Logo

சாமந்திப் பூக்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5998
Saamandhi Pookkal

சாமந்திப் பூக்கள்

எம்.டி.வாசுதேவன் நாயர்

தமிழில் : சுரா

வள் ஏன் இன்னும் வரவில்லை?

சாளரத்தின் அருகில் நின்று கொண்டு அவன் வெளியே கண்களை ஓட்டினான். புகை போல எங்கும் பரவியிருந்த மூடுபனிக்கு மத்தியில் அவளுடைய சிறிய வீடு தெரிந்தது. இப்போது அவள் என்ன செய்து கொண்டிருப்பாள்? அனேகமாக- அவளுடைய தந்தை வந்திருக்க மாட்டான்.

நகரத்தில் எங்காவது குடித்து, கும்மாளம் போட்டுக் கொண்டு நடந்து திரிந்து கொண்டிருப்பான். அவன் சீக்கிரம் வரக் கூடாதா? அவன் வந்து குளித்து, உணவு சாப்பிட்டு முடித்த பிறகுதான் அவள் சாப்பிடுவாள். அதற்குப் பிறகு அவன் குறட்டை விட ஆரம்பிக்க வேண்டும். பறந்து தூரத்திற்குச் செல்ல வேண்டும் என்று ஏங்கிக் கொண்டு அந்த மாடப்புறா வீட்டிற்குள் சிறகுகளை அடித்து இருந்து கொண்டிருக்கும்.

நேரம் ஒன்பதரை ஆகி விட்டது. வெளியே இருட்டும் மூடுபனியும் தழுவிக் கொண்டிருக்கின்றன. அவன் ஒரு 'கோல்ட் ஃப்ளேக்'கிற்கு நெருப்பு வைத்து, சுவரில் தொங்கிக் கொண்டிருந்த காலண்டர் படத்திலிருந்த திரைப்பட நடிகையின் முகத்தில் புகையை விட்டான்.

கோல்ட் ஃப்ளேக்கின் வாசனையும் சுவையும் பரவாயில்லை. சாதாரண சிஸர்ஸ்தான் எப்போதும் வாங்குவான். இன்று கோல்ட் ஃப்ளேக் வாங்கினான். ஒரு நல்ல நாள். விரும்பும் விதத்தில் கொண்டாட வேண்டும்.

ஷ்யாமா வர மாட்டாளா? வராமல் இருக்க மாட்டாள். அந்தச் சிறிய பெண்ணுக்கு அவன் என்றால் உயிர்.

பெட்டி, பொருட்கள் அனைத்தும் ஏற்கெனவே அடுக்கி வைக்கப்பட்டு விட்டன. அவற்றையெல்லாம் ஏன் கட்டி வைத்திருக்கிறான் என்று ஷ்யாமா கேட்காமல் இருக்க மாட்டாள். அப்போது என்ன கூறுவது? ஊருக்குச் செல்வதாக கூறலாம். ஒரு மாத விடுமுறையில். விடுமுறை முடிவடைவதற்கு முன்பே திரும்பி வருவதாகக் கூறி, ரோஜா மலரின் இதழைப் போன்ற அந்த உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்தால், அதற்குப் பிறகு அவள் சந்தேகப்பட மாட்டாள்.

ஆனால், உண்மை அதுவல்ல. ஒரு மாத விடுமுறை இருக்கிறது என்பதென்னவோ உண்மை. ஆனால், ஒரு மாதம் முடிந்த பிறகு, அவன் இங்கு திரும்பி வர மாட்டான். நாளை புலர் காலைப் பொழுதில் அவன் இந்த நகரத்திடமிருந்து விடை பெற்றுக் கொள்ளப் போகிறான். ஆனால், இந்த விஷயம் ஷ்யாமாவிற்குத் தெரியக் கூடாது.

அவன் மெத்தையில் கவிழ்ந்து படுத்து மெதுமெதுவென்றிருந்த தலையணையில் முகத்தை அழுத்தி வைத்தவாறு, தன் தந்தையின் கடிதத்தை மீண்டுமொரு முறை வாசித்தான்.

'...நான் உன் திருமணத்தை முடிவு செய்திருக்கிறேன். அப்பாவின் முடிவுக்கு எதிராக நீ நடக்க மாட்டாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் நான் வாக்கு கொடுத்தேன். பிறகு... உண்மையிலேயே கூறுவதாக இருந்தால், இது நம்முடைய குடும்பம் முழுவதிற்குமே மிகப் பெரிய அதிர்ஷ்டம். பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக தருவதாக இன்னொரு விஷயம்...

பெண்ணைப் பற்றி இதற்கு மேல் எழுத வேண்டிய தேவையில்லையே? பத்மினியை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? வயது சற்று அதிகமாக இருக்கும் என்றொரு குறை இருக்கலாம். அதனால் பரவாயில்லை...'

அவனுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பத்மினியும், பத்தாயிரம் ரூபாயும், மேனேஜர் பதவியும் ஒரே அடியில் கிடைக்கின்றன. வேறு ஏதாவது இடத்திலிருந்து இந்த திருமண ஏற்பாடு வந்திருந்தால், தன்னுடைய சம்மதம் இல்லாமல் முடிவு செய்ததற்கு அவன் எதிர்ப்பைக் காட்டியிருப்பான்.

