Logo

மண்டை ஓடு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 9910
mandai-odu

ரு கிராமத்தின் பாதையோரம் இருக்கும் வீட்டின் வாசற்படியில் மாலை நேரத்தில் பரிதாபத்தை வரவழைக்கும் ஒரு குரலைக் கேட்கலாம்.

“அம்மா, ஏதாவது தாங்க...''

அந்த வீட்டில் இருந்த நாய் குரைக்க ஆரம்பித்தது. திண்ணையில் குத்து விளக்கிற்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு கடவுள்களின் பெயர்களைக் கூறிக் கொண்டிருந்த குழந்தைகளின் கவனம் அந்தப் பக்கமாகத் திரும்பியது. நாய் முன்னோக்கித் தாவ முயற்சித்த வாறு குரைத்துக் கொண்டிருந்தது.

அந்த வீட்டின் வேலையாள் வந்து நாயை விரட்டிவிட்டான். அவன் வாசற்படியின் அருகில் போய் பார்த்தான். அங்கு ஒரு பிச்சைக்காரி நின்றிருந்தாள். அவளுடைய தோளில் ஒரு குழந்தை குப்புறப் படுத்திருந்தது.

அவள் தன்னுடைய பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய கெஞ்சலைத் தொடர்ந்தாள். “தங்கமான அய்யா! இந்தக் குழந்தைக்கு கொஞ்சம் கஞ்சி கொடுங்க... கொதிக்க வச்ச அரிசி சாப்பிட்டு இன்னையோட இரண்டு நாட்கள் ஆச்சு. பிள்ளைகளை நினைச்சு....''

“சாயங்கால நேரத்துலயாடி தர்மம்? இப்போ முடியாது...''

அவளின் தோளில் கிடந்த அந்தக் குழந்தை முனகிக் கொண்டிருந்தது.

வேலைக்காரனின் பதில் அவளை அமைதியானவளாக ஆக்கியது. எனினும், பிச்சைக் காரிதானே? அவள் உடனடியாகப் போய்விட மாட்டாள்.

“தங்கமான அய்யா... அப்படி சொல்லாதீங்க. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. ஒரு கரண்டி கஞ்சி கிடைச்சாகூட போதும். சமையலறையில அம்மா விடம் கொஞ்சம் சொன்னால் போதும்!''

ஒரு கரண்டி கஞ்சி நீர் இருக்கிறதா, இல்லையா என்பதைக் கூறக்கூடிய உரிமை பெண்ணுக்குத்தான் இருக்கிறது என்று அவளுக்குத் தெரியும். ஒரு பிச்சைக்காரி ஒரு குழந்தையைத் தோளில் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பதை இல்லத்தரசி அறிந்து கொள்ளும் பட்சம், காரியம் நிறைவேறும் என்பது அவளுக்குத் தெரியும். சமையலறைக்குக் கேட்கும் வண்ணம் அவள் உரத்த குரலில் சொன்னாள்:

“தங்கமான அம்மா! ஒரு குழந்தைக்குக் கொஞ்சம் கஞ்சி தாங்களேன்!''

அந்த வேலைக்காரன் திரும்பி நின்று கொண்டு சொன்னான்:

“இங்கே நின்று கொண்டு கூப்பாடு போடாதேடி. நாசமாப் போச்சு! ஏதாவது கொண்டு வந்து தர்றேன்!''

அவள் உட்கார்ந்தாள். பிள்ளைகள் எல்லாரும் வாசலில் வந்து பார்த்தார்கள்.

சிறிது நேரம் தாண்டியதும் ஒரு கையில் கொஞ்சம் கஞ்சியையும் இன்னொரு கையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கையும் வைத்துக் கொண்டு இல்லத்தரசி வெளியே வந்தாள். அவளுக்கு உள்ளே நிறைய வேலைகள் இருந்தன.

அந்த பிச்சைக்காரி வயதில் இளையவளாக இருந்தாள். இருபது வயது இருக்கும். கிழிந்துபோய் காணப்பட்ட கொஞ்சம் துண்டுத் துணிகளை இடுப்பிலும் மார்பிலும் சுற்றியிருந்தாள். கூந்தல் ஜடை பின்னப்பட்டு ஒரு சணல் கட்டைப் போல இருந்தது.

அவளுடைய தோளில் கிடந்த குழந்தைக்கு ஒரு வயது இருக்கும்.

அவள் எழுந்து கையில் இருந்த தட்டை நீட்டினாள். அதில் இல்லத்தரசி தான் கொண்டு வந்திருந்த கஞ்சி நீரை ஊற்றினாள். அவள் அந்தத் தட்டை உதட்டிற்கு அருகில் கொண்டு சென்றபோது, அந்தக் குழந்தை ஒரு முணுமுணுப்புடன் அதைப் பிடித்தது. அவனுக்கு கோபம் வருகிறது. அவன் தன் தாயை அதைக் குடிக்க விட மாட்டான்.

முறையாக வளர்ந்தால் அது ஒரு நல்ல குழந்தையாக இருக்கும். அதன் வயிறு சற்று வீங்க ஆரம்பித்திருந்தது. இனி ஊதிப் பெரிதாகும். கால்கள் மெலிந்து போகும். அந்த வகையில் குழந்தையின் கன்னங்கள் வீங்கி, கண்கள் வெளியே தள்ளி, மார்புக்கூடு கட்டி, வயிறு வீங்கி, கால்கள் மெலிந்து என்று ஆகிவிடும். எனினும், ஒரு பிச்சைக்காரி ஒரு வயது வரையிலாவது, அப்படி எதுவும் நடக்காமல் இந்தக் குழந்தையை வளர்த்திருக்கிறாளே!

ஒரு வாரத்திற்குத் தேய்த்துக் குளித்து, நல்ல உணவும் இருந்தால் அவளும் இப்பொழுது காணும் பெண்ணாக இருக்க மாட்டாள். அழகிதான்- ஆமாம்... நகைகளும் நல்ல ஆடைகளும் இருந்திருந்தால் அழகியாகவே ஆகியிருப்பாள். சற்று கூர்ந்து கவினித்தால் புரியும்- அவள் பிச்சைக்காரியாகப் பிறந்தவள் அல்ல என்ற விஷயம். அவளுக்கு ஏதோ ஒரு விபத்து நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

நீரை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கும்போது, அந்த இல்லத்தரசியின் ஆர்வம் அதிகமானது. அவள் நீர் முழுவதையும் முழுமையாகக் குடித்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு அந்தத் தட்டைக் கீழே வைத்தாள். அதில் சோற்றுப் பருக்கைகள் முழுவதும் இருந்தன. குழந்தை வளைந்து நெளிந்து சத்தம் உண்டாக்க ஆரம்பித்தது.

அவள் அந்த சோற்றுப் பருக்கைகளை குழந்தைக்கு கொடுத்துக் கொண்டிருந்தபோது இல்லத்தரசி கேட்டாள்:

“நீ எங்கேயிருந்துடி வர்றே!''

அவள் முகத்தை உயர்த்திச் சொன்னாள்:

“கண்டமாரில் இருந்து அம்மா!''

“கண்டமாரா? அது எங்கே இருக்கு?''

“இரண்டு வருடங்களுக்கு முன்னால் துப்பாக்கிச் சூடு நடந்தது அல்லவா, அம்மா? அந்த ஊர்தான்!''

அந்த வீட்டின் தலைவி, ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு ஒரு முழு ஊரும் அழிந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டிருக் கிறாள்.

சாதத்தை ஆர்வத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கு மத்தியில், குழந்தை இல்லத்தரசியைப் பார்த்துச் சிரித்தது. அந்தக் குழந்தையின் சிரிப்பில் இருந்த அழகு அழிந்துபோய் விடவில்லை. அதற்கு இப்போது சிரிப்பதற்குத் தெரியும். ஆனால், அந்தச் சிரிப்பு பல் இளிப்பாக மாறுவதற்கு எவ்வளவு நாட்கள் ஆகும்? பிச்சைக்காரியின் குழந்தைதானே? நாளையோ நாளை மறுநாளோ அந்த மாறுதல் தொடங்கி விட்டது என்ற நிலை உண்டாகலாம். நல்ல குழந்தை நாசமாகிறது.

இல்லத்தரசிக்கு அவள்மீது சிறிது கோபமும் உண்டாகாமல் இல்லை. பிச்சைக்காரி எதற்காகக் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும்? அதுவும் ஒரு அழகான குழந்தையை! உரிமையற்ற செயல்கள்...

அவள் தன் குரலைச் சற்று கடுமையாக ஆக்கிக் கொண்டு கேட்டாள்:

“இந்தக் குழந்தைக்கு தகப்பன் இல்லையாடீ?''

அவள் அதற்கு பதில் கூறவில்லை. ஒரு இயந்திரத்தைப் போல அவள் குழந்தைக்கு சோற்றுப் பருக்கைகளை ஊட்டிக் கொண்டிருந்தாள். அவள் அந்தக் கேள்வியைக் காதில் வாங்கவில்லையோ? இல்லத்தரசி தன் கேள்வியை மீண்டும் திரும்பக் கேட்டாள். அவளுடைய குரல் மேலும் கடுமையாக இருந்தது. தன்னுடைய புனிதத்தைக் காப்பாறி வைக்கத் தெரியாதவள் என்று அவளுக்குத் தோன்றியது. திருமணமாகாத கன்னிப் பெண் பெற்றெடுத்த குழந்தை. எனினும், அவளைத் தன் பக்கம் இழுத்த ஆண் யாராக இருக்கும்? அவன் சிறந்தவனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்தக் குழந்தை இவ்வளவு நன்றாக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. அவள் கேள்வியைக் காதில் வாங்காததைப் போல பேசாமல் இருப்பதற்குக் காரணம்- அதைப் பற்றிய உண்மையை வெளியே கூறினால் பிச்சை கிடைக்காமல் போய்விடும் என்பதாக இருக்க வேண்டும்.


அங்கே நின்று கொண்டிருந்த அறிவாளியான ஒரு குழந்தை சொன்னது:

“இந்தக் குழந்தையின் அப்பா துப்பாக்கி குண்டு பாய்ந்து இறந்திருப்பார்!''

அதற்கும் பதில் இல்லை. அவள் அப்போதும் குழந்தைக்குச் சாதத்தை ஊட்டிக் கொண்டிருந்தாள். வீட்டின் தலைவி கேட்டாள்:

“என்னடி எதுவும் பேசாமல் இருக்கே?''

அவள் தலையை உயர்த்தினாள். அவளுடைய பார்வை மிகவும் பரிதாபத்தை வரவழைக்கக் கூடியதாக இருந்தது. அவள் சொன்னாள்:

“எனக்கென்று யாரும் இல்லை அம்மா!''

குழந்தைக்குச் சாதத்தை ஊட்டி முடித்ததும் அவள் சொன்னாள்:

“அம்மா! பிள்ளைகளைப் போகச் சொல்லுங்க!''

இல்லத்தரசிக்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு கூறுவதற்கு ஒரு கதை இருக்கிறது. அந்தக் குழந்தையின் தந்தையைப் பற்றி... பிள்ளைகள் கேட்கக் கூடாததாக இருக்க வேண்டும். அவள் பிள்ளைகளைக் கோபப்பட்டு வெளியேற்றினாள்.

குழந்தையைக் கீழே உட்காரச் செய்துவிட்டு அவள் சொன்னாள்:

“அம்மா, உங்களுடைய கேள்வியை நான் காதில் வாங்காததைப் போல பேசாமல் அமர்ந்து கேட்டேன். நான் பிச்சை வாங்கித் திரிபவள். நீர் தருபவர்கள் ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியாது. நான் ஒரு பிச்சைக்காரியா ஆயிட்டேன், அம்மா. எனக்கு இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் அன்றைக்கு ஊர்வலத்திற்குப் போனாங்க. அதற்குப் பிறகு வரவில்லை. ஒரு வயதான தாயும் நானும் மட்டும் மிஞ்சினோம்...''

வீட்டின் தலைவி கேட்டாள்:

“உனக்கு சொந்தக்காரர்கள் என்று யாரும் இல்லையா?''

“இல்லை அம்மா!''

“அப்படின்னா... இந்தக் குழந்தையின் தந்தை யார்?''

“எனக்கு யாருன்னு தெரியாது, அம்மா. நான் அந்த மகா பாவியைப் பார்த்ததே இல்லை.''

இல்லத்தரசி ஆச்சரியத்திற்குள்ளானாள். அவளுக்குத் தன் குழந்தையின் தந்தை யார் என்று தெரியாதாம்! அது நடக்கலாம். ஆனால், அந்த மனிதனைப் பார்த்ததே இல்லை என்று கூறினால் எப்படி நம்புவது?

அவள் சத்தியம் பண்ணிக் கொண்டு சொன்னாள்.

“என் இரண்டு கண்களின்மீது, தந்தையின்மீது சத்தியம்... நான் பார்த்ததே இல்லை அம்மா. எனக்கு அது எதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை அம்மா. ஆனால், இந்தக் குழந்தை இப்படி உயிரோடு இருக்கிறப்போ, அதை நினைத்துப் பார்ப்பேன். எங்களுடைய ஊரில் இப்படி எவ்வளவோ குழந்தைகள் பிறந்திருக்கு அம்மா. எவ்வளவோ பெண்கள் செத்தும் போயிருக்காங்க. பட்டாளத்தின் ஆட்சியாக இல்லாமல் இருந்திருந்தால்...! ஆண்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து செத்தும், பயந்தும் போயிட்டாங்க. பெண்கள் மட்டும் எஞ்சி நின்னாங்க!''

கிராமப் பகுதியைச் சேர்ந்த அந்த வீட்டின் தலைவிக்கு அவள் கூறியது எதுவுமே புரியல்லை. அவள் விளக்கிக் கூறினாள். கேட்கும்போது உரோமங்கள் எழுந்து நிற்கக்கூடிய- ரத்தம் உறைந்து போகிற அளவிற்கு பயங்கரமான- மிருகத்தனமான ஒரு பலாத்காரத்தின் வரலாறு. அது நள்ளிரவு நேரத்தில் நடைபெற்றது!

இல்லத்தரசி பயந்துபோய் விட்டாள். இப்படியெல்லாம் மனிதர்கள் நடப்பார்களா? அப்போது உரத்த குரலில் சத்தம் போட்ட வயதான கிழவியைத் துப்பாக்கியால் அடித்தார்களாம்... அதைப் பற்றியெல்லாம் கேட்பதற்கு ஆள் இல்லையா? இவற்றையெல்லாம் மனிதன் செய்வானா?

பசி தீர்ந்து உற்சாகத்துடன் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை ஒரு வினோதப் பிறவியைப் பார்ப்பதைப் போல இல்லத்தரசி பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அது ஒரு மனிதக் குழந்தைதானா? புரிந்து கொள்ள முடியாத கலவை! அந்த ஆணைப் பற்றி தாய்க்குத் தெரியவே தெரியாது- இருள் வேளையில்! துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணத்தைத் தழுவிய பயங்கரமான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்த இடத்தில்! வயதான கிழவி இறந்து கொண்டிருக்கும்போது, அவள் பாதி சுயஉணர்வு நிலையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்கும்போது... ச்சே.... அவன் ஒரு மனிதனாக இருக்க வாய்ப்பில்லை. மனிதனாக இருந்தால், ஒரு தாய் பெற்றெடுத்திருக்க வேண்டும். தாய் பெற்றெடுத்திருந்தால் அதைச் செய்திருப்பானா? ஆனால், ஒரு மானிடப் பெண் கர்ப்பம் தரிக்க வேண்டுமென்றால், ஒரு மனிதனுடன் உறவு கொள்ள வேண்டும். அவள் கர்ப்பம் தரித்தாள். பிரசவமானாள். குழந்தை முன்னால் உட்கார்ந்து கொண்டு சிரிக்கிறது. கொஞ்சுகிறது. உற்சாகத்துடன் சத்தம் போடுகிறது... ஒரு பலாத்காரத்தின் விளைவை அந்த இல்லத்தின் அரசி வாழ்க்கையில் முதல் தடவையாகக் கண்களுக்கு முன்னால் பார்த்தாள்.

அந்தப் பிச்சைக்காரி தொடர்ந்து சொன்னாள்:

“அம்மா! எனக்குத் திருமணம் நிச்சயம் பண்ணியிருந்தாங்க!''

“அந்த ஆள் இப்போ இருக்கானா?''

“யாருக்குத் தெரியும்?''

இறுதியாக அவள் தன்னுடைய அந்த வரலாற்றைச் சொன்னாள். அவளுக்கு ஒரு காதல் கதை இருந்தது. ஒரு ஆணுக்காக அவள் காத்திருந்தாள். அவன் ஏழு வருடங்களாகப் பணம் சம்பாதித்து, திரும்பி வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக வெளிநாட்டிற்குச் சென்றிருந்தான். வாரத்திற்கு ஒரு கடிதம் என்ற விகிதத்தில் வந்து கொண்டிருந்தது. அப்படி இருக்கும்போதுதான் அது நடந்தது- அவள் கர்ப்பிணியாக ஆன விஷயம்.

அவள் கூறி நிறுத்தினாள்.

“அந்தப் பாவம் திரும்பி வந்திருப்பான்!''

வீட்டின் தலைவி கேட்டாள்:

“அவன் இந்த விஷயங்களையெல்லாம் தெரிந்து கொண்டிருப்பானோ?''

“தெரியாமலே இருக்கட்டும் அம்மா. அம்மா! ஐந்தாறு பட்டாளக்காரர்கள் ஒன்றாக வந்து நுழைந்து கதவை உதைத்து உடைத்தார்கள்... எவ்வளவோ பெண்கள் அங்கு இறந்து விட்டார்கள் அம்மா. எவ்வளவோ பெண்கள்... அந்த மாதிரி ஐந்தாறு பேர் வந்திருந்தால் நானும் இறந்திருப்பேன். இப்படிப்பட்ட குழந்தைகளும் பிறந்திருக்கிறார்கள். ஆனால், அந்த விஷயங்களைப் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியே தெரிவதில்லை. அங்கிருந்து யாரையும் வெளியே அனுப்புவதும் இல்லை. யாரையும் அங்கு நுழைய விடுவதும் இல்லை. யாரும் வரவோ போகவோ முடியாது. அங்கு நடந்தது எதுவும் வெளியே இருப்பவர்களுக்குத் தெரியாது. அங்கு தங்கியிருந்தவர்கள் எல்லாரும் வேலைக்காரர்களாக இருந்தார்கள். அந்த ஊர் இரண்டு மூன்று நிலச்சுவான்தார்களின் கையில் இருந்தது. ஒருவனுக்கும் சொந்தம் என்று கூற இடம் கிடையாது. பிணங்களை அப்படியே மலைபோல குவித்து மண்ணெண்ணெய் ஊற்றி எரிய வைக்கவோ, மண்ணை வெட்டி மூடவோ செய்தார்கள். பாதி வெந்த இறந்த உடல்கள் எத்தனை நாட்கள் கிடந்து நாறின தெரியுமா? அந்த மேடுகளிலும் தேவையான அளவிற்கு மண் போடவில்லை. அதுவும் நாறியது!''

அந்த பயங்கரமான கதையைக் கேட்டு இல்லத்தரசி நடுங்கிவிட்டாள். பிச்சைக்காரி தன் சொந்தக் கதையின் பகுதியைச் சொன்னாள்:

“அந்தப் பாவம் என்னைத் தேடி ஒரு ஆதாரமும் கிடைக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருப்பான். இவை அனைத்தும் தெரிந்து கொண்டாலும்- எது எப்படி இருந்தாலும் என்னை ஏற்றுக் கொள்வான். என்மீது உயிரைவிட அன்பு வைத்திருந்தான்.''


அவள் இல்லத்தரசியிடம் தொடர்ந்து சொன்னாள்:

“அம்மா! எனக்கு ஒரே ஒரு பிரார்த்தனைதான் இருக்கு. இனிமேல் நாங்கள் ஒருவரையொருவர் பார்க்கக் கூடாது என்பதே அது. நான் காத்திருந்தேன். இப்படியெல்லாம் நடந்திடுச்சு. இனி எதற்குப் பார்க்க வேண்டும்? இந்தக் குழந்தை உயிருடன் இருக்கும்போது...''

இல்லத்தரசி இடையில் புகுந்து சொன்னாள்:

“அது உன்னுடைய குற்றம் இல்லையே!''

“இருக்கலாம் அம்மா... என்னுடைய புனிதத்தன்மை போயிடுச்சே?''

இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். வீட்டின் தலைவி தேற்றுகிற விதத்தில் சொன்னாள்:

“இருந்தாலும்... ஒரு ஆண் பிள்ளையாச்சேடீ...''

அவள் முழுமையான ஏமாற்றத்துடனும் வெறுப்புடனும் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னாள்:

“அது சாகாது அம்மா. அது சாகாது... அதற்கு நீண்ட ஆயுள் இருக்கிறது. அன்றைக்கு அப்படிப் பிறந்த குழந்தைகள் எதுவும் சாகாது. அவர்கள் எல்லாரும் சேர்ந்து சில விஷயங்களைச் செய்ய வேண்டியதிருக்கிறது. நான் சொல்லட்டுமா அம்மா? இதை ஏதாவது கிணற்றுக்குள் விட்டெறிய வேண்டும் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது அம்மா. பெற்று விட்டதால் மட்டும் இந்தக் குழந்தைமீது அன்பு உண்டாகி விடாது. வேண்டாம் என்று பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பவள் தான் பெற்றெடுத்த குழந்தை மீது பாசம் வைக்க மாட்டாள். தாய்மார்கள் குழந்தைகளைக் கழுத்தை நெறித்துக் கொல்வதில்லையா? இந்தக் குழந்தை வயிற்றில் இருக்க வேண்டுமென்று நான் விரும்பவில்லை. இதையும் கழுத்தை நெறித்துக் கொன்றுவிடலாம் என்று நான் நினைத்தேன். அப்போது தோணுச்சு அம்மா- இது சாகக்கூடாது என்று. அதனால்தான் நான் வளர்க்கிறேன்.''

தரையில் அடித்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அவள் பார்த்தாள். அதன் விளையாட்டைப் பார்த்து அவளுடைய இதயம் சந்தோஷப்படவில்லை. திட்டமிடப்பட்ட நோக்கத்துடன் அவள் அதை வளர்க்கிறாள். அதை அவள் ஒரு ஆயுதமாக ஆக்கு கிறாள். தாய் அன்பு செலுத்தி, தாயின் பாசத்தின் ருசியை அறிந்து வளரும் குழந்தைக்கு, வளர்ந்த பிறகு அந்த நோக்கத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். அதைப் பெற்றெடுத்த பிறகு உண்டான வலி, ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது இருக்கும் வலியாக இல்லாமல் இருக்கலாம். தான் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த ஒரு குழந்தை என்று அதைப் பார்க்க அவளால் முடியாது. அவள் அன்பு செலுத்தி வளர்க்கவில்லை. அந்தக் குழந்தை வளர்வதற்காக வளர்க்கிறாள். அவளுக்கு அதன் அழகான சிரிப்பையும் ஆனந்தமான விளையாட்டையும் பார்க்க வேண்டும் என்றில்லை. அந்தக் குழந்தையைப் பார்க்கும்போது, தனக்கு ஆனந்தத்தைத் தந்த ஒரு ஆணை அவள் நினைக்கவில்லை. தன்னுடைய தாயை இடித்துக் கொன்று விட்டு, அவளை அந்த நேரத்தில் பலாத்காரம் செய்த ஒரு அரக்கனைத்தான் அவள் நினைக்கிறாள். அவன் எப்படி இருப்பான் என்று அவளுக்குத் தெரியாது. அந்தக் குழந்தை ஒரு கெட்ட கனவின் சின்னமாக இருக்கிறான்.

2

ரணமும் அழிவும் தாண்டவம் ஆடிய கண்டமார் கிராமத்தின் ரத்தம் படிந்த களங்களின் நிறம், புதிதாகப் பெய்த மழையில் மறையத் தொடங்கியது. மாமிசச் சதைகள் காய்ந்து ஒட்டிக் கொண்டிருந்த எலும்புத் துண்டுகள் ஆங்காங்கே சிதறியும், சில இடங்களில் குவியலாகவும் காணப்பட்டன. பிணங்களைக் குவியலாகப் போட்டு மண்ணை வெட்டி மூடி உண்டாக்கப்பட்ட மேடுகள் சிறிது சிறிதாகக் குறைந்தன. நன்கு வளர்ந்து கொண்டிருக்கும் தென்னைகளுக்குக் கீழே, மாலை முடிந்த நேரத்தில் இருளில் நட்சத்திரங்கள் தெரிவதைப் போல தூரத்திலும் அருகிலும் சேர்ந்து சேர்ந்து, கிழக்கு திசையில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரியில் பயணிக்கும் படகோட்டியின் கண்களுக்கு, முறையே இல்லாமல் காணப்படும் எத்தனையோ ஆயிரம் சிறிய தீபங்கள் இனிய அனுபவத்தைத் தந்து கொண்டிருக்கின்றன! இன்று அந்தப் பக்கம் பார்த்தால் இருட்டு! இருட்டு!

பகல் வேளையில் கால் ஒடிந்த ஒருவன் கொம்பைக் கையில் பிடித்துக் கொண்டு தாவுவதையோ, ஒரு முடமானவன் முழங்கால்கள் மோதும் வண்ணம் வேக வேகமாக நடந்து செல்வதையோ பார்க்க நேரிடலாம். அந்த ஏராளமான குடிசைகளைப் பார்க்க முடியாது. ஏரியின் வழியாகச் செல்லும் படகோட்டிகள் பகல் நேரத்தில் அந்த திசையையே பார்த்துக் கொண்டு செல்வார்கள். வரலாற்றில் ஒரு நாடகம் ஆடிய இடம் அது. அங்கு இந்த சிறிய மனிதன் துப்பாக்கி குண்டைப் பார்த்து சவால் விட்டான். ஆனால், அங்கு நடந்த எதையும் உலகம் தெரிந்து கொள்ளவில்லை. அந்த மிகவும் பயங்கரமான கொலைச் செயலிலிருந்து சிரமப்பட்டு வெளியே வந்த அந்த முட வனுக்கும் நொண்டிக்கும் ஒருவேளை ஏதாவது கூறுவதற்கு இருக்கும்!

அந்த ஆளரவமற்ற கிராமத்தின் வழியாக இப்போதும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் இரவிலும் பகலிலும் ரோந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இரவின் பயங்கரமான தருணங்களில் அங்கு இப்போதும் சில தீவிர செயல்கள் நடந்து கொண்டிருக்கலாம். அந்த ஆரவாரம் அடங்கவில்லையா என்ன? ஒரு உயர்வு உண்டாக வாய்ப்பிருக்கிறது...!

உயரப் போகிறவர்கள் யார்? அந்த முடவனும் நொண்டியுமா? ரகசியம் யாருக்குத் தெரியும்? கொண்ட கொள்கையில் விடாப்பிடியாக நின்றிருந்த வாழ்க்கையின் மனபலம் எப்படிப்பட்ட அற்புதச் செயல்களைச் செய்து காட்டியிருக்கிறது! ஆயிரக்கணக்கான பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு நேராக மார்பைக் காட்டவில்லையா? அந்த வரிசைக்கு இடைவெளி உண்டாகி விட்டதா?

அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று மனதிற்குள் விரும்பிய போராட்டம் வெற்றி பெறும் என்றுதான் நம்பிக் கொண்டிருப்பார்கள்.

எனினும், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து இறந்த, ஊரை விட்டுச் சென்ற மனிதர்கள் தவிர, அங்கேயே வாழ்ந்து கொண்டிருந்த யாருக்கும் ரத்தம் இல்லை. சதை இல்லை. எலும்புக் கூடுகள்! அதே கோலத்தில் ஆடியாடி போய்க் கொண்டிருக்கின்றன. அவை எதுவும் இந்த உலகத்தில் இருக்கும் உயிர்கள் அல்ல.

அவர்கள் பெண்களாக இருந்திருக்க வேண்டும். ஆண்களாகவும் இருந்திருக்க வேண்டும். அவை அனைத்தும் பழைய கதைகள். ஒரு இரவு நேரத்தில் அவர்கள் நடந்து திரிகிறார்கள். ஒன்று கூடி ஆலோசனை பண்ணுகிறார்கள். இனியும் அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து எழுந்து நிற்பார்கள் என்று...

இரவு வேளையில் கரைக்கு அருகில் ஒரு படகுகூட செல்வதில்லை. மிகவும் பயங்கரமான அலறல் சத்தங்கள் தூரத்தில் போய்க் கொண்டிருக்கும் படகுகள் வரை கேட்கின்றன என்று கூறிக் கொள் கிறார்கள். நீளமான தென்னை மடல்களில் காற்று புகுந்து எழுப்பும் ஓசை அல்ல. இனம் புரியாத அலறல் சத்தம்! வேறு எந்தவொரு இடத்திலும் கேட்டிராத ஒரு சீட்டி ஒலி, மேற்குப் பக்கமாக வீசும் காற்றில் கலந்திருக்கிறது. அந்தப் பக்கம் பார்த்தால் அங்கும் இங்கும் ஆட்கள் கூட்டம் கூடி இருப்பதைப் போல தோன்றும்.


உண்மையாக இருக்கலாம். அந்த மண் மேடுகளில் இருந்து எலும்புக் கூடுகள் எழுந்து நடந்து திரியலாம். அந்த சீட்டி ஒலி ஆங்காங்கே பரவிக் கிடக்கும் எலும்புத் துண்டுகள் வழியாக ஆள் அரவமற்ற பிரதேசத்தில் காற்று நுழையும்போது உண்டானதாக இருக்கலாம். அங்குள்ள சூடான குருதியைக் குடித்த மணல் துகள்கள் கொள்கைகள் நிறைந்த உணவுகளுடன் வளர்ந்து சிந்தித்துக் கொண்டிருக்கலாம். அவை எதுவும் இல்லாவிட்டால், அந்த முடவனும் நொண்டியும் கிழவனும் வயிறு வீங்கிய சிறுவனும் தங்களுடைய மகனின் அல்லது தந்தையின் அல்லது சகோதரனின் பிணங்கள் எரிந்த சாம்பலின் மீது நின்று கொண்டு, அவர்களுடைய சாம்பலை எடுத்து உரத்த குரலில் அழுகிறார்கள் என்று இருக்கக் கூடாதா?

அங்கு இறந்த வீர ஆன்மாக்களின் போராட்ட ஆரவார சத்தம் இன்று வரை எதிரொலித்துக் கொண்டிருப்பது நிற்கவேயில்லை. அது தொடர்ந்து காற்றில் கலந்து ஒரு நிரந்தர செய்தியாக ஆகி விட்டிருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் பதினெட்டு முழங்கள் கொண்ட துடுப்பை எடுத்து ஊன்றும் படகோட்டிக்கு, அந்த இடத்தைத் தாண்டும்போது ஒரு செய்தி கிடைத்துவிட்டிருப்பதைப் போல தோன்றியது- அந்த மணல் துகள்களின் செய்தி! அவனுக்கே தெளிவாகப் புரியாத அளவிற்கு இருந்தாலும், சிலவற்றை அவன் நினைக்கத்தான் செய்கிறான். அரசியலைப் பற்றியோ, பொருளாதாரத்தைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ ஒன்றிரண்டு வார்த்தைகளைக் கூறிவிட்டு அவன் இப்படி நிறைவு செய்கிறான்.

"எனினும், அந்த மண்ணுக்கு வீரியம் இருக்கிறது.'

