Logo

மனைவியின் மகன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6908
manaiviyin magan

ர்ப்பமாக இருந்த திருமணமாகாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். உண்மையாகவே அது ஒரு தையரிமான செயல்தான். அவர் அப்படியொரு காரியத்தைச் செய்ததற்கு அவருடைய புத்திசாலித்தனமே காரணம். வேறு ஏதாவதொரு பெண்ணுடன் அவர் உறவு கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

கேட்டால் தான் ஒரு உத்தமி என்று அவள் சொல்வாள். அவளை அப்போது நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவள் சொல்வது சரியா, தவறா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இங்கு ஒரு பெண்ணின் தவறு தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தன்னை முட்டாளக்கவில்லை என்பதை உண்மையாகவே இந்த விஷயத்தில் நம்பலாமே!

அந்தத் தாம்பத்திய வாழ்க்கை பலரும் ஏற்றுக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஜானகி அம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை மீது பத்மநாபப்பிள்ளையால் பாசம் செலுத்த முடியாது. அந்தக் குழந்தையை அவருடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி யாரும் பேசக்கூடாது. அது மட்டுமல்ல... அந்தக் குழந்தையை அவரிடம் காட்டாமலேயே இருந்தால்கூட அது நல்ல விஷயம்தான். அப்படி அவர் நடந்து கொண்டதுகூட ஒருவிதத்தில் நியாயமானதுதான். ஜானகி அம்மா அதற்கு ஒப்புக் கொண்டாள். அந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அந்த வீட்டில் வைத்தே வளர்க்கலாம். அந்தக் குழந்தை மீது ஜானகி அம்மா அன்பு செலுத்துவதைத் பற்றி எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஜானகி அம்மா செய்த தவறு காரணமாக பத்மநாபப் பிள்ளை அவள் கவலைப்படுவது மாதிரி நடக்க மாட்டார். அந்தத் தவறு யாரால் நடந்தது, எப்படி நடந்தது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் சாதாரண ஆர்வம் கூட அவரிடம் இல்லை என்பதே உண்மை. ஜானகி அம்மா அவர் மீது அன்பு செலுத்த வேண்டும்; அவரை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவரின் மனைவியாக நடந்து கொள்ள வேண்டும். தான் இதுவரை எந்த ஒரு ஆணையும் காதலித்ததில்லை என்று அவர் கேட்காமலே ஜானகி அம்மா சத்தியம் பண்ணிச் சொன்னாள்.

கடைசியில் ஒரு வீடு உருவாக்கப்பட்டது. நவநாகரீக பாணியில் அமைந்த ஒரு பங்களா அது. அந்த வீட்டில் எதற்கும் எந்தக் குறையும் இல்லை. பத்மநாபப் பிள்ளையிடம் ஏராளமான பணம் இருந்தது.

ஜானகி அம்மா வர்ணிக்க முடியாத அழகைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி, சிவந்த அதரங்கள், பதினேழு வயது. அவளை யாராக இருந்தாலும் ஒருமுறை கட்டாயம் பார்ப்பார்கள். அவளின் சோகம் கலந்த புன்னகையில்கூட வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு கவர்ச்சி இருக்கவே செய்தது. அவளின் பெரிய கண்களில் ஒரு சோகம் எப்போதும் நிழலாடிக் கொண்டே இருக்கும்.

மாலை நேரத்தில் குளித்து, கூந்தலை வாரி முடித்து முடிச்சிட்டுப் பின்னால் போட்டவாறு சுவருக்கு அப்பால் அவள் பார்த்துக் கொண்டிருப்பதை பத்மநாபப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பார். உண்மையாகவே அவள் பேரழகிதான்! ஒரு அபூர்வமான படைப்பு தான்! ஆனால், அவளுடைய வயிறு சற்று வீங்கியிருப்பதைப் பார்த்து நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைப் போல அவருடைய கோபம் மனதிற்குள்ளேயே கனன்று கொண்டிருக்கும். அந்த வயிற்றுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது! ஒரு பெரிய ரகசியத்தை அவள் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்!

அந்த வீட்டிற்கு அவருடைய நண்பர்களும் உறவினர்களும் வருவதுண்டு. அவர்களுக்குத் தன்னுடைய மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவர் ஒரு முட்டாளைப் போல நெளிவார். செயற்கையான ஒரு சிரிப்பை விருப்பமேயில்லாமல் வரவழைத்துக் கொண்டு சிரிப்பார். சொல்லப்போனால் அந்த மாதிரியான நேரங்களில் அவர்களிடமிருந்து சற்று விலகி நிற்க அவர் முயற்சிப்பார். அவரையும் மீறி ஏதாவது அவர்களுக்கு விளக்கிச் சொல்ல அவருடைய நாக்கு முயற்சிக்கும். அதே நேரத்தில், அப்படி ஒரு சூழ்நிலை உண்டாகாமல் கட்டுப்படுத்துவது எப்படி என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.

வருபவர்களெல்லாம் ஜானகி அம்மாவின் வயிற்றை உற்று பார்ப்பார்கள். வயிற்றை நன்கு மூடி வைக்கும்படி அவளைப் பார்த்து சொன்னால் என்ன என்று அவர் நினைப்பார். பின்னர் வேண்டாம் என்று விட்டு விடுவார். வீங்கிப் போயிருக்கு வயிற்றை யாரும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று ஜானகி அம்மாவும் அதற்கேற்றபடி உடை உடுத்தத்தான் செய்கிறாள். எனினும், அது வெளியே தெரியத்தான் செய்கிறது!

மாலை நேரத்தில் வெளியே செல்லும்பொழுது ஜானகி அம்மாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றால் என்ன என்று அவர் நினைப்பார். ஆனால், அந்த வீங்கிப் போயிருக்கும் வயிற்றை நினைத்து அவர் பேசாமல் இருந்து விடுவார். அது உண்மையிலேயே அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத ஒன்றுதான். அந்த வயிற்றையேதான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!

அந்த வயிறு வீக்கம் ஒருநாள் இல்லாமற் போகத்தானே போகிறது என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக் கொள்வார். அதற்குப்பிறகு அவளை யாரிடம் வேண்டுமென்றாலும் எந்தவித தயக்கமும் இன்றி அவர் காட்டலாம். விருந்திற்குப் போகலாம். மாலை நேரத்தில் வெளியே செல்லும்போது அவர் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லலாம். குறைவே இல்லாத ஆவேசம் நிறைந்த இறுக்கமான அணைப்பையும் முத்தத்தையும் அப்போதுதான் அவள் எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்த விஷயங்களையெல்லாம் ஜானகி அம்மாவிடம் கூறுவதற்கு அவரிடம் தைரியமில்லை.

ஜானகி அம்மா அவர் சொன்னதைக் கேட்டு நடக்கும் நல்ல மனைவியாக இருந்தாள். உரத்த குரலில் அவள் பேசுவதில்லை. வெளியே தெரியும்படி சிரிப்பதும் இல்லை. அடக்கமும் ஒடுக்கமும் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள். அவளாக எந்தச் சமயத்திலும் அவரை நெருங்கிப் போவதில்லை. அவர் அழைத்தால் மட்டுமே அவள் போய் நிற்பாள். அப்படியே அவர் அழைத்தாலும் அவள் அவருடன் ஒட்டிக்கொண்டு நிற்பதில்லை. சிறிது இடைவெளிவிட்டே நிற்பாள். அந்த அழைப்பைக் காது கொடுத்துக் கேட்பது ஒரு மனைவி கேட்பதைப் போல் அல்ல. அவருக்கு அருகில் இருக்கும்போது கூட எதுவும் பேசாமல் மணிக்கணக்கில் அவள் இருப்பாள். தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவள் கேட்பதேயில்லை. தன்னுடைய கருத்து இதுதான் என்று கூட அவள் எதைப் பற்றியும் கூறுவதில்லை. அவள் உண்மையில் மனதில் நினைத்து கொண்டிருப்பது தான் என்ன?

இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினைந்தாம் தேதி பொழுது புலர்ந்ததிலிருந்து ஜானகி அம்மா செயல்பட முடியாத நிலையில் இருந்தாள். எனினும், அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.


பத்மநாபப் பிள்ளைக்கு அது புரிந்துவிட்டது. பிரசவ வேதனை... ஆனால், அவர் எதுவும் கேட்கவில்லை. அப்படியே பகல் முழுவதும் ஓடிவிட்டது. இரவில் ஜானகி அம்மா பரிதாபப்படும் வண்ணம் முனகியவாறு அழுது கொண்டிருந்தாள். அப்போதும் அவள் உடம்பிற்கு என்ன என்று பத்மநாபப் பிள்ளை கேட்கவில்லை. ஜானகி அம்மாவும் தனக்கு என்ன என்பதைக் கூறவில்லை.

 

மறுநாள் காலையில் ஜானகி அம்மா ஒரு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்துக் கொண்டாள். என்ன செய்வதென்று தெரியாமல் இப்படியும் அப்படியுமாக பதமநாபப் பிள்ளை நடந்து கொண்டிருந்தார். அவர் அப்படி நிலை கொள்ளாமல் நடந்து கொண்டிருந்ததற்குக் காரணம் மனைவி படும் கஷ்டத்தைப் பார்த்ததால் உண்டான மனக்கவலை அல்ல. அவளுக்கு ஏதாவது நடக்கக்கூடாதது நடந்து விடுமோ என்ற உள்மன எண்ணமல்ல. வேறு ஏதோ ஒரு காரணம்! பக்கத்து அறையிலிருந்து முனகல் சத்தமும், அழுகையும் கேட்டுக் கொண்டேயிருந்தது.

ஜானகி அம்மாவின் வயிறு படிப்படியாக வீங்கிக் கொண்டிருந்ததால் உண்டான மனக்கவலைக்கு அன்று வடிவம் கிடைத்தது. அவளின் வயிற்றுக்குள் இருப்பது ஒரு குழந்தை என்ற அறிவு, ஒரு குழந்தை உயிருடன் பிறக்கப்போகிறது என்ற செய்தியாக மாறியது. எல்லாமே நாசமாகி விட்டது! அவள் குழந்தையைப் பெற்றெடுக்கப் போகிறாள்! அத்துடன் அந்த ரகசியம் இறந்துவிடப் போவதில்லை. அந்த ரகசியம் வடிவமெடுத்து இப்போது வெளியே வருகிறது! முடிந்து போன அந்தச் சம்பவங்களை அவள் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்க்கப் போகிறாள். அவள் அந்தக் குழந்தை மீது மிகுந்த பாசத்தைச் செலுத்துவாள்!

பிறந்து வெளியே வந்த ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டது. அது ஒரு மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் என்பதைப் போல அவரின் காதுகளில் முழங்கியது.

அது இறக்கப்போகும் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தமல்ல. அது ஒரு கெட்ட சம்பவமுமல்ல. வாழ்வதற்கான உரிமை தனக்குக் கிடைத்துவிட்டது என்பதை அழுகை மூலம் அந்தக் குழந்தை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துகிறது. அந்த அழுகையின் மூலமாக அது ‘நான் வாழ்வேன்’ என்பதை உரத்த குரலில் கூறுகிறது!  அந்த வீடு முழுவதும் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. அதைக் கேட்டு பத்மநாபப் பிள்ளை நடுங்க ஆரம்பித்தார்.

அன்று வரை அந்தக் குழந்தை உயிருடன் இருக்கும் என்று அவர் மனதில் நினைத்திருக்கவேயில்லை. அவளின் ரகசியம் யாருக்கும் தெரியாமல் அப்படியே மறைந்துவிடும் என்றுதான் அவர் எண்ணியிருந்தார். அந்தக் குழந்தை இப்போது உள்ளே காலையும் கையையும் பலமாக ஆட்டிக் கொண்டிருக்கிறது. அது இனிமேலும் வளரும். சிரிக்கும். அழும். தனக்கு வேண்டிய உரிமையைக் கேட்கும். பற்களைக் கடிக்கும். அவன் அன்பு செலுத்துவான். வெறுப்பான். அவளை அவனுடைய தாய் பாசமாகக் கொஞ்சுவாள். வளர்ப்பாள். தன்னுடைய தாம்பத்திய உறவு அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் அமைந்தபோது, அவனுடைய தாய் தனக்குப் பிறக்கும் குழந்தை மீது அன்பு செலுத்துவதையும் வளர்ப்பதையும் பற்றி அவர் நினைக்கவில்லை. இப்போது அப்படியொரு காரியம் நடக்கப் போகிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது. நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றும் தன்னை ஏமாற்றி விட்டன என்று அவர் நினைத்தார். அப்படி அந்தக் குழந்தை படிப்படியாக வளரும் பொழுது அவனுக்கு ஒரு தந்தை இருப்பான். அவன் வருவான். தன்னுடைய மகனைத் தேடி வருவான்... அவன் தன் தந்தையை நோக்கி கையை நீட்டுவான். அவன் கையை நீட்டி தன்னுடைய கழுத்தைப் பிடித்து நெரித்து மூச்சு விடாமல் செய்து தன்னைக் கொல்லப்போவது உறுதி என்று அவர் மனம் சொல்லியது. அப்படியொரு சம்பவம் கட்டாயம் நடக்காது என்று என்ன நிச்சயம்?

பைத்தியம் பிடித்த நிலையில் அவர் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார்.

அந்த வீட்டின் வடகிழக்கு மூலையில் தனியாக ஒரு அறை இருந்தது. அந்த அறையில்தான் எப்போதும் ஜானகி அம்மா இருப்பாள். அங்குதான் அவளின் முழு மகிழ்ச்சியும் இருந்தது. அந்த ஒப்பந்தப்படி அந்தக் குழந்தை மீது பாசம் செலுத்துவதற்கும் அதை வளர்ப்பதற்கும் அவளுக்கு உரிமை இல்லையா என்ன?

பொதுவாகவே பத்மநாபப் பிள்ளை விரும்பாத ஒரு விஷயமாக இருந்தது அது. எப்படி அந்த அறையிலிருந்து அவளை அகற்றுவது? பத்மநாபப் பிள்ளைக்கு ஒரு வழியும் தோன்றவில்லை.

அங்கிருந்து அவளை வெளியே வரும்படி அழைத்தால் என்ன? இனிமேல் அந்த அறைக்குள் அவள் செல்லக்கூடாது என்று சொன்னால் என்ன? இப்படிப் பல விதங்களிலும் மனதைப் போட்டு குழப்பிக் கொண்டிருந்தார். ஆனால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. காரணமே இல்லாமல் அவர் கோபப்பட ஆரம்பித்தார். கண்ணில் படுபவர்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்டினார். அப்போதும் அவரின் விருப்பப்படி நடக்கக்கூடிய ஒரு மனைவியாக ஜானகி அம்மா இருந்தாலும், அந்தத் தாய் தன் குழந்தையுடன் பத்மநாபப் பிள்ளை உள்ளே நுழையமுடியாத ஒரு உலகத்தில் இருந்தாள். அவளுக்கு விருப்பமான வேலைகள் பல இருந்தன.

பதினான்கு மாதங்கள் ஓடிவிட்டன. ஒருநாள் காலையில் முன்பு இருந்ததைப் போலவே, ஜானகி அம்மா வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். பத்மநாபப் பிள்ளை உடனடியாக டாக்டரையும் ஆயாக்களையும் அழைத்து வரும்படி ஆளை அனுப்பினார். அந்த அறைக்குள் முனகல் சத்தமும் அழுகையும் கேட்டுக் கொண்டிருந்தன. ஒவ்வொரு நிமிடமும் கவலையை உண்டாக்கக் கூடியதாக நகர்ந்து கொண்டிருந்தது. ஏன் தாமதம்? மனம் நிலைகொள்ளாமல் தவிக்க டாக்டரிடம் குழந்தைத்தனமான கேள்விகளை அவ்வப்போது கேட்டு அவர்களை எரிச்சலடையச் செய்து கொண்டிருந்தார் பத்மநாபப்பிள்ளை. அவர் ஆயிரம் கடவுள்களை வழிபட்டார். மனமுருகி பிரார்த்தனை செய்தார். பிரசவ வலி இந்த அளவுக்குக் கடுமையானதாக இருக்கும் என்பதை அப்போதுவரை அவர் அறிந்ததில்லை.

கவலை நிறைந்த கனமான நிமிடங்கள் கடந்த பிறகு, ஒரு குழந்தையின்அழுகைச் சத்தம் கேட்டது. என்ன மென்மையான மனதை இளகச் செய்யக்கூடிய அழுகை இது...! ‘என்னை வளர்க்கணும்...’ என்று அது கேட்டுக் கொள்வதைப்போல அவருக்குத் தோன்றியது. பொறுமை இல்லாமல் பத்மநாபப் பிள்ளை டாக்டரை அழைத்துக் கேட்டார் : ‘‘என்ன குழந்தை?’’

‘‘ஆண் குழந்தை!’’

அங்கு அன்று ஒரு திருவிழா கொண்டாட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சிறுவர் - சிறுமிகள் பலரையும் அழைத்து அவர் பழங்களும், இனிப்பும் வழங்கினார். குழந்தையைக் குளிப்பாட்டி வெளியே எடுத்துக் கொண்டு வந்தபோது அவர் அவனைத் தன் கையில் வாங்கியபடி சொன்னார் : ‘‘திருட்டுப்பய! அப்பனை எப்படியெல்லாம் பயமுறுத்திட்டான்!’’


அவனை முழுமையான வியப்புடன் அவர் பார்த்துக் கொண்டேயிருப்பார். அவன் கைகளையும் கால்களையும் ஆட்டியவாறு தன்னைப் பார்ப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பது அவருக்கு மகிழ்ச்சியான ஒரு அனுபவமாக இருந்தது. அவனுடைய பிரகாசமான சிறு கண்களில் ஆயிரமாயிரம் மோகனக் கனவுகள் தெரிவதை அவர் பார்த்தார். அந்தச் சிறு உதடுகளில் அரும்பிய அழகான புன்னகையைப் பார்த்த நாள் அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக இருந்தது. அவன் சிரித்துக் கொண்டே ‘ங்க...’ என்று சொன்னபோது சந்தோஷத்தால் குதிக்க வேண்டும் போல் இருந்தது பத்மநாபப் பிள்ளைக்கு. அவன் குப்புறக் கவிழ்ந்து படுத்தபோது, அவர் பதைத்துப் போய் விட்டார்.

அவனுக்கு அவர் கோபகுமாரன் என்று பெயரிட்டார். கோபன் சிறிது கூட அழக்கூடாது. அவன் உடம்புக்கு சிறு வலிகூட உண்டாகக் கூடாது. அவனைத் தரையில் விழக்கூடாது... இப்படி பல விஷயங்களைச் சொன்னார் அந்தத் தந்தை. அந்த வீட்டில் தாய் குழந்தைகளை வளர்க்கக் கூடிய ஒரு இயந்திரமாக மாறிவிட்டிருந்தாள்.

பத்மநாபப் பிள்ளை நினைக்க விரும்பாத விஷயங்களை நினைத்துப் பார்க்காமல் இருக்க அந்தக் குழந்தை மிகவும் உதவியாக இருந்தது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் குழந்தை பிறந்ததன் மூலம் இன்னொரு காரியமும் நடந்தது. ஜானகி அம்மா இப்போது பிறந்திருக்கும் குழந்தையையும் வளர்த்தாக வேண்டிய நிலையில் இருந்தாள். அதனால் அவள் முன்பு இருந்த அறையிலேயே எப்போதும் இருக்க முடியாது. அவள் அந்த அறைக்கு எப்போதாவது ஒருமுறைதான் செல்ல முடியும். அந்த விஷயம் பத்மநாபப்பிள்ளைக்கு ஒருவகையில் நிம்மதியைத் தந்தது. புதிது புதிதாக பல கட்டளைகளைப் போட்டு அவர் ஜானகி அம்மாவை கோபகுமாரனிடமிருந்து சிறிதுகூட அகலாமல் பார்த்துக் கொண்டார்.

2

ருநாள் பத்மநாபப் பிள்ளை வீட்டிற்கு வந்தபோது தன் மகன் கோபனின் வெளுத்த உடலில் ஒரு சிறு கீறல் இருப்பதைப் பார்த்தார். அதை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பிரபாவின் அதாவது ஜானகி அம்மாவின் மூத்த மகனின் விரல் அறியாமல் உண்டாக்கிய கீறலே அது. கோபன் தாயின் மடியில் உட்கார்ந்திருந்தான். நான்கு கால்களில் தவழ்ந்து கொண்டிருந்த பிரபா தன் தாயின் மடியில் ஏறினான். அந்த இரண்டு குழந்தைகளும் உற்சாகமடைந்து ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது எப்படியோ பிரபாவின் விரல் நகம் கோபனின் உடலில் ஒரு கீறல் போட்டு விட்டது.

ஜானகி அம்மா நடந்த இந்த விஷயத்தை பத்மநாபப் பிள்ளையிடம் விவரித்துச் சொன்னாள். அதைக் கேட்டு அவரின் கோபத்தால் சிவந்து விட்டது. சிறிது நேரம் கழித்து இல்லத் தலைவனின் அதிகாரத்துடன் அவர் கேட்டார்: ‘‘இங்க பாரு! அந்தப் பையனை அந்த அறையில வச்சு வளர்க்கணும்னு நான் ஏன் சொன்னேன்றதுக்கான காரணம் இப்போ தெரியுதா?’’

அந்த அளவிற்கு மிடுக்குடன் பத்மநபாப் பிள்டைள பேசி அவன் கேட்டதேயில்லை. அவர் குரலில் கடுமை அதிகமாகத் தெரிந்தது. அவருக்கு அப்படிக் கேட்பதற்கு உரிமை இருக்கிறது. ஜானகி அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. பத்மநாபப் பிள்ளை அதே அதிகார மிடுக்குடன் தொடர்ந்து சொன்னார்:

‘‘அந்தக் குழந்தைகளை ஒண்ணா சேர்ந்து விளையாட விட வேண்டாம். அது ஒரு பிசாசு. என் குழந்தையை அது கொன்னுடும். அவன் அங்கேயே வளரட்டும். இங்கே அவன் வரக்கூடாது. என் குழந்தையை அங்கே நீ கொண்டுபோகக் கூடாது. புரியுதா?’’

ஜானகி அம்மா அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. ‘‘புரியுதா?’’ என்று பத்மநாபப் பிள்ளை மீண்டும் கேட்டார். அப்போது அவளுடைய கண்கள் கலங்கி விட்டன. உயிர்ப்பே இல்லாத குரலில் ஜானகி அம்மா ‘‘ம்...’’ என்றாள்.

‘‘சரி... எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சுக்கோ.’’

ஜானகி அம்மா நீண்ட நேரம் அழுது கொண்டேயிருந்தாள்.

அந்தக் குழந்தைகள் ஒன்று சேர்ந்து வளர்ந்தால் என்ன? அவர்கள் ஒரே இடத்திலிருந்து வந்தவர்கள்தானே? பிறகு ஏன் தெய்வம் அவர்களை ஒன்றாக வளரக்கூடாது என்று தடுக்கிறது?

கண்ணீர் அருவியென வழிய அந்தத் தாய் தன்னுடைய மூத்த மகனை முத்தமிட்டாள். கோபனை மிகவும் அக்கறையெடுத்து பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்வது மட்டுமே பத்மநாபப் பளி¬ளைக்கு சந்தோஷம் தரக்கூடியது. அதைத்தான் செய்யவேண்டும் என்று ஜானகி அம்மா கட்டாயப்படுத்தப்படுவதற்கான காரணமும் அதுவே. அவரின் விருப்பப்படி நடப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி இல்லை. பிரபா-பாவம் செய்த குழந்தை! அவள் அந்த அறையின் கதவு, ஜன்னல் எல்லாவற்றையும் மூடி அதற்குள் அவனை அடைத்து வைப்பாள். அவன் அதற்குள் எப்படியோ இருந்து கொள்வான்!

பிரபா அழவில்லை. அழக்கூடாது. எந்தவித சத்தமும் போடவில்லை. சத்தம் போடக்கூடாது. இப்படித்தான் அவன் வளர்ந்தான். இப்படி ஒரு குழந்தை அங்கு இருக்கிறான் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. பிரதான கட்டிடத்தைத் தாண்டி சற்று தூரத்தில் பத்மநாபப் பிள்ளை அந்தச் சிறிய கட்டடத்தைக் கட்டியிருந்தார். ஒரு நிரந்தர நோயாளியைப் போல பிரபாவை அங்கு இருக்க வைத்திருந்தார் அவர். தான் சொன்னபடி அவன் இந்தப் பக்கம் எந்தக் காரணத்தைக் கொண்டும் வரக்கூடாது என்று கடுமையான குரலில் ஜானகி அம்மாவிடம் சட்டம் போட்டிருந்தார் பத்மநாபப் பிள்ளை.

கேட்கக்கூடாத, பதில் தெரியாத எத்தனையோ கேள்விகளை பத்மநாபப் பிள்ளை கேட்க நினைத்தார். பிரபா யாருடைய மகன்? அவன் எப்படி உண்டானான்? அவனுடைய தாய் யாரையாவது காதலித்தாளா? ஒரு தந்தையால் தன்னுடைய மகனைப் பார்க்காமல், அவன் மீது அன்பு செலுத்தாமல் இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல ஒருத்தியால்தான் முடியும். ஆனால், அவள் பதில் சொல்லமாட்டாள். அதனால் கேட்காமல் இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

பிரபா யாருடைய சாயலில் இருக்கிறான் என்று பத்மநாபப் பிள்ளை பல நேரங்களில் யோசித்துப் பார்ப்பார். கறுத்து தடிமனாக இருக்கும் உடல், உருண்டையான கண்கள், அகலம் குறைவாக இருக்கும் நெற்றி, அடங்காமல் எழுந்து நிற்கும் தலைமுடி- அப்படிப்பட்ட ஒரு ஆளை அவர் தேடிக் கொண்டிருந்தார். கோவிலில் இருக்கும் ஆலமரத்திற்குக் கீழே பக்தனான ஒரு நாடோடி மனிதன் பிரபாவை முதுகில் ஏற்றி விளையாடிக் கொண்டிருப்பதை அவர் ஒரு முறை பார்த்தார். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார்.

அந்த வீட்டிற்கு முன்பக்கம் எங்கிருந்தோ வந்து எங்கோ போகக்கூடிய ஒரு பெரிய சாலை இருந்தது.


அந்தச் சாலை வழியாக பலதரப்பட்டவர்களும் பல மொழிகள் பேசக் கூடியவர்களும் போவதுண்டு. பிரபா படியை விட்டு இறங்கிச் சாலையில் நடந்து போவோரைப் பார்த்தபடி நின்றிருப்பான்.

பிரபாவிற்கு விளையாட சில ஜப்பான் பொம்மைகள் இருந்தன. அவை எங்கிருந்து அவனுக்குக் கிடைத்தனவோ? அவ்வப்போது அந்த ஊரில் அந்த நாடோடி தென்பட்டான். எல்லாமே நாசம்! தன்னுடைய வீட்டிற்குள்ளேயே தந்தையும் தாயும் மகனும் சேர்ந்திருந்தாலும் இருக்கலாம்!

அவர் போட்ட அந்த ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் அவரைப் பார்த்து கிண்டல் செய்தன. அந்த புத்திசாலித்தனத்தின் உண்மைத் தன்மையை அவர் சந்தேகத்துடன் பார்த்தார். அவள் அந்தக் குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். குழந்தை அதன் தந்தைமீது நிச்சயம் பாசம் வைத்திருப்பான். கடைசியில் மூன்று உதடுகளும் ஒரு முத்தத்தில் ஒன்று சேர வாய்ப்பிருக்கிறது.

கோபனுக்கு நகைகள் இருக்கின்றன. விளையாட்டுப் பொருட்கள் இருக்கின்றன. அவனுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேற்றப்படுகின்றன. அவன் பத்மநாபப் பிள்ளையின் ஆசையும் ஆனந்தமுமாக இருந்தான். அவன் என்ன காரணத்தாலோ தன்னுடைய தந்தையை மிகவும் அதிகமாக நேசிக்கக் கற்றுக் கொண்டுவிட்டான். அவன் முடிந்தவரை தாயுடன் இருப்பதைத் தவிர்க்கவே செய்தான்.

கோபன் தன் தாயைத் திட்டுவான். அடிப்பான். அவனிடம் எதையாவது கூறுவதற்குக் கூட அந்தத் தாய் பயந்தாள். அவன் அழுவான். அவன் அழுதால் பத்மநாபப் பிள்ளையின் முகம் கோபத்தில் சிவக்கும். ஒரு வேலைக்காரியைப் போல ஜானகி அம்மா அவனை இடுப்பில் தூக்கிக்கொண்டு நடப்பாள். அதிர்ஷ்டக்கட்டையான பெண்! அவன் உறங்கிக் கொண்டிருக்கும்போது யாருக்கும் தெரியாமல் பதுங்கிப் பதுங்கி சென்று அவனுக்கு முத்தம் கொடுப்பாள். அவளுக்குக் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அவன் தந்தையின் மகனாக இருந்தான்.

ஒருநாள் அவன் பிரபாவைப் பார்த்து லேசாகச் சிரித்தான். அதை அவனுடைய தந்தை பார்த்து விட்டார். அன்று அவர் தந்த கடுமையான அறிவுரையின் விளைவாக அவன் இனிமேல் கோபனைப் பார்த்து ஒருமுறை கூட பேசமாட்டேன் என்று பிரபா பயந்து கொண்டே சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. இனிமேல் ஒருமுறை கூட அந்தப் பக்கம் பார்க்க மாட்டேன் என்று பத்மநாபப் பிள்ளை அந்தச் சிறுவனை சத்தியம் பண்ண வைத்தார். அவன் கூறுவான்; ‘‘அங்கே ஒரு பிசாசு இருக்குது’’ என்று.

கோபனுக்கு ஒரு ஆசிரியரை நியமித்து பத்மநாபப் பிள்ளை படிப்பதற்கு ஏற்பாடு செய்தார். சொன்னால் எந்த விஷயத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு அவன் இருந்தான். அன்று குழந்தைக்கே உரிய ஆர்வத்துடன் தயங்கித் தயங்கி அவன் தன் தந்தையிடம் கேட்டான், ‘‘அது... அது யாரு அப்பா?’’

அந்தத் தந்தை சில விஷயங்களை மட்டும் சொன்னார். ‘‘அப்பா இல்லாதவன்’’ என்று அவன் பின்னால் கூறினான். இன்னொரு நாள் அவன் தன் தாயிடம் கேட்டான். ‘‘அவன் ஏன் இங்கே இருக்கணும்?’’

அவனைத் திட்டுவதற்கு அந்தத் தாய்க்கு நாக்கு வரவில்லை. ஏதாவது கேட்டால் அவனுடைய தந்தை கோபப்படுவார். கோபப்பட்டு சண்டை போடுவதாக இருந்தால், அவளுக்கு வாழ்க்கையே இல்லாமல் போய்விடும்!

அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட அறைக்குள் தாய் மகனைப் படிக்க வைப்பதற்காக முயற்சித்தாள். என்ன செய்வது? அவனுக்குப் படிப்பே ஏறவில்லை. சில நேரங்களில் கோபன் அந்தக் காட்சியை ஒளிந்து நின்று பார்ப்பான். தன் தந்தையிடம் விளக்கமாகச் சொல்லக்கூடிய சுவையான ஒரு சம்பவமாக இருக்கும் அது.

அங்குள்ள எல்லாமே தன் தந்தைக்கும் தனக்கும் சொந்தமானவையே என்பதை கோபன் நாளடைவில் தெரிந்து கொண்டான். வேறு யாருக்கும் அவற்றில் உரிமையில்லை என்பதும் தெரிந்தது. தான் சிறு குழந்தையாக இருந்தபோது இயற்கையாகவே தான் உச்சரித்த அந்த சொல்- அம்மா என்ற குரல்- உச்சரிக்கக் கூடாத ஒன்றாக அவனுக்குத் தோன்ற ஆரம்பித்தது. அந்த எழுத்துக்கள் மனதில் இருக்க வேண்டிய ஒன்றல்ல. தேவையில்லாத ஒரு சொல் அது என்பதாக அவன் நினைத்தான். அந்தச் சொல்லை சிறிதும் உச்சரிக்காமலே அவன் வாழ முடியும். அந்த வார்த்தை அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் எங்கோ போய் மறைந்து கொண்டது. கோபனின் உதடுகளுக்கு அந்தப் பெயர் உச்சரிக்கக்கூடாத ஒன்றாக ஆனது. அந்தப்பெயரைச் சொல்ல அவனுடைய உதடுகள் மறுத்தன.

தன் தாயைப் பற்றி இதுவரை தெரியாமலிருந்த பல விஷயங்களை இப்போது அவன் தெரிந்து கொண்டான். ‘அப்பா இல்லாத பிள்ளை’ என்பதற்கான அர்த்தம் என்னவென்று அவனுக்கு இப்போது தெரிந்தது. அங்கு வசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்ப்பதற்குக்கூட அவன் விரும்பவில்லை. அவள் மரியாதைக்குக் களங்கம் உண்டாக்கியவள். கோபனுக்குத் தன் மீதே ஒருவித வெறுப்பு உண்டானது. ஆனால், தான் தந்தையின் மகன் அதனால்தான் தன் தந்தை தன் மீது உயிரையே வைத்திருக்கிறார் என்று தன்னைத்தானே அவன் சமாதானப்படுத்திக் கொண்டான்.

வீட்டை விட்டு வெளியே செல்லும்பொழுது யாரைப் பார்த்தாலும் கோபன் பயப்பட ஆரம்பித்தான். ஒரே ஒரு கேள்வியை யாராவது கேட்டுவிடப் போகிறார்களோ என்று அவன் பயந்தான். அந்தக் கேள்விக்கு அவன் கட்டாயம் பதில் சொல்லத்தான் வேண்டும். அந்த ஒரு கேள்வி யாருடைய வாயிலிருந்து வரும் என்று யாரால் கூறமுடியும்?

கோபன் தன்னை தன் தந்தையுடன் மேலும் நெருக்கமாக ஆக்கிக் கொண்டான். தன் தந்தையை விட்டால் அவனுக்கு வேறு யாரும் இல்லை. தந்தைக்கு அவன் இருந்தான். அவனுக்கு அவனுடைய தந்தை இருந்தார். அந்தத் தந்தை விரும்பியதும் அதுதான். அவன் எப்படியெல்லாம் சிந்திக்கவேண்டும் என்று அந்தத் தந்தை விரும்பினாரோ அதே மாதிரிதான் அவன் சிந்திக்கிறான் என்பதை அவர் தெரிந்து கொண்டார். அவர் போட்ட திட்டம் வெற்றி பெற்றதென்னவோ உண்மை.

இப்படி அந்த வீடு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத கோணல் எண்ணங்களின் மைய இடமாக மாறிவிட்டிருந்தது. அங்கிருந்த சிரிப்பும் விளையாட்டும் உயிர்ப்பு கொண்ட ஒன்றாக இல்லை. ‘அம்மா’, ‘அப்பா’, ‘பிள்ளைகள்’ என்று அவர்கள் வார்த்தைகளால் தங்களை ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டாலும், அந்தப் பெயர்களில் இரண்டறக் கலந்திருக்கக் கூடிய இனிமையை அங்குள்ள யாரும் அனுபவித்ததில்லை என்பதே உண்மை. அங்கு உணர்வுகளும் எண்ணங்களும் முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டிருந்தன.

பதினாறு வருடங்களுக்குப்பிறகு இன்னொரு குழந்தையும் அங்கு பிறந்தது. பிறந்தது ஒரு பெண் குழந்தை.

3

ந்த நாடோடியையும் தாயையும் விட்டால் பிரபாவிற்கு வேறு யாரும் இல்லை. வளர வளர பல விஷயங்கள் அவனுக்குத் தெரிய ஆரம்பித்தன.


