Logo

அப்பாவின் காதலி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6671
appaavin-kaadhali

ந்து வயதுள்ள பிரதாபன் பட்டாளக்காரனைப் போல நடந்து வந்து காரில் டிரைவரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு காலால் ‘ஹார்ன்’ அடித்தான். பிறகு தன் தாயை அழைத்தான்.

‘‘மம்மி... சீக்கிரம் வாங்க. ஸ்டார்ட்... ஒன்... டூ... த்ரீ...’’

அவனுக்குப் பின்னால் வந்த அவன் தாய் உமயம்மா சொன்னாள் :

‘‘மகனே... சும்மா இருடா !’’

பதினைந்து வயதான பிரதாபனின் அக்கா கீதம்மா, ‘‘இருக்குறதே ரெண்டடி...’’ என்றாள்.

‘‘நான் ரெண்டடி இல்லை... நீதான்...’’

‘‘அப்பப்பா... இவனும் இவனோட நாக்கும்...’’

உமயம்மாவும் கீதம்மாவும் பின்னிருக்கையில் அமர்ந்தார்கள். அப்போது டாடி ராகவன் நாயரும் அங்கு வந்தார். பிரதாபனைத் தூக்கித் தள்ளி உட்கார வைத்தார். காரை ஸ்டார்ட் செய்தவாறு ராகவன் நாயர் கேட்டார் : ‘‘எங்கே போகணும் ?’’

‘‘ரெட்டியார் கடையில துணி வாங்கணும். காய்கறி மார்க்கெட்டுக்கு வேற போகணும். பிறகு...’’

‘‘சொல்லு...’’

‘‘நாமளே நேரடியா மார்க்கெட்டுக்குப் போயி சாமான்கள் வாங்கினா குறைஞ்சது ஒரு ரூபாவாவது லாபம் கிடைக்கும் !’’

அதற்கு ராகவன் நாயர் சிரித்தார்.

‘‘மார்க்கெட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு அஞ்சு ரூபாயோட பெட்ரோல் செலவாகும்ன்றதை யோசிச்சே பார்க்குறது இல்லியா ?’’

‘‘குழந்தைகளை ஜாலியா வெளியே கூட்டிட்டுப் போனது மாதிரியும் ஆகல்ல...’’

‘‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான் ஒரே கஞ்சத்தனம்...’’ - கீதம்மா சொன்னாள்.

‘‘நீ சொல்றது உண்மைதான். சில்லறைக் காசைத்தான் கணக்கு பார்ப்பாரு ! ’’ - இது உமயம்மா.

‘‘லில்லிக்குட்டி எப்போ பார்த்தாலும் காரை எடுத்துக்கிட்டு பீச்சு, பார்க்குன்னு எப்படியெல்லாம் சுத்துறா...’’

‘‘ஓ... அதைப்போல நீயும் சுத்தணும்னு நினைக்கிறியா ? அதெல்லாம் நமக்கு நல்லது இல்ல...’’ - உமயம்மா சொன்னாள்.

‘‘ஒரு சந்தேகம்...’’ - ராகவன் நாயர் கேட்டார்.

‘‘என்ன ?’’

‘‘உலகத்துல கார் இருக்குறவங்க எவ்வளவு பேரு இருப்பாங்க -? கார் இல்லாதவங்க எவ்வளவு பேரு இருப்பாங்க ? கணக்கு பார்த்தா கார் இருக்குறவங்க எந்த அளவுக்கு கம்மி தெரியுமா ?’’

‘‘செத்துப்போன தத்துவம்...’’

‘‘நான் சின்னப்பையனா இருக்குறப்போ காரைத் தொட்டுப் பார்க்கணும்னு அப்படியொரு ஆசை. ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்தவுடனே, மாமரத்து மேல ஏறினேன். பத்து மாங்காய்களைப் பறிச்சு கீழாற்றுக்கரை சந்தைக்குக் கொண்டு போனேன். ஒரு மாங்காய்க்கு நாலு காசு கிடைச்சது. கிடைச்ச காசில ஒரு சக்கரத்தை (திருவாங்கூர் நாணயம்) கொடுத்து மீன் வாங்கினேன்.’’

‘‘ம்...’’

‘‘நம்ம குட்டப்பன் மீன் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வர்றது மாதிரி இருக்குல்ல மம்மி ?’’

‘‘அப்படி மீன் வாங்கிட்டு நான் வர்ற வழியில சால்வேஷன் ஆர்மி மேடத்தோட ‘ப்ளஷர் கார்’ ஆலமரத்து நிழல்ல நின்னுக்கிட்டு இருக்கு. மேடம் காரைவிட்டு இறங்கி கீழே நின்னு சிகரெட் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க. காரைச் சுற்றி ஒன்பதாவது திருவிழாவுக்கு வந்த ஆளுங்க நின்னுக்கிட்டு இருக்காங்க. கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு நான் காரை தொட்டுப் பார்த்தேன் !’’

‘‘அய்யய்யோ... கேட்கவே கேவலமா இருக்கு ! டாடி... நீங்க பேசாம சும்மா இருங்க. ஆமா... மாங்கா வித்தா காசு கிடைக்குமா மம்மி ?’’

‘‘கிடைக்கும்னு நினைக்கிறேன். அதை வித்த ஆளே சொல்றாரே !’’

தாயும் மகளும் சிரித்தார்கள்.

‘‘அது போகட்டும். டாடி, மீன் வாங்குறதுக்காக மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறாரே ! அதை என்னால நினைச்சுப் பார்க்கக்கூட முடியல...’’

‘‘நான் மீன் மார்க்கெட்டுக்குப் போகல. கீழாற்றுக்கரை சந்தைக்குத்தான் நான் போனேன். நான் வாங்கினது மீன் இல்ல... கருவாடு !’’

ராகவன் நாயர் குலுங்கிச் குலுங்கி சிரித்தார். பிரதாபனும் தந்தையுடன் சேர்ந்து சிரித்தான். தாயும் மகளும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் நடந்து வந்துகொண்டிருந்த தன்னுடைய சினேகிதிகளில் ஒருத்தியை கையை அசைத்துக் காட்டி கீதம்மா தன்னிடம் கார் இருக்கிறது என்ற விஷயத்தை பந்தாவாகக் காட்டிக் கொண்டாள்.

நகரத்தில் ராகவன் நாயரைப் பார்த்த பலரும் அவரைக் கண்டதும் வணங்கினார்கள். பலர் அவர் முன்னால் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.

ரெட்டியாரின் கடை முன்னால் ராகவன் நாயர் காரை நிறுத்தினார். அவரும் பிரதாபனும் காரிலேயே உட்கார்ந்திருந்தார்கள். தாயும் மகளும் துணிக்கடைக்குள் புகுந்து பல்வேறு துணிகளையும் பிரித்துப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பலமுறை ராகவன்நாயர் ஹார்ன் அடித்த பிறகும், அவர்கள் வெளியே வருவதாகவே தெரியவில்லை. அவர்கள் வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

காய்கறி மார்க்கெட்டுக்கு பிரதாபனும் தன் தாயுடன் போனான். ராகவன் நாயர் ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு கேட்டிற்கு அருகில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தார். வெளிச்சுவர்களும், நடைபாதைகளும், கட்டிடங்களும் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மார்க்கெட் இதற்கு முன்பு திறந்தவெளி மார்க்கெட்டாக இருந்தது. அந்தக் காலத்தில் ராகவன்நாயர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வரவில்லை. மாறாக, விற்பதற்காக வந்திருக்கிறார்.

கேட்டின் இரு பக்கங்களிலும் அரிசி விற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அரிசி மூட்டைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் நாழிகளும், படிகளும் இருந்தன.

வயதான ஒரு பெண் தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை ராகவன் நாயர் கவனித்தார். நல்ல பருமனான உடம்பு, உதிர்ந்து கொண்டிருக்கும் நரைத்த முடி, காலம் முகத்தில் உண்டாக்கிய சுருக்கங்கள், உதட்டுக்கு மேலே நரைத்த முடி அதற்குப் பக்கத்தில் கருத்த மரு... அந்த மருவைப் பார்த்தபோதுதான் ராகவன் நாயருக்கே ஞாபகம் வந்தது. அது... கவுரியம்மாவாயிற்றே !

கவுரியம்மா ராகவன் நாயரின் அருகில் வந்தாள். பாசம் பொங்க சிரித்தவாறு கேட்டாள் : ‘‘என்னைத் தெரியுதா -?’’

‘‘தெரியுது... என்று ராகவன் நாயர் கூறவில்லை.’’

‘‘தெரியல... அப்படித்தானே ?’’

‘‘கவுரியம்மாதானே ?’’ என்றார் ராகவன்நாயர்.

அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு பிரகாசம் பரவியது. கண்களில் நீர் துளிர்த்தது.

‘‘என்னை மறக்கல இல்ல...’’

ராகவன் நாயர் சிறிது நேரம் கவுரியம்மாவின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தார். கவுரியம்மாவை மறப்பதா ?

‘‘இப்போ அரிசி வியாபாரமா பண்றீங்க ?’’

அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.

‘‘பாச்சன் நாயர்...?’’

அதைக் கேட்டதும் மாறாப்பு துணியால் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் கவுரியம்மா.

‘‘அவர் இறந்து பத்து வருஷமாச்சு. குழந்தை... நீ கார்ல போறதைப் பார்த்து பல தடவை நான் நின்னுருக்கேன்.


ஒரு நாள் தெற்கே இருக்குற மில்லுல நெல்லை அரைச்சிட்டு வர்றப்போ ஸ்டோர் ரூம் இருக்கிற திருப்பத்துல நீ வண்டியை நிறுத்தி வச்சிக்கிட்டு யார்கிட்டயோ பேசிக்கிட்டு இருந்தே. கொஞ்ச நேரம் நான் அங்கேயே நின்னேன். நீ என்னைக் கொஞ்சநேரம் பார்த்தே. அதற்குப் பிறகு கார்ல ஏறி போயிட்டே. அப்போ எனக்கு எவ்வளவு சங்கடமா இருந்தது தெரியுமா ? நான் ரொம்பவும் வருத்தப்பட்டேன். ஒருவேளை என்னை நீ மறந்திட்ட யோன்னு நான் நினைச்சேன். ஆனா, நான் கும்பிடுற கீழாற்றுக்கரை பகவதி என்னைக் கைவிடல. என் பிள்ளை மணிக்குட்டன் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிருச்சு...’’

‘‘இப்பக்கூட நல்லா உற்றுப் பார்த்த பிறகுதான் எனக்கே உங்களை அடையாளம் தெரிஞ்சது... பார்த்து எவ்வளவு வருஷமாச்சு ?’’

தன் பைக்குள் கையை விட்டு பத்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து ராகவன் நாயர் கவுரியம்மாவிடம் நீட்டினார். கவுரியம்மா அதை வாங்கத் தயங்கினாள்.

‘‘வாங்கிக்கங்க கவுரியம்மா...’’

அந்த நோட்டை கை நீட்டி வாங்கும்போது கவுரியம்மாவின் கண்களில் நீர் அரும்பி வழிந்தது. அதைப் பார்த்தவாறு உமயம்மாவும், கீதம்மாவும், பிரதாபனும் காய்கறி வாங்கிக்கொண்டு திரும்பி வந்தார்கள்.

உமயம்மா கிழவியை உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டாள் : ‘‘இவங்க யாரு ?’’

‘‘நமக்குச் சொந்தக்காரங்கதான்.’’

எந்தவகையில் சொந்தம் என்று உமயம்மா கேட்கவில்லை. அழுக்கடைந்து காணப்படும் இந்தக் கிழவி நமக்குச் சொந்தம் என்று நினைத்துப் பார்ப்பதுகூட கஷ்டமாகத் தெரிந்தது கீதம்மாவிற்கு அவள் வேகமாக காருக்குள் ஏறி முகத்தை மறைத்துக் கொண்டாள்.

நேரம் அதிகமாகிவிட்டதால் இனி வேறு எங்கும் போகவேண்டாம் என்று அவர்கள் தீர்மானித்தார்கள்.

வேகமாக காரை ஓட்டிக் கொண்டிருந்த ராகவன் நாயர் மனதளவில் ஒரு பத்து வயது பையனாக மாறிப்போயிருந்தார். நாற்பது வருடங்களுக்கு முன்னால் இருந்த காலகட்டத்திற்கு அவரின் மனம் காரைவிட வேகமாகப் போய்க் கொண்டிருந்தது.

2

த்து வயதான ராகவன் நாயர் என்ற மணிக்குட்டனுக்கு திருவோணத்தைப் போல உற்சாகம் நிறைந்த ஒரு நாள். தோட்டத்தில் விளைச்சல் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மொத்தம் ஆறு ஏக்கர் நிலம். கிழக்குப் பக்கம் இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தில் நேந்திர வாழைப்பழம் வைக்கப்பட்டிருந்தது. வடக்குப் பக்கம் கீழே சற்று தாழ்வான இடத்தில் இருந்த நிலத்தில் சேம்பும், மரவள்ளிக்கிழங்கும், பயிறும் வைக்கப்பட்டிருந்தது. அது ஒன்றரை ஏக்கர் வரும். மீதி இருந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் சேனையும், வெற்றிலை வள்ளிக்கிழங்கும்.

வாழைக்குலை கீவரீது மாப்பிள்ளைக்கு விற்கப்பட்டது. சில குலைகள் பழுக்க ஆரம்பித்த பிறகுதான் வெட்டப்பட்டதே. காலையிலேயே வாழை இலையால் பந்து செய்து பழுக்க ஆரம்பித்திருக்கும் காயை அந்தப் பந்தால் எறிந்து கீழே விழச் செய்து மணிக்குட்டனும் அப்பு அண்ணனும் சாப்பிடுவார்கள். இதெல்லாம் அப்பு அண்ணனின் மூளையில் உதிக்கும் ஐடியாக்கள்தான். அதிகாலை நேரத்திலேயே யாருக்கும் தெரியாமல் மணிக்குட்டனையும் அழைத்துக் கொண்டு வாழைத் தோப்புக்குள் நுழைவான் அப்பு அண்ணன். ஒரு உருண்டையான கல் மீது பனியில் குளிர்ந்திருக்கும் காய்ந்த வாழை இலையைச் சுற்றிச் சுற்றி அவன் பந்து போல ஆக்குவான். அதற்குப் பிறகு அதன்மேல் வாழை நாரை குறுக்கும் நெடுக்குமாய் சுற்றி மேலும் அதை அழகுபடுத்துவான். அப்பு அண்ணன் அப்படி உருவாக்கும் பந்துக்கு முன்னால் வெல்வெட்டில் ஆன பந்து கூட தோற்றுப்போகும். அப்படி உருவாக்கும் பந்தை மணிக்குட்டனைக் குனிந்து நிற்கச் செய்து அவன் மேல் ஏறி நின்று வாழை மரத்தின் மேல் எறிந்து பழுத்த காயைக் கீழே விழச் செய்வான்.

கீவரீது மாப்பிள்ளை வாழைக்குலையை வெட்ட வரும்போது மணிக்குட்டனின் தந்தையிடம் கூறுவார் : ‘‘வர வர இந்த வவ்வாலோட தொந்தரவு தாங்க முடியல, கோன்னன் குஞ்ஞு...’’

‘‘அப்படியா ?’’

‘‘பழுத்த காய் எல்லாத்தையும் வவ்வால் தின்னிடுது...’’

மணிக்குட்டன் அதைக் கேட்டு வெளியே கேட்காமல் அடக்கிக் கொண்டு சிரித்தான்.

நேந்திர வாழைக்குலைகள் முழுமையாக வெட்டப்பட்டுவிட்டன. இன்று வெற்றிலை வள்ளிக்கிழங்கையும் சேனைக்கிழங்கையும் பூமியிலிருந்து எடுக்கவேண்டும். மந்திரவாதி சாத்தப்புலையன், அவன் மகன்கள் காளி, கொச்சு சாத்தன், அழகப்புலையன், அவன் தம்பிகள் தேவன், பூவஞ்சன் - எல்லாரும் சேர்ந்து சேனையையும் வெற்றிலை வள்ளிக் கிழங்கையும் பூமியிலிருந்து எடுக்கிறார்கள். பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் கிழங்குகளை காளியின் மகன் ராஜப்பனுடனும் தேவனின் மகன் தங்கனுடனும் சேர்ந்து ஒரு இடத்தில் குவித்து வைப்பது மணிக்குட்டனின் வேலை. மாமரத்திற்குக் கீழே குடையைப் பிடித்துக் கொண்டு நின்றிருக்கும் அவனுடைய தந்தை, ‘வெயில்ல நிற்காதடா’ என்று பலமுறை கூறியிருக்கிறார். வெற்றிலை வள்ளிக்கிழங்கையும் சேனையையும் பொறுக்கி சேர்த்துக் கொண்டிருந்த உலகிப்புலகி சொன்னாள் : ‘‘பள்ளிக்கூடத்துக்குப் போகாம இங்கயே சுத்திக்கிட்டு இருக்காரு...’’

பள்ளிக்கூடம் எல்லா நாட்களிலும்தான் இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறைதானே சேனைக்கிழங்கும் வெற்றிலை வள்ளிக்கிழங்கும் நிலத்திலிருந்து எடுக்கப்படுகின்றன ! தங்கனுடனும் ராஜப்பனுடனும் போட்டிபோட்டு ஓடி வெற்றி பெற வேண்டாமா என்ன ?

அவன் தந்தை அழைப்பார் : ‘‘காளி ?’’

‘‘‘என்ன ?’’

‘‘நல்லதா பார்த்து பத்து சேனைக்கிழங்கும் பத்து வெற்றிலை வள்ளிக்கிழங்கும் அந்தக் கூடையில எடுத்து வை.’’

‘‘எதுக்கு மூத்த தம்புரான் ?’’

‘‘உன்னைச் சுடுறதுக்கு... நான் என்ன சொல்றேனோ அதைச் செய்டா.’’

மந்திரவாதி சாத்தப்புலையன் அவன் தந்தைக்கு ஆதரவாகப் பேசுவான்.

‘‘இந்தப் பசங்களே இப்படித்தான். மூத்த தம்புரான் என்ன சொல்றாரோ அதை ஒழுங்கா செய்டா...’’

காளி எதுவுமே பேசாமல் அமைதியாக அவர் சொன்னதைச் செய்தான்.

‘‘இதைக் கொண்டு போயி செம்மண்பறம்புல கொடுத்துட்டு வா.’’

பிறகு அவர் அவனைப் பார்த்தார் : ‘‘நீயும் இவன் கூட போடா...’’

 

காளி வாழைத் தண்டால் சும்மாடு உண்டாக்கி சுமையைத் தூக்கத் தொடங்கும்போது சுமதி அக்கா கூறும் கதைகளில் கேட்கும் அசரீரியைப் போல அவன் அம்மாவின் சத்தம் கேட்டது.

‘‘அங்கேயே வைடா. யாருக்கு இது ?’’

எல்லாரும் அதிர்ந்து போய் பார்த்தார்கள்.

அவன் தாய்தான் !

என்ன செய்வது என்று தெரியாமல் காளி சிலையென நின்றிருந்தான். அவன் தாய் கேட்டாள் : ‘‘இது யாருக்குடா காளி ?’’

பதில் சொன்னது அவனின் தந்தை.

‘‘அதைத் தெரிஞ்சு என்ன செய்யப்போற ?’’

அதற்கு அவன் தாயின் குரல் இடி முழக்கத்தைப் போல வந்தது.

‘‘நான் கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.’’


‘‘உன் விஷயத்தை வீட்டுல வச்சுக்கோ. பேசாம இங்கேயிருந்து போ...’’

‘‘நான் இங்கேயிருந்து போறதா இல்ல...’’

‘‘போடி...’’

‘‘எதுக்கு பங்கு வைக்கணும் ? எல்லாத்தையும் ஒரே இடத்துக்குக் கொடுத்து அனுப்ப வேண்டியதுதானே !’’

‘‘மூத்த தம்புராட்டி... கொஞ்சம் பேசாம இருங்களேன்.’’ - இது உலகிப்புலகி.

‘‘உன்கிட்ட நான் ஒண்ணும் கேட்கல...’’ - அவன் தாய் சொன்னாள்.

‘‘கொண்டு போடா காளி...’’ - அவன் தந்தை சொன்னார்.

‘‘கொண்டு போகக் கூடாதுன்னு நான் சொல்றேன்’’ என்றாள் அவன் தாய்.

சொன்னதோடு நிற்காமல் அவன் தாய் கூடைக்கு அருகில் வந்தாள். கூடையிலிருந்து ஒரு சேனைக்கிழங்கை எடுத்து கீழே போட்டாள். அதைப் பார்த்த அவன் தந்தை அவனுடைய தாயைப் பிடித்துத் தள்ளியவாறு கத்தினார் : ‘‘இந்த அளவுக்கு நீ வந்துட்டியா ?’’

அவன் தாய் கீழே விழுந்தாள். புலையன்மார்களும், புலகிகளும் பதறிப்போய் ஓடினார்கள். உலகியும் குஞ்ஞாளியும் சேர்ந்து அவன் தாயைப் பிடித்து எழவைத்தார்கள். அவன் தாய் மார்பில் அடித்துக் கொண்டு உரத்த குரலில் கூப்பாடு போட்டாள் : ‘‘என்னோட கீழாற்றுக்கரை பகவதி... எனக்குன்னு யாரும் இல்லியா ?’’

அவன் தந்தை கத்தினார் :

‘‘சுமையைத் தூக்குடா...’’

கொச்சு சாத்தான், காளியின் தலையில் கூடையைத் தூக்கி வைத்தான்.

‘‘போடா அவன் கூட...’’

கூடையைச் சுமந்தவாறு காளி முன்னால் ஓடினான். மணிக்குட்டன் அவனுக்குப் பின்னால் நடந்தான். அய்யப்ப பணிக்கர் ஆசானின் வீட்டை நெருங்கியதும் காளி பின்னால் திரும்பிப் பார்த்தான்.

‘‘சின்ன தம்புரான் !’’

‘‘ம்...’’

‘‘கால் வலிக்குதா ?’’

‘‘இல்லையே !’’

அவன் உண்மையிலேயே பொய்தான் சொன்னான். அப்பு அண்ணனுடன் ஓடியாடி திரிந்து அவனுடைய கால்கள் பயங்கரமாக வலித்தன.