ராணுவம் இருக்கும் இடத்திலும் தெளிவற்ற ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அந்த மக்கள் கூட்டத்தின் மன தைரியத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டுச்சுட்டு அவர்களின் விரல்களே காய்த்துப் போய்விட்டன. எனினும், வரிசை சிதறவே இல்லை என்பதைப் புரிந்து கொண்டார்கள். அன்றைய முயற்சியின் களைப்புடன் சேர்ந்து ஒரு பயமும் நுழைந்துவிட்டிருந்தது. பேய்கள் பேய்கள் என்று அவர்கள் கூறினார்கள். அந்த மிகப் பெரிய செயலுக்குப் பிறகு, இறப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் எஞ்சியிருக்கும் எத்தனையோ மனிதர்களும் எங்கு ஒளிந்திருக்கிறார்கள்? அது ஒவ்வொரு பட்டாளக்காரனும் ஒருவரோடொருவர் கேட்கக்கூடிய கேள்வியாக இருந்தது. அந்தப் பேய்களின் உன்னதமான ஆவேசம் எப்படி விநியோகம் செய்யப்படும்? அது செயல்பட்டே தீர வேண்டிய ஒன்றல்லவா? ஆச்சரியப்படத்தக்க அந்த ஆவேசத்தால் செயல்படாமல் இருக்க முடியுமா? இல்லை... இல்லை... நிச்சயமாக முடியாது. பூமிக்குள்ளிருந்து அந்த ஆயிரங்கள் எந்த நள்ளிரவு நேரத்தில் மேலே எழுந்து வருமோ? யாருக்குத் தெரியும்! பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் இரவில் தரையில் உறங்குவதற்காகப் படுத்திருக்கும்போது, அந்த கோஷங்கள் பூமிக்குள் முழங்குவதைக் கேட்கலாம். அன்று இறந்தவனின்- மண்ணுக்குக் கீழே சென்றவனின்- அல்ல... உயிரோடு இருப்பவனின் முழக்கம் அது. அது எந்தச் சமயத்திலும் முடிவுக்கு வராது. பூமிக்குக் கீழே பலரும் நடந்து கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமா? ஒரு துயர நிவாரண மையத்தை பட்டாள முகாமிற்கு அருகில் திறந்திருக்கிறார்கள். அங்கு அரிசி, ஆடைகள் எல்லாம் இருக்கின்றன. அந்த ஊரில் எஞ்சியிருப்பவர்களில் ஒருத்தன்கூட அந்தப் பக்கமாகத் திரும்பிப் பார்ப்பதில்லை. பேய்கள்! மரணமடைந்த பேய்களுக்கும் உயிருள்ள பேய்களுக்கும் மத்தியில் வாழ வேண்டியிருக்கிறது.

அந்த பயம் படிப்படியாக வேறொரு வடிவத்தை அடைந்தது. அந்த ஊர் நன்கு அறிமுகமானவுடன், அங்குள்ள மனிதப் புழுக்களின் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் படித்தவுடன் அவர்களுக்குப் பல விஷயங்களும் புரிந்தன. பட்டாளத்தைச் சேர்ந்தவன்... அவனும் மனிதன்தானே? அவர்கள் இறந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுப் பார்க்க ஆரம்பித்தார்கள். யாருக்கும் ஒரு பிடியும் கிடைக்கவில்லை. எரிந்த, புதைத்த மனிதர்களின் எண்ணிக்கை- அதைச் சரியாகக் கணக்கிட முடியவில்லை. ஏரியில் எவ்வளவு பிணங்கள் அடித்து வரப்பட்டு மூழ்கின! உறுப்புகள் செயல்படாமல் நீருக்குள் சென்றன! இப்படிப் பழைய சம்பவங்களை நினைத்த போது, ஒரு விஷயத்தை அவர்கள் ஒருவரோடொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

“இவ்வளவு பேர் எதற்காக இறந்தார்கள்?''

அதற்கு பதில் இல்லை.

கண்டமாரில் உயிர் இருப்பதாகக் கூறி நடக்கும் பேய்கள்- அவை ஒவ்வொன்றுக்கும் வாழ்க்கையில் ஒரு நோக்கம் இருப்பதாகத் தோன்றியது. அவை இறக்க வேண்டும் என்ற முடிவை எடுக்கவில்லை.

ஒரு சிறுவன்... அவனுக்கு யாருமில்லை. வேண்டியவர்கள் எல்லாரும் மரணத்தைத் தழுவிவிட்டார்கள். தந்தையைக் கொன்ற துப்பாக்கி குண்டுதான் கர்ப்பமாக இருந்த தாயையும் கொன்றது. அவளுக்கு ஒரு சிறு குழந்தை இருந்தது. அது அப்போது இறக்க வில்லை. அந்தப் பையன் ஏதாவது ஊருக்குப் போய் பிழைத்திருக்கக் கூடாதா? இந்த நாசம் பிடித்த ஊரில் எதற்காகச் சுற்றிக் கொண்டிருக்கிறான்? அவனுடைய பார்வையைப் பார்த்தால் ஏதோ ஒரு நோக்கம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

தந்தையையும் தாயையும் ஒரே ஒரு துப்பாக்கி குண்டை பயன்படுத்தி சாகடித்தது, அதுவும் அவள் ஒரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டும் இன்னொரு குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டும் மூன்றாவது குழந்தையை வயிற்றில் வைத்துக் கொண்டும் இருக்கும்போது, நல்ல ஒரு விஷயமல்ல என்று அந்தக் கொலைச் செயலை நேரில் பார்த்த ஒரு பட்டாளக்காரன் நினைத்தான். அந்த ஆரவாரத்திற்கு மத்தியில் அதைப் பார்த்தபோது, அப்படிப்பட்ட ஒரு சிந்தனை மின்னலைப்போல தோன்றி மறைந்தது. அவ்வளவுதான். தாய் இறந்து கீழே விழுந்தபோது கைக்குழந்தை அவளுடைய மார்பின்மீது கிடக்கிறது. அது அதற்குப் பிறகும் அன்னையின் மார்பிலிருந்து பால் குடித்திருக்கும். அந்தக் குழந்தை எப்போது வரை வாழ்ந்திருக்கும்? இரவு நேரத்தில் நாயும் குள்ள நரியும் ரத்தத்தைக் குடிப்பதற்காக வந்தபோது அதற்கு உயிர் இருந்திருக்குமா? அந்தக் குழந்தைக்கு ஒரு நாய் தூக்கிக் கொண்டு போகக்கூடிய அளவிற்கே எடை இருந்தது. அதுமட்டும் உண்மை. அந்தப் பட்டாளத்தைச் சேர்ந்தவனுக்கு- அந்தக் குடும்பத்தை நாசம் பண்ணிய நண்பனிடம் கூற வேண்டும் என்று பல நேரங்களிலும் தோன்றியிருக்கிறது- குழந்தைகளையும் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கியிருக்கலாம் என்று.

ஆறே மாதங்களில் பதினைந்து வயது அதிகமான ஒரு வயதான மனிதன் இன்னொருவனின் கவனத்தில் பட்டான். அவன் இப்போது முழுமையாக கூன் விழுந்து காணப்படுகிறான். அவனுக்கும் யாரும் எஞ்சியிருக்கவில்லை. ஒரு மகன் இருந்தான். அவன் துப்பாக்கி குண்டுக்கு இரையாகிவிட்டான். மறுநாளிலிருந்து அந்தக் கிழவனை பிணங்களை எரிப்பதற்கும் பிணங்களைப் புதைப்பதற்கும் நியமித்தார்கள். வரிசையாகக் கிடக்கும் பிணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துத் தூக்கியபோது அந்த அப்பிராணி மனிதன் தன்னுடைய மகனையும் பார்த்தான்.


அப்போது மகனுக்கு மூச்சு இருந்தது என்று கூறப்படுகிறது. எது எப்படியோ- கிழவன் மகனை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிட்டான். அதற்காக கிழவன் ஒரு தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருந்தது. மகனுடைய மார்புப் பகுதியிலிருந்து பிய்ந்து வெளியே வந்து தனியே வராமல் இருந்த- சிறிய அளவிலேயே இருந்த ஒரு சதைப் பகுதியை கிழவனைத் தின்ன வைத்தார்கள் என்ற தகவலை ஜோசப் என்ற பட்டாளத்தைச் சேர்ந்தவன் கூறுவது காதில் விழுந்தது. அது தேவையற்ற ஒன்று. ஆனால், அங்கு ஒரு கேள்வி இருக்கிறது. அந்த வயதான கிழவன் அப்படிப்பட்ட ஒரு மகனை எதற்காகப் பிறக்கச் செய்தான்? அந்தக் கிழவனும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஒரு நோக்கம் இருக்கவே செய்கிறது.

இன்னொரு பட்டாளக்காரனுக்கு அவனுடைய ஒரு நண்பன் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயலைப் பற்றி நல்ல கருத்து இல்லை. அது மட்டுமல்ல -அது இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்பது அவனுடைய கருத்தாக இருந்தது. தாயும் மகளும் மகனும் உள்ள குடும்பத்திற்குள் அவன் நுழைந்து, மகளை பலாத்காரம் செய்தபோது, "வேண்டாம்' என்று தடுத்த மகனைக் கொண்டே அவனுடைய தாயை... உண்மையிலேயே அது மனிதத்தனத்திற்கு பொருத்தமான ஒரு செயல் அல்ல. அந்த அன்னை மட்டும் இப்போதும் இருக்கி றாள். அவளும் ஏன் மரணத்தைத் தழுவவில்லை?

இப்படி இறப்பதற்கு உரிமை உள்ளவர்கள், இறக்காமல் இருப்பதற்குக் காரணங்கள் இல்லாதவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது நோக்கம் இல்லாமலா?

அந்த முகாமில் இருக்கும் ஒவ்வொரு பட்டாளக்காரனுக்கும் உடனிருக்கும் பிற பட்டாளக்காரர்களைப் பற்றிய ஒவ்வொரு கதைகளும் தெரியும். அப்படியெல்லாம் நடந்திருக்கக் கூடாது என்று ஒருவருக்கொருவர் அறிவுரை கூறிக் கொள்வார்கள். "நடந்தது நடந்துவிட்டது' என்று அவை எல்லாவற்றையும் மறப்பதற்கு முயற்சிப்பார்கள்.

ராணுவத்தின் ஆட்சிதான்... எனினும்... எனினும் என்று எல்லாரும் கூறினார்கள்.

3

போராட்டங்கள் முற்றிலுமாக நசுக்கப்பட்டுவிட்டன என்று ரிப்போர்ட் தயார் செய்யப்பட்டது. இரண்டு வருட பட்டாளத்தின் ஆட்சிக்குப் பிறகு கண்டமார் விடுதலை ஆகப் போகிறது.

அந்த ஊரின் உரிமையாளர்கள் என்ற தகுதியைக் கொண்ட நிலச்சுவான்தாரும் தொழில் அதிபரும் ஒன்று சேர்ந்து கலந்து பேசி முடிவு செய்தார்கள்- பிரிந்து செல்லும் ராணுவத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு விடை கொடுக்கும் நிகழ்ச்சி நடத்த வேண்டுமென்று.

இதற்கிடையில் நிலச்சுவான்தாருக்கும் தொழிற்சாலை உரிமையாளருக்கும் சில சிறிய செயல்களைச் செய்து முடிக்க வேண்டியதிருந்தது. நிலச்சுவான்தார் சில குடும்பங்களை வீடுகளில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார். பல குடிசைகளும் ஆட்கள் யாரும் இல்லாமல் காலியாகக் கிடந்தன. வீடுகளை காலி பண்ணாதவர்களும் இருந்தார்கள். அவர்களையும் வீட்டை விட்டு வெளியேற்றி அனுப்பிவிட்டு, பூமி யாருமே இல்லாமல் தனக்குக் கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொழிற்சாலை உரிமையாளருக்கு இன்னொரு காரியம் நிறைவேற வேண்டியதிருந்தது. தொழிலாளர்களை வழி தவறிப் போகச் செய்யும் சிலர் இப்போதும் ஊரில் இருக்கிறார்கள். அவர்களைச் சற்று அச்சமடையச் செய்ய வேண்டும். இனிமேல் அவர்களிடமிருந்து தொல்லைகள் இருக்கக் கூடாது.

நிலச்சுவான்தாருக்குச் சொந்தமான ஒரு வீட்டில், போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மனிதனின் தந்தையும் மூன்று குழந்தைகளும் இருந்தார்கள். அவன் இறந்துவிட்டானா அல்லது உயிருடன் இருக்கிறானா என்பதே உறுதியாகத் தெரியவில்லை. அந்த நிலையில் அந்த வீட்டில் இருப்பவர்கள் வெளியேற்றப்பட வேண்டியவர்கள்தானே? அந்தக் குடும்பத்தின் ஒரு வேர் இருந்தால் போதும். அது அரும்பித் தழைத்து வளர ஆரம்பித்துவிடும். அந்த தந்தைக்கு நடக்க முடியவில்லையென்றாலும், அவன் தன் மகனைப் பிறக்கச் செய்திருக்கிறான். அந்தப் பிள்ளைகள் அவனுடைய பிள்ளைகள்தான். எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா?

நிலச்சுவான்தாரின் எண்ணம் நிறைவேறியது. கண்டமாரில் எஞ்சியிருந்த குடிசைகள் ஒவ்வொன்றையும் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் பிரித்து அழித்தார்கள். அந்த ஊரில் எஞ்சியிருந்தவர்கள் எல்லாருக்கும் ஒன்றும் இரண்டும் கிடைத்தன. அந்த வகையில் வீடே இல்லாத ஒரு மக்கள் கூட்டம் உண்டானது. அந்த ஊரில் ஒரு வீடு கூட இல்லாத நிலை உண்டானது.

எனினும், யாரும் ஊரை விட்டு வெளியே செல்லவில்லை. தென்னை மரங்களுக்கு அடியிலும் வீடுகள் இருந்த இடங்களின் தரைகளிலும் இப்போதும் அவர்கள் கூட்டமாகச் சேர்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். கூரை இல்லாவிட்டாலும், அங்கேயேதான் வசிக்கிறார்கள். போகவில்லை.

மீண்டுமொருமுறை அங்கு பயங்கரமான சூழ்நிலை நிலவியது. மரங்களின் நிழலிலும் தரையிலும் இருந்தவர்கள் அனைவரையும் விரட்டியடித்தார்கள். ஆனால், மறுநாள் காலையில் எங்கோ ஒளிந்திருந்துவிட்டோ என்னவோ அவர்கள் எல்லாரும் அங்கே இருந்தார்கள். அந்த இறுதி விரட்டியடித்தலில் சிலர் இறந்தனர். பாதையின் ஓரங்களிலும் தென்னை மரத்தடியிலும் இறந்துபோன பிணங்கள் கிடந்து நாறின. காகங்கள்கூட ஊரில் இல்லை.

அவர்கள் எங்கே செல்வார்கள்? அவர்கள் அங்கு பிறந்து வளர்ந்தவர்கள். நீளமான மடல்களைக் கொண்ட தென்னை மரங்கள். அவற்றை நட்டு வளர்த்தவர்களே அவர்கள்தான். அந்த மண்ணுக்கு அந்த அளவிற்கு வீரியம் கிடைத்திருப்பதே அவர்களின் வியர்வைத் துளிகள் கலந்திருப்பதால்தான். அந்த ஒற்றையடிப் பாதைகள் அவர்கள் வெட்டி உண்டாக்கியவை. வயல்கள் அவர்கள் உண்டாக்கியவை. ஜமீன்தாரின் மிகப் பெரிய மாளிகையும் அதற்குள் இருக்கும் சந்தோஷத்தைத் தரக்கூடிய பொருட்களும் யாருடைய கடுமையான உழைப்பால் வந்தவை? அந்த ஊர் நன்கு செழித்து எப்படி வந்தது? அந்த அப்பிராணிகள் எங்கு போக வேண்டும்?

ஒரு வாரத்திற்குப் பிறகு, பாதி மனிதர்கள் எஞ்சியிருந்தார்கள்.

பட்டாளத்தைச் சேர்ந்தவர்களை வழியனுப்பி வைக்கும் விழா ஒரு மிகப் பெரிய கொண்டாட்டத்தைப் போல நடந்தது. நிலச் சுவான்தாரின் மாளிகையில் அதிகாரிகளுக்கு ஐரோப்பிய பாணியில் விருந்து.... சாதாரண பட்டாளக்காரர்களுக்கு அங்கிருந்த சாப்பிடும் அறையில் விருந்து... இப்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உணவைத் தயார் பண்ணுபவர்கள் நகரத்தில் இருக்கும் ஒரு உணவு விடுதியைச் சேர்ந்தவர்கள்.

மாநிலத்தில் இருக்கும் முக்கிய மனிதர்கள் எல்லாரும் அழைக்கப்பட்டிருந்தனர். மிகவும் முக்கியமான அரசியல் அமைப்பான ப்ரஜா பரிஷத்தின் தலைவர் வேலை பளுவின் காரணமாக வர முடியாத நிலையில் இருப்பதாக பதில் வந்தது. ஆனால், டிவிஷன் கமிட்டி தலைவரும் முக்கியமான வர்த்தகர்களும் தொழிலதிபர்களும் வந்திருந்தார்கள். மாநிலத்தின் உயர்ந்த நிலையை அந்த விழா வெளிப்படுத்தியது.

ஒரு புகழ் பெற்ற பாடகியின் பாட்டுக் கச்சேரியும் இருந்தது.

இரவு எட்டு மணி ஆனபோது விருந்தினர்கள் ஒவ்வொருவரும் வந்து சேர ஆரம்பித்தார்கள்.


வீட்டின் தலைவர் கை குலுக்கி அவர்களை வரவேற்று, அறையில் அமர வைத்தார். விருந்து ஆரம்பிக்கும் வரையில் விருந்தினர் அங்கு சிகரெட் புகைத்துக் கொண்டும் வெற்றிலை போட்டுக் கொண்டும் தமாஷாகப் பேசிக் கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். முக்கிய விருந்தாளி வந்து சேரவில்லை.

ப்ரஜாபரிஷத்தின் முக்கிய நபர் வந்ததும், எல்லாரும் எழுந்து அவரை வரவேற்றார்கள். நல்ல உயரத்தையும் பருமனையும் கொண்ட ஒரு மனிதராக அவர் இருந்தார். முகத்தில் பிரகாசமும் கம்பீரமும் உயர்ந்த நிலையும் விளையாடிக் கொண்டிருந்தன. அவர் ஒரு வழக்கறிஞராகவும் பெரிய தொழில்கள் சிலவற்றை நடத்திக் கொண்டிருப்பவராகவும் ஒரு நிலச்சுவான்தாராகவும் இருந்தார். மாநிலத்திற்காக ஏராளமான தியாகங்களைச் செய்திருக்கிறார்.

தலைவர் ஆசனத்தில் அமர்ந்தவுடன் மீதி இருந்தவர்களும் அமர்ந்தார்கள். அவருடைய வருகையைத் தொடர்ந்து சொற்பொழிவிற்கு ஒரு உயிர்ப்பு உண்டானது. தலைவர் தன்னுடைய நிலைக்கு ஏற்றபடி புன்னகையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் கூறிக் கொண்டிருந்தார். அங்கு அப்போது நடந்து கொண்டிருந்த சொற்பொழிவு, சர்வதேச அளவில் நிலவிக் கொண்டிருந்த பெரிய விஷயங்களைப் பற்றியதாக இருந்தது.

ஒரு விவசாயி இனிமேலும் போர் உண்டாகுமோ என்று கேட்டான். தலைவர் அதற்கு "இல்லை” என்று பதில் கூறினார். ஆனால் சோவியத் ரஷ்யாவின் பலத்தை மேலும் அதிகரிக்கக் கூடாது. கம்யூனிசத்தையும் சோஷலிசத்தையும் நாடுகள் ஒன்றாகச் சேர்ந்து நசுக்கவில்லையென்றால், போர் உண்டாகும் என்றார். சீனாவின் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தைப் பற்றிக் கருத்து கூறும்போது அது ரவுடிகளின் அமைப்பு என்றார் அவர். உணவுப் பற்றாக்குறையைப் பற்றிப் பேசும்போது சமீப காலத்தில் அதைப் போக்க முடியாது என்று அவர் கூறினார். நெல்லின் விலை அதிகரிக்கவே செய்யும் என்றார். தொடர்ந்து அந்த சொற்பொழிவு மாநிலத்தின் அரசியல் நிலைமையைப் பற்றித் திரும்பியது. ஒரு போராட்டம் அவசியம் தேவைப்படுகிறது. அதற்கு ப்ராஜாபரிஷத் தயாராகிக் கொண்டு இருக்கிறது. முழுமையான சொற்பொழிவாற்றும் திறமையுடன், ஒரு அவையைச் சந்திப்பதைப் போல தலைவர் அரசியல் நிலைமையைப் பற்றி உரையாற்றினார். அவர் இப்படிக் கூறினார்:

“இந்த நாசம் பிடித்த ஏகாதிபத்தியத்திடமிருந்து மாநிலத்தைக் காப்பாற்ற வேண்டும். நாம் நம்முடைய பிள்ளைகளிடம் விளக்கிக் கூற வேண்டிய ஒரு சூழ்நிலை இது. இந்த சந்தர்ப்பத்தை இழந்துவிட்டால் ஒரு நூற்றாண்டு காலத்திற்கு எதுவும் செய்ய முடியாது. அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். கைப்பற்றியே ஆக வேண்டும்!''

அந்தச் சூழ்நிலையில் மேஜர் ராஜசேகரனும் அவருடைய அலுவலகத்தில் உள்ள அலுவலர்களும் பிற அதிகாரிகளும் அங்கு வந்து சேர்ந்தார்கள். தலைவர் உட்பட முக்கிய மனிதர்கள் எழுந்து வரவேற்றார்கள். அந்தப் பட்டாள அதிகாரி தலைவரிடம் கேட்டார்:

“என்ன சார்? அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றா கூறுகிறீர்கள்?''

தலைவர் சற்று வெளிறிப் போய்விட்டார். அப்போதும் ராணுவ ஆட்சி முடிவடையவில்லை என்று அவருக்குத் தெரியும். ஒரு வாரம் ஆன பிறகே அது முடிவுக்கு வரும். அவருடைய அந்த வார்த்தைகளை அடிப்படையாக வைத்து, வேண்டுமென்றால் இப்போது மேஜர் அவரைக் கைது செய்யலாம். எனினும், அவருக்கு பயமில்லை. பல தடவை சிறைக்குச் சென்றிருக்கிறார். அவர் மன்னிப்புக் கேட்கிற தொனியில் சொன்னார்:

“இல்லை... இந்த மாநிலத்தில் மக்களின் போராட்டம் ஆரம்பமாகப் போகிறது என்பதைச் சொன்னேன்.''

அந்த அறிவிப்பு ஒரு தைரியமான அறிவிப்பாக இருந்தது. மேஜர் சொன்னார்:

“பேசணும் சார்.... பேசணும். பேச்சுதான் தேவையற்ற தொல்லைகளை உண்டாக்குகின்றது. இங்கே பார்த்தீர்கள் அல்லவா? நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். எங்களுக்குத்தான் பிரச்சினையே. இங்கே இரண்டு வருடங்களாகக் கிடந்து கஷ்டப்படுகிறோம். எல்லாவற்றுக்கும் பேச்சுத்தானே காரணம்?''

தலைவர் பதில் சொன்னார்:

“இப்படிப்பட்ட பிரச்சினைகள் எங்களுடைய அமைப்பில் இல்லை. இங்கு இறந்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். அவர்களுடைய நம்பிக்கைக் கொள்கையே வன்முறைதான். நாங்கள் வன்முறை இன்மையையும் அகிம்சையையும் நம்புகிறோம். நாங்கள் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவர்கள்.''

“யாருடைய தொண்டர்களாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, சார். நீங்களும் பிரச்சினைகளை உண்டாக்குபவர்கள் தான்!''

தலைவர் தங்களுடைய நிலையை விளக்கிக் கூறுவதற்காக படாதபாடு பட்டார். மேஜருக்கு அப்படி ஒரு தவறான எண்ணம் இருப்பது ஆபத்தானது. அவர் சொன்னார்:

“இல்லை சார்... நாங்களும் கம்யூனிஸ்ட்டுகளும் எதிர் எதிரானவர்கள். அவர்கள் எங்களுடைய விரோதிகள்.''

விருந்திற்கு அழைத்தவர் வந்து வரவேற்பறையில் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார். விருந்தாளிகள் எழுந்தார்கள்.

அலங்கரிக்கப்பட்டிருந்த சாப்பிடும் மேஜையைச் சுற்றிலும் விருந்தாளிகள் எல்லாரும் போய் உட்கார்ந்தார்கள். சாப்பாடும் குடியுமாக அந்த விருந்து ஆரம்பமானது.

அது ஒரு நீண்ட நிகழ்ச்சியாக இருந்தது. முக்கிய விருந்தாளிகளின் நல்ல உடல் நிலைக்காக பானத்தை அருந்தியவாறு, விருந்தை ஏற்பாடு செய்தவருக்காக அந்தப் பொது மக்களின் தலைவர் சொற் பொழிவாற்றினார். அந்த சொற்பொழிவை அவர் இப்படி நிகழ்த்தினார்:

“உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பு இல்லாமல் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வாழ்விற்கும் மரணத்திற்கும் இடையில் கிடந்து சிரமப்பட்டபோது, இது போன்ற சந்தர்ப்பங்களில் இந்து தர்மம் உயிர்களுக்கு ஆறுதலாக இருப்பதைப் போல, நீங்கள் தர்ம அமைப்பிற்காக எங்களுக்கு மத்தியில் தோன்றினீர்கள். ஆமாம்... கம்யூனிஸ்ட் அரக்கர்களிடமிருந்து எங்களைக் காப்பாற்றிய உங்களை ஒரு அவதாரமாக இந்த ஊரின் எதிர்காலத் தலைமுறை நினைக்கும். இந்த சந்தர்ப்பத்தில் உங்களுடைய மனதிற்குள் இப்போது நிலவிக் கொண்டிருக்கிறது என்று நான் நம்பும், தவறான அர்த்தங்களுக்கு காரணமாக இருக்கக்கூடியதுமான ஒரு தவறான எண்ணத்தைப் பற்றி மேலும் இரண்டு வார்த்தைகள் கூறிக் கொள்கிறேன். ப்ரஜா பரிஷத் வன்முறையின்மை, அகிம்சை, மனிதாபிமானம், சகோதரத்துவம் ஆகிய உயர்ந்த கொள்கைகளின்மீது கட்டப்பட்டிருக்கும் ஒரு அரசியல் அமைப்பு. அதன் செயல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. ப்ரஜா பரிஷத்தின் தலைவர்களின் சொற்பொழிவுகள் அதை உறுதிபடத் தெளிவாக்கு கின்றன. உங்களுக்கு நல்ல உடல் நிலை நீடிக்கட்டும்.''

மேஜர் ராஜசேகரன் சமூக சிந்தனையுடன் பதில் சொற்பொழிவு நடத்தினார். ப்ரஜா பரிஷத்தைப் பற்றி அவர் எதுவும் கூறவில்லை. தலைவருக்கு மனதில் சிறிது வருத்தம் இருந்தது. பட்டாளக்காரர்.... என்ன செய்வார்? அவருக்கு தவறுகள் உண்டாகி இருக்கலாம்.

அந்த நேரத்தில் விருந்து முடிந்து, பட்டாளக்காரர்கள் நீளமான கூடத்தில் பல பிரிவுகளாக வட்டமாக உட்கார்ந்து நகைச்சுவையாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். விருந்து மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.


மாளிகையின் மேற்பகுதியில் மேஜையைச் சுற்றிலும் உட்கார்ந்து கொண்டு முள்ளால் குத்தித் தின்பதையும், சிவப்பு, கருப்பு நிறங்களில் இருந்த திரவங்களைப் பெரிய கண்ணாடிக் குவளைகளில் ஊற்றிக் குடிப்பதையும், ஒவ்வொரு நிமிடமும் உற்சாகம் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் கீழே இருந்த பட்டாளக்காரர்கள் சாளரத்தின் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூக்கு பிடிக்கும் அளவிற்கு உணவு சாப்பிட்டாலும் அவர்களுடைய நாவில் நீர் ஊறியது.

அதன் சுவை எப்படி இருக்கும்? சுவை எப்படி இருந்தாலும், பருகுவது என்பது சுவாரசியமான விஷயம்தான். அவை அதிகமான விலையைக் கொண்ட பொருட்கள். என்றாவது அதன் ஒரு துளியின் ருசியையாவது அனுபவிக்க முடியுமா?

ஒரு பட்டாளக்காரன் தனக்கு ஆர்வம் அதிகரிப்பதாகச் சொன்னான்.

“இல்லை... நான் கேட்கிறேன். அவை நம்முடைய தொண்டைக்குள் இறங்காதா?''

“அதன் ஒரு குப்பியின் விலை எவ்வளவு என்று நீ நினைக் கிறாய்?''

அப்போது இன்னொரு ஆள் கேட்டான்:

“என்ன விலை வேண்டுமானாலும் இருக்கட்டும். நமக்குத் தந்தால் என்ன? நமக்குத்தான் தர வேண்டும். மேஜர் ஒரே இடத்தில் இருந்து கொண்டிருந்தார். சிரமப்பட்டதும் மிகப் பெரிய பாவத்தைச் செய்ததும் நாம்தான்...''

இன்னொரு மனிதன் அதை ஒப்புக் கொண்டபின், அது மட்டுமல்ல- அவன் கூறுவதற்கு இன்னும் சில விஷயங்கள் இருந்தன.

“நாம் இல்லாமல் இருந்திருந்தால், இந்த நிலச்சுவான்தாரும் தொழிற்சாலை உரிமையாளரும் இப்படி சந்தோஷத்தில் கிடந்து திளைக்க முடியுமா?''

நான்காவதாக ஒரு மனிதன் சொன்னான்:

“அங்கு உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருத்தனும் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? அந்த ரேஷன் வியாபாரம் செய்பவன்... அவன்தானே நமக்கு விநியோகம் செய்து கொண்டிருந்தவன்! அவன் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கில் திருட்டுத்தனம் பண்ணி சம்பாதித்துக் கொண்டிருக்கிறான். அந்த ஜரிகை போட்ட மேற்துண்டு அணிந்திருக்கும் மனிதன் இருக்கிறானே... அந்தப் பக்கமாக இருப்பவன்... அவனுடைய வீட்டில் மலையைப் போல நெல் குவிந்திருக்கிறது. நான் அங்கு போயிருக்கிறேன். எப்படி அவை அனைத்தையும் காலி பண்ணுவான் என்று நான் நினைத்தேன். ஆனால், ஒரு பறைக்கு ஐந்து ரூபாய் விலை. அந்த காந்தி தொப்பி அணிந்து வந்த ஆள்தான் அவர்களுடைய தலைவர்.''

சற்று போதை உள்ளே இருந்தாலும் ஒருவனின் இதயத்தின் ஆழத்திற்குள்ளிருந்து இன்னொரு கேள்வி எழுந்தது.

“எவ்வளவு பேர் இறந்திருக்கிறார்கள்?''

“எல்லாருமே இறந்துவிட்டார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.''

அப்போது இன்னொருவன் கேட்டான்:

“எல்லாரும் கம்யூனிஸ்ட்களாக இருந்தார்களா?''

அவை அனைத்தையும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்த ஒருவன் சொன்னான்: “அப்பிராணிகள்... முழுமையான அப்பிராணிகள்... டேய், உங்களுக்கு எந்த விஷயமும் தெரிந்திருக்கவில்லை. இங்கே என்ன நடந்தது தெரியுமா? தெரியவில்லையென்றால் கேளுங்க. அவர்கள் எல்லாரும் இந்த நிலச்சுவான்தார்களின், முதலாளிமார்களின் வேலையாட்கள். அவர்களுக்கு சங்கங்கள் இருக்கின்றன. இதெல்லாம் எப்படி நடந்தது என்று நினைக்கிறீர்கள்? இந்த ஏழைகள் அரிசியும், நெல்லும் கிடைக்காமல் சிரமப்பட்டார்கள். வேலையும் இல்லை. கூலி கேட்டால் தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள். நிலச்சுவான்தார் அவனுடைய வீட்டை இடித்து வெளியே போகும்படி கூறுவார். அதை தொழிலாளர்களின் சங்கம் எதிர்த்தது. ஊர் முழுவதும் எதிர்த்தார்கள். அப்போது நிலச்சுவான்தாருக்கும் முதலாளிக்கும் பயம் உண்டாகிவிட்டது. இதோ, நாம் பார்க்கும் தென்னைகளும் மரங்களும் இந்த ஏழை மனிதர்கள் வைத்தவைதான். தேங்காய்க்கு விலை அதிகரித்தபோது, முன்பு அதை கவனித்துக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்த காவல் தேங்காய்களையும் நிலச்சுவான்தார்களே எடுத்துக் கொண்டார்கள். சங்கம் எதிர்த்தது. ரேஷன் கடைக்காரன் திருட்டுத்தனமாக விற்றதை சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கண்டு பிடித்தார்கள். நிலச்சுவான்தாரும் முதலாளியும் ரேஷன் கடைக்காரனும் பணம் உள்ளவர்கள் அல்லவா? அரசாங்கம் அவர்கள் பக்கம்தானே நிற்கும்? அப்போது தொழிலாளர்கள் சங்கம் அரசாங்கத்தையும் எதிர்த்தது. வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. பொதுக்கூட்டங்கள் நடந்தன. ஊர்வலங்கள் நடந்தன. நிலச் சுவான்தாரும் முதலாளியும் பயந்து நடுங்கிவிட்டார்கள். "ஜமீன்தார்தனம் அழியட்டும்” என்று அவர்கள் கூறினார்கள். அதுவும்... வேலை செய்து பருமனான உடல்களைக் கொண்ட ஆஜானுபாகுவான மனிதர்கள்... நாம் பார்த்திருக்கிறோம் அல்லவா? "கஞ்சி குடிப்பதற்கு அரிசி தர முடியுமா?' என்றுதானே அவர்கள் இறந்து விழும்போதுகூட உரத்த குரலில் கூறினார்கள்?''

