மொட்டச்சி
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 6872
“மாஆஆஆ... மாஆஆஆ...”- குழந்தையொன்று அழும் குரல் காற்றோடு கலந்து ஒலித்தது.
சிதம்பரய்யரின் வீட்டிலிருந்து தான் அந்த அழுகைக் குரல் வந்தது. அவரின் வீடு என் வீட்டிற்கு நேர் எதிரில் அமைந்திருந்தது.
அதென்ன திடீரென்று ஒரு அழுகைக் குரல் அந்த வீட்டிலிருந்து என்ற சிந்தனையில் தீவிரமாக ஆழ்ந்து போனேன் நான்.
என் வீட்டு முற்றத்தில் அமர்ந்து பார்த்தால் அந்த வீட்டில் நடக்கின்ற எல்லாமே மிகவும் நன்றாகத் தெரியும். மண்ணெண்ணெய் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் சிதம்பரய்யர் குட்டி போட்ட பூனை மாதிரி குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருப்பது இங்கிருந்து நன்றாகத் தெரிகிறது.
அய்யரின் மனைவி கர்ப்பமாக இருந்தாள். ஒருவேளை அவளுக்குப் பிரசவம் ஆகியிருக்குமோ?
“மாஆஆஆ... மாஆஆஆ...”’
மீண்டும் அழுகை சத்தம் காற்றில் கலந்து வந்தது. சந்தேகமேயில்லை. சிதம்பரய்யர் மற்றொரு குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறார். ஆமாம்... குழந்தை என்ன குழந்தையாக இருக்கும்?
ஆணா, பெண்ணா?
ம்... பொழுது புலர்ந்தால் தெரிந்துவிடப் போகிறது.
சிதம்பரய்யரின் குடும்பம் மிகப் பெரிய குடும்பம். ஐம்பது வயதுடைய அவர் வறுமையின் கொடும்பிடியில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் நாயகர். அவரின் மனைவிக்கு அதிகபட்சம் போனால் வயது நாற்பத்தைந்தை ஒட்டித்தானிருக்கும். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கைக்கோ ஒரு அளவேயில்லை. எத்தனைக் குழந்தை இருக்கும் என்று பலமுறை சிந்தித்துப் பார்த்தும், என்னால் இந்த விஷயத்தில் மட்டும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியவில்லை. இரண்டு வயதிலிருந்து பத்து வயதுக்கு மத்தியில் வரும் குழந்தைகள் மட்டும் ஐந்து அல்லது ஆறு இருக்கும். எடையை மட்டும் நீக்கிப் பார்த்தால் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுமே ஒரே மாதிரிதான் இருக்கும். கடைக் குட்டியைத் தவிர, மீதி எல்லாமே பெண்கள்தாம்.
இது போதாதென்று, இப்போதும் ஒரு பிரசவம்!
மூத்த பெண்ணுக்கு சுமார் பதினெட்டு வயதிருக்கும். அடுத்தவளின் வயது குறித்து என்னால் உறுதியாகச் சொல்ல முடியாத நிலை. தலை மொட்டையடிக்கப்பட்டு, வெள்ளைப் புடவையால் உடம்பைக் கால் முதல் தலைவரை முற்றிலும் போர்த்திக்கொண்டு... இதுதான் மூத்த பெண்ணின் நிரந்தரக் கோலம். ஆம்... அவள் ஒரு இளம் விதவை.
பத்துக்கும் பதினெட்டுக்கும் மத்தியில் சிதம்பரய்யருக்குக் குழந்தைகள் அதிகமாக இல்லாததற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்று அந்த மனிதர் சில வருடங்கள் பிரம்மச் சரியத்தைக் கடைப் பிடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிறந்த குழந்தைகளில் சில இறந்து போயிருக்க வேண்டும்.
நான் இந்த வீட்டுக்கு வந்து சுமார் ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. அன்றிலிருந்து அந்தக் குடும்பத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனித்துக் கொண்டே வந்திருக்கிறேன். வறுமையின் கொடுமையில் சிக்கி அல்லல்பட்டுத் தவிக்கும் ஒரு சாதாரண இந்தியக் குடும்பத்தின் பிரதிநிதியாக அந்தக் குடும்பம் விளங்குவது போல் எனக்குத் தோன்றும்.
ரெயில்வே ஸ்டேஷனில் புகைவண்டி வருகின்ற சமயங்களில் காப்பி, வடை விற்பனை செய்வதுதான் சிதம்பரய்யரின் தொழில். பெரிய ஒரு அலுமினியத்தில் ஆன தூக்குப் பாத்திரத்தில் காப்பியையும், ஒரு தட்டுக் கூடையில் வடையையும் வைத்துக் கொண்டு ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் கூவிக்கூவி அவர் விற்பனை செய்வதை நித்தமும் நாம் காணலாம்.
அவை விற்பனையானால்தான், சிதம்பரய்யரின் வீட்டு அடுப்பு புகையும்.