கொச்சு பறம்பு வைத்தியனின் வீட்டை அடையும்வரை அவனுடைய தாயின் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தப் பால்காரி நாணியம்மாதான் இதற்கெல்லாம் மூலகாரணம். எல்லா உண்மைகளையும் தன் தாயிடம் அவள் கூறியதால்தான் இந்தச் சண்டையே உண்டானது !

காளிப்புலையன் யாரிடம் என்றில்லாமல் சொன்னான் :

‘‘கோபம் வந்துட்டா மூத்த தம்புரானுக்கு கண்மண்ணே தெரியறது இல்ல. மூத்த தம்புராட்டியாவது அவர் பேசுறதை சும்மா கேட்டுட்டு நிக்கலாம்ல ?’’

தலையில் சுமையை வைத்துக் கொண்டு நடந்தாலும், காளிப்புலையனுக்கு இணையாகப் போக வேண்டுமென்றால் அவன் ஓட வேண்டும். தன்னுடைய தந்தை பின்னால் வந்து கொண்டிருப்பாரோ என்றொரு பயமும் அவனுக்கு இருந்தது. இல்லாவிட்டால் இப்போதும் அவர் தன் தாயை அடித்துக் கொண்டிருப்பாரோ என்றொரு நினைப்பும் மனதில் வலம் வந்தது. தன் தாய் அங்கு வந்தபோது, அவளுடன் சேர்ந்து பெரிய அக்கா ஏன் வரவில்லை என்று அவன் நினைத்துப் பார்த்தான். பெரிய அக்கா மட்டும் வந்திருந்து தடுத்திருந்தால் நிச்சயம் தன் தாய்க்கு அடியே கிடைத்திருக்காது என்று அவன் நினைத்தான். இதே மாதிரிதான் ஒருநாள் ஆட்கள் நெற்கதிர்களைச் சுமந்துகொண்டு வர, இதுவரை எத்தனைச் சுமைகள் வந்திருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்கவில்லை என்பதற்காக அவன் தந்தை கையை ஓங்கிக் கொண்டு வந்த போது, அவன் பெரிய அக்காதான் பாய்ந்துவந்து தடுத்து நிறுத்தினாள். தாமரைக்குளத்தின் அருகிலுள்ள வயலிலிருந்து நெற்கதிர்களைப் பிரித்து ஒவ்வொருவரும் தலையில் சுமந்து எடுத்துக் கொண்டு வந்ததை அவன் தாய் எண்ணாமல் இருக்க அவன் தந்தை வந்தவுடன் கேட்டார் :

‘‘இதுவரை நெல் எத்தனை சுமை வந்திருக்குடி ?’’

எண்ணாமல் அதை எப்படிச் சொல்லமுடியும் ?

‘‘அங்கே கொடுத்தனுப்பின நெல்லு முழுசா இங்க வந்து சேர்ந்திருக்கும்னு உன்னால உறுதியா சொல்ல முடியுமா ?’’

உறுதியாக அதைச் சொல்ல முடியாதுதான்.

அவன் தந்தை கோபப்பட்டதும், தாயை அடிப்பதற்காக வந்ததும் ஒரு தவறான காரியமா ? இப்போது கூட ஒரு சுமை வெற்றிலை வள்ளிக்கிழங்கும் சேனையும் அப்படிப் போய்விட்டது என்று எடுத்துக் கொண்டால் என்ன ? புலையர்கள்கூட எவ்வளவோ இப்படி யாருக்கும் தெரியாமல் கொண்டுபோகத்தான் செய்கிறார்கள் !

அவன் தந்தை பயங்கர கோபக்காரர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒரு விஷயம். மாதவன் என்ற ‘கொல்லன் ‘தான்’ என்ற அகம்பாவத்துடன் பேசினான் என்பதற்காக அவனுடைய தந்தை அவனை அடித்து உதைத்து அப்பளமாக்கிய சம்பவத்தை அவன் தாய் நேரிலேயே பார்த்திருக்கிறாள். எங்கோ ஒரு இடத்திற்கு கதவிற்குத் தாழ்ப்பாள் வைப்பதற்காக மாதவப் பணிக்கர் போய்க் கொண்டிருந்தான்.

அவனுடைய தந்தை கேட்டார் : ‘‘மாதவா, எங்கேடா போறே?’’

‘‘எங்கே போனா உங்களுக்கு என்ன ?’’

அப்போது மாதவன் குடித்திருந்தான்.

‘‘அங்கேயே நில்லுடா.’’

மாதவப் பணிக்கர் திரும்பி நின்றான். காளையைப் போல கம்பீரமாக நின்று அவனுடைய தந்தையைப் பார்த்தான்.

‘‘என்னடா சொன்னே ?’’

‘‘நான் சொன்னது உங்க காதுல விழலியா ?’’

‘‘சொன்னதையே இன்னொரு தடவை சொல்லுடா...’’

‘‘ஒரு தடவை இல்ல, நூறு தடவை கூட சொல்லுவேன். என்னைக் கண்டபடி பேசுறதுக்கு நீங்க என்ன பெரிய இவரா ?’’

அடுத்த நிமிடம் மாதவப் பணிக்கருக்கு அடி விழுந்தது. அவன் அடி தாங்காமல் கீழே விழுந்தான். அவனுடைய கருவிகள் சிதறிக் கீழே விழுந்தன. கீழே விழுந்த பணிக்கர் வேகமாக எழுந்து, அவனின் தந்தையின் தலைக்கு நேராக கையை ஓங்கிக் கொண்டு வந்தான். அவனின் தந்தை பணிக்கரின் அடிவயிற்றில் ஓங்கி ஒரு மிதி மிதித்தார். அவன் வேகமாகக் கீழே போய் விழுந்தான். அங்கு நடந்த ஆர்ப்பாட்டத்தின் சத்தத்தைக் கேட்டு சாத்தப்புலையனும் காளியும் ஓடி வந்தார்கள். அவர்களும் பணிக்கரை அடிக்க ஆரம்பித்தார்கள். பணிக்கரின் வாயிலிருந்து இரத்தம் கொட்டியது. அதற்குப்பிறகு அவனுடைய தாய் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரைக் குடித்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு போனான் பணிக்கர்.

அந்தப் பணிக்கருடன் தன்னுடைய தந்தை சண்டை போட்டதை அவன் நேரடியாகவே பார்த்திருக்கிறான். ஆற்றங்கரையில் மூத்த ஆசானுக்கு பதினாறாம் நாள் விசேஷம். ஆசானின் த்த மகன் கேசவக் குறுப்பு எல்லாரையும் அழைத்து படு விமரிசையாக அந்நிகழ்ச்சியை நடத்தினார். சாலையோரத்தில் இருந்த ஆலமரத்தின் கிளையில் பெரிய வெடிகளைத் தொங்கவிட்டார். அந்த நிகழ்ச்சிக்கு அவனையும் அழைத்துச் சென்றிருந்தார். அவன் தந்தை இலை போடுவதற்கு முன்பு ஆற்றங்கரையில் ஊர்ப் பெரியவர்கள் அமர்ந்து பல விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தனர்.


 ஊரில் உள்ள முக்கிய மனிதர்களில் மிகவும் முக்கியமானவர் அவன் தந்தை. பணத்தால் மட்டும் வந்த தகுதி அல்ல அது... மிடுக்கான தோற்றத்தாலும், பேச்சுத் திறமையாலும் கூடத்தான்.

பேசிக் கொண்டிருக்கும்போது கோன்னன் பணிக்கர் அவன் தந்தையைக் கிண்டல் பண்ணுவது மாதிரி என்னவோ கூறிவிட்டார். அதற்கு அவனுடைய தந்தை ஏதோ பதிலும் சொன்னார். கீழாற்றுக் கரையில் முன்பு ஜமீன்தாராக இருந்தவரும், பணக்காரராகத் திகழ்ந்தவரும் அவன் தாய் வீட்டில் சம்பந்தம் வைத்திருப்பவருமான பணிக்கரிடம் பொதுவாக யாரும் அப்படிப் பேசுவதில்லை. குஸ்திக்காரரும், சட்டம் பேசக்கூடியவருமான தடத்தில் ராகவன் பிள்ளை அதை ஒரு பெரிய பிரச்சினை ஆக்கினார். தொடர்ந்து அங்கு அமர்ந்திருந்தவர்கள் ஆளுக்கு ஒன்றாகச் சொல்ல, அதுவே பெரிய சண்டையாக உருவெடுக்க ஆரம்பித்தது. ஆட்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள். அங்கிருந்த பெரும்பாலானவர்கள் பணிக்கரின் பக்கம்தான் இருந்தார்கள். அவன் தந்தை இந்த விஷயத்தில் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அடி என்றால் அடிதான் என்ற முடிவுடன் தயாராக அவர் நின்றிருந்தார். அப்போது ஒருவர் நடுவில் நின்று தேவையில்லாமல் இப்போது சண்டை எதுவும் வேண்டாம் என்று அவர்களை ஒதுக்க முற்பட்டார். அதனால் வருத்தம் உண்டானதென்னவோ பணிக்கருக்குத்தான். காரணம் அவன் தந்தையுடன் பேசி வெற்றி பெறுவது என்ற விஷயத்தில் பணிக்கரால் எதுவும் முடியவில்லை. மறுநாள் காலையில் ஒரு ஆள் வீட்டில் வந்து சொன்னான். அவனுடைய தந்தை கோன்னன் பணிக்கரின் வீட்டுப் பக்கம் போனால் அடிதான் விழும் என்று பணிக்கர் கூறினாராம். இதைக் கேட்டதும் எங்கே அதையும்தான் பார்த்துவிடுவோமே என்ற முடிவுக்கு வந்தார் அவன் தந்தை. அன்றே யாரையும் உடன் அழைத்துச் செல்லாமல் பேனாக்கத்தி ஒன்றை விரித்துப் பிடித்தவாறு அவனுடைய தந்தை பணிக்கரின் வீட்டைத் தேடிப் போனார். இப்படிப்பட்ட முரட்டுக் குணமுள்ள தன் தந்தையுடன் தன் தாய் சண்டைக்கு நிற்பது என்றால் அது எப்படிப்பட்ட விஷயமாக இருக்கும் ?

‘‘எனக்கு எல்லாமே தெரியும். நான் ஒண்ணும் முட்டாள் இல்ல...’’ என்று கூறுகிறாள் அவன் தாய். அப்படி என்ன அவளுக்குத் தெரியுமோ ? எல்லாம் அந்த நாணியம்மா போட்டுக் கொடுத்த விஷயத்தால் வந்த வினை.

‘துரோகி... அம்மாக்கிட்ட நாணியம்மா எப்படியெல்லாம் சொல்லி அம்மாவை முழுசா மாத்தி இருக்காங்க...’ தனக்குத்தானே சொல்லிக் கொண்டான் அவன்.

‘‘சின்ன தம்புரான் !’’

‘‘ம்...’’

‘‘நடந்து வர்றீங்களா ?’’

‘‘ம்...’’

‘‘அப்படின்னா வேகமா நடந்து முன்னாடி வாங்க.’’

அவன் வேகமாக ஓடினான். காளிப்புலையனுக்கு முன்னால் சாதாரணமாக இருந்தால் நன்றாக இருக்காது அல்லவா ?

‘‘உங்களுக்கு வழி தெரியுமா ?’’

‘‘ஊஹும்...’’

‘‘பிறகு எதுக்கு கூட வர்றீங்க ?’’

மணிக்குட்டன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை. தன் தந்தை சொன்னார் என்பதற்காக அவன் வந்தான் என்பதே உண்மை. இல்லாவிட்டால்...? அவர் சொல்லியபடி நடக்கவில்லையென்றால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதை காளிப்புலையன்தான் நன்கு அறிவானே!

செட்டியின் வீட்டுப் படிகள் வழியாக வயலில் அவர்கள் இறங்கினார்கள். அறுவடை முடித்திருந்த வயலில் மாடுகளும் கன்றுகளும் சிறுவர்களும் இருந்தார்கள். சிறுவர்கள் கூட்டத்தில் அப்பு அண்ணனும் இருந்தான். அப்பு அண்ணன் அவனைப் பார்க்கவில்லை. கோவிலைச் சேர்ந்த பசு சாணம் போட்டபோது அப்பு அண்ணனும் குட்டப்பனும் ஒரே நேரத்தில் ‘மாடு சாணி போட்டிருக்கு’ என்று கத்தினார்கள். அந்தச் சாணம் யாருக்கு என்பதைப் பற்றி அவர்களுக்கிடையே சண்டை உண்டாகத் தொடங்கியது. குட்டப்பனை தன்னுடைய கையைச் சுருட்டி பயமுறுத்திய அப்பு அண்ணன் சாணத்தை தன் கையில் எடுத்தான்.

அவனைப் பார்த்ததும் அப்பு அண்ணனின் முகம் ஓருமாதிரி ஆனது.

‘‘எங்கேடா போற மணிக்குட்டா?’’

‘‘அந்தக் கரைக்கு.’’

‘‘சீக்கிரம் திரும்பி வந்திடுவியா? மாங்காய் பறிச்சுத் தர்றேன்.’’

கையிலிருந்த பிரம்பால் வயதான பசுவின் முதுகில் அடித்த அப்பு அண்ணன் வரப்பை நோக்கி நடந்தான்.

படிப்பில் மிகவும் கெட்டிக்காரனான அப்பு அண்ணனை ஒழுங்காக பள்ளிக் கூடத்திற்கு அனுப்பினால்தானே! ‘‘நீ படிச்சு பெரிய ஆளா வந்து இங்கே ஒண்ணும் செலவுக்குத் தரவேண்டாம்’’ என்று அப்பு அண்ணனின் சித்தி கூறுவாள். அப்பு அண்ணனின் தந்தை தைரியசாலி என்றாலும், அவனுடைய சித்தியின் முன்னால் அவர் ஒரு பூனையைப் போல பதுங்கி நின்றிருப்பார். வயலைத் தாண்டி கிழக்குப் பக்கம் இருந்த செண்பக மரத்திற்குக் கீழேயிருந்த சுமைதாங்கிக் கல்லின் மீது காளிப்புலையன் சுமையை இறக்கி வைத்தான். இனி ஒரு மேட்டில் ஏறி இறங்கவேண்டும். அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொள்வதைப்போல சுமைதாங்கிக் கல்லிற்குக் கீழே அமர்ந்து பொட்டலத்தை அவிழ்த்து அவன் வெற்றிலை போட ஆரம்பித்தான்.

செண்பக மரத்தில் பூக்கள் ஏராளமாக இருந்தன. அப்பு அண்ணன் மட்டும் இப்போது அங்கிருந்தால் மரத்தில் ஏறி கிளையைக் கீழே ஒடித்துப் போட்டிருப்பான். மேட்டில் உச்சியிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் மணியடிக்கும் ஓசை கேட்டது.  இரண்டு உயரமான தூண்களுக்கு நடுவில் நாக்கைப் போல தொங்கிக் கொண்டிருந்த மணி கீழும் மேலுமாக ஆடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்!

‘‘காளி, எங்கே சுமை தூக்கிட்டுப் போறே?’’

கேட்டது அவனுடைய நண்பன் கொச்சுராமச்சோவன்! சுமார் முப்பது ஆடுகள் அங்கு நின்றிருந்தன. நடக்கமுடியாத இரண்டு ஆடுகளை அவன் தோள்மீது தூக்கி வைத்திருந்தான். கோவணம் கட்டிக்கொண்டு ஓலையால் ஆன குடையைப் பிடித்திருந்த ஒரு சிறுவன் ஆடுகளுக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தான். கொச்சுராமச்சோவன் காளிப்புலையனுக்கு முன்னால் வந்தான்.

‘‘‘வெற்றிலை போடுறியா?’’

கொச்சுராமச்சோவன் பொட்டலத்தை வாங்கினான்.

‘‘இந்தப் பையன் யாரு?’’

‘‘தெரியலையா? எங்க மூத்த தம்புரானோட மகன்...’’

‘‘அந்தக் கிழவனோட பையனா?’’

‘‘ஆமா...’’

கொச்சு ராமச்சோவன் தலையை ஒரு மாதிரி ஆட்டியவாறு சுட்டு விரலைச் சாய்த்து வைத்துக்கொண்டு கேட்டான். ‘‘இது சர்க்கார் கவுரியோட பங்கா?’

வெற்றிலை போட்டு சிவந்துபோயிருந்த காளிப்புலையனின் உதடுகளிலும் சிரிப்பு தவழ்ந்தது.

‘‘உண்மைதானே காளி?’’

‘‘அதைப்பற்றி நாம ஏன் கவலைப்படணும்?’’

‘‘இருந்தாலும் அதுதான் உண்மை. நாமளும் இந்தக் கீழாற்றுக் கரையில பிறந்து வளர்ந்தவங்கதானே? பார்த்தாலும் கேட்டால் பேசாமல இருக்கமுடியுமா?’’

‘‘அப்படிப் பேச ஆரம்பிச்சா பேசுறதுக்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கு...’’

‘‘அது ஒரு பக்கம் இருக்கட்டும்டா... இந்தப் பையனோட அம்மாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியாதா?’’

‘‘தெரியாம என்ன? அங்கே இதைப்பத்தி ஒரே சண்டையும் சச்சரவும்தான்.’’


‘‘காலம் தலைகீழா மாறிப்போச்சுடா காளி. இதையெல்லாம் எப்படித்தான் கடவுள் பார்த்துக்கிட்டு இருக்காரோ தெரியல... ஐம்பது வயசு ஆன பிறகும் ஆசை அடங்கலைன்னா எப்படிடா?’’

காளிப்புலையன் என்னவோ சொல்லவேண்டுமென்று நினைத்தான். ஆனால், மணிக்குட்டன் அருகில் நின்றுகொண்டிருக்கும் பொழுது அவன் எப்படிச் சொல்வான்? அவனை ஒருவித பரிதாபம் மேலோங்க காளி பார்த்தான்.

‘‘சரி... நீ போ. இன்னைக்கு எங்கே ஆடுகளை மேயவிடுறதா இருக்கு?’’

‘‘மேலு கண்டத்துக்குக் கீழே இருக்குற இடத்துலதான் இன்னைக்கு மேய்ச்சச் சரி... நான் புறப்படுறேன்.’’

நாக்கை நீட்டி துப்பியவாறு கொச்சுராமச்சோவன் நடந்தான்.

‘‘நாமளும் புறப்படுவோம் சின்ன தம்புரான்.’’

காளிப்புலையன் சுமையைத் தூக்கித் தலையில் வைத்தான். காதில் கேட்ட விஷயங்கள் மனதிற்குள் புகுந்து மணிக்குட்டனை என்னவோ செய்தன. எள்ளு தோட்டத்திற்கு ஆடுகளை மேய்க்க வந்தபோது மேல்துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு எந்த அளவிற்கு தன் தந்தையிடம் பயந்துக்கொண்டே பேசினான் கொச்சுராமச்சோவன் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அவனுடைய தந்தை என்ன சொன்னாலும் ‘‘சரி... சரி...’’ ‘நீங்க சொன்ன மாதிரியே...’ ‘உங்களுக்குக் கீழ நான்...’ என்று திரும்பத் திரும்ப அவன் சொல்லிக் கொண்டிருந்தான். இப்போது என்னடாவென்றால் கிழவனாம் கிழவன்! சரி... அதுதான் போகட்டும். கடவுளாலேயே பொறுக்க முடியாத அளவிற்கு அப்படி யென்ன மோசமான காரியத்தை தன் தந்தை செய்துவிட்டார்? ஒருவேளை, அந்த அளவிற்கு ஒரு செயலை தன் தந்தை செய்துவிட்டதால் தான், தன் தாய் அப்படி அழுதாளோ? நாணியம்மா சொன்னதுகூட காரணம் இல்லாமல் இல்லை... ஆனால், அப்படியெல்லாம் இருக்குமா? எல்லா விஷயங்களையும் நன்கு தெரிந்த தன் தந்தை கடவுளை மறந்திருப்பாரா என்ன? கோவிலுக்கு முன்னால் நடந்து செல்லும்போது தன் தந்தை பகவதியை வணங்குவதை அவன் எத்தனை முறை பார்த்திருக்கிறான். கொச்சுராமச்சோவன் பொய் கூறுகிறான். நன்றி கெட்டி மனிதன். ‘அவன் இனிமேல் வரட்டும். தன் தந்தையிடம் அவனைப் பற்றி கூறிவிட்டுத்தான் மறுவேலை’ என்று தீர்மானித்தான் மணிக்குட்டன்.

உயரமான அந்த இடத்தை அடைந்தபோது காளிப்புலையன் மிகவும் தளர்ந்து போயிருந்தான். மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அவன் சொன்னான்: ‘‘சின்ன தம்புரான், அந்தத் தென்னை மரங்களுக்கு மத்தியில தெரியுதே... அந்த வீடுதான்...’’

வீட்டைப் பார்த்தபோதுதான் தன் தந்தையுடன் முன்பு ஒருமுறை தான் அங்கு வந்திருந்த விஷயம் அவனுடைய ஞாபகத்தில் வந்தது. வாசலில் நின்றவாறு ‘‘இங்கே யாரும் இல்லியா? என்று அவனுடைய தந்தை கேட்டார். யாரோ வெளியில் தலையைக் காட்டியதைப் போல் அவன் உணர்ந்தான்.

‘‘மகனே, நீ இங்கேயே நில்லு...’’ என்று கூறிவிட்டு அவனுடைய தந்தை வீட்டிற்குள் போனார். அதற்குப் பிறகு நீண்ட நேரம் கழித்துத்தான் அவர் திரும்பி வந்தார். காற்றுப் புகாத உள்ளறைக்குள் இருந்தது காரணமாக இருக்கலாம். அவனுடைய தந்தை மிகவும் வியர்வையில் நனைந்து போயிருந்தார். தந்தையுடன் சேர்ந்து கவுரியம்மாவும் வெளியே வந்தாள். பாவம் கவுரியம்மா... அவள் என்னவெல்லாமோ சொல்லி அழுதாள். தன் காதில் விழாத அளவிற்கு அவள் மிகவும் மெதுவான குரலில் என்னவோ சொன்னாள்.

அவள் ஏதோ கூறியதைக் கேட்டு அவனுடைய தந்தைக்குக் கோபம் வந்துவிட்டது. இருந்தாலும் தன்னுடைய மடிக்குள்ளிருந்து என்னவோ எடுத்து கவுரியம்மாவிடம் அவர் தந்தார்...

