Logo

திருட்டு நாய்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5982
Thiruttu Naai

திருட்டு நாய்

எம்.முகுந்தன்

தமிழில் : சுரா

த்மநாபனுக்கு வரும் 'சிங்ங' மாதத்தில் மூன்று வயது முடிகிறது. எனினும், அவன் தாய்ப் பால் குடிக்க வேண்டும். சோறு, கஞ்சி எதுவும் பத்மநாபனுக்குப் பிடிக்காது. பசிக்கும்போது தாய்ப்பால் கட்டாயம் கிடைக்க வேண்டும். கிடைக்காவிட்டால், கிடைக்கும் வரை அவன் அழுவான். அதுதான் பத்மநாபனின் குணம். அழ ஆரம்பித்து விட்டால், சிறிது கூட நிறுத்த மாட்டான்.

வாய் முழுவதையும் திறந்து, கண்களை இறுக அடைத்துக் கொண்டு அழுவான். அழ ஆரம்பித்த பிறகும், தான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டால், அவன் தன்னுடைய உத்தியைச் சற்று மாற்றுவான். பிறகு... தரையில் படுத்து கையையும் காலையும் தரையில் அடித்துக் கொண்டே அழுவான். ஆனால், அதே நிலையில் நீண்ட நேரம் அழுவதற்கு உடல் நலமில்லாத பத்மநாபனால் இயலாது. படிப்படியாக அந்த அழுகை பலவீனமாகி ஒரு நாய்க்குட்டியின் முனகலாக மாறும்.

பத்மநாபன் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமென்றாலும், தாய்ப் பால் குடித்துக் கொள்ளட்டும். தேவுவிற்கு அந்த விஷயத்தில் புகார் இல்லை. வாசுதேவன் ஐந்து வரை தாய்ப் பால் குடித்தான். ஆனால், மார்பில் பால் இல்லாவிட்டால் என்ன செய்வது? வாசுதேவனைப் பெற்றெடுக்கும்போது இருந்த உடல் நலம் எதுவும் இப்போது இல்லை. நீளமான கழுத்து, ஒட்டிப் போன கன்னங்கள், நாரைப் போன்று காட்சியளிக்கும் கைகள்... தேவு ஒவ்வொரு நாளும் மெலிந்து கொண்டே வருகிறாள். இனிமேலும் பத்மநாபனுக்கு பால் கொடுப்பது என்பது ஆபத்தான விஷயமென்று ஆசாரிப் பெண் கல்யாணி தேவுவிடம் பல தடவைகள் கூறியிருக்கிறாள். அது உண்மைதான் என்று ஒரு நாள் தேவுவிற்கும் தோன்றியது. அன்றே கல்யாணி, குஞ்ஞண்ணி வைத்தியரின் மருந்துக் கடையில் ஒரு அணாவிற்கு 'மொசு மொசுகாய்' வாங்கிக் கொண்டு வந்தாள். தேவு இரண்டு மார்பகங்களின் நுனியிலும் மொசு மொசுகாயைத் தேய்த்து விட்டாள். வழக்கம்போல தாய்ப் பால் குடிப்பதற்காக ஆர்வத்துடன் முயற்சித்த பத்மநாபனின் முகத்தை அப்போது பார்க்க வேண்டுமே! அவன் பலமான சத்தத்துடன் வாந்தி எடுத்தான். கோபத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தரையில் கைகளையும் கால்களையும் போட்டு அடித்தான். அதற்குப் பிறகு பத்மநாபன் தாய்ப் பாலைத் தொடவேயில்லை...

அப்படிச் செய்திருக்க வேண்டியதில்லை என்று இப்போது தேவுவிற்குத் தோன்றியது. அவன் காலையில் அழ ஆரம்பித்தான். அழுது, அழுது தளர்ந்து போன அவன் இப்போது எந்தவித அசைவுமில்லாமல் தரையில் கிடந்து முனகிக் கொண்டிருந்தான். பார்த்துக் கொண்டு நின்றிருக்க தேவுவால் முடியவில்லை. நெஞ்சு வெடித்து விடுவதைப் போல இருந்தது. சிறிய குழந்தைதானே! பசியை எவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்? பெரியவர்களாக இருந்தால், வேட்டியை இறுக்கமாக அணிந்து கொண்டு எங்காவது சுருண்டு படுத்துக் கிடக்கலாம். பாவம்.. பத்மநாபன்! மூன்று வயது ஆனாலும், அதற்கான வளர்ச்சி இல்லை. மெலிந்து போன கை, கால்களும், வெளிப்படையாக தெரியக் கூடிய இடுப்பு எலும்புகளும்... வளர்வதற்கு தின்ன கொடுக்க வேண்டாமா? தாய்ப் பாலை நிறுத்திய பிறகு, அவன் முழுமையான பட்டினியில் கிடக்கிறான். கஞ்சியும் சோறும் சாப்பிட ஆரம்பித்தபோது, அதைக் கொடுக்க முடியவில்லை. இந்த சிரமங்களுக்கு முடிவே இல்லாமலிருக்கும்!

