
வெளிவாசலுக்கு மிகவும் தூரத்தில் தலைவர் வந்து கொண்டிருக்கும்போதே, அவருடைய மகள் ஒகான்டா அவரைப் பார்த்துவிட்டாள்.
அவரைச் சந்திப்பதற்காக அவள் ஓடினாள். மூச்சுவிட முடியாமல் அவள் தன் தந்தையிடம், “என்ன செய்தி, தலைவரே?'' என்று கேட்டாள். மழை எப்போது பெய்யும் என்ற தகவலைத் தெரிந்து கொள்வதற்காக கிராமத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்கள். லபாங்'ஓ மகளைத் தொடுவதற்காக தன் கைகளை நீட்டினாரே தவிர, ஒருவார்த்தைகூட வாய் திறந்து பேசவில்லை. தந்தை எதுவும் கூறாமல் மிகவும் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட ஒகான்டா, அவர் திரும்பி வந்துவிட்டார் என்ற செய்தியைக் கூறுவதற்காக கிராமத்தை நோக்கி திரும்பி ஓடினாள்.
கிராமத்தின் சூழ்நிலை மிகவும் இறுக்கமானதாகவும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவரும் எந்தவித நோக்கமும் இல்லாமல் நடந்து கொண்டும், குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்தவொரு வேலையையும் செய்யாமல் வெறுமனே மன நிம்மதி இல்லாமல் திறந்த வெளியில் அலைந்து கொண்டும் இருந்தனர். ஒரு இளம்பெண் அங்கிருந்த இன்னொரு பெண்ணிடம், “இன்னைக்கு இந்த மழை சம்பந்தப்பட்ட பிரச்சினை முடிவுக்கு வரலைன்னா, தலைவர் ஒரேயடியாக நொறுங்கிப் போயிடுவாரு'' என்று கூறினாள். மக்கள் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்க... பார்த்துக் கொண்டிருக்க, அவர் மிகவும் மெலிந்து மெலிந்து போய்க்கொண்டிருப்பதை அவர்களே கண்கூடாகப் பார்த்தார்கள். “நம்மோட கால்நடைகள் வயல்களில் செத்துக் கிடக்கின்றன'' என்று அவர்கள் கூறினார்கள். “வெகு சீக்கிரமே நம்முடைய பிள்ளைகள்... பிறகு நாம்... தலைவரே! நம்மோட வாழ்க்கைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்கு என்ன செய்யணும்னு எங்களுக்குச் சொல்லுங்க'' என்றார்கள்
அவர்கள். அதனால் தினந்தோறும் தலைவர் தன்னுடைய முன்னோர்களின் மூலம் கடவுளிடம், மக்களின் தாங்கமுடியாத சிரமங்களிலிருந்து அவர்கள் விடுபடுவதற்கான வழியைக் காட்டும்படி கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
குடும்பத்திலுள்ள எல்லாரையும் ஒரே நேரத்தில் அழைத்து, அவர்களிடம் உடனடியாக செய்தியைக் கூறுவதற்கு பதிலாக, லபாங்'ஓ தன்னுடைய குடிலுக்குச் சென்றார். அதன்மூலம், தான் தொந்தரவு செய்யப்படுவதை விரும்பவில்லை என்று காட்டிக்கொண்டார். கதவை மூடிவிட்டு, மங்கலான விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து சிந்தனையில் மூழ்கினார்.
பசியில் சிக்கிக்கிடக்கும் மக்களின் தலைவர் என்பதற்காக லபாங்'ஓ வின் இதயம் மிகுந்த கவலையில் மூழ்கியிருக்கிறது என்று இனியும் கூறிக்கொண்டிருப்பதற்கில்லை. அவருடைய ஒரே மகளின் வாழ்க்கை இப்போது பிரச்சினைக்குள்ளாகி விட்டிருந்தது. ஒகான்டா தன்னைச் சந்திப்பதற்காக வந்தபோது, அவள் இடுப்பைச் சுற்றிப் பிரகாசித்துக் கொண்டிருந்த சங்கிலியை அவர் பார்த்தார். எது நடக்கவேண்டியது என்ற விஷயம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. "என்னுடைய ஒரே மகள் ஒகான்டா... ஒகான்டா... இந்த இளம் வயதில், அவள் மரணத்தைத் தழுவியே ஆகவேண்டும்... லபாங்'ஓ தன்னுடைய வார்த்தைகளைக் கூறி முடிப்பதற்கு முன்பே, அடக்க முடியாமல் வெடித்து கண்ணீர் விட்டார். தலைவர் அழக்கூடாது. மனிதர்கள் மத்தியிலேயே அவர் மிகவும் தைரியசாலியான மனிதர் என்று மக்கள் தீர்மானமான குரலில் கூறினார்கள். ஆனால் அதையெல்லாம் இப்போது பார்ப்பதற்கு லபாங்'ஓ தயாராக இல்லை. அவர் ஒரு சாதாரண தந்தையாக இருந்ததால், கசப்பு மேலோங்க அழுதார். "லுவோ' என்று அழைக்கப்படும் தன்னுடைய மக்கள்மீது அவர் நிறைய அன்பு வைத்திருந்தார். அதே நேரத்தில் அவரைப் பொறுத்தவரையில் ஒகான்டாவைவிட "லுவோ' என்ற அந்த மக்கள் பெரியவர்களா என்ன? லபாங்'ஓவின் உலகத்திற்கு அவள் ஒரு புதிய வாழ்க்கையைக் கொண்டு வந்தாள். அதைத் தொடர்ந்து தான் மனதில் நினைத்ததைவிட அவர் மிகவும் சிறப்பாக ஆட்சி செய்தார். அந்த கிராமத்தின் ஆவி அவருடைய அழகான மகளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? "இங்கு ஏராளமான வீடுகள் இருக்கு. மகள்களை வைத்திருக்கக்கூடிய பெற்றோர்களும் நிறைய இருக்காங்க. இந்த என் மகளை ஏன் தேர்வு செய்யவேண்டும்? எனக்கென்று இருப்பவளே அவள் ஒருத்திதான்...' ஏதோ தன்னுடைய முன்னோர்கள் அந்தக் குடிலில் இருப்பதைப்போலவும், அவர்களை முகத்தோடு முகம் பார்த்துக் கொண்டிருப்பதைப்போலவும் லபாங்'ஓ பேசிக்கொண்டிருந்தார். இன்னும் சொல்லப்போனால்- அவர்கள் அங்கு இருக்கத்தான் செய்தார்கள். பதவியை ஏற்று அரியாசனத்தில் அமர்ந்த நாளன்று, பெரியவர்களுக்கு முன்னால் உரத்த குரலில், "தேவைப்பட்டால், எதிரியின் கைகளிலிருந்து இந்த பழங்குடி மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னுடைய வாழ்க்கையையும், என் குடும்பத்தில் இருப்பவர்களின் வாழ்க்கையையும்கூட அர்ப்பணிப்பேன்' என்று உறுதி மொழி அளித்ததை நினைத்துப் பார்க்கும்படி அவர்கள் கூறினார்கள். "மறுக்கிறாய்! மறுக்கிறாய்!' தன்னுடைய முன்னோர்கள் தன்னைப் பார்த்து கேலி செய்யும் குரலை அவர் கேட்டார்.