தான் பயன்படுத்த உரிமையில்லாத- பயன்படுத்தவே செய்யாத எத்தனையோ சொற்கள் இருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது. ‘அப்பா’, ‘தம்பி’ இப்படி எத்தனையோ சொற்கள்! தனக்கு இருக்க வேண்டிய யாரோ ஒருவர் தனக்கு இல்லாமல் போன குறைபாட்டை பிரபாவால் நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. அந்த ஆள் மட்டும் இருந்திருந்தால் அவன் உரத்த குரலில் சிரிக்கலாம். அவனுக்கு உரிமைகள் இருந்திருக்கும். அவன் தன்னுடைய உரிமைகளை மனம் திறந்து கேட்கலாம். தன்னுடைய விருப்பங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்தலாம். அந்தத் தந்தை எங்கு இருக்கிறான்? யார் அந்த மனிதன்?

பிரபா தன்னுடைய உடலைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அந்த உடலின் சேர்க்கை அவனுக்கே புரியாத ஒன்றாக இருந்தது. இது எப்படி நடந்தது?

சில நாட்கள் ஓடியபிறகு ‘வேண்டும்’, ‘வேண்டாம்’, ‘இருக்கு’ ‘இல்லை’ போன்ற வார்த்தைகள் கூட அவனுக்குத் தேவையில்லை. என்றாகிவிட்டன. வேண்டும் என்று அவன் எதையும் கேட்பதில்லை. வேண்டாம் என்று கூறுவதற்குத் தைரியமும் இல்லை. இருக்கிறது என்றும், இல்லை என்றும் கூறுவதற்கு அவன் பயந்தான்.

பிரபா சிரித்து யாரும் பார்த்ததில்லை. அவன் அழுததுமில்லை. தான் வளரும் வீடு தன்னுடையதல்ல என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.

அந்தச் சாலை வழியே நடந்து போகும் நாடோடிகளின் மொழி புரிவதைப் போல் அவனுக்குத் தோன்றியது. அவர்களில் பெண்கள் சிலரின் தோள்களில் தொங்கிக் கொண்டிருந்த துணிக்குள் கிடந்த குழந்தைகள் ஏதோ இதற்கு முன்பு அறிமுகமானவனைப் போல அவனைப் பார்த்து சிரித்தார்கள். அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த பரந்து கிடக்கும் உலகம் தன்னை அழைத்துக் கொண்டிருப்பதைப் போல் அவனுக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. அந்த வாழ்க்கையில் ஏதோவொன்றை தான் மறந்துவிட்டிருப்பதைப் போல் அவன் உணர்ந்தான். அந்தப் பெண்களில் ஒருத்தியிடம் தான் பிறந்திருக்க வேண்டியவன் என்று பிரபா பல நேரங்களில் நினைத்திருக்கிறான்.

ஜானகி அம்மா பிரபா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தான். அந்த விஷயத்தில் அவனுக்குச் சிறிதளவு கூட சந்தேகம் கிடையாது. ஆனால், தன் தாய் அப்படி நடக்க வேண்டிய அவசியமில்லை என்பதை அவன் தெரிந்தே இருந்தான். அவள் எப்போதும் ஒரு கவலையில் மூழ்கியிருப்பதை அவன் உணர்ந்தான். அவனுக்குக் கிடைத்த முத்தங்கள் கண்ணீரால் ஈரமாக்கப்பட்டிருந்தன. தன் தாயின் கவலைக்குக் காரணமே தான்தான் என்பதையும் பிரபா நன்கு அறிவான். அதனால்தானோ என்னவோ தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டு அவன் தாயைச் சிரமப்படுத்தவேயில்லை. அங்குள்ள தன்னுடைய வாழ்க்கையால் அவன் யாருக்கும் எந்தவித கஷ்டத்தையும் தரவில்லை. பிரபா ஒரு நல்ல விவரமான பையனாக இருந்தான்.

தான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை அவனுக்கு மூச்சை அடைப்தைப் போல் இருந்தது. அந்த நாடோடிகளுடன் போனால் அங்கு எல்லாரும் தன்மீது அன்பு செலுத்துவார்கள் என்று முழுமையாக நம்பினான். அவன் தன்னை முழு மனதுடன் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அவர்களுடன் சுதந்திரமாக வாழலாம். அவர்கள் தான் தன்னுடைய ஆட்கள் - இப்படியெல்லாம் பிரபா நினைத்தான். இந்த வீட்டில் தான் ஒரு தேவையில்லாத உயிர் என்று அவன் மனம் நினைத்தது. இந்த வீட்டில் தான் வந்து சிக்கிக் கொண்டது எப்படி என்று அவன் சிந்திக்கத் தொடங்கினான்.

பிரபாவை உலகம் உற்று நோக்கியது. அவனைப் பற்றி யாரும் இரண்டு வார்த்தைகளாவது ஏதாவது சொன்னார்கள். எல்லாருக்கும் அவன் ஒரு காட்சிப் பொருளாக  இருந்தான். மற்றவர்களிடம் இல்லாத ஏதாவது தன்னிடம் சிறப்பாக இருக்கிறதா என்று அவன் தன்னைத் தானே ஆராய்ந்து பார்த்தான். எல்லாருக்கும் இருப்பதைப் போல அவனுக்கும் கண்கள் இருந்தன. மூக்கு இருந்தது. முகம் இருந்தது. இப்படி அவர்கள் பார்ப்பதற்கும் சிரிப்பதற்கும் காரணம் என்னவாக இருக்கும்? அப்படி அவர்கள் நடக்க வேண்டிய அவசியமேயில்லை. அப்படி உற்று நோக்க வேண்டிய தேவையே இல்லை. அப்படி அவனைப் பார்த்து சிரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. புதிய மாதிரியாக அவனைப் பார்த்து அவர்கள் சிரித்ததும், அவனைப் பற்றி பேசியதும் உலகமே அவனைப் பார்த்து கிண்டல் செய்வதைப் போல இருந்தது. நான்கு நபர்கள் கூடியிருக்கும் இடத்திற்கு அவன் போவதேயில்லை. அவன் அவர்களிடமிருந்து தப்பித்துச் செல்ல முயற்சி செய்வான். அதே நேரத்தில் அவனுக்கு ஒரே எரிச்சலாக இருக்கும். இந்த உலகத்தில் மனிதர்கள் இல்லாத இடமே இருக்காதா?

பிரபா தன்னைத்தானே ஏராளமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டான். எந்தக் கேள்விக்கும் அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை. ஒரு சிறுவனின் சாதாரண ஆசைகூட நிறைவேறாமல் இருந்தது. தான் அறிந்து கொள்ள நினைத்தது எதையும் யாரும் அவனுக்குச் சொல்லித் தரத் தயாராக இல்லை. எதையும் தானே கற்றுக்கொள்ளவும் அவனால் முடியவில்லை. அவனுடைய தாய்க்கு நேரமில்லை. தன் தாயைப் பார்த்து அவன் கேட்கவுமில்லை.

ஆனால், அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்த அந்தச் சிறுவன் சுற்றிலுமுள்ள ஒவ்வொன்றையும் நன்றாகக் கவனித்துக் கொண்டிருப்பான். பார்க்கக் கூடாததையெல்லாம் தன் கண்களால் பார்ப்பான். அப்போது அவனுடைய கவனத்தை வேறுபக்கம் திருப்பும்படி சொல்ல யாருமில்லை. இந்த விதத்தில் பிரபா அவனாகவே சில விஷயங்களைக் கற்றுக் கொண்டான். கற்கக் கூடாத விஷயங்கள்; உண்மை வேட மணிந்த பொய்கள்! அவனுடைய நடத்தை ஆரோக்கியமான திசையை நோக்கிப் போவதாக இல்லை. எண்ணங்கள் நேரானதாக இல்லை. மனம் உண்டாக்கும் எண்ணங்கள் ஒவ்வொன்றும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. அவனுடைய சிந்தனைகள் முழுமை பெற்றதாக இல்லை.

இப்படிப்பட்ட நிலையில் வளர்ந்த அவன் வீடு என்றால் என்னவென்று கேட்டான். தந்தை என்றால் என்ன என்று கேட்டான். தாய்க்கும் அந்த வீட்டின்  தலைவனான மனிதனுக்குமிடையே உள்ள உறவு என்ன என்று கேட்டான். இப்படி எத்தனையோ ஆயிரம் மனிதர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது எப்படி என்று கேட்டான். அவனை சமுதாயம் தன்னில் ஒருவனாகச் சேர்த்துக் கொள்வதற்கு முன்பு, சமுதாயத்திற்கே சில கேள்விகளுக்குப் பதில்கள் தேவைப்பட்டன. ஒருமுறை ஒரு ஆள் இன்னொரு ஆளிடம் ஒரு கேள்வி கேட்பதை அவன் கேட்டான்.

 ‘‘அவனோட சிரிப்பைப் பார்த்தியா? அது எப்படி இருக்கு?’’

அந்த இன்னொரு ஆள் அதற்குப் பதில் சொன்னான்: ‘‘ஓரு பிசாசோட சிரிப்பைப் போல இருக்கு!’’

‘‘அதே மாதிரி சிரிக்கக்கூடிய ஒரு ஆளாகத்தானே அவனோட அப்பன் இருக்கணும்? அவன் யாரா இருக்கும்?’’

‘‘அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது.’’


தன்னுடைய தந்தை சிரித்தால் எப்படி இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், ‘‘என் அப்பா இவர்தான்’’ என்று சொல்ல அவனால் முடியவில்லை. உலகம் அவனிமிடருந்து எதிர்பார்த்தது அதைத்தான்.

உலகம் எதற்காக அதைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறது என்று அவன் சிந்தித்துப் பார்த்தான். தந்தை இவர்தான் என்று தெரியாமலே ஒரு ஆள்மீது அவர்கள் அன்பு செலுத்த முடியாதா?

பாவம் அந்த இளைஞன்! அவன் மனம்விட்டுச் சிரித்தான். உலகத்தைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக அவன் சிரித்தான். அந்தச் சிரிப்பு உலகத்தைக் கிண்டல் செய்வதைப்போல் இருக்கிறது என்று மற்றவர்கள் சொன்னார்கள். அவன் பணிவுள்ளவனாக இருந்தால் அது ஆணவமாகத் தெரிந்தது. அது அடக்கமாகத் தெரியவில்லை. அவன் மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முயற்சித்தான். அப்படி அன்பு செலுத்தக்கூடாதா என்ன? அன்பு, மரியாதை, நம்பிக்கை, கோபம் எல்லாவற்றைப் பற்றியும் அவனிடம் இதுவுரை இருந்து வந்த நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் தவறு என்றாகிப் போயின. உலக அன்பைப் பற்றியும், நம்பிக்கையைப் பற்றியும், அடக்கத்தைப் பற்றியும் கொண்டிருந்த கருத்துகள் அவனிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு வேறாக இருந்தன. பிறகு என்ன செய்வது? ஒரு கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டால் எல்லா விஷயங்களும் சரியாகிவிடும்.

‘‘அவனோட அப்பன் யாரு?’’

அவனுக்குத் தந்தை இல்லை. எதற்காக நான் பிறந்தேன் என்று பிரபா சிந்தித்தான். தான் பிறந்ததே தேவையில்லாத ஒன்று என்று அவன் முடிவெடுத்தான். அந்தத் தேவையில்லாத பிறப்பிற்கு மூல காரணம் யார்?

தனக்குத் தேவையான ஒரு கவள சோறு இல்லை என்றாலும் அவனுடைய உடலுக்கு வளர்வதற்கான சக்தி இருக்கவே செய்தது. உணவைப் பார்க்கும் நேரத்தில் அவனுடைய வாய் தானே திறக்கும், நாக்கு வறண்டு போகும்போது, நீர் குடித்தாக வேண்டும். அழகான பொருட்களின் மீது கண்கள் பாய்ந்து செல்லும். அவனுடைய உணர்வுகளும் எண்ணங்களும் விரிந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில் அவை சின்னாபின்னப்பட்டு, அநியாயமாக வடிவத்தை இழந்து கொண்டிருந்தன.

எல்லா இளைஞர்களையும் போல அவனும் இளம் பெண்களைப் பார்ப்பது உண்டு. மனப்பூர்வமாக நினைத்து அவன் அப்படிச் செய்யவில்லை. இயற்கையாகவே அது நடந்தது என்று கூறுவதே சரியானது. அவன் அந்தப் பெண்களைப் பற்றி தனியாக இருக்கும் பொழுது நினைத்துப் பார்ப்பான். ஆனால், ஒரு பெண்ணை நோக்கி ஒரு அடி முன்னால் எடுத்து வைக்கக்கூட அவன் பயந்தான். எனினும், அவன் விருப்பப்பட்ட ஒரு தேவதை அவனுக்குக் கிடைக்கவே செய்தாள். அவன் ஒரு இளம்பெண்ணைப் பார்த்தான். அவளும் அவனைப் பார்த்தாள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். என்னவெல்லாமோ ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள். அவனுக்கும் ஒரு காதலி கிடைத்தாள். அவன் ஒரு காதலன் ஆனான். அது ஒரு சாதாரண சம்பவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், அதற்குப் பிறகு அந்த உறவிற்கு ஒரு சிறப்பு கிடைத்தது.

4

ரவாயில்லை. காதில் போட்ட அந்தச் செய்தியையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திவிடலாம் என்று பத்மநாபப் பிள்ளை நினைத்தார். எல்லா விஷயங்களையும் விளக்கமாக அவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். அதிக உற்சாகத்துடன் அந்த நிமிடமே அவர் வீட்டிற்குச் சென்றார். அந்த ஆயுதத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதைப் பற்றி வரும் வழியிலேயே அவர் தெளிவுப்படுத்திக் கொண்டார்.

பிரபாவின் காதலி கர்ப்பமாக இருந்தாள். அவன் வீட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று சொல்வதற்கு அது ஒரு நல்ல காரணமாக இருக்கும் அல்லவா? ஜானகி அம்மா கட்டாயம் பத்மநாபப் பிள்ளை சொல்வதைக் கேட்டுத்தான் ஆகவேண்டும். அதன் விளைவாக பிரபா வீட்டைவிட்டு வெளியேறிவிடுவான். ஒரு தொல்லை ஒழியும்போது, வாழ்க்கையில் எல்லா பயங்களும், எண்ணங்களும், துன்பங்களும் அதோடு சேர்ந்தே போய்விடும்.

பத்மநாபப்பிள்ளை வீட்டை அடைந்தவுடன் மனைவியை அழைத்தார். அவர் அழைத்தது ஜானகி அம்மாவின் காதுகளில் விழுந்தது. அவர் நிலை கொள்ளாமல் வராந்தாவில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தார். ஒரு மிகப் பெரிய சம்பவத்தை எதிர்கொள்ளப்போகும் உற்சாகம் அவரிடம் குடி கொண்டிருந்தது. ஏற்கெனவே முடிவு பண்ணி வைத்திருந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் அவர் நினைவுபடுத்திக் கொண்டார். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தது சிறிது கூட பிசகி விடக்கூடாது அல்லவா? ஜானகி அம்மா கதவுக்கருகில் எதுவும் பேசாமல் வந்து நின்றாள். அவர் எதற்காக அழைத்தார் என்று கேட்க அவள் மறந்து விட்டதைப்போல் இருந்தது.

ஜானகி அம்மாவைப் பார்த்ததும் பத்மநாபப் பிள்ளை முதலில் பேச வேண்டிய வாக்கியத்தை மறந்துவிட்டார். அந்தக் கணவனும் மனைவியும் ஒருவரோடொருவர் எதுவும் பேசாமல் பார்த்தவாறு நின்றிருந்த அந்த ஒரு நிமிடம் மிகவும் கனமுள்ளதாக இருந்து. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு இரண்டு சிறு வாக்கியங்கள் அவரிடமிருந்து வந்தன.

‘‘உன் மகன் ரொம்பவும் நல்லவன். அந்தப் பொண்ணு இப்போ கர்ப்பமா இருக்கா.’’

முதல் அடியே பிசகிவிட்டது. அப்படி ஆரம்பித்திருக்கக் கூடாது என்று அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. அவள் அதைக் கேட்டு அமைதியாக இருக்கவில்லை. ஜானகி அம்மா என்னவோ சொல்ல நினைக்கிறாள். என்ன சொல்லப் போகிறாள்?

‘‘அப்படி யாரு சொன்னது!’’ - ஜானகி அம்மா கேட்டாள்.

‘‘ஊரெங்கும் அதைப் பற்றித்தான் பேச்சு.’’

இப்போது ஜானகி அம்மா எதுவும் பேசவில்லை. பத்மநாபப் பிள்ளை கடுமையான குரலில் சொன்னார்: ‘அந்தப் பொண்ணு நாளைக்கு இங்கே வரமாட்டான்னு யாருக்குத் தெரியும்? சொல்லப் போனா அவ வேற எங்கே போவா?’’

‘‘அதுக்கு நான் என்ன செய்யணும்?’’

பத்மநாபப் பிள்ளை வெற்றி பெற்றுவிட்டார். மெதுவான குரலில் அவர் சொன்னார்:

‘‘என்ன செய்யணுமா? மருமகளை நீ வரவேற்கணும்.’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் வராந்தாவில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நடந்தார். அவரின் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்த ஜானகி அம்மாவின் கண்கள் சிறிதாயின. உதடுகள் லேசாகப் பிரிந்தன. அவள் என்னவோ சொல்ல நினைத்தாள்.

‘‘அவன் பொண்டாட்டி என் மருமகள்தான்’’- அவளின் அந்தப் பதில் அவர் சிறிதும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது.

‘‘உண்மையாகவா?’’- அவர் கேட்டார். அதற்கு ஜானகி அம்மா எந்த பதிலும் கூறவில்லை. பத்மநாபப் பிள்ளை தொடர்ந்து சொன்னார்: ‘‘என் வீட்டுல எந்தவித பிரச்சினையும் இருக்கக் கூடாது. ஒரு பொண்டாட்டி வீட்டுல இருக்குறதே சந்தோஷத்துக்கும் சமாதானத்துக்கும்தான்.’’


அதைக் கேட்டு ‘‘ஆமாம்’’ என்று தலையை ஆட்டினாள் ஜானகி அம்மா. தொடர்ந்து அவள் சொன்னாள்: ‘‘உங்களுக்கு அது ரெண்டுமே இருக்குதே! நல்ல பிள்ளைங்க... நல்ல பொண்டாட்டி...’’

‘‘அது கெட்டுடக் கூடாதே?’’

‘‘நான் கெடுத்தேனா?’’

பத்மநாபப் பிள்ளை என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை அவள் சிறிதுநேரம் எதிர்பார்த்தாள். பின்னர் அவரே தொடர்ந்து சொன்னாள்: ‘‘எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். எனக்கு எந்த சந்தோஷமும் சமாதானமும் கிடைக்கலைன்றதுதான் உண்மை. நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். இந்த வீட்டுத் தரையோட அடிப்பகுதிகூட கண்ணீர்ல நனைஞ்சுதான் இருக்கு.’’

‘‘அதற்குக் காரணம்?’’

‘‘அதுதான் என் வாழ்க்கை.’’

ஒரு புதிய பிரச்சினையை இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்று பத்மநாபப் பிள்ளைக்குத் தோன்றியது.

‘‘உனக்கு அப்படி என்ன கவலை?’’

‘‘உங்களால அதைப் புரிஞ்சிக்க முடியாது. நீங்க உங்க சந்தோஷத்தை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. அது உங்க உரிமை.’’

அந்தப் பிரச்சினை பூதாகர வடிவமெடுத்து நின்றது. அந்தக் கணவர் அந்தச் சூழ்நிலையை மாற்ற நினைத்தார்.

‘‘நீ கவலையில இருக்கியா?

‘‘எதுக்கு அந்தக் கதை?’’

‘‘நான் தெரிஞ்சிக்கணும்...’’

அதற்கு ஜானகி அம்மா எந்த பதிலும் சொல்லவில்லை.

‘‘நான் தெரிஞ்சிக்கணும்’’ என்று பத்மநாபப்பிள்ளை மீண்டும் சொன்னார். அந்தக் கதையைச் சொல்வதற்கு ஜானகி அம்மா சற்று தைரியத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டி வந்தது.

‘‘நான் யாருமே இல்லாத அனாதையாய் இருந்தேன். வாழ்ந்தா போதும்னு நினைச்சேன். அப்படிப்பட்ட ஒருத்திதான் உங்களுக்குத் தேவைப்பட்டா. எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்குற ஒருத்தி...’’

ஒரு உண்மையை இழுத்து வெளியே போட்டு அதை விரலால் சுட்டிக் காட்டிக்கொண்டு  ‘இதுதான் நீங்க’ என்று ஜானகி அம்மா கூறுவதைப் போல் இருந்தது. தன்னை ஒரு ஆள் குத்துவதைப் போல் உணர்ந்த அவர் சற்று நிலைகுலைந்தார்.

‘‘எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு இருக்குற ஒருத்தியைன்னு சொன்னா...’’

அதைக் கேட்டு ஜானகி அம்மாவின் கண்கள் நிறைந்தன. கவலை தோய்ந்த குரலில், ‘‘நீங்க என்னைக் காப்பாத்தினவரு... தெய்வம் என்னால வாழ முடியாதுங்கற ஒரு நிலை வந்தப்போ, என்னை நீங்க காப்பாத்தினீங்க. நான் எல்லாத்தையும் தாங்கிக்கிறேன்’’ என்றாள்.

ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அந்த மனிதர் அவளைக் காப்பாற்றியவர் என்பது உண்மைதானே? அன்று சட்ட விரோதமாக கர்ப்பம் தரித்த தன்னை ஏற்றுக் கொள்ள ஒரு ஆள் மட்டும் இல்லாமல் போயிருந்தாள் தன்னுடைய நிலை என்னவாகியிருக்கும் என்று ஜானகி அம்மா நினைத்துப் பார்த்தாள். தன் நிலை என்னவாகியிருக்கும் என்பதைப் பற்றி அவளுக்கே தெரியாது. அப்படி அவளைக் காப்பாற்ற ஒரு மனிதர் அன்று வந்திருக்க வேண்டியதில்லை. இப்படியொரு வாழ்க்கையும் வாழ்ந்திருக்க வேண்டியதில்லை. எந்த வகையிலாவது அன்றே அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் அவளுக்கு நல்லதாக இருந்திருக்கும். தன்னைக் காப்பாற்றிய அந்த மனிதரை எங்கே எதிர்த்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிவிடுமோ என்று அவள் பயப்பட்டாள். பாதிக்கப்பட்டு ஒரு முடிவுக்கு வந்த தன்னைக் காப்பாற்றி பாதுகாத்த ஒரு மனிதரிடம் சொல்லக் கூடாததைச் சொல்வதும், செய்யக் கூடாததைச் செய்வதும்... ஆனால், மனைவியாக வாழ்ந்த இருபத்தோரு வருடங்களும் எந்த அளவிற்கு கனமுள்ளவையாக இருந்தன என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டிருக்கும் தாங்க முடியாத பாரத்திற்குக் கீழே அமர்ந்து மூச்சுவிடாமல் இருக்கும் பொழுது அபஸ்வரம் மாதிர சில நேரங்களில் ஏதாவது நடக்கத் தான் செய்யும். ஒவ்வொரு நாளையும் அவள மனத்திரையில் ஓட்டிப் பார்த்தாள். அவள் எவ்வளவோ சகித்துக் கொண்டுதான் வாழ்ந்திருக்கிறாள். இப்படியே இன்னும் எவ்வளவு நாட்களுக்கு வாழ முடியும்? ஜானகி அம்மா தன்னையுமறியாமல் சொன்னாள்:

‘‘நான் அழலாம். யாருக்கும் தெரியாம அழலாம். நான் ஒரு அம்மாவா ஆயிட்டேன்.’’

பத்மநாபப்பிள்ளை கட்ளையிடும் தொனியில் சொன்னார்: ‘‘அவன் இனிமேல் இங்கே வரக்கூடாது. அவன் இந்த ஊரைவிட்டே போகணும். நான் விரும்புறது அதைத்தான்.’’

‘‘நான் அவனைப் போகச் சொல்லணும். அவ்வளவுதானே?’’

ஜானகி அம்மாவின் குரல் வழக்கத்தைவிட வேறு மாதிரி இருந்தது. இதுவரை அவள் அப்படிப் பேசியதில்லை.

‘‘ஆமா...’’ என்றார்- பத்மநாபப் பிள்ளை.

ஜானகி அம்மா லேசாகப் புன்னகைத்தாள். தன் பற்களைக் கடித்துக் கொண்டு சொல்ல வந்ததைத் தடுக்க முயன்றாள். எனினும் அவளையும் மீறி ‘‘அப்படின்னா...’’ என்றொரு வார்த்தை வெளியே வந்துவிட்டது.

‘‘அப்படின்னா...? என்னடி அப்படின்னா...?’’

‘‘அவனை நான் போகச் சொல்லணும்னா அதுக்கு முன்னாடி சில கணக்குகளை சரி பண்ண வேண்டியதிருக்கு.’’

‘‘கணக்குகளா?’’ - பத்மநாபப் பிள்ளை தன்னையறியாமல் கேட்டார்: ‘‘யாருகிட்ட?’’

‘‘உங்ககிட்டத்தான். நம்ம வாழ்க்கை ஒரு ஒப்பந்தம் போல ஆரம்பிச்சது. ஒவ்வொரு கட்டத்துலயும் கணக்குகளைச் சரி பண்ண வேண்டியதுதான்.’’

ஜானகி அம்மாவின் கண்கள் விரிந்தன. ஒருவித தன்னம்பிக்கை காரணமாக அவள் முகத்தில் முன்பு இல்லாத ஒரு மிடுக்கு உண்டானது. அது ஒரு அடக்க ஒடுக்கமான மனைவியின் முகமல்ல. எதிர்ப்பதற்குத் தயாராக நின்றிருக்கும் ஒரு பெண்ணின் முகம் அது! அவள் கேட்கும் கேள்விகளுக்கு பத்மநாபப் பிள்ளை பதில் சொல்லியே ஆக வேண்டும் இல்லாவிட்டால் அவள் பதில் சொல்ல வைப்பாள். இப்படியொரு சூழ்நிலை தனக்கு வரும் என்று பத்மநாபப் பிள்ளை சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. முன்பிருந்ததைவிட குரலில் ஒரு மிடுக்குத்தனத்தை வரவழைத்துக்கொண்டு ஜானகி அம்மா கேட்டாள்: ‘‘உங்களுக்குப் புரியலையா- என்னை உங்களுக்கு விற்ற கணக்கு?’’

‘‘உனக்கு நான் என்ன குறை வச்சேன்?’’

‘‘குறை! நான் இங்கே யாராக இருந்தேன்? நல்லா நெனைச்சு பாருங்க. எனக்குன்னு இங்கே என்ன உரிமை இருந்துச்சு? இப்போக் கூட என்ன உரிமை இருக்கு?’’

பத்மநாபப் பிள்ளைக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. தடுமாறிய குரலில் அவர் கேட்டார்: ‘‘ஏன் உனக்கு உரிமை இல்ல?’’

‘‘எனக்கு உரிமை தரலையே?’’

‘‘தரலையா?’’

‘‘ஆமா... அனுமதி இல்லாம உங்க பக்கத்துல வர்றதுக்குக் கூட...’’

ஜானகி அம்மாவால் சொல்லவந்ததை முழுமையாகச் சொல்ல முடியவில்லை. அவருடைய மனநிலை மிகவும் நிலைகுலைந்து விட்டதைப்போல் தோன்றியது.

‘‘பக்கத்துல வர்றதுக்குக் கூடவா? நீ என்ன சொல்ற?’’

பத்மநாபப் பிள்ளை வெற்றி பெற்றுவிட்டார். ஒரு சோதனை கட்ட நிலையை அவர் கடந்துவிட்டதைப் போல் இருந்தது. ஆனால் ஜானகி அம்மா மீண்டும் பதில் கூறுவதற்குத் தயாராகிவிட்டார்.


‘‘அனுமதி இல்லாம பக்கத்துல வர்றதுக்குக் கூட நீங்க என்னை அனுமதிக்கல...’’

‘‘உன்னை அப்படி வரக்கூடாதுன்னு சொன்னேனா?’’

‘‘இல்ல...’’

‘‘பிறகு?’’

‘‘நான் உங்க நல்லது கெட்டதையும், பசங்களோட நல்லது கெட்டதையும் பார்த்துக்கிட்டேன். அதுக்காக நான் இங்கே இருந்தேன். வேலை செஞ்சதுக்கு எனக்கு அது கூலி.’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் தடுமாற்ற நிலைக்கு உள்ளானார் ஜானகி அம்மாவிடம் என்ன சொல்வது என்று அவருக்குத் தெரியவில்லை.

‘‘இதென்னடா புது பிரச்சினையா இருக்கு! அவன் வீட்டைவிட்டு வெளியே போகணும்னு சொன்னதுக்காக...’’

அவர் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் இடையில் தலையிட்டு ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘இந்த இருபத்தொரு வருட வாழ்க்கையில அஞ்சு நிமிடம் தொடர்ந்து நீங்க எப்பவாவது என்கிட்ட பேசியிருக்கீங்களா?’’

‘‘அதுனால?’’

‘‘அதை என்னால பொறுத்துக்க முடியல...’’

‘‘பேச முடியாதுன்னு நான் சொன்னேனா?’’

‘‘உங்களுக்கு என்கூட பேசப் பிடிக்கல.’’

‘‘நீ என்கிட்ட பேச வந்தியா?’’

‘‘இல்ல...’’

இதுவரை ஜானகி அம்மாவிடம் இருந்த தைரியம் அவளிடமிருந்து பறந்துவிட்டிருந்தது. மீண்டும் அவள் எதுவும் செய்ய முடியாத ஒரு பெண்ணாக மாறினாள். எந்தப் பெண்ணாக இருந்தாலும் ஒரே நிலையில் தன்னம்பிக்கையைக் காப்பாற்றுவது என்பது முடியாத ஒரு காரியமே. அவள் தாழ்வான குரலில் சொன்னாள்: ‘‘நீங்க என்கிட்ட பேச விரும்பாம உங்க இடத்துலயே இருந்தீங்க.’’

ஜானகி அம்மா மேற்துண்டு நுனியால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

‘‘வாழ்க்கையில எந்தக் காலத்துலயும் கிடைக்கத் தகுதியே இல்லாத ஒரு இடத்துக்கு நான் எப்படியோ வந்துட்டேன். எதுக்கு உங்களைத் தேவையில்லாம தொந்தரவு செய்யணும்னு நான் நினைச்சேன். நீங்க என்னை ஒருநாளும் அழைக்கல.’’

‘‘நான் அழைக்கணுமா?’’

கணவனின் முகத்தை நேருக்கு நேராகப் பார்த்துக்கொண்டு நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது என்பது எந்த மனைவியாலும் முடியாது. அவளின் தாயும் பாட்டியும் அப்படி நடந்ததில்லை. பரம்பரை பரம்பரையாக தொன்றுதொட்டு வந்த அந்தப் பழக்கம் ஜானகி அம்மாவை மிகவும் தளர்வடையச் செய்தது. அவள் சொன்னாள்: ‘‘நான் ஏதோ வாழ்ந்தால் போதும்னு நினைச்சேன். உங்க பக்கத்துல உட்கார்ந்து பேசி பொழுதைக் கழிக்கிறதுக்கு எனக்கு உரிமை இல்ல. என் தாய் என் தந்தையோட எந்த விஷயத்துலயும் தலையிட்டது இல்ல. அவங்க ஒரு இருளடைஞ்ச வீட்டுல வாழ்ந்து வாழ்க்கையை முடிச்சாங்க. ஆனா... இப்போ எந்தப் பொண்டாட்டியும் சாப்பிடறது, உடுத்தறது மட்டும் போதும்னு இருக்குறது இல்ல...’’

‘‘நீ என்ன சொல்ற? இதுக்கெல்லாம் நானா குற்றவாளி?’’

‘‘நீங்க எதையும் அனுமதிக்க மாட்டீங்க.’’

‘‘அனுமதிக்க மாட்டீங்கன்னுதான் உன்னால சொல்லமுடியும். அனுமதிக்கலைன்னு உன்னால சொல்ல முடியுமா?’’

‘‘நான் சோதனை பண்ணி பார்க்கல. எனக்கு அந்த விஷயத்துல பயம்...’’

‘‘நீ பயந்தது...’’- பத்மநாபப் பிள்ளை பற்களைக் கடித்தார்.

ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘நான் ஆதரவு இல்லாதவளா இருந்தேன். ஒரு முறை தப்பு பண்ணினவளா இருந்தேன். நான் பயமுறுத்தப்பட்டிருந்தேன்.’’

‘‘யாரு பயப்படச் சொன்னது?’’

‘‘அதுதான் ஒரு பொண்டாட்டியோட வாழ்க்கை.’’

‘‘எது?’’

‘‘பயப்படுவது... பொண்டாட்டி... அவள் சந்தேகத்துக்கு இடமில்லாதவளா இருந்தாத்தான் வாழவே முடியும். எந்தக் காலத்துலயும் மறக்க முடியாத சந்தேகத்துக்கு இடமான ஒரு பெண்ணாக... எனக்கு அந்தப் பழைய - யாருக்கும் தெரியாம ஓடிப் போன மருமக்கத்தாய குடும்பமுறை பிடிச்சிருக்கு. அதுல கணவன்- மனைவியை பயப்பட வைக்குறது இல்ல..’’

சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. ஜானகி அம்மா அழுதாள். பத்மநாபப் பிள்ளை அமைதியாக இருந்தார்.

‘‘உன் மேல நான் சந்தேகப்பட்டேன்னு உனக்குத் தோணுச்சா என்ன?’’

‘‘உங்க பார்வையாலேயே என்னை நீங்க அளந்தீங்க. நீங்க என்னை பார்க்குறப்போ நான் நடுங்கிப் போவேன். நான் எப்படி உங்க முன்னாடி வருவேன்? நான் எப்பவும் அழுதுகிட்டே இருப்பேன்.’’

கைகளைப் பின்னால் கட்டியவாறு இப்படியும் அப்படியுமாய் நடந்து கொண்டிருந்த பத்மநாபப் பிள்ளை சொன்னார்: ‘‘ம்... அப்படியே நான் உன் மேல ஒரு கண் வச்சிருந்தாகூட, நிச்சயமா அது தப்பு இல்ல.’’

அவரின் அந்த வார்த்தைகள் ஜானகி அம்மாவின் இதயத்தை என்னவோ செய்தன. ஒரு பெண் என்னதான் மோசமானவளா இருந்தாலும், அவளின் நடவடிக்கைகளை ஒரு மனிதன் கவனித்துக் கொண்டிருப்பதாக அவளுடைய முகத்துக்கு நேராக கூறினால் அவளால் வெறுமனே இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு வார்த்தை அவரிடமிருந்து வந்தால், நிச்சயம் அதற்கு அவள் எதிர்வினை ஆற்றவே செய்வாள். அவரின் பதிலை அவள் எதிர்பார்க்கவே செய்வாள். ஜானகி அம்மா தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டாள்:

‘‘என்மேல நீங்க கண் வச்சிருந்தீங்களா?’’

‘‘நான் வைக்கல. வேற யாராக இருந்தாலும் கட்டாயம் வைப்பாங்க.’’

‘‘பிறகு?’’

‘‘நாம அதைப் பற்றி பேச வேண்டாம் ஜானு. நாம முதல்ல முடிவு பண்ணின விஷயமே அதுதானே? நாம பேசின ஒப்பந்தப்படி நாம நடப்போம். அவன் எங்கே போனாலும் வாழ்ற அளவுக்கு அவனுக்கு உரிய வயசு வந்திடுச்சு. அவன் இனிமேல் இங்கே இருந்தான்னா கட்டாயம்  நமக்குள்ளே உண்டான ஒப்பந்தத்தை மீறத்தான் செய்வே. அவன் என் மகன் இல்லைன்னு சொன்னாக்கூட உலகம் நம்பாது.

‘‘அது இருக்கட்டும். என்வை கவனிச்சீங்களே? அதனோட பலன் என்ன?’’

ஜானகி அம்மாவின் குரலில் முழுமையான வெறுப்பு தொனித்தது. அதைக் கேட்டு பத்மநாபப் பிள்ளை ஒரு மாதிரி ஆகிவிட்டார். அவர் சொன்னார்: ‘‘அதைப் பற்றி நான் பேச வேண்டாம்னு நினைக்கிறேன்.’’

