Logo

விழி மூடி யோசித்தால்...

Category: புதினம்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6505
Vizhi Moodi Yosithaal

விழி மூடி யோசித்தால்...

செல்வந்தர் வீட்டுத் திருமணம் நடைபெறுகிறது என்பதை யாரும் செல்லாமலே அங்கிருந்த சூழ்நிலை அறிவித்தது. மணமண்டப அலங்காரத்தில் இருந்து, மணமகளின் தங்க வைர நகைகள் வரை பணம் வாரி இறைக்கப் பட்டிருந்தது.

     அங்கு கூடி இருந்த கூட்டத்தினரிடையே தனித்துக் காணப்பட்டாள் மிதுனா. செல்வச் செழுமையின் அடையாளம் ஏதும் இன்றி, தன் தங்க நிறத்தாலும் அபார அழகாலும் அங்கிருந்தோரைக் கவனிக்க வைத்தது அவளது தோற்றம்.

     சுறுசுறுப்பாக வேலைகள் செய்து கொண்டிருந்தாள் மிதுனா. மண மண்டபத்தின் முக்கியமான அறையின் சாவி, அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. எனவே யாருக்கு, எது தேவைப்பட்டாலும் ஓடிச் சென்று, கதவைத் திறந்து அவள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவளது அழகான தோற்றத்தையும், சுறுசுறுப்பான நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்டிருந்த அனுசுயாவின் மனதில் ‘பளிச்’ என ஓர் எண்ணம் தோன்றியது.

     ‘இந்தப் பெண் பற்றிக் கல்பனாவிடம் கேட்க வேண்டும். கல்பனா, மணமகளின் அம்மாவாயிற்றே. அவளிடம் இப்போது பேச முடியாது. அவள் கொஞ்சம் நகர்ந்து வரட்டும்... இந்தப் பெண்ணைக் காட்டிவிட்டு, அதன் பின்னர் நிதானமாகப் பேசலாம்’ என்று நினைத்துக் கொண்டாள் அனுசுயா.

     மணமக்களை அட்சதை தூவி வாழ்த்துவதற்காக மஞ்சள் கலந்த அரிசியை அனைவருக்கும் வழங்குவதற்காக அரிசி நிறைந்த தட்டை ஏந்தி வந்த மிதுனா, அங்கிருந்த அனுசுயாவிடமும் தட்டை நீட்டினாள்.

     அவளிடம். “உன் பேர் என்னம்மா?” என்று கேட்டாள் அனுசுயா.

     “மிதுனா” என்று கூறியபடியே நகர்ந்தாள் மிதுனா. அவளது புன்னகை பூத்த முகம், அனுசுயாவின் மனதைக்  கொள்ளை கொண்டது.

     தாலி கட்டும் வைபவம் முடிந்ததும் கல்பனாவிடம் போய்ப் பேசினாள் அனுசுயா. மிதுனாவைச் சுட்டிக்காட்டி இந்தப் பொண்ணைப் பார்த்து வெச்சுக்க கல்ப்பு... விவரமெல்லாம் அப்புறம் நிதானமாப் பேசறேன்...”

     “சரி அனுசுயா, பொண்ணு மாப்பிள்ளை ரெண்டு நாள்ல ஹனிமூன் கிளம்பிடுவாங்க... அதுக்கப்புறம் போன் பண்ணிட்டு என் வீட்டுக்கு வா, பேசலாம்!” என்றாள் அனுசுயாவின் தோழி கல்பனா.

     “சரி கல்பனா...”

     கல்பனாவிடம் விடை பெற்றுக் கிளம்பினாள் அனுசுயா.

 

2

     மிகச் சிறிய வீடு. ஒண்டிக்குடித்தனம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட சிறிய வீட்டில் குடி இருந்தனர் மிதுனாவின் குடும்பத்தினர். பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அப்பாவிற்குத் தேவையானதைச் செய்து. அம்மா சாரதாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து, உடன் பிறந்த தங்கையின் பாடங்களில், அவளுக்கு ஏற்படும் சந்தேகங்ளைத் தெளிவுபடுத்தி... அதன் பின்னர் அவள் ஆசிரியையாகப் பணிபுரியும் பள்ளிக் கூடத்திற்குச் செல்ல வேண்டும்.

     சேவையே வாழ்க்கையாக, வாழ்க்கையே சேவையாக வாழ்ந்து கொண்டிருந்தாள் மிதுனா. அவளது வருமானத்திற்குள் குடும்ப வண்டியை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தம்... வருமான ரீதியாகக் குறைகள் இருப்பினும், அவளது உருவத்திலும், முகத்திலும் நிறைந்த அழகை வெகுமானமாக அள்ளி அளித்திருந்தான் ஆண்டவன்.

     பேரழகி எனும் கர்வம் துளியும் இன்றித் தன்னடக்கத்துடன் பண்பான பெண்ணாக இருந்தாள் மிதுனா.

     தங்கை அருணா மீது உயிரையே வைத்துப் பாசம் கொண்டவள், அம்மா, அப்பா, மூவரிடமும் அளவற்ற அன்பு கொண்டவள். பள்ளிக்கூட நேரம் முடிந்ததும், வீட்டிற்குத் தேவையான காய்கறி வகைகளை வாங்கிக் கொண்டு வருவது அவளது வழக்கம்.

     வீட்டிற்கு வந்ததும் சாரதாவிடம் அன்றைய தினம் பள்ளிக்கூடத்தில் நிகழ்ந்த அனைத்தையும் விலாவாரியாகச் சொல்லி விடும் வழக்கம் மிதுனாவிற்கு.

     தன்னிடம் யார் யார் என்ன பேசினார்கள், சக ஆசிரியைகளுடன் கலந்துரையாடிய விஷயங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி விடுவாள். அம்மா – மகளுக்குள் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது.

     சில சமயம், மிதுனாவின் முகம் வாட்டமாகக் காணப்பட்டால் ‘ஏதோ பிரச்சனை’ என்று அவள் சொல்லாமலே சாரதாவிற்குப் புரிந்துவிடும். மிதுனாவின் பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் சொல்வார்.

     அம்மாவின் தீர்வு, ஏற்புடையதாக இருக்கும் என்ற அதிக நம்பிக்கை வைத்திருந்தாள். அம்மாவிடம் தன் மனதில் இருப்பதைச் சொன்ன பின் மிதுனாவின் பாரமானமனது, இறகு போல மென்மையாக, லேசாக  ஆகிவிடும். அப்பா கிருணஷ்ணனுக்கு டாக்டர் கூறியபடி எளிமையான உடல் பயிற்சிளைச் செய்து விடுவாள்.

     இப்படிப்பட்ட எளிமையான. ஏழ்மையான அந்தக் குடும்பத்தில் ஒரு பல்கலைக் கழகம் போல, எந்தவித பேராசையோ, பொறாமையோ இன்றி வாழ்ந்து வந்தனர்.

 

3

     மிதுனா பணிபுரியும் பள்ளிக்கூடம், கம்பீரமான கட்டத்தைத் தன்னுள் தாங்கிக் கொண்டிருந்தது. மிகவும் பழமையான... ஆனால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வரும் மேன்மையான ஒரு பள்ளிக்கூடமாக இருந்தது.

     அழகிய சீருடையில் மூன்று வயது முதல் பதினேழு வயது வரையிலான மாணவிகள், தோட்டத்தில் மலர்ந்த புத்தம் புதிய பூக்களாக ஆங்காங்கே தென்பட்டனர்.

     முன்தினம், அம்மாவோ அப்பாவோ திட்டியது, புதிய உடை வாங்கி வந்து கொடுத்தது முதல் அன்றைய காலை உணவிற்காக என்ன சாப்பிட்டார்கள் என்பது  வரை, வயது வாரியாக வாய் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் மாணவிகள்.

     நேர்த்தியான காட்டன் புடவை அணிந்து, ஆசிரியைகளுக்குரிய மரியாதையான தோற்றத்தில் சில ஆசிரியைகளும், வீட்டிலும் ஏகமாய்க் குடும்ப கடமைகள் செய்து, பணிக்குத் தாமதமாகி விட்டதாய், ஏனோ தானோ வென்று ஒரு ‘தொள தொளா’ சுடிதார் செட்டை மாட்டிக் கொண்டு அவசர அவசரமாய், வியர்த்து விறுவிறுக்க வேகமாய் நடை போட்ட சில ஆசிரியைகளும் வந்து கொண்டிருந்தனர்.

     மிக எளிமையான பூனம் சேலைகளிலும், கௌரவமாகத் தைக்கப்பட்ட ப்ளவுசும் அணிந்து, மெல்லிய கவரிங் செயினில் முருகன் டாலர் கோக்கப்பட்டு, அது அசைந்தாட, காதுகளில் தொங்கிய கவரிங் ஜிமிக்கிகள் சகிதம் அங்கே நடந்து வந்து கொண்டிருந்தாள் மிதுனா.

     அவளைப் பார்த்த சில மாணவிகள், ‘குட்மார்னிங் மிஸ்’ ‘குட்மார்னிங் மிஸ்’ என்று அவளருகே வந்து அன்புடனும், சந்தோஷத்துடன் கூறினார்.

     அவர்களின் அந்த மென்மையான அன்பிற்கு, உள்ளூரத் தலை வணங்கி, வெளியே தலை அசைத்து அந்த அன்பை ஏற்றுக் கொண்டாள் மிதுனா.

     ‘மிதுனா மிஸ்... மிதுனா மிஸ்!’ என்று மிகவும் பிரியமாக இருந்தனர் மாணவிகள். அன்பாக இருக்க வேண்டிய நேரம் அன்பாகவும், கண்டிப்பாக இருக்க வேண்டிய நேரம் கண்டிப்பாகவும் இருந்து கொள்வது மிதுனாவின் வழக்கம்.

     அந்தப் பள்ளிக்கூடத்தின் அலுவலக நிறுவனத்தாருக்கும் மிதுனாவின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது.

     வகுப்பு துவங்கியது.

     தனது நாற்காலியில் உட்கார்ந்த மிதுனா, அவளது மேஜை மீதிருந்த மதிப்பெண் அட்டைகளை ஒவ்வொன்றாய் எடுத்தாள்.

     எல்லா அட்டைகளிலும் பெற்றோரின் கையெழுத்துப் போடப்பட்டுள்ளதா என்று பார்த்தாள்.

     வரிசையாக ஒவ்வொரு அட்டையும் பார்த்துக் கொண்டே வந்த மிதுனா, மிக மோசமான மார்க்குகள் வாங்கி இருந்த ஒரு பெண்ணின் மதிப்பெண் அட்டையைப் பர்த்ததும் முகம் மாறினாள். கவலை ரேகைகள் அவளது முகத்தில் தோன்றின. “காவ்யா!” என்று அழைத்தாள்.


     காவ்யா என்ற மாணவி எழுந்தாள். “என்ன காவ்யா இது... எல்லா பாடத்திலேயும் இவ்வளவு குறைவாக மார்க் வாங்கி இருக்கியே? உங்கப்பா கையெழுத்து போட்டிருக்கார். இந்த மார்க்கைப் பார்த்துட்டு இந்த அட்டையில் கையெழுத்து போடும்போது அவரோட மனசு எவ்ளவு வருத்தப் பட்டிருக்கும்?

     “உங்க தலையெழுத்து நல்லா இருந்து நீங்க தலையெடுக்கணும்னு உங்களைப் பெத்தவங்க பாடுபடறாங்க. நீ என்னடான்னா... அவங்க கையெழுத்து போடற மார்ஷீட்ல இவ்வளவு மோசமாக மார்க் வாங்கி இருக்கியே! ஏன் காவ்யா? உனக்கு என்ன ஆச்சு? என்ன பிரச்சனை உனக்கு? படிக்கறதைத் தவிர வேற என்ன வேலை இருக்கு உனக்கு?”

     “அ... அ... அது வந்து மிஸ்... வேற வேலையெல்லாம் ஒண்ணும் இல்லை... நான்தான் படிக்க உட்காராம சோம்பேறித்தனமா இருந்துட்டேன். ஸாரிமிஸ்...”

     “ ‘நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்... நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்’னு கவிஞர் பாடி இருக்காரு. நீ வேஸ்ட் பண்ணி இருக்கிற நேரம் இனி திரும்ப உனக்குக் கிடைக்குமா? உன்னோட அம்மா, அப்பா, அவங்களோட ஆசைகளை அழிச்சுக்கிட்டு, நீ நல்லாப் படிக்கணும், நிறையப் படிக்கணும்னு கடனை உடனை வாங்கிப் படிக்க வைக்கிறாங்க... நீங்க படிச்சு முடிச்சு உடனே கை நிறையச் சம்பளத்துல வேலை கிடைச்சுடும்ங்கிற உத்தரவாதம் இல்லாவிட்டாலும், அசைக்க முடியாத நம்பிக்கையோட படிக்க வைக்கிறாங்க.

     இளைய தலைமுறைக்கு வேலை நிச்சயம்னு ஆகறதுக்குள்ள... பெத்தவங்க வயோதிகக் காலத்துக்குத் தள்ளப்பட்டுடறாங்க. அவகங்களோட அந்த முதுமையில் உங்க கையிலே வேலையும் இல்லைன்னா... உங்களைக் காப்பாத்தின உங்கம்மா... அப்பாவை நீங்க எப்படிக் காப்பாத்துவீங்க? வேலை தேடறதுக்குக் கல்வின்னு ஒரு தகுதி வேணும்ல? புரிஞ்சுக்க காவ்யா... சோம்பேறித்தனமா இருந்துட்டேன்னு உண்மயைச் சொன்னியே... இந்த உண்மை பேசுற பண்பு என்னிக்கும் இருக்கணும். இனிமேலாவது நல்லாப் படிச்சு, நிறைய மார்க் வாங்கு. இன்றைய கல்விதான் நாளைக்கு உன்னோட எதிர்காலம். சரியா...?

     “சரி மிஸ்... இனிமேல் நேரத்தை வீணாக்காமல் படிப்பேன் மிஸ்...?

     “சரி காவ்யா... உட்கார் !”

     காவ்யா உட்கார்ந்தாள்.

     அடுத்ததாக அட்டையைப் பார்த்த மிதுனா, “அர்ச்சனா...”
என்று அழைத்தாள். அர்ச்சனா எனும் மாணவி எழுந்தாள்.

     “வெரி குட் அர்ச்சனா... எல்லாப் பாடத்திலேயும் நிறைய மார்க் வாங்கி இருக்கே... உங்கம்மா, அப்பா எந்த அளவுக்குச் சந்தோஷப்பட்டிருப்பாங்களோ அந்த அளவுக்கு நானும் சந்தோஷப்படறேன்.”

     “தேங்க்யூ மிஸ்...!” என்று அர்ச்சனா உட்கார்ந்தாள்.

     அடுத்த அட்டையைப் பார்த்த மிதுனா. சில விநாடிகள் கூர்ந்து கவனித்தாள். மறுபடியும் மறுபடியும் பார்த்தாள். அதன்பின் தீர்மானமாக ஒரு முடிவிற்கு வந்தவள், கோபத்திற்கு ஆளானாள்.

     “சுலபா...” சற்று உரக்க  அழைத்தாள். சுலபா என்கிற மாணவி, மெதுவாக, பயத்துடன் எழுந்தாள்.

     “இங்கே வா...” மிதுனாவின் இருக்கை அருகே வந்த சுலபாவிடம் அட்டையைக் காண்பித்தாள் மிதுனா.

     “இங்கே பாரு... மார்க் போட்ட இடத்துல நீ ப்ளேடோ... எதையோ வெச்சு அழிச்சுட்டு... வேற மார்க்... அதாவது நீ எடுத்த குறைவான மார்க்கை அழிச்சுட்டு நிறைய மார்க்கை எழுதிட்டு, உங்கப்பாகிட்டே கையெழுத்து வாங்கி இருக்கே. எதுக்காக இந்தத் திருட்டுத்தனம்? பொய் சொல்றதும் உண்மையை மறைக்கிறதும் எவ்வளவு தப்பான விஷயம்? தெரியாம செஞ்சா... அது தவறு. தெரிஞ்சே செஞ்சா... அது தப்பு... ரொம்பத் தப்பு.

     உங்கம்மா, அப்பாவை ஏமாத்தறதுக்காக இப்படிச் செஞ்சிருக்கே. ஆனால், நீ உன்னையே ஏமாத்திக் கிட்டிருக்கே...பொய் சொல்றவங்களை எனக்கு அறவே பிடிக்காது. இந்த முறை குறைஞ்ச மார்க் எடுத்த நீ... அடுத்த முறை நல்லாப் படிச்சு எடுக்க வேண்டிதுதானே? அதை விட்டுட்டு எதுக்காக இந்தப் பொய் நாடகம்? உன்னை நம்பி அப்பாவியாகக் கையெழுத்துப் போட்டிருக்கார் உங்கப்பா. இப்படிப் பொய் சொல்லி ஏமாத்தறது எவ்வளவு மோசமான விஷயம்? மன்னிக்கவே முடியாத குற்றம்”.

     கோபத்தில் மிதுனாவின் முகம் சிவந்தது.

     மிதுனாவின் கோபத்தை உணர்ந்த சுலபா. பயத்தில் நடுங்கினாள். அந்தப் பயம் அழுகையாய் மாறியது. அழுதாள்.

     “ஸ்டாப் இட் சுலபா, செய்யறதையெல்லாம் செஞ்சுட்டு அழுகை வேறயா? இந்தச் சின்ன வயசுல இவ்வளவு பொய்... பித்தலாட்டமா...? ச்சே...! உனக்கு என்ன பனிஷ்மென்ட் தெரியுமா...?”

     “வே... வேணாம் மிஸ்... ப்ளீஸ் மிஸ்... இனிமேல் நான் பொய் சொல்ல மாட்டேன். இந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணவே மாட்டேன் மிஸ். மன்னிச்சுக்கோங்க மிஸ்... ஸாரி மிஸ்... ப்ளீஸ் மிஸ்...”

     கெஞ்சினாள் சுலபா.

     நீண்ட நேரம் கெஞ்சினாள் சுலபா.

     “சரியாப் படிக்கலைன்னா... அப்பாவுக்குக் கோபம் வந்துடும் மிஸ். அதனால பயங்கரமா அடிச்சுடுவாரு. அந்த அடிக்குப் பயந்துதான் இப்படிப் பண்ணேன் மிஸ்...”

     “அந்த அடிக்குப் பயந்து, ஒழுங்கா படிச்சிருக்க வேண்டியதுதானே! கண்டிப்பாக இருக்கிற அப்பாவுக்குப் பயந்து... இப்படியா பண்றது? அவங்க கண்டிப்பாக இருக்கிறதே... நீங்க நல்லபடியாகப் படிச்சு முன்னேறணும்னுதானே? படிச்சு, நிறைய மார்க் வாங்கிப் பெத்தவங்ளைச் சந்தோஷப்படுத்துவதை விட்டு, இப்படி ஏமாத்தறது சுத்தப் போக்கிரித்தனம்...!”

     “ஸாரி மிஸ். ப்ராமிஸா இனி ஒழுங்காகப் படிப்பேன் மிஸ். பொய் சொல்ல மாட்டேன் மிஸ். உண்மையை இப்படி மறைக்க மாட்டேன் மிஸ்.”

“சரி... சரி... உட்கார். இனி ஒரு தடவை இப்படிச் செஞ்சா... ஸ்கூல் மேனேஜ்மெண்ட்ஸ் மட்டுமில்லாம... உங்கம்மா. அப்பாகிட்டேயும் சொல்லிடுவேன்... ஜாக்கிரதை.”

     “சரி மிஸ்... ஸாரி மிஸ்.”

     “போய் உட்கார்...”

     சுலபா அவளது நாற்காலிக்குப் போனாள். கோபம் மாறாத மிதுனாவின் முகம் கண்டு மாணவிகள் பயந்தனர்.

 

4

            திய உணவு இடைவேளை பள்ளிக்கூடத்தில் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரயைகள் யாவரும் சாப்பிடுவதற்காக ஒன்றாக உட்கார்ந்திருந்தனர்.

     பல வகைப்பட்ட சமையல் மணங்கள் அங்கே பரவின. மிதுனா மட்டும் தனது லஞ்ச் பாக்ஸைத் திறக்காமல், வாடிய முகத்துடன் காணப்பட்டதைக் கண்டாள் லட்சுமி எனும் ஆசிரியை.

     “என்ன மிதுனா... என்ன ஆச்சு? ஏன் ரொம்படல்லடிக்கிறே? டிபன் பாக்ஸை திறக்காமல்... என்ன யோசனை?”

     “என்னோட க்ளாஸ்ல, சுலபான்னு ஒரு பொண்ணு மார்க் ஷீட்ல இருந்த மோசமான மார்க்ஸை நைஸா அழிச்சுட்டு, கூடுதல் மார்க்ஸ் போட்டு, அவங்கப்பாகிட்டே கையெழுத்து வாங்கிட்டு வந்துட்டா. அதான் அப்ஸெட் ஆகிட்டேன்...!”

     இதைக் கேட்டுச் சிரித்தாள் லட்சுமி.

     “இவ்வளவுதானா? இதுக்கா இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே? அவ இப்படிப் பொறுப்பு இல்லாத ஸ்டூடன்ட்டா இருந்தா... அதுக்கு நீ என்ன பண்ணுவே?”

     “என்ன லட்சுமி இப்படிப் பேசறே? நம்பை மாதிரி டீச்சர்ஸ்... இங்கே படிக்க வர்ற பிள்ளைங்களைக் கண்காணிச்சு. கண்டிச்சு, அவங்களை நல்லா படிக்க வைக்கணும். எந்த ஸ்டூடண்ட் எப்படிப் போனா என்னன்னு  விட்டுட முடியுமா? படிப்பை விட ஒழுக்கம், நேர்மை இதெல்லாம் எவ்வளவு முக்கியம்னு நாமதானே எடுத்துச் சொல்லணும். யாரா இருந்தாலும் பொய் சொல்றதும், உண்மையை மறைக்கிறதும், பெத்தவங்களையும். மத்தவங்களையும். ஏமாத்தறது... பெரிய தப்பு... மன்னிக்க முடியாத தப்பு...”


     “கூல் மிதுனா... கூல். சாப்பிடாம... வயிறை வாடப்போட்டா பிரச்சனை சரியாயிடுமா? உங்கம்மாவோட கை மணத்துல, ௲ப்பரான லஞ்ச்சை தேவை இல்லாம மிஸ் பண்ணாதே, சாப்பிடு....!”

     லட்சுமி பல முறை கூறியபின், டிபன் பாக்ஸைத் திறந்தாள் மிதுனா. சாப்பிட ஆரம்பித்தாள்.

     “இங்கே பாரு மிதுனா... யார் எப்படிப் போனா என்னன்னு உன்னை அலட்சியமா இருக்கச் சொல்லலை. ஸ்கூல் லைஃப், நாம வேலை பார்க்கிற இடங்கள், நம்ம வாழ்க்கை... இதிலேயெல்லாம் சகலமும் சரியா இருக்கணும்னு நாம எதிர்பார்க்க முடியாது. இரவு, பகல் மாறி மாறி வர்றது இயற்கை, அது போல வாழ்க்கையிலோ நல்லது, கெட்டது, சத்தியம், பொய், நேர்மை, கபடம், நம்பிக்கை, ஏமாற்றம் இதெல்லாம் இருக்கத்தான் செய்யும். இது யதார்த்தம்.

     “எல்லாமே மிகச்சரியாக இருக்கணும், எல்லாருமே நேர்மையாக இருக்கணும்னு எதிர்பார்க்கவே கூடாது. அந்த எதிர்பார்ப்புகள், ஏமாற்றத்தைத்தான் கொடுக்கும். நான் நேர்மையாக இருக்கேன்... அதனாலே நான் எல்லார்கிட்டேயும் அந்த நேர்மையை எதிர்பார்ப்பேன் அப்படின்னு நீ இருந்தா... உனக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும், மனிதர்களோட இயல்புகளை நமக்குப் பிடிக்குதோ இல்லையோ... பெரிசா எடுத்துக்கிட்டு மனச்சோர்வுக்கு ஆளாகக் கூடாது.

     “திருத்தணும்னு முயற்சி செய்யலாம்... தப்பு இல்லை, ஆனால், திருத்தியே தீருவேன்னு கங்கணம் கட்டிக்கிட்டு தீவிரமாக ஈடுபடறது... போகாத ஊருக்கு வழி கேட்கிற மாதிரி. புரிஞ்சுக்கோ. காற்று வீசுற பக்கம்தான் நதி ஓடும். அது போல வாழ்க்கையின் யதார்த்தத்தோடேயே நாம பயணிக்கணும்...”

     லட்சுமி பேசுவதைக் கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள் மிதுனா.

     “நீ என்னதான் சமாதானம் சொன்னாலும் என்னால  அதை ஒத்துக்க முடியாது லச்சு, என்னைப் பொறுத்தவரைக்கும் பொய், பித்தலாட்டம் இதையெல்லாம் சகிச்சுக்கவே முடியாது.”

     “உன்னால சகிச்சுக்க முடியாது. அது போல பித்தலாட்டம் பண்றவங்ளைத் திருத்தவும் முடியாது.”

     “அப்படியெல்லாம் சொல்லாதே. கரைப்பார் கரைத்தால் கல்லும்  கரையும். செஞ்ச தப்பைத் தப்புன்னு உணர வெச்சுட்டா... அதுக்கப்புறம் தப்பு பண்ணவே மாட்டாங்க.”

     “சரிங்க மேடம். உன்கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா?” கிண்டலாக லட்சுமி கூறியதும் சிரித்தாள் மிதுனா.

     “யப்பாடா... இப்பவாச்சும் சிரிப்பு வந்துச்சே...! வா, கிளாசுக்குப் போகலாம்.”

     இருவரும் எழுந்து சென்றனர்.

5

     வீட்டிற்குப் போவதற்காக, தினமும் வந்து காத்திருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தாள் மிதுனா.

     ‘அப்பாவுக்குத் தைலம் வாங்கணும், நாளை சமையலுக்குக் காய்கறி வாங்கணும், அண்ணாச்சி கடையில மளிகை சாமான் வாங்கணும், இதயம் நல்லெண்ணெய்தான் வேணும்னு அடம் பிடிக்கிற அம்மா, கொஞ்ச நாளா இதயம் நல்லெண்ணெய்யோட விலை ஏறிப் போச்சுன்னு, கேட்கிறதே  இல்லை. இப்போ இதயம் நல்லெண்ணெய்யோட விலை ஏகமாய்க் குறைஞ்சிருக்குன்னு ரேடியோ விளம்பரத்துல கேட்டேன்... இந்த மாசம் அம்மாவுக்கு  சமையல் பண்றதுக்கு இதயம்  நல்லெண்ணெய்தான்.

     ‘அருணா ஏதோ புத்தகம் வாங்கணும்னு கேட்டா. அதையும் வாங்கிக் கொடுக்கணும்...!’ பள்ளிக்கூடப் பணியில் முழுக்க முழுக்கத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மிதுனா, பணிநேரம் முடிந்ததும் குடும்பக் கடமைகளின் எண்ணங்களில் லயித்தாள்.

     ‘நல்ல வேளை... வீட்டுகிட்டே இருக்கிற பஸ் ஸ்டாப் கிட்டேயே காய்கறிக்  கடை, அண்ணாச்சி கடை, மருந்துக் கடை எல்லாமே இருக்கு. அருணா கேட்ட புத்தகம் மட்டும் மைலாப்பூர் போய் வாங்கிடணும்!’ எனத் தீர்மானித்துக் கொண்டாள் மிதுனா.

     “எக்ஸ்கியூஸ் மீ!” அவளது எண்ணங்களை ஒரு குரல் கலைத்தது. பார்த்தாள். சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் நின்றிருந்தான்.

     ‘தன்னைத்தாள் கூப்பிட்டுப் பேசுகிறானா? அல்லது தனக்குப் பின்னால் வேறு யாராவது இருக்கிறார்களா?’ எனத் திரும்பிப் பார்த்தாள்.

     “உங்ககிட்டேதான் பேசணும்!” என்றான் அவன்.

     ‘முன்னே பின்னே இவரைப் பார்த்த்தே இல்லை... என் கிட்டே பேசணுமாமே...!’ சிறியதாய்க் குழப்பம் தோன்ற, அதன் அடையாளமாக மிதுனாவின் ஒற்றைப் புருவம் உயர்ந்தது.

     “நீங்க யாரு? என் கிட்டே என்ன பேசணும்?”

     மிதுனா கேட்டதும்... ஓரிரு விநாடிகள் மௌனமாக இருந்த அவன், தயக்கமாகப் பேச ஆரம்பித்தான்.

     “உ... உங்களைத் தினமும் காலையிலேயும் சாயங்காலமும் இந்தப் பஸ் ஸ்டாண்டிலே பார்க்கிறேன்... காலையிலே போகும்போது இருக்கிற அதே ஃப்ரெஷ்ஷா சாயங்காலமும் இருக்கீங்க...”

     அவனது பேச்சு அநாவசியமாக இருந்தபடியால்,  இடை மறித்துப் பேசினாள் மிதுனா.

     “மிஸ்டர்... நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேசப் போறீங்க?”

     “அது... அது... வந்து... உங்களை... உங்களை நான் விரும்புறேன். நீங்க சம்மதிச்சா... உ... உ... உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு...”

     மறுபடியும் இடைமறித்தாள் மிதுனா.

     “மிஸ்டர்... இந்த விஷயம் பஸ் ஸ்டாண்ட்லே வெச்சுப் பேசுற விஷயமா? நீங்க என்னைத் தினமும் பார்த்திருக்கலாம்... ஆனால், நான் உங்ளைப் பார்த்தது இல்லை. தீடீர்னு வந்து... கல்யாணம்... அது... இதுன்னு பேசுறீங்க...?”

     “ஸாரிங்க... நீங்க நினைக்கிற மாதிரி நான் மோசமானவன் இல்லை. எனக்குச் சரியாகப் பேசத் தெரியலை.”

     “ப்ளீஸ்... நீங்க எதுவும் பேச வேண்டாம். இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க. எனக்குப் பிடிக்கலை...”

     “எடுத்த எடுப்பிலே இப்படிச் சொல்லாதீங்க... ப்ளீஸ்... நான் பேசுற இடம், பேசுன விதம் வேணும்னா சரி இல்லாம இருக்கலாம். ஆனால் நான் பேசுன விஷயம் ரொம்ப உண்மையான விஷயம். பார்க்கிற பொண்ணுங்ககிட்டே பொறுக்கித்தனமா பேசுற ஆள் இல்லை நான்...  எனக்காகப் பேச யாருமே இல்லைங்க.”

     “யாரும் இல்லைங்கிறதுக்காக... இப்படி நடுரோட்ல... பஸ் ஸ்டாண்ட்லே வெச்சுப் பேசுறது கொஞ்சம் கூட நாகரிகமே இல்லை.

     அப்போது மிதுனாவின் பஸ் வந்தது. “இனிமேல் இந்த மாதிரி... இதைப்பத்தி எதுவும் பேசாதீங்க...” என்று அவசர அவசரமாகச் சொல்லி விட்டுப் பஸ்ஸில் ஏறினாள் மிதுனா, பஸ் கிளம்பியது.

6

     “என்ன இது...? இப்படிப் பஸ் ஸ்டாண்ட்ல வெச்சு ‘விரும்பறேன்... கிரும்பறேன்” அந்த ஆள் சொல்றாரு? ச்சே... இன்னிக்கின்னு பார்த்து இந்த பஸ் ரொம்ப லேட்... ஒருத்தன், ஒருத்தியை விரும்புற விஷயம் இவ்வளவு மலிவா...? இவ்வளவு ஈஸியா ஆகிடுச்சா? ஒண்ணுமே புரியலை... சினிமா... டி.வி... எல்லாத்துலேயும் இப்படித் தெருவுல நடக்கிறது மாதிரிதான் காட்றாங்க.

     ‘சினிமாவுல காட்ற நல்லதையெல்லாம் ஃபாலோ பண்ண மாட்டாங்க. தேவை இல்லாததை மட்டும் ஃபாலோ பண்றாங்க... ம்... என்னமோ, எதேதோ நடக்குது. அநாவசியமாக இந்த விஷயத்தைப் பத்தி நான் ஏன் இன்னும் நினைச்சுக்கிட்டிருக்கேன்? கடுகுக்கும் உதவாத இந்த விஷயத்தை என் மனசுல இருந்து தூக்கி எறியணும்.’

     உருவாகிய எண்ணங்ளை விரட்டினாள் மிதுனா. அவளது வீட்டருகே உள்ள நிறத்தத்தில் நின்றது பஸ். மிதுனா இறங்கினாள். அவள் இறங்கியதும் கண்டக்டர், பஸ் டிரைவரிடம் பேச ஆரம்பித்தான்.

     “இந்தப் பொண்ணு டைரக்டர் பாலச்சந்தர் ஸாரோட அவள் ஒரு தொடர்கதையிலே வர்ற சுஜாதா கேரக்டர் மாதிரி. அமைதியா, அடக்கமா... ரொம்ப பண்புள்ள பொண்ணு...”


     “ஆமா சேகர். இந்தக் காலத்துல இப்படி ஒரு நல்ல பொண்ணைப் பார்க்கிறது அபூர்வம்தான்.”

     பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியில் ஈடுபட வேண்டிய அளவு பயணியர் கூட்டம் அதிகமாகி விட்டபடியால். அதோடு அவர்களது பேச்சு நின்றது. பஸ் ஓடியது.

 

7

          ஸ் நிறுத்தத்தில்  இறங்கிய மிதுனா, ‘அண்ணாச்சி கடை’க்கு நடை போட்டாள். மிதுனாவைப் பார்த்ததும், “வாங்கம்மா, டீச்சரம்மா...” என்று வரவேற்றார் கடையின் உரிமையாளர் அண்ணாச்சி.

     “அண்ணாச்சி... ஒரு லிட்டர் இதயம்  நல்லெண்ணெய் கொடுங்க...”

     “இதோ தரேன்மா...டே தம்பி, அக்காவுக்கு இதயம் ஒரு லிட்டர் எடுத்துக் கொடுடா.?

     அங்கே வேலை செய்யும் பையன், அண்ணாச்சி சொன்னபடி ஒரு லிட்டர் இதயம் பாக்கெட்டை எடுத்து வந்து கொடுத்தான்.

     “என்ன டீச்சரம்மா... இந்த மாசம் இதயம் விலை குறைஞ்சுருக்குன்னு வாங்குறீங்க போலிருக்கு? வழக்கமா மந்த்ரா கடலை எண்ணெய்தானே வாங்குவீங்க?”

     “ஆமா அண்ணாச்சி... இப்போ இதயம் விலை குறைஞ்சிருக்குன்னு வாங்குறேன். அம்மாவுக்கு இதயம் நல்லெண்ணெய் ரொம்பப் பிடிக்கும். சரி அண்ணாச்சி... இந்த லிஸ்ட்ல இருக்கிற சாமானையெல்லாம் கொஞ்சம் சீக்கிரமா எடுத்துக் கொடுக்கச் சொல்லுங்க. லேட் ஆகுது... இன்னும் காய்கறி, தைலமெல்லாம் வாங்கிட்டுப் போகணும்.”

     “இதோ, இப்போ உடனே போட்டுக் கொடுக்கச் சொல்றேன் டீச்சரம்மா...”

     மளிகைப் பொருட்களை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் மிதுனா.

     காய்கறிக் கடைக்குச் சென்றாள்.

     “தம்பி, கேரட் கால் கிலோ, தக்காளி கால் கிலோ கொடுப்பா...”

     “இதோ போடறேன்க்கா...”

     அப்போது மிதுனாவின் தோளை யாரோ தொட்டார்கள். திரும்பிப் பார்த்தாள் மிதுனா.

     “அட.... நிலா, நீயா?”

     “நானேதான்... எப்படி இருக்கே மிதுனா?”

     “நல்லா இருக்கேன் நிலா. ம்...! என்னைப் பார்த்தாலே தெரியலியா? சந்தோஷமா இருக்கேன்... நம்ப ஸ்கூல் எப்படி இருக்கு?”

     “ஸ்கூல் நல்லா டெவலப் ஆகி இருக்கு... அது சரி... என்ன நிலா... இவ்வளவு குண்டாகிட்டியே...?”

     “கல்யாணம் நிச்சயம் ஆனப்புறம் வேலையை விட்டதுல வீட்ல இருந்து கொஞ்சம் குண்டானேன். அப்பப்பா... நான் க்ளாஸ் எடுத்த ஸ்டூடன்ட்ஸ், சரியான வாலுப்பசங்க. அதுங்ககிட்டே இருந்து விடுபட்டதுல ரிலாக்ஸ் ஆகி, உடம்பு போட்டுடுச்சு. கல்யாணத்துக்கப்புறம்... என் ஹஸ்பன்ட்டோட அன்பு, கஷ்டமே இல்லாத வாழ்க்கை... என்னைப் புரிஞ்சுக்கிட்ட மாமியார், இப்படி சின்னப் பிரச்சனை கூட இல்லாத லைஃப். புதுசா ஒரு அப்பார்ட்மென்ட் வாங்கறார் என் ஹஸ்பன்ட்... எல்லா சந்தோஷமும் சேர்ந்து என் உடம்புல சதை சேர்ந்துடுச்சு எக்கச்சக்கமா...”

     வெரி குட். நல்ல விஷயங்கள் நிறைய நடந்திருக்கு,கேட்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அது சரி.. நீ என்ன இந்தப் பக்கம்?’’

     “என்னோட சின்ன மாமியார் வீட்ல விசேஷம்... உங்க வீட்டுக்குப் பின்பக்கத் தெருவுலதான் அவங்க வீடு, அவங்களுக்கு ஃப்ரூட்ஸ் வாங்கத்தான் இங்கே வந்தோன். என் ஹஸ்பன்ட்டால வர முடியலை. வெளியூர் போயிருக்கார். அதான் நான் மட்டும் வந்தேன். நான் கிளம்பறேன் மிதுனா. வீட்டுக்கு ஒரு நாள் வா மிதுனா. புது அப்பார்ட்மென்ட் கிரகப்பிரவேசத்துக்கும் நீ கட்டாயம் வரணும். அம்மா, அருணாவைக் கேட்டதாகச் சொல்லு.”

     “நிச்சயமா சொல்றேன். டேக் கேர்!”

     “தேங்க்யூ, வரேன்!” என்ற நிலா, அங்கிருந்து கிளம்பினாள்.

     ஒரு குட்டி யானை நடப்பது போல நிலா நடந்து போவதைப் பார்த்தாள் மிதுனா, எதிர்ப்பக்கம் நின்றிருந்த காரில் ஏறினாள் நிலா.

     ‘பிறந்த வீட்ல கஷ்டம்னு வேலைக்கு வந்தாள் இந்த நிலா. புகுந்த வீட்ல நல்ல வசதியான வாழ்க்கை கிடைச்சிருக்கு... நல்லா இருக்கட்டும்!’  நினைத்துக் கொண்ட மிதுனா, மருந்துக்  கடைக்குப் போய். தைலம் வாங்கிக் கொண்டு  வீட்டிற்கு நடந்தாள்.

     ‘அடடா... போன வாரமே அம்மா வாழைப்பூ கேட்டாங்களே...! நிலாவைப் பார்த்ததுல மறந்து போயிட்டேன்... சரி, இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம்!’’ என்று நினைத்த மிதுனா, நடையை விரை வாக்கினாள்.

 

8

     ன்னம்மா மிதுனா? இன்னிக்கு இவ்வளவு லேட்டாயிடுச்சு?” சாரதா  கேட்டாள்.

     “பஸ் லேட்டும்மா... கடைகளுக்கெல்லாம் வேற போயிட்டு  வரேன்மா.”

     “சரிம்மா. காபி கலக்கட்டுமா?”

     “இப்ப வேணாம்மா. அப்பாவுக்குத் தைலம் தேய்ச்சுட்டு அப்புறமா குடிக்கிறேன்மா...’’

     “சரிம்மா....”

     மிதுனா, அவளது அப்பாவிற்குத் தைலம் தேய்த்து விட்டு, நைட்டிக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு சமையறைக்கு வந்தாள்.

     “அம்மா... உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்.”

     “தினமும் பேசுற பேச்சுத்தானே மிதுனா? முதல்ல காபி குடிம்மா!”  என்ற சாரதா, சூடாக் காபி கலந்து கொடுத்தாள்.

     அம்மாவின் முகம் பார்த்தபடியே, கையில் காபியை வாங்கிக் கொண்டாள் மிதுனா.

     ‘ஆஹா... தினமும் அதே ருசி... அதே வாசனை... அம்மா கைமணமே தனிதான்!’ நினைத்தபடியே, காபியை ருசித்துக் குடித்தாள் மிதுனா.

     காலையில் காபி போடுவது மிதுனாவின் வேலை மாலையில் அது சாரதாவின் வேலை.

     அம்மாவின் முகத்தில் தென்பட்ட  களைப்பின் அடையாளம், மிதுனாவிற்குக் கவலை அளித்தது.

     வயிதிற்கு மீறிய முதுமைத் தோற்றம், கண்களில் தெரிந்த சோகம் அனைத்தும் சேர்ந்து, வயோதிகத்தின் சாயலை அதிகமாக வெளிப்படுத்தியது.

     அம்மாவின் கைகளை வாஞ்சையுடன் பிடித்து கொண்டாள் மிதுனா.

     “என்னம்மா, மிதுனா... ஏன் ரொம்ப டல்லா இருக்கே? என்னமோ பேசணும்னு சொன்னியே?”

     “ஆமாம்மா...” என்று ஆரம்பித்த மிதுனா, வகுப்பில் நடந்தது, நிலாவைச் சந்தித்தது பற்றிக் கூறி, முடிவில் பஸ் நிறுத்தத்தில் நிகழ்ந்த சம்பவம் பற்றியும் கூறினாள்.

     “பெண்களுக்கு மரியாதை கிடைச்சிருச்சு... அப்படின்னு பெரிசா பேசறாங்க. ஆனால், பஸ் ஸ்டாப்ல ஒரு பொண்ணு நிக்க முடியலை. இதுதான் மரியாதையா? பண்பா? கலாசாரமா?”

     “மிதுனா, உனக்கு முந்தின ஜெனரேஷனைச் சேர்ந்தவ நான். நானே இப்போ உள்ள பையன்களைப் பத்தித் தெரிஞ்சு வெச்சிருக்கேன். இப்பல்லாம் பையன்ங்க, ஒரு பொண்ணைப் பார்த்ததும் மனசுல தோணறதை உடனே வாயால சொல்லிடறாங்க. பெண் என்கிறவள் மரியாதைக்குரியவள். அவகிட்டே எங்கே, எப்போ, எப்படிப் பேசுறதுன்னே அவனுகளுக்குத் தெரிய மாட்டேங்குது. தெரிஞ்சாலும் பொருட்படுத்த மாட்டாங்க, இதுதான் இந்த யுகத்துப் பையனுங்க  லட்சணம்.

     இவ்வளவு படிச்சிருக்கே... இது உனக்குப் புரியலையா? ம்கூம்... உனக்குப் புரியும்... ஆனால், உன்னோட இயல்பு இந்த மாதிரி நடவடிக்கைளை சகஜமா ஏத்துக்க மறுக்குது. நம்ம புடவையிலே தூசு பட்டா என்ன பண்றோம்? தட்டிவிட்டுட்டு அடுத்த வேலையைப் பார்க்கிறோம். அது போல... இந்த மாதிரி விஷயத்தையெல்லாம் அப்படியே விட்டுடணும்.

     “எதுவுமே பிடிக்கலைன்னா, விட்டு விலகிடணும். அதையே நனைச்சுக்கிட்டு டென்ஷன் ஆகிக்கிட்டு... நம்ம மனசும் ஆரோக்கியமும் கெட்டுப் போகணுமா? ’காலம் கெட்டுக் கெடக்கு  காலம் கெட்டுக் கெடக்கு’ன்னு சொலறதிலேயே காலம் கடந்துகிட்டிருக்கு. இதையெல்லாம் சீர்திருத்தவே முடியாது. அது நம்ம வேலையும் இல்லை. அந்த விஷயத்தையே நினைச்சுக்கிட்டிருக்காம உன் வேலையைப் பாரு. வேலை எதுவும் இல்லைன்னா, போய் ரெஸ்ட் எடு...”

     “சரிம்மா, நான் போய் அருணாவுக்குக் கொஞ்சம் பாடம் கத்துக் கொடுக்கணும். கணக்கும் சொல்லிக் கொடுக்கணும்.”

     “சரி மிதுனா... நான் உங்கப்பாவுக்குக் கோதுமைக் கஞ்சி காய்ச்சணும்.”

     “நான் ஹெல்ப் பண்ணவாம்மா?”

     “அதெல்லாம் வேணாம் மிதுனா. நான் பார்த்துக்கிறேன்!” என்ற சாரதா, கோதுமைக் குருணைடப்பாவை எடுத்துக் கொண்டு  ஸ்டவ் அருகே சென்றார்.


     மிதுனா, படித்துக் கொண்டிருந்த அருணாவின் அருகே சென்றாள்.  “அருணா... கணக்குல ஏதோ சந்தேகம் கேட்கணும்னியே... என்னம்மா விஷயம்? கணக்கு புக், நோட் புக் ரெண்டையும்  எடும்மா...!”

     “இதோ எடுக்கிறேன்கா!’’

     அடுத்த ஒரு மணிநேரத்திற்கு டியூஷன் நடந்தது.

     “எல்லாம் நல்லா புரிஞ்சுதாடா அருணா?”

     “சூப்பரா புரிஞ்சுதுக்கா... நீ ரொம்ப நல்லா சொல்லிக் கொடுக்கிறேக்கா...”

     “தேங்க்ஸ்டா... நீ நல்லாப் படிக்கணும், நிறையப் படிக்கணும், வாழ்க்கையிலே உயரணும். உன் படிப்பினால நீ நிறையச் சம்பாதிக்கணும். வறுமைக் கோட்டுக்கு ஒரு எல்லைக் கோட்டை நீ போடணும்.  வளமாக வாழணும்... இதுதான் என் ஆசை. இது உன்னோட லட்சியமாக  இருக்கணும். உனக்கு என்ன படிக்கணுமோ சொல்லு... என் சக்திக்கு உட்பட்டு என்னால முடிஞ்சதை உனக்குச் செய்வேன்...”

     “அக்கா, நம்ம குடும்பத்துக்காக நீ எவ்வளவோ தியாகம் செய்யறே. அப்பாவோட வியாதிக்குப் பார்க்கிறே. அவரால் வரக்கூடிய வருமானத்துக்கு வழி இல்லாத்துனால, குடும்பத்தோட பொருளாதாரப் பிரச்சினையை நீதான் பார்த்துக்கிறே. அம்மாவுக்கு உறுதுணையா இருக்கிறே... என்னோட படிப்புச் செலவையும் நீதான் செய்யறே. அம்மா, தினமும் உன்னோட கல்யாணத்தைப் பத்தி கவலைப்பட்டுப் பேசுறாங்க. உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் நடக்கணும்னு தினமும் அம்மா, என்கிட்டே சொல்லிக்கிட்டே இருக்காங்கக்கா...”

     “கல்யாணம் பண்ணிக்கணும்னு கட்டாயம் எதுவும் இல்லைடா அருணா. எனக்கு அதில் அவ்வளவு ஆர்வமும் கிடையாது. இன்னிக்கு நான் வேலைக்குப் போய் சுதந்திரமா நம்ம குடும்பத்தைப் பார்த்துக்கிறேன். கல்யாணம் ஆனப்புறம், எனக்கு இந்தச் சுதந்திரம் இருக்குமா? என் அம்மா, என் அப்பா, என் தங்கை, இவங்களையெல்லாம் விட்டுட்டு, ஒரு வாழ்க்கையா? ம்கூம்... என்னால அதை நினைச்சுக் கூடப் பார்க்க முடியலைடா...”

     “அக்கா, நம்ப குடும்ப நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு... உனக்கு ஃப்ரீடம் கொடுக்கிற ஒருத்தர் கிடைப்பாருக்கா. எல்லாருமே தகராறு செய்யறவங்களாவா  இருப்பாங்க...?

     “அப்படி ஒருத்தர் கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்”.

     “அம்மாவோட நிம்மதிக்காகவும், சந்தோஷத்துக்காகவும் நீ கல்யாணம் பண்ணிக்கணும்... ப்ளீஸ்கா...!”

     “என்ன நீ... படிப்பை விட்டுட்டு வேற விஷயம் பேசிக்கிட்டிருக்கே? படிச்சுட்டு வா, சாப்பிடலாம்.”

     “நைஸா பேச்சை மாத்திடுவியே!”

     “பேச்சையும் மாத்தலை மூச்சையும் மாத்தலை உன்னோட கவனம் படிப்புல மட்டும்தான் இருக்கணும்.”

     “நிஜம்மா... நான் நல்லப் படிச்சு நிறைய மார்க் வாங்குவேன்கா.”

     “வாழ்க்கையிலே படிப்பு, ஒழுக்கம், நேர்மை இதெல்லாம்தான் முக்கியம். நாம, மேல வர்றதுக்குரிய ஏணி படிப்பு. அந்த ஏணியில் ஏறி, வெற்றிகளைப் பிடிக்கணும்... சரியா?”

     “சரிக்கா... ஐ லவ் யூக்கா.”

     “ஐ லவ் யூ டூ.”

     அருணாவின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எழுந்தாள் மிதுனா.

 

 

 

9

     ணவனுக்குக் கஞ்சியை ஊட்டி விட்டு, அவரது வாயைத் துடைத்து விட்டாள் சாரதா, அவரே தன் வாயைத் துடைக்க முயற்சி செய்தார். முன்பை விட இப்போது கையின் செயல்பாடு முன்னேறி இருந்தது. இதைக் கண்டு சாரதா மகிழ்ந்தாள்.

     அருணாவும், மிதுனாவும் சாப்பிட உட்கார்ந்தனர்.

     சுடச்சுட தோசை சுட்டு, கொத்தமல்லிச் சட்னி வைத்துக் கொடுத்தாள் கமலா. சிக்கனமாக, எண்ணெய் அதிகம் ஊற்றாமல் சுட்ட தோசை என்றாலும், சாரதாவின் சமையல் திறமையால், கொத்தமல்லி சட்னி, மணமாகவும் உப்பு, காரம், புளிப்பு அனைத்தும் கன கச்சிதமாகவும் இருந்தது.   

     “மா...யெம்மி  தோசை... யெம்மி சட்னி” என்று ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாள் அருணா.

     “அம்மா, உங்க கைப்பக்குவமே தனிம்மா. சட்னி சூப்பரா இருக்கும்மா!” என்ற மிதுனா, தொடர்ந்தாள். “நமக்குப் பண வசதி இருந்தா... ஹோட்டல் ஆரம்பிச்சு நடத்தி இருக்கலாம். அம்மாவோட சமையல் ருசிக்கு, ரெஸ்டாரன்ட் நடத்தினா... செமையா சக்ஸஸ் ஆகி இருக்கலாம்.”

     “உங்க அப்பா வேலையில இருந்திருந்தா...  ஏதாவது லோன் போட்டு  சின்னதா ரெஸ்டாரன்ட் ஆரம்பிச்சிருக்கலாம். குடும்பத் தலைவர் உடல் நலம் குன்றிப்போயிட்டா... நமக்கு எந்தக் கனவும் வரக்கூடாது எதுக்கும்  ஆசைப்படவும் கூடாது...” பெருமூச்சு விட்டாள் சாரதா.

     “கவலைப் படாதீங்கம்மா... நீங்கதானே சொல்வீங்க, எல்லாமே நன்மைக்குன்னு எடுத்துக்கணும்னு?”

     “ஆமா மிதுனா, அது என்னமோ நிஜம்தான்... எதுக்குக் கொடுப்பினை இருக்கோ அதுதானே கிடைக்கும்? இதுவும் நிஜம்தான்...!”

     “அதெல்லாம் சரிதான்மா. இப்போ நீங்க சாப்பிடுங்க. நான் உங்களுக்குத்  தோசை போட்டுத் தரேன்...”

     சாப்பிட்டு முடித்த மிதுனா எழுந்து சென்று கமலாவிற்குத் தோசை சுட்டுக் கொடுத்தாள்.

     மூவரும் சாப்பிட்டு விட்டு, ஆளுக்கு ஒரு வேலையைச் செய்து  சாப்பிட்ட இடத்தையும், சமையல் மேடையையும் சுத்தம் செய்து, பாத்திரங்களைக் கழுவியபின் படுத்துக்கொண்டனர்.

     இரவைச் சந்திக்க வந்த நிலவு, ஒளிர்ந்தது.

10

     றுநாள் காலை, காலை நேரம் என்று சொல்வதை விட... விடியற்காலை என்று சொல்வது பொருந்தும். எவ்வளவு லேட்டாகப் படுத்துத் தூங்க நேரிட்டாலும் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள் மிதுனா. இரவு நேர நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் அவளது முகத்தையும், உடலையும் வசீகரமாக்கி இருந்தது. கலைந்து போன தலைமுடி கூட அவளுக்கு ஓர் அழகைத் தந்திருந்தது.

     அவள், கைகளைத் தூக்கி உடம்பை வளைத்து சோம்பல்  முறித்தபோது, நைட்டி அணிந்திருந்த அவளது யௌவனமான உருவம், வளைவு, நெளிவுகளை வடிவமைத்துக் காட்டியது. அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவைப் பார்த்தாள். வாழ்க்கையில் பெரிதாக எந்தச் சுகத்தையும் அறிந்திராத சாரதாவின் முகத்தில் தென்பட்ட பரிதாப உணர்வைப் பார்த்த மிதுனாவிற்குத் துக்கம் மனதைப் பிசைந்தது.

     சாராதாவின் பக்கத்தில் படுத்திருந்த அருணாவின் அன்பு முகம் கண்டு, ‘இவளோட எதிர்காலம் ஒளிமயமாக இருக்கணும்’  என்று கடவுளைவேண்டிக் கொண்டாள். தனக்கென்று எந்த ஆசையும் இன்றி... தான், தனக்கு என எதையும் சிந்திக்காமல் குடும்பத்தினர் நலன் பற்றியே அக்கறை கொண்டு வாழ்ந்து வரும் மிதுனாவிற்கு விடிந்த பிறகும் நித்திரை இருக்குமா? வயிற்றில் பூச்சிகள் பிறாண்டுவது போல ஒரு பய உணர்வில் விடியும் முன்பே எழுந்து விடுவது மிதுனாவின் வழக்கமாகிப் போனது.

     தூணாகக் குடும்பத்தைத் தாங்க வேண்டிய அப்பா, துரும்பாக இளைத்துப் போய் நோயில் படுத்திரப்பது, ஒரு குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போன்ற பாரம் மூத்த மகளுக்கு.

     எல்லாப் பெண்களுக்கும்  இத்தகைய பொறுப்பு இருந்து விடுவதில்லை.

     மிதுனா ஓர் ஆபூர்வ, அறிவார்ந்த, அன்பான பெண், எனவே, தன் தேவைகள் பற்றி நினைக்காமல் தன் குடும்பத்தினர் நலன் பற்றி மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தாள்.

     தங்கை அருணா அழகானவள், தளதளவெனும் உடல்வாகு கொண்டவள். அவளது எடுப்பான மூக்கும் ஆரஞ்சுச் சுளை போன்ற உதடுகளும், துறுதுறுவென ஒளிரும் கண்களுடனும் ஒரு தேவதை போல் அழகு உடையவள்.

     ’அவளது அழகே அவளுக்கு ஆபத்து அளித்து விடக் கூடாது’ என்பதை மனதில் கொண்டு, ’கல்விதான் முக்கியம். உயர் கல்வி, உயர்ந்த வேலை, சுயமரியாதையுடன் வாழ படிப்பு அவசியம்’ என்று அருணாவிற்கு அடிக்கடி அறிவுரை கூறி வந்தாள் மிதுனா.

     ’வெகுளியான இயல்பு உடைய அருணா, யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது, கல்வியில் வெற்றிக் கொடிகளை அருணா  எட்டிப் பிடிக்க வேண்டும்’ என்கிற பற்பல எண்ணங்களை நெஞ்சில் சுமந்தாள் மிதுனா.


     ஒரு பெண்... அதிலும் இளம் பெண், யாருடைய துணையும் இன்றி ஒரு குடும்பத்தை, மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பேணிக்காப்பது என்பது அவளுக்கு மனச்சோர்வை அளிக்கும் விஷயம்.

     வேலை செய்யும் இடத்தில் நேரிடும் பாலியல் தொல்லைகள், உடன் வேலை செய்வோரின் பொறாமை, பிரச்சனைகளிடையே மேற்கொள்ள வேண்டிய பேருந்துப் பயணம், மாணவிகளின் மீதான அக்கறை, அவர்கள் தவறு செய்யும் போது ஏற்படும் கோபம், வருத்தம் கலந்த உணர்வுகள்... இவற்றின் நடுவே எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

     எல்லாம் ஒன்று சேர்ந்து, பூப் போன்ற பெண்ணிடம் வலிமை பூதாகரமாக உருவெடுக்கிறது. பெண்ணின் பெருமை பேசுவதற்கு இதுபோல் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. ஆனால், அவற்றிக்குள் ஆழ்ந்து, ஆராய்ந்து பார்ப்பதற்கு யாருக்கும் மனம் இல்லை. ஊடுருவிப் பார்த்து, உறுதுணையாய் உதவுவதற்கும் யாருக்கும் மனம் இல்லை என்பதே உண்மை.

     ஆனால், ஆண் இனத்தை விட பெண்களுக்கு மனவலிமையும், திடமும் அதிகம். எனவேதான் அந்த நியதிப்படி மிதுனா, தன் மீது சுமத்தப்பட்டுள்ள குடும்பப் பாரத்தை, சுமையாக்க் கருதாமல் சுகமாக எண்ணி வாழ்ந்து வந்தாள்.

     சாரதா எழுந்திருப்பதற்குள் காபி போடுவதற்காகத் தண்ணீரைக் கொதிக்க வைத்தாள்.

     சிக்கன நடவடிக்கை காரணமாக நான்கு பேருக்கும் தண்ணீர் காபிதான். காபித்தூள் போட்டுக் கொதிக்க வைத்த  தண்ணீரில் சிறிதளவு பாலும், சர்க்கரையும் போட்டுக் கலந்த  காபிதான் தினமும். காபி போட்டு வைத்து விட்டுக்  குளிக்கச் சென்றாள். மிதுனா, அவள் குளித்து விட்டு வருவதற்குள் சாரதா எழுந்து, காலை உணவையும் மதியம் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்புவதற்கு மதிய உணவையும் தயார் செய்ய ஆரம்பித்தார்.

     அருணா, எழுந்து படிக்க உட்கார்ந்தாள். தினமும் காலையிலும் ஒரு மணி நேரம் படிப்பது அருணாவின் பழக்கம்.   

     குளித்து விட்டு வந்த மிதுனா, சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி, மனம் ஒன்றிப் பிரார்த்தனை செய்து விட்டு நெற்றியில் மெல்லிய கீற்றாக விபூதி இட்டுக் கொண்டாள்.

     அப்பாவைப் பார்த்து, அவருடன் பத்து நிமிஷங்கள் உட்கார்ந்து பேசினாள். “மிதும்மா... என்னால உனக்கு எவ்வளவு கஷ்டம்? இந்தச் சின்ன வயசுல பெரிய பொறுப்புகளை உன் மேலே சுமத்தும்படியாக ஆகிடுச்சு...

     பக்கவாதம் தாகிய விளைவால் வாய் ஒரு பக்கம் கோணி இருந்ததால், அவரது பேச்சு குறைவாக இருந்தது என்றாலும் அருணா, மிதுனா, கமலா மூவருக்கும் புரியும்

     அப்பாவின் கை மீது தன் கையை வைத்து  ஆறுதலாகப் பேசினாள் மிதுனா.

     “என்னப்பா நீங்க? எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லைப்பா. நீங்க சீக்கிரமா குணமாகி எழுந்திருப்பீங்க நேத்து கூட உங்களால கையை நல்லா தூக்க முடிஞ்சுதுல்ல? கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் சரியாயிடும். நீங்க இப்படியே கவலைப்பட்டுக்கிட்டிருக்காம, தைரியமா, நம்பிக்கையா இருந்தா... சீக்கிரமா குணமாகிடு வீங்க. “கடவுளை நாம அழுது, தொழுது, மனம் உருகி வேண்டிக்கிட்டாலும்... நம்ப மனசுல ஏற்படற அசைக்க முடியாத நம்பிக்கைதான் மிக வலிமையானது’ன்னு குருமார்கள் சொல்லி இருக்காங்கப்பா.  அதனால நம்பிக்கையா இருங்கப்பா.”

     ’’சரிம்மா, நீ, என் கூட பேசும்போது எனக்கு ஆறுதலா இருக்கும்மா, பெரும்பாலான குடும்பங்கள்ல, வியாதியாலே படுக்கையில் இருக்கிறவங்களைக் கண்டுக்கவே மாட்டாங்க. ஆனா... நீ தினமும்... என் கூட பேசறதுக்காக நேரம் ஒதுக்கி, உன்னோட வேலைகளுக்கு நடுவே என்னையும் இவ்வளவு பாசமா பார்த்துக்கிறயேம்மா... நீ.... என் மகள் இல்லையம்மா. என் தாய்...” நெகிழ்ந்து போய் பேசினார்.

     “தேங்ஸ்ப்பா, குடும்ப நேயம்னா... படுத்திருக்கிற வங்களோ... நல்லா இருக்கிறவறங்களோ... எல்லார்கிட்டேயும் எப்பவும் அன்பா இருக்கறதுதானப்பா? இதைப் போய் பெரிசாப் பேசுறீங்க... நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணிட்டு, ஸ்கூலுக்குக் கிளம்பணும்ப்பா...”

     “சரிடா மிது...” பாசத்தோடு பேசினார்.

     மிதுனா, சமையல் மேடை அருகே வேலை செய்து கொண்டிருந்த சாரதாவிற்கு உதவி செய்தாள். நேரத்தைப் பார்த்த மிதுனா, அருணாவை அழைத்தாள்.

     “அருணா, மணி ஆச்சுடா, ஸ்கூலுக்குக் கிளம்பு...”

     “சரிக்கா.”

     அருணா எழுந்து சென்றாள்.

     “மிதுனா... நீ போட்டு வைக்கிற காபிதான் எனக்குக் காலையிலே எனர்ஜி டானிக். ஒரு நாளோட ஆரம்பம் உன்னோட காபியிலதான்.” சாரதா புகழ்ந்தார்.

     “அட என்னம்மா... நான் போடறது தண்ணி காபி அதுக்கு இவ்வளவு பாராட்டா? அது சரிம்மா... லஞ்ச் பாக்ஸ்ல இன்னிக்கு என்ன சாப்பாடு?”

     “தக்காளியும், கேரட்டும் வாங்கிட்டு வந்தியேம்மா... தக்காளிக் குழம்பும், கேரட் பொரியலும் பண்ணி இருக்கேன். நீதானேம்மா தக்காளியும் கேரட்டும் நறுக்கிக் கொடுத்தே?”

     “நறுக்கினது நான்தான்ம்மா. ஆனா என்ன சமைக்கப் போறீங்கன்னு தெரியாது. தக்காளிக் குழம்பை சாதத்துல ஊத்தி, கிளறிக் கொடுங்கம்மா.”

     “சரிம்மா... மிதுனா, நீ போய்க் கிளம்பு.” 

     மிதுனா, எளிமையான புடவையையும் நேர்த்தியாக உடுத்திக் கொண்டு கிளம்பினாள்.