லபாங்'ஓ தலைவராக ஆக்கப்பட்டபோது, அவர் ஒரு இளைஞனாக இருந்தார். தன்னுடைய தந்தையைப்போல இல்லாமல், அவர் ஒரே ஒரு மனைவியுடன் நிறைய வருடங்கள் ஆட்சி செய்தார். ஆனால், அவருடைய ஒரே மனைவி அவருக்கு ஒரு மகளைப் பெற்றுத் தராததால், அந்த கிராமத்து மக்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக அவரைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அவர் ஒரு இரண்டாவது மனைவியை, ஒரு மூன்றாவது மனைவியை, ஒரு நான்காவது மனைவியைத் திருமணம் செய்தார். ஆனால், அவர்கள் எல்லாருமே ஆண் பிள்ளைகளைத்தான் பெற்றெடுத்தார்கள். லபாங்'ஓ ஐந்தாவதாக ஒரு மனைவியைத் திருமணம் செய்தபோது, அவள் ஒரு மகளைப் பெற்றெடுத்தாள். அவளை அவர்கள் ஒகான்டா என்று பெயரிட்டு அழைத்தார்கள். அதற்கு "அவரை' என்று அர்த்தம். ஏனென்றால், அவளுடைய தோல் அந்த அளவிற்கு மிகவும் மென்மைத்தன்மை கொண்டதாக இருந்தது. லபாங்'ஓ விற்கு இருந்த இருபது குழந்தைகளில், ஒகான்டா மட்டும்தான் பெண்ணாகப் பிறந்தவள் தலைவரின் பாசத்திற்குரியவளாக அவள் இருந்தாலும், அவளுடைய மற்ற அம்மாக்கள் தங்களுடைய பொறாமை உணர்வுகளையும் மனதிற்குள் மூழ்கடிக்கச் செய்துகொண்டு, அவள் மீது அன்பு மழை பொழிந்தார்கள். அந்த உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒகான்டா என்ற அந்த இளம்பெண்ணின் நாட்களே எண்ணப்பட்டு கொண்டிருக்கின்றன என்று அவர்களே கூறினார்கள். அவள் தன்னுடைய இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு, பொறாமைப்படும் நிலையில் இருக்கும் இடத்தை வேறு யாருக்காவது விட்டுத்தர வேண்டும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இந்த அளவிற்கு முடிவே எடுக்க முடியாத ஒரு சூழ்நிலை அவருடைய வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் வந்ததில்லை. மழையை வரச் செய்வது யாரோ, அவருடைய விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவது என்பது அந்த கிராமத்து மக்களை முழுமையாக கைகழுவி விடுவதற்கு நிகரானது.
ஒட்டுமொத்த மக்கள் கூட்டத்தின் நன்மையைவிட ஒரு தனிப்பட்ட நபரின் நன்மையைப் பெரிதாக நினைக்கும் செயலே அது. இவை எல்லாவற்றையும்விட, முன்னோர்களை மதிக்கவில்லை என்பதும் அதில் இருக்கிறது. அதன்மூலம் பூமியின் நிலப்பரப்பிலிருந்து லுவோ மக்களை ஒரேயடியாக துடைத்தெறியும் செயலும் நடைபெறுகிறது. அதேநேரத்தில் மக்களுக்காக ஒகான்டாவை பலிகடாவாக்கி இறக்கச் செய்வது என்பது மனரீதியாக லபாங்'ஓவை நிரந்தரமாக முடக்கிப்போடுவதாகவும் ஆகிவிடுகிறது. இதற்கு முன்பிருந்த அதே தலைவரல்ல இப்போது தலைவராக இருக்கும் தான் என்ற உண்மையும் அவருக்கு நன்கு தெரியும்.
வைத்தியன் ந்திதியின் வார்த்தைகள் இப்போதும் அவருடைய செவிகளுக்குள் திரும்பத் திரும்ப எதிரொலித்துக் கொண்டேயிருந்தன. “இந்த "லுவோ'வின் மூத்த குடிமகனான "போதோ' நேற்றிரவு வந்த ஒரு கனவில் எனக்கு முன்னால் தோன்றி, தலைவரிடமும் கிராமத்து மக்களிடமும் பேசுமாறு சொன்னார்.'' கூட்டமாகக் கூடி நின்றிருந்த கிராமத்து மக்களைப் பார்த்து ந்திதி சொன்னான். அவன் தொடர்ந்து சொன்னான்: “எந்தவொரு ஆணையும் தெரியாமல் இருக்கும் ஒரு இளம் பெண் கட்டாயம் மரணத்தைத் தழுவவேண்டும். அப்படியென்றால்தான் கிராமத்திற்கு மழை கிடைக்கும். "போதோ' என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, குளத்தின் கரையில் ஒரு இளம்பெண் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். அவள் தன் கைகளை தலைக்கு மேலே உயர்த்திக்கொண்டிருந்தாள். அவளுடைய தோல் ஒரு இளம் மானின் தோலைப்போல மிகவும் மென்மையானதாக இருந்தது. ஆற்றின் கரையில் தனியாக நின்றிருக்கும் நாணலைப்போல அவளுடைய உயரமான தோற்றம் இருந்தது. கவலையில் மூழ்கியிருக்கும் ஒரு தாயைப் போல, தூக்கக் கலையுடன் இருந்த அவளுடைய கண்களில் ஒரு சோகம் கலந்திருந்தது. அவள் தன்னுடைய இடது பக்க செவியில் ஒரு பொன்னாலான வளையத்தை அணிந்திருந்தாள்...
தன்னுடைய இடுப்பில் ஒரு பிரகாசித்துக் கொண்டிருக்கும் பித்தளையாலான சங்கிலியை அணிந்திருந்தாள். அந்த இளம்பெண்ணின் அழகைப் பார்த்து நான் ஆச்சரியத்தில் மூழ்கி நின்றிருந்தபோது, போதோ என்னிடம், "இந்த கிராமத்திலிருக்கும் அனைத்து பெண்களிலிருந்தும் நாங்கள் தேர்ந்தெடுத்திருப்பது இந்தப் பெண்ணைத்தான். குள அரக்கனுக்கு அவள் தன்னை அர்ப்பணம் செய்து தியாகத்தைச் செய்யட்டும்! அந்த நாளன்று மழை ஏராளமாகப் பெய்யும். அந்தக் குறிப்பிட்ட நாளன்று எல்லாரும் வீடுகளுக்குள் இருக்கட்டும்... இல்லாவிட்டால் அவர்கள் வெள்ளத்தால் கொண்டு செல்லப்பட்டு விடுவார்கள்' என்று கூறினார்.
