Logo

நாயுடன் வந்த பெண்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6145
naayudan-vantha-penn

டற்கரைக்கு புதிதாக ஒரு ஆள் வந்திருப்பதாக பிறர் கூறி கேள்விப்பட்டான். ஒரு நாய்க் குட்டியுடன் நடந்துகொண்டிருந்த ஒரு இளம் பெண். இரண்டு வார வாழ்க்கையிலேயே யால்ட்டாவை தன்னுடைய சொந்த ஊரைப்போல விருப்பப்பட்ட த்மித்ரி த்மித்ரிச் குரோவிற்கு புதிதாக வருபவர்களைப் பற்றி மிகுந்த ஆர்வம் உண்டாகத் தொடங்கியிருந்தது.

"வேர்னீஸ் பவிலியன்' என்ற இனிப்புக் கடையில் உட்கார்ந்திருந்தபோது, இளம் நிறத்திலிருந்த கூந்தலையும் சராசரி உயரத்தையும் கொண்ட ஒரு இளம்பெண் வட்டமான தொப்பியை அணிந்துகொண்டு கடற்கரையில் நடந்து சென்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். வெள்ளை நிறத்தில் ஒரு பாமரேனியன் நாய் அவளுக்குப் பின்னால் ஓடிக் கொண்டிருந்தது.

அதற்குப் பிறகு தினமும் பலமுறை பல இடங்களிலும் அவன் அவளைப் பார்த்தான். பூந்தோட்டங்களிலும், பொது இடங்களிலும்கூட. அவள் மட்டும் தனியே நடந்து கொண்டிருந்தாள். அதே வட்ட வடிவ தொப்பியை அணிந்து கொண்டு, அதே நாயுடன் சேர்ந்து. அவள் யார் என்ற விஷயம் யாருக்குமே தெரியவில்லை. அவளைப் பற்றி கூறியவர்களெல்லாம் "நாயுடன் வந்த பெண்' என்றே குறிப்பிட்டார்கள்.

"கணவனோ நண்பர்களோ யாரும் இல்லாமல் தனியாக இருக்கும்பட்சம், அவளிடம் சற்று அறிமுகமாகிக் கொள்வது வீணாகாது.' குரோவ் சிந்தித்தான்.

அவனுக்கு நாற்பதிற்கும் கீழேதான் வயது இருக்கும். ஆனால், பன்னிரண்டு வயதைக் கொண்ட மகளும் பள்ளிக்கூடத்தில் படிக்கக்கூடிய இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்தார்கள். மிகவும் இளம் வயதிலேயே- கல்லூரியில் இரண்டாவது வருடம் படித்துக் கொண்டிருந்தபோதே அவனுக்குத் திருமணமாகி விட்டது. அவனுடைய மனைவியைப் பார்த்தால், அவனுடைய பாதி வயது அதிகமாகத் தோன்றும். நல்ல உயரத்தையும், நிமிர்ந்த சரீரத்தையும், கறுத்த புருவங்களையும் கொண்ட அழகான பெண்... பிறகு... அவள் தன்னைத் தானே சிறப்பித்துக் கூறிக்கொள்வதைப்போல அறிவாளியான பெண்... நிறைய வாசிப்பாள். எழுத்துகளை உச்சரிப்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பாள். தன் கணவனை அவள் அழைப்பது த்மித்ரி என்றல்ல. திமித்ரி என்றுதான் அழைப்பாள். அவன் அவளை அறிவற்றவளாகவும் ஒடுங்கிப்போன மனதைக் கொண்டவளாகவும் ஈர்க்கத்தக்க தோற்றமில்லாதவளாகவும் நினைத்தான். அவளைப் பார்த்து அவன் பயந்தான். வீட்டில் இருப்பது அவன் வெறுக்கக்கூடிய ஒன்றாக இருந்தது. நீண்டகாலமாகவே அவன் அவள்மீது நம்பிக்கையற்றவனாக இருந்தான். பெரும்பாலும் அவன் அப்படித்தான் இருந்தான். ஒருவேளை அதன் விளைவாகத்தான் இருக்க வேண்டும்- அவன் எப்போதும் பெண்களைப் பற்றி மிகவும் மோசமாக பேசிக்கொண்டும், அவர்களை "கேடு கெட்ட இனம்' என்று குறிப்பிட்டுக் கொண்டும் இருந்தான்.

மோசமான அனுபவங்களின் வெளிச்சத்தில், அவர்களைப் பற்றி தான் எப்படி வேண்டுமென்றாலும் கூறலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது, தொடர்ந்து இரண்டு நாட்கள்கூட "கேடு கெட்ட இனம்' இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை. ஆண்களின் நட்பு அவனுக்கு குழப்பத்தையும், வெறுப்பையும் மட்டுமே பரிசாக அளித்தன. ஏற்றுக்கொள்ள முடியாத- உயிரோட்டமே இல்லாத உறவுகள்தான் அவர்களின் மூலம் கிடைத்தது. ஆனால், பெண்கள் இருக்கும்போது த்மித்ரி அளவற்ற சுதந்திரத்தையும் மன அமைதியையும் உணர்ந்தான். அவர்களிடம் என்ன கூறவேண்டும்., எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம்

அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. பேசாமல் இருந்தபோதுகூட, அவர்களுடைய இனிமையை அவன் உணர்ந்தான். தோற்றத்திலும் நடவடிக்கைகளிலும் குணத்திலும் பெண்களை ஈர்க்கக்கூடிய ஏதோவொன்று அவனிடம் இருந்தது. ஏதோ ஒரு சக்தி பெண்களை நோக்கி அவனையும் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தது.

நன்கு படித்த மனிதர்களுடன் கொண்டிருக்கும் உறவு- உயிரோட்டமற்றவர்களாகவும் முடிவுகள் எடுக்காதவர்களுமான மாஸ்கோவில் வாழும் மனிதர்களுக்கு மத்தியில், குறிப்பாக- ஆரம்பத்தில் ஈர்ப்பும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் தோன்றினாலும், தேவையற்ற குழப்பங்கள் நிறைந்த பிரச்சினைகளாக மாறி, இறுதியில் மனதில் அமைதியைக் கெடுக்கக்கூடியதாக மாறும் கசப்பான ஏராளமான அனுபவங்களை அவனுக்கு கற்றுத் தந்திருக்கின்றன. எனினும், அழகான பெண்களைப் பார்க்கும்போது, அந்த அனுபவங்கள் அனைத்தும் நினைவிலிருந்து இல்லாமற்போய் விடும். வாழ்வின்மீது கொண்டிருக்கும் வெறி மனம் முழுவதும் வந்து நிறையும்... எல்லா விஷயங்களும் இனிமையானவையாகவும், ஈர்க்கக்கூடியவையாகவும் மாறும்.

ஒரு சாயங்கால வேளையில் தோட்டத்தில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வட்டமான தொப்பி அணிந்த ஒரு இளம்பெண் மெதுவாக வந்து, பக்கத்து மேஜையில் உட்கார்ந்தாள். தோற்றத்தையும், ஆடைகளையும், நடையையும், தலைமுடியை வாரிக் கட்டியிருந்த விதத்தையும் பார்த்தபோதே தெரிந்தது- அவள் ஒரு உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதும், திருமணம் ஆனவள் என்பதும், யால்ட்டாவிற்கு முதல் முறையாக வந்திருக்கிறாள் என்பதும், தனியாக வந்திருக்கிறாள் என்பதும், தாங்க முடியாத வெறுப்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும்... யால்ட்டாவைப் போன்ற இடங்களில் பிறரைப் பற்றி உலவிக் கொண்டிருக்கும் கதைகள் அனைத்தும் பெரும்பாலும் பொய்யான கதைகள் என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். முடியுமானால், நூறு எண்ணங்களுடன் பாவச் செயல்களைச் செய்யத் துடித்துக் கொண்டிருக்கும் மனங்கள்தான் அந்த மனிதர்களுக்குப் பின்னால் பெரும்பாலும் இருந்து கொண்டிருக்கிறது. எனினும், மூன்று எட்டுகள் மட்டுமே வைக்கக்கூடிய தூரத்தில் அவள் வந்து உட்கார்ந்தபோது, மலைச் சரிவுகளின் வழியாகச் செல்லக்கூடிய பயணங்களும், கைக்குள் கொண்டுவரும் சம்பவங்கள் நிறைந்த கதைகளும் மனதில் வலம் வந்து கொண்டிருந்தன. பெயர்கூட தெரியாத ஒரு பெண்ணுடன் சிறிது நேரம் மட்டுமே நீடித்திருக்கக் கூடிய காதலின் இனிமை மனதை ஆட்கொண்டது.

அவன் பாமரேனியனை அழைத்தான். அது அருகில் வந்தபோது, அதைப் பார்த்து விரலை ஆட்டினான். நாய் நெளிந்தது. அவன் மீண்டும் விரலை ஆட்டினான்.

அந்த இளம் பெண் அவனையே பார்த்தவாறு, வெகுசீக்கிரம் தன் கண்களை கீழ்நோக்கித் திருப்பிக் கொண்டாள்.

“அவன் கடிக்க மாட்டான்.'' கூறியபோது அவளுடைய முகமெங்கும் சிவந்தது. “அவனுக்கு நான் எலும்புத் துண்டைத் தரட்டுமா?'' அவள் தலையாட்டியபோது,

அவன் மரியாதை நிமித்தமாகக் கேட்டான்: “யால்ட்டாவிற்கு வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டனவா?''

“ஐந்து நாட்கள்...''

“நான் வந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.''

ஒரே அமைதி.

“நேரம் சீக்கிரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், மிகவும் போர் அடிக்கிறது.'' அவனைப் பார்க்காமல் அவள் கூறினாள்.

“போரடிக்கிறது என்று கூறுவது இப்போது ஒரு ஃபேஷனாகி விட்டது. பெல்யேவிலோ ஷீத்ராவிலோ... எந்தவொரு போர் அடித்தலும் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமப் பகுதியைச் சேர்ந்த மனிதன் இங்கு வரும்போது கூறுவான்- "என்ன ஒரு போர்! என்ன ஒரு தூசி!' என்று. அந்தச் சமயத்தில் அவன் க்ரனேடாவிலிருந்து வந்திருப்பதைப்போல தோன்றும்.''

