Logo

மரியாவின் முதலிரவு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7020
Mariyavin-mudhaliravu

வர்கள் சில மாலை வேளைகளில் நிஸாமுதீனில் ஒரு மொட்டை மாடியில் ஒன்று சேர்வார்கள்.

புகழ்பெற்ற சில பாடகர்களும் நாட்டியக் கலைஞர்களும் வசிக்கும் ஒரு இடம்தான் நிஸாமுதீன். கதக் குருவான நாராயண்லாலின் வீட்டு மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ஹுமாயூனின் கல்லறையும் அதைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கும் ரயில் தண்டவாளங்களும் தெரியும். கீழே அதிக ஆள் நடமாட்டமில்லாத பாதையின் ஓரத்தில் ஒரு கொன்றை மரம் இருக்கிறது.

கல்லறையின் சுவரையொட்டி தண்டாவளத்தை நோக்கி ஒரு ஒற்றையடிப்பாதை இருக்கிறது. காலையில் கிராமங்களிலிருந்து தண்டவாளத்தைத் தாண்டி ஒற்றையடிப்பாதை வழியாக காய்கறி விற்பவர்கள் நிஸாமுதீனுக்கு வருவார்கள். குளிர்காலத்தில் அவர்களின் கூடைகளில் வெண்ணெய் நிறத்திலுள்ள காலிஃபிளவர் இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை காலையில் அவன் குரு நாராயண்லாலின் வீட்டிற்குச் சென்றான். இரு பக்கங்களிலும் நெருக்கமாக இருக்கும் வீடுகள். அமைதியாக இருந்த பாதை வழியாக நடந்து குருவின் வீட்டிற்கருகில் போனபோது சாரங்கியின் இசை கேட்டது. விடுமுறை நாட்களில் குருவின் வீடு இசைமயமாக இருக்கும். அவன் மாடிப்படிகளில் ஏறி மூன்றாவது மாடிக்குச் சென்றான். அழைப்பு மணியில் விரலை வைத்தபோது பழமை வாய்ந்த கதவு ஓசை உண்டாக்கியவாறு திறந்தது. கதவுக்குப் பக்கத்தில் குரு நாராயண்லாலின் சிஷ்யை மந்தாகினி நின்றிருந்தாள்.

‘‘நீங்க வந்தது நல்லதாப்போச்சு’’ - மந்தாகினி சொன்னாள்: ‘‘குருஜி உங்களைப் பற்றி இப்போதான் பேசிக்கிட்டு இருந்தாரு.’’

மொட்டை மாடியில் நிறம் மங்கிப்போன ஒரு விரிப்பு விரிக்கப்பட்டிருந்தது. சாதாரணமாக அங்கு காணப்படும் பிரம்பு நாற்காலிகள் மாற்றப்பட்டிருந்தன. இளம் வெயிலில் காய்ந்து கொண்டே கோவிந்த்மோகன் சாரங்கி மீட்டிக் கொண்டிருந்தார்.

‘‘குருஜி எங்கே?’’

‘‘உள்ளே இருக்கார். தியானம் செய்துக்கிட்டு இருக்கார்.’’

இன்று குரு நடனமாடப் போகிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான். நடனமாடும் நாளன்று அவர் நீண்ட நேரம் மவுன விரதத்தில் இருப்பார். குருவிற்காகக் கொண்டு வந்திருந்த உயர்ந்த பழங்கள் இருந்த பெரிய பொட்டலத்தை மந்தாகினியிடம் தந்த அவன் மொட்டை மாடியில் போய் நின்றான். கொன்றை மரத்தின் கிளைகள் மொட்டை மாடிமீது சாய்ந்து கொண்டிருந்தது. முதல் தடவையாக அவன் குருவின் வீட்டிற்கு வரும்போது இந்த மரம் மிகவும் சிறியதாக இருந்தது. அவன் அதை நினைத்துப் பார்த்தான். அதற்கு அப்போது இரும்பு கேட்டின் உயரம் மட்டுமே இருந்தது. ஆடு, மாடுகள் தின்று அழிந்து விடக்கூடாது என்பதற்காக அதைச்சுற்றி தகரத்தால் ஆன ஒரு மறைப்பு வைக்கப்பட்டிருந்தது. முனிசிபாலிட்டிக்காரர்கள்தான் அப்படிச் செய்திருந்தார்கள். தண்டாவளத்தைக் கடந்து காய்கறி விற்பவர்கள் நடந்து வரும் பாதை வழியேதான் கால்நடைகள் நிஸாமுதீனுக்கு வரும்.

‘‘என்ன, உட்காராமலே இருக்கீங்க?’’

‘‘ஒண்ணுமில்ல, மந்தாகினி.’’

மொட்டை மாடியில் சுற்றியிருக்கும் சுவருக்கு அருகில் நின்று கொண்டு பார்த்தால் நிஸாமுதீன் முழுவதும் தெரியும். மரங்கள் பசுமையாகப் படர்ந்திருக்க இங்குமங்குமாய் பழமையான வீடுகள், சுவர்கள் தெரிந்தன. ஹுமாயூனின் கல்லறைக்கு மேலே புறாக்கள் பறந்து கொண்டிருந்தன.

சாரங்கி வாசித்துக் கொண்டிருந்த கோவிந்தமோகன் இலேசாகத் தலையைக் குனிந்தவாறு கண்களைச் சிமிட்டி அவனுக்கு வணக்கம் சொன்னார். அவர் ஒரு வெள்ளை நிற லக்னோ, குர்தா அணிந்திருந்தார். குரு நாராயண்லாலுடன் மேடையில் இருக்கும்போது அவர் ஒரு பட்டு குர்தா அணிந்திருப்பார். அதன் கழுத்திலும் கைகளின் ஓரங்களிலும் பட்டு நூல்களால் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும்.

‘‘நாளை குருஜியின் நிகழ்ச்சி இருக்கு. தீன்மூர்த்தி ஹால்ல...’’ - மந்தாகினி சொன்னாள். ‘‘உங்களுக்கு கார்டு கிடைச்சிடுச்சில்ல?’’

‘‘இல்ல...’’ - அவன் சொன்னான்: ‘‘நான் உடல்நலம் சரியில்லாத என் தாயைப் பார்க்க ஊருக்குப் போயிருந்தேன்.’’

‘‘உங்க அம்மா உடம்புக்கு என்ன?’’

‘‘வயசானதுனால வர்ற உடல்நலக்குறைவுதான். அம்மாவுக்கு வயசு எழுபதைத் தாண்டிருச்சு.’’

‘‘நான் சத்தர்பூர் கோவிலுக்குப் போறப்போ உங்க அம்மாவுக்காக வேண்டிக்கிறேன்’’ என்றாள் மந்தாகினி.

‘‘உங்க அம்மாவோட பேர் என்ன?’’

‘‘தேவகியம்மா’’ என்றான் அவன். பிறகு தன் மனதிற்குள் அவன் தாயின் பெயருடன் சேர்த்துச் சொன்னான்: ‘‘மங்கலத்து வீட்டு கருணாகரன் நம்பியாரின் மனைவி தேவகியம்மா.’

அழைப்பு மணி மீண்டும் ஒருமுறை ஒலித்தது. இந்தமுறை அவன் சென்று கதவைத் திறந்தான். நிஸாமுதீனில் வசிக்கும் உருது கதாசிரியர் ஸர் ஃபரஸ் ஹுஸைன் அங்கு நின்றிருந்தார். அவர் சட்டைக்கு மேலே ஒரு காதி கோட் அணிந்திருந்தார்.

‘‘நான் தாமதமாயிடலையே?’’

‘‘இல்ல....’’ - மந்தாகினி சொன்னாள்: ‘‘குருஜி தியானத்துல இருக்காரு.’’

ஸர் ஃபரஸ் ஹுஸைன் காலணிகளைக் கழற்றி வைத்துவிட்டு தரை விரிப்பில் கால்களை மடக்கிக் கொண்டு உட்கார்ந்தார். அவரின் கை, கால்கள் நல்ல நீளத்தைக் கொண்டிருந்தன.

‘‘நீங்க ஏன் நின்னுக்கிட்டே இருக்கீங்க?’’ - மந்தாகினி சொன்னாள். ‘‘இங்கே உட்காருங்க.’’

அவன் பாதிச்சுவருக்கு அருகில், சாய்ந்து கிடக்கும் கொன்றை மரத்தின் கிளைகளுக்குப் பக்கத்தில் விரிப்பில் அவளுக்கு அருகில் போய் உட்கார்ந்தான். அவள் புடவை உடுத்தியிருந்தாள். மொட்டை மாடியில் நடனம் ஆடும்போது புடவையை மாற்றிவிட்டு வெள்ளை நிற குர்தாவை அணிந்து கொள்வாள். நடனம் மேடையில் என்றால் கண்களைக் கவரும் வண்ண ஆடைகளையும் அதற்குப் பொருத்தமான அணிகலன்களையும் அணிந்திருப்பாள். இந்த விஷயத்தில் அவள் நடனம் ஆடும் ஆண்களுடன் வாதம் செய்வதுகூட உண்டு. நிறைய நகைகளையும் பிரகாசமான ஆடைகளையும் விட்டுவிட்டு எளிமையான ஆடைகள் அணிந்து நடனம் ஆடும்படி அவன் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்வாள்.

இப்போது மரப்படியிலிருந்து மொட்டைமாடிக்கு வரும் வாசல் கதவு திறந்தே கிடக்கிறது. பெண்களும் ஆண்களும் அடங்கிய விருந்தினர்கள் திறந்த கதவு வழியாக வந்து விரிப்பில் உட்காருகிறார்கள்.

‘‘நான் போய் ஆடையை மாற்றிட்டு வர்றேன்.’’

மந்தாகினி எழுந்தாள். குருஜி மொட்டை மாடியில் நடனம் ஆடும்போது அவளும் அவருடன் சேர்ந்து நடனம் ஆடுவாள். ஒரு உயர்ந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரியின் மனைவியான மந்தாகினி குரு நாராயண்லாலின் சிஷ்யை மட்டுமல்ல; எல்லாமும்தான். அவள் அவருடைய வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வாள். அவருக்கு உணவு செய்து கொடுப்பாள். நடக்கும்போது அவருடன் செல்வாள். ஒருமுறை குருஜிக்கு காய்ச்சல் வந்தபோது அவள் தன்னுடைய வீட்டிற்கே போகாமல் இரவு முழுவதும் குருவின் அருகிலேயே உறங்காமல் இருந்து அவரைப் பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள்.

தியானம் முடிந்து குரு நாராயண்லால் மேலே வந்தார். அவரின் ரசிகர்கள் அவரைத் தொழுதவாறு எழுந்து நின்றனர்.

‘‘அம்மாவுக்கு எப்படி இருக்கு?’’

‘‘நலமா இருக்காங்க.’’


அவன் குனிந்து குருஜியின் காலைத்தொட்டு வணங்கினான்.

எல்லாரும் மீண்டும் அமர்ந்தார்கள். குருவின் கண்கள் எல்லாரையும் தாண்டி சாரங்கி வாசிக்கும் கோவிந்த் மோகனிடம் வந்து நின்றது.

‘‘கான் ஸாப் வரலையா?’’

‘‘இல்ல...’’

‘‘அவர் விஷயத்துல நான் தோத்துட்டேன்.’’

