கும்ப லக்னக்காரர்கள் பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற அணிய வேண்டிய ரத்தினங்கள்...
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 8581
கும்ப லக்னக்காரர்கள்
பிரச்னைகளிலிருந்து விடுதலை பெற
அணிய வேண்டிய ரத்தினங்கள்...
- மகேஷ்வர்மா
கும்ப லக்னக்காரர்கள் திடமான சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள். கம்பீரமான மனிதர்களாக இருப்பார்கள். நேரடியாக பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். காம எண்ணங்கள் நிறைந்தவர்களாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதே நோக்கமென இருப்பார்கள். சுகங்களில் மிதக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். நண்பர்களுடன் நன்றாக பழகுவார்கள். ஆடம்பரங்களில் விருப்பமுடையவர்களாக இருப்பார்கள்.
அடுத்தவர்களுக்கு நல்லவற்றைச் செய்ய வேண்டும் என்று எண்ணக் கூடியவர்களாக இருப்பார்கள். சாதுரியமாக பேசுபவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். பழைய பொருட்களைச் சேர்த்து வைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தொழிலதிபர்களாக இருப்பார்கள். இசையில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.
கும்ப லக்னத்திற்கு அதிபதி பகவான் சனி. சனி லக்னத்தில் இருந்தால், அந்த மனிதனுக்கு எப்போதும் வாழ்க்கையில் பிரச்னையே இருக்காது. அவர்கள் தங்களுடைய இடத்தில் குறைந்த பட்சம், ஒரு முறையாவது தலைவராக இருப்பார்கள். ஆனால், லக்னாதிபதி, சூரியனுடன் அஸ்தமாக இருந்தால், அவர்களுக்கு உடலில் பிரச்னைகள் உண்டாகும். அதனால் அவர்கள் சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும்.
லக்னாதிபதியான சனி 2 இல் இருந்தால், அவர்களுக்கு இல் வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கும். அதனால் அவர்கள் சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும்.
லக்னாதிபதி 3 இல் இருந்தால், சனி நீச்சமடைந்தால், அதனால் உடல் நலத்திலும் பிரச்னைகள் ஏற்படும். சகோதரர்களுக்கிடையே பிரச்னைகள் உண்டாகும். அதனால், அவர்கள் சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும்.
லக்னாதிபதியான சனி 4 இல் இருக்கும்போது, சந்தோஷத்தைத் தருவார். லக்னாதிபதியும் 4 க்கு அதிபதியுமான சுக்கிரனும் சேர்ந்து இருந்தால், அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய சந்தோஷங்கள் கிடைக்கும். ஆனால், ராகு – கேதுவுடன் சனி சேர்ந்து இருந்தால், அல்லது சனி, சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அல்லது சனி, செவ்வாயுடன் சேர்ந்து இருந்தால், அவர்களுக்கு இல் வாழ்க்கையில் எப்போதும் பிரச்னைகள் இருந்து கொண்டே இருக்கும். கணவன் – மனைவி உறவு சரியாக இருக்காது. அதனால், சனியின் ரத்தினமான நீலத்தை அணிவது நல்லது.
சனி 6 இல் இருந்தால், உடல் நலம் பாதிக்கப்படும். அதனால், சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும். சனி 7 இல் இருந்தால், மனைவிக்கு உடலில் பிரச்னைகள் இருக்கும். கணவனுக்கு வாய்வு தொல்லைகள் உண்டாகும். அந்த பிரச்னைகளிலிருந்து விடுபட, அவர்கள் சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும்.
சனி 8 இல் இருந்தால், இல் வாழ்க்கையில் பிரச்னைகள் ஏற்படும். உடலில் பிரச்னைகள் உண்டாகும். அதனால், அவர்கள் நீலத்தை அணிய வேண்டும்.
லக்னாதிபதியான சனி 9 இல் இருந்தால், வாழ்க்கையில் அவர்கள் வெற்றி பெறுவார்கள். ஆனால், சந்திரன், செவ்வாய், ராகு, லக்னாதிபதியான சனியுடன் இருந்தால், அவர்களுக்கு பிரச்னைகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அதனால், அவர்கள் சனியின் ரத்தினமான நீலத்தை அணிய வேண்டும்.