ஒருவன் கேட்டான்:

“அப்படியென்றால் நாம் கதையைத் தெரிந்து கொள்ளாமலே ஆட்டத்தைப் பார்த்திருக்கிறோமா?''

“ஆமாம்...''

சிந்தனையில் மூழ்கியிருந்த ஒருவன் சொன்னான்:

“பார்த்தால்... நமக்கும் இந்த இறந்துபோன அப்பிராணி மனிதர்களுக்குமிடையே என்ன வித்தியாசம் இருக்கிறது? நாமும் பட்டினி கிடப்பவர்கள்தான்.''

“ஆமாம்...''

அந்த "ஆமாம்' என்ற சத்தம், அர்த்தத்துடன் வேறு எங்கிருந்தோ அசரீரியைப் போல அங்கு எல்லா இடங்களிலும் எதிரொலித்தது.

4

வாசலுக்கு மேலே சுவரில் ஒரு மண்டை ஓடு பற்களைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு பக்கங்களிலும் நீளமான விரல்களுடன் இரண்டு கைகள் மண்டை ஓட்டிற்கு சற்று மேலே... அந்த இரண்டு எலும்புத் துண்டுகளையும் மணிக்கட்டில் இரும்புச் சங்கிலியால் கட்டியிருந்தார்கள்.

அந்த இளம்பெண் அந்தக் காட்சியைப் பார்த்து நடுங்கிப் போய்விட்டாள்.

அந்தக் காட்சியின் இரண்டு பக்கங்களிலும் சுவரில் மன்னர்கள், அவர்களுடைய அமைச்சர்கள், பெரிய படைத் தளபதிகள் ஆகியோரின் ஓவியங்களும் உலகப் புகழ் பெற்ற ஓவியர்கள் வரைந்த பிரசித்தி பெற்ற ஓவியங்களும் இருந்தன. தாஜ் போன்ற கலைப் படைப்புகளின் ஓவியங்களும் இருந்தன. அந்த வகையில் வரவேற்பறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. எனினும், உள்ளே நுழையும்போது முதலில் கண்களில் படுவது அந்த மண்டை ஓடுதான்.

என்ன ஒரு பயங்கரமான காட்சி! திருமணம் முடிந்து கணவனின் வீட்டிற்கு முதல் தடவையாக கால்களை எடுத்து வைத்த போது, அவள் பார்த்த காட்சி அது. பட்டாளக்காரனின் மனைவியாக ஆகிவிட்டிருந்தாலும் ஒரு மென்மையான இதயத்தைக் கொண்ட இளம்பெண் அவள். அப்படி நடுக்கத்துடன்தான் அந்த வாழ்க்கை ஆரம்பமானது.

ஒரு மண்டை ஓடு மட்டும்தான் என்று, மேலும் ஒருமுறை கூர்ந்து பார்க்கும்போது தோன்றாது. சிறிய சிறிய மூன்று நான்கு எலும்புத் துண்டுகளை ஒன்றாகச் சேர்த்து கழுத்தும், தொடர்ந்து அப்படிப்பட்ட துண்டுகள் சேர்ந்து நீளமாகக் காட்சியளிக்கும் முதுகெலும்பும், மார்புக்கூடும், இடுப்பும், தொடை எலும்புகளும், மூட்டுகளும், கணுக்கால்களும், விரல்களும்... எல்லாம் கீழே இருக்கின்றன என்பதைப் போல தோன்றும் அந்த எலும்புக்கூடு தலையில் கையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருக்கிறது. மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தால்... கோர்க்கப்பட்ட பற்களுக்கு மேலே இருக்கும் பெரிய துவாரத்தின் வழியாக அது மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது. அது நம்மைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறது.


நளினிக்கு எப்படியாவது அங்கிருந்து தப்பித்தால் போதும் என்றிருந்தது. ஆனால், அந்த மண்டை ஓட்டிற்குக் கீழே உள்ள இடத்தின் வழியேதான் அவள் உள்ளே செல்ல முடியும். அந்த வாசலைத் தாண்டி உள்ளே நின்று கொண்டு ராஜசேகரன் திரும்பியவாறு சொன்னான்:

“வா... என்ன அங்கேயே நின்னுட்டே? இது உன்னுடைய வீடு. உனக்காகக் கட்டி அலங்கரிக்கப்பட்டது. உள்ளே வருவதற்கு ஏன் தயங்குகிறாய்?''

அவன் வந்து அவள் தோளில் கையை வைத்துப் பிடித்துக் கொண்டு நடந்தான். அந்த வாசலுக்குக் கீழே வந்தபோது, மேலே இருந்து ஒரு குளிர்ச்சியான காற்று அவளுடைய தலையின் மீது திடீரென்று பட்டது. முழு உடலும் மரத்துப் போய்விட்டதைப் போல அவளுக்குத் தோன்றியது. உடம்பு முழுவதும் நடுங்கியது. அவள் வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மூச்சுக்காற்று மிகவும் வெப்பத்துடன் காணப்பட்டது.

அந்தக் கணவன் அவளுடைய தோளில் கையைச் சுற்றி, அவளுடைய நெற்றியில் முத்தமிட்டான். அவன் சொன்னான்:

“இது என்னுடைய செல்லத்தின் வீடு.''

அன்று இரவு நளினிக்கு உறக்கமே வரவில்லை. அவளுக்கு அருகிலேயே அவளுடைய கணவன் படுத்து உறங்கிக் கொண்டிருந் தான். நீல நிறத்தில் இருந்த சுவரும் மேற்கூரையும், படுக்கையறையின் மங்கலான குத்து விளக்கின் பிரகாசத்தில் அவளுக்கு ஏதோ போல் தோன்றியது. தான் பூமியில் இருக்கவில்லை என்றும்; ஏதோ ஒரு பயங்கரமான மாய உலகத்தில் இருக்கிறோம் என்றும்; அருகில் படுத்திருப்பது யாரென்று தெரியவில்லை என்றும் அவளுக்குத் தோன்றியது. அவளால் மூச்சு விட முடியவில்லை. உடுக்கைச்சத்தம் ஒலிப்பதைப் போல் நளினிக்குத் தோன்றியது. அந்தக் கைகள் விடுதலை பெறுவதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. மேலே கூரையில் ஒரு நிழல் தெரிந்தது. விரல்களின் அந்த நீளமான எலும்புகள்.

அவளுக்கு உரத்த குரலில் அழ வேண்டும் போல இருந்தது. ஆனால் சத்தம் வெளியே வரவில்லை. அவளுக்கு எழ வேண்டும் போல இருந்தது. ஆனால் உடல் ஒத்துழைக்கவில்லை. அவளுக்கு மூச்சு அடைத்தது. நாக்கு வறண்டு போய்விட்டதைப் போல தோன்றியது. எனினும் அவள் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

எப்படியோ சற்று திரும்பிப் படுக்க அவளால் முடிந்தது. அப்படி சிறிது அசையவில்லையென்றால் அவள் மரத்துப்போய் இறந்திருப்பாள். அப்படியா! என்ன ஒரு நிம்மதி? அவளுக்கு உயிர் இருக்கிறது. ஆனால் அவள் யாரையோ தொட்டுக் கொண்டு படுத்திருக்கிறாள்.

“நளினி, நீ உறங்கவில்லையா?''

அது மனிதக் குரல் இல்லை. அவளால் பேச முடியவில்லை.

“உனக்கு குளித்திருப்பதைப் போல வியர்க்கிறதே?''

ராஜசேகரன் எழுந்து உட்கார்ந்தான்.

அவன் அவளுடைய முகத்தில் நீரைத் தெளித்தான். பருகுவதற்கு நீர் கொடுத்தான்.

தான் ஒரு கனவு கண்டதாக அவள் சொன்னாள்.

மறுநாள் அவள் தன் கணவனிடம் அந்த மண்டை ஓட்டைப் பற்றிக் கேட்டாள். அவன் அவளைப் பற்றியவாறு வரவேற்பறைக் குச் சென்றான்.

அப்போதும் அந்த வாசலைத் தாண்ட வேண்டும்.

அந்த மண்டை ஓட்டிற்கு முன்னால் போய் நின்று கொண்டு அதை நோக்கி விரலை நீட்டியவாறு அவன் சொன்னான்:

“இது யாருடைய மண்டை ஓடு என்று உனக்குத் தெரியுமா?''

அந்தப் பக்கம் பார்க்க அவளால் முடியவில்லை. அந்த அளவிற்கு அச்சத்தை உண்டாக்கக் கூடிய பல் இளிப்பு அது! அது யாருடைய மண்டை ஓடாக இருந்தாலும், அதன் உரிமையாளர் ஒரு மனிதனாக இருந்தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவன் தொடர்ந்து சொன்னான்:

“ஒரு பட்டாளக்காரன் வாழ்க்கையின் வெற்றிச் சின்னங்கள் இவை. இந்த மண்டை ஓடுகளும் கை எலும்புகளும் அவனுடைய பெருமையை வெளிப்படுத்துகின்றன. அவன் வெற்றி பெற்றான் என்பதற்கான ஆதாரங்கள் இவை. பார்... இந்த மண்டை ஓடு உன்னுடைய கணவனின் மிகப் பெரிய சம்பாத்தியம்...''

நளினி அந்தப் பேச்சைக் கேட்கவில்லை. அவள் எதுவும் பேசவும் இல்லை. திருமணம் ஆகாமல் இருந்தபோது, அவளுடைய கனவுகள்- அன்பு செலுத்தக் கூடியவனாகவும் அழகான தோற்றத் தைக் கொண்டவனாகவும் இருக்கக்கூடிய ஒருவன் தனக்குக் கணவ னாக வர வேண்டும் என்பதாக இருந்தன. அவளுடைய கணவன் நல்ல தோற்றத்தைக் கொண்டவன்தான். அன்பு செலுத்தக் கூடியவனாக வும் இருந்தான். ஆனால், அவன் ஒரு பட்டாளக்காரனாக இருந்தான்! ஒரு மனிதனின் மனைவியாக இருந்தால்... -இப்படித்தான் அவளுக் குத் தோன்றியது.

ராஜசேகரன் சிரித்துக் கொண்டே தொடர்ந்து சொன்னான்:

“ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக இருக்கும் பட்சம், சில விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த வாழ்க்கையே ஒரு வகையானது... உனக்கு அதெல்லாம் புரியும்.''

அந்த மண்டை ஓட்டைப் பார்த்து அவன் மனதில் ஆனந்தம் அடைவதைப் போல தோன்றியது.

“உன் கணவனுக்குப் பதவி உயர்வு மட்டுமல்ல- புகழும் மதிப்பு மிக்க கேடயங்களையும் பிற பரிசுகளையும் சம்பாதித்துக் கொடுத்தது இந்த மண்டை ஓடுதான்.''

அதற்குப் பிறகும் அவள் பேசவே இல்லை. அவன் தொடர்ந்து சொன்னான்: “இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அந்தப் புகழ் பெற்ற தொழிலாளர்களின் போராட்டத்தை நீ நினைத்துப் பார்த்ததுண்டா?''

ஆமாம்... அதை அவள் நினைத்துப் பார்க்கிறாள். பத்திரிகையில் வாசித்திருக்கிறாள். மாநிலத்தையே மிகவும் பயங்கரமாக நடுங்க வைத்த அந்தப் போராட்டத்தைப் பற்றி அவள் அந்த சமயத்தில் ஆர்வத்துடன் வாசித்திருக்கிறாள்.

“அந்தப் போராட்டத்தை நசுக்குவதற்காகச் சென்ற ராணுவத்தின் தலைவன் ஒருவேளை... அவன் உன்னுடைய கணவனாக இருப்பான் என்று நீ நினைத்திருக்கவே மாட்டாய். அப்படித்தானே?''

அவள் கவலையுடன் புன்னகைத்தாள்.

“அந்தப் போராட்டத்தின் தலைவன் சுப்பிரமணியத்தின் தலைதான் இது. அந்தக் கைகள் அவனுடையவைதான். நான்தான் இந்தக் கைகளால் அவனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினேன். அடடா! அந்த நாளை நினைக்கும்போது... அது மறக்கவே முடியாத நாள்... சம்பவங்களின் போக்கு சற்று மாறிவிட்டிருந்தால், என்னுடைய மண்டை ஓடு அவனுடைய வீட்டின் சுவரில் இருந்திருக்கும். நாங்கள் முழுமையாக அழிந்து போய் விட்டிருப்போம். பார் நளினி... என்னுடைய உடலில் இருக்கும் உரோமங்கள் எழுந்து நிற்கின்றன.''

அந்த நாளன்று நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி அவன் விளக்கிச் சொன்னான். என்ன ஒரு கதை அது! அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரன் உண்மையாகவே சொல்லப்போனால் ஒரு பிசாசாகத்தான் இருந்திருக்கிறான். அவள் கேட்டாள்:

“எனினும், அந்த மண்டை ஓட்டை எதற்கு இங்கே வைக்க வேண்டும்?''


“பட்டாளக்காரனின் வீட்டிற்கு இவையெல்லாம் அலங்காரம், நளினி. பட்டாளக்காரனின் மனைவி பலவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்று அதனால்தான் நான் சொன்னேன்.''

“பழிக்குப் பழி வாங்குவதற்காக அவனுடைய ஆவி இங்கே எங்கேயாவது அலைந்து கொண்டிருந்தால்...?''

அதைக் கேட்டு ராஜசேகரன் விழுந்து விழுந்து சிரித்தான்.

“பழிக்குப் பழி! பழிக்குப் பழி! அவன் இறந்துவிட்டான் அல்லவா? அவனுடைய இனமும் முடிந்துவிட்டது. பார்... அந்த வட்டமான குழிகளில் பெரிய இரண்டு கண்களும் உருள, இந்த ஓட்டிற்குள் மூளை செயல்பட்டுக் கொண்டிருக்க, அந்தப் பற்களுக்கு மத்தியில் சிங்கத்தின் கர்ஜனையைப் போன்ற சத்தம் புறப்பட்டு வந்து கொண்டிருந்த நேரத்திலேயே அவனால் என்னை எதிர்த்து எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குப் பிறகுதான் இது!''

ஒரு நிமிடம் கழித்து அவன் தொடர்ந்து சொன்னான்:

“பிசாசைப் பற்றியாவது உண்மையான விஷயங்களைக் கூற வேண்டாமா? அவன் அசாதாரணமான மனிதனாக இருந்தான். ஒரு தலைவனாக இருப்பதற்காகவே அவன் பிறந்திருந்தான். அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுவதற்கு ஆயிரக்கணக்கான பேர் தயாராக இருந்தார்கள்.''

நளினி எதுவும் பேசவில்லை. அவள் நினைத்தது அது அல்ல. அந்த மண்டை ஓடு அங்கு இருக்கும்போது, பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தாகமெடுத்து அலையும் ஆன்மா அதற்குள் நுழைந்து கொண்டு இருக்காதா என்று அவள் நினைத்தாள். ஒரு பேய்க்கு வீட்டிற்குள் தங்குவதற்கு இடத்தை ஏன் தர வேண்டும்? ஆனால், ராஜசேகரன் புரிந்து கொண்டது அதுவல்ல. பட்டாளக்காரனுக்கு ஆவியைப் பற்றிய பயம் இருக்குமா என்ன? அவள் அந்த மண்டை ஓட்டிற்கு கண்ணும் மூக்கும் இட்டுப் பார்த்தாள். அந்த உருவத்தை அவள் பார்க்கிறாள். வட்டமான கண்கள், நீளமான மூக்கு... இப்படி ஒரு உருவம். அவள் அவனுடைய அலறல் சத்தத்தைக் கேட்கிறாள்.

ஒரு பட்டாளக்காரனுக்கு அதைப் பற்றிய பயம் எதுவும் இல்லை. அவன் போர்க்களங்களையும், ஏராளமான மரணங்களையும், ரத்த ஆறுகளையும் பார்த்தவன்தான். அவனுக்கு ஆவியைப் பற்றிய பயமில்லை. எதிரியை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினாலும், அந்த தலையையும் கைகளையும் அறுத்து எடுத்து பதப்படுத்தி எலும்பாக மட்டும் எப்படி ஆக்கினான்? அதற்காக உழைத்தானா? அந்த மண்டை ஓட்டைத் தொடர்ந்து இருக்கும் உறுப்புகள் எங்கே? இப்படி ஏராளமான கேள்விகளும் சந்தேகங்களும் நளினிக்கு இருந்தன.

இன்னும் என்னவெல்லாம் பார்க்க வேண்டும்? எதற்கெல்லாம் துணையாக இருக்க வேண்டும்?

5

ரசாங்க செயலாளரின் வீட்டில் அன்றொரு நாள், வேறு நான்கு பெரிய பதவியில் இருப்பவர்களின் மனைவிகள் ஒன்று சேர்ந்தார்கள். அவர்களுக்குக் கூற இருந்தவை குற்றச்சாட்டுகள் மட்டும்தான். கணவர்கள் அவர்களுடைய உரிமைகளைப் புறம் தள்ளிவிட்டு செயல்படுவதைப் பற்றி ஒருவரோடொருவர் கூறிக் கொள்ளும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல; அந்தப் பெண்கள் தங்களின், தங்களுடைய குழந்தைகளின் செழிப்பான வாழ்விற்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கும் தடைகளைப் பற்றி மனதில் வேதனைப் பட்டுக் கூறுவதும் அங்கு நடந்து கொண்டிருந்தது. அந்த செகரட்டரி தாசில்தாராக இருந்தபோது, வெறும் மாஜிஸ்ட்ரேட்டாக மட்டுமே இருந்த மனிதர் இன்றைய சீஃப் செகரட்டரி. தன்னுடைய கணவருக்குக் கிடைக்க வேண்டிய பதவி கிடைக்காததைப் பற்றி அவளுக்கு குறைபாடு இல்லாமல் இருக்குமா? அது மட்டுமல்ல; அவரை அங்கேயிருந்து ஏதோ முக்கியத்துவம் குறைவான ஒரு இடத்திற்கு மாறுதல் செய்யப் போவதாகவும் ஒரு தகவல் உலாவிக் கொண்டிருந்தது. செகரட்டரியின் மனைவி- அவளுடைய பெயர் கவுமுதி. அவளிடம் ஒரு சிறிய டிப்பார்ட்மெண்ட் தலைவனின் மனைவியான ஹிரண்மயி சொன்னாள்:

“சரி... அது இருக்கட்டும். அக்கா, உங்களுக்கு என்ன வயது?''

“எதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும்? ஜோதிடம் பார்க்கவா?''

கவுமுதிக்கு தனக்கு எத்தனை வயது நடக்கிறது என்பதைக் கூறுவதற்கு ஒரு தயக்கம்.

இப்போது சஸ்பென்ஷனில் இருக்கும் முக்கியமான பதவியில் இருந்தவரின் மனைவி (விலாசினி என்பது அவளின் பெயராக இருக்கட்டும்) கேட்டாள்:

“எத்தனை வயது என்று சொல்லுங்க. அதற்குப் பிறகு விஷயம் என்ன என்று கூறுகிறோம்.''

“எனக்கு பத்து... நாற்பது வயதாகிவிட்டது. என்ன விஷயம்?''

ஹிரண்மயி ஒரு கேள்வியைக் கேட்டாள்.

“இருபத்தைந்து வயது உள்ளவளுக்கா, நாற்பது வயது உள்ளவளுக்கா...? இவர்களில் யாருக்கு மதிப்பு?''

கவுமுதிக்கு விஷயம் புரிந்தது. அவள் சொன்னாள்:

“மதிப்பு இருபத்தைந்து வயது உள்ளவளுக்குத்தான். சந்தேகம் சிறிதுகூட இல்லை.''

விலாசினிக்கும் ஒரு கேள்வி இருந்தது.

“சரி... அது இருக்கட்டும்... ஹிரண்மயி அம்மா, இருபத்தைந்து வயது உள்ளவளா - நாற்பது வயது உள்ளவளா... இவர்களில் யார் மிகவும் அழகானவள்?''

ஹிரண்மயி கவுமுதியம்மாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்:

“அது நாற்பது வயது பெண்ணாக இருந்தாலும், அந்த அழகல்ல விஷயம்...''

கவுமுதியம்மா சொன்னாள்:

“என் தங்கைமார்களே! என்னால் அதெல்லாம் முடியாது. நான் அதையெல்லாம் கற்கவில்லை. என்னால் முடியாது.''

அப்போது விலாசினி சொன்னாள்:

“அப்படியென்றால் கணவர் எப்போதும் இப்படியேதான் இருப்பார். நல்ல ஆடைகள் அணிந்து அலங்காரம் செய்து கொண்டு பார்க்க வேண்டிய மனிதர்கள் எல்லாரையும் போய் பார்த்தால்தான் நடக்குமா என்பது தெரியும்.''

“என்னால் முடியாது... அப்பா... என்னால் முடியாது. எனக்கு அலங்காரமாக ஆடைகள் அணிந்து இருக்கத் தெரியாது. பார்க்க வேண்டியவர்களின் வீடுகளும் தெரியாது. தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவும் இல்லை.''

ஹிரண்மயி சொன்னாள்:

“அப்படின்னா இப்படியே இருங்க. நாங்கள் கொஞ்சம் சோதனை பண்ணிப் பார்ப்பது என்று முடிவெடுத்திருக்கிறோம். எங்களுடைய கணவர்களுக்கு ஏதாவது நல்லது நடக்குமா என்று சோதித்துப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறோம்.''

கவுமுதி அம்மாவின் சந்தேகம் அதுவல்ல. அவள் கேட்டாள்:

“என் தங்கையே! அவளைப் பார்த்தால் மனித வடிவத்தில் இருப்பதைப் போல இருக்கிறதா? ஒரு மர பொம்மையைப் போல அல்லவா இருக்கிறாள்!''

"பேசாமல் இருங்க” என்று சைகை காட்டியவாறு ஹிரண்மயி சொன்னாள்:

“பேசக்கூடாது. அக்கா, நீங்க யாரைப் பற்றி சொல்றீங்க? உங்க கணவரின் மேலதிகாரியைப் பற்றித்தான் பேசுறீங்க. யாருக்கு அழகு இல்லைன்னு சொல்றீங்க தெரியுமா? இப்போ பிரதம அமைச்சருக்கு மிகவும் பிடித்திருக்கும் ஒருத்தியைப் பற்றிப் பேசுறீங்க. பேசாதீங்க! தலை போகும் விஷயம்...''

கவுமுதி அம்மா கேட்டாள்:

“இப்போ மேலே இருக்கும் கொம்பில்தான் பிடியா?''

“அதனால்தானே புதிய பதவி கிடைத்தது?''


அந்த வகையில் அவர்களுடைய உரையாடல் வேறு சில அதிகாரிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் பிள்ளைகளையும் பற்றி நடந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு பேஷ்காரின் இளைய மகள் யாருக்குப் பிறந்தது என்று தெரியுமா? போலீஸ் உயர் அதிகாரியின் நல்ல காலம் கிட்டத்தட்ட முடிவடைந்ததைப் போலத் தான். இன்னொரு டிப்பார்ட்மெண்டின் தலைவர் இப்போது அந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்படி ஆட்சியைப் படைத்துக் கொண்டிருக்கும் முக்கிய நபர்களைப் பற்றியெல்லாம் அந்த அதிகாரிகளின் மனைவிமார்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இறுதியில் விலாசினி சொன்னாள்:

“இப்போதைய காலத்தில் ஒரு விஷயம்தான் இருக்கிறது. எப்போது பதவி போகும் என்பதே தெரியாது.''

அதுவும் உண்மைதான் என்று எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். யாரையும் எப்போதும் எதற்காகவும் எதுவும் செய்யலாம்! யாரும் கேள்வி கேட்க முடியாது. யாரிடம் கூறுவது?

மிகவும் சமீபத்தில் ஒரு நாள் பிரதம அமைச்சரின் இல்லத்தில் நடக்கப் போகும் புல்வெளி விருந்திற்கு கவுமுதியின் கணவருக்கும் அழைப்பு கிடைத்திருந்தது. அனைத்து பெரிய பதவியில் இருப்பவர் களுக்கும் அழைப்பு இருந்தது. அவர்களுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் அழைத்திருந்தார்கள். அவர் வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் கூறினார்.

“நீ புல்வெளி விருந்திற்கு வருகிறாயா?''

கணவரின் எண்ணத்தைத் தெரிந்து கொள்வதற்காக அந்தப் பெண் அவருடைய முகத்தையே பார்த்தாள். அவர் சொன்னார்:

“எல்லாரும் வருவாங்க. நீயும் வர்றதா இருந்தால் வா.''

மனைவி கேட்டாள்:

“வரவில்லையென்றால், அதனால் பிரச்சினை வருமா?''

“அதுவும் உண்டாகலாம். எப்படித் தெரிந்து கொள்வது? முதல் தடவையாகப் பெண்களை அழைத்திருக்கிறார்கள். அந்த நிலையில், நான் கலந்து கொண்டு என்னுடைய மனைவி கலந்து கொள்ளவில்லை என்ற விஷயம் பெரிதாக ஆகலாம். அது ஒரு மீறலாகவும் நினைக்கப்படலாம்.''

“அய்யோ... அப்படியென்றால் நானும் வந்திடுறேன்.''

“ஆமாம்... விசாரிக்கிறேன்.''

தொடர்ந்து அவர் நடத்திய விசாரணையில் தலைநகரில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் அவர்களுடைய மனைவிகளும் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டார். பெண்கள் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நிலையில் போகாமல் இருக்க முடியாது.

அன்றிலிருந்து அந்த தம்பதிகள் அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே காண்பிப்பதற்கு ஏற்ற நகைகள் எதுவும் தன்னிடம் இல்லை என்று அந்தப் பெண் குறைப்பட்டுக் கொண்டாள். உண்மைதான் என்று அவருக்கும் தெரியும். ஆனால், திடீரென்று நகைகளைத் தயார் பண்ண முடியுமா? அது இருக்கட்டும். நல்ல ஆடைகள் இருக்கின்றனவா? இப்படிப்பட்ட முக்கியமான நிகழ்ச்சிகளில் அணியக்கூடிய வகையில் ஒரு புடவைகூட இல்லை.

அவர் சொன்னார்: “புடவை வேண்டாம் என்று வைத்துக் கொள்ள வேண்டும். கிராமத்து பாணியில் அங்கு போக வேண்டும்.''

“பிறகு?''- கவுமுதி கேட்டாள்: “என்ன, எனக்குப் புடவை அணியக்கூடிய வயது தாண்டி விட்டதா? என்னால் அப்படிப் போக முடியாது. அப்படியென்றால் நான் தயார் இல்லை.''

அவர் சொன்னார்:

“நான் சொன்னது அதுவல்ல. கிராமத்து பாணியில் நீ ஆடைகள் அணிந்து நடப்பதுதான் அழகானது என்று எனக்கு எப்போதும் தோன்றியிருக்கிறது. அதுதான் எனக்கு விருப்பம்.''

“அதற்காக நான்கு பேர் கூடும் இடத்தில் அப்படிப் போக என்னால் முடியாது.''

அவளைப் புடவையிலேயே அழைத்துச் செல்வதாக அவர் ஒப்புக் கொண்டார்.

குறிப்பிட்ட அந்த நாள் வந்து சேர்ந்தது. அன்று அவளுக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. இளமையாக இருந்த அந்தக் காலத்தில் நடந்த திருமண நாளன்றுகூட அவள் அந்த அளவிற்கு பதை பதைப்புடன் இருந்ததில்லை. எவ்வளவு மணி நேரங்கள் செலவழித்து அலங்கரித்தும், அது முடிவடையவில்லை. எதுவுமே சரியாக வரவில்லை. ஒரு பதினாறு வயது கொண்ட பெண்ணைப்போல அழகுபடுத்திக் கொண்டால், அது பொருத்தமாக இருக்காது என்பது புரிந்தது. நாற்பது வயது உள்ள பெண்ணாக அலங்காரம் செய்து கொண்டால்- அது முதுமையை வெளிப்படுத்தக் கூடிய அடையாளமாக இருக்கும். எனினும், அவள் ஒரு வகையில் கணவரின் "நேரமாயிடுச்சு... நேரமாயிடுச்சு...” என்ற அவசரப்பாட்டிற்கு மத்தியில் அலங்கரித்துக் கொண்டு வெளியேறினாள். திருப்தி உண்டாகவில்லை.

கவுமுதியின் இதயம் எப்படித் துடித்துக் கொண்டிருந்தது தெரியுமா? அங்கு என்ன நடக்கப் போகிறது என்று அவளுக்குத் தெரியாது. அது அவளுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான சம்பவமாக இருந்தது. அங்கு சென்றால், எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவளுடைய கணவர் சொல்லிக் கொடுத்திருந்தார். எனினும், அப்படியெல்லாம் நடக்க முடியுமா? என்னவோ? நடந்து கொள்வது சரியாக இல்லையென்றால்... எல்லா வற்றையும் அவள் நினைத்துப் பார்த்தாள். மாநிலத்தையே "கிடுகிடு”வென்று நடுங்க வைத்துக் கொண்டிருக்கும் அசாதாரணமான புத்திசாலித்தனமும் திறமையும் கொண்டவர் என்ற பெயரைப் பெற்றிருக்கும் ஒரு ஆட்சி அதிகாரியுடன் நேரடியாக அவள் அறிமுகமாகப் போகிறாள்.

வெளி வாசலைக் கடந்து அவளுடைய கார் உள்ளே நுழைந்தது. விசாலமான ஒரு புல்வெளி. ஆங்காங்கே தலை நகரத்தின் முக்கிய பதவியில் இருப்பவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நின்றிருந்தார்கள்.

மனைவியும் கணவரும் கீழே வந்தார்கள். அவர் முன்னாலும் அவள் பின்னாலும் இறங்கி காலடியை எடுத்து வைத்தபோது பிரதம அமைச்சரின் தனிச் செயலாளர் வந்து அவரிடம் கைகளைக் குலுக்கினார்.

கணவர் மனைவியை அறிமுகப்படுத்தினார். தனிச் செயலாளர் உற்றுப் பார்த்தார். அவர் சொன்னார்:

“நான் பார்த்திருக்கிறேன்ல?''

“இல்ல...''

கவுமுதியின் கண்கள் அந்தப் புல்வெளியில் இருந்த சீஃப் செகரட்டரியின் மனைவியை ஆராய்ந்து கொண்டிருந்தன. ஒரு அசோக மரத்திற்குக் கீழே தனியாக அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள். ஓ! அவள் எப்படியெல்லாம் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள்! தங்க நிறத்தில் இருக்கும் நூல்களால் உண்டாக்கப்பட்ட புடவை!

ஹிரண்மயி கவுமுதிக்கு அருகில் ஓடி வந்தாள். அவளும் அழகு படுத்திக்கொண்டதில் பின்னால் இல்லை.

கவுமுதிக்கு அறிமுகமில்லாத சில பெண்களும் வந்திருந்தார்கள். ஹிரண்மயி அவர்கள் எல்லாரும் யார் என்று கூறி அறிமுகப்படுத்தி வைத்தாள்.

பாரிஜாதத்திற்குக் கீழே பிரைவேட் செகரட்டரி ஒரு இளம் பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.

கவுமுதி கேட்டாள்:

“அது யார் ஹிரண்மயி?''

“அது ஒரு புதிய ஆள். ஒரு பேராசிரியரின் மனைவி. சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.''

“அசோக மரத்திற்குக் கீழே பார். நான் சொன்னது பொய்யா? மர பொம்மைதானே? என்ன தனியா நிற்கிறாள்?''

“தனியா இல்லை. பிரைவேட் செகரட்டரி இதுவரை அங்கேதான் இருந்தார்.''

