Logo

கிருஷ்ணனின் குடும்பம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5985
krishnanin-kudumbam

நேற்று மாலையில் ஆரம்பித்தது நெற்றி நரம்புகளின் இந்தக் குடைச்சல். தொடர்ந்து தலைவலியும் வந்து சேர்ந்தது. படுத்தபோது ஏதோ ஆபத்து வரப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது. குளிரை உணர்ந்தபோது எழுந்துபோய் மின்விசிறியை அவள் நிறுத்தினாள். நிறுத்தும்போதும், ஓடச் செய்கிறபோதும் அது இலேசாக முனகும்.

வேகத்தைக் கூட்டி வைத்தால் அதற்குப் பிறகு எந்த சத்தமும் உண்டாகாது. மெல்லிய ஒரு ஓசை மட்டும் கேட்டுக் கொண்டிருக்கும். முனகலுடன் மின் விசிறி நின்றதும் கழுத்து வியர்த்தது. கழுத்திலிருந்து வெப்பம் ரவிக்கைக்குள் மார்பு நோக்கி கீழே இறங்கியது. வெப்பம் அதிகமாக இருப்பது தெரிந்தது. அவள் எழுந்து போய் மீண்டும் மின் விசிறியைப் போட்டாள். நள்ளிரவு வரை அவள் அவ்வப்போது எழுந்து சென்று மின் விசிறியை நிறுத்துவதும் பின்னர் போடுவதுமாக இருந்தாள். அவளுடைய மகனின் அறையில் அப்போதும் வெளிச்சம் இருந்தது. நள்ளிரவு தாண்டிய நேரத்தில் எப்போதோ அவள் களைத்துப்போய் படுத்து விட்டிருந்தாள். அப்போதும் நெற்றியில் நரம்புகளின் குடைச்சல் இருந்தது.

எவ்வளவுநேரம் கடந்து படுத்தாலும், எந்த அளவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டாலும் அதிகாலை ஐந்து மணிக்கு அவள் படுக்கையை விட்டு எழுந்து விடுவாள். நாற்பது வருடங்களாகவே இருந்து வரும் பழக்கம் இது. தன்னுடைய தலைக்குள் அலாரம் அடிக்கக் கூடிய ஒரு கடிகாரம் இருக்கிறதோ என்று கூட அவள் பல நேரங்களில் நினைத்துப் பார்த்திருக்கிறாள். மழை விடாது பெய்து கொண்டிருக்கும் மேஷ மாதத்திலும், குளிர் கடுமையாக இருக்கும் விருச்சிக மாதத்திலும் கூட சரியாக ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கும். உடம்புக்கு என்ன கேடு இருந்தாலும் அவள் கண்களைத் திறப்பாள். இன்றும் அதுதான் நடந்திருக்கிறது.

தலைவலி முழுமையாகப் போய்விட்டிருந்தது. எனினும் நெற்றியிலும் தோள்களிலும் ஒரு வலி இருக்கவே செய்தது. அவள் எழுந்து உட்கார்ந்து நெற்றியில் கை வைத்தவாறு சிறிது நேரம் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். வெளியே தெரு விளக்குகள் அணைந்திருந்தன. ஜன்னலுக்கு அப்பால் இருந்த இலேசான இருட்டில் சதுரம் சதுரமாக வீடுகள் தெரிந்தன. தூரத்தில் குருத்துவாராவின் பொன் பூசப்பட்ட மகுடம் ஒரு மின்னல் கீற்றைப் போல தெரிந்தது. அவள் அவிழ்ந்து கிடந்த புடவையை பாவாடைக்கு மேலாகச் சுற்றிப் பிடித்துக் கொண்டு ‘‘பகவானே’’ என்று அழைத்தவாறு அறையைவிட்டு வெளியே வந்தாள்.

தெருவில் இருட்டினூடே பால் வியாபாரிகள் எருமைகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். இருட்டில் தெரிந்த நெருப்பு அவர்களின் உதடுகளில் எரிந்து கொண்டிருந்த பீடிகள்தான். தூக்கக் கலக்கத்துடன் நடந்துகொண்டிருந்த எருமைகளின் கண்களில் பச்சை நிற ஒளி தெரிந்தது. மாடியில் காயப்போட்டிருந்த துவாலையை எடுத்துக் கொண்டு அவள் குளியலறைக்குள் நுழைந்து விளக்கைப் போட்டாள். அந்த வெளிச்சம் திடீரென்று இருட்டில் ஒரு பெரிய ஓட்டையை உண்டாக்கியது. இரும்புத் தொட்டியில் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. அவளுடைய மகன் எப்போதும் குழாய்க்குக் கீழே உட்கார்ந்துதான் குளிப்பான். ஆனால், அவளுக்கோ தொட்டியில் நீரை நிறைத்துக் கொண்டு ‘மக்’கை வைத்து தலையில் நீரை மொண்டு ஊற்றிக் குளிக்க வேண்டும். அப்படி குளித்தால்தான் அவளுக்குத் திருப்தி. குளிர்ந்த நீர் பட்டபோது கண்களை அவள் மூடிக் கொண்டாள்.

குளித்து முடித்து வெளியே வந்தபோது அவளுக்கு ஒரு புத்துணர்ச்சி வந்ததைப் போல் இருந்தது. வானம் இலேசாக வெளிறிக் கொண்டிருந்தது. ஈரக்கூந்தலை அவிழ்த்துவிட்டு சலவை செய்த புடவையை உடம்பில் அணிந்து கொண்டு அவள் படுக்கையறையை நோக்கி மீண்டும் சென்றாள். படுக்கையறைதான் அவளுக்கு பூஜை அறையும். கிராமத்தில் அவளுக்குப் பிரார்த்தனை செய்ய ஒரு பெரிய அறையே இருந்தது. அவளே அந்த அறையைச் சுத்தப்படுத்துவாள். பிரார்த்தனை செய்யும் நேரத்தைத் தவிர வேறு யாரையும் அந்த அறைக்குள் அவள் அனுமதிக்கவே மாட்டாள். கதவைத் திறந்தவுடன் சந்தனத்திரி, கற்பூரம், பூக்கள் ஆகியவற்றின் வாசனை ‘குப்’பென்று வரும்.

இங்கு நகரத்தில் தன்னுடைய மகன் வசிக்கும் இடத்தில் ஒரு தனியான பூஜை அறையை கனவில் காணக்கூட அவளால் முடியாது. அதனால் படுக்கையறையின் ஒரு மூலையையே பூஜை அறையாக அவள் ஆக்கிக் கொண்டாள். கபாடி மார்க்கெட்டிலிருந்து அவளுடைய மகன் வாங்கிக்கொண்டு வந்த ஸ்டூலின் மீதுதான் கடவுள் சிலை இருந்தது. அதற்கு முன்னால் கற்பூரத் தட்டு ஒரு சிறிய வால் கிண்டி ஒரு சிறு குத்துவிளக்கு. அதிகாலை நேரத்திலும் சாயங்கால வேளையிலும் அவள் தவறாமல் அந்தக் குத்துவிளக்கை ஏற்றி வைப்பாள். விளக்கேற்றுவது எங்கே தவறிவிடப் போகிறதோ என்ற பயத்தின் காரணமாக இரவு நேரங்களில் அவள் வேறு எங்கும் போய் தங்குவதில்லை. பகலில் எங்கு போனாலும் மாலை வருவதற்கு முன்பே திரும்பி வந்துவிடுவாள். ஒரு முறை கூட எந்தக் காரணத்தைக் கொண்டும் விளக்கு ஏற்றுவதுநின்று போய்விடக் கூடாது என்பதில் அவள் குறியாக இருந்தாள்.

உதடுகளில் கடவுள்களின் பெயர்களைக் கூறியவாறு பாதி மூடிய கண்களுடன் அவள் தீப்பெட்டியை உரசி குத்துவிளக்கின் திரிகள் ஒவ்வொன்றையும் எரிய வைத்தாள். விளக்கு ஏற்றும் போது அவள் மின்விளக்கைப் போடுவதில்லை. மங்கலான இருட்டில் திரிகள் ஒவ்வொன்றாக எரிந்து, அந்த வெளிச்சத்தில் கடவுளின் திருஉருவத்தைப் பார்ப்பதில் அவளுக்கு விருப்பம் அதிகம். அப்போது அவள் அனுபவிக்கும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலை மதிப்புள்ள ஒரு தருணமாக அவள் அந்த நிமிடத்தை நினைப்பாள்.

திரிகள் ஒவ்வொன்றும் எரிய ஆரம்பித்த போது கையிலிருந்த தீக்குச்சி முழுமையாக எரிந்து முடித்திருந்தது. எரிந்த தீக்குச்சியைக் கீழே போட்ட அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். கண்களைத் திறந்தவுடன், அவள் கடவுளின் முகத்தைப் பார்க்கவில்லை. முதலில் எரிந்து கொண்டிருக்கும் குத்துவிளக்கில்தான் அவளின் கண்கள் பதியும். பிறகு கற்பூரத் தட்டைப் பார்ப்பாள். தொடர்ந்து மெதுவாக கடவுளின் ஒளிமயமான பாதங்களை அவளுடைய கண்கள் பார்க்கும். அங்கேயே அவளின் பார்வை சிறிது நேரம் நின்றிருக்கும். நீல வண்ணப் பாதங்களிலிருந்து விலகும் பார்வை மெதுவாக கடவுளின் முகத்தில் சென்று பதியும் போது மீண்டும் அவள் தன் கண்களை மூடிக் கொள்வாள். பிரார்த்தித்துக் கொண்டிருக்கும் உதடுகள் இலேசாக அசைந்து கொண்டிருக்கும். அப்படி நின்று கொண்டிருக்கும் பொழுது அவள் பூமியை விட்டு, வாழ்க்கையை விட்டு விலகிப் போய் கடவுளின் உடலிலுள்ள ஒரு வியர்வைத் துளியாக மாறிப் போயிருப்பாள்.

குத்துவிளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது.


 கற்பூரத்தட்டிலிருந்த கற்பூரத்தின் சூடும் புகையும் பட்டதால் சற்று நிறம் மங்கிப் போய் காணப்படும் பூக்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவளின் கண்கள் கடவுளின் பாதங்களில் போய் பதிந்தன. தன்னுடைய கண்களுக்கு ஏதாவது பிரச்சினை உண்டாகிவிட்டதோ என்று அவள் சந்தேகப்பட்டாள். நெற்றி நரம்புகளின் குடைச்சலையும் தலையில் உண்டாகியிருக்கும் வலியையும் அவள் நினைத்துப் பார்த்தாள். ஏதோ ஒரு நோய்க்கான அறிகுறியாக அது இருக்குமோ என்று அவள் சந்தேகப்பட்டாள். "என் கடவுளே, எதை இழக்க வேண்டியது நேர்ந்தாலும், கண்களோட பார்வை சக்தியை மட்டும் நான் இழந்திடக் கூடாது."

அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு மீண்டும் பார்த்தாள். இல்லை... கடவுளின் பாதங்களைப் பார்க்க அவளால் முடியவில்லை. ஆனால், மற்ற எல்லாவற்றையும் பார்க்க அவளால் முடிகிறதே! வெளிச்சமே இல்லாத சுவரின் மூலையில் இருந்த பல்லியைக் கூட அவளால் தெளிவாக முடிந்தது. அவள் முழுமையாகத் தளர்ந்து போய்விட்டாள். மின் விளக்கு போட வேண்டும் என்பதற்காக ஸ்விட்சைப் போடுவதற்காக வேகமாக ஓடிய அவளின் கால் கட்டிலில் இடித்தால் உண்டான வேதனையைக் கூட அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. குழல் விளக்கின் வெளிச்சம் அறையில் பரவியது.

அவள் சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தாள். அவளால் எதையும் தெளிவாக யோசிக்க முடியவில்லை. மனம் என்பது இல்லாத ஒரு பிறவியைப் போல அவள் சிறிது நேரம் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். ஜன்னல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. தெருவில் பள்ளிக்கூட பேருந்துக்காக காத்து நின்றிருக்கும் மாணவர்களின் ஆரவாரம் கேட்டது. சிறிது நேரம் சென்ற பிறகு அவள் எழுந்து மெதுவாகத் தன்னுடைய மகனின் அறையை நோக்கிச் சென்றாள்.

வழக்கம் போல ஒரு பைஜாமா மட்டும் அணிந்து அவன் தூங்கிக் கொண்டிருந்தான். கட்டிலுக்குக் கீழே இருந்த ஆஷ்ட்ரே முழுவதும் பிடித்துப் போட்ட சிகரெட் துண்டுகள் கிடந்தன. தலையணைக்கு அருகில் இரவில் படித்த புத்தகம் இருந்தது. இரண்டு மணி வரை அவன் படித்துக் கொண்டிருப்பான். எட்டு மணி வரை படுத்துத் தூங்குவான்.

"பாலா..."- அவள் அழைத்தாள்: "மகனே, பாலா"- அவன் அவள் அழைத்ததைக் கேட்கவில்லை. அவள் தன்னுடைய குளிர்ச்சியான கையை அவனுடைய தோள் மீது வைத்தாள். அப்போது அவனுடைய முதுகின் சதைப் பகுதியில் இலேசான அசைவு உண்டானது. அவள் தன் மகனை இறுகப் பிடித்து குலுக்கினாள். கண்களைத் திறந்து திரும்பிப் படுத்த அவன் தன் தாயைப் பார்த்தான்.

"மகனே, என் கடவுளைக் காணோம்."

அவன் எதுவும் பேசாமல் தரையையே பார்த்தான்.

"நீ என் கடவுளை என்னடா செய்தே?"

அவன் எதுவும் பேசாமல் ஒரு சிகரெட்டை எட்டி எடுத்து வாயில் வைத்தான்.

"மனசு கவலையா இருக்குறப்போ கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்ய என்னை நீ விடமாட்டியா, மகனே?"

அவன் வாயில் வைத்த சிகரெட்டைக் கொளுத்தாமல் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தான்.

அவளால் அழமுடியவில்லை. அழாமல் இருக்கவும் முடியவில்லை. குழம்பிப் போன மனதுடன் அவள் தன் மகன் முகத்தைப் பார்த்தாள். பாலனின் தந்தையின் முகம் அதில் தெரிந்தது.

 

ஒற்றை வேஷ்டியும் மல்லால் ஆன சட்டையும், பாக்கெட் முழுவதும் நிறைத்து வைத்த பேப்பர்களும், ஒரு பழைய பேனாவும்..

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் இருந்த கிருஷ்ணன்.

"எந்தவித பிரச்சினையும் இல்லாம மூணு நேரமும் கஞ்சி குடிக்கிறதுக்கு வசதி இருக்கு. நல்ல குடும்பம். ஒரே ஒரு கெட்ட பெயர்... கொஞ்சம் கம்யூனிசம் இருக்கு..."

அவள் கதவுக்குப் பக்கத்தில் வந்து நின்று அங்கு நடக்கும் உரையாடலைக் கேட்டாள்.

"என்ன லட்சுமி, நீ எதுவுமே பேசாம நிக்கிற? உனக்கு விருப்பம் இல்லையா? மனசுல கொஞ்சம் கம்யூனிசம் இல்லாத ஆளுங்க இந்தக் காலத்துல இருக்காங்களா, மகளே?"

லட்சுமி கம்யூனிசத்தைப் பற்றி அப்போது நினைக்கவில்லை. திருமணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் அவள் உண்மையிலேயே பதறிப் போய்விட்டாள்.

"யோசிச்சு முடிவைச் சொன்னா போதும். விருப்பம் இல்லைன்னா வேண்டாம்."

கண்களை மூடித் திறந்தபோது வாசலில் பந்தல் கட்டப்பட்டிருந்தது. வீட்டின் நான்கு பக்கங்களிலும், முன்னால் கேட் வரை நீட்டப்பட்டிருந்தது. பந்தல். அறைகளில் வார்னீஷ் வாசனை தங்கியிருந்தது. லட்சுமிக்கு வார்னீஷ் வாசனையும், பெட்ரோல் வாசனையும் மிகவும் பிடிக்கும். எப்போதாவது நகரத்திற்குப் போகும் போது பெட்ரோல் பம்புக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கும் பொழுது அவள் நெஞ்சுக்குள் அந்த வாசனையை உள் இழுத்தவாறு போய்க் கொண்டிருப்பாள். வார்னீஷும் பெயின்ட்டும் விற்பனை செய்யும் ஒரு கடை அங்கு இருந்தாலும், அதற்கு முன்னால் போய் நிற்கும் போது ஒரு வாசனையும் வராது. அடைக்கப்பட்ட டின்களில் தான் வார்னீஷ் விற்கிறார்கள். மண்டல காலத்தில் ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயத்தில் திருவிழா நடக்கும். அப்போது அங்கும் வார்னீஷின் வாசனை நிறைந்திருக்கும்.

ஸ்ரீகிருஷ்ண பகவானை லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும். வீட்டிலிருக்கும் பூஜை அறையில் பற்பல கடவுள்களின் படங்களும், சிலைகளும் நிறைந்திருக்கும். அந்தக் கூட்டத்தில் ஒரு சிறிய ஸ்ரீகிருஷ்ணரின் சிலையும் இருக்கும். அங்கு சென்று கண்களை மூடியபடி நின்று கொண்டிருக்கும் நிமிடங்களில் அவள் புல்லாங்குழல் இசையைக் கேட்பாள். காலையில் குளித்து முடித்து விட்டுத்தான் அவள் தன் தொண்டையையே நனைப்பாள். தாய்க்கும் தந்தைக்கும் இருப்பதை விட மகளுக்குத்தான் பக்தி அதிகம். அடிக்கொரு தரம் அவள் பூஜையறையை நோக்கிச் செல்வாள். சில நேரங்களில் அங்கு அவள் ஓடிச் செல்வதையும் பார்க்கலாம். கதவை அடைத்துக் கொண்டு அங்கேயே அவள் உட்கார்ந்திருப்பதையும் பார்க்கலாம். திருமணம் நிச்சயித்த பிறகு உள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் அவள் பகவானுடன்தான் செலவழித்துக் கொண்டிருக்கிறாள். தாயிடமும் தந்தையிடமும் கூறமுடியாத விஷயங்கள் எவ்வளவோ அவளுக்கு ஸ்ரீகிருஷ்ண பகவானிடம் கூற இருக்கின்றன.

"பொண்ணுக்கு பக்தி கொஞ்சம் அதிகம்தான்"- அவளுடைய தாய் கூறினாள்: "எனக்கு பயமா இருக்கு."

"இதுல பயப்படுறதுக்கு என்ன இருக்கு-? கடவுள் பக்தி கொஞ்சம் அதிகமா இருக்குறதால என்ன பிரச்சினை?"

அவளுடைய தந்தை தாயைச் சமாதானப்படுத்தினார்.

திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தபொழுது லட்சுமியின் மனதில் ஒரே ஒரு சிந்தனைதான் இருந்தது. கணவனுடைய வீட்டில் ஒரு பூஜை அறை இருக்குமா என்பதுதான் அது. வீட்டுக்கு அருகில் ஒரு கோவில் இருக்குமா? அப்படி இல்லையென்றால் எங்கு சென்று எப்படி கடவுளைத் தொழுவது? இந்தப் பதைபதைப்பு மட்டுமே லட்சுமியின் மனதில் இருந்தது.


பூஜையறை இல்லாத ஒரு வீட்டில் தன்னால் சிறிதுகூட வாழ முடியாது என்பதை அவள் நன்கு அறிந்திருந்தாள். சிறு வயது முதல் தன் மனதில் இருக்கும் ஒவ்வொன்றையும் பகவானிடம் சிறு கூறித்தான் அவள் வளர்ந்திருக்கிறாள். ரகசியத்தைச் சொல்ல வேண்டும் என்பதற்காக அவள் பகவான் இருக்கும் இடத்திற்கு எத்தனை முறை ஓடிச் சென்றிருக்கிறாள்.

‘‘என் லட்சுமி, எப்போ பார்த்தாலும் நீ இப்படியே பூஜை அறைக்குள்ளேயே இருந்தா எப்படி? அங்கே உன்னைப் பார்க்க ஆளுங்க வந்திருக்காங்க, மகளே!’’

அவளுடைய தாய் பூஜையறையின் கதவுக்கு வெளியே நின்றவாறு சொன்னாள்.

அவளுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் உறவினர்களும் வந்து சேர்ந்துவிட்டார்கள். லட்சுமியின் ஊருக்கு வடக்குப் பக்கத்திலிருந்து வருவதே இரண்டு பஸ்கள்தான். ஒரு பஸ் காலையில் மற்றொரு பஸ் மதியத்திற்குப் பின்னாலும் வரும். காலையில் வரும் பஸ்தான் மதியத்திற்குப் பின்னாலும் வரும். மதியத்திற்குப் பின்னால் வரும் பஸ் சில நேரங்களில் வராமற் போவதும் உண்டு. குண்டும் குழியுமாக இருக்கும் பாதையில் மாட்டு வண்டி சக்கரங்கள் பதித்த அடையாளங்கள் பதிந்திருக்கும். அன்று பஸ்களில் வந்து இறங்கியவர்களில் பெரும்பாலானவர்கள் லட்சுமியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தவர்களே. பாதம் வரை தொங்காத புடவைகளை இடுப்பில் சுற்றி தலையில் கனகாம்பரம் சூடிய இளம் பெண்களும் இடுப்பிற்கு மேலே எதுவும் அணியாமலிருந்து காது வளர்ந்த வயதான பெண்களும் புடைத்துக் காணப்பட்ட மடியில் வெற்றிலை, பாக்கு பொட்டலயத்தையும் நாணயங்களையும் வைத்துக்கொண்டு தோளில் வேஷ்டியை மடித்துப் போட்டிருக்கும் ஆண்களும் முழங்கால் வரை இருக்கும் இஸ்திரி போட்ட ட்ரவுசரும் சட்டையும் அணிந்த சிறுவர்களும் பஸ்ஸை விட்டு இறங்கி திருவிழா நடைபெறும் இடத்திற்கு வருவதைப் போல லட்சுமியின் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

கிருஷ்ணன் வேறு ஊரைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனுடைய அரசியல் செயல்பாடுகளைப் பற்றி முக்கத்துக்காரர்களுக்கு நன்கு தெரியும். அவனை நேசிக்கக் கூடி  இளைஞர்கள் அந்த கிராமத்தில் இருந்தார்கள். அவர்கள் எழுதி நகரத்திற்குக் கொண்டுபோய் அச்சடிக்கப்பட்ட வாழ்த்துப் பத்திரத்தை ஒரு இளைஞன் திருமணப் பந்தலில் உரத்த குரலில் வாசித்து எல்லாரையும் கேட்கச் செய்தான்.