குரு ஒரு மாதிரி ஆகிவிட்டார். உஸ்தாத் அக்தர்கான்தான் தபலா வாசிப்பவர். நிஸாமுதீனிலேயே பெரிய வராந்தாவைக் கொண்ட ஒரு பழைய வீட்டில் வசிக்கும் அவர் மதுபானத்திற்கு அடிமையான ஒரு மனிதர். அவர் ஒரு அருமையான தபலாக்காரர். வேறு யார் தபலா வாசித்தாலும் குரு நாராயண்லாலிற்குத் திருப்தியே இருக்காது.

‘‘கான் ஸாப் வராம இருக்க மாட்டார்.’’

கோவிந்த்மோகன் தன் மடியிலிருந்த சாரங்கியை எடுத்து நீளமாக மார்பின்மீது மோதும்படி வைத்தார். அதன் கம்பிகள் மீண்டும் இசையை உண்டாக்கின.

வழக்கம்போல கான்ஸாப் கடைசி நிமிடத்தில் மூச்சு வாங்க ஓடி வருவார்.

‘‘நீங்க போன சனிக்கிழமை ஆஸாத் அலிகானோட கச்சேரிக்குப் போயிருந்தீங்களா?’’ ஸர் ஃபரஸ் ஹுசைன் கேட்டார்.

‘‘போயிருந்தேன். ஹவ் கேன் ஐ அஃபோர்ட் டு மிஸ் இட்?’’

கதாசிரியருக்கு அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்ட ராஜஸ்தானி ப்ளவ்ஸ் அணிந்திருந்தாள். அவளுடைய வலது கையில் சுட்டு விரல், நடுவிரல் இரண்டின் உள் பகுதியிலும் சிகரெட் கறை படிந்திருந்தது.

‘‘ஆஸாத் அலியோட கச்சேரியைப் பற்றி உங்களுக்கு என்ன தோணுது?’’

‘‘ரொம்பவும் அருமை. இப்போ ‘வாழ்ந்துட்டு இருக்கிறவங்கள்லேயே மிகச் சிறப்பான ருத்ரவீணைக்காரர்கள்ல ஒருத்தர் ஆஸாத்.’’

அவள் புடவையின் ஓரத்தை இழுத்துவிட்டு நகங்கள் சிவப்பாக இருக்கும் கால்களை மறைத்தாள். சுகன்யா என்ற பெயரைக் கொண்ட அவள் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் வழக்கமாக இசைக் கச்சேரிகளை விமர்சனம் செய்து எழுதுவாள்.

‘‘கான் ஸாப் எங்கே?’’

குரு நாராயண்லால் கோபத்துடன் நான்கு பக்கங்களிலும் பார்த்தார்.

‘‘கட்டாயம் கான் ஸாப் உடனே வராம இருக்க மாட்டாரு.’’ கோவிந்த் மோகன் சொன்னார். ‘‘அவர் எப்போதும் கடைசி நிமிடத்தில்தான் வந்து சேர்வார்.’’

‘‘சங்கர்லால் இசை விழாவுலதான் முதல்தடவையா நான் ஒரு தனி சாரங்கி கச்சேரியைக் கேட்டேன்’’ - பிசினஸ் எஸிக்கியூட்டிவ்வான ஹரி யாதவ் சொன்னார்: ‘‘ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைஞ்சுன்னு நினைக்கிறேன்.’’

‘‘இப்போ சாரங்கி ஒரு பிரதான இசைக்கருவி இல்ல...’’ - சுகன்யா சொன்னாள்: ‘‘அதுக்கு சித்தாரைப் போல சொந்தமா ஒரு மதிப்பு இருந்துச்சு. பண்டிட்ராம் நாராயண்தான் அதற்குக் காரணகர்த்தா.

உஸ்தாத் அக்தர்கான் கதவுக்கருகில் தோன்றினார். அவருடைய தபலாக்களைச் சுமந்துகொண்டு அவருடைய மகன் வஸீம்கான் அருகில் நின்றிருந்தான். வாயிலிருந்து வெற்றிலை எச்சிலை வெளியே துப்பி விட்டு தாமதமாக வந்ததற்காக எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அவர் விரிப்பில் போய் அமர்ந்தார். அவரைச் சுற்றிலும் பிராந்தியின் வாசனை பரவியது. குடிகாரராக இருந்தாலும் கான் ஸாப் இல்லாமல் குருஜியால் நடனம் ஆட முடியாது.

மந்தாகினி வெள்ளை நிற சல்வார் கமீஸ் அணிந்து இடுப்பில் ஒரு நீலநிற துணியை இறுகக் கட்டிக் கொண்டு சலங்கைகள் ஒலிக்க வந்தாள்.

மொட்டை மாடியில் பல இடங்களிலும் நின்றிருந்த ரசிகர்கள் விரிப்பில் அமர்ந்தார்கள்.

குருஜி மீண்டுமொருமுறை தியானித்தார்.

தகித தகித திம்...

குருஜியின் சலங்கை கட்டப்பட்ட கால்கள் அசையத் தொடங்கின. அவரின் கைகள் காற்றில் பறவைகளைப் போல நீந்தின. சிறிது நேரம் கடந்த பிறகு மந்தாகினி குருவுடன் சேர்ந்தாள்.

கதவுக்குப் பக்கத்தில் அழைக்காத ஒரு விருந்தாளி வந்து நின்றதை யாரும் கவனிக்கவில்லை. எல்லாரும் இசையிலும் நடனத்திலும் மூழ்கிப் போயிருந்தார்கள். அயர்ன் செய்யப்பட்ட ஆடைகள், நீல நிறக் கண்கள், வளைவுகள் உள்ள நீளமான பொன்நிறத் தலைமுடி... மொத்தத்தில் போட்டிச் செல்லியின் ஒரு ஓவியத்தைப் போல...

அவன் எழுந்து வந்திருக்கும் விருந்தாளிக்கு அருகில் சென்றான். அவள் பதைபதைத்து விட்டாள்.

‘‘இசையைக் கேட்டு வந்தேன்.’’ - அவள் வெட்கத்துடன் சொன்னாள்: ‘‘நான் போறேன்.’’

அவள் திரும்பி நடக்க ஆரம்பித்தாள்.

‘‘வேண்டாம்’’ - அவன் சொன்னான்: ‘‘எங்க கூட்டத்துல வந்து உட்காருங்க.’’

அவளுடைய பிரகாசமான நீலக் கண்களில் மகிழ்ச்சி தெரிந்தது. அவள் அவனுடன் சேர்ந்து வந்து விரிப்பில் உட்கார்ந்தாள்.

குரு நாராயண்லாலும் மந்தாகினியும் இரண்டு பம்பரங்களைப் போல் சுழன்று கொண்டிருந்தார்கள்.

‘‘என் பேரு பவித்ரன்.’’

‘‘என் பேரு மரியா.’’

உஸ்தாத் அக்தர்கானின் தபலாவிலிருந்து ஒரு அடைமழையைப் போல பொழிந்து கொண்டிருந்த இசையில் அவளுடைய மென்மையான குரல் கரைந்து போனது.

 

மழையுடன் சேர்ந்து பனிக்கட்டிகளும் வந்து விழுந்தன. குண்டும் குழிகளுமாக இருந்த தெருக்களில் கலங்கலான நீரும் சேறும் நிறைந்திருந்தன. நொறுங்கிய கண்ணாடித் துண்டுகளைப் போல பனிக்கட்டிகள் சிதறிக்கிடந்தன. மங்கலான வானம் ஜுமா மஸ்ஜித்திற்கு மேலே இறங்கிக் காணப்பட்டது.

மழை நின்றவுடன் வியாபாரிகள் தெருக்களில் இறங்கினார்கள். ரிக்ஷாக்களும் கால்நடையாக நடந்தவர்களும் தெருக்களை நிறைத்தார்கள். பழமையான கட்டிடங்களிலிருந்து அப்போதும் மழைநீர் வழிந்து தெருக்களில் விழுந்து கொண்டிருந்தது. தெருவழியே மரியா நடந்தாள். நனைந்து போன பொன்நிறத் தலைமுடிகள் கன்னங்களில் ஒட்டியிருந்தன. ஒரு அழுகிப்போன மரப்பலகையில் கோழிகளின் பாதங்கள் கிடந்தன. மஞ்சள் நிறத்தில் விறைத்துப்போன விரல்களின் குவியல். தாடியில் மருதாணி தடவிய, கிழிந்து போன சட்டையும், தொப்பியும் அணிந்த ஒரு கிழவன் ஒரு பொட்டலம் கோழிப்பாதங்களை வாங்கினான். அவனுடைய காதுகளின் உள்ளேயும் கைகளிலும் அழுக்கு அதிகமாகச் சேர்ந்திருந்தது.

‘‘ஏய், ஹஸ்ஸன்’’ - கிழவன் கேட்டான்: ‘‘இது எவ்வளவு நாட்களுக்கு முன்னாடி வந்தது?’’

‘‘பழையதா?’’ - ஹஸ்ஸன் சொன்னான்: ‘‘இன்னைக்கு காலையில அறுத்த கோழிகளோட கால்கள்.’’

ஹஸ்ஸன் சொன்னதை நம்பாத கிழவன் ஒரு கால் துண்டை எடுத்து அதிலிருந்த ஒரு விரலைக் கடித்து சுவைத்தான். மிகவும் பழையதல்ல என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான் அவன் காசைக் கொடுத்தான்.

ஆட்டின் குடலை விற்பனை செய்யும் வியாபாரியைக் கடந்து அவள் மஸ்ஜித்திற்கு முன்னால் வந்தாள். மழை பெய்து கழுவி சுத்தம் செய்த அதன் பெரும்பாலான படிகளில் பக்தர்களும் பார்வையாளர்களும், போதைப் பொருட்கள் பயன்படுத்துபவர்களும், பிச்சைக்காரர்களும் சோம்பேறிகளும், தெரு விலை மாதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

தெருவில் சுற்றும் சிறுவர்கள் அவளைச் சுற்றி நின்றார்கள். கழுத்தில் மஃப்ளர் கட்டிய பிணத்தைப் போல வெளிறிப்போய்க் காணப்பட்ட ஒரு இளைஞன் அவளுக்கு அருகில் வந்து டாலர்கள் விற்க வேண்டுமா என்று கேட்டான்.


பாதையோரத்தில் உட்கார்ந்து ஈக்கள் செத்துக் கிடக்கும் பிரியாணியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு தடித்த நடுத்தர வயது மனிதன் உடுப்பிற்குப்க் கீழே தெரிந்த அவளின் மென்மையான கால் பகுதியையே வெறித்துப் பார்த்தான். ஒரு தெரு விலைமாது பயணி ஒருவனை எப்படியோ வளைத்து மக்கள் கூட்டத்தில் மறைந்து போனாள். மரியா மஸ்ஜித்தின் படிகளில் ஏறினாள். தெருவில் சுற்றித்திரிந்த சிறுவர்களும் பிச்சைக்காரர்களும் ஈக்களைப் போல அவளைப் பின் தொடர்ந்தார்கள்.

ஒன்று சேர்வதும் பிரிவதுமாக இருந்த மனிதர்கள் எறும்புகளைப் போல ஊர்ந்து கொண்டிருந்த தெருக்கள் வழியாக அவள் தன் பயணத்தைத் தொடர்ந்தாள்.

