Lekha Books

A+ A A-

தி ரீடர்

The Reader

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

தி ரீடர்

(ஹாலிவுட் திரைப்படம்)

னக்கு மிகவும் பிடித்த, கவித்துவ உணர்வு கொண்ட ஒரு அருமையான படம் இது. 2008ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் ஜெர்மன் மொழியில் இதே பெயரில் எழுதப்பட்ட நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது.

கேட் வின்ஸ்லெட்டின் அபாரமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படம் இது.

1995ஆம் ஆண்டில் படத்தின் கதை தொடங்குகிறது. வழக்கறிஞரான மைக்கேல் முந்தைய இரவு ஃப்ளாட்டில் தன்னுடன் தங்கிய பெண்ணுக்காக காலைச் சிற்றுண்டி தயாரிக்கிறான். அவள் அங்கிருந்து கிளம்ப, தன்னுடைய டீன்-ஏஜ் மகளைப் பார்ப்பதற்காக அவன் கிளம்புகிறான்.

ட்ராம் வண்டி வந்து நிற்கிறது. ட்ராமைப் பார்த்ததும், அவன் தன்னுடைய கடந்த காலத்திற்குச் செல்கிறான். இனிமையான பழைய நினைவுகள்… 1958ஆம் ஆண்டு. 15 வயது மைக்கேல் பள்ளிக் கூடத்திலிருந்து ட்ராம் வண்டியில் திரும்பி வந்து கொண்டிருக்கிறான். உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வுடன் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்கிறான் மைக்கேல். அந்த ட்ராம் வண்டியில் டிக்கெட் கொடுப்பவளாக பணியாற்றுபவள் 36 வயது கொண்ட ஹன்னா. ட்ராம் வண்டியிலிருந்து இறங்கி நடக்கும் மைக்கேல், ஒரு தெருவின் இருட்டில் வாந்தி எடுத்தவாறு உட்கார்ந்திருக்கிறான். அவனைச் சுத்தம் செய்து, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, குணமான பிறகு அவனை அனுப்பி வைக்கிறாள் ஹன்னா. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் மைக்கேல் தன் வீட்டில் ஓய்வு எடுக்கிறான். முற்றிலும் குணமான பிறகு, ஒரு பூச்செண்டுடன் நன்றி தெரிவிப்பதற்காக அவன் ஹன்னாவைத் தேடி வருகிறான். அவனைப் பார்த்ததும் அவள் சந்தோஷப்படுகிறாள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் தினமும் சந்திக்கிறார்கள். காலப் போக்கில் அவர்களுக்கிடையே மிகுந்த நெருக்கமான உறவு உண்டாகி விடுகிறது. இருவருக்குமிடையே உடல் ரீதியாக உறவு உண்டாகிறது. மைக்கேல் தனக்கு அருகில் இருக்கும்போது, தன் கவலைகள் அனைத்தையும் மறக்கிறாள் ஹன்னா. அவளுடைய முகத்தையும், உடலையும் பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது என்ற நிலைக்கு ஆளாகிறான் மைக்கேல்.

இருவரும் தனியாக இருக்கும்போது, மைக்கேல் புகழ் பெற்ற பல இலக்கியங்களையும் ஹன்னாவிற்கு வாசித்துக் காட்டுகிறான். அவன் ஆர்வத்துடன் வாசிக்க… வாசிக்க, அதை முழுமையான ஈடுபாட்டுடன் கேட்கிறாள் ஹன்னா. கதை வாசிப்பு, உடலுறவு – இரண்டும் தினமும் நடைபெறுகிறது.

இதற்கிடையில் ஹன்னாவிற்கு வேறொரு ஊருக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. மைக்கேலிடம் கூட ஒரு வார்த்தை கூறாமல், அவள் தன் பொருட்களுடன் அங்கிருந்து கிளம்பி விடுகிறாள். ஹன்னா இல்லாமல், அவளுடைய ஃப்ளாட்டின் தரையில், மைக்கேல் மட்டும் கவலையுடன் படுத்துக் கிடக்கிறான்.

