கோபம் ஏன் வருகிறது? அதை நீக்க என்ன வழி?
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 3052
கோபம் ஏன் வருகிறது? அதை நீக்க என்ன வழி?
(மகேஷ் வர்மா)
பல மனிதர்களுக்கு அடக்க முடியாத அளவிற்கு கோபம் வருகிறது. இந்த கோப குணத்தால் பல பிரச்சினைகள் உண்டாகின்றன. ஜோதிட ரீதியாக அதற்குக் காரணம் என்ன?
கோபம் சிறியவர்களிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் வருகிறது. கோபம் காரணமாக குடும்பத்தில் பிரச்சினைகள் உண்டாகின்றன. அதனால் பலர் நல்ல வாய்ப்புக்களை இழந்து விடுகின்றனர். பலர் தங்களின் நல்ல நண்பர்களைக் கூட இழந்து விடுகின்றனர்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும் சூரியனும் சேர்ந்து லக்னத்தில் இருந்தால், அவர் தான் மனதில் நினைத்ததைப் போல தன் அனைத்து வேலைகளும் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். லக்னாதிபதி செவ்வாய் அல்லது குருவாக இருந்தால், தன் பேச்சை எல்லோரும் கேட்க வேண்டும் என்று அவர் நினைப்பார். லக்னாதிபதி புதனாக இருந்தால், அதனுடன் சூரியனும் இருந்தால், தான் மட்டுமே அறிவாளி என்றும், மற்றவர்களுக்கு எதுவுமே தெரியாது என்றும் அவர் நினைப்பார். அதனால் யாருடனும் இனிமையாக பழகாதவராகவும், கோப குணம் கொண்டவராகவும் இருப்பார்.
லக்னாதிபதி சுக்கிரனாக இருந்து, அத்துடன் சூரியனும் இருந்தால், அவர்கள் பெண்களுடன் இனிமையாக பழக மாட்டார்கள். எப்போதும் கோபத்துடன் இருப்பார்கள். லக்னாதிபதி சந்திரனாக இருந்து, அத்துடன் சூரியனும் இருந்தால், தான் எதற்கு கோபப்படுகிறோம் என்று கூட அவர்களுக்கு தெரியாது. லக்னத்தில் ராகு, சூரியன், செவ்வாய் இருந்தால், தன் வேலையை பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஒருவேலை முடிவதற்கு முன்பே, இன்னொரு வேலையை ஆரம்பிப்பார். அதனால் அவருக்கு எப்போதும் கோபம் இருந்து கொண்டேயிருக்கும்.
லக்னத்தில் கேது, சூரியன், செவ்வாய் இருந்தால், அவருக்கு எப்போதும் தலைவலி இருக்கும். வேலை சீக்கிரமாக முடிய வேண்டும் நினைப்பார். அதனால், எல்லோரிடமும் கோபத்துடன் நடந்து கொள்வார்.
சிம்ம லக்னமாக இருந்து, லக்னத்தில் சூரியன், 5க்கு அதிபதியான கிரகம் விரய ஸ்தானத்தில் இருந்தால், மற்றவர்கள் தனக்கு அடங்கியிருக்க வேண்டும் என்று ஒருவர் நினைப்பார். அதன் காரணமாக அவருக்கு கோபம் வரும்.
லக்னத்தில் சனி, சூரியன் சேர்ந்து இருந்தால், அவர் தன் தொழில் பங்குதாரர், மனைவி, குழந்தைகளின் மீது எப்போதும் கோபத்துடன் இருப்பார். வேலை செய்பவர்களுக்குப் புரிகிற மாதிரி எதையும் கூற மாட்டார். தான் நினைத்ததை பணியாட்கள் செய்ய வேண்டும் என்று நினைப்பார். அதன் காரணமாக அவருக்கு கோபம் வரும்.
சூரியன், சுக்கிரன், ராகு அல்லது சூரியன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன், செவ்வாய், ராகு அல்லது சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய கிரகங்கள் லக்னத்தில், 2ல், 4ல், 7இல், 8இல், 12இல் இருந்தால் அவருக்கு இல்வாழ்கையில் பிரச்சினைகள் இருக்கும். அவருடைய நாக்கு அமைதியாக இருக்காது. தேவையற்றதைப் பேசி, பிரச்சினைகளை உண்டாக்குவார். சில நேரங்களில் தன் தொழில் நண்பரை அடித்துக் கூட விடுவார். அவரால் பங்குதாரர்கள், மனைவி, பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள்.
ஒருவரின் ஜாதகத்தில் 3வது வீட்டிற்கு அதிபதியான கிரகம் 2இல் இருந்தால், அந்த இடத்தில் அந்த கிரகத்துடன் செவ்வாய் இருந்தால், அவர் தன் சகோதரர்களுடன் பிரச்சினைகளை உண்டாக்குவார். அவர் அவர்களிடம் கோபமாக நடந்து கொள்வார்.
ஒரு மனிதருக்கு ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடந்தால், அந்த நேரத்தில் அவருக்கு 2 ஆம் ஆதி தசை, அஷ்டமாதிபதி தசை நடந்தால், அவருக்கு உடலில் நோய்கள் வரும். பண பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவர் எல்லோரிடமும் கோபத்துடன் நடந்து கொள்வார்.
லக்னத்தில் சூரியன், 2 இல் செவ்வாய், 6இல் சனி இருந்தால், அவர் கடுமையாக உழைத்து வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருப்பார். ஆனால், அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் அவருக்கு பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். அவரிடமிருந்து பணத்தைப் பறிப்பதிலேயே அவர்கள் குறியாக இருப்பார்கள். அதனால் அவர்களின் மீது அவருக்கு கோபம் வரும். சில நேரங்களில் பெரிய வாய்ப்புகள், அந்த கோப குணத்தின் காரணமாக அவரிடமிருந்து விலகிச் சென்று விடும்.
பரிகாரங்கள்
1) தினமும் சிவனை வணங்க வேண்டும். அவருக்கு பால், நீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.
2) கிழக்கு அல்லது தெற்கில் தலை வைத்து படுக்க வேண்டும்.
3) கருப்பு நிற ஆடை அணியக் கூடாது.
4) யோகாசனம், தியானம் செய்ய வேண்டும்.
5) உளுந்து அல்லது உளுந்தால் செய்த உணவை காகம், நாய், ஏழைக்கு அளிக்க வேண்டும்.
6) செவ்வாய்கிழமை ஆஞ்சனேயரை நான்கு முறைகள் சுற்றி வரவேண்டும்.
7) வீட்டுக்குள் குப்பைகள் சேரக் கூடாது.
8) தன் லக்னாதிபதியின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
9) நடக்கும் தசையின் பொருட்களை தானமாக அளிக்க வேண்டும்.
10) நீர் அதிகமாக பருக வேண்டும்.
11) வீட்டில் கெட்டுப் போன மின் பொருட்கள் இருந்தால், அவற்றை அகற்றி விட வேண்டும்.
12) வீட்டின் நிறம் வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும்.