புதிய புதிய விருந்தாளிகள் வந்து கொண்டே இருந்தார்கள். பிரைவேட் செகரட்டரி மிகவும் சுறுசுறுப்புடன் செயலாற்றிக் கொண்டிருந்தார்.


குறைவான கால அளவிலேயே கவுமுதி ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டாள். பிரைவேட் செகரட்டரி தன்னை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார் என்பதே அது. அவர் போவது, வருவது எல்லாமே அவளைத் தாண்டித்தான். அந்தப் பேராசிரியரின் மனைவியுடன் உற்சாகத்துடன் பேசிக் கொண்டு நின்றிருந்தபோதுகூட அவர் அவளையே பார்த்துக் கொண்டுதானிருந்தார்.

ஹிரண்மயி போனால் போதும் என்றிருந்தது கவுமுதிக்கு. தனியாக இருந்தால் நல்லது என்று அவள் நினைத்தாள். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருப்பதை ஹிரண்மயி பார்த்திருப்பாளா? பார்த்திருந்தால் அவள் ஊர் முழுக்க அதைக் கூறி விடுவாள்.

ஹிரண்மயியை அவளுடைய கணவர் அழைத்தார். கவுமுதி தனியாகிவிட்டாள். கவுமுதியின் கணவர் சற்று தூரத்தில் நின்றுகொண்டு ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரைவேட் செகரட்டரி கவுமுதியின் அருகில் வந்தார். அவர் மெதுவான குரலில் சொன்னார்:

“இதுவரை அறிமுகமாகாமல் இருந்ததற்காக வருத்தப்படுகிறேன்.''

என்ன கூறுவது என்று தெரியாமல் அந்தப் பெண் தடுமாறி னாள். எனினும், ஏதாவது கூறாமல் இருக்க முடியுமா? அவளுடைய நாணமும் பதைபதைப்பும் கலந்த புன்னகை அரும்பிய உதடுகளின் வழியாக இப்படி ஒரு வார்த்தை வெளியே வந்தது:

“எனக்கும் வருத்தம் இருக்கு.''

பிரைவேட் செகரட்டரி சொன்னார்:

“அவர் எப்போதும் எனக்கு மனைவி இல்லையா என்று கேட்பார்.''

பிரைவேட் செகரட்டரி பிற விஷயங்களை விசாரிப்பதற்காகச் சென்றார். அந்த உரையாடலை யாராவது பார்த்தார்களா என்று கவுமுதி நான்கு பக்கங்களிலும் பார்த்தாள். பலரும் பார்த்தார்கள்.

அந்தப் பக்கத்தில் பட்டாள பேண்ட் இசை ஆரம்பமானது. பிரதம அமைச்சர் இறங்கி வந்தார். விருந்தாளிகள் அவரவர்களுடைய இருக்கைகளில் இருந்து எழுந்து நின்றார்கள். ஒவ்வொருவருடனும் அவர் கை குலுக்கினார். அந்தக் கூட்டத்தில் அறிமுகமில்லாமல் இருந்தவர்களை அவருக்கு பிரைவேட் செகரட்டரி அறிமுகப்படுத்தி வைத்தார்.

பிரதம அமைச்சர் தன்னையே கூர்ந்து கவனித்ததைப் போல கவுமுதிக்குத் தோன்றியது. அவருடைய பிரகாசமான பெரிய கண்களின் ஏரியில் ஒரு மோகம் கிடந்து சிரித்துக் கொண்டிருந்தது. கவுமுதியின் இதயத்தின் அடித்தளத்திலும் ஏதோ சில விஷயங்கள் தோன்றிப் புரண்டு கொண்டிருந்தன. கையைக் குலுக்கியபோது அவர் தன்னுடைய கைகளை பலமாக அழுத்தியதைப் போல கவுமுதி உணர்ந்தாள். வேறு யாருடைய கையையும் அவ்வளவு நேரம் அவர் தன்னுடைய கையில் வைத்துக் கொண்டிருக்கவில்லை.

பிரைவேட் செகரட்டரி அறிமுகப்படுத்தியதிலும் ஒரு தனி அக்கறை வெளிப்பட்டது.

கவுமுதியின் உடல் முழுவதிலும் சிலிர்ப்பு உண்டானது. ஒரு இன்ப அதிர்வு நரம்புகளில் பயணித்தது. அது ஒரு அனுபவமாக இருந்தது.

அப்பாவிப் பெண்! இந்த சமூகச் சூழ்நிலையில், வாழ்க்கைப் போட்டி கையாளும் ஒரு தந்திரமே அது. அவளைக் குறை கூற வேண்டியதில்லை. கணவருக்குப் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பது அவளுடைய விருப்பம். அதற்காக அவள் பாடுபடுகிறாள். அந்த வகையில் உயர்வதற்கான ஒரு வழியாக அது இருக்கிறது.

6

ந்த வகையில் தலைநகரத்தின் முக்கியமான மையங்களில் பெரிய போட்டிகள் நடந்து கொண்டிருந்தன. இன்று வெற்றி பெற்றவன் நாளை வெளியே வீசியெறியப்படுவான். இன்று தோற்றுப் பின்னால் விட்டெறியப்பட்டவன் நாளை உயரத்திற்கு வருவான்.

அந்தச் சூழ்நிலையில் ஒரு முக்கியமான பதவிக்கு காலி இடம் உண்டாகியிருக்கிறது- உணவுப் பொருட்களின் விநியோகத்திற்கான தலைவர். சீனியர் அதிகாரிகள் பலரும் அதற்காக முயற்சித்துக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பதவி எல்லாரும் விரும்பக் கூடிய ஒன்றாக இருந்தது. கோடிக்கணக்கில் பணம் கொடுத்துப் பெற வேண்டிய பதவி அது. பதவி தரும் அதிகாரமும் மிகப் பெரியது. மாநிலத்தின் மிகப் பெரிய நபர்கள் முழுவதும் அந்தப் பதவியின் கருணைக்கு அடிமைப் பட்டவர்கள். உணவுப் பொருட்களை உற்பத்தி செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும் அந்தப் பதவியில் இருப்பவர்களுக்குக் கீழே வருவார்கள்.

அந்தப் பதவியில் முன்பு அமர்ந்திருந்த மனிதர் அந்த இடத்தில் இருந்து திடீரென்று என்ன காரணத்திற்காக மாற்றப்பட்டார்? இந்தக் கேள்வி எல்லாருடைய நாக்கின் நுனியிலும் தொங்கி நின்றது. காரணம்- யாருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது. அவர் ஆட்சித் தலைவரின் மிகவும் பணிவான அடிமையாக இருந்தார்... ஆனால், செல்வம் நிலையானதா?

மாநிலத்தில் ஒரு பேஷ்கார். அவருடைய தோட்டத்தை அவர் விற்று விட்டாராம். வேறு சில சொத்துகளையும் விற்கப் போகிறாராம். திடீரென்று விற்பதற்கு விசேஷமான காரணம் என்னவென்று தெரியவில்லை. வங்கிகளில் நல்ல சேமிப்பை வைத்திருக்கும் மனிதர், பணத்தை உண்டாக்கிக் கொண்டும் இருக்கிறார். ஒரு டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரியும் பணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார். மொத்தத்தில் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு போட்டி நடக்கிறது. விநியோக கமிஷனராக வரப் போவது யார்?

வேறு சிலரும் முயற்சி செய்ய ஆரம்பித்தார்கள். அந்த வகையில் திடீரென்று பணம் தயார் பண்ண முடியாதவர்களும் இருந்தார்கள். ஆனால், பெரிய அளவில் நண்பர்கள் வட்டாரமும் அறிமுகங்களும் இருப்பதை வைத்துக் கொண்டு செல்வாக்கைப் பயன்படுத்த அவர்களால் முடியும். ஒரு சீனியர் அதிகாரி விடுமுறை எடுத்து டில்லிக்குச் சென்றார். இன்னும் சில அதிகாரிகளின் மனைவிகள் வெளிப்படையாக பிரைவேட் செகரட்டரியைப் போய் பார்க்கி றார்கள்.

எது எப்படி இருந்தாலும் அந்தக் காட்சியில் பிரைவேட் செகரட்டரியின் பதவி மிகவும் உயர்ந்து தெரிந்தது. வெளியில் இருந்தும் சில பெரிய மனிதர்கள் தலைநகரத்திற்கு வந்தார்கள்.

கவுமுதியின் கணவரும், அந்தப் பதவியை விரும்பியதில் தவறு இருக்கிறதா? சிவில் லிஸ்ட்டை எடுத்து வைத்து அவர் சீனியாரிட்டி யைக் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார். முன்பு இருந்த அமைச்சர்கள் அவருக்கு அளித்திருக்கும் நற்சான்றிதழ்கள் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தார். ஒரு நினைவுப் பரிசை தயார் பண்ணிக் கொடுத்தால் என்ன? ஆனால், அப்படிப்பட்ட நினைவுப் பரிசை விருப்பமில்லாதவன் கொடுத்தால் தண்டணைக்குரியதாக ஆகிவிடும். எது வேண்டுமானாலும் வரட்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டு அவர் அதை தயார் பண்ணினார்.

கவுமுதி சம்பவங்களின் வளர்ச்சிகளைப் பற்றி தினந்தோறும் விசாரிப்பாள். நடக்கும் என்று அவள் உறுதியாக நம்பினாள். அவருடைய முயற்சி போதாது என்று அவள் குற்றம் சொன்னாள். பிரதம அமைச்சரைச் சந்தித்து சொன்னால், அவர் மறுக்க மாட்டார் என்று அவள் நம்பிக் கொண்டிருந்தாள்.

அவர் சொன்னார்:

“அதையெல்லாம் முடிவு செய்வது பிரைவேட் செகரட்டரி தான்.''

“எனினும், நமக்கு கிடைக்கும்.''


கவுமுதியின் உறுதியான நம்பிக்கையைப் பற்றி அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவேளை, அந்த நம்பிக்கை தெய்வீகமான அருளின் வெளிப்பாடாக இருக்கலாம். அவர் பிரைவேட் செகரட்டரியையும் பிரதம அமைச்சரையும் போய் பார்த்தார். கவலைகளை வெளியிட்டார். நியாயத்தைப் பார்த்துச் செய்வதாக பிரதம அமைச்சர் பதில் சொன்னார். ஆனால், பிரதம அமைச்சர் ஒரு கேள்வி கேட்டார்:

“அந்தப் பதவியை நீங்கள் என்ன காரணத்திற்காக விரும்புகிறீர்கள்? பொறுப்புகள் அதிகமாக இருக்கும். இப்போது உங்களுக்கு கிடைக்கக்கூடிய சம்பளம்தான் கிடைக்கும்.''

செகரட்டரி ஒரு நிமிட நேரத்திற்கு நெளிந்தார். என்ன பதில் கூறுவார்? தன்னுடைய நோக்கங்கள் வெளியே தெரிந்துவிட்டன என்று அவர் பயப்பட்டார். இருந்த பதவியும் போய்விட்டது. ஆனால், அடுத்த நிமிடம் ஒரு பதில் நாக்கில் உதயமானது.

“இந்த வேலையைச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது. அதனால்தான்.''

“ஓஹோ! இருக்கட்டும்... நியாயப்படி செய்வோம்.''

பிரைவேட் செகரட்டரியின் கைகளால் தாங்கப்பட்டு, அவருடைய மடியில் சாய்ந்து கிடந்து கொண்டு செகரட்டரியின் மனைவி கொஞ்சினாள்.

“அதை நிறைவேற்றித் தரணும். அது எனக்கும் அவருக்கும் அல்ல.''

பிரைவேட் செகரட்டரி கேட்டார்:

“பிறகு யாருக்காக?''

“அது... அது புரியவில்லையா? இல்லாவிட்டாலும்... இந்த ஆண்கள் எல்லாரும் அப்படித்தான். அன்பே இல்லாதவர்கள்...''

கவுமுதியின் கன்னத்தில் முகத்தை வைத்துக் கொண்டு, அவளை மார்புடன் சேர்த்து வைத்துக் கொண்டு பிரைவேட் செகரட்டரி சொன்னார்:

“இப்படி அர்த்தத்தை வைத்துக் கொண்டு சொன்னால் எனக்குப் புரியாது.''

அந்த அணைப்பின், முத்தத்தின் இன்பத்தில் மூழ்கிப் போய் பாதி திறந்த கண்களுடன் அவள் சொன்னாள்:

“உங்களுடைய குழந்தைக்காக... இந்த வயிற்றில் இருக்கும் என்னுடைய கடைசி குழந்தைக்காக... எங்களுக்கு சம்பாத்தியம் எதுவும் இல்லை!''

அவருடைய கைகள் இறுகின. கவுமுதியின் கைகள் அவருடைய கழுத்தை வளைக்க, அந்த முத்தம் அழுத்தமாகப் பதிந்தது. அதுதான் அந்த வேண்டுகோளுக்கு பதிலாக இருந்தது.

காரியம் நிறைவேறிவிட்டது என்று கவுமுதி நம்பினாள். தன்னுடைய சொந்தக் குழந்தைக்காக அந்த அளவிற்காவது அவர் செய்யாமல் இருப்பாரா?

ஆனால், அப்படி எங்கெங்கெல்லாம் அவருக்கு குழந்தைகள் இருக்கின்றன?

மாநிலத்தின் முக்கிய விவசாயிகளையும் வர்த்தகர்களையும் ஒவ்வொருவராக பிரதம அமைச்சர் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அது எதற்கு என்று யாருக்கும் தெரியாது. உணவுப் பொருட்களின் விநியோகப் பிரிவை மறுசீரமைக்கப் போவதாக தகவல் பரவிவிட்டிருந்தது. அத்துடன் அதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் நியமனமும் செயலாக்கமும்.

அப்படி யூகங்கள் பல விதத்திலும் உலாவிக் கொண்டிருந்தபோது, ஒரு அதிகாலை வேளையில் அந்தப் பதவியில் ஆளை நியமித்த அறிவிப்பு வெளியானது. அதுவரை சஸ்பென்ஷனில் இருந்த விலாசினியின் கணவரை அந்த இடத்திற்கு நியமித்திருந்தார்கள்.

சில பெரிய ஒப்பந்தங்களில் லஞ்சம் வாங்கினார் என்ற காரணத்திற்காக அவரின்மீது ஒரு வெளிப்படையான விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த விசாரணையின் தீர்ப்பும் வெளியாகி விட்டது. அவரின்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது நிரூபணமாகியிருக்கிறது.

அவருடைய திறமையைப் பற்றி யாருக்கும் நம்பிக்கையில்லாமல் இல்லை. நிறைய படித்திருக்கும் மனிதர். அப்படிப்பட்ட ஒரு மனிதரை அந்த முக்கியமான பதவியில் நியமித்ததற்காக அரசாங்கத்தைப் பாராட்டி பத்திரிகைகள் தலையங்கங்கள் எழுதின.

அந்த பேஷ்கார் ஒரு மாதிரி ஆகிவிட்டார். அந்த டிப்பார்ட் மெண்ட்டின் மேலதிகாரிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்ற தகவல் நகரம் முழுக்கப் பரவியது. கவுமுதி தன் கணவரை கணக்கு பார்க்காமல் திட்டினாள்.

“அரைக் காசு கையில் இல்லாமல், பதவி உயர்வு இல்லாமல் நீங்க இருப்பதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. இப்படியே உட்கார்ந்து பைத்தியம் பிடிச்சு செத்துடுவீங்க. ஆம்பளைன்னா சொரணை இருக்கணும்.''

பாவம்! அவர் என்ன செய்வார்? எனினும் அவர் சொன்னார்:

“அவர் நல்ல தொகையைக் கொடுத்திருக்கிறார். அதற்கு நம்மிடம் பணம் இருக்கிறதா?''

“பணம் இல்லையென்றால், கடன் வாங்கணும். பிறகு அந்தக் கடனை அடைக்கணும்.''

“அதற்கு நீ சம்மதிச்சிருப்பியா?''

அந்தப் பெண்ணின் கடுமையான ஏமாற்றம், அந்த நியாய வாதங்கள் எதனாலும் சாந்தமாவதாகத் தெரியவில்லை. செகரட்டரி புரிந்து கொண்டிருப்பதைவிட அந்த ஏமாற்றம் ஆழமாக வேர் விட்டதாகவும், பலம் கொண்டதாகவும் இருந்தது. அதை அவர்மீது காட்டாமல் வேறு எங்கு போய் காட்டுவது?

அடுத்து வந்த ஒரு நாளன்று நகரத்திலிருந்த ஒரு முக்கியமான ரெஸ்ட்டாரெண்டின் மேல் மாடியில் ஏமாற்றத்திற்குள்ளான பேஷ்காரும் டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரியும் செகரட்டரியும் ஒன்றாகச் சேர்ந்து இரண்டு மூன்று புட்டிகளை காலி பண்ணிவிட்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு முழு புட்டியும் பாதி நிறைந்த கண்ணாடிக் குவளைகளும் மேஜைமீது இருந்தன.

பேஷ்கார் எழுந்து, கால் தரையில் உறுதியாக நிற்காமல் நின்று கொண்டு கூற ஆரம்பித்தார்:

“என்னுடைய அனைத்தும் முடிந்து போய்விட்டது- அனைத் தும். எல்லாமும் இல்லாமல் போய்விட்டது. இனிமேல் ஒரு காசுகூட இல்லை. அந்த மகாபாவி எனக்கு அந்தப் பதவியைத் தரவில்லை. அதற்காக என்னிடம் வாங்கியதையும் தரவில்லை. நான் பணத்தைக் கேட்டதற்கு அவன் கேட்கிறான்- அது நான் லஞ்சம் வாங்கி சம்பாதித்ததுதானே என்று. என்னுடைய லஞ்சத்தைப் பற்றி அவன் விசாரணை நடத்தியிருப்பான் போல! நான்...''

பேஷ்காரின் கண்கள் இருண்டன. அவர் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. பிறகு, தொடர்ந்து சொன்னார்:

“எனக்கு மேலே பூமியும்... கீழே வானமும்... நான்... நான்.''

மேஜை மீதிருந்து அவர் தன்னுடைய கண்ணாடிக் குவளையை எடுத்தார். டிப்பார்ட்மெண்ட்டின் மேலதிகாரிக்கு கோபம் வரவில்லை. அழுகைதான். அவர் பரிதாபமான குரலில் சொன்னார்:

“நான் கடன்காரனாக ஆகிவிட்டேன். என் தெய்வமே! நான் கடன்காரனாக ஆகிவிட்டேனே!''

செகரட்டரியின் மனதிற்குள்ளிருந்து ஒரு குற்றச்சாட்டு தயங்கித் தயங்கி வெளியே வர முயற்சித்தது. ஆனால், அது வெளியே வரவில்லை.

“எனக்கும்... எனக்கும்... என் மரியாதை... பும்...''

குடித்தது முழுவதையும் அவர் வாந்தி எடுத்துவிடுவார் என்பதைப் போல தோன்றியது.

அந்தக் கண்ணாடிக் குவளைகள் காலியானவுடன் அந்த அறையிலேயே கட்டளையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு நின்றிருந்த ஹோட்டலின் பணியாள் புட்டியின் கார்க்கை திறந்து கொடுத்தான். அரை குவளை வீதம் ஊற்றியவாறு பேஷ்கார் கேட்டார்:

“இதற்கு என்ன பரிகாரம்?''

அவர் ஆழமாக யோசித்தார். வேலை போனால் போகட்டும். ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை விளக்கிக் கூறி ஒவ்வொரு அறிக்கையையும் எழுத வேண்டும். அது அவரவர்கள் தங்களின் முகத்திலேயே கரியைத் தேய்த்துக் கொண்டதைப் போல இருக்கும். எனினும், பரவாயில்லை.''


செகரட்டரிக்கு அதில் அந்த அளவிற்குத் திருப்தி இல்லை. அவர் சொன்னார்:

“எனக்கு உண்டான இழப்பை அறிக்கையில் கொண்டு வர முடியாது. நான் உரையாற்ற மாட்டேன்.''

டிப்பார்ட்மெண்ட்டின் தலைவர் சொன்னார்:

“அதுதான் தவறு. நமக்குள் ஒற்றுமையில்லை.''

செகரட்டரிக்கு ஒரு புத்திசாலித்தனமான எண்ணம் தோன்றியது.

“ப்ரஜா பரிஷத்காரர்களையும் பிடிக்க வேண்டும். அதுதான் நல்லது.''

அதுதான் சரி என்பதை பேஷ்காரும் ஒப்புக் கொண்டார். அந்த வகையில் ஒரு தீர்மானம் நிறைவேறியது.

சிறிதுகூட தாமதிக்காமல் உயர்ந்த பதவிகள் இருக்கும் மையங்களில், குற்றச் செயலான ஊழல் -ஆட்சியின் தலைவருக்கு தனிப்பட்ட முறையில் எதிராக இருக்கும் ஒரு சதிச் செயல் ஆகியவற்றின் உறைவிடமான ஒரு குழுவைக் கண்டு பிடித்திருப்பதாக அரசாங்கத்தின் அறிவிப்பு ஒன்று வெளியானது. அந்தக் குழுவைப் பற்றி விசாரணை நடந்து வருகிறது. அந்த விசாரணையின் விளைவு சில சீனியர் அதிகாரிகளைக்கூட பாதிக்கும் என்று ஒரு பத்திரிகைக் குறிப்பு கூறியது. அது இப்படி முடிந்தது:

“அரசாங்கம் ஊழலுக்கு மன்னிப்பு அளிக்காது. அதே போல அதிகாரத்தை மீறுவதும் மன்னிக்கக் கூடியது அல்ல.''

சில நாட்களுக்குப் பிறகு பேஷ்காரை தரம் தாழ்த்தியதாகவும், டிப்பார்ட்மெண்ட் மேலதிகாரியை சஸ்பெண்ட் செய்ததாகவும் உள்ள செய்தி வெளியே வந்தது. செகரட்டரி சில குழப்பங்களை உண்டாக்க இருப்பதாகத் தகவல் வந்தது. தொடர்ந்து பல கதைகளும் நகரத்தில் உலாவின. விநியோக கமிஷனருக்கான பதவி நியமனம் நடந்த மறுநாள் பிரைவேட் செகரட்டரிக்கும் பேஷ்காருக்குமிடையே அடிதடி நடந்ததாகக் கூறப்படுகிறது. அதை ஊழியர்கள் கேட்டிருக்கின்றனர். இப்படிப் பல கதைகளும்...

பேஷ்காருக்கு ஒரு சந்தேகம் இருந்தது. ரெஸ்ட்டாரெண்டில் இருந்த வெயிட்டர் ஒரு சி.ஐ.டி அல்லவா? அப்படித்தான் இருக்க வேண்டும். அங்கு அதிகாரிகள் அனைவரும் ஒன்று.

7

ராஜசேகரனின் வீட்டில் ஒரு மண்டை ஓடு பற்களை இளித்துக் கொண்டு இருக்கிறது. அது இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. அங்கு இருக்கும் காட்டெருமையின் தலையைப் போல அது ஒரு பொருள். அவ்வளவுதான்.

ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக அந்த வகையில் நாட்கள் ஓடிக் கொண்டிருந்தபோது, பயங்கரமான மானிட வேட்டைகளைப் பற்றிய கதைகளைக் கேட்டும், துப்பாக்கிக் குண்டுகள் பட்டு உண்டான வடிவங்களைப் பார்த்தும் அப்படியே அனுபவங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தபோது அவள் மோசமான கனவுகளைக் காணவில்லை. ரிவால்வரையும் பிஸ்டலையும் கையால் எடுத்து நளினி வேறொரு இடத்தில் வைப்பாள். அந்த வகையில் ஒரு பட்டாளக்காரனின் மனைவியாக ஆவதற்கு அதிக நாட்கள் தேவைப்படவில்லை.

அந்த வகையில் ஒரு மண்டை ஓட்டையும் சங்கிலியால் கட்டப்பட்ட கைகளையும் வீட்டில் இருக்கும் அலங்காரப் பொருட்களாகப் பார்க்கலாம் என்ற சூழ்நிலை உண்டானது. அவளுடைய சினேகிதிகள் பார்ப்பதற்காக வரும்போது அந்த காட்சியைப் பார்த்து நடுங்கு வதுண்டு- எந்தவொரு வீட்டிலும் பார்த்திராத காட்சியாக இருந்தது மனிதனின் மண்டை ஓட்டை அலங்காரத்திற்காக வைத்திருப்பது என்பது. அவர்களுக்கு அவளிடம் முதலில் கேட்க வேண்டும் என்று இருந்தவை- அது யாருடைய மண்டை ஓடு என்பதும், எதற்காக அங்கு அது வைக்கப்பட்டிருக்கிறது என்பதும்தான்.

“எனினும்... என் நளினி, இதை இங்கே வைத்துக் கொண்டிருக்கிறாயே!''

நளினி அதற்கு பதில் கூற வேண்டும் என்று நினைத்தாள்.

“இது ஒரு பட்டாளக்காரரின் வீடு. வேட்டைக்காரனின் வீட்டில் காட்டெருமை, மான் ஆகியவற்றின் தலை இருக்கும். பட்டாளக்காரனின் வீட்டில் மனிதனின் தலை...''

“இருந்தாலும்... இதற்குக் கீழே படுத்துத் தூங்க முடிகிறதே!''

“காட்டெருமையின் தலைக்கு அடியில் படுத்துத் தூங்குகிறீர்கள் அல்லவா?''

பதில் கூற முடியாத கேள்விதான். எனினும், அது எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

எனினும், அந்த கைகளை எதற்காக சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள் என்று இப்போதும் சிந்திப்பாள். பிணைக்காமல் இருந்தால் அசையுமோ? அவள் ராஜசேகரனிடம் கேட்டாள். குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு காரணம் எதுவும் இல்லை. அப்படியே சங்கிலியால் பிணைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அப்படியென்றால்தான் அந்த அமைப்பு சரியாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அவ்வளவுதான்.

வரவேற்பறையில் தைத்துக் கொண்டு தனியே இருக்கும்போது, சில நேரங்களில் நளினியின் பார்வை கதவிற்கு மேலே செல்லும். அறிமுகமானதுதான் என்றாலும், எப்போதும் பார்க்கக் கூடியதுதான் என்றாலும், கூர்ந்து கவனித்தால் அந்தப் பற்களின் இளிப்பிற்கு ஒவ்வொரு நிமிடமும் புதுமை இருக்கவே செய்தது. அதற்கு என்னவோ கூறுவதற்கு இருந்தது. கூறப் போவது நமக்கு நன்கு தெரிந்ததுதான். ஆனால், நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்கள்... சப்தம் இல்லையென்றாலும் அது கூறுகிறது.

சில நேரங்களில் அவள் சந்தேகப்படுவாள். அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரன், அவளுடைய கணவன் விளக்கிக் கூறியதைப் போல ஒரு கெட்டவனாகவும் அரக்க குணம் கொண்டவனாகவும் இருந்திருப்பானா என்று. அப்படியென்றால் அது இந்த அளவிற்கு பரிதாபப்படும் காட்சிப் பொருளாக இருக்காது. அழுகிறதோ? ஏன் இப்படி ஆக்கி விட்டீர்கள் என்று கேட்கிறதோ?

அந்த மனிதனுக்கு ஒரு மனைவி இருந்திருப்பாளோ? அவள்மீது அவன் பாசத்துடன் இருந்திருப்பானோ? இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் கூறுவதற்கு கணவனுக்கு முடியவில்லை. அது எதுவும் அவனுக்குத் தெரியாது... அந்த மனிதன் அந்த அளவிற்கு பயங்கரமானவனாக இருந்திருந்தால், அவன் சிரித்துக் கொண்டு இருந்திருக்க மாட்டான். அப்படியென்றால் அவன் தன் மனைவி மீது அன்பு வைத்திருக்க மாட்டான். அந்த விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நளினி விரும்பினாள். அந்த மனிதனை ஒரு தாய் பெற்று வளர்த்திருப்பாளா? நண்பர்கள் இருந்திருப்பார்களா?

மண்டை ஓட்டின் படைப்பில் இருந்த சிறப்பையும் கை எலும்புகளின் வினோதமான அமைப்பையும் அவள் கூர்ந்து படித்தாள். மண்டை ஓடு மிகவும் கனமாக இருந்தது. மேலே காணப் படும் கோடுகள்தான் தலையெழுத்துகளாக இருக்க வேண்டும்.

அந்த மொழியைத் தெரிந்தவர்கள் இருந்தால், இந்த வாழ்க்கைக் கதையைப் புரிந்துகொள்ள முடியும். அவள் அறிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பக்கூடியவை எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். அந்த வரவேற்பறைக்கு அது வந்து சேர்ந்ததும், இனி எவ்வளவு நாட்களுக்கு அது அதே நிலையில் இருந்து கொண்டிருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். அதன் சொந்தக் கதையையும் தெரிந்துகொள்ளலாம். அவனுடைய கண்கள் இந்த அளவிற்குப் பெரியதாக இருந்தனவா? மூக்கிற்கு நீளமான எலும்பு இல்லை.

அந்தப் பற்களைத் தாண்டி நாக்கு இருந்தது. பற்கள் மிகவும் நீளமாக இருந்தன. சதையும் குருதியும் தோலும் இருந்த காலத்தில் அந்த முகம் எப்படி இருந்தது? மிகவும் பலம் கொண்டவை என்று கூறப்படும் அந்தக் கைகள் முற்றிலும் எதுவும் இல்லாமல் இருந்தன.


அப்போது நளினி நினைத்தாள்- அந்த விரல்கள் ஒரு பெண்ணின் உடலைத் தழுவியிருக்குமோ என்று. ஒரு குழந்தையை அந்தக் கைகள் வாரி எடுத்திருக்குமா? மூக்கின் இடத்தில் இருந்த அந்த துவாரத்தின் வழியாகப் பாசம் கலந்த மூச்சுடன் அந்தக் குழந்தையை முத்த மிட்டிருப்பானா?

அவன் எதற்காக துப்பாக்கிக்கு நேராகப் போய் நின்றான்? துப்பாக்கி குண்டு பட்டபோது, அவனுக்கு வலி உண்டாகவில்லையா?

கண்டமார் கிராமத்தில் வெளிப்படுத்தப்பட்ட தைரியம், தன் கணவன் கூறியதைப் போல ஒழுங்கே இல்லாத காட்டெருமையின் பாய்ச்சலாக இருந்தது என்று நளினிக்குத் தோன்றவில்லை. அங்கு இறந்தவர்கள் எல்லாரும் மனிதர்களாக இருந்தனர். துப்பாக்கி குண்டு பாய்ந்தால் மரணத்தைத் தழுவுவோம் என்பதைத் தெரிந்திருக்கும் மனிதர்கள். துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒன்றோ இரண்டோ பத்தோ பதினைந்தோ பேர்கள் இறக்கும்போதெல்லாம் மற்றவர்களுக்கும் அப்படி நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், அனுபவ அறிவு கிடைத்திருக்கக் கூடிய மனிதர்கள்! குண்டு பாய்ந்து ஏராளமானவர்கள் வீழ்ந்த பிறகும், அவர்களுடைய படையில் பிளவு என்பதே உண்டாகவில்லை. அப்படியென்றால்- அவர்கள் மிருகங்களைப் போல இறந்து கொண்டிருந்தார்களா?

அங்கு நடைபெற்றது மிருகத்தனமான மனிதர்களுடைய ஆக்கிரமிப்பாக இல்லை. பட்டாளத்தைப் பற்றி அவளுடைய கணவன் விளக்கிக் கூறியபோது, அங்கு அந்த மாதிரி புரண்டு புரண்டு விழும்போது துப்பாக்கி குண்டை ஏற்றுக்கொள்வார்கள் என்றும், அடுத்த நொடியே இறந்து விழுந்துவிடுவோம் என்ற முழுமையான உணர்வுடன் பாய்ந்து சென்று படையின் இடைவெளியைச் சரி செய்யப் பார்ப்பார்கள் என்றும் கூறினானே. அதை ஒரு உற்சாகத்துடன்... இறப்பதற்கான உற்சாகம்... கண்டமாரில் இறந்ததும் அப்படித் தான். அவர்களும் வெற்றி பெறுவதற்காகப் பாய்ந்து உள்ளே வந்தார்கள்.

அவர்கள் வெற்றி பெற்றிருந்தால்...? அப்படி நடந்திருந்தால், அவளுடைய கணவனின் மண்டை ஓடும் கை எலும்புகளும் இதேபோல அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரனின் வரவேற்பறையின் வாசலுக்கு மேலே வைக்கப்பட்டிருக்கும்.