வாசலை அடைந்ததும், காளிப்புலையன் அழைத்தான்: ‘‘தம்புராட்டி...’’

எந்தவித பதிலும் இல்லை.

‘‘பெரிய தம்புராட்டி!’’

கவுரியம்மா வெளியே வந்தாள். குளித்து முடித்து தலைமுடியைக் கோதியவாறு அவள் வந்தாள்.

‘‘யாரு? காளிப்புலையனா?’’

‘‘ஆமா...’’

அப்போதுதான் கவுரியம்மா அவனை கவனித்தாள்.

‘‘ஓ... மணிக்குட்டா, நீயும் வந்திருக்கியா?’’

கவுரியம்மா அவனை வாரி எடுத்து அவனுடைய இரு கன்னங்களிலும் முத்தமிட்டாள். அவனுக்கு அது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது. அவளிடமிருந்து முல்லைப்பூவின் வாசனை வந்தது. கவுரியம்மா கூந்தலில் மலர் எதுவும் சூடியிருக்கவில்லை. பிறகு எப்படி மணம் வந்தது?

கவுரியம்மா பக்கத்து வீட்டு குட்டப்பனை அழைத்து சுமையைக் கீழே இறக்கி வைக்கச் சொன்னாள்.

வெற்றிலை வள்ளிக்கிழங்கையும் சேனையையும் கூடையில் மாற்றி உள்ளேயிருக்கும் அறைக்குள் கொண்டுபோய் வைத்தாள்.

வாசலில் இருந்த திண்ணை மீது அவனை அவள் உட்கார வைத்தாள். கன்னத்தில் மீண்டும் முத்தமிட்ட அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள்: ‘‘மணிக்குட்டா, உனக்கு இந்த அம்மாவைத் தெரியுமா?’’

‘‘தெரியும்’’- என்ற அர்த்தத்தில் அவன் தலையை ஆட்டினான்.

‘‘மணிக்குட்டா, உனக்கு என்னைப் பிடிக்குமா?’’

அப்போது அவன் லேசாகத் தயங்கினான். அதற்கு என்ன பதில் கூறுவது? தாய்க்கும் பெரிய அக்காவுக்கும் கவுரியம்மாவைப் பிடிக்காது. தந்தைக்குப் பிடிக்கும். தான் யார் பக்கம் இருந்தால் சரியாக இருக்கும் என்று அவன் யோசித்தான்.

அவன் கவுரியம்மாவைப் பார்த்தான். அவள் சிரித்தாள். அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த சிந்தனையைக் கண்டுபிடித்து விட்டதைப்போல் இருந்தது அவளுடைய சிரிப்பு.

அவனுடைய கன்னத்தைக் கிள்ளியவாறு கவுரியம்மா சொன்னாள்:

‘‘திருடன்... சின்னத் திருடன்...’’

கவுரியம்மா வீட்டிற்குள் சென்று அரிசி உருண்டையும் வறுத்த பலாவையும் கொண்டுவந்து அவனிடம் தந்தாள். அவன் அவற்றைத் தின்பதை அவள் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தாள்.

கவுரியம்மா அவனிடம் கேட்டாள்.

‘‘மணிக்குட்டா, நீ படிச்சு பெரிய உத்தியோகத்துல போய் உட்கார்ந்த பிறகு இந்த கவுரியம்மாவை நினைச்சுப் பார்ப்பியா?’’

நல்ல கேள்விதான். இந்த அளவுக்கு பாசத்தைக் கொட்டும் கவுரியம்மாவை எப்படி மறக்க முடியும்?

அவன் தலையை ஆட்டினான்.

அதைப் பார்த்து கவுரியம்மாவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அவள் எதற்காக அழவேண்டும்?

‘‘தம்புராட்டி... நான் புறப்படுறேன்...’’

காளிப்புலையன் வாசலில் அமர்ந்திருந்ததை கிட்டத்தட்ட கவுரியம்மா மறந்தே போய்விட்டாள். அவள் திடுக்கிட்டு எழுந்து கண்களைத் துடைத்துக்கொண்டு  பெட்டியிலிருந்து இரண்டு சக்கரங்களை (திருவாங்கூர் நாணயம்) எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள். அதைக் காளிப்புலையனிடம் கொடுத்தாள்.

காளிப்புலையன் தயங்கியவாறு சொன்னான்.

‘‘மூத்த தம்புரானுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவ்வளவுதான்.’’

‘‘பரவாயில்ல... சாப்பிட்டுப் போ.’’

‘‘வேண்டாம்... என்னை அங்கே எதிர்பார்த்துக்கிட்டு இருப்பாங்க.’’

‘‘சரி... அப்படின்னா புறப்படு. மணிக்குட்டனைப் பார்த்துக் கூட்டிட்டுப் போகணும்.’’

மீண்டும் மணிக்குட்டனின் கன்னத்தில் முத்தமிடவேண்டும் போலிருந்தது  கவுரியம்மாவிற்கு. மணிக்குட்டன் முன்னால் வேகமாக ஓடினான். சிறிது தூரம் சென்ற பிறகு அவன் திரும்பிப் பார்த்தான். அப்போதும் கவுரியம்மா அவனையே பார்த்தவாறு வீட்டு வாசலில் நின்றிருந்தாள்.

3

மேஷ மாதம் முதல் தேதி கொடியேற்றம். பத்து நாள் திருவிழா. ஐந்தாம் திருவிழா அக்கரை வீட்டைச் சேர்ந்தது.


ஆறாவது நாள் திருவிழா தாமரைக் குளக்கரை உண்ணித்தான்மார்களைச் சேர்ந்தது.

எட்டாம்நாள் திருவிழாவும் ஒன்பதாவது நாள் திருவிழாவும் கரைக்காரர்களைச் சேர்ந்தது. திருவிழா காலத்தில் பள்ளிக் கூடத்திற்கு முழுமையான விடுமுறை. கொடியேற்றம் முதல் திருவிழா முடிவது வரை திருவிழா நடக்கும் இடத்தைவிட்டு மணிக்குட்டன் நகர மாட்டான். அவனுடன் எப்போதும் அப்பு அண்ணன் துணையாக இருப்பான்.

ஒன்பதாவது நாள் திருவிழான்னு அய்யப்ப பணிக்கர் ஆசானின் ‘நல்லதங்காள் கதை’ இசை நாடகம்தான் அந்த வருடத்தின் முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. அதுவரை ஒவ்வொரு வருடமும் கதகளிதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாடகம் இடம்பெற வேண்டும் என்று முடிவெடுத்தது மணிக்குட்டனின் தந்தைதான். அவனுடைய தந்தைக்கு சிறிது இசையறிவு இருந்ததால் பணிக்கர் ஆசான் அவரின் நெருங்கிய நண்பராக மாறியிருந்தார். பெண்களைப் போல நீளமாக முடி வளர்த்துக்கொண்டு வெற்றிலை போட்டச் சிவந்த உதடுகளுடன் ஆசான் தன் தந்தையின் முன்னால் அமர்ந்து கதை சொல்வதைக் கேட்பதே ஒரு சுவையான அனுபவம்தான்.

கதகளிக்குப் பதிலாக நாடகம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததைத் தொடர்ந்து ஊரில் ஒரு பிளவு உண்டானது. இந்த விஷயத்தில் கடைசியில் வெற்றி பெற்றதென்னவோ அவன் தந்தைதான்.

கிழக்குப்பக்கம் வட்டவடிவ பீடத்திற்குப் பக்கத்தில் மேடை போடப்பட்டிருந்தது. அந்த பீடத்திலிருந்து கிணறு இருக்கும் இடம் வரை மைதானம் முழுக்க ஆட்கள் நிறைந்திருந்தார்கள். பணிக்கர் ஆசானும் பாகவதரும் இணைந்து கீர்த்தனைகளைப் பாடியதோடு நிகழ்ச்சி ஆரம்பமானது. ஆர்மோனியமும் மிருதங்கமும் இணைந்து ஒரு மாறுபட்ட அனுபவத்தை அங்கு உண்டாக்கின. கீழாற்றுகாரர்களுக்கு இந்த விஷயங்கள் புதுமையானவையாக இருந்தன.

மணிக்குட்டன் அப்பு அண்ணனுடன் மைதானம் முழுக்க ஓடி ஓடி சுற்றித் திரிந்தான். அப்படி ஓடி நடந்து கொண்டிருக்கும்போது மேடைக்குப் பின்னால் படர்ந்து நின்றிருந்த பலா மரத்திற்குக்கீழே ஒரு விஷயத்தைப் பார்த்த அவன் அதிர்ச்சியடைந்து நின்று விட்டான். அங்கு அவனுடைய தந்தையும் கவுரியம்மாவும் மிகவும் நெருக்கமாக நின்று கொண்டு என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள். அவனுடைய தந்தையின் கை கவுரியம்மாவின் மேல் இருந்தது. படம் விரித்து ஆடும் பாம்பைப் பார்த்ததைப் போல அவன் திகைப்புற்று நின்று விட்டான். அப்பு அண்ணன் அவன் பின் பாகத்தில் மெதுவாக கிள்ளினான். அவனைவிட மூன்று வயது மூத்தவன் அப்பு அண்ணன்.

அவனுடைய தந்தை அவனைப் பார்த்தார். அடுத்த நிமிடம் சிறிது தள்ளி நின்றார். பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றினார்.

‘‘நீ தேவையில்லாம சண்டை, பொல்லாப்புனு போக வேண்டாம். மற்ற விஷயங்களை நான் பேசிக்கிறேன்.’’

‘‘அண்ணே... நாளைக்கு நீங்க அங்கே வருவீங்களா?’’

‘‘வர்றேன். நீ போ.’’

கவுரியம்மா தெற்குதிசை நோக்கி நடந்தாள்.

அவனுடைய தந்தை அவனைப் பார்த்து சத்தம் போட்டார்.

‘‘உன்னால ஒரு இடத்துல உட்கார்ந்து நாடகத்தைப் பார்க்க முடியலியாடா?’’

இவ்வாறு கத்திய அவன் தந்தை கவுரியம்மா போனவழியே தெற்குப் பக்கமாய் நடந்து போனார்.

அதற்குப் பிறகு நாடகத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு இல்லாமற்போனது. மனதின் ஒரு மூலையில் முள் பலமாக குத்தியதைப் போல் அவன் உணர்ந்தான். அவனுடைய தாயும் பெரிய அக்காவும் சுமதி அக்காவும் பாட்டியும் ஒன்றாக பீடத்திற்கருகில் அமர்ந்து நாடகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரியாமல் தன் தந்தை கவுரியம்மாவுடன் ரகசியமாக ஏன் பேசவேண்டும்?

அப்பு அண்ணன் அழைத்தான்: ‘‘மணிக்குட்டா!’’

‘‘ம்...’’

‘‘உன் அப்பா என்ன பண்றாருன்னு பார்த்தியா?’’

‘‘உனக்கு விஷயம் என்னன்னு புரியுதா?’’

அவன் அப்பு அண்ணனைப் பார்த்தான்.

‘‘உன் அப்பாவுக்கு சர்க்கார் கவுரிமேல ரொம்பவும் பிரியம்...’’

அதைக்கேட்டு மணிக்குட்டனுக்கு அழுகை வரும்போல் இருந்தது.

‘‘சர்க்கார் கவுரின்னா என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமாடா மணிக்குட்டா?’’

‘‘எனக்கு எதுவுமே தெரிய வேண்டாம்.’’

‘‘சர்க்கார் சொத்துன்னா அது எல்லாருக்கே சொந்தம்னு அர்த்தம். அதைப்போலத்தான் கவுரியும். இப்போ கவுரியம்மாவைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கிறது உன் அப்பா!’’

அதற்கு எந்தப் பதிலும் கூறாமல் நடந்தான் மணிக்குட்டன். அப்பு அண்ணனிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற ஒரே எண்ணம்தான் அப்போது அவனுக்கு இருந்தது. அப்பு அண்ணனுடன் சேர்ந்து நடந்தால், அவன் மேலும் ஏதாவது கூறினாலும் கூறுவான். எதற்கு வீண் வம்பென்று அவனுக்குத் தெரியாமல் மணிக்குட்டன் தன் வீட்டை நோக்கி ஓடினான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தை அடைந்ததும், அவன் வாய்விட்டு அழுதான். நாடகத்தைப் பார்ப்பதற்காக தலையில் துண்டைக் கட்டிக்கொண்டு கையில் தீப்பந்தத்துடன் சிலர் எதிரில் வந்தபோது, அவன் அழுகையை நிறுத்தினான். இருந்தாலும், தாங்க முடியாத அளவுக்கு மனதில் கவலை உண்டானது. தன் தந்தை ஏன் இப்படி நடந்து கொண்டார்? அப்பு அண்ணன் என்ன கூறினான் என்பதை அவனுடைய தந்தை அறிவாரா? அப்படியென்றால் பிறர் ஒவ்வொருவரும் அவரைப் பற்றி என்னவெல்லாம் கூறுவார்கள்?

அழுதுகொண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டும் அவன் வீட்டை அடைந்தபோது, தெற்குப் பக்கம் இருந்த முன்கதவு அடைக்கப்பட்டிருந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு சாவியுடன்தான் அவன் தாயும், பெரிய அக்காவும் நாடகம் பார்க்கப் போயிருப்பார்கள். வரும்போது சாவியை வாங்கிக்கொண்டு வந்திருக்க வேண்டும். உள்ளே செல்ல என்ன வழி என்ற சிந்தனையுடன் அவன் அங்கு நின்றிருந்தபோது கிழக்கு பக்கமிருந்த அறையின் கதவு திறக்கப்படும் சத்தம் அவன் காதில் விழுந்தது. யாராவது திருடனாக இருக்குமோ? இல்லாவிட்டால் பேய், பிசாசு என்று ஏதாவது இருக்குமோ? பயந்து நடுங்கியவாறு அவன் நின்று கொண்டிருந்தான். அப்போது அவனுடைய தந்தையும் கவுரியம்மாவும் தெற்கு வாசலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அவனைக் கண்டு பயந்ததைப் போல் கவுரியம்மா கேட்டாள். ‘‘யார் அது?’’

அவன் தந்தை அவன் அங்கு நின்றிருப்பதைத் தெரிந்து கொண்டார்.

‘‘நீ என்னடா சனியனா ஆயிட்ட! எங்கே பார்த்தாலும் நட்சத்திரத்தைப் போல கண் முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கே!

கவுரியம்மாவுடன் சேர்ந்து அவன் தந்தை நடந்தார். கவுரியம்மா மெதுவான குரலில் கேட்டாள்:

‘‘பையன் எல்லாத்தையும் தெரிஞ்சிருப்பானா?’’

‘‘ம்... தெரிஞ்சிருப்பான்! நீ அந்தப் பலா மரத்தைத் தாண்டி வடக்குப் பக்கம் இறங்கி மரவள்ளிச் செடிகளைக் கடந்து நடந்து போ...’’

மணிக்குட்டன் அறையில் போடப்பட்டிருந்த கட்டிலில் போய் படுத்தான். அய்யப்ப பணிக்கர் ஆசான் உரத்த குரலில் பாடிய பாட்டு அங்கு கேட்டது. மக்களின் ஆரவாரச் சத்தமும் கேட்டது. அவற்றைத் தாண்டி தன்னுடைய தொண்டை துடித்துக் கொண்டிருக்கும் ஓசை கூட அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.


ஒரு கத்தியை எடுத்துக் கொண்டு மரவள்ளிச் செடிகள் வழியாகப் பதுங்கி நடந்துசென்று சர்க்கார் கவுரியைக் குத்திக் கொன்றால் என்ன என்று அவன் நினைத்தான். திருடி கவுரி! பேய் கவுரி!

தான் பார்த்த விஷயத்தை தன் தாயிடமோ பெரிய அக்காவிடமோ சொன்னால் என்ன? சுமதி அக்காவிடம் கூறினால் எப்படி இருக்கும்?

இப்படி பல விதங்களிலும் அவன் நினைத்தாலும் தன் தாய் வந்தவுடன், அவனால் எதுவுமே சொல்ல முடியவில்லை. பொழுது புலர்ந்து படுக்கையை விட்டு எழுந்தபோது, அவனுக்குக் காய்ச்சல் அடித்தது. அது பனியால் வந்திருக்க வேண்டும் என்று நினைத்த அவனுடைய தாய் அவனைச் சத்தம் போட்டாள். மிளகு போட்டு கஷாயம் தயார் பண்ணித் தந்தாள். கடுகை அரைத்து நெற்றியில் பூசி விட்டாள். அதற்குப் பிறகும் அவனுக்குக் காய்ச்சல் குறைவதாகத் தெரியவில்லை. கடைசியில் டாக்டரிடம் காட்டுவதற்காக அவனை அவனுடைய தந்தை அழைத்துக்கொண்டு போனார். போகும் வழியில் அவன் தந்தையின் நண்பரும் உறவு முறையில் மைத்துனருமான அச்சுதக்குறும்பு மாமாவும் அவர்களுடன் வந்தார். நேரம் தவறாமல் வெற்றிலை போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் காரணத்தால் ‘‘வெற்றிலை எச்சில்’’ என்ற பட்டப்பெயரை மற்றவர்களிடம் பெற்றிருக்கும் குறுப்பு மாமா வெற்றிலையில் சுண்ணாம்பு தடவியவாறு கேட்டார்: ‘‘மச்சான்!’’

‘‘ம்...’’

‘‘நான் ஒரு கதையைக் கேட்டேனே!’’

‘‘என்ன கதை?’’

‘‘கண்ணை மூடிக்கிட்டு பால் குடிச்சா, யாரும் அதைப் பார்க்க மாட்டாங்கன்னு நினைப்பா?’’

‘‘விஷயத்தைத் தெளிவா சொல்லு மாப்ளே...’’

‘‘சர்க்காருக்கு கேஸ் எடுக்குற விஷயம்தான்...’’

‘‘ம்...?’’

‘‘ஒரு சர்க்காருக்குச் சொந்தமான பொருள் மச்சான் கையில இருக்குறதா எல்லாரும் பேசிக்கிறாங்க...’’

குறுப்பு மாமா ரசித்தவாறு சிரித்தார்.

அவனுடைய தந்தை அவனைப் பார்த்தார். தன்னுடைய கவனம் அவர்களின் பேச்சின் மீது இல்லை என்றோ; தனக்கு இந்த விஷயத்தைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு மனப்பக்குவம் இல்லை என்றோ நினைத்த அவன் தந்தை சொன்னார்: ‘‘அப்படியொரு காரியம் நடந்திருச்சு மாப்ளே...’’

‘‘நான் கேட்டதை அந்தக் காலத்துல ஒரு மருமகன் கேட்டது மாதிரி நினைச்சிடக்கூடாது.’’

‘‘என்ன சொல்ற?’’

‘‘தரையில் கிடந்த மருமகன் பொழுது புலர்ந்த நேரத்துல கட்டில் மேல கிடந்தான். மாமா அவனைப் பார்த்து கேட்டான்: ‘நீ எப்படிடா கட்டில் மேல வந்தே?’ன்னு. அதுக்கு மருமகன் சொன்னான்- ‘அதையே தான் மாமா நானும் கேக்குறேன். நான் எப்படி கட்டில் மேல வந்தேன்?னு.’’

குறுப்பு மாமா தன்னுடைய சிறிய தொப்பை விழுந்த வயிறைக் குலுக்கியவாறு சிரியோ சிரி என்று சிரித்தார்.

‘‘நான் சொன்னது மாப்ளே... போன ஓணம் நேரத்துல கல்வேலை செய்யிற ஆசானுக்கும் ஆசாரி முத்துக்கும் நடந்த சண்டை ஞாபகத்துல இருக்குல்ல?’’

‘‘ம்...’’

‘‘அந்த வழக்குல தீர்ப்பு சொன்னது நானும் நம்ம கிருஷ்ணப் பிள்ளையும்தான். காலையில இருந்து வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மத்தியானம் தாண்டின பிறகுதான் ஒரு தீர்மானமே எடுக்க முடிஞ்சது. கொஞ்சம் பயமுறுத்துறது மாதிரிகூட பேச வேண்டி வந்துச்சு. கெட்ட வார்த்தைகளுக்கும் பஞ்சம் இல்ல. எல்லாம் முடிஞ்சதும் ஆசான் ஒரு விருந்தே வச்சாரு.’’

‘‘ம்... ம்... தெரியும்.’’

‘‘தெரியமா எப்படி இருக்க முடியும்?’’

‘‘விருந்துன்னா எப்படிப்பட்ட விருந்துன்ற? அப்போத்தான் மரத்துல இருந்து இறக்கிய கள்ளு, வறுத்த மீன்... எதுக்கும் குறைவு இல்ல. ஆசானோட சகோதரிமாருங்க நல்ல சமையல் பண்ணக் கூடிய வங்களாச்சே!’’

வாய்க்குள் வெற்றிலை இருந்ததால் சுட்டு விரலால் ஆட்டியவாறு குறுப்பு மாமா மெதுவான குரலில் சொன்னார்: ‘‘ம்...ம்...’’

‘‘எல்லாம் முடிஞ்சு ஆற்றோரமா நடந்து வயல் வரப்புல ஏறி குறுக்கு வழியில நடந்து போனா எதிரே வந்துக்கிட்டு இருக்கா நீ சொன்ன ஆளு...’’

குறுப்பு மாமா வாயிலிருந்த வெற்றிலை எச்சிலைத் துப்பிவிட்டு கதை கேட்பதற்குத் தயாரானார். தேவைப்பட்டால் இடையில் ஒன்றிரண்டு வார்த்தைகளாவது கூறவேண்டும் அல்லவா?

‘‘அதுக்கு முன்னாடி அவளை நான் பார்த்ததா எனக்கு ஞாபகத்துல இல்ல. அவ என்னைப் பார்த்து கேட்டா.. அவள்னு சொன்னா யாரைச் சொல்றேன்றதைப் புரிஞ்சிக்கணும்...’’

குறுப்பு மாமா தலையை ஆட்டியவாறு சொன்னார்: ‘‘புரியுது... புரியுது.’’

