Logo

வல்லிகாதேவி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6354
vallikadevi

மாதவமேனன் பரந்து கிடந்த அந்த வயல்வெளிகளின் வழியாக சுற்றி நடந்து, மாலை மயங்கும் நேரத்தில் தன் வீட்டிற்குத் திரும்பி வந்தார். வீட்டிற்கு முன்னாலிருந்த சிறிய பாதையில் நடந்து, வீட்டிற்குள் ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணியை நெருங்கியபோது, தன்னுடைய அறைக்குள்ளிருந்து பெண்களின் சிரிப்புச் சத்தமும், ஆரவாரமும் வந்து கொண்டிருப்பதை அவர் கேட்க நேர்ந்தது.

வெறுப்பின் காரணமாக முகம் இருண்டுபோக, சிறிது நேரம் அந்த முற்றத்திலேயே அவர் எந்தவித அசைவுமில்லாமல் நின்றுகொண்டிருந்தார்.

மாதவமேனனின் அறையில் மூன்று நான்கு பெண்களும் ஓரிரண்டு குழந்தைகளும் இருந்தார்கள். தன்னுடைய அறைக்குள் தன் சொந்த மனைவிகூட தேவையில்லாமல் நுழைவதை அவர்

சிறிதும் விரும்பியதில்லை. அவர்கள் அங்கு சிறிது நேரத்திற்கு முன்பு நடைபெற்ற ஏதோ சுவாரசியமான சம்பவத்தைப் பற்றிப் பேசி குதூகலித்துக் கொண்டிருந்தார்கள்.

பரணின் மேலே இருந்து அரிசி மூட்டை கீழே விழுவதைப்போல ‘தும்' என்றொரு சத்தமும், ‘அய்யோ!' என்றொரு கூக்குரலும்... ‘ஹ! ஹ! ஹ!!!'

மாதவமேனன், தன் மனைவியுடைய சகோதரியின் எலிக்குஞ்சுக் குரலில் வந்த பேச்சை தெளிவாகக் கேட்டார்.

‘‘நான் அந்த வேலையைச் செய்ததால்தானே நீங்க எல்லாரும் இப்படி சிரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கிடைச்சது?''

அது மருமகன் பாலகிருஷ்ணனின் மிடுக்கான குரல்.’’ஓ... அதைக் காதிலேயே வாங்காதீங்க.

இப்படி ஒரு வழியை யார் சொல்லித் தந்தது? இந்த மாதிரி ஒரு சுவாரசியமான சம்பவத்தை நான் விளக்கிச் சொன்ன பிறகுதானே, ஆள் போயி ஏணியை நகர்த்தி வச்சதே!''

அது மாதவமேனனின் மனைவியின் குரல்.

‘‘அப்படின்னா அப்படியே இருக்கட்டும்... அத்தைக்கு ஜே! அத்தைக்கு ஜே!''

குழந்தைகள் உரத்த குரலில் சத்தம் போட்டார்கள். பெண்கள் சிரித்து, குழைந்து விழுந்தார்கள். அறை முழுவதும் ஆரவாரத்தால் நிறைந்திருந்தது.

மாதவமேனனுக்கு எரிச்சலும் வெறுப்பும் அதிகரித்தது! அவர் பொறுமையை இழந்து, ஓசை உண்டாக்கியவாறு வீட்டிற்குள் நுழைந்தார்.

திடீரென்று அறை முழுவதும் அமைதியாக ஆனது. பாலகிருஷ்ணனும் அவனுடைய சிறிய தம்பி கங்காதரனும் மேஜைக்குக் கீழே பதுங்கினார்கள். மெதுவாக வெளியே நகர்ந்து தப்பித்தார்கள். மாதவமேனனின் மனைவி தேவகியம்மாவைத் தவிர, பெண்கள் எல்லாரும் தங்களின் முகங்களைத் தாழ்த்திக்கொண்டு, மேலே அணிந்திருந்த துணியால் சிரிப்பை மறைத்துக் கொண்டிருந்தார்கள். கூச்சத்துடனும் பயம் கலந்த ஒரு உணர்வுடனும் அவர்கள் மெதுவாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்கள்.

தேவகியம்மா சிரித்து, கொஞ்சிக் குழைந்துகொண்டு- பலமான காதல் உணர்வுடன் இருப்பதைப்போல காட்டிக்கொண்டு தன் கணவனை நோக்கி வலிய நடந்து சென்றாள்.

மாதவமேனன் தன் மனைவியின் புதிய காதல் வெளிப்பாடுகளைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல், தன்னுடைய சட்டையை அவிழ்த்து மேஜையின் மீது போட்டார். ஒரு மேல்துண்டை எடுத்து தன்னுடைய வியர்வை வழிந்து கொண்டிருந்த உடலின்மீது வீசிக்கொண்டே, அந்த அறையிலிருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்து படுத்து, ஏதோ சிந்திக்க ஆரம்பித்தார்.

மாதவமேனன் நல்ல அழகான ஒரு இளைஞனாக இருந்தார். குறிப்பாக அந்த நேரத்தில் அவருடைய தோற்றமும், நடந்துகொண்ட முறையும் மிகவும் ஈர்க்கக் கூடியவையாக இருந்தன. வியர்வை அரும்பி ஈரமாக இருந்த தலைமுடி, முகத்தின் மேற்பகுதியிலும் இரண்டு ஓரங்களிலும் மூடிக் கிடந்தது. ரோமங்கள் அடர்ந்திருந்த மார்பின் வழியாக ஒரு மெல்லிய வியர்வை நதி ஓடிக்கொண்டிருந்தது. அவர் அணிந்திருந்த கருப்பு நிறக் கரை போட்ட கதர் வேட்டி அவிழ்திருப்பதை அவர் கவனிக்கவில்லை.

தன் கணவரின் அந்த அழகான சிலை போன்ற தோற்றத்தை சிறிது நேரம் மிக அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, பின் மனதிற்குள்ளிருந்த தாகத்தை அடக்கியவாறு தேவகியம்மா பேச ஆரம்பித்தாள்.

‘‘பிறகு... இந்த விஷயம் தெரியுமா? ஒரு சுவாரசியமான விஷயம் நடந்தது... ஓ.... நீங்கதான் பெரிய காங்கிரஸ்காரராச்சே! சொல்வதற்கே பயமா இருக்கு. என்றாலும், விழுவதைப் பார்த்து சிரிக்காதவங்க ரசனையே இல்லாதவங்கன்னு ஒரு பழமொழி இருக்கு. நம்ம வாசற்படியில் இருக்குற தாழ்ந்த ஜாதிப்பெண் இருக்கிறாள் இல்லையா? சேர... அவள் சரியா கீழே விழுந்தா... அந்த பெரிய திண்டு மேல இருந்து, தலைகீழா அந்த குறு'கலான பாதையில... ட்டும்னு.''

தன்னையே அறியாமல் மாதவமேனன் சற்று அதிர்ந்து போய்விட்டார். தன் மனைவியின் உரையாடலையும், விசேஷமாக அதைக் கூறியதையும், கூறிய முறையையும் அவர் அப்போதைக்கு வெறுத்தாலும், நடந்த சம்பவத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற அளவுக்கும் அதிகமான ஆர்வத்துடன் அவர் தன் தலையை உயர்த்திக் கேட்டார்: ‘‘எந்த சேர? அந்த கர்ப்பிணிப் பெண்ணா?''

தன் கணவரின் ஆர்வத்தைப் பார்த்து தேவகியம்மாவிற்கு சுவாரசியம் உண்டானது. ‘‘ஆமாம்... ஆமாம்.. அந்த கர்ப்பிணியாக இருக்கும் தாழ்ந்த ஜாதிப் பெண்தான். அதுதான் சுவாரசியமான விஷயமே. பத்து மாதம் ஆகிட்டதால், வயிறு தானியக் கிடங்குபோல வீங்கியிருக்கு. அந்த வீங்கிப்போன வயித்தோடதான் அவள் பன்றியைப்போல தலைகீழா விழுந்தா. விழுந்தவுடன் வயித்துக்குள்ள இருக்கிற குழந்தை வெளியே வந்திருக்கும்னு நாங்க எல்லாரும் நினைச்சோம்.  அது நடக்கலை'' என்றாள் அவள்.

மாதவமேனன் தன்னுடைய பதைபதைப்பையும் கவலையையும் அடக்கிக்கொண்டு ஒரே மூச்சில் கேட்டார். ‘‘ஏதாவது நடந்துடுச்சா?''

‘‘ஏதாவது நடந்துடுச்சான்னா கேட்கிறீங்க? அசைவோ சலனமோ இல்லாம விழுந்து கிடக்குறதைப் பாத்துட்டு, அவ செத்துப்போயிட்டான்னு நாங்கல்லாம் முடிவு செஞ்சுட்டோம். ஆனா... அதைப்போய் பார்க்கிறதுக்கு- அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணுக்கு பக்கத்தில் எந்த நாய் போகும்? கொஞ்ச நேரம் தாண்டினதும் அந்த ஏரிக்கரையில் செடி வெட்டப் போயிருந்த தாழ்ந்த ஜாதி ராயன் வந்து அவளைத் தூக்கிக்கிட்டுப் போனான். அவள் சாகலைன்னு அவன் சத்தம் போட்டுச் சொன்னான்.''

அந்த பேச்சைக் கேட்டு மாதவமேனன் அதிர்ச்சியடைந்து விட்டார். தான் வீட்டிற்கு வந்தபோது, தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பெண் கீழே விழுந்ததைப் பற்றி பெண்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலை அவர் நினைத்துப் பார்த்தார். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்தப் பெண் கீழே விழுந்த காரணம் பற்றி சில சந்தேகங்கள் அவருடைய மனதிற்குள் எழுந்தன.

ஆனால், தன் மனைவியிடம் அதைப்பற்றி எதுவும் பேசாமல், அவர் உரத்த குரலில் ‘‘பாலா'' என்று அழைத்தார்.

மாதவமேனனின் மருமகன் பாலகிருஷ்ணன் அறைக்குள் வந்தவுடன், அவர் மேஜையிலிருந்த பெரிய பிரம்பை எடுத்து, பாலகிருஷ்ணனை தனக்கு முன்னால் கைகட்டி நிற்கும்படி கூறிவிட்டுக் கேட்டார்: ‘‘உண்மையைச் சொல்லு... அந்த தாழ்ந்த ஜாதிப் பெண் எப்படி கீழே விழுந்தா?''


சிறிதும் எதிர்பார்த்திராத அந்தக் கேள்வியைக் கேட்டு, பாலகிருஷ்ணன் பதைபதைத்துப் போனான். மாதவமேனனின் முகத்தையும், தேவகியம்மாவின் முகத்தையும் மாறிமாறிப் பார்த்தான். அந்த நேரத்தில் தேவகியம்மா அவனிடம் கண்களால் ஏதோ சைகை செய்வதை மாதவமேனன் கவனித்தார்.