எல்லாரின் மண்டை ஓடுகளும் இதே மாதிரிதான் இருக்கும். அது ஒரு தாயின் வயிற்றுக்குள் சிறிய எலும்புகளுடன் கருவாக உருவானது தான். அந்த வகையில் ஒரு மண்டை ஓடு நளினியின் வயிற்றுக் குள்ளும் உருவம் எடுத்துக் கொண்டிருக்கிறது.

நளினி அந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரனைப் பார்க்க ஆரம்பித்தாள். அவனை சட்டையும் வேட்டியும் அணிந்து அல்ல- பட்டாள ஆடைகளுடன்! அவளுடைய மனக்கண்கள் அப்படித்தான் பார்த்தன. சீவி சீராக்கப்பட்ட தலைமுடி, பிரகாசமான கண்கள், மீசை- இப்படி ஒரு இளைஞன். ஆனால், அவனுடைய எலும்புக் கூட்டையும் பார்க்க முடிந்தது.

அவனிடம் சிலவற்றைக் கேட்கவும் தெரிந்துகொள்ளவும் நளினி விரும்பினாள்.

மேலும் சில மாதங்கள் கடந்த பிறகு, ஒரு புத்திசாலி ஆண் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு அவள் அந்த மண்டை ஓட்டையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அப்போதும் அவளுக்குப் புதிய புதிய விஷயங்கள் அதைப் பற்றி நினைப்பதற்கு இருந்தன.

அந்த மண்டை ஓட்டின் முடிவு என்னவாக இருக்கும்? அது எப்போதும் அதே இடத்தில் இருந்து கொண்டிருக்குமா? அந்த மண்டை ஓட்டை ஒட்டிக்கொண்டிருக்கும் இதர விஷயங்கள் காலப்போக்கில் பிரிந்து போய் விடாதா? தலைப்பகுதியில் இருக்கும் துண்டுகளை இணைக்கும் பற்கள் எந்தச் சமயத்திலும் விலகிப் போகாதா? அந்த மூட்டுகள் பிரியாமல் இருக்குமா?

அவளுடைய குறும்புத்தனம் கொண்ட சிறுவனும் மண்டை ஓட்டைப் பார்க்கவும், சிரிக்கவும், பயமுறுத்துவதைப் போல பற்களைக் கடிக்கவும் செய்து கொண்டிருந்தான். மண்டை ஓடு அவனைப் பார்த்து, முடிவே இல்லாமல் பல் இளிப்பைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

ராஜசேகரன் அவனைத் தூக்கிப் படங்கள் அனைத்தையும் காட்டுவான். அப்போது அவன் கம்யூனிஸ்டின் தலையையும் காட்டுவான். அந்தப் படங்கள் அனைத்தையும் பார்ப்பதைப் போலவே கம்யூனிஸ்டின் தலையையும் அவன் பார்த்துச் சிரிப்பான். அது குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொருளாக இருந்தது.

பேச ஆரம்பித்தபோது, தன்னைத் தூக்கிக் கொண்டு போய் கம்யூனிஸ்டின் தலையைக் காட்டும்படி அவன் தந்தையிடம் பிடிவாதம் பிடிப்பான். கம்யூனிஸ்டின் பற்கள் மிகவும் நீளமாக இருக்கின்றன என்று அவன் கூறுவான். மூக்கும் வாயும் ஒன்றாக அமைந்த ஒரு பிச்சைக்காரியை ஒருமுறை பார்த்து, அது கம்யூனிஸ்டின் முகத்தைப் போல இருக்கிறது என்று அவன் கூறியிருக்கிறான்.

பாலசந்திரன் கம்யூனிஸ்டின் மண்டை ஓட்டைத் தொட்டுப் பார்த்தான்.

அதைப் பார்த்த நளினி சொன்னாள்:

“அவனுக்கு பயமே இல்லையே! அவனைத் தூக்கிக் கொண்டு போய் தொட வைப்பதற்கு ஒரு தந்தை வேறு...''

ராஜசேகரன் சொன்னான்:

“அவன் பட்டாளக்காரனின் மகன். அவனுக்கு மண்டை ஓட்டைப் பார்த்து பயமில்லை. அவன் அதைத் தொட்டுப் படிக்கட்டும்.''

“அப்படின்னா அவனும் பட்டாளக்காரனா ஆகணும்னு சொல்றீங்களா?''

“ஆமாம்.''

“சரிதான்... நல்லாத்தான் இருக்கு.''

“ம்... என்ன?''

“நான் என்னுடைய தலையெழுத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தேன்.'' நளினி சிரித்தாள். “இனி மகன் கொண்டு வரும் மண்டை ஓடுகளை வைத்து இந்த சுவர் முழுவதும் நிறையும். பல அளவுகளிலும் எடைகளிலும் வடிவத்திலும் உள்ள மண்டை ஓடுகளின் ஒரு கண்காட்சி மையமாக இந்த வீடு இருக்கும்.''

அது தமாஷுக்காகக் கூறப்பட்ட விஷயம் என்று கணவனுக்குத் தோன்றியது. அவன் சொன்னான்:

“அந்த மண்டை ஓடுகள் அனைத்தையும் கொண்டு வந்து வைப்பதென்றால், இடம் போதவே போதாது.''

நளினி இறுதியாகச் சொன்னாள்:

“எது எப்படி இருந்தாலும் அவன் ஒரு பட்டாளக்காரனாக ஆவதை நான் ஒப்புக்கொள்ளவே மாட்டேன்.''

8

கோபத்திற்கு ஆளான பேஷ்காரும் டிப்பார்ட்மெண்ட் மேலதிகாரியும் ஊர்க்காரர்கள்தானே? அவர்களுக்கு சில விஷயங்களைச் செய்ய முடியாமல் இருக்குமா?

புதிய விநியோக கமிஷனரின் உற்சாகமான ஆட்சி ஆரம்பமானது. விவசாயிகள் நசுங்கத் தொடங்கினார்கள். ரேஷன் வர்த்தகர்கள் மாட்டிக்கொண்டு தவித்தார்கள். ஏராளமான திருட்டு வர்த்தகங் களையும் மறைத்து வைத்தல்களையும் கண்டுபிடித்து வழக்கு போட்டார். முகத்தைப் பார்க்காமல், பல பெரிய மனிதர்களின் அலுவலகங்களுக்கும் "சீல்” வைத்தார். கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் பலரும் தண்டிக்கப்பட்டனர். அதன் மூலம் ரேஷன் நிலைமை சற்று சீரடைந்தது. இந்த உற்சாக நடவடிக்கை எதற்கோ? யாருக்குத் தெரியும்?

ஒரு விஷயம் உண்மை.

மாநிலத்தில் நல்ல நிலையில் இருந்தவர்கள் எல்லாரும் கவலைப்பட ஆரம்பித்தார்கள். அவர்களுடைய கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலை அரசாங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்குப் போதுமானது என்று யாருக்கும் புரியும்.

பேஷ்காரின் மருமகன் ப்ரஜா பரிஷத்தின் தலைமைப் பிரிவில் ஒரு முக்கிய நபராக இருந்தார். அவர் ஒரு அட்வகேட்.


ஒரு முன்சீஃப் வேலைக்கு ஆசைப்பட்டு நீண்ட நாட்களாகக் காத்திருந்த ஆள் அவர். அரசாங்கத்தின் மீது அவர் பல வருடங்களாகவே எதிர்ப்பு உணர்வு கொண்டவராக இருந்தார். ப்ரஜா பரிஷத்தில் இருக்கும் இன்னொரு முக்கிய நபரும் பேஷ்காரின் உறவினர்தான். உறவினர் களாகவோ உடன் படித்தவர்களாகவோ ஏதாவதொரு விதத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய சிலர் டிப்பார்ட்மெண்ட் தலைவருக்கும் இருந்தார்கள். அப்படி அவர்கள் கணக்குப் போட்டுப் பார்த்தபோது, ப்ரஜா பரிஷத் கமிட்டியில் ஒரு நல்ல பெரும்பான்மை கிடைப்பதற்கு வாய்ப்பு இருந்தது. விநியோக கமிஷனர்மீது கொண்ட, மக்களிடம் செல்வாக்கு செலுத்த முடிந்தவர்களின் கோபத்தை அரசாங்கத்தின் பக்கம் திருப்பிவிட்டால் போதும்.

ப்ரஜா பரிஷத்தின் செயற்குழு கூடியது. அரசாங்கத்தின்மீது பலமான குற்றச்சாட்டுகள் கொண்ட ஒரு அறிக்கையை பேஷ்காரின் மருமகன் முன் வைத்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. சில தேவைகளை விளக்கியும், அவை நிறைவேறும் வரை அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டத்தை அறிவித்தும் உள்ள இன்னொரு அறிக்கையை அந்த டிப்பார்ட்மெண்டின் மேலதிகாரியின் நண்பர் வெளியிட்டார். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அதைத் தொடர்ந்து போராட்டத்திற்கான பிரச்சாரம் ஆரம்பமானது. மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்கள் கூட்டப்பட்டன. பெரிய அளவில் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன. அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கடுமையாக எதிர்த்தார்கள். ஊழல் செயல்களையும் அநியாயத்தையும் பொதுமக்களின் ஆதரவுடன் வெளிப்படுத்தினார்கள். அவற்றை முடிவுக்குக் கொண்டுவராமல் அடங்குவதில்லை என்று ப்ரஜா பரிஷத் உறுதியான குரலில் கூறியது.

ஆட்சித் தலைவருக்கு அனைத்தும் நன்கு தெரிந்திருந்தது. ப்ரஜா பரிஷத்தின் தலைவர், ப்ரஜா பரிஷத்தின் முடிவைத் திரும்பத் திரும்பக் கூறியபோது, அவர் புன்னகையை மட்டும் வெளிப்படுத்தினார். அவருடைய அச்சமின்மை அவர்மீது அன்பு வைத்திருக்கும் தொண்டர்களை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. ஏதாவது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அனைத்தும் பிரச்சினைக்குள்ளாகிவிடும் என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு அவர் வெறுமனே "உம்” மட்டும் கொட்டினார். மாநிலத்தில் எதுவுமே நடக்காததைப் போல, ஆட்சி விஷயங்கள் முறைப்படி நடந்து கொண்டிருந்தன.

சொற்பொழிவுகளைக் கேட்டுக்கேட்டு சோர்வே உண்டாகி விட்டது. எல்லாரும் கூறுவது ஒரே ஒரு விஷயம்தான். ஒவ்வொரு கிராமத்திலும் மூன்றோ நான்கோ பொதுக்கூட்டங்கள் நடந்தன. இப்போது கூட்டங்களுக்கு அதிகமான ஆட்கள் வருவதில்லை. அது ஒரு சாதாரண விஷயம்தான். மனிதர்களுக்கு எவ்வளவோ காரியங்கள் செய்வதற்கு இருக்கின்றன. கூட்டத்தில் கலந்துகொள்ளும் நேரத்தில் பத்து வாழையின் அடிப்பகுதியை ஒழுங்குபடுத்தலாம். பரிஷத்தின் காரியம் எதுவும் நடக்கவில்லை.

மீண்டும் செயற்குழு கூடியது. தீவிரமான கலந்துரையாடல்களுக்குப் பிறகு இன்னொரு செயல் திட்டம் தீட்டப்பட்டது. ஊர்வலங்களையும் திட்டங்களைக் கூறிச் செல்லும் பயணங்களையும் மாநிலம் முழுவதும் நடத்துவது என்பதே அது. அப்படிப் பிரச்சாரம் செய்வதற்கு மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீது உள்ள எதிர்ப்பையும் வெளிப்படுத்துவது...

அது மேலும் சற்று சுவாரசியமான- பார்ப்பதற்கும் ஆர்வத்தைத் தூண்டக்கூடிய ஒரு செயல்திட்டமாக இருந்தது. மக்கள் மேலும் விழிப்படைந்து எல்லா இடங்களிலும் கூடினார்கள். வெள்ளை நிறத் தில் இருக்கும் ஒரு விதமான தொப்பியைத் தலையில் அணிந்துகொண்டு பாடல்களைப் பாடியவாறு வரிசை வரிசையாகப் போய்க் கொண்டிருந்தார்கள். முன்னால் நடந்து கொண்டிருப்பவனின் கையில் ஒரு கொடி இருந்தது. இடையில் அவ்வப்போது அவர்கள் என்னவோ உரத்த குரலில் கூறினார்கள். பிள்ளைகளும் பெண்களும் வாசற்படிக்குச் சென்று அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நிற்பார்கள். வயலில் வேலை செய்யும் புலையன் நீண்ட நேரமாக வேலை செய்து கொண்டிருக்கிறான். அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு அவனும் நிற்பான். கோஷங்கள் போட்டபடி செல்லும் சிலரை அவனுக்கும் தெரியும்.

“அடியே... அங்கு முன்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு போவது என்னுடைய தம்புரான்.''

அப்போது இன்னொருவன் கூறுவான்:

“அதற்குப் பின்னால் போவது அரிசி விற்பனை செய்யும் தம்புரானின் தம்பி.''

“அங்கே உரத்த குரலில் பேசிக்கொண்டிருப்பது மேற்கு வீட்டில் இருக்கும் வக்கீல்.''

அந்த கோஷங்கள் கொண்ட ஊர்வலத்தில் செல்பவர்கள் எல்லாரையும் அவர்களுக்குத் தெரியும். அவர்கள் உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூறுவது அரசாங்கத்திற்கு எதிரான விஷயங்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால், இவையெல்லாம் எதற்காக?

ஒரு புலையன் இன்னொரு புலையனிடம் சொன்னான்:

“எனக்கு நேற்று கூலியாக காசு தந்தாங்க. தம்புரானின் நெல் எல்லாத்தையும் அரசாங்கம் வாரி எடுத்துக்கொண்டு போய்விட்டது. அதனால்தான் நெல் தரவில்லை. அப்போதே தம்புரானின் மகன் சொன்னார். அரசாங்கத்திற்குப் பாடம் சொல்லித் தரப்போறேன் என்று.''

கயிறு பிரித்துக் கொண்டிருக்கும்போதே, ஊர்வலம் வருவது காதில் விழுந்தது. வாசற்படிக்கு ஓடிச் சென்ற அந்த ஏழை கயிறு பிரிக்கும் பெண்களுக்கும் ரேஷன் கடைக்காரனின் தம்பி "அரசாங்கம் ஒழிக” என்று உரத்த குரலில் சத்தம் போட்டுக் கூறுவதற்கான அர்த்தம் தெரியும்.

அந்த வகையில் ஊர்வலங்களும் கோஷங்கள் கொண்ட பயணங்களும் சர்வ சாதாரணமான ஒரு விஷயமாக ஆனது. குழந்தைகள்கூட ஊர்வலம் போகும்போது எட்டிப் பார்ப்பதில்லை. தொப்பியை அணிந்துகொண்டு பாடல்களைப் பாடிக்கொண்டு செல்பவர்களுக்கே ஒரு வெட்கம் உண்டாக ஆரம்பித்தது. எந்தவொரு போக்கும் இல்லாதவர்கள் என்று ஆட்கள் கூறிவிடுவார்களோ என்ற சந்தேகம் அவர்களுக்கு உண்டானது.

மாநிலத்தின் வாழ்க்கை அப்போதும் பழைய மாதிரியே நடந்து கொண்டிருந்தது. கயிறு பிரிப்பவள் கயிறைப் பிரித்துக் கொண்டிருக்கிறாள். புலையன் வயலில் வேலை செய்கிறான். தொழிலாளி அவனுடைய வேலையைப் பார்க்கிறான்.

அடுத்த செயல் திட்டத்தைப் பற்றி யோசிப்பதற்காக செயற்குழு கூடியது. போராட்ட திட்டத்தின் அடுத்த கட்டத்தை அப்போது தலைவர்கள் செயல்வடிவம் செய்தார்கள்.

மேலும் சற்று தீவிரமான ஒரு திட்டமாக இருந்தது. அதில் வரி மறுப்பு இருந்தது. அதிகாரத்தை மீறுவது இருந்தது. இப்படிப் பல. இந்த முறை அரசாங்கத்திற்கு பரிஷத்தின் சவாலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்த மாதிரியான முயற்சிகளின் ஆரம்பத்தைக்கூட அனுமதிப்பதற்கில்லை. சட்டப்படி உண்டாக்கப்பட்ட ஆட்சியைத் தகர்க்கக்கூடிய எண்ணத்தை மக்களுக்கு மத்தியில் உண்டாக்கக் கூடிய முயற்சிகள் தடை செய்யப்பட வேண்டியவை அல்லவா?

பரிஷத்தின் மிகப்பெரிய செயல் திட்டங்களை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்குத் தெளிவான, பலம் கொண்ட பிரச்சாரம் தேவையாக இருந்தது. மீண்டும் கூட்டங்கள் கூட ஆரம்பித்தன. இந்த முறை சொற்பொழிவுகளுக்கு ஒரு தனிப்பட்ட உயிர்ப்பு இருந்தது. மதிப்பு இருந்தது. சொற்பொழிவுகளுக்கு கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. அவர்கள் கேட்டார்கள்: "நீங்கள் தரும் வரியை எப்படி செலவு செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரிய வேண்டாமா?' தெரிந்துகொள்ள வேண்டியதுதான். அது ஒரு உரிமையும்கூட. அந்த வகையில் ஏராளமான விஷயங்கள் அவர்கள் கூறுவதற்கு இருந்தன.


பொதுக்கூட்டங்களும் ஊர்வலங்களும் தடை செய்யப்பட்டன. தலைவர்களைக் கைது செய்தார்கள். சட்டத்தை மீறிப் பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் லத்தி சார்ஜும் துப்பாக்கிச் சூடும் நடந்தன. சிறைகள் நிறைந்தன. காவல் துறைக்கும் ராணுவத்திற்கும் பெரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டன. பெரிய சில தொழிற்சாலைகளின் செயல்பாடு நின்றது. சில பெரிய சொற்பொழிவாளர்களின் வருகை தடை செய்யப்பட்டது.

மேலும் கூறுவதற்கு என்ன இருக்கிறது? மாநிலமே குழப்பத்தில் இருந்தது.

அரசாங்கம் இன்னொரு வழியிலும் வெற்றி பெற்றது. பல முக்கியமான பரிஷத்தின் செயல்வீரர்களைத் தன் கைக்கு கொண்டு வர அரசாங்கத்தால் முடிந்தது. ஏராளமானவர்கள் அரசாங்கத்தின் கொடுமையைத் தாங்கி நிற்பதற்கு முடியாமல் மன்னிப்பு கேட்டார்கள். சிலர் பரிஷத்தின் செயல்களிலிருந்து விலகிக் கொள்வதாகக் காரணம் கூறி ராஜினாமா செய்தார்கள். சில ஆட்களுக்கு நல்ல தொகைகளும் கிடைத்தன.

அந்த வகையில் அரசாங்கத்தின் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக ப்ரஜா பரிஷத்திற்கு ஒரு பின்னடைவு உண்டானது. பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதற்கு ஆள் இல்லை. அதற்கான திறமையைக் கொண்டவர்கள் உள்ளே போய்விட்டார்கள். வெளியே இருப்பவர்களுக்கு பயம். பரிஷத் தோல்வியடைந்துவிட்டது என்று மாநிலத்தில் ஒரு எண்ணமும் உண்டானது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு ராஜினாமா ஆலோசனை நடந்தது. சிறையில் சிக்கிக் கொண்ட தலைவர்களுக்கு, ராஜினாமா ஆலோசனையை ஏற்றுக் கொள்வது சரி என்று தோன்றியது. அரசாங்கத்திற்கு எதிராக நீண்ட நாட்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டு செல்வதற்கு மாநிலத்திற்கு தைரியம் இல்லை என்பது அவர்களுக்குப் புரிந்தது.

பரிஷத் தலைமை ராஜினாமா திட்டத்திற்கு சம்மதத்தை அளித்து அவர்களை சுதந்திரமானவர்களாக ஆக்கியது. நிரந்தரமான ஒரு ராஜினாமா ஆலோசனை நடைபெற்றது. பிரதம அமைச்சரும் பரிஷத்தின் தலைவரும் ஒருவரையொருவர் பல தடவை சந்தித்தார்கள். அவர்களுடைய விவாதங்கள் ரகசியங்களாக வைக்கப்பட்டன. எனினும், பல யூகங்களும் வெளியே பரவின.

மாநிலத்தின் உயர்ந்த இடங்களில் சந்திப்புகளும், தேநீர் உபசரிப்புகளும், ஒருவரையொருவர் புகழ்பாடுவதும் நடந்து கொண்டிருந்தபோது, அப்பிராணி புலையனும் சிறு விவசாயியும் பிச்சைக்காரனும் தங்களுடைய அன்றாடப் பிரச்சினைகளுடன் போராடிக் கொண்டு நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். நடந்து முடிந்த நாடகங்களை அவர்கள் சில நேரங்களில் நினைத் துப் பார்ப்பார்கள். அன்று தொப்பிக்காரர்கள் மட்டுமே கண்களில் பட்டார்கள். அந்தத் தொப்பிகள் அனைத்தும் இப்போது எங்கு போயின?

அந்தத் தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு கொடிக்குப் பின்னால் பாடலைப் பாடிக் கொண்டு நடந்தவர்களுக்கு இப்போது அவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது ஒரு வெட்கம் தோன்றியது. மலையைப் போல வந்தது; எலியைப் போல போய் விட்டது. ஆனால், சிறைக்குப் போயிருப்பவன் ஒரு மரியாதையை எதிர்பார்க்கிறான். அவன் ஒரு தியாகி.

9

ந்தத் தோல்வி உணர்விற்கு மத்தியிலும் இங்குமங்குமாக அந்த நெருப்பு அணையாமல் சிலர் இருக்கத்தான் செய்தார்கள்- இளைஞர்கள்!

அந்தப் பின்னடைவுக்கு மத்தியில் சிறிதும் தாமதிக்காமல் ஒரு குரல் உயர்ந்து கேட்கத் தொடங்கியது. நடந்து முடிந்த போராட்டம் யாருடைய போராட்டமாக இருந்தது? அது தோல்வியை அடைந்ததற்குக் காரணம் என்ன? அந்தப் பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆட்கள் கலந்து கொண்டிருந்தாலும், அதற்குப் பொதுமக்களின் ஆதரவு இருந்ததா?

இந்தக் கேள்விகள் பரிஷத் தலைமையின் காதுகளிலும் விழுந்தன. அது உண்மைதான்!

மாநிலத்தில் ஒரு இளைஞர்கள் அமைப்பு வடிவமெடுத்தது. ஒரு பேராசிரியரின் மகன்... கல்லூரி மாணவனான அவன்தான் அதன் தலைவன். பெயர் ஸ்ரீகுமார். அவன் கேட்ட கேள்விகள் தான் அவை. அவன் தொடர்ந்து பல கேள்விகளைக் கேட்டான். பலவற்றையும் சொன்னான். பதில்களை எதிர்பார்த்தான்.

பரிஷத் தலைமைக்குத் தங்களுடைய போராட்டம் ஏன் தோல்வியடைந்தது என்பது புரிந்துவிட்டது. சிறிய விவசாயி, தொழிலாளி ஆகியோரின் சத்தம், மாநிலத்தையே குலுக்கியது என்று பேசப்படும் அந்தப் போராட்டத்தில் கேட்பதற்கு எதுவும் இல்லை. அந்த ஏழைகள் ஒரு சக்தியாக இருந்தார்கள். ஆனால், அந்த சக்தி யுடன் கூட்டாகச் சேர்வது... அவர்கள் கம்யூனிஸ்ட்டுகள்! அவ்வளவு நல்லதல்ல.

எனினும், அவர்களை உடன் சேர்த்துக் கொண்டு ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கிக் கொண்டு போராட்டத்தைத் தொடர்ந்தால் என்ன? அந்தக் கருத்தை பரிஷத் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டது. எனினும், ஸ்ரீகுமாரைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதற்கு பரிஷத்திற்கு தைரியம் இல்லை. அவன் கேட்பதும் கூறுவதும் பல முக்கிய நபர்களுக்குப் பிடிக்கவில்லை. எந்த அளவிற்குத் தாங்கிக் கொள்ள முடியாத கேள்விகள்! பேசுவது கம்யூனிசம்! பரிஷத்தைச் சேர்ந்த பல முக்கிய நபர்களையும் அவன் தயவு தாட்சண்யமே பார்க் காமல் விமர்சனம் செய்தான். கள்ளச் சந்தையையும் தொழிலாளர்களை நசுக்குவதையும் அவன் வெளிப்படையாகக் கூறினான்.

தொழிலாளிகள், சிறிய விவசாயிகள் ஆகியோருக்கு மத்தியில் பேச்சுவார்த்தை நடத்தி பரிஷத்துடன் அவர்களை ஒன்று சேர்ப்பதற்கு சிலர் ஈடுபட்டார்கள். பரிஷத் கமிட்டி தெளிவான சில வழிமுறைகளை அந்தச் செயல் வீரர்களுக்கு அளித்திருந்தது. வாக்குறுதிகள் எதையும் அளித்துவிடக் கூடாது. அவர்களுடைய கஷ்டங்களையும் அதற்கான பரிகாரங்களையும் பற்றிய அறிவிப்புகளை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். அந்த பிரச்சினைகளை மிகுந்த அக்கறையுடன் அணுக வேண்டும். முதலாளியும் நிலச்சுவான் தாரும் அவர்கள்மீது பரிதாபப்படுகிறார்கள் என்றும்; அதனால்தான் தொழில்கள் வளர்ச்சி அடைகின்றன என்றும்; அதே நேரத்தில் அரசாங்கம் முதலாளியின் கைகளைக் கட்டிப் போட்டிருக்கிறது என்றும் கூறுவதில் தவறே இல்லை. அந்த வகையில் அந்த மக்கள் கூட்டத்தை உற்சாகப்படுத்த வேண்டும். பரிஷத்திற்குப் பின்னால் அணிவகுத்து நிற்கச் செய்ய வேண்டும். தொழிலாளர்களின் அமைப்புகளையும் உண்டாக்கலாம்.

அதைத் தொடர்ந்து பரிஷத்தின் மேற்பார்வையில் தொழிலாளர்களின் செயல்பாடுகள் ஆரம்பமாயின. பரிஷத் செயல்வீரர்களின் உற்சாகமான சொற்பொழிவுகள் பல இடங்களிலும் நடந்தன. சில இடங்களில் தொழிலாளர்கள் சங்கத்திற்குள் நுழைவதற்காக வேறு சில இடங்களில் எதிரான சங்கங்களை உருவாக்கிப் பார்த்தார்கள்.

அந்த வாக்குறுதிகளுக்கும் சேவை செய்யத்தயாராக இருந்ததற்கும் நினைத்த அளவிற்குப் பலன் கிடைக்கவில்லை. அந்த வார்த்தைகள் மிகவும் இனிமையாக இருந்தன. உண்மையாகவே கவலையை வெளிப்படுத்தக்கூடியவையாக இருந்தன. ஆனால், ஒரு அடர்த்திக் குறைவு. அவை யாருடைய இதயத்திற்குள் சென்று நுழைய வேண்டும் என்று நினைத்தார்களோ, அங்கு சென்று அடைவதற்கான ஆற்றல் அவற்றுக்கு இல்லை. அந்த வார்த்தைகள் காற்றில் சிதறிப் போய்விட்டன. ப்ரஜா பரிஷத்தின் வழிமுறைகள் உள்ளுக்குள் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது, அந்த வார்த்தைகளுக்கு எப்படி பலம் இருக்கும்? வார்த்தைகளை எடை போட்டு, அர்த்தத்தை ஒழுங்கு பண்ணி உண்டாக்கப்படும் வார்த்தைகள்தானே அவை?


தொழிலாளிக்கு நூற்றாண்டுகளாக உள்ள அனுபவங்கள் இருக்கின்றன. அவன் இறந்தவன். இப்போதும் ஒரு பறை நெல் வேண்டுமென்றால், ஐந்து ரூபாய் கொடுக்க வேண்டும். முதலாளிக்கு என்ன லாபம் கிடைத்தாலும், கோரனுக்கு கும்பாவில்தான் கஞ்சி.

ஆனால், கொள்கைகளின் பிரகாசமும் நம்பிக்கையின் பலமும் கொண்ட வார்த்தைகளைக் கேட்டவுடன் அந்த ஏழை மனிதன் தன்னுடைய காதுகளைக் கூர்மைப்படுத்தி வைத்துக் கொண்டான். சுயநலம் கொண்ட ஆர்வங்களின் பலி பீடத்தின்மீது கொள்கைகளை பலி கொடுக்கத் தயாராக இல்லாத இளைஞர்களின் குரலை அவர்கள் கேட்டார்கள். பரிஷத் செய்ய வேண்டிய முதல் காரியம் ஏழைக்கு உதவக்கூடியது என்று ஸ்ரீகுமார் கூறியபோது, பரிஷத்தின் கோஷங்களை அவர்களும் கூற ஆரம்பித்தார்கள்.

மீண்டும் போராட்டம்!

ஸ்ரீகுமார் சூறாவளியைப் போல செயல்பட ஆரம்பித்தான். தொழிலாளியும் சிறு விவசாயியும் அவனுடைய தலைமையை ஏற்றுக் கொண்டார்கள். கல்வி நிலையங்களிலும் அவனுடைய செயல்பாடுகளின் அலை சென்றடைந்தது.

அவனுடைய அர்ப்பணிப்பு உணர்வு மாநிலத்தைச் சிலிர்க்கச் செய்தது. இளைஞர்கள் இறப்பதற்குத் தயாராக இருந்தார்கள். ஏழைகளைப் பற்றிக் கூறவே வேண்டாம். பயனட், நெருப்பு குண்டு ஆகியவற்றின் ருசியைத் தெரிந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு பயமில்லை. எல்லாரும் இறந்துவிடக்கூடாது என்று நினைத்து அமைதியாக ஒதுங்கி சிறிது நாட்கள் வாழ்ந்த அப்பிராணிகள் சந்தர்ப்பம் வருவதைப் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஒரு தலைவனும் கிடைத்துவிட்டான். இறப்பதற்குத் தயாராக வேண்டுமென்று ஸ்ரீகுமார் கூறும்போது, அவன் அப்படிக் கூறுவதே இறப்பதற்குத் தயாராகிக் கொண்டுதான். மாநிலத்தில் நிலவும் அநீதிகளைப் பற்றிக் கூறியபோது, அந்த அநீதிகளைப் பார்த்து இதயத்தில் வேதனை அடைந்துதான் அவன் சொன்னான். அந்த அநீதிகள் பிறரின் இதயத்தை வேதனை கொள்ளச் செய்தன. இந்த அநீதிகள் முடிவுக்கு வர வேண்டும். ஆமாம்... முடிவுக்குக் கொண்டு வந்த பிறகுதான் அவன் அமைதியாக இருப்பான். ஒரு புதிய சமூக அமைப்பை அவன் விளக்கிக் கூறினான். அதற்காக அவன் உயிரை அர்ப்பணம் செய்திருக்கிறான். அதற்கு அவனுக்கு தைரியம் இருக்கிறது.

ப்ரஜா பரிஷத்தும் போராட்டம் நடத்துகிறது. அவர்கள் எவ்வளவு தீவிரமாக முயற்சித்தாலும் ஒன்று சேர்க்கமுடியாமல் இருந்த பலம் இப்போதைய போராட்டத்திற்கு இருக்கிறது. இந்த முறை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால், இப்போது இன்னொரு பிரச்சினை. அதனை அப்போது சந்திக்கலாம்.

இப்போது பரிஷத் மிகவும் கவனமாகவே அறிக்கைகளை வெளியிடுகிறது. செயல்படுவதும் மிகவும் திட்டமிட்டே. எனினும், குரல் சற்று மாறியிருக்கிறது. தொழிலாளியும் சிறு விவசாயியும் மாநிலத்திற்குள் இருப்பவர்கள்தான் என்பதை ஒப்புக் கொண்டார்கள். அவர்களுக்கும் சில உரிமைகள் இல்லை என்று கூற முடியுமா?

மாணவர்கள் படிக்கச் செல்லாமல் இருந்துவிடுவார்களோ என்ற சூழ்நிலை உண்டானது. அரசாங்கம் தடுமாறியது. மாணவர்கள் ஆயிரக்கணக்கான படைவீரர்களாக மாறினர். அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு நேராக மார்பைக் காட்டத் தயாராக இருந்தார்கள். அரசாங்கத்தின் செயல்பாடுகளை நிறுத்தி விடுவோம் என்று அவர்கள் எச்சரித்தார்கள்.