‘‘அவ எனக்குப் பக்கத்துல வந்து என்னையே உத்துப் பார்த்து சிரிச்சா. அதுக்குப் பிறகு ஒரு கேள்வி- ‘என்னைத் தெரியலியா?ன்னு.’’

‘‘சரியா ஞாபகத்துல இல்ல...’ன்னேன்.

‘என் கீழாற்றுக்கரை பகவதி.... நான் எத்தனை தடவை உங்களைப் பார்த்திருக்கிறேன்!’னா.

‘பார்த்திருக்கலாம்... ஞாபகத்துல இல்லைன்னுதான் சொன்னேன்’னு நான் சொன்னேன்.

அதுக்குப் பிறகு என்ன சொல்லணும்னு சிந்திச்சுக்கிட்டே அந்த இடத்துல நான் நின்னுட்டேன் மாப்ளே...’’

‘‘கட்டாயம் நின்னுருப்பீங்க.’’

‘‘அவளோட சிரிப்பும் கண்ணுக்குக் கீழே இருக்குற மச்சமும் நடக்குறப்போ இருக்குற ஒரு அழகும்...’’

‘‘விசுவாமித்ர மகரிஷியா இருந்தாக்கூட தரையில கவிழப்போறது உறுதின்னு சொல்லுங்க...’’

‘‘நீங்க என் வீட்டுக்குக் கட்டாயம் வரணும்னு அவ சொன்னா மாப்ளே... நான் ஏன் உன்கிட்ட அந்த விஷயத்தை மறைக்கணும்? நான் அவ வீட்டுக்குப் போனேன். நான் போறப்போ அங்கே அந்தப் பாச்சரன் இருந்தான். என்னைப் பார்த்ததும் அவ கேட்டா- ‘அய்யோ... யாரு இங்கே வந்திருக்கிறது?ன்னு. சொல்லிட்டு அவ பாச்சரனைப் பார்த்தா. என்னைப் பார்க்காதது மாதிரி அவன் இருந்த இடத்தை விட்டு எழுந்து பின்பக்கம் ஒட்டியிருந்த தூசியைத் தட்டிட்டு நடக்க ஆரம்பிச்சான்...’’

‘‘பாவம்... பிறகு?’’

மணிக்குட்டனின் தந்தை சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை. சிரித்தான். பின், ‘‘அதுக்குப் பிறகு... என்ன சொல்லுறது மாப்ளே? நான் எவ்வளவோ அனுபவிச்சிருக்கேன். ஆனால், இப்படிப்பட்ட ஒருத்தியை நான் அதுவரை பார்த்ததே இல்ல. ஏன்... கேள்விப்பட்டதுகூட இல்ல. பணம் அவளுக்குப் பிரச்சினையே இல்ல. அதை அவ சொல்லவும் செய்தா. ‘எனக்கு அன்புதான் பெரிசு. அது எப்பவும் எனக்குக் கிடைக்கணும்’னா என்கிட்ட!’’

குறுப்பு மாமா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு கேட்டார்: ‘‘எல்லாம் சரிதான். இருந்தாலும், பிள்ளைங்களுக்கு வயசாச்சில்ல? இந்த விஷயத்தை இதோட நிறுத்திக்கிறதுதானே நல்லது?’’

‘‘இதை நான் எப்பவும் நினைக்காம இல்லை. மாப்ளே... ஆனா, உண்மை விஷயம் என்ன தெரியுமா? கள்ளு குடிக்கிற விஷயம் மாதிரி தான் இதுவும். நல்லா குடிச்சுப் பழகியவன் என்னதான் இனிமேல் குடிக்கக்கூடாதுன்னு முடிவு எடுத்தாலும், சாயங்கால நேரம் வந்திருச்சுன்னா... கள்ளுக்கடையைத் தேடி தானாகவே கால்கள் போகும்.’’

‘‘அதே கதைதான்...’’


ரசித்து பேசிக்கொண்டே வந்ததில் தங்களுடன் வந்த மணிக்குட்டனை மறந்துவிட்டோமே என்ற உணர்வுடன் அவனுடைய தந்தை அவனைத் திரும்பிப் பார்த்தார். அவனைத் தன்னுடன் அவர் இறுக அணைத்துக் கொண்டு நடந்தார். அவர் அவனைப் பார்த்துக் கேட்டார்: ‘‘மகனே, உனக்குப் பசிக்குதாடா?’’

குறுப்பு மாமா சொன்னார்: ‘‘பிறகென்ன? என்ன இருந்தாலும் சின்ன பையனாச்சே! எப்பவும் பசி எடுத்துக்கிட்டுதான் இருக்கும். அந்தப் பிள்ளையோட கடையில ஏதாவது சுகிபனோ, போளியோ தின்றதுக்கு வாங்கிக் கொடுங்க. இவன் காப்பி குடிக்கட்டும். நாம மரவள்ளிக்கிழங்கோ, மீனோ சாப்பிடலாம்.’’

குறுப்பு மாமா இரட்டை அர்த்தத்தை மனதில் வைத்துக் கொண்டு சிரித்தார். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட அவனுடைய தந்தை தலையை ஆட்டியவாறு சொன்னார்:

‘‘விஷயம் புரிஞ்சது. ஒரே ஒரு பிரச்சினைதான்.’’

‘‘என்ன?’’

‘‘அவன் உள்ளே போயிட்டான்னா எனக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்ன ஆளை உடனடியா பார்க்கணும்னு தோண ஆரம்பிச்சிடும்.

குறுப்பு மாமா தலையைச் சாய்த்துக் கொண்டு சிரித்தார். அவனுடைய தந்தை சொன்னார்: ‘‘வா, மகனே. காப்பியும் பலகாரமும் வாங்கித் தர்றேன்.’’

4

பால்காரி நாணியம்மாதான் மணிக்குட்டனின் தாயிடம் இந்த விஷயத்தை முதல் முறையாகச் சொன்னவள். சிறுவயது முதற் கொண்டே நாணியம்மாவை அவன் நன்கு அறிவான்.

பெரிய பித்தளைக் குடத்தைத் தோளில் வைத்துக் கொண்டு ஊர் முழுவதும் பசுவைக் கறப்பதற்காக நடந்து திரியும் - எப்போதும் இளமை மாறாமல் இருக்கும் நாணியம்மா... அவனுடைய வீட்டில் இரண்டோ மூன்றோ கறவை மாடுகள் எப்போதும் இருக்கும். ஒவ்வொரு பசுவும் இரண்டு அல்லது மூன்று படிகள் பால் கறக்கும். அவன் தாய்க்கு பசுவைக் கறக்கத் தெரியாது. நாணியம்மா பசுக்களைக் கறந்து வீட்டிற்குத் தேவையான பாலைக் கொடுத்துவிட்டு மீதியிருப்பதை அளந்து எடுத்துக் கொண்டு போவாள். அதை மோராகவும் தயிராகவும் மாற்றி நாணியம்மாவின் கணவன் வாசுப்பிள்ளை நகரத்திற்கு கொண்டுபோய் விற்பான்.

நாணியம்மா வாய் வலிக்காமல் பேசிக்கொண்டே இருப்பாள். ஊரில் நடக்கும் பல விஷயங்களையும் தெரிந்து கொள்வது நாணியம்மாவின் மூலம்தான். சமையலறையில் காலை நீட்டிக் கொண்டு பாலை அளந்துகொண்டே நாணியம்மா கூறினாள். ‘‘இனிம«ல் அஞ்சேரிக்கு பசுவைக் கறக்க போக வேண்டியது இல்ல...’’

‘‘ஏன் நாணி?’’ - அவனுடைய தாய் கேட்டாள்.

‘‘அய்யோ... உங்களுக்குத் தெரியாதா என்ன? அவங்க எல்லாத்தையும் வித்துட்டு தொடுபுழைக்குப் போறாங்கள்ல...’’

‘‘எதுக்கு?’’

‘‘ஊர் முழுவதும் அதுதானே பேச்சு... உங்களுக்கு மட்டும் அது எப்படி தெரியாமப் போச்சு? அந்த நாணு அண்ணனுக்கு படகு கம்பெனியிலதான் வேலை. கொல்லத்துலன்னு சொன்னாங்க. ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைதான் இங்கே அவர் வர்றது வழக்கம். ரெண்டு மூணு மாசத்துக்கு முன்னாடி நடுராத்திரி நேரத்துல அவர் வர்றப்போ வீட்டுக்குள்ள வேற யாரோ இருக்காங்க.’’

‘‘யாரு இருந்தது?’’

நாணியம்மா இப்படி அப்படியுமா பார்த்தாள். ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த மணிக்குட்டனைப் பார்த்து அவனுடைய தாய் சொன்னாள்: ‘‘போடா அந்தப்பக்கம்... பொம்பளைங்க பேசுறதைக் கேட்டுக்கிட்டு...’’

ஆனால், அவன் ஒளிந்துகொண்டு பதுங்கிக் கொண்டும் அங்கேயேதான் நின்று கொண்டிருந்தான்.

நாணியம்மா மெதுவான குரலில் சொன்னாள்னு: ‘‘வடக்குல இருக்கிற தோட்டத்துல தண்ணீர் பாயவைக்க என்ஜினைக் கொண்டு வந்திருக்காரு ஒரு முஸ்லிம்...’’

‘‘முஸ்லிமா...?’’

‘‘ஆமா...’’

அவன் தாய் மூக்கின் மீது விரலை வைத்தாள்.

‘‘நாணு அண்ணன் அவளைக் கொல்லுறதுக்கு வெட்டுக்கத்தியை எடுத்திருக்கார். அவ்வளவுதான்- அவ கயிறைத் தொங்கவிட்டு தற்கொலை பண்ணிக்கலாம்னு போயிட்டாளாம். எது எப்படியோ இப்போ அவர் வீட்டையும் சொத்தையும் வித்துட்டு தொடுபுழைக்குப் போறதுன்னு முடிவு பண்ணியாச்சு. அவரோட ஒரு அண்ணன் அங்கேதானே இருக்கார்!’’

‘‘என்ன இருந்தாலும் நாணி, அவ பயங்கரமான ஆளுதான். எப்பவும் கர்வத்தோட நடந்து திரியறவளாச்சே அவ!’’

‘‘அவ கதை இதுன்னா செம்பழத்திலே பாரு கதை வேறமாதிரி...’’

அந்தக் கதை என்ன என்பதைக் கேட்பதற்கு முன்பு மணிக்குட்டனின் தாய் மீண்டும் அவன் அங்கிருப்பதைப் பார்த்துவிட்டாள். அடுத்த நிமிடம் அடுப்பில் நெருப்பு எரிப்பதற்காக கொண்டுவந்து வைத்திருந்த சுள்ளி விறகை எடுத்து அவள் அவனை விரட்டினாள்.

பால் கொடுத்தற்கான பணத்தை வாங்கிக் கொண்டு வரும்படி ஒரு மாலை நேரத்தில் மணிக்குட்டனின் தாய் அவனை நாணியம்மாவின் வீட்டிற்கு அனுப்பினாள். குஞ்ஞம்மா மகளின் குழந்தையைப் பார்க்கப்போகும்போது கையில் ஏதாவது வாங்கிக்கொண்டு போக வேண்டுமென்பதற்காகத்தான் அவள் பணம் வாங்கிவரச் சொன்னதே. அவன் போனபோது துண்டை மட்டும் கட்டிக் கொண்டு கிணற்றோரத்தில் நின்றவாறு நாணியம்மா உடம்பில் எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தாள். பால் கறக்கும் சரஸம்மா கிணற்றுக் கல்லின் மீது அமர்ந்திருந்தாள். தன்னைப் பார்த்தவுடன் வெட்கப்பட்டு எதையாவது எடுத்து உடம்பின் மீது போர்த்திக்கொள்வாள் என்று நினைத்தான் அவன். ஆனால், அவள் அப்படி எதுவும் செய்யவில்லை. மார்பில் எண்ணெய் தேய்த்தவாறு நாணியம்மா கேட்டாள்: ‘‘என்ன மணிக்குட்டா?’’

தன் தாய் சொல்லிவிட்ட விஷயத்தை அவன் சொன்னான். அதைக்கேட்டு நாணியம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது.

‘‘என்னடா பையா? இன்னைக்கு காலையிலதானே உன் அம்மாகிட்ட நான் சொன்னேன். பத்து நாட்கள் கழிச்சுதான் பணம் தர முடியும்னு. இங்கே என்ன பணம் காய்க்கிற மரமா இருக்கு? ஒருபடி பாலோ ஒன்றரைபடி பாலோ இங்கே வித்துட்டா, உடனே பணம் கைக்கு வந்திடும்னு உன் அம்மா நினைக்கிறாங்க. இங்கே இருக்குற ஆளு ரெண்டு நாட்களா கொண்டு போறதை அப்படியே திரும்பிக் கொண்டுவந்துக்கிட்டு இருக்காரு. சுமைகூலி கூட கிடைக்க மாட்டேங்குது.’’

‘‘சரி... இருக்கட்டும். இதையெல்லாம் நீ எதுக்கு இந்தச் சின்னப் பிள்ளைக்கிட்ட சொல்லிக்கிட்டு இருக்கே? என்றாள் சரஸம்மா.

‘‘பேச்சுக்கு சொன்னேன். அதுக்காக என்மேல வருத்தப்பட மாட்டான் மணிக்குட்டன். மகனே, என்மேல வருத்தமா?’’

உண்மையிலேயே அதைக்கேட்டு மணிக்குட்டனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இவ்வளவையும் கூறிவிட்டு தன்மீது அவனுக்கு வருத்தம் இருக்கிறதா என்று கேட்கிறாளே!

சரஸம்மா சொன்னாள்:

‘‘பாவம் பையன்... மற்ற விஷயம் இந்த பையனோட அம்மாவுக்கு தெரியுமா நாணி?’’

‘‘தெரியாதுன்னுதான் நினைக்கிறேன்.’’

‘‘நீ அங்கே விஷயத்தைச் சொல்லலியா?’’

‘‘இல்லடி சரஸு.§’’

‘‘என்ன காரணம்?’’

‘‘அந்த ஆளு சரியான கள்ளு குடிகாரரு. எது செய்யவும் தயங்காத ஆளாச்சே!’’

‘‘நீ சொல்றது சரிதான். சொல்லப்போனா அந்த ஆளுக்கு இது தேவைதான். அந்தப்பேய், அந்த ஆளுமேல ஏறி இறுக்கிப் பிடிச்சிக்கிட்டாளே!’’


‘‘சரிதான். இரத்தத்தை முழுசா குடிச்சிட்டுத்தான் அவ அந்த ஆளை விடுவா.’’

‘‘தெற்குப் பக்கமா அவ நடந்துபோறதை நான் இன்னைக்குப் பார்த்தேன். அவளோட நடையையும் குலுக்கலையும் பார்க்கணுமே!’’

‘‘வயசுகூட அவளுக்குக் குறைவுதான். இல்லியா நாணி?’’

‘‘அவளுக்கு வயசுன்றதே இல்லடி சரஸு. அவளுக்கு எப்பவும் வயசு பதினாறுதான்...’’

‘‘மகனே, நீ புறப்படு. காலையில வர்றப்போ நான் அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லிக்கிறேன்.’’

வீட்டை நோக்கி திரும்பி வரும்போது மணிக்குட்டன் மனதிற்குள் நினைத்தான்... ‘பாவம்... கவுரியம்மா எப்படிப் பேயாக மாறினாள்?’’

தன் தந்தைக்கு பயந்து சொல்லாமலிருந்த விஷயத்தை கடைசியில் நாணியம்மா அவனுடைய தாயிடம் கூறிவிட்டாள். நிறைய தண்ணீரைச் சேர்த்து கலந்தாள் என்பதுதான் விஷயமே.

‘‘ஆம்பளைங்க சேற்றைக் கண்டால் மிதிப்பாங்க. தண்ணி இருக்கிற இடத்துல கழுவுவாங்க. இந்த விஷயத்தைப் பெருசா எடுக்க வேண்டாம்.’’

ஆனால், மணிக்குட்டனின் தாய் அந்த அறிவுரையை எல்லாம் கேட்பாளா என்ன? சுண்ணாம்பு விற்கும் பெண்ணிடமும் காய்கறிக்காரி குஞ்ஞுப்பெண்ணு சோவத்தியிடமும் கிழக்குக் கரையில் புதர்களை வெட்டச்சென்ற உலகிப்புலகியிடமும் கேட்டு எல்லா விஷயங்களையும் அவள் தெரிந்துக் கொண்டாள்.

ஒருநாள் மணிக்குட்டன் பள்ளிக்கூடம் விட்டு வரும்போது அவனுடைய தாய் வாசலில் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் வழக்கமாக படுக்கும் கட்டில் அல்ல அது. விருந்தினர்கள் யாராவது வீட்டுக்கு வரும்போது, அந்தக் கட்டிலில்தான் படுப்பார்கள். கைகள் இரண்டையும் விரித்துப் போட்டுக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதவாறு அவள் படுத்திருந்தாள். தண்ணீர் எடுக்கப் போகும் போது வழியில் கிணற்றுக் கல்லில் கால் வழுக்கி அவள் விழுந்திருக்க வேண்டும் என்றுதான் முதலில் அவன் நினைத்தான். அப்படியென்றால் பெரிய அக்காவும் கிழக்கு வீட்டிலுள்ள சுமதி அக்காவும் இப்படி இடது பக்கமும் வலது பக்கமும் உட்கார்ந்து அழவேண்டிய அவசியமில்லையே!

அவனைக் கண்டதும் அவன் தாய் தன்னுடைய நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

‘‘என் பிள்ளை ஆளாகுறப்போ வெளியே இறங்கி நடக்க முடியாமப் போச்சேடி!’’

சுமதி அக்கா அவனுடைய தாயின் கையை பலமாகப் பற்றினாள்.

வெளியே இறங்கி நடந்தால் என்ன? இந்த அம்மாவுக்கு என்ன ஆகிவிட்டது?

நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்தால் மரவள்ளிக்கிழங்கோ, வெற்றிலை வள்ளிக்கிழங்கோ, சேம்போ- இவற்றில் ஏதாவதொன்றை அவித்து வைத்து அவனுக்காக கருப்பட்டியால் ஆன காப்பியையும் தயார் பண்ணி வைத்திருப்பாள் அவனுடைய தாய். இப்போது அதை அவன் யாரிடம் கேட்பான்? இது ஒன்றுதான் அவனின் மனதில் அப்போது ஓடிக்கொண்டிருந்தது. எது வேண்டுமானாலும் நடக்கட்டும் என்ற எண்ணத்துடன் அவன் பெரிய அக்காவை அழைத்தான்.

‘‘பெரிய அக்கா...’’

திரும்பிக் கூட பார்க்காமல் அவனுடைய பெரிய அக்கா சொன்னாள்:

‘‘அந்தப் பக்கம் போடா தம்பி. அடி ஏதாவது விழுந்துடப்போகுது...’’

கையிலிருந்த புத்தகத்தை பரணில் எறிந்துவிட்டு சமையலறையின் சுவர்மீது சாய்ந்து நின்றவாறு அவன் அழுதான். அப்போது சுமதி அக்கா சொன்னது அவன் காதில் விழுந்தது.

‘‘பெரியம்மா, உங்களுக்கு கொஞ்சம்கூட பிடிப்பு இல்லைன்றதை இப்பத்தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன். பொம்பளையா இருந்தா கொஞ்சமாவது தைரியமாவது இருக்க வேண்டாமா?’’

‘‘நான் முட்டாளா ஆயிட்டேன்டி சுமதி! அதுனாலதான் என் நிலைமை இப்படி ஆயிடுச்சு!’’

‘‘சும்மா இருங்கம்மா...’’

சுமதி அக்கா எவ்வளவு தடுத்தாலும், அவனுடைய தாய் அழுது கொண்டேயிருந்தாள்.

அவனுடைய தந்தை எப்போது வந்தார் என்று அவனுக்குத் தெரியாது. ஒரு பெரிய கூப்பாடு சத்தத்தைக் கேட்டு ஓடிச்சென்று பார்த்தபோது அவன் தாய் தந்தையின் முன்னால் நின்று பத்ரகாளியைப் போல் ஆடிக்கொண்டிருந்தாள். பெரிய அக்காவும் சுமதி அக்காவும் அவனுடைய தாயைப் பிடித்து பின்னால் இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவனுடைய அம்மா அவர்களுக்குப் பிடி கொடுத்தால்தானே!

‘‘நான் சாகப்போறேன். உங்க முன்னாடி தலை குப்புற விழுந்து சாகப்போறேன். உங்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்தவ நான் வேற ஆம்பளையை நான் கனவுல கூட நினைச்சது இல்ல...’’

தன் மார்பில் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டாள் அவன் தாய். கடைசியில் அவனுடைய தந்தை தாயைப் பிடித்து நிறுத்தினார். அவருடைய கைக்குள் சிக்கிக்கொண்ட அவனுடைய தாய் திமிறினாள்.

‘‘நில்லுடி... நீ சாகப் போறியா?’’

‘‘நீங்களே உங்க கையால என்னைக் கொன்னுடுங்க.’’

‘‘முதல்ல விஷயத்தைச் சொல்லு. அதுக்குப் பின்னாடி கொல்லலாம்... நீங்க போங்கடி... போங்க...’’

பெரிய அக்காவும் சுமதி அக்காவும் சிறிதுகூட மனமே இல்லாமல் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு உள்ளே சென்றார்கள். அவர்கள் சமையலறைக்குள் நுழைந்து அடுப்பில் வேகவைத்திருந்த சேம்பு வெந்து விட்டதா என்று ஒரு குச்சியால் குத்திப் பார்த்து விட்டு, அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றினார்கள். பெரிய அக்காவும் சுமதி அக்காவும் சேர்ந்து ஒரே பாத்திரத்திலிருந்த சேம்புவை எடுத்துத் தின்றார்கள். பெரிய அக்காவால் அப்போதுகூட தன் மனதில் உண்டான கவலையை மறக்க முடியவில்லை.

சுமதி அக்கா சொன்னாள்: ‘‘நீ சும்மா இரு பெண்ணே. அவங்களுக்குள்ளே ஏதாவது பேசி அவங்க சரியாயிடுவாங்க...’’

