தீபாவளி பற்றிய கதைகளும் அதில் மறைந்திருக்கும் தத்துவமும்
- Details
- Category: ஜோதிடம்
- Published Date
- Written by சுரா
- Hits: 2035
தீபாவளி பற்றிய கதைகளும்
அதில் மறைந்திருக்கும் தத்துவமும்
- மகேஷ் வர்மா
தீபாவளி என்றால் விளக்கேற்றி வைத்து வழிபடும் திருவிழா என்று அர்த்தம். தீபாவளியன்று சின்னஞ் சிறிய கிராமங்கள் கூட விளக்குகளின் வெளிச்சத்தில் பிரகாசமாக இருக்கும். தமிழ் நாட்டில் இது ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அமாவாசைக்கு முந்தைய நாள் இங்கு தீபாவளி வருகிறது. வட இந்தியாவில் அமாவாசையன்றுதான் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.
நரகாசுரன் என்ற அரக்கனை பகவான் விஷ்ணு வதம் செய்தததைத் தொடர்ந்து, மக்கள் அந்த அரக்கனின் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுகின்றனர்.
அந்த நாளை விளக்கேற்றி வைத்து கொண்டாடுகின்றனர். அதுதான் தீபாவளி. அந்த நாளன்று எண்ணெய் தேய்த்து குளித்து, கோலங்கள் இட்டு, வீட்டிற்கு வர்ணங்கள் பூசி, வாசலில் தோரணங்கள் கட்டி, தீபங்கள் ஏற்றி, மலர்களால் அலங்கரித்து, பட்டாசு வெடித்து, இனிப்பு பலகாரங்கள் செய்து, பெரியவர்களின் கால்களில் விழுந்து தீபாவளியை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மறுநாள் அமாவாசையன்று வீட்டில் பல வகையான இனிப்பு பலகாரங்களைச் செய்து, தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, வீட்டில் செய்த பிரசாதத்தை கோவிலுக்கு எடுத்துச் சென்று கடவுளுக்கு முன்னால் வைத்து வழிபடுவார்கள். அந்த நாளை நோன்பு என்று குறிப்பிடுவார்கள்.
வட இந்தியாவில் அமாவாசையன்று தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். அந்த நாளுக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. பகவான் ராமன் 14 வருடங்கள் வன வாசம் இருந்து, ராவணன் என்ற அரக்கனை அழித்து விட்டு, அயோத்திக்கு மீண்டும் திரும்பி வருகிறார். அப்போது அந்த ஊர் மக்கள் தங்களுடைய வீடுகளிலும், தெருக்களிலும் விளக்கேற்றி வைத்து அந்த நாளைக் கொண்டாடுகிறார்கள். பல வகையான இனிப்புப் பலகாரங்களைச் செய்து, பிறருடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
தீபாவளியன்று பகவான் விஷ்ணுவின் உடலில் பாதியான அன்னை லட்சுமிக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்படும். அந்த நாளன்று வீட்டின் பூஜையறையில் சிவப்பு நிற துணியை விரித்து, அதன் மீது லட்சுமி, சரஸ்வதி, விநாயகர் ஆகியோரின் படங்களை வைத்து, அதற்கு அருகில் ஒரு கலசத்தில் நீர் பிடித்து வைத்து, அதில் ஐந்து வெற்றிலைகள் அல்லது 5 மாவிலைகளை வைத்து, அதில் ஒரு தேங்காயை வைத்து, அந்த கலசத்தை பூஜை செய்து, அன்னை லட்சுமிக்கு வெள்ளை நிற மலர்களை (தாமரை, மல்லிகை) வைத்து வழிபடுவார்கள்.
வீட்டில் ஏதாவது இனிப்பு பலகாரங்களைச் செய்து, பிரசாதமாக வைப்பார்கள்.
படத்தின் இரு பக்கங்களிலும் இரு தீபங்களை ஏற்றி வைப்பார்கள். ஒரு தீபம் நெய்யைக் கொண்டும், இன்னொரு தீபம் நல்லெண்ணெய்யைக் கொண்டும் ஏற்றப்படும்.
வீட்டில் வெள்ளி காசு இருந்தால், அதை பூஜையறையில் வைத்து வழிபடுவார்கள். அந்த பூஜையை அமாவாசையன்று சூரியன் மறைந்த பிறகு, செய்ய வேண்டும்.
தீபாவளிக்கு பூஜை செய்யும் வசதி இல்லையென்றால், பூஜையறையில் அமர்ந்து, மனதில் மகாலட்சுமியை நினைத்து, மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, ஒரு ஆசனத்தில் மன கற்பனையில் மகாலட்சுமியை அமர வைத்து, அந்த அன்னையை வழிபட வேண்டும். மகாலட்சுமியின் சூட்சும மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். அதன்மூலம் வீட்டில் பண வசதி, மன அமைதி கிடைக்கும்.
மகாலட்சுமி சூட்சும மந்திரத்தின் விசேஷ மந்திரம்:
‘ஓம் ரீம் ஷ்ரீம் க்ளீம்.’
இந்த மந்திரத்தை இரவு முழுவதும் கூறிக் கொண்டேயிருக்க வேண்டும். அப்படி கூறினால், அவர்களுக்கு லட்சுமியின் அருள் கிடைக்கும். மனதில் சந்தோஷம் உண்டாகும்.
தீபாவளிக்கான தத்துவம்
வாழ்க்கையில் இருக்கும் பயம் என்ற அசுரன், நோய் என்ற அசுரன் ஆகியவை அழியும் நாள் தீபாவளி. நோய்க்குக் காரணமான தேவையற்ற பொருட்கள், ஒட்டடை, குப்பைகள் ஆகியவற்றை நீக்கி விட வேண்டும்.
தீபாவளியன்று இருட்டிலிருக்கும் மனிதன் வீட்டில் விளக்கேற்றி வைத்து, கடவுள்களை வழிபட்டால், தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த அசுரர்கள் அழிந்து, வாழ்க்கையில் சிரமங்கள் நீங்கி, அது சந்தோஷம் நிறைந்ததாக ஆகும் என்பது மனிதர்களின் நம்பிக்கை.