பார் டெலா டெஸ் நுவாஜெஸ் - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6262
அவர்கள் இருவரும் சேர்ந்து அவளுடைய வீட்டிற்கு வருகிறார்கள். அங்கு இருவரும் உறவு கொள்கிறார்கள். பிறகு... அந்த திரைப்பட இயக்குனர் நகரத்திற்கு மேலே இருக்கும் ஒரு தடாகத்திற்கு அருகில் அமர்ந்து, அந்த பெண்ணின் கதையை மனதில் நினைத்துப் பார்க்கிறார். தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் திரைக்கதையில் அது உண்டாக்கிய பாதிப்பையும்...
மூன்றாவது கதை : என்னை கண்டு பிடிக்க முயற்சிக்க வேண்டாம்
பாரிஸில் இருக்கும் ஒரு காஃபி ஷாப்பில், ஒரு இளம் பெண் அங்கு அமர்ந்திருக்கும் ஒரு மனிதருக்கு அருகில் வருகிறாள். தான் சமீபத்தில் பத்திரிகையில் வாசித்த ஒரு கட்டுரையைப் பற்றி அவள் யாருடனாவது பேச வேண்டும் என்று நினைக்கிறாள். அந்த பெண் கூறும் கதையால் அந்த மனிதர் ஈர்க்கப்படுகிறார். மூன்று வருடங்களுக்குப் பிறகு, அந்த பெண்ணைப் பார்த்து விட்டு, தன் வீட்டிற்கு வருகிறார் அந்த மனிதர். அந்த பெண் இப்போது அவருடைய ஆசை நாயகியாக இருக்கிறாள்.
அவருடைய மனைவி பேட்ரிஸியா அவரிடம் தகராறு செய்கிறாள். ‘ஒன்று நான் வேண்டுமா? இல்லாவிட்டால் அவள் வேண்டுமா? யார் வேண்டும் என்பதை உடனடியாக முடிவு செய்யுங்கள்’ என்கிறாள் அவள் - கறாரான குரலில். அவர் தன் ஆசை நாயகியிடம் உறவை அறுத்து விட்டு வரலாம் என்று போகிறார். ஆனால், போன இடத்தில் அவர்களுக்கிடையே உடல் ரீதியான உறவு உண்டாகி விடுகிறது.
அவர் திரும்பவும் தன் வீட்டிற்கு வருகிறார். அவருடைய மனைவி பேட்ரிஸியா மதுவின் ஆக்கிரமிப்பில் இருக்கிறாள். ‘எல்லா விஷயங்களுமே வேடிக்கையாக இருக்கின்றன!’ என்கிறாள் அவள். தான் எப்படியும் தன்னுடைய வைப்பாட்டியை விட்டு விலகி வந்து விடுவதாக கூறுகிறார் அவர். அதைத் தொடர்ந்து அவர்களுடைக்கிடையே உடல் ரீதியான உறவு உண்டாகிறது. மூன்று வருடங்களுக்குப் பிறகு அவர்கள் முதல் தடவையாக இப்போதுதான் உடலுறவு கொள்கின்றனர். அந்த மனிதர் தன் ஆசை நாயகியைத் தேடி வருகிறார். தன் மனைவியுடன் அவர் உறவு கொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததும், அவள் எரிச்சலும் கோபமும் கொள்கிறாள். அவர்களுக்கிடையே பெரிய சண்டையே நடக்கிறது. இறுதியில் அந்த மனிதர் அவளை இறுக்கமாக அணைக்க, அவள் பெட்டிப் பாம்பாக அடங்கி விடுகிறாள். பிறகென்ன? இருவரும் தங்களையே மறந்து உடலுறவு கொள்கின்றனர்.
இதற்கிடையில் கார்லோ தன்னுடைய ஆடம்பரமான வீட்டிற்கு வருகிறார். வீடு காலியாக கிடக்கிறது. தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அவரை விட்டு விலகிச் சென்று விட்ட அவருடைய மனைவியின் தொலைபேசி அழைப்பு வருகிறது. இருவரும் கோபமாக வார்த்தைகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். கார்லோ தன் வீட்டை அலசிப் பார்க்கிறார். ஒரு இடத்தில் அவருடைய மனைவியின் நிர்வாணமான புகைப்படம் பல துண்டுகளாக கிழிந்து கிடக்கிறது. அதை ஒன்று சேர்த்து வைத்து பார்க்கிறார் அவர்.
