
வீடு
உறூப்
தமிழில் : சுரா
கண்ணம்மா பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தெரு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அந்தப் பகுதிக்கும், அங்கு இருப்பவர்கள் இந்தப் பக்கமும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சிலர் தேம்பி அழுதார்கள். சிலர் அமைதியாக, கூர்மையான கண்களுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.
'எல்லாம் முடியட்டும்.'
'தெரு நாய்கள்...'
'என்னடீ சொன்னே?'- போலீஸ்காரன் லத்தியை ஓங்கினான்.
'இனியும் சாயங்காலம் முடிகிற நேரத்துல நீங்கள் என்னைத் தேடுவீங்க. அப்போ நாங்கள் இங்கே இருக்க மாட்டோம்'- ரங்காயியின் வார்த்தைகளைக் கேட்டபோது, கண்ணம்மா அவளையே வெறித்துப் பார்த்தாள். ஆனால், அசையவில்லை.
வயதானவர்கள் நரைத்த தாடியைச் சொறிந்து கொண்டே, மேலே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றிருந்தார்கள். மேலே இருந்து வந்து கொண்டிருந்த, குத்தக் கூடிய ஒளிக் கீற்றுகளை ஏற்று அவர்கள் தலையைக் குனிந்து கொண்டார்கள். நாற்றமெடுத்த போர்வைகளை தலைப்பக்கம் இழுத்து விட்டு, சுமைகளுடன் நடந்தார்கள்.
ஊன்றுகோலை நடைப்பாதையில் வேக வேகமாக ஊன்றி, ஒரு கிழவி ஆலமரத்திற்குக் கீழே இருந்த கணபதியின் சிலைக்கு முன்னால் போய் நின்று ஞாபகப் படுத்தினாள்: 'பிள்ளையாரே, நீ எல்லாத்தையும் பார்த்துட்டே!'
கணபதி விக்கிரகத்தில் யாரோ வைத்துப் பூசிய செந்தூரம் பிரகாசித்தது. இரத்தம் வழிந்து கொண்டிருக்கும் முகத்துடன் அந்த விக்கிரகம் முழுமையான வெயிலை ஏற்று, கோபத்துடன் நின்று கொண்டிருந்தது.
பெட்டிக் கடைகளை உடைத்து பிரித்தார்கள். குடிசைகளை பலவந்தமாக அகற்றினார்கள். பாத்திரங்கள், கிழிந்த துணிகள், நெளிந்த தகரப் பெட்டிகள், குடைகள், இணைப்புகள் விட்ட கிழிந்த பாய்கள், எண்ணெய்யும் அழுக்கும் சேர்ந்து படர்ந்து யானைப் பிண்டத்தைப் போல காணப்பட்ட தலையணைகள், ஆபாசமான மாத இதழ்கள், உடலுறவு சம்பந்தப்பட்ட படங்கள் - அனைத்தும் தெருவில் சிதறிக் கிடக்கின்றன.
அவற்றைப் பெருக்கி ஒன்று சேர்த்து நகராட்சியின் லாரியில் கொண்டு போய் போடுவதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்கள் நகரத்தை அழகாக்கிறார்கள்.
'சுற்றுலா பயணிகள் வருவார்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் வருவார்கள். மாநிலத்தின் மற்றும் மாநிலத்தை ஆண்டு கொண்டிருக்கும் அரசாங்கத்தின் பெருமையைக் காப்பாற்ற வேண்டும்'- இப்படி யாரோ கூறிக் கொண்டிருப்பதும் காதில் விழுந்தது. கண்ணம்மாவிற்கு அர்த்தம் புரியவில்லை. அவள் அப்போதும் கண்களை அகல திறந்து வைத்து பார்த்தவாறு, வளைவைப் போல உயர்ந்து நின்று கொண்டிருக்கும் ஆலமரத்தின் வேரின் மீது அமர்ந்திருந்தாள்.
காவிக் கரை பூசப்பட்டிருந்த கோவிலின் வெளிச் சுவரில் சாய்ந்து அவள் அமர்ந்திருந்தாள். மேலே இருந்த கல் விளக்கிலிருந்து வழிந்து கொண்டிருந்த எண்ணெய் பட்டு, அவளுடைய சிதறிய தலை முடிகள் ஒன்று சேர்ந்திருந்தன.
அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதாவது தெரிகிறதா? மெதுவாக கண்கள் மனதிற்குள் விழுந்து கிடந்தன.
'கண்ணம்மா!'
அந்த அழைப்பு தூரத்திலிருந்து கேட்பதைப் போல தோன்றியது. தன்னைத்தான் அழைக்கிறார்களா என்றும் தோன்றவில்லை.
'அடியே கண்ணம்மா.'
அவள் தலையை உயர்த்தி பார்த்தாள். அந்தப் பெரிய கண்கள் தங்கப்பனின் முகத்திலும் உடலிலும் பயணித்தன. அவனுடைய தோளில் சுமையும், கையில் பையும் இருந்தன.