‘‘திருதட்டாறத்து கிருஷ்ணன் அவர்களுக்கு முக்கம் கிராமத்தைச் சேர்ந்த படிப்பக செயல்வீரர்கள் சமர்ப்பிக்கும் வாழ்த்து இதழ்.

இல்லறம் என்ற மணிமண்டபத்திற்குள் தாங்கள் காலடி எடுத்து வைக்கும் இந்த இனிமையான நேரத்தில் தோழரே, தங்களுக்கு நாங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதயத்தின் ஆழத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்ட நறுமண மலர்களால் கட்டப்பட்ட அன்பு மாலையை நாங்கள் தங்களின் கழுத்தில் அணிவிக்கிறோம். அமெரிக்க நாட்டிற்கு எதிராகவும், நம் நாட்டின் குத்தகை முதலாளிகளுக்கு எதிராகவும் ஜமீந்தார்களுக்கு எதிராகவும் தாங்கள் முடிவில்லா போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விஷயம் எல்லாரும் நன்கு அறிந்த ஒன்று. முக்கத்தைச் சேர்ந்த தங்களின் மனைவி இந்தப் போராட்டத்தில் தங்களுக்கு உற்சாகத்தையும் மன தைரியத்தையும் தருவார் என்றும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க போரில் கடைசி நிமிடம் வரை தங்களுடன் அவர் நிற்பார் என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இணைக் குருவிகளே, தங்களின் குளிர் நிலவு காட்சியளிக்கும் இல்லற வாழ்க்கையில் என்றென்றும் அன்பு என்ற சந்தனம் மணம் பரப்பிய வண்ணம் இருக்கட்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.’’

வாழ்த்து இதழுக்கு மேலே மரக்கிளையில் அமர்ந்து ஒன்றோடொன்று அலகுகளை உரசிக்கொள்ளும் ஜோடிக்கிளிகளின் படம் இருந்தது.

எல்லாரின் கவனமும் வாசலில் வாசித்துக் கொண்டிருந்த வாழ்த்து இதழில் பதிந்திருந்தபோது லட்சுமி தன் தம்பியை அருகில் அழைத்து ஒரு கனமான பொட்டலத்தை அவன் கையில் தந்தாள்.

‘‘நீ இதை கிருஷ்ணன் அத்தான் வீட்டுல கொண்டுவந்து தரணும். யாருக்கும் தெரியக்கூடாது.’’

‘‘இதுல என்ன இருக்கு அக்கா?’’

‘‘பகவான்...’’

பாஸ்கரனின் முகத்தில் ஒரே குழப்பம்.

‘‘உடைச்சிடாதேடா... என் பகவானுக்கு ஏதாவது நடந்துட்டா நான் உயிரோட இருக்க மாட்டேன்.’’

அவள் ஒரு காலி பவுடர் டப்பாவை தன் தம்பியிடம் தந்தாள். அந்த டப்பா குலுங்கியது. அது நிறைய அவளின் ரகசிய சம்பாத்தியம் இருந்தது. அதில் பெரும்பாலும் இருந்தவை ஓட்டை உள்ள காலணா நாணயங்களும் ஜார்ஜ் மன்னரின் தலை போட்ட அரை அணா நாணயங்களும்தான்.

சடங்குகளாலும் கணவன் வீட்டிற்கான நீண்ட பயணத்தாலும் இரவு வந்தபோது லட்சுமி மிகவும் களைத்துப்போய் காணப்பட்டாள். ஆனால், மிகவும் உற்சாகமான மனிதனாக கிருஷ்ணன் படுக்கையறைக்குள் வந்தான். சட்டை பாக்கெட்டில் நிறைய பேப்பர்களை வைத்திருந்தான். சதைப் பிடிப்பான கைகளையும் சுருண்ட தலைமுடியையும் தெளிவான முகவெளிப்பாட்டையும் கொண்டிருந்தான் அவன். காது குத்தப்பட்டிருந்தாலும், அணிகலன்கள் எதுவும் அவன் அணியவில்லை. மீசை இல்லை. எதுவுமே பேசாமல் கிருஷ்ணன் லட்சுமியின் அருகில் சென்ற ஒரு நிமிடம் அவளையே பார்த்துவிட்டு, அவளுடைய நெற்றியில் ஒரு முத்தத்தைப் பதித்தான். அப்போது குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வந்த ஒரு சுகத்தை அவள் உணர்ந்தாள்.

‘‘ரொம்பவும் களைச்சிப் போயிட்டேல்ல?’’- அவன் கேட்டான்: ‘‘எனக்கு இந்த நாதசுரம், பந்தல், ஆரவாரம் எதுவுமே பிடிக்காது. திருமணம்ன்றது ரொம்பவும் எளிமையா நடக்கணும். பதிவு அலுவலகத்துலயே அதை முடிச்சிடலாம். ஆனா, அதுக்கு மற்றவங்க சம்மதிக்கணுமே?’’

அவன் மடியிலிருந்து வெற்றிலை, பாக்கு பொட்டலத்தை வெளியே எடுத்தான். முற்றிய ஒரு வெற்றிலையின் காம்பைக் கிள்ளிய அவன் சொன்னான். ‘‘எப்பவும் நான் வீட்டிலுள்ளவங்க சொல்றதைக் கேட்க மாட்டேன். இந்த ஒரு விஷயத்திலயாவது அவங்க சொன்னபடி கேட்டா என்னன்னு நினைச்சேன். திருமணம்ன்றது வாழ்க்கையில ஒரே ஒரு முறைதானே வருது?’’

அவன் அவளைக் கடைக்கண்களால் பார்த்துச் சிரித்தான். வெற்றிலையில் சுண்ணாம்பு தேய்த்த பாக்கும் புகையிலையும் சேர்த்து சுருட்டி அவன் அதை வாய்க்குள் திணித்தான். அவனுடைய மூச்சுக் காற்றில் புகையிலையின் மணம் இருந்தது. சிறிது நேரம் சென்ற பிறகு அவன் எழுந்து ஜன்னலருகில் சென்று ஓட்டின்மீது நீட்டித் துப்பினான். அவர்களின் படுக்கையறை மேலே இருந்தது. உயரமுள்ள மேற்கூரையையும் கனமான கதவுகளையும் கொண்ட அந்த அறையில் கும்ப மாதத்தில்கூட உஷ்ணம் இருப்பது தெரியாது. ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்றால் கண்ணுக்குத் தெரியாத தூரம்வரை பரந்து கிடக்கும் வயல்கள் தெரியும்.

‘‘முக்கத்துக்காரர்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்கு. நீ அந்த திருமண வாழ்த்து இதழ் வாசிச்சதை கேட்டேல்ல? இன்னையில இருந்து மரக்கிளையில் உட்கார்ந்திருக்குற இரண்டு ஜோடிக் கிளிகள் நாம..."


அவன் மீண்டும் கண்களால் சிரித்தான்.

"என்ன லட்சுமி, ஒண்ணுமே பேச மாட்டேங்கற? தட்டாறத்து கிருஷ்ணனான என்னை உனக்குப் பிடிக்கலையா?’’

‘தேசாபிமானி’ பத்திரிகையில் அந்தப் பெயரை அவள் பார்த்திருக்கிறாள். அவன் எழுதிய கட்டுரைகள் எதையும் அவள் படித்ததில்லை. வீட்டில் அவளுடைய தந்தை மட்டும்தான் ‘தேசாபிமானி’யைப் படிப்பார். கிராமத்திலுள்ள படிப்பகத்திலிருந்து அவளுடைய தந்தை அந்த பேப்பரைக் கொண்டு வருவார்.

‘‘இன்னையில இருந்து தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவி நீ. அந்த நினைப்பு எப்போதும் உன்கிட்ட இருக்கணும். ஒரு கம்யூனிஸ்ட்காரனோட மனைவியா வாழறதுன்றது அவ்வளவு லேசுப்பட்ட விஷயமில்ல...’’

அவள் தலையை ஆட்டினாள். ‘‘புத்திசாலி...’’

அவன் வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை ஓட்டின்மீது துப்பிவிட்டு அவளுக்கருகில் வந்து உட்கார்ந்தான். நரம்புகள் புடைத்துக் கொண்டிருந்த கனமான அவனுடைய கைகள் அவளின் முழங்கால் மீது தொட்டன.

‘‘ரொம்பவும் களைச்சுப் போயிட்டேல்ல? சீக்கிரமா படுக்கலாம்.’’ - அவன் சொன்னான்: ‘‘காலை பஸ்ல நான் காசர்கோட்டுக்குப் போகணும். கட்சியோட மாநாடு நெருங்குது. நீ பேப்பர்ல வாசிக்கலியா? ஏகப்பட்ட வேலைகள் இருக்கு."

அவன் விளக்கை ஊதிவிட்டு படுக்கையில் வந்து படுத்தான். தலைமுடியை வருடியும் முதுகில் தன்னுடைய விரல்களால் தாளம் போட்டும் அவளை அவன் தூங்க வைத்தான். தூங்கிக் கொண்டிருப்பதற்கிடையில் எப்போதோ ஒருமுறை அவள் தன் கண்களைத் திறந்தபோது அறையில் மீண்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. திறந்து கிடந்த ஜன்னலுக்கு அப்பால் அடர்த்தியான இருட்டு தெரிந்தது. ஒரு துவாலையைப் போர்த்திக் கொண்டு மேஜைக்கு அருகில் அமர்ந்து அவள் என்னவோ எழுதிக் கொண்டிருந்தான். அவள் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தாள்.

காலையில் பாக்கெட்டில் பேப்பர்களை நிறைத்துக்கொண்டு பையில் ஒரு சட்டையும் வேஷ்டியும் எடுத்து வைத்துக் கொண்டு அவன் காசர்கோட்டிற்குப் புறப்பட்டான். அன்று அவன் திரும்பி வரமாட்டான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

குளித்து வந்த போது லட்சுமிக்கு மூச்சுவிடவே முடியவில்லை. பூஜை அறை இல்லை. சிறு வயது கிருஷ்ணன் இல்லை. அவள் எங்கு போய் பூஜை செய்வாள்? அவ்வப்போது மேலே ஏறிச் சென்று யாருக்கும் தெரியாமல் அவள் அழுதாள். வெயில் ஏறிய போது வயலில் தூரத்தில் ஒரு நிழல் தெரிந்தது. அது பாஸ்கரன் என்பதை அவள் தெரிந்து கொண்டாள். அவளுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவன் தன் மார்போடு சேர்த்து எதையோ பிடித்திருந்தான். பகவான் சிலைதான். மரப்படிக்கட்டில் ஓசை உண்டாக்கியவாறு கீழே இறங்கிய அவள் வெளியே போய் நின்றாள். பகவான் தன்னைக் கைவிட மாட்டார் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். பகவானுக்கு அறிய தான் எந்த தப்பும் செய்யவில்லை என்பதையும் அவள் நன்கு அறிவாள்.

