Logo

நொறுங்கிய ஆசைகள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6437
noringiya asaigal

தினாறு வருடங்களுக்கு முன்பு, வீடும் பள்ளிக்கூடமும் பந்து விளையாடக்கூடிய இடமும் நண்பர்களும் மட்டுமே இருந்த ஒரு உலகத்தில், இதயம் முழுவதும் சந்தோஷத்துடன் ஓடித் திரிந்த பிள்ளைப் பருவத்தில், என்னுடைய வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்துவிட்ட இந்தக் கதையை இப்போது ஞாபகப்படுத்திப் பார்ப்பதற்கு காரணமாக இருப்பவளே என்னுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த  பிந்துதான். ஒன்பது வயது மட்டுமே நிறைந்திருந்த அவள், என்னுடன் அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு வடநாட்டு நண்பரின் மகள். நான் இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டிருந்தாலும், பிந்துவுடன் உள்ள பழக்கத்திற்கான காலம் அவ்வளவுதானா என்பதை நம்பமுடியவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தவுடன், நான் அலுவலகத்திலிருந்து வருவதை எதிர்பார்த்துக் கொண்டு அவள் என்னுடைய அறையின் வாசற்படியில் நின்றிருப்பாள். காலையில் தினமும் ஆறு மணிக்கு என்னை கண் விழிக்கச்செய்யும் வேலையை பிந்து ஏற்றுக்கொண்டிருந்தாள். போர்வையை மூடித் தூங்கிக் கொண்டிருக்கும் என்னைக் குலுக்கி அழைக்கும்போது அவள் கூறுவாள்.

‘பாபு! தும் பொஹத் ஸுஸ்த் ஹை!'

நான் மிகப்பெரிய சோம்பேறி என்று அவள் கூறுகிறாள்.

ஒரு வாரத்திற்கு முன்பு ஒருநாள் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்னால், அவள் ஓடிவந்து என்னிடம் ஒரு முக்கியமான தகவலைச் சொன்னாள்:

‘அகலே மைனாமெ மேரீ தீதீக்கீ ஷாதி ஹை!'

அடுத்த மாதம் தன்னுடைய அக்காவின் திருமணம் நடக்கப்போகிறது என்ற தகவலே அது. நான் கேட்டேன்:

‘அப்படியா? பிந்து, இனி எப்போ உன்னுடைய கல்யாணம்?'

அவள் பதைபதைத்துப்போய் தூரத்திற்கு ஓடிச்சென்று முகத்தை இருள வைத்துக்கொண்டு நின்றாள்.

நான் எழுந்து சென்று அவளுடைய காதிற்குள் முணு முணுத்தேன்:

‘பிந்து, உன்னை நான் திருமணம் செய்து கொள்ளவா?'

அவள் என்னை கையால் விலக்கிவிட்டு, வீட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டாள். அன்றிலிருந்து அவள் என்னைப் பார்த்துவிட்டால் முகத்தை ஒரு மாதிரி கோணலாக வைத்துக்கொண்டு ஓடிவிடுவாள்.

 

இன்று நான் சீக்கிரமே அலுவலகத்திலிருந்து வந்து அறையின் வாசலில் சாலையைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். ஒரு கையில் புத்தகப் பையைத் தூக்கிக்கொண்டு, இன்னொரு கையால் சுருள்சுருளாக இருந்த அடங்காத கூந்தலை காதுப் பக்கம் ஒதுக்கிவிட்டவாறு பிந்து பள்ளிக்கூடத்திலிருந்து வருவதை தூரத்திலேயே நான் பார்த்துவிட்டேன். அருகில் வந்ததும் கேட்டேன்:

‘பிந்து, ஏன் இவ்வளவு தாமதம்?'

‘மேரீ குஷி...' (நானே விரும்பியதால்!)

அவளுடைய நடைக்கு வேகம் கூடியது. அவள் என்னைக் கடந்து சென்றவுடன், நான் பின்னால் நின்று கொண்டு சொன்னேன்:

‘பிந்து, உன்னை நான்தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போறேன்.'

அவள் திரும்பி நின்று கோபத்துடன் சொன்னாள்:

‘தும் பொஹத் கறாப் ஆத்மீ ஹை!'

நான் மிகவும் மோசமான மனிதன் என்று அவள் கூறினாள். தொடர்ந்து ஓடி, தன்னுடைய வீட்டின் கேட்டிற்கு அருகில்போய் நின்று, என்னைப் பார்த்து நாக்கை நீட்டிக் காட்டினாள். நான் உரத்த குரலில் சொன்னேன்:

‘பிந்து, நான்தான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன்.'

அவள் அதை காதில் வாங்காததைப்போல, ஒரு பட்டாம்பூச்சி பறப்பதைப்போல வீட்டிற்குள் ஓடி விட்டாள். சிரிக்கும்போதும் பதைபதைப்புடன் இருக்கும்போதும் ஒரே மாதிரி அழகாக இருக்கும் அந்த முகம் என் கண்களுக்கு முன்னாலிருந்து மறைவதே இல்லை. அவளுக்கு அந்தப் பெயரை வைத்தவர்கள்மீது எனக்கு மதிப்பு உண்டானது. பிந்து! பிந்து!

என்னுடைய நினைவுகள் கடந்த காலத்தின் தூரத்தை நோக்கி ஓடி... ஓடிப்போய்க் கொண்டிருக்கிறது. பதினாறு வருடங்கள்! அவை எவ்வளவு வேகமாக கடந்து சென்றிருக்கின்றன! காட்டாற்றின் சுறுசுறுப்புடனும் முல்லை மலரின் அழகுடனும் துள்ளிக்குதித்துத் திரிந்த என்னுடைய இளமைக் காலத்தின் இனிய நினைவுகள் வரிசை வரிசையாக கண்களுக்கு முன்னால் வலம் வந்துகொண்டிருந்தன. அன்று எனக்கு ஒரு விளையாட்டுத் தோழி இருந்தாள். அவளிடம் ஒருநாள் நான் ரகசியமாகக் கேட்டேன்.

‘லில்லி, நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கட்டுமா?'

நான் மோசனமானவன் என்று அவள் கூறவில்லை. ஒரு புதுமணப் பெண்ணின் வெட்கத்துடன் அந்த பன்னிரண்டு வயதுகொண்ட இளம்பெண் சிறிது நேரம் தலையை குனிந்துகொண்டே நடந்தாள். நான் கேட்டேன்.

‘லில்லி, உனக்கு விருப்பம்தானே?'

விரல் நுனியைக் கடித்துக்கொண்டே அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

‘குஞ்ஞப்பா, உனக்கு வரதட்சணை தருவதற்கு எங்க அப்பா கையில் பணமில்லையே!'

எந்தவொரு வரதட்சணையும் வாங்காமலே நான் அவளைத் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியதும், அந்த பிரகாசமான நீலநிறக் கண்களை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்டு, அவள் தன் முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்.