அவள் பத்மநாபனைத் தூக்கினாள். தாய்ப்பால் குடிக்க மாட்டான் என்ற விஷயத்தை அறிந்திருந்தாலும், அவள் ரவிக்கையின் கொக்கியை அவிழ்த்தாள். கொஞ்சம் உதடு ஈரமாக ஆகட்டும்... ஆனால், பத்மநாபன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். அவன் வாந்தி எடுத்தான். கசப்பு எடுக்கும் மொசு மொசு காயின் ஞாபகம் வந்திருக்க வேண்டும். தேவு தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். ஆசாரிப் பெண் கல்யாணியையும். வெறுமனே சிறுவனின் பால் குடிக்கும் பழக்கத்தை நிறுத்தியாகி விட்டது. பால் இல்லையென்றாலும், அவன் சப்பிச் சப்பி உறங்கியிருப்பான். இனி என்ன செய்வது?

இரவில் அரை நாழி அரிசியை வைத்து கஞ்சி வைத்தாள். குழந்தைகளுக்கும், குழந்தைகளின் தகப்பனுக்கும் கொடுத்தவுடன், பானை காலியாகி விட்டது. எஞ்சியிருந்ததை ஒரு கோப்பையில் ஊற்றி, மூடி வைத்தாள். காலையில் பத்மநாபன் அழ ஆரம்பித்த போது, அவள் போய் பார்த்தாள். புளித்து நாறிக் கொண்டிருந்தது! ஒரு கோப்பை கஞ்சியை வீணாக, வெளியே ஊற்றினாள்.

இரண்டு துண்டு வெல்லம் இருந்தால், ஒரு குவளை கருப்பு காபி தயாரிக்கலாம். ஆனால், அதுவும் அந்த வீட்டிற்குள் இல்லை. வீடு... வீடு... என்று அதற்கு பெயர் மட்டுமே இருக்கிறது. அரிசி இல்லை, தேங்காய் இல்லை, மிளகாய் இல்லை. எங்கிருந்தாவது நாழி அரிசி கிடைத்தால், அதை வேக வைப்பதற்கு ஒரு பானை இருக்கிறதா? ஓரம் சேதமடைந்த ஒரு பழைய பானையில் கஞ்சி வைக்கிறாள். அது முழுமையாக எப்போது உடையும் என்று தெரியவில்லை.

வீடு அல்ல... நகரம் அது!

'நாராயணா... நாராயணா...'

கிழவிதான் அப்படி கூறினாள். பசிக்கும்போது எல்லோரும் எதுவும் பேசாமல் எங்காவது போய் அமைதியாக இருப்பார்கள். கிழவி நேர் எதிரானவள். வாயில் நாக்கு அடங்கி இருக்காது.

'பையனை ஏன் இப்படி அழ வைக்கிறே?'- கிழவி தலையை வெளியே நீட்டியவாறு கேட்டாள்.

'இங்கே மூட்டை மூட்டையா அரிசி இருக்குதுல்ல...'

இப்போதும் பத்மநாபன் முனகிக் கொண்டிருந்தான். அழுவதற்குக் கூட பையனால் முடியவில்லை.

'ஜானு...'


தேவு மூத்த மகளை அழைத்தாள். முற்றத்திலிருந்த படியில் அமர்ந்து புளியங்கொட்டையை உடைத்து அவள் தின்று கொண்டிருந்தாள். பத்து... பன்னிரெண்டு வயதுகள் ஆகிவிட்டாலும், குழந்தை குணத்தை அவள் இன்னும் விடவில்லை.

புளியங்கொட்டையை ரவிக்கைக்குள் பத்திரமாக வைத்து விட்டு, ஜானு வந்தாள்.

'இந்தப் பையனை கொஞ்சம் தூக்கிக்கோ. சாலைக்குக் கொண்டு சென்று காரைக் காட்டு. என்ன ஒரு அழுகை இது!'

தரையில் கிடந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்த பத்மநாபனை ஜானு தூக்கினாள். அப்போது அவன் மேலும் சற்று பலமாக அழுதான்.

'வாசுதேவனும் குஞ்ஞிகிருஷ்ணனும் எங்கே போனாங்க?'

'எனக்குத் தெரியாது.'

ஜானு பத்மநாபனைத் தூக்கிக் கொண்டு சாலைக்குச் சென்றாள். முனையிலிருந்த மம்மது மாப்பிள்ளையின் கடையின் அருகில் போய் நின்றால், பிரதான சாலையில் கடந்து செல்லக் கூடிய கார்களையும் பேருந்துகளையும் பார்க்கலாம். அதைப் பார்த்த பிறகாவது, அவனுடைய அழுகை நிற்கட்டும்.

பத்மநாபன் மட்டுமே ஒரு பிரச்சினை. எஞ்சியிருக்கும் மூன்று பிள்ளைகளால் எந்தவொரு சிரமமும் இல்லை. ஜானு விவரமுள்ளவள். கூறினால் அவளுக்குப் புரிந்து விடும். அவள் மூத்தவள் அல்லவா? கிணற்றிலிருந்து குளிர்ந்த நீரை அள்ளிக் பருகியும், புளியங் கொட்டையைத் தின்றும் அவள் நாட்களை ஓட்டி விடுவாள். அதற்குப் பிறகு இருப்பவர்கள் வாசுதேவனும், குஞ்ஞி கிருஷ்ணனும். தூங்கிக் கொண்டிருக்கும் பாயிலிருந்து நேராக எழுந்து செல்வது மாலோட்டு கோவிலுக்குத்தான். கோவிலின் வாசலில் ஏதாவது விளையாடிக் கொண்டிருப்பார்கள். பூஜை இருக்கும் நாளாக இருந்தால், பிரசாதம் கிடைக்கும். கொஞ்சம் அவலும் சர்க்கரையும் பழமும். அதை வைத்து அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மாங்காய் எறிந்து கீழே விழ வைக்கவோ, முந்திரிக் கொட்டை பொறுக்கவோ செய்வார்கள். முந்திரிக் கொட்டைகளைச் சேகரித்து மம்மது மாப்பிள்ளையிடம் கொடுத்து காசு வாங்குவதில் பெரிய திறமைசாலி வாசுதேவன்.