‘‘நீ அறையை விட்டு வெளியே போ...'' மாதவமேனன் தன் மனைவிக்கு கட்டளை பிறப்பித்தார்.

தேவகியம்மா முகத்தை இருள வைத்து கனமாக்கிக் கொண்டு, என்னவோ முணுமுணுத்தவாறு அறையை விட்டு வெளியேறினாள்.

பாலகிருஷ்ணன் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் எதையும் மறைக்காமல் கூறினான். அவன் கூறியது இதுதான்.

‘பட்டினி கிடந்து தாங்க முடியாத நிலை வந்ததும், தம்பிராட்டியிடம் இரண்டு நாழி நெல் வாங்கலாம் என்று நினைத்து, கையில் ஒரு பாத்திரத்துடன் சேர இங்கு வந்துகொண்டிருந்தாள். அப்போது அவர்கள் எல்லாரும் சாப்பிட்டு முடித்து, மேலே இருக்கும் வராந்தாவில் விளையாட்டாகப் பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.. அந்த தாழ்ந்த ஜாதிப்பெண் தூரத்திலிருந்து வருவதைப் பார்த்ததும் தேவகியம்மா, ‘உங்கள் எல்லாருக்கும் இப்போ சிரிப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தர்றேன்' என்று சொன்னாள். அவள் தன் தங்கை மீனாட்சியின் காதில் ஏதோ ரகசியமாகச் சொன்னாள். மீனாட்சி கீழே இறங்கிப் போனாள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் ஏறி வருவதற்கென்றே சுவரோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் மர ஏணியைச் சற்று நகர்த்தி வைத்துவிட்டு, திரும்பவும் மேலே வந்துட்டாள். அந்த தாழ்ந்த ஜாதிப்பெண் தனக்கு முன்னால் ஏற்படுத்தப்பட்டிருந்த ஆபத்தைப் பற்றி சிறிதும் நினைக்காமல் ஏணியில் ஏற ஆரம்பித்தாள். கிட்டத்தட்ட மேலே வந்திருப்பாள்... ஏணி இருந்த இடத்தை விட்டு விலகிச் சாய்ந்தது. உயரமாக இருந்த அந்தச் சுவரிலிருந்து கீழே இருந்த குறுகலான பாதையில் அவள் மல்லாக்க போய் விழுந்தாள். அவள் ‘அய்யோ' என்று ஒரே ஒருமுறை மட்டும் உரத்த குரலில் சத்தம் போட்டாள். மேலேயிருந்த எல்லாரும் கைகளைத் தட்டிக்கொண்டு சிரித்தார்கள்.'

அந்தச் சம்பவத்தைக் கேட்டவுடன், மாதவமேனனின் நரம்புகளில் வார்த்தைகளால் கூற முடியாத அளவிற்கு ஒரு கொதிப்பு  உண்டாக ஆரம்பித்தது. என்னவென்று புரிந்துகொள்ள முடியாத ஒரு கோபம், இயல்பாகவே சாந்தமாக இருக்கும் அந்த இதயத்திற்குள் பரவ ஆரம்பித்தது.. கண்களின் நிறம் மாறியது. முகத்தின் இயல்புத் தன்மை முற்றிலும் மாற

ஆரம்பித்தது. தாங்கமுடியாத வெறுப்பை- பற்களின் வரிசை,  கீழுதடு ஆகியவற்றுக்கு நடுவில் அழுத்தி மறைக்க ஆரம்பித்தார். இரக்கத்தால், உணர்ச்சிகள் நிறைந்த ஓரிரு நீண்ட பெருமூச்சுகள் வெளிவந்தன.

என்ன? புரட்சிகரமான எண்ணங்கள் எழுவதற்குக் காரணமாக இருக்கும் அந்தச் சம்பவம், தான் நாயகனாக இருக்கும் வீட்டில் நடந்திருக்கிறதா?

பிரம்பைக் கீழே எறிந்துவிட்டு, ஒரு நீண்ட கரகரப்பான இருமலுடன் மாதவமேனன், தன் முகத்தில் பரவியிருந்த உணர்ச்சிகளை சிறிதும் மாற்றிக் கொள்ளாமல், அறையில் நாலா பக்கங்களிலும் கண்களைச் செலுத்தினார்.

மாமாவின் இந்த வழக்கமில்லாத போக்கைப் பார்த்து திகைத்துப் போய்விட்ட சிறுவன், சிறிது சிறிதாக பின்னோக்கி நகர்ந்து, வெளியேறித் தப்பித்தான்.

மாதவமேனன் சுவரில் தொங்கவிடப்பட்டிருந்த சட்டையை வேகமாக எடுத்து அணிந்துகொண்டு, கடமையுணர்வுடன் அறையைவிட்டு வெளியேறி நடந்தார்.

2

யல்களையும் நிலங்களையும் ஏழைகளின் வசிப்பிடங்களையும் கடந்து, சுருக்காகச் செல்லும் வழி எதுவென்று பார்த்து, குறுகலான ஒற்றையடிப் பாதைகளின் வழியாக பல மேடுகளையும் குதித்துத் தாவி, பத்து நிமிடங்களில் மாதவமேனன் குப்பைமேட்டிற்கு அருகிலிருந்த சேரயின் வீட்டிற்கு- கூப்பிடு தூரத்திற்கு போய்ச் சேர்ந்தார்

மாலை நேரம் கடந்து முழு கிராமமும் மிகவும் அமைதியில் மூழ்கியிருந்தது. இருட்டு எல்லா இடங்களிலும் பரவியிருந்தது. அந்த வயலின் ஒரு மூலையில், சற்று உயரத்திலிருந்த ஒரு சிறு துண்டு நிலத்தில் சேரயின் குடிசை தனியாக இருந்தது. வயலின் வரப்பிலிருந்து, அந்த புல் வேய்ந்த குடிசையின் முற்றத்திற்குச் செல்வதற்காக சுவரின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருந்த மர ஏணியின்மீது மாதவமேனன் ஏறினார். அங்கு சத்தமோ அசைவோ பிரகாசமோ வெளிச்சமோ எதுவும் இல்லாமலிருந்தது. புற்கள் முளைத்து, ‘கரடிப் புற்றுகள்' இருந்த அசுத்தமான அந்த முற்றத்தில் மாதவமேனன் சிறிது நேரம் விழித்தபடி நின்றிருந்தார்.

அப்போது ‘அய்யோ' என்றொரு தாங்கமுடியாத வேதனை கலந்த முனகலும், அதைத் தொடர்ந்து ‘என்னம்மா?' என்ற ஒரு அமைதியான குரலும் அந்தக் குடிசைக்குள்ளிருந்து வந்ததை மாதவமேனன் கேட்டார். அவர் அந்த இருட்டில் தட்டுத் தடுமாறி மேலும் சற்று முன்னோக்கிச் சென்றார். குடிசைக்கு அருகில் சென்று மிகவும் சிரமப்பட்டுத் தேடியபோது, வறுமையின் பிடியிலிருந்த அந்தக் குடிசையின் வாசல் பகுதி தெரிந்தது.

அவர் உள்ளே நுழைந்து மெல்ல கனைத்து, ஓசை உண்டாக்கினார். ‘‘யார் அது?'' என்றொரு கேள்வி மெல்லிய தொனியில் இருந்தாலும், ஒரு விசேஷமான இனிமையுடன் உள்ளேயிருந்து வந்தது.

மாதவமேனன் மேலும் சற்று முன்னேறிச் சென்றார். ‘‘நான்தான்... அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான்.'' தொடர்ந்து அவர் கேட்டார். ‘‘சேர, கீழே விழுந்ததைத் தொடர்ந்து உனக்கு என்ன நடந்தது? அதிகமா எதுவும் நடக்கலையே?'' அடுத்த நிமிடம் ஒரு பேரமைதி அங்கு நிலவியது. வேதனை கலந்த அழுகைச் சத்தமும் இல்லை. பதிலும் இல்லை. அங்குள்ள நாக்குகள் அனைத்தும் கீழே விழுந்ததைப்போல ஆகிவிட்டன. அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான் அவளுடைய குடிசையில்! அய்யய்யோ! பதைபதைப்பால் சேர இறக்கவில்லை; அவ்வளவுதான். உயிர் போகும் அளவிற்கு உண்டான வேதனையால் இப்படியும் அப்படியுமாக நெளிந்து கொண்டிருந்த அவள், அம்பலப்புள்ளி குடும்பத்தின் பெரிய தம்புரான் தன்னைப் பார்ப்பதற்காக குடிசையைத் தேடி வந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டதும், முன்பு இருந்ததைவிட அதிக வேதனையுடன் ‘‘அய்யோ! என் தங்க தம்புரான்!'' என்று மட்டும் கூறினாள், அதற்குமேல் எதுவும் கூறமுடியாமல், வேகமாக எழுந்து முழங்காலிட்டு வணங்குவதற்கு முயற்சி செய்தாள்.

இருட்டில் நடைபெற்ற அந்தக் காட்சியைப் பார்த்து மாதவமேனனின் இதயம் துடித்தது.

‘‘பெண்ணே,  நீ எதுவும் செய்யவேண்டாம். அப்படியே படுத்திரு...'' என்று கூறியவாறு, மிகுந்த பாசத்துடன் அவர் அவளைப் பிடித்து அங்கேயே படுக்க வைத்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறுமி நின்றுகொண்டிருந்தாள். மாதவமேனன் அந்தச் சிறுமியின் பக்கம் திரும்பியவாறு கூறினார்: ‘‘இங்கு கொஞ்சம்கூட வெளிச்சமே இல்லையே! நீ வேகமா போயி எங்கேயிருந்தாவது கொஞ்சம் வெளிச்சம் கொண்டு வர்றியா?'

பத்து நிமிடங்கள் தாண்டியதும், சற்று காய்ந்த ஓலைகளை எரிய வைத்துக் கொண்டு அவள் திரும்பி வந்தாள்.


அந்த வெளிச்சத்தில் குடிசையின் ஒரு பகுதியை அவரால் நன்கு பார்க்க முடிந்தது. அந்தக் காட்சி அவருடைய இதயத்தை மரத்துப் போகச் செய்தது. தன்னைப் போலவே ஐம்புலன்களுடன் பிறந்திருக்கும் ஏழை உயிர்கள் வறுமையின் பிடியில் சிக்கி, தாங்கமுடியாத இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வாழ்க்கையை ஓட்ட முடிகிறதே என்பதை நினைத்து அவர் ஆச்சரியப்பட்டார். நான்கு பகுதிகளிலும் ஓலையால் மறைக்கப்பட்ட, காற்றும் வெளிச்சமும் பயந்து ஓடக்கூடிய ஒரு குடிசை! அவர்களுடைய அடுப்பும், படுத்திருக்கும் இடமும்... சில நேரங்களில்... கழிப்பிடமும் குடிசையின் அந்த ஒரே அறையில்தான். சீர் செய்யாத அந்தத் தரையில் இரண்டு, மூன்று நண்டு பொந்துகள் இருந்தன. கரையான் புற்று நிறைந்து, ஈர மண் காலில் ஒட்டக்கூடிய அந்தத் தரையில், ஒரு கிழிந்து போன பாயை விரித்து ஒரு பெண் படுத்திருக்கிறாள். உடுத்துவதற்கும், குளிப்பதற்கும், வேலை செய்வதற்கும், குளிரில் இரவு வேளையில் போர்த்திக் கொள்வதற்கும் அவளிடம் இருப்பது ஒரே ஒரு துணி.