     அருணாவும் உடன் கிளம்பினாள், இருவரும் கைப்பை, ஸ்கூல் பேக், லஞ்ச் பாக்ஸ் சகிதம், அப்பா, அம்மாவிடம் சொல்லி விட்டுக் கிளம்பினார்கள்.

 

11

     குப்பையைக் கொட்டி விட்டு வீட்டிற்குள் செல்ல முற்பட்ட சாரதாவை அழைத்தாள் அடுத்த வீட்டில் வசித்து வரும் இந்திரா.

     “சாரதா... வேலையெல்லாம் முடிஞ்சுதா...?”

     “என் பொண்ணுங்களுக்குக் காலையிலேயே சாப்பாடு கட்டிக் கொடுக்கணுமில்லை இந்திரா... அதனால ரெண்டு மையலும் சீக்கிரமா முடிஞ்சுடும். ரெண்டு பேரும் கூடமாட ஒத்தாசையா இருப்பாங்க... அதனால, காலை டிபனும், மதிய சாப்பாடும் ஒரு சேர முடிஞ்சுடும். அதுக்கப்புறம் சமையல் மேடையைச் சுத்தம் பண்றதும், வீட்டைப் பெருக்கிக் கூட்டி அள்ளிப் போடறதும் மட்டும் தான். எங்க வீட்டுக்காரருக்கு மருந்து, மாத்திரை, சாப்பாடு கொடுக்கணும்...!”

     “உனக்கு உன் மூத்த பொண்ணு மிதுனா நல்லா ஹெல்ப் பண்றா. நல்ல பொண்ணு...!”

     “ஆமா இந்திரா... கஷ்டங்களுக்கு நடுவில சில நல்ல விஷயங்களும் நடக்குது. ஆனால்... பாவம் மிதுனா.. அவதான் ரொம்பச் சிரமப்படறா. பிறந்த வீட்ல சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கிற மிதுனாவுக்குப் புகுந்த வீடாவது நல்லபடியா அமையணும். ஏகப்பட்ட வேண்டுதல் நேர்ந்திருக்கேன். அந்த ஆண்டவன், கண் திறப்பான்னு நம்பி இருக்கேன். அவ, வசதியான குடும்பத்துல வாழ்க்கைப்பட்டு வளமாவாழணும்!”

     “வசதியை மட்டும் பார்த்தா போதாது சாரதா... பொண்ணைக் கட்டிக்கிறவன், நல்லவனா... நம்ம பொண்ணை நல்லாப் பார்த்துக்கறவனா இருக்கணும் ’உன் அம்மா வீட்ல போய் அதை வாங்கிட்டு வா... இதை வாங்கிட்டு வா’ன்னு கேட்டுத் தொல்லை பண்ணாதவனா இருக்கணும். ’அம்மா வீட்டுக்குப் போறதுக்கு எங்க அம்மாகிட்டேயும், என்கிட்டேயும் அனுமதி வாங்கிட்டுதான் போகணும்’ அப்படின்னு கண்டிஷன் போடாதவனா இருக்கணும்.

     அடக்கி, அதிகாரம் பண்ணாம, அன்பா, ஆதரவா இருக்கறவனா அமையணும். அவங்க பணத்தையும், பகட்டையும் பார்த்து நம்ம பொண்ணு அங்கே போய் சுகவாசியா வழ்வான்னெல்லாம் கியாரண்டியா சொல்ல முடியாது...”


     “நீ வேற பயம் காட்டாதே இந்திரா.”

     “பயமுறுத்தலை சாரதா... மாப்பிள்ளைப் பையன் நல்லவன், வல்லவன், உங்க பொண்ணை, பூப் போல பார்த்துக்குவான்னு மத்தவங்க சொல்றதை நம்பிப் பொண்ணைக் கொடுத்துட்டு, பூப் போல இருந்த பொண்ணைப் புயலாக்கறனுவங்க இல்லியா என்ன? பொண்ணு, புயலாகி பூகம்மா வெடிச்சு நியாயம் கேட்டால் கூட, கேஸ் சிலிண்டர் வெடிச்சுடுச்சுன்னுல்ல கதை விடறானுங்க? அதை வெச்சுத்தான் சொல்றேன்...!”

     “வறுமையின் நிழலிலேயே உழன்றுகிட்டிருக்கிற என் மகள் மிதுனா, செல்வச் செழுமையின் பிரதிபலிப்பில செல்வச் சீமாட்டியா  வாழணும்னு நான் ஆசைப்படறது நியாயம்தானே இந்திரா?”

     “நான், இப்போ நடப்புல இருக்கிற யாதார்த்தமான பிரச்சனைக ளைத்தான் சொல்றேன் சாரதா.  பேப்பர்ல செய்தி படிச்சுப்பாரு... டி.வி.யில் நியூஸ் பாரு... புதுப்பெண் தூக்குப்போட்டுத் தற்கொலை, கல்யாணம் ஆகி மூன்று மாத்ததிற்குள் விவாகரத்து, வரதட்சணைக் கொடுமையால் பெண் எரித்துக் கொலை... இந்த மாதிரி துக்ககரமான நீயூஸ் ஏராளமா வருது. ஆனா... இது... பணக்காரங்க  வீட்லேயும் நடக்கிறதுதான் கொடுமை.

     அவங்களுக்குன்னு எவ்வளவு பணம், சொத்து கொட்டிக் கிடந்தாலும் பெண் வீட்டார்கிட்டே ‘இன்னும் அதைக் கொடு, இன்னும் இதைக் கொடு’ன்னு கேக்கிறாங்களே... இது எவ்வளவு அநியாயம்? மாப்பிள்ளைப் பையன் நல்லவனாக இருந்தாலும் அவனோட அம்மா, அக்கா, தம்பி... அவன்... இவன்னு குடும்பமே ஒட்டுமொத்தமா சேர்ந்து எவ்ளவு அக்கிரமம் பண்றாங்க தெரியுமா? இதெல்லாம் அங்கே... இங்கே... எங்கேயோ... எப்பவோ ஒண்ணுன்னு நடந்தா கூடப் பரவாயில்லை... எங்கே பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் இந்த மாதிரி அட்டூழியங்கள் நடந்துக்கிட்டே இருக்கு.

     “நான் சொல்ல வந்தது... சுமாரான வசதியுள்ள குடும்பமாக இருந்தாலும் செல்வச் செழிப்பான குடும்பமாக இருந்தாலும் பொண்ணைக் கட்டிக்கப் போற மாப்பிள்ளைப் பையன், கண்ணியமானவனா, கட்டுப்பாடுள்ளவனா இருக்கணும்...!”

     “தீர விசாரிச்சு... அதுக்கப்புறம்தானே, நம்ம பொண்ணைக் கொடுக்கிறதைப்பத்தி நாமளே யோசிப்போம்? எல்லாப் பணக்காரங்களும் குணக்கேடு உள்ளவங்களா என்ன? என் பொண்ணு வசதியான குடும்பத்துல வாழ்க்கைப் படணும்னு நான் ஆசைப்டறது தப்பா என்ன?”

     “நிச்சயமா தப்பு இல்லை. எல்லா அம்மாமார்களும் அப்பாவும் நம்ம பொண்ணு சுகமா, ஐஸ்வர்யோகத்தோட வாழணும்னுதான்  ஆசைப்படுவாங்க. முன் ஜாக்கிரதையா இருந்துக்கிட்டா வேற எந்தப் பிரச்சனையும் வராம பார்த்துக்கலாம்ல? அதைத்தான் நான் சொன்னேன்... நீ என்னைத் தப்பா நினைச்சுக்காதே சாரதா...! மிதுனா எனக்கும் மகள் போலத்தான்.

     “போன வாரத்துல ஒரு நாள் எங்க வீட்டுக்காரர் வெளியூர் போயிருந்தப்போ, எனக்குத் தீடீர்னு ரத்த அழுத்தம் அதிகமாகி மயக்கமாகிட்டப்ப மிதுனாதான் ஓடி வந்து உதவி செஞ்சா. ஆம்பளைப்

பையன் மாதிரி ‘டக் டக்’னு ஆட்டோ பிடிச்சு, கூடவே ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டரைப் பார்த்துப் பேசி, ட்ரீட்மெண்ட் கொடுக்க வெச்சு, கூடவே இருந்து, என்னை மறுபடியும் வீட்டிற்குக் கொண்டு வந்து விட்டா, அவ நல்ல மனசுக்கு நிச்சயமா அவ சகல ஐஸ்வர்யத்தோட ஆனந்தமா வாழ்வா.”

     “நம்ம பிள்ளைங்களோட ஆனந்தமான வாழ்வு தானே நமக்குச் சந்தோஷம் தர்ற பெரிய விஷயம்?.., ஆனா நான் ஆசைப்படறது, கொஞ்சம் ஓவராத் தோணுதா இந்திரா?” தயக்கமாகப் பேசிய சாரதாவின் கைகளை ஆதரவாகப் பிடித்துக் கொண்டாள் இந்திரா.

     ’’சேச்சே... என்ன சாரதா நீ? எந்தத் தாய்க்குத்தான் அவ பெத்த பொண்ணுங்க சௌகரியமான வாழ்க்கை வாழணும்னு ஆசை இருக்காது? எல்லாருக்கும் இருக்கிற ஆசைதான் உனக்கும் இருக்கு? ஓவர்னு நீ ஏன் குழப்பிக்கிறே. நியாயமான ஆசையை நிச்சயம் கடவுள் நிறவேத்தி வைப்பார். தேவை இல்லாம எதையும் யோசிச்சுக்கிட்டிருக்காம நம்பிக்கையா இரு. நல்லதுதான் நடக்கும்”.

     “சரி இந்திரா, ஏதோ என் மனசுல நான் நினைச்சதை உன்கிட்ட சொன்னேன். இந்த சென்னை மாநகரத்துல பக்கத்து வீட்ல யார் இருக்கா... யார் வர்றா... யார் போறா... எதுவுமே தெரியாம இருக்கிறது வழக்கமாயிடுச்சு. ஆனா... நீயும் நானும் பக்கத்து வீட்ல குடி இருக்கிற அந்த நேயத்தைக் காப்பாத்திக்கிட்டிருக்கோம். எல்லாரும் இப்படி இருந்தா நல்லா  இருக்கும்...!”

     “அட நீ வேற... இந்தச் சென்னைக்கு நான் வாழ்க்கைப்பட்டு வந்தப்போ, நான் கிராமத்துல இருந்து வந்த்துனால, கண்ணைக் கட்டிக் காட்டில விட்ட மாதிரி இருந்துச்சு. அது மட்டும் இல்லை சாரதா... இஙகே உள்ள மக்கள் யார் முகத்துலேயும் சிரிப்பே இல்லை. கொஞ்ச நாள் பழகினா, எனக்கே சிரிப்பு மறந்துடுமோன்னு பயந்துட்டேன்னா பார்த்துக்கோயேன். ஏதோ... உன்னை மாதிரி அன்பாப் பழகி, பண்பாப் பேசுற நட்பு கிடைச்சதுனால... சென்னை நகர அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்கு நாம ஆளாலை.’’

     ’’நீ சொல்றது நூத்தக்கு நூறு நிஜம்... யதார்த்தம். நான் போய் வேலையைப் பார்க்கிறேன் இந்திரா.’’

     ’’சரி சாரதா, நானும் உலை வைக்கணும். எங்க வீட்டுக்காரருக்குக் குக்கர் சாப்பாடு பிடிக்காதே!”

     ’’சரி இந்திரா, போய் வேலையைப் பாரு!’’ சாரதா வீட்டிற்குள் நுழைந்தாள்.

 

12

     பி.எம்.டபிள்யூ கார்... குழந்தையின் கன்னத்தில் கை பட்டால் வழுக்குவது போல, மிருதுவாக கல்பனாவின் பங்களா வாசலில் நின்றது.

     அதில் இருந்து அனுசுயா இறங்குவதற்காக, டிரைவர் இறங்கிக் கார் கதவைப் பவ்யமாகத் திறந்த விட்டான்.

     இறங்கிய அனுசுயா, பங்களாவிற்குள் சென்றாள். அவளை எதிர்கொண்டு வரவேற்றாள் கல்பனா.

     ஏற்கெனவே கல்பனாவிற்கு, தான் அங்கு வரும் விஷயத்தைப் போனில் கூறி இருந்தாள் அனுசுயா.

     “வா அனுசுயா”

     கல்பனா வரவேற்றாள்.

     “என்ன கல்பனா, கல்யாண வீட்டு வேலைகளெல்லாம் முடிஞ்சுதா?”

     “ஆமா அனுசுயா... ஊர்ல இருந்து வந்திருந்த உறவுக்காரங்களெல்லாம் சென்னைக்கு அடிக்கடி வர முடியாத்துனால, வந்தவங்கள்ல சில பேர் மேற்கொண்டு ரெண்டு நாள் தங்கிட்டாங்க.  ஊரையெல்லாம் வேற சுத்திப் பார்க்கணும்னுட்டாங்க. என்னிக்கோ அபூர்வமா வர்ற சொந்தக்காரங்க... அவங்களை நல்லபடியா கவனிச்சு அனுப்பணும்ல? அதனால வீட்லேயும் வேலை அதிகமாயிடுச்சு.

     “வெளியில போற அவங்களுக்குக் கார் ஏற்பாடு பண்றது, கூட துணைக்கு ஆள் அனுப்புறது, அவங்களுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுக்கிறதுன்னு நிறைய வேலையாயிடுச்சு. கடவுள் அருளால நாம பண வசதியோட இருக்கோம்... வந்திருந்த சொந்தக்காரங்கள்லாம் அதிகமா செலவு பண்ண முடியாதவங்க... அதனாலே நாமதானே அவங்களுக்கு நிறைவா, எல்லாமே செய்யணும்? அது மட்டும் இல்லை... அவங்க எல்லாருமே என் மேலே ரொம்ப்ப் பிரியமா இருக்கிறவங்க.

     “அந்தப் பிரியத்துக்கும், அன்புக்கும் நான் கடமைப்படிருக்கேன். எல்லாரும் போயாச்சு, பொண்ணு மாப்பிள்ளை ஹனிமூன்  கிளம்பிப் போயிட்டாங்க... அடடே... பேச்சு வாக்கிலே உனக்குக் குடிக்கிறதுக்கு என்ன வேணும்னு கூடக் கேட்காம விட்டுட்டேன்? என்ன குடிக்கிறே அனுசுயா?”

     “உன்னோட வீட்ல இஞ்சி டீ குடிக்காம என்னிக்குப் போயிருக்கேன்? இஞ்சி டீ கொடு...”

     “வீட்ல சமையலுக்கு ரெண்டு பேர், மேல் வேலைக்கு ரெண்டு பேர்னு இருந்தாலும்... இந்த இஞ்சி டீ, கருப்பட்டிக்  காப்பி...  இந்த மாதிரி சில முக்கியமானதெல்லாம் எனக்கு நானே என் கைப்பட செஞ்சாத்தான் பிடிக்கும். நானே உனக்குப் போட்டுத் தரேன்.”

     ’’உனக்கு எதுக்குச் சிரம்ம? வேலை செய்றவங்க  யாரையாவது போடச் சொல்லேன்.’’


     ’’என்னோட பிரெண்டுக்கு டீ போடறது எனக்குக் கஷ்டமா? அதெல்லாம் சந்தேஷமாப் போட்டுத் தரேன்!” என்ற கூறிய கல்பனா, பத்து நிமிடங்களில் இஞ்சி ஏலக்காய் மணக்க... ஆவி பறக்கும் டீயை அழகிய கப்களில் ஊற்றிக் கொண்டு வந்தாள். இருவரும்  டீயைக் குடித்தனர்.

     “ச்சே... ஜெய்சங்கரைப் பத்திக் கேட்கவே விட்டுட்டேன். ஜெய்சங்கர் எப்படி இருக்கான்? பெங்களூருல தான் இருக்கானா?

     “ஆமா கல்பனா, இங்கே உள்ள ஆஃபீஸை நல்லாப் பழகின ஆளுங்க பார்த்துக்கிறாங்க... பெங்களூருல எல்லா ஆட்களும் புதுசு. அதனால நான்தான் ஜெய்சங்கரை அங்கே போய் ஆளுங்களைப் பழக்குப்பான்னு சொல்லி அனுப்பி வெச்சிருக்கேன். அவங்க அப்பாவோட வியாபாரத் திறமை, தொழில் நுணுக்கம் இதெல்லாம் அவனுக்கும் இருக்கு. அதனால பிஸினஸ் நல்லா இருக்கு.”

     “வெரி குட்... ஜெய்சங்கர் கெட்டிக்காரன்தான். அது சரி, பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அலையறது ஜெய்சங்கருக்குக் கஷ்டமாக இல்லையா?”

     “அதெல்லாம் பழகிடுச்சு... ஆனால், கொஞ்ச நாள்தானே? ஆளுங்களைப் பழக்கிட்டா... இவன் அடிக்கடி அங்கே போக வேண்டியது இல்லை. இளவயசுதானே? இந்த வயசுலதானே ஓடியாடி சுறுசுறுப்பா உழைக்க முடியும்? உழைச்சாத்தானே உயர முடியும்?”

     “நீ சொல்றது ரொம்ப சரியானது. ஆனால், பூர்வீகப் பணம், பூர்வீக வீடு, சொத்து எல்லாமே இருந்தும் ஜெய்சங்கர் உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு ஊரைச் சுத்திக்கிட்டு இருக்காம, அப்பாவோட பிஸினஸை அக்கறையா கவனிச்சுக்கிறானே! இது ரொம்ப் பெரிய விஷயம்தானே? எனக்குத் தெரிஞ்சு எத்தனையோ பையனுங்க, அப்பாவோட பணத்துல ஆனந்தமா வாழறாங்க...

     “அப்பாவோட கார், அவர்கொடுக்கிற கிரெடிட் கார்ட்ஸ், இதையெல்லாம் அனுபவிச்சிட்டு, ஊர் சுத்தறாங்க. ’ப்ப்’புக்குப் போறது, கார்ல யாரோ முன்னே பின்னே தெரியாத பொண்ணுங்களைக் கூப்பிட்டுக்கிட்டு ஈ.ஸ்.ஆர். போறது... பொண்ணுங்களோட குடிச்சுட்டுக் கும்மாளம் போடறது...  தழைச்சு வாழ வேண்டிய இப்போதைய தலைமுறை, தறுதலையாத் திரியுதுங்க அப்படிப்பட்ட இந்தக் கெட்டுப் போன காலத்துல... ஜெய்சங்கரைப் போல நல்ல வாலிபப் பையனைப் பார்க்கிறதே ரொம்ப அபூர்வம். சின்ன வயசுல இருந்தே உன்னோட சொல்லை மீறி எதுவுமே அவன் செய்ய மாட்டானே. நீ அவனை அப்படி வளர்த்திருக்கே...!”

     “எந்தக் குழந்தையும் மண்ணில் பிறக்கையில் நல்ல குழந்தைகளே; பின் நல்லவராவதும், தியவராவதும் அன்னை வளர்ப்பிலேன்னு கவிஞர் என்ன சும்மாவா எழுதனாரு?”

     “ஆஹா... கவிஞரைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டியா? நீ அவரோட வெறித்தனமான ரசிகையாச்சே...! சும்மா சொல்லக்கூடாது. கவியரசு கண்ணதாசன் பூமியில் இருந்து மறைஞ்சு போனாலும் அவரோட எழுத்து, மக்கள் மனசுல நிறைஞ்சு பேயிருக்கு. அவர் ஒரு அபூர்வக் கவிஞர். அற்புதமான கவிஞர். அந்தக் கவிஞர் வாழ்ந்த காலத்துல நாமளும் வாழ்ந்திருக்கோம்கிறது நமக்கு எவ்வளவு பாக்கியம்?”

     “நிச்சயமா... நாம செஞ்ச பூர்வ ஜென்ம புண்ணியம்தான், அவரோட எழுத்துக்கள் நமக்குக் கிடைச்சிருக்கு. அதெல்லாம் பொன் புதையல் பொக்கிஷம். ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுள் கொடுத்திருந்தா... இன்னும் அந்த எழுத்துச் சுரங்கத்துல இருந்து கவிதை, காவியம், பாடல்.... எல்லாமே நாம தோண்டாமலே கிடைச்சிருக்கும்...”

     ’’இப்போ என்னமோ அந்தக் கார் ஓட்டறோம்... இந்தக் கார் ஓட்டறோம்னு பெருமையா பேசிக்கிறோமே... அவர் அறுபது வருஷத்துக்கு முன்னாலேயே பென்ஸ் கார் ஓட்டிட்டார். அவர்... அவர்தான்!”

     “அர்த்தமுள்ள இந்துமதம் எழுதின அவரே இயேசு காவியமும் எழுதி இருக்காரே.. எவ்ளவு பெரிய மகத்தான விஷயம்?”

     “சரி அனுசுயா... அதைப் பத்தியெல்லாம் பேசி முடிக்கிறதுன்னா நேரம், காலம் எதுவும் பத்தாது. அன்னிக்கு கல்யாணத்துல ஒரு பெண்ணைப் பார்த்து அவளைப் பார்த்து வெச்சுக்க.. இதைப் பத்தி அப்புறம் பேசறேன்னு சொன்னியே? என்ன விஷயம்? அந்தப் பொண்ணைப்பத்தி என்ன பேசணும்?”

     ’’அந்தப் பொண்ணு யாரு? முதல்ல அதைச் சொல்லு நீ...?”

     “அவ பேர் மிதுனா. இந்தப் பங்களா வாங்கறதுக்கு முன்னால... அதாவது இருபது வருஷத்துக்கு முன்னால நாங்க குடி இருந்த ஏரியாவுல ஒரு சின்ன வீட்ல இந்த மிதுனாவும் அவ குடும்பமும் குடியிருந்தாங்க. அப்போ இந்த மிதுனாவுக்கு நாலு அல்லது அஞ்சு வயது இருக்கும். அப்போ அவளோட அம்மா சாரதா எனக்குப் பழக்கமானா. எங்க வீட்ல அப்போதும் பெரிய சமையல்தான். நிறைய விருந்தாளிங்க வந்துட்டா, சாரதாவை ஹெல்ப்புக்குக் கூப்பிடுவேன்.

     “சாரதா நல்லா சமைப்பா. அவளோடகை மணமும், பக்கவம்ம் பிரமாதமா இருக்கும். எப்போ எனக்குத் தேவைப்பட்டாலும் அவளைக் கூப்பிட்டுப்பேன். அப்போ அவளோட வீட்டுக்காரருக்குச்  சுமாரான வேலைதான். ஆனாலும் எனக்கு வேலை செஞ்சதுக்கு ஒரு பைசா  வாங்கிக்க மாட்டா. ஆனா... ஏதாவது  நாள் கிழமைன்னா... பண்டிகை சமயத்துல சாரதாவுக்கு அவ வீட்டுக்காரருக்கும், குழந்தைங்களுக்கும் புது துணிமணிங்க வாங்கிக் கொடுத்துடுவேன்.

     “அதுக்கப்புறம் கொஞ்ச நாள்ல அவ வீட்டுக் கார்ருக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்சது. நல்ல வேலை, நல்ல சம்பளம் கிடைச்சதால ஓரளவு வசதியான அப்பார்டமென்ட்டுக்குக் குடி போனா, நல்லபடியா முன்னேறிக்கிட்டிருந்தா. ஆனா துரதிர்ஷ்டவசமா... அவ வீட்டுக்காருக்கு பக்கவாதம் வந்ததுனால, படுத்துட்டாரு வேலை போயிடுச்சு.

     அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்குச்  சமையல் பண்ணிக் கொடுத்து, சில வீட்ல கொஞ்ச நாள் நிரந்தரமா சமையல் வேலை பார்த்து, கஷ்டப்பட்டு உடல் தேய உழைச்சு குழந்தைங்களைப் படிக்க வெச்சா, வளர்த்து ஆளாக்கினா. அவளோட வீட்டுக்காரருக்கு அன்னிக்கு ஆரம்பிச்ச வைத்தியம், இன்னிக்கும் தொடருது. ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தா... அவ பணமே வாங்கிக்க மாட்டா.

     அவ வீட்டுக்காரரோட வைத்தியத்துக்கு எனக்குத் தெரிஞ்ச டாக்டர்கிட்டே சிபாரிசு பண்ணி. ஃப்ரீயா, ட்ரீட்மென்ட் கொடுக்க  ஏற்பாடு செஞ்சேன். இந்த ஒரு உதவியை மட்டும்தான் அவ ஏத்துக்கிட்டா. நான் வீடு மாத்திப் போனப்புறமும் தொடர்ந்து எனக்கு  ஹெல்ப் பண்ணினா...  நன்றி மறக்காதவ. ரெண்டு பொண்ணுங்களை அவ கரையேத்தணும். ஒரு ஆறுதல் என்னன்னா... மிதுனாவுக்கு அவ படிச்சு முடிச்ச உடனேயே வேலை கிடைச்சுடுச்சு...

     “அவ வேலைக்குப் போனப்புறம் சாரதாவை வேலைக்குப் போக்ககூடாதுன்னு தடுத்துட்டா. இப்ப மிதுனாதான் குடும்பத்தைத் தாங்கறா. ரொம்ப  நல்ல பொண்ணு, நேர்மையான பொண்ணு.  உதவி செய்யற  மனப்பான்மை உள்ளவ. அவ அப்பாவை ஒரு குழந்தையைப்  பார்த்துக்கிற மாதிரி பார்த்துக்கிறா. தங்கச்சியைப் படிக்க வைக்கிறா. முன்னமாதிரி இல்லைன்னாலும் எப்பவாச்சும் ஏதாவது  ஹெல்ப் வேணும்னா சாரதாவையோ... மிதுனாவையோ கூப்பிடுவேன், வந்து செஞ்சு கொடுப்பாங்க. நல்ல குடும்பம்.

     ’’சாரதாவோட வீட்டுக்காரர், உடம்புக்கு முடியாமபடுத்ததுல இருந்து கஷ்டப்பட்டாங்க. மிதுனா படிச்சு முடிச்சு, வேலைக்குப் போனதுல இருந்து கொஞ்சம் ஏதோ சமாளிக்கிறாங்க.  இதுதான் சாரதாவோட குடும்ப நிலவரம் எதுக்காக மிதுனாவைப் பத்திக் கேட்டேன்னு இப்போசொல்றியா?”

     “சொல்றேன் கல்பான. அதுக்காகத்தானே வந்திருக்கேன். என் மகன் ஜெய்சங்கருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடலான்னு முடிவு பண்ணி இருக்கேன். அவங்கப்பா இறந்து போனதுக்கப்புறம் பிஸினஸைக் கவனிச்சுக்கிற வயசும், திறமையும் ஜெய்சங்கருக்கு இருந்ததுனால அந்த விஷயம் பத்தி பிராச்சனை இல்லை. இப்போ எனக்கு அப்பப்போ நெஞ்சு வலி வருது. எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகறதுக்குள்ளே ஜெய்சங்கருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடணும்னு நினைக்கிறேன்”.

     கல்பனா குறுக்கிட்டாள். ’’ஜெய்சங்கருக்கு நல்லபடியான மெச்சூரிட்டி... அதாவது பிஸினஸ் பண்றது... அதிலேயெல்லாம் கெட்டிக்காரன்தான். ஆனால், அவனுக்குக் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துறதுக்குத் தேவையான பக்குவம் வந்துருச்சா?”


     இதைக் கேட்டு அனுசுயா சற்று யோசித்தாள், அதன்பின் கல்பனாவிடம் எதிர்க்கேள்வி கேட்டாள்.

     ’’ஏன் அப்படிக் கேட்கிறே கல்பனா?”

     ’’சிரித்துக் கொண்டே பேச  ஆரம்பித்தார் கல்பனா.

     ’’நீ ஜெய்சங்கரை  ஒரே பையன்னு செல்லம் கொடுத்து ’அம்மா கோண்டுவா ஆக்கி வெச்சிருக்கியே... அதனாலே கேட்டேன். தப்பா நினைச்சுக்காதே...!”

     ’’ச்சே ! இதிலே தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? நீ சொல்றது என்னமோ நிஜம்தான். என் மகன்தான் என் உலகம், என் உயிர். செல்லமா வளர்த்தாலும் சொன்ன பேச்சுக் கேட்டு நடக்கணும்னு அறிவுறுத்தி வளர்த்திருக்கேன்...’’

     ’’அது சரி, கல்யாண விஷயத்துலேயும் நீ சொல்றதைக் கேட்பானா? அதாவது அவனுக்குன்னு தனிப்பட்ட ஆசை... எனக்கு வர்ற மனைவி இப்படி இருக்கணும்... அப்படி இருக்கணும்னு ஒரு கனவு இருக்கலாம்ல? இதைப் பத்தி அவன் கிட்டேகேட்டியா?’’

     ’’அ... அ... அது வந்து கல்பனா... அவனோட இஷ்டத்துக்கு நான் குறுக்கே நிற்கப் போறதில்லை. என்னோட பேச்சையும் அவன் மீற மாட்டான்...!”

     தட்டுத் தடுமாறி, ஆனால் சுதாரித்துப் பேசினாள் அனுசுயா.

     ’’சரி... உன் பேச்சை உன் மகன் மீற மாட்டான்னாலும் அவன்கிட்டே இப்போ கல்யாணம் பண்ணிக்கத் தயாரா இருக்கானான்னு கேட்டியா?”

     ’’ஓ...கேட்டேனே! அவன் சரின்னு சொல்லிட்டான். பணம், நகை, சொத்து, கார், எதுவும் பொண்ணு வீட்ல கேட்கக்கூடாது. பொண்ணு ஏழையா இருந்தாலும் நல்ல அழகா இருக்கணும்னு சொன்னான். ’’பணக்கார வீட்டுப் பொண்ணே வேண்டாம்மா’ம் சொல்லி இருக்கான்...’’

     சரமாரியாகப் பொய்களை, உண்மைகள் போல அள்ளி வீசினார் அனுசுயா.

     ’’ஓ... அப்படியா? அப்போ... அவனுக்குன்னு கல்யாண விஷயத்துல ஒரு ஐடியா இருக்குன்னு சொல்றே. நீ சொல்றதை வெச்சுப் பார்த்தா, ஜெய்சங்கர் ரொம்ப  முற்போக்கு சிந்தனையிலே இருக்கான்னு புரியுது....’’

     ’’அ... ஆமா கல்ப்பு, அதனாலதான் அந்த மிதுனாவை ஜெய்சங்கருக்குப் பார்க்கலாமேன்னு உன்கிட்டே வந்திருக்கேன்...’’

     ’’ஓ... அப்படியா? நல்ல விஷயம்தான். ஆனால் உன்னோட உயர்ந்த அந்தஸ்துக்கு சரி நிகர் சமமாக இருக்கிற குடும்பத்துலதான் பொண்ணு எடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தே... இப்போ என்னடான்னா இப்படிச் சொல்றே?”

     ’’அதான் சொன்னேனே கல்ப்பு, ஜெய்சங்கர் பணக்கார வீட்டுப் பொண்ணே வேண்டாங்கிறான்னு... அதனாலதான் உன் பொண்ணு கல்யாணத்துல அந்த மிதுனாவைப் பார்த்ததும் எனக்கு இந்த யோசனை தோணிச்சு...’’

     ’’அப்படின்னா நல்ல விஷயம்தான். மிதுனா ரொம்ப நல்ல பொண்ணு. அழகா இருந்தாலும் ஆணவம் இல்லாதவள். அடக்கமானவள், குடும்ப நேயம் உள்ளவள். அவங்கம்மா சாரதாவும் அமைதியான சுபாவம். மிதுனா படிச்சு முடிச்சு வேலைக்குப் போற வரைக்கும் நோயாளிப் புருஷனையும், போதிய வருமானம் இல்லாத சூழ்நிலையிலேயும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல், உழைப்பால் குடும்பத்தைக் காப்பாத்தினவள்.

     ’’ஒரே ஒரு விஷயம்... தங்கமான பொண்ணுங்களைப் பெத்து வெச்சிருக்காளே தவிர, தங்கம் எதையும் சேர்த்து வைக்கலை. பொண்ணு கேட்டா, பொண்ணைக் கொடுப்பாளே தவிர பொன் நகை எதுவும் ஏகத்துக்குப் போட அவளால் முடியாது. ஏதோ அவளோட பழைய நகைங்க கொஞ்சம் வெச்சிருந்தா... புருஷனோட வைத்தியச் செலவு, பிள்ளைங்களோட படிப்புச் செலவுன்னு வித்துட்டா... இப்போ மிதுனாவோட சம்பளத்துல... தக்கி, முக்கி சீட்டுப் போட்டுக்கிட்டிருக்கிறதா சொன்னா. இதை எதுக்காகச் சொல்றேன்னா... நீ அவகிட்டே பெரிசா எதிர்பார்த்துடக்  கூடாது பாரு.... அதுக்குதான்.’’

     ’’எனக்குப் புரியுது கல்ப்பு. எனக்கு அவங்க பொண்ணு மிதுனாவை மருமகளாக அனுப்பினா போதும். எங்க வீட்டுப் பூர்வீக நகைங்க, என்னோட நகைங்க, வரப்போற மருமகளுக்காக நான் வாங்கி வெச்சிருக்கற நகைங்க...  எல்லாமே என்கிட்டே இருக்கு, பட்டு, கல்யாணச் செலவு, எதையுமே நான் எதிர் பார்க்கலை.’’

     ’’நீ இப்படிச் சொல்றே... ஏகப்பட்ட பணம், சொத்து நகை நட்டு, கார், பங்களான்னு வெச்சிருக்கிறவங்க எல்லாருமேவா வரதட்சணை வேண்டான்னு சொல்றாங்க? இன்னும் இன்னும்னு  நகை கொண்டா, பண கேட்டு வாங்கிட்டு வான்னு அம்மா வீட்டுக்குத் துரத்தி விடறாங்க. நீ உன் மகன் ஜெய்சங்கர் சொல்றான்கிறதுக்காக அவனோட இஷ்டப்படி பொண்ணு பார்த்து முடிக்கணும்கிறே. பேசி முடிச்சப்புறம் மனசு மாறிட மாட்டியே?  வார்த்தை தவறிட மாட்டியே? நான் இப்படிக் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதே. கல்யாணம்கிறது பெரிய விஷயம்... முன்கூட்டியே தெளிவு படுத்திக்கிட்டா நல்லதுதானே?”

     ’’நான் கேட்கிறது பெரிய விஷயம் இல்லை நாளைக்கு நல்ல நாளா இருக்கு, நான் சாரதாவை நேர்ல பார்த்துப் பேசிடறேன். மிதுனாவுக்கு அதிர்ஷ்டம், வசதியான குடும்பத்துல இருந்த அவளைப் பொண்ணு கேட்கிறது. ஆனால், மிதுனாவுக்கும் பிடிக்கணும். முன்ன மாதிரியெல்லாம் பெத்தவங்க, ’இவர்தான் உனக்கு நாங்க பார்த்து வெச்சிருக்கிற மாப்பிள்ளை அல்லது பொண்ணு அப்படின்னு சொல்லிவிட்டு.... அதாவது ஜஸ்ட் இன்ஃபர்மேஷன் மட்டும் கொடுப்பாங்க, பெர்மிஷனெல்லாம் கேட்க மாட்டாங்க. கல்யாணம் முடிஞ்சு முதல் இரவு அன்னிக்குதான் மாப்பிள்ளையோட முகத்தையே பொண்ணு பாப்பா. அப்போ அவளுக்கு அவன் ஒரு அந்நியன்தான்.

     ஆனாலும் அந்தக் காலத்துப் பொண்ணுங்களும் முன்னே பின்னே பார்க்காமலே பெத்தவங்க பார்த்து கட்டிவெச்ச கணவன் கூட வாழலியா? நம்மையே எடுத்துக்கோயேன்... நாம என்ன மொபைல்ல பேசிக்கிட்டே இருந்தோமா? இல்லியே! இப்போ உள்ள பிள்ளைங்க மொபைல்ல பேசும் போதே, திடீர்னு அவங்களுக்குள்ளே தகராறு ஆகி, கல்யாணத்தை நிறுத்தச் சொல்லிடறாங்க. இரு மனம் கலந்தால்தான் திருமணம்... அதுக்காக... ஓவராகப் பேசிப் பேசி... பேசி வெச்ச கல்யாணம் நின்னுபோகுது. அதுக்காக முகம் பார்க்காம கல்யாணம் பண்ணிக்கணும்னு நான் சொல்லலை. நிச்சயதார்த்தத்துக்கும், கல்யாணத் தேதிக்கும் இடைப்பட்ட நாட்கள்லே அளவுக்கு மீறிப் பேசத் தேவையில்லை. அளவுக்கு அதிகமானா, அமிர்தம் கூட விஷமாயிடும்னு பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கோம்.’’

     ’’இப்போல்லாம் வீட்டு வேலை செய்யறவங்க கூட மொபைல் போன் வெச்சிக்கிறாங்க... எப்போ பார்த்தாலும் பேசிக்கிட்டே இருக்காங்க... ஆனால் நம்பளோட அழைப்புகளை அலட்சியப்படுத்துறாங்க...’’    

     ’’ஆத்திரம் அவசரத்திற்கு  மொபைல் போன் தேவை தான். ஆனால், அநாவசியமாக யூஸ் பண்றதைப் பார்க்கும்போது கடுப்பா இருக்கு.’’

     ’’அது போகட்டும்... சாரதா கிட்டே பேசிட்டு, அவ என்ன சொன்னாள்ன்னு உனக்குச் சொல்றேன்...’’

     ’’ஓ...! ஒரு விஷயம் கல்ப்பு... கல்யாணத்துக்கு அந்த சாரதா ஒத்துக்கிட்டா... உடனடியா அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை நடத்திடணும்.’’

     ’’என்ன...? அவ்ளவு சீக்கிரமாவா? ஏன்...?’’

     ’’நான்தான் சொன்னேனே கல்ப்பு... எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருதுன்னு. நான் நல்லபடியா இருக்கும்போதே என் பையனோட கல்யாணத்தை நடத்திடணும்...’’

     ’’நீ நூறு வயசு நல்லா இருப்பே. ஏதாவது ஆகிடும்னு ஏன் அவநம்பிக்கையாக இருக்கே? உன் ஆசைப்படி சாரதாவும், மிதுனாவும் சம்மதிச்சுட்டா... கல்யாணத்தை முடிச்சுடலாம். அந்தக் குடும்பம் கஷ்டப்பட்டு, அதுக்கப்புறம் முன்னேறி, திரும்பவும் சறுக்கி... வாழ்ந்து கெட்டவங்களா இருந்து, இப்போ மிதுனாவால  கொஞ்சம் நல்லா இருக்காங்க இருந்தாலும்... அவங்களோட ஏழ்மை நிலை உன்னை எரிச்சல் படுத்தி, அதுக்கு நீ ரியாக்ட் பண்ணக் கூடாது இது என் வேண்டுகோள்.


     வேற எங்கேயாவது அவளுக்கு வரன் தகைஞ்சு கல்யாணம் ஆனா... அதுல வர்ற நல்லது என்னைச் சந்தோஷப்படுத்தும்... கெட்டது, அதாவது அந்தக்குடும்பம் மனசங்கடப்படற மாதிரி ஏதாவது நடந்தால்... அதுவும் என்னைப் பாதிக்கும். அதுவும் நான் பார்த்துப் பேசி முடிச்சுவைக்கிற இந்தத் திருமணத்துல, சாரதாவுக்கோ மிதுனாவுக்கோ எந்த ஒரு மன வருத்தமும் உன்னால உண்டாகக்  கூடாது.

                                                          ’’ ’கல்பனாம்மா பார்த்துச் சொன்ன வரன், குடும்பம்... அதனால நல்லபடியாகத்தான் இருக்கும்’ங்கிற அவங்களோட நம்பிக்கையைக் காப்பாத்தணும் பொதுவா... இந்த மாதிரி  ‘பொண்ணு’ ‘மாப்பிள்ளை’ன்னு பேசிக்கொடுன்னு யார் வந்து கேட்டாலும் நான் தலையிடறதே இல்லை. நீ என் நெருங்கிய தோழி. அதனாலே உன்கிட்டே என்னாலே மறுக்க முடியலை. அது மட்டுமில்லை. சாரதா நல்லவள். மிதுனா நல்ல பொண்ணு. அவளுக்கு ஒரு வளமான வாழ்வு கிடைக்கற இந்தச் சந்தர்ப்பத்தை நான் தவிர்க்க விரும்பலை.

     ஒரு பெண்ணுக்கு சிறப்பான  வாழ்க்கை அமையறதுக்கு என்னால முடிஞ்சதைச் செய்யணும்னு நினைக்கிறேன். அந்த வாழ்க்கை சிறப்பாக இருக்கும்ங்கற அந்த நம்பிக்கையைக் காப்பாத்துறது உன் கையில்தான் இருக்கு. நான் இப்படிப் பேசுறேனேன்னு தப்பா  நினைச்சுக்காதே அனுசுயா, ஈஸியா சொல்லிடறாங்க. கல்யாணம் ஆன மூணு மாசத்துல டைவர்ஸ்... அம்மா வீட்டுக்குத் திரும்பி வந்துட்டா... அது... இதுன்னு.

     ’’ஆனா, அப்படிப்பட்ட சூழ்நிலைகள்ல... குடும்பத்தினருக்குள்ளே எவ்வளவோ கஷ்டங்கள், குழப்பங்கள் மனவேதனைகள். குழந்தைகள் இருந்தால், அதுங்களோட பரிதவிப்பு... அப்பப்பா... இப்படி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கும். அதனாலதான் நான் திரும்பத் திரும்பக் கேட்கிறேன்... உன்னால அவர்களோட ஏழ்மை நிலையை ஜீரணிச்சுக்க முடியுமா? யோசிச்சுச் சொல்லு...!?

     “யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை கல்ப்பு... பொண்ணு எங்க வீட்டுக்குத்தான வரப்போறா? என் வீட்ல உள்ள சகல வசதிகளையும் செல்வத்தையும் அவ அனுபவிக்கப்போறா. அவங்களோட ஏழ்மை நிலை என்னை எந்த விதத்துல பாதிக்கும்? ஒரு வேளை... எனக்கு ஒரு பொண்ணு இருந்து... அவ, ஏழையான குடும்பத்துல வாழ்க்கைப்படப் போறான்னா... ஐய்யோ.. நம்ம பொண்ணு இருந்து... அவ, ஏழையான குடும்பத்துல  வாழ்க்கைப்படப் போறான்னா... ஐய்யோ... நம்ம பொண்ணு இங்கே சகல செகர்யங்களோட இருந்தவளாச்சே... புகுந்த வீட்ல எந்த வசதியும் இல்லையே அப்பிடின்னு நான் யோசிக்க வாய்ப்பு உண்டு. என் மனம் தடுமாறவும் போராடவும் வாய்ப்பு உண்டு. ஆனா, ஒரு ஏழைப்பொண்ணு என் குடும்பத்துக்குத்தானே வாழ வரப்போறா?”

     ’’நீ மன உறுதியா இன்னிக்குப் பேசுறே... இதே மன உறுதி எப்போதும் இருக்கணும்...’’

     ’’நிச்சயமான இருக்கும் கல்ப்பு, மிதுனா, என் வீட்டுக்கு மருமகளா வந்துட்டா அவ மருமகள் இல்லை என் மகள்...’’

     ’’மருமகளை என் மகள் மாதிரிப் பார்த்துக்கிறேன்னு சொல்றதை நூறு சினிமாவுல பார்த்தாச்சு அனுசுயா. இது சினிமாவுல வர்ற டயலாக் மாதிரி டம்மியா ஆகிடக்கூடாது. ’எங்க மம்மி உன்னைப் பூப்போல தாங்குவாங்க’ன்னு கல்யாணம் பண்ணிக்கப் போறவன் சொல்லுவான்... மகன் ஆபீஸுக்குக் கிளம்பிப் போனப்புறம் மருமகளை அந்த மம்மி, கும்மி எடுத்துடுவா. மறைமுகமான தாக்குதல்கள்... மன வேதனையான சுடு சொற்கள்... இதையெல்லாம் பேசி, ஒரு பொண்ணை மனம் சொற்கள்...  இதயெல்லாம் பேசி, ஒரு பொண்ணை மனம் நோகப்பண்றதுல என்ன கிடைக்கப் போகுது?

     ஊர் நடப்பு, நாட்டு நடப்பை நான் சொல்றேன் அனுசுயா, உனக்குத் தெரியாதது இல்லை. நல்லா யோசிச்சு ராத்திரி எட்டு மணிக்கு எனக்குப் போன் போடு. நான் நாளைக்குச் சாரதாவை வரவழைச்சுப் பேசிடறேன்... எல்லாம் நல்லபடியா நடக்கும் பாரத்தை ஆண்டவன்மேல போட்டுட்டு நிம்மதியாக இரு...’’

     ’’சரி கல்ப்பு, நான் கிளம்புறேன்’’

     ’’சரி அனுசுயா... எட்டு மணிக்குப் போன் போடு உடம்பைப் பார்த்துக்கோ.’’

     ’’சரி கல்ப்பு, நான் கிளம்புறேன்’’

     அனுசுயா காரில் உட்கார்ந்த்தும் கார் கிளம்பியது.

 

13

     மிதுனாவும், அருணாவும் கிளம்பிப்போன பிறகு, வாசலுக்கு வந்தாள் சாரதா. அப்போது அங்கே கோயில் குருக்கள் குமார சிவாச்சியாரின் மகன் கண்ணன் நின்றிருந்தான். அவனும் வேறு ஒரு கோயிலில் பூஜைப் பணியில் இருந்தான்.

     ’’அட... நீ... குமார சிவாச்சியார் மகன்தானே? ஸாரிப்பா... உன்னோட பேர் மறந்து போச்சு..’’

     ’’என் பேர் கண்ணன்மா. அப்பா சில வரன் பத்தின விபரமெல்லாம் கொடுத்திருக்கார். அப்பாவுக்குத் திடீர்னு ஶ்ரீரங்கத்துல கோயில் வேலை வந்துடுச்சு, அதனால என்கிட்டே கொடுத்தனுப்பிச்சார். நீங்க ஜாதகம் வேண்டாம்னதாலே டீடெயில்ஸ் மட்டும் கொடுத்திருக்கார்.’’

     ’’ஆமாம்ப்பா... ஜாதகத்துலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. வாப்பா, உள்ளே வந்து ஒரு வாய் காபி குடிச்சிட்டுப் பேயேன்...!”

     ’’இல்லைம்மா, நான் போகணும், கொஞ்சம் அவசர வேலை இருக்கு. இந்தாங்க.’’

     ஒரு பெரிய கவரைச் சாரதாவிடம் கொடுத்துவிட்டுக் கண்ணன் கிளம்பினான். அவன் கொடுத்து விட்டுப் போன கவரைப் பிரித்துப்  பார்த்தாள் சாரதா, அப்போது இந்திரா அங்கு வந்தார்.

     ’’வா இந்திரா... மிதுனாவுக்கு வரன் பார்க்கிறதுக்காக குருக்கள்கிட்டே சொல்லி இருந்தேன். அவர், வரன் பத்தின விபரங்கள் அனுப்பி இருக்கார்.’’

     ’’ஆனால், ஜாதகமே இல்லையே சாரதா?”

     ’’ஜாதகம் எதுக்கு இந்திரா? எனக்கென்னமோ அதில நம்பிக்கையே இல்லை. எங்க அம்மாவுக்கு, அப்பாவுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணி வெச்சாங்களாம். ஆனால், எங்கப்பா அவரோட இருபத்து ஒன்பதாவது வயசுல ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போயிட்டார். எங்க அம்மாவுக்கு அப்போ வயசு இருபத்தி ரெண்டுதான். நான் அம்மாவோட வயித்துல ஆறாம் மாசம். ஏன் ஜாதகத்துல இதைப் பத்தி சொல்லலை?

     ’’வாழ்வாங்கு வாழ்வாங்க... மூணு குழந்தைங்க பிறந்து, பணம், காசு சேர்ந்து அமோகமா வாழ்வாங்கன்னு ஜோஸியக்காரர் சொன்னாராம். ஒரு குழந்தையான என்னையே எங்கப்பா கண்ணால பார்க்காம, கண் மூடிட்டார். எங்க பாட்டி, தாத்தா கொஞ்சம் நல்லபடியாக இருந்ததுனால எங்கம்மாவையும், என்னையும் பார்த்துக்கிட்டாங்க. அது என்ன சாபக்கேடோ... எங்கம்மாவுக்கு எங்கப்பா செத்துப்போய் எங்கம்மா அமங்கலியானாங்க. எனக்கு என் வீட்டுக்காரர் கொஞ்ச வயசுல இருந்தே நோயாளியாகிட்டார்.  எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்தே இந்த ஜாதகப் பொருத்தம், ஜோஸ்யம் இதெல்லாம் சுத்தமா பிடிக்காமப் போச்சு, நம்பிக்கையும் போச்சு.

     ’’உலகத்துல இரவு, பகல் மாறி மாறி வர்றது இயற்கைதானே? அதுபோலத்தான் இன்பமும், துன்பமும் மனிதர்களோட வாழ்க்கையில மாறி மாறி வரும். இது யதார்த்தம்.  எல்லாரும் எப்பவும் சந்தோஷமாவே இருந்துடறோமா? அல்லது எப்பவுமே எல்லாருமே துக்கத்துலேயே மூழ்கிக்  கிடக்கிறோமோ? நாம பிறக்கிறதுக்கு முன்னாலேயே இவளுக்கு இது நடக்கும்... இவள் இதனை இழப்பாள்... இது போன்ற பல விஷயங்கள் நமக்கு நிகழ இருக்கிறதை எழுதி வெச்சிருப்பான் இறைவன். அது எழுதப்பட்டது அப்படின்னு மகான் ரமணமகரிஷி சொல்லி இருக்காராம். அதில கூட எனக்கு நம்பிக்கை இல்லை.


     ’’நாம சில விஷயங்களை அடைய முடியலைன்னாலோ அல்லது நமக்குக் கிடைக்கலைன்னாலோ ’இது ஏற்கெனவே எழுதி வைக்கப்பட்டது’ன்னு விட்டுடறோமா? முயற்சி எடுக்காமலா இருக்கோம்? பெரிய மகான் ரமண மகரிஷி... அவர் சொன்னது எனக்குப் புரியலியோ என்னமோ? ஆனால், இந்த ஜாதகப் பொருத்தம்  பார்க்கிறதை நான் அறவே வெறுக்கறேன்...’’ என்ற சாரதா, கவரில் இருந்து எடுக்கப்பட்ட பேப்பர்களை பார்த்தார்.

     ’’என்ன சாரதா... ஏதாவது நல்ல வரன் விவரம் வந்திருக்கா?’’

     ’’ம்கூம்... எல்லாமே பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பளம் வாங்குகிற வரன்கள் விபரம்தான் இருக்கு குறைஞ்ச பட்சம் ஒரு நாப்பதாயிரம் சம்பாதிக்கறவனா இருந்தால் பரவாயில்ல... ஊம்...!’’ பெருமூச்சு விட்டாள் சாரதா.

     ’’நீ அந்தக் குருக்கள்கிட்டே, நாப்பதாயிரம் சம்பாதிக்கற வரன் மட்டும் கொண்டு வாங்கன்னு சொல்லிடு சாரதா.’’

     “ஆமா இந்திரா, அப்படித்தான் செய்யணும்...”

     சாரதா பேசிக் கொண்டிருக்கும் போதே அங்கு ஒருவன் வந்தான். வெள்ளை பேண்ட், வெள்ளை ஷர்ட் அணிந்து, தொப்பியைக் கையில் வைத்திருந்தான். அவனது உடை அவன் ஒரு டிரைவர் என்பதை உணர்த்தியது. இருந்தாலும் அவனே பேசட்டும் என்று காத்திருந்தார் சாரதா.

     ’’இங்கே சாரதான்னு ஒருத்தங்க இருக்கறதா சொன்னாங்க... அவங்க வீட்டு அட்ரஸ் இதோ...!’’ என்று ஒரு பேப்பரைக் காட்டினான் அவன்.

     ’’அட்ரஸ் சரிதான். நான்தான் சாரதா.’’

     ’’அம்மா, நான் கல்பனா மேடம் வீட்ல புதுசா சேர்ந்திருக்கிற டிரைவர். மேடம் உங்களைக் கூப்பிட்டுக்கிட்டு வரச் சொன்னாங்க...’’

     ’’இல்லை தம்பி, நான் கார்ல எல்லாம் வர மாட்டேன்னு கல்பனாம்மாவுக்கே தெரியுமே...!”

     “கேட்டுப் பாரு, கார்ல  வரலைன்னா  ஆட்டோ விலேயாவது வரச் சொல்லுன்னு பணம் கொடுத்து விட்டிருக்காங்கம்மா. ஏதோ முக்கியமான  விஷயம் பேசணுமாம்.’’

     யோசித்தாள் சாரதா.

     இதைப் பார்த்த இந்திரா,  ’யோசிக்காதே சாரதா... ஏதோ அவசரம், அவசியம் இல்லாம சொல்லி அனுப்ப மாட்டாங்க. நீ கார்ல வர மாட்டேன்னு தெரிஞ்சும் கார் அனுப்பி இருக்காங்க. அவங்க மேலே நீ பெரிய மரியாதை வெச்சிருக்கேன்னு சொல்லுவியே... கார்லேயே போய் என்னன்னு கேட்டுட்டு வந்துடேன். மிதுனா அருணா வந்ததும் நான் சொல்லிக்கிறேன்.’’

     இந்திரா சொல்வது நியாயம் என்று தோன்றவே, சம்மதித்த சாரதா கிளம்பினாள். கார், கல்பனாவின் பங்களாவிற்கு விரைந்தது.

 

14

     ல்பனாவின் பங்களாவிற்குச் சென்ற சாரதாவை வரவேற்றாள் கல்பனா.

     ’’வா சாரதா, நல்லா இருக்கியா? நீயும் உன் பொண்ணு மிதுனாவும் கல்யாணத்துல ரொம்ப நல்லா ஹெல்ப் பண்ணுனீங்க. தேங்க்ஸ்னு சாதாரணமாகச் சொல்லிட முடியாது. அவ்வளவு வேலை பண்ணி இருக்கீங்க...’’

     ’’பட்டு, பணம், பலகாரம்னு நிறையக் கொடுத்துக் கௌரவப்படுத்திட்டீங்களே கல்பனாம்மா. மறுபடி மறுபடி தேங்க்ஸ் சொல்லித்தானே வழி அனுப்புனீங்க... எதுக்காம்மா இந்தச் சம்பிரதாயமெல்லாம்? நீங்க என் குடும்பத்து மேலே வெச்சிருக்கிற அன்பே பெரிசு.’’

     ’’பெருந்தன்மையா... அடக்கமாகப் பேசுறே. உட்கார் சாரதா...
உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்... அதுக்கு முன்னாலே ஏதாவது சாப்பிடு!” என்ற கல்பனா, வேலை செய்யும் பெண் மாலதியைக் கூப்பிட்டார்.

     ’’ஏ மாலதி, கேசரி, வடை, பஜ்ஜி எடுத்துட்டு வா...’’

     மாலதி எடுத்து வந்து வைத்தாள்.

     மரியாதைக்காக அவற்றைச் சாப்பிட்டாள் சாரதா.

     சாப்பிட்டு முடித்ததும் காபி வந்தது.

     காபியைக் குடித்து முடித்தாள்.

     ’’கல்பனாம்மா... சொல்லுங்கம்மா, என்ன விஷயம்?”

     “எனக்கு ரொம்ப வேண்டியவங்க... என்னோட நெருங்கிய பிரெண்ட் அனுசுயா, கல்யாணத்துல நீ அவளைப் பார்த்தியா என்னன்னு தெரியலை. அனுசுயா ஒரு கோடீஸ்வரி. அவளுக்குப் புருஷன் இல்லை. அவர் இறந்துட்டார். ஏகப்பட்ட பணம் இருக்கிறதுனால பொருளாதாரப் பிரச்சனை எதுவும் இல்லை. அவளோட மகனும் பெரிவனா உரிய வயசுல இருந்ததுனால... அவளுக்கு, அவளோட கணவர் கவனிச்சுக்கிட்டிருந்த பிஸினஸை அவனே பார்த்துக்கிறான்.

     “சென்னையில் பங்களா, பாண்டிச்சேரியில் பங்களா, பெங்களூருவில் புது பிஸினஸ்... கார், டிரைவர், வேலைக்காரங்க,  சமையலுக்கு ஆள் இப்படி ஏகப்பட்ட வசதி, ஆபீஸ்ல பல பேருக்குச் சம்பளம் கொடுக்கிறாங்க பையன் பேர் ஜெய்சங்கர். இதையெல்லாம் ஏன் உன்கிட்டே நான் சொல்றேன்னு உன் மனசுல எண்ணம் ஓடுது. அது எனக்குப் புரியுது.

     “காரணம் இல்லாம எதுவும் பேச மாட்டேன்னு உனக்குத் தெரியும். அந்தப் பையன் ஜெய்சங்கருக்கு உன் பொண்ணு மிதுனாவைப் பெண் கேட்கிறாங்க...”

     “என்ன கல்பனாம்மா சொல்றீங்க...? பெரிய கோடீஸ்வரக் குடும்பங்கிறீங்க...? எங்க மிதுனாவைப் பெண் கேட்கிறாங்களா? நிச்சயமா இதை என்னாலே நம்ப முடியலை கல்பனாம்மா!’’

     படபடப்பாய்ப் பேசிய சாரதாவை  அமைதிப்படுத்தினார் கல்பனா.

     “பதட்டப்படாதே சாரதா... மாப்பிள்ளைப் பையன் ஜெய்சங்கர் தனக்குப் பார்க்கிற பொண்ணு வீட்டார்கிட்டே எதுவுமே வரதட்சணையாகேட்கக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கானாம். அது மட்டும் இல்லை... ஏழைக் குடும்பத்துப் பொண்ணுதான் வேணும்னு சொல்லி இருக்கானாம்.  உண்மையிலேயே ரொம்ப அதிசயமாய்த்தான் தோணுது எனக்கும். சில குடும்பத்துல பையனுங்க வரதட்சணை வேண்டாம்னாலும் பையனோட அம்மா எதையாவது கேட்டுக் கெடுபிடி பண்ணுவாங்க இந்த அனுசுயா என்னடான்னா, பையனுக்கு மேலே ஒரு படி மேலே போய் “பொண்ணைக் கொடுத்தால் போதும்’ங்கிறா...!”

     “நீங்க பேசுறதையெல்லாம் கேட்கும்போது, எனக்குக் கனவு காண்கிற மாதிரி இருக்கு கல்பனாம்மா... நிஜமா சொல்றேன், கனவு கூட இப்படி வராது. ஆனால்... கல்பனாம்மா... ஒண்ணு கேட்கிறேன்... அவ்வளவு பெரிய பணக்காரங்க எங்களை மாதிரி கீழ் மட்டத்துக் குடும்பத்துப் பொண்ணை அவங்க மகனுக்குக் கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்கு முன்வந்தது, ரொம்ப ஆச்சர்யமா இருக்கு கல்பனாம்மா... ஆச்சர்யம் மட்டும் இல்லை... அது வந்து... அது...”

     தொடர்ந்து பேசுவதற்கு மிகவும் தயங்கி சாரதாவைப் பார்த்துக் கையமார்த்தினாள் கல்பனா.

     “எனக்குப் புரியுது சாரதா... உனக்கு ஆச்சர்யம் மட்டும் இல்லை, கூடவே கொஞ்சம் சந்தேகமும் இருக்கு... அது இயல்பான விஷயம். உன்னோட இடத்துல நான் இருந்திருந்தாலும், என்னோட மனநிலையும் இப்படித்தான் இருக்கும். வெளிப்படையாவே சொல்றேன்... அந்தப் பையனுக்கு ஏதேனும் குறை, நோய், நொடி இருக்குமோன்னு பயப்படற.

     ஒரு தாய்க்கு உரிய இயற்கையான பயம் அது. தயங்காமல் என்ன கேட்கணும்னு நினைக்கிறியோ..  அதைக் கேட்டுடு. ஆனா, அதுக்கு முன்னால் நான்  சொல்றதை நீ கேட்டுக்கோ, அனுசுயாவோட மகன் ஜெய்சங்கருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. எந்த வியாதியும் கிடையாது. கோழி அடைகாக்கற மாதிரி, தன் மகனைப் பொத்திப் பொத்தி வளர்த்திருக்கா, தாய் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். இப்போதான் என்னவோ அதிசயமா, தன்னோட கல்யாணம் பத்தி அவனோட சொந்த அபிப்ராயத்தைச் சொல்லி இருக்கன். பணக்காரக் குடும்பத்துப் பொண்ணு வேண்டாம்னு. மத்தபடி, சொல்றதை செஞ்சுக்கிட்டு... அவன் உண்டு அவனோட வேலை உண்டுன்னு இருக்கக்கூடிய பையன் அந்த ஜெய்சங்கர். இப்போ நீ கேளு... உனக்கு என்ன கேட்கணும்னு தோணுதோ...கேளு...!”


     “உண்மையிலேயே நான் சந்தேகப்பட்டது பையனுக்கு நோய் ஏதாவது இருக்குமோன்னுதான். இன்னொரு விஷயம்... இப்போ வரதட்ணை வேண்டாம்னு சொல்லிவிட்டு, கல்யாணம் ஆகி பொண்ணு அவங்க வீட்டுக்குப் போனப்புறம் சீர், செனத்தின்னு கேட்டு எங்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது. அந்த விஷயம் இன்னும் எனக்குத் தெளிவாகலை கல்பனாம்மா...’’

     “அதைப் பத்தி நீ ஒரு எள்ளளவு கூட யோசிக்க வேண்டாம் சாரதா.  இதைப்பத்தி... ரொம்ப உறுதியா நான் அனுசுயாட்ட பேசிட்டேன். அதாவது, கல்யாணத்துக்கப்புறம் நகையோ பணமோ எதுவும் கேட்கக் கூடாதுன்னு கண்டிஷனா சொல்லி இருக்கேன். அவகிட்டே எக்கச்சக்கமா நகை இருக்கு. அது எல்லாமே என் மருமகளுக்குத்தான்னு  ஆசையா சொல்றா. இது நான் தலையிட்டுப் பேசுற கல்யாண விஷயம்கிறதுனால கொஞ்சம் அதிகமாகவே பேசி இருகேன். அதனால நகை, பணப் பிரச்சனையெல்லாம் வரவே வராது. வேற என்ன கேட்கணும்?”

     “ஆமா... ஆனா, பெங்களூருல இன்னொரு ஆஃபீஸ் ஆரம்பிச்சிருக்காங்களாம்... ஜெய்சங்கர் அங்கேபோக, வர இருப்பான்னு அனுசுயா சொன்னாள். இப்போ அவன் மட்டும் போறான் வர்றான். கல்யாணத்துக்கப்புறம் பொண்டாட்டியைக் கூட கூட்டிக்கிட்டுப் போவான். அட, நீ என்ன சாரதா... பெங்களூரு நமக்கு அடுத்த வீடு மாதிரி, பறந்தா ஒரே ஒரு மணி நேரம்... அங்கே ஃப்ளைட் ஏறினா... சென்னைக்கு ஒரு மணி நேரத்துல வந்துடலாம்.

     “இந்தக் காலத்துப் பொண்ணுங்க வெளிநாட்டு மாப்பிள்ளைதான் வேணும்னு கேட்கிறாங்க... நீ என்னடான்னா... என் பொண்ணு சென்னையிலேதானே இருப்பான்னு கேட்கிறே? இங்கே பாரு சாரதா... பொண்ணுங்க எங்கே, எந்த ஊர்ல, எந்த நாட்டுல இருந்தாலும் அவ சந்தோஷமா... புருஷனால எந்தக் கஷ்டமும் இல்லாத நல்லபடியான ஒரு வாழ்க்கை வாழணும். அவ வாழற இடம் முக்கியம் இல்லை, வாழற விதம்தான் முக்கியம். புருஷன், பொண்டாட்டிக்குள்ளே மனசு ஒத்துப்போய், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டா... எங்கே இருந்தாலும் சந்தோஷமாக வாழலாம்...”

