Logo

பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 9729
paappi-ammaavum-pillaigalum

த்மநாபன் கோயம்புத்தூரில் இருக்கிறான். ஒரு வீட்டில் அவன் வேலை பார்க்கிறான். அவன் இல்லாமல் இரண்டு ஓணம் பண்டிகைகள் கடந்துவிட்டன. பாப்பி அம்மாவிற்கும் கார்த்தியாயினிக்கும் அந்த இரண்டு ஓணங்களும் ஓணங்களாகவே இல்லை. அவன் வழக்கம்போல பணம் அனுப்பியிருந்தான். அதை வைத்துத்தான் ஓணமே நடந்தது. எனினும், திருவோண நாளன்று ஒரு ஆணுக்கு இலை போட்டு உணவுப் பொருட்களைப் பரப்பி வைத்து ஓணச் சாப்பாடு சாப்பிட முடியவில்லை. சமையலறையிலேயே தாயும் மகளும் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

இந்த வருடம் ஓணத்திற்குப் பத்மநாபன் வருகிறான். முன்கூட்டியே அவன் வருவதாகக் கடிதம் எழுதி விட்டான். அதைப் பார்த்து கார்த்தியாயினி மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தாள். ஆனால், பாப்பி அம்மாவின் மனதிற்குள் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. மகன் வரவேண்டாம் என்று அவள் பிரார்த்தனை செய்யவில்லை. அவன் வரவேண்டும் அவனை அவள் பார்க்க வேண்டும். ஆனால் ஒரு தயக்கம்! அதற்குக் காரணம் இருக்கிறது. சரியான காரணம்தான். பாப்பி அம்மா கர்ப்பமாக இருக்கிறாள். வீங்கிய வயிறுடன் தன் மகனுக்கு முன்னால் போய் அவள் நிற்க வேண்டும். அந்த வயிறு எப்படி வீங்கியது என்று அவன் முகத்தை நோக்கிக் கேட்காமல் இருக்கலாம். கேட்கவும் செய்யலாம். கேட்டால் பாப்பி அம்மா பதில் கூறியாக வேண்டும். கேட்காவிட்டாலும் விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். அவனுக்கு வயது பதினான்கு ஆகிவிட்டது.

பத்மநாபன் பூராடத்திற்கு வருவதாக எழுதிய கடிதம் வந்தவுடன் உண்மையாகவே பாப்பி அம்மாவிற்குள் நெருப்பு எரிய ஆரம்பித்துவிட்டது. ஒரு ஆளிடம் பாப்பி அம்மா கட்டாயம் அந்த விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். பாப்பி அம்மாவின் அப்போதைய சூழ்நிலைக்குக் காரணம் ஒரு ஆண். அந்த மனிதரின் பெயர் கேசவன் நாயர். அன்று இரவு இருட்டும் நேரத்தில் கேசவன் நாயர் வந்தார்.

பாப்பி அம்மா சொன்னாள்:

“இப்போ பெரிய பிரச்சினை ஆகப்போகுது.”

அந்த வார்த்தைகள் உண்மையாகவே அவளுடைய இதயத்திலிருந்து கிளம்பி வந்தவை.

கேசவன் நாயர் கேட்டார்: “என்ன சொன்னே?”

“பையன் பூராடத்திற்கு இங்கே வர்றான்.”

அதைக்கேட்டு கேசவன் நாயரிடம் எந்த மாற்றமும் உண்டாகவில்லை.

“வரட்டும், அதனால என்ன?”

கேட்க வேண்டிய கேள்வியைப் பாப்பி அம்மா கேட்டாள்: “நான் எப்படி வீங்கிய வயிறோட அவன் முன்னாடி நிக்கிறது?”

எந்தவித தயக்கமும் இல்லாமல் கேசவன் நாயர் சொன்னார்: “இந்தப் பொண்ணை வயித்துல வச்சுக்கிட்டு நீ அவன் முன்னாடி நின்னல்ல?”

பாப்பி அம்மா சொன்னாள்: “அப்போ அவன் சின்னப் பையனா இருந்தான்.”

கேசவன் நாயரின் அடுத்த வாக்கியம் பாப்பி அம்மாவைத் தேற்றும் விதத்தில் இருந்தது.

“பத்மநாபன் வர்றப்போ நான் இங்கே இருப்பேன். நான் ஓடி ஒளியப்போறது இல்ல..”

எனினும், பாப்பி அம்மாவிற்கு மனநிம்மதி உண்டாகவில்லை.

பாப்பி அம்மாவை ஊர், உலகம் அறிய ஒரு மனிதன் அவளுக்கு முண்டு வாங்கிக் கொடுத்து திருமணம் செய்தான். அவன் பெயர் கிட்டு நாயர். அவனுக்குப் பிறந்த மகன்தான் பத்மநாபன். கிட்டு நாயர் திடீரென்று ஒருநாள் இறந்துவிட்டான். அப்போது பத்மநாபனுக்கு இரண்டு வயது நடந்துக் கொண்டிருந்தது. அதற்குப்பிறகு அவள் கர்ப்பமடைந்தாள். அதற்குக் காரணம் பாச்சு பிள்ளை என்றாள் அவள். இப்படித்தான் கார்த்தியாயினி இந்த பூமிக்கு வந்தாள். ஒரு குழந்தையுடன் இன்னொரு குழந்தையும் வந்து சேர்ந்தது. அந்தச் சூழ்நிலையில் பத்மநாபன் கோயம்புத்தூருக்குச் சென்றான். கேசவன் நாயர் அவளைத் தேடி வந்தார்.

ஆனால், கேசவன்நாயர் கொண்ட உறவில் ஒரு தனித்துவம் இருந்தது. அவர் எல்லோருக்கும் தெரியும்படி அந்த வீட்டிற்கு வருவார். நிறைய நேரம் அங்கிருந்து பேசிக் கொண்டிருப்பார். கேசவன் நாயர் பாப்பி அம்மாவின் கணவர் என்று நீண்ட சிந்தனைக்குப் பிறகு வேண்டுமானால் கூறலாம். அப்படி யாராவது சொன்னால், சிறிது நேரம் பேசிய பிறகு, இல்லாவிட்டால் ஒரு நீண்ட விளக்கத்திற்குப் பிறகு அவர் அதை மறுப்பார்.

பூராடம் வந்தது. பாப்பி அம்மா மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டாள். உள்ளுக்குள் புழுங்கினாள். எனினும், கர்ப்பமாக இருக்கும் அந்த தாய் தன் மகனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். கார்த்தியாயினிக்கு உற்சாகமோ உற்சாகம். சொன்னதைப்போலவே கேசவன் நாயர் அங்கேயே தங்கினார். சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டால் போதும்.. பாப்பி அம்மா அவரைப் பார்த்துக் கேட்பாள்:

“என்ன, கிளம்பிட்டீங்களா?”

இப்படி மூன்று நான்கு தடவைகள் அவள் கேட்டவுடன், அவருக்குக் கோபம் வந்துவிட்டது.

“என்ன கேள்வி கேக்குற? நான் உன் பக்கத்துலயே எப்பவும் நின்னுக்கிட்டு இருக்கணுமா?”

பாப்பி அம்மா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. வயிறு வீங்கி இருப்பதற்கு சரியான பரிகாரம் அவர் தன் அருகில் இருப்பதுதான் என்று அந்தப் பெண் நினைத்தாள். அதுதானே சரியான விஷயம்!

தூரத்தில் பத்மநாபன் நடந்து வந்துக் கொண்டிருந்தான். பாப்பி அம்மா எல்லாவற்றையும் மறந்துவிட்டு பாதையில் இறங்கி அவனை நோக்கி ஓடினாள். என்ன இருந்தாலும் அவனைப் பெற்ற தாயாயிற்றே அவள்! அவனை நெருங்கியதும் ‘மகனே’ என்று அழைத்தவாறு தன் கைகளை அவள் நீட்டினாள். அந்த மகன் நீட்டிய கைகளுக்குள் தன்னை அடக்கிக் கொண்டு தாயுடன் சேர்ந்தான். வீங்கிக் காணப்பட்ட அவளின் வயிறு அந்த அணைப்பிற்கு இடைஞ்சலாக இருக்கவில்லை. தாயும் மகனும் சேர்ந்து வீட்டை நோக்கி நடந்தார்கள். கார்த்தியாயினி அவனுடைய கையைப் பிடித்துத் தொங்கினாள்.

வீட்டில் கேசவன் நாயர் இருந்தார். அவர் தான் சொன்ன வார்த்தைகளைக் காப்பாற்றினார். வீட்டைவிட்டு ஓடிப் போகவில்லை. அவனுக்குக் கேசவன் நாயரைத் தெரியும். ‘கேசவன் மாமா’ என்றுதான் முன்பு அவன் அவரை அழைப்பான்.

கேசவன் நாயர் ஒரு பிரகாசமான சிரிப்புடன் அவனைப் பார்த்துக் கேட்டார்.

“நீ எப்படி வந்தே?”

“கோயம்புத்தூர்ல இருந்து ரயிலேறி எர்ணாகுளத்துக்கு வந்தேன். ஆலப்புழைக்கு படகுல வந்தேன். அங்கேயிருந்து கருமாடியில இறங்கி நடந்து வர்றேன்.”

அவன் சொன்னதை ஆர்வத்துடன் எல்லாரும் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

கேசவன் நாயர் பாப்பி அம்மாவிடம் சொன்னார்: “நீ அவனுக்கு சாப்பிடுறதுக்கு ஏதாவது கொடு. அவன் எதுவும் சாப்பிட்டிருக்க மாட்டான்.”

பத்மநாபன் சொன்னான்: “நான் காப்பி குடிச்சேன்.”

தந்தையைப் போல கேசவன் நாயர் சொன்னார் : “இருந்தாலும் பதினாலு வயசுகூட ஆகாத ஒரு பையன் இவ்வளவு தூரம் ரயிலேறி வந்திருக்கேல்ல!”

பாப்பி அம்மா சமையலறைக்குச் சென்றாள். கார்த்தியாயினியை பத்மநாபன் தன்னுடன் ஒட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான்.


அவளுக்கு அவன் பாவாடையும் சட்டையும் வாங்கிக் கொண்டு வரவில்லை. ஆனால், அவற்றை வாங்கித் தருவதாக அவன் சொன்னான். அப்போது சமையலறையிலிருந்தவாறு பாப்பி அம்மா அவனை அழைத்தாள். பத்மநாபனுடன் கேசவன் நாயரும் சமையலறைக்குள் சென்றார். அவனுக்கு ஊட்டப் போவதைப்போல..

எதுவும் அங்கு நடந்து விடவில்லை. பாப்பி அம்மா எந்த விஷயத்திற்காக பயந்தாளோ, அந்தக் கேள்வியே அங்கு எழவில்லை. பதில் கூற வேண்டிய அவசியமும் அங்கு உண்டாகவில்லை. பத்மநாபன் தான் கொண்டு வந்திருந்த பணத்தைத் தன் தாயிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி கேசவன் நாயரிடம் தந்தாள். அதைச் செலவு செய்தது கேசவன் நாயர்தான். கேசவன் நாயர் அவனிடம் கேட்டார்: “திரும்பிப் போறதுக்குப் பணம் இருக்கா மகனே?”

அதற்குப் பணம் வேண்டும் என்று அவன் சொன்னான். தன் கையில் இருந்த முழுப் பணத்தையும் அவன் தாயிடம் கொடுத்துவிட்டான்.

அப்போது கேசவன் நாயர் சொன்னார்:

“சரி.. அப்படின்னா முழுப் பணமும் செலவழிஞ்சிடாம பார்த்துக்கணும்.”

மொத்தத்தில் அந்த வீடு தந்தை என்ற ஒருவரைக் கொண்ட மாதிரியே இருந்தது.

பக்கத்திலிருந்தவர்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள். கிழக்குப் பக்கம் இருந்த அம்மும்மா பக்கத்து வீட்டுப் பெண்களைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டாள்: “அவ எப்படி அந்தப் பையன் முன்னாடி போய் நிக்கிறா? அதைத்தான் எப்பவும் நினைச்சுப் பார்க்குறேன்.”

மற்றப் பெண்களும் அதைத்தான் நினைத்தார்கள்.

மேற்குப் பக்கம் இருந்த வீட்டைச் சேர்ந்த குட்டி அம்மா ஆச்சரியத்துடன் சொன்னாள்:

“என்ன இருந்தாலும் விஷயங்களைப் புரிஞ்சிக்கிறதுக்கான வயசுக்கு வந்துட்டான்ல?”

தெற்கு வீட்டைச் சேர்ந்த நாணியம்மா அதற்குப் பதில் சொன்னாள்: “என்ன இருந்தாலும் அவர்கள் தாயும் மகனுமாச்சே! அவன் தன் தாயைப் பார்த்து என்ன கேட்க முடியும்?”

பாரு அம்மா பாப்பி அம்மா மீது குற்றம் சொன்னாள்:

“அவன் கேட்கலைன்னாலும் அவள் அதை நினைச்சுப் பார்க்கணும். வயசுக்கு வந்த ஒரு மகன் தனக்கு இருக்கான்றதை அவள் மனசுல நினைச்சிருக்கணும்..” தொடர்ந்து பாரு அம்மா சொன்னாள்: “எங்க கமலாம்மா என் வயித்துல இருக்குறப்போ எனக்கு வெட்கமா இருந்துச்சு. அப்போ வாசுக்கு பத்து வயசுதான். இருந்தாலும்.. எனக்கு அவமானமா இருந்துச்சு. வயசுக்கு வந்தப் பிள்ளைங்க முன்னாடி தாய்மாருங்க எப்படி வயித்தைத் தள்ளிட்டு நிக்கிறது?”

அவள் சொன்னது சரிதான் என்பதை குட்டி அம்மாவும் ஒப்புக் கொண்டாள்.

“இது அப்படிப்பட்ட ஒரு விஷயமா? அந்தப் பையன் இங்கேயிருந்து போறப்போ தாய்க்குப் புருஷன் இல்ல. திரும்பி வர்றப்போ அம்மா கர்ப்பமா இருக்கா. வெட்கக் கேடு..”

காளியம்மா தனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைச் சொன்னாள்: “அந்த ஆளு இப்போ உறவை சரி பண்ணிட்டாரு. நேற்று சாயங்காலம் அவர் ஓணத்துக்கு சாமான்கள் வாங்கிட்டுப் போறதை நானே பார்த்தேன்.”

அம்மும்மாவும் கேசவன் நாயர் பொருட்கள் வாங்கிக் கொண்டு போவதைப் பார்த்திருந்தாள்.

குட்டி அம்மா சொன்னாள்: “அது சும்மா ஒண்ணும் நடக்கல. அந்தப் பையன் ஏதாவது கொண்டு வந்திருப்பான். அதுனாலதான் அந்த ஆளு அங்கேயே இருந்துட்டாரு..”

நாணியம்மாவும் அதே கருத்தைத்தான் கொண்டிருந்தாள்.

“அந்தப் பணம் தீர்ந்திருச்சுன்னா, இந்த விருப்பமும் போயிடும். இப்போ பணத்தை மடியில வச்சிக்கிட்டு நடந்து திரியலாம்.”

எனினும், கேசவன் நாயர் அந்த வீட்டிலேயேதான் எப்போதும் இருக்கிறார் என்று காளியம்மா சொன்னாள். இருந்தாலும், ஒரு விஷயத்தில் அந்தப் பெண்கள் எல்லாரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தார்கள். சில நாட்களுக்கு வேண்டுமானால் கேசவன் நாயர் அவர்களுடன் இருக்கலாம். பிறகு மனம்மாறி நடக்கப் போவது உறுதி என்பதுதான் அது.

குட்டிம்மா சொன்னாள்: “இருந்தாலும் அந்த ஆளு இப்படி ஆயிட்டாரே! அந்த மாராம் மடத்துல அவரோட தங்கச்சி இருக்காள்ல! அவ எந்த அளவுக்கு மரியாதையா வாழ்ந்துக்கிட்டு இருக்கா! அவளுக்கும் இது அவமானம்தானே?”

பாரு அம்மா கேட்டாள்.

“அவளுக்கென்ன அவமானம் வந்துடப் போகுது? அவமானம், மரியாதை உள்ளவ. அவங்களைப் பற்றி இந்த ஆளுக்கு என்ன கவலை இருக்கப்போவது?”

காளியம்மா சொல்ல விரும்பியது அதுவல்ல. பாப்பி அம்மாவைப் பற்றித்தான் அவளுக்கு நினைப்பு.

“அவ ஏன் இன்னும் பாடமே படிக்காம இருக்கான்றதைத்தான் நான் நினைச்சுப் பார்க்குறேன். மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு தடவை வேணும்னா தப்பு நடக்கலாம். நாயர் இறந்து தலைக்குப் பக்கத்துல நிற்கிறப்போ ஒரு தப்பு நடந்துச்சு. அந்தப் பொண்ணு பிறந்தா பிறகும் தப்பு நடக்குமா?”

அதற்குக் காளியம்மா சொன்னாள்:

“அதுக்கு நான் பதில் சொல்றேன். சில பொம்பளைங்களுக்கு வீட்டைத் தாழ்ப்பாள் போட்டுட்டா, தூக்கம் வரவே வராது.”

எல்லாரும் அவள் சொன்னதைக் கேட்டு சிரித்தார்கள். சிறிது பரிதாப உணர்ச்சி தோன்ற நாணியம்மா சொன்னாள்:

“தாழ்ப்பாளை வேணும்னா திறக்கட்டும். ஆனா, இந்தக் குழந்தைகளை அவ எப்படி வளர்ப்பா? ஒவ்வொரு ஆம்பளையா வருவான். போவான்னா..”

குட்டி அம்மா அந்தப் பேச்சின் ஒரு பகுதியை எதிர்த்தாள்.

“அந்தக் குழந்தையோட தகப்பன்தான் இல்லைன்னு சொல்றாரே பாச்சு பிள்ளை!”

“பாச்சு பிள்ளை இல்லைன்னா கோந்தப்பிள்ளையா இருந்துட்டுப் போகட்டும். யாரோ ஒரு ஆம்பளைதான் அந்தப் பொண்ணோட அப்பா. இந்த ஆம்பளைங்க படுத்துட்டுப் போயிடுவாங்க. பிறகு இந்த அப்பிராணி பொம்பளைங்க குழந்தையைக் கையில வச்சுக்கிட்டு நடக்கணும்.”

“அது கதவுத் தாழ்ப்பாளுக்கு உள்ளே நடக்குற விஷயம்தானே? அதுக்காக எப்படி ஆம்பளைங்களைக் குறை சொல்ல முடியும்?”

காளியம்மா ஒரு பெரிய உண்மையைச் சொன்னாள்: “திருட திருட முடிச்சிப் போடுறது... முடிச்சுப் போட்டுட்டு முடிச்சுப் போட்டுட்டு திருடுறது...”

இப்படி பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்கள் பாப்பி என்ற பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது பாப்பி அம்மாவின் வீட்டில் ஓண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. கார்த்தியாயினிக்கு பாவாடையும் சட்டையும் வாங்கினார்கள். அங்கு சமையல் வேலைகள் நடந்தன. எல்லாம் முறைப்படி நடந்து கொண்டிருந்தன.

கோயம்புத்தூருக்குப் போகும் வரையில் பத்மநாபன் பக்கத்து வீட்டுக்காரர்களின் உதவியுடன்தான் உயிர் வாழ்ந்தான். அவர்கள் தந்த கஞ்சியையும், சாதத்தையும் சாப்பிட்டுத்தான் அவன் வளர்ந்தான் என்பதே சரியானது. அவன் அவர்கள் எல்லாரையும் கட்டாயம் போய் பார்க்க வேண்டும் பாப்பி அம்மா சொன்னாள்.

“மகனே, எல்லாரையும் நீ போய்ப் பார்க்கணும். அவங்க போட்ட சாப்பாடுதான் உன் உடம்பை வளர்த்தது.”

பத்மநாபன் தாய் கூறியபடி நடந்தான். கிழக்கு வீட்டைச் சேர்ந்த அம்மும்மா அவனை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள்.


“உடம்புல இன்னும் சரியா சதை பிடிக்கலையேடா! ஆனா, கொஞ்சம் உயரமா இருக்கே!”

பிறகு அவள் கேட்டாள்:

“நீ என்னடா கொண்டு வந்தே?”

அவன் உண்மையைச் சொன்னான். அதற்கு அம்மும்மா சொன்னாள்:

“அப்படின்னா கேசவனுக்கு ஓணம் நல்ல கொண்டாட்டம்னு சொல்லு...”

தொடர்ந்து அம்மும்மா கேட்டாள்:

“யார் கையில பணத்தைத் தந்தே? அம்மா கையிலயா, இல்லாட்டி சித்தப்பன் கையிலயா?”

தன் தாயின் கையில் தந்ததாகத்தான் அவன் சொல்ல வேண்டும். ஆனால், அதை அவன் சொல்லவில்லை.

அம்மும்மா கேள்வியை மீண்டும் கேட்டாள். அப்போது அவன் பதில் சொன்னான்:

“நான் அம்மா கையிலதான் தந்தேன்.”

அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாரும் தங்களின் வீடுகளில் அவனிடம் அதே கேள்வியைத்தான் கேட்டார்கள். “கொண்டு வந்த பணத்தை யார்கிட்டே கொடுத்தே? அம்மா கையிலயா? இல்லாட்டி சித்தப்பா கையிலயா?” இதுதான் அவர்கள் கேட்டது. பதில் சொல்வதற்கு சற்றுத் தயக்கமாக இருந்தாலும் ‘சித்தப்பன்’ என்ற ஒசை காதுக்கு இனிமையான ஒன்றாக இருந்தது. ஒருவேளை ‘கேசவனின் கையிலயா?’ என்று அவர்கள் கேட்டிருந்தால், அவன் பதில் சொல்ல தயங்கியிருக்க மாட்டான்.

அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்லவர்களாக இருந்தாலும், கருணை மனம் கொண்டவர்களாக இருந்தாலும் கேசவன் நாயரின் உறவைப் பற்றிக் கூறி பாப்பி அம்மாவுடன் சில நேரங்களில் அவர்கள் சண்டை போட்டிருக்கிறார்கள். அந்த மாதிரியான விஷயங்கள் அந்தந்த நேரங்களில் முடிந்து போய்விடும். எனினும், பாப்பி அம்மாவிற்கு ஒரு பயம். அவர்கள் எசகு பிசகாக எதையாவது பத்மநாபனிடம் கூறிவிடுவார்களோ என்பதே அது. அவன் திரும்பி வீட்டிற்கு வந்தபோது, அவள் கேட்டாள்.

“அவங்க உன்கிட்ட என்ன சொன்னாங்க, மகனே?”

அவன் அப்படியொன்னும் அலட்சியமாக இல்லை. அதே நேரத்தில் வாயை மூடிக்கொண்டும் இல்லை. அவன் சொன்னான்.

“எல்லாரும் என்னைப் பார்த்து பணத்தை யார் கையில கொடுத்தே. அம்மா கையிலயா, இல்லாட்டி சித்தப்பன் கையிலயான்னு கேட்டாங்க.”

முதல் முறையாக அவன் சிற்றப்பன் என்ற வார்த்தையை உச்சரித்தான். அவன் அதை விரும்பி உச்சரித்தது மாதிரி தெரியவில்லை.

சிறிது நேரத்திற்குப் பாப்பி அம்மா எதுவும் பேசவில்லை. பிறகு அவள் சொன்னாள்:

“மகனே, அந்த மனிதர் மட்டும் இல்லாமப் போயிருந்தா, அம்மாவும் இந்த மண்ணுக்குக் கீழே என்னைக்கோ போயிருப்பேன். அவர் நம்ம கடவுள்.”

சிறிது நேரம் கழித்து அவள் தொடர்ந்து சொன்னாள்: “எல்லாருக்கும் அதைப் பார்த்துப் பொறாமை. அவர் மாராம் மடத்தைச் சேர்ந்தவர். அதுனால யாராலயும் அதைப் பொறுத்துக்க முடியல...”

சொல்ல வேண்டிய விஷயங்கள் அனைத்தையும் பாப்பி அம்மா சொன்னாள். பத்மநாபன் ஒரு வார்த்தைகூட பேசாமல் அமைதியாக இருந்தான். அந்த வருட ஓணம் நல்ல சந்தோஷத்துடன் இருந்தது. கேசவன் நாயருக்கும் அவனுடன் சேர்த்து இலை போட்டு பாப்பி அம்மா சாதம் பரிமாறினாள்.

ஓணச் சாப்பாடு சாப்பிட்டு முடித்து பத்மநாபன் வெற்றிலையுடன் அவனுடைய தந்தையின் தாய் வீட்டிற்குச் சென்றான். பாப்பி அம்மா சொல்லித்தான் அவன் அங்கு போனான். மாதவி அம்மா சாப்பிட்டு முடித்து தன்னுடைய மடியில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தன் மகளின் தலையில் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள். பத்மநாபன் தான் கொண்டு சென்றிருந்த வெற்றிலைப் பொட்டலத்தைப் பாட்டியின் அருகில் வைத்தான். பாட்டி சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. அவனைப் பார்த்தது மாதிரிகூட அவள் காட்டிக் கொள்ளவில்லை. பிறகு மாதவி அம்மா வெறுப்பு கலந்த குரலில் கேட்டாள்.

“நீ எப்படா வந்தே?”

அவன் சொன்னான்: “முந்தா நாளு...”

பாட்டியின் அடுத்த கேள்வி இது.

“உன் சித்தப்பன் அங்கே இருக்கானா?”

பத்மநாபன் அதுக்கு எந்த பதிலும் கூறவில்லை. அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் மாதவி அம்மா தொடர்ந்தாள்.

“கல்யாணம் பண்ணினவன் செத்துப் போனான். அவன் மூலம் ஒரு குழந்தை பிறந்துச்சு. ஒரு தடவை தப்பு நடக்கலாம். பிறகும் அது நடக்கலாமா?”

ஓண வெற்றிலையுடன் அங்கு சென்றிருந்த பத்மநாபனுக்கு அங்கு கிடைத்தது அவனுடைய தாயைப் பற்றிய கூர்மையான திட்டுதல்கள்தான். அவன் அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

மாதவி அம்மா சொன்னாள்.

“இருந்தாலும் பாவம் பிடிச்ச என் மகனுக்குக் கிடைச்சது ஒரு நல்ல பொண்டாட்டிதான். ஒரு வகையில் பார்த்தால் அவன் செத்ததுகூட நல்லதுதான். இல்லாட்டி மத்தவங்களோட அடி வாங்கியே அவன் செத்திருப்பான்.”

மாதவி அம்மா எழுந்து வந்து வெற்றிலையை எடுத்துக்கொண்டு போனான். திரும்பி வந்து அவன் எங்கு இருந்தான், என்ன செய்து கொண்டிருந்தான் போன்ற விஷயங்களை விசாரித்தாள். அதற்குப் பிறகும் மாதவி அம்மாவின் கோபம் தணியவில்லை.

“உன் அம்மாவுக்கு இது எத்தினாவது மாசம்?”

அவன் பதில் சொன்னான்.

“எனக்குத் தெரியாது?”

மாதவி அம்மா விடவில்லை.

“இன்னொரு தடவை நீ வர்றப்போ, இப்போ இருக்கிற ஆளுக்குப் பதிலா வேறொரு சித்தப்பனை நீ பார்ப்பே?”

மாதவி அம்மா காறித்துப்பினாள். அவனை மேலிருந்து கீழ்வரை உற்றுப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்.

“நீ உன் அப்பனைப் போலவே இருக்கே?”

மாதவி அம்மா சொன்னதன் முழு அர்த்தமும் பத்மநாபனுக்குப் புரிந்ததா என்பது நிச்சயமில்லை. ஒன்று மட்டும் அவனுக்குத் தெரிந்தது. பாட்டியைப் பார்க்க வராமலே இருந்திருக்கலாம் என்பதே அது. முன்பு கூட பாட்டிக்கும் அவனுடைய தாய்க்குமிடையே சில சில்லறைத் தகராறுகள் உண்டானதுண்டு. பாட்டி அவனை ஓணச் சாப்பாடு சாப்பிட அழைத்தாள்.

வீட்டிற்குத் திரும்பி வந்தபோது அவனுடைய தாய் நடந்த விஷயங்களைக் கேட்டாள். அவன் சொன்னான்.

“ம்... அவங்க என்னென்னவோ சொன்னாங்க. இனியொரு தடவை நான் வர்றப்போ எனக்கு வேறொரு புது சித்தப்பா இருப்பார்னு அவங்க சொன்னாங்க.”

எல்லாவற்றையும் மனதில் வாங்கிக் கொண்டு பாப்பி அம்மா அவனுக்குப் பதில் சொன்னாள்.

“அவங்க அந்தக் காலத்துல இருந்தே இப்படித்தான். உன்னைப் பெற்றெடுத்து, தானியம் ஏதாவது கிடைக்குமான்னு போய்க் கெஞ்சி நின்னப்போ, அவங்க என்னை ஒரேயடியா அவமானப்படுத்துனாங்க. என்ன இருந்தாலும், நாம் ஏழைகளாச்சே. நாம அதையெல்லாம் நினைக்க முடியுமா?

“நான் ஓணச் சாப்பாடு வேண்டாம்னு சொல்லிட்டேன்.”

சிறிது நேரத்திற்குக் கனமான அமைதி அங்கு நிலவியது. பாப்பி அம்மாவின் கண்கள் நிறைந்துவிட்டன. ஒருவேளை, அவள் தன் கணவனை அப்போது மனதில் நினைத்திருக்கலாம். மனைவி அடுத்தடுத்து ஆண்களுடன் சேர்ந்து வாழ்வது இறந்துப் போன கணவனுக்குப் பிடிக்காத ஒன்றாக இருக்கலாம்.


இல்லாவிட்டால் உடல் உலகை விட்டு நீங்கியிருந்தாலும், ஆத்மாவால் எல்லாவற்றையும் பார்க்கவும் புரிந்து கொள்ளவும் முடியுமென்றால், கிட்டு நாயர் பாப்பி அம்மாவிற்கு மன்னிப்பு தந்தாலும் தரலாம்.

கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. எது எப்படியோ அந்த வருடத்தில் ஓணம் முடிந்தது. பத்மநாபன் போவதற்கான நாள் வந்தது. அவனுக்கு அல்வா சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தது. கேசவன் நாயர் அல்வா தயாரித்துத் தந்தார். இப்போது அவர் அவனை ‘மகனே’ என்றுதான் அழைக்கிறார். அவனுக்கு ஒரு புதிய வேஷ்டியும், சட்டையும் அவர் வாங்கிக் கொடுத்தார்.

சிறிது நேரம் அவனுடைய தாயும் சிற்றப்பாவும் அவனுடன் நடந்தார்கள். தாய் இதயம் முழுக்க பிரார்த்தனைகளுடன், கண்கள் முழுக்கக் கண்ணீருடன் திரும்பினாள். கேசவன் நாயர் படகுத்துறை வரை சென்றார், அவன் படகில் ஏறியபோது அவர் சொன்னார்.

“போனவுடன் கடிதம் எழுதணும். தெரியுதா?”

பத்மநாபன் ‘சரி’ என்று மெதுவான குரலில் சொன்னான். கேசவன் நாயர் சொன்னார்.

“அம்மா பிரசவம் ஆனவுடன், தெரியப்படுத்துறேன்.”

அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

2

ரு பொறுப்பு தன்னை விட்டு நீங்கியதைப் போல நிம்மதியான நிலையில் இருந்தார் கேசவன் நாயர். எதுவும் சொல்லாமல், மனம் வருத்தப்படாமல் பத்மநாபன் போய்விட்டான். தாய்க்கும் மகனுக்குமிடையே சிறிதுகூட இடைவெளி உண்டாகவில்லை. கேசவன் நாயர் நிம்மதியடைந்த குரலில் சொன்னார்:

“ம்... ஒரு சுமை இறங்கியது.”

பாப்பி அம்மா கேட்டாள்:

“என்ன சொன்னீங்க?”

“இனிமேல் நான் என் விருப்பப்படி நடக்கலாம்.”

“நீங்க சொல்றதன் அர்த்தம் என்ன?”

கேசவன் நாயர் விளக்கிச் சொன்னார்:

“நான் முன்னாடி பகல் நேரத்துல இங்கே இருந்தேனா? இல்ல. ஆனா, அவன் இங்கே வந்தப்போ அவனுக்கு எதுவும் தோணிடக் கூடாதுன்னு நினைச்சு நான் இங்கேயே இருந்துட்டேன். ஓணத்துக்கும் இங்கே இருந்துட்டேன்.”