சமையல் செய்வதற்கும், சாப்பிடுவதற்கும், குடிப்பதற்கும் எஞ்சியவற்றைப் பாதுகாத்து வைப்பதற்கும் அவளிடம் இருப்பது ஒரே ஒரு சட்டி! பிறப்பிலிருந்து மரணம் வரை இந்த விஷயத்தில் எந்தவொரு மாறுதலும் இல்லை. பகலிலிருந்து மாலை வரை வெளியே வயலில் தூசியிலும், சேற்றிலும்.... இரவு முழுவதும் குடிசையின் இருட்டிலும், குளிரிலும் உழன்று கொண்டிருக்கும் இந்த ஏழைகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களைப் பற்றி படித்தவர்களுக்கு என்ன தெரியும்? இங்கு பார்த்துக் கொண்டிருக்கும் கஷ்டங்களுக்கெல்லாம் காரணகர்த்தாக்கள் யார்? என்ற ஒரு கேள்வியை மாதவமேனன் தனக்குள் கேட்டுக்கொண்டாலும், ‘முதலாளித்துவம், பிரபுவத்துவம்' என்ற சில சொற்கள் உடனடி பதில்களாக வந்தாலும், தற்போதைக்கு இந்த வகையான விஷயங்களில் மனதை ஈடுபடுத்தாமல், அவர் நோய்வாய்ப்பட்டிருக்கும் பெண்ணின் சரீரத்தில் இருந்த காயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

பெரிய அளவில் காயங்கள் எதுவும் வெளிப்படையாகத் தெரியவில்லை. எனினும், உள்ளே ஏதோ பெரிய அளவில் பாதிப்பு உண்டாகியிருக்கிறது என்பதை அவளுடைய அழுகையிலிருந்து புரிந்துகொள்ள முடிந்தது. மாதவமேனன் அவளுடைய உடலைத் தடவியவாறு, ‘‘எங்கே வலிக்குது?'' என்று கேட்டார். மாதவமேனன் தன் கையால் தொட்டது, நெருப்பு படுவதைவிட தாங்கிக்கொள்ள முடியாததாக இருந்தது. பதிலெதுவும் கூறாமல், மாதவமேனனின் இரண்டு கைகளையும் பிடித்து அழுத்தி வைத்துக் கொண்டு, அவள் அவருடைய கால்களில் தலையை வைத்து மோத ஆரம்பித்தாள். அருகில் நின்றிருந்த அந்தச் சிறுமி ஒரு மூலையில் இருந்தவாறு குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். மொத்தத்தில் அந்த காட்சி இதயத்தைப் பிழியக்கூடியதாக இருந்தது.

மாதவமேனன் அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணை பலவற்றையும் கூறி தேற்றினார். அவளுடைய கணவன் எங்கே போயிருக்கிறான் என்று அவர் கேட்டார். தன் அன்னையின் உடல்வலிக்கு ஏதாவது மருந்து வாங்கிக்கொண்டு வருவதற்காக அவன் வெளியே சென்றிருக்கிறான் என்று அந்தச் சிறுமி அதற்கு பதிலாகக் கூறினாள்.

அவர் அந்தச் சிறுமியின் கையில் ஐந்து ரூபாயைக் கொடுத்தார். ‘‘நல்ல ஒரு வைத்தியரை கூட்டிட்டு வந்து சிகிச்சை செய்யுங்க. இன்னும் பணம் வேணும்னா என்னிடம் யாராவது ஒரு ஆளை அனுப்பிவச்சா போதும்'' என்று கூறிவிட்டு, அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணின் நன்றியை வெளிப்படுத்தும் வேதனை கலந்த வார்த்தைகளை இனியும் கேட்டுக்கொண்டு நின்றுகொண்டிருக்காமல், அவர் அங்கிருந்து வெளியேறி நடந்தார். ஓலையை எரிய வைத்து உண்டாக்கிய வெளிச்சத்தைக் காட்டியவாறு, பின்னால் அந்தச் சிறுமியும், முள்புதரைக் கடந்து வயலில் இறங்குவது வரை அவரைப் பின்பற்றி நடந்தாள். இதற்கிடையில் அவர்களுக்கிடையே இப்படி ஒரு உரையாடல் நடந்தது.

‘‘ நீ சேரயின் மகள், அப்படித்தானே?''

‘‘ஆமாம்......''

‘‘உன் பேர்?''

‘‘வெள்ளாயி...''

‘‘உனக்கு என்ன வயசு?''

‘‘பதினஞ்சு...''

‘‘நீ உன் அம்மாவை நல்ல முறையில பார்த்துக்கணும்; தெரியுதா? அப்படியென்றால் நான் உனக்கு ஒரு நல்ல ஜரிகை போட்ட முண்டு (வேட்டி) வாங்கித் தருவேன்.''

மாதவமேனன் அவளுடைய முகத்தையும் உடலையும் கூர்ந்து ஒருமுறை பார்த்தார்.

மாநிறத்தில், மெலிந்து காணப்பட்ட சரீரம்.... கழுத்தில் கொஞ்சம் பித்தளை வளையங்களும், வண்ணக் கற்களும், ‘முத்து'களும் சேர்த்துக் கட்டப்பட்டு தொங்கிக் கொண்டிருந்த மாலைகள் பெரும்பாலும் மார்புப் பகுதியை மறைத்துக் கொண்டிருந்தன.

ஜரிகை போடப்பட்ட முண்டைப் பற்றி காதில் விழுந்ததும், அந்த நீளமான நாசிக்குக் கீழே, வெண்மை நிறத்தில் வரிசையாக இருந்த கொஞ்சம் பற்களின் பிரகாசம் தெரிந்தது. அவள் கையிலிருந்த பந்தத்தை வாங்கிக்கொண்டு மாதவமேனன் வயலுக்குள் இறங்கினார்.

3

ந்தக் கிராமத்திலேயே மிகவும் புகழ்பெற்ற- எல்லாருக்கும் தெரிந்த ஒரு குடும்பம் ‘அம்பலப்புள்ளி.' சொத்து விஷயத்தில் அவர்களை மிஞ்சிச் செல்வதற்கு அங்கு யாருமில்லை. ஒரு நான்கு மைல் சுற்றளவில் கண்களில் தென்படும் பெரும்பாலான வயல்களும் வீடுகளும் மலைகளும் குளங்களும் நிலங்களும்- அனைத்தும் ‘அம்பலப்புள்ளி' குடும்பத்திற்குச் சொந்தமானவையே. அந்தப் பகுதியிலிருந்த மக்களில் பெரும்பாலானவர்கள் அம்பலப்புள்ளி குடும்பத்தை நம்பி, கூலி வேலை செய்பவர்களாகவோ, குடியானவர்களாகவோ இருப்பார்கள். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்கு ஒரு ராஜபதவி கொடுக்கப்பட்டிருந்தது.

அந்தக் குடும்பத்தின் முந்தைய பெரியவராக இருந்த இட்டிராரிஸ்ஸ மேனன் மரணத்தைத் தழுவி மூன்று வருடங்களாகி விட்டன. அவர் மிகவும் கொடூரமான மனிதராகவும், மது அருந்தக்கூடியவராகவும், மக்களுக்கு துரோகம் இழைக்கக் கூடியவராகவும், சர்வாதிகார குணம் கொண்ட பணக்காரராகவும், ஒரு கடுமையான சுயநலவாதியாகவும் இருந்தார். அவர் செய்த கொடூரமான காரியங்களுக்கும், கொலைச் செயல்களுக்கும் அளவே இல்லை. நல்ல உடல் பலத்தையும், அழகான தோற்றத்தையும் கொண்டிருந்த அந்த தடிமனான மனிதர், ஆண்களுக்கு ஒரு எமனாகவும் பெண்களுக்கு ஒரு இராவணனாகவும் இருந்தார்.

ஆனால், அவருடைய மூத்த மருமகனாக மாதவமேனனின் மனம் அப்படிப்பட்டதாக இல்லை. இளம் வயதிலிருந்தே எல்லாருடைய அன்பையும், ஆதரவையும் பெற்றிருந்த அவர், வயது ஆக ஆக அவர்களுடைய நிம்மதிக்கும் நம்பிக்கைக்கும் உரிய மனிதராக ஆனார். தன் மாமாவிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளையும் கருத்துகளையும் கொண்டிருந்த மாதவமேனனின் இரக்கம் எப்போதும் ஏழைகளின்மீதும், அக்கறை அவர்களுடைய வறுமையின் மீதும் ஆழமாக இருந்தது.. சிறுபிள்ளைப் பிராயத்திலிருந்தே வறுமையின் பிடியில் சிக்கிக் கிடக்கும் விவசாயிகளின் வசிப்பிடங்களுக்கும், அவர்கள் இருக்கும் சூழல்களுக்கும் போய்க்கொண்டிருந்த பழக்கம் இருந்ததால், அவர்களுடைய வாழ்க்கை முறைகளையும், வாழ்க்கையின் எல்லையையும், கஷ்டங்களையும் நேரில் தெரிந்துகொள்வதற்கு அவரால் முடிந்தது.


குடும்பத்தின் ஆட்சிப் பொறுப்பு தன் கையில் வந்துசேரும்போது, அவற்றிற்கெல்லாம் ஒரு பரிகாரம் உண்டாக்கலாம் என்று அந்தச் சமயத்தில் அவர் தன் மனதிற்குள் சபதம் செய்து வைத்திருந்தார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்களாக இருக்கும் இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய தோழராகவும், மதிப்பிற்குரிய நாயகராகவும் இருந்த மாதவமேனன், பல சந்தர்ப்பங்களில் தன் மாமாவுடன் போராட வேண்டியதிருந்தது. சுயநலப் போக்கும், சர்வாதிகார குணமும் அதிகமாகி இறுகிப் போயிருந்த மனதுடன், சமத்துவவாதமும், இனிய எண்ணங்கள் கொண்ட வாலிபப் பருவமும் தைரியமாகப் போரிட்டன. ஆனால், மாதவமேனனின் அமைதியான மிடுக்குத் தனங்களும், முழுமையான செயல் அர்ப்பணிப்பும், அன்பு கலந்த செயல்களும் நிறைந்த பலமான வாதங்களால், பெரியவரின் மனதை மாற்றுவதற்கு சிறிதுகூட முடியவில்லை. வழக்கமான அவருடைய போக்கில், அவை அனைத்தும் அடித்து வீசி எறியப்பட்டன. இறுதியில் மருமகன் ஒரு தனி காங்கிரஸ்காரராக ஆனதைத் தொடர்ந்து, கிழவரின் கோபம் அடக்க முடியாத அளவிற்கு ஆகிவிட்டது. ‘பையன் தொலைஞ்சு நாசமாப் போயிட்டான்' என்று பெரியவர் வெறுப்புடன் தீர்மானித்து விட்டார். ஆனால், அந்த வருடத்திலேயே மாதவமேனன் மேற்படிப்பிற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டானது.