மாலை நேரத்தில் மிகவும் களைத்துப்போய் அவள் பஹாட் கஞ்சில் கட்டணம் குறைவான தன்னுடைய ஹோட்டல் அறைக்குத் திரும்பி வந்தாள். சிமெண்ட் தரையில் நல்ல குளிர்ச்சி இருந்தது. ஒடுகலான ஜன்னல் வழியாக ஒரு நாற்றம் வந்து கொண்டிருந்தது. அவள் தோல் பையிலிருந்து ஒரு பொட்டலத்தை வெளியே எடுத்தாள். அந்தப் பொட்டலம் நிறைய டாலர்களின் ட்ராவலர்ஸ் செக்குகளாக இருந்தன. அந்த டாலர்களை தரையில் பரப்பி வைத்து, அவள் அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய பிரகாசமான நீல நிறக் கண்களில் கண்ணீர் வந்தது.

 

அடுத்தது மல்ஹர் ராகம். அது முடிந்துவிட்டால் வெளியே கிளம்புவதற்காக அவன் தான் உட்கார்ந்திருந்த இடத்தை மாற்றினான். வெளியே போகும் வழிக்கு அருகிலிருந்த அந்த இருக்கையிலிருந்து யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக அவன் தியேட்டரை விட்டு வெளியே வரலாம். ஒரு கச்சேரி முடிவதற்கு முன்னால் இருந்த இடத்தை விட்டு வெளியேறுவது என்பது அவனுக்குச் சிறிதும் பிடிக்காதவிஷயம். ஆனால், அவனுக்கு அப்படிப் போவதைத் தவிர வேறு வழியில்லை. அலுவலகத்தில் இரவு எட்டரை மணிக்கு ஆரம்பிக்கும் ஒரு மீட்டிங்கில் அவன் கட்டாயம் இருந்தாக வேண்டும்.

முன்னால் இறக்கி வைத்திருந்த சித்தாரை ஒரு கைக்குழந்தையைப் போல மிகவும் கவனமாக எடுத்து மடியில் வைத்து பண்டிட் வினய் முத்கல் அடுத்த ராகத்தை ஆரம்பிப்பதற்குத் தயாரானார். சனிக்கிழமையாக இருந்ததால் தியேட்டரில் நல்ல கூட்டமிருந்தது. வெளியே டிசம்பர் இரவில் குளிர்ந்த மின்விளக்குகளின் ஒளி பரந்திருந்தது.

மெல்லிய நறுமணத்துடன் ஒரு வெண்மையான முகம் தன்னுடைய முகத்திற்கு அருகில் நெருங்குவதை அறிந்து அவன் திரும்பிப் பார்த்தான். மின் விளக்கு ஒளியின் வளைவுகளால் ஆன பொன்நிற முடி.

‘‘என்னை ஞாபகத்துல இருக்கா?’’ தாழ்ந்த குரலில் முணுமுணுப்பதைப் போல அவள் கேட்டாள்.

‘‘மரியா’’ என்றாள் அவன்.

பண்டிட் வினய் முக்தலின் கை விரல்கள் சித்தாரில் இயங்கிக் கொண்டிருந்தன.

‘‘நான் உங்க பக்கத்துல உட்கார்ந்துக்கட்டுமா?’’

அவனுக்கு அருகில் இரண்டு இருக்கைகள் ஆள் இல்லாமல் வெறுமையாகக் கிடந்தன. கதவுக்குப் பக்கத்தில் இருக்கும் இருக்கைகள் எப்போதும் காலியாகத்தான் இருக்கும். யாரும் அங்கு உட்கார விரும்ப மாட்டார்கள்.

அவன் பின்னாலிருந்து எழுந்து வந்து அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் உட்கார்ந்தான். மல்ஹர் ராகம் முடிவது வரை அவன் எதுவும் பேசாமல் இருந்தான். அடுத்தது ஒரு ஜுகல்பந்தி என்று அவன் நினைத்தான். தபலா வாசிப்பது உத்தம் மகாராஜ். அந்த இடத்தை விட்டுப் போக அவனுடைய மனம் சம்மதிக்கவில்லை. ஆனால், அவன் போயாக வேண்டும்.

‘‘எனக்கு இன்னும் ஒரு வாரம்தான் மீதி இருக்கு. என்னோட விசா தீரப் போகுது.’’

‘‘எங்கேயெல்லாம் போனீங்க?’’

‘‘பனாரஸ், ரிஷிகேஷ், கயா...’’

‘‘இனியும் பார்க்கறதுக்கு எவ்வளவோ இடங்கள் இருக்கு.’’

‘‘ஆமாம். உங்க நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கறதுன்னா பல பிறவிகள் வேணும்.’’

சித்தாரின் கம்பிகள் இசைந்தன.

அவன் விடை பெற்று எழுந்தான்.

‘‘உத்தம் மகாராஜ் தபலாவோட ஸ்வரத்தைச் சரி செய்றாரு.’’

‘‘நாளைக்கு நான் உங்களை வந்து பார்க்கட்டுமா?’’ - அவள் கேட்டாள்.

‘‘நான் ரொம்பவும் பிஸியா இருப்பேன்... நாளை ஞாயிற்றுக்கிழமை ஆச்சே! எனக்கு அலுவலகத்துல வேலை இருக்கு.’’

‘‘அப்படின்னா உங்களுக்கு வசதிப்படுறப்போ... நேரம் கிடைக்கிறப்போ.’’

அவள் எதற்காகத் தன்னை வந்து பார்க்க நினைக்கிறாள் என்று அவன் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தான்.

ஜுகல்பந்தி ஆரம்பமானது.

அவன் விடை பெற்றுக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றான். காலியாகக் கிடந்த மூன்று இருக்கைகளுக்கு மத்தியில் அவள் தனியாக உட்கார்ந்து இசையைக் கேட்டாள்.

வெளியில் குளிர்கால இரவு நேரத்தில் தனிமையும் அமைதியும் நிறைந்திருந்தன.

 

நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. மலர்களுக்கும் பறவைகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டபோது அது அவளாகத் தான் இருக்கும் என்று அவன் நினைத்தான். அவன் நினைத்தது தப்பாகவில்லை. வழக்கம்போல முழங்கால் வரை இருக்கும் ஒரு அயர்ன் பண்ணிய ஆடையை அவள் அணிந்திருந்தாள். கழுத்தில் ஒரு நீளமான மஃப்ளரைச் சுற்றியிருந்தாள்.

‘‘வாங்க மரியா.’’ கதவைத் திறந்து அவன் சொன்னான். அவள் அவனுடைய அறைக்குள் நுழைந்தாள். அவனுடைய இருப்பிடம் எதுவுமே இல்லாமல் இருந்தது. சுவரில் ஒரு கடிகாரமோ, ஓவியமோ எதுவும் இல்லை. அந்தப் பெரிய அறையில் சிறிய கால்களைக கொண்ட சில நாற்காலிகள் மட்டுமே இருந்தன.

‘‘நான் வந்தது உங்களுக்குத் தொந்தரவா இருக்கா? இப்பவும் நீங்க வேலையில பிஸியா இருக்கீங்களா?’’

‘‘மரியா, நான் எவ்வளவு பிஸியா இருந்தாலும் உங்களுக்காக சில நிமிடங்கள் ஒதுக்கி வைக்கிறேன்.’’

சிரிக்கக் கற்றுக் கொள்வதைப் போல அவள் புன்னகைத்தாள்.

மிகவும் ஒல்லியான கால்களைக் கொண்ட நாற்காலிகளில் அவர்கள் நேருக்கு நேர் அமர்ந்தார்கள்.

‘‘விடுமுறைக் காலத்தை நான் மெக்ஸிக்கோவில் செலவழிக்கத் தீர்மானிச்சிருந்தேன். ஆனா, கடைசி நிமிடத்துல ஒரு அழைப்புக்கேட்டு நான் இங்கே வந்துட்டேன். உங்கள் நாட்டை நான் ரொம்பவும் விரும்புகிறேன்.’’

‘‘மகிழ்ச்சி.’’

அவன் தன்னுடைய கால்களை நீட்டி வைத்தான்.

மிகவும் அடர்த்தியாக இருந்த துணியால் ஆன ஆடைக்குக் கீழே அவளுடைய அழகான கால்கள் தெரிந்தன.

‘‘என்னோட விசா தீர்றதுக்கு இன்னும் ரெண்டு நாட்கள் மட்டும் தான் இருக்கு. உங்களால எனக்கு உதவ முடியுமா? என்னால இந்த நாட்டை விட்டுப் போக முடியாது.’’

அவன் சிந்தனையில் மூழ்கினான்.

‘‘என்ன ஒண்ணுமே பேச மாட்டேங்குறீங்க? எனக்கு இந்த நாட்டுல யாரையும் தெரியாது.’’

‘‘இந்த விஷயத்துல என்னால என்ன செய்ய முடியும், மரியா?’’

‘‘தயவு செய்து எனக்கு உதவுங்க. ஒரு வாரத்துக்காவது என்னோட விசாவை நீட்டித் தர முயற்சி பண்ணுங்க.


அதுக்காக எவ்வளவு பணம் வேணும்னாலும் நான் செலவழிக்கத் தயாரா இருக்கேன்.’’

‘‘உங்க கையில?’’

‘‘எதுக்கு என்னை ‘உங்க’ன்னு கூப்பிடுறீங்க? ‘நீ’ன்னு கூப்பிட்டா போதாதா?’’

‘‘உன் கையில அவ்வளவு பணம் இருக்குதா என்ன, மரியா?’’

அவள் தோல் பையிலிருந்த டாலர் கட்டுகளை அவனிடம் காண்பித்தாள்.

‘‘இந்த அளவுக்குப் பணக்காரியான நீ எதனால பஹாட் கஞ்சில் இருக்கிற ஒரு சுத்தமில்லாத ஹோட்டல்ல இருக்கணும்?’’

‘‘உங்க நாட்டோட ஆன்மாவுக்குள்ளே நுழையக்கூடிய வாசல் கதவே தரித்திரமும் அசுத்தமும்தான்.’’

‘‘உனக்கு யார் அப்படிச் சொன்னது சிநேகிதியே?’’

‘‘என் மனதுதான். காசியிலும் ஹரித்துவாரிலும் நான் பார்த்தது அதைத்தான்.’’

அவன் சிந்தனையில் மூழ்கினான். அவள் வெறுமனே கிடந்த தரையையும் எதுவுமே இல்லாமலிருந்த சுவரையும் பார்த்தாள். ஒரு பெரிய ஆகாயக் கப்பலில் இருப்பதைப் போல் அவளுக்குத் தோன்றியது.

‘‘எனக்கு ஒரு ஆளைத் தெரியும். அந்த ஆளால கட்டாயம் உனக்கு உதவ முடியும். ஆனால், டாலர்களைக் காட்டி உன்னால அந்த ஆளை வசப்படுத்த முடியாது. மெஹ்ரோலியில் பண்ணை நிலமும் பஞ்சாபில் கோதுமை வயல்களும் ட்ராக்டர்களும் உள்ள அந்த ஆளுக்கு டாலர்கள் பெரிய விஷயம் இல்லைன்னு சொல்லலாம்...’’

‘‘அப்படின்னா அந்த ஆளுக்கு என்னதான் வேணும்?’’

‘‘மரியா, கடவுள் பேரைச் சொல்லி கேட்டுக்கறேன். நீ என்கிட்ட அதைக் கேட்காதே.’’