சிறிது நேரம் கழித்து கேசவன் நாயர் கேட்டார்.

“நான் உன் நாயரா இந்த வீட்டுல இருக்கப் போறேன்னு நினைச்சியா?”

அதைக்கேட்டு பாப்பி அம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள். அந்தப் பதைபதைப்பில் அவளிடமிருந்து இப்படியொரு வார்த்தை திடீரென்று புறப்பட்டு வந்தது.

“அப்படின்னா நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்களா?”

கேசவன் நாயர் சிறிதுகூட தயக்கமே இல்லாமல் சொன்னார்:

“நான் உன்னை ஏமாத்தலையே!”

“பிறகு ஏன் அப்படிச் சொன்னீங்க?”

“நான் உன் நாயரா வீட்டோட இருக்கேன்னு எப்பவாவது சொல்லியிருக்கேனா?”

அதைக்கேட்டு பாப்பி அம்மா ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவள் சொன்னாள்:

“சொல்லலியா? அன்னைக்கு என்கூட படுத்தப்போ எனக்குப் பெண்டாட்டியோ, பிள்ளைகளோ யாரும் இல்லைன்னு நீங்க சொல்லலியா? ஏதாவது தப்பு நடந்திடுச்சுன்னா என்ன செய்யிறதுன்னு நான் கேட்டதுக்கு, அதுக்கு நான் பொறுப்புன்னு நீங்க என் கை மேல அடிச்சு சத்தியம் பண்ணலியா?”

அதெல்லாம் உண்மைதான். அதைக் கேசவன் நாயரும் ஒத்துக்கொள்ளவே செய்தார். அவர் சொன்னார்:

“யாரும் உன்கிட்டே வந்து கேள்வி கேட்டு சண்டை போட வரப்போறது இல்ல. உன் வயித்துல இருக்குற குழந்தைக்குத் தகப்பன் நான்தான்னு எங்க வேணும்னாலும் நீ சொல்லிக்கலாம். நான் அடிக்கொருதரம் வர்றேன். கையில கிடைக்கிறதைத் தர்றேன்.”

தான் சொன்னது எதுவும் பாப்பி அம்மாவுக்குப் புரியவில்லை என்பதை கேசவன் நாயரும் உணர்ந்து கொண்டார். இதற்கு மேல் என்ன வேண்டும்? தான் சொன்னதையே அவர் மீண்டுமொருமுறை சொன்னார். பிறகு அவர் விளக்கமாகச் சொன்னார்:

“பத்மநாபன் இங்கே வர்றதுக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ, அதே மாதிரி நான் இனிமேலும் இருப்பேன். அப்படி இல்லாம அவன் இங்கே வந்தப்போ இருந்த மாதிரி இங்கேயே கிடந்த மாதிரி இருக்கமாட்டேன்.”

கேசவன் நாயர் பாப்பி அம்மாவுடன் தனக்கிருக்கும் உறவைப் பற்றி சிந்தித்துப் பார்க்கும் நிலையில் இருந்தார். அவருடைய அந்த யோசிப்பை பாப்பி அம்மாவால் புரிந்து கொள்ள முடியவில்லை. சிறிது நாட்கள் அவர் அந்த வீட்டிலேயே இருந்தவுடன், அவர் அதே மாதிரி எப்போதும் இருப்பார் என்று பாப்பி அம்மா நினைத்திருக்கலாம்.

“அய்யோ, மகா பாவி.. என்ன நீங்க ஏமாத்திட்டீங்களா?”

“இல்ல.. உன்னை நான் ஏமாத்தல.”

கேசவன் நாயருக்கு குறிப்பிட்டுக் கூறும்படி வேலை எதுவும் இல்லை. அவருக்கென்று சொத்து எதுவும் கிடையாது. அவருடைய சகோதரியை அந்த ஊரில் கொஞ்சம் வசதியான பணக்காரன் ஒருவன் திருமணம் செய்திருக்கிறார். அவரின் பெயர் மாராம் மடத்தில் கோவிந்தப்பிள்ளை. கேசவன் நாயருக்குத் தொழில் என்று கூறுவதாக இருந்தால் சில தரகு வேலைகளையும் சில சில்லறை வியாபாரங்களையும்தான் கூற வேண்டும். பாப்பி அம்மாவின் கணவராக இருப்பது என்பது தன்னுடைய தகுதிக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார் அவர்.

“மாராம் மடத்துல இருக்குறது என் சகோதரி. அதாவது, என் சொந்த சகோதரி. அவளோட மானத்தை நான் காப்பாற்ற வேண்டாமா? மாராம் மடத்துல இருக்குற பிள்ளைங்க உன்னை அத்தைன்னு அழைக்கணும்னு நீ சொல்றியா?”

பாப்பி அம்மாவிற்கு அப்படிப்பட்ட ஆசை எதுவும் இல்லை. கேசவன் நாயருக்கு வேறு சில காரணங்களும் இருந்தன.

“உன் நாயரா இருக்குறது என் தொழிலுக்குச் சரிபட்டு வராது. யாராவது என்னைத் தேடி வர்றாங்கன்னு வச்சுக்கோ, அவங்க எங்கே வருவாங்க? என்னைத் தேடி அவங்க வர்றதா இருந்தா, எனக்கு மதிப்பே குறைஞ்சு போயிடும். அதுக்காக நான் உன்னை விட்டுட மாட்டேன்.”

பாப்பி அம்மா தனக்குத்தானே கூறிக்கொள்வது மாதிரி மெதுவான குரலில் சொன்னாள்: “நீங்க என்ன சொன்னாலும், என்னை நீங்க ஏமாத்திட்டீங்கன்றது உண்மை. என்னைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை?”

கேசவன் நாயர் அங்கிருந்து கிளம்பினார். அவர் நிரந்தரமாக அங்கிருந்து செல்வதைப் போல் பாப்பி அம்மாவுக்குத் தோன்றியது. அவள் அழுது விட்டாள்.

காளிம்மாவும், நாணியம்மாவும், குட்டி அம்மாவும் அங்கு வந்தார்கள்.

காளியம்மா பாப்பி அம்மாவைக் குறை சொன்னாள்.

“நீ ஏன்டி அந்த ஆள்கிட்டே சண்டை போட்டு அனுப்பினே?”

கண்ணீருடன் பாப்பி அம்மா சொன்னாள்:

“நான் ஒரு வார்த்தைகூட கடுமையா பேசல. என்னை அவர் ஏமாத்திட்டாரு.”

குட்டி அம்மாவும் பாப்பி அம்மாவைக் குறை சொன்னாள்.

“நீ இத்தனைக்குப் பிறகும் ஏதாவது படிச்சிருக்கியா? இல்ல... இது எத்தனையாவது ஏமாத்தல்டி?”

கூறுவதாக இருந்தால் பாப்பி அம்மா கூறுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. அப்படி சொல்வதாக இருந்தால், அது அவளின் தனிப்பட்ட விஷயங்களாக இருக்கும். இரண்டு துரோகங்களின் கதை.


துயரம் நிறைந்த அவலக் கதை. அந்தக் கதையைக் கூறினால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். பாப்பி அம்மா அழ மட்டும் செய்தாள்.

பக்கத்து வீட்டுப் பெண்கள் அவள்மீது பரிதாபம் கொண்டார்கள். குட்டி அம்மா ஒரு அக்காவைப் போல பாப்பி அம்மாவிற்கு அறிவுரை சொன்னாள்.

“நீ அப்படி அந்த ஆளுகிட்ட சண்டை போட்டிருக்கக் கூடாது.”

“நான் ஒண்ணும் சொல்ல அக்கா. இங்கே வர்றது தன் கவுரத்திற்குக் குறைச்சல்னு அவர் சொல்லிட்டுப் போறாரு.”

“அவனோட கவுரவம் குறைஞ்சிடப் போகுதாம்மா? அப்படி கவுரவக் குறைச்சல்னா அவன் இவ்வளவு நாட்கள் ஏன் இங்கே இருந்தான்?”

பெண்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து தடத்தில் வீட்டில் பாப்பி அம்மாவின் விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது கேசவன் நாயர் போய்க் கொண்டிருந்தார். அவர் மனதிற்குள் ஏதோ கணக்குப் போட்டுக் கொண்டிருந்ததைப்போல தோன்றியது. அந்தக் கணக்கு போட்டுக் கொண்டிருந்ததில், எதிரில் வந்து கொண்டிருந்த சாக்கோ மாப்பிள்ளையை அவர் பார்க்கவில்லை. கவனிக்கவில்லை. அவன் கேசவன் நாயரைப் பார்ப்பதற்காக தடத்தில் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான். சாக்கோ மாப்பிள்ளை சொன்னான்.

“அண்ணே, உங்களைப் பார்க்குறதுக்காகத்தான் நான் தடத்தில் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கேன்.”

குரலைக் கேட்டு கேசவன் நாயர் திரும்பி நின்றார்.

“யாரு.. சாக்கோ மாப்பிள்ளையா? என்ன விஷயம்?”

“நான் தடத்தில் வீட்டுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கேன்” எந்தவொரு கெட்ட எண்ணமும் கெட்ட நோக்கமும் சாக்கோ மாப்பிள்ளைக்கு இல்லை. சாக்கோ மாப்பிள்ளையிடம் பள்ளி வீட்டிலிருந்து வைக்கோல் வாங்கித் தருவதாகச் சொல்லி கேசவன் நாயர் கொஞ்சம் பணம் வாங்கியிருந்தார். இப்போது அந்த வைக்கோலை வேறு யாரோ விலைக்கு வாங்கிவிட்டார்கள். பள்ளி வீட்டுக்காரர்களுக்கு இந்த வியாபாரத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அந்த விஷயத்தைக் கேட்பதற்காகத்தான் சாக்கோ மாப்பிள்ளை கேசவன் நாயரைத் தேடிப் போய்க் கொண்டிருந்தான்.

கேசவன் நாயர் மிடுக்கான குரலில் கேட்டார்.

“என்னைப் பார்க்குறதுக்கு எதுக்கு தடத்தில் வீட்டுக்குப் போகணும்?”

சாக்கோ மாப்பிள்ளை சுத்தமான மனதுடன் சொன்னான்.

“நீங்க அங்கே உறவு வச்சிருக்கிறதா யாரோ சொன்னாங்க. உண்மையைச் சொல்லப் போனா, இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் என் மனசுல நான் நினைச்சது இப்பவாவது நீங்க ஒரு இடத்துல போய் இருந்துட்டீங்களேன்றதைத்தான். மனிதன்னா அவன் ஒரு இடத்துல நிரந்தரமா தங்கணும். நீங்க செய்தது சரிதான்.”

அதைக்கேட்டு கேசவன் நாயர் குலுங்கிக் குலுங்கி சிரித்தார்.

“எனக்கு உறவா? அதுவும், அங்கேயா? நான் மாராம் மடத்துலதான் இருக்கேன், சாக்கோ மாப்பிள்ளை.”

சாக்கோ மாப்பிள்ளைக்கு அந்த விஷயத்தைப் பற்றி பெரிய அக்கறையொன்றுமில்லை. அவனுக்குத் தெரிய வேண்டியது வைக்கோல் விஷயம் மட்டும்தான். விஷயத்தை சாக்கோ மாப்பிள்ளை விளக்கிச் சொன்னான். அதைக்கேட்டு கேசவன் நாயருக்குக் கோபம் வந்துவிட்டது. “பள்ளி வீட்டுக்காரர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். அவர்கள் சொன்னபடி நடக்கவில்லை” என்றார் அவர்.

“என் கையில் இருந்து முன்பணம் வாங்கிட்டு, அவங்க வேறொரு ஆளுக்கு வைக்கோலை வித்துருக்காங்க. ம்.. பாக்குறேன். இந்த கேசவன் நாயர் யாருன்னு அவங்களுக்குத் தெரியல.”

சாக்கோ மாப்பிள்ளை சொன்னான்.

“இந்த விஷயத்தைப் பற்றி நீங்க அவங்ககிட்ட பேசவே இல்லைன்னு அவங்க சொல்றாங்க. முன்பணமும் கொடுக்கலையாம்.”

சற்று உயர்ந்த குரலில் கேசவன் நாயர் கேட்டார்.

“அப்படி யார் சொன்னது?”

“அவங்கதான்.”

“நான் அங்கே வர்றேன். நான் கேக்குறேன்.”

யார் கூறியது சரி என்பதைப் பற்றி சாக்கோ மாப்பிள்ளைக்கு சந்தேகம் வந்துவிட்டது.

கேசவன் நாயர், “பள்ளி வீட்டுக்கு நட, நான் மாராம் மடம்வரை போயிட்டு வந்திடுறேன்” என்றார்.

எனினும், சாக்கோ மாப்பிள்ளைக்கு ஒரு சந்தேகம்.

“நாம சேர்ந்து போவோம்.”

“வேண்டாம். நீ அங்கே போய் சேர்றப்போ, நானும் வந்திடுவேன்.”

கேசவன் நாயர் நடக்க ஆரம்பித்தார். சாக்கோ மாப்பிள்ளை அவர் நடந்து போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்தப் பணத்தை உண்மையாக சொல்லப் போனால் கேசவன் நாயர் ஓணத்திற்கு செலவழித்து விட்டார்.

கேசவன் நாயர் இன்னொரு ஆளுக்காகவும் ஒளிந்து நடக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது.

இப்போது ஊர்க்காரர்கள் எல்லாரும் கேசவன் நாயருக்கு தடத்தில் வீட்டுடன் உறவு இருக்கிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய எல்லாவித பலத்தையும் பயன்படுத்தி அந்த எண்ணத்தை நீக்க முயற்சி செய்து கொண்டிருந்தார் கேசவன் நாயர். போகும் எந்த இடமாக இருந்தாலும், யாரைப் பார்த்தாலும் அவர்கள் அதைப்பற்றித்தான் அவரிடம் கேள்வி கேட்டார்கள். கேசவன் நாயரின் விஷயத்தில் ஒரு குறிப்பிட்டுக் கூறும்படியான அம்சம் இருந்தது. அவர்கள் அப்படிக் கேட்டதால், அவருக்குக் கொஞ்சம்கூட கோபம் உண்டாகவில்லை. யாரிடமும் அவர் சண்டைக்குப் போகவும் இல்லை. அந்த விஷயத்தைப் பற்றி பேசும்போது தான் மாராம் மடத்தில் இருப்பதாக அவர் கூறுவார். அப்போது ஆட்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். ஆனால், அவர்களின் சிரிப்பிற்கு என்ன அர்த்தம் என்பது தெரியாதது மாதிரி கேசவன் நாயர் நின்றிருப்பார். அப்படிப்பட்ட நிலையில் வேறொரு மனிதன் இருப்பானேயானால், அவன் மனிதர்களை அதிகம் பார்க்காமலே இருந்து விடுவான். ஆனால், நான்கு நபர்கள் கூடும் எந்த இடமாக இருந்தாலும், அங்கு தானே போய் நிற்பார் கேசவன் நாயர். யாரைப் பார்த்தாலும் தானே வலிய போய்ப் பேசுவார். அந்த விஷயத்தைப் பற்றி அவர்களே தன்னைப் பார்த்து விசாரிக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்ப்பார். அவர்கள் அதைப் பற்றிக் கேட்கவில்லையென்றால், அவரே அவர்களைக் கேட்க வைப்பார். பிறகு விஷயங்கள அவரே கூறத் தொடங்குவார். தடத்தில் வீட்டில் தனக்கு எந்த உறவும் இல்லை என்பதை எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டும். தான் சொல்வதை அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் அப்படி நடந்து கொண்டார்.

தடத்தில் வீட்டின் நிலைமையும் மிகவும் மோசமாகத்தான் இருந்தது. பத்மநாபன் அங்கிருந்து போய் மூன்று, நான்கு நாட்கள் வரை எப்படியோ ஒருவிதத்தில் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகு அன்றாட வாழ்க்கையை ஓட்ட எதுவுமே இல்லை என்றாகிவிட்டது. அதாவது வாழ்க்கையை நடத்த ஒன்றுமே இல்லை. தாயும் மகளும் கயிறு பிரித்தார்கள். அதற்குக் கூலியாக இரண்டு சக்கரங்கள் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கிடைத்தன. கார்த்தியாயினி ஒரு நேரம் பக்கத்து வீடுகளில் ஏதாவதொன்றில் சாப்பிட்டுக் கொள்வாள். அவர்களில் யார் வேண்டுமென்றாலும் கொடுப்பார்கள். ஒரு சிறு பெண் பட்டினி கிடப்பதைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.


ஆனால், தாய்க்கும் சேர்த்துக் கொடுக்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை. அவர்கள் அந்த அளவிற்கு உயர்ந்த நிலையில் இல்லை.

இந்த விஷயங்களையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம். பத்மநாபன் இங்கிருந்து போனபிறகு, அவனிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை. அவன் கடிதம் எதுவும் எழுதவில்லை. உடனே போய் பணம் அனுப்ப முடியாது. ஆனால், கடிதமாவது எழுதலாமே! ஒருவேளை, அவன் மனதில் வருத்தத்துடன் போயிருப்பானோ? பக்கத்து வீட்டுக்காரர்களும் பாட்டியும் சேர்ந்து அவனுடைய மனதை மாற்றிவிட்டிருக்கலாம். குட்டி அம்மாவின் கணவரிடம் சொல்லி ஒன்றல்ல, இரண்டு கடிதங்களைப் பாப்பி அம்மா எழுதினாள். ஆனால், அதற்குப் பதில் எதுவும் வரவில்லை.

கிழக்கு வீட்டிலிருக்கும் அம்மும்மா பாப்பி அம்மாவைப் பார்த்துக் கூறுவாள்.

“என் கடவுளே! அவ வயித்துல இருக்கிற குழந்தை உண்மையிலேயே பாவம் செஞ்சதுதான்.”

குட்டி அம்மா அப்படிக் கூற மாட்டாள்.

“அவ நல்லா அனுபவிக்கட்டும். பொம்பளைன்னா ஒழுக்கமும் வரைமுறையும் இருக்கணும். இதையெல்லாம் அவ நினைச்சுப் பார்த்திருக்கணும்.”

பாரு அம்மா அவள் சொன்னதற்கு முழுமையாக எதிர்வார்த்தை கூறாவிட்டாலும், வேறொரு விதத்தில் கூறுவாள்.

“நாம அப்படி சொல்லிடலாம். ஆனா, அது எப்படியோ நடந்து போயிருக்கும்.” பாரு அம்மாவின் திருமணம் அவள் கர்ப்பமான பிறகுதான் நடந்தது.

அம்மும்மா மன வருத்தத்துடன் சொன்னாள்.

“வயித்துல இருந்து குழந்தை நேரா வெளியே வரணுமே கடவுளே.”

எல்லாப் பெண்களும் இந்த விஷயத்தில் ஒன்றாகச் சிந்தித்தார்கள். அவர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.

“எது எப்படியோ அந்தக் குழந்தை நேரா வெளியே வரணும்.”

அந்தப் பெண்களின் பரிதாப உணர்ச்சி வேறொரு வடிவத்தை எடுத்தது. கேசவன் நாயர் ஊர் முழுக்கச் சுற்றி ஒவ்வொருவரிடமும் சொல்லித் திரிந்த வார்த்தைகள் அவர்களின் காதுகளிலும் விழுந்தன. ஒருநாள் கடைக்குப் போய் விட்டுத் திரும்பிய குட்டி அம்மா பொருட்களைத் திண்ணையில் வைத்துவிட்டு நேராக பாரு அம்மாவின் வீட்டை நோக்கி ஓடினாள்.

“கேட்டியா பாரு. அந்த நாத்தமெடுத்தவன் என்ன சொல்லித் திரியிறான்னு.”

பாரு அம்மாவிற்கு உடனடியாக அவள் யாரைச் சொல்கிறாள் என்பது புரியவில்லை. அவள் கேட்டாள்:

“யாரைச் சொல்ற?”

“அந்த ஆளைத்தான்.. கேசவன் நாயர்.. அந்த அப்பிராணியைக் கெடுத்தது போதாதுன்னு, அவன் ஊர் முழுக்க அதைச் சொல்லிக் கிட்டும் திரியிறான்.”

அப்போது நாணியம்மாவும் காளியம்மாவும் அங்கு வந்தார்கள். நாணியம்மாவின் மனதைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்த ஒரு விஷயம் அது.

நாணியம்மா சொன்னாள்.

“அவன் பல்லை உடைக்குறதுக்கு ஆள் இல்லாததுனால அவன் இப்படிப் பேசித் திரியிறான்.”

காளியம்மாவும் அதைத்தான் சொல்ல நினைத்தாள்.

காளியம்மா சொன்னாள்.

“இந்த ஊர்ல அதைச் செய்றதுக்கு ஆம்பளைங்க இருக்காங்களா என்ன? இதுவே வேற ஊரா இருக்கணும். அவனை ஒரு வழி பண்ணிட்டுத்தான் வேற வேலையையே பார்ப்பாங்க.”

அவள் சொன்னது உண்மைதான் என்பதை பாரு அம்மாவும் ஒப்புக்கொண்டாள், அவள் சொன்னாள்:

“ஒவ்வொரு ஊர்லயும் இந்த மாதிரி பொம்பளைகளைக் கெடுத்து ஏமாத்துறவனைக் கையோட பிடிச்சுக் கொண்டு வந்து கட்டிப் போடுவாங்க. அது ஆம்பளைங்க இருக்குற ஊருங்க. இங்கேயும் ஆம்பளைங்க இருக்காங்களே.”

பாரு அம்மாவின் திருமணத்தின்போது பலவிதப்பட்ட பிரச்சினைகளும் உண்டாயின. அதனால்தான் அவள் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக இருந்தாள். திருமணம் முடிந்து விட்டாலும், அவள் மனதில் எவ்வளவோ வேதனைகள் உண்டாயின.

“அந்த ஆளை அந்த அளவிற்கு வெறுமனே விட்டு விடக்கூடாது” என்றாள் குட்டி அம்மா. பாரு அம்மா கேட்டாள்.

“பொம்பளைங்க நாம நினைச்சு என்ன நடக்கப் போகுது?”

காளியம்மா புத்திசாலித்தனமான ஒரு விஷயத்தைச் சொன்னாள்.

“எங்க வாசுவோட அப்பா வழக்குப் போடலாம்னு சொல்றாரு. வழக்குப் போட்டா அந்த ஆளு ஒழுங்குக்கு வருவான்.”

ஒரு வழி கிடைத்ததைப்போல் இருந்தது. குட்டியம்மா சொன்னாள். “நீ சொல்றது சரியான வழிதான்.”

பாரு அம்மா குட்டி அம்மாவிடம் சொன்னாள்.

“இருந்தாலும் இந்த விஷயத்தைப் பற்றி குட்டன் அண்ணன்கிட்ட பேசுங்க.”

குட்டி அம்மாவின் கணவன் குட்டன் பிள்ளை வழக்கு நடத்துவதற்கு அனுபவமுள்ள ஒரு மனிதர் என்பது அவர்களின் கருத்து. அந்த ஊரிலுள்ள பல வழக்குகளுக்கும் அவர் சாட்சியாக இருந்திருக்கிறார். சில நாட்களாகவே அதுதான் நடந்து வருகிறது. அந்த ஊரைச் சேர்ந்த எல்லா வழக்குகளைப் பற்றியும் குட்டன் பிள்ளைக்குத் தெரியும். அதனால் இந்த விஷயத்தைத் தன் கணவரிடமும் பேச குட்டியம்மா சம்மதித்தாள்.

“இன்னைக்கு யார் கூடவோ வழக்கு விஷயமா ஆலப்புழைக்குப் போயிருக்காரு. ராத்திரி வந்திடுவாரு.”

குட்டி அம்மா இரவில் தன் கணவரிடம் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசினாள். வழக்குத் தொடுப்பதுதான் சரியான விஷயம் என்று குட்டன் பிள்ளையும் சொன்னார்.

“அவன் மேல வழக்குப் போட்டாத்தான், அவன் துள்ளிக் குதிச்சு ஓடிவருவான்.”

அதைக்கேட்டு குட்டி அம்மா சந்தோஷப்பட்டாள். அவளுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. கேசவன் நாயர் வந்து பாப்பி அம்மாவின் பாதத்தில் விழுந்து தான் செய்த தவறுகளையெல்லாம் மன்னிக்க வேண்டும் என்று கெஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதைப்போல அவள் மகிழ்ச்சியடைந்தாள். குட்டன்பிள்ளை அடுத்து சொன்னதைக் கேட்டு அவள் வாயடைத்துப் போனாள்.

“ஆனா, ஒரு விஷயம் அதுக்குப் பணம் செலவாகும்.”

எனினும், குட்டி அம்மா கேட்டாள்.

“எவ்வளவு செலவாகும்?”

குட்டன் பிள்ளை கணக்குப் போட்டார்.

“இப்போதைக்கு வழக்குப் பதிவு செய்ய அஞ்சு, பத்து, பதிமூணு, பதினெட்டு, இருபது ரூபா வேணும்.”

மறுநாள் காலையில் குட்டி அம்மா தன் சிநேகிதிகள் எல்லாரையும் அழைத்தாள். அவர்கள் மூன்று பேரும், கிழக்கு வீட்டு அம்மும்மாவும் ஒன்று கூடினார்கள்.

குட்டி அம்மா தன் கணவர் சொன்ன விஷயங்களைச் சொன்னாள்.

“ராத்திரி முழுவதும் நான் சொல்லி சொல்லி பன்னிரண்டு ரூபாய்ல விஷயத்தை முடிக்க அவர் சம்மதிச்சிட்டாரு. அந்த ரூபா வந்திருச்சுன்னா, அவர் உடனே வழக்குத் தொடுத்து நோட்டீஸ் அனுப்பிடுவாங்க.”

“பன்னிரண்டு ரூபாயை எப்படி தயார் பண்ணுறது” அது இப்போது பாப்பி அம்மாவின் விஷயமாக இருக்கவில்லை.

பாரு அம்மா ஒரு வழி சொன்னாள்.

“நாம எல்லாரும் பிரிச்சு அந்தத் தொகையைத் தயார் பண்ணுவோம்.”

காளியம்மா அதற்கு ஒத்துக் கொண்டாள்.

“இனிமேல் அப்படியொரு காரியம் நடக்கக்கூடாது. எவனும் இனிமேல் இந்த மாதிரி ஏமாத்தக்கூடாது.”

எல்லாரும் அதை ஒத்துக் கொண்டார்கள். தன்னுடைய மனப்பூர்வமான ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்காக குட்டி அம்மா சொன்னாள்.


“நான் என் பணத்தை யார்கிட்ட வேணும்னாலும் தர்றேன்.”

“அது எதுக்கு?” என்பது மாதிரி எல்லாரும் குட்டி அம்மாவின் முகத்தைப் பார்த்தார்கள். குட்டி அம்மா சொன்னாள்.

“இல்ல... என் வாசுவோட அப்பாதான் வழக்கை நடத்துறது. அதனால சொன்னேன்.”

“இப்படித் தனித்தனியா ஒவ்வொருத்தர்கிட்டயும் பிரிச்சு வாங்கினா பணத்தை மோசடி பண்ணிடுவாங்கன்னு யாராவது நினைச்சாங்களா என்ன?”

“இல்ல... வெறுமனே சொன்னேன்.”

அந்த ஊரெங்கும் அந்த விஷயம் பரவி விட்டது. கேசவன் நாயர் மீது வழக்குத் தொடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி எல்லா இடங்களிலும் பரவியது. ஒவ்வொருவரும் அவரைப் பார்த்துக் கேட்க ஆரம்பித்தார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் இதுவாக இருந்தது.

“நானும் வழக்கைப் பார்த்தவன்தான்.”

கோயில் மைதானத்திலும், ஈச்சரமேனனின் கடையிலும் இருக்கும்போது குட்டன்பிள்ளை இந்த விஷயத்தைப் பற்றி எல்லாரும் கேட்கும் வண்ணம் சவால்விட்டு சொன்னார். அந்த சம்பவத்தைப் பற்றி கேசவன் நாயரும் அறிந்தார். அப்போது அவருக்கு மனதில் சிறிது அச்சம் உண்டாகவில்லை என்று கூறுவதற்கில்லை.

நிலைமை இப்படியிருக்க, அஞ்சல் பணியாள் தன்னைத் தேடிக் கொண்டிருக்கும் விஷயத்தை கேசவன் நாயர் அறிந்தார்.

விளையாட்டாக நினைத்தது வினையாகப் போகிறது. கேசவன் நாயரின் மனதில் பதைபதைப்பு அதிகமாகியது. அவர் திடீரென்று காணாமல் போனார். அவர் எங்கு இருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது. சமீப காலமாக அவர் யார் கண்ணிலும் படவில்லை. மாராம் மடத்தில் கேசவன் நாயர் என்றுதான் அஞ்சலின் வெளிப்குதியில் எழுதப்பட்டிருந்தது. அந்த வீட்டில் அப்படியொரு மனிதரே இல்லை என்று வீட்டிலுள்ளவர்கள் கூறிவிட்டார்கள்.

குட்டன்பிள்ளை நோட்டீஸை அனுப்புவதற்கு முன்பே அதைப்பற்றி அஞ்சல் பணியாளரிடம் கூறியிருந்தார். அப்போதே அந்த அஞ்சல் பணியாளருக்கு மனதில் ஒருவித வெறி உண்டாகிவிட்டது. ஆளை எப்படியாவது கண்டுபிடித்து நோட்டீஸைத் தந்தே ஆவது என்பதில் அவன் மிகவும் தீவிரமாக இருந்தான்.

மாராம் மடத்தில் கேசவன் நாயர் என்ற பெயரில் ஒரு ஆளே இல்லை என்ற சூழ்நிலை வந்ததும், அஞ்சல் பணியாள் குட்டன் பிள்ளையிடம் வந்தான். அப்படியொரு சூழ்நிலையில் குட்டன்பிள்ளை என்ன செய்ய முடியும்? கேசவன் நாயர்தான் காணாமல் போய்விட்டாரே!

கேசவன் நாயர் பயந்து எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறார் என்ற விஷயத்தை குட்டன்பிள்ளை பெண்களிடம் கூறினார். அது ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திதான். சந்தேகமேயில்லை. குட்டன்பிள்ளை சொன்னார்.

“அவன் பயந்துட்டான். மறுபடியும் வராம அவன் எங்கே போயிடுவான்?”

தன் கணவரின் திறமையைப் பார்த்து குட்டி அம்மா மிகவும் பெருமைப்பட்டாள். அவள் சொன்னாள்.

“அரசாங்கத்தை எதிர்க்க முடியுமா?”

குட்டன்பிள்ளை தன் மனைவியைப் பார்த்து சொன்னார்.

“ஹா.. போடி அந்தப் பக்கம்! அரசாங்கம் இந்த விஷயத்துல இன்னும் தலையிடலடி.. அது இனிமேல்தான்.”

குட்டி அம்மாவின் அரைகுறை அறிவு கேட்டது.

“பிறகு, இந்த அஞ்சல் பணியாள் யாரு? அரசாங்கத்தோட ஆள்தானே?”

அப்போது குட்டன் பிள்ளைக்குப் பேச்சு வரவில்லை. அஞ்சல் பணியாள் அரசாங்கத்தைச் சேர்ந்தவன்தான். சந்தேகமில்லை. அவள் அதை சொன்னபோது தன்னை யாரோ முதுகில் அடித்ததைப்போல் அவர் உணர்ந்தார். எனினும் அவர் சொன்னார்.

“போடி, அந்தப் பக்கம். உனக்கு என்ன தெரியும்?”

ஒரு மாலை நேரத்தில் கோயிலின் மேற்குப் பக்கத்திலிருக்கும் வெற்றிடத்தில் அஞ்சல் பணியாள் கேசவன் நாயரைப் பார்த்தான். அங்கிருந்து ஓடி ஒளிய பல முயற்சிகளையும் அவர் செய்து பார்த்தார். அஞ்சல் பணியாள் அவரைத் தப்பியோட விடவில்லை. கையெழுத்துப் போட்டு அந்த நோட்டீஸை வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அதை வாங்கிக் கொள்ள அவர் மறுத்துவிட்டார் என்று தான் எழுதிவிடுவதாக அவர் அவரை மிரட்டினான். அந்தப் பகுதியில்தான் குட்டன் பிள்ளையும் இருந்தார். வேறு வழியில்லாமல் கேசவன் நாயர் கையெழுத்துப் போட்டு நோட்டீஸை வாங்கினார்.

