Logo

எதிர்பாராதது

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5969

எதிர்பாராதது

டி.பத்மநாபன்

தமிழில் : சுரா

வானத்திலிருந்து சிதறி விழுந்ததைப் போல கங்காதரன் வாசலில் வந்து நின்றான். உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- மழையிலிருந்து தப்பிப்பதற்காக அவன் ஓடி வந்து கொண்டிருந்தான். அப்போது நேரம் அந்த அளவிற்கு எதுவுமே இல்லையென்றாலும், பேருந்திலிருந்து இறங்கும்போது வானத்தின் முகம் கறுத்து விட்டிருந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் அவனுக்கு ஒரு ஆட்டோ கிடைக்கவில்லை. அதனால் அவன் மிகவும் சிரமப்பட்டு நடந்தான். பிறகு மழைத் துளிகள் விழ ஆரம்பித்ததும், ஓடவும் செய்தான்.

இரண்டு நாட்கள் 'டூர்' சென்ற தகவல்களை மேனேஜரிடம் கூறிவிட்டு, தாள்கள் முழுவதையும் அவரிடம் ஒப்படைத்த பிறகு, சாயங்காலத்திற்கு முன்பு இருக்கக் கூடிய வண்டியில் வீட்டிற்குச் செல்லக் கூடிய அவசரத்தில் அவன் இருந்தான்.

சாலையிலிருந்து கடையின் வாசலுக்கு வேகமாக தாவி வந்த கங்காதரன் 'டூல்கிட்டைக் கீழே வைத்து விட்டு, கையால் தலையிலும் முகத்திலும் இருந்த நீர்த் துளிகளைத் துடைத்து விட்டான். பிறகு நிம்மதிப் பெருமூச்சுடன் கடைக்குள் நுழைய ஆரம்பிக்கும்போது, வாசலின் ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த மேனேஜரின் மீது அவனுடைய கண்கள் பதிந்தன.

கங்காதரன் ஓடி வந்ததை முதலில் மேனேஜர் பார்க்கவில்லை. நீண்ட நேரமாக அவர் கங்காதரனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். மிகவும் முக்கியமான ஒரு தேவைக்காகத்தான் அது. அதனால் இடையில் வாசலுக்கு வந்து சாலையில் பார்த்துக் கொண்டும், மீண்டும் கடைக்குள் நுழைந்து கொண்டும், திரும்பவும் உடனே வாசலுக்கு வந்து கொண்டு என்றும் நிலையற்ற மனதுடன் அவர் இதுவரை நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தார். எனினும், இப்போது கங்காதரனைப் பார்த்ததும், அவருடைய முகத்தில் முதலில் உண்டான வெளிப்பாடு கடுமையான எரிச்சல் உள்ளதாக இருந்தது. ஆனால், அவர் உடனடியாக அதை மறைத்து வைத்தார். பிறகு கங்காதரனை நோக்கி நடக்க ஆரம்பித்தார். அப்போது உள்ளேயிருந்து ஒரு பணியாள் வந்து க்ளப் செக்ரட்டரி அவரை மீண்டும் அழைப்பதாக கூறினான்.

மேனேஜர் வேகமாக உள்ளே சென்றபோது, கங்காதரனும் சென்றான். ஆனால், அவன் மேனேஜரின் அறைக்கு வெளியிலேயே நின்று கொண்டான்.

ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி., மிக்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்யவும், தேவைப்பட்டால் வாங்கியவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவற்றின் கேடுகளைச் சீர்செய்து கொடுத்துக் கொண்டும் இருக்கக் கூடிய பெரிய ஒரு நிறுவனம் அது.

பொருட்களைப் பார்க்க வந்தவர்கள், வாங்க வந்தவர்கள் ஆகியோரின் கூட்டம் கடையில் நிறைய இருந்தது. அந்த கூட்டத்திலிருந்து விலகி, ஒரு அறிமுகமற்ற மனிதனைப் போல கங்காதரன் மேனேஜரின் அறைக்கு வெளியே நின்றிருந்தான். அவனுடைய முகத்தில் ஒரு வித செயலற்ற நிலை வெளிப்பட்டாலும், உண்மையிலேயே அவன் மிகவும் பொறுமையற்ற நிலையில் இருந்தான். மேனேஜரிடம் கொடுக்க வேண்டிய தாள்களை கையில் வைத்துக் கொண்டுதான் அவன் நின்றிருந்தான். கடந்த இரண்டு நாட்களாக தான் எங்கெங்கெல்லாம் போனோம், யாரையெல்லாம் பார்த்தோம், எந்தெந்த கருவிகளின் கேடுகளைச் சீர் செய்து கொடுத்தோம், சீர் செய்து கொடுக்க இயலாதவர்களுக்கு என்ன உதிரி பாகங்கள் தேவைப்படுகின்றன என்பதைப் பற்றிய ரிப்போர்ட்டே அது. ரிப்போர்ட்டை மேனேஜரிடம் ஒப்படைத்து விட்டு, சாயங்காலத்திற்கு முன்பு இருக்கக் கூடிய கடைசி வண்டிக்கு வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் அவன் இருந்தான். முடியுமானால் கொஞ்சம் ஆப்பிளோ முந்திரியோ வாங்க வேண்டும் என்றும் நினைத்தான்.