அவள் சிரித்தாள். உணவு சாப்பிட்டு முடிக்கும்வரை அவர்கள் பேசவே இல்லை.


 அதற்குப் பிறகு எங்கு போகிறோம் என்பதைப் பற்றியோ, என்ன கூறுகிறோம் என்பதைப் பற்றியோ சிறிதும் அக்கறை இல்லாமல், முழு சுதந்திரம் கொண்டவர்களைப்போல சிறிய சிறிய விஷயங்களைப் பற்றி பேசியவாறு, தோள்களை உரசிக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நடந்துகொண்டிருப்பதற்கு மத்தியில், கடலில் தெரிந்த வினோதமான வெளிச்சத்தைப் பற்றி அவள் பேசினாள். கடலுக்கு கடுமையான நீல நிறம் இருந்தது, அதன்மீது நிலவு பொன் நிறத்தில் கீற்றுகளைச் சிதறிவிட்டுக் கொண்டிருந்தது. வெப்பம் நிறைந்த ஒரு நாளின் இறுதி, எந்த அளவிற்கு மூச்சுவிட முடியாத அளவிற்கு இருக்கும் என்பதைப் பற்றி அவள் கூறினாள். "மாஸ்கோவில் இருந்து வருகிறேன்... ஆர்ட்ஸில் பட்டம் பெற்றிருக்கிறேன். எனினும், வங்கியில் பணிபுரிகிறேன். ஆப்பரா பாடகனாக பயிற்சி பெற்றிருக்கிறேன். ஆனால், அது வேண்டாமென்று வந்து விட்டேன். மாஸ்கோவில் இரண்டு வீடுகள் இருக்கின்றன' போன்ற தகவல்களை அவன் அவளிடம் கூறினான். "பீட்டர்ஸ்பர்க்கில் வளர்ந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் திருமணம் நடந்ததிலிருந்து எஸ்.......ஸில் வசிக்கிறேன். ஒரு மாதகாலம் யால்ட்டாவில் இருப்பேன். விடுமுறைக்காக காத்திருக்கும் கணவர் ஒருவேளை வந்து அழைத்துக்கொண்டு செல்வார்' என்பதைப் போன்ற தகவல்களை அவளிடமிருந்து அவன் தெரிந்து கொண்டான்.

தன் கணவர் பணிபுரிவது க்ரவுன் டிபார்ட்மெண்டிலா அல்லது ப்ராவின்ஷ்யல் கவுன்சிலின் கீழா என்று அவளுக்கு தெளிவாகத் தெரியவில்லை. தான் அதைப் பற்றித் தெரியாமல் இருப்பதைக் கூறி, அவளே ரசித்துக்கொண்டாள். அவளுடைய பெயர் அன்னா ஸெர்ஜியேவ்னா என்பதை குரோவ் தெரிந்து கொண்டான்.

அதற்குப் பிறகு ஹோட்டலில் இருந்தபோதும் அவன் அவளைப் பற்றி சிந்தித்தான். மறுநாளும் தாங்கள் ஒருவரையொருவர் கட்டாயம் பார்ப்போம் என்பதை நினைத்தான். சமீபகாலம் வரை அவளும் ஒரு சிறிய பள்ளிக்கூடம் செல்லும் சிறுமியாகத்தானே இருந்திருக்கிறாள்- தன்னுடைய மகளைப்போல என்பதை படுக்கையில் சாய்ந்தபோது அவன் நினைத்தான். இதற்கு முன்பு அறிமுகமில்லாத ஒரு மனிதனுடன் உரையாடும்போது பேச்சிலும் சிரிப்பிலும் வெளிப்பட்ட தவிப்பையும் தயக்கத்தையும் அவன் நினைத்துப் பார்த்தான். வெளிப்படையாகத் தெரிந்த தீவிர நோக்கங்கள் நிறைந்த உரையாடல்களும் பார்வைகளும் பின்தொடர்ந்து கொண்டிருந்த சூழ்நிலையில், தனியாக நின்று கொண்டிருப்பது என்பது அவளுடைய வாழ்வில் முதல்முறையாக இருக்கவேண்டும். அவளுடைய மென்மையான கழுத்தும் சாம்பல் நிற கண்களும் அவனுடைய நினைவில் வந்தன.

"இரக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் அவளிடம் என்னவோ சில விஷயங்கள் இருக்கின்றன!' சிந்தித்துக் கொண்டே அவன் உறங்கிவிட்டான்.

2

றிமுகமாகிவிட்ட பிறகு, ஒரு வாரம் கடந்து சென்று விட்டது. ஒரு விடுமுறை நாள். உள்ளுக்குள் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வெப்பம். வெளியிலோ தூசி முழுவதையும் சுழற்றியடிக்கும் அளவிற்கு வீசிக் கொண்டி ருந்த காற்று, ஆட்களின் தொப்பிகளைப் பறக்கச் செய்து கொண்டிருந்தது. தாகம் நிறைந்த நாளாக அது இருந்தது. குரோவ் இடையில் அவ்வப்போது "பெவிலிய'னுக்குச் சென்று, ஏதாவது குளிர்ச்சியாகப் பருகும்படி அன்னாஸெர் ஜியேவ்னாவை வற்புறுத்திக் கொண்டிருந்தான். என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை...

சாயங்காலம் காற்று சற்று அடங்கியபோது, கப்பல் வருவதைப் பார்ப்பதற்காக அவர்கள் சென்றார்கள். யாரையோ வரவேற்பதற்காக தயார்படுத்திக்கொண்டு கையில் பூங்கொத்துக்களுடன் ஆட்கள் கூட்டமாக துறைமுகத்தில் இருந்தார்கள். யால்ட்டாவில் நாகரீகமாக ஆடைகள் அணிந்த ஆட்களின் கூட்டத்தில், இரண்டு விஷயங்கள் கவனத்தை ஈர்த்தன. வயதான பெண்கள் இளம்பெண்களைப்போல ஆடைகளணிந்து காட்சியளித்தார்கள். இன்னொரு பக்கம் ஏராளமான ஜெனரல்கள் இருந்தார்கள்.

கடல் கொந்தளிப்பில் இருந்ததால், கப்பல் மிகவும் தாமதமாகவே வந்தது. சூரியன் மறைந்த பிறகுதான் அது வந்துசேர்ந்தது. தெரிந்தவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல, அன்னா கண்ணாடியின் வழியாக கப்பலில் பயணம் செய்து வந்தவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். குரோவின் பக்கம் திரும்பியபோது, அவளுடைய கண்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தன. அவள் நிறைய பேசினாள்... ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத கேள்விகளைக் கேட்டாள்... என்ன கேட்டோம் என்பதை அடுத்த நிமிடமே மறந்தாள்... அந்த மனிதர்களின் கூட்டத்தில் கண்ணாடி கீழே விழுந்துவிட்டது. மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.  யாருடைய முகத்தையும் அடையாளம் காணமுடியாத அளவிற்கு இருட்டாக இருந்தது. காற்று முழுமையாக அடங்கி விட்டிருந்தது. எனினும், குரோவும் அன்னா ஸெர்ஜியேவ்னாவும் கப்பலிலிருந்து யாரோ வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல அங்கேயே நின்றிருந்தார்கள். அன்னா ஸெர்ஜியேவ்னா மிகவும் அமைதியாக குரோவின் பக்கம் பார்க்காமல் மலர்களை வாசனை பிடித்தவாறு நின்றிருந்தாள்.

“காலநிலை கொஞ்சம் சுமாராக இருக்கிறது...'' அவன் சொன்னான்: “நாம் எங்கே போகவேண்டும்? ஒரு பயணம் போனால் என்ன?''

அவள் பதிலெதுவும் பேசவில்லை.

அவன் அவளைப் பார்த்துக் கொண்டே, திடீரென்று வளைத்துப் பிடித்து, உதடுகளில் முத்தமிட்டு, மலர்களின் வாசனையையும் ஈரத்தையும் சுவாசத்தில் ஒற்றியெடுத்தான். திடுக்கிட்டுத் திரும்பி, சுற்றிலும் பார்த்தான். யாராவது பார்த்திருப்பார்களா?

“நீங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் செல்வோம்...'' அவன் மெதுவான குரலில் சொன்னான். இருவரும் வேகமாக நடந்தார்கள். மூடப்பட்டிருந்த அறையில் ஜப்பானிய கடையிலிருந்து வாங்கப்பட்ட தைலத்தின் வாசனை. அவளைப் பார்த்துக்கொண்டே குரோவ் சிந்தித்தான்: "எந்த அளவிற்கு வித்தியாசமான மனிதர்களையெல்லாம் உலகத்தில் சந்திக்கிறோம்!' நினைவுகளில் எவ்வளவு பெண்கள்! மனப்பூர்வமாகக் காதலித்து, சிறிது காலத்திற்காவது செலுத்திய அன்பிற்கு நன்றியுடன் நடந்த அலட்சிய குணம் கொண்டவர்கள்! அர்ப்பணிப்பு உணர்வே இல்லாமல் குறும்புத் தனங்களுடனும் அர்த்தமற்ற சொற்களுடனும், அன்புப் பிரவாகமல்ல- அதைவிட பெரிய ஏதோவென்றுதான் தாங்கள் எதிர்பார்ப்பது என்று நடந்து கொள்ளும் மனைவியைப் போன்றவர்கள்! வாழ்விற்கு அளிப்பதைவிட, அதிகமாகப் பெற வேண்டும் என்ற வெறியுடன் நடந்து திரியும் பேரழகிகளான இரண்டு மூன்று பேர்- அதிகார குணம் கொண்ட, சிந்தனை சக்தி இல்லாத சபல மனம் கொண்டவர்கள்! இளம் வயதுகளைத் தாண்டியவர்கள்! வெறி அடங்கியபோது, குரோவிற்கு அவர்களுடைய அழகு வெறுப்பை உண்டாக்கியது. அவர்களுடைய ஆடைகளில் தொங்கிக் கொண்டிருந்த கலை வேலைப்பாடு கொண்ட பகுதிகள் மீனின் செதில்களைப்போல அவனுக்குத் தோன்றியது.