அவளுடைய கண்கள் தாழ்ந்தன.
தங்கப்பன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். சாந்துப் பொட்டு அணிந்த, உயர்தர பலா மரத்தால் செய்யப்பட்ட சிலையைப் போல அவள் இருந்தாள். அவன் உற்சாகத்துடன் கேட்டான்:
'நீ வர்றியாடீ, கண்ணம்மா. அரண்மனை இடிஞ்சிருச்சே!'
தங்கப்பன் தன் கேள்வியை மீண்டும் கேட்டதும், அவள் தலையை உயர்த்தி பார்த்தாள். அப்போது அந்த முகம் பிள்ளையாரின் முகத்தைப் போல சிவந்திருந்தது. மனதில் ஒரு அதிர்ச்சி. எனினும், அவன் கேள்வியை மீண்டும் கேட்டான்:
'வர்றியாடீ?'
'த்தூ...'- ஒரு நீட்டித் துப்பல்தான் பதிலாக இருந்தது. ஒரு சிறிய குலுங்கல். அந்த நீட்டித் துப்பும் சத்தம் பல தடவைகள் கேட்டதுதான். எந்தச் சமயத்திலும் இந்த அளவிற்கு கோபத்துடன் இருந்தது இல்லை. தோளில் இருந்த சுமையைப் பிடித்து தூக்கியவாறு, அவன் நான்கடிகள் நடந்தான். மீண்டும் திரும்பி வந்தான். அவளுடைய முகத்தைப் பார்க்காமலே கூறினான்: 'நான் உனக்காக... தூரத்தில் ஒரு வீட்டை உண்டாக்குவேன்.'
கண்ணம்மா அதை காதில் வாங்கிக் கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை.
'வீட்டை உண்டாக்குவேன்.'
'அதில் உன்னுடைய பிணத்தை எடுடா. குள்ள எருமையே!'
அதற்குப் பிறகு நிற்கவில்லை. திரும்பிப் பார்த்தவாறு தங்கப்பன் நடந்து சென்றான்.
பிள்ளையார் கோவிலின் ஆலமரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருப்பதை மிகவும் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா. பிறகு சுற்றிலும் பார்த்தாள்.
கையில் கிடைத்த பொருட்களைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு, பெட்டிக் கடைக்காரர்கள் மைதானத்தின் எதிர் பக்கத்தை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.
தெரு காலியாகிக் கொண்டு வந்தது.
'உனக்கு இது வேணுமாடீ?'
கண்ணம்மா பார்த்தாள். ஒரு மயிலிறகு விசிறியைப் பிடித்தவாறு இளைஞனான போலீஸ்காரன் முன்னால் நின்று கொண்டிருக்கிறான். முதல் பார்வையிலேயே அவனுக்கு மீசை இல்லை என்பதைத் தெரிந்து கொண்டாள். எனினும், பெண் போலீஸ் அல்ல.
'வேணுமாடீ?'
கண்ணம்மா பதில் கூறவில்லை.
சிறு வயதில் சம்பாதித்து, அப்போதும் நெளிந்து போன தகரப் பெட்டிக்குள் கவனமாக பத்திரப்படுத்தி வைத்திருக்கும் மயிலிறகையைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். மயிலிறகு விசிறியை அவளுடைய மடியின் மீது போட்டு விட்டு நடந்து சென்று கொண்டே, அவன் சொன்னான்:
'உனக்கு இது தேவைதான்.'
கண்ணம்மா வாய் திறக்கவில்லை.
சுப்பய்யனின் பெட்டிக் கடையில் இப்படிப்பட்ட விசிறிகள் ஒரு நாள் தொங்கிக் கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தாள். ஏதோ சுல்த்தான்மார்கள் வீசுவதற்கு பயன்படுத்தக் கூடிய விசிறிகள் அவை என்று அவன் சத்தம் போட்டு கூறியதையும் அவள் கேட்டிருக்கிறாள்.
போலீஸ்காரன் பார்வையாலேயே அவளை ஒரு இறகால் வருடியவாறு கடந்து சென்றான்.
ஏராளமான நீல கண்கள் மடியில் இருக்கின்றன. அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மனதில் தோன்றியவை இரண்டு கண்கள்தாம். முருகச்சாமியின் தளர்ந்து போன கண்கள்...
மூச்சு விட முடியாத நிலை... எந்தச் சமயத்திலும் அழுதிராத அந்த கண்கள் இன்று நிறைந்து நின்றிருப்பதை அவள் பார்த்தாள்.
அவன் பிள்ளையார் கோவிலின் கருங்கல் படியில் தலையை வைத்து மோதுவதைப் பார்த்தாள். தடுக்கவில்லை. தலையை உயர்த்தியபோது, பிள்ளையாரின் குங்குமம் அணிந்த முகத்தைப் போலவே அவனுடைய முகமும் இரத்தம் படிந்து சிவந்திருந்தது. தாடியில் இங்குமங்குமாக காணப்பட்ட சிறிய உரோமங்களுக்கு மத்தியில் இரத்தம் படிந்து வழிந்து கொண்டிருந்தது.