     “நீங்க சொல்றது நூத்துக்கு நூறு நிஜம்தான் கல்பனாம்மா... ஆனால் கைக்குள்ளே, கண்ணுக்குள்ளே வெச்சு வளர்த்த பொண்ணு மிதுனா, நினைச்சா பொண்ணைப் போய்ப் பார்க்கிறதுன்னா... பக்கத்துல இருந்தாத்தானே ஒரு எட்டு போய்ப்  பார்த்துட்டு வர முடியும்? அதுக்காகக் கேட்டேன்.

     சிரித்தார் கல்பனா.

     “இதுக்குக் கூட கம்ப்யூட்டர்ல வழி வந்துருச்சு சாரதா. மொபைல் போன்ல கூட நீ உன் பொண்ணைப் பார்த்துக்கிட்டே பேசலாம், அவ எங்கே இருந்தாலும்... இதுக்கு ஸ்கைப்னு பேர்.”

     “அதெல்லாம் எனக்குப் புரியாது கல்பனாம்மா. என்ன இருந்தாலும் நேர்ல பார்த்துப் பேசுற மாதிரி இருக்காதுல்ல...?

     “உனக்கு அந்தப் பிரச்சனையே இல்லை. அனுசுயா எந்த ஊருக்கும், நாட்டுக்கும் போக மாட்டா. ஜெய்சங்கர் மட்டும் பெங்களூருக்கு அப்பப்போ போயிட்டு வருவான். போதுமா? வேற என்ன கேட்கணுமோ கேட்டுடு...!”

     “அது... வந்து... என்னதான் அவங்க ’பொண்ணைக் கொடுத்தா போதும்’னு சொன்னாலும்  நம்ம மரியாதைக்காக ஏதாவது செஞ்சுதானே ஆகணும்? மிதுனா வேலைக்குப் போனதில இருந்து கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வெச்சு... ஒரு செயினும், நெக்லஸும் வாங்கி வெச்சிருக்கேன். இதைத் தவிர வேற எதுவும் என்னால செய்ய முடியாது. நகை விஷயத்தை அனுசுயாம்மா கிட்டே சொல்லிடுங்க...”

     “நீ நகையே போடாட்டாலும், உன் மேலேயும், உன் பொண்ணு மிதுனா மேலே உள்ள மரியாதையும் எந்த விதத்துலேயும் கெட்டுப் போகாது. எல்லாமே நான் அனுசுயாகிட்டே பேசிட்டேன். உன்னோட ஏழ்மை நிலை என்னிக்கும் அவளை எரிச்சல் படுத்தக் கூடாதுன்னு தெளிவா எடுத்துச் சொல்லி இருக்கேன். அவளுக்கு என்னைப் பத்தி தெரியும். நான் மீடியேட்டரா செயல்பட்டு முடிக்கிற எந்தச் சமாச்சாரத்துலேயும் ஏதாவது சச்சரவோ, சர்ச்சைக்குரிய விஷயமோ நடந்தா நான் எவ்வளவு கடுமையா எதிர்ப் போராட்டம் பண்ணுவேன்னு அவளுக்கு நல்லாத் தெரியும்.

     “அதனாலே... அவளால உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது. இங்கே பாரு சாரதா... நான் உனக்கு எல்லாத்தையும் தெளிவு படுத்திட்டேன். மிதுனா நல்ல பொண்ணு... நீயும் ஆர்ப்பாட்டம் எதுவும் இல்லாத அமைதியான குணம் உள்ளவள். சின்ன வயசுல இருந்தே கஷ்டப்பட்டுட்டே... மிதுனாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை... நல்ல இடத்துல மருமகளாகப் போற வாய்ப்புக் கிடைக்குது. அதனாலே உனக்கும் சந்தோஷமா இருக்கும்கிறதுனாலதான் நான் இதிலே தலையிட்டுப்பேசுறேன்.

     நம்பிக்கையோடே மிதுனாகிட்டே பேசு... அவளோட அபிப்பிராயத்தைக்கேளு... பணக்கார சம்பந்தம்கிறதுனால மட்டும் நான் இந்த விஷயம் பேசலை. அந்தப் பையன் ஜெய்சங்கர் நல்ல பையன். அம்மா அதுக்காகத்தான் பேசுறேன். வரன் பேசுறதுல, யாரும் யாரையும் வற்புறுத்த முடியாது. உன் இஷ்டம், மிதுனாவோட இஷ்டம்... கலந்து பேசிட்டு வந்து சொல்லு கார்லேயே போய் இறங்கிக்கோ.  கூச்சப்படாதே டிரைவரை ஒரு மளிகை சாமான் பையை உன் வீட்ல இறக்கிக் கொடுக்கச் சொல்லி இருக்கேன். மறுக்காம வாங்கிக்கோ...’’

     “சரி கல்பனாம்மா... நான் கிளம்பறேன்.’’

     “ஜெய்சங்கரோட போட்டோவை அனுசுயா அனுப்பி வெச்சிருக்கா. இந்தக் கவர்ல இருக்கு... வீட்டுக்குப் போய் எல்லாரும் சேர்ந்து பாருங்க... பேசுங்க... முடிவு எடுங்க... சரியா...?”

     “சரி கல்பனாம்மா.”

     சாரதா அங்கிருந்து கல்பனாவின் காரில் கிளம்பினாள். கார் ஓட... ஓட... அவளது எண்ண ஓட்டங்களும் ஓடின.

    

15

     நோய் வாய்ப்பட்டிருந்த கிருஷ்ணனின் உடல் நலம் மெல்ல மெல்லத் தேறிக் கொண்டிருந்தது.

     அவரது முகத்திற்கு நேரே ஜெய்சங்கரின் புகைப் படத்தைக் காண்பித்தாள் சாரதா.

     “யார் சாரதா?” வாய் குழறியபடி கேட்டார் கிருஷ்ணன்.

     “சொல்றேங்க... நம்ம மிதுனாவுக்கு வரன் வந்திருக்கு.. இந்தப் பையன்தான். போர் ஜெய்சங்கர்...”

     “பையன் நல்லா இருக்கான், என்ன வேலை செய்யறானாம்...?”

     “வேலை செய்யறதா? பல பேர் இவர்கிட்டே வேலை செய்யறாங்களாம். இந்தப் பையன் அவங்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கிட்டிருக்கிறார். பெரிய பணக்காரக் குடும்பத்துப் பையன்...’’

     கவனித்துக் கேட்டுக் கொண்டார்  கிருஷ்ணன்.

     “மிதுனா வரட்டும். அவ வந்ததும் உட்கார்ந்து பேசலாம்...”

     தலையசைத்துச் சம்மதித்தார் கிருஷ்ணன்.

     “நீங்க சாப்பிட்ருங்க. நான் எடுத்துட்டு வரேன். மிதுனா வர்ற வரைக்கும் வெயிட் பண்ண வேண்டாம். அவ வந்ததும் இந்த வரன் பத்தி, நிதானமா பேசலாம்!” என்ற சாரதா, சமையலறைக்குள் சென்றார்.

     அதன்பின் அருணா வந்தாள்.

     சீருடையை மாற்றி விட்டு சில வீட்டு வேலைகள் செய்தாள்.

     ’கடவுளே! என் பொண்ணுக்கு ஒரு வழி... நல்ல வழி காட்டுப்பா தெய்வமே!’

     கண்மூடிப் பிரார்த்தித்தாள் சாரதா.

     மிதுனா வந்தாள். அவளை எதிர்பார்த்துக் காத்திருந்தார். சாரதா. தனது தாய் சற்றுப் பரபரப்பாக இருப்பதைப் பார்த்த மிதுனா, சற்று பதற்றம் அடைந்தாள்.

     “என்னம்மா... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? அப்பா நல்லா இருக்கார்ல?” கேட்டபடயே ஓடிச் சென்று கிருஷ்ணனைப் பார்த்தாள்.

     “அப்பா நல்லாத்தான் இருக்கார்மா.... நீ ஏதாச்சும் சாப்பிட்டுட்டு வா... நாம நாலு பேரும் உட்கார்ந்து பேசணும்... நல்ல விஷயம்தான்மா....!”


     “என் கூட வேலை செய்யுற மாலினி டீச்சருக்குக் கல்யாண நாள்னு ஸ்வீட், சமுஸா கொடுத்தா... சாப்பிட்டேன். ட்ரெஸ் மட்டும் மாத்திட்டு வந்துடறேன்...” என்ற மிதுனா, உடை மாற்றி விட்டு வந்தாள்.

     “இந்த போட்டோவைப் பாரு மிதுனா...!”

     ஜெய்சங்கரின் புகைப்படத்தைக் காண்பித்தார் சாரதா.

     பார்த்த மிதுனா கேள்விக்குறி தோன்றிய முகத்துடன் சாரதாவைப் பார்த்துக் கேட்டாள், “யாரும்மா இது?”

     “நம்ம கல்பனாம்மாவோட பிரெண்ட் அனுசுயான்னு ஒருத்தங்களோட மகன். பேர் ஜெய்சங்கர், சொந்தக் கம்பெனி நடத்தறாராம். வசதியான குடும்பம்... பெரிய பணக்காரங்களாம். ஒரேபையனாம். உன்னை பொண்ணு கேட்டிருக்காங்க... கல்பனாம்மா மூலமா இந்தப் பேச்சு வந்திருக்கு...”

     “என்னை... எப்படி அவங்களுக்குத் தெரியும்...?”

     “கல்பனாம்மாவோட பொண்ணு கல்யாணத்துல உன்னை அந்த அனுசுயாம்மா பார்த்திருக்காங்க. அவங்க மகனுக்காக கல்பனாம்மா மூலமாகக் கேட்டு விட்டீருக்காங்க...”

     “அவ்வளவு பெரிய பணக்காரங்க, நம்ம வீட்ல எப்படிம்மா சம்பந்தம் பண்ணுவாங்க?”

     “எல்லா விஷயமும் நான் பேசிட்டேன்...கேட்டுட்டேன். அந்தப் பையன் ஜெய்சங்கர், தனக்குப் பணம் முக்கியம் இல்லை, நல்ல பொண்ணா அழகா இருக்கணும்னு சொன்னானாம். அதனால, பணம், காசு, நகை எதுவும் வேண்டாம்னு சொல்லி இருக்காங்க. என்னென்ன கேட்கணுமோ எல்லாத்தையும் கேட்டுட்டேன்!” என்று சொல்ல ஆரம்பித்த சாரதா... கல்பனாவிடம் பேசியவை அனைத்தையும் விலாவாரியாக விளக்கிக் கூறினார். தெளிவாகப் புரிந்து கொண்டாள் மிதுனா.

     “என்னடா மிதுனா. நீ என்ன நினைக்கிறே?”

     “ம்... சொல்றேன்மா. அப்பா என்ன சொல்றார்?”

     “நீயே கேட்டுக்கோயேன்!”

     “அப்பா... சொல்லுங்கப்பா...?”

     “சிரித்த முகத்துடன், “எனக்குப் பிடிச்சிருக்கும்மா...” வாய் குளறினாலும் அவரது முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது.

     சாரதாவிடமிருந்து ஜெய்சங்கரின் புகைப்படத்தை வாங்கிப் பார்த்த அருணா, மகிழ்ச்சியில் குதித்தாள்.

     “அக்கா, மாப்பிள்ளை அந்தச் சினிமா நடிகர் ஜெய்சங்கர் மாரியே ஹேன்ஸமா இருக்கார்கா...”

     “முந்தரிக்கொட்டை... உன்னை யாராவதுகேட்டாங்களா?...”

     “எங்க அக்காவுக்குப் பார்க்கற மாப்பிள்ளையைப் பத்தி கேட்டாத்தான் சொல்லணுமா?”

     “அது சரி... அந்தக் கால நடிகர் ஜெய்சங்கரையெல்லாம் தெரிஞ்சு வெச்சிருக்கியே!”

     “அந்தக்காலம் என்னக்கா அந்தக் காலம்?... இப்போதான் டி.வி.யிலே எல்லாக் காலத்துப் படமும் போடறாங்கள்ல? நடிகர் ஜெய்சங்கரோட படம் நிறையப் பார்த்திருக்கேன்...”

     “ஏய்... உன்னை பாடம் படிக்கச் சொன்னா, டி.வி.யிலே பழைய படமா பார்த்துக்கிட்டிருக்கே?”

     “ஞாயிற்றுக்கிழமை மட்டும், அதுவும் கொஞ்ச நேரம்தான்கா டி.வி. பார்ப்பேன்...”

     “சேச்சே... சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன். நம்ம வீட்ல என்ன டி.வி. பார்க்க, தனி ரூமா இருக்கு? நீ என்ன பண்றேன்னு எனக்குத் தெரியாதா அருணா?”

     “அது சரிக்கா... இப்போ உன்னோட கல்யாண விஷயத்துக்கு வா...”

     “அதான் அம்மா பேசிக்கிட்டிருக்காங்கல்ல?”

     “இதிலே நான் பேச வேண்டியதெல்லாம் கல்பனாம்மாகிட்ட பேசிட்டேன் மிதுனா. இனிமேல் நீதான் உன்னோட சம்மதத்தைச் சொல்லணும்...”

     “என் மனசுல எனக்குத் தோணின சந்தேகத்தையெல்லாம் நீங்களே கல்பனாம்மாகிட்டே கேட்டுட்டீங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு... நீங்க கேட்காதது... மாப்பிள்ளை என்னைப் பார்க்கலை. நான் அவரோட போட்டோ பார்த்துட்டேன்...”

     “அதான் சொன்னேனேம்மா... பையன், அவரோட அம்மா பேச்சை எள்ளளவு கூட மீற மாட்டானாம், உனக்குச் சம்மதம்னா சொல்லு. கல்பனாம்மாகிட்டே நான் போய்ப் பேசுறேன்.  நாம பேச வேண்டிய தெல்லாம் பேசியாச்சு. இனி... நீ உன்னோட சம்மதம் சொல்லணும். கல்பனாம்மா சொன்ன மாதிரி, கஷ்டங்களையே பார்த்த நீ, இந்தச் சம்பந்தத்துல...  சந்தோஷமா வாழ்வேன்னு எனக்கும் தோணுது. ஆனால், உன்னோட முழு மனசு சம்மதம் இருந்தா மட்டும்தான்  இதைப்பத்தி மேற்கொண்டு பேசுவேன்...”

     “அக்கா... சரின்னு சொல்லுங்கக்கா...!”

     “ஏ அருணா... பெரியவங்க பேசும்போது சின்னப் பொண்ணு நீ குறுக்கே பேசக்கூடாது...!”

     மிதுனா சொன்னதும் அமைதியானாள் அருணா.

     என்னதான் படித்து, டீச்சர் வேலை செய்யும் தைரியமான பெண் என்றாலும்,  பெண்மையின் இயல்பான நாணத்துடன் சாரதாவைப் பார்த்த மிதுனா, லேசாகத் தலை குனிந்தபடி, “எனக்குச் சம்மதம்மா. கல்பனாம்மாகிட்டே பேசிடுங்க. என்னோட சம்மதத்தைச் சொல்லிடுங்க...!”

     மிதுனாவின் குரலில் மகிழ்ச்சி தென்பட்டது.

     “ஹய்யா...!” அருணா அளவற்ற சந்தோஷத்தில் மிதுனாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

     கிருஷ்ணனின் அருகே சென்று அவரது கையை அன்புடன் பிடித்துக் கொண்டாள் மிதுனா.

     தெளிவற்ற குரலுடன் அவளை ஆசிர்வதித்தார்.

     சாமி படத்தருகே சென்று கைகூப்பி வணங்கி... சாரதா ஒரு பையையும், சிறிதளவு பணமும் எடுத்துக் கொண்டாள்.

     “நான் கல்பனாம்மா வீட்டுக்குப் போய்ப் பேசிட்டுவரேன் மிதுனா. போகும்போது கொஞ்சம் ஸ்வீட்ஸ் வாங்கிட்டுப் போறேன்...”

     “அம்மா, ஆட்டோவுல போங்கம்மா.”

     “சரிம்மா மிதுனா...”

     சாரதா கிளம்பினார்.

 

16

     “யாரோ வந்திருக்காங்கம்மா!” பணி புரியும் பெண் வந்து சொன்னாள்.

     “பேரைக் கேட்டியா?”

     “சாரதான்னு சொன்னாங்கம்மா...”

     “உள்ளே வரச் சொல்லு!” என்று கல்பனா சொன்னதும் அந்தப் பெண் சாரதாவை உள்ளே அனுப்பினாள்.

     “வா சாரதா, உட்கார்.”

     சாரதா உட்காரந்தாள்.

     “என்ன சாரதா... உன் மகள் மிதுனாகிட்டே பேசிட்டியா? சம்மதம் சொல்லிட்டாளா? உன் முகத்துல சந்தோஷமும் தெரியுது... அதே சமயம், ஏதோ யோசிக்கிறதும் தெரியுதே?”

     “சந்தோஷம் தான் கல்பனாம்மா... இருந்தாலும் பெரிய வீட்டுச் சம்பந்தம்கிறதுனால கொஞ்சம் பயமா இருக்கு... வேற ஒண்ணும் இல்லை. மிதுனா சரின்னு சொல்லிட்டா. நான் கேட்ட கேள்விளை அவளும் கேட்டா. எல்லாத்தையும் தெளிவுபடுத்திட்டேன்... நீங்க, அனுசுயாம்மாகிட்டே பேசிடுங்க.”

     “சரி சாரதா... நான் அவ வீட்டுக்குப் போய் நேர்ல பேசிடறேன்... அனுசுயாவை உங்க விட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேட்கச் சொல்றேன். நீ இந்தச் சம்பந்தத்துக்குச் சரி சொன்னதுக்கப்புறம், அவளும் இனி முறைப்படிதான் எல்லாமே செய்யணும்.”

     “உங்க நல்ல மனசுக்கு முதல்ல நான் நன்றி செல்லணும். மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை முறைப்படி செய்யச் சொல்லணும்னு பெருந்தன்மையா சொல்ற உங்களோட உயர்ந்த பண்புக்கு நான் தலை வணங்கிறேன். கல்பனாம்மா...”

     “நீ என்ன சாரதா, பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கிட்டு! அவங்களை விட அந்தஸ்துல குறைஞ்சுட்டா... எதுவும் செய்யக் கூடாதுன்னு சட்டமா என்ன? அனுசுயாவுக்கு உன் வீட்டு அட்ரஸ் கொடுத்துடறேன்... அவ என்னிக்கு வர்றான்னு உனக்குப் போன் பண்றேன்.

     “சரி கல்பனாம்மா... ஆனா ஒரு வேண்டுகோள்... முதல் முதல்ல அவங்க வரும்போது நீங்களும் கூட வந்து, எங்களை அறிமுகப்படுத்தி வெச்சு, உங்க முன்னிலையிலே அந்த நாள்ல பேச்சு வார்த்தை நடக்கிறது நல்லா இருக்கும்... மத்தபடி உங்களை எல்லா விஷயத்துக்கும் தொந்தரவு பண்ண மாட்டேன்...”

     “இதுக்கும் ஏன் இவ்வளவு தயங்குறே சாரதா நிச்சயம் நான் வர்றேன்... எல்லாம் நல்லபடியாக நடக்கும் முதல் நாளே அனுசுயாகிட்டே பேசி, பூவைக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிடறேன். பொண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பூ வெச்சுட்டா... இதுதான் பொண்ணு... இதுதான்  மாப்பிள்ளைன்னு உறுதியாயிடுச்சுன்னு அர்த்தம். உனக்கு தெரியாததா? அது சரி, உன் வீட்டுக்காருக்குத் திருப்திதானே இந்தச் சம்பந்தம்?”


     “ரொம்ப சந்தோஷமா இருக்கார் கல்பனாம்மா. தெளிவாகப் பேச்சு வரலைன்னாலும் குழறிக் குழறியாவது பேசிடறார். அவரைவிட... என் சின்ன மகள் அருணா, துள்ளிக் குதிக்காத குறை, மாப்பிள்ளையோட போட்டோ பார்த்ததும் மிதுனாவை விட அருணாதான் ரொம்பக் குஷியாயிட்டா...”

     “மிதுனா மெச்சூர் ஆனவ. அவ வேற பல கோணங்கள்ல யோசிச்சிருப்பா. அருணா சின்னப் பொண்ணுதானே? நம்ப அக்காவுக்குப் பார்த்திருக்கிற மாப்பிள்ளை அழகா இருக்காரேன்னு சந்தோஷப்பட்டிருப்பா...”

     “இந்தாங்க கல்பனாம்மா ஸ்வீட்ஸ்... வீட்ல பண்ண நேரம் இல்லை. கடையிலேதான்  வாங்கிட்டு வந்தேன். நான் கிளம்பறேன் கல்பனாம்மா...”

     “சரி சாரதா... மிதுனாவோட மொபைல்ல உன்னைக் கூப்பிட்டுப் பேசறேன்...”

     “சரி கல்பனாம்மா...”

     அங்கிருந்து கிளம்பினார் சாரதா.

 

17

     மொபைல் ஒலித்து அழைத்ததும் காதில் வைத்துப் பேசினாள் மிதுனா கல்பனாம்மா என்று கல்பனாவின் நம்பரைக் குறித்து வைத்திருந்தபடியால், உடனே பேச ஆரம்பித்தாள்.

     “கல்பனாம்மா, வணக்கம்மா...”

     “கங்கிராஜுலேஷன்ஸ் மிதுனா...!”

     “தே... தேங்க்ஸ் கல்பனாம்மா...!”

     “என்ன...? திக்கித் திக்கிப் பேசுறே? வெட்கமா? கல்யாணப் பொண்ணாச்சே... வெட்கமாகத்தான் இருக்கும்.  சரி மிதுனா, வீட்லதானே இருக்கே? அம்மா கிட்டே கொடுக்கிறியா...?”

     “இதோ தரேன் கல்பனாம்மா!” என்ற மிதுனா “அம்மா... அம்மா...” என்று சாரதாவை அழைத்தாள்.

     சாரதாவிடம் மொபைலைக் கொடுத்தாள்.

     “கல்பனாம்மா பேசறாங்கம்மா,  பேசுங்க...”

     சாரதா பேசினார்.

     “கல்பனாம்மா, வணக்கம்...”

     “வணக்கம் சாரதா... நளைக்குக் காலையிலே பதினொரு மணிக்கு அனுசுயா, உன் வீட்டுக்கு வர்றதா சொல்லி இருக்கா. நாளைக்கு மிதுனாவுக்கு லீவுதானே? நானும், அனுசுயாவும் வர்றோம். அனுசுயாவோட சொந்தக்காரங்க ரெண்டு பேர் வருவாங்களாம். சிம்பிளா கேசரியும், வடையும்ரெடி பண்ணிக்கோ... மிதுனாவை நல்ல புடவை கட்டிக்கிட்டு, கொஞ்சம் பூவைத் தலையில் வெச்சுக்கச் சொல்லு. வேற எந்த ஃபார்மாலிட்டியும் வேண்டியதில்லை. டீயோ... காபியோ ரெடி பண்ணிக்கோ. சரியா? நாளைக்குக் காலையிலே பதினொரு மணிக்கு... ஞாபகம் வெச்சுக்கோ...”

     “சரி கல்பனாம்மா... மாப்பிள்ளை வருவாரா...?”

     “நானும் இதைத்தான் கேட்டேன்... பையனுக்கு வர முடியாத அளவுக்குப் பெங்களூருல முக்கியமான வேலை இருக்காம்... அதனால அவன் வரமாட்டான். உனக்கு  ஒண்ணும் ஆட்சேபம் இல்லையே?”    

     “அதெல்லாம் ஒண்ணும் இல்லை கல்பனாம்மா. சும்மாதான் கேட்டேன்.”

     “நீ கேட்டது தப்பு இல்லை.  நாளைக்கு வீட்ல பார்ப்போம்... சரியா...?”

     “சரி கல்பனாம்மா.”

     இருவரும் பேசி முடித்தனர். பக்கத்தில் இருந்த மிதுனா, “என்னம்மா, நாளைக்கு வர்றாங்களா”?

     “ஆமா மிதுனா... ரவை, சீனி, நெய் இதெல்லாம் வாங்கணும். வடைக்கு உளுந்து வாங்கணும். பதினொரு மணிக்கு வர்றாங்களாம்...கேசரி, வடை, டீ, காபி ரெடி பண்ணிக்கச் சொல்லி கல்பனாம்மா சொல்லி இருக்காங்க.”

     “சரிம்மா, நான் போய் வாங்கிட்டு வரேன்...!” என்ற மிதுனா, பையை எடுத்துக் கொண்டு  கடைக்குக் கிளம்பினாள்.

     “பக்கத்து வீட்டு இந்திராவைக் கூப்பிட்டுக்கலாம் நாளைக்கு...”

     “சரிம்மா...!” என்ற மிதுனா வெளியேறினாள்.

 

18

     றுநாள் காலை, வீட்டை ஓரளவுக்குச் சீர்படுத்தினாள் மிதுனா. அருணா அவளுக்கு உதவி செய்தாள்.

     “அக்கா... ஏன்க்கா மாப்பிள்ளை வரலியாம்?” கேட்டாள் அருணா.

     “ம்... அதை அம்மாவிடம் கேளு.’’

     ’’ஹாய்... ஹாய்... உனக்கு அவரைப்பத்திப் பேசுறதுக்கு வெட்கமா  இருக்குதாக்கும்?”

     “அடி போடி... அதெல்லாம் ஒண்ணுமில்லை வேலையைப் பாரு...’’

     மிதுனா வெட்கப்பட்டதை அருணா கிண்டலடித்தாள்.

     சாரதா, நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துக் கொண்டிருந்தாள்.

     கேசரியைக் கிளறி ஹாட் கேஸில் எடுத்து வைத்தார். வடைக்கு ஆட்டி மாவை எடுத்து வைத்தாள்... மாப்பிள்ளை வீட்டார் வந்த பிறகு சூடாகப் பொரித்துக் கொடுக்க எண்ணி இருந்தாள் மிதுனா. அவளிடம் இருந்த பட்டுச் சேலையை உடுத்தி இருந்தாள். அவளிடம் நாலைந்து பட்டுப் புடவைகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் மஞ்சள் வண்ணத்தில், நீல வண்ண பார்டல் எளிய ஜரிகை போட்ட புடவையை மிதுனா உடுத்தி இருந்தாள்.

     செயற்கை அழகு சாதனங்கள் எதையும் பயன்படுத்தாமலே. மிதுனாவின் அழகு பரிமளித்தது.

     தளர்த்தியாகத் தலைமுடியைக் கொஞ்சம் விட்டு, அதன்பின் பின்னலைப் பின்னி இருந்தாள் அடர்த்தியாக் கட்டிய ஜாதிப்பூவை லேசாகத் தழைய வைத்திருந்தாள்.

     எப்போதும் சாதாரண, எளிய புடவை கட்டும் மிதுனா... அப்போது பட்டுப்புடவையில் மிக அழகாக இருந்தாள்.

     மாப்பிள்ளை வீட்டார் வந்தனர். அனுசுயாவுடன் இரண்டு பெண்மணிகள் வந்தனர்.

     கல்பனா, தனது காரில் வந்திருந்தார்.

     “இவங்கதான் பொண்ணோட அப்பா, இவ மிதுனாவோட தங்கச்சி!” என்ற கல்பனா, “சாரதா, இவதான் என் பிரெண்ட் அனுசுயா... இவங்க ரெண்டு பேரும் அனுசுயாவோட ரிலேஷன்ஸ். அனுசுயா, நீ சாரதாகிட்டேபேசு...”

     “சரி கல்ப்பு!” என்ற அனுசுயா, “உங்க மகள் மிதுனாவைக் கல்பனாவோட மகள் கல்யாணத்துல பார்த்திருக்கேன். அவளோட சுறுசுறுப்பான செயல்பாடுளைக் கவனிச்சேன். வெறும் அழகு மட்டுமில்லாம... பழகுறதுக்கும் இனிமையானவளா இருந்ததையும் கவனிச்சேன். கல்பனா எல்லாமே உங்ககிட்டே சொல்லி இருப்பா. உங்க மகள் மிதுனாவை என் மகன் ஜெய்சங்கருக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்க உங்களுக்குச் சம்மதம்தானே?”

     “சம்மதம்தானுங்க...”

     “பொண்ணை வரச் சொல்றீங்களா?”

     “அருணா, “அக்கா” என்று குரல் கொடுத்ததும் சமையல் அறையில் இருந்து மிதுனா வந்தாள்.

     எல்லோரும் மிதுனாவைப் பார்த்து மகிழ்ந்தனர்.

     “அனுசுயா, நீ வேற எதுவும் பேசணுமா...?” கல்பனா கோட்டார்.

     “ஆமா கல்ப்பு... ஒரு வாரத்துல என் மகன் வந்துடுவான். வந்ததும் கல்யாணத்தை நடத்தணும்...”

     “ஏற்கெனவே சொல்லியாச்சு அனுசுயா...”

     “சரி கல்ப்பு” என்ற அனுசுயா.

     சாரதாவிடம், ’’என்னங்க... என்னடா இது, இவ்வளவு சீக்கிரமா கல்யாணம் நடத்துணும்னு சொல்றாங்களே அப்பிடின்னு எந்தச் சிரமமும் படாதீங்க. எல்லா ஏற்பாடும் நாங்க பண்ணிடறோம்...!”

     “சரிங்க...”

     இவர்கள் பேசிக் கொள்வதைக் கவனித்த கல்பனா, சிரித்தபடி பேச ஆரம்பித்தார். “என்ன இது? நீங்க ரெண்டு பேரும் ‘அதுங்க’, ‘என்னங்க’, ’சரிங்க’ன்னு...’ங்க்’ போட்டுப் போசுறீங்க...? ஏ அனுசுயா, நீ சாரதாவை அண்ணின்னு கூப்பிடு... சாரதாவும் உன்னை அண்ணின்னு கூப்பிடட்டும்...” என்று கல்பனா கூறியதும் அனைவரும் சிரித்தனர்.

     ஒரு பெரிய பையில் இருந்து, பட்டுப்புடவை, நகைப்பெட்டி, பூ இவற்றை எடுத்த அனுசுயா, புடவையையும், நகைகையும் மிதுனாவிடம் கொடுத்துவிட்டு, பூவை அவளே மிதுனாவின் தலையில் வைத்து விட்டாள்.

     “ஆஹா... பொண்ணுக்குப் பூ வெச்சாச்சு... மிதுனா, புடவையைக் கட்டிக்கிட்டு நகையைப் போட்டுக்கிட்டுவாம்மா!” என்றாள் கல்பனா.

     இதற்குள் சூடாக வடை சுடப் போனாள் சாரதா.

     மிதுனா, புதுப்புடவை கட்டிக்கொண்டு நகைளை அணிந்து கொண்டு வந்து, அனுசுயா, கல்பனா, மற்றவர்கள் அனைவரிடமும் ஆசிர்வாதம் பெற்றாள்.

     “கல்ப்பு, இந்தச் சிவப்புப் பட்டுப் புடவையிலே மிதுனா ரொம்ப அழகாக இருக்கா பார்த்தியா? நகைஸெட் கூட அவளுக்கு எவ்வளவு பாந்தமா இருக்கு பார்த்தியா...?’’

     “மருமகளைப் பத்தி இப்பவே புகழ ஆரம்பிச்சுட்டே நீ...!”

     “பின்னே? அவளைப் பாரு... எவ்வளவு அழகா இருக்கான்னு!” என்ற அனுசுயா, மிதுனாவிடம், “என்னம்மா மிதுனா... உனக்குப் புடவை நகையெல்லாம் பிடிச்சிருக்கா...?”

     “பிடிச்சிருக்கு... ஆனால், நான் இவ்வளவு ஆடம்பரமான புடவையோ... நகையோ... போட்டுக்கிறதில்லை.”


     “ஒரு விசேஷம், பண்டிகைன்னா கிராண்ட் ஆன புடவை, நகைபோடறதுதான்மா வழக்கம். தினமுமா போட்டுக்கப் போறோம். உனக்கு  நகை போட்டா, அப்படியே அந்த அம்மனுக்குப் போட்ட மாதிரி சர்வ அலங்கார பூஷிதையா இருக்கு மிதுனா...!” அனுசுயாவின் பாராட்டைக் கேட்ட மிதுனா, வெட்கத்தில் நெளிந்தாள். வடை சுட்டுக் கொண்டிருந்த சாரதா அருணாவை அழைத்தார்.

     “அருணா, கேசரியை முதல்ல எடுத்து வைம்மா....!” என்றார்.

     “எல்லாரும் சாப்பிட வாங்க!” அருணா அனைவரையும் அழைத்தாள். அனைவரும் சாப்பிட்டனர்.

     “கேசரி சூப்பர்...!” அனுசுயா பாராட்டினாள்.

     “அனுசுயா... அடக்கி வாசி, உனக்கு ப்ளட் ப்ரஷர் அதிகமாக இருக்கு. எடை கூடிடக் கூடாது...!”

     “என்னிக்கோ ஒரு நாள்தானே கல்ப்பு...?

     “வருஷக்கணக்கா தவம் இருக்கிற முனிவர், எதுக்கோ ஆசைப்பட்டுட்டா... அந்த ஒரு வினாடி நேரத்துல பல வருஷம் கடுமையா செஞ்ச தவம் கலைஞ்சுடுது. தவப்பலன் முற்றிலும் நீங்கிடுது. அது மாதிரி நீ இன்னிக்குச் சாப்பிடற கேசரி, இத்தனை நாளா நீ இருந்த உணவுக் கட்டுப்பாட்டை ஒண்ணுமே இல்லாமல் பண்ணிடுமே? கவனமாக இருந்துக்கோ!

     ’’சம்பந்தியம்மா செம டேஸ்ட்டா பண்ணி இருக்காங்க கேசரி, வடை எல்லாமே ரொம்ப நல்லா பண்ணி இருக்காங்க... அதான் நாக்கைக் கட்டுப்படுத்த முடியலை...”

     “சரி... சரி... எஞ்ஜாய் பண்ணு...”

     “அத்தை... மாப்பிள்ளை... எங்க மச்சான் வந்திருந்தா இன்னும் ரொம்ப  சந்தோஷமா இருந்திருக்கும்...”

     அருணா ரொம்ப நாள் பழகியவள் போல அனுசுயாவிடம் கேட்டாள்.

     “இதோ பாருடா... அதுக்குள்ளே மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்கிறா அருணா. ‘மச்சான்’ன்னு வேற சொல்றா...

     அருணா சிரித்தாள்.

     “ஏ அருணா... அதிகப்பிரசிங்கத்தனமாகப் பேசிக்கிட்டிருக்காதே...!” சாரதா அதட்டலான குரலில் கூறினார்.

     “சின்னப்பொண்ணுதானே சாரதா? ஏன் கோவிச்சுக்கிறே? அவளுக்கு அவங்க அக்காவோட மாப்பிள்ளை, மாப்பிள்ளை வீட்டார்னு ஆசையாத்தானே இருக்கும்?” என்று சாரதாவிடம் கூறிய கல்பனா.

     “அருணா, உன் மச்சானை நீ கல்யாணத் தன்னிக்குத்தானே பார்க்க முடியும். அவர் பெங்களூருல முக்கியமான வேலையா இருக்காராம். என்ன ஷாக் ஆகிறே? இன்னும் ஒரு வாரம்தான். ஒரு வாரத்துல முகூர்த்த நாள் பார்த்தாச்சு!”

     “கல்பனா கூறியதும் அருணாவிற்கு மேலும் மகிழ்ச்சி.

     “அனுசுயா... சாப்பிட்டு முடிச்சாச்சு... ஸ்வீட் சாப்பிட்ட கையோட முகூர்த்த தேதியை சாரதாகிட்டே சொல்லிடு...”

     “சரி கல்ப்பு!” என்ற அனுசுயா எழுந்தார். சாரதா அருகே சென்றார். “அண்ணி, ஆறாம் தேதி முகூர்த்தத்திற்கு நல்ல நாள் இருக்கு. காலையில பத்தரையில இருந்து 12 மணிக்குள்ளே முகூர்த்தம். நீங்க எந்த ஏற்பாடும் செய்ய சிரமப்பட வேண்டாம். நானே எல்லாம் பார்த்துக்கிறேன். எனக்கு உதவி செய்யவும், வேலை செய்யவும் நிறைய ஆள் இருக்காங்க. நீங்க கவலையே பட வேண்டாம். சந்தோஷம்தானே!”

     “ரொம்ப சந்தோஷம் அண்ணி...”

     “சரி, அப்போ நாங்க கிளம்புறோம்... மிதுனா, அருணா... நாங்க கிளம்புறோம். உங்க அப்பாகிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போறேன்...” அனுசுயா, கிருஷ்ணனின் அருகே சென்று...

     “நான் போயிட்டு வரேன் அண்ணா!” என்று கூறி வணங்கி, விடை பெற்றுக்  கிளம்பினார். கல்பனாவும் கிளம்பினார்.

 

19

     ரு வாரம், ஓரிரு நாட்கள் போலப் பறந்தோடி விட்டது. மிதுனா-ஜெய்சங்கர் திருமண விழா முடிந்தது. செல்வந்தர்களுக்கு உரிய ஆடம்பரத்துடனும், அநாவசிய பந்தாக்களுடனும் அந்தத் திருமணம் நிகழ்ந்தேறியது.

     வண்ணமயமான பட்டு மற்றும் விலையுயர்ந்த ஜாக்கெட், ஷிஃபான் புடவையில் கண்கவரும் ஜரிகை, மணி, கற்கள் மூலம் வேலைப்பாடு செய்த உடைகளில் பளிச் பளிச் என மின்னிய பெண்கள், பிரமாண்டமான விருந்தை உண்டு மகிழ்ந்தபின் மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

     திருமண விழாவிற்கு வந்திருந்த அனைத்து விருந்தினர் கையிலும் அழகிய வண்ணத்தில் சுற்றப்பட்ட சிறு பார்சல் இருந்தது.

     ஆர்வக் கோளாறால் சிலர் அங்கேயே அதைப் பிரித்துப் பார்த்தனர். உள்ளே அழகான சிறிய வெள்ளிக் காமாட்சி விளக்கு இருந்ததைப் பார்த்து அவர்கள் அகமகிழ்ந்தனர். எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நல்லபடியாகக் கல்யாணம் நடந்து முடிந்ததே என்று சாரதா நிம்மதி மூச்சு விட்டாள். மிதுனாவையும் ஜெய்சங்கரையும் மணமக்களாகப் பார்த்த சாரதா கடவுளுக்கு நன்றி கூறினாள். அவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தாள்.

     அருணா, அவசரம் அவசரமாக ஜெய்சங்கரிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

     மிதுனா, அவளைத் தன் கண் அசைவால் கட்டுப்படுத்தினாள்.

     அருணா சிணுங்கினாள்.

     “என்னக்கா... நான் எப்போ பேசுறது?”

     “வீட்டுக்குப் போனப்புறம் பேசலாம்...”

     மிதுனா சொன்னதும் சரி எனக் கேட்டுக் கொண்டாள் அருணா.

     அதன்பின் சில நிமிடங்களில் அனுசுயா இவர்கள் அருகே வந்தாள்.

     “அண்ணி, நாம கிளம்பலாம்... மிதுனாவும் ஜெய்சங்கரும் அலங்காரம்  பண்ணின கார்ல வரட்டும் நாம எல்லாரும் ஒரு கார்ல போயிடலாம் வாங்க...”

     மணக்கள், அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான காரில் கிளம்பினார்கள். கார் ஓடியது.

     ’ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்னு சொல்லுவாங்க. நான்....? அளவாகப் பொய் சொல்லி என் மகனோட கல்யாணத்தை நடத்திட்டேன். ஜெய்சங்கர், பெங்களூருல வேற சிக்கல்ல மாட்டிக்கிட்டிருக்கான். அதை எப்படி ஜெய்சங்கர் சமாளிக்கப் போறான்? யாரோ முன்னே பின்னே தெரியாதவங்க கூட தேவை இல்லாமப் பழகி பிரச்சனையில் மாட்டிக்கிட்டிருக்கான். நான் இப்படி அவசர அவசரமாக அவனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சது சரிதானா...? ம்..... பார்க்கலாம். பணம்கிற ஆயுதத்தால் எதைத்தான் சமாளிக்க முடியாது? பிரச்னை பெரிசா நெருங்கி வரும்போது பார்த்துக்கலாம்.

     “டாக்டர் வேற ஸ்ட்ரெஸ் ஆனா இதயப் பிரச்சனை வரும்னு சொல்லி இருக்கார். என் மகன் ஜெய்சங்கர், என் மேலே வெச்சிருக்கிற  அளவில்லா பாசத்தைப் பயன்படுத்தி அவனை இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வெச்சுட்டேன்.  அவனோட வாழ்க்கையில் ஏற்பட்ட முடிச்சு அவிழணும்... அவன் நல்லா வாழணும்... என் மகன் நல்லா இருக்கணும்கிற நல்ல எண்ணத்துலதான் நான் எல்லாமே செஞ்சேன். செய்யறேன்.

     ’எனக்கு அடிக்கடி நெஞ்சு வலி வருது. என் காலம் முடியறதுக்குள்ளே என் மகனோட பிரச்னை தீரணும். தீரும். அதுக்காகத்தானே ஏழைக் குடும்பத்துப் பொண்ணா இருந்தாலும் பரவாயில்லை. புத்திசாலிப் பொண்ணா இருக்கற  மிதுனாவை அவனுக்குப் பண்ணி வெச்சிருக்கேன்.”

     அனுசுயா, பலவித நினைவுகளில் முழ்கினாள். கார், அவரது பங்களா அருகே நின்றது. அப்போதுதான் அவரது எண்ண ஓட்டங்களும் நின்றன.

 

20

     வ்வளவு தூரம் கார்ல வந்தும் சம்பந்தி கூடயோ, அருணா கூடயோ எதுவும் பேசாம ஏதேதோ என்னோட பிரச்னைகளைப் பத்தி நினைச்சுக்கிட்டே வந்துட்டேனே...! ரொம்பத் தப்பு பண்ணிட்டேன். சம்பந்தியும் அருணாவும் என்னைத் தப்பா நினைச்சுக்கப் போறாங்க...! என்று எண்ணிய அனுசுயா, அவர்களை மிக்க அன்புடனும். மரியாதையுடனும் வரவேற்றாள்.

     “வாங்க அண்ணி, வாம்மா அருணா, உள்ளே வாங்க உட்காருங்க. பொண்ணு, மாப்பிள்ளை வர்ற கார் இங்கே வர்றதுக்குள்ளே அவங்களுக்கு ஆரத்தி கரைச்சு ரெடி பண்ணி வைக்கச் சொல்லிவிட்டு வந்துடறேன். அதுக்குள்ளே நீங்க டீயோ, காபியோ குடிங்க. இதோ வந்துடறேன்...!” என்று கூறிவிட்டு அனுசுயா போன ஐந்து நிமிடங்களில் ஒரு பெண் அவர்களிடம், “டீ வேணுமா? காபி-வேணுமா?” என்று கேட்டாள்.


     “ரெண்டு பேருக்கும் காபிதான்!” என்று சாரதா கூற, அப்பெண் நகர்ந்தாள்.

     அடுத்த சில நிமிடங்களில் சிறிய, அழகிய பீங்கான் கிண்ணங்களில் பாதாம் ஹல்வா, பால் கேக், லட்டு போன்ற இனிப்புகளும் வறுத்த முந்திரிப் பருப்பு, பிஸ்தா, காராசேவு போன்ற கார வகைகள் நிரம்பிய கிண்ணங்களும் வைக்கப்பட்ட ட்ரேயை அந்தப் பெண் கொண்டு வந்து வைத்தாள்.

     “சாப்பிடுங்கம்மா, காபி எடுத்துட்டு வரேன்!” என்று சாரதாவிடமும், “சாப்பிடு பாப்பா” என்று அருணாவிடமும் சொல்லிவிட்டுப் போனாள். இயந்திர கதியில் சொல்லாமல், உண்மையான உபசார உணர்வோடு சொல்லி விட்டுப் போனாள்.

     “பார்த்தீங்களாம்மா... வேலை செய்யற பொண்ணை எவ்வளவு நல்லா ட்ரெயின் பண்ணி இருக்காங்க? ஏனோ தானோன்னு இல்லாம அன்பாகவும், அடக்கமாகவும் பேசினா.”

     “ஆமாம்மா அருணா... வேலை செய்யறவங்க நல்ல மாதிரியாக் கிடைக்கிறது இந்தக் காலத்துல ரொம் அபூர்வம்.”

     “ஆமாம்மா, ஆனால், அனுசுயா அத்தை மாதிரி பெரிய பணக்காரங்க கணக்குப் பார்க்காம சம்பளம் கொடுப்பாங்கன்னு நினைக்கிறேன்...”

     அருணா பேசிக் கொண்டிருந்தாலும் அவளது பார்வை அங்கே வைக்கப்பட்டிருந்த நெய்யில் வறுத்த மிளகாய்ப் பொடி உப்பு தூவிய மினுமினுப்பான முந்திரிப் பருப்பின் மீது இருந்தது.

     சிறு வயதில் இருந்தே முந்திரிப் பருப்பு என்றால் அருணாவிற்கு மிகவும் ஆசை. முந்திரிப் பருப்பு வாங்கும் வசதி இல்லாதபடியால் அரைத்து விட்டுச் சமைக்கும் குழம்பு, குருமா வகைகளுக்கு, சாரதா பொட்டுக் கடலையை அரைத்துத்தான் சமைப்பார். நாசூக்காகச் சிறிதளவு முந்திரிப் பருப்பை எடுத்துச் சுவைத்தாள்.

     ’ஆஹா... மொறு மொறுன்னு சுவை... கமகமன்னு நெய் மணம். அளவான காரம்... கச்சிதமான உப்பு... அபார ருச்சி...!” ரசித்து முந்திரிப் பருப்பைச் சாப்பிட்டாள் அருணா.

     அடுத்து கொஞ்சம் எடுக்க முற்பட்ட போது அவளைத் தடுத்தாள் சாரதா.

     “போதும்மா அருணா. என்னடா இது... இவ்வளவு சப்பிட்டிருக்காங்களேன்னு இங்கே யாரும் நினைச்சிடக் கூடாதுடா... நம்ம கௌரவத்தை நாம எப்பவும், எந்தச் சூழ்நிலையிலேயும் காப்பாத்திக்கணும்.’’

     “ஸாரிம்மா. ஆசையிலே எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.’’

     “இதுக்கெதுக்குடா சாரியெல்லாம் சொல்லிக்கிட்டு? நீ சின்னப் பொண்ணு. எவ்வளவோ ஆசை இருக்கும். நம்ம நிலைமை அறிஞ்சு, இடம்பொறுத்து நடந்துக்கணும். அதுக்காகத்தான் சொன்னேன்...” சாரதா பேசி முடிப்பதற்குள், அனுசுயா வீட்டின் பணிப்பெண் ஆவி பறக்கும் காபியை அழகிய கப்களில் கொண்டு வந்து கொடுத்தாள்.

     இருவரும் குடித்தனர். அனுசுயா வந்தார்.

     “பொண்ணு, மாப்பிள்ளையை பெருமாள் கோவிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வரச் சொன்னேன். பக்கத்துல வந்துட்டாங்களாம். டிரைவர் போன் பண்ணினான்.’’

     ஐந்து நிமிடங்களில் மணமக்களின் கார் வந்தது. மிதுனாவும், ஜெய்சங்கரும் உள்ளே வந்தனர்.

     உறவுக்காரப் பெண்மணி ஆரத்தி எடுத்தாள்.

     “உள்ளே வாம்மா மிதுனா. வாப்பா ஜெய்சங்கர்.”

     இருவரும் உள்ளே வந்தனர். சாரதாவையும், அருணாவையும் பார்த்த மிதுனா, அவர்களின் அருகே வந்தாள்.

     “அம்மா... அருணா...” சாரதாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் மிதுனா.

     “அம்மா... இந்தக் கனமான புடவை, நகைங்களையெல்லாம் சுமக்கிறது ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா...”

     “நூல் மாதிரி ஒரே ஒரு செயின் போட்டுப் பழகினவ நீ. திடீர்னு இவ்வளவு நகைங்க போட்டுக்கிறது சிரமாகத்தான் இருக்கும்...”

     அப்போது அவர்களருகே அனுசுயா வந்தார்.

     “மிதுனா, புடவை மாத்திக்கம்மா...”

     “இதோ போறேன்....!” என்ற மிதுனா, ’எங்கே போய் மாற்றுவது?’ என்று மிதுனா யோசிப்பதை உணர்ந்த அனுசுயா, “வேணி... வேணி” என்று பணிப்பெண்ணை  அழைத்தார்.

     “அக்காவுக்கு என்னோட ரூமைக் காட்டுவேணி. கட்டில் மேல ஒரு மாத்துச் சேலை இருக்கும். அதை மிதுனாக்காகிட்டே எடுத்துக் கொடு... இந்தா சாவி...”

     “சரிங்கம்மா...”

     வேணி, சாவியைப் பெற்றுக் கொள்வதற்காக சாரதாவின் அருகே சென்று சாவியை வாங்கிக்கொண்டபின், மிதுனாவை அழைத்துச்  சென்றாள். சாரதாவின் அறையைத் திறந்து விட்டு, புடவையை எடுத்துக் கொடுத்தாள்.

     “புடவை மாத்திட்டு வாங்கக்கா!” என்ற வேணி கதவைச் சாத்திவிட்டு வெளியேறினாள்.

     சாரதாவிடமும், அருணாவிடமும் பேசிக் கொண்டிருந்தள் அனுசுயா.

     “அண்ணி, நம்ம வழக்கப்படி இன்னிக்கே முதல் இரவு. நீங்க இருந்து ராத்தி விருந்து சாப்பிட்டுட்டு, முதல் இரவுக்குப் போற நம்ம பிள்ளைங்களை ஆசிர்வதிக்கணும். நீங்க கொஞ்ச நேரம் என்னோட ரூம் போய் ஓய்வு எடுத்துக்கோங்க. போம்மா அருணா. உன் அக்கா என் ரூம்லதான் இருக்கா. போங்க... போய் பேசிக்கிட்டிருங்க. நான் போய் முதல் இரவுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்கறேன்.’’

     “சரிங்க அண்ணி” என்றார் சாரதா.

     அதன்பின் சாரதாவும், அருணாவும் அனுசுயாவின் அறைக்குச் சென்றனர். இரவு ஒன்பது மணி. புதிய பூக்களாகக் கட்டிய பூச்சரத்தை மிதுனாவின் தலையில் சூடி விட்டாள் அனுசுயா. வெள்ளித் திருநீறு கிண்ணத்தைச் சாரதாவிடம் கொடுத்தாள் அனுசுயா.

     “அண்ணி, ஜெய்சங்கரை வரச் சொல்றேன் அவனுக்கும், மிதுனாவுக்கும் திருநீறு பூசி விடுங்க...”

     “சரிங்க அண்ணி...” என்ற சாரதா, திருநீறு கிண்ணத்தைக் கையில் வாங்கிக் கொண்டாள்... மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள்.

     ஜெய்சங்கர் வந்தான். சாரதாவை அவனும் மிதுனாவும் வணங்கினர். அவர்கள் இருவருக்கும் திருநீறு பூசி விட்டாள்.

     “ஜெய்சங்கர்... நீ உன்னோட ரூமுக்குப் போப்பா, மிதுனா வருவா...” என்றார் அனுசுயா.

      “சரிம்மா...!” என்ற ஜெய்சங்கர், மாடியில் இருக்கும் தன் அறைக்குச்  செல்வதற்காகப் படிக்கட்டுகளில் ஏறினான்.

 

21

     முதல் இரவு என்பது ஆண், பெண் இருவருக்கும் இருக்கக்கூடிய ஒரு கனவு எண்ணில் அடங்காத கற்பனைகளுடன் இருபாலருமே காத்திருக்கும் ஓர் உன்னதமான நிகழ்வு.

     இரண்டு பட்டங்கள் பெற்றுப் பள்ளிக்கூடத்தில் பணிபுரியும்பொழுது பல நூறு மாணவியரைப் பயிற்றுவித்த ஆசிரியை என்றாலும் பெண்மையின் இயற்கையான இயல்பின் காரணமாய் உருவாகிய வெட்கம், ஆசை, எதிர்பார்ப்புகளோடுதான் முதல் இரவு அறைக்குள் சென்றாள் மிதுனா.

     ஆனால், சர்வ அலங்காரத்தில் கூடுதல் அழகில் தேவதை போலத் தென்பட்ட மிதுனாவை ரசிக்கும் உணர்வு எதும் இன்றி ஜெய்சங்கர் ஒரு வித பதற்றத்துடனும், சங்கடத்துடனும் இருந்தான்.

     “வா மிதுனா... உட்கார்!” என்று சாதாரணமாகக் கூறினான்.

     அவனுடைய குரலில் எவ்வித ஆசையோ அன்போ இல்லாததைப் புரிந்து கொண்டாள் மிதுனா. ’ஏன் இப்படி?’ என்று யோசித்தாள்... குழம்பினாள்.

     உட்காராமல் நின்று கொண்டே இருந்தாள்.

     “ஏன் மிதுனா நின்னுக்கிட்டே இருக்கே? நா... நா... நான் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...”

     ’இதென்ன... முதல் இரவுல புது மாப்பிள்ளை பேசுற மாதிரி இல்லாம ஏதோ சாஸ்திர சம்பிரதாயத்துக்குப் பேசுற மாதிரி பேசறாரே இவர்?”

     அவளது எண்ணத்தை யூகித்துக்கொண்ட ஜெய்சங்கர், “புரியுது மிதுனா... முதல் இரவுல இருக்கக் கூடிய எந்த எக்ஸைட்மென்ட்டும் இல்லாம வறண்டு போய்ப் பேசுறனேன்னு யோசிக்கிறியா? நீ யோசிக்கிறது சரிதான். இந்த முதல் ராத்திரியிலே ஒரு ஆணுக்கு,  மணமகனுக்கு இருக்கவேண்டிய எந்தக் குதூகலமும் எனக்கு இல்லைங்கிறது உண்மைதான். அதைப் பத்திதான் உன்கிட்டே பேசணும்...”

     “ம்.. பேசுங்க!” என்ன சொல்லப் போகிறாரோ!’ என்ற திகில் உள்ளத்தில் ஒரு பகீர் உணர்வை ஏற்படுத்தினாலும், “அவன் என்ன சொன்னாலும்  அதைக் கவனித்துக் கேட்கவேண்டும்!” என்கிற தலையணைகளை அடுக்கி, அதன் மீது சாய்ந்து படுத்து  ஒரு கால் மீது  மற்றொரு காலை மடக்கிப் போட்டிருந்த ஜெய்சங்கர், டென்ஷனில் நகம் கடித்தான்.

     “மி... மி.... மிதுனா, உன்கிட்டே ஒரு உண்மையைச் சொல்லணும்...” என்று ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.


     அப்போதைய அங்கே இருந்த நிலவரம், மிதுனாவின் உள்ளத்தில் கலவரத்தை உருவாக்கியது. அந்த உணர்வு அவளது கண்களில் பிரதிபலித்தது. தைரியசாலியான மிதுனா, தன்னைத்தானே சமாளித்து.

     ‘எதையும் தாங்கிக் கொள்ள வேண்டும்’ என்கிற மன வலிமையை உருவாக்கிக் கொண்டு மெதுவாகப் பேசினாள்.

     “உண்மையைத்தானே சொல்லப் போறீங்க....சொல்லுங்க...!”

     அவளே பேசியதும் ஜெய்சங்கருக்குக் கொஞ்சம் தயக்கம் குறைந்தது.

     ஒரு முறை கண் மூடித் திறந்த அவன், சற்று ரிலாக்ஸ் ஆகிக் கொண்டபின், “ஒரு இக்கட்டான சூழ்நிலையில... வேறு வழியே இல்லாத ஒரு சூழ்நிலையில... நான் பெங்களூருல ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டிட்டேன்....”

     “என்ன?” அதிர்ச்சி அடங்காத குரலில் கத்தினாள்.

     “நீங்க ஏற்கெனவே கல்யாணம் ஆனவரா? இந்த விஷயத்தை எப்போ சொல்லி இருக்கணும்? என்னமோ ’ஏற்கெனவே’ உடுப்பி ஹோட்டல்ல ஒரு காபி குடிச்சுட்டேன்’கிற மாதிரில்ல சொல்றீங்க?”

     குறுக்கிட்டுப் பேசினான் ஜெய்சங்கர்.

     “இல்லை மிதுனா. ரொம்பச் சங்கடப்பட்டுத்தான். இதை நான் சொல்றேன். உன்னைப் பெண் பார்த்து... எல்லாமே பேசி... நிச்சயம் பண்ணி, ஒரு வாரத்துக்குள்ள கல்யாணத் தேதி குறிச்சி, எங்க அம்மாவோட அவசர நடவடிக்கையினாலே எல்லாமே நடந்துருச்சு. ஒரு வாரத்துக்கு முன்னாலே முன் ஏற்பாடாக எல்லாத்தையம் முடிச்ச எங்கம்மா, என் கிட்டே ஒரு வார்த்தை கூடச் சொல்லலை. நேத்து என்னைப் பெங்களூருல இருந்து வரவழைச்சு இன்னிக்குக் கல்யாணத்தை நடத்திட்டாங்க...”

     “ஓஹோ...! ஏதோ அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைக்குக் கட்டுப்பட்டது மாதிரியில்ல பேசுறீங்க? நடவடிக்கை எடுத்தது உங்கம்மாதானே? மறுத்துப் பேச முடியாதா என்ன?”

     “முடியலை மிதுனா.... என்னால முடியலை. அம்மா அழுதாங்க.. கெஞ்சினாங்க... அவங்க ஒரு இதய நோயாளி. ரத்த அழுத்தம், சர்க்ரை, கொலஸ்ட்ரால்.... இதுவேற....”

     “என் ரத்தம் கொதிக்குது...”

     “ப்ளீஸ் மிதுனா... கொஞ்சம் அமைதியாக இரு. நான் சொல்ல வர்றதைக் கவனி, ப்ளீஸ். அம்மாகிட்டே பெங்களூருல நடந்ததைப் பத்தி சொல்லி, இது வேணாம்மான்னு சொல்லிக் கெஞ்சினேன். ’அதை எப்படியாவது சமாளிக்கலாம். நான் பார்த்து நிச்சயம் பண்ணின மிதுனாதான் உனக்கு மனைவி. இதுக்கு நீ மறுத்தா....’ அப்படின்னு கோபமா பேசின எங்கம்மா, நெஞ்சு வலி வந்து, ப்ரெஷர் ரொம்ப அதிகமாகி, மயக்கமாகிட்டாங்க.

     “எங்க ஃபேமிலி டாக்டர் வந்து பார்த்துட்டு உங்கம்மா ஏற்கெனவே ஏதோ அதிர்ச்சியிலே பாதிக்கப்பட்டுதான் அவங்களுக்கு ப்ரெஷர் ஜாஸ்தியாகி அடிக்கடி நெஞ்சு வலி வருது. இனிமே எந்த ஒரு சின்ன அதிர்ச்சியும் தாங்காது. கவனமா பார்த்துக்கோங்க’ன்னு ரொம்ப ஸ்ட்ராங்க்கா சொல்லிட்டுப் போனார். அதுக்கப்புறம் என்னால எதுவும் பேச முடியலை. அம்மா, அப்பாவுக்கு நான் ஒரே மகன். அப்பாவை இழந்துட்ட நான் அம்மாவையும் இழந்துடக் கூடாத்தேன்னு அதுக்கப்புறம் அம்மாவை மறுத்துப் பேச முடியலை. 

     ’’என்னோட மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக்கிட்டு கல்யாணத்தை நடத்திட்டாங்க. பேசுறதுக்கு அவசகாசமும் இல்லை. அவசரம்தான் எல்லாமே அவசரத்துல நடந்துருச்சு...”

     அவன் பேசியதைக் கவனமாகக் கேட்டு மனதில் உள் வாங்கிக் கொண்டாள் மிதுனா. என்றாலும் கோபம் குறையாமல் அவளது உள்ளம் கொந்தளித்தது. ’அறிவு முதிராத ஒரு இரண்டுங்கெட்டான் பேசுவது போல பேசுறாரே..... கடவுளே....!’ கோபம் கொண்ட மனதைச் சாந்தப் படுத்த முடியவில்லை அவளால்.

     ’’என்ன மிதுனா... எதுவுமே சொல்ல மாட்டேங்கிறே?”

     ஜெய்சங்கர் கேட்டதும் வெடித்தாள் மிதுனா.

     ’’என்ன சொல்லணும்கிறீங்க? ம்...? இது தப்புன்னு தெரிஞ்சும் உங்கம்மாவுக்காக என்னைக் கல்யாண பண்ணிக்கிட்டீங்க. எனக்கும் அம்மா இருக்காங்க... தங்கை இருக்கா. பேரலைஸ்னால பாதிப்பாகிப் படுக்கையில இருக்கிற அப்பா... இவங்க எல்லார் மேலயும் உயிரையே வெச்சிருக்கேன். நீங்க சொன்ன விஷயத்தைக் கேட்டு எங்கம்மா அதிர்ச்சி அடைய மாட்டாங்களா?”

     பொண்ணு நல்ல இடத்தல சந்தோஷமா வாழப்போறாள்னு நம்பிக்கிட்டிருக்கிற எங்கம்மா ரொம்ப ஷாக் ஆகிடுவாங்க... அதுக்காக இதைச் சொல்லாம இருக்க மாட்டேன். எதுவாக இருந்தாலும் எங்கம்மாகிட்டே சொல்லிடற பழக்கம் எனக்கு எப்பவும் உண்டு. அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் நான் செய்வேன்.

     ஆனா ஒண்ணு... என் அம்மா சொல்றாங்கங்கிறதுக்காக உங்களை மாதிரி முட்டாள்தனமான செயல் எதுவும் செய்ய மாட்டாங்க. இந்த மாதிரி அநியாயமான விஷயம் எதுவுமே என் அம்மா செய்யச் சொல்ல மாட்டாங்க. அந்த அளவுக்கு ஸெல்ஃபிஷ் கிடையாது எங்கம்மா. நேர்மைதான் மனித வாழ்க்கையிலே எல்லாரும் கடைப்பிடிக்க வேண்டிய மெயினான நேயம். நேர்மை தவறினா, என்னால அதைத் தாங்கிக்கவே முடியாது. சகிச்சுக்க முடியாது.

     பணபலம் இருக்கிற நீங்க என்ன வேண்ணாலும் செய்யலாமா? பணம்கிறது பெரிய விஷயமாக இருக்கலாம். ஆனால்... அந்தப் பணத்துக்கும், அது கொடுக்கற பகட்டுக்கும் நாங்க அடிமை இல்லை. புரிஞ்சுக்கோங்க. தடாலடியா முடிவு எடுக்கிற அவசரக்காரி இல்லை நான். என்னை என் குடும்பத்துல மூணுப்பேர் இருக்காங்க.

     உங்க மேலே கோபப்பட்டு நான் போய் எங்கம்மா வீட்ல உட்கார்ந்துட்டா... எங்கம்மா, அப்பா வருத்தப்படறது மட்டும் இல்லை... என் தங்கையோட எதிர்காலமும் பாதிக்கும். அக்கா பிறந்த வீட்ல வந்து உட்கார்ந்திருக்கா... என்ன ஆச்சோ... ஏது ஆச்சோ... தங்கச்சி என்ன செய்வாளோன்னு எல்லாரும் யோசிப்பாங்க. ஆனால் அதுக்காக உங்க வீட்லயே முடங்கிக் கிடப்பேன்னு நினைச்சுடாதீங்க. உங்களுக்கு எப்படி உங்கம்மா முக்கியமோ... அதுபோல எனக்கு என் குடும்பம் முக்கியம்.’’