யார் யாரைத் துப்பாக்கியால் சுடுவது?

செயல்பாடுகள் தங்களின் கட்டுப்பாட்டை விட்டுப் போய்விடும் என்று ப்ரஜா பரிஷத்தின் தலைமைக்குத் தோன்றியது. அந்த ஆபத்தைத் தடுப்பதற்கான வழி, இந்த அமைப்புகளையும் பரிஷத்தில் சேர்த்துக் கொள்வதுதான். ஸ்ரீகுமார் அந்த வகையில் பரிஷத்தின் செயற்குழுவில் ஒரு உறுப்பினராக ஆனான்.

தாங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்காக இளைஞர்கள் சந்தோஷப்பட்டார்கள். ஆனால், அதே சூழ்நிலையில் அவன் ஒரு முன்னறிவிப்பை வெளியிட்டான். "இது ஒரு ஐக்கிய முன்னணி. இளைஞர்களைப் பிற்போக்கான விஷயங்களுக்குள் கட்டிப்போட்டு நிறுத்தலாம் என்று யாரும் வீணாக ஆசைப்பட வேண்டாம்.”

பரிஷத் தலைமைக்கு அது அந்த அளவிற்குப் பிடிக்கவில்லை.

இளைஞன் தன்னுடைய லட்சியங்களை ஒவ்வொன்றாக வெளியிட ஆரம்பித்தான். நெருப்புப் பொறிகள்! ஆனால், தற்போதைக்கு அவற்றையெல்லாம் விழுங்காமல் இருக்க முடியுமா! பரிஷத்தில் அறிவு படைத்தவர்கள் கூறினார்கள்:

“பயப்பட வேண்டாம். வருவது வரட்டும். வருடங்கள் கடக்கும்போது, இந்த இளமை இல்லாமற்போகும். துயரங்களைக் கடந்து மனதிற்குப் பக்குவம் வரும். அப்போது இந்த வெப்பம் குறைந்துவிடும்!''

ஆனால், அப்போதும் கொள்கை என்ற பந்தத்தை உயர்த்திப் பிடிப்பதற்கு இளைஞன் இல்லாமற் போய்விடுவானா?

கண்டமாரில் நடைபெற்ற பயங்கரமான மனித வேட்டையைப் பற்றி, அது நடந்ததற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து, கூறுவதற்கு இளைஞர்கள் தயாரானார்கள். சூடான குருதியின் உணர்ச்சிக் கொந்தளிப்புடன், கண்டமாரின் காற்றில் கலந்துவிட்டிருந்த இறுதி மூச்சுக்களின் கோபத்துடன், அங்கு வெளிப்பட்ட துணிச்சல் மிக்க உறுதியான நம்பிக்கையுடன், ஸ்ரீகுமார் ஒரு பொதுக்கூட்டத்தில் சொற்பொழிவாற்றினான். அவன் கைகளைச் சுருட்டி வானத்தை நோக்கி அதை உயர்த்திக் கொண்டு சொன்னான்:

“அங்கு நடந்த பலாத்காரச் செயல்கள் இந்த சமூகச் சூழலை அடியோடு மாற்றுவதற்கான திறமையைக் கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்க வைத்திருக்கின்றன என்று நினைத்துக் கொள்வோம். அங்கு ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் எலும்புகளும் அங்குள்ள கல்லறைகளும் பிரம்மாண்டமாக வளர்கின்றன என்று நினைத்துக் கொள்ளுங்கள். அங்கு இறந்தவர்கள் இறக்கவில்லை. இறக்கப் போவதும் இல்லை.''

அன்று இரவு உண்மையாகவே கண்டமார் என்ற இடுகாட்டில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடந்திருக்க வேண்டும். எலும்புத் துண்டுகள் ஒன்று சேர்ந்து எலும்புக் கூடுகளாக ஆகியிருக்க வேண்டும். அன்றும் "போராட்டம் வெற்றி பெறட்டும்” என்ற கோஷங்கள் முழங்கியிருக்க வேண்டும். அந்த பலரின் மரணத்திலிருந்து தப்பித்து, மறைவிடங்களுக்குச் சென்று ஒளிந்து கொண்டவர்கள், அன்று எல்லாருக்கும் தெரியும்படியாக முதல் தடவையாக மூச்சுவிட்டிருக்க வேண்டும்.

அந்த சொற்பொழிவைக் கேட்டுவிட்டு வீட்டிற்குச் சென்ற பாலசந்திரன்- மேஜர் ராஜசேகரனின் மகன்- சொற்பொழிவில் இருந்த சில வார்த்தைகளை அதே தொனியில், அதே ஆவேசத்துடன் கூறினான். ஸ்ரீகுமாரைப் போல கையைச் சுருட்டி அவன் மேல் நோக்கித் தூக்கியிருந்தான்.

“அங்கு ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் எலும்புகளும் அங்குள்ள கல்லறைகளும் பிரம்மாண்டமாக வளர்கின்றன என்று நினைத்துக் கொள்ளுங்கள்!''

பாலசந்திரன் வணங்கக்கூடிய கடவுள்களான ஸ்ரீகிருஷ்ணன், பரமசிவன் ஆகியோரின் படங்களுடன் அந்த மண்டை ஓடும் இருந்தது. ஸ்ரீ கிருஷ்ணன் திகைப்புடன் அவனைப் பார்த்தான். ஸ்ரீபத்மநாபன் பள்ளியறையின் மெத்தையிலிருந்து எழுந்து நிற்கிறானோ? மண்டை ஓடு அப்போது பற்களை இளித்துக் கொண்டிருக்கிறது. கை எலும்புகள் சற்று அசைவதைப்போல தோன்றியது. விரல்கள் நடுங்கின. சங்கிலி சற்று குலுங்கியது. ஒரு பல்லி அதற்கு நடுவில் ஓடிக் கொண்டிருந்தது.

கதவுக்குப் பின்னால் மறைந்து நின்று கொண்டு நளினியும் ராஜசேகரனும் அந்த சொற்பொழிவைக் கேட்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.


“என்னடா மகனே, சொற்பொழிவு?''

தந்தை வெளியே வந்தான். பாலசந்திரனுக்கு வெட்கம் வந்து விட்டது. அவன் ஓடி மறைந்துவிட்டான். நளினி கேட்டாள்.

“எனினும், அவன் சொன்னதைக் கேட்டீங்களா?''

“கேட்டேன்.''

“அப்பா செய்ததைப் பற்றித்தான் மகன் கூறுகிறான்.''

“அந்த சொற்பொழிவாளர்கள் யாரோ கூறியதை அவன் பின்பற்றிக் கூறுகிறான். பாவம்... குழந்தை...''

“ஆமாம்... ஆனால், அவன் சொன்னது உண்மைதானே?''

“என்ன உண்மை? போர் நடக்கும் இடத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்று உனக்குத் தெரியுமா? கண்டமாரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. நான் அனுமதிக்கவில்லை!''

“எனினும், எனக்கு சில நேரங்களில் தோன்றியிருக்கிறது- அதெல்லாம் தவறானவை என்று. அங்கு இறந்தவர்கள் கூறுவதிலும் உண்மைகள் இருக்கின்றன. இந்த மகா பாவங்களுக்கு நீங்கள்தான் முழுமையாக பதில் கூற வேண்டும்!''

“பட்டாளக்காரனுக்கு பாவ புண்ணியங்களைப் பற்றி பார்க்க முடியாது. அவன் உத்தரவுகளைப் பின்பற்றுகிறான். அவ்வளவுதான். அதனால்தான் எனக்கு இவ்வளவு சீக்கிரம் பதவி உயர்வு கிடைத்தது!''

“அது சரி... ஆனால், அங்கு மரணமடைந்தவர்களின் பிள்ளை கள் பழிக்குப் பழி வாங்காமல் இருப்பார்களா?''

“ஓ... பழிக்குப் பழி...! பேசாமல் இரு. உனக்கு என்ன பைத்தியமா?''

“இருந்தாலும்... கவனமா இருக்கணும். இந்த மண்டை ஓட்டுக்கு சொந்தக்காரனின் மகன் இங்கே பிச்சை எடுத்துக் கொண்டு திரியவில்லை என்று எப்படித் தெரியும்? அவனுக்கு வாழ்க்கையில் வேறு எந்த இலக்கும் இல்லையென்றால்... நாம் கவனமாக இல்லாமல் இருக்கும்போது ஆபத்து வருவதற்கு நீண்ட நேரம் தேவையில்லை. நான் இந்தப் பிச்சைக்காரர்களைப் பார்த்து பயப்படுகிறேன். கண்டமாரில் இருந்துதான் இவர்கள் எல்லாரும் வருகிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அங்குள்ள இழப்பின் எச்சங்களாக இருக்க வேண்டும்.''

அடுத்து வந்த ஒரு நாளன்று பாலசந்திரன் பள்ளிக்கூடத்திற்குச் சென்றபோது, அங்குள்ள அவனுடைய நண்பர்கள் இங்குமங்குமாக தனித்தனியாக உட்கார்ந்திருந்தனர். அன்று அவர்கள் படிப்பு நிறுத்தம் செய்கிறார்கள். கோஷங்கள் கொண்ட ஊர்வலமும் இருந்தது. அவன் கோஷங்களை நன்கு கற்று வைத்திருந்தான். பால சந்திரன் தன்னுடைய நண்பர்களிடம் சொற்பொழிவு ஆற்றினான்.

“அந்த கம்யூனிஸ்டின் மண்டை ஓடு என்னுடைய வீட்டில் இருக்கிறது!''

அன்று மாணவர்களில் சிலர் அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள். கம்யூனிஸ்டின் மண்டை ஓடு ஒரு குறிப்பிடத்தக்க காட்சிப் பொருளாக இருந்தது.

10

பொதுமக்களின் போராட்டத்தின் பலனாக அரசாங்கம் தகர்ந்து போய்விடும் என்ற சூழ்நிலை உண்டானது. மாநிலமே அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டது. பொதுமக்களின் தலைவர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது.

ஸ்ரீகுமாரின் குரல் அப்போதும் கேட்டுக் கொண்டிருந்தது. ராஜினாமா எண்ணம் முன்னால் இருக்கும்போதெல்லாம் அவனுக்கு கூறுவதற்கு சில விஷயங்கள் இருந்தன.

சட்டசபை புறக்கணிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் விஷயத்தில் ஈடுபாடு இருக்கிறது என்ற நிலை வந்தது. போராட்டம் பின் வாங்கப்பட்டது.

தேர்தல் வந்தது. ப்ரஜா பரிஷத்தின் பல முக்கிய தலைவர்களும் சட்டமன்றத்திற்குள் வந்தார்கள். அவர்கள் எல்லாரும் ஊரில் உள்ள பெரிய நிலச்சுவான்தார்களாகவும் வர்த்தகர்களாகவும் தொழிலதிபர் களாகவும் இருந்தார்கள். அந்தப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திய நாயகர்கள் அரசாங்க காரியங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

புதிய அரசாங்கம் மாநிலம் முழுவதும் மிகப் பெரிய கொண்டாட்டங்களுடன் ஆரம்பமானது. எல்லா இடங்களிலும் பொதுக்கூட்டங்களும் சொற்பொழிவுகளும் நடந்தன. இனிமேல் அந்த மாநிலத்தை அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களே ஆளப்போகிறார்கள். புதிய அரசாங்கத்தின் நோக்கங்கள் வெளிப்படையாகக் கூறப்பட்டது. பரவாயில்லை. அவை அனைத்தும் நல்லவையாகவே இருந்தன.

அந்த சொற்பொழிவுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் மத்தியில் அப்போதும் ஒரு சத்தம் உரத்த குரலில் கேட்டுக் கொண்டிருந்தது. அது அந்த இளைஞனுடையதுதான். ஸ்ரீகுமார் அன்றும் சொன்னான்:

“எதிர்காலம் எங்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை நாங்கள் பார்க்கிறோம். மன்னிக்க வேண்டும். எங்களுக்கு உங்களைப் பற்றி சந்தேகம் இருக்கிறது. கண்டமாரின் கொலையாளிகளை நீங்கள் கண்டுபிடித்து தண்டனை அளிப்பீர்களா? கடந்த போராட்டத்தின் போது மாநிலத்திற்கு சேவை செய்த மாணவர்களின் தலையை அடித்து உடைத்தவர்களை நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? அப்பிராணி விவசாயிக்கும் தொழிலாளிக்கும் என்ன செய்யப் போகிறீர்கள்? முதலாளியையும் நிலச்சுவான்தாரையும் நீங்கள் எப்படிக் கையாளப் போகிறீர்கள் என்பதைப் பார்க்கிறோம். அதிகரித்து வரும் வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை ஆகியவை உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?''

இப்படிச் சென்ற அவனுடைய சொற்பொழிவு, பலமான ஒரு எதிர்க்கட்சியை, அமைச்சர்களின் பிள்ளைகளும் மருமகன்களும் சேர்ந்து உண்டாக்கியிருக்கிறார்கள் என்பதையும் கூறி எச்சரித்தது. அது இப்படி நிறைவடைந்தது:

“கம்யூனிஸ்ட் பாவிகள் என்று நீங்கள் முத்திரை குத்துபவர்களும், பசிக்கு உணவும் படுப்பதற்கு இடமும் மட்டுமே கேட்டதற்கு மரணத்தைத் தழுவிய கண்டமாரின் ஆயிரக்கணக்கான மனிதர்களின் ஆன்மாக்களும் எங்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்!''

அந்த அறிவிப்பிற்கு அமைச்சரவை பதில் கூறியது. சட்டம், சமாதானம் ஆகியவற்றை நிலை நிறுத்துவதற்கு ஒவ்வொரு அரசாங்கமும் அந்தந்தக் காலத்தில் நடவடிக்கைகள் எடுக்கும். அன்று அதிகாரத்தின் கட்டளைப்படி செய்யும் செயல்கள் சற்று கட்டுப் பாட்டை மீறி இருந்தாலும், தண்டனைக்குரியவை அல்ல. கண்ட மாரில் மரணத்தைத் தழுவியவர்களைப் பற்றி அரசாங்கமும் கனிவு மனம் கொண்டு பார்க்கிறது என்றாலும், அவர்கள் கெட்ட நோக்கங்கள் கொண்டவர்களின் நட்புக்குள் சிக்கிக்கொண்டு வழி மாறிச் சென்றுவிட்டவர்கள். விவசாயி, தொழிலாளி ஆகியோரின் நிலைமை களை அரசாங்கம் தீவிரமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. நிலச்சுவான்தாரும் முதலாளியும் மாநிலத்தின் பொருளாதார உயர்வுக்கு காவல்காரர்களாக இருக்கிறார்கள் என்று அரசாங்கம் நம்புகிறது. உணவுப் பற்றாக்குறையைச் சந்திப்பதற்கு ஒரு பரவலான திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. பூமியைத் துண்டு துண்டாக வைத்துக் கொண்டு விவசாயம் செய்வதால் உற்பத்தி குறைகிறது. அதற்குப் பரிகாரமாக கூட்டுறவு சங்கங்களின் மூலம் விவசாயத்தை நடத்த விரும்புகிறது... திறமை அதிகம் தேவைப்படும் செயல்களுக்கு அறிவுரை கூறிக் கொண்டிருக்காமல், ஒத்துழைப்பு அளிக்கும்படி அரசாங்கம் எல்லா கட்சிகளையும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறது.

அந்த வகையில் நரம்புகளின் போருடன் அரசாங்கம் ஆரம்பமானது. அமைச்சர்கள் மாநிலத்தின் கார்களில் அப்படியே மாநிலமெங்கும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். வாழ்த்து மடல்களும் தேநீர் விருந்துகளும் டின்னர்களும் முறைப்படி நடந்து கொண்டிருந்தன. மாதங்கள் பல கடந்தும், அது முடிவுக்கு வரவில்லை. பத்திரிகைகளுக்கு இடம் போதவில்லை.

பலப்பல புதிய விஷயங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாகத் தகவல் பரவிவிட்டிருந்தது. தினமும் காலையில் ஒரு புதுமையைப் பற்றிய செய்தியைக் கேட்டுக் கொண்டு மட்டுமே மாநிலம் கண்விழித்துக் கொண்டிருந்தது. இந்தப் புதிய திட்டங்கள் அனைத்தும் செயல் வடிவத்திற்கு வந்தால் இந்த மாநிலம் என்ன ஆகும் என்று ஆட்கள் அச்சப்பட்டார்கள்.


மக்களுக்கு இந்தப் போராட்டங்களின் பலனாக ஒரு பாரம்பரியம் உண்டானது. நல்ல சொற்பொழிவுகளை அடையாளம் கண்டு பிடிக்கக்கூடிய திறமை மாநிலத்தில் நல்ல முறையில் உண்டானது. எவ்வளவு வருடங்களாக அவர்கள் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்! அமைச்சர்கள் மத்தியில் ஒரு போட்டி... சொற்பொழிவுகளைச் சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று. அந்தப் பிடிவாதம் ஒரு பெரிய சுவாரசியமான விஷயமாக இருந்தது. பூங்காக்களிலும் கடைகளின் திண்ணைகளிலும் நூல் நிலையங்களிலும் வாதங்களும் எதிர்வாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த வாதத்தில் எந்த அமைச்சரின் எந்த சொற்பொழிவு முன்பு இருந்ததைவிட சிறப்பாக இருந்தது என்பதைப் பற்றிப் பேசினார்கள். ஒவ்வொரு அமைச்சருக்கும் ஆட்கள் இருந் தார்கள். ஆனால், அந்த வாதங்களும் எதிர்வாதங்களும் எப்போதும் ஒரு சமரசத்தில் போய் முடியும்.

அப்படிப் பேசிப் பேசி மாநில ஆட்சி நடந்து கொண்டிருந்தது. சொற்பொழிவைப் பயன்படுத்தியே அமைச்சருக்கு அமைச்சராகத் தொடர முடிந்தது. அவர்கள் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

தூர இடங்களான கிராமப் பகுதிகளில் சிறிய விவசாயிகள் இப்போதும் கஷ்டப்பட்டு வயலில் விவசாயத்தைச் செய்கிறார்கள். நெல்லை விளைவிக்கிறார்கள். விளைச்சலை எடுக்கும்போது நிலச்சுவான்தார் தன்னுடைய பெரிய பறையுடன் குத்தகையை அளப்பதற்காக வருவார். அவர் சில கணக்குகளையெல்லாம் கூறுவார். அவற்றையெல்லாம் விவசாயியால் புரிந்து கொள்ள முடியுமா? எல்லாவற்றுக்கும் சம்மதிக்காமல் இருக்க முடியுமா? களத்தில் குவித்து வைத்திருக்கும் நெல் முழுவதையும் நிலச்சுவான்தார் அவருடைய பெரிய பறையை வைத்து அளந்து முடிப்பார். கணக்குப்படி அவருக்குக் கிடைக்க வேண்டிய முழுவதும் கிடைக்கவில்லை. அவர் கேட்டார்:

“மீதி எங்கே?''

ஒரு வருட உழைப்பின் முடிவில் ஒரு மணி நெல்கூட மீதமாக இல்லை. மீதி எங்கே என்ற கேள்விக்கு விவசாயி என்ன பதில் கூறுவான்? இரண்டாண்டுகளுக்கான குத்தகையையும், மூன்றாவது வருடத்திற்கான வட்டியையும் தர வேண்டும். மூன்றாவது வருடம் வெள்ளப் பெருக்கால் விவசாயம் பாழாகி, அறுவடைகூட இல்லாமல் போனது. மேலும் ஒரு வருடத்திற்கான குத்தகையைத் தர வேண்டுமாம்! அவன் கூப்பிய கைகளுடன் தன்னுடைய நிலைமையைச் சொன்னான்.

“போன வருடத்திற்கான குத்தகையைத் தள்ளுபடி செய்யணும். நீங்களே வந்து பார்த்தீர்கள். பொடி செய்து கொறிப்பதற்குக்கூட ஒரு நெல் இல்லை!''

கவலையைக் கூறும்போது, அந்த ஏழையின் முதுகெலும்பு வில்லைப் போல வளைந்து கொண்டிருந்தது. நிலச்சுவான்தார் கடுமையான குரலில் சொன்னார்:

“எந்தவித முறைகேடும் உண்டாகாமல் குத்தகையைத் தர வேண்டியதை அளந்து தந்துவிட வேண்டும் என்று குத்தகைப் பத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது!''

அதுவும் சரிதான். ஆனால், ஒரு வருடம் அவனும் குடும்பமும் சிரமப்பட்டு உழைத்து, ஒருநாள் முழுமையாக உண்ணும் அளவிற்கு கூட மீதமிருக்கவில்லை. விவசாயம் நன்றாகவே இருந்தது. வட்டி இருக்கும்போது மீதி இருக்குமா?

நிலச்சுவான்தாரின் நிறைந்த கோணிகள் களத்திலிருந்து மூட்டை மூட்டையாகப் போகும்போது, குடிசையின் முன்னால் விவசாயியின் மனைவியும் பிள்ளைகளும் நீண்ட பெருமூச்சை விட்டுக் கொண்டு பார்த்தவாறு நின்றிருந்தார்கள். அவனுடன் சேர்ந்து பாடுபட்ட புலையனின் வேலை- மூட்டைகளைத் தூக்கி சுமை தூக்குபவர்களின் தலையில் ஏற்றி, தான் விளைய வைத்த நெல்லை பயணிக்க வைப்பதுதான்.

மீதி எங்கே என்ற கேள்வி அவ்வப்போது நிலச்சுவான்தாரிட மிருந்து வந்து கொண்டேயிருக்கும். அந்த வகையில் நெல் முழுவதும் போன பிறகு, விவசாயிகளின் சிறிய மகன் தன் தந்தையிடம் கேட்பான்:

“அப்பா! நம்முடைய நெல் முழுவதையும் அவர்கள் கொண்டுபோய் விடுவார்களா?''

“ஆமாம்... மகனே! அவர்களுக்குக் கொடுப்பதற்காக இருப்பதுதான்!''

அந்தக் களத்தில் அதற்குப் பிறகு எஞ்சியிருப்பது தரையைப் பெருக்கிய பிறகு வந்த கொஞ்சம் தூசியும் நெல்லும்தான். அதைப் பணியாளும் தம்புரானும் பங்கு பிரித்துக் கொண்டார்கள்.

அந்த ஏழை விவசாயிக்கு எப்படிப்பட்ட சோதனையான நேரத்திலும் கலந்து பேசுவதற்கு ஒரே ஒரு ஆள்தான் இருப்பான். அது அவனிடம் பணியாளாக வேலை பார்ப்பவன். அந்த உறவு இன்றோ நேற்றோ ஆரம்பமானது அல்ல. தலைமுறை தலைமுறையாக அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு பொதுச் செயல் பாட்டில் பங்காளியாக இருப்பவன் அவன். வயலில் விளையும் நெல் தனக்குச் சொந்தமானதும்கூட என்று அவன் நினைக் கிறான். கவலை யில் இருக்கும் விவசாயிக்கு புலையன் ஆறுதல் சொன்னான்:

“என் தம்புரானே! கவலைப்படாதீங்க. நம்முடைய நிலத்தில் கப்பை வைக்கிறப்போ, நம்முடைய கடன் தீர்ந்து விடும். சேனைக் கிழங்கு விற்று அடுத்த விவசாயத்தை ஆரம்பிச்சிடலாம்!''

அவனுடைய பொருளாதார சுமை எந்த அளவிற்குப் பெரியதாக இருக்கிறது என்பது அவனுக்கோ, அவனுடைய புலையனுக்கோ தெரியாது. நிலத்தில் விளையும் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டோ, சேனைக் கிழங்கை வைத்தோ அந்தக் கடனைத் தீர்க்கவே முடியாது. அந்த அளவிற்கு அது அதிகமாக இருக்கும். ஒவ்வொரு நிமிடமும் வட்டியால் அது பெருகிக் கொண்டிருக்கும். இரண்டு குடும்பங்கள் வாழ வேண்டும். அடுத்த விளைச்சலை ஆரம்பிக்க வேண்டும். இந்த விஷயங்கள் விவசாயியின் மனதை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். சாத்தப் புலையனும் ஆறுதலாக ஏதாவது கூறுவான்.

“அதெல்லாம் சரியாகும் தம்புரான். நீங்க எங்கே இருந்தாவது விதையைத் தயார் பண்ணுங்க. நீங்களும் நானும் சேர்ந்து உங்களுடைய உடம்புக்கு பாதிப்பு உண்டாக்காமல் இருந்தால் போதும்!''

ஆனால் சாத்தனின் ஆழமான நம்பிக்கையால் பரிகாரம் உண்டாகக்கூடிய பிரச்சினைகளாக அவை இருக்கவில்லை. மரவள்ளிக் கிழங்கைப் பிடுங்கி சந்தைக்குக் கொண்டு சென்றபோது, எதிர்பார்த்ததில் பாதி விலைகூட கிடைக்கவில்லை. மரவள்ளிக் கிழங்கின் சந்தை விலை மிகவும் குறைவாக இருந்தது. யாருக்கும் வைக்கோல் தேவைப்படவில்லை. அவர்களுடைய ஒரு காளை மாடு வாத நோய் வந்து தளர்ந்து போய் இறந்துவிட்டது.

அடுத்த விளைச்சலை உருவாக்க வேண்டிய நேரம் வந்தது. அந்த விவசாயி உடல் நலம் பாதிக்கப்பட்டுக் படுக்கையில் போய் படுத்துவிட்டான். சாத்தப் புலையன் மட்டுமே இருந்தான். விவசாயி களுக்கு படுப்பதற்கு சொந்தத்தில் இடம் இருந்ததால், நிலச்சுவான்தார் விதை நெல்லை கடனுக்குக் கொடுத்தார். அதன் மூலம் விளைச்சல் உருவானது.

அந்த வருடம் கடுமையான கோடை நிலவியது. விவசாயி உடல் நல பாதிப்பில் இருந்து எழுந்து எலும்பும் தோலுமாக குச்சியை ஊன்றிக் கொண்டு, மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு வயலில் சென்று பார்த்தான். அங்கு எதுவும் இல்லை. காய்ந்து வறண்டு போயிருந்த பூமியில் செம்பு நிறத்தில் சில நெல் செடிகள் இருந்தன. சாத்தன் தன்னால் முடிந்த வரையில் கஷ்டப்பட்டு வேலை செய்தான். ஆனால் பலன் இல்லை.


அந்த அறுவடை முடிந்ததும், நிலத்தை அவனிடமிருந்து எடுத்துக் கொண்டார்கள். குத்தகைக்கும் கடன் வாங்கியதற்கும் அவர் ஒரு பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டார்.

புதிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் வந்த பிறகும் வழக்கம்போல அப்பிராணி விவசாயி விவசாயம் செய்வதும், இருப்பிடத்தைப் பணத்திற்காகப் பணயம் வைத்து எழுதிக் கொடுப்பதும், விளைச்சல் கரிந்து போவதும் நடந்து கொண்டுதான் இருந்தன. அரசாங்கம் மாறிவிட்டதைத் தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு இயலவில்லை.

அந்த விஷயங்கள் அப்படி கிராமப் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தபோது, நகரத்தில்...?

கயிறுக்கு விலை இல்லை. கயிறு விவசாயம் பாதிக்கப்பட்டது. நெசவு செய்பவனுக்கு நூல் கிடைக்கவில்லை. அவனுடைய தொழிலும் நடக்கவில்லை. செம்மீன் பருப்பின் வெளிநாட்டு வியாபாரம் மிகவும் பாதிப்படைந்து விட்டதைப் போல தோன்றுகிறது. அந்த வகையில் தொழிலின்மை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை வேறு.

அதைத் தொடர்ந்து நகரத்தின் தெருக்களில் சோர்வடைந்த முகங்களுடனும், எதையோ தேடிக் கொண்டிருக்கும் குழி விழுந்த கண்களுடனும், அழுக்கு ஆடைகளுடனும் எந்தவொரு இலக்கும் இல்லாமல் மனிதர்கள் திரிவதைப் பார்க்க முடிந்தது. அவர்களுடைய வீடுகள் இல்லாமல் போயின. குழந்தைகள் மரணத்தைத் தழுவ ஆரம்பித்தார்கள். வாழ்க்கை ஒரு மிகப் பெரிய பிரச்சினையாக இருந்தது.

நகரத்தின் வெளிப் பகுதியில் ஒரு சிறிய குடிசை. ஒரு காலத்தில் அது சந்தோஷம் நிறைந்த ஒரு வீடாக இருந்தது. வெள்ளை அடிக்கப்பட்ட மூங்கிலாலான தடுப்புகள் அமைத்து மறைத்து உண்டாக்கப்பட்ட அந்த வீடு ஒரு காலத்தில் பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒன்றாக இருந்தது. இப்போது வீடே சாய்ந்து நின்றிருந்தது. தடுப்புகள் பல இடங்களிலும் பாதிப்படைந்து, பெரிய ஓட்டைகள் இருந்தன.

அங்குள்ள வீட்டின் தலைவனை, மனைவியும் ஒரு வயதான தந்தையும் இரண்டு பிள்ளைகளும் சார்ந்திருந்தார்கள். தினமும் காலையில் அவன் வேலை தேடிச் செல்வான். அந்த வீட்டில் இருப்பவர்கள், அப்போதிருந்து அவன் திரும்பி வரும் மாலை நேரத்தை எதிர்பார்த்து பகல் நேரத்தின் நீளத்தை மனதில் திட்டிக் கொண்டே இருப்பார்கள். வெளியே காலடிச்சத்தம் கேட்டவுடன் குழந்தைகளின், "அப்பா வந்துட்டாரு” என்ற குரல் எழும். கிழவன் தன் மகனை அழைப்பான். அன்றும் அரிசி போட்டு கொதிக்க வைத்த நீரைக் குடிக்க முடியாது. இரண்டு ராத்தல் மரவள்ளிக் கிழங்கைக் கொண்டு வந்திருந்தான். அதற்குத் தேவையான காசுதான் அன்று கிடைத்தது. அவன் எங்கேயோ அன்று கஞ்சி நீரைக் குடித்தான்... சில நாட்களில், சிறு குழந்தைக்கு ஒரு பிடி சாதத்தை அவன் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு வருவான். வெறும் கையுடன் திரும்பி வர வேண்டிய நாட்களிலும் அவன் தன்னுடைய தந்தைக்கு காலணாவிற்கு புகையிலை வாங்கிக் கொண்டு வருவான்.

அப்படியே நாட்கள் கடந்தன. ஒரு துண்டு மரவள்ளிக் கிழங்கையோ, உப்பு மட்டுமே போட்ட கொஞ்சம் செம்மீனையோ, சிறிது புண்ணாக்கையோ சாப்பிட்டு நாட்களை ஓட்டி, அந்த வீட்டிற்குள் அன்பு கலந்த உறவுகளைத் தொடர்ந்து காப்பாற்ற முடிய வில்லை. ஒருமுறை வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, மரணத்தைத் தழுவிவிட வேண்டும் என்று கிழவனுக்குத் தோன்றியது. "இன்றைக்கும் அரிசி கொண்டு வரவில்லை” என்று கூறி, குழந்தைகள் அழுதார்கள். படுத்த இடத்தில் இருந்து எழுந்திருக்க முடியாமல் மனைவி, பிள்ளைகளை வைத்துக் கொண்டு சிரமப்பட்டாள். பகல் முழுவதும் வேலை தேடி அலைந்துவிட்டு வெறும் கையுடன் திரும்பி வர வேண்டிய சூழ்நிலையில் இருந்த வீட்டின் தலைவன், மனைவியையும் பிள்ளைகளையும் தந்தையையும் மனதிற்குள் திட்டினான். அங்கு எப்படிச் செல்வது?

எல்லாரும் இறந்துவிட்டால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான். ஒரு ஆள் சாப்பிடக்கூடிய சோற்றுக்காக அவன் எந்த வேலையையும் செய்வதற்குத் தயாராக இருந்தான். ஆனால், யாருக்கும் வேலைக்காக அவன் தேவைப்படவில்லை. சாகும் நிலையில் இருந்த அவனை வைத்து என்ன வேலை செய்ய முடியும்?

மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் வெறுத்தார்கள். பிள்ளைகள் சுமையாகத் தெரிந்தார்கள். அந்தக் கிழவன் சாகக் கூடாதா? கிழவனை எடுத்துக் கொண்டால், தான் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டோம், எப்படிப்பட்ட எதிர்பார்ப்புகளையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ஒரு ஆண் பிள்ளையை வளர்த்தோம் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்தான். வயதான காலத்தில் அவனால் பலன் இல்லை என்றாகிவிட்டது. தான் மட்டுமே என்றால் எப்படியும் வாழ்ந்துவிடலாம் என்று வீட்டின் தலைவனுக்குத் தோன்றியது. அந்த சுமைகளைத் தாங்கிக் கொண்டு எப்படிப் போவது? அவனுக்குத் தான் தப்பித்தால் போதும் என்று தோன்றியது.

தன்னுடைய தந்தைக்குத் தேவைப்படுபவற்றைக் கொடுத்து காப்பாற்றி, அந்த வகையில் கடனை மீட்டு, தன்னுடைய பிள்ளை களை வளர்த்து, தன்னுடைய வயதான காலத்தில் இப்போது கொடுக்கும் கடனை திரும்பவும் வாங்கி வாழலாம் என்று மனதில் நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் அவன். அவனுடைய திருமணம் ஒரு காதல் திருமணமாக இருந்தது. அவன் பணி செய்த தொழிற்சாலையில் கயிறைக் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்த பெண் அவள்.

ஒருநாள் அந்த வீட்டின் தலைவன் எப்போதும் போல வெளியே சென்றான். வரவில்லை. மறுநாளும் அவனைக் காண வில்லை. பிள்ளைகளுக்கு முத்தம் தந்துவிட்டு அவன் போயிருந்தான். தந்தையிடம் விடை பெற்றுவிட்டுத்தான் சென்றான். மகனைக் காணவில்லை என்பதால், தந்தை தேடிக் கொண்டு போனார். நான்காவது நாள் மூத்த பையனும் அந்த வீட்டை விட்டுச் சென்றான். சில நாட்களில் தாய் மரணத்தைத் தழுவினாள்.

அந்த வகையில் அந்த வீடு சின்னாபின்னமாக ஆகியது. அவர்கள் எல்லாரும் எங்கு போனார்களோ? அவரவர்களின் வேலைகளைப் பார்த்துப் போயிருக்கலாம். ஒவ்வொருவரும் இன்னொரு வரைப் பார்க்காமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கலாம்.

11

ணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்கும் விநியோகத்தை முறைப்படுத்துவதற்கும் என்ற பெயரில் அரசாங்கம் நடைமுறைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கும் திட்டத்தைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன. அத்துடன் மாநிலத்தை தொழில் மயமாக ஆக்குவதற்கும் இன்னொரு திட்டம் இருந்தது. இரண்டையும் ஒரே நேரத்தில் செயல் வடிவத்திற்குக் கொண்டு வர அரசு நினைக்கிறது. இந்த திட்டங்களின் செயல்பாடுகளை ஆரம்பிக்கும்போது உணவுப் பற்றாக்குறையும் தொழிலின்மையும் நீக்கப்பட்டுவிடும் என்று அறிவைப் பயன்படுத்தியும் கணக்குகளின் மூலமாகவும் கூறுவதற்கு அரசாங்கத்தால் முடிந்தது.

செய்திப் பத்திரிகைகள் அனைத்தும் அந்த திட்டத்தைப் புகழ்ந்தன. அரசு ஒரு துணிச்சலான காலை முன்னோக்கி வைக்கும் செயல் என்று பாராட்டின. கம்யூனிஸ்ட்டுகள்கூட அந்தத் திட்டத்தை ஏற்றுக்கொள்ளாமல் இல்லை.


அமைச்சரவையின் இடது திசையை நோக்கிய சாய்வு அதன் மூலம் வெளிப்பட்டது. சோசலிசத்தை நோக்கிச் செல்லும் பயணத்தில் மாநிலம் முக்கால் பகுதி தூரத்தைக் கடந்து வந்துவிட்டதாகக் கூறினார்கள்... இப்படிச் சென்றன அந்தப் புகழ் வார்த்தைகள்...

சிறிய விவசாயிகளிடமிருந்தும் அவர்களுடைய கைவசமிருந்த பொருட்களைத் தேடி எடுத்தார்கள். அதன்மூலம் துண்டு பூமிகளில் விவசாயம் செய்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அவர்களை அழிவிலிருந்து காப்பாற்றக்கூடிய முதல் நடவடிக்கையாக அது இருந்தது. விவசாயத்தைச் செய்வதற்கு விவசாய கூட்டுறவு சங்கங்கள் என்ற பெயரில் சில அமைப்புகள் மாநிலம் முழுவதும் உண்டாயின. அதைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் உற்பத்தி மேற்சொன்ன அமைப்புகளுக்கு என்றானது.

உணவுப் பொருட்களின் வினியோகமும் அப்படிப்பட்ட அமைப்புகளின் மூலம்தான் பிரித்துத் தரப்பட்டது. மாநிலத்தில் இருந்த தொழில்களும், தனிப்பட்ட நபர்களிடமிருந்து அமைப்புகளுக்கு கைமாறும் விதத்தில் சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் புரட்சிகரமான ஒரு மாறுதல் மாநிலத்தின் பொருளாதார வாழ்க்கையில் வந்து சேர்ந்தது.

அந்த திட்டங்கள் நடைமுறைக்கு வர ஆரம்பித்தவுடன், ஒரு விஷயம் முன்பிருந்த சிறிய விவசாயிக்குப் புரிய ஆரம்பித்தது. முன்பு, அவன் தொழிலாளியைவிட உயர்ந்தவன் என்று நினைத்திருந்தான். அது ஒரு தவறான எண்ணம் என்று அவனுக்குப் புரிந்தது. அவனுடைய நிலைமை தொழிலாளியைவிட மோசமாக இருந்தது. அவனும் தொழிலாளியின் அணியில் சேர்ந்து கொண்டான்.

அதன்மூலம் தொழில் மண்டலத்திலும் ஒரு விஷயம் தெளிவானது. தனி நபரைவிட தொழில் அமைப்புகள் ஆபத்தானவை என்பதே அது. அந்த ஒன்றால் மட்டும் கூலி அதிகமாகப் போவதில்லை. தொழில் இல்லாமை இல்லாமல் போகப் போவதில்லை.

உணவுப் பற்றாக்குறை பயங்கரமான வடிவத்தை எடுத்தது.

ஆனால், அன்றும் மாண்புமிகு அமைச்சர் மகளின் திருமணத்தின்போது, நான்கு நாட்கள் தொடர்ந்து விருந்து நடந்தது. நிலச் சுவான்தாரின் தந்தையின் மரண அஞ்சலி நிகழ்ச்சியைப் போன்ற ஒரு கொண்டாட்டம் இன்னொரு ஊரில் சமீப காலத்தில் நடந்ததே இல்லை. நகரத்தின் தெருக்களில் நடக்கும்போது சந்தோஷமும் செழிப்பும் மட்டுமே தெரிந்தன. பஞ்சம் எங்கே என்று கேட்டு விடுவார்கள். பற்றாக்குறையைக் காணச் செல்பவன் போக வேண்டிய இடம் வேறு.

நகரத்தில் பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்த மாளிகைகளுக்கு அப்பால் இருந்த- நரகத்தைப் போல விளங்கிய வீடுகளின் மீது யாருடைய கவனம் செல்லப் போகிறது? சகித்துக் கொள்ளத் தெரிந்தவர்களுக்கு- பல வருடங்களாக சகித்துக் கொள்ள பழகிக் கொண்டவர்களுக்கு- கஷ்டங்களைக் கஷ்டங்களாகப் பார்க்கத் தெரியாதவர்களுக்குப் பஞ்சம் இருக்கிறதா? எந்தக் காலத்திலும் எதுவும் இல்லாமல் இருந்த இடத்தில், ஏதோ பஞ்சம் பாதிக்க ஆரம்பித்து விட்டது என்று கூற முடியுமா? வாழ்க்கை முழுவதுமே இல்லாமை தான் என்னும்போது ஒரு நாளோ மாதமோ ஒரு வருடமோ இல்லாமை என்று இல்லையே! அங்கு மரணம் நடந்தால், அது நடக்க வேண்டியதுதான் என்று தலைமுறை தலைமுறையாகப் படித்து வைத்திருக்கிறார்கள். பட்டினிதான் மரணத்தை உண்டாக்கு கிறது என்பது தெரிந்தால்...? பட்டினிக்கு மரணத்தை உண்டாக்க முடியும் என்பது தெரிந்தால் என்னவெல்லாம் நடக்கும்? இடுப்பைச் சுற்றி மட்டுமே வெட்கம் இருக்கிறது என்ற இடத்தில், ஆடை பற்றாக் குறை உண்டாகுமோ?

அப்படி உள்ளவர்களை வசதி படைத்தவனாக ஆக்குவதன் மூலமும், இல்லாதவனுக்கு இல்லாமை என்ற நிலைமையை இல்லா மல் செய்வதன் மூலமும் பற்றாக்குறை என்பது ஒரு பேசப்படும் விஷயம் மட்டுமே என்று வேண்டுமானால் கூறலாம்.

ஆனால், ஒரு விஷயம் குறிப்பிட்டுக் கூறும் வகையில் கவனத்தை ஈர்த்தது. ஏதோ சிறு சிறு இடுக்குகளுக்குள் இருந்து வெளியே வந்த பேய் வடிவங்கள் நகரங்களின் அழகை அலங் கோலப்படுத்தி வீடுகளின் வாசல்களிலும் கடைகளுக்கு முன்னாலும் ஓட்டல்களின் பின்னால் இருக்கும் எச்சில் தொட்டிகளிலும், அவற்றின் உருண்டைக் கண்களால் விழித்துப் பார்த்துக் கொண்டு காட்சியளித்தன. எந்த அளவிற்கு நாசம் பிடித்த விஷயம் அது! வெளியே என்ன ஒரு சத்தம்!

வெளியே சென்றால் மனதை உருத்தக் கூடிய ஒரு காட்சியைப் பார்க்காமல் திரும்பி வர முடியாது. சோற்றை வாய்க்குள் வைக்கும் போது, அந்தக் காட்சிதான் ஞாபகத்தில் வரும். சந்தோஷமாக கொஞ்சம் தூங்கலாம் என்றால் முடியாது. அந்த வகையில் அன்றாட வாழ்க்கையின் சந்தோஷங்களுக்கு மத்தியில் ஒரு தொல்லையாக இந்தப் பிரச்சினை வளர்ந்து கொண்டிருந்தது.

அவர்களுடைய எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருவதும் தெரிந்தது. எங்கேயிருந்து இப்படிப் பெருகுகிறது?

நகரத்தில் இருக்கும் கோடீஸ்வரனுக்கு உணவுக்குத் தேவைப்படும் சிறு மணி அரிசிகூட கிடைக்கவில்லை என்ற சூழ்நிலை வந்தபோது, உணவுப் பற்றாக்குறை என்ற சத்தத்திற்கு கனம் உண்டானது. அது அரசாங்கத்திற்குத் தெரியாமல் இருக்குமா? நிலச்சுவான்தாரின் மனைவிக்குப் பிடித்த மேல்துண்டு கடைவீதியில் கிடைக்கவில்லை என்றபோது ஆடைப் பஞ்சத்தைப் பற்றிய கருத்து பரவலாக வெளியே வந்தது.

வெளியே இருந்த சத்தமும் அமைதியைக் கிழிக்கக் கூடிய நாண மின்மையின் ஒரு பிரச்சினையாகவே வளர்ந்து கொண்டிருந்தது.

யாருக்கும் தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த பிச்சைக்காரன் சாலையில் நடந்து திரியவில்லை. உணவின் வாசனை வந்த இடத்தைத் தேடி அவன் செல்கிறான். உயிர் இருப்பதால் செயல்படுகிறான்.

அரசாங்கம் பொதுமக்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து இந்த வளர்ந்து வரும் பிரச்சினைக்கு ஒரு பரிகாரத்தைக் கண்டு பிடித்தார்கள். ஒரு சட்ட உருவாக்கத்தின் மூலம் பிச்சை எடுப்பதற்கு தடை கொண்டுவரப்பட்டது. அத்துடன் இப்போதிருக்கும் பிச்சைக்காரனுக்காக மாநிலத்தின் நாலா பக்கங்களிலும் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன. இரக்க குணம் கொண்ட முக்கிய நபர்களிடமிருந்து பெரிய அளவில் நன்கொடைகள் வந்து கொண்டிருந்தன.

அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வரவில்லை. மீண்டும் பிச்சைக்காரர்கள் உருவாகிக் கொண்டுதானே இருக்கிறார் கள்?

சாதாரண மக்களுக்குப் பல விஷயங்களும் புரிந்தன. விவசாய சங்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டார்கள். கிராமப்பகுதிகளில் இருக்கும் ஏழைகளுக்கு அந்த சங்கங்களில் கூறிக் கொள்கிற மாதிரியான நன்மைகள் எதுவும் இல்லை. சங்கங்களில் முக்கிய நபர்களாக இருந்தவர்கள் நிலச்சுவான் தார்களும், புதிய தொழில்களையும் லாபம் தரும் வழிகளையும் தேடிக் கொண்டிருக்கும் பணக்காரர்களும்தான். அப்பிராணிகளாக இருக்கும் சிறிய விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் அதில் உறுப்பினராக ஆவதற்குப் பணம் இருக்கிறதா? அப்படி இருந்தால் கூட, அவர்களுக்கு உறுப்பினராக இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் அதன் செயல்பாடுகளில் எந்த அளவிற்குப் பங்காற்ற முடியும்?


விவசாயம் ஒரு தொழிலாக ஆனதைத் தொடர்ந்து நூற்றாண்டுகளாக விவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளிகளுக்குமிடையே இருந்து வந்த உறவு தகர்ந்துவிட்டது. முன்பு விவசாயத் தொழிலாளி விவசாயத்தையும் பூமியையும் பாசத்துடன் நினைத்தான். வயலும் விளைச்சலும் அவனுக்கும் விவசாயிக்கும் நெருக்கமானவைகளாக இருந்தன. இன்று? அவன் இத்தனை மணி முதல் இத்தனை மணி வரை வேலை செய்ய வேண்டும். முறையான கூலியை நாணய வடிவில் வாங்கிக் கொள்ள வேண்டும். நெல் கூலியாகக் கிடைத்துக் கொண்டிருந்த காலம் மறந்தே போனது. அறுவடை செய்யும் காலத்தில்கூட ஒரு நெல்மணிக்கும் அவனுக்கு உரிமை இல்லை. நெல் வேண்டுமென்றால், விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டும்.

ஆனால், நெல் கிடைக்கும். ஒரு பறைக்கு ஐந்து ரூபாய் விலையாகக் கொடுக்க வேண்டும்.

சிறு விவசாயிகளில் பலரும் விவசாயத் தொழிலாளிகளாக ஆகி விட்டார்கள். எஞ்சியவர்கள் ஊரைவிட்டே போய்விட்டார்கள்.

மக்களுடைய கோபம் அதிகமாகிறது. அது அடுத்த வடிவத்தை அடைந்து கொண்டிருக்கிறது. பெரிய விநியோக சங்கங்களும் விவசாய சங்கங்களும் செய்த கள்ளச் சந்தை விவகாரம் கண்டு பிடிக்கப்பட்டது. அத்துடன் முக்கிய நபர்களான பலரின் பெயர்களும் நாறத் தொடங்கின.

மீண்டும் தொழிலாளர் அமைப்புகள் பலமான எச்சரிக்கைகளை வெளியிட்டன. ஸ்ரீகுமார் அரசாங்கத்தை விமர்சனம் செய்தான். அந்த அரசாங்கத்தை உருவாக்கிய பொதுமக்கள்தான் அதைத் தகர்க்கவும் செய்வார்கள். இந்த நிலை தொடர்ந்து நடப்பதற்கு சம்மதிக்க மாட்டார்கள்.

தொழிலாளிக்கும் முதலாளிக்குமிடையே உண்டான கருத்து வேறுபாடு, மாநிலமெங்கும் மீண்டும் ஒரு பிரச்சினையாக மாறியது. விவசாயத் தொழிலாளிகளும் வேலை நிறுத்தம் செய்தார்கள். மாநிலம் மிகவும் வேகமாக ஸ்தம்பிக்கும் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

ப்ரஜா பரிஷத்துக்கும் தன்னுடைய அரசாங்கத்தைப் பற்றிக் குறை கூற வேண்டிய சூழ்நிலை வந்தது. பரிஷத்தின் பல முக்கிய நபர்களின் ஈடுபாடுகள் ஆபத்திற்குள்ளாயின. அது மட்டுமல்ல- ஒரு பிரிவினருக்கும் திருப்தி உண்டாவதாக இல்லை. இப்படிப் போனால் அடுத்த தேர்தலை பரிஷத்தால் எப்படி சந்திக்க முடியும்?

அடுத்த சட்டமன்றம் கூடுகிறபோது, அமைச்சரவை பதவி இல்லாமல் போய்விடும் என ஒரு வதந்தி ஊரெங்கும் பரவிக் கொண்டிருந்தது. அமைச்சரவைக்கு ஆதரவு தருவதற்கு யாருமே இல்லை. அமைச்சரவையின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறிக் கொண்டார்கள்.

சட்டமன்றம் கூடியது. சட்டசபை பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. உள்ளே இடம் இல்லாததால், நிறைய ஆட்களுக்கு நுழைவதற்கான வாய்ப்பு தரப்படவில்லை. அந்த மூலையில் தனக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல அப்பிராணியாக ஒதுங்கி உட்கார்ந்திருக்கும் ஒரு மனிதர்தான் நம்பிக்கையில்லா தீர்மானத் தைக் கொண்டு வருகிறார்.

சபை ஆரம்பித்தவுடன் கேள்விகளும் பதில்களும் தொடங்கின.

அமைச்சரவைக்கு முதல் தடவையாக பதில் கூற வேண்டியிருந்த கேள்வி இதுதான்:

"கண்டமாரிலிருந்து மறைந்தோடிய கம்யூனிஸ்ட்டுகள், மாநிலம் முழுவதும் கிராமங்கள் கிராமங்களாக பரவி ரகசியமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் அரசாங்கத்திற்குத் தெரியுமா?'

தெரியாது என்று அரசாங்கம் பதில் கூறியது. தொடர்ந்து கிளை கேள்விகள்:

"எவ்வளவு கம்யூனிஸ்ட்டுகள் தப்பித்திருக்கிறார்கள்?'

பதில்: "தெரியாது!'

கேள்வி: "தப்பித்திருக்கிறார்களா?'

பதில்: "தெரியாது!'

கேள்வி: "தப்பித்துப் போயிருந்தால் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?'

பதில்: "தெரியாது!'

அந்த சூழ்நிலையில் தலைவரின் வேண்டுகோளை ஏற்று ஒரு அமைச்சர் ஒரு சொற்பொழிவை ஆற்றினார். கடந்த அரசாங்கத்தின் திறமைக்குறைவின் விளைவுதான் கண்டமார் சம்பவம் என்றும்; கம்யூனிஸ்ட்டுகளின் ரகசிய செயல்பாடுகள் மாநிலத்தில் ஆரம்பித் திருக்கின்றன என்ற விஷயம் சமீபத்தில் அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறது என்றும்; உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அரசாங்கம் எடுக்க இருக்கிறது என்றும் அவர் கூறினார். பொது மக்களின் சுதந்திரத்திற்கு மிகப் பெரிய மதிப்பு தரும் அரசாங்கம் முன்கூட்டியே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்ததற்கு பொதுமக்கள் மன்னிக்க வேண்டும் என்று தொடர்ந்து அவர் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.

பரிஷத் கட்சியில் இல்லாத ஒரு உறுப்பினர் கேட்டார்: "ஒரு புரட்சிவாதியும் உண்மையான கம்யூனிஸ்ட்டுமான ஸ்ரீகுமாரை கைது செய்யாததற்குக் காரணம் - அவருடைய செல்வாக்கிற்கு பயந்தா, அல்லது முன்பு ப்ரஜா பரிஷத்தின் செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார் என்பதற்காகவா?'

தலைவர் அந்தக் கேள்வியை அனுமதிக்கவில்லை. இன்னொரு உறுப்பினர் சில ஆட்களின் பெயர்களைக் கூறிவிட்டு, "அவர்களின் பெயரில் கள்ளச்சந்தை நடத்தியதாகக் குற்றச்சாட்டுகள் உண்டான பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்கான காரணம்- அவர்கள் ப்ரஜா பரிஷத்தின் உறுப்பினர்களாக இருந்ததும் முக்கிய நபர்களாக இருந்ததும்தானே?' என்று கேட்டார். அந்தக் கேள்வியையும் தலைவர் அனுமதிக்கவில்லை.

இன்னொரு கேள்வி எல்லாவற்றையும்விட முக்கியமானதாக இருந்தது. புதிய விவசாய சங்கங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அமைச்சருக்கும் எத்தனை பங்குகள் வீதம் இருக்கின்றன என்பதே அந்தக் கேள்வி. அமைச்சரவை உருவானதற்குப் பிறகு, புதிய தொழில் கொள்கையின்படி எத்தனை தொழிற்சாலைகள் உண்டாகி இருக்கின்றன என்பதும் அதில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அமைச்சருக்கும் உள்ள உரிமைகள் என்ன என்பதும் இன்னொரு கேள்வியாக இருந்தது.

அப்போது சபை மதிய உணவிற்காகப் பிரிந்தது. மதிய உணவிற்குப் பிறகுதான் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாத, எதிர் வாதங்களுக்காக எடுக்க இருக்கிறார்கள்.

சபை மதிய உணவிற்காகப் பிரிந்தபோது, அமைச்சரவையின் ஒரு அவசர கூட்டம் கூடியது. அது மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டது. அவையின் காலை வேளை போக்கைப் பார்த்ததில் அவர்களுடைய கட்சியேகூட அவர்களை ஆதரிப்பதாக இல்லை.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்து, சட்டமன்றக் கட்டிடத்தை விட்டு அமைச்சர்கள் வெளியே வந்தபோது, வெளிவாசலில் ஒரு பிச்சைக்காரி படுத்து மரண மூச்சை விட்டுக் கொண்டிருந்தாள். அவளை அங்கு யாரோ இழுத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

மதியத்திற்குப் பிறகு மீண்டும் அவை கூடியது. கடுமையான காவலும் கட்டுப்பாடும் இருந்தன. நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் வெளியே போராட்டம் நடக்கும்.

தலைவர் தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்தார். என்ன ஒரு முழுமையான அமைதி! நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வருவதற்காக வந்திருந்த உறுப்பினரை தலைவர் அழைத்தார். அவரை எல்லாரும் சுவாசத்தை அடக்கிப் பார்த்துக் கொண்டிருந் தார்கள்.

அந்த மதிப்பு மிக்க உறுப்பினர் எழுந்து, குறிப்பிட்ட அந்த தீர்மானத்தைக் கொண்டு வர தான் விரும்பவில்லை என்று கூறினார்.

சூழ்நிலையின் இறுக்கம் எவ்வளவு விரைவாக இல்லாமல் போனது!


12

ரு பெரிய நகரத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் இல்லம். இரவு அதிகமாகவே இருட்டி விட்டது. உலகம் சந்தோஷமான தூக்கத்தில் மூழ்கியிருந்த நேரம். கஷ்டங்களிலும் துயரங்களிலும் இருந்து உயிர்கள் தற்காலிகமாவது தப்பிக்க முடிகிற நேரம்.

ஆனால், பிச்சைக்காரனுக்கு அந்த ஆசீர்வாதமும் இல்லை. நோயும் பசியும்தானே அவனுடைய உறவினர்களாக இருக்கிறார்கள்! அவற்றுடன் அவன் நெருங்கிய உறவு கொண்டிருந்தாலும், தூங்கும்போதுகூட முனகிக் கொண்டும், சொறிந்து கொண்டும், உருண்டு கொண்டும் அவன் இருப்பான். சில நேரங்களில் அவன் பேசவும் செய்வான். மூட்டைப் பூச்சியும் கொசுவும் கரையானும் அவனுடைய முரட்டுத்தனமான தோலைக் கடித்து உடைக்க முடியாது. அவனுடைய பழுத்துப் போன சலம் வழியும் புண்களில் நெளிந்து கொண்டிருக்கும் புழுக்களுடன் எறும்புகள் பெரிய அளவில் போர் நடத்தும்போதுகூட, தூக்கத்தில் அவன் சில நேரங்களில் அந்த இடத்தில் அடித்தான் என்று வரலாம்.

அது உறக்கமா? அதனை உறக்கம் என்று கூறலாமா? உறங்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள் அல்லவா? தூக்கம் அதிர்ஷ்டத்தின் ஒரு அடையாளம். அந்த ஓய்வில் இருந்துவிட்டு, கண் விழிக்கும்போது உற்சாகமும் எழுச்சியும் இருந்தால்தானே தூக்கம் என்று கூற முடியும். தூக்கம் ஓய்வுதானே? அப்படிப் படுத்திருப்பதும் அந்த பிச்சைக்காரர்களுக்கு ஒரு கஷ்டமான விஷயம்தான். அது ஓய்வு அல்ல. பிச்சைக்காரர்களின் தூக்கத்திற்கு சுய உணர்வு இல்லாத ஒரு படுத்திருத்தல் என்று சிரமப்பட்டு பெயர் கொடுக்க வேண்டும்.

சந்தோஷத்தின் வெளிப்பாடும் அமைதியும் அந்தக் கட்டிடத்தில் இல்லை. அந்தக் கட்டிடத்திற்குள் இருக்கும் இருட்டின் பக்கங்களில் ஏராளமான மனிதர்கள் சுருண்டு படுத்திருக்கிறார்கள். இடையில் அவ்வவ்போது தாங்க முடியாத புலம்பல்கள், வேதனை கலந்த முனகல்கள், அழுகைகள்... சில நேரங்களில் நள்ளிரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு, குளிரில் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மரங்களை நடுங்கச் செய்யும் விதத்தில் எழும் அலறல்கள்- இப்படித்தான் அங்கு இரவுகள் கழிந்து கொண்டிருக்கின்றன. ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன் தன்னுடைய மன வலிமையின் காரணமாக பைத்தியக்காரனாக ஆகாமல் வாழ்ந்தான். எப்போதாவது பைத்தியம் பிடிக்க அவனுக்கு சந்தர்ப்பம் வேண்டாமா?

அந்த கட்டிடத்திற்குள், உலகத்தை நடுங்கச் செய்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் வேதனைகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு இருப்பவர்கள் எல்லாரும் பிச்சைக்காரர்களாகவே பிறந்த வர்கள் அல்லவே! எனினும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வாழ்க்கை பற்றிய கதை இருக்கும். வேறுபட்ட ஒவ்வொரு வாழ்க்கைப் பாதையின், சமூக நீதியில் தவறுகளின் சான்றுகள்தான் அங்கு இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் உடலில் மட்டு மல்ல- மனங்களில் எந்த அளவிற்குப் பெரிய புண்களைக் காண்பார்கள்!

எல்லாரையும் அன்னைதான் பெற்றெடுத்திருக்கிறாள். பத்து மாதங்கள் சுமந்து, வேதனையைச் சகித்துக் கொண்டு பெற்றெடுக்கப் பட்டவர்கள். ஒரு குழந்தை தேவை என்று நினைக்கும் கொஞ்சல் களிலும் உபசரிப்புகளிலும் சிறிய அளவிலாவது அவர்களுக்கும் கிடைத்திருக்கும். இல்லாவிட்டால் குழந்தையாக இருக்கும்போதே அழிந்து போயிருப்பார்களே! தொடர்ந்து ஒவ்வொருத்தனும் அவனவனின் அனுபவங்களை நடந்து கொண்டே கூறத் தொடங்கினால், இந்த சமூக நீதி தகர்ந்து போய்விடும் என்று கருதி அவர்கள் அனைவரையும் அங்கு அடைத்துப் பூட்டி வைத்திருக்கிறார்கள்.

அந்த கூட்டிற்குள் இருக்கும் முனகல்களுக்கும் வேதனை கலந்த புலம்பல்களுக்கும் மத்தியில், தெளிவான ஒரு உரையாடல் கேட்டது. ஒரு மனிதன் கேட்டான்:

“பரமு, தூங்கிட்டியா?''

“இல்லை.''

“எனக்கு தூக்கம் வரல.''

“எனக்கும் தூக்கம் வரல.''

அவர்கள் இருவரும் எழுந்து உட்கார்ந்தார்கள். ஒரு ஆள் சொன்னான்:

“இந்த கட்டிடத்திற்குள் எப்படிப்பட்ட சத்தங்கள் எல்லாம் கேட்கின்றன. அழுகையும் முனகலும் சத்தங்களும்...''

“அது அப்படித்தான் இருக்கும்'' -பரமு சொன்னான். “நாமும் கொஞ்சம் கண்களை மூடிவிட்டால், வாய்க்கு வந்ததைக் கூற ஆரம்பித்துவிடுவோம். நேற்று நள்ளிரவு தாண்டினப்போ, நீ ஏதோ உளறிக் கொண்டிருப்பதைக் கேட்டேன். "சாத்தா' என்று அழைக்கவோ வயலில் காளையைப் பூட்டவோ- என்னவோ செய்தாய். இடையில் மகனை அழைப்பதையும் ஏதோ வேலை செய்யச் சொல்லிக் கூறுவதையும் கேட்டேன்.''

“நினைவுகள்... பரமு... நினைவுகள்... இந்த நினைவுகள் முழுவதும் மறைந்து போய் விட்டிருந்தால் நல்லா இருந்திருக்கும். நானும் காளைகளைப் பூட்டியவன்தான். நிலத்தில் விவசாயம் செய்தவன்தான். எனக்குப் பணியாள் இருந்தான். அவனுடைய பெயரைத்தான் "சாத்தா” என்று நான் அழைத்தேன். எல்லாம் இருந்தன. அது எதையும் மறக்கவில்லை. கண்களை மூடிவிட்டால் வேதனை கலந்த கனவுதான். என்ன செய்வது? நான் ஒரு கனவு கண்டவன் அல்ல.''

“அது சரிதான்... நானும் கனவு கண்டவன் அல்ல'' -பரமு தொடர்ந்து சொன்னான்: “எனக்கு வேலை செய்தால்தான் தூக்கம் வரும்.''

பரமுவின் நண்பனும் அதை ஒப்புக் கொண்டான். அவர்கள் இருவரும் நல்ல முறையில் அவர்களுடைய காலத்தில் வேலை செய்தவர்கள்.

அவர்கள் தங்களுடைய கடந்து சென்ற வாழ்க்கையைப் பற்றி விளக்கிப் பேசினார்கள். அப்போது பிச்சைக்காரர்களின் பலவீனமான குரலுக்கு பலம் வந்து சேர்ந்தது. அவர்களுக்கும் ஒரு சக்தி உண்டானது. அதைக் கூறுவதும் கேட்பதும் சுவாரசியமான ஒரு விஷயமாக இருந்தது.

கேசவன் சொன்னான்:

“எனக்கு ஒரு புலையன் இருந்தான். சாத்தன்... என்னுடைய நிலத்தின் ஒரு மூலையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். நாங்கள் பத்து... பதினைந்து தலைமுறைகளாக பணியாளும் தம்புரானுமாக இருந்திருக்கிறோம். அந்தப் பகுதி முழுவதும் காடாகக் கிடந்த காலத்தில் என்னுடைய பெரிய மூத்தவரும், ஒரு புலையனுடன் அங்கு சென்றார்கள். இரண்டு பேரும் சேர்ந்து காட்டை வெட்டி சீர்படுத்தினார்கள். அதற்குப் பிறகு அவர்கள் அங்கேயே வசிக்க ஆரம்பித்தார்கள். அங்கு ஏராளமான புலிகளும் கொசுக்களும் இருந்தன. அங்குள்ள தாழ்வாரத்தை நிலமாக ஆக்கினார்கள். அதற்குப் பிறகுதான் அங்கு மனிதர்கள் வந்தார்கள். பிறகு பிள்ளைகள் வழியாக தம்புரானும் பணியாளுமாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். நானும் என்னுடைய சாத்தனும் சேர்ந்தால் எப்படிப்பட்ட நிலத்திலும் ரத்தினத்தை விளையச் செய்வோம்.''