உண்மையிலேயே கடந்த இரண்டு நாட்களும் அவனுடைய மனதில் வீடு மட்டுமே இருந்தது. மானந்தவாடியின் மலைப் பகுதிகளிலும் வயல்கள் வழியாகவும் பயணம் செய்து யார் யாராருடைய டி.வி. செட்களையும், மிக்ஸிகளையும் சரி பண்ணி கொடுக்கும்போது அவனுடைய மனதில் இருந்தது தன்னுடைய வீடு மட்டும்தான். 'வீடு' என்று கூறினால்... மகன். என்ன காரணமோ தெரியவில்லை- அவனுக்கு இப்போது அடிக்கடி காய்ச்சல் வருகிறது. காட்டிய டாக்டர்கள் அனைவரும் கூறுவது 'ஏய்... பரவாயில்லை... குழந்தைகள்தானே! அவங்களுக்கு இடையில் அவ்வப்போது காய்ச்சல் வரும்' என்பதுதான். ஆனால், அப்படி நினைத்து அமைதியாக இருக்க முடியுமா? டாக்டர்மார்கள் கூறுவார்கள்... அவர்களுடைய குழந்தை இல்லையே...!

அப்படிக் கூறிய ஒரு டாக்டரிடம்தானே ஒருமுறை 104 டிகிரி காய்ச்சல் இருந்த அவனையும் தூக்கிக் கொண்டு... அப்போதும் டாக்டர் கூறினார்: 'நல்லது... இப்போது கொண்டு வந்தது நல்லது.... இன்னும் கொஞ்ச நேரம் ஆகியிருந்தால்...!'

சுட்டெரிக்கும் ஒரு நினைவாக அது எப்போதும் ஆனது. மூன்று நாட்களுக்கு முன்பே வீட்டிலிருந்து கிளம்பும்போது, அவனுடைய கையை பலமாகப் பற்றியவாறு, அவன் சொன்னான்:

'வேண்டாம் அப்பா. நீங்க இன்னைக்குப் போக வேண்டாம், அப்பா. நீங்க என் கூடவே இருந்து... நாம இரண்டு பேரும் சேர்ந்து....'

அப்போது அவன் சிரிப்பதற்காக அல்லவா முயற்சித்தான்?

'என்ன உண்ணி அது? நான் இங்கேயே இருந்து என்ன பிரயோஜனம்?'

உண்ணியின் சோர்வடைந்த கண்களில் சந்தோஷத்தின் பிரகாசம்.

'அப்பா, நான் உங்ககூட விளையாடுவேன்.'

விளையாடுவதா? எப்படி? எப்போது?

அறைக்கு வெளியில் அவன் வெறுப்புடனும் வேதனையுடனும் நின்று கொண்டிருந்தான்.

அப்போதும் மேனேஜர் க்ளப்பின் செக்ரட்டரியுடன் உரையாடிக் கொண்டிருந்ததை நிறுத்தவில்லை. மிகவும் தாழ்ந்த குரலில் அந்த உரையாடல் இருந்தாலும், அவருடைய வார்த்தைகள் கங்காதரனின் செவியிலும் விழுந்து கொண்டிருந்தன.

'இல்லை... இல்லை... நீங்கள் நினைப்பதைப் போல எதுவுமில்லை. நான் இப்போதே புறப்படுகிறேன். அந்த ஆள் வந்தாச்சு. இதோ... இங்கே இருக்கிறார். நான் வெறுமனே கூறவில்லை. அவரிடம் விவரங்களைக் கூறி விட்டு…. அதிகபட்சம் போனால், ஐந்து நிமிடங்கள். அதற்குப் பிறகு நான் புறப்படுகிறேன். எனக்காக அதுவரை காத்திருங்க. உங்களுடைய எந்த தீர்மானமும் என்னுடைய தீர்மானமும் கூட. அது உண்மை. பிறகு... நானும் இந்த க்ளப்பின் பொறுப்பாளராக இருந்தேனல்லவா? எனக்கும் சில கடமைகள் இருக்கின்றன அல்லவா? இப்போதும்... பிறகு... என்னுடைய அபிப்ராயம்... இந்த வருட குடியரசு நாளை க்ளப்பின் வரலாற்றிலேயே மிகப் பெரிய கொண்டாட்டமாக ஆக்க வேண்டும் என்பதுதான். அதற்காக எப்படிப்பட்ட சிரமங்களை ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டானாலும்- நாம் கவர்னரைக் கொண்டு வர வேண்டும். என்ன? குடியரசு தினமல்ல... சுதந்திர தினம் என்று கூறுகிறீர்களா? அப்படி இருந்தால் இருந்து விட்டுப் போகட்டும். இல்லாவிட்டால்... அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்? எல்லாம் ஒன்றுதானே?'