சம வயதைக் கொண்ட மற்ற இளம் பெண்கள் திக்குரிஸ்ஸியையும் சத்யனையும் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவள் நினைத்தது ஸ்ரீகிருஷ்ண பகவானைத்தான். பகவானின் மாய லீலைகள் அவள் மனதில் என்னவென்றே தெரியாமல் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டிருந்தன. இதற்கிடையில் அவள் மீராவைப் பற்றி படிக்க நேர்ந்தது. அவளின் தோழிகள் சத்யனின் நடிப்பைப் பற்றி வாய் வலிக்கப் பேசும் பொழுது அவள் தன்னை ஒரு ராவாக கற்பனை பண்ணிக் கொண்டு கையில் தம்புராவுடன் பாடிக் கொண்டிருப்பாள். அவளைப் பொறுத்த வரையில் மிகவும் பயன்படக்கூடிய ஒரு கண்டுபிடிப்புதான் மீரா. தன்னுடைய சொந்த பக்திக்கும் கடவுள் பற்றிய சிந்தனைகளுக்கும் கண்ணுக்குத் தெரியும். ஒரு உருவத்தைத் தர அது அவளுக்கு உதவியது. எவ்வளவோ கனவுகளிலும் நனவிலும் அவள் நீளமான கண்களைக் கொண்ட தரையைத் தொடும் சுருக்கங்கள் கொண்ட பாவாடை அணிந்த, கைகளில் தம்புராவை வைத்துக் கொண்டு பாடும் மீராவாகத் தன்னை பரிணாமப் படுத்திக் கொண்டு அவள் திருப்தியடைந்தாள்.

பாஸ்கரன் அவளை நெருங்கி வந்தான். படிகளில் ஏறும் போது அவன் மேல்மூச்சு கீழ்மூச்சுவிட்டான். அவனுடைய களைத்துப் போன கழுத்தில் இருந்த உருண்டை அசைந்தது. கோடுகள் போட்ட அவனுடைய சட்டை வியர்வையில் நனைந்திருந்தது.

"எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கே?"- அவள் தன் தம்பியைப் பாசத்துடன் பார்த்தாள்: "நான் இந்த உதவியை ஒரு நாளும் மறக்க மாட்டேன்."

பாஸ்கரன் நின்று மூச்சுவிட்டான்.

அவன் வயல் வழியாகத் திரும்பி நடந்து மறைவதை அவள் ஜன்னலுக்கருகில் நின்று கொண்டு பார்த்தாள். பாஸ்கரனை வாழ்க்கையில் ஒரு முறை கூட மறக்கக் கூடாது என்றும் அவனுக்காக எந்த தியாகத்தை வேண்டுமானாலும் தான் செய்வது உறுதி என்றும் அவள் தனக்குள் கூறிக் கொண்டாள். ஆபத்து வருகிற நேரங்களில் எப்போதும் தனக்கு உதவி செய்ய யாராவது இருப்பார்கள் என்பதை அவள் தன் அனுபவத்தில் தெரிந்து கொண்டாள். அதுவும் பகவானின் மாயச் செயல்தான் என்று அவள் நினைத்தாள்.

காலையில் கல்யாணி வந்து அறையைப் பெருக்கி விட்டுப் போயிருந்தாலும், அவள் மீண்டும் ஒருமுறை அறையை நீர் தெளித்து சுத்தமாக்கினாள். ஒரு பெரிய படுக்கையறை அது. மேற்குப் பக்கத்திலும் தெற்குப் பக்கத்திலும் ஒவ்வொரு ஜன்னல் இருக்கும் தெற்குப் பக்கம் இருக்கும் ஜன்னல் எப்போதும் அடைத்தே இருக்கும். அதைத் திறந்தால் பக்கத்திலிருக்கும் மேற்கூரை பிரிந்த கக்கூஸ் தெரியும். மதியத்தைத் தாண்டினால் அறையில் நல்ல வெளிச்சம் இருக்கும். கைப்பிடி உள்ள ஒரு பெரிய மரக்கட்டிலும் இழுப்புகள் இல்லாத ஒரு மேஜையும் மட்டுமே அறையில் இருக்கும். சுவர்களில் ஆணியடித்துக் கட்டப்பட்ட கொடியில் ஆடைகள் தொங்கிக் கொண்டிருக்கும். மேஜை மீது கிடக்கும் தாள்களின் குவியல்களை ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு இடம் உண்டாக்கி பகவானை அந்த இடத்தில் அவள் கொண்டு போய் வைத்தாள். உடனடியாக ஒரு பூஜை அறையை உண்டாக்கித் தரும்படி கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள். படுக்கையறையின் ஒரு பகுதியைப் பலகையால் பிரித்துவிட்டால் போதும். இவ்வளவு பெரிய ஒரு படுக்கையறை எதற்கு? வாசலில் பிச்சிச் செடிகள் இருக்கின்றன. கை நிறைய பிச்சி மலர்களைப் பறித்துக் கொண்டு வந்து நூலில் கோர்த்து மாலை உண்டாக்கி அவள் பகவானுக்குப் போட்டாள். கற்பூரமும் சந்தனத்திரிகளும் வாங்க வேண்டும். வீட்டிற்குப் போகும் போது மறக்காமல் கற்பூரத்தட்டை எடுத்துக் கொண்டு வர வேண்டும். இவ்வாறு பல விஷயங்களை அவள் சிந்தித்து வைத்திருந்தாள்.


மூன்று நாட்கள் கடந்து தான் கிருஷ்ணன் திரும்பி வந்தான். சட்டையும் வேஷ்டியும் அழுக்கடைந்து காணப்பட்டன. செருப்பு இடாத கால்களில் நிறைய மண்ணும் சே-றும் இருந்தன. கண்களில் தூக்கக் கலக்கம் தெரிந்தது. இருப்பினும் சிறிது கூட களைப்போ, சோர்வோ அவனிடம் இருந்தது மாதிரி தெரியவில்லை. படிகளில் குதித்துக் குதித்துத்தான் அவன் வீட்டிற்குள்ளேயே நுழைந்தான்.

"ஸாரி லட்சுமி..."- அவன் சொன்னான்: "நேற்றே திரும்பி வரணும்னு நினைச்சேன். முடியல. எவ்வளவோ வேலைகள் செய்ய வேண்டியதிருக்கு."

மாநாடு ஆரம்பிக்க இன்னும் சரியாக ஒரு வாரம் கூட இல்லை.

ஆனால், அவன் தாமதமாக வந்தான் என்பதற்காக அவன் மீது அவளுக்கு ஒரு வருத்தமும் இல்லை. உண்மையாகச் சொல்லப் போனால் கடந்த மூன்று நாட்களில் அவனைப் பற்றி மிகவும் குறைவாகவேதான் நினைத்திருக்கிறோம் என்பதை ஒரு குற்ற உணர்வுடன் அவள் எண்ணிப் பார்த்தாள். ஜன்னல் வழியாக வந்து கொண்டிருந்த நள்ளிரவுக் காற்றின் குளிர்ச்சியில் பெரிய கட்டிலில் தான் மட்டும் தனியே படுத்திருந்த போது இரண்டு மூன்று முறை அவனைப் பற்றி நினைத்து ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள் என்பது மட்டுமே உண்மை.

"கவலைப்படாதே"- அவன் சொன்னான்: "மாநாடு முடிஞ்சபிறகு, பத்து நாட்களுக்கு நான் வேற எங்கேயும் போக மாட்டேன். போதுமா?"

அவள் தலையை ஆட்டினாள்.

"எனக்கு இப்போதான் சந்தோஷம்"- அவன் சொன்னான்: "நான், எப்படிப்பட்ட மனைவி எனக்குக் கிடைக்கணும்னு மனசில நினைச்சேனோ, அப்படியே இருக்கே நீ!"

அவன் சட்டையைக் கழற்றி அவளுடைய கையில் தந்தான். அதற்கு வியர்வையின் நாற்றம் இருந்தது. பாறை போல உறுதியாக இருந்த அவனுடைய மார்பிற்கு முகத்தைவிட அதிகமான நிறமிருந்தது. ஒட்டிப் போன வயிறுக்கும் ஒடுங்கிப் போன இடுப்பிற்கும் சொந்தக்காரனாக இருந்தான் அவன்.

"அந்த ஜாடியில இருந்து ஒரு பாக்குக்காயை எடுத்துத்தா"- மேலே அவள் ஏறிப்போகும் போது அவன் சொன்னான்: "நிம்மதியா வெற்றிலை பாக்கு போட்டு மூணு நாளாயிடுச்சு."

சாப்பிடவில்லையென்றாலும் உறங்காமலே போனாலும் நிம்மதியாக வெற்றிலை, பாக்கு போட வேண்டும்.

குளியலறையை ஒட்டியிருந்த அறையில்தான் அந்தப் பெரிய ஜாடி இருந்தது. அதில்தான் பாக்குக்காய் வைக்கப்பட்டிருந்தது. இடுப்பு வரை உயரம் வரக்கூடிய அந்த ஜாடியின் அடியிலிருந்து கையை விட்டு பாக்குக்காயை எடுப்பதற்கு அவள் மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. கை பயங்கரமாக நாறியது. பாக்குக்காய் கொட்டைப் பாக்குக் காயாக மாறி விடக் கூடாது என்பதற்காகத் தான் நீரில் போட்டு வைத்திருப்பார்கள். நீருக்குள் போட்டு வைத்துவிட்டால் எவ்வளவு காலம் ஆனாலும் கேடு வராமல் அது அப்படியே இருக்கும். ஆனால், இந்த நாற்றத்தைத்தான் சிறிது கூட பொறுத்துக் கொள்ள முடியாது. எப்படித்தான் இந்த நாற்றமெடுத்த பாக்கைச் சேர்த்துக் கொண்டு ஒவ்வொருவரும் வெற்றிலை போடுகிறார்களோ? நினைத்தபோது அவளுக்கு வியப்புத்தான் உண்டானது.

பாக்குக் காயையும் கையையும் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டு மேலே செல்லும் போது கிருஷ்ணன் மேஜைக்கு அருகில் இருந்த சிலையைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். அவனுடைய கண்களில் குறும்பு தாண்டவமாடியது.

"உன்கிட்ட இந்த அளவுக்கு பக்தி இருக்குன்னு நான் நினைக்கவே இல்ல"- அவன் சொன்னான்: "இது எங்கேயிருந்து கிடைச்சது? வீட்டுல இருந்து கொண்டு வந்ததா?"

"ஆமாம்" என்ற அர்த்தத்தில் அவள் தலையைக் குலுக்கினாள்.

"கோவிலுக்குப் போவது உண்டா?"

"எல்லா நாட்களிலும் போவேன்."