அவர் பி.ஏ. தேர்வில் வெற்றி பெற்றார். பி.எல். வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோதுதான் சட்டமறுப்பு இயக்கம் உண்டானது. மாதவமேனன் தன் படிப்பை நிறுத்திவிட்டு, சட்டத்தை மீறி, சிறைத் தண்டனை பெற்றார்.

இட்டிராரிஸ்ஸ மேனன் மரணத்தைத் தழுவும்போது, தன் மருமகனை ஒருமுறை பார்ப்பதற்குக்கூட முடியாமல் போய்விட்டது. மாதவமேனன் அப்போது பல்லாரி சிறையில் ஒன்றரை வருட கடுங்காவல் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.

சிறைத் தண்டனை முடிந்தவுடன், படிப்பைத் தொடரவேண்டும் என்று விருப்பப்படாமல், அவர் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு திரும்பி வந்தார். ‘அம்பலப்புள்ளி' குடும்பத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார். குடும்பத்துடனேயே நிரந்தரமாக இருக்க ஆரம்பித்தார்.

வெகுசீக்கிரமே அவருடைய திருமணமும் நடைபெற்றது. மாமா இறப்பதற்கு முன்னால், மாதவமேனன் சென்னையில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே, அவருடைய திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துவிட்டது. இட்டிராரிஸ்ஸ மேனனின் ஒரு மிக நெருங்கிய நண்பரும், இன்னொரு குடும்பத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவருமான சங்கரமேனனின் மகள் தேவகியம்மாதான் மணமகள்.

4

மாதவமேனன் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, ‘அம்பலப்புள்ளி' குடும்பத்திலும், அவருடைய அதிகாரத்திற்குப்பட்ட எல்லா இடங்களிலும் அவர் ஏற்படுத்திய மாற்றங்கள் பலரையும் ஆச்சரியப்பட வைக்கக் கூடியனவாக இருந்தன. அவர் அந்தப் பகுதியை ஒரு சிறிய ரஷ்யாவாக மாற்றினார். எழுதப்படாத ஏதோ ஒரு அரக்கத்தனமான சட்டத்தால், பிறப்பிலிருந்தே கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களும், வாசற்படி வரை மட்டுமே வருவதற்கான உரிமை தரப்பட்டிருந்த தாழ்ந்த ஜாதி மக்கள் என்று கூறப்பட்டுக் கொண்டிருந்த அடிமைகளுக்கு, எந்தவொரு நிபந்தனையும் விதிக்காமலேயே சுதந்திரம் அளித்தார். வயலில் வேலை செய்வதென்பது பட்டினி கிடக்கும் நிலைமையைப் போக்குவதற்காக மட்டுமல்ல; அது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலும்கூட என்ற நிலையை அவர் உண்டாக்கினார். பொதுவாகவே தன்னுடைய விருப்பப்படி பல நிலங்களையும் விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு விட்டுக் கொடுத்து ‘கூட்டுறவு விவசாயம்' என்ற ஒரு வழக்கத்தை உண்டாக்கி, அதில் என்ன லாபம் கிடைக்கிறது என்பதை அவர்களுக்கு கற்றுத் தரவும் செய்தார். கோழிக் கூடுகளைப்போல இருந்த விவசாயிகளின் குடிசைகளை இடித்துத் தள்ளி, வெளிச்சமும் காற்றும் நுழையக்கூடிய விசாலமான வீடுகளைக் கட்டுவதற்கு அவர்களுக்கு பண உதவி செய்தார். நவீன முறையில் விவசாயம் செய்வதற்கு சொல்லிக் கொடுத்து சுதந்திரமான மன நிலையும், சம உணர்வும், நினைத்துப் பார்க்க முடியாத ஒரு தன்னம்பிக்கை உணர்வும், நிம்மதியும் அவர்களிடம் ஏற்படும்படி செய்தார். வாழ்வின் இனிய பக்கத்தை அவர்கள் அனுபவிக்க ஆரம்பித்தார்கள். மனிதர்களுக்கு பிறக்கும் போதிலிருந்தே சில உரிமைகள் இருக்கின்றன என்ற விஷயம் அவர்களுக்குப் புரிய ஆரம்பித்தது. அதற்கு மேல் என்ன? ஒரு புதிய உலகத்திற்குள் நுழைந்திருப்பதைப்போல அவர்கள் உணர்ந்தார்கள்.

எனினும், மூத்த தலைமுறையைச் சேர்ந்த சிலரிடம், திடீரென்று உண்டான இந்த மாற்றம் பொறாமைப்படத்தக்க ஒரு போதையை உண்டாக்கியது. அவர்களில் குறிப்பிட்டுக் கூறவேண்டிய நபர்- மாதவமேனனின் எதிர்கால மாமனார் சங்கரமேனன்.

சங்கரமேனன் ஒரு கட்டுப்பாடற்ற- போக்கிரி குணம் கொண்ட மனிதராக இருந்தார். அவர் மது, விபச்சாரம், அக்கிரமச் செயல்கள், கொலை செய்யக்கூட தயங்காத குணம்- ஆகிய அனைத்தும் நிறைந்தவராக இருந்தார். அவர் செய்யாத அக்கிரமச் செயல்களே இல்லை என்று கூறுவதுதான் சரியாக இருக்கும். இந்த தான்தோன்றித்தனமான செயல்களுக்கும், அநீதியான போக்குகளுக்கும் அவருடைய அதிகார நிலை ஒரு முகமூடியாக இருந்தது. போலீஸ் அதிகாரிகளின் அதிகாரம், அவருடைய பணத்திற்கு முன்னால் தலையை குனிந்துகொண்டு நின்றது. மறுநாள் விலங்குகள் மாட்டப்பட வேண்டிய தன் கைகளைக் கொண்டு எவ்வளவோ கொலைகளை அவர் செய்திருக்கிறார்.

இட்டிராரிஸ்ஸ மேனன் மரணமடைந்தபோது, ஒரு மிக நெருங்கிய நண்பர் தன்னை விட்டுப் போய்விட்டார் என்ற உணர்வு சங்கரமேனனுக்கு உண்டானது.

தன்னுடைய குடியான்களையும் வேலை செய்பவர்களையும் வெறும் புழு பூச்சிகள் என்பதைப்போல மட்டுமே அவர் நினைத்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு கல்வி தேவையில்லை- முழங்கால் மூடும் அளவிற்குவேட்டி கட்டக்கூடாது- அந்த வேட்டியே சலவை செய்யப்பட்டிருக்கக் கூடாது- தலையை மறைக்க குடை பிடிக்கக்கூடாது- வித்தைகளைக் கற்றுக் கொள்ளக்கூடாது- இவைதாம் சங்கரமேனனின் கட்டளைகளாக இருந்தன. அவரின் கட்டளைகளை மீறி நடப்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய தண்டனை மிகவும் பயங்கரமானதாக இருந்தது. அதனால் ‘இரணியனின் நாட்டில் இரண்யாய நம' என்று கூறியதைப்போல, சங்கரமேனனின் அதிருப்திக்கு ஆளாகாமல் எல்லாரும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியிலிருந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு பெயர்கள் வைக்க சங்கரமேனனின் அனுமதி வேண்டும் என்றொரு வழக்கம் இருந்தது. (பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்கே தன்னுடைய அனுமதி வேண்டும் என்ற ஒரு புதிய விதியை நடைமுறைப்படுத்துவதற்கு அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார்).

குழந்தைகள் பிறந்தவுடன், அந்தத் தகவலை சங்கரமேனனுக்கு அறிவிக்க, அவர் சில மோசமான பெயர்களை அவர்களுக்கு வைத்துக் கொண்டிருந்தார். அதனால் அந்தப் பகுதியிலிருந்த சில சிறு குழந்தைகளுக்கு ‘மரக்கிளை', ‘கைக்கோட்டு', ‘சேறு', ‘அழுக்கு', ‘சேர' போன்ற சில பெயர்களும்; இங்கு எழுத முடியாத அளவிற்கு உள்ள வேறு சில பெயர்களும் சாதாரணமாகவே இருந்து வந்தன.

மாதவமேனனுக்கு தன் மாமனாரை மட்டுமல்ல; அவருடைய மகளான தன்னுடைய மனைவியையும் பிடிக்கவில்லை.


மாதவமேனனின் எண்ணங்களையும், கொள்கைகளையும் புரிந்துகொண்டு செயல்படும் அளவிற்கான ஒரு மனநிலை தேவகியம்மாவிற்கு இருந்திருந்தால், ஒருவேளை அவளிடமிருந்த மீதி மோசமான விஷயங்களையெல்லாம் மறந்துவிட்டு, மாதவமேனன் அவள் மீது அன்பு வைத்திருப்பார். இன்னும் சொல்லப் போனால்- தேவகியம்மாவின் அழகோ, அவளிடமிருந்த அளவற்ற நகைகளோ, அவளுடைய தந்தையின் பணமோ, அவர் வகித்துக் கொண்டிருந்த பதவியோ- இவை எதுவுமே அவரைச் சிறிதும் கவரவில்லை. தேவகியம்மாவிற்கு படிப்பு என்பது இருந்தாலும், கண்ணில் பார்க்கும் தரம் தாழ்ந்த நாவல்களையும் காதல் கதைகளையும் மனப்பாடம் செய்வதில்தான் அவள் அதிக ஆர்வத்தைக் கொண்டிருந்தாள். பழமையான ரோம நாட்டின் அடிமைகள் கொடுமைகள் அனுபவிப்பதைப் பற்றிய கதைகளை அவள் எவ்வளவோ முறை திரும்பத் திரும்ப, மிகுந்த ஆர்வத்துடன் வாசித்திருக்கிறாள். மனதிற்குள் அன்பின் இடைவெளி இருப்பதை காலப்போக்கில் இருவருமே உணர ஆரம்பித்தார்கள். மாதவமேனன் ஏழைகள்மீது அன்பு செலுத்துவதிலும், அவர்களுக்கு உதவி செய்வதிலும் ஆனந்தம் அடைந்தார். தேவகியம்மா அவர்களை கிண்டல் பண்ணுவதிலும், அவர்களுக்கு தொந்தரவு தருவதிலும் சந்தோஷத்தை எதிர்பார்த்தாள். தன் கணவரின் அழகைப் பற்றியும், அவருடைய மிடுக்கான தோற்றத்தைப் பற்றியும், அவருக்கு மக்கள் மத்தியில் இருந்த செல்வாக்கு பற்றியும் தேவகியம்மாவிற்கு உயர்ந்த மதிப்பு இருந்தது. தன் தந்தையின் பண வசதியைப் பற்றியும், தன்னிடமிருந்த ஏராளமான நகைகளைப் பற்றியும் எல்லாரிடமும் பெருமையுடன் கூறிக்கொண்டிருப்பதற்கு மத்தியில், தன் கணவரின் இந்தப் பெருமைகளைப் பற்றியும் அவள் புகழ்ந்து கூறுவாள். அதே நேரத்தில்- வயலுக்குச் செல்லும்போது அவர் செய்யக்கூடிய ‘சிறு பிள்ளைகள் விளையாட்டைப்' பற்றி தேவகியம்மா பெரும்பாலும் வெறுப்பு கலந்த குரலில் கூறுவாள். மாதவமேனனின் பொறுமை குணம், அமைதியான போக்கு ஆகியவை காரணமாக அவர்களுக்கிடையே முதலில் பெரிய அளவில் பிரச்சினை எதுவும் உண்டாகவில்லை. காலப்போக்கில் மாதவமேனன் தேவகியம்மாவை ஒரு சாதாரண பெண் என்பதைப்போல ஒதுக்கி வைத்ததால், அவர்களுக்கிடையே அதற்குப் பிறகு எந்தவொரு சண்டையோ மோதலோ உண்டாகவில்லை. தேவகியம்மாவின் மாமா இல்லத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அவள் நீண்ட காலம் தன் தந்தையின் வீட்டில்தான் இருந்தாள். திருமணம் நடந்த பிறகும், இந்த வழக்கத்தை அவள் மாற்றிக்கொள்ளவில்லை. வருடத்தில் எட்டு மாத காலம் அவள் சங்கரமேனனுடன்தான் இருந்தாள். அந்தச் சமயங்களில் மாதவமேனன் அவளைப் பார்ப்பதற்காக ஒருமுறைகூட அங்கு சென்றதில்லை. மாதவமேனனின் மனைவி பொறுப்பை விட்டெறியும்படி சங்கரமேனன் பல முறை கூறினாலும், தேவகியம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை.