‘‘என்ன இருந்தாலும் நீங்க தைரியசாலி ஆச்சே! உண்மையைச் சொல்லுங்க.’’

அதைக் கேட்டு பத்மநாபப் பிள்ளைக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. அவர் உரத்த குரலில் கத்தினார்: ‘‘அவன் இனிமேல் இங்கே இருக்கக்கூடாது.’’

ஜானகி அம்மா சாந்தமான குரலில் ‘‘சரி...’’ என்றாள்.

‘‘நான் சொன்னபடி நடக்கணும்.’’

‘‘சரி... பிறகு... என்னை கவனிச்சீங்களே... என்ன நடந்துச்சு?’’

‘‘அடியே...!’’ - பத்மநாபப்பிள்ளை தாங்கமுடியாத கோபத்துடன் கத்தினார்: ‘‘கேவலமான உன்னோட வாழ்க்கையில இருந்து உன்னைக் காப்பத்தினத்துக்கு முன்னாடி உன் கடந்த கால சரித்திரத்தை நான் கேட்டுத் தெரிஞ்சிக்கணும்...’’

‘‘ஏன் அதைச் செய்யல?’’

அதத்கு பத்மநாபப் பிள்ளையால் பதில் சொல்ல முடியவில்லை.

ஜானகி அம்மா தொடர்ந்தாள்.

‘‘உங்களால் பதில் சொல்ல முடியல... அப்படித்தானே? நான் சொல்றேன். என்னோட அழகையும் அடிமை மாதிரி இருக்குற குணத்தையும் நீங்க விரும்புனீங்க. வாழ்க்கையில கெட்டுப் போனவள்தானே எல்லா விஷயத்தையும் சகிச்சுக்குவான்னு நீங்க நினைச்சீங்க!’’


‘‘அழகா? அதைத்தான் எனக்கு முன்னாடியே யாரோ பயன்படுத்திட்டாங்களே! அதோட விளைவுதானே அந்தப் பிசாசு!’’

அவர் சொன்னதைக் கேட்டு ஜானகி அம்மா தன்னையே மறந்து விட்டாள். பற்களைக் கடித்துக் கொண்டு உரத்த குரலில் அவள் கத்தினாள்:

‘‘அப்படின்னா...’’

‘‘என்னடி அப்படின்னா...?’’

‘‘உங்ககிட்ட இருக்குற குணங்கள்... அந்தப் பைத்தியக்காரத் தனமான செயல்கள், கெட்ட நடத்தைகள்....’’

ஜானகி அம்மா கட்டுப்பாட்டை இழந்துவிட்டாள்.

‘‘கெட்ட நடத்தைகளா?’’

‘‘ஆமா... உங்ககிட்ட என்னென்ன கெட்ட நடவடிக்கைகள் இருக்குன்னு எனக்கு நல்லாத் தெரியும்.’’

‘‘ச்சீ... நாற்றமெடுத்த பிணமே!’’

‘‘நாற்றமெடுத்த பிணமா? இன்னைக்குத்தான் அது தெரிஞ்சுதா?’’

‘‘உலகத்துக்கு எப்பவோ அது தெரியும்.’’

‘‘உங்களுக்கும் ஏற்கெனவே அது தெரியும்ல? என்னை உற்று கவனிச்சு என்னத்தைக் கண்டுபிடிச்சீங்க?’’

ஜானகி அம்மா பயங்கரமாகச் சிரித்தாள்.

பத்மநாபப் பிள்ளை என்ன பேசுவது என்றே தெரியாமல் நின்றுவிட்டார். ஜானகி அம்மா ஆத்திரம் பொங்க கத்தினாள். ‘‘என் பிள்ளைங்களை எனக்கு எதிரா திருப்பிவிட்டு... இது ஒண்ணுக்காகவே நான் உங்களுக்குப் பாடம் கற்றுத் தர்றேன்.’’

‘‘எனக்கா?’’

‘‘ஆமா...’’

ஜானகி அம்மா தன் நிலையில் மிகவும் உறுதியாக இருந்தாள். அவள் ஒரு சாதாரணப் பெண்ணாக அப்போது தெரியவில்லை. பெண் என்ற பெயரை மட்டும் வைத்து நாம் கற்பனை பண்ணக் கூடிய உருவமல்ல அவளுக்குத் இருந்தது. இருபத்தோரு நீண்ட வருடங்களாக அந்த வீட்டில் அவள் வாழ்ந்த வாழ்க்கையில் அவளுக்குக் கிடைத்த சக்தி அனைத்தும் ஒன்று திரண்டு பரிணாம வளர்ச்சி பெற்று உயர்ந்து நின்றது. நம்பிக்கைகளையும், சட்டங்களையும், கோட்பாடுகளையும் அது சவாலுக்கு அழைத்தது பத்மநாபப் பிள்ளைக்கு அவளைப் பார்க்கவே பயமாக இருந்தது. அப்பப்பா... அவள் கண்கள் நெருப்பென ஜொலித்துக் கொண்டிருந்தன.

பத்மநாபப் பிள்ளை அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். வெளி வாசலை அவர் கடந்தபோது, உள்ளேயிருந்து கேட்ட ஒரு பெரிய சிரிப்புச் சத்தம் அவரின் செவிகளில் மோதி அவரைப் பாடாய்ப்படுத்தியது.

5

புகைந்து கொண்டிருந்த எரிமலை வெடித்தது. இடி விழுந்ததைப் போல அந்த வீடு சுக்கு நூறாக உடைந்து, தரையின் அடிப்பகுதி வரை குலுங்கியது. ஜானகி அம்மாவின் அந்த உரத்தச் சிரிப்புச் சத்தம் யாரும் எதிர்பார்த்திராத ஒரு அட்டகாசச் சிரிப்பைப்போல அந்த வீட்டின் மூலை முடுக்கெங்கும் பரவி, அங்கிருந்த ஒவ்வொரு மனதிலும் நுழைந்து அது எதிரொலித்தது.

ஒரு கரும் நிழல் அந்த வீட்டை மூடியது. வாசல் கதவுகளும் ஜன்னல்களும் திறந்து கிடந்தாலும், அந்த வீட்டுக்குள் மனிதர்கள் வசிக்கிறார்களா என்றொரு சந்தேகத்தை அது உண்டாக்கியது. அந்த வீடு இயற்கையான ஒன்றாக இல்லை. அது ஒரு மாய உலகத்தைப் போல இருந்தது. ஏதோ பேய்க் கதைகளில்தான் அப்படிப்பட்ட ஒரு வீட்டைப் பற்றி நாம் படித்திருக்கிறோம்.

ஒரு சிறுமி அந்த வீட்டின் வெளிவாசலுக்கு அருகே உள்ள மாமரத்திற்குக் கீழே நின்றிருக்கிறாள். அவளுடைய அகலமான கண்களில் கவலை தெரிகிறது. தான் ஏதோ ஒரு பழக்கமில்லாத இடத்தில் நின்று கொண்டிருப்பதைப் போல் அவள் உணர்கிறாள். எப்படியோ அந்த வீட்டில் சிக்கிக் கொண்டாள். அவள்தான் லலிதா. ஜானகி அம்மாவின் மகள்!

மாலை நேரமானது, கோபன் வெளி வாசலைக் கடந்து உள்ளே வந்தான். லலிதா ஓடிச்சென்று தன் அண்ணனை இறுக அணைத்துக் கொண்டாள். தன் அண்ணனிடம் சொல்வதற்கு அவளிடம் நிறைய விஷயங்கள் இருந்தன.

‘‘அண்ணே... அப்பாவும் அம்மாவும் சத்தமா சண்டை போட்டாங்க. அப்பாவைப் பார்த்து அம்மா சத்தம் போட்டாங்க!’’

‘‘அப்பா இப்போ எங்கே?’’

‘‘அவர் வெளியே போயிருக்காரு!’’

லலிதாவை அழைத்துக்கொண்டு கோபன் வராந்தாவை நோக்கி நடந்தான். அங்கு ஒரே இருட்டாக இருந்தது.

‘‘இங்கே விளக்கேற்றி வைக்க யாருமில்லையா? கோபன் உரத்த குரலில் கேட்டான். அவனுக்கு ஒரே வெறுப்பாக இருந்தது.

லலிதா சொன்னாள்: ‘‘அண்ணே, எனக்கு ஒரே பயமாக இருந்துச்சு. அம்மாவோட பார்வையும் சிரிப்பையும் நான் மறைஞ்சிருந்து பார்த்தேன். அப்பாகூட பயந்துட்டாரு. அந்தப் பைத்தியக்காரி இருக்காள்ல... அவளைப் போலவே அம்மா இருந்தாங்க. ஏன் தாமதமா வீட்டுக்கு வந்தீங்கண்ணே?’’

கோபன் அதற்கு பதிலேதும் கூறவில்லை. லலிதா தொடர்ந்து கேடட்டாள்: ‘‘அம்மாவும் அப்பாவும் ஏன் சண்டை போட்டுக்கிறாங்கண்ணே?’’

கோபன் லலிதா இறுக அணைத்துக்கொண்டு அவளின் நெற்றியைத் தடவியவாறு சொன்னான்: ‘‘தங்கச்சி... அந்த விஷயம் உனக்குத் தெரியாமலேயே இருக்கட்டும்.’’

அழுது கலங்கிய கண்களுடன் ஜானகி அம்மா கதவருகில் விளக்குடன் தோன்றினாள். குற்றம் செய்த பெண்ணின் வெளிப்பாடு அவளிடம் தெரிந்தது. கோபன் கோபத்துடன் அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையைத் தாங்கக்கூடிய சக்தி அவளுக்கு இல்லை. தான் பெற்று வளர்த்த மகனுக்கு முன்னால் நின்று கொண்டிருப்பது அவள் நினைக்கவில்லை. மாறாக, ஒரு குற்றவாளி நீதிபதியின் முன்னால் நின்று கொண்டிருப்பதைப் போல் அவள் உணர்ந்தாள். நிச்சயம் தன்னுடைய செயலுக்கு அவள் ஏதாவது சமாதானம் சொல்லியே ஆகவேண்டும்.

கோபன் கேட்டான்: ‘‘என் அப்பா எங்கே போனாரு?’’

என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தாள். ஜானகி அம்மா. பின்னர் ‘‘உன் அப்பா கூட இன்னைக்கு நான்...’’ - அவள் நடுங்கும் குரலில் சொன்னாள்.

கோபன் வெறுப்பு கலந்த குரலில், ‘‘கட்டாயம் அது தேவைதான்...’’ என்றான். 

சிறிது நேரம் கழித்து கோபன் கேட்டான்: ‘‘என்னையும் இந்த அப்பாவி பெண்ணையும் என்ன செய்யப் போறீங்க?’’

ஜானகி அம்மா மேஜையின் மீது விளக்கை வைத்தாள். அவள் அழுது கொண்டிருந்தாள்.

‘‘மனசுல வச்சுக்க முடியாம எல்லாமே வெளியே வந்திடுச்சு. நான் என்னென்னவோ சொல்லிட்டேன். எதுக்காக நான் அப்படியெல்லாம் சொன்னேன்னு கேக்குறதுக்கு இங்கே யாரும் இல்ல. என் மேல பரிதாபப்படுறதுக்கு எனக்கு எந்தத் தகுதியும் இல்ல...’’

ஜானகி அம்மா தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள். கோபன், ‘‘பாவம் என் அப்பா இப்போ தூக்குப்போட்டு சாகலைன்னு...’’ என்றான்.

‘‘நிச்சயம் அப்படியொரு காரியத்தை அவர் செஞ்சிருக்க மாட்டாரு. அதற்கான தைரியம் அவருக்கு இல்ல...’’

அந்தப் பதிலே கோபன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ‘‘என் அப்பா மேல உங்களுக்கு அன்பு இருக்கா?-’’ தன்னையே அறியாமல் அப்படியொரு கேள்வியைக் கேட்டான் கோபன். ஜானகி அம்மாவின் ‘அதுக்கான தைரியம் அவருக்கு இல்ல’ என்ற பதில் அந்தக் கேள்வியை அவனுடைய இதயத்தின் ஆழத்திலிருந்து மேலே எழுப்பிக் கொண்டே வந்தது.


ஜானகி அம்மாவும் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை. வந்தது. ஜானகி அம்மாவும் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை.

‘‘நீ... நீயா இப்படியொரு கேள்வியைக் கேக்குற?’’

‘‘இந்த வீட்டுல வளர்ற பிள்ளைங்க இது மட்டுமில்ல; இதைத் தாண்டிக்கூட கேட்பாங்க. ஒரு தாய்க்கிட்ட இந்த விஷயத்தைத் தான் பேசணும்னு எங்களுக்கு எப்படி தெரியும்?’’

‘‘நான் என்ன செய்யணும்?’’

‘‘ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சிருந்திருக்கணும்.’’ - கோபன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான் : ‘‘இனிமேலும் குழந்தைங்க பிறக்கும்ன்ற விஷயத்தை. ஒழுங்கா இருந்திருந்தா இப்படி பல பேரோட வாழ்க்கை வீணாகாம இருந்திருக்கும்...’’

கோபன் ஒரு எல்லையைத் தாண்டி போய்விட்டான் என்பதைத் தெரிந்து கொண்ட ஜானகி அம்மாவின் மனதில் மேலும் பல கேள்விகள் எழுந்தன. அப்போதும் அவள் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தவண்ணம் இருந்தது. அவள் சொன்னர்ள் :

‘‘தனக்கு உரிமையில்லாத ஒரு குழந்தையை அவள் பெத்தெடுப்பான்னு உங்களுக்குத் தெரியாதான்னு நீ கேட்டிருக்கலாமே!’’

‘‘யார்கிட்ட கேக்குறது?’’

‘‘என்னை வெறுக்கச் சொல்லி உனக்குச் சொல்லித் தந்த ஆள்கிட்ட!’’

கோபனின் அறிவு இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் சொன்னான் : ‘‘அவர் அப்படி நடந்து கொண்டது எவ்வளவு பெரிய பெருந்தன்மை! உங்கமேல கொண்ட இரக்கத்தாலும், கருணையாலும் தான் அவர் அப்படி நடந்துக்கிட்டார். நல்ல ஒரு காரியத்தைச் செய்வோம்னு மனப்பூர்வமா ஆசைப்பட்டதன் விளைவுதானே அது? அப்படிப்பட்ட ஒரு செயலை என் அப்பா செய்தார்னா அதுக்கு எவ்வளவு பெரிய பரந்த மனசும் தைரியமும் இருக்கணும்?’’

ஜானகி அம்மா அதைக் கேட்டுப் புன்னகைத்தாள்.

‘பெரிய மனசு! இரக்கம்! கருணை!’

ஜானகி அம்மா வெறுப்புடன் சிரித்தாள். பிறகு அவள் சொன்னாள் : ‘‘எல்லைகளையெல்லாம் தாண்டியாச்சுல்ல! நீயும் கேட்கக் கூடாததையெல்லாம் கேட்டுட்டே நான் சொல்றேன். என்னை அவர் ஏற்றுக் கொண்டது இரக்கப்பட்டு அல்ல. என்னோட ஆதரவற்ற நிலையை வச்சு அவர் முதல் எடுக்கலாம்னு பார்த்தாரு!’’ ஜானகி அம்மாவின் குரல் மேலும் உயர்ந்தது : ‘‘மனம் விரும்பி அவர் அந்தக் காரியத்தைச் செய்யல. ஆதரவு இல்லாத ஒரு பெண்ணை மனைவியா ஏத்துக்கிட்டா, அவ எல்லா விஷயங்களையும் சகிச்சுக்கிடுவாள்னு அவர் நினைச்சாரு. அதுதான் உண்மை. வேற எப்படிப்பட்ட பெண்ணை அவர் ஏத்துக்கிட்டாலும், அவள் சொல்றதை அவர் நம்பியே ஆகணும். வேற வழியே இல்ல. இந்த புத்திசாலித்தனம் தன் மீது அவர் கொண்ட அவநம்பிக்கையால் பிறந்தது. உனக்கு என்னவெல்லாமோ சொல்லித்தந்த உன் அப்பாவோட குணம் அதுதான். அவர் ஒரு வஞ்சகன்.’’

மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசியதால் ஜானகி அம்மாவிற்கு மூச்சை அடைத்தது. அவள் இன்னும் என்னென்னவோ சொல்ல நினைத்தாள். சொல்ல நினைத்தது ஒவ்வொன்றும் திரண்டு தொண்டையில் நின்று கொண்டிருந்தது. தாய்க்கு எதிராக மகனை தயார் பண்ணிவிட்டதால் உண்டான மனவருத்தத்தின் விளைவே அவள் சொல்ல நினைத்த ஒவ்வொன்றும்.

மகன் கேட்கக் கூடாதைக் கேட்டான். அவனை வைத்து அவர் கேட்க வைத்தார். தாய் சொல்லாக்கூடாததைச் சொன்னாள். அவளை அப்படி அவர் சொல்ல வைத்தார். பல நூற்றாண்டுகளாகப் புனிதம் என்று நினைத்துப் பாதுகாக்கப்பட்டு வந்திருக்கும் நம்பிக்கைகள் சரிந்துவிட்டன. ஜானகி அம்மாவின் கடந்துபோன இருபத்து மூன்று வருடங்களும் வீண் என்றாகிவிட்டது. ஒப்பந்தத்தை மீறாமல் அவள் வாழ்ந்தாள். அதை இப்போது அவள் மீறிவிட்டாள். இனிமேல் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

அவள் சொன்னாள் : ‘‘என்னை அவர் எப்பவும் சந்தேகப்பட்டார். என் பிள்ளைகளோட பிறப்பைப் பற்றிக் கூட அவர் சந்தேகப்பட்டார்.’’

ஜானகி அம்மா மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள். ஒரு தாய் தன் மகனிடம் இப்படியெல்லாம் பேச வேண்டியதாகி விட்டதே!

கோபனும் மிகவும் தர்ம சங்கடமான நிலையில் இருந்தான். சந்தேகம் நிறைந்த ஒரு சூழ்நிலையில்தான் அவன் வளர்ந்ததே. ஞாபகமிருக்கும் காலம் முதல் ஒரு குழந்தை சிந்திக்கத் தேவையில்லாதவை, ஒரு குழந்தை சிந்திக்கக் கூடாதவை எல்லாவற்றையும் அவன் சிந்தித்தான். அந்த வீட்டில் சந்தேகப்படுவதைத் தவிர முழுமையாக நம்புவதற்கு என்று எதுவுமேயில்லை. சிறு குழந்தையாக இருந்தது முதல் அவன் தன்னைத்தானே பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறான்.

ஜானகி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தவாறு அவன் கேட்டான் : ‘‘நாங்க எதை நம்புறது?’’

பாவம் அந்தப் பெண்! அந்தக் கேள்விக்கு அவள் என்ன பதில் கூறுவாள்? ஒரு பெண்ணின் முலைப்பால் இந்த அளவிற்கு வீணடைந்தது அவள் கேள்விப்பட்டதேயில்லை!

கோபன் ஜானகி அம்மாவையே வெறித்துப் பார்த்தான். அதுவரை அப்படிப்பட்ட ஒரு பெண்ணை அவன் பார்த்ததில்லை. ஏராளமாக ரகசியங்களின் உறைவிடமாக, எளிதில் புரிந்து கொள்ள முடியாத எதையும் செய்யத் தயாராக இருக்கும் ஒரு பெண் அந்த வீட்டில் இதுவரை வாழ்ந்து வந்திருக்கிறாள். அவளை ஒருமுறை கூட அவன் உற்றுப் பார்த்ததில்லை. முன்னால் நின்று கொண்டிருக்கும் அந்தப் பெண் ஒரு பரிதாபமானவள். எதையோ எதிர்பார்த்து ஏங்கிக் கொண்டிருப்பவள். அவளிடம் ரகசியங்கள் எதுவுமில்லை.

ஒரு தாயின் பார்வை எப்படி இருக்கும் என்பதை கோபனால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. தாய் அழுவாள். அன்பு செலுத்துவாள். மகன் வெறுப்பது ஒரு தாய்க்கு கவலையைத் தரும் விஷயம். மகன் தாய்மீது அன்பு செலுத்த வேண்டும். அன்று வரை ‘அம்மா’ என்று தான் அழைத்ததேயில்லை என்பதை கோபன் நினைத்துப் பார்த்தான்.

‘‘அம்மான்னு கூப்பிட உரிமை இல்லாம...’’- கோபன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்: ‘‘அன்பு செலுத்தத் தெரியாம...’’

‘‘அந்தப் பாடத்தை உனக்குச் சொல்லித் தர்றதுக்கு என்னையும் அதைப் படிக்க உன்னையும் அனுமதிக்கல!’’

‘‘அந்த மறையாத கறுப்பு மச்சத்தைத் தேய்த்த தாய், எப்படியோ இருக்கிற தந்தை... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்படியொரு குடும்பத்தை எதுக்காக உருவாக்கினீங்க?’’

ஜானகி அம்மா பரிதாபமான குரலில் சொன்னாள்: ‘‘என் தப்பை உலகம் மன்னிக்கும். அதை நீயும் மன்னிப்பே. என் பிரபாவும் மன்னிப்பான். மன்னிக்கக் கூடாதுன்னு உனக்கு கத்துத் தந்தாலும் அதை நீ நம்பாதே மகனே! நீங்க என்மேல அன்பு செலுத்த வேண்டாம். இரக்கப்பட்டு என்னை மனசுல நினைச்சா போதும்.’’

அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் கோபனின் இதயத்திற்குள் நுழைந்தது. அவனுக்கு ஒரு தாய் இருக்கிறாள். அவள்மீது அவன் நிச்சயம் அன்பு செலுத்துவான். அந்தத் தாய்தான் அவனைப் பெற்றெடுத்தவள். தாய் பிள்ளைகள் மீது பாசம் செலுத்துவாள்.


தாய் செய்த தவறுகள்... தவறுகள் செய்த தாய்மார்களும் அவர்களுக்கு பிள்ளைகளும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அவன் கேட்டான்: ‘‘நான் என் அப்பாவை வெறுக்கணுமா?’’

‘‘கூடாது... கூடாது... என் மகன் தன் அப்பாவுக்கு எதிரா எதுவும் சிந்திக்கக் கூடாது. அவர் நமக்கு தெய்வம். அவர் இல்லைன்னா நம்ம நிலைமை என்ன? அப்படியொரு காரியத்தை செய்யவே கூடாது...’’

‘‘நீங்க எப்படியெல்லாம் எங்களைக் கஷ்டப்படுத்துறீங்க? இது ஒரு நரக வேதனையா இருக்கு.’’

அது ஒரு நரக வேதனைதான் என்பதை ஜானகி அம்மாவும் ஒத்துக் கொண்டாள். என்ன செய்வது? மகனின் நரக வேதனையைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர அந்த அப்பாவிப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? அவள் இதயம் வலித்தது.

‘‘மகனே, எல்லையைத் தாண்டினால் கிடைக்கக்கூடிய தண்டனை அதுதான்...’’

தாயும் மகனும் சிறிது நேரம் எதுவும் பேசவில்லை. உள்ளே லலிதா உரத்த குரலில் ஜபித்துக் கொண்டிருந்தாள். மனதில் உண்டான பயம் போவதற்காக அவள் அப்படி செய்து கொண்டிருந்தாள். சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்த யாரோ சிரிக்கும் சத்தம் கேட்டது. ஒரு நீண்ட பெருமூச்சைப் போல காற்று வீசியது. ஒரு வண்டு ஓசை எழுப்பியவாறு விளக்கில் மோதிவிட்டு பறந்து கொண்டிருந்தது.

‘‘என் மகன் பிரபா மேல் இரக்கமிருந்தா...’’

ஜானகி அம்மாவின் அந்த வார்த்தைகளை முழுமையாக முடிக்க விடவில்லை கோபன். அவன் இடையில் புகுந்து சொன்னான்:

‘‘இரக்கப்படுவதா? அந்த மனிதன் ஒரு கெட்ட கனவாச்சே! எல்லார் வாழ்க்கையிலும் ஒரு கரு நிழல்!’’

‘‘ஆனா, அவனைப் பெற்றது நான்தான்டா மகனே!’’

கோபன் மீண்டும் தன் தாயின் முகத்தை ஏறிட்டு நோக்கினான். அவள்- அவனைப் பெற்றெடுத்த தாய். அதைப் போலவேதான் பிரபாவையும் அவள் பெற்றெடுத்திருக்கிறாள். ஒரு பெண் தனக்குப் பிறந்த பிள்ளைகள்மீது பாசம் வைப்பாள். அது ஒரு எழுதப்படாத சட்டம்.

‘‘அதுனாலதான் இன்னைக்குப் பாதையில வந்துக்கிட்டு இருக்கிறப்போ என்னைக் கூப்பிட்டவுடன் நான் நின்னேன்.’’

‘‘அவன் எதுக்கு உன்னை அழைச்சான்?’’

‘‘அப்பாவுக்கு எதிரா சில விஷயங்களைச் சொல்வதற்காக.’’

குற்றவாளியின் மனதைப் பிடித்து நிறுத்துவதைப் போல தன் தாயின் முகத்தை உற்று நோக்கியவாறு கோபன் கேட்டான்:

‘‘அந்த நாடோடி யார்? அவன் எதுக்காக இந்த ஊர்ல சுத்திக்கிட்டு இருக்கான்?’’

அதைக் கேட்டு ஜானகி அம்மா வெலவெலத்துப் போனாள். அடுத்த நிமிடமே எங்கே தான் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லிவிடுவோமோ என்று அவள் பயந்தாள். வெளியே ‘யார் அது?’ என்று வேலைக்காரன் யாரையோ பார்த்துக் கேட்டுக் கொண்டிருந்தான். ஜானகி அம்மா பதறுகிற குரலில் சொன்னாள்:

‘‘பிரபாவுக்கு இங்கே என்ன வேலை? நான் அவனை எப்படியோ பெத்துட்டேன். நாங்க வேணும்னா இந்த ஊரை விட்டு போயிடுறோம். அப்படின்னா எல்லாருக்கும் திருப்திதானே? அவனைப் பெத்ததுக்கு அப்படியாவது பரிகாரம் கிடைக்கட்டும்.’’

‘‘என்னையும் லலிதாவையும் பெத்ததுக்குப் பரிகாரம் என்ன?’’

‘‘நான்தான் அதையும் செய்யணும். நான் இங்கே இருக்குறதே பாரம்.’’

கோபன் நிலைகுலைந்த மனதுடன் வராந்தாவில் இப்படியும் அப்படியுமாக நடந்து கொண்டிருந்தான். அந்த வீட்டில் நிலவிக் கொண்டிருந்த சூழ்நிலை அவனை மூச்சடைக்கச் செய்தது. அங்குள்ள உறவுகள் ஏன் இப்படி சிக்கல்கள் கொண்டதாக இருக்கின்றன என்பதை அவன் எண்ணிப் பார்த்தான் யாரிடமும் அவனுக்கு ஒரு மதிப்போ, பாசமோ தோன்றவில்லை. அவன் தன் தந்தையிடமும் பிறகு லலிதாவிடமும் அவன் ஏதாவது கூறத்தான் போகிறான். அவர்கள் அதற்குத் திரும்ப ஏதாவது கூறுவார்கள். எதை நம்புவது? யாரை மதிப்பது? ஏதாவதொன்றை உடும்புப் பிடியாகப் பிடித்துக்கொள்ள அவனுடைய மனம் துடியாய்த் துடித்தது. ஒரு நிரந்தர நம்பிக்கை கிடைக்காதா என்று அவன் ஏங்கினான்.

அவன் கண்ணீருடன் சொன்னான்: ‘‘அப்பா அம்மாவை நம்பினாங்க. அம்மா அப்பாவை நம்பினாங்க. ஒருவர்மேல ஒருத்தர் அன்பு செலுத்தினாங்க. பிள்ளைகள் அப்பா- அம்மா ரெண்டுபேர் மேலேயும் அன்பு செலுத்தினாங்க. அப்படியொரு வீடு... அம்மாவோட மடியில உட்கார்ந்து பால் குடிக்கிறப்போ அந்தக் குழந்தைக்கு  அப்பாக்கிட்ட இருந்து ஒரு முத்தம் கிடைக்கும்... அது எவ்வளவு பெரிய ஆனந்தம்!’’

அவன் என்ன சொல்கிறான் என்பதை ஜானகி அம்மாவால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆமாம்- அப்படிப்பட்ட ஒரு வீடு அமையவில்லை. அப்படிப்பட்ட எதுவும் நடக்கவில்லை. தந்தையும் தாயும் பிள்ளைகளும் சேர்ந்து விளையாடி ரசிக்கும் சத்தம் நிறைந்திருக்கும் ஒரு வீடு அங்கு இல்லை என்பது உண்மை தான். தந்தை குழந்தைக்கு முத்தம் தந்ததை தாய் ரசிக்கவில்லை. தாய் குழந்தையைக் குளிப்பாட்டுவதைப் பார்த்து தந்தை மனதில் மகிழ்ச்சி அடையவில்லை. ஒரே வயிற்றில் பிறந்த அண்ணனும் தம்பியும் ஒருவரையொருவர் அறியாமல் இருந்தார்கள். அங்கு பிள்ளைகள் ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொள்ளவில்லை. தாய் இடையில் புகுந்து அந்தச் சண்டையை விலக்கவில்லை. தந்தை அங்கு நீதிபதியாக வரவில்லை.

  கோபன் சொன்னான்: ‘‘என் அம்மா, இனிமேலாவது நீங்க சேர்ந்து ஒண்ணா இருக்கக்கூடாதா? அந்த சொர்க்கம் மட்டும் கையில கிடைக்கிறதா இருந்தா, அந்த மனிதனை ‘அண்ணே’ன்னு நான் கூப்பிடுறேன்.’’

வாழ்க்கையில் கோபன் சொல்ல நினைத்தது அது ஒன்றுதான். அது ஒன்றுதான் அவன் அதுவரை தெரியாமல் இருந்தது. அவனுடைய வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்கள் அவன் நினைத்தபடி நடந்தபோது, அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், அந்த ஒரு விஷயம் மட்டும் நடக்கவில்லை. அவனுக்குத் தாயும் தந்தையும் வேண்டும். அண்ணன் வேண்டும். அந்தக் குடும்ப உறவுகளின் இனிமையை அனுபவிக்கவேண்டும். கோபனின் கண்களிலிருந்து நீர் அருவியென வழிந்தது. ஜானகி அம்மாவும் அழுதாள். அவள் தன்னையும் அறியாமல் கைகளை நீட்டினாள். அந்தக் கைகளுக்கு இடையில் கோபன் தன் தாயின் மார்புமீது சாய்ந்தான்.

இயற்கை வாழ்த்தியது. எரிந்துகொண்டிருந்த தீபம் அப்படியே நின்றது. மனதிற்கு நிம்மதி தரும் ஒரு இனிய இசை தூரத்தில் எங்கோ முழுங்குவதுபோல் இருந்தது. கோபனின் கண்கள் மூடின. தாய் அவனுடைய நெற்றியில் முத்தமிட்டாள்.

‘‘கோபா!’’

பத்மநாபப் பிள்ளை பின்னாலிருந்து அழைத்தார். கோபனும் அவனுடைய தாயும் அதிர்ச்சியடைந்து பிரிந்தார்கள்.

‘‘அண்ணன்னு அழைக்கலாம்... அப்படித்தானே கோபா?’’ பத்மநாபப் பிள்ளை கேட்டார்.

அதற்கு யாரும் எந்த பதிலும் கூறவில்லை.

‘‘இல்ல... இல்ல...’’ அவர் சொன்னார்: ‘‘அடியே, நீ அவனை மயக்கி...’’

‘‘இது என் உரிமை.’’

கோபன் எதுவும் பேசாமல், ஒரு குற்றவாளியைப் போல உள்ளே நடந்தான்.


‘‘உன் உரிமை!’’- பத்மநாபப் பிள்ளை பற்களைக் கடித்தார்.

‘‘ஆமா... நான் அவனோட அம்மா.’’

‘‘அது உண்மைதான்.’’

ஜானகி அம்மா பத்மநாபப் பிள்ளையை உற்றுப் பார்த்துவிட்டு உள்ளே நடந்தாள்.

6

ந்த வீட்டின் மூலையிலிருந்த ஒரு அறைக்கு ஜானகி அம்மா மாற்றப்பட்டாள்.

அந்த அறையின் கதவுகளும் ஜன்னல்களும் அன்று திறக்கப்பட்டன. அதற்குள் பிரகாசமான ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அப்பாவிப்பெண்! ஒதுக்குப்புறமாக இருந்த அந்த மூலையிலேயே முடங்கிக்கொண்டு இருந்துவிடலாம் என்று அவள் தீர்மானித்து விட்டாள்!

அன்று நடந்த சம்பவங்களை ஜானகி அம்மா நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு வாழ்வதற்கு இடமில்லை. வழியில்லை. அது இன்றைய பிரச்சினை மட்டுமில்லை. எப்போதும் அவளுடைய நிலை இதுதான். எனினும், அவள் வாழ்ந்தாள். வாழவேண்டிய சூழ்நிலை என்ற முறையில், வாழ்வதற்காக அவள் மனைவியாக ஆனாள். மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். இருந்தாலும் யாரும் தன்மீது அன்பு செலுத்தியதாக அவள் நினைக்கவில்லை.

அன்று தன் கணவரிடம் சொன்ன விஷயங்கள் எதுவும் ஜானகி அம்மாவிற்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும், அவ்வளவும் சொன்னதன் மூலம் அவளுக்கு இதயத்தின் கனம் குறைந்து விட்டதைப் போல் இருந்தது. அவள் பலவற்றிற்கும் ஆசைப்படுகிறாள். ஆனால், அவற்றைக் கேட்க அவளுக்கு எந்த அதிகாரம் இருக்கிறது?

எல்லா விஷயங்களையும் ஜானகி அம்மாவால் பொறுத்துக் கொள்ள முடியும். அவளுடைய மகனை வைத்தே பல விஷயங்களையும் சொல்ல வைத்தது அவளால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்று. கோபன் கேட்டதெல்லாம் சரிதான். அவள் கேட்ட ஒவ்வொன்றுக்கும் அவள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அவனை உலகத்திற்குக் கொண்டு வராமலே இருந்திருக்கலாம். அதே மாதிரி பிரபாவிற்கும் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலை அவளுக்கு உண்டாகியிருக்கிறது. யாருக்கும் யாரையும் மன்னிக்க விருப்பமில்லை. அங்கு எல்லாரும் தங்கள் நிலையை நியாயப்படுத்தவே செய்கின்றனர். அவள் மட்டுமே அங்கு குற்றவாளி!

எனினும், அன்று அந்த அளவிற்குத் தான் நடந்திருக்கவேண்டியதில்லை என்றே அவள் நினைத்தாள். பிரபாவிற்கு அங்கு வாழ்வதற்கான உரிமை இல்லை என்பது உண்மைதானே? அது யாருடைய வீடு அவனுடைய வீடுமல்ல, தன்னுடைய வீடும் அல்ல.  அதை தான் ஒத்துக் கொண்டிருக்கலாம்.... அப்படியானால் பிரபா எங்கு போவான்? எங்கும் போக முடியாது... அவன் இங்கேயே வாழ்ந்தால்தான் என்ன? அவனால் இங்கு யாருக்கு என்ன தொந்தரவு இருக்கிறது? அவன் ஒரு பெண்ணைக் காதலிக் கிறானென்றால் அதனால் கோபனுக்கும் அவனுடைய தந்தைக்கும் என்ன இழப்பு இருக்கிறது? ஆனால், அவனுக்கு ஒரு பெண்ணைக் காதலிப்பதற்கான தகுதி இருக்கிறதா?

இரவு நன்கு இருட்டிவிட்டிருந்தது. நள்ளிரவுக் கோழி கூவியது. ஜன்னல் வழியாக ஜானகி அம்மா வெளியே பார்த்தாள். வானத்தில் பலகோடி நட்சத்திரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரே அமைதி! இப்போது வெளியே என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது!

‘‘அம்மா, நீங்க இங்கேயா இருக்கீங்க?’’

