ஏ செப்பரேஷன் - Page 3
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4543
தன் மகள் Termehஇன் வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று பயப்படும் சிமின், Hodjat, Razieh இருவருடனும் ஒரு பொருளாதார ஒப்பந்தம் போடுவதற்கு தயாராகிறாள். கருவிலேயே இறந்து விட்ட அந்த குழந்தைக்காக ஒரு பெரிய தொகையைத் தர தயாராக இருக்கிறாள் சிமின். ஆனால், அவ்வாறு பணம் கொடுப்பதற்கு எதிராக இருக்கிறான் நாடெர். அப்படி பணம் தந்தால், குற்றத்தை நாம் ஒப்புக் கொண்டதாக அர்த்தமாகி விடும் என்கிறான் அவன். அதே நேரத்தில்- ரஸியே கர்ப்பமாக இருக்கும் விஷயம் தனக்கு தெரியவே தெரியாது என்று தான் பொய் சொன்னதையும் அவன் ஒப்புக் கொள்கிறான். இன்னும் சொல்லப் போனால்- கர்ப்பம் கலைந்ததற்கு நாடெரின் செயல்கள்தாம் காரணமா என்ற சந்தேகம் Raziehவிற்கும் இருக்கிறது. ஏனென்றால், அவள் ஏற்கெனவே ஒரு காரால் மோதப்பட்டிருக்கிறாள். அன்று இரவு கர்ப்பம் சிதைந்ததற்கான அறிகுறிகளை அவள் உணர்கிறாள்.
இதற்கிடையில், திரும்பவும் வீட்டிற்கு வந்து தன் கணவனுடன் வாழ தீர்மானிக்கிறாள் சிமின். தன் மகள் Termeh அங்கு இருக்கும் வரை, தான் வேறெங்கும் போக முடியாது என்பதையும் அவள் உணர்கிறாள். ஆனால், கணவனுடன் தொடர்ந்து விவாதம் செய்ததன் விளைவாக அவளுடைய மனம் மீண்டும் மாறுகிறது. வீட்டை விட்டு வெளியேறி, தன்னுடன் வந்து விடும்படி தன் மகள் Termehவிடம் கூறுகிறாள் சிமின். நாடெர், காரில் அமர்ந்திருக்கும் தன் மனைவியை அழைத்து வரும்படி கூறுகிறான். தான் குற்றம் செய்தவன் என்ற எண்ணத்துடன் அவள் இப்போதும் இருந்தால், தான் Razieh, Hodjat இருவருக்கும் பணம் தர தயாராக இருப்பதாக அவன் கூறுகிறான். டெர்மெஹ் தன் தாயுடன் அங்கிருந்து கிளம்புகிறாள். அவர்கள் அமர்ந்திருக்கும் கார் நகர்வதைப் பார்த்தவாறு நின்று கொண்டிருக்கிறான் நாடெர். தான் ஒரு குற்றவாளி அல்ல, தான் ஒரு அப்பாவி என்ற உண்மையை தன் மகளாவது உணர்ந்திருக்கிறாளே என்ற திருப்தியும், சந்தோஷமும் அவனுடைய முகத்தில் நிழலாடுகின்றன.
இப்போது ஹோட்ஜாட்டிக்குக் கடனாக பணம் தந்தவர்கள் ரஸியேவையும், ஹோட்ஜாட்டையும் அவர்களுடைய வீட்டில் சந்திக்கிறார்கள். தங்களுக்குத் தர வேண்டிய பணத்தைக் கொடுக்கும்படி கேட்கின்றனர். ரஸியேவின் கர்ப்பம் கலைந்ததற்கு உண்மையான காரணம் என்ன? யார்? என்பதைப் பற்றி இப்போதும் குழப்பத்துடன் இருக்கும் நாடெர் 'செக்கை எழுதுகிறான். ஆனால், கர்ப்பம் கலைந்ததற்கு தான்தான் காரணம் என்று ரஸியேவை 'குர் ஆனி'ன் மீது சத்தியம் பண்ணி கூறச் சொல்கிறான். தன் கணவன் ஹோட்ஜாட் எவ்வளவு வற்புறுத்தியும், இறை பயம் கொண்டவளாக இருப்பதாலும், பொய் சத்தியம் பண்ணுவதன் மூலம், தன் மகளுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகி விடக் கூடாதே என்ற அச்சம் காரணமாகவும், அப்படி சத்தியம் பண்ணினால் அது ஒரு பாவச் செயலாக இருக்கும் என்று அவள் நினைக்கிறாள். முற்றிலும் ஏமாற்றத்திற்கு ஆளாகும் ஹோட்ஜாட் நிலை குலைந்து, கீழே விழுந்து புரள்கிறான். தன்னைத் தானே மிருகத்தனமாக தாக்கியவாறு, வீட்டை விட்டு வெளியேறுகிறான். நாடெர் பணத்தைத் தராமல், வைத்துக் கொள்கிறான்.
நாடெரும் சிமினும் மீண்டும் விவாகரத்து கேட்டு, நீதி மன்றத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகளின் மூலம், நாடெரின் தந்தை இறந்து விட்டார் என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம். அவர்களுக்கு விவாகரத்து வழங்க தீர்மானித்திருப்பதாக நீதிபதி கூறுகிறார். அவர்களுடைய மகள் Termehவிடம் 'நீ யாருடன் வாழப் போகிறாய்?' என்று கேட்கிறார் நீதிபதி. அவள் கண்ணீர் மல்க 'நான் இதைப் பற்றி ஏற்கெனவே தீர்மானித்து விட்டேன். நான் கூறுகிறேன். அதுவரை இவர்கள் இருவரையும் வெளியே அமரும்படி கூறுங்கள்' என்கிறாள். அதைத் தொடர்ந்து நாடெரும், சிமினும் அறையிலிருந்து வெளியேறிச் செல்கிறார்கள். உள்ளே மகள் Termeh அமர்ந்திருக்கிறாள். அவர்களுக்கும் அவளுக்குமிடையே ஒரு கண்ணாடிச் சுவர்... Termeh நீதிபதியிடம் என்ன கூறினாள்?
'A Separation' படம் இந்த கேள்விக்கு விடை கூறும்.
Nader ஆக Peyman Moaadi
Simin ஆக Leila Hatami
Termeh ஆக Sarina Farhadi
Hodjat ஆக Shahab Hosseini
Razieh ஆக Sareh Bayat
ஒவ்வொருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
படத்தைப் பார்க்கும்போது நம் அல்லது நமக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தின் கதையைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம், பார்வையாளர்கள் எல்லோருக்கும் உண்டாகும்.
ஏராளமான பட விழாக்களில் 'ஏ செப்பரேஷன்' விருதுகளை அள்ளிச் சென்றதற்கான காரணம் இப்போது புரிகிறதா?