Logo

வாழ்க்கைப் பயணம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6629
vazhkai-payanam

காற்றும் மழையும் காரணமாக பஞ்சாயத்து விளக்குகள் அணைந்து ஊரே இருளில் மூழ்கிப் போயிருந்தது. இல்லாவிட்டாலும் விளக்குகள் சீக்கிரமே அணைந்து போவது என்பது இப்போது ஒரு வழக்கமான செயலாக மாறியிருக்கிறது.

மண்ணெண்ணெயின் நினைக்க முடியாத அதிக விலை தான் அதற்குக் காரணம் மழை மேகங்கள் நட்சத்திரங்களை மூடியிருந்தன. வயல், வரப்பு, கரை, ஏரி எதையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் நிறைந்திருக்கும் இருட்டும் நீரும் மட்டுமே.

"அய்யோ, கண் தெரியல விளக்கைக் கொளுத்துங்க."

"இப்போ விளக்கு எதுக்கு? கிடந்து உறங்கு."

அவள் இளைய மகனின் பின்பக்கத்தில் இலேசாகக் கிள்ளினாள். அவன் பிள்ளைகள் உறங்குவதற்காகக் காத்து படுத்திருக்கிறான் என்பது அவளுக்குத் தெரியும். பிள்ளைகள் எல்லாரும் சீக்கிரமே உறங்கிவிட்டாலும், இளையவனின் கண்கள் மட்டும் மூடவில்லை.

"பயமா, இருக்கு, விளக்கைக் கொளுத்துங்கம்மா."

"மகனே, ஏண்டா பயப்படுற? அம்மாவும் அப்பாவும் உன் பக்கத்துலதானே இருக்கோம்!"

அவள் இருட்டில் அவனுடைய தலையை வருடினாள். தன் கணவனிடமிருந்து ஒரு நீளமான பெருமூச்சு வருவதை அவள் உணர்ந்தாள். தன் மார்புடன் ஒட்டிக் கிடந்த இளைய மகனுடைய நெஞ்சு ஒரு குருவியின் நெஞ்சைப் போல துடிப்பதையும் அவளால் உணர முடிந்தது.

அவளுடைய கணவனின் பருமனான கை படுக்கை வழியாக ஊர்ந்து வந்து அவள் வயிற்றின் மீது வந்து நின்றது.

"என்ன சத்தம்?"

அவளுடைய மார்புடன் ஒட்டியிருந்த மகனின் தலை இலேசாக அசைந்தது.

"உன்கிட்ட நான் தோத்துப் போயிட்டேன்டா, மகனே. நீயும் தூங்குறது இல்ல. மத்தவங்களையும் தூங்க விடுறது இல்ல. இது என்னடா பழக்கம்?"

வீட்டிற்கு முன்னாலிருந்த தெரு வழியே ஒரு ஜட்கா வண்டி போய்க் கொண்டிருக்கும் சத்தம் தான் அவன் கேட்டது. இந்தக் காற்றிலும் மழையிலும் குதிரை வண்டியில் போவது யாராக இருக்கும்?

"நான் ஜட்கா வண்டியைப் பார்க்கணும்?"

அவன் படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தான்.

"உன்னை நான் இன்னைக்கு கொல்லப் போறேன். அது மட்டும் உண்மை.

கோபம் வந்த அவள் அவனை பலமாகப் பிடித்து படுக்க வைத்து அவனுடைய பின் பாகத்தில் இன்னொரு முறை கிள்ளினாள்.

"நடுராத்திரி ஆன பிறகும் பையனுக்குத் தூக்கமே வர்றது இல்ல."

அவன் முணுமுணுத்தான்.

திடீரென்று மீண்டும் மழை வேகமாகப் பெய்ய ஆரம்பித்தது. வானத்திலிருந்து குடங்கள் வீட்டிற்கு மேலே வந்து விழுவதைப் போல் அவனுக்குத் தோன்றியது. மேலே விழுந்த நீர் வழிந்து வாசலில் விழுந்தது. படுக்கையறையின் சுவர்களிலும் ஜன்னல்களிலும் மழை நீர் வந்து விழுந்த சத்தம் கேட்டது. மழை விழும் சத்தத்தைக் கேட்டு பயந்த சிறுவன் எந்த வித அசைவும் இல்லாமல் தன் தாயுடன் சேர்ந்து படுத்துக் கொண்டான்.

"தூங்கிட்டானா?"

"தெரியல."

"இலேசா கிள்ளிப் பாரு."

"ம்.. தூங்கிட்டான்."

அவன் அவளுக்கு நேராகச் சாய்ந்து படுத்தான்.

"என்னத்தை சிந்திக்கிறே?"

"குதிரை வண்டியில யார் போயிருப்பாங்க? அதுவும் இந்த நடுராத்திரி பொழுதுல."

"அது கச்சேரிக்குப் போயிருந்த சந்துநாயரா இருக்கும்."- அவன் சொன்னான்.

காலையில் குதிரை வண்டியில் ஏறி பதினான்கு மைல் தூரத்திலிருக்கும் கச்சேரிக்கு வழக்கு விஷயமாகப் போன சந்துநாயரை அவன் பார்த்திருந்தான்.

குதிரை வண்டியின் சத்தம் மீண்டுமொரு முறை கேட்பதாக அவளுக்குத் தோன்றியது. அவள் காதைத் தீட்டிக் கொண்டு படுத்திருந்தாள். இந்த நள்ளிரவு நேரத்தில் ஜட்கா வண்டியில் இப்படியும் அப்படியுமாகப் போவது யாராக இருக்கும்?"

"கொஞ்சம் கதவைத் திறந்து பாருங்க."

"எதுக்கு?"

"அது சந்து நாயர் இல்ல. என் மனசு சொல்லுது."

"யாரா இருந்தா நமக்கு என்ன? நாம கிடந்து தூங்குவோம். ஏய், மழை நேரத்துல இப்படி படுத்திருந்தா என்ன சந்தோஷம் இருக்கு?"

அவன் அவளை இறுக அணைத்தான்.

"போய்ப் பாருங்க வாசல்ல யாருன்னு."

அவனும் காதைத் தீட்டிக் கொண்டு கேட்டான். வாசலில் ஒரு சிறு சத்தமோ, காலடி ஓசையோ ஏதோவொன்று கேட்பதைப் போல் இருந்தது. அறையில் முட்டை விளக்கின் திரி கரிந்து அணைந்து போய் எவ்வளவோ நேரமாகிவிட்டது.

"கொஞ்சம் போய்ப் பாருங்க."

"யார் என்னன்னு தெரியாம..."

அவன் தயங்கி நின்றான்.

"அப்படின்னா நானும் வர்றேன்."

ஆணாக இருந்த அவனைவிட பெண்ணான அவளுக்குத்தான் தைரியம் அதிகம். முட்டை விளக்கை எரிய வைக்க முயற்சி செய்து பார்த்தும், அது எரியவில்லை. எண்ணெய் தீர்ந்து கரிந்து போய் அதுதான் ஏற்கெனவே அணைந்து போய் விட்டதே! அவன் தட்டுத் தடுமாறி சமையலறைக்குள் சென்று அங்கு சுவரில் தொங்கிக் கொண்டிருந்த பானீஸ் விளக்கை எடுத்து கொளுத்தி வாசலை நோக்கி நடந்தான். கதவைத் திறப்பதற்குத் தயாரான கை ஒரு நிமிடம் அப்படியே தயங்கி நின்றது.

"கதவைத் திறக்கணுமா?"- அவன் கேட்டான். "இப்போ சத்தம் எதுவும் கேட்கலையே?"

"வாசல்ல யாரோ இருக்காங்க. அது மட்டும் நிச்சயம்." அவன் தாழ்வான குரலில் சொன்னான்.

பானீஸ் விளக்கை தன் மனைவியின் கையில் தந்த அவன் கதவின் தாழ்ப்பாளை நீக்கினான். இருட்டில் யாரோ 'விசுக்'கென்று நடப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது.

"யார் அது?"

திடீரென்று வந்த தைரியத்துடன் அவன் அசைவு கண்ட இடத்தை நோக்கி நடந்தான். பானீஸ் விளக்கின் வெளிச்சத்தில் சுவரில் மூலையில் யாரோ நின்று கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவன் தன் மனைவியின் கையிலிருந்த விளக்கை திரும்பவும் வாங்கி, அதை அந்த ஒதுங்கி நிற்கும் மனிதனுக்கு நேராக உயர்த்திக் காட்டினான். முகத்தில் வெளிச்சம் விழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மனிதன் தன் தலையை குனிந்து கொண்டான்.

"யார் நீ?"

அவன் கையில் பானீஸுடன் முன்னோக்கி நடந்தான்.

"திருடனாக இருக்கலாம் பார்த்துப் போங்க."