ஜானகி அம்மா திரும்பிப் பார்த்தாள். அங்கு பிரபா நின்றிருந்தான். பிரபா ஜானகி அம்மாவை நெருங்கிவந்தான். அவன் அவளுடைய முகத்தைக் கையால் உயர்த்தியவாறு கேட்டான்: ‘‘அம்மா, நீங்க அழுறீங்களா? ஏம்மா நீங்க அழணும்?’’

‘‘என் வாழ்க்கையில ஒரு முக்கியமான கட்டம் இப்போ ஆரம்பச்சிருக்கு மகனே!’’

‘‘முக்கியமான கட்டமா? அது முடிஞ்சிடுச்சில்லம்மா?’’

‘‘எனக்கும் கோபனோட அப்பாவுக்கும் சண்டை.’’

அது பிரபாவைப் பொறுத்தவரை ஒரு செய்தி. அவ்வளவுதான்.

‘‘சண்டை எப்படிம்மா வந்துச்சு? நீங்க புத்திசாலியாச்சே! இல்லன்னா... நீங்க என்கிட்ட அதைப்பற்றி சொல்லவே வேண்டாம்.’’

‘‘நான் புத்திசாலின்னு உனக்குத் தோணுதா?’’

அதைப்பற்றி எண்ணிப் பார்க்க வேண்டிய அவசியமே பிரபாவிற்கு இல்லை. அந்தக் கேள்விக்குரிய பதிலை அவன் ஏற்கெனவே சிந்தித்து வைத்திருந்தவைதான்.

‘‘எந்தவொரு பொண்ணுக்கும் நடக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சினைகள் வாழ்க்கையில் நடந்தும், நீங்க அதுல வெற்றி பெற்றீங்கம்மா.’’

அர்த்தம் நிறைந்த அமைதி அங்கு நிலவிக் கொண்டிருந்தது. இருவருக்கும் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு ஜானகி அம்மா கேட்டாள்: ‘‘பிரபா உனக்கு உன்னைப் பற்றித் தெரியுமா?’’

அதற்கு பிரபா சிரித்தான். பிறகு ‘‘தெரியும்’’ என்று அவன் சொன்னான்.

‘‘எதுக்கு ஒரு பெண்ணை வாழ்க்கைக்குள்ளே இழுத்தே?’’

‘‘எந்தப் பொண்ணை?’’

‘‘அந்த அப்பாவிப்பொண்ணை!’’

தான் நினைத்திருந்ததைவிட வேறு ஏதோவொன்றை ஜானகி அம்மா கூறப்போகிறாள் என்பதை பிரபா புரிந்து கொண்டான். அவன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான். ஜானகி அம்மா சொன்னாள்:

‘‘நீ அழியப்போற. அதை அமைதியா பார்த்துக்கிட்டு இருக்கிறதை தவிர எனக்கு வேற வழி இல்ல. அழிவதற்காகப் பிறந்த நீ அழிஞ்சே ஆகணும். நீ எதுக்கு காதலிச்சே? உனக்கு காதலிக்கிறதுக்குத் தகுதியே இல்ல.’’

அமைதியாக தாய் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் பிரபா.

‘‘இது ஒரு சவால்மா!’’

‘‘சவாலா?’’

ஜானகி அம்மாவுக்குப் புரியவில்லை. அவள் தொடர்ந்து கேட்டாள்:

‘‘சவாலா? யார்கிட்ட சவால்? நீ அந்தப் பொண்ணை ஏமாத்திட்டியா?’’

‘‘இல்ல... காதலிக்க முடியும்னு- காதலிக்கப்பட தகுதி இருக்குன்னு நிரூபிச்சிட்டேன். அந்த விதத்துல எனக்கு சந்தோஷம்தான்மா.’’

‘‘நீ அவளை ஏமாத்திட்டே உன் சவாலுக்கு அவளை நீ ஒரு கருவியா பயன்படுத்திட்டே...’’

அவளை ஏமாற்றி விட்டான்! அவளை ஒரு கருவியாகப் பயன்படுத்தி விட்டான்! இரண்டிற்கும் அர்த்தம் இருப்பதாக பிரபா நினைத்தான். இரண்டும் உண்மைகளே ஏமாற்றுவது, கருவியாகப் பயன்படுத்துவது. அதுவரை அவற்றைப் பற்றி பிரபா சிந்தித்துப் பார்த்ததில்லை. ஏமாற்றியதற்கும், கருவியாகப் பயன்படுத்தியதற்கும் கிடைக்கும் பரிசு என்னவாக இருக்கும்? ஏமாற்றுவது என்பதைப் பற்றி பிரபா ஆராயத் தொடங்கினான்.

‘‘நீ அவளைக் காதலிக்கிறதா இருந்தா, உன்னோட பாழாய்ப் போன வாழ்க்கையில அவளைப் பங்காளியா கொண்டு வந்திருப்பியா?’’

‘‘இல்ல... இல்ல...’’ பிரபா சொன்னான். ‘‘இல்ல... நான் இப்படியே எங்க வேணும்னாலும் இஷ்டப்படி சுற்றுவேன். அவளை வாழ்க்கையில பங்குகாரியா ஆக்குறதுன்றது...’’

‘‘ஒரு பொறுப்புணர்வு...’’

‘‘அந்தத் தகுதி எனக்கில்ல... அம்மா அந்த நாடோடிக் கூட்டத்துல இருக்குற பெண்கள்ல ஒருத்திக்கிட்ட நான் பிறந்திருக்கணும்.’’

பிரபா ஜானகி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவளிடம் எந்தவித உணர்ச்சி வேறுபாட்டையும் அவன் பார்க்கவில்லை. அவள் மிகவும் அமைதியான குரலில் சொன்னாள்: ‘‘நான் அப்படிப்பட்ட ஒருத்தி இல்ல...’’

‘‘அப்படி உங்களுக்குத் தோணுதாம்மா!’’

‘‘அது உன்னோட துரதிர்ஷ்டம் மகனே!’’

‘‘துரதிர்ஷ்டம்’’ என்று இரண்டு மூன்று முறை பிரபா திருப்பித் திருப்பிக் கூறினான். அவன் எவ்வளவோ கேள்விகளைத் தன் தாயைப் பார்த்துக் கேட்க வேண்டுமென்று நினைத்தான்.


 அந்த ‘துரதிர்ஷ்டம்’ மிகவும் விரிவாக விளக்கிக் கூறப்பட்டு புரிந்து கொள்ள வேண்டியது. அதைப்பற்றி ஜானகி அம்மாவுக்கும் கூறுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அவளின் சிந்தனையோட்டம் பல வருடங்களுக்கு முன்னால் பாய்ந்து சென்றது. இருபத்தொரு வருடங்களுக்கு முன்னால் தன்னுடைய நிலை எப்படி இருந்தது என்பதை நினைத்துப் பார்த்ததன் விளைவாக அவள் அப்படி சொல்லிவிட்டாள்.

‘‘அந்தப் பொண்ணு பாவம்... அவ நிலைமை இப்போ எப்படி இருக்கும்?’’

பிரபாவிற்கு அவள் என்ன சொல்கிறாள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஒரு பெண்ணால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரபா தன்னுடைய துரதிர்ஷ்ட நிலைமையைப் பற்றி எண்ணிப் பார்த்தான். தன்னுடைய அதிர்ஷ்டக் குறைவை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்க்கையில் அவனுக்கென்று எதுவுமில்லை. தாய்கூட இல்லை. ஆதரவாகப் பற்றிக்கொள்வதற்கு யாரும் இல்லை. திரும்பிப் பின்னால் பார்க்க அவனுக்கென்று பாரம்பரியம் எதுவும் இல்லை. அதே நேரத்தில் உலகமே வெறுத்து ஒதுக்கும்போதுகூட அவன்மீது பரிதாப உணர்வு கொண்டு ஒரு பெண்ணின் இதயம் துடிப்பதை அவனால் உணரமுடிந்தது. ஒரு இனிமையான நினைவு அவனை சதா நேரமும் ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. உள்ளே எரிச்சல்பட வைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களிலிருந்து மாறுபட்டு அவளிடமிருந்த அந்த நினைவின் குளிர்ச்சியில் அவன் தன்னைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டான். அந்தப் பெண்ணின் சிரிப்பு அவனுடைய இதயத்தில் பிரகாசத்தைப் பரவச் செய்தது. அவள் புன்னகை பிரபாவை மென்மையான மனம் கொண்டவனாக மாற்றியது. அவளின் இருப்பு அவனை வாழ்க்கையின் மகிழ்ச்சியான திசையை நோக்கித் திருப்பி விட்டது. கனவு காண தனக்கு உரிமை இருக்கிறது என்று பிரபா உணர்ந்தான். ஏனென்றால் பிரபா ஒரு பெண்ணின் கனவின் மையமாக இருந்தான். பிரபாவை இருகரம் நீட்டி வரவேற்க ஒருத்தி தயாராக இருந்தாள். அவன் ஒருத்திக்குச் சொந்தமானவனாக இருந்தான். அவள் பிரபாவிற்குச் சொந்தமானவளாக இருப்பதாகச் சொன்னாள். அந்த வாக்குறுதியில் பிரபா திருப்தி அடைந்தான்.

அவன் தன் தாயைப் பார்த்து சொன்னான்: ‘‘நான் வாழ்க்கையில் வெற்றி பெறணும்னு அவள் எதிர்பார்க்கல. என்மேல அவளுக்கு நம்பிக்கை இல்லாமக்கூட இருக்கலாம். என் உண்மை நிலை அவளுக்குத் தெரியும்மா.’’

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பிரபா தொடர்ந்தான்: ‘‘எனக்கு இந்த விஷயத்துல தகுதியே இல்ல.’’

ஜானகி அம்மா இன்னொரு உண்மையைச் சொன்னாள்: ‘‘உன்னை அவள் வெறுத்திடுவா. உனக்குக் கிடைச்ச சந்தோஷம் அர்த்தமில்லாதது. அந்தக் குழந்தை...’’

‘‘அது இன்னொரு வருத்தப்படக் கூடிய உண்மை!’’

‘‘அப்போ அந்தக் குழந்தை பிறக்குறதே நல்ல ஒரு விஷயம் இல்லைன்றதை நீ ஒத்துக்கறியா?’’

பிரபா அந்தக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ஜானகி அம்மா தொடர்ந்து சொன்னாள்: ‘‘அந்தக் குழந்தை அவளோட கெட்ட கனவா இருக்கும்.’’

அந்த வார்த்தைகள் பிரபாவின் இதயத்தில் ஆழமாகப் பாய்ந்தன. அந்த வார்த்தைகளை உண்மையிலேயே தன்னுடைய தாய்தான் சொன்னாளா என்பதை அறிந்து கொள்வதற்காக பிரபா அவள் முகத்தை உற்றுப் பார்த்தான். ஜானகி அம்மா உறுதியான குரலில் சொன்னாள்: ‘‘ஆமாம் மகனே... அது கெட்ட கனவுதான்.’’

பிரபா இடறிய குரலில் கேட்டான்: ‘‘நீங்க சொல்றது உண்மையா அம்மா?’’

அதைக் கேட்டு ஜானகி அம்மாவின் கண்களில் நீர் நிறைந்தது.

‘‘ஆமா... மகனே!’’

அதுவரை தன்னைப் பற்றி தெரியாதிருந்த இன்னொரு உண்மையை பிரபா தெரிந்து கொண்டான். உலகத்துடன் அவனைப் பிணைத்திருந்த ஒரு மென்மையான இழையை அது சேதப்படுத்தியது. உள்மனதில் பயங்கரமான ஏமாற்றம் அலைமோத தன்னைத்தானே வெறுத்தவாறு பிரபா கேட்டான்: ‘‘அப்போ பெற்ற தாயோட பாசம்கூட எனக்கு இல்லை. அம்மா, நான் உங்களுக்கு எப்படிப்பட்ட கெட்ட கனவு?’’

‘‘கேள் மகனே. உன்னால முழுசா அதைப் புரிஞ்சிக்க முடியல. அந்தக் குழந்தை வளரும். பிறந்தா, அது நீண்ட நாள் உயிர்வாழும் அதை வளர்க்காம இருக்க அவளால முடியாது!’’

‘‘அது என்ன கடமை அம்மா? அப்போ அதோட நெற்றியில் வைக்கிற ஈரமான முத்தங்கள்... அது கொஞ்சம் கூட ஒரு குழந்தையைச் சந்தோஷப்பட வைக்காதே.’’

‘‘அவளால் அழாம இருக்க முடியாது பிரபா!’’

‘‘அந்தக் குழந்தை வளரணும்னு அவ விருப்பப்பட மாட்டாள்ல அம்மா!’’ - பிரபா ஜானகி அம்மாவுக்கு நெருக்கமா வந்து அவளின் கையை இறுகப் பிடித்து தடவியவாறு கேட்டான்:

‘‘உண்மை... உண்மையைச் சொல்லுங்கம்மா. அந்தக் குழந்தையை அவள் இறுக அணைக்கிறதுகூட அது மூச்சுவிட முடியாம சாகணும்கிறதுக்குத்தானா?

ஜானகி அம்மா பிரபாவைப் பார்த்து பயந்தாள். பிரபா தொடர்ந்து சொன்னான்: ‘‘சொல்லுங்க. என் மனசுல அப்படி ஒரு எண்ணம் தோணியிருக்கு- நீங்க என்னை இறுக கட்டிப் பிடிச்சப்போ... அப்படின்னா அந்தக் குழந்தை...’’

‘‘பிறக்கக்கூடாது.’’

பிரபா தன் தாயின் கையை விட்டான். மிகவும் தளர்ந்து போய் அவன் ஜன்னல்மீது சாய்ந்து நின்றான். ஒரு உண்மையை அவன் நினைத்துப் பார்த்தான். ஒரு தாய் தன் மகன் இறக்க வேண்டு மென்று, குழந்தை பிறக்க கூடாதென்று விருப்பப்படுகிறாள்!

ஒரு மனிதனின் நீளமான கரும் நிழல் அந்த அறையின் சுவரில் தெரிந்தது. அந்த நிழலுக்குச் சொந்தக்காரர் பத்மநாபப் பிள்ளை தான். அவர் பிரபாவைப் பார்த்துக் கேட்டார்: ‘‘நீ வந்துட்டியா?’’

‘‘அவனும் என்மேல பாசமா இருக்கக்கூடாதா?’’ ஜானகி அம்மா பத்மநாபப் பிள்ளையிடம் கேட்டாள்.

அதற்கு அவர் சொன்னார்: ‘‘இவங்க யாரும் உனக்கு பிரயோஜனமா இருக்க மாட்டாங்க!’’

‘‘உங்க பிள்ளைங்க உங்களுக்கு உதவியா இருப்பாங்களா? இல்ல... அதுக்கும் வழியில்ல...’’

வெளியே யாரோ நடக்கும் சத்தம் கேட்பதுபோல் இருந்தது. ‘‘யார் அது?’’ என்று உரத்த குரலில் பத்மநாபப் பிள்ளை கேட்டார். அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. ஜானகி அம்மா அதிர்ச்சியடைந்து நின்றிருந்தாள். பிரபா வெளியே புறப்பட்டான்.

‘‘ச்சே... என்னை நிம்மதியா இருக்கவிட மாட்டீங்களா?’’- பத்மநாபப் பிள்ளை உரத்த குரலில் கத்தினார்.

7

ந்த நள்ளிரவு நேரத்தின் அமைதியைக் கிழித்துக் கொண்டு பிரபா நடந்து போய்க்கொண்டிருந்தான். ‘அப்படிப்பட்ட குழந்தை பிறக்கக்கூடாது’ என்ற வார்த்தைகள் பிரபாவின் காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தன. தன் தாயின் இதயத்தின் அடியாழத்திலிருந்து அந்த வார்த்தைகள் வந்தபோதுதான் அவற்றின் கனமும் கடுமையும் என்னவென்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. தான் பிறந்திருக்கவே கூடாது என்று அவனுக்கு எத்தனையோ தடவைகள் தோன்றியிருக்கிறது. ஆனால், அவனுடைய தாயும் அதையே நினைத்திருக்கிறாள் என்பதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.


அப்படியென்றால் எதற்காக அவனுடைய தாய் அவனைப் பெற்றெடுத்தாள்?

ஒரு ஆள் தன்னந்தனியனாக அவனுக்கு எதிராக வந்து அவனைக் கடந்து போனான். அந்த மனிதன் ஏதோ ஒரு இடத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறான். அவனுக்கென்று ஒரு இலக்கு இருக்கிறது. அவன் மனதில் எதைப்பற்றி நினைத்துக் கொண்டிருப்பான்? பாதையோரத்தில் இருந்த ஒரு வீட்டில் ஒரு குழந்தை தூக்கம் கலைந்து எழுந்து அழுதது. அந்தக் குழந்தை தன் தாயுடனோ அல்லது தந்தையுடனோ படுத்து உறங்கிக் கொண்டிருக்கவேண்டும். தாய் தந்தை தங்கள் குழந்தைகளை அருகில் படுக்க வைத்து உறங்கச் செய்வார்களா? ஒரு ஆள் அந்தக் குழந்தையை ‘வா... வா...’ என்று சொல்லித் தூங்க வைக்கும் குரல் கேட்டது. அடுத்த சில நிமிடங்களில் குழந்தையின் அழுகைச் சத்தம் முழுமையாக நிற்கவும் செய்தது.

இப்படி வீடுகளில் பல விஷயங்கள் நடக்கத்தான் செய்கின்றன. தந்தை தாய் ஆகியோருக்கு நடுவில் குழந்தை படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தை இருவருக்கும் உரிமையுள்ளதாயிற்றே!

பிரபா எங்கு நோக்கியோ மீண்டும் நடந்தான். முடிவே இல்லாத அந்த சாலையில் எவ்வளவு நாட்கள் நடந்தாலும், அவனுக்குத் தெரிந்த இரண்டே இரண்டு வீடுகள்தான் இருக்கின்றன. வாழ்க்கையில் இரண்டு வீடுகளின் உட்பகுதிகளை மட்டுமே அவன் பார்த்திருக்கிறான். அந்த வீடுகளை அவன் நினைத்துப் பார்த்தான். சிறு குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு வீட்டின் உள்ளேயிருக்கும் அறையில் அவன் இருந்திருக்கிறான். அதன் சுவர் பச்சை நிறத்தில் இருந்தது.

கால்கள் அவனை இருட்டில் மூழ்கிக் கிடந்த ஒரு சிறு வீட்டை நோக்கி இழுத்துச் சென்றன. அந்த வீட்டின் கதவுகளைத் தட்டுவதற்கு அவனிடம் தைரியம் இருந்தது. ஏனென்றால் அந்தக் கதவு திறக்கப்படும். அந்த வீட்டுக்குள் அவன் நுழையலாம். அவன் ஏற்கெனவே அங்கு போயிருக்கிறான்.

கதவு திறந்தது. பிரபா வீட்டிற்குள் நுழைந்தான். அது ஒரு சிறிய படுக்கையறை. விரிப்பு விரிக்கப்பட்டிருந்த ஒரு கட்டிலும் ஒரு சிறு மேஜையும் அறைக்குள் இருந்தன. மேஜைமீது ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவிழ்ந்து கிடந்த கூந்தலை முடிச்சுப் போட்டவாறு ஒரு பெண் நின்றிருந்தாள். அவளுக்கு அதிகம் போனால் பதினெட்டு வயது இருக்கும். அவள் சொன்னாள்: ‘‘வரமாட்டேன்னு சொன்னதுனால நான் நல்லா தூங்கிட்டேன்.’’

பிரபாவின் கண்கள் மேஜைமீது பல வர்ணங்களைக் கொண்ட கம்பளி நூலால் நெய்யப்பட்டிருக்கும் பொருளையே பார்த்தன. அதை விஜயம்மாவும் பார்த்தாள். ஒரு புன்னகையுடன் அவள் மேஜைக்கு அருகில் நடந்து சென்று அதைக் கையில் எடுத்தாள்.

‘‘இது என்னன்னு தெரியுதா?’’

அந்த அளவிற்கு ஒரு கவர்ச்சியை அதற்கு முன்பு அவளுடைய புன்னகையில் அவன் பார்த்ததில்லை.

‘‘இது ஒரு தொப்பி மாதிரி தெரியுது...’’ என்றான் பிரபா.

‘‘இது யாருக்கு?’’ என்றாள் அவள்.

பிரபாவிற்குப் புரிந்தது.

அவள் தன்னுடைய குழந்தையின் தலையில் வைப்பதற்காக அந்தத் தொப்பியைத் தைத்துக்கொண்டிருக்கிறாள்.

‘‘இந்த அளவுக்கு வந்தாச்சா?’’

‘‘ம்... என்ன சொன்னீங்க?’’

அவள் மெதுவாகக் கட்டிலிருக்கும் இடத்தை நோக்கி நடந்தாள். பிரபா அவளைப் பார்த்துச் சிரித்தான். அவன் கேட்டான்:

‘‘நீ ஏன் அழல?’’

‘‘நான் ஏன் அழணும்?’’

‘‘இந்தக் குழந்தை பிறக்கக் கூடாது.’’

பிரபா தன்னையே அறியாமல் அந்த வார்த்தைகளைக் கூறினான். அதைக் கேட்டு அவனே சிறிது அதிர்ச்சியடைந்தான். விஜயம்மா கேட்டாள்: ‘‘பிறக்கக்கூடாதா?’’

‘ஆமா...’ - இந்த பதில் பிரபாவின் தொண்டைவரை வந்துவிட்டது. ஆனால், வெளியே வரவில்லை.

‘‘எதுக்காகப் பிறக்கக்கூடாது?’’ - விஜயம்மா தொடர்ந்து கேட்டாள். பிரபா என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேந்தப் பேந்த விழித்தான். அவன் கூற நினைத்தது எவ்வளவோ!

‘‘நான் உன்னை நாசம் செஞ்சிட்டேன். உன்னை விட்டு நான் ஓடணும்.’’

இந்த அளவிற்கு குழம்பிப்போன நிலையில் பிரபாவை விஜயம்மா ஒருமுறை கூட பார்த்ததில்லை.

‘‘ஓடுறதுக்குக் காரணம்?’’

‘‘உன்னை வெறுக்க நான் முயற்சிக்கிறேன்.’’

‘‘எனக்கு அதைப் பற்றி பயமில்லை’’ என்றாள் விஜயம்மா.

பிரபா கேட்டான்: ‘‘நான் போயிட்டா?’’

எந்தவிதமான அதிர்ச்சியும் அடையாமல் அவள் சொன்னாள்: ‘‘உங்களால் அது முடியாது. நான் உங்களை விடமாட்டேன்.’’

விஜயம்மா அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அந்தச் சிரிப்பை அவள் மிகவும் சிரமப்பட்டு வரவழைத்தாள். அப்படி அவள் புன்னகைத்ததால் எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை. அந்தச் சூழ்நிலையின் கனம் அதனால் சிறிதும் குறையவில்லை. பிரபா இதயம் திறந்து சொன்னான்: ‘‘என்னை நம்பமுடியாது.’’

தொடர்ந்து பிரபா என்னென்னவோ சொன்னான். அவள் தன்னை வெறுக்காமலிருக்க வேண்டுமென்றால், தன்னைப் பேசாமல் போகவிடுவதே சரியானது என்றான் அவன். விஜயம்மா அவன் சொன்ன எல்லாவற்றையும் கேட்டாள். அவளும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்று நினைத்தாள். அவளின் காதலன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. இருந்தாலும் தன்னுடைய வாழ்க்கை முழுமையடைந்து விட்டது என்று அவள் எண்ணினாள். கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு இதயத்திற்கு நிம்மதி தர அவளால் முடிந்தது. உலகமே கேலி பண்ணிக் கொண்டிருந்த ஒரு மனிதனை அவளால் காதலிக்க முடிந்தது. விஜயம்மாவிற்கு அது போதும். அவள் கேட்டாள்: ‘‘என்னை விட்டுட்டுப் போனா, உங்களுக்குச் சந்தோஷம் கிடைக்குமா?’’

அதற்குப் பதில் கூற பிரபாவால் முடியவில்லை. அவள் பிரபாவை நெருங்கி அவனுடைய தோளில் கையை வைத்தவாறு சொன்னாள்: ‘‘நான் ஒரு பரிசு தர்றேன். அதை வைச்சு என்னை விட்டு ஒதுங்கி நிற்க விரும்புற இந்த இதயத்தோட சொந்தக்காரியா நான் ஆவேன். உங்க குழந்தையோட தாய்க்கு உங்க வாழ்க்கையில ஒரு உன்னதமான இடம் இருக்குல்ல? இங்க பாருங்க...’’

அவள் பாதி தைக்கப்பட்ட அந்தத் தொப்பியை எடுத்து அவனுடைய முகத்திற்கு நேராகக் காட்டினாள். பற்களைக் கடித்துக்கொண்டு அவன் அதை அவளுடைய கையிலிருந்து பிடுங்கி பியத்து எறிந்தான்.

‘‘இங்க பாரு... ஒரு குழந்தையை உண்டாக்கும் உரிமை எனக்கு இல்ல. நான் ஒரு வம்சத்தை உண்டாக்கினா, அதுல ஒரு களங்கம் இருக்கவே செய்யும். பரம்பரரை பரம்பரையா ஒரு கறுப்பு கறை இருந்துக்கிட்டே இருக்கும். களங்கம்! அது மறையவே மறையாது!’’ அடக்க முடியாத உணர்ச்சி வேகத்தில் பிரபா உரத்த குரலில் சொன்னான்: ‘‘இந்தக் குழந்தை பிறக்கக்கூடாது.’’

அவன் வெளியேறினான். அவனைத் தடுக்க விஜயம்மாவால் முடியவில்லை. படுக்கையறையில் விழுந்த அவள் தேம்பித்தேம்பி அழுதாள்.

பிரபா மீண்டும் இருட்டினில் கரைந்தான்.


அவள் அப்படிப் புன்னகைக்காமல் இருந்திருந்தால்...? பித்து பிடிக்கச் செய்யும் புன்சிரிப்பு அது! பிரபாவின் உள்மனதை விட்டு அந்தப் புன்னகை எந்தக் காலத்திலும் மறையாது. அப்படிப்பட்ட ஒரு சிரிப்பு அதற்கு முன்பு அவளுடைய உதடுகளில் உதயமானதேயில்லை. அந்தப் புன்னகையைச் சிந்தாமலே இருந்திருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பற்றி மனைவி கணவனிடம் கூறும்போது அவளுடைய உதடுகளில் அரும்பிய புன்னகையைப் பற்றி பிரபாவிற்கு எதுவுமே தெரியாது. அவன் அப்படிப்பட்ட புன்னகையை அப்போதுதான் முதல் தடவையாகப் பார்க்கிறான்.

அவள் இப்போது அழுது கொண்டிருப்பாள் என்று பிரபா நினைத்தான். அந்தக் குழந்தை வயிற்றுக்குள் அசைந்து கொண்டிருக்கும். அவள் அழுது அழுது தன்னை வெறுக்கட்டும்‘ அந்தக் குழந்தையையும் வெறுக்கட்டும்! இருந்தாலும், அவளால் மறக்க முடியாது.

யாருக்கும் தெரியாத மொழியைப் பேசிக்கொண்டு நாடோடிகள் நடந்து போகும் இந்தச் சாலையில் தானும் ஒருநாள் நடந்து போக அவளையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு போனால் என்ன? ஆனால், அவளோ ஒரு கனமான வாழ்க்கையை இறுகப் பிடித்துக் கொள்ளப் பார்க்கிறாள். அவளைக் காதலிக்க வேண்டும். அவளைத் திருப்திப்படுத்த வேண்டும். பாதுகாக்க வேண்டும். இதெல்லாம் எப்படி நடைமுறையில் சாத்தியம்?

அவனையும் அவனுடைய சிந்தனையையும் கலைப்பதைப்போல தூரத்தில் ஒரு சேவல் கூவியது. மென்மையான காற்றொன்று மரத்தலைப்புகளில் தவழ்ந்து சென்றது. வானத்தின் கிழக்கு திசையில் இதுவரை இருந்த கருமேகங்களுக்குள் ஒரு வெளிச்சம் தோன்ற ஆரம்பித்தது. பிரபாவின் குழம்பிப் போயிருந்த மனம் சிறிது அமைதி நிலைக்குத் திரும்பியது. அவன் ஒரு ஆலமரத்திற்குக் கீழே போய் அமர்ந்தான்.

எங்கோ மலர்ந்த முல்லை மலர்களிலிருந்து வாசனை புறப்பட்டு வந்து எல்லா இடங்களிலும் பரவியது. மனதில் உண்டான மகிழ்ச்சியான நினைவுகளில் பிரபா மூழ்கத் தொடங்கினான்.

நீல நிறத்தில் பரந்து கிடக்கும் ஆகாயத்தில் வெள்ளி பறக்கும் தட்டு வேகமாகப் பாய்ந்தோடிக் கொண்டிருப்பதை முதல் முறையாக தான் பார்த்த நாளை அவன் நினைவுபடுத்திப் பார்த்தான். அது ஒரு வசந்த கால பவுர்ணமி. மைதானத்தையும் அறுவடை முடித்திருந்த வயல்களையும், மலைப்பகுதியையும் கடந்து அவன் நதிப் பகுதியை அடைந்தான். நிலவு வெளிச்சத்தில் விஜயம்மாவின் கையுடன் தன்னுடைய கையைக் கோர்த்துக் கொண்டு நடந்துபோன அந்தச் சம்பவத்தை நினைவில் கொண்டு வந்தான் பிரபா. நினைக்க நினைக்க அவனுக்கு அது ஒரு சுகமான அனுபவமாக இருந்தது. அவளுடைய மடிமீது தன்னுடைய தலையை வைத்துக்கொண்டு வெண்மையான மணல்பரப்பில் எவ்வளவு நேரம் அவன் படுத்துக் கிடந்தான்! நதி புன்னகைத்துக் கொண்டே அருகில் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது.

நிலவின் குளிர்ச்சியையும் அழகையும் பிரபாவிற்குத் தெரிந்து கொள்ள முடிந்தது. மலர்களின் நறுமணத்தை அவனால் அனுபவிக்க முடிந்தது. இசையில் மூழ்கி அவன் ஆனந்த அனுபவத்தை அடைந்தான். அதற்கு முன்பு அவன் இது எதையும் அறிந்திருக்க வில்லை. அனுபவித்ததும் இல்லை. உலகம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது. ஏராளமான கொடைகளை அது தன்னிடம் கொண்டிருந்தது.

இந்த முடிவில்லாத சாலையில் இரண்டு கைகளையும் வீசிக் கொண்டு தனியாக அவன் நடந்து போகலாம். உடன் அவளிருந்தால்... கால்கள் வலிக்கின்றன என்று அவள் சொன்னால், அவன் என்ன செய்வான்? அவளுக்குத் தாகம் எடுத்தால் வறண்டு கிடக்கும் மைதானத்தில் எங்கிருந்தாவது அவன் நீர் கொண்டுவந்து கொடுப்பான். அவளுக்குப் பசி எடுக்கவும் செய்யுமே! அந்தப் பொறுப்புணர்வின் பெருமையைப் பற்றி பிரபா எண்ணிப் பார்த்தான். அது அவனுடைய எண்ணங்களையும் தாண்டி உயர்ந்து நின்றது. ஆயிரக்கணக்கான சிந்தனைகள் மனதில் தோன்றின. எதற்கும் பதில் இல்லை. வேண்டாம் அந்த பாரத்தைச் சுமக்க அவனால் முடியாது. அந்த உறவின் ஆனந்தத்தை அனுபவிக்கவும் வேண்டாம். இது எதுவும் விதிக்கப் பட்டதல்ல. இனிமேலும் முன்பு உண்டானதைப் போல பவுர்ணமிகள் உண்டாகட்டும். அப்படி கையைப் பற்றிக்கொண்டு நடக்கும் ஆசை அவனுக்கு இல்லை. அதற்கு முன்பு அவன் அறியாத எத்தனை வசந்தகால நாட்கள் கடந்து போயிருக்கின்றன! இனிமேலும் எளிமையான மனதுடன் ஏதாவது பேசிக்கொண்டிருக்க யாராலும் முடியாது. இருவருக்கும் முழுமையான சிந்தனைகள் இருக்கின்றன. சொல்ல நினைப்பவை எல்லாமே கனமான விஷயங்களாக இருக்கின்றன. இதயம் இனி உணர்ச்சிவசப்படப் போவதில்லை. இனி அவள் பாட்டு பாடமாட்டாள். அவளின் கூந்தலில் சூடுவதற்கு இனிமேல் முல்லை மாலை கட்ட வேண்டியதில்லை. அவளை இந்தச் சாலையில் வரும் பயணிகளில் ஓருத்தியாக ஆக்கினால் - ஏதாவதொரு மரத்தடியில் உறங்கிவிட்டு நள்ளிரவு நேரத்தில் அவன் அவளைவிட்டு ஓடப்போவது உறுதி என்று யாரோ பிரபாவிடம் உள்ளேயிருந்து கூறினார்கள். வேண்டாம்! அவள் அந்த வீட்டிற்குள்ளேயே வாழட்டும்!

பிரபா எழுந்து திரும்ப நடந்தான். அந்தக் குழந்தை பிறக்கக்கூடாது என்று பிரபா மீண்டும் தனக்குத்தானே கூறிக்கொண்டான்.

8

நாட்கள் சில கடந்தன. குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் நடக்கவில்லை. யாருக்கும் யாரையும் சந்திக்க கூடிய மன தைரியம் இல்லை. பத்மநாபப் பிள்ளை இரவு நேரத்தில் அங்கு வருவார். காலையில் புறப்படுவார். இரவில் வரும்போதுகூட அவர் தன் மனைவியை அழைப்பதில்லை. ஜானகி அம்மா அந்த வீட்டில்தான் இருக்கிறாள். என்று சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். அதே நேரத்தில் அங்குள்ளவர்கள் சிந்திப்பதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. ஒவ்வொருவருடைய சிந்தனையும் எல்லா எல்லைகளையும் தாண்டிச் சென்றது. அது எங்கெல்லாம் வாழ்க்கையை இழுத்துக்கொண்டு செல்கிறது என்பதை யாருமே அறிந்திருக்கவில்லை.

தன்னுடைய வாழ்க்கை ஒரு தோல்விதான் என்ற முடிவுக்கு வந்தார் பத்மநாபப் பிள்ளை. இருட்டால் அவர் ஓட்டையை அடைத்துக் கொண்டிருந்தார். உண்மைகளை விட்டு அவர் தன்னுடைய முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார். கர்ப்பிணியாக இருந்த அவளை ஏற்றுக்கொண்டது தப்பான ஒரு செயல் என்று அவர் நினைக்க ஆரம்பித்தார். அவளுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது அதை விட தப்பான ஒன்று என்பதும் அவருடைய எண்ணமாக இருந்தது. அதுமட்டுமல்ல; தான் நினைத்த எல்லா விஷயங்களுமே அபத்தமானவை என்ற முடிவுக்குத்தான் அவர் இறுதியில் வந்தார். அவள் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று அவர் நினைத்திருந்தார். தனக்குக் கீழ்ப்படிந்து நடப்பாள் என்று நம்பினார். அதுவும் தவறான ஒன்றாகிவிட்டது. அவளின் வீரம் நிறைந்த ஒவ்வொரு வார்த்தையும் பத்மநாபப் பிள்ளையின் காதுகளில் முழங்கிக் கொண்டேயிருந்தது. அவள் ஏமாற்றிவிட்டாள் என்று நினைக்க வேண்டாம். ஒருவேளை அவள் வெளியே காட்டியதெல்லாம் நடிப்பு.


இந்த இருபத்தொரு வருட காலமாக தான் ஏமாற்றப்பட்டு வந்திருப்பதாக அவர் நினைத்தார். இல்லை... அவளால் அப்படி நடக்க முடியாது. இன்னொரு மனிதனுடன் உறவு கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையவில்லை. இருந்தாலும், யாரோ ஒரு மனிதன் ஒரு நிழலைப் போல தன்னுடைய வாழ்க்கையைப் பிரகாசம் குறையச் செய்து கொண்டிருந்தான் என்பது மட்டும் பத்மநாபப் பிள்ளைக்கு தோன்றது. உறங்கிக் கொண்டிருக்கும்பொழுது கூட அவர் காதுகள் மிகவும் கவனமாக இருந்தன. வீட்டில் மரங்களுக்கு மத்தியில் யாரோ நடந்து மறைவதைப் போல அவருக்குப் பலமுறை தோன்றியிருக்கிறது. இல்லை... நிச்சயம் அவள் அப்படிச் செய்திருக்க மாட்டாள். நடக்க முடியாது. எனினும், கடந்த இருபத்தொரு வருடங்களும் சந்தேகம் கலந்த பயப்படக் கூடியவையாகவே இருந்து வந்திருக்கின்றன. சொல்லப் போனால் இத்தனை வருடங்களில் அவர் சரியாக உறங்கக் கூட இல்லை.