வெளியே இனம்புரியாத ஒரு வெறுமைத் தன்மை நிலவிக் கொண்டிருந்தது. உயிரோட்டமே இல்லாத மரங்களில் அமர்ந்திருந்த தாகமெடுத்த பறவைகள் சோம்பேறித் தனத்துடன் பாடிக்கொண்டிருந்ததைத் தவிர, வேறு சத்தமே இல்லை. கண்களைக் கூசச் செய்யும் மதிய நேர வெப்பம் மக்களை அவர்களுடைய குடிசைகளுக்குள் பலவந்தமாக இருக்கும்படி செய்தது. தலைவரின் குடிலுக்கு மிகவும் அருகிலேயே இருந்த இரண்டு பாதுகாவலர்கள் மிகவும் அமைதியாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தார்கள். லபாங்'ஓ தன்னுடைய கிரீடத்தைக் கழற்ற, அவருடைய பெரிய கழுகுத் தலை அவரின் தோள்களின்மீது தொங்கிக் கொண்டிருந்தது. அவர் தன் குடிலை விட்டு வெளியே வந்து, செய்தியை அறிவிக்கும் மனிதனான ந்யாபோகோவிடம் கூறி முரசொலிக்கச் செய்வதற்கு பதிலாக, அவரே நேரடியாகச் சென்று, தானே முரசை அடித்து ஒலிக்கச் செய்தார். வீட்டிலிருந்த எல்லாரும் அடுத்த சில நொடிகளுக்குள் அங்கிருந்த "சியாலா' மரத்திற்குக் கீழே வந்து குழுமினார்கள். அந்த இடத்தில்தான் பொதுவாக அவர், அவர்களுக்கு முன்னால் உரையாற்றுவார். ஒகான்டாவை சிறிது நேரம் அவளுடைய பாட்டியின் குடிலில் இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
தன்னுடைய வீட்டைச் சேர்ந்தவர்களிடம் லபாங்'ஓ உரையாற்றுவற்காக நின்றபோது, அவருடைய குரல் மிகவும் கரகரப்பாக இருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது. அவர் பேச ஆரம்பித்தார். ஆனால், அவருடைய உதடுகளிலிருந்து சொற்கள் வெளியே வரமறுத்தன. தங்களுடைய எதிரிகள் அவர்களின்மீது போர் தொடுக்கப் போவதாக அறிவித்திருந்ததால், நிச்சயம் ஆபத்து இருக்கிறது என்ற விஷயம் அவருடைய மனைவிகளுக்கும், மகன்களுக்கும் நன்றாகத் தெரியும். லபாங்'ஓவின் கண்கள் சிவந்து காணப்பட்டன.
அவர் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பதை அவர்கள் பார்த்தார்கள். இறுதியில் அவர் “நாம் மிகவும் அன்பு செலுத்திக்கொண்டும், பொக்கிஷத்தைப்போல பாதுகாத்துக் கொண்டுமிருந்த ஒன்று நம்மிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படப் போகிறது... ஒகான்டா மரணத்தைத் தழுவவேண்டிய நிலை...'' என்று கூறினார்.
அப்போது தானே கேட்க முடியாத அளவிற்கு அவருடைய குரல் மிகவும் பலவீனமாக இருந்தது. எனினும், அவர் தொடர்ந்து சொன்னார்: “குளத்தின் அரக்கனுக்கு அர்ப்பணிக்கப்பட வேண்டுமென்று முன்னோர்கள் அவளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அதன்மூலம் நமக்கு மழை பெய்யும் என்பதுதான் காரணம்.''
அங்கு குழுமியிருந்தவர்களுக்கு மத்தியில் மரணத்திற்கு நிகரான அமைதி சிறிது நேரம் நிலவியது. அவர்கள் முழுமையாக அதிர்ச்சியடைந்து விட்டார்கள். அதைத் தொடர்ந்து குழப்பங்கள் நிறைந்த முணுமுணுப்புகள் அங்கு உண்டாயின. ஒகான்டாவின் அன்னை மயக்கமடைய, அவள் தன்னுடைய குடிலுக்குத் தூக்கிக்கொண்டு போகப்பட்டாள். அதே நேரத்தில் அங்கிருந்த மற்றவர்கள் மனதிற்குள் சந்தோஷப்பட்டார்கள்.
அவர்கள் சுற்றிச் சுற்றி நடனமாடினார்கள்... பாடினார்கள்... இனிய ஓசைகளை உண்டாக்கினார்கள்.
“மக்களுக்காக மரணத்தைத் தழுவக்கூடிய அதிர்ஷ்டத்தைப் பெற்றிருப்பவள் ஒகான்டா. மக்களைக் காப்பாற்றுவதற்காக என்னும்பட்சம், ஒகான்டா மரணத்தைத் தழுவட்டும்...'' அவர்கள் ராகத்துடன் பாடினார்கள்.
அப்படி தான் கேட்கக்கூடாத எந்த விஷயத்தை தன் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று, தன் பாட்டியின் குடிலுக்குள் இருந்துகொண்டே ஒகான்டா ஆச்சரியத்துடன் சிந்தித்தாள். தலைவர் மக்களிடம் உரையாற்றிக் கொண்டிருக்கும் இடத்திலிருந்து மிகவும் விலகியிருந்தது அவளுடைய பாட்டியின் குடில். அவள் என்னதான் தன் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு கேட்க முயற்சித்தும், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது அவளுடைய காதுகளில் விழவே இல்லை. "திருமண விஷயமாகத்தான் இருக்க வேண்டும்!' - அவள் மனதிற்குள் தீர்மானித்தாள். அவளுடைய முதுகிற்குப் பின்னால், தங்களுடைய மகளின் எதிர்காலத் திருமணத்தைப் பற்றி குடும்பத்திற்குள் பேசுவதென்பது பொதுவாகவே அங்கீகரிக்கப்பட்ட ஒரு விஷயம்தானே! தன்னுடைய வெறும் பெயரை உச்சரித்தாலே, எச்சிலை விழுங்கும் பல இளைஞர்களையும் பற்றி நினைத்துப் பார்த்ததும் ஒகான்டாவின் உதடுகளில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது.
மிகவும் அருகிலேயே ஒரு வயதான உறவினரின் கெச் என்ற மகன் இருந்தான். கெச் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவன் அவனுடைய கண்கள் அழகானவையாக, அமைதி நிறைந்தவையாக இருக்கும். வாய்விட்டு சிரித்தானென்றால், பலமாக சிரிப்பான், "அவன் ஒரு நல்ல தந்தையாக வருவான்' என்று ஒகான்டா மனதில் நினைத்தாள். ஆனால், அவர்கள் ஒரு பொருத்தமான ஜோடியாக இருக்க மாட்டார்கள். கெச் அவளுடைய கணவனாக இருப்பதற்கான உயரம் இல்லாமல் மிகவும் குள்ளமாக இருந்தான்.
ஒவ்வொரு முறையும் தான் அவனுடன் உரையாடும்போது, அவள் அவனை நோக்கி கீழே பார்த்துப் பேசவேண்டும் என்பதே அவளுக்கு தொந்தரவு தரக்கூடிய விஷயமாக இருந்தது. அதற்குப் பிறகு அவள் டிமோவைப் பற்றி நினைத்துப் பார்த்தாள். மிகவும் உயரமான இளைஞனாகவும், தைரியம்மிக்க போராளியாகவும், மிகவும் நன்றாக சண்டை போடக்கூடியவனாகவும் அவன் தன்னை எல்லாரிடமும் காட்டியிருக்கிறான்.