     “ஸாரி மிதுனா... இக்கட்டான சூழ்நிலையில்....”

     குறுக்கிட்டாள் மிதுனா. “எந்தச் சூழ்நிலையா இருந்தா என்ன? எனக்கு தாலி கட்டறதுக்கு முன்னாடியே சொல்லி இருக்க வேண்டியதுதானே?”

     சில நிமிடங்கள் மெளனமாக இருந்தான் ஜெய்சங்கர்.

     “எதுவும் பேசாம இருந்தா? சொல்லுங்க...”

     “உ... உன்னோட கேள்விக்கு நான் சொல்லப் போற பதில் உன்னை இன்னும் கூடுதலாகக் கோபப்படுத்தும்... அல்லது, நீ என்னைக் கேலியாகப் பேச வைக்கும்...”

     “கோபமோ கேலியோ... எதுவாக இருந்தாலும் பரவாயில்லை... சொல்லுங்க...!”

     “என்னோட இரக்க சுபாவமும், தாய்ப்பாசமும்தான் நடந்த ரெண்டு நிகழ்ச்சிக்கும்  காரணம்...’’

     இதைக் கேட்டுப்  படபடப்பானாள் மிதுனா, அவளது உதடுகள் துடித்தன. மார்பு ஏறி ஏறி இறங்கியது கோபத்தில் பொங்கினாள்.

     “நிகழ்ச்சிகளா? கல்யாணம்கிறது உங்களுக்கு நிகழ்ச்சியா?”

     அவள் பேசி முடிப்பதற்குள் ஜெய்சங்கர், அவளிடம் “ஐயோ மிதுனா... நான் யதார்த்தமாகக் பேசுறதையெல்லாம்... நீ தப்பாக எடுத்துக்கிறியே...!”

     “தப்பைத் தப்பாகத்தான் எடுத்துக்க முடியும்...!”

     “மன்னிச்சுடு மிதுனா, பெங்களூருல நடந்தது ஒரு அவசர கதியிலே நடந்தது. நான்... நான் தாலி கட்டின அந்தப் பெண் மேலே எந்த ஒருவிதப் பிடிப்போ... ஆர்வமோ கிடையாது...”

     “தாலி... அந்தப் பெண் எதுவுமே தெளிவு இல்லாமல் சொல்றீங்க? அவ யார்...?

     “அவ பேர் மஞ்சுளா. பெங்களூருல நான் தங்கி இருந்த அப்பார்ட்மென்ட்லதான் அவள், அவளோட அத்தை, அந்த அத்தையோட அண்ணன் இவங்க ரெண்டுபேர் கூட இருந்தா. ஒரு நாள் எனக்கு அல்ஸர் பெயின் மாதிரி வயித்து வலி வந்துடுச்சு. டாக்டர்கிட்டே போகலாம்னு கஷ்டப்பட்டு கார் பார்க்கிங்குக்குப் போனப்போ, ஒரு மாதிரி மயக்கம் வந்துருச்சு. அப்போ, அந்தப் பொண்ணோட மாமா என்னைத் தாங்கிப் பிடிச்சார்.


     நான் தட்டுத் தடுமாறி விஷயத்தைச் சொன்னதும் அவரே ஒரு டாக்ஸி பிடிச்சு என்னை ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போனார். அவரோட பேர் ரங்கா. ’ஹோட்டல் சாப்பாடு உங்களுக்கு ஒத்தக்கலை... மத்தபடி வேற எதுவும் பெரிசா  பிரச்சனை இல்லை. ஆனால், கூடி வரைக்கும் வீட்ல சமைச்சதையே சாப்பிடுங்க’ன்னு சொல்லி அனுப்பிட்டார். டாக்டர் இதைக் கேட்டுக்கிட்டிருந்த ரங்கா, ‘எங்க வீட்ல என் தங்கச்சியை சமைக்கச் சொல்றேன் தம்பி... எங்க வீட்லேயே சாப்பிட்டுக்கோங்க’ன்னு சொல்லி வற்புறுத்தினார்.

     “அன்னிக்கு எனக்கு வலிச்ச வயித்துவலி... ரொம்ப கொடுமையா இருந்துச்சு... அதனால சரின்னு சொல்லிட்டேன்.  அன்னிக்கு டாக்ஸிக்குப் பணம் கொடத்து செட்டில் பண்ணினப்போ அவர் என்கிட்டே ஒரு அஞ்சாயிரம் ரூபா கொடுங்க தம்பின்னு கோட்டார். நானும் கொடுத்தேன்.

     அதுக்கப்புறம் ரெண்டு தடவை பணம் கேட்டு வாங்கினார். ’வசதியான அப்பார்ட்மெண்டல குடி இருக்காங்க. பின்னே ஏன் இப்படிப் பணம்கேட்டு வாங்கறார்? வாங்கின பணத்தைக் கொடுக்கிறதும் இல்லையே’ன்னு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் என்னோட வேலைகள்ல நான் பிஸியாயிட்டேன். சில நேரங்கள்ல அந்த மஞ்சுளா மட்டும்தான் இருப்பாள். எதுவும் பேசமாட்டாள். சாப்பாடு மட்டும் எடுத்து வைப்பாள். மத்தபடி எதுவுமே அவளும் பேச மாட்டாள்... நானும் பேச மாட்டேன். பொதுவாவே நான் பெண்கள்கிட்டே சகஜமா பேசவோ... பழகவோ மாட்டேன். அது என்னோட சுபாவம்.  சாப்பாடு எடுத் வைக்கும் போது ‘வேணுமா?’ ‘போதுமா? ன்னு கேட்பாள். ஏதாவது ஸ்பெஷலா, டேஸ்ட்டா இருந்தா ‘சூப்பரா இருக்கு’ன்னு சொல்வேன். அவ்வளவுதான்.

     “அந்த ரங்காவோட தங்கச்சி... அவங்க பேர் மங்கா...என்கிட்டே ’தம்பி’ ‘தம்பி’ன்னு நல்ல பழகுவாங்க. ஆனால், நான் அதிகம் பேசுறது இல்லை. எனக்கு அதுக்கு நேரமும் இல்லை. ஆனா ஒண்ணு மட்டும் ஞாபகம் இருக்கு. என்னோட குடும்பம், பிஸினஸ் பத்தியெல்லாம் விவரமாக் கேட்டுக்கிட்டாங்க. திடீர்னு ஒரு நாள் அந்தம்மா ‘மங்கா’ என் கிட்டே வந்து, ‘தம்பி’, மஞ்சுளா ரொம்ப அழறா... நாங்க இல்லாதப்போ எங்க வீட்டுக்கு நீ சாப்பிட வருவீங்கல்ல? அப்போ என்ன நடந்துச்சு? நீதான் அவளைக் கல்யாணம் பண்ணிக்கணுமாம். இல்லைன்னா அவ செத்துப் போயிருவாளாம்...’

     “என்ன ஆன்ட்டி நீங்க? திடீர்னு இப்படி வந்து சொல்றீங்க? நீங்க இல்லாதப்போ நான் சாப்பிட வந்தா... நான் பாட்டுக்குச் சாப்பிடுவேன், வருவேன் அவ்வளவு தான்...

     “ 'ஐய்யோ... கடவுளே...! அவளுக்கு ஏற்கெனவே ஆஸ்த்மா மாதிரி மூச்சுத்திணறல் இருக்கு. நீங்க வேற இப்படி மறுத்துப் பேசினா... அவளுக்கு என்ன ஆகுமோ? கொஞ்சம் வந்து பாருங்க தம்பி’ன்னு சொல்லி, என் கையைப் பிடிச்சு இழுத்துகிட்டு அவங்க அப்பார்ட்மெண்ட்டுக்குப் போனாங்க. அங்கே அந்த மஞ்சுளா மூச்சுத் திணறலில் கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தா. புதுசா ஒரு மஞ்சக்கயிறை என் கையில கொடுத்து, ‘கட்டுங்க தம்பி... கட்டுங்க தம்பி... நீங்க மாட்டேன்னா இவ செத்துப் போயிடுவா’ன்னு வற்புறுத்தினாங்க. அந்தச் சூழ்நிலையில் மஞ்சுளாவைப் பார்க்கப் பயமாகவும் இருந்துச்சு, பரிதாபமாகவும் இருந்துச்சு...!”

     “உடனே இரக்க சுபாவத்துல மஞ்சக்கயிறைக் கட்டிட்டீங்க. அப்படித்தானே?” இடைமறித்துக் கேட்ட மிதுனாவை நேருக்கு நேர் பார்க்க இயலாதவனாய்த் தவித்தான் ஜெய்சங்கர்.

     “ஒரு அந்நியக் குடும்பத்தோடு பழகும் போது அவங்க யார், எப்படிப்பட்ட ஆளுங்கன்னெல்லாம் கவனமா இருக்க வேண்டாமா? திடீர்னு அவ மூச்சுத்திணறல்ல தவிக்கிறா... நீங்க தாலிக் கட்டலைன்னா அவ செத்துடுவாள்னு சொன்னாங்க.... அதனால நான் தாலி கட்டிடடேன்னு நீங்க சொல்றது நம்பற மாதிரி இல்லியே?”

     “நம்பு மிதுனா... என்னை நம்பு. நான் சொல்றதெல்லாம் சத்தியம். ஒரு பரபரப்பான தர்ம சங்கடமான நிலைமையில், சூழ்நிலையின் கைதியாக நான் மாட்டிக்கிட்டேன். அவ கழுத்துல மஞ்சக்கயிறைக் கட்டின அடுத்த நிமிஷம், எங்கம்மாவுக்கு நெஞ்சு வலி அதிகமாக இருக்கு... ப்ரஷர் ஏறிப் போயிருக்குன்னும், டாக்டர் வந்து பார்த்துட்டு ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணச் சொல்லிட்டார். இப்ப ஷாஸ்பிடல்லதான் அம்மா இருக்காங்கன்னு வேலை செய்யற பொண்ணு வேணி, என்னோட மொபைல்ல கூப்பிட்டுச் சொன்னா. ‘உடனே கிளம்பி வந்துருங்கண்ணா’ன்னு ரொம்ப பதற்றமாகச் சொன்னா. எனக்கு ரொம்ப டென்ஷன் ஆயிடுச்சு...

     அதே சமயம் அந்த ரங்கா, ‘இந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணியாகணும்’னு ரொம்ப வற்புறுத்தினார். ‘எங்கம்மாவுக்கு நெஞ்சுவலி... நான் உடனே சென்னை போக     ணும்னு சொல்லிட்டு, அவசர அவசரமாக ஏர்போர்ட் போய் ஃப்ளைட் பிடிச்சு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். கடவுள் அருளாலே எங்கம்மாவுக்கு எதுவும் ஆகலை. ஆனால் கவனமாக இருக்கணும்னு டாக்டர் எச்சரிச்சு அனுப்பினார். மறு நாளே அம்மாவை வீட்டுக்கு அனுப்பிட்டாங்க...”

     “பெங்களூருல நடந்ததை உங்கம்மாகிட்டே சொன்ன்னீங்களா?”

     “உடனே சொல்லலை. ரெண்டு நாள் கழிச்சு அம்மா நல்லா ஆனப்பறம் ‘அம்மாவுக்கு அதிர்ச்சி கொடுக்கக் கூடாதே’ன்னு பயந்துக்கிட்டேதான் சொன்னேன். நான் பயந்தது போலவே அம்மா அதிர்ச்சி ஆனாங்க. ஆனால், என் நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ஆனாலும் அம்மா, என் கிட்டே ஒரு கேள்வி கேட்டாங்க. ‘மகன் மேலே தப்பு இருக்குமோ’ன்னு  அதை க்ளியர் பண்ணிக்கிறதுக்காகக் கேட்டாங்க.

     “ ‘அந்தப் பெண்ணை நீ காதலிச்சியா?’ன்னு அம்மா கேட்டாங்க. அதுக்கு நான் ‘ஒரு துளி கூட காதல் எதுவும் இல்லைம்மா’ன்னு நான் சொன்னப்புறம் ஓரளவு சமாதானம் ஆனாங்க. என்னை நம்பினாங்க ‘மகன் ஒருத்தியைக் காதலிச்சுக் கழுத்தறுக்கலைன்னு நம்பினாங்க. நீயும் என்னை நம்பு மிதுனா... என் பிஸினஸ் விஷயமா  திடீர்னு நான் சென்ட்ரல் மினிஸ்டர்கிட்டே கேட்டிருந்த அப்பாயின்ட்மென்ட் கன்ஃபார்ம்னு மெயில் வந்துச்சு. போன்லேயும் சொன்னாங்க. அதனால நான் மறுநாள் போன்லேயும் சொன்னாங்க. அதனால நான் மறுநாள் டெல்லிக்குக் கிளம்பிப் போயிட்டேன்.

     “அம்மா எனக்கு உன்னைப் பெண் பார்த்து நிச்சயமும் பண்ணிட்டாங்க. ஏற்கெனவே நான் சொன்னேனே. நான் மறுத்துப் பேசினப்போ.. மறுபடியும் அவங்களுக்கு உடல்நலம் மோசமாயிடுச்சுன்னு. அதனால அம்மாவோட ஏற்பாட்டின்படி உனக்கும், எனக்கும் கல்யாணம் நடந்துருச்சு.”

     “ஓ... அதனாலதான் அவசரம் அவசரமாக நிச்சயம் பண்ணி, அதை விட அவசரமாகக் கல்யாணத்தையும் நடத்திட்டாங்களா, உங்கம்மா? என்னைப் பலிகடா வாக்கிட்டாங்க... அப்படித்தானே?”

     “எனக்கு எதுவும் புரியலை மிதுனா. அம்மா சொன்னாங்க நான் செஞ்சேன். நான் மறுத்தா...  அவங்களுக்கு நெஞ்சுவலி வந்துடுமோன்னு பயம வேற...”

     அவன் பேசுவதைக் கேட்க, அவனது முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது மிதுனாவிற்கு.

     என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், “பத்து வயசுப் பையன் போல ‘அம்மா சொன்னாக், செஞ்சேன்... அம்மா சொன்னாங்க செஞ்சேன்’னு சொல்றீங்களே? இது நியாயம்னு தோணுதா?”

     “ஒரு விஷயம் மிதுனா, என் அம்மாவோட நலம் மட்டும் முக்கியம்னு நான் நினைச்சிருந்தா... உன்கிட்டே உண்மையைச் சொல்லி இருக்கவே மாட்டேன். உன்னை ஏமாத்தணும்கிற எண்ணம் இருந்திருந்தா... உன்கிட்டே உண்மையை மறைச்சுட்டு, முதல் இரவைக் கொண்டாடி இருப்பேன். நான் நியாயமானவன்... என்னை நம்பு, ப்ளீஸ்... நீ படிச்சவ, புத்திசாலின்னு கல்பனா ஆன்ட்டி சொன்னதாக அம்மா சொன்னாங்க... உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். இதைப்பத்தி எங்கம்மாகிட்டே எதுவும் கேட்டுடாதே.


     “நீ அதைப் பத்தி கேட்டுட்டா... அம்மாவுக்கு அதிர்ச்சியாயிடும்.  எந்த உயிரைக் காப்பாத்தணும்னு நான் இதுக்குச் சம்மதிச்சேனோ... அந்த உயிர் போயிடக் கூடாது. ப்ளீஸ் மிதுனா...!” என்று கூறிய ஜெய்சங்கரைப் பார்க்கும் போது... அறிவு முதிராத குழந்தை பேசுவது போல இருந்தது.

     சிலரது முகராசிக்கு, அவர்கள் மீது ஒரு பச்சாதாய உணர்வு உருவாகும். அதுபோன்ற முகராசியோ ஜெய்சங்கருக்கு என்று தோன்றியது மிதுனாவிற்கு.

     “சரின்னு சொல்லு மிதுனா. ப்ளீஸ்...!”

     “சரி... ஆனால், எனக்கு உங்களோட மறுபக்கம் தெளிவாகணும். ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் என் வாய்க்குப் பூட்டுப் போட்டிருப்பேன்... அதுவும் உங்கம்மா கிட்டே மட்டும்....”

     “தேங்க்ஸ் மிதுனா. இந்த அளவுக்குப் பொறுமையாகவும், பொறுப்புணர்ச்சியோடும் நான் சொல்றதையெல்லாம் காது கொடுத்துக் கேட்கிற உன்னோட உயர்ந்த பண்புக்கு நான் சொல்ற ‘தேங்க்ஸ்’ங்கற வார்த்தை ரொம்ப சாதாரணம், சராசரிப் பெண்ணா இருந்தா... என் கிட்டேயும், எங்கம்மாகிட்டேயும் அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணி சண்டை போட்டிருப்பாங்க.

     “கண்ணால் காண்பதும் பொய்  காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதுதான் மெய்’ என்று பெரியவங்க சொல்றதை நீ செயல்படுத்திட்டே. என் அம்மாவோட மரணத்துக்கு நான் காரணமாயிட்டேனோன்னு வாழ்நாள் முழுசும் நான் வேதனைப்படும்படியான ஒரு நிலையை எனக்கு வந்துடக்கூடாது. இதுக்கு உன்னைத்தான் நான் நம்பி இருக்கேன்...”

     அவன் பேசுவதைக் கேட்டு ‘அழுவதா, சிரிப்பதா? என்று மிதுனாவிற்குப் புரியவில்லை.

     “நான்தான் சொன்னேனே... ஒரு குறிப்பிட்ட டைம் வரைக்கும்தான் வெயிட் பண்ணுவேன்னு. ஆனா, எனக்கு ஒரு தெளிவு கிடைச்சு, என் வாழ்க்கைக்கு ஒரு பதில் கிடைக்கிற வரைக்கும் கல்யாணம் சம்பந்தப்பட்ட எந்த சாஸ்திர, சம்பிரதாயத்துக்கும் உடன்பட மாட்டேன்... முதல் இரவு உள்பட!”

     “நானும் உன்னைப் போலத்தான் முடிவு பண்ணி இருக்கேன் மிதுனா. அப்படி இல்லைன்னா இந்த உண்மையை உன்கிட்டே மறைச்சிருப்பேன்...”

     அவன் சொன்னதில் இருந்த யதார்த்தம் மிதுனாவிற்குப் புரிந்தது.

     “கிட்டத்தட்ட விடியப் போகுது மிதுனா, நீ படுத்துக்கோ, குட் நைட்!”

     “குட் நைட்!” என்று கூறிய மிதுனா, நகைகளைக் கழற்றி அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் வைத்தாள். பக்கவாட்டு மேஜையில் இருந்த நைட்டியை எடுத்துக் கொண்டு அந்த அறையில்  இருந்த குளியலறைக்குச் சென்றாள்.

     அந்த அறையின் அளவில் முக்கால்வாசி அளவில் மிகப் பெரியதாக இருந்தது குறியலறை. சுற்றிலும் முகம் பார்க்கும் கண்ணாடிகள் அலங்கரித்தன. எதையும் ரசிக்கும் மனோபாவத்தில் இல்லாத மிதுனா, புடவையை அவிழ்த்து அங்கிருந்த நீண்ட ஸ்டீல் குழாய் மீது மடித்துப் போட்டாள்.

     அணிந்திருந்த சட்டையை நீக்கினாள். நெஞ்சில் புத்தம் புதிய தாலி உறுத்தியது.

     ‘இதயத்திற்கு இதமாகத் தொட்டுக் கொண்டிருக்க வேண்டிய தாலி என் இதயத்தை சுட்டுக்கிட்டிருக்கே!’ என்று தவித்த மிதுனா, பெருமூச்செறிந்தாள். நைட்டியை அணிந்து கொண்டபின் அறைக்கு வந்து படுத்துக் கொண்டாள். முதல் இரவின் புதிய அனுபவங்களை ரசித்தபடி, தூங்காமல் கழிய வேண்டிய அவளது முதல் இரவு, புரியாத புதிர்களால் தூங்காமல் கழிய வேண்டிய துர்பாக்கியம் நிறைந்த இரவாகி விட்டது.

     அறையில் இருந்த சோஃபாவில் புரண்டு, புரண்டுபடுத்துக் கொண்டிருந்த ஜெய்சங்ரைப்பொருட்படுத்தாமல், தூங்குவதற்கு முயற்சி செய்தாள்.

     அவளது முயற்சியையும் மீறி, பற்பல யோசனைகள் அவளது இதயத்தில் தோன்றியக் கொண்டே இருந்தன.

     ‘என்னதான் இவர் சத்தியம், நிஜம்னு சொன்னாலும் இவர் கையால தாலி வாங்கிக்ட்ட ஒருத்தி, ஒங்கே பெங்களூருல இருக்கிறதும் நிஜம்தானே? சில சூழ்நிலைகள்ல ‘உண்மை கசக்கும்’னு சொல்லுவாங்க. நான் இப்போ அந்தச் சூழ்நிலையிலதான் இருக்கேன். ஜெய்சங்கர். ஒரு பெண் போல குரல் தழுதழுக்கப் பேசியதை நினைச்சா பாவமாகவும் இருக்கு... கோபமாகவும் இருக்கு. என்னதான் அப்பாவியாக இருந்தாலும் கல்யாண  விஷயத்துல இப்படியா பண்ணுவாங்க? இதுக்கு... இரக்க சுபாவம்ன்னு காரணம் வேற?

     ‘இவர் மேல மட்டும் தப்பு இல்லை. இவரோட அம்மா வளர்த்த விதம் தப்பு. ஒரே மகன்னு முந்தானைக்குள்ளே அப்பாவோட பிஸினஸ் திறமையும், நிர்வாகப் புத்திசாலித்தனமும் இவரோட ரத்தத்துல கலந்திருக்கிறதுனால கம்பெனியையும், பிஸினஸ் நிர்வாகத்தையும் திறமையா பார்த்துக்கிறார். ஆனால், இவரோட அம்மா இவரைப் பொத்திப் பொத்தி வெச்சதுனால வாழ்க்கை பத்தின விஷயம், குடும்பம் பத்தின விஷயம் எதுவும் ஆழமா புரிஞ்சக்காம வளர்ந்திருக்கார்.

     ‘இவர் வெகுளிதான். அது நல்லாப் புரியுது. இவர் சொல்றது எல்லாமே உண்மையாக இருக்கலாம். அந்த பொங்களூரு ஆளு... என்னவோ பேர் சொன்னரே... ரங்காவோ என்னவோ... அந்த ஆள் இவர்கிட்டே அடிக்கடி பணம் வாங்கி இருக்கார். இவரைப் பார்த்தால் பெரிய பணக்காரர் வீட்டைச் சேர்ந்தவர்னு புரிஞ்சுக்கிட்டு, பணம் பறிக்கிறதுக்காக ஏதாவது நாடகமாடி இருக்கலாமோ?

     ‘இவர்தான் இளகின மனசுள்ளவரா இருக்காரே... அதனால ஏமாந்திருப்பாரோ? ஒரே குழப்பமாக இருக்கே...! திருமண வாழ்க்கையிலே, ஒருத்தன், ஒருத்தி கூடத்தான் வாழணும், மனைவியைக் கண்போல கவனிச்சுக்கிறவன்தான் கணவன், கண்ல கண்டவளுக்கெல்லாம் ‘அவங்க சொன்னாங்க’, ‘இவங்க சொன்னாங்க’ன்னு தாலி கட்றவன், கணவனா இருக்க முடியாது. கயவனாத்தான் இருக்க முடியும்.’

     ஜெய்சங்கர் மீது இப்படியும், அப்படியுமாக மாறுபட்ட அபிப்பிராயங்கள் தோன்ற, அவள் மன வேதனைக்கு ஆளானாள்.

     ‘என்ன செய்வது... என்ன செய்வது...?’ என்கிற யோசனையும் அவளைத் தவிக்க வைத்தது.

     ‘இவரை நான் நம்பற பட்சத்தில் பெங்களூருல நடந்தது பத்தி எனக்கு இன்னும் முழுசாத் தெரியணும் ஏதோ பக்கத்து அப்பார்ட்மெண்ட் பழக்கம்... சாப்பாடு போட்டாங்க... இக்கட்டான நிலைமையில தாலி கட்டிட்டேன்னு இவர் சொன்னது போக, இவருக்கே அந்தப் பெண் விஷயமாக எதுவும் தெரியலைன்னு புரியுது. ஆனால், மேலோட்டமான தகவல்களை வெச்சு, நான் என்னன்னு புரிஞ்சுக்கறது? ஒரு மனைவியா இல்லாம... ஒரு நட்பின் பரிணாமம் மூலமா இவருக்கு உதவி செய்யலாமா?

     ‘அம்மாகிட்டே பேசி, அம்மா என்ன சொல்றாங்களோ அதைச் செய்யணும். அம்மாகிட்டே  இதையெல்லாம் சொல்லும்போது... எவ்வளவு அதிர்ச்சி அடைவாங்க... எவ்வளவு வேதனைப்படுவாங்க? கடவுளே...! ஆனா என்னால. எதையுமே அம்மாகிட்டே மறைக்கிற பழக்கமே இல்லையே எனக்கு? கடவுளுக்கு அடுத்தபடியா என் அம்மாதான எல்லாமே எனக்கு...!’

     புலம்பிய அவளுடைய மனது, அம்மாவை நினைத்ததும் ஓரளவு அமைதி அடைந்தது. அலுப்படைந்த மனது தந்த அயர்ச்சியின் விளைவால், அவளுக்கு விடியும் வேளையில்தான் தூக்கம் வந்தது. கண்களை உறக்கம் தழுவிக் கொள்ள... மெல்லக் கண்களை மூடினாள்.

 

22

     முதல் இரவு முடிந்த மறுநாள் காலையிலேயே வீட்டு விலக்காகி விட்ட மிதுனாவை, அவர்கள் குடும்ப வழக்கப்படி தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார் அனுசுயா.

     “இன்னிக்கு திங்கக்கிழமை மிதுனா. மூணு நாள் கழிச்சு வியாழக்கிழமை கார் அனுப்பி வைக்கிறேன் அல்லது ஜெய்சங்கரை வரச்சொல்றேன்... வந்துரு அப்புறம் மிதுனா... ஸ்வீட்ஸ் பழங்களெல்லாம் எடுத்து வெச்சிருக்கேன்... அம்மாகிட்டே கொடுத்துரும்மா...’’

     “வேண்டாம். எதுக்கு இதெல்லாம்? சம்பிரதாயமெல்லாம் வேண்டாமே...!”

     “இது சாஸ்திரமோ... சம்பிரதாயமோ இல்லைம்மா ஒரு பிரியத்துலதான்மா கொடுக்கறேன். எடுத்துட்டுப்போம்மா...”


     அங்கே இருந்து ஜெய்சங்கரும், “எடுத்துட்டுப் போ மிதுனா. இப்போ எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு... திரும்பக் கூப்பிடறக்கு நான் வரேன்!”

     “சரி...”

     வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டாள் அனுசுயா. அவள் வந்தாள்.

     “என்னங்கம்மா?”

     “இந்தப் பையையெல்லாம் கார்ல கொண்டு போய் வை. டிரைவர் வாசுவை காய்கறி லிஸ்ட்டை வாங்கிட்டுப் போகச்சொல்லு. மிதுனாம்மாவைக் கொண்டு போய் விட்டுட்டு வர்ற வழியிலே வாங்கிட்டு வரச் சொல்லு... காருக்கு பெட்ரோல் போடணும்னு வாசு சொன்னான். வரும்போது பெட்ரோல் போட்டுட்டு வரச் சொல்லு... இந்தா பணம், வாசுகிட்டே கொடுத்துரு.”

     “சரிங்கம்மா!” அவள் போனாள்.

     “மிதுனா... அம்மா, அருணா, அப்பா... எல்லாரையும் கேட்டதாகச் சொல்லும்மா. நீ வரும்போது அம்மாவையும் அருணாவையும் கூப்பிட்டுக்கிட்டு வாம்மா...!”

     “சரி... நான் கிளம்பறேன்.”

     “சரிம்மா மிதுனா...” பங்களாவின் வாசற்படி வரை அவளுடன் வந்த ஜெய்சங்கர், மிதுனாவிடம், “மிதுனா, என் மேலே எந்தத் தப்பும் இல்லை... நான் உன்கிட்டே பொய் சொல்லலை...!”

     “ஹும்... உண்மையை மறைக்கறதுக்குப் பேரும் பொய்தான்...!”

     இவர்களைத் தொடர்ந்து வந்த அனுசுயா, இவர்களின் அருகே வந்துவிட்டபடியால் மிதுனா, பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

     மிதுனாவை அனுப்ப வந்த அனுசுயா, உள்ளே போனதும் மறுபடியும் மிதுனாவிடம் பேச ஆரம்பித்தான் ஜெய்சங்கர்.

     “மிதுனா... என்னை நம்பு ப்ளீஸ்...”

     “இங்கே பாருங்க... நான் போய் எங்கம்மாகிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லி, அவங்க என்ன சொல்றாங்களே... அதைத்தான் செய்வேன். அவங்ககிட்டே கலந்து பேசிட்டப்புறம் என்ன செய்யணுமோ அதைச் செய்வேன். நான் கிளம்பறேன்...” என்ற மிதுனா, காரில் ஏறிக் கொள்ள... கார் கிளம்பியது.

 

23

     மிதுனாவைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர் சாரதாவும், அருணாவும்.

     “வாம்மா மிதுனா...”

     “அக்கா... மச்சான் வரலியாக்கா?”

     “இல்லைம்மா அப்பா சாப்பிட்டாரா? மருந்து கொடுத்திட்டிங்களா?”

     “சாப்பிட்டுட்டார், மருந்தும் கொடுத்தாச்சும்மா... இன்னிக்கு என்னமோ... இந்த நேரத்துல தூங்கிக்கிட்டிருக்கார்.”

     “அக்கா... உன்னோட காபி இல்லாம கஷ்டமா இருக்குக்கா...”

     “ஏ அருணா... நான் போடற காபி நல்லா இல்லையா என்ன?” சாராதா கேட்டார்.

     “நல்லாதான்மா இருந்துச்சு, ஆனா... அக்கா போடற மாதிரி இல்லை...”

     “நாளையில இருந்து உனக்குக் காபி கிடையாது.” கேலி செய்தாள் சாரதா.

     “ஐயோ... அக்கா... அம்மாவைப்  பாருங்கக்கா... உங்க காபியைப் பாராட்டினதுக்கு அப்படிச் சொல்றாங்கக்கா.”

     “அருணாவும், சாரதாவும் சிரித்தனர். அந்தச் சிரிப்பில் கலந்து கொள்ள முடியாத மனநிலையில் இருந்தாள் மிதுனா. இதைக் கவனித்தாள் சாரதா, அருணா முன்னிலையில் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைத்த சாரதா, அருணாவைக்  கடைக்கு அனுப்பி வைத்தார்.

     அதன்பின் மிதுனாவிடம், “என்னம்மா மிதுனா... ஏன் உன் முகம் வாடிக்கிடக்கு? முதல் இரவு முடிஞ்ச மணப்பெண் முகத்தில் தெரியக்கூடிய சந்தோஷம் வெட்கம்... எதுவும் இல்லாம ரொம்ப டல்லா இருக்கியே... என்னம்மா ஆச்சு? எதுவும் பிரச்சனை இல்லையோ?” நெஞ்சம் பதைபதைக்கக்  கேட்டார் சாரதா.

     “எப்படிம்மா உங்களுக்கு நான் பிரச்சனையிலே இருக்கேன்னு தோணுது...?”

     “தாய் அறியாத சூல் இல்லைம்மா ஏதோ நடந்திருக்கு...”

     சாரதா பேசி முடிப்பதற்குள் மிதுனா அவளைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.

     “என்னம்மா மிதுனா... என் வயித்தைக் கலக்குதும்மா...!”

     “அம்மா... நாம ஏமாந்துட்டோம்னு நினைக்கிறேன். அவர்... அவர்... நேத்து எனக்குத் தாலி கட்டின என் கணவர், ஏற்கெனவே கல்யாணம் ஆனவராம்.”

     “இதைக்கேட்டு அதிர்ச்சி  அடைந்தாள் சாரதா. அவளது நெஞ்சம் நடுங்கியது. கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது. தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசினார்.

     “என்னம்மா சொல்றே? நிஜமாவா சொல்றே? பொறாமையிலே யாராவது  கதை கட்டி விட்டாங்களா...?”

     “சொன்னது வேற  யாரோ இல்லேம்மா... என் கணவர்தான்மா இதை என்கிட்டே சொன்னார். அப்படி இருக்கும்போது... நிஜமா, இல்லையான்னு நம்பறதுக்கு ஆராய்ச்சி பண்றது தேவையே இல்லைம்மா...”

     “என்ன? மாப்பிள்ளையே உன்கிட்டே சொன்னாரா? கலக்கம் குறையாத குரலில் கேட்டார் சாரதா.

     “ஆமாம்மா... பெங்களூருல ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினாராம். தவிர்க்க முடியாத சூழ்நிலையிலே தாலி கட்ட வேண்டியதாயிடுச்சாம். மத்தபடி அவ கூட குடும்பமெல்லாம் நடத்தலையாம். தாலி கட்டின அடுத்த நிமிஷம், அவங்கம்மாவுக்கு நெஞ்சுவலின்னு போன் வந்ததுனால. உடனே கிளம்பி இங்கே வந்துட்டாராம். அந்த நெஞ்சு வலியையே காரணமா வெச்சு, அவங்கம்மா இவருக்கு வேற கல்யாணம் பண்ணனும்னு... என்னைப் பார்த்து... நம்மகிட்டே பேசி, கல்யாணத்தை நடத்தி வெச்சுட்டாங்க...” என்று விவரம் கூற ஆரம்பித்த மிதுனா, தன்னிடம் ஜெய்சங்கர் சொன்ன அனைத்து விஷயங்களையும் சாரதாவிடம் சொன்னாள்.

     “இவ்வளவு நடந்திருக்கா? மாப்பிள்ளை உன்கிட்டே சொன்னப்போ நீ என்ன சொன்ன...?”

     “எனக்கு ரொம்பக் கோபம் வந்துருச்சும்மா... ‘உங்க வாழ்க்கையோட முக்கியமான கல்யாண விஷயத்தை உங்கம்மாதான் முடிவு செய்வாங்களா? அவங்களோட முடிவுக்கு என் வாழ்க்கையைப் பலி கொடுக்கணுமா?’ன்னு கேட்டேன். அதுக்கு அவர், ‘என்னோட படிப்பு, பெங்களூருல எங்க தொழிற்சாலை, ஆபீஸ் நிர்வாகத்தை நான் பார்த்துக்கணும்கிற ப்ளான் எல்லாமே எங்கம்மா எடுத்த முடிவுதான்’னு சின்னப் பையன் மாதிரி சொல்றார்மா.”

     “பெங்களூருல முன்னே பின்னே தெரியாத ஒருத்திக்குத் தாலி கட்டறதுக்கு மட்டும் அம்மாவைக் கேட்க வேண்டியதில்லையாமா அவருக்கு?”

     “எல்லாத்தையும் நல்லாக் கேட்டு விட்டுட்டேன்மா. ‘எங்கம்மாகிட்டே எல்லா விஷயத்தையும் சொல்லுவேன். அவங்க என்ன சொல்றாங்களோ அதைத்தான் செய்வேன்’னு சொல்லிட்டேன். அவர் சொன்னது அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. ஆனா... எடுத்த எடுப்பிலேயே திருமண முறிவு, பிரிவுன்னு அவசரப்பட்டு நான் வந்துட்டா... அருணாவோட எதிர்காலம் பாதிக்கும். அதனால நிதானமா யோசிக்கணும்னு முடிவு பண்ணினேன். அதுக்கேத்தபடி, வீட்டு விலக்காகி இங்கே வந்துடற மாதிரி ஆயிடுச்சு.”

     “நீ பொறுமையா, பொறுப்பா இருக்கிறதைப் பார்க்க எனக்குப் பெருமையா இருக்கு மிதுனா. ஆனால் நம்ம தகுதிக்கு மேலே... பெரிய இடத்துலே இருந்து உன்னைப் பெண் கேட்டு வந்தப்போ எனக்குப் பயமா இருந்துச்சு. மாப்பிள்ளையைப் பத்தின உண்மை தெரிஞ்சுதான் சம்பந்தியம்மா... ஏழைக் குடும்பம்னாலும் பரவாயில்லை என்று நம்ப குடும்பத்துல பெண் எடுத்திருக்காங்களோன்னு தோணுது. நீ சொல்ற மாதிரி மண முறிவுக்கு அவசர முடிவு எடுக்கக்கூடாது.

     ஆனால், நீ மாப்பிள்ளைகிட்டே இன்னும் விலாவாரியா விசாரிக்கணும். எதுக்காக இந்த நாடகம்னு உண்மையான விவரங்களைக் கேட்கலாம். “உண்மையைச் சொல்றேன்... உண்மையைச் சொல்றேன்’னு சொல்லிட்டா மட்டும் முழுசா நம்ப முடியுமா? நீ, மாப்பிள்ளைகிட்டே இன்னும் நிறையக் கேட்கணும்.”

     “சரிம்மா, வியாழக்கிழமை போயிடுவேன்ல... நன் கேட்கறேன். ஆனா அம்மா, அவர் சொன்ன இன்னொரு விஷயம்... உங்ககிட்டே சொல்றதுக்குக் கூச்சமா இருக்கு. அவர் சொன்னார்... ‘நான் நினைச்சா, உண்மையைச் சொல்லாம மறைச்சு, முதல் இரவைக் கொண்டாடி இருப்பேன்’னு சொன்னார்மா. அதை வெச்சுப் பார்த்தால், அவர் நல்லவராத்தான் இருப்பாரோன்னு தோணுது...’’

     “ஓ... அப்படிச் சொன்னாரா? நீ சொல்ற மாதிரி மாப்பிள்ளை மேலே தப்பு இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், இன்னும் நிதானமாக இருந்து... அவர்கிட்டே இன்னும் நிறைய கேட்டுப் பேசி, அப்புறமா என்ன செய்றதுன்னு யோசிக்கலாம். நீ வியாழக்கிழமை உன் மாமியார் வீட்டுக்குப் போ... சம்பந்தியம்மாகிட்டே எதுவும் கேட்காதே. சந்தர்ப்பம் வரும்போது என்ன பேசணும், எப்படிப் பேசணும்னு முடிவு பண்ணிக்கலாம். நாம யாருக்கும், எந்தத் துரோகமும், தீங்கும் செய்யலை அதனால உனக்குக் கடவுள் நல்லதுதான் செய்வார்.


     மாப்பிள்ளைப் பத்தி விசாரிக்க நீ ஏன் பெங்களூரு போகக்கூடாது? அவர்கிட்டேயே அந்த அட்ரஸ் வாங்கிக்கிட்டு நீ அங்கே போய் விசாரித்துப்பாரு அவர் உன் கூட வரவேண்டாம். நீ மட்டும் போ. இப்போதான் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது உன்னோட பிரெண்ட் கார்த்திகா, பெங்களூருலதானே இருக்கா? அவளுக்கு போன் போட்டுப் பேசு. அங்கே அவ உனக்கு எல்லா ஹெல்ப்பும் பண்ணுவா..

     “நீ தைரியமான, புத்திசாலியான பொண்ணு. அது மட்டுமில்லை, விவேகமா முடிவு  எடுக்கக்கூடியவ. சட்டுன்னு கோபப்பட்டு தகராறு பண்ணாம... சராசரிப் பொண்ணுங்க மாதிரி குடும்பத்தை ரெண்டு  பண்ணி ரகளை பண்ணாம... பெத்தவகிட்டே ஆலோசனை கேட்கலாம்னு புத்திசாலித்தனமாக நடந்துக்கிற உன்னை மகளா பெத்தெடுத்ததுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கேன்மா... ஆனா கல்யாணம் ஆன மறுநாளே இப்படி ஒரு அதிர்ச்சியான விஷயத்தை வந்து, என் பொண்ணு வந்து சொல்றதுக்கு நான் என்ன பாவம் பண்ணினேனோன்னு நினைக்க வைக்குது.

     “தங்க, வைர நகைகள், கார், பங்களா, பணம்... இதுக்கெல்லாம் மயங்குற குடும்பம்னு அந்த சம்பந்தியம்மா நினைச்சுட்டாங்களா? வலிய வந்து பெண்கேட்டாங்க... வெளியிலே விசாரிச்சதுல நல்ல குடும்பம், நல்ல பையன்னுதான் சொன்னாங்க... ஒருத்தர் கூட எதுவுமே தப்பா சொல்லலியே? கல்பனாம்மா கூட சின்ன வயசுல இருந்தே அந்தப் பையனைத் தெரியும். நல்ல பையன்தான்னு சொன்னாங்களே... அதனால மாப்பிள்ளை மோசமானவர்னு எனக்குத் தோணலைம்மா. என் பொண்ணு, பிறந்த வீட்ல கஷ்டப்பட்டுட்டா... புகுந்த விட்லயாவது நல்லபடியா வாழட்டுமே’ன்னு நினைச்சுதான் இந்தச் சம்பந்தத்துக்குச் சம்மதிச்சேன்...!” சாரதா, கண்கள் கலங்கிக் சிகப்பேற அழுதார்.

     “அம்மா, அழாதீங்கம்மா... உங்க முகம் பாரத்துதான்மா நான் ஆறுதலா இருக்கேன். நீங்க சொல்ற மாதிரிதான்மா நானும் அவர்  மோசமானவரா இருக்க மாட்டார்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற யோசனைப்படி அவர்கிட்டே பேசிட்டு, பெங்களூரு போறதுக்கு கார்த்திகாகிட்டே பேசிடறேன்மா.”

     “சரிம்மா. என்னம்மா... அருணா இன்னும் வரலியே...?”   

     “பக்கத்துக் கடையிலே இல்லைன்னா சூப்பர் மார்க்கெட் போய் வாங்கிட்டு வான்னு நான்தான்மா சொல்லி அனுப்பிச்சேன். அதனாலதான் லேட் ஆகுது. நீ வாம்மா. சாப்பிட்டுட்டுப் படுத்துக்கோ. மன உளைச்சல் கூட உடம்பும் சோர்வா இருக்கும்... அந்தக் கடவுள் நமக்கு நல்ல வழி காட்டுவார். மனசு கஷ்டப்படாம அமைதியாத் தூங்கு. மத்ததை காலையிலே பேசிக்கலாம். இப்போதைக்கு அருணாவுக்கு எதுவும் தெரியவேண்டாம்.”

     “சரிம்மா” என்ற மிதுனா, சாப்பிட உட்கார்ந்தாள். சாப்பிட்டாள். அதன்பின் உடல் களைப்பிலும் மனச் சோர்விலும் ஆழ்ந்த தூக்கத்திற்கு ஆளானாள்.

 

24

     மூன்று நாட்கள், சாரதாவின் வீட்டில் இருந்தபடி அப்பாவுடனும், அருணாவுடனும் பேசிப் பொழுதைப் போக்கினாள் மிதுனா. அருணா கல்லூரிக்குச் சென்றபின் சாரதாவும், மிதுனாவும் பிரச்சனை குறித்துக் கலந்து பேசி விவாதித்தனர். பேசிப் பேசி, அலசி ஆராய்ந்தனர்.

     ‘தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டேமோ...? அனுசுயா மீது தவறு இருக்கா? ஜெய்சங்கர் மோசடி செய்கிறானா? ஏன், எதற்கு? செல்வந்தர்கள் அனைவருமே இப்படித்தானா? அல்லது நாமதான் தப்ப நினைக்கிறோமா? ஏற்கெனவே பேசியபடி பெங்களூரு போய் விசாரிப்பது சரிதானா? ஜெய்சங்கர் நல்லவனா, கெட்டவனா?” இது போலப் பல விஷயங்களைப் பற்றித் தாயும், மகளும் பேசினார்கள்.

     பேச்சின் நடுவே அவ்வப்போது வேதனைப்படும் சாரதாவைத் தேற்றினாள் மிதுனா.

     மூன்று நாட்களும் இவ்விதம் கழிந்தன. ஏற்கெனவே எடுத்த முடிவின்படி மிதுனா, பெங்களூரு செல்லும் திட்டம்தான் சரி என்று இருவரும் தீர்மானித்தனர்.

     பிரச்சனை எதுவும் தெரியாத அருணா, ஆசையாக மிதுனாவிடம் பேசினாள்.

     “அக்கா, மச்சான் நல்ல ஹேண்ட்ஸம் இல்லக்கா? நம்ம வீட்டுக்கு எப்பக்கா வருவார்? அவர்கிட்டே நான் பேசணும். நல்லாப் பழகுவாராக்கா? பெரிய பணக்காரர்... அதனால நம்மை மாதிரி வசதி குறைஞ்ச குடும்பத்தைச் சேர்ந்தவங்கன்னா... பழகுறதுக்குத் தயங்குவாரா? ஆனா... அவரைப் பார்க்கிறதுக்கு அப்படிப்பட்டவரா தோணலைக்கா. மச்சானுக்காக ஆறு கைக்குட்டையிலே நானே எம்ப்ராய்டரி பண்ணி கிஃப்ட் பேக் பண்ணி வெச்சிருக்கேன்.  அதெல்லாம் அவருக்குப் பிடிக்குமோ என்னவோ?

     “அழகா பால் பாயிண்ட் பேனா கூட வாங்கி வெச்சிருக்கேன்கா... அவருக்குத் தியேட்டர் போய் சினிமா பார்க்கிற பழக்கம் இருக்காக்கா? அவர் விஜய் ரசிகரா? அஜித் ரசிகரா? எல்லாமே நான் மச்சான்கிட்டே பேசணும்க்கா...”

     இப்படிப் பல கேள்விகளைத் தயாரித்து வைத்து மிதுனாவுடன் அதைப்பற்றி அவ்வப்போது பேசிக் கொண்டிருந்தாள் அருணா.

     குழந்தைத்தனமாக அவள் பேசுவதைக் கேட்க மிதுனாவிற்கு வருத்தம் ஏற்பட்டது.

     ‘எண்ணற்ற ஆசைகளோடும், அன்போடும் தன் மச்சானிடம் பேச வேண்டும், பழக வேண்டும் என்கிற மனப்பான்மையில் இருக்கும் இவள் நம்பும்படியாக அவர் நல்லவராகவே இருந்தால்...’ என்கிற ரீதியில் மிதுனாவின் சிந்தனை இருந்தது.

     மூன்று நாட்கள் கடந்தன.

     மிதுனா, புகுந்த வீடு செல்லும் நாளின்  காலைப் பொழுதை நோக்கி, இரவு நகர்ந்து கொண்டிருந்தது.

 

 

 

25

     காலைப் பொழுது புலர்ந்திருந்தது. எழுந்திருக்கும் போதே மிதுனாவிற்கு வயிற்றைக் கலக்கியது. இனம் புரியாத ஓர் உணர்வின் கலங்கல் அது.

     சாரதாவும் எழுந்திருக்கும் பொழுதில் இருந்து ஸ்வாமி நாமங்களை உச்சரித்து, தன் மன உளைச்சலைச் சமாளித்துக் கொண்டிருந்தாள்.

     அருணா, மிதுனாவைக் கட்டிப் பிடித்து, விடை பெற்று, கல்லூரிக்குக் கிளம்பினாள்.

     மிதுனாவை அழைத்துச் செல்வதற்காக ஜெய்சங்கர் வந்தான்.

     அவனைப் பார்த்த சாரதா, அவனை வரவேற்றாள்.

     “வாங்க மாப்பிள்ளை, உள்ளே வாங்க...”

     “வணக்கம், நல்லா இருக்கீங்களா?”

     “உங்க அம்மா நல்லா இருக்காங்களா?”

     “நல்லா இருக்காங்க...”

     “இருங்க மாப்பிள்ளை. இதோ மிதுனா வந்துருவா. சாமி கும்பிட்டுக்கிட்டுருக்கா. அதுக்குள்ளே நான் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.’’

     “சரி... ஒரு நிமிஷம், மிதுனாவோட அப்பாவைப் பார்க்கலாமா...?

     “அதுக்கென்ன? தாராளமா, அதோ அங்கே படுத்திருக்கார். நீங்க போய் பார்த்துப் பேசுங்க...”

     ஜெய்சங்கர், கிருஷ்ணனின் அருகே சென்று அவரைப் பார்த்தான். ஜெய்சங்கரை அடையாளம் தெரிந்து கொண்ட அவரும் வாய் குழறினாலும் முகத்தில் மகிழ்ச்சி தென்படப் பேசினார்.

     மிதுனா வந்தாள்.

     சாரதா காபியுடன் வந்தார். ‘அம்மாவிடம் எல்லாவற்றையும் சொல்வேன்ன’ என்று மிதுனா ஜெய்சங்கரிடம் சொல்லி இருந்தபடியால், சாரதாவை நேருக்கு நேர் பார்க்கவும் அவருடன் பேசவும் தர்மசங்கடமாக உணர்ந்தான் ஜெய்சங்கர்.

     ‘அத்தை’ என்ற அழைக்கவும் தயங்கினான்.

     எப்படியோ சமாளித்து, காபியைக் குடித்தான்.

     மௌனமாக அங்கே நின்றிருந்தாள் மிதுனா அவள் ஜெய்சங்கரிடம் எதுவும் பேசவில்லை.

     “போகலாமா மிதுனா?” என்று அவளிடம் கேட்டான். ஜெய்சங்கர்.

     “சரி...போகலாம்....” என்று அவனிடம் சொன்ன மிதுனா, லேசாகக் கலங்கிய கண்களுடன் சாரதாவை பார்த்தாள்.

     “நான் போயிட்டு வரேன்மா....!”

     “சரிம்மா மிதுனா....’’

     கிருஷ்ணனிடம் சொல்லி விட்டு ஜெய்சங்கருடன் கிளம்பினாள்  மிதுனா.

     ஜெய்சங்கரின் பங்களாவிற்குக் கார் வந்து சேரும் வரை மிதுனாவும், ஜெய்சங்கரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை.


26

     ங்களாவின் வாசலில் காத்திருந்து, மிதுனாவை வரவேற்றார் அனுசுயா.

     “வாம்மா மிதுனா... உன் அம்மா வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா? உங்க அப்பாவுக்கு இப்போ உடம்புக்குப் பரவாயில்லையா?”

     “எல்லாரும் நல்லா இருக்காங்க... அப்பா, ஆயுர்வேத ட்ரீட்மென்ட்டுக்குப் பிறகு இப்போ பரவாயில்லை.’’

     “சரி மிதுனா... நீ என்ன சாப்பிடறே? சூடா காபி, டீ, ஹார்லிக்ஸ்... என்னம்மா வேணும்?”

     “இப்போ எனக்கு எதுவும் வேண்டாம்..”

     “சரிம்மா, நீயும் ஜெய்சங்கரும் உங்க ரூமுக்குப் போங்க. கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருங்க.  நான் போய் வேலை செய்றவங்களுக்கு  என்னென்ன வேலைகள்னு சொல்லிட்டு, உன்னைக்  கூப்பிடறேன். மதிய சாப்பாட்டுக்கு என்ன சமையல் செய்யச் சொல்லட்டும்? உனக்குப் பிடிச்சதா சொல்லு மிதுனா....!”

     “எ... எ... எனக்கு...”

     “தயங்காம சொல்லும்மா... என்ன சமைக்கச் சொல்லலாம்....?”

     “அ... அ... அது வந்து...” மிதுனா சகஜமாகப் பேசத்தயங்குவதைக் கவனித்த ஜெய்சங்கர், நிலைமையைச் சமாளிக்க முன் வந்தான்.

     “அம்மா, மொச்சைப் பயித்துக் குழம்பு, அப்பளம், முட்டை ஆம்லெட், அவரைக்காய் பொரியல் பண்ணச் சொல்லுங்கம்மா....”

     “அட... நீ என்னப்பா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு சொல்றே? தடபுடலா சிக்கன் பிரியாணி தந்தூரி, முட்டை மசாலா செய்யச் சொல்லுங்கம்மா....’’

     “அட... நீ என்னப்பா முந்திரிக் கொட்டை மாதிரி முந்திக்கிட்டு சொல்றே? தடபுடலா சிக்கன் பிரியாணி, தந்தூரி, முட்டை மசாலா செய்யச் சொல்லலாம்னு பார்த்தா... மொச்சைக் கொட்டை... துவரங்காய்னு மெனு கொடுக்கிறே?”

     “ப்ளீஸ்மா... எனக்கு இன்னிக்கு வெஜிடேரியன்  சாப்பாடுதான் வேணும்மா. ஹெவியான சாப்பாடு இன்னிக்கு வேண்டாம்மா... ப்ளீஸ்....!”

     “சரிப்பா... நீங்க ரெண்டு பேரும் ரூமுக்குப் போங்க..”

     “சரிம்மா....”

     ஜெய்சங்கர், மாடி அறைக்குப் போவதற்காகப் படிக்கட்டுகளில் ஏறினான். அவனைப் பின் தொடர்ந்தாள் மிதுனா.

27

     ட்டிலில் போடப்பட்டிருந்த மெத்தையின் மீது ஒரு அழகிய விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.

     அறை மிகவும் சுத்தமாகப் பராமரிக்கப்பட்டிருந்தது. பத்து நிமிடங்கள்  வரை எதுவும் பேசாமல் இருந்த ஜெய்சங்கர், பேச ஆரம்பித்தான்.

     “மிதுனா... உங்கம்மாட்ட பேசினியா? என்ன சொன்னாங்க்க?”

     “என்ன சொல்வாங்க? பெண்ணைப் பெத்த பாவியாயிட்டேனேன்னு பரிதவிச்சாங்க....”

     “மிதுனா... ஸாரி....”

     “உங்க ஸாரி யாருக்கு வேணும்? உங்க அம்மா மேலே எவ்வளவு பாசம் வெச்சிருக்கீங்களோ... அதே போலத்தான்  நானும், என் அம்மா மேலே உயிரையே வெச்சிருக்கேன். மகள், போற இடத்துல ‘சந்தோஷமா வாழ்வா’ன்னு நம்பி,  நிம்மதியா. இருந்தாங்க. அந்த நிம்மதியிலே மண்ணை அள்ளிப் போட்டாச்சு...”

     “உன் கோபம் நியாயமானது மிதுனா. ஆனால், உங்கம்மா என்ன சொன்னாங்கன்னு நான் தெரிஞ்சுக்கக் கூடாதா?”

     “தெரிஞ்சுக்கலாம்தான். அதுக்கு முன்னால இன்னொரு முக்கியமாக விஷயம் தெரிஞ்சுக்கோங்க. நீங்க அவசரத்தாலி கட்டின அந்தப் பொண்ணோட சொந்தக்கார் அந்தக் கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணணும்னு வற்புறுத்தினார்னு சொன்னீங்கல்ல? அப்போ அதுக்கும் நீங்க மயங்கப்போய் அந்தக் காரியத்தைச் செஞ்சிருந்தா... என்ன ஆகி இருக்கும் தெரியுமா?

     அதுக்கப்புறம் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது தெரிஞ்சு அவங்க கேஸ் கொடுத்தா... நீங்க ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டியதாகி இருக்கும். உங்கம்மாவுக்கு நெஞ்சு வலி வந்து, அதிலே இருந்து அவங்க மட்டும் பிழைக்கலை... நீங்களும்தான் ஜெயில் தண்டனையில் இருந்து பிழைச்சிருக்கீங்க. புரிஞ்சுக்கோங்க... உங்களைப் பெட்டிப்  பாம்பாய்ப் பிடிச்சு வெச்சு, அடைச்சு வெச்சு.. தாய்பாசம்கிற கோட்டைக்குள்ள முடக்கி வெச்சு... என் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கிட்டாங்க.

     இதுக்கு, விதி சொல்லப்போற பதில் என்னவா இருக்கும்னு எனக்குத் தெரியலை. ஆனால், கெட்ட விஷயத்துலேயும் நல்ல விஷயம்கிற மாதிரி... என்னோட மனசுலேயும், எங்கம்மா மனசுலேயும் நீங்க மோசமானவர்ங்கிற எண்ணம்  வரலை. நீங்க ஒழுக்கமான வராத்தான் இருப்பீங்கங்கிற ஒரு அனுமானம் எங்க மனசுல இருக்கு. ஆனாலும் எதையும் ஆதாரப்பூர்வமாகத் தெரிஞ்சுக்கணும் இல்லியா? அதனால என் அம்மா சொன்னபடி நான் பெங்களூரு போகணும். நீங்க வரவேண்டாம்...”

     குறுக்கிட்டுப் பேசினான் ஜெய்சங்கர்.

     “மிதுனா... நீ மட்டும் தனியாகப் பெங்களூரு போகப் போறியா...?”

     ஏளனமாகச் சிரித்தாள் மிதுனா.

     “பெண்கள் ராக்கெட்ல போய் வெற்றிக்கொடி பிடிக்கிற காலம் வந்தாச்சு. இதோ... இங்கே இருக்கிற பெங்களூரு போறதுக்குத் துணை வேணுமா....?”

     “அதுக்கு இல்லை மிதுனா, நான் ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னுதான் கேட்டேன்.”

     “எனக்கு ஹெல்ப் பண்ண பெங்களூருல ஆட்கள் இருக்காங்க. ஐ மீன்... என்னோட பிரெண்ட், அவளோட ஹஸ்பெண்ட், ரெண்டுபேரும் இருக்காங்க. நீங்க கவலைப்படாதீங்க...’’

     முகத்தில் அடித்தாற் போல மிதுனா பேசியதும் ஜெய்சங்கரின் முகம் வாடிப் போயிற்று.

     இதைக் கண்ட மிதுனா, ‘ஏடா கூடமா எதையாவது செஞ்சுட்டு எதுவுமே தெரியாத அப்பாவி மாதிரி இந்த முகம். இவர் உண்மையிலேயே அப்பாவியா? இல்லைன்னா பாவியா? ஒண்ணும் புரியலை!’ இவ்விதம் மனதிற்குள் நினைத்தாள்.

     “என்ன மிதுனா... ஏன் திடீர்னு ஒண்ணுமே பேசாம இருக்கே... ? பெங்களூரு போய் என்ன செய்யப்போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?”

     “ம்... கண்டிப்பாக உங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும். ஒரு பொண்ணுக்கு மணவாழ்க்கையிலே கஷ்டம் வந்துட்டா... அவளோட துன்பமான அனுபவம் என்ன...? வேதனை என்ன...? எத்தனை மனச்சோர்வு...? அத்தனைக்கும் காரணமான நீங்க... தெரிஞ்சுக்கிட்டே ஆகணும். நான் போய் என்னோட பிரெண்ட் கார்த்திகாவைப் பார்த்து, அவளோட உதவியோட... நீங்க தங்கி இருந்த அபார்ட்மென்டுக்குப் போய், விசாரிக்கணும். அங்கே நான் என்ன தெரிஞ்சுக்கிட்டேனோ... அதுக்கப்புறம்தான் அதை வேச்சுத்தான் யார் மேலே என்ன தப்புன்னு தெரிஞ்சுக்க முடியும். அந்த விசாரணைதான் என் கேள்விக்குறியான என் மண வாழ்க்கைக்கு ஒரு விடை கொடுக்கும்.’’

     “என் மேலே எந்தத் தப்பும் இல்லை மிதுனா. நீ சொன்ன  மாதிரி சட்டச்சிக்கல்ல மாட்டிக்கிறாப் போல நடந்துருச்சே தவிர, நான் என் மனசார எந்தத் தப்பும் பண்ணலை...’’    

     “எனக்கும் நீங்க தப்பு பண்ணி இருக்க மாட்டீங்கங்கிற நம்பிக்கை அறுபது சதவிகிதம் இருக்கு அதனாலதான் இந்தப் பெங்களூர் விஜயம். மூணு மாச அவகாசம் எல்லாமே... இல்லைன்னா நான் உங்களுக்கு டாட்டா சொல்லிட்டு... என் வழியைப் பார்த்துக்கிட்டு, போய்க்கிட்டே இருப்பேன். மணமுறிவு, தம்பதி பிரிவு இதெல்லாம் இப்போ சகஜமாகிட்ட இன்றைய கால கட்டத்துலே... அந்த முடிவு அவசரத்துலேயும், ஆத்திரத்திலேயும் எடுக்கப்பட்டதா இருந்துடக் கூடாதுன்னு மட்டுமில்லை... அது என் பிறந்த வீட்டுக் குடும்பத்தையும் பாதிக்கும்கிறதும் ஒரு காரணம்.

     “இன்னோரு முக்கியமான காரணம் என்னன்னா... உங்கம்மாவோட உடல்நலம்... அதைப் பத்தி நீங்க எடுத்துச் சொல்லியும் நம்ம பிரச்னை பத்திப் பேசி அவங்களுக்குத் தெரிஞ்சு, அவங்களோட உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலைமை உருவாகிடக் கூடாதுங்கிற மனித நேயமும்தான்...”

     “தேங்க்ஸ் மிதுனா... ஒரு மனித உயிருக்கு நீ கொடுக்கிற இந்த உன்னதமான உணர்வுக்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்றேன். எங்கம்மா ஒரு விஷயத்தைத் தெளிவு பண்ணிக்கிட்டப்புறம்தான் உன்னை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற முயற்சியிலே இறங்கினாங்க...”

     “தெளிவு படுத்திக்கிட்டாங்களா? அது என்ன அப்படி ஒரு பெரிய விஷயம்?”

     “ பெங்களூருல... அந்தப் பொண்ணை நீ காதலிச்சியா?’ன்னு அம்மா என்கிட்டே கேட்டாங்க. நான் இல்லவே இலலைன்னு சொன்னப்புறம்தான் கல்பனா ஆன்ட்டி வீட்டுக் கல்யாணத்துல உன்னைப் பார்த்து, எனக்கு நிச்சயம் பண்ணி, கல்யாணத்தையும் நடத்திட்டாங்க...”


     அறிவில் முதிர்ச்சி அடையாத பத்து வயதுச் சிறுவன் போல அவன் பேசியதைக் கேட்டு, மிதுனாவிற்கு எரிச்சல் தோன்றியது.

     “என்னுடைய பெங்களூரு திட்டம் பத்தி உங்ககிட்டே சொல்லிட்டேன். அந்த அட்ரஸ் எனக்கு வேணும். எஸ்.எம்.எஸ். கொடுங்க அல்லது வாட்ஸ்அப்ல அனுப்பிடுங்க.”

     அப்போது அழைப்பு மணி ஒலித்தது.

     “அம்மா கூப்பிடறாங்க மிதுனா. கீழே போகலாமா?”

     “ம்...”

     இருவரும் கீழே இறங்கினர்.

 

28

     நீண்ட, பெரிய மேஜை மீது ஒரே வண்ணத்தில் பீங்கான் தட்டுகளும், அவற்றிற்கு இணையான சிறிய தட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன.

     அவற்றிற்கு இணையான வண்ணத்தில் உருவாக்கப்பட்ட பீங்கான் பாத்திரங்கள், டம்ளர்கள் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன.

     பாத்திரங்களில் வகை வகையான உணவுகள் வைக்கப்பட்டிருந்தன.

     “வாம்மா மிதுனா... சாப்பிட உட்கார். ஜெய்சங்கர் சொன்னது போல உனக்காக புலவு ஐட்டங்களும் பண்ணச் சொல்லி இருந்தேன். உனக்கு எதெல்லாம் பிடிக்குதோ அதைச் சாப்பிடு. உட்கார்.”

     மிதுனா, உட்கார்ந்தாள். ஸோயா புலவு, பட்டாணி புலவு, கொத்தமல்லி சட்னி, மசால் வடை, தயிர் பச்சடி, தயிர் சாதம், நார்த்தங்காய் ஊறுகாய் என்று பல வகைகள் தயாரிக்கப்பட்டு, மேஜையை அலங்கரித்துக் கொண்டிருந்தன.