பிள்ளைகள் தனக்குப் பிரயோஜனமாக இருக்க மாட்டார்கள் என்று அவள் சொன்னாள். அவள் ஏன் அப்படிச் சொன்னாள்? பிள்ளைகள் தந்தைக்குப் பிரயோஜனமாக இருக்க மாட்டார்களா?

ஜானகி அம்மா சிந்தித்துப் பார்ப்பதற்கும் ஏராளமான விஷயங்கள் இருந்தன. அவள் வாழ்க்கையும் ஓரு தோல்விக் கதையாகவே அமைந்து விட்டது. அது எந்த இடத்தில் ஆரம்பித்தது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அந்தக் குழந்தை  பிறந்திருக்கக் கூடாது! பிறகு ஒரு கணவன் அமைந்திருக்கக் கூடாது. வாழ்வதற்கு அந்த அளவிற்கு விருப்பப்பட்டிருக்கக் கூடாது. அவள் கணவன் உண்மையாகவே அவளைக் காப்பாற்றியவர்தான். தெய்வம்தான். ஆனால், கடந்துபோன இருபத்தொரு வருடங்களும் அவளுக்கு ஒரு நரகமாகவே இருந்து விட்டது. அவள் தன் கணவனை வணங்கினாள். அவருக்குக் கீழ்ப் படிந்து நடந்தாள். எவ்வளவோ விஷயங்களைச் சகித்துக் கொண்டு வாழ்ந்தாள். எனினும், ஒரு மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலவும் அவளுக்குக் கிடைக்கவில்லை. அது வேறு யாரின் குற்றமுமல்ல என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்ள ஜானகி அம்மா முயற்சி செய்தாள். இப்படி ஒரு பெண்ணுக்கு ஒரு கணவனிடமிருந்து கிடைக்க வேண்டிய பல விஷயங்கள் கிடைக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் ஒரு கணவனுக்கு எந்த அளவிற்கு மனைவிமீது நம்பிக்கை இருக்கும்? அவளுக்குத் தன்னுடைய உரிமைகளைக் கேட்டு பெறுவதற்கான தைரியம் எந்த அளவிற்கு வரும்? ஆனால், அந்த அளவிற்கு சகிப்புத் தன்மையுடன் அவள் வாழ்ந்தும், அதைப் பார்த்துப் புரிந்து கொள்வதற்கு அந்தக் கணவனால் முடியவில்லை. அது மனிதத் தன்மையா?

ஜானகி அம்மாவின் வாழ்க்கையை விழுங்கிய அந்தக் கரும் நிழலிலிருந்து வெளிய«றி வெளிச்சத்தில் கால் வைக்க இன்றுவரை அவளால் முடியவில்லை. இவ்வளவு பெரிய மாளிகைக்கு வந்த பிறகும், மற்றொரு மனிதரின் மனைவியாக ஆன பிறகும், இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும், அதைவிட்டு வெளியே குதிக்க அவளால் முடியவில்லை. பகல் நேரத்தில்கூட தனியாக இருக்க அவளுக்குப் பயமாக இருக்கிறது. மாலை நேரம் வந்துவிட்டால் அவள் வெளியிலேயே வருவதில்லை. இரவில் ஜன்னல்களையும், கதவையும் இறுக மூடிவிட்டே அவள் தூங்குவாள். அப்படியிருந்தும் ஆழ்ந்து அவளால் தூங்க முடிவதில்லை. அது என்ன சாபமோ தெரியவில்லை. கணவர் தன்னைச் சந்தேகிக்கிறார் என்பதை வைத்து அவரைக் குற்றவாளி என்று கூறிவிட முடியுமா?

அப்படி ஒரு குழந்தை பிறந்திருக்கக் கூடாது. ஆனால், வரலாறு திரும்புகிறதே! இப்போது அதேமாதிரி ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. பிரபா இரவு நேரங்களில் ஒரு பேயைப் போல அலைந்து திரியப் போகிறான். அவனுடைய காலடிச் சத்தம் கேட்டு ஒரு உறக்கம் கிடைக்கப் போவதில்லை. அந்தக் குழந்தை பிறக்கக் கூடாது.

ஜானகி அம்மாவைப் பார்ப்பதற்காக அங்கு ஒரு வைத்தியன் இரண்டு மூன்று நாட்கள் வந்தான். அவனிடம் அவள் நீண்ட நேரம் ரகசியமாக பல விஷயங்களைச் சொன்னாள்.

அடுத்த நாள் காலையில் பிரபாவும் அவனுடைய தாயும் சேர்ந்து பேசினார்கள். அந்தக் குழந்தை பிறக்கவே கூடாது என்று இருவரும் முடிவு பண்ணினார்கள். ஒரு இரவு வேளையில் பெட்டியிலிருந்த தன்னுடைய நகைகளையும் ஒரு புட்டியையும் எடுத்துக்கொண்ட ஜானகி அம்மா தலையில் ஒரு கறுப்பு போர்வையைப் போட்டு மூடிக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள். அவள் பிரபாவின் காதலி விஜயம்மாவின் வீட்டிற்குச் சென்றாள்.

‘‘என் பிரபா விஷயத்துல நான் ஒரு பெரிய தப்பைச் செஞ்சிட்டேன். அவன் முகத்தைப் பார்க்கக்கூட என்னால முடியல. என் மற்ற பிள்ளைங்க என் மேல பாசம் வைக்கிறதுக்கே தடைகள் இருக்கு. இதுதான் மகளே என் உண்மையான நிலை.’’

ஜானகி அம்மாவின் வார்த்தைகளை விஜயம்மா இதயத்தில் எடுத்துக் கொள்ளவேயில்லை என்று தோன்றியது. அவளின் முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை. ஜானகி அம்மா இவ்வளவு நேரம் பேசிய பிறகும், அதனால் எந்தவொரு பிரயோஜனமும் உண்டாகவில்லை.

‘‘குழந்தே... ஒருமுறை தப்பு பண்ணிட்டா ஒரு பெண் எப்பவும் தப்பு பண்ணினவதான்.’’

அதற்கு விஜயம்மா அடுத்த நிமிடமே சொன்னாள். ‘‘அது தப்பாக இருந்தாத்தானே?’’

வெளியே மணல் நிறைந்திருக்கும் முற்றத்தில் கனமான பாதங்களின் ஓசை கேட்டது.

‘‘யார் அது?’’ - விஜயம்மா பயத்துடன் கேட்டாள். அமைதியான குரலில் ஜானகி அம்மா சொன்னாள்.

‘‘யாருமில்ல குழந்தை...’’

‘‘இல்ல... காலடிச் சத்தம் கேட்டது.’’

‘‘அது ஒரு தப்புதான் மகளே... அது ஒரு பாவம். எதிர்காலத்துல நீ எவ்வளவோ விஷயங்களைப் பற்றி குறை சொல்வே...’’

உறுதியான குரலில் விஜயம்மா சொன்னாள்:

‘‘இல்ல... எனக்கு அப்படி எந்தக் குறையும் இல்ல. எனக்கு அப்படி உண்டாகவும் செய்யாது.’’

‘‘அது விஷயம் தெரியாததுனால... வாழ்க்கையைப் பற்றி அறிவு இல்லாததுனால... உனக்கு வாழ்றதுக்கு ஆசையில்லையா மகளே?’’

‘‘எனக்கு வாழ்றதுக்கு எந்தவிதத் தடையும் இல்லையே!’’

ஒரு புன்சிரிப்புடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அந்தத் தடைகள்லாம் வரும். நீ பிரபாவை வெறுக்காமல் இருக்கணும்னா, அவனோட உள்ள உறவு நிலையா இருக்கணும்னா...’’

ஜானகி அம்மா தான் சொல்லிக் கொண்டிருந்ததை பாதியில் நிறுத்தினாள். முழுவதும் சொல்வதற்கு அவளுடைய நாக்கு தயாராக இல்லை. அவள் இதயம் தடுமாறியது. ஒருவித பதைபதைப்பு அவளிடம் குடிகொண்டது.

விஜயம்மா கேட்டாள்: ‘‘அப்படின்னா?’’

தொண்டை அடைக்க ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அது... அது... இருக்கக்கூடாது.’’

‘‘எது?’’

இடியைப் போல அந்தக் குரல் ஜானகி அம்மாவின் செவிகளில் வந்து மோதியது.

‘‘அது இருக்கக் கூடாது. நான் அதுக்குக் கொண்டு வந்திருக்கேன்.’’


ஜானகி அம்மா சுய உணர்வை இழந்தவளைப் போல மடியிலிருந்த ஒரு புட்டியை எடுத்து மேஜைமீது வைத்தாள்.

‘‘அந்த உயிர் சாகணும், மகளே!’’

அதைக் கேட்டு விஜயம்மா அதிர்ச்சியடைந்துவிட்டாள். ஒரு நிமிடம் அவளுக்கு எதுவுமே தோன்றவில்லை. பேசக்கூட முடியவில்லை. உரத்த குரலில் அவள் கேட்டாள்: ‘‘நீங்க... நீங்க... ஒரு பெண்தானே?’’

ஜானகி அம்மா மீண்டும் தன் கால்களில் பலமாக நின்றாள். அவள் எண்ணியது நடந்தது. அவள் சொன்னாள்: ‘‘ஆமா... குழந்தை... அந்த பாரத்தைச் சுமந்த பெண்! அப்படிப்பட்ட ஒருத்திக்கு மதிப்பே இல்லை, மகளே! சமுதாயத்தில் அவளுக்கு ஒரு இடமே இல்ல... அவ உத்தமியாகவே இருந்தாலும் உலகம் அவளைச் சந்தேகத்தோட தான் பார்க்கும். அந்தக் குழந்தையை நீ வச்சிருக்கக் கூடாது.’’

விஜயம்மா உறுதியான குரலில் சொன்னாள்: ‘‘வச்சிருக்கணுமா வச்சிருக்கக் கூடாதான்னு தீர்மானிக்க வேண்டியது நான். வச்சிருக்கணும்னு நீ நினைக்கக் கூடாது. இந்த ராத்திரி நேரத்துல நடக்குற சம்பவம் யாருக்கும் தெரியாது, குழந்தை...’’

விஜயம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அவள் சொன்னாள்: ‘‘நான் நீங்க சொல்றதைக் கேக்குறதா இல்ல....’’

ஜானகி அம்மா வெற்றி பெற்றுவிட்டாள். அவளைத் தன்னுடைய வழிக்குக் கொண்டுவர முடியுமென்று அவளின் உள் மனம் சொல்லியது. அவளின் அறிவு கூர்மையாக வேலை செய்ய ஆரம்பித்தது.

‘‘நீ புத்திசாலித்தனமா நடக்கப் பாரு, மகளே! இந்தக் குழப்பமான நிலையில் இருந்து தப்பிக்கப் பாரு. இதுல சிந்திக்கிறதுக்கு என்ன இருக்கு? ஏன் இதைப் பற்றி பெருசா நினைக்கிற? புத்திசாலிப் பெண்கள் இப்படி மணிக்கணக்குல சிந்திச்சிக்கிட்டு இருக்க மாட்டாங்க. அவங்க உத்தமிகளா எந்தவித களங்கமும் இல்லாம சிரிச்சிக்கிட்டு வாழுவாங்க.’’

‘‘நீங்க பேசறதை தயவு செய்து நிறுத்துங்க.’’ விஜயம்மா வெறுப்புடன் சொன்னாள். ஆனால், ஜானகி அம்மா இப்போதும் தான் பேசுவதை நிறுத்தவில்லை. அவள் தொடர்ந்தாள்:

‘‘மகளே! நாம் பார்க்குற எவ்வளவு குடும்பப் பெண்களோட வாழ்க்கையில இந்த மாதிரி- இதை விடவும் மோசமான சம்பவங்களோட நினைவுகள் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கன்னு உனக்குத் தெரியுமா? புது வாழ்க்கையோட சந்தோஷத்துல அந்தச் சம்பவங்கள் காலாகாலத்துக்கும் மறக்கப்பட்டுவிடும்ன்றதுதான் உண்மை.’’

விஜயம்மாவின் வெறுப்பு பல மடங்கு அதிகமானது. அதற்குமேல் அவளால் சகித்துக் கொண்டு இருக்க முடியவில்லை. பற்களைக் கடித்துக் கொண்டுதான் அதுவரை அவள் எல்லாவற்றையும் கேட்டாள். வெறுப்பு கலந்த குரலில் அவள் சொன்னாள்: ‘‘இப்போ இங்கேயிருந்து போன அதிர்ஷ்டமில்லாத மனிதனை நினைச்சு நான் ஒண்ணும் சொல்லாம இருக்கேன். இல்லன்னா வாயில வர்றதைச் சொல்லிடுவேன்.’’

‘‘அப்படியா? பரவாயில்ல... நான் வாழ்க்கையில எவ்வளவோ அனுபவங்களைக் கடந்தவ. குழந்தை.... நான் சொல்றதைக் கேளு. நான் சொல்றதைக் கேட்டா போதும். தெளிவில்லாத விஷயங்கள் உண்மைகள் இல்ல... அதுதான் உலக நீதி. என்னோட நடத்தையை என் கணவர் சந்தேகப்படுறாரு. அதுக்குக் காரணம் என் தப்பு வெளிப்படையா தெரிஞ்சதால. வெளிப்படையா அது தெரியாமல் போயிருந்தா, நள்ளிரவு நேரத்துல அருமையான இருட்டுல அதை ஒண்ணுமே இல்லாம அழிச்சிருந்தா, என் வாழ்க்கை இப்படி ஒரு தோல்வியா ஆகியிருக்காது.’’

அதைக் கேட்டு விஜயம்மாவிற்கு கோபம் வந்தது. ஆனால், அவள் எதுவும் பேசவில்லை.

‘‘அப்படி அதை அழிக்காம விட்டுட்டதுனால வாழ்க்கையில எனக்கு அது எவ்வளவு பெரிய தொந்தரவா போச்சு தெரியுமா, மகளே?’’

விஜயம்மாவிற்கு இப்போது வார்த்தைகள் கிடைத்தன.

‘‘ஏன் அதை ஒரு தொந்தரவுன்னு நினைக்கிறீங்க? நல்லதுன்னு நினைக்க வேண்டியதுதானே! நான் அதை அழிக்கிறதுக்குத் தயாரா இல்ல. இது ஒரு புனிதமான உறவோட அடையாளச் சின்னம். ஒரு நிமிட தொந்தரவுன்னு நாம ஏன் நினைக்கணும்? எனக்கு ஒரு பெரிய நிதி கிடைச்ச மாதிரி இருக்கு. என் பெண்மையைப் பற்றி, இதய மலர்ச்சியின் முழுமைமேல எனக்கு உயர்ந்த மதிப்பு இருக்கு.’’

ஜானகி அம்மாவின் வாய் அத்துடன் மூடப்பட்டுவிடும் என்று விஜயம்மா கருதினாள். ஆனால், ஜானகி அம்மா மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

‘‘அது நீ நினைக்கிறது... திருமணமாகாத உன்னோட மதிப்பும் மற்றவங்க உன்னைப் பற்றி கவுரவமா நினைக்கிறதும் அதுக்குப்பிறகு இல்லாமற் போகும்.’’

‘‘கல்யாணம்ன்றது எனக்கு பெரிசு இல்ல. நான் ஒரு மனிதனைக் காதலிக்கிறேன்னு சொல்றதுக்கு என்கிட்ட தைரியம் இருக்கு. நான் பிள்ளை பெத்துக்குவேன். அந்தக் குழந்தையோட தந்தைக்கு நான் எல்லாத்தையம் சமர்ப்பணம் செஞ்சாச்சு!’’

தீவிரமான சிந்தனையுடன், உண்மையான ஈடுபாட்டுடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘நீ அவனை நரகத்தைப் போல வெறுப்பே.’’

வெளியே ஒரு பலவீனமான அழுகைச் சத்தம் கேட்டது. ஒரு இதயம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறது. குற்ற உணர்வாலோ, வாழ்க்கையில் பிரியமான ஏதோ ஒன்று அழியப் போகிறது என்பதாலோ, அளவுக்கதிகமான ஏமாற்றம் காரணமாகவோ எதற்காக அந்த அழுகை என்பதைச் சொல்ல முடியவில்லை. இதயம் வெடித்து வெளிவரும் அழுகை அது. கண்ணீரால் அது ஈரமாகாது. அதையும் தாண்டிய ஒன்று அது கண்ணீர் வழிவதைத் தாண்டி நிறைந்திருக்கும் துக்கம்! இனிமேலும் அந்த உயிர் வாழப் போவதில்லை!

‘‘யார் அது?’’- விஜயம்மா உரத்த குரலில் கேட்டாள். ஒரே நிசப்தமாக இருந்தது. அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். ‘யாரோ அழுறாங்க.’

ஒரு புன்னகையுடன் ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘பாவத்தோட புலம்பல், மகளே! நினைவுகளின் பயங்கர வடிவம்!’’

சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘உனக்குப் புரியல.... பாவம் வடிவம் எடுத்து வந்தப்போ நினைவுகள் அதுக்கு உயிர்தானம் செய்தது. இப்படி ஒரு இரவில்... கிட்டத்தட்ட இதே நேரத்தில்...’’

ஜானகி அம்மா நீண்ட பெருமூச்சு விட்டாள். அவள் மீண்டும் தன் பேச்சைத் தொடர்ந்தாள்.

‘‘அந்தக் கொடிய சம்பவத்தோட பிணம்தான் அது. அது தாகத்தைத் தாங்க முடியாம தேம்பித் தேம்பி அழுவுது. மகளே! பாரு.. பிரபாவைப் பார்க்குறப்போ ஒவ்வொரு நிமிடமும் நான் நினைவுகளால சூழப்பட்டு நடுங்கிப் போறேன். ஒவ்வொரு இரவிலம் நான் பயந்து நடுங்கிக்கிட்டு  இருக்கேன்.’’

விஜயம்மா எதுவும் புரியாமல் நின்றிருந்தாள். மொத்தத்தில் ஒரு பயங்கரமான பேய்க் கதையைய் போல அது அவளுக்குத் தோன்றியது. அந்த மகனும் அதைப்போலவே பேய்க் கனவுகள்  காணக் கூடியவன்தான் என்பதை அவளும் நன்கு அறிவாள்.

ஜானகி அம்மா தொடர்ந்தாள்: ‘‘மகளே! அந்தத் தப்பு ஆகாயம் அளவுக்கு இரத்தச் சதையோட முன்னால நின்னுக்கிட்டு இருக்கும்.


வெறுப்போட அது என்னையே வெறிச்சுப் பார்க்கும். என்கிட்ட பேசும், அழும், பற்களைக் கடிக்கும். அளவுக்கதிகமா அன்பு செலுத்தும். ரொம்பவும் நெருக்கமா வந்து பிடிக்கும்... அந்த நாள் தெளிவா ஞாபகத்துல வரும். இரவு நேரங்களில்  இப்போ கேட்ட மாதிரி முனகல்களையும் காலடிச் சத்தத்தையும் கேட்டு நான் நடுங்கிப் போய் எழுந்திருப்பேன். இதுதான் என்னோட அன்றாட வாழ்க்கை. என் கணவர் சில நேரங்கள்ல அதிர்ந்து போய் தூக்கத்துல இருந்து எழுந்திருக்கிறது உண்டு. அவர் இடி இடிக்கிற குரல்ல கேட்பாரு- ‘யார் அது’ன்னு. அதற்குப் பிறகு எந்தச் சத்தமும் இருக்காது.’’

விஜயம்மாவிற்கு அந்த விஷயம் தெளிவாகப் புரிந்தது. அதுதான் தன்னுடைய காதலன்  என்பதை அவள் புரிந்து கொண்டாள். அதுதான் அந்த மனிதன் பிறந்த இரவு. அதுதான் அந்தக் கணவனின் வாழ்க்கை! ஆனால், அந்த முனகல்களும் காலடிச் சத்தமும் என்ன? எனினும் முன்னால் நின்றிருக்கும் பெண் இவை எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டியவள்தான். அவள் அந்த அளவிற்குப் பயங்கரமானவளாயிற்றே! அந்த வார்த்தைகள் அவளையும் மீறி அவளுடைய வாயிலிருந்து வெளிவந்தன.

‘‘நீங்க இதை எல்லாம் அனுபவிக்கணும்.’’

‘‘ஆமா மகளே! கன்னிப்பெண் ஒருத்தி கர்ப்பம் தரிச்சு பிள்ளை பெற்றால் அவ நிலைமை இதுதான். இப்போ உனக்குப் புரியுதா?’’

விஜயம்மா வசமாக மாட்டிக்கொண்டாள் என்று ஜானகி அம்மா நினைத்தாள். ஆனால், அவள் சொன்னாள்: ‘‘உங்க விஷயத்துல அது சரியா இருக்கலாம். அந்தக் கருவைக் கலைக்கிறதுன்றது உங்க விஷயத்துல நியாயமாக் கூட இருந்திருக்கலாம். ஆனா, எனக்கு இது வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தரக்கூடிய ஒரு விஷயம்...’’

ஜானகி அம்மாவிற்கு சொல்வதற்கு எதுவுமில்லை என்றாகிவிட்டது. அவள் இதயத்தை அவளுக்கே தெரியாத ஒரு இழை தொட்டதைப் போல் இருந்தது. அது அன்றுவரை அவள் அனுபவித்திராத ஒரு சத்தத்தை எழச் செய்தது. அவள் சொன்னாள்:

‘‘ஆமா... அந்த முதல் அனுபவம் வாழ்நாள் முழுவதும் பசுமையா இருந்துக்கிட்டே இருக்கும்.’’

ஒரு நீண்ட பெருமூச்சு ஆச்சரியப்படும் விதத்தில் பெரிதான சத்தத்தைப் போல வெளியே கேட்டது. ‘‘அப்படியா?’’ என்று யாரோ கேட்டார்கள். ‘‘அப்படின்னா...’’ என்று ஒரு சிறு கேள்வி வேறு  ஜயம்மா சொன்னாள்.

‘‘இதோ திரும்பவும் அந்தச் சத்தம்.’’

‘‘என்னை நிம்மதியா இருக்கவிடக் கூடாதா?’’ ஜானகி அம்மா உரத்த குரலில் கேட்டாள். தொடர்ந்து ஒரே அமைதி!

மீண்டும் சிறிது நேரம் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஆழமான நிசப்தம் அங்கு நிலவிக் கொண்டிருந்தது. ஒரு வண்டு அந்த புட்டியைச் சுற்றி வட்டமிட்டு பறந்து கொண்டிருந்தது.

‘‘அந்தக் குழந்தை பிறக்கமா இருக்கட்டும்.’’

அசரீரியைப் போல அந்த வார்த்தைகள் அந்த அறைக்குள் எதிரொலித்தது.

விஜயம்மா சொன்னாள்; ‘‘அந்த விஷயத்தை நான் தீர்மானிச்சுக்குறேன். இன்னொரு தடவை நான் சொல்றேன். இது புனிதமான ஒரு உறவால் வந்த சம்பாத்தியம். இதுல அவமானப்படுறதுக்கு எதுவுமே இல்ல. இந்தக் கரு ஒரு சுபமுகூர்த்துல உண்டானது.’’

‘‘பிரபாவை நீ நம்பாதே. அவனோட பிறப்பு அப்படி.’’

‘‘அந்தக் குற்றத்தை யாரு சுமக்குறது?’’

‘‘யார் வேணும்னாலும் சுமக்கட்டும். அது உண்மை. அதைத்தான் நான் சொல்ல முடியும்.’’

‘‘பரவாயில்ல... நான் அதை அனுபவிக்கிறேன்.’’

‘‘நீதான் அவனோட பெரிய எதிரியே.’’

ஜானகி அம்மா எழுந்தாள். விஜயம்மாவிற்கு பயங்கரமாகக் கோபம் வந்தது. அவள் பற்களைக் கடித்துக்கொண்டு சொன்னாள்.

‘‘நீங்க பெரிய பாவி. இங்கேயிருந்து உடனடியா போங்க. உங்களைப் பார்த்த பிறகு கட்டாயம் நான் குளிக்கணும். நீங்க எதைத்தான் செய்ய மாட்டீங்க!’’

மெதுவான குரலில் ஜானகி அம்மா சொன்னாள்:

‘‘நான் ஒண்ணும் செய்யமாட்டேன். சிந்திப்பேன். செய்றதுக்கான தைரியம் எனக்கு இல்ல.’’

‘‘நீங்க பெண் உலகத்தின் சாபம்!’’

‘‘ஆமா, மகளே! பிரபா அதோட நகல்!’’

‘‘அந்த பாவத்தில் விஷம் ஏற்றுறது நீங்கதான்.’’

ஜானகி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். விஜயம்மா எதையும் கேட்கத் தயாராக இல்லை.

‘‘நீங்க போறீங்களா! நான் தூங்கப் போறேன்.’’

சிறிது நேரம் கழித்து ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘நான் சொன்னதெல்லாம் உண்மைன்றதை அனுபவத்துல நீ தெரிஞ்சுக்குவே!’’

‘‘அப்போ நான் பார்த்துக்குறேன்.’’

ஒரு புட்டியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு ஜானகி அம்மா வாசலை நோக்கி நடந்தாள். முற்றத்தில் கால் வைத்த அவள் திரும்பி விஜயம்மாவைப் பார்த்தாள். அவள் கண்கள் மிகவும் பிரகாசமாக இருந்தன.

ஜானகி அம்மா இருட்டில் மறைந்தாள். சிறிது நேரம் விஜயம்மா என்னவோ சிந்தித்தவாறு நின்றிருந்தாள். சுவரில் வைத்திருந்த கண்ணாடியில் தன் உருவம் தெரிவதை அவள் பார்த்தாள். அவள் நகைகள் அணிந்திருக்கிறாள்! அதை இரத்தக்காளி அணிவித்திருக்கிறாள்!

அடக்க முடியாத வெறுப்புடன் அவள் எல்லா நகைகளையும் கழற்றினாள். வாசலில் சென்று பார்த்தபோது வெளியே எல்லையற்ற இருள் மட்டுமே தெரிந்தது. இந்த நகைகளை அவளிடமே கொடுத்துவிட்டிருக்க வேண்டும்! கஷ்டம்! என்ன மறதி இது!

9

பிரபா தன்னுடைய வாழ்க்கையில் உறவுகளைப் பற்றி தீவிரமாகச் சிந்தித்துப் பார்த்தான். அந்த அளவிற்குத் தீவிரமாக அவன் அதற்கு முன்பு எப்போதும் சிந்தித்ததில்லை. அந்த உறவுகளைத் தெளிவாகக் காப்பாற்றக்கூடிய நேரம் இப்போதுதான் வந்திருக்கிறது. பிரபா தெரிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றையெல்லாம் அவன் தெரிந்து கொள்ளும்பொழுது, ஒருவேளை அவனுக்கு வாழ்க்கையில் தன்னுடைய இடம் என்ன என்பதைப் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

அந்த நாடோடிக்கு பத்மநாபப் பிள்ளை நிறைய தொந்தரவுகள் உண்டாக்கினார். அவருடைய ஆணைப்படி சிலர் அந்த மனிதனுக்கு உடல் ரீதியாகத் தொந்தரவுகள் தந்தனர். வீட்டிலிருந்த சில தங்க நகைகள் திருடுபோய் விட்டதாக பத்மநாபப் பிள்ளை புகார் செய்தார். அந்த நாடோடியை போலீஸ்காரர்கள் விசாரிக்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக அந்த மனிதன் ஊரைவிட்டே போய்விட்டான்.

பத்மநாபப் பிள்ளையைப் பார்த்து சில கேள்விகள் கேட்க வேண்டுமென்று பிரபா நினைத்தான். ஒருநாள் மாலை மயங்கிய நேரத்தில் அவன் வீட்டிற்குச் சென்று பத்மநாபப் பிள்ளையின் முன்னால் நின்றான். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் அப்போதுதான் முதல் தடவையாக நடக்கிறது.

ஹாலில் அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அவன் அங்கு வந்து நின்றதைப் பார்த்து அவர் அதிர்ச்சியடைந்து வேகமாக எழுந்து நின்றுவிட்டார். தன் கண்களையே நம்ப முடியாததைப் போல அவர் பிரபாவை வெறித்துப் பார்த்தார்.


பிரபாவும் அவர் முகத்தை உற்றுப் பார்த்தான். அப்படி அந்த முகத்தை அவன் பார்ப்பது அதுதான் முதல் முறை.

சில நிமிடங்கள் கழித்து பிரபா மன்னிப்பு கேட்கிற தொனியில் ‘‘மன்னிக்கணும்! இப்படி ஒரு சந்திப்பு தவிர்க்க முடியாததா ஆயிடுச்சு. இது இன்னொரு தடவை நடக்காது. நான் சில விஷயங்களை உங்கக்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறேன். அந்த நாடோடியை எதற்கு நீங்க தொந்தரவு செய்றீங்க?’’ என்றான்.

‘‘தொந்தரவு செஞ்சா என்ன? நீ என்ன பண்ணுவே?’’ என்று கோபமாகக் கேட்டார் பத்மநாபப் பிள்ளை.

பிரபா புன்னகைத்தான். ‘‘அதை மனப்பூர்வமா விருப்பப்பட்டு செய்றீங்களா?’’

‘‘அப்படித்தான்னு வச்சுக்கோ.’’

பிரபாவின் அறிவு இப்போது வேலை செய்ய ஆரம்பித்தது.

‘‘அப்படிச் செய்யிறது ஆண்மைத்தனமா?’’

‘‘நான் அவனை சும்மா விடமாட்டேன்!’’

‘‘அந்த ஆளு உங்களுக்கு என்ன செய்தாரு?’’

அந்தக் கேள்விக்கு பத்மநாபப் பிள்ளை என்ன பதில் கூறப் போகிறார் என்பதைத்தான் பிரபா முதலில் தெரிந்துகொள்ள நினைத்தான். உடனே அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. பிரபா ஆர்வத்துடன் அவரையே பார்த்தான்.

‘‘என்ன செய்தான்னா கேக்குறே? நான் இப்போ அதுக்குப் பதில் சொல்லமாட்டேன்.’’

‘‘எதுனால?’’

‘‘நான் விரும்பல.’’

பிரபா அதைக் கேட்டு ஏமாற்றமடைந்தான். அவன் நினைத்தது நடக்காமல் போய்விட்டது. முன்னால் நின்று கொண்டிருக்கும் மனிதர் மந்த புத்தியைக் கொண்டவரா என்ன? அவர் ஒரு அப்பிராணியா? சாதாரண அறிவுகூட இல்லாதவரா? அவன் நினைத்தது ஒவ்வொன்றும் பிசகி விட்டது. அந்த அளவிற்கு தைரியமும் உறுதியும் இல்லாத ஒரு ஆளா அந்த மனிதர்? அவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்டு வாங்கிவிட முடியும் என்ற முடிவுக்கு வந்த அவன் அதிகார தோரணையில் சொன்னான்:

‘‘உங்களை நான் சொல்ல வைக்கிறேன்.’’

‘‘இது என்ன வம்பாப் போச்சு!’’

அந்த நாடோடி தன்னுடைய பரம எதிரி என்று சொல்ல பத்மநாபப் பிள்ளை நினைத்தார். ஆனால், அதை வெளியே சொல்லவில்லை. அவன் எங்கே எல்லா விஷயங்களையும் தன்னிடமிருந்து கறந்து விடுவானோ என்று அவர் பயந்தார்.

‘‘நீ இங்கேயிருந்து போறியா இல்லியா?’’

‘‘போக மாட்டேன். நான் சில விஷயங்களைத் தெரிஞ்சிக்க நினைக்கிறேன். நீங்க என் முகத்தைப் பார்த்து ஏன் பேச மாட்டேங்குறீங்க?’’

‘‘நீ முகத்தைப் பார்த்து பேசுவியா?’’

பிரபா அதற்கு சிரித்து விட்டான். தான் ஒரு தைரியசாலி என்பதைக் காட்டுவதற்காக பத்மநாபப் பிள்ளை மீண்டும் பிரபாவின் முகத்தைப் பார்த்தார்.

‘‘இப்போ போதுமாடா?’’

‘‘நீங்க ஏன் பயப்படுறீங்க?’’

‘‘யாருக்கு பயப்படுறேன்?’’

‘‘யாருக்கு பயப்படுறீங்கன்னுதான் நான் கேக்குறேன்.’’

‘‘என்னடா வம்பாப் போச்சு!’ என்று சொன்ன பத்மநாபப் பிள்ளை இங்குமங்குமாய் நடந்தார்.

‘‘நீங்க ஒரு கோழை.’’

‘‘நானா?’’

பத்மநாபப் பிள்ளை செயற்கையாக ஒரு சிரிப்பை வரவழைத்தார். சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிரபா கேட்டான். ‘‘அந்த நாடோடி என்ன தப்பு செஞ்சாரு?’’

தன்னையும் அறியாமல் பத்மநாபப் பிள்ளை சொன்னார்: ‘‘அவன் என் வீட்டு பகுதியில ஏன் ஒளிஞ்சு திரியிறான்? அவன் அப்படி இவ்வளவு நாட்களா பின்தொடர்ந்து திரியிறது எதுக்கு? அவனால என்னை ஒண்ணும் செய்யமுடியாது. இருந்தாலும் அது அதிகப் பிரசங்கித்தனம்.’’

அதுவரை பிரபா அறிந்திராத ஒரு விஷயமாக இருந்தது அது. புதிய புதிய விஷயங்களை நோக்கி வாசல் கதவுகள் திறப்பதைப்போல் அவன் உணர்ந்தான். அவன் தெரிந்துகொள்ள இன்னும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. பிரபா ஒரு நிமிடம் ஏதோ சிந்ததனையில் ஆழ்ந்தான். பின் ஆர்வத்துடன் கேட்டான்: ‘‘அதுக்குக் காரணம்?’’

‘‘அவன்கிட்டதான் கேட்கணும். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நீ புறப்படு.’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் நாற்காலியில் அமர்ந்தார். பிறகு மேஜைமீது கிடந்த ஒரு கணக்குப் புத்தகத்தைக் கையிலெடுத்து விரித்தார்.

‘‘சரி... வரட்டுமா?’’- பிரபா கேட்டான்.

‘‘என்ன வரட்டுமாவா?’’

‘‘கணக்கெழுதுறதுக்கு...’’

‘‘எனக்குப் புரியல!’’

ஆணையிடும் குரலில் பிரபா சொன்னான்: ‘‘‘அந்தப் புத்தகத்தை மூடுங்க.’’

பத்மநாபப் பிள்ளை புத்தகத்தை மூடினார்.

‘‘சின்னப் பையனோட அதிகாரம்! நீ போறியா இல்லியா?’’

தனக்குத் தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்ற என்றான் பிரபா. பத்மநாபப் பிள்ளை அவனையே வெறித்துப் பார்த்தார்.

அதைப் பார்த்து பிரபாவிற்கு மீண்டும் சிரிப்பு வந்தது. அவன் கேட்டான்: ‘‘நீங்க எதுக்கு பயப்படுறீங்க? நான் உங்களுக்கு வாழ்க்கை முழுவதும் கடன்பட்டிருக்கேன். தைரியமா இருங்க. சில விஷயங்களைப் பற்றி நாம பேச வேண்டியதிருக்கு.’’

பத்மநாபப் பிள்ளை விசிறியை எடுத்து வீசத் தொடங்கினார். அவரின் சேஷ்டைகளைப் பார்த்தவாறு நின்றிருந்த பிரபா கேட்டான்: ‘‘நீங்க அந்த நாடோடியைப் பார்த்து பயப்படுறீங்களா?’’