வருடங்கள் கடந்தோடுகின்றன. 1966ஆம் ஆண்டு… மைக்கேல் ஹெய்டெல்பெர்க் பல்கலைக்கழகத்தின் சட்டப் பள்ளியில் மாணவனாக இருக்கிறான். பாடத் திட்டத்தின் ஒரு பகுதியாக, வழக்கு நடந்து கொண்டிருக்கும் நீதிமன்றத்திற்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். 300 யூதப் பெண்கள் ஒரே நேரத்தில் ஒரு தேவாலயத்திற்குள் எரிந்து சாம்பலான வழக்கு. அந்த விபத்திற்குக் காரணம் என்று ஆறு பெண் காவலர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர்களில் ஒருத்தி -ஹன்னா. நீதிமன்றத்தில் ஹன்னாவிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

அப்போதுதான் மைக்கேலுக்கே ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அது – ஹன்னாவிற்கு எழுதவோ, படிக்கவோ தெரியாது என்பது. அந்த உண்மையை அவள் கூற விரும்பவில்லை. அதை மட்டும் அவள் கூறியிருந்தால், தண்டனையிலிருந்து தப்பியிருக்கலாம். கூறாததற்கு காரணம்?

இதற்கிடையில் மைக்கேலுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடக்கிறது. ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாகவும் அவன் ஆகிறான். அந்த திருமண வாழ்க்கை சில காரணங்களால் விவாகரத்தில் முடிய, தன் மகளுடன் அவன் வெளியேறுகிறான். அவளை ஒரு போர்டிங் பள்ளிக் கூடத்தில் கொண்டு போய் சேர்க்கிறான்.

பல இலக்கிய நூல்களை வாசித்து, அதை ஒலி வடிவத்தில் பதிவு செய்து, பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாக்களை சிறையிலிருக்கும் ஹன்னாவிற்கு மைக்கேல் அவ்வப்போது அனுப்பி வைக்கிறான். அவற்றைக் கேட்கும் ஹன்னா, அதே நூல்களை சிறைக்குள் இருக்கும் நூலகத்திலிருந்து எடுத்து யாருடைய உதவியும் இல்லாமல், அவளாகவே எழுதவும், படிக்கவும் கற்கிறாள்.

1988 ஆண்டு... ஹன்னா இன்னும் ஒரு வாரத்தில் விடுதலை செய்யப்பட இருக்கிறாள். அவள் தங்கியிருப்பதற்கு ஒரு வீட்டையும், அவளுக்கு ஒரு வேலையையும் ஏற்பாடு செய்கிறான் மைக்கேல். ஒரு வாரத்திற்கு முன்னால் அவளை அவன் சிறையில் சந்திக்கிறான். சற்று அவன் விலகியே இருக்கிறான். கடந்த காலத்தின் நாட்களை அவளே அசைபோடட்டும் என்று அவன் நினைக்கிறான்.

விடுதலை ஆகி வரப்போகும் ஹன்னாவைத் தேடி மலர்களுடன் வருகிறான் மைக்கேல். ஆனால், தான் வைத்திருந்த புத்தகங்களின் மீது ஏறி, ஹன்னா ஏற்கெனவே தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சியடைகிறான் மைக்கேல்.

ஹன்னாவின் கல்லறை… கல்லூரி மாணவியாக இருக்கும் தன் அன்பு மகளிடம் தன்னுடைய கடந்து போன வாழ்க்கைக் கதையை மைக்கேல் கூற ஆரம்பிக்கிறான்.

‘ஹன்னாவைப் பார்க்கும்போது, எனக்கு பதினைந்து வயது…’ என்று அவன் ஆர்வத்துடன் கூற ஆரம்பிக்க, எழுத்துக்கள் ஓடுகின்றன.

இளம் வயது மைக்கேலாக நடித்த David Kross, நடுத்தர வயது மைக்கேலாக நடித்த Ralph Fiennes, ஹன்னாவாக வாழ்ந்த Kate Winslet-மூவருமே தங்களின் நடிப்புத் திறமையில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருதை

Kate Winslet தட்டிச் சென்றார்.

Stephen Daldry இயக்கிய இந்தப் படத்தின் காட்சிகள் இன்னும் பல மாதங்களுக்குப் பிறகும், என் மனதில் உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கும்.

Page Divider

 

+Novels

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

தந்தை விழுந்தபோது...

March 8, 2012,

மகாலட்சுமி

March 22, 2013,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel