தடைகள் நீங்கி, வாழ்க்கையில் வெற்றி பெற பரிகாரங்கள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2805
தடைகள் நீங்கி,
வாழ்க்கையில் வெற்றி பெற
பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா
சுய முயற்சியால் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது?
ஒரு மனிதன் பிறக்கும்போது, அவனுடன் இருப்பவர்கள் சந்தோஷமடைகிறார்கள். அப்போது குடும்பத்தில் அவன் ஒரு மருத்துவராகவோ, பொறியியல் நிபுணராகவோ, பெரிய மேதையாகவோ, அரசியல் தலைவராகவோ வருவான் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள்.
ஆனால், சிலர் வாழ்க்கையில் படிக்க முடியாத நிலையில் இருப்பார்கள். சிலர் படித்தும், வேலை கிடைக்காமல் இருப்பார்கள். சிலர் பணம் இருந்தும், உடல் நலம் சரி இல்லாமல் இருப்பார்கள். சிலர் ஞானியாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய குடும்பச் சூழல் அவர்களை வெளியே அனுப்பி வைக்க முடியாத நிலையில் இருக்கும்.
சிலர் தங்களுடைய சொந்த முயற்சியால் தன் செலவுகளையே பார்த்துக் கொள்ள முடியாத நிலையில் இருப்பார்கள்.
முயற்சி, உழைப்பு இருந்தும் சிலருக்கு வெற்றி கிடைக்காமல் இருக்கிறது. ஏன்?
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு முன்பும் பின்பும் பாவ கிரகங்கள் இருந்தால், பாவகர்த்தி யோகம் உண்டாகும். அதனால் அவர்களுடைய வாழ்க்கையில் தடைகள் உண்டாகும்.
10 க்கு அதிபதியான கிரகம் நீசமடைந்தால் அல்லது சூரியனுடன் அஸ்தமாக இருந்தால், அவர்களுடைய சுய முயற்சியில் பல தடைகள் உண்டாகும்.
4 க்கு அதிபதியான கிரகம் 6, 8, 12 இல் இருந்தால், அவர்கள் கடுமையாக உழைத்தும், சாதாரண வெற்றிதான் கிடைக்கும்.
லக்னாதிபதி விரய ஸ்தானதிபதியுடன் விரய ஸ்தானத்தில் இருந்தால், அவர்கள் பிறந்த ஊரிலிருந்து வேறு ஊருக்குச் சென்றால், வெற்றி பெறுவார்கள். கன்யா லக்னத்தில் புதன் விரய ஸ்தானாதிபதியான சூரியனுடன் அஸ்தமாக இருந்தால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பெரிய வெற்றியைப் பார்க்கும் போது, ஏதாவது நோயோ அல்லது குடும்பத்தில் ஏதாவது பிரச்னைகளோ உண்டாகும். ஆனால், அந்த புதனுக்கு, குரு கேந்திரத்தில் இருந்தால், அல்லது 5 அல்லது 9 இல் இருந்து பார்வையைப் பார்த்தால், அவர்களுக்கு 32 வயதிற்குப் பிறகு பெரிய வெற்றி கிடைக்கும்.
12 இல் செவ்வாய், சனி, 5 இல் ராகு, 11 இல் சூரியன் இருந்தால், அவர்கள் வெற்றியைக் காணும் நேரத்தில் தங்களுடைய மனைவிகளால் பாதிக்கப்படுவார்கள். அதனால், அவர்களுடைய அந்த வெற்றியில் தடை இருந்து கொண்டே இருக்கும். ஆனால், குருவின் பார்வை அந்த செவ்வாய், சனிக்கு இருந்தால், அந்த தடை நீங்கி விடும்.
சிம்ம லக்னத்தில் சூரியன், 2 இல் சனி, புதன், 5 இல் கேது இருந்தால், அவர்களுடைய வாழ்க்கையின் முதல் பாகத்தில் (32 வயது வரை) கடுமையான கஷ்டங்கள் இருக்கும். என்ன முயற்சிகள் செய்தாலும், அவர்களுக்கு தடைகள் இருந்து கொண்டே இருக்கும். 2 க்கு அதிபதியான கிரகம் நீசமடைந்தால், 5 இல் ராகு இருந்தால், 10 இல் சனி இருந்தால், தங்களுடைய 52 வயதிற்குப் பிறகு அவர்கள் வெற்றிகளைப் பார்ப்பார்கள்.