‘‘நீ என் விரோதி. எனக்குள்ளே இருக்கிற ரகசியங்களை நான் வெளியே சொல்வேன்னு நினைக்காதே. நீ என்னோட கண்ணும் மனசும் எட்டாத தூரத்துக்குப் போறியா?’’

‘‘அப்படின்னா உங்க பயம் போயிடுமா?’’

ஆர்வத்துடன் பத்மநாபப் பிள்ளை கேட்டார்: ‘‘நீ அதுக்குத் தயாரா இருக்கியா?’’

‘‘அது ஒரு கோழைத்தனமாச்சே!’’

‘எது?’’

‘‘நான் போனால் பயப்பட வேண்டிய அவசியமில்லைன்னு நீங்க நினைக்குறது...’’

பத்மநாபப் பிள்ளை எதுவும் பேசவில்லை. அவரை நெருங்கி அவரின் முகத்தை உற்றுப் பார்த்தாவறு பிரபா கேட்டான்: ‘‘நீங்க என் தாயை விரும்பினீங்களா?’’

அதைக் கேட்டு பத்மநாபப் பிள்ளை அதிர்ச்சியடைந்தார். அவர் வேகமாக எழுந்து வெளியே போக முயற்சித்தார். பிரபா அவரைத் தடுத்து நிறுத்தினான்.

‘‘நீங்க போகக் கூடாது. சொல்லுங்க... நீங்க என் தாயை விரும்புனீங்களா?’’

‘‘இல்லைன்னு சொன்னா நீ என்ன செய்வே?’’

‘‘விரும்பலைன்னா எதுக்காக அவங்களை ஏத்துக்கிட்டீங்க?’’

‘‘அதுனாலதானே அந்தப் பிசாசு சுற்றிச் சுற்றி வந்துக்கிட்டு இருக்கான்.’’

‘‘நீங்க ஏன் வேறொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கக் கூடாது?’’

‘‘எல்லாமே போச்சு!’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் அமர்ந்தார். கேட்க நினைத்தவை எல்லாவற்றையும் கேட்கும்படி பற்களைக் கடித்துக் கொண்டே அவர் சொன்னார். எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் அளிக்கத் தயாராக இருப்பதாகச் சொன்னார். தொடர்ந்து, ‘‘உன் தாயை ஏற்றுக் கொள்ளுறப்போ நான் முட்டாள் இல்லைன்னு நினைச்சேன்’’ என்றார்.

‘‘அந்தத் தப்பை என் தாய் தொடர்ந்து செஞ்சாங்கன்றீங்களா?’’

‘‘நீ என்னை சுத்த மடையனா ஆக்கப் பாக்குற!’’

‘‘இல்ல... உங்க மேல இருக்குற பரிதாப உணர்வால நான் கேக்குறேன்.’’

‘‘நீ அங்கே இல்லாம இருக்க முடியுமா?’’

பிரபா புன்னகைத்துக்கொண்டே சொன்னான்: ‘‘நான் ஓரு கெட்டவனாச்சே!’’


பத்மநாபப் பிள்ளை ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தார். பிறகு சொன்னார்:

‘‘வேண்டாம். நீ இல்லாமற் போனால் அந்தப் பிசாசு பழிவாங்குற எண்ணத்துல பின்னால வரும்.’’

‘‘சரி, அது இருக்கட்டும். என் தாயோட அந்தத் தப்பு தொடர்ந்து நடந்ததா?’’

இதை அவள்கிட்டே கேளு. உன் தாய்கிட்ட கேளு. அவ யாரை மனசுல நினைச்சுக்கிட்டு இருந்தான்னு.’’

‘‘அதுக்கு உங்கக்கிட்ட ஆதாரம் இருக்கா?’’

‘‘நீதான் ஆதாரம்.’’

‘‘இல்ல... என் தாயோட நடத்தைக்கு...’’

‘‘டேய் வெட்கம் கெட்டவ«னெ! உன் பெற்ற தாயோட நடத்தையைப் பற்றி பேசுறதுக்கு உனக்கு கேவலமா இல்லையா? நீ எவ்வளவு வேணம்னாலும் கேளு. நான் அதுக்குப் பதில் சொல்றேன். உனக்குக் கேட்க முடியும்னா, எனக்கு பதில் சொல்லத் தெரியும். அவள் திருடி! பெரிய திருடி!’’

‘‘அவங்க யாரை மனசுல நினைச்சுக்கிட்டு இருக்காங்கன்னு நீங்க அவங்களைப் பார்த்து கேட்டிருக்கலாமே?’’

பத்மநாபப் பிள்ளை அதற்கு ஒரு சிரிப்பு சிரித்தார். தொடர்ந்து அவர் சொன்னார்: ‘‘அப்படி ஆம்பளைங்க யாராவது கேட்பாங்களா? ஒரு ஆம்பளைக்கிட்ட அப்படி கேட்டா அவன் மனசுல யாரை நினைச்சுக்கிட்டு இருக்கான்றது நமக்குத் தெரிஞ்சிடும். ஒரு பொண்டாட்டிக்கிட்ட இந்த ஆளைத்தான் இப்போது நீ மனசுல நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு கேக்குறது நல்லவிஷயமா என்ன?’’

‘‘அந்த பயங்கரமான சம்பவத்துக்குக் காரணமான சூழ்நிலையை பற்றி நீங்க அவங்கக்கிட்ட ஒண்ணும் கேட்கலியா?’’

‘‘எந்த சம்பவம்?’’

‘‘என் பிறப்பு!’’

‘‘நான் தோற்றுப் போனேன். உன்கிட்ட தோன்றுப்போனேன். நான் இதையெல்லாம் கேட்டிருக்கணுமா என்ன?’’

‘‘இன்னொரு கேள்வி...’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் போவதற்காக எழுந்தார். பிரபா மீண்டும் அவரைத் தடுத்தான். ‘‘நீங்க என்னை ஏன் வெறுத்தீங்க? எனக்கும் கோபனுக்குமிடையே இயற்கையாகவே இருக்கிற உறவை ஏன் கெடுத்தீங்க?’’

‘‘சரிதான்... என் பிள்ளையை உன்கூட பழகவிடுறதா? அவன் என்னோட மகன். அவனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவனை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அவனை உன்கூட பழகவிடுறதைவிட அவனைக் கொன்னு போட்டுறது எவ்வளவோ மேல். நீ என்னோட பெரிய எதிரி. அந்த நாடோடி கூட திரியிறவன்தானே நீ?’’

சாந்தமான குரலில் பிரபா சொன்னான்: ‘‘நீங்க ஒரு விஷயத்தை ஞாபகத்துல வச்சுக்கணும். நாங்க ஒரே வயிற்றுல பிறந்தவங்க. நீங்க என்னதான் எங்களைப் பிரிக்க முயற்சித்தாலும் எங்களோட இதயங்கள் நெருங்கத்தான் செய்யும். நாங்க ரெண்டு பேரும் ஒருவர் மேல ஒருவர் அன்பு செலுத்த ஒரு பொதுவான மையம் இருக்கத்தான் செய்யுது. அதுதான் எங்களோட அம்மா...’’

பத்மநாபப் பிள்ளை சற்று கோபம் கொண்டார். அவன் சொன்னது தவறு என்பதை அவனுக்குப் புரியவைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சொன்னார்:

‘‘டேய், நான் ஒரு முட்டாள்னு நீ நினைக்கறேல்ல! அப்படின்னா நான் இப்போ சொல்றதைக் கேளு. இந்த விஷயம் எனக்கு முன்னாலேயே தெரியும். அவன் உன்னோட மிகப்பெரிய எதிரின்றதை நீ ஞாபகத்தில வச்சுக்கோ. நீ இந்த மாதிரி ஆளுன்றது அவனுக்குத் தெரியும். அதே மாதிரிதான் உன் தாயும். எப்படி ஒரு நல்ல மகனால அப்படிப்பட்ட ஒரு தாயை மதிக்க முடியும்? அவன் என் பிள்ளை...’’

அது இன்னொரு புதுமையான விஷயமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை அவன் நினைத்துக்கட பார்க்கவில்லை. அந்த வீட்டில் அவன் கேட்ட சிரிப்பும் விளையாட்டும் பொய்யானதாக இருந்தது. அங்கு மகன் தாய் மீது அன்பு செலுத்தவில்லை. மனைவி கணவனைச் சந்தேகப்பட்டாள்.

‘‘நீங்க ஏன் இப்படி ஒரு சூழ்நிலையை உண்டாக்கினீங்க? ஆதரவில்லாத அந்தப் பெண்ணை அவ விருப்பப்படி நீங்க விட்டிருக்கலாமே! அந்த இதயம் ஒரு இடத்துல பதிஞ்சிருந்தா, அதை ஏன் நீங்க பிடிச்சு விலக்கினீங்க?’’

‘‘எனக்கு அப்படி தோணிச்சு.’’

பத்மநாபப் பிள்ளை வெளியே நடந்தார். அப்போ பிரபா சொன்னான்: ‘‘உங்க பிள்ளைங்க உங்கக்கிட்ட கணக்குக் கேட்பாங்க.’’

பத்மநாபப் பிள்ளை திரும்பி நின்று பிரபாவைப் பார்த்தார்.

‘‘கோபனா?’’

‘‘ஆமா... அது நடக்கத்தான் போகுது.’’

பத்மநாபப் பிள்ளை வெளியேறி நடந்தார். ஒரு நிமிடம் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்த பிரபா தனக்குள் கூறினான்:

 ‘அந்தப் பெண்ணுக்கு யாருமே இல்லை.’

10

பிரபா கோபனைப் பார்க்க நினைத்தான். கோபனிடமும் சில கேள்விகள் கேட்க வேண்டுமென்று அவன் எண்ணினான். கோபனை அவனுடைய தாய்க்கு எதிராக பத்மநாபப் பிள்ளை எப்படி உருவாக்கிவிட்டார்? எதற்காக பத்மநாபப் பிள்ளை அந்தக் காரியத்தைச் செய்யவேண்டும்?’’

அந்தக் கட்டிடத்தின் மேற்கு மூலையில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஏதோ தீவிரமான சிந்தனையில் மூழ்கியபடி கோபன் அங்கிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்தான். தாயை ‘அம்மா’ என்று அழைத்த அந்த நாளுக்குப் பிறகு அவன் நிறைய விஷயங்களைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தான். அவனுடைய தந்தை ஏராளமான விஷயங்களை அவனிடம் சொல்லி வைத்திருந்தார். மரணம் வரை அவனுக்கு நிம்மதி என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

கோபனிடமிருந்த தன்னம்பிக்கை இல்லாமற்போய்விட்டது. அவனுடைய முகம் மிகவும் கறுத்துப் போய் விட்டது. சில நாட்களிலேயே அவனிடம் என்னவெல்லாம் மாற்றங்கள் உண்டாகி விட்டிருக்கின்றன!

பிரபா திறந்திருந்த வாசல் வழியாக அந்த அறைக்குள் நுழைந்தான். பத்மநாபப் பிள்ளையைப் போலவே கோபனும்  அதிர்ந்து போய் வேகமாக எழுந்தான். அது ஒரு ஆச்சரியம் போல் இருந்தது பிரபாவிற்கு.

ஒரு நிமிடம் இருவரும் எதுவும் பேசவில்லை. முதலில் பேச்சை ஆரம்பித்தது பிரபாதான்.

‘‘கடைசியா உன்னைப் பார்த்துட்டு போறதுக்காக நான் வந்திருக்கேன், கோபா! நான் போறேன். உன்னைப் பார்க்காம போறதுக்கு எனக்கு மனசு வரல.’’

‘‘பார்க்காம போறதுதான் நல்லது.’’

வருத்தம் கலந்த ஒரு புன்சிரிப்புடன் பிரபா சொன்னான். ‘‘அப்படிச் சொல்லாதே. நமக்கு இடையில் அன்பு இருக்கிறது மிகவும் இயற்கையானது. என்ன இருந்தாலும் நாம ஒரே இடத்துல இருந்து வந்தவங்க தானே! நம்ம அம்மாமேல உனக்கு அன்பு இல்லாமப் போச்சுன்றது ஆச்சரியமான ஒரு விஷயம்தான்!’’

பிரபா கோபனின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவன் தாங்க முடியாத மனவேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பதை அவனால் தெரிந்து கொள்ள முடிந்தது.

‘‘அப்படின்னா நான் என் தந்தையை வெறுக்கணுமா என்ன?’’ என்றான் கோபன்.

‘‘நான் தெரியாம கேக்குறேன் கோபா! ஒரு குழந்தை, தந்தை, தாய்- ரெண்டுபேர் கிட்டயும் ஒரே மாதிரி அன்பா இருக்கக்கூடாதா?’’

‘‘எனக்கு அது தெரியாது!’’


பிரபா உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டான்.

‘‘எவ்வளவு ஆனந்தம் நிறைந்த வீடுகள் நம்மைச்சுற்றிலும் இருக்கு!’’

‘‘நிறைய இருக்கு. அப்படிப்பட்ட ஒரு வீடுஎனக்குக் கிடைக்கல.’’

பிரபா ஒரு நாற்காலியில் உட்கார்ந்தான். கோபன் அவனுக்கு நேர் எதிராக இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தான். சிறிது நேரம் அவர்களுக்கிடையே அமைதி நிலவியது. தொடர்ந்து இதயபூர்வமான வார்த்தைகள் வெளியே வந்தன.

‘‘கோபா! ஆதரவில்லாத அனாதையாக இருந்தாலும் ஒரு பெண்ணைப் பற்றி பரிதாபப்படுறதுக்கு ஏராளமான விஷயங்கள் இருக்கு. அவங்களோட வாழ்க்கை ஒரு நரகத்தைப்போல கொடுமையானது. யார்கிட்டேயும் ஒரு வார்த்தைகூட பேசமுடியாம, யாரும் அவங்க சொல்றதைக் கேட்கத் தயாராக இல்லாம... பொறுமைசாலின்னு தான் பெண்ணைச் சொல்லணும்! பாவமே செய்திருந்தாலும் தண்டனை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற ஒரு உயிரைப் பார்த்து நாம பரிதாபப்படணும். அதுதான் மனிதத்தன்மை. அன்பு செலுத்த விரும்பலைன்னா வேண்டாம். ஆனால், உன் பரிதாப உணர்வால அந்தப் பெண் வாழ்ந்திடுவா.’’

‘‘என் அப்பாவோட சோற்றைச் சாப்பிட்டுக்கிட்டு அவங்க வேற யாரையோ கனவு கண்டுகொண்டிருந்தாங்க. என் தந்தைக்கு வாழ்க்கையில மன அமைதின்றது மருந்துக்குக்கூட கிடைக்கல. அந்தப் பெண்ணுக்கு என் தந்தைமேல பாசமே இல்ல...’’ கோபன் பற்களைக் கடித்துக்கொண்டு உரத்த குரலில் கத்தினான். ‘‘நான்... என் தந்தையோட மகன்தானான்னு சந்தேகம் வேற...’’

கோபன் பிரபாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அவன் பிரபாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்பதுபோல் இருந்தது. தன்னையுமறியாமல் பிரபா ‘‘என் தம்பி...’’ என்று அழைத்தான். அவன் எழுந்து அவனை இறுகக் கட்டிப்பிடிப்பதற்காக கோபனை நெருங்கினான். அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை.

கோபன் தொடர்ந்து சொன்னான்: ‘‘அப்படி என் வாழ்க்கையை ஒண்ணுமில்லாம செய்திட்டு, என்னைப் பார்த்து பரிதாபப்படச் சொல்லி...’’

 ‘‘அதுக்கு நானிருக்கேன். ஒருவிதத்துல பார்த்தா நாம ரெண்டு பேருமே சமமா பாதிக்கப்பட்டவங்கதான்.’’

‘‘இல்ல...’’ - கோபன் சொன்னான். ‘‘உங்களால் ஒரு மனிதரை ‘அப்பா’ன்னு கூப்பிட முடியாம இருக்கலாம். இல்லாட்டி அப்படிக் கூப்பிட முடியாம இருக்கலாம். அந்த நிச்சயமற்ற தன்மை, உறுதியில்லாமை ஒரு வகையில் பார்க்கப்போனால் எவ்வளவோ மேல். நான் இவ்வளவு நாட்களா ‘அப்பா’ன்னு அழைச்ச ஆள் என் பிறப்பிற்குக் காரணமா இல்லைன்னாலும் அந்த உண்மை எனக்குத் தெரிஞ்சா போதும்.’’

‘‘நீ ஏன் சந்தேகப்படுறே?’’

‘‘அதை என்கிட்ட கேட்க வேண்டாம். என்னால பதில் சொல்ல முடியாது.’’

கோபன் சோர்வடைந்து அழத் தொடங்கினான். ‘அவ¬னை எப்படி ஆறுதல் படுத்துவது? பிரபா சொன்னான்: ‘‘எந்தவித பிரச்சினையும் இல்லாத ஒரு வீடு நம்ம ரெண்டு பேருக்கும் இல்லாமச் செய்தது யார்னு நினைக்கிறே? நம்ம அம்மாவா?’’

‘‘அப்பா தலையிடாம இருந்திருந்தா ஒருவேளை உங்களுக்காவது அப்படிப்பட்ட ஒரு வீடு அமைஞ்சிருக்கலாம்.’’

‘‘அதுவும் உன்னோட வீடுதானே, கோபா?’’

‘‘நாம அண்ணன்- தம்பியா வாழ்ந்திருக்கலாம்னு சொல்றீங்களா?’’

‘‘ஆமா... அதைப்பற்றி உனக்கு வெறுப்பு ஒண்ணுமில்லியே?’’

‘‘என் தாய் கனவு கண்டுகொண்டிருந்த அந்த மனிதன் குடும்பத் தலைவனாக இருந்த வீட்டுல நான் வளர்ந்தாகூட போதும்தான்.’’

‘‘அந்த ஆள் ஒரு நாடோடியா இருந்தா?’’

‘‘அப்படி இருந்தாக்கூட சரிதான். அங்கே கணவன்- மனைவிக்கு இடையில் ரகசியங்கள் எதுவும் இருக்காது. அங்கே பிள்ளைகளை தந்தையும் தாயும் ஒவ்வொரு கையைப் பிடிச்சு இழுத்து பிய்க்க மாட்டாங்க. தந்தைமேல பாசம் வைக்கச் சொல்லி தாயும், தாய்மீது அன்பு செலுத்தச் சொல்லி தந்தையும் சொல்லித் தருவாங்க.’’

கோபனின் நிலையை பிரபா தெளிவாகப் புரிந்து கொண்டான். அது தன்னுடைய நிலையைவிட அப்படியொன்றும் மெச்சப்படத் தக்கதாக இல்லை என்பதையும் அவன் எண்ணிப் பார்த்தான். ஆனால், அவன் சில விஷயங்களைப் பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறான். அந்தத் தவறுகள் நிவர்த்தி செய்யப்பட்டாலும் அவனுடைய மனதில் சமாதானம் உண்டாகப் போவதில்லை. எனினும், அவன் தன்னுடைய தாயிடம் அன்பு செலுத்தலாமே! பிரபா சொன்னான்: ‘‘உலகமே என்னைப் பார்த்து முணுமுணுக்குது. இந்த உருவம் உலகம் கிண்டல் பண்ணிச் சிரிக்கிறதுக்குப் பயன்படுது எல்லாரோட பார்வையிலும் நான் ஒரு கேள்வி தொக்கி நிற்பதைப் பார்க்கிறேன். இருந்தாலும் நான் என் தாயைப் பார்த்து பரிதாபப்படுகிறேன், கோபா!’’

‘‘உங்க அப்பா, அம்மா ரெண்டு பேரும் பாசமா இருந்தாங்க. அவங்களுக்கு...’’ கோபன் சொல்லவந்ததை பாதியில் நிறுத்தினான்.

பிரபா சொன்னான்: ‘‘இல்ல... அதுக்காக நான் அம்மாவைப் பார்த்து பரிதாபப்படல. அம்மாவோட வாழ்க்கை எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சுதான் நான் பரிதாபப்படுறேன்.’’

கோபன் கேட்டான்:

‘‘உங்க அப்பாவோட மகன்தானான்ற கேள்வியை நீங்க அப்பான்னு நம்புற மனிதரோட பார்வையில பார்த்திருக்கீங்களா?

‘‘நான் அப்படிப்பட்ட ஒரு ஆளை என் தந்தையினு நம்பவே இல்லை. இருந்தாலும்... கோபா! அந்த வார்த்தை இதயத்தின் அடித்தளத்திலிருந்து கிளம்பி தொண்டையில நின்னுக்கிட்டு இருக்கு.’’

அதே குரலில் கோபன் சொன்னான்:

‘‘வெளியே வந்த அந்த வார்த்தையின், ‘அப்பா’ன்ற குரலின் எதிரொலிப்பு கிண்டல் மாதிரி ஆயிடுச்சு.’’

‘‘ஆனா... கோபா! எந்தவித தயக்கமும் இல்லாம, எந்தவித சந்தேகமும் இல்லாம நாம ‘அம்மா’ன்னு கூப்பிடலாமே! அந்த அழைப்பு தொண்டையில் தங்கி நிற்காது. அது வெளியே வந்துச்சுன்னா, அதுக்காக நாம வெட்கப்படவும் வேண்டாம்.’’

கோபன் தொண்டை இடறச் சொன்னான்:

‘‘தாயை ‘அம்மா’ன்னு கூப்பிட முடியல. தந்தை அப்படி கூப்பிட முடியாம செய்திட்டாரு.’’

‘‘முலையில இருந்துவந்த பாலைக் குடிச்சப்போ பால் ஓட்டின உதட்டால ஒருத்தியின் முகத்தைப் பார்த்து நான் ‘அம்மா’ன்னு கூப்பிட்டேன், கோபா!’’

கோபன் உறுதியான குரலில் சொன்னான்: ‘‘நான் இனிமேல் அப்பா அம்மாங்கிற அந்த ரெண்டு வார்த்தைகளையும் சொல்ல மாட்டேன். அது தர்ற அமைதி எனக்கு வேண்டாம். அந்தப் பெண்ணோட புனிதத் தன்மையை நான் அப்பப்போ யோசிச்சு யோசிச்சு கேட்பேன். அந்த மனிதரோட முகத்துலேயும் நான் காறித்துப்புவேன். பிறகு நான் இந்த உறவுகளிலிருந்து விலகிப் போவேன்.’’

சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. பிரபா கேட்டான்:

‘‘உனக்குப் பெரிய அளவுல துரோகம் பண்ணினது யாருன்னு நினைக்கிறே?’’

‘‘என்னைப் பெற்றெடுத்த பெண்... என்னோட பிறப்பைப் பற்றி கேள்வி கேட்ட என்னோட தந்தை...’’

‘‘ஒரு நாடோடியோட பொண்டாட்டியா அந்தப்பெண் அவங்க விருப்பப்படி வாழ்ந்திருப்பாங்க! உன் தந்தைக்கு வேறொரு பொண்டாட்டியா கிடைக்கல?’’

‘‘எதுக்கு அவங்க ஒண்ணு சேர்ந்தாங்க?’’

‘‘அந்தக் கேள்வியை உன் அப்பாக்கிட்ட நான் கேட்டுட்டுத்தான் வந்தேன்.’’

‘‘பிறகு?’’

‘‘அதன் விளைவாக நான் சொல்ல நினைக்கிறது இது ஒண்ணுதான்.


அந்த அதிர்ஷ்டமில்லாத பெண்ணைப் பார்த்து பரிதாபப்படு. அதுக்கு அவங்க தகுதியானவங்க, கோபா! நீ சொன்னதைப் போல அவங்க சின்ன வயசுல ஒருத்தனை விரும்பியிருக்கலாம். அந்த அன்பு இப்பவும் அணையாம மனசுல அப்படியே இருக்குன்னா அது பாராட்டக்கூடிய ஒண்ணுதானே? அது ஒரு குற்றமா என்ன?’’

‘‘குற்றமா இல்லாம இருக்கலாம்.’’

‘‘அவங்களுக்குச் சொந்தமாக ஒரு சொர்க்கம் இருந்திருக்கலாம். அவங்களை உன் அப்பா நரகத்தை நோக்கி இழுத்திருக்கலாம். யார் குற்றவாளி, கோபா?’’

‘‘அவங்களோட விருப்பம் என்னன்னு தெரியாம என் தந்தை அவங்களைக் கொண்டு வந்தாரா என்ன?’’

பிரபா அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. அது அவனே அறிய நினைத்த ஒன்றுதான். எதற்காக அவனுடைய தாய் அந்த மனிதரை ஏற்றுக் கொண்டாள்? கோபனும் அதைப் பற்றி சிந்தித்தான்.

மீண்டும் அங்கு நிசப்தம் நிலவியது. இருவரும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து விட்டார்கள். இப்படியே நீண்ட நேரம் ஓடிவிட்டது. ஹாலில் உள்ள கடிகாரத்தில் மணி பதினொன்று அடித்தது. பிரபா போவதற்காக எழுந்தான். அவன் கோபனை உற்றுப் பார்த்தவாறு நின்றான். அவன் மனதிற்குள் ஏதோ ஆசைப்படுவது போல் தெரிந்தது.

கோபன் சிந்தனையை விட்டு வெளியே வந்து கேட்டான். ‘‘போறதா... எங்கே போறதா உத்தேசம்?’’

வருத்தம் கலந்த புன்னகையை உதிர்த்த பிரபா சொன்னான்: இந்த இடம்னு இல்ல. இந்த சாலை வழியே போகவேண்டியதுதான்.’’

‘‘நாம இனிமேல் ஒருத்தரையொருத்தர் பார்க்க மாட்டோமோ?’’

‘‘பார்க்க மாட்டோம்.’’

‘‘எல்லாவற்றையும் மறக்க முடியுமா?’’

கோபனின் கண்களில் கண்ணீர் நிறைந்துவிட்டது.

பிரபா சொன்னான்; ‘‘மறக்குறதுக்காக நான் போகல. நான் எப்பவும் உன்னை நினைப்பேன். நம்ம அம்மாவை நினைப்பேன். இந்த வீட்டை நினைப்பேன். நான்... நான்... உனக்கு விருப்பமில்லாம இருக்கலாம்...’’

‘‘என்ன சொல்றீங்க?’’

பிரபாவிற்குச் சொல்வதற்கு தைரியமில்லை. அவனுடைய வாழ்க்கையில் ஒரு விருப்பம் அது. தன்னைவிட இளையவனைத் தூக்கிக் கொண்டு நடப்பான். அது மூத்தவனுக்குக் கிடைத்திருக்கும் உரிமை. பிரபா தன்னுடைய தம்பியை ஒரே ஓருமுறை மட்டும் தொட்டிருக்கிறான். தயக்கத்துடன் பிரபா கோபனைப் பார்த்து ‘உன்னைத் தொடட்டுமா?’ என்று கேட்டான். கோபன் வேண்டாம்’ என்று தலையை ஆட்டினான். அவனுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

அவன் சொன்னான்:

‘‘வேண்டாம்... வேண்டாம்... என்னுடைய அண்ணனைக் தொடற சுகத்தை நான் அனுபவிக்காம இருக்கணும் அப்பதான் நான் நிம்மதியா இருப்பேன். நான் என் அண்ணனை மறந்திட வேண்டியதுதான்!’’

அந்த இதயம் அழுவதைப் பிரபாவால் புரிந்துகொள்ள முடிந்தது. எதற்கு இனிமேலும் அனுபவங்கள் உண்டாக வேண்டும்? அவன் சொன்னான்: ‘‘ஆமா, தம்பி! வேண்டாம்னு விலக்கப்பட்டதை நாம விருப்பப்பட வேண்டாம்.’’

‘‘ஆமா...’’

பிரபா வெளியேறினான். ‘அய்யோ’ என்று பரிதாபக் குரல் எழுப்பியவாறு கோபன் ஸோஃபாவில் சாய்ந்தான்.

11

‘‘என்னோட ஆசை என்ன தெரியும்மா! அந்த இதயத்தை எரிச்சிக்கிட்டு இருக்குற விஷயத்துல இருந்து நான் தப்பிக்கணும்மா. எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது. நான் தூங்குறது மாதிரி நடிக்கிறேன். அதுதான் உண்மை. நாம தீவிரமா இந்த விஷயத்தைப் பேசலாம்மா. அம்மா! பயப்படாதீங்க.’’

பயப்படவில்லை என்று ஜானகி அம்மா சொன்னாள் எதைப் பற்றி பேசுவது என்பது அவளுக்குத் தெரியவில்லை.

 

பிரபா கேட்டான். ‘‘அம்மா, வாழ்க்கையில சந்தோஷம்னா என்னன்றதை அனுபவிச்சிருக்கீங்களா? சின்ன வயசிலயாவது?’’

‘‘இல்ல, மகனே!’’- ஜானகி அம்மா பதில் சொன்னாள்.

‘‘அம்மா, நீங்க எப்பவாவது வாய்விட்டு சிரிச்சிருக்கீங்களா?’’

‘‘அது நம்ம வீட்டுலயும் நடக்கல. அது ஒரு பழைய வீடு. பாம்புப் புற்றும் செடிகளும் நிறைஞ்ச ஒரு இடம். அங்கேயிருந்த தனிமை ரொம்பவும் பயங்கரமானது.’’

‘‘அந்தத் தனிமை உங்களை பயப்பட வச்சுச்சாம்மா?’’

‘‘ஆமா, மகனே! அங்கேயிருந்த காற்றுகூட ஏதோ ஒரு துக்கத்தைச் சொல்லிக்கிட்டே இருக்கும். அங்கே எரியவிட்டிருக்குற விளக்குக்கு பிரகாசமே இருக்கும். வாய்விட்டு சிரிச்சா அதோட எதிரொலியைக் கேட்டு நடுங்கிப் போயிடுவேன். இரவு நேரங்கள்ல அங்கே சில முனகல் சத்தங்கள் கேட்டுக்கிட்டே இருக்கும். நம்ம கண்ணால் பார்க்க முடியாத சில வியாபாரங்கள் அங்கே நடந்துக்கிட்டு இருக்கும். அது என் தந்தைக்குன்னு கொடுக்கப்பட்ட பரம்பரை சொத்து, மகனே.’’

ஜானகி அம்மா அந்த வீட்டைப் பற்றி மீண்டும் சொன்னாள். அந்த வீட்டில் பேய்களும், கந்தவர்களும் சுதந்திரமாக இங்குமங்குமாய் நடந்து திரிவார்களாம். அங்கு ஏராளமான ஆண்களும், பெண்களும் இறந்திருக்கிறார்கள். எல்லாரும் பேய்களாக அங்கு அலைந்து திரிந்திருக்கின்றனர். கண்ணுக்குத் தெரியாத யாரோ ஒருவரின் பெரு மூச்சு உடம்பின் மீது படுவதுபோல் இருக்குமாம். நம்மால் புரிந்து கொள்ள முடியாத சில வாழ்க்கை வியாபாரங்கள் அங்கே நடந்திருக்கின்றன. ஜானகி அம்மாவின் தாய் பலப்பல கதைகளை அவளிடம் கூறியிருக்கிறாள். ஜானகி அம்மா தன் பெண்ணுக்கு வாழ்க்கையில் எவ்வளவோ குறைகள் இருந்தன. ஆனால், அவள் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டாள். சகித்துக் கொண்டாள். அவள் தன்னுடைய கவலைகளை மாலை நேரத்தில் சொல்லும் கீர்த்தனையில் வெளிப்படுத்தி விடுவாள்.

பிரபா கேட்டான்: ‘‘அந்தக் கீர்த்தனைதான் நீங்க இப்பவும் சொல்லிக் கிட்டு இருக்கிறதா அம்மா?’’

‘‘ஆமா மகனே. என் தாய்கிட்டே இருந்து எனக்குக் கிடைத்த சொத்து அது. அவங்க இறக்குறப்போ இங்கே எந்தவித சந்தோஷத்தையும் தான் அனுபவிக்கலைன்னு சொன்னாங்க. அதை காலப்போக்குல நான் தெரிஞ்சிக்குவேன்னும் சொன்னாங்க.’’

‘‘இது உண்மையா அம்மா?’’

‘‘ஆமா மகனே. நாங்க ரெண்டு பேரும் எப்பவும் சேர்ந்துதான் இருப்போம். நாங்க தினமும் ஒரு பாறைக்குக் கீழே மவுனமா உட்கார்ந்திருப்போம். யாரும் ஒரு வார்த்தைக்கூட அங்கே பேச முடியாது.’’ ஜானகி அம்மா ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

ஜானகி அம்மாவின் உணர்ச்சி வேறுபாடுகளை கவனித்துக் கொண்டிருந்த பிரபா கேட்டான்: ‘‘பாட்டியோட கவலைக்குக் காரணம் என்னம்மா?’’

‘‘என் கஷ்டங்களை அவங்க முன்னாடியே அனுபவச்சிருப்பாங்க, மகனே! அந்தப் புண்ணியவதியோட வாழ்க்கை மிகவும் மோசமா இருந்தது. அவங்க தன் கணவரை கடவுளைப் போல நினைச்சாங்க. என் தந்தை நல்ல கணவரா இருந்தார். ஆனால், அவங்க ரெண்டு பேரும் பேசி நான் பார்த்ததேயில்ல. தன் கணவரை கவனிச்சா மட்டும்தான், என் தாய் வாழமுடியும்ன்ற நிலை அங்கே இருந்துச்சு.’’

அது பிரபாவிற்கு ஒரு புதிய செய்தியாக இருந்தது. அந்தப் பாட்டிக்கு சொத்தோ, உறவினர்களோ கிடையாது என்று ஜானகி அம்மா சொன்னாள்.


அப்படிப்பட்ட ஒரு பெண்ணைத் திருமணம் செய்த தன் தந்தை  உண்மையிலேயே ஒரு கருணை வடிவம்தான் என்றாள் அவள். பிரபா கேட்க நினைத்தது வேறொன்று.

‘‘பாட்டியோட மரணத்துக்குப் பிறகு அந்தத் தனிமையான வீட்டில் நீங்க மட்டும் தனியா இருந்தீங்க. அப்படித்தானேம்மா?’’

‘‘ஆமா... கவலை நிறைந்த சில நினைவுகளுடன் அங்கே நான் இருந்தேன். அந்தப் பாறை அதுக்குப் பிறகு பயன்படாமப் போயிடுச்சு!’’

‘‘அங்கே உங்க அப்பா இருந்தார்லம்மா?’’

ஜானகி அம்மாவின் தந்தை ஒரு சிறு உத்தியோகம் பார்த்தார். தினமும் மாலையில் வருவார். அவர் ஒரு வார்த்தைகூட யாரிடமும் பேச மாட்டார். அந்தத் தந்தை தன்னைக் கொஞ்சிய ஞாபகம்கூட ஜானகி அம்மாவிடம் இல்லை. எனினும், அவர் ஜானகி அம்மா மீது பாசம் வைத்திருந்தார். இறந்துபோன அவர் தன் மகளின் கஷ்டங்களை மேலேயிருந்து பார்த்து மிகவும் கவலைப்படுவார் என்று ஜானகி அம்மா சொன்னாள்.

பிரபா கேட்டான்: ‘‘அப்போ உங்களுக்கு என்ன வயசும்மா?’’

‘‘எப்போ?’’

‘‘பேசுறதுக்கு யாரும் ஆளே இல்லையேன்னு தோணிச்சே.. அப்போ...’’

சிறு வயது முதலே நிலைமை அப்படித்தான் இருந்தது என்றாள் ஜானகி அம்மா. எனினும், தனக்குப் பன்னிரண்டு வயது நடக்கும் போதுதான், அந்த உணர்வு தனக்கு ஏற்பட்டது என்றாள் அவள்.

‘‘அம்மா, வாழ்க்கையின் சந்தோஷம் நிறைந்த ஒரே மகளாக..’’

ஜானகி அம்மா இடையில் புகுந்து சொன்னாள்: ‘‘வாழ்க்கையின் சந்தோஷமா? அது என்னன்னு கூட உன் தாய்க்கு தெரியாது.’’

‘‘அப்போ நீங்க கதை தெரியாத ஒரு அப்பாவிச் சிறுமியா இருந்தீங்களா அம்மா?’’