அப்போது பேட்ரிஸியா அங்கு வருகிறாள். கார்லோவின் மனைவி அந்த வீட்டை தனக்கு வாடகைக்கு விட்டிருப்பதாக அவள் கூறுகிறாள். பேட்ரிஸியா தன் கணவரை விட்டு விலகி வந்து விட்டாள். அவளுடைய பொருட்கள் விரைவில் வந்து சேர இருக்கின்றன. அவளும் தன் கணவரின் வீட்டை காலி பண்ணிவிட்டு வந்து விட்டாள். வியாபார விஷயமாக தான் பெரும்பாலும் தூர இடங்களில் இருக்க வேண்டிய சூழ்நிலையின் காரணமாக தன் மனைவி தன்னை உதறி விட்டு, தன் காதலனைத் தேடிச் சென்று விட்டாள் என்கிறார் கார்லோ. அப்போது பேட்ரிஸியாவிற்கு அவளுடைய கணவரிடமிருந்து ஃபோன் வருகிறது. அவள் அவரிடம் ‘என்னை கண்டு பிடிக்க முயற்சிக்காதீர்கள்!’ என்கிறாள். கார்லோவும் பேட்ரிஸியாவும் ஒருவரோடொருவர் நெருங்குகின்றனர். அவர் கூறுகிறார்: ‘எல்லா விஷயங்களுக்கும் ஒரு தீர்வு இருக்கிறது’. அதற்கு அவள் கூறுகிறாள்: ‘அதுதான் என்னைத் துன்பப்படுத்தும் விஷயமே...’ அவர் அவளுடைய கையை மென்மையாக முத்தமிடுகிறார்.
ஃப்ரான்ஸின் கிராமப் பகுதியில், ஒரு ரயில் தாண்டிச் செல்லும்போது, ரயில் பாதையிலிருந்து ஒரு பெண்ணை ஒரு மனிதன் பிடித்து இழுக்கிறான். அந்த ரயிலில் திரைப்பட இயக்குனர் அமர்ந்து கொண்டு மனித மூளையின் எல்லை, மனிதனின் அனுபவங்கள், கலாச்சாரம், வாழ்க்கையில் ஈர்க்கக் கூடிய விஷயங்கள், மனதில் உண்டாகும் கற்பனைகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அந்த கம்பார்ட்மெண்ட்டிற்குள் ஒரு பெண் வருகிறாள், அவளுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. அவள் ‘எனக்கு இன்னொரு முறை ஃபோன் செய்ய வேண்டாம்’ என்கிறாள். இதற்கிடையில், அருகிலிருக்கும் மலைக்கு அருகில் ஒரு ஓவியர் அந்த நிலப் பகுதியையும், அதில் கடந்து செல்லும் ரயிலையும் ஓவியமாக வரைந்து கொண்டிருக்கிறார். மிகப் பெரிய ஓவியர்களிடமிருந்து நகலெடுத்து ஓவியம் வரைவதால் உண்டாகும் பயனைப் பற்றி அவர் ஒரு பெண்ணிடம் விளக்கி கூறுகிறார்.
நான்காவது கதை : அசிங்கங்கள் நிறைந்த இந்த சரீரம்
திரைப்பட இயக்குனர் தான் தங்கியிருக்கும் ஹோட்டலின் வரவேற்பறையில் மாட்டப்பட்டிருக்கும் ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தெருவில் நடந்து வரும் ஒரு மனிதன் கலைத்தன்மை கொண்ட ஓவியங்களைக் கொடுப்பதற்காக அந்த கட்டிடத்திற்குள் நுழைவதை அவர் பார்க்கிறார். நுழையும் அந்த மனிதனின் பெயர் நிக்கோலோ. அவன் ஒரு இளம் பெண்ணைக் கடக்கிறான். அவ்வளவுதான்- அந்த பெண்ணைப் பின்பற்றிச் செல்ல அவன் முடிவெடுக்கிறான். அவளைப் பின் பற்றி தான் வரலாமா என்று அவளிடமே அவன் கேட்கிறான். அவள் தான் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறுகிறாள். அந்த அமைதியான இளம் பெண் மிகவும் குறைவான வார்த்தைகளிலேயே பேசுகிறாள் என்பதையும், தன்னைச் சுற்றி இருக்கும் உலக விஷயங்களில் அந்த அளவிற்கு ஆர்வம் எதுவும் இல்லாமல் இருக்கிறாள் என்பதையும் பார்த்து அவன் மிகவும் ஆச்சரியப்படுகிறான். தேவையற்ற எண்ணங்களை நீக்கி விட்டால் மட்டுமே யாரும் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கூறும் அவள், மிகவும் அமைதியான பெண்ணாக இருப்பதையே தான் விரும்புவதாக கூறுகிறாள்.