அறையின் வாசலைத் திறந்து மேனேஜர் உள்ளே அழைத்தபோது, கங்காதரன் முதலில் கவனிக்கவில்லை. அவன் அப்போதும் எதையெதையோ நினைத்துக் கொண்டு... மானந்தவாடியின் மழை பெய்து ஈரமான வயல் வரப்பின் வழியாக... மகனையும் அழைத்துக் கொண்டு... அவனிடம் ஒவ்வொன்றையும் கூறிக் கொண்டு....

பிறகு அறைக்குள் நுழைந்து மேனேஜரின் மேஜையின் மீது தாள்களை விரித்து வைத்தபோது...

அவன் பேசியவை அனைத்தும் மிகவும் வேகத்தில் இருந்தது. சாயங்காலத்திற்கு முன்பு செல்லக் கூடிய கடைசி பாசஞ்சர் வண்டிக்கு... வாய்ப்பு இருந்தால், கொஞ்சம் ஆப்பிளோ முந்திரிப் பழமோ வாங்கிக் கொண்டு...

அப்போது மனதில் அவைதாம் இருந்தன.

ஆனால், மேனேஜர் அவனை விலக்கிக் கொண்டு கேட்டார்:

'ஏன் இவ்வளவு தாமதம்? கடந்த சில மணி நேரங்களாக நான் உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். நீங்கள் எனக்கு தேவைப்பட்டீர்கள்.'

கங்காதரனால் முதலில் அதை நம்ப முடியவில்லை.

தாமதம் என்றா கூறுகிறார்?

எவ்வளவு தாமதமாகி விட்டது?

எவ்வளவு மணிகள்?

பேருந்து 'ப்ரேக் டவுன்' ஆனவுடன், தயங்கி நின்று கொண்டிருக்காமல், மரங்களை ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரியில் எப்படியோ ஏறி... பிறகு ஒன்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் மாறி ஏறி... சாயங்காலத்திற்கு முன்பே வந்து சேர்ந்தபோது...

எங்கே தாமதம் உண்டானது?

மிகவும் வெறுப்புடன் கங்காதரன் அவை அனைத்தையும் கூறினான். ஆனால், முழுமையாக கூறி முடிக்க அவனை அனுமதிக்காமல், மேனேஜர் சொன்னார்:

'சரி... சரி...'

மேனேஜருக்கு முன்னால் தாள்களை மீண்டுமொரு முறை நகர்த்தி வைத்து விட்டு, கங்காதரன் கூறினான்:

'நான் இன்னைக்கு வண்டியில்...'

அப்போது மேனேஜர் பொறுமையை இழந்து கூறினார்.

'அதற்கு இன்னும் நேரம் இருக்கிறதே! அதற்கு முன்பு கங்காதரன்...'

அப்போது மேனேஜர் கூறிக் கொண்டிருப்பதற்கு நடுவில் புகுந்து அவன் கூறினான்:

'நான் வர்றப்போ மகனுக்கு...'

மேனேஜர் சிரிக்க ஆரம்பித்தார்.