மாதவமேனனின் வயலில் வேலை செய்தால், பணமும் வசதிகளும் அதிகரிக்கும் என்பதைப் புரிந்துகொண்டு, சங்கரமேனனின் சில பணியாட்கள் மாதவமேனனுக்குக் கீழே வேலை செய்வதற்காக வந்து சேர்ந்தார்கள். இந்த விஷயம் சங்கரமேனனை அளவற்ற கோபத்திற்கு ஆளாக்கியது. ‘அந்தநாய்களை எங்காவது பார்த்தால் அடித்துக் கொன்று விடுங்கள்' என்று அவர் தன்னுடைய பணியாட்களுக்கு கட்டளையும் பிறப்பித்தார்.

ஒரு சாயங்கால வேளையில் மாதவமேனன் தன்னுடைய வயலின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். மாலை நேரத்தில் மறைந்து கொண்டிருந்த சூரியனின் ஒளிக் கீற்றுகள் பரவியிருந்த விவசாய இடங்கள் மிகவும் அழகாகத் தோன்றின. வயலில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் நாற்றுகளைப் பிரித்து நட்டுக்கொண்டிருந்தார்கள். தலையில் துணிகளைக் கட்டிக்கொண்டு, முழங்கால் வரை இருந்த சேற்றுக்குள் இறங்கி நின்றுகொண்டு, குனிந்து நடும்போது அவர்கள் கூட்டமாக பாடிக் கொண்டிருந்தார்கள்.

‘தச்சோளி நல்ல செல்லக்குழந்தை உதயணன்
தச்சோளி நல்ல செல்லக்குழந்தை உதயணன்'
என்று ஆரம்பிக்கும் அந்த பாட்டும், அது நீளமாக பாடப்பட்ட விதமும், அதில் உள்ளடக்கமாக இருந்த வீரத்தன்மையும், அந்த பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர்களின் சந்தோஷமும்- இவை அனைத்தும் மாதவமேனனை உணர்ச்சிவயப்படச் செய்தன. அவர்களுடைய தம்புரான் அருகில் வந்து நின்றதை அவர்களில் ஒரு ஆள் பார்த்தாலும், ஒரு புன்சிரிப்புடன் அவர் வந்திருக்கும் விஷயத்தை பக்கத்தில் நின்று கொண்டிருப்பவனிடம் கண்களால் கூறியவாறு அவன் எந்தவிதமான பயமும் இல்லாமல் பாட்டைத் தொடர்ந்து கொண்டுதான் இருப்பான். இப்படி எல்லாருமே தம்புரான் அங்கு வந்து நின்று கொண்டிருப்பதைப் பார்த்தாலும், அவர்கள் முன்பு இருந்ததைவிட அதிகமான உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் தங்களுடைய வேலைகளையும் பாட்டையும் தொடர்ந்து கொண்டிருந்தார்கள்.

அவர்களுக்கு மத்தியில் சேர்ந்துகொண்டு, அவர்களைப் போல சிறிது நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற அடக்க முடியாத ஆசை அப்போது மாதவமேனனுக்கு உண்டானது. அவர் தன்னுடைய சட்டையைக் கழற்ற முயன்றார். ஆனால், அப்போது சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றது.

தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்களின் பாட்டு திடீரென்று நின்றது. அவர்கள் எல்லாரும் கைகளையும் வேலையையும் மறந்துவிட்டு, முன்னோக்கி அதிர்ச்சியுடன் பார்த்தவாறு நின்றிருந்தார்கள்.

உடல் முழுவதும் ரத்தம் வழிய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு துடித்துக் கொண்டிருந்த ஒரு புலையன், மாதவமேனனின் கால்களில் வந்து விழுந்தான்.

சங்கரமேனனின் ஊரிலிருந்து மாதவமேனனின் வயலில் வேலை செய்வதற்காக, இரண்டு நாட்களுக்கு முன்னால் புதிதாக வந்து சேர்ந்த ‘தனியன்' தான் அவன். சங்கரமேனனின் ஆட்கள் அவனை இரும்பு உலக்கையாலும், மரக் கொம்பாலும் அடித்து காயம் உண்டாக்கி விட்டிருந்தார்கள்.

மாதவமேனன் அவனைத் தாங்கிப் பிடித்து, அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு கொண்டு சென்றார். அவனுக்கு சிறிதுகூட சுய உணர்வு இல்லாமலிருந்தது. சில ஆரம்ப சிகிச்சைகள் செய்தபிறகு, அன்று இரவே அவனை ஒரு கட்டிலில் படுக்கச் செய்து, மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், அன்று இரவே அவன் அங்கு இறந்துவிட்டான்.

மாதவமேனன் தன்னுடைய மாமனாரின் செயல்களைப் பற்றி தீவிரமான சிந்தனையில் மூழ்கினார். தான் சிறிது குறிப்பால் உணர்த்தினால்கூட போதும். தன்னுடைய பகுதியில் இருப்பவர்கள் எல்லாரும் சங்கரமேனனின் சொத்துகளை நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கி விடுவார்கள் என்ற விஷயம் மாதவமேனனுக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், அந்த மாதிரி இரண்டு பக்கங்களிலும் இருக்கும் மக்களுக்கிடையே ஒரு போர் நடக்கும்பட்சம், அதனால் ஏற்கெனவே இருக்கும் பகை உணர்ச்சி அதிகரிக்குமே தவிர, மனதில் நினைக்கக்கூடிய அளவிற்கு நல்ல விளைவு கிடைக்காது என்பதை அவர் புரிந்து கொண்டார். எது எப்படி இருந்தாலும், இந்தக் கொடூரமான செயலுக்குக் காரணமாக இருந்தவர்களுக்கு ஒரு நல்ல பாடத்தைக் கற்றுத் தந்தே ஆகவேண்டும் என்று அவர் தெளிவாக முடிவு செய்தார்.

மறுநாள் காலையில் சங்கரமேனனின் ஊரில் கூட்டமாக போலீஸ்காரர்கள் வந்தவுடன், அங்கு இருப்பவர்கள் எல்லாரும் பதைபதைத்துப் போய் விட்டார்கள்.


அந்தப் பகுதியிலிருந்த சில போக்கிரிகளைப் பிடித்து அடி, உதை கொடுத்தவுடன், அவர்கள் எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகக் கூற ஆரம்பித்து விட்டார்கள். தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த மனிதனைக் கொல்ல முயன்றது கேளுக்குறுப்பு என்ற ஒரு முரட்டு மனிதன் என்ற தகவல் வெளியே வந்தது. அவன் வெகுசீக்கிரமே போலீஸாரிடம் சரணடைந்தான். சங்கரமேனன் எதையுமே தொடாத மாதிரியும், எதுவுமே தெரியாததைப்போலவும் ஒளிந்து எப்படியோ தப்பித்துக் கொண்டார்.

கேளுக்குறுப்பை ஆயுள் காலம் முழுவதும் நாடு கடந்து செல்லும்படி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அன்றிலிருந்து உயர்ந்த தலைமைப் பொறுப்பில் இருந்த சங்கரமேனனை விட பெரிய ஒரு சட்ட சக்தி அங்கு இருக்கிறது என்ற விஷயத்தை அங்குள்ளவர்கள் புரிந்து கொண்டார்கள்.

அந்தச் சம்பவம் நடந்து முடிந்தவுடன்தான், சேர மேலே இருந்து கீழே விழுந்த சம்பவம் நடந்தது.

அன்று இரவு மாதவமேனன் சேரயைப் பார்ப்பதற்குப் போன நாளிலிருந்து, பெரும்பாலும் எல்லா நாட்களிலும் அவளுடைய நிலைமையை விசாரிப்பதற்காக அவளுடைய குடிசைக்குச் சென்று கொண்டிருந்தார். இந்த விஷயம் எதிர் முகாமில் இருப்பவர்கள் பேசக்கூடிய விஷயமாக ஆனது.

ஒரு நல்ல வைத்தியரை வைத்து சிகிச்சையைச் செய்திருந்தாலும், மேலே இருந்து கீழே விழுந்த பதினான்காம் நாள் உயிரில்லாத ஒரு குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு, சேர மரணத்தைத் தழுவி விட்டாள்.

ராயனை, எதிர் முகாமைச் சேர்ந்த ஆட்கள் பலவற்றையும் கூறி தூண்டி விட்டனர். அவனுக்கு தினமும் கள்ளு வாங்கிக் கொடுத்து, கைக்கூலி தருவதாக வாக்குறுதி அளித்து, அவனை ஒரு காரியத்தைச் செய்யும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

‘அம்பலப்புள்ளி' குடும்பத்தைச் சேர்ந்த மாதவமேனன் தினமும் சேரயைப் பார்ப்பதற்காக தேவையில்லாமல் அவனுடைய குடிசைக்குச் சென்று கொண்டிருந்தது- அவனுடைய மகளுடன் கள்ள உறவு கொள்வதற்குதான் என்றும், அவன் அந்தச் சம்பவத்தை ஓரிரு முறை நேரில் பார்த்ததாகவும் எல்லாரிடமும் கூறிப் பரப்பவேண்டும் என்பதே அது. தொடர்ந்து அவளுக்கு கர்ப்பம் உண்டாகி விட்டது என்றும், அதன் காரண கர்த்தா மாதவமேனன்தான் என்றும், இனி அவள் தனக்குத் தேவையே இல்லை என்றும் கூறி, ஒருநாள்  சாயங்கால வேளையில் எல்லாரும் காணும் வண்ணம் அவளை அடித்து உதைத்து ‘அம்பலப்புள்ளி' குடும்பத்தில் கொண்டு போய்விட வேண்டும் என்றும் அவர்கள் அவனிடம் கூறினார்கள்.