அவளுடைய விஷயத்தில், இப்போதுகூட இளம் வயதிற்கே உரிய கள்ளங்கபடமற்ற தன்மையும் கூச்சமும் எஞ்சி நின்றுகொண்டிருந்தன. யாரோ வாசற்கதவைத் தட்டுகிறார்கள் என்ற தோணல் திடீரென்று ஒரு பதைபதைப்பை உண்டாக்கியது.

நடந்து முடிந்த சம்பவத்தின்மீது அன்னா ஸெர்ஜியேவ்னாவின்- நாயுடன் நடந்து கொண்டிருக்கும் பெண்ணின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது. அது தன்னுடைய வீழ்ச்சியாக இருந்தது என்பதைப் போன்ற உறுதியான எண்ணமும் புலம்பலும் அந்த முகத்தில் தெரிந்தது. முகம் மிகவும் வெளிறிப்போய் காணப்பட்டது. இரு பக்கங்களிலும் அவிழ்த்து விடப்பட்டிருந்த தலைமுடிகள் விழுந்து கிடந்தன.


மொத்தத்தில் அவள் "பாவம் செய்த பெண்'ணின் பழையகால ஓவியத்தைப்போல இருந்தாள்.

“நடந்தது தப்பாகி விட்டது.'' அவள் சொன்னாள்: “நீங்கள்தான் முதலில் என்னை வெறுப்பீர்கள்.''

மேஜையின்மீது ஒரு நீர்ப்பூசணி இருந்தது. குரோவ் ஒரு துண்டை அறுத்தெடுத்து மெதுவாக சாப்பிட்டான். அரைமணிநேரம் மிகவும் அமைதியாக கடந்து சென்றது.

அன்னா ஒரு பரிதாபமான நிலையில் உட்கார்ந்திருந்தாள். வாழ்வை அதிகமாகப் பார்த்திராத ஒரு அப்பாவி இளம் பெண்ணின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் அவள் இருந்தாள். மேஜையின்மீது எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தி அவளுடைய முகத்தில் மெல்லிய வெளிச்சத்தைப் பரவச் செய்துகொண்டிருந்தது. அவளுடைய உள்மனதில் இருந்த சந்தோஷத்தை எளிதில் உணரமுடிந்தது.

“என்னால் உன்னை எப்படி வெறுக்க முடியும்?'' குரோவ் கேட்டான்: “என்ன கூறுகிறோம் என்பதே உனக்குத் தெரியவில்லை.''

“கடவுள் என்னை மன்னிக்கட்டும்...'' அவளுடைய கண்கள் கண்ணீரால் நிறைந்து விட்டன. “என்ன பயங்கரம்!''

“ நீ பாவ மன்னிப்பு கேட்பதைப்போல இருக்கிறதே?'' அவன் கேட்டான்.

“பாவ மன்னிப்பா? இல்லை... நான் கெட்டுப் போனவள். நானே என்னை வெறுக்கிறேன். என்னுடைய தவறுக்கு நியாயம் கூறமுடியாது. கணவரை அல்ல... என்னையே நான் ஏமாற்றியிருக்கிறேன். இப்போது முதல் முறையாக அல்ல. நீண்டகாலமாக நான் என்னையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். என்னுடைய கணவர் உண்மையானவராகவும், நல்லவராகவும் இருக்கலாம். ஆனால், அந்த ஆள் எந்தவொரு திறமையும் இல்லாதவர். அவருடைய வேலை என்ன என்பதே எனக்குத் தெரியாது. எப்படிப் பார்த்தாலும் அந்த ஆள் ஒரு கேடுகெட்ட மனிதர்தான்.  எனக்கு இருபது வயது நடக்கும்போது எங்களுடைய திருமணம் நடந்தது. பதைபதைப்புடன் நான் போராடி வாழ்ந்துகொண்டிருந்தேன். இன்னும் கொஞ்சம் நல்ல வாழ்க்கை எனக்கு கிடைத்திருக்கலாம். வித்தியாசமான ஒரு வாழ்க்கை வேண்டும்... நான் வாழவேண்டும்... நான் வாழவேண்டும்... கவலைப்பட்டுக் கொண்டு என்னால் இருக்க முடியாத நிலை உண்டாகிவிட்டது. அது உங்களுக்குப் புரியாது. தெய்வத்தை சாட்சி வைத்துக்கொண்டு நான் கூறுகிறேன்.  என்னை என்னாலேயே கட்டுப்படுத்த முடியவில்லை. எனக்கு என்னவோ நடந்துவிட்டது. என்னை கட்டுப்படுத்தி நிறுத்தி வைக்க முடியவில்லை. உடல் நலமில்லை என்று என் கணவரிடம் கூறிவிட்டு, நான் இங்கு வந்தேன். இங்கு நான் பைத்தியம் பிடித்த பெண்ணைப்போல நடந்து திரிந்து கொண்டிருந்தேன்... இப்போது யாரும் வெறுக்கக்கூடிய மோசமான பெண்ணாகி விட்டிருக்கிறேன்.''

அதைக் கேட்டுக்கொண்டிருந்த குரோவிற்கு "போர்' அடித்தது. எதிர்பாராததாகவும் சூழ்நிலைக்கேற்றதாக இல்லாததாகவும் இருந்த அந்த கவலை நிறைந்த வார்த்தைகளும், கள்ளங்கபடமற்ற குரலும் வெறுப்பை உண்டாக்கக்கூடியவையாக இருந்தன. கண்களில் கண்ணீர் நிறையாமல் இருந்திருந்தால், அது அவளுடைய தந்திரச் செயல் என்று மட்டுமே அவன் நினைத்திருப்பான்.

“என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. உனக்கு என்ன வேண்டும்?'' அவன் கேட்டான். அவனுடைய மார்பின்மீது தன் தலையைச் சேர்ந்து வைத்து, அவள் மேலும் நெருக்கமாக உட்கார்ந்தாள். “சொல்வதை நம்புவதற்கு முயற்சி செய்யுங்கள். நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். நேர்மையான, புனிதமான வாழ்க்கையை வாழவே நான் விரும்புகிறேன். பாவம் என்பது வெறுக்கப்படக்கூடாது. நான் என்ன செய்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்கள் "மோசமான சக்தி ஈர்த்து வைத்திருக்கிறது' என்று கூறுவார்கள். என்னைப் பற்றியும் அவ்வாறு கூறக்கூடிய சூழ்நிலை உண்டாகியிருக்கிறது.'' அவள் கூறினாள்.

“ஸ்... ஸ்... ஸ்...'' அவன் சத்தம் உண்டாக்கினான். அவளுடைய பயந்துபோன கண்களையே பார்த்தவாறு அவன் அவளை முத்தமிட்டான். மெதுவான குரலில் பாசத்துடன் பேசினான்.

கொஞ்சம் கொஞ்சமாக அவள் ஆறுதல் அடைந்து, பழைய சந்தோஷத்தை மீண்டும் பெற்றாள். இருவரும் சிரித்துக்கொண்டே விளையாட ஆரம்பித்தனர்.

அங்கிருந்து வெளியே வந்தபோது கடல்பகுதியில் ஒரு ஆள்கூட இல்லை. ஸைப்ரஸ் மரங்கள் நிறைந்த நகரத்திற்கு மரணத்தின் சாயல் உண்டாகிவிட்டிருந்தது. ஆனால், கடல் மிகவும் சத்தமாக, கரையை வேகத்துடன் மோதிக்கொண்டிருந்தது. ஒரே ஒரு படகு மட்டும் கடலில் ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது. அதில் ஒரு விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது.

அவர்கள் ஒரு வண்டியில் ஏறி ஓரியான்டாவிற்குச் சென்றார்கள். “ஹாலில் இருந்த அறிவிப்புப் பலகையில் நான் உன்னுடைய இரண்டாவது பெயரை கூர்ந்து கவனித்தேன்- வான் திதெரிட்ஸ்... உன்னுடைய கணவர் ஜெர்மனியைச் சேர்ந்தவரா?''

“இல்லை... தாத்தா ஜெர்மன்காரராக இருந்தார் என்று தோன்றுகிறது. ஆனால், அந்த ஆள் ரஷ்யன் ஆர்த்தோடக்ஸ் பிரிவைச் சேர்ந்தவர்.''

ஓரியான்டாவின் தேவாலயத்திலிருந்து மிகவும் அதிக தூரத்தில் இல்லாமல் இருவரும் உட்கார்ந்து, எதுவும் பேசாமல் அமைதியாக கடலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிகாலைப் பொழுதின் மூடுபனிக்கு மத்தியில் யால்ட்டா மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்தது. மலைச் சிகரங்களில் வெள்ளை நிறத்தில் மேகங்கள் எந்தவித அசைவும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தன. மரங்களில் இலைகள் அசையாமல் இருந்தன. விட்டில் பூச்சிகள் ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. கீழேயிருந்து மேலே வந்துகொண்டிருந்த கடலின் முழக்கம் நிரந்தரமாக நிலவிக்கொண்டிருந்த தூக்கத்தின் அமைதியை விரட்டியடித்துக் கொண்டிருந்தது. யால்ட்டாவோ ஓரியான்டாவோ உருவாவதற்கு முன்பும் அது இப்படித்தான் சத்தத்தை உண்டாக்கிக்கொண்டு இருந்திருக்கும். இப்போதும் அதே சத்தம்தான்... நாம் யாரும் இங்கு இல்லாதபோதும் இதே கள்ளங்கபடமற்ற தன்மையுடன் உரத்து இந்த சத்தம் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கும். நம் ஒவ்வொருவரின் வாழ்வு, மரணம் ஆகியவை நிறைந்த இந்த கள்ளங்கபடமற்ற தன்மைக்குள், இந்த பேரமைதிக்குள் ஒருவேளை... நம்முடைய நிரந்தரமான தப்பித்தலின், பூமியின் எல்லையற்ற அசைவுகளின், முழுமையை நோக்கி உள்ள முடிவற்ற பயணத்தின் வாக்குறுதிகள் மறைந்து கொண்டிருக்கலாம். கடலும் மலைகளும் மேகங்களும் பரந்து கிடக்கும் ஆகாயமும் சேர்ந்து உண்டாக்கிய மந்திரத்தன்மை நிறைந்த சூழ்நிலையில், மிகவும் அமைதியாக உட்கார்ந்திருந்த அழகான பெண்ணின் அருகில் இருந்து கொண்டு குரோவ் சிந்தித்தான். "சற்று நினைத்துப் பார்த்தால், இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளுமே எவ்வளவு அழகாக இருக்கின்றன! மனதின் செயல்களையும் வாழ்வின் மிகவும் உயர்வான இலட்சியங்களையும் மறந்த சிந்தனைக்குரிய செய்திகளைத் தவிர மற்றவை அனைத்தும்...'