     “சாப்பிடும்மா மிதுனா...” அனுசுயா வருந்தி வருந்தி உபசரித்தார்.

     ‘சரி... சரி’ என்று சொல்லிக் கொண்டிருந்தாள் மிதுனா.

     ‘அம்மாவின் உபசரிப்பை மிதுனா ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்கிற எண்ணத்தில் ஜெய்சங்கர், மிதுனாவிடம் மிக மெதுவான குரலில், “நல்லா சாப்பிடு மிதுனா!” என்றான்.

     அவனுக்கு ‘சரி’ என்ற ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள் மிதுனா.

     ‘இவங்க வீட்ல ஒரு நாள் சமையலுக்கு ஆகுற செலவை வெச்சு, எங்கம்மா வீட்ல ஒரு மாசத்துக்கு சமையல் பண்ணிடுவாங்க. இவங்க ஒரு வேலையாளுக்குக் கொடுக்கற சம்பளத்துல பாதி பணம் எங்கம்மா வீட்டு வாடகை, கண்ணாடி பாத்திரங்களோட விலையில ஒரு கல்யாணத்துக்கு, பெண்ணுக்குப் போட வேண்டிய எவர்சில்வர் பாத்திரங்கள் வாங்கிடலாம் போல...’ மனதிற்குள் ‘ஒப்பிட்டுப் பார்த்தல்’ எண்ணங்கள் அசைபோட, வயிற்றுக்குள் பசித்து, ருசித்துப் போக வேண்டிய உணவு வகைகளைக் கடனே என்று வாய்க்குள் அசை போட்டாள் மிதுனா.

     ‘புதுமணப்பெண்... கூச்சப்படுகிறாள்!’ என்று அனுசுயா நினைத்துக் கொண்டார்.

     “மிதுனா... நீ சரியாவே சாப்பிடலை, புது இடம் புதுக்குடும்பம்... மனசு ஒட்டறதுக்குக் கொஞ்ச நாளாகும்னு புரியுதும்மா. இங்கே உனக்கு எதிலேயும், தயக்கமே வேண்டாம். ஜெய்சங்கர் அடிக்கடி பெங்களூரு போறவன். இங்கே இருக்கக்கூடிய நாட்கள்லேயும் கம்பெனி, ஆஃபீஸ்னு எப்பவும் பிஸியா இருப்பான். அதனால... இங்கே நீயும், நானும் மட்டும்தான். வீட்டு ஆட்களை விட, வேலை செய்றவங்கதான் அதிகம். பங்களாவைப் பராமரிக்க ஆட்கள் வேண்டியதிருக்கு. ஜெய்சங்கரோட அப்பா... உன்னோட மாமனார்... ஆசைப்பட்டு அவரே டிஸைன் பண்ணி, கட்டின பங்களா இது. அவரோட ஆயுசு சீக்கிரமா முடிஞ்சு போச்சு...

     “ஜெய்சங்கர் தலை எடுத்ததுனால அவங்கப்பாவோட தொழில், ஆஃபீஸ் நிர்வாகம் எல்லாத்தையும் இவன் பார்த்துக்கிறான். அவங்க அப்பா பார்த்துப் பார்த்து கட்டின இந்தப் பங்களாவுல அவர் நீண்ட காலம் வாழலைங்கறது என்னோட மனக்குறை. அவர் போனதுல ஏற்பட்ட அதிர்ச்சியிலதான் என்னோட உடல்நலம் பாதிச்சுருச்சு, அடிக்கடி நெஞ்சுவலி வர ஆரம்பிச்சுடுச்சு. அதுக்கப்புறம் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் எல்லாம் வந்தாச்சு.

     “என் மகன் ஜெய்சங்கரும், என் மருமகள் நீயும், என் வீட்டுக்காரர் கட்டின இந்தப் பங்களாவுல சந்தோஷமா வாழ்ந்து... குழந்தை குட்டிகளைப் பெத்து... அந்தப் பேரக்குழந்தைகளோட நான் விளையாடணும். பேரக்குழந்தைகள் நீண்ட ஆயுசோட வாழணும். என் வீட்டுக்கார்ரோட ஆயுசையும் சேர்த்து நீங்க எல்லாரும் தீர்க்காயுசோட வாழணும். அதுதான் எனக்கு வேணும்.”

     நீளமாகப் பேசித் தன் அபிலாஷைகளையெல்லாம் கூறிய அனுசுயாவைப் பார்க்கவே தர்மசங்கடமாக இருந்தது மிதுனாவிற்கு. மணவாழ்வில் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டிராத நிலை எனில்... இதே மிதுனா மனம் திறந்து, மனப்பூர்வமாக அவருடன் கலந்துரையாடி சூழ்நிலையைக் கலகலப்பாக்கி இருப்பாள். இப்பொழுது...? தன் வாழ்க்கை அந்தக் குடும்பத்தில் தொடருமா என்பதே உறுதியாக இல்லாதபோது, நான் எப்படி இவர்களுடன் மனம்விட்டுப் பேச முடியும்? பழக முடியும்? எனவே அனுசுயாவுடன் மனம் திறந்து பழக இயலாத நிலையில் கஷ்டப்பட்டாள்.

     ‘வயது முதிர்ந்த அம்மா... தன் ஒரே மகன், செல்ல மகன், பாசத்தைக் கொட்டி வளர்த்த மகன்! அந்த மகனுக்குத் தான் பார்த்துத் தனக்குப் பிடித்த, தன் குடும்பத்திற்குப் பொருத்தமாக ஒரு பெண்ணை மருமகளாளத் தேர்ந்தெடுக்கும் உரிமை, அந்தத்தாய்க்கு இருக்கிறது. அந்த உரிமையின் அடிப்படையில், ஆசையில், தன் மகன் ஒரு பிரச்சனையில் சிக்குண்டிருக்கிறான் என்று தெரிந்தும் என்னை இவருக்குக் கல்யாணம் செய்து வைத்து விட்டார்கள். இவர்களை நான் உதாசினப்படுத்துவது சரி இல்லை. ஆனால், என்மனம் இங்கே ஒட்ட மறுக்கிறதே.

     ‘அறிந்தும், அறியாமாலும் தன் மகனுக்கு என்னைக் கட்டி வெச்சுட்டு இவங்களிடம் அந்தப் பிரச்சனை பற்றிப் பேசவும் முடியாது. பேசுவதால் இதய நோயாளியான இந்தத் தாயை இவர் இழக்க நேர்ந்து விட்டால்? ஐயோ... அதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறதே. கடவுளே...! என் இஷ்ட தெய்வமே... யோகி ராம் சுரத்குமார். என் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கொடுக்க வேண்டும் தெய்வமே!’ மாறுபட்ட... வெவ்வேறு எண்ணங்களில் அலைமோதினாள் மிதுனா. அனுசுயாவைப் பார்க்கக் கோபமாகவும் இருந்தது... சில நேரத்தில் பாவமாகவும் இருந்தது.

     “ஏம்மா... ‘அத்தை’ன்னு வாயாரக் கூப்பிட்டுப் பேச மாட்டியா?” ஏக்கத்தோடு கேட்டார் அனுசுயா.

     ஜெய்சங்கரை ஓரளவு நம்பி, அவனுடைய சிக்கலைத் தீர்க்க அவனுக்கு உதவி செய்ய எண்ணினாலும் இப்போதைக்கு மிதுனாவால் அனுசுயாவை ‘அத்தை’ என்று சகஜமாக அழைக்க இயலவில்லை.

     “ ‘அத்தை’ன்னு கூப்பிடக் கூடாதுன்னெல்லாம் இல்லை அ... அத்தை... கொஞ்சம் பழகிக்கிறேனே...!”

     “சரிம்மா... எனக்கு ஜெய்சங்கர் ஒரே மகன்... பெண் குழந்தை கிடையாது. இனி நீதான் எனக்கு மகள். சாரதா அண்ணி மட்டுமில்லை... நானும் உனக்கு அம்மாதான். இந்த வீட்ல, இந்தக் குடும்பத்துல... உனக்கு எல்லா உரிமையும் இருக்கும்மா மிதுனா...!”

     “தேங்க்ஸ் அத்தை...!”

     “சரிம்மா... மதியம் சாப்பிட்டப்புறம் நான் கொஞ்ச நேரம்...கொஞ்ச நேரமென்ன... ஒரு மணி நேரம் நல்லா தூங்கிடுவேன். நீயும் போய்ப்படுத்துக்கோ. ரெஸ்ட் எடு, போம்மா மிதுனா...!” என்று சொன்ன அனுசுயா, கொட்டாவி விட்டபடியே அவரது அறைக்குச் சென்றார்.

     “மிதுனா, பின்பக்கத் தோட்டத்துல எந்த நேரமும் வெயிலே இருக்காது. அங்கே போய் உட்காரலாமா? நீ பெங்களூரு போற விஷயமா உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...!”

     “சரி...” மிதுனா சொன்னதும், ஜெய்சங்கர் அவளைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான்.


29

     தோட்டத்தின் பச்சைப் பசேல் அழகினைக் கண்டு பிரமித்துப் போனாள் மிதுனா. ‘வீட்டுக்குள்ள இருக்கிற சாமான்களுக்குத்தான் கணக்குப் பார்க்காமல் செலவு செஞ்சிருக்காங்கன்னு பார்த்தா, தோட்டத்துல இருக்கிற, வளர்க்கிற செடி, கொடிகளுக்கும் ஏராளமாகச் செலவு பண்ணி இருக்காங்க. செடி, கொடிகளுக்குக் கூட இருப்பிடமாக விலையுயர்ந்த அலங்காரத் தொட்டிகள் என்ன? வண்ணம் பூசப்பட்ட இரும்பு வளையங்கள் என்ன...? ஒவ்வொரு செடியும் கூட கூடுதலான விலையாக இருக்கும் போலிருக்கே!

     ‘ஸ்கூலுக்காக... ப்ரின்சிபால் மேடம் நர்ஸரிக்கு அனுப்பினப்போ, அங்கே இந்தச் செடிகள்லாம் கொள்ளை விலை சொன்னாங்களே... இங்கே உட்கார்றதுக்காகப் பேட்டிருக்கிற பெஞ்சுகள் எவவ்ளவு நேர்த்தியா இருக்கு! வெயில் உணர்வே தெரியாம ஒரு சோலை மாதிரி செடிகளும், கொடிகளும் பூத்துக் குலுங்குகிற இந்த இடம்... மனச் சோர்வையெல்லாம் மறைஞ்சு போக வெச்சு... மனசு... காத்து மாதிரி எள்ளளவு கூட கனமே இல்லாமல்... நானே எங்கேயோ வானத்துல பறக்கற மாதிரி இருக்கே?

     ‘இவரோட அம்மா சொன்ன மாதிரி... இவங்கப்பா... ரொம்ப ரொம்ப ரசனையாகத்தான் ஒவ்வொரு இடத்தையும் பார்த்துப் பார்த்துச் சிற்பி செதுக்கின மாதிரி செய்ய வெச்சிருக்கார். பங்களாவோட பிரமாண்டம், வண்ணங்கள், மர வேலைப்பாடு செய்யப்பட்ட ஸோஃபா, மேஜை, நாற்காலிகள், ஒவ்வொண்ணும் பணத்தை விலைமதிப்பைப் பறைசாற்றுதே..

     “மிதுனா... மிதுனா...!” ஜெய்சங்கர் அழைக்கும் குரல் அவளது சிந்தனையைக் கலைத்தது.

     “ம்... கூப்பிட்டீங்களா?” மிதுனா கேட்டதும் ஜெய்சங்கர் சிரித்தான்.

     “எங்கேயோ போயிட்டே போலிருக்கு? நீ பெங்களூரு போற விஷயம் அம்மாவுக்குத் தெரிய வேண்டாம்... ஆனால் அவங்ககிட்டே... நீ எங்கே போறே... எதுக்காகப் போறேன்னு என்ன காரணம் சொல்றது? இதைத்தான் நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்....”

     “என் அம்மா வீட்டுக்குப் போறதா சொல்லிட்டுப்போறேன். இது சரியா வருமா?”

     “ம்ஹூம். திடீர்னு ‘நான் மிதுனாவைப் பார்க்கணும்’னு சொல்லி அவங்க பாட்டுக்கு... உன் அம்மா வீட்டுக்குக் கிளம்பி வந்துட்டாங்கன்னா...?”

     “நான் என்ன நாள் கணக்கிலேயோ பெங்களூரு போய் உட்காரப் போறேன்...?”

     “அப்படி இல்லை மிதுனா... நீ கிளம்பிப் போன மறுநாளே அம்மா, உன்னைப் பார்க்கக் கிளம்பிட்டா?”

     “அப்படின்னா... பெங்களூருல என்னோட பிரெண்டுக்குக் கல்யாணம்னு சொல்லிடுங்க.”

     “பெங்களூருன்னு சொன்னா, ‘நீயும் கூடப் போயிட்டு வா’ன்னு என்னையும் உன் கூட அனுப்புவாங்க...”

     “ ‘இங்கே ஆபீஸ் வேலை நிறைய இருக்கு’ன்னு சொல்லிச் சமாளிங்க...”

     “சரி மிதுனா. நான் போய் உனக்கு டிக்கெட் ஏற்பாடு பண்ணிட்டு, நீ தங்கறதுக்கு ஹோட்டல் ரூம் புக் பண்ணிட்டு வரேன்...”

     “டிக்கெட் ஓ.கே. ஆனா ரூம் வேண்டாம். நான் என் பிரெண்ட் கார்த்திகா கூட தங்கிக்குவேன்...”

     “சரி மிதுனா!” என்று சொன்ன ஜெய்சங்கர், கம்ப்யூட்டர் இருக்கும் அறையை நோக்கி நடந்தான். சிட்டுக்குருவி, பச்சைக் கிளிகள், பூஞ்சிட்டுக்கள் ஆகியவற்றின் இனிய ஒலிகளைக் கண்மூடி, காதுகள் குளிரக் கேட்டபடியே அங்கே உட்கார்திருந்தாள் மிதுனா.

     ‘இந்தப் பறவைகளுக்கு ஆயுள் மிகக் குறைவு என்றாலும்... உயிர் உள்ளவரை உணவும், உறைவிடமும் மட்டும் தேடுவதே இவற்றின் பிரச்சனைகள், வேறு எந்தக் கவலையும் இல்லாமல் தன் ஜோடியுடனும், குஞ்சுகளுடனும் ‘கீச்’ ‘கீச்’ என்று தங்கள் மொழியில் பேசிக் கொள்கின்றன. மனித வாழ்வில் போலக் குடும்பப் பிரச்சனைகள் ஏதும் இன்றி, வாழும் வரை அழகான ஒரு வாழ்க்கை வாழ்கின்றன இந்தப் பறவைகள்!

     ‘கடவுளின் படைப்பில்தான் எத்தனை வித்தியாசமான... கற்பனையின் பரிமாணங்கள்! வண்ணக் கலவைகளின் அழகுத் தோற்றங்கள்! ஒவ்வொரு இனப் பறவைக்கும் ஒரு வகை வண்ணம், வடிவ அமைப்பு, அலகுகளின் அழகு, குரல்களின் வித்தியாசமான இனிமைகள்! ஆண்டவன் படைப்பில் மனித இனத்தைத் தவிர அத்தனையும் ஆனந்தம்! இங்கே உட்கார்ந்திருந்தால் காற்று வரும்... கவிதையும் வரும். கவலை காணாமல் போகும்.’  

     சிந்தனைச் சிதறல்கள், ‘ஆஹா... என்ன சுகம்...? என்ற உணர்வை அவளுக்குள் தோற்றுவித்தது. தற்காலிகமாகத் தன் கவலைகளையும், பிரச்சனைகளையும் தள்ளி விட்டு, அங்கிருந்த சூழலை வெகுவாக ரசித்தாள் மிதுனா.’

     அவளது கவனத்தைக் கலைத்தது அனுசுயாவின் குரல்.

     “என்னம்மா மிதுனா... காபி குடிக்கற டைம் ஆச்சு உனக்கு என்ன வேணும்? காபியா? டீயா?”

     “இதோ... நானே வந்து காபி போடறேன். உங்களுக்கும் சேர்த்துப் போட்டுத் தரேன்.”

     இருவரும் சமையலறைக்குச் சென்றனர்.

     நவீன மயமாக்கப்பட்ட  சமையல் அறையில், எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அனுசுயாவிற்கும் சேர்த்துக் காபி தயாரித்துக் கொடுத்தாள் மிதுனா.

     “நீ போடற காபி வித்தியாசமான டேஸ்ட்டா இருக்கு மிதுனா, ரொம்ப நல்லா இருக்கு.”

     “எங்க வீட்ல ஃபில்ட்டர் காபி போட மாட்டோம். தண்ணியிலே காபித்துள் போட்டுக்  கொதிக்க வெச்சு, வடிகட்டி பால் சேர்க்கிற காபிதான். அதுபோலத்தான் இப்போ போட்டேன். அதுக்குக் காரணம் சிக்கன நடவடிக்கை.”

     இதைக் கேட்டுச் சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருந்த அனுசுயா, அதன்பின் மிதுனாவிடம், “மிதுனா, நான் ஒண்ணு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே? உன் அம்மா குடும்பத்துக்கு மாசா மாசம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுக்கலாம்னு  நினைக்கிறேன். என்னை உன் மாமியாராவோ... அல்லது உங்கம்மாவோட சம்பந்தியாவோ நினைக்காம... உங்களுக்கு நெருக்கமான உறவா நினைச்சு, நீ இதை மறுக்கக் கூடாது.”

     அனுசுயா பேசி முடிப்பதற்குள் வேகமாக மறுத்துப் பேசினாள் மிதுனா.

     “ம்ஹூம்... வேண்டாம் வேண்டவே வேண்டாம். ஏற்கெனவே இந்தக் கல்யாணம் பத்திப் பேசும்போது கல்பனாம்மாகிட்டே ‘என்னோட சம்பளப் பணம் அதாவது அந்தத் தொகையை மாசா மாசம் எங்கம்மாவுக்குக் கொடுக்கணும்னு பேசி நீங்களும் அதுக்குச் சம்மதிச்சீங்க. அதைக் கேட்கவே எனக்கு ஏகப்பட்ட தயக்கம். எங்க குடும்பத்தோட வாழ்வாதாரமே என்னோட சம்பளப் பணம்தான். அதனாலேதான் அந்தத் தொகையை உங்ககிட்டே கேட்க வேண்டிய நிலைமை, சூழ்நிலை. அதுக்கும் மேலே வேறு    எதுவும் வேண்டாம்... ப்ளீஸ், இந்த நிபந்தனைக்குக் கட்டுப்பட்டால்தான்... அதாவது நான் வேலைக்குப் போனால்...  என்னோட சம்பளப் பணத்தை எங்கம்மாவுக்குக் கொடுப்பேன். வேலைக்குப் போகலைன்னா, அந்தத் தொகையை மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கணும்கிறதுதான் அது. மேற்கொண்டு எதுவும் வேண்டாம். நீங்க தேவையான்னு கேட்டதே போதும் தேங்க்ஸ்.”

     “சரிம்மா, ஆனால் எப்பவும், எதுவாச்சும் அவசரமாக... அவசியமாகத் தேவைப்பட்டால் தயங்காமல் என்கிட்டேயோ ஜெய்சங்கர்கிட்டயோ கேளும்மா... இன்னொரு விஷயம் மிதுனா... நீ தப்பாக நினைச்சுக்கலைன்னா நான் ஒண்ணு கேட்கிறேன்... உன்னோட நிபந்தனைக்கு ஒத்த வர லன்னா... அதாவது பணமும் தரமாட்டோம்... வேலைக்கும் போகக்கூடாதுன்னு மாப்பிள்ளை வீட்டக்காரங்க சொல்றாங்கன்னு வெச்சுக்கோ... அப்போ நீ என்ன செஞ்சிருப்பே...?”

     “என்ன செஞ்சிருப்பேனா...? கல்யாணமே செஞ்சுருக்க மாட்டேன். எனக்கு என் அம்மா, அப்பா, தங்கைதான் முக்கியம். என் உலகம், அவர்களுக்கு உதவ மனசு இல்லாதபோது கல்யாண வாழ்க்கையே எனக்குத் தேவை இல்லாதது.”


     “உன்னோட பாசம் பெரிய விஷயம்மா. தன்னலம் மட்டுமே பெரிசுன்னு வாழற இந்தக் காலத்துல, உன்னைப் போல குடும்ப நலம்தான் முக்கியம்னு தியாக மனப்பான்மையான பொண்ணுங்களைப் பார்க்கறதே அபூர்வம். இப்படி ஒரு பாசமான பொண்ணு எனக்கு மருமகளா வந்ததே என்னோட அதிர்ஷ்டம்மா...!”

     அப்போது அங்கே ஜெய்சங்கர் வந்தான்.

     “மிதுனா... இதே உன்னோட பெங்களூரு ஃப்ளைட் டிக்கெட்டோட ப்ரிண்ட் அவுட்.”

     “என்ன ஜெய்சங்கர்? மிதுனாவுக்கு பெங்களூரு டிக்கெட்டா?
எதுக்காக? எப்போ போறா?”

     “அது வந்ததும்மா... மிதுனாவோட க்ளோஸ் பிரெண்டுக்குக் கல்யாணமாம். கல்யாணம் பெங்களூருல. இருபதாம் தேதி கல்யாணம். அதனால நாளைக்குக்  காலையிலே போறதுக்கு டிக்கெட் எடுத்திருக்கு...”

     “பெங்களூருன்னா நீயும் போக வேண்டியது தானே? ‘மிதுனா போறா... மிதுனா போறா’ன்னு செல்றே?”

     “அது வந்தும்மா... எனக்கு இங்கே ஆடிட்டிங் வேலை நிறைய இருக்கு. நாலு நாள் தொடர்ந்து ஆடிட்டர் நம்ம ஆபிஸுக்கு வரப்போறார். அதனால நிச்சயமா என்னால போக முடியாதும்மா...”

     “சரிப்பா... ஆனால் இப்போதான் கல்யாணம் ஆன ஜோடி நீங்க. கல்யாணத்துக்கு மறுநாளே வீட்டு விலக்காகி, அவங்கம்மா வீட்டுக்குப் போயிட்டா... இப்போ வந்ததும் வராததுமா பெங்களூரு போகப் போறாங்கிறே...”

     “சின்ன வயசுல இருந்தே ஒண்ணா சேர்ந்து படிச்சவங்க... போகாமல் இருந்தா நல்லா இருக்காதும்மா...”

     “சரிப்பா ஜெய்சங்கர்... பேசிக்கிட்டிருந்ததுல உனக்கு டீ போட்டச் சொல்ல மறந்துட்டனே... வேணி, வேணி...’’ வேலை செய்யும் பெண்ணைக் கூப்பிட்டார் அனுசுயா.

     “நான் போய் போட்டு எடுத்துட்டு வரேன்...!” என்ற மிதுனா, அங்கிருந்து சமையலறைக்கு நகர்ந்தாள்.

30

     பெங்களூரு போகும் முன்பு சாரதாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று மிதுனா கூறியபடியால், அவளை சாரதாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் ஜெய்சங்கர்.

     தான் அங்கே வருவதாக சாரதாவிற்கு மொபைலில் தகவல் கூறி இருந்தபடியால், அவளை எதிர்பார்த்துக் கார்த்திருந்தார் சாரதா.

     மிதுனாவுடன் ஜெய்சங்கரும் வந்தபடியால் அவனை வரவேற்றார் சாரதா.

     “வாங்க மாப்பிள்ளை... வாம்மா மிதுனா...”

     இருவரும் உள்ளே சென்றனர்.

     “காபி போடறேன் மாப்பிள்ளை...”

     “சரி அத்தை... மாமா முழிச்சிருக்காரா...?”

     “அவர் முழிச்சுதான் இருக்கார்.”

     கிருஷ்ணனிடம் நலம் விசாரித்தான். கிருஷ்ணன் மகிழ்ச்சி அடைந்தார். சாரதா காபி கொண்டு வந்து கொடுத்தார்.

     குடித்தான் ஜெய்சங்கர்.

     “மிதுனா... உன் தங்கை அருணா...”

     “அவ காலேஜ்ல இருந்து டூர் கூட்டிட்டுப் போயிருக்காங்க.”

     “சரி மிதுனா... நான் என்னோட ஆபீஸ் வேலையை முடிச்சுட்டு வந்து உன்னைக் கூட்டிட்டுப்போறேன்.

     “சரி.”

     “அத்தை... நான் கிளம்பறேன்...”

     “சரி மாப்பிள்ளை, போயிட்டு வாங்க.”

     “மிதுனா, நான் கிளம்பறேன்... எங்கம்மாவுக்கு நீ அவங்க கூடவே இருக்கணும்னு ஆசை.”

     “அதுக்குரிய நேரமும் காலமும் கூடி வந்தால்... எல்லாமே நல்லபடியாக, நாம விரும்பற மாதிரிதான் நடக்கும். எல்லாம் அவன் செயல்ங்கிறதுல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. அதை விட எல்லாமே நன்மைக்குத்தான்னு நான் ரொம்ப நம்பறேன். என்னோட இந்த மணவாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற பிரச்சனையும் சரியாகிடும்கிற நம்பிக்கையும் இருக்கு. ஆனால், அது வரைக்கும் காத்திருங்க. இப்போதைக்கு வேற எதையும் எதிர்பார்க்காதீங்க... ப்ளீஸ்... நான் எடுக்கிற எல்லா நடவடிக்கைக்கும் நீங்க ஒத்துழைப்பு கொடுப்பீங்கன்னு நான் நம்பறேன். உங்கம்மா நல்லவங்கதான். என் மேலே பிரியமா இருக்காங்க. ஆனால், அதுக்காக நான் வந்து அவங்க கூடவே இருப்பேன் என்றெல்லாம் எதிர்பார்க்காதீங்க...”

     “சரி மிதுனா... எல்லாமே உன் இஷ்டம்தான்.”

     ஜெய்சங்கரும், மிதுனாவும் இவ்விதம் மனம் ஒட்டாமல் பேசிக் கொள்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சாரதாவிற்கு மிகவும் கவலையானது.

     ‘என் மகளின் திருமண வாழ்க்கை இப்படி சஸ்பென்ஸா இருக்கே... மாப்பிள்ளையைப் பார்த்தால் நல்லவர்தான்னு தோணுது... ஆனால், இன்னொரு பொண்ணு அவரோட சம்பந்தப்பட்டிருக்காளே...! அது என்ன விஷயம்னு தெரியலியே?’ கவலையோடு மனதிற்குள் சங்கடப்பட்டுக் கொண்டிருந்த சாரதாவின் கவனத்தை ஈர்த்தது மிதுனாவின் குரல்.

     “போயிட்டு வாங்க மாப்பிள்ளை!” ஜெய்சங்கர் கிளம்பினான்.

 

 

 

31

     ஜெய்சங்கர் சென்றதும் கவலையான முகத்தோடு மிதுனாவைப் பார்த்தார் சாரதா.

     “என்னம்மா மிதுனா... என்ன ஆச்சு? நீ மாப்பிள்ளைகிட்டே பேசிட்டு சொல்றேன்னு சொன்னே. எனக்கு மனசே சரி இல்லை. பொண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோமா... அவ, புகுந்த வீட்ல சந்தோஷமா வாழ்கிறாள்ங்கிற ஒரு நிம்மதி நல்ல பையன்னு மத்தவங்க சொன்னதுனாலதான் இந்தக் கல்யாணத்துக்கு நான் சரின்னு சொன்னேன். அவங்க பணக்காரங்க... சொத்து சுகம் நிறைய இருக்குன்னா உன்னைக் கட்டிக் கொடுத்தேன்? வசதியான குடும்பம்னா போற இடத்துல மகள் சந்தோஷமா... சௌகரியமா... வாழ்வாள்னு நான் நினைச்சதும், ஆசைப்பட்டதும் நிஜம்தான்.

     “ஆனா, அதுக்காகக் கண்ணை மூடிக்கிட்டு எப்படி இருந்தாலும் பரவாயில்லைன்னு நான் நினைக்கலியே... கஞ்சியும் கந்தலுமா வாழ்ந்தப்போ கூட வயிறு பசிச்சு சாப்பிட்டோம். படுக்கையில படுத்தா படுத்த அடுத்த நிமிஷம், தானாகத் தூக்கம் வந்துச்சு. இப்போ, பொண்ணு செல்வந்தர் குடும்பத்துல வாழ்க்கைப்பட்ட பிறகு, பசியும் இல்லை... ராத்திரி முழுசும் விட்டத்தை வெறிச்சுப் பார்த்துக்கிட்டு தூக்கம் வராத நிலைமை! ஐயோ கடவுளே! கண் திறந்து பார்க்கக் கூடாதா...?”

     “அட... என்னம்மா நீங்க? தைரியம் ஊட்டி வளர்த்த நீங்களே இப்படிக் கவலைப்படலாமா? தாலி கட்டினவனைப் பத்தி... விரும்பத் தகாத விஷயத்தைக் கேட்கும் போது அவசரப்பட்டு, ஆத்திரப்பட்டு, கோபத்துல பொங்கி சண்டை போடற பொண்ணாவோ... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி, பிறந்த வீட்ல வந்து முடங்கிக் கிடக்கிற பொண்ணாவோ நீங்க என்னை வளர்க்கலை. எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகளை எதிர்த்துப் போராடறதுக்கும், அந்தப் போராட்டம்... வெற்றிகளைச் சந்திக்க வைக்கிறதாக இருக்கணும்னு நீங்க எனக்கு அறிவுரை சொல்லி வளர்த்தீங்க.

     “கவலைப்பட்டுக்கிட்டே இருந்தால்... மன அழுத்தம் வரும், அது நம் உடல் ஆரோக்யத்தைப் பாதிக்கும்னு அடிக்கடி சொல்வீங்களேம்மா... இப்போ நீங்களே கவலை காரணமாக ராத்திரி முழுசும் தூங்காம கஷ்டப்படறதா சொல்றீங்களே... அவர் கூட பேசின வரைக்கும் அவர் நல்லவர்னுதான் என்று தோணுது...” என்று சொல்ல ஆரம்பித்த மிதுனா, அதுவரை ஜெய்சங்கர் கூறிய விபரங்களையெல்லாம் விளக்கிக் கூறினாள்.

     “ஓஹோ... நீ சொல்றதை வெச்சுப் பார்க்கும்போது மாப்பிள்ளை மேலே பெரிசா தப்பு இல்லியோன்னுதான் தோணுது. நாம ஏற்கெனவே அப்படித்தானே நினைச்சோம்...?”

     “அம்மா... தப்பு செய்றதுல என்னம்மா சின்ன தப்பு... பெரிய தப்பு? கண்ணாடி பாத்திரம் தானா கீழே விழுந்து உடைஞ்சாலும் உடைஞ்சதுதான்... நாம கை தவறிக் கீழே போட்டு உடைஞ்சாலும், உடைஞ்சது உடைஞ்சதுதானே? ஆனால்... இவரோட இரக்க சுபாவம் தெரிஞ்சு, பணம் கறக்க முயச்சி நடந்திருக்குமோன்னும் எனக்குச் சந்தேகம் இருக்கு... இந்த என்னோட சந்தேகம் நிரூபணமானா இவர் நல்லவர்தான். ஆனால், என்னதான் இருந்தாலும். படிச்ச ஒரு மனுஷன்... இவ்வளவு பெரிய விஷயத்துல இப்படி ஏமாறுவாரான்னும் எரிச்சலா இருக்கு. விடுகதைக்கு விடை கண்டுபிடிக்கிற மாதிரி இந்தப் பிரச்சனையை நானே கையிலே எடுத்துக்கிட்டேன். அதுக்கு நீங்கதான். நான் பெங்களூரு போற முதல் படிக்கட்டை எனக்குக் காண்பிச்சிருக்கீங்க...”


     “மெள்ள ஏறும்மா... இடறி விழந்துடக் கூடாது, கவனம்.”

     “சரிம்மா... அசட்டுத்தனமா எதுவும் செஞ்சுட மாட்டேன்மா. மதி நிறைஞ்ச மந்திரி மாதிரி... உடனே எனக்குப் பெங்களூரு போற ஆலோசனை சொன்னீங்களே... நீங்க க்ரேட்மா. எந்தப் பிரச்சனையக இருந்தாலும் கலங்கிப் போய் நின்னுடாம நல்லா யோசிச்சு... என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு எனக்குக்கத்துக் கொடுத்ததே நீங்கதானேம்மா... உங்களோட பாசமும், பிரார்த்தனையும், அறிவுரைகளும் என்னை நல்லபடியாக வாழ வைக்கிற மந்திரங்கள்மா...”

     மகளின் பாராட்டுகளைக் கேட்டு உள்ளம் மகிழ்ந்த சாரதா, அன்பு பெருக மிதுனாவை அணைத்துக் கொண்டாள். அவர்கள் இருவரது இதயத்திலும் தற்காலிகமான ஒரு நிம்மதி ஏற்பட்டது.

 

32

     பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் மிதுனா. விமானத்தின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள் அவள்.

     விமானம் பறக்க ஆரம்பித்தது. முதல் விமானப் பயணம் என்பதால் அவளையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு, ஒருவித பரபரப்பானாள் மிதுனா. ஜன்னல் வழியே தெரிந்த மேகக் கூட்டம் போன்ற ஸெட், செயற்கை அரங்கம் நிர்மாணித்து தெய்வங்கள் போன்ற மேக்கப் போட்டுக் கொண்ட நடிகர்கள் அந்த வெண்மேகச் செயற்கை அரங்கத்தின் நடுவே காட்சி அளிப்பார்கள். அந்த நினைவுதான் வந்தது மிதுனாவிற்கு.

     விமானத்தின் ஜன்னல் வழியே தென்பட்ட மேகக் கூட்டத்தின் நடுவே, தெய்வங்கள் காட்சி அளிப்பது போலக் கற்பனை செய்துகொண்டு பிரார்த்தனை செய்தாள். ‘என்னுடைய இந்தப் பிரயாணத்தின் பலனாக என் வாழ்க்கை நல்லபடியானதாக அமையணும் தெய்வங்களே!’ இவ்விதம் இறைவனைக் கேட்டுக் கொண்டாள் அவள்.

     ‘ராமாயணத்தில், ராமருடன் வனவாசம் செய்தாள் சீதாதேவி, என் வாழ்க்கையில், என் கணவர், ராமரா இல்லையான்னு கண்டுபிடிக்க வேண்டியது இருக்கு...’ தனக்குள் வேதனை கலந்த சிரிப்புச் சிரித்துக் கொண்டாள்.

     ‘பணக்காரக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு. அந்தப் பணக்கார  வாழ்க்கையின் வளமான அடையாளமான பங்களாவைப் பார்த்தாச்சு... படகு போன்ற கார் சவாரி... இதோ... இப்போ... விமானத்துல பறக்கிற பிரயாணம்.  இதையெல்லாம் பெரிசா நான் எடுத்துக்கிறது இல்லை. உயிர் இல்லாத இவையெல்லாம் இருந்து எனக்கென்ன ஆகப்போகுது? உயிர் உள்ள ஜீவன்கள், உண்மையாக இருந்து, உறுதுணையாகக் கூட வந்தால் போதும், பணம் என்பது இதுக்கு அடுத்ததுதான்.

     ‘ ‘பணம் என்னடா பணம் பணம்... குணம்தானடா நிரந்தரம்’னு எப்பவோ கவிஞர் பாடினது... இப்போ உள்ள என்னோட வயசுல உள்ள இந்தத் தலைமுறை வரைக்கும் கவிஞரோட அந்தப் பாடல் பாடமா அமைஞ்சிருக்கே... அனுபவப்பூர்வமான உணரவும் வெச்சிருக்கு... பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரைக்கும் பாயும்னு சொல்வாங்க. அது நிஜம்தான் போலிருக்கு.’

     ரயில் பிரயாணத்தில் ஜன்னல் வழியே தெரியும் இயற்கைக் காட்சிகள் தோன்றி மறைவது போல, மிதுனாவின் மனதில் பற்பல எண்ணங்கள் தோன்றி மறைந்தன. பறந்து கொண்டிருந்த விமானம், பெங்களூரு விமான நிலையத்தில் தரை இறங்கியது. வெளியே வந்ததும், அவளுடைய பெயரைத் தாங்கிய ஒரு அட்டையைப் பிடித்தபடி ஒருவன் நின்றிருப்பதைப் பார்த்தாள்.  அவளுக்காகக் கார் ஏற்பாடு செய்திருப்பதாக ஏற்கெனவே ஜெய்சங்கர் அவளிடம் சொல்லி இருந்தான்.

     எனவே அவளது பெயர் தாங்கிய அட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். நாய்க்குட்டியைச் சங்கிலி போட்டு அழைத்துக் கொண்டு போவது போல சிறிய சூட்கேஸை இழுத்துக் கொண்டு போனாள் மிதுனா.

     “மேடம், என் பேர் திலகன், ஜெய்சங்கர் ஸார் எப்போது பெங்களூரு வந்தாலும். என்னைக் கூப்பிடுவார். இது என்னோட சொந்த டாக்ஸி. இங்கே உங்க வேலை முடியுற வரைக்கும், நீங்க என்னைக் கூப்பிடுங்க. என்னோட மொபைல் நம்பர் கொடுத்துடறேன். கார்ல ஏறிக்கோங்க மேடம்...” என்ற திலகன், மிதுனாவின் பெட்டியை வாங்கி, காரின் டிக்கியில் வைத்தான். மிதுனா காரில் ஏறினாள்.

     “இப்போ நீங்க எங்கே மேடம் போகணும்?”

     தன் தோழி கார்த்திகாவின் வீட்டு அட்ரஸைக் கூறினாள் மிதுனா. அவள் சொன்ன இடத்தில் அவளை இறக்கி விட்டான் திலகன்.

     மிதுனா இறங்கியதும் அவளிடம், “நான் இங்கேயே வெயிட் பண்றேன் மேடம்...” என்றான்.

     “சரி, உன்னோட மொபைல் நம்பர் கொடு, தேவைன்னா உனக்குப் போன் பண்றேன். வேண்டியதில்லைன்னாலும் சொல்லிடறேன்.”

 

 

33

     கார்த்திகாவின் அப்பார்ட்மென்ட் மிக அழகாக இருந்தது. மூன்று பெரிய அறைகள், பெரிய ஹால், சாப்பிடும் மேஜை போடுவதற்குத் தாராளமான இடம்... யாவும் கொண்ட மிகப் பெரிய அப்பார்மென்ட்டை கார்த்திகாவும் அவளது கணவன் ஹரியும் சேர்ந்து லோன் போட்டு வாங்கி இருந்தனர். இருவருமே ஐந்து இலக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதால் அவர்களால் வசதி மிக்க அந்த அப்பார்ட்மென்ட்டை வாங்கவும் முடிந்தது.

     கார்த்திகா, அங்கே இருந்த பால்கனிகளில் அழகிய பூச்செடிகளைத் தொட்டிகளில் வளர்த்து வந்தாள். அந்தச் செடிகள் அந்த வீட்டிற்கு மேலும் அழகு சேர்த்தது.

     ஷோ கேஸில்... மிக அழகிய, விலையுயர்ந்த பொம்மைகளையும், ஓவியங்களையும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள்.

     சுவர்களில் ஆங்காங்கே மாட்டப்பட்டிருந்த சுவர்க் கடிகாரங்கள் புதுமையான அமைப்பில் இருந்தன. தொட்டிகளில் உள்ள செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள் கார்த்திகா.

     அவளது நிறம், மாநிறம்தான் என்றாலும் கார்த்திகா மிக லட்சணமாக இருந்தாள். கண்கள், மூக்கு, வாய், உதடு, நெற்றி... இவை யாவும் மிக அழகாக அமையப் பெற்று இருந்தாள்.

     பருமனாகவும் இல்லாமல் அதிகக் குச்சி போலவும் இல்லாமல் தளதளவென்னும் வாளிப்பான உடல்வாக கொண்டிருந்தாள்  கார்த்திகா. ஒரு முறை பார்ப்பவர்கள், மறுமுறை நிச்சயம் பார்க்கும் வண்ணம் அழகான தோற்றத்தில் காணப்பட்டாள் அவள். ஸோஃபாவில் சாய்ந்து அன்றைய செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான் அவளது கணவன் ஹரி.

     ஹரியின் நிறம் கருப்பு, ஆனால் திரைப்பட நடிகர்கள் போன்ற தோற்றத்தில், வாட்டசாட்டமாகவும் கம்பீரமாகவும் இருந்தான் ஹரி. பழகுவதில் இனியவனாகவும், அன்பானவனாகவும குணநலன் பெற்றிருந்தான்.

     “கார்த்திகா... உன்னோட பிரெண்ட் மிதுனா வர்றதா சொன்னியே... ஏர்போர்ட்ல இருந்துபோன் வந்துச்சா?”

     “ஆமா ஹரி... எப்பவோ போன் பண்ணிட்டா. ஸோ, ஸாரி டியர்... சொல்ல மறந்துட்டேன்.”

     அப்போது அழைப்பு மணி ஒலித்தது. ஓடிச்சென்று கதவைத் திறந்தாள் கார்த்திகா.

     “ஹலோ ஹரி... எப்படி இருக்கீங்க? உங்க கல்யாண ரிசப்ஸன் அப்போ உங்களைப் பார்த்தது... பேசினது அதுக்கப்புறம் மொபைல்ல பேசி இருக்கோம். உங்க வேலையெல்லாம் எப்படிப் போய்க்கிட்டிருக்கு?”

     “எல்லாம் நல்லபடியாகப் போய்க்கிட்டிருக்கு.”

     “வந்து உட்கார்ந்து பேசு மிதுனா... என்னைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... மொபைல்ல பேசிக்கிற தோட சரி. உன்னோட கல்யாணத்துக்கு ரொம்ப ஷார்ட் நோட்டீஸ் கொடுத்தே... அந்தச் சமயம், நானும் ஹரியும் ஆஸ்திரேலியா போற ப்ளான் கன்ஃபார்ம் ஆயிடுச்சு. அதனாலே வர முடியலை. உன்னைப் பார்க்கச் சென்னைக்கு வர்றதாகச் இருந்தோம்... அதுக்குள்ளே திடீர்னு நீயே வர்றதாகச் சொன்னதும் எனக்கு ஆச்சர்யமான சந்தோஷம். சரி, சரி... வா, சாப்பிடலாம்... மத்ததையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்...” என்ற கார்த்திகா, சாப்பிடும் மேஜை மீது உணவு வகைகளை எடுத்து வைத்தாள்.


     ஹரியும் அவளுக்கு உதவி செய்தான்.

     “உன் வீடு ரொம்ப அழகா... கலையம்சமா இருக்கு கார்த்திகா...”

     மிதுனா பாராட்டியதும் மகிழ்ச்சி அடைந்தாள் கார்த்திகா.

     “தேங்க்யூ, சரி, வந்து உட்கார்...”

     மிதுனா போய் உட்கார்ந்தாள்.

     “ஹரி, நீங்களும் உட்காருங்க டியர்...”

     கார்த்திகா  சொன்னதும் ஹரியும் உட்கார்ந்தான். முதலில் ரவா கேசரியை எடுத்துப் பரிமாறினாள். நெய் மணக்க, பொன் நிறமாக வறுக்கப்பட்ட  முந்திரிப்பருப்பு ஆங்காங்கே மின்னிக் கொண்டிருந்தது கேசரியில்.

     இனிப்பு சாப்பிடும் மனநிலையில் இல்லாத மிதுனா, “எதுக்கு கார்த்திகா... வேலையை இழுத்து வெச்சுக்கிட்டிருக்கே? சிம்பிளா ஏதாவது செஞ்சிருக்க வேண்டியதுதானே?”

     “அட, நீங்க வேற மிதுனா... உங்களை சாக்கு வெச்சு எனக்குக் கேசரி கிடைச்சிருக்கு. எனக்கு வெயிட் போட்டுடும்னு  எப்பவாச்சும்தான் கேசரி செய்வா.”

     “சரி, சரி... இதுதான் சாக்குன்னு நிறையச் சாப்பிடா தீங்க...” என்றவள் மிதுனாவிடம்.

     “மிதுனா... இட்லி, வடை, சாம்பார், சட்னி, பூரிக்கிழங்கு, இதெல்லாம் இருக்கு... நல்லாச்  சாப்பிடு.”

     “என்னடி கார்த்திகா. ஒரு உடுப்பி ஹோட்டலையே உன்னோட டைனிங் டேபிள் மேலே கொண்டு வந்து வெச்சிருக்கே? நல்ல ஆளு... நீயும் வந்து உட்கார் கார்த்திகா... சேர்ந்து சாப்பிடலாம்.”

     கார்த்திகாவும் உட்கார்ந்தாள். மூவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டனர்.

     “உன்னோட ஹஸ்பென்ட் எப்படி இருக்கார்? அவர் ஏன் உன் கூட வரலைன்னுகேட்டதுக்கு, எல்லாம் நேர்ல பேசிக்கலாம்னு சொன்னே? இப்போ சொல்லுடி...”

     “என்னோட மணவாழ்க்கை ஒரு கேள்விக்குறியாக இருக்கு...”

     இதைக் கேட்ட கார்த்திகா, அதிர்ச்சி  அடைந்தாள்.

     “என்னாடி சொல்றே? கேள்விக்குறியாக இருக்கா?”

     “ஆமா... இந்த பெங்களூருல அவருக்கு ஏற்கெனவே கல்யாணமாகி இருக்கு...” என்று தனது பிரச்சனைகளைச் சொல்ல ஆரம்பித்த மிதுனா, அனைத்து விவரங்களையும் விவரித்துக் கூறினாள்.

     “உன்னோட யூகப்படி உன் கணவர் நல்லவரா, அவர் சொன்னதெல்லாம் நிஜம்தானான்னு நீ தெரிஞ்சுக்கணும்... அதுக்கு உனக்குத் தேவையான எல்லா உதவியும் நானும், ஹரியும் செய்யத் தயாரா இருக்கோம்...”

     “தேங்க்ஸ் கார்த்திகா...”

     “நமக்குள்ளே என்னடி தேங்க்ஸ்... கீங்ஸெல்லாம்? நாம, உன் ஹஸ்பென்ட கொடுத்திருக்கிற அட்ரசுக்குப் போவோம். கல்யாணம் பத்தியெல்லாம் எதுவும் சொல்லாம அங்கே விசாரிக்கலாம்... இன்னிக்கு ரிலாக்ஸ்டா, கொஞ்ச நேரம் ஊரைச் சுத்தலாம்...”

     “சரி கார்த்திகா... ஆனால், விசாரிக்கும்போது... என் கணவர் சொன்ன தகவல் பொய்யாக இருந்தால்...?”

     “ரிலாக்ஸ் மிதுனா, சுத்திச் சுத்தி அதைப் பத்தியே பேசுறே... யோசிக்கிறே... உன் கணவர் மேலே நம்பிக்கை இருக்கிறதுனாலதானே இங்கே வந்து உண்மைகளைக் கண்டறியலாம்னு சொன்னே? திடீர்னு பல்ட்டி அடிக்கிறியே? ஓ.கே. பெண்கள் நமக்கு இயல்பானது இந்தக் கொஞ்சமான சந்தேகம். ஏதோ தடுமாற்றம... அதனாலே இப்படிக் கேக்கிறே. நீ ஒரு முற்போக்கான பெண்.

     உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? இன்னிக்கு ஒரு நாள் விட்டுடு. ஊரைச் சுத்தலாம்... நிதானமாக என்ன பண்றது... ஏது பண்றதுன்னு யோசிக்கலாம்... பேசலாம்.”

     அப்போது ஹரி, “ஆமா மிதுனா... கார்த்திகா சொல்றது சரிதான். மனசை ரிலாக்ஸ் பண்ணிக்கிட்டா, பிரச்சனைகளுக்குரிய வழிமுறைகள் தெளிவாகும்...” என்றான்.

     கார்த்திகாவிடமும், ஹரியிடமும் பேசியபிறகு ஓரளவு அமைதி அடைந்தாள் மிதுனா.

     “அது சரி, நீங்க ரெண்டு பேரும்  ஆபீஸுக்குக் கிளம்பலியா?”

     மிதுனா கேட்டதும் ஹரி சிரித்தான்.

     “நீங்க வர்றதா சொன்னதும் ஆபீஸுக்கு லீவு பேட்டுட்டா இவ...”

     “அப்படியாடி கார்த்திகா? எனக்காக நீ மெனக்கெட்டு நிறைய உதவி செய்யறே...”

     “நாலு வயசுல இருந்து பதினாறு வயசு வரைக்கும் ஸ்கூல்ல பிரெண்ட்ஸா இருந்தோம். அதுக்கப்புறம் நீ டீச்சர்ஸ் ட்ரெயினிங்குக்காக பி.எட். படிக்கப் போயிட்டே... நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கப் போயிட்டேன். ஆனா, நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை விடாம தொடர்ந்துகிட்டிருக்கோம்.

     “இப்படி ஒரு நட்புக்கு, இது ஒரு பெரிய உதவியா என்ன? என்னால முடிஞ்ச எல்லா உதவியும் செய்வேன். ஹரியும் எனக்கு ஒத்துழைக்கறதுக்கு... நாம அவருக்குத்தான் நிறையத் தேங்க்ஸ் சொல்லணும்.”

     “அம்மா... தாயே...! ஐஸ் வெச்சது போதும், நான் ஆஃபீஸ் கிளம்பறேன்!” என்ற ஹரி, ஆஃபீஸுக்குக் கிளம்பினான்.

     தோழிகள் இருவரும் வெளியே கிளம்பத் தயாரானார்கள்.

 

34

     மிதுனாவை வற்புறுத்திக் கடைகளுக்கு அழைத்துச் சென்றாள் கார்த்திகா, ஷாப்பிங் செய்தாலும் சரி, சும்மா எதையும் வாங்காமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கும் ‘விண்டோ ஷாப்பிங்’ என்றாலும் சரி, ஒரு வித புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தாள். மிதுனா, அவளுக்கு எதுவும் வாங்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ இல்லா விட்டாலும்... உயிர்த்தோழி கார்த்திகாவுடன் சுற்றி வருவதும், அழகிய பொருட்களை வேடிக்கை பார்ப்பதும் மிதுனாவிற்கு மகிழ்ச்சி அளித்தது.

     மிதுனாவிற்குத் திருமணப் பரிசாக நல்லதாக ஏதாவது வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்த கார்த்திகா, ஒரு நகைக்கடைக்கு மிதுனாவை அழைத்துச் சென்றாள்.

     ‘வேண்டாம்’ ‘வேண்டாம்’ என மறுத்த மிதுனாவைச் செல்லமாகத் திட்டி சிகப்புக் கற்களும், முத்துக்களும் பதிக்கப்பட்ட ஜிமிக்கிகளை வாங்கிக் கொடுத்தாள்.

     “இப்போ எனக்கு எதுக்குடி இது...?”

     “கல்யாணத்துக்கு வரமுடியலைல்ல? அதனால இப்போதான் கொடுக்க முடியும். எதுக்குன்னு கேட்டால்...? இது உனக்கு என்னோட கல்யாணப் பரிசு.  நாளைக்கு இதை எனக்குப் போட்டுக் காட்டணும், சரியா...?

     “என்னடி...பேச்சுல சுருதி இறங்குது?”

     “அதெல்லாம் ஒண்ணுமில்லை...”

     “என்ன ஒண்ணுமில்லை...? அப்பப்போ மூட் அப்ஸெட் ஆகிடறே. எனக்குப் புரியுது. நேர்மை தவறி நடந்துக்கிறது உனக்கு பிடிக்காதது. அதுக்கு என்ன பண்றது? உலகத்துல எல்லாருமே உத்தமரா இருக்க முடியுமா? இன்னொரு விஷயம்... உன் கணவர் நல்லவரா இருக்கலாம்னு நீ ஓரளவு நம்புறே. அது உண்மைன்னு உனக்கு நிரூபணமாகணும், அதுக்குத்தானே இங்கே வந்திருக்கே? அதுக்குரிய நடவடிக்கையே இன்னும் ஆரம்பமாகலை... அதுக்குள்ள அப்படி இருக்மோ... இப்படி இருக்குமோன்னு முடிவு தெரியறதுக்குள்ளே குழம்பித் தவிக்கறே.

     இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட சந்தோஷமாக இருந்தே... திடீர்னு டல்லாயிட்டே ப்ளீஸ்டி... சியர்ஃபுல். உனக்கு ஹெல்ப் பண்ண நாங்க இருக்கோம். உன்னோட திருமணம் உனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்டுத்தாது. நான் அப்படி நம்புறேன். சில சமயம் நமக்கு ஏதாவது தீமையானதாகவோ... விபரீதமானதாகவோ நடந்திருக்கலாமோ... அல்லது நடக்கப்போகுதுன்னா நம்ம உள் மனசுல ஒரு பயப்பிசாசு பிறாண்டி எடுக்கும். டிக்... டிக்...னு துடிக்கற இதயம், திக்... திக்...ன்னு திகில் உணர்வுல துடிக்கும்.

     ஆனால், உன்னோட விஷயத்துல நீ சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்க்கும்போது அப்படி ஒரு எதிர்மறையான... நெகட்டிவ்வான உணர்வு ஏற்படலை. நீ எந்த மணத்தாக்கத்துக்கும் ஆளாகாதே. நம்பிக்கையும் பாஸிட்டிவு உணர்வுகளும்தான் வாழ்க்கையில் வெற்றி கொடுக்கும். உன் கல்யாண வாழ்க்கையிலே... உன் கணவர் மேலே களங்கும் ஏதும் இல்லைன்னு கடவுள் காட்டுவார். அதுக்குரிய பிரார்த்தனையும், வாழ்த்தும் உனக்கு உண்டு. நான் சொன்னதெல்லாம் நிஜமாகி, நிழலாக நிற்கிற உன் பிரச்சனைகள் உன்னை பயமுறுத்தாத ஒரு சந்தோஷமான வாழ்க்கை நீ வாழப்போறே...

     வெளியில் சுற்றி வந்தாலும், மிதுனாவிற்குத் தைரியமும், ஆறுதலும் கூறி, நம்பிக்கையூட்டும் பேச்சுக்களைப் பேசிக் கொண்டே இருந்தாள் கார்த்திகா. அவளது பேச்சைக் கேட்ட மிதுனாவிற்கு மனதில் நம்பிக்கையும், அமைதியும் ஏற்பட்டன.

     கார்த்திகாவின் இல்லற வாழ்க்கையில் ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட், அவளுக்கு ஹரி போன்ற நல்ல பண்பாளன் கணவனாக அமைந்தது. தன் மனைவி கார்த்திகாவின் தோழி மிதுனாவிற்கு உதவி செய்வதற்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்தான். பெங்களூருவில் இருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது. அவன் வேலை செய்யும் அலுவலகம்.


     மிதுனாவிற்காகக் கார்த்திகாவை லீவு எடுத்துக் கொள்ளும்படி கூறி இருந்தான். கார்த்திகாவிற்கும் ஹரிக்கும் ஒரு புரிந்து கொள்ளுதல் இருந்தது.

     எனவே அவர்களின் இல்லற வாழ்க்கை, இனிய நல்லறமாக இருந்தது. இனித்தது. ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்கிற நியதிப்படி இருவரும் வாழ்ந்து வந்தனர். கடைகளுக்குச் சென்றுவிட்டு கார்த்திகாவும் மிதுனாவும் ‘இஸ்கான்’ கோயிலுக்குச் சென்றனர்.

     கோயிலின் பிரம்மாண்டத்தைப் பார்த்து பிரமித்தாள் மிதுனா. பிரமிப்பு தீர்ந்து, பக்தி உணர்வு வந்ததும்... அங்கிருந்த ஒவ்வொரு விக்கிரகத்தின் முன்பும் நின்று, கண்ணீர் வடிய உள்ளம் உருகப் பிரார்த்தனை செய்தாள். அவ்விதம் அவள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது, அவளது அடிவயிற்றில் ஒரு வித அதிர்வலைகள் தோன்றின.

     கார்த்திகாவும், மிதுனாவிற்காக மனதார வேண்டிக் கொண்டாள். கோயிலில் பிரார்த்தனை முடிந்த பிறகு இருவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

     ஏர்போர்ட்டிற்கு வந்திருந்த டிரைவர் திலகனுடைய டாக்ஸியை முழு நாளும் பயன்படுத்திக் கொண்டாள் மிதுனா...

     “நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும்...?” திலகன் கேட்டான்.

     “நாளைக்குக் காலையிலே எட்டு மணிக்குப் போன் பண்ணிச் சொல்றேன். இன்னிக்கு டாக்ஸி சார்ஜ் வாங்கிக்கோங்க. எவ்வளவு ஆச்சு?”

     “ஜெய்சங்கர் ஸார் ஸெட்டில் பண்ணிடுவார் மேடம். ஸார் அப்படிச் சொல்லி இருக்கார். நான் கிளம்பறேன் மேடம். காலையிலே போன்  பண்ணுங்க.”

     “சரி திலகன்... கிளம்புங்க, தேங்க்ஸ்...!”

     திலகன் கிளம்பினான்.

     ஹரி வந்ததும் மூவரும் இரவு உணவு சப்பிட்டனர். மறுநாளையத் திட்டம் பற்றிப் பேசினர்.

     “காலையில ஒன்பது மணிக்குக் கிளம்பிப் போங்க... ஜெய்சங்கர் கொடுத்த அட்ரஸ்ல விசாரிங்க. இந்தக் கல்யாணம் பற்றி எல்லாம் எதுவும் சொல்லாதீங்க. சும்மா விசாரிக்கிற மாதிரி விசாரிங்க.”

     ஹரி கூறியதும்  அதை ஏற்றுக் கொண்டனர் கார்த்திகாவும், மிதுனாவும். விருந்தினர் வந்தால் தங்கும் படுக்கை அறையில் மிதுனாவைப் படுக்க வைத்துத் தானும் மிதுனாவுடன் படுத்துக் கொண்டாள் கார்த்திகா.

     “மிதுனா... உன்கிட்டே ஒரு விஷயம் கேட்கணும்... உன் மாமியாரோட குணம் எப்படி? உன்கிட்டே எப்படிப் பழகுறாங்க?...”

     “இவ்வளவு சீக்கிரம் அவங்களைப் பற்றி எதுவும் சொல்ல முடியலை. ஆனால், என் மேலே ரொம்ப அன்பாய்ப் பழகுறாங்க. அவங்களோட மகன் மேலே இருக்கிற மறைமுகமான தப்பை மறைச்சு, என்னை அவருக்குக் கல்யாணம் பண்ணி வெச்சது தப்புதானே...?

     “தப்புதான். அதுதான் எனக்குப் புரியலை. ஆனால், இப்போ எல்லா ஊர்லேயும், எல்லா மாநிலத்திலேயும் ‘ஒருத்தி இல்லைன்னா இன்னொருத்தி’ ‘ஒருத்தி போனா இன்னொருத்தி’ன்னு நிறைய அம்மாமார்கள். தங்களோட மகனுக்குத் தங்களோட இஷ்டப்படி மறு கல்யாணம் பண்ணி வைக்கறது நடக்குது. குழந்தை குட்டிகளைப் பெத்து,  அப்புறம் அதுங்களுக்காக மாமியார், புருஷன் கொடுமைங்களைத் தாங்கிக்கிட்டு விதியேன்னு வாழ வேண்டிய நிர்பந்தம். நம்மை மாதிரி படிச்ச பெண்கள், படிக்காட்டாலும் புத்திசாலியான பெண்கள் சுதாரிச்சு... அந்தக் ‘குடும்பம்கிற’ பேர்ல இருக்கிற கொடுமைக்காரக் கும்பல்கிட்டே இருந்து தப்பிச்சுக்க முடியும்.”

     “தப்பிச்சுக்கிறது மட்டுமில்லை... அவங்களோட தப்புகளுக்குச் சட்டம்  மூலமாகத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்!”

     மிதுனாவின் பேச்சு சூடானது.

     “நான் பேசலாம்... நீ பேசலாம்... ஆனால், ‘புல்லானாலும் புருஷன்... கல்லானாலும் புருஷன்’னு அவனோட காலடியிலே காலம் பூரா கிடக்கிற சில பொண்ணுங்களோட ஒத்துழைப்பு இல்லாமல், எந்தச் சட்டத்தாலேயும் எதுவும் பண்ண முடியாது. இதனாலேயே என்னமோ... பெண்களை ‘வீக்கர் செக்ஸ்’ன்னு சொல்றாங்க...”

     “ஸ்ட்ராங் விமன்னு ஒரு சாரார் இருக்கிற மாதிரி ஒட்டு மொத்த எல்லாப் பெண்களும் மாறணும். அப்படியாவது...பெண்கள் நிம்மதியாக, தைரியமா வாழற ஒரு இந்தியா உருவாகணும்.

     “நீ சொல்ற மாதிரி இல்லாட்டாலும் முன்னை விட இப்போ உள்ள பெண்கள் சமூகம் ஓரளவு பரவாயில்லை. அதுவரைக்கும் ஒரு ஆறுதல்தான்.”

     “பெரிய படிப்பு படிச்ச பெண்கள், உயர்ந்த உத்தியோகத்திலே இருக்கிற பெண்கள், பெரிய பதவி வகிக்கிற பெண்கள். இவங்ககூட ஏமாந்து போய் கணவனைப் பிரிந்து வாழற நிலைமைக்குத் தள்ளப்படறாங்க...”

     “ஆமாம்... இந்தப் பிரச்சனை ஏழை, பணக்காரங்க படிச்சவங்க, படிக்காதவங்க எல்லார் வாழ்க்கையிலேயும் நடக்குது. ஆனால்... உன்னோட விஷயத்துல பிரச்சனையே வேற. உண்மையை வெளிப்படையாகச் சொல்கிற புருஷன் மேலே தப்பு இருக்கா இல்லையான்னு தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயமான, கஷ்டமான நிலைமையில் நீ இருக்கே. ராத்திரின்னு ஒரு இருள் வந்தா பகல்னு ஒரு வெளிச்சம் வந்துதானே ஆகும்?.

     நிச்சயமாக உன்னோட கணவர் சம்பந்தப்பட்ட மர்மத்திரை விலகும். உன் கணவர் மேலே எந்தத்தப்பும் இல்லைங்கிற உண்மை விளங்கும். இந்த நம்பிக்கையோடு, நிம்மதியாக அமைதியாகத் தூங்கு காலையில் அவசரமாக எழுந்திருக்காதே... நிதானமாக எழுந்திருச்சுக் கிளம்பு. சரியா...?”

     “சரி கார்த்திகா... நீயும் தூங்கு. ஒரு விஷயம் கார்த்திகா... காலையில நீயும் சீக்கிரமா எழுந்திருச்சு, நிறைய சமையல் வேலையை இழுத்துப் போட்டுக்கிட்டு செய்யாதே. இட்லி, சட்னி அல்லது உப்புமா இருந்தால் போதும்.”

     “என்னது... உப்புமாவா? என்னிக்கோ வர்ற என்னோட டியர் பிரெண்ட் நீ... உனக்கு வெறும் உப்புமா வெங்கயாம்னுக்கிட்டு? தூங்கு, குட்நைட்...”

     “உன்னோட அன்புத் தொல்லை தாங்க முடியலை... குட் நைட்...!” இருவரும் தூங்க முயற்சி செய்தார்கள்.

 

35

     காலையில் எழுந்து, குளித்துச் சாப்பிட்டு முடித்து... ஹரியிடம் விடைப் பெற்றுக் கிளம்பினர் கார்த்திகாவும், மிதுனாவும். சரியான நேரத்திற்குத் திலகன் வந்திருந்தான். கார்த்திகாவும், மிதுனாவும் காருக்குள் ஏறப்போகும் போது, “மேடம்... மேடம்...!” என்ற குரல், அருகாமையில் கேட்டது.

