Read Free Online Tamil Novels,Stories,Cinema,Crime,Health and Recipes

Switch to desktop Register Login

பேபெல் - Page 3

Babel

அமெரிக்கா, மெக்ஸிகோ

 

இப்போது படம் அமெரிக்காவிற்கும், மெக்ஸிகோவிற்கும் நகர்கிறது. கலிஃபோர்னியாவின் ஒரு பகுதியான சான்டிகோவில் இருக்கும் ஒரு மாடி வீட்டில் அமேலியா என்ற நடுத்தர வயதைத் தாண்டிய பணிப் பெண் இருக்கிறாள். அவளுடன் இரு சிறுவர்கள். அவர்கள் இருவரும் ரிச்சர்ட்- சூஸன் தம்பதிகளின் மகன்கள். அது ரிச்சர்டின் வீடு. மொராக்கோவிற்கு பயணம் சென்ற அவர்கள், அமேலியாவின் பாதுகாப்பில் தங்களின் பிள்ளைகளை விட்டுச் சென்றிருக்கிறார்கள். அமேலியாவின் மகனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. அதற்கு அவள் செல்ல வேண்டும். ஆனால், மொராக்கோவில் சூஸனுக்கு குண்டு பாய்ந்து விட்டதால், அந்த தம்பதிகள் குறிப்பிட்ட நாளில் திரும்பி வர முடியவில்லை. எங்கே தன் மகனின் திருமணத்திற்குச்  செல்ல முடியாமல் போய் விடுமோ என்ற பதைபதைப்புடன் இருக்கிறாள் அமேலியா. பிள்ளைகளை என்ன செய்வது என்ற பதட்டத்துடன் ரிச்சர்ட் தொலைபேசியில் அறிவுரை கேட்க, அந்த திருமணத்தையே ரத்து செய்யும்படி அவன் கூறுகிறான். அவனுடைய அனுமதியே இல்லாமல், அமேலியா தன் மகனின் திருமணம் நடக்கும் மெக்ஸிகோவில் உள்ள டிஜுவானா என்ற இடத்திற்கு குழந்தைகளுடன் செல்ல தீர்மானிக்கிறாள். அவளின் உறவினரான சாண்டியாகோ தன் காரில் எப்படியோ மெக்ஸிகோவிற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகிறான்.

மெக்ஸிகோவின் பழக்க வழக்கங்கள் புதுமையாக இருக்கின்றன குழந்தைகளுக்கு. திருமண நிகழ்ச்சிகள் மாலையைத் தாண்டியும் நீடிக்கின்றன. இரவில் அங்கு தங்காமல், பிள்ளைகளுடன் மீண்டும் சான்டியாகோவின் காரிலேயே அமெரிக்காவிற்குத் திரும்ப தீர்மானிக்கிறாள் அமேலியா. சான்டியாகோ நன்கு குடித்திருக்கிறான். அவனுடைய காரில் அமெரிக்காவைச் சேர்ந்த குழந்தைகள் ஏன் இருக்கிறார்கள் என்று எல்லைப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் சந்தேகம்  கொள்கிறார்கள்.  நான்கு பேருக்குமான பாஸ்போர்ட்கள் அமேலியாவிடம் இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளியே பிள்ளைகளை அழைத்துச் செல்லக் கூடிய பெற்றோரின் அனுமதிச் சீட்டு அவளிடம் இல்லை. அவர்கள் விசாரித்துக் கொண்டிருக்க, மதுவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் சான்டியாகோ, காரை மிகவும் வேகமாக கிளப்புகிறான். ஒரு பாலைவனப் பகுதியில் அமேலியாவையும், குழந்தைகளையும் இறக்கிவிட்டு, அவன் எல்லைப் பகுதி அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக பாய்ந்து செல்கிறான்.  அதற்குப் பிறகு அவன் என்ன ஆனான் என்பது படத்தில் காட்டப்படவில்லை.

நீர், உணவு எதுவுமே இல்லாமல் அந்த இரவு நேரத்தை அந்த பாலைவனப் பகுதியிலேயே செலவிடுகின்றனர் அமேலியாவும், இரு சிறுவர்களும். உடனடியாக ஏதாவது உதவி கிடைக்கவில்லையென்றால், தாங்கள் எல்லோரும் இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த அமேலியா, சிறுவர்களை அந்த இடத்தை விட்டு வேறெங்கும் நகரவே கூடாது என்று கூறிவிட்டு உதவி தேடிச் செல்ல, அவளை ஒரு அமெரிக்க காவல்துறை அதிகாரி பார்த்து விடுகிறார். பின்னர், அவளுடன் அவர் குழந்தை விடப்பட்ட இடத்திற்குச் செல்ல, அங்கு அவர்கள் இல்லை... அமேலியா மீண்டும் எல்லைப் பகுதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்பதும், விஷயத்தைக் கேள்விப்பட்ட ரிச்சர்ட் மிகுந்த ஆத்திரம் அடைந்து விட்டான் என்பதும், அவளை வேலையிலிருந்து அவன் நீக்கி விட்டான் என்பதும் தெரிய வருகிறது. எனினும், அவள் மீது அவன் குற்றச்சாட்டு எதுவும் சுமத்தவில்லை. 

அதைத் தொடர்ந்து இதுவரை சட்டத்திற்கு விரோதமாக வேலை பார்த்ததால், அமெரிக்காவிலிருந்து அவள் வெளியேற்றப்படுகிறாள். தான் அமெரிக்காவில் 16 வருடங்கள் வேலை பார்த்ததாகவும், அந்த குழந்தைகளை தன் பிள்ளைகள் என்றே தான் நினைத்ததாகவும் கூறுகிறாள் அமேலியா. அது எதுவுமே அவளுக்கு கை கொடுக்க வில்லை. படம் முடியப் போகும் நிலையில், மெக்ஸிகோவின் `டீஜுவானா'வின் எல்லையில், திருமணத்திற்காக தான் அணிந்திருந்த சிவப்பு நிற ஆடை பாலைவனத்தில் சிக்கிக் கொண்டதால் கிழிந்து, அழுக்கடைந்து போய் காணப்பட்ட கோலத்துடன் அமேலியா தன் மகனை கண்ணீருடன் சந்திக்கிறாள்.

  இந்த படத்தில் Richard Jones ஆக நடித்தவர் Brad Pitt. Susan Jones கதாபாத்திரத்தில் Cate Blanchett.. இருவரும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். Amelia வாக Adriana Barraza. என்ன இயல்பான நடிப்புத் திறமை!

ஜப்பானிய இளம்பெண் சீக்கோவாக நடித்த Rinko Kikuchi- ஒரு அழகுச் சிலையே தான்!

 'Babel' படம்  இசைக்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. (இப்போது கூட இசை காதில் ஒலிக்கிறது.) 

கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான விருது, படத்தின் இயக்குநர் Alejandro விற்கு வழங்கப்பட்டது.

பல்வேறு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை வைத்து, ஒரு நேர்த்தியான கதையை உருவாக்கி, அதை மிகச் சிறந்த படமாக இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்காக இயக்குநர்  Alejandroவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Top Desktop version