நவராத்திரிக்கு எந்த பூஜை செய்தால், பணவரவு உண்டாகும்?
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 3679
நவராத்திரிக்கு எந்த பூஜை செய்தால்,
பணவரவு உண்டாகும்?
- மகேஷ்வர்மா
நவராத்திரியன்று எந்த பூஜையைச் செய்தால், பண வரவு உண்டாகும்? செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்?
ஒரு ஆண்டில் நான்கு நவராத்திரிகள் வருகின்றன. கோடை காலத்தில் ஒரு நவராத்திரி வருகிறது. இதுதான் முதல் நவராத்திரி. இரண்டாவது நவராத்திரி தீபாவளிக்கு முன்னால் வருகிறது. மீதி இரு நவராத்திரிகளுக்குப் பெயர் குப்த நவராத்திரி.
கோடை காலத்தில் வரும் நவராத்திரியின் முதல் நாளன்று வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒட்டடை அடிக்க வேண்டும். பூஜையறையைச் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் கோமியம், பசும்பால் ஆகியவற்றைக் கொண்டு தெளித்து வீட்டை நன்கு பராமரிக்க வேண்டும். பூஜையறையில் ஒரு கலத்தில் நீரைப் பிடித்து வைத்து, அதன் மீது ஐந்து மாவிலைகள் அல்லது வெற்றிலைகளை வைத்து, அதன் மீது ஒரு தேங்காயை வைத்து, தேங்காயில் குங்குமத்தைக் கொண்டு திலகமிட்டு வைத்திருக்க வேண்டும். வீட்டிலிருக்கும் துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமி படங்களுக்கு பூ, பழம் வைத்து ‘துர்க்கா சப்த சதி’ மந்திரத்தைக் கூற வேண்டும். அதை கூறுவதற்கு முன்பு அந்த இடத்தில் சிவப்பு நிற துணியை விரித்து, அதன் மீது கடவுளின் படத்தை வைக்க வேண்டும். பூஜை செய்பவர் சிவப்பு நிற அல்லது மஞ்சள் நிற அல்லது வெண்ணிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்.
பூஜையின் பிரசாதமாக பால்கோவா அல்லது கற்கண்டு அல்லது அல்வாவைச் செய்து வைக்க வேண்டும். பூஜை செய்பவர் அந்த 9 நாட்களும் விரதம் இருக்க வேண்டும். பிரஞ்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்கக் கூடாது.
பிறகு அவர் தினமும் காலையில் சூரியனை வழிபட வேண்டும். சூரிய காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பகவான் விநாயகரை வழிபட வேண்டும். குலதெய்வத்திற்குப் பூஜை செய்ய வேண்டும். துர்க்கையை வழிபட வேண்டும். வீட்டில் ‘துர்கா சப்த சதி’யைப் படிக்க வேண்டும். அன்னை துர்க்கைக்கு சிவப்பு நிற மலர் அல்லது வெண்ணிற மலரை வைத்து பூஜை செய்ய வேண்டும். நெய் விளக்கு ஏற்ற வேண்டும்.
பண வரவு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்? துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கைக்கு பல பீஜ மந்திரங்கள் இருக்கின்றன. அவை தெரியாவிட்டால், இவற்றைக் கூற வேண்டும்.
ஓம் ரீம் ஸ்ரீம் க்ளீம்
அல்லது
ஓம் ஸ்ரீம்
அல்லது
ஓம் ஆம் ரீம் ஸ்ரீம் க்ளீம்
இந்த மந்திரங்களை தினமும் 1லிருந்து 10 மாலைகள் வரை (10x108) உச்சரிக்க வேண்டும்.
மனநோய், வர்த்தகத்தில் பகைவர்கள் இருப்பவர்கள் ‘ஓம் ஆம் க்ளீம் சாமுண்டாய விச்சை’, என்ற மந்திரத்தை தினமும் 10 மாலைகள் (10x108) கூற வேண்டும். அதைக் கூறிய பிறகுதான் சாப்பிட வேண்டும்.
வீட்டில் தேவையற்ற பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடாது. பூஜையறையில் பெரிய அகல் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அதற்குக் காரணம்மந்திரத்தைக் கூறி முடிக்கும் வரை, அந்த விளக்கு அணையாமல் இருக்க வேண்டும்.
நவராத்திரியின் 9வது நாளன்று தேங்காய் அல்லது பூசணிக்காயை கடவுளுக்குப் படைக்க வேண்டும். பூஜை முடிந்த பிறகு தேங்காயை கோவிலில் யாருக்காவது கொடுத்து விட வேண்டும். பூசணிக்காயை நீரிலோ அல்லது புதரிலோ வெட்டி போட்டு விட வேண்டும்.
9வது நாள் வீட்டில் கடவுளுக்கு பிரசாதம் செய்து 9 சிறுமிகளை வீட்டிற்கு அழைத்து, அவர்களின் கால்களைக் கழுவி... வசதி இருந்தால்... அவர்களுக்கு உணவு அளித்து, பிரசாதத்தையும் தர வேண்டும்.
10வது நாள் ராமர் ஆலயத்திற்குச் சென்று, பூஜை செய்ய வேண்டும். வாழ்வில் நல்ல காரியங்கள் நடப்பதற்காக துர்க்கை அல்லது காளிகாம்பாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும்.
வசதி இருந்தால், முதல் நாளிலிருந்து ‘சத் சண்டி யாகம்’ செய்து, ஹோமம் நடத்தி, பூஜை செய்ய வேண்டும்.
மேற் கூறிய பூஜைகளைச் செய்தால், பண வரவு உண்டாகும். செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.