'அதற்கு இப்படியெல்லாம் பதைபதைப்பு அடையணுமா கங்காதரன்? குழந்தைகள்தானே! அவர்களுக்கு சில நேரங்களில் காய்ச்சல் வரத்தான் செய்யும். பிறகு... குழந்தைக்கு எந்தவொரு கஷ்டமும் வராது. சொல்றது நான்தானே? ஒரு கஷ்டமும் வராது... பிறகு...வண்டியில் போவதற்கு இன்னும் தேவையான அளவிற்கு நேரம் இருக்கிறது. அதற்கு முன்பு... கங்காதரன், நீங்க இன்னொரு வேலையையும் செய்ய வேண்டியதிருக்கு. அதைக் கூறி ஒப்படைப்பதற்குத்தான் நான் இவ்வளவு நேரம் இங்கு உங்களை எதிர்பார்த்துக் கொண்டு... க்ளப்பில் மிகவும் முக்கியமான ஒரு மீட்டிங் இருக்கிறது. எனினும், நான்... இல்லை... அதிக தூரமொண்ணும் இல்ல. நகரத்தில்தான். கங்காதரன், ஒரு முறை நீங்கள் அங்கே போயிருக்குறீங்க. கோவிலுக்குப் பக்கத்துல இருக்குற அந்த பழைய வீட்டில் தனியாளாக வசித்துக் கொண்டிருக்கும் அந்த வயசான ஆள் ஞாபகத்துல இருக்குறார்ல? அந்தக் காலத்தில் என்னென்னவோ நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருந்த மனிதர் அவர். ஆனால், இப்போது எந்தவொரு ஆளுடனும் உறவே இல்லாமல்... எங்களுடைய க்ளப்பில் கூட உறுப்பினராக இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மிகவும் கறாரான ஒரு மனிதர்! அவர் சமீபத்தில் இங்கே வாங்கிய வாஷிங் மெஷின் கேடாகி விட்டது. கடந்த இரண்டு நாட்களாக அவர் அடிக்கொருதரம் அழைத்துக் கொண்டே இருக்கிறார். வேறு யாராவது இருந்தால்... ஆனால், இந்த ஆளை வெறுப்படைய வைக்க முடியல. இப்போது மேல் மட்டத்தில் மிகவும் செல்வாக்கு உள்ள மனிதர். பெரிய பிடிவாத குணம் கொண்டவரும் கூட. கங்காதரன், அதனால்தான் நான் உங்களுக்காக காத்துக் கொண்டு நின்றிருந்தேன். கங்காதரன், நீங்க அங்கே போய்... ஸ்டேஷனுக்குப் போகும் வழியில்தானே! அதிகபட்சம் அரை மணி நேரம் வேலை வரும். சில நேரங்களில் அதுவும் கூட தேவைப்படாது. அவருக்கு வெறுமனே கூட தோன்றியிருக்கலாம். ஆள் அப்படிப்பட்டவர்தானே? நான் அவரிடம் நேரம் கூறியிருப்பது...'

முற்றிலும் நம்ப முடியாத ஏதோ ஒன்றை கேட்டுக் கொண்டு நின்றிருப்பதைப் போல கங்காதரன் அவை அனைத்தையும் கேட்டான்.

அவன் பதைபதைப்புடன் கூறினான்.

'ஆனால், எனக்கு...'

அப்போது மேனேஜர் அறைக்குள்ளிருந்து வெளியேறி விட்டிருந்தார். வெளியே தன்னுடைய கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு அவர் வேகமாக நடந்தபோது, கங்காதரனும் அவருக்குப் பின்னால் இருந்தான். பரிதாபமான குரலில் கங்காதரன் அவரிடம் என்னென்னவோ கூறினான்.

காரின் கதவைத் திறந்து ஒரு காலை உள்ளே வைத்து விட்டு, ஒரு இரண்டாவது சிந்தனை என்பதைப் போல மேனேஜர் கங்காதரனிடம் கூறினார்:

'பாருங்க. இது மிகவும் கவனமாக செய்ய வேண்டிய ஒரு காரியம். அந்த மனிதருக்கு அதிருப்தி உண்டாவது மாதிரியான சூழ்நிலையை உண்டாக்கி விடாதீர்கள். வேலையைச் சீக்கிரமாக முடித்து விட்டால், நீங்கள் கடைசி வண்டியில் வீட்டிற்குப் போகலாம். இல்லாவிட்டால், அதை முடிச்சிட்டு மட்டுமே... புரியுதுல்ல? பிறகு... வேலை முடிந்து விட்டால், க்ளப்பிற்கு ஃபோன் போட்டு, என்னிடம்...'

மழைக் காலத்தின் ஆரம்பத்தில் சற்று முன்பே வந்து சேர்ந்த மழை அப்போது முயற்சித்துக் கொண்டிருந்தாலும், எந்த நேரத்திலும் மீண்டும் அது பெய்யலாம் என்ற நிலையில் இருந்தது ஆகாயம்.

கங்காதரன் மேனேஜரின் கார் சென்ற பாதையையே பார்த்தவாறு சாலையிலேயே நின்று கொண்டிருந்தான். பிறகு அவன் உள்ளே சென்று 'டூல் கிட்'டை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அவன் அப்போது நடந்து கொண்டது ஒரு கனவில் என்பதைப் போல இருந்தது.

சாலை வளைவுகளோ திருப்பங்களோ எதுவுமில்லாமல் நீண்ட தூரம் நேராக செல்லக் கூடியதாக இருந்தது.

