அம்பிகாபதி
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 3674
‘அம்பிகாபதி’
எனும்
அமர காவியம்
சுரா
அம்பிகாபதி...
- 1957ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, 100 நாட்களைத் தாண்டி ஓடிய படம்.
- படத்தின் கதாநாயகன்... நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
- கதாநாயகி ... P. பானுமதி.
- இப்படத்தைத் தயாரித்த பட நிறுவனம்... A.L.S. புரொடக்ஷன்ஸ்.
- படத்தை இயக்கியவர் P. நீலகண்டன்.
- இப்படத்தின் திரைக்கதையை எழுதியவர்கள்.... சக்தி கிருஷ்ணசாமி, சின்ன அண்ணாமலை, மா. லட்சுமணன்.
- உரையாடல்களை எழுதியவர் இயக்குநர் P. நீலகண்டன்.
- ‘அம்பிகாபதி’ படத்திற்கு மிகவும் அருமையாக இசையமைத்தவர் ஜி. ராமனாதன்.
- இப்படத்தின் கறுப்பு – வெள்ளை காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்தவர் V.ராமமூர்த்தி. கேவா கலரில் படமாக்கப்பட்ட காட்சிகளுக்கு ஒளிப்பதிவு செய்தவர் W.R.சுப்பாராவ்.
- இந்த படத்திற்கு படத் தொகுப்பாளராக பணி புரிந்தவர் R.தேவராஜன்.
- ‘அம்பிகாபதி’ ஒரு கவித்துவத் தன்மை நிறைந்த காதல் கதை.
- 12 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் நடைபெற்ற கதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
- இதே கதை ‘அம்பிகாபதி’ என்ற பெயரிலேயே 1937 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டு, மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் அம்பிகாபதியாக நடித்தவர் M.K.தியாகராஜ பாகவதர். அமராவதியாக நடித்தவர் M.R.சந்தானலட்சுமி. அப்படத்தை இயக்கியவர் அமெரிக்கரான எல்லிஸ் ஆர். டங்கன் (DUNGAN).
- இரண்டாவதாக தயாரிக்கப்பட்டு, வெற்றி பெற்ற இந்தப் படத்தில் அம்பிகாபதியாகவே படம் முழுக்க வாழ்ந்திருந்தார் நடிப்பு மேதை சிவாஜி கணேசன். என்ன அருமையான நடிப்புத் திறமையை அவர் வெளிப்படுத்தியிருந்தார்!
- காண்போரைக் கவரும் அழகு பெட்டகம் அமராவதியாக நடித்து, மக்களின் உள்ளங்களில் நிரந்தரமான ஒரு இடத்தைப பிடித்தவர் ‘பல்கலை அரசி’ P.பானுமதி. அவர் மிகவும் இயல்பாக நடித்து, மக்களின் கைத்தட்டல்களைப் பெற்றார்.
- அம்பிகாபதியின் தந்தை ‘கவிச் சக்கரவர்த்தி’ கம்பராக படத்தில் நடித்து, அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்தவர் M.K. ராதா.
- குலோத்துங்க சோழனாக வந்து, தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியவர்... சித்தூர் V. நாகையா.
- அம்பிகாபதியும் அமராவதியும் பங்கு பெறும் காதல் காட்சிகளை மக்கள் மிகவும் விரும்பி பார்த்தார்கள். அந்த காட்சிகளை தங்களையே மறந்து விட்டு, மக்கள் பார்த்தார்கள். சிவாஜி, பானுமதி இருவரின் நடிப்பிலும் முழுமையாக கரைந்து போயினர் மக்கள்.
- ‘சிந்தனை செய் மனமே’ என்ற பாடல் கர்னாடக இசை பின்னணியில் அமைந்த பாடல்! இப்போது அந்தப் பாடலைக் கேட்டாலும், நமக்குள் ஒரு சுகமான அனுபவம் உண்டாகும்.
- ஒட்டக் கூத்தராக நடித்து, தன் தனித்துவ நடிப்பால் தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்கு உயிர் தந்தவர் M.N. நம்பியார்.
- காதல் வானில் அம்பிகாபதியும், அமராவதியும் சிறகடித்து பறந்து திரிந்த காட்சிகளில் அவர்களுடன் சேர்ந்து நாமும் பறந்தோம் என்பதே உண்மை.