பள்ளிக் கூடம் அடைக்கப்பட்டிருந்த காலம். திறந்து விட்டால், மிகப் பெரிய ஒரு நிம்மதியாக இருக்கும். ஜானுவும் வாசுதேவனும் படிக்கிறார்கள். படிக்கட்டும்... அதிர்ஷ்டமிருந்தால், நன்றாக வருவார்கள். இன்னொரு முறை 'படிக்காத காரணத்தால்தான் இப்படி ஆகி விட்டோம்!' என்ற கவலை தோன்றாது அல்லவா? அது மட்டுமல்ல- பள்ளிக் கூடத்தில் மதிய கஞ்சி கிடைக்கும். அது ஒரு நிம்மதி அளிக்கும் விஷயமாக இருக்கும். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வீட்டிற்கு வந்து ஏதாவது சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஜானுவிற்கும் வாசுதேவனுக்கும் உண்டாகும். மதிய நேரத்தில் பள்ளிக் கூடத்தில் வயிறு நிறைய சாப்பிடும் கஞ்சி, அவர்களுக்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் போதும்!

குஞ்ஞிகிருஷ்ணனுக்கு ஐந்து வயது முடியவில்லை. உரிய வயதிற்கு வந்து விட்டால், அவனையும் பள்ளிக் கூடத்தில் சேர்க்க வேண்டும். ஒரு நேர கஞ்சி கிடைப்பது என்பது, ஒரு பெரிய உதவி ஆயிற்றே!

ஒரு நாள் தேவுவிற்கு ஒரு யோசனை தோன்றியது. ஜானுவும் வாசுதேவனும் பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது அவள் சொன்னாள்: 'நீங்க இந்த குஞ்ஞிகிருஷ்ணனையும் அங்கே கொண்டு போங்க.'

'அதற்கு குஞ்ஞிகிருஷ்ணனுக்கு ஐந்து வயது முடியலையே!' - ஜானு சந்தேகத்துடன் கேட்டாள்.

'அது இல்லடீ விஷயம்! அவன் வெளியே எங்காவது விளையாடிக் கொண்டு இருக்கட்டும். கஞ்சி குடிக்கிறப்போ நீ அவனை அழைச்சிட்டுப் போயி பக்கத்துல வச்சிக்கோ.'

தன் தாயின் யோசனை ஜானுவிற்கும் பிடித்தது. பள்ளிக் கூடத்திற்குச் செல்லும்போது, அவள் குஞ்ஞிகிருஷ்ணனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்றாள்.

ஜானுவும் வாசுதேவனும் வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது, குஞ்ஞிகிருஷ்ணன் வாய்க்காலில் அயிரை மீன் பிடித்துக் கொண்டோ, மம்மது மாப்பிள்ளையின் நிலத்திலிருக்கும் மாமரத்தின் மீது கல்லெறிந்து கொண்டோ இருப்பான். மதிய கஞ்சிக்கு பள்ளிக் கூடம் விடக் கூடிய மணி அடிப்பதைக் கேட்டவுடன், அவன் மெதுவாக வாசலுக்கு நடந்து செல்வான். பத்து... ஐநூறு பிள்ளைகள் இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் குஞ்ஞிகிருஷ்ணனை யார் கவனிக்கப் போகிறார்கள்?

குஞ்ஞிகிருஷ்ணன் ஒரு வார காலம் சந்தோஷமாக கஞ்சியும் அவியலும் சாப்பிட்டான்.

ஒருநாள் பரிமாறும்போது, குட்டன் நாயரின் கண்களில் அவன் பட்டு விட்டான்: 'உன் பெயர் என்னடா?'

'குஞ்ஞிகிருஷ்ணன்.'

'நீ எந்த வகுப்புல படிக்கிறே?'

குஞ்ஞிகிருஷ்ணன் வாய் திறக்கவில்லை. பூனை வெளியே தாவியது. குட்டன் நாயர் அவனை கஞ்சிக்கு முன்னாலிருந்து காதைப் பிடித்து எழுந்திருக்கச் செய்தார். கேட்டிற்கு வெளியே அவனை அனுப்பி விட்டு, உரத்த குரலில் கூறினார்: 'ஓடு... இனிமேல் இந்தப் பக்கம் இந்த காரியத்துக்காக வந்து நின்றால், காலை அடிச்சு ஒடிச்சிடுவேன். பார்த்துக்கோ.'

கஞ்சி தருவது அரசாங்கம்தான். குட்டன் நாயருக்கு அதிலென்ன நஷ்டம்? மோசமான ஆள்!

'நாராயணா... நாராயணா...'

'நீங்க கொஞ்சம் பேசாமல் இருக்கக் கூடாதா?'

'என்னடி உனக்கு? பட்டினி கிடக்குறது போதாதுன்னு, வாயைத் திறக்கவும் கூடாதா?'