வக்கீல் அனுப்பிய நோட்டீஸ் அது. மிகவும் கடுமையாக அது எழுதப்பட்டிருந்தது. அதில் கூறப்பட்டிருந்தவை எல்லாமே சரியாக இருந்தன. அந்த நோட்டீஸை ஊரிலுள்ள யாரிடமாவது காட்டி அறிவுரை பெறலாமென்றால், கேசவன் நாயருக்கு உதவி செய்ய அந்த ஊரில் யாருமில்லை. அது மட்டுமல்ல... அந்த நோட்டீஸை வேறு யாரிடமும் காட்டவும் முடியாது.

ஆலப்புழை வரை சென்று வேறொரு வக்கீரை அவர் ஏற்பாடு செய்தாக வேண்டும். அதற்குப் பணம் தேவை. சில நாட்களாகவே அவரால் அன்றாட வாழ்க்கையை நடத்தவே முடியவில்லை. அப்போது அறுவடை முடிந்து நெல் வியாபாரம் நன்றாக நடந்து கொண்டிருந்த நேரமாக இருந்தாலும், அவர் கையில் ஒரு பைசாகூட இல்லை என்பதே உண்மை. பார்ப்பவர்களெல்லாம் அவரைப் பார்த்துக் கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

“என்ன கேசவன் நாயரே, வழக்குல சிக்கிக்கிட்டீங்களா?”

கேசவன் நாயர் அதற்குப் பதிலாக வெறுமனே ‘உம்’ கொட்டுவார். இந்த அளவிற்கு தன் நிலைமை வரும் என்று கேசவன் நாயர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்திற்கு இந்த அளவிற்கு முக்கியத்துவம் கிடைக்குமா? தடத்தில் வீட்டு பாப்பிக்கு யாரோ ஆட்கள் கிடைத்திருக்கிறார்கள்.

கேசவன் நாயர் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு பெரிய பிரச்சினையை நேரில் சந்திக்கிறார். ஒரு பெரிய பிரச்சினை! இப்போது தன்னைப் பார்த்துக் கேட்பவர்களிடம் கேசவன் நாயர் கூறுவது இதைத்தான்.

“அந்தக் குட்டன் இருக்கிறானே, அவனை நான் ஒரு வழி பண்ணுறேன்.”

3

“இந்தா பணம்.”

பாப்பி அம்மாவின் கையை அந்த இருட்டில் கண்டுபிடித்து அவர் என்னவோ கொடுத்தார்.

“மூணு ரூபா இருக்கு. ஒரு ரூபா நோட்டு.”

“அஞ்சுன்னு சொல்லிட்டு மூணைக் கொடுத்தா?”

“எங்கேயிருந்து பணம் உண்டாக்குறது, பாப்பி?”

“நான் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டேன் தெரியுமா?” அவர் வாசலிலிருந்து அறைக்குள் மெதுவாக வந்தார். பாப்பி அம்மா சொன்னாள்.

“அந்தக் குழந்தை அங்கே படுத்திருக்கு.. மிதிச்சுடாதீங்க.”

“இல்ல...”

பிறகு நீண்ட நேரம் அந்த அறைக்குள் மெதுவான குரலில் அவர்களுக்குள் உரையாடல் நடந்தது. மன வேதனை வெளிப்பட்ட குரலில் அவர் கேட்டார்.

“இருந்தாலும் நீ என் மேல வழக்குப் போட்டுட்டியே. நீ என்மேல அன்பே இல்லாம நடந்துக்கிட்ட. நான் இதை எதிர்பார்க்கவே இல்ல.”

பாப்பி அம்மா பதைபதைப்பான குரலில் சொன்னாள்.

“நான் வழக்குப் போட்டிருக்கேனா? என்ன சொல்றீங்க? என் குழந்தைங்க சத்தியமா சொல்றேன், எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது.”

குழந்தைகள் மீது சத்தியம் செய்து அவள் சொன்ன வார்த்தைகளை அவர் சரியாகக் காதில் வாங்காமல் அவர் சொன்னார்.


“நீ வழக்குப் போடலைன்னாக் கூட நோட்டீஸ் அனுப்பினே. நான் அன்னைக்கு விளையாட்டா சொன்னதை, நீ வினையா எடுத்துக்கிட்ட.”

“யார் நோட்டீஸ் அனுப்பினதுன்னு சொல்றீங்க?”

“நீ...”

“எனக்கு அதைப்பற்றி எதுவுமே தெரியாது. குட்டி அக்கா இங்கே வந்து இன்னைக்கு சொன்னாங்க. அவங்க வீட்டுக்காரரு இந்த மாதிரி ஏதோ பண்ணியிருக்காருன்னு அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”

“அப்போ அதைப்பற்றி உனக்குத் தெரியாதுன்ற?”

“என் குழந்தைங்க மேல சத்தியமா சொல்றேன், எனக்கு எதுவுமே தெரியாது.”

சிறிது நேரம் கழித்து கேசவன் நாயர் சொன்னார். “அப்போ அது அவனோட வேலையாத்தான் இருக்கும். நான் அவனை ஒரு வழி பண்றேன்.”

மனைவிக்கும் கணவனுக்குமிடையில், இல்லாவிட்டால் காதலனுக்கும் காதலிக்குமிடையில், அதுவும் இல்லாவிட்டால் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்குமிடையில் இனிய உரையாடலும் வாக்குறுதி அளிப்பதும் அங்கு நடந்து கொண்டிருந்தன. பிரிந்ததற்குப் பிறகு உள்ள நாட்களைத் தான் கடத்தியது எப்படி என்பதை அவளும், எப்படி வாழ்ந்தேன் என்று அவரும் சொன்னார்கள். அவள் தன் செயலுக்காக வருத்தப்பட்டாள்.

“இந்த அளவுக்குப் பாசம் இல்லாமப் போயிட்டீங்களேன்னு நான் மனசுல நினைச்சேன். எல்லாம் என் தலைவிதின்னு நினைச்சிக்கிட்டேன்.”

அவர் அவளைத் தேற்றினார்.

“அப்படியெல்லாம் நினைக்காதே. நான் அப்படியொண்ணும் பாசம் இல்லாத ஆளு இல்ல. உன் வயித்துல இருக்குறது என் குழந்தை. பாசம் இல்லாம நான் எப்படி இருப்பேன்?”

பாப்பி அம்மா அவர் சொன்னதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாள். அவளுடைய இயல்பே அதுதான். அவள் சொன்னாள்.

“நான் அப்படி நினைக்கிறதுக்குக் காரணம் அந்த துரோகி. அப்படிப்பட்ட ஆளு என் மகளுக்கு அந்த ஆளு ஒரு சங்கு எண்ணெய் கூட தந்தது இல்ல. நீங்களும் என்னை விட்டு போயிட்டா.”

அதற்குக் கேசவன் நாயர் சொன்னார்.

“நான் அப்படியெல்லாம் உன்னை விட்டுப் போக மாட்டேன்.”

அதற்கு அவளிடமிருந்து உடனடியாக பதில் வந்தது.

“அப்படியிருந்தா அது என் குழந்தையோட அதிர்ஷ்டம்னுதான் சொல்லுவேன்.”

அதற்குக் கேசவன் நாயர் சொன்னார்:

“அந்தக் குழந்தை ஒரு ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். நிச்சயம் அதிர்ஷ்டம் உள்ள குழந்தையாத்தான் இருக்கும். நீ அதை நல்லா பார்த்துக்கணும்.”

தொடர்ந்து சில அறிவுரைகளை கேசவன் நாயர் கூறினார். அதன்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்றார் அவர். அவர் சொன்னார்:

“ஒரு விஷயத்தை நீ ஞாபகத்துல வச்சுக்கோ. நீ என்னை சபிச்சா, நான் போற வழியில எனக்கு ஏதாவது கெடுதல் நடக்கும். அது கடைசியில பிறக்கப்போற இந்தக் குழந்தையைத்தான் பாதிக்கும்.”

மேலும் அவர் சொன்னார்:

“சில நேரங்கள்ல மனசுல இருக்குற கவலைகளால் நான் கோபமா நடந்திருப்பேன். அது மனப்பூர்வமா விருப்பப்பட்டு நான் செய்யிறது இல்ல. அதனால ஒரு கெடுதலும் வராது.”

“இல்ல... அது எனக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் அடிக்கடி கோபமா நடக்கக்கூடாதுன்னு நான் சொல்றேன்” பாப்பி அம்மா பரிதாபமான குரலில் சொன்னாள்.

“இனிமேல் நான் கோபப்படமாட்டேன்.”

“இன்னொரு விஷயம்.. நான் சொன்னதையெல்லாம் புரிஞ்சிக்கிட்டே இல்லே? மாசம் பதினஞ்சு ரூபா நான் தருவேன். அவ்வளவுதான் என்னால தர முடியும். மாசத்துல நாலு நாட்கள் நான் வருவேன். பகல் நேரத்துல வர மாட்டேன். நான் இங்கே வர்றதா யார்கிட்டயும் நீ சொல்லக்கூடாது. என்னைக் குறை சொல்லிக்கிட்டு யாராவது வந்தாங்கன்னா, எனக்கு அதைக் கேட்கணும்னு அவசியமில்லைன்னு நீ சொல்லணும். புரியுதா?”

பாப்பி அம்மா அதற்கு ‘உம்’ கொட்டினாள். “வெறுமனே ‘உம்’ கொட்டினா போதாது. நான் சொல்கிறபடி நடக்குறேன்னு வாயைத் திறந்து சொல்லணும்” என்றார் அவர். அவள் வாயைத் திறந்து அதற்கு சம்மதம் சொன்னாள். தொடர்ந்து பாப்பி அம்மா கூறினாள்.

“ஒரு விஷயத்தை நீங்க ஞாபகத்துல வச்சிருக்கணும். என் குழந்தைக்கு தகப்பன் இருக்கணும். கொடுக்குறதும் வாங்குறதும் அவங்கவங்க கையில இருக்குறதைப் பொறுத்தது. அது ஒரு பிரச்சினையே இல்ல. அந்தக் குழந்தை பிறக்குறதுக்குக் காரணமா இருக்கும் ஆளை அவன் ‘அப்பா’ன்னு கூப்பிடணும். அது மட்டும்தான் நான் விரும்புறது.”

பிறகு கார்த்தியாயினி அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து ஒரு சம்பவத்தைச் சொன்னாள். அது அதற்கு முந்தைய நாள் நடைபெற்ற ஒன்று. அவள் கடைக்குப் போயிருந்தாள். அப்போது அங்கு பாச்சு பிள்ளை உட்கார்ந்திருந்தார். என்ன இருந்தாலும் அவர் கார்த்தியாயினிக்குத் தந்தை ஆயிற்றே! அந்தக் குழந்தை, “அப்பா, எனக்கு ஒரு சக்கரம் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) தாங்க” என்றிருக்கிறாள். அப்போது கடையில் நிறைய ஆட்கள் இருந்திருக்கிறார்கள். பாச்சு பிள்ளை புலியைப் போல பாய்ந்து ஓடி வந்திருக்கிறார். “யாருடி உன் அப்பா?” என்று கேட்டவாறு, அவளுக்கு ஐந்தாறு அடிகள் தந்திருக்கிறார்.

“குழந்தை வாய்விட்டு அழுதுகிட்டே வந்தா. அவள் விருப்பப்பட்டு ‘அப்பா’ன்னு கூப்பிட்டிருக்கிறா. பிறகு என்னைப் பார்த்து அவ கேட்டா, ‘அவருதானேம்மா என் அப்பா’ன்னு அதைக் கேட்டு என் இதயமே வெடிச்சுப் போறது மாதிரி ஆயிடுச்சு. எதுவுமே தரலைன்னாக்கூட, குழந்தைகளுக்கு அப்பான்னு ஒரு ஆளு இருக்கணும்.”

கேசவன் நாயர் அந்த விஷயத்தில் பாப்பி அம்மா சொன்னதை முழுமையாக ஒப்புக் கொண்டார். குழந்தைகளுக்கு ‘அப்பா’ என்று அழைக்க ஒரு மனிதர் கட்டாயம் வேண்டும்தான். அந்த வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு இந்த விஷயத்தில் எந்தவொரு பிரச்சினையும் இருக்கப் போவதில்லை.

“அது என் குழந்தை. அதோட அப்பன் நான். அந்த எருமை பாச்சுப் பிள்ளையைப் போல நானும் இருப்பேன்னு நீ நினைச்சியா?”

அவர்களுக்குள் சமாதானம் உண்டாகிவிட்டது. கருத்து வேறுபாடு என்று கூறுவதற்கு அவர்களுக்கிடையே ஒரு விஷயம்கூட இல்லை. தொடர்ந்து அந்த அறைக்குள் படு அமைதி நிலவியது. பொழுது விடியும் நேரத்தில், அந்தக் கதவு ‘கிர்’ என்ற ஓசையுடன் திறந்தது. அவர் வீட்டை விட்டு வெளியேறி நடந்தார்.

நாட்கள் பல கடந்தன. குட்டன் பிள்ளை அவ்வப்போது பாப்பி அம்மாவுக்காக நோட்டீஸ் அனுப்பிய வக்கிலீன் அலுவலகத்திற்கு செல்வார். நோட்டீஸிற்குப் பதில் எதுவும் வரவில்லை. குறிப்பிட்ட நாளும் கடந்துவிட்டது. இனியொரு முறை நோட்டீஸ் அனுப்புவதற்கு வழியிருக்கிறது. அவர் தன் மனைவியிடம் கேட்டார்.

“அடியே, இனி அந்த வழக்கைத் தொடர வேண்டாமா?”

அந்த அளவிற்கு குட்டி அம்மாவிடம் ஆர்வம் இல்லை. எனினும் ‘வேண்டாம்’ என்று குட்டி அம்மா கூறவில்லை.

“எல்லார்கிட்டயும் கேட்டுப் பார்க்குறேன். எல்லாரும் சேர்ந்து தானே பணம் தயார் பண்ணணும்.”


குட்டன் பிள்ளை சொன்னார்.

“அந்த ஆளு பதில் எதுவும் அனுப்பல. அவ்வளவு பெரிய விஷயமா அதை அந்த ஆளு எடுக்கலைன்னு நினைக்கிறேன்.”

இப்போது குட்டன் பிள்ளையின் மனதிலும் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. கேசவன் நாயரிடம் அந்த நோட்டீஸ் கிடைத்திருக்கக்கூடாது என்று அவர் நினைத்தார். இன்னொரு சந்தேகமும் அவருக்கு இருந்தது. நோட்டீஸில் இருந்த கடுமை போதாதோ என்று அவர் நினைத்தார். நோட்டீஸ் வரப்போகிறது என்பது தெரிந்ததும் ஓடி ஒளிந்து கொண்டிருந்த ஒரு ஆள், நோட்டீஸ் கையில் கிடைத்தவுடன் எந்தவித பயமும் இல்லாமல் எல்லா இடங்களிலும் நடந்து திரிகிறார் என்றால்...? அந்த ஆளுக்கு இருந்த பயம் முற்றிலுமாகப் போய்விட்டது என்றுதானே அர்த்தம்! ஒரு சிறிய தோல்வி தனக்கு உண்டாகிவிட்டது என்றே குட்டன்பிள்ளை நினைத்தார். மூன்று நான்கு தடவைகள் கேசவன் நாயர் மார்பை நிமிர்த்தி வைத்துக்கொண்டு குட்டன் பிள்ளைக்கு முன்னால் கம்பீரமாக நடந்து போனார். அவருடைய அந்த நடையில் வெற்றி பெற்று விட்டோம் என்ற கர்வம் தெரிந்தது.

பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாரும் அம்மும்மாவின் வீட்டு வாசலிலிருந்த மாமரத்திற்குக் கீழே மதிய உணவு சாப்பிட்டு முடித்து பேன் எடுப்பதற்காகக் கூடியிருந்தார்கள். குட்டி அம்மா கடைசியில் போனாள். அவள் போனவுடன் கேட்டாள்.

“வழக்குப் போட வேண்டாமான்னு வாசுவோட அப்பா கேட்டாரு.”

சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை. பேன்களை விரலால் நசுக்கும்போது ‘ஸ்’ என்ற சத்தம் மட்டுமே அங்கு கேட்டது. குட்டி அம்மா தொடர்ந்து கேட்டாள்.

“என்ன யாரும் எதுவும் பேசாமல் இருக்கீங்க?”

“யாரிடம் என்றில்லாமல் காளியம்மா சொன்னாள்.

“சமீப காலமா ஒரு நேரம் அங்கு சமையல் நடக்குதுன்னு நினைக்கிறேன். நேற்று நான் அங்கு போயிருந்தப்போ, அரிசி அடுப்புல கொதிச்சிக்கிட்டு இருந்துச்சு. கப்பை வேக வச்சிருந்தா. மீனும் இருந்துச்சு.”

அப்போது பாரு அம்மா சொன்னாள்.

“நாலஞ்சு நாட்களுக்கு முன்னாடி மதிய நேரம் அந்தப் பெண் குழந்தை சோறு சாப்பிடுறதை நானே பார்த்தேன்.”

அம்மும்மா சொன்னாள்.

“கேடு கெட்ட பிறவிகள். இப்போ யாராவது வந்து சேர்ந்திருப்பாங்க.”

“அய்யோ, என் அம்மாவே! வயிறைத் தள்ளிக்கிட்டு இருக்குறப்பவா?”

“அவளுக்கேத்த ஒரு ஆளு கிடைக்காமலா போகப் போறான்?”

“அதுக்காக?”

குட்டி அம்மாவிற்குத் தெரிய வேண்டியது அதுவல்ல. வழக்கை நடத்த வேண்டுமா வேண்டாமா என்பதுதான் அவளுக்குத் தெரிய வேண்டிய விஷயம்.

“எல்லாரையும் அந்த ஆளு அவமானப்படுத்திவிட்டதாக வாசுவோட அப்பா சொல்றாரு. அந்த ஆளு இப்போ பந்தாவா நடந்து திரியிறாரு. அந்த ஆளு எங்கே தன்னைப் பார்த்து ஏதாவது கேட்டுருவாரோன்னு அவர் பயப்படுறாரு.”

அதற்கு அலட்சியமான குரலில் காளியம்மா சொன்னாள்.

“அப்படின்னா வழக்கை நடத்த வேண்டியதுதான்.”

பாரு அம்மா கூற விரும்பியதும் அதுதான்.

“சும்மா இருந்துக்கிட்டு மனிதர்களைப் பாடாய்ப் படுத்தி வெட்கம் கெட்டத்தனமா நடக்குறது சரியா என்ன?”

நாணியம்மாவுக்கும் அந்தக் கருத்து இல்லாமல் வேறு மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால், ஒரு விஷயம்.”

“நமக்கெதுக்கு இப்படியொரு அக்கறை. இப்படி நடக்குற ஆம்பளைங்களுக்குப் பாடம் சொல்லித்தர நாம நினைக்கிறோம். அதே நேரத்துல பொம்பளைகளும் ஒழுங்கா இருக்கணும்ல.”

இப்படிப் பல விஷயங்களைப் பற்றியும் அவர்கள் சிந்தித்தார்கள். முதல் தடவையாக வசூலித்த பணத்திற்கான கணக்கை குட்டி அம்மா சொன்னாள். அந்தப் பணம் சேர்ந்ததில் குட்டி அம்மாவின் பங்கும் இருந்தது. எல்லா செலவுகளும் போக மீதம் நான்கு ரூபாய் இருந்தது. கணக்கை சொன்னபோது சிலரின் நெற்றி சுருங்கியது. ஏனென்றால், ஒருமுறை ஆலப்புழைக்கு செல்வதற்கு ஒன்றரை ரூபாய் செலவு வரும். இப்படி குட்டன் பிள்ளை மூன்று தடவைகள் போயிருக்கிறார். அந்தக் கணக்கில் குட்டி அம்மா பணம் போட்ட கணக்கு வரவில்லை.

4

தற்கிடையில் கேசவன் நாயர் பாரு அம்மாவின் கணவனிடம் ஒருநாள் சொன்னார்:

“அவள் வழக்குப் போடுறதா இருந்தா போடட்டும். ஆனா, அவள் அப்படி செய்யிற மாதிரி தெரியல.”

அதில் ஏதோ அர்த்தம் இருக்கறது என்று பப்பு நாயர் நினைத்தார். பாப்பி அம்மா வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை என்ற விஷயத்தைப் பற்றி அவர் உறுதியாக இருப்பதை பப்பு நாயரால் உணர முடிந்தது. அப்படியென்றால் அதில் ஏதோ விஷயம் இருக்கிறது.

மனைவிமார்களும் கணவன்மார்களும் அடங்கியிருந்த ஒரு கூட்டத்தில் இந்த விஷயம் சிந்தனைக்கு வந்தது.

பப்பு நாயர் தீவிரமாக ஒரு அறிவாளித்தனமான கேள்வியைக் கேட்டார்.

“நீங்க யாராவது அந்தப் பெண்கிட்ட அவளுக்கு வழக்குத் தொடுக்க விருப்பம் இருக்கான்னு கேட்டீங்களா?”

உடனே அந்தக் கேள்விக்குப் பதில் வரவில்லை. அப்போது குட்டன்பிள்ளை இருந்த பக்கம் பப்பு நாயர் திரும்பினார்.

“என்ன குட்டன் பிள்ளை, வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்கள் நல்லா தெரிஞ்சிருந்தும், இப்படியொரு தவறு எப்படி நடந்துச்சு?”

குட்டன்பிள்ளை சிறிது பதுங்கினார். பப்பு நாயர் அவரை விடவில்லை.

“வாதி வழக்கு போட சம்மதிச்சாளா? வாதியோட சம்மதமே இல்லாம எப்படி வழக்குப் போட முடியும்?”

குட்டன்பிள்ளை குற்றத்தைப் பெண்கள் மீது சுமத்தினார்.

“இவங்கதான் வழக்குப் போடணும்னு சொன்னாங்க. நான் வக்கீலைப் பார்த்தேன். நோட்டீஸ் கொடுக்க வச்சேன்.”

தொடர்ந்து குட்டன்பிள்ளை பெண்கள் பக்கம் திரும்பினார்.

“நீங்க யாரும் கேட்கலையா?”

“நான் கேட்கல” என்று எல்லாரும் சொன்னார்கள். குட்டன் பிள்ளையின் முகமே அதைக்கேட்டு மாறிவிட்டது. இல்லாவிட்டால் அவன் தன் முகத்தில் தெரிந்த உணர்ச்சி வெளிப்பாட்டை மாற்றிக் கொண்டார்.

“நீங்க சும்மா இருந்தவங்களை அசிங்கம் பண்ணிட்டீங்களே” வெட்கக்கேடான விஷயமா இருக்கே இது?”

பிறகு அவர் ஒரு சட்ட சம்பந்தமான விஷயத்தை சொன்னார். அந்தப் பெண் நோட்டீஸ் அனுப்பச் சொல்லி கேட்டுக் கொள்ளவேயில்லை என்று வக்கீலுக்கு நோட்டீஸ் அனுப்பினால், தான் தலைகுனிந்து நிற்பதைத் தவிர வேறு வழியே இல்லை” என்றார் அவர். “அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை வந்தால், தான் எப்படி இனிமேல் ஆலப்புழைக்குப் போக முடியும்” என்றார் அவர்.

பப்பு நாயரைப் பார்த்து சிரித்தவாறு அவர் சொன்னார்:

“வாய் திறக்க வேண்டாம். இந்த விஷயத்தைப் பற்றி வெளியே வாய் திறக்க வேண்டாம். அந்த ஆளுக்கு இந்த விஷயம் தெரிஞ்சிருச்சுன்னா, அவ்வளவுதான்... வெளியே இது தெரியாம இருக்குறதே நல்லது.”

பெண்களும் குட்டன் பிள்ளையும் தலைகுனிந்து நின்றிருந்தார்கள். பாரு அம்மா சொன்னாள்.


“அப்படின்னா வழக்குப் போட வேண்டாம். நாம ஏன் அதுக்காகப் பணத்தை செலவழிக்கணும்?”

“அதுதான் சரி” குட்டி அம்மாவைத் தவிர, மற்ற எல்லாப் பெண்களும் கூறினார்கள். குட்டன் பிள்ளையைப் பொறுத்தவரையில் அந்த வழக்கு மூலம் அவருக்குச் சிறிது லாபம் இருந்தது. அது மட்டுமல்ல, மீதமிருக்கும் மூன்று ரூபாயை அவர் உடனடியாகத் தயார் பண்ணியாக வேண்டும். குட்டன்பிள்ளை சொன்னார்.

“அதுக்காக இந்த வழக்கை இப்படியே விட்டுட முடியுமா? நான் ஆப்புல மாட்டிக்கிட்டு தவிக்கிறேன். என் வக்கீலுக்கு கெட்டப் பெயர் உண்டாக நான் சம்மதிக்க மாட்டேன்.”

அவர் சொல்வது சரிதான் என்பதை பப்பு நாயரும் ஒப்புக் கொண்டார். உண்டான தவறுக்குள்ளிருந்து தலையை வெளியே எடுத்தே ஆகவேண்டும்.

காளியம்மா கோபத்துடன் கேட்டாள்.

“அதுக்கு நாங்க இனியும் எவ்வளவு பணம் தரணும்?”

குட்டி அம்மா சிலுப்பிக் கொண்டு சொன்னாள்.

“நாங்க மட்டுமா இந்த விஷயத்தைத் தலையில் தூக்கி வச்சோம்?”

“நாங்களா தூக்கி வச்சோம்?”

அந்தப் பெண்களுக்கிடையே ஒரு சண்டை உண்டாகும் நிலையில் இருந்தது. பப்பு நாயர் இடையில் புகுந்து சொன்னார்.

“நீங்க சண்டை போட வேண்டாம். இந்தத் தவறு யாரோட தப்பாலும் நடக்கலை. எப்படியோ அது நடந்திடுச்சு. நாம அதையும் இதையும் சொல்லி சண்டை போடுறதுனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. நாம நடக்க வேண்டியதைப் பார்ப்போம்.”

எது எப்படியோ வழக்கு நடத்துவது என்பது இல்லை என்றாகிவிட்டது. ஒருவிதத்தில் நல்லதுதான் என்று எல்லாருமே நினைத்தார்கள். இல்லாவிட்டால் நீண்ட நாட்களுக்குத் தேவையில்லாமல் பணத்தை செலவழிக்க வேண்டியது வரும். “உண்டான பிரச்சினையிலிருந்து தலையை வெளியே எடுக்க இனியும் ஆறு ரூபாய் வேண்டும்” என்றார் குட்டன்பிள்ளை. அதை அவர்கள் எல்லாரும் சேர்ந்துதான் போட்டாக வேண்டும். அதாவது ஒவ்வொருவரும் ஒன்றரை ரூபாய் போட வேண்டும். எல்லாம் முடிந்ததும் பாரு அம்மாவும் காளியம்மாவும் நாணியம்மாவும் தங்களைத் தாங்களே திட்டிக் கொண்டார்கள். தேவையில்லாமல் ஒரு சுமையைத் தங்கள் தலை மீது தாங்களே தூக்கி வைத்துக் கொண்டதாக அவர்கள் நினைத்தார்கள். சாப்பிடாமல், தின்னாமல் கையிலிருந்த பணம் கொஞ்சம் செலவாகிவிட்டது. அவர்களுடைய கணவன்மார்கள் அவர்கள் மீது கோபத்தைக் காட்டினார்கள்.

எனினும், விஷயத்தை அத்துடன் விட்டுவிடுவதில் யாருக்கும் சிறிதும் மனமில்லை. பாப்பி அம்மா வழக்குத் தொடுக்கப் போவதில்லை என்று கேசவன் நாயர் தைரியமாக சொல்லித் திரிந்த விஷயத்தை எல்லாரும் தெரிந்து கொள்ள நினைத்தார்கள். குட்டன் பிள்ளையும் குட்டி அம்மாவும் இந்த விஷயத்தில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். பாப்பி அம்மாவைப் பார்த்துக் கேட்டு விட வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள்.

மனதில் உறுதியாக முடிவெடுத்துக்கொண்டு அந்த விஷயத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான்கு பேர்களும் தடத்தில் வீட்டுக்கு சென்றார்கள். அவர்களுடைய முக வெளிப்பாடுகளைப் பார்க்கும்போதே அவர்கள் எதையோ கேட்பதற்குத்தான் அங்கு செல்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால், பாப்பி அம்மாவுக்குத்தான் எதுவுமே தெரியவில்லை. அவள் அப்போது தேங்காயை உரித்துக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டிலுள்ள நான்கு பெண்களும் தன்னைத் தேடி வீட்டிற்கு வந்திருக்கும் போது, ‘எதற்காக வந்திருக்கீங்க?’ என்று கேட்பது அவ்வளவு நல்லதாக இருக்காதே. அந்தப் பெண்கள் அனைவரும் முகத்தை ஒரு மாதிரி விறைப்பாக வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். பாப்பி அம்மா அவர்களைப் பார்த்து சொன்னாள். “மேற்கு வீட்டுல இருந்து வாங்கின தேங்காய் ரொம்பவும் முற்றிப் போய் இருக்கு. அடிச்சாக்கூட உரிய மாட்டேங்குது. நெஞ்சே வெடிச்சுடும்போல இருக்கு.”

ஏதோ பேச வேண்டும் என்பதற்காக அவள் பேசியதைப் போல் இருந்தது. அந்தத் தேங்காய் முற்றிப் போய் இருப்பதைப் பற்றி அவர்கள் எந்தக் கருத்தையும் கூறவில்லை. அப்போதும் அந்தப் பெண்கள் முகத்தை ‘உர்’ரென்று வைத்துக் கொண்டுதான் நின்றிருந்தார்கள். கேட்க வேண்டிய விஷயம் என்னவென்று அவர்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும். ஆனால், அந்தக் கேள்வியை எப்படி ஆரம்பிப்பது என்பதுதான் அவர்களுக்குத் தெரியவில்லை. என்ன கேட்க வேண்டும். யார் கேட்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்குப் பிரச்சினையாக இருந்தது. யாராவது ஒரு கேள்வியை ஆரம்பித்தால் போதும் என்றிருந்தது அவர்களுக்கு. அதற்குப்பிறகு கேள்விகள் அடுத்தடுத்து புறப்பட்டு வந்துவிடும். இப்படியே நேரம் சிறிது போய்க் கொண்டிருக்க, பாப்பி அம்மாவே மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

“சாப்பிட்டாச்சா?”

“ம்...”

ஒரு ‘உம்’ கொட்டல். யார் ‘உம்’ கொட்டியது என்பது தெரியவில்லை. நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.

கயிறு பிரிப்பதற்கிடையில் பாப்பி அம்மா கேட்டாள்.

“என்ன, யாரும் எதுவும் பேசாம நின்னுக்கிட்டே இருக்கீங்க?”

என்னவோ விஷயம் இருக்கிறது என்பது மட்டும் பாப்பி அம்மாவிற்குப் புரிந்தது. எதைப் பற்றியதாக அவர்கள் வந்த விஷயம் இருக்கும் என்பதைக்கூட அவளால் கணிக்க முடிந்தது. குட்டி அம்மா தான் பூனைக்கு மணியைக் கட்டினாள்.

“நாங்க ஒரு விஷயத்தைத் தெரிஞ்சிக்கிறதுக்காக வந்திருக்கோம்” என்று அவள் சொன்னாள். அது என்ன என்று கேட்பது மாதிரி பாப்பி அம்மா தன் தலையை உயர்த்திப் பார்த்தாள். இனி கேட்கப் போவது ஒரு நீளமான கேள்வி. அதைக் கேட்பதற்கு சிறிது நேரத்திற்கு யாராலும் முடியவில்லை. பாப்பி அம்மா கேட்டாள்.

“என்ன?”

குட்டி அம்மா விஷயத்தை ஆரம்பித்தாள். கேசவன் நாயர் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு வீட்டை விட்டுப் போனதையும் அதற்குப் பிறகு அவளுடைய கஷ்டங்களை மனதில் நினைத்து கேசவன் நாயருக்கு ஒரு நல்ல பாடம் கற்றுத் தர வேண்டும் என்று வழக்குத் தொடுக்க எல்லாரும் முடிவெடுத்து பணம் சேர்த்ததையும் அவள் சொன்னாள்.

நாணியம்மா அதை முடிவுக்குக் கொண்டு வந்தாள்.

“நாங்க அப்படியொண்ணும் பணக்காரங்க இல்ல. உன்னைப் போல உள்ளவங்கத்தான் நாங்களும். ஆனா, எங்க வீட்டு ஆம்பளைங்க விஷயத்தைத் தெரிஞ்சு பணம் தந்தாங்க. உன் கஷ்டங்களை எங்களால பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியல.”