- ‘கண்ணிலே இருப்பதென்ன’ பாடல் காட்சியை ரசிக்காத மனமும் உண்டோ? அந்தப் பாடலில் ‘பானுமதி’ என்ற தன் பெயரை பானுமதியே உச்சரித்து பாடி, நடிக்கும் அழகு இருக்கிறதே! அதை ரசிக்காத மனிதரும் உண்டோ?
- ஒட்டக்கூத்தரின் பொறாமையையும், கோபத்தையும், ஆத்திரத்தையும் நம் கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார் M.N. நம்பியார்.
- இளவரசன் குலசேகரனாக ... K.A. தங்கவேலு.
- கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளலாக .... K.D. சந்தானம்.
- ‘வரும் பகைவர் படை கண்டு’ என்ற பாடலை தன் தனித்துவ குரலால் மிகவும் அருமையாக பாடியிருந்தவர் டி.எம். சவுந்தர்ராஜன்.
- நகைச் சுவை விருந்து படைத்தவர் ... N.S. கிருஷ்ணன். அவருடன் ... T.A. மதுரம். அவர்கள் இருவரும் பாடி, நடிக்கும் ‘கண்ணே உன்னால் நான் அடையும் கவலை கொஞ்சமா’ என்ற பாடலுக்கு திரையரங்கில் என்ன வரவேற்பு!
- ஒட்டக்கூத்தரின் நயவஞ்சகச் செயலால் அம்பிகாபதியும் அமராவதியும் அடையும் துன்பத்தைப் பார்த்து கலங்காமல் யாராலும் இருக்க முடியுமா?
- ‘மாசிலா நிலவே’ என்ற பாடல் இத்தனை வருடங்களுக்குப் பிறகும், நம் உள்ளத்தின் அடித்தளத்தில் உயிர்ப்புடன் வலம் வந்து கொண்டிருக்கிறதே! இது ஒன்றே போதும்.. அப்பாடலின் பெருமையைப் பறை சாற்றுவதற்கு!
- அம்பிகாபதியும் அமராவதியும் சந்தித்து மகிழ்வதற்கு உதவும் நல்ல மனம் படைத்த கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில்... ராஜ சுலோச்சனா. வழக்கம்போல தன் அழகான தோற்றத்தாலும், பாராட்டக் கூடிய நடிப்பாற்றலாலும் அனைவரையும் கவர்ந்தார் ராஜ சுலோச்சனா.
- A.கருணாநிதி ‘வெங்காயம்’ என்ற கதாபாத்திரத்தில் வந்து, தன் தனித்துவ நடிப்புத் திறமையைக் காட்டினார்.
- செண்பக தீவிற்கு தப்பித்துச் செல்லலாம் என்று அம்பிகாபதியும், அமராவதியும் முடிவெடுக்க ... அந்த முயற்சியில் பல பிரச்னைகள் உண்டாக... மனதை பதைபதைக்க வைத்த காட்சிகள் அவை!
- ‘வாடா மலரே’ என்ற முகாரி ராகத்தில் அமைந்த பாடலை நம்மால் மறக்க முடியுமா?
- அமராவதி மீது அம்பிகாபதி கொண்டிருக்கும் காதலுக்கு அளவுண்டோ? அதே போல அமராவதியின் உள்ளத்திற்குள் ஓடிக் கொண்டிருக்கும் காதல் அலைகளுக்கும்தான்....
- ‘ஆடட்டுமா கொஞ்சம் பாடட்டுமா’ என்ற பி. சுசீலா பாடிய பாடலை அந்த காலத்திலேயே அனைவரும் ரசித்தனர் ... பாடலில் முற்றிலும் கரைந்து போய் அமர்ந்திருந்தனர்.
- அம்பிகாபதியின் காதலை இல்லாமற் செய்ய வேண்டும் என்பதற்காக ஒட்டக்கூத்தர் முயல, அதை எதிர்த்து பல வகைகளிலும் அம்பிகாபதி முழு வீச்சுடன் போராட.... உண்மையிலேயே விறுவிறுப்புதான்!.