ஒகான்டா டிமோவைக் காதலித்தாள். ஆனால், அவன் ஒரு கொடூரமான கணவனாக இருப்பானென்றும், எப்போதும் தகராறு பண்ணிக் கொண்டிருப்பானென்றும், சண்டை போடுவதற்கு தயார் நிலையிலேயே எப்போதும் இருப்பானென்றும் ஒகான்டா நினைத்தாள். அதனால், அவனை அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் ஒசிந்தாவைப் பற்றி நினைத்தபோது, தன்னுடைய இடுப்பில் பிரகாசித்துக் கொண்டிருந்த சங்கிலியை விரல்களால் தடவிப்பார்த்துக் கொண்டாள். நீண்ட நாட்களுக்கு முன்பு, அவள் மிகவும் இளையவளாக இருந்தபோது, ஒசிந்தாதான் அவளுக்கு அந்த சங்கிலியைக் கொடுத்தான். அவள் அதை பலநேரங்களில் தன்னுடைய கழுத்தில் அணிவதற்கு பதிலாக, தன்னுடைய இடுப்பில்தான் அணிந்திருப்பாள். அது அங்கேயே நிரந்தரமாக இருந்துகொண்டிருந்தது.
அவனைப்பற்றி நினைக்கும்போது, தன்னுடைய இதயம் மிகவும் சத்தமாக துடிப்பதைப்போல அவளுக்குக் கேட்டது. அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்: "அவர்கள் அனேகமாக உன்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஒசிந்தா, என் அன்பே! இப்போதே வந்து என்னை எங்காவது அழைத்துக் கொண்டு செல்...'
தான் மனதில் காதலித்துக் கொண்டிருக்கும் மனிதனைப் பற்றி ஆழமாக நினைத்துக் கொண்டிருக்கும்போது, வாசற்கதவிற்கு அருகில் தெரிந்த ஒல்லியான உருவத்தைப் பார்த்து அதிர்ந்துபோய் விட்டாள் ஒகான்டா. “நீ என்னை பயமுறுத்திட்டே, பாட்டி...'' ஒகான்டா சிரித்துக் கொண்டே கூறினாள்: “சரி... என்னிடம் சொல்லு. நீங்க என்னுடைய திருமணத்தைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கீங்க? நான் சொல்றேன். அவங்க யாரையும் நான் திருமணம் செய்துகொள்ளவே மாட்டேன்.'' அவளுடைய உதடுகளில் மீண்டும் ஒரு புன்னகை தவழ்ந்தது. அவள் தன் பாட்டியை வேண்டுமென்றே உசுப்பேற்றி விட்டாள். அதன் மூலமாவது அவள் வேகமாக அவளிடம், அவர்கள் எல்லாருக்குமே ஒசிந்தாவைப் பிடித்திருக்கிறது என்று கூறமாட்டாளா என்று அவள் நினைத்தாள்.
வெளியே இருந்த திறந்தவெளியில் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருந்த அவளுடைய உறவினர்கள் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்தார்கள். அவர்கள் இப்போது குடிசையை நோக்கி வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரின் கையிலும் ஒகான்டாவின் பாதத்தில் வைப்பதற்காக பரிசுப் பொருட்களை வைத்திருந்தார்கள். அவர்கள் பாடிக்கொண்டே அருகில் வர வர, அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை ஒகான்டாவால் தெரிந்துகொள்ள முடிந்தது. "இது மக்களைக் காப்பாற்றுவதற்காக என்றிருந்தால், இது நமக்காக மழை பெய்ய வைக்கக்கூடிய செயல் என்றிருந்தால், தாராளமாக ஒகான்டா செல்லட்டும்... தன்னுடைய மக்களுக்காகவும், தன்னுடைய முன்னோர்களுக்காகவும் ஒகான்டா தன் உயிரைத் துறக்கட்டும்.'
அவர்கள் தன்னைப் பற்றித்தான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம் தெரிந்தால், அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிடாதா? அவள் எப்படி இறப்பாள்? கதவை அடைக்கும்- ஒல்லியான உடலைக் கொண்டிருக்கும் தன் பாட்டியை அவள் பார்த்தாள். அவள் வெளியே செல்லமுடியாது.
அவளுடைய பாட்டியின் முகத்தைப் பார்க்கும்போதே, அந்த இடத்தில் ஆபத்து நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
“அம்மா... அப்படியென்றால்... திருமணத்தைப் பற்றி பேசவில்லையா?'' ஒகான்டா உடனடியாகக் கேட்டாள். அந்த நிமிடமே அவளுக்கு பயம் உண்டானது.
பசியிலிருக்கும் பூனையால் சுற்றிவளைக்கப்பட்ட ஒரு எலியைப் போல தன்னை அவள் உணர்ந்தாள். அந்தக் குடிலில் ஒரே ஒரு கதவுதான் இருக்கிறது என்பதையே மறந்துவிட்டு, தேவையில்லாமல் அவள் வெளியே செல்வதற்கு வேறு வழி இருக்கிறதா என்று தேடினாள். தன்னுடைய வாழ்க்கைக்காக அவள் கட்டாயம் போராடியே ஆகவேண்டும்.
ஆனால், அங்கு யாருமே இல்லை.
அவள் தன்னுடைய கண்களை மூடிக்கொண்டாள். வெறிபிடித்த ஒரு புலியைப்போல அவள் மெதுவாக ஊர்ந்து, தன் பாட்டியைப் பிடித்து தரையில் தள்ளிவிட்டாள். வெளியே பிரார்த்தனை செய்யும்போது அணியக் கூடிய ஆடைகளை அணிந்துகொண்டு, லபாங்'ஓ எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தார். தன் கைகளை அவர் பின்பக்கத்தில் மடித்து வைத்திருந்தார்.
அவர் தன்னுடைய மகளின் கையைப் பற்றி, அங்கு உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நின்று கொண்டிருந்த கூட்டத்திலிருந்து அவளை விலக்கிக் கொண்டு வந்து, சிவப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்டிருந்த குடிலுக்கு அழைத்துக்கொண்டு வந்தார். அங்கு அவளுடைய அன்னை அமர்ந்திருந்தாள். அந்த இடத்தில் அதிகாரப் பூர்வமாக அவர் தன் மகளிடம் அந்த செய்தியை வெளியிட்டார்.
ஒருவரோடொருவர் மிகுந்த அன்பு வைத்திருக்கும் அந்த மூன்று ஆன்மாக்களும் நீண்ட நேரம் அந்த இருட்டிலேயே அமர்ந்திருந்தன. அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அப்படியே பேசுவதற்கு முயன்றாலும், வார்த்தைகள் வர மறுத்தன. முன்பு அவர்கள் மூவரும் சமையல் செய்யப் பயன்படும் மூன்று கற்களைப்போல இருந்து வந்தார்கள். தங்களுக்குள் இருந்த சுமைகளை அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டார்கள். ஒகான்டா அங்கிருந்து நீக்கப்பட்டு விட்டால், எஞ்சி இருப்பவை எதற்கும் பயன்படாத இரண்டு கற்கள். அவற்றில் ஒரு சமையல் பானையை வைக்கமுடியாது.
மக்களுக்கு மழைபெய்ய வைப்பதற்காக தலைவரின் அழகான மகள் பலிகடாவாகக் கொடுக்கப்படப் போகிறாள் என்ற செய்தி நாடெங்கும் ஒரு சூறாவளியைப்போல வேகமாகப் பரவியது. சூரியன் மறையும் நேரத்தில், தலைவரின் கிராமம் உறவினர்களாலும் நண்பர்களாலும் நிறைந்தது. அவர்கள் ஒகான்டாவைப் பாராட்டு வதற்காக அங்கு வந்திருந்தார்கள். இன்னும் பலர் கிராமத்தை நோக்கி கையில் பரிசுப் பொருட்களுடன் வந்துகொண்டிருந்தார்கள்.