ஒரு  ஆள்  அருகில் வந்தார்-  காவலாளியாக  இருக்க  வேண்டும். அவர்களைக் கூர்ந்து பார்த்துவிட்டு கடந்து சென்றார்.

அதுவும் மிகவும் அழகான விஷயமாகத் தோன்றியது. தியடோஷ்யாவிலிருந்து ஒரு கப்பல் வந்தது. அதிகாலைப் பொழுதின் வெளிச்சத்தில் அதன் விளக்குகள் மங்கலாக காட்சியளித்தன.

“புல்லில் பனித்துளிகள் இருக்கின்றன...'' மிகவும் நீளமான ஒரு பேரமைதிக்குப் பிறகு அன்னா  ஸெர்ஜியேவ்னா கூறினாள்.

“ம்... வீட்டிற்குச் செல்வதற்கு நேரமாகி விட்டது.''


அவர்கள் நகரத்திற்குத் திரும்பினார்கள். தொடர்ந்து எல்லா நாட்களிலும் பன்னிரண்டு மணிக்கு அவர்கள் கடலின் அருகில் வந்து ஒருவரையொருவர் சந்திப்பார்கள். மதிய உணவையும் இரவு உணவையும் பங்கிட்டுச் சாப்பிடுவார்கள். ஒன்றாகச் சேர்ந்து நடந்தார்கள். கடலின் அழகை ரசித்தார்கள். முடியாமல் தூக்கத்தில் மூழ்கி விடுவதையும், இதயம் அதிகமாகத் துடிப்பதையும் பற்றி அவள் குறை கூறினாள். அவனுக்கு அவள்மீது அந்த அளவிற்கு மதிப்பு இல்லை என்ற பயமும் பதைப்பதைப்பும் இருந்ததன் காரணமாக, ஒரே கேள்விகளை திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டேயிருந்தாள். ஓய்வெடுக்கும் இடங்களிலும் பூந்தோட்டங்களிலும் வேறு யாருமே இல்லாதபோது, திடீரென்று அவளைப் பிடித்திழுத்து அருகில் வரச்செய்து அவன் வெறிபிடித்தவனைப்போல முத்தமிட்டான். கவலைகளே இல்லாத அலட்சிய சூழ்நிலை... யாராவது பார்த்துவிடுவார்களா என்ற பதைபதைப்புடன் பகல் வெளிச்சத்தில் தரும் வெப்பமான முத்தங்கள்... உஷ்ணம்... கடலின் வாசனை.... அழகாக ஆடைகள் அணிந்து முன்னோக்கி இங்குமங்குமாக நடந்துபோய்க் கொண்டிருக்கும் பளபளப்பான மனிதர்கள்... எல்லாம் சேர்ந்து அவனை புதிய மனிதனாக ஆக்கிவிட்டிருந்தன. அன்னா ஸெர்ஜியேவ்னா பேரழகு படைத்தவளாகவும் ஈர்க்கக் கூடியவளாகவும் இருக்கிறாள் என்று அவன் அவளிடம் கூறினான். அவளை விட்டு ஒரு அடிகூட நகரமுடியாத அளவிற்கு அவன் ஆழமான காதலில் மூழ்கிவிட்டிருந்தான். அவளோ சிந்தனை வயப்பட்டிருந்தாள். "அவனுக்கு அவள்மீது சிறிதும் மதிப்பும் இல்லை. குறிப்பிட்டுக் கூறுவதாக இருந்தால் அன்புகூட இல்லை. ஒரு சாதாரண பெண் என்பதைத் தாண்டி மதிப்பும் இல்லை' என்றெல்லாம் சிந்தித்து, அதை மனதைத் திறந்து சொல்வதற்காக இடையில் அவ்வப்போது கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தாள். பெரும்பாலான நாட்களில் நேரம் மிகவும் அதிகமான பிறகே அவர்கள் நகரத்தைவிட்டு தூர இடத்திற்குப் பயணம் செய்வார்கள். ஓரியான்டாவிற்கோ... நீர் வீழ்ச்சிக்கோ. ஒவ்வொரு முயற்சியும் மிகப்பெரிய வெற்றியாகவே அமைந்தன.

அருமையான காட்சிகள் அவர்களை மிகுந்த சந்தோஷத்திற்குள்ளாக்கின.

அவளுடைய கணவர் வருவார் என்று அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், அவருடைய கடிதம்தான் வந்தது. கண்ணுக்கு நலமில்லையென்றும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அவள் திரும்பி வரவேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அன்னா ஸெர்ஜியேவ்னா திரும்பிச் செல்லும் பயணத்திற்காக ஆயத்தங்களைச் செய்தாள்.

“நான் போவது நல்ல விஷயம்... இது விதியின் தீர்மானம்...'' அவள் கூறினாள்.

அவனும் அவளுடன் சென்றான். எக்ஸ்பிரஸின் கம்பார்ட்மென்டிற்குள் ஏறி, இரண்டாவது மணி அடித்த போது அவள் சொன்னாள்: “நான் உங்களை இன்னொரு முறை பார்த்துக்கொள்ளட்டுமா? இன்னொருமுறை அவள் அழவில்லை. ஆனால், கவலையின் காரணமாக, தாங்க முடியாமல் முகம் முழுவதும் நடுங்கிக் கொண்டிருந்தது.

“நான் எப்போதும் உங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டே இருப்பேன். கடவுளின் ஆசீர்வாதம் இருக்கட்டும். சந்தோஷமாக இருக்கவேண்டும். என்னைப் பற்றி மோசமாக எதுவும் நினைக்கக் கூடாது. நாம் நிரந்தரமாகப் பிரிகிறோம். அது அப்படித்தான் நடக்கும்... நாம் எந்தச் சமயத்திலும் சந்திக்கவே கூடாதுதெய்வம் உடன் இருக்கட்டும்...''

ரயில் வேகமாகப் பாய்ந்து சென்று அதன் வெளிச்சம் பார்வையிலிருந்து மறைந்தது. ஒரு நிமிடம் ஆவதற்கு முன்பே சத்தமும் இல்லாமல் போனது. இனிமையான அந்த சம்பவங்கள் எவ்வளவு சீக்கிரம் முடிவிற்கு வரவேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிவிற்கு வர அனைத்தும் சேர்ந்து நடத்திய சதி வேலையைப்போல அது தோன்றியது. விட்டில் பூச்சிகளின் அழுகைச் சத்தத்தையும் டெலிக்ராஃப் நிறுவனங்களின் ஓசைகளையும் கேட்டவாறு, இருட்டைப் பார்த்துக்கொண்டே குரோவ் தான் மட்டும் தனியாக ப்ளாட்ஃபாரத்தில் நின்று கொண்டிருந்தான். வாழ்வில் இன்னொரு சாகசம் நிறைந்த அத்தியாயம் முடிவுக்கு வந்திருக்கிறது. இனி எஞ்சி நின்று கொண்டிருப்பவை நினைவுகள் மட்டும். எங்கேயோ கவலை நிறைந்த ஒரு சிந்தனை இருப்பதை அவன் அடையாளம் தெரிந்து கொண்டான்... இனி எந்தச் சமயத்திலும் சந்திப்பதற்கான வாய்ப்பு இல்லாத அந்த இளம்பெண் தன்னுடன் இருந்த நாட்களில் சந்தோஷம் நிறைந்தவளாக இல்லை. முழுமையான அர்த்தத்தில் பாசத்தையும் அன்பையும் அளித்தும், நடவடிக்கைகளிலும் மாறுபட்ட உரையாடல்களிலும் கொஞ்சல்களிலும் ஏதோ இனம்புரியாத வேறுபாடுகள் நிறைந்திருந்தன. அவளைவிட இன்னொரு மடங்கு வயதைக் கொண்ட- சந்தோஷம் நிறைந்த ஒரு மனிதனின் போலித்தனமான பணிவையும் பார்த்து... நல்ல மனம் கொண்ட மனிதர், அன்பானவர் என்றுதான் அவள் எப்போதும் அவனைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறாள். உண்மையை விட்டு மிகவும் விலகிப்போயிருக்கும் ஏதோ ஒன்றாகத்தான் அவள் அவனைப் புரிந்து கொண்டிருந்தாள். அந்த அளவிற்கு அவன் அவளை உண்மையாகவே ஏமாற்றினான்... மனப்பூர்வமாக இல்லையென்றாலும்கூட...

ஸ்டேஷனில் இளவேனில் காலத்தின் வாசனை... நல்ல குளிர்ச்சியான சாயங்கால வேளை.... "நான் வடக்கு திசை நோக்கிப் போவதற்கான நேரமாகி விட்டது...' ப்ளாட்ஃபாரத்தை விட்டுக் கிளம்பும்போது குரோவ் நினைத்தான்: "நேரம் அதிகமாகி விட்டது...'

3

மாஸ்கோவில் அனைத்தும், குளிர்காலத்தில் எப்போதும் நடப்பதைப்போல நடந்துகொண்டிருந்தன. கணப்புகள் எரிந்து கொண்டிருந்தன. குழந்தைகள் காலை உணவை சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்திற்குச் செல்ல ஆரம்பிக்கும்போதுகூட இருள் இன்னும் விலகாமலே இருந்தது.