வந்த விஷயம் முடிந்துவிட்டது. எனினும், ஏதோவொன்று பாக்கி இருந்தது. ஒரே ஒரு கேள்விதான் அவர்கள் அவளைப் பார்த்துக் கேட்க நினைத்தது. அதற்கான பதில்தான் அவர்களுக்குத் தெரிய வேண்டும். அந்தக் கேள்வியைத்தான் எப்படிக் கேட்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. பாப்பி அம்மா சொன்னாள்.

“எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இருக்குறது என் பக்கத்து வீட்டைச் சேர்ந்த நீங்கதான். உங்களைத் தவிர எங்களுக்கு வேற யாருமே இல்ல.”


பத்மநாபன் வளர்ந்ததையும், கடும் பட்டினிக்கு மத்தியில் கார்த்தியாயினி வளர்வதையும், ஒரு நேரமாவது அரிசி போட்ட நீரைக் குடிப்பதையும் அவள் நன்றியுடன் நினைத்துப் பார்த்தாள். அந்தப் பெண்களுக்குத் தெரிய வேண்டியது அது அல்லவே.

காளியம்மாவின் நாக்கில் அந்தக் கேள்வி பிறந்தது.

“வழக்குத் தொடுக்க உனக்கு விருப்பமிருக்கான்னு தெரிஞ்சுக்கிறதுக்குத்தான் நாங்க வந்தோம். அதுக்கு நீ பதில் சொல்லணும்.”

இதைக் கூறிவிட்டு காளியம்மா மற்றவர்களைப் பார்த்து கண்களை சிமிட்டினாள். பாப்பி அம்மா அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை.

காளியம்மா கேட்டாள்:

“என்ன எதுவும் பேசாம அமைதியா இருக்கே?”

தேங்காயை ஒரு கொம்பால் அடித்துக் கொண்டிருந்த பாப்பி அம்மா சொன்னாள்:

“வழக்குப் போடுறதுக்கான வசதி எனக்கு இல்ல. என் வழக்கெல்லாம் கடவுள் கூடத்தான். கோர்ட்டுக்குப் போக எல்லாம் என்னால் முடியாது.”

“அதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நாங்க அதுக்குத் தேவையான பண விஷயத்தைப் பார்த்துக்குறோம். வழக்கு நடத்துறதுக்கும் ஆள் இருக்கு. நீதான் வழக்குத் தொடுத்ததுன்னு வெளியே தெரிஞ்சா போதும். நின்ன நிலையில் இருந்து கொஞ்சமும் மாறக்கூடாது.”

பாப்பி அம்மாவிற்கு வழக்கைப் பற்றி சிறிது தெரியும்போல் இருக்கிறது. அவள் சொன்னாள்:

“வழக்குத் தொடுக்கிறதா இருந்தா கோர்ட்டுக்குப் போகணும். சமீபத்துல மாராம் மடத்துக்காரரு வாக்குமூலம் கொடுக்குறதுக்காக கோர்ட்டுக்குப் போனாரு. எனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது.”

அந்தப் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குத் தெரிய வேண்டியது அதுவல்ல. அவர்களுக்கு ஒரு பதில் கிடைத்தாக வேண்டும். ஒரே வார்த்தையில் அதை சொன்னால்கூட போதும். வழக்குத் தொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வேண்டாம் என்பதே அது.

பாப்பி அம்மா வேறொரு கேள்வி கேட்டாள்:

“இனி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? நீங்கதான் சிந்திச்சுப் பார்க்கணும்.”

சிறிது பதைபதைப்புடன் நாணியம்மா சொன்னாள்.

“அவள் என்ன சொல்றான்னு ஒங்களுக்குப் புரியுதா பெண்களே? நீங்களே சிந்திச்சுப் பாருங்கன்னு சொல்றான்னா அவளால முடியலைன்னு அர்த்தம்.”

அதற்கு எந்த விளக்கமும் பதிலும் பாப்பி அம்மா தரவில்லை. அந்த மவுனத்தை பதிலாக அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். குட்டி அம்மா கேட்டாள்.

“அப்படின்னா உனக்கு கேசவன் நாயர் இருந்தா போதும். நாங்க தேவையில்லையா?”

பாப்பி அம்மா அடிக்கப்பட்ட தேங்காயை வெயிலில் பரப்பியவாறு சொன்னாள்.

“எனக்கு எல்லாரும் வேணும்.”

“கேசவன் நாயரும்?”

அதற்கு பதில் இல்லை.

“கேக்குறதுக்கு பதில் சொல்லு, பெண்ணே.”

“என் குழந்தைக்குத் தகப்பன் வேணும். என் மகளுக்கு அப்பா இல்ல. அப்பான்னு கூப்பிட்டதுக்கு அந்தப் பாவி அவளை அடிச்சிட்டான். இந்தக் குழந்தைக்கு அப்படியொரு நிலைமை வரக்கூடாது. எதுவுமே தரலைன்னாக்கூட பரவாயில்ல. தகப்பன்னு ஒரு ஆள் இருக்காருல்ல.”

நாணியம்மா சொன்னாள்:

“அப்படி தகப்பனா இருக்கணும்றதுக்காகத்தான் வழக்கே போடுறது. வழக்குப் போடலைன்னா அந்த ஆளும் பாச்சு பிள்ளையைப் போல அப்பன் இல்லைன்னு சொன்னாலும் சொல்லலாம்.”

பாரு அம்மா சொன்னாள்: “நீங்க ஏன் அவளைக் கட்டாயப்படுத்துறீங்க? அவளுக்கு மனசில்ல...”

பாப்பி அம்மா ஒரு விளக்கம் கூற நினைத்தாள்: “நான் வழக்குத் தொடுத்தா அந்த மனிதர் கோர்ட்டுல போய் சொல்வாரு, தான் இந்த குழந்தைக்குத் தகப்பன் இல்லைன்னு. நான் என்ன செய்யிறது? உண்மை எதுன்னு கோர்ட்டுக்கு எப்படித் தெரியும்? பாச்சு பிள்ளை விஷயத்தை இவரே சொல்வாரு. அப்போ இவர் குழந்தையோட அப்பன் இல்லைன்ற முடிவுக்குக் கோர்ட்டு வந்துட்டா என்ன செய்யிறது? அந்த பயம்தான் எனக்கு?”

அதைக்கேட்டு அந்தப் பெண்களுக்கு வார்த்தையே வரவில்லை. எப்படி உண்மையை நிரூபிக்க முடியும்? வழக்கைப் பற்றி தெளிவாகப் பேசுகிறாள். அவள். ஆனால், வழக்கைப் பற்றிய விஷயங்களை நன்கு அறிந்த குட்டன்பிள்ளையுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் குட்டி அம்மா வேகமாக முன்னால் வந்து சொன்னாள்: “அடியே, அடியே... நீ வழக்கைப் பற்றி படிக்கலையாடி? இவ சொல்றது வாசுவோட அப்பா சொல்ற மாதிரியே இருக்கு. அப்படியாவது பொய் வெளியே வரட்டும். இது எல்லாமே அந்த ஆளு சொல்லித் தந்தது. அந்தக் கேசவன் நாயர்....”

தொடர்ந்து குட்டி அம்மா மற்றவர்களிடம் சொன்னாள்: “நாம அவளுக்கு நல்லது செய்யணும்னு நினைச்சு வழக்கு நடத்த பெரிய பாத்திரத்துல நீர் நிறைக்கிறப்போ, இவ அந்த ஆளுகூட பிரியமா இருந்திருக்கா.”

அதற்கு இல்லை என்றோ, ஆமாம் என்றோ எதுவும் பாப்பி அம்மா கூறவில்லை. குட்டி அம்மா கோபம் உண்டாக சொன்னாள்: “இவ நாம நினைச்ச மாதிரி இல்ல. திருடி... சரியான திருடி! யார் பார்த்தாலும் இவளை பாவம்னு நினைப்பாங்க. இவளோட உண்மையான மனசை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு வெளைஞ்சவ இவ... சும்மாவாடி இப்படி ஆனே?”

நாணியம்மா இடையில் புகுந்து சொன்னாள்: “ச்சே.. தேவையில்லாம நாம ஏன் கண்டதையெல்லாம் பேசணும்? இவ தன்னோட வாழ்க்கையைப் பார்த்துக்கட்டும். நாம நம்ம வாழ்க்கையைப் பார்ப்போம்.”

அதுதான் சரி என்று குட்டி அம்மாவைத் தவிர, மற்ற எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். குட்டி அம்மாவிற்கு மட்டும் ஆத்திரம் சிறிதும் குறையவில்லை. அவள் சொன்னாள். “பாரு, இனிமேல் உனக்குப் பக்கத்து வீட்டுக்காரங்கன்னு யாருமே இல்ல. இப்போ குழந்தையைப் பெத்தெடுப்பே இல்ல... அப்போ ஒருத்தர்கூட திரும்பி உன்னைப் பார்க்க மாட்டாங்க. உன் ஆம்பளை உனக்கு உதவட்டும்...”

“எனக்கு எல்லாரும் வேணும். நீங்களும் வேணும், என் குழந்தைக்குத் தகப்பனும் வேணும். குட்டி அக்கா என் மேல எதுக்காகக் கோபப்படுறீங்க?”

இதுதான் பாப்பி அம்மாவின் நிலை. அதற்குப் பிறகும் ஆத்திரத்துடன் வாய்க்கு வந்தபடி குட்டி அம்மா என்னென்னவோ சொன்னாள். ஒரு பயங்கரமான சதி வேலை அது என்று அவர்கள் எல்லாருமே கூறினார்கள். உண்மையிலேயே பாப்பி அம்மா என்ன செய்வாள்? பக்கத்து வீட்டுக்காரர்கள் அவளிடம் பிணக்கம் கொண்டார்கள்.

“வாங்க, பெண்களே” என்று அழைத்துக்கொண்டு குட்டி அம்மா நடந்தாள். அவளுக்குப் பின்னால் எல்லாரும் சென்றார்கள்.

5

ல்ல இருட்டும் சாரல் மழையும் உள்ள ஒரு இரவு நேரம். நள்ளிரவு நேரம் இருக்கும். பாப்பி அம்மாவுக்குப் பிரசவ வலி ஆரம்பமானது. பதினைந்து நாட்களுக்கு முன்னால் கேசவன் நாயரிடம் பாப்பி அம்மா கிட்டத்தட்ட பிரசவம் என்று நடக்கும் என்று கூறியிருந்தாள். அதற்குப் பிறகு அவர் திரும்பி வரவேயில்லை.

முன்பு உண்டான இரண்டு பிரசவங்களின் போதும் இந்த அளவிற்கு வலியை பாப்பி அம்மா அனுபவித்ததில்லை.


இப்போது அவளாலேயே தாங்க முடியவில்லை. ஒருவேளை முன்பு இப்போது இருப்பதை விட அவளுடைய வயது குறைவாக இருந்தது காரணமாக இருக்கலாம். இல்லாவிட்டால் இந்த அளவிற்கு உடல் பலவீனமில்லாமல் இருந்திருக்கலாம். எது எப்படியோ பாப்பி அம்மாவால் வலியைத் தாங்க முடியவில்லை. அதற்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது. வெறுமனே முனகல் என்று கூறுவதைவிட அவள் வாய்விட்டு அழுதாள் என்பதே உண்மை. அந்த அழுகையைக் கேட்டு கார்த்தியாயினி விழித்துவிட்டாள்.

அவள் கேட்டாள்.

“என்னம்மா?”

அந்தத் தாய் சொன்னாள்.

“அம்மா நான் சாகப் போறேன், மகளே.”

கார்த்தியாயினி எழுந்து தன் தாயைக் கையால் தேடினாள். விளக்கில் மண்ணெண்ணெய் இல்லை. அன்றிரவு திரி எரிந்து கருகி விளக்கு அணைந்துவிட்டிருந்தது.

கார்த்தியாயினி கையால் தடவிக்கொண்டே கதவைத் திறந்தாள். கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு பாப்பி அம்மா கேட்டாள்.

“நீ எங்கே போற மகளே?”

கார்த்தியாயினி அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை.

“என் மகளே, இந்த இருட்டு நேரத்துல எங்கேயும் நீ போக வேண்டாம். மழை பெய்துக்கிட்டு இருக்கு, மகளே.”

ஆனால், அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. அவள் பாரு அம்மாவின் வீட்டிற்கு சென்றாள். அங்கு எல்லாரும் நல்ல உறக்கத்தில் இருந்தார்கள். கார்த்தியாயினி அங்கு போய் அவர்களை எழுப்பினாள்.

பாரு அம்மாவிற்கு என்ன விஷயம் என்பது புரிந்துவிட்டது. அவள் வெளியே வந்து நடந்தபோது, வீட்டில் விளக்கு இல்லை என்ற விஷயத்தை கார்த்தியாயினி சொன்னாள். பாரு அம்மா திரும்பவும் வீட்டிற்குள் செல்ல தயங்கினாள். அது ஒரு நல்ல சகுனம் அல்ல. அவள் பாப்பி அம்மாவைக் குறை சொன்னாள்.

“கண்டவனையெல்லாம்... நான் இப்போ ஒண்ணும் சொல்லல. இருந்தாலும் ஒரு விளக்கையாவது ஒழுங்கா வச்சிருக்கக்கூடாதா? பத்து மாசம் ஆச்சுன்னா பிள்ளை பிறக்கும்னு தெரியாதா? இதுக்கு முன்னாடி ரெண்டு புள்ளங்களை அவ பெத்தவதானே?”

பாரு அம்மா தன் மகள் பங்கஜாக்ஷியை எழுப்பி ஒரு விளக்கை எரிய வைத்துக்கொண்டு வரச் செய்தாள்.

அந்த விளக்கினால் தடத்தில் வீட்டில் வெளிச்சம் உண்டானது. பாப்பி அம்மா வலி பொறுக்க முடியாமல் கத்தினாள். அந்த அளவிற்குக் கஷ்டம் நிறைந்த ஒரு பிரசவத்தைப் பாரு அம்மா பார்த்ததில்லை. உண்மையில் சொல்லப்போனால் அவளுக்கே ஒருவித பயம் உண்டானது.

“என் பாப்பியே, கொஞ்சம் அமைதியா இரு. நாம இந்த மாதிரியான பிரசவ வலியைத்தான் அனுபவிச்சிருக்கோமே!”

அப்படி சொல்லித் தேற்ற மட்டுமே பாரு அம்மாவால் முடிந்தது.

“நீ கடவுளைக் கும்பிடு.. பிரசவம் நல்லா நடக்கணும்னு சொல்லி..”

கார்த்தியாயினியும் அழத் தொடங்கினாள்.

அப்போது குட்டி அம்மா அங்கு வந்தாள். அவள் வெளியே வந்தபோது தடத்தில் வீட்டிலிருந்து வந்த அழுகை சத்தம் காதில் விழுந்தது. அவ்வளவுதான். அடுத்த நிமிடம் அவள் அங்கு வந்துவிட்டாள். சிறிதும் தாமதமாகாமல் நாணியம்மாவும் காளியம்மாவும் கூட அங்கு வந்தவிட்டார்கள். அந்த நான்கு பக்கத்து வீட்டுப் பெண்களும் தங்களுக்குள் என்னவோ மெதுவான குரலில் பேசிக் கொண்டார்கள். பிரசவம் சற்று கடினமானது தான் என்று அவர்கள் எல்லாருக்குமே தோன்றியது. கைதயில் மரியப்பெண் பிள்ளையை அழைக்க வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தார்கள். அந்த நள்ளிரவு நேரத்தில் யார் போய் அவளை அழைப்பது?

குட்டி அம்மா கேசவன் நாயரை வாய்க்கு வந்தபடி திட்டினாள்.

“அந்த மகாபாவி இந்தப் பாவம் பிடிச்சவளை ஏமாத்திட்டுப் போயிட்டான். இப்படிப்பட்டவன் தலையில இடி விழணும்?”

நாணியம்மா பக்குவப்பட்ட குரலில் கூறினாள்:

“அதை சொல்றதுக்கு இதுவா நேரம்? நாம இப்போ மரியப் பெண் பிள்ளையை இங்கே வர வைக்கிறதுக்கு வழியைப் பார்க்கணும்.”

அதன்மூலம் ஒரு காட்சி வளராமல் முடிந்தது.

பாரு அம்மாவின் கணவர் ஊரில் இல்லை. அவளுடைய மகன் பரமேஸ்வரன் குட்டியும் இல்லை. குட்டன் பிள்ளை ஊரில் இருக்கிறார். ஆனால், குட்டன்பிள்ளையை அழைத்து விஷயத்தை சொல்ல யாருக்கும் தைரியமில்லை. பாப்பி அம்மா அவரை ஏமாற்றிவிட்டாள் என்று எல்லாரிடமும் கூறிக்கொண்டிருக்கிறார். தன்னை அவள் அவமானப்படுத்திவிட்டதாக அவர் கூறுகிறார். குட்டி அம்மாவின் மகன் வாசுதேவன் இருக்கிறான். ஆனால், அவனுக்கு பயம். நாணியம்மா நேராகத் தன் வீட்டிற்கு சென்றாள். சங்கரப்பணிக்கர் அங்கு இருந்தார். அவரை அவள் எழுப்பினாள்.

மனைவிக்கும் கணவனுக்குமிடையே ஒரு சிறு சண்டை - சண்டை என்று கூற முடியாது. சிறு விவாதம் நடந்தது. சங்கரப் பணிக்கர் கேட்பது என்னவோ சரிதான்.

“கண்டவனெல்லாம் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு ஆபத்து உண்டாக்குறதுக்கு இளைச்சவன் நான்தானா?”

எனினும், ஒரு பந்தத்தை எரிய வைத்துக்கொண்டு தன்னுடைய ஓலைக் குடையையும் கையில் எடுத்துக் கொண்டு சங்கரப் பணிக்கர் அங்கிருந்து கிளம்பினார்.

அதிக நேரம் ஆகவில்லை. மரியப்பெண் பிள்ளையை அழைத்துக் கொண்டு சங்கரப் பணிக்கர் வந்தார். மரியப்பெண் பிள்ளை திண்ணையில் சிறிது நேரம் உட்கார்ந்தாள். அதுதான் முறை நேராக நடந்து வந்து பிரசவம் பார்க்கும் பெண் பிரசவ வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பது நடைமுறை வழக்கு.

வயிறைக் கையால் தடவிப் பார்த்துவிட்டு மரியப் பெண் பிள்ளை சொன்னாள்.

“இன்னும் பிரசவத்துக்கான நேரம் வரலையே.”

இனியும் எவ்வளவு நேரம் அந்த வலியைத் தாங்கிக் கொண்டிருப்பது? பக்கத்து வீட்டுப் பெண்களிடம் பாப்பி அம்மா சொன்னாள்.

“நான் செத்துப் போயிடுவேன்.”

பக்கத்து வீட்டுப் பெண்களிடமிருந்த தைரியமும் இப்போது இல்லாமற் போனது.

என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

குட்டி அம்மா அந்த மவுனத்தைக் கலைத்தாள்.

“ஏதாவது பிரச்சினை இருக்குற மாதிரி இருந்ததுன்னா, நாம அம்பலப்புழை மருத்துவமனைக்குக் கொண்டு போயிடலாம்” மற்றவர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் செயலற்று நின்றிருந்தார்கள். அவர்களை நடுங்கச் செய்கிற வார்த்தைகளாக இருந்தன அவை.

“நீ என்ன சொல்ற?”

பாரு அம்மா கேட்டாள். நாணியம்மா பதில் சொன்னாள்.

“பிறகு என்ன செய்றது? ஒரு பிள்ளைத்தாச்சியை இப்படியே விட்டுட முடியுமா?”

குட்டி அம்மா நல்ல தைரியசாலி. நாணியம்மா கேட்டாள்.

“இந்த நடு ராத்திரி வேளையில் படகுக்காரன் யாராவது இருப்பானா? சும்மா கையை வீசிக்கிட்டு ஆலப்புழைக்குப் போனா போதுமா? சக்கரம் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) வேண்டாமா? என்ன நினைச்சிக்கிட்டு நீ வாய்க்கு வந்ததைப் பேசிக்கிட்டு இருக்கே?”

குட்டி அம்மாவும் விடுவதாக இல்லை.

“என்ன வேணும்னு சொல்ற?”


அவள் சொன்னது சரிதான். பிரசவத்திற்கு ஏதாவது பிரச்சினைகள் இருக்கும் பட்சம், அந்த ஒரு வழி மட்டுமே இருக்கிறது. அதைத் தவிர, வேறு வழியில்லை. மற்றப் பெண்கள் கூறுவதும் சரிதான். மருத்துவமனைக்கு கொண்டு போவது என்பது மிகவும் சிரமமும் செலவும் இருக்கக்கூடிய ஒன்று என்பதென்னவோ உண்மை. ஒரு ஆண் அந்த நேரத்தில் உதவியாக இருந்தால் போதும். ஆனால், அதற்குத்தான் ஆள் இல்லை.

இயற்கையாகவே அவர்களுடைய பேச்சு கேசவன் நாயரில் போய் நின்றது. பாரு அம்மா கேட்டாள்.

“அந்த மகாபாவி இப்போ எங்கே?”

குட்டி அம்மா சொன்னாள்.

“ஆள் எங்கேன்னு யாருக்குத் தெரியும்?”

நாணியம்மா சொன்னாள்.

“சமீப நாட்களா ஆள் எங்கேயும் கண்ணுல படலியே.”

கேசவன் நாயரை அவர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து வாய்க்கு வந்தபடி கேவலமாகப் பேசியதும் சாபம் போட்டதும் அந்த வேதனைக்கு மத்தியில் பாப்பி அம்மாவின் காதுகளில் விழுந்தன.

பாரு அம்மா கேட்டாள்.

“அந்த ஆள் எங்கேடி பாப்பி?”

முனகல்களுக்கும் அழுகைக்கும் மத்தியில் பாப்பி அம்மா சொன்னாள்.

“அவர் போயி ஒரு மாசமாச்சு. போறப்போ, காசு கொண்டுட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனாரு.”

பாப்பி அம்மா எப்படியோ கூற நினைத்ததைக் கூறினாள். அதைக்கேட்டு குட்டி அம்மாவிற்கு அதிகமான கோபம் வந்தது.

“ஆமாமா... அவன் பணம் கொண்டு வர்றதுக்காகப் போயிருக்கான்.. திருட்டுப்பய.. இந்த அப்பிராணியை அவன் இப்படி ஏதாவது சொல்லி நல்லா ஏமாத்துறான்.”

எனினும் பாப்பி அம்மா சொன்னாள்.

“எங்கேயிருந்து காசு சம்பாதிக்கிறது? தொழில் சரியா நடக்கலைன்னா காசு எப்படி உண்டாக்குறது?”

குட்டி அம்மா கோபத்துடன் சொன்னாள்.

“பாரு... பாரு.. இவளோட திருட்டுத்தனம் வெளியே வருது பாரு. இவளுக்கு அவன் மேல விருப்பம்...”

நாணியம்மா இடையில் புகுந்து சொன்னாள்.

“போதும், குட்டி போதும். அதைப் பேசுறதுக்கு இதுவா நேரம்? இவ அவனை நம்புறா... அதுக்கு என்ன?”

காளியம்மாவும் அவள் சொன்னதை ஒப்புக் கொண்டாள்.

“என்ன இருந்தாலும் இவ வயித்துல இருக்குற குழந்தையோட அப்பன் ஆச்சே!”

உண்மை என்னவோ அதுதான். கேசவன் நாயரை அப்படி அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டுவதும் சாபம் போடுவதும் பாப்பி அம்மாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை. ஏதோ தூர இடத்திற்கு அந்த மனிதர் பிரசவத்திற்காகப் பணம் சம்பாதிக்கப் போயிருக்கிறார் என்பதை முழுமையாக நம்பினாள் பாப்பி அம்மா. கையில் இருப்பதைத்தான் கொடுக்க முடியும் என்று அவர் கூறியதையும் அவள் ஒப்புக் கொண்டாள். அவர் வருவார், பணமும் கொண்டு வருவார். பாப்பி அம்மா உண்மையாகவே அதை நம்பினாள். குட்டி அம்மாவின் கோபம் அதற்குப் பிறகும் குறையவில்லை.

எனினும் செய்ய வேண்டிய வேலை இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. என்ன செய்வது? குட்டி அம்மா கேட்டாள்.

“நேரம் போய்கிட்டே இருக்கு, என்ன செய்றது?”

யாரும் எதுவும் சொல்லவில்லை.

குட்டி அம்மா கூறினாள்.

“ஒருத்தியோட உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் இது. என் கையில் உண்மையாகவே சொல்றேன்.. ரெண்டு ரூபா இருக்கு. நான் அதை செலவழிக்கத் தயாரா இருக்கேன். இந்த விஷயம் வாசுவோட அப்பாவுக்குத் தெரிஞ்சா என்னைக் கொலையே செய்திடுவாரு. நான் அம்பலப்புழைக்குப் போறதுக்குத் தயாரா இருக்கேன்.”

மற்ற பக்கத்து வீட்டுக்காரர்கள் அதற்கு எதுவும் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். மரியப் பெண்பிள்ளை சொன்னாள்.

“பயப்படாம இருங்கம்மா. கடவுள் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாம குழந்தையை வெளியே கொண்டு வருவாரு.”

சிறிது நேரத்தில் பாப்பி அம்மா பிரசவித்தாள். எந்த அளவிற்கு உரத்த அழுகையுடன் அந்தக் குழந்தை வெளியே வந்தது. அதன் அழுகைச் சத்தம் இருட்டைக் கிழித்துக் கொண்டு ஒலித்தது.

“அம்மாமார்களே, மாதாவோட கிருபையால் நான் பார்க்குற பிரசவத்துக்கு எந்தக் கேடும் வராது.”

மரியப் பெண்பிள்ளை ஜபம் செய்தாள்.

ஆர்வத்துடன் பாரு அம்மா கேட்டாள்.

“என்ன பிள்ளை பொறந்திருக்கு, மரியப் பெண்பிள்ளை?”

“ஆண் குழந்தை...”

தொடர்ந்து மரியப் பெண் பிள்ளை அந்தக் குழந்தையைப் பார்த்து சொன்னாள்.

“இப்படி அழாதேடா. ஊர்ல இருக்குறவங்க படுத்து உறங்கட்டும்.”

மரியப் பெண் பிள்ளை ஒரு தண்டனையும் அவனுக்குத் தரப்போவதாக சொன்னாள்.

“இப்படி அழுதால், உனக்கு நான் அம்மாவைத் தர மாட்டேன்.”

அவனுடைய அழுகை நின்றது. அப்போது குட்டி அம்மா சொன்னாள்:

“பார்த்தீங்களா.. பார்த்தீங்களா.. அம்மாவைப் பற்றி சொன்னதும் அவனோட அழுகை நின்னுடுச்சு.”

குழந்தை அந்த அளவிற்கு சதைப்பிடிப்பாக ஒன்றும் இல்லை. ஆனால், சுறுசுறுப்பும் புத்திசாலித்தனமும் கொண்ட குழந்தையாக இருந்தது. தலை நிறைய முடி இருந்தது. நாணியம்மா அவனுக்கு நேராக விரலை நீட்டிக்கொண்டு சொன்னாள்.

“திருட்டுப்பயலே.. நீ எங்களை எப்படியெல்லாம் கவலைப்பட வச்சிட்டே. அம்மாவை இந்த அளவுக்குக் கஷ்டப்படுத்தணுமா?”

காளியம்மா அப்போது ஒரு விஷயத்தை ஞாபகப்படுத்தினாள்.

“அய்யோ, பெண்களே.. குலவை இட வேண்டாமா?”

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் எல்லாரும் அந்த விஷயத்தை மறந்து விட்டார்கள்.

குலவை சத்தத்தைக் கேட்டு சங்கரப் பணிக்கர் வெளியே வந்து நட்சத்திரத்தைப் பார்த்தார். அவருக்குக் கொஞ்சம் ஜோதிடம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரியும்.

குழந்தையை படுக்க வைத்துக் குளிப்பாட்ட ஒரு வாளிகூட இல்லை. இஞ்சியோ, எண்ணையோ, பொன்னோ, தேனோ எதுவும் இல்லை. மீண்டும் பக்கத்து வீட்டுப் பெண்களுக்குக் கோபம் வர ஆரம்பித்தது. காளியம்மா சொன்னாள்.

“பத்து மாசமா இதெல்லாம் இருக்கணும்னு உனக்குத் தெரியாதாடி?”

தொடர்ந்து குட்டி அம்மா சொன்னாள்.

“எவ்வளவு பட்டினி இருந்தாலும், ஒரு வாளி கூடவா வாங்கி வைக்க முடியல?”

அந்த இரவு நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அந்தப் பெண்கள் எல்லாவற்றையும் தயார் பண்ணினார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்டினார்கள்.

இனி மரியப் பெண் பிள்ளையின் கையிலிருந்து குழந்தையை வாங்க வேண்டும். ஒரு காசு கூட அப்போது அங்கு இல்லை. அப்போது அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்களுக்குக் கோபம் கோபமாக வந்தது. குட்டி அம்மா தன் வீட்டிற்குச் சென்று அரை ரூபாய் எடுத்துக் கொண்டு வந்தாள்.

எல்லாம் முறைப்படி நடந்தது. பொழுது புலர்ந்த பிறகுதான் மரியப்பெண்பிள்ளை அங்கிருந்து போக முடியும். அவளை அங்கேயே இருக்கச் செய்துவிட்டு, பக்கத்து வீட்டுப் பெண்கள் குளிப்பதற்காக சென்றார்கள். குளத்தை நோக்கிப் போகும் வழியில் அவர்கள் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் ஓடிக்கொண்டிருந்த ஒரு விஷயத்தை நாணியம்மா மெதுவாக வெளியே விட்டாள்.


நாணியம்மா கேட்டாள்.

“அந்தக் குழந்தையைப் பார்த்தீங்களா?”

எல்லாருக்கும் விஷயம் புரிந்துவிட்டது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. குட்டி அம்மாவிற்கு ஒரு சந்தேகம்.

“அந்தக் குழந்தை கேசவன் நாயரைப் போலவே இருக்கு?”

காளியம்மா சொன்னாள்.

“பெத்த உடனே, அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ன?”

“நிச்சயம் அடையாளம் கண்டுபிடிக்க முடியும்” என்றாள் பாரு அம்மா. அப்போது நாணியம்மா கூறினாள்.

“அப்படின்னா அந்தக் குழந்தை தன் தாயோட சாயல்ல இருக்கலாம்ல..”

குட்டி அம்மா சொன்னாள்.

“எது எப்படியோ அது கேசவன் நாயரைப் போல இல்ல. நாம எல்லாரும் சேர்ந்து பாவம்... அந்த ஆளை தேவையில்லாம சபிச்சிட்டோமோன்னு நான் நினைக்கிறேன்.”

பாரு அம்மா அந்தக் கூற்றை எதிர்த்தாள்.

“ச்சே... அப்படி சொல்லாதே. என்னதான் நாம சொல்லட்டும். ஒரு ஆளு இருக்குறப்போ பாப்பி வேறொரு ஆளை வீட்டுக்குள்ளே நுழைய விடமாட்டா. நமக்கு அது தெரியாதா என்ன?”

நாணியம்மா கேட்டாள்.

“அது நமக்கு எப்படித் தெரியும்?”

காளியம்மா சொன்னாள்.

“சரி... விடுங்க பெண்களே. என்ன இருந்தாலும் பொறந்தது ஆண்பிள்ளை ஆச்சே. தேவையில்லாம அது இதுன்னு பேசிக்கிட்டு...”

குட்டி அம்மா சொன்னாள்.

“அவதானே சொன்னா தன் குழந்தைக்குத் தகப்பன்னு ஒரு ஆளு இருக்கணும்னு. அதனாலதான் சொன்னேன்.”

அதற்கு மேல் அவர்கள் எதுவும் பேசவில்லை. குளத்தில் குளிக்குமிடத்தில் வேறொரு விஷயம் அவர்களுடைய சிந்தனைக்கு வந்தது. அதை ஆரம்பித்து வைத்தவள் பாரு அம்மா.

“நாளைக்கு இஞ்சியும் தேனும் கொடுக்கணும். அதுக்கு என்ன செய்றது?”