விருச்சிக லக்னத்தில் 5 இல் ராகு, 10 இல் சனி அஸ்தமாக இருந்தால், அவர்களுக்கு 48 வயது வரை தடைகள் இருக்கும். 52 வயதிற்குப் பிறகு பெரிய வெற்றிகளை அவர்கள் பார்ப்பார்கள். ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், அவர்கள் ஏதாவது முயற்சி செய்யும்போது, பயம் உண்டாகும். அதிகமாக சிந்திப்பார்கள். அதனால் முக்கியமான வேலைகளைச் செய்யாமல் விட்டு விடுவார்கள். 5 க்கு அதிபதியான கிரகம் நீசம் அல்லது அஸ்தமாக இருந்தால், அவர்கள் தங்களுடைய வேலைகளைச் செய்யும்போது பெயர், புகழ் கிடைக்காது. 9 க்கு உரிய கிரகம் 8 இல் இருந்தால் அல்லது 6 இல் இருந்தால், அல்லது ராகு, செவ்வாய், சனியுடன் இருந்தால், அல்லது பார்வை இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். அதனால் பயந்து போய், பிறரிடம் அடிமையாக வேலை பார்ப்பார்கள்.
கால சர்ப்ப தோஷம் இருந்து, லக்னாதிபதி அஸ்தமாக இருந்தால், 31 வயது வரை அவர்களுக்கு கஷ்டங்கள் இருக்கும். லக்னாதிபதி அஸ்தமாக இருந்து, சுகாதிபதி நீசமடைந்தால், 2 இல் செவ்வாய், சுக்கிரன் அல்லது செவ்வாய், ராகு இருந்தால், இளம் வயதிலேயே படிப்பை விட்டு விட்டு, வேலை பார்க்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உண்டாகும். அதனால் முன் பகுதி வாழ்க்கை அவர்களுக்கு நன்றாக இருக்காது. பிற்பகுதி நன்றாக இருக்கும். லக்னத்தில் சூரியன், சனி, இருந்தால், முன் கோபத்தால் அவர்களுக்கு பல தடைகள் ஏற்படும். லக்னத்தில் உச்ச சூரியன், 7 இல் உச்ச சனி இருந்தால், அவர்களே பல தடைகளை உண்டாக்கிக் கொள்வார்கள். கன்யா லக்னமோ அல்லது மிதுன லக்னமோ இருந்து, 2 இல் சுக்கிரன், செவ்வாய் இருந்தால், பெண் மோகத்தால் அவர்களுக்கு பல தடைகள் உண்டாகும்.
பரிகாரங்கள்
1. பகவான் விநாயகரை வழிபட வேண்டும்.
2. வீட்டைச் சுத்தமாக வைக்க வேண்டும்.
3. கருப்பு நிற ஆடை அணியக் கூடாது.
4. தெற்கில் தலை வைத்து படுக்கக் கூடாது.
5. தன் ரகசியங்களை யாரிடமும் கூறக் கூடாது.
6. வீட்டிற்கு வெளியே கால் வைக்கும்போது, தன் குல தெய்வத்தை அல்லது விருப்பமான கடவுளை வணங்கி கால் வைக்க வேண்டும்.
7. எங்கு பயணம் சென்றாலும், பகவான் சீதாராமனின் பெயரை உச்சரித்து பயணத்தை ஆரம்பிக்க வேண்டும்.
8. தன் லக்னத்திற்கு அதிபதியான கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
9. 5 க்கு அதிபதியான கிரகத்தின் கடவுளை வழிபட வேண்டும்.
10. தினமும் சூரியனுக்கு நீர் விட வேண்டும்.
11. வீட்டில் பச்சை நிறம் இருக்கக் கூடாது.
12. வீட்டில் துர்க்கை அல்லது ஆஞ்சநேயரின் யந்திரத்தை வைத்து வழிபட வேண்டும்.