படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 5819
படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லையா?
செய்ய வேண்டிய பரிகாரங்கள்...
- மகேஷ்வர்மா
பலர் உயர்ந்த படிப்பைப் படித்து விட்டு, அதற்குரிய வேலையில் இல்லாமல் இருக்கிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்திற்கு ஏதாவதொரு வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பலர் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜோதிட ரீதியாக இதற்கு காரணம் இருக்கிறதா?
வாழ்க்கையில் பெயர், புகழுடன் இருக்க வேண்டும் என்று எல்லோரும் ஆசைப்படுவார்கள். நல்ல வசதி படைத்த நிலைக்கு உயர வேண்டும். என்று மனதில் நினைப்பார்கள். ஆனால், பலருக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைப்பதில்லை. அதனால், மிகுந்த மன கவலைக்கு அவர்கள் ஆளாவார்கள். அதற்குக் காரணம் அவர்களின் ஜாதகத்திலிருக்கும் லக்னாதிபதியின் தசாநாதன்தான்.
ஒரு மனிதரின் ஜாதகத்தில் பணம் வந்து சேர வேண்டுமென்றால், அவருடைய 2ஆம் ஆதியும், 11க்கு அதிபதியுமான கிரகமும் சரியான இடத்தில் இருக்க வேண்டும். சுய வீட்டிலோ அல்லது உச்சத்திலோ இருக்க வேண்டும். ஜாதகத்தில் 9க்கு அதிபதியான கிரகம் சுய வீட்டிலோ, மூல திரிகோணத்திலோ அல்லது உச்சமாகவோ இருக்க வேண்டும். தசையின் அதிபதி சுய வீட்டிலோ அல்லது உச்சத்திலோ இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். இல்லாவிட்டால்அவர்கள் மன குழப்பத்திற்கு ஆளாவார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி, லக்னத்தில் இருந்தால், அவர் நல்ல நிலைமையில் இருப்பார். பெயர், புகழுடன் இருப்பார். ஆனால், லக்னாதிபதி, விரய ஸ்தானாதிபதியுடனோ அல்லது அஷ்டமாதிபதியுடனோ அல்லது 6க்கு அதிபதியான கிரகத்துடனோ இருந்தால், அவர்கள் தங்களின் தேர்வு அல்லது நேர்காணலில் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது.
ஒரு மனிதரின் ஜாதகத்தில் 2இல் 2ஆம் ஆதியுடன் செவ்வாய், சூரியன், இருந்தால், அவர் தன் 28 வயது வரை பல கஷ்டங்களை அனுபவிப்பார். செவ்வாய், சூரியன், ராகு, புதன் ஒரு ஜாதகத்தில் 2இல் இருந்தால், அவர் பல ஏமாற்றங்களைச் சந்திப்பார். அவருக்கேற்ற வேலை அமையாது. சகோதரர்கள், தந்தை ஆகியோருடன் உறவு சரியாக இருக்காது. உரிய நேரத்தில் யாரும் உதவ மாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், சனி இருந்தால், அவர் யாருடனும் பழக மாட்டார். பிறரைக் குறை கூறிக் கொண்டே இருப்பார். அவருக்கு உரிய வேலை கிடைக்காது. ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் செவ்வாய், 7இல் சனி அல்லது லக்னத்தில் சனி, 7இல் செவ்வாய் இருந்தால், அவர் பிறரைக் குறை கூறிக் கொண்டே இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, சூரியன், சனி அல்லது ராகு, சூரியன், செவ்வாய் இருந்தால், அவர் ஒரே இடத்தில் வேலை செய்ய மாட்டார். வேலைக்குச் சென்ற இடத்தில் அவரைப் பற்றிய பழைய விஷயங்களைப் பார்த்து, அவருக்கு வேலை தர மாட்டார்கள்.