அப்போது யாரும் எதுவும் பேசவில்லை. எனினும் மறுநாள் பாப்பி அம்மா இஞ்சியும் தேனும் சாப்பிட்டாள். சீரகம், வெந்தயம், அலுப்பு மருந்து என்று அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்கள் ஒவ்வொருவரும் கொண்டு வந்து அவளுக்குத் தந்தார்கள். மாறி மாறி அவர்களே அவளுக்கு சாப்பாடும் கொண்டு வந்து தந்தார்கள். அவர்கள் தங்களுக்குள் இப்படிக் கூறிக்கொண்டார்கள்.

“ஒரு பெண்... அதுவும் மூணு பிள்ளைகளோட தாய்... பெற்று புழுத்துப் போய்க் கிடந்தா, ஆளுங்க பக்கதது வீட்டுக்காரர்களைத் தான் குறை சொல்லுவாங்க...”

எது எப்படியோ நல்ல முறையில் பாப்பி அம்மா குழந்தையைப் பெற்றெடுத்து எழுந்தாள்.

ஒருநாள் கேசவன் நாயர் வந்தார். வந்தவுடன் ஒரு வார்த்தைகூட பேசாமல் அவர் ஒரு பொட்டலத்தை அவளுடைய கையில் தந்தார்.

“இந்த வச்சுக்கோ... பிரசவத்துக்கான ரூபாய்.”

கவலை நிறைந்த குரலில் பாப்பி அம்மா சொன்னாள். “நல்லா வந்தீங்க.. பக்கத்து வீட்டுக்காரங்க மட்டும் இல்லாமப் போயிருந்தா நான் எப்பவோ செத்துப் போயிருப்பேன்.”

பாப்பி அந்தப் பொட்டலத்தைப் பார்க்கக்கூட இல்லை.

“உனக்கு இது வேண்டாமா? நான் இந்தக் காசை உண்டாக்குறதுக்காக எத்தனை காடுகளையும் மலைகளையும் மூங்கில் வெட்டுறவங்க கூட ஏறினேன் தெரியுமா? காய்ச்சல் வந்து எத்தனை நாட்கள் படுத்த படுக்கையாய் கிடந்தேன்னு நினைக்கிறே... இருந்தும்...”

பாப்பி தன் தலையை உயர்த்தி கேசவன் நாயரின் முகத்தைப் பார்த்தாள். குழந்தையைத் தன் மார்போடு சேர்த்து வைத்துக் கொண்டு அவள் பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவர் மிகவும் சோர்வடைந்து போய் இருக்கிறார் என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அந்தப் பொட்டலத்தை அவள் தன் கையில் எடுத்தாள்.

கேசவன் நாயர் கேட்டார்.

“குழந்தையை என்கிட்ட கொஞ்சம் காட்டக்கூடாதா?”

“ம்... எதுக்குக் காட்டணும்? இதைப் பார்க்கணும்னு தோணியிருந்தா, முன்னாடியே வந்திருக்கணும்ல...”

“நீ நான் சொல்றதை நம்பவே மாட்டே.”

நம்பாதது மாதிரியான குரலில் அவள் சொன்னாள்.

“ஓ... நான் நம்புறேன்.”

அங்கிருந்து புறப்பட்டதிலிருந்து உண்டான விஷயங்களை கேசவன் நாயர் அவளிடம் கூற ஆரம்பித்தார். பிரசவத்திற்குக் கட்டாயம் வந்துவிட வேண்டும் என அவர் நினைத்திருந்தார். ஆனால், அதற்குள் அவருக்குக் காய்ச்சல் வந்துவிட்டது. சொல்லப்போனால், அவர் ஊரை விட்டுப் போனதே பிரசவத்திற்குப் பணம் தயார் பண்ணுவதற்காகத்தான். பாப்பி அம்மாவும் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றையும் அவரிடம் விளக்கமாகச் சொன்னாள். கேசவன் நாயர் குழந்தையைப் பார்த்தார். அவனைத் தன் கைகளில் அவர் தூக்கினார். உண்மையாக சொல்லப் போனால் அது அவருக்கு சந்தோஷத்தைத் தரும் ஒரு விஷயமாக இருந்தது. அவருக்கென்று ஒரு குழந்தை இருக்கிறது. அவர் ஒரு தந்தையாகி இருக்கிறார். பாப்பி அம்மா அந்தக் காட்சியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் மனதில் ஆசைப்பட்டது அதுதான். தன்னுடைய குழந்தைக்கு ஒரு தந்தை இருக்க வேண்டும் என்பதுதானே அவள் விரும்பியது!

“இவன் பிறந்தால், இவனோட அப்பாவுக்கு நல்லது நடக்கும்னு சொன்னாங்க.”

பாப்பி அம்மாவின் முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. கேசவன் நாயர் கேட்டார்:

“அப்படி யாரு சொன்னது?”

“சங்கரப் பணிக்கர் அண்ணன் சொன்னாரு. இவனோட பிறந்த நேரம் நல்லதாம்.”

குழந்தையை உற்றுப் பார்த்துவிட்டு கேசவன் நாயர் சொன்னார்.

“பார்க்குறப்பவே அந்தக் களை இவன் முகத்துல தெரியுதே.”

கேசவன் நாயர் புறப்படும் நேரத்தில் பாப்பி அம்மா கேட்டாள்:

“இனி எப்போ திரும்பவும் வருவீங்க?”

“நான் சமீபத்துல எங்கேயும் போகல?”

பாப்பி அம்மாவிற்கு ஒரு விருப்பம் இருந்தது. குழந்தைக்கு ஒரு இடுப்புச் சங்கிலியும் காதில் ஒரு கடுக்கணும் இருக்க வேண்டும். அவள் சொன்னதைக் கேட்டு கேசவன் நாயர் வெறுமனே ‘உம்’ கொட்ட மட்டும் செய்தார்.

ஒரு விசேஷம். கண்ணில் படுபவர்களெல்லாம் கேசவன் நாயரைப் பார்த்து ஒரு கேள்வியை மட்டும் விடாது கேட்டார்கள்:

“என்ன, கேசவன் நாயர் குழந்தையைப் பார்த்தாச்சா?”

ஆண்கள், பெண்கள் எல்லாரும் அதே கேள்வியைத்தான் அவரைப் பார்த்துக் கேட்டார்கள். குழந்தையைப் பார்க்கும் விஷயத்தில் குறிப்பிட்டுக் கூறும்படி அப்படி என்ன இருக்கிறது? அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு தொல்லை அளிக்கக்கூடிய கேள்வியாக இருந்தது அது. திருமணம் ஆகியும், ஆகாமலும் எவ்வளவோ பேருக்கு குழந்தைகள் இருக்கிறார்கள். கர்ப்பமான பெண்கள் கர்ப்பத்திற்குக் காரணமான ஆண்கள் ஊரில் இல்லாதபோது பிரசவம் ஆகியிருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து மனிதர்கள் இதே கேள்வியைக் கேட்டார்களா?

அந்தக் கேள்வியில் என்னென்னவோ மறைந்திருக்கிறது என்பதை கேசவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அது என்ன என்பதைத்தான் அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் அவர் எதுவும் பதில் சொல்லாமல் தான் இருந்தார். நாளடைவில் கேசவன் நாயருக்குக் கோபம் வர ஆரம்பித்தது. அவர் பலரிடமும் சண்டை போட ஆரம்பித்தார்.


எனினும் குழந்தைக்கு ஜாதகம் எழுத ஏற்பாடு பண்ணினார் கேசவன் நாயர். அதற்கு அவர் கேசவக் கணியாருக்கு மூன்று ரூபாய் கூலியாகக் கொடுத்தார். ஜோதிடர் ஜாதகத்தைப் படித்து விளக்கினார். அந்த ஜாதகத்திலேயே குறிப்பிட்டுக் கூறும்படியான விஷயம் குழந்தையின் பிறப்பின் மூலம் தந்தைக்குக் கிடைக்கப் போகும் மதிப்புத்தான் என்று தெளிவான குரலில் சொன்னார் ஜோதிடர்.

திருப்தி உண்டான குரலில் கேசவன் நாயர் கேட்டார்.

“எப்படிப்பட்ட மதிப்பு, ஜோதிடரே?”

“எல்லாவிதத்திலும்...”

தொடர்ந்து ஜோதிடர் ஒரு சுலோகத்தைப் பாடினார். “பணம், மதிப்பு எல்லாம் உண்டாகும்” என்றார்.

அந்த ஜாதகத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கேசவன் நாயர் நடந்து திரிந்தார். நான்கு பேர் கூடியிருக்கும் இடம் வந்துவிட்டால் அவர் அவர்களைத் தேடிச் செல்வார். அவர்களைப் பார்த்து ஒரே ஒரு வாக்கியத்தை மட்டும் அவர் கூறுவார். “எனக்கு நல்ல காலம் வரப்போகுது” ஆனால், பல நேரங்களில் அந்த வாக்கியத்தைக் கூறுவதற்கான சூழ்நிலை அவருக்கு இல்லாமற் போய்விடும். அவர்களிடம் போய் தான் அப்படிக் கூறுவது சரியாக இருக்குமா என்று அவர் நினைப்பார். எனினும், ஒன்றிரண்டு தடவைகள் அவர் கூறத்தான் செய்தார்.

கோயில் குளத்தில் இருக்கும்போது அவர் அந்த வாக்கியத்தைச் சொன்னார். தச்சேள கோவிந்தன் நாயர் கேட்டார்.

“எப்படிடா உனக்கு நல்ல காலம் வரும்?”

கேசவன் நாயர் அதற்கு பதில் சொன்னார்.

“நல்ல நேரம் வரும்னு இருக்கு.”

“எப்படி?”

அந்த விஷயத்தைக் கேசவன் நாயர் விளக்கினார்.

“எனக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு. நல்ல ஜாதகம்.”

“ஓ! அதை சொல்றியா?”

எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அப்போது கேசவன் நாயருக்கு சிறிது வெட்கமாக இருந்தது. எனினும், அதை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அவர் சொன்னார். “இல்ல... கேசவக்கணியார் எனக்கு நல்ல காலம் வரப்போகுதுன்றதை உறுதியா சொன்னாரு.”

கோவிந்தன் நாயர் சொன்னார்:

“குழந்தையோட பிறப்பால், அந்தக் குழந்தையோட தகப்பனுக்கும் தாய்க்கும் நல்லது நடக்கும்னு.”

அங்கிருந்தவர்களில் ஒரு தைரியசாலி அப்போது சொன்னான்:

“அந்தக் குழந்தை இந்த ஆளுக்குப் பொறந்திருந்தாதானே இவருக்கு அதுனால நல்லது நடக்கும்?”

அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டார் கேசவன் நாயர். அப்படி அந்த மனிதர் கூறியிருக்கக்கூடாது என்று கோவிந்தன் நாயரும் நினைத்தார். அந்த வார்த்தைகளை சொன்ன மனிதனைப் பார்த்து கோவிந்தன் நாயர் திட்டினார்.

“என்ன வார்த்தைகளை சொல்றே நீ? நீ சொன்னது தப்பு.”

அவன் தான் சொன்னதை நியாயப்படுத்திச் சொன்னான்.

“நேத்து குட்டி அக்காதான் சொன்னாங்க. அந்தக் குழந்தை கேசவன் நாயர் மாதிரி இல்லைன்னு. அதைத்தான் நான் சொன்னேன்.”

அதைக் கேட்டு கேசவன் நாயர் சொன்னார்.

“அந்தப் பெண் என் விரோதி.”

எனினும் கேசவன் நாயர் நேராக பாப்பி அம்மாவைத் தேடி சென்றார். அந்த ஜாதகம் தனக்குப் பயனில்லாத ஒன்றாகிவிடுமோ என்ற சந்தேகம் அவருக்கு.

தடத்தில் வீட்டிற்குள் நுழைந்த உடனே அவர் கேட்டார்.

“இந்தக் குழந்தை என்னோடதுதானே?”

அதைக்கேட்டு பாப்பி அம்மா பதைபதைத்து விட்டாள். அவள் கேட்டாள்.

“என்ன கேள்வி இது?”

அவர் சொன்னார்.

“இந்தக் குழந்தை என்னை மாதிரி இல்ல.”

பாப்பி அம்மா அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டாள்.

“உன்னோட இந்தக் குழந்தைக்கும் தகப்பன் இல்லாம இருக்கும்.”

அப்படியென்றால் அந்தக் குழந்தைக்கும் ஒரு ஆளை ‘அப்பா’ என்று அழைக்க முடியாத நிலை உண்டாகியிருக்கிறது. எப்படி கேசவன் நாயருக்குப் புரிய வைப்பது என்பது தெரியாமல் தவித்தாள் பாப்பி அம்மா.

கேசவன் நாயருக்குத் தெளிவாகத் தெரிய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அந்தக் குழந்தை தனக்குப் பிறந்தது என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்துவிட்டால் போதும் அவருக்கு. அவர் தொடர்ந்து சொன்னார்.

“எல்லாரும் என்னைப் பார்த்து கேக்குறாங்க, குழந்தை எனக்குப் பிறந்ததுதானான்னு. எனக்குப் பிறந்ததுதான்னு நான் சொன்னேன். குழந்தை என்னைப் போலத்தான் இருக்குன்னு நான் சொன்னேன். நான் சொன்னது உண்மைதானான்னு உன்னைப் பார்த்து நான் கேக்குறேன்.”

பாப்பி அம்மா தன் உண்மை நிலையைச் சொன்னாள்:

“என் பத்மநாபனோட அப்பா இன்னைக்கு உயிரோட இருந்திருந்தா, என் கார்த்தியாயினிக்கும் என் சின்ன மகனுக்கும் அவர்தானே அப்பாவா இருப்பாரு.”

அதற்கு மேல் அவள் கூறுவதற்கு எதுவுமில்லை. அதைச் சொல்லி முடித்தபோது நம்பினால் நம்புங்கள் என்று நினைத்து அவள் முடித்ததைப்போல் இருந்தது.

கேசவன் நாயர் சொன்னார்.

“இல்ல... நான் நம்பிக்கை இல்லைன்னு சொல்லல... உண்மைதானான்னு கேட்டேன்.”

ஒரு நிமிடம் கழித்து அவர் தொடர்ந்தார்.

“நம் மகனோட ஜாதகம் பிரமாதமா இருக்கு. எனக்கு அவன் ஜாதகம் மூலம் நல்லது நடக்கப் போகுது.”

மேலும் அவர் சொன்னார்:

“அதுனாலதான் நான் கேட்டேன். என் குழந்தையா இது இருந்தாத்தானே எனக்கு நல்லது நடக்கும். வேற யாரோட குழந்தையா இது இருந்தாலும், அதுனால நல்லது அவங்களுக்குத்தானே நடக்கும். அதனாலதான் நான் கேட்டேன்.”

பாப்பி அம்மா மீண்டும் தன் நேர்மையை விளக்கினாள்.

“நான் சொன்னது உண்மை. இது வேற யாரோட குழந்தையும் இல்ல.”

6

ட்டு, ஒன்பது வருடங்கள் கடந்தன. பத்மநாபன் வந்திருக்கிறான். அகலக் கரை போட்ட வேட்டியும், சட்டையும் அணிந்து நெற்றி நிறைய விபூதி பூசி, விரல்களில் மோதிரங்கள் அணிந்து, கம்மலைப் போன்ற கடுக்கண்களைக் காதுகளில் அணிந்து கழுத்தில் செயினும் அணிந்து அவன் வந்திருக்கிறான். சொல்லப் போனால் அவன் ஆளே முழுமையாக மாறி விட்டிருந்தான். பழைய பத்மநாபன் என்று யாரும் கூற மாட்டார்கள். பேச்சில் ஒரு தமிழன் சாயல் இருக்கும்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை அவன் வந்திருந்தான். அப்போதிருந்ததை விட இப்போது அவன் எந்த அளவுக்கு மாறியிருக்கிறான். ஆனால், குணத்தில் பெரிய மாற்றம் எதுவுமில்லை. பக்கத்து வீடுகள் எல்லாவற்றுக்கும் பத்மநாபன் சென்றான். அவன் யாரையும் மறக்கவில்லை. முன்பு அவர்கள் வீட்டில் நீர் குடித்து தான் வளர்ந்த நினைவு அவனிடம் இப்போதும் இருக்கிறது.

நாணியம்மாவிற்கும் காளியம்மாவிற்கும் குட்டி அம்மாவிற்கும் புதிதாகப் பேசுவதற்கு விஷயம் கிடைத்தது.

குட்டி அம்மாவிற்கு மட்டும் என்ன காரணத்தாலோ மனதில் மகிழ்ச்சி உண்டாகவில்லை. பத்மநாபன் அவளுடைய வீட்டிற்குச் சென்று ஐந்து ரூபாய் கொடுத்தான். இருந்தாலும் அவளுக்கு அவனுடைய செயல்மீது ஒரு கருத்து வேறுபாடு உண்டானது. அவள் கேட்டாள்.


“ஒரு தேநீர்க் கடை நடத்தினா, இப்படியெல்லாம் பணம் வருமா நாணி?”

பாரு அம்மாதான் அதற்கு பதில் சொன்னாள்.

“கோவில்ல இருக்குற கிட்டு நாயரோட தேநீர்க் கடை மாதிரியா இருக்கும் கோயம்புத்தூரில் இருக்குற தேநீர்க் கடை?”

தொடர்ந்து அவள் சொன்னாள்.

“எங்க பரமேஸ்வரன் குட்டி சொன்னான். ஒரு தேநீர்க் கடையில் ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய் வரை கிடைக்கும்னு. அவன் திருவனந்தபுரத்துல இருந்த தேநீர்க் கடையில அதுக்கு மேலயே கிடைக்கும்.”

குட்டி அம்மாவிற்கு நம்பிக்கையே வரவில்லை. நாணியம்மாவைப் பொறுத்தவரை அவள் நல்லதையே நினைத்தாள்.

“எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். அவன் ஒரு நல்ல பையன். நல்லா வரட்டும். அவளும் எவ்வளவோ கஷ்டப்பட்டுட்டா.”

குட்டி அம்மாவும் அவள் சொன்னதை ஒப்புக் கொண்டாள்.

“இப்போ அவ சுகமா இருக்கா. சமீப காலமா அவ நல்லாவே இருக்கா. வயசே குறைஞ்சு போனது மாதிரி இருக்கு.”

குட்டி அம்மாவின் மனதில் இருந்தது வெளியே வந்தத.

“இருந்தாலும் அவ்வளவு பெரிய ஒரு தேநீர்க் கடை நடத்துறதுக்கு அவனுக்கு எங்கேயிருந்து முதலீடு கிடைச்சது?”

நாணியம்மா அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சொன்னாள்:

“எங்கேயிருந்து வேணும்னாலும் இருக்கட்டும். அதைப் பற்றி நமக்கு என்ன கவலை? பக்கத்து வீட்டுல இருக்குற ஒரு பையன் நல்ல நிலைமைக்கு வர்றான். அதுனால அந்த வீடும் நல்ல நிலைமைக்கு வருதுல்ல?”

குட்டி அம்மாவைத் தவிர, மற்ற எல்லாரும் அவள் கூறியதை ஒத்துக் கொண்டார்கள். தான் மட்டும் தனியே விடப்பட்டதைப் போல் உணர்ந்ததால், சற்று வருத்தம் உண்டான குரலில் குட்டி அம்மா சொன்னாள்.

“அவன் நல்லா வரக்கூடாதுனு யாரு சொன்னா? அதுதான் வேடிக்கையா இருக்கு. பக்கத்துல இருக்குற வீடு ஒண்ணுமில்லாமப் போகணும்னு நாங்க என்ன ஒண்ணு சேர்ந்து சதி வேலைகளா செய்தோம்? இப்போ அந்த நல்ல பையன் வீட்டுக்கு வந்திருக்கான். மத்தவங்களுக்கு அதைப் பார்த்து குறும்புத்தனமும் பொறாமையும் வந்திடுச்சு.”

குட்டி அம்மாவின் குரலில் ஒரு வெறுப்பு தெரிந்தது.

சிறிது நேரத்திற்கு யாரும் எதுவும் பேசவில்லை.

பாரு அம்மாதான் அந்த அமைதியான சூழ்நிலையை மாற்றினாள்.

“எது எப்படி போனாலும் இவளும் இவ புருஷனும் எப்பவுமே இப்படித்தான். வழக்கு நடத்துறதுதானே அந்த ஆளோட வேலையே.”

அன்று சாயங்காலம் பாரு அம்மாவின் கோழி குட்டி அம்மாவின் இடத்திற்குள் நுழைந்து ஒரு வழி பண்ணி விட்டது என்று ஒரு சண்டை உண்டானது. எல்லா வீட்டுக்காரர்களும் அந்த சண்டையில் குட்டி அம்மாவிற்கு எதிராக ஒன்று சேர்ந்து நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. பாப்பி அம்மா மட்டும் எப்போதும் இருப்பதைப் போல மவுனமாக இருந்தாள். பத்மநாபன் இருந்ததால், கேசவன் நாயரும் வாயைத் திறக்கவில்லை.

தடத்தில் வீடு இருக்குமிடத்தில் புதிதாக வீடு கட்டப் போகிறார்கள். ஆனால், வீடு கட்டுவதற்கு இடம் போதாது. இருப்பதே பத்து சென்ட்தான். இதைப் பற்றி எல்லாரும் பேசி மூன்று, நான்கு நாட்கள் ஓடின.

பத்மநாபன் வந்த பிறகு தடத்தில் வீட்டின் வாழ்க்கை முறையே திடீரென்று மாறிவிட்டது. கேசவன் நாயர் அம்பலப்புழைக்குச் சென்று ஒவ்வொரு நாளும் காய்கறிகளும் மீனும் மாமிசமும் வாங்கிக் கொண்டு வந்தார். வறுப்பதன் வாசனையும் பொரிப்பதன் வாசனையும் அந்த ஏழைகள் வசித்துக் கொண்டிருந்த வீட்டின் பகுதியில் இருந்த காற்றில் கலந்து வெளிப்பட்டது. கார்த்தியாயினிக்கு அவன் நல்ல புடவை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான். அதை எப்படிக் கட்டுவது என்று அவளுக்குத் தெரியவில்லை. நாராயணனுக்கு அரைக்கால் சட்டையும், மேல்சட்டையும் அவன் வாங்கிக் கொண்டு வந்திருந்தான்.

தடத்தில் வீட்டையொட்டி இருந்த ஏழு சென்ட் நிலமும் பாரு அம்மாவிற்கு சொந்தமானது. அதைத் தடத்தில் வீட்டுக்காரர்கள் விலைக்கு வாங்கப் போகிறார்கள். அதன் விலை இருநூறு ரூபாய். வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது.

சில நாட்களாக குட்டன் பிள்ளை ஊரில் இல்லாமல் இருந்தார். மாலை நேரத்தில் அவர் வீடு திரும்பி வந்தபோது குட்டி அம்மா அவரிடம் கூற நினைத்த பெரிய விஷயம் அதுதான். பாரு அம்மாவிற்கு சொந்தமான இடத்தைத் தடத்தில் வீட்டுக்காரர்கள் விலைக்கு வாங்கப் போகிறார்கள். விலையை ஒப்புக் கொண்டு விட்டார்கள். எல்லாம் முடிவாகிவிட்டது. எனினும் அவள் சொன்னாள்.

“எது எப்படி இருந்தாலும் பத்திரம் எழுதுற விஷயமாக இருந்தாலும், வழக்கு விஷயமா இருந்தாலும், தகராறு விஷயமா இருந்தாலும் இந்த ஊர்ல எது நடந்தாலும் அதைப் பற்றி கேட்க வேண்டிய ஒரு ஆள் இருக்கிறார்ன்றதை பக்கத்து வீட்டுக்காரங்க ஒரு மரியாதைக்குக்கூட நினைச்சுப் பார்க்கலையே.”

குட்டன்பிள்ளை கேட்டார்.

“அய்யப்பன் நாயரோ அந்தப் பையனோ வந்து நான் எங்கே போயிருக்கேன்னு கேட்கலையா?”

“அவங்க யாருமே இங்கே வரலை. எதுக்கு இதைக் கேக்குறீங்க?”

அது ஒரு மரியாதைக் குறைவு என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அதனால் உண்டான இழப்பைப் பற்றித்தான் குட்டன்பிள்ளை நினைத்துப் பார்த்தார்.

“யார் இந்த விஷயத்தை திட்டம் போட்டு நடத்திக்கிட்டு இருக்குறது?”

“எனக்குத் தெரியாது. போயி விசாரிச்சுப் பாருங்க. நான் இதைப் பற்றி யார்கிட்டயும் விசாரிக்கல.”

இந்த வார்த்தைகள் மூலம் குட்டி அம்மா தன் கணவர் மீது உண்டான அவமதிப்பை வெளிப்படுத்தினாள்.

குட்டன் பிள்ளை சிறிது நேரம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். குட்டி அம்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள். நீண்ட நேரம் அப்படியே எதுவும் பேசாமல் இருக்க அவளால் முடியவில்லை அவள் கூறினாள்.

“அந்தப் பையனுக்கு இவ்வளவு பணம் எங்கேயிருந்து வந்துச்சு?”

சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்.

“புதையல் ஏதாவது கிடைத்திருக்குமோ என்னவோ...”

குட்டன் பிள்ளையிடமும் சற்று வெறுப்பு அதிகரித்திருந்தது. அவர் சொன்னார்.

“புதையலாம் புதையல்... பாண்டி நாட்டுலதானே அவன் இருக்கான்? எங்கேயாவது திருடியிருப்பான். இல்லாட்டி மோசடி பண்ணியிருப்பான்...”

அதைக் கேட்டு குட்டி அம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள்.

“அய்யோ! நீங்க சொல்றது உண்மையா இருக்குமா?”

“பிறகு? யாரு இப்படி காசு சம்பாதிக்க முடியும்?”

குட்டி அம்மா ஆர்வத்துடன் கேட்டாள். “அப்படின்னா போலீஸ்காரங்க பிடிக்க மாட்டாங்களா?”

“ஓ... போலீஸ்காரங்க! பாண்டி நாடு மானும் மனிதர்களும் இல்லாம பரந்து கிடக்குதா என்ன? எப்படிப் பிடிக்க முடியும்?”

அவர் தொடர்ந்து கேட்டார்.

“எவ்வளவு ரூபாய்க்கு வியாபாரம் நடக்குதாம்?”


குட்டி அம்மாவின் சிந்தனை முழுவதும் பத்மநாபனின் பணம் மோசடி மூலம் சம்பாதித்தது என்பதையும், அதைப் பற்றி தெரிந்து போலீஸ்காரர்கள் அவனைப் பிடிப்பதற்காக வருவார்கள் என்பதையும் சுற்றியே இருந்தது. எனினும் தன் கணவரின் கேள்விக்கு அவள் பதில் சொன்னாள்.

“இருநூறு ரூபாய்க்கு தினமும் வியாபாரம் நடக்குமாம். அப்படின்னா போலீஸ்காரங்க எப்படியாவது வராமலா இருப்பாங்க. அப்படி வந்தாத்தான் இந்தப் புடவையை நீளமா கட்டிட்டு நடக்குறதும் வறுக்குறதும் முழுசா நிற்கும்.”

அவள் சொன்னதை குட்டன் பிள்ளை காதிலேயே வாங்காதது மாதிரி இருந்தார்.

குட்டி அம்மா தொடர்ந்து சொன்னாள்.

“முகத்துல மீசை இருந்தா, அந்தப் பத்திர வேலைகளை நீங்க பார்க்கக்கூடாது. அதுதான் நான் சொல்ல நினைக்கிறது.”

குட்டன் பிள்ளை ஏதோ ஆழமாக சிந்தித்தவாறு நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தார். தன்னை மறந்து அவர் சொன்னார்.

“அந்தப் பையனுக்கு சக்கரத்தைப் பற்றிய மதிப்பு சரியா தெரியலைன்னு நினைக்கிறேன்.”

“ஏமாற்றி சம்பாதிச்சு காசுக்கு சூடு இருக்குமா என்ன?”

மீண்டும் என்னவோ சிந்தனையில் மூழ்கிய குட்டன்பிள்ளை சொன்னார்.

“அந்த நிலத்துல ஒரு பிரச்சினை இருக்கு.”

“ஆனால், இரண்டு நாட்கள் கழித்து அந்தப் பத்திரப்பதிவு நடந்தது. பத்திரப் பதிவு முடித்து அம்பலப்புழையிலிருந்து திரும்பி வரும்போது கருமாடி என்ற இடத்தில் கேசவன் நாயருக்கும் குட்டன் பிள்ளைக்குமிடையே ஒரு பெரிய சண்டையே வந்துவிட்டது. அடிதடி நடக்கவில்லை என்பதுதான் விஷயம். கேசவன் நாயர் மிகப்பெரிய ஒரு காரியத்தை சாதித்துவிட்டு திரும்பி வருகிறார் அல்லவா? குட்டன் பிள்ளை அதற்காக மனதில் மிகவும் வருத்தத்துடன் இருந்தார்.

வெற்றி பெற்ற கேசவன் நாயர் குட்டன் பிள்ளையைப் பார்த்ததும் சற்று நெளிந்து கொண்டு கேட்டார்.

“என்னடா, பார்க்குற? நான் பத்திரப் பதிவு முடிச்சிட்டு வர்றேன்.”

அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டார் குட்டன்பிள்ளை. எனினும், அவர் அதோடு நிற்கவில்லை. அவர் சொன்னார்:

“இந்தக் குட்டன், குட்டனா இருக்குறதா இருந்தா இந்த நிலத்தை நீயும் உன் பொண்டாட்டியும் மகனும் எந்தவித பிரச்சினையும் இல்லாம அனுபவிக்க முடியாது. அதற்கான விஷயம் என்னன்னு எனக்குத் தெரியும். திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்துக்கு முன்னாடி மூக்கை ஒழுக விட்டுக்கிட்டு இடுப்பை சொறிஞ்சிக்கிட்டு நீ நடந்து போறியா இல்லியான்னு பாரு. அப்படி நடக்கலைன்னா...”

குட்டன் பிள்ளை கையை ஆட்டியவாறு சொன்னார்.

“என் பேரை நாய்க்கு வச்சுக்கோ.”

கேசவன் நாயரின் மனதில் ஒரு மூலையில் குட்டன் பிள்ளையின் வார்த்தைகள் நுழைந்து அவரை என்னவோ செய்தாலும், அதற்காக அவர் சோர்வடைந்து விடவில்லை.

“டேய், பணம் கொடுத்து வாங்கிய அந்த இடத்தை நானும் என் பொண்டாட்டியும் பிள்ளைகளும் நல்லாவே அனுபவிப்போம். வம்பு, வழக்குன்னு உண்டாக்கிக்கிட்டு நக்கித் தின்று வாழ்ற உனக்கு என்ன தெரியும்? பொருள் சேர்ற இடத்துக்குத்தான் புண்ணியம் கிடைக்கும். இடத்துக்கான சரியான விலையை நாங்க கொடுத்துட்டோம். உனக்குத் தெரியுமா? கட்டாயம் எங்களுக்குப் புண்ணியம் கிடைக்கும். நீ இல்ல, உன் அப்பன் நினைச்சாக்கூட அந்த ஏழு சென்ட் நிலம் எங்களை விட்டு எங்கேயும் போகவே போகாது.”

குட்டன் பிள்ளை ஒரு நிமிடம் நிலைகுலைந்து போய்விட்டார். அவரால் எதுவும் பேச முடியவில்லை. கேசவன் நாயர் தொடர்ந்து சொன்னார்.

“நூறு ரூபா கூட மதிப்பு இல்லாத ஒரு இடத்துக்கு இருநூறு ரூபா கொடுத்திருக்கோம். அதனாலதான் பொருளுக்கு சரியான விலையை நாங்க கொடுத்திருக்கோம்னு நான் சொன்னேன். உனக்கு அதெல்லாம் தெரியாதாடா?”

குட்டன் பிள்ளையும் விடவில்லை.

“அப்படின்னா திருவனந்தபுரம் உயர்நீதிமன்றத்தில் நாம பார்ப்போம்.”

இப்போது தோற்ற குட்டன்பிள்ளை, பின்னால் வெற்றி பெறுவோம் என்ற வீராவேசத்துடன் சொன்னார்.

