1983 - Page 4
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4737
மாவட்ட அளவில் நடைபெறும் போட்டியைப் பற்றி கூறிய அவர், ஒரே ஒரு சிறுவன்தான் தேர்வு செய்யப்படுவான் என்றும், அதை கூறுவதற்காகவே தான் வந்திருப்பதாகவும் கூறினார்.
நகரத்தில் மாவட்ட அளவில் தேர்வு செய்யும் போட்டி. ஆயிரக்கணக்கில் சிறுவர்களும், இளைஞர்களும் வந்திருந்தார்கள். கண்ணனுக்கு 10 வயதுதான் நடக்கிறது என்று கூறி, முதலில் உள்ளே அனுமதிக்கவே மறுத்தார்கள். விஜய் மேனன் பலமாக சிபாரிசு செய்ய, சிறுவன் அனுமதிக்கப்படுகிறான். அவனைக் காயப்படுத்திய சிறுவன்தான் இப்போது 'பவுலிங்' செய்கிறான். அவனைப் பார்த்ததும் நடுங்குகிறான் சிறுவன் கண்ணன். அதைப் புரிந்து கொண்ட விஜய் மேனன் 'அந்த பையனின் கண்களை நீ பார்க்காதே. அவன் 'பவுல்' செய்யும் பந்தை மட்டுமே பார்!' என்கிறார். கண்ணன் அதன்படி நடக்கிறான். பிறகென்ன? பந்து பறக்கிறது. கண்ணனின் அபாரமான பேட்டிங் திறமையைப் பார்த்து மைதானத்திலிருந்த அனைவரும் ஆச்சரியத்தில் உறைந்து போய் நிற்கின்றனர்.
மாவட்ட அளவில் ஒரே ஒரு சிறுவன்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு சிறுவன்...! வேறு யார்? நம் கண்ணான கண்ணன்தான்.
ரமேஷன், தன் மகனுடன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனின் கை, தன் மகன் கண்ணனின் தோள் மீது இருக்கிறது. அவர்களுக்கு முன்னால் மிக உயர்ந்த மலை.
ஒற்றையடிப் பாதையில் நடந்து போகும் அவர்கள் நிழல் வடிவத்தில் காட்டப்படுகிறார்கள். 'என் மகன் இப்போது தேர்வாகி விட்டான். அவன் உயர்ந்த இடத்திற்குச் செல்வதற்கு இன்னும் பல மலைகளையும் தாண்ட வேண்டும். நிச்சயம் அவன் தாண்டுவான். அதற்கு இறுதி வரை அவனுக்கு நான் உறுதுணையாக இருப்பேன்' என்ற ரமேஷனின் குரல் படம் பார்க்கும் நம் மீது ஒலிக்கிறது.
'A film by சச்சின் டெண்டுல்கரின் பரம ரசிகனான ஆப்ரிட் ஷைன்' என்ற டைட்டில் கார்டு திரையில் ஓடுகிறது.
அத்துடன் படம் முடிவடைகிறது. நல்ல ஒரு படத்தைப் பார்த்தோம் என்ற மன நிறைவுடன் எழுந்து நிற்கிறோம் நாம்.
ரமேஷனாக நிவீன் பாலி ('நேரம்' படத்தின் கதாநாயகன்)
விஜய் மேனனாக - அனூப் மேனன்
மஞ்சுளாவாக - நிக்கி கல்ராணி
ரமேஷனின் தந்தையாக- ஜாய் மேத்யூ
சிறுவன் கண்ணனாக - பகத் ஆப்ரிட்
ஒவ்வொருவரும் தங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்பதே உண்மை. படம் முடிந்த பிறகும், அவர்கள் நம் மனங்களில் வலம் வந்து கொண்டே இருப்பார்கள். அதுதான் படத்தின் வெற்றியே!