வாழ்க்கையின் ஒரு திருப்பத்தில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்ற விஷயம் சேகரனுக்குத் தெரியும். அதிர்ஷ்டம் அவனுடைய வாசல் கதவைத் தட்டி அழைத்தது. சந்தோஷங்கள் நிறைந்த ஒரு புதிய உலகம் அவனுக்கு முன்னால் வடிவமெடுத்துக் கொண்டிருந்தது...

எங்கோ தூரத்திலிருக்கும் ஒரு ஊரில் உள்ள இந்த இரசாயன தொழிற்சாலையில் வேலை செய்ய ஆரம்பித்து ஒரு வருடமாகி விட்டது. அதற்கு முன்பு இருந்த ஆசிரியர் வாழ்க்கையைப் பற்றி மனதில் நினைத்துப் பார்க்காமல் இருப்பதே நல்லது. உதவி கெமிஸ்ட் வேலையையும் அவன் விரும்பவில்லை. சம்பளம் வெறும் நூற்று நாற்பத்தைந்து ரூபாய். சிக்கனமாக செலவழிப்பதற்கு கற்றுக் கொண்டிருந்ததால், மாதத்தின் இறுதியில் ஒரு காசு கூட மீதம் என்று இருக்காது. அமோனியா, கடுமையான அமிலம் ஆகியவற்றின் வாசனை கலந்த 'ஒர்க் செக்ஷ'னுக்குள் நுழைவது என்பதே அவனுக்கு வெறுப்பைத் தரக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. ஒரு வருடம் வேலையில் இருந்ததன் மூலம் கிடைத்த லாபம் என்ன என்று தன்னைத் தானே அவன் கேட்டுக் கொள்வதுண்டு. இடையில் அவ்வப்போது மிகவும் சிரமத்திற்குள்ளாக்கும் தலைவலி வேறு.

நாளை இந்த ஊரை விட்டு கிளம்பப் போகிறான். இந்த அறையையும், சுற்றியுள்ள இடங்களையும் விட்டுப் போவதில் சிறிது வேதனை இல்லாமலில்லை. அவனுக்கு அறை பிடித்திருந்தது. மெத்தையில் படுத்து சாளரத்தின் வழியாக பார்த்தால், வெயிலைச் சூடியிருக்கும் மலைச் சிகரங்கள் தூரத்தில் தெரியும். தினமும் கண் விழிக்கும்போது, அவன் அதைத்தான் பார்ப்பான். பிறகு... வாசலில் இருக்கும் பன்னீர் பந்தல். அதில் இளம் சிவப்பு நிறத்தில் ரோஜா மலர்கள் மலர்ந்து நின்று கொண்டிருக்கும்... ஷ்யாமாவின் கன்னங்களிலும் ரோஜா மலர்கள் மலர்வதுண்டு. பச்சை நிறத்திலிருக்கும் ரவிக்கையும், இளம் மஞ்சள் நிறத்தில் அசையும் பாவாடையும் அணிந்து, இளமையின் தொடக்கத்திற்கென்றே இருக்கும் துடிப்பு முழுவதையும் முகத்தில் வெளிப்படுத்தி நின்று கொண்டிருக்கும் ஷ்யாமா! அந்த பெண் பார்ப்பதற்கு என்ன அழகாக இருக்கிறாள்! இருட்டின் அருவியைப் போல் தொங்கிக் கொண்டிருக்கும் அடர்த்தியான கூந்தலில் அரைச் சந்திர வடிவத்தில் அவள் சாமந்திப் பூக்களைச் சூடுவாள். இந்த அளவிற்கு அழகான கூந்தலை அவன் வேறு எந்த இளம் பெண்ணிடமும் பார்த்ததில்லை.

புதிய வாழ்க்கைக்குள் நுழைந்தால், அவற்றையெல்லாம் மறப்பது என்பது சிரமமான விஷயமாக இருக்காது.

நேரம் பத்து மணி ஆனது. அவள் வருவாளா?


நினைத்துப் பார்த்தபோது, அது ஒரு ஏமாற்றும் செயல் என்று மனதில் தோன்றியது. அவள் எந்த அளவிற்கு காதலிக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு தெரியும். அவனைப் பார்க்கும்போது, அவன் ஏதாவது கூறும்போது அவளுடைய கண்களில் பொன் கதிர்கள் மலரும். அவள் தனக்குச் சொந்தமானவை அனைத்தையும் அவனுக்குப் பரிசாகத் தருவதற்குத் தயாராக இருந்தாள். ஒரு மாதத்திற்குள் அவன் திரும்பி வருவான் என்று அவள் நம்புவாள். எதிர்பார்ப்புகளுடன், கனவுகளுடன் முப்பது இரவுகளை அவள் தள்ளி நீக்கிக் கொண்டிருப்பாள். ஒரு நல்ல நாளன்று அவனுடைய மணப் பெண்ணாக ஆவோம் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்...