சுமதி அக்கா மணிக்குட்டனையும் அழைத்துக்கொண்டு கிழக்குப் பக்கம் இருந்த வீட்டிற்குச் சென்றாள். பாட்டியும் சுமதி அக்காவும் மட்டும்தான் அந்த வீட்டில் இருக்கிறார்கள். சுமதி அக்காவின் கணவர் ஒரு போலீஸ்காரர். மாதத்தில் இரண்டு அல்லது மூன்று முறைதான் அவர் வீட்டிற்கு வருவார். எப்போதும் குளித்து, சுத்தமான ஆடைகள் அணிந்து நடக்கும் சுமதி அக்காவுக்கு தன் மீது ஏன் இப்படியொரு பிரியம் என்று அவன் பல நேரங்களில் நினைத்திருக்கிறான். சுமதி அக்காவிற்கென்று அந்த வீட்டில் ஒரு தனி அறை இருக்கிறது. அவளுடைய ஆடைகளை வைப்பதற்கென்றே தனியாக ஒரு பெட்டி இருக்கிறது. மேஜை மீது பவுடர், சீப்பு, பெரிய கண்ணாடி, செனட்... சென்ட் பாட்டிலின் மூடியைத் திறந்து சில நேரங்களில் அவனுடைய கையில் சிறிது சென்ட் படுமாறு அவள் செய்வாள். அந்த வாசனை மூன்று நாட்களுக்குப் போகாமல் இருக்கும். சுமதி அக்கா படுத்திருக்கும் மெத்தையில் அருமையான ஒரு வாசனை இருக்கும். மெத்தையில் அழகான ஒரு விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும். தொட்டால் மெத்தென்று இருக்கும் தலையணை... அந்த மெத்தையில் தன் அருகில் படுக்க வைத்துக் கொண்டு அவனுக்கு சுமதி அக்கா எவ்வளவு கதைகள் சொல்லியிருக்கிறாள்! அன்று அவனை மிகவும் அருகில் நிறுத்தி வைத்துக் கொண்டு அவனைக் கையால் வருடியவாறு சுமதி அக்கா என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.


பாட்டி கழியை ஊன்றிக்கொண்டு கூன் விழுந்து முதுகுடன் அறைக்குள் வந்தாள்.

பாட்டி கேட்டாள்: ‘‘கிழக்கு வீட்டுல என்ன பிரச்னை?’’

சுமதி அக்கா சொன்னாள்: ‘‘ம்... ஒண்ணுமில்லம்மா...’’

‘‘ஒண்ணுமில்லாமலாடி அம்மாவும் மகளும் ஏதோ கொலை செஞ்சிட்டதைப் போல அப்படியொரு ஆர்ப்பாட்டம் பண்றாங்க?’’

‘‘வீடுன்னு இருந்தா இதெல்லாம் இல்லாமலா இருக்கும்? அழுவுறது, சிரிக்குறது எல்லாம்தான் இருக்கும்.

‘‘அழுவுறதுக்கு ஒரு காரணம் வேண்டாமாடி?’’

‘‘சுண்ணாம்புக்காரி சிருத வந்து சொன்ன விஷயம்தான் எல்லாத்துக்கும் காரணம்.’’

‘‘அப்படிச் சொல்லு. கிழக்குக் கரையில இருக்கிற கவுரி விஷயம்... அப்படித்தானே?’’

‘‘ஆமாம்மா....’’

‘‘லோலாயியா சுத்திக்கிட்டு இருக்குற பொம்பளைங்ககூட உறவு வச்சிருக்குற ஆம்பளைங்க வீட்டுல இதுதான் கதை. பொம்பளைங்க இப்படி ஒண்ணு சேர்ந்து நின்னா அவன் என்ன செய்வான்?’’

‘‘ஆம்பளைங்களைப் பத்தி என்னடி? அவங்களுக்கு எவ்வளோ பிரச்சினைகள்... ஒழுங்கா இருக்க வேண்டியது பொம்பளைங்க தான்டி...’’

‘‘நீ சொல்றது சரிதாம்மா...’’

மெதுவான குரலில் சொன்னாள் சுமதி அக்கா. அது சரியாக பாட்டியின் காதில் விழவில்லை. சுமதி அக்கா மணிக்குட்டனை இறுக அணைத்துக்கொண்டு கட்டிலில் படுத்தாள். அக்காவின் மார்பிலிருந்து வந்த மணத்தை அனுபவித்தவாறு அவன் உறங்கினான்.

5

காலப்போக்கில் தன்னுடைய வீட்டைவிட சுமதி அக்காவின் வீடுதான் அவனுக்கு மிகவும் நெருக்கம் என்று ஆகிவிட்டது. அவனுடைய தாய் எப்போது பார்த்தாலும் புலம்பிக்கொண்டே இருந்தாள். யாருடனும் அவள் ஒரு வார்த்தைகூட பேசுவதில்லை. யாராவது ஏதாவது கேட்டால் அந்தக்கணமே அவளுக்குக் கோபம் வந்துவிடும். அதனால் வீட்டின் முழுப் பொறுப்பும் பெரிய அக்காவின் மீது விழுந்துவிட்டது.

நேற்றுவரை தன் தாயைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்த பெரிய அக்காவால் வீட்டை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு திறமை இருக்கிறதா என்ன? இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது. பள்ளிக்கூடத்தில் முதல் மணி அடித்ததும் அவன் கெஞ்சினான்.

‘‘ஏதாவது சாப்பிட தாங்க அக்கா. முதல் மணி அடிச்சிட்டாங்க...’’

அப்போதுதான் மரவள்ளிக் கிழங்கோ, கஞ்சியோ அடுப்பில் வெந்து கொண்டிருக்கும். பச்சை சுள்ளி விறகை அடுப்பிற்குள் போட்டு தீயை ஊதியதால் புகைந்துபோன கண்களுடன் கோபமடையும் பெரிய அக்கா அவனைப் பார்த்துக் கூறுவாள்.

‘‘டேய்... நீ ஒழுங்கா போறியா இல்லியா? என் உடம்பே ஒரு மாதிரி ஆகிப் போச்சுடா.’’

‘‘அப்படின்னா நான் இன்னைக்கு பள்ளிக்கூடம் போறதா இல்ல...’’

‘‘சரி... போக வேண்டாம்.’’

அவன் அழுவான். கையிலிருந்த புத்தகத்தை வீசி எறிவான். எது நடந்தாலும் அவனுடைய தாய்க்கு அதைப்பற்றி சிறிதுகூட கவலையே இல்லை. தாடையில் கையை ஊன்றியவாறு தூரத்தில் எங்கோ பார்த்தவாறு அவள் ஒரு சிலையைப் போல அசையாமல் உட்கார்ந்திருப்பாள். இல்லாவிட்டால் கட்டிலில் போர்வையை மூடித் தூங்குவாள். இரண்டாவது மணி அடித்ததும் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அவன் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடுவான். சாப்பிட ஏதாவது இருந்தால் சாப்பிடுவான். இல்லாவிட்டால் இல்லை. சொல்லப்போனால் ஒருநாள் கூட சரியான நேரத்திற்கு அவன் பள்ளிக்கூடம் போனதே இல்லை. சாக்கோ சார் அவனைப் பார்த்ததும் கூறுவார்.

‘‘களீக்கல் நாயருக்கு இப்பத்தான் பொழுது விடிஞ்சிருக்கு... அப்படித்தானே?’’

அதைக் கேட்டு வகுப்பிலிருக்கும் எல்லா மாணவர்களும் சிரிப்பார்கள். எந்த அளவிற்கு வெட்கக்கேடான ஒரு செயல் அது!

நாட்கள் பல இப்படியே கடந்து கொண்டிருந்தபோது, சுமதி அக்கா அவனைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போனாள். பிரச்சினைகளை மற்ற யாரும் புரிந்துகொண்டிருப்பதைவிட சுமதி அக்கா நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஆனால், தான் ஏதோ உதவி செய்கிறோம் என்ற நினைப்பு எந்த நேரத்திலும் சுமதி அக்காவிடம் இருந்ததில்லை. ‘உன் வீட்டுல சரியான நேரத்துக்கு கஞ்சி கிடைக்கலன்றதுக்காக இல்ல... எனக்குக் கூட ஒரு ஆளு இருந்தா நல்லதுன்னு நான் நினைக்கிறதுதான் காரணம்’ என்பது மாதிரி இருக்கும் அவளின் நடவடிக்கை. அவனுக்குத் தெரியாத கணக்கை அவள் சொல்லித் தருவாள். காலையில் அவனைக் குளிக்க வைத்து, காப்பியும் பலகாரமும் தந்து சரியான நேரத்திற்கு பள்ளிக் கூடத்திற்கு அனுப்பி வைப்பாள். மதிய உணவு மட்டும் அவனுடைய வீட்டைச் சேர்ந்தது. நான்கு மணிக்கு பள்ளிக்கூடம் விட்டதுதான் தாமதம், நேராக சுமதி அக்காவின் வீட்டிற்குத்தான் அவன் வருவான்.

வாழ்க்கை இந்த அளவிற்கு மகிழ்ச்சிகரமானது என்ற உண்மையே மணிக்குட்டனுக்கு சுமதி அக்காவின் வீட்டில் போய் தங்கிய பிறகுதான் தெரிய வந்தது. ஏழு சென்ட் நிலமும் அதிலிருக்கும் வீடும் மட்டும்தான் சுமதி அக்காவின் சொத்து. கணவன் போலீஸ்காரனாக இருப்பதால், அவளுக்கு வீட்டுச் செலவுக்குப் பிரச்சினையே இல்லை. போலீஸ் என்று கேட்கும்போது உண்டாகக்கூடிய பயத்தை மாற்றியது தாமு அண்ணன்தான். தாமு அண்ணனுக்குச் சிரிக்க மட்டும்தான் தெரியும். எட்டு நாட்களோ, பத்து நாட்களோ, கழித்து வீட்டிற்கு வரும் தாமு அண்ணன் வரும்போது என்னென்னவெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறான்!  பூவன் பழம், மாம்பழம், பேரீச்சம்பழம், அல்வா... ஒரு சிறு குழந்தையிடம் நடப்பதைப் போலத்தான் அவன் சுமதி அக்காவிடம் நடப்பான். ஏதாவது நகைச்சுவையாகப் பேசி அவளை அவன் சிரிக்க வைப்பான்.

சிறுவனாக இருந்தாலும் மணிக்குட்டனுக்கு எல்லா விஷயங்களும் நன்கு புரிந்தன. மகிழ்ச்சிக்கான காரணம் சொத்து அல்ல என்பதை அவன் புரிந்து கொண்டான். நூறு ஏக்கருக்குமேல் இருக்கும் புஞ்சை நிலமும் ஐம்பது ஏக்கர் நஞ்சையும், ஏழு அறைகளைக் கொண்ட வீடும் சொந்தத்தில் வைத்திருக்கும் கீழாற்றுக்கரை கிராமத்தின் ஒரு ஜமீன்தாரான களீக்கல் கோன்னக் குறுப்பின் மகனான மணிக்குட்டன், மகிழ்ச்சி என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டது ஏழு சென்ட் நிலத்தின் சொந்தக்காரியான சுமதி அக்காவின் வீட்டில் இருக்கும் போதுதான். ஓணப் பண்டிகையின்போதோ அல்லது விஷு பண்டிகையின்போதோ தவிர மற்ற நேரங்களில் நல்ல சாப்பாடு சாப்பிட்டதாக அவனுடைய ஞாபகத்திலேயே இல்லை. காலையில் கஞ்சி. அதில் சில நேரங்களில் உப்பு இருக்கும். சில நேரங்களில் உப்பு இருக்காது. பகல் நேரத்தில் அரிசிச்சோறும் மோரும். அதற்குக் கூட்டு என்று ஏதாவது இருந்தால் உண்மையிலேயே மகிழ்ச்சிதான். இரவு நேரத்தில் கஞ்சியும் சேம்புக் கூட்டும். இவ்வளவு வருடங்களாக இதை மட்டுமே சாப்பிட்டு பழகிப்போன அவன் ஆச்சரியம் மேலோங்க நினைத்துப் பார்த்தான் - ருசியுள்ள உணவையும் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்! இப்படி தன்னுடைய சொந்த வீட்டிலேயே ஒரு அன்னியனைப் போல அவன் வாழ்ந்துகொண்டிருந்த சமயத்தில்தான் அவனுடைய தந்தை வயிற்றுவலி வந்து வழியில் விழுந்து கிடந்தார்.


அய்யப்ப பக்தர்கள் மலைக்குப் போகும் காலம் அது. அய்யப்பபணிக்கர் ஆசானின் மூத்த மகன் கிருஷ்ணன் குட்டி முதல் தடவையாக மலைக்குப் போகிறான். அதற்காக இருமுடி கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கு மணிக்குட்டனும் தன் தந்தையுடன் போயிருந்தான். அவனுடைய கையில் தீப்பந்தம் இருந்தது. அவனுடைய தந்தையின் கையில் கழியும் பேனாக்கத்தியும் இருந்தன. அவர் எங்கு சென்றாலும் பேனாக்கத்தி அவரின் கையில் கட்டாயம் இருக்கும்.

வாத்து மேய்க்கும் கோசி மாப்பிள்ளையின் வீட்டு வாசலை அடைந்ததும் அவனுடைய தந்தை நின்றார். தன் இடது கையால் வயிறை இறுகப் பிடித்தார். தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் பார்த்தபோது அவர் முழுமையாக வியர்வையில் நனைந்திருந்தார். கையில் இருந்த கழியும் கத்தியும் அவரின் கையைவிட்டுக் கீழே விழுந்தன. கீழே விழுந்து விடுவோம் என்று மனதில் பட்டது காரணமாக இருக்கலாம். அவனுடைய தந்தை அவன் தோளை இறுகப் பற்றினார்.

‘‘என்னப்பா?’’

‘‘ஒண்ணுமில்ல மகனே!’’

‘ஓண்ணுமில்ல...’ என்று அவர் மிகவும் சிரமப்பட்டே சொன்னார். அவன் தோளில் இருந்த அவரின் கைகள் நீங்கின. அடுத்த நிமிடம் அவர் கீழே விழுந்தார். அவன் ‘அய்யோ’வென்று கத்தினான். கோசி மாப்பிள்ளையும் அவனுடைய மகனும் அவன் கத்தியதைப் பார்த்து ஓடி வந்தார்கள். அவர்கள் அவரை தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்தார்கள்.

வீட்டிற்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. ஆட்கள் வந்து அவரைத் தூக்கிக்கொண்டு போனார்கள்.

இரவில் ராமக்கணியார் வீட்டிற்கு வந்தார். வாயு, பித்தம், கபம் ஆகியவற்றைக் குறிக்கும் சுலோகத்தைச் சொன்னார். கஷாயம், லேகியம் ஆகியவற்றுக்கான குறிப்புகளைத் தந்தார். ஒருமாத காலம் கட்டிலை விட்டு எழுந்திருக்காமல் பத்தியம் இருக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிறிதும் எதிர்பார்க்காமல் உண்டான அந்த வீழ்ச்சி மணிக்குட்டனின் தந்தையை ஒரு புதிய ஆளாக மாற்றியது. தன்னுடைய புகழை வைத்து ஊரையே தன்னுடைய கைப்பிடிக்குள் கொண்டுவந்து விடலாம் என்ற ஆசையை அவர் துறந்தது காரணமாக இருக்கலாம். எது எப்படியோ வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியான சூழ்நிலையும் மீண்டும் உண்டானது. வீட்டில் சிறிய சிறிய விஷயங்களிலெல்லாம் அவனுடைய தந்தை அக்கறை செலுத்த ஆரம்பித்தார். அவனை தனக்கு அருகில் அழைத்து உட்கார வைத்து அவனுக்குத் தெரியாத கணக்கைச் சொல்லித் தந்தார். அவனுக்கும் அக்காவுக்கும் புதிய ஆடைகள் வாங்கித் தந்தார். சமையலறையில் சமையல் செய்வதற்கு ஓரு ஆளை நியமித்தார். உணவு விஷயம் இப்போது குறிப்பிடத்தக்க முறையில் ஒழுங்காக நடந்துகொண்டிருந்தது.

மனதளவில் முழுமையான உடன்பாடு உண்டாகவில்லையென்றாலும் அவன் தாய் அவனுடைய தந்தையை அருகிலிருந்து பார்த்துக்கொண்டாள். அவன் தந்தை தாயிடம் எப்போதும் இருப்பதைவிட அதிகமாக அன்பைக் காட்டினார். அந்த அன்பை அவனுடைய தாய் அவனுக்கும் பெரிய அக்காவிற்கும் பங்கு போட்டுத் தந்தாள். உரிய நேரத்திற்கு உணவு கொடுத்து மணிக்குட்டனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சமையல்காரி பானுமதிக்கு அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.

அவனுடைய தாயால் தந்தையைவிட்டு சிறிதுகூட விலகி நிற்பதற்கு நேரமில்லை. உரிய நேரத்திற்கு மருந்து, உணவு, நோய் வாய்ப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டு நலம் விசாரிப்பதற்காக வரும் உறவினர்களையும், ஊர்க்காரர்களையும் உபசரித்தல்... இப்படி அவளுடைய பொழுது போய்க்கொண்டிருந்தது. வீடு சிறிது நேரம் கூட அமைதியாக இருக்காது. பணிக்கர் ஆசானும் குறுப்பு மாமாவும் எந்த நேரமும் அவன் தந்தையுடனே இருப்பார்கள். புலையன்மார்களும், புலைச்சிகளும் வாசலில் எப்போதும் காத்து கிடப்பார்கள். படுக்கையில் படுத்தவாறு அவனுடைய தந்தை வயதில் மூத்த சாத்தப் புலையனை அழைத்து என்னென்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுவார். சாத்தப்புலையன் நேரத்திற்கேற்றபடி வேலைகளை மற்றவர்களைக் கொண்டு செய்வான்.

பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன் மணிக்குட்டனைத் தனக்கு அருகில் அழைத்து அவனுடைய தந்தை கூறுவார்:

‘‘தெற்கு மலைப்பக்கம் இருக்குற நிலத்தை உழுவுறதுக்கு ஆளுங்களை ஏற்பாடு பண்ணியிருக்கேன். மகனே, நீ போய் அதைக் கொஞ்சம் கவனி.’’

‘‘ஆமா... அவன் பார்த்து என்ன ஆகப் போகுது?’’

‘‘அப்படிச் சொல்லாதடி, சின்னப் பையனா இருந்தாலும் அவன் போய் பார்த்தான்னா, அதுக்குன்னு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்யும்.’’

பாதியைக் காதில் வாங்கியும் மீதியைக் காதில் வாங்காமலும் அவன் நிலத்தை நோக்கி ஓடுவான். தெற்கு மலைபக்கம் போவதென்றால் அவனுக்கு எப்போதும் சந்தோஷம்தான். வாய்க்கால் வழியே ஓடி கீழே குளக்கரையை அடைந்தால் அங்கு ஆம்பல் மலர்கள் நிறைய இருக்கும். அவற்றைப் பறிக்கலாம். அவற்றை நீரில் வீசி எறியலாம். அருகிலிருக்கும் காட்டில், காட்டுக் கோழிகளைப் பிடிப்பதைப் பார்க்கலாம். ஆம்பல் மலர்களை மாலையாக ஆக்கி கழுத்தில் அணிந்து வரப்பு வழியே சென்றால் நீர் ஒடிக்கொண்டிருக்கும் வாய்க்கால் இருக்கும். மழைக்காலத்தில் அந்த வாய்க்காலில் கழுத்து வரை நீர் இருக்கும். அந்த வாய்க்காலில் நீந்தி மேலே ஏறினால், பூந்தோட்டத்து வீடு இருக்கும். அந்த வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள் ‘ஹோய் ஹோய்’ என்று கூறியவாறு கோவிலுக்குப் போய்க் கொண்டிருக்கும். வீட்டிலுள்ள பெண்கள்... அந்த வீட்டைக் கடந்து செம்மண் சாலையில் ஏறினால் வெளி வாசலில் சிங்கங்கள் சிற்பங்களாக காவல் காத்துக் கொண்டிருக்கும் மாத்தன் மாப்பிள்ளையின் வீடு. மாத்தன் மாப்பிள்ளைக்கு சர்க்கரை நோய் வந்து அவருடைய ஒரு காலை வெட்டி எடுத்து விட்டார்கள். அவர் ஒரு நாள் காலையில் ஊன்றுகோல் உதவியுடன் மலம் கழிக்கச் சென்றபோது ‘க்லிங்’ என்றொரு ஓசை கேட்டது. என்னவென்று பார்த்தால் அவருக்கு முன்னால் ஓரு செம்பு பாத்திரம். யாருக்கும் தெரியாமல் இவர் அதை எடுத்தார். செம்பு பாத்திரம் நிறைய தங்கம். அதை வைத்துத்தான் அவர் தங்க நகை விற்கும் கடை, வங்கி, சீட்டு போடும் இடம் ஆகியவற்றைத் தொடங்கினார்.

இந்த விஷயத்தை அப்பு அண்ணன்தான் அவனிடம் சொன்னான். அப்பு அண்ணனுக்குத் தெரியாத விஷயமே இல்லை.

மாத்தன் மாப்பிள்ளையின் வீட்டைத் தாண்டி தெற்குமலை வீடு. அழகப்புலையனின் தம்பி பூவஞ்சன்தான் அங்கு வசித்துக் கொண்டிருப்பவன்.

அவன் சென்றபோது பூவஞ்சனும் மற்ற பணியாட்களும் படர்ந்து நின்றிருந்த பலா மரத்திற்குக் கீழே ஏதோ தமாஷாகப் பேசிக்கொண்டு பீடி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

‘‘இதுவரை என்ன வேலை செய்திருக்கீங்க?’’ என்றுதான் அவன் அவர்களைப் பார்த்து கேட்டிருக்க வேண்டும். அவனுடைய தந்தையாக இருந்தால் பூவஞ்சனைப் பார்த்து வாய்க்கு வந்தபடி ஏதாவது திட்டியிருப்பார். இல்லாவிட்டால் அவனை அடித்தாலும் அடித்திருப்பார்.


ஆனால், அவனைப் பார்த்து பூவஞ்சனுக்கு எந்தவித உணர்ச்சி மாறுபாடும் உண்டாகவில்லை.

‘‘தம்புரான், நீங்க எதுக்கு வந்தீங்க?’’

‘‘வேலை எப்படி நடக்குதுன்னு பார்க்குறதுக்காக வந்தேன்டா பூவஞ்சா!’’