"இனி கோவிலுக்கெல்லாம் போக வேண்டாம். தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவியாச்சே, நீ?"

அதைக் கேட்டதும் அவள் உருகிப் போய்விட்டாள்.

அவன் கட்டிலில் அமர்ந்து வெற்றிலை வைத்திருந்த பொட்டலத்தைத் திறந்தான். ஒரு நிமிடம் கூட ஆகவில்லை- வெற்றிலையின் நரம்பைக் கிள்ளி எடுக்க அவனுடைய தடிமனான கை விரல்களுக்கு இருக்கும் வேகத்தன்மைதான் என்ன! அதே சுறுசுறுப்புடன் அவன் பேனாக்கத்தியால் பாக்குக் காயைச் சுரண்டி வெட்டி துண்டு துண்டுகளாக ஆக்கினான். பாக்குக்காயைச் சுரண்டும்படி அவளிடம் கூறியிருந்தால், நிச்சயம் அவள் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்துப் போயிருப்பாள். இன்று வரை அவள் அதைச் செய்தது இல்லை. வெற்றிலை, பாக்கு போடுபவர்களைப் பொதுவாகவே அவளுக்குப் பிடிக்காது. சிகரெட் புகைப்பதை அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால், இனிமேல் வெற்றிலை, பாக்கு போடுபவர்களை விரும்பாமல் அவள் இருக்க முடியாதே! இனி எல்லா காரியங்களையும் அவனுடைய விருப்பத்திற்கேற்றபடி செய்ய வேண்டியதுதான் கிருஷ்ணன் கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு சந்தோஷத்துடன் வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய முகத்தில் இனம் புரியாத ஒரு திருப்தி தெரிந்தது. கட்டிலுக்கு மேலே எச்சில் பாத்திரம் இருந்தாலும், அவன் அதில் வெற்றிலை போட்டுத் துப்புவதில்லை. ஜன்னலுக்கு அருகில் சென்று ஓட்டின் மீதுதான் எப்போதும் துப்புவான். ஜன்னலுக்கு நேராகக் கீழே ஓடுகள் முழுவதும் சிவந்து காணப்படும். வெற்றிலை எச்சில் காய்ந்து போய் அங்கு தெரியும்.

அன்று இரவு கிருஷ்ணன் என்னவெல்லாமோ சொல்வதை அவள் கேட்டாள். சிறிதுநேரம் சென்ற பிறகு ஒரு கட்டு வார இதழ்களையும் பத்திரிகைகளையும் அவன் எடுத்துக் கொண்டு வந்து அவளுக்கு முன்னால் வைத்தான்.

‘‘நான் எழுதிய கட்டுரைகள்’’ - அவன் சொன்னான்: ‘‘நேரம் கிடைக்கிறப்பல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தி படிக்கணும். அப்போ உனக்குத் தெரியவரும் தெய்வம்ன்ற ஒண்ணு இல்லவே இல்லன்னு...’’

‘தேசாபிமானி’, ‘நவயுகம்’ ஆகியவற்றின் பழைய இதழ்கள்தான் அவற்றில் பெரும்பாலானவை. சில ஆங்கில பத்திரிகைகளும் அவற்றில் இருந்தன. அவன் ஆங்கிலத்திலும் எழுதுவது உண்டு என்பது தெரிந்து உண்மையிலேயே அவள் ஆச்சரியப்பட்டாள். அடுத்த நிமிடம் அப்படி தெரிந்து கொண்டது அவளிடம் ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. கடவுள் இல்லை என்பதைக் கூறுவதற்காகவா அவன் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் இவ்வளவு விஷயங்களையும் எழுதியிருக்கிறான்? ஒரு குழந்தைக்குக் கூட தெய்வம் இருக்கிறது என்ற உண்மை தெரியும். கடவுள் இல்லை என்றால் இடி இடிக்குமா? சூறாவளி வீசுமா? கடவுள் இல்லை என்று யாரும் சொல்லி அவள் கேட்டது இல்லை. தன் கணவன் விஷயம் தெரியாமல் இருப்பது குறித்து அவளுக்கு வருத்தம்தான் உண்டானது. ‘ஒருவேளை அவன் வேண்டுமென்றே தன்னை கேலி செய்து பார்க்கிறானோ? ‘பகவானே, உண்மையில் அப்படியே இருக்கவேண்டும்’ என்று அவள் பிரார்த்தித்தாள்.

‘‘படிச்சியா?’’

மறுநாள் அவன் கேட்டான். வீட்டுப் பாடம் எழுத மறந்த சிறுமியைப் போல அவள் தயங்கினாள்.

‘‘ஏன் படிக்கல?’’

‘‘பயமா இருக்கு!’’


‘‘பயமா? எதுக்கு?’’

அவள் பேசாமல் தரையைப் பார்த்தவாறு நின்றிருந்தாள். அவன் இரக்கத்துடனும் அன்புடனும் அவளைப் பார்த்தான். அன்றைய ‘தேசாபிமானி’யின் முதல் பக்கத்தில் எ.கெ.ஜி.யுடன் நின்றிருக்கும் அவனுடைய புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. தன்னுடைய கணவன் ஒரு பெரிய மனிதன் என்பதை அவள் புரிந்து கொண்டாள். இரவில் நெடுநேரம் ஆகும்வரை அவன் அமர்ந்து படிப்பதையும் எழுதுவதையும் அவள் பார்ப்பாள். அவன் கொண்டுவரும் மலையாள மொழியில் உள்ள புத்தகங்களைப் படிக்கும்போது அவளுக்கு ஒன்றுமே புரியாது. அவனைப் பார்ப்பதற்காக பல இடங்களில் இருந்தும், தூரத்தில் இருக்கும் ஊர்களில் இருந்துகூட ஆட்கள் வருவார்கள். படிப்படியாக தட்டாறத்து கிருஷ்ணனின் மனைவியாக தான் ஆனது குறித்து லட்சுமி பெருமைப்படத் தொடங்கினாள். தன்னையும் அறியாமல் அவன்மீது ஒரு மதிப்பு அவளுக்கு உண்டாகி வளர்ந்து கொண்டிருந்தது.

தான் எவ்வளவு அவசரமான காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும் தன்னுடைய மனைவி சம்பந்தப்பட்ட விஷயம் என்றால் அதில் முதலில் கவனம் செலுத்த அவன் மறக்கமாட்டான். ஒருமுறை திருவனந்தபுரத்திற்குப் போய்விட்டுத் திரும்பி வரும்போது அவன் அவளுக்காக ஒரு ஜரிகை போட்ட புடவையை வாங்கிக் கொண்டு வந்தான். தலசேரிக்குப் போனால் கண்ணாடி வளையல்களையோ சாந்துப் பொட்டையோ வாங்கிக் கொண்டு வருவான். இந்த அளவிற்கு பரந்த மனம் படைத்த, அறிவுள்ள ஒரு கணவனைத் தந்ததற்காக அவள் பகவானுக்கு நன்றி கூறுவாள்.

‘‘படிக்கிறதுக்கு கஷ்டமா இருந்துச்சுன்னா வேண்டாம்...’’ அவன் சொன்னான்: ‘‘நேரம் கிடைக்கிறப்போ நான் சொல்லித் தர்றேன்.’’

அவள் கவனித்தாள். அவன் இப்போது மேஜைக்கு அருகில் அமர்ந்து எழுதுவதோ வாசிப்பதோ இல்லை. கட்டிலில் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்துகொண்டுதான் அந்த இரண்டு விஷயங்களையும் செய்கிறான். அவன் தன்னுடைய எழுதும் மேஜையை பிரார்த்தனை செய்வதற்கும் பூஜைக்கும் அவளுக்காக விட்டுத் தந்திருக்கிறான்.

மண்டல காலம் வந்தது. ஜன்னல் வழியே பார்த்தால் வெளிறிப் போய்க் காணப்படும் வயல்களில் பனி படர்ந்திருப்பது தெரியும். நீருக்கு பனிக்கட்டியின் குளிர் இருக்கும். எனினும், சூரியன் உதிப்பதற்கு முன்பு அவள் படுக்கையை விட்டு எழுந்து குளித்து ஈரக்கூந்தலுடன் கோவிலுக்குச் செல்வாள்.

‘‘லட்சுமி...’’ - அவன் மாடியில் ஜன்னலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு அழைத்தான்: ‘‘அங்கேயே நில்லு. ஒரு விஷயம் சொல்லட்டுமா?’’

வாசலுக்கு வந்த அவள் அங்கேயே நின்றாள். கால்கள் முன்னோக்கி அசையவில்லை. வெளியே வயல் படிப்படியாக வெளுத்துக் கொண்டிருந்தது. மூச்சுவிடும் காற்று குளிர்ச்சியாக இருந்தது. வயல்களிலிருந்து கிளம்பிவந்த குளிர்ந்த காற்று அவளைத் தழுவிவிட்டு கடந்து போனது. தெற்குப் பக்கம் இருந்த ஜாதி மரத்திலிருந்து ஒரு பறவை ஓசை எழுப்பியவாறு பறந்துபோனது.

‘‘காங்கிரஸ்காரங்க சொல்லிச் சொல்லி சிரிக்கிறாங்க. இனிமேலும் அவங்க பேசுறமாதிரி இடம் கொடுக்காதே.’’

லட்சுமி பேசாமல் நின்றாள்.

‘‘நான் சொல்றேன்னு வருத்தப்படக்கூடாது. நீ உன் மனசுல இருக்குற தெய்வத்தை மறக்க முயற்சிக்கணும். இல்லாட்டி தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவியா வாழறது உனக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமா இருக்கும்.’’

அவள் திரும்பவும் மாடிக்கு வந்தாள்.

மறுநாள் காலையில் அவள் தன் கைகளைத் திறந்தபோது பழையமாதிரி அவன் மேஜைக்கு அருகில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். பகவானோ, கற்பூரத் தட்டோ அங்கு இல்லை. அவன் மேஜையை சுத்தம் செய்து வைத்திருந்தான். எப்போதும் தன்னுடன் வைத்திருந்த சிறு வயது கிருஷ்ணனின் அந்தச் சிலையை பிறகு அவள் ஒருமுறைகூட பார்த்ததே இல்லை.

 

‘‘பாலா, முழு மனசோட நான் வரல’’ - லட்சுமியம்மா சொன்னாள்: ‘‘பிறந்த ஊர்ல கிடந்து சாகறதைத்தான் நான் விரும்புறேன்.’’

‘‘அம்மா, இப்போ ஒண்ணும் நீங்க சாகப்போறது இல்ல. நீங்க ரொம்ப வருடங்கள் உயிரோட இருப்பீங்க.’’

‘‘அதைக் கடவுள் தீர்மானிப்பாரு.’’

‘‘நம்ம விஷயங்களை நாமதான் பெரும்பாலும் தீர்மானிக்கிறோம். கடவுள் இல்ல. நாம அம்மை இல்லாமச் செய்யலியா? ஜலதோஷத்தை இல்லாம ஆக்கறது மாதிரியில்ல இப்போ சயரோகத்தை சிகிச்சை செய்து மாத்தறோம்?’’

