Logo

ரதி நிர்வேதம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 7202
radhi-nirvedham

லா மரத்திற்கு அடியில் இரண்டு பாம்புகள் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. பயங்கரமான...  அதே நேரத்தில் காமத்தை வெளிப்படுத்தும் காட்சி.

ஒன்று இன்னொன்றின் உடலில் சுற்றிப் பிணைந்து... இரண்டும் சேர்ந்து ஒரு கயிறைப்போலப் பிரிந்து... வாலில் இருந்து மேல்நோக்கி எழுந்துகொண்டிருந்தன.

தரையில் உயரமாக நின்றுகொண்டிருக்கும் ஒரு கொம்பு.

ஒன்றோடொன்று சேர்ந்த வயிறுகள்... கடித்து சேர்ந்திருக்கும் வாய்கள்... ஒன்றோ இரண்டோ நிமிடங்கள் அப்படியே இருந்துவிட்டு, பின்னர் பிடியை விட்டுக் கீழே விழுகின்றன. பிரிந்து களைப்படைந்து இரண்டு பக்கங்களிலும் சென்று மீண்டும் நெருங்குகின்றன. திரும்பவும் ஒன்று சேர்கின்றன. மேல்நோக்கி எழுகின்றன. இறுக அணைக்கும் நேரத்தில் கீழே விழுகின்றன. மீண்டும் வெறியுடன் நெருங்குகின்றன.

வேறு எதன்மீதும் கவனம் இல்லை. தாங்கள் மட்டுமே தனியாக இருப்பதைப்போல ஒரு உணர்வு.

எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. பல மணி நேரங்கள் கடந்திருக்கலாம். இப்போது கிட்டத்தட்ட முடிவடையும் நிலை வந்துவிட்டது என்று தோன்றுகிறது.

மேலே பலா மரத்தின் நிர்வாணமான, காய்ந்துபோன கிளைகள் காற்றின் இசைக்குக் காதுகளைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. தூரத்தில் இருக்கும் மேட்டில் இருந்து மரத்தின்மீது கயிறு கட்டி கிழங்குக் கொடிகள் படரவிடப்பட்டிருக்கின்றன. இளங்காற்று வீசும்போது அவை அனைத்தும் ஒரு நடன மங்கைகளின் கூட்டத்தைப்போல ஒன்று சேர்ந்து ஆரவாரம் உண்டாக்குகின்றன. ஒன்றாக சத்தம் இல்லாமல் ஆகின்றன.

சுற்றிலும் உயிர்ப்பற்ற மதிய நேரம்.

பாம்புகள் அதற்குப் பிறகும் ஒன்று சேர்வதும் களைப்படைந்து விழுவதும், மீண்டும் ஒன்றோடொன்று பிணைவதுமாக இருக்கின்றன. இப்போது வெறி சற்று குறைந்திருக்கிறது. நான் இருப்பதை அவை தெரிந்துகொண்டு விட்டன என்று நினைக்கிறேன். காரணம் களைத்துப் போன கண்களால் அவ்வப்போது அவை என்னைப் பார்த்தன.

அவற்றில் கருப்பு நிறத்தில் இருப்பது ஆண் பாம்பு என்று நினைக்கிறேன். அது என்னைப் பார்க்கவே இல்லை. என்னைத் தவிர இன்னொரு ஆளும் அந்தப் பகுதியில் இருக்கிற விஷயம் அவனுக்குத் தெரிந்திருப்பதைப் போல இருந்தது. காரணம்- அவ்வப்போது அவனுடைய கண்கள் பாலை மரம் இருக்கும் பக்கமே போய்க் கொண்டிருந்தன. அதையே வெறித்துப் பார்த்தன.

நான் வந்த விஷயமே தெரியாமல், ஒன்றோடொன்று பிணைந்து சந்தோஷத்தில் ஈடுபட்டிருக்கும் பாம்புகளின் உடல்களை மட்டுமே பார்த்துக் கொண்டு, அனைத்தையும் மறந்து பாலை மரத்தின் சாம்பல்நிறத் தடிமீது ஒரு காலைத் தூக்கி வைத்தவாறு நின்றிருந்தாள் ரது அக்கா.

இன்னொரு நாகதேவதை.

வெய்யிலின் கடுமை குறைந்தது. பிரிந்து போகும்படி குறிப்பு மூலம் உணர்த்துவதைப்போல, அசோக மரத்தில் இருந்த ஒரு அணில் திரும்பத் திரும்ப சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது.

ஒன்றோடொன்று மீண்டும் ஒருமுறை பின்னிப் பிணைந்து காற்றில் சற்று மேலே உயர்ந்து, பாம்புகள் எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தன. சிறிது நேரம் சென்றதும் அவை இரண்டும் சோர்வடைந்து இரண்டு வெவ்வேறு பாதைகளில் பிரிந்து சென்றன. அவற்றில் கருப்பு நிறத்தை அதிகமாக கொண்டிருந்த பாம்பு நிலத்தின் தெற்கு மூலையில் இருந்த புற்றை நோக்கி ஊர்ந்து சென்றது.

நசுங்கிப் போன பாலைப் பூக்கள் போர் முடிவடைந்த ஒரு போர்க்களத்தைப்போல காட்சியளித்தன.

 “அந்தப் பாம்புகள் என்ன செய்து கொண்டிருந்தன?’’ - எதுவுமே தெரியாதவனைப்போல நான் கேட்டேன்.

“ஆ! நீயா?’’ - ரது அக்கா எனக்கு நேராகத் திரும்பினாள். அப்போதுதான் அவள் என்னைப் பார்த்திருக்க வேண்டும்.

“அந்தப் பாம்புகள்?’’

“ஓ! சும்மா...’’ - அவள் புருவத்தைச் சுளித்தாள். வியர்வையில் நனைந்திருந்த சாந்துப் பொட்டின் வெள்ளைக் கோடுகள் தெரிந்தன. “பாம்புகள் ஒன்றோடொன்று உறவு கொள்ளாது என்ற விஷயம் உனக்குத் தெரியாதா? அவற்றில் ஒன்று விஷப் பாம்பு... இன்னொன்று தண்ணீர் பாம்பு.’’

எனக்கு அந்த விஷயம் தெரியும். எனினும், நான் ஒரு முட்டாளாக ஆகிவிட்டேன்.

“விஷப் பாம்பும் தண்ணீர் பாம்பும் ஒன்றையொன்று கொத்திக் கொண்டிருந்தன... அப்படித்தானே?’’

“கொத்திக் கொண்டிருந்தனவா? மடையன்!’’ - அவள் சிரித்தாள். பார்த்து நின்று கொண்டிருப்பதற்கு மிகவும் அரிய, வரிசையான வெள்ளை வெளேரென்ற பற்கள்...

நான் கவனத்தை வேறு பக்கம் திருப்பினேன். என்னுடைய கைகள் எதற்காகவோ துடித்துக் கொண்டிருந்தன.

“கொத்திக் கொண்டிருக்கவில்லையென்றால்...’’ - நான் கேட்டேன்: “பிறகு இரண்டும் சேர்ந்து என்ன செய்தன?’’

“அவற்றுக்கு இடையே... அவற்றுக்கு இடையே...’’ - அவள் வார்த்தைகள் கிடைக்காமல் சிரமப்படுவதைப் போலத் தோன்றியது. சற்று ஆபாசம் கலந்த ஒரு சொல் அந்த வாயிலிருந்து வெளியே வந்து விழுவதைக் கேட்பதற்காக நான் பொறுமையுடன் காத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

“அவை இரண்டும் ஒன்றோடொன்று என்ன செய்து கொண்டிருந்தன?’’ - நான் கண்களை விரிய வைத்துக் கொண்டு, சிறு குழந்தையைப் போலக் கேட்டேன்: “பதில் சொல்லுங்க ரது அக்கா.’’

“உடலுறவு கொண்டிருந்தன.’’

“அப்படின்னா என்ன ரது அக்கா?’’ என்று நான் கேட்க ஆரம்பித்தேன். அதற்கு முன்னால் அவள் திடீரென்று விஷயத்தை மாற்றினாள்.

“அது இருக்கட்டும்... நீ என்ன செய்து கொண்டிருந்தே? தூங்கிக் கொண்டிருந்தாயா?’’

எனக்கு அந்தப் பாம்புகளைப் பற்றிய உரையாடலைத் தொடர வேண்டும். ஆனால், அவள் அதற்குத் தயாராக இல்லை என்னும்போது நான் என்ன செய்ய முடியும்?

“படித்துக் கொண்டிருந்தேன்?’’ - நான் சொன்னேன்.

“என்ன புத்தகம்?’’

நான் புத்தகங்களின் பெயரைக் கூறினேன்: “இருட்டறையில் சவப்பெட்டி... உடுதுணி இல்லாத உமயம்மா...’’

நான் சொன்னது உண்மை. அதோ ஒரு பல்லி ஓசை உண்டாக்குகிறது. நான் கேட்டேன்: “நல்ல புத்தகம்... ரது அக்கா, நீங்க வாசிக்கணும் என்றால், நான் தர்றேன்.’’

அடுத்த நிமிடம் அவளுடைய முகம் பிரகாசமானது. மூக்கில் விரலை வைத்தாளே தவிர, எதுவும் கூறவில்லை. முட்டாள்தனமாக என்னவோ கூறிவிட்டதைப்போல நானும் ட்ரவுசர் பாக்கெட்டிற்குள் விரலை நுழைத்துக் கொண்டு நின்றிருந்தேன்.

அப்படி நின்று கொண்டிருக்கும்போது, அவளைச் சிறிது தொடவேண்டும்போல எனக்கு இருந்தது. பார்க்கும்போதெல்லாம் உண்டாகக்கூடிய ஒரு ஆசை. ஆனால், இன்றும் அது நடக்கக்கூடிய ஒன்றாகத் தெரியவில்லை. அவள் மிகவும் புத்திசாலித்தனமாக விஷயத்தைவிட்டு விலகிப் போக முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

என்னுடைய ஆசை நிச்சயம் நிறைவேறப் போவதில்லை என்று எனக்குத் தோன்றியது. முன்பு பல தடவை நடந்திருப்பதைப்போல இந்த முறையும் ஏக்கத்துடன் திரும்பிச் சென்று கட்டிலில் குப்புறப்படுத்து என்னை நானே குறை சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.


எங்களுக்கு இடையே இருந்த மவுனத்திற்கு கனம் கூடிக் கொண்டிருந்தது. அதை முடிவுக்குக் கொண்டு வருவதைப்போல பாலையில் இருந்து ஒரு மலர்க்கொத்து ஒடிந்து கீழே விழுந்தது.

நாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் மேலே பார்த்தோம்.

ஒரு கூர்மையான வாலைக் கொண்ட பறவை பறந்து போய்க் கொண்டிருந்தது. அதுதான் பூங்கொத்தைக் கீழே விழச் செய்திருக்க வேண்டும்.

எங்களுக்கு சற்று முன்னால், புழுதியில் வெள்ளை நிறப் பூக்களைக் கொண்ட அந்த தடிமனான கொத்து கீழே விழுந்து சிறிது நேரம் ஆடியது. பிறகு அது அசைவே இல்லாமல் கிடந்தது. காற்றில் பயணம் செய்யும் படகைப் போல, எங்கிருந்தோ அங்கு வந்த ஒரு தேனீ அந்தக் கொத்துக்கு நேராகக் கீழே இறங்கிச் சென்று, மலர்களுக்கு நடுவில் புகுந்து மறைந்து போனது.

“அந்தப் பூவை எடு...’’ - ஒரு புதிய விஷயம் கிடைத்த சந்தோஷத்துடன் ரது அக்கா கட்டளையிட்டாள்.

நான் அதைக் காதில் வாங்காததைப் போல இருந்தேன். நிலத்தின் மேற்கு மூலையில் நின்று கொண்டிருந்த தென்னை மரத்தின் காய்ந்துபோன தடியை, நிறுத்தாமல் கொத்திக் கொண்டிருந்த மரங்கொத்தியையே பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன்.

ரது அக்காவின் செயல் என்னை வேதனை கொள்ளச் செய்தது. நான் ஒரு வெறும் சிறுவன் என்று மட்டுமே நினைத்து என்னுடன் அவள் பழகுகிறாள் என்றால்...?

“பப்பு!’’ - அவள் சற்று குரலை உயர்த்தி அழைத்தாள்.

“என்ன?’’ - நான் ஆச்சரியப்படுவதைப்போல நடித்தேன்: “மரங்கொத்தி...’’

“மரமண்டை’’ - அந்தப் பேரழகி ஒரு புல்லை எடுத்து மென்று கொண்டே சொன்னாள்: “அந்தப் பூவை இங்கே எடுத்துக் கொண்டு வரும்படி நான் சொன்னேன்...’’

நான் பார்த்துக் கொண்டு இருக்கும்போதே, மிடுக்குத் தனத்தைச் சிறிதும் விடாமல் அவள் அந்தப் புல் முழுவதையும் மென்று தின்றுவிட்டாள். பிறகு காறித்துப்பினாள். “கசப்பா இருக்கு.’’

கண்களில் காணும் புல், செடி எல்லாவற்றையும் மென்று தின்ன ஆரம்பித்தால், எவ்வளவு நல்ல வாயாக இருந்தாலும் கசக்காமல் இருக்குமா? ஆனால் நான் அதைக் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக அவளுடைய சிவந்த முகத்தில் உதட்டில் ஒரு மூலையில் ஒட்டி இருந்த மணல் துகளையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.

ஓ! என்ன ஒரு அழகு!

மேலும் சிறிது நேரம் அவள் தன் கண்களில் நெருப்பை நிறைத்துக் கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். நான் அவள் சொன்னதைக் கேட்கப் போவதில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அவள் தானே பூவை எடுப்பதற்காகத் திரும்பி நடந்தாள். அந்த நடையைப் பார்த்துக் கொண்டு நின்றதுதான் தவறான ஒன்றாகிவிட்டது.

ஆள் அரவமே இல்லாத நிலப்பகுதி. மேலே மேகங்கள் அற்ற நீல நிறம். கிளிகள், அழகான பெண்கள் அணில்கள்... பாம்புப் புற்று இருந்த பகுதியிலிருந்து வீசிய காற்றின் இரைச்சல்...

குனிந்து நின்று பூவை எடுத்த அவளைப் பின்னால் இருந்தவாறு நான் வளைத்துப் பிடித்தேன். அந்தக் காரியத்தைச் செய்தபோது என் கண்கள் மூடியிருந்தன.

அடுத்த நிமிடம் ஒரு கூச்சல்... கையை எடுத்தேன். கண்களைத் திறந்தேன். “அய்யோ!’’ என்று கத்தியவாறு அவள் பரபரத்துக் கொண்டிருந்தாள். தரையில் கால்களை ஊன்றாமல் நின்று குதித்துக் கொண்டிருந்தாள். பதைபதைத்துப்போய் ஓடலாம் என்று காலை எடுத்தபோது, ரது அக்காவின் அலறல் சத்தம் கேட்டது. “கொட்டிடுச்சு...’’

விரலைக் காட்டினாள். சுண்டு விரலில் தேனீயின் கொடுக்கு ஒட்டியிருந்தது. அவள் தன்னுடைய இடது கையால் அந்த விரலை இறுகப் பிடித்திருந்தாள். விரலின் நுனிப் பகுதி. சிவப்பு மையில் மூழ்கச் செய்து காய வைத்ததைப்போல சிவப்பாகக் காட்சியளித்தது.

நான் கொடுக்கைப் பிடுங்கி எறிந்தேன். ஓடிச் சென்று குளத்தின் கரையில் இருந்து இரண்டு வாழைத் தண்டுகளைப் பறித்துக் கொண்டு வந்து தேனீ, கொட்டிய இடத்தில் அதை வைத்துத் தேய்த்தேன்.

“எரியுது... எரியுது...’’ - அவள் கூறினாள். அத்துடன் வேதனையைக் காட்டும் சத்தங்களையும் வெளிப்படுத்தினாள்.

அப்போது நான் வேறொரு விஷயத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் ஒரு இறுக்கமான அணைப்பு நடந்த விஷயம் அவளுக்கு தெரியாமலே போயிருக்குமோ?  அதுதான் உண்மை என்றால், நான் மீண்டும் அதே பழைய இருட்டில்தான் இருந்து கொண்டிருக்கிறேன். நாசம் பிடித்த தேனீ கொத்துவதற்கு அந்த நேரமா கிடைத்தது?

வேதனை சற்று குறைந்தவுடன் அவள் எனக்கு நேராகத் திரும்பினாள். அவளுடைய முகம் கோபத்தால் மேலும் சிறிது பெரிதானதைப் போல இருந்தது.

“அது இருக்கட்டும்... இதற்கிடையில் நீ என்ன செஞ்சே?’’

“நான் எதுவும் செய்யலையே!’’ - பயந்து நடுங்கிக் கொண்டு நான் பதில் சொன்னேன்.

“நீ என்னை கட்டிப் பிடிச்சே...’’

“........’’

“என்ன... முழிக்கிறியா? ம்... நீ என்னைக் கட்டிப் பிடிச்சு என்னோட பின் பாகத்தைக் கிள்ளினே... உன் அம்மாக்கிட்ட நான் சொல்றேன்... சின்னப் பையன் அந்த அளவுக்கு விளைஞ்சிட்டியா?’’

பயம் காரணமாக என்னால் எதுவுமே பேசவே முடியவில்லை. என்னுடைய பேசும் சக்தியையே முழுமையாக இழந்து விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். உற்சாகத்துடன் குதித்துக் கொண்டிருந்த உடல், எந்தவித அசைவும் இல்லாமல் முதுகெலும்பு ஒடிந்து தொங்கிக் கொண்டிருப்பதைப்போல ஆகிவிட்டது.

என் தாயிடம் அவள் இந்த விஷயத்தைக் கூறினால் என்ன நடக்கும்?

ரது அக்கா, அவ்வப்போது தன் வலது கையின் சுண்டு விரலை ஊதிக் கொண்டிருந்தாள். அப்போது மட்டும் முகத்தில் கோபம் நீங்க கவலை வந்து ஆக்கிரமிக்கும். எனக்கு நேராகப் பார்க்கும்போது, மீண்டும் கண்கள் வெறிக்கவும், மூக்கு துடிக்கவும் செய்யும்.

“நான் சொல்லத்தான் போறேன். கண்ட கண்ட தெருப்பொறுக்கி பையன்கள்கூட சேர்ந்தும், படிக்கக் கூடாத புத்தகங்களையெல்லாம் படிச்சுத்தான் நீ இப்படி ஆயிட்டே. உன்னோட ஒரு நண்பர்கள் கூட்டம்...! ஒரு புத்தக வாசிப்பு... எல்லாவற்றையும் நான் இன்னைக்கே நிறுத்துறேன். அதிகப்பிரசங்கி!’’

நான் எதுவும் பேசாமல் நிற்பதைப் பார்த்து அவள் மேலும் சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் செய்தாள்:

“யாருடா என்னைக் கட்டிப்பிடிக்கச் சொல்லி உன்கிட்ட சொன்னது? சொல்லு...’’

“நான் கட்டிப்பிடிக்கெல்லாம் இல்ல...’’

“ஆனால் கட்டிப்பிடிக்க வந்தே...’’ - அவள் உறுதியான குரலில் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தாள். பேசும்போது இரண்டாகப் பின்னப்பட்டிருந்த அவளுடைய தலைமுடி அசைந்து கொண்டும் மார்புப் பகுதி கோபத்தால் மேலே எழுந்து தாழ்ந்து கொண்டும் இருந்தன.


“உண்மையைச் சொன்னால் உனக்கு நல்லது. உண்மையைச் சொல்லிடு... இப்படிச் செய்யச் சொல்லி உன்கிட்ட யார் சொன்னது?’’

மீண்டும் அவள் என்னை முழுமையான ஒரு குழந்தையாகவே ஆக்கிவிட்டாள். எனக்கு இந்த மாதிரியான சிந்தனைகள் வரவே வராது என்பதைப்போல அவள் பேசிக் கொண்டிருந்தாள். சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நான் பதில் சொன்னேன்:

“யாரும் சொல்லிக் கொடுக்கல...’’

“பிறகு?’’

“பிறகு... அப்படிச் செய்யணும்னு எனக்கே தோணுச்சு’’ - நான் மகிழ்ச்சியுடன் உண்மையை ஒப்புக் கொண்டேன்.

“ச்சீ...’’ - நான் கூறியதை முடிப்பதற்குள் அவள் முகத்தை மூடிக்கொண்டு, அதை இப்படியும் அப்படியுமாக ஆட்டினாள்.

“உனக்கே அப்படிச் தோணிச்சு... அப்படித்தானே? உன்னை நான் சும்மா விடமாட்டேன். உன் அம்மா ஒருத்திதான் கொஞ்சிக் கொஞ்சி சின்னப் பையனான உன்னை இப்படிப் பாழ்படுத்திட்டாங்க. அவங்கக்கிட்ட சொல்லியும் பிரயோஜனம் இல்ல. உன் சித்தி பள்ளிக்கூடத்துக்கு வரட்டும்... நான் சொல்றேன்.’’

“அய்யோ!’’ - நான் அதிர்ச்சியடைந்து கத்தி விட்டேன். “சித்திக்கிட்ட மட்டும் சொல்லாதீங்க.’’