‘‘என்னோட விசாவை நீட்டிக்குறதுக்காக லோக்நாயக் பவன் வாசல்ல மணிக்கணக்கில் நான் நின்னேன். அங்க இருந்த ஆளுங்கக்கிட்ட கெஞ்சினேன். பிச்சைக்காரி மாதிரி நின்னேன். அவங்க முன்னாடி நின்னுக்கிட்டு வெட்கத்தையும் மானத்தை மறந்து நான் அழுதேன். அதற்குப் பிறகும் அவங்களோட மனசு இளகல...’’

அவளுடைய கண்கள் ஈரமாயின. அவன் உள்ளே சென்று ஒரு தாளில் எழுதப்பட்ட முகவரியுடன் வந்தான். அவள் அதைப் பார்த்தாள். ‘விஸ்வம்பர் ஸாஹ்னி...’’

‘‘மரியா, இனிமேல் உன் அதிர்ஷ்டம் போல நடக்கட்டும். இங்கே இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி என்னைப் பார்த்து நீ சொல்லணும். எந்தக் காலத்திலும் என்னை நீ சபிக்க மாட்டேன்...’’

அவள் அடுத்த நிமிடம் அவனுடைய கைகளைச் சேர்த்துப் பிடித்தாள்.

‘‘இந்த நாட்டுலயே என்னோட ஒரே நண்பர் நீங்கதான். உங்களோட இந்த அன்பு எப்போதும் என்கூட இருக்கட்டும்.’’

‘‘எப்போதும்...’’ அவன் சொன்னான்.

அவர்கள் பிரிந்தார்கள்.

 

மரியா விஸ்வம்பர் ஸாஹ்னியின் அலுவலகத்தில் காத்திருந்தாள். அங்கு உட்கார்ந்திருக்கும்பொழுது ஒரு தரித்திர நாடான பாரதத்தில்தான் தான் இப்போது இருக்கிறோம் என்பதை அவளால் நம்புவதற்கே கஷ்டமாக இருந்தது. ஒரு நவநாகரீக மன்னரின் அரண்மனையில் இருப்பதைப் போல்தான் அவளுக்குத் தோன்றியது.

‘‘வாங்க’’ என்றாள் ஸாஹ்னியின் அழகான பெண் செக்ரட்டரி. புன்னகைத்தவாறு அவள் சொன்னாள்: ‘‘உங்களுக்கு அஞ்சு நிமிடங்கள்தான் இருக்கு. மிஸ்டர் ஸாஹ்னி ரொம்பவும் பிஸி.’’

மரியா தரை விரிப்பு விரிக்கப்பட்ட அறைக்குள் நுழைந்தாள். அவளுக்குப் பின்னால் கதவு ஓசையே இல்லாமல் அடைத்தது. விஸ்வம்பர் ஸாஹ்னி தலையைக் குனிந்தவாறு என்னவோ எழுதிக் கொண்டிருந்தார். அவருடைய கண்ணாடியின் ப்ரேமும் பேனாவும் பொன் நிறத்தில் இருந்தன. தன்னுடைய நரைத்த தலைமுடியை அவர் ஒரு பக்கமாக வாரி விட்டிருந்தார்.

‘மரியா, இந்த நாட்டை ஆட்சி செய்யறது ஏதாவது ஒரு கட்சின்னு நீ நினைச்சிருந்தா, உனக்கு ஏதோ கோளாறுன்னு அர்த்தம். பாரதத்தோட ஒவ்வொரு அணுவையும் ஆட்சி செய்துக்கிட்டு இருக்குறது வட இந்தியாவுல இருக்குற நிலக்கிழார்களும் தொழிலதிபர்களும்தான்.’

பவித்ரனின் வார்த்தைகள் அவளுடைய காதுகளில் முழங்கின.

அவள் விஸ்வம்பர் ஸாஹ்னிக்கு முன்னால் போய் நின்றாள். தோளிலிருந்த தோல் பையைக் கழற்றி அவள் நாற்காலிமீது வைத்தாள். இளம் சிவப்பு நிறத்திலிருந்த நீளமான மஃப்ளரைக் கழுத்திலிருந்து எடுத்து நாற்காலியின்மீது வைத்தாள். அதற்குப் பிறகு அவள் தான் அணிந்திருந்த மேலாடையையும் பாவாடையையும் கழற்றித் தரை விரிப்பின் மீது போட்டாள்.

‘‘குழந்தை, உனக்கு என்ன வேணும்?’’ தலையை உயர்த்தாமல் அவர் கேட்டார்.

‘‘விசா...’’

அவளுடைய தொண்டையில் துயரம் வந்து அடைத்தது. தன்னைத்தானே கட்டுப்படுத்த முடியாமல் அவள் அழுதாள்.

‘‘தொட்டதற்கும் தொடுவதற்கும் அழுவறதுன்றது எங்க நாட்டு பெண்களோட இயற்கை குணம். ஐரோப்பாவுல இருக்குற பெண்கள் வெளியே தெரியிற மாதிரி அழறது இல்ல. சொந்தக் கணவன் இறந்தாக் கூட மத்தவங்க முன்னாடி அழறது வெட்கக்கேடான விஷயம்னு நினைக்கிறவங்க நீங்க. இருந்தாலும் நீ...’’

மத்திய யுகத்தில் இத்தாலிய ஓவியத்தில் இருக்கும் வீனஸைப் போல தனக்கு முன்னால் நின்றிருக்கும் இளம் பெண்ணை அவள் முதல் தடவையாக முகத்தை உயர்த்தி பார்த்தார். அவள் பரிதாபப்படும்படி நின்றிருந்தாள்.

‘‘உன் பாஸ்போர்ட்டை என் செக்ரட்டரிக்கிட்ட கொடு’’ - அவர் சொன்னார்: ‘‘இப்போ நீ போகலாம்.’’

‘‘நான் எப்போ வரணும்?’’ அவள் கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது. நீலக்கண்களில் மகிழ்ச்சி மின்னியது.

‘‘இன்னைக்கு இரவு. மெஹ்ரோலியில இருக்கற என்னோட பண்ணை வீட்டுக்கு வா. உன் விசா தயாரா இருக்கும்.’’

அவள் தன்னுடைய ஆடைகளை எடுத்து அணிந்து திரும்பத் திரும்ப அவருக்கு நன்றி கூறிவிட்டு, கூட்டிலிருந்து சுதந்திரமாக்கப்பட்ட ஒரு பறவையைப் போலத் தெருவை நோக்கி நடந்தாள்.

‘பவித்ரா, நான் உன் நாட்டை ரொம்பவும் நேசிக்கிறேன். மூணு மாசத்துக்கு எனக்கு விசா... மூணு வருடங்கள் இந்த நாட்டுல என்னால வாழ முடிஞ்சா...’’

அன்று இரவு விஸ்வம்பர் ஸாஹ்னி அவளுடைய பாஸ் போர்ட்டை திரும்பத் தந்தார். அதைத் திறந்து பார்த்தபோது அவளுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவளுடைய விசா நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஹரிதபங்கிற்கிடையில் இருந்த அந்தப் பண்ணை வீட்டின் மாடியில் மங்கலான வெளிச்சம் இருந்தது.

 

‘‘மரியா, விஸ்வம்பர் ஸாஹ்னியால் உனக்கு உதவ முடியும்னு எனக்குத் தெரியும். ஆனா...’’

அவள் அவனுடைய சவரம் செய்து சுத்தமாக இருந்த முகத்தைப் பார்த்தாள்.

‘‘விஸ்வம்பர் ஸாஹ்னி யாருக்கும் எதையும் வெறுமனே செய்து தர்றது இல்ல. உன்கிட்ட இருந்து அவர் கட்டாயம் பதிலுக்கு பதிலா எதையாவது வாங்கியிருப்பார்.’’

‘‘என்கிட்ட இருந்து பணமா? இல்ல... நான் அவருக்கு எதுவும் தரலையே!’’

‘‘நீ ஒரு நாள் அவர் கூட அவரோட பண்ணை வீட்டுல தங்கினியா இல்லியா?’’

‘‘என் வயசுல உள்ள நண்பர்களோட சேர்ந்து தூங்கறது எங்க நாட்டுல சாதாரண ஒரு விஷயம். விஸ்வம்பர் ஸாஹ்னி எனக்கு ஒரு பெரிய உதவியைச் செய்திருக்கார். அவர் என்னோட நண்பர்.’


பண்ணை வீட்டின் அழுக்குகள் இல்லாத பெரிய கண்ணாடி ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சம் படுக்கையில் விழுந்து கொண்டிருந்தது. தூரத்தில் பழமையான மெஹ்ரோலி கிராமத்தின் சிதிலமடைந்த வீடுகள் தெரிந்தன.

‘‘உண்மையாகச் சொல்லப் போனால் நான் ஏதாவதுதர வேண்டியது நண்பரே, உங்களுக்குத்தான். நீங்கதானே விஸ்வம்பர் ஸாஹ்னியை எனக்கு அறிமுகப்படுத்தியது! உங்களால இன்னும் ஒரு மாதம் இந்த நாட்டுல ஒரு பறவையைப் போல நான் சுதந்திரமா திரியலாம்...’’

‘‘வேண்டாம்... எனக்கு எதுவும் நீ தரவேண்டாம்.’’

அவன் கோட்டைக் கழற்றினான். சட்டைக்குள்ளிருந்து ஒரு ருத்ராட்ச மாலையை வெளியே எடுத்து நீட்டி, அதை நெற்றியில் ஒற்றினான்.

‘‘என்ன அது?’’

அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.

‘‘இக்கட்டான நேரங்கள்ல எனக்கு மன தைரியம் தர்றது இதுதான்.’’

அவன் அந்த ருத்ராட்சமாலையை மீண்டும் சட்டைக்குள் போட்டு கோட்டை எடுத்து அணிந்து அமைதியாக அவளுக்கு முன்னால் போய் உட்கார்ந்தான். அவனுடைய அறையிலிருந்த வெண்மையான சுவர்கள் வெறுமையாக இருந்தன. அங்கிருந்த நாற்காலிகளில் வெள்ளை குஷன்கள் போடப்பட்டிருந்தன. அந்த விசாலமான அறையே மொத்தத்தில் வெண்மையாக இருந்தது.

‘‘நான் போறேன்.’’ - அவள் எழுந்தாள். ‘‘ஒரு மாதம் கழிச்சு நிரந்தரமா திரும்பிப் போறப்போ நிச்சயம் நான் உங்களை வந்து பார்ப்பேன் - விடை பெறுவதற்காக.’’

‘‘கட்டாயம்...’’

அவன் அமைதியாகச் சிரித்தான்.

 

அவனுடைய தாய் மரணத்தைத் தழுவினாள்.

 

ஒருநாள் ‘குடுகுடா’ என்று புகை விட்டபடி ஓடிக் கொண்டிருக்கும் புகை வண்டியில் அவள் பத்தான்காரர்களின் நகரத்தில் வந்து இறங்கினாள். புகை வண்டி நிலையத்தின் அருகில் மலைகளின் நிழல் விழுந்திருந்தது.  நல்ல வெயிலில் மூழ்கியிருந்த தெருவில் குளிர் காற்று வீசிக் கொண்டிருந்தது. அவள் குதிரை வண்டியில் ஏறினாள்.

‘‘நீங்க எங்கே போகணும்?’’ - வண்டிக்காரன் கேட்டான். அவன் தன் தலையில் அழுக்குப் பிடித்த ஒரு கம்பளித் தொப்பியை வைத்திருந்தான்.