இப்போது தைரியம் குறைவாக இருந்தது அவளுக்குத்தான்.

"விளக்கை அணை"- தாழ்ந்த குரலில் அந்த மனிதன் சொன்னான்: "எனக்குப் பின்னால ஆள் இருக்காங்க."

"அப்போ, திருடன்தான்."

"நான் திருடன் இல்ல. விளக்கை அணைங்க. எல்லாத்தையும் நான் சொல்றேன்."

அந்த மனிதன் பதைபதைப்புடன் வெளியே இருட்டில் பார்த்தான். அவன் ஒரு இளைஞனாக இருந்தான். வயது இருபத்து ஐந்து இருக்கும்.

"நீ எதுவும் சொல்ல வேண்டாம். நான் உன்கிட்ட எதையும் கேட்க விரும்பல. நடுராத்திரி நேரத்துல வீட்டு வாசல்ல வந்து நின்னுகிட்டு தொந்தரவா தர்ற?"


"என்கிட்ட கருணை காட்டுங்க."

"சீக்கிரம் இங்கேயிருந்து போயிடு. இல்லாட்டி. நான் பிடிச்சு கட்டிப் போட்டுடுவேன். போலீஸைக் கூப்பிடுவேன்."

போலீஸ் என்ற வார்த்தையைக் கேட்டதும் அந்த இளைஞன் நடுங்கிப் போய்விட்டான். அவன் சுவரின் மூலையில் போய் பதுங்கி நின்றான்.

"நான் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்குறேன். போலீஸ் என்னை தேடிக்கிட்டு இருக்காங்க. பொ-ழுது விடியறதுக்கு முன்னாடி நான் இங்கேயிருந்து போயிடுறேன். உங்க தம்பின்னு நினைச்சு என்னைக் காப்பாத்துங்க."

அந்த இளைஞன் கெஞ்சினான்.

இருட்டில் எங்கோ ஒரு விஸில் சத்தம் கேட்டது. அதைக் கேட்டதுதான் தாமதம் அந்த இளைஞன் அடுத்த நிமிடம் பானீஸ் விளக்கை அவர்களிடமிருந்து பிடுங்கி திரியை இறக்கி அணைத்தான். அவர்கள் இருளில் கரைந்து நின்றிருந்தார்கள். யாருக்கும் யாரையும் பார்க்க முடியவில்லை. அவள் பயந்து போய் தன் கணவனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு நின்றாள்.

"நீ என்ன காரியம் செஞ்சே?"

கோபம் வந்த அவன் அந்த இளைஞனுக்கு நேராக இருட்டில் கையை ஓங்கினான். அந்த இளைஞன் எந்த சத்தமும் உண்டாக்காமல் கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தான்.

"விளக்கைக் கொளுத்தாதீங்க."

இளைஞன் மீண்டும் அவர்களைப் பார்த்து கெஞ்சினான். அவன் கெஞ்சியதைப் பொருட்படுத்தாமல் வீட்டுக்காரன் தீப்பெட்டியை உரசி பானீஸ் விளக்கைப் பற்ற வைத்தான். வெளிச்சத்தைப் பார்த்ததும் ஒரு பெருச்சாளியைப் போல அவன் பதுங்கினான்.

"யார் நீ?"

"நான் தான்... அப்புண்ணி."

"எந்த அப்புண்ணி?"

"கரியாட்டு கிருஷ்ணன் நம்பியாரோட."

"அடக்கடவுளே!"

அவன் கதவின் தாழ்ப்பாளைப் போட்டு விட்டு, விளக்கின் திரியை இறக்கி வெளிச்சம் குறைவாக இருப்பது மாதிரி செய்தான். பிறகு அவன் அப்புண்ணியை மேலிருந்து கீழ்வரைப் பார்த்தான். அந்த இளைஞனின் தலைமுடி காடென வளர்ந்திருந்தது. முகத்தில் ரோமங்கள் சிதறிக் கிடந்தன. மழை பெய்து நனைந்திருந்த அவனுடைய ஆடையில் சேறு ஒட்டியிருந்தது. உடல் இலேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.

"குடிக்குறதுககு ஏதாவது வேணுமா?"

அவளுக்கு அவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. 'வேணும்' என்ற அர்த்தத்தில் அவன் தலையை ஆட்டினான்.

"நீ இப்போ எங்கே இருக்கே?"

"தலைமறைவா இருக்கேன். அப்பாவுக்கு உடம்புக்கு சரியில்லைன்னு தெரிஞ்சு வந்தா"- அவன் எச்சிலை விழுங்கினான். போலீஸ் என்னை வளைச்சிட்டாங்க."

"நீ வந்திருக்கக்கூடாது அப்புண்ணி. தலைமறைவா இருக்குற கம்யூனிஸ்ட்காரங்களுக்கு அப்பா என்ன அம்மா என்ன?"

"ஜட்கா வண்டிக்காரன் கண்ணனோட உதவியாலதான் நான் இங்கே உயிரோட வந்து சேர்ந்தேன்."

அப்புண்ணி நாற்காலியில் அமர்ந்து கட்டியிருந்த வேஷ்டியால் கண்களையும் முகத்தையும் துடைத்தான். அவனுக்குச் சற்று நிம்மதி வந்ததைப் போல் இருந்தது.

அவள் கொண்டு வந்து தந்த சூடான பால் கலக்காத தேநீரைக் குடித்த போது, அவனுக்குப் புதிய உற்சாகம் வந்ததைப் போல் இருந்தது.

"கொஞ்ச நேரம் இங்கே நான் படுக்க சம்மதிக்கணும். பொழுது விடியறதுக்கு முன்னாடி நான் இங்கேயிருந்து போயிடுறேன்."

"எத்தனை நாட்கள் வேணும்னாலும் நீ இங்கேயே இரு. யாருக்கும் தெரியாது."

நம்பிக்கை வராததைப் போல அப்புண்ணி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.

"அப்புண்ணி வா..."

அவன் அப்புண்ணியின் கையைப் பிடித்து படுக்கையறைக்குள் அழைத்துக் கொண்டு போனான். படுக்கையில் இப்படியும் அப்படியுமாக பிள்ளைகள் படுத்திருந்தார்கள். அவன் விளக்கை சுவர் பக்கம் உயர்த்திக் காட்டினான். தோழர் கிருஷ்ணபிள்ளையின் கண்ணாடி போட்ட படமொன்று அங்கு மாட்டப்பட்டிருந்தது அதற்குப் பூமாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

"பாம்பு கடிச்சு இறந்துட்டார்னு தெரிஞ்சப்போ யாருக்கும் தெரியாம நான் அழுதேன்.வேற நான் என்ன செய்யமுடியும்? எனக்குன்னு வீடும் குடும்பமும் இருக்கு. எனக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்துட்டா, எல்லாரும் அனாதை ஆயிடுவாங்க."

வார்த்தைகள் அவனுடைய தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டன. அப்புண்ணியின் தளர்ந்து போன கையை அவன் இறுகப் பற்றிக் கொண்டான்.

"இந்தா, வேஷ்டியும், சட்டையும்."- அவள் சொன்னாள். "இதை மாத்திட்டு வந்து படு."

அவன் ஈரமாயிருந்த சட்டையை மாற்றினான்.

"இனி படு... மேல கட்டில் போட்டிருக்கு..."

அப்புண்ணி மேலே ஏறியபோது விளக்கு மீண்டும் அணைந்தது. வெளியில் திரும்பவும் மழை பெய்ய ஆரம்பித்த- காற்றும் மின்னலும் இல்லாமல் பொழுது புலரும் வரை அப்படியே மழை பெய்தவண்ணம் இருந்தது.

பொழுது புலர்ந்ததும் அப்புண்ணி எழவில்லை. ஒரு குழந்தையைப் போல எல்லாவற்றையும் மறந்து அவன் உறங்கிக் கொண்டிருந்தான். புகை போட்ட இடத்திலிருந்து ஓடும் ஒரு எலியைப் போல உயிரைக் காப்பாற்றுவதற்காக இவ்வளவு காலமும் அவன் ஓடிக் கொண்டேயிருந்தான். சொல்லப் போனால் ஒரு படுக்கையில் படுத்துறங்கிய காலத்தையே அவன் மறந்து போய்விட்டான்.

"எழுப்ப வேண்டாம்..."- தேநீருடன் மூன்றாவது தடவையாக அவள் மேலே ஏறிப் போவதைப் பார்த்து அவன் சொன்னான். "நல்லா தூங்கட்டும்..."

அன்று முழுவதும் அப்புண்ணி படுத்து உறங்கினான். நீர்கூட அருந்தாமல் எல்லாவற்றையும் மறந்த உறக்கம் அது. மாலை மயங்கி கிராமம் இருளில் மூழ்கியபோது தூக்கம் கலைந்து எழுந்து அவன் கீழே இறங்கி வந்தான்.