'மத்தவங்க மூக்கு முட்ட சாப்பிட்டுட்டுல்ல இருக்காங்க?'

'நீ என்னைக்கு இந்த குடும்பத்துல கால் வச்சியோ, அன்று ஆரம்பிச்சது இங்கே பட்டினி...

'என்னை ஏதாவது பேச வச்சிடாதீங்க.'

'என்னடீ நீ? சொல்லு... சொல்லுன்றேன்.'

தேவு எதுவும் கூறவில்லை. கிழவியுடன் சண்டை போடக் கூடாது என்று எப்போதும் மனதிற்குள் நினைப்பாள். முள் இலையின் மீது விழுந்தாலும், இலை முள்ளின் மீது விழுந்தாலும், இலைக்குத்தானே பாதிப்பு! கிழவியின் முனகலைக் கேட்கும்போது, சில நேரங்களில் நாக்கு அசைய ஆரம்பித்து விடும்!


'அவள் சொல்லுவாளாம்! நீ என்னடீ சொல்லுவே?'

'நான் ஒண்ணும் சொல்லலை.'

அதற்குப் பிறகும் கிழவியின் நாக்கு அடங்கி நிற்காது. முற்றத்திற்கு வந்து முணுமுணுத்துக் கொண்டிருப்பாள்.

தேவு பாயில் படுத்தாள். வயிறு எரிந்து கொண்டிருந்தது. அவளுக்கு பசி இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் பசிக்கு மத்தியில் அது மறந்து போய் விடுகிறது. அடுப்பில் இதுவரை நெருப்பு பற்ற வைக்கவில்லை. எங்கிருந்தாவது நாழி அரிசிக்கான பணத்தைத் தயார் பண்ணி விட்டுத்தான் வருவேன் என்று கூறிவிட்டுத்தான் கோபாலன் காலையில் சென்றான். கிடைத்தால், அடுப்பில் தீ பற்ற வைக்கலாம். இல்லாவிட்டால்...

இந்த மாதம் தரித்திரம் சற்று முன்பே வந்து விட்டது. பொதுவாக மாத இறுதியில் ஐந்தோ ஆறோ நாட்கள் மட்டுமே சிரமங்களைச் சந்திக்க வேண்டியதிருக்கும். இன்று தேதி இருபதுதான் ஆகியிருக்கிறது. இன்னும் பத்து நாட்கள்! இந்த நாட்களை எப்படி ஓட்டுவது?

இந்த பிரச்சினைகளையெல்லாம் உண்டாக்கியதே கிழவிதான். பல வருடங்களாக கிழவிக்கு உடல் நலக்கேடு. வாதம்... உடனடியாக எதுவும் குணமாகாது. இடையில் அவ்வப்போது குஞ்ஞண்ணி வைத்தியரைப் போய் பார்க்க வேண்டும். பொதுவாக அங்கு போய் பார்ப்பதுதான் வழக்கம். இந்த முறை வைத்தியரை வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வர வேண்டிய சூழ்நிலை உண்டானது. கிழவியால் ஒரு அடி கூட நடக்க முடியவில்லை. நகரத்தின் மையத்திலிருந்து வருகிறார். வைத்தியரின் கையில் இரண்டு ரூபாய்களாவது கொடுக்க வேண்டாமா? கஷாயம், களிம்பு, நெய் - இறுதியில் பிள்ளைகள் பட்டினியில் கிடக்க வேண்டியதாகி விட்டது!

ஒரு வயது தாண்டினால் மரணமடைய வேண்டும். ஏன் மற்றவர்களுக்கு சுமையாக வாழ வேண்டும்? இந்த கிழவி அவ்வாறு இறந்தால் என்ன?

'என் மாலோட்டு பகவதி, என்னைக் காப்பாற்று!'

'திருட்டு நாய்!'

'பகவதி ஏமாத்திட்டாளே!'

'குட்டி சங்கரா ஓடு... மேற்கு பக்கம்தான் போனது... ஓடு... என் குட்டி சங்கரா.'

ஆசாரிப் பெண் கல்யாணியின் வீட்டிலிருந்துதான் ஆரவாரம். தேவு பாயை விட்டு எழுந்தாள். கல்யாணி பதைபதைப்புடன் வாசலில் நின்றிருந்தாள். குட்டி சங்கரன் வேட்டியை மடித்துக் கட்டியவாறு மேற்கு திசை நோக்கி அம்பைப் போல வேகமாக பாய்ந்து போய்க் கொண்டிருந்தான்.

திருட்டு நாய் எதையோ அபகரித்துச் சென்றிருக்க வேண்டும். திருட்டு நாயின் தொல்லைகள் அதிகமான நேரமிது. சமீபத்தில்தான் அது பிரசவித்தது. பிரசவம் முடிந்து விட்டால், திருட்டு நாய்க்கு வெறி உண்டாகி விடும். எவ்வளவு சாப்பிட்டாலும், திருப்தியே உண்டாகாது. ஒவ்வொரு பிரசவத்திலும் மூன்றோ நான்கோ குட்டிகள் பிறக்கும். இந்த முறையும் மூன்று குட்டிகள் பிறந்தன. ஆசாரி நாராயணன் மூன்று குட்டிகளையும் ஒரு கோணியில் இட்டு கட்டி, கோணியைத் தரையில் மோதச் செய்து கொன்றான். அப்படி இல்லாமல் அவற்றை வைத்துக் கொண்டு என்ன செய்வது? மனிதர்களே இங்கு பட்டினி கிடக்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதைவிட நல்லது, பிறந்த உடனேயே குட்டியைக் கோணிக்குள் போட்டு தரையில் அடித்து கொல்வது.