‘‘உனக்கு விருப்பமான இடத்துக்கு.’’

அவன் அவளை உற்றுப் பார்த்து விட்டு தன் கையிலிருந்த சாட்டையால் குதிரையின் பின் பக்கத்தைக் குத்தினான். டோங்கா முன்னோக்கி ஓடியது.

அகலம் குறைவான தெருக்களில் சலவை செய்யப்பட்ட ஆடைகளும் தொப்பியும் அணிந்த பத்தான்காரர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். பாதையோரத்தில் அமர்ந்து வியாபாரிகள் உலர்ந்த பழங்களை விற்றுக் கொண்டிருந்தார்கள். கற்கள் பதித்த ஒடுகலான தெருக்களில் பல வண்ணங்களிலுள்ள ஆடைகள் விற்பவர்களும் பிரம்புக்கூடை விற்பவர்களும் கண்ணில் பட்டார்கள். இரண்டு சிறுவர்கள் வெறுமனே டோங்காவிற்குப் பின்னால் ஓடினார்கள். அவள் மகிழ்ச்சிப் பொங்க அவர்களுக்கு நேராக நாணயங்களை வீசி எறிந்தாள். நகரத்தின் எல்லைகளில், மலைகளில் வெயில் பிரகாசமாகத் தெரிவதாகவும், பின்னர் மங்கலாவதாகவும் இருந்தது.

‘‘உன் பேர் என்ன?’’

‘‘டோங்காக்காரன்.’’

‘‘இதுதான் உன் பேரா?’’

‘‘எல்லாரும் என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.’’

நான்கு பக்கங்களிலிருந்தும் குதிரைகளின் குளம்புச் சத்தமும் மணிகள் ஒலிக்கும் சத்தமும் கேட்டது. அகலம் குறைவான பாதைகள் வழியாக டோங்காக்கள் முனகியவாறு ஒடிக் கொண்டிருந்தன.

டோங்காக்காரன் வண்டியை நிறுத்தினான். மரத்தால் ஆன பால்கணிகளும் படிகளும் உள்ள பெரியதும் பழையதும் ஆன ஒரு கட்டிடம் அது. பால்கணியில் பூசப்பட்டிருந்த பச்சைச் சாயம் மங்கிப் போயிருந்தது.

இறங்கவில்லையா என்று கேட்பது மாதிரி டோங்காக்காரன் அவளைப் பார்த்தான். அவள் நீண்ட பாவாடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டு படியில் கால் வைத்துக் கீழே இறங்கினாள். அவளின் சிறிய தோல் பையை அவன் எடுத்து கீழே வைத்தான்.

‘‘அதோ... நேரா மேல ஏறிப் போனா போதும்.’’

டோங்காக்காரன் மரப் படியைச் சுட்டிக் காட்டினான். அவள் மேலே பார்த்தாள். பால்கணியின் சிதிலமடைந்த கைப்பிடிகளில் வண்ணத் துணிகள் உலரப் போடப்பட்டிருந்தன. அங்கு தொப்பி அணிந்த ஒரு வயதான ஒரு மனிதன் தெருவைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

‘‘மேலே என்ன இருக்கு?’’

அவள் கேட்டாள். டோங்காக்காரன் அவளை அங்கே கொண்டு வந்து இறக்குகிறான் என்றால், அங்கு என்னவோ விசேஷம் இருக்க வேண்டும் அல்லவா? அவன் பதிலெதுவும் சொல்லாமல் ‘எல்லாம் உனக்குத் தெரியும்’ என்பது மாதிரி அவளைப் பார்த்துச் சிரித்தான். அவள் அவனுக்குக் கூலியைத் தந்துவிட்டு படிகளில் ஏறினாள்.

சாயம்போன விரிப்பு விரிக்கப்பட்ட ஒரு மேல் தளத்திற்கு அவள் ஏறிச் சென்றாள். ஜன்னல்கள் இல்லாததால் அங்கு ஒரே இருட்டாக இருந்தது. பாதி உலர்ந்த ஆப்ரிக்கட் பழத்தின் வாசனை அங்கு தங்கியிருந்தது.

‘‘யார் அது?’’

கதவைத் திறந்து ஒரு வயதான மனிதன் அந்த இடத்திற்கு வந்தான். சிறிது பகல் வெளிச்சம் அங்கு இருந்தது. வயதான அந்த மனிதனின் தலையிலிருந்த பெரிய கம்பளித் தொப்பி அவனுடைய நெற்றியை முழுமையாக மறைத்தது.

‘‘என் பேரு மரியா.’’

‘‘உன்னை இங்கே கொண்டுவந்தது ரஹ்மதுல்லாவா?’’

‘‘ஆமா...’’

அந்த டோங்காக்காரனின் பெயர் ரஹ்மதுல்லாவாக இருக்குமோ?’’

‘‘உட்காரு.’’

வயதான மனிதன் சொன்னான். அவன் வட்டமாக இருந்த ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் ஆப்ரிக்கட் பழத்தை அவளுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தான். அவள்  ஒரு பழத்தை எடுத்து மேற்தோலை நீக்கிவிட்டு சுளையை எடுத்து வாய்க்குள் போட்டாள். நிறம் மங்கிப்போன விரிப்பில் சப்பணமிட்டு அமர்ந்து அவள் வயதான மனிதனின் முகத்தைப் பார்த்தாள்.

‘‘என் பேரு அமானத்துல்லா. நாலு தலைமுறைகளாகவே எங்க குடும்பம் இங்கேதான் வசிக்குது. அதுக்கு முன்னாடி எங்க முன்னோர்கள் பெஷாவரில் இருந்தாங்க. உலர்ந்த பழ வகைகளை ஏற்றி அனுப்புறதுதான் எங்களோட குலத்தொழில். எனக்கு ஆம்பளை பசங்க இல்ல. வயசாயிடுச்சு. கஷ்டப்பட்டு வேலை செய்ய முடியாது. அதனால கொஞ்ச நஞ்சம் சட்ட விரோதமான காரியங்களை நான் செய்துக்கிட்டு இருக்கேன். நானும் கல்யாணம் ஆகாத இளைய மகளும் வாழணும்ன்றதுக்காக கருணை வடிவமான அல்லா இந்த வயசான காலத்துல என்னை மன்னிக்கட்டும்.’’

அவன் உள்ளே சென்று ஈயத் தாளில் சுற்றப்பட்ட ஒரு சிறிய பொட்டலத்தை கொண்டுவந்து அவளிடம் தந்தான்.

‘‘ரஹ்மதுல்லாவோட ஆள்ன்றதுனால தர்றேன். இல்லாட்டி அறிமுகமில்லாதவங்ககிட்ட நான் வியாபாரமே வச்சுக்கிறது இல்ல.’’

அவள் பொட்டலத்தைத் திறந்து முகர்ந்து பார்த்தாள்.

‘‘சந்தேகம் வேண்டாம். அருமையான சரக்கு.’’

வயதான மனிதன் சொன்னான்: ‘‘நாலு தலைமுறையா ரொம்பவும் நேர்மையா உலர்ந்த பழங்கள் வியாபாரம் செய்துக்கிட்டு வந்தோம். இப்போ வேற வழி இல்லாததுனால...’’

அவள் பொட்டலத்தை தோல் பைக்குள் வைத்துவிட்டு பணத்தைத் தந்தாள்.


‘‘மகளே, உனக்கு தங்கறதுக்கு வேற இடம் எதுவும் இல்லேன்னா இங்கேயே தங்கலாம். இங்கே நானும் என்னோட இளைய மகள் ஸரீனாவும் மட்டும்தான் இருக்கோம். அவளுக்கு உன் வயசுதான். அவளுக்கு நாவல் பழத்தைப் போல வயலட் நிறத்துல கண்கள் இருக்கு. இருந்தாலும், அவளுக்கு ஒரு புருஷனைக் கண்டுபிடிக்க இந்த கிழவனால முடியல. பெண் பிள்ளைகளோட நல்ல குணங்களோ, அழகோ இப்போ முக்கியம் இல்ல, மகளே. அவங்களோட அப்பன்மார்களோட சொத்தும் பணமும்தான் எல்லாருக்கும் பெரிசு.’’

வயதான மனிதன் அமானத்துல்லா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

‘‘நான் வெளியே கொஞ்சம் போயிட்டு வரட்டுமா?’’ - அவள் சொன்னாள்: ‘‘ஒருவேளை, ராத்திரி தூங்கறதுக்கு நான் இங்கே வந்தாலும் வரலாம்.’’

‘‘கருணை வடிவமான அல்லா உனக்கு அருள் செய்யட்டும்.’’

நகரத்தில் மலைகளின் நிழல்கள் நீண்டு வருவதாகவும் பெரிதாகவும் இருந்தன. அகலம் குறைவான தெருக்களில் பத்தான்காரர்கள் நிறைந்து காணப்பட்டார்கள். அவர்களின் பெரிய உடம்பும், தனித்துத் தெரிந்த மூக்கும், அணிந்திருந்த ஆடைகளும் அவளுக்கு மிகவும் பிடித்தன. அந்த பத்தான்காரர்களுக்கு நடுவில் ஒரு  தூக்கத்தில் நடக்கும் பெண்ணைப் போல அவள் மெதுவாக நடந்தாள். பத்தான்காரர்களின் பருமனான கைகள் அவள்மீது பட்டன.

மலைகள் இருண்டன... நகரத்தில் பொன் உருகியதைப் போல இருந்த வெயில் மறைத்தது.

கடைகள் அடைக்கப்பட்டன. பாதைகள் ஆள் நடமாட்டம் இல்லாமல் ஆயின. டோங்காக்கள் காணாமற் போயின. தெரு விளக்கின் மஞ்சள் நிற வெளிச்சத்தில் ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடிப் போயிருந்த தெரு வழியாக அவள் நடந்தாள். பூக்கள், பழக்கள் ஆகியவற்றன் வாசனை அப்போதும் அங்கே போகாமல் தங்கியிருந்தது.

அன்று இரவு அவள் அமானத்துல்லாவின் மகன் ஸரீனாவிற்குப் பக்கத்தில் படுத்துறங்கினாள்.

மறுநாள் அவள் பத்தான்காரர்களின் நகரத்திடம் விடைபெற்றாள்.

அவனுக்கு ஜெய்ஸால்மரில் தபாலில் போடப்பட்ட ஒரு தபால் அட்டை வந்தது.

ஜெய்ஸால்மரில் குப்பை, கூளங்களுக்கு மத்தியில் குளிர்ந்துபோய் காணப்படும் ஒரு வாடகை அறையிலிருந்து அவள் எழுதி அனுப்பிய கடிதம் அது.

அவள் எழுதியிருந்தாள்: ‘என் விசா தீருவதற்கு இன்னும் இருபத்துநான்கு மணி நேரம் மட்டுமே இருக்கிறது. நாளை சூரியன் உதயமாகும் நேரத்தில் எனக்கு இந்த மண்ணில் இருக்க உரிமையில்லை என்ற நிலை இருக்கும். நான் இங்கு நாடு கடத்தப்பட்ட ஒரு பெண்ணாக நின்றிருப்பேன்.

எங்கு வேண்டுமென்றாலும் விஸ்வம்பர் ஸாஹ்னிமார்கள் இனியும் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால், அவர்களுக்கு முன்னால் ஆடையை அவிழ்த்துப்போட்டு விட்டு நிற்க இனிமேல் என்னால் முடியாது. எனக்குள் என்னவெல்லாமோ மாற்றங்கள் உண்டாகியிருக்கின்னன.