"நான் புறப்படுறேன்."

"யாரும் போகச் சொல்லலையே."

"படுக்கையில் படுத்து சுகம் கண்டு பாழ் செய்யறதுக்கு இல்ல என்னோட இந்தப் பிறவி நான் செய்ய வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கு"- அப்புண்ணி அவனுடைய கையை இறுகப் பற்றினான்: "அண்ணே... இந்த உதவியை நான் எப்பவும் மறக்க மாட்டேன்."

"அப்புண்ணி..."

"எனக்காக இன்னொரு உதவி செய்யணும். கடைசி மூச்சை விட்டு படுத்த படுக்கையா கிடக்குற என் அப்பாக்கிட்ட ஒரு விஷயத்தைச் சொல்லணும்... நான் உயிரோட இருக்கேன்றதை..."

"அப்புண்ணி..."

"அப்படின்னாத்தான் அப்பா மன நிம்மதியோட கண்ணை மூடுவாரு..."

"நான் சொல்றேன்."

அவன் இருட்டில் இறங்கி வேகமாக நடந்து மறைந்தான்.

இரண்டு நாட்கள் கடந்த பிறகு கிருஷ்ணன் நம்பியார் தன் இறுதி மூச்சைவிட்டார். அப்புண்ணியை எதிர்பார்த்து போலீஸ்காரர்கள் அங்கு பதுங்கியிருந்தாலும், அவன் வரவில்லை.

ஆனால், வெகு சீக்கிரமே ஒரு நாள் அவன் போலீஸ்காரர்களின் பிடியில் சிக்கினான். தனியாகவே சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு இளைஞன் எவ்வளவு காலத்திற்குத்தான் இப்படியே ஒளிந்து திரிய முடியும்? எவ்வளவு காலம் போலீஸ்காரர்களின் வலையில் மாட்டாமல் தப்பித்துக் கொண்டே இருக்க முடியும்? சமூக நீதிக்காக தன்னுடைய இளம் வாழ்க்கையை தியாகம் செய்த அப்புண்ணியை ஒரு திருடனையோ, கொலை செய்தவனையோ பிடிப்பது மாதிரி போலீஸ்காரர்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்வதைப் பார்ப்பதற்கு கிருஷ்ணன் நம்பியார் உயிருடன் இல்லாமற் போனது அவருடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.


நவ நாகரீகமாகக் கட்டப்பட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் ஹோட்டலுக்கு முன்னால் பஸ் வந்து நின்றதும், பல வண்ண ஆடைகளணிந்த மனிதர்கள் பல நிறங்களைக் கொண்ட பைகளுடனும் மற்ற பொருட்களுடனும் பஸ்ஸை விட்டு சத்தம் எழ கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள். வெண்மையான மணல் பரப்பில் பூக்களைப் போல அவர்கள் சிதறினார்கள்.

"பாரு... கடல் எவ்வளவு அழகா இருக்கு?"

முதலிரவின் நாணம் கண்களிலிருந்து இன்னும் போகாத நிலையில் இருந்த தன்னுடைய புது மணப்பெண்ணைப் பார்த்து அவன் கடலைக் காட்டி சொன்னான். அவள்முதல் தடவையாக கடலைப் பார்க்கிறாள். பத்திரிகைகளிலும், புகைப்படங்களிலும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் அல்லாமல் அவள் இதற்கு முன்பு கடலைப் பார்த்ததில்லை.

கடலின் பரந்த தன்மையும், கம்பீரமும் அவளை வியப்படையச் செய்தன.

அவளைப் போல வட இந்தியாவில் பிறந்து வளர்ந்தவன்தான் என்றாலும், அவன் இதற்கு முன்பு பல தடவை கடலைப் பார்த்திருக்கிறான்.

"வா.. நாம அலைகளுக்குப் பக்கத்துல போவோம்."

"அய்யோ... எனக்கு பயமா இருக்கு."

அவன் அவளுடைய கையைப் பிடித்துக் கொண்டு கடலுக்கு நேராக நடந்தான். நடந்தார்கள் என்று கூறுவதை விட அவர்கள் ஓடினார்கள் என்று கூறுவதே சரியாக இருக்கும்.

பஸ்ஸிலிருந்து இறங்கிய மற்ற பயணிகள் கடற்கரையில் பல்வேறு இடங்களில் சிதறி நடந்து கொண்டிருந்தார்கள்.

கடலை நெருங்கும் போது, பயந்தால் அவளுடைய கால்களின் வேகம் குறைந்து கொண்டே வந்தது.

"மலைகளையும், கடல்களையும் பார்க்கறப்போதான் பூமியைப் பற்றியே நம்மால புரிஞ்சிக்க முடியுது."அவன் சொன்னான்.

அவனுடைய கையை இறுகப் பிடித்துக் கொண்டு அவள் சிரித்தாள்.

கடலுக்கு மிகவும் நெருக்கமாக நின்றிருந்த அவர்களின் கால்கள் ஈரமான மணலில் கீழே இறங்கியது. அதற்கு மேல் முன்னோக்கிப் போக அவள் தயாராக இல்லை. அந்த அளவிற்கு அவளுக்குப் பயமாக இருந்தது.

"அப்படின்னா நீ இங்கேயே நில்லு"- அவன் சொன்னான். "நான் போயி அலைகளை அழைச்சிட்டு வர்றேன்."

"அய்யோ... அங்கே போக வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு."

கால்கள் இறங்கிப் போய்க் கொண்டிருக்கும் நீர் நிறைந்த மணல் வழியாக அவன் முன்னோக்கி நடந்து அலைகளை அழைத்துக் கொண்டு வந்தான். அலைகள் அவனைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. அலைகளை அழைத்துக் கொண்டு திரும்பி வரும் தன் கணவனை அவள் ஆச்சரியத்தால் விரிந்த கண்களால் பார்த்தவாறு நின்றிருந்தாள்.

அலைகள் மிகவும் நெருக்கமாக வந்தபோது, அவளுக்குப் பயம் தோன்றவில்லை. அவளுடைய பயம் இல்லாமல் போயிருந்தது அவள் கடலை விரும்பத் தொடங்கினாள்.

முதல் அலை அவளின் காற்பாதங்களை நனைத்துவிட்டு திரும்பிச் சென்றது. இரண்டாவதாக வந்த குறும்புத்தனமான அலை அவளின் கணுக்கால்கள் வழியாக முழங்காலையும் தாண்டி மேலே நகர்ந்து அவளின் தொடையை முத்தமிட்டது.

"போக்கிரி"- அவள் சொன்னாள்: "உன் காலை நான் ஒடிக்கிறேன் பாரு."

அவள் அலையைப் பார்த்து கையை ஓங்கினாள்.

அமைதியாகச் சிரித்தவாறு அலை கடலை நோக்கித் திரும்ப ஓடியது.

பயம் மாறிய அவள் அலைகளுடன் விளையாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அங்கு நின்றிருக்க, அவன் சற்று தூரத்தில் அமர்ந்து கடலின் அளவுடனும் வயதுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மனிதன் எவ்வளவு சாதாரணமானவன் என்று சிந்தித்துக் கொண்டிருந்தான். அப்போது அவனுடைய கை இயல்பாக சட்டை பாக்கெட்டிற்குள் ஒரு சிகரெட்டைத் தேடியது. மணலில் மல்லாக்கப் படுத்தவாறு காலை நேரத்தில் அழகு தாண்டவாடிக் கொண்டிருந்த ஆகாயத்தைப் பார்த்தவாறு அவன் புகை விட்டுக் கொண்டிருந்தான். அப்படியே படுத்தபடி ஆகாயம் கீழே இருப்பது மாதிரியும் கடல் மேலே இருப்பது மாதிரியும் அவன் கற்பனை பண்ணிப் பார்த்தான். மேலே அலைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும் தன்னுடைய புது மனைவியை அவன் பார்த்தான். அங்கிருந்து அவள் காலால் தட்டித் தெறித்த கடல் நீர் அவனுடைய முகத்தில் வந்து விழுந்தது.

"வா... மழை வருது..." - அவன் அழைத்துச் சொன்னான்: "நாம போவோம்.."

அலைகள் மேலும் அதிகமாக குறும்புத்தனங்கள் காட்டிக் கொண்டிருந்தன. ஒரு அலை அவளுடைய இடுப்பு வரை ஏறிச் சென்றது. வீரத்தனமான இன்னொரு அலை அவளின் மார்பகங்களை எட்டிப் பிடித்தது. தொடர்ந்து அலைகள் அவளின் உடம்பு முழுக்க ஏறிச்சென்று தழுவியும் முத்தங்கள் பதித்தும் அவளைப் பரவசத்திற்குள் சிக்க வைத்தன. அவளுடைய கால்களுக்கு இடையில் மார்பகங்களுக்கு இடையிலும் நுரைகள் பரவின. உப்பு நீரில் நனைந்த அவளின் உடலை அலைகள் கையில் எடுத்து விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

"வா... உனக்கு மழை பெய்றது தெரியலையா?"

