தி போவ்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 4064
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
தி போவ்
(தென் கொரிய திரைப்படம்)
என் மனதில் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவித்துவம் நிறைந்த படம் இது. 2005இல் திரைக்கு வந்த இந்தப் படத்தை இயக்கி, தயாரித்தவர் தென் கொரிய திரைப்பட இயக்குநரான கிம் கி-டுக். படத்தின் கதையை எழுதியிருப்பவரும் இவரே. தன்னுடைய பல அற்புதமான படைப்புகளால், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்று, புகழின் ஏணியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் இவர்.
அறுபது வயது நிறைந்த ஒரு கிழவனையும், 16 வயது கொண்ட ஒரு பேரழகு படைத்த இளம் பெண்ணையும் சுற்றி பின்னப்பட்டதே ‘The Bow’. எங்கிருந்தோ ஆறு வயது உள்ள அழகான ஒரு சிறுமியை அவன் கொண்டு வருகிறான். கடலின் நடுவில் மிதந்து கொண்டிருக்கும் 40 அடி நீளம் கொண்ட படகுதான் அவனுக்கு வீடு. அங்கிருந்தவாறு அவளை அவன் வளர்க்கிறான். அவள் பேசுவதே இல்லை. இப்போது அவளின் வயது 16.
படகின் ஒரு பகுதியில் புத்தரின் படம் வரையப் பட்டிருக்கும். அதற்கு அருகில் ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருக்கும். அந்த ஊஞ்சலில் எப்போதும் தொங்கிக் கொண்டே புன்னகை தவழும் முகத்துடன் ஆடிக் கொண்டிருப்பாள் அந்த இளம் பெண். அந்த கிழவனைத் தவிர, அந்த இளம் பெண்ணுக்கு உலகத்தில் வேறு யாரையும் தெரியாது. அதே போன்றுதான் கிழவனுக்கும். அந்த அழகு தேவதைதான் அவனின் உலகமே.
அவனைப் பார்ப்பதற்காக அவ்வப்போது மீனவர்கள் யாராவது படகிற்கு வருவார்கள். அந்த இளம் பெண்ணிடம் ஏதாவது பேச முயன்றாலோ, ‘சில்மிஷம்’ செய்ய முயன்றாலோ, கிழவன் தன் கையில் எப்போதும் வைத்திருக்கும் வில்லிலிருந்து அம்புகளை எய்து, அவர்களை விரட்டியடிப்பான். அப்போது அந்த இளம்பெண் அழகாக புன்னகைத்துக் கொண்டிருப்பாள்.
கிழவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி ஜோதிடம் கூறத் தெரியும். அதனால் அவனைத் தேடி அவ்வப்போது பலரும் வருவார்கள். அந்த மாதிரியான சமயங்களில், படகின் பக்கவாட்டில் இருக்கும் புத்தரின் ஓவியத்தின் மீது மூன்று அம்புகளை எய்துவான் கிழவன். அம்பு வேகமாக வந்து பாயும்போது, அதற்கு அருகிலேயே எந்தவித பயமும் இல்லாமல் அழகாக புன்னகைத்துக் கொண்டே ஊஞ்சலில் ஒய்யாரமாக ஆடிக் கொண்டிருப்பாள் அந்த அழகுப் பெட்டகம் (அந்தப் பெண்ணுக்குச் சிறிதும் பயமில்லை. ஆனால், படத்தைப் பார்க்கும் நம்முடைய மனம்தான் பதைபதைக்கும் – எங்கே அந்த தேவதையின் மீது அம்பு பாய்ந்து விடப் போகிறதோ என்று). தொடர்ந்து அவள் கிழவனின் காதில் என்னவோ முணுமுணுப்பாள். கிழவன், தேடி வந்திருப்பவர்களிடம் எதிர்கால பலனைக் கூறுவான்.
அந்த இளம் பெண்ணுக்கு 17 வயது ஆகும்போது, அவளைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறான் கிழவன். இதற்கிடையில் அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை ஒரு பக்கம் எங்கே இருக்கிறாள் என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த அழகுப் பொக்கிஷம் சிறு நீர் கழிப்பது கூட படகின் மேலேதான். வெட்கம், கூச்சம் எதுவுமே தெரியாததால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் ஆடையை மேலே தூக்கி, அமர்ந்து அவள் புன்னகையுடன் சிறுநீர் கழிப்பாள். அதை கிழவன் பார்த்துக் கொண்டிருப்பான். கிழவனுக்கு அவள்தான் எல்லாமே- கடத்திக் கொண்டு வரப்பட்ட சிறுமி, மகள், தோழி, திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகள்… அனைத்துமே அவள்தான்.
இதற்கிடையில் மீனவர்கள் அடங்கிய ஒரு குழு, படகைத் தேடி வருகிறது. அதில் ஒரு அழகான வாலிபன் இருக்கிறான். அவன் ஒரு மாணவன். படகிலிருந்த இளம் பெண்ணை முதல் தடவையாக பார்த்த கணத்திலேயே, அவளின் மீது அவனுக்கு காதல் அரும்பி விடுகிறது. அவளுடைய சூழ்நிலை என்ன என்பதை அவன் புரிந்து கொள்கிறான்.
இதுவரை காதல் என்றால் என்ன என்று தெரியாமலிருந்த அந்த தேவதைக்கு, இளைஞனைப் பார்த்ததும் அவன் மீது காதல் பிறக்கிறது. இருவரும் அங்கிருந்து எப்படியாவது தப்பித்துச் சென்று விட வேண்டும் என்று நினைக்கின்றனர்.
அவர்களுக்கிடையே அரும்பியிருக்கும் காதலை கிழவனும் தெரிந்து கொள்கிறான். இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காக தனக்கும், பெண்ணுக்கும் திருமண ஆடைகளை வாங்கி வைத்துக் கொண்டு தயார் நிலையில் இருக்கும் அவன், அவர்களை தப்பித்து ஓட விடுவானா? அடுத்து என்ன நடந்தது? இதுவரை கிழவனின் அரவணைப்பிலேயே வளர்ந்திருக்கும் அந்தப் பெண் என்ன முடிவெடுத்தாள்? கிழவனின் ஆசை நிறைவேறியதா இல்லையா?
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை படம் பார்ப்போரை, நாற்காலியுடன் இறுக கட்டிப் போட்டு விடுகிறார் இயக்குநர் கிம் கி-டுக் என்பதே உண்மை.
16 வயது இளம் பெண்ணாக வரும் Han Yeoreum மின் பேரழகு இருக்கிறதே! அந்த அழகு தேவதைக்காகவே நாம் படத்தைப் பார்க்கலாம். 60 வயது கிழவனாக வரும் Jeon Seonghwang பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
உரையாடல்கள் அதிகமாக இல்லாமல், மிகவும் குறைந்த வசனங்களுடன் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் 2005ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.