நான் உங்களுக்காகப் பிரார்த்திக்கிறேன்.

மரியா.

 

அவள் கங்கை நதிக்கு மேலே இருந்த பாலத்தில் நின்றுகொண்டு கீழே பார்த்தாள். வானமும் நீரும் இருண்டு காணப்பட்டன. மழை மேகங்கள் பாலத்திற்கு மேலே திரண்டு போய்க் கொண்டிருந்தன. மழை நீரில் நெருப்பு நிறத்திலுள்ள அவளுடைய தலைமுடி முகத்திலும் கழுத்திலும் ஒட்டியிருந்தன.

அவள் தோல் பையிலிருந்து தன்னுடைய பாஸ்போர்ட்டை வெளியில் எடுத்தாள். விழுந்து கொண்டிருந்த மழைத்துளிகள் பட்டு அதன் கறுத்த மேலட்டை ஈரமானது. இரும்புப் பாலத்தின் உயரமான தூண்களுக்கு நடுவில் கருமையான மேகங்கள் நகர்ந்து கொண்டிருந்தன.

அவள் பாஸ்போர்ட்டைப் பிரித்து அதைப் பார்த்தாள். அவள் பிறந்த நாளும் இடமும் அதில் குறிக்கப்பட்டிருந்தன. அவளுடைய ஒரு சிறு புகைப்படம் அதில் ஒட்டப்பட்டிருந்தது. அவள் பயணம் செய்தநாடுகளின் விசா முத்திரைகள் அதில் இருந்தன. உலகத்தின் அறியப்படாத நாடுகளுக்கான கதவுகள்... இந்த பாஸ்போர்ட்தான். அவளை இந்த நாட்டிற்குக் கொண்டு வந்தது.

அவள் மழை விழுந்து நனைந்த முத்திரையைப் பார்த்தாள். அவளுடைய விசா முடிந்துவிட்டது. தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிப் போவதற்காக விமான நிலையத்திற்குச் சென்றால், அங்கு வைத்தே அவள் கைது செய்யப்படுவாள்.

சில நாட்களிலேயே அவளுக்கு மிகவும் பிடித்துப் போய்விட்ட இந்த நாட்டில் அவளுக்கு இனிமேல் இடமில்லை. அவளால் நம்பமுடியவில்லை. உலகத்தைப் பிரித்து எல்லைகள் உண்டாக்கிய மனிதர்கள்மீது அவளுக்குக் கோபம் வந்தது. இந்த உலகம் எல்லைகள் இல்லாத ஒரே ஒரு நாடாக இருந்தால்... பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமலே இருந்தால்... அவள் அப்படியொரு நிலைக்காக ஆசைப்பட்டாள்.

அவள் நதியைப் பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தாள். கலங்கிப் போய்க் கொண்டிருக்கும் நதியில் படகுகள் காணாமற் போயிருந்தன. பாலமும் வெறிச்சோடிப் போயிருந்தது. எப்போதாவது ஒரு கார் பாலத்தின் வழியே கடந்து போனது.

பாஸ்போர்ட்டும் விசாவும் இல்லாமலிருந்தால்...

அவள் முணுமுணுத்தாள்.

அவள் தன்னுடைய பாஸ்போர்ட்டை தூரத்தில் நீரில் வீசி எறிந்தாள். நதிக்கு மேலே ஒரு நிமிடம் அது அசையாமல் நின்றது. பிறகு ஒரு சுழலில் பட்டு அது திரும்ப ஆரம்பித்தது. சுழலின் ஓட்டத்திற்கேற்ப பாஸ்போர்ட்டும் சேர்ந்து நகர்ந்தது.

பிறகு சுழலிலிருந்து தனியே பிரிந்த அது நதியின் ஓட்டத்தோடு சேர்ந்து கிழக்குப் பக்கம் நோக்கி படுவேகமாக ஓடியது. இரும்பு பாலத்திற்குக் கீழே அது மறைந்தும் போனது.

அவளுக்கு இப்போது நிம்மதியாக இருந்தது. அவளுக்கு இனிமேல் நாடும், முகவரியும் இல்லை. அவள் சுதந்திரப் பறவையாகிவிட்டாள்.

தன்னையும் அறியாமல் மனதிற்குள் மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு இனிய கூட்டு இசை எழும்புவதை அவளால் உணர முடிந்தது.

பாலத்திற்கு மேலே அவள் நடந்தாள். கதக் நடனக் கலைஞர் குரு நாராயண்லாலின் கால் சலங்கைகள் அவளுக்குள் சப்தித்தன. உஸ்தாத் அக்தர்கானின் தபலா அவளுக்குள் ஒலித்தது. முத்கலின் சித்தாரும் கோவிந்த் மோகனன் சாரங்கியும் அவளுக்குள் ஒலித்தன. ஆனந்தம் பெருக்கெடுத்த அவள் கங்கைக்கரை வழியே நடந்தாள்.

அவளும் இசையும், மழையும் மட்டும்.

 

ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அவன் - புல்லாங்குழல் இசையைக் கேட்டவாறு படுத்திருந்தான். அவன் புதிதாக வாங்கிய குறுந்தட்டு அது. மணிக்கணக்காக அவன் அப்படியே படுத்திருந்தான்.

ஜன்னலுக்கு அப்பால் வெளிச்சம் படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருந்தது. வெறுமனே கடந்த அவனுடைய அறையின் சுவர்களுக்கு வெண்மை ஏறிக் கொண்டிருந்தது. அவன் தன் கைகளை தலைக்குப் பின்னால் சேர்த்து வைத்துக் கொண்டு கண்களைத் திறந்தவாறு படுத்திருந்தான். படுக்கையில் நேற்று இரவு அவன் படித்த புத்தகம் திறந்தபடி கவிழ்ந்து கிடந்தது.

‘‘மகனே, பவித்ரா...’’

புல்லாங்குழலின் இசையில் அவனுடைய தாயின் குரல்.

‘‘எப்பவும் இப்படியே தனியா இருக்கறதுன்றதுதான் உன் எண்ணமா? உனக்கு வயசு என்ன ஆச்சு?’’

‘‘எனக்கு இப்படியே இருக்கணும்ன்றதுதான் ஆசை.’’


‘‘நான் இனி அதிக காலம் உயிரோடு இருக்கமாட்டேன். நான் போயிட்டா உனக்கு யார் இருக்காங்க, மகனே?’’

‘‘அம்மா, நீங்க இருக்கறப்பவும் எனக்குன்னு யாருமில்ல.’’

தாய் தன் மகனை உற்றுப் பார்த்தாள். அவள் முகம் என்னவோ போலிருந்தது. அவன் தலை குனிந்திருந்தான்.

‘‘நான் எப்பவும் தனிதான் அம்மா.’’

குறுந்தட்டுக்க மேலே லேசர் விளக்கு அணைந்தது. புல்லாங்குழல் இசை நின்றது.

 

‘‘நண்பரே, சொல்லுங்க நான் ஒண்ணு கேட்கட்டுமா?’’

‘‘கேளுங்க.’’

அவன் சொன்னான். அந்த இரண்டு நண்பர்களும் த்ரிவேணி ஆர்ட் காலரியை ஒட்டியுள்ள காஃபி ஹவுஸில் அமர்ந்திருந்தனர்.

"நீங்க தனியா இருக்கறதைத்தான் விரும்புறீங்கன்னு சொன்னீங்க."

"ஆமா..."

"உங்களுக்குத் திருமணம் செய்துக்கணும்ன்ற ஆசை இல்ல..."

"இல்ல..."

"நீங்க ஒரு நல்ல திடகாத்திரமான இளைஞர். உங்க மனசு தனிமையை விரும்பலாம். ஆனால், உங்க உடம்புக்கு ஒரு துணை வேண்டாமா?"

"நண்பரே, கட்டாயம்.."

"திருமணமாகாத நீங்க இந்த விஷயத்தை எப்படி சரி பண்ணுறீங்க?"

"எனக்கு ஒரு சினேகிதி இருக்கா."

"படுக்கறதுக்கு மட்டும்?-"

"ஆமா..."

"அவள் ஒரு விலைமாதா?"

"தெரியாது."

"ஒரு நண்பரோட மனைவி?"

"இல்ல..."

"யார் அவ?"

"தெரியாது."

"நிச்சயமா அவ ஒரு கெட்டவளா இருக்கணும்."

"இருக்கலாம்-."

"அவள் திருமணம் ஆனவளா? அவளோட குடும்பத்தைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாதா?"

"தெரியாது."

"அவளோட பேரு?"

"வினீதா பல்லா."

"பார்க்கறதுக்கு அழகா இருப்பாளா?"

"ம்..."

"நீங்க அவளுக்குப் பணம் தருவீங்களா?"

"அவளுக்குப் பணம் தேவையில்ல."

"அவள் பணக்காரியா?"

"இருக்கலாம். எனக்குத் தேவைப்படுறப்போ, அவள் எனக்குப் பணம் தருவா."

"உங்க உறவு வினோதமா இருக்கே?"

"ஆமா.."

"நீங்க எங்க வச்சு சந்திப்பீங்க? வாரத்துல எத்தனை நாட்கள்? இல்லாட்டி மாசத்துல..."

"நான் கணக்கு வைக்கல."

"நீங்க எப்பவாவது ஒரு முறை எனக்கு அவளை அறிமுகப்படுத்தி வைப்பீங்களா?"

"எதுக்கு?"

"சும்மா பார்க்கத்தான். நாம நண்பர்கள் ஆச்சே! ஆனால், உங்களுக்கு இதுல கஷ்டம் இருக்குன்னா வேண்டாம்."

"வினீதா பல்லாவை உங்களுக்-கு அறிமுகப்படுத்தி வைக்கிறதுல எனக்கு சந்தோஷம்தான்."

அந்த கஃபற்றேரியாவில் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து சற்று தூரம் தள்ளி வெளிச்சம் நிறைந்த கதவுக்குப் பக்கத்தில் ஒரு இளம்பெண் அமர்ந்திருந்தாள். நல்ல சதைப்பிடிப்பான உடம்பைக் கொண்டிருந்த அவள் ஒரு மூக்குத்தி அணிந்திருந்தாள். அவள் காப்பியைக் குடித்துக் கொண்டே ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள்.

"நண்பரே, வாங்க. நான் உங்களுக்கு வினீதா பல்லாவை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்."

அவன் நாற்காலியை விட்டு எழுந்து அவளுக்கு அருகில் வந்தான்.

 

அவன் தன்னுடைய வீட்டிற்கு முன்னால் ஒரு போலீஸ்காரர் நின்றிருப்பதைப் பார்த்து சற்று அதிர்ச்சியடைந்தான். முன்பு ஒரு முறை இதுமாதிரிதான் ஒரு போலீஸ்காரர் அவனைத் தேடி வந்தார். அவனுக்கு சில நக்ஸலைட்டுகள் தொடர்பு இருக்கிறதா என்பதை விசாரிப்பதற்காக அந்த போலீஸ்காரர் அப்போது வந்திருந்தார்.

அவன் தன்னுடைய வீட்டைத் திறந்து, இசையை வைத்துவிட்டு போலீஸ்காரரை உட்காரும் படி அழைத்தான்.