     இருவரும் திரும்பிப் பார்த்தனர். அந்தக் குரலுக்குரியவன், மிதுனாவின் அருகே வந்து, “உங்களைத்தான் மேடம். என்னை ஞாபகம் இல்லையா மேடம்...?” என்று கேட்டான்.

     மிதுனா அவனைக் கவனித்துப் பார்த்தாள். அவனது முகம் அவளுக்கு ஞாபகம் வரவில்லை.

     “நீ... நீ... நீங்க...?”

     “சுத்தமா மறந்துட்டீங்க மேடம். அ... அது... வந்து... சென்னையிலே ஒரு நாள்... பஸ் ஸ்டாண்ட்ல வெச்சு... உ... உங்களை... உங்களை விரும்புறதா... உளறிக்கொட்டி உங்ககிட்டே வாங்கிக் கட்டிக்கிட்டேனே... அதுதான் நான்.”

     அவன் இவ்விதம் சொன்னதும் மிதுனாவிற்கு ஞாபகம் வந்துவிட்டது. உடனே சற்று எரிச்சலான மனநிலைக்கு ஆளானாள் மிதுனா.

     “இப்போ என்ன வேணும் உங்களுக்கு? சீக்கிரம் சொல்லுங்க... நான் போகணும்...”

     “கோவிச்சுக்காதீங்க மேடம். உங்ககிட்டே மன்னிப்புக் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் மேடம்... நல்ல வேளை, உங்களை இங்கே பார்த்துட்டேன். ஸாரி மேடம் அன்னிக்கு நடந்ததுக்கு, என்னை நீங்க மன்னிக்கணும் எங்க வீட்ல எனக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காங்க... பொண்ணு இந்த ஊர். அவளுக்கு நாளைக்குப் பிறந்த நாள். அதனாலே அவளுக்குக் கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். அவளை நேர்ல பார்த்துக் கொடுக்கறதுக்காக வந்திருக்கேன்.

     “உங்களைப் பார்த்ததும் உங்க கிட்டே என்னோட கல்யாண விஷயத்தைச் சொல்லிடலாம்னுதான்மேடம் கூப்பிட்டேன். காதல்னா என்னன்னு புரியாம... எதையோ காதல்னு நினைச்சு பித்துக்குளியாகத் திரிஞ்சேன். நான் அப்படித் திரிஞ்சுட்டிருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்ட என்னோட அம்மா, உடனே எனக்குப் பொண்ணு பார்த்து நிச்சயம் பண்ணிட்டாங்க...”

     இடையில் குறுக்கிட்டுப் பேசினாள் மிதுனா.

     “ஓ... நீங்க தட்டுக் கெட்டு அலைவீங்க... உங்களை உங்கம்மாவே தட்டிக்கேட்டுத் திருத்தாம... ஒருத்தியைக்கட்டிவைப்பாங்களா...?


     “அ... அது... வந்து மேடம்... எனக்கு எங்கம்மா நிச்சயம் பண்ணின பொண்னை நான் காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்... இனி அவளுக்கு நான் உண்மையாக இருப்பேன் மேடம்.”

     அப்போது கார்த்திகா, “மிதுனா... தப்பு செஞ்சவங்க திருந்திட்டதாகச் சொல்லும்போது, அதை நாம ஏத்துக்கணும். இவன் பேசுறதை வெச்சுப் பார்த்தால்... இவன் உனக்கு யாரோ... எவனோ... எதுக்காக அவன் கூட தர்க்கம் பண்ணிக்கிட்டு...?” என்று அடிக்குரலில், மிதுனாவிற்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள்.

     அதை ஏற்றுக்கொண்ட மிதுனா, “சரி...சரி... நீங்க கிளம்புங்க. நாங்களும் போகணும். வாழ்த்துக்கள்...” என்று சொல்லிவிட்டுக் காரில் ஏறினாள்.

     அவளைத் தொடர்ந்து கார்த்திகாவும் ஏறிக் கொள்ள, கார் கிளம்பியது.

     ஜெய்சங்கர் கொடுத்திருந்த முகவரியைக் கார்த்திகா, டிரைவர் திலகனிடம் சொல்ல... அந்த இடத்திற்குக் காரைச் செலுத்தினான்.

 

36

     சென்னையில்... ஆபீஸிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான் ஜெய்சங்கர். ஸோஃபாவில் அயர்ச்சியுடன் உட்கார்ந்திருந்த அனுசுயாவிடம், “போயிட்டு வரேன்மா!” என்றான்.

     “கிளம்பிட்டியாப்பா? ஒரு அஞ்சு நிமிஷம் உன் கிட்டே பேசணும்ப்பா...”

     “பெங்களூரு போறதைப்பத்தி மிதுனா என்கிட்டே சொல்லி இருக்கலாமேப்பா... நான் என்ன, ‘வேண்டாம்’னா சொல்லப் போறேன்.”

     “உங்ககிட்டே சொல்லக் கூடாதுன்னு எதுவும் கிடையாதும்மா...”

     “சரிப்பா... நான் மத்த மாமியாருக மாதிரி, ‘அங்கே போகாதே’ ‘இங்கே போகாதே’ ‘அம்மா வீட்டுக்கு அடிக்கடி போகாதே’ன்னெல்லாம் சொல்வறவளா? என்கிட்டே அனுமதி கேட்கச் சொல்லலைப்பா. ஒரு அறிவிப்பாவது சொல்லிட்டுப் போகலாம்ல? எல்லாரும் மாமியார் மெச்சுகிற மருமகளா இருக்கணும், பேர் எடுக்கணும்னு சொல்லுவாங்க.

     ஆனால் நான்...? மருமகள் மெச்சுகிற மாமியார்னு பேர் எடுக்கணும்னு நினைக்கிறேன். நினைக்கிறது மட்டுமில்லை... அதுக்கேத்த மாதிரி நடந்துக்கிட்டும் இருக்கேன். உனக்கும், மிதுனாவுக்கும் இப்பத்தான்  கல்யாணம் ஆகி இருக்கு... நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா, ஆசையா வாழறதைப் பார்க்கணும்னுதானே நான்  உயிரோட இருக்கேன்...? உன்னையோ... அல்லது என்னையோ மிதுனாவுக்குப் பிடிக்கலியா...?”

     இதைக் கேட்ட ஜெய்சங்கர்,  திகைத்தான்.  ‘பெங்களூரு... அவன் தாலி கட்டிய அந்தப் பொண்ணு... அந்தக் காரணத்துக்காக அம்மா எனக்கு அவசரமாகக் கல்யாணம் பண்ணி வெச்சது... இது தொடர்பான எந்த விஷயங்களையும் அம்மாகிட்டே பேசக்கூடாதுன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்... அம்மா என்னடான்னா... ‘உன்னை மிதுனாவுக்குப் பிடிக்கலியோ’ன்னு சந்தேகமா பேசறாங்களே... அதிர்ச்சி தர்ற விஷயங்களையோ... மன அழுத்தம் தர்ற பிரச்சனைகள் பற்றியோ பேசக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். அம்மாவை எப்படியாவது சமாளிக்கணும்... சமாதானம்  பண்ணணும்...!” என்று நினைத்த ஜெய்சங்கர், பேச ஆரம்பித்தான்.

     “என்னம்மா நீங்க? எது எதையோ கற்பனை பண்ணிக்கிட்டு? நாலு வயசுல இருந்து இன்னிக்கு வரைக்கும் உயிருக்குயிராப் பழகுற நெருக்கமான பிரெண்ட்டோட கல்யாணத்துக்குப் போகாம இருக்க முடியுமாம்மா? மிதுனாவை இப்போதைக்கு ஓரளவுக்குப் புரிஞ்சு வெச்சிருக்கேன். மிதுனா... தன்மான உணர்வு அதிகமுள்ள பெண். அவ, அவங்கம்மா குடும்பத்தார் மேலே அளவற்ற பாசம் வெச்சிருக்கா. அந்தத் திடீர் கல்யாணம், அவ வாழ்க்கையிலே ஒரு திருப்பம். இதிலே அவ சமனமாகக் கொஞ்ச நாளாகும்.

     அம்மா வீட்டாரின் ஏழ்மை நிலை, தங்கையின் படிப்பு, அப்பாவோட நோய்ப் படுக்கை... இதெல்லாம் குருவி தலையில பனங்காய் மாதிரிம்மா... திடீர்னு அந்தக் குடும்பக் கடமைகள்லே இருந்து கொஞ்சம் விலகிட்டது மாதிரி ஒரு உணர்வு அவளுக்குத் தோணுதோ என்னமோ... நாம அவளோட உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்கறோம்...  புரிஞ்சுக்கிறோம்னு அவளுக்குத் தெரியறதுக்குக் கொஞ்ச நாள் ஆகும்மா.

     நீங்க கவலையே படாதீங்க... மிதுனா நல்லவ... நம்ம குடும்பத்துக் கூட ஐக்கியமாகக் கூடிய அன்பான பொண்ணும்மா அவ... உங்க நல்ல மனசு எனக்குப் புரியது... அவளுக்கும் புரியும். நீங்க மனசைப் போட்டு அலட்டிக்காம, அமைதியாக இருங்க, ஓய்வா இருங்க. மாத்திரையெல்லாம் கரெக்ட்டா சாப்பிடறீங்களா...?”

     “அதெல்லாம் கரெக்ட்டா சாப்பிடறேன்ப்பா. உன்கிட்டே மனம் விட்டுப் பேசினதுல எனக்கு ஆறுதலாக இருக்கு. நீ ஆஃபீஸுக்குக் கிளம்புப்பா...

     “சரிம்மா, போயிட்டு வரேன்.”

     ஜெய்சங்கர் ஆஃபீஸ் போவதற்காக வெளியேறினான்.

 

37

     காரில் ஏறி ஸ்டார்ட் செய்யும்போது, ஜெய்சங்கரின் மொபைல் ஒலித்தது. அதில் மிதுனா அழைத்திருந்தாள்.

     “சொல்லு மிதுனா.”

     “நீங்க கொடுத்த அட்ரஸ்ல இருக்கிற அந்த அப்பார்ட்மென்ட் பூட்டிக் கிடக்கு. அக்கம்பக்கம் விசாரிச்சோம்... யாருக்கும் எதுவும் தெரியலை.”

     “அப்படியா? எனக்கு ஒண்ணும் புரியலை. உன்கிட்டே கொடுத்த அட்ரஸ்லதான் நான் பெங்களூருல இருந்தேன். அங்கேதான் அந்தக் குடும்பமும் இருந்தாங்க.”

     “உண்மையான அட்ரஸ்தான் கொடுத்தீங்களா?”

     “என்ன மிதுனா... என் மேலே நம்பிக்கை இல்லையா? நான் ஏன் பொய்யான அட்ரஸ் கொடுக்கணும்? பொய் அட்ரஸ் கொடுத்தால் என் மேலே இருக்கிற சந்தேகம் ஜாஸ்தியாகத்தானே ஆகும்?”

     “உங்க மேலேயும், நீங்க சொன்ன விஷயங்கள்லேயும் நம்பிக்கை வெச்சுதான் நான் இங்கே வந்தேன். ஆனால், நீங்க சொன்னபடி இங்கே யாருமே இல்லை. அவங்களைப்பத்தி யாருக்கும் எதுவும் தெரியலை. அதுதான் எனக்குக் குழுப்பமாக இருக்கு...”

     “குழப்பமாக இருக்கிறது நியாயம்தான். ஆனால், சந்தேகப்படறது சரி இல்லை...”

     “நான் உங்களைச் சந்தேகப்படலை. நீங்க குறிப்பிட்டுச் சொன்ன அந்த நபர்கள் மேலேதான் சந்தேகப்படறேன். கண்ணை இறுகக் கட்டி விட்டுட்டு காணாமல் போன பொருளைத் தேடற மாதிரி இருக்கு என்னோட நிலைமை...”

     “உன்னோட நிலைமை எனக்குப் புரியுது மிதுனா. நீ சொல்றதைக் கேட்கும்போது எனக்குத் தலை சுத்தது...”

     “அந்த நபர்கள் நாடோடிகள் மாதிரி இப்படி அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம ஓடிப் போயிருக்காங்களே... அவங்க மேலேதான் என் சந்தேகம் இன்னும் அதிகமாகுது, ஊறுதியாகுது.”

     “இனி என்ன செய்யலாம்னு நினைக்கிறே மிதுனா?”

     “இப்போதைக்கு அங்கே இருந்து வேற எதுவும் ஆகப்போறதில்லைன்னு தோணுது. அதனாலே நான் சென்னைக்குக் கிளம்பி வந்துடலாம்னு நினைக்கிறேன். கார்த்திகாவும் அப்படிதான் சொல்றா. அவ எனக்கு நிறைய ஹெல்ப்  பண்ணினா.”

     “கார்த்திகாவுக்கு என்னோட தேங்க்ஸை சொல்லிடு. ஆனால், என்னோட பக்கம், இன்னும் க்ளியர் ஆகலியே...!”

     “உங்களுக்கு நடந்தது. கிணத்துல போட்ட கல் இல்லை.  இருட்டிலே மறையுற நீதி நிச்சயம் வெளியே வரும்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு... ஆனால், அது நிரூபணம் ஆகணும். உங்க மேலே இருக்கறது. அறுபது சதவிகிதம் நம்பிக்கை... மீதியுள்ள நாற்பது சதவிகிதம் சந்தேகம்தான். அந்தச் சந்தேகம் நீங்கி, நூறு சதவிகிதம் நீங்க உண்மையானவர்னு நான் தெரிஞ்சுக்கணும்.”

     “ஆமாம் மிதுனா... அது நடக்கும். என் மேலே உனக்கு அன்பும், மரியாதையும் உண்டாக  ணும், உன்னோட ஃப்ளைட் டிக்கெட்டை மாத்தி எடுத்து வந்துடு. டிரைவர் திலகன் கரெக்ட்டா நீ சொல்ற டைமுக்கு வந்துடறானா? சரி மிதுனா... நீ இங்கே வரும்போது நான் உன்னைக் கூப்பிட ஏர்போர்ட் வந்துடறேன்.”

     “அதெல்லாம் வேண்டாம். நான் டாக்ஸி எடுத்துட்டு வந்துடுவேன். ஒரு விஷயம்... நான் அம்மா வீட்டுக்குப் போயிட்டுதான் உங்க வீட்டுக்கு வருவேன்...”

     “சரி மிதுனா. நீ போய் உன் அம்மாவைப்  பார்த்துட்டு வா. ஆனால், அதென்ன ‘உங்க வீடு’ ‘எங்க வீடு’ன்னு பிரிச்சுப் பேசுறே? உனக்கும் அது வீடுதானே?”

     “அந்த உணர்வு எனக்கு வர்றதுக்குரிய நேரம் வந்ததும் ‘நம்ம வீடு’ன்னு நான் சொல்வேன்.

     “நிச்சயம், நீ அப்படிச் சொல்ற ஒரு நாள் சீக்கிரம் வரும்னு நான் நம்புறேன் மிதுனா.”


     “சரி... மத்ததை நான் சென்னை வந்தப்புறம் பேசிக்கலாம்.”

     “ஓ.கே.”

     பேசி முடித்த ஜெய்சங்கர் பெருமூச்சு விட்டான்.

     ‘ ‘மதில் மேல் பூனை’ நிலைமை எனக்கு. எப்போ இது மாறுமோ...? கடவுளே...!’ மனதிற்குள் புலம்பியபடியே காரை ஓட்டினான் ஜெய்சங்கர்.

 

38

     ன்ன மிதுனா. கிளம்பறேங்கிறே...? இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போயேன்.

     “இல்லை கார்த்திகா... நான் போகணும். எனக்காக ஆஃபிஸுக்கு லீவு போட்டுட்டு என் கூடவே வந்து உதவி செய்றே. நாம போன இடத்துல ஏதாவது விவரம் கிடைச்சதுன்னா பரவாயில்லை... அதுவும் இல்லை. வீணாக உன்னை ஏன் அலைய வைக்கணும்? நீயும், ஹரியும் ஹெல்ப்  பண்ணதுக்கு ‘தேங்க்ஸ்’னு ஒரு வார்த்தையில நன்றி சொல்லிட முடியாது. அதுக்கு மேலே என்ன சொல்றதுன்னு எனக்குத் தெரியலை?”

     “நட்புக்கு நடுவிலே நன்றியெல்லாம் சொல்ல வேண்டியதே இல்லை. நான் உன் நண்பேன்டி...”

     “ஓ...! சந்தானம் ஸ்டைல் ‘நண்பேன்டா’வா?” மிதுனா சிரித்தாள். கார்த்திகாவும் சேர்ந்து சிரித்தாள்.

     “ச்சே... இப்படி வாய்விட்டுச் சிரிச்சுக்கிட்டு மனம் விட்டுப் பேசிக்கிட்டு இருக்கிறதை விட்டுட்டு கல்யாணம்ங்கிற பொறியிலே மாட்டிக்கிட்டேனோன்னு தோணுது.”

     “கல்யாணம்ங்கிறது பொறியும் இல்லை... நீ அதிலே மாட்டிக்கிட்ட எலியும் இல்லை. எதையும் நெகட்டிவ்வா யோசிக்காதே. கல்யாணம், நம்ம வாழ்க்கையிலே ஒரு வேள்வி நடத்தற மாதிரி உணர்வு வரணும். அதுக்கு ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிறது. அவசியம். உனக்கும் ஜெய்சங்கருக்கும் நடுவுல இருக்கற இரும்புத்திரை விலகணும். அந்த நாள் சீக்கிரம் வரும். உன் வாழ்க்கை கரும்புபோல இனிக்கணும்.

     நீ தன்னம்பிக்கை நிறைஞ்சவ... இந்தப் பிரச்சனையை ஒரு சேலஞ்சா எடுத்துக்கோ. உண்மைகளைக் கண்டுபிடிக்க அடுத்தபடியாக என்ன செய்யறதுன்னு தீவிரமாக யோசிப்போம். உன் கணவர் ஜெய்சங்கரைச் சுற்றியுள்ள மாயவலையின் ரகசியம் வெளிப்படும். எனக்கும் அவர் இன்னொஸென்ட்னுதான் தோணுது. நீ யாருக்கும் மனசால கூடத் தீங்கு நினைச்சது கிடையாது.

     உன் கணவர் நல்லவர்னு நிரூபணமாகி, உண்மையானவராக அவர் உனக்குக் கிடைப்பார். கடவுள் காலடியே சரணம்னு சரணாகதியாகிடு. மனித சக்தியோட தெய்வ சக்தியும் இணைஞ்சு செயல்படும்போது, நல்லது நடக்கும். நாம நினைச்சது நடக்கும். காட் இஸ் கிரேட்...”

     “ஆமா கார்த்திகா... தெய்வ பலத்தையும் அருளையும்தான் நம்பி இருக்கேன். நீ சொன்னது மாதிரி இதை ஒரு சவாலா எடுத்துக்குவேன். தைரியத்தை இழக்காமல், இந்த பெங்களூருல நடந்த மர்மங்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வேன்.”

     “வெரி குட்... இந்தத் தைரியம் உன்னை விட்டு இம்மியளவு கூடக் குறையக் கூடாது. நீ அப்ஸெட் ஆகக் கூடாது. நான் ஹரிகிட்டேயும் இதைப் பற்றிப் பேசி ஆலோசனை கேட்கிறேன். நீ கவலைப்படாதே.”

     “தேங்க்யூ, கார்த்திகா, திலகன் இங்கேதானே வெயிட் பண்றார். நீ இப்போ கிளம்பினாத்தான் ஏர்போர்ட்டுக்கு சரியான நேரத்துக்குப் போக முடியும். பெங்களூருல ஏப்போர்ட் போறது ஒரு ஊருக்குப் போற மாதிரி...”  “சரி கார்த்திகா... நான் கிளம்பறேன். நான் கிளம்பறேன்னு ஹரிகிட்டே சொல்லிடு. நான் சென்னை ஏர்போர்ட் போனப்புறம் உனக்குப் போன் பண்றேன்...”

     கண்கள் கலங்க, கார்த்திகாவைக் கட்டி அணைத்து, விடை பெற்றுக் கிளம்பினாள் மிதுனா.

 

39

     கோயம்புத்தூர்... லட்சுமி கடாட்சம் நிரம்பிய ஊர் எனப் புகழ் பெற்ற ஊர். இந்த ஊருக்கு வந்தால் நல்லபடியாக வளமான வாழ்வு வாழும்படியாக தொழில் செய்யும் உற்சாகம், உத்வேகம் ஏற்படும் என்பார்கள். பழம் பெருமையான மண்ணின் மணம் நிறைந்த ஊர். கோனி அம்மனும், மருதமலை முருகனும் அருள் பாலிக்கும் ஆலயங்கள் அமைந்துள்ள ஊர், பழகியவர்களாக இருந்தாலும், மற்றவர்களாக ஊர், பழகியவர்களாக இருந்தாலும், மற்றவர்களாக இருந்தாலும் மிக்க மரியாதையுடன் பேசும் மனிதர்கள்  வாழும் ஊர். தொழில் நிறுவனங்கள் நிறைந்த ஊர். ‘க்ரைம் மன்னன்’ எனப் புகழ் பெற்றுள்ள  எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்கள் வாழும் ஊர் கோவை.

     இத்தகைய பெருமைகளுக்குரிய கோவை நகருக்கு வேலை மாற்றல் ஆகி வந்து, காவல் துறையில் இன்ஸ்பெக்டராகப் பணியை ஏற்றுக் கொள்ள வந்திருந்தார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.

     நெடிதுயர்ந்த உயரம், அடர்த்தியான தலைமுடி, மீசை, தீர்க்கமான கண்கள் இவற்றுக்குரியவர், ப்ரேம்குமார், வியாபாரத் துறையில் விண்ணளவு புகழ் பெற்ற விருதுநகரில் பிறந்தவர் அவர்.

     அவருக்குப் பிடித்த காவல்துறையில் பணிபுரிவதைச் சிறு வயதிலிருந்தே விரும்பியவர். இவரது திறமை குறித்து விருதுநகர் பெருமிதம் கொண்டது. அந்த ஊரின் மக்களிடையே பெரும் மதிப்பும் மரியாதையும் பெற்றிருந்தார். கோயம்புத்தூர் பி.11 காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டராகப் பணி ஏற்றுக் கொண்ட ப்ரேம்குமார், அங்கே வந்ததும் வராததுமாக, ஏற்கனவே அங்கே பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் விட்டுச் சென்ற ஒரு கேஸைத் துரிதமாக முடிக்கவேண்டும் என்ற ஆணை போடப்பட்டிருந்தது.

     எனவே அந்தக் கேஸில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரியில் இருந்த இடத்திற்குச் சென்றார்.

     ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்தது அந்த இடம். அது ஒரு பெரிய பங்களா. அங்கே சென்ற இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார், ஜீப்பில் இருந்து இறங்கினார். அவரைப் பார்த்த அந்தப் பங்களாவின் செக்யூரிட்டி பயத்தில் பம்மினான்.

     “என்னய்யா செக்யூரிட்டி?” என்ற ப்ரேம்குமார். செக்யூட்டியின் யூனிஃபார்மில் இருந்த அவரது பெயரைப் பார்த்தார்.

     “ஓ... வேல்முருகனா? வேல்முருகா... வீட்ல யார் இருக்காங்க? நான் அவங்களைப் பார்க்கணும்...”

     “அம்மா இருக்காங்கய்யா... கொஞ்சம் இருங்க!” என்ற செக்யூரிட்டி வேல்முருகன், இன்டர்காமில் வீட்டில் உள்ளோரை அழைத்தார்.

     “அம்மா... இன்ஸ்பெக்டர் ஸார் வந்திருக்கார்மா. அவரை உள்ளே கூட்டிட்டு வரேன்மா...” என்று கூறிய வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமாரை அழைத்துச் சென்றார். போர்ட்டிகோவில் நின்றிருந்த பெண்மணி அவரை எதிர் கொண்டு வரவேற்றார்.

     செல்வத்தின் செழுமை ஏற்படுத்திய பணக்காரத் தோற்றமும், செல்வாக்கின் பிரதிபலிப்பான கம்பீரமும் நிரம்பிய பெண்மணியாக இருந்தார் அவர்.

     “நீங்க மிஸஸ் வசந்தா மாணிக்கவேல்...?”

     “ஆமா ஸார், நான்தான், வசந்தா.”

     வசந்தாவின் முகத்தில் ஒரு சோகம் தென்பட்டது.

     “வணக்கம்... நான் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார். உங்க மகள் தங்கமீனா காணாமல் போன கேஸை டீல் பண்ணிக்கிட்டிருந்த இன்ஸ்பெக்டர் சுயம்புலிங்கம் டிரான்ஸ்ஃபர் ஆகி வேற ஊருக்குப் போயிட்டார். அதனால அந்தக் கேஸ் ஃபைலை டிப்பார்ட்மென்ட் என்கிட்டே ஒப்படைச்சிருக்காங்க... ஃபைலைத் தரோவா பார்த்துட்டேன்...”

     “உட்காருங்க இன்ஸ்பெக்டர்!” என்றார் வசந்தா.

     ப்ரேம்குமார் உட்கார்ந்தார்.

     “எங்க மகளைக் காணோம்னு போலீஸ்ல கம்ப்பௌயிண்ட் கொடுத்து ரொம்ப நாளாச்சுங்க. என் பொண்ணை இன்னும் கண்டுபிடிச்சுக் கொடுக்கலைங்க ஸார்...”

     “கவலைப்படாதீங்க மேடம். சீக்கிரமாகக் கண்டு பிடிச்சுடலாம். இது விஷயமாக உங்ககிட்டே கொஞ்சம் விசாரிக்க வேண்டி இருக்கு...”

     “விசாரணைக்குப் பதில் சொல்லிச் சொல்லி மன அழுத்தம் அதிகமாகுதுங்க.”

     “ஸாரி மேடம்... நீங்க ஒத்துழைச்சாதான், உங்க மகளைக் கண்டுபிடிக்க முடியும்.”

     “காணாமல் போனது என் மகள், அவளைக் கண்டு பிடிக்கிறதுக்கு ஒத்துழைக்காம நான் என்ன பண்றேன்? காவல் துறையைச் சேர்ந்த உங்களுக்கு அவளைக் கண்டுபிடிக்க வேண்டிய கடமை மட்டுமே இருக்கு.

ஆனால், அவளைப் பெத்த எனக்கு...? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும் அவளை நினைச்சுத்துடிச்சிக்கிட்டிருக்கேன். காணாமல் போன என் பொண்ணு எங்கே போனாளோ... எப்படி இருக்காளோன்னு பதறிப் போய்க் கிடக்கிறேன்...”


     “உங்க நிலைமை எனக்குப் புரியுது மேடம். நாங்களும் எங்களால எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்குத் தீவிரமாக முயற்சி பண்ணி, தேடற வேலையில ஈடுபட்டுக்கிட்டுத்தான் இருக்கோம், தங்கமீனா கேஸ் ஃபைல்ல அவளுக்கு காதல் விவகாரம் இருந்திருக்குங்க.”

     “இதையேதான் பழைய இன்ஸ்பெக்டரும் சொன்னார். அந்தக் கெரகம் பிடிச்ச காதல் விஷயத்தைச் சொன்னதே நாங்கதானே? நாங்க எதையும் போலீஸ்ல மறைக்கலை...”

     “ஸாரி மேடம்... நீங்க மறைக்கலைன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் புதுசா வந்திருக்கிற நான், சில கேள்விகள் கேட்கத்தான் வேண்டியதிருக்கு...!”

     “சரிங்க இன்ஸ்பெக்டர்... நீங்க என்ன கேக்கணுமோ, கேளுங்க... எனக்கு என் மகள் சீக்கிரமாக வேணும்.”

     “தங்கமீனா காதலிச்ச வாலிபன் இதே ஊர்லதான் இருக்கானா?”

     “ஆமா... அவன் இதே ஊர்ல... வேற ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கான்.”

     “தங்கமீனாவோட காதலுக்கு எதனாலே எதிர்ப்புத் தெரிவிச்சீங்க?”

     “அவனைப்பத்தி விசாரிச்சோம். அவனைப் பத்தின நல்ல தகவலே எங்களுக்குக் கிடைக்கலை. பொண்ணு ஒருத்தனைக் காதலிக்கிறாள்னா... அவன் நல்லவனாக இருந்தால்தானே அவளோட ஆசையை நிறைவேத்த முடியும்? அதனாலதான் எதிர்ப்புத் தெரிவிச்சோம்.”

     “இந்தக் காதல், ஒருதலைக் காதலாக இருந்திருக்கலாமா...?”

     “இல்லை... அந்தப் பையன் மதனும் என் மகளை விரும்பி இருந்தான். இது எனக்கு நல்லாத் தெரியும். நாங்க காதலுக்கு எதிரிகள் இல்லை. தப்பான ஒருத்தனைக் காதலிக்கிறாள்தான் எதிர்த்து நின்னோம். என்னை விட என் வீட்டுக்காரர் எங்க மகள் மேலே உயிரையே வெச்சிருக்கார். அவ வீட்டை விட்டுப்போனதுல இருந்து... அவர் உடம்பு சரி இல்லாம... மனசு சரி இல்லாம படுத்த படுக்கையாகிட்டார். தங்கமீனா வந்தால்தான்... அவளைப் பார்த்தால்தான் அவர் பழையபடி குணமாவார்னு டாக்டர்ஸ் சொல்லிட்டாங்க. என் மகளும் எனக்குக் கிடைக்கணும். என் வீட்டுக்காரரும் குணமாகி எழுந்திருக்கணும். என் மகளைக் காதலிச்சு, அவ மனசைக் கெடுத்த அந்தப் படுபாவி மதன், சந்தோஷமாக இருக்கான். எங்க குடும்பம்தான் சீரழிஞ்சு சிதைஞ்சு போயிருக்கு.”

     “தங்கமீனாவோட காதலை நீங்க கண்டிச்சதுனால அவ கோவிச்சுக்கிட்டு காரை ரொம்ப ஸ்பீடா ஓட்டிக்கிட்டுப் போனாள்னு ஃபைல்ல இருக்கு...”

     “ஆமா... அவ சூப்பரா கார் ஓட்வா, ரேஸ்ல கூட கலந்திருக்கா. அவளோட அந்தக் கார் ஓட்டற திறமையே அவளுக்குத் தீங்காயிடுச்சுன்னுதான் சொல்லணும். அவளுக்கு ஏதாவது கோபம் வந்துட்டா, உடனே காரை எடுத்துக்கிட்டு வேகமா ஓட்டிக்கிட்டுப் போவா. கோபம் குறைஞ்சதும் வீடு வந்து சேருவா. அவ வர்ற வரைக்கும் என் வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு நான் காத்துக்கிட்டிருப்பேன். இந்தக் காதல் விஷயத்துல கோவிச்சுக்கிட்டு போன அன்னிக்கு ஓவர் ஸ்பீடா போயிருக்கா... போனவ போனதுதான். திரும்ப வரவே இல்லை. விபத்துல சிக்கி, அவளுக்கு ஏதாவது ஆகிடுச்சா... அவள் எங்கே? என்ன ஆனாள்னு எதுவும் தெரியாம வேதனையாக இருக்கு. உங்க போலீஸ் துறை என் மகளை ரெண்டு வருஷமா தேடிக்கிட்டிருக்காங்க...”

     “ஸாரி மேடம்... தங்கமீனாவைச் சீக்கிரமாகக் கண்டு பிடிச்சுடறோம்...”

     “அவ உயிரோட இருக்காள்னு தெரிஞ்சாக் கூட நல்லா இருக்கும்...!”

     பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டு பேசினாள் வசந்தா.

     “தங்கமீனாவைச் சீக்கிரமாகக் கண்டுபிடிக்க முயற்சி செய்றேன் மேடம். என் முயற்சி பலன் கொடுக்கும்னு நான் நம்பறேன்!” என்ற ப்ரேம்குமார் விடை பெற்றுக் கிளம்பினார்.

 

40

     டுத்தர வர்க்கத்திற்கும் கீழ் மட்ட வருமானம் உள்ளவர்கள் குடி இருக்கும் சுமாரான அப்பார்ட்மென்ட் வளாகத்தில், தரைத் தளத்தில் உள்ள ஒரு அப்பார்ட்மென்ட்டின் வாசலில் இருந்த அழைப்பு மணியின் ஸ்விட்ச்சை அழுத்தினார் இன்ஸ்பெக்டர் ப்ரேம்குமார்.

     கதவைத் திறந்தாள் ஓர் இளம்பெண், அவளது இடுப்பில் ஒரு வயதுக் குழந்தையை வைத்திருந்தாள்.

     “வா... வாங்க இன்ஸ்பெக்டர்.”

     அவளது குரலில் பயம் தென்பட்டது. இதற்குள் அங்கே ஒருவன் உள்பக்க மிருந்து வந்தான்.

     “நீங்க?...” என்று கேட்ட ப்ரேம்குமாரிடம் அவன்.

     “என் பேர் மதன். இவள் என் மனைவி கலா. உட்காருங்க இன்ஸ்பெக்டர் ஸார்.”

     “தேங்க்ஸ்... பிரபல தொழிலதிபர் மாணிக்கவேலோட மகள் தங்கமீனா காணாமல் போன வழக்குல சம்பந்தப்ட்டிருக்கீங்க...”

     “இல்லீங்க இன்ஸ்பெக்டர்... அவ, ஓவர் ஸ்பீட காரை ஓட்டிக்கிட்டுப் போயிருக்கா. நான் எப்படி அவ காணாமல் போனதுல சம்பந்தப்பட்டிருக்க முடியும்?”

     “நீங்க காதலிச்ச பொண்ணுதானே தங்கமீனா...?”

     “காதலிச்சுட்டா? காணாமல் போனதுக்கு நான் எப்படி இன்ஸ்பெக்டர் காரணமாக முடியும்?”

     “உங்க மேலே தப்பு இல்லைன்னா... எதுக்காக இவ்வளவு கோபப்படுறீங்க?”

     “பின்னே என்ன ஸார்? நான் நல்லவன் இல்லைன்னு யார் யாரோ சொன்னாங்களாம். அதனால நான் அவளுக்குத் தகுதியான ஆள் இல்லைன்னு அவளோட பேரண்ட்ஸ் சொல்லி இருக்காங்க. அவங்க என்னைப்பற்றி விசாரிச்சதாகவும், நான் மோசமானவன்னும் சொன்னாங்களாம். சுத்தப் பொய் ஸார் எல்லாமே என்னைப் பற்றி நீங்களே விசாரிச்சுப் பாருங்க... இங்கே இந்தக் காம்ப்ளெக்ஸ்ல விசாரிங்க... என்னோட ஆபீஸ்ல விசாரிங்க, என்னைப் பற்றி யாருமே தப்பாகச் சொல்ல மாட்டாங்க.

     “நான் கீழ் மட்டத்து வர்க்கத்தைச் சேர்ந்தவன் தங்கமீனா... கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவ. தங்கமீனா என்னோட மனசையும், குணத்தையும் மட்டும்தான் பார்த்து என்னை நேசிச்சா. ஆனா, அவங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் அந்தஸ்து வெறி பிடிச்சவங்க. அதனால எங்க காதலை ஏத்துக்கலை, கல்யாணத்துக்கு ஒத்துக்கலை. அந்தக் கோபத்துல, வேகமாகக்  காரை ஓட்டிக்கிட்டுப் போயிருக்கா. இதுக்கு மேலே... ரெண்டு வருஷமா... அவளைப் பத்தின எந்தக் தகவலும் இல்லை. அதனாலே நான் குற்றவாளியாகிடுவேனாங்க இன்ஸ்பெக்டர் ஸார்?

     “சம்பந்தப்பட்ட எல்லாரையும் விசாரிக்கிறது எங்க ப்ரொஸீஜர்... அதைத்தான் நான் செஞ்சுக்கிட்டிருக்கேன்.”

     “தங்கமீனாவை நான் காதலிச்ச விஷயமாக நான் சொன்னதெல்லாம் உண்மை. இப்போ நான் சொல்றதும் உண்மை. என் மேலே எந்தத் தப்பும் கிடையாது. நான் என்னமோ அவளோட பணத்துக்காகத்தான் அவளைக் காதலிச்சதாக அவங்க அம்மா சொன்னாங்களாம்.

     தங்கமீனா காணாமல் போனதுல இருந்து நானும் கவலைப்பட்டேன். காதலுக்கு மறுப்பு சொன்ன பெத்தவங்க மேலே கோபப்படுறது நியாயம்... ஆனால், இது ரொம்ப ஓவர் இல்லீங்களா? அவ என்னைப் பார்த்து, என் கிட்டே பேசி இருக்கலாம். வேற ஒரு நல்ல முடிவு எடுத்திருக்கலாம். அவங்க அம்மா, அப்பா மேலே உள்ள கோபத்தை இப்படியா வெளிப்படுத்தறது?

     ‘தங்கமீனா என்ன ஆனாள்னே தெரியலியே? நாங்க சொல்ற பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கோ’ன்னு எங்கம்மா, அப்பா என்னைக் கெஞ்சினாங்க. தங்கமீனா மீதான என் காதலை என்னோட பெற்றோர் முழு மனசோட அங்கீகரிச்சாங்க. அவங்க ஒண்ணும் பணத்துக்கு அலையறவங்க இல்லை. அவங்க எனக்காகப் பார்த்து, பேசிக் கல்யாணம் பண்ணிவெச்ச இந்தக் கலா, எங்களை விட சுமார் வர்க்கத்தைச் சேர்ந்தவ. ஒரு பைசா கூட வரதட்சணை நானோ, என்னைப் பெத்தவாங்களே எதிர்பார்க்கலை. எதுவுமே கெடுபிடி பண்ணாமல் நான் கலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டிருக்கேன்.


     “தங்கமீனா, காணாமல் போனப்புறம் எங்கம்மா, அப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னப்போ முதல்ல நான் மறுத்தேன். ‘நம்ம மகனோட காதல்தான் இப்படியாயிடுச்சு. நாம பார்த்து நிச்சயம் பண்ற பொண்ணையாவது கல்யாணம் பண்ணிக்கக் கூடாதா’ன்னு என்னைப் பெத்தவங்க ரொம்ப சங்கடப்பட்டாங்க. அவங்களோட சங்கடத்தை, சந்தோஷமா மாத்தறதுக்காக நான் கலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

     “அந்தஸ்து பேதத்தை ஒரு காரணமாகச் சொன்னா மகள் ஒத்துக்க மாட்டாள்னு என்னைப் பற்றித் தவறான தகவலை அவளுக்குச்  சொல்லி இருக்காங்க. ஆனா தங்கமீனா, அந்தக் காரணத்தையும் ஏத்துக்கலை. அவ செல்லமா வளர்ந்தவ. அவ ஒண்ணு கேட்டா அது கிடைக்கணும். அவ ஒண்ணு வேணும்னா அது நடக்கணும். அந்த மனப்பான்மையிலே வளர்ந்திருக்கா. அதனாலே அவளோட பேரன்ட்ஸ் எங்க காதலை மறுத்ததும், கோபத்தோட போயிட்டா.

     “இந்தச் சிக்கலை உண்டாக்கினவங்க அவளோட பேரண்ட்ஸ். ஆனால், என்னைச் சிக்கல்ல மாட்டி விட்டுட்டாங்க. ‘பணம்’ பணத்தோட... இனம் இனத்தோட’ன்னு சொல்லுவாங்க. பணம், இனம் பார்த்தா ஸார் காதல் வருது? எதையும் பார்க்காமல் அவளோட இதயத்தை மட்டுமே பார்த்துக் காதலிச்ச எனக்கு நல்ல பரிசு கொடுத்துட்டா. அப்பப்போ போலீஸ் விசாரணை, சந்தேகம்... வெறுப்பா இருக்குங்க ஸார்...”

     “இன்ஸ்பெக்டர் ஸார்... இவர் நல்லவர், இவரோட  காதல் பற்றி என்கிட்டே இவர் எதையும் மறைக்கலை. கல்யாணத்துக்கு முன்னாடியே எங்க குடும்பத்தார்கிட்டேயும், என்கிட்டேயும் அந்தத் தங்கமீனாவைக் காதலிச்சது பற்றின எல்லா உண்மைகளையும் சொல்லிட்டார். போலீஸ் இவரைத்தேடி வந்து விசாரிக்கறப்போ, அவமானமாக இருக்குங்க ஸார். இவராலே அந்தத் தங்கமீனாவுக்கு எதுவும் ஆகி இருக்காதுங்க, இன்ஸ்பெக்டர் ஸார்.”

     மதனின் மனைவி கலா, கவலையோட சொன்னாள்.

     கலாவின் பேச்சில் வெகுளித்தனம் தென்பட்டது.

     “பல கோணத்துல பலரையும் விசாரித்தால்தான்மா இந்தக் கேஸை முடிக்க முயும். உண்மை நீண்ட காலம் ஒளிஞ்சிருக்காது...” என்று சொன்ன ப்ரேம்குமார், ஏதோ யோசித்தார்.

     அதன்பின் மதனிடம், “தங்கமீனாவோட பேரண்ட்ஸ், அந்தஸ்து பேதத்துனாலதான் உங்க காதலை மறுத்தாங்கன்னும், உங்களைப் பத்தின பொய்யான தகவல்களையும் சொன்னாங்கன்னும் உங்களுக்கு எப்படித் தெரிஞ்சுது...?”

     “தங்கமீனாவோட அம்மாவோட சொந்தக்காரங்க, அப்பாவோட சொந்தக்காரங்க, அவங்களைச் சேர்ந்தவங்க சில பேர் எனக்கு பிரெண்ட்ஸ். அவங்க மூலமா எனக்குத் தெரிஞ்சுது. பெரிய பணக்காரங்களோட குடும்ப விவரங்களெல்லாம் அவங்க பங்களாவுல வேலை செய்யற டிரைவர், வேலைக்காரங்க,  சமையல்காரங்க... இவங்க மூலமாகவும் லண்டன் பி.பி.ஸி. நியூஸ் மாதிரி பரவிடும் ஸார்...”

     “ஓகோ... சரி, நான் கிளம்பறேன்.”

     “சரிங்க ஸார்...”

     ப்ரேம்குமார், அவருக்கே உரிய மிடுக்குடன் நடந்து சென்று ஜீப்பில் ஏறிக் கொண்டார். ஜீப் கிளம்பியது.

    

41

     வீட்டினுள் சென்ற மிதுனாவைக் கட்டி அணைத்துக் கொண்டார் சாரதா.

     “என்னம்மா? ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கீங்க? இதோ இருக்கிற பெங்களூரு போய்ட்டு வர்றதுக்குள்ளே... ஏன் இப்படிக் கண் கலங்கி, இவ்வளவு சோகமா இருக்கீங்க?”

     பெங்களூரு என்னம்மா... நீ வெளிநாட்டுக்கே தனியாகப் போயிட்டு வந்தால்கூட நான் இப்படிப் பரிதவிக்க மாட்டேன். நீ எங்கே போனேங்கிறதுல எனக்குக் கலக்கம் இல்லைம்மா. நீ போன காரணம்தான்மா என் வயிற்றைக் கலக்கிடுச்சும்மா... உன்னோட வாழ்க்கைப் பிரச்சனை யாச்சேம்மா... பெத்தவ மனசு பதறாதா?”

     “அமைதியாக உட்காருங்கம்மா!” என்று கூறி சாரதாவை ஆசுவாசப்படுத்தினாள்.

     “ஆஞ்சநேய பகவான் ஶ்ரீராமர் தெய்வத்துகிட்டே ‘கண்டேன் சீதையை’ன்னு சொன்ன மாதிரி நீயும் ஒரு பிரச்சனையும் இல்லைம்மான்னு சொல்லுடா என் மிதுனா செல்லம்...!” பதற்றம் குறையாத குரலில் பேசினார் சாரதா.

     “ரிலாக்ஸ்மா. நீங்க எதிர்பார்க்கிற மாதிரி ‘பிரச்சனை இல்லை’ன்னு என்னால சொல்ல முடியாதும்மா. ஆனால், நீங்க பயப்படற மாதிரி இப்போதைக்கு எதுவும் இல்லை... அல்லது இன்னும் முழுசாக நான் எதையும் தெரிஞ்சுக்கலை. இதுதான்மா என்னால சொல்ல முடியும். படபடப்பாகி, உங்க உடம்புக்கு எதுவும் ஆகிடக் கூடாதும்மா...!”

     “சரிம்மா. நீ சொல்லு... போன இடத்துல என்ன நடந்துச்சு?

     “அங்கே கார்த்திகாவையும், அவ ஹஸ்பென்ட் ஹரியையும் பார்த்தேன். அவங்களோட வீட்லதானே இருந்தேன்? கார்த்திகாவோட அப்பார்ட்மென்ட் சூப்பரா இருக்கு. பெங்களூருல என்னோட உபயோகத்துக்காக உங்க ‘மாப்பிள்ளை’ டாக்ஸி ஏற்பாடு பண்ணி இருந்தார்...”

     அப்போது குறுக்கிட்டுப் பேசினார் சாரதா. “போன விஷயம் என்னம்மா ஆச்சு? அதைச் சொல்லும்மா...?”

     “அவசரப்படாதீங்கம்மா, பெங்களூருல ‘அவர்’ கொடுத்த அட்ரசுக்கு நானும் கார்த்திகாவும் போனோம். ஆனால், அந்த அப்பார்ட்மென்ட் வெளிக்கதவுல பெரிய பூட்டு போட்டுத் தொங்கிக்கிட்டிருந்துச்சு...!””

     “என்ன? பூட்டிக்கிடந்துச்சா?”

     “ஆமாம்மா, அக்கம் பக்கம் விசாரிச்சுப் பார்த்தோம். யாருக்கு எதுவும் தெரியலை. குழப்பம் தீரும்னு அங்கே போனா... குழப்பம் இன்னும் அதிகமாயிடுச்சு, ஒண்ணும் புரியலை...”

     “என்னம்மா, நீ இப்படிச் சொல்றே?”

     “அம்மா... கவலைப்படாதீங்க. இது சாதாரண பிரச்சனை இல்லைம்மா, பெரிய பிரச்சனை. போனேன், வந்தேன்னு முடிஞ்சுடற சின்னப் பிரச்சனை இல்லம்மா. ஆனால், ஒரு சின்ன, ஆறுதலான விஷயம் என்னன்னா. உங்க மாப்பிள்ளையோட சம்பந்தப்பட்ட அந்த பெங்களூரு ஆளுங்க மேலே தப்பு இருக்கு. இவரோட பணத்துக்காக இவரைச் சிக்க வெச்சிருக்காங்களோன்னு. நான் நினைச்சது சரிதான். தேவை இல்லாமல் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைக் காலி பண்ணிட்டு ஓடிப் போயிருக்காங்களோ... அதை வெச்சுச் சொல்றேன். இவர் நல்லவராத்தான் இருக்கணும்னு தோணுது.”

     “அது சரி மிதுனா, படிச்ச, பணக்கார வீட்டுப்பையன் இப்படி ஏமாறுவாரா...?”

     “படிப்புக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைம்மா. இது இவரோட இரக்க சுபாவத்துக்குக் கிடைச்சது. மேற்கொண்டு என்ன செய்யறதுன்னும், நிஜமாகவே நடந்தது என்னன்னு கண்டுபிடிக்கவும் கார்த்திகா, அவ ஹஸ்பென்ட் ஹரி கூட கலந்து பேசிட்டுச் சொல்றேன்னு சொல்லி இருக்கா. ‘அடுத்த நடவடிக்கை பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டு அதன்படி செய்யலாம். நீ இங்கே இரு, இப்ப சென்னைக்குப் போகாதே’ன்னு கார்த்திகா சொன்னா. நீங்க ரொம்ப கவலைப்பட்டுக்கிட்டுருப்பீங்கன்னு, நான் வந்துட்டேன்.

     “அது மட்டுமில்லை... அந்த ஃப்ராடுங்க வீடு பூட்டி இருந்ததாலே நான் அங்கே இருந்து என்ன ஆகப்போகுதுன்னும் நினைச்சேன். இன்னொரு விஷயம்... என்னோட மாமியார்கிட்டே, கார்த்திகா கல்யாணத்துக்குப் போறதாகப் பொய் சொல்லி இருக்கு. அவங்களுக்கு வேற பதில் சொல்லணும். அதனால நான் கிளம்பி வந்துட்டேன். அது சரிம்மா, அப்பா ஏன் இந்த நேரம் தூங்கிக்கிட்டிருக்கார்...?”

     “ரொம்ப அலுப்பா இருக்குன்னு சொன்னார்மா...”

     “அருணாவுக்கு இந்தப் பிரச்சனை பற்றி எதுவும் தெரியாதுல்ல...?”

     “தெரியாதும்மா டியூஷன் முடிஞ்சு வர லேட்டாகும்னு சொல்லிட்டுப் போனா...”

     “சரிம்மா, அருணாவுக்குச் சுடிதார் வாங்கிட்டு வந்தேன். உங்களுக்குப் பெங்களூரு காட்டன் சேலை வாங்கிட்டு வந்திருக்கேன். அப்பாவுக்கு ஸாஃர்ட் மெட்டீரியல்ல ஷர்ட் வாங்கிட்டு வந்திருக்கேன். இன்னோரு விஷயம்மா... இதைப் பாருங்க...” என்ற மிதுனா, தன் ஹேண்ட்பேக்கில் இருந்து கார்த்திகா பரிசாகக் கொடுத்து ஜிமிக்கிகளைக் காண்பித்தாள்.


     “அழகா இருக்கும்மா. ரொம்ப விலையா இருக்கும் போலிருக்கே?”

     “ஆமாம்மா, வேண்டாம்னு சொல்லியும் அவ கேட்கலைம்மா.”

     “கார்த்திகா உனக்கு ஹெல்ப் பண்ணது பெரிய விஷயம் மிதுனா...”

     “அவளுக்கு நல்ல மனசும்மா, சரிம்மா, நான் கிளம்பறேன்மா...”

     விமான நிலையத்தில் இருந்து வந்த டாக்ஸியிலேயே, ஜெய்சங்கரின் வீட்டிற்குக் கிளம்பினாள் மிதுனா.

    

42

     ங்களாவில் இறாங்கிக் கொண்ட மிதுனா, டாக்ஸிக்குரிய பணத்தை, டிரைவரிடம் கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள்.

     “வாம்மா மிதுனா, உன் பிரெண்ட்டோ கல்யாணம் நல்லபடியா நடந்துச்சாம்மா...?”

     அனுசுயா கேட்டதும், “அ... அ... ஆமா... கல்யாணம் நல்லா கிராண்டா நடந்துச்சு...!” சமாளித்துப் பதிலளித்தால் மிதுனா.

     “சரிம்மா, நீ போய்ப் புடவை மாத்திட்டு, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வா. நைட்டுக்கு என்ன டிபன் பண்ணலாம்னு யோசிப்போம். அது போக உன்கிட்டே கொஞ்சம் பேசணும்.”

     “ச... சரி...!” என்று சொன்ன மிதுனா, யோசனையில் ஆழ்ந்தபடி மாடிப்படிகளில் ஏறினாள்.

     புடவை மாற்றிக் கொண்டே, ‘என்கிட்டே இவரோட அம்மா என்ன பேசப் போறாங்க? நான் பொங்களூரு போன  விஷயம் பற்றின உண்மை ஏதாவது தெரிஞ்சுருக்குமா? என்கிட்டே அதைப் பற்றி ஏதாவது கேட்டால், நான் என்ன சொல்றது? இவங்க ஹார்ட் பேஷண்ட் வேற. இவர்  வேற இங்கே இல்லை... இவருக்கு போன்  பண்ணி வரச் சொல்ல்லாமா?’

     ஏதேதோ யோசித்தபடியே புடவை மாற்றிய மிதுனா, மனச் சோர்வுடன் கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக் கொண்டாள். அப்படியே தூங்கி விட்டாள். அறையின் அழைப்பு மணி ஒலி கேட்டுத் திடுக்கிட்டாள் எழுந்தாள்.

     புடவையைச் சரி செய்து கொண்டு வேகமாகக் கீழே இறங்கினாள்.’

     “வாம்மா மிதுனா... நைட் டிபனுக்கு என்னம்மா பண்ணலாம்? குருமாவுக்கு ஏதாவது புதுசா, மசாலா சொல்றியாம்மா? சப்பாத்திக்கு மாவு பிசையச் சொன்னால் வேணி பிசைஞ்சுடுவா. ரெடிமேட்  பரோட்டா இருக்கு. இட்லி மாவு இருக்கு. ஒரே மசாலா போட்டுக் குருமா பண்ணிப் பண்ணி...போர் அடிக்குதும்மா...”

     யோசித்தாள் மிதுனா. அதன்பின், “நீங்க வழங்கமாக என்ன மசாலா அரைக்கச் சொல்வீங்க?”

     “தனியா, சீரகம், மிளகு, சின்ன வெங்காயம் அரைச்சுட்டு, மசாலாவை இதயம் நல்லெண்ணெய்யிலே வதக்கிட்டு மிளகாத்தூள், மஞ்சள்தூள், உப்பு போட்டு, காய்கறி அல்லது சிக்கனைப் போட்டுக் கொஞ்ச நேரம் வதக்கிட்டு, தேங்காய்ப்பால் ஊத்திச் செய்யச் சொல்லுவேன்.

     “அப்படின்னா... தேங்காய், சோம்பு, கசகசா முந்திரிப் பருப்பு, பச்சை மிளகாய் அரைச்சுப் போட்டு குருமா செய்யலாம். நான் போய்ச் செய்யட்டுமா...?”

     “வேணாம்மா...  வேணிகிட்டே மசாலா என்னன்னு சொல்லிட்டா அவ செஞ்சுடுவா, சமையலுக்கு ஆள் இருக்கும்போது நீ எதுக்கும்மா சிரமப்படணும்?”

     “இதிலே என்ன சிரமம்...?” அவள் பேசி முடிக்கும் முன் அனுசுயா அவளிடம்.

     “உன்கிட்டே கொஞ்சம் பேசணும்னு சொன்னேன்மா... நீ... நீ என்னை... ‘அத்தை’ன்னு கூப்பிட்டுப் பேசமாட்டிங்கிறியே... ஏற்கெனவே உன்கிட்டே இதைப் பற்றிப் பேசி இருக்கேன்...!”

     “அ... அ... அ வந்து... அப்படிக் கூப்பிடக் கூடாதுன்னு நான் நினைக்கலை. கொஞ்சம் பழகினப்புறம்... சகஜமாயிடும். வேணும்னு நான் அப்பிடிமொட்டையாகப் பேசலை அத்தை...!”

     “சரிம்மா... எனக்குப் புரியுது. எதையும் வெளிப்படையாக நேரிடையாகப் பேசிடறதுதான்  நல்லது. மாமியார், மருமகள் மன வேறுபாடுகள் இருக்காது... என்னம்மா, நான் சொல்றது சரிதானே...?”

     “அ... ஆமா... அத்தை...”

     “நீ என்ன ‘அத்தை’ன்னு  கூப்பிடறதைக் கேட்க எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்ம...”

     அனுசுயா பேசி முடிப்பதற்குள் ஜெய்சங்கர் ஆஃபீஸிலிருந்து வந்தான்.

     “முகம் கழுவிட்டு, ட்ரெஸ் மாத்திட்டுச் சாப்பிட வாப்பா ஜெய்சங்கர்.”

     “சரிம்மா, இதோ வந்துடறேன்!” என்றவன், மிதுனாவைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு மாடி அறைக்குச் சென்றான்.

     உடை மாற்றிவிட்டுக் கீழே வந்தான், சாப்பிட உட்கார்ந்தான். சாப்பாத்தியையும், குருமாவையும் சாப்பிட்ட ஜெய்சங்கர், “என்னம்மா? இன்னிக்குக் குருமா வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கு?” என்று கேட்டான்.

     “மிதுனா ஒரு புது மசாலா சொன்னாள்ப்பா... உனக்குப் பிடிச்சிருக்கா?”

     “ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. நல்லா இருக்கும்மா...”

     “ம்... ம்... புதுப் பொண்டாட்டி சொல்லி செஞ்சதுல்ல? நல்லாத்தானே இருக்கும்?” கிண்டல் செய்தார் அனுசுயா.

     நிலைமைக்கு ஏற்றபடி சிரித்துச் சமாளித்தான் ஜெய்சங்கர். மிதுனாவும் செயற்கையாகச் சிரித்துவைத்தாள்.

     அதன்பின், அனுசுயாவும், ஜெய்சங்கரும் பொதுவான விஷயங்களைப் பேசினர். மிதுனாவும் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக ஏதோ பேசிவைத்தாள். சிறிது நேரம் ஆனதுமே அனுசுயா,

     “நீங்க ரெண்டு பேரும் போய் படுத்துக்கோங்கப்பா...”

     “சரிம்மா... நீங்க மாத்திரையெல்லாம் சாப்பிட்டீங்களாம்மா...?”

     “சாப்பிட்டேன்ப்பா... வேணி எட்டு மணிக்கெல்லாம் கொடுத்துதுவா...”

     “சரிம்மா, கும் நைட்...”

     “குட் நைட்ப்பா... குட் நைட் மிதுனா...“

     “குட் நைட் அத்தை...!”

     மிதுனாவும், ஜெய்சங்கரும் ஜோடியாக மாடிப்படியில் ஏறுவதை ஆனந்தமாய்ப் பார்த்தாள் அனுசுயா

.

43

     மாடியறையிலுள்ள குளியலறையில் உடையை மாற்றி நைட்டி அணிந்து கொண்டு வந்தாள் மிதுனா.

     “உங்க அம்மா, என்கிட்டே நான் ஏன் அவங்களை ‘அத்தை’ன்னு கூப்பிட மாட்டேங்கிறேன்னு கேட்டு வருத்தப்பட்டாங்க...”

     “நானும் கவனிச்சேன். நீ என் அம்மாவைத் திடீர்னு அத்தைன்னு கூப்பிட்டே...”

     “கூப்பிடக் கூடாதுன்னு நான் நினைக்கலை. ஆனால், சரளமாக அப்படிக் கூப்பிடவும் முடியலை. நமக்குச் சொந்த பந்தம் இல்லாத அந்நியமானவங்களைக் கூட, பொது இடத்துல வெச்சுக் கூப்பிடணும்னா ‘ஆன்ட்டி’ ‘மாமி’ ‘அத்தை’ இப்படிக் கூப்பிடறோம். உங்கம்மா, உங்க பிரச்சனை எனக்குத் தெரியாதுன்னுதானே நினைச்சுக்கிட்டிருக்காங்க? அதனாலே அவங்களுக்கு நான் அத்தைன்னு அவங்களைக் கூப்பிடாதது சங்கடமா இருந்திருக்கு. நானும் யோசிச்சேன். யார் யாரையோ முறை வெச்சுக் கூப்பிடும் போது... இவங்களையும் அப்படிக் கூப்பிடறதுல என்ன கஷ்டம்னு தான் அத்தைன்னு கூப்பிட்டேன்.”

     “உனக்கு நல்ல மனசு... அதே சமயம் என் மனசையும், என் மேலே எந்தத் தப்பும் இல்லையங்கிறதையும் நீ சீக்கிரமாவே புரிஞ்சிக்குவேன்னு நான் நம்புறேன் மிதுனா. நானும் உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்னு இருந்தேன்.

     “பெங்களூருல அந்தப் பொண்ணு கழுத்துல நான் தாலி கட்டினதை ரிஜிஸ்டர் பண்ணி, அதை ஒரு ரிஜிஸ்டர்ட் ரெக்கார்டு பண்றதுக்கு என்னை ரங்கான்னு ஒரு ஆள் வற்புறுத்தினார்னு சொன்னேன்ல...? அந்த ஆள் என்னோட மொபைல்ல கூப்பிட்டார்.”

     “அப்படியா? அந்த ஆளோட நம்பரை ஸ்டோர் பண்ணிட்டீங்களா?”

     “எதுக்கு அந்த ஆள் கூப்பிட்டாராம்?”

     “என்னை உடனே கிளம்பி வரச்சொன்னார். ஆனா, எதுக்காகன்னு ஒண்ணும் சொல்லலை. ஆனா, ‘பெங்களூரு கிளம்பி வாங்க... வாங்க...’ன்னு திரும்பத் திரும்பச் சொன்னார். நான் மொபைல் லைனைக் கட் பண்ணி விட்டுட்டேன். மறுபடி மறுபடி கூப்பிட்டுக்கிட்டே இருந்தார். இப்போ நம்பர் ஸ்டோர் பண்ணிட்டதாலே, நான் அவரோட காலை அட்டெண்ட் பண்றதில்லை.”

     “யப்பாடா... இப்பவாவது சமயோசிதமா செய்யணும்னு தோணிச்சே? அந்த ஆளை மாதிரி கேடிங்க மொபைல் நம்பரை மாத்திட்டுக் கூப்பிடுவானுங்க... சரியான ஃப்ராடுங்கள். அது சரி, நம்பரை மாத்திட்டு அந்த ஆள் கூப்பிட்டு நீங்க மொபைலை அட்டெண்ட் பண்ணிட்டீங்கன்னா என்ன செய்வீங்க...?”

     “அது வந்து... இன்னும் எங்கம்மா ஹாஸ்பிடல்ல தான் இருக்காங்கன்னு சொல்லிச் சமாளிப்பேன்.”


     மிதுனா சிரித்தாள். “பழைய ஏமாளியாக இருந்தால் உடனே கிளம்பிப் போயிருப்பீங்க...!”

     “அது வந்து மிதுனா...!”

     “பெரிய இன்டஸ்ட்ரீஸை ‘ஜஸ்ட் லைக் தட்’ மேனேஜ் பண்ற நீங்க, உங்களோட மனசுலேயும், இயல்பிலேயும் இருக்கிற ஸாஃப்ட் கார்னர்ல ஏடாகூடமா எதையாவது பண்ணிடறீங்க. இரக்க சுபாவத்துக்கும் ஒரு அளவு, சூழ்நிலை, காரணம் இதெல்லாம் உண்டு... யாருக்கு என்ன செய்யறோம்கிறதையும் பொறுத்தது.”

     “ஸாரி மிதுனா...”

     “சரி... பழசை ‘போஸ்ட்மார்ட்டம் ‘பண்றதுனாலே என்ன ஆகப் போகுது? இனி என்ன ஆகணும்? நீங்க இன்னொஸென்ட்டா இல்லையான்னு தெரியணும்...”

     “நீ.. என்னை ஃபிப்டி பெர்ஸென்ட் இப்போ நம்பறே. இனி ஹண்ட்ரட் பெர்ஸெண்ட் நம்பற மாதிரி உண்மைகள் வெளிவரும். அது சரி... மிதுனா, பெங்களூருல வேற என்ன நடந்துச்சு?”

     “பெங்களூருல அந்த அப்பார்ட்மென்ட் கதவு பூட்டிக் கிடந்ததைத் தவிர பலன் தர்ற விஷயமா வேற எதுவும் நடக்கலை. இதைத்தான் போன்லேயே உங்ககிட்டே சொன்னேனே...?”

     “உங்க அம்மா என்ன சொன்னாங்க?”

     “அவங்க என்ன சொல்லுவாங்க? மகளோட வாழ்க்கை இப்படி... இதுவா? அதுவாங்கிற மாதிரி இருக்கே... கல்யாணம் பண்ணி மகள் குடும்பம் நடத்தறதைப் பார்க்க ஆசைப்பட்டோமே... அவ என்னடான்னா அவளுக்குப் பிடிக்காத  ‘பொய் பேசற விஷயத்துக்கு உடந்தையாக இருந்து பெங்களூருக்குப் போய் வந்துக்கிட்டு இருக்காளே!’ன்னு நெஞ்சு நிறைய வேதனையைச் சுமந்துகிட்டு இருக்காங்க.