மூன்றாவது வகுப்பில் படிக்கும்போதுதான் எனக்கு அவள் அறிமுகமானாள். அச்சுதன் பிள்ளை சார் இடமாற்றம் பெற்றுப் போனதைத் தொடர்ந்து இன்னொரு ‘சார்'  வரும் நாள் அது. பள்ளிக்கூடத்தில் வாசலில் இருந்த புளிய மரத்திற்குக் கீழே நாங்கள் கிளித்தட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது, தாடி, மீசை ஆகியவற்றுடன் இருந்த ‘வர்க்கி சார்' அங்கு வந்துகொண்டிருந்தார். அவருடன், எங்களுடைய கிராமப் பகுதியில் சாதாரணமாகப் பார்க்க முடியாத ஒரு வகையான புதிய ‘ஃப்ராக்' அணிந்திருந்த ஒரு சிறுமியும் வந்தாள். வர்க்கி சார் தலைமை ஆசிரியருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது மாணவ- மாணவி களுக்கு மத்தியிலிருந்து யாரோ சொன்னார்கள்:

‘அது சாரின் மகள்...'

நாங்கள் எல்லாரும் பொறாமையுடன் அந்தச் சிறுமியையே பார்த்தோம். காதிற்குக் கீழேயே வெட்டப்பட்டிருந்த அவளுடைய சுருள்விழுந்த தலைமுடியும், பட்டாம்பூச்சியைப்போல செய்யப்பட்டிருந்த மலர் வைக்கும் குப்பிகளும், ஆங்காங்கே இளஞ்சிவப்புநிறப் புள்ளிகளுடன் இருந்த நீல வண்ணப் பட்டாடையும் எங்களுக்கு புதுமையாக இருந்தன. அவள் அப்படி நின்றுகொண்டிருந்தபோது, ஒரு துண்டு புளியை நீட்டியவாறு கறுத்த துண்டுத் துணியை அணிந்திருந்த ஒரு சிறுமி சொன்னாள்:

‘புளியம் பழம் வேணுமா? வா குழந்தை...'

அவள் வெட்கப்பட்டுக்கொண்டு நின்றிருக்காமல் அருகில் வந்து அதை வாங்கினாள். பிள்ளைகள் எல்லாரும் அவளைச் சுற்றி கூட்டமாக நின்றார்கள். அந்தக் கூட்டத்தில் யாரோ கேட்டார்கள்:

‘உன் பெயர் என்ன?'

‘லில்லி...'

‘என்ன வகுப்பில் படிக்கிறாய்?'

‘மூணாவது வகுப்பில்.'

கொஞ்சம் புளியம்பழத்தைக் கிள்ளி வாய்க்குள் போட்டு சுவைத்துக் கொண்டே அவள் சொன்னாள்:

‘நாளையிலிருந்து நானும் இங்கே படிப்பதற்காக வரப் போறேன்.'


அன்று மாலை நான் வீட்டிற்கு வந்தபோது, வர்க்கி சார் இருக்கப்போவது எங்கள் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்திலிருக்கும் வீட்டில்தான் என்ற விஷயம் எனக்குத் தெரிய வந்தது. இரண்டு நாட்கள் கடந்தபிறகு, ஒரு வண்டி நிறைய வீட்டுச் சாமான்களுடன் அவர்கள் அங்கு வசிப்பதற்காக வந்தார்கள். அவர்கள் வந்த நாளன்றே, என் தாயும் மூத்த சகோதரியும் அவர்களைப் பார்ப்பதற்காகப் போயிருந்தார்கள். மாலை நேரத்தில் லில்லியும் அவளுடைய அன்னையும் எங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். சமையலறையில் அவர்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது, லில்லி என்னுடைய அறைக்குள் வந்தாள். அவளுடன் உரையாடுவதற்கு எனக்கு கூச்சமாக இருந்தது. மேஜைகளின்மீது மூன்றாவது வகுப்பு பாடப் புத்தகத்தை திறந்து வைத்துக்கொண்டு நான் அவளை கவனிக்காதது மாதிரி, தலையை குனிந்துகொண்டு உட்கார்ந்திருக்க, அவள் மெதுவாக வந்து மேஜையைப் பிடித்துக்கொண்டே கேட்டாள்:

‘மூணாவது வகுப்பிலா படிக்கிறே?'

‘ஆமாம்...'

‘உங்களுக்கு எந்தப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்கிறாங்க?'

‘மீனவனும் பூதமும்.'

அவள் என்னைவிட மிகவும் அதிகமாகப் படித்திருப்பதைப்போல காட்டிக்கொண்டு சொன்னாள்:

‘எங்களுக்கு அதையெல்லாம் ஏற்கெனவே சொல்லித் தந்துட்டாங்க. இப்போ ‘குள்ளநரி அரசனான கதை'யைப் படிச்சிக்கிட்டு இருக்கோம்.'

‘உன் அப்பாவா பாடம் சொல்லித் தர்றாரு?'

‘ஆமா...' அவள் பெருமையுடன் தலையாட்டினாள்.

‘அடிப்பாரா?'

‘ஆமாம்... படிச்சிட்டு போகலைன்னா அடிப்பாரு. பிறகு... வீட்டுப் பாடமான கணக்கு போடாம போனாலும்...'  அவள் கேட்டாள்:

‘கணக்கு தெரியுமா?'

ஒன்பதிலிருந்து மூன்றைக் கழித்தால் மீதி என்ன வரும் என்றுகேட்டால், விழித்துக்கொண்டு நிற்கக்கூடிய கணக்குப் பண்டிதரான நான் சொன்னேன்.

‘ஏதோ ஒண்ணு வரும்.'

ஆனால், மிகவும் சீக்கிரமே உண்மை வெளியே தெரிந்துவிட்டது. அது- நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து  உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தபிறகுதான். வீட்டுப் பாடமாகக் கொடுக்கப்பட்ட கணக்கு கேள்விகள் எழுதப்பட்டிருக்கும் நோட்டுப் புத்தகத்துடன் நான் அதிகாலையில் லில்லியின் வீட்டிற்குச் செல்வேன். அந்த நேரத்தில் அவள் அதை தன்னுடைய நோட்டு புத்தகத்தில் செய்து முடித்து மிகவும் அருகில் வைத்திருப்பாள். தொடர்ந்து ஒரு ஆசிரியைபோல காட்டிக்கொண்டு மிடுக்கான குரலில் கூறுவாள்.

‘இன்னும் செய்து பார்...'

நான் கையறு நிலையில் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு, இறுதியில் அவளுடைய நோட்டுப் புத்தகத்தை வலிய வாங்கி விரித்து வைத்து, அதில் இருப்பது மாதிரியே என்னுடைய நோட்டுப் புத்தகத்தில் எழுதும்போது, அவள் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்துவாள்:

‘இந்த குஞ்ஞப்பனுக்கு கணக்கு கொஞ்சம்கூட தெரியல...'

மனக்கணக்கு வகுப்பில்தான் என்னை லில்லி அதிகமாக காப்பாற்றியிருக்கிறாள். கேள்வியைக் கேட்டுவிட்டு சார் என்னை நோக்கி கையை நீட்டும்போது, நான் எழுந்து சிந்தித்துப் பார்ப்பதைப்போல நிற்பேன். எனக்கு நேர் எதிரில் இருக்கும் பெஞ்சில் லில்லி உட்கார்ந்திருப்பாள். தன்னுடைய பத்து விரல்களைக் கொண்டு, அவள் அதன் சரியான விடையை ஒரு நடனப் பெண்ணின் லாவகத்துடன் வேறு யாருக்கும் தெரியாமல் எனக்குத் தெரிய வைப்பாள்.