பணிப்பெண் சிறிது நேரத்திற்கு விளக்கை எரிய வைப்பாள் பனி பொழிய ஆரம்பித்திருந்தது. முதல் பனி விழுந்தபோது, பணி வண்டியில் பயணம் செய்வது சுவாரசியமான ஒன்றாக இருந்தது. வெண்மை நிறத்தில் பூமி, வெள்ளை நிற மேற்கூரைகள், மென்மையான ஈர்க்கக்கூடிய காற்று... இளமைக்காலம் திரும்பவும் கிடைத்ததைப்போல தோன்றும். வெண்பனி மூடிய பிர்ச் மரங்களும் ஆரஞ்ச் மரங்களும் பிரகாசமாக நின்று கொண்டிருக்கும். ஸைப்ரஸ் மரங்களையும் பனைமரங்களையும்விட இதயத்துடன் ஒன்றி நின்று கொண்டிருப்பவை அவைதாம்... அவற்றின் அருகில் இருக்கும்போது கடல், மலைகள் எதைப் பற்றியும் நினைக்க வேண்டிய அவசியமே இல்லை.

குரோவ், மாஸ்கோவில் பிறந்த மனிதன். பயணம் முடிந்து, பனி ஏராளமாக நிறைந்திருந்த ஒரு நாளன்று அவன் திரும்பி வந்தான். உரோமத்தாலான ஆடை அணிந்து, கைகளில் உறைகள் அணிந்து, பெட்ரோவ்ஸ்காவின் வழியாக நடந்துகொண்டே, சனிக்கிழமை சாயங்கால நேரத்தின் மணிச் சத்தத்தைக் கேட்டபோது, தான் செய்த பயணங்கள் மற்றும் சென்று பார்த்த இடங்கள் ஆகியவற்றின் வசீகரங்களெல்லாம் மறைந்து போய்விட்டன. படிப்படியாக அவன் மாஸ்கோவின் வாழ்வில் இரண்டறக் கரைந்து விட்டான். தினந்தோறும் மூன்று நாளிதழ்களை ஆர்வத்துடன் வாசித்து முடித்துக் கொண்டிருந்தான். ரெஸ்ட்டாரென்ட்களிலும் க்ளப்களிலும் விருந்துகளிலும் பங்குபெறுவதற்கு ஆர்வம் உண்டாக ஆரம்பித்தது. பெயர் பெற்ற வழக்கறிஞர்களையும் கலைஞர்களையும் உபசரிப்பதிலும், டாக்டர்ஸ் க்ளப்பில் ஒரு பேராசிரியருடன் சேர்ந்து சீட்டு விளையாடுவதிலும் அவன் மகிழ்ச்சி அடைந்தான்.


ஒரு மாதத்திற்குள் அன்னா ஸெர்ஜியேவ்னா, மற்றவர்களைப்போல ஞாபகக் கிடங்கில் பனியால் மூடப்பட்டுக் கிடப்பாள். எப்போதாவது ஒரு முறை மட்டும் புன்னகையுடன் கனவுகளைத் தட்டி எழுப்புவாள்- அவன் சிந்தித்தான். ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாகக் கடந்து சென்றுவிட்டது. முழுமையான குளிர்காலம் வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகும் எல்லா விஷயங்களும் நினைவில் பசுமையாக நின்றுகொண்டிருந்தன. அன்னா ஸெர்ஜியேவ்னாவை விட்டு நேற்றுதான் பிரிந்து வந்தோம் என்று தோன்றுவதைப்போல நினைவுகள் மேலும் தெளிவாக இருந்தன. சாயங்கால அமைதியில் படித்துக்கொண்டிருந்த குழந்தைகளின் சத்தம் காதில் விழுந்தபோது, ரெஸ்ட்டாரென்டின் இசையைக் கேட்கும்போது, அடுப்பில் காற்று வந்து மோதும்போது, அந்த நினைவுகள் எழுந்து மேலே வந்தன. கப்பலைப் பார்ப்பதற்காகச் சென்றபோது நடைபெற்ற சம்பவம், பனி நிறைந்த புலர்காலைப் பொழுதில் மலைச் சரிவிற்குச் சென்றது, தியடோஷ்யாவிலிருந்து வந்த கப்பல், முத்தங்கள்... அவை எல்லாவற்றையும் மனதில் நினைத்துக் கொண்டே ஒரு புன்சிரிப்புடன் நீண்ட நேரம் அறைக்குள் இங்குமங்குமாக அவன் நடந்து கொண்டிருந்தான். தொடர்ந்து நினைவுகள்,

கனவுகளுக்கு வழிவகுத்துக் கொடுக்கும். கடந்து சென்றவற்றிலிருந்து மனம் வர இருக்கும் விஷயங்களை நோக்கிப் பயணிக்கும். அன்னா ஸெர்ஜியேவ்னா அவனுடைய கனவுகளில் வரவில்லை. ஆனால், அவன் சென்ற இடங்களுக்கெல்லாம் நிழலைப்போல அவனுடன் சேர்ந்து அவள் நடந்தாள். கண்களை மூடியிருக்கும்போது உயிருடன் வருவதைப்போல அவள், மேலும் பேரழகியாக, மேலும் இளமை ததும்ப, மேலும் வசீகரிக்கக் கூடியவளாகத் தோன்றினாள். யால்ட்டாவில் இருந்ததைவிட தானும் இப்போது அழகன்தான் என்று அவன் தன் மனதில் நினைத்தான். சாயங்கால வேளைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷெல்ஃப்களிலும் கணப்புகளிலும் அறைகளின் மூலைகளிலும் அவள் மறைந்துகொண்டு பார்த்தாள். அவளுடைய மூச்சுவிடும் சத்தம் கேட்டது. ஆடைகளின் மென்மையான சத்தமும்... தெருக்களில் அவளைப்போல யாராவது இருக்கிறார்களா என்று கண்களால் அவன் தேடிப்பார்த்தான்.

நினைவுகளை நம்பிக்கைக்குரிய யாருடனாவது பங்குபோட வேண்டும் என்று குரோவ் ஆசைப்பட்டான். வீட்டில் காதலைப் பற்றிப் பேசுவது என்பது நடக்காத விஷயம். வெளியிலோ கூறத்தக்க அளவிற்கு யாருமில்லை. பணியாட்களிடமோ, வங்கியில் தன்னுடன் பணியாற்றக் கூடியவர்களிடமோ எதையும் கூறமுடியாது. அப்படியே இல்லையென்றாலும் என்ன கூறுவது? உண்மையிலேயே காதல் என்ற ஒன்று இருக்கிறதா? அழகு, காவியத்தன்மை, கடமை என்று கூறக்கூடிய அளவிற்கு... குறைந்தபட்சம் சுவாரசியமான விஷயங்கள் என்ற அளவிலாவது சிறப்பித்துக் கூறுவதற்கு அன்னா ஸெர்ஜியேவ்னாவுடன் கொண்டிருந்த உறவில் என்ன இருக்கிறது? மொத்தத்தில்- செய்ய முடிவது- காதல் மற்றும் பெண்களைப் பற்றி வெறுமனே பொதுவாக ஏதாவது கூறலாம். அவ்வளவுதான். அவனுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. மனைவியின் கறுத்த புருவங்கள் மட்டும் சுருங்கின. அவள் சொன்னாள்.

“திமித்ரி, உங்களுக்கு அழகிய உல்லாசி வேடம் சிறிதும் பொருத்தமாக இருக்காது.''

ஒரு சாயங்கால வேளையில், டாக்டர்ஸ் க்ளப்பிலிருந்து ஒரு அதிகாரியுடன் சேர்ந்து சீட்டு விளையாடி முடித்துவிட்டு வெளியே வந்தபோது அவன் கூறினான்:

“யால்ட்டாவில் எனக்கு அறிமுகமான இளம்பெண் எந்த அளவிற்கு ஈர்க்கக் கூடியவள் தெரியுமா?''

அந்த அதிகாரி பனி வண்டியில் ஏறி ஓட்டிக்கொண்டு செல்வதற்கு மத்தியில் திடீரென்று திரும்பி அழைத்தான்:

“த்மித்ரி த்மித்ரிச்!”

“என்ன?''

“நீங்கள் சாயங்காலம் கூறியது உண்மைதான். இன்றைய மீன் சற்று பருமனாக இருந்தது.''

அலட்சியமாகக் கூறப்பட்ட அந்த வார்த்தைகள் தரம் தாழ்ந்தவை என்பதையும், கிண்டல் பண்ணக் கூடியவை என்பதையும் உணர்ந்த குரோவிற்கு கோபம் உண்டானது.

எந்த அளவிற்கு நாகரீகமற்ற போக்குகள்! என்ன வகையான மனிதர்கள்! அர்த்தமற்ற இரவுகள், வெறுப்பைத் தந்த பகல்கள்! சீட்டு விளையாட்டு, சாப்பாடு, மது அருந்துவது,

இப்படியும் அப்படியுமாக திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருந்த உரையாடல்கள்... ஏதோ ஒரே விஷயத்திற்காக பிரயோஜனமே இல்லாமல் செய்த கடுமையான முயற்சிகளும் பேச்சுகளும் நேரம், உடல் நலம் ஆகியவற்றின் பெரும்பகுதியை ஆட்கொண்டிருந்தது... எஞ்சியிருந்தது குறைபாடுகள் நிறைந்த, ஒதுக்கப்பட்ட, ஒரு சாதாரண வாழ்க்கை. அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை. சிறை அறைக்குள்ளோ மனநிலை பாதிக்கப்பட்டிருப்போர் இருக்கக்கூடிய அறைக்குள்ளோ சிக்கிக்கொண்டு விட்டதைப்போல இருந்தது.

அன்று இரவு முழுவதும் குரோவ் மிகுந்த கோபம் உண்டாகி, தூங்க முடியாமல் இருந்தான். மறுநாள் முழுவதும் ஒரே தலைவலியாக இருந்தது. அதற்கு அடுத்த நாளும் உறக்கம் வரவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்து, சிந்தனையில் மூழ்கினான். இல்லாவிட்டால் அறைக்குள் இங்குமங்குமாக நடந்துகொண்டிருந்தான். குழந்தைகள், வங்கி- அனைத்தும் அவனுக்கு வெறுப்பை உண்டாக்கக்கூடிய விஷயங்களாக இருந்தன. எங்காவது போக வேண்டும் என்றோ, ஏதாவது பேசவேண்டும் என்றோ எந்தவொரு ஆர்வமும் அவனுக்கு உண்டாகவில்லை.