“அப்படின்னா... அவங்ககிட்ட பயம் இருக்கு.’’

“அவங்க என்னை அடிச்சுக் கொன்னுடுவாங்க.’’

“உன்னை அடிச்சுக் கொன்னால் எனக்கு என்ன?’’ - அவள் முகத்தை வெட்டிக் கொண்டு திரும்பி நடந்தாள். விரலை அப்போதும் ஊதிக் கொண்டு இருந்தாள். சிறிது தூரம் நடந்த பிறகு ஒரு பெரிய அதிகாரியைப் போல திரும்பி நின்று கொண்டு சொன்னாள்: “சின்னப் பையனே, இந்த சின்ன வயசுல கேடு கெட்டுப் போயிடக் கூடாது.’’

ஆடிக் குலுங்கியவாறு அவள் நடந்து சென்றாள்.

அமைதியின் ஆழத்தில், அவமானத்தின் அடிகள் வாங்கி நான் தலை குப்புற விழுந்து விட்டேன். அசைந்து கொண்டிருக்கும் கொடிகளின் இலைகள்... இலைகளின் நிழலில் அமர்ந்து சத்தம் உண்டாக்கிக் கொண்டிருக்கும் கிளிகள்... வெயிலின் மாறுபட்ட நிலைகள்... வயலில் இருந்து நெற்கதிரைத் தூக்கிக் கொண்டு பறந்து போகும் கிளிகள்... மேற்கு திசையில் ஏரியின் வெப்பமான அலைகள் கரையில் வந்து மோதி உண்டாக்கும் சத்தம்.

அந்த பாலைப் பூங்கொத்து அதே இடத்தில் கிடந்தது. சற்று இடம் மாறியிருந்தது. ஒன்றிரண்டு ஒற்றைப் பூக்கள் உதிர்ந்து போயிருந்தன. அவற்றை உச்சிக் காற்றுப் புழுதியில் இட்டு உருட்டி விளையாடிக் கொண்டிருந்தது.

2

மாலை நேரத்தில் நானும் கொச்சும்மிணியும் சேர்ந்து பாக்கு பறிப்பதற்காகச் சென்றோம்.

வெயில் மறைந்துபோன நிலம். பாக்கு மரங்களின் நீளமான நிழல்கள் இங்குமங்குமாக விழுந்து கிடந்தன. எல்லா மரங்களிலும் பழுத்த காய்களும் மலர்ந்த பூங்கொத்துகளும் ஆடிக் கொண்டிருந்தன.

காலில் செருப்பு அணிந்து உடுத்தியிருந்த வேட்டிக்குப் பின்னால் சிறிய அரிவாளை வைத்துக் கொண்டு கொச்சும்மிணி மரங்களின் உயரங்களுக்குச் சென்று காணாமல் போனான். நான் எவ்வளவு முயற்சி செய்தும் அவன் மேலே என்ன செய்கிறான் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கு ஒரே இருட்டாக இருந்தது. ஒருவேளை ஒன்றோ இரண்டோ பாக்குகளை எடுத்து அவன் தன் மடிக்குள் மறைத்து வைத்திருக்கலாம். அதனால் ஒவ்வொரு மரத்திலிருந்து இறங்கியவுடன், நான் அவனுடைய வேஷ்டியை அவிழ்த்து சோதித்துப் பார்த்தேன். உள்ளே அரைக்கால் சட்டை அணியாமல் இருந்ததால் அவனுக்கு சிறிது வெட்கம் இருந்தது.

மனம் மிகவும் பதட்டத்தில் இருந்தது. சித்தி பள்ளிக் கூடத்திலிருந்து வந்திருந்தாள். அவளிடம் சொல்லியிருக்கும் பட்சம், அதைவிட இறப்பதே மேல். என் தாய்க்கு விஷயம் தெரிந்திருந்தால்கூட அதனால் பெரிய அளவில் பிரச்சினை இல்லை. எதையும் தெரிந்து கொள்ளாமல் இருப்பதைப் போல அவள் இருந்துவிடுவாள். சித்தி அப்படியில்லை. எல்லோருக்கும் தெரியும்வண்ணம், கூப்பிட்டு விஷயத்தைச் சொல்லி அடிக்க ஆரம்பிப்பாள். அவமானமாக இருக்கும்!

கொச்சும்மிணி ஒரு மரத்தில் இருந்து ஆடியவாறு இன்னொரு மரத்திற்குத் தாவிக் கொண்டிருந்தான். இடுப்பில், சிவந்து பழுத்த ஒரு பாக்கு குலை வாலைப் போல ஆடிக் கொண்டிருந்தது. எனக்கு அதில் கவனம் செலுத்தவேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. வேண்டுமென்றால் அவன் ஒன்றோ இரண்டோ பாக்குகளைக்கூட எடுத்துக் கொள்ளட்டும். இரண்டு பாக்குகள் என்பது எனக்கு பெரிய விஷயம் இல்லையே! அதைவிட எவ்வளவு பெரிய சம்பவம் இங்கு நடந்திருக்கிறது!

இந்த தடவை கீழே இறங்கும்போது, கொச்சும்மிணி கேட்டான்:

“என்ன, ஒரு மாதிரியா இருக்கீங்க?’’

“ஒண்ணுமில்ல...’’ - நான் சொன்னேன்.

“சும்மா சொல்லாதீங்க. என்னவோ இருக்கு.’’

“ம்... இருக்கு அதனால் என்ன?’’ - நான் எதுவுமே தெரியாதது மாதிரி நடித்தேன்.

“சொல்லட்டுமா?’’

“சொல்லு...’’

அவன் சிறிது நேரம் என்னவோ சிந்தித்தான். தொடர்ந்து அதுவரை இருந்த விளையாட்டுத்தனத்தை வீசி எறிந்துவிட்டு, மிடுக்கான குரலில் ஒரு கேள்வியைக் கேட்டான்:

“உங்களுக்கு இப்போ என்ன வயசு நடக்குது?’’

“பதினேழு... அதற்கென்ன?’’

“சரி... அடுத்த மரத்துல இருந்து இறங்குறதுக்கு முன்னாடி நான் விஷயம் என்னன்னு சொல்றேன். உண்மையாக இருந்தால் ஒத்துக்கணும்.’’

“நிச்சயமா...’’

அவன் அடுத்திருந்த மரத்தை நோக்கி நடந்தான். பாக்கு மரத்தின் தடியைத் தொட்டு வணங்கிவிட்டு, அவன் மேல்நோக்கிச் சென்றான். பார்ப்பதற்கு, மேலேதான் உண்மை இருப்பதைப்போல தோன்றியது.

எனக்கு வியப்பாக இருந்தது. அவன் கூறிவிடுவானா? எது எப்படியோ, என்னைவிட அவனுக்கு மூன்று நான்கு வயதாவது அதிகம் இருக்குமே! அப்படியென்றால் அந்த அளவிற்கு அதிகமாக அனுபவமும் அவனுக்கு இருக்குமே!

மேலே எங்கோ ஓலைகள் அசைந்தன. மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. வயல் வழியாக நடந்து போய்க் கொண்டிருந்த மனித உருவங்கள் முற்றிலுமாக பார்வையிலிருந்து மறைந்து போயின. சந்தையில் இருந்து மீன் வாங்கிக் கொண்டு திரும்பி வரும் கொழுத்து தடித்த பெண்ணுக்குப் பின்னால் ஏதோ ஒரு சைக்கிள்காரன், நிறுத்தாமல் மணியடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தான்.

ஆகாயத்தில் இருந்து ஒரு கேள்வி:

“நான் சொல்லட்டுமா?’’

“சொல்லு...’’ - நான் மேலே பார்த்து உரத்த குரலில் சொன்னேன்.

“உண்மையாக இருந்தால், நான் பத்து பாக்குகள் எடுத்துக் கொள்வேன்.’’

சிறிது நேரம் யோசனை செய்து விட்டு, அதை எடுத்துக் கொள்வதற்கு நான் சம்மதித்தேன்.

மேலே ஓலைகள் அசையாமல் இருந்தன. எந்தவிதமான அசைவும் இல்லாத இயற்கைச் சூழ்நிலையில் இருட்டு ஆக்கிரமித்திருந்தது. பாக்கின் ஓடுகளை உறிஞ்சிக் குடிப்பதற்காக அங்கு பறந்து வந்திருந்த வவ்வால்களின் ஏமாற்றம் நிறைந்த சிறகடிப்புகள்... வாழைத் தோப்பில் குடை செய்யப் பயன்படும் பனைகளைச் சுற்றியும் வவ்வால்கள் காட்சியளித்தன.

ஆகாயம் கேட்டது:


“உங்களுக்கு ஒரு பெண்ணால் உண்டான மனக்கவலை இருக்குதுல்ல?’’

நான் வெட்கப்பட்டு தலையைக் குனிந்து கொண்டேன். வாழ்க்கையில் அதற்கு முன்னால் எந்தச் சமயத்திலும் அப்படிப்பட்ட ஒரு அனுபவம் உண்டானதில்லை. அதுவரையில் என் பெயருடன் ஒரு பெண்ணின் பெயரை இணைத்துக் கற்பனை பண்ணிப் பார்க்கக்கூட யாரும் நினைத்தது இல்லை. அந்தக் காரணத்தால் எனக்கு ஒரு விதத்தில் சந்தோஷமே உண்டானது.

“உண்மைதானே?’’

“ஆமா...’’ - நான் முடிந்த வரையிலுமான உரத்த குரலில் சத்தம்போட்டுச் சொன்னேன்.

பாக்கு மரம் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தது. என்னுடைய கன்னங்கள் வெட்கத்தால் சிவந்தன. சத்தங்கள் என் காதுகளில் விழுந்து கொண்டேயிருந்தன.

மரத்தடியில் மிகவும் பலமாக மோதி இறங்கும் அரிவாளின் சத்தம் கேட்டது. சாயங்காலப் படகில் இருந்து கிடைத்த மீனுடன் நடந்து செல்லும் கொடூரமான கொலைகாரனின் ஆவேசம் நிறைந்த மீன் கண்கள்... தொழுவத்தில் வைக்கோலை எதிர்பார்த்து நின்று கொண்டிருக்கும் பசுவின் நீளமான கத்தல்கள்...

மொத்தத்தில் ஒரு சத்தங்களின் கோலாகலம்.

வெட்கத்தால், என்னால் பார்க்க முடியவில்லை. நான் மெல்ல கண்களை மூடிக் கொண்டேன்.

 

கண்களைத் திறந்தபோது கொச்சும்மிணி எனக்கு சற்று முன்னால் நின்றிருந்தான். அவன் கட்டியிருந்த துணியை அவிழ்த்துக் கொண்டே, ஒரு பெரிய ரகசியத்தைக் கேட்டான்.

“எந்தப் பெண்?’’

“ஒரு பெண்...’’

“பேரைச் சொல்லுங்க.’’

எங்களுடைய உரையாடலுக்கு ஒரு பெரிய விவாதத்தின் அடர்த்தி வந்து சேர்ந்திருந்தது.

“பெயர் என்ன?’’ - எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்வதற்குத் தயக்கமாக இருந்தது.

“ஒரு பெண் என்று மட்டும் தெரிந்தால் போதும்.’’

“இருந்தாலும் பெயரைச் சொல்ல மாட்டீங்களா?’’

“மாட்டேன்.’’

“சரி, வேண்டாம்... அப்படின்னா, அவங்க எங்கே இருக்குறவங்கன்ற விஷயத்தையாவது சொல்லலாமே?’’

“இங்கே பக்கத்துலதான்.’’

“அப்படி மேலோட்டமா சொல்லிக்கிட்டு இருந்தா சரியா இருக்காது. விஷயத்தை ஒழுங்கா சொல்லணும். அப்படின்னாத்தான், விஷயத்தைச் சரியா நம்மால முடிக்க முடியும்.’’

நான் அதற்குப் பிறகும் தயங்குவதைப் பார்த்து அவன் வேகப்படுத்தினான்:

“மறைக்காம விஷயத்தைச் சொல்லுங்க நமக்கு வழி இருக்கு.’’

எதிர்பார்ப்பு தலையை நீட்டியது: “எப்படிடா வழி உண்டாக்குவது?’’

“நான் அந்த வழியை உண்டாக்கித் தர்றேன். அது இருக்கட்டும்... பொண்ணு எங்கே இருக்கான்னு சொல்லுங்க.’’

“இங்கே பக்கத்துலதான்...’’

“அப்படின்னா?’’

“கொஞ்சம் மேற்கு திசையில...’’

அவன் சிறிது நேரம் மெல்லிய முனகலுடன், கண்களை மூடிக் கொண்டு யோசித்தான். தொடர்ந்து இதுதான் இப்போ இவ்வளவு பெரிய விஷயமா என்பது மாதிரி சொன்னான்:

“ம்... விஷயம் இவ்வளவுதானா? புரியுது...’’

“என்ன?’’

“ஓஹோ... உங்களைப் புரிஞ்சிக்கிட்டேன். ஆனால், முழுசா சொல்லல... இரண்டு சந்தேகங்கள் இருக்கு... கேட்கட்டுமா?’’

“தாராளமா...’’

“உண்மையைச் சொல்லணும்.’’

“நிச்சயமா...’’

அவன் தன்னுடைய முதல் சந்தேகத்தைச் சொன்னான்:

“பெண் உங்களைவிட ஐந்து அல்லது ஆறு வயது மூத்தவ அப்படித்தானே?’’

“ஆமாம்...’’ - என்னுடைய கண்கள் ஆச்சரியத்தால் விரிய ஆரம்பித்தன.

“திருமணம் நடந்திருச்சு...’’ - இரண்டாவது சந்தேகம் ஒரு அறிவிப்பைப் போல வெளியே வந்தது.

“ஆமாம்...’’

“இனி... இப்போ... நான் பெயரைச் சொல்லணுமா? தேவையில்லை. அதற்கான அவசியம் இருக்குதா?’’ - அவனுடைய அவலட்சணமான முகத்தில் ஒரு புன்சிரிப்பு மலர்ந்தது.

“கொச்சும்மிணி...’’- இதற்குமேல் அமைதியாக இருக்க முடியாது என்ற சூழ்நிலை உண்டானவுடன், நான் உரத்த குரலில் அழைத்தேன்.

அவன் என்னுடைய தொண்டைக்குள் இருந்து வெளிவந்த அழைப்பை முழுமையாக நிராகரித்து விட்டுச் சொன்னான்: “ரதி...’’

இந்த முறை நான் ஒலி என்ற ஒன்றை இழந்துவிட்டேன். என்னால் பேசமுடியவில்லை. குரல் எதையும் கேட்க முடியவில்லை. எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. இலைகளின் முனகல்கள் திடீரென்று இல்லாமல் போயின. திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது இடையில் திடீரென்று சத்தம் நின்று போய், திரைச்சீலையில் வாயை மட்டும் அசைத்துக் கொண்டிருக்கும் உருவங்கள் வந்து போய்க் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு உணர்வு அப்போது உண்டானது. கொச்சும்மிணி என்னுடன் சம்பந்தப்பட்ட ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டிருக்கிறான். எந்தவித குற்றச்சாட்டும் இல்லாமல், ஒரு சாதாரண சம்பவத்தைப் போல அதை அவன் ஏற்றுக் கொண்டும் இருக்கிறான். அப்படியென்றால், எனக்கு ஒரு பெண்ணின்மீது ஆர்வம் உண்டாவது என்பது, இந்த உலகத்தில் ஒரு சம்பவமே அல்ல.

படிப்படியாக சத்தங்கள் திரும்பி வந்து கொண்டிருந்தன. இருட்டின் சத்தம்... மாலை நேரத்தின் சத்தம்... வீட்டில் சித்தி கடவுளின் பெயர்களைக் கூறிக் கொண்டிருக்கும் சத்தம்... சமையல்காரி குஞ்ஞி பெரியம்மா நாயை அழைக்கும் சத்தம்... இதோ, இறுதியாக கொச்சும்மிணியின் சத்தம்...

“நான் இதை எப்படிக் கண்டுபிடிச்சேன்னு நினைக்கிறீங்க... அப்படித்தானே?’’

“ஆமாம்... ஆமாம்...’’ - எனக்குப் பேசக் கூடிய ஆற்றல் திரும்பவும் கிடைத்தது.

“உன்னால இதை எப்படித் தெரிஞ்சிக்க முடிஞ்சது.’’

“அதெல்லாம் முடியும்...’’

“இருந்தாலும்...?’’

“அதற்கான அறிகுறி தெரிஞ்சப்பவே, நான் நினைச்சேன்...’’

நான் ஒரு பெரிய உண்மையைக் கேட்டுக் கொண்டிருப்பவனைப் போல கண்களைத் திறந்து வைத்துக் கொண்டு நின்றிருந்தேன். அந்த கறுப்புநிறக் குரங்குப் பயலுக்கு அந்த அளவிற்கு அறிவு இருக்கிறது என்று நான் நினைக்கவேயில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது பொதுவாகவே மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டிருந்த அந்த இளம்பெண் இப்போது முற்றிலுமாக மாறிவிட்டாள் என்பதுதான் உண்மை. அவள் என்னுடைய அக்காவுடன் சேர்ந்துதான் பள்ளிக் கூடத்திற்குப் போய்க் கொண்டிருந்தாள். திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் மட்டுமே அவள் தன்னுடைய கணவனுடன் இருந்தாள். ஒரு பட்டாளக்காரன்... திருமணத்திற்குப் பிறகு அவன் போய் விட்டான். அதற்குப் பிறகு அவளிடம் என்னவோ மாறுதல் இருக்கிறது. அது மட்டும் உண்மை.

“இனி... இப்போ என்னடா செய்றது?’’ - நான் கேட்டேன்.

“எதைப் பற்றியும் கவலைப்படாம இருங்க. படுத்துக் கொண்டு கயிறைப் பிடுங்காம இருக்கணும்... வழி இருக்குன்னு சொன்னேன்ல?’’

“என்ன வழி?’’

“அதைச் சொல்றேன்... அதற்கு முன்னால், நடந்த எல்லா விஷயங்களையும் சொல்லுங்க.’’

“முதலில் இருந்தா?’’ -நான் கேட்டேன். என்னுடைய மனம் எந்தவித தியாகத்திற்கும் தயாராகிவிட்டிருந்தது.

“ஆமாம்... முதலில் இருந்து... ஒரு பொய்கட சொல்லக்கூடாது. நடந்தது முழுவதையும் நடந்ததைப்போலவே சொல்லணும். நாம அதற்கு ஒரு வழி பண்ணுவோம்.’’

நாங்கள் வீட்டை நோக்கி நடந்தோம். அவனுடைய வேட்டியின் மடி நிறைய பழுத்த பாக்குகள் நிறைந்திருந்தன.

இருட்டு இங்குமங்குமாகப் பரவ ஆரம்பித்திருந்தது. ஆகாயம் ஒரு செட்டிப் பெண்ணைப் போல, புள்ளிகள் நிறைந்து காணப்பட்டது.


நான் நடந்த விஷயங்கள் அனைத்தையும், எதையும் மறைக்காமல் அவனிடம் விளக்கமாகக் கூறினேன்.

பயப்பட்டதைப்போல எதுவும் நடக்கவில்லை. எதுவுமே நடக்காததைப்போல மறுநாளும் ரது அக்கா வீட்டிற்கு வந்தாள். என் தாயின் தலையில் இருந்த பேன்களைக் கொன்று தீர்த்தாள். என்னிடம் எதுவும் பேசவில்லை. வெறித்து என்னையே பார்த்தாள் அவ்வளவுதான்.

நான் உள்ளே இருந்த அறைக்குள் இருந்தவாறு மூடப்பட்டிருந்த சாளரத்தின் இடைவெளி வழியாக அவளை பார்த்தேன். அவள் என்னவோ கூறிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது. இடையில் என்னைப் பற்றியும் என்னவோ பேசுவதைப்போல இருந்தது. நான் கூர்ந்து கேட்டேன்.

என் தாய் சொன்னாள்: “அவனுடைய அட்மிஷன் விஷயம் கிட்டத்தட்ட சரி ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. எவ்வளவு நாட்கள் அவன் இங்கு இருப்பானோ, அந்த அளவுக்கு எனக்கு நல்லது.’’

நான் கல்லூரிக்குப் போய்விட்டால், வீடு உறக்கத்தில் மூழ்கிவிடும் என்று என் தாய் பயந்தாள். என் தாய் என்னைப் பற்றி மேலும் அதிகமாகப் பேச ஆரம்பித்தபோது, ரது அக்கா திடீரென்று விஷயத்தை மாற்றினாள்.

எனக்கு கவலை உண்டானது.

அவள் போய்விட்டவுடன், கதவை அடைத்துப் படுத்துக் கொண்டு சிறிது நேரம் அழுதேன். இனி வாழ்க்கையில் எந்தச் சமயத்திலும் அவள் என்னுடன் பேச மாட்டாளா?

முன்பெல்லாம் எந்த அளவிற்குச் சுதந்திரமும் நெருக்கமும் இருந்தன! ஒருநாள் பின்பக்கம் பட்டன்களைக் கொண்ட ஒரு ரவிக்கையை அணிவதற்கு என்னுடைய உதவியை அவள் நாடியிருக்கிறாள். அந்த அளவிற்கு நெருக்கமாக நடந்துவிட்டு, நான் செய்த ஒரு சிறு தவறுக்காக விலகி விலகிப் போவதாக கூறினால் எப்படி இருக்கும்?