அலைகளின் கையிலிருந்து விடை பெற்றுச்செல்ல அவளுக்கு மனமே வரவில்லை. சிறிது நேரத்திற்கு முன்பு அவள் பயந்த அலைகள் அதற்குள் அவளுடைய நண்பர்களாக மாறிவிட்டிருந்தன.

"மழை நின்ன பிறகு, நான் திரும்பவும் வருவேன். தெரியுதா?"

அவள் அலைகளைப் பார்த்துச் சொன்னாள். அலைகளை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்தவாறு அவள் தன் கணவனின் கையைப் பிடித்துக்கொண்டு ஹோட்டலை நோக்கி நடந்தாள். ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பலவகைப்பட்ட கார்களுக்கு மத்தியில் ஒரு மெர்ஸிடஸும் நின்றிருந்தது.

 

மழை பெய்தவுடன் வெவ்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த உல்லாசப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்கோ அல்லது வேறு ஏதாவது தங்கியிருக்கும் இடங்களுக்கோ திரும்பினார்கள். வெளிநாட்டுக்காரர்களோ, மழையைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல் கடற்கரையில் நடந்து கொண்டோ மணலில் படுத்துக் கொண்டோ இருந்தார்கள். கடலின் நிறம் மங்கலாகிக் கொண்டு வந்தது.

இப்போது கடல் சாம்பல் நிறத்தில் இருந்தது.

போத்துகீசியர்கள் தங்கியிருந்த ஒரு பழைய பங்களாதான் ஹோட்டலாக மாறியிருந்தது. அது மிகவும் பழமையானது. அகலமான ஜன்னல்கள், உயர்ந்த சுவர்களும் ஓடு வேய்ந்த மேற்கூரையும் கொண்ட அந்த பங்களா வெள்ளை நிறத்தில் இருந்தது. மழை நீர் பட்டதால் அதன் வெளிச்சுவர்கள் நனைந்து சாம்பல் நிறத்தில் இருந்தன.

"குளிருது."

அவள் சொன்னாள். அவன் அவனைத் தன்னுடைய உடம்போடு சேர்த்து அணைத்தான். மழை பெய்வதற்கு முன்பே அலைகளுடன் விளையாடிய அவளுடைய உடல் நன்கு நனைந்திருந்தது.

கடலுக்கு மேலே பெய்யும் மழையைப் பார்த்து அவனுக்கும் சிறிது குளிர் தோன்றியது.

"நீ வேற புடவையை உடுத்திக்கிட்டு வா."- அவன் சொன்னான். "நான் லாபியில இருக்கேன்."

அவள் சாவியை வாங்கிக் கொண்டு தன்னுடைய அறைக்குச் சென்றாள்.


அவன் நேராக பார் இருக்கும் இடத்திற்குச் சென்று சூடாக ஒரு பிராந்தி வாங்கிக் கொண்டு அதை கையில் வைத்துக் கொண்டே லாபிக்கு வந்தான். அவனுக்கு நேராக கடல் இருந்தது. இடியோ, காற்றோ எதுவும் இல்லாமல் பெய்து கொண்டிருக்கும் மழையைப் பார்த்தவாறு அவன் பிராந்தியைக் குடித்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு முன்னால் அவனைப் போலவே கையில் ஒரு டம்ளருடன் இன்னொரு ஆள் உட்கா£ந்து கடலைப் பா£த்துக் கொண்டிருந்தார். பருமனான உடலைக் கொண்ட ஒரு நடுத்தர வயது மனிதர் அவர். அவர்கள் இருவரின் கைகளில் இருந்த டம்ளர்களிலும் இருந்த மதுவிற்கு நிற வேறுபாடு இருந்தது.

மழை பெய்து கொண்டிருக்கும் கடற்கரையில் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அப்போதும் நடந்து கொண்டிருந்தனர். அவர்களில் சிலர் தங்களின் ஆடைகளை முற்றிலுமாகத் துறந்திருந்தனர்.

"நான் என் பிள்ளைகளைக் கூட அழைச்சிட்டு வரத் தயங்கறதுக்கு இதுதான் காரணம்."- நடுத்தர  வயது மனிதர் சொன்னார். அவருடைய கையில் ஒரு ரோலக்ஸ் கடிகாரம் இருந்தது. "எப்போ எந்த இடத்துல அவங்க கட்டியிருக்கும் துணியை அவிழ்த்துப் போடுவாங்கன்னே சொல்ல முடியாது."

அந்த இளைஞன் தன் கையிலிருந்த டம்ளரைப் பார்த்து சிரித்தான்.

"இது ஒரு நல்ல சுற்றுலா இடம். இவ்வளவு நல்ல கடற்கரையை இந்த நாட்டுல வேற எங்கேயும் பார்க்க முடியாது. ஆனால், இந்த நாசம் பிடிச்ச வெளிநாட்டுக் காரங்க...."

இளைஞன் மீண்டும் சிரித்தான். அதற்கிடையில் புடவை மாற்றப் போன தன்னுடைய மனைவி ஏன் இவ்வளவு நேரமாக வராமல் இருக்கிறாள் என்பதையும் அவன் யோசித்தான்.

"நான் இங்கே எப்போ வந்தாலும் இந்த ஹோட்டல்லதான் தங்குவேன். இங்கே நமக்குக் கிடைக்கிற ராயல் சல்யூட்டும் ஷிவாஸ்ரீகலும் கலப்படமே இல்லாததுன்ற விஷயத்தை நான் உறுதிபடச் சொல்லுறேன்."

புடவையை மாற்றிக் கொண்டு லாபியை நோக்கி வந்த தன் மனைவியின் முகத்தைப் பார்த்து இளைஞனின் முகம் மலர்ந்தது.

"என் மனைவி."

"குழந்தைங்க?"

"போன வாரம் தான் எங்களுக்குத் திருமணமாச்சு."

"வாழ்த்துக்கள்!"

அவர் எழுந்து இரண்டு பேரின் கைகளையும் பிடித்து குலுக்கி அவர்களை வாழ்த்தினார். அதற்குப் பிறகு அவர் பாருக்குள் நுழைந்து அங்கிருந்த ஆளிடம் என்னவெல்லாமோ பேசினார். பாரில் இருந்த ஆள் கையை விரித்ததைப் பார்த்து அந்த ஆளுக்குக் கோபம் வந்துவிட்டது. ஹோட்டல் மேனேஜரின் அறைக்குள் அவர் சென்றார்.

சிறிது நேரம் கடந்த பிறகு முகம் முழுக்க சிரிப்புடன் அவர் திரும்பி வந்தார்.

"புதுசா பார்ல வேலைக்கு வந்திருக்குற ஆள்"-அவர் சொன்னார். "இல்லாட்டி ஷாம்பெய்ன் இல்லைன்னு என்கிட்ட தைரியமா அவன் சொல்வானா?" மிகவும் விலை உயர்ந்த விசேஷமான அந்த மது கடற்கரையில் இருக்கும் பார்களில் பொதுவாகவே கிடைக்காது.

"உங்களோட நலத்திற்கும் மகிழ்ச்சிக்குமாக..."

அவர் டம்ளரை உயர்த்தினார். அவருடைய அந்த நடவடிக்கை இளைஞனையும் அவனுடைய மனைவியையும் மிகவும் கவர்ந்தது. அவள் முதல் தடவையாக அந்த விசேஷமான மதுவைப் பருகுகிறாள். ஒரு நிறுவனத்தின் எம்.டி.யான அவளுடைய தந்தை அடிக்கடி தன்னுடைய வீட்டில் விருந்துகள் வைப்பதுண்டு. அந்த விருந்துகளின் மூலம் பல மது வகைகளைப் பற்றியும் அவள் தெரிந்து கொள்ள முடிந்தது.

"என் மனைவிக்குப் பொதுவாக மதுன்னாலே பிடிக்காது. நான் வற்புறுத்தினா அவள் ஒயின் மட்டும் குடிப்பா. ஆனா, நான் என்ன குடிச்சாலும், அதுக்கு அவள் தடையே சொல்லமாட்டா."