அருகில் சென்று பார்த்துவிட்டு அவன் எதுவும் பேசாமல் நின்றிருந்தான். அவள் சுட்டு விரலால் அந்த இரத்தத்தைத் தொட்டு தன்னுடைய நெற்றியில் பூசினாள்.
எதுவும் கேட்கவில்லை.
எதுவும் கூறவுமில்லை.
சிறிது நேரம் கழித்து முருகச்சாமி சுமையை எடுத்து தோளில் வைத்தான். பிறகு... மெதுவாக கேட்டான்:
'வர்றியா புள்ளை?'
'எங்கே?'
முருகச்சாமி பதில் கூறவில்லை.
'நட... நான் வர்றேன்.'
அவன் கம்பி வளையமிட்ட பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நடந்தான். மெதுவாக... மெதுவாக... கோட்டைச் சுவரைத் தாண்டினான்.
அப்போது, ஒரு சிறகை இழந்த பெண் பருந்தை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.
பிள்ளையார் கோவிலின் அருகில்தான் அது வந்து விழுந்தது. கண்ணம்மா அதை மடியில் எடுத்து வைத்து தடவினாள். முருகச்சாமி அதற்கு இட்லித் துண்டுகளையும் உடைக்கப்பட்ட எள்ளுருண்டையையும் கொடுத்தான். அது எதையும் தின்னவில்லை. ஒரு நாள் காலையில் அது இறந்து விட்டது.
கண்ணம்மா கடற்கரைக்குக் கொண்டு சென்று அதை மணலுக்குள் புதைத்து மூடினாள். புட்டியில் நீர் கொண்டு வந்து, குழி பறித்த இடத்தில் ஊற்றினாள். பிறகு சூரியனைப் பார்த்தாள்: 'நல்ல வழியே போ.'
முருகச்சாமியின் நடை அந்த பெண் பருந்தை ஞாபகப்படுத்துகிறது. வெளியே வந்த அழுகையைத் தொண்டையில் தடுத்து நிறுத்தினாள்.
முருகச்சாமியைப் பார்த்த காலமும் அப்போது ஞாபகத்தில் வருகிறது. பிள்ளையார் கோவிலுக்கு அருகில்தான் முதல் தடவையாக பார்த்தாள். யாரிடமும் எதுவும் கூறுவதில்லை. பொழுது புலர்வதற்கு முன்பே குழாய்க்கு அருகில் நின்று கொண்டு குளிப்பான். சுமையில் இருந்து திருநீறை எடுத்து பூசுவான். பிள்ளையாரை வணங்குவான். பிறகு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு எங்கேயோ செல்வான்.
அப்படி ஒரு ஆள் இருக்கிறான் என்று யாருமே பொருட்படுத்தவில்லை. கடந்து செல்லும்போது, கண்ணம்மா அழைப்பாள்.
'முருகண்ணா!'
வெற்றிலைக் கறை படிந்த பற்களைக் காட்டியவாறு முருகச்சாமி சற்று சிரிப்பான்... போவான்.
திரும்பவும் வருவது எப்போது என்று நிச்சயமில்லை. ரங்காயியும், எச்சுமியும், கமலமும், மீனாச்சியும் முருகண்ணனை மதித்தார்கள்.
ஒரு மாலை நேரத்தில் எல்லோரும் திரும்பி வந்து, மைதானத்தில் மூன்று கற்களை வைத்து நெருப்பு மூட்டினார்கள். அரிசி கொதித்தது. கருவாடு சுடும் வாசனை. அப்போதுதான் ஆரவாரம் ஆரம்பித்தது. ரங்காயியின் பேன் எடுக்கும் சீப்பு காணாமல் போய் விட்டது. அவள் சாபமிட்டாள்.... வாய்க்கு வந்ததையெல்லாம் கூற ஆரம்பித்தாள். கமலமும் மீனாச்சியும் அவளைப் பார்த்து கண்டபடி பேசினார்கள். 'கோட்டைச் சுவருக்குப் பக்கத்துல இருக்குற உன்னோட நொண்டிக் காலன் இருக்கிறானே, அவன்கிட்ட கேளு.'
'உன் கதை தெரியும்...'- பிறகு அவளுடைய கதையைச் சற்று விளக்கி கூறினாள். பல இரவு வேளை கதைகள் கண்டபடி பேசியதில் வெளியே வந்தன.
மக்கள் சிரித்து, கைகளைத் தட்டி உற்சாகப் படுத்தினார்கள்.
தான் மைதானத்தின் அரைச் சுவரின் மீது ஏறி கால்களை இணைத்து தொங்க விட்டிருக்கிறோம் என்பதை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.