ஆனால், அதனால் என்ன பயன்? திருட்டுநாய் உடனே கர்ப்பம் தரிக்கும். பிரசவிக்கவும் செய்யும். திருட்டு நாயைப் பார்க்கும்போதெல்லாம் அதற்கு கர்ப்பம் உண்டாகும். திருட்டு நாய்க்கு ஒரு பெயர் இருக்கிறது- 'பாரு' என்று. திருட்டு நாய் உண்மையிலேயே ஆண் நாய் அல்ல- பெண் நாய். 'பாரு' என்று யாரும் அழைக்க தயாராக இல்லை. திருட்டு நாய் என்ற பெயரில்தான் பாரு நீண்ட காலமாகவே அறியப்பட்டு வருகிறது.

நேற்று இரவு ஏதோ சந்தேகம் உண்டானபோதுதான் தேவு சமையலறைக்குள் சென்றாள். திருட்டு நாய் தலையை வைத்து மெதுவாக கதவைத் தள்ளி திறந்து கொண்டிருக்கிறது! தாழ்ப்பாள் இல்லாத கதவு. தள்ளினால், திறந்து கொள்ளும். சற்று தாமதித்திருந்தால், பானையில் மூடி வைத்திருந்த கஞ்சி முழுவதையும் திருட்டு நாய் சாப்பிட்டிருக்கும்!

தேவு வாசலுக்கு வந்தாள். அப்போதுதான் வடக்குப் பக்க வீட்டைச் சேர்ந்த உஸ்மானின் வேலியைத் தாவி கடந்து, திருட்டு நாய் வருவதைப் பார்த்தாள். வாயில் ஒரு பெரிய சாக்குப் பை தொங்கிக் கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் ஒரு முறை பார்த்துவிட்டு திருட்டு நாய் முற்றத்தை நோக்கி வேகமாக வந்தது. முற்றத்திலிருந்த மதிலின் மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஈர்க்குச்சி துடைப்பம்தான் தேவுவின் கண்களில் பட்டது. எடுத்து ஒரு அடி கொடுத்தாள். முதுகில் விழுந்தது. வாயிலிருந்து கனமாக இருந்த பை நழுவி விழுந்தது. ஒரு முனகலுடன் திருட்டு நாய் சற்று தூரத்தில் விலகி நின்றது. பிறகு வேலியைத் தாவிக் குதித்து உஸ்மானின் நிலத்திற்கே திரும்பிச் சென்றது...

தரையில் கிடந்த பையை எடுத்து தேவு திறந்து பார்த்தாள். அரிசி இருந்தது. இரண்டு படி அரிசியாவது இருக்கும். அவள் சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை. தேவு வேகமாக சமையலறைக்குள் நுழைந்து, பையைத் தரையில் வைத்து முறத்தைக் கொண்டு மூடி வைத்தாள்.

'என்ன தேவு, நீ இங்கே என்ன செய்யிறே?'

கிழவிதான்.

'நீங்க பேசாமல் இருங்க.'

'சொல்லிச் சொல்லி நீ திருடவும் ஆரம்பிச்சாச்சா?'

'தேவு அக்கா!'

தேவு திரும்பிப் பார்த்தாள். குட்டி சங்கரன் வாசலில் நின்றிருந்தான். திருட்டு நாய்க்குப் பின்னால் ஓடித் தளர்ந்த அவன் நின்று பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தான்.

'உங்களுக்கு அரிசியும் பையும் கிடைச்சதா?'


'என்ன குட்டி சங்கரா, நீ என்ன சொல்றே?'

'திருட்டு நாய் நாசமாப் போற காரியத்தைச் செஞ்சிருச்சு தேவு.'

அப்போது அங்கு வந்த ஆசாரிப் பெண் கல்யாணி சொன்னாள்:

'இரண்டு படி அரிசி இருந்தது. கடனுக்கு வாங்கியது. நான் என்ன செய்வேன்? என் பகவதீ...'

'திருட்டு நாய் இங்கே வரலையே, கல்யாணீ' -தேவு கல்யாணியின் முகத்தைப் பார்க்காமலே கூறினாள்.

'நாராயணா... நாராயணா...'

'திருட்டு நாயை நான் பார்த்தேன். உஸ்மானின் வீட்டிற்குப் பின்னால் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. அரிசியும் பையும் வாயில் இல்லை'- குட்டி சங்கரன் கூறினான்.

'நீ நிலம் முழுவதையும் பார்த்தியா? அங்கே எங்காவது விழுந்து கிடக்கும்'-தேவு கூறினாள்.

'நான் பார்த்தேன். திருட்டு நாய் இந்தப் பக்கம்தான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொன்னாங்க.'

'நல்லா போய் பாரு, குட்டி சங்கரா. கிடைக்கலைன்னா, என் பிள்ளைங்க பட்டினி கிடக்க வேண்டியதிருக்குமே, பகவதீ.'

