நிர்வாண நிஜம் - Page 17
- Details
- Category: சினிமா
- Published Date
- Written by சுரா
- Hits: 9789
விஜயகாந்த் படத்தை வாங்கி, விண்ணுலகிற்கே சென்றுவிட்ட வினியோகஸ்தர்!
சுரா
ரங்கராஜ் - இவர் ஒரு திரைப்பட வினியோகஸ்தர். 1994ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு அவர் அறிமுகமானார். சென்னை மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் நாற்காலி, மேஜை, பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு ஷோ ரூமைச் சொந்தத்தில் அவர் வைத்திருந்தார். சொந்த ஊர் மதுரை. அங்கு அவருக்கு கடைகள், லாட்ஜ், ஃபைனான்ஸ் கம்பெனி ஆகியவை இருந்தன.
திடீரென்று அவருக்கு ஒரு ஆசை- படவுலகில் காலடி எடுத்து வைத்து வினியோகஸ்தராக வடிவமெடுத்தால் என்ன என்று. அதற்கு முன்பு படவுலகத்தைப் பற்றிய எந்த அறிவும் அவருக்குக் கிடையாது. இருந்தாலும் சினிமா ஆசை அவர் மனதில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. விளைவு- படத்தை வினியோகம் செய்ய உதவும் மீடியேட்டர் ஒருவர் அவருக்கு அறிமுகமாக, தினமும் ஒவ்வொரு படம் என்று ரங்கராஜ் சுமார் ஐம்பது படங்களை இடைவிடாமல் பார்த்தார். எதுவுமே ரங்கராஜுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்த 'மனதிலே ஒரு பாட்டு' என்ற படத்தைப் பார்த்தார். அந்தப் படத்தை அதற்கு முன்பு பல முறை பல வினியோகஸ்தர்களுக்கும் அதைத் தயாரித்தவர்கள் போட்டுக் காட்டியும், யாரும் வாங்க முன் வரவில்லை. ஆனால், ரங்கராஜுக்கு எப்படியோ அந்தப் படம் மிகவும் பிடித்து விட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரங்கராஜ் வடிவில் அதிர்ஷ்டம் அடித்தது!
இரண்டு ஏரியாக்களை நல்ல விலை கொடுத்து வாங்கினார் ரங்கராஜ். வினியோகம் பண்ண வேண்டும் என்று அவர் வாங்கிய முதல் படமே அதுதான். படம் திரைக்கு வந்தது. போட்ட பணத்தில் ரங்கராஜுக்கு ஒரு பைசா கூட திரும்ப கிடைக்கவில்லை. படம் அந்த அளவிற்கு படு தோல்வி. இதுதான் அவரின் முதல் படவுலக அனுபவம்!
எனினும் அவர் சளைக்கவில்லை. நெப்போலியன்- குஷ்பு நடித்த 'என் பொண்டாட்டி நல்லவ' என்ற படத்தை சென்னை நகரத்திற்கு வாங்கினார். செந்தில்நாதன் இயக்கிய அந்தப் படத்தில் போட்ட பணத்தில் பாதிப் பணம் கைக்கு வந்தது. பவித்ரன் இயக்கிய 'கல்லூரி வாசல்' படத்தை வாங்கினார். அதிலும் பயங்கர அடி.
இதற்கிடையில் சென்னையில் தான் வைத்திருந்த ஷோரூமை முழுமையாகக் காலி செய்து விட்டு, அவர் மதுரையிலேயே குடியேறிவிட்டார். வி.சி.குகநாதன் இயக்கி அஜீத் கதாநாயகனாக நடித்த 'மைனர் மாப்பிள்ளை' என்ற படத்தை மதுரை ஏரியாவுக்கு அவர் வாங்கினார். 'காதல் கோட்டை' திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது. எங்கு பார்த்தாலும் அஜீத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அலையாலோ என்னவோ சுமாரான படமான 'மைனர் மாப்பிள்ளை' வர்த்தக ரீதியாக நன்றாக ஓடி ரங்கராஜுக்கு கணிசமான லாபத்தைச் சம்பாதித்துத் தந்தது. ரங்கராஜ் திரைப்பட வினியோகஸ்தர் அங்கியை அணிந்த பிறகு, அவர் முதலீடு செய்த பணத்திற்கு மேல் லாபம் என்று பார்த்தது முதல் முறையாக அந்தப் படத்தில்தான். தொடர்ந்து குகநாதனிடம் சிறு தொகை ஒன்றைக் கொடுத்து 'கனவுக் கன்னி' என்ற தெலுங்கு டப்பிங் படத்தை ரங்கராஜ் வாங்கினார். ‘வெங்கடேஷ்- ஷில்பா ஷெட்டி இணைந்து நடித்த அந்தப் படம்தான் நான் வாங்கிய படங்களிலேயே நல்ல வசூலைப் பெற்றுத் தந்த படம்’ என்று ஒரு நாள் என்னைப் பார்க்கும்போது ரங்கராஜ் கூறினார்.
