விருந்து - Page 2
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6675
‘‘என்ன ஆச்சு மோகன் உங்களுக்கு? அவள் கேட்டாள்: ‘‘என்ன ஆச்சு?’’ அவள் பூசியிருந்த வாசனைப் பொருட்கள் அவனைப் பாடாய்ப்படுத்தின. அவன் முகத்தை உயர்த்தாமலே சொன்னான்:
‘‘தயவு செய்து இன்னைக்கு என்னை இங்கேயே இருக்க விட்டுடு... எங்கேயும் போகணும்னு இன்னைக்கு எனக்குத் தோணல!’’
‘‘என்ன சொல்றீங்க நீங்க?’’ - அவளின் குரல் முன்பிருந்ததை விட உயர்ந்தது: ‘‘வர்றோம்னு சொல்லிட்டு இப்போ போகாம இருந்தா நல்லாவா இருக்கும்? இப்படி கீழ்த்தரமா நடக்க நீங்க எங்கதான் படிச்சீங்களோ தெரியல, உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்ல! எனக்கு நல்லாவே தெரியும். சரி எழுந்திரிங்க... நாம போகலாம், இப்பவே மணி ஏழே முக்கால் ஆயிடுச்சு!’’
அப்போது மேலே விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் பம்பரத்தை நூலால் சுழற்றி கொண்டிருந்தார்கள். அதன் ஓசை அவனுடைய மனதிற்குள் ஒரு வேதனையின் தொடர்ச்சியைப் போல எழும்பி திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
‘‘நான் எங்கேயும் வரல!’’ - அவன் சொன்னான்.
‘‘ஏன் மோகன், இப்படி சின்னப் பிள்ளை மாதிரி நடக்குறீங்க?’’ - அவள் கெஞ்சுகிற குரலில் சொன்னாள்: ‘‘நாம எப்படி போகாம இருக்க முடியும்? உங்களோட மேலதிகாரியோட பார்ட்டி இல்லியா? அந்த மனிதரை நம்மால வேண்டாம்னு ஒதுக்க முடியுமா?’’
அப்போதும் தலையைச் சொறிந்தவாறு இருந்த அவன் சொன்னான்:
‘‘நான் வர்றதா இல்ல!’’
அவள் அவனின் தலைமுடியைக் கைகளால் கோதிவிட்டாள். அவனுடைய கை விரல்களைப் பிடித்து முத்தமிட்டாள். ‘‘சரி, எந்திரிங்க மோகன்....’’ - அவள் முணு முணுக்கும் குரலில் சொன்னாள்.
‘‘அந்த ஆளை எப்படி நாம வேண்டாம்னு ஒதுக்க முடியும்?’’
அவன் எழுந்து அவளைக் கொஞ்சம் கூட பார்க்காமல், படுவேகமாக நடந்தான். இலேசாக புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு அவனை அவள் பின்பற்றினாள்.
‘‘இதுக்கு மேல தாமதமா போற அளவுக்கு முக்கியத்துவம் உள்ளவங்க நாம இல்லியே! ’’ - அவள் சொன்னாள். படிகளில் இறங்குகிறபோது, அவனின் முகத்தை அவள் பார்த்தாள். புன்சிரிப்பு, கோபத்தின் நிழலாட்டம்.... - எதுவுமே அவளுக்குத் தெரியவில்லை. அதனால் விஷயத்தை மாற்றும் எண்ணத்துடன் அவள் கேட்டாள்:
‘‘இன்னைக்கு நல்லவேளை மழை பெய்யல. மழை பெய்தால் என்னதான் கவனமா இருந்தாலும் என் புடவை நாசமாயிடும். கார்ல ஏறி உட்கார்றதுக்குள்ள ஓரமெல்லாம் நனைஞ்சிடும். அதுதான் எனக்கு பயமே!!’’
அவன் காரை ஒட்ட ஆரம்பிக்கவும், மழை துளிகள் திடீரென்று வந்து தெருவில் விழவும் சரியாக இருந்தது.
‘‘நான் சொல்லல?’’ - அவள் சொன்னாள்: ‘‘எனக்கு முன்னாடியே தெரியும், இன்னைக்கு கட்டாயம் மழை பெய்யும்னு! என்னோட வெள்ளைப் புடவை...’’
அவள் இன்னொரு முறை அந்தப் புடவையைப் பற்றி ஏதாவது சொன்னால் நிச்சயமாக அவளைக் கொலை செய்வது உறுதி என்று அவன் மனதிற்குள் நினைத்தான். அவனுடைய கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.
‘‘மோகன், இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?’’ - அவள் கேட்டாள்: ‘‘உங்க கைகள் பயங்கரமா நடுங்குதே! உங்களுக்குக் காய்ச்சல் ஏதாவது இருக்கா என்ன?’’
‘‘காய்ச்சலா...? ஹா... ஹா...’’
அவன் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அவனுடைய தேவையற்ற அந்தச் சிரிப்பு சீக்கிரம் முடியாதா என்று மனதிற்குள் வேண்டியவாறு அவள் அமர்ந்திருந்தாள். மழைத் துளிகள் பயங்கர வேகத்துடன் காரில் வந்து மோதிக் கொண்டிருந்தன. அவன் மீண்டும் காரில் இருந்தவாறு பயங்கரமாகச் சிரித்தான். தன் மீது அவனுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை என்பது அவளுக்குப் புரிந்தது. ஒருநாளும் விரும்பியதே இல்லையா? அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அன்று அந்த விருந்தில் வைத்து அவர்களை அழைத்திருந்த மனிதர் சொன்னார்:
‘‘உங்களோட அழகு மேலும் கூடியிருப்பதா எனக்கு படுது!’’
என்ன காரணத்தாலோ, அந்த நிமிடம் அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.