அதே நேரத்தில் பாரு அம்மாவிற்கும் குட்டி அம்மாவிற்கும் இடையில் ஒரு பெரிய சண்டை நடந்து கொண்டிருந்தது. ஏழு சென்ட் நிலத்திற்கு இப்போது வாங்கியிருப்பதை விட அதிகமான தொகையை வாங்கித் தருவதாக குட்டன்பிள்ளை பரமேஸ்வரன் குட்டியிடம் கூறியிருக்கிறார். அன்று அந்த ஏழு சென்ட் நிலத்தை பாரு அம்மாவும் பரமேஸ்வரன் பங்கஜாக்ஷியும் எழுதிக் கொடுத்துவிட்டால் மட்டும் போதாது. அந்த நிலத்தில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்ற விஷயத்தை குட்டன்பிள்ளை பத்மநாபனிடம் முன்கூட்டியே கூறியிருக்கிறார். பத்திரப்பதிவு நடக்கும் நேரத்தில் பரமேஸ்வரன் பிள்ளை மேலும் கொஞ்சம் பணம் வேண்டுமென்று கேட்டார். அப்போது அந்த நிலத்திலிருந்த பிரச்சினையை பத்மநாபன் சொல்ல, பத்திரப்பதிவே நடக்காது என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டது. பாப்பி அம்மாவும் பத்திரப் பதிவிற்குப் போயிருந்தாள். எல்லாருக்குமிடையில் நீண்ட நேரம் பலவிதப்பட்ட வாக்குவாதங்களும் நடந்தன. பத்திரப்பதிவு நடக்காது என்ற சூழ்நிலை உண்டான பிறகும் பாரு அம்மாவும் பாப்பி அம்மாவும் அந்த நல்ல பக்கத்து வீட்டுப் பெண்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து வெற்றிலை, பாக்குப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

கவலை மேலோங்க, பரமேஸ்வரன் குட்டி வந்து சொன்னான்.

“இந்த இடத்தை நாம் தரவேண்டாம் அம்மா. எழுந்திருங்க போவோம்.”

அப்போது பத்மநாபனும் வந்து பாப்பி அம்மாவிடம் சொன்னான்.

“இந்த இடம் நமக்கு வேண்டாம். அம்மா பணம் நம்ம கையில் இருந்தா, இடத்துக்கா பஞ்சம். வாங்க போகலாம்.”

ஆனால், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்களுக்கிடையே எந்த பிரச்சனையும் இல்லை. பாப்பி அம்மாவின் வெற்றிலைப் பொட்டலத்திலிருந்து எடுத்து பாரு அம்மா வெற்றிலை, பாக்குப் போட்டுக் கொண்டிருந்தாள். அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழவில்லை.

பரமேஸ்வரன் குட்டிக்கும் பத்மநாபனுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் நடந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் கேசவன் நாயரும் அய்யப்பன் நாயரும் நின்றிருந்தார்கள்.

பாப்பி அம்மா தன் மகனை அழைத்து சொன்னாள்.

“மகனே, நீங்க சண்டை போடலாம். ஆனா, நாங்க சாகுறது வரை சண்டை போட முடியாது. ஏழு சென்ட் நிலம் நமக்கு இல்லாமப் போனா போகட்டும். பங்கஜாக்ஷிக்கும் பரமேஸ்வரன் குட்டிக்கும் அது இருந்துட்டுப் போகட்டும்.”

பாப்பி அம்மாவை விட நன்கு சிந்திக்கக்கூடிய பாரு அம்மா சொன்னான்.

“பாப்பி அம்மாவுக்கு ஏழு சென்ட் இடத்தை இருநூறு ரூபாய்க்கு நான் தர்றேன். அந்த இடத்துக்கு அதுக்கு மேல் பணம் கிடைச்சாக்கூட நமக்கு வேண்டாம்.”

அவள் தொடர்ந்து சொன்னாள்.

“எந்தவிதமான தகராறுக்கும் வழக்குக்கும் நான் தயாரா இல்ல.”

அதற்குப் பிறகுதான் இந்தப் பிரச்னைகளுக்குப் பின்னால் யார் இருந்தது என்பதே தெரிந்தது. அது தெரிந்த போது குட்டி அம்மாவிடமும் சில விஷயங்களை சொல்லாமல் பாரு அம்மாவால் இருக்க முடியவில்லை.


பத்திரப்பதிவு நடந்து முடிந்தவுடன் பாரு அம்மா வேகமாக ஓடினாள். வீட்டை அடைந்தவுடன், பாரு அம்மா குட்டி அம்மாவைப் பார்த்து சவால் விட்டாள். ஆனால், வாசுதேவன் குட்டி தன் தாயின் வாயைப் பொத்திக் கொண்டான்.

அன்றிரவு குட்டன் பிள்ளைக்கும் குட்டி அம்மாவுக்குமிடையில் பெரிய சண்டை நடந்தது. குட்டன் பிள்ளை குட்டி அம்மாவை அடித்துவிட்டார். இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் குட்டி அம்மாதான் என்று குட்டன் பிள்ளையும், குட்டன்பிள்ளைதான் என்று குட்டி அம்மாவும் ஒருவரையொருவர் குறை கூறிக் கொண்டார்கள்.

குட்டி அம்மா அவரைப் பார்த்து கேட்டாள்.

“நாளைக்கு நான் எப்படி என் பக்கத்து வீட்டுக்காரங்களோட முகத்தைப் பார்ப்பேன்?”

குட்டன் பிள்ளையும் அதே மாதிரி கூற நினைத்தார்.

“இவ்வளவு பிரச்னைகளுக்கும் காரணம் நீதானே. என்னை ஏத்திவிட்டது நீதானே?”

அதைத் தொடர்ந்து முன்பு நடந்த எல்லா விஷயங்களையும் கணவனும் மனைவியும் தங்களின் சண்டைக்கு மத்தியில் கூறினார்கள். அவர்கள் கூறிய எல்லாவற்றையும் பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்டார்கள். ஆனால், அன்று இரவு ஒரு சம்பவம் அங்கு நடந்தது. பத்திரம் எழுதிய பிள்ளை பத்திரம் எழுதியதற்கு மேல் ஏதாவது பணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் கூறினான் என்று உறுதியாகக் கூறுவதற்கு இல்லை- கேசவன் நாயரைப் பார்த்து புத்திசாலித்தனமான ஒரு விஷயத்தைச் சொன்னான்.

“உடனே வாங்கின நிலத்திற்கு வேலி போடணும். எப்படிப்பட்ட வழக்கு வந்தாலும், தைரியமா அதை சந்திக்கணும்.”

அந்த அறிவுரையை சொன்னதற்காக, பிள்ளைக்கு ‘தண்ணி’ அடிக்க ஒரு ரூபாய் கிடைத்தது.

அன்றிரவு கேசவன் நாயர் ஏழரை சென்ட் நிலத்தின் மூன்று பக்கங்களிலும் வேலி கட்டிவிட்டு, ஒரு பக்கத்தைத் தடத்தில் வீட்டோடு சேர்ந்து இருக்கும்படி செய்தார். பொழுது விடிந்தபோது பலா கிளைகளால் ஆன பலமான வேலி போடப்பட்டிருந்தது. அய்யப்பன் நாயருக்கு அது பிடிக்கவில்லை. இரவோடு இரவாக வேலி கட்ட வேண்டும்? அது மட்டுமல்ல- ஒரு மாமரத்தையும் ஒரு வேலிக்குள் இருக்கும்படி செய்து விட்டிருந்தார்கள். பத்திரத்தில் எழுதிக் கொடுத்த ஆள் உடன் இருந்தல்லவா வேலி இட வேண்டும்?

அந்த சண்டையின்போது அய்யப்பன் நாயர் மிரட்டினார்.

“நான் அந்த வேலியைப் பிரிப்பேன்.”

கேசவன் நாயரும் விடுவதாக இல்லை.

“அதைச் செய்ய நான் விட மாட்டேன்.”

அய்யப்பன் நாயர் பதிலுக்கு சொன்னார்.

“ப்பூ... பிச்சைக்காரப் பயலே... எங்கேயோ இருந்து இங்கே வந்து ஆட்சிப் பண்ணலாமான்னு பார்க்குறியா? உனக்கு இங்கே என்னடா அதிகாரம் இருக்கு? பிரசவத்துக்குச் செலவழிக்காத பய.”

தொடர்ந்து நாராயணனை பாப்பி அம்மா பெற்றெடுத்த, அந்த மழை பெய்து கொண்டிருந்த இரவு நேரத்தில் தன்னுடைய மனைவி கஷ்டப்பட்டதையும், அதற்குப் பிறகு நடைபெற்ற சம்பவங்களையும் அவர் விளக்கிக் கூற ஆரம்பித்தார். நாராயணன் அவர் சொன்ன எல்லா விஷயங்களையும் கேட்டுக் கொண்டு நின்றிருந்தான். அங்கு கூறப்பட்ட எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடிய வயதை அவன் அடைந்து விட்டிருந்தான்.

அய்யப்பன் நாயர் கேட்டார்.

“உனக்கு இங்கு என்ன வேலை? நீ பாப்பியைக் கல்யாணம் பண்ணினியா என்ன?”

7

டையில் பாச்சிபிள்ளை உட்கார்ந்திருந்தார். அவருக்கு வேறு எந்த வேலையும் இல்லை. கடைக்காரர் குமாரக்குறுப்பிற்கு கொண்டு வந்த சாதத்தில் ஒரு பகுதி மதிய நேரத்தில் அவருக்குக் கிடைக்கும். மாலை நேரத்தில் மரவள்ளிக்கிழங்கு இருக்கும் காலமாக இருந்தால், குறுப்பு இரண்டு மரவள்ளிக் கிழங்குகளைத் தருவார். வேக வைத்த மரவள்ளிக் கிழங்காகவோ, சுடப்பட்டதாகவோ அல்லது பச்சையாகவோ அது இருக்கும். சாயங்கால நேரங்களில் பட்டினியாகவும் இருப்பதுண்டு. கடையின் ஒரு மூலையில்தான் அவர் எப்போதும் படுத்துத் தூங்குவார். மிகவும் குறைந்த செலவில் குமாரக்குறுப்பிற்கு ஒரு வேலைக்காரர் கிடைத்தார். கடையைப் பார்த்துக் கொள்ள ஒரு நபரும், பாச்சுபிள்ளைக்கு மதிய நேரத்தில் போதுமான சாப்பாடு கிடைக்கும். மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்கும். வெற்றிலை-பாக்கு போடுவது, எண்ணெய் தேய்ப்பது எல்லாமே கடை இருக்கும் இடத்தில்தான். கடையில் ஏதாவது வேலை செய்து ஆடைக்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். படுத்து உறங்குவதற்கும் இடம் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது. அந்த விதத்தில் பாச்சு பிள்ளைக்கு எல்லா வசதிகளும் கிடைத்தன.

பத்மநாபன் வந்திருக்கும் விஷயத்தைக் குமாரக்குறுப்பு பாச்சு பிள்ளையிடம் கூறினார்.

“பாச்சு பிள்ளை அண்ணே... நீங்க மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, இப்போ உங்க நிலைமை என்ன தெரியுமா?”

பாச்சு பிள்ளைக்கு எதுவும் புரியவில்லை. குமாரக் குறுப்பு விளக்கிச் சொன்னார்.

“கேசவன் நாயர் இப்போ எப்படி வாழ்றார்னு தெரியுமா? அவர் கையில் இப்போ நூறு ரூபா நோட்டு பறக்குது.”

குமாரக்குறுப்பு உள் அர்த்தத்துடன் கேட்டார்.

“அந்தப் பொண்ணு பொறந்தப்போ ஒழுங்கா அங்கே இருந்திருந்தா, இப்போ நீங்க யாரு? இப்போ கேசவன் நாயரோட இடத்துல பாச்சு பிள்ளை அண்ணே, நீங்கதானே இருப்பீங்க?”

அவர் சொன்னது சரிதான் என்பதை பாச்சு பிள்ளையும் ஒத்துக் கொண்டார். குமாரக்குறுப்பு கேட்டார்.

“நீங்க ஏன் அங்கே போகாம இருந்தீங்கண்ணே?”

“அது ஒரு பெரிய கதை” பாச்சுபிள்ளை சொன்னார்.

“என் குறுப்பே, அதைச் சொல்றதுக்கு ஒருநாள் போதாது. அப்போ நான் வேலை செய்துக்கிட்டு இருந்தேன். தடத்தில் வீட்டுக்கு வடக்குப் பக்கம் இருந்த நிலத்துல எனக்கு வேலை கோன்னோத்துக்காரங்களுக்கு சொந்தமா இருந்துச்சு அந்த இடம். ஒருநாள் வேலை முடிஞ்சு வர்றப்போ, நேரம் சாயங்காலம் ஆயிடுச்சு. அந்தப் பெண் இருக்காளே, பாப்பி... அவ வாசல்ல நின்னுக்கிட்டிருந்தா, அந்தப் பையனும் இருக்கான். அவங்களுக்கு ரெண்டு சக்கரம் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) வேணும். வீட்டுல கஞ்சி வச்சி நாலு நாட்கள் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. நான் மடியில இருந்து வெற்றிலைப் பொட்டலத்தை அவிழ்த்து ரெண்டு சக்கரத்தைக் கொடுத்தேன். அதுக்குப் பிறகு நான் அங்கேயிருந்து போயிட்டேன்.”

குமாரக்குறுப்பு அதை நம்பாதது மாதிரி கேட்டார்.

“ச்சே... நீங்க வெறுமனே அங்கேயிருந்து போயிட்டீங்களா என்ன?”

பாச்சுபிள்ளை சத்தியம் செய்து பதில் கூறினார்.

“என் அப்பா மேல சத்தியமா, அம்மா மேல சத்தியமா... அங்கேயிருந்து நான் போயிட்டேன்.”

பாச்சு பிள்ளை குரலைத் தாழ்த்தி தன்னைப் பற்றிய ஒரு உண்மையைச் சொன்னார்.

“அது என்னோட இயற்கை குணம் குறுப்பே. பொம்பளை, பொட்டைக் கோழின்ற நினைப்பெல்லாம் எனக்கு எப்பவும் கிடையாது. அதை நான் எப்பவும் தேடினதும் இல்ல...”

குமாரக் குறுப்பு விடுவதாக இல்லை.


“பொய் சொல்லாதீங்க, பாச்சுபிள்ளை அண்ணே. சும்மா சன்னியாசி மாதிரி நடிக்காதீங்க. அந்தப் பொண்ணு கார்த்தியாயினி உங்களையே வார்த்தெடுத்து மாதிரி இருக்கு.”

பாச்சு பிள்ளை அதை மறுக்காமல் தொடர்ந்தார்.

“கேளு குறுப்பே கதையைக் கேளு. மறுநாள் அவ வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தா. நாலு சக்கரம் வேணும்னா. நான் கொடுத்தேன்.”

குமாரக் குறுப்பு கேட்டார்.

“பிறகு எதுவுமே பேசாம அங்கேயிருந்து போயிட்டீங்களா, பாச்சுப் பிள்ளை அண்ணே?”

தேய்ந்து போன பற்கள் வெளியே தெரிய சிரித்தவாறு அவர் சொன்னார்.

“இல்ல அன்னைக்கு தான் கொஞ்ச நேரம் அவகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன். இருட்டுறது வரை அங்கேயே இருந்துட்டேன். இந்த மாதிரி விஷயங்கள்ல ஆர்வம் இல்லாத ஆளா நான் இருந்தாலும், நானும் ஒரு மனிதன் தானே குறுப்பே?”

கதையைக் கேட்டு சுவாரசியமான குறுப்பு கேட்டார்.

“பிறகு?”

சிரித்துக் கொண்டே பாச்சு பிள்ளை தொடாந்தார்.

“பிறகு என்ன? அப்போ கோவில்ல ராத்திரி சாப்பாட்டுக்கு முரசு அடிச்சாங்க. அதுக்குப் பிறகு போனா நமக்கு சாப்பாடு இருக்காது. அப்போ கோவில்ல பிரசாத சாப்பாடு வாங்கிதான் நம்ம பொழப்பே ஓடிக்கிட்டு இருந்துச்சு. நான் அந்த விஷயத்தை அவக்கிட்ட சொன்னேன். பட்டினி கிடக்க வேண்டியதாயிடுச்சேன்னு நான் சொன்னேன். இருக்குறதை பங்கு வச்சு சாப்பிடலாம்னு அவ அப்போ சொன்னா. நான் மடியில இருந்து நாலு சக்கரத்தை எடுத்து அவக்கிட்டே கொடுத்தேன்.”

பாச்சு பிள்ளை நிறுத்தினார். அந்தக் கதையின் சுவாரசியத்தில் மிகவும் மூழ்கிப் போய் விட்டார் குறுப்பு. அவர் பாச்சு பிள்ளையிடம் கெஞ்சும் குரலில் சொன்னார்.

“அதுக்குப் பிறகு நடந்ததை சொல்லுங்க, பாச்சு பிள்ளை அண்ணே...”

“என்னத்தை சொல்றது குறுப்பே. அன்னைக்கு ராத்திரி நான் அங்கேயே படுத்துட்டேன். உறக்கம் வர்ற நேரத்துல அவ பாயில் வந்து உட்கார்ந்தா. அவ சாதாரண பெண் இல்ல... சரியான பெண்...”

குறுப்பு கேட்டார்.

“அந்தப் பொண்ணு பிறந்த பிறகு அங்கே போகாமலே இருந்ததுக்குக் காரணம் என்ன பாச்சு பிள்ளை அண்ணே?”

உண்மையைக் கூறும் குரலில் பாச்சு பிள்ளை சொன்னார்.

“நம்மால தாங்க முடியாது குறுப்பே. என்னால எப்படி ஒரு குடும்பத்தைத் தாங்க முடியும்?”

குமாரக் குறுப்பு கேட்டார்.

“பாப்பி அக்காவை உங்களால காப்பாற்ற முடியலியா?”

“காப்பாற்ற ஆசைதான். உண்மையைச் சொல்லணும்ல? எல்லாருக்கும் அரை ரூபா கூலி கிடைச்சதுன்னா, எனக்கு மனிதர்கள் நாலணாதான் கூலியா தந்தாங்க. பிறகு எப்படி ஒரு குடும்ப சுமையை நான் தாங்க முடியும்?”

குமாரக் குறுப்பு கேட்டார்:

“இருந்தாலும் கொஞ்ச நாள் அப்படியே இருந்தீங்கள்ல?”

“கொஞ்ச நாட்கள் அப்படியே வாழ்க்கை ஓடிச்சு. ஒருநாள் வேற வழியா போனேன். பிறகு அந்தப் பக்கமே போகலே...”

அந்த உறவைப் பற்றி மேலும் அறிய ஆர்வமாக இருந்தார் குமாரக் குறுப்பு. அவர் தொடர்ந்து கேட்டார்.

“பத்மநாபனுக்கு இப்போ உங்களைப் பார்த்தா அடையாளம் தெரியுமா, பாச்சு பிள்ளை அண்ணே?”

“தெரியுமோ என்னவோ, அப்போ நான் அவனை நல்லா உதைச்சிருக்கேன். நான் கம்பைக் கையில எடுத்தவுடன், அவன் நடுங்க ஆரம்பிச்சிடுவான். நான் அங்க போகாம இருந்தப்போ, அவன் என்னைத் தேடி வருவான். அவனோட தாய் சொல்லி விட்டுத்தான்.”

எல்லாவற்றையும் கேட்ட குமாரக் குறுப்பு ஒரு உண்மையைத் தெரிந்து கொள்வதற்காக கேட்டார்.

“பாச்சு பிள்ளை அண்ணே, அந்தப் பெண்ணைத் தவிர, உங்களுக்கு உறவுன்னு சொல்றதுக்கு இந்த பூமியில் வேற யாராவது இருக்காங்களா?”

“இல்லை” என்று தலையை ஆட்டினார் பாச்சு பிள்ளை.

“அப்படிக் இருக்குறப்போ, நீங்க அங்கே போனா என்ன? இப்போ போறவங்க எல்லாருக்கும் பத்மநாபன் காசை வாரி வாரி இறைக்கிறானாம்...”

“எனக்கும் ஏதாவது அவன் தரத்தான் வேணும். அதுதான் தர்மம். ஆனா, அவன் அப்படி சொல்வானா? ஒண்ணுமே இல்லைன்னாக்கூட அவனோட தங்கச்சி என் மகள்தானே?”

“அதை... அதைத்தான் நான் சொல்றேன். பத்து ரூபா கிடைச்சா இந்த வருடத்துக்கு வேட்டியும் மேற்துண்டும் கிடைச்சது மாதிரி ஆயிடும்ல.”

பத்து ரூபா கிடைத்தால் ஒரு வருடத்துக்கான ஆடை மட்டுமா வாங்க முடியும்? பாச்சு பிள்ளைக்கு உண்மையிலேயே அது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.

“ஆனா, எனக்கு அங்கே போறதுக்கு வெட்கமா இருக்கு, குறுப்பே?”

ஒரு நிமிடம் கழித்து அவர் தொடர்ந்து சொன்னார்.

“என்ன செய்றது? ஏதாவது கிடைக்கிற விஷயம்... ஆனா, போறதுக்கு வெட்கமா இருக்கு.”

“என்ன வெட்கம் பாச்சு பிள்ளை அண்ணே?”

அதற்கு பாச்சு பிள்ளை எந்த பதிலும் கூறவில்லை.

போகலாமா, வேண்டாமா என்ற சிந்தனையிலேயே நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. கடையில் பொருட்கள் வாங்க வருபவர்கள் யாரும் இல்லாத நேரத்தில் குமாரக் குறுப்பு இந்த விஷயத்தை பாச்சு பிள்ளையிடம் ஞாபகப்படுத்துவார். அவர் கடைசியில் சொன்னார்.

“பாச்சு பிள்ளை அண்ணே, உங்களுக்கு எதுக்கு காசும் பணமும்? சாப்பாடும், காப்பியும், வெற்றிலையும் அங்கே போனா உங்களுக்குக் கிடைக்கும்ல?”

தடத்தில் வீட்டிற்கு முன்னால் போகும் பாதை வழியே பல வருடங்களுக்குப் பிறகு பாச்சு பிள்ளை நடந்து போனார். வேகமாக எங்கோ செல்வதைப் போல இடது பக்கமோ, வலது பக்கமோ பார்க்காமல் நேராக அவர் நடந்தார். யாரும் தன்னைப் பார்த்து விடக் கூடாது என்ற எண்ணம் அந்த வீட்டு வாசலின் அருகில் சென்றபோது பாச்சு பிள்ளைக்கு இருந்தது. தடத்தில் வீட்டிற்குள் எந்தவித தயக்கமும் இல்லாமல் நுழைய வேண்டும் என்று அவர் மனதில் திட்டம் போட்டிருந்தார். ஆனால், அது நடக்காமல் போய் விட்டது.

தடத்தில் வீட்டின் முன்பக்கம் மட்டுமல்ல, நான்கு பக்கங்களும் உயரமான பெரிய வேலிகளால் கட்டப்பட்டிருந்தன. உள்ளே ஆசாரிமார்கள் வேலை செய்து கொண்டிருக்கும் தட்டு முட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தன்னுடைய பயணத்தில் பாச்சு பிள்ளை தெரிந்து கொண்ட விஷயங்கள் அவ்வளவுதான். திரும்பி வந்தபோது குமாரக் குறுப்பு சிரிப்புடன் கேட்டார்.

“என்ன பாச்சு பிள்ளை அண்ணே? ஏதாவது விஷயம் நடந்ததா?”

பாச்சு பிள்ளை சற்று தெளிந்தவாறு சொன்னார்.

“நான் அங்கே போகல. கோவில் வரை போயிருந்தேன். அந்தப் பூக்காரன் மாது நாயரைப் பார்த்துட்டு வரலாம்னு...”

குமாரக் குறுப்பு அதை நம்பினாரோ இல்லையோ? அவர் சொன்னார்.


“திருவிழா முடிஞ்சு யானையும் போயிடுச்சு. பத்மநாபன் போயி மூணு நாலு நாட்களாச்சு. இப்போ கேசவன் நாயர் வீடு கட்டுற வேலைகளைப் பார்த்துக்கிட்டு இருக்காரு.”

அது ஒரு முக்கியமான விஷயமல்ல என்பது மாதிரி பாச்சு பிள்ளை சொன்னார்.

“சரி... போகட்டும்.”

குமாரக் குறுப்பு ஆரம்பித்து வைத்த எதிர்பார்ப்புகள் பல மடங்கு பெருகி இப்போது ஒரு வெறியாகவே மாறி விட்டிருந்தது. தடத்தில் வீட்டிற்குள் நுழைந்தாலென்ன என்று அவர் நினைத்தார். உள்ளே நுழைவதற்கு தான் ஏன் வெட்கப்பட வேண்டும்? மாலை நேரத்தில் காத்து நின்று அவள் இரண்டு சக்கரம் தன்னிடம் வாங்கவில்லையா? பத்து நாட்களாவது தான் அவளுக்கு செலவுக்குப் பணம் தரவில்லையா? தான் சாப்பிட்டு முடித்த பாத்திரத்தில் மீதமிருந்ததை அவள் சாப்பிடவில்லையா? தனக்காக இருப்பதை வைத்துக் கொண்டு அவள் காத்திருக்கவில்லையா? இப்படிப் பல விஷயங்களையும் அவர் நினைத்துப் பார்த்தார்.

தடத்தில் வீட்டு வேலை படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒருநாள் எல்லா பலத்தையும் திரட்டிக் கொண்டு பாச்சு பிள்ளை அந்த வீட்டை நோக்கி நடந்தார். வாசலை அடைந்ததும் உள்ளே போக கால் வரவில்லை. யாரோ பின்னாலிருந்து இழுப்பதைப் போல் அவருக்கு இருந்தது. எனினும், எப்படி என்று தெரியவில்லை, பாச்சு பிள்ளை வெளி வாசலைத் தாண்டி உள்ளே நுழைந்து விட்டார்.

மூன்று நான்கு ஆசாரிமார்கள் அங்கு வேலை செய்து கொண்டிருந்தார்கள். கல் வேலை செய்பவர்கள் சுவரை உயர்த்தி கட்டிக் கொண்டிருந்தார்கள். மண்ணெடுப்பதும், சாயம் கலப்பதும் படு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. யாரையும் வெளியே காணவில்லை.

சிறிது நேரம் அங்கு நின்றிருந்த பாச்சு பிள்ளை வேலை நடந்து கொண்டிருந்த வீட்டிற்குள் நுழைந்தார். சிறிது நேரம் நடந்து பார்த்து விட்டு யாரிடம் என்றில்லாமல் ஒரு கேள்வியைக் கேட்டார்.

“ரெண்டு அறைகளும் ரெண்டு பரண்களும் ஒரு திண்ணையும் மட்டும்தான் இருக்கா?”

யாரும் பதில் கூறவில்லை. எங்கிருந்து என்று தெரியவில்லை. கார்த்தியாயினி முன்னால் வந்து நின்றாள். ஒரு நிமிடம் பாச்சு பிள்ளை அதிர்ச்சியடைந்து நின்று விட்டார்.

கார்த்தியாயினி திரும்பி நடந்தாள். பாச்சு பிள்ளை சிறிது அதிகாரம் தொனிக்கும் குரலில் சொன்னார்.

“பெண்ணே, தின்றதுக்கு ஏதாவது கொண்டு வா.”

கார்த்தியாயினி அதைக் கேட்டாளோ இல்லையோ! எனினும் அவள் கேட்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

வேலைக்காரர்களுடன் சேர்ந்து கேசவன் நாயரும் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் பாச்சு பிள்ளையைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டார். அந்த ஒரு நிமிட நேரத்தில் அவரிடமிருந்து இப்படியொரு வாக்கியம் வெளியே வந்தது.

“நீ எதுக்கு வந்தே?”

அதற்கு பாச்சு பிள்ளையிடமிருந்து உடனடியாக பதில் வந்தது.

“சும்மாதான்.”

கேசவன் நாயர் அதற்கு பதில் கூறுவதற்கு எதுவும் இல்லாமல் இருந்தார்.

பாரு அம்மாவிடமிருந்து வாங்கிய இடத்தில் தற்காலிகமாக ஒரு சிறிய ஆறுகால் குடில் அமைத்து அதில்தான் தடத்தில் வீட்டைச் சேர்ந்தவர்கள் இருந்தார்கள். முன்பு வீடு இருந்த இடத்தில்தான் இப்போது வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் குடிசை வாசலில் அமர்ந்து பாப்பி அம்மா அரிசி களைந்து கொண்டிருந்தாள். அவள் எழுந்தபோது பாச்சு பிள்ளைப் பார்த்து விட்டாள். கொதிக்கத் தொடங்கிய நீரில் அரிசியைப் போட்டு விட்டு பாப்பி அம்மா வெற்றிலைப் பெட்டியை எடுத்து அதிலிருந்து ஒரு வெற்றிலையையும், நான்கைந்து பாக்குத் துண்டுகளையும் நான்கு விரல் நீளத்தில் புகையிலையையும் எடுத்தாள். பக்கத்தில் கிடந்த கட்டிலில் கோபப்பட்டதைப் போல முகத்தை ‘உம்’ மென்று வைத்துக்கொண்டு கார்த்தியாயினி உட்கார்ந்திருந்தாள். வெற்றிலையைக் கையில் வைத்திருந்த பாப்பி அம்மா தன் மகளிடம் சொன்னாள்.

“மகளே, உன் அப்பா வந்திருக்காரு. இந்த வெற்றிலையை அவர்கிட்ட கொண்டு போய்க் கொடு.”

உடனே அவளிடமிருந்து பதில் வந்தது.

“என்னால இப்போ முடியாது.”

ஒரு நிமிடம் கழிந்தது. பாப்பி அம்மாவிற்கு கோபம் வரவில்லை. அவள் சொன்னாள்.

“அப்பான்னு சொல்றது பெரிய விஷயம், மகளே!”

“எனக்குத் தெரியாது.”

தொடர்ந்து அவள் தெளிவில்லாமல் என்னவோ முணுமுணுத்தாள்.

“நான் சொல்றேன். இதைக் கொண்டு போய்க் கொடு.”

கார்த்தியாயினி அந்தப் பழைய வரலாற்றை நினைத்துப் பார்த்தாள். “அப்பா இல்லைன்னு சொல்லி என்னை அடிச்சாரு. எனக்கு அப்பாவும் இல்ல... யாருமில்ல...”

பாப்பி அம்மா அமைதியான குரலில் சொன்னாள்:

“அப்பான்னு ஒரு ஆளு இருக்காருன்னும் அது அதோ அங்கே நிக்கிற மனிதர்தான்னும் நான் சொல்றேன்ல.”

அதற்குப் பிறகும் தலையை இப்படியும் அப்படியுமாக ‘முடியாது’ என்பது மாதிரி ஆட்டிய கார்த்தியாயினி என்னவோ மெதுவான குரலில் முணுமுணுத்தாள். “இப்போ திடீர்னு அப்பா வந்துட்டாராக்கும்.”

அவள் அந்த வார்த்தைகளைத்தான் கூறியிருக்க வேண்டும். பாப்பி அம்மா வெற்றிலையை அவள் கையில் தந்தாள்.

“கொண்டு போயி கொடு, மகளே! தந்தையோட சாபத்தை தேவையில்லாம சம்பாரிச்சுக்காதே. நம்மோட கர்ம பலன்தான் நம்ம கஷ்டங்களுக்கெல்லாம் காரணமா இருக்கணும். இருந்தாலும் அம்மா நான் சொல்றேன் மகளே, அவர்தான் உன் அப்பா போ.”

பாப்பி அம்மா கார்த்தியாயினியைக் கையால் தூக்கி எழுந்து நிற்க வைத்து, தள்ளிவிட்டாள்.

வெற்றிலைக்குள் பாக்குத் துண்டுகளையும் புகையிலைத் துண்டுகளையும் வைத்து சுருட்டி தன் தாய் கையில் கொடுத்ததை அப்படியே கொண்டு போய் கார்த்தியாயினி பாச்சு பிள்ளையின் கையில் தந்தாள். மகள் முதல் தடவையாக தன் தந்தையின் கையில் எதையோ கொடுக்கிறாள் என்றால் அதுதான். அதைக் கொடுத்த போது கார்த்தியாயினி பாச்சு பிள்ளையின் முகத்தை உற்றுப் பார்த்தாள். பாச்சு பிள்ளை தன்னுடைய தேய்ந்து போன் பற்கள் முழுவதையும் வெளியே காட்டி தலையைக் குலுக்கியவாறு ‘ஙங்ங’ என்று சத்தம் வரும் வண்ணம் சிரித்தார். வாழ்க்கையில் பாச்சு பிள்ளையின் முதல் பாச வெளிப்பாடே அதுதான். அதேபோல கார்த்தியாயினி வாழ்க்கையிலேயே முதல் தடவையாகத் தந்தையின் பாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

கேசவன் நாயர் அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். அதை அவரால் சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அவர் நேராக பாப்பி அம்மா இருக்குமிடத்திற்கு சென்றார். பாப்பி அம்மா அடுப்பிற்கு அருகில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள்.