- ‘அமராவதியே என் ஆசை கனியமுதே’ என்ற டி.எம். சவுந்தர்ராஜன் பாடிய பாடலில், என்ன உயிரோட்டம்! காதலி மீது அம்பிகாபதி கொண்டிருக்கும் மோகத்தையும், தாகத்தையும் தன் குரலில் அப்படியே கொண்டு வந்து விட்டாரே டி.எம்.எஸ்!. பாடல் காட்சியில் அருமையாக நடித்த நடிகர் திலகமும்தான்!
- ‘வடிவேலும் மயிலும்’ என்ற காம்போஜி ராகத்தில் அமைந்த பாடல், இசையின் மீது நாட்டம் கொண்ட ஒவ்வொருவருக்கும் சுவை மிக்க தேன் என்று துணிந்து கூறலாம்.
- அம்பிகாபதிக்கு தன் தந்தை தண்டனை அளிக்க தீர்மானிக்க, காதல் தேவதையான அமராவதி வெகுண்டெழுகிறாளே! எப்படிப்பட்ட காட்சி அது! உண்மையிலேயே அந்த காட்சியில் பானுமதி எரிமலையேதான்!
- ‘வானம் இங்கே´ என்ற பாடல் காட்சி கேவா வர்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும். பாடல் படமாக்கப்பட்ட விதமே அருமை!
- தன் கவிதைகளின் மீது ஆத்திரத்தைக் கொட்டும் மன்னர் குலோத்துங்க சோழனின் செயலை நினைத்து, புயலென சீறும் அம்பிகாபதியைப் புகழாதவரும் உண்டோ? ஒரு உண்மையான கவிஞன் அப்படித்தான் சிங்கமென சீறுவான். சிவாஜி சிங்கமாகவே நமக்கு காட்சியளித்தார்.
- சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அம்பிகாபதியை ஒரு இரவு வேளையில் அமராவதி சந்திக்க வருகிறான். அந்த காட்சி எந்த அளவிற்கு கவித்துவ உணர்வுடன் படமாக்கப்பட்டிருந்தது!.
- வசந்த மண்டபத்தில் தன் முழு திறமையையும் காட்டுவதற்காக அம்பிகாபதி கம்பீரமாக நமக்கு முன்னால் தோன்றும் காட்சி, அனைவரின் உள்ளங்களிலும் என்றும் மறையவே மறையாது. சிவாஜியிடம் என்ன மிடுக்கு!
- இரு இளம் உள்ளங்களின் ஆழமான காதலையும், வரப் போகும் இனிய வாழ்க்கையையும் தீர்மானிக்கும் அந்த காட்சியில் எப்படிப்பட்ட ஒரு திருப்பம்! இப்படியொரு திருப்பத்தை நாம் எதிர்பார்த்தோமா? அந்த காட்சியில் அம்பிகாபதியும், அமராவதியும் மட்டுமா துடித்தார்கள்? படத்தைப் பார்த்த நாமும்தான்...
- படத்தின் உச்ச கட்ட காட்சியில் அம்பிகாபதியும் அமராவதியும் நம்மை கண்ணீர் சிந்த வைத்தார்கள் ... காதலின் அளவற்ற ஆழத்தை வெளிப்படுத்தி, நம்மை துயரக் கடலில் மூழ்க வைத்தார்கள். ‘அம்பிகாபதி’ திரைப்படத்தை ஒரு அமர காவியமாக ஆக்கிய அற்புத காட்சி அது! அந்த நினைவை விட்டு நீங்காத காட்சியில் தெய்வீக காதலர்களாவே வாழ்ந்து, நம் உள்ளத்தில் இடம் பெற்றனர் நடிப்பின் அரசர் சிவாஜி கணேசனும், நடிப்பின் அரசி பி. பானுமதியும்!
- ‘அம்பிகாபதி’ திரைப்படம் திரைக்கு வந்து 61 வருடங்களாகி விட்டன. இத்தனை வருடங்கள் கடந்தோடிய பிறகும், மக்களின் மனங்களில் காவியம் என வாழ்ந்து கொண்டிருக்கும் இப்படம், இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தோடினாலும் நிச்சயம் வாழும் ... வாழ்ந்து கொண்டேயிருக்கும்!
அமர காதலர்களாக சிவாஜியும், பானுமதியும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் ... காலத்தையே வென்று.
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன்!
வரலாற்றில் வாழட்டும் ‘அம்பிகாபதி’யின் புகழ்!