"குடிக்கிறதுக்கு என்ன வேணும்?"

"எதுவும் வேண்டாம்."

போலீஸ்காரர் அமரவில்லை. தயங்கியவாறு நின்றார். அவன் போலீஸ்காரரை வற்புறுத்தி உட்கார வைத்தான்.

"நான் உங்களுக்குக் கொஞ்சம் பீர் தரட்டுமா? என் ஃப்ரிட்ஜில் நிறைய குளிர வச்ச பீர் இருக்கு..."

"வேண்டாம்."

போலீஸ்காரர் தன்னுடைய குரலை கனமாக ஆக்கினார். அவர் சொன்னார்: "நான் ஒரு ஆளைப் பற்றி விசாரிக்குறதுக்காக வந்திருக்கேன்."

"யாரைப் பற்றி?"

"மரியா..."

அவளுடைய முழுப் பெயரையும் ஞாபகத்தில் வைத்திராத போலீஸ்காரர் தன் கையிலிருந்த தாளைப் பார்த்தார்.

"அவளைப் பற்றி விசாரிக்குறதுக்குத்தான் நான் வந்தேன்."

"மரியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரிஞ்சுக்கணும்?"

"உங்களுக்கு அவளைத் தெரியுமா?"

"தெரியும்."

"அவள் இப்போ எங்கேயிருக்கா?"

"எனக்குத் தெரியாது. சில மாதங்களுக்கு முன்னால் ஜெய்ஸால்மர்ல இருந்து அவள் எனக்கு ஒரு கார்டு போட்டிருந்தா. அதற்குப் பிறகு அவளைப் பற்றி எந்த ஒரு விவரமும் இல்ல."

"அந்த கார்டைக் காட்ட முடியுமா?"

"முடியாது. அது தனிப்பட்ட விஷயம்."

"அதுல அவள் என்ன முகவரி எழுதியிருந்தா? அந்தக் கடிதத்துல அவள் என்ன எழுதியிருந்தா?"

"அதுல அவள் தன்னோட முகவரியை எழுதல."

"அப்படியா? நான் இதுக்கு மேல உங்களைக் கஷ்டப்படுத்த விரும்பல" - போலீஸ்காரர் எழுந்தார்: "அவளைப் பற்றி ஏதாவது தகவல்கள் தெரிஞ்சா, போலீஸ்ல எஸ்.எச்.ஓவுக்குத் தெரிவிக்க மறக்க வேண்டாம்-."

"நிச்சயமா..."

போலீஸ்காரர் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

அவன் தன்னுடைய வெண்மையான அறையில் இரண்டு முறை அங்குமிங்குமாய் நடந்தான். நீட்டப்பட்ட விசாவிற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. போலீஸ்காரர் அவளைத் தேடிப் பிடித்து கைது பண்ணுவார். அவன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

'மரியா, நீ எங்கேயிருக்கே? இவ்வளவு பெரிய நாட்டின் ஏதாவதொரு தெருவுல நீ உன்னோட பொன்நிற தலைமுடியுடன் அலைஞ்சு திரிஞ்சுக்கிட்டு இருப்பே... இல்லாட்டி ஏதாவதொரு பழமையான கோவில்ல எண்ணெயும் நீரும் பூவும் விழுந்து கிடக்குற கருங்கல் படியில நீ உட்கார்ந்துக்கிட்டு இருப்பே..'- அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான்.

 

குருத்துவாராவின் மேற்பகுதி தங்கமுலாம் பூசப்பட்டது. உச்சி வெயிலில் அது மினுமினுத்தது. அதற்கு முன்னால் இலவசமாகக் கிடைக்கும் மதிய உணவிற்காக வரிசை வரிசையாக ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் பிச்சைக்காரர்கள். சீச்கியர்கள் அவர்களுக்கு முன்னால் சப்பாத்தி பரிமாறினார்கள். வேகமாகக் கடந்து போகும் தலையில் மஞ்சள் நிறத் துணி கட்டிய சீக்கியர்களில் இரண்டு வெளுத்த கைகளைப் பார்த்து ஒரு முகம் உயர்ந்தது. அது - மரியா.

அவளுடைய பொன் நிறத் தலைமுடி அழுக்குப் படிந்திருந்தது. அவளுடைய கண்கள் உள்ளே போயிருந்தன.

பிச்சைக்காரர்களுக்கு மத்தியில் அமர்ந்து வேகவேகமாக அவள் சப்பாத்தியையும் டாலையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

 

நவாபின் பழைய அரண்மனைக்கு முன்னால் கார்கள் வரிசையாக நின்றிருந்தன. பல கார்களும் வெளிநாடுகளில் தயாரானவை.

அழுக்குப் பிடித்த தலைமுடியும் கிழிந்த ஆடையுமாக இருந்த அவள் அரண்மனையின் வாசலில் வந்து நின்றபோது காவலாளி அவளைத் தடுத்தான்.

"உனக்கு என்ன வேணும்?"

காவலாளி பயமுறுத்தும் குரலில் கேட்டான். அவனுடைய இடுப்பில் உறையில் போடப்பட்ட துப்பாக்கி தொங்கிக் கொண்டிருந்தது.

"நான் பிஸ்மில்லாகானோட கச்சேரி கேட்க வந்திருக்கேன்."

காவலாளி அவளை உற்றுப் பார்த்தான். அவளுடைய இரண்டு பக்கங்களிலும் தொங்கிக் கொண்டிருந்த தளர்ந்து போன கைகள் எந்த காரணமும் இல்லாமல் வியர்த்துக் கொண்டிருந்தன.


"கச்சேரி தொடங்கியாச்சு. உள்ளே இடமில்லே.."

"நான் ஒரு மூலையில நின்னுக்கிறேன்."

"மகளே, உள்ளே யாரெல்லாம் இருக்காங்கன்னு உனக்குத் தெரியுமா? நவாப்மார்கள், ராஜ்மாதாமார்கள், கலெக்டர்... இதுதவிர, உத்தரபிரதேசத்தின் ஒரு அமைச்சரும் இருக்கார். மகளே, இங்கிருந்து போறதுதான் உனக்கு நல்லது. உன்னைப் போல உள்ளவங்களுக்கு அல்ல இந்தக் கச்சேரி..."

காவலாளி கனிவான குரலில் சொன்னான். வியர்வையைத் துடைப்பதற்காக அவன் தொப்பியைக் கழற்றியபோது, தலை முழுவதும் நரைத்த ஒரு வயதான கிழவன் அவன் என்பதை அவள் தெரிந்து கொண்டாள்.

செயலற்ற நிலையில் நின்றிருந்த அவள் அரண்மனையின் வெளிச்சுவரில் காதுகளை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள். அரண்மனைக்குள்ளிருந்து எங்கோ தூரத்தில் கேட்பதைப் போல ஷெனாய் இசை அவளுடைய காதுகளில் வந்து விழுந்தது. அவள் சுவரோடு தன்னை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

 

வெறிச்சோடிப் போயிருந்த நதிக்கரையில் இருந்த ஆலமரத்திற்குக் கீழே சடைமுடியுடன் உட்கார்ந்திருந்த சன்னியாசிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு அவள் சொன்னாள்: "நான் இந்த நாட்டுக்கு வந்து இன்னைக்கோட ஒரு வருடம் முடியுது. அப்போ என் தலைமுடி பொன் நிறத்துல இருக்கும். என் தோள்ல தொங்கின தோல்பை நிறைய டாலர்கள் இருக்கும். நான் எல்லாத்தையும் இழந்துட்டேன். அதைப் பற்றி எனக்குக் கவலையே இல்ல. காரணம்- இந்த நாட்டுக்கு வந்த பிறகு விலை மதிப்புள்ள பலவற்றையும் நான் சம்பாதிச்சிருக்கேன்."

போலீஸ்காரர்கள் அவளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கே அவர்களிடம் பிடிபட்டு விடுவோமோ என்ற பயம் காரணமாக ஒரு இடத்திலும் நிரந்தரமாக நிற்காமல் அவள் தொடர்ந்து ஒரு இடம் விட்டு இன்னொரு இடத்திற்குப் போய்க் கொண்டேயிருந்தாள்.

"பிரபு, என்ன காரணத்தால் நான் இந்த நாட்டை இந்த அளவுக்கு விரும்புறேன்னு எனக்கே தெரியல. இங்கே இருக்குற அழுக்குகள்ல நான் புனிதத்தைப் பார்க்கிறேன். இங்கே இருக்கிற தரித்திரத்துல நான் செழிப்பைப் பார்க்கிறேன்..."

காசியில் அகலம் குறைவான ஒரு தெருவில் அதிகாலை நேரத்தில் அவள் கற்பழிக்கப்பட்டாள். நதிக்கரையில் பூஜை செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்த சன்னியாசிகள்தான் அப்படியொரு காரியத்தைச் செய்தார்கள். கமண்டலத்தில் இருந்த நீரையும் இலையில் இருந்த பூக்களையும் தரையில் வைத்துவிட்டு, அடைக்கப்பட்டிருந்த கடையின் திண்ணையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை பூசாரிகள் கூட்டமாகச் சேர்ந்து தங்களின் பலத்தை பயன்படுத்தி நாசமாக்கி விட்டார்கள்.

"பிரபு, எல்லாம் முடிஞ்சதும் அவர்கள் என் பக்கத்துல வந்து என் முகத்தைப் பார்த்துக்கிட்டு என்னைச் சுற்றி நின்னாங்க. அவங்க கண்கள்ல பரிதாப உணர்ச்சி இருந்துச்சு."

தளர்ந்து போய் தரையில் கிடந்த அவளை ஒரு கன்றுக்குட்டியை கொண்டு போவதைப் போல அவர்கள் நதியை நோக்கிக் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவளைப் புனித நதியில் மூழ்கச் செய்தார்கள். அவள் மீது கமண்டலத்திலிருந்த நீரைக் கொட்டினார்கள். அவளின் தலைமீது மலர்களைத் தூவினார்கள்... அவர்கள் அவளைப் புனிதமாக்கினார்கள்.

"அவர்களின் கண்கள்ல கங்கை அன்னையோட அன்பு, கடல் மாதிரி பெருகி நிற்கிறதை நான் பார்த்தேன்."

சன்னியாசிகள் காலியான கமண்டலங்களுடனும் இலைகளுடனும் அந்த இடத்தை விட்டு போகும் போது அவளைப் பார்த்துச் சொன்னார்கள்: "மகளே, கங்கை அன்னை பெயரால் நாங்கள் உன்னை ஆசீர்வதிக்கிறோம்-."

"அப்போ என் தலைமுடி போட்டிச் செல்லியோட வீனஸ்ஸோடது மாதிரி இருக்கும்..."

அவள் தன்னுடைய தலைமுடியை ஒட்ட வெட்டினாள். அதற்குச் சாயம் தேய்த்து கறுப்பாக்கினாள். தன்னைப் போலீஸ்காரர்கள் கண்டுபிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவள் இப்படியெல்லாம் செய்தாள்.

"பிரபு. இனிமேல் என் தோலோட நிறத்தையும் நான் மாற்றணும்னு நினைக்கிறேன். பனியைப் போல வெண்மையான இந்தத் தோல் எனக்கு ஒரு சாபம்னுதான் சொல்லணும். இந்த நிறத்தை மட்டும் மாத்திட்டா, என்னை யாருமே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அதுக்குப் பிறகு நிம்மதியா நான் ஒரு இடத்துல இருக்கலாம். நான் மரணத்தைத் தழுவுற நிமிடம் வரை..."