திடீரென்று இருட்டுக்குள்ளிருந்து முருகச்சாமி கடந்து வந்தான். 'இந்தா, புள்ளே... சத்தம் போட்டது போதும்'- ஒரு சீப்பை எடுத்து ரங்காயியிடம் நீட்டினான். ரங்காயி எதுவும் பேசாமல் வாங்கியதும், முருகச்சாமி இருட்டிற்குள் திரும்பிச் சென்றான்.
ஆரவாரம் நின்றது. எல்லோரும் தெருவின் மூலைகளை நோக்கி தலையை நீட்டினார்கள். அப்போது கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள். சாமிக் கடையிலிருந்து வாங்கிய இரண்டு பீடிகள் கையில் இருக்கின்றன. சாப்பாடும் குடியும் முடிந்த பிறகு, தலை முடியை நெற்றியில் விழும்படி சீவி முடித்த பிறகு, உதடுகள் சிவக்க சற்று வெற்றிலை போட வேண்டும் என்று நினைத்தாள். பிறகு, வாயால் பாட்டை முணுமுணுத்துக் கொண்டே சிறிது நேரம் அமர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், ரங்காயியின் சீப்புச் சத்தம் எல்லா சுவாரசியங்களையும் நாசமாக்கியது.
வெற்றிலையைக் கடித்து மென்று கொண்டே அவள் நினைத்தாள்-
படுத்து வசிப்பதற்கு வீடு இருந்தால், இப்படியெல்லாம் எதுவுமே நடக்காது என்று.
வீட்டில் வசித்த மங்கலான ஞாபகம் மட்டுமே இருக்கிறது. அந்த வீட்டிற்கு மினுமினுப்பான ஒரு தூண் இருந்தது. அதைப் பிடித்து வட்டம் போட்டு சுற்றி விளையாடுவதற்கு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அவளுடைய தாய் மூங்கிலால் ஆன பாயால் மறைவு உண்டாக்கி, சமையலறையில் அரிசியை வேக வைத்துக் கொண்டிருந்தபோது, அவள் தூணில் வட்டம் சுற்றிக் கொண்டிருந்தாள். மீனாச்சியம்மாவைப் பற்றிய ஒரு பாட்டும் இருந்தது. அதெல்லாம் மறந்து போய் விட்டது.
அப்போதுதான் அவளுடைய தந்தை வீட்டிற்குள் வந்தார். கள்ளின் வாசனை முன்பே வரும். பிறகு ஒரே ஆரவாரம்தான்... அடிக்கும் உதைக்கும் பயந்து போய் கயிற்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்து படுத்திருப்பாள். சில நேரங்களில் அதே நிலையில் படுத்து உறங்கியும் போவாள்.
எனினும், வீடென்ற ஒன்று இருந்தபோது எவ்வளவு சந்தோஷமாக இருந்தது! ஓட்டை விழுந்த, வைக்கோல் வேய்ந்த வீட்டின் வழியாக வெயில் தரையில் வந்து விழும். ஒரு காலை தூக்கி அந்தப் புள்ளியை மிதிக்கும்போது, வெயில் கால் மீது வந்து விழும்.
எல்லாம் போய் விட்டன.
அவளுடைய அன்னை இறந்து விட்டாள்... தந்தை காணாமல் போய் விட்டார்.
பிறகு... நடைதான்.
கண்ணம்மா சுற்றிலும் பார்த்தாள். வெறுமை... பெட்டிகள், குடிசைகள் அனைத்தும் போய் விட்டன.
மைதானத்தில் இடுப்பு சுருங்கி, வயிறு வீங்கிய நிலையில் உடு துணி இல்லாமல் சில குழந்தைகள் அலைந்து கொண்டிருந்தன.
கீழே பார்த்தபோது, மயிலிறகின் கண்கள், கண்களை விழித்தவாறு மடியில் கிடந்தன. அவை வெறித்துப் பார்த்தன.
முருகச்சாமியின் கண்கள் மனதிற்குள் தெளிவாக தோன்றின. அவை எப்போது கவனத்தில் வந்தன என்பதை நினைத்துப் பார்த்தாள். ஓ... அப்படியொரு நாள் எதையும் நினைவுபடுத்திப் பார்க்க முடியவில்லை.
ஒரு நாள் சாயங்கால வேளையில் நீளமான ஒரு மரக் கொம்புடன் அந்த மனிதன் வந்தான். அதை பிள்ளையார் கோவிலின் மறைவில் சாய்த்து வைக்கும்போது, கண்ணம்மா கேட்டாள்:
'இது என்ன முருகண்ணா?'
பதில் இல்லை.
திரும்பிப் பார்த்து சற்று சிரித்தான். கையில் தொங்க விடப்பட்டிருந்த கம்பி போட்ட பாத்திரத்திலிருந்து லட்டு ஒன்றை எடுத்து அவளிடம் கொடுத்தான். அதன் ஒரு பகுதியை யாரோ பிய்த்து எடுத்திருந்தார்கள். அவளும் ரங்காயியும் சேர்ந்து பங்கு வைத்து தின்றார்கள்.
