வீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி
- Details
- Category: பொது
- Published Date
- Written by சுரா
- Hits: 3615
மறக்க முடியுமா? - சுரா (Sura)
வீட்டைச் சுற்றிக் காட்டிய வினு சக்ரவர்த்தி
படவுலகில் பவனி வந்த சிலரின் மரணம் நம்மை மிகவும் கவலையில் மூழ்க வைத்து விடும். என்னை சமீப காலத்தில் அவ்வாறு கவலை கொள்ள வைத்தவர் வினு சக்ரவர்த்தி.
எனக்கு வினுவை 30 வருடங்களாக நன்கு தெரியும். நான் அவருடன் மிகவும் அன்புடனும், மதிப்புடனும் பழகுவேன். அதேபோல என் மீது அவருக்கும் ஆழமான அன்பும், பாசமும் எப்போதும் உண்டு.
1980 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ‘வண்டிச்சக்கரம்’ படத்தின் கதை-வசன ஆசிரியர் வினுசக்ரவர்த்தி. அப்போது அவர் ரயில்வே துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சிவகுமார்-சரிதா நடித்த அப்படத்தைத் தயாரித்தவர் திருப்பூர் மணி. படத்தின் இயக்குநர் கே.விஜயன். ஸ்மிதா அதில்தான் சில்க் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அக்கதாபாத்திரத்தின் வெற்றி அவரை பின்னர் 'சில்க்' ஸ்மிதா என்றே ஆக்கி விட்டது. அப்படம் 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. கதை-வசனம் எழுதியதுடன், படம் முழுக்க சிவகுமாருடன் இணைந்து நடிக்கவும் செய்தார் வினு சக்ரவர்த்தி. எனக்கு மிகவும் பிடித்த படமது.
‘வண்டிச்சக்கரம்’ வெற்றியைத் தொடர்ந்து வினுசக்ரவர்த்தியைத் தேடி பட வாய்ப்புகள் நிறைய வந்தன. நடிப்பதற்குத்தான். பல வகையான கதாபாத்திரங்களிலும் வினு சக்ரவர்த்தி நடித்தார். அவருடைய இயல்பான தோற்றம், மிகையற்ற நடிப்பு, வசனத்தைப் பேசும் முறை ஆகியவை மக்களிடம் அவருக்கு நல்ல ஒரு பெயரைப் பெற்றுத் தந்தன.
இதற்கிடையில் ‘கோயில் புறா’ என்ற படத்திற்கு வினு சக்ரவர்த்தி கதை-வசனம் எழுதினார். அதில் நடிக்கவும் செய்தார். அப்படத்தையும் கே.விஜயன்தான் இயக்கினார். இசை பின்னணியில் உருவாக்கப்பட்ட படம். படத்திற்கு இசையமைத்தவர் ‘இசைஞானி’ இளையராஜா. வர்த்தக ரீதியாக அப்படம் வெற்றி பெறவில்லை. எனினும், அப்படத்தில் இடம் பெற்ற ‘அழகே தமிழே’ ‘அழகிய மொழியே’ என்ற பாடல் இப்போதும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அப்பாடல் காட்சியில் குழந்தைகளுக்கு இசை கற்றுத் தருபவராக நடித்த வினு சக்ரவர்த்தியின் உருவமும், குரலும் கூடத்தான்….
எனக்கு வினு சக்ரவர்த்தி நெருக்கமாக பழக்கமானது ‘பூக்களை பறிக்காதீர்கள்’ படப்பிடிப்பின்போது… சுரேஷ் – நதியா இணைந்து நடித்த அப்படத்தைத் தயாரித்தது ஶ்ரீராஜகாளியம்மன் புரொடக்ஷன்ஸ். படத்திற்கு இசையமைத்தவர் டி.ராஜேந்தர், படத்தை இயக்கியவர் வி.அழகப்பன். நான் அப்படத்திற்கு மக்கள் தொடர்பாளர்.