‘‘அப்படின்னா?’’

‘‘விஷயங்களைத் தெரிஞ்சிக்குற அளவுக்கு நீங்க இருந்தீங்களான்னு கேக்குறேன்.’’

‘‘எனக்கு நீ என்ன சொல்றேன்னே புரியல பிரபா.’’

சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு பிரபா சொன்னான்: ‘‘அம்மா, லலிதாவைப் பாருங்க. அவள் பறவைகள்கூட சேர்ந்து கூவுவா. வாய் விட்டு சிரிப்பா. கதை தெரியாத குழந்தை! நீங்க அப்படி இருந்தீங்களா?’’

ஜானகி அம்மாவிற்குப் புரிந்துவிட்டது. அவள் சொன்னாள்: ‘‘எனக்கும் அவளுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. அவள் பெரிய பணக்காரனோட மகள். பிறப்பிலேயே பெருமை இருக்கு. நேற்று அவள் கிருஷ்ணனைத் திட்டுறதைக் கேட்டேன். என்னால இப்போக்கூட அப்படியெல்லாம் நடக்க முடியாது. எனக்குக் கோபம் வந்தது இல்ல. நான் உரத்த குரல்ல பேசினது இல்ல. ஒரு மனிதனோடு சண்டை போட எனக்கு பயம்...’’

‘‘அது எதுனால அம்மா?’’

‘‘நாம ஏழைகளா இருந்தோம். மகனே! நம்ம குடும்ப சரித்திரத்தை என் தாய் சொல்லி நான் கேட்டிருக்கேன். நாம ஆழ்வாஞ்சேரியில இருந்து வந்தவங்க. அங்கே தாசிகளா இருந்தோம். பாட்டியோட அம்மா ஒரு தாழ்ந்த ஜாதிக்காரன்கூட ஓடிப் போயிட்டாங்க. பாட்டி ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களுக்குன்னு உலகத்துல யாருமே இல்ல. ஒரு நேரம் சாப்பிடுறதுக்குக் கூட ரொம்ப கஷ்டம்னா பார்த்துக்கயேன். என் தந்தை தாயைக் கல்யாணம் பண்ணுறப்போ வீட்டுல எரியிறதுக்கு ஒரு விளக்குக்கூட இல்லை.’’

பிரபா தன் தாய் சொல்வதை மிகவும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். ஜானகி அம்மா தொடர்ந்து சொன்னாள்: ‘‘ஆண் துணையே இல்லாம இருந்தவங்க என் தாய்! அவங்களோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும். ஒரு வெளுத்த ஆடை அவங்களுக்கு உடுத்த கிடைச்சது. நான் சின்னக் குழந்தையா இருக்குறப்போ என் தந்தைக்கு ஒரு சினேகிதர் இருந்தாரு. என் தாய் அவரை ‘ராமன் அண்ணே’ன்னு கூப்பிடுவாங்க. அவர் என் தாயை ‘குழந்தே...’’ன்னு கூப்பிடுவாரு.’’

‘‘நீங்க அவரை எப்படிம்மா கூப்பிட்டீங்க?’’

‘‘ராமன் மாமான்னு நான் கூப்பிடுவேன். அவர் நல்ல குடும்பத்துல பிறந்த ஒரு மனிதர்.’’

‘‘அந்த வீட்டுக்குப் பக்கத்துல வேற வீடுகள் இருந்துச்சா அம்மா?’’

‘‘இல்ல... நீ அந்த இடத்தைப் பார்க்கல. அது இப்போ என் தந்தையோட சொந்தக்காரங்கன்னு சொல்லிக்கிட்டு வந்த யாரோ சிலர்கிட்ட இருக்கு.’’

‘‘அந்த வீட்டுல தன்னந்தனியா... ஒரு மனிதனோட முகத்தையும் பார்க்காம... பொறுமையா உங்களால இருக்க முடிஞ்சதாம்மா?’’

‘‘எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருந்தேன்.’’

‘‘எந்தச் சம்பவமும் இல்லாம...’’

‘‘ஆமா...’’

‘‘உங்களுக்குப் பழக்கமானவங்கன்னு யாரும் இல்லையம்மா?’’

‘‘இல்ல... படிக்கிற காலத்துல சில தோழிகள் இருந்தாங்க என் மகனே! அங்கேயும் அந்த தாழ்வு மனப்பான்மை என்னை ரொம்பவும் கஷ்டப்படுத்திட்டது. யார் கூடவும் சமத்துவ எண்ணத்தோட என்னால பழக முடியல.’’

‘‘நீங்க எப்போம்மா படிப்பை நிறுத்தினீங்க?’’

‘‘பதினேழாம் வயசுல.’’

படிப்பு நிறுத்திய பிறகு உள்ள வாழ்க்கையைப் பற்றி பிரபா கேட்டான். ஜானகி அம்மாவிற்கு அதைப் பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. ‘‘வெறுமனே வாழ்ந்தேன்’’- அவ்வளவுதான்’’ என்று கூறிவிட்டாள் அவள்.

பிரபா கேட்டான்: ‘‘அந்த ஒடுங்கிப்போன வாழ்க்கையில திருப்தி... சுகத்தைச் சொல்லல... போதும்ன்ற திருப்தி உங்களுக்கு இருந்துச்சாம்மா?’’

‘‘எனக்கு அதிருப்தி இல்ல...’’

‘‘அதைக் கேட்கலம்மா... ஏமாற்றம்... போதாதுன்ற உணர்வு.’’

‘‘என் மேல என் தந்தை மிகவும் பிரியமா இருந்திருக்கணும், மகனே! நமக்கு அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை கனவு காணக்கூட முடியாது. தெருத் தெருவா அலைஞ்ச கூட்டம். ஆண் துணையோ, குடும்ப சொத்தோ எதுவும் இல்ல. தந்தைமார்கள்தான் நம்மைக் காப்பாற்றினது... பாட்டியோட பாட்டி காலத்துல இருந்து அப்படித்தான்...’’

பிரபா மீண்டும் தன்னுடைய கேள்வியைத் திரும்பக் கேட்டான்.

‘‘அந்த வாழ்க்கை போதும்னு நீங்க நினைச்சீங்களா?’’

‘இப்போ இல்லாத திருப்தி அப்போது இருந்ததாகச் சொன்னாள் ஜானகி அம்மா. அந்த இருட்டில் வாழ்ந்தால் போதும் என்று அப்போது அவள் நினைத்தாள். ஏனென்றால் அதை அன்று எதிர்க்கக் கூடிய வெறி அவளிடம் இல்லை. இந்த பிரகாசமான வீட்டில் அந்த அறிவு வேலை செய்கிறது. அந்த வீட்டில் எதையும் சகித்துக் கொள்ளக் கூடிய எளிமைத்தனம் அவளிடம் இருந்தது. அதனால்தான் அவள் எதையும் எதிர்க்கவில்லை. எளிமையாக வாழ்வதுதான் தன்னுடைய பரம்பரைப் பழக்கம் என்று ஜானகி அம்மா நம்பினாள்.

பிரபா கேட்டான்: ‘‘அந்தத் தனிமை வாழ்க்கையில் உங்களுக்கு நிராசை தோணியிருக்காம்மா?’’

ஜானகி அம்மாவிற்கு அப்படியொன்றும் ஆசைகள் இல்லை. அவளின் தாய்க்கும்கூட பெரிதாக ஆசைகள் இல்லைதான்.

பிரபா கேட்டான்: ‘‘நீங்க கனவுகள் காணுறது உண்டாம்மா?’’

‘‘கனவுகளா?’’

‘‘ஆமாம்மா. அந்தத் தனிமையான வீட்டுல மணிக்கணக்கா உட்கார்ந்து நீங்க எதைப் பற்றியாவது சிந்திக்குற உண்டா?’’

‘‘அப்படி எதுவும் இல்ல.’’

‘‘அந்தத் தனிமையில உங்க மனசு எப்பவாவது கட்டுப்பாட்டை விட்டு போயிருக்காம்மா?’’

ஜானகி அம்மாவிற்கு அவன் என்ன சொல்கிறான் என்பதே புரியவில்லை.


‘‘கட்டுப்பாட்டை விட்டா...?’’

‘‘ஆமா... அது இருக்கட்டும். அங்கே இருக்குறப்போ உங்க உடல் நிலை நல்லா இருந்ததாம்மா?’’

‘‘நல்லா இருந்துச்சு.’’

‘‘நீங்க நல்ல அழகான பெண்ணா இருந்தீங்களா?’’

‘‘நீ என்ன கேள்வியெல்லாம் கேக்குற?’’

‘‘இப்போ இருக்குறதைவிட அப்போ இன்னும் நல்ல நிறமா இருந்திருப்பீங்கள்ல தலையிலகூட முடி அதிகமா இருந்திருக்கும்! அப்படித்தானேம்மா?’’

‘‘அப்படி இருந்தது உண்மைதான்’’ என்றாள் ஜானகி அம்மா. அவளின் தாய் அவளைவிட அழகானவளாம். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லா பெண்களும் மிகவும் அழகாக இருப்பார்களாம். அவளின் தாய் பாதம் வரை தொங்கிக் கொண்டிருக்கும் கூந்தலை வாரிக் கட்டி பூச்சூடியிருப்பாளாம். அவள் எப்போதும் கட்டியிருப்பது முண்டுதானாம். ஜானகி அம்மா தன் தாயைப் பற்றி கூறிக் கொண்டிருப்பதற்கிடையில் பிரபா கேட்டான்.

‘‘நீங்களும் தலைமுடியை வாரிக் கட்டி பூச்சூடியிருப்பீங்களாம்மா?’’

‘‘ஆமா... அந்த வீடு முழுக்க முல்லைப் பூ காடு மாதிரி பூத்திருக்கும்.’’

‘‘நீங்க நகை அணிஞ்சிருப்பீங்க. பொட்டு வைப்பீங்க. அப்படித்தானேம்மா?’’

‘‘இதென்ன கேள்வி பிரபா?’

‘‘இல்லம்மா... சும்மா கேட்டேன். நகைகளும் நல்ல ஆடைகளும் வேணும்னு உங்க அப்பாவை நீங்க கஷ்டப்படுத்தியிருக்கீங்களா?’’

‘‘இல்ல... அதுக்கான தைரியம் எனக்கு இல்ல. என் தாய் அப்படி செஞ்சதாகவும் நான் கேள்விப்படல.’’

‘‘அம்மா, நீங்க கண்ணாடி பார்த்ததுண்டா?’’

‘‘இது என்ன கேள்வி?’’

‘‘அந்த இருளடைஞ்சு போய் இருக்குற வீட்டை விட்டு வெளியே போகணும்னு, அங்கே இருந்த பழைய வாசனையிலிருந்து வெளியே வந்து விசாலமான உலகத்தைப் பார்க்கணும்னு உங்களுக்குத் தோணலியாம்மா? அதாவது வாழ்க்கையின் ஆனந்தம் நிறைந்த உலகத்தைப் பார்க்கணும்னு...’’

‘‘அது எப்படி முடியும், மகனே? அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டாமா?’’

‘‘அப்படியொரு எண்ணம் மனசுல இருந்துச்சா?’’

‘‘இல்லாம இருக்குமா?’’

‘‘அந்த வீட்டின் இருளடைஞ்ச சமையலறையைவிட்டு, அங்கே இருந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கையைவிட்டு தப்பிக்கணும்னு எப்பவாவது நினைச்சிருக்கீங்களாம்மா? அங்கே இருக்கும் பழைய நாற்றம் மனசைப் புரட்டுறது மாதிரி இல்லியா?’’

மனதைப் புரட்டிக்கொண்டு வந்தாலும், எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தான் இருந்ததாகச் சொன்னாள் ஜானகி அம்மா. அங்கு தனக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்றாள் அவள். ‘‘எனினும் அங்கிருந்த தனிமையும் நிசப்தமும் அவளுடைய மனதில் ஒரு பெரிய பாரத்தைப் போல கனத்துக் கொண்டிருக்கவில்லையா?’’ என்று பிரபா கேட்டான். சில நேரங்களில் வெறுப்பு தோன்றியிருக்கிறது என்று அதற்குப் பதில் சொன்னாள் ஜானகி அம்மா.

‘‘அந்த வீட்டுல மூச்சு விடுறதுக்கே ரொம்பவும் கஷ்டமா இருந்திருக்குமே அம்மா! அங்கே இருந்த பழமையான பொருட்களைப் பார்த்து உங்க மனசுல ஒருவகை வெறுப்பு தோணியிருக்கணுமே! அங்கே நீங்க நீண்ட நேரம் தூங்கிக்கிட்டே இருந்திருப்பீங்க. விசாலமான உலகத்தைப் பற்றி எப்பவும் நினைச்சுக்கிட்டு இருந்திருப்பீங்க.’’

அவன் என்ன சொல்கிறான் என்பதை ஜானகி அம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.

பிரபா தொடர்ந்தான்: ‘‘பாகவதம் தவிர வாழ்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிற புத்தகங்களுக்காக நீங்க ஏங்கினீங்களாம்மா? சிரிப்பு, பாட்டு எல்லா நிறைஞ்ச புத்தகங்களுக்காக...’’

‘‘அப்படிப்பட்ட புத்தகங்கள் எனக்குக் கிடைக்கல’’ என்றாள் ஜானகி அம்மா.

பிரபா தொடர்ந்து சொன்னான். ‘‘விசாலமான உலகத்துல எங்கேயோ இருக்குற ஒரு ஆளை, உங்களுக்கே தெரியாத ஒரு ஆளை நீங்க உன் மனசுல நினைச்சீங்களாம்மா? கண்ணில் பார்க்காத அந்த மனிதனை நினைக்குறப்போ உங்கமனசுல ஒரு சுகம் தோணியிருக்காம்மா?’’

அதைக்கேட்டு ஜானகி அம்மா அதிர்ந்து போனாள். அவள் அவன் முகத்தையே உற்றுபார்த்தாள். பிரபா புன்சிரிப்பு தவழச் சொன்னான்: ‘‘பல விஷயங்களைப் பற்றி நாம பேச வேண்டியிருக்கும்மா. உங்களுக்குப் பதினாறு வயசு நடக்குறப்போ, அந்த வயசுக்கே இருக்குற ஆசைகள் உங்க மனசுல இருந்துச்சாம்மா’’

அதற்கு ஜானகி அம்மா எந்தப் பதிலும் சொல்லவில்லை.

‘‘என் கண்ணுக்கு முன்னால ஒரு இருட்டு. இங்க பாருங்க. அந்தப் பதினாறு வயசுல அப்படிப்பட்ட ஆசைகள் எதுவும் இல்லையா என்ன? நாம கொஞ்சம் மனசை விட்டு பேசுவோம் அம்மா.’’

ஜானகி அம்மா சற்று தயங்கினாள். அவள் மனதிற்குள் கடவுளைத் தொழுதாள்.

‘‘அம்மா, நீங்க திருமணமாகாத ஒரு பெண்ணா இருந்தா எல்லாத்தையும் மறைச்சுத்தான் வைக்கணும். நான் சில சம்பவங்களை நினைக்கிறேன். அதை நான் பார்க்கவும் செய்யிறேன்.’’

ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘இல்ல... இவ்வளவு காலமா நான் அதைச் சொல்லல.’’

‘‘அது எல்லாருக்கும் தெரியும். அந்த நாடகத்தின் சூழ்நிலை, கதாபாத்திரங்கள்- இதுல வேணும்னா தப்பு உண்டாகலாம். அது ஒரு பெரிய ரகசியமே இல்ல.’’

‘‘நீ எல்லையைக் கடந்து கேள்வி கேக்குற, பிரபா!’’

பிரபா புன்னகைத்தான்!

‘‘எல்லையா அம்மா! அந்த எல்லையை மீறாம இருக்குறது எதுக்கும்மா? குடும்ப உறவுகளைக் காப்பாத்துறதுக்கும் ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் உறவுகள் சரியான முறையில் இருப்பதற்கும் தான் அந்த எல்லை வச்சிருக்கறதே.’’

‘‘அதை நான் உன்கிட்ட சொல்லணுமா மகனே?’’

‘‘அம்மா, இப்போ நீங்க கல்யாணம் ஆனவங்க. ஒரு பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய மனைவின்ற இடம் உங்களோட பதினேழாவது வயசிலேயே உங்களுக்குக் கிடைச்சிடுச்சு!’’

ஜானகி அம்மா அழுதாள்.

‘‘ஏம்மா அழுறீங்க?’’ என்று பிரபா கேட்டான்.

‘‘உன் விஷயத்துல நான் நடந்த முறைக்கு...?’’

‘‘இல்லம்மா... அதை ஒரு தப்பான விஷயமாகவே நான் நினைக்கல.’’

‘‘உன் பிறப்பு...’’

‘‘அதை நீங்க செஞ்ச தப்பா நான் நினைக்கலம்மா’’ என்று பிரபா மீண்டும் சொன்னான். ‘‘ஆனா, நீங்க உங்களுக்கே தண்டனை கொடுத்துக்கிட்டீங்க. அதுக்காக நீங்க தோற்றுப் போகல. நம்ம குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் தோற்றுப்போக மாட்டாங்க. அவங்ககிட்ட இருந்த உலகத்துக்கே தெரிஞ்ச அழகு...’’

‘‘செத்துப்போன பாட்டிமார்களைப் பற்றி தப்பா பேசாதே.’’

‘‘தப்பா சொல்லலம்மா! பல வருடங்களுக்கு முன்னாடி ஆழ்வாஞ்சேரியில இருந்து வீட்டை விட்டு ஓடிப்போன அந்தப் பழைய பாட்டி தாசின்ற கேவலமான பதவியை வச்சு ஒரு கணவனை எப்படியோ பிடிச்சிட்டாங்க.’’

‘‘அப்போ இருந்து நாம அனாதையா ஆயிட்டோம், மகனே!’’

‘‘அது எப்படிம்மா? அப்போ இருந்து நாம வேற மாதிரி மாறியிருக்கணுமேம்மா?’’

‘‘இல்ல. அப்போயிருந்துதான் மகனே, நம்ம குடும்பத்துல பெண்கள் ஆண்களோட அடிமையா ஆக ஆரம்பிச்சது. கணவன்னு ஒருத்தனை அடைஞ்சாத்தான் வாழவே முடியும்ன்ற நிலை வந்துச்சு. ஆழ்வாஞ்சேரியில இருந்து ஒரு ஆணை நம்பி அந்த ஆளு பின்னால ஒடிய பெண் எல்லாவித சுதந்திரங்களையும் கொண்ட மருமக்கத்தாய குடும்பத்தை விட்டு போயாச்சு! அப்போ அந்தப் பாட்டி அடிமை பதவியை தானே தேடிக்கிட்டாங்க!’’


‘‘அது எப்படி வேணும்னாலும் போகட்டும். அவங்க புத்திசாலியா இருந்திருக்காங்க. சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு கணவனை சந்தோஷப்படுத்தி வாழ்ந்திருக்காங்க. அப்படித்தான் நீங்களும் ஒரு கணவனை அடைஞ்சீங்க... அப்படித்தானேம்மா?’’

‘‘நான் ஒரு கணவனை ஏற்றுக்கிட்டதுக்கு, நீ என் மேல கோபப்படுறியா?’’

‘‘நிச்சயமா இல்ல. நீங்க புத்திசாலித்தனமா நடந்திருக்குறதா நான் நினைக்கிறேன்.’’

‘‘ஆமா...’’ - சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு ஜானகி அம்மா சொன்னாள்: ‘‘அதனால... அப்படி ஓரு ஆளை ஏற்றுக்கிட்டதால நீயும் வளர்ந்தே.’’

‘‘ஆமாம்மா! நான் வளர மருமக்கத்தாய அமைப்பு இல்லாமப் போச்சு. இருந்தாலும் நீங்க இப்படியொரு உறவை உண்டாக்காம இருந்திருந்தா, நான் ஒரு ஆளை ‘அப்பா’ன்னு... கூப்பிட்டிருப்பேன் அம்மா.’’

பிரபா ஜானகி அம்மாவின் முகத்தை உற்றுப் பார்த்தான். அறிய வேண்டிய விஷயத்தை அவன் நெருங்கிவிட்டான். அவனுடைய ஆர்வம் கட்டுப்பாட்டை மீறிவிட்டிருந்தது. தன் தாயின் முகக்திலிருந்து கண்களை எடுக்காமல் அவன் சொன்னான்: ‘‘வாழ்க்கையில ‘அப்பா’ன்னு கூப்பிடுறதுல என்ன இன்பம் இருக்கப் போகுது? இருந்தாலும் எனக்கு ஒரு விஷயம் தெரியணும்மா. எதுனால அந்த மனிதரை நீங்க ஏத்துக்கல?’’

இடி விழுந்ததைப் போல ஜானகி அம்மா நடுங்கிப் போய் நின்றாள். அவளின் இதயம் வேகமாக அடித்துக் கொண்டிருந்தது. அவள் பதைபதைப்பான குரலில் சொன்னாள்: ‘‘இல்ல... நான் சொல்லமாட்டேன். நான் யார்கிட்டயும் சொன்னதில்ல. என் கணவர்கிட்ட கூட சொன்னதில்ல...’’

‘‘பதட்டப்படாதீங்கம்மா... சொன்னால்தான் என்ன?’’

‘‘நான் விரும்பின ஆளை எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு என் தந்தை என்கிட்ட சொன்னாரு. இருந்தாலும் நான் சொல்லல...’’

‘‘ஏன் சொல்லலம்மா?’’

‘‘நான் யாரையும் விரும்பல...’’

பிரபாவால் அந்த வார்த்தைகளை நம்ப முடியவில்லை. அவன் ‘‘என்ன சொன்னீங்க?’’ என்று கேட்டதற்கு ஜானகி அம்மா திரும்பவும் ‘‘நான் யாரையும் விரும்பல’’ என்று உறுதியான குரலில் சொன்னாள்.

‘‘அம்மா, நீங்க அப்போ பார்க்க நல்லா இருந்திருக்கீங்க. நல்ல இளமையோட... நாம ரொம்பவும் அழகா இருக்கோம்ன்ற நினைப்போட... கனவுகள் கண்டு... சபலமான மனசு கட்டுப்பாட்டை மீறி...’’

பிரபா ஒரு நிமிடம் கட்டுப்பாட்டை மீறிய மனிதனாகிவிட்டான். அவன் பற்களைக் கடித்துக் கொண்டு சொன்னான்: ‘‘என்னால யூகிக்க முடியுது... அம்மா, நீங்க உணர்ச்சிவசப்பட்டு... காம எண்ணங்களுக்கு அடிமையாகி... யார் மேலயும் விருப்பம் இல்லாம... தப்பா நடந்து...’’

‘‘இல்ல... இல்ல மகனே!’’ - ஜானகி அம்மாவால் இனிமேல் உண்மையைச் சொல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை உண்டாகிவிட்டது. ‘‘இல்ல... இல்ல... அப்படி இல்ல... ஆர்வமும் இளமையும் இல்ல... இரத்தக் கொதிப்பு இல்ல. அந்த வாழ்க்கையில அப்படியெல்லாம் எதுவும் இல்ல. அந்த இருண்ட வீட்டுல அதுக்கெல்லாம் சாத்தியமே இல்ல. அங்கே சந்தோஷத்தோட ஒண்ணு சேர்ந்து இருக்க முடியாது. நான் காம வயப்படவும் இல்ல. எல்லாம் என் கெட்ட நேரம்.’’

பிரபப உரத்த குரலில் சொன்னான்: ‘‘ஆமா... பெண்களுக்குன்னே இருக்குற கெட்ட நேரம்!’’

‘‘நான் ரொம்பவும் அடக்க ஒடுக்கமா இருந்ததுகூட ஒரு காரணமா இருக்கலாம். ‘முடியாது’ன்னு சொல்லத் தெரியாத குணம்... கையை விடுவிக்கணும்னு கூட தோணாதது... நான் வேலைக்காரனனை அண்ணே’ன்னு மரியாதையா கூப்பிட்டேன். நாம ரொம்பவும் சாதாரணமானவங்கன்னு என் தாய் எனக்குச் சொல்லித் தந்திருந்தாங்க.  கையைப் பிடிச்சப்போ எதுவும் செய்ய முடியாம அதுக்கு இணங்கிப் போக மட்டும்தான் என்னால முடிஞ்சது. நான் ஏழையாச்சே? ‘என்னை கெடுத்துடாதீங்க’ன்னு நான் சொன்னேன். பேசாதேன்னு கோபமா வார்த்தைகள் வந்ததும் நான் பேசாம இருந்துட்டேன். இப்போ உன்கிட்ட அதைத் சொல்ல வேண்டிய நிலை.’’

ஜானகி அம்மா உணர்ச்சி கொந்தளிக்க நின்று கொண்டிருந்தாள். அவளிடம் சொல்வதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. எல்லாவற்றையும் கூறுவதற்கு ஆர்வமாகவும் இருந்தாள். அப்படி சொன்னால், மனம் நிம்மதியாக இருக்கும். ஆனால், அவளால் முடியவில்லை.

‘‘இல்ல... என் இரத்தக் கொதிப்பு இல்ல, இளமை இல்ல, காமம் இல்ல... கட்டுப்பாட்டை மீறிய மனம் இல்ல... நான் நிரபராதின்றதை என்னால நிரூபிக்க முடிஞ்சா... அந்த சம்பவத்தில் தலை முடியோட அசைவைக் கூட... நான் எப்படி அதைச் சொல்லுவேன்? சொன்னேன்னா உலகம் நான் செய்த தப்பை மன்னிச்சாலும் மன்னிக்கும்.’’

பிரபா இப்படி நினைக்கவில்லை. இப்படி ஒரு குழந்தை பிறப்பான் என்று அவன் எண்ணியிருக்கவில்லை. பெண்ணும் ஆணும் முழுமையான சம்மதத்துடன்தான் இணைய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தான். நிலை கொள்ளாத மனதுடன் பிரபா அந்த அறைக்குள் இப்படியும் அப்படியுமாய் நடந்தான். ஜன்னல் கம்பிகளைப் பிடித்து இழுக்க வேண்டும்போல் அவனுக்கு இருந்தது. ஒரு பெண்ணின் பலவீனத்தின் சின்னம்! பெண்ணும் ஆணும் முறைப்படி இணைந்து பிறந்தவனல்ல அவன்! தான் எப்படிப் பிறந்தோம் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தச் சம்பவத்தை தன்னுடைய அகக் கண்களால் அவன் பார்த்தான். ஒரு அப்பாவிப் பெண்ணிடம் ‘பேசாதே’ என்று ஒரு மிருகம் கோபமான குரலில் கூறுகிறது! பிரபாவிற்குத் தன் மீதே வெறுப்பு தோன்றியது.

அந்தப் பழைய வீட்டின் இருட்டில் என்னவெல்லாம் நடந்திருக்கும்? அங்குள்ள சுவர்களில் கட்டாயம் இரத்தத்துளிகள் இருக்கும்!

பிரபா கேட்டான்: ‘‘அது யாரு?’’

‘‘நீ வருத்தப்படுவே.’’

‘‘இல்ல... சொல்லுங்க அம்மா.’’

‘‘உனக்குத் தெரியும். உன் வாழ்க்கையில் உனக்குன்னு இருக்குற ஒரே சொந்தம். உனக்கு பொம்மை வாங்கித் தந்தாருல்ல.. உன் மேல அன்பு காட்டினாருல்ல.. அந்த ஆளுதான். இந்த வீட்டைச் சுற்றி சுற்றி வந்துக்கிட்டு இருந்தாரு. என்னோட வாழ்க்கையிலும் என் கணவரோட வாழ்க்கையிலும் கெட்ட கனவா இருந்தாரு அந்த ஆளு. பாவம்! உன்னை கொஞ்சுறதுக்காக வந்தாரு அந்த நாடோடி.’’

‘‘நிறுத்துங்க. கோபனோட அப்பா யாரு?’’

‘‘நீ ஏன் அப்படி கேக்குற?’’

‘‘அதை அவனோட அப்பா அவன்கிட்ட கேக்குறாரு.’’

அடுத்த நிமிடம் ஜானகி அம்மா ‘அய்யோ’ என்று உரத்த குரலில் கத்தியவாறு தரையில் விழுந்தாள். அது தெரியாமல் பிரபா வெளியேறி போய்க் கொண்டிருந்தான்.

12

ருபத்தொரு வருடங்களாக எவ்வளவு பெரிய பாரத்தை ஜானகி அம்மா சுமந்திருக்கிறாள்! அது அவளை இவ்வளவு காலமும் அழுத்தி பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தது. அந்தப் படுகுழியை விட்டு அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை. ஒரு ஆளிடம் அந்த ரகசியத்தை வெளியிட்டாகிவிட்டது. அதன்மூலம் இதயத்திலிருந்த பாரம் இல்லாமற்போனது. இனிமேல் தான் ஒரு தப்பு செய்தவள் இல்லை என்று அவளுக்குத் தோன்றியது.


யாராக இருந்தாலும் தன்னுடைய தப்பை மன்னிப்பார்கள் என்று மனப் பூர்வமாக அவள் நம்பினாள். முன்பு எப்போதும் அனுபவிக்காத நிம்மதியும் தன்னுணர்வும் அவளுக்கு உண்டாயின. ‘பேசாதே’ என்ற அந்த கட்டளைக்குக் கட்டுப்பட்டு அவள் மனம் இதுவரை கிடந்தது. அந்த வார்த்தையை அவள் உச்சரித்தாள். அதிலிருந்து அவள் வெளியேறினாள். அவள் கணவரைப் பார்த்துக் கேட்டாள்: ‘‘என்ன? நான் உங்களை விட்டு விலகிப் போகிற மாதிரி தெரியுதா?’’

ஜானகி அம்மாவுக்கு மேலும் கொஞ்சம் சதை பிடித்தது போல் இருந்தது. அவள் பல விஷயங்களையும் சிந்தித்துப் பார்த்தாள்.கேலியுடன் சிரித்தவாறு அவள் சொன்னாள்: ‘‘நீங்க ஒரு அப்பிராணி, உங்க விஷயங்களெல்லாம் எனக்கு நல்லா தெரியும்.’’

பத்மநாபப் பிள்ளை சிறிது பயம் தோன்ற நின்றிருந்தார். அவர் கேட்டார்: ‘‘அதுக்காக?’’

‘‘கோபன்... அவன் யாரோட பையன்னு நீங்க நினைக்கிறீங்க?’’

‘‘அவனோட அப்பா நான்தான்.’’

‘‘அது நிச்சயமா உங்களுக்குத் தெரியமா?’’

‘‘என்னை ஏமாற்ற உன்னால முடியாது.’’

ஜானகி அம்மா அதற்கு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். பத்மநாபப் பிள்ளை அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் முட்டாளைப்போல கேட்டார்: ‘‘அவன் யாரோட மகன்?’’

‘‘தாசிக்கிட்ட அவ பிள்ளைங்களுக்கு தகப்பன் யாருன்னு கேட்கக்கூடாது. அவ எத்தனையோ பேர்கூட பழகி வாழ்க்கையை ஓட்டினவளா இருப்பா. அது அவளுக்கே தெரியாது.’’

அதைக்கேட்டு பத்மநாபப் பிள்ளை ஒரு மாதிரி ஆகிவிட்டார்.

‘‘உன்னோட பழயை வரலாறை- அதை நான் அவ்வளவு சாதாரணமா கண்டுக்காம ஓரத்துல போட்டிருக்கக்ககூடாது. அப்படின்னா உன் வாழ்க்கை அதோட தொடர்ச்சி... அப்படித்தானே?’’

பத்மநாபப் பிள்ளை உரத்த குரலில் சிரிக்க முயற்சித்தார்.

‘‘அந்தப் பிள்ளைங்க உங்களுக்கு உதவமாட்டாங்க.’’

‘‘என்ன சொன்ன?’’

பத்மநாபப் பிள்ளைக்கு ஒன்றுமே புரியவில்லை.

‘‘அந்தப் பிள்ளைகள் உங்களோட எதிரிகளா இருப்பாங்க.’’

‘‘நான் உன்னைப் பார்த்து பயப்படல.’’

‘‘பயப்பட வேண்டாம்.’’

‘‘இந்தக் கனவின் இன்னொரு பக்கம் தெரியுமா? எல்லாத்தையும் சாதாரணமா தூக்கிப் போட்டுற என்னால முடியும். இந்தப் பிள்ளைகள் எனக்குப் பிறக்காததா கூட இருக்கட்டும். அப்போகூட நான் பயப்பட ஒண்ணுமேயில்லை...’’

‘‘அப்படின்னா அந்தப் பிள்ளைகள் உங்க பிள்ளைகள் இல்லைன்னு முடிவுக்கு வந்துட்டீங்களா? எனக்கு அது போதும்.’’

பத்மநாபப் பிள்ளை எரியும் நெருப்பிற்குள் சிக்கிக் கொண்டார். அவர் பயமுறுத்துவதைப் போல சொன்னார்: ‘‘நான் கோபனைக் கூப்பிடுவேன்.’’

அதற்குச் சிரித்துக்கொண்டே ஜானகி அம்மா சொன்னாள்.’’ ‘‘எதுக்கு? அவன் எப்படி பதில் சொல்வான்?’’

‘‘அவன் வாயாலயே அதை உன்கிட்ட கேட்க வைப்பேன்.’’

‘‘நான் பதில் சொல்ல மாட்டேன். வேதனைப்பட்டு வேதனைப்பட்டு நீங்க துடிக்கணும். நான் அந்த மனிதனோட பேரைச் சொல்ல மாட்டேன்.’’

பத்மநாபப் பிள்ளை அனலில் விழந்ததைப் போல துடித்தார்.

‘‘நான் உன்னைக் காப்பாற்றினவன். எனக்கு இதெல்லாம் தேவைதான்.’’

‘‘இதைவிட அதிகமாகவே நீங்க அனுபவிக்கணும்.’’

பத்மநாபப் பிள்ளை செயலற்று நின்றுவிட்டார். தன்னுடைய வாழ்க்கை முழுமையாக இருண்டு போய் இருப்பதை அவரால் உணர முடிந்தது. அந்தப் பிள்ளைகளின் தந்தை தானல்ல என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டால்கூட போதுமென்று அவர் நினைத்தார்.

‘‘அடியே, என் பிள்ளைகள்தானே அவர்கள்?’’

‘‘அதை நான் சொல்ல மாட்டேன்.’’

‘‘என் வாழ்க்கையே வீணாயிடுச்சு.’’

‘‘அதை நான் சொல்ல மாட்டேன்.’’

‘‘எனக்கு அது தெரிஞ்சு ஆகணும்.’’ என்று கூறியவாறு கோபன் எங்கிருந்தோ அங்கு வந்தான். ஜானகி அம்மா அவனிடம் கேட்டாள்: ‘‘என் மகனே, எதுக்கு இங்கே வந்தே?’’

அவன் சொன்னான்: ‘‘எனக்கு அது தெரியணும்.’’

ஜானகி அம்மாவின் இதயம் வலித்தது. அவளுடைய கண்களில் கண்ணீர் அரும்பியது.

‘‘என் மகனே, நீ போ! நீ தெரிஞ்சிருக்கிறதுக்கு ஒண்ணுமே இல்ல. இங்கே நடக்கிற விஷயங்களுக்கு மகனே, நீ சாட்சியா இருக்க வேண்டாம்.’’

‘‘போகமாட்டேன். எனக்கு அந்த சந்தேகம் தீரணும்.’’

பத்மநாபப் பிள்ளை இடையில் புகுந்து சொன்னார்: ‘‘நீ எனக்குப் பிறக்கலையாம்.’’

கோபன் பத்மநாபப் பிள்ளைக்கு நேராகத் திரும்பிச் சொன்னான்: ‘‘தயவு செய்து பேசாம இருங்க.’’

பற்களைக் கடித்துக்கொண்டு ஜானகி அம்மா பத்மநாபப் பிள்ளையின் முகத்தைப் பார்ததவாறு கேட்டாள்: ‘‘ஏன் இப்படியெல்லாம் குழப்பத்தை உண்டாக்கியிருக்கீங்க?’’

‘‘எல்லாம் சரியாத்தான் போய்க்கிட்டு இருக்கு.’’