‘‘இப்போ நீங்கதானே தம்புரான்... பார்க்கணும்...’’

அதற்குமேல் அவன் அவர்களிடம் எதுவும் பேசவில்லை. வெறுமனே பார்ப்பதற்காக வந்தது மாதிரி அவர்களிடம் காட்டிக் கொண்ட அவன் வலதுபக்கம் நடந்து அங்கிருந்த மாமரத்திலிருந்து மாங்காய்களைப் பறித்துக்கொண்டு திரும்பி நடந்தான்.

மருந்தாலும் பத்தியத்தாலும் மணிக்குட்டனின் தந்தையின் நோய் முழுமையாக குணமானது. அவனுடைய தாயின் கவனிப்பாலும் உணவின் தனித்துவத்தாலும் அவருடைய உடம்பு தேறி மேலும் அது வெளுத்தது. அவரைப் பார்த்த எல்லாரும் சொன்னார்கள்:

‘‘ராமக் கணியார் உண்மையிலேயே திறமைசாலிதான்.’’

அவர் திறமைசாலிதான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை. எவ்வளவு குணமாகாத நோய்களை ராமக்கணியார் குணமாக்கியிருக்கிறார்! அவர் ஆயுர்வேதத்தின் மறுகரையைக் கண்ட மனிதராயிற்றே! நாடி பிடித்துப் பார்த்து ஆயுளைக் கணிக்கக் கூடியவராயிற்றே அவர்!

மணிக்குட்டனின் தந்தை முதல்முறையாக வீட்டை விட்டு வெளியே வரும் நிலைக்கு வந்தபோது அவனுடைய தாய் சொன்னாள்:

‘‘பிள்ளைகளை மனசுல வச்சு ஒரு விஷயம் சொல்றேன். எனக்கு சொத்தோ பணமோ எதுவும் வேண்டாம். எல்லாத்தையம் நான் பார்த்தாச்சு. அனுபவிச்சாச்சு. வயசும் அதிகமாயிடுச்சு. இப்போ உடம்புக்கும் சரியில்லாத நிலைமை. அதுனாலதான் சொல்றேன்- பிள்ளைகளை வருத்தப்பட வைக்காதீங்க.

எல்லாவற்றையும் நின்று கேட்ட அவனுடைய தந்தை வீட்டை விட்டு வெளியே வந்தார்.

அவர் நேராகச் சென்றது செம்மண் நிலத்திற்கு என்ற உண்மை பின்னர்தான் தெரிந்தது.

ஒன்றிரண்டு வாரங்களில் கீழே இருக்கும் கோவிலில் பூந்தோட்டத்து வீட்டுக்காரர்கள் சார்பாக திருவிழா கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் இது நடக்கக் கூடியதுதான். பப்பு அண்ணன் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓடிவந்து சொன்னார்.

‘‘கோன்னகுறுப்பு அண்ணன் கோவில் நிலத்துல வந்து சண்டை போடுறாரு. ஏதாவது பிரச்சினை வந்திடும்போல இருக்கு. வந்து அவரை அழைச்சிட்டு வாங்க.’’

அந்த நேரத்தில் மணிக்குட்டனைத் தவிர வீட்டில் வேறு யாரும் இல்லை. அவனுடைய தாய் சொன்னாள்:

‘‘மகனே, போய் என்னன்னு பார்த்து அப்பாவை அழைச்சிட்டு வாடா.’’

அவன் சென்றபோது கோவிலின் இடுப்பளவு சுவர் மீது அவனுடைய தந்தை அமர்ந்திருந்தார். அவருக்கு மிகவும் அருகில் அச்சுதக்குறுப்பு மாமா இருந்தார். அய்யப்பபணிக்கர் ஆசானும் இருந்தார். அங்கு நடக்கப் போகும் சண்டையைப் பார்த்து ரசிக்கும் எண்ணத்துடன் சுற்றிலும் சுமார் நூறு ஆட்கள் கூடியிருந்தார்கள்.

குறுப்பு மாமாதான் அவனை முதலில் பார்த்தார். கையைப் பிடித்து அவனை அவனுடைய தந்தைக்கு அருகில் அவர் அழைத்து சென்றார். அவன் தந்தையின் தலை ஒரு பக்கமாகச் சாய்ந்திருந்தது. அவன் அவருக்கு முன்னால் போய் நின்றபோது ஏதோ பெரிய ஓரு சுமையைத் தூக்குவதைப் போல அவர் தலையை உயர்த்தினார். அப்போது அவரின் கண்கள் திறந்தன.

‘‘யாருடா?’’

‘‘நான்தான்பா.’’

‘‘மகனா!’’

‘‘ஆமா...’’

‘‘என்னடா விசேஷம்?’’

‘‘அம்மா உங்களை வீட்டுக்குச் வரச்சொன்னாங்க.’’

 ‘‘யாரோட அம்மா?’’

அதைக்கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் சிரித்தார்கள்.

‘‘என்ன மச்சான் பைத்தியக்காரத்தனமா பேசுறீங்க! எழுந்திரிங்க...’’ குறுப்பு மாமா அவனுடைய தந்தையைப் பிடித்து தூக்கினார். அவனுடைய தந்தை நடந்தபோது கால் இடறியது. குறுப்பு மாமா அவரை இறுகப் பிடித்துக் கொண்டார். வேறு யாரோ உதவிக்கு வந்தபோது, குறுப்பு மாமா சொன்னார். ‘‘யாரும் பிடிக்காதீங்க. கோன்னன் மச்சானை எப்படி வீட்டுக்கு கொண்டு போகணும்னு எனக்குத் தெரியும்.’’

குறுப்பு மாமா அவனுடைய தந்தையை பலமாகப் பிடித்தவாறு நடந்தார். ஆனால், அப்படி நடப்பது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவன் உடன் வருகிறானா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவர் பின்னால் திரும்பிப் பார்த்தார். அப்போது அவருக்குக் கால் தடுமாறியது. குறுப்பு மாமா மிகவும் சிரமப்பட்டு நடையைத் தொடர்ந்தார்.

அவனுடைய தந்தையின் உடம்பில் அடர்த்தியான நீலநிறத்தில் ஒரு தடம் தெரிந்தது.

குறுப்பு மாமா கேட்டார். ‘‘இது என்ன மச்சான், உடம்புல ஒரு தடம்?’’

‘‘தடமா? என்ன தடம்?’’

‘‘நீல நிறத்துல தெரியுதே!’’

‘‘ஏதாவது கொடி உடம்புல பட்டுருக்கும்.’’

சாலிசேரி ஈப்பன் முதலாளியின் வீட்டு வாசலை அடைந்ததும் அவனுடைய தந்தை நின்றார். மணிக்குட்டனின் பக்கம் திரும்பிப் பார்த்த அவர் சொன்னார்: ‘‘நீ போடா...’’

அவன் போகத் தயங்கினான். அவர் சொன்னதைப் பொருட்படுத்த வேண்டாம் என்ற அர்த்தத்தில் குறுப்பு மாமா கண்களைச் சிமிட்டினார்.

தோள் மீது கை போட்டு நடந்தவாறு குறுப்பு மாமா சொன்னார்: ‘‘நல்லா நடங்க மாமா. வீட்டுக்குப் போயி நல்லா படுத்துத் தூங்குங்க...’’

‘‘ம்...’’

‘‘இந்த அளவுக்கு தண்ணி உள்ளே போகக் கூடாதுன்னு நான் அப்பவே சொன்னேன்ல?’’

‘‘ஆமா... மாப்ளே...?’’

‘‘என்ன மச்சான்?’’

‘‘நான் அடிப்பேன்...’’

‘‘யாரை?’’

‘‘அவனையும் அவளையும்’’

‘‘எவனையும் எவளையும்’’

அவனுடைய தந்தை சிரித்தார். அதற்கு முன்பு அவர் அப்படிச் சிரித்து அவன் பார்த்ததில்லை.

‘‘மச்சினா?’

‘‘ம்...’’

‘‘நான் உடம்பு சரியில்லாம படுத்த படுக்கையா கிடக்குறப்போ எனக்கு ஒரு கடிதம் கொடுத்தனுப்பினா... யாரு?’’

‘‘கவுரி...’’

‘‘ஆமா... என் கவுரி... உடம்புக்குச் சரியில்லாம படுத்திருக்கிறதா கேள்விப்பட்டேன். வந்து உங்களைப் பார்க்க முடியலையேன்னு மனசுல வருத்தமா இருக்குது. நான் எப்படி வருவேன்? கிருஷ்ணசுவாமி கோவில்லயும் கீழே இருக்குற கோவில்லயும் நான் உங்களுக்காக கடவுள்கிட்ட வேண்டியிருக்கேன்.

நீங்க நல்ல சுகத்தோட வர்றதை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கேன். அப்படி உடல் நலத்தோட நீங்க இருக்குறதைப் பார்த்த பிறகுதான் நான் நிம்மதியா தூங்குவேன்னு.’’

‘‘ஓஹா... அதுனால நீங்க அங்கே போனீங்களா மச்சான்?’’

‘‘ஆமா... போனேன்...’’

‘‘பிறகு?’

மணிக்குட்டனின் தந்தை மீண்டும் சிரித்தார். கால் தடுமாறிக் கீழே விழுந்தார். அவரைப் பிடித்து எழ வைத்த குறுப்பு மாமா சொன்னார்:

‘‘இங்கே பாருங்க. நேரா பார்த்து நடக்கணும்னு நான் சொன்னேன்ல...’’

‘‘பரவாயில்ல மாப்ளே...’’

‘‘சரி... சொல்லிட்டுவந்த விஷயத்தைச் சொல்லுங்க.’’

‘‘கேசவப்பிள்ளையைத் தெரியும்ல மாப்ளே? பொற்றேக்கடவுல சம்பந்தம் வச்சிருக்கவன்...’’

‘‘அவனைத் தெரியாமலா?’’

‘‘அவனோட தம்பி வாசுப்பிள்ளையைத் தெரியுமா?’’

‘‘பெரிய மீசை வச்சிருப்பானே?’’

‘‘அவனேதான். நான் போனப்போ அவ தன் தலையை அவன் மடியில வச்சு படுத்திருக்கா...’’

மது அருந்தியிருந்தாலும் மணிக்குட்டனின் தந்தை அளவிற்கு போதை இல்லாமல் நிதான நிலையிலிருந்த குறுப்பு மாமா திரும்பிப் பார்த்தார். தான் உடன் இருக்கும் விஷயம் அவனுடைய தந்தையின் ஞாபகத்தில் இல்லை.


தான் அங்கு இருப்பதை மறைப்பதற்கும் விஷயத்தை மாற்றுவதற்கும் குறுப்பு மாமா சொன்னார்:

‘‘அந்த விஷயத்தை மறந்திடுங்க மச்சான்.’’

‘‘அப்படி மறக்க முடியாது. ‘நீ யார்டா?ன்னு அந்த தேவிடியா மகன் என்னைப் பார்த்து கேட்டான்.’’

‘‘நாம அவன்கிட்ட பதிலுக்கு பதில் வச்சிக்குவோம். மச்சான், இப்போ நடங்க...’’

‘‘கேட்கணும்...’’

‘‘கேட்கலாம்...’’

‘‘மாப்ளே... நீ எப்பவும் என்கூட இருக்கணும்...’’

‘‘கட்டாயம் இருப்பேன்.’’

வீட்டை அடைந்தபோது கண்ணீர் வழிய மணிக்குட்டனின் தாயும் பெரிய அக்காவும் சுமதி அக்காவும் அவனையும் அவனுடைய தந்தையையும் எதிர்பார்த்து வாசலில் நின்றிருந்தார்கள்.

6

காலையில் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பொழுது கிழக்குப் பக்கம் ராமன் நாயரின் தோசைக் கடைக்கு முன்னால் நிறைய ஆட்கள் கூடியிருந்தார்கள். அப்பு அண்ணனும் அங்கு இருந்தான். மணிக்குட்டனைப் பார்த்ததும் பேசிக் கொண்டிருந்தவர்கள் தங்களின் பேச்சை நிறுத்தினார்கள்.

ராமன் நாயர் சொன்னார்: ‘‘ம்... உப்பு தின்னவன் தண்ணி குடிச்சிதான் ஆகணும்.’’

மோர் வியாபாரம் செய்யும் பரமக்குறுப்பு, ‘‘எது எப்படியோ அவரோட நல்ல நேரம்னுதான் சொல்லணும். அவருக்கு எதிரா ஒரு ஆளாவது ஏதாவது பேசணுமே.’’ என்றான்.

‘‘காலம் எப்பவும் ஒரே மாதிரி இருக்காதுடா குறுப்பு !’’

‘‘நீங்க சொல்றது சரிதான்.’’

‘‘என்ன இருந்தாலும் அது சர்க்கார் சொத்துத் தானே ? அது எல்லாருக்கும் சொந்தம்தானே ? ஒரே ஒரு ஆளு தனக்கு அதைச் சொந்தமா வச்சிக்கணும்னு நினைச்சா, இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும்...’’

அதைக்கேட்டு அங்கு கூடி நின்றவர்கள் சிரித்தார்கள். எல்லாரின் பார்வையும் மணிக்குட்டனின் முகத்தை நோக்கி இருந்தன. அவர்களின் பார்வையே ஒரு மாதிரி இருந்தது. அவர்களின் அந்தப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக அவன் அப்பு அண்ணனின் முகத்தைப் பார்த்தான். அப்பு அண்ணன் அவனுக்கு அருகில் வந்து தோளில் கை வைத்தவாறு சொன்னான் : ‘‘வா மணிக்குட்டா... நாம போகலாம்.’’

சிறிது தூரம் நடந்ததும் அப்பு அண்ணன் சொன்னான் : ‘‘உன் அப்பாவைப் பத்தித்தான்டா அவங்க பேசுறாங்க.’’

அவன் அப்பு அண்ணனைப் பார்த்தான். ‘கடவுளே ! இதற்குமேல் கவலை தரக்கூடிய விஷயத்தை அப்பு அண்ணன் சொல்லாமல் இருக்க வேண்டும்’ என்று அவன் நினைத்தான்.

‘‘நேற்று உன் அப்பா அந்த வாசுப்பிள்ளை கூட சண்டைக்குப் போயிட்டார்.’’

அவன் பரிதாபமாக அப்பு அண்ணனைப் பார்த்தான்.

‘‘அது பொய் அப்பு அண்ணே. அப்படி ஒரு விஷயம் நடந்தாகவே அப்பா குறும்பு மாமாக்கிட்ட சொல்லலை.’’

‘‘அடி உதை வாங்கின விஷயத்தை யாராவது வெளியே சொல்வாங்களாடா மடையா...’’

அவன் மனதிற்குள் வேண்டினான். - அப்பு அண்ணன் இதற்குமேல் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசாமல் இருக்க வேண்டும் ! அதற்காக அவன் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றினான்.

‘‘செட்டிக்குளக்கரை திருவிழாவுக்கு தேரும் குதிரையும் பார்க்கப் போறப்போ அப்பு அண்ணே, நீங்க மறக்காம என்னையும் கூட்டிட்டுப் போகணும்...’’

ஆனால், அப்பு அண்ணன் அதற்குப் பிறகு அதே விஷயத்தைப் பற்றித்தான் பேசினான்.

‘‘நீ சர்க்கார் கவுரியைப் பார்த்திருக்கியா ?’’

‘‘ம்...’’

‘‘சரியான சரக்கு... நான் சொல்றது சரிதானே ?’’

அய்யோ... அப்பு அண்ணன் என்னவெல்லாம் சொல்கிறான் !

‘‘மணிக்குட்டா...’’

‘‘ம்...’’

‘‘நான் நேற்று ஒரு விஷயத்தைப் பார்த்தேன்டா...’’

‘‘என்ன ?’’

‘‘நானும் சாமுவேல்குட்டியும் எங்க வடக்குப் பக்கமிருந்த நிலத்துல மரவள்ளிக்கிழங்கு பிடுங்கலாம்னு போனோம். அப்போ அங்கே பட்டாளம் ஜானகி இருக்காள்ல... அவளும் கம்பெனி படகு ஓட்டுற நாணப்பனும்...’’

வேண்டாம். கெட்ட விஷயம். அப்பு அண்ணனுக்கு இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றி பேசுவதற்கு சிறிதுகூட வெட்கம் கிடையாது.

‘‘இந்த மாதிரி விஷயத்தை என்கிட்ட சொல்ல வேண்டாம். நான¢ அம்மாகிட்ட சொல்லுவேன்.’’

அப்பு அண்ணன் அதைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்தான்.

‘‘நீ ஒரு சரியான முட்டாள்டா...’’

மணிக்குட்டன் முன்னால் வேகமாக ஓடினான். பள்ளிக்கூட வாசலை அவன் அடையும்போது, அங்கு கூட்டமாக நின்றிருந்தார்கள். எல்லாரும் அவனுடைய விரோதிகள். ஜார்ஜ் அவனைப் பார்த்துக் கேட்டான் :

‘‘உன் அப்பாவை நல்லா அடிச்சு உதைச்சிட்டாங்களாமே ?’’

குட்டனின் மகன் ராகவன் கேட்டான் : ‘‘களீக்கல் குறுப்பு அய்யாவே பெரிய அடிதடிக்காரரு. அவரோட அடியெல்லாம் எங்கே போச்சு ?’’

‘‘என்ன இருந்தாலும் குறுப்பு குறுப்புதான்...’’

‘‘கருங்குரங்கை சூப் வச்சு குடிக்கச் சொல்லுடா...’’

‘‘சர்க்கார் கவுரிதான் இவன் அப்பாவை உதைச்சது.’’

‘‘உனக்கும் அடி இருக்கு !’’

கடைசியில் அவன் அப்பு அண்ணனைத் தேடி வந்தான். அப்பு அண்ணனின் குழுவில் தைரியசாலியான ஆட்கள் இருக்கிறார்கள்.

‘‘எவன்டா மணிக்குட்டனைப் பார்த்து கிண்டல் பண்ணினது ? தையரிம் இருந்தா வாடா...’’

அவ்வளவுதான்... எல்லாரும் இறங்கி விட்டார்கள். மதியம் பள்ளிக்கூடம் விட்டதும் யாரையும் எதிர்பார்க்காமல் அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

வீட்டிற்குச் சென்றால் அங்கு ஒரு பெரிய பெண்கள் கூட்டமே இருந்தது. அம்மா, பெரிய அக்கா, சுமதி அக்கா, பால்காரி நாணியம்மா, அவளின் தோழி சரஸம்மா... நாணியம்மா சொன்னாள் :

‘‘அடி உதை வாங்கினதுனால அய்யா இரத்த வாந்தி எடுத்தார்னு எல்லாரும் பேசிக்கிறாங்க...’’

‘‘வாய்க்கு வந்தபடி பேசாத நாணியம்மா’’ - சுமதி அக்கா சொன்னாள்.

‘‘என் சுமதி, தேவையில்லாம என்னைப் பார்த்து ஏன் கோபப்படுறே ? ஒவ்வொருத்தரும் சொல்ற விஷயத்தைத்தான் நான் சொல்றேன்.’’

‘‘சொல்லுறவங்க சொல்லிட்டுப் போகட்டும். உனக்கெங்கே அறிவு போச்சு ?’’

‘‘இதுதான் பிரச்சினையே. மத்தவங்க சொல்றதுக்கு நான் என்ன செய்ய முடியும் ? எனக்கென்ன அய்யா கூடவும் இவங்க கூடவும் விரோதமா ? இந்த விஷயம் தெரிஞ்சவுடனே என் புருஷன் என்ன சொன்னார் தெரியுமா ? அந்த வாசுப்பிள்ளைக்கு நாலு உதை கொடுத்தாத்தான் சரியா வரும்னு சொன்னார். அப்படி ஏதாவது நடக்கக்கூடாதது நடந்திருந்தா ? அப்படி செய்யக்கூடிய ஆளுதான் அவரு...’’

இவ்வளவு நடந்தபிறகும் மணிக்குட்டனின் தாய் ஒரு வார்த்தையாவது பேசவேண்டுமே ! அவள் தாடையில் கைவைத்து எங்கோ தூரத்தில் பார்த்தவண்ணம் உட்கார்ந்திருந்தாள்.

சரஸம்மா சொன்னாள் : ‘‘சரி நீ வா... நாம நம்ம வேலையைப் பார்ப்போம்.’’

நாணியம்மாவும் சரஸம்மாவும் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்கள்.

சுமதி அக்கா பெரிய அக்காவைப் பார்த்துச் சொன்னாள் :

‘‘மணிக்குட்டன் வந்ததைப் பார்த்தே இல்ல பார்கவி ? அவனுக்கு சாதம் போட்டுக் கொடு.’’


பெரிய அக்கா மனமே இல்லாமல் எழுந்து வந்தாள். மணிக்குட்டன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது, சுமதி அக்கா அவனுடைய தாயைத் தேற்றுவது காதில் விழுந்தது.

‘‘தேவையில்லாததையெல்லாம் நினைச்சு வருத்தப்படக்கூடாது. அமைதியா இருக்கணும். பெரியம்மா, நீங்க யாருக்கும் எந்தக் கெடுதலும் இதுவரை செய்யலையே !’’

‘‘நான் இனிமேல் எவ்வளவு காலம் வாழப்போறேன் சுமதி ? என் பிள்ளைங்க இந்த ஊர்ல வாழணுமேன்றதை நினைச்சுத்தான் நான் வருத்தப்படுறேன்.’’

‘‘அவங்க நல்லாவே இருப்பாங்க பெரியம்மா. நீங்க அதைப்பற்றி நினைச்சு கொஞ்சம்கூட கவலைப்படக்கூடாது.’’

சுமதி அக்காவின் வார்த்தைகளைக் கேட்ட மணிக்குட்டனின் தாய் இந்த முறை அழ மட்டும் செய்தாள். தேவையில்லாமல் ஆர்ப்பாட்டம் எதுவும் பண்ணவில்லை. அவன் தந்தையைப் பார்த்து கோபப்படவில்லை. அன்று இரவு அவனுடைய தந்தை வந்தபோது, அவருடன் நான்கைந்து ஆட்கள் இருந்தார்கள். அய்யப்ப பணிக்கர் ஆசான், அச்சுதக்குறுப்பு மாமா, அப்பு அண்ணனின் தந்தை, சுமதி அக்காவின் கணவர் தாமு அண்ணன்... அதற்குப் பிறகு அவனுக்கு யாரென்று தெரியாத இரண்டு நபர்கள்... வந்தவர்கள் கட்டிலிலும் நாற்காலியிலும் உட்கார்ந்தார்கள். அப்பு அண்ணனின் தந்தை மணிக்குட்டனைப் பிடித்து அருகில்நிற்க வைத்து தடவியவாறு சொன்னார் :

‘‘எப்படிப் படிக்குற ?’’