'வேலியைத் தாவிக் குதித்து கடந்து இந்தப் பக்கம்தான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொல்றாங்க. உடனேயே திரும்பிப் போனேன். வாயில் பை இல்லை. அப்படின்னா, பை இங்கேதான் எங்கேயாவது இருக்கும். இன்னொரு முறை பார்க்குறேன்.'

குட்டி சங்கரன் வேட்டியை மடித்துக் கட்டி, நிலத்திற்குள் நுழைந்து சென்றான்:

'இரண்டு படி அரிசி. பிள்ளைகளோட அப்பா வந்தால், நான் என்ன சொல்றது? என்னைக் கொன்னுடுவாரு'- கல்யாணி திண்ணைக்கு வந்து தலையில் கையை வைத்தவாறு அமர்ந்தாள்.

'நேற்று இரவு திருட்டு நாய் சமையலறைக்குள் நுழைஞ்சது. அப்போ நான் பார்த்துட்டேன். இல்லாவிட்டால்... அதோட காலை அடிச்சு ஒடிக்கிறதுக்கு இந்த ஊர்ல யாருமில்லையே!'

'பிள்ளைகளோட அப்பா வாசல்ல கொண்டு வந்து வைத்தார். 'கல்யாணீ, இதை அங்கே எடுத்து வை'ன்னு சொல்லிட்டு படி இறங்கிப் போயிருப்பாரு. வாசல்ல போய் பார்க்குறப்போ...'

'நாராயணா...'

'என் பிள்ளைங்க...'

குட்டி சங்கரன் நிலம் முழுவதும் தேடி திரிந்து விட்டு, திரும்பி வந்தான். பை கிடைக்கவில்லை.

'யாரோ சதி வேலை பண்ணியிருக்காங்கன்னு தோணுது. திருட்டு நாய்க்குப் பின்னால், நான் வேகமாக ஓடினேன். உஸ்மானோட வீட்டிற்குப் பக்கத்துல அது எண் கண்கள்ல இருந்து மறைஞ்சிடுச்சு. திருட்டு நாய் இங்கே வரைதான் வந்ததுன்னு உஸ்மானோட உம்மா சொன்னாங்க. அப்படின்னா, பை எங்கே போனது? அதை யாரோ எடுத்து வச்சிருக்காங்கன்னு நான் நினைக்கிறேன்.'

'உன் அரிசியையும் பையையும் யார் திருடி வச்சிருப்பாங்க, குட்டி சங்கரா?'- தேவு சொன்னாள்.

'மிகப் பெரிய பாவ காரியத்தைச் சொல்லாதே. அதை எங்காவது கொண்டு போய் வச்சிருக்கும். நீ இன்னொரு முறை பார்த்துட்டு வா'- நல்ல மனம் கொண்ட கல்யாணி கூறினாள்.

'என்னால முடியாது. அது இனிமேல்தான் கிடைக்கப் போகுதா?'

குட்டி சங்கரன் வேட்டியைப் பிரித்து விட்டு, திண்ணையில் போய் அமர்ந்தான்.

'இனி என்ன செய்வது தேவு? என் பிள்ளைங்க பட்டினி கிடக்க வேண்டியதாகி விட்டதே?'- கல்யாணி கண்களைத் துடைத்தாள்.

'அதை மட்டும் இப்போ என் முன்னாடி பார்த்தால்...'- குட்டிசங்கரன் கையைக் கசக்கினான்: 'அடிச்சு காலை ஒடிச்சி வீசி எறியணும்.'

குட்டிசங்கரனுக்குப் பின்னால் கண்களைத் துடைத்தவாறு ஆசாரிப் பொண்ணான கல்யாணி  சென்றாள்.

'கண்களில் இரத்தம் இல்லாதவள்... மகா பாவி?'- கிழவி தேவுவைப் பார்த்து முணுமுணுத்தாள்.

தேவு திண்ணையில் தூணில் சாய்ந்து அமர்ந்தாள்.

பத்மநாபனின் அழுகைச் சத்தம் அதற்குப் பிறகும் கேட்க ஆரம்பித்தது. ஜானுவின் இடுப்பில் அமர்ந்து அவன் நெளிந்து கொண்டிருந்தான். அவனைத் தரையில் இறக்கி வைத்து விட்டு, ஜானு கூறினாள்: 'இவனை தூக்கி வச்சிக்கிட்டு நடக்க என்னால முடியல. இப்படியும் ஒரு பையன் இருப்பானா?'

தரையில் கவிழ்ந்து படுத்து கையையும் காலையும் தரையில் அடித்து, பத்மநாபன் உரத்த குரலில் சத்தம் போட்டு அழுதான். தேவு சமையலறைக்குள் நுழைந்து நெருப்பைப் பற்ற வைத்தாள். முறத்திற்குக் கீழே இருந்த பையை எடுத்து, அரிசியைக் கொட்டி விட்டு, பையை அடுப்பிற்குள் போட்டு எரியச் செய்தாள். அதை கல்யாணி எங்காவது பார்க்க நேர்ந்தால்... சிறிய பாத்திரத்தில் நீரை நிறைத்து, அடுப்பின் மீது வைத்தாள். நீர் கொதித்ததும், நாழி அரிசியை எடுத்து கல், நெல் ஆகியவற்றை நீக்கி கழுவி, நீருக்குள் போட்டாள். பிறகு திண்ணைக்குச் சென்று தரையில் படுத்து முனகிக் கொண்டிருக்கும் பத்மநாபனைத் தூக்கியவாறு அவள் சொன்னாள் : 'மகனே, அழாதே. உனக்கு நான் இப்போ சோறு தர்றேன்.'