ஆனால், சிறிதும் எதிர்பார்க்காமல் எனக்கு ஆபத்து வந்தது. ஒருநாள் லில்லியை என்னுடைய பெஞ்சுக்கு அருகில் வேறொரு பெஞ்சில் மாற்றி அமர வைத்து விட்டார்கள். ஒரு கேள்விக்கு பதில் கூறுவதற்காக நான் எழுந்து நின்றேன். என்னைக் காப்பாற்றும் நபரை நோக்கி ஓரக்கண்களால் பார்த்தபோது, அங்கு யாருமே இல்லாமல் இடம் வெறுமனே இருந்தது. நான் மேலே பார்த்தவாறு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து, தன்னுடைய தாடியையும் மீசையையும் தடவியவாறு சார் தமாஷாகக் கேட்டார்.

‘பள்ளிக்கூடத்தில் எத்தனை தூக்கு மரம் இருக்கு குஞ்ஞப்பன்?'

அதைக்கேட்டு மாணவர்களும், மாணவிகளும் குலுங்கிச் சிரித்தார்கள். பள்ளிக்கூடம் விட்டு வெளியே வந்தவுடன், அவர்கள் எல்லாரும் என்னைச் சுற்றி கூட்டமாக நின்று கேலி செய்தார்கள். நானும் லில்லியும் தனியாக இருந்தபோது, என்னுடைய மன வேதனையில் பங்குபெற்று அவள் சொன்னாள்:

‘இனி நான் சிலேட்டில் பதில் எழுதி வைத்து விடுகிறேன். பார்த்துச் சொல்லிடு... தெரியுதா?'

நான் வீட்டிற்குச் செல்ல தயாரானபோது, அவள் உரத்த குரலில் சொன்னாள்:

‘நாளைக்கு எங்க வீட்டில் கொழுக்கட்டை அவிக்கப் போறாங்க. குஞ்ஞப்பா, உனக்கு எடுத்து வைக்கிறேன். வரணும்...'

நான் நினைத்துப் பார்க்கிறேன்- வேதனைகளின் கறை படியாத அந்த நல்ல காலங்கள் எவ்வளவு சீக்கிரமாக கடந்து போய்விட்டது. ஒன்றரை ஃபர்லாங் தூரத்தில் மட்டுமே இருந்த பள்ளிக்கூடத்திற்கு என்னுடன் அல்லாமல், லில்லி ஒருமுறைகூட தனியாகச் சென்றதே இல்லை. எங்களுடைய வேலியின் அருகில் இருந்த பூவரச மரத்தில் ஏறி, படர்ந்திருந்த ஓணச் செடியிலிருந்து எவ்வளவு ஓணப் பூக்களை நான் அவளுக்கு பறித்துத் தந்திருக்கிறேன். அந்த மரம் இன்று இரண்டு ஆட்கள் சேர்ந்து பிடித்தால்கூட, பிடிக்கமுடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது. சந்தோஷம் நிறைந்த அந்தக் காலங்கள் பல வண்ணங்களுடன் என் கண்களுக்கு முன்னால் தெரிகின்றன. அது இப்போது எந்தச் சமயத்திலும் திரும்பி வராத அளவிற்கு கடந்து போய்விட்டது.

நான்காம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் நானும் லில்லியும் சேர்ந்து அதே பள்ளிக்கூடத்தில் படித்தோம். அந்த இரண்டு வகுப்புகளிலும் வேறு யாரையும்விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கி தேர்ச்சி பெற்றது அவள்தான். வகுப்பறையில் வேறு யாரும் பதில் கூறாத கேள்வியை இறுதியாக லில்லியிடம்தான் கேட்பார்கள். அவள் எழுந்து நின்று இனிமையான குரலில் பதில் கூறுவாள். ‘அந்தச் சிறுமியைப் பார்த்து படிடா மரமண்டை!' என்று மாணவர்களைப் பார்த்து ஆசிரியர்கள் கூறுவார்கள்.

 ஐந்தாவது வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன், என்னையும் லில்லியையும் ஒரு மைல் தூரத்திலிருந்த ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கொண்டு போய் சேர்த்ததே வர்க்கீஸ் சார்தான். அப்போது அவளுக்கு பன்னிரண்டு வயதும் எனக்கு பதின்மூன்று வயதும் நடந்துகொண்டிருந்தது. முதன்முதலாக ஆங்கில எழுத்துகளை வாசித்தபோது, அதை உச்சரிக்க... உச்சரிக்க அதற்குப் பிறகும் ஆர்வம் சிறிது குறையாமல், எல்லா நேரங்களிலும் திரும்பத் திரும்ப அதை உச்சரித்துத் திரிந்த காட்சியை நேற்று நடைபெற்றதைப்போல என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. அங்கும் லில்லி மாணவ- மாணவிகளுக்கு மத்தியில் அரசியாக இருந்தாள். பொறாமைப்படக்கூடிய அளவிற்கு அவள் எல்லா விஷயங்களிலும் முதலிடத்தில் இருந்து கொண்டிருந்தாள்.

வீட்டிலிருந்து புறப்பட்டால் பள்ளிக்கூடம் போய் சேர்வதுவரை, அவள் வீட்டில் நடைபெற்ற சம்பவங்களைப் பற்றி என்னிடம் சொல்லிக்கொண்டே வருவாள். பன்னிரண்டு வயது மட்டுமே கொண்ட அவளுக்கு வீட்டின் வரவு செலவு கணக்குகள் வரை மிகவும் சரியாகத் தெரிந்திருந்தன. எனக்கு புதிய புத்தகங்கள் அனைத்தும் வாங்கப்பட்ட நாளன்று நான் லில்லியிடம் கேட்டேன்:


‘லில்லி, உனக்கு ஏன் இன்னும் புத்தகம் வாங்கலை?'

ஒரு இல்லத்தரசியின் பொறுப்புணர்வுடன் அவள் பதில் கூறினாள்.

‘அப்பாவின் சம்பளம் எல்லாவற்றையும் வாங்கக் கூடிய அளவிற்கு இல்லை. எனக்கு அடுத்த மாதம் புத்தகங்கள் வாங்கித் தருவார்.'

ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்தபோது துவாலையின் நுனியில் போடப்பட்டிருந்த முடிச்சைக் காட்டியவாறு அவள் சொன்னாள்.

‘என்கிட்ட எட்டணா இருக்கு.'

‘எங்கேயிருந்து கிடைச்சது?' நான் கேட்டேன்.

 

‘ஐந்தாறு மாதங்களுக்கு முன்னாடி என் அம்மாவோட அப்பா வந்தப்போ நாலணா தந்தாரு. பிறகு... தேவாலயத்தில் போடுவதற்காக தந்தது....'