பிறகு... அணிந்திருந்த ஆடையில் கையைத் துடைத்துக் கொண்டே கண்ணம்மா கேட்டாள்: 'விறகா?'
முருகச்சாமிக்கு கோபம் வந்து விட்டது. அதை தொடக் கூடாது என்று கோபத்துடன் கூறவும் செய்தான்.
கண்ணம்மாவிற்கும் ரங்காயிக்கும் அர்த்தம் புரியவில்லை. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ரங்காயி மெதுவான குரலில் சொன்னாள்: 'முருகண்ணனுக்கு கோபம்! பேசாதே...'
மறுநாளும் இன்னொரு மரக் கொம்பினை இழுத்துக் கொண்டு வந்தான். அதற்குப் பிறகு இரண்டு நாட்களுக்கு முருகண்ணனைப் பார்க்க முடியவில்லை. மூன்றாவது நாள் ஒரு கட்டு மரக் கொம்புகளுடன் வந்தான். பனை மரத்தின் பட்டைகளுடன் வரும் கோவில் யானையைப் பற்றி கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.
மரக் கொம்புகளை அடுக்கி, கயிறுகளைக் கொண்டு கட்டி, பத்திரப்படுத்தி வைத்து விட்டு, எல்லா பெண்களிடமும் கூறுவதைப் போல அவன் சொன்னான்:
'தொடக் கூடாது.'
முருகண்ணனுக்குச் சொந்தமானவை அவை என்பதால், விறகு தேடி அலைந்து கொண்டிருந்தபோது கூட, அதை யாரும் தொடவில்லை.
பிறகு... கிழிந்த தார்ப்பாய் துண்டுகள், சேதமடைந்த நிலையில் இருந்த மரப் பெட்டி, பனையோலைகள் - இப்படி பலவற்றையும் சேர்த்துக் கொண்டு வந்து வைத்தான்.
தங்கப்பன் அவளிடம் சொன்னான்: 'முருகச்சாமிக்கு பைத்தியம் பிடிச்சிருச்சு.'
'யார் சொன்னது?'
'கண்ட கண்ட இடங்களிலிருந்தெல்லாம், கிழிந்து போன பொருட்களைக் கொண்டு வந்து சேர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறான்.'
கண்ணம்மா எதுவும் கூறவில்லை.
அப்போது தங்கப்பன் அருகில் வந்து அமர்ந்தான். அவள் பார்த்ததாக காட்டிக் கொள்ளவில்லை.
பிள்ளையார் கோவிலின் மீது பரவி நின்று கொண்டிருந்த ஆல மரத்தின் மேற்பகுதி சலசலத்துக் கொண்டிருந்தது.
இலைகள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன.
'நல்ல காற்று!'- தங்கப்பன் கூறினான்.
'ம்...' - அவளும் முணுமுணுத்தாள்.
தங்கப்பன் மேலும் சிறிது அருகில் நகர்ந்து உட்கார்ந்தான். அவனுடைய விரிந்த நெஞ்சுப் பகுதியையும், சதைப் பிடிப்பான கைகளையும் தான் ஓரக் கண்களால் பார்த்ததை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள். அதற்குப் பிறகும், சிலையைப் போலவே அமர்ந்திருந்தாள்.
இலைகளே தெரியாமல் பூத்து நின்று கொண்டிருக்கும் கோட்டை மைதானத்திலிருக்கும் அலரியைப் போல மேற்கு திசை வானம் இருந்தது. கண்ணம்மா அந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். கீழே விழுந்து கிடந்த சிவப்பு நிற மலர்கள் இருளோடு கரைந்து விட்டிருந்தன.
'கண்ணம்மா.'
'ம்...?'
பிறகும்... பேரமைதி.
மேற்கு திசை வானத்திலிருந்து அதற்குப் பிறகும் பூக்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன.
'கண்ணம்மா...'
'ம்...?'
'உன் ஊர் எது?'
அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
'நீ சிரிக்கிறப்போ...'- அவன் முழுமை செய்வதற்கு தயங்கிக் கொண்டு நின்றான்.
'சொல்லு...'
'பிள்ளையார் கோவில்ல இருக்குற கல் விளக்கை எரிய வச்சதைப் போல...'
அவளுடைய சிரிப்பே மலர்ந்து இருந்தது.
'கண்ணம்மா... நீ என் கூட வசிப்பாயா?'
தங்கப்பனின் முகத்தைப் பார்க்காமலிருக்க முடியவில்லை. ஒரு நிமிடம் கழித்து கேட்டாள் : 'வீடு இருக்குதா?'
'இல்ல...'
சிரிப்பு வந்து விட்டது. மைதானத்தின் மரங்களின் கீழ்ப் பகுதிக்கும், கடைத் திண்ணைக்கும், கோவிலின் முன் பகுதிக்கும் அழைக்கிறான். இப்படி எவ்வளவோ ஆண்கள் அழைத்திருக்கிறார்கள்.