'சோறா? அரிசி எங்கேயிருந்து கிடைச்சது?' -ஜானு ஆச்சரியப்பட்டாள்.

'அது உனக்கு தெரிய வேண்டாம்டீ...'

'அடியே ஜானு... உன் அம்மாவுக்கு இப்போ திருடுறதுக்கும், பொய் சொல்றதுக்கும் தயக்கமே இல்லை.'

'அம்மா என்ன திருடினாங்க?'

'பட்டினி கிடந்தாலும், கழுத்தையே அறுத்தாலும், பொய் சொல்லவோ திருடவோ கூடாது. அது மகா பாவம்...'

'பேசாமல் இருக்குறதுதான் உங்களுக்கு நல்லது'- தேவுவின் பொறுமை எல்லை கடந்தது.

'பேசினால் என்னடீ? நீ என்னை என்ன செய்வே? திருடி...'

'பேசினால்...'- பத்மநாபனை தரையில் போட்டு விட்டு, வாசலிலிருந்த திருட்டு நாயை எறிந்த துடைப்பத்தை எடுத்தவாறு தேவு சொன்னாள்: 'இதைப் பார்த்தீங்களா? பார்த்தீங்களா இதை? நான் கொன்னுடுவேன். வாயில நாக்கு இருந்தால், அதை அங்கேயே அடக்கி வைக்கணும்.'

'என்னடீ தேவு உனக்கு? பைத்தியம் பிடிச்சிருச்சா?'


'பைத்தியம் பிடிக்காதவர்களுக்கு நீங்க பைத்தியம் பிடிக்க வைப்பீங்க.'

துடைப்பத்தை எடுத்துக் கொண்டு வேகமாக திண்ணைக்கு வந்த தேவுவின் முகத்தைப் பார்த்து கிழவி பயந்து போய் விட்டாள்.

'நாராயணா...'

கிழவி தற்போதைக்கு அமைதியாக இருந்தாள். பத்மநாபனைத் தூக்கிக் கொண்டு தேவு சமையலறைக்குச் சென்றாள்.

மாலோட்டு கோவிலின் வாசலில் விளையாடி முடித்து, வாசுதேவனும் குஞ்ஞிகிருஷ்ணனும் வந்தார்கள். வியர்வையில் குளித்து, மிகவும் களைத்துப் போய் காணப்பட்டார்கள். வீட்டுக்குள் நுழைந்த உடனே குஞ்ஞிகிருஷ்ணன் சொன்னான்:

'என்னால பசியோட இருக்க முடியல.'

'இன்னைக்கு பூஜை நடக்கல. பிரசாதம் கிடைக்கல'- வாசுதேவன் சொன்னான்.

'இன்று நமக்கு சோறு இருக்குடா. பிள்ளைகளே...' ஜானு சொன்னாள்.

'சோறா?'

'ஆமாம்டா. சோறுதான்...'

அதற்குப் பிறகு குஞ்ஞிகிருஷ்ணனும் வாசுதேவனும் அங்கு இல்லை. சமையலறைக்குள் சென்றபோது, அம்மா பத்மநாபனை மடியில் வைத்தவாறு, சோற்றை வாய்க்குள் ஊட்டிக் கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். ஜானு கூறியது பொய் அல்ல! கையையும் முகத்தையும் கழுவுவதற்குக் கூட நேரமில்லை. இருவரும் பலகையைப் போட்டு அமர்ந்து விட்டார்கள். சோறு!

வயிறு நிறைய உணவு சாப்பிட்டு விட்டு பத்மநாபன் தூங்கினான். பாவம் பையன்! காலையிலிருந்து அழ ஆரம்பித்திருந்தானே! திண்ணையில் கிழிந்த பாயில் அவனை படுக்கப் போட்டு விட்டு, தேவு தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள். கிழவி மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். இரண்டு கால்களையும் நீட்டி வைத்துக் கொண்டு சுவரில் சாய்ந்து கொண்டு, எந்த வித உணர்ச்சியுமில்லாத சமாதி நிலையில்!

பிள்ளைகள் சாப்பிட்டு முடித்ததும், தேவு கிழவியை அழைத்தாள்: 'எழுந்து போய் சோறு சாப்பிடுங்க.'

'உன் சோறு எனக்கு வேண்டாம்.'

'பசிக்கலையா?'

'திருடியதையும் கொள்ளை அடிச்சதையும் சாப்பிட்டு எனக்கு பழக்கமில்லைடீ...'

நாவில் சனியன்!- வாயைத் திறந்தால் தேவையற்றதையே பேசுவாள்.

'இங்கே சாப்பிடுவதற்கு வேறு எதுவும் இல்ல.'

'நான் பட்டினி கிடப்பேன்.'

'மனசு இருந்தால், சாப்பிடுங்க.'

அதற்குப் பிறகு தேவு கட்டாயப்படுத்தவில்லை. பாயில் பத்மநாபனுக்கு அருகில் போய் படுத்தாள். எதையெதையோ சிந்தித்துக் கொண்டே அப்படியே உறங்கி விட்டாள். அப்போது சமையலறையிலிருந்து ஒரு சத்தம் கேட்டது. அவள் அதிர்ச்சியடைந்து கண் விழித்தாள். திருட்டு நாயா? வேகமாக எழுந்தாள். எறிந்து காலை ஒடிக்க வேண்டும். இனி யாருடைய பொருட்களையும் திருடக் கூடாது. தேவு சமையலறைக்குள் வேகமாக பாய்ந்து சென்றாள்.