என்ன செய்வது என்றே தெரியாமல் மனதில் கவலைப்பட்டுக் கொண்டு படுத்திருக்கும்போது, பின்னால் ஜன்னல் பகுதியிலிருந்து குரல் வந்தது:

“அய்யா...!’’

என்னைக் காப்பாற்றப் போகிறவன்... வழிகாட்டி...

“விஷயங்கள் எந்த அளவு போயிருக்கு...?’’ - நான் அருகில் சென்றபோது அவன் கேட்டான்.

நாங்கள் மேற்குப் பக்க வாசலில் படர்ந்து நிழல் பரப்பிக் கொண்டிருந்த பூவரச மரத்திற்குக் கீழே உட்கார்ந்தோம். நீண்ட நேரத்திற்கு நான் எதுவும் பேசவில்லை. என்னுடைய மனதில் இருக்கும் கவலையை புரிந்து கொண்டிருந்த அவனும் பேசாமல் இருந்தான்.

“நான் ஊரைவிட்டுப் போகப் போறேன்’’- வானத்தில் அலைந்து கொண்டிருந்த மேகங்களின் சிதறல்களைப் பார்த்துக் கொண்டே நான் சொன்னேன்.

“இனிமேல் இந்த ஊரில் காலெடுத்து வைக்கவே மாட்டேன்.’’

எல்லோருடனும் பொதுவாகவே மிகுந்த கோபத்தையும் வாழ்க்கையைப் பற்றி முழுமையான ஏமாற்றத்தையும் நான் கொண்டிருந்தேன்.

“அந்த அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லையே? இந்த விஷயத்துக்காக மனசுல வெறுப்பு அடைஞ்சா எப்படி?’’ - கொச்சும்மிணி எனக்கு ஆறுதல் சொன்னான்: “அந்தப் பெண்ணை நாம வழிக்குக் கொண்டு வருவோம்.’’

“எனக்கு யாரும் தேவையில்லை...’’ - நான் சொன்னேன்: “அவங்க முன்னாடி நடந்தது மாதிரி நடந்தாலே போதும்.’’

“ச்சே... நான் இருக்குறப்போ... என் உடலில் உயிர் இருக்குற வரை... நீங்க நினைச்சது நடக்கும்.’’

அவன் அதை உறுதிப்படுத்தும் வகையில் தன் மார்பில் ஓங்கி ஒரு அடி அடித்தான்.

“நான் எதையும் நினைக்கல...’’

“ம்... அப்போ நேற்று என்கிட்ட சொன்ன விஷயம்...?’’

“அது நடக்காத விஷயம்...’’

“இங்கே பார்த்து சொல்லுங்க...’’

நான் பார்த்தேன். அவனுடைய முகத்தில் ஒரு கம்பீரம் நிழலாடிக் கொண்டிருந்தது.

“அழைக்கிற இடத்துக்கு வருவாங்க... சொல்றபடி செய்வாங்க...’’

“யாரு?’’ - நான் கேட்டேன்.

“யாரா? யாரும்தான்... மகாராணிகளைக்கூட சிலர் இப்படித்தான் கைக்குள் கொண்டு வந்திருக்காங்க, தெரியுமா?’’

“எப்படி?’’ - எனக்குப் பொறுமை இல்லாமல் போயிருந்தது.

அவன் அந்த அற்புத ரகசியத்தைச் சொன்னான்: “வசியம்...’’

3

சியம் பல வகைகளிலும் இருந்தது.

கொச்சும்மிணி அந்த ஆழமான உலகத்திற்குள் என்னையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றான்.

‘ஜோடிக்கொடி’ என்றொரு இனத்தைச் சேர்ந்த கொடிகள் இருந்தன.

ஆண் கொடியும் பெண் கொடியும் சேர்ந்து பிணைந்தே அவை வளரும். ஒன்றோடொன்று மிகுந்த அன்பு கொண்டிருப்பதற்கும் வெறித்தனமாக இருப்பதற்கும் ஒரு அசாதாரண உதாரணங்களாக அவற்றைச் சொல்லலாம். ஜோடிக் கொடிகளின் வடக்குப் பக்கமாகச் செல்லும் வேரை எடுத்து அதன்மீது மந்திரவாதியை வைத்து ஒரு சிறப்பு மந்திரச் செயலைச் செய்ய வேண்டும். தொடர்ந்து வசீகரிக்க விரும்பும் பெண் நடந்து செல்லும் பாதையில் அதைக் குழி தோண்டிப் புதைக்க வேண்டும். அந்த வேர் மறைந்து கிடக்கும் பூமியின் வழியாக ஒருமுறை நடந்து சென்றாலே, இளம்பெண் உங்கள்மீது மையல் கொள்ள ஆரம்பித்துவிடுவாள்.

நான் கேட்டேன்: “எந்த இடத்துல குழிதோண்டிப் புதைப்பது? ரது அக்கா எங்கெங்கோ நடப்பாங்க. அந்த இடங்களில் எல்லாம் ஓடி ஓடி வேரைப் புதைக்க முடியுமா? நடக்காத விஷயத்தைச் சொல்லாதடா.’’

நான் கூறியது உண்மைதான் என்பதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். காரணம்- உடனடியாக அவன் வேறொரு வழியைச் சொன்னான்.

உடலுறவு கொண்டிருக்கும் ஓணான்கள்மீது ஒரு பெரிய கூடை நிறைய சாணத்தை எறிந்து அவற்றைப் பிடிக்க வேண்டும். சாணத்தை சினையாக இருக்கும் பசுவிடம் இருந்து எடுக்க வேண்டும். சாணத்திற்குள்ளிருக்கும் ஓணான் ஜோடிகள் மரணத்தைத் தழுவும். அவற்றை அப்படியே எடுத்து, காய்க்காத, தென்னை மரத்தின் உச்சியில் வைத்து காய வைக்க வேண்டும். காய்ந்து எலும்புகள் தூள் தூளாக உதிர ஆரம்பிக்கும்போது அந்தத் தூளைச் சேகரித்து அதில் ஒரு மந்திரச் செயலைச் செய்ய வேண்டும். மந்திர சக்தி படைத்த சாம்பலை நெற்றியில் பூசிக் கொண்டு விருப்பப்படும் இளம் பெண்ணைப் பார்க்க வேண்டும். அவள் திரும்பி இந்தப் பக்கம் பார்த்து நெற்றியில் இருக்கும் சாம்பலைப் பார்த்துவிட்டால்-

கொச்சும்மிணி இப்படிக் கூறி முடித்தான்:

“இரவு நேரத்துல போய் அழைத்தால், தூங்கிக்கிட்டு இருக்குற பாயோட வந்திடுவா.’’

எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. மந்திரச் செயலில் எனக்கு மேலும் நம்பிக்கை வரவேண்டும் என்பதற்காக, முன்பு மந்திரவாதி இதே வித்தையைச் செய்து, ஒரு வாழையை வசீகரித்த விஷயத்தையும் கொச்சும்மிணி என்னிடம் சொன்னான். பகல் நேரத்தில் வாழையைப் பார்த்துக் கொண்டே மந்திரவாதி சாம்பலை நெற்றியில் பூசினான். இரவு வேளையில் அவன் பதுங்கிப் பதுங்கிச் சென்றவாறு வாழையைப் பார்த்து கைகளைச் சொடக்கினான். “வாழையே, வரணும்.’’

மந்திரவாதி போன இடங்களுக்கெல்லாம் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டதைப்போல, ஒரு பெரிய குலையையும் சுமந்து கொண்டு பாவம்... அந்தப் பெரிய வாழைமரம் நகர்ந்து போய்க் கொண்டே இருந்தது.


என்னுடைய கண்கள் அகலமாக விரிந்தன. அந்த அவலட்சணமான மனிதனை இறுக அணைத்து ஒரு முத்தம் தர வேண்டும்போல எனக்கு அந்த நிமிடத்தில் தோன்றியது.

“அப்படின்னா நாம அதையே செய்வோம்... என்ன?’’ - கொச்சும்மிணி கேட்டான்.

அப்போதுதான் அந்த வித்தையைச் செயல்படுத்துவது பற்றி நான் சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு மாதத்திற்குள் என்னுடைய கல்லூரி அட்மிஷன் விஷயம் சரியாகிவிடும். ஓணான் ஜோடிகள் தூள் தூளாகி சாம்பலாகப் பல மாதங்கள் ஆகும்.

ஒரு சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து வேரைப் பதித்து வைக்கலாம் என்றால், அதிலும் ஆபத்து இருக்கிறது. ரது அக்காவிற்குப் பதிலாக அவளுடைய தாய் அந்தப் பக்கமாக நடந்து வந்துவிட்டால்...?

எனக்கு அதை நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. எங்களுடைய கிராமத்திலேயே மிகவும் நீளமான நாக்கினைச் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள். ஆண்களே வெட்கப்படுகிற அளவுக்கு அவள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவாள். யாருக்கும் கூச்சப்படாத குணத்தைக் கொண்டவள் அவள்.

“அப்படின்னா நீங்க ஒரு காரியம் செய்யிங்க... எது எப்படியோ, நாம நாளையில இருந்து ஓணானைப் பிடிக்க முயற்சிப்போம். எவ்வளவு சீக்கிரமா காரியம் நடக்குதுன்னு பார்ப்போம்.’’

நான் சொன்னேன்: “அது நிறைவேற நிறைய நாட்கள் ஆகும் என்றுதானே நீ சொன்னே? எனக்கு இனியும் அதிக நாட்கள் இல்லையே!’’

“அப்படின்னா ஒண்ணு செய்வோம். மந்திரச் செயல் செய்த சாம்பல் விலைக்குக் கிடைக்குதான்னு பார்ப்போம்.’’

“ஓ... அப்படி எங்கே கிடைக்கும்?’’

“மனதைத் தளரவிட வேண்டாம். கிடைக்கும் என்று என் மனசு சொல்லுது. நாம பணிக்கர் அய்யாவைப் போய்ப் பார்ப்போம்.’’

எங்களுடைய கிராமத்திலேயே சக்தி படைத்த மந்திரவாதி பணிக்கர்தான். பணத்தைக் கொடுத்தால் அவரிடமிருந்து கிடைக்காத ரகசிய மருந்துகள் எதுவும் இல்லை.

“ஆனால் பெரிய விலையைத் தர வேண்டியது இருக்குமே!’’ - நான் அதில் அடங்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சினையை வெளியிட்டேன். அது அவனுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது.

“இது கொஞ்சம் சிரமமான விஷயம்தான். உங்களுக்குன்றதுக்காக சம்மதிக்கிறேன். எனக்கு கட்டாயம் ஒண்ணும் இல்லை.’’

அவன் கோபப்படுவதைப்போல தோன்றியது. அவனுடைய குரலில் எரிச்சல் கலந்திருந்தது. நான் மென்மையான குரலில் கேட்டேன்.

“அப்படின்னா என்ன தர வேண்டியது இருக்கும்?’’

“அதை இப்போ எப்படிச் சொல்ல முடியும்? போனாத்தான் தெரியும்.’’

“இருந்தாலும்... உத்தேசமா...?’’

“ஒரு ஐந்து ரூபாயாவது தேவைப்படும். அந்த ரூபாய்ல விஷயத்தை முடிக்க நாம பார்க்கணும்.’’

நான் கவலையில் மூழ்கிவிட்டேன். அதைப் பார்த்தவுடன் சமாதானப்படுத்துகிற விதத்தில் அவன் சொன்னான்: “எது எப்படி இருந்தாலும் ஓணான் கிடைக்குதான்னு நாம பார்ப்போம். கிடைத்துவிட்டால் பரவாயில்லை... பெரிய அளவில் கைச்செலவு இல்லாமல் காரியம் நடந்து விடும்.’’

சிறிது நேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, என் தாயின் வெற்றிலைப் பெட்டிக்குள் இருந்து ஐந்து ரூபாயைத் திருடுவதற்காக நான் ஓடினேன்.

இதற்கிடையில் எப்போதோ வசந்தம் என் வீட்டு வாசலில் ஒரு வண்ணக் கண்ணாடிப் பாத்திரத்தைப்போல வந்து விழுந்து, உடைந்து சிதறி விட்டிருந்தது.

ஏழு லட்சம் நிறங்கள் சிதறிப் பரவி, கண்ணில் பார்க்கும் செடிகள், மரங்கள் ஆகியவற்றின் கிளைகளில் போய் ஒட்டிக் கொண்டிருந்தன. மேகங்கள், நிர்வாணமாக்கப்பட்ட கிராமத்து இளம் பெண்களைப் போலத் திரண்டு, பிரகாசமாக உருண்டு விளையாட ஆரம்பித்தன. எல்லா மரங்களும் கிளைகளைச் சேர்த்துக் கொண்டு சதா நேரமும் இளமையான காற்றை அணைத்து அதைச் செல்லவிடாமல் நிறுத்திக் கொண்டிருந்தன. மரக்கிளைகளில் இருந்து பிடியை விடுவித்துக் கொண்டு பாய்ந்து ஓடிய காற்றின் குழந்தைகள், பெண் கிளிகளின் ஆண் கிளிகளின் சிறகுகளுக்கு நடுவில் அபயம் தேடின.

நான் நிலத்தின் ஏதாவதொரு மூலையில் எல்லா நேரங்களிலும் பதுங்கி நடந்து செல்ல ஆரம்பித்தேன். பாம்புகள் வசிக்கும் நிலத்தின் ஓரங்களிலும் பாலை மரங்களின் அடிப்பகுதியிலும் விசாலமாகப் படர்ந்து தொங்கிக் கொண்டிருந்த கிளிமூக்கு மாமரத்தின் நிரலிலும் நிறைய ஓணான்கள் உடலுறவு கொண்டவாறு கிடந்தன. இடையில் அணில்களும், ஆனால் ஒன்றைக்கூட சாண உருண்டைக்குள் கொண்டுவர என்னால் முடியவில்லை. மிகவும் நெருங்கிப் போகும்போது அவை தங்களைத் தேடி வந்திருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு, அருகில் சென்றவுடன் உடலுறவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மரங்களையோ புல்வெளியையோ தேடி ஓடி மறைய ஆரம்பித்தன. ஒருமுறை வீட்டின் வடக்குப் பகுதியில் இருந்த மரத்திற்குக் கீழே ஒரு ஓணான் ஜோடியை கிட்டத்தட்ட பாதி அளவு நான் பிடித்துவிட்டேன்.

ஆனால், சாணம் அவற்றின் வால் பகுதியில் போய் விழுந்துவிட்டதால் இரண்டும் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து ஓடி மரத்தின் மேல் போய் உட்கார்ந்துகொண்டு என்னைப் பார்த்து கிண்டலாக ஓசை உண்டாக்கின.

என் தாய் ஒரு நாள் நிலப்பகுதியில் நான் இங்குமங்குமாக அலைந்து கொண்டு எதைத் தேடுகிறேன் என்று கேட்டாள். உடனடியாக என்னால் பதில் கூற முடியவில்லையென்றாலும், அங்கிருக்கும் காய்களைப் பறிப்பதற்காகத்தான் நான் நடந்து திரிகிறேன் என்று சொன்னபோது, என் தாய் அதை நம்பினாள். எனினும் அதற்காக என்னை அவள் திட்டினாள்:

“ச்சே... என்ன வெட்கக் கேடு! கல்லூரிப் போவதற்காக இருக்குற பையன் சின்னப் பிள்ளைகளைப்போல காட்டுக் காயைப் பறிப்பதற்காக நடந்து திரியறான். உன்னோட இந்த குணமெல்லாம் எப்படா மாறும்?’’

 

ரது அக்காவும் அவளுடைய தாயும் பெரும்பாலான நாட்களில் வீட்டிற்கு வருவார்கள். மகள் வந்தால் பிரச்சினை இல்லை. என் தாயிடம் எதையாவது பேசிக் கொண்டு இருந்துவிட்டு, ஏதாவதொரு வார இதழை எடுத்துக் கொண்டு இடத்தைவிட்டுக் கிளம்பி விடுவாள். அவளுடைய தாய் முற்றிலும் வேறு மாதிரி நடப்பாள். அந்தப் பெண் வந்துவிட்டால், நான் எப்போதும் இருக்கக்கூடிய மதிய உறக்கத்தில் இருந்து கண் விழித்து விடுவேன்.

கண் விழித்துப் படுத்திருக்கும்போது, ஊரில் இருக்கக்கூடிய இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகியோரைப் பற்றிய - அன்றுவரை இருக்கக்கூடிய தகவல்கள் அடங்கிய ஒரு நீண்ட விளக்கத்தைக் கேட்கலாம். இப்போதைய இளைஞர்கள் எல்லோரும் மிகவும் மோசமானவர்கள் என்று அவள் நினைத்துக் கொண்டிருக்கிறாள். ஆடு மெல்வதைப்போல வெற்றிலை போடுவதற்கு மத்தியில், தன்னுடைய மகள் ஒருத்தியைத் தவிர இந்த உலகத்தில் இருக்கும் எல்லா இளம்பெண்களையும் பற்றி அவள் மிகவும் மோசமாகப் பேசுவாள்.

கணவன் இல்லாமல் இருப்பதால்தான் அவளுக்கு இந்த அளவிற்கு பொறாமை இருக்கிறது என்று கொச்சும்மிணி ஏற்கெனவே கூறியிருக்கிறான்.


தன்னுடைய இருபதாவது வயதில் அவள் ரது அக்காவைப் பெற்றெடுத்திருக்கிறாள். அடுத்த வருடமே அவளுடைய கணவர் இறந்துவிட்டார். ரது அக்காவிற்கு முன்னால் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாலும், அது குழந்தையாக இருக்கும்போதே மரணத்தைத் தழுவிவிட்டது. கணவர் இறந்த பிறகும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும்; பிள்ளை பெற வேண்டும் என்றும் அவள் ஆசைப்பட்டாள். ஆனால் அந்தச் சமயத்தில் அவளுடைய நாக்கின் குணம் எப்படிப்பட்டது என்ற விஷயம் எல்லா இடங்களிலும் பரவி விட்டிருந்ததால், ஊரில் உள்ள எந்த ஆணுக்கும் அவளைத் திருமணம் செய்வதற்கான தைரியம் வரவில்லை.

கிழக்குப் பக்க அறைக்குள்ளிருந்து அவளுடைய தொடர் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டே படுத்திருக்கும்போதே, நான் வேறொன்றை நினைத்துக் கொண்டிருந்தேன்.

அன்று நான் ரது அக்காவைக் கட்டிப் பிடித்ததை அவள் தெரிந்து கொண்டிருந்தால்...?

சம்பவம் நடந்து முடிந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், அந்த ஒரு நாளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதற்கே எனக்கு பயமாக இருந்தது.

சாயங்காலம், ஒரு கையில் கூடையுடனும், இன்னொரு கையில் வரால் மீன்கள் கோர்க்கப்பட்ட நூலுடனும் சேற்றில் குளித்தவாறு நெல் வயலில் இருந்து கொச்சும்மிணி வந்தபோது, எனக்கு சாம்பல் கிடைத்தது.

சமீப நாட்களாக அவனை அதிகமாகப் பார்க்க முடியவில்லை. கிழக்குப் பக்க வாசலில் இருக்கும் தானிய அறைக்கு அருகில்தான் அவன் பொதுவாகப் படுத்திருப்பான். காலையில் பழைய கஞ்சியைக் குடித்துவிட்டு அங்கிருந்து கிளம்புவான். அவன் போகும் விஷயத்தை சமையல்காரி குஞ்ஞி பெரியம்மா மட்டுமே தெரிந்திருப்பாள்.

வயலில் எஞ்சின் வைத்து நீரை வெளியேற்றுகிறார்கள். ஏராளமாக மீன் கிடைக்கும். ஒரு நூல் முழுவதும் மீன்களைக் கோர்த்து ஒவ்வொரு நாளும் கொண்டு வந்து தர வேண்டும் என்று என் தாய் கூறியிருந்தாள். மீதி இருக்கும் மீன்களை விற்று, அதன்மூலம் கிடைக்கும் பணத்தை அவனே எடுத்துக் கொள்ளலாம்.

நான் அருகில் சென்றபோது, அவனுடைய முகத்தில் அபூர்வமாக மட்டுமே தெரியக்கூடிய அந்த பொல்லாத சிரிப்பைப் பார்த்து என்னுடைய இதயம் துடித்தது.

“கிடைச்சிடுச்சா?’’ - நான் திசைகளிலும் பார்த்துக் கொண்டே நான் கேட்டேன்.

“ம்... மடியில இருக்கு. எடுத்துக்கோங்க...’’ - கொச்சும்மிணி சொன்னான்.

சுதந்திரமாக இல்லாத இரண்டு கைகளையும் விரித்து வைத்துக் கொண்டு ஒரு தேவதூதனைப்போல அவன் நிற்பதைப் பார்த்தபோது, அந்தக் கால்களை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு நன்றியை வெளிப்படுத்த வேண்டும்போல எனக்குத் தோன்றியது.

