சொத்துக்கள் வாங்க வேண்டுமா? செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2354
சொத்துக்கள் வாங்க வேண்டுமா?
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
- மகேஷ் வர்மா
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் சொந்த வீடு, நகைகள், பணம் ஆகியவற்றைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று எப்போதும் மனதில் ஆசைப்படுவான். சிலருக்கு பிறக்கும்போதே அந்த வசதிகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் முயற்சி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், பெரும்பாலானவர்கள் முயற்சி பண்ணித்தான் சம்பாதிக்க முடியும் என்ற நிலையிலேயே இருப்பார்கள். அவர்கள் சொத்துக்களை வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், சொத்துக்களை வாங்கக் கூடிய நேரத்தில், ஏதாவது பிரச்னைகள் முளைத்து அவற்றை வாங்க முடியாத சூழ்நிலை அவர்களுக்கு உண்டாகி விடும். அல்லது வாங்கிய சொத்துக்களை இழக்க வேண்டிய நிலை அவர்களுக்கு உண்டாகும்.
அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
ஒரு மனிதனின் லக்னாதிபதி, லக்னத்திலோ அல்லது உச்சமாகவோ இருந்தால், அந்த மனிதன் தன்னுடைய சுய முயற்சியால் மட்டுமே தான் மனதில் ஆசைப்படும் விஷயங்களை அடைய முடியும். அந்த ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், அந்த ஜாதகரின் 4 க்கு அதிபதியான கிரகம் நீசம் அடையக் கூடாது. அஸ்தம் ஆகக் கூடாது. விரய ஸ்தானத்தில் இருக்கக் கூடாது. 8 இல் இருக்கக் கூடாது.
4 வது வீட்டிற்கு சுப கிரகத்தின் பார்வை இருக்க வேண்டும். 9 க்கு அதிபதியான கிரகம் லக்னத்திலோ, 2 லோ, 5 லோ இருக்க வேண்டும். அல்லது 9 இல் இருந்து 5 க்கு அதிபதியான கிரகத்தையும், 4 க்கு அதிபதியான கிரகத்தையும் பார்க்க வேண்டும். அல்லது 4 க்கும் 5 க்கும் அதிபதியான கிரகங்கள் 9 இல் இருக்க வேண்டும். அந்த கிரகத்திற்கு குருவின் பார்வை இருக்க வேண்டும். இதைப் போல இருந்தால், அவர் தன் வாழ்க்கையில் சொத்துக்களை வாங்க முடியும்.
9 க்கு அதிபதியான கிரகம் 11 இலும், 11 க்கு அதிபதியான கிரகம் 5 இலும், 5 க்கு அதிபதியான கிரகம், லக்னத்திலும் இருந்தால், அவருக்கு பண வசதி உண்டாகும். சொத்துக்கள் வந்து சேரும்.
லக்னாதிபதி, 2 க்கு அதிபதியான கிரகம், 9 க்கு அதிபதியான கிரகம் – மூன்றும் சேர்ந்து லக்னத்தில், 5 இல், 9 இல் அல்லது 11 இல் இருந்தால், அவர்களுக்கு பெரிய அளவில் சொத்துக்கள் வந்து சேரும். 5 க்கும், 11 க்கும் உரிய கிரகம் 10 இல் இருந்தால், அல்லது இவ்விரண்டு கிரகங்களும் 10 க்கு அதிபதியுடன் லக்னத்தில் இருந்தால், அந்த மனிதர் தன் சுய முயற்சியால் முன்னுக்கு வந்து, ஏராளமான சொத்துக்களை வாங்குவார்.
லக்னாதிபதியுடன் 10 க்கு அதிபதியான கிரகம் லக்னத்தில் இருந்தால், அந்த மனிதர் தன் சுய முயற்சியால் பெரிய அளவில் சொத்துக்களை வாங்குவார். 2 இல் சுக்கிரன், 10 இல் குரு, லக்னத்தில் புதன் இருந்தால், அவர் பெரிய கதாசிரியராகவோ, விஞ்ஞானியாகவோ, ஜோதிடராகவோ வந்து பெயர், புகழ் பெறுவார். அதன் மூலம் அவர் சொத்துக்களை வாங்குவார்.
லக்னத்தில் சந்திரன், சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால், அந்த மனிதனுக்கு கஜ கேசரி யோகம் உண்டாகி, அவர் ஆட்சியில் மன்னர் போல வாழ்வார்.
ஒரு ஜாதகத்தில் குரு உச்சமாக இருந்து புதனைப் பார்த்தால் அல்லது குரு சுய வீட்டில் இருந்து, புதனைப் பார்த்தால், அவர் பெரிய சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆக வந்து, பெரிய அளவில் சொத்துக்களை வாங்குவார். 10 இல் புதன், சூரியன், குரு, சுக்கிரன் இருந்தால், அந்த மனிதர் 31 வயதிற்குப் பிறகு பெயர், புகழுடன் சந்தோஷமாக வாழ்வார். சொத்துக்களையும் நிறைய வாங்குவார்.
4 கேந்திரங்களிலும் (1, 4, 7, 10) சுப கிரகங்கள் இருந்தால், அந்த மனிதருக்கு கேந்திராதிபதி கிரகத்தின் தசை நடக்கும்போது, அவர் நிறைய சொத்துக்களைச் சேர்ப்பார்.
ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி நீசமடைந்தால் அல்லது அஸ்தமாக இருந்தால், சில முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு பிறரிடம் ஆலோசனை கேட்கும்போது உண்டாகக் கூடிய குழப்பங்களால் அவரால் சொத்துக்கள் எதுவும் வாங்க முடியாது. 4 க்கு அதிபதியான கிரகம் நீசமடைந்தால், அல்லது 6, 8 இல் இருந்தால், பெயர், புகழ் இருந்தும், சொத்து சேர்க்கக் கூடிய வாய்ப்பு அவருக்கு இல்லாமலிருக்கும். 4 இல் சூரியன் இருந்தால், அந்த சூரியனுக்கு சனியின் பார்வை இருந்தால், அந்த மனிதர் சொத்து சேர்க்கும்போது, உடலில் உபாதைகள் உண்டாகும். சொத்துக்களைச் சேர்க்க முடியாத சூழ்நிலை உண்டாகும்.
4 க்கும் 11 க்கும் அதிபதியான கிரகம் 12 இல் அல்லது 6 இல் இருந்தால், அவர்கள் தங்களுடைய முயற்சிகளில் வேகம் குறைவானவர்களாக இருப்பார்கள். அதனால், அவர்களால் சொத்துக்களை வாங்க முடியாது.
4 இல் சூரியன், 12 இல் ராகு இருந்தால், அவர்கள் தங்களுடைய சக்திக்கும் மீறி கடனை வாங்கி விடுவார்கள். 4 இல் சந்திரன், 7 இல் சனி, 9 இல் சூரியன் இருந்தால், அவர்கள் அதிகமாக கடன் வாங்குவார்கள். சுக்கிரனும் குருவும் ஒரு ஜாதகத்தில் நீசமாக இருந்து, அந்த ஜாதகத்தில் சனி, சந்திரனையோ அல்லது சூரியனையோ பார்த்தால், அவர்களுக்கு சொத்துக்கள் வாங்குவதில் பிரச்னைகள் இருக்கும்.
பரிகாரங்கள்
1. ஒரு மனிதன் காலை நேரத்தில் எழுந்திருக்கும்போது, கண்களைத் திறந்தவுடன் தன் இரு கைகளையும் சேர்த்து வைத்து, உள்ளங் கையில் லட்சுமி, சரஸ்வதி, விஷ்ணு ஆகியோரை நினைத்து வணங்க வேண்டும். பிறகுதான் கால்களையே பூமியில் வைக்க வேண்டும்.
2. மேற்கு திசையில் தலையை வைத்து படுக்க வேண்டும்.
3. காலை நேரத்தில் பகவான் சூரியனுக்கு நீரில் குங்குமம், சர்க்கரை கலந்து விட வேண்டும்.
4. அரச மரத்தைச் சுற்றி வந்து, நீர் விட வேண்டும்.
5. ஆஞ்சநேயர் ஆலயத்திற்குச் சென்று 9 முறை சுற்றி வர வேண்டும்.
6. தன் தந்தை, தாய் இருவரின் கால்களையும் தொட்டு வணங்க வேண்டும். அதனால் ஜாதகருக்கு இருக்கக் கூடிய சூரியன், சந்திரன் ஆகியோரின் தோஷங்கள் நீங்கும்.
7. மனைவியுடன் சண்டை போடக் கூடாது. மனைவி கணவனுடன் சண்டை போடக் கூடாது.
8. வீட்டில் தேவையற்ற பொருட்களை நீக்கி விட வேண்டும்.
9. வீட்டில் சாயங்கால நேரத்தில் நகம் வெட்டக் கூடாது.
10. சாயங்கால வேளையில் துணி துவைக்கக் கூடாது.
11. லக்னாதிபதிக்கு 9 க்கு அதிபதியான கிரகத்தின் ரத்தினத்தை அணிய வேண்டும்.
12. வீட்டில் மாருதி யந்திரம் வைத்து வழிபட வேண்டும்.
மேற்கண்ட பரிகாரங்களைச் செய்தால், வாழ்க்கையில் சொத்துக்களை வாங்கி சந்தோஷமாக வாழலாம்.