நடுத்தர வயது மனிதர் தேவையில்லாமல் சத்தம் போட்டு சிரித்தார். அவர் தொடர்ந்து சொன்னார்: "மது அருந்துறது ஒரு கெட்ட பழக்கம்னு நினைக்கிறவங்க விவரம் இல்லாதவங்க. நம்மளோட அன்றாட வாழ்க்கையில எவ்வளவோ டென்ஷன் இருக்கு. நண்பர்களோட சாயங்கால வேளைகள்ல உட்கார்ந்து கொஞ்சம் மது அருந்துறது உடம்பு, மனசு ரெண்டோட ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஆரோக்கியமுள்ள ஆளுங்கதான் ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்க முடியும். அதனால சமூகத்தின் ஆரோக்கியத்திற்காக நாம குடிக்கணும்."

இளைஞன் அவர் கூறியதை ஒப்புக் கொள்வது மாதிரி தலையை ஆட்டினான். அவன் வளர்ந்து வரும் ஒரு பிஸினஸ் எக்ஸிக்யூட்டிவ்.

"உங்க மனைவியும் பிள்ளைகளும் வரலையா?" அவள் கேட்டாள்.

"ம்...ம்.."- நடுத்தர வயது மனிதர் சொன்னார்: "பிள்ளைகள் அறையில் உட்கார்ந்து வீடியோ பார்த்துக்கிட்டு இருக்காங்க. மனைவி ஹெல்த் க்ளப்புக்குப் போயிருக்கா."

அவர் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு பாக்கெட் வெளிநாட்டு சிகரெட்டை எடுத்துத் திறந்து இளைஞனுக்கு நேராக நீட்டினார். தொடர்ந்து அவர்கள் இருவரும் ஆளுக்கு ஒரு சிகரெட்டைப் புகைத்தார்கள்.

"இன்னிக்கு நாம ஒண்ணா மதிய உணவு சாப்பிடுவோம். நானும் என் மனைவியும் எங்களோட ரெண்டு பிள்ளைகளும் நீங்க ரெண்டு பேரும். என்ன சொல்றீங்க?"

"வித் ப்ளஷர்."

இளைஞன் தலையைக் குலுக்கிச் சிரித்தான்.

"மழை இல்லைன்னா நாம தீவுக்கு அவுட்டிங் போகலாம். ஒரு பிக்னிக் லஞ்ச். என்ன சொல்றீங்க?’’

‘‘ஃபென்டாஸ்ட்டிக்.’’

இளைஞன் சிரித்தான். அவனுடைய மனைவி புன்னகைத்தாள்.

புட்டி காலியான பிறகும் அவர்கள் லாபியில் உட்கார்ந்து பேசிக் கொண்டேயிருந்தார்கள். அந்த ஹோட்டல் ஒரு வீட்டைப் போல என்று கூறுவதே பொருத்தம். எங்கு வேண்டுமென்றாலும் போய் உட்காரலாம். எங்கு அமர்ந்தும் மது அருந்தலாம் எதைச் செய்வதற்கும் அங்கு சுதந்திரம் இருக்கிறது.

‘‘பை த வே, நீங்க ஒரு தென்னிந்தியரா?’’ இளைஞன் கேட்டான்.

‘‘என்னைப் பார்த்தா எப்படித் தோணுது? ஒரு தென்னிந்தியரைப் போல தெரியுதா?’’

அவர் இளைஞனையும் அவருனுடைய மனைவியையும் மாறி மாறி பார்த்தார்.

‘‘வேண்டாம்... நீங்க சிரமப்பட வேண்டாம்...’’ - அவர் சொன்னார். ‘‘நீங்க நினைச்சது சரிதான். நான் ஒரு தென்னிந்தியர்தான். இன்னும் சரியா சொன்னா நான் ஒரு மலையாளி.’’

தான் மனதில் நினைத்தது சரியாக அமைந்துபோனது குறித்து அந்த இளைஞனுக்கு மகிழ்ச்சி உண்டானது. அந்த மகிழ்ச்சியுடன் அவன் தன்னை அறிமுகப்படுத்தினான்.

‘‘அயாம் எஸ்.க்ருபளானி... சுபாஷ் க்ருபளானி.’’

‘‘அப்படின்னா நீங்க ஒரு சிந்தியா?’’

‘‘ஆமா...’’

அவர்கள் எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொண்டார்கள்.

‘‘அயாம் கெ.எ.நம்பியார்’’ - நடுத்தர வயது மனிதர் சொன்னார். ‘‘அதாவது - கரியாட்டு அப்புண்ணி நம்பியார்.’’

அந்த அறிமுகப்படலம் முடிவடைந்த மகிழ்ச்சியில் அந்த மனிதர் தன்னுடைய பருமனான உடலைக் குலுக்கி உரத்த குரலில் சிரித்தார்.

‘‘நானும், என் மனைவியும், எங்களோட ரெண்டு பிள்ளைகளும், அதோ அங்கே நிற்கிற மெர்ஸிடஸ் காரும்... இதுதான் என் குடும்பம்.’’


ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மெர்ஸிடஸ் தன்னுடையதுதான் என்று அவர்களுக்கு தெரிவிப்பதில் அவருக்கு ஆர்வம் அதிகம் இருப்பதுபோல் தோன்றியது.

மழை நின்றது. கடல் தெளிவானது. வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

சுற்றுலாப் பயணிகள் தாங்கள் தங்கியிருந்த இடங்களைவிட்டு வெளியே வந்து மீண்டும் கடலைத் தேடி வந்தார்கள். பரந்து கிடந்த கடற்கரையில் பலவண்ணங்கள் தெரிந்தன.

படிப்படியாக கடலுக்கு அதன் சொந்த நிறம் வர ஆரம்பித்தது. தெளிவான கடலும் மேகங்கள் இல்லாத ஆகாயமும் குளிர்ந்த காற்றும்...

இளைஞன் தன்னுடைய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு கடற்கரையில் நடந்தான்.

‘‘நம்ம ஊர்ல ஒரு கடல் இல்லாமல் போனது வருத்தமான விஷயம்தான்.’’ - அவள் சொன்னாள். ‘‘எல்லாமே அங்கே இருக்கு. ஒரு கடல் மட்டும் இல்ல...’’

அவளுக்கு கடல் மீது முதலில் இருந்த பயம் முற்றிலும் இல்லாமற்போயிருந்தது. இப்போது அவள் கடலைப் பார்ப்பது ஒரு நண்பரையோ சினேகிதியையோ பார்ப்பது போலத்தான்.

‘‘நாம தண்ணியில போய் நிற்போம்.’’ அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு கடலை நோக்கி நடந்தாள். அலைகள் அவளைக் கையை நீட்டி அழைத்தன. அவள் தங்களை நோக்கி வருவதைப் பார்த்து அலைகள் தங்களின் கடுமையான குரலில் பாட்டுப் பாட ஆரம்பித்தன. தொடர்ந்தும் இடைவெளி விட்டும் ஒலித்த அந்த இசை படிப்படியாக ஒரு குழுப்பாடலாக மாறியது.

அவள் அவனுடைய கையை விட்டு, அலைகளின் கைகளை நோக்கி ஓடிச் சென்றாள்.

தன்னுடைய சட்டையைக் கழற்றி, செருப்புகளைக் கழற்றி ஒரு இடத்தில் வைத்துவிட்டு அவன் மழை நீரும் கடல் நீரும் மணக்கும் மணலில் கால்களை நீட்டிப் படுத்தான். அப்போது மீண்டுமொரு முறை கடல் மேலேயும் ஆகாயம் கீழேயும் இருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. அது தனக்கு மட்டும் தோன்றும் ஒரு தோற்றமா இல்லாவிட்டால் அது ஒரு கற்பனையா என்று அவனுக்கே சந்தேகம் உண்டானது.

அலைகள் அவருக்குப் பாட்டு பாடச் சொல்லித் தருவதாகவும், கற்பனைக் கதைகளைச் சொல்லித் தருவதாகவும் இருந்தன. அவை அவளுடைய பாதங்களையும், கால்களையும் தொட்டு வருடிக் கொண்டிருந்தன. முரட்டுத்தனமான குணத்தைக் கொண்ட ஒரு அலை அவளுடைய கால்களுக்கு அடியில் இருந்த மணலைத் தோண்டி அவளை நிலை குலையச் செய்தது. முன்னோக்கிச் சாய்ந்து விழுந்த அவளை கைகளில் தாங்கிப் பிடிப்பதற்காக இளம் அலைகள் வேகமாக பாய்ந்து வந்தன. இதுவரை அடக்கமாக இருந்த அலைகள் ஒரு நிமிடம் நேரம் தங்களின் சகோதரத்துவத்தை மறந்து அவளுக்காக போட்டி போட்டன. அவை அவளின் நனைந்த தலை முடியையும் ஈரமான கால்களையும் முகத்தால் உரசின. நீரும் வெயிலும் முத்தமிட்ட அவளுடைய பெண்மையைத் தொட்ட அலைகளின் முரட்டுத்தனமான உதடுகள் அவளின் ஈரமான வயிற்றையும் தொப்புளையும் தொட்டு நகர்ந்தன. இளமை தாண்டவமாடும் ஒரு அலை தன்னுடைய நடுங்கிக் கொண்டிருந்த கையைநீரில் மூழ்கிக் கிடந்த அவளுடைய மார்பகங்களுக்குள் விட்டது. அலைகள் அவளுடைய முழு உடலிலும் முல்லைப் பூக்களைத் தூவின.