மேற்கு திசை வானத்தின் சிவப்பு மலர்கள் மேலும் மேலும் உதிர்ந்து விழுவதை கண்ணம்மா பார்த்தாள்.
'கண்ணம்மா!'
அவள் முனகவில்லை.
திரும்பவும் அழைத்தான். பிறகு கிழிந்த வெள்ளை நிற ரவிக்கைக்கு வெளியே தெரிந்த கறுத்த கழுத்தைச் சுற்றி, மெதுவாக தடவினான்.
அவள் அதிர்ச்சியடைந்து, வெறித்துப் பார்த்தாள்.
அவன் கையை எடுக்கவில்லை.
கண்ணம்மா கையை நீட்டி அவனுடைய முகத்தில் அடித்தாள்: 'நாயே! த்தூ...'
தங்கப்பன் கையை எடுத்து விட்டு, எழுந்து நின்றான்.
தான் நாவின் நூலை அவிழ்த்து விடுவதை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள்.
தங்கப்பன் சுற்றிலும் பார்த்துக் கொண்டே, இருட்டைப் பார்த்து சீட்டியடித்தான்.
அவன் போய் மறைந்ததும், குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.
'ஏன் புள்ளே, சிரிக்கிறே?'- என்று கேட்டவாறு முருகச்சாமி அங்கு வந்தான்.
தலையில் வைத்திருந்த சுமையை மரக்கொம்புகளுக்குக் கீழே இறக்கி வைத்து விட்டு, அவளுடைய முகத்தையே பார்த்தான்.
அப்போதும் சிரிப்பு நிற்கவில்லை.
'அந்த மாதிரி சிரிக்கக் கூடாது, புள்ளே.'
அதைக் கூறி விட்டு அவன் துணியை மாற்றி அணிந்து கொண்டு, மைதானத்திலிருந்த குழாய்க்கு அருகில் போய் அமர்ந்து குளிக்க ஆரம்பித்தான்.
வெளியே புறப்பட்டு வந்த சிரிப்பை அடக்கி நிறுத்துவதற்கு கண்ணம்மா படாத பாடு பட்டாள். இரவில் பிள்ளையார் கோவிலின் அரைச் சுவருடன் சேர்ந்து படுத்திருந்தபோது கூட, உதட்டில் சிரிப்பு வெளிப்பட்டது.
அந்தப் பக்கத்தில் யாரோ முணுமுணுக்கிறார்கள்.
யார்? காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு கேட்டாள். ரங்காயிதான் பேசிக் கொண்டிருந்தாள். யாருடன்? அது ஒரு கேட்ட குரலாக இருந்தது. போலீஸ்காரனின் குரலா? அதிர்ச்சியடைந்து விட்டாள். மெதுவாக எழுந்து எதிர் பக்கத்திற்குச் சென்றாள். முருகச்சாமி மூடி போர்த்திப் படுத்திருந்ததற்கு அருகில் போய் படுத்தாள். கறுப்பு நிற புடவையின் முந்தானையை இழுத்து முகத்தை மூடிக் கொண்டாள்.
ஆலமரத்தின் மேற்பகுதியிலிருந்து வந்த சலசலப்பு கேட்டுக் கொண்டிருந்தது. இழுத்துப் பிடித்து முத்தம் தரக் கூடிய சத்தத்துடன் ஒரு காற்று கடந்து சென்றது.
ரங்காயியின் சிரிப்புச் சத்தம் கேட்டது.
அசையாமல் படுத்திருந்தாள்.
வெறுப்பா? பயமா? இல்லாவிட்டால்.... வேதனையா? படுத்திருப்பதற்கோ எழுந்திருப்பதற்கோ முடியாத பருவம்... உள்ளங்கைகளை மார்புப் பகுதியில் வைத்து தேய்த்தாள். எப்போது தூங்கினோம் என்பதே தெரியவில்லை.
மறுநாள் முருகச்சாமி யாசிப்பதற்காகச் சென்றான். அவன் கோட்டைச் சுவருக்கு அருகில் என்னவோ செய்து கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தாள். மரக் கால்களை நட்டுக் கொண்டிருந்தான். மூன்று கால்கள்... ஒரு கால் சுவரேதான்... கால்களை நட்டு, மரக் கொம்புகளை இணைத்து வைத்து, ஆணி அடித்தான்.
அதை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சதைகள் பெரும்பாலும் அழுகிப் போய், எலும்புகள் உந்தித் தள்ளி நின்று கொண்டிருக்கும் ஒரு பிணம் மிதந்து செல்வதை ஒரு முறை பார்த்திருக்கிறாள். அது ஞாபகத்தில் வந்தது.
இதற்கிடையில் மேலேயும் சுற்றியும் கிழிந்த தார்ப்பாய் துண்டுகளையும், மூங்கில் துண்டுகளையும் வைத்து கட்டினான்.