இவையெல்லாம் அவளுக்குத் தெரிந்தால்... ஆனால், அவளுக்குத் தெரியாது. தெரிந்து கொண்டால், இன்றைய திட்டங்களெல்லாம் தகர்ந்து விடும். அவளுக்கு தெரியக் கூடாது... பிரபஞ்சத்தின் கருத்த பக்கங்களைப் பற்றி அவள் சிந்தித்ததில்லை.

வேதனைப்படுத்தும் இதயத்துடன் அவள் கொஞ்ச நாட்கள் காத்திருப்பாள். அதற்குப் பிறகு மறந்து விடுவாள். அவள் வேறொரு இளைஞனின் மனைவியாக ஆவாள். இல்லாவிட்டால்... இன்னொரு சாத்தியமும் இருக்கிறது. இந்த அறை காலி செய்யப்பட்டவுடன், ஏதாவதொரு இளைஞன் இங்கு தங்குவதற்கு வரலாம். அவன் அவளைக் காதலியாக ஆக்கிக் கொள்வானோ? இதயத்திற்குள் சற்று எட்டிப் பார்த்துக் கொண்டு கூறுவதாக இருந்தால், அந்த விஷயத்தை சேகரன் விரும்பவில்லை. அவளுடைய தந்தை சீக்கிரமாகவே அவளை யாருக்காவது திருமணம் செய்து கொடுக்கட்டும். மனைவியாகவும், குடும்பத் தலைவியாகவும் ஆகி விட்டால், அவளுக்கும் சேகரனை மறப்பதென்பது சிரமமான விஷயமாக இருக்காது.

பத்மினியைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்தான். அவள் தன்னுடைய மனைவியாக ஆகப் போகிறாள். அவளுடைய வீட்டை ஒரு சந்தர்ப்பத்தில் அவன் பார்த்திருக்கிறான். பத்மினியின் தந்தை ஒரு பெரிய பணக்காரர். இளம் நீல வர்ணம் பூசப்பட்ட ஒரு பெரிய ஸ்டூடியோபேக்கர் கார் இருந்தது.

பத்மினியை அவன் பார்த்திருக்கிறான் என்று கூறலாம். மிகவும் அருகிலிருந்து பார்த்ததில்லை. காரில் செல்லும்போதும், ஒரு சந்தர்ப்பத்தில் திரை அரங்கில் வைத்தும் பார்த்திருக்கிறான். அவள் பெண்களுக்கான கல்லூரியில் படித்தாள். அதுவும் நல்ல விஷயம்தான். இரு பாலரும் படிக்கக் கூடிய கல்லூரிகளில் படித்த இளம் பெண்களாக இருந்தால், ஏதாவது காதல் வலைகளில் மாட்டியிருப்பதற்கு வழி இருக்கிறது...

பத்மினியின் உருவத்தை அவன் கற்பனை பண்ணிப் பார்க்க முயற்சித்தான். மூன்று வருடங்களுக்கு முன்பு அவளைப் பார்த்தான். நல்ல வெள்ளை நிறத்தில் இருப்பாள். பால்ஸன்  பட்டரின் நிறம். தடித்து சதைப் பிடிப்புடன் இருக்கக் கூடிய சரீரம். அவனை விட பருமனாக இருப்பாள். ஆனால், நல்ல உயரம் இருந்ததால், பருமனாக இருந்தது குறைபாடாக தெரியவில்லை. நினைத்துப் பார்த்தபோது, அவளுக்கு ஏதோ திரைப்பட நடிகையின் சாயல் இருப்பது போல இல்லையா? யாருடையது? சுவரிலிருந்த காலண்டரில் சதைப் பிடிப்பான முக்கிய பாகங்களை வெளிக்காட்டிக் கொண்டு ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த ரஹானாவின் படத்தை அவன் பார்த்தான். ரஹானா அல்ல. ஓ... இப்போது ஞாபகத்தில் வருகிறது. கடந்த மாதத்தில் 'ஏக்- தோ- தீ'னில் பார்த்த மீனாவின் சாயல்... முதலிரவிலேயே அதை அவளிடம் கூற வேண்டும். அழகைப் பற்றி வேறொரு ஆள் புகழ்ந்து கூறுவது பெண்களுக்குப் பிடிக்கும்.