தடிமனான பலகையின் மீது அமர்ந்து கிண்ணத்திலிருந்து சோற்றை அள்ளி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் கிழவி. கால் சத்தத்தைக் கேட்டதும், தலையை உயர்த்தி பார்த்து விட்டு மீண்டும் மிகவும் அமைதியாக சோற்றை வாரி வாரி சாப்பிட்டாள். என்ன ஒரு வெறி! தேவுவின் இரத்தம் கொதித்தது.

'இப்போ நீதி போதனை எங்கே போனது? சத்தமே உண்டாக்காமல் வந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கீங்க... பூனையைப் போல...'

கிழவி வாய் திறக்கவில்லை.

'என்ன... பேசவே இல்ல? வாய்ல ஒரு முழத்துக்கு நாக்கு இருக்குல்ல...! அது எங்கே போச்சு?'

'பசி எடுக்குறப்போ புலி புல்லையும் தின்னும்டீ, தேவு'- கிழவி கிண்ணத்திலிருந்து தலையை உயர்த்தாமலே கூறினாள்.

'பிறகு எதற்கு தேவையில்லாத விஷயங்களைப் பேசணும்? எனக்காகவா நான் அதைச் செய்தேன்? பத்மநாபன் பசியெடுத்து அழுது கொண்டிருந்ததை நீங்கள் பார்த்தீங்கள்ல? நேற்று இரவு கொஞ்சம் கஞ்சி குடிச்சது... சின்ன குழந்தையல்லவா? எவ்வளவு நேரத்துக்கு பசியைத் தாங்கிக் கொண்டு இருக்க முடியும்? நான் கண்ணுல இரத்தம் இல்லாதவள்தான்! மகாபாவிதான்!'

தேவு தான் அணிந்திருந்த துணியால் நுனிப் பகுதியைக் கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

'அதற்கு நீ ஏன்டி அழறே? நான் ஏதாவது சொன்னேனா?'

தேவு கண்களைத் துடைத்துக் கொண்டு, மூக்கைச் சிந்தினாள்.

'இனி சொல்லி என்ன பலன்? நடந்தது நடந்திருச்சு. நீ கொஞ்சம் சோற்றை எடுத்து சாப்பிடு. பசியோட இருக்க வேண்டாம்.'

கிழவி தடிமனான பலகையிலிருந்து எழுந்து, கிண்ணத்தைக் கழுவி வைத்தாள். பிறகு உள்ளே சென்று பாயை விரித்து படுத்தாள். இரண்டு நிமிடங்கள் ஆகியிருக்கவில்லை. குறட்டை விட ஆரம்பித்தாள்.

அதற்குப் பிறகு தேவுவால் தூங்க முடியவில்லை. சிந்தனைகள் அவளுடைய மனதை ஆக்கிரமித்தன. வயிறு எரிந்து கொண்டிருந்தது. பானையில் நிறைய சோறு இருந்தும், ஏன் பட்டினி கிடக்க வேண்டும்? பிள்ளைகள் சாப்பிட்டு விட்டார்கள். அவர்கள் அவளுடைய பிள்ளைகள். நீதி போதனைகள் கூறிய கிழவியும் சாப்பிட்டு விட்டாள். ஒரு பிடி சோறு எடுத்து சாப்பிடலாம். மனப்பூர்வமாக செய்யவில்லையே! மாலோட்டு பகவதி தன்னை மன்னிப்பாள். தேவு சமையலறைக்குள் திரும்பச் சென்று கிண்ணத்தில் சோற்றைப் பரிமாறினாள். பலகையைப் போட்டு அமர்ந்தாள்.

வாசலில் கண்களைத் துடைத்துக் கொண்டிருக்கும் கல்யாணியின் முகம் அப்போது மீண்டும் மனதில் தோன்றியது. ஆசாரி நாராயணன் இரவில்தான் திரும்பி வருவான். அப்போதுதான் விஷயங்கள் அவனுக்குத் தெரியும். உடனே 'பூரம் திருவிழா' ஆரம்பித்து விடும். அந்த நாசமாய் போனவன் கல்யாணியைக் கொன்று விடுவான். கல்யாணிக்கும் பத்மநாபனையும் வாசுதேவனையும் போல பிள்ளைகள் இருக்கிறார்கள். அவள் அவர்களைப் பட்டினியாக கிடக்கும்படி செய்து விட்டாள். கல்யாணியை அழ வைத்தாள். அதைச் செய்திருக்கக் கூடாது. 'மன்னித்து விடு, மாலோட்டு பகவதி! நான் அறிந்து, செய்தது இல்லையே!'

பசி இருந்தாலும், தேவுவால் ஒரு உருளைச் சோற்றைச் சாப்பிட முடியவில்லை. கிண்ணத்தைத் தள்ளி வைத்து விட்டு, அவள் எழுந்தாள். பிறகு பத்மநாபனின் அருகில் சென்று படுத்தாள். வயிறு நிறைந்த திருப்தியுடன் அவன் உறங்கிக் கொண்டிருந்தான். ஆனால்...?'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.