'எலும்புகளெல்லாம் மூடி'- தன்னையும் அறியாமல் அவள் கூறி விட்டாள். தொடர்ந்து அவள் சிரித்தாள்.
'என்ன புள்ளே சிரிக்குறே?'
'சும்மா...'
கண்ணம்மா உட்பகுதியைச் சீராக்குவதற்கு உதவினாள். பாத்திரத்தை எடுத்துக் கொண்டு மைதானத்திற்கு நடந்து சென்று சாணத்தையும், மண்ணையும் கொண்டு வந்தாள். உள்ளே மெழுகி மினுமினுப்பாக்கி, பார்த்து விட்டு சிரித்தாள்.
'என்ன புள்ளே சிரிக்கிறே?'
'சும்மா...'
மரப் பெட்டிகளை உள்ளே கொண்டு வந்தான் முருகச்சாமி. அவள் தடுத்தாள்.
'நில்லு... தரை காயட்டும்.'
முருகச்சாமியும் அவளும் சிரித்தார்கள்.
வெயில் இருந்ததால், தரை சீக்கிரமே காய்ந்தது.
சாயங்காலம் மரப் பெட்டிகளை அவளே உள்ளே கொண்டு வந்து சேர்த்து வைத்தாள். மேலே கிழிந்த துணிகளை விரித்தாள். பிறகு கிழிய ஆரம்பித்திருந்த ஒரு சிவப்பு நிற புடவையை மடித்து விரித்தாள்.
'கட்டில்...'- அவள் சிரித்தாள்.
முருகச்சாமியும் தாடியைச் சொறிந்து கொண்டே சிரித்தான்.
இரவில் மைதானத்தில் அமர்ந்து சோற்றை அள்ளித் தின்றபோது அழைத்தாள்:
'முருகண்ணா.'
'புள்ளே?'
'நானும் வீட்ல வந்து இருக்கட்டுமா?'
'இருக்கணும், புள்ளே.'
அவள் சாப்பிட்டு முடித்து, சட்டிகளை அடுக்கி வைத்து விட்டு, குளித்து கூந்தல் உலர்வது வரை, மைதானத்தில் நடந்தாள். பிறகு சாமிக் கடைக்குச் சென்று பீடி வாங்கினாள். பாதியைப் பிய்த்து வாய்க்குள் போட்டு கடித்து மென்றாள்.
வெறுமனே சிரித்தாள்.
கடைகள் அடைக்கப்பட்டன. விளக்குகள் கண்களை மூடின. வாகனங்களின் போக்குவரத்து குறைந்து, ஆலமரத்திற்குக் கீழேயும் அலரி மரத்திற்கு அடியிலும் இருட்டு வந்து கூடாரங்கள் அமைத்தது. அந்த கூடாரங்களுக்குள்ளிருந்து குசுகுசுக்கல்கள்... அடக்கி வைக்கப்பட்ட சிரிப்புகள்.
அவள் குடிசைக்குள் தலையை நீட்டியபோது, முருகண்ணன் அங்கு இருக்கிறானா என்பதே தெரியவில்லை. இருட்டு...
'முருகண்ணா.'
'புள்ளே...'
அவள் அவனுடைய கையைப் பற்றி, பீடியைத் தந்தாள்: 'தின்னு...'
முருகச்சாமி சிரித்தான். அவளுடைய சிரிப்பை இருட்டில் முருகச்சாமி பார்க்கவில்லை.
அவள் கட்டிலில் அமர்ந்தாள். யாரும் பேசிக் கொள்ளவில்லை.
பிறகு... படுத்தார்கள்.
யாரும் பேசிக் கொள்ளவில்லை.
மறுநாள் காலையில் எழுந்து, கோட்டைச் சுவரின் மீது ஏறி கைகளில் முகத்தை வைத்துக் கொண்டு, கீழே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
சிவப்பு சூரியன் தூரத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. அவள் மைதானத்தின் பக்கம் கண்களை ஓட்டினாள். ஓரங்களில் அலரி மரங்கள், மெல்லிய காற்றில் மலர்களை உதிர்த்துக் கொண்டிருந்தன. காற்றும் நிறங்களும் சேர்ந்து பாட்டு பாடின.
ஓடி உள்ளே சென்றாள். முருகண்ணன் எழுந்து குளிப்பதற்காகச் சென்றிருந்தான். குடிசையைப் பெருக்கி சுத்தமாக்கினாள். விரிப்பை உதறி விரித்தாள். பிறகு தகரடப்பாவை எடுத்து கடைக்குச் சென்று ஒரு தேநீர் வாங்கி குடிசைக்குக் கொண்டு வந்து, மூடி வைத்தாள்.
அன்று சாயங்காலம் சாராயக் கடைக்கு அருகிலிருந்த ஒற்றையடிப்பாதையில் வைத்து பார்த்தபோது, தங்கப்பன் யாரிடம் என்று இல்லாமல் கூறினான்:
'கிழட்டு அரசன் அரண்மனை கட்டியிருக்கிறான். இளவரசி அங்கே வாழ போய் விட்டாள்.'