சேற்றில் நனைந்த வேட்டியின் மடிப்பிற்குள்ளிருந்து எண்ணெய் தாளில் சுற்றிய ஒரு சிறிய பொட்டலத்தை பக்திப் பரவசத்துடன் நான் எடுத்தேன். சாம்பல் உள்ள பொட்டலம். அதைத் தொட்டபோது, என்னுடைய கைகள் நடுங்கின. கண்கள் தாமாகவே மூடின.

பொட்டலத்தைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்: ‘பாண்டவர்காவில் அம்மா, இதில் அவள் விழணும்.’’

என்னுடைய இறுதி முயற்சி அது. அதுவும் நடக்காமல் போய்விட்டால், பிறகு... அந்த வழியை நினைத்துப் பார்த்து பிரயோஜனமே இல்லை.

கொச்சும்மிணி உத்தரவுகள் பிறப்பிக்க ஆரம்பித்தான்: “குளித்து, சிறிதுகூட வாய் திறக்காமல்...’’

மறுநாள் பிற்பகல் வேளையில் ரது அக்கா எப்போதும் வரக்கூடிய நேரத்திற்குச் சற்று முன்னால், நான் வழக்கத்திற்கு மாறாகக் குளித்தேன்.

சித்தியின் மகன் கோவிந்தன் ஒரு பெரிய சம்பவத்தைப்போல ஆச்சரியத்துடன் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

என்னைவிட சற்று வயதில் மூத்தவனாக இருந்தாலும் அவனை நான் அண்ணனாக ஏற்றுக் கொண்டதில்லை. ஒரு சாதாரண ‘முட்டாள்’ அவன். நான் என்ன செய்கிறேனோ, அதே மாதிரி அவற்றை அவனும் செய்வான்.

“பப்பு...’’ - கோவிந்தன் அருகில் வந்தான்: “எங்கே போறதுக்கு குளிக்கிறே?’’

“உன் அப்பாவோட திவசத்துக்கு...’’ - நான் சொன்னேன்.

அதைக் கேட்டு அவன் ஒரு மாதிரி ஆகிவிட்டான். அதற்குக் காரணம் இருக்கிறது. அவனுடைய தந்தை நீண்ட காலத்திற்கு முன்பே மரணத்தைத் தழுவிவிட்டார்.

“இல்ல... எப்போதும் இல்லாதது மாதிரி குளிச்சதுனால கேட்டேன்’’ - அவன் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தான்.

இனி சாம்பலைப் பூசவேண்டும். கொஞ்சமும் பேசக்கூடாது. ரது அக்காவின் தரிசனம் கிடைத்துவிட்டால், அதற்குப் பிறகு பேசலாம். அதுவரையில் பேசக்கூடாது.

அவ்வளவு நேரத்திற்குப் பேசாமல் இருக்க முடியுமா என்ற விஷயத்தில் எனக்கு பயம் இருந்தது. கோவிந்தனை எடுத்துக் கொண்டால் சிறிய சிறிய சந்தேகங்களுடன் என்னை விட்டுப் போகாமல் அவன் பின்னால் நின்றிருந்தான்.

கண்ணாடிக்கு முன்னால் சென்று சாம்பலை விரல்களுக்கு நடுவில் எடுத்தபோது அந்த மடையன் இளித்துக் கொண்டு பின்னால் நின்றிருந்தான்.

“இல்ல... இல்ல... இன்னைக்கு என்ன விசேஷம்? சாம்பல் பூசுற விஷயமெல்லாம் நடக்குதே?’’

நான் மிகவும் கவனமாக சாம்பலைத் திரும்பவும் தாளிலேயே போட்டேன்.

“ஒண்ணுமில்ல... வெறுமனே தொட்டேன்....’’

“வெறுமனே ஒண்ணுமில்லே...’’

“வெறுமனேன்னு சொன்னேன்ல...’’ - நான் குரலை கடுமையாக ஆக்கினேன்.

அப்படிச் சொன்னது பொய் என்று அவனுக்கு தெளிவாகத் தெரிந்திருக்க வேண்டும். அவன் சொன்னான்:

“நான் பெரியம்மாவிடம் கேட்டுப் பார்க்குறேன். வெறுமனேயா இது நடக்குதுன்னு...’’

அவனுடைய குரலில் ஒரு மிரட்டலின் சாயல் மறைந்திருந்தது. அதைப் புரிந்து கொண்டவுடன், நான் வெளிறிப் போய்விட்டேன். குளித்ததற்கும் சாம்பலைப் பூசுவதற்கும் காரணங்கள் என்ன என்பதை என் தாயிடமே கேட்டுவிட வேண்டும் என்பது அவனுடைய நோக்கமாக இருந்தது.

நான் கோவிந்தனைத் தடுத்தேன்.

“அம்மாவிடம் கேட்க வேண்டாம்.’’

“பிறகு... நான் எப்படித் தெரிஞ்சிக்க முடியும்? நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?’’

தோற்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. பரிதாபமான குரலில் நான் கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன்.

“யாரிடமும் சொல்லக் கூடாது. அப்படின்னா நான் விஷயத்தைச் சொல்றேன்.’’

“ம்... அப்படி வா வழிக்கு.’’ - அவன் வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷத்துடன் புன்னகைத்தான்.

நான் எல்லா விஷயங்களையும் சுருக்கமாகச் சொன்னேன். ரது அக்காவைக் கட்டிப் பிடித்த விஷயத்தை மட்டும் கூறவில்லை. அவளை வசீகரிப்பதற்குத்தான் இந்த அனைத்துச் செயல்களும் என்பதை நான் ஒப்புக் கொண்டேன். அவன் அதைக் கேட்டு சமாதானமடைந்து விட்டான் என்பதைப் போல தோன்றியது. அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நான் கேட்டேன்: “நீ யாரிடமும் சொல்ல மாட்டேல்ல?’’

“நிச்சயமா சொல்ல மாட்டேன்.’’ - அவன் தன் மார்பில் அடித்து சத்தியம் செய்தான்.

“கோவிந்தா!’’ நான் மீண்டும் கேட்டேன்: “யாரிடமும் சொல்லுவியா?’’

“என் தாய்மேல ஆணையா... மசூரிப் படிக்கேல் பார்வதிமேல சத்தியமா...’’


அவன் உரத்த குரலில் கூறியவாறு மீண்டும் தன் மார்பில் அடிப்பதற்காக கையை உயர்த்தினான்.

“போதும்... போதும்...’’ - நான் அந்தக் கையைத் தாவிப் பிடித்தேன். “சரி... நான் சாம்பலைப் பூசப் போறேன்.’’

அவன் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

“சாம்பலைப் பூசிவிட்டால்... நான் ஒரு வார்த்தைகூட பேசமாட்டேன்.’’

எல்லா கடவுள்களையும் மனதில் நினைத்துக் கொண்டே நான் சாம்பலைப் பூசினேன். ரது அக்கா பார்த்துவிடாமல் போய்விடக்கூடாது என்ற நினைப்புடன், புருவங்களில்கூட நிறைய சாம்பலைப் பூசினேன். தொடர்ந்து கிழக்குப் பக்கம் இருந்த அரை மதிலில், கிழக்குப் பக்கமாகப் பார்த்து உட்கார்ந்தேன்.

நேரம் நகராமல் இருப்பதைப்போல இருந்தது. முற்றம் அமைதியாக இருந்தது. காயப் போட்டிருந்த நெல்லில் காகங்கள் கொத்தாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தொங்க விடப்பட்டிருந்த கருப்பு நிறத் துவாலைகள் கருப்பு வண்ணக் கொடிகளைப்போல ஆடி விளையாடிக் கொண்டிருந்தன. ஏதோ மரங்களின் இலைகளுக்கு நடுவில் உட்கார்ந்து கொண்டு புரிந்து கொள்ள முடியாத அசாதாரணமான சத்தத்தில் பல கிளிகளும் ஓசைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன.

ஒரு கூட்டம் காய்ந்த இலைக் கிளிகள் வரிசையாக அணிவகுத்து குளிப்பதற்கும், தாகத்தைத் தீர்த்துக் கொள்வதற்கும், குளத்தைத் தேடிப் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

அவற்றுக்குப் பின்னால் அரச மிடுக்குடன் ரது அக்கா நடந்து வந்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவள் வருவதற்கு சற்று முன்னால் இன்னொரு ஆளும் வந்தான்.

கோவிந்தன்.

என்னைப் போலவே குளித்து, நான் அணிந்திருப்பதைப் போலவே ஈரமான வேட்டியை அணிந்து, என்னைப் போலவே நெற்றியிலும் புருவங்களிலும் புனித சாம்பலைப் பூசி, என்னுடைய இடது பக்கத்தில் அவன் வந்து உட்கார்ந்தான். என்னிடம் இல்லாத சில அலங்காரங்கள் அவனிடம் இருந்தன. சாம்பலை நனைத்து, மார்பிலும் கைகளிலும் அவன் பூசியிருந்தான். நான் பற்களைக் கடித்துக் கொண்டு, அவனை கவனிக்காதது மாதிரி உட்கார்ந்திருந்தேன்- எதுவும் பேசிவிடச் கூடாதே!

பேசக்கூடிய சூழ்நிலை வரும்போது நான் அடித்து உதைப்பேன் என்ற விஷயம் அவனுக்கு உறுதியாகத் தெரியும். எனினும், ஒரு முட்டாள்தனமான சிரிப்புடன் அவன் அதே நிலையில் உட்கார்ந்திருந்தான்.

விஷயம் குழப்பத்தில் வந்து சேர்ந்துவிட்டது. ரது அக்கா இப்போது அருகில் வரப்போகிறாள். இரண்டு பேர் மீதும் அவள் ஒரே மாதிரி காதல் கொள்ளப் போகிறாள். அதற்கு அர்த்தம்- மேலும் ஒரு வில்லன் காட்சியில் வருகிறான் என்பதுதானே? இனி.... ஒருவேளை எனக்குப் பதிலாக அவள் கோவிந்தனை மட்டுமே பார்க்கிறாள் என்ற சூழ்நிலை உண்டாகிவிட்டால்...?

என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய முடியாமல் பதைபதைத்துக் கொண்டிருக்கும் போது, அவள் அருகில் வந்துவிட்டாள். இறுகப் பிடித்திருக்கும் நீலநிற ரவிக்கை... கழுத்திற்குக் கீழே அழகான ஒரு 'டாலர்' தொங்கிக் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிந்தது.

அவள் தன்னுடைய பெரிய கண்களை விரித்துக் கொண்டு என்னைப் பார்த்தாள்.

தொடர்ந்து... அதே மாதிரி கோவிந்தனையும்.

நாங்கள் இரண்டு பேரும் அசாதாரணமான முறையில் அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்து அவள் தமாஷாக எதையாவது உணர்ந்திருக்க வேண்டும். ஈரமான ஒற்றை வேட்டி மட்டும் அணிந்து, உடல் முழுவதும் சாம்பலைப் பூசி உட்கார்ந்து கொண்டிருந்த எங்களைப் பார்த்தபோது வாழ வேண்டும் என்பதற்காகத் துறவுக் கோலம் பூண்ட இரு சிறுவர்கள் என்ற நினைப்பு அவளுக்கு உண்டாகியிருக்க வேண்டும்.

புன்சிரிப்பை அடக்கிக் கொண்டு, அவள் கடந்து சென்றாள். கண்களிலிருந்து மறைவது வரையில், நாங்கள் இருவரும் ஆடி ஆடி மறைந்து கொண்டிருக்கும் அவளுடைய பின் பாகத்தையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.

நிழலும் மறைந்துவிட்ட பிறகு, நான் பாய்ந்து பிடித்தேன்.

இனி எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பேசலாமே! நான் கேட்டேன்: "நீ எதுக்கு சாம்பல் பூசினே, மரமண்டையா!"

"வசீகரிக்க...."-அவன் வாயைப் பிளந்து சிரிக்க ஆரம்பித்தான்.

"என்ன?"- நான் உரத்த குரலில் கத்தினேன்: "யாரை வசீகரிக்க?"

புரிந்து கொள்ள முடியாத இனிமையான ஒரு அனுபவத்தில் சிக்கியிருப்பவனைப் போல கோவிந்தன் மெதுவான குரலில் சொன்னான்: "என் ரதியை..."

கூறி முடிப்பதற்கு முன்பே அடி விழுந்துவிட்டிருந்தது.

4

நிலத்தின் தெற்கு எல்லையில் சாய்ந்து கிடந்த வேலியின் வழியாகப் பாம்பு பிடிப்பவர்கள் உள்ளே வந்தார்கள்.

இரண்டு பேர் இரண்டு பேரின் தலையிலும் கட்டு இருந்தது. கறுத்து மெலிந்த உடல், கழுத்தில் மாலைகள்... கையில் இருந்த நீளமான கொம்பில் இறந்த பாம்புகளின் பின்னிப் பிணைந்த உடல்கள்.

என் தந்தை பார்க்கவில்லை. பார்த்தால் வாய்க்கு வந்தபடி திட்டுவார். எல்லா பாம்புகளையும் பிடிக்கும் போது புற்றில் இருக்கும் உண்மையுள்ள பாம்புகளையும் பிடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்று என் தந்தை கூறுவார். அப்படி நடந்தால், அந்தச் சாபம் குடும்பத்திற்குத்தான் வந்து சேரும்.

பாம்பு பிடிப்பவர்கள் மீது எனக்கு எப்போதும் மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுடைய சுறுசுறுப்பும் தைரியமும் என்னிடமும் எப்போதும் ஆச்சரியத்தை உண்டாக்கி இருக்கின்றன. திருப்பிக் கொத்தினால் மரணம் உண்டாகும் என்ற விஷயம் உறுதியாகத் தெரிந்த பிறகும் சிறிதும் பயப்படாமல் கைகளால் அவர்கள் பாம்புகளின் வாலைச் சுற்றிப் பிடிப்பார்கள். பின்னோக்கி இழுத்து, அதே வேகத்தில் அதைத் தரையில் இருந்து உயர்த்தி, அந்தரத்தில் தலையைச் சுற்றி ஒன்றிரண்டு தடவை  சுழற்றி அருகில் தென்படும் தென்னை மரத்திலோ தரையிலோ அடிப்பார்கள். தலை நசுங்கியிருக்கும் பாம்பை அதே வேகத்தில் கையின் மணிக்கட்டில் ஒரு கைக்குட்டையைப் போல சுற்றிக் கட்டிக் கொள்வார்கள்.

நான் மெதுவாக அவர்களுக்குப் பின்னால் சென்றேன். என் தந்தை பார்த்தால் அடி கிடைக்கும் என்று தெரியும். எனினும் அவர்களுக்குப் பின்னால் நடந்து செல்லும் விருப்பத்தை அழுத்தி வைக்க என்னால் எந்தச் சமயத்திலும் இயலாது.

பாம்பு பிடிப்பவர்கள் என்னை பயத்துடனும் சந்தேகத்துடனும் பார்த்தார்கள். பெரும்பாலான வீடுகளில் அதற்கு எதிர்ப்பு இருக்கும். யாருடைய கண்களிலும் படாமல் பார்த்தும் பதுங்கியும்தான் அவர்கள் தங்களின்வேலையைச் செய்வார்கள். என்னையும் அவர்கள் சந்தேகப்பார்வையுடன் பார்த்தார்கள் என்றால் அது அவர்களுடைய குற்றம் அல்ல.

நான் அவர்களில் வயது அதிகமான மனிதனைப் பார்த்து நேசத்துடன் சிரித்தேன். எதிரி அல்ல; நண்பன்தான். உதவக் கூடியவன்தான் என்று அவர்களுக்குப் புரிய வைப்பதற்குத்தான். அந்தச் சிரிப்பு. அவர்க--ளுக்கு அது புரிந்து விட்டது என்று நினைக்கிறேன். காரணம்- சிறு சிறு நேராமங்கள் வளர்ந்திருக்கும் கீழ் தாடையில் சுருக்கங்கள் தோன்றின. தொடர்ந்து சிவப்பு நிறத்தில் பிரகாசமாக இருந்த பற்கள் வெளியே தெரிந்தன.


மொழி எங்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. நான் பாம்புப் புற்றை நோக்கி விரலை நீட்டிக் கொண்டு அவனிடம் சொன்னேன்: "காட்டுக்குப் பக்கத்துல இருக்கும்."

அவனுக்கு அது புரிந்து விட்டது. உயரமாக இருந்த தலைக்கட்டு அதற்கேற்றபடி ஆடியது. தொடர்ந்து என்னை கவனிக்காமல் அவன் பாம்புப் புற்றை நோக்கி நடந்தான்.

மதிய நேரம்... வீட்டில் எல்லோரும் தூங்கக்கூடிய நேரம். பொதுவாக நானும் அந்த நேரததில் தூங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று அவர்களைப் பார்த்தவுடன் என்னுடைய தூக்கமெல்லாம் எங்கேயோ போய்விட்டது.

நிலத்தில் தென்னை மரங்களும் மாமரங்களும் உறங்கிக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. கிளி மூக்கு மாமரத்தின் உச்சியில் இலைகளுக்கு மத்தியில் உட்கார்ந்து கொண்டு ஒரு அணில் தன்னுடைய ஜோடியை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டிருந்தது. நான் அந்தப் பக்கம் பார்த்தேன். கண்டபடி திட்டுவது ஆணாக இருக்க வேண்டும். பெண் அணில் அவனுக்கு எந்தச் சமயத்திலும் பிடி கொடுப்பதில்லை என்பது மாதிரி சற்றுத் தள்ளி உட்கார்ந்து கொண்டு ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டு ஆண் அணில் அதை நோக்கி குதித்துச் சென்றது. அதற்குள் அவள் ஓடி விட்டிருந்தாள். கிளைகள் வழியாகவும் மரங்கள் வழியாகவும் இலைகள் வழியாகவும் முன்னிலும் பின்னிலுமாக அவை ஓடிக் கொண்டிருந்தன. இடையில் அவன் சிறிது நேரம் நிற்பான். அந்த நேரத்தில் சற்று முன்னால் அவளும் நிற்பாள். பிறகு அவற்றின் மொழியில் திட்டிக் கொள்வார்கள். சிறிது நேரம் வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு அவள் மீண்டும் ஓட ஆரம்பிப்பாள்.

நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவள் மாமரத்தின் ஒரு தாழ்வான கிளையில் இருந்து அருகில் இருந்த தென்னை மரத்தின் ஓலைக்குத் தாவினாள்.

தாவும் போது சற்று தவறி விட்டது.

அவள் இங்கு கீழே வெறும் தரையில் வந்து விழுந்தாள். சிறிது நேரம் எந்தவித அசையும் இல்லாமல் கிடந்தாள்.

அப்போது அவன் தென்னை ஓலை மீது வந்து விழுந்திருந்தான். அதே வேகத்தில் மரத்தின் வழியாக கீழே இறங்கி அவளை அவன் அடைந்ததும், அவள் ஓட ஆரம்பித்தாள்.

இனிமேல் அவளைப் பிடிக்க முடியாது என்று நான் மனதில் நினைத்துக் கொண்டேன். அணில்களின் சிறப்பு குணங்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். என் தாய் எனக்குக் கூறியிருக்கிறாள். தரையில் விழுந்தால், புதிதாக ஏழு உயிர்கள் கிடைக்கும். முன்பு மூன்று கோடுகளைப் போட்டு ஸ்ரீராமன் கொடுத்த வரம்.

வரத்தின் பலன் என்ன காரணத்தாலோ இந்த முறை கிடைக்க வில்லை. காரணம்- அவள் அவனுடைய பிடியில் சிக்கிக் கொண்டிருந்தாள். அவனுக்குக் கீழே அவள் அகப்பட்டுக் கொண்டிருந்தாள். அசாதாரணமான வேகத்தில் வாலை அசைத்துக் கொண்டு அவன் அவளுடைய வாயின் ஓரத்தைப் பிடித்து இழுத்தான்.

எனக்குள் அமைதியற்ற நிலை அதிகமாகிக் கொண்டிருந்தது. முன்பு சிறுவனாக இருந்தபோது, இந்த மாதிரியான காட்சிகளை எவ்வளவு வேண்டுமானாலும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் சமீப காலமாக இப்படிப்பட்ட சம்பவங்களைப் பார்ப்பதற்கு என்னால் முடியவில்லை. மூச்சே விட முடியாமல் தவித்தேன்.

எனக்கு மிகவும் அருகில் காற்று சீறுவதைப் போல ஓசை கேட்டுக் நான் அதிர்ச்சியடைந்து திரும்பிப் பா£த்தபோது, காற்றில் இப்படியும் அப்படியுமாக நெளிந்து கொண்டிருந்த பாம்பின் உடலைப் பார்த்தேன். பாம்பு பிடிப்பவர்களில் வயது குறைவாக இருந்த மனிதன் அந்தப் பாம்பைப் பிடித்திருந்தான். முகத்தில் எந்தவித உணர்ச்சியையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் அவன் அருகில் இருந்த பாக்கு மரத்தின் மீது அந்தப் பாம்பை அடித்தான். ஒரு சாட்டை போய் விழுவதைப் போல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து தலை சிதைந்த பாம்பின் உடல் வட்டமாகச் சுற்றிக் கீழே விழுந்தது.

மதிய நேரத்தில் வெளியே செல்லப் புறப்பட்ட பாம்பின் முடிவு.