வானத்தின் விளிம்பில் ஒரு கார் பார்வையிலிருந்து மறைந்து கொண்டிருந்தது. அது மேனேஜரின் காராகத்தான் இருக்கும் என்று கங்காதரன் நினைத்தான். அந்த கார் சென்ற பாதையையே பார்த்துக் கொண்டிருந்தான் கங்காதரன்.

கோவிலுக்குப் பக்கத்திலிருக்கும் பழைய, பெரிய வீட்டிற்குச் செல்ல வேண்டியதும் அதே வழியில்தான்...

'ஒரு ஆட்டோ ரிக்‌ஷாவாவது வந்தால், நன்றாக இருக்கும்!' என்று கங்காதரன் மனதிற்குள் நினைத்தான். ஆனால், கண்ணில் தெரியக் கூடிய தூரம் வரை ஆட்டோ ரிக்‌ஷா இல்லை.

பிறகு கங்காதரன் வேகமாக நடந்தான்.

அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்- அப்போது மழை இல்லை.


பேருந்து நிறுத்தத்தின் மூலையில் கங்காதரனுக்கு ஆட்டோ கிடைத்தது.. அங்கிருந்து அதிக தூரம் போக வேண்டியதிருக்காது என்றாலும், அந்த அளவிற்காவது நேரத்தை மிச்சப்படுத்தலாமே என்று கருதி, அவன் ஆட்டோவில் ஏறினான். ஆனால் ஏறி முடித்த சில நிமிடங்களிலேயே வண்டிக்கு வேகம் போதாது என்று அவனுக்குத் தோன்றியது. அதனால் அதிகமான வேகத்தில் வண்டியைச் செலுத்தும்படி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை அவன் கூறினான். முதலில் அதை கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லையென்றாலும், இறுதியில் அந்த ஆள் வெறுப்புடன் கேட்டான்:

'ஏன்?'

அதைக் கேட்டு கங்காதரன் அதிர்ச்சியடைந்தாலும், எதுவும் கூறவில்லை. அப்போது ஓட்டுநர் மீண்டும் கூறினான்:

'ஆட்டோவின் வேகத்திற்கு ஒரு வரைமுறை இல்லையா?'

வாஷிங்மெஷினுக்கு என்ன கேடு இருக்கும், அதைச் சரி செய்வதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்ற கணக்குப் போடல்களில் இருந்தான் கங்காதரன். அதனால் அவன் அதைக் காதில் வாங்கவில்லை.

ஓட்டுநர் மீண்டும் கூறினான்.

'உங்களுடைய இடம் வந்துருச்சு...'

சாயங்காலம் ஆவதற்கு இன்னும் நேரமிருந்தாலும், இருட்டு பரவ ஆரம்பித்திருந்தது. முன்பு பெய்த மழையின் ஈரத்தைக் கொண்டிருந்த வானம் நன்கு கறுத்து காணப்பட்டது. உயரமான மரங்கள் நின்றிருந்த நிலப் பகுதியும், பழமையாகி சிதிலமடைய ஆரம்பித்திருந்த பெரிய கட்டிடமும், பயமுறுத்தக் கூடிய ஒரு காட்சியாக அவனுக்கு அப்போது தோன்றியது. நகரத்திற்கு நடுவில் இப்படிப்பட்ட ஒரு வீடா என்று அவன் ஆச்சரியத்துடன் நினைக்கவும் செய்தான். வீட்டில் வெளிச்சம் இல்லை. அங்கு ஆட்கள் வசிப்பதற்கான அறிகுறியும் இல்லை. அதனால் சற்று சந்தேகத்துடன்தான் கங்காதரன் வாசலிலே கால் வைத்து, அழைப்பு மணியை அழுத்தினான்.

மணியின் சத்தம் ஒலித்து முடிந்தவுடன், உள்ளேயிருந்த அறையிலும் வாசலிலும் வெளிச்சம் பரவ, வயதான ஒரு மனிதர் கதவைத் திறந்து வெளியே வந்தார்.

வெள்ளை நிற, கழுத்து இல்லாத சட்டையையும் பேன்ட்டையும் அணிந்திருந்த அவர் திடகாத்திரமான தோற்றத்துடன் இருந்தார்.

தான் யார் என்பதையும், எதற்காக அங்கு வந்திருக்கிறோம் என்பதையும் விளக்கிக் கூறியபோது, கங்காதரனின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு இருந்து விட்டு அவர் சொன்னார்:

'உங்களுடைய அடையாள அட்டை...?'

அடையாள அட்டையைக் காட்டியபோது, மனதிலிருந்து பழைய ஒரு நினைவைத் தேடி எடுத்தவாறு அவர் சொன்னார்:

'நீங்கள் இதற்கு முன்பு இங்கே வந்திருக்கீங்க.'