பரமு இரவு பகலாக வேலை செய்தவன். அவனும் தன்னுடைய கதையைக் கூறினான். இரண்டு பிள்ளைகளும் ஒரு மனைவியும் தந்தையும் அவனுக்கு இருந்தார்கள். வேலை செய்து அவன் அந்தக் குடும்பத்திற்கு இல்லாமையைக் காட்டிக் கொள்ளாமல் வாழ்க்கையை நடத்தினான். அப்படி வாழ்வதற்கு இரவும் பகலும் பாடுபட்டாலும் போதுமானதாக இல்லை. பாடுபட்டு வளர்த்த தந்தையை வயதான காலத்தில் காப்பாற்ற வேண்டாமா? அப்படி நடந்தால்தானே, அவனுக்கும் வயதாகும்போது அவனுடைய பிள்ளைகள் நாழி நீர் கொடுப்பார்கள். அந்த இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தான். அவர்களை வளர்க்க வேண்டியது அவனுடைய பொறுப்புதானே? அதேபோல அவனுடன் வாழ்க்கைக்குள் நம்பி காலை எடுத்து வைத்த மனைவியையும்... ஆசைகளும் கடமைகளும்தான் அவனுக்கு வேலை செய்வதற்கான தூண்டுகோல்களாக இருந்தன. பரமுவிற்கு வாழ்க்கையில் சோர்வு என்ற ஒன்றே தோன்றியதில்லை.


இருவரும் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்கள். ஒருவேளை, கடந்து சென்ற நல்ல காலத்தை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், கேசவன் பரமுவின் கதைகளையும், பரமு கேசவனின் கதைகளையும் கேட்டு மனதில் ஒன்றிப் போய் உட்கார்ந்திருக்கலாம். ஒரு பிச்சைக்காரனுக்கு இன்னொரு பிச்சைக்காரனைப் பற்றி பரிதாப உணர்ச்சி உண்டாகக் கூடாது என்றில்லையே!

கேசவன் இரக்கம் கலந்த குரலில் சொன்னான்.

“எல்லாரும் இறந்து விட்டிருப்பாங்க.''

“இருக்கலாம். அதே நேரத்தில், இறக்கவில்லை என்றும் வரலாம். நான் அவர்களை விட்டுப் பிரிய வேண்டும் என்பதற்காக வெளியே வரவில்லை. எங்கிருந்தாவது படி அரிசி தயார் பண்ண வேண்டும் என்று நினைத்து வீட்டை விட்டு வெளியே வந்தேன். நான்கு நாட்கள் அலைந்து திரிந்தேன். அதற்குப் பிறகும் நடந்தேன். இப்போ கஷ்டப்படுறேன். அங்கே கிடந்து எல்லாருடனும் சேர்ந்து செத்திருக்கலாம்.''

பரமுவின் கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கலாம்... யாருக்குத் தெரியும்? இருட்டில் பார்க்க முடியவில்லை.

அவர்கள் இருக்குமிடத்திற்கு ஒரு வயதான கிழவி வந்தாள். அவளும் பிச்சைக்காரர்கள் இல்லத்தில் தங்கியிருப்பவள்தான்.

கேசவன் சொன்னான்:

“நான் என்னுடைய ஊருக்கு என்றைக்காவது போவேன். கடனை அடைத்து வீட்டையும் நிலத்தையும் திரும்பவும் வாங்குவேன் என்று சத்தியம் பண்ணிவிட்டுத்தான் என்னுடைய மகன் வீட்டை விட்டே வெளியே போயிருக்கிறான். அவன் திரும்பி வந்த பிறகு, நான் போவேன்.''

“எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் நண்பா! அதுதான் காலம்.''

கேசவன் தன்னுடைய மகன் திரும்பி வருவான் என்று எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறான். பரமுவிற்கு தன்னுடைய பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா என்று தெரியாது. அந்தக் கிழவிக்கு, அவளுடைய மகன் திரும்பி வர மாட்டான் என்பது உறுதியாகத் தெரியும். ஏனென்றால், கடந்த போராட்டத்தின்போது அவன் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்து விட்டான். எனினும், அவன் திரும்பி வந்து அழைப்பதைப் போல அவள் கனவு காண்பதுண்டு.

பாவம்... தேங்காய் உரித்து, நார் பிரித்து மகனை வளர்த்தாள்.

கிழவி சொன்னாள்:

“அவன் வீட்டை விட்டுப் புறப்பட்டபோது நான் போய் கையைப் பிடித்தேன். "மகனே. போகாதே'ன்னு சொன்னேன். "எனக்கு யார் இருக்காங்க” ன்னு கேட்டேன். அவன் அப்போ சொன்னான்- "நாடு இருக்கு'ன்னு!''

பரமு முழுமையான கோபத்துடன் சொன்னான்:

“நாடு! நாடு! இப்படி எவ்வளவோ பேர் இறந்திருக்காங்க. அப்போதைய சொற்பொழிவாளர்கள் அவர்களுடைய காரியத்தைச் சாதிப்பதற்காக எவ்வளவோ பேர்களைச் சாக வைத்தார்கள். சமீபத்தில் இங்கே பார்ப்பதற்காக வந்திருந்த அமைச்சர் இருக்கிறாரே... ஆரம்பத்தில் ஒருநாள்... அப்போதும் சொற்பொழிவு நடக்கும் காலம்தான். சொற்பொழிவு ஆற்றுவதை நான் கேட்டேன். எல்லாருக்கும் வேலை கிடைக்கும்... ஊரில் வறுமை இருக்காது... அப்படியெல்லாம் பேசினார். இப்போது? அவருக்கு... அவருடைய காரியம் நிறைவேறிவிட்டது.''

கேசவன் இன்னொரு விஷயத்தைக் கூற நினைத்தான். அவனுடைய ஊரில் இருந்த விவசாயிகளின் சங்கத்தில் பாதி பங்கு அமைச்சர்களுக்குத்தான். இல்லாவிட்டால் அவர்களுடைய சொந்தக் காரர்களுக்கு. குரலை அடக்கிக் கொண்டு அவன் தொடர்ந்து சொன்னான்:

“ஊரில் எந்த இடத்திலும் ஒரு மணி அரிசி கூட இல்லாத காலம். அந்த சங்கத்தில் இரவு நேரத்தில் பறைக்கு ஐந்து ரூபாய் வைத்து நெல் விற்பனை செய்தார்கள். அது அந்த ஊர்க்காரர்களுக்கு அல்ல. வேறு எங்கோ இருப்பவர்களுக்கு...''

பரமு கேட்டான்:

“அதை பிடிக்கவில்லையா?''

“அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட விஷயமாச்சே? போலீஸ்காரர்கள் பிடிப்பார்களா? நல்ல விஷயம்தான்... ஒரு விஷயத்தைச் சொல்லியாகணுமே. நல்ல முறையில் நெல் விளைகிறது. வயலில் வேலையும் செய்கிறோம். இருந்தாலும் வேலை செய்பவர்களுக்கு- இந்த நெல்லை உண்டாக்கியவர்களுக்கு ஒரு மணி நெல் கிடையாது.''

கிழவி இன்னொரு கதையைச் சொன்னாள்:

“இந்த அதிகாரிகளும் போலீஸ்காரர்களும் அதிகமான விலைக்கு அரிசியை வாங்குகிறார்கள். அப்படி வாங்கக் கூடாது என்பதுதானே சட்டம்?''

“சட்டம்!'' -பரமு கிண்டலுடன் சொன்னான்:

“சட்டம்! பிச்சை எடுக்கக்கூடாது என்பதுதான் சட்டம்! சாலை யில் பிச்சைக்காரர்கள் இல்லாமல் இருக்கிறார்களா? அதேபோல அந்த மூலையில் இருக்கும் கடையில் எல்லாருக்கும் தெரிகிற மாதிரி படி அரிசியை ஒன்றரை ரூபாய்க்கு விற்கிறார்கள்.''

கேசவன் எல்லாம் தெரிந்தவனைப் போல சொன்னான்: “அதைப் பற்றி சுருக்கமாக நான் சொல்றேன். அரசாங்கம் சட்டத்தை உண்டாக்குகிறது. அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திற்கு முடியவில்லை.''

அந்தக் கருத்தை பரமு முழுமையாக ஒப்புக்கொண்டான். ஓராயிரம் விஷயங்கள்... அதை வலியுறுத்துவதற்கு அவனிடம் கூறுவதற்கு பல தகவல்கள் இருந்தன. கிழவிக்கு ஒரு சந்தேகம்- இந்த பிச்சைக்காரர்கள் அனைவரும் எங்கேயிருந்து உண்டாகிறார்கள்?

கேசவன் இன்னொரு கேள்வியின் மூலம் அந்த சந்தேகத்தைத் தீர்த்து வைத்தான்.

“நாம் பிச்சைக்காரர்களாக எப்படி ஆனோம்?''

அப்போது பரமுவிற்கு இன்னொரு சந்தேகம்.

“நாம் நம்முடைய இளம் வயதிலிருந்து வேலை செய்து வருகிறோம் அல்லவா? லாபம், மிச்சம் எல்லாவற்றையும் உண்டாக்கினோம். எல்லாம் எங்கே போயின?''

கேசவன் சிரித்துக்கொண்டே சொன்னான்:

“அவை அனைத்தும் நிலச்சுவான்தார், முதலாளி ஆகியோரின் பாக்கெட்டை வீங்க வச்சிருக்கு.''

பரமு சிந்தனையில் மூழ்கிவிட்டுச் சொன்னான்:

“நாமெல்லாம் ஏன் இருக்கிறோம் என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நமக்கு நல்லது சாகுறதுதான். இந்த பிச்சைக்காரர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சாகுறதுக்காக வெளியேறணும்... செத்துதான் ஆகணும் என்று வைத்துக்கொள்ள வேண்டும்.''

“இந்த இடத்தைத் தந்து நம்மை இப்படி வைத்திருக்கிறதுக்குக் காரணம் என்னன்னு நினைக்கிறே? பயந்துதான்...''

இதற்கு முன்பு வேறு எங்கோ இருக்கும் ஒரு பிச்சைக்காரர்கள் இல்லத்தில் சில நாட்கள் இருந்த அனுபவத்தைக் கொண்ட கிழவி சொன்னாள்:

“பழைய யூனியன்காரர்கள் வந்து சில இடங்களில் இதைச் சொல்வது உண்டு.''

“இனிமேல் முன்பு நடந்ததைப் போல கோஷங்கள் கொண்ட ஊர்வலம் நடந்தால், நாமும் அதில் கலந்துகொள்ள வேண்டும். நமக்கென்ன? மேலே பார்த்தால் வானம்... கீழே... பூமி.''

13

சுக்கி வைக்கப்பட்ட லட்சங்கள் கண்விழித்தன. பிச்சைக்காரர்கள் இல்லத்திற்குள் அடைத்து வைக்கப்பட்ட எச்சங்கள் எழுந்தன. எலும்பும் தோலும் மட்டுமே என்றிருந்த பிச்சைக்காரர்கள்தான் அவர்கள்.

அவர்களால் என்ன செய்ய முடியும் என்று கேட்கக் கூடாது. அவர்களால் இறக்க முடியும்.

முழுமையான வேலை நிறுத்தம்! அதைத் தொடர்ந்து ஊரெங்கும் போராட்டங்களும்... அப்படி ஒரு போராட்டம் ஆரம்பமானபோது, அந்தப் போராட்ட ஆரவாரத்தை இளைஞர்கள் கேட்டார்கள். மாநிலம் ஒரு இக்கட்டான நிலைமையைச் சந்திக்கும்போது, சமுதாயம் சேவையைத் தேடும்போது, இளைஞர்களால் அமைதியாக இருக்க முடியாது. எதிர்காலம் அவனுக்குரியது.


மாணவர்கள் புத்தகங்களை மடக்கி வைத்தார்கள். பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானவர்களின் தோளோடு தோள் சேர்ந்து வரிசையில் நிற்க மாணவர்கள் தயாரானார்கள். நாளைய சமத்துவ, அழகான உலகம் அவனைக் கையசைத்து அழைக்கிறது. மாணவன் இன்று வரை படித்தவை, நாளை படிக்கப் போகின்றவை எதற்காக என்று இப்போது அவனுக்குப் புரிந்துவிட்டது.

அதிகாரம் அந்தப் போராட்டத்தை நசுக்குவதற்காக அதன் எல்லாவித சக்திகளையும் பயன்படுத்தியது. போராட்டம் ஆரம்பமான நாளன்றே பல இடங்களிலும் துப்பாக்கிச் சூடுகள் நடந்தன. ஏராளமான பேர் மரணத்தைத் தழுவினர். இறந்தவர்கள் அனைவரும் எங்கோயிருந்து வந்த கம்யூனிஸ்ட்டுகள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவர்களுடைய இழப்பைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர்களுக்காக ஒரு துளி கண்ணீர் கூட சிந்த வேண்டாம்.

ஆனால், இந்த முறை அந்தத் துப்பாக்கிச் சூட்டைப் பார்த்து மாநிலம் அஞ்சுவதற்குத் தயாராக இல்லை. கம்யூனிஸ்ட்டுகள் என்று அதிகாரிகள் கூறிக் கொண்டிருந்தவர்கள் யார் என்று மாநிலத்திற்குப் புரிந்துவிட்டது. அவர்கள் இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான். இங்கு பிறந்து வளர்ந்தவர்கள்தான். பசிக்கிறது என்று கூறுபவர்கள் தான். கம்யூனிஸ்ட்டுகள்! பசிக்கிறது என்று கூறுவதற்கு மனிதனுக்கு உரிமை இல்லையா?

துப்பாக்கிச் சூடுகள் பல நடந்தன. மனிதனுக்கு இறப்பதற்கு பயமில்லை. உயிருடன் இருப்பதில்தான் பயம். அந்தப் போராட்டம் ஒன்றோ இரண்டோ இல்லாவிட்டால் நான்கோ ஐந்தோ நகரங்களில் மட்டுமல்ல; கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நடந்தன. ஆட்சிப் பீடம் என்ன செய்வது? அவர்கள் பற்பல புதிய சட்டங்களையும் உண்டாக்கினார்கள். ஆனால், எந்தவொரு சட்டமும் நடக்காது. நடைமுறைக்குக் கொண்டு வருவது முடியாத ஒன்று. எல்லாரும் சட்டத்தை மீறுபவர்களே!

மேஜர் ராஜசேகரன், தன்னுடைய வீட்டில், அந்த மண்டை ஓட்டிற்கு அருகில் ஒரு நீளமான ஆணியைச் சுவற்றில் அடித்துக் கொண்டிருந்தான்.

நளினி கேட்டாள்:

“இது எதற்கு?''

“விஷயம் இருக்கு. பாரு...''

ஆணியை அடித்து முடித்துவிட்டு, ராஜசேகரன் உள்ளே போனான். சிறிது நேரம் கழித்து அவன் திரும்பி வந்தான். அவனுடைய கையில் ஒரு பை இருந்தது. நளினிக்கு எதுவும் புரியவில்லை. அவளை ஆச்சரியப்பட வைப்பதைப்போல, அந்தப் பைக்குள் இருந்து ராஜசேகரன் ஒரு பொருளைப் பிடித்து வேகமாக எடுத்து அவளுடைய முகத்திற்கு எதிரில் காட்டியவாறு கேட்டான்:

“பாரு... இது யாருடையது என்று தெரியுமா?''

நளினி அப்போது நடுங்கி விட்டாள். அந்த வீட்டில் காலை எடுத்து வைத்த நாளன்று நடுங்கியதைப் போலவே நடுங்கினாள். ஒரு ஆள் ஒரு மண்டை ஓட்டைப் பற்றி, அதை முதல் தடவையாகப் பார்க்கும்போது மட்டுமே ஒரே ஒரு தடவை நடுங்குவான். அதனுடன் நன்கு பழகிவிட்டாலும், இன்னொரு மண்டை ஓட்டை பார்க்கும்போது, அப்போதும் நடுங்குவான். ஆனால், மண்டை ஓடுகள் எல்லாவற்றின் அமைப்பும் ஒரே மாதிரிதானே இருக்கின்றன? பல் இளிப்பது, வெறித்துப் பார்ப்பது... எல்லாம் ஒரே மாதிரி இருக்கும். ஒரு மண்டை ஓட்டைப் பார்த்துப் பழகிப் போய்விட்ட பிறகு, இன்னொன்றைப் பார்க்கும்போது எதற்காக நடுங்க வேண்டும்?

ஒருவேளை, ஒரு மனிதனின் குணமே இன்னொருவனுக்கும் இருக்கும் என்று கூறுவதற்கில்லை என்பது காரணமாக இருக்கலாம். ஒருவன் இளகிய இதயமும் பாசம் கொண்டவனாகவும் இருக்கும் போது, இன்னொருவன் கொடூரமானவனாகவும் மோசமான நடத்தை கொண்டவனாகவும் இருப்பதில்லையா? அந்த வகையில் அவர்களுடைய மண்டை ஓடுகளின் பல் இளிப்பிற்கும் பார்வைக்கும் சிறிய வித்தியாசம் இருக்கலாம். ஒரு மண்டை ஓட்டின் செய்தியே இன்னொரு மண்டை ஓட்டைப் பற்றியும் இருக்கும் என்று கூற முடியாது. நளினி மீண்டும் ஒரு மண்டை ஓட்டைப் பார்த்தபோது நடுங்குவதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம்.

ஒரு அச்சத்துடன் நளினி கேட்டாள்:

“அந்த எலும்புகளுக்கு நடுவில் சதை காய்ந்து போய் இருக்கிறது.''

ராஜசேகரன் அதை இப்படியும் அப்படியுமாகப் புரட்டி பார்த்துவிட்டு சொன்னான்:

“இது புதியது... எனினும், சதை முழுவதும் அழுகிப்போய் விட்டது.''

“இது நாறுது.''

“இல்லை.''

ராஜசேகரன் மண்டை ஓட்டை வாசனை பிடித்துப் பார்த்தான். அவன் கேட்டான்:

“இது அந்த மண்டை ஓட்டைவிட இன்னொரு மடங்கு பெரியதாக இருக்கிறது அல்லவா?''

நளினி எதுவும் பேசவில்லை. ராஜசேகரன் தொடர்ந்து சொன்னான்:

“என்ன கனம் என்று நினைக்கிறாய்? நல்ல கனம்... இல்லை... அது ஆச்சரியமான விஷயமே இல்லை. சாதாரண ஒரு மனிதனைவிட ஒன்றரை மடங்கு பெரிய உடலைக் கொண்ட ஆள் அவன்... நினைத்துப் பார்க்க முடியாத முரட்டுத்தனம்.. நான்கைந்து ஆட்கள் சேர்ந்தாலும் அவனிடம் எதுவுமே பண்ண முடியாது. உயரத்தை எடுத்துக் கொண்டால்... இப்படி ஒரு பிசாசை நான் பார்த்ததே இல்லை. அரக்கன்! ஒரு துப்பாக்கி குண்டில் எதுவும் நடக்கவில்லை. அவன் சாகவில்லை. என்னுடைய பெரிய வெற்றியின் சின்னம் இது. இவ்வளவு பெரிய ஒரு வெற்றி எனக்கு கிடைத்ததே இல்லை. அது மட்டுமல்ல; நான் தப்பித்ததும் ஒரு அதிர்ஷ்டம்தான்.''

அந்த மண்டை ஓட்டை அவன் ஆணியில் மாட்டிவிட்டு, இரண்டு மண்டை ஓடுகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவன் கேட்டான்:

“இரண்டுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கு. இல்லையா?''

நளினி எதுவும் பேசவில்லை. இரண்டின் பல் இளிப்பும் ஒரே மாதிரி இருக்கிறது. அது மட்டுமல்ல- புதிய மண்டை ஓடு வந்ததும், முதல் மண்டை ஓட்டிற்கு ஒரு நண்பன் கிடைத்திருப்பதைப் போல தோன்றுகிறது. அவர்கள் சகோதரர்களாக ஆகிவிட்டனர்.

ராஜசேகரன் கேட்டான்:

“இது யாருடைய மண்டை ஓடு என்று தெரியுமா?''

நளினி பதிலெதுவும் கூறாமல் தன் கணவனின் முகத்தையே பார்த்தாள். பட்டாளக்காரனின் மனைவியாக இருப்பதால், மண்டை ஓட்டைப் பார்த்து அது யாருடையது என்று கற்பனை பண்ண வேண்டிய கடமை இருக்கிறதா என்ன?

இப்படி இன்னும் எத்தனை மண்டை ஓடுகள் அங்கு வரும்? எத்தனை மண்டை ஓடுகளைப் பற்றிய விளக்கங்களைக் கேட்க வேண்டியதிருக்கும்?

அவனிடமிருந்து பதிலெதுவும் வரவில்லை என்றதும் மிகுந்த பெருமிதத்துடன், மேலும் சந்தோஷத்துடன், ராஜசேகரன் சொன்னான்:

“உனக்கு அறிவே இல்லை. கற்பனை பண்ணிவிடலாம். யாருடைய மண்டை ஓடாக இருந்தால், உன் கணவனுக்குப் பெரிய வெற்றியாக இருக்கும்?''

அதற்குப் பிறகும் அவள் பேசவில்லை.

“முட்டாள் பெண்! நான் அந்தப் பெயரின் முதல் எழுத்தைக் கூறுகிறேன். ஸ்ரீ...''

அவளுடைய அறிவு வேலை செய்கிறதா என்று ராஜசேகரன் பார்த்தான். இல்லை... யாருக்குத்தான் அந்தப் பெயர் தெரியாது? ராஜசேகரன் சொன்னான்:

“ஸ்ரீகுமார்... அவனுடைய மண்டை ஓடுதான் இது.''


நளினி மீண்டும் நடுங்கினாள். ஸ்ரீகுமார்! ஸ்ரீகுமார்! அவர் களுடைய மகன் பாலசந்திரன் ஆவேசத்துடன் தினமும் கூறக்கூடிய ஒரு பெயர் அது- ஸ்ரீகுமார்!

அடுத்த நாள் பாலசந்திரனை மாணவர்கள் தங்களுடைய தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த சந்தர்ப்பத்தில் அவன் செய்த சொற்பொழிவு இது:

“பொதுமக்கள் போராட்டத்தின் முதல் தலைவரின் மண்டை ஓடு பத்திரமாக வைக்கப்பட்டிருக்கும் வீட்டில் பிறந்து, அதைப் பார்த்துப் பார்த்து வளர்ந்து, அதன் பல் இளிப்பில் இருந்து ஆவேசம் அடைந்த நான் என்னுடைய வாழ்க்கையை அந்த மிகப் பெரிய போராட்டத்திற்குச் சமர்ப்பிக்கிறேன். நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்காக உயிரை அர்ப்பணம் செய்த ஸ்ரீகுமார் ஒருநாள் செய்த சொற்பொழிவை நான் திரும்பவும் கூறுகிறேன். கண்டமாரில் நடந்த பலாத்காரச் செயல்கள் இந்த சமூக அமைப்பின் அடித்தளத்தைப் பெயர்த்து எறிவதற்கான சக்தியைக் கொண்ட குழந்தைகளை உருவாக்கியிருக்கின்றன என்று நினைத்துக் கொள்கிறேன். அங்குமிங்குமாக சிதறிக் கிடக்கும் எலும்புத் துண்டுகளும் அங்குள்ள கல்லறைகளும் பிரம்மாண்டமாக வளர் கின்றன. அன்று இறந்தவர்கள் இறக்கவில்லை; இறக்கப் போவதும் இல்லை. இந்த மிகப் பெரிய கடலில் நாம் தலைவரைப் பின்பற்றி நடப்போம்!''

அதைத் தொடர்ந்து மாணவர்கள் நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களுக்குப் பின்னால் அணிதிரண்டு நின்றனர். முதல் வரிசையில் யார் தெரியுமா? அவர்கள் இந்த ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்களை யாருக்கும் தெரியாது. அவர்களுக்கு இந்த உலகத்தில் யாருடனும் உறவு இருப்பதாகத் தெரியவில்லை. ஏதோ ஒரு தெரியாத உலகத்திலிருந்து வந்திருப்பவர்கள். ஒருவரையொருவர் இதற்கு முன்பு பார்த்திராதவர்கள்.

அவர்களுடைய தாயைப் பற்றியோ தந்தையைப் பற்றியோ கேட்க வேண்டாம். அக்கிரமத்தில் இருந்தும் அநீதிகளில் இருந்தும் அவர்கள் கிளம்பி வந்திருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நோக்கங்கள் இருக்கின்றன. அதை அடையக்கூடிய வலிமையும் உற்சாகமும் இருக்கின்றன. பயம் என்பதே அவர்களுக்கு இல்லை. அவர்களுடைய எண்ணிக்கையோ? அது யாருக்கும் தெரியாது.

வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பாருங்கள். அரசர்களின், சக்கரவர்த்திகளின் வரலாற்றை அல்ல- மனிதர்களின் வரலாற்றை! இந்த வீரர்கள் பிறந்தது எங்கே என்பதைப் பார்க்கலாம்... எத்தனை கண்டமார் கிராமங்கள் இருந்திருக்கின்றன! நினைவுபடுத்திப் பாருங்கள்... அதிர்ச்சி அடைய வேண்டாம். அது ஒரு உண்மை மட்டுமே.

ராஜசேகரனும் நளினியும் பாலசந்திரனின் சொற்பொழிவை வாசித்தார்கள். அந்த வரவேற்பறையில் இருந்து கொண்டுதான் வாசித்தார்கள். அப்போதும் அந்த இரண்டு மண்டை ஓடுகள் பற்களை இளித்துக் கொண்டிருந்தன. அவற்றின் பல் இளிப்பிற்குத் தெளிவான அர்த்தம் இருந்தது. நளினி பதைபதைப்புடன் கேட்டாள்:

“அந்த மண்டை ஓட்டை எதற்கு இங்கு கொண்டு வந்து வைத்தீர்கள்? மகனை பலி கொடுப்பதற்கா?''

செயலற்ற நிலையில் ராஜசேகரன் சொன்னான்:

“இது இப்படி வரும் என்று எனக்குத் தெரியுமா?''

அப்போது பாலசந்திரன் அங்கு வந்தான். அவன் சற்று அவசரத்தில் இருப்பதைப் போல தோன்றியது. சிறிது பேச வேண்டும் என்பதற்காக வந்திருந்தான். இனிமையாக சிரித்துக் கொண்டே அவன் சொன்னான்:

“அப்பா, நாளைக்கு நீங்க மூன்றாவதாக ஒரு மண்டை ஓட்டையும் இங்கே வைக்கலாம். அதற்கான ஆணியாக ஒரு இடுப்பு எலும்பு இருப்பது சிறப்பாக இருக்கும்.''

ராஜசேகரன் அதிர்ச்சியடைந்து உறைந்துபோய் நின்று கொண்டிருந்தான். வாய்விட்டு அழுதவாறு நளினி மகனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“என் தங்க மகனே!''

ராஜசேகரனின் பெரிய வாயிலிருந்து ஒரு அலறல் சத்தம் கிளம்கி வந்தது.

“நீயா?''

அமைதியான குரலில் பாலசந்திரன் சொன்னான்:

“ஆமாம்... அப்பா!''

ராஜசேகரன் பற்களைக் கடித்துக் கொண்டே தன்னுடைய ட்ரவுசர் பாக்கெட்டிற்குள் கையை நுழைத்துத் தேடினான். அவன் கத்தினான்.

“உன்னையும் உன்னுடைய அம்மாவையும் கொன்றுவிட்டு நானும் இறப்பேன்!''

அதை அந்த அளவிற்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பாலசந்திரன் சொன்னான்:

“அதுவும் நல்லது... இருந்தாலும் எனக்குத் திருப்திதான். நான் சாவதை நீங்கள் பார்க்கிறீர்களே, அப்பா. இதோ... அப்பா... நீங்க அந்த சாளரத்தின் வழியே வெளியே பாருங்க...''

அப்போது கோஷங்களுடன் ஒரு ஊர்வலம் சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருந்தது. அதில் பிச்சைக்காரர்களும், எலும்பும் தோலுமாக பட்டினி கிடப்பவர்களும், மனித பிரகாசம் இல்லாமல் போனவர்களும்... இப்படி எல்லாரும் இருந்தார்கள். பாலசந்திரன் தொடர்ந்து சொன்னான்: “அந்த ஊர்வலம் இங்குதான் வருகிறது. பயப்பட வேண்டாம். எதற்கென்று தெரியுமா? இந்த இரண்டு மண்டை ஓடுகளையும் பார்த்து மரியாதை செலுத்துவதற்காக... இதை பத்திரப்படுத்திக் காப்பாற்றி வைத்ததற்காகவும், அதன் மூலம் மனிதர்கள்மீது செய்த அநீதிகளைப் பற்றி நேரடியாகத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி. அந்த ஊர்வலத்தின் இடப்பக்க வரிசையில் முன்னால் நின்று கொண்டிருப்பவன், அப்பா... உங்களுடைய முதல் வெற்றிச் சின்னமான இந்த மண்டை ஓட்டின் சொந்தக்காரரின் மகன். அவன் தன்னுடைய தந்தையின் மண்டை ஓட்டைப் பார்ப்பதற்காக வருகிறான். இன்னொரு வரிசையில் முன்னால் நின்று கொண்டிருப்பது, அப்பா... கண்டமாரில் நீங்கள் செய்த பலாத்காரத்தில் பிறந்த ஒரு குழந்தை... அவனுக்கும் பின்னால் அப்படிப் பிறந்தவர்கள் நிறைய இருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் பல வருடங்களாகப் பிரிந்து போய் பிச்சை எடுத்துத் திரிந்த தந்தைகளும் பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் இங்கு வந்து வணங்கிவிட்டுப் போகட்டும்.''

ராஜசேகரன் புலியைப் பார்ப்பதுபோல சீறியவாறு சொன்னான்:

“நாசமாப் போச்சு! அவர்களை வழியில் யாரும் தடுக்க வில்லையா?''

சிரித்துக் கொண்டே பாலசந்திரன் பதில் சொன்னான்:

“யாரும் அவர்களைத் தடுக்க மாட்டார்கள். அவர்களுக்குப் பின்னால், அப்பா... உங்களுடைய பட்டாளத்தைச் சேர்ந்தவர்களும் கோஷங்கள் போட்டுக் கொண்டு ஊர்வலமாக வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பா... பட்டாளக்காரர்களுக்குப் புரிந்து விட்டது- தாங்கள் இப்படிச் செய்து கொண்டிருப்பவை அனைத்தும் வேறு யாருடைய நலன்களையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்ற உண்மை. மாநிலத்தின் மேன்மையைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்பதையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். அன்று... கண்டமாரில் வைத்தே அவர்களுக்கு அது தெரிந்துவிட்டதாம்...''

“நாசமாப் போச்சு! அவர்கள் இங்கே வருகிறார்கள்!''

ராஜசேகரன் அறைக்குள் பதுங்கியவாறு ஓடினான்.

“வரட்டும் அப்பா! வரட்டும். அவர்கள் பழிக்குப் பழி வாங்குபவர்கள். ஆனால், அவர்களால் மன்னிப்பு அளிக்க முடியும். அப்பா... நீங்க இவற்றையெல்லாம் செய்தது மாநிலத்திற்காக அல்ல... வேறு யாருடைய நலனையோ காப்பாற்றுவதற்காகத்தான் என்பதைப் புரிந்து கொள்வார்களா? அவர்கள் அந்த பலாத்காரத்தின் குழந்தை களாக இருந்தாலும், அவர்களுக்கு தங்களுடைய தந்தைகள் யார் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தால்- இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், அப்பா யார் என்ற கேள்வியிலிருந்து விடுதலை பெற்று மன்னிப்பு அளிப்பார்கள்.''


அந்தக் கோபத்தின் எல்லையில் ராஜசேகரன் சோர்வடைந்து ஸோஃபாவின் மீது சாய்ந்தான். மண்டை ஓட்டிற்கு மேலே இருந்த கை விரல்கள் அசைந்தன. மண்டை ஓட்டிற்குள்ளிருந்து ஒரு சத்தம் கேட்டது.

பொதுமக்கள் போராட்டத்தின் வெற்றி கோஷம் வெளி வாசலில் கேட்டது. தாயும் மகனும் சேர்ந்து சென்று அவர்களை வரவேற்றார்கள்.

அப்போது ஒரு துப்பாக்கி குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. அந்த மண்டை ஓடுகள் அங்கு கீழே நொறுங்கி விழுந்தன.

இன்னொரு குண்டு ராஜசேகரன் மார்பைத் துளைத்தது. அவனுடைய ரிவால்வரிலிருந்து மூன்றாவதாகவும் ஒரு குண்டு வெடித்தது. அது அந்தக் கை எலும்புகளைத் தரையில் கொண்டு வந்து போட்டது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.