டிசம்பரில் விடுமுறை நாட்களில் அவன் ஒரு பயணத்திற்குத் தயாரானான். பீட்டர்ஸ்பர்க்கில் நண்பர் ஒருவருக்கு உதவி செய்யப்போகிறேன் என்று தன் மனைவியிடம் அவன் கூறினான். பிறகு எஸ்...... க்குப் புறப் பட்டான். எதற்கு? அவனுக்கே தெரியவில்லை. அன்னா ஸெர்ஜியேவ்னாவைப் பார்க்க வேண்டும்- முடிந்தால், ஒரு உரையாடலை ஏற்படுத்த வேண்டும்.

காலையில் எஸ்... ஐ அடைந்தான். ஹோட்டலில் இருப்பதிலேயே மிகவும் நல்ல அறையை எடுத்தான். தரையில் பட்டாளத் துணி விரிக்கப்பட்டிருந்தது. மேஜை யில் மை புட்டி வைக்கக்கூடிய ஒரு ஸ்டாண்ட். தூசி படிந்திருந்த அதில், குதிரைமீது அமர்ந்திருந்திருந்த மனிதனின் கையில் தொப்பி... தலை இல்லாமலிருந்து. ஹோட்டலின் சுமைதூக்கும் பணிசெய்யும் மனிதன் அவனுக்குத் தேவையான தகவல்களை கூறினான். பழைய கான்ட்சார்னி தெருவில் இருக்கும் சொந்த வீட்டில் வான் திதெரிட்ஸ் வசிக்கிறார். அந்த வீடு மிகவும் அருகிலேயே இருக்கிறது. நல்ல வகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் வசதி படைத்த மனிதர் அவர். சொந்தத்தில் குதிரைகள் இருக்கின்றன. நகரத்தில் எல்லாருக்கும் அவரைத் தெரியும். அந்த பணியாள் த்ரிதிரிட்ஸ் என்று அந்தப் பெயரை உச்சரித்தான்.

அதிகம் தாமதிக்காமல் குரோவ், பழைய கான்ட்சார்னி தெருவிற்குச் சென்று அந்த வீட்டைக் கண்டுபிடித்தான். வீட்டிற்கு நேராக எதிர்பக்கத்தில் முள்ளாலான வேலி போடப்பட்டிருந்தது.

"இப்படிப்பட்ட ஒரு வேலிக்குள்ளிருந்து யாராக இருந்தாலும் ஓடிப் போகத்தான் செய்வார்கள்! வேலியையும் வீட்டின் சாளரங்களையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே குரோவ் சிந்தித்தான்: "இன்று விடுமுறை நாள். பெரும்பாலும் அவளுடைய கணவர் வீட்டில் இருப்பார். வீட்டிற்குள் நுழைந்து அவளை குழப்பத்திற்குள்ளாக்குவது அறிவுப்பூர்வமான விஷயமாக இருக்காது. ஒரு குறிப்பை எழுதி அனுப்பி வைக்கலாமென்றால், ஒருவேளை அது அவளுடைய கணவரின் கையில் போய் கிடைத்து விட்டால், எல்லா விஷயங்களும் பாழாகிவிடும்.


அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து, காத்திருப்பதுதான் மிகவும் நல்ல காரியமாக இருக்கும். குரோவ், வேலிக்கு அருகில் இங்கு மங்குமாக நடந்து கொண்டிருந்தான். ஒரு பிச்சைக்காரன் உள்ளே செல்வதையும் நாய்கள் அவனை நோக்கிப் பாய்ந்து வருவதையும் "குரோவ் பார்த்தான். ஒரு மணி நேரம் தாண்டியதும், பியானோவின் மெல்லிய சத்தம் தூரத்தில் கேட்டது. பெரும்பாலும் அன்னா ஸெர்ஜியேவ்னாதான் பியானோவை இசைத்திருக்க வேண்டும். திடீரென்று வாசல் கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான பெண் வெளியே வந்தாள். அவளுக்கு மிகவும் பின்னால் அவனுக்கு நன்கு அறிமுகமாகியிருந்த அந்த பாமரேனியன்... குரோவ் நாயை அழைக்க நினைத்தான். ஆனால், அதிக சந்தோஷத்தில் அதன் பெயர் ஞாபகத்தில் வரவில்லை. நடையைத் தொடரத் தொடர, அமைக்கப்பட்டிருந்த அந்த வேலியின்மீது அவனுக்கு வெறுப்பு உண்டாக ஆரம்பித்தது. இவ்வளவு நாட்களில் அன்னா ஸெர்ஜியேவ்னா தன்னை மறந்துவிட்டு, வேறு யாருடனாவது சேர்ந்து சந்தோஷத்தில் திளைத்துக்கொண்டிருப்பாள் என்றும் அவன் சிந்தித்தான். நாசம் பிடித்த ஒரு வேலியையே பொழுது புலரும் நேரத்திலிருந்து இரவு வரை பார்த்துக்கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் எந்தவொரு இளம்பெண்ணுக்கும் இயற்கையாகவே நடக்கக்கூடியதுதான் அது. அவன் திரும்பவும் ஹோட்டலுக்குச் சென்றான்.  என்ன செய்யவேண்டுமென்று தெரியாமல், நீண்ட நேரம் ஸோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான். அதற்குப் பிறகு உணவு சாப்பிட்டுவிட்டு நன்றாக உறங்கினான்.

"என்ன ஒரு முட்டாள்தனம்! எந்த அளவிற்கு கஷ்டத்தைத் தரும் விஷயம் இது!' தூக்கம் கலைந்து சாளரத்தைப் பார்த்தபோது அவன் நினைத்தான். சாயங்கால நேரம் ஆகிவிட்டிருந்தது. "எது எப்படி இருந்தாலும், நல்ல ஒரு உறக்கம் நடந்துவிட்டது. இனி இரவில் என்ன செய்வது?'

மருத்துவமனைகளில் பார்ப்பதைப் போன்ற விலை குறைவான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் உட்கார்ந்து, அவன் தன்னைத்தானே குற்றம் சுமத்திக்கொண் டான். "நாயுடன் வந்த பெண்... உன்னுடைய ஒரு சாகசச் செயல்... நன்றாக நடந்தது...'

காலையில் வந்து இறங்கியபோது, ஸ்டேஷனில் பெரிய எழுத்துகளில் பார்த்த சுவரொட்டி நினைவில் வந்தது. "கெய்ஷெ' என்ற ஆப்பராவின் முதல் இசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. நேராக அரங்கத்திற்குச் சென்றான். "முதல் நிகழ்ச்சிக்கு அவளும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது...'

அவன் மனதிற்குள் கூறிக் கொண்டான்.

அரங்கம் நிறைந்திருந்தது. கிராமப் பகுதிகளில் இருக்கும் அரங்குகளில் உள்ளதைப்போல தொங்கிக்கொண்டிருந்த விளக்குகளைச் சுற்றி மூடுபனி சூழ்ந்திருந்தது. காலரிகளில் பெரிய அளவில் ஆரவாரம் இருந்தது. முன் வரிசையில் ஊரிலிருக்கும் வாலிபர்களின் சத்தங்கள்... கவர்னரின் பாக்ஸில் முன் வரிசையில் கவர்னரின் மகள்... கவர்னர் திரைச்சீலைக்குப் பின்னால் கம்பீரமாக அமர்ந்திருந்தார். வெளியே கைகள் மட்டும் தெரிந்தன. நீண்ட நேரமாக ஆர்க்கெஸ்ட்ரா முழங்கிக் கொண்டிருந்தது. திரைச்சீலை விலகியது. இவ்வளவு நேரமும் பார்வையாளர்கள் வந்து கொண்டேயிருந்தனர். குரோவ் ஆர்வத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னா ஸெர்ஜியேவ்னாவும் வந்திருந்தாள். மூன்றாவது வரிசையில் அவள் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தபோது அவனுக்குத் தோன்றியது- "எனக்கு இந்த அளவிற்கு விருப்பமான, இந்த அளவிற்கு அதிக விலைமதிப்புள்ள வேறு எதுவுமே இல்லை. ஒரு கிராமப் பகுதியில் இருக்கும் பெண்களில் ஒருத்தியாக, பார்க்கவே சகிக்காத கண்ணாடியை மாட்டிக்கொண்டு, கூறிக்கொள்கிற அளவிற்கு சிறப்புத் தன்மைகள் எதுவும் இல்லாத இந்தப் பெண் என்னுடைய வாழ்க்கையில் நிறைந்து நின்று கொண்டிருக்கிறாள். நான் விருப்பப்படும் ஒரே ஒரு சந்தோஷமாக...' நன்றாக இருக்கிறது என்று கூறமுடியாத அளவிற்கு இருந்த ஆர்க்கெஸ்ட்ராவும், தரித்திரம் பிடித்த வயலின் சத்தமும் சேர்ந்து ஒலித்தபோதுகூட அவள் எந்த அளவிற்கு அழகாக இருக்கிறாள் என்பதை அவன் கனவு கண்டான்.

நல்ல உயரத்தைக் கொண்ட, குனிந்துகொண்டு நடக்கும், மீசை வளர்ந்திருக்கும் ஒரு மனிதர் அன்னா ஸெர்ஜியேவ்னாவின் அருகில் வந்து அமர்ந்தார். ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்போதும் அவர் தன் தலையை குனிந்தார். யால்ட்டாவிலேயே "கேடு கெட்ட மனிதன்' என்று அவள் சிறப்பித்துக் கூறிய அவளுடைய கணவர் ஒருவேளை அந்த ஆளாக இருக்கவேண்டும். அந்த மனிதரின் உயரமான தோற்றமும் வளைந்த மீசையும் சிறிய வழுக்கையும் "கேடுகெட்ட மனித'னின் கேடு கெட்ட விஷயங்களை வெளியே காட்டின.

அந்த மனிதனின் சிரிப்பு இனியதாக இருந்தது. பொத்தான்களை மாட்டும் ஓட்டைகளில், வெயிட்டர்களின் எண்களைப்போல வைத்திருந்த ஏதோ குறிப்பிட்ட பேட்ஜ்...