உண்மையிலேயே இந்த வியாபாரத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு அடுப்பு புகையுமா? இது குறித்து ஒரு முறையல்ல பலமுறை நான் ஆலோசித்துப் பார்த்ததுண்டு. காப்பி, வடை விற்பதில் அப்படியென்ன பெரிதாக லாபம் கிடைத்துவிடப் போகிறது? வயிறு நிறைய உணவு கிடைக்க வழியில்லை என்பது மட்டும் நிச்சயம்.
அய்யர் வீட்டு சமையலறையிலிருந்து வடையின் மணம் சில நேரங்களில் காற்றில் கலந்து வரும். சிறுகுழந்தைகள் ‘அம்மா... வடை... வடை’ என்று தங்கள் தாயிடம் கெஞ்சுவது சில நேரங்களில் தெளிவாகக் கேட்கும்.
ஒரு நாள் இப்படித்தான் மூத்த மகளை “மொட்டச்சி... மொட்டச்சி...” என்று சிதம்பரய்யரின் மனைவி திட்டுவது வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த என் காதுகளில் தெளிவாக விழுந்தது. காரணம்- குழந்தைகளுக்கு இரண்டு மூன்று வடைகளை அவள் எடுத்துக் கொடுத்துவிட்டாளாம்.
அவள் வெள்ளைச் சேலை நுனியால் கண்ணீரைத் துடைத்தவாறு நின்று கொண்டிருந்தாள். ‘மொட்டச்சி... மொட்டச்சி’ என்று அவளின் அன்னை திட்டுவது அப்போதும் நிற்கவில்லை.
அப்பப்பா... எத்தனைக் கொடுமையான வார்த்தை அது! பொதுவாக விதவைகளை எல்லாருமே அப்படித்தான் அழைக்கிறார்கள். கணவன் இறந்தவுடன், தலையை மொட்டையடிக்க வேண்டும். அதற்குப் பின் குங்குமம் வைக்கக் கூடாது. வளையல் அணியக்கூடாது. வெள்ளைப் புடவையைப் போர்வையாய்ப் போர்த்திக் கொண்டு, உயிரற்ற சவங்களாய் அவர்கள் நடமாடித் திரிய வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அவர்களுக்குத் திருவிழாக்கள் இல்லை. மகிழ்ச்சியான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களைக் கண்டாலே கெட்ட சகுனமாம். சொல்லப்போனால், ஒரு குஷ்டரோகியை நடத்துவதைப் போலத்தான் இந்தப் பாழாய்ப் போன சமுதாயம் விதவைகளை நடத்துகிறது.
அந்தப் பெண்ணைப் பார்க்கும்போது எனக்கே ரொம்பவும் பரிதாபமாக இருக்கும்.
சில சமயங்களில் ஜன்னலோரம், ஏக்கம் முகத்தில் குடிகொள்ள அவள் நின்றிருப்பாள். அவள் கண்ணீர் வழிய சிலையாய் நின்று கொண்டிருப்பதை பல சமயங்களில் அவள் முகமே வேறு மாதிரியாகத் தோன்றும். மொட்டையடிக்கப்பட்ட தலை, உடம்பைப் போர்த்திய வெள்ளைப் புடவை, அழுது தளர்ந்துபோன கண்கள் - எல்லாம் அவளின் இளமையை முதுமையாய் பிரதிபலிக்கும். அழுகை நின்றவுடன் மீண்டும் இளம் வயது பெண்ணாகி விடுவாள். அழுது சிவந்துபோன கண்கள் வானத்தையே வெறித்து நோக்கிக் கொண்டிருக்கும். இழந்த ஏதோவொன்றைத் தேடுவதுபோல் இருக்கும் அவள் செயல்.
அவள் ஏன் அழ வேண்டும்? அவளால் சிரிக்க முடியாதா? அவளின் தங்கை சிரிக்கும்போது, அவள் மட்டும் ஏன் சிரிக்காமல் இருக்க வேண்டும்?
ம்... தலை மொட்டையடிக்கப்பட்ட ஒரு பெண் ஏன் சிரிக்க வேண்டும்? எல்லாம் யாருக்கு வேண்டி? யாரின் மனதை மகிழ்விக்க?
அவளைப் பொறுத்தவரை உயிரிருந்தும் உயிரற்ற சவம்தான். அவளுக்கென்று இன்னொரு வாழ்க்கை அமையவா போகிறது? நல்ல ஒரு பொருள்மேல் அவள் ஆசை வைக்கக்கூடாது. அவள் சிரித்தால் வயதானவர்கள் குற்றம் சொல்லுவார்கள்.
இந்த இளம் வயதிலேயே இந்தத் துர்பாக்கிய நிலை அவளுக்கு எப்படி நடந்தது? அவளின் கணவன் யாராக இருக்கும்? அவன் எப்படி மரணத்தைத் தழுவினான்? சாகும்போது அவனுக்கு எத்தனை வயதிருக்கும்?