அவள் அங்கிருக்க, காலை வரை அவர்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். காலை வந்ததும், அவர்கள் அவளுக்காக ஒரு விடைகொடுக்கும் விருந்து தயாரிக்க ஆரம்பிப்பார்கள். சமூகம் வாழவேண்டும் என்பதற்காக- தியாகம் செய்த ஆன்மாக்கள் அவளைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன என்ற விஷயத்தை, அங்கிருந்த உறவினர்கள் மிகப்பெரிய கவுரவம் தரக்கூடிய ஒன்றாக நினைத்தனர்.
"ஒகான்டாவின் பெயர் நமக்கு மத்தியில் எப்போதும் நிரந்தரமாக வாழ்ந்துகொண்டிருக்கும்' என்று அவர்கள் பெருமையுடன் கூறிக்கொண்டார்கள்.
இன்னும் சொல்லப்போனால்- அது ஒரு மரியாதைக்குரிய காரியம்தான். மிகப்பெரிய மதிப்பை அளிக்கக்கூடிய விஷயம்தான்- ஒரு பெண்ணின் மகளாகப் பிறந்த ஒருத்தி நாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாள் என்பது... தன்னுடைய ஒரே மகள் காற்றில் அடித்துக் கொண்டுபோன பிறகு, அந்தத் தாய் அடையப்போகும் ஆதாயம் அது.
அந்த நாட்டில் எவ்வளவோ பெண்கள் இருக்கிறார்கள்.
அவளுடைய மகளை மட்டும்... அவளுக்கென்றிருக்கும் ஒரே மகளை மட்டும் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம்? மனித வாழ்க்கைக்கு அர்த்தம் என்ற ஒன்றே கிடையாதா?
மற்ற பெண்கள் தங்களின் வீடுகள் முழுக்க குழந்தைகளை வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில்- ஒகான்டாவின் அன்னை தன்னுடைய ஒரே மகளை இழக்கவேண்டும்!
மேகங்களற்ற வானத்தில் நிலவு பிரகாசித்துக் கொண்டிருந்தது. எண்ணற்ற நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன. எல்லா வயதுகளையும் கொண்ட நடனமாடக் கூடியவர்கள், ஒகான்டாவிற்கு முன்னால் நடனமாடுவதற்காகக் கூடிநின்றார்கள். ஒகான்டா தன் அன்னைக்கு மிகவும் அருகில் உட்கார்ந்து கொண்டு அமைதியாக தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தாள். இத்தனை வருடங்களாக அவள் தன்னுடைய மக்களுடன்தான் இருந்துவந்திருக்கிறாள். அவர்களை தான் நன்கு புரிந்துவைத்திருப்பதாகவே இதுவரை அவள் நினைத்திருந்தாள். ஆனால், அவர்களுக்கு மத்தியில் தான் ஒரு அந்நிய உயிராக நின்றுகொண்டிருப்பதை இப்போதுதான் அவளே உணர்கிறாள். அவர்கள் அவள்மீது உண்மையிலேயே அன்பு என்ற ஒன்றை வைத்திருந்தால், எப்போதும் அதைக் காட்டி வந்திருக்கிறார்கள் என்றால், அவளின் நிலையை நினைத்து அவர்கள் ஏன் பரிதாபப்படவில்லை?
அவளைக் காப்பாற்றுவதற்கான எந்த முயற்சியிலும் அவர்கள் ஏன் இறங்கவில்லை? இளம்வயதிலேயே மரணத்தைத் தழுவுவது என்பது எவ்வளவு கொடுமையான விஷயம் என்பதை அவளுடைய மக்கள் உண்மையிலேயே உணரவே இல்லையா? தன்னுடைய உணர்ச்சிகளை அதற்குமேலும் கட்டுப்படுத்த முடியாமல், அவள் சத்தம் போட்டு அழுதாள். அப்போது அவளுடைய வயதில் இருந்தவர்கள் நடனம் ஆடுவதற்காக எழுந்து நின்றார்கள்.
அவர்கள் மிகவும் இளமையானவர்களாகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். வெகுசீக்கிரமே அவர்களுக்குத் திருமணமாகி தங்களுக்கென்று குழந்தைகளைக்கூட அவர்கள் பெறுவார்கள். தாங்கள் காதலிப்பதற்கு அவர்களுக்கு கணவர்கள் இருப்பார்கள். வசிப்பதற்கு அவர்களுக்கென்று குடில்கள் இருக்கும். அவர்கள் முதிர்ந்த நிலையை அடைந்துவிடுவார்கள். ஒகான்டா தன்னுடைய இடுப்பைச் சுற்றியிருந்த சங்கிலியைக் கையால் தொட்டுப் பார்த்தாள். அப்போது அவளுக்கு ஒசிந்தாவின் ஞாபகம் வந்தது. அங்கே இருக்கும் தன்னுடைய நண்பர்களின் கூட்டத்தில் ஒசிந்தாவும் இருக்கலாம் என்று அவள் நினைத்தாள். "ஆனால், அவனுக்கு உடல்நலம் சரியாக இல்லையே!' அவள் நினைத்தாள். அவன் தந்த அந்த சங்கிலியை தன்னுடைய இடுப்பில் கட்டிய கோலத்துடனே அவள் மரணத்தைத் தழுவுவாள். பூமிக்குக் கீழே உள்ள உலகத்தில் இருக்கும்போதும், அவளது இடையில் அந்த சங்கிலி இருக்கும்.
காலையில் பல வகைப்பட்ட உணவுப் பொருட்களும் சமைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய விருந்து ஒகான்டாவிற்காக தயாரிக்கப்பட்டது.
அவற்றிலிருந்து எது தேவையோ, அதைத் தேர்வு செய்து அவள் சாப்பிட வேண்டும். "மரணமடைந்த பிறகு மனிதர்கள் சாப்பிட முடியாது.' அவர்கள் கூறிக்கொண்டார்கள். உணவுப் பொருட்கள் மிகவும் சுவையாகத் தயாரிக்கப்பட்டிருந்தன. ஆனால், ஒகான்டா அவற்றில் ஒன்றைக்கூட தொட்டுப் பார்க்கவில்லை. சந்தோஷமாக இருக்கக்கூடியவர்கள் சாப்பிட்டுக் கொள்ளட்டும். அங்கிருந்த ஒரு சிறிய பாத்திரத்திலிருந்த நீரில் கொஞ்சம் எடுத்து பருகியதுடன், அவள் திருப்திப்பட்டுக் கொண்டாள்.
அவள் பிரிந்து செல்வதற்கான நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்பற்றதாகத் தோன்றியது. அந்தக் குளத்தை அடைய வேண்டுமானால், ஒருநாள் முழுவதும் பயணம் செய்யவேண்டும். அடர்ந்த காட்டின் வழியாக, அவள் முழு இரவும் நடந்து செல்ல வேண்டும். அவளை சலனமடையச் செய்வதற்கு இனி எதுவுமில்லை. அடர்ந்த காடுகூட அவளை எதுவும் செய்யமுடியாது. ஏற்கெனவே அவள்மீது புனித எண்ணெய் தேய்க்கப்பட்டுவிட்டது.