அவள் இந்த திருமணத்திற்கு எப்படி ஒத்துக் கொண்டாள்? அவள் முன்பே அவனைப் பார்த்திருக்கலாம். எங்கு பார்த்திருப்பாள்? என்னவோ? ஒரு வேளை... இந்தத் திருமணமாகாத இளம் பெண்களுக்கு ஞானப் பார்வை கூட இருக்கும். தந்தையின் கடிதத்திலிருந்து தெளிவாக தெரிவது- கோபி மேனனின் விருப்பப்படிதான் இது தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்ற விஷயம். கோபி மேனனும் தந்தையும் இளம் வயதில் ஒன்றாகச் சேர்ந்து படித்திருக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் அது நல்லதாகி விட்டது. அவர்கள் திருமண ஆலோசனையுடன் இங்கு வந்திருக்கிறார்கள். அதில்தான் டீஸன்ஸியே இருக்கிறது... அவளுடைய அழகையும் பணத்தையும் பார்த்து ஆசைப்பட்டு ஒரு கடுமையான போராட்டம் நடத்தி திருமணம் செய்தால், குடும்ப வாழ்க்கை தோல்வியில்தான் போய் முடியும் என்பது சேகரனுக்குத் தெரியும். அப்படிப்பட்ட திருமணங்கள்தான் 'ஹென்பெக்ட்' கணவர்களை உருவாக்குகின்றன. அப்போது அவன் சற்று தமாஷாக சிந்தித்துப் பார்த்தான். அழகு கொண்ட ஒரு மனைவிக்குக் கீழே 'ஹென்பெக்ட்' ஆக வாழ்வதிலும் ஒரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது.

...ஷ்யாமா வருவாளா? அவளுடைய வீட்டில் இன்னும் விளக்கு அணைக்கவில்லை.

ஷ்யாமாவும் பத்மினியும்... அவன் சற்று ஒப்பிட்டுப் பார்க்க முயன்றான். ஷ்யாமா கூச்ச சுபாவம் கொண்ட ஒரு சிறிய பெண். ஒரு விளையாட்டு பொம்மையைப் போலத்தான் அவள் அவனுக்கு தோன்றுகிறாள். ஒரு கொன்றை மலரின் அழகு அவளுக்கு இருந்தது. தொட்டால் வாடி விடுவாளோ என்று தோன்றும். அவளுக்கு பதினைந்தோ பதினாறோ வயது இருக்கும். மார்பில் தாமரை மொட்டுகள் பெரிதாகவில்லை. அவனுடைய இறுக்கமான கைகளின் வளையத்திற்குள் ஒரு நிமிடம் அவள் நின்றிருக்கிறாள்... இறுக சற்று கட்டிப் பிடித்தால், எங்கே அவள் நொறுங்கி கீழே விழுந்து விடுவாளோ என்று தோன்றியது.

எனினும், அவளை அந்த மாதிரி பார்த்துக் கொண்டு நின்றிருப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்தது.

பத்மினியின் அழகு, கவர்ச்சி நிறைந்தது. சதைப்பிடிப்பான சரீரத்துடன் அரசியவாறு, திறந்து வைத்திருக்கும் காரில் மாலை நேரங்களில் பயணிக்கும்போது, நண்பர்கள் யாராவது பார்க்க வேண்டும்... பொறாமை வெளிப்படும் எத்தனையெத்தனை கண்கள் அவனை வட்டம் போட்டுக் கொண்டிருக்கும் என்பது தெரியவில்லை...

இன்னும் நான்கு நாட்கள் கடந்தால் போதும்... வெறும் நான்கு நாட்கள்...

பெரிய கொண்டாட்டம் எதுவும் தேவையில்லை என்று மனதில் நினைத்திருக்கிறான். கோவிலில் வைத்துத்தான் திருமணம். அவன் தன் நண்பர்கள் யாருக்கும் தெரியப்படுத்தவில்லையே! திருமணத்திற்குப் பிறகு எல்லோரையும் அழைத்து, பெரிய அளவில் ஒரு பார்ட்டி நடத்தி விட வேண்டியதுதான்.

அவன் சாளரத்தின் வழியாக திரும்பவும் வெளியே கண்களை ஓட்டினான். அவளுடைய வீட்டில் வெளிச்சம் இல்லை. ஷ்யாமா வர மாட்டாளோ? கிழவனின் குறட்டைச் சத்தத்தை எதிர்பார்த்துக் கொண்டு அவள் நெஞ்சு அடித்துக் கொண்டிருக்க படுத்திருப்பாள்.

கடந்த சில மாதங்களாக நடந்து கொண்டிருந்த வாழ்க்கையைப் பற்றி அவன் சிந்தித்தான். ஷ்யாமா அருகில் இருந்தது அவனுக்கு ஒரு நிம்மதியைத் தரும் விஷயமாக இருந்தது.


ஒரு வருடத்திற்கு முன்புதான் அவன் இங்கு பணிக்கு வந்தான். தங்குவதற்கு இடத்தைத் தேடி அலைந்து, இறுதியாக இந்த அறை கிடைத்தது. வாடகை குறைவுதான். சற்று தூரத்தில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. சாப்பாடு, காபி ஆகியவற்றைக் கொண்டு வந்து தருவதற்கு ஒரு பையனையும் ஏற்பாடு செய்தாகி விட்டது.

அவன் இங்கு வந்து சேர்ந்த மறுநாள்தான் அவன் ஷ்யாமாவை முதல் தடவையாக பார்த்தான். அன்று விடுமுறை நாள். காலையில் எழுந்து சாளரத்திற்கு அருகில் நின்று கொண்டு அவன் ஒரு சிகரெட்டைப் புகைத்து விட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவள் அந்த வழியே கடந்து சென்றாள். இடுப்பிலிருந்த ஒரு பித்தளைக் குடத்தில் நீர் இருந்தது. பழைய பாவாடையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள். கூந்தலை முடித்துக் கட்டி, அதில் சாமந்திப் பூக்களைச் சூடியிருந்தாள். புலர் காலைப் பொழுதைப் போல பிரகாசமான முகம். குருதி துடித்துக் கொண்டிருந்த கன்னங்கள்....