சடைமுடி வளர்ந்திருந்த சன்னியாசி கஞ்சா போதையிலிருந்து எழுந்து கண்களைத் திறந்தார்.

இளவேனிற்கால வெயில் தன்மீது பட நதிக்கரையில்அவள் ஆடைகள் எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தாள். வெயில் பட்டுக் கறுத்துப் போன தன்னுடைய தோலுக்கு அதன் வெண்மை நிறம் இல்லாமற் போகட்டும் என்று அவள் மனதிற்குள் பிரார்த்தித்தாள்.

அப்படியே அவள் மணிக்கணக்கான நேரம் இளவேனிற்கால வெயிலில் கிடந்தாள். சூரியனின் வெம்மை பட்டு அவளுடைய உடலில் வெடிப்புகள் உண்டாயின. எனினும், அவள் எழவில்லை. ஒரு தவஞானியின் பிடிவாதத்துடன் அவள் தன் தவத்தைத் தொடர்ந்தாள்.

 

"எனக்கு முன்னாடி யாரு?" சிறிதாக வெட்டிய தலைமுடியும் சதைப்பிடிப்பான முகமும் சிவந்த உதடுகளும் உள்ள ரதி வியாஸ் கேட்டாள்.

"வினிதா பல்லா."

"அவள் இப்போ எங்கே?"

"தெரியாது."

தன்னுடைய வாழ்க்கையில் கடந்து வந்து ஒரு நிமிடம் தங்கி மீண்டும் கடந்து போன பெண்களின் முகவரிகளைப் பொதுவாகவே அவன் ஞாபகத்தில் வைத்திருப்பதில்லை.

"வினிதாவுக்கு முன்னாடி...?"

"எதுக்காக நீ இதையெல்லாம் கேக்குற?"

அவன் அவளுடைய 'க்ராப்' வெட்டப்பட்ட தலைமுடியைக் கையால் வருடினான். அவனைப் போலவே நாகரீகம் தெரிந்தவள் தான் அவளும்.

"விருப்பமில்லைன்னா வேண்டாம்."

"விருப்பமில்லாம இல்ல. அவங்களோட முகவரிகள்... சில நேரங்கள்ல பெயர்கள் கூட என் ஞாபகத்துல இருக்காது."

‘‘எனக்குப் பிறகு திரும்பவும் பெண்கள் உங்க வாழ்க்கையில கடந்து வரலாம்...’’

‘‘நிச்சயமா... எனக்கு அவங்க தேவைப்படுற காலம் வரை...’’

‘‘நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?’’

சிறிதும் எதிர்பார்க்காமல் அவள் கேட்டாள். அவள் கணவனை இழந்த, ஒரு குழந்தை உள்ள விதவை.

‘‘வேண்டாம். அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்’’- அவன் கறாரான குரலில் சொன்னான்: ‘‘என்னைக்கும் இப்படியே சுதந்திரமா இருக்கிறதைத்தான் நான் விரும்புறேன்.’’

அவள் தன்னுடைய சிவந்த உதடுகளை அவனுடைய முகத்திலும் முடியிலும் உரசினாள்.

‘‘இங்க பாருங்க, உங்க தலைமுடியில நரை ஏறிடுச்சு. உங்களோட இளமை போய்க்கிட்டே இருக்கு. சீக்கிரமே பெண்களை மகிழ்ச்சிப்படுத்துற உங்களோட சக்தி உங்ககிட்ட இல்லாமப் போகும். அப்போ அவங்க உங்களைத் தேடி வரமாட்டாங்க. அப்போ உங்களுக்கு ஒரு துணை வேண்டாமா?’’

‘‘அப்போ எனக்கும் அவங்களோட தேவை வேண்டாம்னு வரும்.’’

அவள் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து தரையில் முழங்காலிட்டு அமர்ந்து அவனுடைய மடியில் தலைவைத்தவாறு அவள் சொன்னாள்: ‘‘நான் உங்களை ரொம்பவும் விரும்புறேன்.’’


ரதி வியாஸுடன் அவனுக்கு உள்ள உறவு மூன்று மாதங்கள் மட்டுமே நீடித்திருந்தது. அவள் ஹரீதாபாத்தில் உள்ள ஒரு தொழிபதிபதரை திருமணம் செய்து கொண்டாள்.

அவனுக்கு இப்போது சினேகிதிகள் இல்லை.

‘‘நீங்க உங்க முடிக்கு ‘டை’ அடிக்கணும்!’’

நண்பர்கள் அவனிடம் சொன்னார்கள். அவன் சிரித்தான். அவனுக்கு அதற்கான தேவை இல்லாமலிருந்தது.

 

நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நாட்கள்... வாரங்கள்... மாதங்கள். காலத்தை ஒரு புல்லாங்குழல் இசையாகத்தான் அவன் உணர்ந்தான்.

 

அவனுடைய எதுவும் இல்லாத அறையின் கதவுக்கு அருகில் மீண்டும் ஒரு போலீஸ்காரர் வந்து நின்றார்.

‘‘இந்த ஆள் நீங்கதானா?’’

போலீஸ்காரர் ஒரு சிறு தாளை நீட்டினார். அது கசங்கிப் போயிருந்தது.

‘‘ஆமா...’’

அந்தத் துண்டுத் தாளில் அவனுடைய பெயரும் முகவரியும் எழுதப்பட்டிருந்தது. அதில் வேறு எதுவும் இல்லை. அது மரியாவின் கையெழுத்து என்பதை அவன் தெரிந்து கொண்டான்.

‘மரியா, நீ வெயிலுக்காக ஏங்கிக்கிட்டு இருக்குற உன் ஐரோப்பாவுக்குத் திரும்பிப் போயிட்டேன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

மரியா, நீ இப்போ எங்கே இருக்கே?

உன் பொன் நிறத் தலைமுடியையும் அமைதியான இள நீலக் கண்களையும் நான் மறக்கல...’

போலீஸ் ஜீப் உயர்ந்து நிற்கும் கட்டிடங்களுக்கு நடுவில் போகும் சாலை வழியே மேற்குப் பக்கம் நோக்கிச் சென்றது.

‘‘நீங்க என்னை எங்கே கொண்டு போறீங்க?’’

போலீஸ்காரர் பதிலெதுவும் சொல்லவில்லை.

அவன் தன்னுடைய கேள்வியை மீண்டுமொருமுறை கேட்கவில்லை. தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அடுத்த நிமிடம் அடக்கிக் கொண்ட அவன் போலீஸ் ஜீப்பில் ஒரு கைதியைப் போல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான்.

ஜீப் நகரத்தின் எல்லையைத் தாண்டி நெடுஞ்சாலை வழியாக ஓடியது. சாலையில் இருபக்கங்களிலும் கோதுமை வயல்கள் காட்சியளித்தன.

வெயில் குறைந்த நேரத்தில் சிவப்பான கட்டிடங்கள் நிறைந்துள்ள, மணல் காற்று வீசிக் கொண்டிருந்த நகரத்தை அவர்கள் அடைந்தார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னால் ஜீப் நின்றது. போலீஸ்காரர்கள் அவனுக்கு ஓரம் உடைந்த டம்ளரில் ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த தேநீர் கொண்டுவந்து தந்தார்கள். தொண்டை வறண்டு போயிருந்த அவன் ஆர்வத்துடன் அந்தத் தேநீரைக் குடித்தான்.

இன்னொரு போலீஸ் அதிகாரியும் ஜீப்பில் ஏறினார்.

‘‘நாம மருத்துவமனைக்குப் போறோம்.’’

போலீஸ் அதிகாரி சொன்னார்: ‘‘உங்க உதவி எங்களுக்குத் தேவைப்படுது.’’

டோங்காக்கள் ஓடிக்கொண்டிருந்த செங்கற்கள் பதித்த பாதை வழியே ஓடிய ஜீப் மருத்துவமனைக்கு முன்னால் போய் நின்றது.

அவன் போலீஸ்காரர்களைப் பின் தொடர்ந்தான்.

அவர்கள் பிணவறைக்கு முன்னால் நின்றார்கள். துணியால் சுற்றப்பட்ட ஒரு சிறு சடலத்தை அவர்கள் அவனுக்கு முன்னால் கொண்டு வந்து வைத்தார்கள். அவனுடைய கைவிரல்கள் சட்டைக்குள்ளேயிருந்த ருத்ராட்ச மணிகளைத் தேடிக் கொண்டிருந்தன.

‘இருக்கக்கூடாது... இருக்கக்கூடாது...’

அவர்கள் சடலத்தின் முகத்திலிருந்து துணியை நீக்க முயன்ற போது அவன் தடுத்தான்.

‘‘இது யார்னு எனக்குத் தெரியும்.’’

போலீஸ் அதிகாரி தன் கையிலிருந்த தாளை அவனிடம் நீட்டினார்.

போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அது.

மரியா, உனக்கு என்ன நடந்தது?

‘நான் உங்களைப்போல ஆகணும்னு என் மேற்தோலோட நிறத்தை மாற்ற முயற்சித்தேன். அதுக்கு நான் சூரிய தேவனோட அருளைத் தேடினேன்...’

மரியா.

‘சூரியனோட வெப்பம் பட்டும் என்னோட உடல் முழுக்க வெடிப்புகள் உண்டாச்சு...’

மரியா.

‘என்னோட உடல்ல இருந்த வெடிப்புகள் புண்களா மாறிடுச்சு...’

அவன் தலைகுனிந்து நின்றிருந்தான்.

‘‘இவ யாரு?’’

போலீஸ் அதிகாரி கேட்டார். சட்டைக்குள் ருத்ராட்ச மணிகளைத் தேடிப் பிடித்திருந்த அவனுடைய கை மார்பின்மீது அசைவே இல்லாமல் இருந்தது.

‘‘இவ உங்களுக்கு யார்?’’

‘‘மனைவி!’’

ஒரு நிமிடம் அங்கு அமைதி நிலவியது.

‘மரியா, வா... நாம போகலாம்.’

அவர்கள் கைகளைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். அவர்கள் எதுவுமே இல்லாத சுவர்களைக் கொண்ட அவனுடைய வீட்டிற்கு வந்தார்கள். ஒல்லியான கால்களைக் கொண்ட சிறிய கட்டிலில் விரிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற படுக்கையில் அவன் அவளைப் படுக்க வைத்தான். அவளுடைய கண்களும் உதடுகளும் புன்னகைத்தன. அவன் அவளுடைய வெள்ளை நிற வயிற்றில் தன்னுடைய தலையை வைத்து படுத்த அவன் சொன்னான்: ‘‘மரியா, இன்னைக்கு நம்மோட முதலிரவு...’’ அதற்குப் பிறகு இரண்டு நதிகள் ஒன்று சேர்வதைப்போல அவர்கள் ஒருவரோடொருவர் இணைந்தார்கள்...

கோதுமை வயல்களுக்கு மத்தியில் ஆள் நடமாட்டமில்லாத பாதை வழியே ஓடிக் கொண்டிருந்த ஜீப்பில் கைகளில் முகத்தை வைத்திருந்த அவன் அமைதியாக உட்கார்ந்திருந்தான். அவனுக்குள் ஒரு புல்லாங்குழல் இசை ஒலித்தது. காலம் அவன் மூலமாக கடந்து போய்க் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.