சனி 10 இல் இருந்தால், சத்ர பங்க யோகம் உண்டாகும். அதனால் மனிதன் வெற்றி கண்டு நாற்காலியில் அமரும்போது, நாற்காலி இல்லாமற் போய் விடும். அதனால், அவர்கள் நீலத்தை அணிய வேண்டும்.
சனி 11 இல் இருந்தால், லாபத்தைத் தருவார். நன்மைகளைக் கொடுப்பார். சனி விரையத்தில் இருந்தால், இல் வாழ்க்கையில் பிரச்னைகள் உண்டாகும். அதனால் அவர்கள் சனி பகவானை வழிபட வேண்டும். சிவனை வழிபட வேண்டும். நீலத்தை அணியக் கூடாது. கும்ப லக்னத்திற்கு 5 க்கு அதிபதியான புதன் லக்னத்தில் இருந்தால், அந்த மனிதனுக்கு பல யோகங்கள் உண்டாகும். 2 இலோ 5 இலோ 9 இலோ இருந்தால், ராஜ யோகத்தைத் தருவார். அதே நேரத்தில் 2 க்கு அதிபதியுடன், 9 க்கு அதிபதியுடன் இருந்தால், பிரபல ராஜ யோகம் உண்டாகும். ஆனால், 5 க்கு அதிபதியான புதன் 6 இல் இருந்தால், அவர்களுக்கு பிள்ளைகளால் பிரச்னைகள் உண்டாகும். நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும். அதனால், அவர்கள் புதனின் ரத்தினமான மரகத பச்சையை அணிய வேண்டும்.
5 க்கு அதிபதியான புதன் 8 இல் இருந்தால், அவர்களுக்கு பல நோய்கள் உண்டாகும். மனதில் சிக்கல்கள் ஏற்படும். அவர்கள் மரகத பச்சையை அணிய வேண்டும். 5 க்கு அதிபதியான புதன் 12 இல் இருந்தால், அவர்களுக்கு வெளிநாடுகளுடன் வர்த்தகத் தொடர்பு இருந்தால், அது நன்றாக நடக்கும். ஆனால், பிள்ளைகளால் பிரச்னைகள் உண்டாகும். 5 க்கு அதிபதியான புதன் விரய ஸ்தானத்தில், சனியுடன் இருந்தால், அவர்களுக்கு பல பிரச்னைகள் இருக்கும். அவர்கள் புதனின் ரத்தினமான மரகத பச்சையை அணிய வேண்டும்.
கும்ப லக்னத்திற்கு 9 க்கு அதிபதியான சுக்கிரன் 6, 8, 12 இல் இருந்தால், தீமையைச் செய்வார். வாழ்க்கையில் போராட்டங்கள் அதிகமாக இருக்கும். அதனால், அவர்கள் சுக்கிரனின் ரத்தினமான வைரத்தை அணிய வேண்டும்.
சுக்கிர பகவான், செவ்வாயுடன் இருந்தால், பிரச்னைகள் ஏற்படும். சுக்கிரன், செவ்வாய், ராகு சேர்க்கை இருந்தாலும், பிரச்னைகள் இருக்கும். சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கை இருந்தாலும் பிரச்னைகள். உடல் நலம் கெடும். அதனால், அவர்கள் சுக்கிரனின் ரத்தினமான வைரத்தை அணிய வேண்டும்.
கும்ப லக்னக்காரர்களுக்கு அதிகமான பிரச்னைகள் இருந்தால், அவர்கள் லக்னாதிபதியான சனியின் ரத்தினமான நீலம், 5 க்கு அதிபதியான புதனின் ரத்தினமான மரகத பச்சை, 9 க்கு அதிபதியான சுக்கிரனின் ரத்தினமான வைரம் ஆகியவற்றை ஒரே டாலராக செய்து அணிந்து, பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.