சற்று தூரத்தில் துளசிச் செடிக்கு அருகிலிருந்து ஒரு குரல் கேட்டது: "என்ன நடந்தது?"

திரும்பிப் பார்த்த போது, கோவிந்தன் ஒரு மாங்கொட்டையைக் கடித்துத் தின்றவாறு கேட்டுக் கொண்டிருந்தான்.

எனக்குப் பொறுக்க முடியாத அளவிற்குக் கோபம் வந்தது. அவன் தலையிடும் அளவிற்கு இதில் என்ன இருக்கிறது? பேசாமல் இருக்குமாறு நான் கைகளால் சைகை செய்தேன்.

அதற்குள் பாம்பு பிடிப்பவர்கள் அங்கிருந்து போய்விட்டிருந்தார்கள். வந்ததைப் போலவே வேலியைத் திறந்து, அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

ஆரவாரம் கேட்டு நடந்திருக்க வேண்டும்- அணில்கள் ஒன்றை விட்டு ஒன்று பிரிந்து ஓடின. மீண்டும் மாமரத்தின் உச்சியில் அவற்றின் சத்தங்கள் கேட்டன.

எனக்குத் தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு தோன்றியது. வாழ்க்கையில் எல்லா வண்ணங்களும் ஒன்று சேர்ந்ததைப் போல, சூழ்நிலை மிகவும் அமைதியாக இருந்தது.

நான் அவனை அருகில் வரும்படி அழைத்தேன். அரைக்கால் சட்டையின் கயிறை மீண்டும் இறுகக் கட்டிக் கொண்டு அவன் வந்தான். அருகில் வந்தவுடன் நான் அவனுடைய காதை இறுகப் பிடித்தேன்.

"நீ ஏன்டா இந்த விஷயத்துல தேவையில்லாம கத்துறே?"

அவன் என்னுடைய கையை விடுதலை பண்ண முயற்சித்துக் கொண்டு சொன்னான்: "அய்யோ... கெட்ட நேரம்டா. இங்க இருக்குற பாம்பு எதையாவது அவங்க பிடிச்சிட்டுப் போனா, அவங்களுக்குத் தான் கேடு."

"கேடா? அப்படியா,"- நான் உள்ளுக்குள் பயந்து கொண்டே சொன்னேன். அவனுடைய செவியைப் பிடித்துக் கொண்டிருப்பதை விட்டேன். பாம்புகளின் விரோத குணத்தைப் பற்றி ஏராளமான கதைகளை நானும் கேட்டிருக்கிறேன். ஒரு பாம்பைக் கொன்றால் அந்தப் பாம்பின் ஜோடி அந்தச் செயலை மறக்காமல் தனக்குள் வைத்துக் கொண்டே இருக்கும். பிறகு என்றாவது ஒருநாள் ஏதாவதொரு இடத்தில் அதன் கோபத்திற்கு பரிகாரம் காணவும் செய்யும். பாம்பு பிடிப்பவர்களுக்கு எந்தக் கெடுதலும் உண்டாகாது. காரணம்- அவர்கள் இந்த வீட்டில் இருப்பவர்கள் இல்லையே! அப்படியென்றால் அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய நான் இந்த வீட்டில் ஒரு உறுப்பினராக இருக்கும் போது, பாவம் முழுவதும் என் தலையில் வந்து விழுகிறது.

என் உள்ளம் நடுங்கியது. என்னையே அறியாமல் மனதில் வேண்டிக் கொண்டேன்.

"மண்ணார் சாலை அம்மா, நான் எதுவும் செய்யலையே! எனக்கு எந்தத் தண்டனையும் தந்திடாதே!"

இரவுகள் மிகவும் குளிர் நிறைந்ததாக இருந்தன.

மழைக்காலம் ஒப்பனை அறையில் இருக்கும் நடன மங்கையைப் போல பொறுமை இல்லாமல் மேகங்களுக்குப் பின்னால் மறைந்து கொண்டிருந்தன.


வானொலியில் நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்த பிறகு கேட்கும் ஒலியைப் போல, பாம்புப் புற்றுகள் இருக்கும் பகுதியில் இருந்து தேனீக்களின் ஓசை எப்போதும் கேட்டுக் கொண்டே இருந்தது. செடிகள் பூத்திருக்க வேண்டும். மனதை மயக்கக்கூடிய ஒரு நறுமணம் எப்போதும் காற்றில் இருந்து கொண்டே இருந்தது-

என்னுடைய பகல் தூக்கம் சாயங்காலம் வரும் வரையில் நீடிக்க ஆரம்பித்தது. ஏரியிலிருந்து புறப்பட்டு வரும் காற்று நான் கண் விழிக்கும் போது வாசலில் தவழ்ந்து கொண்டிருக்கும். ஒரு கனவில் நடப்பவனைப் போல அங்கும் இங்குமாக சிறிது நேரம் சுற்றித் திரிந்துவிட்டு, சோற்றை வாரி சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து படுத்துத் தூங்குவேன் ஏமாற்றம் நிறைந்த நாட்கள்...

சாம்பலும் அந்த ஒரே நாளில் தீர்ந்து போய்விட்டது! இரண்டு பேர் முழுமையாக அள்ளிப் பூசிய நாளாயிற்றே! இன்னொரு வகையில் சொல்லப் போனால் சாம்பல் விஷயத்தில் எனக்கு இப்போது பெரிய அளவில் நம்பிக்கை இல்லை என்பது தான் உண்மை.

கொச்சும்மிணி மீது எனக்குத் தோன்ற ஆரம்பித்த ஈடுபாடு கொஞ்சம் கொஞ்சமாக இல்லாமல் போனது. வெறும் சாம்பலைக் கொண்டு வந்து தந்துவிட்டு, அவன் என் கையிலிருந்து ஐந்து ரூபாயை எப்படியோ தட்டிப் பறித்துவிட்டான் என்று எப்படியோ என் மனதில் தோன்ற ஆரம்பித்த-து. அவனைப் பார்ப்பதற்கே எனக்கு வெட்கமாக இருந்தது.

கல்லூரிக்குப் போவதற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தன. இருபத்தொன்றாவது நாள் நேர்முகத்தேர்வு.

நேர்முகத் தேர்விற்குப் பிறகு, ஒன்றோ இரண்டோ நாட்கள் கடந்த பிறகு மீண்டும் கல்லூரிக்குச் செல்ல வேண்டும். பிறகு ஊருக்கு ஓணப் பண்டிகை சமயத்தில்தான் வர முடியும். அந்தச் சமயம் ரது அக்காவின் கணவரும் விடுமுறையில் வர வாய்ப்பிருக்கிறது. அந்த பட்டாளத்துக்காரர் விடுமுறை முடிந்து செல்லும்போது ரது அக்காவை, அவர் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துக் கொண்டுபோய் விடுவார். அங்கு பார்த்துக் கொள்ளவும், கவனிக்கவும் வேறு யாரும் இல்லை. அவருடைய தாய் தனியாக அங்கு இருக்கிறாள்.

வடக்குப் பக்க அறையில் கட்டிலில் பாய்கள் மடித்து வைத்திருப்பதற்கு மத்தியில்தான் நான் பகல் வேளையில் தூங்குவேன். வீட்டில் மற்ற எல்லோரும் தூங்கக்கூடிய பாய்கள் எல்லாவற்றையும் அந்த ஒரே கட்டிலில் கொண்டு வந்து வைத்திருப்பார்கள். அவற்றுக்கு நடுவில் இன்னொரு பாயைப்போல நானும் படுத்திருப்பேன்.

வாழ்க்கையில் முதல் தடவையாகத் தோன்றிய ஒரு காதல் உணர்வைப் பற்றியும், அதன் மிகவும் பரிதாபமான வீழ்ச்சியைப் பற்றியும் நான் கவலையுடன் நினைத்துப் பார்த்தேன். இந்த மாதிரியான சிந்தனைகள் உண்டாகும்போது சுய வெறுப்புதான் முதலில் தலையை உயர்த்தும்.

நடக்கக் கூடாதவையெல்லாம் நடந்து முடிந்துவிட்டன. இனிமேல் அதைப்பற்றி நினைத்துக் கவலைப்பட்டு பிரயோஜனமே இல்லை. எல்லாவற்றையும் கழுவக்கூடிய தொட்டி என்று சொல்லப்படும் காலத்தை மட்டுமே நான் நம்புகிறேன். இந்தக் கறையை அழிப்பதற்கு அதனால் மட்டுமே முடியும்.

தூக்கம் வருவதைப்போல இருந்தது. தூங்கி விட்டிருப்பேன். ஆனால் அதற்கு முன்னால் நான் எதிர்பார்க்காதது நடந்தது.

ரது அக்கா அறைக்குள் வந்தாள்.

என் தாய் வீட்டில் இல்லை. வடக்குப் பக்க தோட்டத்தில் இருந்த புடலங்காய்களுக்கு கல் கட்டுவதற்காக அவள் போயிருந்தாள். வருவதற்கு இன்னும் நேரமாகும்.

கட்டிலில் நான் படுத்திருக்கிறேன் என்ற விஷயம் தெரியாமலே அவள் அறைக்குள் நின்று கொண்டிருக்கிறாள் என்பதை சிறிது நேரம் கழித்து நான் தெரிந்து கொண்டேன். மாட்டு வண்டிகளில் இருப்பதைப்போல மெத்தைகளும் பாய்களும் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கு மத்தியில் என்னுடைய உடல் மறைந்து கிடந்தது.

ரது அக்கா கண்ணாடிக்கு முன்னால் போய் சிறிது நேரம் நின்றாள். பிறகு ஒரு பக்கமாக சாய்ந்தவாறு சிறிது நேரம் அப்படியே நின்று கொண்டு கண்ணாடியைப் பார்த்துச் சிரித்தாள். வேறு பக்கமாக சாய்ந்து நின்று கொண்டு, ரவிக்கையின் அடிப்பகுதியைப் பிடித்துக் கீழ் நோக்கி இழுத்தாள்.

என்ன ஒரு கூர்மை!

என்னுடைய தொண்டையின் வறட்சித் தன்மை மேலும் அதிகமானது.

முண்டின் முனைப்பகுதியை உயர்த்தி கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டே அவள் கட்டிலை நோக்கி நடந்து வந்தாள். நெருங்கி நெருங்கி வர வர என்னுடைய இதயத்தின் துடிப்பு குறைந்து வருவதைப்போல இருந்தது.

நான் அங்கிருப்பது தெரியாமல்தான் அவள் இந்த விஷயங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்திருந்தாலும், எனக்கு சாம்பலின் சக்திமீது சிறிது நம்பிக்கை உண்டாக ஆரம்பித்தது. அவை அனைத்தும் அதன் வேலைகளாகத் தான் இருக்க வேண்டும்.

படித்துக் கொண்டிருந்த வார இதழை எடுத்து அதன் பக்கங்களை அலட்சியமாகப் புரட்டிப் பார்த்துக் கொண்டே என்னுடைய முகத்திற்குச் சற்று முன்னால் அவள் வந்து உட்கார்ந்தாள். என்னுடைய மூச்சுகள் அவளுடைய பின்பாகத்தில் பட்டுக் கொண்டிருந்தது. அந்த அளவிற்கு மிகவும் அருகில் அவள் இருந்தாள்.

சிறிது நேரம் அந்த பின் பாகத்தையே பார்த்துக் கொண்டு நான் படுத்திருந்தேன்.

வாழ்க்கையில் முன்பு எந்தச் சமயத்திலும் ஒரு பெண்ணின் உடலை இந்த அளவிற்கு நெருக்கத்தில் நான் பார்த்ததில்லை. ரவிக்கைக்குக் கீழே இருந்த திறந்த இடத்தில், முண்டிற்கு மேலே சிறு சிறு ரோமங்கள் தலையை உயர்த்திக் கொண்டு நின்றிருந்தன.

கட்டிப் பிடித்தால் என்ன என்று நினைக்காமல் இல்லை. ஆனால் மீண்டும் அந்தப் பழைய சம்பவத்தைத் திரும்பச் செய்வதில் எனக்கு சிறிதளவில்கூட விருப்பம் இல்லை.

இப்படியே எவ்வளவு நேரம் படுத்திருந்தேன் என்று எனக்கே தெரியாது. நீண்டநேரம் ஆகியிருக்க வேண்டும். ரது அக்கா ‘நீளமான கதை’யை வாசித்து முடித்தாள். பிறகு தனக்குத்தானே கூறிக் கொண்டாள்:

“அடுத்த வாரம் பாப்பச்சன் அன்னக்குட்டியை திருமணம் செய்து கொள்வான்.’’

அவள் அடுத்த கதைக்குச் சென்றாள்.

இதயத்தின் துடிப்பு அதிகமாகிக் கொண்டிருந்தது.

அதன் சத்தத்தை அவள் எப்படிக் கேட்காமல் இருக்கிறாள் என்று நான் ஆச்சரியத்துடன் நினைத்தேன். ரத்தக் குழாய்கள் எல்லாம் சேர்ந்து இப்போது ஒன்றாக வெடிக்கப் போகின்றன.

இனிமேலும் படுத்திருக்க முடியாது.

ஏதாவது நடந்தே ஆக வேண்டும்.

ஒன்று ரது அக்கா, இல்லாவிட்டால் நான்... இருவரில் ஒருவர் இங்கிருந்து எழுந்து போயாக வேண்டும்.

இரண்டையும் தீர்மானித்துக் கொண்டு, அதேநிலையில் படுத்தவாறு மெதுவான குரலில் நான் முனகினேன்.

“கொஞ்சம் எழுந்திருங்க... நான் போகணும்.’’

குரலில் இந்த அளவிற்கு மென்மைத்தன்மை இருக்க வேண்டும் என்று நான்கூட நினைக்கவில்லை. எது எப்படி இருந்தாலும் என்னுடைய வார்த்தைகள் ஒரு அழுகையைப் போல எனக்கே தோன்றியது.


ரது அக்கா அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தாள். என்னை மிகவும் நெருக்கத்தில் பார்த்து அவள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். எனினும் அவள் எழவில்லை. பதைபதைப்பு நீங்கிய பிறகு அந்த இடத்திலேயே திரும்பி உட்கார்ந்து கொண்டு அவள்கேட்டாள்:

“உன் அம்மா எங்கே?’’

முன்பு உண்டான மோதலுக்குப் பிறகு அவள் முதல் தடவையாகப் பேசுகிறாள்.

உள்ளங்கைகளில் முகத்தை உயர்த்தி வைத்துக் கொண்டு முடிந்தவரையில் மிடுக்குத்தனத்தை வரவழைத்துக் கொண்டு நான் சொன்னேன். “அம்மா வடக்குப் பக்கத் தோட்டத்துக்கு புடலங்காய்க்கு கல் கட்டப் போயிருக்காங்க.’’

என்னுடைய மிடுக்குத்தனத்தைப் பார்த்து அவள் சிரித்தாள்.

“பையனுக்கு என்ன இந்த அளவுக்கு மிடுக்கு?’’

“ஓ... நாங்க அப்பாவிகள்’’ - உண்மை இல்லாத ஒரு வாசகத்தைக் கவலையில் கலந்து நான் சொன்னேன்: “பெரிய மதிப்பு உள்ளவங்கக்கிட்ட இருக்க வேண்டிய விஷயம் அது.’’

சிறிது நேரத்திற்கு இரண்டு பேரும் எதுவும் பேசவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அந்த அளவிற்கு நெருக்கமாக உட்கார்ந்து கொண்டிருக்கும்போது, இருவரும் இன்னொருவரின் மனதைப் படிப்பதைப்போல இருந்தது.

அவளுக்கு என்மீது வெறுப்பு இல்லை என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் அன்பும் இருக்கிறது அல்லவா?

“அன்றைக்கு எதற்காகத் திருநீறு பூசிக்கிட்டு தவம் இருந்தே?’’ - இறுதியில் அவளே கேட்டாள்.

வேண்டுமென்றால் வெறுமனே என்று கூறலாம். ஆனால் அதில் அர்த்தமே இல்லை. உண்மையைக் கூறுவதால் கெடுதல் எதுவும் இல்லை.

சிலவேளைகளில் அது நல்லதில் போய்க்கூட முடியலாம்.

அவளை வளைத்துக் கைக்குள் போட நான் முயற்சிக்கிறேன். உடலைத் தொடாமல் இருப்பது வரையில், அவள் அதைப்பற்றிக் குறை சொல்வதற்கு வாய்ப்பில்லை!

நான் உண்மையைச் சொன்னேன்: “வசீகரிக்க...’’

என்னுடைய குரலில் தொனித்த கள்ளங்கபடமற்ற தன்மையை அவள் ஒருவேளை எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

“பப்பு, யாரை நீ வசீகரிக்கணும்?’’ - அவள் ஆர்வத்துடன் கேட்டாள்.

‘உங்களைத்தான்...’ என்ற அர்த்தத்தில் நான் கண்களால் காட்டினேன்.

சிறிதும் எதிர்பாராமல் அது நடந்தது. அதுவரையில் ரது அக்காவின் உதடுகளில் தவழ்ந்து கொண்டிருந்த புன்சிரிப்பு வெட்கத்தின் ஒரு பெரிய அலைக்குள் சிக்கி மூழ்கி எழுந்தது.

அதை மறைப்பதற்காக அவள் முணுமுணுத்தாள்: “பாவம்?’’

மீண்டும் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஒரு இளங்காற்று சாளரத்தின் வழியாக நுழைந்து சாளரத்தின் திரைச்சீலைகளைப் படகின் பாய் மரத்தைப்போல விரித்துப் போட்டது. தரையில் கிடந்த ஒரு துண்டுத் தாள் ஓசை உண்டாக்கியவாறு பறந்து கொண்டிருந்தது.

“நான் போகணும்...’’ - நான் முனகினேன்: “கொஞ்சம் எழுந்தால் நான் போயிடுவேன்.’’

ரது அக்கா என்னவோ சிந்தனைகளில் மூழ்கியிருந்தாள்.

என்னுடைய குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவள் கேட்டாள்: “என்ன...?’’

“கொஞ்சம் எழுந்திரிங்க...’’

அவ்வளவுதானா விஷயம் என்பது மாதிரி அவள் புன்னகைத்தாள். முகத்தில் இரக்கத்தின் சாயல்கள்... குறும்புத்தனத்தின் அலைகள்...

“இல்லைன்னா...’’ - அவள் ஒரு சவாலை எதிர்பார்த்தாள்.

“இல்லைன்னா மிதித்து எழுந்திரிக்க வைப்பேன்.’’ - நான் சொன்னேன்.

அவளுடைய பின் பகுதியில் ஒருமுறை மிதித்தால் எப்படி இருக்கும் என்றொரு ஆசையும் அப்படிக் கூறியதற்குப் பின்னால் இருந்தது.

“ஓ... அந்த அளவுக்கு நீ வளர்ந்துட்டியா மகனே?’’ - அவள் பற்கள் முழுவதும் தெரிய சிரித்தாள்: “அந்த அளவுக்கு தைரியம் இருக்கா?’’

என்னுடைய மரியாதை காயப்பட்டு விட்டதைப்போல நான் உணர்ந்தேன். இதோ... நான் வெறும் சிறுவன் என்பது மாதிரி அவள் மீண்டும் நடந்து கொள்கிறாள்.

இனிமேலும் அப்படி விட்டுவிட முடியாது. அந்தச் சிந்தனையை வளரவிடக் கூடாது.

அந்த இடத்திலேயே படுத்துக் கொண்டு, நான் கையின் சதைப் பகுதிகளை பெரிதாக்கிக் காட்டினேன்.

ரது அக்கா விழுந்து விழுந்து சிரித்தாள்: “ஓ... ஒரு பயில்வான்!’’

எனக்கு மேலும் பிடிவாதம் உண்டானது. நான் அதற்கு மேலும் சவால் விட்டேன்.

“சந்தேகம் இருந்தால் இதைப் பிடிச்சுப் பாருங்க.’’

“சரி...’’ - அவள் அதை ஏற்றுக் கொண்டாள்: “எழுந்து உட்காரு.’’

“தேவையில்லை... நான் இங்கேயே படுத்திருக்கேன். ரது அக்கா, நீங்க அங்கேயே உட்கார்ந்திருங்க. நாம பார்ப்போம் யாருக்கு பலம் இருக்குன்னு...’’

உண்மையாகச் சொல்லப் போனால் எழுந்து உட்கார முடியாத நிலையில் நான் இருந்தேன். அவள் எங்கே கிண்டல் பண்ணி விடுவாளோ என்ற பயமும் எனக்கு இருந்தது.

எங்களுடைய கைகள் ஒன்றோடொன்று சேர்ந்தன. “என்ன... உன் கை வியர்வையா இருக்கு?’’- அவள் கேட்டாள்.

“அது எப்போதும் அப்படித்தான்...’’ - நான் நடுக்கத்தைப் போக்கினேன். பொதுவாக வியர்க்கும் உள்ளங்கைகள்தான் என்றாலும் இப்போது அது மேலும் அதிகமாக இருந்தது.

ரது அக்கா முழங்கைகளைக் கட்டிலில் ஊன்றி குனிந்து உட்கார்ந்திருந்தாள். அவளுடைய ரவிக்கையைப் பார்க்க நான் மிகவும் சிரமப்பட்டேன்.

“ரைட்... ஒன்... டூ... த்ரீ...’’ - அவள் சொன்னாள்.