முதல் இடைவேளையின்போது அவளுடைய கணவர் புகை பிடிப்பதற்காக வெளியே சென்றார். அவள் அங்கேயே உட்கார்ந்திருந்தாள். குரோவ் அருகில் சென்று சிரமப்பட்டு மலரச் செய்த சிரிப்புடன், நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கூறினான்: “குட் ஈவ்னிங்...''

திரும்பிப் பார்த்த அவள் வெளிறிப் போய்விட்டாள். நம்பிக்கை வராமல், பயத்துடன் மீண்டும் பார்த்தாள். கையிலிருந்த விசிறியையும் கண்ணாடியையும் இறுகப் பிடித்துக்கொண்டு அவை கீழே விழாமல் பார்த்துக் கொண்டாள். இருவரும் மிகவும் அமைதியாக இருந்தனர்.

அவள் அமர்ந்திருக்கிறாள். அவன் நின்று கொண்டிருக்கிறான்.

அவளுடைய பதைபதைப்பைப் பார்த்து அவனுக்கு அருகில்போய் உட்கார தைரியம் வரவில்லை. வயலினும் புல்லாங்குழலும் ஒலிக்க ஆரம்பித்தன. அவளுக்கு பெரிய அளவில் பயம் உண்டானது. அரங்கிற்குள் எல்லாரும் தங்களையே பார்த்துக் கொண்டிருப்பதைப்போல அவளுக்குத் தோன்றியது. அவள் திடீரென்று எழுந்து கதவை நோக்கி நடந்தாள். அவன் அவளைப் பின்பற்றி நடந்தான். சுய உணர்வற்ற  நிலையில் நடப்பதைப்போல இருவரும் இடையிலிருந்த படிகளின் வழியாக நடந்தார்கள். பலவகையான சீருடைகள் அணிந்து பலதரப்பட்ட மனிதர்கள்- எல்லாரும் பேட்ஜ் அணிந்திருந்தார்கள்- கண்களுக்கு முன்னால் தோன்றி மறைந்தார்கள். அழகான பெண்களையும், கம்பிகளில் தொங்கவிடப்பட்டிருந்த உரோம ஆடைகளையும் மின்னலைப்போல அவன் பார்த்தான். நன்கு தெரிந்த புகையிலையின் வாசனை நிறைந் திருந்த காற்று முகத்தில் வந்து மோதியது! பலமாக இதயம் அடித்தபோது, குரோவ் நினைத்தான்:

"ஹோ! இந்த மனிதர்களும் ஆர்க்கெஸ்ட்ராவும் இங்கு இப்போது எதற்காக?'

எல்லாம் முடிந்துவிட்டது. இனி எந்தச் சமயத்திலும் தாங்கள் ஒருவரையொருவர் பார்க்கப் போவதில்லை என்று ஸ்டேஷனில் அன்னா ஸெர்ஜியேவ்னா விடைபெறும் நிமிடத்தில் நினைத்தது திடீரென்று மனதில் வலம் வந்தது. இறுதி என்பது இன்னும் எவ்வளவு தூரத்தில்?

"தியேட்டருக்கு...' என்று எழுதப்பட்டிருந்த படியில் அவள் நின்றாள்.

“என்னை பயமுறுத்தி விட்டீர்கள்...'' அதிர்ச்சி விலகாமல், வெளிறிப்போன முகத்துடன், மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டு அவள் கூறினாள்: “நான் மிகவும் பயந்து போய்விட்டேன். பாதி செத்தே போய்விட்டேன். ஏன் இங்கு வந்தீர்கள்?''

“ஆனால், அன்னா... என்னைப் புரிந்துகொள்.'' குரலைத் தாழ்த்திக் கொண்டு அவன் வேகமாகக் கூறினான்.


 “என்னைப் புரிந்துகொள்ள முயற்சி செய்...''

அவள் பயந்துகொண்டே, கெஞ்சுவதைப்போல முழுமையான அன்புடன் அவனையே பார்த்தாள். கூர்ந்து பார்த்தாள்- அந்த உருவத்தையே மேலும் ஆழமாக தன் மனதிற்குள் பதிய வைப்பதைப்போல.

“நான் எந்த அளவிற்கு கவலையில் இருக்கிறேன் தெரியுமா?'' அவனுக்கு செவியைக் கொடுக்காமல் அவள் சொன்னாள்: “இவ்வளவு நாட்களும் உங்களைத் தவிர நான் வேறு எதைப் பற்றியும் நினைத்ததே இல்லை. உங்களைப் பற்றிய நினைவுகளில்தான் நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனினும், நான் உங்களை மறக்கவேண்டும் என்று நினைக் கிறேன். மறப்பதற்கு முயற்சி செய்தேன்... நீங்கள் எதற்கு... நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?''

படிகளுக்கு மேலே இருந்த தளத்தில் இரண்டு மாணவர்கள் அவர்களையே பார்த்தவாறு, புகை பிடித்துக்கொண்டிருந் தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் குரோவ், அன்னா ஸெர்ஜியேவ்னாவைப் பிடித்து இழுத்து அருகில் கொண்டு வந்து அவளுடைய முகத்திலும் கன்னங்களிலும் கைகளிலும் முத்தமிட்டான்.

“நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்ன இது?''  பயத்துடன் கூறியவாறு அவள் அவனைத் தள்ளி விலக்கினாள். “உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இப்போது திரும்பிச் செல்லுங்கள். சீக்கிரமாகப் போங்கள். எல்லா புனிதர்களின் பெயரையும் கூறி நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்... இங்கே ஆட்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்!''

யாரோ படிகளில் ஏறி வந்துகொண்டிருந்தார்கள்.

“நீங்கள் இப்போது போயே ஆகவேண்டும்...'' அன்னா ஸெர்ஜியேவ்னா மெதுவான குரலில் கூறினாள்: “த்மித்ரி த்மித்ரிச், கேட்கிறீர்களா? நான் மாஸ்கோவிற்கு வருகிறேன். சந்தோஷம் என்ன என்பதை நான் அறிந்ததே இல்லை. இப்போது என்னுடைய நிலை மிகவும் பரிதாபமானது.

எனக்கு எந்தச் சமயத்திலும் சந்தோஷம் என்ற ஒன்று கிடைக்கப்போவதே இல்லை. என்னுடைய பொறுமையைச் சோதிக்காதீர்கள். மாஸ்கோவிற்கு வருகிறேன் என்று நான் உறுதிமொழி தந்தேன். இப்போது நாம் பிரிவோம். என் தங்கமான அன்பரே! இப்போது பிரிந்தே ஆகவேண்டும்!''

அவனுடைய கைகளை அழுத்திவிட்டு, அவள் அடுத்த நிமிடம் படிகளில் இறங்கிக் கீழே சென்றாள். இடையில் அவ்வப்போது திரும்பிப் பார்த்தபோது, அந்தக் கண்களில் இருந்த கவலையை அவனால் மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. குரோவ் மேலும் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தான். ஆசைகள் முழுவதும் அடங்கிய பிறகு, கோட்டை எடுத்துக்கொண்டு வெளியேறினான்.

4

ன்னா ஸெர்ஜியேவ்னா மாஸ்கோவிற்கு வந்து அவனைக் காண ஆரம்பித்தாள். மேலும் இரண்டோ மூன்றோ மாதங்கள் ஆகும்போது, டாக்டரைப் பார்க்கப் போவதாகக் கூறிவிட்டு அவள் எஸ்...ஸை விட்டுப் புறப்படுவாள். அவளுடைய கணவர் அவள் வார்த்தைகளை நம்பினார்.

இல்லாவிட்டால்... நம்பவில்லையா?

மாஸ்கோவில் ஸ்லாவியன்ஸ்கி பஜார் ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு, அவள் ஒரு சிவப்பு நிற தொப்பியணிந்த மனிதனை குரோவிடம் அனுப்பி வைப்பாள். அவன் வருவான். மாஸ்கோவில் யாருமே இந்த சந்திப்பைப்பற்றி தெரிந்திருக்கவில்லை.

இப்படியொரு குளிர்கால புலர்காலைப் பொழுதில் அவன் அவளைப் பார்ப்பதற்காக புறப்பட்டான். (முதல் நாள் இரவில் அவன் வீட்டில் இல்லாத வேளையில் அவனைத் தேடி ஆள் வந்திருந்தான்). அவனுடைய மகளும் அப்போது அவனுடன் இருந்தாள். போகும் வழியில் அவளை பள்ளிக்கூடத்தில் விடவேண்டும். பெரிய பெரிய துண்டுகளாக பனி பொழிந்து கொண்டிருந்தது.

“பனி விழுந்து கொண்டிருப்பதைவிட மூன்று டிகிரி வெப்பம் அதிகமாக இருக்கிறது. எனினும், பனி பெய்து கொண்டிருக்கிறது.''' அவன் தன் மகளிடம் கூறினான்: “பூமிப் பரப்பில் மட்டுமே வெப்பம் இருக்கிறது. காற்றின் மேல் தட்டுகளில் தட்ப வெட்பநிலை வேறு மாதிரி இருக்கும்!''

“குளிர்காலத்தில் ஏன் கடுமையான காற்று இல்லாமல் இருக்கிறது அப்பா?''

அதற்கான காரணத்தையும் அவன் விளக்கிச் சொன்னான்.