     “இப்படிக் கவலைப்பட்டுக்கிட்டு இருக்கிற ஒரு சூழ்நிலையிலே அவங்க கூடவே ஆறுதலா இருக்க முடியாத நிலைமை எனக்கு. அருணாவுக்கும், எங்க அப்பாவுக்கும் எதுவும்தெரியாமல் மறைச்சு வெச்சுக்கிட்டு... ‘என் அம்மா இப்படிக் கவலைப்படும்படியாக ஒரு கல்யாணம் நடந்துருக்கே’ன்னு நானும் கவலைப்பட்டு... என் அம்மாவும் கவலைப்பட்டு... இந்த நிலைமை எப்போ மாறுமோன்னு இருக்கு...”

     “ஸாரி மிதுனா...”

     “எங்க அம்மா மேலே நான் உயிருக்குயிராகப் பாசம் வெச்சிருக்கிற மாதிரி... நீங்க, உங்கம்மா மேலே வெச்சிருக்கிற பாசத்துனால இப்படி ஒரு செய்யக்கூடாத... மிகப்பெரிய தப்பைப் பண்ணிட்டீங்க. நூறு தடவை ‘ஸாரி’ சொல்றதுனால என்ன ஆகப் போகுது? யோசிக்காம நீங்க செஞ்ச தப்புக்கு ‘என்ன செய்றது’ என்ன செய்யறது’ன்னு நான் யோசிச்சுக்கிட்ருக்கேன்.

     “ஸாரி மிதுனா...”

     “மறுபடியும் ஸாரியா? என் அம்மா அங்கே தனியா, அருணாகிட்டேயும் எதுவும் பேச முடியாமல், எங்கப்பாகிட்டேயும் எதுவும் பேச முடியாமல், துயரத்தீ சுடுற மனசை ஆத்திக்க முடியாம அழுதுக்கிட்டு இருப்பாங்க. இந்த மாதிரி சமயத்துல அவங்க கூட இருக்க முடியாம, கல்யாணச் சம்பிரதாயங்கள், சாஸ்திரங்கள், புகுந்த வீட்டுப் பழக்க வழக்கங்கள்னு... நான்  இங்கே இருக்க வேண்டி இருக்கு... இதுக்கும் ஸாரி சொல்லாதீங்க, ப்ளீஸ்.... தூங்குங்க குட் நைட்...!”

     மிதுனா. தூங்க முயற்சித்தாள்.

     “குட்நைட் மிதுனா!” என்ற ஜெய்சங்கர், சோகம் நிரம்பிய முகத்துடன் படுக்கச் சென்றான். யாருடைய துன்பத்தையும், இன்பத்தையும் எதையும் பொருட்படுத்தாமல் இயற்கையின் விளைவால் இருள் இறகு விரித்தது.

 

44

     கையில் சிறிய சூட்கேஸ், பணம் வைக்கும் ஹேண்ட் பேக் சகிதம் நின்றிருந்த ஜெய்சங்கரைக் கேள்விக்குறியுடன் பார்த்தாள் மிதுனா.

     “அ... அது... வந்து மிதுனா... பெங்களூரு ஆஃபீஸ்ல ஒரு அவசர வேலை. உடனே கிளம்பி வரச்சொல்றாங்க...”

     “அப்படியா? அவ்வளவு அவசரமான வேலையா?”

     “ஆமா... இன்னும் ஒரு மணி நேரத்துல நான் ஏர்போர்ட்ல இருக்கணும்...!”

     “சரி... கிளம்புங்க. நான் வேணும்னா உங்க கூட வரட்டுமா? ஏதாவது ஹெல்ப் பண்ணுவேன்ல?”

     “அ... அ... அது... வேண்டாம், மிதுனா.”

     “அதுக்கு ஏன் இவ்வளவு தயங்குறீங்க? தடுமாறிப் பேசுறீங்க? ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க நானும் வரேன்...”

     அப்போது அங்கிருந்த அனுசுயா, “ஏம்ப்பா... மிதுனாதான் உன் கூட வர்றேன்னு சொல்றால்ல? கூட்டிக்கிட்டுப் போயேன்பா...”

     “அம்மா... ப்ளீஸ்... புரிஞ்சுக்கோங்கம்மா. நான் அவசர அவசரமாப் போயிட்டு இருக்கேன். நிதானமா, ரிலாக்ஸ்டாப் போனால், மிதுனாவைக்கூட கூப்பிட்டுக்கிட்டுப் போறதுல அர்த்தம் இருக்கு. நான் போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன்மா...”

     “சரிப்பா... நீ கிளம்பு, வாசுவைக் காரை நிதானமாகக் கவனமாக ஓட்டச் சொல்லு...”

     “சரிம்மா.. மிதுனா, நான் கிளம்பறேன்.”

     “சரி...”

     “மிதுனா, அவனை வாசல் வரைக்கும் போய் வழி அனுப்பிட்டு வாம்மா...”

     “சரி அத்தை...!” என்ற மிதுனா, வாசலில் நின்ற காரை நோக்கி நடந்த அவனுடன் மிதுனாவும் போனாள்.

     காரில் ஏறிக் கொண்ட ஜெய்சங்கர், கையசைத்து மிதுனாவிடம் விடை பெற்றுக் கிளம்பினான்.

     ‘இவர் ஏன் இவ்வளவு அவசரமாகப் பெங்களூரு கிளம்பறார்...? ஒண்ணுமே புரிய மாட்டேங்குதே...!’ என்று யோசித்தபடியே பங்களாவிற்குள் வந்தாள் மிதுனா.

     “அக்கா, உங்க மொபைல் அடிச்சுக்கிட்டே இருந்துச்சுக்கா...!” என்றபடி அவளிடம் மொபைலைக் கொடுத்தாள் வேணி.

     “தேங்க்ஸ் வேணி...”

     “எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ் கொல்றீங்கக்கா... என்னை எந்த வேலையும் செய்ய விட மாட்டேங்கிறீங்கக்கா...!” வேணி இவ்விதம் சொன்னதைக் கேட்ட மிதுனா புன்னகைத்தாள்.

     “எனக்குத் தேவைப்பட்டா உன்னைத்தான் வேணி கூப்பிடுவேன். நீ போய் அத்தைக்குத் தைலம் தடவி கால் தேய்ச்சு விடு! நான் மாடி ரூமுக்குப் போயிட்டு வந்துடறேன்...”

     “சரிக்கா..!” வேணி சென்றதும் மிதுனா, மாடி அறைக்குப் போனாள்.

     மிஸ்டுகால் பார்த்தாள்... சாரதாவின் மொபைல் நம்பர் காணப்பட்டது.

     ‘அடடா... அம்மா கூப்பிட்டிருக்காங்களே...!” என நினைத்தபடிபே, சாரதாவின் மொபைல் நம்பரில் அழைத்தாள்.

     “ஹலோ...” மறுமுனையில் அருணாவின் குரல் கேட்டது.

     “அருணா... எப்படிம்மா இருக்கே...?”

     “நல்லா இருக்கேன்கா... நீங்க எப்படி இருக்கீங்க...?”

     “நான் நல்லா இருக்கேன்டா அருணா. அம்மா, என்னோட மொபைல்ல கூப்பிட்டிருக்காங்க...”

     “அம்மா கூப்பிடலைக்கா... நான்தான் கூப்பிட்டேன். மச்சான் நல்லா இருக்காராக்கா? உன் மேலே பிரியமா இருக்காராக்கா? நீங்க சந்தோஷமா இருக்கீங்களாக்கா? உங்க மாமியார் எப்படி இருக்காங்க...?”

     “என்ன அருணா... பெரிய மனுஷி மாதிரி அடுக்கடுக்காகக் கேள்வி கேட்கிறே? நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம். அப்பா எப்படி இருக்கார்...?”

     “அப்பா நல்லா இருக்காருக்கா... நீங்க பெஙகளூருல இருந்து வாங்கிட்டு வந்த சுடிதார். ரொம்ப சூப்பரா இருக்குக்கா... தேங்க்ஸ்க்கா...!”

     “ச்சே... நமக்குள்ளே என்ன தேங்க்ஸ்? சரி, நல்லாப் படிக்கிறியா?”

     “ஓ... சூப்பரா படிக்கிறேன்க்கா. ஆனால், கணக்குத்தான்கா நீ சொல்லித் தராம மண்டையிலே ஏற மாட்டேங்குது...!”

     “ஸ்கூல்ல என் கூட வேலை பார்த்தாங்களே... ஸ்டெல்லா மிஸ்...? அவங்களை உனக்குக் கணக்கு டியூஷன் எடுக்கச் சொல்றேன். வாரத்துக்கு மூணு கிளாஸ் எடுக்கட்டும்... எனக்காக அவங்க... டியுஷன் ஃபீஸ் அதிகமாகக் கேட்க மாட்டாங்க..."

     “சரிக்கா. அம்மாகிட்டே கொடுக்கட்டாக்கா?”

     “கொடும்மா...” சாரதா லைனில் வந்தார்.

     “ஹலோ மிதுனா... என்னம்மா, எப்படி இருக்கே? உன் அத்தை நல்லா இருக்காங்களா?”

     “எல்லாரும் நல்லா இருக்கோம்மா. உங்க மருமகன் பெங்களூரு போயிருக்காரு. என்னமோ அவசர வேலையாம்...”

     “என்ன மிதுனா...? நீ பெங்களூரு போறே... இப்போ அவர் போறார்ங்கிறே? என்ன நடக்குது...?”


     “அம்மா... அருணா முன்னாடி எதுவும் பேசாதீங்க. அவர் ஆஃபீஸ் வேலையாகக் கிளம்பிப் போயிருக்கார்.

     “இந்திரா நல்லா இருக்காம்மா. உன்னைக் கேட்டா... அவதான் எனக்கு அப்பப்போ ஹெல்ப் பண்றா...”

     “அவங்களை நான் விசாரிச்சதா சொல்லுங்கம்மா.”

     “சரிம்மா... கல்பனாம்மா கூப்பிட்டாங்க. மிதுனா நல்லா இருக்காளா அப்படின்னு கேட்டாங்க...”

     குறுக்கே மிதுனா பேசினாள். “அவங்ககிட்டே இப்போ பிரச்சனைகள் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்மா... தேவைப்பட்டால் பார்த்துக்கலாம்... இப்போ சொன்னா அவங்க உடனே என் மாமியார்கிட்டே கோபமாகப் பேசி, விஷயம் பெரிசா ஆயிடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கம்மா. கவலைப்பட்டு உடம்பைக் கெடுத்துக்காதீங்கம்மா... வெச்சுரட்டுமா?”

     “சரிம்மா மிதுனா...”

     இருவரது இணைப்புகளும் மௌனமாகின.

 

 

 

45

     ரவின்  மடியில் நிலவு தவழும் நேரம்... மிதுனாவின் கண்களைத் தூக்கம் தழுவ மறுத்தது, தவித்தாள்.

     தூக்கம் இல்லாதபடியால், இதயத்தில் ஏதேதோ சிந்தனைகள் தோன்றின. அவளுக்குத் திருமணம் ஆனது முதல் அன்றைய தினம் வரை நடந்த அத்தனையையும் நினைத்துப் பார்த்தாள். நீண்ட நேரம், நினைவுகளில் நீந்தியவள், விடியும் தறுவாயில் அவளது விழிகளை உறக்கம் மெல்லமெல்ல  ஆக்கிரமித்துக் கொண்டது. அசந்து தூங்கிக் கொண்டிருந்த அவளை, அவளது மொபைல் ஒலித்து அழைத்தது. அவளது தூக்கத்தைக்  கலைத்தது.

     எழுந்தாள். மொபைலை எடுத்துப் பேசினாள்.

     “ஹலோ மிதுனா... நான் கார்த்திகா பேசறேன்டி என்னடி, தூக்கமா? உன்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் முக்கியமான விஷயம்ணு சொல்றதைவிட... உன் மனசுக்குக் கஷ்டமான விஷயம்...”

     “பரவாயில்லை கார்த்திகா, சொல்லு.” பரபரத்த மனதை நிதானமாக்கியபடி பேசினாள் மிதுனா. மறுமுனையில் இருந்து கார்த்திகா, மிகத் தயக்கமான குரலில், மெதுவான குரலில்... விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்தாள்.

     “மிதுனா... உன் கணவர் ஜெய்சங்கர், நாம நினைச்ச மாதிரி நல்லவர் இல்லை.!”

     இதைக் கேட்ட மிதுனா, மௌனமானாள்.

     “என்னடி மிதுனா... கேட்கிறியா?”

     “ம்... கேட்டுக்கிட்டுதான் இருக்கேன்...”

     “ஜெய்சங்கரை ஒரு பொண்ணு கூட நாம அன்னிக்குப் போன ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ல பார்த்தேன். அவரோட ஆஃபீஸ்ல வேலைசெய்றவளா இருக்கலாம்மோன்னு நினைச்சேன். ஆனால், அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப் பிடிச்சுக்கிட்டு... ரொம்ப ரொமான்ட்டிக்கா சுத்திக்கிட்டிருந்தாங்க. அவங்களைப் பார்க்கிறதுக்கு புதுசா கல்யாணமான ஜோடி மாதிரி இருந்துச்சு. அவங்க அப்படி நடந்துக்கிட்டாங்க.

     “நான் அவங்களை ஃபாலோ பண்ணிப் போனேன். ஒரே கொஞ்சல்... ஒரே குலாவல்... இந்த ஊர்ல அவர் ஏதோ ஒரு பொண்ணுக்குத் தாலி கட்டினதாகவும், அது ஒரு இக்கட்டான சூழ் நிலையிலே நடந்தளதாகவும் சொன்னதா நீ சொன்னே.  அந்தப் பொண்ணுதான் ஜெய்சங்கர் கூட சுத்தினவளா... அல்லது இவ வேற ஒருத்தியான்னு தெரியலியே! ஏமாந்துட்டதாகவும் சொன்னாரே... அவர்தான் உன்னை ஏமாத்திக்கிட்டிருக்கார். அதனாலதான் அவர் உனக்குத் தப்பான அட்ரஸ் கொடுத்திருக்கார்...”

     “நீ உன் கண்ணால பார்த்துச் சொல்றே... அதனால நீ சொல்றது எல்லாமே சரியாத்தான் இருக்கும். அதாவது... அவர் நல்லவர் இல்லைங்கிறது...”

     “என் கண்ணால மட்டுமில்ல மிதுனா... என் ஐ-ஃபோன்ல இருக்கிற கேமராவோட கண்ணாலேயே அதையெல்லாம் வீடியோ எடுத்திருக்கேன். உனக்கு அதை அனுப்பறேன். ஆனால், அப்ஸெட் ஆகாதே மிதுனா.”

     “நான் எதுக்கு அப்ஸெட் ஆகப்போறேன்? நல்லவரா... கெட்டவரான்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ணினோம். அவர் நல்லவர்னு நாம நம்பினோம். அது இல்லைன்னு நிரூபணம் ஆயிடுச்சு. அவ்வளவு தானே? நீ அந்த வீடியோவை அனுப்பு. அடுத்தது என்ன செய்றதுன்னு அப்புறம் யோசிக்கிறேன்.”

     “சரி மிதுனா, இதோ இப்போ உடனே அந்த வீடியோவை அனுப்பி வைக்கறேன்....” என்று சொன்ன கார்த்திகா, வீடியோ காட்சிகளை மிதுனாவிற்கு அனுப்பி வைத்தாள்.

     அதைப் பார்த்தாள் மிதுனா. கார்த்திகா சொன்னது போல, ஜெய்சங்கர் ஒரு பெண்ணுடன் உல்லாசமாகச் சுற்றிக் கொண்டிருந்தான். அவ்வப்போது அவளைக் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தான். வீடியோவில் பதிவான அந்தக் காட்சிகளைப் பார்த்த மிதுனா கோபம் அடைந்தாள்.

     கீழே இறங்கி வந்தாள். ஸோஃபாவில் உட்கார்ந்திருந்த அனுசுயாவின் அருகே வந்தாள்.

     “உங்க மகனுக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆனது தெரிஞ்சும், என்னை அவருக்குக் கட்டி வெச்சுட்டீங்க. என் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீங்க. இதுக்குத்தான் ஏழைக் குடும்பத்துப் பொண்ணுதான் வேணும்னு சொன்னீங்களா? எல்லாம் ஏமாத்து வேலை. நாடகம். உங்க சொத்து, சுகம், கார், பங்களா, பணம்... இதெல்லாம் யருக்கு வேணும்? எங்களுக்கு எங்க குடும்ப கௌரவம்தான் முக்கியம். பணத்தையும், உங்களோட பந்தா வாழ்க்கையையும்  காண்பிச்சு... எங்களை ஏமாத்திட்டோம்னு நினைச்சுட்டீங்களா? நாங்க அதிலே ஒண்ணும் ஏமாறலை.

     “கல்பனா ஆன்ட்டி உங்களைப் பத்தியும், உங்களோட மகனைப் பத்தியும் ரொம்ப நல்லவிதமா சொன்னாங்கன்னுதான், எங்கம்மா இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாங்க. உங்க மகன் என்னடான்னா... முதல் இரவுல, ‘நான் ஏற்கெனவே வேற ஒருத்தி கழுத்துல தாலி கட்டி இருக்கேன்’னு சொன்னார். ‘எங்கம்மாவுக்கு நெஞ்சுவலி... அதனால நீ இதைப்பத்தி அவாங்ககிட்டே பேசாதே, நான் நல்லவன். என் மேலே எந்தத் தப்பும் இல்லை’ன்னு வேற சொல்லி என்னை நம்ப வெச்சார். இப்போ...? நம்ப வெச்ச அவர், என் கழுத்தை அறுத்துட்டார். கல்பனா ஆன்ட்டிக்கு போன் பண்ணிச் சொல்லி இருக்கேன். அவங்க இப்ப வருவாங்க...”

     “ஐயோ கல்பனாவா? அவ வந்தா...“நடுங்கினார் அனுசுயா.

     மிதுனா குறுக்கிட்டுப் பேசினாள்.

     “வந்தா... பயமா?”

     “என் மகன் அந்த இன்னொருத்தியை விரும்பித் தாலி கட்டலைம்மா...”

     “ஓ...! விரும்பலையா? விரும்பாமல்தான் இப்படி ஊர் சுத்துறாரா?" என்று கேட்டு, கார்த்திகா அனுப்பியா வீடியோ காட்சிகளைக் காண்பித்தாள்.

     அப்போது அவசர அவசரமாக அங்கே வந்த கல்பனாவும் அக்காட்சிகளைப் பார்த்தார். கோபத்தின் எல்லைக்கே சென்ற கல்பனாவும் குரல் ஓங்கிப் பேச ஆரம்பித்தார்.

     “ரொம்ப நல்லா இருக்கு அனுசுயா, உன்னோட நாடகம். என் மகன் உத்தமன், ஒரு பைசா கூட வரதட்சணை வேண்டாம், பொண்ணைக் கொடுத்தாப் போதும்... அது... இதுன்னு டயலாக் பேசி இந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பாழாக்கி, இப்படி நிக்க வெச்சிருக்கியே? நீயெல்லாம் ஒரு மனுஷியா? நான் அன்னிக்கே சொன்னேன்... ஏதாவது பிரச்சனைன்னா உன்னைச் சும்மா விட மாட்டேன்னு... இரு, இதோ இப்பவே போலீசைக் கூப்பிடறேன். உன் மானம் காத்துல பறக்கட்டும் உன் குடும்ப கௌரவம் கப்பல் ஏறட்டும்...”

     இதைக் கேட்ட அனுசுயா மிகவும் அஞ்சி நடுங்கினார். நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார்.

     இதற்குள் மிதுனா, கல்பனா இருவரும் கத்தியது  கேட்டு, அங்கே வேலை செய்பவர்கள் வந்தார்கள். அவர்கள் அனுசுயா மயக்கமாகிக் கீழே விழுந்திருப்பதைப் பார்த்தார்கள். அதிர்ச்சி அடைந்தார்கள்.

     வேணி பதறிப் போய், அனுசுயாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். ஒரு அசைவும் ஏற்படவில்லை. இன்னொரு பணிப்பெண் டாக்டரைக் கூப்பிட முயற்சித்தாள்.

     வேறொரு வயது முதிர்ந்த பணிப்பெண். அனுசுயாவின் மூக்கின் அருகில் கை வைத்துப் பார்த்தாள். அனுசுயாவின் மூச்ச நின்று போயிருந்தது.


     “ஐயோ... அம்மா...!” என்று அவள் அலற தோட்டக்காரர்களும் அங்கே குழுமி விட்டனர்.

     அந்தப் பெண்மணி மிதுனாவைப் பார்த்துக் கத்தினாள்.

     “ஏம்மா, ஒரு மாமியாரை, மருமகள் இப்படியா வாய் கூசாமல் பேசுறது? எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் ‘என்ன’ ‘ஏது’ன்னு நிதானமாகக் கேட்காமல், இப்படியா கூப்பாடு போடுவே? அம்மாவுக்கு நெஞ்சு வலின்னு உனக்குத் தெரியாதா...? அநியாயமா அவங்க உயிர் போறதுக்கு நீ காரணமாயிட்டியே!”

     இதைக் கேட்ட மிதுனா, “ஐயோ... நான் காரணம் இல்லை... நான் இல்லை... நான் இல்லை...” என்று கத்தினாள்.

     அப்போது அவளருகே வந்த வேணி, “என்னக்கா, இன்னிக்கு இவ்வளவு நேரமாகத் தூங்குறீங்க? கனவு கண்டீங்களாக்கா? என்னமோ... ‘நான் இல்லை’ ‘நான் இல்லை’ன்னு சொல்லிக்கிட்டிருந்தீங்களே...!”

     ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட மிதுனா, அப்போது தான் அத்தனையும் தனது கனவில் வந்தவை என்பதை உணர்ந்தாள். கனவின் விளைவால் படபடத்த அவளது நெஞ்சம், அது நிஜத்தில் நிகழ்ந்தது. அல்ல... நிழலாகத் தன் கனவில் நேர்ந்தவை என்பதை அறிந்ததும் மகத்தான நிம்மதி அடைந்தாள். ‘நல்ல வேளை... அத்தனையும் கனவு’ என்று நினைத்து நிம்மதி அடைந்த அவள், வேணியிடம் கனவு பற்றி எதுவும் சொல்லாமல் “ராத்திரி லேட்டா தூங்கினேன். அதனால  எழுந்திருக்க லேட் ஆயிடுச்சு வேணி...”

     “சரிக்கா... நீங்க இன்னும் கீழே இறங்கி வரலியேன்னு அம்மா பார்த்துட்டு வரச் சொன்னாங்கக்கா. முகம் கழுவுங்கக்கா. நான் போய் காபி போட்டுக் கொண்டு வரேன்.”

     “வேண்டாம் வேணி, நான் குளிச்சுட்டு கீழே வர்றேன்.”

     “சரிக்கா... நான் போறேன்...”

     “சரி வேணி...” என்ற மிதுனா, சற்று படபடப்பு அடங்கியதும் குளிப்பதற்குத் தயாரானாள்.

 

46

     பெங்களூருவில்... இரண்டாம் தரமான அப்பார்ட்மென்ட். மிகவும் மட்டமாகவும் இன்றி, மிக உயர்ந்த தரமானாகவும் இன்றி ஓரளவு மரியாதையான அப்பார்ட்மென்ட்டாக இருந்தது.

     அங்கே ஒரு கட்டிலில் இளம்பெண் ஒருத்தி, சாய்ந்துபடுத்துத் தூங்கிக் கொண்டிருந்தாள். எலுமிச்சையின் நிறத்தில், மிகவும் வனப்பான முகம் கொண்ட அவளது அழகு பிரமிக்க வைத்தது.

     அங்கே ஐம்பத்தைந்து வயதுடைய ஒரு ஆளும், நாற்பத்தெட்டு வயதுடைய ஒரு பெண்மணியும் இருந்தனர்.

     அந்த ஆள், அந்தப் பெண்மணியிடம், “ஏ மங்கா... இன்னும் எத்தனை நாளுக்கு இந்தப் பொண்ணை நம்ம கூட வெச்சு வாழப் போறோம்? இவளுக்குச் சாப்பாடு, துணிமணி, மருந்து, மாத்திரைன்னு எக்கச்சக்கமா ஆகுது...”

     “அட ரங்கா... நீ எனக்கு அண்ணன்னாலும் அறிவுல நீ ரொம்ப ராங்கா இருக்கே... இந்தப் பொண்ணு பெரிய கோடீஸ்வரக் குடும்பத்துப் பொண்ணுன்னு தெரிஞ்சுதானே பெரிய திட்டமெல்லாம் போட்டு வெச்சிருக்கோம்? இவளுக்கு எப்போ வேணும்னாலும் நினைவு திரும்ப வரலாம்னு டாக்டருங்க சொல்லி அனுப்பிச்சாங்க. இவளுக்கு நினைவு திரும்பிட்டா... இவ யார், இவளோடு வீடு எங்கே இருக்கு...? இவளைப் பெத்தவங்க யாரு... என்னன்னு எல்லா விபரத்தையும் கண்டுபிடிச்சு, இவ கூடவே நாமளும் ஒட்டிக்கணும்...”

     பேசிய மங்காவின் காது, மூக்கு, கைகளில் ஏகப்பட்ட கறுத்துப் போன கவரிங் நகைகள் காட்சி அளித்தன. அவளது தலைமுடி அடர்த்தியாக இருந்தது. உயரமான உருவம். அதற்கேற்ற பருமனான உடல்வாகு. சதா சர்வமும் வெற்றிலையை மென்று கொண்டே இருந்ததால் கருஞ்சிவப்பாய் மாறிப்போன உதடுகள். இவற்றின் மொத்த உருவமாக இருந்தாள் மங்கா.

     ஆனால் மங்காவின் அண்ணன் ரங்காவோ... குச்சி போன்ற உடல்வாகு, ஒற்றை நாடி, வழுக்கைத் தலை, நரைத்த மீசை, இடுங்கிய கண்கள்... இவற்றை அடையாளமாகக் கொண்டிருந்தான். ரங்கா, அவனது அப்பாவைப் போலவும், மங்கா அம்மாவைப் போலவும் சாயல் கொண்டிருந்தார்கள்.

     “இந்தப் பொண்ணை இவ வீட்ல சேர்த்துட்டு நாமளும் அங்கேயே ஒட்டிக்கணும், நல்லவங்களா நடிச்சு, நம்மை நல்லா நம்ப வெச்சு... எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டு, கம்பி நீட்டிடணும்.”

     மங்கா பேசியதைக் கேட்டு எரிச்சலானான் ரங்கா.

     “அட நீ வேற... இதையே சொல்லிச் சொல்லி, ஒரு மண்ணும் ஆகலை...”

     ரங்கா உரக்கப் பேசியதும் மங்கா கோபப்பட்டாள்.

     “ஏ ரங்கா... இவளுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரைக்கு அசந்து தூக்கம் வரும்னு சொன்னார் தான். ஆனால் அதுக்காக...? அலட்சியமாக இப்படிக் கத்தலாமா? அடக்கி வாசி. இவளுக்குச் செலவு செய்யுறதைப் பற்றிப் பெரிசாப் பேசுறியே... நீ என்ன பாடுபட்டு உழைச்சு சம்பாதிச்ச பணத்துலேயா செலவு செய்யறே? தங்கக் கடத்தல் செஞ்சும், ஸ்டார் ஆமை கடத்தியும்தானே காசு சேர்த்து வெச்சிருக்கே? நீ போலீஸ்லே மாட்டிக்காத... ஜாக்கிரதையா இரு...”

     “அதெல்லாம் உஷாராத்தான் இருக்கேன். ஆனால், நாம காலி பண்ணின அந்த அப்பார்ட்மென்ட்டுக்கு வாடகை கொடுத்துதான் கையில இருந்த பணம் நிறையக் குறைஞ்சு போச்சு...!”

     “ஆமா... கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணிடலாம்னா அவன் சிக்கவே மாட்டேங்கிறான்...”

     “நிறுத்து ரங்கா, கொஞ்சம் மூச்சு விட்டுக்கோ. இவ, இவளோட குடும்பத்துலே போய்ச் சேர்ந்தாலும் நமக்கு ஆதாயம்... அந்த ஜெய்சங்கர் பையனோட போய்ச் சேர்ந்தாலும் ஆதாயம். மொத்தத்துல இவபொன் முட்டை இடற வாத்து.”

     “அட வாத்து மடச்சி...பொன் முட்டை இட்ற வாத்தை, பேராசை பிடிச்ச வியாபாரி அறுத்துக் கொன்னானே... அந்த மாதிரி நம்ம கதை ஆகிடுமோன்னு பயமா இருக்கு. இவளுக்கு என்னிக்குப் பழைய நினைவு திரும்பி, நாம என்னிக்கு செல்வச் செழிப்பா வாழப் போறாமோ தெரியலை...”

     “இந்தப் பொண்ணு... நம்மை யார்னு தெரியாமலே சிரிச்ச முகமா, ஏதோ அவளுக்குத் தோணறதைப் பேசிக்கிட்டு, அவபாட்டுக்கு இருக்கா...”

     “பழைய நினைப்பு மீண்டுட்டா... பத்ரகாளி ஆட்டம் போட மாட்டாளா?”

     “அப்படிப்பட்ட பொண்ணு இல்லை இவ... நான் அப்படித்தான் நம்பறேன்.”

     “என்னமோ போ... நீ சொல்றதை நானும் நம்பறேன்... காலத்தை ஓட்டறேன்.”

     “சரி, சரி... புலம்பாதே.”

     “உன்கிட்டே நான் கொடுத்து வெச்செனே... இவளோட அம்மா இவளுக்கு எழுதின லெட்டர்? அதைப் பத்திரமா வெச்சிருக்கியா?”

     “பின்னே? நான் உன்னை மாதிரி தண்ணி அடிச்சுட்டு எதை எங்கே வெச்சோம்னு தேடிக்கிட்டு திரியற ஆள் நான் இல்லை...”

     அப்போது அந்தப் பெண், கண் விழித்தாள், தூங்கி எழுந்தாலும், கூட புன்னகை மாறாத முகத்துடன், மங்காவைப் பார்த்தாள்.

     “யம்மாடி மஞ்சுளா... ரொம்ப நேரம்  தூங்கிட்டியே? வயிறு பசிக்கும். பல் தேய்ச்சுட்டு வா, இட்லி பண்ணி வெச்சிருக்கேன்.”

     “சரிம்மா!” என்ற மஞ்சுளா என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண், குறியலறைக்குச் சென்றாள்.

     அவள் சாப்பிடுவதற்குத் தயாராக, இட்லியையும் சட்னியையும் எடுத்து வைத்தாள் மங்கா.


47

     மிதுனாவின் மொபைல் ஒலித்து அவளை அழைத்தது. எடுத்துப் பேசினாள் மிதுனா.

     “ஹாய் மிதுனா...” கார்த்திகாவின் குரல் கேட்டது.

     “ஹாய் கார்த்திகா... நைட் எது எதையோ நினைச்சு, தூங்கறதுக்கு ரொம்ப லேட்டாயிடுச்சு... விடியற நேரம் அசந்து தூங்கிட்டேன். அப்போ நான் கண்ட கனவு... என்னை ரொம்ப அப்ஸெட் பண்ணிடுச்சு...!” என்ற மிதுனா, அவள் கண்ட கனவு பற்றி, முழுவதையும் விவரித்துக் கூறினாள்.

     “த்சு... ரொம்ப அப்ஸெட் ஆகிட்டே போலிருக்கு. உன் குரல் அதைச் சொல்லுது. நிஜமா நடந்த தீமைகளையும், கெடுதல்களையுமே கனவா நினைச்சுத் தள்ளிட்டு மறந்துடணும்னு சொல்லுவாங்க. உண்மையாகவே கண்ட கனவைப்பத்தி எதுக்காகப் பேசிக்கிட்டு? விட்டுத்தள்ளு, மறந்துடு. நான் உன்னை எதுக்காகக் கூப்பிட்டேன் தெரியுமா? உன்னோட பிரச்சனை பற்றி நானும், ஹரியும் பேசிக்கிட்டிருந்தோம்.

     “அப்போ ஹரி ஒரு யோசனை சொன்னார். உன் ஹஸ்பென்ட ஜெய்சங்கர் பத்தின விஷயம், பெங்களூருல அவர் சொல்ற அந்த ஆட்கள் பத்தின தகவல் எல்லாம் கண்டுபிடிச்சுக் கொடுக்கற டிடெக்டிவ்  ஏஜென்ஸி நிறைய இருக்காம். அதிலே எக்ஸ்பெர்ட் ஆன ஏஜென்ஸி பற்றி ஹரியோட ஆஃபீஸ் பிரெண்ட் சொன்னாராம். குடும்ப ரகசியங்கள் எதுவும் வெளியே வராதாம். அந்த ஏஜென்ஸி பத்தின எல்லா டீடெயில்சும் ஹரி வாங்கி வெச்சிருக்கார்...”

     “சரி கார்த்திகா. ஹரி சொல்ற மாதிரியே செய்யலாம். இன்னொரு விஷயம் உன்கிட்டே சொல்லணும். பெங்களூருல ஒரு ஆள், இவர் வேற ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டினதை ரிஜிஸ்ட்ரார் ஆஃபீஸ் போய் ரிஜிஸ்ட்டர் பண்ணணும்னு அவசரப் படுத்தனார்ல? அந்த ஆள், இவருக்கு போன் போட்டுக்கிட்டிருக்காராம். இவர் அந்த ஆள் நம்பரைப் பார்த்து, எடுத்துப் பேசலையாம்...”

     “அதுதான் நல்லது. ஆனால், இந்த மாதிரி ஆளுங்க நம்பரை மாத்திக்கிட்டே இருப்பாங்க.”

     “நானும் அதைத்தான் சொன்னேன்.”

     “ஜெய்சங்கரைக் கவனமாக இருக்கச் சொல்லு. பெங்களூரு வந்திருக்கிறதாகச் சொன்னியே... எப்போ சென்னைக்கு வர்றாராம்...?

     “வேலை முடிந்ததும் வர்றதா சொன்னார்.”

     “சரி மிதுனா டிடெக்டிவ் ஏஜென்ஸியிலே அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டு, உனக்குச் சொல்றேன். இப்போ வைக்கட்டுமா? எதையும் யோசிச்சுக் குழம்பாதே. எப்ப வேணும்னாலும் என்னைக் கூப்பிடு...”

     “சரி கார்த்திகா. தேங்க்ஸ்!”

     மிதுனா, மொபைலை அமைதியாக்கினாள். மொபைல் அமைதியானது ஆனால், அவளது மனதின் நினைவலைகள் ஓயவில்லை.

     ‘என் வாழ்க்கையிலே என்னென்னமோ நடக்குது...? பொய்கள், குற்றங்கள், ஏமாற்றுதல், மர்மமான விஷயங்கள் இவற்றைக் கண்டுபிடிக்க ‘டிடெக்டிவ் ஏஜென்ஸி!’ ஒண்ணும் புரியலை. ஆக மொத்தம்... எனக்குப் பிடிக்காத எல்லாமே ஒட்டு மொத்தமாகச் சேர்ந்து என்னைக் குழப்புது.’

     பெருமூச்சு விட்ட மிதுனா, பிரார்த்தனை செய்வதற்குத் தயாரானாள்.

 

48

     கார்த்திகாவின் கணவன் ஹரி, உற்சாகமாக்க் கார்த்திகாவிடம் பேச ஆரம்பித்தான்.

     “கார்த்திகா... ப்ரேவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியிலே அப்பாயன்ட்மென்ட்  வாங்கிட்டேன்.”

     “என்னது...? அப்பாயின்ட்மென்ட் வாங்கிட்டீங்களா? மிதுனாவோட நிலைமை என்ன... அவ இங்கே, அப்போ வரத் தயாராக இருக்காள் என்றெல்லாம் தெரிஞ்சுக்காமல்... சரியான அவசரக் குடுக்கை நீங்க...”

     “நீ பெரிய மந்திரியாக்கும்? எல்லாத்தையும் யோசிச்சுதான் ஏற்பாடு பண்ணி  இருக்கேன். இதுக்காக மிதுனா இங்கே வந்துதான் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாம ரெண்டு பேரும் போய் ஏஜென்ஸி ஆட்களைப் பார்த்து விபரங்களைச் சொல்லலாம். அதுக்கு மேலே மிதுனா வந்துதான் ஆகணும்னா வரச்சொல்லலாம். இந்த விஷயத்துல இங்கே வர வேண்டியது ஜெய்சங்கராகத்தான் இருக்கும். தேவை இல்லாம மிதுனாவைக் கஷ்டப்படுத்த வேண்டாம்னு நான் நினைக்கிறேன்....”

     “வெரிகுட் ஹரி. நீங்க சொல்றது நல்ல யோசனை. நான் மிதுனாவுக்குச் சொல்லிடறேன். என்னைக்கு எத்தனை மணிக்கு அப்பாயின்ட்மென்ட்....?”

     “என்னது? இன்னிக்கா...?”

     “அட, என் அருமை மனைவியே... எதுக்காக இவ்வளவு அதிர்ச்சி? ஐயா... எப்பவும் எதிலேயும் ஸ்பீடுதானே? ஒரு பாராட்டு கூடக் கிடையாதா?

     “அதான் ‘வெரிகுட்’னு சொன்னேனே!”

     “அந்தப் பாராட்டு உன் வாயிலே இருந்து வர்ற குரல்ல மட்டும்தானே? உன் வாயிலே இருந்து இன்னொண்ணு கிடைக்குமே... அது வேணும்...!”

     “ச்சீ, திருட்டுப் பையா...!” செல்லமாக ஹரியின் தலையில் குட்டு வைத்தாள் கார்த்திகா.

     “நாம ஆஃபீஸ் போவோம். சாயங்காலம் உன்னைக் கூப்பிட உன்னோட ஆஃபீஸுக்கு வந்து, அங்கே இருந்து டிடெக்டிவ் ஏஜென்ஸிக்குப் போகலாம்.”

     “அந்த டிடெக்டிவ்  ஏஜென்ஸியோட பேர் என்ன?”

     “சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸி.”

     “ஓ...பேர் நல்லா இருக்கே...!”

     “பேர் நல்லா இருக்கு. அது ரிப்பேர் ஆகிடாம அவங்க திறமையைக் காட்டணும். அதனால மிதுனாவுக்குப் பலன் கிடைக்கணும்...”

     “ஆமா... அப்போதான் அவ வாழ்க்கையிலே ஒரு தெளிவு கிடைக்கும். மிதுனா நல்லவ... அவளோட திருமண வாழ்க்கை எந்தப் பிரச்சனையும் இல்லாம நல்லவிதமாக இருக்கணும்.”

     “கண்டிப்பா நல்லபடியாக இருக்கும் நீ கவலைப்படாதே...!”

     “ஓ.கே. தேங்க்யூடா...!”

     “என்னது...? ‘டா’வா? சரி ‘டி’...” இருவரும் ஆஃபீஸிற்குக் கிளம்பினார்கள்.

 

49

     பீஸின் இடைவெளி நேரம் மிதுனாவை மொபைலில் அழைத்தான் கார்த்திகா.

     “ஹரி, சுரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸிங்கிற ஏஜென்ஸியிலே இன்னிக்கு சாயங்காலத்துக்கு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கார். முதல்ல நாங்க ரெண்டு பேரும் போய்ப் பார்த்துப் பேசிடறோம். தேவைப்பட்டா ஜெய்சங்கர் மட்டும் வந்தால் போதும்னு ஹரி அபிப்ராயப்படறார்...”

     “ஆமா கார்த்திகா . அவர் மட்டும் வர்றதுதான் சரி. ஏன் தெரியுமா?  என் மாமியார்பகிட்டே பொய் சொல்லிட்டு வர வேண்டி இருக்கு. இந்தப் புதிர் முடிச்சு அவிழ்ந்து, எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். நீச்சல் தெரிஞ்சவங்க கூட சுழல்ல சிக்கிக்கிட்டா... அந்தச் சுழல் இழுத்து, உயிர் முடிஞ்சு போயிடும். இப்போ என்னோட நிலைமை அப்படித்தான் இருக்கு. சுபாவத்துல தைரியசாலியான நானே இந்தப் பிரச்சனையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். என்னோட நிலைமை அப்படித்தானே இருக்கு...?”

     “புனிதமாக இருக்க வேண்டிய மணவாழ்க்கை இப்படிப் புதிராக இருக்கிறது வேதனையாக இருக்கு. இந்தப் புதிர் முடிச்சு அழ்ந்து, எனக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும். நீச்சல் தெரிஞ்சவங்க கூட சுழல்ல சிக்கிக்கிட்டா... அந்தச் சுழல் இழுத்து, உயிர் முடிஞ்சு போயிடும். இப்போ என்னோட நிலைமை அப்படித்தான் இருக்கு. சுபாவத்துல தைரியசாலியான நானே இந்தப் பிரச்சனையில மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். என்னோட நிலைமை அப்படித்தானே இருக்கு...?”

     “அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லை. தூண்டில் போட்டு மீன் பிடிக்கிறோம்ல... அதுபோல ஏஜென்ஸி மூலமா தப்பு யார் மேலேங்கறதைக் கண்டுபிடிச்சுடலாம். நம்பு மிதுனா...!”

     “நம்பறது வேற விஷயம்... ஆனால், எதுக்காக என்னோட கல்யாணத்துல என்னைச் சுற்றி, இப்படி ஒரு வியூகம்? கல்யாணக் கனவே இல்லாமல், என் அம்மா, அப்பா, தங்கை... இவங்க மட்டும்தான் என் உலகம், என் வாழ்க்கைன்னு வாழ்ந்துக்கிட்டிருந்த எனக்குத் திடீர்னு கல்யாணமாகி, நான் படற கஷ்டம் இருக்கே...! ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவங்க, தங்களோட மகள் ‘வசதியான வாழ்க்கை வாழ்வாள்’னு ஆசைப்படக் கூடாதா? ஏழைப் பொண்ணுன்னா... ஏமாத்திடலாம்னு  நினைக்கலாமா? எங்க அம்மா, தீர விசாரிச்சு, அதுக்கப்புறம்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சங்க, அம்மாவுக்காத்தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன்...!”


     “ப்ளீஸ் மிதுனா... உன் மனக்கஷ்டம் எனக்குப் புரியுது. துன்பம் வந்தால்தான், அடுத்து வர்ற இன்பம், அதிக சந்தோஷத்தைக் கொடுக்கும். எப்பவும் தொடர்ந்து இனிப்பையே சாப்பிட்டுக்கிட்டிருந்தால் திகட்டிப் போகும்ல? இரவும், பகலும் மாறி மாறி வர்ற மாதிரிதான் வாழ்க்கையும். நிச்சயமா உன் கேள்விகளுக்குரிய பதில் கிடைக்கும். ‘ஜெய்சங்கர் நல்லவர்’னு உனக்குத் தெரிய வரும்.”

     “சரி கார்த்திகா, நீ சொல்ற மாதிரி எல்லாமே நல்லபடியான ஒரு முடிவுக்கு வரணும்...”

     “வரும். நானும், ஹரியும் டிடெக்டிவ் ஏஜென்ஸிக்குப் போய்ட்டு வந்தப்புறம் உனக்குத் தகவல் சொல்றேன்.”

     “சரி கார்த்திகா... எனக்காக நீயும் ஹரியும் சிரமப்பட்டு உதவி செய்யறீங்க...”

     “சிரமம் ஏதுவும் இல்லை... உனக்குச் செய்றதுல எனக்குச் சந்தோஷம்தான்.”

     “சரி கார்த்திகா, தேங்க்ஸ்!” தோழிகள் இருவரது மொபைலும் வாயை மூடிக்கொண்டன.

    

50

     சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸியின் ஆஃபீஸ் வாசலில் வந்து நின்றனர் கார்த்திகாவும், ஹரியும். வெளியில் இருந்த அழைப்பு மணியின் ஸ்விட்ச்சை அழுத்தினான் ஹரி. கதவு திறக்கப்பட்டு, அவர்களை வரவேற்றான் ஒரு வாலிபன். நடிகர் நகுல் போன்ற தோற்றத்தில், வளர்ந்தும் வளராத மீசையுடன் காணப்பட்டான் அவன்.

     “என் பேர் ஹரி. இவங்க என்னோட வொய்ஃப் கார்த்திகா.”

     “என் பேர் வினய்... வாங்க, உள்ளே வாங்க!” என்றான் அவன்.

     ஹரியும் கார்த்திகாவும் உள்ளே சென்றனர்.

     அந்த ஆஃபீஸ் ஒற்றை அறையைக் கொண்டது என்றாலும் மிகவும் விசாலமாக இருந்தது. நவீனமாக, மிக நேர்த்தியாக, அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காணப்பட்டது. அங்கே கம்பீரமான, மிக விலையுயர்ந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த ஒரு நபரை வினய், ஹரிக்கும், கார்த்திகாவிற்கும் அறிமுகப்படுத்தி வைத்தான்.

     “மீட் மிஸ்டர் சூரஜ், என்னோட முதலாளி, என்னோட பிரெண்ட்...” என்று ஆரம்பித்தவனைச் செல்லமாக அதட்டினாள் சூரஜ்.

     சூரஜ் எனும் அந்த நபர், ‘சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸி’யின் உரிமையாளர். முப்பது வயதிற்குள் இருக்கும் சூரஜ், சிரித்த முகத்துடன் காணப்பட்டான். அவனது  உடை, அவனுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைக் கொடுத்திருந்தது. அந்த அளவிற்கு உடையின் தேர்வில் திறமை பெற்றவனாக இருந்தான். வினய், அவனை அறிமுகப்படுத்தியதும்...

     “உட்காருங்க ஹரி...மேடம், நீங்களும் உட்காருங்க...!”

     இருவரும் உட்கார்ந்தனர்.

     “என்ன ஹரி... ஆச்சரியமாகப் பார்க்கிறீங்க? உங்க பேரைச் சொல்லிப் பேசுறேன்னுதானே? குறிப்பிட்ட நேரத்துக்கு இன்னாருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தேன்னா... அந்த நேரத்துக்கு வேற யாரும் இந்த ரூமுக்குள் வர முடியாது. இதோ என் உயிர்த்தோழன் இருக்கானே... இவன் ஏதாவது சொதப்பினால் தான். உண்டு. சேச்சே... சும்மா தமாஷுக்குச் சொன்னேன்!” என்று சூரஜ் சொன்னதும்...

     ஹரி, அவனிடம், “பாக்காவா இருக்கீங் மிஸ்டர் சூரஜ்...!” என்றான்.

     “அடடே... இந்த மிஸ்டர் கிஸ்டர்லாம் வேண்டாமே ஹரி. நான் உங்களை மிஸ்டர் ஹரின்னா சொன்னேன்? இல்லையே? சும்மா சூரஜ்ன்னே கூப்பிடுங்க...”

     “இனிமேல் அப்படிக் கூப்பிடுறேன் சூரஜ்...”

     “தேங்க்யூ, உங்களுக்குக் குடிக்கிறதுக்கு காபியா... டீயா... க்ரீன் டீயா... லெமன் டீயா...?” என்று கேட்ட சூரஜ், தற்செயலாக வினய்யைப் பார்த்தான். வினய், திருட்டுத்தனமான பார்வையுடன் கார்த்திகாவை ‘ஸைட்’ அடித்துக் கொண்டிருந்தான்.

     இதைக் கவனித்த சூரஜ், “ஏ வினய்... பேப்பர் பேனா ரெடியாக எடுத்து வெச்சிருக்கியா? இவங்களுக்குக் குடிக்கிறதுக்கு, இவங்களுக்குத் தேவையானதை எடுத்துட்டு வந்து கொடு...!” என்று சொல்லியபடி வினய்யை எச்சரிக்கும் விதமாகக் கண் ஜாடையால் மிரட்டினான்...

     “அது... வந்து... பாஸ்... சும்மா...”

     “வினய், உளறாம சொன்ன வேலையை மட்டும் செய். வேறு எதுவும் நீ செய்ய வேண்டாம்...” என  மறைமுகமாகக் கூறினான்.

     “இதோ... நான் போய்  இவங்களுக்கு லெமன் டீ எடுத்துட்டு வரேன் பாஸ். இங்கே நம்ம ஆஃபீஸ்ல நாம வாங்கிப் போட்டிருக்கிற மிஷின்ல லெமன் டீ மட்டும்தான் பாஸ் சூப்பரா இருக்கு...!”

     “அது மிஷின் மிஸ்டேக் இல்லை... டீ மிக்ஸோட பிரச்சனை...”

     “சரி பாஸ்...!” என்று டீ மிஷின் பக்கம் சென்றான் வினய்.

     “சொல்லுங்க ஹரி... என்ன விஷயம்? என்ன பிரச்சனை?”

     “கார்த்திகாவோட பிரெண்ட் மிதுனா, சென்னையிலே இருக்காங்க... அவங்களோட பிரச்சனை பற்றித்தான் பேசணும். அதைப்பற்றி நான் பேசுறதை விட, இவங்க பேசினால்தான் சரியாக இருக்கும்...!” என்று கார்த்திகாவைக் காட்டினான்.

     மிதுனா – ஜெய்சங்கர் திருமணம் பற்றிய அத்தனை தகவல்களையும் கார்த்திகா விளக்கமாக சூரஜ்ஜிடம் சொன்னாள்.

     “நீங்க சொல்றதையெல்லாம் வெச்சுப் பார்த்தா... பெங்களூருல உங்க  பிரெண்ட் மிதுனாவுடைய கணவர் ஜெய்சங்கருக்கு நடந்த அந்தக் கல்யாணம், ‘எமோஷனல் ப்ளாக் மெயில்’ல நடந்த கல்யாணமா இருக்குமோன்னு தோணுது. அதாவது, ‘உணர்வுப் பூர்வமாக மிரட்டி’த் தாலி கட்ட வைக்கிறது. அந்தப் பொண்ணு மேலே ஜெய்சங்கருக்கு ‘லவ்’ இருந்துச்சா?”

     “அப்படி எதுவும் இல்லைன்னு ஜெய்சங்கர் சொன்னாராம்...”

     “பெங்களூரு பொண்ணு... ஒரு தலைக் காதலா ஜெய்சங்கரை லவ் பண்ணி இருக்கலாம்ல?”

     “இருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் ஜெய்சங்கர் மிதுனாகிட்டே சொல்லலை. அவ மேலே லவ் இல்லையா? அதை மிதுனாகிட்டே சொல்லலையா? அதாவது சொல்லாம மறைச்சுட்டாரா?”

     “இதுக்கு நீங்க பதில் சொல்ல முடியாது. நாங்கதான் கண்டுபிடிக்கணும். எவ்வளவு பெரிய தொழிலதிபராக இருந்தாலும் ஒரு சில விஷயங்கள்ல பலவீனமாக இருக்கிறது பற்றிக் கேள்விப்படறோம். அந்தப் பலவீனம்... பெண்கள் மேலே ஏற்படுற  சபலமாக இருக்கலாம், தேவை இல்லாத பயமாக இருக்கலாம். இரக்க சுபாவமாக இருக்கலாம். ‘புகழ்’ங்கற போதை... அதாவது யாராவது பாராட்டிக்கிட்டே இருந்தால், அதுக்கு மயங்குகிற குணமாக இருக்கலாம். இப்படி எத்தனையோ ‘வீக்னெஸ்’ மனுஷங்களுக்கு இருக்கும்.

     “மிதுனா–ஜெய்சங்கர் பிரச்சனை பற்றித் தெரிஞ்சுக்க... இங்கே பெங்களூருல நடந்த சம்பவத்துக்குள்ளே ஆழமாகப் போய்ப் பார்க்கணும். இன்னொரு முக்கியமான விஷயம்... நான் அந்த ஜெய்சங்கரை சந்திச்சே ஆகணும். அவரை நேர்ல பார்த்து பேசினப் புறம்தான் அடுத்து என்ன செய்ய முடியும்னு என்னால யோசிக்க முடியும். அவரைக் கிளம்பி வரச் சொல்லுங்க... ப்ளீஸ்...!”

     “அதிர்ஷ்டவசமாக, அவர் இங்கே பெங்களூருல தான் இருக்கார் சூரஜ்...!”

     “இன்னிக்கு ராத்திரியே மிதுனாவுக்குப் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லி, ஜெய்சங்கரை உங்களைச் சந்திக்க ஏற்பாடு பண்றேன். நாளைக்கு உங்களோட அப்பாயின்ட்மென்ட் கிடைக்குமா சூரஜ்?”

     கார்த்திகா கேட்டதும் வினய், கம்ப்யூட்டரில் பார்த்தான்.

     “நாளைக்குக் காலையிலே வேற ஒரு அப்பாயின்ட்மென்ட் இருக்கு. சாயங்காலம் ஏழு மணிக்கு வரலாம்...” வினய் சொன்னான்.

     அவன், காத்திகாவைப் பார்த்தபடியே சொன்னதை சூரஜ் கவனித்தான்.

     “வினய்...!” கேலியாகக் குரல் கொடுத்தான் சூரஜ்.

     “யெஸ் பாஸ்... என்னோட டியூட்டியைத்தான் பாஸ் செய்யறேன்...”

     “நீ ட்யூட்டி பார்க்கிற பியூட்டி எனக்குத் தெரியாதா...?” நக்கலாகக் கேட்டுச் சிரித்தான் சூரஜ். மேலும் சில விபரங்களைக் கார்த்திகாவிடம் கேட்டு அறிந்து கொண்டான் சூரஜ்.

     “ஜெய்சங்கர் சொல்றதெல்லாம் உண்மைதானா? அவருக்கு நடந்தது என்ன...? இது தெரிந்தால்தான் மிதுனாவோட வாழ்க்கையோட பெரிய கேள்விக்குறிக்கு விடை கிடைக்கும் சூரஜ். என் உயிர் பிரெண்ட் மிதுனா சந்தோஷமாக வாழணும். அது சீக்கிரமாக நடக்கணும் ப்ளீஸ்...ஹெல்ப்  பண்ணங்க சூரஜ்...!” வேண்டிக் கேட்டுக் கொண்டாள் கார்த்திகா.


     “நிச்சயமாக கூடிய சீக்கிரம் எல்லாத்தையும் தெளிவுபடுத்தி என்னால முடிஞ்ச வரைக்கும் முயற்சி செய்வேன்.”

     “தேங்க்யூ...”

     ஹரியும், கார்த்திகாவும் கிளம்பினார்கள்.

     “நான் போய் வழி அனுப்பிச்சட்டு வரேன் பாஸ்.”

     “ஹய்யோ... ஹய்யோ...!” என்று கூறிச் சிரித்த படியே தலையிலே அடித்துக் கொண்டான் சூரஜ்.

     கார்த்திகாவும், ஹரியுத் வெளியேறும்போது கூடவே சென்றான் வினய்.

 

51

     ஹாய் மிதுனா... சாயங்காலம் நானும், ஹரியும் ‘சூரஜ் டிடெக்டிவ் ஏஜென்ஸிக்குப் போனோம். அங்கே அதோட உரிமையாளர் சூரஜ், நல்ல திறமைச்சாலி. உன் பிரச்சனை பற்றி எல்லா விஷயமும் அவர்கிட்டே சொன்னேன். தன்னாலே முடிஞ்ச அளவுக்குச் சீக்கிரமாகப் பெங்களூரு பத்தின உண்மைகளைக் கண்டுபிடிக்கறதாகச் சொன்னார். ‘ஜெய்சங்கரை நேர்ல பார்க்கணும், அவர்கிட்டே பேசினால்தான் நிறைய விஷயங்கள் தெளிவாகும்’னு சூரஜ் சொன்னார். அதனாலே நீ, உடனே ஜெய்சங்கருக்குப் போன் பண்ணி, நாளைக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு சூரஜ்ஜோட ஆஃபீஸுக்கு அவரைப் போகச் சொல்லு...”

     “சரி கார்த்திகா, சொல்லிடறேன். ஏதோ இந்த நடவடிக்கையோட இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வும், தெளிவும் கிடைச்சுட்டா நல்லது. முள் மேலே மனசு இருக்கற மாதிரியான உணர்வுல... ரொம்பக் கஷ்டமாக இருக்கு.”

     “எல்லாம் சரியாகிடும்டி, கவலைப்படாம... முதல்ல ஜெய்சங்கருக்குப் போன் போடு. அவர் பாட்டுக்குத் திடீர்னு சென்னைக்குக் கிளம்பிடப் போறார். நான் இப்போ உடனே சூரஜ்ஜோட மொபைல் நம்பர், அட்ரஸ் இதெல்லாம் ‘வட்ஸ்அப்’ல அனுப்பிவைக்கிறேன்...”

     “சரி கார்த்திகா.”

     கார்த்திகாவுடன் பேசி முடித்த மிதுனா, தனது மொபைலில் ஜெய்சங்கரின் நம்பர்களை அழுத்தினாள்.

    

52

     மிதுனாவுடன் பேசி விட்டுக் கட்டிலில்படுத்துக் கொண்ட கார்த்திகாவை வம்புக்கு இழுத்தான் ஹரி.

     “அந்த சூரஜ்ஜோட பிரெண்ட் வினய். உன்னை ஸைட் அடிச்சுக்கிட்டிருந்தான்... கவனிச்சியா?” சிரித்தான் ஹரி.

     ஹரியின் குறும்பைப் புரிந்து கொண்ட கார்த்திகா, வேண்டுமென்றே, “ஆமா.. இந்த வயசுல ‘ஸைட்’ அடிக்காட்டாதான் ஆச்சர்யம்...!”

     “ஓ... அப்படியா?”

     “அப்படித்தான். அந்த சூரஜ்ஜோட ஆஃபீஸ் இன்ட்டீரியர், எவ்வளவு சூப்பரா இருந்துச்சு? அதைப்பத்திப் பேசணும் தோணாமல்... ‘ஸைட்’ ஃபைட்டுன்னுக்கிட்டு...”

     “சரிம்மா தாயே. உன்னை வம்புக்கு இழுக்கலைன்னா எனக்குத் தூக்கம் வராதில்லே...!”

     “சரி, சரி... இப்போ தூங்க வேண்டியதுதானே?”

     “ம்... தூங்குறதா? தூங்குறதுக்கு முன்னால...”

     “ச்சீய்...!” பொய்யான சிணுங்கலோடு ஹரியை அணைத்துக் கொண்டாள் கார்த்திகா. பூவில், வண்டு தேன் குடித்தது.

 

53

     சூரஜ்ஜின் அலுவலகத்திற்கு வந்திருந்தான் ஜெய்சங்கர். இருவரும் ஒருவரை ஒருவர் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சூரஜ்ஜின் காரை ‘கார் சேவை’ மையத்தில் இருந்து எடுக்கச் சென்றிருந்தான் வினய்.

     “ஜெய்சங்கர், உங்களைச் சந்திச்சதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். உங்களைப் பற்றி பிசினஸ் மேகஸீன்ஸ்ல கட்டுரை படிச்சிருக்கேன். சிறந்த தொழில் அதிபர் விருது கூட வாங்கி இருக்கீங்க. இவ்வளவு சின்ன வயசுலேயே பெரிய சாதனை செஞ்சுருக்கீங்க... உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது...”

     “தேங்க்யூ... எல்லாப் புகழும் இறைவனுக்கேங்கிற மாதிரி... எனக்குக் கிடைச்சிருக்கிற எல்லாப் புகழும் எங்கப்பாவைச் சேர்ந்தது. என்னோட சின்ன வயசுல இருந்தே... என்னை அவர் கூடவே கூட்டிட்டுப் போய்,
பர்ச்சேஸ், ஸெல்லிங், மார்க்கெட்டிங், பிஸினஸ் டெவலப்மென்ட் எல்லாத்தையும் கத்துக் கொடுத்தார். ஸ்கூல், காலேஜ் நேரம் போக, மத்த நேரங்கள்ல அப்பா கூடப் போயிடுவேன்.

     “பிஸனஸ் வேலையா அவர் வெளியே போனாலும் சரி, ஆஃபீஸுக்குப் போனாலும் சரி... அவர் கூடத்தான் இருப்பேன். ஆனால், நான் பெரிய அளவுல பிஸினஸ் பழகி, பேரும் புகழும் எடுக்கும்போது, அதைப் பார்த்து ஆனந்தப்பட அப்பா இல்லை. இறந்து போயிட்டார். ஆனால், அவர் எனக்குச் சொல்லிக் கொடுத்த பிஸினஸ் தந்திரங்கள், டெவலப்மென்ட் பத்தின விவரங்கள் என்னிக்கும் என் மனசுல பசுமரத்தாணி மாதிரி பதிஞ்சு இருக்கும்...!”

     “ஓ...! வெரி குட், உங்கப்பா மேலே இவ்வளவு நன்றியோட இருக்கீங்க. பொதுவாக எல்லாருமே ‘நான் பழகினேன்’ ‘என் திறமை’ அப்பிடின்னு ‘நான்’ ‘எனது’ன்னு இறுமாப்பாகப் பேசுவாங்க. ஆனால் நீங்க ‘எல்லாமே அப்பாவாலதான்’னு சொல்லி  அவரைப் பெருமைப்படுத்துறீங்க. இப்படி நன்றி உணர்வோட பேசுறவங்க, ரொம் ஆபூர்வம்.

     “ஆனா, ஒரு ஜென்ட்டில்மேன் ஆன நீங்க பெங்களூருல ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டிட்டு... சென்னையிலே இன்னொரு பொண்ணுக்கும் தாலி கட்டி இருக்கீங்க. பெங்களூருல நீங்க கட்டினது ரகசியத்தாலி... சென்னையிலே, ஊரறிய, உலகறிய விமரிசையாகக் கல்யாணம் பண்ணி இருக்கீங்க... இதோட பின்னணி என்ன? நீங்க, உங்க மனைவி மிதுனாகிட்டே சொன்ன விஷயங்கள் எல்லாமே உண்மைதானா...?”

     “உண்மை இல்லைன்னா... உங்களைப் போல ஒரு டிடெக்டிவ் கிட்டே வருவேனா? உங்களைச் சந்திக்கச் சம்மதிப்பேனா? எனக்கும் என் வாழ்க்கைப் பிரச்சனை ஒரு தீர்வுக்கு வந்து, சந்தோஷமாக வாழணும்னு தான் ஆசை. இன்னொரு விஷயம்... இது வரைக்கும் என் மனைவி மிதுனாகிட்டே கூடச் சொல்லாத ஒரு உண்மையை உங்ககிட்டே சொல்லப்பேறேன்.

     “அது... அது வந்து... நான், மிதுனாவை ரொம்ப நேசிக்கிறேன். அவ நல்ல பொண்ணு. புத்திசாலி, பொறுமைசாலி, அவளைப் போல ஒரு ஏழைக் குடும்பத்துப் பொண்ணுக்கு வாழ்வு கொடுக்கணும்னு... நான் எங்கம்மாகிட்டே சொல்லிக்கிட்டிருந்தேன். எனக்கே அறியாமல் நான் நினைச்சபடி ஒரு பொண்ணா... மனைவியா... மிதுனா கிடைச்சா. ஆனா, அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாலே... நான் ஒரு பொறியிலே மாட்டிக்கிட்டேன்.”

     “இவ்வளவு படிச்ச நீங்க... அது எப்படி ஜெய்சங்கர்... பொறியில் மாட்டினேன்... இக்கட்டான சூழ்நிலை... அது... இதுன்னு காரணம் சொல்றீங்க?”

     சிறிது கோபமானான் ஜெய்சங்கர்.

     “எப்படின்னா...? அதுதான் உண்மை. அதைத்தான் சொல்றேன். மிதுனா, என்னை நம்பறா... அதனாலதான் நான் இங்கே உங்களைப் பார்க்க வந்திருக்கேன். எனக்கு சின்ன வயசுல இருந்தே இளகின சுபாவம். என்னைப் பழி வாங்கி... என் மேலே வீண் பழி வந்துருச்சு...!”