கங்காதரனின் வார்த்தைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவர் சொன்னார்:

'வாங்க.'

பெரிய மேற்கூரைகளைக் கொண்ட விசாலமான அறைகள்... உயரமான கதவுகள்... தரையில் கால ஓட்டத்தின் காரணமாக ஓரங்கள் ஆங்காங்கே விலக ஆரம்பித்திருந்த தரையோடுகள்... மிகவும் பழமையான நாற்காலிகள்...

வீடு முழுமையான பேரமைதியில் இருந்தது.

வாஷிங்மெஷினின் மூடிகளைத் திறந்து பார்த்துவிட்டு, ஒரு நிமிடம் அவன் திகைப்படைந்து நின்று விட்டான்.

கங்காதரனின் அசைவுகளை மிகவும் கூர்ந்து கவனித்தாறு அவனுக்கு மிகவும் அருகில் வாஷிங்மெஷினின் உரிமையாளரான இல்லத்துச் சொந்தக்காரரும் நின்று கொண்டிருந்தார்.

அவர் கேட்டார்:

'என்ன?'

ஒரு நிமிட நேர அமைதிக்குப் பிறகு கங்காதரன் மெதுவான குரலில் கூறினான்:

'இது முழுவதையும் எலிகள் தாறுமாறாக ஆக்கி விட்டிருக்கு. அவை இதற்குள் கூடு கட்டியிருக்குன்னு தோணுது.'

வீட்டின் உரிமையாளர் அப்போது கோபத்துடன் கூறினார்:

'என்ன? எலிகள் தாறுமாறாக ஆக்கி விட்டிருக்குதா? அதற்கு... இங்கே எலிகள் இல்லையே!'

ஆனால், அவர் கூறி முடிப்பதற்கு முன்பு, இரண்டு சிறிய எலிகள் வாஷிங்மெஷினுக்கு அடியிலிருந்து வெளியே வந்து, வீட்டிற்கு வெளியே ஓடின.

அவை சென்ற வழியையே பார்த்துக் கொண்டிருந்த வீட்டின் உரிமையாளர் ஆச்சரியத்துடன் நின்று கொண்டிருந்தார்.

'எனக்கு புரியல... எங்கிருந்து இவ்வளவு வேகமாக இவை...'

கங்காதரன் எதுவும் கூறவில்லை. முறிந்து கிடந்த வயர்களை ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாகச் சேர்த்து இணைத்து வைக்கும் முயற்சியில் அவன் ஈடுபட்டிருந்தான். அவன் கொஞ்சம் செய்து முடிக்கவும் செய்தான். ஆனால், ஒரு கட்டத்தில் அவன் வேலையை நிறுத்தினான். அங்கு நிலவிக் கொண்டிருந்த மங்கலான வெளிச்சத்தில் அதற்கு மேல் செய்வதற்கு அவனால் முடியவில்லை.

கங்காதரன் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வெறுப்புடன் கூறினான்:

'எதையும் பார்க்க முடியலை...'

வீட்டின் உரிமையாளர் எதுவும் கூறாமல் நின்றிருந்ததும், கங்காரன் கேட்டான்:

'இங்கு ஸ்டெப்பப் வைக்கலையா? இந்த வோல்ட்டேஜில்... இனி.. இதை சரியாக்கினால் கூட, சோதித்துப் பார்க்கவும் முடியாது...'

வீட்டின் உரிமையாளர் திடீரென்று கோபத்துடன் கூறினார்:

'இல்லை... இங்கு ஸ்டெப்பப் எதுவும் வாங்கி வைக்கல. அதற்கு தேவைப்படும் பணமும் என்கிட்ட இல்ல.'

அவருடைய குரல் மிகவும் பெரிதாக இருந்தது. அதைக் கேட்டு கங்காதரன் அதிர்ச்சியடைந்து விட்டான்.

அவர் அப்போது கோபத்துடன் மீண்டும் கூறினார்:

'வோல்ட்டேஜிக்குப் பதிலாக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் இல்லையா? இல்லை... வெறுமனே தந்தாலும், நான் அதை வைக்க மாட்டேன். எனக்கு அது தேவையில்லை. பார்க்குறேன்... எவ்வளவு காலம் இப்படி வோல்ட்டேஜ் இல்லாமல்...'