சாளரத்திற்கு நேர் கீழே அவள் போனாள்.

அப்படியொரு இளைஞன் தன் தலைக்கு மேலே நின்று கொண்டு பார்க்கும் விஷயம் அவளுக்குத் தெரியாது. அவள் அந்தச் சிறிய வீட்டிற்குள் நுழைந்து செல்வதை அவன் பார்த்தான். அப்படியென்றால்... அதுதான் அவளுடைய வீடு. காலி குடத்துடன் அவள் மீண்டும் வெளியே வந்தாள்.

சாளரத்தின் சட்டத்தைச் சற்று அசைத்தபோது, அவள் முகத்தை உயர்த்தி பார்த்தாள். பதைபதைத்து, முகத்தைத் தாழ்த்திக் கொண்டு அவள் வேகமாக நடந்து சென்றாள்.

அது அவனுடைய வழக்கமான செயலாகி விட்டது. தினந்தோறும் காலையிலும் மாலையிலும் அவள் கிணற்றின் அருகில் போவதையும் வருவதையும் பார்த்துக் கொண்டு அவன் நின்றிருப்பான்.

சில வாரங்களுக்குப் பிறகுதான் அவன் அவளிடம் முதல் தடவையாக பேசினான். பன்னீர் குச்சிகளை முற்றத்தில் நட்டு வைத்த மறுநாள். ஹோட்டலில் வேலை பார்க்கும் சிறுவன்தான் பன்னீர் குச்சிகளைக் கொண்டு வந்தான்.

மறுநாள் அவள் சாளரத்திற்குக் கீழே வந்தபோது, அவன் சொன்னான்:

'அந்த பன்னீர் பாத்தியில் கொஞ்சம் நீர் ஊற்ற முடியுமா?'

அவள் வெட்கப்பட்டாள். எதுவும் பேசாமல் அவள் தன் நடைக்கு வேகத்தை அதிகரித்தாள்.

அவள் நீர் ஊற்றுவாளா என்று அவன் பார்த்துக் கொண்டு நின்றான். இல்லை...

ஆனால், அன்று சாயங்காலம் திரும்பி வந்தபோது, பன்னீர் பாத்தி ஈரமாக இருப்பதைப் பார்த்தான்.

மறுநாள் சேகரன் சொன்னான்:

'மிகவும் நன்றி...'

அவள் வெட்கப்பட்டு நின்றாள்.

'என்ன பெயர்?'

பதில் இல்லை.

'சொல்ல மாட்டியா?'

பேரமைதி.

'அப்படின்னா... நான் சாமந்திப் பூவேன்னு கூறப்பிடுறேன்.'

'........'

'சம்மதமா?'

அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள்.

'பெயரைச் சொல்லக் கூடாதா?'

'ஷ்யாமா...'

அங்கிருந்துதான் பழக்கம் ஆரம்பித்தது. அவளைப் பற்றி அதிகமாக தகவல்களை அவன் தெரிந்து கொண்டான். அவளும் அவளுடைய தந்தையும் மட்டுமே வீட்டில் இருக்கிறார்கள். தாய் இறந்து விட்டாள். தந்தைக்கு ஏதோ சிறிய வேலை இருக்கிறது.

நாட்கள் கடந்து செல்ல, அந்தச் சிறிய பன்னீர் குச்சிகள் தளிர் விட ஆரம்பித்தன. ஒரு அதிகாலை வேளையில் அதில் இளம் சிவப்பு நிறத்தைக் கொண்ட ஒரு ரோஜா மலர் மலர்ந்தது அவன் அதை அறுத்தெடுத்து சாளரத்திற்கு அருகில் வைத்தவாறு, ஷ்யாமாவின் வருகையை எதிர்பார்த்து காத்து நின்றிருந்தான்.

அவள் பூச்செடிகள் இருந்த பாத்தியைத்தான் முதலில் பார்த்தாள்.

யாரிடம் என்றில்லாமல் அவள் சொன்னாள் : 'நீர் ஊற்றி, பூ மலர்ந்தபோது, அது உரிமையாளருக்குச் சொந்தமாயிடுச்சு...'

'ஷ்யாமா, உனக்கு பூ வேணுமா?'

'வேணும்ன்றவங்க அதை அறுத்தாச்சுல்ல...?'

'உனக்கு தர்றதுக்குத்தான்...'

'அப்படின்னா... எங்கே?'

அவன் அந்த மலரில் சற்று உதட்டை அழுத்தி வைத்து விட்டு, அதை அவளை நோக்கி எறிந்தான்.

'எந்த பூ அதிகமாக பிடிக்கும்?'

ஒரு சிறிய குழந்தையின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அவள் கேட்டாள்.

அவன் புன்னகைத்தவாறு அவளை நோக்கி விரலால் சுட்டிக் காட்டியவாறு கூறினான்: 'இதோ... இந்த பூ.'

வெட்கத்தால் அவளுடைய முகம் சிவந்தது.

'ஷ்யாமா, உனக்கு...?'

'எனக்கு சாமந்திப்பூவைத்தான் மிகவும் பிடிக்கும்.'

'அதனால்தான் தலையில் சாமந்திக் காட்டையே வளர்த்து வச்சிருக்கே!'

'நான் தினமும் வாங்குவேன். காலணாவிற்கு ஐந்து பூ. அந்த செட்டிச்சி அம்மா எனக்கு ஆறு பூக்களைத் தருவாங்க. பிடிச்சிருக்கா?'

'என்ன?'

'சாமந்திப் பூ...'

'ஓ... நிறைய.'

அதற்குப் பிறகு அவனுடைய சாளரத்தில் தினந்தோறும் காலையில் ஒரு சாமந்திப்பூ தோன்றிக் கொண்டிருக்கும்.

ஒருநாள் அவன் கேட்டான்:

'நீ என்னுடன் பேசும் விஷயம் உன் அப்பாவுக்குத் தெரியுமா?'

'அப்பாவுக்குத் தெரிந்தால், கணக்கு முடிஞ்சிடும்.'

'என்ன?'

'அப்பா எவ்வளவு கோபக்காரர் தெரியுமா? என்னைக் கொன்னு போட்டுடுவாரு.'

'அப்படின்னா... நான் உன் அப்பாவிடம் சொல்லப் போறேன்:

'என்ன?'

'நான் உன்னைக் கல்யாணம் பண்ணப் போறேன்னு...'

மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில் அந்த முகம் வெட்கத்தால் சிவப்பதை அவன் பார்த்தான்.

'அதெல்லாம்... நீங்க சும்மா சொல்றீங்க...'

'இல்லை... அர்த்தத்தோடத்தான்.'

நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளை நீட்டி அவன் அவளை சரீரத்துடன் நெருங்கச் செய்தான். தாமரைத் தண்டு போல இருந்த சரீரத்தை கைகளுக்குள் அடங்கி இருக்கச் செய்தான். மென்மையான அதரங்களில் அவன் சற்று அழுத்தி முத்தமிட்டான். அவள் விடுவித்துக் கொண்டு, பாய்ந்தோடினாள்.

சேகரன் இன்னொரு சிகரெட்டிற்கு நெருப்பு பற்ற வைத்தான். அன்று அவளிடம் பலவற்றையும் கூறி விட்டான். அவள் அவற்றையெல்லாம் தீவிரமாக எடுத்திருப்பாளோ?

ஷ்யாமா வருவாளா? வராமல் இருக்க மாட்டாள். அவன் காலையில்தான் அவளிடம் கூறினான் - இரவில் அறைக்கு வரும்படி. அவள் முதலில் சம்மதிக்கவில்லை. அவன் வற்புறுத்திய பிறகு, அவள் வருவதாகச் சொன்னாள்.

அது மோசமான ஏமாற்றும் செயல் என்பது அவனுக்குத் தெரியும். அவளுடைய கன்னித் தன்மையை அபகரிப்பதற்கு அவன் முயற்சிக்கிறான். அது ஒரு துரோகச் செயல் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். பிறகு...?

நாளை அவன் இந்த இடத்தை விட்டு கிளம்பப் போகிறான். ஷ்யாமாவும், அவள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கப் போகும் இனிய நிமிடங்களும் நினைவுகளாக ஆகும்...


நான்கு நாட்களுக்குள் திருமணம் செய்து கொள்ளப் போகிற ஒருவன் இதற்கு தயாராகிறான் என்பதை நினைத்துப் பார்த்தபோது, அவனுக்கு வெட்கமாக இருந்தது. எதிர்கால மனைவிக்குச் செய்யும் துரோகம். ஆனால், இந்த இரவு யாருக்கும் தெரியப் போவதில்லை. ஒவ்வொரு மனிதர்களும் இப்படி எத்தனையெத்தனை தவறுகளையும் குற்றங்களையும் இதயத்தின் இட்டறைக்குள் புதைத்து, மூடி வைத்திருக்கிறார்கள்!

வெளியே காய்ந்த இலைகள் அசைந்தன. அவன் காதுகளைக் கூர்மைப்படுத்தினான். கதவில் ஒரு மெல்லிய சத்தம்.

'ஷ்யாமா.. '

அவன் கூறினான்.

கதவைத் திறந்தான். பதைபதைப்பின் காரணமாக வெளிறிப் போயிருந்த முகத்தில் ஒரு சிரிப்பை வரவழைக்க முயற்சித்தவாறு அவள் நின்று கொண்டிருந்தாள். அவள் மேல் மூச்சு, கீழ் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள்.

'வா...'

அவள் உள்ளே நுழைந்ததும், அவன் ஓசை உண்டாக்காமல் கதவை அடைத்தான்.

அவள் அறை முழுவதையும் சற்று கண்களைச் செலுத்தி பார்த்தாள்.

'அப்பா உறங்கிட்டாரா?'

'ம்... அப்பாவுக்குத் தெரிஞ்சா...'

அவளுடைய முகத்தில் பயமும் பதைபதைப்பும் வெளிப்பட்டன. அறை முழுவதையும் அவள் மீண்டுமொரு முறை கண்களை ஓட்டி பார்த்தாள். சுவரில் ஃப்ரேம் போட்ட படங்கள் இல்லை. அலமாரியில் புத்தகங்கள் இல்லை.

'என்ன... எல்லாவற்றையும் கட்டி வச்சிருக்கீங்க?'

அவன் ஒரு வெளிறிப் போன சிரிப்புடன் சொன்னான்:

'எனக்கு நாளையில இருந்து விடுமுறை.'

அவள் எதையோ நினைத்துக் கொண்டு கேட்டாள்:

'போறீங்களா? '

'நாளைக்குப் போறேன்.'

அவளுடைய முகம் வாடியது.

'பிறகு வர மாட்டீங்களா?'

'வருவேன். விடுமுறை முடிந்தவுடன் வருவேன்.''

'உண்மையாகவா?'

'உண்மையா...'

அவள் மீண்டும் பேரமைதியைத் தொடர்ந்தாள்.

அவன் சாளரத்தின் வழியாக வெளியே பார்த்தவாறு பலவீனமான குரலில் சொன்னான்:

'ஷ்யாமா, சிறிது நாட்கள் உன்னைப் பார்க்க முடியாதே! அதனால்தான் இன்னைக்கு வரச் சொன்னேன்.'

'இனி எப்போ வருவீங்க?'

'ஒரு மாதம் விடுமுறை இருக்கு.'

அவள் முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அந்த கண்கள் ஈரமாகியிருக்கின்றனவோ என்று அவன் நினைத்தான்.

'ஊருக்குப் போய் விட்டால், இவற்றையெல்லாம் மறந்திடுவீங்கள்ல?'

கஷாயத்தைக் குடித்து உள்ளே இறக்குவதைப போல அவன் சொன்னான்:

'எந்தச் சமயத்திலும் இல்லை.'

அவள் அவனுடைய விரல்களையும், சுட்டு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் இறுக பிடித்துக் கொண்டிருந்தாள்.

'ஷ்யாமா, உனக்கு ஏதாவது வேணுமா?'

'ஒண்ணும் வேண்டாம்.'

'எது வேணும்னாலும் வாங்கிக்கோ.'

'எனக்கு... அன்பு மட்டும் போதும்...'

அவனுடைய உள்ளங்கையில் ஒரு துளி கண்ணீர் உதிர்ந்து விழுந்தது.

'நீ இந்த அளவிற்கு முட்டாளா? வெறுமனே எதற்கு அழறே?'

அவன் ஒரு சிறிய குழந்தையைப் போல அவளை அள்ளி தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான்...

...ஷ்யாமா சென்ற பிறகு, அவன் விளக்கைப் பற்ற வைத்தான். சாளரத்தின் சட்டங்களைத் திறந்து விட்டான். நெற்றியிலும் நெஞ்சிலும் அரும்பிய வியர்வையை முத்தமிட்டவாறு ஒரு இளம் காற்று உள்ளே நுழைந்து வந்தது.

சுருங்கி, கலைந்து போய் காணப்பட்ட மெத்தையில் வாடிய சாமந்திப் பூக்கள் கிடக்கின்றன. அவன் அவற்றைப் பொறுக்கியெடுத்து, முகர்ந்து பார்த்தான். வாடிப் போயிருந்தாலும், வாசனை போகவில்லை. அவன் அவை முழுவதையும் கசக்கி தரையில் போட்டான்.

மறுநாள் புலர் காலைப் பொழுதில் சேகரன் வண்டி ஏறினான்...

ஸ்டேஷன்களைத் தாண்டிக் கொண்டு வண்டி வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருந்தபோது, அவன் மிக விரைவில் வர இருக்கும் அந்த நல்ல நாளைப் பற்றி கனவுகள் நெய்து கொண்டிருந்தான். முந்தைய இரவை ஒரு பகல் கனவைப் போல அவன் மறந்து விட்டிருந்தான்.

வாழ்கையிலேயே மிகவும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது... சிந்திக்கக் சிந்திக்க சந்தோஷம் அதிகரித்துக் கொண்டே வந்தது. முதலிரவின்போது இன்பத்தில் திளைக்க வைக்கும் காட்சிகள். படுக்கையறையின் ஒரு மூலையில் ஆசையும் எதிர்பார்ப்பும் நிறைந்திருக்கும் முகத்தைக் குனிய வைத்துக் கொண்டு அவள் நின்றிருப்பாள். உதட்டிலும் மார்பிலும் கன்னங்களிலும் வெட்கத்தைக் கொண்ட அந்த இளம்பெண் எப்படி உரையாடலைத் தொடங்குவாள்? இளமையின் முந்திரிச் சாறு நிறைந்து ததும்பிக் கொண்டிருக்கும் அந்த குவளையை நோக்கி முதலில் எப்படி கையை நீட்டுவது?