பிறகு அவனுடைய தாய் கேட்கும்வண்ணம் உரத்த குரலில் ‘‘என்ன... நாலஞ்சு ஆம்பளைங்க வீட்டுக்கு வந்திருக்குறப்போ இந்தப் பக்கம் வராம இருந்தா எப்படி ? காப்பியோ சோறோ தர வேண்டாமா ?’’ என்றார்.

அவனுடைய தாய் மெதுவாக எழுந்து முன்னறையை நோக்கி நடந்து வந்தாள். அறையின் ஒரு மூலையில் அவள் நின்றாள்.

தாமு அண்ணன் சொன்னார் :

‘‘ இங்கே சில விஷயங்கள் நடந்ததை நான் கேள்விப்பட்டேன். அதுக்கு என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும். வந்தது போல விஷயங்கள் போகறதுக்கான வழியை நான் செய்வேன். பெரியம்மா, நீங்க தைரியமா இருங்க...’’

அப்பு அண்ணனின் தந்தை சொன்னார் :

‘‘தைரியமா இருங்க. நாங்க போலீஸ் ஸ்டேஷனுக்குப் போயி புகார் எழுதிக்கொடுத்துட்டு வந்திருக்கோம்.’’

மணிக்குட்டனின் தாய் கேட்டாள் : ‘‘என்ன புகார் ?’’

‘‘அநியாயமா முன்கூட்டியே திட்டமிட்டு ஆளைத்தாக்க வந்ததா...’’

‘‘தாக்க வரலியே ! இவர்தானே அங்கே போயிருக்காரு !’’

‘‘அப்படிச் சொல்லக்கூடாது. ஒரு விஷயம் நடந்தா, வீட்டிலுள்ளவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து நிக்கணும்.’’

அச்சுதக் குறுப்பு மாமா சொன்னார் : ‘‘உள்ள விஷயத்தை முழுசா திறந்து சொல்றதுதான் சரி. மச்சானுக்கு இனிமேல் ஆயுள் உள்ள காலம்வரை செம்மண் நிலத்துல இருக்குற கவுரிகூட எந்தவிதமான உறவும் கட்டாயம் இருக்காது.’’

‘‘அய்யப்ப பணிக்கார் ஆசான் சொன்னார் :’’

‘‘அது மட்டுமில்ல... அவளை இந்தக் கீழாற்றுக்கரை பகுதியில இருந்தே விரட்டுற விஷயத்¬¬ப் பற்றியும் நாங்க யோசிச்சு வச்சிருக்கோம்.’’

‘‘சரி... மற்ற விஷயங்களையும் சொல்லு...’’ - அப்பு அண்ணனின் தந்தை சொன்னார்.

அச்சுதக்குறுப்பு மாமா, ‘‘சொல்றேன். வடக்குக் கரைப்பக்கம் இருக்குற ஐம்பது சென்ட் நிலத்தை மச்சான் கவுரிக்கு தன் விருப்பப்படி எழுதிக் கொடுத்திருக்கார். அந்த விஷயம் இங்கே உள்ளவங்க யாருக்கும் தெரியாது. தேவன் விவசாயம் செய்யிற இடம் கவுரிக்கு எழுதிக் கொடுத்ததுதான்...’’

ஒரு கற்பனைக் கதையைக் கேட்பதைப் போல கண்களைத் திறந்து கொண்டு கேட்டாள். மணிக்குட்டனின் தாய்.

‘‘அதைப்பற்றி நாம கவலைப்பட வேண்டாம். அடுத்தமுறை நாமதான் அங்கே விவசாயம் செய்யப்போறோம். என்ன தாமு ?’’

தாமு அண்ணன் உடனே அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. காரணம் - தான் ஒரு போலீஸ்காரன் என்பதும் இந்த விஷயத்தில் சட்டம் கவுரியம்மாவிற்கும் சாதகமாயிருக்கிறது என்ற உண்மையை அவன் அறிந்திருந்ததுமே.

மணிக்குட்டனின் தந்தை சொன்னார் : ‘‘இந்த விஷயத்தைப் பற்றி முடிவு செய்ய வேண்டியவன் நான். நான்கு நாட்கள் கழிச்சு நான் அங்கே காளையைப் பூட்டி உழப்போறேன் !’’

7

ணிக்குட்டனின் தந்தையின் வயிற்றில் மீண்டும் வலி உண்டானது. முன்பு வந்த அளவிற்கு மிகவும் பலமாக அல்ல. உடல் அலைச்சலால் அந்த வலி என்றார் ராமக்கணியார்.

அது யாருமே சாதாரணமாக சொல்லக்கூடிய விஷயம்தானே ? இந்த நோயுடன் இரவு பகல் பாராமல் இங்குமங்குமாய் அலைந்து கொண்டிருந்தார் அவனுடைய தந்தை.  மருந்தும் பத்தியமும் மீண்டும் ஆரம்பமானாலும் இந்தமுறை நோயாளியாக அவர் படுக்கையில் படுக்கவில்லை. உடம்பில் இருக்கும் நோயை முழுமையாக மறந்து விட்டு நடந்து அலைந்து திரியவேண்டிய அளவிற்கு அவருக்கு வேலைகள் இருந்தன. ஒரு பக்கம் வாசுப்பிள்ளையுடன் அவர் கொண்ட சண்டை. இன்னொரு பக்கம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு விவசாயத்தில் இழப்பும் நஷ்டங்களும்... வேறொரு பக்கத்தில் அந்தச் சமயத்தில் உண்டான வெள்ளப் பெருக்கு புஞ்சை முழுவதையும் அழித்து விட்டுத்தான் மறுவேலை பார்த்தது. பந்தளத்துக்காரன் கீவர்கீஸ் மாப்பிள்ளைக்கு சாராயம் குத்தகை எடுப்பதற்காகக் கடனாகத் தந்த இரண்டாயிரம் ரூபாய் அவருக்குக் கிடைக்காமலே போய்விட்டது.

முன்புகூட அவருடன் கொடுக்கல் வாங்கல் வைத்திருந்த ஒரு மனிதர்தான் கீவர்கீஸ் மாப்பிள்ளை நம்பிக்கையான ஆள். ஆனால், வெள்ளம்போல வந்து வெள்ளம் போல போய்விட்டது என்ற மாதிரிதான் அவர் விஷயத்தில் நடந்தது. பணம் கொடுத்தற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. அப்படியே ஆதாரம் இருந்தாலும், பணத்தை ஈடு செய்தவதற்கான சொத்து அவரிடம் இல்லை என்றாகிவிட்டது.

இப்படி பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான் வாசுதேவன் பிள்ளையுடன் கொண்ட தகராறு நடக்கிறது. செம்மண் நிலத்தில் கவுரிக்கு மணிக்குட்டனின் தந்தை விருப்பப்பட்டுத் தந்த நிலத்தை மீண்டும் திரும்ப எடுத்துக் கொள்ளப் போகிறார் என்ற செய்தி ஊர் முழுக்க பரவியது. நிலத்தை எடுப்பதற்கு ஆதரவாக சிலரும், அதை தருவதற்கு எதிராக சிலரும் அந்த ஊரில் இருக்கவே செய்தார்கள். அதற்காக அந்த ஊர் மக்கள் மத்தியில் பலவித விவாதங்கள் நடந்தன. அதற்கான நாள் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. தனக்கு உதவியாக இருப்பார்களென்று நம்பிய பலரும் தேவையான நேரத்திற்கு உடன் இருப்பார்களா என்ற சந்தேகம் அவனுடைய தந்தைக்கே இருந்தது. போதாதென்று எப்போதும் உடனிருந்த வயிற்றுவலி வேறு அவரைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருந்தது. வாசுப்பிள்ளை ஒரு முரடன், இரக்கமற்ற குணத்தைக் கொண்டவன் என்ற உண்மையையும் அவர் நன்கு தெரிந்து வைத்திருந்தார்.

தாமு அண்ணன் மீண்டும் வீட்டிற்கு வந்தார்.


அந்தச் சமயம் மணிக்குட்டனின் தந்தை வீட்டில் இல்லை. அவன் தாயிடம் எல்லா விஷயங்களையும் அவர் கேட்டறிந்தார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழந்த அவர் சொன்னார் : ‘‘பொருளைப் பறிக்கிற விஷயத்தைப் பொறுத்தவரை அதற்கு ஆதரவா நான் இருக்கமாட்டேன் பெரியம்மா. ஏன்னு கேட்டீங்கன்னா நாம நினைக்கிற அளவுக்கு வாசுப்பிள்ளை மோசமான ஆளு இல்ல. அடிபிடி விஷயத்தைப் பார்க்க வேண்டியவங்களைப் பார்த்து அவரால ஒண்ணுமே இல்லாம ஆக்க முடிஞ்சிச்சா இல்லையா ? அது மட்டுமில்ல... பெரியப்பாகூட இருக்குற ஆளுங்க மேல எனக்கு அந்த அளவுக்கு நம்பிக்கை இல்ல...’’

‘‘அதைத்தான் நானும் சொல்றேன். நடந்தது நடந்திருச்சு. இனிமேல் நடக்கப்போற விஷயங்களையாவது கவனமா பார்த்துக்க வேண்டாமா ? ஆனால், சொன்னா கேட்டாத்தானே ? நான் என்ன சொன்னாலும் அவர் கேக்குறது இல்ல.’’

‘‘அப்படி கேக்காம இருக்குறது நல்லது இல்ல.’’

அன்று மாலையில் மணிக்குட்டனின் தந்தை வீட்டிற்கு வந்தது வயிற்றில் ஒரு சிறு வலியுடன்தான். இப்போதெல்லாம் உடம்புக்கு ஏதாவது வந்தால்கூட அவர் அவன் தாயிடம் எதுவும் கூறுவதேயில்லை. யாரும் பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் அரிஷ்டத்தை எடுத்து அவர் குடிப்பார். எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என்று அவன் தாய்கூட அப்போது நினைப்பாள். சொல்லப் போனால் அவன் தந்தையிடம் அவள் பேசுவதேயில்லை. இருந்தாலும் தாமு அண்ணன் வந்து சொல்லவேண்டிய விஷயத்தைச் சொன்னார். அவ்வளவுதான் - ஒரு ஆட்டமே போட்டுவிட்டார் அவனுடைய தந்தை.

‘‘நான் எந்த அளவுக்கு கேவலமானவனாடி ? உன் வேலையைப் பார்த்துக்கிட்டு போறியா இல்லியா ?’’

அதற்குப் பிறகு அவன் தாய் வாயே திறக்கவில்லை.

ஒருநாள் இரவு நேரத்தில் வீட்டில் ஒரு கூட்டு ஆலோசனை நடைபெற்றது. அது ஒரு விருச்சிக மாதத்தின் முழு இருள் நிறைந்த இரவு. கையில் பந்தமோ, வெளிச்சமோ எதுவும் இல்லாமல் மணிக்குட்டனின் தந்தையுடன் சுமார் பத்து ஆட்கள் வீட்டிற்குள் வந்தார்கள். பலப்பிரயோகம் என்று வரும்பட்சம், அதைச் சந்திப்பதற்காக கூலி தந்து கொண்டுவரப்பட்ட தடியர்கள் நான்கு பேர் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மற்றவர்கள் அவன் தந்தையின் நண்பர்கள். பானை நிறைய கள்ளு குடிப்பதற்கான ஏற்பாடுகளையும் அவர்கள் முறைப்படி செய்திருந்தார்கள். இரவு முழுவதும் வட்டமாக உட்கார்ந்து கொண்டு அவர்கள் கள்ளு குடித்தார்கள். தங்களின் வீர சாகஸங்களைக் கதைகளாகக் கூறிக் கொண்டிருந்தார்கள். சவால் விட்டார்கள்.

மறுநாள் காலையில் வரிசையாக நிலத்தில் ஏர் பூட்டுவதற்காக புறப்பட்டார்கள். புறப்படும்பொழுது மணிக்குட்டனின் தாய் இடையில் புகுந்து அவர்களைத் தடுத்தாள். காலைப் பிடித்துக் கொண்டு அழுதாள். ஆனால், அவன் தந்தை வைத்த காலைப் பின் எடுப்பதாக இல்லை.

சிறிது நேரம் சென்றதும் மணிக்குட்டனைக் கையில் பிடித்துக் கொண்டு அவனுடைய தாயும் அவர்களுக்குப் பின்னால் புறப்பட்டாள். பெரிய அக்காவும் சுமதி அக்காவும் அவர்களுடன் வருவதாகச் சொன்னார்கள். ஆனால், அவன் தாய் வேண்டாம் என்று அவர்களைத் தடுத்துவிட்டாள். எல்லாம் ஆச்சரியப்படும் வகையில் நடந்தது என்று கூறுவதே சரியானது. அவனுடைய தந்தையும் மற்ற ஆட்களும் சென்றபோது, வாசுப்பிள்ளை நிலத்தை உழுது கொண்டிருந்தார். கவுரியம்மா வரப்பில் நின்றிருந்தாள். ஊரைச்சேர்ந்த சில இளைஞர்கள் அவர்களுக்கு உதவியாக வந்திருந்தார்கள். நடக்கும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக வேறு சிலரும் வந்திருந்தனர்.

அவனுடைய தந்தை தன்னுடைய நண்பர்களைப் பார்த்தார். தன்னுடன் அழைத்து வந்திருந்த ஆட்களைப் பார்த்தார். அவர்கள் அவரைப் பார்த்தார்கள். என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யாருக்கும் ஒரு தீர்மானம் இல்லாமலிருந்தது. எது எப்படியோ இரண்டில் ஒன்றைத் தீர்மானித்தே ஆகவேண்டும். இவ்வளவு தூரம் வந்துவிட்டு பிரச்சினையைச் சந்திக்காமல் போவதற்கும் அழுக்கு நீரில் மூழ்கிச் சாவதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது ?

அங்கு கூடி நின்றிருந்தவர்கள் எல்லாரும் கேட்கக்கூடிய விதத்தில் மணிக்குட்டனின் தந்தை உரத்த குரலில் சொன்னார் : ‘‘காளையை அவிழ்த்து விடுடா...’’

அதைக்கேட்டு வாசுதேவன் பிள்ளை நின்றார். வரப்பில் நின்றிருந்த ஒரு இளைஞனை அழைத்து கலப்பையை அவன் கையில் தந்தார். பிறகு குஸ்திக்காரரைப் போல மார்பை நிமிர்த்திக் கொண்டு அவர் சொன்னார் : ‘‘காளையை அவிழ்த்து விடுறேன் - ரெண்டு தடவை உழுதுட்டு...’’

கவுரியம்மா இப்போது நிலத்தில் இறங்கினாள்.

‘‘அண்ணே... நீங்க சும்மா இருங்க. நான்தான்டா காளையை ஏர்ல பூட்டினேன். என் நிலத்தை நான் உழுவுறேன். அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை ?’’

உருவம் இருக்கட்டும். அந்தக் குரல் தனக்கு மிகவும் பழக்கமான குரல் என்பதை மணிக்குட்டன் உணர்ந்தான். காளிப்புலையனுடன் தான் போயிருந்தபோது தான் கண்ட கவுரியம்மா அல்ல இது என்பதாகேவ நினைத்தான் மணிக்குட்டன்.

அவனுடைய தந்தை இடது பக்கமும் வலது பக்கமும் பார்த்தார். அச்சுதக் குறுப்பு மாமாவைக் காணோம். அய்யப்ப பணிக்கர் ஆசானையும் காணவில்லை. கள்ளும் சோறும் வாங்கித் தந்து அழைத்துக் கொண்டு வந்திருந்தவர்கள் மட்டும் சாப்பிட்ட சோற்றுக்கு நன்றி காட்டும் விதத்தில் தயாராக அவருக்கருகில் நின்றிருந்தார்கள்.

கடைசி முயற்சி என்ற வகையில் மணிக்குட்டனின்¢ தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு அவனுடைய தாய் கெஞ்சினாள். ‘‘நடந்து முடிஞ்சது போகட்டும். வாங்க. நாம வீட்டுக்குப் போகலாம்’’ என்றாள் அவள். ஆனால், அவர் கையை உதற அடுத்த நிமிடம் அவனுடைய தாய் தூரத்தில் போய் விழுந்தாள். அப்போது தன்னுடைய தந்தையின் முகத்தைப் பார்ப்பதற்கே அவனுக்குப் பயமாக இருந்தது.

அவனுடைய தந்தை நிலத்தில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து மீதி நான்கு பேரும் இறங்கினார்கள்.

கவுரியம்மாவுக்கு நேராக போய் நின்று கொண்டு அவனுடைய தந்தை கேட்டார் :

‘‘என்னடி சொன்னே ? உன் நிலமா ?’’

‘‘ஆமாம்... அப்படித்தான் சொன்னேன்.’’

அவனுடைய தந்தை முன்னோக்கி வந்தபோது, வாசுப்பிள்ளை இடையில் நுழைந்து நின்றார் - சவால் விடுவதைப் போல.

தொடர்ந்து அவர் கேட்டார் : ‘‘உங்களுக்கு இப்போ என்ன வேணும் ? அதைச் சொல்லுங்க.’’

‘‘நீ தள்ளி நில்லுடா. உன்கிட்ட யாரும் எதையும் கேட்கல.’’

‘‘நீ என் புருஷனாடா கிழவா ?’’ என்றாள் அவள்.

அதைக்கேட்டு வரப்பில் நின்றிருந்த மக்கள் வாய்விட்டு கூவினார்கள். மணிக்குட்டனின் தந்தை வாசுப்பிள்ளையைப் பலம் கொண்டு தள்ளினார். அவர் பின்னோக்கி சாய்ந்தாலும், ஒரு குஸ்திக்காரனைப் போல சமாளித்துக் கொண்டு நின்றார்.


தொடர்ந்து அவர் கையைச் சுருட்டியவாறு முன்னோக்கிப் பாய்ந்து வந்தார். மணிக்குட்டனின் தந்தை இலேசாக நகர்ந்தார். அடுத்தநிமிடம் வாசுப் பிள்ளை தலைக்குப்புற கீழே விழுந்தார். ஆனால், உடனே சுதாரித்து எழுந்து நின்றார்.

அதற்குப் பிறகு எல்லாமே ஒரு கனவில் நடப்பதைப் போல நடந்தது. ஒரே ஒரு விஷயம் மட்டும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. மணிக்குட்டனின் தந்தை கொடுத்த ஒரு அடியில் வாசுப்பிள்ளை நான்கு முறை குட்டிக்கரணம் அடித்துக் கீழே விழுந்தார். அவர் எழுந்து வந்தபிறகு, மீண்டும் அவரை மணிக்குட்டனின் தந்தை அடித்துக் கீழே வீழ்த்தினார். அவர் மடிக்குள்ளிருந்து எடுத்து விரித்த பேனாக் கத்தியை உடனிருந்த ஒருவன் தட்டிப் பறித்தான். முழங்காலை மடக்கிக் கொண்டு வயிற்றைப் பிடித்தவாறு மணிக்குட்டனின் தந்தை அவருடைய கழுத்தை எட்டிப்பிடித்த போது, அவர் பரிதாபமாக அலறினார். அந்த அபயக் குரலைக் கேட்டு, கவுரியம்மா அந்த இடத்தை விட்டு ஓடினாள். உதவிக்கு வந்திருந்த இளைஞர்களும் ஓடினார்கள்.

ஒருமுறை கிடைத்த தோல்வி அனுபவம், உயிரைவிட பெரியது மரியாதை என்ற அறிவு - இவைதான் அன்று மணிக்குட்டனின் தந்தையைக் காப்பாற்றின.

8

பெரிய காயமெதுவும் உண்டாகிவிட்டது என்பதற்காக அல்ல மணிக்குட்டனின் தந்தையை மருத்துவமனையில் சேர்த்தது. நெற்றியில் இரண்டு அங்குல நீளத்திற்கு தோல் உரிந்து போயிருந்தது. வழக்கு பலமாக இருக்க வேண்டுமென்றால் அவருக்கு உடம்பில் காயம் உண்டானது என்பதற்கான ஆதாரம் இருக்கவேண்டும்.

மருத்துவரின் அத்தாட்சிப் பத்திரம் அதற்கு வேண்டும். எது எப்படியோ இந்த முறை மணிக்குட்டனின் தந்தை தனக்கு வந்த அவமானத்தை ஒன்றுமில்லாமல் பண்ணிவிட்டார். களீக்கல் கோன்னக்குறுப்பு உயிர்ப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதர்தான் என்பதை ஊர்க்காரர்கள் புரிந்து கொண்டார்கள். குட்டனின் மகன் ராகவனைப் பார்த்தால் கட்டாயம் கேட்கவேண்டுமென்று மணிக்குட்டன் நினைத்தான்.

‘பார்த்தியாடா என் அப்பாவோட தைரியத்தை.’

அடிப்பதற்காக அழைத்துச் சென்ற நான்கு பேரில் ஒரு ஆளுக்கு மட்டுமே சொல்லிக் கொள்கிற மாதிரி உடம்பில் காயம்பட்டிருந்தது. வாசுப்பிள்ளையின் இடுப்பெலும்பில் ஒரு எலும்பு ஒடிந்து போயிருந்தது. அவருக்கு உதவிக்குவந்த நான்கு பேரையும் இனிமேல் எதற்குமே பயன்படாத அளவிற்கு ஒருவழி பண்ணிவிட்டார் மணிக்குட்டனின் தந்தை. அந்த ஐந்து பேரையும் கட்டில் மீது போட்டுக் கொண்டுதான் மருத்துவமனைக்கே எடுத்துச் சென்றார்கள்.

கிழக்கு வாசலில் இருந்த பரமக்குறுப்பு சொன்னார் :

‘‘என்ன இருந்தாலும் அவரோட பழைய உறவாச்சே ! மனம் தெளிவாகி இந்த அளவுக்குப் போட்டுத் தள்ளினது எவ்வளவு பெரிய விஷயம் !’’