தாங்கள் கூறியபடி செய்யாமலிருந்தால், தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த  மற்றவர்கள் அவனை சமுதாயத்திலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள் என்றும், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்ட சங்கரமேனன் அவனை அடித்துக் கொன்று குழிக்குள் போட்டுப் புதைத்து, அதன்மீது ஒரு வாழையை வைத்து விடுவார் என்றும் அவர்கள் ராயனை பயமுறுத்தினர்.

‘‘டேய் ராயா, உன்னைப் பொறுத்தவரையில் உன்னுடைய மகளை நீ வீட்டிலிருந்து விரட்டி விடுகிறாய். அவ்வளவுதான். அதே நேரத்தில் அப்படி நடந்ததற்குப் பிறகு நாங்க எல்லாரும்... அதிகாரத்தைக் கொண்ட தம்புரானும் உன் பக்கம் இருக்கார்டா...'' என்று கூறி அவர்கள் அவனுக்கு தைரியமூட்டினார்கள்.

தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த அந்த மனிதனும் இதை நல்ல ஒரு வாய்ப்பாக எண்ணினான். தன் மனைவி மரணமடைந்து விட்டதால், மகள் என்ற ஒரு சுமை மட்டுமே அவனுக்கு இருந்தது. அவர்கள் கூறியபடி செய்தால், அந்தச் சுமையும் இல்லாமல் போய்விடும். அதற்குப் பிறகு தனக்கு எது கிடைத்தாலும் அதை வைத்து குடித்துக் கொண்டு, கும்மாளம் போட்டுக்கொண்டு தன் விருப்பப்படியெல்லாம் இருக்கலாமே என்று அவன் நினைத்தான். இது தவிர, சங்கரமேனன் பல நாட்கள் அவனுடைய குடிசைக்கு யாருக்கும் தெரியாமல் சென்று, அவனிடம் என்னென்னவோ கூறினார். அதைத் தொடர்ந்து அவருடைய கட்டளையை சிறிதுகூட பிசகாமல் அப்படியே பின்பற்றுவதாக ராயன் வாக்குறுதி அளித்தான்.

5

மாலை நேரம் கடந்து விட்டிருந்தது. ‘அம்பலப்புள்ளி' வீட்டின் வாசலில் உட்கார்ந்து கொண்டு, மாதவமேனன் ‘ஹிந்து' பத்திரிகைகயை விரித்து வாசித்துக் கொண்டிருந்தார்.

மதியத்திலிருந்தே வேலையை ஆரம்பித்தும், அன்று அறுவடை செய்த நெல் முழுவதையும் மிதித்து களத்திற்குக் கொண்டு செல்ல முடியாததால், ஏராளமான தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த பணியாட்கள், சாணத்தால் மெழுகி சுத்தமாக வைக்கப்பட்டிருந்த முற்றத்தில் நின்று கொண்டு, தங்களுக்கிடையே ஆரவாரம் செய்தவாறு வேலையைச் செய்து கொண்டிருந்தார்கள்.

‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் முன்பகுதியில் விசாலமான வயல் இருந்தது. திடீரென்று அந்தப் பகுதியிலிருந்து பெரிய ஒரு சத்தம் வருவதைக் கேட்டு எல்லாரும் தங்களுடைய வேலையை நிறுத்தினார்கள். அங்கு என்ன சத்தம் கேட்கிறது என்று அவர்கள் காதுகளைத் தீட்டி வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள்.

இடது கையில் ஒரு பந்தத்தை எரிய வைத்துப் பிடித்துக்கொண்டு, வலது கையால் தன் மகளின் கூந்தலைச் சுற்றிப் பிடித்தவாறு, அவளை வயலின் வழியாக இழுத்துக் கொண்டு ராயனும், அவனுக்குப் பின்னால் ஒரு பெரிய ஆட்களின் கூட்டமும் ‘அம்பலப்புள்ளி' இல்லத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ராயன் தலைமையில் நடைபெற்ற அந்த ஊர்வலம் ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் வாசலுக்கு வந்தது. மாதவமேனன் முற்றத்தில் வந்து நின்றார். திடீரென்று வாய்க்கு வந்த வார்த்தைகளிலெல்லாம் அர்ச்சனை செய்து கொண்டிருந்த அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனை நோக்கி மிகுந்த கோபத்துடன் யாரோ பாய்ந்தபோது, மாதவமேனன் அந்த ஆளை விலகச் சொன்னார்.

யாரும் எதுவும் பேசவில்லை. எங்கும் பேரமைதி! ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் ‘டைகர்' மட்டும் சத்தமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.

ராயன் தன் மகளை வாசற்படியை நோக்கித் தள்ளியவாறு உரத்த குரலில் சொன்னான்: ‘‘ஓடுடி... உன் நாயரிடம்...''

ஒரே நிமிடத்தில் மாதவமேனனுக்கு எல்லா விஷயங்களும் புரிந்து விட்டன. அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனுக்குப் பின்னால் இருக்கும் சக்தி எது என்பதும், சிறிதும் எதிர்பாராத அந்தச் செயல் ஏன் நடக்கிறது என்பதும் அவருக்குப் புரிந்தாலும், எந்தவித கோபமும் அடையாமல் மாதவமேனன் மெதுவாக அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த மனிதனின் அருகில் சென்றார்.

‘‘ராயா, இனி உனக்கு உன் மகள் தேவையில்லை அல்லவா?''

மாதவமேனன் மரத்துப்போன உணர்வுடன் கேட்டார்.

‘‘அந்த தரம் கெட்ட பெண்ணை நான் ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்... ஒதுக்கிட்டேன்...''

காதுகளுக்குள் கை விரல்களை நுழைத்து அழுத்தி வைத்துக் கொண்டு, மூன்று முறை அவன் இவ்வாறு உரத்த குரலில் கூறினான்.

மாதவமேனன் அந்த தாழ்ந்த ஜாதிப் பெண்ணை அழைத்துச் சென்று ‘அம்பலப்புள்ளி' இல்லத்தின் ஒரு அறைக்குள் இருக்கும்படி செய்தார். ராயனும் அவனுடன் வந்த ஆட்களும் உரத்த குரலில் வெற்றி முழக்கமிட்டவாறு அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள்.


அரை மணி நேரம் கடந்தது. ‘அம்பலப்புள்ளி' இல்லத்திலிருந்து எரிந்து கொண்டிருந்த கயிறையும், பந்தத்தையும், பெட்டியையும், மூட்டைகளையும் எடுத்துக்கொண்டு சிலர் வெளியேறினார்கள். மாதவமேனனின் மனைவியும், மனைவியின் சகோதரிகளும், அவர்களுடைய பணியாட்களும் தான் அவர்கள்.

6

ன்று இரவு மாதவமேனன் தன்னுடைய படுக்கையறைக்குள் நுழைந்து விளக்கை அணைத்தார். கதவை அடைத்ததும், அவருடைய மனதிலிருந்த அமைதியெல்லாம் இல்லாமல் போனது. ஓராயிரம் சிந்தனைகள் அந்த இருட்டுக் குள்ளிருந்து வருவதைப்போல அவருடைய மனதிற்குள் நுழைந்து அங்கு சில அதிர்வுகளை உண்டாக்கி விட்டன. சமுதாயத் தலைவர்களின் மோசமான தூண்டுதல்கள் காரணமாக தன்மீது சுமத்தப்பட்ட- நினைத்துப் பார்க்க முடியாத தண்டனையையும், குற்றச்சாட்டையும் நினைத்து,அவர் படுக்கையில் கவிழ்ந்து படுத்தவாறு ஒரு குழந்தையைப்போல குலுங்கிக் குலுங்கி அழுதார். அதன் உண்மைத்தன்மை எல்லாருக்கும் நன்கு தெரியுமென்றாலும், அந்தக் குற்றச்சாட்டை நம்புவதற்கும் சிலர் இல்லாமலில்லை என்ற விஷயம் மாதவமேனனுக்கும் தெரியும். சமுதாயம் அப்படித்தானே இருக்கும்?

மறுநாள் காலையில் மாதவமேனன் அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சிறுமியின் அறைக்குச் சென்று, அவளிடம் மிகுந்த கூச்சமும் மனவேதனையும் கலந்த ஒரு அமைதியான குரலில் கேட்டார். ‘‘உன் அப்பன் கூறுவதைப்போல நீ கர்ப்பமாக இருக்கியா?''

அந்த ஏழைச் சிறுமி குலுங்கிக் குலுங்கி அழுதுகொண்டே கூறினாள். ‘‘இல்லை, தம்புரானே! இல்லை... அதிகாரத் தம்புரான் கொஞ்ச நாட்களாக சாயங்கால நேரத்துல வந்து என்னை என்னென்னவோ செய்தார்!''

அந்த நிமிடமே மாதவமேனன் அவளை அழைத்துக் கொண்டு நகரத்திற்குச் சென்றார். அங்கிருந்த ஒரு கான்வென்ட்டில் அவளுக்கு ஒரு நல்ல கல்வி கிடைப்பது வரை அவள் தங்கியிருப்பதற்குத் தேவையான அனைத்து வசதியையும் செய்து முடித்த பிறகுதான், அவர் வீட்டிற்கு திரும்பியே வந்தார்.

7

தற்குப் பிறகும் மாதவமேனன் இரண்டு வருட காலம் தன் குடும்பத்தை ஆட்சி செய்தார். அவருடைய வயதான தாய், இதற்கிடையில் மரணத்தைத் தழுவினார். அதைத் தொடர்ந்து மாதவமேனன் தன்னுடைய சொத்துகள் அனைத்தையும் தன் தம்பியிடம் கொடுத்துவிட்டு, ஒரு ஐரோப்பிய பயணத்திற்காகப் புறப்பட்டார்.

அவர் கிளம்பும்போது மக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள்.

மூன்று வருட காலம் இங்கிலாந்து, ஃப்ரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்து, தொழில் சம்பந்தப்பட்ட பல அறிவுகளையும் பெற்றுக்கொண்டு, அவர் இந்தியாவிற்குத் திரும்பி வந்தார்.

