ஸ்பிரிட்
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3691
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
ஸ்பிரிட்
(மலையாள திரைப்படம்)
மோகன்லால் கதாநாயகனாக நடித்து, பரவலான பாராட்டைப் பெற்ற படம். படத்தில் குடிகாரராக வருகிறார் மோகன்லால்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் மக்களின் வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார் மோகன்லால். ஆனால், மதுவை அளவே இல்லாமல் அருந்திவிட்டு வந்துதான் அந்த நிகழ்ச்சியையே அவர் நடத்துவார்.
பல்வேறு துறைகளிலும் புகழ் பெற்றவர்கள், முத்திரை பதித்து உயரத்தில் அமர்ந்திருப்பவர்கள் ஆகியோரை அவர் நேர்காணல் செய்வார். அவர் கேட்கும் ஊசியைப் போன்ற கேள்விகளால், அவர்களின் உண்மைத் தன்மைகள் வெளியே கொண்டு வரப்படும்.
அந்த காரணத்திற்காகவே மக்கள் வெறி பிடித்து அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள். ஆண்கள், பெண்கள், இளம் தலைமுறையினர் – எல்லோருமே அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது டி.வி.யின் முன்னால் நூறு சதவிகிதம் அமர்ந்திருப்பார்கள். பெண்கள் மோகன்லாலை ‘தாமரை’ என்று செல்லப் பெயரிட்டு அழைப்பார்கள். அதற்குக் காரணம் – தாமரை எப்போதும் தண்ணீரில் மிதப்பதைப் போல, மோகன்லாலும் எப்போதும் ‘தண்ணி’யில்… அதன் காரணமாக அவருடைய மனைவி தன் மகனுடன் அவரை விவாகரத்து செய்துவிட்டு, மோகன் லாலின் நண்பர் ஒருவரையே திருமணம் செய்து கொள்கிறார்.
பல மொழிகளைக் கற்ற, புகழ் பெற்ற நூல்கள் பலவற்றையும் படித்த, உலக வரலாறுகளைக் கரைத்துக் குடித்த மோகன்லால் ஒருநாள் மது அருந்தும் பழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரிய உதயத்தைப் பார்க்கிறார்… மலர்களைப் பார்க்கிறார்... சந்தோஷமாக நடந்து செல்லும் ஆண்களையும், பெண்களையும் பார்க்கிறார். ‘உலகம் இவ்வளவு அழகாக இருக்கிறதா? இவ்வளவு நாட்களாக நாம் அதைத் தவற விட்டு விட்டோமே!’ என்று நினைத்து வருந்துகிறார்.
மோகன்லாலைத் திருந்தச் செய்த அந்த நிகழ்ச்சி எது?
இந்த படத்திற்கு கேரள அரசாங்கம் வரி விலக்கு அளித்திருக்கிறது.
இந்த படத்தை ஒரு முறை பார்த்தால், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்தலாம்.. நிறுத்த நினைக்கலாம்… இப்போது இல்லையென்றாலும், என்றாவதொரு நாள்…
ரஞ்சித் இயக்கிய இந்தப் படத்தில் மோகன்லாலின் யதார்த்த நடிப்பைப் பார்த்து பல இடங்களிலும் நான் உணர்ச்சி வசப்பட்டு கை தட்டினேன்.