
அவன் முகத்தில் காமத்தின் ரேகைகள் தெரிந்தன. அவள் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டாள்.
அன்று குழந்தைக்கு அருகில் தானும் தன்னுடைய கணவனும் படுத்த கட்டிலில் படுத்துக் கொண்டு அவள் சிறிது நேரம் கண்ணீர் விட்டு அழுதாள். ஒன்றிரண்டு தடவை யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்டு, அவள் நடுங்கினாள்.
காலையில் அவள் கதவைத் திறந்தபோது, ராமச்சந்திரன் போய்விட்டிருந்தான். ஆனால், அவன் அங்கு ஒரு இரவு தங்கினான் என்ற செய்தி ஊரெங்கும் இப்படிப்பட்ட செய்திகளுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவர்களிடம் போய்ச் சேர்ந்தது. கோவில் வாசல்களிலும் துணிக்கடைகளிலும் தன்னைப் பார்த்து பலரும் கிண்டலாகச் சிரிப்பதை அவளே கேட்டாள். ஒருநாள் அந்த வீட்டைப் பூட்டிவிட்டு, விவசாய வேலைகளைப் பார்ப்பதற்கு ஒரு பணியாளை ஏற்பாடு செய்துவிட்டு, அவள் குழந்தையுடன் அந்த ஊரை விட்டுக் கிளம்பினாள்.
ஒருவாரம் கழிந்ததும் வேலைக்கு இருந்த ஆளுக்கு அவள் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் திருச்சூரிலிருக்கும் ஒரு வீட்டு முகவரிக்கு தேங்காய்களை விற்றதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஒழுங்காக அனுப்பி வைக்கும்படி அவள் எழுதியிருந்தாள்.
மூன்று வருடங்களுக்குப் பிறகு அவள் மீண்டும் அந்த ஊருக்குத் திரும்பி வந்தாள். அவளுடன் குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் ஒரு வேலைக்காரியும், ஒரு அழகான இளைஞனும் வந்திருந்தார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த இளைஞனின் சிவந்த உதடுகளையும், கம்பீரமான தோற்றத்தையும் வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள்.
"இது யாரு? தெரியலையே!"- ஒரு ஆள் கேட்டான்.
"இது என் கணவர்"- அவள் சொன்னாள்.
அன்று இரவு பல வீடுகளிலும் பேசப்படும் ஒரு விஷயமாக அவள் மாறினாள். அவள் தன் கணவனைக் கொன்றவள் என்றும், கொஞ்சம் கூட வெட்கமில்லாதவள் என்றும் எல்லோரும் அவளைப் பற்றி தாறுமாறாகப் பேசிக் கொண்டார்கள்.
"அவளுக்கு காமவெறி... எனக்கு அது நல்லா தெரியும்" என்று பசுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த முரட்டுக் கிழவன் சொன்னான். அதைக் கேட்டு கள்ளுக்கடையில் இருந்த எல்லோரும் மனதிற்குள் சிரித்துக் கொண்டார்கள். "தன்னுடைய காமவெறி அடங்க இந்தக் கிழவனைக் கூட அவள் விட்டு வைக்கலியா? சிவ... சிவா..." என்ற அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.
ஆனால், அந்த ஊர் மக்களின் கருத்துக்களும், கிண்டல் பேச்சும் அவளைச் சிறிதும் கூட பாதிக்கவில்லை. தன்னுடைய புதிய கணவன் தன் மீது கொண்டிருக்கும் அளவற்ற அன்பு மூலம் தான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவள் என்ற எண்ணம் அவளுக்கு உண்டானது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook