Logo

மந்திரப் பூனை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 9624
mandhira-poonai

ரு மந்திரப் பூனையின் அவதாரத்தைப் பற்றி இப்போது நான் கூறப்போகிறேன். ஆரம்ப காலம் தொட்டே அற்புத நிகழ்ச்சிகள் ஆயிரக்கணக்கில் இந்த உலகத்தில் நடைபெற்று வந்திருக்கின்றன. அந்த மாதிரியான மிகப் பெரிய விஷயமில்லை இது. ஒரு சாதாரண பூனை எப்படி மந்திரப் பூனையாக மாறியது என்பதைத்தான் நான் இப்போது சொல்லப் போகிறேன். இந்த விஷயத்திற்குள் நுழைந்து போனால் தமாஷான சம்பவங்கள் பலவும் இருக்கின்றன.

உலகத்திலேயே இதுதான் முதல் மந்திரப் பூனையா? சந்தேகம்தான். பிரபஞ்சத்தின் வரலாறைப் பொறுமையாகப் புரட்டிப் பார்த்தால் இத்தகைய சம்பவங்கள் ஏராளமாக இருக்க வாய்ப்புண்டு. ஒருவேளை பலரும் இந்த மாதிரி விஷயங்களை அதிகம் கவனிக்காமல் விட்டிருக்கலாம். இப்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முழுமையான கவனத்தை வையுங்கள். சிவந்த கண்கள், சிரிக்கின்ற முக அமைப்பு, காதுகளிலும் முதுகிலும் வாலிலும் இலேசான சிவப்புக் கோடுகள். மீதி முழுக்க தூய வெள்ளை நிறம். வெறித்துப் பார்த்து "மியாவ்” என்று கத்துவதைக் கேட்டால் அப்படியே அன்புடன் தூக்கி வருடிக் கொடுக்கத் தோன்றும்.

இந்தப் பூனை இந்த வீட்டுக்குள் நுழைந்தது சங்கநாதத்தோடு என்றுதான் சொல்ல வேண்டும். அந்தக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் மனதிற்கு சுகமாகவே இருக்கிறது. அப்படியென்றால் பெரிய காரியம் ஏதாவது அப்போது நடந்ததா என்ன? அப்படிச் சொல்வதற்கில்லை. தாடி, மீசை, சடை எல்லாம் கொண்ட ஒரு இந்து சந்நியாசி இந்த வீட்டுக்கு வந்து சங்கநாதம் எழுப்பினார்.

அந்த சந்நியாசியைப் பற்றிக் கூறும்போதெல்லாம் "பீப்பி ஊதுற மிஸ்கீன்...” என்று என் ஐந்தரை வயது மகள் ஷாஹினா சொல்லுவாள். சந்நியாசிக்கு அப்போது எழுபது வயது இருக்கும். அதற்காக அவருக்கு நரை எல்லாம் விழுந்து விடவில்லை. பிரகாசமான கண்கள்... நீளமாக இருக்கும் சடையை இழுத்து உயரமாகக் கட்டி வைத்திருப்பார்... உடல் முழுக்க விபூதி... நிலத்தில் ஊன்றினால் ஒலி எழுப்பும் சூலம்... தோளில் ஒரு துணி... ஒரு கையில் வெள்ளை வெளேர் என மின்னிக் கொண்டிருக்கும் சங்கு... எத்தனையோ வருடங்களாக... யுகங்கள் என்று கூறுவதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். அது கடலுக்கு அடியில் கிடந்ததாக இருக்கலாம். எங்களின் வீட்டிற்குப் பின்னால் சிறிது தூரத்தில் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் இருக்கிறது. அதன் ஆர்ப்பாட்டத்தை அடக்கும் வண்ணம் கரை உயரமாகவே இருக்கிறது. பயப்படுவதற்கு ஒன்றுமில்லை! இருந்தாலும், கடலின் பேரிரைச்சலைக் கேட்கும் ஒவ்வொரு நிமிடமும்... பல விஷயங்களும் மனதில் அலை மோதுவதென்னவோ உண்மை. சந்நியாசிக்கு நாங்கள் இருபத்தைந்து பைசா கொடுப்போம். மீதி பிச்சைக்காரர்களுக்கு தலா பத்து பைசா தருவோம். இந்த இந்து சந்நியாசிக்கு மற்றவர்களைவிட அதிகமாகக் காசு கொடுப்பதற்கு ஒரு சிறிய காரணம் இருக்கிறது. முன்பு நானும் இதேபோன்ற ஒரு சந்நியாசியாக இருந்திருக்கிறேன். இந்து... பிறகு ஸுஃபி... ஆரம்பத்தில் தலையிலும் முகத்திலும் இருந்த ரோமங் களைச் சவரம் செய்து நீக்கினேன். கோவணம் மட்டும் அணிந்திருப் பேன். கறுப்புப் போர்வையையும் ஒரு கம்பையும் கையில் வைத்துக் கொண்டு... முடியும் தாடியும் நீளமாக வளர்கின்றன. எனக்கு அன்னியமாக உலகத்தில் ஒன்றுமில்லை. புல்லும், புழுவும், மரங்களும், ஜந்துக்களும், மிருகங்களும், கடலும், மலையும், பறவைகளும், சூரியனும், சந்திரனும், கோடானுகோடி நட்சத்திரங்களும், பூச்சிகளும், அண்டவெளியும், பிரபஞ்சங்களான சர்வ பிரபஞ்சங்களும்... எல்லாம், எல்லாம் நான்தான்! அனல்ஹக்!

அஹம் ப்ரஹ்மாஸ்மி!

காடும், மேடும், குகைகளும், பாலைவனங்களும் அடிக்கடி ஞாபகத்தில் வரும். கடலின் இரைச்சலைக் கேட்டவாறு நான் வராந்தாவில் உட்கார்ந்திருக்கிறேன். சாய்வு நாற்காலியில் வெறுமனே உட்கார்ந்திருக்கவில்லை. உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறேன். இது போதாதா? என்ன... தமாஷாக இருக்கிறதா? சொல்லப் போனால்- நான் இலக்கியவாதியே அல்ல. இதுவரை எழுதியவையும் இலக்கியமே இல்லை. ஏதோ மனதில் தோன்றுவதை எழுதி வைக்கிறேன். உலகத்தின் ஒரு மூலையில் நான் இருக்கிறேன். அதனால் நான் எழுதுவதை உலக இலக்கியம் என்று குறிப்பிடுகிறேன்.  அவ்வளவு தான். நான் இப்போது உட்கார்ந்து எழுதும் நாற்காலிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயது இருக்கும். இது முன்பு அழகான மரமாக ஏதோ ஒரு அடர்ந்த காட்டில் இருக்கும்போது இதற்கு வயது என்னவாக இருந்திருக்கும்? தெரியவில்லை. ஈட்டி- அதாவது ரோஸ் வுட். ஸ்டூலும் ரோஸ் வுட்டால் ஆனதுதான். மேஜையில் எழுத பயன்படுத்தும் பொருட்கள் இருக்கின்றன. பக்கத்தில் கண்ணாடி டம்ளர்களும், ஃப்ளாஸ்க்கும். ஃப்ளாஸ்க்கில் பால் கலக்காத தேநீர். பிறகு... பீடி, சிகரெட், தீப்பெட்டி அருகில் ஒன்றிரண்டு நாற்காலிகள். ஆரம்ப நாட்களில் சந்நியாசி அந்த நாற்காலியில் உட்கார முடியாது என்று சொல்லிவிடுவார். காசு வாங்கியவுடன் புறப்பட்டுவிடுவார். வாரத்தில் ஒரு நாள் வருவார். அதற்குப் பிறகு அடிக்கடி வருவார். காசு வாங்குவதற்காக அல்ல. அவரைப் பொறுத்தவரை அவருக்கு காசு ஒன்றும் தேவையான விஷயமல்ல. முன்பு கஞ்சா குடித்துக் கொண்டிருந்தார். நானும்கூட அப்போது குடிப்பேன். இப்போது எப்போதாவது பீடி பிடிப்பார். சிகரெட் பிடிப்பதும் உண்டு. பால் போடாத தேநீர் குடிப்பார். சாப்பாடு ஒரு பிரச்சினையாக இருந்ததே இல்லை. இலைகள், பயறு ஆகியவற்றைச் சாப்பிடுவார். அரிசி கிடைத்தால், கிழங்கோ, பருப்போ, பயறோ- ஏதோ ஒன்றுடன் உப்பு, மிளகு ஆகியவற்றைச் சேர்த்து வேக வைத்துச் சாப்பிடுவார். அதற்கும் தேநீருக்கும் உள்ள ஒரே பாத்திரம் அவர் தோளில் இருக்கும் துண்டில் எப்போதும் இருக்கும்.

சில நேரங்களில் எங்களின் இந்த தோட்டத்திலுள்ள ஏதாவதொரு மரத்தினடியில் அடுப்பை மூட்டி சமையல் செய்வார். எங்கள் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து எல்லா வேலைகளையும் அவரே செய்வார். கடந்த ஒரு வருட காலமாக இந்த சந்நியாசி வசிப்பது சிறிது தூரத்தில் உள்ள ரெயில்வே பாலத்தின் அடியில்தான். நதியின் கரையோடு சேர்ந்துள்ள பாலத்தின் தூண்களுக்கு இடையில் உள்ள உயர்ந்த சிமெண்ட் திண்ணைதான் அவரின் இருப்பிடம். அவரின் உடலுக்கு மேலே மூன்றடி உயரத்தில் இரவு நேரங்களில் ஓசை எழுப்பிய வாறு பயங்கர சத்தத்துடன் புகை வண்டிகள் போய்க்கொண்டிருக்கும்.

"நீள வண்டி” என்றுதான் புகைவண்டியை என்னுடைய மகள் ஷாஹினா குறிப்பிடுவாள். சந்நியாசியும் நானும் வேதாந்தம், தத்துவம் என்று பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருப்போம்.


ஒரு ஆங்கில மாத இதழில் ஒரு கட்டுரை. இன்று இந்த பூமியில் நாம் காணும் உயிரினங்கள் முன்பும் இருந்தன. எத்தனையோ உயிரினங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. இப்படி பூச்சிகளும், மிருகங்களும், பறவைகளும், மீன்களும், செடிகளும், மரங்களும் மட்டுமே இந்த பூமியில் இருந்தன. இப்படி எத்தனையோ ஆயிரம் லட்சம்... கோடி என்றுகூட கூறலாம். வருடங்கள்... இந்த நிலைதான் நிலவியது. அப்போது முந்தா நாள் என்று சொல்வது மாதிரி பத்தோ, பதினைந்தோ கோடி வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் சில மனிதக் குரங்குகள்... அவை ஏதோ சில காரணங்களுக்காக மரங்களில் இருந்து கீழே விழவோ, மரத்துக்கு மரம் தாவவோ செய்கின்றன. அவை புல்வெளிகளில் நான்கு கால்களாலும் ஓடுகின்றன. காலம் கடந்தோடுகிறது. அவற்றில் சில குரங்குகளோ அல்லது அவற்றின் பின் தோன்றல்களோ இரண்டு கால்களால் எழுந்து நிற்கின்றன. காலப்போக்கில் அவற்றின் கைகளின் நீளங்கள் குறைகின்றன. மரக்கொம்புகளால் இரைகளையும் எதிரிகளையும் அவை அடித்து வீழ்த்துகின்றன. குகைகளில் வசிக்க ஆரம்பிக்கின்றன. குளிரில் இருந்தும் உஷ்ணத்தில் இருந்தும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மிருகங்களின் தோல்களால் உடலை மறைக்கின்றன. தீயைப் பயன்படுத்தத் தொடங்குகின்றன. காலம் கடக்கிறது. உலகத்தில் பல பாகங்களுக்கும் அவர்கள் பிரிகிறார்கள். நம்பிக்கைகள், மதம் என்று பலவும் உண்டாகின்றன. காலப்போக்கில் பல மாற்றங்களைப் பெற்று இன்றைய மனிதர்களாக நாம் முன்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம்.

நான் இப்போது சொன்னதைவிட மிகவும் அருமையாக அந்த மாத இதழில் எழுதப்பட்டிருந்தது. ஒரு அறிவியல் அறிஞர் அந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். இந்தக் கட்டுரையை அந்த சந்நியாசி எடுத்து கடைசி வரை படித்தார். அதற்குப் பிறகு நாங்கள் அந்தக் கட்டுரை குறித்துப் பேச ஆரம்பித்தோம். அவர் சந்நியாசம் தொடங்கி நாற்பது, நாற்பத்தைந்து வருடங்களாகிவிட்டன. ஆங்கிலம் தவிர இன்னும் சில இந்திய மொழிகளும் அவருக்குத் தெரியும். எவ்வளவோ விஷயங்களை அவர் படித்தார். இல்லாமலே போய்விட்ட மதங்களையும், இப்போது இருக்கும் மதங்களையும் பற்றி படித்தார். கடைசியில் விரக்தி தோன்றி, சந்நியாசியாகிவிட்டார். அவர் ஒரு காலத்தில் லைப்ரேரியனாக இருந்தவர். பல சந்நியாசிகளுடன் தங்கி இருந்திருக்கிறார். நானும்தான். மலைகளிலும், குகைகளிலும், பாலைவனங்களிலும்... அந்த வகையில் நாங்கள் பேசிக்கொண்டிருப்பதற்கு விஷயங்கள் நிறையவே இருக்கின்றன.

சுற்றிலும் மரங்கள் இருக்க, தனியாக அமைந்திருந்தது எங்கள் வீடு. இங்கே மகளின் தாயும், மகளும், நானும் மட்டும்தான் பேசக் கூடியவர்கள். பேச முடியாதவர்கள்- நான்கு பசுக்கள், பத்து பதினெட்டுக் கோழிகள், ஒரு நாய்க்குட்டி, பிறகு அவ்வப்போது வரும் விருந்தாளிகளாக சில காகங்கள், இரண்டு பருந்துகள். இவை இரண்டும் "க்...கீ” என்று கத்தியவாறு மரக்கிளைகளில் வந்து உட்கார்ந்து கொண்டிருக்கும். மகளின் தாய் வளர்க்கும் நல்ல கலப்பின விருத்தியில் பிறந்த கோழிக் குஞ்சுகளைத் தூக்கிக்கொண்டு போய்ச் சாப்பிடுவது தான் இவற்றின் வேலை. மகளின் தாய், பருந்துகளின் வம்சத்தையே சதா நேரமும் சாபமிட்டு அழிக்க நினைப்பாள். ஆண் இனத்தின் இரக்கமில்லாத தன்மையை ஒரு பிடி பிடிப்பாள். இந்த வீடு இருக்கின்ற நிலத்தின் அளவு இரண்டு ஏக்கர். எனக்குத் தெரிந்த வரையில் ஆண் என்று இங்கு இருப்பது நானும், ஒரு ஒயிட் லெகான் சேவலும் மட்டும்தான். ஒயிட் லெகான் சேவலுக்கு அழகான பதினேழு மனைவிகள் இருக்கிறார்கள். அவனைப் பார்த்து, பருந்தை விரட்டி யடிக்கும்படி கூறுவது முறைதானா? தர்மமான செயலா? என்னை எடுத்துக்கொண்டால் நான் உலக இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய வேலை எப்போதும் இதுதான். எங்களுடைய இந்த இடத்திற்கு சில நேரங்களில் கீரிகள் வருவது உண்டு. அவை எங்கே தங்குகின்றன என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அருகில் இருக்கிற மலை இடுக்குகளில் அவை வசிக்கலாம். எப்போதுமே இங்கு இருப்பவர்கள் சாரைகளும் பாம்புகளும். பாம்புகளில் இரண்டு வகை இருக்கின்றன. வெளுத்த வரிகள் உள்ள விஷம் இல்லாத பாம்பு ஒருவகை. இன்னொரு வகை விஷமுள்ள மூர்க்கன் பாம்பு, கீரி, சாரை, பாம்பு- மூன்று பேருக்குமே கோழிக்குஞ்சு என்றால் உயிர். நரிகூட இங்கு இருக்கிறது. பனை எறும்பும் இங்கு உண்டு. இவர்கள் ஒருபுறமிருக்க, நீளமான பெரிய கறுத்த தேள்கள், கரையான்கள் ஆகியவையும் உண்டு. எலிகளுக்கு இங்கு பஞ்சமே இல்லை. தவளைகளும் இங்கு இருக்கின்றன. மூன்று நான்கு ஆமைகளும். இது இப்படி இருக்க, ஒரு பாம்பையோ தேளையோ உடனடியாகக் காட்டச் சொன்னால், மை போட்டுப் பார்த்தால்கூட அவற்றை நம்மால் காட்ட முடியாது. சொல்லப்போனால்- அவை எல்லாமே பேய்களைப் போல, திடீரென்று வீட்டுக்கு முன்னால் ஓடிக்கொண்டிருக்கும். பகல் நேரங்களில் பாம்புகள் வந்தால் கோழிகள் கொக்கரிக்கும். பறவைகள் கூட்டம் கூடி ஆர்ப்பாட்டம் பண்ணும். பறவைகள் பலவிதம். எல்லாம் இங்கு உண்டு. பட்டாம்பூச்சிகள், எறும்புகள், ஈக்கள், புழுக்கள், வண்டுகள் என்று எல்லா உயிரினங் களுமே பூமிக்குச் சொந்தக்காரர்கள்தாம். (இந்த வீடு இருக்கிற இரண்டு ஏக்கர் நிலமும் நான் எப்படியெல்லாமோ கஷ்டப்பட்டு விலைக்கு வாங்கியது. இந்த வகையில் பதிவுக் கட்டணம் என்று அரசாங்கம் மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் என்னிடம் வாங்கியிருக்கிறது. வருடம்தோறும் தவறாமல் வரி கட்டுகிறேன். வருமான வரி கட்டுவதும் ஒழுங்காக நடக்கிறது. அப்படியானால் பருந்து, எலி, பாம்பு, தேள், நரி ஆகியவர்களிடமிருந்து எங்களுக்குப் பாதுகாப்பு தரவேண்டியது அரசாங்கத்தின் கடமையல்லவா?)

எல்லாவற்றுக்கும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறது. ரோக அணுக்கள், புல், செடிகள், மரங்கள், ஈ, கொசு, முட்டை, பாம்பு, எலி, நரி, பசு, நாய், பன்றி, மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள், பறவைகள், வவ்வால்கள், ஆமைகள், மனிதர்கள்- ஆத்மா எல்லாருக்குமே இருக்கிறது. சந்நியாசி இப்படித்தான் சொன்னார். அப்படியானால் ஒரு ஆத்மா இன்னொரு ஆத்மாவைச் சாப்பிடுவது சரியா? இந்துக்களில் பெரும்பாலானவர்களுக்கு இதில் விருப்பமில்லை. பார்ஸிகள், யகுதன்மார்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் ஆகியவர்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவான கருத்து கிடையாது. என்ன இருந்தாலும் யாரையும் துன்புறுத்தாமல் வாழ முடிந்தால், மனிதனைப் பொறுத்தவரை அது ஒரு மிகப் பெரிய விஷயம்தான். என்ன மிகப்பெரிய விஷயம்? நாம் மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து இந்த பூமியில் வாழ்கிறோம். இந்த பூமி ஒரு உருண்டை இது இரவும் பகலும் தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருக்கிறது. அதோடு சூரியனையும் இது சுற்றுகிறது.


எல்லாம் சேர்ந்து எங்கோ பாய்ந்து போய்க்கொண்டிருக்கின்றன. ஆனால், பூமி சுற்றுவது மாதிரி எனக்குத் தோன்றுவதில்லை. இருந்தாலும் பூமியின் எல்லாப் பக்கங்களிலும் ஆகாயம்தான் தெரிகிறது. நட்சத்திரங்களும் இருக்கின்றன. எங்கும் தொடாமல் இந்த பூமி வெட்டவெளியில் சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது சிறியதோ, பெரியதோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்- இது ஒரு விந்தையான விஷயம்தான்! நான் நாற்காலியில் உட்கார்ந்தி ருக்கும்போதும் முற்றத்திலும் நிலத்திலும் நடக்கும்போதும், உணர்வி லும் உறக்கத்திலும் எந்தவித தொடர்பும் இல்லாமல் வெட்ட வெளியில் நின்று சுற்றிக்கொண்டிருக்கும் பூமியைப் பற்றி நினைத்துப் பார்ப்பேன். ஆனால், இது எப்படி என்பதற்கு என்னால் கடைசி வரை விடையே கண்டுபிடிக்க முடியாது. நான் இங்கே உட்கார்ந்திருக்கிறேன். தூரத்தில் சாலையில் கார்களும் பஸ்களும் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கின்றன. ஆகாயத்தில் விமானம் சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கிறது. நான் இந்த நாற்காலியில் அமர்ந்து வெளிக்கதவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன். யாராவது வருகிறார்களா என்ன?

எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் எங்களுக்கு இஷ்டம்தான். குறிப்பாக மகளுக்கு. விருந்தாளிகள் வந்தால் ஒரு திருவிழாபோல வீடு ஆகிவிடும். இந்த வீட்டிற்கு சந்நியாசி தவிர, ஏழு பிச்சைக்காரர்கள் வருவார்கள். மூன்று இந்துக்களும், ஐந்து முஸ்லிம்களும். சாதாரணமாக இந்தப் பகுதியில் இந்துவாக இருக்கும் பிச்சைக்காரர்கள் முஸ்லிம்களின் வீடுகளுக்குப் பிச்சை கேட்டுப் போவதில்லை. அவர்கள் முஸ்லிம் வீடுகளைப் பார்த்தவுடனே கண்டுபிடித்துவிடுவாôகள்.

“உரோம மதங்களின் பாகம்தானே வீடுகளும்!'' இப்படிக் கூறுவார் சந்நியாசி.

உரோம  மதங்கள்!

முதலில் எனக்கு அவர் என்ன சொல்கிறார் என்பதே புரியவில்லை. கொஞ்சம் சிந்தித்துப் பார்த்த பிறகுதான் எனக்கே இது புரிந்தது. இதுவரை இந்த பூமியில் இருக்கும் எல்லா மதங்களுமே உரோமத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. கொஞ்சம் உரோமத்தை நீக்கி, கொஞ்சம் ஒரு இடத்தில் மட்டும் வைத்து, கொஞ்சம் இன்னொரு இடத்தில் மட்டும் வைத்து, கொஞ்சம் இன்னொரு இடத்தில் மட்டும் ஒதுக்கி, சிலர் முழுமையாக நீக்கி, சிலர் முழுமையாக உரோமத்தை  அப்படியே விட்டு.. இப்படிப் போய்க்கொண்டிருக்கிறது உரோம மதங்களின் கதை! இப்போது உரோமங்களின் பிடியில் இருந்து மனித இனம் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆடை அணிவதிலும் மாற்றம் உண்டாகத் தொடங்கியிருக்கிறது. இப்போது இந்துவையோ கிறிஸ்துவனையோ முஸ்லிமையோ பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. இல்லாவிட்டால் தேவாலயங்களைத் தேடிப் போக வேண்டும். தேவாலயங்களின் அமைப்பில் வித்தியாசம் இருக்கிறது அல்லவா? அதைப்போல ஒரு வித்தியாசம் வீடுகளுக்கு இல்லை. இந்தப் பகுதியிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் வீடுகளின் கதவுகளும் ஜன்னல்களும் பச்சை நிறத்தில் "பளிச்” என்று பிரகாசித்துக் கொண்டிருக்கும். அதை வைத்து, இந்து மதத்தை வழிபடும் பிச்சைக்காரர்கள் அந்த வீடுகளைத் தேடி வரமாட்டார்கள். பச்சை நிறத்தைப் பார்த்து அவர்களுக்கு பயமா என்ன? அதெல்லாம் ஒன்றுமில்லை. ஒருவேளை... ஒன்றுமே கிடைக்காது என்று அவர்கள் நினைப்பது காரணமாக இருக்கலாம்.

இந்த வீட்டிற்கு சந்நியாசியும் இந்துக்களான பிச்சைக்காரர்களும் எப்படி வந்தார்கள்?

நாங்கள் இந்த வீட்டையும், சுற்றியிருக்கும் இடத்தையும் விலைக்கு வாங்கிய காலத்தில் இந்த வீட்டின் ஜன்னல்கள், கதவுகள் எல்லாமே பச்சை நிறத்தில்தான் இருந்தன. நான் அவற்றை லேசாகச் சுரண்டிப் பார்த்தபோது, பெயிண்டுக்குக் கீழே நல்ல மாணிக்காத்த வீட்டியாலும், பலா மரத்தாலும் அவை செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. பச்சை நிறம்  எனக்கு மிகவும் பிடிக்கும். கண்ணுக்குக் குளிர்ச்சி தருகிற மரங்களும், செடிகளும், பச்சைப் பசேல் என்று காட்சியளிக்கும் நெல்வயல்களும்... ஆனால், வீட்டியும் பலாவும்- அவையாகவே இருக்கட்டுமே! இரண்டு வாரங்களில் அதை முழுவதும் சுரண்டி எடுத்து, அதை நன்கு கழுவி விட்டு, காய வைத்து வார்னீஷ் அடித்தோம். வீடு முழுவதையும் கழுவிவிட்டோம். வீட்டிற்கு வெள்ளை அடித்தோம். குடி தண்ணீர் தருகின்ற கிணற்றின் நிலை? இந்தப் பகுதியில் வாழ்கின்ற பெரும் பாலான இந்துக்களின், முஸ்லிம்களின் பழக்க- வழக்கங்களை நான் நன்றாகவே கவனித்து வந்திருக்கிறேன். இரண்டு மதங்களைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் குளிப்பது கிணற்றில்தான். நூறு வருடங்களாக நடந்து வரும் ஒரு விஷயம் இது. வீட்டில் எல்லோருக்குமே பொதுவாக இருக்கும் ஒரே ஒரு துண்டு. அது அழுக்கடைந்து போயும், பழையதாகவும் இருக்கும். அதை ஒரு வீட்டைச் சேர்ந்த எல்லாருமே பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எண்ணெய், களிம்பு போன்றவற்றைத் தேய்த்துக்கொண்டு சோப், சீயக்காய், அரப்பு போன்றவற்றைக் கையில் எடுத்துக்கொண்டு கிணற்றுப் பக்கம் போவார்கள். எல்லா வற்றையும் கிணற்றுக்கு அருகில் இருக்கும் கல் திண்டில் வைப்பார்கள். (எல்லா கிணறுகளுக்கும் மறைவிடம் என்று ஒன்று இருக்கும் என்று கருத வேண்டாம்.) நேரம் இருந்தால், துண்டை நனைத்து சோப்பு போட்டு கிணற்றின் பக்கத்தில் இருக்கும் கல்லில் வைத்து துவைத்து, அருகில் உள்ள திண்டில் வைப்பார்கள். துண்டில் இருக்கும் அழுக்கும், சோப்பு நீரும் கிணற்றுக்குள் விழும் என்பதை மறந்துவிட வேண்டாம். பிறகு நீரை கிணற்றுக்குள் இருந்து எடுத்து தலை வழியாக ஊற்று வார்கள். குளிக்கும்போதே பாதி தண்ணீர் கிணற்றுக்குள் கட்டாயம் விழும். மீண்டும் தண்ணீரை எடுத்து தலையில் ஊற்றுவார்கள். உடலில் உள்ள அழுக்கு கலந்த தண்ணீர் எந்தவிதத் தடையுமின்றி கிணற்றில் விழும்.  சில நேரங்களில் இரண்டு மூன்று பேர் ஒரே நேரத்தில் குளிப்பார்கள். இதற்கிடையில் பெண்கள் குடத்துடன் அங்கு வந்து குடிப்பதற்கும் சோறு சமைப்பதற்கும் அதே கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போவார்கள். தாகம் உண்டாகி ஏதாவதொரு வீட்டில் ஏறி தண்ணீர் கேட்டால் அவர்கள் நமக்குக் கொண்டு வந்து தருவது கிணற்றில் இருந்து எடுத்துக்கொண்டு வந்த இந்தத் தண்ணீரைத்தான். குஷ்டம், சயம் என்று மட்டுமல்ல... உலகத்தில் உள்ள எல்லா நோய் களின் கிருமிகளும் அந்தக் கிணற்று நீரில் இருக்கும் என்பது மட்டும் உண்மை. ஆண்களும் பெண்களும் கட்டாயம் குளிக்கத்தான் வேண்டும். அதற்காக கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து சற்று தூரத்தில் ஒரு குளியலறை கட்டி, ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொண்டு வந்து வைத்துக் குளித்தால், கிணற்று நீர் அசுத்தம் ஆகாமல் இருக்குமே என்று சொன்னால் கிண்டலாகச் சிரிப்பார்கள்.

“தண்ணீர் அசுத்தமா ஏன் ஆகுது? அதுக்காகத்தானே கிணத்துல மீன்களை வளர்க்கறோம்?''

இதற்கு என்ன பதில் சொல்வது?

எங்கள் கிணற்றில் தண்ணீர் வற்றியபோது, ஒரு அங்குல நீளமுள்ள நிறைய மீன்கள் கிடைத்தன.


அவற்றை தண்ணீர் நிறைந்த ஒரு பாத்திரத்தில் இட்டோம். பழம்பொருட்கள் பலவும் கிணற்றுக்குள் கிடந்தன. அவை எல்லாவற்றையும் எடுத்து தென்னை மரத்தினடியில் போட்டோம். சேறு, அழுக்குகள், கயிறுகள், சட்டிகள், பாத்திரங்கள், மந்திரங்கள் எழுதிய குப்பிகள், பழைய துணிகள், கிழிந்துபோன சட்டைகள், துண்டுகள், சீயக்காய் அட்டைகள்... இப்படி எத்தனையோ பொருட்கள் அங்கே- கீழே கிடந்தன. கிணற்றைக் கழுவி சுத்தமாக்கி னோம். பொட்டாசியம் பெர்மாங்கனேட், க்ளோரின் பவுடர் எல்லாம் கலந்து உள்ளே ஊற்றினோம்.

கிணற்றிலிருந்து எடுத்த மீன்களை கிணறு சுத்தம் செய்ய வந்தவர்களுக்குக் கொடுத்தோம். அவர்களால் அதை நம்பவே முடியவில்லை.

“கிணத்துல இந்த மீன்களை போட வேண்டாமா?''

“வேண்டாம்.''

“பிறகு எப்படி தண்ணி சுத்தமாகும்?''

அவர்கள் சிரித்தவாறு மீன்களுடன் போனார்கள். கழுவி சுத்தம் செய்த வெள்ளை மணலை, கிணற்றின் அடிப்பகுதியில் போட்டோம். ஒரு ஆள் உயரத்திற்கு சுத்தமான நீர் உண்டானது.

வீட்டையொட்டி இருக்கும் நிலத்தில் நிறைய மரங்கள் இருக்கின்றன. பக்கத்து வீடுகளையொட்டி இருக்கும் நிலங்களில்கூட இதே மாதிரி ஏராளமான மரங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்தப் பகுதியில் ஏராளமான பறவைகள்!

மொத்தத்தில்- இந்த இடத்தை ஒரு அழகான பர்ணசாலை என்று கூட சொல்லலாம். இங்கு அமைதியாக உட்கார்ந்து சிந்தனை செய்யலாம். எழுதலாம். எந்தப் பக்கம் பார்த்தாலும் மலர்கள் இருக்கின்றன. எந்தத் திக்கில் நோக்கினாலும் அழகின் ஆட்சி! அமைதியோ அமைதி என்று கூறிவிடுவதற்கில்லை. ஓசை எழுப்பும் வண்டுகள், "கீச்கீச்” என்று கத்தும் பறவைகள்... இது போதாதென்று அமைதியை இல்லாமல் விரட்டும் சௌபாக்யவதிகளான பெண்களின் சிரிப்பு வேறு...

பக்கத்து வீடுகளில் பகல் நேரத்தில் ஆண்கள் இருப்பது அபூர்வம். பெரும்பாலானவர்கள் காலை நேரத்திலேயே வேலைக்குப் போய் விடுவார்கள்.

வேலை எதுவும் இல்லாத நான் மட்டும்தான் இந்தப் பகுதியிலேயே பகல் நேரத்தில் வீட்டில் இருக்கும் ஒரே ஆண். நான் எதையாவது எழுதிக்கொண்டிருப்பதை ஒரு வேலையாக யாரும் எடுத்துக் கொள்வதில்லை. "உடலால், மனசால் முழுமையான ஈடுபாட்டுடன் வேலை செய்றேன். தயவு செஞ்சு தொந்தரவு செய்யாதீங்க” என்று எல்லாரிடமும் கூறிக்கொண்டிருக்க முடியுமா?

நான் ஒரு டம்ளர் பால் கலக்காத தேநீர் குடித்து, ஒரு பீடி பிடித்து முடித்து, உலக இலக்கியம் படைக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு முன்னால் வெள்ளை மணல் விரித்த விசாலமான முற்றம் வெயில் பட்டு தங்கம்போல தகதகத்துக் கொண்டிருக்கிறது அங்கு போடப்பட்டிருக்கும் மணல் பரப்பு. அங்கு பறந்து கொண்டிருக்கும் பட்டாம்பூச்சிகள்கூட அப்படித்தான். பொன் நிறத்தில் மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்தப் பட்டாம்பூச்சிகளையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு முற்றத்தின் ஒரு மூலையில் நின்று கொண்டிருக்கிறான் அழகான- தடிமனான ஒயிட் லெகான் சேவல்.

நான் இந்த நாற்காலியை விட்டு எழுந்துவிட்டால் போதும்- அடுத்த நிமிடம் அவன் வந்து இதில் பந்தாவாக உட்கார்ந்து கொள்வான். அவனுக்கு என்னைப் பார்த்து பயமோ உயர்ந்த மரியாதையோ ஒன்றும் கிடையாது. அவன் மகளின் தாய் பக்கத்தைச் சேர்ந்தவன். அதனால் அவனைப் பற்றி நான் ஒன்றும் பேசுவதற்கும் இல்லை. நியாயமாகப் பார்த்தால் என்னைவிட நிச்சயம் அவன் பெரியவன்தான். அவனுக்கு மனைவிகள் என்று இருப்பவர்கள் பதினேழு அழகான கோழிகள் அல்லவா? எல்லா கோழிகளுமே அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவைதாம். "கொ... கொ...” என்று அவன் மெதுவான குரலில் அழைத்தால் போதும். அடுத்த நிமிடம் அந்த பதினேழு கோழிகளுமே அவனுக்கு முன்னால் வந்து ஆஜர் ஆகிவிடும். என்னை எடுத்துக் கொண்டால் எனக்கு மகளின் அம்மா ஒருத்தி மட்டுமே மனைவி! அவள் மட்டும்தான். இப்படிப் போகிறது என்னுடைய கதை. இருந்தாலும் பரவாயில்லை. கடவுளை மனதில் நினைத்துக்கொண்டு உலக இலக்கியம் படைக்கலாம் என்று தாளில் பேனாவை வைக்கப் போனால்-

“டாட்டோ...'' என்று கவலை கலந்த குரலில் அழைத்தவாறு என்னுடைய மகள் ஷாஹினா என் அருகில் வந்து நிற்கிறாள். (மகள் என்னை "அப்பா” என்று அழைப்பதற்குத்தான் "டாட்டோ” என்று அழைக்கிறாள். இதற்காக மன்னிக்க வேண்டும்.) மகள் என்னைத் தேடி வந்திருப்பது நிச்சயம் ஒரு கவலை தோய்ந்த விஷயத்திற்காகத்தான். ஐந்தரை வயதான இந்த என் மகளின் மனதிற்குள் ஒரு மிகப் பெரிய விஷயம் அணுகுண்டு மாதிரி புகைந்து எரிந்து கொண்டிருக்கிறது. அது என்ன தெரியுமா?

மகளுக்கு விளையாடுவதற்கு ஆள் இல்லை.

என்ன செய்வது? பீப்பிளி என்று அழைக்கப்படும் பீப்பி, பொம்மைகள், ரப்பர் பந்துகள், சிறிய வீடு, பாடப் புத்தகங்கள், பக்கெட், பாத்திரங்கள், ஊஞ்சல், சைக்கிள்- எல்லாம் அவளுக்கு இருக்கின்றன. சொல்லப்போனால் நான் வாங்கிக் கொடுத்திருக்கும் இந்தப் பொருட்களை வைத்து மணிக்கணக்கில் விளையாடலாம். ஆனால், இந்த விளையாட்டுப் பொருட்கள் என் மகளுக்குத் தேவையில்லையாம். அப்படியொரு விரக்தி அவளின் மனதில். மகளுக்கு இப்போது தேவை அவளைப் போன்ற சிறு குழந்தைகள். உரக்க சத்தம்போட்டவாறு மண்ணில் உருண்டு விளையாட வேண்டும். இதற்கு என்ன வழி? கடவுளே! அவளுடன் விளையாடுவதற்கு குழந்தைகள் எங்கேயிருந்து கிடைக்கும்?

நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நானும், மகளின் தாயும் மகளின் விளையாட்டுகளில் பங்கு கொள்வது உண்டு. மகளின் தாய்க்கு ஏகப்பட்ட வேலைகள். இங்கே வீட்டில் வேலைக்காரர் என்று யாரும் இல்லை. முற்றத்தை வாரிச் சுத்தம் செய்ய வேண்டும். பாத்திரங்கள் கழுவ வேண்டும். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்ய வேண்டும். சமையல் பண்ண வேண்டும். இரண்டு ஏக்கர் நிலத்தில் நடந்து பல விஷயங்களையும் பார்க்க வேண்டும். ஓலையோ தேங்காயோ கீழே விழுந்திருந்தால், அவற்றை எடுக்க வேண்டும். வேலிகளில் கரையான் புற்று இருந்தால் அவற்றை அழிக்க வேண்டும். வேலிகளுக்கு பதிலாக நான்கு பக்கங்களிலும் சுவர்கள் கட்ட வேண்டும். அதைச் செய்வதாக இருந்தால், அதற்குக் கொஞ்சம் பணம் செலவாகும். கோழிகள், பசுக்கள், நாய் ஆகியவற்றுக்கு உணவும் தண்ணீரும் கொடுக்க வேண்டும். அதனால் மகளின் விளையாட்டில் நான்தான் சேர வேண்டியதிருக்கிறது. ஆனால், எனக்கும் வேலை என்ற ஒன்று இருக்கிறதே! நான் இந்த உலக இலக்கியத்தைப் படைப்பதற்காக உட்காருகிறபோது, மகள் என்னை அழைப்பது எதற்காக என்கிறீர்கள்? "நொண்டி விளையாட்டு” விளையாடுவதற்காக. முற்றத்தில் இருக்கும் மணலில் சில கோடுகளும் கட்டங்களும் இருக்கும். ஒரு காலை மட்டும் வைத்துக்கொண்டு நாம் அதைத் தாண்ட வேண்டும். பொதுவாக நான் நன்றாகவே தாண்டுவேன்.


சில நேரங்களில் தவறுதலாக ஏதாவது செய்து விடுவேன். காலால் தொடக்கூடாத இடத்தில் என் கால் பட்டுவிடும். இப்படி எத்தனையோ தவறுகள்! இப்போது இந்த மாதிரி விளையாட்டுகளில் என்னால் முழுமையாக ஒன்ற முடியவில்லை. நான் வேண்டுமானால் சமையலறைக்குப் போகிறேன். மகளின் தாய் வந்து நொண்டி விளையாட்டு விளையாடினால் என்ன?

“மகளே, அம்மா எங்கே?''

மகள் சொன்னாள்:

“அம்மா பேசிக்கிட்டு இருக்காங்க.''

மகள் சொன்னது சரிதான். ராஜலா, கதீஜா பீபி, சௌமினிதேவி ஆகிய மூன்று சௌபாக்யவதிகளுடன் வேலிக்கு அருகில் நின்றவாறு என் மனைவி பேசிக்கொண்டிருக்கிறாள். அவர்கள் எல்லாருக்குமே  ஏகப்பட்ட வேலைகள் இருக்கும். இருந்தாலும் இந்த சௌபாக்யவதிகள் பெண்கள் ஆயிற்றே! அவர்கள் என்னென்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் பேச வேண்டியதிருக்கும்!

நான் சொன்னேன்:

“மகளே... டாட்டோவுக்கு கொஞ்சம் எழுத வேண்டிய வேலை இருக்கு. நீ போயி அம்மாவைக் கூப்பிட்டு வந்து விளையாடு... என்ன?''

மாமரத்திற்குக் கீழே நான் ஒரு ஊஞ்சல் கட்டித் தொங்க விட்டிருக்கிறேன். அதைச் செய்திருப்பதே மகளுக்காகத்தான். ஆனால், அதில் உட்கார்ந்து ஆடுவது பெரும்பாலும் யார் தெரியுமா? மகளின் தாய், சௌமினி தேவி, ராஜலா, கதீஜா பீபி ஆகிய சௌபாக்யவதிகள் தாம். சில நேரங்களில் ஊஞ்சலில் ஆட அவர்கள் மகளையும் அனுமதிப்பது உண்டு.

மகள் சொன்னாள்:

“டாட்டோ... டாட்டோ... சொன்னீங்கள்ல... பூச்சி ஒண்ணு... தேளு... தோட்டத்துல போய்க்கிட்டு இருக்கு...!''

என்ன இருந்தாலும் பெண் இனமாச்சே! சொல்வதைக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

நான் பேனாவை மூடி வைத்துவிட்டு, ஒரு பீடியைப் புகைத்தவாறு முற்றத்தில் இறங்கினேன். அப்போது ஒயிட் லெகான் சேவல் என்னுடைய நாற்காலியில் வந்து உட்காருவதற்காக நாலடி முன்னால் நடந்து வந்தான். நான் கோபத்துடன் சத்தம் போட்டேன்:

“டேய்... உன்னையும் உன்னோட மனைவிமார்களையும் நான்...'' பாதிதான் சொல்லி இருப்பேன். அதற்குள் மகள் என்னை பயமுறுத்தினாள்.

“இருங்க... இருங்க... அம்மாக்கிட்ட சொல்றேன்.''

“அம்மாக்கிட்ட சொல்லுவியா? சொல்லு... எல்லாத்தையும் நான் அடிச்சு மிதிக்கப் போறேன்... கோழி, பசு, நாய், அம்மா, மகள் எல்லாரையும்...''

அவ்வளவுதான்-

மகளின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. மகள் சொன்னாள்:

“எல்லா வீட்லயும் நிறைய குழந்தைங்க இருப்பாங்க. இந்த வீட்ல ஒரு அம்மாவும் ஒரு டாட்டோவும் மட்டும்தான். கேட்டா, டாட்டோ சொல்றீங்க அடிச்சு மிதிப்பேன்னு...''

மகள் இப்படிச் சொன்னதும் அவளை அப்படியே வாரி எடுத்து, நாற்காலியில் வந்து அமர்ந்தேன்.

“மகளே... டாட்டோ சும்மா சொன்னேன்டா கண்ணு...'' என்று சொல்லியவாறு, வேண்டுமென்றே கோபக் குரலை வரவழைத்துக் கொண்டு மகளின் தாயை அழைத்தேன்.

“அடியே...!''

ஒரே நிசப்தம். நான் அழைத்தது அவள் காதில் விழுந்திருக்கும். இருந்தாலும், பதிலைக் காணோம். வீட்டில் உள்ள யாருக்கும் என்னைப் பார்த்து பயம் கிடையாது. ஒயிட்  லெகான்  சேவல் என்னை நான்கைந்து முறை கொத்தியிருக்கிறான். எங்களின் பசுக்களில் பெரிய பசுவான கறுப்பி இரண்டு முறை என்னை முட்டியிருக்கிறாள்- அதுவும் பயங்கர பலத்துடன்.

“அடியே...!''

அவள் இப்போதும் நான் அழைத்ததைக் கேட்டது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. கணவர்கள் மனைவிகளின் கூந்தலை இழுத்துப் பிடித்து கன்னத்தில் இரண்டு இடி இடித்தால்தான் அவர்கள் சரியாக வருவார்கள்! இந்தத் தத்துவத்தை நான் சிறு வயதிலேயே கற்றுக்கொண்டேன். ஆனால் நான் ஒரு ஹென்பெக்ட் ஹஸ்பெண்ட் ஆச்சே! ஹென்பெக்ட் என்பதுடன், காக்பெக்ட் என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். பசு என்னைக் குத்திவிட்டுத்தான் மறுவேலை பார்க்கும்.

“அடியே!''

“என்ன?'' தூரத்தில் இருந்து அவள் குரல் கேட்டது. நாதப்ரம்மம் மாதிரி ஒன்பதாவது முறை அழைத்தபோதுதான் அவளிடமிருந்து பதிலே வருகிறது. பதில் கூறியவாறே மெதுவாக நடந்து வந்த அவளைப் பார்த்து நான் சொன்னேன்:

“மகளோட விளையாட்டுத் தோழிகள் விஷயத்துல நீ கொஞ்சம் கவனம் செலுத்தணும். சொல்லப்போனா, இது சத்தியாகிரகங்களோட காலம். மரணத்தைத் தழுவினவங்களும், இப்போ வாழ்ந்துக்கிட்டு இருக்கிறவங்களுமான நம்மோட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அரசியல் தலைவர்கள் நமக்குத் தந்திருக்கிற ஒரே ஆயுதம் இதுதான். எப்போ எதுக்குன்னு இல்லாம எப்ப வேணும்னாலும் இஷ்டம்போல இதை எடுத்துப் பயன்படுத்தலாம். ஜாக்கிரதை! மரணம் வரை உண்ணாவிரதம்! புரியுதா? அப்பாவையும் அம்மாவையும் மாத்தணும்னு மக்கள் வீட்டுப் படியில உட்கார்ந்து உண்ணாவிரதம் இருக்காங்க. என்ன செய்யிறது? இப்போ நம்மளோட அருமை மகள் மரணம் வரை உண்ணாவிரதம் இருக்கான்னு வச்சுக்கோ. எங்கே? வீட்டுப்படியில... டாட்டோவையும் அம்மாவையும் மாத்தணும்! அஞ்சாறு குழந்தைங்க உள்ள அப்பாவும் அம்மாவும்தான் மகளுக்கு வேணுமாம். அரசாங்கம் என்ன செய்யிறது? நீதான் என்ன செய்வே?''

மகளின் தாய் சொன்னாள்:

“இவளோட தொடையில அடிச்சு ஒரு வழி பண்ணுறேன். இப்படித் தான் இவ சில நேரங்கள்ல சம்பந்தமில்லாம ஏதாவது சொல்லுவா...''

இந்த அணுகுண்டு யுகத்தில் சொல்ல வேண்டிய வசனம்தான். மனிதன் சந்திர மண்டலத்தில் இறங்கி செவ்வாய் கிரகத்தில் இறங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அமைதியாக இருப்பது தப்பான செயல்தான்!

மகள் சொன்னாள்:

“அம்மா, என்னை அடிச்சிடுவேன்னு சொல்லுது டாட்டோ...''

நான் மகளைத் தட்டிக்கொடுத்து விட்டுச் சொன்னேன்:

“அடியே... உனக்கு அரசியல் புரிய மாட்டேங்குது. ஒரு குடிசைத் தொழில் மாதிரிதான் இங்க நடக்குற அரசியல். அதே நேரத்துல நாடு முழுவதும் வேலை இல்லாத தலைவருங்க ஏகப்பட்ட பேர் இருக்காங்க. எங்கே கொடி பறக்க விடுறதுக்கு இடம் இருக்குன்னு தெருத்தெருவா அவங்க அலைஞ்சிக்கிட்டு இருப்பாங்க. நம்ம மகளோட புகாரைக் கேட்டாங்கன்னா அவங்க சும்மாவா இருப்பாங்க? கொடிகளும் கோஷங்களும் உடனே தயாராகிவிடும். அவங்க வருவாங்க. கொடியைப் பறக்க விடுவாங்க. படியில உட்கார்ந்து சத்தியாகிரகம் பண்ற நம்மோட மகளுக்கு அவங்க உதவி செய்ய ஆரம்பிச்சிடுவாங்க. மனம் போனபடி கோஷம் போடுவாங்க... அப்ப நீ என்ன செய்வே?”

"மத்தவங்க என்ன செய்வாங்க?'

"மத்தவங்க” என்று அவள் குறிப்பிட்டது என்னைத்தான். நான் சொன்னேன்:

“எனக்குத் தெரியாது. முற்போக்கான விஷயங்களையும், புரட்சி சம்பந்தப்பட்ட காரியங்கள்லயும் நம்பிக்கைகொண்ட மனிதன்ற முறையில- அரசியல் தலைவர்களோட சேர்ந்து கோஷங்கள் நிறைய தடவை போட்டவன்ற வகையில- மகளோட கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்டு அதற்கு ஆதரவா நிற்பேன்.''

“அப்படின்னா?'' மகளின் அம்மா ஒரு மாதிரி என்னைப் பார்த்தாள். அவளின் குரலில் இலேசாக வித்தியாசம் இருந்தது.


மனைவிகளிடம் உண்டாகும் மாற்றத்தைக் கவனிக்காத கணவன்களும் உலகத்தில் இருக்கிறார்களா என்ன? குடும்பச் சண்டை நடைபெறுவதற்கான சூழ்நிலை வருகிறது. அதை மனதில் வைத்துக் கொண்டு நான் சொன்னேன்:

“மகளுக்கு கூட விளையாட ஆள் வேணும்!''

மகளின் தாய் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தாள். உயர்ந்த வேலி கட்டி பாதுகாப்பாக இருக்கும் வீட்டைச் சுற்றியுள்ள நிலத்தில் பசுக்களும், கோழிகளும், நாயும், மரங்களும், பறவைகளும், பாம்புகளும் இருக்கின்றன. அவற்றைத் தவிர வேறு யாருமில்லை. இருந்தாலும், மகளின் தாய் மெதுவான குரலில் ஒரு உலக ரகசியத்தைக் கூறுகிற மாதிரி சொன்னாள்:

“நான் மூணு மாச கர்ப்பம்ன்றது உங்களுக்குத் தெரியாதா?''

நான் உரத்த குரலில், இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தையும் தாண்டிக் கேட்கிற அளவிற்கு வாய்விட்டுச் சிரித்தேன். பிறகு சொன்னேன்:

“அடியே... இந்த விஷயத்தை மகள்கிட்டயும் அரசியல் தலைவர்கள்கிட்டயும் சொல்ல முடியுமா?''

“அப்ப நாம என்ன செய்றது?''

“மகளை தனியா பக்கத்து வீடுகளுக்கு அனுப்ப முடியாது. வழியில பாம்போ பசுவோ குள்ளநரியோ வந்துச்சுன்னா பிரச்சினை ஆயிடும். நீ மகளைக் கொண்டு போய் மத்த குழந்தைங்ககூட விளையாட விடு. பத்திரமா பாத்துக்கணும்...''

மகளின் தாய் மகளை அழைத்துக்கொண்டு வடக்குப் பக்கம் இருந்த வேலிக்கு அருகில் போனாள்.

ஒரு பிரச்சினை தீர்ந்தது.

சௌபாக்யவதிகள் கதீஜா பீபி, சௌமினி தேவி, ராஜலா ஆகியோருடன் கான்ஃபரன்ஸ் நடத்திவிட்டு, மகளின் தாயும் மகளும் சிறிது நேரத்தில் உற்சாகத்துடன் வந்தார்கள்.

மகளின் தாய் ஒரு தீர்மானத்திற்கு வந்தது மாதிரி சொன்னாள்:

“மகளுக்கு கூட விளையாட ஒரு பூனைக்குட்டி போதும்!''

நான் கேட்டேன்.

“மகளே! உன்கூட விளையாட ஒரு பூனைக்குட்டி இருந்தா போதுமா?''

மகள் சொன்னாள்:

“வெள்ளை பூனைக்குட்டி வேணும்!''

மகளின் தாய் சொன்னாள்:

“வெள்ளை பூனைக்குட்டிதான்!''

கடவுள் அருளால் பெரிய ஒரு ப்ராப்ளம் ஸால்வ் ஆனால்...

“அடியே... பூனைக்குட்டி எங்கே இருக்கு?''

பந்தாவான குரலில் மகளின் தாய் சொன்னாள்:

“வரும்...''

கொஞ்ச நேரத்தில் நானும் ஒயிட் லெகான் சேவலும் மட்டும் அந்த இடத்தில் இருந்தோம். உலக இலக்கியம் படைக்கலாம் என்று பேனாவைத் தாளில் வைத்திருப்பேன். பிரபஞ்சத்தையே உலுக்குகிற மாதிரி ஒரு குரல் திடீரென்று...

“ம்மூவே...''

சௌபாக்யவதி ராஜலாவின் குரல் அது. மகளின் தாயைப் பிரியத்துடன் அவள் இப்படித்தான் அழைப்பாள்.

சிறிது நேரம் சென்றதும் சௌபாக்யவதி ராஜலா மார்பகங்களுக்கு நடுவில் சிறிய ஒரு பஞ்சுப் பொதி மாதிரி, வெளுத்த ஒரு பூனைக் குட்டியை அழகாகப் பிடித்துக்கொண்டு என்னை நோக்கிச் சிரித்தவாறு, முற்றத்தைத் தாண்டி நடந்து அந்தப் பக்கம் போனாள். அவளைத் தொடர்ந்து சந்நியாசி வருகிறார்.... சங்கநாதம் முழங்க!

2

ந்நியாசி போனவுடன் சௌபாக்யவதிகளான சௌமினி தேவியும் கதீஜா பீபியும் வெளிவாசலைக் கடந்து வந்து என்னைப் பார்த்து புன்சிரிப்பைத் தவழ விட்டவாறு பந்தாவாக நடந்து முற்றத்தைக் கடந்து அந்தப் பக்கம் போனார்கள்.

மகளுக்கு விளையாடுவதற்கு ஆள் கிடைத்துவிட்டது. எல்லாம் நல்லபடியே முடிந்துவிட்டது. இனி உலக இலக்கியம் படைக்க வேண்டியதுதான்! ஆனால், ஒரு நினைவு... எத்தனையோ யுகங்களுக்கு முன்பு பாரதமெங்கும் எதிரொலித்த சங்கநாதம்... மலைச்சிகரங்களில் இருந்து... மலையிடுக்குகளில் இருந்து... குகைகளில் இருந்து... அடர்ந்த காடுகளில் இருந்து... கோவில்களில் இருந்து... அந்த சங்கநாதம் இப்போது எங்களின் இந்த சாதாரண வீட்டிலும். இந்த வீடு இருக்கின்ற இடம் முன்பு திப்பு சுல்தானின் பட்டாளம் இருந்த இடமாக இருந்தது! அந்தக் காலத்தில் இது ஒரு மைதானமாக இருந்திருக்க வேண்டும். இங்கு காலாட்படையும் குதிரைப்படையும் இருந்திருக்க வேண்டும். மைசூர் பிரிவு!

எல்லா பிரிவுகளும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. விக்டோரியா மகாராணி, எட்வர்ட் மன்னன், ஐந்தாம் ஜார்ஜ்... ஆகியோரின் ஓவியங்களுக்கான முன் ஆதாரங்கள் இங்கு இருக்கின்றன. இந்த நிலத்தில்... சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் மகா சாம்ராஜ்யம்... அங்கேயும் சூரியன் அஸ்தமித்துவிட்டது. எங்கேயும் சூரியன் அஸ்தமித்துதானே ஆக வேண்டும்! இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு துண்டு நிலத்திலும் வரலாறு மறைந்து கிடக்கிறது. மைதானங்களில் மரங்கள் உண்டாகின்றன. வீடுகள் கட்டப்படுகின்றன. மனிதர்கள் குடியேறுகிறார்கள். எதுவுமே இதற்கு முன்பு நடக்காத மாதிரி அன்றாட வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வளவு விஷயங்களும் ஒரு நிழல்போல் என் மனதில் ஒரு சில விநாடிகள் கடந்து போயின. பூனைக்குட்டியைப் பற்றி நான் எண்ணிப் பார்க்கவில்லை. இந்தப் பூனை என் வாழ்வில் அப்படியொன்றும் பெரிய ஒரு விஷயமாக இருக்க வில்லை என்பதுதானே உண்மை! நான் எழுதிக்கொண்டிருந்ததை தொடர்ந்து எழுதினேன். பேனாவில் இருந்து எந்தவித தடையும் இல்லாமல் வார்த்தைகள் வந்து விழுந்து கொண்டிருந்தன. வெள்ளை பேப்பர்... அதில் ஸ்டைலாக உலக இலக்கியத்தை நான் படைத்துக் கொண்டிருந்தபோது...

உள்ளே இருந்து மரியாதையுடன் யாரோ அழைக்கிறார்கள். அழைப்பது- வேறு யார்? மகளின் தாய்தான். ஏதோ காரியம் சாதிக்க என்பது மட்டும் நிச்சயம்.

“கொஞ்சம் இங்கே வர்றீங்களா?''

“என்ன விஷயம்?''

“இந்தப் பூனைக்குட்டிக்கு ஒரு பேர் வைக்கணும்.''

கட்டாயம் தேவைதான். உலக இலக்கியத்தைப் படைத்துக் கொண்டிருக்கும் ஒருவனிடம் நாறிப்போன ஏதோ ஒரு பூனைக் குட்டிக்குப் பெயர் வைக்கச் சொல்வது என்றால்...? அவள் அப்படிச் சொன்னதும் எனக்குக் கோபம் வந்தது. பேனாவை மூடி வைத்தேன். நாற்காலியில் போய் அமர்ந்தேன். ஒரு மீசை வைத்தால் என்ன என்று நினைத்தேன். மீசை இல்லாததால் முகத்தில் ஒரு குறை இருப்பது மாதிரி எனக்குப் பட்டது. யாரும் என்னைப் பொருட்டாக எடுத்தது மாதிரியே தெரியவில்லை. முன்பு எனக்கு பகத்சிங் மீசை இருந்தது. இந்தியாவின் விடுதலைக்காகக் குருதி சிந்தி வாழ்க்கையைத் தியாகம் செய்த எத்தனையோ போராளிகளான இளைஞர்களே! இளைஞிகளே! என்னுடைய தோழர்களே! உங்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். உங்களின் நினைவிற்காக நான் மீசை வைக்கப் போகிறேன்.

நான் உள்ளே பார்த்தவாறு சொன்னேன்.

“பூனைக்குட்டிக்கு நீங்களே பேர் வையுங்க. எந்தப் பேர் வச்சாலும் எனக்கு சம்மதம்தான்.''

“ம்க்கும்... உங்களோட சம்மதத்தை யார் கேட்டாங்க?''

அவமானப்படுத்திவிட்டாள்! முள்ளைப் போன்ற வார்த்தையால் குத்திவிட்டாள்!

எது வேண்டுமானாலும் ஆகட்டும். உள்ளே- பூனைக்குட்டிக்குப் பெயர் வைக்கும் சடங்கு நடந்து கொண்டிருக்கிறது. கவனமாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

சௌபாக்யவதி ராஜலா கூறுகிறாள்:


“மாளு, சௌம்யா, மிருணாளினி, திலோத்தமா, சரஸ்வதி, இந்திரா, பார்வதி, மாயா, பிரேமலதா, ஸ்ரீகுமாரி, தமயந்தி, பார்கவி, சீதா, ருக்மிணி, லட்சுமி, ஷோபனா, சாந்தா, தாட்சாயணி- இதுல எந்தப்பேரு உங்களுக்குப் பிடிச்சிருக்கு?''

சௌமினிதேவி என்ற சௌபாக்யவதி சொன்னாள்:

“ராஜலான்னு பேர் வச்சா எப்படி இருக்கும்?''

அவர்கள் யாரும் பேசவில்லை. மாமரத்தில் படர்ந்திருக்கின்ற மிளகுக்கொடிக்குக் கீழே இருந்த குப்பைகளைக் கிளறிக் கொண்டிருந்த ஒயிட் லெகான் சேவல் "கொ... கொ... கொ...” என்று மெதுவாக அழைத் தான். அவன் அப்படி அழைத்ததும் அடுத்த நிமிடம் அவனுக்குக் கீழ்ப்படியும் குணத்தைக் கொண்ட அவன் மனைவிகள் அவன்முன் ஆஜர் ஆனார்கள். எல்லாரும் குப்பைகளைக் கொத்தித்தின்றார்கள். ம்... பொறாமைப்பட்டு என்ன பிரயோஜனம்?

“இந்துக்களோட பேரை வைக்க நான் சம்மதிக்கமாட்டேன்.'' பதறிப்போன குரலில் சொன்னாள் சௌபாக்யவதி கதீஜா பிபி. சிறிது நேர அமைதிக்குப் பிறகு உரத்த குரலில் அவள் சொன்னாள்: “இது என் வீட்ல பிறந்த பூனைக்குட்டி. மொத்தம் நாலு குட்டிகள் இருந்துச்சு. மூணு குட்டிகளை நரி கொண்டு போயிடுச்சு. நான் பொத்திப் பொத்தி பாதுகாத்து வளர்த்த குட்டி இது. இந்தப் பூனைக்குட்டிக்கு இஸ்லாம் பேர்தான் வைக்கணும்.''

அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது. இஸ்லாம் பூனைக்கு இஸ்லாம்  பெயர்! இந்து பூனைக்கு இந்து பெயர்! சட்டம் இப்படியிருக்க, இஸ்லாம் பூனைக்கு எப்படி இந்து பெயரை வைக்க முடியும்? அவள் சொல்வது சரிதானே! அவள் கூறுவதை மறுக்க முடியுமா? இன்னொரு விஷயமும் இருக்கிறது. இப்போது சௌபாக்யவதி கதீஜா பீபி தேர்தலில் போட்டியிடுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். செவ்வாய், சூரிய மண்டலம், சந்திர மண்டலம், பூமி- இந்த இடங்களுக்கு மகாராணியாக இருப்பதற்குத்தான். அவளுக்கு மூன்று வாக்குகள் நிச்சயம் கிடைக்கும். நான்காவது வாக்கும் கட்டாயம் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். தலையணை மந்திரம், கண்ணீர், முணுமுணுப்பு ஆகிய தொந்தரவுகளில் இருந்து நான் முற்றிலும் விடுபட வேண்டும் என்பதற்காகவாவது  சௌபாக்யவதி கதீஜா பீபிக்கு கட்டாயம் வாக்களித்துவிடுவேன். என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? சௌபாக்யவதி கதீஜா பீபி எங்கள் அனைவருக்கும் மிகவும் வேண்டியவள். சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு ஈருளியை மகளின் தாய்க்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்போவதாக போன வாரமே அவள் சொல்லியிருக்கிறாள். நூறு தென்னைமடல்- அதற்கு எப்போது வேண்டுமானாலும் காசு கொடுக்கலாம் என்ற வாக்குறுதியுடன் சௌபாக்யவதி ராஜலாவுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறாள் சௌபாக்யவதி கதீஜா பீபி. அதைக் கிழித்து காய வைத்து, அதற்குப் பிறகு வீட்டின் மேற்கூரையாக அதை வைத்து அவள் வேய வேண்டும். அரிசி கிடைப்பதே மிகமிக கஷ்டமாக இருக்கும் காலம் இது. சொல்லப்பேனால் உணவுப் பிரச்சினை என்பது இங்கு ஒரு மிகப்பெரிய விஷயமாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் சௌபாக்யவதி கதீஜா பீபியிடம், சௌபாக்யவதி சௌமினிதேவி நான்கு படி கோதுமை கடனாக வாங்கி மூன்று வாரங்கள் ஆகிவிட்டன. இதுவரை வாங்கிய அந்த கோதுமையை ஏன் திருப்பித்தரவில்லை என்று ஒரு வார்த்தை கேட்டிருப்பாளா சௌபாக்கியவதி கதீஜா பீபி?

அவள் பக்கம் நியாயம் இருப்பதாகவே எனக்குப் பட்டது.

“பிறகு...'' சௌபாக்யவதி கதீஜா பீபி சொன்னாள்: “அல்லா எந்தக் குறையும் வராம பார்த்துக்கணும். இப்போ இந்தப் பூனை செத்துப் போகுதுன்னு வச்சுக்கோங்க, ரூஹ் எங்கே போகும்?''

அவள் ஆன்மிக விஷயத்திற்குள் நுழைந்துவிட்டாள். மரணத்திற்குப் பிறகு இந்தப் பூனையின் ஆத்மா எங்கே போகும் என்று கேட்கிறாள். இதில் என்ன சந்தேகம்- கட்டாயம் நரகத்திற்குத்தான் போகும்.

“அதனால...'' சௌபாக்யவதி கதீஜா பீபி சொன்னாள்: “அது சொர்க்கத்திற்குப் போகணும். அப்படின்னா இஸ்லாம் பேருதான் அதுக்கு வைக்கணும்.'' சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவள் தொடர்ந்து சொன்னாள்: “கைஸு, கைஸும்மா, கைஸுமோள்- இதுதான் இந்தப் பூனைக்குட்டியோட பேரு...''

மகிழ்ச்சி. யாரும் ஒரு வார்த்தைகூட மறுத்துப் பேசவில்லை. அதற்கான தைரியம் யாருக்கும் இல்லை என்பதே உண்மை. அதற்காக நான் சும்மா இருக்க முடியுமா? மீசை வைக்கப்போகிற நான்... தைரியமாக என்றுகூட வைத்துக்கொள்ளுங்கள்... இலேசாக முணுமுணுத்தேன்.

“ம்க்கும்... இந்த வீட்ல பெண்களோட எண்ணிக்கை பெருகிப்போச்சு. பதினேழு பெண் கோழிகள், நாலு பெண் பசுக்கள், ஒரு பெண் நாய், மகள், மகளோட தாய்... இப்போ ஒரு பெண் பூனை... ம்க்கும்... பெண்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு!''

திடீரென்று மனதில் தோன்றியது- பெண் பசு, ஆண் பசு! சொல்வதற்கு நன்றாகவே இருக்கின்றனவே! சந்தர்ப்பம் அமைந்தால் உலக இலக்கியம் படைக்கிறபோது இந்த வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் உள்ளே நுழைத்துவிட வேண்டும். இப்படிப் பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருக்கும்போது சௌபாக்ய வதிகள் கதீஜா பீபி, ராஜலா, சௌமினிதேவி மூவரும் எந்தவித காரணமும் இல்லாமல் என்னை முறைத்துப் பார்த்தவாறு அவர்களின் புடவைகள் "பரபர” என்று சத்தம் கேட்கிற மாதிரி பந்தாவாக என்னைத் தாண்டி வேகமாக நடந்து போனார்கள்.

எதற்கு இந்த முறைப்பு?

மகள் கைஸுக்குட்டியுடன் வந்தாள்.

கைஸுக்குட்டியின் கழுத்தில் இரண்டு பாசி மாலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. சிவப்பு ரிப்பனால் ஆன ஒரு கழுத்துப்பட்டை வேறு.

மகள் பூனைக்குட்டியிடம் சொன்னாள். அதன் அர்த்தம் என்னவென்றால், தன் தந்தையைப் பூனைக்குட்டிக்கு அவள் அறிமுகம் செய்து வைக்கிறாள்.

“கைஸுக்குட்டி... இங்க பாரு- இதுதான்... என்னோட டாட்டோ...''

நானும் பூனைக்குட்டியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். நான் சின்ன குரலில் ஒரு அல்சேஷன் நாய் மாதிரி குரைத்தேன்:

“பௌ... பௌ...''

பூனைக்குட்டி கேட்டது:

“ம்யாவ்...?''

மகள் சொன்னாள்:

“கைஸுக்குட்டி... பயப்படாதே. டாட்டோ சும்மா குரைச்சாங்க...''

இந்த நேரத்தில் மகளின் தாய் அங்கு வந்தாள். எந்தவித காரணமும் இல்லாமல் என்னைப் பொசுக்கி விடுவது மாதிரி ஒரு பார்வை பார்த்தாள். இந்த நெருப்பு போன்ற முறைப்பு கொண்ட பார்வையை இங்கு நான் குறிப்பிடுவதற்குக் காரணம்- பெண்மணிகளான சௌபாக்யவதிகள் எப்படி ஆண்களின் இதயத்திற்குள் இந்தக் கூரிய பார்வையை அம்பு மாதிரி பயன்படுத்துகிறார்கள் என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். இப்படி முறைத்துப் பார்க்கிற அளவிற்கு நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன். எனக்கே ஒன்றும் புரியவில்லை. இதுவரை சௌபாக்யவதிகளான இந்தப் பெண்மணிகளின் நெருப்பு போன்ற இந்தக் கூரிய பார்வை என்மேல் பல முறை அம்புபோல பட்டிருக்கிறது. இதன் காரணம் என்னவாக இருக்கும்?


என்ன இருந்தாலும் ஆண்தானே! நம் பக்கமும் சில தவறுகள் இருக்கலாம். ஒப்புக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் மீசை வைக்கப்போவதை நினைத்தவாறு நான் கேட்டேன்:

“என்னடி... என்னையே முறைச்சுப் பாக்குறே?''

“பெண்கள் இங்கு எண்ணிக்கையில அதிகமானா...'' மகளின் தாய், நான் பூனைக்குட்டியைப் பற்றிச் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு பேசுகிறாள் என்பதைப் புரிந்து கொண்டேன். எப்படியோ கைஸுக்குட்டி என்னுடைய அமைதியான வாழ்க்கையில் ஒரு பிரச்சினையை உண்டாக்கிவிட்டது. மகளின் தாய் தொடர்ந்தாள்: “இதனால ஆண்களுக்கென்ன பிரச்சினை? இதுக்கு மேலே பேசினா, அவ்வளவு நல்லா இருக்காது...''

இதனால் ஆண்களுக்கு என்ன பிரச்சினை வந்தது என்று கேட்கிறாள். இப்போதுள்ள கணக்குப்படி ஒரு ஆணுக்கு மூன்று பெண்கள் என்ற விதத்தில் இருக்கிறது. அதிகமாக இருக்கின்ற இரண்டு சௌபாக்யவதிகளை நாம் என்ன செய்வது? மனைவியுடன் தேவையில்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைவிட எதுவும் பேசாமல் மவுனமாக இருப்பதே சிறந்தது என்பதால் வாயே திறக்காமல் இருந்தேன்.

அடுத்த நிமிடம்- நான் நாற்காலியைவிட்டு எழுந்து முற்றத்தில் கால் வைத்தேன். வீட்டைச் சுற்றியிருந்த நிலத்தைக் கடந்து மரங்களுக்கு மத்தியில் நடந்தேன். அழகான, தனிமையான, அமைதியான சூழ்நிலை. மரங்களைப் பார்த்த நான் சொன்னேன்:

“கடவுளோட அருமையான படைப்புகளே... உங்களைப் பார்த்து வணங்குகிறேன். உங்களுக்கு ஆத்மா இருக்குன்னு சொல்றாங்க. சரிதானா?''

“யார்கிட்ட நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க?'' பின்னால் நின்றவாறு மகளின் தாய் கேட்டாள்.

“பெண் ஏன்டி ஆணுக்குப் பின்னாடியே வரணும்?''

“மனசுல தோணுச்சு. வந்தேன். இல்லாட்டினாக்கூட வருவேன்!''

திடீரென்று ஆதி வரலாறு ஞாபகத்தில் வந்தது.

“ஆணோட முதுகெலும்பு இருக்கு பாரு. நான் சொல்றதை நீ கவனமா கேட்கணும். மனித இனத்தோட படைப்பைப் பற்றிய ஆரம்பத்தைப் பத்தி இப்போ சொல்லப்போறேன். ஆரம்பத்துல தெய்வம் ஒரு ஆணைப் படைக்குது...''

“பெண்ணைத்தான் தெய்வம் முதல்ல படைச்சதுன்னு ஒரு நாள் நீங்க சொன்னீங்களே?''

“அப்படி நான் சொல்லியிருந்தா, அது சரியான விஷயம்னு இப்போ தோணல. இன்னும் சொல்லப்போனா... இப்போ நான் மேலும் வளர்ந்திருக்கேன்ல? அதுக்கேத்த மாதிரி சிந்தனைகளுக்கும் வளர்ச்சி உண்டாகி இருக்குமா இல்லியா? நான் பேசிக்கிட்டு இருக்குறப்போ இடையில புகுந்து எதையாவது பேசாம நான் சொல்றதை கவனமா கேளு, புரியுதா?''

“பெண்களுக்கு எதிரா எதையாவது சொல்றதா இருந்தா, நான் அதைக் கேட்கணும்னு அவசியமே இல்ல!''

“சரி... நீ கேட்கவே வேண்டாம். மாமரங்களே, பறவைகளே, கடலே, வானமே... கேளுங்க... ஆதிகாலத்துல ஏதன் தோட்டத்துல ஆதாம் மட்டும்தான் இருந்தான். அவனுக்கு எந்தவித கவலையும் கிடையாது. சுதந்திரமான ஒரு மனிதனா மகிழ்ச்சியோட அந்தத் தோட்டம் முழுக்க  அவன் உலாவிக்கிட்டு இருந்தான். தலையணை மந்திரங்கள், கண்ணீர், முணுமுணுப்பு, குறை சொல்றது, அட்டகாசங்கள், இடையில் புகுந்து பேசுதல்- எதுவும் அவனைப் பொறுத்தவரை கிடையாது. நான்தான் சொல்றேனே- ஆனந்தமான ஒரு வாழ்வை அவன் வாழ்ந்துக்கிட்டு இருந்தான்னு. இருந்தாலும் ஒரு சின்ன பிரச்சினை. ஆதாமுக்கு முதுகெலும்பு முடிஞ்சப்புறம், அதைத் தொடர்ந்து ஒரு வால் இருந்துச்சு. வால்னா நீளமான வால். அதையும் இழுத்துக்கிட்டுத்தான் அவன் நடந்துபோகணும். சில நேரங்கள்ல அந்த வாலை எடுத்து ஆதாம் தன்னோட தோள்ல போட்டுக்குவான். பொதுவா அந்த வாலை வச்சுக்கிட்டு அவனால் ஓட முடியல. ஒரு நாள் ஒரு யானை அந்த வாலோட நுனியை மிதிச்சிடுச்சு. ஆதாம் எப்படியோ அந்த வாலை இழுத்து காப்பாத்திட்டான். ஆதாமுக்குப்  பின்னாடி இந்த வால் எப்பவும் இருக்குன்றதை ஞாபகத்துல வச்சிக்கணும். ஆதாம் ஒரு நாள் சொன்னான்: "தெய்வமே... எனக்கு இந்த வால் எதுக்கு?' ஆதாம் இப்படிச் சொன்னதும், தெய்வம் ஆதாமோட வாலை முழுசா அறுத்திடுச்சு...''

“பிறகு?''

“அருமை மாமரங்களே! அந்த வால் ஏதன் தோட்டத்துல ரொம்ப நாட்கள் கிடந்துச்சு. சிங்கம், கரடி, மலைப்பாம்பு, திமிங்கிலம் எல்லாமே அந்த வாலை மோந்து பார்த்தன. அதை விழுங்கணும்ன்ற எண்ணம் யாருக்கும் வரல. அது அப்படியே இருந்துச்சு. அந்த வால் என்ன செய்யும்? தெய்வம் அந்த வாலை எடுத்து சுத்தமான தண்ணீரில கழுவுச்சு. பிறகு கடல்ல இருக்கிற உப்புத் தண்ணீர்ல முக்கி எடுத்துச்சு. அதுக்குப்பிறகு சங்கீதத்துல முக்கி எடுத்துச்சு... பிறகு... தேன்ல. அதுக்குப் பிறகு விஷத்தைத் தெளிச்சது... அதுக்குப் பிறகு நல்ல ஒண்ணாம் நம்பர் அத்தர்ல முக்கி எடுத்து காய வைச்சது. இப்படி படிப்படியா தெய்வம் அந்த வாலை ஒரு அழகான பெண்ணா மாத்தி எடுத்துச்சு. அவதான் உலகத்துலயே உண்டான முதல் சௌபாக்யவதி!''

“மிகப் பெரிய பொய் இது!'' இப்படிச் சொல்லியவாறு ஒரு முறைப்பு!

“அதுனாலதான் பொம்பளைங்க எப்பவும் ஆம்பளைங்க பின்னாடியே நடந்து திரியிறாங்க...''

குடும்பத்தில் சண்டை நடக்க இதற்குமேல் ஒரு விஷயம் வேண்டுமா என்ன? ஆண் இனத்திற்கு எதிராக என்னென்னவோ கூறினாள் அவள். தர்க்கங்கள், சவால்கள்... அவள் சொன்ன எதையும் நான் காதிலேயே வாங்கவில்லை. சௌபாக்யவதிகளின் வார்த்தைகளுக்கு மதிப்பு தராமல் நடந்துகொள்வதுதான் உண்மையிலேயே புத்திசாலித்தனம்!

மவுனமாக இருந்ததால், அந்தப் பிரச்சினை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தமாதிரி இருந்தது. நாங்கள் கொஞ்ச தூரம் நிலத்தின் வழியே நடந்து சென்றோம். வேலிகளில் படர்ந்திருந்த கரையான் புற்றுகளைத் தட்டிவிட்டு அழித்து, திரும்பிவரும்போது பார்த்தால்... மாமரத்தின் கிளையில் ஊஞ்சல் வெறுமனே தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்த ஊஞ்சலில் உட்கார்ந்து சிறிது நேரம் ஜாலியாக ஆடினால் என்ன என்று நான் நினைத்தேன். நான் ஊஞ்சலில் அமர்ந்து குதித்து ஸ்டைலாக ஆடிக்கொண்டிருந்தபோது, எப்படி நடந்தது என்று எனக்கே தெரியவில்லை... ஊஞ்சலை விட்டு நான் கீழே விழுந்து கிடந்தேன். ஊஞ்சல் அறுந்து போய்விட்டதா என்று பார்த்தால்... அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை. பிறகு எப்படி நான் விழுந்தேன்? தொடர்ந்து பிரபஞ்சத்தில் உள்ள சர்வ சௌபாக்யவதி களின் சிரிப்பு!

“பெண்களை எதிர்த்துப் பேசினா இப்படித்தான் நடக்கும்!''

நான் எழுந்து ஆடைகளில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிட்டு, ஆணுக்குரிய கம்பீரத்தை வரவழைத்தேன். அந்த நேரத்தில் மனதில் ஒரு தத்துவம் அரும்பி தன் முகத்தைக் காட்டியது. வைராக்கியம் என்ற ஒன்றை மனதில் எப்போதும் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருப் பவர்கள் பெண்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். என்ன இருந்தாலும் ஊஞ்சலில் இருந்து நான் கீழே விழுந்தது ஆண் இனத்திற்கு ஒரு அவமானமான செயல்தான். என்ன செய்வது?

“என்ன... வலிக்குதா?''


நான் ஏன் பேசப் போகிறேன்? ஊஞ்சலில் இருந்து கீழே விழுந்தால் வலிக்காமல் இருக்குமா? நான் விழுவதற்குக் காரணம் என்ன? ஆவியும் பேயும் உண்டு என்று பொதுவாகச் சொல்வார்களே! இது ஏகப்பட்ட மனிதர்கள் வாழ்ந்து மறைந்த இடம். சௌபாக்யவதிகள் ஆவிகளின் வேலையாக இது இருக்குமோ? அவைதான் ஊஞ்சலில் இருந்து என்னை கீழே விழ வைத்திருக்குமோ? மண்ணை விட்டு மறைந்து போனாலும், மனதில் வைத்திருக்கும் வைராக்கியத்தை மறக்காமலே இருக்கும் இனமாயிற்றே பெண்கள்! சொல்லப்போனால்... பழிக்குப் பழி வாங்குவதில் பெண்களுக்கு நிகர் வேறு யார் இருக்கிறார்கள்? இதை எல்லாம் பார்த்தபோது பெண்மணிகளான சௌபாக்யவதிகள்மீது எனக்கே ஒருவித வெறுப்பு தோன்றியது. அப்படியே நடந்து நாங்கள் மகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தை அடைந்தோம். மகளும் பூனைக்குட்டியும் சோறு, குழம்பு வைத்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். மகள் இருந்த அந்தச் சிறு அறை, எவ்வளவு பெரிய தச்சனும் பொறாமைப்படக்கூடிய விதத்தில் அவ்வளவு அழகாக அமைக்கப்பட் டிருந்தது. மகளின் தாய், ராஜலா, கதீஜா பீபி, சௌமினி தேவி ஆகிய சௌபாக்யவதிகளின் ஒட்டுமொத்த கற்பனையில் உருவாக்கப்பட்ட சிறிய அறை அது. மகள் சோறு ஆக்கி அந்த அறையில் விளையாட லாம். அதில் படுக்கை இருக்கிறது. விருந்தினர்கள் யாராவது வந்தால், அங்கு தங்கலாம். அதில் சமையல் செய்யக்கூடிய வசதிகளை உண்டாக்க மட்டும் நாங்கள் மறந்து போனோம். சமையல்தான் எங்கிருந்து வேண்டுமானாலும் பண்ணலாமே! அந்த அறை உண்டாக்கப்பட்டதன் பிரதான நோக்கமே பேன்களைக் கொல்வதற்குத்தான்! முன்னால் நான் குறிப்பிட்ட சௌபாக்யவதிகள் எல்லாரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஒன்றாக அங்கு அமர்ந்து பேன்களை எடுத்துக் கொல்வார்கள். ஊர்க்கதைகள் பேசிக் கொண்டிருப்பார்கள். இப்போது மகளும் கைஸுக்குட்டியும் உள்ளே அமர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். நான் மேலே பார்த்தேன். பார்த்தவுடன் நானே பயந்துவிட்டேன். முற்கள் கொஞ்சமும் இல்லாமல்- ஏதோ அரிவாளை வைத்து சுத்தம் செய்தது மாதிரி பளபளப்புடன் நான்கு இளவங்காய்கள், நீளமான கொடியில் அந்தச் சிறிய அறைக்கு நேர்மேலே, மாமரத்தின் கிளையில் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்தன. இங்கிருந்து பார்த்தபோது, அவை மாங்காய்கள் மாதிரியே தெரிந்தன. எல்லாம் மகளின் தாயுடைய கைங்கர்யம். தொழுவத்தின்மேல் படர்ந்து கிடக்கும் பூசணிக்கொடி, இல்லா விட்டால் அதுவும் இளவங் கொடிதானா? எது வேண்டுமானாலும் இருக்கட்டும்... மகளின் தாய்தான் அதை அங்கு படரவிட்டது. அது தொழுவத்திற்கு வெளியே படர்ந்து மாமரத்தில் ஏறிப் படர்ந்து காய்த்திருக்கிறது. முந்தாநாள் வரை அது மிகவும் சிறியதாக இருந்தது. இப்போது அவை வெள்ளை உப்பு மாங்காய்கள் போல மகளுக்கும் பூனைக்குட்டிக்கும் மேலே தொங்கிக் கொண்டிருந்தன! எப்போது வேண்டுமானாலும் அந்த நான்கு காய்களும் கொடியில் இருந்து அறுந்து கீழே விழலாம்!

“மகளே!'' நான் அழைத்தேன்: “இங்க நீ விளையாட வேண்டாம். உன்னோட தலையிலும், கைஸுக்குட்டி தலையிலும் இளவங்காய் விழப்போகுது...''

அவ்வளவுதான்-

மகள் பூனைக்குட்டியுடன் ஓடிவந்து எங்களுடன் ஒட்டிக் கொண்டாள். நாங்கள் முன்பக்கம் வந்தபோது, ஒயிட் லெகான் சேவல் ஸார் என்னுடைய நாற்காலியில் உட்கார்ந்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்.

காலை மடக்கி ஒரு உதை கொடுத்தால் என்ன என்று நினைத்தேன். என்னுடைய எண்ணத்தைப் புரிந்துகொண்ட மகளின் தாய் சொன்னாள்:

“அதை ஒண்ணும் செஞ்சிடாதீங்க. பாவம்... அதுங்களுக்கெல்லாம் இருக்கிறது இது ஒண்ணுதான்...''

“அதுங்களுக்கெல்லாம்...'' என்று மகளின் தாய் குறிப்பிட்டது- அவனின் சௌபாக்யவதிகளான மனைவிமார்களை. நியாயமாகப் பார்த்தால் அவன்மீது கருணை காட்டித்தான் தீர வேண்டும். ஒரு பெண் கோழி மட்டும் என் நாற்காலியில் உட்கார்ந்திருந்தால் இப்போது நடந்திருக்கும் கதையே வேறு. காலில் கிடக்கும் செருப்பை அகற்றி அடித்து உதைத்திருப்பேன். ஆண் கோழி! ஆண் இனம்! அவனுக்கு மரியாதை கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை. நான் பக்கத்தில் இருந்த சிமெண்ட் திண்ணையில் போய் சாய்ந்து அமர்ந்தேன். எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தேன். ஒயிட் லெகான் சேவல் ஒரு கண்ணைப் பாதி திறந்து, என்னை இலேசாகப் பார்த்தவாறு உறங்கத் தொடங்கினான்.

“அடியே... இவன் ரொம்ப களைப்பா இருப்பான்போல இருக்கு!'' நான் மெதுவான குரலில் சொன்னேன். தூங்கிக்கொண்டிருக்கும் ஒருவனுக்குத் தொந்தரவு தரக்கூடாது பாருங்கள். “பொண்டாட்டிகளோட தொல்லையில இருந்து தப்பிச்சு வந்து ஒளிஞ்சிருக்கான் இவன். அவனோட கவலைகளைச் சொல்றதுக்கு நண்பன்ற முறையில அவனுக்கு நான் மட்டும்தான் இருக்கேன்!''

“கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?'' மகளின் தாய் என்னைப் பார்த்துச் சொன்னாள். தொடர்ந்து முணுமுணுக்கும் குரலில் அவள் சொன்னாள்: “பதினேழு கோழிகளும் முட்டை போடுது. அடுத்த வருஷம் என்கிட்ட எப்படியும் நூறு கோழிகளாவது இருக்கும்.''

என்னுடைய இந்த உடல் வலிமையும், தடிமனும், பேச்சும் கோழி முட்டை சாப்பிட்டு உண்டானதல்ல. முட்டைகள் முழுவதும் குஞ்சுகள் உண்டாக்கப் போய்விடுகின்றன. இந்த ஒயிட் லெகான் சேவல் திருமணம் செய்திருப்பது அத்தனையும் நாட்டுக் கோழிகள். நாட்டுக் கோழிகளுக்கு பொதுவாகவே நல்ல சக்தி உண்டு. நோய்களை எதிர்த்து நிற்பதற்கும், எதிரிகளுடன் போராடுவதற்கும் அவற்றிடம் நல்ல பலம் இருக்கின்றன. ஆனால் முட்டைகள் குறைவாகத்தான் போடும். இந்தக் குறை ஒயிட் லெகான் சேவலின் உதவியால் உண்டாகும் முட்டைகள் விரிந்தால், தீர்ந்துவிடும். அப்போது முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் எல்லாமே ஒயிட் லெகான் குஞ்சுகளாக இருக்கும். ஒயிட் லெகானின் எல்லா குணங்களும், நாட்டுக் கோழிகளின் எல்லா குணங்களும் அவற்றிற்கு இருக்கும். அப்படிப்பட்ட குஞ்சுகளைத்தான் பருந்து சில நேரங்களில் "லபக்”கென்று தூக்கிக்கொண்டு போய்விடும். அதற்கு நான் என்ன செய்வேன்? நான் அமைதியாக உட்கார்ந்து கொண்டு உலக இலக்கியம் படைப்பதில் ஈடுபட்டிருக்கிறேன். இருந்தாலும் கோழிக்குஞ்சுகளை ஒரு அறையில் அடைத்துப் போட்டு வைத்து வளர்க்கும்படி ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். ஆனால், என்ன பிரச்சினை என்றால் அந்த அறையில் காற்று, வெளிச்சம் எதுவும் கிடையாது. விளைவு- எல்லா குஞ்சுகளையும் நன்றாக இரை பொறுக்கித் தின்னட்டும் என்று இரண்டு ஏக்கர் நிலத்திலும் சுதந்திரமாக விட்டுவிட்டோம். எதுவோ ஞாபகம் வந்தது மாதிரி மகளின் தாய் சொன்னாள்:

“நல்ல இரை போடுறேன். நெய் ஊத்தி சோறு குழைச்சு தர்றேன்.''

“நெய் கொடுக்குறேல்ல... கொடுத்து வச்சவன்தான்!'' இவ்வளவுதான் சொல்லி இருப்பேன். பூமியே அதிர்கிற மாதிரி ஒரு பெரிய ஓசையுடன் என்னவோ வந்து விழுந்தது. அடுத்த நிமிடம்- ஒயிட் லெகான் சேவல் பயந்துபோய் "கொக் கொக் கொக்” என்று கத்தியவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடினான்.


கண்களும் என்னையே உற்றுப் பார்த்தன. எனக்கே கூச்சம் வரும்போல் இருந்தது. அதனால் மெல்ல அவர்களைவிட்டு அகன்றேன். மனம் என்னவோபோல் இருக்கும்போது அதற்கு சரியான மருந்து சங்கீதம் என்று சொல்வார்கள். மனிதனுக்குக் கிடைத்திருக்கும் ஒரு அற்புதமான விஷயம் சங்கீதம். நான் ரேடியோகிராமின் பொத்தானை அழுத்தி, மேதையான பண்டிட் ரவிசங்கரின் ஒரு இசைத்தட்டை முழங்க வைத்தேன். ராகங்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது என்றாலும் அவரின் சிதார் இசையில் என்னையே மறந்து, முழுக்க முழுக்க என்னை இழந்து கண்களை மூடி அப்படியே உட்கார்ந்து விட்டேன். அதற்காக என்னைச் சுற்றியுள்ள உலகம் அமைதியாக இல்லை. நான் கண்களைத் திறந்து பார்த்தபோது மகளின் தாயும், மற்றவர்களும் பலாமரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்தார்கள்.

“ஒரு புதுமையான விஷயத்தைச் சொல்றேன் கேளுங்க.'' ஏதோ ஒரு விஷயத்திற்குப் பீடிகை போடுகிற மாதிரி மகளின் தாய் பேசினாள்: “நாங்க இந்த இடத்தையும் வீட்டையும் வாங்கியவுடனே, இந்தப் பலாமரம் காய்க்க ஆரம்பிச்சிடுச்சு.''

எப்போதுமே அசாதாரண விஷயங்களை நம்புவதில் மனிதர்களுக்கு ஒரு ஆர்வம் உண்டு. குறிப்பாக பெண்மணிகளான சௌபாக்யவதி களுக்கு. மனித இனம் தோன்றியது முதல் இந்த நிமிடம் வரை உள்ள சரித்திரத்தைப் புரட்டிப்பார்த்தால் இந்த உண்மை தெரியவரும். சொல்லப்போனால் சௌபாக்யவதியான மகளின் தாய்க்கு கொஞ்சம் மிகைப்படுத்தாமல் எதையும் பேசத் தெரியாது. நாங்கள் வீட்டுக்கு வந்தவுடன், இந்தப் பலா மரத்தில் ஒரு காய் காய்த்தது. அது கொஞ்ச நாட்களில் பழுத்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் யாருக்கும் கொடுக்காமல் நாங்கள் மட்டும் அதைச் சாப்பிட்டோம். நல்ல தேன் பலா. எல்லாம் முடிந்தபிறகு, எதுவும் நடக்காதது மாதிரி நாங்கள் முற்றத்தில் நடந்து திரிந்தோம். மகள், மகளின் தாய், நான்- எல்லாருமே பலா மரத்தை மகிழ்ச்சியுடன் பார்த்தோம். நான் அந்த மரத்தின் அருகில் சென்று மரத்தை அப்படியே இறுகத் தழுவி முத்தமிட்டேன். பிறகு மெல்ல சொன்னேன்:

“மகிழ்ச்சி... அற்புதமான பலா மரமே! உனக்கு நன்றி. உன் மரத்துல இருந்த பலாப் பழத்துக்குத்தான் என்ன சுவை! யாருக்கும் தராமல் நாங்கள் மட்டும் சாப்பிட்டோம். வர்ற வருஷம் நீ நாலு பழங்கள் தரணும். ஒண்ணு- மகளுக்கு, ஒண்ணு- மகளோட தாய்க்கு, ஒண்ணு- எனக்கு, ஒண்ணு- பக்கத்து வீட்டுக்காரங்களுக்கு. மறந்துடக் கூடாது!''

பலா மரத்திற்கு ஆத்மா இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் அப்போது நான் யோசிக்கவில்லை. இந்த சந்நியாசி அந்தச் சமயத்தில் இந்த ஊருக்கு வரவில்லை என்று நினைக்கிறேன். பலா மரத்திற்கு ஆத்மா இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி... பலா மரம் படைக்கப்பட்டதற்கான நோக்கம் என்ன? பழம் தருவது! அது தருகிறது. தந்தது. சொன்னது மாதிரியே நான்கு பழங்களைத் தந்தது. பழம் பழுத்த பிறகு, பெரிய பழமாகப் பார்த்து அதை மூன்றாக அறுத்து சௌபாக்யவதிகளான சௌமினிதேவி, கதீஜா பீபி, ராஜலா ஆகியோருக்குக் கொடுத்தோம். அவர்களும் அவர்களின் கணவர்களும் அதை விரும்பிச் சாப்பிட்டார்கள்.

மகளின் தாய் சௌபாக்யவதிகளிடம் கேட்டாள்:

“பலாப்பழம் எப்படி இருந்துச்சு?''

மூன்று பேர்களும் மூன்று வெவ்வேறு விதமாக பதில் கூறினார்கள்.

“தேன்போல இருந்துச்சு!''

“நெய் அல்வாபோல இருந்துச்சு!''

“பேரீச்சம்பழம்போல இருந்துச்சு!''

“இன்னொரு விஷயம் சொல்றேன். கேட்டுக்கோங்க.'' மகளின் தாய் கொஞ்சம் கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்: “மகளும் நானும் இன்னைக்கு வீட்ல இருக்க மாட்டோம்!''

விஷயம் என்ன தெரியுமா? மகளின் தாய் பஸ்ஸில் பயணம் செய்யும்போது, வீட்டில் சாதாரணமாக கட்டிலில் உட்கார்ந்திருக்கிற மாதிரி உட்கார்ந்திருப்பாள். எதையும் அவள் பிடிப்பதில்லை. பஸ் வளைவில் திரும்புகிறபோது இந்த சௌபாக்யவதி தடுமாறிக் கீழே விழப் பார்ப்பாள். இது என்றைக்குமே நடக்கிற ஒரு காட்சி. ஒவ்வொரு நிமிடமும் "கம்பியை ஒழுங்கா பிடிச்சுக்கடி” என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். நான் சொல்லவில்லையென்றால், நிச்சயம் அவள் கீழே விழப்போவது உறுதி. இதோ, மகளின் தாய் என்ற சௌபாக்யவதி... நாங்கள் பஸ்ஸில் ஒரு இடத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களின் இரண்டு நண்பர்கள், மகள், மகளின் தாய், நான்... வெளியே நல்ல மழை பெய்துகொண்டிருந்தது. நதியில் நீர் கலங்கலாக பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. நதியில் வரும் வெள்ளப்பெருக்கைப் பார்க்கிறபோதே பயங்கரமாக இருந்தது. மகளின் தாய்க்கு நீச்சல் தெரியாது. இவ்வளவும் சொல்வதற்குக் காரணம்- பஸ் மிதவை மூலம் நதியைக் கடந்து செல்ல வேண்டும். எந்தவித பிரச்சினை யும் இல்லாமல் பஸ்ஸும் நாங்களும் நதிவரை வந்துவிட்டோம். மிதவை சாலை ஓரத்தில் உள்ள பெரிய செடிகளில் கட்டப்பட்டிருந்தது. சாலைக்கு மேலே நீரில் அது மிதந்து கொண்டிருந்தது. இரண்டு பெரிய படகுகளை ஒன்றாக இணைத்துக்கட்டி அதோடு சேர்த்து மிதவையைக் கட்டியிருந்தார்கள்.

எல்லாரும் பஸ்ஸை விட்டு இறங்க ஆரம்பித்தபோது எனக்கு நன்கு அறிமுகமான பஸ் டிரைவர் சொன்னார்:

“அம்மாவும் பாப்பாவும் பஸ்லயே இருக்கட்டும்!''

பெண்மணிகளான சௌபாக்யவதிகளுக்கு மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு சலுகை இது!

நானும், மற்ற பயணிகளும் குடையை விரித்துப் பிடித்தவாறு கீழே இறங்கினோம். சாலையில் இருந்து இரண்டு பலகைகள் வழியே பஸ் "குர்ர்ர்...” என்று மிதவையில் ஏறப்போகிறது. இதற்கு முன்புகூட பலமுறை பஸ் இந்த மாதிரி ஏறியிருக்கிறது. இப்போது அதே மாதிரி ஏற வேண்டியதுதான். ஆனால், மகளின் தாயும், மகளும் பஸ்ஸின் முன்னிருக்கையில் சிலைபோல உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்கள் எதையும் பிடிக்கவில்லை. எதையாவது பிடித்துக்கொள்ளச் சொல்ல  பக்கத்தில் நான் இல்லையே! ஆனால், விஷயம் அதுவல்ல. என் மனதில் இலேசாக ஏதோ தோன்றியது. விபத்து முன்னெச்சரிக்கை... என்று சொல்வதற்கில்லை. சாதாரணமாக எந்த முட்டாள் கணவனுக்கும், தந்தைக்கும் தோன்றக்கூடிய ஒரு எண்ணம்தான் எனக்கும் தோன்றியது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். நான் உரத்த குரலில் அழைத்துச் சொன்னேன்:

“அடியே... மகளையும் தூக்கிக்கிட்டு கீழே இறங்கு. குடையைக் கையில எடுத்துக்கோ...''

எங்களின் சிறிய பேக் அப்போது என் கையில் இருந்தது. அதை ஏன் என் கையில் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்தேன்? அது பற்றி எல்லாம் இப்போது ஒன்றும் கூறுவதற்கில்லை. அதில் கொஞ்சம் பணம் இருந்தது. இருந்தாலும், அதை பஸ்ஸிலேயே வைத்துவிட்டு இறங்கியிருக்கலாமே! மற்ற பயணிகளின் உடைமைகள் எல்லாம் பஸ்ஸுக்குள் தான் இருந்தன.

மகளைக் கையில் தூக்கியவாறு மகளின் தாய் பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினாள்.


குடையை விரித்துப்பிடித்து, மழையில் நனையாமல் என் பக்கத்தில் வந்து நின்றாள். பஸ் பலகைகள் வழியே "குர்ர்ர்” என்று மிதவைக்கு ஏறியது. பாதி தூரம் சென்றிருக்கும். திடீரென்று மிதவை நீங்கியது. கயிறுகள் அறுந்தன. தனியாகிப்போன மிதவை நீரின் போக்கில் போனது. நீருக்குள் போன பஸ்ஸில் இருந்த டிரைவர் நூறடி தூரத்தில்- எப்படியோ தப்பித்து வெளியே வந்தார்.

மகளும், மகளின் தாயும் பஸ்ஸுக்குள் இருந்திருந்தால்...?

ஆச்சரியம், பக்தி, சிநேகம்- எல்லாம் கலந்த புன்சிரிப்பு இழையோடிய முகங்களுடன் சௌபாக்யவதிகளான கதீஜா பீபியும், சௌமினிதேவியும், ராஜலாவும் என்னைப் பார்த்தார்கள். என்ன இருந்தாலும், நான் மூன்று அற்புத நிகழ்ச்சிகளை நடத்தியதாக அவர்கள் நினைப்பு! "வரட்டும்... வரட்டும். சந்தர்ப்பம் வரட்டும், நாங்க யார்னு காட்டுறோம்... அதுவரை உங்கக்கிட்ட உஷாராத்தான் இருக்கணும்' என்ற எண்ணம் அவர்கள் மனதில் இருக்கலாம். யாருக்குத் தெரியும்? பெண் இனம் என்ற சௌபாக்யவதிகளின் இதயத்தில் இருக்கும் ரகசியத்தைப் பற்றி யாரால் என்ன சொல்ல முடியும்?

இளவங்காய் துண்டுகளை ஒரு பொட்டலமாகக் கட்டி கையில் வைத்தவாறு நடந்தேன். பூனைக்குட்டியைக் கையில் அணைத்தவாறு மகள் என் அருகில் வந்தாள். அப்போது சௌபாக்யவதிகள் மூவரும் எதையோ நினைத்தவண்ணம் மூன்று நெருப்பு மாதிரியான பார்வைகளை என்மீது பாய்ச்சினார்கள். பின்னர் அவர்கள் என்ன நினைத்தார்களோ... அந்தப் பார்வையை பக்திமயமான பார்வையாக மாற்றினார்கள்.

பெண் இனத்தைச் சேர்ந்த சௌபாக்யவதிகளே, உங்களுக்கு வணக்கம்.

சௌபாக்யவதி கதிஜா பீபி மகளிடம் சொன்னாள்:

“மகளே... கைஸுக்குட்டியை பத்திரமா பார்த்துக்கணும்...''

3

பிறந்தது பாக்கிய நட்சத்திரத்தில். கடவுள் புண்ணியத்தால் எதற்கும் ஒரு குறைவும் இல்லை. கைஸுக்குட்டிக்கு சாப்பிட தனியாக தட்டு. தனி படுக்கை. உபசரிக்க ஏகப்பட்ட ஆட்கள். நன்றாகக் காய வைத்த சர்க்கரை போட்ட பால். காய்ச்சிய பாலில் முட்டையை உடைத்துப் போட்டு சுவையாக இருக்கும் வண்ணம் குடிக்கும் வாய்ப்பு. (மகானான ஒயிட் லெகான் சேவல்! அதனுடைய அருமை குஞ்சைத்தான் பாலில் சேர்த்து கைஸுக்குட்டி குடிக்கிறது.) அதோடு நிற்கவில்லை. சூப் வேறு. சின்னச்சின்ன துண்டுகளாக்கப்பட்டு பொரித்த ஆட்டிறைச்சி. முள் நீக்கப்பட்ட மீன். பொரித்த அப்பளம். நெய்யில் குழைத்த சோறு. முத்தங்கள். இன்னும் சொல்லப்போனால் இங்கு பல சௌபாக்யவதி களான இளம் பெண்களும் ஒவ்வொரு நாளும் வருவார்கள். மகளின் தாயின் தையல் மெஷினில் புதிய மாடல் இங்கிலீஷ் மார்புக் கச்சைகளும், ப்ளவுஸுகளும் தைக்க, புத்தகங்களோ பத்திரிகைகளோ வாங்க, பாட்டு கேட்க என்று பல விஷயங்களுக்காகவும் இந்தப் பெண்கள் இந்த வீட்டுக்கு வருவார்கள். வரும் எல்லாருமே கைஸுக்குட்டியைக் கையில் எடுத்து கன்னத்தோடு கன்னம் வைத்து முத்தம் தருவார்கள். தலையிலும், தோளிலும், நெஞ்சிலும் அதை வைத்து ஆசையாகக் கொஞ்சுவார்கள்.

நாட்கள் படுவேகமாக ஓடிக்கொண்டிருந்தன. வாரங்கள் பல கடந்த பிறகு சந்நியாசியும் நானும் ரொம்பவும் நெருக்கமானோம். நாங்கள் பால் போடாத தேநீர் அருந்துவோம். பீடி குடிப்போம். பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்போம். வேதாந்தம், தெய்வத்தைப் பற்றியுள்ள கருத்துகள், மதங்கள், பெரிய நூல்கள், மதங்களின் வளர்ச்சிக்கு சங்கீதம் எந்த அளவிற்கு உதவியிருக்கிறது, ஓவியர்கள், கவிஞர்கள், கதாசிரியர்கள்- இவர்கள் மதங்களை எப்படியெல்லாம் வளர்த்திருக்கிறார்கள், மதங்கள் காலாகாலமாக நிலைபெற்று நிற்குமா, ஏகப்பட்ட மதங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போயிருக்கின்றனவே, ஆத்மா என்ற ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா, பேய், பிசாசுகளைப் பற்றி என்ன சொல்கிறீர்கள், சொர்க்கம்- நரகம்... இப்படி இதுதான் என்றில்லை... எத்தனையோ விஷயங்களைப் பேசினாலும், அதில் ஒரு தீர்மானமான முடிவுக்கு வரவே முடியாது. “என்னதான் நம்பிக்கைகளும் கொள்கைகளும் இருந்தாலும்...'' சந்நியாசி சொன்னார்: “இப்பவும் நமக்கு தாழ்ப்பாளும் வேணும், சாவியும் வேணும். போலீஸும் பட்டாளமும் வேணும். சிறையும் தூக்குமரமும் வேணும்...''

அவர் தொடர்ந்து சொன்னார்:

“சுருக்கமா சொல்லப்போனா, நடக்குற கக்கூஸ் - மனிதன்- ஆணும் பெண்ணும். வயித்துக்குள்ள கிருமிகள், கழிவுப்பொருட்கள், தலையில் பேன், உடல் முழுக்க அணுக்கள், வாய்நாத்தம், உடல் முழுக்க ஒரே வீச்சம். இவ்வளவு நாத்தம் எடுத்த வேற ஏதாவது உயிரினத்தை உங்களால உலகத்துல காட்ட முடியுமா? சுவாமிஜி, நீங்க என்ன சொல்றீங்க?''

அவர் பொதுவாக என்னை "சுவாமிஜி' என்றுதான் அழைப்பார். இதற்கு பெரிய அர்த்தமொன்றும் கிடையாது. காலாகாலமாக பல்வேறு பெயர்களில் பலரும் என்னை அழைத்திருக்கிறார்கள். நாய், பன்றி, கழுதை, எருமை, குரங்கு- இவற்றுக்கெல்லாம் ஆத்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கருதப்படுகிறது அல்லவா? அதே மாதிரி மனிதனுக்கும் இருக்கிறது. ஆத்மாக்கள் எல்லாம் ஒரே மாதிரி இருக்குமா? எனக்கு ஆத்மா எப்படி இருக்கிறதோ, அதேபோல்தான் மற்றவற்றிற்கும். என்னைவிட வித்தியாசமாக ஒன்றுமில்லை அவை என்றுதானே இதற்கு அர்த்தம்!

ப்ரஹ்மம்! ஆதிப்ரஹ்மம்!

நான் கேட்டேன்:

“மனிதனைப் பத்தி சுவாமிஜி, நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“என்னதான் இருந்தாலும், மனிதப் பிறவின்றது ஒரு பெரிய படைப்புதான். சந்தேகமே இல்லை.''

“இருந்தாலும், மனிதன் நடக்குற கக்கூஸ்தான். சுவாமிஜி, தெய்வம் என்னோட சாயல்ல மனிதனைப் படைச்சிருக்குன்னு சொல்லப்படுறதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

“பறவைகள், ஊர்ந்து திரியும் பிராணிகள், மிருகங்கள், மீன், மத்தி, நீர்வாழ் உயிரினங்கள், கிருமிகள், மரங்கள்... யார் வேண்டுமானாலும் இதையே சொல்லலாமே! ஆனா... நான் நம்புற கடவுளுக்கு உருவம் கிடையாது.''

“அந்த தெய்வம் மொத்த பிரபஞ்சத்தையும் உயிரினங்களையும் எதுக்காகப் படைக்கணும்? மொத்தத்துல வாழ்க்கையைப் பத்தி நினைச்சுப் பாக்குறப்போ...''

“எல்லாம் பகவானின் லீலா வினோதங்கள்...''

“டாட்டோ... கைஸுக்குட்டி கண்ணாடியைப் பார்த்துச்சு...'' கைஸுக்குட்டியுடன் மகள் வந்து நின்றாள். கைஸுக்குட்டி மகள் கையில் அடக்க ஒடுக்கமாக அமர்ந்திருந்தது. பூனைக்கு, பொன்னை உருக்குகிற இடத்தில் என்ன வேலை என்பது மாதிரி சந்நியாசியும் நானும் பார்த்தோம். சந்நியாசி பூனைக்குட்டியைக் கையில் வாங்கி, மகளிடம் கேட்டார்:

“பூனைக்குட்டிக்கு என்ன பேரு வச்சிருக்கு?''

மகள் சொன்னாள்:

“கைஸுக்குட்டி...''

“இது முஸ்லிம் பூனைதானே?''

கைஸுக்குட்டி சந்நியாசியின் தாடி மணத்தை முகர்ந்து பார்த்தவாறு கேட்டது:

“ம்யாவோ...?''

சந்நியாசி கைஸுக்குட்டியிடம் சொன்னார்:

“ப்ரஹ்மமயம்!''

மகள் சந்நியாசியிடம் இருந்து பூனைக்குட்டியை வாங்கிக் கொண்டு ஓடினாள்.

“அம்மா... பீப்பிளி ஊதுற மிஸ்கீன் கைஸுக்குட்டிக்கிட்ட பேசினாரு...''

சந்நியாசி போனபிறகு, நான் சில நிமிடங்கள் வெறுமனே அமைதியாக உட்கார்ந்திருந்தேன். பிறகு எழுதிக் கொண்டிருந்ததைத் தொடர ஆரம்பித்தேன்.


அப்போது சம்பந்தமேயில்லாமல் திடீரென்று நினைத்தேன்- ஒயிட்  லெகான் சேவல் எங்கே போனான்? விவரத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்று இங்கிருந்தே சத்தம் போட்டுக் கேட்டேன். அங்கிருந்து வந்த பதில் ஆண் இனத்திற்கே அவமானம் என்பது மாதிரி இருந்தது. சிறிய அளவில் கிடைத்த ஒரு அடி என்று கூட அதைச் சொல்லலாம். மகளின் தாயின் தங்கையான சௌபாக்யவதியும், எனக்கு முன்பின் அறிமுகமே இல்லாத இன்னொரு சௌபாக்யவதியும் அங்கே உட்கார்ந்திருந்தார்கள். மகளின் தாய் எனக்குச் சொன்ன பதிலைக் கேட்டு அவர்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பது எனக்குக் கேட்டது.

“அவன் அவளோட பொண்டாட்டிமார்கள்கூட இருக்கான்!''

மற்றவர்கள் மனைவிகளுக்கு அருகில் இல்லை. சொல்லப்போனால் மனைவிகளைப் பார்க்கவே வேண்டாம் என்பது அவர்களின் எண்ணம். என்ன இருந்தாலும், உலக இலக்கியத்தை எழுதிக் கொண்டிருக்கிற போது, இடையில் என்னென்ன விஷயங்களில் எல்லாம் கவனத்தைச் செலுத்த வேண்டி நேரிடுகிறது! எதையெல்லாம் விசாரிக்க வேண்டியிருக்கிறது! திடீரென்று மனதில் ஒரு தோணல். காதல், பசி, பக்தி. இதில் காதல், பசி- இரண்டையும் விளக்கிவிட முடியும். பக்தி என்ற உணர்வு எப்படி உண்டானது? மனிதப் பிறவிகள் எல்லாருக்குமே இந்த உணர்வு இருக்கிறதா? கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் இந்த உலகத்தில் இருக்கவே செய்கிறார்கள். பக்தி என்ற உணர்வைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்?

இப்படிப் பல விஷயங்களையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது... வீட்டின் பின்பக்கத்திலிருந்து ஒரே ஆரவாரம். “ஓடி வாங்க... ஓடி வாங்க... பாம்பு...!'' கோழிகள் கொக்கரிக்கின்றன. காகங்கள் கரைகின்றன. எங்கு பார்த்தாலும் ஒரே கலவரம்! நான் மெல்ல எழுந்து பின்பக்கம் சென்றேன். சம்பவம் நடந்த இடம் தொழுவம். நாட்டுக் கோழிகளுக்கும், ஒயிட் லெகான் சேவலுக்கும் பிறந்த பத்து குஞ்சுகள்... ஐந்தாறு தாய்க்கோழிகள். சுமார் பத்து அடி நீளம் உள்ள தடிமனான ஒரு சாரை. நிறம் கருப்பு. அது தன் தலையை உயர்த்திய வாறு கோழிக்குஞ்சுகளுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறது. கைஸுக்குட்டியைக் கையில் வைத்தவாறு மகள் முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறாள். பயம் முகத்தில் தெரிந்த நிலையில் வாசலில் நின்றிருக்கின்றனர் மூன்று சௌபாக்யவதிகளும். ஒயிட் லெகான் சேவல் சிறகுகளை விரித்துக்கொண்டு தலையையும் கழுத்தையும் தாழ்த்திக்கொண்டு நெருங்கிப் போய் சாரையை இரண்டு கொத்து கொத்துகிறான். அவனோடு சேர்ந்து தாய்க்கோழியும் ஒரு கொத்து கொத்தியது. அவ்வளவுதான். சாரை மெதுவாக நகர்ந்து ஊர்ந்து போனது. இவ்வளவு விஷயங்களும் ஒரு சில நொடிகளிலேயே நடந்து முடிந்துவிட்டன என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். மகளின் தாய் கோபத்துடன் கேட்டாள்:

“அது ஊர்ந்து போறதைப் பார்த்தீங்கள்ல...? கல்தூண் மாதிரி பார்த்துக்கிட்டு நின்னா எப்படி?''

நான் பிறகு என்ன செய்ய முடியும்? அதை அடித்துக் கொல்ல முடியுமா? அது முடியாத விஷயம். அதனால் எதற்கு வீண் வம்பென்று எதுவுமே பேசாமல் மவுன விரதம் அனுஷ்டித்தேன்.

“உங்களைப்போல இல்ல ஒயிட் லெகான். அவனுக்கு சூடு, சொரணை இருக்கு. அவன்தான் ஆம்பளை. அவன் அந்தப் பாம்பை எப்படி கொத்தினான் பார்த்தீங்களா?''

நான் சொன்னேன்:

“என் மகளையும் பொண்டாட்டியையும் காப்பாத்தணும்னா நான் எவ்வளவு கொடிய நல்ல பாம்புடன்கூட போராடத் தயார். ஒயிட் லெகான் சேவல் அவனோட மனைவிமார்களையும் குஞ்சுகளையும் காப்பாத்துறதுக்காகக் கொத்தினான்.''

“காப்பாத்தினதைப் பார்த்தீங்கள்ல...'' திரும்பிப் பார்த்து தன் தங்கையிடம் சொன்னாள்: “கொண்டு வாடி ஒரு நாழி கோதுமையை. அவன் எப்படி மலைபோல இருந்த அந்த சாரைப் பாம்பைக் கொத்தி விரட்டினான் பார்த்தியா?''

மகள் சொன்னாள்:

“டாட்டோ...! அது வாயைத் திறந்து கடிக்க வந்துச்சு- கைஸுக்குட்டியை...''

“ம்க்கும்...'' மகளிடம் நான் சொன்னேன்: “மகளே, ஊர்ந்து போகுதுல்ல பூச்சி... எதைப் பார்த்தாலும், நீ பார்த்துக்கிட்டு நிக்கக் கூடாது. ஓடி வந்து அம்மாக்கிட்ட இல்லாட்டி டாட்டோக்கிட்ட சொல்லணும்... என்ன?''

இப்போது மகளின் தாயிடம் சொன்னேன்:

“வாசல் கதவுகளைத் திறந்து வைக்காதே. கொஞ்ச நாட்கள் கோழிக்குஞ்சுகளை அறைக்குள் பூட்டி வளர்க்குறதுதான் சரியா இருக்கும்.''

நான் திரும்ப வந்து உட்கார்ந்தேன். ஏற்கெனவே எழுதிய ஒரு பக்கத்தை வாசித்துப் பார்த்துவிட்டு எழுத்தைத் தொடர்ந்தேன். அப்போது ஒரு தந்தி வருகிறது. அதன்படி அடுத்தநாள் நான் வேறொரு ஊருக்குப் போக வேண்டும். அங்கிருந்து மகளுக்கும், மகளின் தாய்க்கும் வாங்கி வர வேண்டிய பொருட்களின் பட்டியல் ஒன்று என்னிடம் நீட்டப்பட்டது. கடைசியில் மகள்: “டாட்டோ... கைஸுக்குட்டிக்கு ஒரு மாலை வேணும்!''

அடுத்த நாள் நான் பயணமானேன். சுமார் நானூறு மைல்களுக்கப்பால் உள்ள ஒரு நகரத்திற்கு நான் போய், காண வேண்டியவர்களைக் கண்டேன். நான்கு நாட்கள் அங்கு தங்கிவிட்டுத் திரும்பினேன். வீட்டில் இருந்து பன்னிரண்டு மைல் தூரத்தில் உள்ள ஒரு சிறிய ரெயில்வே ஸ்டேஷனில் நான் இறங்கினேன். அப்போது இரவு பதினொன்றரை மணி. போவதற்கு வாகனங்கள் எதுவும் இல்லை. இரவில் தங்கிச் செல்லலாம் என்றால் அதற்கேற்ற நல்ல ஹோட்டல்களும் இல்லை. என்ன செய்வது? திடீரென்று ஞாபகத்தில் வந்தது. ரெயில்வே தண்டவாளத்தின் வழியே நடந்தால் ஒரு குறுக்குப் பாதை இருக்கிறது. மூன்று மைல்கள்தான் வரும். கையில் குடை இருக்கிறது. ஒரு பெட்டியும். பெட்டியைத் திறந்து டார்ச் விளக்கை எடுத்தேன். பெட்டியில் இரண்டு மெழுகுவர்த்திகள் இருந்தன. முன் ஏற்பாடாக எதற்கும் இருக்கட்டும் என்று அந்த மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்திருந்தேன். என்ன இருந்தாலும் மின்சாரத்தை முழுக்க முழுக்க நம்ப முடியாது அல்லவா? ஒருவேளை டார்ச் விளக்கின் பல்பு திடீரென்று, கொஞ்சமும் எதிர்பாராமல் ஃப்யூஸ் ஆகலாம். ஒரு சினிமாவில் நடித்திருக்கும் அரிவாளை எடுத்து சட்டைக்குக் கீழே பெல்ட்டில் வைத்துக் கட்டினேன். இது வெறுமனே ஒரு தைரியத்திற் காகத்தான். அடுத்த நிமிடம் பெட்டியைக் கையில் தூக்கியவாறு மெல்ல நடந்தேன். ரெயில்வே ஸ்டேஷனின் வெளிச்சம் முழுமையாக மறைந்ததும், டார்ச் விளக்கை அடித்தேன். ரெயில்வே தண்டவாளங்கள் நீண்டு, முடிவே இல்லாத வண்ணம் கிடக்கின்றன நீளமான பாம்புகளைப்போல. டார்ச் விளக்கை அணைத்தபோது ஒன்றுமே தெரியவில்லை. ஒரே இருட்டு. மின்மினிப் பூச்சிகளின் ஓசை மட்டும் கேட்டது. டார்ச்சை மீண்டும் அடித்தவாறு மிகவும் கவனமாக நடந்தேன். அதிக நேரம் பெட்டியைக் கையிலேயே வைத்திருந்ததால் மிகவும் அதிகமாகக் கனப்பது மாதிரி அது தெரிந்தது. அதனால் அதைத் தூக்கித் தலையில் வைத்தேன்.


பெட்டிக்குள் கண்ட கண்ட சாமான்கள் எல்லாம் நிறைய வைத்திருந்தேன். பத்துப் பன்னிரண்டு நேந்திர வாழைப்பழங்கள் உள்ளே இருந்தன. கொஞ்சம் ஆரஞ்சுப் பழங்கள், மிட்டாய், இரண்டு கிலோ சர்க்கரை. அப்போது சர்க்கரை கிடைப்பது என்பது ஊரில் மிகவும் கஷ்டமான ஒரு காரியமாக இருந்தது. சர்க்கரை மட்டுமல்ல; அரிசியும்தான். நான் போயிருந்த நானூறுக்கும் மேற்பட்ட மைல்கள் தூரத்தில் இருந்த நகரத்தில் அரிசி எளிதாகக் கிடைத்தது. அங்கேயிருந்து கொண்டு வந்தால் அரசாங்கம் என்னைப் பிடித்து சிறைக்குள் பூட்டிவிடும். எந்த முட்டாள்தனமான அரசாங்கத்திற்கும் நாம் பயப்படத்தானே வேண்டிருக்கிறது. போலீஸ், பட்டாளம், சிறை, தூக்குமரம்- எல்லாமே அரசாங்கத்தின் பிடியில் இருக்கின்றன. இந்த இரண்டு கிலோ சர்க்கரைக்கு வேண்டுமானால் அரசாங்கம் எனக்குத் தண்டனை தரலாம். நல்ல தரமான ஒரு கிலோ தேயிலைகூட இருக்கிறது. அதற்குக்கூட தண்டனை இருக்கிறதோ என்னவோ? என் உடம்பு முழுக்க வியர்க்கத் தொடங்கியது. களைப்பு ஒன்றும் தோன்றியதாகச் சொல்வதற்கில்லை. பேசாமல் ரெயில்வே ஸ்டேஷனிலேயே தங்கியிருக்கலாம். இல்லாவிட்டால் அதிகாலை ஐந்து மணிக்கு வந்து சேரும் புகை வண்டியில் வந்திருக்கலாம். இருட்டு நேரத்தில் நடக்கும்போதுதான் இந்த எண்ணமெல்லாம் வருகிறது. நான் நடந்து செல்லும் பாதை ஒரே அமைதியாக இருக்கிறது. திடீரென்று  ஒரு ஞாபகம். இந்தப் பகுதியில் நடந்து வருபவர்கள் நிறைய பேரை திருடர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கொன்றிருக்கிறார்கள் என்று பரவலாகச் சொல்லப்படுவதுண்டு. நடந்து வருபவர்களின் கழுத்தை வெட்டுவது... பிறகு அவர்களிடம் இருக்கும் பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடுவது... சில நாட்களுக்கு முன்பு வரை இந்தப் பகுதியில் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஒருவேளை இப்போதுகூட நடக்கலாம். மிகமிக எச்சரிக்கை உணர்வுடன், தேவைப் பட்டால் மட்டும் டார்ச் விளக்கை அடித்தவாறு வேக வேகமாக நான் நடந்தேன். எப்படியும் பன்னிரண்டரை மணிக்கு முன்னால் வீடு போய்ச் சேர்ந்து விடலாம் என்று தோன்றியது. தார் போட்ட பாதையை விட்டு ஒற்றையடிப்பாதை வழியே மலை இடுக்குகளைத் தாண்டி நடந்து போக வேண்டும். கிட்டத்தட்ட ஆள் நடமாட்டமே கிடையாது. ஒரு காரோ பஸ்ஸோ இன்னும் ஆயிரம் வருடங்கள் ஆனால்கூட அந்தச் சிறிய பாதையில் வரப்போவதில்லை. வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? இதைக் குறித்து ஆராய்ச்சி பண்ண வேண்டும். அதே நேரத்தில்... நாறிப்போன பழமையான நகரங்களின் ஆர்ப்பாட்டங்கள்! அட்டகாசங்கள்! இதற்காக எத்தனை லட்சம் ரூபாய்களைச் செலவழிக்கிறார்கள்! அதே நகரங்களை சுத்தமான நகரங்களாக வைக்க முடியும். அழுக்கே இல்லாத நகரங்களாக மாற்ற முடியும். மக்களிடம் பொது இடங்களில் மலமும் மூத்திரமும் கழிக்கக்கூடாது என்று சொல்ல வேண்டும். வீட்டையும் சுற்றுப் புறத்தையும் சுகாதாரமாக வைக்கும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். இதை யார் யாரிடம் செல்வது? ஆயிரக்கணக்கான வருடங்களாகப் பழகிப்போன நம்பிக்கைகள்... மனதின் பிரதிபலிப்புத்தானா வீடும், சுற்றுப்புறமும்? நான் தற்போது குடியிருக்கும் வீடு நான் கட்டியதல்ல. நான் இங்கு வருவதற்கு முன்பே கட்டி இருந்தது. நியாயமாகப் பார்த்தால் அதைக் கட்டி குடியிருந்தவர்களின் எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்புதானே இந்த வீடும் சுற்றுப்புறமும்! நாங்கள் வரும்போது அழுக்கடைந்து அசிங்கமான நிலையில் இருந்தது இந்த வீடு. நாங்கள் விரும்பக்கூடிய விதத்தில் இதைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறோம். வீடு நன்றாக இருக்க வேண்டுமென்றால், முதலில் வீட்டிலுள்ள ஆண் அது பற்றி கவனம் செலுத்த வேண்டும். வீட்டில் இருக்கும் சௌபாக்யவதிகளும் இந்த விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். இப்போது மகளும், மகளின் தாயும் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அநேகமாக தூங்கிக் கொண்டிருப்பார்கள். மகள், மகளின் தாய், கைஸுக்குட்டி- மூன்று பேரும் தற்போது படுக்கையில் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பார்கள். அதாவது- கட்டிலில். கொசுவலைக்கு உள்ளே. மகளுக்கும் கைஸுக்குட்டிக்கும் கட்டாயம் மின்விசிறி வேண்டும். மகளின் தாய்க்கு மின்விசிறியின் சத்தம் ஒத்து வராது. நரியோ வேறு ஏதாவது மிருகமோ வந்து கோழிகளைப் பிடித்தால் மின்விசிறியின் சத்தத்தில் அது கேட்காமலேயே போய்விடுமே! நான் வீட்டில் இல்லாததால் மின் விசிறியை சத்தம் இல்லாமலே... நான் வீட்டுக்குள் நுழைந்துவிட்டால்... எல்லாரும் உடனே படுக்கையைவிட்டு எழுவார்கள். விளக்கைப் போட்டுவிட்டு எல்லாரும் பெட்டியைச் சுற்றி நிற்பார்கள். முதலில் எல்லாரும் ஏதாவது தின்ன வேண்டும். அதற்கு மிட்டாய் இருக்கிறது. பழமும் ஆரஞ்சுப் பழமும் இருக்கின்றன. ஆமாம்... கைஸுக்குட்டி மிட்டாய் தின்னுமா? திடீரென்று ஒரு மாற்றம் நதி! ரயில் பாலம்... பாலத்தில் ஏறியபோது... அப்போதுதான் ஞாபகத்தில் வந்தது, சந்நியாசி! அவர் பாலத்திற்கு அடியில் இருக்கிறாரா? சிறிது நேரம் தயங்கி நின்றேன். பிறகு என்ன நினைத்தேனோ... பெட்டியைத் திறந்து மெழுகுவர்த்தியை எடுத்து எரியவிட்டு... டார்ச் விளக்கை அடித்தவாறு பார்த்தேன். கீழே ஒரு பக்கம் முழுவதும் செடிகள் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. மறுபக்கம் இறங்கி பாலத்திற்கு அடியில் சென்றேன். கீழே முழுக்க முழுக்க வெள்ளை மணல்... அந்த இடம் பெருக்கி சுத்தம் செய்யப்பட்டிருந்தது. மழை நனைக்காமல் இருக்கும் ஒரு இடத்தில் ஒரு அடுப்பு இருந்தது. அதற்கு அருகில் எரிப்பதற்காகப் பயன்படும் விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. டார்ச் விளக்கை அடித்துப் பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது- நான் பார்த்த செடிகள் முழுக்க முழுக்க அவரைக் கொடிகள் என்று. ஏகப்பட்ட அவரைக்காய்கள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்தன. நான் கையிலிருந்து மெழுகுவர்த்தியை சிமெண்ட் தூணில் வைத்து எரியவிட்டேன். பெட்டியையும் குடையையும் மேலே வைத்தேன். மழை விழாத இடமொன்றில் சந்நியாசி தூங்கிக்கொண்டிருந்தார்- சிறு குழந்தைகள் படுத்திருப் பதைப்போல ஒரு காலை மட்டும் நீட்டிச் சரிந்தவாறு. அவருக்கு நேராக மேலே ஒரு காவி நிறத் துண்டு தொங்கிக் கொண்டிருந்தது. சந்நியாசிக்கு அருகில் ஒரு துணி  மூட்டை, சங்கு, சூலம் ஆகிய அவரின் பிரிக்க முடியாத சொத்துகள்...

இதோ கிடக்கிறார் ஒரு மனிதர்! மக்களைப் பற்றியோ சமூகத்தைப் பற்றியோ எந்தக் குற்றச்சாட்டும் இவரைப் பொறுத்தவரை இல்லை. அரசாங்கத்தைப் பற்றியும் இல்லை. கடவுளைப் பற்றியும் இல்லை. யாரைப் பற்றியும், எதைப் பற்றியும் இல்லை. லோக ஸமஸ்தா ஸுகினோ பவந்து!

“மகாத்மா.'' நான் அழைத்தேன்.

“சுவாமிஜி...''

அவர் கண்களைத் திறந்தார். நான் வெளிச்சத்தில் நின்றிருந்தேன். புன்சிரிப்பு தவழ நீண்ட நேரம் என்னையே பார்த்தார். “வாங்க சுவாமிஜி'' என்று அழைத்தவாறு அவர் எழுந்து உட்கார்ந்தார்.


அவரின் தலைக்கும் பாலத்திற்கும் நான்கு விரல் தூரம்தான். நான் மேலே ஏறி உட்கார்ந்து விவரத்தைச் சொன்னேன். அப்போதே என்னை வீட்டில் கொண்டு விடுவதாக அவர் சொன்னார். “வேண்டாம். அதிகாலையில போனா போதும்'' என்றேன் நான். பெட்டியைத் திறந்து பழங்களையும், ஆரஞ்சுப் பழங்களையும் வெளியே எடுத்தேன். நாங்கள் கொஞ்சம் சாப்பிட்டோம். அவர் ஒரு குப்பியில் சுத்தமான நீர் பிடித்து வைத்திருந்தார். அதைத் தந்தார். இருவரும் குடித்தோம். "தேநீர் போடலாம்” என்றார் அவர். நான் கொஞ்சம் சர்க்கரையும், தேயிலையும் எடுத்துத் தந்தேன். நாங்கள் ஆளுக்கு ஒரு பீடியைப் பிடித்தோம். சில நிமிடங்கள் என்னென்னவோ விஷயங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். படுத்தவாறுதான். அவர் வெறும் நிலத்தில் கையைத் தலைக்கு வைத்தவாறு படுத்திருந்தார். நான் சட்டையும் வேஷ்டியும் கட்டிக் கொண்டு, பெட்டியைத் தலைக்கு வைத்திருந்தேன். அவருக்கு ஒரு ஜமுக்காளமும், போர்வையும் வாங்கிக் கொடுத்தால் என்ன என்று அப்போது நினைத்தேன். மெழுகுவர்த்தி பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. சுத்தமான காற்று எங்கும் பரவி இருந்தது. உறங்குவதற்கு முன்பு அவர் சொன்னார்: “தனிமையான ஒரு மலை உச்சியில் படுத்தபடியே, "தெய்வமே”ன்னு கூப்பிட்டுக்கிட்டே என்னோட கடைசி மூச்சை விடணும். இதுதான் என்னோட ஆசை!''

மெழுகுவர்த்தி அணைந்தது. நல்ல இருட்டு. இலேசாக கண்களை மூடியிருப்பேன்... ஒரு மிகப் பெரிய சத்தம்... புகை வண்டி வரும் ஓசைதான்! பயங்கரமான ஓசையுடன் அது நாங்கள் படுத்திருக்கும் இடத்தில் இருந்து நான்கடி உயரத்தில் சீறிப்பாய்ந்து ஓடிக்கொண்டி ருந்தது. அப்போது மண்ணும் தூசியும் உடல்மேல் விழுந்தன. நான் உறங்க ஆரம்பித்தேன். ஒரு கனவு. என்னையா இல்லை சந்நியாசியையா என்று தெரியவில்லை. கொல்லப் பார்க்கிறார்கள். ஆகாயம் இருட்டாக இருக்கிறது. வெறும் நிலத்தில் நாங்கள் படுத்திருக்கிறோம். கண்கள் இரண்டையும் யாரோ தோண்டியெடுத்து ஆகாயத்தில் இரண்டு இடங்களில் வைக்கிறார்கள். அப்போது நல்ல பிரகாசம்! யாரோ காலின் பெருவிரல்களுக்குத் தீ வைக்கிறார்கள். அடுத்த நிமிடம் உடல் நெருப்புப் பற்றி எரிகிறது. தீ முழங்கால் வரை எரிந்த பிறகு ஒரு குரல்-

“கடைசியா என்ன சொல்ல விரும்புறே?''

“ஓம் சாந்தி சாந்தி சாந்தி...'' எரிந்து கொண்டிருந்த உடல் சொன்னது: “லோக மைஸ்தான ஸுகினோ பவந்து...''

உடல் முழுமையாக எரிந்து முடிந்தது. அது இப்போது சாம்பலாகி இருந்தது. காற்றடித்தபோது அந்தச் சாம்பல் நாலாப் பக்கங்களிலும் பரவியது. நிலம் யாருமே இல்லாமல் சூனியமாகக் கிடந்தது.

ஆகாயத்தில் இரண்டு கண்கள் பயங்கர ஒளியுடன் பிரகாசித்துக் கொண்டிருந்தன.

அடுத்து ஒரு கம்பீரமான குரல்: “அடுத்த ஆள்!''

நான் திடுக்கிட்டுப் போனேன். கண்களைத் திறந்தேன். பொழுது இன்னும் புலரவில்லை. தீக்குச்சியை உரசி பீடியைப் பற்ற வைத்தேன். நேரம் என்னவென்று பார்த்தேன்.

மணி ஐந்து, சந்நியாசி எங்கே போனார்?

“என்ன... எந்திரிச்சிட்டீங்களா?'' என்று கேள்வியுடன் அவர் வந்தார். அவர் குளித்து முடித்திருந்தார். உடம்பு முழுக்க விபூதி மணம் கமழ்ந்து கொண்டிருந்தது. ஒரு குப்பியிலும் ஒரு அலுமினிய பாத்திரத்திலும் அவர் தேநீர் கொண்டு வந்தார். நான் குப்பியில் இருந்த தேநீரைக் குடித்தேன். பெரிய ஒரு கட்டு அவரைப் பயறை என் முன் கொண்டு வந்து வைத்தார். “இதுல சில பயறுகள் நல்லா காய்ஞ்சு போயிருக்கும். அதை மண்ணுக்குள்ள விதைச்சுடுங்க. கொஞ்ச நாள்ல வளர்ந்து கொடி கொடியா படர்ந்து நிற்கும். நான் நாற்பது வருஷமா பல இடங்கள்லயும் இதை நட்டு வளர்த்து வர்றேன்.''

நாங்கள் நடந்தோம். தார் சாலை வரை அவர் என்னுடன் வந்தார்.

என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் மகளின் தாய். நான் வாங்கி வந்திருந்த மாலையை மகள் கைஸுக்குட்டிக்கு அணிவித்தாள். மிட்டாயைக் கைஸுக்குட்டி தின்னவில்லை. சந்நியாசி தந்த அவரைப் பயறில் காய்ந்து போயிருந்த சில விதைகளை மண்ணில் வித்தாக ஊன்றி வைத்தோம். குளித்துமுடித்து, தேநீர் குடித்தேன். உலக இலக்கியத்தைத் தொடரலாம் என்று உட்கார்ந்தேன். ஆரம்பத்தில் எழுதியதிலிருந்து இதுவரை எழுதியதுவரை ஒரு முறை படித்துப் பார்த்தேன். அவ்வளவு நன்றாக எழுதியிருப்பதாகப் படவில்லை. அதனால் எழுதியவற்றைச் சிறு சிறு துண்டுகளாகக் கிழித்து, நிலத்தின் ஒரு மூலையில் தூக்கி எறிந்தேன். பிறகு... எந்தவித பரபரப்பும் இல்லாமல் "ஹாயாக” நடந்தேன். அப்போது மகள் கைஸுக்குட்டியுடன் வந்தாள்.

“டாட்டோ... கைஸுக்குட்டியை புள்ளிக்கோழி கொத்திடுச்சு...''

என்னை நலம் விசாரிப்பதற்காக வந்த ஒயிட் லெகான் சேவலிடம் நான் சொன்னேன்:

“தோழரே... உங்களோட மனைவிமார்கள்ல ஒருத்தி கைஸுக்குட்டியைக் கொத்தியிருக்கா. நீங்க அதைப் பத்தி என்ன சொல்றீங்க?''

ஒயிட் லெகான் சேவல் தலையைத் திருப்பி ஒரு கண்ணால் என்னைப் பார்த்தான். அப்போது திடீரென்று என் ஞாபகத்தில் வந்தது- ஆகாயத்தில் பிரகாசம் தந்து கொண்டிருக்கும் அந்த இரண்டு கண்கள்!

நான் வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் முழுவதுமாகத் திறந்துவிட்டேன். இருந்தாலும் உள்ளே வெளிச்சம் சரியாக வரவில்லை. இது முன்பு சில முஸ்லிம்கள் உண்டாக்கிய வீடு. அதாவது- அவர்கள் சொல்லி தச்சன் கட்டிய வீடு. முஸ்லிம்கள் இந்த வீட்டில் குடியிருந்தார்கள். அறைகள் நிறையவே இருக்கின்றன. தீப்பெட்டி மாதிரி சின்னச் சின்ன அறைகள். பிரார்த்தனை செய்வதற்கென்று தனியாக ஒரு இடம், படுக்கையறை, சமையலறை, ஸ்டோர் ரூம், விசிட்டர்ஸ் அறை என்று பல அறைகள் திட்டமிட்டுக் கட்டப்பட்டி ருந்தன. படுக்கையறைக்கு இரண்டு ஜன்னல்கள். அதற்கு எதிராக ஜன்னல்கள் எதுவும் இல்லாததால், காற்று எங்கே போவது என்று தெரியாமல் வெளியே நின்று கொண்டிருக்கும். இந்தப் படுக்கை அறையைவிட பெரியது ஹால். அதற்கு நான்கு ஜன்னல்கள், நான்கு கதவுகள். இந்த அளவுக்கு பெரிய அறை தேவைதானா? இதற்கு இந்தியா, எகிப்து, அரேபியா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் பத்தாயிரம், பதினைந்தாயிரம் வருட சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால்தான் உங்களுக்கே இதைப்பற்றி தெளிவாகப் புரிந்தகொள்ள முடியும். பொதுவாக செத்துப்போன பிணத்தை வீட்டு ஹாலின் மையத்தில்தான் வைப்பார்கள். உதாரணத்திற்கு- நான் இறந்து போகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என்னைக் குளிப்பாட்டி, புதிய ஆடைகள் அணிவித்து, அந்த அறையின் மத்தியில் கொண்டு போய் வைப்பார்கள். ஆட்கள் வந்து கடைசி முறையாக என்னைப் பார்த்துவிட்டுப் போவார்கள். இறந்துவிட்டால், காற்றும் வெளிச்சமும் மிகவும் முக்கியம் அல்லவா? வாழும்போது காற்று வேண்டாம்... வெளிச்சம் வேண்டாம்... எதுவுமே வேண்டாம்.


இந்த பூமியில் வாழ்வது என்பது பயணத்தின் மத்தியில் இரவு நேரத்தில் ஏதாவதொரு சத்திரத்தில் தங்குவது மாதிரி என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயணத்தில் எவ்வளவோ கஷ்டங்கள் இருக்கலாம். இருந்தாலும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நிரந்தரமாக வாழக்கூடிய இடம் இருக்கிறது சொர்க்கம்! நரகமும் இருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதில் இருந்து தப்பிப்பதற்காகத்தான் இருக்கிறது பிரார்த்தனையும், அதோடு சம்பந்தப்பட்ட இன்னும் சில விஷயங்களும். பிரார்த்தனையும், உணவும், குடியும், குழந்தைகள் பிரசவிப்பதும்- இதுதான் வாழ்க்கை. பத்து... பதினைந்தாயிரம் வருடங்களாக உலகில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து சந்ததி உருவாகி, இதே கதைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதுதான் விதி!

இந்த ஹால் இப்போது பெண் விருந்தாளிகளுக்கென்று ஆகிவிட்டது. எப்போதாவது நான் அதில் உட்கார்ந்து சாப்பிடு வதுண்டு. சாப்பிடுவதற்கென்று தனியாக ஒரு அறை நம்முடைய தச்சு சாஸ்திரத்தில் (எனக்கு இதைப் பற்றிய அறிவு குறைவு) இல்லை என்றுதான் நினைக்கிறேன். உண்மையைச் சொல்லப்போனால் பெரிய இந்த ஹால் இப்போது பூனை அறை ஆகிவிட்டது. பகல் நேரத்தில் பெரும்பாலும் இந்த அறையில்தான் மகளும் கைஸுக்குட்டியும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இரவில் கைஸுக்குட்டி எங்களுடன்தான் படுக்கிறது. கொசு வலைக்கு உள்ளே. என்னுடைய  கட்டிலுக்கு கொசு வலை இல்லை. கொசு வலைக்குள்ளே படுத்தால் எனக்கு மூச்சு விடவே மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் கொசு தன் விருப்பப்படி சுற்றிக் கொண்டிருக்கும். அங்கிருந்த கொசு முட்டை களை எல்லாம் மகளின் தாய் மண்ணெண்ணெய்யில் சோப்பைக் கலந்து முழுமையாக அழித்துவிட்டதாகச் சொன்னாள். மனிதர்களைப் போலத்தானே முட்டைகளும்! அவற்றுக்கும் ஆத்மா என்று ஒன்று இருக்கிறதே! அப்படியானால் முட்டைகளை அழிப்பது என்பது பாவமான செயல்தானே! ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வாயையும் மூக்கையும் துணியால் மூடிக்கொண்டுதான்  நடப்பார்கள். காரணம் காற்றில் கலந்திருக்கும் அணுக்களைக் கொன்றுவிடக்கூடாது என்பதுதான். கொசு என் பக்கம் வரக்கூடாது என்பதற்காக மின்விசிறியை வேகமாக ஓடவிடுகிறேன்- மழை பெய்தாலும், குளிர் இருந்தாலும்.

“இந்த ஃபேனை நிறுத்தினா என்ன? நாங்க உறங்க வேண்டாமா?''

தேவையில்லாத பிரச்சினை! நான் மின்விசிறியை நிறுத்துகிறேன். அடுத்த நிமிடம் கொசுக்கள் படு உற்சாகத்துடன் படையெடுத்து வருகின்றன. தெய்வத்தை நினைத்துக்கொண்டே கொஞ்சம் ரத்ததானம் செய்கிறேன். கொசக்களே இல்லையென்றாலும் எனக்கு எப்போதும் காற்று இருக்க வேண்டும். தண்ணீரில் வாழும் மீனைப்போல நான். மீண்டும் மின்விசிறியை ஓடவிடுவேன். அவ்வளவுதான்- தூக்கத்திலிருந்து எழுந்த சௌபாக்யவதி "காச்மூச்” என்று கத்துவாள். உண்மையாகச் சொல்லப்போனால் பத்ரகாளி என்ற சௌபாக்யவதியின் வர்க்கத்தைச் சேர்ந்தவன் இவள் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும். பயப்படாமல் இருக்க முடியுமா? திருமணம் ஆவதற்கு முன்பு, என்னுடைய விருப்பங்களுக்கு முன்னுரிமை தருவதாகவும், எது சொன்னாலும் நான் சொல்லும் எல்லா விஷயங்களையும் கேட்டு அதன்படி நடப்பதாகவும் கூறி என்னிடம் இந்த சௌபாக்யவதி சத்தியம் செய்திருந்தாள். திருமணம் செய்து கொண்டு சுகமாக வாழலாம் என்ற கற்பனையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஆண் சிங்கங்கள் இந்த விஷயத்தை இப்போதே மனதில் வைத்துக்கொள்வது நல்லது. இருந்தாலும் சௌபாக்யவதி தான் எந்த காளியாக இருந்தாலும், நேரம் செல்லச்செல்ல தூங்கித்தானே ஆக வேண்டும்! கோழியைப் பிடிப்பதற்காக நரியோ செந்நாயோ மலைப்பாம்போ வந்தால், எழுந்து ஓடி அவற்றோடு போராட வேண்டியது நான்தான். அது என் கடமையாகிப் போகிறது. அதையும் கவனித்துக்கொண்டு, மீண்டும் மின்விசிறியை ஓட விடுகிறேன். மகளுக்கு ஒரு வேளை வியர்க்கிறதோ என்று கொசு வலையை இலேசாக உயர்த்தி அவள் பக்கம் கொஞ்சம் காற்றைப் போக விடுகிறேன். கைஸுக்குட்டி கண்களை அகல விரித்து என்னைப் பார்க்கிறது. "என்னடா... காத்தா? என் பக்கம் கொஞ்சம் வர்றது மாதிரி போட்டு விடு' என்பது மாதிரி இருந்தது அதன் பார்வை. கைஸுக்குட்டி மீது கொஞ்சம் மின்விசிறி காற்றைப் படச் செய்வேன். பாதி இரவு தாண்டியிருக்கும். எனக்கு இலேசாக பசி எடுப்பதுபோல் இருந்தது. அதற்குத்தான் பிஸ்கட், முந்திரிப்பருப்பு, பழம் என்று ஏதாவது இருக்கின்றனவே! கைஸுக்குட்டி இந்த வீட்டுக்கு வந்தபிறகு, பெரும்பாலும் பிஸ்கட்தான். நான் ஏதாவது தின்று கொண்டிருந்தால், "என்ன, தனியா உட்கார்ந்து தின்னுக்கிட்டு இருக்கீங்க!” என்பது மாதிரி "ம்யாவோ” என்று கத்தியவாறு கைஸுக்குட்டி எழுந்து நடந்து வரும். எப்படி என்று தெரியாது... “டாட்டோ... என்ன தின்றீங்க?'' என்ற கேள்வியுடன் அடுத்த நிமிடம் மகளும் எழுந்து வருவாள். கைஸுக்குட்டியும் மகளும் நானும் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் பிஸ்கட்டுகளை காலி செய்து கொண்டிருக்கும்போது ஒரு சத்தம்-

“ராத்திரி நேரத்துல பிஸ்கட் தின்னுக்கிட்டு... காற்றாடியைப் போட்டுக்கிட்டு... கைஸுக்குட்டியும் மகளும் நீங்களும் சேர்ந்து என்னை உறங்க விடுறீங்களா?''

சத்தம் போட்டது யார்? என்னுடைய பத்ரகாளி என்ற சௌபாக்யவதிதான். அவளுக்கும் கொஞ்சும் பிஸ்கட்களைத் தருவேன். அதைத் தின்று, கொஞ்சம் தண்ணீர் குடித்து முடித்தால், அவளின் கோபம் இருந்த இடம் தெரியாமல் போனது மாதிரி இருக்கும். அதற்குப் பிறகும்... அதிகாரம்தான்!

“நரியோட சத்தம் ஏதாவது கேட்குதா?''

மின்விசிறியை நிறுத்துகிறேன். நரி முதல் திருடன்வரை... யாருடைய நடக்கும் சப்தமாவது கேட்கிறதா என்று காதுகளைத் தீட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன். அப்போது தூரத்தில் ஏகப்பட்ட மக்களை ஏற்றிக்கொண்டு பயங்கரமான சத்தத்துடன் புகைவண்டி வந்துகொண்டிருக்கும் ஓசை காதில் விழுந்தது.

“டாட்டோ... நீள வண்டி...''

மகள் சொல்கிறாள். புகைவண்டி இப்போது ரெயில்வே பாவத்தின்  மேலே போய்க்கொண்டிருக்கிறது. அதன் "குடு குடு குடு குடு” சத்தத்தை வைத்து என்னால் அதை உணர முடிகிறது.

அந்த மனிதர் அங்கே கிடக்கிறார். வேலையையும், வீட்டையும், நிலங்களையும், எல்லா சுகங்களையும் உதறி எறிந்துவிட்டு... எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாலத்திற்குக் கீழே கிடக்கிறார்...!

எல்லா உலகங்களையும் படைத்த தெய்வமே! எல்லா உயிர்களையும் உருவாக்கிய கடவுளே!

கோவில்கள், பள்ளிகள், வழிபாட்டு இடங்கள், மனித தெய்வங்கள், காளைகள், கற்கள், மரங்கள், உருவகங்கள், அவதாரங்கள்... ஸம்பவாமி யுகே யுகே!

பனி விழுந்து கொண்டிருக்கும் கடும் குளிரில், உடலில் ஆடை எதுவும் இன்றி நிர்வாணமாக- கழுத்து வரை தண்ணீரில் நின்று தவம் செய்யும் மனிதர். பலகையில் அறையப்பட்ட கூர்மையான ஆணிகள் மேல் படுத்துக் கிடக்கிறார். வலது கையை மேல் நோக்கி உயர்த்தி, பின் அதை இறக்குவதே இல்லை.


அந்தக் கை தீக்குச்சிபோல விறைத்துப் போயிருக்கும். நகங்கள் வளர்ந்து மூன்றடி நீளத்தில் காய்ந்து கருகிப்போன குருத்து இலைபோல காற்றில் "கலபலா” சத்தம் உண்டாக்குகின்றன. கண்ணால் பார்த்த சந்நியாசிகள்... கண்ணால் பார்க்காத சந்நியாசிகள்...

கைஸுக்குட்டியும் மகளும் மகளின் தாயும் நன்கு உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். உறக்கம். என்ன உறக்கம்? என்ன இருந்தாலும், உறக்கம் என்பது ஒரு கொடுப்பினைதான்.

தெய்வமே! யாரப்புல் ஆலமின்!

காலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. செடிகளும், மரங்களும், பூக்களும், பறவைகளும்- எல்லாமே அழகானவைதாம். சிந்திக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன. சிரிப்பதற்கும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நான் புதிதாக வைத்திருக்கும் என்னுடைய மீசையைப் பார்த்து நானே வாய்விட்டுச் சிரித்தேன். மீசை உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது. ஆனால் டெக்னிக் கலரில் அது இருந்தது- வெள்ளை, சிவப்பு, கறுப்பு, சாம்பல், மஞ்சள்... இப்படியொரு மீசை யாருக்குத் தேவை?

நான் சாயம் பூசி, மீசை முழுவதையும் கறுப்பாக்கினேன்.

மீசை இப்போது நன்றாக வந்திருந்தது.

என் மீசையைப் பார்த்து எல்லாரும் சிரித்தார்கள். மகளை முத்தமிட்டபோது “டாட்டோ... ஊசிபோல குத்துது... வலிக்குது...'' என்றாள் மகள்.

என்ன இருந்தாலும், மகள் பெண் இனமாச்சே! கைஸுக்குட்டியின் நகங்கள் பட்டு மகளின் உடல், முகம் என்று எல்லா இடங்களிலும் ஏகப்பட்ட கீறல்கள். அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட புகார் சொல்லாமல், என் மீசை குத்தும்போது மட்டும் ஊசிபோல் இருக்கிறதாம்.

அறிவாளிகளாக இருக்கும் நான்கு பேரிடம் இந்த மீசையைக் காட்டலாம் என்று போனால், நான் தேவையில்லாமல் ஒரு ஆபத்தில் மாட்டிக்கொண்டேன். இலக்கியவாதிகள் பலரும் இருக்கும் ஒரு கூட்டத்தில் போய் நான் சிக்கிக்கொண்டேன். "குடையை எடுத்துக் கொண்டு ஓடிப்போ” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் என்பதுதான் விஷயம். நான் ஒரு இலக்கியவாதி இல்லையென்றாலும், எழுத்தாளர்களையும் எழுத்தாளிகளையும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் மேல் நான் நல்ல மதிப்பும், பிரியமும் வைத்திருப்பவன். இவர்கள் பொதுவாக எதையுமே மிகைப்படுத்திப் பேசக்கூடியவர்கள். பத்து சதவிகிதம் உள்ளதை நூறு சதவிகிதமாக உயர்த்திப் பேசுவது இந்த இலக்கியவாதிகளின் இயல்பு. கூட்டம் படு கலகலப்பாக இருந்தது. யாரும் யாரையும்விட கீழானவர்கள் இல்லை அல்லவா! வீரம் கொப்புளிக்கும் வாதங்களும், எதிர்வாதங்களும், சவால்களும்! நிலவில் இறங்கிய ஒயிட் லெகான் சேவலைப்போல நான் இருந்தேன். என்னைப் பார்த்ததும் எல்லாரும் அமைதியாகிவிட்டார்கள். மீசை சம்பந்தமாக ஏதாவது சொல்வார்கள் என்ற ஆர்வத்துடன் இருந்தேன். நான் உட்கார்ந்தவுடன் கெ.டி. முஹம்மது என்ற எழுத்தாளர் பி.ஸி. குட்டி கிருஷ்ணன் அண்ட் உரூப் என்ற இரட்டைப் பெயர் கொண்ட எழுத்தாளரிடம் சொன்னார்:

“தெரியுதா? யார் இது? வைக்கம் முஹம்மது பஷீர். எங்களோட ஔலியா. இவர் இறந்துபோன பின்னாடி சந்தனக்குடம், கொடியேற்றம், வெட்டு, குத்து... பிறகு பணம் வசூல்னு ஒரே கொண்டாட்டம்தான்.''

அவர் சொன்னது ஒருவிதத்தில் எனக்கு சந்தோஷத்தைத் தந்தது. நான் இறந்தால் என்னை ஒரு மனிதக் கடவுளாக ஆக்கிவிடுவார்கள். சில நிமிடங்கள் அதிர்ச்சியடைந்த நான் கேட்டேன்: “என்னோட பிணத்தைப் பக்கத்துல வச்சிக்கிட்டுத்தானே இதையெல்லாம் செய்யப் போறீங்க? பணப்பெட்டிக்குப் பக்கத்துல என்னோட மகளின் தாயையும், மகளையும் உட்கார வைக்கலாம் இல்லியா?''

“இந்துக்கள், கட்டாயம் இதை எதிர்ப்பார்கள்.'' உரூப் என்ற பி.ஸி. இதை ஆட்சேபித்தார்: “இந்துக்களின் செத்துப்போன பிணத்தின் மேல்தான் முஸ்லிம்கள் பஷீரை ஔலியாவா ஆக்க முடியும்!''

நல்ல வேளை, நான் தப்பித்தேன். ஆனால்-

“இந்துக்களுக்கு இதில் என்ன வேலை?'' கெ.டி. முஹம்மது கேட்டார்: “எங்க விருப்பப்படி நாங்க செய்வோம். இஸ்லாமோட ஆளு பஷீர்...''

அவர் சொன்னது நியாயம்தான். எந்த நீதிமன்றமும் ஒத்துக்கொள்கிற விஷயம் இது. அதே நேரத்தில் உரூப் அண்ட் பி.ஸி. என்ற டபுள் பெயர் கொண்ட எழுத்தாளர் நூறு பேரின் சத்தத்தில் கத்தினார்.

“இந்துக்களின் தெய்வம்- வைக்கம் முஹம்மது பஷீர்.''

அங்கு கூடியிருந்தவர்கள் இதைக் கேட்டதும் நிசப்தமாகி விட்டார்கள். ஒரு இந்து- முஸ்லிம் சண்டைக்கான சரியான சூழ்நிலை அங்கு உண்டாகிவிட்டிருந்தது. ஆனால், பொதுவாக அங்கு கூடியிருந்தவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவு. தடியாக இருந்த இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் கோபத்தில் மீசையை முறுக்கினார்கள். கூட்டத்திலேயே கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த ஒரே ஆள்- ஜோசப் முண்டசேரியின் மகன் கரண்ட் தோமா. அவன் என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தான். கெ.டி. முஹம்மது மெல்லிய குரலில் சொன்னார்: “பி.ஸி.,  இந்துக்களான உங்களுக்கு தெய்வங்கள் நிறைய இருக்குல்ல...''

“இந்துக்களான நாங்கள்...'' உரூப் அண்ட் பி.ஸி. என்ற இந்து மிகவும் மகிழ்ச்சியான குரலில் சொன்னார்: “தெய்வங்கள் விஷயத்தைப் பொறுத்தவரை செல்வந்தர்கள்தான்னு சொல்லணும்... இருந்தாலும்...''

“பி.ஸி...'' இடையில் புகுந்து நான் சொன்னேன்: “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நம்ம கேசவதேவ், லலிதாம்பிக அந்தர்ஜனம், எஸ்.கெ. பொற்றெக்காட், தகழி சிவசங்கரப்பிள்ளை, குட்டி கிருஷ்ண மாரார், ஜி. சங்கரக்குருப்பு, ஜோசப் முண்டசேரி, பொன்குன்னம் வர்க்கி, குற்றிப்புழ கிருஷ்ணபிள்ளை, எம்.ஸி. ஜோசப், மன்னத்து பத்மநாபன்- இவங்கள்ல யாரையாவது தெய்வமாக்குறதுதான் சரின்னு எனக்குப் படுது...''

“இல்ல...'' பி.ஸி. அண்ட் உரூப் என்ற டபுள் சொன்னார்: “எங்களுக்கு முஸ்லிம் தெய்வம் இல்ல... வழுக்கைத் தலை தெய்வமும் இல்ல. அதனாலதான் சொல்றேன். வைலாலில் வீட்டோட தலைவர் பஷீர்தான் தெய்வம்...''

“என்னோட மீசையைப் பத்தி என்ன நினைக்கிறீங்க.''

எல்லாரும் மீசையைப் பார்த்தார்கள். ஆஹா ஓஹோ என்று யாரும் பாராட்டவில்லை.

“மீசை பத்திரம்... எங்களோட சிவன்ற தெய்வத்துக்குக்கூட மீசை இருக்கு!''

“பி.ஸி... நாம இந்த அமைப்பை நல்லா வளர்க்கணும்...'' எம்.டி. வாசுதேவன் நாயர் என்ற மீசைக்கார எழுத்தாளர் சொன்னார்:  “பஷீர் தெய்வத்தைப் பற்றி ஒரு வரி சுலோகங்கள், கதைகள், நாவல்கள், நாடகங்கள், பெருங்காப்பியங்கள்- எல்லாம் இயற்றணும். கரண்ட் தோமா என்ற கிறிஸ்துவர் எல்லா புத்தகங்களையும் அச்சடிச்சு வித்து காசாக்கிக்கிடட்டும்.''

நான் கரண்ட் தோமாவின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தேன். அவன் சொன்னான்: “குருவே, மன்னிக்கணும். இலக்கியவாதிகள்ல பெரும்பாலானவங்க இந்துக்கள்தான். நானும் கரண்ட் புக்ஸும் இவங்ககூட சேர்றதுன்னு முடிவு பண்ணிட்டேன். பஷீர் தெய்வமே... வணக்கம்!''

“இப்படியொரு முடிவுல இருக்கியாடா நீ?'' நான் சொன்னேன்.

“பிறகு... பி.ஸி...'' எம்.டி.வாசுதேவன் நாயர் என்ற மீசைக்கார இலக்கியவாதி சொன்னார்:


“வைலாலில் வீட்டுக்குப் போற ஒத்தையடிப் பாதையை வெட்டி பெரிய குகைகளும் சுரங்கங்களும் உண்டாக்கணும். பக்தர்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் தெய்வ சந்நிதியைப் போய் அடையணும்.''

“கட்டாயமா...''

“பி.ஸி...'' எம்டி. வாசுதேவன் நாயர் ஏதோ ஞாபகம் வந்த மாதிரி சொன்னார்: “கிணத்தை இன்னும் ஆழமாக்கணும்.''

“எந்த கிணறு?''

“பஷீர் தெய்வத்தோட வீட்ல ஒரு பெரிய கிணறு இருக்குது. தெய்வத்தோட மனைவி ஒரு நல்ல பசுமாட்டை வச்சிருக்காங்க. அவங்க நூறு வீட்டுக்கு பால் தர்றாங்க. கிணத்துத் தண்ணி முழுவதும் பாலாக மாறிக்கிட்டு இருக்கு!''

“குடிச்ச பால் போட்ட தேநீருக்கு நன்றியோட இருக்க வேண்டாமா?'' நான் சொன்னேன்: “பி.ஸி., எங்களுக்கு நாலு பசு மாடு இருக்கு. வாசு சொன்னது சுத்தப் பொய்...''

“தெய்வம் சொல்றதை முழுசா நம்புறோம்.'' பி.ஸி. என்ற உரூப் சொன்னார்: “தெய்வத்தோட மாட்டுத் தொழுவத்துல நாலு என்ன... நாப்பதாயிரம் பசுக்கள்கூட உண்டாகட்டும். வாசு தாடியையும் முடியையும் நீளமாக வளர்த்துக்கிட்டு, ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக்கிட்டு அந்தக் கிணற்றுப் பக்கத்துல ஒரு பர்ணசாலை அமைச்சு, அங்கேயே இருக்கணும். உண்மையான கங்கை நதியோட தொடர்புடையது அந்தக் கிணறுன்னு பிரச்சாரம் செய்யணும். ஒரு குப்பி தண்ணீர்- சின்ன குப்பிதான்... தெரியுதா? ஒரு ரூபா விலை வச்சு பக்தர்களுக்கு விற்பனை செய்யணும். சர்வ வியாதிகளும் அந்தத் தண்ணீரைக் குடிச்சா சரியாகும்னு சொல்லணும். பிறகு... காவடியாட்டம், துள்ளல், சூலம் குத்துதல், பஜைனை- எல்லாம் முறைப்படி நடக்குற மாதிரி பண்ணனும். அற்புதச் செயல்கள் சிலவற்றையும் காண்பிக்கணும். பஷீர் தெய்வம் நடக்குறப்போ காலுக்கு அடியில் இருந்து விபூதி... நூறு ரூபாய் நோட்டுகள்... இந்த மாதிரி...''

நான் சொன்னேன்: “நான் கொஞ்சம் பாத்ரூம் வரை போயிட்டு வர்றேன்.''

குடையை அவர்களுக்கருகிலேயே வைத்துவிட்டு பாத்ரூம் வழியாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து இங்கு ஓடிவந்துவிட்டேன். கொஞ்சம் விலை உயர்ந்த அந்தப் புதிய குடை அங்கே இருக்கிறது. என்ன செய்வது? சாதாரண மனிதனைப் போய் தெய்வமாக்கப் பார்க்கிறார்கள். ஔலியாவாக்கப் பார்க்கிறார்கள். எந்தப் பெருமையுமே இல்லாத ஒரு ஆளை இப்படியெல்லாம் ஆக்குவதற்கு எல்லாருக்கும் எப்படி எண்ணம் உண்டாகிறது? ஒரு அதிசயத்தைக் காட்டினால் என்ன? முற்றத்தைப் பார்த்தபோது ஒரு எண்ணம் மனதில் உதித்தது. நான் மகளின் தாயை அழைத்துக் கேட்டேன்:

“அடியே... நம்மோட அந்த சிமெண்ட் சாக்குகளெல்லாம் எங்கே? கரையான் எதுவும் அரிச்சு நாசமாப் போச்சா என்ன?''

“எல்லாத்தையும் நல்லா கழுவி காய வச்சு, ஸ்டோர் ரூம்ல கட்டி வச்சிருக்கேன்.'' மகளின் தாய் எங்கோ நின்று கேட்டாள்: “எதுக்கு அதைக் கேக்குறீங்க?''

“மொத்தம் எத்தனை சாக்குகள் இருக்கும்?''

“இருபது...''

நான் எழுந்து சென்று வெளிவாசலைப் பூட்டினேன். தப்பித்தவறி யாரும் உள்ளே நுழைந்துவிடக் கூடாது இல்லையா? முற்றத்தில் நின்றிருந்த ஒயிட் லெகான் சேவலையும், அவனின் ஒன்றிரண்டு மனைவிமார்களையும் பின்பக்கம் போய் நிலத்தில் ஏதாவது பொறுக்கித் தின்னும்படி விரட்டி விட்டேன். நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன். முற்றத்தையே பார்த்தவாறு மவுனமாக அமர்ந்திருந்தேன். எல்லா ஆன்மிக சக்திகளையும் மனதில் நினைத்தவாறு மெதுவான குரலில் கட்டளையிட்டேன்:

“முற்றத்தில் இருக்குற மணலெல்லாம் தங்கமா மாறணும்... பத்தரை மாற்றுத் தங்கமா...''

எதிர்பார்ப்புடன் நான் பார்த்தேன். அதிசயம் என்று கூறுவதுமாதிரி ஒன்றுமே நடக்கவில்லை. மணல் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே மணலாகவே கிடந்தது. நான் சென்று வெளிவாசலை மறுபடி திறந்துவிட்டேன். மீண்டும் வந்து நாற்காலியில் அமர்ந்து மகளின் தாயை அழைத்துச் சொன்னேன்:

“அடியே! அந்தச் சாக்குகளையெல்லாம் விக்காம எதுக்கு வச்சிருக்கே! வர்ற காசுக்கு வித்திடு...''

நான் நினைத்தபடி மணல் தங்கமாக மாறவில்லை. அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன். இருக்கக்கூடிய ஒரு பொருளை இன்னொன் றாக மாற்றுவதைவிட, இல்லாத ஒன்றை உருவாக்குவதற்குப் பெயர் தானே அதிசயம்! அதுதானே உண்மையும்கூட! இப்படி ஒரு எண்ணத் தில் நான் இருந்தபோது ஒயிட் லெகான் சேவல் என் முன்னால்  வந்து நின்று கொண்டிருந்தான். அவனை இன்னொன்றாக மாற்றுவதென்பது முடியாத விஷயம். அதனால் நான் சிறிது நேரம் கண்களை மூடி தியானத்தில் இருப்பதுமாதிரி இருந்தேன். பிறகு... ஒயிட் லெகான் சேவலையே உற்றுப் பார்த்தவாறு கட்டளையிட்டேன்:

“ஒயிட் லெகான் சேவல் சிவப்பு நிறத்துல முட்டை போடணும்- சீக்கிரமா!''

அதிசயம்! ஒயிட் லெகான் சேவல் சிவப்பு நிறத்தில் முட்டை போடவில்லை. சரி போகட்டும். அது முட்டை போட்டால் என்ன போடாவிட்டால் என்ன? எனக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை. எனக்கு என் குடை வேண்டுமே! அது ஆறு மைல் தூரத்தில் அல்லவா இருக்கிறது! அதை மனதில் நினைத்தவாறு "குடை என் கைக்கு உடனே வரணும்” என்று கட்டளையிட்டேன். அதிசயம்! குடை வரவில்லை.

கோபத்துடன் நான் உட்கார்ந்திருந்தபோது கைஸுக்குட்டி வந்து என் மடிமேல் ஏறி உட்கார்ந்தது. என் மடியில் பூனை, கோழி போன்றவை ஏறி உட்கார்வது என்பதைப் பொதுவாக நான் விரும்புவதில்லை. நான் பூனையின் காதைப் பிடித்து, கீழே விட்டேன். இதைப் பார்த்தவாறு சௌபாக்யவதி ராஜலா வெளிவாசலைக் கடந்து உள்ளே வந்தாள். நெஞ்சே வெடித்து விடுகிற மாதிரி "ம்மூவே!' என்று அழைத்தவாறு பூனைக்குட்டியை எடுத்து மார்போடு சேர்த்து  அணைத்தவாறு சௌபாக்யவதி ராஜலா என்னை ஒருமுறை முறைத்துப் பார்த்தாள். சரிதான்... எல்லா சௌபாக்யவதிகளும் தங்கள் விருப்பப்படி என்னை நெருப்புப் பார்வை பார்க்க வேண்டியதுதான்.

“என்ன? என்ன?'' என்று கேட்டவாறு அடுத்த நிமிடம் அங்கு வந்து நின்றாள் மகளின் தாய். மகளும் இருந்தாள். சௌபாக்யவதி ராஜலா கண்ணீர் விட்டவாறு வருத்தம் கலந்த குரலில் சொன்னாள்:

“கைஸுக்குட்டியைத் தூக்கி எறிஞ்சிட்டாரு...''

மகளின் தாயும் மகளும் என்னை முறைத்துப் பார்த்தார்கள். எங்கே நான் உட்கார்ந்திருந்த இடம், கைஸுக்குட்டி கீழே போய் விழுந்த இடம்... எல்லாவற்றையும் டேப் வைத்து அளந்துவிடுவார்களோ என்று நினைத்தேன். அவர்கள் கைஸுக்குட்டியைக் கையில் எடுத்தவாறு கொஞ்சம் தள்ளிப் போனார்கள். சிறிது நேரத்தில் சௌபாக்யவதி ராஜலா தன் புடவை "பரபர” என்று ஓசை உண்டாக்க, நடந்து வந்தாள். நடந்து வரும்போதே என்மீது ஒரு நெருப்புப் பார்வை பார்த்தாள்! ஐந்து நிமிடங்கள் கழித்து, சௌபாக்யவதி கதீஜா பீபியும், சௌபாக்யவதி சௌமினிதேவியும் தூரத்திலிருந்து இரண்டு நெருப்புப் பார்வைகளை என்மீது பாய்ச்சப் போவதென்னவோ நிச்சயம்.


உள்ளேயிருந்து மகளின் தாயின் குரல்- ஒரு அசரீரி மாதிரி.

“வாயில்லாப் பிராணிகளை தேவையில்லாம கஷ்டப்படுத்தக் கூடாது!''

அவள் சொல்வதும் நியாயம்தானே! மகள் கைஸுக்குட்டியுடன் வந்து, நீர்நிறைந்த விழிகளுடன் ஒரு ஸ்பெஷல் நெருப்புப் பார்வையை என்மேல் விட்டாள். மகளே, நீயுமா? எனக்குக் கட்டாயம் தேவைதான்.

“டாட்டோ... கைஸுக்குட்டி உங்களை அடிக்கும்.''

4

கள் சொல்வது சரிதான். எந்தப் பூனையாக இருந்தாலும், அது என்னை விருப்பம்போலத் தாக்க வேண்டியதுதான். தோன்றுகிற போதெல்லாம் என்னை எந்தக் கோழியாக இருந்தாலும் கொத்த வேண்டியதுதான். நேரம் கிடைக்கிறபோதெல்லாம் என்னை எந்தப் பசுவும் முட்டித் தள்ளலாம். எல்லா சௌபாக்யவதிகளும் என் மேல் நெருப்புப் பார்வையை வீசலாம். எனக்கு எந்தவொரு அபார சக்தியுமில்லை. இப்படிப்பட்ட நினைப்புடன் நான் உட்கார்ந்திருந்த போது-

கைஸுக்குட்டிக்கு காது குத்த தீர்மானிக்கிறார்கள். வேறு யார்? சௌபாக்யவதிகள்தான்! அந்தச் சின்னஞ்சிறு பூனைக்குட்டிக்கு வலிக் காதா? அதுபற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. சௌபாக்யவதிகள் எல்லாரும் ஏதோ ஒரு விதத்தில் சிறிய அளவிலாவது வேதனை அனுபவித்தவர்கள்தான்! மோதிரம், கம்மல், காது இலை- இதில் எதை கைஸுக்குட்டிக்கு அணிவிக்கலாம்? ஒரு பிடிவாதம் மாதிரி சௌபாக்யவதி சௌமினிதேவி மோதிரம் போடலாம் என்பதையே திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருக்கிறாள். கிறிஸ்டியன் சென்டரில் இருந்து வந்தவள் சௌபாக்யவதி சௌமினிதேவி. இதுதவிர அவள் கான்வென்ட்டில் வேறு படித்தவள். அதனால்தான் இந்த கிறிஸ்துவ ரத்தம் அவளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. சௌபாக்யவதி ராஜலா, கம்மல் போட்டால் நன்றாக இருக்கும் என்கிறாள். அப்போது அவள் மனதில் சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படம் ஞாபகத்தில் வந்தது. அந்தப் படத்தில் நடித்த அழகான சௌபாக்யவதியின் முகம் அவள் மனதில் வலம் வந்தது. அவள் அணிந்திருந்த மாதிரியே ரிங் என்று சொல்லப்படும் இரண்டு தங்க வளையல்களைக் கைஸுக்குட்டிக்குப் போட்டால் நன்றாக இருக்கும் என்பது அவளின் எண்ணம். மகளின் தாயிடம் இப்போதே ஸ்டெயின்லஸ் ஸ்டீலால் ஆன இரண்டு வளையங்கள் கைவசம் இருக்கின்றன. ஆனால் சௌபாக்யவதி கதீஜா பீபி காது இலை மாட்ட வேண்டும் என்கிறாள். என்ன இருந்தாலும் கைஸுக்குட்டி முஸ்லிம் ஆயிற்றே! அது இந்துப் பூனையோ கிறிஸ்துவப் பூனையோ இல்லையே! கைஸுக்குட்டி என்ற பெயர் சௌபாக்கியவதி கதீஜா பீபி என்ற பெயரின் ஒரு டிஸ்டன்ட் ரிலேட்டிவ்தானே! அதனால், சௌபாக்யவதி கதீஜா பீபியின் கருத்துக்குத்தான் முதலிடம் தரவேண்டியதிருக்கிறது! ஏனென்றால், சித்திர வேலைப்பாடு கொண்ட ஈருளி மகளின் தாய்க்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டுவிட்டது. சௌபாக்யவதி சௌமினி தேவி கொடுக்க வேண்டிய நான்கு படி கோதுமையையும் திருப்பிக் கொடுத்தாகி விட்டது. நூறு மடல் தென்னை ஓலைக்கான பணத்தை தன் கணவனிடமிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டாள் சௌபாக்யவதி ராஜலா. அவர்களைப் பொறுத்தவரை சௌபாக்கியவதி கதீஜா பீபியின் கருத்துக்கு முன்னுரிமை தரப் போவதில்லை. விளைவு- அந்த சௌபாக்யவதி இப்போது தனிமைப்படுத்தப்பட்டு விட்டாள். ஆனால்... போட்டியில் குதித்ததால் அவள் கையில் இரண்டு ஸ்டெயின் லஸ் ஸ்டீலால் ஆன வளையங்களையும், சாக்கு குத்த பயன்படும் பெரிய ஊசியையும் கொண்டு வந்து கொடுத்தாள் மகளின் தாய்.

“கதீஜா பீபி, காதைக் குத்தி இந்த வளையங்களை மாட்டு...''

மூன்று சௌபாக்யவதிகளும் கூட்டமாக நின்று கைஸுக்குட்டி யைப் பிடித்துக்கொண்டார்கள். பாவம் அந்தப் பூனைக்குட்டி...! ஊசி தன் காதில் பட்டவுடன் உண்டான வேதனையைத் தாங்க முடியாமல் உரத்த குரலில் கத்திக்கொண்டு அது அவர்கள் பிடியிலிருந்து திமிறிக்கொண்டு தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடியது. எனக்கு முன்னால் இருந்த மரத்தில் போய் உட்கார்ந்து கொண்டது. கீழே கொக்கரித்துக் கொண்டிருந்த கோழிகள், குரைத்துக்கொண்டிருக்கும் நாய், தேம்பி அழுதுகொண்டிருக்கும் மகள்.

“கைஸுக்குட்டி... வா... அவங்க உன்னைக் கொல்ல மாட்டாங்க. உனக்கு அவுங்க காது குத்துறாங்க...''

இந்த நேரத்தில் நான் தீவிர சிந்தனை என்ற தமாஷ் காரியத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டேன். எனக்கு முன்னால் இருந்த மாமரத்தின் கிளைகளில் ஒரு போகன்வில்லா நன்றாகப் படர்ந்து நிறைய பூக்களால் அழகு செய்துகொண்டிருந்தது. எங்கோ தூரத்தில் இருந்த ஒரு இடத்தில் இருந்து நான் கொண்டு வந்து நட்டு வைத்த செடி அது. நான்கு அங்குலமே இருந்த ஒரு சிறிய குச்சி அது. இந்தப் பூக்கள் அந்தக் குச்சியில் இருந்து எப்படி வந்தன? பல நிறங்களிலும், பல அளவுகளிலும்... இங்கு பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த செம்பருத்திப் பூக்கள் இருக்கின்றன. ரோஜாச் செடிகள் இருக்கின்றன. இவையெல்லாம் இருநூற்றைம்பது மைல் தூரத்தில் இருந்து பெட்டியில் வைத்துக் கொண்டு வந்த குச்சிகளை நட்டு வைத்து வளர்ந்தவையே. அங்கே எங்களுக்கு நல்ல ஒரு புதிய வீடு இருந்தது. அங்கே இருந்த பூச்செடி களின் குச்சிதான் இங்கே சிரித்துக் கொண்டிருக்கும் பல பூச்செடி களுக்கு ஆதாரம். அந்த வீட்டை விற்றுத்தான் இந்த வீட்டையும், நிலத்தையும் நான் விலைக்கு வாங்கினேன். மணம் பரப்பிக்கொண்டிருக்கும்... பல்வேறு நிறங்களில் இந்த இடத்திற்கே அழகை அள்ளித்தந்து கொண்டிருக்கும் இந்த மலர்கள் எதற்காக மலர்கின்றன? மனிதர்கள் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு முன்பே இவை இந்த பூமியில் இருந்தன என்பதே உண்மை. பழங்கள், காய்கள், கிழங்குகள்- எல்லாமே மனிதர்களுக்காக விசேஷமாகப் படைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தனவோ?

“இந்தப் பூனைக்குட்டியைக் கொஞ்சம் பிடிச்சு, அதோட காதைக் குத்தித் தர முடியுமா?'' உள்ளே இருந்த மகளின் தாய் கேட்டாள். இதைக் கேட்டால் எனக்குக் கோபம் வருமா இல்லையா? பழைய மாதிரியான கணவனாக இருந்தால், சௌபாக்யவதியின் கன்னத்தில் ஸ்டைலாக இரண்டு குத்துக்கள் விட்டிருப்பேன். பிரபஞ்ச ரகசியங்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம், பூனைக்குட்டியைப் பிடித்து காதைக் குத்தித் தரச் சொன்னால் எப்படி இருக்கும்? நான் எழுந்து சென்று மரத்தின் மேல் இருந்த பூனைக் குட்டியைப் பிடித்து, மகளின் கையில் தந்தேன்.

“பூனைக்குட்டிக்கு நாளைக்குக் காது குத்தலாம். இன்னைக்கு எனக்கு வேலை இருக்கு!''

“ஓ... என்ன பெரிய வேலை! கேட்டா பிகு பண்ண ஆரம்பிச் சிருவீங்களே!'' என்று சொல்லியவாறு போனாள் மகளின் தாய். அவளுடன் சௌபாக்யவதிகளான ராஜலா, கதீஜா பீபி, சௌமினி தேவி, மகள்- அவர்களுடன் கைஸுக்குட்டியும்.

எங்கே போகிறார்கள் என்று விசாரித்தால், “கைஸுக்குட்டிக்கு கடலைக் காட்டப்போகிறோம்'' என்ற பதில் கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்.


ஆர்ப்பரித்துக்கொண்டு, வீடுகளையே அடியோடு பெயர்த்து விடுகிற மாதிரி பாய்ந்துகொண்டு வரும் கடல் இரண்டு மூன்று ஃபர்லாங் தூரத்தில்தான் இருக்கிறது. வருண பகவான் கருணை காட்டட்டும்!

இப்போது வீட்டில் நானும், ஒயிட் லெகான் சேவலும் மட்டுமே இருந்தோம். அவன் முற்றத்தில் எதையோ கொத்தித் தின்று கொண்டிருந்தான்.

“டேய்... உன் பொண்டாட்டிகள்லாம் கடலைப் பார்க்கப் போயிருக்காங்களா என்ன?''

அதற்கு பதிலாக அவள் "கொ... கொ...” என்று சொன்னான். அடுத்த நிமிடம்- அவனின் மனைவிமார்கள் எல்லாரும் முற்றத்தில் வந்து நின்றார்கள். நான் உள்ளே போய் கொஞ்சம் கோதுமையை எடுத்துக் கொண்டு வந்து எல்லாரும் சாப்பிடட்டும் என்று சிதறவிட்டேன். மொத்தம் இருக்கும் கோழிகளை எண்ணிப் பார்த்தேன். பதினைந்தே இருந்தன. நான் பின்னால் போய் பார்த்தேன். ஒரு கோழி, குஞ்சுகளுடன் இருந்தது. குஞ்சுகளை ஒரு கூடையில் அடைத்து வைத்திருந்தாள் மகளின் தாய். குஞ்சுகளுக்கும் தாய்க் கோழிக்கும் கொஞ்சம் அரிசி கொண்டு வந்து போட்டேன். இனியும் ஒரு கோழி வேண்டுமே! புள்ளி போட்ட கோழி. அவள் எங்கே?

"ப...ப...ப...ப...ப...” என்று சொல்லியவாறு வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தேன். எந்த இடத்திலும் அந்தக் கோழியைக் காணவில்லை. அப்போது ஒரு தவளையின் பயந்துபோன குரல் காதில் வந்து விழுகிறது. சத்தம் வந்தது வீட்டுக்குச் சற்று தூரத்தில்- ஒரு ஒதுக்குப் புறத்தில் இருந்து. உடனே ஓடிப்போய் பார்த்தால்... கோழி அங்கே கிடக்கிறது. உடலில் நீலம் பாய்ந்திருக்கிறது. அது ஏற்கெனவே செத்துப் போயிருந்தது. நான் தேடிக்கொண்டிருந்த கோழி அதுதான். சற்று தூரத்தில் ஒரு பாம்பு பெரிய ஒரு தவளையை விழுங்கிக் கொண்டிருக்கிறது. பாம்புக்கு ஏழு அல்லது எட்டு அடி நீளமிருக்கும். நல்ல பாம்பு. முட்டையிடுகின்ற புள்ளி போட்ட கோழியை அவன் எதற்குக் கொல்ல வேண்டும்? அடுத்து என்ன செய்வது என்று ஒரு நிமிடம் யோசித்தேன். நல்ல நீளமான ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்து அதன் ஒரு நுனியில் ஒரு கயிறால் உருவாஞ்சுருக்குப் போட்டேன். அந்த உருவாஞ் சுருக்கை பாம்பின் தலையில் வைத்தேன். பாம்பு தவளையை விழுங்குவதிலேயே தன் முழு கவனத்தையும் வைத்திருந்தது. கொஞ்ச நேரத்தில் தவளை முழுக்க முழுக்க அதன் வாய்க்குள் போனது. கழுத்துக்குக் கீழே தவளை உருண்டையாகப் போய்க் கொண்டிருந்தபோது, நான் அந்த உருவாஞ் சுருக்கைச் சுண்டி இழுத்தேன். பாம்பின் கழுத்துப் பகுதி சரியாக உருவாஞ் சுருக்குக்குள் மாட்டிக்கொண்டது. தலையை அந்தப் பாம்பால் உயர்த்த முடியவில்லை. அதை அப்படியே இழுத்துக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டேன். இன்னொரு உருவாஞ் சுருக்கைப் போட்டு கோழியின் காலுக்குள் மாட்டி அதையும் இழுத்து முற்றத்தில் கொண்டு வந்து போட்டேன். ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்தவாறு எப்போதும் உட்காரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்தேன். கோழிகளெல்லாம் ஒன்று சேர்ந்து உரத்த குரலில் கத்திக்கொண்டிருந்தன. சில கோழிகள் இறந்துபோன கோழியின் பக்கத்தில் போய் அதையே பார்த்தன. நாய் குரைத்தது. இந்தப் பாம்பை என்ன செய்வது? சின்னப் பையனாக இருந்தபோது பள்ளிக்கூடம் போகாத நாட்களில் பாம்பு பிடிப்பதும், பந்து விளையாடுவதும்தான் என்னுடைய முக்கிய வேலைகளாக இருந்தன. தண்ணீர்ப் பாம்பு, சாரை, மண்ணுளிப் பாம்புகள் போன்ற வற்றைப் பிடிப்பேன். அவற்றைக் கொல்ல மாட்டேன். யாராவது பாம்பைக் கொல்வதைப் பார்த்தால், வாயில் எச்சில் உண்டாகும். சாப்பிடவே பிடிக்காது. எதைச் சாப்பிட்டாலும் ருசி இல்லாதது மாதிரியே தோன்றும். இரவு நேரங்களில் கண்ட கண்ட கனவுகள் எல்லாம் வரும். பாம்பைப் பார்ப்பது என்பது நான் சந்தோஷப் படக்கூடிய ஒரு விஷயமல்ல. அச்சம் தரக்கூடிய ஒன்றுதான் அது. அனந்தன், வாசுகி ஆகியோரின் வழித்தோன்றலே இந்தப் பாம்பு. வாசுகி, சிவனின் கழுத்தில் சுற்றிக்கொண்டு தலையை உயர்த்தி கம்பீரமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும். சிவனும் பார்வதியும் இருப்பது கைலாசத்தில். இமயமலையில் அல்லவா கைலாசம் இருக்கிறது. பூமியை விட உயரத்தில் இருக்கும் இடம். இந்தக் கைலாசமும், பூமியின் மற்ற பகுதிகளும் கடல் உள்பட பூலோகம் முழுவதும் அனந்தன் என்ற பாம்பின் தலைமேல் இருக்கிறது. பல மைல்கள் நீளமுள்ள மலை சுருண்டு, வளைந்த கிடப்பதுபோல் பாற்கடலில் கிடக்கிறது அனந்தன். அதன் சுருண்டு கிடக்கும் மெத்தைமேல் விஷ்ணு படுத்திருக்கிறார். அவருடன் மகாலட்சுமியும், மகாவிஷ்ணுவின் தொப்புளில் இருந்து நீளமாகப் போகிற தாமரைத் தண்டின் நுனியில் மலர்ந்திருக்கும் தாமரைப் பூவில் பிரம்மா இருக்கிறார்.

மிகப் பழமையான இந்து மதத்தில் இருக்கும் கதை இது. இதை வைத்துப் பார்க்கும்போது பாம்புகளுக்கு புனிதத் தன்மை உண்டு என்று நினைப்பதும், அதை தெய்வமாக வழிபடுவதும் இயல்பான ஒன்று தானே! விளைவு- பாம்புகளுக்கு ஆலயங்கள் ஆங்காங்கே உருவாயின. இந்து மதத்தின் ஆதாரமே பாம்புகள் என்று சொன்னால்கூடத் தப்பில்லை. அனந்தன், வாசுகி, தட்சகன், கார்க்கோடகன் என்று பல பாம்புகளைப் பற்றி புராணத்தில் கூறப்பட்டிருக்கின்றன.

நான் உருவாஞ் சுருக்கு போட்டுப் பிடித்த பாம்பைப் பார்த்தேன். தவளை உருண்டையாகக் கீழே கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடக்காதது மாதிரி பாம்பு அசையாமல் கிடக்கிறது. தவளை விழுங்குகிற மாதிரி ஒரு சூழ்நிலை இல்லையென்றால் நிச்சயம் அவன் இந்தச் சுருக்கில் மாட்டியிருக்கவே மாட்டான். பாதி உடலை மேலே தூக்கி அது இலேசாக சீறியது. தலையை உயர்த்தி நிற்கும் பாம்பைப் பார்ப்பது என்பது உண்மையிலேயே பயங்கரமான அனுபவம்தான்.

இந்தப் பாம்புகள்... பொதுவாக எல்லா மதங்களிலும் வருகின்றன. இந்து, ஜைன, புத்த மதங்கள், யூத மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாம் மதம்... ஆரம்ப காலத்தில் ஏதன் தோட்டத்தில் ஆதாம், ஏவாள் இருவரையும் தவறான பாதைக்கு அழைத்துச் சென்றது சாத்தானின் வடிவமான பாம்பு என்பதுதானே கதை! பாம்பு, நரகத்தில் இருக்கும் பிசாசின் வடிவம். அதைப் பார்க்க நேர்ந்தால் பார்த்த இடத்திலேயே கொல்ல வேண்டும். காரணம்- அது தன்னிடத்தில் கொடிய விஷயத்தை வைத்திருக்கிறது. பாம்பு யாரையாவது கடிக்கும் பட்சம், கடிபட்டவர் விஷம் ஏறி இறப்பது உறுதி.

இப்படி... இரு வேறு கதைகள் புராணங்களில் கூறப்படுகின்றன. இவற்றில் எதை நாம் எடுத்துக்கொள்வது?

நான் இப்போது இந்தப் பாம்பை என்ன செய்வது?

கைஸுக்குட்டியும், மற்றவர்களும் கடலைப் பார்த்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குத் திரும்பி வருகிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் என்ன?


“இவனைக் கொல்லணும்!'' சௌபாக்யவதிகளான மகளின் தாயும், கதீஜா பீபியும்.

“கொல்லக்கூடாது...'' சௌபாக்யவதிகளான ராஜலாவும் சௌமினிதேவியும்!

நான் என்ன செய்வது? கடைசியில் சௌபாக்யவதி ராஜலா சொன்ன ஆலோசனையின்படி, குட்டி ராமன் என்ற மனிதனை அழைத்து வருவதற்காக ஒரு ஆள் அனுப்பப்பட்டது. தாடி, தலையில் துண்டு, கிழிந்துபோன காக்கி அரைக்கால் ட்ரவுசர், சட்டையுடன் இருக்கும் ஆள்தான் இந்த குட்டி ராமன். ஏதாவது வீடுகளில் பாம்பு வந்துவிட்டால், குட்டி ராமன் ஒரு கூடையையும், கொம்பையும் எடுத்துக்கொண்டு வந்து, ஒரு சிறு தொகையைக் கூலியாகப் பெற்றுக்கொண்டு பாம்பைப் பிடித்துக்கொண்டுபோய் தூரத்தில் இருக்கும் காட்டில் விட்டுவிடுவான். அந்த ஆள் சிறிது நேரத்தில் வந்தான். கொம்பின் நுனியில் மயக்க மருந்து தேய்க்கப்பட்டிருக்கிற தென்றும் அதனால்தான் கொம்பைக் காட்டியதும், பாம்பு மயங்கிப் போகிறது என்றும் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. அவன் கையிலிருந்த கொம்பால் பாம்பை இறுகப் பிடித்து மெதுவாகக் கூடைக்குள் போட்டான். மூடியால் கூடையை மூடினான். இடையில் சிறுசிறு துவாரங்கள் இருந்தன. மகிழ்ச்சியுடன் என்னை வணங்கிய அவன் அடுத்த நிமிடம் பாம்புக் கூடையுடன் வெளியேறினான். நான் ஒரு தென்னை மரத்தின் அடியில் ஒரு குழியைத் தோண்டி, இறந்துபோன கோழியை அதில் புதைத்தேன். கோழிக்கு விலையாக மார்க்கெட்டில் உள்ள ரேட்டை அனுசரித்து ஒரு தொகையைத் தரவேண்டும் என்று மகளின் தாய் சொன்னதற்கு நான் எதுவும் எதிர்ப்பே தெரிவிக்காமல் அவள் கேட்ட தொகையைத் தந்தேன். அதற்கு பதிலாக அவர்கள் எல்லாரும் அழகான கடல் சிப்பிகளை எனக்குத் தந்தார்கள். வருண பகவானின் பிரசாதம்!

விஷயம் ஏதோ ஒரு வகையில் முடிந்துவிட்டது என்றாலும் இரவிலும் பகலிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் சொல்வேன். இரவு நேரங்களில் பந்தமோ, விளக்கோ இல்லாமல் சினிமாப் பாடல்கள் பாடியவாறு ஆட்கள் ஒற்றையடிப் பாதை வழியே நடந்துபோகிறபோது, நானே அவர்களை அழைத்து பந்தத்தைக் கொளுத்தி கையில் தருவேன். இவ்வளவு கவனமாக நான் இருந்தும், இப்படியொரு சம்பவம் இங்கு நடந்திருக்கிறது! விதி என்ன நினைக்கிறதோ, அது நடக்கத்தான் செய்யும். விதியின் போக்கை யாரால் தடுக்க முடியும் என்ற கேள்வி வர ஆரம்பித்துவிட்டது எல்லாரின் வாயிலும்.

கைஸுக்குட்டியும், மகளும், மகளின் தாயும் சேர்ந்து பல நாட்கள் பக்கத்து வீடுகளுக்கு விருந்துண்ணப் போவார்கள். சில நேரங்களில் கைஸுக்குட்டியை மட்டும் யாராவது தூக்கிக்கொண்டு போவார்கள்... யாராவது இதைக் கவனிக்காமல் இருந்துவிட்டால்...? விஷயம் அவ்வளவுதான்- கைஸுக்குட்டி எங்கே என்று தேடுவதே ஒவ்வொருத்தரின் வேலையாகவும் ஆகிவிடும்.

மகள் தோட்டம் முழுவதையும் அலசுவாள். எல்லா மரங்களையும் பார்ப்பாள். என்னை வந்து கேட்பாள். ஒயிட் லெகான் சேவலைப் பார்த்து விசாரிப்பாள். பசுக்களையும், நாய்க்குட்டியையும் பார்த்துக் கேட்பாள். மகளின் தாய் பிரபஞ்சமே கேட்கிற மாதிரி உரத்த குரலில் கேட்பாள்:

“கைஸுக்குட்டியைப் பார்த்தீங்களா?''

அப்போது பக்கத்து வீடுகளில் இருக்கும் சௌபாக்யவதிகள் யாராவது சத்தமிட்டுச் சொல்வார்கள்: “கைஸுக்குட்டி இங்கே இருக்கு...''

அடுத்த நிமிடம் மார்போடு அணைத்தவாறு வேலியின் இடைவெளி வழியாக கைஸுக்குட்டியைக் கொடுப்பார்கள். அவர்கள் வீட்டைச் சுற்றி வேலி இல்லை. கைஸுக்குட்டியைக் கொடுக்கும் போது, இலேசாக அவர்கள் மேல் முள் பட்டுவிட்டால் "அய்யோ...” என்ற சத்தம் உண்டாகும். சத்தம் உண்டாக்குவது வேறு யார்? நான்தான்.

வேலியில் இருக்கும் மூங்கில் பூத்த பிறகு, என் சத்தம் இன்னும் கூடப் பெரிதாகும். மூங்கில் பூத்த விஷயம் கிட்டத்தட்ட ஒரு திருவிழா போல சௌபாக்யவதிகளுக்கு.

“மூங்கில் அரிசியைக் குத்தி பாயசம் வச்சு, எல்லாரையும் கூப்பிட்டு கொடுக்கணும். கைஸுக்குட்டிக்காக...''

“கட்டாயம் செய்ய வேண்டியதுதான்!''

“கைஸுக்குட்டியோட காதை இன்னைக்கு குத்தி விடுறீங்களா? ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டியதிருக்கு.''

காது குத்து, சவரம், துணி துவைத்தல், சமையல்- போன்ற பெரும் கலைகளில் கைதேர்ந்தவன் ஆயிற்றே நான்!

“கல்யாணத்துக்கு கைஸுக்குட்டியும் போகுதா என்ன?''

கைஸுக்குட்டியும் போகின்றதா என்றொரு கேள்வியா? இது என்ன கேள்வி! கைஸுக்குட்டியும், மகளும், மகளின் தாயும் இந்தத் திருமணத்திற்குப் போகிறார்கள். அவர்களுடன் நானும். திருமணம் நடப்பது மனைவியின் உறவினர்களுக்கு. அவர்கள் வீட்டில்தான் இந்த விசேஷம் நடக்கிறது. பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள், கண்களில் நீர், மரியாதைகள், முணுமுணுப்புகள். நெருப்புப் பார்வைகள்... எல்லாம் அங்கு இருக்கும். அதற்குப் போகாமல் இருக்க முடியுமா?

கணவன்மார்களே, சொர்க்கம் உங்களுக்காகக் காத்திருக்கிறது!

“அடியே... கல்யாணத்துக்கு பூனைக்குட்டி எதுக்கு?''

பயணம் போவது பஸ்ஸில். அதுவும் பன்னிரண்டு மைல்கள் தாண்டி.

“ஆனா... மகள் கைஸுக்குட்டி கட்டாயம் வரணும்னு சொல்லுவாளே!''

"நல்ல பச்சை மூங்கிலால் தொடையில் பன்னிரண்டு அடிகள் கொடுத்தால் மகள், மகளின் தாய்... ஏன், மகளின் தந்தைகூட எதைச் சொன்னாலும் சம்மதிப்பான்' என்று நான் சொல்லவில்லை. மகள் இன்னும் கொஞ்சம் வளரட்டும்!

நான் சொன்னேன்:

“பூனைக்குட்டியை பஸ்ல ஏத்தமாட்டாங்க!''

“கைஸுக்குட்டியை... ஏத்துவாங்க டாட்டோ...'' மகள் சொன்னாள். அப்படியா? நான் சொன்னேன்:

“ஒண்ணு செய்வோம். பஸ்ல போறப்போ உங்களுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லைன்ற மாதிரி காண்பிச்சிக்குவோம். நீங்க வேற பார்ட்டி நான் வேற பார்ட்டி. ஒழுங்கா கம்பியை இறுகப் பிடிச்சுக் கிட்டு உட்காரணும். வழியில என்கிட்ட எதுவுமே பேசக்கூடாது. யாரோன்ற மாதிரி என்கிட்ட நடந்துக்கணும்.''

“நாங்க ஒண்ணும் தேவையில்லாம யார்கிட்டயும் பேசமாட்டோம்.''

“பஹுத் அச்சா ஹே! கல்யாணம் என்னைக்கு?''

“இன்னும் நாலு நாள் இருக்கு...''

“நாலு நாள்தான் இருக்கா? இடைவெளி ரொம்பவும் குறைவா இருக்கே! இப்பவே ஆடைகள் அணிய ஆரம்பிச்சிட வேண்டியது தானே!''

திருமணத்திற்குப் போவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே சௌபாக்யவதிகள் ஆடைகள் அணியத் தொடங்க வேண்டும் என்று நான் சொன்னதில் என்ன தப்பு இருக்கிறது? இதற்கு எதிராகப் பேச யார் இருக்கிறார்கள்? கணவன்மார்கள் நிச்சயம் நான் சொல்வதை ஆதரிக்கவே செய்வார்கள்.

இருந்தாலும், சரியான நேரத்திற்கு திருமண நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர முடியுமா என்பது சந்தேகம்தான். சௌபாக்யவதிகளுக்கு கடவுள் புண்ணியத்தால் நேரம் என்ற ஒன்று பொருட்டே அல்ல. எதிலுமே ஒரு அசிரத்தை! ஆண்கள் நினைப்பது மாதிரி நேரத்தைப் பற்றி பொதுவாக பெண்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை! காலம், நேரம் ஆகியவற்றைக் கடந்தவர்கள் பெண்கள்! அவை அவர்களை எப்போதும் கட்டுப்படுத்தாது. இதன் அர்த்தம் என்னவென்றால் காலத்தைக் கடந்து அவர்கள் வாழ்வார்கள்.


ஆண்கள் சூரியன், கடிகாரம், டைம்பீஸ் ஆகியவற்றைப் பார்த்தவாறு சதா நேரமும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். சௌபாக்யவதிகளே, நீங்கள் காலத்தைக் கடந்து வாழுங்கள்!

“சரி... பூனைக்கு காது குத்தி விடுறீங்களா?''

“நாளைக்கு.''

வேலிக்கருகில் இருந்து ஒரு கேள்வி:

“கைஸுக்குட்டியோட காதைக் குத்தி, வளையம் போட்டாச்சா?''

“இல்ல... நாளைக்குப் போடுறாராம்!''

“என்ன நாளைக்கு! ஆம்பளைங்ககிட்ட ஒரு காரியம் சொன்னாலே இப்படித்தான்... பெரிசா அலட்டிக்குவாங்க. நாமா இருந்தா இந்த நேரத்துல நூறு பூனைக்குட்டிகளுக்கு காது குத்திடுவோம்!''

அப்போது சங்கநாதம் முழங்கியது.

சந்நியாசி வந்தார். நாங்கள் பால் கலக்காத தேநீர் குடித்தோம். ஆளுக்கொரு பீடி பிடித்தோம்.

“மனிதனை தெய்வமா வழிபடுறாங்களே! அதைப்பத்தி சுவாமிஜி, உங்களோட கருத்து என்ன?''

“இது ஒண்ணும் புதிய விஷயமில்லையே. ராஜாக்களை அந்தக் காலத்துல மனிதர்கள் தெய்வமா வழிபட்டாங்க. என்னைக்கு இருந்தாலும் நிரந்தமில்லாம கீழே சாயப்போற அவங்களை தெய்வமாக நினைச்சதைப் பத்திக்கூட நான் ஆச்சரியப்படல. காட்டுல வாழ்ற மக்களுக்கு நம்ம சிலந்தி தெய்வமா இருக்கு. இதுதவிர, மரங்கள், மலைகள், நதிகள், மிருகங்கள் எல்லாமே தெய்வங்கள்தான்...''

“ஒரு காளையை தெய்வமா வழிபட்டதைப் பத்தி சுவாமிஜி, நீங்க கேள்விப்பட்டிருக்கீங்களா? ஆரம்ப கால நாகரீகத்தோட தொட்டில்னு சொல்லப்படுற எகிப்தில... ஃபரோஹாமார்களின் காலத்தில், அப்போ ஆண்டுகொண்டிருந்த ராஜாவைத்தான் தெய்வமா வழிபட்டாங்க. மோஸான்னு யூதர்களும், மோசஸ்னு கிறிஸ்துவர்களும், மூஸாநபின்னு முஸ்லிம்களும் சொல்ற தேவதூதனோட காலத்துல, கண்கள் ரத்தினங்களாலும், உடலின் மத்த பாகங்கள் தங்கத்தாலும் அமைக்கப்பட்ட ஒரு காளையை தெய்வமா வணங்கியிருக்காங்க...''

“அப்படி இருக்குறப்போ, ஏன் மனிதனை தெய்வமா வழிபடக் கூடாது?'' சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு சந்நியாசி சொன்னார்: “மகத்தான, ஆச்சரியப்படும்படியான, எல்லைகள் இல்லாத திறமைகள் பலவற்றைக் கொண்டவன் மனிதன். இந்த மனிதர்களையும், உலகத்தில் உள்ள மற்ற உயிர்களையும், எல்லா உலகங்களையும் படைத்துக் காப்பாற்றிக் கொண்டிருக்கிற மகாசக்தியே! உன்னுடைய ஒளிக் கதிர்கள் எங்களின் இருளடைந்து போய்க் கிடக்கும் ஆத்மாக்களில் பட்டு அங்கு பிரகாசத்தையும் தெளிவையும் உண்டாக்கட்டும்!''

நேரம் சாயங்காலம் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவியத் தொடங்கியது. வீடுகளில் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. பந்தத்தை எரிய விட்டவாறு சந்நியாசி புறப்பட்டார். இரவு முடிந்தது. பகல் வந்தது. மலர்கள் மலர்ந்து சிரித்தன. பறவைகள் உற்சாக ஓசைகள் எழுப்பின. பட்டாம்பூச்சிகள் வெயிலில் மகிழ்ச்சியுடன் பறந்து திரிந்தன. இளங்காற்று இலைகளில் பட்டு "சலசல” சத்தத்தை உண்டாக்கியது. முகச்சவரம் முடிந்து, குளித்து முடித்து, மீசைக்கு கறுப்பு சாயம் பூசி... எல்லாம் முடித்து காலை உணவு சாப்பிட்டு, ஒரு பீடியை எடுத்து உதட்டில் வைத்து புகையை "குப் குப்” என்று விட்டபோது மனதில் தோன்றியது... இந்த உலகம் உண்மையிலேயே அழகானதுதான். இவற்றையெல்லாம் எங்களுக்குத் தந்த தெய்வமே...! நன்றி!

திருமணத்திற்குப் போக வேண்டிய நாள் வந்தது. நாங்கள் துரிதகதியில் ஆடைகளை அணிந்து பஸ்ஸில் ஏறினோம். நான் குளித்து முடித்து, காப்பி எல்லாம் சாப்பிட்டு முடித்து, சட்டையும் வேஷ்டியும் அணிந்து, பீடி புகைத்தவாறு காத்திருந்தேன். அவர்களை வேகப்படுத்தியதற்கு நெருப்புப் பார்வைகள் தாராளமாகவே கிடைத்தன.

நான் முன்னிருக்கையில் (என் குடையைப்பற்றி கேள்வி வந்தது; சீக்கிரம் அது வரும் என்று சொன்னேன் நான்) போய் அமர்ந்தேன். எனக்குப் பின்னால் இருந்த இருக்கையில் மகளின் தாய், மகள், கைஸுக்குட்டி ஆகியோருடன் மற்றவர்களும். "மகளுக்கு டிக்கெட் வாங்குற வயசு இன்னும் வரல. அதுனால அவளுக்கு டிக்கெட் வாங்காதீங்க. நான் சொல்லிக்கறேன்' என்றொரு கருத்து பெண்களிடமிருந்து எப்போதும் வரும். இப்படித்தான் தேவையில்லாத வம்பு என் தலைமீது வந்து விழும். வம்பு என்று நான் சொல்வது, பஸ் கண்டக்டருக்கும், என் மனைவிக்கும் இடையே காரசாரமான சண்டை உண்டாகும்போது அதைப் பார்த்துக்கொண்டு நான் வெறுமனே அசையாமல் உட்கார்ந்திருக்க முடியுமா? கண்டக்டரை அடித்து தரையில் விழ வைக்க வேண்டியது ஒரு கணவனின் கடமை அல்லவா? பஸ் போய்க்கொண்டிருந்தது. நிதானமான வேகத்தில்தான் அது சென்றது. கைஸுக்குட்டிக்கு காது குத்தி வளையம் போடாததால், மன வருத்தம் உண்டாகாமல் இல்லை. கண்டக்டர் ஒரு பகுதியில் டிக்கெட் கொடுத்து, காசை வாங்கிப் பைக்குள் போட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்... சொன்னதையெல்லாம் மறந்து மகள் உரத்த குரலில் கத்தினாள்... ஒரு வெடி வெடித்தது போன்ற பதட்டத்துடன்.

“டாட்டோ... டாட்டோ... கைஸுக்குட்டி ஒண்ணுக்கு இருக்கணும்.''

மகள் சொன்னது காதில் விழாதது மாதிரி நான் உட்கார்ந்திருந்தேன். அவளை எனக்கு யார் என்று தெரியாது என்பது மாதிரி இருந்தது என் செயல். மகளின் பக்கத்தில்தான் மகளின் தாய் இருக்கிறாள் அல்லவா? ஆனால் அவளும் எதுவுமே கேட்காதது மாதிரி அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

ஒரு அசரீரி மாதிரி... சொல்வது நான் இல்லை என்பது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு, வேறு யாரோ பேசுவதுபோல் எந்தவித சலனமும் இல்லாமல் நான் சொன்னேன்:

“மகளே... பஸ் நிற்கட்டும்!''

“பஸ்ஸை நிறுத்துங்க... டாட்டோ...''

இந்த நேரத்தில் கண்டக்டர் அருகில் வந்தார். அந்த ஆளுக்கு ஒரு பெரிய மீசை இருந்தது. அந்த மீசை உண்மையானதாக இருக்குமா? இல்லாவிட்டால்... ஒட்டு மீசையா? ஆனால் மீசை கறுப்பாக இருந்தது. என் மீசையைவிட அந்த ஆளின் மீசை கம்பீரமாக இருந்தது. இப்போதெல்லாம் மீசை, முடி போன்றவற்றை- அது யாருடையதாக இருந்தாலும், சந்தோஷத்துடன்தான் நான் பார்ப்பது. ஒட்டு முடியும், பழைய கறுப்புத் துணியும் வைத்து தலையை வாரும் சௌபாக்யவதிகளைத்தான் நாம் நிறைய பார்க்கிறோமே! மகளின் தாய் பேச வாய்ப்பு தராமல், நானே சொன்னேன்:

“பூனை, மகள், தாய், நான்- எத்தன டிக்கெட் வேணும்?''

1. பூனை அந்தத் தாயின் குழந்தையா?

2. ஷட்அப் கண்டக்டர்!

இந்த இரண்டு டயலாக்குகளையும் பேச வேண்டிய அவசியம் உண்டாகவில்லை. பக்கத்தில் வந்த கண்டர்க்டர் கைஸுக்குட்டியை உற்றுப் பார்த்தார். இரண்டு பேரும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். கண்டக்டர் சொன்னார்:

“பூனைக்குட்டிக்கு டிக்கெட் தேவையில்லை. மூணு டிக்கெட். எந்த ஊருக்கு?''

மகளின் தாய் பதறிப்போன குரலில் சொன்னாள்:

“மகள், சின்னக்குழந்தை ஆச்சே! ரெண்டு டிக்கெட் போதும்...''

மகள் சொன்னாள்... “கைஸுக்குட்டிதான் சின்னகுழந்தை. நான் இல்ல...''

கண்டக்டர் சொன்னார்: “சரி... ரெண்டரை டிக்கெட் எடுக்கணும். எந்த இடம்?''


மகளின் தாய் போக வேண்டிய இடத்தின் பெயரைச் சொன்னாள். கண்டக்டர் இரண்டரை டிக்கெட் தந்தார். மகளின் தாய் என்னைத் தன் இரு கண்களாலும் நெருப்புப் பார்வை பார்த்தாள். ஒரு முறையல்ல- இருமுறை. முதல் தடவை பார்த்தற்குக் காரணம்- பூனைக் குட்டியை பஸ்ஸில் ஏற்ற மாட்டார்கள் என்று சொன்னதற்கு. இரண்டாவது பார்வைக்குக் காரணம்- மகளுக்கு முழு டிக்கெட் நான் வாங்க முயன்றதுக்கு. அரை டிக்கெட் என்றால் அரை டிக்கெட்தான். என்ன இருந்தாலும் பெண் உலகத்தைச் சேர்ந்த சௌபாக்யவதிகளுக்கு இது ஒரு வெற்றிதான்!

கைஸுக்குட்டி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற விஷயத்தை மகள் மறந்து போனாளோ? இல்லை. பஸ் ஒரு பாம்புப் புற்றுப் பக்கத்தில் நிறுத்தப்பட்டது. நாங்கள் இறங்கினோம். பஸ் புறப்பட்டது. கைஸுக்குட்டியுடன் போன மகள், அதை சிறுநீர் கழிக்க வைத்துவிட்டுத் திரும்பி வந்தாள். உடலில் எந்த அணிகலன்களும் இல்லாமல் இருந்த கைஸுக்குட்டி மகளின் தோள்மீது கிடந்தது. நாங்கள் சிறிது நேரத்தில் ஆரவாரம் மிக்க கல்யாணக் கூட்டத்திற்குள் புகுந்தோம். (பஸ்ஸில் வரும்போது எந்தவித பிரச்சினையும் உண்டாகவில்லை. திரும்பிப் போகும்போது ஏதாவது நடக்க வேண்டுமே!) கைஸுக்குட்டி, மகள், மகளின் தாய்- மூவரும் பெண்கள் பகுதி என்ற சௌபாக்யவதிகளுக்கு மத்தியில் போனார்கள். அவர்களுக்கு அங்கு மகிழ்ச்சியான வரவேற்பு கிடைத்தது என்பது எனக்கு வந்த தகவல். சௌபாக்யவதிகளான சௌபாக்யவதிகளெல்லாம் கைஸுக்குட்டியைக் கையில் எடுத்துக் கொஞ்சினார்கள். அதன் உடலில் வாசனைத் திரவியங்களைத் தடவினார்கள். ஒவ்வொருவரும் அதைக் கையில் எடுத்து மாறி மாறி முத்தம் தந்தார்கள். காது குத்தல் சீக்கிரம் நடத்த வேண்டும் என்று எல்லா சௌபாக்யவதிகளும் ஒருமித்த குரலில் கூறினார்கள். எல்லாம் முடிந்து, நாங்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பத் தயாரானோம். பஸ்ஸில் ஏறினோம். “அடியே... கம்பியை ஒழுங்கா பிடி...'' ஒவ்வொரு நிமிடமும் நான் கூறிக்கொண்டே இருக்க வேண்டியிருந்தது. திடீரென்று ஒரு வளைவில் பஸ் திரும்பியது. அவ்வளவுதான். இதோ பஸ்ஸுக்குள் ஒரு ஆள் நிலை தடுமாறி விழுந்து கிடக்கிறார்! வேறு யார்... நான்தான்.

என்ன இருந்தாலும் நான் ஆண் ஆயிற்றே! ஒன்றுமே நடக்காத மாதிரி ஆடையில் பட்ட தூசுகளைத் தட்டி விட்டவாறு எழுந்து மீண்டும் நான் அமர்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தேன். நான் பஸ்ஸுக்குள் விழுந்தது ஆண் இனத்திற்கே ஒரு அவமானமான காரியம்தான்! ஒப்புக்கொள்கிறேன்.

“என்ன... உடம்புல ஏதாவது அடிபட்டிருச்சா?'' வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு மகளின் தாய் கேட்டாள். அவள் கேட்டதில் குசும்பு கலந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. பேசாமல் மீசையை எடுத்து விடலாமா என்றுகூட நினைத்தேன். பஸ்ஸை விட்டு இறங்கி எல்லாரும் வீட்டுக்குள் வந்தோம். பக்கத்து வீடுகளைச் சேர்ந்த பெண்கள் வந்து பல விஷயங்களையும் விசாரிக்கிறார்கள்; பேசுகிறார்கள். ஆணான நான் பஸ்ஸுக்குள் தலை குப்புற விழுந்த விஷயத்தை சௌபாக்யவதிகள் எல்லாருமே அடுத்த நிமிடம் அறிந்து கொள்கிறார்கள். இதைக் கேட்டதும்தான் சௌபாக்யவதிகளின் மனதிற்குள் எத்தனை சந்தோஷம்! அவர்கள் உதட்டில் மலர்ச்சி தெரிய சொன்னார்கள்: “இனிமேலும் பெண்களைப் பரிகாசம் செய்யக்கூடாது. இப்ப தெரியுதா கடவுள் எங்க பக்கம்தான் இருக்காருன்னு. ஊஞ்சல் ஆடுறேன்னு அதுல இருந்து கீழே விழுந்தீங்க. இப்போ பஸ்ல இருந்து விழுந்திருக்கீங்க. எங்களைத் தேவையில்லாம கிண்டல் பண்ணினா இனிமேலும் விழ வேண்டியதிருக்கும். பார்த்துக்கோங்க. ஆண்களோட பவர் என்னன்னு இதுல இருந்தே தெரியலியா?''

இவ்வளவையும் கேட்டுக்கொண்டு ஒரு ஆண் எப்படி கம்பீரமாக தலையை உயர்த்திக் கொண்டு இருக்க முடியும்? நான் வெட்கத்தால் தலைகுனிந்தேன். சௌபாக்யவதிகளின் முகத்தைப் பார்க்கவே தைரியம் இல்லாமல் நான் நாட்களை ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஆச்சரியத்தில் ஆச்சரியமான அந்த நிகழ்ச்சி நடக்கிறது. யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத அந்த நிகழ்ச்சி!

கிட்டத்தட்ட ஒரு அணுகுண்டு வெடித்த மாதிரிதான். சௌபாக்யவதிகளின் இதயம் வெடித்துச் சிதறும் நிலை!

இனிமேல் ஆண்கள் தலையை உயர்த்தி, மார்பை நிமிர்த்தி கம்பீரமாக நடக்கலாம். தாராளமாக மீசை வைத்துக்கொள்ளலாம். சௌபாக்யவதிகளின் அழகான உதடுகளில் மறைந்துபோன சிரிப்பைப் பார்த்து மனதில் மகிழ்ச்சி கொள்ளலாம். ஆண்களின் உலகத்திற்கு ஒரு சலாம்! மனிதாபிமான அடிப்படையில் சௌபாக்யவதிகளுக்கும் சலாம்!

நடந்த நிகழ்ச்சி என்னவென்றால்...

சௌபாக்யவதிகளான கதீஜா பீபி, ராஜலா, மகளின் தாய், சௌமினி தேவி- எல்லாரும் என்ன செய்வது என்று தெரியாமல் இப்போது கையைப் பிசைந்து நின்று கொண்டிருக்கிறார்கள். ஆகாயமே தங்கள் தலைக்கு மேல் இடிந்து விழுந்துவிட்டதோ என்ற நினைப்புடன் அவர்கள் இருக்கிறார்கள்... இவர்களின் செயல் எதுவுமே மகளுக்குப் புரியவில்லை. அவள் வெறுமனே அழுதவாறு நின்றிருக்கிறாள்.

பக்கத்து வீடுகளைச் சேர்ந்த சௌபாக்யவதிகள் எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் நடையில் ஒரு வேகம் தெரிந்தது. மகளின் தாய் அவர்களை அழைத்திருக்க வேண்டும். தங்களின் ஆறு கண்களையும் தீப்பந்தம் மாதிரி ஆக்கிக்கொண்டு அவர்கள் போனார்கள். அவர்கள் அப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் என்னவாக இருக்கும்?

சிறிது நேரம் கழித்து உள்ளே இருந்து கோபத்துடன் சில வார்த்தைகள்! அடிகள்! ஆர்ப்பாட்டங்கள்!

தேம்பித் தேம்பி அழுதவாறு மகள் என்னிடம் ஓடி வந்தாள்.

“டாட்டோ...! ஓடி வாங்க. கைஸுக்குட்டியை அவங்க அடிச்சுக் கொல்றாங்க...''

நான் ஓடவில்லை. மெதுவாக நடந்து உள்ளே சென்றேன். ஹால். கைஸுக்குட்டியின் கழுத்தில் எந்த அணிகலனும் இல்லை. ரிப்பன்கூடக் கிடையாது. ஒன்றுமே இல்லாமல் வெறுமனே நின்று கொண்டிருக் கிறது கைஸுக்குட்டி. கழுத்தில் ஒரு கயிறு மாட்டப்பட்டிருக்கிறது. அதன் இன்னொரு நுனி ஜன்னல் கம்பியில் கட்டப்பட்டிருக்கிறது. கைஸுக்குட்டி என்ன செய்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தவாறு நின்றிருந்தது. சௌபாக்யவதிகளான கதீஜா பீபி, ராஜலா, சௌமினிதேவி ஆகியோர் பூனைக்குட்டியை ஏற்கெனவே ஒரு சுற்று அடித்து முடித்திருந்தனர். சித்திர வேலைப்பாடுகள் கொண்ட ஈருளி மகளின் தாயின் கையில் இருந்தது. அவளின் தலைமுடி கலைந்து அலங்கோலமாயிருந்தது. கண்கள் உண்மையிலேயே தீப்பந்தங்கள்தாம்!

மகளின் தாய் “சனியனே!'' என்று திட்டியவாறு கைஸுக்குட்டியை இரண்டு அடி அடித்தாள். மூன்றாவது அடி கொடுப்பதற்காக ஓங்கினாள்.

நான் (கொஞ்சம் பதைபதைப்புடன்), “என்ன இது? பூனைக்குட்டியை எதுக்கு அடிக்கிறே? கைஸுக்குட்டி எதையவாது திருடி சாப்பிட்டுருச்சா என்ன?'' என்று கேட்டேன்.

நான் கேட்டது நியாயமான கேள்விதான். ஆனால், நான் இப்படிக் கேட்டதும் நான்கு சௌபாக்யவதிகளின் எட்டு கண்களும் தீப்பந்தமாக மாறி என்னைத் துளைத்தெடுத்தன.


அந்தப் பார்வைகளில்- சொல்லப் போனால் நான் சாம்பலாகி இருக்க வேண்டும். ஆனால், அந்தக் கண்கள் தீப்பந்தங்களாக ஒரு நிமிட நேரம்தான் இருந்தன. அடுத்த நிமிடம்- அவர்களின் கண்கள் மீண்டும் பெண்களின் சாதாரண கண்களாக மாறி, கண்ணீரைக் கொட்டியது. இதயமே வெடித்துவிட்டதுபோல் பலவீனமான குரலில் அவர்கள் கேட்டார்கள்:

“ஏன் கைஸுக்குட்டியை ஆணா மாத்துனீங்க?''

ஒரு நிமிட நேரத்திற்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்பதே புரியவில்லை. எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை. மனதில் ஒரு பதைபதைப்பு தோன்ற நான் கேட்டேன்.

“என்ன! கைஸுக்குட்டி ஆண் பூனையா மாறிடுச்சா? இனி அவன் ஆண் பூனையா?''

“அவன் ஒண்ணும் ஆண் பூனையா இருக்கல.'' மெதுவான குரலில் சௌபாக்யவதி சௌமினிதேவி சொன்னாள்: “நீங்க ஏன் கைஸுக்குட்டியை ஆண் பூனையா மாத்தினீங்கன்றதுதான் எங்களோட கேள்வி...''

ஓஹோ... விஷயம் இப்படிப் போகுதா?

மகாமந்திரவாதி! மெஜீஸ்யன், மேஜிக், மேஜிக்!

5

ப்போது என் மனதிற்குள் ஒரு சிறு அணுகுண்டு வெடித்தது. உண்மையிலேயே நான் ஒரு பெரிய மந்திரவாதிதானோ?

நான் கைஸுக்குட்டியைக் கையால் எடுத்து முகத்துக்கு மேலே உயர்த்திப் பார்த்தேன். ஆச்சரியம்! ஆண்தான்... ஆண் பூனைதான்!

இப்படியொரு தவறு எப்படி நடந்தது? நான் ஸ்தம்பித்து நின்றுவிட்டேன். என மனதில் பட்டது என்னவென்றால், ஆரம்பத்திலேயே பூனைக்குட்டி ஆணாகத்தான் இருந்திருக்க வேண்டும். அதை யாரும் சரியாக கவனிக்கவில்லை. பெண் பூனை என்று நினைத்து, சௌபாக்யவதி கதீஜா பீபி அதை எடுத்து சௌபாக்யவதி ராஜலாவின் கையில் தந்தாள். அவளும் அதைப் பெண் பூனை என்ற நினைப்பில்தான் கையில் வாங்கி இருப்பாள். அவள் மனதில் நினைத்ததையே மகளின் தாயிடமும் கூறிவிட்டாள். எல்லாரும் சேர்ந்து இதையே சௌபாக்யவதி சௌமினிதேவியிடமும் கூறியிருக்கிறார்கள். இருந்தாலும், ஒரே நேரத்தில் நான்கு சௌபாக்யவதிகளுக்கும் இப்படியொரு தவறு எப்படித்தான் நேர்ந்ததோ?

நான்கூட அதைப் பெண் பூனை என்றுதான் நினைத்தேன். அவர்கள் சொல்லும்போது நாம் பேசாமல் கேட்க வேண்டியதுதானே! இரண்டு பசுக்களும் பெற்றிருப்பது பசுக்குட்டிகள்தான் என்று மகளின் தாய் கூறும்போது நாம் நம்புவதுதானே நியாயம்! ஒரு வேளை அந்தக் கன்றுக்குட்டிகளும் காளையாக இருந்தால்...? அடுத்த நிமிடம் நான் வேகமாக ஓடினேன். பசுக்கள் கன்றுக்குட்டிகளைப் பெற்றெடுத்து ஒரு வருடம் ஓடி முடிந்துவிட்டது. இப்போது நான் அந்தக் கன்றுக்குட்டி ஆணா பெண்ணா என்று பார்க்கப் போகிறேன். காரணம்- இதுவரை நான் அதைச் சரியாக கவனிக்காமல் இருந்ததே. நான் போய்ப் பார்த்தேன். சாட்சாத் பசுக் கன்றுகள்தான்!

நான் ஹால் பக்கம் போனேன். மேஜைக்கு அருகில் போய் உட்கார்ந்தேன். குற்றவாளி! மந்திரவாதி!

நீதிபதிகளான சௌபாக்யவதிகள் அங்கு நின்றிருந்தார்கள்.

சௌபாக்யவதி கதீஜா பீபி மெதுவான குரலில் சொன்னாள்:

“மொத்தம் நாலு பூனைக் குட்டிங்க இருந்துச்சு. ரெண்டு பெண் பூனைக்குட்டிங்க. ரெண்டு ஆண் பூனைக்குட்டிங்க. அதுல ரெண்டு ஆண் பூனைக்குட்டியையும், ஒரு பெண் பூனைக் குட்டியையும் நரி கொண்டு போயிருச்சு. மீதி இருந்த ஒரே பூனைக்குட்டியைத்தான் நான் ராஜலா கையில் கொடுத்தேன். நான் கொடுக்குறப்போ அது பெண் பூனைக்குட்டியாத்தான் இருந்துச்சு...''

சௌபாக்யவதி கதீஜா பீபி தானே ஆணாக மாறிவிட்டதைப் போல் உணர்ந்தாள்.

நான் சொன்னேன்:

“இந்தப் பூனைக்குட்டியை ஆணாக மாத்தினது நான் இல்ல. பிறக்குறப்பவே இது ஆணாத்தான் இருந்துச்சு...''

நான் எழுந்துபோய் கட்டியிருந்த கயிற்றை விட்டு அதை விடுதலை பண்ணினேன். மீண்டும் வந்து மேஜைமேல் ஏறி உட்கார்ந்தேன்.

“அது பெண் பூனையாத்தான் இருந்துச்சு!''

“அது ஆண் பூனைக்குட்டியாத்தான் இருந்துச்சு!''

“மந்திரம் பண்ணி அதை ஆணா மாத்தினது நீங்கதான்... மந்திரப் பூனை!''

சௌபாக்யவதி ராஜலா சொன்னாள்:

“மந்திரப் பூனை!''

“ஆமா...'' சௌபாக்யவதி சௌமினிதேவி சொன்னாள்: “மந்திரப் பூனை!''

நான் கேட்டேன்:

“இதை ஆண் பூனைக்குட்டியா மாத்திவிட்டது நான்தான்னு நீங்க எல்லாரும் நினைக்கிறீங்களா?''

சிறிது நேரம் மவுனத்திற்குப் பிறகு அடுத்தடுத்து அவர்கள் கேள்வி அம்புகளை அடுக்கினார்கள். நான் அவர்கள் கேட்ட கேள்விகளுக் கெல்லாம் சலிப்பு இல்லாமல் பதில் சொன்னேன். அவர்களின் முதல் கேள்வி.

“பூனைக்கு காது குத்தச் சொல்லி கேட்டதற்கு, ஒவ்வொரு நாளும் "நாளைக்குக் குத்துறேன்... நாளைக்குக் குத்துறேன்'னு சொல்லி தள்ளிப் போய்க்கிட்டே வந்ததுக்குக் காரணம் என்ன?''

“நான் சும்மா அப்படிச் சொன்னேன். அவ்வளவுதான். இதுக்குக் காரணம்லாம் இல்ல...''

“இங்கே பெண்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சுன்னு யார் சொன்னது?''

“நான்தான்!''

“படம் விரிச்சு நின்னு சீறிக்கிட்டு இருந்த பாம்பை உருவாஞ்சுருக்கு போட்டுப் பிடிச்சது யாரு?''

யாரும் பிடிக்கக்கூடிய விதத்தில் இருந்தது அந்தப் பாம்பு என்பதே உண்மை. வெளியே வரமுடியாத அளவிற்கு சிக்கிக் கொண்ட தவளை பாம்பின் வாய்க்குள் முக்கால் பகுதி போய்விட்டது. படம் விரித்து சீறுகிற அளவுக்குக்கூட அவன் அப்போது இல்லை... இருந்தாலும் அவர்களின் கேள்விக்கு நான் பதில் சொல்லி ஆக வேண்டும்.

“பாம்பை உருவாஞ்சுருக்கு போட்டு பிடிச்சது நான்தான்!''

“இளவங்காய் கீழே விழப்போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சு சொன்னது யாரு?''

“நான்தான்!''

“பலா மரத்துக்கிட்ட நாலு பழங்கள் தரணும்னு கேட்டபடி மரம் தந்துச்சா?''

“தந்துச்சு...''

“அப்படிக் கேட்டது யாரு?''

“நான்தான்!''

“மிதவை மேல ஏறப்போன பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கச் சொன்னது யாரு?''

“நான்தான்!''

“பெண் பூனைக்குட்டியை ஆண் பூனைக்குட்டியா மாத்தினது யாரு?''

“நான் இல்ல...''

“உங்களைப்போல உள்ள ஒரு ஆளு பொய் சொல்றது நல்லதா?''

“பொய் சொல்லக்கூடாதுதான்!''

“பிறகு ஏன் சொல்றீங்க?''

“உலகைப் படைச்ச கடவுளே!''

பூனையைக் கையில் எடுத்தவாறு நான் வாசல் பக்கம் வந்தேன். ஒயிட் லெகான் சேவல் சாய்வு நாற்காலியில் ஏறி உட்கார்ந்திருந்தது. நான் ஒன்றுமே சொல்லவில்லை. எதுவுமே செய்யவுமில்லை. யார் வேண்டுமென்றாலும், என்னுடைய சிம்மாசனமான சாய்வு நாற்காலியில் ஏறி உட்காரலாம். உட்காருவது கோழியாகவே இருந்தால்கூட அதைத் தட்டிக்கேட்க இங்கு யார் இருக்கிறார்கள்? நான் அருகில் சிமெண்ட் தரையில் இருந்த தூண் மேல் சாய்ந்தவாறு அமர்ந்தேன். பூனைக்குட்டி என் மடிமேல் உட்கார்ந்திருந்தது. இங்கேயே அது இருக்கட்டும். இப்போது ஆண்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கிறது. அதற்காக யாருக்கு நன்றி சொல்வது? மனதில் இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி நிலவிக் கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. சொல்லப்போனால் என் நிலையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.


இப்படி நான் உட்கார்ந்திருக்க, சித்திர வேலைப்பாடுகள் கொண்ட ஈருளியைக் கையில் வைத்தவாறு மகளின் தாய் உன் வாசல் வழியாகவும், சௌபாக்யவதிகள் ராஜலா, கதீஜா பீபி, சௌமினிதேவி ஆகியோர் ஹாலில் இருந்தும் முற்றத்திற்கு வந்தார்கள். மகளின் தாய், வந்த வேகத்தில் சித்திர வேலைப்பாடுகள் கொண்ட ஈருளியால் ஒயிட் லெகான் சேவலுக்கு இரண்டு அடிகள் கொடுத்தாள். ஒயிட் லெகான் சேவல் "என்னை ஏன் தேவையே இல்லாமல் அடிக்கணும்? உங்களுக்கு என்ன ஆச்சு? நான் யார்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்துவிட்டு, தரையில் எதையோ கொத்தியவாறு முற்றத்தில் போய் நின்றது. மகளின் தாய் அடுத்த நிமிடம் பூனைக்குட்டியின் காதைப் பிடித்துத் தூக்கி கோபத்துடன் முற்றத்தை நோக்கி அதை வீசி எறிந்தாள். பூனை எழுந்து, நான்கு கால்களாலும் நின்றது.

நான் முன்பு பூனையைப் பிடித்துக் கீழே போட்டதைவிட அதிகமான தூரத்தில் அதை வீசி எறிந்திருக்கிறாள் மகளின் தாய். "பேச முடியாத ஒரு பிராணியைத் தேவையில்லாம கஷ்டப்படுத்த வேண்டாம்” என்று நான் அறிவுரை சொல்லவில்லை. மகளின் தாய் பூனையை வீசி எறிந்ததை சௌபாக்யவாதிகளான ராஜலா, கதீஜா பீபி, சௌமினி தேவி மூவருமே பார்த்தார்கள். ஆனால், அதற்கு எதிராக அவர்கள் ஒரு வார்த்தையாவது பேச வேண்டுமே! என்னைப் பார்த்தவாறு நெருப்புப் பார்வைகள் பார்க்க வேண்டுமே! ஆனால், அப்படியெல்லாம் அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.

என்ன இருந்தாலும் ஆண் ஒரு பாவப்பட்ட பிறவிதான்! சௌபாக்யவதிகளான பெண்கள் தங்கள் விருப்பப்படி ஆண்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். ஆதரவே இல்லாத ஒரு அனாதை இனம்தானே ஆண்கள் என்பது!

சௌபாக்கியவதிகள் எனக்கு முன்னால் நடந்து போனார்கள். எல்லாரிடமும் ஒரு மிகப் பெரிய மாற்றம் தெரிந்தது. அடக்கம், ஒடுக்கம், பணிவு... எல்லாம் தெரிந்தது அவர்களிடம். புடவைகளால் "பரபர” என்ற சத்தத்தை அவர்கள் உண்டாக்கவில்லை. பக்திவயப்பட்ட பார்வைகளுடன் அவர்கள் நடந்தார்கள். ஒரு ஆன்மிக சக்தியின் சந்நிதானத்தில் நடந்து செல்வது மாதிரி, மிக மிக மெதுவாக, பூமியில் கால் படுகிறதா என்று சந்தேகப்படுகிற அளவிற்கு அவர்கள் சாதுவாக நடந்து சென்றார்கள்.

மகள் தேம்பித் தேம்பி அழுதவாறு என் அருகில் வந்து நின்றாள்.

“டாட்டோ... இப்போ அவங்க கைஸுக்குட்டியை நீலகண்டான்னு கூப்பிடுறாங்க!''

நீலகண்டன்! பெயர் நன்றாகத்தான் இருக்கிறது. ஆணாக இருப்பதால், இறந்துபோன பிறகு நரகத்திற்குப் போகட்டும் என்று இப்படி ஒரு பெயர்! இந்துப் பூனை! இதனால் யாருக்கு நஷ்டம்? ஒரு நிமிடத்தில் இந்தப் பூனை இந்துப் பூனையாக மாறியது எப்படி? இருந்தாலும், நீலகண்டன் என்ற பெயர் சொல்வதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. இந்தப் பூனைக்கு அஸன்குஞ்ஞூ என்று கூடப் பெயர் வைத்திருக்கலாம். சௌபாக்யவதி கதீஜா பீபியின் கணவன் பெயர் அது. இல்லாவிட்டால் வாசு என்ற பெயர் சூட்டியிருக்கலாம். சௌபாக்யவதி ராஜலாவின் கணவர் பெயர் அது. அதாவது வாசுதேவன். அந்தப் பெயர்கூட நன்றாகத்தான் இருக்கிறது. சௌபாக்யவதி சௌமினிதேவி யின் கணவன் பெயர் ராமகிருஷ்ணன். அதுவும் இல்லையென்றால், மகளின் தாயின் கணவனின் பெயரான பஷீரைக்கூட பூனைக்கு வைத்திருக்கலாம். இது எதுவுமே இல்லாமல்... நீலகண்டன்!

“பூனைக்கு யாருடி நீலகண்டன்னு பேர் வச்சது?''

“அவளுக்கு வருத்தமும் கோபமும் வந்தப்போ, அவள் அந்தப் பேரை வச்சுக் கூப்பிட்டா.''

“யார்?''

“நீங்க தப்பா நினைச்சுக்கக் கூடாது... ராஜலா!''

“பொம்பளைகளுக்கு என்ன பெரிய வருத்தமும் கோபமும் வேண்டிக்கிடக்கு! ஒழுங்கா இருந்துக்கங்க. சரி, இருந்துட்டுப் போகட்டும்... நீலகண்டன்!''

“டாட்டோ... நீலகண்டன் வேண்டாம்...''

“ஏன்டா கண்ணு? அது ஒரு நல்ல மந்திரப்பூனை ஆச்சே!''

“அது எனக்கு வேண்டாம்... அது ஒரு கெட்ட பூனை!''

“இதைப் பெண் பூனையா மாத்த முடியாதா?'' மகளின் தாய் கேட்டாள். எப்படி?

“அடியே முட்டாள்! எழுதப் படிக்கத் தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? என்ன இருந்தாலும் நீ ஒரு பெண்தானே! இங்க பாரு... நான் சொல்றேன். கேட்டுக்கோ. இது பிறவிலேயே ஒரு ஆண் பூனைதான்!''

“இது பிறவியிலேயே ஒரு ஆண் பூனைன்னு அவங்க யாரும் நம்பத் தயாரா இல்ல...''

மகளின் தாயின் நடத்தையில் ஒருவித அமைதித்தனம் தெரிந்தது. நெருப்புப் பார்வையைக் காணோம். மிகவும் பணிவுடன் அவள் வாயிலிருந்து வார்த்தைகள் வந்தன.

“நீ நம்புறியா?''

மகளின் தாய் மட்டும் நான் சொல்வதைக் கேட்டு நம்பினால், நான் வெற்றி பெற்றுவிட்டதாக அர்த்தம். எனக்கு ஏதோ பெரிய ஆன்மிக சக்தி இருக்கிறது என்று முதலில் நம்பியவள் அவள்தான். அவள் சொன்னதைக் கேட்டுத்தான். மற்றவர்கள் அதை உண்மை என்று நம்பத் தொடங்கினார்கள். என்னிடம் அப்படி எதுவும் பெரிய சக்தி கிடையாது என்பதை முதலில் அவள் ஒப்புக்கொள்ள வேண்டும். இதோ... அவள் பேசப்போகிறாள்!

“நம்பச் சொன்னா நம்புறேன்!''

நான் என்ன சொல்கிறேனோ, அதுதான் சட்டம் என்றெல்லாம் நான் அவளிடம் கட்டளை போட்டுக் கொண்டிருக்கவில்லை. நான் சொன்னேன்.

“ரொம்ப சந்தோஷம். இங்க பாரு... உன்னைக் கட்டிய கணவனான நான் சொல்றேன். இந்தப் பூனை பிறக்குறப்பவே ஆண்தான். பொம்பளைங்களான நீங்க யாரும் அதை ஒழுங்கா கவனிக்கல. அது ஒரு பெண் பூனைன்னு நீங்க எல்லாரும் நெனச்சீங்க. அதைப் பெண் பூனையா மாத்தப் பார்த்தீங்க. அது நடக்காமப் போச்சு. அது பிறக்குறப்பவே ஆண் பூனைதான். அது எப்படி பெண் பூனையா மாறும்?''

“கல்யாணப் பந்தல்ல அம்பது, அறுபது பொம்பளைங்க இருந்தாங்க. அவுங்க எல்லாருமே பூனைக்குட்டியை அன்பா எடுத்துக் கொஞ்சினாங்க. ஆசையா முத்தம் கொடுத்தாங்க. எல்லாரும் எப்படி ஒரே நேரத்துல தப்பு பண்ணி இருக்க முடியும்!''

“எப்படியோ இந்தத் தப்பு நடந்திடுச்சு. ஒரே நேரத்துல எல்லாருமே தப்ப பண்ணி இருக்காங்க!''

“நீங்க சொன்னா நம்புறேன்!''

நான் சொன்னதால் நம்புகிறாளாம். கணவன் சொல்வதை ஒரு மனைவி கேட்டு நடக்க வேண்டியது அவளின் கடமை ஆயிற்றே! அதற்காக பெண்கள் பூனை பற்றிய இந்த விஷயத்தில் சரியான கவனம் செலுத்தவில்லை என்று நான் சொன்னது சரிதானா? உலக வரலாறு என்ன கூறுகிறது? சௌபாக்யவதிகளுக்குத் தவறு நேர்கிற சூழ்நிலைகளில், அவர்கள் அதை ஒப்புக்கொண்டிருக்கிறார்களே! பிறகு எப்படி இந்தத் தவறு உண்டானது?


நல்ல வேளை... இந்த நேரத்தில் என் குடை வந்த சேர்ந்தது. ஒரு ஆள் அதைக் கொண்டு வந்தார். “இங்கே இதைத் தரச் சொன்னாங்க'' என்றார் வந்த ஆள். குடையை நான் கையில் வாங்கினேன்.

“ரொம்ப சந்தோஷம்.''

இரவில் நீலகண்டனை மகளும் மகளின் தாயும் கொசு வலைக்குள் படுக்க வைக்கவில்லை. அதை வெளியே விட்டு, எல்லாக் கதவுகளையும் அடைத்துவிட்டார்கள். ஆதரவு இல்லாத அனாதையைப்போல் நீலகண்டன், உலகமே கேட்கிற மாதிரி "ம்யாவோ ம்யாவோ” என்று கத்தியவாறு வீட்டையே சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருந்தது.

"இவ்வளவு கடினமானதா பெண்ணோட இதயம்!”

மின் விசிறியின் சத்தத்தில் நான் சொன்னது சரியாகக் கேட்காமல் போயிருக்கலாம். இந்த நேரத்தில் ஒரு ஆணின் கடமை என்னவாக இருக்கும்? சிந்தித்துப் பார்த்தேன். இரண்டு பீடிகளை எடுத்துப் புகைத்தேன். நீளமான ஒரு அரிவாளைக் கையில் எடுத்தேன். இரவு நேரத்தில் வெளியே வந்தால் கையில் ஒரு ஆயுதம் இருப்பது எப்போதுமே நல்லது. டார்ச் விளக்கு எங்கே என்று தேடினேன். அப்போது ஒரு சீறல், ஒரு அழுகை, ஒரு குரைக்கும் சத்தம்! உரத்த குரலில் கத்தியவாறு நீலகண்டன் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் கத்துவது நியாயம்தானே! அவன் வேதனைப்படுவதில்கூட ஒரு அர்த்தம் இருக்கவே செய்தது. டார்ச் விளக்கைத் தேடி கையில் எடுத்து, கதவைத் திறந்தேன். விளக்கை அடித்துப் பார்த்தேன். அடுத்த நிமிடம் இருளில் நடந்தேன். குரைத்துக் கொண்டிருந்த நாயை "ஷட் அப்” என்று அதட்டியவாறு, நீலகண்டனைக் கையில் எடுத்தவாறு நடந்தேன். இருட்டில் ஒரு இடத்தில் நின்றேன். வானத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரே இருட்டு. வெட்டுக்கிளிகள் கத்துவது எங்கும் கேட்டுக்கொண்டிருந்தது. நீலகண்டனைக் கையில் பிடித்தவாறு கோடிக்கணக்கான நட்சத்திரங் களையும் தாண்டி பார்வையைப் பதித்தவாறு அந்த இருட்டில் நீண்ட நேரம் நான் நின்றிருந்தேன். ஆஹா... என்ன அழகான உலகம்! சில நிமிடங்களில் நீலகண்டனுடன் வீட்டுக்குள் நுழைந்த நான் கதவைத் தாழ்ப்பாள் போட்டு மூடினேன். கால்களை மீண்டும் கழுவி, படுக்கையில் போய் படுத்தேன். நீலகண்டன் மெதுவாக ஊர்ந்து போய் கொசு வலைக்குள் நுழைந்தது. எல்லாம் நன்றாகவே நடந்தது. ஆனால் அவனால் முழுமையாகக் கொசு வலைக்குள் போக முடியவில்லை. அவன் உடம்பில் ஒரு பகுதி கொசு வலைக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது. நீலகண்டன் என்ற இந்துப் பூனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொசு வலைக்குள் நுழைந்தது. அடுத்த நிமிடம் உள்ளே படுத்திருந்தவர்கள் கால்களால் தள்ளிவிட, மீண்டும் நீலகண்டன் கொசு வலைக்கு வெளியே வந்தான். இப்படியே கொசு வலைக்குள் நுழைவதும், வெளியே வருவதுமாக சுமார் நூற்றியொரு முறை... அல்லல்பட்டுக் கொண்டிருந்தான் நீலகண்டன். இந்தப் போராட்டத்தில் களைத்துப்போன அந்தப் பூனைக்குட்டி கடைசியில் என் கால்களுக்கு அருகில் படுத்தவாறு கண்களைச் சிறிதுகூட இமைக்காமல் என்னையே உற்றுப் பார்த்தது. அந்தப் பார்வையில், "இப்படியெல்லாம் நடப்பதற்குக் காரணம் என்ன?' என்ற கேள்வி தொக்கி நிற்பதை என்னால் உணர முடிந்தது. நான் சொன்னேன்:

“நீ இப்போ ஒரு நல்ல மந்திரப் பூனையா ஆயிட்டே! உன்னை இப்போ யாருக்கும் வேண்டாம். பேரு- நீலகண்டன். நீ இதைப் பத்தியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாதே. உன்னை நான் பார்த்துக்குறேன். இந்துப் பூனையே, ஏன் கவலைப்படுறே? நான் உன்னைக் காப்பாத்துறேன்.''

நீலகண்டன் நான் சொன்னதில் திருப்தியடைந்த மாதிரி கண்களை மூடியது. அவனுக்குச் சரியாக உறக்கம் வரவில்லை. எனக்கும்தான்.

பொழுது புலர்ந்தது முதல் நீலகண்டன் ஒரு புதிய தோற்றம் கொண்டவனாகி விட்டான். அவன் ஒரு மந்திரப் பூனை! அவனுக்கு இப்போது பாத்திரமில்லை. உணவு இல்லை. செண்ட் மணம் கமழும் முத்தங்கள் இல்லை. அவனுக்கு எதுவுமே தராமல் பட்டினி போட்டு விட்டார்கள். இவன் வெளுத்தவனாக இருந்ததால், பார்க்க சுமாராகத் தான் இருந்தான். இவனே கறுப்பு வண்ணத்தில் இருந்திருந்தால், பார்ப்பதற்கே மிகவும் கம்பீரமாக இருந்திருப்பான்! இவனைக் கறுப்பாக்க என்ன வழி? மீசை கறுப்பாக்கப் பயன்படும் பொடியை ஒரு வாளி தண்ணீரில் கலக்கி, அதில் நீலகண்டனை முழுமையாக முக்கி எடுக்க வேண்டும் என்று நான் தீர்மானித்தேன். அப்படிச் செய்தால் நீலகண்டன் கறுப்புப் பூனையாகிவிடுவான். கடவுளே! கறுப்பனான நீலகண்டனைப் பார்த்தால், எல்லா சௌபாக்யவதிகளும் மயக்கம் போட்டு நிச்சயம் கீழே விழுந்துவிடுவார்கள். வேண்டாம்... மந்திரப் பூனை வெண்மை நிறத்திலேயே இருக்கட்டும்.

நான் சாப்பிட்டுவிட்டு, நீலகண்டனுக்குக் கொஞ்சம் சோறு போட்டேன். அப்போது என்மீது ஒரு குற்றச்சாட்டு வருகிறது- பெண்களின் கடுமையான இதயத்தைப் பறைசாற்றுவதற்காகவே இதை நான் சொல்கிறேன்.

“இது ரேஷன் காலம். அரிசி கிடைப்பதே கஷ்டமா இருக்கு. இந்தப் பூனைக்குட்டிக்கெல்லாம் எதற்கு சோறு போடணும்? கோழிகளுக்கு சோறு போட்டா அது முட்டையாவது போடும்...''

அவர்கள் சொன்னதில் ஒருவிதத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. பசி அடங்க வேண்டும் என்றால் பூனைக்கு வேறு எதைத்தான் கொடுப்பது? வேண்டுமானால் அது போய் எலியைப் பிடிக்கலாம். ஆனால், நீலகண்டன் பிடிக்க முயற்சி பண்ணிக்கொண்டிருந்தது அணிலைத்தான். என்னதான் முயற்சி செய்தாலும் அவனால் ஒரு அணிலைக்கூட பிடிக்க முடியவில்லை. மரத்தின்மேல் சிறிது தூரம் ஏறி நீலகண்டன் அணிலைப் பார்ப்பான். அணில்களோ தலைகீழாகத் தொங்கிக்கொண்டு வால்களை ஆட்டியவாறு நீலகண்டன் என்ற இந்துப் பூனையை கேலியாகப் பார்த்துக்கொண்டிருக்கும். ஒரு மந்திரப் பூனையை இப்படி கிண்டலுடன் பார்க்கலாமா? எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. என்ன இருந்தாலும், எல்லாருமே பூமிக்குச் சொந்தமானவர்கள்தானே!

சந்நியாசி வந்தபோது, நான் பூனையைப் பற்றிய செய்தியைத்தான் சொன்னேன். அவர் அதை மிகவும் ரசித்துக் கேட்டார். முழுவதையும் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

“நீலகண்டனைப் பார்த்துப் பெண்கள் பயப்படாமல் இருக்க மாட்டாங்க.'' சந்நியாசி சொன்னார்: “கைஸுக்குட்டின்ற பெயரைக் கேட்டப்போ, நான்கூட அது பெண் பூனைன்னுதான் நினைச்சேன். சரியா கவனிக்கல. இப்போது இவன் மந்திரப்பூனை ஆயிட்டான்ல?'' சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அவர் சொன்னார். “புனிதப் பூனை!'' தாடியைத் தடவியவாறு நீலகண்டனைப் பார்த்த சந்நியாசி தொடர்ந்தார்: “நீலகண்டன் ஒரு புனிதப் பூனைன்ற உண்மையை பத்து பேர் அறியட்டும். அதற்குப் பிறகு நேர்த்திக்கடன், காணிக்கைன்னு அவனைத் தேடி எல்லாரும் வர ஆரம்பிப்பாங்க. சுவாமிஜி, புனித மீன்களைப் பார்த்திருக்கீங்களா?''


“அஜ்மீர் ஷரீஃபைத் தாண்டி, பாலைவனத்தின் வழியே பயணம் செஞ்சு போனால், புஷ்கர் சாகர்ன்ற குளம் வரும். அந்தப் பெரிய குளத்துல நிறைய மீன்கள் இருக்கும். ஆண்களும் பெண்களும் நேர்த்திக்கடனா அங்குள்ள மீன்களுக்கு உணவு தருவாங்க!''

“உலகத்தில் புனிதமான விஷயங்கள்தாம் எவ்வளவு இருக்கின்றன! புனிதச் செய்திகள்... புனித மீன்கள்... புனித பாம்புகள்... புனித நகரங்கள்... புனித நதிகள்... புனித மரங்கள்... புனித பசுக்கள்... புனித காளைகள்... புனித மலைகள்... புனித குகைகள்.. புனித நிறங்கள்...''

“புனித திமிங்கிலங்கள்...''

“சுவாமிஜி, நீங்க அதை எங்கே பார்த்தீங்க?''

“கராச்சியில ஒரு தேவாலயத்துக்குப் பக்கத்துல ஒரு பெரிய கிணறு இருக்கு. அதுல இருந்த ஒரு திமிங்கிலத்திற்குப் பக்த ஜனங்கள் நேர்த்திக்கடனா மாமிசத் துண்டுகளைத் தர்றதை நான் பார்த்திருக்கேன்!''

“அவங்க மனசுல நினைக்கிற காரியங்கள் நடக்கும்ன்ற நம்பிக்கை காரணமா இருக்கலாம். அந்தப் புண்ணிய திமிங்கிலங்கள் ஏதாவது அற்புதக் காரியங்கள் காட்டியிருக்கலாம். அற்புதங்கள் எதுவுமே இல்லாம இந்த உரோம மதங்கள்...''

“உரோமம் இல்லாத மதங்கள் இந்த உலகத்துல இருக்குதா சுவாமிஜி?''

“இதுவரை இல்லைன்னுதான் சொல்லணும்!''

“உரோமம் ஒரு அடையாளம்- அவ்வளவுதான். நண்பர்களையும், விரோதிகளையும் வித்தியாசம் கண்டுபிடிக்கிறதுக்கு.''

“இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் கடவுள் பேர்லதான் நடக்குது. அவங்களோட லட்சியம் மோட்சத்துக்குப் போகணும்ன்றது. இப்போ பகைன்றது எதுக்கு? எல்லாருமே நண்பர்கள்தான். உலகத்துல இருக்குற எல்லாருமே சகோதரர்கள்தான்- சகோதரிகள்தான். கடவுளை எந்தப்பேர்ல அழைச்சாலும், அது கடவுள்தான். கடவுள்ன்றது எல்லா உலகங்களுக்கும், உலகத்துல நடக்குற எல்லாச் செயல்களுக்கும் ஆதாரமா இருக்குற மிகப்பெரிய சக்தி... ஆரம்பமும் முடிவுமா இருக்குற அந்தக் கடவுள் எந்த ஒரு தனிப்பட்ட மதத்துக்கும் சொந்தம் கிடையாது!''

“உண்மை தெய்வம்! உண்மை மதம்!''

“சுவாமிஜி, பிரச்சினை பெரிசா போயிடுச்சு. இதோட நிறுத்திக்கு வோம். உலகத்துல உள்ள எல்லாரையும் கடவுள் காப்பாத்தட்டும்...''

சந்நியாசி நீலகண்டனை மடியில் வைத்துக்கொண்டு என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்தார். அவரின் கைகள் பூனைக்குட்டியைத் தடவிக்கொண்டிருந்தன.

கடல் பயங்கரமாக ஓசை எழுப்பி ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தது. இரவில் நடுக்கடலில் மீன் பிடிக்கப் போனவர்கள் மறுநாள் மதியத்திற்கு முன்பு படகு நிறைய மீன்களுடன் திரும்பி கரைக்கு வந்தபோது, அவர்களின் வீடுகளை கடல் கொண்டு போயிருந்தது. நான் ஃப்ளாஸ்க்கில் இருந்து இரண்டு டம்ளர்களில் பால் கலக்காத தேநீரை ஊற்றி னேன். சந்நியாசியிடம் ஒரு டம்ளரை நீட்டினேன். இன்னொரு டம்ளரை நான் என் கையில் எடுத்தேன். ஒயிட் லெகான் சேவல் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. தேநீர் குடித்து முடிந்ததும், நாங்கள் ஆளுக்கு ஒரு பீடியைப் பிடிக்கத் தொடங்கினோம்.

நான் கேட்டேன்.

“சுவாமிஜி, பிரச்சினை பெரிதானது எப்படி? எல்லாத்துக்கும் அறிவுதான் காரணமா?''

நான் சொன்னதைக் கேட்காத மாதிரி, சந்நியாசி சொன்னார்:

“மகாவிஷ்ணு மீனாக அவதரிச்சார். ஆமையாகவும், பன்றியாகவும், நரசிம்மமாகவும்கூட அவதரிச்சார். வாமனன், பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன், ஸ்ரீகிருஷ்ணன், கல்கி- இப்படிப் பல அவதாரங்கள். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“இதைப் பத்தி நான் என்ன சொல்றது?''

அவர் தொடர்ந்தார்: “புத்தபகவானைப் பத்தி என்ன சொல்றீங்க? நான் சொல்றேன். அவர் ஒரு மாமனிதர். இந்தியா, சீனா, ஜப்பான், திபெத்- இந்த நாடுகள்ல அவருக்கு எத்தனையோ கோடி சீடர்கள் உருவானாங்க. புத்த மதம் உண்டாச்சு. உன்னதமான, உயர்ந்த உபதேசங் கள். சாகும் வரை புத்தர் எந்த ஒரு அற்புதக் காரியங்களையும் செஞ்சு காட்டல. எண்பதாவது வயசு நடக்குற சமயத்துல அவர் இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாரு. புத்தரோட பேர்ல அவரோட சீடர்கள்தான் அற்புத காரியங்கள் பலவற்றையும் செஞ்சு காண்பிச்சுக்கிட்டு இருக்காங்க. அவங்க புத்தரை தெய்வமா ஆக்கிட்டாங்க. புத்தர் இறந்து போய் ரெண்டாயிரம் வருஷத்துக்கு மேல ஆயிடுச்சு. இப்பவும் புத்த மதத்தைச் சேர்ந்தவங்களுக்கு புத்தர் தெய்வம்தான். அவருக்குப் பல அவதாரங்களும் இப்போ இருக்காங்க. தலாய்லாமா இப்போ இருக்குற புத்தர். அதாவது- ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி மறைஞ்சு போன புத்தரோட அவதாரமாம் இவர்! இப்படியொரு நம்பிக்கை இருக்குறதைப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

“நீங்க சொன்னதை நானும் சிந்திச்சுப் பாக்குறேன், சுவாமிஜி...''

“ஏதாவது சொல்லணும்னு ஒண்ணும் அவசியம் இல்ல.'' அவர் சொன்னார்.

“சிந்திச்சா போதும். ஆதாம் முதல் மோசஸ், டேவிட், இயேசு கிறிஸ்து, முஹம்மது நபி... இவங்களைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க? இவங்கள்ல யாரை மனித சமுதாயம் பின்பற்றிப் போகணும்? இவங்கள்ல உண்மையான மதபோதகர் யார்?''

“யார்னு மனசுக்குள்ள நினைச்சா போதும்.'' அவர் தொடர்ந்தார்: “இப்ப நாம சில மகத்தான நூல்களை எடுத்துக்குவோம். இறந்துபோன ஆத்மாக்களைப் பற்றிய நூல்கள். செயின்ட் அவேஸ்தா... வேதங்கள், உபநிஷத்துகள், நினைவுச் சின்னங்கள், தர்ம சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள், தோரா, மும்மூர்த்திகள், பைபிள், புதிய ஏற்பாடு, குர்-ஆன், மார்மன் நூல், கேப்பிட்டல், உண்மை விளக்க நூல், ஆதிநூல்- இவற்றில் மனித சமுதாயம் எந்த நூலைப் பின்பற்றி நடக்க வேண்டும்? இவற்றில் உயர்ந்த நூல் எது?''

எந்த நூல் உயர்ந்தது என்று சொல்வதற்காக நான் வாயைத் திறந்தேன். அதற்குள் "ஒண்ணுமே சொல்ல வேண்டாம்' என்று கையால் சைகை காட்டித் தடுத்தார். தொடர்ந்து அவர் சொன்னார்:

“மனித சமுதாயத்தோட உணவு விஷயத்தைப் பத்திப் பார்ப்போம். என்னைப் பொறுத்தவரை உணவுப் பிரச்சினையை நான் எப்பவுமே பெரிசா எடுத்துக்குறது இல்ல...''

“சுவாமிஜி, நீங்க அப்படிச் சொல்றீங்க. ஆனா, உலகத்துலயே இன்னைக்கு பெரிய பிரச்சினையா இருக்குறது இதுதானே? உலக ஜனத்தொகை கடல் மாதிரி நாளுக்கு நாள் பெருகிக்கிட்டே இருக்கு. மக்களுக்கு உணவு கிடைப்பதே பெரிய விஷயமா இருக்கு. இதை எப்படி முக்கியமான ஒண்ணா எடுக்காம இருக்க முடியும்?''

“மக்களுக்கு வாயைப் படைச்ச கடவுள், அதற்கு என்ன தேவையோ அதைத் தராமலா இருப்பான்?''

“மக்கள் முறையிடுவது கடவுள்கிட்டயா என்ன?''

“பிரச்சினை உண்மையிலேயே பெரியதுதான். நீர்வாழ் பிராணிகள், பறவைகள், ஊர்ந்து திரியும் பிராணிகள், மிருகங்கள், பட்டாம்பூச்சி கள், புழுக்கள், கண்ணுக்குத் தெரியாத சிறு அணுக்கள்- சுவாமி, நீங்க எப்பவும் சொல்றது மாதிரி இந்த உயிரினங்கள் எல்லாம் இந்த பூமிக்கு சொந்தமானவைதாமே. இவை எல்லாமே கடவுளோட படைப்புகள் தாம். நியாயமாகப் பார்க்கப்போனா, இந்த உயிரினங்கள் எல்லாத்துக் கும் உணவுன்றது முக்கியமான ஒரு பிரச்சினையே.


இந்த உயிரினங்கள் உணவுக்காக யாரைப் பார்த்துக் கேட்கும்? இவர்களுக்கு வாயைப் படைச்ச கடவுள் இரையையும் கிடைக்கவே செய்யிறாரு. இந்த விஷயத்துல இந்த உயிரினங்களுக்கு திருப்தியே. சந்தோஷமே. ஆனா, பிறவிகளிலேயே உயர்ந்த பிறவின்னு எல்லாரும் சொல்லிக்கிற இரண்டு கால் மாடுகளான மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த உணவுப் பிரச்சினைன்றது பெரிய ஒரு விஷயமா இருக்கு?''

“ஜனத்தொகைப் பெருக்கம். குறைவான உணவு உற்பத்தி!''

“ஜனத்தொகை அதிகமாவதைக் குறைக்கணும்; உணவு உற்பத்தியை அதிகப்படுத்தணும். இந்த ரெண்டும் நடந்திருச்சின்னா, இந்தப் பிரச்சினை தீர்ந்த மாதிரிதான்!''

“பிரச்சினை தீராது, சுவாமிஜி. மதங்கள் இருக்கே! இந்துக்கள், ஜைனர்கள், புத்தமதத்தவர்கள், பார்ஸிகள், யூதர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், அஹம்மதியாக்கள், வஹ்ஹாபிகள், தாருஸி கள், கத்தோலிக்கர்கள், புதுமை விரும்பிகள், ஆர்ய சமாஜக்காரர்கள்- இவங்க எல்லாருமே குழந்தை பிறப்புத் தடையை மிகப்பெரிய ஒரு பாவமா நினைச்சாங்கன்னா...?''

“அவங்க அப்படி நினைச்சாங்கன்னா ஒண்ணு செய்யலாம். இதுவரை பிறந்த குழந்தையைக் கொல்ல வேண்டிய அவசியம் இல்ல. இனி பிறக்கப்போகும் குழந்தை விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடா இருக்கலாமே!''

“இது நடைமுறையில் சாத்தியமா சுவாமிஜி? இதுபத்திப் பேசினா, "நாங்க அப்பாவி. வாழ்க்கையில இது சர்வ சாதாரணமா நடக்கக்கூடிய ஒண்ணு. குழந்தைகள் பிறக்குறதுன்றது கடவுளோட ஆசியால நடக்குறது"ன்னு அவங்க சொல்லலாம் இல்லியா?''

“அப்படிச் சொன்னாங்கன்னா, அதுக்கும் பரிகாரம் இருக்கு. பல்லாயிரம் வருடங்களா இந்த பூமி எந்தவித விரிவாக்கமும் இல்லாம அப்படியே இருந்துக்கிட்டு இருக்கு. இதுக்கு ஒரு விரிவாக்கம் வேணும். இதுக்கு நீளமும் அகலமும் கட்டாயம் இருக்கும்ல! மனிதர்கள் வசிப்பதற்கு இடம் கிடைச்ச மாதிரியும் ஆச்சு. விவசாயம் செய்யவும் அதிகமா நிலம் வந்த மாதிரியும் இருக்கும்!''

“இது எப்படி சாத்தியம் சுவாமிஜி?''

“கடவுள்கிட்ட கேட்க வேண்டியதுதான். மதத்தை நம்பக்கூடிய எல்லாருமே ஒண்ணு சேர்ந்து தெய்வத்துக்கிட்ட வேண்டிக்கணும். இந்த பூமியின் பரப்பளவை இன்னும் பெரிசாக்கணும்னு கேட்கணும்!''

இது ஒரு அருமையான விஷயம்தான். காரியங்கள் நடக்கிற போக்குல, இதை யாரும் எதிர்க்கவும் மாட்டாங்க...

சந்நியாசி சொன்னார்:

“நான்தான் சொன்னேனே... எனக்கு உணவுன்றது ஒரு பிரச்சினையே இல்லைன்னு. கட்டாயம் சோறுதான் சாப்பிடணும்னு ஏதாவது இருக்கா என்ன? சப்பாத்தியோ ரொட்டியோ பூரியோதான் சாப்பிடணும்னு கூட எதுவும் இல்லை. பால் என்பது ஒரு திருட்டுப் பொருள்ன்றதுனாலயும், அதைச் சாப்பிடுவது ஒரு பாவச்செயல்னு நினைக்கிறதாலயும் நான் அதைக் குடிப்பது இல்லை. பச்சை இலைகள், பயறு வகைகள், கிழங்குகள், பழங்கள்- இவற்றை நான் சாப்பிடுறேன். இவை வெந்திருக்கணும்ன்ற கட்டாயம் இல்ல. உப்பு போட்டிருக்கணும்ன்ற அவசியமும் இல்ல. அந்த ரெயில்வே பாலம் முதல் அங்கே இருக்குற தார் ரோடு வரை ரெண்டு பக்கமும் ரெண்டு மூணு லட்சம் செடிகள் இலைகள் சகிதமா நின்னுக்கிட்டு இருக்கு. அவற்றின் இலைகளை மனிதன் ஏன் சாப்பிடுவதில்லைன்னு பலமுறை நான் சிந்திச்சுப் பார்த்திருக்கேன். இதைப்பத்தி ஆச்சரியமும் பட்டிருக்கேன். சிலருக்கு அரிசி மட்டுமே வேணும். சிலருக்கு கோதுமை! இப்படி ஒவ்வொரு விஷயத்திலயும் பிடிவாதம் பிடிச்சிக்கிட்டு இருந்தா எப்படி? ஒவ்வொருத்தரையும், அவங்களால உற்பத்தி செய்ய முடிகிற உணவுப் பொருட்களை அவங்களே உற்பத்தி செய்யணும்னு சொன்னால், அவங்க அதைக்கேட்டு அதன்படி நடப்பாங்களா?''