ஜானகி அம்மா மகனைத் திருப்திப்படுத்துவதற்காகச் சொன்னாள்: ‘‘என் மகன் அதை நம்புவானா?’’

பத்மநாபப் பிள்ளை ஆவேசத்துடன் சொன்னார்:

‘‘நான் நம்புறேன். உண்மையைச் சொல்லு.’’

‘‘தள்ளி நில்லுங்க...’’

பத்மநாபப் பிள்ளை வெலவெலத்துப் போய் சற்று பின்னால் தள்ளி நின்றார். பிறகு அவர் கடுமையான குரலில் கோபனைப் பார்த்துச் சொன்னார்: ‘‘நீ உன் தாயோட மகன்.’’

‘‘ஆமாம்... - என்று கோபன் மெதுவான குரலில் சொன்னான். தோல்வியைத் தழுவிய பத்மநாபப் பிள்ளை உரத்த குரலில் கத்தினார்.

‘‘இவ ஒரு... இரத்தக் காளி!’’

‘‘அவமானப்பட்ட... தண்டிக்கப்பட்ட... பெண் - அவள் இப்படித்தான் இருப்பா!’’

‘‘நான் உன்னைப் பார்க்க விரும்பல.’’

பத்மநாபப் பிள்ளை தள்ளி நின்றார். எதுவும் பேசாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

ஜானகி அம்மா கோபனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

‘‘என் மகனே, நீ கவலைப்படக் கூடாது.’’

ஜானகி அம்மாவின் கண்களிலிருந்து நீர் தாரைத் தாரையாக வழிந்தது. கோபனுக்கு அதன் உண்மை தெரியவேண்டும்.

‘‘என் மகனே, நீ யார் முகத்தையும் தைரியமா பார்க்கலாம்.’’

‘‘அப்படின்னா... நான்...’’

‘‘நம்பணும்.’’

அந்த வார்த்தைகளில் இருந்த உண்மைத் தன்மை கோபனின் இதயத்தைத் தொட்டது. அவனுக்கு இப்போது நிம்மதி பிறந்தது. இருந்தாலும் வேறு சில விஷயங்களை அவன் தெரிந்தாக வேண்டும்.

‘‘இங்கே யாரை நினைச்சுக்கிட்டு நீங்க இருந்தீங்க?’’

‘‘நான் யாரையும் நினைக்கல. என் வாழ்க்கையைப் பற்றி நினைச்சேன்.’’

‘‘அப்பாமேல உங்களுக்கு ஏன் அன்பு இல்லை?’’

‘‘என்னால முடியல மகனே.’’

‘‘இங்கே அந்த ஆளு ஒளிஞ்சு திரிஞ்சது...?’’

‘‘அதுக்கு நான் பொறுப்பில்ல, மகனே?’’

‘‘அந்த ஆளு ஏன் அப்படி சுற்றித் திரியணும்?’’

‘‘ஓரு வேளை...’’ ஜானகி அம்மா தான் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தினாள்.

‘‘ஓருவேளை... சொல்லுங்க. நான் கேக்குறேன்.’’

‘‘அந்த ஆளு என்னைப் பின்தொடர்ந்துக்கிட்டு இருந்தாரு, மகனே! இங்கே இருந்து வெளியே போக எனக்குப் பயமா இருந்துச்சு.’’

‘‘எதுக்காகப் பயந்தீங்க?’’

சில நிமிடங்களுக்கப் பிறகு ஜானகி அம்மா சொன்னாள்:


‘‘வாழ்க்கையில திருப்தி அடையாத தாகம்! எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சாச்சு. நான் மன்னிக்கணும்னு அந்த ஆளு விரும்பினாரு. மன்னிப்பு மட்டும்தான்! என் மகனே, தப்பா நினைக்காதே. வாழ்நாள் முழுவதும் எனக்குப் பின்னாடி அலைஞ்சுக் கிட்டிருக்கிற ஒரு மனிதன் அப்படின்ற விஷயத்தை நினைச்சுப் பார்த்தா அதை நாம எப்படி ஒதுக்கிட முடியும்? என் மகனே, உன் தாய் தப்பு செய்யல.’’

‘‘என் தாயே, நீங்க யாரையும் விரும்பலையா?’’

‘‘இல்ல... யாரையும் இல்ல.’’

சிறிது நேரத்திற்கு அங்கு அமைதி நிலவியது. கோபன் தன் தாய் சொன்ன எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டான். ஜானகி அம்மாவிற்கு அது குறித்து மிகவும் மகிழ்ச்சியே. கோபன் கேட்டான்: ‘‘இதெல்லாம் யாரோட தப்பு அம்மா?’’

‘‘கன்னிப் பெண் கர்ப்பம் தரிச்சால் உண்டாகுற தலைவலி இதுதான் மகனே! அய்யோ... எனக்குத் தலை சுத்துதே!’’

‘‘ஏன்? என்ன ஆச்சு?’’

‘‘என் தலை சுத்துற மாதிரி இருக்கு மகனே.’’ மீண்டும் யாரும் எதுவும் பேசவில்லை. கோபன் சொன்னான்: ‘‘அது உண்மையான அன்பு அம்மா.’’

‘‘ஆமா... அதுக்காக ஒரு வாழ்க்கையையே அர்ப்பணம் பண்ணியாச்சு. அந்தக் காதலை நான் பெருசா நினைக்கல. அந்தத் தெரு பொறுக்கிக்கு என்னை விரும்பத் தெரிஞ்சது. என்னை கடவுளா வழிபடத் தெரிஞ்சது...’’

ஜானகி அம்மா உரத்த குரலில் கத்தியவாறு, விழப் பார்த்தாள். கோபன் ஜானகி அம்மாவைத் தாங்கிக் கொண்டான்.

‘‘என் மகனே.’’

‘‘அம்மா- என் அன்பு அம்மா...’’

13

‘‘நான் உங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு பாரமா இருக்க மாட்டேன். என் தோள்ல தொங்கிக்கிட்டு இருக்கிற துணியில அந்தக் குழந்தையை வச்சிக்கிட்டு உங்கப் பின்னாடி நான் கடைசிவரை நடப்பேன். அந்தப் பாதை நமக்கு எப்பவும் தூரமா இருக்காது.’’

அவள் கடைசியில் சொல்ல நினைத்தது அது ஒன்றுதான். பிரபா சொன்னான்: ‘‘வேண்டாம். அந்தப் பாதையின் தூரம் எவ்வளவுன்றது எனக்குத் தெரியணும். கால் வழுக்கி அந்தப் பாதையிலேயே விழுந்து சாகணும். இல்லாட்டி கொஞ்ச தூரம் பயணம் செய்த பிறகு (பற்களைக் கடித்துக் கொண்டு) ஓரு அதிகாலை வேளையில் உலகம் எதிர்பார்த்துக்கிட்டு இருக்குற ஒரு கேள்விக்கு சின்னமா அப்படி தோணினா ஒரு மர உச்சியில இருந்து தொங்கி உயிரை விட வேண்டியதுதான்.’’

நான் உடனிருக்கும்வரை அப்படிப்பட்ட சம்பவத்திற்கு இடமே இல்லையென்று விஜயம்மா சொன்னாள். பிரபாவிற்கும் அது நன்றாகவே தெரியும். அவள் உடனிருந்தால் அது உண்மையிலேயே ஒரு பெரிய சுதந்திரமின்மைதான்.

‘‘எனக்கு சுந்திரம் வேணும். நான் எவ்வளவு தடவை சொல்லியிருக்கேன்- பொறுப்புள்ள மனிதனா நடக்க என்னால முடியாதுன்னு... நீ அதைப் புரிஞ்சிக்கவே இல்லியே!’’

விஜயம்மாவிற்கு இனி ஒரே வழிதான் இருக்கிறது. அவள் சொன்னாள்: ‘‘இந்தக் குழந்தையை உங்க கையில கொடுத்து... அப்படிப்பட்ட சூழ்நிலை மட்டும் அமைஞ்சா...’’

பிரபா இடையில் புகுந்து சொன்னான்: ‘‘அந்தப் புத்திசாலித்தனமான காரியத்தை நீ செய்திருக்கணும். என் தாய் சொன்ன விஷயத்தைச் சொல்றேன். என் போதாத நேரம் இப்படியொரு காரியம் நடந்திடுச்சு.’’

‘‘நான் அதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்.’’

‘‘நீ உன் வாழ்க்கையையே நாசமாக்கிட்டே.’’

‘‘நான் இன்னொரு பத்மநாபப் பிள்ளையை ஏத்துக்குறதா இல்ல.’’

சிறது நேர இடைவெளிக்குப் பிறகு பிரபா சொன்னான்: ‘‘இதுக்கு நான் காரணம் கிடையாதுன்னு சொல்லிட்டா...?’’- அந்தக் கவலைக்கு மத்தியிலும் ஒரு அழகான புன்சிரிப்பு தவழ்ந்தது.

அவள் கேட்டாள்: ‘‘அதுக்கான தைரியம் உங்களுக்கு இருக்கா?’’

‘‘எனக்கு தைரியமில்லைன்னு நீ நினைக்கிறியா?’’

‘‘எனக்கு என்னோட மனசாட்சி இருக்கு. நான் இந்தக் குழந்தையை வளர்ப்பேன். ஆனா, இது வளர்ந்து ‘என் தந்தை எங்கே?’ன்னு கேக்குறப்போ, நான் இதயத்தைத் திறந்து அதுக்கிட்டே காட்டத்தான் செய்வேன். அங்கே இருக்குற ஏராளமான கறைகளைப் பார்த்து அவன் மனசு பதைபதைக்கும்.’’

விஜயம்மா இனிமேல் எதிர்காலத்தில் நடக்க இருக்கும் அந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். அந்தக் குழந்தை ஆர்வம் பொங்க கேட்கும் கேள்விகளுக்கு அவள் எப்படி பதில் கூறுவாள்?

பிரபா சொன்னான்: ‘‘நீ சொல்லணும்- ‘மகனே, அந்த மனிதர் எந்தவொரு மகனும் பொறாமைப்படுற அளவுக்கு அன்பு, பாசத்துல திளைச்சாரு, அதே மாதிரி அவர் பக்தியும், அன்பும், கொண்ட இதயத்தோடு இருந்தாரு. ஆனா, அவர் ஓருமுறைகூட, ‘அப்பா’ன்னு கூப்பிடல. ‘மகனே’ன்னு யாரும் அவரையும் கூப்பிடல. தந்தை-மகன் உறவைப் பற்றி மனசுல நினைச்சு வேதனையடைஞ்ச அந்த மனிதர் தான் புனிதம்னு நினைச்சிருந்ததெல்லாம் பாவச் செயல்களும், குற்றச்செயல்களும் கொண்டதாக இருந்ததைத் தெரிஞ்சிக்கிட்டு இதுவரை மனசுல உயர்வா நினைச்ச விஷயங்கள் மீது காரித் துப்பிட்டு ஓடிட்டாரு. பாவம்! இதோ போகுதே இந்தப் பாதையிலதான் கிழக்கு நோக்கி அவர் போனாரு’ன்னு.’’

‘‘உங்க மடியில தலையை வச்சு, உங்க கண்ணீர் துளிகள் விழுந்த இதயம் குளிர்ந்து கடைசியில கண்ணை மூடணும்னு அந்த நாடோடி நினைச்சிருப்பார். அதுக்காக மட்டும் அவர் வாழ்ந்திருப்பார்.’’

பிரபா பற்களைக் கடித்து தன்னை அடக்கிக்கொண்டான். அது உண்மைதான். அந்த மனிதன் பல திறமைகளைக் கொண்டவன்தான். வாழ்க்கை வீணாகிவிட்டது. அதற்கு மற்றொரு விளக்கம் சொல்ல முடியாது. தனக்கென்று அந்த ஆளுக்கு ஒரு மகன் கிடைத்தான். அவன் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த நிலைக்குப் போயிருக்க வேண்டும். ஆனால், தாகத்தைத் தாங்க முடியாமல் அவன் தெருத் தெருவாக அலைந்தான். இருந்தாலும் தனக்கு ஒரு மகன் வேண்டுமென்று அவன் நினைக்கவில்லை. காமவயப்பட்டு ஒரு பெண்ணை அவன் பலமாகப் பிடித்து நிறுத்தினான். ‘பேசாதே...’’ என்று கூறி... அது ஒரு ஆண் குழந்தையாகிவிட்டது. அதற்கு உரிமை கொண்டாட என்ன தகுதி இருக்கிறது?

விஜயம்மா சொன்னாள்: ‘‘அந்தக் குற்ற உணர்வு காரணமாகத்தான் அந்த ஆளு இப்படி மன வேதனைப்பட்டுக்கிட்டு இருக்காரு. ‘அப்பா’ன்னு ஒரே ஒரு அழைப்புக்காகத்தான் அவர் இருபது வருடங்களக்கு மேலாக இங்கேயே சுற்றிக்கிட்டு இருக்காரு. நினைச்சா சங்கட மாகத்தான் இருக்கு.’’

பிரபா அதற்கு பதில் சொன்னான்: ‘‘அந்த விஷயம் எனக்குத் தெரியாம இருந்திருந்தா, நான் அப்படிக் கூப்பிட்டிருப்பேன். இனிமேல் அப்படி ஒண்ணு நடக்காது. பிறப்பிற்கு காரணமாக இருந்ததாலோ, என் மேல அன்பு இருக்குன்றதுக்காகவோ ஒரு ஆளு அப்பாவா ஆகமுடியாது. அப்பப்பா... ‘பேசாதே’ன்னு மிருகத்தனமா சொன்னது என் காதுகள்ல இப்பவும் கேட்டுக்கிட்டே இருக்கு.’’

‘‘அந்த வரலாறை ஏன் தெரிஞ்சிக்கணும்னு நினைச்சீங்க?’’


‘‘நான் அதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டேன். யாரும் விருப்பப்பட்டு நான் இந்த உலகத்துக்க வரல. என் தந்தையும் தாயும் நான் பிறக்கணும்னு ஆசைப்படல. எதுக்காக இந்த விதத்துல என்னை உலகத்துக்கு கொண்டு வந்தீங்கன்னு நான் அந்த மனிதர்கிட்ட கேட்டேன். அந்த ஆளு எந்த பதிலும் சொல்லாம பேந்தப் பேந்த விழிச்சிக்கிட்டு நிக்கிறாரு. நான் அவர் முகத்துல காரித்துப்பினேன்.’’

அதைக் கேட்டு விஜயம்மா அதிர்ந்து போனாள். இந்த மனிதன் என்னவெல்லாம் செய்திருக்கிறான்! தன் தந்தையின் முகத்தில் காரித் துப்பியிருக்கிறான்!

 ‘‘நீங்க எவ்வளவு பெரிய மோசமான காரியத்தைப் பண்ணியிருக்கீங்க?’’

‘‘நான் இனிமேலும் அந்த மாதிரி நடப்பேன். அந்தப் ‘பேசாதே’ன்ற வார்த்தைக்கு நான் அப்படித்தான் பதிலுக்கு நடந்துக்காட்ட முடியும்.’’

விஜயம்மா தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள். அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தையின் நிலை இது!

‘‘இந்தக் குழந்தையை ‘மகனே’ன்னு கூப்பிடுறதுக்கும் இவன் ‘அப்பா’ன்னு அழைக்கிறப்போ, அந்த அழைப்பைக் கேக்குறதுக்கும் உங்களுக்கு எந்தவித கஷ்டமும் இருக்காது. இந்தக் குழந்தையோட பிறப்பில் ‘பேசாதே’ன்ற வார்த்தை உச்சரிக்கப்படல....’

பிரபா இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினான். அதைவிட அதிகமாக அவன் சிந்தித்துக் கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன.

‘‘எனக்கு அந்த உரிமை இல்ல, விஜயம்மா! என்னை யாரும் ‘மகனே’ன்னு கூப்பிடல. நான் யாரையும் ‘அப்பா’ன்ன கூப்பிடல. என்னோட நாக்கு அந்த வார்த்தையை வழங்காது. நான் அதை எதிர்பார்க்கவும் இல்ல. வெயில் விழுந்து கொதிச்சுக்கிட்டு இருக்குற மணல் வெளியின் மத்தியில், இந்த நீண்ட சாலையின் ஓரத்தில் இலைகள் விழுந்த ஒரு மரம் நின்னுக்கிட்டு இருக்கு. அதன் அடியில் ஒரு நடுப்பகல் நேரத்துல கடைசி தாகத்தோட, திறந்த வாயோடயே நான் கடைசி மூச்சைவிடணும். மரத்தின் உச்சியில் அமர்ந்து கீழே பார்த்துக்கிட்டு இருக்குற கழுகு எல்லாத்துக்கும் சாட்சியா இருக்கட்டும்.’’

இதயத்தைப் பிளந்து வெளிவந்த அந்த வார்த்தைகளை விஜயம்மா கேட்டவாறு நின்றிருந்தாள்.

‘‘இப்படியொரு கொடுமையான நிலையா? இதுல இருந்து தப்பிக்க முடியாதா?’’- அவள் கேட்டாள். ‘‘நீங்க திரும்ப இங்க வரமாட்டீங்களா? நீங்க தூரத்துலயே இருந்தாலும் ஒரு அடையாளத்தைச் சுட்டிக்காட்டி இந்தக் குழந்தையின் ஆர்வத்தைத் திருப்திப்படுத்த என்னால முடியுமில்ல?’’

‘‘வருவேன். ஒருவேளை... உலகத்தையே சுற்றிய ஒரு பிச்சைக்காரன் இந்த வீட்டு வழியா ஒருநாள் கடந்து போகலாம். அது எப்போன்னு என்னால சொல்ல முடியாது. இங்கே வர்றப்போ என் கால்கள் பலவீனமடைஞ்சு போய், அசைய முடியாத நிலைக்கு வந்து, வந்ததைப் போல் போகப்போற காலம் வர்றப்போ ஒருவேளை நான் திரும்ப வரலாம். நான் வளர்ந்த இந்த ஊரைப்போல உலகத்திலுள்ள மற்ற பாகங்களும் எனக்கு நல்லா தெரிய வர்றப்போ, ஒரு நாடோடி இந்த வீட்டு வழியாக நடந்து போகலாம்...’’

‘‘என் குழந்தை இந்த வீட்டு வாசல்ல யாருன்னு தெரியாத அந்த நாடோடிக்காகக் காத்து இருக்கணுமா?’’

பிரபா ஒரு நிமிடம் கழித்து சொன்னான்: ‘‘அந்த மனிதன் விளையாட்டு பொருட்களைக் கொண்டுவந்து தரமாட்டான். அந்த நாடோடி அப்படிப்பட்ட ஒரு தாகத்துடன் வந்தவனாக இருக்க மாட்டான்.’’

நீண்ட சாலை வழியாகத் தளர்ந்து தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கும் அந்த மனிதனை தான் எப்போதும் நினைத்துக் கொண்டே இருக்கப் போவதாகச் சொன்னாள் விஜயம்மா. மாலை நேரத்தில் மரத்தடியில் அடுப்பு மூட்டி உணவு தயாரிக்கும்போது ஆடிக்கொண்டிருக்கும் தீ நாக்குகளில் அவள் உருவத்தை அவன் பார்க்க முடியும் என்றாள் அவள். கெட்ட கனவுகள் காணாமல் அதிகாலையில் எப்படி எழ முடிகிறது? நினைத்துப் பார்ப்பானா என்று பிரபாவிடம் விஜயம்மா கேட்டாள். அந்தக் கடுமையான களைப்படைந்த நிலையிலும் நடந்த தூரத்தை எப்படி தெரிந்து கொள்ள முடியவில்லை என்பதை பிரபா சிந்தித்துப் பார்ப்பானா என்றாள் அவள். அவளின் இதயக் கோவிலில் அமைதியற்ற மனதைக் கொண்ட ஒரு இளைஞனை அவள் குடிகொள்ளச் செய்து எப்போதும் வழிபடுவாள்.

பிரபா சொன்னான்: ‘‘அவன் நடந்து நடந்து கிழவனாயிடுவான்.’’

‘‘அந்தச் சமயத்திலும் நான் உங்களை அடையாளம் கண்டு பிடிச்சிடுவேன்.’’

பிரபா நம்ப முடியாமல் ‘‘ஓ...’’ என்று சொன்னான்.

சில நேரங்களில் ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும் அந்தக் கடவுள் ஒரு பிசாசாக மாறியாக வேண்டிய சூழ்நிலை வரலாம். விஜயம்மா வயதில் மிகவும் இளையவள். அவள் இனியும் வளர்வாள். பிரபா உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்: ‘‘நீ வளராம இருந்திருந்தா...?’’

பிரபா அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் மனதில் என்னென்னவோ நினைவுகள்! அந்தப் புன்னகை அதற்கு நேராக பிரபாவின் இதயம் எல்லா கட்டுப்பாடுகளையும் தவிடு பொடியாக்கி விட்டு முன்னோக்கிப் பாய்ந்தது. அவன் தன்னையுமறியாமல் சொன்னான்: ‘‘‘நீ கொஞ்சம் சிரி... முன்னாடி மாதிரி.’’

‘‘எனக்கு இனிமேல் சிரிப்பு வராது.’’

‘‘இலேசான மனசோட...’’

‘‘என் வாழ்க்கையில் குழப்பமும் கனமும் வந்திடுச்சு...’’

‘‘நிரந்தரமா உன்னைவிட்டு நான் பிரியறேன்.’’

அவள் பிரபாவின் முகத்தை உற்று பார்த்தவாறு சொன்னாள்:

‘‘என்னை நீங்க நல்லா பார்த்துக்கங்க. இந்த உருவம் என்றைக்கும் மறையாத மாதிரி உங்களோட இதயத்துல பதியட்டும்.’’

‘‘உன்னோட மனஅமைதி உன்னைவிட்டு போயிடுச்சு.’’

‘‘உங்களை சிரிக்க வைக்க இனிமேல் என்னால முடியாது.’’

‘‘ஆமா... என்னை சிரிக்க வைக்க முடியாது. அது முன்னாடி, உன்னால முடிஞ்சது. என் தாய் சொன்னபடி நீ நடந்திருந்தா, உன்னால நிச்சயம் சிரிக்க முடியும்?’’

‘‘அந்தச் சிரிப்பு ஒரு குரூரமான சிரிப்பா இருந்திருக்கும். அந்தச் சிரிப்பு முகத்தையே இருளடைய வச்சிடும். அது மன நிம்மதிக்கு எப்போதும் உதவாது.’’

அதை பிரபா ஒப்புக்கொண்டான். எனினும், மேலும் சில விஷயங்களை அவன் சொல்ல நினைத்தான்.

‘‘சிரிப்பு இல்லாத உன் முகம் களை இழந்திடும். நீளமான இந்தக் கண்கள் பேந்தப் பேந்த விழிக்கும். அதுல எப்பவும் ஒரு அவநம்பிக்கை நிழலாடிக்கிட்டே இருக்கும். அன்று... ரத்தம் குளிர்ந்து போகுற அந்தச் சமயத்துல வாசல் படியில நிக்கிற வயசான பிச்சைக்காரனோட சிரட்டையில ஒரு பிடி அரிசியைப் போட்டுட்டு நீ போவே. நாம அப்போ எதுவும் பேசமாட்டோம். அன்பும் விரோதமும் இல்லாத அந்த காலத்துல நான் திரும்பி வருவேன்.’’

பிரபா வெளியேறினான். விஜயம்மா சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தாள். படிப்படியாக அவளுடைய உதடுகள் கோணலாகின. அழகை இழந்தன. முகம் இரண்டது. கண்கள் பேந்தப் பேந்த விழித்தன. பிரபா கற்பனை பண்ணிய உருவமாக அவள் மாறினாள்.


14

ரு அவுன்ஸ் கண்ணாடி டம்ளரில் கொஞ்சம் மருந்தை ஊற்றிய கோபன் தன் தாயின் தலையை மடியில் வைத்துக்கொண்டு அவளை அழைத்தான்: ‘‘அம்மா... அம்மா... கொஞ்சம் வாயைத் திறங்கம்மா..’’

ஜானகி அம்மா கண்களைத் திறந்து அவன் அழைப்பதைக் கேட்டாள். அவள் தன் மகனின் முகத்தையே பார்த்தாள். மனம் குளிர புன்னகைத்தாள்.

‘‘மருந்தா மகனே? நான் வாயைத் திறக்குறேன்.’’

கோபனின் கண்கள் கண்ணீரால் நிறைந்தன. ஜானகி அம்மா வாயைத் திறந்தாள். கோபன் மருந்தை அவள் வாயில் ஊற்றினான்.

மருந்தை குடித்து முடித்ததும் ஜானகி அம்மாவின் கண்கள் மூடின. கோபன் அந்த முகத்தையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். கண்ணீர் இன்னும் வழிந்து கொண்டேயிருந்தது. ஏழைப் பெண்... எவ்வளவோ கஷ்டங்களை வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறாள்! ஒரு தவறு அவளின் முழு வாழ்க்கையையும் எந்த அளவிற்கு பாதித்திருக்கிறது!

ஜானகி அம்மா மீண்டும் கண்களைத் திறந்தாள். திடீரென்று நிலைகுலைந்த அவள் சொன்னாள்: ‘‘காலடிச்சத்தம்! வெளியே காலடிச் சத்தம்!’’

‘‘இல்லம்மா... வெளியே யாரும் இல்ல.’’

‘‘நல்லா கேளு... யாரோ நடக்குறாங்க’’  அவள் காதுகளைத் தீட்டியவாறு சொன்னாள்.

‘‘முடியாது... அய்யோ! முடியாது’’... - அவள் தலையில் அடித்துக் கொண்டு காலையும் கையையும் ஆட்டியவாறு சொன்னாள்: ‘‘மகனே! என்னைக் கொண்டுபோகப் போறாப்ல...’’

கண்களை அடைத்துக்கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்: ‘‘தேம்பி தேம்பி அழுதே என்னை நாசம் பண்ணியாச்சு.’’

பத்மநாபப் பிள்ளை அப்போது அங்கு வந்தார். தன் தாயின் தலையை மெதுவாகத் தலையணையில் வைத்துவிட்டு கோபன் எழுந்து நின்றான். பத்மநாபப் பிள்ளை ஜானகி அம்மாவிற்கு மிகவும் அருகில் வந்து நின்று அவளைப் பார்த்தார்.

‘‘தூங்குறாளா’’

கோபன் சொன்னான்: ‘‘இல்ல... சரியா சுய உணர்வு இல்ல... அப்பப்போ மயக்கம் வருது.’’

‘‘டாக்டர் வந்தாரா?’’

‘‘வந்தாரு.’’

‘‘பிறகு?’’

‘‘இதயமும் நாடித் துடிப்பும் ரொம்பவும் மோசமா இருக்கு.’’

பத்மநாபப் பிள்ளை சட்டையைக் கழற்றி போட்டுவிட்டு ஒரு பத்திரிகையை கையில் எடுத்து வைத்து கொண்டு சாய்வு நாற்காலியை விளக்கிற்குப் பக்கத்தில் இழுத்துப் போட்டு, அதில் சாய்ந்து பத்திரிகையைப் படிக்க ஆரம்பித்தார்.

ஜானகி அம்மா மீண்டும் கண்களைத் திறந்து எதிரிலிருந்த சுவரையே உற்று பார்த்தாள். பலவீனமான குரலில் அவள் சொன்னாள்:

‘‘அவன் மை தேய்த்த அடையாளம்....’’

அவள் மீண்டும் புன்னகைத்தாள்.

பத்மநாபப் பிள்ளை ஒன்றே ஒன்றைச் சொல்ல நினைத்தார்.

பழைய வரலாறை நினைச்சுப் பாக்குறா. அதை நினைக்க வேண்டாம்னு சொல்லு.’

கோபன் அருகில் சென்று ‘‘பேசாம தூங்குங்கம்மா’’ என்றான்.

‘‘தூங்கறேன், மகனே! நான் சொல்றதைக் கேளு. மகனே, வெளியே போய் கேளு- எதுக்கு இப்படி நடக்குறீங்கன்னு. நடக்க வேண்டாம்னு சொல்லு. இங்கேயிருந்து போகச் சொல்லு. இல்லாட்டி நான் கேக்குறேன்.’’

ஜானகி அம்மா எழ முயற்சித்தாள்.

‘‘என் தாயே, வேண்டாம்.’’

கோபன் தன் தாயைப் பிடித்தான்.

‘‘என்னால முடியல. கோபா! நான் என்ன தப்பு செஞ்ச«ன்! நீ காலடிச் சத்தத்தைக் கேட்கலியா?’’

பத்மநாபப் பிள்ளை வேகமாக எழுந்தார்.

‘‘யார் அது?’’

ஜானகி அம்மா பத்மநாபப் பிள்ளைப் பார்த்தாள். அவருடைய முகத்தையே அவள் உற்று பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவர் காதுகளைத் தீட்டிக்கொண்டு நின்றிருந்தார்.

‘‘யாருடா அது?’’

பத்மநாபப் பிள்ளையின் குரல் அந்த வீட்டையே அதிர வைத்தது. ஜானகி அம்மாவும் அதைக் கேட்டு நடுங்கினாள். கோபன் வெறுப்பு கலந்த குரலில் கேட்டான் : ‘‘இது என்ன பைத்தியக்காரத்தனம்?’’

‘‘இல்ல கோபா... அவள் சொன்னது சரிதான். யாரோ நடந்துக்கிட்டு இருக்காங்க.’’

‘‘எனக்கும் காதுகள் இருக்கே! எனக்கு எதுவும் கேட்கலையே!’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் கவனித்துவிட்டு சொன்னார்:

‘‘பாரு... நீ வேணும்னா வெளியே போயி பாரு. இதோ யாரோ நடக்குறாங்க. ச்சே... அதுக்கு வாய்ப்பில்லையே!’’

ஜானகி அம்மா இடறிய குரலில் என்னவோ சொன்னாள். கோபன் காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தான். அவள் சொன்னாள்: ‘‘நான் வர மாட்டேன். இந்த வேண்டுகோளுக்கு, இந்த ஆவேசத்திற்கு, அடுத்த பிறவியில் என்னைக் கஷ்டப்படுத்தலைன்னா மட்டும்...’’

‘‘என்ன சொல்றா?’’- பத்மநாப் பிள்ளை கேட்டார். கோபன் சொன்னான்: ‘‘பேசாம இருங்க.’’

பத்மநாபப் பிள்ளை மீண்டும் நாற்காலியில் அமர்ந்து விளக்கின் திரியை இன்னும் கொஞ்சம் ஏற்றி விட்டவாறு சொன்னார்:

‘‘எனக்குப் பின்னாலும் யாரோ வந்தாங்க. ஆனால், அதுக்கு வாய்ப்பில்லையேன்னு நான் நினைச்சேன். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீடுகளைச் சுற்றி எமதூதர்கள் நடப்பாங்க.’’

இருபது வருடங்கள் அவருடன் வாழ்க்கை நடத்திய ஒரு பெண் எழுந்திருக்க முடியாமல் படுத்திருக்கும்பொழுது எம தூதர்களைப் பற்றி அவர் பேசுகிறார்! முழுமையான நம்பிக்கை வைத்து மதித்த தன் தந்தை எப்படிப்பட்டவர் என்பதை கோபன் புரிந்து கொண்டான். அவன் பற்களைக் கடித்துக்கொண்டு பத்மநாபப் பிள்ளையை உற்று பார்த்தவாறு சொன்னான்: ‘‘ஒரு எம தூதனா இருக்கும்!’’

பத்மநாபப் பிள்ளை அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லை. அவர் விழித்தவாறு உட்கார்ந்திருந்தார். ‘‘பிரபா அழமாட்டான்’’ என்று ஜானகி அம்மா பாதி நினைவில் சொன்னாள்.

பத்மநாபப் பிள்ளையும் பாதி உணர்வுடன் சொன்னார்: ‘‘அவன் போயிட்டான். அவனுக்குப் பின்னால் அந்தப் பிசாசும் போயிருக்கும்ன்னு நான் நினைச்சேன்.’’

ஜானகி அம்மா முதல் வாக்கியத்தைக் கேட்டது போல் தோன்றியது. அவள் கேட்டாள்: ‘‘அவன் போயிட்டானா?’’

அவள் வேகமாக எழுந்து உட்கார்ந்தாள். கோபன் அவளைத் தாங்கிப் பிடித்தான்.

‘‘அவன் எப்போ போனான்? எங்கே போனான்?’’

‘‘நீ சொல்லித்தானே அவன் போனான்?

ஜானகி அம்மா தளர்ந்துபோய் விழுந்தாள். பத்மநாபப் பிள்ளை எழுந்து அவளருகில் சென்றார். அவர் சொன்னார்: ‘‘இங்க பாரு... அவ கண்களைப் பாரு!’’ கோபனால் அதைப் பொறுக்க முடியவில்லை. அவன் கேட்டான்: ‘‘இவங்க சாகணும்னு விரும்புறீங்களா?’’

‘‘உனக்கு இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணுமா?’’

‘‘இனிமேலாவது மனிதனா இருக்கக் கூடாதா?’’

அதற்கு பத்மநாபப் பிள்ளை எந்த பதிலும் கூறவில்லை. அவர் ஜானகி அம்மாவையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். ஜானகி அம்மா வாயைத் திறந்தாள். அதைப் பார்த்து பத்மநாபப் பிள்ளை நடுங்கிப் போனார்.

‘‘அம்மா! என் அன்பு அம்மா!’’ கோபன் சொன்னான்: ‘‘எல்லாம் முடிஞ்சது! எல்லாம் முடிஞ்சது!

பத்மநாபப் பிள்ளை ஜன்னல் வழியாக வெளியே பார்த்துவிட்டு பதைபதைப்பான குரலில் கேட்டார்: ‘‘யார் அது?’’


வாசல் வழியாக கறுத்து தடித்த ஒரு மனிதன் உள்ளே நுழைந்தான். அந்த மனிதனின் கறுப்பான தாடி கத்தரிக்கப்பட்டிருந்தது. அவனுடைய சிவப்பான பெரிய கண்களைப் பார்த்தால் கட்டாயம் யாரும் பயந்து விடுவார்கள். ஜானகி அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறு அவன் கட்டிலுக்கு அருகில் சென்றான். பத்மநாபப் பிள்ளை பயத்தில் அதிர்ந்து போய் குனிந்தவாறு நின்றிருந்தார். பேசுவதற்குக் கூட அவரால் முடியவில்லை. கோபன் எழுந்து தள்ளி நின்றான். வந்த மனிதன் கட்டிலுக்கு அருகில் சென்று சிறிது நேரம் பார்த்தவாறு நின்றான். அந்தச் சிவந்த கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவனுடைய தலை தாழ்ந்தது. ஜானகி அம்மாவின் முகத்தை அந்த மனிதனின் முகம் நெருங்கியது. ஆனால், அந்த முகங்கள் ஒரு முத்தத்தில் ஒன்று சேரவில்லை. அதற்கு முன்பே ஏதோ ஞாபகம் வந்ததைப் போல, யாரோ பிடித்து இழுப்பதைப் போல திடீரென்று அந்த ஆளின் தலை உயர்ந்தது.

ஒருவேளை தன்மீது அவளுக்கு விருப்பமில்லை என்பதை அந்த மனிதன் நினைத்திருக்கலாம். ஒரு குற்றம் செய்தாகிவிட்டது! இன்னொரு குற்றம் வேண்டாம் என்று நினைத்திருக்கலாம். என்ன காரணமோ, அவன் படுவேகமாக ஒரு கோழையைப் போல திடீரென்று மறைந்து போனான்.

ஜானகி அம்மாவின் கண்கள் திறந்ததையும், அடுத்த கணமே அது மூடியதையும் கோபன் பார்த்தான்.

‘‘அம்மா... என் அம்மா.’’

முண்டை இழுத்துக் கட்டிக் கொண்டு தூக்கத்திலிருந்து எழுந்து லலிதா அங்கே வந்தாள். அவளும் ஜானகி அம்மாவை அழைத்தாள்.

‘‘எல்லாமே போச்சு! கடைசியில அவ எதையும் சொல்லாமலே போயிட்டாளே!’’ பத்மநாபப் பிள்ளை மெதுவான குரலில் முணுமுணுத்தார்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.