இருவரும் முடிந்தவரையில் பலத்தைக் கொடுத்துப் பிடித்தோம். வயதில் சிறியவன் என்றாலும் எனக்கு அவளைவிட பலம் இருந்தது. அவளுடைய கையை நான் கட்டிலைத் தொட வைத்தேன்.

“இப்போ என்ன சொல்றீங்க!’’ - நான் வெற்றி பெற்றுவிட்ட சந்தோஷத்துடன் சிரித்தேன்.

“ம்... அது நீ முழங்கையை நகர்த்தியதால்தான்...’’ - அவள் ஒப்புக் கொள்ளத் தயாராக இல்லை. தோற்றவுடன் பிடிவாதம் அதிகமாகிவிட்டது. “ஓ... திருடன்! திருடன்! தைரியம் இருந்தால் இன்னொரு முறை பிடி. ஏன் இப்படி?’’

மீண்டும் கைகள் ஒன்றோடொன்று சேர்ந்தன. அவள் மிகவும் மிடுக்குடன் இருந்தாள். பற்களைக் கடித்துக் கொண்டு கண்களை கூர்மையாக வைத்துக் கொண்டு முழு கவனத்தையும் மையப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

இந்தமுறை என்னையே அறியாமல் அவளுடைய மார்பு பகுதியை நான் பார்த்துவிட்டேன். உள்ளங்கையில் அழுத்தமாக இருந்த மென்மையான உள்ளங்கையைக்கூட மறந்து போய்விட்டேன்.

என்னுடைய வயிற்றுக்கு ஒரு அங்குலம் மேலே அவளுடைய மார்பு நின்று கொண்டிருந்தது. தொட்டது... தொடவில்லை என்பது மாதிரி.

இடையில் ஒரு சிறிய வெற்றிடம் இல்லாமல் போயிருந்தால்...!

அதை நினைத்தபோது உடலெங்கும் ஒரு வெப்பம் பரவியது. கையைப் பிடிக்கும் விஷயத்தையே மறந்துவிட்டேன். அவளை அப்படியே வாரி எடுத்து நெஞ்சில் இட்டேன். இரண்டு கைகளாலும் அவளுடைய முதுகை அழுத்திப் பிடித்தேன்.

அவள் என்னுடைய மார்பில் முழங்கைகளை ஊன்றித் தப்பிக்க முயற்சித்தாள்.

திடீரென்று வெளியிலிருந்து யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. என் தாயாக இருக்க வேண்டும்.


“அய்யோ!’’ - ரது அக்கா என்னிடமிருந்து விலக முயற்சித்தாள்: “அம்மா வர்றாங்க... விடு...’’

“வரட்டும்...’’ - நான் மேலும் கீழுமாக மூச்சுவிட்டேன்.

“விடு... விடு... சாயங்காலம்...’’ - அவள் என் காதுகளில் முணுமுணுத்தாள்: “சாயங்காலம் நான் வர்றேன்...’’

ஒரு அடி விழுந்ததைப்போல எனக்கு இருந்தது. இதை எந்தச் சமயத்திலும் நான் எதிர்பார்க்கவில்லை.

திருநீற்றின் சக்தியைப் பற்றி திடீரென்று நான் நினைத்துப் பார்த்தேன்.

“வருவீங்களா?’’ - நான் ஒரு கனவில் நடப்பவனைப் போல் கேட்டேன்.

“ம்...’’ - அவளுடைய மூச்சின் வெப்பம் என்னுடைய உதடுகளில் வந்து மோதியது.

என் கைகள் விலகின. பிடியை விட்டவாறு நான் கேட்டேன்.

“எங்கே வருவீங்க?’’

ரது அக்கா கட்டிலில் இருந்து வேகமாக எழுந்து சாளரத்தின் அருகில் போய் நின்றாள். ரவிக்கையையும் முண்டையும் சரி செய்துவிட்டு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள். தொடர்ந்து வெளியே கையைக் காட்டினாள்: “அங்கே...’’

5

ங்கே முன்பு எப்போதோ ஒருமுறை விடைபெற்றுப் பிரிந்து சென்ற நிலாவைக் கனவு கண்டு கொண்டு நின்றிருக்கும் அமைதியான பலா மரத்தின் நிழலில், இரண்டு ஜோடிக் கொடிகளைப் போல நாங்கள் படுத்திருந்தோம்.

சாயங்காலம் எப்போதோ கடந்து போயிருக்க வேண்டும். இருட்டு மரங்கள் அனைத்தையும் பிரேதங்களாக மாற்றி விட்டிருந்தது. வயன மலர்களும் குடகப் பாலை மலர்களும் சேர்ந்து உண்டாக்கிய மயக்கத்தைத் தரும் வாசனை காற்றைக் குளிப்பாட்டியது. பனி பெய்ய ஆரம்பித்திருந்தது. பாம்புப் புற்று இருக்கும் பகுதியில் இருந்து, வயதான பாம்புகளின் மேல்தோலில் இருந்து வரும் வெறுப்பைத் தரும் வாசனை வந்து கொண்டிருந்தது. சாயங்கால வேளையில் பாம்புகள் இரை தேடி ஊர்ந்து கொண்டிருக்க வேண்டும்.

பலா மரம் முழுமையான தியானத்தில் மூழ்கியவாறு நின்றிருந்தது.

“அதோ ஒரு பாம்பு...’’ - ரது அக்கா சொன்னாள். உண்மைதானோ என்னவோ? எனினும் நான் அதை கவனிக்கவில்லை.

“பாம்பு அதன் வழியே போய்விடும்.’’

நான் அவளுடைய முடிக்காட்டிற்குள் கூறினேன்.

“எனக்கு பாம்பென்றால் பயம்’’ - அவள் சொன்னாள்.

“எனக்கு பயமே இல்லை...’’

“அது எப்படி? கடிக்காதா?’’ - ஒரு சிறு குழந்தை கேட்பதைப்போல எனக்குத் தோன்றியது.

“இல்லை...’’

“பிறகு?’’

“அதன் புற்றுக்குப்போய்விடும்.’’

“அது எங்கே இருக்கு?’’ - அவள் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள். தொடர்ந்து பேசக்கூடிய ஒரு ஆசையுடன் அவள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

“இதோ இருக்கே...’’

ரது அக்கா சத்தத்தைக் தாழ்த்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்: “எல்லாம் தெரியும்.’’ பிறகு அவள் என் காதுகளில் முத்தமிட்டாள். “என் திருடன்!’’

மெல்லிய காற்று வீசியது.

பாலைப் பூக்கள் எங்கோ தூரத்திலிருந்து பயணத்தை ஆரம்பித்த பயணிகளைப்போல வேகமாக வந்து அவளுடைய அவிழ்ந்து கிடந்த கூந்தலுக்கு மத்தியில் ஓய்வு எடுத்தன.

“இங்கே இப்படியே படுத்துத் தூங்கணும்’’ - நான் சொன்னேன்.

“தூங்கிவிட்டால்...?’’

“அப்படித் தூங்கிட்டோம்னா, பொழுது விடிஞ்ச பிறகும் நம்ம - ரெண்டு பேரையும் யாராலயும் பார்க்க முடியாது. குடக பாலைப் பூக்கள் வந்து மூடிவிட்டுடும்.’’

“அப்படித் தூங்கினா மட்டும் போதுமா?’’ - என்னை கிச்சுக் கிச்சு மூட்டியவாறு ரது அக்கா கேட்டாள்.

அவள் என்னுடைய வெட்கத்தைப் பற்றிக் கூறுகிறாள் என்று எனக்குத் தோன்றியது. அதனால் நான் பதில் எதுவும் கூறவில்லை.

என் இயலாமையை கிண்டல் பண்ணுவதைப்போல பலா மரத்தின் கிளையில் உட்கார்ந்திருந்த, பனியில் நனைந்த ஒரு ஆந்தை பல  தடவை அர்த்தத்துடன் ஓசை உண்டாக்கியது. பிறகு தன் சிறகைக் குடைந்த அது அங்கிருந்து பறந்து சென்றுவிட்டது. பனித்துளிகள் சிறது சிறிதாக எங்கள்மீது விழுந்து கொண்டிருந்தன.

“என்ன பொறாமை!’’ - ரது ஆந்தையை மனதில் வைத்து சொன்னாள்.

ஏரிக்கு வடக்கில் இருக்கும் முஸ்லிம் பள்ளிவாசலில் இருந்து நேரத்தை அறிவிக்கும் பாங்கு ஓசை எழுந்து பேரமைதியில் அடக்கமானது. தவளைகளைப் பிடிப்பதற்காக நடந்து திரியும் பறையச் சிறுவர்களின் பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெளிச்சக் கீற்றுகள் குளத்திற்கு மேலே வட்டங்களை உண்டாக்கின.

“பப்பு, நாளைக்கு உன் வெட்கம் மாறிடும்.’’ - அவள் முணுமுணுத்தாள்.

நான்கு பக்கங்களிலும் இருந்து ஏராளமான வெட்டுக் கிளிகள் ஒன்றாகச் சேர்ந்து குலுங்கிக் குலுங்கிச் சிரித்தன. எங்களுக்கும் மரங்களுக்கும் மேலே, இரவு மேகங்கள் ஓசை உண்டாக்கியவாறு கடந்து சென்றன.

“இன்றைக்கும் வெட்கமா?’’ - மறுநாள் இரவில் அவள் கேட்டாள்.

நான் பதில் கூறவில்லை. எனக்குள் ஒரு குற்ற உணர்வு உண்டானது.

ரது அக்கா அப்படி நடந்து கொண்டதற்காக இப்போது குற்றம் கூற முடியாது. நான் இப்போதும் ஒரு சிறுவன்தான். முழு ஆளாக மாற இன்னும் எவ்வளவோ தூரத்தைக் கடக்க வேண்டியிருக்கிறது.

“மகனே, நான் உன்னுடைய கூச்சத்தை மாற்றுவேன். பார்த்துக்கோ...’’ அவள் என்னுடைய முதுகில் தன் கைவிரல்களால் வருடியவாறு சொன்னாள். அவளுடைய விரல்கள் ஆடைகளுக்குள் நுழைந்து, என்னுடைய உடம்பெங்கும் இன்ப அதிர்வுகளை விதைத்தன.

அந்த மார்பில் முகத்தை வைத்துக் கொண்டு, சதையின் மென்மைத் தன்மையையும், குளிர்ச்சியையும் சுகத்தையும் அனுபவித்துக் கொண்டு படுத்திருப்பது என்பது சந்தோஷம் தரக்கூடிய ஒரு விஷயம்தான். நான் முகத்தை அங்கு மறைத்து வைத்தேன். அவளுடைய மூச்சுகள். தலை முடிகளுக்கு நடுவில் வெப்பத்தைப் பரப்பியவாறு ஓடிக் கொண்டிருந்தன.

“துணியை அவிழ்த்துப் போடு’’ - அவள் தூக்கத்தின் சாயல் கொண்ட குரலில் கெஞ்சினாள்.

“ஊஹூம்...’’

“ஏன்?’’

“என்னால முடியாது’’ - மிகவும் உறுதியான குரலில் நான் உண்மையைச் சொன்னேன். அவவ் அருகில் இருக்கும்போது ஒரு ஆணைப்போல நடப்பதற்கு என்னால் முடியவே முடியாது. இன்றும் நேற்று இரவு நடந்ததைப்போலத்தான் முடியும். எவ்வளவு நாட்கள் கழித்து என்னுடைய வெட்கம் முழுமையாக மாறும் என்று என்னாலேயே கூற முடியாது.

ஒரு ஆணாக மாற வேண்டும் என்று நினைக்கிறேன். தைரியமான ஒரு ஆணாக...

ஆனால், சிறுவனாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

மரங்களுக்கு மத்தியில் ஒரு வெளிறிப்போன சந்திரன் தூங்கியவாறு நின்றிருந்தது. பனியைச் சுமந்து கொண்டிருந்த காற்று உடம்பைத் துளைத்துக் கொண்டு நுழைந்தது.

“ஆடையை அவிழ்த்தால் என்ன? கூச்சமா?’’

நான் எதுவும் பேசவில்லை.

“இந்தா... என்னைப் பாரு. ஒரு பெண்ணாக இருந்து கொண்டு...’’ அவள் என்னைக் குற்றம் சுமத்துவதைப்போல சொன்னாள்.


“எனக்கு வெட்கம் இல்ல...’’ - நானும் மேலும் தாழ்ந்த குரலில் சொன்னேன். கூறியது பொய் என்று எனக்கே உறுதியாகத் தெரிந்தது.

“பிறகு என்ன?’’ - ரதி கேட்டாள்.

என்ன பதில் கூறுவது என்று தெரியவில்லை. உண்மையைச் சொன்னால், அவளே சிரிப்பாள் என்பது மட்டும் உண்மை.

தயங்கித் தயங்கி நான் கூறினேன்.

“எனக்கு... எனக்கு...’’

“ம்... சொல்லு...’’ - அவள் என்னுடைய தலையை மேலும் அழுத்திப் பிடித்தாள்.

“எனக்கு... எனக்கு குளிராக இருக்கும் ரது அக்கா.’’

ஒரு குலுங்கல் சிரிப்பு என் உடலைக் குலுக்கியது.

என்னுடைய பகல்கள் உயிர்ப்பற்றதாக இருந்தன. வீட்டில் யாராவது அதை கவனிக்கிறார்களா என்றுகூட எனக்கு சந்தேகமாக இருந்தது. அந்த அளவிற்கு வித்தியாசமான சம்பவங்கள் எனக்கு நடந்தன. பெரும்பாலும் அறைக்குள்ளேயே கண்களை மூடிக்கொண்டு நான் படுத்திருந்தேன். யாரிடமும் பேசுவதற்கு எனக்கு ஆர்வம் உண்டாகவில்லை.

சாயங்காலம் நெருங்கி வரும்போது இதயம் புத்துணர்ச்சியுடன் எழுந்தது. தொடர்ந்து வார்த்தையால் விவரிக்க முடியாத ஒருவிதமான குழப்பநிலை.... ஒவ்வொரு நாளும் முடியும்போதும் சாயங்கால நேரத்தின் பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

சாயங்கால வேளைகள் பித்துப் பிடிக்கச் செய்தன.

காலை நேரங்கள் மனதில் வெறுப்பை உண்டாக்கின.

பல நேரங்களில் தோன்றிய ஒரு சந்தேகம் எனக்குள் இருந்தது. என்னுடைய இடத்தில் வேறு எந்த ஆண் இருந்தாலும், அவள் இந்த மாதிரிதானே நடந்து கொண்டிருப்பாள்? அவளுடைய தாகம் எந்த ஒரு ஆணையும் அள்ளிக் குடிக்கக்கூடிய அளவிற்கு ஆழமானதாயிற்றே!

ஒருநாள் நான் அதைக் கேட்டுவிடவும் செய்தேன்.

“ரது அக்கா, உங்களோட கணவர் இருந்திருந்தா, என்னை...’’

“என்னை...?’’

“என்னை...?’’ - எனக்கு வார்த்தைகள் வரவில்லை.

“விரும்பியிருப்பேனான்னு கேட்கிறே... அப்படித்தானே?’’

“ம்...’’

அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

ஒரு பனித்துளி எங்கிருந்தோ வந்து என் முதுகில் விழுந்தது.

“விரும்பியிருப்பேன்...’’

அவளுடைய குரலில் இருந்த உறுதியும் அதில் கலந்திருந்த உண்மைத்தன்மையும் என்னுடைய நாக்கை முழுமையாக அடக்கி விட்டன. அதற்குமேல் எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

“ரது அக்கா, உங்க கணவரை உங்களுக்குப் பிடிக்கும்ல?’’ - நான் கேட்டேன்.

“இல்லை...’’ - அவள் சொன்னாள். தொடர்ந்து என்னுடைய தலைமுடிகளுக்கு நடுவில் தன் விரல்களை ஓடவிட்டு, நீண்டநேரம் என்னவோ சிந்தனையில் அவள் மூழ்கியவாறு படுத்திருந்தாள்.

“என்ன காரணம்?’’

“அவர் எனக்குப் பொருத்தமானவர் இல்லை’’ - அவள் சொன்னாள்: “ஒரு வகையான காட்டு மிராண்டி...’’

மிகவும் குறைவான நாட்களே அவர்கள் ஒன்று சேர்ந்து இருந்திருக்கிறார்கள். இதற்கிடையில் இந்த அளவிற்கு வெறுப்பை அந்த மனிதர் எப்படி சம்பாதித்தார் என்று நான் ஆச்சரியப்பட்டேன். அதுவும் ரதியைப் போன்ற - பிரபஞ்சம் முழுவதையும் காதலிக்கத் தயாராக இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து...

“முதல் நாளன்றே எனக்கு அந்த ஆள்மீது வெறுப்பு வந்து விட்டது...’’ - ரதி சொன்னாள். மங்கலான நிலவு வெளிச்சத்தில் அவளுடைய கண்களின் ஓரங்களில் தெரிந்த பிரகாசத்தை நான் பார்த்தேன்.

“ஒரு குஸ்திக்காரன்.’’

“ரது அக்கா, உங்க கணவர் குடிப்பாரா?’’

“நிறைய...’’ - அவள் சொன்னாள்: “முதல் இரவிலேயே நிறைய குடித்திருந்தார்’’ - அந்த இளம்பெண் முதலிரவைப் பற்றிய நினைவுகளை வெளியிடுவதை நான் ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன்.

“போனவுடன் அவர் என்னிடம் வித்தைகளைக் காட்ட ஆரம்பித்தார். தன்னுடைய பலத்தை எனக்குக் காட்ட நினைத்தார்.’’

“எப்படிக் காட்டுவார்?’’

“ஓ... அதை எப்படிச் சொல்வது? ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சேர்ந்து ஒரு கோதாவுல இறங்கியிருக்காங்கன்னு வச்சுக்கோ. பெண் குஸ்தி போடணும்னு தேவையில்லை. ஆண் தன்னோட பலத்தை அவளுக்குக் காட்டணும். எப்படி இருக்கும்?’’

“அப்போ வேறு எதுவும் நடக்கலையா?’’ - தயங்கித் தயங்கி அந்தக் கேள்வியை என்னால் கேட்க முடிந்தது.

“நடக்கலை...’’ - அவள் சொன்னாள்: பெரும்பாலும் எல்லா நாட்களிலும் அதேதான் நடந்தது. சிலவேளைகளில் என்னுடைய கையைப் பிடித்து திருகுவார். நான் அழுவது வரை அப்படியே பிடித்துக் கொண்டிருப்பார். ஒருமுறை என் கழுத்தைப் பிடித்துக் கையிடுக்கில் வைத்து அழுத்தினார்.’’

நான் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டேன். அவள் ஒரு சிறு குழந்தையைப்போலத் தேம்பித் தேம்பி அழுதாள்.

அவளுடைய வயது திடீரென்று குறைந்து விட்டதைப்போல இருந்தது. இப்போது அவளுக்கு என்னைவிட எவ்வளவோ வயது குறைந்து விட்டது. கவலைகளை மனம் திறந்து கூறி நிம்மதி அடையும் ஒரு காதலியும், அவற்றை அக்கறையுடன் கேட்டு ஆறுதல் கூறும் ஒரு காதலனுமாக நாங்கள் இருப்பதாக எனக்குத் தோன்றியது.

“அவர் போவது வரையில் எனக்கு பயமாவே இருந்தது’’ - ரதி சொன்னாள்: “இனியும் வருவார் என்பதை நினைக்கிறப்போ எனக்கு ரொம்பவும் பயமா இருக்கு.’’

அந்த இளம்பெண்ணின் இக்கட்டான நிலைமையை என்னால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. இளமைக்கே உரிய தாகங்கள், பசி... எல்லாவற்றுடனும் படுக்கையறைக்குள் நடந்து செல்லும் பெண்... அவளை ஏற்றுக் கொண்ட ஆணுக்கு உடல்நலக்குறைவு எதுவும் இல்லை. அவலட்சணமான தோற்றம் உள்ளவரும் இல்லை. ஆனால், ஒருவகைப்பட்ட மன ரீதியான குறை அந்த மனிதரை பாதித்துவிட்டிருக்கிறது.

"அவர் வராமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னோட ஆசை"- அவள் சொன்னாள்.

"வராமல் இருந்தால்...?"

"நாம இப்படியே இருந்துவிடலாம்."

"என்னைப் பிடிச்சிருக்கா?"- நான் திடீரென்று கேட்டேன்.

அவள் உடனடியாக பதில் கூறவில்லை. ஒரு தாங்க முடியாத அழுகை அவளுடைய தொண்டைக்குள் இருந்து கொண்டு மூச்சுவிட முடியாமல் இருப்பதைப் போலத் தோன்றியது. சத்தங்கள் இல்லாத அழுகைக்குரல் அவளுடைய உடலின் அடி ஆழத்திலிருந்து மேலே கிளம்பி வருவதைப்போல இருந்தது. அவள் அதை மறைப்பதற்காக என்னுடைய உடலை இறுக அழுத்தி என்னுடைய கழுத்தைக் கடித்தாள். கால்கள் என்னை இறுக முறுக்கின. பைத்தியம் பிடித்ததைப் போல ஒரு வெறி அந்த இளம்பெண்ணை பாதித்ததைப் போல இருந்தது. அதிலிருந்து தப்பிப்பதற்காக அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

மேலும் கீழும் மூச்சு விடுவதற்கிடையில்  அவள் முனகினாள்: "என் ராஜா... என் ராஜா..."

