கனவு ராஜாக்கள் - Page 32
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9295
விஜயகாந்தை ஜப்பானுக்கு அழைத்துச் சென்ற இயக்குநர்!
சுரா
‘பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற படத்தை இயக்கிய வி.அழகப்பனை நம்மால் எப்படி மறக்க முடியும்?
எனக்கு இயக்குநர் வி.அழகப்பனை 1981ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். நான் பார்க்கும்போது அவர் நடிகர் விஜயனைக் கதாநாயகனாக வைத்து ‘கண்ணிலே அன்பிருந்தால்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அதற்கு முன்னால் உதயசங்கர், மேனகா என்ற இரு புதுமுகங்களை வைத்து ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். அந்தப் படத்தை நான் பழனியில் பார்த்தேன். நான் விரும்பாத சில காட்சிகள் அந்தப் படத்தில் இருந்தாலும், பல காட்சிகளில் இயக்குநரின் திறமை அதில் தெரிந்தது. அந்தக் காரணத்தால் நானே அவரை தேடிச் சென்று பார்த்தேன். ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படத்தில் நான் கண்ட சில குறைகளை அவரிடம் சொன்னேன். குறிப்பாக - இடைவேளை காட்சி. நான் சொன்னதை அழகப்பன் ஒத்துக் கொண்டார். இடைவேளைக்குப் பிறகு படம் பார்ப்போரை மீண்டும் அரங்கத்திற்குள் கொண்டு வருவதற்காக அதைச் செய்ததாக அவர் சொன்னார். அந்தச் சந்திப்பிற்குப் பிறகு எங்களுக்குள் ஒரு நெருங்கிய நட்பு உண்டானது.
‘கண்ணிலே அன்பிருந்தால்’ முற்றிலும் முடிவடைந்தும், விஜயனுக்கு மார்க்கெட் மதிப்பு இல்லாமற் போனதால், படம் திரைக்கு வராமல் நின்று விட்டது. அதற்குப் பிறகு அழகப்பன் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டார். மீண்டும் படத்தை இயக்குவதற்காக பல வகைகளிலும் அவர் போராடினார். அப்போது நான் தியாகராய நகரில் இருந்தேன். அவரும் அங்குதான் இருந்தார். நானும் அவரும் அடிக்கடி சாலையில் சந்திப்போம். பல கதைகளையும் என்னிடம் அவர் கூறுவார். தேவராஜ்- மோகனிடம் அசோசியேட் இயக்குநராக தான் பணியாற்றிய நாட்களைப் பற்றி அவர் கூறுவார். ‘அன்னக்கிளி’ படத்தில் தான் இணை இயக்குநராகப் பணியாற்றியதையும், அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்ததையும் அவர் என்னிடம் பல சம்பவங்களுடன் கூறியிருக்கிறார். பல வெற்றிப் படங்களில் பணியாற்றி, மிகச் சிறந்த அனுபவங்களைப் பெற்றிருக்கும் அழகப்பன் பட உலகில் முறையான வாய்ப்பு கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறாரே என்று பல நேரங்களில் நான் கவலைப்பட்டிருக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1985ஆம் ஆண்டில் வி.அழகப்பனுக்கு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது. அழகப்பனின் திறமையை நன்கு தெரிந்து கொண்டிருந்த படத்தொகுப்பாளர் வி.ராஜகோபால் அந்த வாய்ப்பை அவருக்கு அளித்தார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘ஆகாயத் தாமரைகள்’. சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ரேவதி கதாநாயகியாக அதில் நடித்தார். ‘மண்வாசனை’ படம் திரைக்கு வந்து மக்கள் மத்தியில் ரேவதி ஒரு பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. ஒட்டன் சத்திரத்தில் நடைபெற்ற அப்படத்தின் படப்பிடிப்பிற்கு நான் போயிருந்தேன். சுரேஷுக்கும் ரேவதிக்கும் நடிப்பு சொல்லிக் கொடுத்து இயக்கிக் கொண்டிருந்த அழகப்பனைப் பார்த்தபோது எனக்கு பாரதிராஜாதான் ஞாபகத்தில் வந்தார். அப்படத்தின் ஒரு காட்சியில் சாணத்தைத் தட்டிக் கொண்டே நீளமான வசனத்தை ஒரே டேக்கில் பேசி நடித்த ரேவதியின் திறமையைப் பார்த்து, கூடியிருந்த கிராமத்து மக்கள் தங்களை மறந்து கைகளைத் தட்டினார்கள். அவர்களுடன் நானும் சேர்ந்து கைகளைத் தட்டினேன்.