அவள் ஆறு மாதகாலத்தில் அந்தத் தொகைகளை சம்பாதித்திருப்பதாகக் கூறியவுடன் எனக்கு ஆச்சரியம் உண்டானது. அவள் சொன்னாள்:

‘நான் ஒரு கோழிக்குஞ்சு வாங்கணும். அதற்காகத் தான்...'

‘கோழிக்குஞ்சா?'

‘ஆமாம்... மேற்குப் பக்க வீட்டிலிருக்கும் குஞ்ஞம்மா தர்றேன்னு சொல்லியிருக்காங்க. ஐந்தாறு மாதங்கள் கடந்துட்டா, முட்டைபோட ஆரம்பிச்சிடும்.'

‘அதற்குப் பிறகு முட்டைகளை விற்பனை செய்வியா?'

‘ஓ!' என்னிடம் ஏதோ தவறு இருப்பதைப்போல அவள் திருத்தினாள்.

‘அடை வைப்பேன்.'

‘கோழிக்குஞ்சுகளை பருந்து கொண்டுபோயிடாதா?'

‘பத்திரமா பார்த்துக்கணும். அவை எல்லாம் வளர்ந்து முட்டைகள் போடுறப்போ, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்.'

‘லில்லி, உனக்கு எதுக்குப் பணம்?'

‘ஒரு தேவை இருக்கு...'

‘ரகசியமா?'

அவள் சிறிது நேரம் யோசித்துவிட்டு சொன்னாள்:

‘உன்கிட்ட சொல்றேன்.'

‘என்ன?'

‘பிறகு...'

‘என்ன?'

‘எனக்கு ஒரு முல்லை மொட்டு மாலை செய்யணும்.'

‘சின்ன பிள்ளைகளுக்கு எதற்கு முல்லை மொட்டு மாலை?'

‘அந்தச் சமயத்துல நான் வளர்ந்துடுவேனே?'

‘லில்லி, வளர்றப்போ உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்களே?'

‘என்ன...?' இடது கையில் புத்தகப் பையை ஆட்டியவாறு, தலையை ஒருபக்கமாக சாய்த்துக்கொண்டு அவள் அலட்சியமாக நடந்துகொண்டிருந்தாள். அப்போது அதுவரை நினைத்துப் பார்த்திராத சிந்தனை என்னுடைய மனதிற்குள் எழுந்தது

‘லில்லி, உன்னை யார் கல்யாணம் பண்ணுவாங்க?'

‘ம்ஹும்... போ குஞ்ஞப்பா?'

அவள் என்னை விட்டு விலகிச் செல்வதைப்போல எனக்குத் தோன்றியது. சிறிது தூரம் நடந்தபிறகு நான் மீண்டும் கேட்டேன்:

‘லில்லீ!'

‘ம்...?'

‘உன்னை யார் கல்யாணம் பண்ணுவாங்க?'

எனக்கு வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு வேதனை உண்டானது. திருமணம் செய்து முடிக்கப்பட்ட பெண், திருமணம் செய்துகொள்ளும் ஆளுக்குச் சொந்தமாகிவிடுவாள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். லில்லிக்கு உரிமை கொண்டாடும் இன்னொரு மனிதன் வருவானோ? என்னால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. நான் கேட்டேன்:

‘லில்லீ!'

‘என்ன?'

‘லில்லி, உன்னை நான் திருமணம் செய்துகொள்ளட்டுமா? உன்னை...'

ஒரு புதுமணப் பெண்ணின் வெட்கத்துடன் அவள் சிறிது நேரம் தலையை குனிந்துகொண்டு நடந்தாள். நான் கேட்டேன்:

‘லில்லி, உனக்கு விருப்பம்தானே?'

விரலின் நுனியைக் கடித்துக்கொண்டே அவள் மெதுவான குரலில் சொன்னாள்:

‘குஞ்ஞப்பா, உனக்கு வரதட்சணை தர்றதுக்கு எங்க அப்பா கைகளில் பணம் இல்லையே!'

 ’வரதட்சணையே வாங்காமல் நான் உன்னைத் திருமணம் செய்துகொள்வேன்.'

அவள் என்னைப் பார்த்துவிட்டு தன் தலையை குனிந்துகொண்டாள். அப்போது நீல நிறத்திலிருந்த அந்தக் கண்கள் எவ்வளவு பிரகாசமாக இருந்தன! நான் சொன்னேன்:

‘அந்தச் சமயத்தில் நான் உனக்கு முல்லை மொட்டு மாலை செய்துதருவேன்.'

அவள் எதுவும் கூறவில்லை. ஒரு புதிய மணப் பெண்ணைப்போல அவள் எனக்குப் பின்னால் நடந்து வந்துகொண்டிருந்தாள்.

இப்படி கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சமயத்தில்தான் சிறிதும் நினைத்துப் பார்த்திராத அந்த எதிர்பாராத சம்பவம் நடைபெற்றது. அது என்னுடைய பிஞ்சு மனதில் உண்டாக்கிய காயம் இன்னும்கூட ஆறாமலே இருக்கிறது. அன்று பள்ளிக்கூட விடுமுறை நாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, பலரும் கூக்குரலிட்டு அழுவதைக் கேட்டு நான் திடுக்கிட்டு கண் விழித்தேன். லில்லியின் வீட்டிலிருந்துதான் அந்த அழுகைச் சத்தம் வந்துகொண்டிருந்தது. நான் வேகமாக ஓடிச்சென்று பார்த்தபோது, லில்லியும் அவளுடைய தாயும் அறையிலிருந்த கட்டிலில் கவிழ்ந்து படுத்து அழுதுகொண்டிருந்தார்கள்...! என்ன நடந்தது? பாதி திறந்த கண்களுடன் வர்க்கி சார் எந்தவித அசைவுமில்லாமல் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தார். வர்க்கி சாரின் கால்களை இறுகப் பற்றிக்கொண்டு லில்லி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள். நான் மரத்துப்போய் நின்றுவிட்டேன். சிறிதும் யோசிக்காமல் நான் உரத்த குரலில் அழைத்தேன்:

‘லில்லீ!'

‘குஞ்ஞப்பா!'

அவள் ஓடி வந்து என்னை கட்டிப் பிடித்துக்கொண்டு அழுதவாறு கூறினாள்:

‘என் அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு, குஞ்ஞப்பா!'

அந்த சத்தம் அவளுடைய தொண்டைக்குள்ளிருந்து விட்டு விட்டு வந்து கொண்டிருந்தது. அவளுடைய சிவந்த கன்னங்களை நனைத்துக்கொண்டு வழிந்த கண்ணீர் என்னுடைய நெஞ்சின்மீது விழுந்தது. என்னுடைய கண்களும் கண்ணீரால் நிறைந்து ததும்பின.

இரவு உணவு சாப்பிட்டுவிட்டு உறங்குவதற்காகப் படுக்கும்போது, வர்க்கி சாருக்கு எந்தவித உடல்நலக் கேடும் இல்லை. நள்ளிரவு நேரம் ஆனபோது, தன்னுடைய மனைவியை அழைத்து எழுப்பி தலை சுற்றுவதைப்போல இருப்பதாகக் கூறியிருக்கிறார். வாசலுக்குச் சென்று ஒன்றிரண்டு முறை வாந்தியும் எடுத்திருக்கிறார். வாசலிலிருந்து பிடித்துக்கொண்டு வந்து அவருடைய மனைவிதான் அவரை கட்டிலில் படுக்க வைத்திருக்கிறாள். அதற்குப் பிறகு அவர் எதுவும் பேசவில்லை.

லில்லி, அவளுடைய அன்னை ஆகியோரின் அழுகைச் சத்தம் கேட்டு பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் அங்கு வேகமாக வந்து கூடிவிட்டார்கள் அந்த இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை. தேம்பி அழுது கொண்டிருக்கும் இதயத்துடன் நானும் லில்லியுடன் அந்தக் கட்டிலின் அருகிலேயே அமர்ந்திருந்தேன்.

காலையில் பிணத்தை பெட்டிக்குள் வைத்து தேவாலயத்திற்குக் கொண்டு போவதற்கு தயாரானபோது, லில்லியின் தாய் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டாள்.

‘நான் என் அப்பாவை அனுப்பி வைக்கமாட்டேன்' என்று கூறியவாறு அந்தப் பெட்டியின்மீது கவிழ்ந்து விழுந்து அழுத லில்லியின் உருவம்  மிகவும் பசுமையாக இப்போதும் எனக்கு ஞாபகத்தில் இருக்கிறது.

இரண்டு வாரங்கள் கடந்தபிறகு லில்லியும் அவளுடைய அன்னையும் பத்து இருபது மைல்கள் தூரத்திலிருந்த அவர்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள். புறப்படும் நாளன்று லில்லியின் தாய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்றுவிட்டு லில்லியிடம் சொன்னாள்.

‘குஞ்ஞப்பனிடம் விடை பெற்றுக்கொள், மகளே.'

ஆனால், அவளால் அழத்தான் முடிந்தது. கண்கள் எட்டும் தூரம் வரை கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவள் என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள்.


என்னுடைய உற்சாகமும் சந்தோஷமும் லில்லியுடன் போய்விட்டன. எனக்கு முதலும் இறுதியுமாக விருப்பப்படக்கூடிய விஷயமாக இருந்தது அவளுடைய நட்புதான். அதற்குப் பிறகு நான் யாருடைய நட்பையும் விரும்பவில்லை. பள்ளிக்கூடத்திற்கு செல்வது, திரும்பி வருவது எல்லாமே தனியேதான். அந்தப் பாதையிலிருந்த ஒவ்வொரு மணல் துகளிலும் பதிந்துகிடந்த அவளைப் பற்றிய இனிய நினைவுகள் மட்டுமே எனக்குத் துணையாக இருந்தன.

லில்லி அவளுடைய ஊரிலிருந்த பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தாள் என்ற தகவல் எனக்குக் கிடைத்தது. ஆனால், வர்க்கி சாரின் சிறிதும் எதிர்பார்த்திராத மரணம் அந்தச் சிறிய குடும்பத்தைப் பொறுத்த வரையில் ஒரு பேரிடியாக அமைந்துவிட்டது. சொல்லிக்கொள்கிற அளவிற்கு எந்தவொரு சம்பாத்தியத்தையும் அவர்களுக்காக சேமித்து வைப்பதற்கு வர்க்கி சாரால் முடியவில்லை. உயிருடன் இருக்கும் வரை, அவர் அந்த குடும்பத்தை இல்லாமை என்ற கசப்பை அனுபவிக்க வைக்கவில்லை.

லில்லியையும் அவளுடைய அன்னையையும் பற்றி தெரிந்துகொள்வதற்காக அதற்குப் பிறகு அவ்வப்போது நான் முயற்சி செய்து பார்த்தும் அதற்கான வழி கிடைக்கவில்லை. அவர்களுடைய ஊரைப்பற்றி சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவுதான். நினைவுகளின் வெப்பத்தைத் தணிய வைத்துக்கொண்டு காலங்கள் கடந்து சென்றன. அவளுடைய இளமை ததும்பும் உருவம் மட்டும் பசுமையாக என்னுடைய இதயத்தில் மறையாமல் இருந்துகொண்டிருந்தது. இப்படியே நான்கு வருடங்களுக்குப் பிறகு, நான் ஐந்தாவது ஃபாரத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, சிறிதும் எதிர்பாராமல் ஒரு தேவதையைப் போல லில்லி எனக்கு முன்னால் வந்து நின்றாள். அன்று நான் பள்ளிக்கூடத்தின் மூத்த மாணவனாக இருந்தேன். இளமைப் பருவத்தின் வாசலில் வாலிபம் வந்து எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த வயது...!

காலையில் பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்காக நான் ஆடைகளை மாற்றிவிட்டு, புத்தகங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் தேடி எடுத்துக்கொண்டு நின்றிருந்தேன். அப்போது சமையலறைக்குள்ளிருந்து, எப்போதுமில்லாத ஒரு உரையாடலைக் கேட்டேன். நான் அதை கவனித்துக் கொண்டிருந்தபோது, என்னுடைய தாய் சமையலறைக்குள்ளிருந்து உரத்த குரலில் கேட்டாள்:

 ‘இது யார்னு பார்த்தியா, மகனே?'

நான் அறையைவிட்டு வெளியே வந்தேன். யாரோ கதவுக்குப் பின்னால் மறைந்து நின்றுகொண்டிருக்கிறார்கள். யார் அது? நான் அருகில் சென்று பார்த்தவுடன், ஆச்சரியத்தில் திகைத்துப்போய் நின்றுவிட்டேன். லில்லி...!

என்னால் ஒரு நிமிடம் பேசவே முடியவில்லை. நான் கண்களை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். லில்லி எவ்வளவு வளர்ந்துவிட்டிருக்கிறாள்! இரண்டாகப் பின்னப்பட்டு, நுனியில் சிவப்பு நிற ரிப்பன் கட்டப்பட்ட தலைமுடி இடுப்பு வரை நீளமாகத் தொங்கிக்கொண்டிருந்தது. அந்தக் கண்களின் ஆழமான நீல நிறத்தில் ஒரு இளம்பெண்ணுக்கே உரிய கவர்ச்சி உயிர்ப்புடன் தவழ்ந்து கொண்டிருந்தது. தாமரை மொட்டைப்போல வளர்ந்து வரும் மார்பை என்னிடமிருந்து மறைப்பதற்காக அவள் சற்று குனிந்துகொண்டு நின்றிருந்தாள். நான் அழைத்தேன்.

‘லில்லீ...'

அவள் முகத்தை உயர்த்தி என்னைப் பார்த்தாள். அவ்வளவுதான்...

‘லில்லி, நீ பள்ளிக்கூடத்திற்குப் போறேல்ல?'  அவளுடைய அன்னைதான் அதற்கு பதில் கூறினாள்:

‘போன வருடம் நான்காவது ஃபாரத்தில் அவள் தேர்ச்சி பெற்றவுடன், படிப்பை நிறுத்தியாச்சு மகனே!''

எனக்கு வேதனை உண்டானது. அந்த அசாதாரணமான திறமைகள் பயனே இல்லாமல் போய்விடாதா? எல்லா விஷயங்களிலும் மிகவும் அதிக மதிப்பெண்களை வாங்கும் திறமை வாய்ந்த மாணவியான லில்லி என்ற அந்தச் சிறுமியை நான் நினைத்துப் பார்த்தேன்.

‘அறைக்குள் வா, லில்லீ!'

நான் மேஜையின்மீது ஏறி உட்கார, அவள் கதவைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள். என்ன பேசுவது என்றே எனக்குத் தெரியவில்லை. தரையில் படம் வரைந்து கொண்டிருந்த பெருவிரலைப் பார்த்துக்கொண்டே அவள் சொன்னாள்:

‘ஏழைகளான எங்களைப் பார்த்தால், ஞாபகத்தில் வச்சிருப்பேன்னு நான் நினைக்கல.'

‘அப்படி யார் சொன்னது? லில்லி, ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது நான் உன்னை நினைக்காமல் இருந்ததில்லை.'

‘அதனாலதான் இந்த நான்கு வருடங்களுக்குள் எத்தனை முறை எங்க வீட்டிற்கு நீ வந்திருக்கேன்னு தெரியுமா?'

‘எனக்கு வழி தெரியாது, லில்லீ!'

‘தேவைன்னா, தெரிஞ்சுக்க முயற்சித்திருக்கணும். நாங்க ஏழைகள்தானே?'

‘உங்களை ஏழைகளா நான் நினைச்சதே இல்லை. அது இருக்கட்டும்... லில்லி, நீ ஏன் படிப்பை நிறுத்தினே?'

அவள் பதிலெதுவும் கூறவில்லை. எனக்கு எதிரில் இருந்த சாளரத்தின் வழியாக அவள் வெளியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். நான் மீண்டும் கேட்டேன்:

‘லில்லீ!'

‘ம்...'

‘ஏன் படிப்பை நிறுத்தினே?'

‘பணம் கட்டாமல் யாராவது பாடம் சொல்லித் தருவாங்களா?' அப்போது அந்தக் கண்கள் கண்ணீரால் நிறைந்திருந்தன.

‘பணமில்லாதவர்களுக்கு அது கிடைக்க வாய்ப்பில்லை.'

அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டிருக்கத் தேவையில்லை என்று நான் நினைத்தேன். அவள் தன் கண்களைத் துடைத்துவிட்டு, புன்னகைக்க முயற்சித்தவாறு கேட்டாள்:

‘பள்ளிக்கூடம் போவதற்கு நேரமாயிருச்சுல்ல?'

‘இன்னைக்கு போகல.'

அவள் ஓரக் கண்களால் என்னை காலிலிருந்து தலை வரை பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த காலங்களைப் பற்றி நினைத்துக் கொண்டே அவள் கேட்டாள்:

‘அந்த ராஜம்மாவும் சாரதாவும் இப்போதும் படிக்கிறாங்களா?'

‘சாரதா என்னுடைய வகுப்பில் படிக்கிறாள். ராஜம்மாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு...'

‘ராஜம்மாவுக்கா?' அவள் ஆச்சரியத்துடன் சொன்னாள்: ‘வகுப்பிலேயே மிகவும் சின்னவள் அவள்தான்.'

‘சின்ன பிள்ளைகள்தான் வளர்றாங்க. லில்லி, இப்போதும் உன்னை நீ சின்னப் பிள்ளையாகவே நினைச்சுக்கிட்டு இருக்கியா?'

அவள் வெட்கத்துடன் தலையை குனிந்துகொண்டு நின்றிருந்தாள். நான் கேட்டேன்:

‘லில்லி, பள்ளிக்கூடத்திற்குப் போகக்கூடிய வழி உனக்கு ஞாபகத்துல இருக்குதா?'

‘பிறகு?'

‘சரி... உன் கோழிகள் முட்டை போட ஆரம்பிச்சிடுச்சா?'

அவள் கைகளால் முகத்தை மூடிக்கொண்டு நின்றவாறு சிரித்தாள். சிறிது நேரம் கழித்து, அவள் என்னிடம் கேட்டாள்:

‘இந்த வீட்டிற்கு எத்தனை தூண்கள் இருக்குன்னு சொல்ல முடியுமா?'

 

அன்றைய ஒவ்வொரு நிமிடங்களும் எனக்கு எந்த அளவிற்கு விலை மதிப்பு கொண்டவையாக இருந்தன! அன்று எவ்வளவு வேகமாக நேரம் கடந்து போய்விட்டது! லில்லியும் அவளுடைய அன்னையும் அன்று மாலையே திரும்பிச் சென்றார்கள். போவதற்கு முன்னால் அவள் என்னிடம் கேட்டாள்:

‘பள்ளிக்கூட இறுதி வகுப்பில் தேர்ச்சிபெற்ற பிறகு, கல்லூரிக்குப் போவியா?'


‘இல்லை... ஏதாவது வேலை தேடுவேன்.'

‘அப்போ எங்களையெல்லாம் நினைப்பியா?'

‘லில்லி, எனக்கு என்னைப் பற்றிய நினைவு இருந்தால், நான் உன்னை மறக்கவே மாட்டேன்.'

அவள் அன்புடன் என் கண்களையே பார்த்தாள். அப்போது அவள் என்னுடைய பழைய வாக்குறுதியை மனதில் நினைத்திருக்க வேண்டும்.

 

பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்று நான்கைந்து மாதங்கள் கடந்தபிறகு, டில்லியில் ஒரு பெரிய வேலையில் இருந்த என்னுடைய உறவினர் ஒருவரின் சிபாரிசால், எனக்கு ஒரு வேலைக்கான உத்தரவு வந்துசேர்ந்தது. கேரளத்தின் ஒரு குக்கிராமத்தை மட்டுமே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில், தலைநகரத்தின் புதிய புதிய அனுபவங்களும், புதிய புதிய அறிமுகங்களும் எப்படிப்பட்ட மனமாற்றங்களையெல்லாம் உண்டாக்கின! வேலை விஷயமாக வட இந்தியாவின் பல நகரங்களுக்கும் நான் பயணம் செய்ய வேண்டியதிருந்தது. டில்லி, அலஹாபாத், லக்னோ, மீரட், ஜலந்தர், ஆக்ரா, தான்ஸி! இதற்கு முன்பு தெரிந்திராத மொழியும், பழக்கவழக்கங்களும், காலநிலையும் படிப்படியாக எனக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக ஆயின. இப்படியே பல வருடங்கள் கடந்தோடின. அப்போதைய உறங்காத இரவு வேளைகளில், பரந்து விரிந்து கிடந்த நீலவானத்தில் புன்னகைத்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டு படுத்திருந்தபோது, காதல் உணர்வு நிறைந்திருந்த என்னுடைய இதயம், ஆயிரமாயிரம் மைல்களுக்கப்பால் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் என்னுடைய விளையாட்டுத் தோழியைத் தேடி பறந்து சென்றுகொண்டிருந்தது. ஆறு வருடங்களுக்குப் பிறகுதான் முதல்முறையாக என்னால் விடுமுறையில் ஊருக்குத் திரும்பிவர முடிந்தது. இந்த கால இடைவெளி என்னுடைய கிராமத்தில் உண்டாக்கி விட்டிருந்த மாறுதல்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டுவிட்டேன்.

வீட்டிலுள்ளவர்கள், உறவினர்கள் ஆகியோர்களுடன் நேரத்தைச் செலவிட்டுவிட்டு, நான் முதல்முறையாக லில்லியின் வீட்டிற்குப் புறப்பட்டேன். அவளைப் பார்த்து எட்டு வருடங்களாகிவிட்டன. அவள் என்னை மறந்திருப்பாளோ? இவ்வளவு காலமும் அவளுடைய எதிர்பார்ப்புகள் அணைந்து போகாமல் இருப்பதற்காக நான் என்ன செய்தேன்? ஒரு கடிதம்கூட எழுதி அனுப்பவில்லை. வீட்டிற்கு வந்திருந்தபோது, அவள் கேட்டது எனக்கு ஞாபகத்தில் வந்தது- ‘அப்போது எங்களையெல்லாம் மறந்திடுவியா?' இதயத்திற்குள் அவளைப் பற்றிய நினைவுகளை தினமும் நான் பத்திரமாகக் காப்பாற்றி வந்திருக்கிறேன் என்பது மட்டும் எனக்குத் தெரியும்.

வண்டியிலிருந்து இறங்கி ஒரு வியாபாரியிடம் விசாரித்துவிட்டு, நான் ஒரு ஒற்றையடிப் பாதையின் வழியாக நடந்தேன். பாதங்கள் புதைந்து கீழே இறங்கும் அளவிற்கு சீனிக்கற்களைப் போன்ற மணல் துகள்கள் நிறைந்திருந்த வழி... இரு பக்கங்களிலும் காணப்பட்ட பரந்துவிரிந்த நிலம் முழுவதும் உயரமான தென்னை மரங்கள்... பாதையோரத்தில் இங்குமங்குமாக ஓலை வேய்ந்த சிறிய குடிசைகள்! நான் நான்கு பாதைகள் சந்திக்கக்கூடிய ஒரு இடத்தை அடைந்து நின்றேன். அதற்குப் பிறகு எந்தப் பக்கம் போவதென்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. வழிப்போக்கர்கள் யாராவது வருகிறார்களா என்று எதிர்பார்த்துக்கொண்டு நான் நின்றிருந்தேன். யாரும் அந்த வழியாக வரவில்லை.

அப்படி நின்றுகொண்டிருந்தபோது, பின்னால் ஒரு சத்தம் கேட்டது:

‘அங்கே வரும்படி சின்னம்மா சொன்னாங்க:''

‘என்ன?' நான் திரும்பிப் பார்த்தபோது, ஆறு அல்லது ஏழு வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன் அங்கு நின்றிருந்தான். அழுக்குப் படிந்த நிர்வாண உடல்!

அவன் மீண்டும் சொன்னான்:

‘சின்னம்மா வரச் சொன்னாங்க.'

‘உன் வீடு எங்கே இருக்கு?'

தென்னை மரங்களுக்கு மத்தியில் இருந்த ஒரு ஓலையாலான வீட்டை அவன் சுட்டிக்காட்டினான்.

அங்கிருக்கும் எந்த சின்னம்மாவிற்கு என்னைத் தெரியும் என்று எனக்குப் புரியவில்லை. சிறிது நேரம் சந்தேகத்துடன் நின்றுவிட்டு, நான் அந்தச் சிறுவனுக்குப் பின்னால் நடந்தேன். வாசலை அடைந்தவுடன், அவன் குடிசைக்குள் ஓடி மறைந்தான். அதற்குள் நுழைய வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. சுத்தமற்ற வாசலும் சுற்றியிருந்த பகுதிகளும்... அப்போது உள்ளேயிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

‘உள்ளே நுழைஞ்சு இங்கே வரலாம்.'

நான் அந்த முன்னறைக்குள் நுழைந்தேன். வாசற் கதவிற்குப் பின்னாலிருந்துதான் அந்தக் குரல் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். அறைக்குள் தேவையான அளவிற்கு வெளிச்சம் இல்லாமலிருந்தது. ‘உட்காருங்க... எங்கே போகணும்?'

நான் வீட்டின் பெயரைச் சொன்னேன்.

‘அங்கு யாரைப் பார்க்கணும்?'

‘அந்த குடும்பத்தைச் சேர்ந்த சாரும் குடும்பமும் எங்க பக்கத்து வீட்டுல குடியிருந்தாங்க. அங்கே இருக்குறப்போ சார் இறந்துட்டாரு.'

தொடர்ந்து சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. நான் கேட்டேன்:

‘அங்கே எந்த வழியா போகணும்?'

‘இப்போ அங்கே யாரைப் பார்க்கணும்?'

‘லில்லியையும் அவளோட அம்மாவையும்...'

‘... அவங்க இறந்துட்டாங்க.'

‘என்ன?'

தொடர்ந்து பேரமைதி... தலைசுற்றுவதைப்போல எனக்குத் தோன்றியது. அந்தப் பெண் என்ன சொல்கிறாள்? உணர்ச்சிவசப்பட்டு நான் கேட்டேன்:

‘நீங்க உண்மையைத்தான் சொல்றீங்களா?'

மீண்டும் அச்சத்தை உண்டாக்கும் பேரமைதி... அந்தப் பெண்ணுக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா? நான் எழுந்து வாசலுக்கு வந்தேன். கதவின் மறைவிலிருந்து வாசலுக்கு வந்து நின்று அந்தப் பெண் கேட்டாள்:

‘லில்லியைப் பார்க்க வேண்டாமா?'

நான் திரும்பிப் பார்த்தேன். நீர் நிறைந்திருந்த இரண்டு கண்கள் என்னையே வெறித்துப் பார்த்தன. அவள் தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதாள். யார் அவள்? நான் கனவு காண்கிறேனா? என்னையே அறியாமல் என்னுடைய உதடுகள் முணுமுணுத்தன:

‘லில்லி!'

அதற்குப் பிறகு என்னுடைய நாக்கு அசையவில்லை. கனவு காணும் கண்களுடன் நான் அந்த முகத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். எண்ணெய் தேய்க்கப்படாமல் பறந்துகொண்டிருந்த தலைமுடி... குழிவிழுந்து காணப்பட்ட பிரகாசத்தை இழந்த கண்கள்... கரி படிந்து அழுக்கடைந்த தோற்றம்....

அது லில்லியின் ஆவியா? இதயம் வெடித்துவிடுவதைப்போல உணர்ச்சிகள் ஒன்றுக்குமேல் ஒன்றாக அதிகரித்துக்கொண்டிருந்தன. வாழ்க்கையில் இந்த அளவிற்கு வேதனையை அனுபவித்த வேறு சந்தர்ப்பங்கள் எனக்கு ஞாபகத்தில் இல்லை. புடவையின் நுனியால் கண்களைத் துடைத்துக்கொண்டே லில்லி கேட்டாள்:

‘எப்போ வந்திங்க?'

‘ஒரு வாரம் ஆயிடுச்சு...'

‘இப்பவாவது வரணும்னு தோணுச்சே!'

மீண்டும் அந்தக் கண்கள் கண்ணீரால் நிறைந்தன.

‘அம்மா எங்கே, லில்லீ?' நான் கேட்டேன்.

‘அம்மா... அப்பா இருக்குற இடத்துக்கே போயிட்டாங்க...' உதடுகளை அழுத்தமாகக் கடித்து, அவள் வெடித்து அழாமல் இருப்பதற்காக முயற்சித்தாள்.

‘லில்லி, இதுதான் உன்னுடைய வீடா?'

அவள் பதிலெதுவும் கூறவில்லை. உரையாடலைக் கேட்டு, அங்குவந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு வயதான பெண்தான் அதற்கு பதில் கூறினாள்:

‘லில்லியை இங்கே கல்யாணம் பண்ணி வச்சாங்க, மகனே! மூணு வருடங்களாயிடுச்சு...'


நான் கேட்காமலே அந்தப் பெண் எல்லா விஷயங்களையும் விளக்கிக் கூறினாள். அன்றாடச் செலவுகளுக்கு வழியில்லாமல் அந்த அன்னையும் மகளும் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்கள். கடன் கொடுத்தவர்களின் தொந்தரவுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத சூழ்நிலை வந்தவுடன், அவர்கள் தாங்கள் இருந்த வீட்டின் நிலத்தை எழுதி விற்றிருக்கிறார்கள். அதில் மீதமாக இருந்த பணத்தைக் கொடுத்து லில்லிக்குத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இறுதியில் நீண்ட பெருமூச்சை விட்டுக்கொண்டே அந்த வயதான பெண் சொன்னாள்:

‘அதுவும் சரியாக வரவில்லை, மகனே.'

 

நான் கேள்வி கேட்க நினைப்பதைப்போல அவளுடைய முகத்திற்கு நேராக என் முகத்தை உயர்த்தியபோது, அவள் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்: ‘இரண்டாவது தாரமாக... முதல் பொண்டாட்டிக்குப் பிறந்த மகன்தான் அங்கே இருப்பது...'

என்னை அழைத்துக்கொண்டு வந்த சிறுவனை சுட்டிக் காட்டியவாறு அவள் சொன்னாள்.

‘அந்த ஆளுக்கு என்ன வேலை?'

‘ஓ... வேலை...!' அந்தப் பெண் வெறுப்புடன் சொன்னாள்: ‘சாயங்காலம் வரை சீட்டு விளையாட்டு... சாயங்காலம் கள்ளு குடிச்சிட்டு வந்து வீட்டுக்குள்ளே நுழைவான். பிறகு... இந்த பெண்ணைப் போட்டு அடிப்பான்...'

அவள் சுற்றிலும் பார்த்தாள். வேறு யாரும் கேட்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு சொன்னாள்:

‘முதல் தாரமாக கட்டிய பெண்ணை அவன் அடிச்சே கொன்னுட்டான், மகனே!'

எனக்கு வாய்விட்டு அழவேண்டும்போல தோன்றியது. ஒரு இளம் தேவதையைப்போல என்னுடன் புன்னகைத்துக் கொண்டே விளையாடித் திரிந்த லில்லியை நான் ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தேன். அந்த குடிசையின் வாசற்படியில் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கும் லில்லியா அது? அவள் கனவு கண்ட முல்லை மொட்டு மாலையைப் பற்றி எனக்கு  ஞாபகம் வந்தது. ஆனால், அந்த மெலிந்துபோன நீளமான கழுத்தில், ஒரு கறுத்து இருண்டுபோன ‘தாலிக்கயிறு' மட்டுமே இருந்தது.

எழுந்து நடந்துகொண்டே அந்த வயதான பெண் சொன்னாள்:

‘மகனே, உன்னைப் பற்றி அவள் எப்போதும் சொல்லுவாள். எல்லாம் கடவுளோட முடிவு மகனே!'

என்னுடைய கண்களில் கண்ணீர் நிறைந்து வழிந்து கொண்டிருந்தது. நிறைந்த பேரமைதியைக் கிழித்துக்கொண்டு அவள் கேட்டாள்:

‘கல்யாணம் ஆயிடுச்சா?'

அவளுடைய கண்ணீர் நிறைந்த கண்களைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்:

‘கல்யாணம் பண்றதுக்குத்தான் நான் வந்ததே...'

இதயத் துடிப்பு நின்று போய்விடுமோ என்பதைப் போல எனக்குத் தோன்றியது. நான் அங்கிருந்து தப்பிக்க வேண்டும். வானத்தின் விளிம்பில் இறங்கிக் கொண்டிருந்த மறையப் போகும் சூரியன் சிவப்பு வண்ணத்தைப் பரப்பியிருந்த தென்னை மர உச்சியைப் பார்த்தவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் இதயத்துடன் நான் சொன்னேன்:

‘வரட்டுமா லில்லீ?'

கண்ணீர் நிறைந்த கண்களுடன் அவள் நான் போவதைப் பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.

அந்த நிலத்தின் வேலிக்கு அருகில் நான் சென்றபோது, அவள் பின்னாலிருந்து சொன்னாள்:

‘லில்லியை மறந்திடு... ஒரு நல்ல கல்யாணத்தைப் பண்ணி, சந்தோஷமா வாழணும்... தெரியுதா?'

அவளுடைய வாழ்த்துகள் இப்போதும் என்னுடைய இதயத்தில் நெருப்பென எரிவதுண்டு. வாழ்க்கையைப் பற்றி அவள் கண்ட கனவுகள் அனைத்தும் நொறுங்கிப் போனதற்கு நானும்கூட காரணம்தானே?

பிந்து தன்னுடைய வீட்டின் வாசலில் நின்றுகொண்டு என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். நான் அழைத்தேன்:

‘பிந்து...'

அவள் சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு, மெதுவாக... மெதுவாக நெருங்கி வந்தாள். அருகில் வந்ததும் நான் கேட்டேன்:

‘பிந்து, என்மேல கோபமா?'

அவள் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். நான் மீண்டும் கேட்டேன்.

அவள் ‘இல்லை' என்பதைப்போல தலையை ஆட்டினாள். தொடர்ந்து என்னுடைய கண்களைப் பார்த்துக்கொண்டே கேட்டாள்:

‘துமாரா ஆம்ஹோமேம் பானி கைஸா ஆயா?'

என்னுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்திருக்கின்றனவாம்! நான் துவாலையை எடுத்து முகத்தைத் துடைத்துவிட்டு, சிரித்துக்கொண்டே கேட்டேன்.

‘பிந்து...!'

‘ம்...'

‘பிந்து, உன்னை லில்லின்னு அழைக்கட்டுமா?'

‘லில்லி?'

‘ஆமாம்...'

அவள் குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். நான்

அழைத்தேன்:

‘லில்லீ...!'

அவள் தன்னுடைய வீட்டை நோக்கி ஓடிக்கொண்டே சொன்னாள்:

‘மே லில்லி நஹி... பிந்து ஹை, பிந்து...'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.