அந்த துக்கச் செய்தியைக் கேள்விப்பட்ட கணத்திலிருந்து, எந்தவொரு நொடியிலும் எனக்கு முன்னால் ஒசிந்தா வந்து தோன்றுவான் என்பதை அவள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அங்கு அவன் இல்லை. தன்னுடைய சொந்த வேலை விஷயமாக ஒசிந்தா வேறு எங்கோ சென்றிருப்பதாக அவளுடைய உறவினர் ஒருவர் அவளிடம் கூறினார்.
தான் மனதிற்குள் நேசித்துக் கொண்டிருக்கும் அவனை மீண்டும் பார்க்கப் போவதில்லை என்பதையும் ஒகான்டா நினைத்துப் பார்த்தாள்.
மதிய நேரத்தில் முழு கிராமமும் அவளுக்கு விடை கூறுவதற்காகவும், அவளை இறுதியாக ஒருமுறை பார்த்துக்கொள்வதற்காகவும் வாசலுக்கு அருகில் வந்து குழுமியிருந்தது. அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அவளுடைய தாய் நீண்ட நேரமாக அழுதுகொண்டேயிருந்தாள். பிரார்த்தனைக்கான ஆடையை அணிந்துகொண்டு, தலைவர் காலணி எதுவும் அணியாமல் வெளிவாசலுக்கு வந்து மக்களுடன் ஒருவராக கலந்துகொண்டார். கவலையில் மூழ்கியிருந்த ஒரு சாதாரண தந்தையாக அவர் காட்சியளித்தார். அவர் தன்னுடைய மணிக்கட்டில் கட்டியிருந்த சங்கிலியைக் கழற்றி தன் மகளின் இடுப்பில் கட்டிவிட்டுக் கூறினார். “நீ எங்களுக்கு மத்தியில் எப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பாய். நம் முன்னோர்களின் ஆன்மாக்கள் உன்னுடன்தான் இருக்கின்றன.''
வாயால் எதுவும் பேசமுடியாத நிலையில், எதையுமே நம்பமுடியாத வகையில் ஒகான்டா மக்களுக்கு முன்னால் நின்றிருந்தாள். அவள் கூறுவதற்கு எதுவுமில்லை. அவள் தன்னுடைய வீட்டை மீண்டுமொருமுறை பார்த்தாள். தனக்குள்ளிருக்கும் தன்னுடைய இதயம் மிகவும் வேதனையுடன் துடித்துக்கொண்டிருந்ததை அவளால் கேட்கமுடிந்தது. அவள் சிறுபிள்ளையாக இருந்தபோது மனதில் போட்டு வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் ஒரு முடிவுக்கு வந்து விட்டன. ஒரு மலரை மலரச் செய்யாமலே, மீண்டும் புலர்காலைப் பொழுது பனி விழுவதை அனுபவிக்கவிடாமல் மொட்டாகவே தன்னை அவர்கள் இருக்கச் செய்துவிட்டதைப்போல அவள் உணர்ந்தாள். அழுது கொண்டிருந்த தன் தாயின் காதுகளில் அவள் மெதுவான குரலில் முணுமுணுத்தாள்: “நீங்கள் எப்போதெல்லாம் என்னைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்களோ, அப்போது சூரியன் மறைவதைப் பாருங்கள்... நான் அங்கிருப்பேன்...''
ஒகான்டா தென்திசையை நோக்கித் திரும்பி, குளத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். அவளுடைய பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், வழிபடுபவர்கள் வாசலில் நின்றுகொண்டு, அவள் நடந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவளுடைய அழகான மெல்லிய உருவம் கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக, அவள் காட்டில் இருந்த ஒல்லியான காய்ந்த மரங்களுடன் சிறிது நேரத்தில் முற்றிலுமாகக் கரைந்து போனாள்.
அடர்ந்த காட்டுக்குள் இருந்த அந்த தனிமையான பாதையில் வேதனை உண்டாக நடந்துகொண்டி ருக்கும்போது, ஒகான்டா ஒரு பாடலைப் பாடினாள்.
அவளுடைய குரல் மட்டுமே அவளுக்கு வழித்துணையாக இருந்தது.
"முன்னோர்கள் கூறி விட்டார்கள்
ஒகான்டா கட்டாயம் இறக்க வேண்டுமென்று...
தலைவரின் மகள்
கட்டாயம் தியாகம் செய்யவேண்டும்...
குளத்தின் அரக்கன் என் சதையை உண்ணும்போது
மக்களுக்கு மழை கிடைக்கும்...
ஆமாம்...
மழை தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும்...
காற்று வீசும்... இடி முழங்கும்...
மணல் நிறைந்த கடற்கரையை
வெள்ளம் அடித்துக்கொண்டு போகும்...
தலைவரின் மகள் குளத்தில் இறக்கும்போது.
என் வயதைக் கொண்டவர்கள் ஒப்புக்கொண்டார்கள்,
என் பெற்றோர்கள் ஒப்புக்கொண்டார்கள்,
அதனால்,
என் நண்பர்களும் உறவினர்களும்...
எங்களுக்கு மழை கிடைப்பதற்காக
ஒகான்டா மரணத்தைத் தழுவட்டும்...
என் வயதைக் கொண்டவர்கள்,
இளமையானவர்கள், பழுத்த நிலையில் இருப்பவர்கள்.
பெண்ணாக ஆவதற்கும் தாயாக ஆவதற்கும்
பழுத்த நிலையில் இருப்பவர்கள்...
ஆனால்-
ஒகான்டா இளமையிலேயே இறக்கவேண்டும்.
ஒகான்டா முன்னோர்களுடன் படுக்க வேண்டும்.
ஆமாம்...
தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கும்.'
மறைந்துகொண்டிருந்த சூரியனின் சிவப்புநிற ஒளிக்கீற்றுகள் ஒகான்டாவை இறுகத் தழுவின.
அப்போது அந்த அடர்த்தியான காட்டுக்குள் எரிந்துகொண்டிருக்கும் ஒரு மெழுகுவர்த்தியைப் போல தோன்றினாள்.
அவளுடைய சோகம் நிறைந்த பாடலைக் கேட்பதற்காக வந்திருந்த மக்கள் அவளுடைய பேரழகைப் பார்த்து அசந்துபோய் விட்டார்கள்.
ஆனால், அவர்கள் எல்லாரும் அதே விஷயத்தைத்தான் கூறினார்கள்- "மக்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்றால், எங்களுக்கு மழை பெய்வதற்காகத்தான் என்றால், நீ சிறிதும் மனதில் பயம் கொள்ளவே கூடாது. உன்னுடைய பெயர் நிரந்தரமாக எங்களுக்கிடையே வாழ்ந்துகொண்டே இருக்கும்.'
நள்ளிரவு வேளையில் ஒகான்டா மிகவும் களைத்துப்- போய், சோர்வடைந்து காணப்பட்டாள். அவளால் அதற்குமேல் நடக்க முடியவில்லை. அவள் ஒரு பெரிய மரத்திற்குக் கீழேபோய் உட்கார்ந்தாள். தன்னிடமிருந்த பாத்திரத்திலிருந்து நீரை எடுத்துப் பருகினாள். மரத்தின் அடிப்பகுதியில் தன்னுடைய தலையை வைத்து, அவள் தூங்கினாள்.