‘ஆகாயத் தாமரைகள்’ திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. அதைத் தொடர்ந்து வி.அழகப்பன், தரங்கை சண்முகம், மோகன் நடராஜன் மூவரும் சேர்ந்து ஒரு பட நிறுவனத்தை ஆரம்பித்தார்கள். அதுதான் ஸ்ரீ ராஜகாளியம்மன் பட நிறுவனம். அந்நிறுவனத்தின் மூலம் ‘பூக்களை பறிக்காதீர்கள்’ என்ற படத்தை ஆரம்பித்தார்கள். அப்படத்தை அழகப்பன் இயக்கினார். சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, நதியா கதாநாயகியாக நடித்தார். ‘பூவே பூச்சூடவா’ திரைக்கு வந்து நதியா மக்கள் மனங்களில் இளவரசியாக வாழ்ந்து கொண்டிருந்த காலம் அது. அந்தப் படத்திற்கு டி.ராஜேந்தர் மிகவும் சிறப்பாக இசையமைத்தார். தன் படங்கள் இல்லாமல், வெளிப் படம் ஒன்றிற்கு டி.ராஜேந்தர் இசையமைப்பது அதுவே முதல் முறை. ஊட்டி, மூணாறு, கொடைக்கானல் ஆகிய இடங்களில் வளர்ந்த ஒரு கவித்துவமான காதல் கதை அது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படமும், ‘பூக்களை பறிக்காதீர்கள்’ படமும் ஒரே நாளில் திரைக்கு வந்தன. பெரிதாக எதிர்ப்பக்கப்பட்ட, பிரம்மாண்ட படமான ‘விக்ரம்’ வர்த்தக ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு ஓடாமல் போக, சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘பூக்களை பறிக்காதீர்கள்’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. அதில் இடம் பெற்ற ‘பூக்களைத்தான் பறிக்காதீங்க...’, ‘மாலை என்னை வாட்டுது...’, ‘அம்மாடி சின்னப் பெண்ணு...’ ஆகிய டி.ராஜேந்தரின் பாடல்கள் இப்போது கூட நம் இதயங்களில் ஒலித்துக் கொண்டுதானே இருக்கின்றன!
ஸ்ரீராஜகாளியம்மன் நிறுவனம் தயாரித்து, வி.அழகப்பன் இயக்கிய அடுத்த படம் ‘பூ மழை பொழியுது’ விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட முதல் படம் அதுதான். அந்தப் படத்திற்கு இந்திப் பட இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன் இசையமைத்தார். ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய இடங்களில் அதன் படப்பிடிப்பு நடைபெற்றது. சுரேஷ் இரண்டாம் கதாநாயகனாக நடிக்க, நதியா அப்படத்தின் கதாநாயகியாக நடித்தார். ஆர்.டி.பர்மன் இசையமைப்பில் அமைந்த ‘நதியா நதியா நைல் நதியா…’ என்ற கவிஞர் வாலியின் இனிய பாடலை நம்மால் மறக்கத்தான் முடியுமா?
தொடர்ந்து அழகப்பன் இயக்கிய படம் ‘நம்ம ஊரு நல்ல ஊரு’. இயக்குநராக இருந்த ராமராஜனை அந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார் அழகப்பன். ரேகா கதாநாயகியாக நடித்தார். அழகப்பனின் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் அது. திரைக்கு வந்து அந்தப் படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து மோகன், நளினி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரை வைத்து ‘குங்குமக் கோடு’ என்ற படத்தை அழகப்பன் இயக்கினார். ஒரு இளம் விதவையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படம் மிகவும் தாமதமாக வெளியிடப்பட்டதால், வர்த்தக ரீதியாக அது தோல்வியைத் தழுவியது. எனினும், அப்படத்திற்காக எஸ்.ஏ.ராஜ்குமார் எழுதி இசையமைத்த ‘தாலாட்டும் நிலவுக்கு காவலாய் வானம் இருக்குது... தள்ளாடும் மலருக்குக் காவலாய் தென்றல் இருக்குது... பெண்ணே உனக்குக் காவலாய் என்ன இருக்குது?’ என்ற பாடல் இப்போதும் என் மனதில் பசுமையாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.