ஒரு ஜாதகத்தில் 11க்கு அதிபதியான கிரகம் நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், அந்த சந்திரனிலிருந்து சனி 6 இலோ 8 இலோ இருந்தால், அந்த ஜாதகர் எந்த வேலையையும் ஒழுங்காகச் செய்ய மாட்டார். வேலை கிடைக்கும்போது, அவருக்கு நோய் வந்து விடும். அதை சரியாக கவனிக்காமல், பெரிதாக்கி விடுவார். அதனால் அடிக்கடி வேலையை விட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் குரு, கன்னி ராசியில் இருந்தால், அவர் தன் வேலையை ஒழுங்காகச் செய்ய மாட்டார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன்-ராகு, சனியுடன் இருந்தால், வேலைக்குச் சென்ற இடத்தில் வேலையை இழக்க வேண்டியதிருக்கும்.
ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு அதிபதியான கிரகம் 6இலோ 8இலோ இருந்தால், அவர் தன் பேச்சு காரணமாக வேலையை இழந்து விடுவார். ஒரு மனிதரின் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், 7இலோ 8இலோ செவ்வாய் இருந்தால், அவர் தன் பேச்சால் தான் பார்க்கும் வேலையை இழந்து விடுவார்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய்–சனி சேர்ந்திருந்தால், அந்த ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்தால், 7க்கு அதிபதியான கிரகம் பாதகாதிபதியாக இருந்து, 8இல் அல்லது 11இல் இருந்தால், அவர் தேவையற்ற விஷயங்களைப் பேசி, தன் வேலையை இழந்து விடுவார்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி, ராகு 12இல் இருந்தால், அவருக்கு சனி தசையோ ராகு தசையோ நடக்கும்போது, அவர் தான் பார்க்கும் வேலையை இழந்து விடுவார். பேராசை காரணமாக, வெளியே சென்றால், மேலும் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று நினைத்து, பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விட்டு விடுவார்.
பரிகாரங்கள்
01.தினமும் துர்க்கை ஆலயத்திற்குச் சென்று துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையின் பீஜ மந்திரத்தைக் கூற வேண்டும் அல்லது மகாலட்சுமியின் ஶ்ரீசுதம் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் – லட்சுமியின் பீஜ மந்திரத்தைக் கூற வேண்டும். ‘ஓம் ரீம் ஷ்ரீம் க்ளீம்’ என்ற மந்திரத்தை தினமும் 108 தடவைகள் கூற வேண்டும்.
02.மேற்கில் அல்லது வடக்கில் தலை வைத்து படுக்கக் கூடாது.
03.கருப்பு நிற ஆடை அணியக் கூடாது.
04.ஞாயிற்றுக் கிழமை அசைவம் சாப்பிடக் கூடாது. உப்பு இல்லாத உணவை ஞாயிற்றுக் கிழமை சாப்பிட வேண்டும்.
05.பெரியோர்களின் கால்களில் விழுந்து, அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்.
06.தினமும் ஆஞ்சனேயரை 4 முறை சுற்றி வர வேண்டும்.
07.லக்னாதிபதி மற்றும் 9க்கு உரிய கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
08.படுக்கையறையில் செருப்பு, பழைய இரும்பு, தேவையற்ற பொருட்கள் இருக்கக் கூடாது.
09.வீட்டின் வட கிழக்கில் குப்பை இருக்கக் கூடாது.
10. வீட்டின் மொட்டை மாடியின் மத்திய பகுதியில் தேவையற்ற பொருட்கள் இருக்கக் கூடாது.
11. வேலைக்குச் செல்லும்போது, விநாயகருக்கு முழு தேங்காயை, அங்கேயே விட்டு விட்டு வர வேண்டும்.
12. வீட்டில் வாஸ்து தோஷ யந்திரமோ அல்லது கணேஷ் யந்திரமோ வைத்து பூஜை செய்ய வேண்டும்.
மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், உரிய வேலை கிடைத்து சந்தோஷமாக வாழலாம்.