அவன் தன் தாயைப் பார்த்து கண்களால் சிரித்தான். அவர்களின் வலது பக்கத்தில் ஒரு பெரிய மரம் கடந்து போனது.

‘‘இப்போ பிரசவம் நூறு சதவிகிதம் எந்தவித பிரச்சினையும் இல்லாம பாதுகாப்பா நடக்குது. குழந்தைகள் சாகறது இல்ல. மனிதர்களுக்கு ஆயுள்காலம் கூடிவருது. இறக்காத வயதான மனிதர்களால் ஐரோப்பாவுல ஒரு பெரிய தலைவலியே உண்டாகுது. ரொம்பவும் சீக்கிரமே நம்ம நாட்டுலயும் அது ஒரு பிரச்னையா வரப்போகுது.’’

லட்சுமியம்மா தன் மகன் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். முன்பு கிருஷ்ணன் பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி கூறும்போது அவள் இப்படித்தான் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். தந்தைக்கும் மகனுக்கும் உள்ள அறிவும் விஷய ஞானமும் தனக்கு இல்லை என்பது அவளுக்கு நன்கு தெரியும். தந்தையைப் போலவே இருந்தான் மகனும். தூக்கத்தை இழந்துவிட்டு படித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது எதையாவது எழுதிக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். ஒரே ஒரு வித்தியாசம்தான். மேஜையின்மீது இருந்த மண்ணெண்ணெய் விளக்கின் இடத்தில்  இப்போது டேபிள் லேம்ப் இருக்கிறது.

கூட்டமாக மாடுகளும், கன்றுகளும் பின்னால் கடந்து போயின. தூரத்தில் ஒரு மலை தெரிந்தது.

‘‘அம்மா, என்ன சிந்தனையில இருக்கீங்க?’’ - பாலன் கேட்டான். ‘‘நாம வந்துட்டோம்.’’

‘‘எனக்கே வெறுப்பாயிடுச்சு, மகனே. எவ்வளவு நாட்களாக இந்த வண்டியிலேயே இருக்குறது?’’

வலது பக்கம் புகைக்குழாய்கள் வேகமாக வருவதும் போவதுமாக இருந்தன.

‘‘அம்மா, பாருங்க’’ - பாலன் வெளியே சுட்டிக் காட்டினான். கூட்டமாக இருந்த ஓலைக் குடிசைகளுக்கு மேலே ஒரு செங்கொடி பறந்து கொண்டிருந்தது. அவள் பார்த்தபோது குடிசைகள் மறைந்து விட்டன.

‘‘நீ என்னை எப்போ ஹரித்துவாருக்கு அழைச்சிட்டுப் போகப்போற? அப்பாவுக்கு ஒரு காரியம் செய்யணும்.’’

‘‘அதுக்கு இப்போ எனக்கு விடுமுறை இருக்கா என்ன? ஹரித்துவாருக்குப் போகணும்னா ரெண்டு நாட்களாவது விடுமுறை வேணும்.’’

மீதியிருந்த கேஷுவல் விடுமுறைகளை எடுத்துக் கொண்டுதான் பாலன் தன் தாயை அழைத்துக் கொண்டு வருவதற்காக கிராமத்திற்கே போனான்.

‘‘எப்போ உனக்கு வசதிப்படுதோ, அப்போ போவோம்.’’

வெளியே மேகங்கள் பல வண்ணங்களில் காட்சியளித்தன. கட்டிடம் கட்டுவதற்குப் பயன்படும் கற்களும், சாயமும் மற்ற பொருட்களும் விற்பனை செய்யப்படும் இடமது. அவன் எல்லாவற்றையும் தன் தாயிடம் விளக்கிச் சொன்னான். ஒரு பெரிய அனல் மின் நிலையமும் அங்கு இருக்கிறது. மிகக் குறைவான சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் அங்கு இருக்கிறார்கள்.


அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் இருக்கின்றன. நகரத்தில் உள்ளவர்கள் நல்ல வசதியுடன் வாழ்வதற்காக வீடுகள் கட்டுவதற்குப் பயன்படும் பொருட்களை உண்டாக்கியும் அவற்றைச் சுமந்தும் வாழும் அவர்கள் சாயப்பொடியையும் நிலக்கரிப் புகையையும் சுவாசித்து நோய்வாய்ப் பட்டு வெகு சீக்கிரமே இறந்து போகிறார்கள்.

நீண்ட காலம் வாழ்வது என்பது அவர்களின் வாழ்க்கையில் நடக்காத ஒரு விஷயம்.

‘‘பாருங்க...’’ - இரண்டு நாட்கள் கழித்து அவன் தன் தாயிடம் சொன்னான்: ‘‘நம்ம அறைக்கு வெளிச்சம் தர்ற இந்த மின்சக்தி நாம வண்டியில வர்றப்போ பார்த்த அனல்மின் நிலையத்துல இருந்து வர்றதுதான்.’

இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருக்கும் இருப்பிடம் அது. மிகவும் குறைவான மரப்பொருட்களும் வீட்டுச் சாமான்களும் மட்டுமே அங்கு இருந்தன. எனினும், எல்லாவற்றையும் பாலன் ஒழுங்காக வைத்திருந்தான். அந்த விஷயத்தில் லட்சுமியம்மாவிற்கு சந்தோஷம்தான். வீடு சுத்தமாக இருந்தால்தான், வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று பொதுவாக அவள் கூறுவதுண்டு.

அவள் சிறிய பால்கணியில் போய் நின்றாள். முன்னால் அதே போன்ற சிறு பால்கணிகளைக் கொண்ட வீடுகள் அடுத்தடுத்து இருந்தன. எல்லா வீடுகளும் ஒரே அச்சில் இட்டு வார்த்ததைப் போல் இருந்தன. ஒரே மாதிரி இருக்கும் பால்கணிகள் ஜன்னல்கள் படிகள் காலையில் அவள் எழுந்து பார்க்கும்போது கையில் தூக்குப் பாத்திரங்களுடன் ஆண்கள் பால் பூத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பார்கள். மாலை நேரங்களில் பால் பூத்திற்குச் செல்பவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். ஞாயிற்றுக்கிழமை மட்டும் அந்த வழக்கம் மாறும். அன்று சாயங்காலம் பால் வாங்கப் போகும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் ஆண்களும் இருப்பார்கள். பாலன் அலுவலகத்திற்குப் போன பிறகு, தள்ளு வண்டிகளில் காய்கறிகளையும், பழங்களையும் வைத்துக் கொண்டு வியாபாரிகள் வருவார்கள்.

மதிய நேரத்தில் பெண்கள் பேசியவாறு காலனிக்கு வெளியே இருக்கும் பிரதான சாலையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பார்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி வரும்போது அவர்களுடன் புத்தகப் பைகளைத் தூக்கிக் கொண்டு பள்ளிச் சீருடைகளுடன் குழந்தைகள் வருவார்கள். மதியத்தைத் தாண்டிவிட்டால் காலனி மிகவும் அமைதியாக இருக்கும். காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு பெரும்பாலும் காலியாக இருக்கும் தள்ளு வண்டிகளை மரங்களுக்குக் கீழே நிறுத்திவிட்டு மர நிழல்களில் வியாபாரிகள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருப்பார்கள். வெயில் குறைய ஆரம்பிக்கும்போது காலனி மீண்டும் சுறுசுறுப்பாகும். தள்ளு வண்டிகளில் மீதமிருக்கும் காய்கறிகளை லாபம் கிடைக்கிற மாதிரி வேகமாக விற்றுவிட்டு வியாபாரிகள் தூரத்தில் இருக்கும் தங்களின் கிராமங்களை நோக்கி திரும்பச் செல்வார்கள். வரிசையாக இருக்கும் கட்டிடங்களுக்கு இடையில் அகலம் குறைவாக இருக்கும் பாதையில் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட ஆரம்பிப்பார்கள். வெயில் மேலும் கொஞ்சம் குறைகிறபோது கையில் காலி டிஃபன் பாக்ஸ் சகிதமாக வியர்த்துப் போய், கசங்கிப்போன ஆடையுடனும் காலில் சேறுபடிந்த காலணிகளுடனும் ஆண்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வீட்டுக்கு வருவார்கள். மாலைநேரம் வந்துவிட்டு வீடுகளில் டெலிவிஷன் செட்டுகள் இயங்க ஆரம்பிக்கும். தொடர்ந்து காலனி மீண்டும் அமைதியில் மூழ்கிவிடும்.

‘‘அம்மா, நாள் முழுவதும் இப்படியே உட்கார்ந்து உங்களுக்கு போர் அடிக்கலியா? பாலன் அண்ணன்கிட்ட சொல்லி ஒரு டி.வி. வாங்கித் தரச்சொல்ல வேண்டியதுதானே?’’

‘‘என் குழந்தையே, அதை மட்டும் அவன்கிட்ட கேட்கவே கூடாது. டி.வி.ன்ற வார்த்தையைக் கேட்டாலே, பாலனுக்கு பயங்கரமா கோபம் வரும்.’’

‘‘என் வீட்டுக்காரரு டி.வி. முன்னாடி உட்கார்ந்தா எழுந்திரிக்கிறதே இல்ல. அலுவலகத்துல இருந்து வந்துட்டா டி.வி. முன்னாடி உட்கார்றதுதான் வேலை. தேநீர், சாப்பாடு எல்லாமே அதுக்கு முன்னாடி உட்கார்ந்துக்கிட்டுத்தான். பிள்ளைகளும் அப்பாவை மாதிரியே ஆயிடுவாங்களோன்னு ஒரே பயமா இருக்கு. ரெண்டு பிள்ளைகளுக்கும் முடிக்கவே முடியாத அளவுக்கு வீட்டுப்பாடம் இருக்கு.’’

‘‘சும்மா உட்கார்ந்திருக்கிறப்போ மனசுல தோணும்... ஒரு டி.வி. இருந்தா எதையாவது பார்த்துக்கிட்டு இருக்கலாமேன்னு இருந்தாலும் மகளே, பாலனுக்குப் பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்யமாட்டேன்.’’

‘‘போரடிக்கிறப்போ, என் வீட்டுக்கு நீங்க வந்திடுங்கம்மா. காலனியில வழிதான் இப்போ உங்களுக்கு ஓரளவு தெரிஞ்சிருக்குமே!’’

காலனியில் சிறிய மார்க்கெட்டிற்கும் பால் பூத்திற்கும் பிரதான சாலையில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கும் போகும் வழிகளை இப்போது அவள் நன்கு அறிவாள். இங்கு வந்து ஆறு மாதங்கள் ஆகி விட்டனவே! எனினும் சாவித்திரியின் வீட்டிற்கு இதுவரை தனியாகப் போனதில்லை. எல்லா வீடுகளும் எல்லா வழிகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. சில நேரங்களில் அவளுக்குத் தோன்றும் ‘காலனியில் இருக்கும் எல்லா மனிதர்களின் முகபாவங்கள்கூட ஒரே மாதிரிதான் இருக்கின்றனவோ’ என்று. இருந்தாலும், ஒருநாள் தனியாக அவளுடைய வீட்டிற்குச் சென்று பார்க்க வேண்டும் என்று லட்சுமியம்மா முடிவெடுத்தாள். பாலனுக்கு எந்த விஷயத்தைச் செய்யவும் நேரமில்லை. வெயில் இறங்கும்போது காலனியில் இருக்கும் எல்லா ஆண்களும் அலுவலகங்களை விட்டு திரும்பி வந்தாலும், பாலன் வீட்டிற்கு வரும்போது பெரும்பாலும் நள்ளிரவு நேரம் ஆகிவிடும். எப்போதும் அவனுக்கு மீட்டிங்கும் விவாத மாநாடுகளும்தான்.