கேசவன் நாயர் பாப்பி அம்மாவைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார்.

“அந்த ஆள் இங்கே எதுக்கு வரணும்?”

தலையை உயர்த்தாமலே பாப்பி அம்மா பதில் சொன்னாள்.

“எனக்குத் தெரியாது.”


அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் குழம்பிப் போய் அவர் அதே கேள்வியை மீண்டும் கேட்டார்.

“அந்த ஆளு இங்கே எதுக்கு வரணும்னு நான் கேக்குறேன்ல?”

பூசணிக்காயை நறுக்கிக் கொண்டே தலையை உயர்த்தாமல் பாப்பி அம்மா சொன்னாள்.

“நான் வரச் சொல்லல.”

கேசவன் நாயர் தொடர்ந்து கேட்டார்.

“மத்தவங்க கஷ்டப்பட்டு இங்கே மூணு நேரமும் சாப்பிடலாம்ன்ற நிலை வந்ததும், ஒவ்வொருத்தனும் மகளைப் பார்க்கணும், சந்தோஷப்படணும்னு வந்திர்றதா..?”

பாப்பி அம்மா அதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. கேசவன் நாயர் கேட்டார்.

“இவன் எப்போ தந்தை ஆனான்? எப்போ மகள் உண்டானா?”

அதற்கும் பாப்பி அம்மா பதில் சொல்லவில்லை.

கேசவன் நாயர் அவளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்.

“இங்கே எதுக்கு வந்தேன்னு அந்த ஆளைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டா என்ன?”

தலையை உயர்த்தாமலே அதற்கு பாப்பி அம்மா பதில் சொன்னாள்.

“சொல்றேன்னு கோபிக்கக் கூடாது. தப்பாகவும் நினைக்கக் கூடாது. அவரை மாதிரி ஆயிட்டு, இங்கே நீங்க வர்றீங்க, உங்களைப் பார்த்து நான் இப்போ நீங்க சொன்ன மாதிரி நடந்தா, நாராயணன் குஞ்சு அதைப் பற்றி என்ன நினைப்பான்? நான் அப்படி நடந்தா கார்த்தியாயினி வருத்தப்பட மாட்டாளா? தந்தை எப்படி இருந்தாலும் தந்தைதானே?”

கேசவன் நாயருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. ஆனால், கவலையோ, பயமோ ஏதோவொன்று அவருக்குள் இருந்தது.

“அப்படின்னா இது முன்கூட்டியே திட்டம் போடப்பட்டு நடக்குது. எல்லாத்தையும் தெரிஞ்சு அந்த ஆளு நெருங்கி வர்றான். என்னைப் போகச் சொல்லப் போறியா? இல்லாட்டி ரெண்டு பேரையும் இங்கே வச்சுக்கலாம்னு திட்டம் போட்டிருக்கியா?”

பதிலுக்குக் காத்திருக்காமல் கேசவன் நாயர் நடந்தார்.

சிறிது நேரம் சென்றது. மேலும் அதிகாரம் வெளிப்பட சாந்து குழைத்துக் கொண்டிருந்தவனையும் கல்வேலை செய்து கொண்டிருந்தவனையும் வேலையில் சற்று மந்தமாக இருந்தார்கள் என்பதற்காக கேசவன் நாயர் வாய்க்கு வந்தபடி திட்டுவது காதில் விழுந்தது.

“கூலியை சாயங்காலம் எண்ணி வாங்குறீங்கள்ல? அப்படின்னா வேலையை ஒழுங்கா செய்யணும்.”

கேசவன் நாயர் உரத்த குரலில் கூறினார்.

8

பரமேஸ்வரன் குட்டியையும் பத்மநாபன் அழைத்துச் சென்றிருந்தான். அவன் போய் சரியாக ஒரு மாதம் ஆனவுடன் அய்யப்பன் நாயரின் பெயருக்குப் பதினைந்து ரூபாய் மணியார்டர் வந்தது. இதற்கு முன்பு திருவனந்தபுரத்திலிருக்கும் ஒரு ஹோட்டலில் அவன் சிறிது நாட்கள் வேலை செய்தான். ஆனால், அப்போது அவன் ஒரு காசுகூட வீட்டுக்கு அனுப்பியதில்லை.

பரமேஸ்வரன் குட்டியின் மணியார்டர் வந்த விஷயம் பக்கத்து வீடுகளில் ஒரு பேச்சு விஷயமாக ஆனது. பாரு அம்மாவிற்கு ஒரு தனிப்பட்ட சந்தோஷம் அதனால் உண்டானது. தன் மகன் அனுப்பி வைத்த பத்து சக்கரம் வந்திருக்கிறது என்ற விஷயம் ஒரு தாய்க்குத் தனி மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒன்றுதானே.

ஆனால், குட்டி அம்மாவின் வீட்டில் அன்று கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை நடந்தது.

“அந்தப் பத்திரப்பதிவு நாளன்று தேவையில்லாம பிரச்சினைகள் உண்டாக்கி பக்கத்து வீட்டுக்காரர்களை எதிரிகளா ஆக்கியாச்சே! இல்லாட்டி வாசுதேவனை பத்மநாபன் கூட அனுப்பியிருக்கலாமே? பையன் இப்படி வேலை வெட்டி இல்லாம பீடி பிடிச்சிக்கிட்டு சுத்திக்கிட்டு திரியிறான்...”

குட்டன் பிள்ளை சொன்னார்.

“போடி... போ. நான் என் பையனை அப்படியெல்லாம் தேநீர்க் கடை வேலைக்கு அனுப்புறதா இல்ல...”

குட்டி அம்மா கேட்டாள்.

“பிறகு என்ன செய்யப் போறீங்க?”

“அது எனக்குத் தெரியும்” என்று சொன்னாரே தவிர, தெளிவான ஒரு பதிலைக் குட்டன் பிள்ளையால் தர முடியவில்லை.

தொடர்ந்து நடந்த வாக்குவாதத்தில் தடத்தில் வீட்டுக்காரர்களுடன் சண்டை உண்டாகக் காரணம் குட்டி அம்மாதான் என்று குட்டன்பிள்ளை சொன்னார். தான் நிரபராதி என்று குட்டி அம்மா வாதிட்டாள். கடைசியில் தன் நெஞ்சில் அடித்து தான் நிரபராதி என்று நிரூபிக்க முயன்றாள் குட்டி அம்மா.

நாணியம்மாவின் வீட்டில் பேச்சு வேறு வகையில் இருந்தது. இரவு உணவு முடிந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாணியம்மா சங்கரப் பணிக்கரிடம் சொன்னாள்.

“எது எப்படியோ- பாரு தப்பிசிட்டா.”

சங்கரப் பணிக்கருக்கு எதுவும் புரியவில்லை. நாணியம்மா விளக்கினாள்.

“பரமேஸ்வரன் குட்டியும் கோயம்புத்தூருக்குப் போயிட்டான். தடத்தில்காரர்கள் நல்லா ஆனது பத்மநாபன் கோயம்புத்தூருக்குப் போனதுனாலதானே?”

சங்கரப் பணிக்கருக்கு சிறிது அந்த விஷயத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது. அவர் சொன்னார்.

“பத்மநாபன் போனான், நல்ல நிலைமைக்கு வந்துக்கிட்டு இருக்கான். அவன் இந்த ஊர்ல இருக்குற மற்ற பசங்க மாதிரி இல்ல நல்லவன். நல்ல குணமும் மரியாதையும் உள்ளவன். பரமேஸ்வரன் குட்டி அப்படியில்ல. அவன் ஒரு கையில கறை உள்ளவன்.”

நாணியம்மா அதை மறுத்தாள்.

“அவன்கிட்ட அப்படி என்ன தப்பு இருக்கு?”

அவன்மீது தெளிவான ஒரு குற்றத்தை சாரங்கப் பணிக்கரால் கூற முடியவில்லை. என்ன காரணத்தாலோ, பரமேஸ்வரன் குட்டியை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

சிறிது நேரம் நாணியம்மா என்னவோ யோசனையில் இருந்தாள். பிறகு அவள் சொன்னாள்.

“ராத்திரி சாப்பாடு முடிஞ்சு ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்கக் கூடாதுன்னு பொதுவா சொல்லுவாங்க. இருந்தாலும் நான் சொல்றேன். என் மனசுல தோணினது. அது பக்கத்து வீட்டுக்காரங்க நல்லா வரட்டும்.”

“ம்... பக்கத்து வீட்டுக்காரங்க நல்லா இருக்கட்டும்னு இப்போ மூளையில தோணுனதுக்குக் காரணம்?”

நாணியம்மா நேராக விஷயத்திற்கு வந்தாள்.

“பத்மநாபனைப் பாருவோட மகள் பங்கஜாக்ஷிக்கும் பரமேஸ்வரன் குட்டியை தடத்தில் கார்த்தியாயினிக்கும் கல்யாணம் பண்ணி வச்சா என்ன?”

சங்கரப் பணிக்கர் கேட்டார்.

“நீ அதை முடிவு பண்ணினா போதுமா?”

“நான் அதை முடிவு பண்ணுவேன்னா சொன்னேன்? சம்பந்தப்பட்டவங்க அதை சிந்திக்கட்டும்.”

யாரும் சிறிது நேரத்திற்கு எதுவும் பேசவில்லை. அதைப்பற்றி சங்கரப் பணிக்கர் யோசித்துக் கொண்டிருந்தார்.

“நமக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை நினைச்சிக்கிட்டு தேவையில்லாம மத்தவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு திட்டும், கெட்டப் பெயரும் வாங்காம இருக்குறது நல்லது. நான் சொல்ல நினைக்கிறது அதுதான்.”

நாணியம்மா கோபத்துடன் சொன்னாள்.

“என்னை எதுக்கு திட்டுறாங்க? நீங்க சொல்றதுதான் வேடிக்கையா இருக்கு. நான் சொல்றதை சொல்லுவேன். அவங்களுக்கு விருப்பமிருந்தா செய்யட்டும். இல்லாட்டி வேண்டாம்.”

“சரி... நடக்கட்டும்.”

மறுநாள் காலையில் நாணியம்மா பாரு அம்மாவின் வீட்டிற்குச் சென்றாள். தான் மனதில் நினைத்திருந்ததை பாரு அம்மாவிடம் அவள் கூறினாள்.


பாரு அம்மாவைப் பொறுத்தவரையில் அது ஒரு நல்ல விஷயமாக இருந்தது. அவள் தன் கணவரை அழைத்தாள். அய்யப்பன் நாயருக்கும் அந்த விஷயம் மிகவும் பிடித்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்க வேண்டுமென்று அவர் விரும்பினார்.

பாரு அம்மா சொன்னாள்.

“ஆனா, ஒரு விஷயத்தை நான் சொல்ல விரும்புகிறேன். நாணி, இப்போ நீ நல்ல எண்ணத்தோட இதைச் சொல்ல வந்திருக்கே. பக்கத்து வீட்டுக்காரங்க ஒண்ணோடு ஒண்ணு சேர்ந்து நல்லா இருக்கட்டும்னு நீ நினைக்கிறே. ஆனா, தடத்தில் வீட்டுக்காரங்க இதுக்கு சம்மதிப்பாங்களான்னு எனக்கு சந்தேகமா இருக்கு.”

அய்யப்பன் நாயருக்கும் அந்த சந்தேகம் இருந்தது. நாணியம்மாவால் அதை நம்பவே முடியவில்லை. அவள் கேட்டாள்.

“பாரு, தடத்தில் வீட்டு பாப்பியையும் அவளோட பிள்ளைகளையும் நமக்குத் தெரியாதா?”

ஒரு புன்சிரிப்புடன் பாரு அம்மா சொன்னாள்.

“அது அப்போ இருந்த நிலைமை நாணி! இப்போ ஓடு போட்ட வீடு, அது இதுன்னு ஆயிட்டாங்களே! அதுவும் அடி பிடின்ல வீட்டு வேலை நடந்திருக்கு! கையில பணத்தை வச்சிக்கிட்டு... மாராம் மடத்துக்காரங்க நினைச்சாக்கூட இவ்வளவு சீக்கிரமா வீட்டு வேலை முடிஞ்சிருக்காது.”

ஒரு நிமிடம் கழித்து பாரு அம்மா தொடர்ந்தாள்.

“ஆனா, எல்லா விஷயத்தையும் சொல்லணும்ல. பாப்பியைப் பொறுத்தவரை, அவள்கிட்ட எந்த மாற்றமும் இல்ல. இப்போ அவ சந்தோஷமா இருக்கா. உடல்நலம் நல்லா இருக்கு. இருந்தாலும், எந்த விஷயத்தையும் அவ மறக்கல. கொஞ்சம்கூட ஆணவம் அவள்கிட்ட இல்ல!”

நாணியம்மா கேட்டாள்.

“பிறகு யாரைக் குறை சொல்ற? பத்மநாபனையா?”

அய்யப்பன் நாயர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.

“அந்தப் பையனைப் பற்றி எதுவும் சொல்லாதே. இந்த அளவுக்கு ஒரு நல்ல பையன் நம்ம ஊர்லயே இல்ல. தனக்கு இந்த அளவுக்கு வசதி வந்திருக்குறதை அவன் காட்டிக்கிறதே இல்ல...”

பாரு அம்மா சொன்னாள்.

“அந்தப் பொண்ணுகூட அப்படித்தான். அவள் புடவையை அணிஞ்சு நடந்தாலும், கொஞ்சம்கூட ஆணவம் கிடையாது. பிறகு, அந்தச் சின்னப் பையன்...”

நாணியம்மா இடையில் புகுந்து சொன்னாள்:

“அந்தச் சின்னப்பையன் இருக்கானே! அவன் பட்டினி கிடக்க வேண்டிய நிலைமையில இப்போ இல்ல. இருந்தாலும் அவன் என்ன பேச்சு பேசுறான்!”

பாரு அம்மா கேட்டாள்:

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவன் மற்ற பிள்ளைங்க மாதிரி இல்லைன்னு வேணும்னா சொல்லலாம்.”

அய்யப்பன் நாயர் அப்போது வேறொரு விஷயத்தைச் சொல்ல நினைத்தார். அவர் ஆர்வத்துடன் கேட்டார்:

“இப்போ பாச்சு பிள்ளை தடத்தில் வீட்டுக்கு வர்றாரா?”

நாணியம்மா அதற்குப் பதில் சொன்னாள்:

“அவர் மதிய சாப்பாடு அங்கேதான்.”

அய்யப்பன் நாயர் கேட்டார்:

“அப்போ கேசவன் நாயர்...?”

கேள்வியை அவர் முடிப்பதற்கு முன்பே, பாரு அம்மா சொன்னாள்:

“அவரும் அங்கேதான் இருக்கார். மத்தியானம் பாச்சு பிள்ளை வருவார். கார்த்தியாயினி சோறு பரிமாறுவா. அவர் அங்கேயே உட்கார்ந்து வெற்றிலை, பாக்கு போடுவார். புறப்படுவார். ராத்திரி அங்கே வர்றது இல்ல!”

நாணியம்மா அய்யப்பன் நாயரைப் பார்த்து கேட்டாள்:

“இந்த விஷயத்தை இவ்வளவு தீவிரமா கேக்குறதுக்குக் காரணம் என்ன அய்யப்பன் அண்ணே?”

ஒரு சிரிப்புடன் அய்யப்பன் நாயர் சொன்னார்:

“நான் கோவில் பக்கத்துல இருக்குற துணிக்கடையில இருக்குறப்போ பாச்சு பிள்ளை வந்தார். அவர் கையில ஒரு அஞ்சு ரூபா நோட்டு இருந்துச்சு. ஒரு வேஷ்டியும் துண்டும் வாங்கினாரு. யாரோ அவரைப் பார்த்து கிண்டலுடன் கேட்டாங்க. ரூபா எங்கேயிருந்து கிடைச்சது பாச்சு அண்ணேன்னு. அந்தத் தேய்ஞ்சு போன பல்லை வெளியே காட்டி அவர் சொன்னாரு: ‘என் மகள் தந்தா’ன்னு எந்த மகள்னு அந்த ஆளு அவரைப் பார்த்து கேட்டாரு. ‘தடத்தில் வீட்டுல இருக்குற கார்த்தியாயினி. அவ இல்லாம எனக்கு வேற எந்த குழந்தை இருக்கு? என்று பாச்சு பிள்ளை பதில் சொன்னாரு. இப்போ தடத்தில் வீட்டுக்குப் போறதுண்டான்னு அவர் கேட்டதற்கு சாப்பாடு அங்கேதான்னு அவர் சொன்னாரு. தொடர்ந்து அவர் சொன்னாரு. ‘இந்த வயதான காலத்துல அவங்களைத் தவிர எனக்கு வேறு யாரு இருக்கா?’ன்னு அதைக் கேட்டு எல்லாரும் சிரிச்சிட்டாங்க.”

நாணியம்மா சிறிது கோபம் கலக்கச் சொன்னாள்:

“இதுல சிரிக்கிறதுக்கு என்ன இருக்கு? கார்த்தியாயினி அவர் மகதான். இதுல மாறுபட்ட கருத்தே இல்லை. அவளைத் தவிர அவருக்கு வேற யாருமே இல்ல...”

சிரித்துக் கொண்டு அய்யப்பன் நாயர் சொன்னார்:

“அது சரிதான். பிரசவம் ஆனப்போ கவனிக்கல. குழந்தைக்கு எண்ணெய் வாங்கிக் கொடுக்கல. அப்பன்னு போய் இப்போ நிக்கிறாரு!”

அதற்குப் பதில் பாரு அம்மாவிடமிருந்து வந்தது:

“ம்... என்ன அதுக்கு? கேசவன் நாயர் அந்த வீட்டுல ஆட்சி செய்யலாம்னா, பாச்சு பிள்ளை செய்யக்கூடாதா என்ன?”

நாணியம்மாவும் அதை சரி என்று ஒப்புக் கொண்டாள். அவள் பாரு அம்மா கூறியதை முழுமை செய்தாள்.

“நாராயணனோட அப்பன் அந்த வீட்டுல இருக்கலாம்னா கார்த்தியாயினியோட அப்பன் அங்கே இருக்குறதுல என்ன தப்பு? தடத்தில்காரங்க வாழ்றது இந்த ரெண்டு பேரால நிச்சயமா இல்ல. அந்தப் பையன் பாண்டி நாட்டுக்குப் போயி எச்சில் இலை எடுத்து, க்ளாஸ் கழுவி நெருப்புப் புகையில சம்பாதிச்சது எல்லாம். நிலைமை அப்படி இருக்குறப்போ பாச்சு பிள்ளைக்கு கேசவன் நாயருக்குமிடையே என்ன பெரிய வித்தியாசம் இருக்கு?”

நாணியம்மா கொஞ்சம் மூச்சை நிறுத்தியபோது, ஆவேசத்துடன் பாரு அம்மா சொன்னாள்:

“நாராயணனோட தகப்பனும் கார்த்தியாயினியோட தகப்பனும் அந்த வீட்டுல ஒரே மாதிரிதான். பாப்பி அந்த விஷயத்தை ஒழுங்காதான் செய்திருக்கா!”

அந்த இரண்டு பெண்களும் கறாராகப் பேசியதைப் பார்த்து ஒரு மாதிரி ஆகிவிட்டார் அய்யப்பன் நாயர். அவர் தான் தோல்வியடைந்ததை ஒப்புக் கொண்டார்.

“நீங்க சட்டம் படிச்சு வக்கீல்களா ஆகியிருந்தா, யாருமே உங்க முன்னாடி நிற்க முடியாது. அது இருக்கட்டும்... பெண்களே, நீங்க எனக்கு என் முன்னாடி கத்திக்கிட்டு இருக்கீங்க?”

பாரு அம்மா அமைதியாக இருந்தாள். நாணியம்மா அதற்குப் பதில் சொன்னாள்:

“பாவம்... அந்த பாச்சு பிள்ளை. அந்த வீட்டுல வந்து ஒரு நேரம் சாப்பிடுற விஷயம் இந்த ஊர்ல இருக்குற ஆம்பளைங்க யாருக்குமே பிடிக்கல. எங்க வீட்டுக்காரரும் அதையேதான் சொல்றாரு. இப்போ எல்லாரும் பாச்சு பிள்ளையைப் பார்த்து விரிக்கிறாங்க.


கேசவன் நாயர் காலையில காபி, மதியானம் சாப்பாடு, சாயங்காலம் சாப்பாடு, ராத்திரி பாலுன்னு சாப்பிட்டு, மடி நிறைய பணத்தையும் வச்சிக்கிட்டுத் திரியிறாரு. அவரோட தொந்தியைப் பார்த்து யாரும் சிரிக்கிறது இல்ல. ரெண்டு பேருமே பிரசவத்துக்கு ஒண்ணுமே தரல. ரெண்டு பேருமே ஆம்பளைங்கதான். ரெண்டு பிள்ளைகளோட தந்தைமார்கள்தான். பாப்பி அஞ்சுரூபா கொடுத்தாள்னா, அது சரியான செயல்தான்...”

அந்தப் பெண்களின் நியாயமான பேச்சைப் பார்த்து அய்யப்பன் நாயரே அசந்து போய்விட்டார். அவர்கள் கூறுவது சரிதான் என்பதை அவரும் ஒப்புக் கொண்டார்.

அந்தத் தைரியத்துடன் நாணியம்மா சொன்னாள்:

“நான் போயி பாப்பிகிட்ட கேட்கப்போறேன். கல்யாண விஷயத்தை அவ ஒப்புக் கொள்கிறாளா இல்லையான்றதை நான் தெரிஞ்சிக்கப் போறேன். அப்போ தெரிஞ்சிக்கலாம் பாப்பியை...”

பாரு அம்மா சொன்னாள்:

“அப்படின்னா நீ போய் கேளு...”

அந்த ஆர்வத்துடனே நாணியம்மா தடத்தில் வீட்டிற்குச் சென்றாள். அப்போது பாப்பி அம்மா வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். நாணியம்மா அருகில் போய் உட்கார்ந்தாள். பிறகு, சொன்னாள்:

“நான் ஒரு விஷயத்தைக் கேட்கலாம்னு வந்தேன், பாப்பி!”

நாணியம்மா ஏதோவொரு முக்கியமான விஷயமாகத்தான் வந்திருக்கிறாள் என்பதை பாப்பி அம்மா புரிந்து கொண்டாள். அவள் சொன்னாள்:

“நாணி அக்கா, வெற்றிலை போடுங்க. நல்ல பாக்கு இருக்கு. இங்கேயிருக்குற பாக்கு மரத்துல இருந்து பறிச்சது.”

நாணியம்மா சொன்னாள்:

“நான் வெற்றிலை போடுறேன். அது கொஞ்ச நேரம் கழிச்சு வந்த விஷயத்தைச் சொல்லட்டுமா? கேசவன் நாயர் ஒப்புக் கொள்ளாமல் போகலாம்.  இருந்தாலும் சொல்றேன்.”

பாப்பி அம்மா சொன்னாள்:

“என்ன விஷயம்னு சொல்லுங்கக்கா?”

நாணியம்மா சொன்னாள்:

“உன் பக்கத்து வீட்டுக்காரங்களான நாங்க ஒரு விஷயத்தை முடிவு பண்ணியிருக்கோம். பத்மநாபன்- பங்கஜாக்ஷிக்கும் பரமேஸ்வரன் குட்டி - கார்த்தியாயினிக்கும் ஒவ்வொரு துணி வாங்கித் தரணும்.”

நாணியம்மா தான் கூற நினைத்த விஷயத்தைக் கூறி முடித்த திருப்தியில் இருந்தாள்.

பாப்பி அம்மா அப்படியொன்றும் அதிக நேரம் யோசிக்கவில்லை. அவள் சொன்னாள்:

“எனக்கு விருப்பம்தான், அக்கா. அந்தப் பெண்ணையும் பையனையும் எனக்கு நல்லா தெரியும். அந்தப் பொண்ணு என்கூட நல்லா இருந்துக்குவா. பையனும் என்னை ஒதுக்கமாட்டான். ஆனா, பத்மநாபனும் கார்த்தியாயினியோட அப்பாவும் நாராயணனோட அப்பாவும்ல இந்த விஷயத்தைத் தீர்மானிக்க வேண்டியவங்க!”

நாணியம்மாவிற்கு ஒரு நிமிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அடுத்த நிமிடம் அவள் கேட்டாள்:

“ஏன்டி இந்த விஷயத்தைப் பாச்சு பிள்ளையும் கேசவன் நாயரும் தீர்மானிக்கணும்? பத்மநாபன் நீ சொல்றதை மறுத்துப் பேசமாட்டான்.”

பாப்பி அம்மா அதற்குப் பதில் சொன்னாள்:

“கார்த்தியாயினியோட கல்யாண விஷயத்தைத் தீர்மானிக்க வேண்டியது அவளோட அப்பன்தானே அக்கா? இப்போ இங்கே இருக்குறது பத்மநாபனோட பணமா இருந்தாலும், எல்லா விஷயங்களையும் பாக்குறது நாராயணனோட தந்தைதானே?”

நாணியம்மாவிற்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. சிறிது தயங்கிய குரலில் அவள் கேட்டாள்:

“உனக்குச் சம்மதம்தானே?”

பாப்பி அம்மா ஆத்மார்த்தமான குரலில் சொன்னாள்:

“எனக்குச் சம்மதம்தான். பூர்ண சம்மதம். இது என்ன கேள்வி? எங்கிருந்தாவது அவன் ஒரு பொண்ணைக் கொண்டு வந்தால், அவளுக்கு என் மேல இப்படியொரு விருப்பம் இருக்குமா? இந்தப் பொண்ணா இருந்தா, நான் ஏதாவது குறை சொன்னாக்கூட இவ அதைப் பெருசா எடுத்துக்க மாட்டா...”

நாணியம்மா சொன்னாள்:

“அப்படின்னா இந்த விஷயத்தைச் சொல்லி பத்மநாபனுக்கு ஒரு கடிதம் எழுது.”

பாப்பி அம்மா தன்னுடைய செயலற்ற நிலைமையை விளக்கினாள்:

“நான் சொன்னால், அந்த நாராயணனோட அப்பா எழுதுவாரா? எனக்கு எழுதத் தெரியுமா? ஒரு விஷயம் செய்யுங்க. அய்யப்பன் அண்ணன்கிட்ட சொல்லி எழுதச் சொல்லுங்க. நான் சொல்லித்தான் கடிதம் எழுதுறதா சொல்லிடுங்க. பிறகு என்ன வேணும்?”

அய்யப்பன் நாயர் எழுதுவாரா என்பதைப் பற்றி நாணியம்மாவிற்குச் சந்தேகம் இருந்தது. எனினும், அவரை எப்படியும் எழுதச் செய்ய வேண்டும் என்று அவள் தீர்மானித்தாள்.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் அங்கு ஒரு சம்பவம் நடைபெற்றது. குட்டியம்மாவின் மகன் வாசுதேவன் காணாமற் போனான். ஆலப்புழையில் நடைபெறும் யாரோ ஒருவரின் வழக்கு விஷயத்திற்காக வக்கீலுக்குக் கொடுக்கும்படி தந்திருந்த பதினைந்து ரூபாய்களையும் காணோம். அவன் அந்தப் பணத்தையும் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். கருமாடியிலிருந்து ஆலப்புழைக்குச் செல்லும் இரவு நேரப் படகில் அவன் ஏறியதாகப் பின்னால் தகவல் கிடைத்தது.

குட்டி அம்மா எப்போதும் அழுத வண்ணம் இருந்தாள். குட்டன்பிள்ளை சொன்னார்:

“என்ன இருந்தாலும் ஆண்பிள்ளைதானே! எங்கேயாவது போயி பிழைக்கட்டும். நாம எதுக்கு அதுக்காக வருத்தப்படணும்?”

குட்டி அம்மா எல்லா குற்றங்களையும் குட்டன்பிள்ளை மீது சுமத்தினாள்.

நான்கைந்து நாட்கள் கழித்து பத்மநாபனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வாசுதேவன் கோயம்புத்தூரில் பத்மநாபனின் ஹோட்டலுக்கு வந்து சேர்ந்ததாகவும், அவனை அங்கு தங்க வைத்திருப்பதாகவும், யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு புறப்பட்டதற்காக அவனுக்கு நிறைய அறிவுரைகளை தான் கூறியிருப்பதாகவும் அவன் எழுதியிருந்தான். எது எப்படியிருந்தாலும் வாசுதேவனைத் தற்போதைக்கு பத்மநாபன் விடமாட்டான் என்பது தெரிந்தது.

தடத்தில் வீட்டில் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்கள் எல்லாரும் கூடியிருந்தார்கள். அங்கு குட்டி அம்மா இருந்தாள். கடிதம் படிப்பதைக் கேட்டாள். குட்டி அம்மாவிற்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

பாரு அம்மா சொன்னாள்:

“குட்டி, நீயும் தப்பிச்சிட்டேடி... அவனும் நல்லா வருவான். நீயே பாரேன்!”

நாணியம்மா அதை ஒத்துக் கொண்டாள். அவள் சொன்னாள்:

“ஒரு பையன் போயி நல்லா இருக்குறதுனாலதானே மற்ற பிள்ளைகளும் நல்லா வரணும்னு அவனுக்குப் பின்னாடி போறாங்க?”

பாரு அம்மாவும் அவள் சொன்னதை ஒத்துக் கொண்டாள். பாப்பி அம்மாவிற்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாகப் புரிந்தது. இந்த ஊரிலிருந்து ஒரு ஆள் போனால், பத்மநாபன் அந்த ஆளை விடாமல் தன்னுடன் வைத்துக்கொள்வான் என்பதே அது.

இப்படி அந்தப் பெண்கள் பேசிக் கொண்டிருந்தபோது, அந்தப் பக்கத்தில் நாராயணன் உரத்த குரலில் சத்தம் சப்தம் காதில் விழுந்தது.

“அக்கா என்ன அடிக்குது...”

தொடர்ந்து கார்த்தியாயினியும் அழுது கொண்டே தன் தாயை அழைத்தாள்.

“என்னடி அங்கே?”- பாப்பி அம்மா அழைத்துக் கேட்டாள். பாரு அம்மா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

“கார்த்தியாயினி ஏதாவது நோண்டி விட்டிருப்பா. அவன் அவளை அடிச்சிருப்பான். அதுதான் அழுகை.”

பாப்பி அம்மாவால் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் சொன்னாள்:


“இங்கே அவங்களுக்குள்ளே சண்டையே போடமாட்டாங்க. அவனை அவ அழவே விட மாட்டா. அப்படி ஒரு சம்பவம் இங்கே நடந்திருக்கவே செய்யாது!”

அப்போது நாராயணன் அங்கு வந்தான். அவன் அழுது கொண்டிருந்தான். பின்னால் வந்த கார்த்தியாயினியும் அழுது கொண்டிருந்தாள்.

பாப்பி அம்மா கார்த்தியாயினியைத் திட்டினாள்:

“என்னடி இது?”

கார்த்தியாயினி அழுது கொண்டே சொன்னாள்:

“என் அப்பா நிறைய சாப்பிடுற ஆளாம். வீட்டுக்குள்ளே நுழைஞ்சு இங்கே இருக்கிற சாதம் முழுவதையும் அவர் சாப்பிட்டிருவாருன்னு இவன் சொன்னான்.”

நாராயணனும் தன் பக்கம் இருக்கும் புகாரைச் சொன்னான்:

“அக்காவோட அப்பாவின் பல் ஏன் அப்படி இருக்குன்னு நான் கேட்டேன். அதுக்கு அக்கா என்னை அடிச்சிடுச்சு...”

காளியம்மாவும் குட்டி அம்மாவும் நாணியம்மாவும் பாரு அம்மாவும் புன்சிரிப்புடன் தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர். அந்தச் சண்டையை அப்படித் தீர்த்து வைப்பது என்று பாப்பி அம்மாவிற்குப் புரியவில்லை. யாரை அவள் கண்டிப்பாளா?

குட்டி அம்மா சொன்னாள்:

“ஒவ்வொருத்தருக்கும் தங்களோட தகப்பன்தான் மேல்.”

எல்லாரும் அதை ஒப்புக் கொண்டு ‘உம்’ கொட்டினார்கள்.

9

ருநாள் வாசுதேவன் வீட்டிற்குத் திரும்பி வந்தான்.

