பழைய ஒரு சிறிய காதல் கதை
- Details
- Category: சிறுகதைகள்
- Published Date
- Written by சுரா
- Hits: 7514
காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற... பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்... இளமையின் உஷ்ணத்தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது... இதயம் காட்டும் வழியில் பயணிப்பது... தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!
பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது... எல்லா வகைப்பட்ட பசியும்... எல்லா வகைப்பட்ட தாகமும்... அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்... சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்குவேன். புரட்சிவாதி... கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத்தின் தலைவன்... கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!
பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகையும்... நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.
நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.
தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்... இரவும் பகலும் செயல்பாடுகள்...
என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை... நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.
பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.
இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.
இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்படிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத்தைக் கொண்ட ஒரு இளம் பெண்ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்... பெண்ணரசி!
முதல் பார்வை...
பிறகு காதல் வலையில் சிக்குவதற்கு அதிக நிமிடங்கள் தேவைப்படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகிறேன்- மகாமாயே!
இப்படிப் பாடலைப் பாடியவாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்... வழிபாடு!
இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.
நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த்தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!
உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!
முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழைகள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை... சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.
என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்துடன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டினார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.
அந்த வெற்றிடம் என்று கூறப்படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி... ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று
கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கையின் வழியாக அனைத்தும் நன்றாகத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!
தெய்வமே!
அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?
நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!
அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்கவில்லை. ஏன் கேட்கவில்லை?
அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது... அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற்காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங்களில் மின்னலைப் போல பார்ப்பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?
இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர்களின் வீடுகள்.
நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!
அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண்மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.
ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவேயில்லை.