தெருக்களின் வழியாக அவர்கள் நடந்து செல்லும்போது, தன் சரீரத்திலிருந்து தான் தப்பித்து இருக்க விரும்புவதாக அவள் கூறுகிறாள். உடல் ஏகப்பட்ட விஷயங்களை ஆசைப்படும் என்றும், எதைக் கொண்டும் அது திருப்தி அடையவே அடையாது என்றும் அவள் கூறுகிறாள். ஆனால், நிக்கோலோ அவளுடைய சரீரத்தின் மீதுதான் குறியாகவே இருக்கிறான். அவன் தன்னுடைய காதல் வார்த்தைகளை வெளியிட, அவள் அதை சிறிதும் காதிலேயே போட்டுக் கொள்ளாமல் இருக்கிறாள். தான் ஏற்கெனவே காதலில் இருக்கும் ஒருத்தி என்பதைப் போலவும், ஏற்கெனவே இருக்கக் கூடிய விஷயத்திலேயே தான் திருப்தி அடைந்து விட்டவள் எனப்பதைப் போலவும் அவள் அவனுக்குத் தெரிகிறாள். அவள் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவன் நினைக்கிறான்.
அவர்கள் தேவாலயத்தை அடைய, அந்த இளம் பெண் உள்ளே நுழைகிறாள். அவன் அவளைப் பின்பற்றி உள்ளே செல்கிறான். தேவாலயத்திற்குள் போதனை நடந்து கொண்டிருக்கிறது. பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த இளம் பெண் ஆன்மீக உணர்வில் கரைந்து போய் நின்றிருப்பதை அவன் பார்க்கிறான். தான் மட்டும் தனிமைப்பட்ட உணர்வுடன் அங்கு இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றுகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் அவன் ஒரு சுற்றுலா பயணியைப் போல அங்கிருக்கும் ஓவியங்களை வேடிக்கை பார்த்தவாறு நடக்கிறான். பின்னர் ஒரு இடத்தில் போய் அமர்கிறான்.
கண் அயர்ந்து விடும் நிக்கோலோ சிறிது நேரத்திற்குப் பிறகு கண் விழிக்க, போதனை முடிந்து. தேவாலயம் காலியாக இருக்கிறது. அவன் வெளியே இருக்கும் இருள் நிறைந்த தெருக்களில் அந்த இளம் பெண்ணைத் தேடி ஓடுகிறான். அவள் ஒரு கிணற்றுக்கு அருகில் தரையில் அமர்ந்திருப்பதை அவன் பார்க்கிறான். பொருட்களின் நிலையற்ற தன்மையைப் பற்றி அவர்கள் உரையாடுகின்றனர். தான் மரணத்தைப் பார்த்து பயப்படுவதாக அவன் கூறுகிறான். ஆனால், அவளோ வாழ்வைப் பார்த்து தான் பயப்படுவதாக கூறுகிறாள். மனிதர்களின் வாழ்க்கைகளைப் பார்த்து தான் உண்மையிலேயே பயப்படுவதாக அவள் தெரிவிக்கிறாள். நிக்கோலோ அவளைப் பின்பற்றி நடக்கிறான். அவளுடைய வீட்டிற்கு அருகில், அவர்கள் வருகிறார்கள். வீட்டிற்கு முன்னால் இருக்கும் நுழைவாயிலுக்கு அருகில் மழைக்காக அவர்கள் நிற்கிறார்கள். தான் அவள் மீது காதல் வலையில் விழுந்தால் என்ன நடக்கும் என்று அவன் அவளைப் பார்த்து கேட்கிறான். அதற்கு அவள் கூறுகிறாள்: ‘முழுமையான வெளிச்சத்துடன் இருக்கும் ஒரு அறையில் நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி வைக்கிறீர்கள் என்று நான் நினைப்பேன்.’ அவளுடைய வீட்டை அவர்கள் அடையும்போது, மறுநாள் அவளைப் பார்ப்பதாக அவன் கூறுகிறான். அதற்கு அவள் எந்தவித சலனமும் அற்ற குரலில் கூறுகிறாள் : ‘நான் நாளை ஒரு மடத்திற்குள் நுழைகிறேன்.’
நிக்கோலோ அந்த இரவு வேளையில் மழையில் நனைந்தவாறு அங்கிருந்து புறப்பட்டு, நடந்து செல்கிறான்.
இப்படம் இத்தாலி, ஃப்ரான்ஸ் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது.
பத்திரிகைகளால் பெரிய அளவில் பாராட்டப்பட்ட ‘Par-Dela Les Nuages’ (Beyond the clouds) பல திரைப்பட விழாக்களிலும் கலந்து கொண்டு விருதுகளை நிறைய பெற்றது.
- 1995 வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர்களுக்கான விருது (Michelangelo Antonioni, Wim Wanders இருவருக்கும்.)
- 1996 Italian National Syndicate of Film Journalists Silver Ribbon for Best Score (Lucio Dalla)
- 1996 David di Donatello Award for Best Cinematography (Alfio Contini).