காலையில் அவள் எழுந்தபோது, சூரியன் வானத்தின் உயரத்தில் இருந்தது. பல மணி நேரம் நடந்தபிறகு, அவள் ஒரு நிலப் பகுதியை அடைந்தாள். அந்த சிறு நிலப்பகுதி நாட்டின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியையும், புனித இடமான "கார் லமோ'வையும் பிரித்துக் காட்டியது. சாதாரண மனிதன் யாரும் அந்த இடத்திற்குள் நுழைய முடியாது... உயிருடன் திரும்பி வரவும் முடியாது. ஆன்மாக்களுடன் நேரடியான தொடர்பு கொண்டிருப்பவர்களும், இறைவனும் மட்டுமே
அந்த புனிதங்களின் புனிதமான இடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், குளத்திற்குச் செல்லும் வழியில் ஒகான்டா அந்த புனிதமான இடத்தைக் கடந்துதான் செல்லவேண்டும்.
அவள் அந்தக் குளத்தை சூரியன் மறைவதற்குள் அடையவேண்டும்.
அவளை இறுதியாகப் பார்ப்பதற்காக ஒரு மிகப் பெரிய கூட்டமே திரண்டு வந்து நின்றிருந்தது. அவளுடைய குரல் இப்போது கரகரப்பானதாகவும், வேதனை நிறைந்ததாகவும் இருந்தது.
அதே நேரத்தில்- இதற்குமேல் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை. வெகு சீக்கிரமே பாடலைப் பாடவேண்டிய அவசியமே இல்லாத நிலை அவளுக்கு உண்டாகப் போகிறது. அங்கு கூடியிருந்த கூட்டம் ஒகான்டாவையே பரிதாப உணர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கிடையே அவர்கள் மெதுவான குரலில் என்னவோ வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டார்கள். ஆனால், அது அவள் காதில் விழவில்லை. ஆனால், அவர்களில் யாருமே அவளுடைய வாழ்க்கைக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஒகான்டா வெளி வாசலைத் திறந்ததும், ஒரு குழந்தை, ஒரு சிறிய குழந்தை மக்கள் கூட்டத்திற்குள்ளிருந்து விலகி வெளியே வந்து, அவளை நோக்கி ஓடியது.
அந்தக் குழந்தை தன்னுடைய கைகளிலிருந்து ஒரு அழகான காது வளையத்தை எடுத்து, அதை ஒகான்டாவின் கையில் கொடுத்தது. அது கூறியது: “மரணமடைந்தவர்கள் இருக்கும் உலகத்தை நீங்கள் அடைந்த பிறகு, இந்த காது வளையத்தை என் சகோதரியிடம் கொடுங்கள். அவள் போனவாரம் இறந்துவிட்டாள். அவள் இந்த வளையத்தை மறந்து விட்டாள்.'' இந்த வினோதமான வேண்டுகோளைக் கேட்டு ஆச்சரியமடைந்த ஒகான்டா, அந்தச் சிறிய வளையத்தை வாங்கிக் கொண்டு, விலைமதிப்பற்ற நீரையும் உணவையும் அவள் குழந்தைக்குக் கொடுத்தாள். அவளுக்கு அவை இப்போது தேவையில்லை. ஒகான்டாவிற்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. எவ்வளவோ வருடங்களுக்கு முன்னால் இறந்து போனவர்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தங்களின் அன்பை தாங்கள் நேசித்தவர்களுக்குத் தெரிவிப்பதைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால், பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பது என்ற எண்ணம் அவளுக்கே புதிய ஒன்றாக இருந்தது.
அந்த புனித மண்ணுக்குச் செல்லும் தடையைக் கடந்தபோது, ஒகான்டா தன்னுடைய மூச்சைப் பிடித்து வைத்துக்கொண்டாள். அவள் அங்கு குழுமியிருந்த கூட்டத்தைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்வதைப்போல பார்த்தாள். ஆனால், அவர்களிடம் அதற்கு எந்த எதிர்வினையும் உண்டாக வில்லை. தாங்கள் பிழைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களின் மனங்களில் ஏற்கெனவே ஆழமாகப் படிந்துவிட்டிருந்தது. அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த விலைமதிப்பற்ற மருந்தே மழைதான். எவ்வளவு சீக்கிரம் தான் போய் அடைய வேண்டிய இடத்தை ஒகான்டா அடைகிறாளோ, அந்த அளவிற்கு நல்லது என்று அவர்கள் நினைத்தார்கள்.
அந்த புனித மண்ணை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, இளவரசியின் மனதில் வினோதமான ஒரு உணர்வு ஓடிக்கொண்டிருந்தது. விசித்திரமான சத்தங்கள் அவ்வப்போது ஒலித்து, அவளை திகைப்படையச் செய்துகொண்டிருந்தன. அங்கிருந்து வேகமாக ஓடிவிடலாமா என்றுகூட அவள் நினைத்தாள். ஆனால், தன்னுடைய மக்களின் மனங்களில் இருக்கக்கூடிய ஆசையை தான் கட்டாயம் நிறைவேற்றி வைக்கவேண்டும் என்பதையும் அவள் நினைத்துப்பார்த்தாள். அவள் மிகவும் களைத்துப்போய் காணப்பட்டாள். ஆனால், பாதையோ மேலும் வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. திடீரென்று பாதை ஒரு மணல் நிறைந்த நிலத்தில் முடிவடைந்தது. கரையிலிருந்து மிக தூரத்திலேயே நீர் நின்று விட்டு, ஒரு பரந்த மணல்வெளி இருக்கும்படி செய்திருந்தது. அதைத் தாண்டி, பரந்த நீர்ப்பரப்பு...
ஒகான்டாவிற்கு மிக பயமாக இருந்தது.
அரக்கனின் அளவையும், வடிவத்தையும் அவள் கற்பனை செய்து பார்த்தாள். ஆனால், பயம் அதை
அவள் செய்யவிடாமல் தடுத்தது. மக்கள் யாரும் அதைப் பற்றி ஒரு வார்த்தைகூட வாய்திறந்து பேசவில்லை. அழுது கொண்டிருந்த குழந்தைகள்கூட அதைப்பற்றி எதுவும் கூறவில்லை. அதன் பெயரை உச்சரித்தாலே, அவர்கள் வாய்மூடி இருக்கும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டார்கள். சூரியன் இப்போது மேலும் உச்சத்தில் இருந்தது. ஆனால், பெரிய அளவில் வெப்பம் நிறைந்ததாக இல்லை. நீண்ட நேரம் ஒகான்டா மணலில் கணுக்கால் மூழ்கிப் போகும் அளவிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தாள். அவள் மிகவும் களைத்துப்போய், என்ன செய்வதென்று தெரியாமல் நீர் இருந்த பாத்திரத்திற்காக ஏங்கினாள். தான் மேலும் முன்னோக்கி நடக்க, ஏதோவொன்று தன்னைப் பின்தொடர்ந்து வருவதைப்போல அவள் உணர்ந்தாள். அந்த அரக்கனா? அவளுடைய தலைமுடிகள் சிலிர்த்து நின்றன. உடம்பையே அடித்து செயலற்றுப் போகச் செய்யும் அளவிற்கு ஒரு குளிர்ச்சி அவளுடைய தண்டுவடத்தில் பரவி ஓடிக்கொண்டிருந்தது. அவள் பின்னாலும், பக்கவாட்டிலும், முன்னாலும் பார்த்தாள். ஒரு தூசிக் கூட்டத்தைத் தவிர, வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒகான்டா வேகமாக நடக்க ஆரம்பித்தாள். ஆனால், அந்த உணர்வு அவளிடமிருந்து விலகிச் செல்லவில்லை. அவளுடைய முழு உடம்பும் அதன் வியர்வையில் குளித்துக் கொண்டிருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது.
சூரியன் வேகமாக கீழே இறங்கிக் கொண்டி ருந்தது... குளத்தின் கரை அதோடு சேர்ந்து நகர்ந்துகொண்டிருப்பதைப்போல தோன்றியது.
ஒகான்டா அங்கிருந்து ஓட ஆரம்பித்தாள். சூரியன் மறைவதற்கு முன்னால், அவள் குளத்தில் இருக்கவேண்டும். தான் ஓடிக்கொண்டிருந்தபோது, தனக்குப் பின்னால் ஒரு சத்தம் ஒலிப்பதைக் கேட்டாள். அவள் பின்னால் திரும்பி கூர்ந்து பார்த்தாள். நகர்ந்து கொண்டிருக்கும் புதரைப் போன்ற ஏதோவொன்று அவளுக்குப் பின்னால் மிகவும் வேகமாக ஓடிவந்துகொண்டிருந்தது. கிட்டத்தட்ட அவளைப் பிடித்துவிடக்கூடிய நிலையில் அது இருந்தது.
தன்னுடைய முழு சக்தியையும் திரட்டிக்கொண்டு ஒகான்டா ஓடினாள். சூரியன் மறைவதற்கு முன்னால், தான் போய் நீருக்குள் விழுந்துவிட வேண்டும் என்று இப்போது அவள் தீர்மானம் செய்து கொண்டாள். அவள் பின்னால் திரும்பிக்கூட பார்க்கவில்லை. ஆனால், அந்த ஜந்து அவளுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்தது. கனவில் நடப்பதைப்போல, வாய்விட்டு அழுவதற்கு அவள் முயற்சித்தாள். ஆனால், தன்னுடைய குரலை அவளாலேயே கேட்க முடியவில்லை. அந்த ஜந்து ஒகான்டாவை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒரு பலமான கரம் அவளைப் பற்றியது. அதைத் தொடர்ந்து அவள் மணலில் அப்படியே சாய்ந்து, மயக்கமடைந்தாள்.
அந்தக் குளத்தின் காற்று அவளைச் சுய உணர்விற்கு மீண்டும் கொண்டு வந்தபோது ஒரு மனிதன் அவளை நோக்கி குனிந்து கொண்டிருந்தான். "ஓ...!' ஒகான்டா பேசுவதற்காக தன் வாயைத் திறந்தாள். ஆனால், அவளுக்கு குரலே வரவில்லை. அங்கு வந்திருந்த மனிதன் அவளுடைய வாய்க்குள் ஊற்றிய நீரில், அவள் ஒரு வாய் நீரைக் குடித்தாள்.
“ஒசிந்தா... ஒசிந்தா! தயவுசெய்து என்னைச் சாக விடு. என்னை ஓடுவதற்கு அனுமதி. சூரியன் கீழே இறங்கிக் கொண்டிருக்கிறது. நான் இறக்கப் போகிறேன். அவர்களுக்கு மழை கிடைக்கட்டும்..''
ஒகான்டாவின் இடுப்பில் பிரகாசித்துக் கொண்டிருந்த சங்கிலியை ஒசிந்தா ஆசையாகத் தடவிக்கொண்டே, அவளுடைய முகத்தில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரைத் துடைத்துவிட்டான்.
“யாருக்குமே தெரியாத ஒரு நிலப்பகுதிக்கு நாம் உடனடியாகத் தப்பித்துச் செல்லவேண்டும்'' ஒசிந்தா மிகவும் வேகமாகக் கூறினான். “முன்னோர்களின் கோபத்திலிருந்தும், அரக்கனின் விரும்பத்தகாத தாக்குதலில் இருந்தும் நாம் கட்டாயம் தப்பித்து ஓடியாக வேண்டும்.''
ஒகான்டா உறுதி தளர்ந்த நிலையில் இருந்தாள். அங்கிருந்து தப்பித்துச் செல்வதற்கு அவள் பயந்தாள். ஆனால், ஒசிந்தா மீண்டும் அவளுடைய கைகளைப் பற்றினான். “இங்கே பார், ஒகான்டா! கவனமாகக் கேள். இங்கே இரண்டு "கோட்டு'கள் இருக்கின்றன'' என்று கூறிய அவன், ஒகான்டாவின் சரீரம் முழுவதையும்- அவளுடைய கண்களை மட்டும் விட்டுவிட்டு, மூங்கில்களிலிருந்து எடுக்கப்பட்ட இலைகளைக் கொண்டு மூடினான். “முன்னோர்களின் கண்களிலிருந்தும் அரக்கனின் கோபத்திலிருந்தும் இவை நம்மைக் காப்பாற்றும். நாம் இப்போது இங்கிருந்து உடனடியாக ஓடியாக வேண்டும்'' என்று கூறிய அவன் ஒகான்டாவின் கையைப் பற்றினான். அவர்கள் அந்த புனித நிலத்தை விட்டு ஓடினார்கள். ஒகான்டா இதுவரை நடந்துவந்த பாதைகளில் அவர்கள் செல்லவில்லை.
புதர் மிகவும் அடர்த்தியாக இருந்தது. அதில் இருந்த நீளமான புற்கள் அவர்கள் ஓடும்போது, அவர்களுடைய பாதத்தில் நசுங்கிக் கொண்டிருந்தன. புனித நிலத்தின் பாதி தூரத்தைக் கடந்து வந்ததும், அவர்கள் நின்று பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். சூரியன் கிட்டத்தட்ட நீரின் மேற்பரப்பைத் தொடக்கூடிய நிலையில் இருந்தது. அவர்கள் பயந்துவிட்டார்கள். மூழ்கிக் கொண்டிருக்கும் சூரியனைப் பொருட்படுத்தாமல் அவர்கள் இன்னும் வேகமாக தங்களின் ஓட்டத்தைத் தொடர்ந்தார்கள்.
“நம்பு... ஒகான்டா! அது நம்மை அடையாது...''
அவர்கள் தடை இருந்த இடத்தை அடைந்ததும், பின்னால் திரும்பி நடுங்கிக் கொண்டே பார்த்தார்கள். நீரின் மேற்பரப்பிற்கு மேலே சூரியனின் ஒரு முனைப் பகுதி மட்டுமே தெரிந்தது.
“மறைந்து விட்டது! மறைந்து விட்டது!'' தன் முகத்தை அவனுடைய கைகளில் மறைத்துக்கொண்டு, அவள் அழுதாள்.
“தலைவரின் மகளே, அழாதே! நாம் ஓடுவோம்... இங்கிருந்து தப்பிப்போம்.''
தூரத்தில் ஒரு மின்னல் பிரகாசமாக வெட்டியது. அவர்கள் மேலே பார்த்து, பயந்து போனார்கள்.
அன்றிரவு சிறிதும் நிற்காமல் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்தது- நீண்டகாலமாக பெய்யாமலே இருந்த மழை.