இதற்கிடையில் அவன் நினைத்துப் பார்த்தான். அவளைப் பார்க்கப் போகிறோம். ஒரு ஆளுக்குக்கூட தெரியாமல்... சொல்லப் போனால் எந்தச் சமயத்திலும் யாருக்கும் தெரியாது. இரண்டு வாழ்க்கைகள் இப்போது. ஒன்று, வெளிப்படையாகத் திறந்திருக்கும் வாழ்க்கை.. அக்கறை உள்ளவர்கள் எல்லாருக்கும் தெரிந்தது அது. வெளிப்படையான உண்மைகளும் திருட்டுத்தனங்களும் நிறைந்தது. மற்ற நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களின் வாழ்க்கையைப் போன்றதுதான் அதுவும். இன்னொரு வாழ்க்கை மிகவும் ரகசியமானது. உள்மனங்களின் உந்துதலின் மூலம் நடைபெறும் எதிர்பாராத செயல்கள்... மனதின் விளையாட்டு என்று கூறுவதைத் தவிர வேறு என்ன கூறமுடியும்? ஆத்ம வஞ்சனை செய்வதை வெளிக்காட்டாமல், அர்ப்பணிப்பும் அக்கறையும் கொண்ட, ஈடுபாடும் ஆர்வமும் உள்ள வாழ்வின் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் மற்றவர்களிடமிருந்து மறைந்திருக்கின்றன. திருட்டுத்தனங்கள் முழுவதும் உண்மையை மறைத்து வைப்பதற்கான தளங்களாக இருக்கின்றன- வங்கியில் பணி, க்ளப்பில் உரையாடல்கள், "கேடு கெட்ட இனம்' தத்துவம், கொண்டாட்டங்களில் மனைவியுடன் சேர்ந்திருக்கும் பங்குபெறல்- அனைத்தும் முழுமையாகத் திறந்திருக்கின்றன. அவன் தன்னுடைய நிலைமைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களையும் அளந்து பார்த்தான். வெளியே பார்த்தது எதையும் நம்பாமல், எல்லா மனிதர்களின் உண்மையான முகம்- அதாவது அவர்கள் விருப்பப்படும் விஷயங்கள் ரகசியத்தின் மூடிக்குள்ளும் இரவின் மறைவிலும்தான் இருக்கின்றன என்று அவன் நினைத்தான். தனி மனிதர்களின் வாழ்க்கைகள் அனைத்தும் ரகசியங்கள் நிறைந்தனவே. ஒருவேளை அந்தக் காரணத்தால்தான் இருக்கவேண்டும்- உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதன் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி அந்த அளவிற்கு பதைபதைப்பு கொண்டவனாக இருக்கிறான்.

தன் மகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, குரோவ் ஸ்லாவியன்ஸ்கி பஜாருக்குச் சென்றான். கீழே இருந்தபோதே உரோமத்தாலான ஆடையைக் கழற்றிவிட்டு மேல் தளத்திற்குச் சென்று கதவை மெதுவாகத் தட்டினான் பயணம் மற்றும் எதிர்பார்த்துக் காத்திருந்தது ஆகியவற்றின் காரணமாக வெறுத்துப் போயிருந்த அன்னா ஸெர்ஜியேவ்னா, அவனுக்கு மிகவும் பிடித்த ஊதா நிற ஆடையை அணிந்து முந்தைய நாள் சாயங்காலத்திலிருந்து எதிர்பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் மொத்தத்தில் வெளிறிப்போய் காணப்பட்டாள். நேராகப் பார்த்து சற்று சிரிக்கக்கூட செய்யாமல், அறைக்குள் நுழைந்தவுடன், அவள் அவனுடைய நெஞ்சின் மீது சாய்ந்தாள். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு சந்திப்ப தைப்போல, உணர்ச்சிவசப்பட்டு, வெறியுடன் அவர்கள் ஒருவரையொருவர் முத்தமிட்டுக் கொண்டார்கள்.

“நீ அங்கு எப்படி வாழ்கிறாய்?'' அவன் கேட்டான்: “அங்கு என்ன விசேஷம்?''

“நான் எல்லாவற்றையும் கூறுகிறேன். என்னால் பேச முடியவில்லை.'' அவள் அழுதாள். எதுவும் பேச இயலவில்லை. முகத்தைத் திருப்பிக் கொண்டு, துவாலையால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

"பாவம்... எவ்வளவு நேரம் அழத் தோன்றுகிறதோ, அவ்வளவு நேரம் அழட்டும். நான் காத்திருக்கிறேன்' என்று மனதில் நினைத்த குரோவ், நாற்காலியில் போய் உட்கார்ந்தான். ஒரு தேநீர் கொண்டு வரும்படிக் கூறினான்.


குரோவ் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது, அவள் சாளரத்தின் அருகில் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்தாள். வாழ்க்கை இந்த அளவிற்கு கடினமாக இருக்கிறதே என்பதை நினைத்து அவள் அழுது கொண்டிருந்தாள். திருடர்களைப்போல மனிதர்களிடமிருந்து மறைந்துகொண்டு ரகசியமாகத்தான் பார்க்க வேண்டும்!'' வாழ்க்கை துயரமாகிவிட்டதே!

“ம்... போதும்!'' குரோவ் கூறினான்.

இந்த உறவு உடனடியாக முடிந்துவிடப் போவதில்லை என்று உறுதியாக அவனுக்குத் தெரிந்திருந்தது. அன்னா ஸெர்ஜியேவ்னா அவனுடன் மேலும் மேலும் நெருங்கிவந்தாள். வழிபடுகிறாள். என்றாவதொருநாள் இவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவளிடம் கூறுவது இயலாத ஒன்றாகத் தோன்றியது. கூறினாலும், அவள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாள்.

எதையாவது கூறி சந்தோஷப்படுத்தலாம் என்று எண்ணி மெதுவாக அருகில் வந்து அவளுடைய தோளில் கையை வைத்து அவளை அவன் சுற்றி அணைத்தான். அந்த நிமிடம் நீலநிறக் கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய உருவத்தை அவன் கூர்ந்து கவனித்தான்.

தலைமுடி நரைக்க ஆரம்பித்திருந்தது. கடந்த சில வருடங்களில் அவன் கிழவனாக ஆகிவிட்டிருக்கிறான்.

அவனுடைய கைகளுக்குக் கீழே சதைப்பிடிப்பான தோள்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. அந்த வாழ்க்கையுடன் அவனுக்கு இனம்புரியாத ஈர்ப்பு உண்டானது. இப்போதும் அழகானதாகவும், ஆர்வத்தைத் தூண்டக் கூடியதாகவும் அது இருந்தது. ஆனால், அதுவும் வெகுசீக்கிரமே தன்னுடைய வாழ்க்கையைப்போல மங்கலாக ஆரம்பிக்கும் என்று அவனுக்குத் தெரியும். என்ன காரணத்திற்காக அவள் இப்படி அன்பு வைத்திருக்கிறாள்? அவன் எப்படி இருக்கிறானோ, அப்படி அல்ல பெண்கள் அவனைப் புரிந்துகொண்டிருப்பது. அவர்கள் காதலித்தது அவனை அல்ல. அவர்களுடைய மனதில் கற்பனை செய்து வைத்திருக்கும் மனிதனை... வாழ்க்கை முழுவதும் தேடிக்கொண்டிருந்த ஒருவனை... பிறகு அந்த தவறைப் புரிந்து கொண்டபோது... அப்போதும் அந்தக் காதல் அதே மாதிரிதான் இருக்கிறது. ஒருத்திகூட அவனுடன் இருந்தபோது சந்தோஷமடைந்ததில்லை. காலம் கடந்து போய்விட்டது. அவர்கள் பலருடனும் பழக்கமானான், நெருங்கினான், பிரிந்தான். ஆனால், எந்தச் சமயத்திலும் அவன் ஒருமுறைகூட காதலித்தது இல்லை. வேறு என்ன பெயர் கூறி குறிப்பிட்டாலும், அவனுடையது காதலாக இல்லை.

முடி நரைத்தபிறகு, இப்போதுதான் அவன் வாழ்க்கையில் முதல் முறையாக உண்மையான காதலில் கால்வைக்கிறான்.

அன்னா ஸெர்ஜியேவ்னாவும் குரோவும் கணவன்- மனைவி யைப்போல, உயிர் நண்பர்களைப்போல ஒருவரையொருவர் காதலித்தார்கள். ஒருவரையொருவர் காதலிப்பதற்காக என்றே விதி தனி கவனம் செலுத்தி அவர்களைப் படைத் திருக்கிறது என்பதைப்போல அவர்களுக்குத் தோன்றியது. கடந்த காலத்தில் வெட்கப்படத்தக்கவை என்று நினைத்த அனைத்தையும் அவர்கள் இருவரும் ஏற்றுக்கொண்டார்கள். இப்போது இருப்பவை அனைத்தையும் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்தக் காதல் தங்களை முழுமை யாக மாற்றிவிட்டிருக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள்.

முன்பு கவலை தோன்றும்போது, அவனுடைய மனம் ஒவ்வொரு காரணமாகக் கண்டுபிடித்துக்கொண்டிருந்தது. ஆனால், இப்போது அவன் காரணங்களைப் பற்றி நினைப்பதில்லை. ஆழமான காதல்... இரக்கம்... இனிமேலும் திருட்டுத்தனங்கள் தேவையில்லை...

“அழுதது போதும், குழந்தை...'' அவன் சொன்னான்: “ஒரு ஆயுளுக்குத் தேவையான அளவுக்கு நீ அழுதுவிட்டாய். இனி போதும்... நாம் சிறிது பேசுவோம். ஏதாவதொரு வழியை யோசிப்போம்...''

அவர்கள் ஆலோசனைகளில் மூழ்கினார்கள். இந்த வஞ்சனைக்கும், ரகசியத்திற்கும் ஒரு முடிவு கண்டுபிடிக்க வேண்டும். நீண்ட நாட்கள் ஒருவரையொருவர் சந்திக்காமல், இரண்டு நகரங்களில் தனித்தனியாக வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முடிவு உண்டாக்க வேண்டும். தாங்கிக்கொள்ள முடியாத அந்த உறவுகளிலிருந்து எப்படி விடுதலை பெறுவது?

“என்ன வழி?'' தலையில் கைகளை அழுத்தி வைத்துக்கொண்டு தாங்கமுடியாத நிலையில் அவன் கூறினான்: “என்ன செய்வது?''

எல்லா விஷயங்களுக்கும் மேலும் தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது. சிறிது நேரத்திற்குள் ஏதாவதொரு வழி கிடைக்கும்... மிகவும் அழகான ஒரு புதிய வாழ்க்கை ஆரம்பமாகும்... இனி... முன்னால் இருப்பது நீண்ட நெடிய பாதை. அதன் ஆபத்தான கட்டம் இப்போது ஆரம்பமாகப் போகிறது. அவ்வளவுதான்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.