அவிழ்ந்த தலை முடியுடனும் அலங்கோலமான ஆடையுடனும் அவள் நீர் வந்து போய்க் கொண்டிருந்த மணலில் கண்களை மூடிக் கிடந்தாள். அவளுடைய கன்னங்களில் இருந்த நீர்த் துளிகள் வெயில் பட்டு முத்துக்களைப் போல் ஒளிர்ந்தன.

அதேநிலையில் படுத்திருந்த தன் மனைவியை அவள் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய கை விரல்களுக்கிடையில் ஒரு சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. அவனை அறியாமல் அவனுடைய உதட்டில் ஒரு புன்னகை தோன்றியது.

***

காசிக்குச் செல்லும் வண்டியில் ஏராளமான புனிதப் பயணம் செல்பவர்கள் இருந்தார்கள். கம்பார்ட்மென்டின் எல்லா மூலைகளிலும் மட்டுமல்ல- ஏறுகிற படியிலும் வண்டிக்கு மேலேயும் கூட அவர்கள் நிறைந்திருந்தார்கள். வழியில் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் பக்தர்கள் இடித்துக் கொண்டு ஏறிய வண்ணம் இருந்தார்கள். நாளைக்கு பவுர்ணமி என்ற விஷயம் அவனுக்குத் தெரியாது. அப்படித் தெரிந்திருந்தால் அந்த வண்டியில் அவன் பயணம் செய்திருக்க மாட்டான். அதைப்போல கூட்டமாக ஆட்கள் பயணம் செய்த ஒரு வண்டியில் அவன் இதுவரை பயணித்ததே இல்லை.

அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றபோது தன்னுடைய சிறிய பேக்குடன் அங்கு இறங்கிவிடலாமா என்று அவன் நினைத்தான். ஏதாவது ஒரு ஹோட்டலிலோ இல்லாவிட்டால் ஸ்டேஷனின் ஓய்வு அறையிலோ இரவுநேரத்தில் தங்கிவிட்டு நாளை கூட்டம் அதிகமில்லாத நேரத்தில் பனாரஸை நோக்கிப் பயணம் செய்யலாம். அவன் இந்த விஷயத்தை தீவிரமாகச் சிந்தித்தான். ஆனால், வண்டியை விட்டு எப்படி வெளியே இறங்குவது? நின்று கொண்டிருந்த இடத்தை விட்டு ஒரு அங்குலம்கூட பின்னாலோ முன்னாலோ நகர முடியாத நிலையில் அவன் இருந்தான். அந்தச் சூழ்நிலையில் வண்டி ஸ்டேஷன்களில் நிற்பதும் மீண்டும் ஆட்களின் கூட்டம் அலையென உள்ளே நுழைவதுமாக இருந்தது. நான்கு பக்கங்களிலுமிருந்த இடிபாடும் வியர்வை நாற்றமும் அவனை மூச்சுவிட சிரமப்படுத்தியதோடு வாந்தி வருவதைப்போல் ஒரு உணர்வையும் உண்டாக்கின. அவனுடைய தொண்டை ஒரு துளி நீருக்காக ஏங்கியது.

மாலை நேரம் ஆனபோது அவனுடைய உடல் செயல்படும் தன்மையையே இழந்துவிட்டது. ஆட்கள் அவனுடைய கால்களை மிதித்து நசுக்கியதைக்கூட அவனால் உணர முடியவில்லை. கிட்டத்தட்ட அவன் சுயஉணர்வு அற்ற நிலையில் இருந்தான். எதையும் புரிந்து கொள்ளவோ பார்க்கவோ அவனால் முடியவில்லை. நான்கு பக்கங்களிலுமிருந்து வந்த நெரிசலில் ஒரு மரத்தூணைப் போல அவன் அசையாமல் நின்றிருந்தான்.

அதேநிலையில் பயணம் செய்து நள்ளிரவு நேரத்தில் அவன் பனாரஸில் வண்டியை விட்டு இறங்கினான். வண்டி ஆறு மணி நேரம் தாமதமாக வந்திருந்தது. அந்த நேரம் கெட்ட நேரத்தில், தான் எப்படி மகளிர் ஹாஸ்டலுக்குப் போக முடியும் என்று அவன் யோசித்தான். என்ன சொன்னாலும், எவ்வளவு விளக்கினாலும் காவலாளி கேட்டைத் திறக்க மாட்டான் என்பது நிச்சயம்.

வண்டி சாயங்காலம் ஐந்தரை மணிக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும். ஸ்டேஷனிலிரந்து நேராக ஹாஸ்டலுக்குச் சென்று அவளை அழைத்துக்கொண்டு ராம் நகரில் இருக்கும் அந்தச் சிறு ஹோட்டலில் அறை எடுத்துத் தங்க வேண்டும் என்பதுதான் அவனுடைய திட்டமாக இருந்தது. ஆனால், இப்போது எல்லாமே குழப்பமாகிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் அவன் ப்ளாட்பாரத்தில் சிந்தித்தவாறு நின்றிருந்தான். அவனுடைய உடம்பும் மனதும் ஒரே மாதிரி சோர்வடைந்து போயிருந்தன.

அப்படி நின்றிருந்தபோது தன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை.


சுமை, பைகள், ஊன்றுகோல் ஆகியவற்றுடன் வந்து கொண்டிருந்த புனிதப்பயணிகளுக்கு மத்தியில் அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

‘‘அஞ்சு மணிக்கே வந்து காத்திருக்கேன்.’’

அவள் சொன்னாள். அவளைப் பார்த்தவுடன் அவனுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவன் சொன்னான்: ‘‘நடு ராத்திரி நேரத்துல நீ இங்கே தனியா வந்திருக்கக் கூடாது.’’

‘‘பரவாயில்ல... எனக்கு இப்போ பயம் எதுவும் இல்ல.’’

ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை இங்கு கொண்டுவந்து ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுத் திரும்பிப் போகும்போது ஒரு குழந்தையைப் போல அவள் கண்ணீர்விட்டு அழுதாள்.

‘‘வண்டியில் உட்கார்ந்து வர்றதுக்கு இடம் கிடைக்கல அப்படித்தானே? பவுர்ணமின்னு தெரிஞ்சப்பவே வண்டியில கூட்டம் அதிகமா இருக்கும்ன்ற விஷயம் எனக்குத் தெரியும்.’’

அவர்கள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தார்கள். நள்ளிரவு நேரமாக இருந்தாலும் பகல் நேரத்தைப் போல ஸ்டேஷனிலும் சுற்றியுள்ள இடங்களிலும் நல்ல கூட்டம் இருந்தது. நாட்டிலிருக்கும் மக்கள் எல்லாருமே புனிதப் பயணிகளாக மாறி விட்டதைப் போல இருந்தது.

‘‘நீ வராம இருந்திருந்தா நான் பொழுது விடியிறது வரை எங்கேயாவது போய் உட்கார்ந்து பொழுதைப் போக்கியிருக்கணும்.’’

‘‘நான் வருவேன்னு நினைக்கல... அப்படித்தானே?’’

‘‘ஆறு மாதங்கள்ல நீ இந்த அளவுக்கு புத்திசாலியா மாறி இருப்பேன்னு யார் நினைச்சாங்க?’’

நள்ளிரவு வெளிச்சத்தில் அவள் சிரித்தாள். அவன் தன்னுடைய சோர்வையும் உடல் வேதனையையும் மறந்து உற்சாகத்துடன் அவளுடன் சேர்ந்து நடந்தான்.

‘‘நாம பார்த்து மூணு மாதங்கள் ஆச்சுல்ல?’’ - அவன் சொன்னான்: ‘‘ஆனா, மூணு வருடங்கள் ஆனது மாதிரி இருக்கு.’’

‘‘என்னை நினைச்சீங்களா?’’

‘‘உன்னை விட்டுப் போன பிறகு என் முக்கிய வேலையே உன்னைப் பற்றி நினைக்கிறதுதான். வேற எதையும் நினைக்க எனக்கு நேரமே இல்ல.’’

‘‘என்னைப் பற்றி அந்த அளவுக்கு நினைக்கிறதுக்கு என்ன இருக்கு?’’

‘‘உன் தலைமுடி, உன் தொப்புள்...’’