சிறிது காலம் தன்னுடைய கிராமத்தில் இருந்துவிட்டு, அவர் பம்பாய்க்குச் சென்று, அங்கு ஒரு பெரிய திரைப்படம் தயாரிக்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

திரு.எ.எம். மேனவனின் (அம்பலப்புள்ளி மாதவமேனனின்) சொந்த நிறுவனமான, ‘சந்திரிகா ஃபிலிம் கம்பெனி' பொதுவாகபணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே உண்டாக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. படிப்பு வாசனை இல்லாத மக்களை கல்வி கற்க வைக்கக்கூடிய ஒரு ஊடகமாக இருக்கும் என்ற எண்ணத்தினால் மட்டுமே மாதவமேனன்அந்த திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையே ஆரம்பித்தார்.

‘அரிஜனங்களின் எழுச்சி',. ‘தொழிலாளர்கள் சங்கம்', ‘கிராம வளர்ச்சி', ‘வறுமைக்கான காரணம்', ‘சுதந்திரச் செல்வம்'- இப்படிப்பட்ட பல விஷயங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இதயத்தைத் தொடக்கூடிய எவ்வளவோ கதைகள் அங்கிருந்து திரைப்படங்களாகத் தயாராகி வெளிவந்தன. ஒற்றுமையாக மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதை பலமாக பிரச்சாரம் செய்யக்கூடிய ஒரு வாய்ப்பும் அதன்மூலம் நிறைவேறியது. வாழ்க்கையை அதன் உண்மைத் தன்மையுடன் வெளிப்படுத்தாத ஒரு படம்கூட அங்கு தயாராகி வெளிவரவில்லை. சாம்ராஜ்ஜியங்களுக்குக் கீழே, முதலாளித்துவத்திற்குக் கீழே வளர்ந்து கொண்டிருக்கும் பல லட்சம் மக்களின் துயரங்கள் நிறைந்த வாழ்க்கையை அப்படியே

திரைப்படங்களில் காட்டினார்கள். அந்தத் திரைப்படங்கள் திரைக்கு வந்து மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, சிந்திக்கச் செய்தன. முதலாளிகளை பயமுறுத்தி, தொழிலாளிகளுக்கு உணர்வையும், உற்சாகத்தையும் அவை அளித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பெரிய மக்கள் கூட்டத்தையே அவை கற்கச் செய்தன.

அந்த வகையில் சந்திரிகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய புகழும், விளம்பரமும் கிடைத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், மாதவமேனன் ‘அரிஜன சிறுமி' என்ற கதையை எழுதினார். அது ‘அச்யுதகன்ய' போன்ற புகழ்பெற்ற இந்தித் திரைப்படங்களைவிட இதயம் தொடக்கூடிய கதைக்கருவும் காட்சிகளும் நிறைந்ததாக இருந்தது.

ஆனால், அதன் கதாநாயகி பாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு, மனம் விரும்புவது மாதிரி ஒரு நடிகை மாதவமேனனுக்குக் கிடைக்கவில்லை.

அந்தச் சூழ்நிலையில் சற்று ஓய்வெடுப்பதற்காக அவர் மலபாருக்கு வந்தார்.

‘அம்பலப்புள்ளி' குடும்பத்தின் ஆட்சி முன்பு நடந்ததைப் போல்தான் நடந்துகொண்டிருந்தது. சந்திரசேகரமேனன் தன் அண்ணனைவிட திறமை வாய்ந்த- ஒரு பரந்த மனம் கொண்ட மனிதராக இருந்ததால், விவசாயிகளுக்கு நிறைய சுதந்திரமும் வளர்ச்சியும் கிடைத்துக்கொண்டிருந்தன.

‘அம்பலப்புள்ளி' குடும்பத்தின் உறவினர்களுக்கு மத்தியில் மாதவமேனன் மிகவும் சந்தோஷமாக ஓரிரண்டு நாட்கள் செலவழித்தார். ஊரின் விசேஷங்களைப் பற்றி அவருடைய பழைய நண்பரான குமாரமேனன் அவரிடம் கூறினார்.

அதிகாரத்தில் இருந்த சங்கரமேனன் என்ற மனிதரை கேளு நம்பியார் என்ற ஒரு போக்கிரி, வெட்டித் துண்டு துண்டுகளாக ஆக்கிய செய்தியை சிறிது நாட்களுக்கு முன்புதான் மாதவமேனன் ‘மாத்ருபூமி' நாளிதழில் வாசித்திருந்தார். அதைப்பற்றி விளக்கிக் கூறும்படி மாதவமேனன், குமாரமேனனிடம் கேட்டுக்கொண்டார். குமாரமேனன் அந்தச் சம்பவத்தை விளக்கிக் கூறினார்.

‘‘கேளு நம்பியார், உயர்ந்த அதிகாரத்தைக் கொண்டிருந்த சங்கரமேனனின் நெருங்கிய நண்பராகவும், கெட்ட செயல்களில் அவரின் நம்பிக்கைக்குரிய... உடனிருந்து செயல்படக்கூடிய மனிதராகவும் இருந்தார். ஆனால், ஒருநாள் நம்பியார் இல்லாமலிருந்த நேரத்தில் சங்கரமேனன் அவருடைய வீட்டிற்குள் நுழைந்து, அவருடைய மனைவியைக் கற்பழிக்க முயன்றிருக்கிறார். அந்த நேரத்தில் கேளு நம்பியார் சிறிதும் எதிர்பாராமல் அங்கு வந்திருக்கிறார்.

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற நம்பியார், சங்கரமேனனை துண்டுத் துண்டாக வெட்டிக் கொன்றுவிட்டு, நேராகச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்திருக்கிறார். வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்தில் நம்பியார், சங்கரமேனன் கூறியதாலும் அவரின் உதவியாலும் தான் செய்த கொலைச் செயல்களை ஒவ்வொன்றாக அடுக்கிக்கூறியிருக்கிறார். நீதிமன்றம் நம்பியாருக்கு தூக்குத் தண்டனை கொடுத்திருக்கிறது.''

‘‘அந்த ராயன் இல்லையா? அவன் எங்கே இருக்கிறான்?'' மாதவமேனன் கேட்டார்.

‘‘அன்று ‘அம்பலப்புள்ளி' குடும்பத்தில் நடைபெற்ற சம்பவத்திற்குப் பிறகு, ராயன் சிறிது காலம் சங்கரமேனனை ஒட்டிக்கொண்டு திரிந்தான். காலப்போக்கில் சங்கரமேனன் அவனை விட்டெறிந்தார். அவனுக்கு அவர் எதுவுமே கொடுக்காத சூழ்நிலை உண்டானது. ராயன், சங்கரமேனனின் தோட்டத்திலிருந்த தேங்காய்களும், தன்னுடைய வயிறும், சங்கரமேனனின் கையும், தன்னுடைய முதுகும் என்று சிறிது காலம் வாழ்க்கையை ஓட்டினான்.


ஒருநாள் இரவு தேங்காய் குலையைப் பறிப்பதற்காக அவன் சங்கரமேனனின் தோப்புக்குள் நுழைந்தான். ஒரு தென்னை மரத்திலிருந்து ஓரிரு குலைகளை வெட்டி முடித்தவுடன், அவன் எப்படியோ தலைகுப்புற கீழே விழுந்துவிட்டான். ஒரு கால் ஒடிந்துவிட்டது. நகர முடியாமல் தென்னை மரத்திற்குக் கீழேயே அவன் படுத்துக்கிடந்தான். மறுநாள் காலையில் சங்கரமேனன் அவனுடைய இன்னொரு காலையும் அடித்து உடைத்தார். அதற்குப் பிறகு இங்கிருக்கும் சந்திரசேகரமேனன் அவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவனுடைய இரண்டு கால்களையும் நீக்க வேண்டிய நிலை வந்தது. காயம் ஆறியபிறகு, அவன் கடைவீதியில் சிறிது காலம் பிச்சை எடுத்துக்கொண்டும், பொறுக்கித் தின்றுகொண்டும் திரிந்தான். இப்போது அவனைக் காணவில்லை. எங்காவது கிடந்து இறந்திருக்க வேண்டும்.'' குமாரமேனன் கூறினார்.

‘‘தேவகியம்மாவைப் பற்றிய தகவல் ஏதாவது?'' ஒரு மெல்லிய புன்சிரிப்புடன் மாதவமேனன் கேட்டார்.

அதற்கு குமாரமேனன் கூறினார்: ‘‘நீங்கள் திருமண உறவை விட்டுப் பிரிந்த சிறிது நாட்களிலேயே அவர்களை சங்கரமேனனின் ஒரு மருமகன் திருமணம் செய்துகொண்டார். இப்போது அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.''

அந்தக் காலத்தைப் பற்றிய விஷயங்கள் ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது, மாதவமேனனுக்கு திடீரென்று அந்த தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த சிறுமியைப் பற்றிய ஞாபகம் வந்தது. ‘வெள்ளாயி'யை கான்வென்ட்டில் ‘வல்லிகா' என்ற பெயரில்தான் அவர் சேர்த்துவிட்டிருந்தார். அவளுக்கு ஒவ்வொரு மாதமும் செலவிற்குத் தேவைப்படும் பணத்தை அனுப்பி வைப்பதற்கு தன்னுடைய வங்கி மூலம் மாதவமேனன் அப்போதே ஏற்பாடு செய்துவிட்டிருந்தார். அதற்குப் பிறகு வல்லிகாவைப் பற்றி நினைப்பதற்கு மாதவமேனனுக்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவளுடைய அறிவுத் திறமையைப் பற்றியும், நல்ல குணத்தைப் பற்றியும், படிப்பதில் இருந்த ஈடுபாட்டைப் பற்றியும் புகழ்ந்து, கான்வென்ட்டில் இருந்த ‘அம்மா' மாதவமேனனுக்கு மூன்று, நான்கு கடிதங்கள் எழுதியிருந்தார். அதைத் தவிர, அவளைப் பார்க்கவேண்டும் என்று கான்வென்ட்டிற்கு ஒருநாள்கூட அவர் சென்றதில்லை.

இன்று அவளை சற்று போய் பார்க்கவேண்டும் என்று மாதவமேனன் முடிவெடுத்தார். சாயங்காலம் காரில் கான்வென்ட்டிற்குச் சென்றபோது, ‘அம்மா' அங்கு இல்லாத காரணத்தால், அன்று பார்க்க முடியாமல் போய்விட்டது. மறுநாள் கான்வென்ட் உயர்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா. அதற்கான ஒரு அழைப்பிதழும், அன்று மாணவிகள் நடிக்கப்போகும் நாடகத்தில் சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி, விருது பெற தகுதிபெற்ற மாணவியைத் தேர்வு செய்யும் நீதிபதிகளில் ஒருவராக அவர் இருக்கவேண்டும் என்ற விருப்பக் கடிதமும் அவருக்குக் கிடைத்தது.