"பாலன் அண்ணனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கக்கூடாதா? அதுக்குப் பிறகாவது காலாகாலத்துல வீட்டுக்கு வந்திடுவார்ல! அம்மா, உங்களுக்கும் ஒரு துணை வந்த மாதிரி இருக்கும்."

"மனசுல ஆசை இல்லாம இல்ல. அவனும் இதை நினைக்கணும்ல!" சொல்லிச் சொல்லி எனக்கே அலுத்துப் போச்சு."

"என் கல்யாணம் ஒரு பெரிய பிரச்சினையா அம்மா?" -திருமணத்தைப் பற்றிப் பேசும் போது பாலன் கேட்பான்: "அதைவிட எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இப்போ இந்த நாட்டுல இருக்கு தெரியுமா?"

அவனுடைய தலைமுடியின் பின்பக்கம் நரை ஏறத்தொடங்கி விட்டது. அதைப் பார்க்கும் போது லட்சுமியம்மாவிற்கு மிகவும் சங்கடமாக இருக்கும். திருமணம் செய்ய நேரமில்லை என்று கூறும் ஒருவனை அவள் வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறாள். அதைக் கேட்ட போது சாவித்திரி விழுந்து விழுந்து சிரித்தாள். அவளுடைய கணவன் உண்ணி வேலை கிடைத்து முதல் மாத சம்பளம் கையில் வாங்கியதுதான் தாமதம்- திருமணத்திற்காக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டான். பாலனுக்கு நல்ல சம்பளம் கிடைக்கிறது என்பதை லட்சுமியம்மா நன்கு அறிவாள். எனினும், அவன் கையில் எப்போதும் காசு இருக்காது. சொந்தப் பணத்தைச் செலவழித்து அவன் தன்னுடைய மாத இதழை கொண்டு வருகிறானோ என்று அவள் சந்தேகப்பட்டாள். தட்டாறத்து கிருஷ்ணனின் மகனாயிற்றே! அப்படித்தான் நடக்க வாய்ப்பிருக்கிறது.


ஆரம்பத்தில் ஒரு சாதாரண பெண்ணின் விருப்பங்களும் கனவுகளும் அவளுக்கும் இருந்தன. பிறகு அவை எதுவும் இல்லாமற் போய்விட்டன. இனிமேல் அவளுடைய மனதில் கடவுளைப் பற்றிய சிந்தனைகளுக்கு மட்டுமே இடம் இருக்கிறது.

தனிமையும் வெறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக அவளை ஆக்கிரமிக்கத் தொடங்கின. பேசுவதற்குக்கூட யாரும் இல்லை. சாவித்திரி எந்தநேரம் வேண்டுமானாலும் வந்து பேசிக் கொண்டிருக்க முடியுமா என்ன? அவளுக்குக் கணவனும் குழந்தைகளும் இருக்கிறார்களே! அந்த வெறுப்பில் அவளையும் அறியாமல் அவளிடம் ஒரு ஆசை உண்டாகி வளர்ந்தது ஒரு பூஜையறை இருந்தால்... ஒரு சிலை இருந்தால்... ஒரு காலத்தில் அவளுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தவர் பகவான்தானே!

"நான் என் கணவர்கிட்ட சொல்லி வாங்கித் தரச் சொல்கிறேன்..."

"உண்ணிக்கு அது தேவையில்லாத கஷ்டமாக இருக்காதா?"

"இதுல என்ன கஷ்டம் இருக்கு? கடவுளோட அருள் கிடைக்கட்டும்."

எடுத்தால் கீழே வைக்க மனம் வராத ஒரு ஸ்ரீராமன் சிலையை உண்ணி வாங்கிக் கொண்டு வந்தான். மண்ணால் செய்யப்பட்ட சிலையாக அது இருந்தாலும் ஒருமுறை பார்ப்பதிலேயே அது ஏதோ உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைப் போல் தோன்றும். அதற்கு அதிக விலை இருக்கும் என்று அவள் நினைத்தாள். ஆனால், உண்ணி ஒரு பைசா கூட அவளிடம் வாங்கவில்லை. அறையைப் பெருக்கி சுத்தம் செய்து, நீர் தெளித்து, அவள் சிலையை ஒரு ஸ்டூலின் மீது வைத்தாள். உண்ணிதான் ஒரு கற்பூரத் தட்டையும் வாங்கிக் கொண்டு வந்தான். காலையில் படுக்கையை விட்டு எழுந்து அவள் குளித்து முடித்து, விளக்கைக் கொளுத்தினாள். அறையில் கற்பூரத்தின் வாசனை சுற்றிலும் பரவித் தங்கியது. அந்த நிமிடமே தான் இழந்த என்னவெல்லாமே மீண்டும் தனக்குக் கிடைத்திருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். விரக்தியும் தனிமையும் இல்லாமற் போயின. ஸ்ரீராமபகவானிடம் தன் மனக் கஷ்டங்களையும் கனவுகளையும் கூற ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் மவுனமொழியில் அவள் பகவானுடன் பேசினாள் என்றாலும் காலப்போக்கில் அவள் உரத்த குரலில் பேசுவதும் கண்ணீர் சிந்துவதும் சிரிப்பதுமாக மாறிவிட்டாள். மனிதர்கள் யாருடனும் தோன்றாத ஒரு நெருக்கம் அவளுக்கு எப்போதும்  தெய்வங்களுடன் இருந்திருக்கிறது அல்லவா? ஸ்ரீராமபகவானுடன் அவள் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பேசினாள். சாவித்திரியின் பக்கத்து வீட்டுக்காரி ஒரு மாதச்சீட்டு ஆரம்பித்த போது அவள் இரண்டு சீட்டுகளில் சேர்ந்தாள். ஒரு சீட்டு பாலனின் பெயரிலும் இன்னொன்று கடவுள் பெயரிலும். கடவுள் பெயரிலிருக்கும் சீட்டுப்பணம் கிடைக்கிறது போது, அதைக் கொண்டு கடவுளுக்கு தங்கமாலை செய்து போட வேண்டும் என்று தீர்மானித்தாள்.

"மாலையும் வளையலும் செய்து போட எனக்கு மகளோ, மருமகளோ இல்லாட்டி என்ன? எனக்கு நீ இல்லையா?"- அவள் கடவுளைப் பார்த்துச் சொன்னாள்: "இல்லாததைப் பற்றி நினைச்சு நான் எந்தச் சமயத்திலும் சங்கடப்பட்டது இல்ல. என்ன இருக்குதோ, அதைக் கொண்டு திருப்திப்படுறதுதான் என் அனுபவத்துல இதுவரை நான் கத்துக்கிட்டது."

பிரார்த்தனையும் பூஜையும் ஆச்சரியப்படத்தக்க ஒரு மாற்றத்தை அவளிடம் உண்டாக்கியது. இரவில் மகன் வரத் தாமதமானால் அவளுக்கு ஒரு பதைபதைப்பாக இருக்கும். ஒருநாள் சாவித்திரியைப் பார்க்கவில்லையென்றால் அவளால் செயல்படவே முடியாது. காற்றும் மழையும் வந்தால் மனதில் ஒரு வகை பயம் தோன்றும். சாலை விபத்துக்களைப் பற்றியசெய்திகளை நாளிதழ்களில் வாசிக்கும் போதும் விபத்திற்கு இரையானவர்களின் புகைப்படங்களைப் பார்க்கிறபோதும் மனதே இடிந்து விட்டதைப் போல் இருக்கும். காலனியில் ஒரு வீட்டில் திருடன் நுழைந்துவிட்டான் என்பது தெரிந்த போது இரவு முழுக்க அவளுக்கு தூக்கமே வரவில்லை.

சாவித்திரியின் மூத்த மகனுக்கு மஞ்சள் காமாலை வந்த நாளன்று மூன்று நான்கு தடவைகள் தன்னுடைய முதுகு வேதனையைப் பற்றிக் கவலைப்படாமல் அவளுடைய வீட்டிற்குச் சென்று குழந்தையின் உடல்நிலையைப் பற்றி விசாரித்த வண்ணம் இருந்தாள். உண்ணி வெளியூர் பயணம் போயிருந்தபோது சாவித்திரியும் பிள்ளைகளும் எப்படித் தனியாக இரவு நேரங்களில் இருப்பார்கள் என்று நினைத்து நினைத்து அவளுக்கு உறக்கம் என்ற ஒன்று இல்லாமல் போனது. இப்போது அப்படி ஏதாவது நடந்தால் அவளுடைய மனம் சிறிதும் பாதிக்கப்படாது. கடவுள் சிலைக்கு முன்னால் விளக்கு கொளுத்தி கண்களை மூடி உட்கார்ந்து விட்டால் போதும், எல்லா குறைகளும் பனியைப் போல ஓடிவிடும். வாழ்வு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சினைகளுக்கும் உள்ள தெளிவான பதில் பிரார்த்தனைதான் என்ற முடிவுக்கு அவள் வந்தாள். பிரார்த்தனை செய்ய ஒரு மனமும் தெய்வங்களின் புகழை வார்த்தைகளால் சொல்ல ஒரு ஜோடி உதடுகளும் தொழுவதற்கு இரண்டு கைகளும் இருந்தால் வாழ்க்கை வளமானதே.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு குளித்து முடித்து, கடவுளுக்கு முன்னால் விளக்கைக் கொளுத்தி வைத்தபோது இந்த ஒரு முழுமையான மகிழ்ச்சிதான் அவளுக்குத் திரும்பக் கிடைத்தது.

 

நெற்றியில் நரம்புகள் குடைச்சல் உண்டாக்கி வேதனையைத் தந்தன. இடதுபக்கம் நெற்றிக்கு மேலே முடிக்குச் சற்று கீழேதான் முதலில் நரம்பு குடைச்சல் உண்டாக்க ஆரம்பித்தது. பிறகு அந்த குடைச்சலின் தொடர்ச்சி என்பதைப் போல வலது நெற்றி நரம்பும் இலேசாகத் துடித்தது. பிறகு இரண்டு பக்க நரம்புகளும் ஒரே நேரத்தில் துடித்தன. இடையில் தலைக்குள்ளிருந்து ஒரு அஸ்திரம் புறப்பட்டு வருவதைப் போல வலி பாய்ந்து வந்து நெற்றியைத் துளைத்துக் கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தது.