‘‘போதும்... போதும்... நடுத்தெருவுல வச்சு என்ன பேசுறீங்க?’’

குதிரை வண்டிகளும், ரிக்ஷாக்களும் கால்நடையாக நடப்பவர்களும் நெருங்கி நெருங்கி போய்க் கொண்டிருந்த தெரு அது என்பதை அவன் மறந்துவிட்டான்.

‘‘பெட்டி பெருசா இருக்கே! எனக்காக என்ன கொண்டு வந்தீங்க?’’

‘‘முதல்ல அறைக்குப் போவோம். என்ன கொண்டு வந்திருக்கேன்னு அங்கே காண்பிக்கிறேன்.’’

அவன் அர்த்தம் வைத்துக் கொண்டு சிரித்தான்.

‘‘எந்த அறை? புனிதப் பயணிகள் வர்றதைப் பார்த்தீங்கள்ல? இன்னைக்கு எங்கேயும் அறை கிடையாது. பொழுது விடியறது வரை இப்படி நடந்துக்கிட்டு இருக்க வேண்டியதுதான்.’’

அவள் அவனை நோக்கி கடைக்கண்ணால் சிரித்தாள்.

‘‘நான் பொழுது விடியறது வரை நடக்கத் தயார்.’’

‘‘அது வேண்டாம்...’’ - அவள் சொன்னாள்: ‘‘ஹோட்டல்ல நான் அறை புக் பண்ணி வச்சிருக்கேன்.’’

அவனால் நம்பவே முடியவில்லை. இந்த அளவிற்கு புத்திசாலித்தனமாக அவளால் எப்படி நடக்க முடிகிறது? திருமணம் முடிந்த மறுநாளே அவன் அவளுக்கு ஒரு புதிய பெயர் வைத்தான். புத்தூஸ்... சிந்திக்க தெரியாத மறதியைக் கொண்ட புத்தூஸ். அந்த புத்தூஸ்தான் ஸ்டேஷனுக்கு வந்து நள்ளிரவு நேரம் வரை போலி சந்நியாசிகளும் பிக்பாக்கெட் அடிப்பவர்களும் நடமாடிக் கொண்டிருக்கும் ஜன சந்தடி நிறைந்த ப்ளாட்ஃபாரத்தில் தனக்காக காத்திருக்கிறாள். பவுர்ணமி நாளன்று ஹோட்டல்களில் அறை கிடைப்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயம் என்பதைப் புரிந்து கொண்டு முன்கூட்டியே அறையை புக் பண்ணி வைத்திருக்கிறாள். உண்மையிலேயே அவள் புத்திசாலிதான்...

அவர்கள் ஒரு ரிக்ஷாவில் ஏறினார்கள்.

முதல் தடவையாக அவளை இங்கு அழைத்துக்கொண்டு வந்தபோதும் மூன்று மாதங்கள் கழித்து அவளைப் பார்ப்பதற்காக வந்தபோதும் அவன் ராம்நகரில் இருக்கும் ஹோட்டலில்தான் தங்கினான். அறை முழுவதும் பல கடவுள்களின் படங்களும், காலண்டர்களும் மாட்டப்பட்டு சாயம் பூசப்பட்ட சுவர்களைக் கொண்ட, கொண்டி உடைந்த ஜன்னல்களைக் கொண்ட அந்த ஹோட்டல் பழமையானதாகவும் சிதிலமடைந்த ஒன்றாகவும் இருந்தாலும், அது சுத்தமாக இருந்தது.

‘‘நாம பொழுது விடியறது வரை இப்படியே ரிக்ஷாவுல சுத்தலாம்.’’

அவள் சொன்னாள்.

இருண்ட நிழல்கள் விழுந்த அகலம் குறைவான பாதைகள் வழியாக புனிதப் பயணிகள் மூட்டை, முடிச்சுகளுடன் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

‘‘நான் வண்டியில எப்படி வந்தேன்னு உனக்குத் தெரியாது. என் உடம்பு எப்படி வலிக்குது தெரியுமா? எங்கேயாவது போய் முதல்ல படுக்கணும்...’’

‘‘அதுக்கு இனியும் மூணு நாட்கள் இருக்கே!’’

‘‘மூணு நாட்களா? நாளை மறுநாள் சாயங்காலம் காசி எக்ஸ்பிரஸ்ல நான் கிளம்பிப் போகணும்.’’

‘‘அப்படின்னா ஒரு ராத்திரிதான் என்கூட இருப்பீங்களா?’’ அவளுடைய முகம் வாடிவிட்டது. ‘‘இவ்வளவுதான் என்கிட்ட இருக்குற அன்பா?’’

ரிக்ஷாக்காரன் தெருக்கள் வழியாக அவர்களை ஏற்றிக் கொண்டு போய்க் கொண்டிருந்தான். சிறிது தூரம் சென்றதும் பாதைகள் முழுவதும் புனிதப் பயணிகளின் பஸ்கள் வரிசையாக நின்றிருந்தன. பஸ்ஸிற்குள் உட்கார்ந்திருந்த பக்தர்கள் கைகளைத்தட்டி சிவனின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பஸ்ஸிலிருந்து உரத்த குரலில் பாட்டும் டோலக் சத்தமும் கேட்டன.

‘‘சிலருக்கு பக்தி ஒரு கேளிக்கையைப் போல...’’ - அவன் சொன்னான். ‘‘ஒரு பிக்னிக்கிற்குப் போவதைப் போல அவங்க காசிக்கு வர்றாங்க.’’

‘‘சிலர் ஜோடிகளைத் தேடி காசிக்கு வர்றாங்க.’’

அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.

அவர்கள் ஹோட்டலை அடைந்தார்கள். சாவியை வாங்கி பேக்குடன் அவன் அறைக்குள் பாய்ந்தான். அறைக்குள் நுழைந்தவுடன் அவன் கதவை வேகமாக அடைத்தான்.

‘‘அய்யோ, ஜன்னலை அடைக்கல...’’

திறந்து கிடக்கும் ஜன்னல் வழியாக மங்கலான வெளிச்சத்தில் பனாரஸின் பழமையான கட்டிடங்களைப் பார்க்கலாம்.

அவன் அவளைக் கீழே இறக்கிவிட்டு ஜன்னல்களை அடைத்து விட்டுத் திரும்பி வந்தான்.

‘‘என் தங்கமே, இனி விசேஷங்களைச் சொல்லு.’’

‘‘நான் நல்ல இருக்கேன்...’’

புதிய சூழ்நிலையுடனும் உடன் பணியாற்றுபவர்களுடனும் அவள் ஒத்துப்போய் விட்டாள். இப்போது காசி அவளுக்குப் பிரச்சினையாக இல்லை. சந்நியாசிகளும், பிச்சைக்காரர்களும் பூசாரிகளும், பிணங்களும் நிறைந்த காசி அவளை பயமுறுத்தவில்லை. எப்போதும் அணையாத ஒன்றிலிருந்து வேறொன்றிற்கு காலம் காலமாக பற்றி எரிந்து கொண்டிருக்கும் சிதைகள் அவளை பாதிக்கவில்லை. அவற்றுக்கு நடுவில் மகிழ்ச்சியின், அழகின் சிறு தீவுகள் இருக்கவே செய்கின்றன. அந்தத் தீவுகளில் அவள் மனத் திருப்தியுடன் வாழ்ந்தாள்.

‘‘எனக்கு ஒரே ஒரு கவலைதான்’’ - அவள் சொன்னாள்: ‘‘நாம ரெண்டுபேரும் ரெண்டு இடங்கள்ல இருக்க வேண்டியதாகிப் போச்சு!’’

‘‘இன்னும் ஆறு மாதங்களுக்குத்தான். அதுக்குப் பிறகு நீ என்கிட்ட வந்திடலாம்.’’


அவன் அவளைத் தேற்றினான்.

ஊரில் திருமணம் முடிந்து நகரத்திற்கு வந்தவுடன் அவளுக்கு இடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது. சிறிதும் எதிர்பார்க்காமல் கிடைத்த ஒரு அதிர்ச்சி அது. ஒருவரையொருவர் பார்த்து, தொட்ட ஆவல் கூட அடங்கவில்லை. அதற்கு முன்பு...

எவ்வளவு பேரைப் போய்ப் பார்த்தான்? எத்தனைப் பேர்களின் கால்களை அவன் பிடித்திருப்பான்? எவ்வளவு பணத்தைச் செலவழித்திருப்பான்? அதற்கு எந்தப் பிரயோஜனமும் உண்டாகவில்லை. ஒரு வருடம் முடியாமல் திரும்பவும் பழைய இடத்திற்கு மாற்றுவது என்பது நடக்காத ஒரு காரியம் என்று அவர்கள் உறுதியான குரலில் கூறிவிட்டார்கள்.