தொடர்ந்து பிரபு, சரிதா, அமலா ஆகியோரை வைத்து அழகப்பன் ‘பூப் பூவா பூத்திருக்கு’ என்ற படத்தை இயக்கினார். அருமையான குடும்பக் கதை அது. டி.ராஜேந்தர் அப்படத்திற்கு இசையமைத்தார். பல காட்சிகள் அந்தமானில் படமாக்கப்பட்டன. சரிதாவின் மிகச் சிறந்த நடிப்பைக் கொண்ட படம் ‘பூப் பூவா பூத்திருக்கு’. அது திரைக்கு வந்து சிறந்த வெற்றியை பெற்றது. டி.ராஜேந்தர் எழுதி இசையமைத்த ‘எங்கப்பா வாங்கித் தந்த குதிரை...’ என்ற பாடல் மக்களின் மனங்களில் இப்போது கூட ஒலித்துக் கொண்டிருக்கின்றது. அந்தப் படத்தின் க்ளைமாக்ஸைப் பார்த்து, அழாதவர்கள் யார்? வி.அழகப்பன் இயக்கிய படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ‘பூப் பூவா பூத்திருக்கு’தான். பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே, படமாக்கப்பட்ட காட்சிகளை வசனத்துடன் அழகப்பன் தன் நண்பர்களுக்கும், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் திரையிட்டுக் காட்டினார். அதற்கு என்னையும் அழைத்திருந்தார். படம் முடிந்து வெளியே வந்து நான் அடக்க முடியாமல் அழுதேன். அதைப் பார்த்த அழகப்பன் என் தோளில் தன் கையை வைத்து ‘அழாதீங்க சார்… இது படம்தானே?’ என்று தேற்றியதை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.
‘அன்னக்கிளி’, ‘கல்யாணராமன்’ படங்களைத் தயாரித்த எஸ்.பி.டி. பிலிம்ஸுக்காக அழகப்பன் இயக்கிய படம் ‘இரண்டில் ஒன்று’. ராம்கி, நதியா நடிக்க, ஒரு கொடூரமான போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் அப்படத்தில் ரகுவரன் நடித்திருந்தார். ரகுவரனின் அபாரமான நடிப்புத் திறமையைக் கொண்ட படம் அது. தணிக்கையின் போது பல சிரமங்களையும் அனுபவித்த அப்படம் திரைக்கு வந்து எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தொடர்ந்து ரகுவரன் கதாநாயகனாக நடிக்க ‘என் வழி தனி வழி’ என்ற படத்தை அழகப்பனே சொந்தத்தில் தயாரித்து, இயக்கினார். மாறுபட்ட கதையைக் கொண்ட அப்படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவி, அழகப்பனுக்கு மிகப் பெரிய பொருளாதார வீழ்ச்சியைக் கொடுத்துவிட்டது. தாங்க முடியாத பண இழப்பில் இருந்த அழகப்பனுக்கு, அப்போது முன்னணி நட்சத்திரமாக இருந்த ராமராஜன் கால்ஷீட் கொடுத்து உதவினார். அப்படி ஆரம்பிக்கப்பட்ட படம்தான் ‘தங்கமான ராசா’. ராமராஜன், கனகா நடித்த அந்தப் படத்தை அழகப்பன் இயக்கினார். 100 நாட்கள் ஓடி அது சாதனை புரிந்தது. அதற்குப் பிறகு அழகப்பன் அர்ஜுன் நடிக்க, ‘தங்கத் தாமரைகள்’ என்ற படத்தையும், ராமராஜன் நடித்த ஒரு படத்தையும் இயக்கினார்.