அவர் திடீரென்று கங்காதரனின் முகத்தை நோக்கி விரலை நீட்டியவாறு உரத்த குரலில் கேட்டார்:

'இந்த சாயங்கால வேளையில் என் வீட்டிற்கு வரச் சொல்லி உங்களிடம் யார் சொன்னது? உங்களுக்கு பகல்ல நேரம் கிடைக்கலையா? உங்களோட மேனேஜர்கிட்ட சொல்ல ஆரம்பிச்சு, இரண்டு நாட்களாச்சு. அப்போதெல்லாம் ஆளை அனுப்பி வைக்கிறேன்... அனுப்பி வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. கடைசியாக, இந்த சாயங்கால வேளையில... இல்லை... இல்லை... நான் இதை எந்தச் சமயத்திலும்...'

அவர் கோபத்துடன் கூறிக் கொண்டிருந்தார். பொறுப்புணர்ச்சி இல்லாத மின்சார வாரியத்தைப் பற்றி, அரசாங்கத்தைப் பற்றி, வர்த்தகர்களைப் பற்றி... இவ்வாறு...

ஆனால், திடீரென்று அவருடைய குரல் புகை வண்டியின் விஷில் சத்தத்தில் கரைந்து போய் விட்டது.

புகைவண்டி தண்டவாளத்திற்கு அருகில் இருந்தது வீடு. ஆனால் வண்டியின் விஷில் சத்தம் மட்டுமல்ல- அதன் பலமான ஓசைகள் கூட அங்கு நீண்ட நேரம் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

கங்காதரன் அமைதியாக நின்றிருந்தான்.

கடிகாரத்தைப் பார்த்ததும், அவனுடைய முகம் வெளிறிப் போய் விட்டது.

மிகவும் மெதுவாக, மிகவும் சிரமப்பட்டவாறு அவன் கேட்டான்:

'அது வடக்குப் பக்கம் போகும் பாஸஞ்சர்தானே?'

கங்காதரனிடம் உண்டான மாற்றம் வீட்டின் உரிமையாளரை பயமுறுத்தியது.

அவர் கூறினார்:

'ஆமாம்.. அது வடக்குப் பக்கம் போகும் பாஸஞ்சர்தான்...'

கங்காதரன் எதுவும் கூறாமல் நின்றதும், வீட்டின் உரிமையாளர் கேட்டார்:

'என்ன?... என்ன விஷயம்?'


கங்காதரன் எதுவும் கூறாமல் நின்றதும், வீட்டின் உரிமையாளர் கூறினார்:

'சொல்லுங்க... என்ன விஷயம்?'

இந்த முறை அவருடைய குரல் மிகவும் மென்மையாக இருந்தது. பரிதாப உணர்வு கலந்ததாக இருந்தது.

வேதனையுடனும், பயத்துடனும் கங்காதரன் நின்றிருந்தான். அவன் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தான். தொடர்ந்து அவன் கூற ஆரம்பித்தான். ஆனால், எங்கிருந்து ஆரம்பிப்பது, எதையெதையெல்லாம் கூற வேண்டியது, எங்கு முடிக்க வேண்டியது என்பதைப் பற்றியெல்லாம் அவனுக்கு எந்தவொரு வடிவமும் இல்லை. வார்த்தைகள் எப்படியோ வெளியே வந்து விழுந்தன. சில நேரங்களில் மிகவும் சத்தமாக... சில நேரங்களில் ஒரு ரகசியத்தைக் கூறுவதைப் போல மிகவும் மெதுவாக... ஒரு நீண்ட பெருமூச்சில் மூழ்கி தாழ்ந்தவாறு... கடந்த இரண்டு நாட்களாக மானந்தவாடியிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் இருப்பவர்களின் டெலிவிஷன்களைச் சீர் செய்து கொண்டு அலைந்து திரிந்தது, 'இன்னைக்கு வேண்டாம் அப்பா' என்று காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகன் அழுது கொண்டே கூறியது, ஒரு நாள் நூற்று நான்கு டிகிரி காய்ச்சல் அடித்தபோது, அவனையும் தூக்கிக் கொண்டு... ஒவ்வொரு டெலிவிஷனையும் சீர் செய்யும் போது மனதிற்குள் இருந்தவன் அவன்தானே! இப்போது இந்த வாஷிங் மெஷினைத் திறந்த போதும்... அவன் அழுது கொண்டு... எல்லாவற்றையும் சரி பண்ணி விட்டு, மானந்தவாடியிலிருந்து திரும்பி வரும்போது பேருந்து கேடாகி விட்டது... அதற்குப் பிறகு அடுத்த பேருந்திற்காகக் காத்திருக்காமல் ஓடி, லாரியில் ஏறி, இறுதியில் பேருந்து கிடைத்ததும்... வேண்டுமென்றால், அங்கேயே தங்கியிருந்து நாளைக்கு வந்திருக்கலாமே! அதைச் செய்யாமல் அதற்குப் பிறகும் தாமதமாக வந்ததைப் பற்றி மேனேஜர் கேட்டார். இந்த வேலையையும் முடித்து விட்டு, வீட்டிற்குச் சென்றால் போதும் என்று சொன்னார். குழந்தைக்கு பிரச்னை எதுவும் உண்டாகாது என்று சொன்னார். அவர் எப்படி அதை கூற முடியும்? யாராலாவது அப்படி கூற முடியுமா? எனினும், மேனேஜர் க்ளப்பிற்கு காரில் சென்றதும், அவன் நடந்தும் ஓடியும் இறுதியில் ஆட்டோ பிடித்து... எப்படியாவது வேலையை முடித்து, கடைசி வண்டிக்கு...