‘‘நீ வேலையை ராஜினாமா செஞ்சிரு’’ - மனம் வெறுப்படைந்து அவன் சொன்னான். ‘‘இருக்குறதை வச்சு நாம வாழ்வோம்.’’

‘‘அய்யோ, ராஜினாமா செய்யறதா?’’

அவளால் அதை எண்ணிப் பார்க்கக்கூட முடியவில்லை. தூங்காமல் விழித்திருந்து படித்து எத்தனை முறை தேர்வுகள் எழுதி கடைசியில் இந்த வேலை தனக்குக் கிடைத்தது என்பது அவளுக்குத்தான் தெரியும்.

இனியும் ஆறு மாதங்கள்...

‘‘ஆறு மாதங்கள் படு வேகமா ஓடிடும்’’ - அவன் அவளைத் தழுவிக் கொண்டே சொன்னான்: ‘‘நான்கு வருடங்களுக்கு முன்னாடி நாம முதல் தடவையா பார்த்த நாள் உனக்கு ஞாபகத்துல இருக்கா? எவ்வளவு வேகமா நான்கு வருடங்கள் ஓடிடுச்சு?’’

அவன் அவள் கால்களை வருடினான். வயிற்றில் விரல்களை ஓடவிட்டான். தன்னுடைய முழு உடம்பும் அவளுக்காக உள்ளுக்குள் ஏங்கிக் கொண்டிருப்பதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அறையை அடைத்தவுடன் கால்களை நீட்டிப் படுத்துத் தூங்க வேண்டும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால் பொழுது விடிந்த பிறகும் அவர்கள் உறங்கவில்லை. அவர்கள் தங்களுடைய உடல்களின் பசியையும் தாகத்தையும் தீர்க்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் மதியம் வரை அவர்கள் படுத்து உறங்கினார்கள்.

சாயங்காலம் அவர்கள் நதிக்கரையில் நடப்பதற்காக கிளம்பினார்கள். அவன் வாங்கிக் கொண்டு வந்திருந்த தவிட்டு நிறத்திலான புடவையை அவள் அணிந்திருந்தாள். அந்தப் புடவையை உடுத்தி நதிக்கரையிலிருந்த பீப்பல் மரத்திற்குக் கீழே அவள் நின்றிருந்தபோது அவள் மீது தான் கொண்டிருக்கும் பிரியத்தை அவன் நினைத்துப் பார்த்தான்.

‘‘நான் ஒரு ஆளை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.’’ - அவள் சொன்னாள். ‘‘நம்ம ஊர்தான்.’’

‘‘மலையாளியா?’’

‘‘ஆமா...’’

‘‘யார் அந்த ஆளு?’’

அவன் பதைபதைப்புடன் கேட்டான்: ‘‘பயப்பட வேண்டாம். இளைஞன் ஒண்ணும் இல்ல. என் அப்பா வயசு இருக்கும் அந்த ஆளுக்கு.’’

அவனுடைய வாடிய முகம் மீண்டும் மலர்ந்தது.

அவள் அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு தூரத்தில் தெரிந்த ஆலமரத்தை நோக்கி நடந்தாள். மிகவும் வயதான அந்த மரத்திற்கு கீழே ஒரு நெய்விளக்கு எரிந்து கொண்டிருந்தது. மரத்திற்குக் கீழே வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்த ஒரு வயதான மனிதர் ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்தாள்.

‘‘யார் அந்த ஆளு?’’

‘‘ஒரு பெரிய பணக்காரர். மன அமைதிக்காக இங்கே வந்து தங்கியிருக்காரு. சொத்து, பணம் எல்லாத்தையும் வேண்டாம்னு தூக்கியெறிஞ்சிட்டு இங்கே வந்திருக்காரு.’’

அவர்கள் ஆலமரத்திற்கு முன்னால் போய் நின்றார்கள்.

‘‘இவர்தான் நான் சொன்ன ஆளு. நேற்று ராத்திரி வந்தார்.’’

அந்த வயதான மனிதர் சிரிக்கக் கற்பதைப்போல அவர்களைப் பார்த்து சிரித்தார்.

‘‘விடுமுறை அதிகம் இருக்கா?’’

‘‘நாளைக்கு ராத்திரி காசி எக்ஸ்பிரஸ்ல திரும்பிப் போகணும்.’’

‘‘அடிக்கடி வாங்க. பொண்ணு இங்கே தனியா இருக்குல்ல?’’

‘‘அவளுக்கு இப்போ நானே தேவையில்ல... காசிக்கு வந்த பிறகு ஆளே முழுசா மாறிப்போயிட்டா...’’

சிரிக்க ஆரம்பித்த அவன் வயதான மனிதரின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியைப் பார்த்து அந்தச் சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

அவர்கள் ஆலமரத்திற்குக் கீழே உட்கார்ந்தார்கள். அங்கு ஒரு உடைந்த மண் பானையும் நீரும் கொஞ்சம் பூக்களும் சிதறிக் கிடந்தன. அவள் வாய் வலிக்கப் பேசிக் கொண்டே இருந்தாள். இடையில் அவ்வப்போது அவனும் சிலவற்றைப் பேசினான். வயதான மனிதர் எதையும் கேட்காததைப் போல எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தார்.

கொஞ்சம் கொஞ்சமாக நதி இருண்டது. குளிர்க்காற்று வீச ஆரம்பித்தது.

அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்து வயதான மனிதரிடம் விடைபெற்றார்கள். வெளிச்சம் குறைவாக இருந்த மரத்தடியில் அமர்ந்திருந்த அந்த மனிதர் தன்னுடைய நரைத்துப்போன தலையை மெல்ல அசைத்து அவர்களுக்கு விடை கொடுத்தார்.

‘‘எனக்கு அவரை நல்லா தெரியும்.’’

அவள் தன் கணவனின் முகத்தைப் பார்த்தாள். அவன் தொடர்ந்து சொன்னான்: ‘‘கரியாட்டு அப்புண்ணி நம்பியார்ன்னு அவரோட பேரு.’’

நனைந்து போயிருந்த தெரு வழியே அவர்கள் தோள்களை உரசியவாறு நடந்தார்கள். நள்ளிரவு நேரம் வரை அவர்கள் காசியில் சுற்றித் திரிந்தார்கள். இரவில் அவர்கள் தூங்கவில்லை. பொழுதுவிடியும் வரை அவர்கள் ஒருவர் உடலை ஒருவர் கைகளில் எடுத்துக் கொண்டு விளையாடினார்கள்.

மதியம் ஹாஸ்டலில் இருந்த சிநேகிதி அவர்களை சாப்பாட்டுக்கு அழைத்திருந்தாள்.

அறைக்கு திரும்பி கதவையும் ஜன்னலையும் அடைத்துவிட்டு அவர்கள் ஒன்றாகப் படுத்து உறங்கினார்கள்.

‘‘அய்யோ... அழறியா?’’ - அவன்கேட்டான். ‘‘தைரியம் எல்லாம் எங்கே போச்சு?’’

அவள் புடவைத் தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

இரண்டு மாதங்கள் கழிந்தால் அவன் மீண்டும் வருவான். அந்த நாள் பவுர்ணமி நாளாக இல்லாதது மாதிரி அவன் பார்த்துக் கொள்வான்.

பேகி பேன்ட்டும் ஆக்ஷன் ஷூக்களும் அணிந்து கல்லூரிக்குப் போய்க் கொண்டிருக்கும் அந்த இளைஞன் வேறு யாருமல்ல - கரியாட்டு அப்புண்ணி நம்பியாரின் இளைய மகன்தான். இரண்டு வருடங்கள் கழிந்தால் பொருளாதாரத்தில் பட்டத்துடன் அவன் கல்லூரியை விட்டு வெளியே வருவான். பிறகு? பிறகு அவன் என்னவாக ஆவான்? அவன் சமூக நீதிக்காகப் போராடும் ஒரு புரட்சியாளனாக ஆவானா? மெர்ஸிடஸ் காரில் பயணிக்கும் ஒரு தொழிலதிபராக ஆவானா? சொத்து, பணம் எல்லாவற்றையும் வேண்டாம் என்று உதறி எறிந்துவிட்டு காசிக்கு மன அமைதி தேடிப போவானா?

இந்த கதாசிரியருக்குத் தெரியாது.

இனியும் ஓணப் பண்டிகை வரும். இனியும் ஓணப்பதிப்புகள் வரும். என்றாவது ஒரு நாள் ஏதாவதொரு ஓணப்பதிப்பில் வேறு யாராவது ஒரு கதாசிரியர் அவனுடைய கதையை எழுதுவார். அந்தப் பொறுப்பு எதிர்காலத்தில் யார் என்று தெரியாத அந்த கதாசிரியரைச் சேர்ந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.