அவரின் முழு கவனமும் திரைப்பட வினியோகத்தை நோக்கியே திரும்பிவிட்டது. கே.டி.குஞ்சுமோனின் 'ஜென்டில்மேன்' மதுரை- இராமநாதபுரம் மாவட்டங்களில் 25 தியேட்டர்களில் ஓடி முடிந்த நிலையில், குஞ்சுமோனுக்கும், வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் உண்டான சில பிரச்னைகளால் அதற்குப் பிறகு வேறு எந்தத் திரையரங்குகளிலும் அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. மதுரை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் குஞ்சுமோனுக்கு சில லட்சங்களை அபராதமாகப் போட்டது. குஞ்சுமோன் தலை வணங்கத் தயாராக இல்லை. அபராதம் கட்டவும் முடியாது என்று கம்பீரமாகக் கூறிவிட்டார். அந்த அபராதத் தொகையை ரங்கராஜ் கட்டி, மதுரை- இராமநாதபுரம் ஏரியாவுக்கு படத்தின் வினியோக உரிமையை வாங்கியதோடு, மதுரையில் இருக்கும் தன்னுடைய வினியோக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு கே.டி.குஞ்சுமோனை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, ஏகப்பட்ட மரியாதைகள் செய்து ஒரு பெரிய விழாவே நடத்தினார். நானும் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். 'நமக்குத் தலை வணங்காத குஞ்சுமோனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று ஆரத்தி எடுக்கும் இந்த நபர் யார்?' என்று மதுரையைச் சேர்ந்த பட வினியோகஸ்தர்கள் ரங்கராஜை வியப்பு மேலோங்க பார்த்தார்கள். கரும்பை முழுமையாக சுவைத்துவிட்ட பிறகு, சக்கையில் என்ன இருக்கும்? பெரிய ஊர்களில் முழுமையாக ஓடி முடிந்துவிட்ட அந்தப் படம் சிறிய ஊர்களில் ஓடி ரங்கராஜுக்கு என்ன பெரிதாகச் சம்பாதித்துத் தந்துவிடப் போகிறது? அந்தப் படத்திலும் ரங்கராஜுக்குப் போட்ட அசல் கூட வரவில்லை.
அதற்குப் பிறகு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நான்கைந்து படங்களை அவர் வாங்கினார். சில ஓடின. சில மண்ணைக் கவ்வின. எப்போதாவது சென்னைக்கு வரும்போது என்னை அவர் சந்திப்பார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து, பி.வாசு இயக்கி, வேலூர் அப்சரா தியேட்டர் அதிபர் பாலாஜி தயாரித்த 'வாய்மையே வெல்லும்' படத்தில் தனக்கு பல லட்சங்கள் நஷ்டம் என்று மிகவும் கவலையுடன் ஒரு நாள் என்னிடம் சொன்னார் ரங்கராஜ்.
இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும், அவரிடம் எந்தவித சோர்வையோ, தளர்ச்சியையோ நான் பார்க்கவில்லை. பல லட்சங்கள் நஷ்டமடைந்திருந்தாலும், எப்போதும் மிகுந்த தைரியத்துடன் அவர் பேசுவார். பின்னர் ஒரு முறை சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தபோது, முற்றிலுமாக அவர் ஒடிந்து போயிருந்தார். சரியாக நடக்கக் கூட அவரால் முடியவில்லை. காரணம்- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'உளவுத் துறை' கொடுத்த மரண அடி! மிகப் பெரிய தொகை கொடுத்து மதுரை ஏரியாவுக்கு வினியோக உரிமை பெற்ற அவருக்கு அந்தப் படத்தின் மூலம் அந்தக் காலத்தில் சுமார் 60 லட்சம் நஷ்டம்! ஒரு மனிதரால் தாங்கிக் கொள்ளக் கூடிய தொகையா அது? 'இவ்வளவு பெரிய தொகை கொடுத்து உங்களை யார் அந்தப் படத்தை வாங்கச் சொன்னது?' என்று நான் அவரை உரிமையுடன் கோபித்தேன். அந்தப் படம் உண்டாக்கிய கடனால் மன நிம்மதி இல்லாத மனிதராக ஆனார் ரங்கராஜ். பலருக்கும் பதில் கூறுவதற்கு அஞ்சி அவர் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார். மதுரையில் பல லட்சங்கள் கடன்! அவர் நடத்திக் கொண்டிருந்த அத்தனை பிசினஸ்களையும் இழுத்து மூட வேண்டிய நிலை...
ஒரு நாள் ஒரு நண்பரின் மூலம் துயரம் நிறைந்த அந்தச் செய்தியை... மிகவும் தாமதமாக நான் தெரிய நேர்ந்தது. மதுரையில் இருந்த ரங்கராஜ் தானே மரணத்தைத் தேடிக் கொண்டார் என்பதே அது. படத்துறையில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால், ரங்கராஜ் என்ற அந்த அருமையான மனிதர் இன்று கூட உயிருடன் இருந்திருப்பார்! ஒரு மனிதரின் சினிமா ஆசை, அவரை மண்ணுக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டது. நான் ஒரு இனிய நண்பரை இழந்துவிட்டேன். கலையுலகக் கனவில் கரைந்து போன நிழலாகிவிட்டார் ரங்கராஜ்!