நாங்கள் இருவரும் தலா ஒரு அவுன்ஸ் பால் கலக்காத தேநீர் குடித்தோம். நான் கொஞ்சம் தேநீரை சிமெண்ட் திண்ணையில் ஊற்றினேன். அதை நீலகண்டன் என்ற இந்துப் பூனை அருகில் வந்து நக்கிக் குடித்தது. “உண்மையிலேயே இது மந்திரப் பூனைதான்.'' எனக்குள் நானே சொல்லிக்கொண்டேன்.

இருவரும் எழுந்து சிறிது நேரம் நிலத்தில் நடந்தோம். எங்களுடன் ஒயிட் லெகான் சேவலும், நீலகண்டனும் சேர்ந்து நடந்து வந்தார்கள். ஆண்களுடன் ஆண்கள் சேர்ந்து நடந்து வருகிறார்கள். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? சிறிது நேரத்தில் நாங்கள் பலா மரத்திற்குக் கீழே, நிழலில் நின்றிருந்தோம்.

சந்நியாசி சொன்னார்:

“உலக மக்களோட உணவுப் பிரச்சினையை எடுக்கிறப்போ, அதை இரண்டு பிரிவா பிரிக்க வேண்டியதிருக்கு. சைவம் சாப்பிடுகிறவர்கள், அசைவம் உண்பவர்கள்.''

“சைவம், அசைவம்- ரெண்டையும் சாப்பிடுபவர்களை?''

“நான் சொன்னது- அசைவம் மட்டுமே சாப்பிடுகிறவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல...''

“சுவாமிஜி, தொண்ணூத்தொம்பதரை சதவிகிதம் அசைவம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழ்றவங்களும் இங்கே இருக்கத்தான் செய்றாங்க!''

“எங்கே?''

“பனிப் பிரதேசங்கள்ல...''

“ஓ... எஸ்கிமோக்களைச் சொல்றீங்களா? சரிதான்...''

“அங்கே தண்ணீர் உறைஞ்சு போய் பனிக்கட்டியாய் கிடக்கு. கடல்... பனிமலைகள். அவங்க பனிக்கட்டிகளால ஆன குகைகள்ல வசிச்சுக்கிட்டு இருக்காங்க. சில காலங்கள்ல அவங்களுக்கு பகலே கிடையாது. எப்பவுமே இருட்டுதான். அதுவும் மாசக் கணக்குல. சில காலங்கள்ல மாசக்கணக்கா பகல் மட்டுமே. மீன்கள், கடல் யானைகள், கடல் பன்றிகள், கடல் குதிரைகள், ஓநாய்கள், கரடிகள்- இவற்றை பச்சையா அவங்க சாப்பிட்டு தங்கள் நாட்களை ஓட்டுறாங்க. அவங்களுக்குன்னு பிரத்யேக மத நம்பிக்கைகளும் இருக்கு!''

“அவங்களையும் நாம கணக்குல எடுக்கத்தான் செய்யணும். காட்டுல வாழ்றவங்களையும் நாம கணக்குல எடுக்கணும். மொத்தத்துல பார்த்தால், மனித இனத்தோட உணவுன்னு எடுத்துக்கிட்டா, எதை எதைச் சொல்லலாம்?''

“கோதுமை, அரிசி, சோளம், தினை, கேழ்வரகு, கிழங்குகள், பழங்கள், கடல்வாழ் உயிரினங்கள், காய்கறிகள், பால், நெய், தயிர், தேன்...''

“நடக்குறதும் பறக்குறதும்கூட மனிதனோட உணவுதானே?''

“ஏன்... ஊர்ந்து போறதையும் சேர்த்துக்கலாமே! நான் எல்லாத்தையும் சொல்றேன். ஆடு, கோழி, முயல், வவ்வால்கள், காக்கா, மைனா, குருவிகள், மயில்...''

“மயில் தேசியப் பறவையாச்சே!''

“காளை, எருமை, பசு, காட்டெருமை, ஒட்டகம், காட்டு ஆடு, யாக்...''

“யாக் திபெத்ல இல்ல இருக்கு? அதை அங்க இருக்குறவங்க சாப்பிடுறாங்களா என்ன?''

“மான், காட்டுப் பன்றி, நாட்டுப்பன்றி, நாய்கள், எலிகள், உடும்பு, ஆமை, திமிங்கிலம், வெட்டுக்கிளிகள், நண்டு, தவளை, யானை...''

“யானையை யார் உணவா சாப்பிடுறாங்க?''

“காங்கோ நாட்டுல இருக்குற அடர்ந்த காடுகள்ல வசிக்கிற பிக்மிகள்ன்ற காட்டு ஜாதி மக்கள் யானையைச் சாப்பிடுறாங்க. அவங்களுக்கும் ஒரு மத நம்பிக்கை இருக்கவே செய்யுது. சுவாமிஜி, அவங்களைப் பத்தி நீங்க படிச்சது இல்லியா?''

“இல்ல..''

“பிக்மிகளோட மத நம்பிக்கையைப் பத்தி எனக்கு இப்போ சரியா ஞாபகத்துல இல்ல. எல்லா காட்டுவாழ் மக்களைப் போலவே அவங்களுக்கும் மரணத்துக்கு பிறகு இருக்குற வாழ்க்கையில நம்பிக்கை இருக்கு.

அவங்களைச் சேர்ந்தவங்க யாராவது இறந்துட்டாங்கன்னா, அவங்களோட ஆத்மா இருக்கும் இடத்தை சொர்க்கம்னு நினைக் கிறாங்க அந்தக் காட்டுவாழ் மக்கள். வேட்டையாடுறதுல அவங்களுக்கு விருப்பம் அதிகம். பிக்மிகள் அதிகமா வேட்டையாடுறது யானைகளைத்தான். அவங்க ரொம்பவும் உயரம் குறைவானவங்க. மூணுல இருந்து மூணரை அடி உயரம்தான் அவங்களுக்கு. யானையோட சாணத்தை தண்ணீர்ல கலக்கி, அதை அவங்க தங்களோட உடம்பு முழுக்க நல்லா மேல இருந்து கீழே வரை தேய்ச்சிக்குவாங்க. பிறகு மரத்துண்டுகளைக் கூர்மையா சீவி கையில வச்சிக்கிட்டு யானைக்குப் பின்னாடி ஓடுவாங்க. யானைக்கு ஒரு சந்தேகமும் வராது. அவங்க யானையைக் குத்தி காயம் உண்டாக்கு வாங்க. யானை திரும்பிப் பார்க்கும். ஆனா, அவங்க உயரம் கம்பியா இருக்குறதால, யானையோட கண்கள்ல அவங்க பட மாட்டாங்க. காயங்கள் அதிகமானவுடன் யானையால் அதுக்கு மேல நடக்க முடியாது. அப்படியே என்ன பண்றதுன்னு தெரியாம, நின்னுடும். உணவு சாப்பிடாம, நாளடைவுல உடல் தளர்ச்சியடைஞ்சு, அது செத்து கீழே விழுந்திடும். அதுக்குப்பிறகு என்ன? விருந்துதான், பாட்டுதான், கூத்துதான்... ஆடை விஷயத்துல அவங்க ஆர்வமே எடுத்துக்குறது இல்ல...''

“யானையை விட்டா, அவங்க வேற என்னெல்லாம் சாப்பிடுவாங்க?''

“முயல், மீன்கள், நத்தை, சிலந்திகள், முட்டை, ஈசல், எறும்புகள், தவளை, குதிரை, கழுதை, புழுக்கள், பாம்புகள்...''

“பாம்புகளைப் பிடிச்சுத் தின்னுவாங்களா என்ன?''

“தின்னுவாங்க, சுவாமிஜி. நல்ல பாம்புகள், ராட்டிள் ஸ்னேக், மலைப் பாம்புகள், சாரைப் பாம்புகள், தண்ணீர்ப் பாம்பு- எல்லாத்தையும் ரொம்ப ரொம்ப விரும்பிச் சாப்பிடுவாங்க!''

“விஷம்?''

“விஷம் இப்போ அவங்களோட உணவுப்பொருளா ஆயிடுச்சா என்னன்னு தெரியல!''

“நல்ல பாம்பை எப்படிச் சாப்பிடுறாங்க?''

“பாம்புகளை காட்டுவாழ் மனிதர்களும், பல மேல் நாட்டுக்காரர்களும் சாப்பிடத்தான் செய்றாங்க. தவளை, எலி, பாம்புகள்- எல்லாமே அவங்களோட ருசியான உணவுப் பட்டியல்ல இருக்கு. இப்போ நாம கிழக்கத்திய நாடுகள் எதுக்காவது போய் அங்கே இருக்குற பெரிய ஒரு ஹோட்டலுக்குப் போறோம்னு வச்சுக்கோங்க. நமக்கு ஏதாவது குடிக்கணும்போல இருக்கு. ஏதாவது சாப்பிடணும். என்ன சாப்பிடுறது? அங்கே கோழி வளர்க்குற நிலையங்கள் இருக்கு. மற்ற பறவைகளும் அங்கே நிறையவே இருக்கு. மீன்களுக்கும், பாம்புகளுக்கும் பஞ்சம் இல்ல. மணல் பரப்பப்பட்ட பெரிய சிமெண்ட் குழிகளுக்குள் உணவு கொடுத்து பாம்புகளை அங்கே வளர்க்கிறாங்க. இரும்பு வலைகள் போட்டு அந்தப் பாம்புகளை மூடியிருப்பாங்க. ராத்திரி நேரங்கள்ல விளக்குகள் எரிஞ்சுக்கிட்டு இருக்கும். படம் விரிச்சு கோபமா ஆடிக்கிட்டு இருக்கிற ஒரு நல்ல பாம்பை நமக்குப் பிடிக்குதுன்னு வச்சுக்குவோம். நாம அதனோட விலையைப் பேசி பிரச்சினை முடிஞ்சிருச்சின்னா, அடுத்த நிமிஷம் ரப்பர் கையுறை அணிஞ்ச பரிசாரகன் வலையை உயர்த்தி, நீளமான ஒரு கம்பியால அந்த அழகான நல்ல பாம்பைப் பிடிச்சுத் தூக்கி தலையைப் பிடிப்பான். தன்னோட ரப்பர் கையுறையில் அந்தப் பாம்பைச் சுத்துவான். வலையைத் திரும்பவும் மூடிட்டு, நம்மகூட ஒரு அறைக்குள்ள வருவான். நாம கேக்குற மது அடுத்த நொடியில வருது. ஐஸ் கட்டிகள் வருது, ஐஸ்கட்டிகள் ரெண்டோ மூணோ எடுத்து கண்ணாடி டம்ளருக்குள் போட்டு, மதுக்குப்பியைத் திறந்து ரெண்டு பெக் வீதம் அதுல ஊத்துறோம். நல்ல பாம்போட தலையையும், உடலையும் தனித்தனியா பிரிச்சு, இரத்தத்தை மது ஊத்தப்பட்டிருக்குற கண்ணாடி டம்ளர்கள்ல பரிசாரகன் வழிய விடுறான். தலையையும் உடலையும் எடுத்துக்கிட்டு அவன் போறான். நாம மதுவை ருசிச்சுப்பார்த்து, சிகரெட்டைப் புகைத்து, படைப்புன்ற உலகத்தோட மிகப்பெரிய விஷயத்தைப் பத்திப் பேசிக்கிட்டு இருக்கோம். அப்போ நல்ல பாம்போட தோலை உரிச்சு, பச்சை வாழைக்காயை நறுக்குறது மாதிரி நல்லா நறுக்கி, உப்பும், மிளகாயும், மசால் சாமான்களும் கலந்து, பசுவோட நெய்ல நல்ல முறையில வறுத்து, ரெண்டு தட்டுகள்ல அதை பரிசாரகன் நமக்காக எடுத்துட்டு வர்றான். தக்காளிப் பழத்தை அறுத்து, பச்சை மிளகாய், உப்பு, வெங்காயம் சேர்த்து பக்கத்துலயே வைச்சிருப்பான். சிம்ப்ளி க்ராண்ட்! நாம் உட்கார்ந்து சாப்பிடுறோம். குடிக்கிறோம். நல்லபாம்பைச் சாப்பிட்டு முடிச்சதும், ஒரு சின்ன மலைப்பாம்பையும் சாப்பிடலாம்னு...''

“பூனையை அவங்க சாப்பிடுறது உண்டா?''

“தின்பாங்க, சுவாமிஜி. கருப்புப் பூனைன்னா உயிர்...''

“நீலகண்டனைப்போல உள்ள வெள்ளைப் பூனையையும் தின்பாங்களா?''

“நல்லாவே தின்பாங்க.''

“அப்ப மனிதர்களுக்கு இதுகூட ஜீரணமாகும்னு சொல்லுங்க!''

“ஜீரணமாகுறதா? நீண்ட காலம் எந்தவித குறைபாடும் இல்லாம, நல்ல ஆரோக்கியத்தோட வாழ்றாங்கன்னு வச்சுக்கோங்க...''

“அப்ப... நீங்க சொல்றபடி பார்த்தா, மனசுக்கு எது பிடிக்குதோ, அதை அவங்க சாப்பிடுறாங்க. இரத்தம், பால், பாம்பு, திமிங்கிலம், பூனை- எல்லாமே மனிதப் பிறவிகளோட உணவுகள்தாம். இப்படிப் பார்த்தா, மனிதர்களோட உண்மையான உணவுதான் எது?''

“ஒரு மனிதனையே இன்னொரு மனிதன் சாப்பிடுறான். இப்பவும் இது நடக்குது. மனிதனை புலி, சிங்கம், மலைப்பாம்பு, சுறா ஆகியவை சாப்பிடுது.''

பேசிக்கொண்டிருந்தபோது, பயங்கரமான ஒரு சீறல் சத்தம்! ஒரு குரைப்பு! ஒரு கோழியின் கொக்கரிப்பு! நாய், நீலகண்டனைப் பிடித்துத் தின்னப் பார்க்க... ஆனால், நீலகண்டன் நாயை ஒரு கடி கடித்துவிட்டு, ஓடிச்சென்று பலா மரத்தின் மேல் ஏறி, நகத்தால் இறுகப் பற்றியவாறு உட்கார்ந்திருக்கிறான். நாய் பலாமரத்துக்குக் கீழே நின்று, மேலே பார்த்தவாறு பெரிய சத்தத்தில் குரைத்துக் கொண்டிருக்கிறது. ஒயிட் லெகான் சேவல் இரண்டு பேரையும் பார்த்துக் கொக்கரிக்கிறான்.

நான் போய் ஒரு கயிறை எடுத்துக்கொண்டு வந்து நாயைப் பிடித்துக் கட்டிவைத்துவிட்டுத் திரும்பி வந்தேன். அப்போது சந்நியாசி நீலகண்டனைக் கையில் வைத்துக்கொண்டு பாசத்துடன் தடவிக் கொண்டிருந்தார்.

“பரவாயில்ல... நீலகண்டா! நீ ஒரு புனிதப் பூனைன்னோ, மந்திரப் பூனைன்னோ நாய்க்குத் தெரியாதுல்ல! சரியான சந்தர்ப்பம் கிடைச்சா, உன்னைச் சாப்பிடலாம்னு நாய் பார்த்துச்சு. நீ அந்த நாய்ப் பயலை...''

“நாய்ப் பெண்!''

“மன்னிக்கணும்.'' சந்நியாசி நீலகண்டனை என் கையில் தந்தவாறு சொன்னார்: “நான் இந்த ஊரை விட்டே போகப்போறேன், சுவாமிஜி. இது நான் ஏற்கனவே முடிவு பண்ணின விஷயம்!''

“எப்போ புறப்படுறதா இருக்கு, சுவாமிஜி?''

“சொல்றேன்.''

அவர் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

அவர் சொல்ல வந்ததை முழுமையாக முடித்தாரா? படைப்புகளின் உண்மையான உணவுதான் எது?

அடுத்த நாள் நான் நகரத்திற்குப் போய் ஒரு போர்வையும், ஜமுக்காளமும் வாங்கிக் கொண்டு, பாலத்தின் அடிப்பக்கத்தை நோக்கிப்போனேன். சந்நியாசி அப்போது அங்கே இல்லை.


அவர் எப்போதும் படுக்கும் இடத்தில் நான் ஜமுக்காளத்தை விரித்து, போர்வையை மடித்து தலைப் பக்கம் வைத்துவிட்டு, இங்கு திரும்பி வந்தேன். நாற்காலியை விரித்து உட்கார்ந்தபோது. ஒரு சத்தம்! என்னவென்று பார்த்தேன். சௌபாக்யவதி ராஜலா பயந்துபோய் கத்தினாள்.

“ம்மூவே... நீலகண்டன் ஒரு வீட்ல உட்கார்ந்திருக்கான். அவனோட பார்வையைப் பார்த்தாலே பயமா இருக்கு. இங்க வந்து அவனைத் தூக்கிட்டுப் போகச் சொல்லுங்க...''

“ராஜலா ரெண்டு மாச கர்ப்பமா இருக்கா.'' மகளின் தாய் ஏதோ ரகசியம் சொல்கிற மாதிரி என்னிடம் சொன்னாள். மலையிடுக்கில் செல்கிற மாதிரி நான் நடந்து சென்றேன். சௌபாக்யவதிகள் மூன்று பேரும் ஒரு மரத்திற்குக் கீழே நின்றிருந்தார்கள். நீலகண்டன் அவர்களையே வைத்த கண் எடுக்காது பார்த்தவாறு ஒரு படியில் உட்கார்ந்திருந்தான். நான் அவனைக் கையில் எடுத்தவாறு திரும்பினேன்.

மாலை நேரத்தில் விளக்குகளைப்போட்டு, கடலின் இரைச்சலைக் கேட்டவாறு நாங்கள் வராந்தாவில் உட்கார்ந்திருந்தோம். எல்லாற்றையும் ஒரு வழி பண்ணிவிட்டு, கடல்நீர் இங்கு வந்தால்...? மகளின் தாய்க்கு ஒரு சந்தேகம்: “ராத்திரி நாம தூங்கிக்கிட்டு இருக்குறப்போ கடல்தண்ணி இங்கே வந்தா...?''

“அந்தக் கரையில எவ்வளவோ வீடுகள் இருக்கு! எவ்வளவோ மனிதர்கள்!''

நான் சொல்லிக்கொண்டிருக்கும்போது, ஒரு சங்கநாதம்! மகளின் தாய் வீட்டுக்குள் போகிறாள். அந்த இடைவேளையில் நீலகண்டன் வேகமாக வந்து என் மடியில் ஏறி உட்காருகிறான். போர்வையால் உடலை மூடிக்கொண்டு தோளில் ஜமுக்காளத்தை மடித்துப் போட்டவாறு சந்நியாசி வருகிறார்.

“உங்களோட கால் பாதம் பார்த்துதான் இங்கே வர்றேன்!''

“நட்சத்திரங்களைப் பார்த்தீங்களா?''

“வாழ்க்கையில சுமை அதிகமாயிடுச்சு!''

“சுமையை எல்லாரும் கொஞ்சம் சுமக்கத்தானே செய்யணும்!''

“வாழ்க்கை... முடியப்போற நேரம் நெருங்கிடுச்சுன்னு நினைக்கிறேன்!''

“எனக்கும்தான்!''

நட்சத்திரங்களே, சூரிய-சந்திரர்களே, அணுக்களே, மற்ற உலகங்களே, பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களே... சலாம்!

“சுவாமிஜி, இன்னைக்கு ராத்திரி நீங்க இங்கே தங்கலாமே!''

“முடியாத நிலை... தியானம்...!''

“சுவாமிஜி, உங்களுக்கு நாளைக்கு இங்கேதான் சாப்பாடு!''

“கடவுளோட அருளாசி இருந்தா...''

அலைகளே, கடல்களே, மலைகளே, வானமே... சலாம்!

6

டல் இரண்டு வீடுகளையும் சேர்ந்து விழுங்கியது. ஒரு பலா மரமும், சுமார் நாற்பது தென்னை மரங்களும்கூட அதற்கு பலி ஆயின. அதற்குப் பிறகும் கோபத்துடன் கர்ஜித்துக்கொண்டு படுவேகமாக தன் பலத்தை அது காட்டிக்கொண்டுதான் இருந்தது. கடல் தன் எல்லையைக் கரைப்பக்கம் மேலும் அதிகமாக்கிக் கொண்டிருந்தது.

உண்மையிலேயே மகிழ்ச்சிதான்- சந்நியாசி வந்தார். முன்பு நான் தனி பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் எனக்கென்று சொந்தமாக மூன்று அலுமினியப் பாத்திரங்கள் இருந்தன. மீன்களோ மாமிசமோ படாத பாத்திரங்கள் அவை. அந்தப் பாத்திரங்களையும் ப்ரிமா ஸ்டவ்வையும் சிறிய இரும்பு உரலையும் மற்ற சில பொருட்களையும் பலா மரத்திற்குக் கீழே கொண்டு வந்து வைத்தபோது உள்ளே இருந்தது ஒரு குரல்:

“மீதி இருக்குறவங்களுக்கும் சேர்த்து சமையல் பண்றதா இருந்தா, சமையலறைக்குள்ள போக வேண்டியதே இல்ல...''

“இது சந்நியாசிகளோட சாப்பாடு!''

“டாட்டோ... எனக்கு இதுதான் வேணும்!''

“அப்படின்னா மகளோட அம்மாவுக்கும் இதுவே இருக்கட்டும்!''

“ராஜலா, கதீஜா பீபி, சௌமினிதேவி...?''

“அவுங்களையும் கூப்பிடு. நீலகண்டன், ஒயிட் லெகான் சேவல், அவனோட பதினேழு - ஸாரி - பதினாறு பொண்டாட்டிகள், குஞ்சுகள், ஒரு நாய், நாலு பசுக்கள் - எல்லாருக்கும் இன்னைக்கு அருமையான சந்நியாசி சாப்பாடு...''

புதிய வெட்டுக் கற்களும், விறகும் வந்து சேர்ந்தன. இரண்டு அடுப்புகள் சில நிமிடங்களில் தயாராயின. ஈயம் பூசிய செம்பாலான ஒரு பானை வந்தது. பிரியாணி அரிசி, உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு, கடலைப்பருப்பு, உருளைக்கிழங்கு, எலுமிச்சம்பழம், தக்காளிப் பழம், அவரைக்காய், பச்சை மிளகாய், வெங்காயம், மிளகுப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் பொடி, உப்பு, இஞ்சி, கருவேப்பிலை, பச்சை கொத்தமல்லி, புதினா, காய்ந்த மிளகாய், தேங்காய் எண்ணெய் (சந்நியாசிக்கு நெய் பிடிக்காது) எல்லாமே அங்கு இருந்தன. சந்நியாசி அரிசியைக் கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் இருந்த பானையில் நீரை ஊற்றி சுட வைத்தார். இன்னொரு அடுப்பில் பச்சை மிளகாய் நறுக்கிப் போடப்பட்ட கடலைப் பருப்பு வெந்து கொண்டிருந்தது. இரண்டு அடுப்புகளுமே படுஜோராக எரிந்து கொண்டிருந்தன. கூர்மையான கத்தியால் உருளைக் கிழங்கைத் துண்டுதுண்டாக நறுக்கி, வெண்டைக்காயை சிறு சிறு துண்டாக ஆக்கி, வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கி, அவரைக்காயை சிறு சிறு துண்டாக ஒடித்து, மிளகுப் பொடி, மல்லிப் பொடி, கொஞ்சம் மஞ்சள் பொடி ஆகியவற்றையும் கலந்து, அதில் இஞ்சி, வெள்ளைப் பூண்டு, கொத்தமல்லி, புதினா ஆகியவற்றைக் கலந்து இரும்பு உரலில் போட்டு இடித்து ஒரு உருண்டை ஆக்கினார். பருப்பு வெந்து முடிந்தபோது, உருளைக்கிழங்கு, வெண்டைக்காய், அவரைக்காய் ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு வேகவைத்து, சிறிது நேரத்தில் கொஞ்சம் உப்பைப் போட்டு இன்னும் சிறிது வேக இருக்கும் நேரத்தில், இன்னொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி அதில் வெங்காயத் துண்டுகளைப் போட்டார். கொஞ்சம் காய்ந்த மிளகாய்த் துண்டுகளை அதில் கலந்தார். மிளகாய்த் துண்டுகள் இலேசாகக் கறுகத் தொடங்கிய போது, கொஞ்சம் கருவேப்பிலையையும் கொத்தமல்லி இலைகளை யும், சிறிது உப்பையும் அவர் போட, "படா படா' என்ற சத்தத்துடன் அது அடுப்பில் பொரிந்து கொண்டிருக்க, உருண்டையாக இருந்த மசாலாவை தேங்காய் எண்ணெய்யில் போட்டு, ஒரு வித ஸ்டைலுடன் அதை அவர் கொதிக்க வைத்தார். நல்ல வாசனையை வெளியே பரப்பியவாறு அது கொதித்துக்கொண்டிருந்தது. இப்போது வேக வைத்துத் தயாராக இருந்த பருப்பை மசாலாவுடன் கலந்து, கருவேப்பிலையையும் கொத்தமல்லி இலையையும் புதினாவையும் சேர்த்து, இறக்கி கீழே வைத்து மூடினார். இந்த நேரத்தில் வாசனையை முகர்ந்தவாறு சௌபாக்யவதிகளான ராஜலாவும், கதீஜா பீபியும், சௌமினி தேவியும் எங்களைப் பார்த்தவாறு அடக்க ஒடுக்கத்துடன் நடந்துசென்று முற்றத்தைத் தாண்டினார்கள். அப்போது அவர்களைப் பார்த்து, "ம்யாவோ” என்று கத்தினான் நீலகண்டன். அவர்கள் அதைக் கேட்டு நடுங்கியதை என்னால் உணர முடிந்தது. சந்நியாசி சோறு வெந்துவிட்டதா என்று பார்த்தார். இன்னும் கொஞ்சம் வேக வேண்டும். சிறிது நேரத்தில் குழம்பு இருந்த பாத்திரத்தை எடுத்து சோறு இருந்த பானைக்குள் கவிழ்த்தார். ஞாபகமாக அதைக் கிளறி விட்டு, திராட்சைப் பழம், முந்திரிப்பருப்பு ஆகியவற்றை அதில் போட்டு மூடி வைத்தார். தீயை நன்கு எரிய விட்டார்.


பாத்திரம் கொதித்தது. இன்னும் சிறிதுநேரம் அடுப்பில் அது இருக்கட்டும் என்று காத்திருந்தார் சந்நியாசி. கொஞ்ச நேரத்தில் வெந்தது போதும் என்று நினைத்த அவர், மூடியைத் திறந்தார். வெளியே வந்த ஆவி எங்களின் மூக்குத் துவாரத்திற்குள் நுழைந்தது. ஆஹா... என்ன வாசனை! சிம்ப்ளி கிராண்ட்!

மிக முக்கிய விருந்தாளி என்ற முறையில் முதலில் நீலகண்டனுக்கு சந்நியாசி சோற்றை எடுத்து வைத்தார். அடுத்து ஒயிட் லெகான் சேவலுக்கும், அவனின் மனைவிமார்களுக்கும், குஞ்சுகளுக்கும்! அதற்குப் பிறகு, நாய்க்கு. தொடர்ந்து பசுக்களுக்கு.

நாங்கள் பெரிய இரண்டு வாழை இலையும், சிறிய ஒரு வாழை இலையும் மரத்திலிருந்து அறுத்தோம். சந்நியாசி அதில் சோறு பரிமாறினார். மீதியை பாத்திரத்துடன் சமையலறையில் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தார். மகளின் கையையும், என் கையையும் கழுவிவிட்டார். சில நிமிடங்கள் மவுனமாக தியானித்த பிறகு, சந்நியாசி தன் கைகளையும் கழுவினார். அங்கேயே உட்கார்ந்து நாங்கள் சாப்பிட் டோம். உணவை வாயில் வைத்தபோது, எங்களுக்குத் தோன்றியது - தக்காளியை அறுத்து இதில் போடவில்லை. இரண்டு துண்டு எலுமிச்சம் பழம் இதில் போட்டிருக்கலாம். சரி... இப்போது என்ன செய்வது!

“எல்லாமே ப்ரம்மமயம்தான்.'' சந்நியாசி சொன்னார்: “இந்தத் தக்காளி சாப்பிடக்கூடாது. எலுமிச்சம் பழம் இங்கேயே இருக்கட்டும்!''

உணவு சாப்பிட்டு முடித்து, எச்சில் இலைகளைத் தூரத்தில் எறிந்து, கை கழுவி, மீதி இருந்த தக்காளிப் பழங்களையும், எலுமிச்சம் பழங்களையும் எடுத்துக்கொண்டு சௌபாக்யவதிகள் இருந்த பக்கம் போனேன். எங்களின் சமையல் கலையைப் பற்றி அவர்களிடம் நான் எதுவும் கேட்கவில்லை. குற்றத்தையும், குறையையும் அவர்கள் சொல்ல, அதைக்கேட்டு நாம் ஏன் மனம் வேதனைப்பட வேண்டும்? சர்வ சமையல் விஷயங்களின் ஒரே அத்தாரிட்டி யார்? சௌபாக்யவதிகள் தானே!

அவர்களிடம் தக்காளிப் பழங்களைத் தந்தேன். அறுத்த எலுமிச்சம் பழங்களையும்தான்.

“தக்காளியைக் கடிச்சுத் தின்னுங்க. எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு மூணு துளிகளை சோத்துல விட்டு சாப்பிடுங்க'' என்று கூறிவிட்டு, சந்நியாசியைத் தேடி வந்தேன். மகள் இன்னொரு பாதை வழியாக சமையலறைக்குப் போயிருந்தாள். நாயையும் அங்கு காணோம். ஆனால், ஒயிட் லெகான் சேவலும், நீலகண்டனும் மட்டும் சந்நியாசிக் குப் பக்கத்திலேயே நின்றிருந்தார்கள். சந்நியாசியும் நானும் தலா ஒரு அவுன்ஸ் பால் கலக்காத தேநீர் குடித்தோம். ஆளுக்கு ஒரு சிகரெட் டைப் புகைத்தவாறு ஸ்டைலாக மூக்கின் வழியே புகையை விட்டோம். கத்தியைத் தீட்டி கூர்மையாக்கிக் கொண்டிருந்தபோது, சந்நியாசி கேட்டார்:

“மனித சமுதாயத்துல இருக்குற கலைகளிலேயே மகத்தான கலை எது தெரியுமா?''

“சமையல் கலை!''

இதற்கு எதிராக வேறு ஏதாவது இருக்கிறதா என்று நாங்கள் சிந்தித்துப் பார்த்தோம். அப்படியொன்றும் இதைவிட பெரிதாக இருப்பதாகத் தெரியவில்லை. சிந்தனை ஒரு பக்கம் இருக்க, என் கண்களுக்கு பார்வை சக்தி கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டு வருகிறது. பக்கத்தில் இருக்கிற பொருட்களை மட்டும்தான் தெளிவாகப் பார்க்க முடிகிறது. உலகத்தை அழிக்க வருகிற கடலைப் போல, என்னைச் சுற்றியுள்ள மரங்களும், மற்றவைகளும் என்னை மூட வருவதுபோல் என் கண்களுக்குப் படுகிறது. இதன் காரணம் என்ன?

“சுவாமிஜி, உங்களோட கண் பார்வை எப்படி? எல்லாம் சரியாத் தெரியுதா?''

சந்நியாசியின் கண்களில் எந்தவித பிரச்சினையும் இல்லை. அவரை விட வயதில் குறைந்தவன் நான். இருந்தாலும், என் கண்களில் சரியான பார்வை சக்தி இல்லை. இதற்கு என்ன காரணம்? குடும்ப வாழ்க்கை வாழ்வதுதான் காரணமாக இருக்குமா? அப்படியென்றால்... முன்பு கறுப்பு வண்ண போர்வையையும், கையில் ஒரு குச்சியையும், லங்கோட்டையும், சடையையும் வைத்துக்கொண்டு வாழ்ந்த வாழ்க்கையை உதறி எறிந்துவிட்டு, எந்தவித இலட்சியமும் இல்லாமல், கண்பார்வைக் குறைவுடன், வழுக்கைத் தலையுடன் வாழும் இப்போதைய வாழ்க்கை... ம்... என்ன செய்வது?

நான் என்றோ பார்த்த மலைகளே, பாலைவனங்களே, அடர்ந்த காடுகளே, என்னுடைய கடைசி பயணத்திற்கான நேரம் நெருங்கி விட்டது. சலாம்!

“ஒரு விஷயம் ஞாபகத்துல வருதா?'' சந்நியாசி கேட்டார்: “இந்த பூமியில வாழ்ற மனிதர்கள்ல எத்தனை பேருக்கு சொந்தமா சமையல் பண்ணத் தெரியும்?''

“எத்தனை சதவிகிதம் பேருக்கு சமைக்கத் தெரியும்ன்றது தெரியல, சுவாமிஜி. எதற்காக இதைக் கேட்டீங்க?''

“இது ஒரு சிந்திக்க வேண்டிய விஷயம். உணவுன்றது அவசியம் தேவைப்படுற ஒரு விஷயமாச்சே! அதைச் சமையல் பண்ண ஆயிரத்துல ரெண்டு பேரு தயாரா இருப்பாங்களா? எல்லாரும் ஆசைப் படுறது என்னன்னா... மத்தவங்க சமையல் செஞ்சு அவங்களுக்குப் பரிமாறணும். சமையல் பண்ற ஆளுக்கு ஏதாவது தொத்து நோய்கள் இருக்குமா, சுத்தமும் சுகாதாரமுமா அவங்க இருக்காங்களா... இதுபத்தியெல்லாம் அவங்க கவலைப்படுறதே இல்ல. இதுபோலத்தான் எல்லா விஷயங்கள்லயும். சிந்தனை, மதம், அரசியல்... எல்லா விஷயங்களையும்- மத்தவங்க சொல்றதை அப்படியே கேட்டுக்குவாங்க. அவுங்களுக்குன்னு சொந்தக் கருத்து எதுவும் இருக்காது!''

“எல்லாரும் சொந்தமா சமையல் பண்ணி சாப்பிடுறதுக்கும், வாழ்க்கையில இருக்குற பல விஷயங்களைப் பத்தி சிந்திச்சிப் பார்த்து ஒரு தீர்மானத்திற்கு வர்றதுக்கும் நேரம் இருக்குதா, சுவாமிஜி?''

“எல்லாரும் கூட்டம் கூட்டமா எங்கோ போறாங்க! மரணம் அவங்களுக்கு சமீபத்துலயே நின்னுக்கிட்டு இருக்கு!''

உண்மைதான். மரணம் நமக்குப் பக்கத்திலேயே நின்று கொண்டிருக்கிறது.

சிறிது நேரம் கழித்து சந்நியாசி சொன்னார்:

“நான் சொன்னது நம்மோட விஷயத்தைத்தான். மருத்துவ விஞ்ஞானம் நாளுக்கு நாள் ரொம்பவும் முன்னேறிக்கிட்டு இருக்கு. இனி வரப்போற ஐநூறு வருடங்கள்ல என்னவெல்லாம் மாற்றங்கள் வரப்போகுது தெரியுமா? ஒரு ஆள் ஐநூறோ அறுநூறோ வருடங்கள் கூட உயிரோட இருக்குற மாதிரி சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப் படுறதுக்கில்ல...''

பிறக்க இருக்கிற ஆயிரமாயிரம் வருடங்களே, சலாம்!

சந்நியாசி, நீலகண்டனைப் பிடித்து மடியில் வைத்து, அதை செல்லமாகத் தடவிக் கொடுத்தார்.

சௌபாக்யவதிகள் மூவரும், சந்நியாசி உணவைச் சாப்பிட்டு முடித்து அடக்க ஒடுக்கமாக நடந்து போனார்கள்.

கடைசி முறையாகச் சொல்லிவிட்டு போகத்தான் வருவதாகக் கூறிய சந்நியாசி இடத்தை விட்டு நீங்கினார். மந்திரப் பூனையைப் பொறுத்தவரை சொல்கிற மாதிரி ஒன்றும் விசேஷங்கள் இல்லை. அதன் உணவு, உறக்கம் எல்லாமே என்கூடவேதான். கொடுமை என்றுகூடக் கூறலாம். சௌபாக்யவதிகள் நீலகண்டன்மீது அத்தரில் முக்கி எடுத்த பரிவான பார்வை எதையும் செலுத்தவில்லை என்பது மட்டும் உண்மை.


"நீலகண்டனைக் கரை கடத்தணும்' என்றொரு கருத்து சௌபாக்யவதிகள் மத்தியில் நிலவிக்கொண்டிருப்பதை நான் அறிந்தேன். கரை கடத்துவதா? இரண்டு வாழை மட்டைகளை ஒன்று சேர்த்து மிதவைபோல ஆக்கி, அதில் நீலகண்டனைக் கட்டி, ஆற்று நீரின் போக்கில் போகவிடுவது! பக்கத்திலேயே ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் இருக்கிறது. அங்கே நீலகண்டனைப் போட்டால், அவன் எப்படியும் இங்கே வந்துவிடுவான். இது பற்றியெல்லாம் எண்ணாமல் நான் சொன்னேன்:

“சூர்ய புத்திரன் அவனாகவே இங்கு தேடி வரல. நீங்கதான் பாசமா இவனை இங்கு கொண்டு வந்தீங்க. நெய்யும் பாலும் கொடுத்து அன்பா வளர்த்தீங்க. பிறகு என்ன நினைச்சீங்களோ, எல்லாரும் சேர்ந்து இவனை வெளியே துரத்திட்டீங்க. நீலகண்டனைப் பொறுத்தவரை, இவன் யாருக்கும் கெடுதல் செய்யல... இவனைக் கரை கடத்தணும்னு சொல்றது நீதிக்கும் தர்மத்துக்கும் அடங்கிய ஒரு செயல்தானா? சிந்திச்சுப் பாருங்க...''

“ராஜலாவுக்கு ரெண்டு மாசம் கர்ப்பம்னு நான் சொன்னேன்ல? அவ நீலகண்டனைப் பார்த்து பயப்படுறா!''

ராஜலா கர்ப்பமாக இருப்பதற்கும், நீலகண்டனைக் கரை கடத்துவதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? நினைத்துப் பார்க்கும் போதே இது ஒரு வினோதமான விஷயமாகத்தான் இருக்கிறது. வேறு சிலரும்கூட இங்கு கர்ப்பமாக இருக்கிறார்கள். மூன்று மாதத்திற்கும் மேலேகூட அவர்கள் கர்ப்பம் தரித்திருக்கிறார்கள். கர்ப்ப சம்பந்தமான கணக்குகளை கணவன்மார்கள் எந்த அளவிற்கு கவனமாக மனதில் வைத்திருக்கிறார்கள்? நான் கேள்விப்பட்டவரை எந்தவொரு கணவனும் இந்த மாதிரி விஷயங்களை ஞாபகத்தில் வைத்திருப்பதே இல்லை என்பதுதான் உண்மை. "கர்ப்பமா! சரி... இனி இது உங்க பாடு” என்றுதான் பொதுவாக எல்லா கணவன்மார்களுமே சொல்வார்கள். அவர்கள் எப்போதுமே கூறும் டயலாக் இதுவாகத்தான் இருக்கும். ஆனால், நான் அப்படிச் சொல்ல முடியுமா? இருபத்து நான்கு மணி நேரமும் ஒரு கணவனாக- இதே இடத்தில் நான் இருக்கிறேன். அதனால் "மகத்தான கர்ப்பம் 150- ஆம் நாள்' என்று எழுதி வைக்க வேண்டி இருக்கிறது. இருந்தாலும், பார்வைக் குறைவு ஒரு பக்கம் இருக்க, ஞாபக சக்தியும் மிகவும் குறைவாகவே இருக்கிறது என்ற உண்மையையும் கொண்டு நான் என் வாழ்க்கையின் நாட்களைத் தள்ளிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்வது பெண் காதில் ஏறுமா என்ன? இங்கு ராஜலா கர்ப்பமாக இருப்பதற்கும், நீலகண்டனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?

“எனக்கும் பயமா இருக்கு.'' அசரீரி மாதிரி உள்ளே இருந்து மகளின் தாயின் குரல்: “நான் தலைக்குப் பக்கத்துல கத்தியை வச்சுக்கிட்டுத்தான் தினமும் உறங்குறேன்!''

இந்த விஷயம் எனக்கு இதுவரை தெரியாமலே இருந்தது. பிறகென்ன? வரவேற்பறை, நீலகண்டனின் படுக்கும் இடமாக ஆனது.

நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தபோது மூன்று சிங்கங்கள் எதிரில் வந்து நிற்கின்றன. சௌபாக்யவதிகள் மூன்று பேரின் மரியாதைக்குப் பாத்திரமான அவர்களின் கணவன்மார்கள். முன்னால் வாசுதேவன், நடுவில் அஸன்குஞ்ஞு (அஸன்குஞ்ஞி என்றுதான் பொதுவாக எல்லாரும் அழைப்பது), கடைசியில் ராமகிருஷ்ணன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் மூன்று பேருமே படு உற்சாகமாக இருந்தார்கள். மூன்று பேருமே சிவப்புக் கோடுகள் போட்ட அரைக்கை சட்டை அணிந்திருந்தார்கள். காலருக்கு அடியில் ஒரே மாதிரியான கைக்குட்டை. மூன்று பேருமே சிவப்புக் கரை போட்ட இரட்டை வேஷ்டி கட்டியிருந்தார்கள். ராமகிருஷ்ணன் மட்டுமே செருப்பு அணிந்திருந்தான். (காலை பத்துமணிக்கு கோவணம் கட்டிக் கொண்டு மூவரும் கிணற்றுக்குப் பக்கத்தில் நின்று குளித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். சோப், நனைந்த துண்டுகள் அருகில் கல் திண்டில் வைக்கப்பட்டிருந்தன. அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது சௌபாக்யவதி ராஜலா தண்ணீர் எடுத்துக்கொண்டு போனாள். குளிக்கும்போதே அவர்கள் மத்தியில் வாக்குவாதங்கள், சிரிப்பு எல்லாமே இருந்தன.) குளித்து முடித்து, ஆடைகள் அணிந்து, காப்பி குடித்து முடித்து இங்கு வந்து நின்றிருக்கிறார்கள். என்னுடன் ஏதோ பேசுவதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். வேறு எதைப் பற்றி இருக்கும்? மந்திரப்பூனையைப் பற்றித்தான். இவர்கள் மூவருமே நிறைய படிப்பவர்கள், நிறையத் திரைப்படங்கள் பார்ப்பவர்கள். அடி, இடி, இரட்டை வேடங்கள் கொண்ட படங்களை இவர்கள் விரும்பிப் பார்ப்பார்கள். புத்தகங்களில் விக்கிரமாதித்தன் கதை, அரபிக் கதை ஆகியவற்றை ஆர்வத்துடன் படிப்பார்கள். நாரதர், உமரய்யா, விக்கிரமாதித்தன், பட்டி, வேதாளம் ஆகியோர் இந்த மூன்று பேருக்கும் பக்கத்து வீட்டுக்காரர்கள் மாதிரி. விக்கிரமாதித்தன் கதையைத் தொண்ணூற்று இரண்டாம் முறை படித்து முடித்திருக்கிறார்கள். ஒரு ஆள் கதையைப் படிப்பான். மற்ற இருவரும் கதையைக் கேட்டு, தங்களின் கருத்தைக் கூறுவார்கள். மந்திரப் பூனையும் நானும் ஒரே ஆள்- இங்கு நான் இரட்டை வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் இவர்களுக்கு. சிங்கங்களுக்கு தலா ஒரு அவுன்ஸ் தேநீர் கொடுத்தேன். பிறகு, அவர்களை வரவேற்பு அறைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வந்ததும் அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி! அவர்கள் நினைத்தது மாதிரி டபுள் ரோல் எதுவும் கிடையாது. நாற்காலியில் நீலகண்டன் படுத்திருக்கிறான்!