அவள் அறையை விட்டு வெளியே வரவில்லை. சாதாரணமாக இந்த நேரத்தில் அவள் பால்கனிக்குச் சென்று வெளியிலிருக்கும் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருப்பாள். வெயில் ஏறிக் கொண்டிருந்தது. காலனியிலிருந்த ஆண்கள் எல்லாரும் பணி செய்யும் இடங்களுக்கும் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்கும் போய் விட்டிருந்தார்கள். இப்போது பெண்கள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு காலனியாக அது மாறி இருந்தது. சில பால்கனிகளில் பெண்கள் அமர்ந்து கூந்தலை உலர வைத்துக் கொண்டிருந்தனர். மொட்டை மாடியில் சலவை செய்யப்பட்ட ஆடைகள் காய்ந்து கொண்டிருந்தன. கீழே சில பெண்கள் காய்கறி விற்பனை செய்பவர்களிடம் விலைபேசிக் கொண்டிருந்தார்கள். கையில் ப்ளாஸ்டிக் கூடைகளை எடுத்துக் கொண்டு காலனிக்குள் இருந்த மார்க்கெட்டிற்கு கூட்டமாகப் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் போய்க் கொண்டிருந்தனர் சில பெண்கள்.

லட்சுமியம்மா கட்டிலில் படுத்திருந்தாள். வயிறு எரிந்தாலும், அவள் ஒரு துளி நீர் கூட குடிக்கவில்லை. பாலனும் எதுவும் சாப்பிடாமல்தான் அலுவலகத்துக்குப் போயிருந்தான். இப்படி நடப்பது இதுவே முதல்முறை.


 ஜலதோஷமும் காய்ச்சலும் வந்து படுத்த படுக்கையாய் இருந்த போது கூட காலையில் எழுந்து அவனுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள். அழுக்கான சட்டையைச் சலவை செய்து கொடுப்பாள். அவளுக்கென்று இருந்த ஒரே மகன் அவன். அவனுக்காக மட்டுமே அவள் உயிர் வாழ்கிறாள். வாழ வேண்டும் என்ற விருப்பம் எப்போதோ போய்விட்டது. அவனுடைய தந்தை முன்பே போய்விட்டார். தாயும் உலகில் இல்லாமற்போனால் அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்? பாலனின் வயதைக் கொண்டவர்கள் எல்லாரும் திருமணம் முடித்து மனைவி, பிள்ளைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாலனுக்கு அப்படியொரு வாழ்க்கை அமையவில்லை. தானும் இல்லாமற்போய்விட்டால், அவன் நிலைகுலைந்து போய்விடமாட்டானா? அதனால் மட்டுமே அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். பாலனுக்காக மட்டும். அவனுடைய சந்தோஷம்தான் அவளுக்கும் சந்தோஷம். அவனுடைய மனம் சிறிது கூட வேதனைப்படக்கூடாது. அவனுடைய முகம் ஒரு தடவை கூட வாடக் கூடாது. இந்த விஷயங்களை அவள் விரதமென வாழ்க்கையில் கடைப்பிடித்துக் கொண்டிருந்தாள். பாலனுடைய விருப்பங்கள் தான் தன்னுடைய விருப்பங்கள் என்று அவள் ஆக்கிக் கொண்டிருந்தாள். அவனுடைய விருப்பங்கள் எதற்கும் தான் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். இப்படி பல விஷயங்களையும் கட்டிலில் படுத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தாள் லட்சுமியம்மா.

மதியநேரம் வந்தபோது சமையல் செய்து முடித்து துணிகளைச் சலவை செய்து காயப்போட்டுவிட்டு, குளித்து புடவை மாற்றிக் கொண்டு எப்போதும் போல சாவித்திரி வந்து கதவைத் தட்டினாள். சாதாரணமாக இந்த நேரத்தில் லட்சுமியம்மா அவளை எதிர்பார்த்து வெளியே பால்கணியில் அமர்ந்திருப்பாள். இன்று பலமுறைகள் கதவைத் தட்டினபிறகுதான் அவள் கதவையே திறந்தாள்.

"அம்மா, இன்னைக்கு உங்களுக்கு என்ன ஆச்சு?"- சாவித்திரி கேட்டாள்: "முகம் ஒரு மாதிரி வெளிறிப் போய் இருக்கே?"

"எனக்கு சாகணும்போல இருக்கு. மகளே!"

"அதுக்கு இப்போ என்ன நடந்திருச்சு?"

"அவங்கவங்களுக்கு தோணுற மாதிரி வாழமுடியலைன்னா சாகறதுதானே நல்லது?"

சாவித்திரிக்கு எதுவும் புரியவில்லை. அவளைப் பொறுத்தவரை லட்சுமியம்மா மிகவும் கொடுத்து வைத்தவள். லட்சுமியம்மாவின் கணவர் மிகவும் புகழ்பெற்ற ஒரு மனிதர். சாவித்திரி சமீபத்தில் கிராமத்திற்குப் போயிருந்தபோது கோழிக்கோட்டிற்குப் போயிருந்தாள். உண்ணியின் வீடு கோழிக்கோட்டிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தூரத்தில் கிழக்குப் பக்கம் இருக்கிறது. பஸ் ஸ்டாண்டிற்கு அருகில் இருக்கும் பூங்காவில் ஒரு ஆள் உயரத்திற்கு உள்ள ஒரு சிலை இருக்கிறது. உண்ணி அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டு சாவித்திரியிடம் சொன்னான்: "இது யாரோட சிலைன்னு உனக்குத் தெரியுமா? நம்ம லட்சுமியம்மாவோட கணவரோடது."

லட்சுமியம்மாவின் கணவர் இவ்வளவு பெரிய ஒரு மனிதர் என்பதே அப்போதுதான் சாவித்திரிக்குத் தெரிய வந்தது. இன்னொரு விஷயத்தையும் அப்போது அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. பூங்காவில் இருந்த சிலைக்கு பாலனின் முகச்சாயல் இருந்தது. ஒரே பார்வையில் அந்தச் சிலை பாலனின் சிலையாக இருக்குமோ என்று யாருமே நினைத்து விடுவார்கள்.

பாலனும் புகழ்பெற்று வருகிறான். டி.பாலகிருஷ்ணன் என்ற பெயரில் ஒரு ஆங்கில புத்தகத்தை சமீபத்தில் சாவித்திரி பார்க்க நேர்ந்தது.

இவ்வளவு போதாதா லட்சுமியம்மாவிற்கு?

"அம்மா, இன்னைக்கு ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?"- சாவித்திரி கேட்டாள்: "உங்களுக்கு என்ன ஆச்சும்மா?"

லட்சுமியம்மா எதுவும் பேசவில்லை. அவள் தன் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தாள். அவளுடைய இரண்டு கால்களிலும் வீக்கம் இருந்தது.

வெளியே இளம் வெயில் காய்ந்து கொண்டிருந்தது. பெண்கள் தனியாகவும் கூட்டமாகவும் காலனி வழியே நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். சாவித்திரி எவ்வளவு வற்புறுத்தியும் லட்சுமியம்மா வெளியே வரவில்லை. அவள் மதியம் வரை லட்சுமியம்மாவுடன் இருந்தாள். குழந்தைகள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வரும் நேரத்தில் அவள் அங்கிருந்து கிளம்பினாள். லட்சுமியம்மா மீண்டும் தன்னுடைய தனிமைச் சூழ்நிலையில் இருந்து கொண்டு வீங்கிப் போயிருந்த தன் கால்களையே பார்த்துக் கொண்டிருந்தாள். நெற்றி நரம்புகள் இப்போதும் விட்டு விட்டு குடைச்சல் தந்து கொண்டிருந்தன. இடது பக்க நரம்பை யாரோ பிடித்து இழுப்பதைப் போல் இருந்தது. அப்படியே நாற்காலியில் உட்கார்ந்து அவள் தூங்கி விட்டாள். மாலை வரை அந்தத் தூக்கம் தொடர்ந்தது. உண்மையில் சொல்லப் போனால் அவள் உறங்கவில்லை. தன்னுடைய சொந்த வாழ்க்கையை ஒரு திரைப்படத்தைப் போல அவள் பார்த்துக் கொண்டிருந்தாள். நினைவிற்கும் தூக்கத்திற்கும் இடைப்பட்ட ஒரு நிலை அது. அந்த நிலையில் பலமுறை அவள் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். வார இதழ்களின் அட்டைகளில் பார்த்திருக்கும் முகம். பாலனும் தன் தந்தையின் வழியைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான். சமீபத்தில் அவனுடைய புகைப்படம் பத்திரிகையில் பிரசுரமாகி வந்ததை அவள் பார்த்தாள். இனிமேல் வார இதழ்களின் அட்டைப்படங்களில் அவனுடைய முகம் அடிக்கடி வரலாம். தந்தையும் மகனும் பெரியவர்கள். அவர்களுக்கு தவறு நேராது. ஒருவேளை, தவறு இருப்பது தன்னிடம்தானோ? தன்னுடைய அறிவுக்கு எட்டாத, தன்னால் புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களும் உலகத்தில் இருக்கலாம். கணவன், மகன்- இரண்டு பேர் அளவிற்கு அறிவு இல்லாத தனக்கு அந்த விஷயங்கள் எப்போதும் புரிந்து கொள்ள முடியாதவையாகவே இருக்கலாம்....

"அம்மா, தூங்குறீங்களா?"

பாலனின் குரலைக் கேட்டு அவள் தன் கண்களைத் திறந்தாள். கதவுக்குப் பக்கத்தில் மங்கலான இருட்டில் அவளுடைய மகன் நின்றிருந்தான். எப்போதும் இல்லாத வகையில் பாலன் சீக்கிரமே வீடு திரும்பியிருக்கிறான். அவன் உள்ளே வந்து விளக்கைப் போட்டான்.

"அம்மா, நீங்க ஒண்ணும் சாப்பிட்டிருக்க மாட்டீங்க. எனக்குத் தெரியும்-."

அவன் உணவுப் பொட்டலத்தை மேஜை மீது வைத்தான்.

"சாப்பிடுங்கம்மா."

"பசி இல்ல, பாலா."

"எனக்குத் தெரியும்"- அவன் தலையைக் குலுக்கினான்: "அம்மா, உங்களுக்கு என் மேல கோபம்."

"எனக்கு யார் மேலயும் கோபம் இல்ல."

"நாடு பற்றி எரியுதும்மா. மனிதர்கள் பிராணியைப் போல செத்து விழுறாங்க. எல்லாத்துக்கும் காரணம் உங்க கடவுள்தாம்மா."

லட்சுமியம்மாவின் முகம் அமைதியாக இருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. முதல் தடவையாகப் பார்ப்பதைப் போல அவள் தன் மகனைப் பார்த்தாள்.

"என்னம்மா, என்ன சிந்திக்கிறீங்க?"

"இவ்வளவு காலம் தட்டாறத்து கிருஷ்ணனோட மனைவியா வாழ்ந்தேன். அப்படி வாழ்றது சாதாரண விஷயமில்லே" லட்சுமியம்மா சொன்னாள்: "இனிமேல் டி.பாலகிருஷ்ணனோட தாயா வாழணும். அதுவும் சாதாரண விஷயமில்ல. எது எப்படியோ, மகனே உன் அம்மாடா நான்..."

குடைந்து தளர்ந்து போன நரம்புகள் அவள் நெற்றியில் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தன.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.