வர்த்தகம் நடைபெறும் இடம் லாபத்துடன் நடக்க... செய்ய வேண்டியவை
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 1828
வர்த்தகம் நடைபெறும் இடம்
லாபத்துடன் நடக்க... செய்ய வேண்டியவை
- மகேஷ்வர்மா
வர்த்தகம் நடக்கும் இடத்தில் வியாபாரம் லாபகரமாக நடப்பதற்கும், வாஸ்துவிற்கும் சம்பந்தம் இருக்கிறதா?
வியாபாரம் நடக்கும் இடம் எப்போதும் ஆதாயம் வரும் அளவிற்கும், பெயர், புகழ் கிடைக்கும் வண்ணமும் இருக்க வேண்டும். அந்த இடத்தில் வர்த்தகம் செய்பவர் தென்மேற்கு திசையில் அமர வேண்டும். அவருடைய முகம் கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து இருக்க வேண்டும்.
அந்த வியாபாரம் நடக்கும் இடத்தில் தேவையற்ற பொருட்களை வடக்கு திசையில் வைக்கக் கூடாது. வட கிழக்கில் குப்பையோ, அவசியமற்ற பொருட்களோ, குப்பைத் தொட்டியோ இருக்கக் கூடாது. அந்த இடத்தில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். அங்குள்ள வாசல் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். கதவில் இடைவெளி, கீறல் இருக்கக் கூடாது. பிரதான வாசல் எப்போதும் உச்சத்தில் இருக்க வேண்டும். அங்கு பணி செய்பவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசையைப் பார்த்து அமர வேண்டும். தெய்வத்தின் படங்கள் அல்லது பூஜையறை கிழக்கிலோ அல்லது மேற்கிலோ இருக்க வேண்டும். நீர் தொட்டி, கிணறு அல்லது பருகும் நீர் இருக்கும் பாத்திரம் ஆகியவை வடக்கிலோ அல்லது வட கிழக்கிலோ இருக்க வேண்டும்.
வர்த்தகம் நடக்கும் இடத்தில் கிடங்கு வட கிழக்கில் இருக்கக் கூடாது. தென் கிழக்கில் நீர் தொட்டி இருக்கக் கூடாது.
பெரிய தொழிற்சாலை இருந்தால், அங்கு எப்போதும் வட கிழக்கில் பெரிய மரங்களோ, தேவையற்ற பொருட்கள் இருக்கக் கூடிய இடங்களோ இருக்கக் கூடாது. தொழிற்சாலையின் கூரை வடக்கிலோ அல்லது கிழக்கிலோ தாழ்ந்து இருக்க வேண்டும். தொழிற்சாலையின் வடக்குப் பகுதி தாழ்ந்து இருக்க வேண்டும். தெற்கு உயரமாக இருக்க வேண்டும். மிகப் பெரிய இயந்திரங்களை எப்போதும் தெற்கு திசையில் அமைக்க வேண்டும்.
தொழிற்சாலையில் பணியாற்றுபவர்கள் தங்கக் கூடிய இடம் வட மேற்கில் இருக்க வேண்டும். தொழிற்சாலையின் கொதிகலன் தென் கிழக்கிலோ அல்லது வட மேற்கு திசையிலோ இருக்க வேண்டும். தொழிற்சாலையின் நீர் சுத்திகரிக்கும் கருவி வட மேற்கில் இருக்க வேண்டும். தொழிற்சாலையின் கழிவு நீர் அறை வட மேற்கிலோ அல்லது தெற்கு திசையின் மத்தியிலோ இருக்க வேண்டும்.
தொழிற்சாலையின் தரைப் பகுதியைக் (அன்டர்க்ரவுண்ட்) கட்டுவதாக இருந்தால், வடக்கிலோ, கிழக்கிலோ அதை அமைக்க வேண்டும். தொழில் நடக்கும் இடத்தில் அதன் தலைவர் வட கிழக்கில் உட்காரக் கூடாது. அதே போல வட மேற்கில் தொழிற்சாலையின் அலுவலகத்தை அமைக்கக் கூடாது.
எப்போதும் தெருக்குத்து இருக்கக் கூடிய பூமியை வாங்கக் கூடாது. தொழில் நடக்கும் இடத்தின் தென் மேற்கு திசை தாழ்வாக இருக்கக் கூடாது.
கழிவு நீர் தொட்டி தென் கிழக்கிலோ, வட கிழக்கிலோ இருக்கக் கூடாது. தொழிற்சாலையின் பிரம்ம ஸ்தானத்தில் கழிவு நீர் அறை, கிணறு அல்லது தேவையற்ற பொருட்கள் இருக்கக் கூடாது. தென் கிழக்கில் நீர் தேங்கி இருக்கக் கூடாது. அப்படி தேங்கியிருந்தால், திடீரென்று கடன் பிரச்னைகள் உண்டாகும்.
வர்த்தகம் நடக்கும் இடத்தில் அடர்த்தியான நீலம், ப்ரவுன், பச்சை ஆகிய நிறங்கள் பூசப்பட்டிருக்கக் கூடாது. படிக்கட்டு வடக்கிலோ, வட கிழக்கிலோ இருக்கக் கூடாது.
தென் கிழக்கில் நீர் தொட்டியோ, கிணறோ இருந்து, அந்த நீர் தொழிற்சாலையில் இருக்கும் இயந்திரங்களுக்கு வந்தால், சிறிதும் எதிர்பாராமல் தீ விபத்து உண்டாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் தென் கிழக்கில் நீர் தொட்டியை அமைக்கக் கூடாது. தொழிற்சாலை சரியாக நடக்கவில்லையென்றால், அந்த இடத்தில் பகவான் பைரவரின் யந்திரத்தை அமைக்க வேண்டும். பகைவர்கள் அதிகமாக இருந்து, அவர்களிடம் ஏமாந்திருந்தால் அல்லது அவர்களிடம் பணத்தை இழந்திருந்தால், பகுளாமுகி யந்திரத்தை அமைக்க வேண்டும். அதனால் திருஷ்டி நீங்கி, அங்கு நடக்கும் வியாபாரம் நல்ல முறையில் – லாபத்துடன் நடக்கும்.