அவனுடைய வார்த்தைகள் இறுதியில் ஒரு தேம்பித் தேம்பி அழுவதில் முடிந்தன.

வீட்டின் உரிமையாளர் எதுவும் கூறாமல், கேட்டுக் கொண்டு நின்றிருக்க மட்டும் செய்தார்.

அவருடைய நெற்றி இடையில் அவ்வப்போது சுருங்கிக் கொண்டிருந்தது.

தொடர்ந்து தன்னுடைய பொருட்களை எடுத்து 'கிட்'டில் போட்டவாறு, கங்காதரன் கூறினான்:

'நாளை ஞாயிறு... நாளை மறுநாள் நான் வருவதாக இருந்தால், காலையிலேயே...'

வீட்டின் உரிமையாளர் மெதுவான குரலில் கேட்டார்:

'நீங்க எப்படி போவீங்க? இனி பேருந்து இருக்காதே!'

கங்காரன் கூறினான்:

'அது பரவாயில்ல... நான் எப்படியாவது போயிடுவேன். ஒரு வேளை வழியில் ஏதாவது லாரி கிடைச்சாலும் கிடைக்கலாம்.'

வீட்டின் உரிமையாளரால் அதை நம்ப முடியவில்லை. அவர் கேட்டார்:

'இந்த இரவு வேளையில் நீங்கள் முப்பது கிலோ மீட்டர் நடக்க போறீங்களா?'

கங்காதரன் எதுவும் கூறாமல் நிற்கவே, அவர் மெதுவான குரலில் சொன்னார்:

'உங்களுக்கு சம்மதம் என்றால், இன்று இரவு இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள். எனக்கு எந்தவொரு சிரமமுமில்லை. சந்தோஷம்தான். பிறகு... நாளை காலையில்...'

அப்போது கங்காதரன் கூறினான்:

'நான் போய் ஆகணும். முழு தூரத்தையும் ஒரு வேளை நடக்க வேண்டியது இருக்காது. இனி நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டானாலும்...'

கங்காதரன் வாசலுக்கு வந்து விட்டிருந்தான்.

வீட்டின் உரிமையாளர் அப்போது ஏதோ சிந்தித்தவாறு கூறினார்:

'உங்களுக்கு ட்ரைவிங் தெரியுமா?'

கங்காதரன் பதைபதைப்புடன் 'தெரியாது' என்று தலையை ஆட்டினான்.

வீட்டின் உரிமையாளர் கூறினார்:

'எனக்கு தெரியும். நான் நன்றாக ஓட்டவும் செய்வேன். என் கார், கன்டிஷன்லயும் இருக்கு. ஆனால், இரவு... வேண்டாம்... அது சரியாக இருக்காது. என் வயதையும் நினைக்க வேண்டுமல்லவா? எது எப்படியிருந்தாலும், ஒரு காரியம் செய்வோம். நீங்க நில்லுங்க. நான் வீட்டைப் பூட்டி விட்டு, ஒரு நிமிடத்துல வர்றேன்...'

கங்காரன் ஏதாவது கூற முயற்சிப்பதற்கு முன்பு, அவர் வீட்டிற்குள் சென்று திரும்பி வந்தார்.

'வாங்க... புகை வண்டி நிலையத்திற்கு முன்னால் இருக்கும் நிறுத்தத்தில் எனக்குத் தெரிந்த வாடகைக்கார் ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் யாரிடமாவது சொல்லி...'

கங்காரன் என்னவோ கூற முயற்சித்தபோது, உரத்த குரலில் அவர் தடுத்தார்:

'இது என்னுடைய பணம். என் சொந்த பணம்... கைக்கூலி வாங்கியதோ கொள்ளையடிச்சதோ எதுவுமில்ல...'

கங்காரனின் பதிலுக்குக் காத்து நின்று கொண்டிருக்காமல் அவர் கூறினார்:

'வாங்க...'

தூரத்தில் மழை வந்து கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கிடையே மவுனத்தின் சப்தம் மட்டுமே இருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.