வீட்டை அடைந்தான். அங்கும் சந்தோஷம் அலையடித்து உயர்ந்து கொண்டிருந்தது.

நிமிடங்கள் பெரும் பாம்புகளைப் போல ஊர்ந்து நகர்ந்து கொண்டிருந்தன. இறுதியில் திருமண நாளும் வந்தது. அவனுடைய கனவுகளுக்கு செயல் வடிவம் கிடைக்கப் போகிறது. குருவாயூரப்பனை சாட்சியாக நிறுத்தி வைத்துக் கொண்டு, அவன் பத்மினியின் கழுத்தில் மாலை அணிவித்தான். சாமந்திப் பூக்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட, ஜரிகைகளை வைத்து அலங்கரிக்கப்பட்ட அழகான மாலை...

முதலிரவு:

நறுமணம் நிறைந்திருந்த காற்றை முழுமையாக சுவாசித்தவாறு அவன் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தான். வெளியே விருந்தினர்களின் ஆரவாரம் குறைந்து... குறைந்து வந்து கொண்டிருந்தது.

கதவைத் தள்ளித் திறந்து கொண்டு, மணப்பெண் உள்ளே வந்தாள்...

அவன் அப்போதுதான் அவளை முழுமையாக பார்க்கிறான். முகூர்த்த நேரத்தின்போது பார்க்கவில்லை. வெட்கத்தின் காரணமாக முகத்தை உயர்த்த முடியவில்லை. முன்பு இருந்ததை விட பத்மினி அதிகமாக தடித்திருந்தாள். தடித்து வீங்கிய கன்னங்கள் கண்களை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனவோ என்று தோன்றியது. பந்தல் வாழைத் தண்டு போல இருந்த கை, கால்கள்... அவள் மிகவும் பருமனாக ஆகி விட்டிருந்தாள்.


அவள் கதவை பின்னோக்கி சாத்தினாள். சாளரத்தின் இரும்புக் கம்பிகளைப் பிடித்துக் கொண்டு, பயந்து நடுங்கியதைப் போல நின்று கொண்டிருந்த சேகரனின் அருகில் வந்து, அவனுடைய சரீரத்தில், தோளைக் கொண்டு உரசியவாறு அவள் கேட்டாள் :

'தெரியுமா?'

அவனுடைய தொண்டை வறண்டு போய் விட்டது.

'தெ... ரியும்... முன்னாடியே...'

அவள் சிரித்தாள். அவனுடைய செயலில் வெளிப்பட்ட, கற்பனையில் இருந்த... நாணம் நிறைந்த புது மணப் பெண்ணின் இடத்தில் இப்போது பார்ப்பது வேறு யாரையோ...

அவளுடைய கொழுத்து, உருண்டு போய் காணப்பட்ட கைகள் அவனுடைய கழுத்தில் விழுந்தன.

அவள் அவனுடைய முகத்திற்கு அருகில் வருகிறாளோ?... ஒரு முத்தத்திற்காக புது மணப் பெண் கெஞ்சுகிறாளோ?

சேகரன் வியர்வை வழிய நின்று கொண்டிருந்தான்.

அவனுடைய சரீரத்துடன் சேர்ந்து நின்று கொண்டு அவள் சொன்னாள்:

'யூ ஃபீல் ஷை?'

அவனுக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

அதற்குப் பிறகும் அவள் என்னவோ கேட்டாள். அவன் என்னவெல்லாமோ பதிலாக கூறினான்.

'டைம் ப்ளீஸ்...'

'பத்து.'

'நாம படுப்போம்.'

அவன் 'உம்' கொட்டினான்.

அவள் விளக்கை அணைத்தாள். அதற்குப் பிறகும் அறையில் மங்கலான வெளிச்சம் இருந்தது. அடர்த்தியான சிவப்பு நிறத்திலிருந்த பட்டுப் புடவையையும், சாட்டின் ஜாக்கெட்டையும் அவள் அவிழ்த்தாள். பார்த்தவுடன் அவன் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து விட்டான். மெல்லிய பாவாடை, மார்புக் கச்சை ஆகியவற்றுடன் அவள் நின்றிருந்தபோது, அவனுடைய நரம்புகள் எழவில்லை. குருதி உஷ்ணமாகவில்லை. உணர்ச்சிகளின் எழுச்சி இதயத்தில் உண்டாகவில்லை.

'வா...'

அவன் ஒரு இயந்திரத்தைப் போல கட்டிலை நெருங்கினான்...

காலையில் எழுந்து கண் விழித்தபோது, பத்மினி எழுந்து போய் விட்டிருந்தாள். ஒரு கெட்ட கனவிலிருந்து திடுக்கிட்டு கண் விழித்ததைப் போல அவன் உணர்ந்தான். கட்டிலின் கால் பகுதியில் முந்தைய நாளின் மாலை கிடந்தது.

மாலையிலிருந்த வாடிய சாமந்திப் பூக்கள் வேதனையுடன் புன்னகைத்துக் கொண்டிருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.