தொடர்ந்து ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், ஒரு நிமிடம் கடந்து விட்டால் ஏதோவொன்றை இழந்து விடுவோமோ என்று பயந்ததைப் போல அவள் என்னுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.

நான் அழுதேன்.


இருபதாவது இரவன்று அவள் எனக்கு நெருப்பைப் போன்ற நரம்புகளைப் பற்றிச் சொல்லித் தந்தாள்.

ஏதாவதொரு புத்தகத்திலிருந்து படித்துத் தெரிந்து கொண்டதா என்று எனக்குத் தெரியவில்லை. எது எப்படியோ- அன்றும் அதற்குப் பிறகும் கூட அந்த அளவிற்கு நல்ல கவிதையை ஒருவருடைய வார்த்தைகளில் நான் கேட்டதேயில்லை.

அப்போது வயன மலர்கள் உதிர ஆரம்பித்திருந்தன. அவ்வப்போது விழுந்து கொண்டிருந்த சாரல் மழைகளை அதிகமான தடவை பார்க்க முடிந்தது.

கடந்து சென்ற இருபது இரவுகளிலும் எங்களைப் பிரிப்பதற்காக ஒவ்வொரு சாரல் மழையும் பெய்தது. அவை வரும் போது எனக்குப் பெரிய அளவில் ஒரு நிம்மதியும் உண்டானது. காரணம்- இருபது இரவுகள் கடந்து போன பிறகும், என்னுடைய கூச்சம் மாறவே இல்லை.

நான் ஒரு ஆணாக இல்லை.

வானம் பல நேரங்களில் மின்னல்களால் பிரகாசமாக இருந்தது. ஏழோ எட்டோ சிகரங்களைக் கொண்ட மின்னல்கள். வீங்கிய கரிக்கோணிகளைப் போல, மழை மேகங்கள் அவற்றுக்கு மத்தியில் ஒளிந்திருந்தன.

"நரம்புகளைப் பற்றி படிச்சிருக்கேல்ல?"- ரதி கேட்டாள்: "மனிதனின் உடலில் இருக்கும் நரம்புகள்...?"

"படிச்சிருக்கேன்."

"அவற்றின் படத்தைப் பார்த்திருக்கியா? அப்படின்னா அதுதான்..."

அவள் கிழக்குப் பக்க ஆகாயத்தை நோக்கி விரலை நீட்டினாள்.

சொல்லி வைத்ததைப் போல ஒரு மின்னல் தோன்றியது.

"நெருப்பின் நரம்புகள்..."

"அக்னியின் நரம்புகள்..."- நான் சொன்னேன்: "அக்னி நரம்பு என்று சொல்வதுதானே மிகவும் சரியாக இருக்கும்?"

"அக்னி நரம்பு..."

"ம்... அக்னி நரம்பு..."- நான் முணுமுணுத்தேன்.

இதயம் மிகுந்த கவலையில் இருந்தது. இதற்கு முன்பு இல்லாமலிருந்த ஒரு உணர்வு என்னிடம் சமீப காலமாக ரதியின் மீது உண்டாக ஆரம்பித்திருந்தது. அவளுடைய கவித்துவம் நிறைந்த பேச்சும் எப்போதும் இருக்கக்கூடிய சுறுசுறுப்பும் நினைத்துப் பார்க்க முடியாத தைரியமும் மனதிற்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கவலைகளும் சேர்ந்து எனக்குள் ஒருவித வழிபாட்டையே படைத்து விட்டிருந்தன. காதல் என்று சொல்லப்படுவது இதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நாளைக்குக் காலையில் கல்லூரிக்குப் போக வேண்டும் என்ற விஷயத்தைக் கூறுவதற்கு என்ன காரணத்தாலோ நான் தயங்கினேன். சொன்னால் அவள் ஒருவேளை அழுதாலும் அழலாம். நான் அதை விரும்பவில்லை. அதனால் போகிறேன் என்ற விஷயத்தைத் தற்போது கூற வேண்டாம் என்று முடிவெடுத்தேன். நேர்முகத்தேர்வு முடிந்து நாளை இரவோ அல்லது நாளை மறுநாள் காலையிலோ திரும்பி வரத்தானே போகிறேன்! அதற்குப் பிறகு மூன்றோ நான்கோ நாட்கள் இருக்கலாம். எப்படிப் போனாலும் இரண்டு நாட்களாவது இல்லாமல் போகாது. அதற்குப் பிறகு ரதியிடம் விடை பெற்றுக் கொண்டால் போதும்.

மழை மேகங்களுக்கு மத்தியில் எங்கேயோ ஒரு சந்திரன் மறைந்திருப்பான்- சில நட்சத்திரங்களும் காற்று வீசி ஆகாயம் தெளிவாகத் தெரியும் போது, அங்கு எல்லா இடங்களிலும் மின்மினிப் பூச்சிகள் ஒட்டிக் கொண்டிருப்பதைப் போல ஒன்றிரண்டு நட்சத்திரங்களைப் பார்க்க முடிந்தது.

மழைக்கு முன்பு இருக்கும் காற்று வீசியது. காட்டிற்குள் இருக்கும் நாகராஜாவும் நாகமோகினியும் இப்போது பூமிக்கு அடியில் வெப்பம் நிறைந்த படுக்கையறைக்குள் நுழைந்திருப்பார்கள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன்.

"என்ன... எதுவும் பேசாமல் இருக்கே?"- ரதி கேட்டாள்.

"எனக்கு எதுவும் பேச வரல..."

நான் சொன்னது உண்மைதான் குளிர் நிறைந்த இரவு வேளையில் குடை விரித்து கொண்டிருந்த பலா மரத்திற்குக் கீழே, சேனைக்கொடிகளும் கிழங்குக் கொடிகளும் சேர்ந்து உண்டாக்கியிருந்த கொடியாலான வீட்டிற்குள் இருந்த முழுமையான இருட்டில் எல்லாவற்றையும் மறந்து, வானத்தின் மூலையில் நடுங்கி நடுங்கி நின்று கொண்டிருக்கும் நட்சத்திரங்களையும் கண்களுக்குத் தெரியாத பாதங்களால் நகர்ந்து போகும் நீர் மேகங்களையும் பார்த்தவாறு, ஒரு அழகான இளம் பெண்ணின் கைகளுக்குள் சிக்கிப் படுத்திருந்த போது, வேறு எதைப் பற்றியும் நினைத்துப் பார்க்கவோ பேசவோ நான் தயாராக இல்லை.

என்னவோ கூறுவதற்குத் தயாரான போது, ஒரு பெரிய நீர்த்துளி முகத்தில் வந்து விழுந்தது. மழை பெய்ய ஆரம்பித்திருந்தது-.

நான் வேகமாக எழுந்தேன்.

சுற்றிலும் பசுமையான இலைகளைக் கொண்ட கொடிகளாலான பந்தல்கள் கூவி அழைப்பதைப் போல இருந்தது. காடு அசையும் சத்தம் எங்கும் கேட்டது.

கடுமையான காற்றின் ஆரம்பம்.

இயற்கை என்ற அசைவற்ற ஓவியத்திற்கு திடீரென்று உயிர் வந்திருந்தது.

நாங்கள் இரண்டு பக்கங்களையும் தேடி ஓடினோம்.

இரவு முழுவதும் இருப்பிடத்தின் மேற்கூரையை நக்கியவாறு அக்னி நரம்புகள் நெளிந்து ஓடிக் கொண்டிருந்தன.

6

றுநாள் இரவில் மழை பெய்த சாலையோரத்தில் இருந்த இடிந்து காணப்பட்ட கடையின் திண்ணையில் நானும் என் தந்தையும் விறைத்து நடுங்கிக் கொண்டு நின்றிருந்தோம். நகரத்திலிருந்து எங்களை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தின் பின்னாலிருந்த சிவப்புக் கண்கள் தூரத்தில் பார்வையை விட்டு மறைந்த போது, என், தந்தை கேட்டார்: "இப்போ மணி என்ன இருக்கும்?"

என் மனதில் இருந்ததைக் கூறுவதற்கு முன்னால் அருகில் எங்கோ தூக்கத்தில் மூழ்கியிருந்த ஒரு கடையின் கடிகாரம் கண்விழித்து ஒரு முறை ஒலித்தது. பன்னிரண்டரையோ ஒன்றோ இரண்டோ இருக்கலாம். அதைத்தாண்டி இருப்பதற்கு வாய்ப்பில்லை. காரணம்- காயங்குளத்தில் நான் ஒரு ஆளிடம் நேரம் என்னவென்று கேட்டபோது, பன்னிரண்டு பத்து என்று அவர் சொன்னார்.

எங்கள் இருவரிடமும் குடை இல்லை. மழை கொஞ்சம் நிற்காமல் அங்கிருந்து கிளம்புவது சற்று சிரமமான விஷயமே.

என்னுடைய தாடைப்பகுதி வேகமாக அடித்துக் கொண்டது. என் தந்தை தன்னுடைய மடியிலிருந்து ஒரு ப்ளாஸ்டிக் தாளைப் பிரித்தெடுத்து, பீடியை எரிய வைத்து, மகிழ்ச்சியுடன் சத்தம் உண்டாகும்படி புகையை விட்டு கொண்டிருந்தார்.

ஹாஸ்டலில் நேர்முகத்தேர்வு முடிந்த போது மிகவும் தாமதமாகிவிட்டது. இல்லாவிட்டால் சற்று முன்கூட்டியே நாங்கள் வந்திருக்கலாம். இன்னும் மூன்று நாட்கள் கழித்து திரும்பவும் அங்கேதான் போக வேண்டும் என்பதை நினைத்தபோது, மனதிற்குக் கவலையாக இருந்தது. முதல் முறையாக வீட்டையும் ஊரையும் விட்டுத் தனியாக நான் வெளியே செல்கிறேன்.

"காலையில் இருந்து மழை நிற்கிற மாதிரியே இல்ல..."- என் தந்தை முணுமுணுத்தார்: "சாலை முழுவதும் முழங்கால் வரை தண்ணி...."

அவ்வப்போது லாரிகளும் ஒரு காரும் கண் தெரியாத வெறி பிடித்த நாய்களைப் போல பாய்ந்து போகும் போது தெறிக்கும் நீர், எங்களுடைய பாதங்களில் வந்து விழுந்து கொண்டிருந்தது. என் தந்தை மெல்ல இருமியவாறு பீடித் துண்டை ஓடிக் கொண்டிருக்கும் சிவப்பு நிற நீரில் எறிந்தார்.


தொடர்ந்து அவர் தனக்குத்தானே கூறிக் கொண்டார்: "கொஞ்சமும் நிற்காத மழை! நட்ட தானியங்களையெல்லாம் நாசமாக்கியிருக்கும்!"

நான் கிழக்குக் காட்டில் இருந்த பயறு கொடிகளை நினைத்து பார்த்தேன். அவை அனைத்தும் போய்விட்டிருக்கும். என் அன்னைக்கு மிகவும் விருப்பமான பாகற்காயும் புடலங்காயும் நீரில் மூழ்கியிருக்கும். சாயங்காலம் மழை சற்று நிற்பதைப் பார்த்ததும் கொச்சும்மிணியை அழைத்துக் கொண்டு, ஓலையாலான குடையைப் பிடித்தவாறு அவற்றைத் தேடிச் சென்று என் தாய் கவலையில் மூழ்கியிருப்பாள்.

கால்கள் வழியாகக் குளிர் மேலே ஏறியது. நான் செருப்பைக் கழற்றி கையில் வைத்துக் கொண்டிருந்தேன். இரண்டு தடிமனான செருப்புகள். கல்லூரிக்குப் போவதற்காக சேப்பாட்டில் இருக்கும் கடைக்காரனிடம் சொல்லி செய்யப்பட்டவை அவை. முன்பு எந்தச் சமயத்திலும் செருப்பு அணிந்த பழக்கம் இல்லாததால், காலில் புண் உண்டாகி எரிச்சல் வந்து கொண்டிருந்தது.

என்னையே அறியாமல் சிந்தனை ரதியை நோக்கிச் சென்றது. பாவம்... இன்று சாயங்காலம் யாருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து பலா மரத்திற்குக் கீழே அவள் வந்து நின்றிருப்பாள். மழை இடைவிடாமல் பெய்து கொண்டிருந்ததால், பகல் நேரத்தில் வீட்டிற்கு வந்திருக்க மாட்டாள். அதனால் நான் நகரத்திற்குச் சென்ற விஷயம் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நேற்று இரவு என்னால் கூறவும் முடியவில்லையே!

நாளை காலையில் மன்னிப்பு கேட்க வேண்டும். பிறகு அதிக பட்சம் போனால், இரண்டு இரவுகள்... அவையும் முடிந்துவிட்டால்-

அதைச் சிந்திப்பதற்கே தயக்கமாக இருந்தது.   நிற்காமல் பெய்து கொண்டிருந்த மழையையே பார்த்துக் கொண்டிருந்த போது, மிகவும் தூரத்தில் இருக்கும் எதிர்காலத்தில் ஒருவேளை மறந்து போகக் கூடிய மிகவும் அழகானதும் ஆழமானதுமான அந்த இதய உறவின் மகத்துவத்தைப் பற்றி நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

என் தந்தை சொன்னார்: "நின்று பிரயோஜனம் இல்ல.... நாம நடப்போம்."

மழை சற்று குறைந்ததைப் போல இருந்தது. நான் செருப்புகள் இரண்டையும் எடுத்து குடைகளின் கம்பிகளுக்கு நடுவில் சொருகி வைத்தேன். அந்தச் சமயத்தில் என் தந்தை சாலையில் இறங்கிவிட்டிருந்தார்.

வீட்டை அடைந்தபோது, மழை கனமாகப் பெய்து கொண்டிருந்தது- எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நீண்ட நேரம் குரல் கொடுத்த பிறகு, என் தாய் கண் விழித்தாள். அவ¬ள்த தொடர்ந்து அக்காவும் சித்தியும்.

கிழக்கு வாசலில் தானிய அறைக்கு மேலே இருந்த ஒரு கோணிக்கு அடியில் சுகமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கொச்சும்மிணி ஒருமுறை தலையை உயர்த்திப் பார்த்துவிட்டு மீண்டும் படுத்துக் கொண்டான்.

மேற்குப் பக்கம் இருந்த அறையில் ஈரமான ஆடைகளை மாற்றி காய்ந்த ஆடையை அணிந்த போது குளிர் குறைந்ததைப் போல இருந்தது-. இருட்டில் அவ்வப்போது தோன்றிய மின்னல்களின் வெளிச்சத்தில் ரதியின் வீடு தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். ஆதரவற்ற ஒரு இளம்பெண்ணின் கள்ளங்கபடமற்ற திறந்த மனதுடன் மழை தன் விருப்பப்படி பெய்யும் வகையில் அது கண்களை மூடிக் கொண்டு நின்றிருந்தது-.

கம்பிகள் வழியாக அதைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நான் நின்றிருந்தேன்.

நான் எதைப்பற்றி நினைக்கிறேன்? எனக்கே அதைப் பற்றித் தெளிவாகத் தெரியாமல் இருந்தது.

நீண்ட விடுமுறைக்குப் பிறகு மனைவியைப் பார்ப்பதற்காக ஓடி வந்த கணவனா நான்?

இல்லாவிட்டால்- பல வருட விரகத்திற்குப் பிறகு காதலியைத் தேடி வந்த காதலனா?

எனக்கு எதுவுமே தெரியவில்லை. எனக்கு என்ன நடந்திருக்கிறது என்று நான் சிந்தித்துப் பார்த்தேன். கதைப்புத்தகங்களில் வாசித்திருக்கும் காதல்? அதுவாக இருக்க முடியாது... இன்னொரு மனிதரின் மனைவியாக ஆகிவிட்ட அவளிடம் எனக்கு காதல் உண்டாக வழியில்லை. அப்படியென்றால் இது என்ன? இந்த நிம்மதியற்ற நிலையும்  வேதனையும் கவலையும்...?

பலவற்றையும் சிந்தித்துக் கொண்டு நின்றிருந்த போது, சித்தி அறைக்குள் வந்தாள்.

இனி தொல்லையாக இருக்கும்.

நேர்முகத் தேர்விற்குச் சென்ற விஷயங்களைப் பற்றி முழுமையாக விளக்க வேண்டியதிருக்கும். பேச்சு அந்தப் பக்கமாகத் திரும்புவதற்கு முன்னால், நான் சொன்னேன்: "எனக்கு சாதம் வேணும்."

"தர்றேன்"- அதைக் கூறிவிட்டு, மேஜைமீது அவள் ஏறி உட்கார்ந்தாள். மிடுக்கு நிறைந்த குரலில் அவள் தொடர்ந்து சொன்னாள்: "இந்த வீட்டில் இதற்கு முன்பும் ஆண் பிள்ளைகள் இருந்திருக்காங்க... காதுல விழுகுதாடா?"

எனக்கு விஷயம் எதுவும் புரியவில்லை. திகைப்புடன் நின்று கொண்டிருந்த போது, சித்தி மீண்டும் தொடர்ந்தாள்: "குடும்பத்திற்கு கெட்ட பெயர் உண்டாகுற அளவுக்கு நீ அப்படியொண்ணும் வளரலையே!"

இப்போது இப்படியொரு பேச்சு உண்டாவதற்குக் காரணம் என்ன என்று எனக்கே புரியவில்லை. நேர்முகத் தேர்வைப் பற்றி ஒரு வார்த்தை கூட அவள் கேட்கவில்லை.

பதில் எதுவும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, சித்தி சொன்னாள்: "அருகில் பல பெண் பிள்ளைகளும் இருப்பாங்க. ஆனால், இங்கேயும் ஒரு பெண் இருக்கிறாள்ன்றதை ஞாபகத்துல வச்சிருக்கணும். அதை உணர்ந்து நடக்கணும்."

எனக்கு கொஞ்சம் புரிந்தது. எனக்கும் ரதிக்கும் இடையில் இருக்கும் உறவை சித்தி தெரிந்து கொண்டிருக்கிறாள். சித்தி மட்டுமல்ல- என் தாயும் அக்காவும் தெரிந்திருக்கிறார்கள். அதனால்தான் வீட்டிற்குள் நுழைந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் இந்த அளவிற்குக் கோபமும் வெறுப்பும் இருப்பதைப் பார்த்தேன்.

நான் ஊரில் இல்லாத நேரத்தில் என்னவோ நடந்திருக்கிறது. அது என்ன? அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் போல எனக்கு இருந்தது. ஆனால் எப்படிக் கேட்பது? மொத்தத்தில் ஒரு தர்மசங்கடமான நிலை.

சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்துவிட்டு, சித்தி கேட்டாள்: "உன் நேர்முகத்தேர்வு எப்படி இருந்தது?"

"பிரச்சினையொண்ணும் இல்லை"- நான் சொன்னேன்.

"எப்போ போகணும்?"

"இரண்டு நாட்கள் கழித்துப் போனால் போதும்."

"ம்..."- அவள் மிடுக்கைக் கைவிடாமல் மெதுவாக முனகினாள். பிறகு மேஜைமீதிருந்து குதித்து இறங்கி அந்தப் பக்கமாகச் சென்றாள்.

நான் மீண்டும் வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். மூளை சிறிது கூட செயல்படவில்லை. எனக்கும் ரதிக்கும் இடையில் இருந்த உறவைப் பற்றி எல்லோரும் எப்படித் தெரிந்து கொண்டார்கள்? அதுவும் நான் ஊரில் இல்லாத நேரத்தில்? கொச்சும்மிணியிடம் மட்டுமே விஷயத்தைக் கேட்க முடியும். ஆனால் அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான்.

ஒரு பலமான காற்று அடித்தது. விளக்கு அணைந்தது. சுற்றிலும் இருள் மட்டுமே இருந்தது. பாம்புப் புற்றுக்குப் பின்னால் இருந்த அடர்த்தியான புதர் அசையும் சத்தம் இங்கு கேட்டது.


அப்போது சிறிய செடிகள் வளைந்து தெற்குப் பக்கம் இருக்கும் ஒற்றையடிப் பாதையையும், கீழே இருக்கும் நீர் நிறைந்த ஆழமான குளத்தையும் தொடும். இதயம் அதைவிட பலமாக அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஒரு விளக்கின் பிரகாசம், கூடத்திலிருந்து வந்தது. திரும்பிப் பார்க்கவில்லை. பின்னால் அக்காவின் குரல் கேட்டது.

"எனக்கு வேண்டாம்..."

ஒன்றிரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வெளிச்சம் இல்லாமல் போனது.

பிறகு யாரும் வரவில்லை.

இரவில் முற்றிலும் உறங்க முடியவில்லை. மற்ற எல்லோரும் படுத்தவுடன் தூங்கிவிட்டார்கள். ஒவ்வொருவருடைய குறட்டை ஒலிகளையும் அடையாளம் கண்டுபிடிக்க முடிந்தது. ஈரமான அமைதியில் மழையின் முனகல் சத்தம்...