மறுநாள் மாதவமேனன் கான்வென்ட்டில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்திற்குச் சென்றார். மிகவும் சிறப்பான கொண்டாட்டங்களுக்குப் பிறகு அங்கிருந்த உயர்நிலைப்பள்ளி மாணவிகள் மிகப்பெரிய கவிஞரான ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஒதெல்லோ'  என்ற நாடகத்தில் நடித்தார்கள். அதில் ஒரு மாணவி, கதாநாயகியான டெஸ் டெமோனாவின் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்து, நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தாள். பேரழகு படைத்த அந்த மாணவியின் வசனம் பேசும் முறையும், நடிப்புத் திறமையும் அவள் ஒரு நடிகையாவதற்கென்றே பிறந்தவள் என்று பறைசாற்றின. அவளுடைய உடலுறுப்புகளின் ஒவ்வொரு அசைவும், பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்திய கண்களின் சலனங்களும், நாடகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களின் இதய நரம்புகளில் ஓராயிரம் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழச் செய்து கொண்டிருந்தன. நாடகக் கலையைப் பற்றிய பாரம்பரிய அறிவோ, அனுபவமோ, பயிற்சியோ இல்லாமல்- கஷ்டங்களில் சந்தோஷத்தைக் கண்டவளைப்போல அந்த கன்யாஸ்திரீகளின் மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த இளம்பெண்ணின் கலைத் திறமை வீணாகிவிடப் போகிறது என்பதை நினைத்து மாதவமேனன் மனதிற்குள் மிகவும் கவலைப்பட்டார்.

நாடகம் முடிந்த பிறகு நீதிபதிகள் ஒரே குரலில், கதாநாயகியாக நடித்த பெண்ணுக்கு முதல் பரிசைத் தரவேண்டும் என்று கருத்து தெரிவித்தார்கள். அத்துடன் அவளுக்கு மாதவமேனனின் சார்பில் தங்கத்தாலான ஒரு கைக்கடிகாரம் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது.

அவர் அவளைப் பற்றி விசாரித்தாலும், அங்கு அதிகமாக எதைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடியவில்லை.

மறுநாள் அவர் கான்வென்ட்டிற்குச் சென்றார். அவருக்கு முன்னால் வல்லிகா அழைத்துக்கொண்டு வரப்பட்டாள்.

ஆச்சரியத்துடன் மாதவமேனன் அவளையே சிறிது நேரம் பார்த்தார். நல்ல உயரமும் வடிவமும் நிறைந்த அழகான உடலமைப்பு... புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்த அழகான உதடுகள்... மலர்ந்து, பிரகாசமாக காட்சியளித்த கண்கள்... நீண்டு, முனை வளைந்திருக்கும் நாசி... கறுத்து, சுருண்டு அடர்த்தியாக வளர்ந்திருந்த கூந்தல்... நன்றி உணர்வை ஒரு அரைச் சிரிப்பிலேயே வெளிப்படுத்தக்கூடிய பிரகாசமான பற்களின் வரிசைகள்... மொத்தத்தில்- கடைந்தெடுத்த ஒரு சிலையைப்போல முழுமையான அழகுடன் இருந்த அவளை எதுவும் பேசாமல் நீண்ட நேரம் அவர் பார்த்துக்கொண்டே நின்றிருந்தார். ஏழு வருடங்களுக்கு முன்னால் ஒரு சாயங்கால வேளையில் ராயனின் குடிசையில் பந்தத்தைக் கையில் வைத்துக்கொண்டு வழியைக் காட்டிய அந்த வெள்ளாயி என்ற ஏழைச் சிறுமி இதோ ஒரு தங்கப் பட்டாம்பூச்சியாக மாறிவிட்டிருக்கிறாள்!

அளவற்ற நன்றியுணர்வுடனும், மதிப்புடனும் வல்லிகா தலையை குனிந்து குனிந்து, தன்னுடைய காப்பாளருக்கு முன்னால் எந்தவிதமான அசைவுமில்லாமல் நின்று கொண்டிருந்தாள். முந்தைய நாள் நாடகத்தில் நடித்ததற்காக கிடைத்த சிறப்புப் பரிசு அவளுடய இடது கையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

‘‘வல்லிகா, நேத்து டெஸ் டெமோனாவாக நடித்தது நீதானா?''

‘‘ஆமாம்...''

சந்தோஷத்தால் மாதவமேனனின் உள்மனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.

‘‘வல்லிகா, இப்போ நீ எந்த வகுப்பில் படிச்சிக்கிட்டு இருக்குறே?''

‘‘இந்த வருடம் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்விற்குப் போறேன். இன்னும் தேர்வுக்கு இரண்டு மாதங்கள் இருக்கு.''

மாதவமேனன் அவளுடன் பல விஷயங்களைப் பற்றியும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார். அவளுக்கு ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், இந்தி ஆகிய மொழிகள் நன்கு எழுதுவதற்கும் பேசுவதற்கும் தெரிந்திருந்தது. ஆங்கில மொழியில் இருக்கும் இலக்கியம் சம்பந்தப்பட்ட முக்கியமான நூல்கள் அனைத்தையும் அவள் வாசித்து முடித்திருந்தாள்.

அப்போது ‘அம்மா' அவளுக்கு அருகில் வந்தார்.

வல்லிகாவைப் பற்றி நீண்ட நேரம் ஆழமாகவும், ஈடுபாட்டுடனும் அவர்களுக்கிடையே உரையாடல் நடத்திய பிறகு, மாதவமேனன் விடைபெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

தேர்வு முடியும்வரை வல்லிகாவை கான்வென்ட்டிலேயே இருக்கச் செய்வது என்று அவர்கள் முடிவு செய்தார்கள்.

8

தற்குப் பிறகு ஒரு வருடம் கடந்தது.

‘அரிஜன சிறுமி' என்ற திரைப்படம் வெளிவந்தபிறகு, இந்தியாவிலிருந்த திரை அரங்குகளில் ஒரு பூகம்பமே உண்டானது. இதயத்தைத் தொடக்கூடிய ஒரு புதுமையான கதை.


நடிப்புக் கலையின் நுணுக்கத்தை நன்கு புரிந்து கொண்டு, படம் பார்ப்போரின் இதயத்தைத் துளைத்து உள்ளே நுழையக்கூடிய ஒரு புதிய நடிகை, எ.எம். மேனன் தயாரித்த அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாள். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்த அப்படம் திடீரென்று உலகப் புகழைப் பெற்றது. பம்பாய், கல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களில் எவ்வளவோ மாதங்களாக தொடர்ந்து அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. அதில் கதாநாயகியாக நடித்திருந்த வல்லிகாதேவிக்கு பாராட்டுகளும் ஆசீர்வாதங்களும் காதல் மொழிகளும் கொண்ட கடிதங்கள் தினந்தோறும் பத்தாயிரத்திற்கும் மேலாக உலகத்திலுள்ள பல இடங்களிலிருந்தும் வந்துகொண்டிருந்தன.

அந்தப் படத்தின்மூலம் கிடைத்த லாபம் முழுவதையும் மாதவமேனன் இந்தியாவிலிருக்கும் அரிஜன இனத்தைச் சேர்ந்த மக்களின் உயர்வுக்காக பாடுபடும் போராளிகளைப் படைப்பதற்காக செலவிட்டார்.

அந்தப் புகழின் வெப்பம் குறைவதற்கு முன்பே, இன்னொரு செய்தி பரவியது. அது வேறொன்றுமில்லை; அந்தப் படத்தின் இயக்குநரான திரு. எ.எம்.மேனன் (மாதவமேனன்), அதில் கதாநாயகியாக நடித்திருந்த வல்லிகாதேவியைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்தியே அது.

‘அம்பலப்புள்ளி' இல்லத்திலேயே மாதவமேனனின் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

திருமணத்திற்கு, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்து விலைமதிப்பு கொண்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் மணமக்களுக்கு வந்து சேர்ந்தன. பல மிகப்பெரிய மனிதர்களும் அந்தத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக அங்கு வந்திருந்தனர்.

மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் அந்தத் திருமணம் ஒரு வகையில் நடந்து முடிந்தது. அந்தச் சமயத்தில் புதிய மணமகளின் கையைப் பிடித்தவாறு, அங்கு குழுமியிருந்தவர்களுக்கு முன்னால் வந்து நின்றவாறு மாதவமேனன் இவ்வாறு கூறினார்:

‘‘ ’அரிஜன சிறுமி' என்ற திரைப்படத்தில் கதாநாயகியின் பாத்திரத்தை ஏற்று நடித்து உலகப் புகழ்பெற்றிருக்கும் வல்லிகாதேவியைப் பற்றி புதிதாகக் கூறுவதற்கு அதிகம் எதுவும் இருக்காது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம். எனினும், சில ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களை உங்களிடம் கூறவேண்டும் என்பதற்காகத்தான் நான் இங்குவந்து நின்றுகொண்டிருக்கிறேன். இவள் உண்மையிலேயே ஒரு அரிஜன வகுப்பைச் சேர்ந்த பெண்தான்.

ஏழு வருடங்களுக்கு முன்பு, கேரளத்திலிருந்த ஒரு புலையக் குடிசையில் சேற்றிலும் அழுக்கிலும் கிடந்து வாழ்ந்த ஒரு புழுவாக இவள் இருந்தாள். என்னை அவமானத்திற்குள்ளாக்க வேண்டும் என்பதற்காக என்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்த சில பொறாமை பிடித்த மனிதர்கள், மோசமான வழிகளில் நடந்தேன் என்று கூறி தண்டனை அளிக்க நினைத்து, அன்று இந்த ஏழைப் பெண்ணை அதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தினார்கள். இவள் கர்ப்பமாகி விட்டாள் என்றொரு செய்தியைப் பரப்பி விட்டார்கள். சில பெரிய மனிதர்களின் தூண்டுதல்களால், இவளுடைய தந்தை இவளை என் வீட்டின் வாசற்படியில் வீசியெறிந்துவிட்டுப் போய்விட்டார். ஊர்வசியின் சாபம் உபயோகம் என்று கூறுவதைப்போல, அந்தக் காரணத்தால், நடிப்புலகத்திற்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறாள். ஏழு வருட அனுபவங்களுக்குப் பிறகு, விலைமதிப்புள்ள- இணையற்ற ஒரு மாணிக்கக் கல்லாக இவள் இதோ வெளியே வந்திருக்கிறாள்.

இதை ஒரு விசேஷமான சம்பவமாக நீங்கள் யாரும் நினைக்க வேண்டாம்.

‘தேய்த்து மினுக்கினால் ஒளியும் மதிப்பும் பெற்றிடும் கற்கள்.'

பாரதத் தாயின் மடியில் கூர்தீட்டப்படாமல் இன்னும் எவ்வளவோ பேர் கிடக்கிறார்கள். அவர்களை உயர்வுக்குக் கொண்டு வந்தால் மட்டுமே, பாரதத்திற்கும் உயர்வு உண்டாகும். கல்வி, பண்பாடு ஆகியவற்றின் மூலம் எவ்வளவோ வல்லிகாதேவிகளை இனியும் படைத்துப் பார்ப்பதற்கு என்னுடன் சேர்ந்து நீங்களும் பிரார்த்தனை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்.''

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.