சரஸ்வதியை வழிபட்டால், கிடைக்கும் நன்மைகள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2422
சரஸ்வதியை வழிபட்டால்,
கிடைக்கும் நன்மைகள்
- மகேஷ்வர்மா
சரஸ்வதியை யார் வழிபடலாம்? வழிபடுபவர்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
படிக்கும் குழந்தைகள், எழுத்தாளர்கள், வக்கீல்கள், கலைத் துறையில் இருப்பவர்கள், நடனத் துறையில் இருப்பவர்கள், ஜோதிடர்கள், மந்திரவாதிகள், பொறியியல் வல்லுனர்கள், எலெக்ட்ரானிக் தொழிலில் இருப்பவர்கள், வாஸ்து நிபுணர்கள், நீதிபதிகள், பேச்சாளர்கள், கதாசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், வர்த்தகத் துறை நிர்வாகிகள், தரகு செய்பவர்கள், காப்பீட்டுத் துறையில் இருப்பவர்கள், மன இயல் நிபுணர்கள், கவர்னர்கள், தூதர்கள், வெளிநாட்டுத் துறையின் அதிகாரிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், வங்கியில் பணி புரிபவர்கள், ஆசிரியர்கள், தொலைக்காட்சித் துறையில் இருப்பவர்கள் இவர்களுக்கு அறிவு சக்தி தேவைப்படுகிறது. ஒரு மனிதனுக்கு வார்த்தையிலும், எழுத்திலும் பலமில்லையென்றால், அவர்களால் பெரிய வெற்றிகளைக் காண முடியாது.
அதே நேரத்தில் பொறியியல் வல்லுனர்கள், நீதிபதிகள், பெரிய பதவிகளில் இருப்பவர்கள் ஆகியோருக்கு சரஸ்வதியின் அருள் வேண்டும். அது இல்லையென்றால், அவர்கள் தங்களுடைய பணியில் தவறு செய்து விடுவார்கள்.
ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னாதிபதி பலமில்லாமலிருந்தால், அல்லது நீசமாக இருந்தால், அந்த மனிதர் தன் செயலை முழுமையாக முடிக்காமல் இருப்பார். அவருக்கு தைரியம் குறைவாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இது போன்ற நிலைமை இருந்தால், அவர்கள் என்னதான் வீட்டில் பாடங்களைப் படித்தாலும், ஒழுங்காக தேர்வை எழுத முடியாமல் இருப்பார்கள். படித்த அனைத்தையும் மறந்து விடுவார்கள்.
ஒரு மனிதரின் ஜாதகத்தில் புதன் அஸ்தமாக இருந்தால், அல்லது நீசமாக இருந்தால், அவர்கள் தங்களின் வேலையை முடிக்க முடியுமா என்று சந்தேகப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு பயம் உண்டாகும். அந்த பயத்தின் காரணமாக வயிற்றில் நோய் உண்டாகும். அதன் காரணமாக சாப்பாடு ஜீரணமாகாது. பித்தம் உண்டாகும். தலைவலி வரும். அதனால் அப்படிப்பட்ட நிலைமையில் உள்ளவர்கள் சரஸ்வதியின் ஆலயத்திற்குச் சென்று வெள்ளை நிற ஆடையை வைத்து, வெள்ளை நிற மலரை வைத்து, இனிப்பை வைத்து, தேங்காயை வைத்து பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு புதன் கிழமையும் சரஸ்வதியின் ஆலயத்திற்குச் சென்று, 9 ஏலக்காய்களை வைத்து, வழிபட வேண்டும். ‘ஓம் வாக்கு வாஹினி ஸ்வாஹா’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறைகள் உச்சரிக்க வேண்டும்.
ஒரு மனிதருக்கு அவருடைய ஜாதகத்தில் குரு நீசமடைந்தால், அந்த ஜாதகத்தில் சூரியன் நீசமாக இருந்தால், அவர்கள் பல தவறுதளை தங்களுடைய பேச்சின் காரணமாக செய்வார்கள். அவர்கள் பெற வேண்டிய வெற்றியை இறுதி நேரத்தில் இழந்து விடுவார்கள். அதன் காரணமாக அவர்கள் சோர்ந்து போவார்கள். அவர்கள் மத்திய பிரதேசத்திலிருக்கும் ‘மைஹர்’ என்ற ஊரில் உள்ள சரஸ்வதியைப் போய் வணங்கினால், அவர்களுடைய ஜாதகத்திலிருக்கும் தோஷங்கள் நீங்கும்.