எது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். அதைக்கேட்ட போது மணிக்குட்டனுக்கு அதிக அளவில் மகிழ்ச்சி உண்டானதென்னவோ உண்மை.

அச்சுதகுறுப்பு மாமாவும் அய்யப்ப பணிக்கர் ஆசானும் மணிக்குட்டனின் தந்தையைப் பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தார்கள்.

ஆசான் சொன்னார் : ‘‘நான் ஏன் அங்கே வரல தெரியுமா ? வந்திருந்தா , ரெண்டு பேரையும் அழிச்சிட்டுத்தான் வேற வேலையையே பார்த்திருப்பேன். அதுதான் என்னோட குணமே. அதுக்குப்பிறகு நமக்கு சாதகமா வழக்கு எப்படி இருக்கும்?’’

அச்சுதக்குறுப்பு மாமா சொன்னார்: ‘‘என் விஷயமும் இவரு சொன்னது மாதிரிதான் மச்சான். மன்னிக்குறதா இருந்தா பூமி அளவுக்கு மன்னிப்பேன். பிடிவாதம் பிடிச்சா அதுக்குப் பிறகு யார் சொன்னாலும் நான் கேட்கமாட்டேன்.’’

மணிக்குட்டனின் தந்தைக்கு விசிறியால் வீசி விட்டுக் கொண்டு தலைப்பக்கத்தில் அமர்ந்திருந்த அவனுடைய தாய் சொன்னாள்: ‘‘உடம்புக்குச் சரியில்லாதவர் முன்னாடி நிறைய பேசாம இருங்க. நடக்க வேண்டியது நடந்திருச்சு. எல்லாமே ஒரு பாடம்னு எடுத்துக்க வேண்டியதுதான்.’’

மருத்துவமனையில் படுத்திருக்கும்பொழுது மணிக்குட்டனின் தந்தைக்கு சற்று அதிகமாக வயற்றில் வலி உண்டானது.

அவன் தாய் சொன்னாள்: ‘‘வயிற்றில் வலி இருக்கிற விஷயத்தை நீங்க டாக்டர் கிட்ட சொல்லலாம்ல?’’

‘‘வேண்டாம்டி... ராமக்கணியாரோட சிகிச்சைத்தான் நமக்கு இருக்குல்ல? வயிற்று வலிக்கு ஆயுர்வேதம்தான் நல்லது...’’

‘‘அப்படிச்சொன்னா எப்படி? இந்த வயிற்றுவலி வந்து எவ்வளவு நாட்களாயிடுச்சு! எவ்வளவோ கஷாயமும் அரிஷ்டமும் சாப்பிட்டாச்சு. டாக்டர் பார்த்தால்தான் நோய் என்னன்னு கண்டுபிடிக்க முடியும்...’’

அதற்கு மணிக்குட்டனின் தந்தை எதுவும் பதில் சொல்லாமல் மருத்துவமனையில் முகட்டையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தார்.

அவன் தாய் சொன்னாள்: ‘‘நமக்கு இப்போ கஷ்டகாலம். எனக்கும் பார்கவிக்கும் ஏழரை சனி நடக்குது. பொண்ணுக்கு பதினேழு வயசு ஆயிடுச்சு. அவளை ஒருத்தன் கூட அனுப்பி வைக்க வேண்டாமா?’’

‘‘அதுக்கு என்னடி? அவளுக்கு என்ன சொத்துன்னு ஒண்ணும் இல்லியா?’’

‘‘சொத்து இருக்கா இல்லையான்னு யாருக்குத் தெரியும்? கடன் எவ்வளவு இருக்கு.’’

அதற்கு அவனுடைய தந்தை பதில் எதுவும் கூறவில்லை.

‘‘நம்ம சதி இறந்தப்போ ஆரம்பிச்சது கஷ்டகாலம்.’’

பெரிய அக்காவைவிட ஒருவயது இளைய சின்ன அக்கா மரணமடைந்த விஷயத்தைச் சொன்னபோது மணிக்குட்டனின் தாயின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

‘‘நீ அழாதடி, படுக்கையில் இருந்து முதல்ல எழுந்திரிக்கிறேன். அதுக்குப் பிறகு எல்லாத்துக்கும் ஒருவழி பிறக்கும்.’’

மறுநாள் காலையில் டாக்டர் வந்தபோது மணிக்குட்டனின் தாய் வயிற்றுவலியை பற்றிச் சொன்னாள். டாக்டர் சோதித்துப் பார்த்தார். எப்போதிருந்து வயிற்றுவலி இருக்கிறது என்ற விஷயத்தைக் கேட்டு தெரிந்துகொண்டார். அன்று மதியமே பெரிய டாக்டரையும் அழைத்துக் கொண்டு அவர் வந்தார். இரண்டு பேரும் சேர்ந்து மணிக்குட்டனின் தந்தையை சோதித்துப் பார்த்தார்கள். பிறகு அவன் தாயிடம் அவர்கள் கூறினார்கள். ‘‘இனிமேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியதிருக்கு. எல்லாம் முடிஞ்ச பிறகுதான் நோய் என்னன்னு எங்களால கூற முடியும்.’’

பலமுறை அவனுடைய தந்தையின் இரத்தத்தை அவர்கள் சோதித்துப் பார்த்தார்கள். மலம், சிறுநீர் ஆகியவற்றையும் சோதித்தார்கள். தயிர்போல இருந்த ஏதோவொன்றைக் குடிக்கும்படி கொடுத்த அவர்கள் வயிற்றைப் புகைப்படம் எடுத்தார்கள்.

மறுநாள் பெரிய டாக்டர் மணிக்குட்டனின் தாயை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சொன்னார்: ‘‘பெரிய நோய் வந்திருக்கு. குடல்ல புற்றுநோய்... உடனே ஆப்பரேஷன் பண்ணினாத்தான் சரியா இருக்கும்.’’

புற்றுநோய் என்றால் என்னவென்பதை மணிக்குட்டனின் தாயால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் வயிற்றில் ஆப்பரேஷன் பண்ண வேண்டும் என்று சொன்னதைக்கேட்டு அவள் அதிர்ச்சியடைந்து விட்டாள். மணிக்குட்டனின் தந்தையிடம் உடனடியாக அவள் இந்த விஷயத்தைச் சொல்லவில்லை. அப்பு அண்ணனின் தந்தையிடம் சொன்னாள். அவனுடைய தந்தையின் நண்பர்கள் கூட்டத்தில் நம்பிக்கைக்கு உரிய நபர் என்று கூறவேண்டுமானால் அப்பு அண்ணனின் தந்தைதான் என்று அவன் தாயே பொதுவாகக் கூறுவதுண்டு.


அப்பு அண்ணனின் தந்தைக்கும் அந்த நோயைப் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் மருத்துவமனையில் கம்பவுண்டராகப் பணியாற்றும் செரியன் மாப்பிள்ளையிடம் விசாரித்தார். சிறிய அளவில் தனியாக செரியன் மாப்பிள்ளை சிகிச்சை செய்யும் வேலையில் ஈடுபடுவதும் உண்டு. விஷயத்தைக் கேள்விப்பட்ட செரியன் மாப்பிள்ளை மெதுவான குரலில் என்னவோ முணுமுணுத்தவாறு தலையை ஆட்டினான்.

‘‘ஒரு நாளைக்கு முன்னாடியே ஆப்பரேஷன் செய்திடுங்க...’’

ஆப்பரேஷன் விஷயத்தை மணிக்குட்டனின் தந்தை அறிந்த போது, அவர் எந்தவித பதைபதைப்பையும் காட்டிக்கொள்ளவில்லை. தேவைப்பட்டால் செய்து கொள்ள வேண்டியது தான் என்று மட்டும் சொன்னார். ஆப்பரேஷன் செய்வதற்கான நாள் முடிவு செய்யப்பட்டது. மணிக்குட்டனின் தாய் ஆப்பரேஷன் செய்ய சம்மதித்து கையெழுத்துப் போட்டுக் கொடுத்தாள்.

ஆப்பரேஷன் செய்வதற்காக தியேட்டருக்கள் கொண்டு செல்வதற்கு முன்பு மணிக்குட்டனின் தந்தை அவனையும் பெரிய அக்காவையும் பார்க்க வேண்டுமென்று சொன்னார். அவர்கள் அருகில் சென்றதும் அழுதுகொண்டிருந்த அவன் தாயைப் பார்த்து அவர் சொன்னார்: ‘‘நீ எதைப்பற்றியும் தேவையில்லாம நினைச்சு கவலைப்பட வேண்டாம். உன் மகன் நல்ல புத்திசாலி. என்னைவிட அவன் குடும்பத்தை நல்லா பாத்துக்குவான்...’’

தொடர்ந்து அவன் மணிக்குட்டனை பாசம் மேலோங்கப் பார்த்து அவனுடைய கையைப் பிடித்து வருடினார்.

ஆப்பரேஷன் நடக்கும் நாளன்று மணிக்குட்டனின் தாய், பெரிய அக்கா தவிர அப்பு அண்ணன், அப்பு அண்ணனின் தந்தை, சுமதி அக்கா, செரியன் மாப்பிள்ளை ஆகியோருடன் ஏராளமான நண்பர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் கூடியிருந்தார்கள். அப்பு அண்ணன் மணிக்குட்டனை விட்டு சதா நேரமும் பிரியாமல் இருந்தான். அரை சக்கரத்திற்கு அப்பு அண்ணன் நிலக்கடலை வாங்கிக்கொண்டு வர, அதை அவர்கள்  இருவரும் மாமரத்திற்குக் கீழே அமர்ந்து தின்றார்கள். தன்னுடைய எதிரியான ஜார்ஜை முந்தையநாள் மாலையில் அடித்த கதையை அப்போது அப்பு அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தான். ஜார்ஜ் கீழே உள்ள கோவிலுக்கு முன்னால் உள்ள ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் ஓட்டப் பழகிக் கொண்டிருந்திருக்கிறான். சைக்கிள் கோவில் சுவரில் மோதி அவன் கீழே விழுந்துவிட்டான். ‘‘என்ன, கோவில் மேல ஏறிட்டியா?’’ என்று உரத்த குரலில் அப்பு அண்ணன் அதைப் பார்த்து கூறியிருக்கிறான். தொடர்ந்து அவர்களுக்குள் சண்டை உண்டாகியிருக்கிறது. ஜார்ஜின் வயிற்றில் ஒரு உதை கொடுத்திருக்கிறான் அப்பு அண்ணன். ‘அய்யோ... அம்மா...’ என்று அலறியவாறு ஜார்ஜ் உரத்த குரலில் அழுதிருக்கிறான்!

‘‘அவனோட நண்பர்களையும் நான் மனசுல வச்சிருக்கேன். அவங்களுக்கும் ஏதாவது கொடுத்தாத்தான் சரியா வரும்...’’

ஒருமணி நேரம் ஆகும் என்று சொன்ன ஆப்பரேஷன் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது. டாக்டர்களும் நர்ஸ்களும் வெளியே வந்தார்கள்.  அவர்கள் மணிக்குட்டனின் தாயின் முகத்தைப் பார்க்கவேயில்லை. சிறிது தூரத்தில் நின்று பெரிய டாக்டரும் சின்ன டாக்டரும் தங்களுக்குள் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பிறகு மணிக்குட்டனின் தாயை அருகில் அழைத்துக் கேட்டார்கள்: ‘‘வயசான ஆண்பிள்ளை யாராவது இருக்காங்களா?’’

மணிக்குட்டனின் தாய் சொன்னாள்: ‘‘சின்னப்பையன்தான் இருக்கான். பத்து வயசு நடக்குது.’’

ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்த டாக்டர் சொன்னார்:

‘‘கூப்பிடுங்க.’’

அப்பு அண்ணன் மணிக்குட்டனை அங்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்கு பின்னால் செரியன் மாப்பிள்ளை வந்தான்.

டாக்டர் சொன்னார்: ‘‘வயிறை ஓப்பன் பண்ணி பாக்குறப்போ புற்றுநோய் சம்பந்தப்பட்ட புண்கள் நிறைய இருக்குறது தெரிஞ்சது. கத்தியை வைக்கவே முடியல. அதுனால ஆப்பரேஷன் எதுவும் செய்யாமலே வயிறைத் தையல் போட்டு மூடியிருக்கு., காயம் ஆறினவுடனே, நோயாளியை வீட்டுக்குக் கொண்டு போகலாம்.’’

புரிந்துக்கொள்ளாததைப் போல் மணிக்குட்டனின் தாயும் மணிக்குட்டனும் டாக்டரின் முகத்தையே வைத்த கண் எடுக்காது பார்த்தார்கள். டாக்டர் செரியன் மாப்பிள்ளையைப் பார்த்தார். அவன் பெரிய டாக்டரிடம் வேலை பார்த்திருக்கிறான்.

‘‘நான் சொன்னதை நீ கேட்டேல்ல செரியன்?’’

‘‘கேட்டேன்...’’

‘‘அதை இவங்களுக்கு விளக்கிச் சொல்லு...’’

டாக்டர்கள் புறப்பட்டார்கள்.

மணிக்குட்டனின் தாயையும் மணிக்குட்டனையும் அழைத்துக் கொண்டு செரியன் மாப்பிள்ளை அப்பு அண்ணனும் மற்றவர்களும் நின்றுகொண்டிருந்த இடத்திற்கு வந்தான். எல்லாரையும் பார்த்து செரியன் மாப்பிள்ளை சொன்னான்: ‘‘நோய் முற்றிடுச்சு. இனிமேல் ஒண்ணுமே பண்ணமுடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு...’’

அதைக்கேட்டு மணிக்குட்டனின் தாய் நிலை குலைந்து கீழே விழுந்துவிட்டாள். பெரிய அக்கா உரத்த குரலில் கூப்பாடுபோடத் தொடங்கிவிட்டாள். அவர்களைப் பார்த்து மணிக்குட்டனும் அழ ஆரம்பித்தான்.

வயிற்றைக்கிழித்த புண் ஆறுவதற்கு முன்பே மணிக்குட்டனின் தந்தை மருத்துவமனையில் மரணமடைந்தார்.

 

9

சவ அடக்கம் முடிந்து எல்லாரும் அந்த இடத்தைவிட்டுப் போனபிறகு மணிக்குட்டனும் அவனுடைய தாயும் பெரிய அக்காவும் என்ன செய்வதென்று தெரியாமல் செயலற்று நின்றிருந்தார்கள்.

கரை காணாத கடலில் சிக்கிய மூன்று உயிர்கள்! சுமதி அக்கா மட்டுமே அவர்களுக்கு ஆறுதல் கூறுவதற்கு இருந்தாள்.

மூன்றாம் நாள் செங்கோட்டையிலிருந்து பணம் வட்டிக்குத் தரும் மாத்தன் மாப்பிள்ளை மணிக்குட்டனின் வீட்டிற்கு வந்தார். அவருடன் குறுப்பு மாமாவும் இருந்தார். அவர்தான் அந்த ஆளுக்கு வீட்டிற்கு வழி காட்டியிருக்கிறார்.

சீட்டு பிடித்த வகையில் மணிக்குட்டனின் தந்தை அவருக்கு நான்காயிரம் ரூபாய் தரவேண்டுமாம். அதற்குப் பணயமாக தெற்குப் பக்கம் இருக்கும் நிலம் வைக்கப்பட்டிருக்கிறது.

மாத்தன் மாப்பிள்ளை இந்த விஷயத்தைச் சொன்னபோது, என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் மணிக்குட்டனின் தாய் குறுப்பு மாமாவை பார்த்தாள்.

‘‘கையில இருக்குற சொத்தை விற்றாவது கடனை உடனடியா தீர்க்குறதுதான் நல்லது. அதை விட்டுட்டு வழக்கு அது இதுன்னு போனா தேவையில்லாம கோர்ட்டுக்குத்தான் செலவழிக்கணும்...’’

அதைக்கேட்டு மணிக்குட்டனின் தாய் சொன்னாள்: ‘‘என்ன செய்யணும்னு நினைக்கிறீங்களோ, அதை நீங்களே செய்திடுங்க குறுப்பு அண்ணே.’’

அருகில் நின்றிருந்த சுமதி அக்கா மணிக்குட்டனின் தாயின் கையை மெதுவாக கிள்ளினாள். தொடர்ந்து அவள் சொன்னாள்.

‘‘இதைப்பற்றி யோசனை பண்ணி செய்யிறதுக்கு இங்கே வேற ஆளுகளும் இருக்காங்க...’’

குறுப்பு மாமா மாத்தன் மாப்பிள்ளைக்கு எடுபிடி வேலை பார்க்கும் ஆள் என்பதைத் தெரிந்தகொள்ள அவர்களுக்கு அதிக நாட்கள் ஆகவில்லை.

வேறு பல கடன்காரர்களும் இருந்தாலும். சாலிசேரி ஈப்பன் முதலாளி, தெற்குப்புரை கொச்சு நீலகண்ட பணிக்கர், அறைக்கல் கொச்சுண்ணித்தான்... எல்லாருக்கும் மணிக்குட்டனின் தந்தை பணம் தர வேண்டியிருந்தது. ப்ராமிஸரி நோட் எழுதிக்கொடுத்து அவர் பல இடங்களில் கடன் வாங்கயிருந்தார்.

ஒருநாள் மணிக்குட்டனின் தாய் சமையலறையில் அமர்ந்து தன்னுடைய, தன் பிள்ளைகளுடைய நிலைமையைச் சொல்லி அழுதபோது, சுமதி அக்கா சொன்னதை அவன் நினைத்துப் பார்த்தான்.


‘‘வாழ்க்கைன்றது ஒரு போர் மாதிரி பெரியம்மா. படைத்தலைவன் இறந்தாச்சு. வாள் இப்போ பெரியம்மாவோட கையில இருக்கு. இந்த வாளை மணிக்குட்டனின் கையில கொடுக்குறவரைக்கும் நீங்க தைரியமா இருக்கணும். நீங்க அழுறதைப் பார்த்தா, கிண்டல் பண்றதுக்குத்தான் இங்கே ஆளுங்க இருக்காங்க...’’

அதற்குப் பிறகு மணிக்குட்டனின் தாய் தைரியமாக இருந்தாளா? இருக்கத்தான் செய்தாள். சுமதி அக்கா பின்னால் இருந்ததுவரை அவளுக்கு அந்த தைரியம் இருந்தது. மணிக்குட்டனின் குடும்பத்திற்கு குண்டான சாபம் என்றுதான் சொல்ல வேண்டும்- விருச்சிக மாதத்தில் கார்த்திகை நாளன்று துளசிச் செடிக்கு அருகில் விளக்கு வைப்பதற்காக போன சுமதி அக்கா பாம்பு கடித்து மரணத்தைத் தழுவினாள்.... முடியவில்லை. அந்தக் காட்சியை மட்டும் மணிக்குட்டனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

பதினாறு வயது வருவதற்கு முன்பே மணிக்குட்டன் குடும்பப் பொறுப்பு ஏற்றான். வசித்துக் கொண்டிருந்த வீட்டைத் தவிர மீதியிருந்த சொத்தை விற்று பெரிய அக்காவிற்குத் திருமணம் செய்து அனுப்பி வைத்தான்.

வாழ்க்கை என்ற சவாலை அவன் நேரடியாகச் சந்திக்கத் தயாரானான். படிக்கவேண்டும், படித்துப் பெரிய ஆளாக வேண்டும், எந்தத் தொழில் செய்தாவது தன் தாயை சிரமப்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவை மட்டுமே மணிக்குட்டனின் மனதில் இருந்தவை.

தினமும் அதிகாலை நான்கு மணிக்கு அவன் படுக்கையை விட்டு எழுவான். சூரியன் உதயமாகும் வரை படிப்பான். பிறகு நிலத்தில் இறங்குவான். ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை திட்டமிடுவான். அதைச் செய்து முடிக்காமல் அவன் உறங்க மாட்டான்.

அந்தக் காலத்தில் களீக்கல் மணிக்குட்டனுக்கும் செறியய்யத்தெ காளியின் மகன் ராஜப்பனுக்குமிடையில் எந்த வித்தியாசமும் இருக்காது. அவன் மணிக்குட்டனை ‘மணிக்குட்டா...’ என்று சிறிதும் தயங்காமல் அழைப்பான். அழைத்தால் என்ன? அவனும் மணிக்குட்டனும் ஒன்றாகவே நிலத்தில் வேலை செய்கிறார்கள். மாம்பழங்களைச் சந்தைக்குக் கொண்டு போய் விற்று, அதில் கிடைக்கும் பணத்திற்கு கருவாடு வாங்கிக்கொண்டு இருவரும் வீடு திரும்புவார்கள்.

வகுப்புகளில் அவன் எந்த நேரத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்ததில்லை. கல்லூரியில் படிக்கும் காலத்தில் அவனுடைய தந்தையின் நண்பர்கள் சொல்வது அவன் காதில் விழுந்தது. 

‘‘அவன் பெரிய ஆளா வருவான்டா... என்ன இருந்தாலும் கோன்னக்குறுப்போட மகனாச்சே அவன்!’’

‘‘இங்க பாருங்க...’’

கண்களைத் திறந்து பார்த்தார்.

‘‘தூங்கிட்டீங்களா?’’

‘‘இல்ல... ஒவ்வொண்ணையும் நினைச்சிக்கிட்டே படுத்திருந்தேன்.’’

‘‘இன்னைக்கு வெளியில போயிட்டு வந்ததுல இருந்து ஒரே சிந்தனைதான்.’’

‘‘அப்படி என்ன விஷயம்?’’

‘‘உமா, உனக்கு நான் சொல்லிப் புரியக்கூடிய விஷயங்கள் இல்லை இவை...’’

‘‘கடவுளே! அப்படிப்பட்ட விஷயங்கள் இனியும் இருக்குதா என்ன?’’

உமயம்மா சிரித்தாள்.

‘‘எது எப்படியோ நீங்க முதல்ல எழுந்திரிங்க. குளிச்சிட்டு சாப்பிடலாம்...’’

ராகவன் நாயர் உமயம்மாவின் முகத்தையே உற்றுப் பார்த்தார். அவருடைய மனம் சொன்னது: ‘என் வாழ்க்கையில் நீ தெரிஞ்சிருக்குற விஷயங்களை தெரியாத விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தா எவ்வளவு குறைவு தெரியுமா?’’

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.