தட்டத்தின் மறயத்து
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3628
நான் சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த மலையாளப் படமிது. நடிகர், கதாசிரியர் ஸ்ரீநிவாசனின் மகன் வினீத் ஸ்ரீநிவாசன் (‘அங்காடித் தெரு’ படத்தில் இடம் பெற்ற ‘அவள் அப்படியொன்றும் அழகில்லை’ என்ற புகழ் பெற்ற பாடலைப் பாடியவர்) இயக்கிய படம்.
ஒரு கவித்துவத்தன்மை கொண்ட ஒரு அருமையான காதல் கதையை ‘ஏ-ஒன்’ என்று கை தட்டி பாராட்டக் கூடிய அளவிற்கு வினீத் படமாக இயக்கியிருந்தார்.
ஒரு நடுத்தர நாயர் வகுப்பைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞனுக்கும், ஆய்ஷா என்ற கடுமையான விதி முறைகளைப் பின்பற்றும் வசதி படைத்த ஒரு முஸ்லீம் குடும்பத்தைச் சேர்ந்த அழகு தேவதைக்குமிடையே உண்டாகும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படமிது.
படத்தின் ஆரம்பத்திலேயே ‘A love story of a Nair boy and a Muslim girl’ என்று எழுத்து போடும்போதே, படத்தின் மீது நமக்கு ஒரு எதிர்பார்ப்பு உண்டாகி விடுகிறது.
பர்தாவிற்குப் பின்னால் எப்போதும் மறைந்திருக்கும் ஒரு அழகுப் பெண்ணின் இதயத்தில் அந்த ஹிந்து இளைஞன் எப்படி இடம் பிடிக்கிறான், அந்தப் பெண்ணின் மனம் காலப் போக்கில் அவன் மீது எப்படி காந்தமென ஈர்க்கப்படுகிறது, அந்த காதலுக்கு அவனுடைய நண்பர்களும் அவளுடைய தோழிகளும் எப்படியெல்லாம் உதவுகிறார்கள் என்பதை மிகவும் யதார்த்தமாக சித்தரித்திருக்கிறார் வினீத் ஸ்ரீநிவாசன்.
சிறைக்குள் அடைக்கப்படும் கதாநாயகனின் காதலுக்கு உதவும் போலீஸ் இன்ஸ்பெக்டராக மனோஜ் கே.ஜெயன். என்ன இயல்பான நடிப்பு! வெல்டன் மனோஜ்!
நிவீன் பாலி, இஷா தால்வர் நடித்திருக்கும் இப்படத்தின் இறுதி காட்சியில் நம் கைத் தட்டல்களை அள்ளிச் செல்பவர் கதாநாயகியின் தந்தையாக வரும் நடிகர் ஸ்ரீநிவாசன். காதலுக்கு பச்சை கொடி காட்டி, கதையின் திருப்புமுனையாக இருப்பவரே அவர்தானே!
இயற்கை அழகு ஆட்சி செய்யும் கேரளத்தின் தலசேரி, கண்ணூர் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் வினீத் ஸ்ரீநிவாசனுக்கு இன்னொரு மகுடம்!