நான் நீலகண்டனின் இடது பக்கத்தில் போய் உட்கார்ந்தேன். அவர்கள் மூன்று பேரும் சில கேள்விகளை, தாளில் எழுதி வைத்திருந்தார்கள். இடையில் தங்களுக்குள் மெதுவான குரலில் அவர்கள் ஏதோ பேசிக்கொண்டார்கள். ஒரு ஆள் மட்டும் கேள்வியைக் கேட்டான்:

“கைஸுக்குட்டின்ற முஸ்லிம் பெண் பூனை எப்படி நீலகண்டன்ற இந்து ஆண் பூனையா மாறுச்சு?''

அதற்கு நான் சொன்னேன்: “அது ஏற்கெனவே ஆண் பூனைதான். பெண் பூனை இல்ல...''

தொடர்ந்து பல கேள்விகள். பாம்பு விஷயம், இளவங்காய் சமாச்சாரம், பலாப்பழ வினோதம், பஸ் நிகழ்ச்சி எல்லாவற்றையும் விவரமாகக் கேட்டார்கள்.

“எல்லாமே எதேச்சையா நடந்தது'' என்று நான் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அப்போது அவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு கேள்வி:

“சாதாரணமா பெண் ஆணாக மாறுவதையும், ஆண் பெண்ணாக மாறுவதையும் பத்திரிகைகள்ல நாம படிக்கிறோமே?''

நான் சொன்னேன்: “நானும் படிச்சிருக்கேன். ஆனா, அதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.''

நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது நீலகண்டன் மெல்ல எழுந்து, உடலை நிமிர்த்தினான். உட்கார்ந்திருந்த மூன்று பேரையும் உற்றுப் பார்த்தான். பிறகு என்ன நினைத்தானோ, கீழே ஓடிச்சென்று அவர்களின் கால்களில் உரசிவிட்டு, சற்று தள்ளிப்போய் நின்றான். யாரும் அவனைக் கையில் எடுக்கவில்லை. ஏன்... தொட்டுப் பார்க்கக்கூட இல்லை. சில ஆண்கள் மனதிலும் அன்பு, பாசம் எல்லாமே காலப்போக்கில் மறைந்து வருகின்றதோ? அவர்கள் ஏன் கருங்கல் சிலைகளைப்போல உட்கார்ந்திருக்கிறார்கள்?


நீலகண்டன் திரும்பவும் வந்து நாற்காலிமேல் ஏறி உட்கார்ந்தான். மீண்டும் அவர்களையே வெறித்துப் பார்த்தான்.

நான் நீலகண்டன் என்ற இந்துப் பூனையை எடுத்து என் மடிமேல் வைத்தேன். தங்களுக்குள் அவர்கள் ஏதோ பேசினார்கள். அடுத்து ஒரு கேள்வி:

“மனிதர்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?''

"உண்மையைச் சொல்லனும்னா, புதுசா பாக்குற எந்த மனிதனையும் சந்தேகத்தோட பார்க்கணும். சில நேரங்கள்ல நாரத முனியா இருக்கலாம். இல்லாட்டி அரபிக் கதைகள்ல வர்ற இரட்டை வேடம் போடுற உமரய்யாராக இருக்கலாம். சில நேரங்கள்ல விக்கிரமாதித்தன் வேடம் மாறி வந்திருக்கலாம். இல்லாட்டி பட்டியாகவோ வேதாள மாகவோகூட இருக்கலாம்.” இதுதான் சரியான பதில். இருந்தாலும் அவர்களைப் பார்த்து நான் சொன்னேன்: “ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட கொடுமைகள் செய்து வாழ்ற ஒரு மிருகம்தான் மனிதன்!''

“அப்படின்னா மனிதர்கள்கிட்ட பெரிசா சொல்ற மாதிரி ஒண்ணும் இல்லைன்னு சொல்றீங்களா?''

“ஏன் இல்லாம? நிறைய இருக்கே! அறிவு, செயல், சிந்தனை, நன்மையைப் பற்றிய தெளிவு, மனிதநேயம்- இப்படி எண்ணிப் பார்த்தா அடக்க முடியாத அளவுக்கு நிறைய இருக்கே!''

“அற்புதங்கள் உண்டாக்குவதற்கான சக்தி?''

“என்கிட்ட கிடையாது!''

“புத்த பகவான், பரசுராமன், சிவன், ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் - இவங்கல்லாம் மனிதர்களா பூமியில நடமாடினவங்கதானே?''

அடுத்த நிமிடம் அஸன்குஞ்ஞு துள்ளிக்குதித்து எழுந்தான்.

“மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்ல வந்த மகா மனிதர்களை விட்டு விட்டீங்களே! ஆதாம் நபி, நுஹ் நபி, இப்ராஹிம் நபி, மூஸா நபி, ஈஸா நபி, முஹம்மது நபி...''

“மன்னிக்கணும் அஸன்குஞ்ஞி...'' வாசுதேவன் சொன்னான்: “இயேசு கிறிஸ்து ஒரு மதபோதகர் மட்டும்தான்றதை கத்தோலிக்கர்கள் ஒத்துக்குவாங்களா?''

“ஒருநாளும் ஒத்துக்க மாட்டாங்க.'' ராமகிருஷ்ணன் சொன்னான்.

“அது போகட்டும்...'' வாசுதேவன் சொன்னன்: “இவங்க காட்டிய அற்புதச் செயல்கள் உங்களுக்குத் தெரியும்ல?''

“கேள்விப்பட்டிருக்கேன்.'' நான் சொன்னேன்: “எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவுக்கு வந்த ஒரு சீன யாத்திரீகன். அவர் பேரு ஹுயான்... இல்ல... ஃபாஹியான்னு நினைக்கிறேன். பேரு சரியா ஞாபகத்துல இல்ல. புத்தகம் இங்கேதான் எங்கேயாவது இருக்கும். நான் சொன்ன சீனாக்காரன்ல யாரோ ஒரு ஆள் எழுதினது இந்தப் புத்தகம். அவர் ஒரு புத்த ஆலயத்திலோ வேறு எங்கோ சில (மூன்று என்று ஞாபகம்) ஏணிகளைப் பார்த்திருக்காரு. அதுல தங்கத்தாலான ஏணியை, புத்தபகவான் சொர்க்கத்துக்குப் போறதுற்காகப் பயன்படுத்தினதுன்னு சொல்லி இருக்காங்க.''

“புத்த பகவான் தெய்வம்ன்றத ஒத்துக்குறீங்களா?'' வாசுதேவன் கேட்டான். நான் பதில் சொல்வதற்கு முன்பு அஸன்குஞ்ஞு வேகமாக எழுந்து உரத்த குரலில் சொன்னான்:

“புத்தர் தெய்வம்ன்றதை நான் ஒத்துக்க மாட்டேன்!''

அவ்வளவுதான். அதற்குப் பிறகு வாக்குவாதங்களும், சத்தங்களும்தான். கடைசியில் ராமகிருஷ்ணன் சொன்னான்:

“அஸன்குஞ்ஞி... நம்மோட விக்கிரமாதித்தன் என்னவெல்லாம் அற்புதங்கள் செஞ்சு காண்பிச்சிருக்காரு! உமரய்யார், பட்டி, வேதாளம் - இவங்களையெல்லாம் நாம் மறந்துட்டா எப்படி? சரி போகட்டும்... என்ன இருந்தாலும் புத்த பகவான் அற்புதங்கள் நிறைய காட்டியிருக்காரு. பிறகென்ன?''

நான் சொன்னேன்: “சிலர் கடலை கரையாக ஆக்கியிருக்காங்க..''

“சும்மா இல்ல... ஒண்ணாம் நம்பர் கோடரியை எறிஞ்சு...''

“பிறகு... விஷத்தைச் சாப்பிட்டு, ஒரு மலையையே தூக்கி, வாயைத் திறந்து ஈரேழு உலகங்களையும் காட்டி, புஷ்பக விமானத்துல பயணம் செஞ்சு, திமிங்கிலத்தோட வயித்துல சில நாட்கள் தங்கி, சீடர்களோட கடல்மேல நடந்து, உடன் வந்தவர்களுடன் பெரிய ஒரு நதியை ரெண்டாகப் பிளந்து நடந்து அக்கரையை அடைந்து, மழை பெய்ய வைச்சு, பெய்த மழையை நிறுத்தி, கொடுங்காற்றை அடக்கி, சந்திர மண்டலத்தை ரெண்டாகப் பிளந்து காண்பித்து...''

“இதெல்லாம் அற்புதங்கள்தானே?''

“இவர்கள்ல சில பேரோட உபதேசங்களைக் கேட்குறீங்களா?''

“வேண்டாம்.'' வாசுதேவன் சொன்னான்: “எங்களுக்குத் தெரிய வேண்டியது அற்புதங்கள்தான். சபரிமலை அய்யப்பனும் வாவரும் மனிதர்களா இந்த பூமிக்கு வந்தவங்கதானே? சாய்பாபாவும் மனிதரா வந்தவர்தான். சத்யசாயிபாபா -அவரும் மனிதர்தான். அவர் எவ்வளவு அற்புதங்களைச் செஞ்சு காட்டியிருக்கார்! வெட்ட வெளியில இருந்து திருநீறு, கைக்கடிகாரங்கள், பூக்கள்... இப்படி என்னென்னவெல்லாம் எடுத்து பக்தர்களுக்கு அவர் தர்றார்!''

நான் சொன்னேன்:

“அவருக்கும் நீங்க சொன்ன மத்த புனிதர்களுக்கும் அமானுஷ்ய சக்தி ஏதாவது இருக்கும்!''

“உங்களுக்கு?''

“என்கிட்ட ஒண்ணும் கிடையாது. நான் ஒரு சின்ன மனுஷன். எனக்கு இருக்குறது சின்ன அறிவு. சின்ன இதயம். என்னோட கண்களுக்கு சரியா பார்வைகூட இல்ல. கண்ணாடி எப்பவும் போட வேண்டியிருக்கு. எனக்கு மட்டும் நீங்க சொல்ற மாதிரி சக்தி இருந்தால், என் கண்களை நான் சரி பண்ணிட மாட்டேனா? நீங்க என் மீசையைப் பாருங்க. என்னோட வழுக்கை விழுந்த தலையைப் பாருங்க. இந்த நிலத்துல இருக்குற தென்னை மரங்களைப் பாருங்க. இந்த மீசையை நான் கருப்பு சாயம் பூசி, கருகருன்னு தெரியிற மாதிரி வச்சிருக்கேன். பெரிய பெரிய அற்புதங்களையெல்லாம் செஞ்சு காட்டுற அளவுக்கு எனக்கு சக்தி இருந்தா... பெண் பூனைக் குட்டியை ஆணா மாத்தக்கூடிய வல்லமை கொண்ட மனிதனா நான் இருந்தா என் மீசை எப்போதும் கருப்பாவே இருக்கணும்னு நான் சொல்லி இருப்பேன். என்னோட வழுக்கைத் தலையில கருப்பு முடி வளரும்படி செஞ்சிருப்பேன். இங்க இருக்குற தென்னை மரத்தோட ஒவ்வொரு குலையிலயும் நூறு தேங்காய் காய்ச்சுத் தொங்கணும்னு கட்டளையே போட்டிருப்பேன். சுத்தி இருக்குற எல்லா வீடுகள்லயும் இருக்குற கஷ்டங்களை நானே தீர்த்திருப்பேன். இந்த உலகத்தை விட்டு வறுமையும் நோயும் போரும் நிரந்தரமா இல்லாமலே போகட்டும்னு நான் உத்தரவு போட்டி ருப்பேன். பொறாமை, பகை, வஞ்சனை, வன்முறை - எல்லாமே இந்த பூமியில் இருந்த இடம் தெரியாம அழியட்டும்னு கட்டளை பிறப்பித்திருப்பேன். இவை ஒவ்வொன்றும் நான் மனசில ஆசைபடுகிற விஷயங்கள். ஆனா, இது நடைமுறையில நடக்கப்போறது இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும். காரணம் என்கிட்ட எந்தவித தெய்வீக சக்தியும் இல்லைன்றதுதான்!''

“இது உண்மைதான்றதைப் புரிய வைக்க, கொதிக்கிற நெய்யில கையை முக்கிக் காட்டத் தயாரா இருக்கீங்களா?''

பிரபஞ்சங்களைப் படைத்த கடவுளே!

எந்தவித அற்புத சக்தியும் என்னிடம் இல்லை என்பதை நிரூபிக்க, கொதித்துக் கொண்டிருக்கும் நெய்யில் என் கையை நுழைத்தால், என்ன ஆகும்? என் கை வெந்து போகாதா?


“சரி...'' அவர்கள் கேட்ட கேள்வியைக் காதில் வாங்காத மாதிரி நான் கேட்டேன்: “சாதாரண மனிதர்கள் செய்து காட்டியிருக்கும் அற்புதச் செயல்களை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?''

“சாதாரண மனிதர்கள் என்ன அற்புதத்தைக் காட்டிட முடியும்?''

“சின்னச் சின்ன அற்புதங்கள்...!''

“எங்கே சொல்லுங்க... கேட்கிறோம்!''

“நம்மோட இந்த பூமி உண்டாகி எத்தனையோ கோடி வருஷங்களாச்சுன்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. எத்தனை கோடி வருஷங்கள்னு எனக்கு இப்போ ஞாபகத்துல இல்ல. ஒரு ஆயிரம் கோடி வருஷங்கள்னு வச்சுக்குவோம். இந்த ஆயிரம் கோடி வருஷங்களின் பயங்கரமான இருட்டு இருக்கே! அதாவது... கூரிருட்டு! இந்தக் கடுமை யான இருட்டுல ஒரு பொத்தானை அழுத்தின உடனே, கோடிக்கணக் கான மின்விளக்குகள் எரியத் தொடங்குது. பகலை விட படுவெளிச்சமா அது இருக்குது. ஒரு கம்பி வழியா ஐயாயிரம் மைல் தூரத்துல இருக்குற மனிதன்கூட நாம இப்போ பேசிக்கிட்டு இருக்கோம். எங்கோ இருக்குற ஒரு ஆளை நாம இங்கே இருந்தே பார்க்கலாம். வேறொரு பொத்தானை அழுத்தினா ஆயிரம் மைல் தூரத்துல இருக்குற இசையை நாம கேட்கலாம். செய்திகளையும், சொற்பொழிவையும் கேட்கலாம். காளையும், எருமையும், குதிரையும், ஒட்டகமும் இல்லாமலே இப்போ வண்டிகள் ஓடுது. கடலுக்கு மேலே போற கப்பல்கள், கடலுக்கு அடியில போற கப்பல்கள், கடலுக்கு கீழே போற சுரங்கங்கள், ஆகாயத்துல பறக்குற விமானங்கள், சந்திரனுக்கும் மத்த கிரகங்களுக்கும் பறந்துபோற கோள்கள், மனிதர்களோட ஆயுளை நீடிக்கக் கூடிய மருந்துகள், நோய்கள்ல இருந்து விடுதலை செய்யும் முயற்சிகள், கண்கள் போனவங்களுக்கு மீண்டும் கண் பார்வை...''

“ஓஹோ... இதைச் சொல்றீங்களா? இது எல்லாமே சாதாரண சம்பவங்கள்தானே! நாங்க நினைச்சோம்- நீங்க ஏதோ அற்புதச் செயல்களைப் பத்திச் சொல்லப் போறீங்கன்னு. இதுல என்ன அற்புதங்கள் இருக்கு?''

அவர்கள் எழுந்தார்கள். நீலகண்டனைச் சுற்றி நின்று அவனையே உற்றுப் பார்த்தார்கள். அவர்கள் புறப்படும்போது நான் சொன்னேன்: “ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கணும். இந்த மந்திரப் பூனையைப் பத்தி யார்கிட்டயும் சொல்லாதீங்க!''

அடுத்தநாள்- இன்னொரு ஆச்சரியமான விஷயம் நடந்தது. மகள் ஓடி வந்து சொன்னாள்: “டாட்டோ... நீலகண்டனைக் காணல...''

“அடியே...'' மகளின் தாயை நான் அழைத்தேன். சொல்லப்போனால் சரியாக வாயைத் திறந்துகூட அதை நான் சொல்லவில்லை. அதற்குள் எங்கோ தூரத்தில் ஏதோ முக்கிய வேலையில் ஈடுபட்டிருந்த அவள் அடுத்த நொடியே, “என்ன?'' என்று கேட்டவாறு விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தாள். எனக்கொரு விஷயம் தெரியும்- மகளின் தாயும் சரி, மற்ற சௌபாக்யவதிகளும் சரி, அவர்களுக்கு என்மேல் ஒரு சந்தேகம். என்னுடைய அடுத்த குறி யாராக இருக்கும்? இனி யாரை நான் ஆணாக மாற்றப் போகிறேன் என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஓடிக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. அந்த பயத்தில் அவர்களிடம் இதற்குமுன் இருந்திராத அடக்கமும், பணிவும், பக்தியும் வந்து குடி கொண்டிருப்பதையும் என்னால் காண முடிந்தது. வேகமாக ஓடிவந்த மகளின் தாயிடம் நான் கேட்டேன்:

“நீலகண்டன் எங்கே?''

“நம்ம வீட்லயும் பார்த்தேன். பக்கத்து வீடுகள்லயும் பார்த்தேன். எங்கேயும் காணலியே!''

“யாராவது அவனைக் கொன்னுட்டாங்களா?''

அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தால் குற்றவாளிகள் சௌபாக்யவதிகளான கதீஜா பீபி, ராஜலா, சௌமினிதேவி, ஸ்ரீமான்மார்களான வாசுதேவன், அஸன்குஞ்ஞு, ராமகிருஷ்ணன், மகளின் தாய்- இவர்கள்தான். மகளுக்கு இதில் ஒரு பங்கும் கிடையாது.

“யாரும் கொல்லல...'' மகளின் தாய் சொன்னாள்: “அதை யார் கொல்வாங்க? சொல்லப்போனா நீலகண்டனைப் பார்த்தா, எல்லாருக்குமே பயம்...''

அவள் அப்படிச் சொன்னது எனக்குப் பிடித்தது. அவன் நன்றாக வாழட்டும். என்ன இருந்தாலும் அவன் ஆணாயிற்றே! காதல் அது இதுவென்று ஒருவேளை நடைப் பயணம் போயிருப்பானோ? ம்... நீலகண்டன் எப்படியும் திரும்பி வருவான். ஆனால், நீலகண்டன் காணாமல் போய்விட்டான் என்பதற்காக யாருமே வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இரவு முழுக்க நான் பார்த்தேன். சாப்பிடக்கூட இல்லை. தூக்கம்கூட வரவில்லை. (அவன் இப்போதும் என் பக்கத்தில் இருப்பது மாதிரியே உணர்ந்தேன். மகளின் தாய் நீலகண்டன் அறைக்குள் இருப்பதாகவே நினைத்து, இப்போதும் தலையணைக்குப் பக்கத்தில் அரிவாளை வைத்திருக்கிறாள்.) நீலகண்டன் எங்கே போயிருப்பான்?

நீலகண்டனைக் காணோம் என்ற அந்த கவலையான செய்தி மனதை தினமும் வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது. நாட்கள் படுவேகமாக நீங்கிக்கொண்டிருந்தன. இந்தச் சூழ்நிலையில் மந்திரப்பூனை பற்றி கேள்விப்பட்டு கண்ணாடி அணிந்த ஒரு ஆள் ஒரு நாள் வீடு தேடி வந்தார். மிகவும் அடர்த்தியான கண்ணாடி... அதற்குள் சிறிய விழிகள். கறுப்பு ஃப்ரேம். மிகவும் சாதுவாக அந்த ஆள் இருந்தார். வாழ்க்கையில் இன்னும் எவ்வளவோ நாட்கள் இருக்கின்றன என்ற நினைப்பு அந்த ஆளிடம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. கையிடுக்கில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்து அந்த ஆள் மேஜை மேல் வைத்தார். ஒரு பயண நினைவுப் புத்தகம் அது. பிரமிடுகளின் படங்கள் அதில் இருந்தன. நாங்கள் இருவரும் தலா ஒரு டம்ளர் பால் கலந்த தேநீர் குடித்தோம். அவர் புகை பிடிக்கவில்லை. நான் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்துப் புகைத்தேன். இரண்டு முறை புகையை ஊதிவிட்டு, புத்தகத்தை எடுத்து பக்கங்களைப் புரட்டினேன். நிறைய புகைப்படங் கள் அதில் இருந்தன. ஆங்காங்கே பல இடங்களில் மையால் அடிக்கோடு இடப்பட்டிருந்தது. அடிக்கோடிட்ட இடங்களை வாசித்துப் பார்த்தேன். எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதர்கள் உண்டாக்கியதாயிற்றே பிரமிடுகள்! அங்கே இருந்து நானூறு, ஐந்நூறு மைல் தூரத்தில் ஒரு மலையின் பள்ளத்தாக்கில் இருக்கும் குகைகளில் சில கல்லறைகள். அந்தக்கால மன்னர்களுடைய தாக இருக்கலாம். அவற்றைத் திறந்து பார்த்தபோது, ஏதோ மருந்து களில் நனைத்த துணிகளால் மூடப்பட்ட பிரேதங்கள். மூவாயிரம், நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த உடல்கள் அவை. இது அங்கு சர்வ சாதாரணமான ஒன்று. ஆனால் ஒரே ஒரு விசேஷம்... அருகில் இருக்கும் வெள்ளை மணலில் பதிந்திருக்கும் ஒரு கால்சுவடு... வேலைக்காரனின் அல்லது வைதீகனின் கால்சுவடாக அது இருக்கலாம்.

“நான்காயிரம், ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னாடி உள்ள ஒரு கால்சுவடு!''

நாங்கள் அதைப் பற்றி நீண்ட நேரம் நினைத்துப் பார்த்தோம். அந்தக் கால் சுவடு பதிந்த காலத்திற்குப் பிறகு... இன்றுவரை!


ஜூபிட்டரும், ராயும்... அந்த தெய்வங்களின் இடத்தை புதிய தெய்வங்கள் பிடித்துக் கொண்டன. புதிய மதங்கள் வந்து சேர்ந்தன. புத்தகத்தில் சில பெரிய மரங்களின் புகைப்படங்களும் இருந்தன. ஆகாயத்தையே தொடக்கூடிய அளவிற்கு உயரமானதாகவும், பெரிதாகவும் அவை இருந்தன. அந்த ஆள் சொன்னார்:

“அந்த மரங்களுக்கு வயசு என்ன தெரியுமா? ஆயிரத்து நானூறோ மூவாயிரத்து நூறோ வருடங்களுக்குமேலே இருக்கும்னு கணக்குப் போட்டிருக்காங்க!''

அவர் சொன்னதைக் கேட்டு நான் ஆச்சரியப்படாமல் எப்படி இருக்க முடியும்? மரத்தைப் பற்றிய சிந்தனையில் இருந்தபோது, கொஞ்சமும் எதிர்பாராமல் அவர் மந்திரப் பூனையைப் பற்றி கேட்டார். கைஸுக்குட்டி என்ற நீலகண்டனைப் பற்றி சிறிதுநேரம் பேசிய நான் சொன்னேன்:

“பெண்கள்னு சொல்லப்படுற சௌபாக்யவதிகள் செய்த ஒரு தவறாமல் உண்டானதுதான் இந்த மந்திரப்பூனை. இவங்கதான் எதையுமே சீக்கிரம் நம்பிடுவாங்களே! எது இருந்தாலும் அதை உடனடியா நம்பி, சொர்க்கத்திற்குப் போறதுக்குக் காத்திருக்கிற தங்கக் குடங்களாச்சே இந்தப் பெண்மணிகளான சௌபாக்யவதிகள்! மாயா மோகினிகள்! அவங்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும்!''

“கடவுள்...?''

“ஆமா...''

“கடவுள்ன்ற ஒண்ணு உலகத்துல இருக்குதா என்ன? கடவுள் இல்லைன்னு சொல்றதுதானே முற்போக்கான கண்ணோட்டம்! எத்தனையோ லட்சம் வருடங்களுக்கு முன்னால வாழ்ந்த காட்டுவாழ் மக்களோட கற்பனையில பிறந்ததுதானே கடவுள்ன்ற விஷயம்?''

“கடவுள்ன்றது அழகான, வலிமையான ஒரு உருவகம். கற்பனைன்னு கூட எடுத்துக்கலாம். கடவுள்ன்றது பெரிய ஒரு சக்தி... அதுதான் உலகத்தோட ஆரம்பம்... காலாகாலத்திற்கும் வெவ்வேறு வடிவங்கள்ல கடவுள்ன்ற இந்தக் கற்பிதம் மனித சமுதாயத்தோட நரம்புலயும் இரத்தத்திலயும் கலந்திருக்கும்ன்றது மட்டும் உண்மை. ஆரம்ப காலத்துல இருந்து கடவுளைப் பத்திய நினைப்பு மனிதர்கள்கிட்ட தொடர்ந்து இருந்துக்கிட்டுதான் இருக்கு. லட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்னாடியே கடவுள்ன்ற ஒண்ணு இல்லைன்னு மனிதர்கள் சொல்லத்தான் செஞ்சிருக்காங்க. அப்பவும் கடவுள் இருக்குறார்னு சொல்லவும் ஆளுங்க இருந்திருக்காங்க. இப்பவும் கடவுள் இல்லைன்னு சிலரும், அவர் இருக்குறார்னு சிலரும் சொல்லிக் கிட்டுத்தான் இருக்குறாங்க. இதுல முற்போக்கு, வளர்ச்சின்னு எதைச் சொல்லமுடியும்? எதிர்காலத்துல - ஐயாயிரம் வருடங்களுக்கு அப்புறம் இருக்கப்போற மனிதர்கள் நம்மளைப் பத்தியும் காட்டு மனிதர்கள்னு தான் சொல்லுவாங்க. என்ன சொல்றீங்க?''

“கடவுளை நாம நம்ப வேண்டிய அவசியம்?''

“அவசியம்...? எனக்கு நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல. நம்பிக்கை நமக்கு வரலைன்னா அதுல என்ன தப்பு இருக்கு? சூரியன் மறையிறதும், அது உதயமாகுறதும் உலகத்துல நடந்துக்கிட்டுத்தான் இருக்கும். பெய்ய வேண்டிய காலத்துல மழை பெய்யும். செடிகள் முளைக்கும். பூக்கள் மலரும். அதுக்கு அழகு இருக்கும். மணம் இருக்கும். பிறகு... பிரபஞ்சங்களான பிரபஞ்சங்களுக்கெல்லாம் ஒரு படைப்பாளி இல்லைன்னு சொல்றதுக்கு கொஞ்சம் தைரியம் வேணும்... எனக்கு அந்த தைரியம் இல்ல. தைரியசாலிகள் கடவுள்ன்ற ஒருத்தர் இல்லைன்னு சொல்லத்தான் செய்றாங்க. நான் தைரியசாலி இல்லை. நான் ஒரு சாதாரண கோழை மனிதன். கடவுள்ன்ற சக்தியை முழுமையா நம்புற மனிதன் நான்!''

“கடவுள் எதுக்காக இந்த உலகத்துல அமைதியும், சமாதானமும் நிலவும்படி செய்யல?''

“மனிதர்களான நாமதான் அமைதியாகவும், சமாதானத்துடனும் இருக்கனும்னு கடவுள் கட்டளை இட்டிருக்காரு. ஆனா, இங்கு நடக்குறதென்ன? ஒவ்வொரு நிமிடமும் எத்தனையோ மக்கள் மரணத்தைத் தழுவிக்கிட்டு இருக்காங்க! ஒரு மனிதன் இன்னொரு மனிதனைச் சாப்பிட்டு வாழுறான். எல்லாம் நிறைஞ்ச ஒரு அழகான காட்சி பங்களாதான் இந்த பூமி!''

“காட்சி பங்களா! யார் அதைப் பார்ப்பது?''

“நாமளும் மத்த மனிதர்களும்தான். மனிதர்களைவிட சுத்தமும், சுகாதாரமும், அறிவும், பலமும், அழகும் கொண்ட பிறவிகள் இந்த உலகத்துல இருக்கலாம். ராத்திரி நேரங்கள்ல நாம வானத்தைப் பார்க்குறப்போ, லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நம்மோட கண்கள் பார்க்குதுல்ல...! எண்ண முடியாத சூரிய சந்திரர்கள்! கிரகங்கள்! அங்கே நம்மைவிட உயர்ந்த பிறவிகள் இருக்கலாம்னு சொல்றாங்க. அவங்க நம்மை வந்து பார்க்க மாட்டாங்கன்னு யாருக்குத் தெரியும்?''

அடுத்த சில நிமிடங்கள் நாங்கள் எதுவுமே பேசாமல் மவுனமாக அமர்ந்திருந்தோம். அவர் புறப்படுவதற்கு முன்பு, மந்திரப் பூனையைப் பற்றிச் சொல்லிவிட்டு நான் சொன்னேன்:

“உங்க வீட்டுக்கு மந்திரப்பூனை வந்தா, அதுக்குச் சாப்பிட ஏதாவது கொடுங்க. பாசத்தோட நீங்க கைஸுக்குட்டின்னோ நீலகண்டான்னோ கூப்பிட்டா, "ம்யாவோ ம்யாவோ'ன்னு அடுத்த நிமிடம் அது சத்தம் கொடுக்கும்.''

“சரி... நான் பாக்குறேன்'' என்று சொல்லியவாறு அந்த ஆள் கிளம்பினார். இனி கனவுகள்தாம். இப்போது இரவு கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். நானும், மரணமும் ஒரு தமாஷான கதையைப் படித்துக்கொண்டு கிடக்கிறோம். மரணம் எனக்கு மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது. மின்விசிறி மெதுவாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது. படிக்கப் பயன்படுத்தும் விளக்கால் யாருக்கும் எந்தவித தொந்தரவும் இல்லை. மகளும், மகளின் தாயும் கொசு வலை வழியாகத் தெரிகிறார்கள். இரண்டு பேரும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். வெளியே இருட்டில் கலந்திருக்கும் உலகம் படு நிசப்தமாக இருக்கிறது. ஆனால், கடல் மட்டும் பயங்கரமான சத்தத்துடன் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. அதற்கு மட்டும் உறக்கம் என்பதே இல்லை. நான் படித்துக்கொண்டு படுத்திருக்கிறேன். தூரத்தில் ஒரு இரைச்சல் ஒலி... புகைவண்டி வந்து கொண்டிருக்கிறது... அது பாலத்தின்மேல் ஓசை எழுப்பிக்கொண்டு போவதை இங்கிருந்தே என்னால் உணர முடிகிறது. சந்நியாசி அனேக மாக இப்போது உறங்கிக் கொண்டிருப்பாரா? நான் வெறுமனே கடிகாரத்தை எடுத்துப் பார்த்தேன். அற்புதமான ஒரு கண்டுபிடிப்பு! கருஞ்சிவப்பு நிறத்தில் செகண்ட் முள் வேகமாக வெள்ளை டயலில் சுற்றிக்கொண்டிருந்தது. இவன் எவ்வளவு முக்கியமானவன்! செகண்ட் முள்ளோடு சேர்ந்து என்னுடைய இதயமும் மரணத்தை நோக்கி வேகவேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. மரணம் எப்போது வரும்?

திடீரென்று மின்னுகிற அரிவாளுடன், புரண்டு எழுந்து நின்றாள் மகளின் தாய். அவளின் கண்கள் தீப் பந்தங்கள்போல் இருந்தன.

“என்னை ஒரு வழி பண்ணணும்னு நினைச்சா, பண்ணிக்கோ. நான் தயாரா இருக்கேன். பிரபஞ்சமே சலாம்!''

அரிவாள் படுக்கையில் விழுந்தது!

நடந்தது இதுதான்: இருண்டுபோன கடல். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றன. நல்ல வெளிச்சம். ஒவ்வொரு அலையிலும் ஒவ்வொரு மந்திரப்பூனை. இப்படி ஆயிரக்கணக்கில் மந்திரப் பூனைகள். ஒவ்வொரு மந்திரப்பூனையாக அலையைவிட்டு, வீட்டுமேல் தாவுகின்றன. தாவிக்கொண்டே இருக்கின்றன.

இதுதான் மகளின் தாய் கண்ட கனவு!

“மனைவிமார்கள் கனவு காண வேண்டியது கணவர்களை. கண்ட பூனைகளையும் கனவு கண்டா எப்படி?''

அரிவாளை எடுத்து நான் தலைப்பக்கத்தில் வைத்தேன்.


சௌபாக்யவதி ராஜலா கண்ட கனவு சற்று வித்தியாசமானது. வாசலைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்து பார்த்தால், சௌபாக்யவதி ராஜலா, நீலகண்டனின் வயிற்றுக்குள் இருக்கிறாள். அவ்வளவுதான்... "அய்யோ” என்று கத்திவிட்டாள் ராஜலா. ஒவ்வொரு நாளும் அவளுக்கு இதே கனவுதான். இப்போது அவள் என்ன செய்வது?

சௌபாக்யவதி சௌமினிதேவி கண்ட கனவு அழகானது. பெரிதாக பயப்படும்படி ஒன்றுமில்லை. அவள் கண்ட கனவில், உடல் முழுக்க நகைகள் அணிந்த கோலத்தில் கைஸுக்குட்டி. காதுகளில் இரண்டு தங்கத்தாலான வளையங்கள்!

சௌபாக்யவதி கதீஜா பீபி எந்தக் கனவும் காணவில்லை. கனவு எப்படி வராமலே போனது? எனக்கு இது ஒரு அவமானம்போலத் தோன்றியது.

அப்போது வருகிறது கனவுகளான கனவுகளின் சிங்கம்!

இரவு முழுக்க ஒரே கூக்குரலும், ஆர்ப்பாட்டமும்! ஒரு லட்சம் நகங்களைக் கொண்ட ஒரு மிருகம் சௌபாக்யவதி கதீஜா பீபியின் நெஞ்சின்மேல் பாய்கிறது. அதை "யாஸைக் முஹயாதீன்” என்று சொல்லியவாறு பிடிக்கிறாள் அவள். வெளிச்சம் வந்தபோது, வெள்ளை யான ஒரு சிறிய மிருகம் "ம்யாவோ' என்று கத்தியவாறு ஜன்னல் வழியே பாய்ந்தோடுகிறது. சில நொடிகளில் அது இருட்டில் மறைந்தும் போகிறது. கதீஜா பீபியின் கையில் செத்துப்போன ஒரு எலி!

சௌபாக்யவதி ராஜலாவிற்கு அப்படியொரு கனவு ஏன் வரவேண்டும்?

அதை வெறுமனே விட்டுவிடத் தோன்றவில்லை.

சௌபாக்யவதிகள் எல்லாரும் கூடி ஆலோசனை பண்ணினார்கள். ஒருவேளை அது நீலகண்டனின் ஆவியாக இருக்குமோ? அப்படியானால் மந்திரவாதத்தை வைத்துதான் அதை விரட்டியடிக்க வேண்டும். மந்திரம் ஓதப்பட்டது. தகடு எழுதவும் தீர்மானிக்கப்பட்டது. கோவில்களில் வழிபாடு நடத்தவும் திட்டமிட்டார்கள்.

“இப்போ எப்படி இருக்கு ராஜலா?''

“ரொம்பவும் களைப்பா இருக்கு. வாந்தி வருது. எதைச் சாப்பிட்டாலும் ருசியே இல்ல. உறக்கம் வரமாட்டேங்குது. கொஞ்சம் கண்களை மூடினாலும், நீலகண்டன் என்னை எடுத்துத் தூக்கி அடிக்கிறான்...''

“தூக்கி அடிக்கிறானா? அப்படின்னா, குழந்தைக்கு...?''

“என் தெய்வமே! நீலகண்டன் அந்த அளவுக்கு நடப்பானா என்ன?''

ராஜலா ரொம்பவும் பயந்து போயிருந்தாள். இதிலிருந்து சௌபாக்யவதி ராஜலாவை எப்படிக் காப்பாற்றுவது? சங்குண்ணி வைத்தியரை அழைத்து ஆலோசித்தால் என்ன? பெயருக்குத்தான் அவர் வைத்தியர். அவரின் முக்கிய தொழில்- மந்திரவாதம்தான். சௌபாக்யவதி ராஜலாவின் கதையைக் கேட்ட சங்குண்ணி வைத்தியர் சொன்னார்: “இது உண்மையான ஆவியோட வேலைதான். தங்கத்தால் ஆன தகட்டுல எழுதணும். அறுபது ரூபா அதுக்கு ஆகும்!''

கடவுளே! யாரிடம் அறுபது ரூபாய் கேட்பது?

எப்படியோ... ராஜலாவின் இடுப்பில் ஒரு தகடு கட்டப்பட்டு விட்டது. நீலகண்டன் என்ற ஆவியின் தொந்தரவு எதுவும் அதற்குமேல் இல்லை. இப்போது அதிகம் களைப்பு இல்லை. வாய்க்கு ருசி வந்துவிட்டது. உறக்கமும் வருகிறது. வேறென்ன வேண்டும்?

“சௌபாக்யவதி ராஜலா, கவனமா கேட்டுக்கோ. பிரசவம் நல்லபடியா முடிஞ்சப்புறம், நாற்பது குளியல்லாம் முடிஞ்சு, தாயும் குழந்தையும் சுகமா இருக்குறப்போ, இடுப்புல கட்டியிருக்கிற தகடைக் கழட்டு. அதைத் திறந்து பார். உள்ளே அப்போ என்ன பாக்குறியோ... அதுக்கு மிட்டாய் வாங்கிக்கொண்டு போய் பாலவாடியில இருக்குற குழந்தைகளுக்குக் கொடு. மங்களம்!''

(இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. தகடை இடுப்பில் கட்டுவதற்கு முன்பே, அதற்குள் ரகசியமாக பத்து அரை ரூபா நாணயங்களை நான் வைத்திருக்கிறேன்.)

சௌபாக்யவதிகளுக்கெல்லாம் ஏகப்பட்ட சந்தோஷம். ஒரு விபத்திலிருந்து தப்பி விட்டோம் என்ற மகிழ்ச்சிதான். இதன் மூலம் இரண்டு உயிர்கள் காப்பாற்றப்பட்டு விட்டனவே! எல்லாரும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கும்போது, இதோ உயிருடன் வந்து நின்று கொண்டிருக்கிறான் தோழன் நீலகண்டன்! அவன் முகத்தைப் பார்த்தபோது, வாழ்க்கை அனுபவங்கள் கொஞ்சம் கிடைத்திருப்பது தெரிந்தது. அவ்வளவுதான் - சௌபாக்யவதிகள் யாரும் அவனைப் பார்த்தது மாதிரியே காட்டிக் கொள்ளவில்லை. ஒளிந்து கொண்டாவது பார்க்காமலா இருப்பார்கள்?

வயிறு நிறைய நீலகண்டனுக்கு உணவு கொடுத்தேன். அப்போது தெற்குக் கடல் பகுதியிலிருந்து ஒரு சத்தம். என்ன நடந்தது? எல்லாம் தகர்ந்து கீழே விழும் ஓசை! கடல் பேரிரைச்சலோடு இங்கு வருகிறதா என்ன? ஒருவேளை இறுதிக் கட்டம் வந்துவிட்டதோ?

என்னவென்று பார்த்தேன். பயங்கரமான சத்தத்துடன் கடல் ஒவ்வொன்றையும் கீழே மோதித் தள்ளிக்கொண்டிருந்தது. அடித்துத் தகர்த்த கோலத்தில் கரை. கடலைப் பார்த்தாலே மனதில் பயம் வரத்தான் செய்கிறது. மனதில் அதை நினைத்தாலே நடுக்கம் உண்டாகிறது. சிறிய மனது. பெரிய கடல். நிர்மலமான ஆகாயம்.

பயம் தரும், அகன்ற, அழகான கடலே, சலாம்!

திரும்பி வந்தேன். பறவைகள் "க்ரீச்' சிட்டுக் கொண்டிருக்கின்றன. வண்டுகள் ஓசை எழுப்புகின்றன. மலர்கள் பல வண்ணங்களில் பூத்து அழகு காட்டிக்கொண்டிருக்கின்றன. மரங்கள் கம்பீரமாக தலையை உயர்த்தி நின்றுகொண்டிருக்கின்றன. வீடுகள்... மனிதர்கள்... பனிப் பிரதேசங்களில் பனி உருகினால் கரை முழுவதும் கடலுக்கு அடியில் போய்விடுமா?

கட்டாயம் அதுதான் நடக்கும்.

எல்லாமே ஒரு அற்புதத்தில்தான் நின்றுகொண்டிருக்கின்றன.

இந்த நேரத்தில் சங்கநாதம்! தொடர்ந்து மகளின் உரத்த குரல்:

“டாட்டோ... பீப்பி ஊதுற மிஸ்கீன்...''

நான் சென்று தெற்குப்பக்க வாசல் வழியாக வீட்டுக்குள் நுழைந் தேன். ஒரு கவருக்குள் ஒரு சிறு தொகையை வைத்து சந்நியாசியிடம் வழியில் ஏதாவது செலவுக்கு வைத்துக் கொள்ளும்படி சொல்ல வேண்டும் என்று அதை மகளின் கையில் தந்தேன். பிறகு... சட்டையைக் கழற்றிவிட்டு சென்றேன். ஒயிட் லெகான் சேவல் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான். சந்நியாசி, நீலகண்டனை மடியில் வைத்தவாறு சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்திருத்தார். போர்வையையும், ஜமுக்காளத்தையும் மடித்து தோளில் இட்டிருந்தார். மகள் தந்த கவரை மாராப்பில் வைத்துக் கொண்டார். ஃப்ளாஸ்க்கையும், கண்ணாடி டம்ளர்களையும் எடுத்துக்கொண்டு வந்து சந்நியாசிக்கு அருகில் அமர்ந்தேன். தேநீர் குடித்து இருவரும் தலா ஒரு பீடி புகைத்தோம்.

அந்தப் பாலத்தின் அடிப்பக்கம் காலியாகக் கிடக்கிறது!

நாங்கள் இனி பார்க்கப்போவதில்லை. கடைசி பிரிவு. அவர் போகிறார். நானோ? நாங்கள் எழுந்து நின்றோம். சூலம் சப்தித்தது. சங்கு மாராப்புக்குள்!

நீலகண்டன் எங்களுக்கு மத்தியில் நின்றான். பக்கத்தில் மகள். மகளின் தாய் வாசல் படியில். சௌமினிதேவி, கதீஜா பீபி, ராஜலா, நாய், ஒயிட் லெகான் சேவல்- எல்லாரும் முற்றத்தில் நின்றிருக்கிறார்கள்.

சிறிதுநேரம் தியானத்தில் நின்ற சந்நியாசி கண்களைத் திறந்தார்:

“தனிமையான மலை உச்சியில் நான் இறந்து கிடக்குறதா நினைச்சுங்கோங்க. விடை கொடுங்க... ஆசீர்வதிங்க...''.

“நீங்க எங்களை ஆசீர்வதிங்க...''

ஆகாயத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இரண்டு கண்கள்!

“எல்லா உலகங்களையும் எல்லா உயிரினங்களையும்...''

“கடல்களையும், மலைகளையும், உங்களையும், என்னையும், எல்லாவற்றையும் படைத்த-''

“முதலும் முடிவுமற்ற கடவுளே, உலகங்களை எல்லாம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வழி நடத்தும் உங்களின் ஆசீர்வாதம் எங்கள் எல்லாருக்கும் கிடைக்கட்டும்!''

“ஓம் சாந்தி! சாந்தி! லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து!''

மங்களம்.

சுபம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.