பின்னர் மம்மூட்டி கதாநாயகனாக நடித்த ‘ஜாக்பாட்’ என்ற மலையாள படத்தின் தமிழ் உரிமையை வாங்கினார் அழகப்பன். மலையாள படத்தில் இருந்த காட்சிகளுடன், தமிழில் சில காட்சிகளை தன் இயக்கத்தில் அவர் படமாக்கினார். மம்மூட்டிக்கு தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் ஒரு மரியாதை இருந்ததால், அப்படத்தை எளிதில் விநியோகம் செய்துவிட முடியும் என்று அழகப்பன் எதிர்பார்த்தார். ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை. படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க தயாராக இல்லை. மிகப் பெரிய தொகையை அழகப்பன் வெளியில் கடன் வாங்கியிருந்தார். ‘ஜாக்பாட்’ படத்தை திரைக்குக் கொண்டு வர முடியாத்தால், அழகப்பனுக்கு மிகப் பெரிய இழப்பு உண்டானது.
அதற்கடுத்து வி.அழகப்பன் படமெதுவும் இயக்கவில்லை. திரையுலகில் பல மாற்றங்கள் உண்டாயின. ஏற்கெனவே இருந்தவர்கள், மக்களால் வீசி எறியப்பட்டார்கள். புதிதாக பல இளைஞர்கள் இயக்குநர்களாக அறிமுகமாகி வியக்கத்தக்க சாதனைகள் புரிந்தனர். அப்படி படவுலகம் மறந்து போய்விட்ட ஒரு மனிதராக வி.அழகப்பன் ஆகிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு உடல் ரீதியாக அழகப்பன் பாதிக்கப்பட்டார். அவரால் நடக்கக் கூட முடியவில்லை. வாக்கிங் ஸ்டிக்கை ஊன்றிக் கொண்டே சுவரைப் பிடித்துக் கொண்டு நடக்கக் கூடிய சூழ்நிலை அவருக்கு உண்டானது. ராணுவ வீரரைப் போன்ற மிடுக்கான தோற்றத்தையும், யாருக்கும் தலை வணங்காத குணத்தையும், கம்பீரமான நடவடிக்கைகளையும், சிங்கத்தைப் போன்ற திமிரையும், அளவற்ற தன்னம்பிக்கையையும் கொண்டிருந்த அழகப்பனால் வெறுமனே எப்படி வீட்டில் உட்கார்ந்து கொண்டிருக்க முடியும்? தன் விதியை தானே நொந்து கொண்டு அவர் காலத்தைக் கடத்திக் கொண்டிருந்தார்.
ஒரு வருடத்திற்கு முன்னால் சிறிதும் எதிர்பாராமல் வி.அழகப்பன் மரணத்தைத் தழுவி விட்டார். அவர் மரணமடைந்த செய்தி எனக்கே சமீபத்தில்தான் தெரிய வந்தது. எத்தனையோ வெற்றிப் படங்களை இயக்கிய வி.அழகப்பன், யாருக்கும் பரவலாக தெரியாமலே இறந்து விட்டார் என்பதை நினைக்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. படவுலகிலிருந்து அவர் விலகி இருந்த காரணத்தால், அவருக்கும் எனக்கும் பல வருடங்கள் எந்தவித தொடர்பும் இல்லாமல் போய்விட்டது. நான் உயர்வாக மதிக்கும் ஒரு நல்ல இயக்குநரை, அருமையான நண்பரை பல வருடங்கள் பார்க்காமலே இருந்து விட்டோமே என்பதற்காக நான் மிகவும் கவலைப்படுகிறேன்.
அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். மூத்த மகன் தற்போது அமெரிக்காவில் நல்ல சம்பாத்தியத்தில் இருக்கிறார். இளைய மகன் ஒரு திரைப்படத்தை தற்போது இயக்கிக் கொண்டிருக்கிறார். மகளுக்கு திருமணமாகி விட்டது.வி.அழகப்பன் என்ற மனிதர் இந்த உலகத்தை விட்டு நீங்கியிருக்கலாம். ஆனால், அவர் இயக்கிய சிறந்த திரைப்படங்கள் நம் உள்ளங்களில் நிரந்தரமாக என்றென்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும்.
தொடரும்...