சிறிது நேரம் கழித்து குட்டி அம்மா பாரு அம்மாவின் வீட்டிற்குச் சென்றாள். அங்கு போன பிறகு, அவள் நாணியம்மாவை அங்கு வரும்படி சொன்னாள். சூடு உள்ள சில செய்திகளை குட்டி அம்மா தன் சிநேகிதிகளிடம் கூறுவதற்கு வைத்திருந்தாள். அத்துடன் அவள் எச்சரிப்பதாகவும் இருந்தாள். பத்மநாபனுக்கு அங்கு நல்ல வியாபாரம். நல்ல பண வரவு. கடை பெரியது. ஏராளமான பணம் புழக்கத்தில் இருக்கிறது. இரண்டு மூன்று நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் அங்குதான் சாப்பிடுவதும், காப்பி குடிப்பதும். ஆனால் வேலைக்காரர்களை எலும்பு நொறுங்கும் அளவிற்குக் கஷ்டப்படுத்தும் செயல் அங்கு நடக்கிறது உட்காருவதற்குச் சிறிது கூட நேரம் கிடையாது. சற்று தூங்கக் கூட முடியாது.

குட்டி அம்மா பாரு அம்மாவிடம் சொன்னாள்:

“பரமேஸ்வரன் குட்டியை இங்கே உடனே வரச் சொல்றதுதான் நல்லது. பையன் அங்கே வேலை செய்து ஒரு வழி ஆயிடுவான். காச நோய் கூட வர்றது உறுதி. ஒவ்வொரு மாசமும் பதினஞ்சு ரூபாய் முழுசா கிடைக்குதுன்னு நினைச்சு அவனை அங்கே வேலை செய்ய விட்டா, அதுக்கு மேல நான் அதைப் பற்றி சொல்ல விருப்பல. நாம இங்கே பார்த்த பையன் இல்ல அங்கே இருக்குற பத்மநாபன். அவன் ரொம்பவும் மோசமானவன். பாவம் ஒண்ணும் இல்ல. ஈனப்பிறவி!”

நாணியம்மா சொன்னாள்:

அவன் இங்கே வந்தப்பவே அது தெரிஞ்சது!

குட்டி அம்மா பாரு அம்மாவிடம் கறாரான குரலில் ஒரு எச்சரிக்கை என்பது மாதிரி சொன்னாள்:

“அவனை இங்கே உடனே வரவைக்கணும். பையன் அங்கே கிடந்து கஷ்டப்படுறான். பையன் இருந்தா எப்பவும் பணம் சம்பாதிக்கலாம். பதினஞ்சு ரூபாய்க்காக பையனைக் கொன்னுடக் கூடாது. இங்கே இருக்குற சாப்பாட்டைச் சாப்பிட்டு அவன் உயிரோட இருப்பான்.”

பாரு அம்மாவின் தாய் இதயம் பதைபதைத்தது.

“அப்படின்னா வாசுதேவன் வர்றப்போ அவனையும் அழைச்சிட்டு வந்திருக்கலாமே?”

“நான் அதை அவன் கிட்ட கேட்கல!

நாணியம்மா கேட்டாள்:

“கடிதம் எழுதினா அவன் வருவானா?”

திடீரென்று ஒரு வழியை குட்டி அம்மா சொல்லித் தந்தாள்:

“பாரு, உனக்கு சுகமில்லைன்னு எழுது!”

அது ஒரு நல்ல எண்ணம் என்று எல்லாரும் சொன்னார்கள்.

குட்டி அம்மா வேறொரு சுவாரசியமான விஷயத்தையும் நாணியம்மாவிடம் கேட்டாள்:

“நீ அந்தக் கல்யாண விஷயத்தைப் பற்றி எழுதின கடிதத்துக்குப் பதில் வந்ததா?”

“இல்ல...” தடுமாற்றத்துடன் நாணியம்மா பதில் சொன்னாள்.

குட்டி அம்மா சொன்னாள்:

“இல்ல... பதில் வராது.”

அதற்கான காரணம் தனக்குத் தெரியும் என்பது மாதிரி குட்டி அம்மா புன்சிரிப்புடன் பாரு அம்மாவிடம் சொன்னாள்:

“தடத்தில் வீட்டுக்கு உன் பொண்ணு மருமகளா போவான்னு கனவு காண வேண்டாம்!”

பாரு அம்மா சொன்னாள்:

“நான் கனவு ஒண்ணும் காணல. நாணி வந்து சொன்னா. நான் ‘உம்’ கொட்டினேன். தடத்தில் வீட்டுல ஒரு பையன் இருக்குறான்னு நினைச்சா எனக்குப் பொண்ணு பொறந்தா? என்ன, ஒரே கூத்தா இருக்கு!”

குட்டி அம்மா அந்த ரகசியத்தை வெளியே சொன்னாள்:

“அவனுக்கு அங்கே ஒரு தமிழச்சி கூட பழக்கம்!”

தன்னையே அறியாமல் “அப்படி வா” என்று சொன்னாள் நாணியம்மா.

குட்டி அம்மா சொன்னாள் :

“கல்யாணம் பண்ணி தாய் சொல்றபடி கேட்டு வாழப் போறவன் இல்ல அவன். அப்படியே வாழ்ந்தாலும் நெறியும் முறையும் கண்ணுல இரத்தமும் இருக்கக் கூடியவனா இருக்கணும்ல! அவன்கிட்ட இது எதுவுமே இல்லயே!”

ஒரு நிமிடம் மூச்சு விடுவதற்காகத் தன் பேச்சை குட்டி அம்மா நிறுத்தினாள். பிறகு தொடர்ந்தாள்:

“அவன் தேநீர்க் கடையில மீன் வெட்டுறதுக்கும், காய்கறி நறுக்குறதுக்கும் இருக்குறவங்கள்ல ஒருத்திதான் அவ. ஆமையைப் பிடிச்சு சாப்பிடுறவங்க இருப்பாங்கள்ல... அப்படி இருப்பா அவ! கறுத்து, தடிச்சுப் போயி, சட்டி முகத்தையும் சப்பிப்போன மூக்கையும் வச்சுக் கிட்டு, முழங்கை வரை பித்தளை வளையலைப் போட்டுக்கிட்டு, சிக்குப் பிடிச்ச தலைமுடியை ஒரு பக்கம் முடிச்சுப் போட்டு, நாத்தமெடுத்த புடவையை உடம்புல அணிஞ்சிருக்கிறவளா அவ இருப்பா! அவளுக்கு அவன் அப்படியொண்ணும் கொடுக்கறதும் இல்ல...”

மூச்சை அடக்கிக் கொண்டு அந்தச் செய்தியைக் கேட்டுக் கொண்டிருந்த பாரு அம்மா, “என் கடவுளே!” என்று அதிர்ச்சியடைந்து போய் கத்தினாள். அவள் தன் மகனை அப்போது நினைத்துப் பார்த்தாள்.

அவள் பதைபதைப்புடன் கேட்டாள்:

“என் பையனுக்கும் ஏதாவதொரு தமிழச்சி கூட தொடர்பு இருக்குமோ?”

குட்டி அம்மா அதற்குப் பதில் சொன்னாள்:

“அவன் அப்படியொண்ணும் சொல்லல. இல்லாததைச் சொல்லக் கூடாதுல்ல...”

ஒரு நிமிடம் கழித்து குரலைத் தாழ்த்திக் கொண்டு குட்டி அம்மா சொன்னாள்:

“அது எப்படின்னே தெரியல... வேலை செய்து எலும்பு ஒடிஞ்சு இரத்தமும் நீரும் இல்லாம ஆகுறப்போ பெண் வேணும்னு தோணுமா?”

நாணியம்மா சொன்னாள்:

“அப்போ தடத்தில் வீட்டுக்கு ஒரு தமிழச்சி மருமகளா வரப்போறா!”

குட்டி அம்மா சொன்னாள்:

“அப்படியெதுவும் நடக்காது. அவன் நாம நினைக்கிறதைப் போல இல்ல. அவன் சரியான திருட்டுப் பய!”

நாணியம்மா கேட்டாள்:

“அவளுக்கு வயித்துல உண்டாயிட்டா என்ன நடக்கும்?”


பாரு அம்மாதான் அதற்குப் பதில் சொன்னாள்:

“நாம ஏன் அதையெல்லாம் நினைக்கணும்?”

மற்றொரு பரம ரகசியமான ஒரு விஷயத்தையும் குட்டி அம்மா சொன்னாள். அது குட்டன்பிள்ளை அவனிடம் தெரிந்து சொன்னது. அவள் குரலைத் தாழ்த்திக் கொண்ட சொன்னாள்:

“அவனுக்கு இந்தப் பணம் எங்கேயிருந்து வருதுன்னு நினைக்கிறீங்க?”

அந்தப் பெண்களுக்கு எதுவும் புரியவில்லை. அவர்கள் வாயைப் பிளந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். குட்டி அம்மா சொன்னாள்:

“அப்படின்னா கேட்டுக்கங்க. வாசுவோட அப்பா இன்னைக்குத்தான் அதைச் சொன்னாரு. அவர்கிட்ட நேத்து ஆலம்புழையில யாரோ சொல்லியிருக்காங்க. கோயம்புத்தூர் முழுவதும் கள்ள நோட்டு புழங்குதாம். அவனும் கோயம்புத்தூர்லதானே இருக்கான். அதுதான் விஷயம்...”

அதைக் கேட்டு அந்தப் பெண்கள் பயந்து விட்டார்கள். அந்தப் பயம் சற்று குறைந்தபோது பாரு அம்மா கேட்டாள்:

“வாசு பணம் ஏதாவது கொண்டு வந்தானா?”

குட்டி அம்மா சொன்னாள்:

“நல்ல கேள்வி கேட்டே! என் பிள்ளை நாக்கை வெளியே தள்ளிக்கிட்டுல்ல வந்தான். பச்சைத் தண்ணிகூட குடிக்காம, கையில சல்லிக் காசு இல்லாம...”

பாரு அம்மா கேட்டாள்:

“பிறகு எப்படி இங்கு வந்து சேர்ந்தான்?”

“அந்தக் கதையை அவன் சொல்லி கேக்குறவங்க யாரும் வாய்விட்டு அழுதிடுவாங்க. காசு கொடுக்காமலேயே அவன் புகை வண்டியில ஏறியிருக்கான். வண்டிக்காரங்க ஒரு இடத்துல அவனைப் பிடிச்சு, வெளியே தள்ளிட்டாங்க. பிறகு, மானும் மனிதர்களும் இல்லாத பாதையில ராத்திரி நடந்திருக்கான். அதுக்குப்பிறகு திரும்பவும் வண்டியில ஏறியிருக்கான். அவன் தண்ணி குடிச்சதே இங்கே வந்தபிறகுதான். ‘அம்மா, தண்ணி...’ன்னு சொல்லிக்கிட்டுத்தான் அவன் வீட்டுக்குள்ளேயே நுழைஞ்சான்.”

ஒரு நீண்ட பெருமூச்சுடன் குட்டி அம்மா அந்தக் கதையைக் கூறி முடித்தாள்.

“என் பிள்ளை எனக்குத் திரும்பக் கிடைச்சிட்டான், அது போதும்!”

பாரு அம்மா கேட்டாள்:

“வாசு புறப்படுறப்போ, பத்மநாபன்கிட்ட சொல்லலியா?”

“சொல்லவா? சொன்னா, அவன் விடுவானா? ஒரு பைசாகூட அவன் தரல. துரோகி! எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும். பக்கத்து வீட்டுப் பையன்னுகூட அவன் நினைக்கல!”

அந்தப் பெண்கள் நடந்த சம்பவங்களை நினைத்து அமைதியாக இருந்தாங்க.

எது எப்படியோ தடத்தில் வீட்டைச் சுற்றிலும் பயங்கரமான ஒரு சூறாவளிக்காற்று அடித்துக் கொண்டிருந்தது. வாசுதேவன் திரும்பி வந்த விஷயத்தைப் பாப்பி அம்மாவும் தெரிந்து கொண்டாள். ஆனால், அவன் அங்கு சொல்லவில்லை. பாப்பி அம்மா அவனை அழைத்தாள். ஆனால், அவன் அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

மூன்று நான்கு நாட்களுக்கு அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்கள் யாரும் தடத்தில் வீட்டுப் பக்கமே செல்லவில்லை. என்ன காரணமாக இருக்கும் என்று பாப்பி அம்மாவிற்கும் புரியவில்லை. ஏதோ விஷயம் இருக்கிறது என்பது மட்டும் அவளுக்குத் தெரிந்தது. நிலைமை இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் கோயம்புத்தூரிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதை பத்மநாபன் எழுதியிருந்தான். கார்த்தியாயினிடம் சொல்லி அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொல்லி கேட்ட பாப்பி அம்மா குட்டி அம்மாவையும் நாணியம்மாவையும் அங்கு வரும்படி அழைத்தாள். அந்தப் பெண்கள் முகத்தை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு வந்தார்கள்.

பாப்பி அம்மா சொன்னாள்:

“கார்த்தியாயினி. அந்தக் கடிதத்தைப் படி!

கார்த்தியாயினி கடிதத்தைப் படிக்க ஆரம்பித்தாள்:

“அன்புள்ள அம்மாவுக்கு, வாசுதேவன் அங்கு வந்திருப்பான் என்று நினைக்கிறேன். அவன் இங்கு வந்திருந்த விஷயத்தை நான் ஏற்கெனவே எழுதியிருந்தேன் அல்லவா? நம்முடைய குட்டி பெரியம்மாவின் மகனாக இருந்ததால் எனக்கு அவன் வந்தது மகிவும் மகிழ்ச்சியாக இருந்தது. இங்கு பணம் வாங்கும் மேஜைக்கு அருகில் எனக்கு உதவியாக இருக்கும் வண்ணம் அவனை உட்கார வைத்தேன். வேறு எந்த வேலையையும் அவனுக்கு நான் தரவில்லை. பரமேஸ்வரன் குட்டி இங்கு வந்து சிறிது நாட்கள் ஆகிவிட்டன அல்லவா! அவனுக்கு இந்த இடம் நன்கு பழக்கமாகி விட்டதால் வேலையாட்களை மேற்பார்வை பார்ப்பதும் பொருட்களை வாங்கி வந்தவுடன் என் தம்பி வந்திருக்கிறான் என்றுதான் இங்குள்ள தமிழர்களிடம் நான் கூறினேன். பரமேஸ்வரன் குட்டியை ‘பெரிய தம்பி’ என்றும் வாசுதேவனை ‘சின்னத்தம்பி’ என்றும் அவர்கள் அழைத்தார்கள். அங்குள்ள பெரியம்மாவின் கஞ்சியின் ருசி என் நாக்கில் இப்போதும் இருக்கிறது. அவர்கள் வந்தபோது என்னுடைய சொந்தக்காரர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம்தான் எனக்கு உண்டானது. அதற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். வாசுதேவனும் பரமேஸ்வரன் குட்டியும் என்னுடைய அறையில்தான் படுத்துறங்கினார்கள். என்னுடன்தான் அவர்கள் சாப்பிடுவார்கள்.”

“வாசுதேவா, டேய் அங்கேயே நில்லுடா!”

குட்டி அம்மா உரத்த குரலில் கத்தினாள். அவன் வீட்டை விட்டு தெற்குத் திசை நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

பாரு அம்மா சொன்னாள்:

“அமைதியா இரு, குட்டி. இப்படி உன்னையே நீ மறந்திடுறதா?”

செயலற்ற நிலையில் குட்டி அம்மா சொன்னாள்:

“நான் எதையும் கேட்க விரும்பல.”

தொடர்ந்து கடிதத்தைப் படிக்கும்படி நாணியம்மா கார்த்தியாயினிடம் சொன்னாள். அவள் படிப்பதைத் தொடர்ந்தாள்.

“கடந்த எட்டாம் தேதி மாலை நேரத்தில் பணம் வாங்கக் கூடிய மேஜைக்கு அருகில் வாசுதேவளை உட்காரவைத்து விட்டு நான் ஒரு முக்கிய வேலையாக வெளியே போய் விட்டேன். நான் திரும்பி வந்தபோது வாசுதேவன் அங்கு இல்லை. மேஜை பூட்டப்பட்டிருந்தது. சாவியும் இல்லை. வாசுதேவன் எங்கே என்று வேலையாட்களிடம் கேட்டபோது வெளியே போயிருப்பதாக அவர்கள் சொன்னார்கள். நான் காத்திருந்தேன். இப்போது வந்துவிடுவான் என்று நினைத்தேன். அதற்குப் பிறகு அவன் வரவேயில்லை. அவனைத் தேடுவதற்காக ஆட்களை அனுப்பினேன். நான் இதற்கு முன்பு அந்த அளவிற்கு வருத்தப்பட்டதில்லை. குட்டி பெரியம்மாவிடம் என்ன கூறுவேன் என்பதைத்தான் நான் நினைத்தேன். என்னுடன் இருந்த தன் மகன் எங்கு போனான் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? மேஜையைக் கருவியால் திறந்து பார்த்தபோது அதற்குள் இருந்த நூறு ரூபாய்களையும் சில்லறைகளையும் காணவில்லை. எனக்குப் பணம் போனதைப் பற்றி கவலையில்லை. நான் வேலை செய்த காசுதானே! யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என் குட்டி பெரியம்மாவின் மகன்தானே அதை எடுத்தது? எனினும், அவன் நல்ல குணத்துடன்தான் இங்கு இருந்தான். எல்லாருக்கும் அவனை மிகவும் பிடித்திருந்தது. இப்போதும் அவனைப் பற்றி எங்களுக்குப் பெரிய மனக்கவலை இருக்கவே செய்கிறது. அதனால் இந்தக் கடிதம் கிடைத்தவுடன் வாசுதேவன் அங்கு இருக்கிறானா, இல்லையா என்பதைப்பற்றி தந்தி அடிக்க வேண்டும்.


அவன் அங்கு இருந்தால், வாசுதேவன் இருக்கிறான் என்று யாரையாவது வைத்து ஆங்கிலத்தில் எழுதி தந்தி அடிக்க வேண்டும். நான் இங்குள்ள தந்தி அலுவலகத்தில் கூறி இருந்திருக்கிறேன். நான் குட்டன் மாமாவுக்கும் கடிதம் எழுதுகிறேன்.”

குட்டி அம்மா அதிர்ச்சியில் உறைந்துபோய் கல்லைப்போல உட்கார்ந்து விட்டாள். மற்ற பெண்கள் தலையில் கையை வைத்து உட்கார்ந்திருந்தார்கள். யாரும் யாருடனும் பேசவில்லை. பாப்பி அம்மா, வெற்றிலை, பாக்கு போட்டுக் கொண்டிருந்தாள்.

அவள் சொன்னாள்: “படிடி...”

“ம்... என்னால முடியாது...”

பாப்பி அம்மா திட்டினாள்.

“படிக்கச் சொல்றேன்ல...”

அவள் கடிதத்தைத் தொடர்ந்து படித்தாள்.

“நாணிப் பெரியம்மா அனுப்பிய கடிதம் கிடைத்தது. நானும் பரமேஸ்வரன் குட்டியும் அந்த விஷயத்தைப் பற்றிபு பேசினோம். நமக்கு மூன்று வேளைகளிலும் கஞ்சி நீர் குடிக்கும் வசதி உண்டான பிறகு நான் திருமணம் செய்து கொண்டால் போதும். நாராயணன் குஞ்சைப் படிக்க வைக்க வேண்டும் அல்லவா? கார்த்தியாயினிக்கும் ஒரு நல்ல வரனைப் பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும். அதற்குச் சிறிது கால அவகாசம் வேண்டும். நமக்கு ஒரு நல்ல நிலை உண்டான பிறகுதானே திருமணம் செய்ய முடியும்? இங்கு அருகில் மதுக்கரை என்றொரு இடமிருக்கிறது. அங்கு  இப்போது இரண்டு பெரிய சிமெண்ட் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அங்கு நல்ல ஹோட்டல் ஒன்று கூட இல்லை. பரமேஸ்வரன் குட்டியை வைத்து அங்கு ஒரு ஹோட்டல் நடத்தத் திட்டமிட்டிருக்கிறேன். பணம் நான் தயார் பண்ணித் தர வேண்டும் அல்லவா? சிறிது சிறிதாகத் திருப்பித்ததந்தால் போதும். நான் மேற்பார்வை பார்த்துக் கொள்வேன். இங்கு அருகில் ஒரு மில்லில் வேலை பார்க்கும் ஒரு மலையாளி இளைஞனுக்கு பங்காக்ஷியைத் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். அவனுடைய சொந்த ஊர் மாவேலிக்கரை. இருநூறு ரூபாய் சம்பளம் வாங்குகிறான். நல்ல குணத்தைக் கொண்டவன். பரமேஸ்வரன் குட்டியின் ஹோட்டல் விஷயம் முடிந்து விட்டால் வேண்டுமென்றால் கார்த்தியாயினியை நாம் அவனுக்குத் திருமணம் செய்து வைக்கலாம். இதுதான் நல்லதென்று எங்களுக்குப் படுகிறது. பிறகு உங்களின் விருப்பம் போல.

தந்தி அடிக்க மறக்க வேண்டாம்.

இப்படிக்கு,

மகன் பத்மநாபன்.

10

ரு நாள் கழிந்தது. இரண்டு நாட்கள் கழிந்தன. மூன்று நாட்கள் ஆனது. எப்போதும் மதிய நேரச் சாப்பாட்டுக்கு வரும் பாச்சு பிள்ளை வரவில்லை. மூன்றாவது நாள் முடிந்தபோது கார்த்தியாயினி தன் தாயிடம் சொன்னாள்:

“அம்மா, அப்பா மூணு நாட்களா வரல.”

பாப்பி அம்மாவும் அதை நினைத்தாள். அவள் சொன்னாள்:

“ஏதாவது உடம்புக்கு ஆகியிருக்குமோ?”

“என்னவோ? எப்படி தெரிஞ்சிக்கிறது?”

எது எப்படியோ பாச்சு பிள்ளையைப் பற்றி நினைக்கக் கூடிய இரண்டு உயிர்கள் உலகத்தில் இருக்கவே செய்கின்றன. கார்த்தியாயினியும் பார்ப்பி அம்மாவும். அந்த ஏழை மனிதனின் வாழ்க்கையில். அது உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய விஷயம் தானே?

ஏழரைக் கடையில் போய் விசாரிக்கும்படி கார்த்தியாயினி நாராயணனிடம் சொன்னாள். போவதாக அவன் சொன்னான். ஆனால், அவன் போகவில்லை.

அடுத்த நாளும் கார்த்தியாயினி காத்திருந்தாள். ஆனால், பாச்சு பிள்ளை வரவில்லை. அன்றும் அவள் தாயிடம் கேட்டாள்:

“அம்மா, அப்பாவுக்கு உடம்புக்கு ஏதாவது ஆகியிருக்குமோ?”

எப்படி தெரிஞ்சிக்கிறது மகளே?”

“நான் நாராயணன்கிட்ட சொன்னேன். அவன் போகல!”

அதற்குப் பிறகு பாப்பி அம்மா எதுவும் பேசவில்லை.

சிறிது நேரம் கழிந்த பிறகு வாசலில் ‘மகளே’ என்றொரு குரல் கேட்டது. பாச்சு பிள்ளை ஒரு பழைய பாயைச் சுருட்டி கையில் வைத்துக் கொண்டு, ஒரு சிறிய பொதியுடன் நடக்க முடியாமல் கால்கள் தடுமாற வந்து கொண்டிருந்தார். கார்த்தியாயினி ஓடி வாசலுக்குச் சென்று அந்தப் பொதியையும் பாயையும் கையில் வாங்கினான். அந்த மனிதனுக்கு வாழ்க்கையில் இருந்த மொத்த சொத்தே அவைதான்.

திண்ணையில் கேசவன் நாயரும் நாராயணனும் நின்றிருந்தார்கள். பாச்சு பிள்ளையை அழைத்துக் கொண்டு வருவதை அவர்கள் பார்த்தவாறு நின்றிருந்தார்கள். கேசவன் நாயர் அப்போது என்னவோ முணுமுணுத்தார். “சாகுற நேரத்துல வீட்டுக்குள்ள வர்றான்” என்று அவர் கூறியிருக்கலாம்.

பாப்பி அம்மாவும் அந்தச் சமயத்தில் அங்கு வந்தாள். கார்த்தியாயினி சொன்னாள்:

“அம்மா, தெற்குப் பக்கம் இருக்கிற திண்ணையில பாயை விரிங்க.”

கேசவன் நாயர் தன்னை அறியாமல் சொன்னார்:

“அங்கே படுத்தா, யாராவது ஆளுங்க வர்றப்போ என்ன செய்யிறது?”

அதை கார்த்தியாயினி காதிலேயே வாங்கவில்லை. கேசவன் நாயர் தான் கேட்ட கேள்வியைக் கேட்கும்படி நாராயணனைக் கையால் சுரண்டினார். அவன் விஷயம் புரியாமல் தன் தந்தையின் முகத்தையே பார்த்தான்.

பாப்பி அம்மா தெற்குப் பக்கம் இருந்த திண்ணையில் போடப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பாயை விரித்தாள். பாச்சு பிள்ளையின் பாய் கிழிந்து போய் நாற்றமெடுத்தது. தாயும் மகளும் சேர்ந்து அவரைக் கையால் தாங்கியவாறு படுக்க வைத்தார்கள். கட்டிலில் அமர்ந்து கொண்டு கார்த்தியாயினி கேட்டாள்:

“அப்பா, உங்க உடம்புக்கு என்ன?”

“காய்ச்சல் அடிச்சது, மகளே. பிறகு வயிற்றோட்டமா ஆயிடுச்சு!”

கால் பகுதியில் பாப்பி அம்மா நின்றிருந்தாள். பாச்சு பிள்ளை அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.

கார்த்தியாயினி தன் தாயிடம் கேட்டாள்:

“சக்கரக் கணியாரை அழைச்சுக் காட்டினா என்னம்மா?”

“காட்டலாம்!”

அப்போது ஒரு பெரிய பிரச்சினை அவளுக்கு முன்னால் வந்து நின்றது. யாரிடம் கூறி அனுப்புவாள்?

நாராயணன் அப்போது அங்கு வந்தான். அவன் ஒரு கேள்வி கேட்டான்:

“இங்கே படுக்க போட்டா யாராவது வந்தா என்ன செய்யிறது?”

கார்த்தியாயினி அவனை எரித்து விடுவதைப் போல் ஒரு பார்வை பார்த்தாள். பிறகு அவள் சொன்னாள்:

“உன் அப்பாவும் ஒருநாள் இப்படி படுப்பார்ன்றதை ஞாபகத்துல வச்சுக்கோ. உன் அப்பா எனக்கு யாருமில்ல!”

வாசலில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்த கேசவன் நாயர் திடீரென்று மறைந்துவிட்டார். அவர் எங்கு போனார் என்று யாருக்குமே தெரியவில்லை.

நாராயணன் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. அவன் கேட்ட கேள்விக்கான அர்த்தமோ, கார்த்தியாயினி சொன்ன பதிலுக்கான அர்த்தமோ அவனுக்குப் புரிந்திருக்குமா என்பது சந்தேகமே.

அப்போது நாணியம்மாவும் பாரு அம்மாவும் அய்யப்பன் நாயரும் சங்கரப்பணிக்கரும் அங்கு வந்தார்கள். அய்யப்பன் நாயர் சங்கரக் கணியாரை அழைப்பதற்காகச் சென்றார்.


அந்த நேரம் முழுவதும் பாப்பி அம்மாவும் பாச்சு பிள்ளையும் ஒருவரையொருவர் உற்றுப் பார்த்துக் கொண்டேயிருந்தார்கள். அதை யாரும் கவனிக்கவில்லை. அந்தப் பார்வைக்கான அர்த்தம் உண்மையாகச் சொல்லப் போனால் கார்த்தியாயினி!

பாப்பி அம்மா பாச்சு பிள்ளையைப் பற்றி கூறுவதற்குக் குற்றச்சாட்டுகள் மட்டுமே இருந்தன. அவள் அவர் மீது குறைகள் சொல்லவில்லை என்றாலும் - ஆனால், அவளுக்கு ஒரு மகள் யார் மூலம் உண்டானாள்? பாச்சுப்பிள்ளை படுத்துக்கிடந்த அந்த நிலையில் அந்த நினைக்காமல் இருக்க முடியுமா? அதேதான் பாச்சுபிள்ளை விஷயத்திலும். அந்த மனிதர் இந்த உலகத்தில் பிறந்து வளர்ந்தார் என்பதற்கு ஆதாரமாக இருப்பது ஒன்றே ஒன்றுதான். அது - கார்த்தியாயினி! அந்த ஆதாரம் உண்டாகக் காரணம் பாப்பி அம்மா அல்லவா? பாப்பி அம்மா மட்டும்! அதனால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பாப்பி அம்மாவின் கண்களில் நீர் நிறைந்து விட்டது. அப்படி கண்ணீர் நிறைந்து நிற்கக் காரணம் என்னவாக இருக்கும்? பாப்பி அம்மாவின் கண்கள் நிறைவதை பாச்சு பிள்ளை பார்த்தார். தெளிவற்ற குரலில் பாச்சு பிள்ளை என்னவோ சொன்னார்.

கார்த்தியாயினி கேட்டாள்:

“என்னப்பா சொல்றீங்க?”

பாச்சு பிள்ளை பாப்பி அம்மாவைச் சுட்டிக் காட்டினார்.

அப்போது பாப்பி அம்மாவின் கன்னங்களிலிருந்து இரண்டு கண்ணீர்த் துளிகள் கீழே விழுந்தன. அதைக் கார்த்தியாயினி பார்த்தாள். அந்தக் கண்ணீரின் அர்த்தம் என்னவாக இருக்கும்? கார்த்தியாயினியும் அடக்க முடியாமல் அழுதாள்.

ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி மனைவியாக ஏற்று, குழந்தைகளை தனி கவனம் செலுத்திக் காப்பாற்றி வாழ்க்கையை முடிக்கப் போகும் ஒரு மனிதனல்ல அங்கு படுத்திருந்தது. தந்தை தனக்குத் தேவைப்படும் எல்லாவற்றையும் தந்து வளர்ந்த ஒரு குழந்தையையும் அல்ல கார்த்தியாயினி. இருவருக்கும் ஞாபகப்படுத்திப் பார்க்க எதுவும் இல்லை. எனினும், அவள் அழுகிறாள்!

கணியார் வந்து பார்த்தார். வீட்டின் தலைவர் என்று அறியப்படுபவர் கேசவன் நாயர் ஆயிற்றே! அவரிடம் கணியார் சொன்னார்:

“ஒரு இரவு, பகல் தாங்காது...”

அதைப் பாப்பி அம்மா கேட்டாள். கேசவன் நாயர் சற்று அதிர்ச்சியடைந்ததைப் போல் இருந்தது. ஏதோ ஒன்றை அவர் தன் கண்களுக்கு முன்னால் பார்க்கிறார்.

அந்த அதிர்ச்சி முடிந்ததும், அவர் தன் மனைவியிடம் சொன்னார்:

“கேட்டியா பாப்பி, நான் தப்பா நடந்துட்டேன்.”

என்னவென்று தெரிந்து கொள்வதற்காக பாப்பி அம்மா அவருடைய முகத்தைப் பார்த்தாள். அவர் தொடர்ந்தார்:

“நான் இப்போதான் நினைக்கிறேன். முன்னாடி எப்பவும் நினைக்கல!”

பிறகும் அது என்னவென்று சொல்லவில்லை. அவர் சொன்னார்:

“பாச்சு பிள்ளை, நீ பெற்ற ஒரு குழந்தையோட அப்பன்...”

அவ்வளவுதான் அவரால் சொல்ல முடிந்தது.

கணியார் ஒரு கஷாயத்தை எழுதித்தந்தார். சில மாத்திரைகளைக் கொடுத்தார். கேசவன் நாயர் எழுதப்பட்டிருந்த பச்சிலை மருந்துகளைப் பறிப்பதற்காகச் சென்றார்.

அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்கள் சொன்ன கருத்துப்படி அங்கு பாகவதம் படிக்க கேசவன் நாயர் ஏற்பாடு செய்தார்.

கஷாயம் தயாரித்து ஒரு நேரம்தான் கொடுக்கப்பட்டது. அடுத்த நேரத்திற்கு முன்பு நோயின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. பாப்பி அம்மாவும் கார்த்தியாயினியும் நாராயணனும் பாச்சு பிள்ளைக் இறுதி நீர் கொடுத்தார்கள்.

பாச்சு பிள்ளையை எரித்தார்கள். நாராயணன்தான் இறுதிச் சடங்கைச் செய்தான்.

பதினாறாம் நாளுக்கு முன்னால் பத்மநாபன் கோயம்புத்தூரிலிருந்து வந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.