ஒரு ஜாதகத்தில் புதன் உச்சமாக இருந்து, சூரியனுடன் அஸ்தமாக இருந்தால், அவர்கள் பெரிய அறிவாளிகளாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய அறிவு வெளி உலகத்திற்குத் தெரியாது. அதனால் அவர்களுக்கு மனதில் குறை இருந்து கொண்டேயிருக்கும். அவர்கள் சரஸ்வதியை வழிபட வேண்டும். சரஸ்வதியின் சுலோகங்களைப் படிக்க வேண்டும் (ஓம் சரஸ்வதியே நமஹ), இரவில் படுக்கும்போது 10 தடவைகளாவது இந்த மந்திரத்தைக் கூற வேண்டும்.
வீட்டைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் தேவையற்ற பொருட்களை வைக்கக் கூடாது. நவராத்திரியின் 8வது நாளில் சரஸ்வதி பூஜையைச் செய்ய வேண்டும். தங்களின் நூல்களையும், எழுது கோலையும் கடவுளுக்கு முன்னால் வைத்து, பூஜை செய்ய வேண்டும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய், புதன் சூரியன் லக்னத்தில் இருந்தால், 6இல் பாவ கிரகம் இருந்தால் அல்லது 2இல் செவ்வாய், சூரியன் இருந்தால், 8இல் பாவ கிரகம் இருந்தால் அல்லது 5க்கு அதிபதி 6இல் இருந்தால், அதற்கு மேல் அந்த கிரகத்தை பாவ கிரகம் பார்த்தால், லக்னாதிபதி நீசமடைந்தால், லக்னத்தில் பாவ கிரகம் இருந்தால், லக்னத்திலிருந்து 6,8 இல் பாவ கிரகம் இருந்தால், லக்னத்தில் செவ்வாய், 4இல் சூரியன், 7இல் சனி இருந்தால், அல்லது லக்னத்தில் சனி, 4இல் செவ்வாய், 8இல் சூரியன் இருந்தால், அவர்கள் படிப்பில் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும். பட்டம் வாங்க முடியாது. பட்டதாரியாக இருந்தால், அவர்களுக்கு அந்த பட்டத்தால் எந்த பயனும் இருக்காது. அவர்கள் திங்கள், புதன், சனி கிழமைகளில் சரஸ்வதியின் மந்திரத்தை வீட்டில் உச்சரிக்க வேண்டும். வீட்டில் சரஸ்வதியின் உருவப் படத்தை வைத்து, கற்கண்டை பிரசாதமாக வைத்து, பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்யும்போது, வெள்ளை நிற ஆடையை அணிந்து பூஜை செய்ய வேண்டும். புதன் கிழமை மாலை வேளையில் சரஸ்வதியின் ஆலயத்திற்குச் சென்று, வெள்ளை நிற மலர்களை வைத்து வழிபட வேண்டும்.
இதேபோல 11 வாரங்கள் சரஸ்வதி ஆலயத்திற்குச் சென்று பூஜை செய்து, 11வது வாரம் 11 ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். இதைச் செய்தால், அவர்கள் சந்தோஷத்துடன் வாழ்வார்கள்.
எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமலிருந்தால், அவர்கள் புதன் கிழமை காலை வேளையில் சூரியனையும், விநாயகரையும் வணங்கி விட்டு, சரஸ்வதி ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். அன்று அவர்கள் விரதம் இருக்க வேண்டும். இதை அவர்கள் 21 வாரங்கள் செய்ய வேண்டும். 21ஆவது வார இறுதியில் சரஸ்வதிக்கு ஒரு ஹோமம் செய்து, 11 பேருக்கு சாப்பாடு அளிக்க வேண்டும் அதைச் செய்தால் அவர்கள் தங்களுடைய செயல்களில், பெரிய அளவில் வெற்றியைக் காண்பார்கள்.