15 பார்க் அவென்யூ - Page 2
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 6182
டாக்டரின் அறிவுரைப்படி, அனு தன் தங்கை மீத்தியை ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்று எண்ணி பூட்டானுக்கு அழைத்துச் செல்கிறாள். அங்கு அப்போது ஜாய்தீப் தான் திருமணம் செய்து கொண்ட பெண்ணுடனும், தன்னுடைய இரண்டு குழந்தைகளுடனும் சுற்றுலா வந்திருக்கிறான். சிறு குழந்தையைப் போல நடைபோட்டுக் கொண்டிருக்கும் மீத்தியை ஜாய்தீப் பார்த்து விடுகிறான்.
இப்போதைய நிலையில், ஜாய்தீப்பை மீத்திக்கு அடையாளம் தெரியவில்லை. அவனை இப்போதுதான் முதல் தடவையாக பார்ப்பதாக அவள் நினைக்கிறாள். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால்- அவள் தன் மனதில் கணவன் என்று கற்பனை பண்ணி வைத்துக் கொண்டிருப்பது அவனைத்தான். கற்பனை உலகத்தில் அவனுடைய பெயர் ஜாய்தீப் அல்ல – ஜோஜோ. அவளுடைய கற்பனை உலகத்தில் அவளுடைய ஐந்து குழந்தைகளுக்கும் தந்தை அவன்தான். எனினும், அவனே நேரில் வந்து அவளுடன் பேசும்போது, யாரோ ஒரு மூன்றாவது மனிதருடன் உரையாடுகிறோம் என்பதைப் போலத்தான் அவள் நடந்து கொள்கிறாள்.
அவனிடம் தான் தேடிக் கொண்டிருக்கும் 15, பார்க் அவென்யூ முகவரியைப் பற்றியும், அங்கிருக்கும் தன்னுடைய வீட்டிற்குப் போக விடாமல் தன்னை தன சகோதரி அனுவும், அன்னையும் சிறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறாள் மீத்தி. அந்த முகவரியைக் கண்டு பிடிப்பதற்கு தான் அவளுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்கிறான் ஜாய்தீப்.
அவர்கள் அனைவரும் மீண்டும் கொல்கத்தாவிற்குத் திரும்பி வருகிறார்கள். மீத்தி தன் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் முகவரி இருக்கும் இடத்தை அவளுக்கு காட்டுவதாகக் கூறி, காரில் அவளை அழைத்துச் செல்கிறான் ஜாய் தீப்.
என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அந்த காரைப் பின்பற்றி இன்னொரு காரில் வருகிறார்கள் அனுவும், அவளுடைய தாயும்.
ஒரு இடத்தில் கார்களுடன் எல்லோரும் நின்றிருக்க, மெதுவாக முன்னோக்கி ஒரு தெருவில் நடந்து செல்கிறாள் மீத்தி. அவளுடைய கண்களில் ‘பார்க் அவென்யூ’ என்ற பெயர் பலகை படுகிறது. ‘15’ என்ற எண்ணும் (ஆனால், அப்படி ஒரு எண்ணும் இல்லை... தெருவும் இல்லை). அந்த எண் கொண்ட பங்களாவிற்குச் செல்லும் ‘கேட்’டிற்குள் நுழைந்து நடக்கிறாள் மீத்தி. அங்கிருக்கும் மிகப் பெரிய நவீன பங்களாவிற்கு முன்னால் அவளை எதிர்பார்த்துக் கொண்டு, அவளுடைய ஐந்து குழந்தைகளும் ஆவலுடன் இருக்கின்றனர். அவளைப் பார்த்ததும், அவர்கள் ‘மம்மி... மம்மி...’ என்று பாச மழை பொழிகின்றனர். மீத்தி அவர்களை பாசத்துடன் அணைத்துக் கொள்கிறாள். அப்போது அன்புடன் அங்கே வருகிறான் அவளுடைய கற்பனை கணவனான ஜோஜோ. அவன் அவளின் தோளில் காதலுடன் கை வைக்க, அவர்கள் குழந்தைகளுடன் வீட்டிற்குள் செல்கின்றனர்.
இது ஒரு புறமிருக்க, கார்களுடன் நிற்கும் அனுவும், அவளின் தாயும், ஜாய் தீப்பும் மீத்தியைத் தேடுகின்றனர். அவளின் பெயரைக் கூறி அழைக்கின்றனர். எவ்வளவு தேடியும் அவள் கிடைக்கவில்லை. அவள் எங்கே போனாள்? எங்கு போய் மறைந்தாள்? அவர்கள் செயலற்ற நிலையில், திகைத்துப் போய் நிற்கின்றனர்.
‘Surrealistic’ பாணியில் இப்படத்தின் climax அமைக்கப்பட்டிருக்கிறது.
மிட்டாலி என்ற மீத்தியாக வாழ்ந்திருப்பவர் கொங்கொனா சென்ஷர்மா (என்ன அபாரமான நடிப்புத் திறமை!)
அவளின் சுயநலமற்ற, தியாக குணம் கொண்ட அக்கா அஞ்சலி என்ற அனுவாக ஷபனா ஆஸ்மி. (இவரைப் பற்றி சொல்ல வேண்டுமா என்ன? பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். தங்கையின் மீது பாசத்தைக் கொட்டும்போதும், அவள் படும் கஷ்டங்களைப் பார்த்து கண்ணீர் விடும்போதும், தன் தங்கையைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால், கோபமடைந்து ஆவேசமாக பேசும்போதும், டாக்டரிடம் தன் தங்கையைப் பற்றி விளக்கி கூறும்போதும் தான் ஒரு பண்பட்ட நடிகை என்பதையும், நடிப்புக் கலையில் பல பரிமாணங்களையும் தன்னால் காட்ட முடியும் என்பதையும் வெளிப்படுத்தி, நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார் ஷபனா ஆஸ்மி. பல இடங்களில் நான் ஷபனா ஆஸ்மியின் நடிப்பைப் பார்த்து, என்னை மறந்து கை தட்டினேன். என்ன அருமையான நடிகை!)
மீத்தி, அனு – இருவரின் அன்னையாக மூத்த நடிகை வஹீதா ரஹ்மான். பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம்!
டாக்டராக Dhritiman Chatterjee. அவரின் அனுபவ நடிப்பு, எல்லா காட்சிகளிலும் நன்கு தெரிகிறது.
மீத்தியை திருமணம் செய்ய வந்து, நிச்சயம் செய்து, அதிலிருந்து விலகிய ஜாய் தீப்பாகவும், அவளின் கற்பனை உலகத்தில் அவளுடைய கணவன் ஜோஜோவாகவும் – ராகுல் போஸ். வழக்கம்போல மிகையற்ற, இயல்பான நடிப்பு!
புதுமையான கோணத்தில் உருவாக்கப்பட்ட கதையைக் கொண்ட படம் – அதற்காகவும், பல அற்புத கலைஞர்களின் திறமைக்காகவும் இப்படத்தைப் பார்க்கலாம்.