     “ஸோ... உங்களுக்கு அந்தப் பொண்ணு மேலே ஒரு பிடிப்பு, ஈடுபாடு, ஈர்ப்பு... எதுவுமே கிடையாதுங்கறீங்க... அப்படித்தானே...?”

     “நிச்சயமாக இல்லை...”

     “ஆனால், அந்தப் பொண்ணுக்கு உங்க மேலே...”

     அப்போது குறுக்கிட்டுப் பேசினான் ஜெய்சங்கர். “சூரஜ்... அந்தப் பொண்ணு எப்பவும் சிரிச்ச முகத்தோட இருப்பா. சில சமயம், அந்த அம்மா எங்கேயாவது போயிருந்தா, எனக்குச் சாப்பாடு எடுத்து வைப்பா. அது வேணுமா... இது வேணுமா...?ன்னு கேட்பா, கேட்டா எடுத்து வைப்பா. வேற எதுவும் கலகலப்பாகப் பேசமாட்டா. ஒரு ரோபாட் இயங்குற மாதிரி... அவளேட செயல்கள் இருக்கும். ஆனால், அந்த முகத்துல வழக்கமான புன்னகை மட்டும் மாறாம இருக்கும்.”

     “அந்த ஸ்மைல் உங்களை அட்ராக்ட் பண்ணிடுச்சோ...?

     “அப்படி இல்லை சூரஜ். சில பேரைக் காரணமே இல்லாமல் நமக்குப் பிடிக்காது. சில பேரை, குறிப்பிட்ட காரணத்துக்காகப் பிடிக்கும். அது போலத்தான். அதுக்காக நான் ‘பிடிக்கும்’னு சொன்னதுக்கு நீங்க சொல்ற ‘பிடிப்பு’, ‘ஈடுபாடு’ அப்படிங்கிற அர்த்தம் கிடையாது. சின்ன வயசுல இருந்தே எனக்கு வயித்துல கொஞ்சம் ப்ராப்ளம், ஹோட்டால் சாப்பாடு அறவே ஒத்துக்காது. கடுமையான வயித்துவலி வந்துடும். ஜீரணம் ஆகாது. வெளியூர்... வெளிநாடு போனால்... தயிர், பழங்கள், ஃப்ரூட்ஸ், காய்கறிகள், க்ரீன் டீ... இப்படிப் பிரச்சனை தராத உணவுகளைச் சாப்பிட்டுக்குவேன்.


     இப்போதான் ‘ஹட்ஸன்... நெஸ்லே’ன்னு ரெடிமேட் தயிர் கிடைக்குதே. ஈஸியாகக் கிடைக்குது. ஈஸியாகச் சாப்பிட்டுக்க முடியுது. இன்னொரு விஷயம்... எனக்கு ரிஃபைன்ட் ஆயில் ஒத்துக்காது. அது நம்ம ஹெல்த்தை ரொம்பவும் பாதிக்கிற விஷயம். சமீப காலமாக கேன்ஸர் நோய் பெருகுறதுக்குரிய காரணங்கள்ல ரிஃபைன்ட் ஆயிலும் ஒரு காரணம்.

     “அந்த மஞ்சுளாவோட அம்மா... சமைச்சுக் கொடுக்க ஆரம்பிச்சதும், வீட்ல அம்மா வாங்கி வெச்சிருக்கிற இதயம் நல்லெண்ணெய்யை எடுத்துட்டு வந்து மஞ்சுளாவோட அம்மாகிட்டே கொடுத்துச் சமைக்கச் சொல்லுவேன். பெரிய பிஸினஸ் மேனாக இருந்தாலும், நானும் சாதாரண மனுஷன்தான். தயிர், பால், பழம்னு  சாப்பிட்டு அலுத்தப் போறதுல இருந்து, தப்பிக்கிறதுக்காக மஞ்சுளா வீட்ல சாப்பிடறது எனக்குக் கொஞ்ச நாளாக வழக்கமாயிடுச்சு.

     “என்னடா இவன்...? சாப்பாட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறானேன்னு நினைக்கிறீங்க... என்னைப் பொறுத்த வரைக்கும் அது ரொம்ப முக்கியமான, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட விஷயம் வழக்கமான உணவுப் பழக்கத்தை விட்டு, வேற எந்த ஒரு மாற்றம் சொஞ்சாலும் என் வயிறு, அதை ஏத்துக்காது. வலி, பின்னி எடுத்துடும். அந்த வலி விரோதிகளுக்குக் கூட வரக்கூடாதுன்னு நினைக்கிறவன். நான். எவ்வளவோ ட்ரீட் எமன்ட் எடுத்துப் பார்த்தாச்சு... மருந்து, மாத்திரை எடுத்துக்கிட்டா... கூடுதலாக வயித்துல பிரச்சனைகள் வர ஆரம்பிச்சுடுச்சு..” என்று விளக்கம் கூறினான் ஜெய்சங்கர்.

     “அதனால... உங்க ஆரோக்கியப் பிரச்சனைக்கு ஒரு நல்ல வழின்னு அங்கே பணம் கொடுத்துச் சாப்பிட்டுக்கிட்டிருந்தீங்க. நீங்க ஏன் உங்க அப்பார்ட்மென்ட்ல சமையலுக்கு ஆள் போட்டு உங்களுக்குப் பிடிச்ச எண்ணெய்ல சமைக்கச் சொல்லி சாப்பிட்டிருக்கலாமே...?

     “ஆமா, நானும் அப்படித்தான் செய்ய நினைச்சிருந்தேன். ஆனால், அதுக்குள்ளே இந்தப் பிரச்சனைகள்... என்னோட அம்மா விரும்பியபடி கல்யாணம்... இதெல்லாம் எதிர்பாராமல் நடந்துருச்சு.”

     “சரி... அம்மாவோட அண்ணன் இருந்தார். அவர் பேர் ரங்கா... அந்த அம்மா பேர் மங்கா.”

     “ரங்கா... மங்கா... பேர் ரொம்ப வித்தியாசமா, தமாஷா இருக்கு. இவரைப் பற்றி ஹரியோ, கார்த்திகாவோ சொல்லாம விட்டுட்டாங்க. மறந்துட்டாங்க போலிருக்கு...”

     “இருக்கலாம்... நானே அதைப் பற்றி இப்போ நீங்க கேட்டப்புறம்தானே சொல்றேன்? நீங்க டிடெக்டிவ்... அதனாலே அடுத்தடுத்து சமயோசிதமாகக் கேள்வி கேட்கிறீங்க...”

     “தேங்க்யூ. அந்த ஆள் ரங்கா, ஏதாவது வேலைக்குப் போற ஆளா...?”

     “இல்லை. ஏதோ பிஸினஸ் பண்றதா சொன்னார். விவரமா நான் கேட்டுக்கலை. அந்த அப்பார்ட்மென்ட் வாடகை ரொம்ப அதிகம். அதனாலே பணப்புழக்கம் உள்ள ஆளாகத்தான் இருக்கணும். ஆனால், ஒரு புரியாத விஷயம்... அவர் என்கிட்டேயும் அப்பப்போ பணம் கேட்டு வாங்குவார். வசதியான சில பேருக்கு இப்படி இனமாகப் பணம் வாங்குகிற ஒரு இயல்பும் வழக்கமும் இருக்கும். அப்படிப்பட்ட ரகமாக இருக்கணும் அந்த ஆள்...”

     “அந்த அம்மா மங்கா எப்படிப்பட்டவங்க?”

     “அந்த அம்மாகிட்டேயோ அந்த ரங்காகிட்டேயோ நான் அதிகமாகப் பேசினதோ பழகினதோ இல்லை சூரஜ். அந்த அம்மா, ஆதிவாசிகள் மாதிரி வித்தியாசமான நகைகளைக் காதுலேயும், கழுத்துலேயும், கைகள்லேயும் போட்டிருப்பாங்க...”

     “ஓ...! பழங்குடி மக்கள் போடற மாதிரிதானே இப்போ பெண்கள் போட்டுக்கிறாங்க... அதை விடுங்க, அந்த ரங்கா, நீங்க சென்னைக்குப் போன பிறகு உங்களைத் தொடர்பு கொண்டாரா?”.

     “ஆமா சூரஜ். என்னோட மொபைல்ல கூப்பிட்டு... ‘பெங்களூரு வாங்க தம்பி, வாங்க தம்பி’ன்னு கூப்பிட்டுக்கிட்டிருந்தார். நான் அவர்கிட்டே பேசலை...”

     “அந்த நம்பரை ஸ்டோர் பண்ணி வெச்சிருக்கீங்களா?”

     “ஆமா...”

     “இப்போ உடனே அவரைக் கூப்பிடுங்க...”

     “இப்பவா...?”

     “ஆமா... இப்பவே கூப்பிடுங்க...”

     “பேசினா அவர் இருக்கிற இடத்துக்கு வரச் சொல்லி நச்சரிப்பார்.”

     “பரவாயில்லை. நீங்க... இங்கே பெங்களூருல இருக்கறதா சொல்லுங்க...”

     “ஐயோ... என்ன சூரஜ் மாட்டி விடறீங்க?”

     “மாட்டிக்கிட்ட உங்களை விடுவிக்கத்தான் சில நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கு. அதிலே இது ஆரம்பக் கட்டம். ம்... கூப்பிடுங்க ஜெய்சங்கர்... முதல் படிக்கட்டுல காலை வைங்க. அப்புறம் அடுத்தடுத்துப் போய்... அப்புறம் வெற்றிதான்.”

     “சரி” என்ற ஜெய்சங்கர், மொபைலை எடுத்து, ரங்காவின் மொபைல் எண்களை அழுத்தினான்.

     “ஸ்பீக்கர்ல போடுங்க...” சூரஜ் சொன்னதும் ஸ்பீக்கரில் போட்டான் ஜெய்சங்கர்.

     “என்ன தம்பி ஜெய்சங்கர்... ஏன் வரவே மாட்டேங்கிறீங்க? உடனே கிளம்பி வாங்க தம்பி, உங்களுக்கும் மஞ்சுளாவுக்கும் நடந்த கல்யாணத்தை ரிஜிஸ்டர் பண்ணணும்.

     “அப்படி என்ன அவசரம்... அவசியம்... ரிஜிஸ்டர் பண்றதுக்கு?”

     “என்ன தம்பி இப்படிக் கேட்டுட்டீங்க? கல்யாணம்னு நடந்தா... அதை ரிஜிஸ்டர் பண்றதுதானே முறை? கோடீஸ்வரக் குடும்பத்துப் பையன் நீங்க... உங்களுக்குத் தெரியாதா?”

     “எனக்கு ஆயிரம் வேலைகள், ஆயிரம் டென்ஷன்... இதுல நீங்க வேற... வா... வாங்கிறீங்க. சரி... நீங்க உங்க அட்ரஸைச் சொல்லுங்க. எங்கே இருக்கீங்கன்னு சொல்லாமலேயே வரச் சொல்றீங்க... நான் இங்கே பெங்களூர்லதான் இருக்கேன்...”

     “அட... ரொம்ப நல்ல வேளையாச்சு தம்பி... நீங்க எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க தம்பி... நானே வந்து பார்க்கிறேன்...”

     “நீங்க அட்ரஸ் சொல்லுங்க... நானே வரேன்.”

     ரங்கா சொல்ல அதைத் திருப்பி ஜெய்சங்கர் சொல்லச் சொல்ல சுரஜ் தனது ஐ ஃபோனில் குறித்துக் கொண்டான்.

     “கண்டிப்பா வந்துருங்க தம்பி.”

     “சரி... நான் வைக்கிறேன்...!”

     மொபைல் இணைப்பைத் துண்டித்தான்.

     “வெரிகுட் ஜெய்சங்கர்... கரெக்ட்டா பேசுனீங்க...”

     “நீங்க வேற சூரஜ்... ஒரு திறமையான டிடெக்டிவ்... உங்க முன்னால நான் எவ்வளவு நெர்வஸ் ஆனேன் தெரியுமா?”

     “தப்பு செய்றவங்கதான் நெர்வஸ் ஆகணும். சரி, அது போகட்டும். நாளைக்குக் காலையிலே நான் இந்த ரங்காவைப் பாய்ப் பார்க்கணும். அவனோட மொபைல் நம்பரை எனக்கு அனுப்பிவிடுங்க. அந்த அட்ரஸ்ல அந்தப் பொண்ணு மஞ்சுளா, அந்த அம்மா மங்கா... இவங்களைப் பார்த்துப் பேசினால்... ஏதாவது தகவல் கிடைக்குதான்னு விசாரிப்பேன்...”

     அப்போது அங்கிருந்த வினய், “என்ன சூரஜ் பாஸ்... நான் உள்ளே வந்து பத்து நிமிஷமாச்சு... நீங்க என்னைக் கண்டுக்கவே இல்லை.”

     “காரை எடுத்துட்டு வர்ற வேலையை முடிச்சுட்டியா வினய்?”

     “எடுத்துட்டு வந்துட்டேன் பாஸ். அதை விடுங்க பாஸ்... இவர்... ஜெய்சங்கர் ஸார் அந்த ரங்காவோட அட்ரஸ் வாங்கினார்ல? அப்பவே நான் வந்துட்டேன். அந்த ரங்கா கொடுத்த அட்ரஸுக்கு நீங்க மட்டும் போய் விசாரிக்கப் போற மாதிரி பேசுனீங்க. அங்கே அந்தப் பொண்ணு மஞ்சுளா... அது இதுன்னு பேசினீங்களே... இது நியாயமா பாஸ்...? உங்க பிரெண்ட், உங்க உதவியாளன் நான். என்னை விட்டுட்டுப் போகப் போறீங்களா?”

     சிரித்தான் சூரஜ்

     “ஜெய்சங்கர்... இவன் பேர் வினய். என்னோட நெருங்கிய நண்பன். நேத்து ஹரியும், கார்த்திகாவும் வந்தப்போ இவனும் இங்கே இருந்தான். நான் வெற்றி அடைஞ்ச பல விஷயங்கள்ல இவனுக்கும் பெரிய பங்கு இருக்கு...”

     “இந்தப் பாராட்டெல்லாம் வேணாம் பாஸ். அந்தப் பொண்ணு மஞ்சுளாவை விசாரிக்கப் போகும் போது, என்னைக் கூட்டிட்டுப் போங்க.... அது போதும்.”


     “இவன் எப்படி அலையறான் பாருங்க ஜெய்சங்கர்...”

     ஜெய்சங்கர் சிரித்தான்.

     “சூரஜ் பாஸ்... அலையறது என் பிறவிக் குணம். அதுல ஒரு ரிலாக்ஸேஷன் கிடைக்கும். அதை மாத்தவே முடியாது. இப்போ உருப்படியா ஒண்ணு சொல்றேன். அந்த ரங்கா பேசும்போது ஜெய்சங்கர் ஸார், அந்த ரங்காவோட இடத்துக்கு வரச்சொல்லி வற்புறுத்தினார்ல? ஆனா அந்த மஞ்சுளா, ஜெய்சங்கர் ஸாரைப் பார்க்கிறதுக்காகக் ‘காத்திருக்கா... பார்க்கத் துடிக்கிறா... ஏங்கிப் போயிருக்கா...’ அப்படின்னு ஒரு வார்த்தை கூடச் சொன்ன மாதிரி தெரியலியே. நியாயப்படி பார்த்தா... மஞ்சுளாவுக்காகத்தான் அவர் பேசி இருக்கணும்...”

     “செம பாயிண்ட். இதுக்குத்தான் வினய் நீ வேணும்ங்கிறது.  வெரி குட்... !” என்ற சுரஜ், விரலைச்  சொடுக்கி விட்டு, ஜெய்சங்கரிடம், “வினய் சொன்ன மாதிரி மஞ்சுளாவைப் பத்தி ரங்கா எதுவும் பேசலை. அதனால... ரங்காவோட இடத்துக்குப் போறதுதான் நம்ம பிக்சரோட ஆரம்பக் கட்டம்... அடுத்த கட்டம்... !”

     “பாஸ்... என்னை விட்டுட்டுப் போயிடாதீங்க பாஸ்...”

     “நிச்சயமா... நீதானே காரை ஓட்டிக்கிட்டே வரணும்...?”

     “யெஸ் பாஸ்...”

     ஜெய்சங்கர் கிளம்பினான்.

     “சூரஜ், நான் கிளம்பறேன்... ஏதாவது கேட்கணும்னா என்னோட மொபைல்ல கூப்பிடுங்க சூரஜ்...”

     “சரி ஜெய்சங்கர்... நீங்க கிளம்புங்க.”

     ஜெய்சங்கர் வெளியேறினான்.

     அவன் போன பிறகு சூரஜ், ஏதோ யோசித்துக் கொண்டே சிறு நடை போட்டான். மின்னல் போல் ஒரு விஷயம் தோன்றியது. உடனே வினய்யிடம், “இன்னொரு முக்கியமான விஷயம் வினய்...பெங்களூரு, மைசூர், கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, மதுரை, திருச்சி... இந்த ஊர்கள்ல ‘பொண்ணுங்க மிஸ்ஸிங்’ கம்ப்ளெயிண்ட் பத்தின டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணணும். நீ இந்த வேலையை முடிச்சுடு...”

     “யெஸ் பாஸ்...”

     இருவரும் ஆஃபீஸைப் பூட்டிவிட்டுக் கிளம்பினார்கள்.

 

54

     வெறுமனே சாத்தி இருந்த கதவைத் தள்ளிப் பார்த்தாள் அந்தப் பெண். அவள், கீரை விற்பவள். கதவைத் திறந்த அவள், குரல் கொடுத்தாள்.

     “மஞ்சுளா, வாம்மா சீக்கிரம்... உங்கம்மா தினமும் கீரை கொடுக்கச் சொல்லி இருக்காங்கல்ல... உங்கம்மா இல்லையா? நான் இன்னும் நிறைய வீடு போகணும். காசு எடுத்துக்கிட்டு வாம்மா. ஏம்மா மஞ்சுளா இப்படி மசமசன்னு நிக்கிறே? சரி, நான் கீரையை வெச்சுட்டுப்போறேன்... காசை நாளைக்கு வாங்கிக்கிறேன்.”

     “இந்தப் பொண்ணு எப்பவும் இப்படித்தான், எதுவும் பேசாது. ஆனால், பார்க்கிறப்போ... ஒரு சிரிப்பு மட்டும் சிரிக்கும். இன்னிக்கு அதுவும் இல்லை...’ நினைத்தபடியே வேகமாகப் போனாள் கீரை விற்பவள்.

     அப்பார்ம்மென்ட்டினுள் இருந்த ‘மஞ்சுளா’ என்று அழைக்கப்பட்ட அந்தப் பெண், தலையைப் பிடித்துக் கொண்டாள்.

     ‘ஐயோ...! என் தலை ஏன் இப்படிக் கொடுமையா வலிக்குது? தாங்க முடியலியே? எங்கேயாவது ஒரு தலைவலி மாத்திரை இருந்தால் போடலாமே... என்னமோ செய்யுதே... கடவுளே! அந்தம்மா என்னை ‘மஞ்சுளா’ன்னு கூப்பிட்டாங்களே? அது என்னையா? நான் மஞ்சுளாவா? என் பேர் மஞ்சுளாவா? இல்லை. அப்படின்னா நான் யார்...? என் பேர் என்ன? ஐயோ...! யோசிக்க யோசிக்கத் தலை வலிக்குதே...! மாத்திரைதேடுவோம்...!’ என்று நினைத்த மஞ்சுளா, கதவைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுவிட்டுப் புலம்பியபடியே ஒவ்வொரு அலமாரியாகத் திறந்து பார்த்தாள். மாத்திரை, தேடினாள்.

     ஒரு அலமாரியில் அவள் தேடியபோது... நிறையக் காகிதங்கள், ஒழுங்கில்லாமல் கலைந்து கிடந்தன. அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமான நகர்த்தி, மாத்திரையைத் தேடினாள். ஒரு காகிதக் கட்டின் பின்புறம் சில மாத்திரைகள் கிடந்தன. அவற்றுள் தலைவலி மாத்திரை ஒன்றை எடுத்து, வாயில் போட்டு, அங்கிருந்த தண்ணீரைக் குடித்தாள் அவள்.

     மாத்திரை அட்டையை மறுபடி அலமாரியினுள் வைக்கும்போது, அங்கிருந்த கவர் மீது ‘தங்கமீனா’ என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் படித்த அவள் ‘என்ன... தங்கமீனாவா? நான்... நான் தங்கமீனாவா? ஆமா... நான்தானே தங்கமீனா...! என் பேர்தானே அது...?” மாத்திரை சாப்பிட்டபடியால் தலைவலி குறைந்திருந்தது. எனவே அந்தக் கவரைப் பிரித்துப் பார்த்தாள். உள்ளே ஒரு கடிதம் இருந்தது.

     என் அன்பு மகள்... செல்ல மகள் தங்கமீனாவிற்கு

     உன் அன்பு அம்மா எழுதுவது

     நீ... உன் காதலைப் பெரிதாக நினைத்து. உங்களை உதாசீனம் செய்கிறாய். நம்ம வீட்ல சுகமாக, சகல வசதிகளுடன் சௌகர்யமாக வாழும் நீ, உன் புகுந்த வீட்லேயும் அதே போல  வசதியாக வாழணும்னுதானே நினைப்போம்? ஆனால் நீ...? நம்ம டிரைவர் சம்பளத்தை விடக் குறைவாகச் சம்பளம் வாங்குகிற ஒருத்தனைக் காதலிக்கிறே... அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பிடிவாதம் பிடிக்கிற... அவன் ஏழைங்கிறது... இப்போ உனக்கு அவன் மேலே உள்ள காதல்ல பெரிசாத்  தெரியாது. காலப் போக்குல... அந்தக் குறைகள் உன்னைப் பயமுறுத்தும். இப்போ இனிக்கிற அந்தக் காதல் கசக்கும். அதுக்கப்புறம் உன் நிம்மதிக்கு ஒரு முடிவு வந்துடும்.

     அவனோட ஏழ்மை நிலையை நம்மோட பணத்தாலே மாத்திக்க முடியும்னு வெச்சுக்க. அதை அவனும், அவனோட குடும்பமும் ஏத்துக்கணும். இதை விட்டுட்டுப் பார்த்தால்... அவனைப் பத்தி விசாரிச்சதுல. அவன் உன்னை மட்டும் காதலிக்கலை... பல பெண்கள் கூட தொடர்பு வெச்சிருக்கான். ‘காதல்’னு சொல்லி ஏமாத்தி இருக்கான். அந்தஸ்து விஷயத்தை விட்டுட்டுப் பார்த்தால்... அவனோட இந்த அயோக்கியத்தனம் தடுக்குதே...!

     நம்ம பங்களா ஏழாயிரம் ஸ்கொயர் ஃபீட் ஏரியா. நீ காதலிக்கிற அந்த மதன், ஏழாயிரம் ரூபாய் வாடகை வீட்ல இருக்கான். நஞ்சையும், புஞ்சையுமா நமக்குப் பத்து ஏக்கர் நிலம் இருக்கு. உங்கப்பாவோட ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியிலே எக்கச்சக்கமான லாரிகள், ட்ரெக்கர்கள் ஓடுது. கோடிக்கணக்கான டர்ன் ஓவர் உள்ள கம்பெனி. நம்ம பங்களாவுல நாலஞ்சு கார்கள் நிக்குது. அந்த மதனோட வீட்டுக்கு வெளியிலே... பைக் நிறுத்தக் கூட இட நெருக்கடி. நம்ம வீட்ல உன்னோட துணிமணிகள் வைக்க மூணு பீரோ பத்தலை. அவனோட வீட்ல ஒரு பீரோ கூட வைக்கிறதுக்கு இடம் இருக்காது. என்னோட நகைங்க ஐநூறு பவுனுக்கு மேலே இருக்கும்... அவன் கிட்டே என்ன இருக்கும்?

     ஆனால், இதையெல்லாம் ‘போனாப் போகுது’ன்னு விட்டுட்டாலும், அவன் நல்லவன் இல்லைங்கிற விஷயம்தான்... உன்னோட விருப்பத்துக்குத் தடை சொல்ல வைக்குது. இன்னொரு பெரிய விஷயம்... அவன் நம்ம ஜாதி இல்லை. அந்தஸ்து, ஒழுக்கம், ஜாதி... எதிலேயும் சரி இல்லாத அந்த மதனை நீ கல்யாணம் பண்ணிக்க, நாங்க எப்படிச் சம்மதிக்க முடியும்? ஜாதியையோ அந்தஸ்து பேதத்தையோ நீ ஒத்துக்கமாட்டே, அதனால அவனோட குணநலன், ஒழுக்கம்... இதைப்பத்தி விசாரிச்சோம். அதுலயும் அவன் மோசமானவனாக இருக்கான்.

     நேருக்கு நேராக இதைப்பற்றியெல்லாம் பேசினால் நீ காது கொடுத்துக் கேட்க மாட்டே காச் மூச்னு கத்துவே. புரிஞ்சுக்க மாட்டே. அதனால, மனசு விட்டு வெளிப்படையாக எழுதினால் சிந்திச்சு... நல்லது, கெட்டத்தைப் புரிஞ்சப்பேன்னுதான் எழுதிக் கொடுத்திருக்கேன். ஆற அமர யோசிச்சு நல்ல முடிவு எடு. அந்த முடிவு, அந்த மதனைக் கல்யாணம் பண்ணிக்கறதாக இருந்தால் நாங்க அதுக்கு ஒத்துக்கவே மாட்டோம். இது வரைக்கும் நீ விரும்பின விலையுயர்ந்த எல்லாமே வாங்கிக்கொடுத்திக்கோம். உன் வாழ்க்கையும் உயர்ந்ததாக இருக்கணும். ஆனால், உன் ஆயுள்காலம் வரைக்கும் கூடவே வாழப்போற ஒருத்தனை இவ்ளவு மட்டமானவனாகத் தேர்ந்தெடுத்திருக்கிறே...


     நீ காதுல போட்டிருக்கிற கம்மல்ல இருந்து கால்ல போடற செருப்பு வரைக்கும் விலையும் கூடினது... தரமும் உயர்தரம். அது போல உன் வருங்காலக் கணவனும் நல்லவனாக இருக்கணும். ஜாதி கெட்ட, குணம் கெட்ட, ஒழுக்கம் கெட்ட, பண பலம் இல்லாத அவனையும், அவன் மீதான காதலையும் வேண்டாத பொருளைக் குப்பையிலே போடற மாதிரி குப்பையிலே போட்டுட்டு... எங்க மனசு குளிர, எங்க விருப்பப்படி நாங்க  பார்த்து முடிவு செய்யற நம்ம ஜாதிப் பையைக் கல்யாணம் பண்ணிக்கச் சம்மதிக்கணும். எங்களோட ஒரே மகள் நீ. எங்க சொத்துக்கு ஒரே வாரிசு நீ. உன் மனசு மாறும்னு நம்பிக்கையோட காத்திருக்கோம்.

உன் அன்பு அம்மா

வசந்தா.

     ‘அ... ஐயோ... வசந்தாவா? வசந்தா என் அம்மாவாச்சே! கீரைக்காரம்மா யாரை... யாரை உங்கம்மான்னு சொன்னாங்க? என் அம்மா, வெளியிலே போயிருக்காங்களா? இது என்ன இடம்? நான் எப்படி இங்கே வந்தேன்? எனக்கு என்ன ஆச்சு?’ என்று யோசிக்கும்போது... தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிறைத் தற்செயலாகப் பார்த்த அவள், அதிர்ச்சி அடைந்தாள். திடுக்கிட்டாள்.

     ‘ஐயோ...! யோசிக்க யோசிக்கத் திரும்பவும் தலை வலிக்குதே...! எனக்கு என்னமோ பண்ணுதே...! என் கழுத்துல புது மஞ்சள் கயிறு... இது எப்படி? இதை எனக்குக் கட்டினது யார்? நான் என்னையே அறியாமல்... எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியாமல் இருந்திருக்கேன். அப்படிப்பட்ட நிலைமையிலா எனக்கு இந்த மஞ்சள் கயிறு கட்டப்பட்டிருக்கு? ஒண்ணுமே புரியலியே...?’

     கதறி அழுதாள். அதன்பின் சற்று அமைதியானாள்.

     நிதானமாக யோசித்தாள். ‘எனக்கு நினைவு பழையபடி திரும்பறதுனாலதான் இவ்வளவு கடுமையாகத் தலை வலிக்குது போல... அந்த லெட்டர் என் அம்மா எழுதினது... நான் தங்கமீனா... நான் எப்படியோ மஞ்சுளா ஆகி இருக்கேன். அது எப்படி?’

     அவள் நினைத்துப் பார்க்கப் பார்க்க... கொஞ்சம் கொஞ்சமாகப் பனிப்படலம் போல அவளுக்குச் சில நிகழ்வுகளும், அதன் நினைவுகளும் தோன்றின. அந்த நேரம் பார்த்து, கதவைத் தட்டும் சப்தம் கேட்டது. அவசர அவசரமாகக் கடிதத்தைக் கவரில் போட்டு, இருந்த இடத்திலேயே வைத்தாள். அப்போதும் அவளுக்குத் தலை சுற்றியது. சமாளித்தபடி அலமாரியின் கதவை மூடி விட்டு வாசல் கதவைத் திறந்தாள்.

     “என்னம்மா மஞ்சுளா... எழுந்துட்டியா? காலங்கார்த்தால போன கரண்ட் இன்னும் வரலை போல? ராத்திரி திடீர்னு வந்த நெஞ்சு வலி, ராவோட ராவா... என்னை ஆஸ்பத்திரிக்கு விரட்டிடுச்சு, என்னென்னமோ டெஸ்ட் கிஸ்ட்னு இவ்வளவு நேரம் ஆக்கிட்டானுங்க. மருந்து மாத்திரை, ஊசி போட்டு அனுப்பிட்டானுங்க... நீ அசந்து தூங்கிக்கிட்டிருந்ததுனால உன்னை எழுப்பலை.

     “ரங்கா மாமாவை உனக்குத் துணைக்கு இருக்கச் சொல்லிட்டுப் போனேன். சனியன் பிடிச்சவன் எங்கே போய்த் தொலைஞ்சானோ? கதவு உள்பக்கம் நீ பூட்டினியாம்மா? உன்னை எழுப்பிப் பூட்டிக்க சொன்னானா?”

     “இ... இ... இல்லை. இங்கே நான் எழுந்திருக்கும் போது யாருமே இல்லை... நான்தான் கதவைப் பூட்டினேன்.”

     தட்டுத் தடுமாறிப் பேசினாள் மஞ்சுளா என்கிற தங்கமீனா.

     “இன்னும் நெஞ்சுவலி நிக்கலியே! ஆஸ்பத்திரியிலே அவனுக கொடுத்த மாத்திரைக்குத் தூக்கம் கண்ணை அசத்துது. நிக்கவே முடியலை. நான் படுத்துத் தூங்குறேன். ஹோட்டல்ல உனக்கு டிபன் வாங்கலாம்னு பார்த்தா... இந்த ரங்கா எங்கே போனான்னு தெரியலை.”

     பேசி முடிக்கக்கூட முடியாமல் அப்படியே படுத்துக் கொண்ட மங்கா, ஆழ்ந்து தூங்கிவிட்டாள். மங்கா அசந்து தூங்குவதைப் பார்த்த தங்கமீனா, மறுபடியும் வேறு  ஏதாவது அடையாளம் கிடைக்கிறதா எனப் பார்த்தாள்.

     ‘என் அம்மா வசந்தாவுக்கு அண்ணனே கிடையாது. நல்லா ரீல் உடறா இந்த அம்மா?’

     தலைவலி ஓரளவிற்குக் குறைந்திருந்தது.

     ‘என்னைச் சுத்தி என்னமோ சதித்திட்டம் நடக்குது. ஒரு மர்மமான வலைக்குள்ளே சிக்கிக்கிட்டேன் போலிருக்கு. எல்லாத்தையும் விட... இந்த மஞ்சள் கயிறுதான் என் மனசை அறுக்குது. கெரகம்... ஒரு மொபைல் கூட இந்த வீட்ல இல்லை.’

     குழம்பிப் போய் மன சஞ்சலப்பட்டாள் அவள்.

     அப்போது மிக மெதுவாக நாசூக்காய்க் கதவைத் தட்டும் ஒலி கேட்டது.

     இரண்டு முறை தட்டிய பின், கதவைத் திறந்து ஒரு நபர் உள்ளே வந்தார். வந்தது சூராஜ்.    

     ‘இந்தம்மா என்னமோ ‘அண்ணன்’ அண்ணன்’னு சொன்னாங்க... ஆனால், வந்திருக்கிற ஆள், ரொம்ப  கொஞ்ச வயசுக்காரரா இருக்காரே...! இந்தம்மா என்ன டான்னா... கும்பகர்ணி மாதிரி தூங்கறாங்க!’

     கடுப்பானாள் தங்கமீனா.

     “எக்ஸ்க்யூஸ் மீ. இங்கே ‘மஞ்சுளா’ங்கிறது...?”

     சூரஜ் கேட்டதும் மேலும் கடுப்பானாள் தங்கமீனா.

     “முதல்ல நீங்க யார்? அதைச் சொல்லுங்க...”

     “என் பேர் சூரஜ், நான் ‘ப்ரைவேட் டிடெக்டிவ் ஏஜென்ஸியில இருந்து வந்திருக்கேன்.”

     “அதுக்கு என்ன ஆதாரம்?”

     ‘ம்... புத்திசாலியாகத்தான்  இருக்கா... இவதான் மஞ்சுளாவாக இருக்கமோ...?’ என்று நினைத்த சூரஜ், தனது அடையாள அட்டையை எடுத்துக் காட்டினான்.

     அதைப் பார்த்து நிம்மதி அடைந்த தங்கமீனா... “என் பேர் தங்கமீனா... நீங்க கேட்ட மஞ்சுளாவும் நான்தான்!” என்றவள், மங்கா விழித்துக் கொள்ளக்கூடாது என்கிற எச்சரிக்கை உணர்வில், அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த மங்காவைப் பார்த்தாள்.

     மங்கா, லேசுக்குள்  விழிப்பதாகத் தெரியவில்லை.

     எனவே சூரஜ்ஜிடம் கொஞ்சம் தள்ளி வந்து, “மெதுவாகப் பேசுங்களேன்... ப்ளீஸ்... !” என்று கூறினாள்.

     “நீங்க... ‘மஞ்சுளா’ என்கிற ‘தங்கமீனா’ங்கிறதுக்கு என்ன ஆதாரம்?” என நக்கலாகக் கேட்டான் சூரஜ்.

     சூரஜ் மூலம் தப்பிக்க வழி கிடைத்து விட்டது என்கிற சந்தோஷத்திலும் நம்பிக்கையிலும்... மெதுவாக அலமாரியின் கதவைத் திறந்து, அவளது அம்மா எழுதிய கடிதம் அடங்கிய கவரை எடுத்தாள்... திறந்தாள். உள்ளிருந்த கடிதத்தை எடுத்து சூரஜ்ஜிடம் கொடுத்தாள்.

     கடகடவென்று படித்தான் சூரஜ், தங்கமீனாவை வெளியே வரச்சொல்லி, அவனும் வெளியே வந்தவன்... மொபைலை எடுத்தக் காரில் காத்திருந்த வினய்யை வரச்சொல்லி  அழைத்தான்.

     கார்த்திகா, ஹரியையும் அழைத்து வரச் சொன்னான்.

     ஜெய்சங்கரிடம், ‘ரங்காவை வரச் சொல்லி போனில் சொல்லச் சொன்னான். ஜெய்சங்கரையும்  வரச் சொன்னான்.

     தங்கமீனா கொடுத்த கடிதத்தில் இருந்த விஷயங்களை வினய்யிடம் சொல்லிக் காவல்துறையில் ‘காணவில்லை’ புகார் வந்த லிஸ்ட்டில் ‘தங்கமீனா’ என்று பெயர் இருக்கிறதா எனப் பார்க்கச் சொன்னான்.

     “இருக்கு பாஸ்... கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் அட்ரஸ்ல தங்கமீனாங்கிற இருபத்தி நாலு வயசுப் பொண்ணோட பேர் அட்ரஸ் இருக்கு பாஸ்!” என்று கூறிய வினய், “இவங்கதான் அந்த்த் தங்கமீனாவா சூரஜ் பாஸ்...?

     நைஸாகக் கண்களை உருட்டினான் வினய். “உண்மையிலேயே தங்கம்தான் சூரஜ் பாஸ்...” என்று ஆரம்பித்தவனை அடக்கினான் சூரஜ்.

     கோயம்புத்தூர் காவல்துறைக்குத் தகவல் சொல்லி, தங்கமீனா தொடர்பான வேறு விஷயங்களைக் கேட்டு அறியச் சொன்னான்.

     அத்தனையும் துரிதகதியில் நடந்தன.

     கார்த்திகாவும் ஹரியும் வந்தனர். அவர்களிடம் ஜெய்சங்கரை அறிமுகப்படுத்தி வைத்தான் சூரஜ். மிதுனாவின் திருமணப் புகைப்படத்தில் பார்த்திருப்பதாக அவர்கள் கூறினர்.


     சம்பந்தப்பட்ட கேஸை விசாரித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் பிரேம்குமாருக்கும் தகவல் அறிவிக்கப்பட்டது.

    

55

     நிகழும் சம்பவங்கள் எதையும் அறியாத மங்கா, இன்னமும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.

     ஜெய்சங்கர் அழைத்ததால் ‘தன் வேலை முடிந்து விடும்’ என்னு எண்ணிய ரங்கா, வேகமாகப் பரபரப்புடன் வந்தான்.

     ஆனால், அவன் எதிர்பாராதபடி அங்கே கூட்டமாகப் பலர் இருப்பதைப் பார்த்துத் திகைத்தான்.

     சூரஜ், அவனை மடக்கி, மிரட்டி விசாரித்ததும், உண்மைகளைக் கூறினான்.

     வினய், பெங்களூரு போலீஸிற்கு அறிவித்தபடியால், பெங்களூரு போலீஸாரும் வந்தனர்.

     கடத்தல் குற்றவாளிகள் வரிசையில் ரங்கா இருக்கிறான் என்கிற தகவலைப் பெங்களூரு போலீஸ் தெரிவித்தனர்.

     ரங்கா கைது செய்யப்பட்டுக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் ஜீப்பில் ஏறுவதற்கு முன், பெங்களூரு போலீஸிடம், ஒரு நிமிஷம்... நான் என் தங்கச்சி மங்காவை உள்ளே போய்ப் பார்த்துவிட்டுவரேன்!” என்றதும்... அவன் கூடவே இரண்டு போலீஸார் சென்றனர்.

     தூங்கிக் கொண்டிருந்த மங்காவின் அருகே சென்று அவளை எழுப்பினான்.

     “மங்கா... ஏ மங்கா...”

     ரங்காவின் குரலுக்கு மங்காவின் உடலிலும், உணர்விலும் எந்த அசைவும் இல்லை.

     ‘திக்’ என்று பயந்து போன  ரங்கா, அவளது மூக்கருகே தன் கையை வைத்துப் பார்த்தான்.

     மங்காவின் உயிர் மூச்சு அடங்கி இருந்தது.

     “மங்கா...”

     அலறினான் ரங்கா.

     “மங்கா செத்துப் போயிட்டா ஸார்...”

     உடனே அரசு மருத்துவமனைக்கு அறிவித்து, அங்கிருந்து டாக்டர் வந்தார்.

     “மேஸ்ஸிவ் ஹார்ட் அட்டாக்... சர்க்கரை நோயாளியாக இருந்ததுனால... வலி தெரியாமலே உயிர் போயிருக்கு...!” என்று மங்கா இறந்து போனதற்குரிய காரணத்தையும், அவளது மரணத்தையும் உறுதி செய்தார் அரசு டாக்டர்.

     மங்காவின் உடல் போஸ்ட் மார்ட்டத்திற்கு அனுப்பப்பட்டது. ரங்காவைப் பெங்களூரு காவல் துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

     ஜெய்சங்கர், தங்கமீனா இருவரையும் காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி அவர்கள் சென்றனர். உடன் கார்த்திகாவும், ஹரியும் சென்றனர்.

     சூரஜ் மற்றும் வினய்யும் போனார்கள்.

     ஜெய்சங்கரைக் காண்பித்துத் தங்கமீனாவிடம், “இவரை அடையாளம் தெரியுதா?” என்று கேட்டான் சூரஜ்.

     “ம்ஹூம்... தெரியலை...” என்றாள் தங்கமீனா.

     அவள் அப்படிச் சொன்னதும் வேறு எதுவும் சொல்லாமல் இருந்து கொண்டான் சூரஜ்.

     இதற்குள் ரங்காவிடம் வாக்குமூலம் பெறத்தயாராகினர் காவல்துறையினர். ரங்கா பேச ஆரம்பித்தான்.

     “என் பெயர் ரங்கா... பிறந்து வளர்ந்தது பண்டரிபுரத்துக்கிட்டே ஒரு சின்னக் கிராமத்துல. சின்ன வயசுல இருந்தே படிப்பு ஏறலை. நானும் மங்காவும் சின்ன வயசா இருந்தப்பவே எங்களைப் பெத்தவங்க செத்துப் போயிட்டாங்க... சொந்த பந்தம் யாரும் கிடையாது. நாங்க வறுமையின் கொடுமையாலேயும். பசியைத் தாங்க முயாமலும் ரொட்டிக்கடை, இட்லிக் கடை... இப்படிப்  பல இடங்களில் திருடித்திங்க ஆரம்பிச்சோம். அப்போது திருட்டுக் கும்பலோட தலைவன் ஒரு ஆள், எங்களுக்கு நிறையச் சாப்பாடு துணிமணயெல்லாம் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் அவர் எங்களை திருட்டுக்கு பயன்படுத்தினார்.

     “அவர் ஊர் ஊராக... மாநிலம் மாநிலமாகச் சுத்துவார். எங்களையும் அவர் கூடவே கூட்டிட்டுப் போவார். வேளா வேளைக்குச் சாப்பாடு, துணிமணி கிடைச்சதுனால நாங்க அவர் கூடவே இருந்து, அவர் சொல்ற திருட்டு வேலையைச் செஞ்சோம். அப்புறமா அவர், கடத்தல் வேலையும் செய்ய ஆரம்பிச்சார். அதிலே எங்களையும் ஈடுபடுத்தினார். நிறையத் தடவை போலீஸ்ல மாட்டி ஜெயிலுக்குப் போனோம். அதனால ரொம்பப் பயந்துட்டோம். அந்த திருட்டுக் கும்பல் தலைவனை விட்டு ஓடிட்டோம்.

     “எங்கேயும் எங்களுக்கு வேலை கிடைக்கலை. அதனாலே நான் மட்டும் கடத்தல் தொழில், கமிஷனுக்காகச் செஞ்சேன். இதிலே எக்கச்சக்கமாகப் பணம் கிடைச்சது. மங்காவை எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லி, நான் மட்டும் திருட்டு வேலை, கடத்தல் வேலை செஞ்சேன். நாங்க எந்த ஊர்லேயும் நிரந்தமாக இருக்கிறதில்லை. நாடோடிகள் மாதிரி திரிஞ்சோம். அதனால எங்களுக்கு நிறைய பாஷைகள் பேச வந்துச்சு. பித்தளை நகைகள்னா மங்காவுக்கு ரொம் ஆசை. நிறைய போட்க்குவா... நிறையச் சாப்பிடுவா, ரசிச்சு... ருசிச்சுச் சாப்பிடுவா.

     “கடத்தல் வேலைன்னா திடீர்னு வெளியூர் சிங்காப்பூர், மலேஷியான்னு நிறைய வெளிநாடுகளுக்கும் போவேன். அப்போ மங்கா தனியாக இருப்பா... எனக்குச் சமைச்சு வைப்பா... இப்படி நினைச்சப்போ நினைச்ச இடத்துக்குச் சுத்தினோம். அப்படி ஒரு ஊர்ல இருந்து வேற ஊருக்குப் போகலாம்னு இருந்தப்போ, மஞ்சுளா கார் விபத்துல மாட்டி மோசமான நிலைமையில் கிடந்தா... அவளைப் பக்கத்துல இருந்த ஹாஸ்பிடல்ல சேர்த்து ட்ரீட்மென்ட் கொடுத்தோம். அவளோட காயங்கள் ஆறிச்சு, ஆனால், அவளோட கடந்தகாலம் அவளுக்கு மறந்து போச்சு, அவளுக்கு எப்ப வேணும்னாலும் நினைவு திரும்பலாம் அப்படின்னு டாக்டருங்க சொல்லி அனுப்பினாங்க.

     “மஞ்சுளாவுக்கு அவங்க அம்மா  எழுதின லெட்டர் பார்த்து, இவ பெரிய கோடீஸ்வரின்னு தெரிஞ்சுக்கிட்டோம். அதனால, பணத்தை இவளுக்காகச் செலவு செஞ்சோம். கடத்தல்ல நிறையச் சம்பாதிச்சு வெச்சிருந்தேன். மஞ்சுளாவுக்கு நினைவு தெரிஞ்சு அவ குடும்பம் பத்தி தெரிஞ்சுக்கிட்டா அவ கூடவே போய் ஒட்டிக்கலாம்னு திட்டம் போட்டோம். அப்போ ஜெய்சங்கரோட அறிமுகம் கிடைச்சது. அவரோட இரக்க சுபாவத்தைப் பயன்படுத்தி, மஞ்சளாவுக்குத் தாலி கட்ட வெச்சோம். அந்தக் கல்யாணத்தை  ரிஜிட்டர் பண்றதுக்குள்ளே அவர் அம்மாவுக்கு உடம்பு சரி இல்லைன்னு சென்னை போயிட்டார். அதுக்கப்புறம் அவரை வரச்சொல்லிப் போன்ல கூப்பிட்டேன். அவர் வரலை.

     “இன்னிக்கு அவராகவே கூப்பிட்டதுனால நான் வீட்டுக்குப் போனேன். ஆனால், போலீஸ் விரிச்ச வலை அதுன்னு தெரியாது... மஞ்சுளாவுக்குத் துணையாக இருக்கச் சொல்லிட்டு ஆஸ்பத்திரிக்குப் போனாள் மங்கா. ஆனால் நான், நிறையப் பணம் கிடைக்கும்னு சொன்னதுனால ஒரு கடத்தல் வேலைக்குப் போயிட்டேன். அப்போதான் ஜெய்சங்கர் தம்பி என்னைக் கூப்பிட்டார். கடைசி நேரம் மங்கா கூட இருக்க முடியாம ஆகிடுச்சு... ஜெய்சங்கர் கோடீஸ்வரர்... மஞ்சுளா கோடீஸ்வரி. இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சு ஸெட்டில் ஆகிடலாம்னு திட்டம் போட்டோம்... இப்போ மங்கா செத்துட்டா... நான் மாட்டிக்கிட்டேன்.

     பல மொழிகளின் கலவையில் பேசிய ரங்கா, தலைகுனிந்தான்.
லாக்–அப்பில் அடைக்கப்பட்டான்.

     ழுது கொண்டிருந்த தங்கமீனாவின் முதுகில் தடவிக் கொடுத்தான் வினய்.  ஆறுதல் சொல்கிறானாம்... அவனைப் பிடித்து இழுத்தான் சூரஜ்.

     “அழாதே தங்கமீனா... உன் அம்மா வந்து உன்னைக் கூப்பிட்டுப் போவாங்க. இன்ஸ்பெக்டர் பிரேம்குமாருக்குத் தகவல் கொடுத்தாச்சு. உங்க அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாததுனால, உங்க அம்மா மட்டும் வர்றாங்களாம.”

     “நான் அதுக்கு அழலை ஸார். இதோ இந்த மஞ்சள் கயிறு...”

     “அதைப்பத்தியா கவலைப்படறே? தேவையே இல்லை. உனக்கு நினைவு இல்லாதப்போ... ஒருத்தரை எமோஷனல் ப்ளாக்மெயில் செஞ்சு கட்டப்பட்ட அந்தத் தாலி, வெறும் நூல் சரடு... அது தாலியே இல்லை. நீ இப்பவும் மிஸ் தங்கமீனாதான். நீ காதலிச்ச மதன், கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தை பெத்துக்கிட்டு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டிருக்கான். உங்க அம்மா, அப்பா... அவர்களுக்குப் பிடிக்காததுனால மதனைப்பத்தி ஏதேதோ சாக்கு போக்குகள் சொல்லி இருப்பாங்க. அதையெல்லாம் மறந்துடு. பழைய நினைவுகள் மறந்த உனக்கு, அது மறுபடி வந்ததுக்குச் சந்தோஷப்படு.  அதேபோல அந்த மதனையும் மறந்துடு. உங்க அம்மா அப்பா சொன்னபடி கல்யாணம் பண்ணிக்கோ....!”


     “சரி ஸார். ஆனால், என் அம்மா மதனைப் பற்றிப் பொய்யான விஷயம் சொன்னது இன்னும் உறுத்தது. அவங்க என்னைச் சாகடிக்கலை... என் காதலைச் சாகடிச்சுட்டாங்க...”

     “புதுசா ஒரு வாழ்க்கையைத் துவங்கு தங்கமீனா.”

     “அதுக்கு எனக்கு நிறைய அவகாசம் வேணும்...”

     “உங்க அப்பா மனசு உடைஞ்சு படுத்துட்டார். உன்னைப் பார்த்தாத்தான் அவர் சுகம் ஆவார். ஆயிரம் இருந்தாலும் நடந்தாலும்... அவங்க உன்னோட அம்மா, அப்பா. அவங்க மனசுக்கேத்த மாதிரி நடந்துக்கோ. உன்னோட கல்யாணத்துக்கு என்னோட அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!”

     “நம்மையும் கல்யாணத்துக்குக் கூப்பிடுவாங்களா சூரஜ் பாஸ்...?”

     “அலையாதே வினய்.”

     “சூரஜ் பாஸ், தங்கமீனாவோட அம்மா வீட்டு அட்ரஸ் கொடுங்க. நான் கோயம்புத்தூர் கொண்டு போய் விட்டுட்டுவரேன்...!” வினய் சொன்னான்.

     “ரொம்ப முக்கியம்...!” என்று விளையாட்டாய் வினய்யை  முறைத்தான் சூரஜ்.

     “எல்லா வேலையையும் கோவை போலீசும் பெங்களூரு போலீசும் பார்த்துக்குவாங்க... நாம நம்ம வேலையைப் பார்க்கலாம்.”

     அப்போது தங்கமீனாவை, போலீஸார் தகுந்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

     கார்த்திகாவும், ஹரியும் நடந்தது என்ன என்று புரிந்து கொண்டு சந்தோஷப்பட்டனர். சூரஜ்ஜிடம் நன்றி தெரிவித்தனர்.

     “சூரஜ்... உங்க திறமையாலே மிதுனாவோட திருமண வாழ்க்கையில இருந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்தாச்சு. நல்ல வேளை... நீங்க சமயோசிதமாக தங்கமீனாகிட்டே, ஜெய்சங்கர்தான் அவளுக்குத் தாலி கட்டினவர்னு சொல்லாம இருந்தீங்க. அது தெரிஞ்சா... தங்கமீனா மனசு ரொம்ப வேதனைப் பட்டிருக்கும்... அவமானமாகக் கூட உணர்ந்திருப்பா...

     “ஆமா... அவ, ஜெய்சங்கரை யார்னு தெரியலைன்னதும் அப்படியே எதுவும் சொல்லாம விட்டுட்டேன். ஒரு பெண்ணுக்குத் தர்மசங்கடமான நிலைமை அது.”

     “தங்கமீனாவைக் கூட்டிக்கிட்டுப் போறதுக்குக் கோயம்புத்தூர்ல இருந்து யார் வர்றாங்களாம்?”

     “தங்க மீனாவோட அப்பாவுக்கு உடம்பு சுகம இல்லாததுனால அவங்க அம்மா மட்டும் வர்றாங்களாம். அவங்க ஃப்ளைட்ல கிளம்பிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல எழுதிக் கொடுத்துட்டுக் கூட்டிட்டுப் போவாங்க. போலீஸ் பாதுகாப்புலதான் அவங்கம்மா வர்ற வரைக்கும் இருப்பா.”

     “பாவம் தங்கமீனா... காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிச்ச பெத்தவங்க மேலே கோபப்பட்டு ஓவர் ஸ்பீட்ல காரை ஓட்டிக்கிட்டுப் போய் இவ்வளவு பெரிய பிரச்சனையிலே மாட்டிக்கிட்டா. இதுக்குத்தான் அம்மா–அப்பாகிட்டே மனசு விட்டுப் பேசணும்ங்கிறது...”

     “கார்த்திகா சொன்னதும் ஹரி, “அது மட்டும் இல்லை...ஜெய்சங்கர் கௌரவமான மனுஷன். அதனால தங்கமீனா தப்பிச்சா. கேடுகெட்ட ஆம்பிளையா இருந்திருந்தால்... தங்கமீனாவை அனுபவிச்சுட்டு விட்டிருப்பான்.”

     “ஹரி சொல்றது ரொம்ப சரியான விஷயம். ஜெய்சங்கர் நல்லவர், கண்ணியமானவர்னு நிரூபிக்க இத ஒரு முக்கியமான ஆதாரம். ஆனாலும் அவர், அந்த ரங்கா–மங்கா பண்ணின உணர்வுப்பூர்வமான மிரட்டலுக்குப் பயந்து தங்கமீனா கழுத்துல தாலி கட்டியது மிகப் பெரிய தப்பு.”

     இதைக் கேட்ட்ட கார்த்திகா, “அந்தத் தப்புக்குரிய தண்டனையாகத்தான் மிதுனா அவரை விட்டு விலகி, ‘அவர் நல்லவர்னு தெரியறது வரைக்கும் அப்படித்தான்’னு சொல்லிட்டா. இன்னொரு விஷயம்... மூணு மாசத்துக்குள்ளே இந்த மர்ம முடிச்சு அவிழ்க்கப் படலைன்னா... மிதுனா, அவளோட அம்மா வீட்டுக்குப் போறதாகக்  காலக்கெடு வெச்சிருந்தா. சூரஜ் சுறுசுறுப்பாகச் செயல்பட்டதுனால ஜெய்சங்கருக்கு மிதுனாவோட வாழற வாழ்க்கை கிடைக்கப் போகுது...”

     “சூரஜ் பாஸ் மட்டும்தான் சுறுசுறுப்பாகச் செயல்பட்டாரா? நான் கூடத்தான்...” என்றான் வினய்.

     “சரி வினய், அழாதே. நீ இல்லாமல் நான் இல்லை. போதுமா?” சூரஜ் சொன்னதும் அனைவரும் சிரித்தனர்.

     “உங்களுக்கெல்லாம் தெரியாத ஓர் உண்மை, ஜெய்சங்கர் தன் மனைவி மிதுனாவை உயிரக்குயிராக விரும்புகிறார். அவர் பார்க்காமலே பேசாமலே திடீர்னு அவங்கம்மா பார்த்து நடத்தின அந்தக் கல்யாணத்துல கிடைச்ச மிதுனாவை அவர் நேசிக்க ஆரம்பிச்சுட்டார். தன் மேலே உள்ள கரும்புள்ளி நீங்க, தான் தப்பு செய்யாதவன்னு நிரூபணம் ஆகி, மிதுனாவும் தன்னை நேசிக்கணும்னு  காத்திருக்கார்.

     “நம்ம தாத்தா–பாட்டி காலத்துல ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காம பெத்தவங்க காட்டற பையனைப் பொண்ணும், பெத்தவங்க காட்டற பொண்ணைப் பையனும் கல்யாணம் பண்ணிக்குவாங்க. முதல் இரவு அன்னிக்குதான் அவங்க ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்குவாங்க. ஆனால், அவங்கள்லாம் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு, ஒற்றுமையா வாழ்ந்தாங்க.

     “இப்போதான் பத்து நாள் மொபைல்ல பேசறதுக்குள்ளே நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்று போச்சுன்னு சொல்றதைக் கேள்ளிப்படறோம். அந்தக் காலத்துல மாதிரி ஜெய்சங்கரோட அம்மா ஜெய்சங்கருக்கும், மிதுனாவுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சுட்டாங்க. அம்மா மேலே உள்ள கண்மூடித்தனமான பாசத்துனாலே ஜெய்சங்கர், அவங்க சொன்னபடி நடந்துக்கிறார். இனி எல்லாம் நல்லபடியா இருக்கும்?

     “தங்கமீனாவோட அம்மா, அவளைச் சில மணி நேரங்களிலே கூட்டிட்டுப் போயிடுவாங்க. ரங்கா போலீஸ் விருந்தாளி அகிட்டான். மங்கா செஞ்ச புண்ணியம், தூக்கத்திலேயே செத்துப் போனதுனால போலீஸ், விசாரணை, தண்டனைன்னு எதையும் எதிர்நோக்கத்தேவை இல்லாம மண்டையைப் போட்டுடுச்சு. ஜெய்சங்கர் தப்பானவர் இல்லைன்னு நிரூபணம் ஆகிடுச்சு...!

     “நான் இப்ப மிதுனாவுக்குப் போன் போட்டு இந்த சந்தோஷமான சமாச்சரத்தை சொல்லப் போறேன்...!” என்ற கார்த்திகா, தனது மொபைலை எடுத்தாள். மிதுனாவுடன் பேசி மகிழ்ந்தாள்.

     எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு மௌனமாக அதுவரை இருந்த ஜெய்சங்கர், “ரங்காவை வரச்சொல்லி போன் பண்ணினப்புறம் என்ன நடக்குமோ... ஏது நடக்குமோன்னு இருந்துச்சு. இப்போ எல்லாமே க்ளியரா ஆயிடுச்சு. எமோஷனல் ப்ளாக்மெயிலுக்குப் பயந்தது. உணர்ச்சி வசப்பட்டது எல்லாமே நான் செஞ்ச தப்பு. நான் தப்பானவன் இல்லைன்னு தெரிஞ்சு, மிதுனா என் அன்பைப் புரிஞ்சுக்கணும்னு துடிச்சுக்கிட்டிருந்தேன். கார்த்திகா, ரொம்ப சந்தோஷமா மிதுனாகிட்டே பேசிட்டாங்க. சூரஜ்ஜுக்குத்தான் பெரிய நன்றி சொல்லணும். கார்த்திகா, ஹரி இவங்க ரெண்டு பேருக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளைத் தேடணும். அவங்க குடும்பத்துப் பிரச்சனை மாதிரி ஹெல்ப்  பண்ணி இருக்காங்க. கார்த்திகா, ஹரி... ரொம்ப ரொம்ப நன்றி...!”

     “மிதுனாவுக்குத்தான் நீங்க மிகப்பெரிய நன்றி சொல்லணும். பொய் சொல்றது கூட பிடிக்காத இயல்பு உள்ளவ அவ. அவளோட வாழ்க்கையிலே ஏகப்பட்ட திரைமறைவுகளை அவ சந்திக்க நேர்ந்துடுச்சு. ஆனால், உங்க மேலே இருந்த நம்பிக்கையினாலே பொறுமையா காத்திருக்கா. சாதாரணப் பெண்கள் போல பிரச்சனையைப் பூதாகரமாக ஆக்காம, உங்கம்மாவோட உடல் நலத்தையும் மனசுல வெச்சு அவ ரொம்ப பொறுமையாவும், புத்திசாலித்தனமாகவும் நடந்துக்கிட்டா. அதனால பெரிய நன்றி சொல்ல வேண்டியது மிதுனாவுக்குத்தான்.”

     “நிச்சயமாக... நீங்க சொல்றது ரொம்ப சரி கார்த்திகா...

     “ஜெய்சங்கர், சென்னைக்குக் கிளம்பத் துடிச்சுக்கிட்டிருக்கார்.”

     அப்போது வெட்கம் கலந்த சிரிப்பு சிரித்தான் ஜெய்சங்கர்.

     “அது வந்து... இப்பவே என்னோட மொபைல்லேயே சென்னைக்கு ஃப்ளைட் டிக்கெட் போட்டுட்டேன்....”

     “பார்த்தீங்களா சூரஜ்... நீங்க சொன்னது சரிதான். மிதுனாவோட மகிழ்ச்சி கலந்த முகத்தை நான் சீக்கிரம் பார்க்கணும். ஜெய்சங்கர், உங்களுக்கு இருக்கிற வசதிக்கு நீங்க ஹனிமூனுக்கு வெளிநாடுகள் போகலாம். ஆனால், நீங்களும் மிதுனாவும் இங்கே பெங்களூருக்கு வந்து, உங்க ஹனிமூனைக் கொண்டாடுங்க.”

     “நிச்சயமாக இங்கேதான் வருவோம்...”

     ஒருவருக்கொருவர் விடை பெற்றுக் கிளம்பினர்.

     வினய் மட்டும் கார்த்திகாவைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே இருந்தான்.


     “வினய்... கொஞ்சம்  ரோட்டையும் பார்த்துக் கார் ஓட்டினா நல்லது...”

     “அதென்னவோ சூரஜ் பாஸ்... பொண்ணுகளைப் பார்த்தாலே கண் அப்படியே பின்னாடியே போகுது...”

     “ம்...போகும் போகும்... கண்ணை நோண்டிடுவேன் படவா...!”

     “ஸாரி சூரஜ் பாஸ். பழக்க தோஷம்.”

     அவர்கள் கார் விரைந்து சென்றது.

     பிரச்னைகள் தீர்ந்து, ஜெய்சங்கர் நல்லவன் என்று அறிந்து கொண்டு நடந்தவை அனைத்தையும் அறிந்து கொண்ட மிதுனா, மிகவும் மகிழ்ந்தாள்.

     சாரதாவிடம் சொல்லி  அவரையும் மகிழ்ச்சிப்படுத்தினாள்.

     ஜெய்சங்கர் பெங்களூரில் இருந்து வருவதற்காகக் கார்த்திருந்தாள்.

     அன்றைய இரவு, மிதுனா தன்னை மிகவும் அழகுபடுத்திக் கொண்டாள்.

     மிதுனாவின் மூச்சுக்காற்று தன் மீது படும் அளவு, அவள் நெருக்கமாகத் தன் அருகே அமர்ந்தது அவனுக்கு இன்பமாக இருந்தது. மிதுனாவிடம் கிசுகிசுப்பாகப் பேச ஆரம்பித்தான்.

     “மிதுனா... தினமும் நடந்த பிரச்சனைகள் எப்போது முடியுமோன்னு என் கண்களை மூடி யோசிக்கும்போது, என் கண் முன்னாலே உன்னோட உருவம்தான் எனக்குத் தெரிந்தது. என்னை அறியாமலே உன்னை நேசிக்க ஆரம்பிச்சுட்டேன். நீ கொடுத்த மூணு மாசக் கெடு முடிந்திடக் கூடாதுன்னு துடிச்சேன். நான் நினைச்சதை விட ரொம் சீக்கிரமாகவே நிலைமை சரியாகி, நீ எனக்குக் கிடைச்சுட்டே...”

     “உங்க மேலே இருந்த நம்பிக்கை எனக்கு நல்லதை எடுத்துக் காட்டிச்சு. கடவுளுக்கு நன்றி சொல்லணும்.”

     “நிச்சயமாக, அது சரி, நாளைக்கே நாம ரெண்டு பேரும் பெங்களூரு போறோம்...”

     “ம்... நம்ம ஹனிமூன், பெங்களூருலதான்...!” என்று கூறியபடி மிதுனாவை அணைத்துக் கொண்டான் ஜெய்சங்கர்.

     ‘விழி மூடி யோசித்தால்... அங்கேயும் வந்தாய் பெண்ணே... பெண்ணே...!’

திரைப்படப் பாடல் எங்கேயோ ஒலித்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.