'த்தூ...'- நீட்டித் துப்பி தலையை வெட்டியவாறு நடந்த போது, மனதில் ஒரு யானை நடந்து கொண்டிருப்பதாக கண்ணம்மா நினைத்தாள்.
மறுநாள் மீனாச்சி அவளிடம் கூறினாள்:
'அதிர்ஷ்டக்காரி!'
பதில் கூறவில்லை.பெண்கள் சத்தம் போட்டு பேசிக் கொண்டிருந்தபோது, அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.
பிச்சை எடுப்பதற்காகச் சென்றபோது, ரங்காயி அவளுடைய காதில் முணுமுணுத்தாள்:
'முருகண்ணன் நல்லவன்டி.'
பதில் கூறவில்லை.
அதற்குப் பிறகு பெண்களும் ஆண்களும் மறந்து விட்டார்கள் என்பதை கண்ணம்மா நினைத்துப் பார்த்தாள். தங்கப்பன் வழியில் வைத்து பார்த்தான். சிரிக்க முயற்சிக்கும்போது, அவள் சீறுவாள்.
'த்தூ...'
அவன் வழியை மாற்றிக் கொண்டு செல்வான்.
அட்டைப் பெட்டிக்கு அடியிலிருந்து எதையோ தேடி எடுத்தபோது, ஒரு மயிலிறகு கண்ணைப் பார்த்தாள். முன்பு எப்போதோ சேரித்து வைத்தது. எடுத்து இப்படியும் அப்படியுமாக திருப்பித் திருப்பி பார்த்தபோது, சிரிப்பு வந்தது.
'என்ன புள்ளே?'- முருகண்ணன் கேட்டான்.
'மயிலிறகு குட்டி போடும்னு சொல்றாங்க.'
'அப்படி சொல்றதுண்டு.'
அதற்குப் பிறகு இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இரவில் படுத்திருந்தபோது, முருகண்ணனிடம் கேட்டாள்- வீடு மிகவும் உறுதியாக இருக்கிறதா என்று. அர்த்தம் புரியாமல் அவன், முகத்தையே பார்த்தான்.
'பிள்ளை தொட்டில் கட்டினால், ஒடிஞ்சிடுமா?'
'அப்போ, உனக்கு?'
'இல்ல... சும்மா கேட்டேன்.'
இரண்டு பேரும் சிரித்துக் கொண்டார்கள்.
எங்கெங்கிருந்தெல்லாமோ தான் சேகரித்துக் கொண்டு வந்து கட்டிலில் ஒட்டி வைத்த திரைப்படங்களின் சுவரொட்டிகளைப் பார்த்துக் கொண்டே அவள் படுத்திருந்தாள்.
மறுநாள் சாயங்காலம் முருகண்ணன் உறுதியான இரண்டு மரக்கொம்புகளைக் கொண்டு வந்தான். குடிசையில் ஓரத்தில் வைத்தான். எதற்கு என்று கேட்கவில்லை. வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.
அது நடந்து, ஒரு வாரம்தான் ஆகியிருக்கும். அப்போதுதான் எமன்கள் வடிவத்தில் வந்து எல்லாவற்றையும் பிடித்து இழுத்துப் போட்டு கீழே தள்ளியது...
உலகம் சுக்கு நூறாக தகர்ந்தது.
கண்ணம்மா சுற்றிலும் பார்த்தாள். எல்லோரும் போய் விட்டிருந்தார்கள். அவள் எழுந்து பிள்ளையார் கோவிலுக்கு, முன்னால் போய் நின்றாள். கருங்கல் படியில் மோதி, முருகச் சாமியின் நெற்றியில் இரத்தம்...
பிள்ளையாரையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
'உனக்கு எங்களை வேண்டாம். நாங்க போறோம்.'
சுமையை எடுத்து தோளில் தொங்க விட்டாள். முருகச்சாமி சென்ற வழியில் நடந்தாள்.
கோட்டைச் சுவரைக் கடந்தாள். பெரிய ஹோட்டலின் அருகில் சென்றாள். முருகண்ணன் ஓரத்தில் சாய்ந்து நின்றிருந்தான். சாயங்கால வானத்தைப் போல இருந்தது.
'வா புள்ளே, போகலாம்.'
'எங்கே?'
'எங்கேயாவது போய் வீடு உண்டாக்கணுமே!'
'நீயா?'
'ஆமா...
ஈரமான அவளுடைய கண்களில் சூரியன் உதித்தது.
வெளிநாடுகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு சந்தோஷமாக நடந்து செல்லக் கூடிய வகையில், அகலமும் சுத்தமும் உள்ள நகரத்தின் தெருவின் வழியாக நடந்து செல்லும்போது, அவள் மனதிற்குள் நினைத்தாள்: 'சுடுகாடு போல ஆயிடுச்சு...!'