இது நடைபெற்றது 1985 ஆம் ஆண்டில். அப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. அதை பார்த்து பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பதற்காக நான் அங்கு சென்றிருந்தேன். அங்குதான் முதல் முறையாக வினு சக்ரவர்த்தியை நான் பார்த்தேன். அதில் நதியாவின் தந்தையாக நடித்திருந்தார் வினு. நான் சென்றிருந்தபோது சுரேஷ், நதியா, ராஜீவ், வினு சக்ரவர்த்தி பங்குபெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. படப்பிடிப்பின்போது வினு சக்ரவர்த்தி நடிப்தை நான் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பேன். தெளிவான உச்சரிப்புடன், மிகவும் இயல்பாக நடிக்கிறாரே என்று நான் அப்போது ஆச்சரியத்துடன் நினைப்பேன். பகலிலும் இரவிலும் எடுக்கப்பட்ட பல காட்சிகளில் அவர் நடித்தார். படப்பிடிப்பு நடைபெறும் நாட்களில் தினந்தோறும் நான் அவரைப் பார்ப்பேன். ஷாட்களுக்கு இடையே கிடைக்கும் நேரங்களில் பல விஷயங்களை என்னிடம் கூறுவார் வினு. நானும் எனக்குத் தெரிந்த பல விஷயங்ளைக் கூறுவேன். அவர் கூறுவதை நான் குதூகலத்துடன் கேட்பேன். நான் கூறுவதை அதே ஆர்வத்துடன் அவர் கேட்பார். படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு வந்த பிறகு, அறையிலேயே சந்தித்து நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். எங்களுக்கிடையே அப்போதே ஒரு நெருக்கமான நட்பு உண்டாகி விட்டது, நான் அவரை ‘அண்ணே’ என்று அன்புடன் அழைப்பேன். என்னை அவர் ‘சுரா’ என்று பெயரிட்டு பாசத்துடன் அழைப்பார். இருவரும் சேர்ந்து ஹோட்டல் அறையில் மது கூட அருந்தியிருக்கிறோம்.
அதற்கு பிறகு வினு சக்ரவர்த்தி நான் பி.ஆர்.ஓ.வாக பணியாற்றிய பல படங்களில் நடித்தார். ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பின்போதும் நானும், வினு சக்ரவர்த்தியும் சந்திப்போம். ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் பல விஷயங்ளைப் பற்றியும் பேசுவோம்.
நானும் வினுவும் மிகவும் நெருக்கமாக பேசிக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பு ‘சித்திரை பூக்கள்’ படப்பிடிப்பின்போது கிடைத்தது. அழகன் தமிழ்மணி தயாரித்த அப்படத்தின் இயக்குநர் கண்மணி சுப்பு. கவியரசு கண்ணதாசனின் மகன் இவர். அதில்தான் வினோதினி கதாநாயகியாக அறிமுகமானார். சரத்குமார் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். வினோதினியின் தந்தையாக நடித்தவர் வினு சக்ரவர்த்தி. மூணாறு, ஊட்டி ஆகிய இடங்களில் அதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
இடையில் வினு சக்ரவர்த்தி ஒரு படத்தை இயக்குவதாக இருந்த்து. அதற்கான திரைக்கதையையும் கூட முழுமையாக அவர் எழுதி விட்டார், அந்தப் படத்திற்கு என்னை மக்கள் தொடர்பாளராக பணியாற்றும்படி வினு கேட்டார். நானும் சம்மதித்தேன். இது சம்பந்தமாக பேசுவதற்காக அப்போது அவர் குடியிருந்த கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனி இல்லத்திற்கு நான் அவ்வப்போது செல்வேன். படத்தின் முழு கதையையும் என்னிடம் கூறினார் வினு. கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. 'இதை இயக்குங்கள். படம் நிச்சயம் நன்றாக ஓடும்' என்றேன் நான். அதைக் கேட்டு வினு சக்ரவர்த்தி மிகவும் சந்தோஷப்பட்டார். சிரித்த முகத்துடன் உற்சாகம் தாண்டவமாட அவர் என்னையே பார்த்தார். 'நீங்கள் நிறைய கதைகளை வேற்று மொழியிலிருந்து மொழி பெயர்ப்பவர். உங்களுக்கு இந்த கதை மிகவும் பிடித்திருக்கிறது என்றால், நிச்சயம் மக்களுக்கும் பிடிக்கும்' என்று கூறினார் வினு..... அப்போது என்னிடம், எப்போது படத்தை இயக்கப் போவதாக வினு சொன்னாரோ, அதற்குப் பிறகு படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு குறைவாகவே வந்தது. படத்தை இயக்கிக் கொண்டே, பிற படங்களில் நடிக்கவும் செய்யலாம் என்று மனதில் நினைத்திருந்தார் வினு. ஆனால், படத்தை இயக்க ஆரம்பித்து விட்டால், அதில் அவர் மிகவும் பிஸியாகி விடுவார் என்று நினைத்து அவரை நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்ய படத் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தயங்கினார்கள். அதன் விளைவாக படத்தை இயக்கும் தீர்மானத்தையே வேண்டாம் என்று முடிவிற்கு கொண்டு வந்து விட்டார் வினு. அதனால் தன் நடிப்பு வாழ்க்கைக்கு பாதிப்பு உண்டாகி விடக் கூடாது என்பதில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.