படிப்படியாக மழை நின்றது. பெய்து முடிந்த பிறகு, இருக்கக்கூடிய கடைசி துளிகள் ஆகாயத்திலிருந்து விழும் சத்தம் கேட்டது. எங்கேயோ நாய்கள் ஊளையிட்டன. அவ்வப்போது காற்று வீசிக் கடந்து போய்க் கொண்டிருந்தது. தோட்டத்தில் இங்குமங்குமாக காய்ந்த தேங்காய்களும் மட்டைகளும் கீழே விழுந்து அவற்றின் சத்தத்துடன் ஆடின.

தொடர்ந்து அதிகாலைப் பொழுதின் ஆரவாரம் காதில் விழுந்தது. மாட்டுச் சந்தைக்குப் போகும் காளைகளின் மணியோசைகள்... ஏரிக்கரையில் இருந்து இரவுக் காவல் முடிந்து, சீக்கிரமே திரும்பி வரும் காவலாளிகளின் உரையாடல்... முதல் சூளைத் தெரு... காயங்குளம் பேருந்தின் உலகைப் பிளக்கும் ஹார்ன் சத்தங்கள்... புலர்காலைப் பொழுது...

தூக்கம்.

முதலில் என்னவென்று புரியவில்லை. மேல்நோக்கி ஏறிவரும் லாரியின் இரைச்சலும் நேற்று இரவு கேட்ட புதர்களின் சத்தமும் திடீரென்று ஞாபகத்தில் வந்தன. என்னவோ அழிவதைப் போலவும், நொறுங்கி ஒடிவதைப் போலவும், பயங்கரமானத் தோற்றத்தைக் கொண்ட ஒரு அரக்கன் உரத்த குரலில் கத்தியவாறு ஓடி வருவதைப் போலவும் எனக்குத் தோன்றின.

நான் எழுந்து உட்கார்ந்தேன்.

சாளரத்தின் கம்பிகள் வழியாக கிழக்குப் பக்க வாசலைப் பார்த்தேன். சாதாரணமாகத்தான் பார்த்தேன். அவிழ்த்து விடப்பட்ட தலைமுடியுடனும் தூக்கம் விலகியிருந்த குழி விழுந்த கண்களில் கோபத்தின் வெளிப்பாட்டுடனும் அவள் நின்றிருந்தாள்.

ரதியின் தாய்!

கண்களை மூடிக் கொண்டேன்.

திட்டுதல்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தன.

நான் காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டேன்.

"பெரிய அளவுல காசும் வசதியும் எதுவும் இல்லைன்னாலும், நாங்க மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். அந்த புட்டு வியாபாரத்தை இங்கே வச்சிக்கக் கூடாது. அவளை அடைய இந்த ஊர்ல ஒரு நாயும் வளர்ந்திருக்கவில்லை..."

சற்று நிறுத்தி, மூச்சு எடுத்துக் கொண்டு அவள் தொடர்ந்து சொன்னாள்: "அதுதான் சொன்னேன். ஒரு நாயின் மகனும் வளர்ந்திருக்கவில்லை. எங்கே... அதையும்தான் பார்ப்போமே! ம்... கேக்குறதுக்கும் சொல்றதுக்கும் ஆம்பளைங்க இருக்காங்க."

என்னுடைய சப்த நாடிகளும் தளர்ந்து போய்விட்டன. திரும்பிப் படுத்தேன். தலையிலிருந்து கீழ்வரை போர்வையால் மூடிக் கொண்டேன். நல்ல குளிர் இருந்தாலும் மூக்கின் நுனியிலிருந்து வியர்வைத் துளிகள் கீழே விழுந்து கொண்டே இருந்தன.

இரண்டுமே நடந்திருக்க வேண்டியதில்லை. எல்லாவற்றுக்கும் தொடக்கம் உண்டாக்கியது நான்தானே!

சூழ்நிலையைப் பற்றிய உணர்வு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் ஆனது. அத்துடன் அதிர்ச்சி அடைந்தேன்.

எனக்கு என் மீதே அளவுக்கும் அதிகமான வெறுப்பு தோன்றியது. எல்லா அசிங்கங்களையும் செய்துவிட்டு, இப்போது ஒரு கோழையைப் போல மூடிக் கொண்டு படுத்திருக்கிறேன்.

வெளியிலிருந்து கோபக் குரல் கேட்டது: "அவன் எங்கே? எந்தப் பிணத்தின் மீது ஏற வைத்து மறைத்து அவனை நீங்க வச்சிருக்கீங்க?"

என் தாயின் பதில்: "அவன் வெளியே எங்காவது இருப்பான். நான் கூப்பிடுறேன். நீங்க சத்தம் போட்டு ஆட்களைக் கூட்டாம இருங்க. கடைசியில உங்க மகளுக்குத்தான் அதிகம் மானக்கேடு..."

"அவளுக்கு எந்தவொரு மானக்கேடும் இல்லை. ஒரு குறைச்சலும் இல்லை. அவளுக்கு என்ன பிரச்சினை? அவளை நான் அறிவு புகட்டி வளர்த்துக் கொண்டு வந்திருக்கேன். அந்த விஷயம் இந்த ஊர்க்காரர்களுக்கு நல்லாவே தெரியும். தெரியுதா?"

"இருந்தாலும்..."- என் தாயின் குரல் மிகவும் பலவீனமாக இருந்தது.

"ஒண்ணுமில்ல... ஒரு சுக்கும் இல்ல. ஓ... இனி இப்போ அப்படிச் சொல்லி விரட்ட பார்க்கிறீங்களாக்கும்... ஏதாவது மானக்கேடு ஆயிடக்கூடாதுன்றதுனாலதான் நானும் என் மகளும் பொறுத்துக்கிட்டோம்"- அவள் நீட்டித் துப்பும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு புதிய குரலில் சொன்னாள்: "உங்கக்கிட்ட புகார் சொல்றதுக்காக நான் இங்கே வரல. அந்தப் பையனை இப்போ நான் பார்க்கணும். நேற்று அதற்குப் பிறகு இரவு ஆயிடுச்சு. அதனாலதான் நான் பொறுமையாக இரந்தேன். இங்கே வந்து அவனைக் கூப்பிட்டேன். அவன்கிட்ட ஒன்றிரண்டு விஷயங்களை நான் கேட்க வேண்டியதிருக்கு."

யாரும் தடுக்காத காரணமாக இருக்க வேண்டும்- அவளுடைய குரலுக்கு பலம் அதிகமானதைப் போல இருந்தது. அளவுக்கு மீறிய ஒரு நடுக்கம் அதில் இருந்தது.

"அவனைப் பார்த்து என்ன செய்யப் போறீங்க?"- என் தாய் கேட்டாள்.

"நான் கழுத்தை அறுத்துட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்"- அவள் நின்று கொண்டு குதித்தாள். "என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? யாரும் எதையும் கேட்க மாட்டாங்கன்னு நினைச்சீங்களா?"

என்னையே அறியாமல் கழுத்தைத் தடவிக் கொண்டேன்.

குரல் மேலும் மேலும் உயர்ந்து கொண்டிருந்தது. இனி அது நிற்க வேண்டுமென்றால், நான் அங்கு போக வேண்டும். என் தந்தை அங்கு எங்கும் இல்லை. காலையில் வயலுக்கு, நேற்று இரவு பெய்த மழையில் உடைந்த மடைகளைச் சரி செய்வதற்காக போயிருப்பார்.

வாசல் பக்கத்திலிருந்து ஒரே ஆரவாரமாக இருந்தது. அளவுக்கும் அதிகமான உரத்த குரலில் அது இருந்தது.

நான் எழுந்தேன்.

கால் நடுங்கிக் கொண்டிருந்தது. எது நடந்தாலும் வெளியே போய்த்தான் ஆக வேண்டும். இங்கு முழுவதுமாக மூடிப் படுத்துக் கிடந்தால், அவள் ஆவேசம் அதிகமாகி இங்கே வந்து விடுவாள் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருந்தது.

வாசலுக்குச் செல்ல பயமாக இருந்தது.

அதனால், கண்ணாடிக்கு முன்னால் போய் நின்று கொண்டு தலைமுடியைச் சரி செய்து வாரினேன். அது முடிந்தவுடன் இனி என்ன செய்ய வேண்டும் என்ற முடிவு இல்லாமல் இருந்தது. உள்ளுக்குள் ஒரு வகைப்பட்ட நடுக்கம் கலந்த வெற்றிடம் நிறைந்திருந்தது. பயம், இரக்கம் ஆகியவற்றின் கலவை... நான் கையில் கிடைத்தால் அவள் என்ன செய்வாள் என்பதைப் பற்றி கிட்டத்தட்ட என்னால் முடிவு செய்ய முடிந்தது. எல்லாம் ஒரு கனவைப் போல இருந்தது.


திடீரென்று என் அக்கா அறைக்குள் வந்தாள். அவளுடைய முகத்தில் பதைபதைப்பு இருந்தது. தூக்கத்தின் சாயல் படர்ந்திருந்த கண்களில் உயிர்ப்பே இல்லை. யாரையோ மனதில் திட்டிக் கொண்டே அவள் அறைக்குள் வந்திருந்தாள். வந்தவுடன் அவள் என்னிடம் கேட்டாள்: "அவனைப் பார்த்தியாடா?"

கேள்வி என்னைப் பார்த்துதானா என்று ஒரு நிமிடம் நான் சந்தேகப்பட்டு நின்றுவிட்டேன். ஒருவேளை பதைபதைப்பிற்கு மத்தியில், கோவிந்தன்தான் நின்று கொண்டிருக்கிறான் என்று நினைத்து அவள் பேசிக் கொண்டிருக்கலாம்.

"யாரு?"- நான் தயங்கித் தயங்கிக் கேட்டேன்: "அவங்க யாரை வாய்க்கு வந்தபடி பேசுறாங்க?"

"என்ன ஒரு வெட்கக் கேடு!"- அக்கா சொன்னாள்:

"செய்தது போதாதுன்னு, எங்கேயோ போயி மறைந்து கொண்டு வேறு இருக்கான். அவன் மட்டும் கிடைச்சிருந்தா, அந்த பத்ரகாளி ஒண்ணு ரெண்டு அடியைக் கொடுத்துட்டுப் போயிடுவாங்க. இப்படி சத்தம் போடுவது இல்லாமப் போயிருக்கும். அவன் கண்ணுல படாம இருக்குறதுனால அவங்க பிடிச்ச பிடியா நின்னுக்கிட்டு இருக்காங்க."

என்னிடம் பேசுகிறோம் என்ற சுய உணர்வுடன்தான் என் அக்கா பேசிக் கொண்டிருந்தாள்.

யார் இந்த 'அவன்?'

மொத்தத்தில் ஒரு திகைப்பு.

என்னையே அறியாமல் ஒரு கேள்வி கிளம்பி வந்தது: "அவன் என்ன செய்தான்னு இப்போ சொல்றீங்க?"

கேட்டு முடித்தவுடன், மீண்டும் சந்தேகம் உண்டானது. யாரைப் பற்றி நான் அப்படியொரு கேள்வியைக் கேட்டேன்?

அக்கா பதைபதைப்பிற்கு மத்தியில் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னாள்:

"நேற்று சாயங்காலம் அந்த மேற்குப் பக்க தோட்டத்தில் வச்சு அங்கே இருக்குற ரதியின் கையைப் பிடிச்சு இழுத்திருக்கான்."

"பிறகு?"

"அவள் சத்தம் போட்டு கத்திட்டா... அதைக் கேக்குறதுக்குத்தான் ரதியின் அம்மா காலையில வந்து கூப்பாடு போட்டுக்கிட்டு இருக்காங்க."

நான் ஒரு மடையனைப் போல பேந்த பேந்த விழித்துக் கொண்டு நின்றிருந்தேன். இங்க என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது?

நான் திகைத்துப் போய் நிற்பதைப் பார்த்துவிட்டு, பொறுமையை இழந்துவிட்டதைப் போல அக்கா கேட்டாள்:

"அவன் எங்கே? இங்கே எங்கேயாவது பார்த்தியா?"

என்னால் பேசவே முடியவில்லை.

மீண்டும் அவன் தலையை நீட்டியிருக்கிறான்.

கேள்விக்கு பதில் கிடைக்காமல் போனவுடன், அக்கா வெளியே நடந்தாள். அதைப் பார்த்து திடீரென்று அதிர்ச்சியடைந்து சுய உணர்வுக்கு வந்ததைப் போல நான் உரத்த குரலில் கேட்டேன்:

"அக்கா, யாரைத் தேடுறீங்க?"

"அந்தப் பாழாய் போறவனை... அந்த கொச்சும்மிணியை...."

ஏதோ புதருக்குள் இருந்து எங்களுடைய கணக்குப் பிள்ளை குட்டிக் கிருஷ்ணன் நாயரும் வேறு சிலரும் சேர்ந்து அவனைக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் வைத்து இரண்டு அடிகள் கொடுத்துவிட்டு ரதியின் தாய் அவனை அங்கிருந்து விரட்டிவிட்டாள்.

அந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக நானும் கிழக்குப் பக்கத்தில் இருந்த பாதிச்சுவரில் போய் உட்கார்ந்திருந்தேன்.

ரது அக்காவின் தாய் வாசல் பெருக்கும் துடைப்பத்தை எடுத்து இரண்டு மூன்று அடிகளைக் கொடுத்தாள். அவளுடைய செல்ல மகளை பலாத்காரம் செய்ய முயன்ற அவனை அவள் அவ்வளவு செய்தால் போதுமா?

எனக்கு ஒரு விதத்தில் நிம்மதியாக இருந்தது. எனக்கும் ரதிக்கும் இடையில் உள்ள உறவைப் பற்றி என் வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. அதை எப்படி அவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்ற விஷயத்தை இதுவரை என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. எது எப்படி இருந்தாலும் ரதியின் தாய்க்கு அது தெரியாது.

அந்தப் பெண் கொச்சும்மிணியை அதற்கு மேலும் துன்புறுத்தியிருக்கலாம். அதற்கு வாய்ப்பு கொடுக்காமல், எல்லோரும் சேர்ந்து அவனை கிழக்குப் பக்கம் இருந்த வயல் பக்கம் தள்ளிக் கொண்டு போனார்கள்.

போவதற்கு மத்தியில் திரும்பி நின்று எனக்கு நேராக விரலை நீட்டி ஒரு தடவை அவன் சொன்னான்: "நான் சில விஷயங்கள் பேச வேண்டியதிருக்கு."

யாரும் அவனை அங்கு நிற்க வைக்க அனுமதிக்கவில்லை. பேசுவதற்கு சம்மதிக்கவும் இல்லை. என்னுடைய அதிர்ஷ்டம்.

கொச்சும்மிணி என்ன கூற நினைத்திருப்பான் என்பதைப் பற்றி என்னால் கற்பனை பண்ணிப் பார்க்க முடிந்தது. எனினும், அதற்குப் பிறகுதான் மேலும் பல தகவல்கள் எனக்குக் கிடைத்தன.

நானும் ரதியும் ஒன்றாக இருந்த எல்லா இரவுகளிலும் எங்களுடைய செயல்களைப் பார்த்துக் கொண்டு ஒரு குரங்கைப் போல பலா மரத்தின் கிளைகளுக்கு மத்தியில் அவன் மறைந்து இருந்திருக்கிறான். இறுதியில் நான் நேர்முகத் தேர்விற்குப் போன நாளன்று, என்னை எதிர்பார்த்து இருட்டில் மறைந்தவாறு வந்த ரதியை, நான் என்ற போர்வையில் அவன் கட்டிப் பிடித்திருக்கிறான். ஆள் மாறிவிட்டது என்பது தெரிந்தவுடன், அவள் சத்தம் போட்டிருக்கிறாள். அந்தப் பெரிய மழை பெய்து கொண்டிருந்த போது, என்னுடைய வீட்டில் இருந்தும் அவளுடைய வீட்டில் இருந்தும் ஆட்கள் ஓடிக் கூடிய போது, கொச்சும்மிணி எங்கோ ஓடி மறைந்துவிட்டான்.

என் தாய் அந்த இரவில் அவனை நிறைய திட்டினாள். காலையில் இங்கிருந்து போய்விடும்படி கட்டளை போடவும் செய்தாள். இரவில் இறுதி கஞ்சியைக் குடிப்பதற்காக உட்கார்ந்திருக்கும் போது, திட்டுவதற்காகச் சென்ற சமையல்காரி பெரியம்மாவிடம் அவன் ஆரம்பத்திலிருந்து உள்ள எல்லாக் கதைகளையும் கூறிவிட்டான். வசீகரிக்கப்பதற்காக மந்திரம் வாங்கிய விஷயத்தைக் கூட அவன் விடவில்லை. இருபது இரவுகளிலும் நாங்கள் என்னவெல்லாம் செய்தோம், என்னவெல்லாம் பேசினோம் என்பதிலிருந்து எல்லா விஷயங்களும் குஞ்ஞி பெரியம்மாவிற்குக் கிடைத்தன. அவள் சொல்லித்தான் என் தாயும் சித்தியும் வீட்டில் இருந்த மற்ற எல்லோரும் கதைகளைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து வந்த இரண்டு நாட்களிலும் நான் ரதியைப் பார்க்கவில்லை. சாயங்காலம் பலா மரத்திற்குக் கீழே போய் நிற்க வேண்டும் என்றிருந்தாலும், பயம் காரணமாக அது நடக்கவில்லை.

பெரிய மழையும் கடுமையான காற்றும் காவல் பூதங்களாக மாறியிருந்தன. இடையில் அவ்வப்போது நிலத்தின் ஏதாவதொரு மூலையில் ஒரு தென்னை மட்டை பிய்ந்து விழுந்து கொண்டிருந்தது.

இரண்டு நாட்களும் மதிய உணவு சாப்பிடும் போது, தென்னங்குருத்து ஊறுகாய் தொட்டுக் கொள்வதற்காக வைக்கப்பட்டிருந்தது.

7

மூன்றாவது நாள் அதிகாலையில் மழை நின்றது. வாசலில் நீர் ஓடிக் கொண்டிருந்த இடத்தில் நீல நிறத்தில் மண் துகள்கள் சிதறிக் கிடந்தன. நீண்ட பிரிதலுக்குப் பிறகு வெயில் அவற்றின் மீது வந்து விழுந்து ஒளிர்ந்தது.

அரளி மரத்திற்கு அடியில் இருந்து மழை நீர் உருட்டிக் கொண்டு வந்த பழுத்த காய்கள் ஆங்காங்கே கிடந்தன.


நான் அவற்றைத் தட்டி உடைத்து, எதுவும் செய்யாமல், ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்துடன் சுற்றி நடந்து கொண்டிருந்தேன்.

நாளை காலையில் நான் கல்லூரிக்குப் போக வேண்டும். கொண்டு போகக்கூடிய பெட்டி, படுக்கை ஆகியவற்றை நேற்று இரவிலேயே ஒழுங்குபடுத்தி வைத்தாகிவிட்டது.

இன்று, பிரகாசித்துக் கொண்டிருக்கும் நீல நிற வானம் இருக்கிறது. மேகங்கள் இருக்கின்றன.

மழை பெய்யாது என்று தோன்றியது.

கடந்த இரண்டு நாட்களாக ரதியைப் பார்க்க முடியாமல் போனதற்குக் காரணமாக இருந்தவன் கொச்சும்மிணிதான் என்று தோன்றியது. அவன்தான் எல்லா விஷயங்களையும் குழப்பத்திற்குள்ளாக்கியவன். மொத்தத்தில் கலக்கி தலைகீழாக்கிவிட்டான்.

இன்னொரு இரவு இருக்கிறது. பத்து இருபது நாட்கள் வெறுமனே பிரச்சினையில் சிக்கிக் கிடந்தேன். எதுவும் செய்ய முடியாமல் ஒரு சிறு குழந்தையைப் போல நான் நடந்து கொண்டேன். முன்பு பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்து உறுதியான முடிவு எடுத்திருந்தாலும், ஒரு பெண் அருகில் இருப்பது என்னை ஒட்டு மொத்தமாகத் தளர்வடையச் செய்துவிட்டது.

ஒரு விஷயத்தைத் தீர்மானித்துவிட்டேன். இந்த இரவில் நான் அவளைப் பார்ப்பேன். ஒரு சரியான ஆணாக நடந்து கொள்வேன்.

நான் ரதியின் வீடு இருக்கும் பகுதியை நோக்கி நடந்தேன்.

நிலத்தில் இங்குமங்குமாகக் குருவிகள், அணிகல்கள் ஆகியவற்றின் கூடுகள் பிய்ந்துவிழுந்து கிடந்தன. வசந்தத்தின் உற்சாகத்தில் ஆழமான அடையாளங்களை உண்டாக்க இடையில் தலை காட்டிய ம¬£யால் முடியவில்லை.

மீண்டும் குருவிகள் கூடுகளைக் கட்டும். அணில் கண்ணன் தன் மனைவிக்கு பிள்ளை பெற அரண்மனை உண்டாக்குவான்.

மனதில் கவலைகள் நிறைந்த சிறு சிறு அருவிகள். இந்த வீடும் இந்த சுற்றுப்புறத்தையும் விட்டு நான் போகிறேன். இனி எந்தச் சமயத்திலும் இப்போதைய நான் இருக்கப்போவதில்லை. இடையில் அதிகபட்சம் போனால் இரண்டு மாதங்கள் வரக்கூடிய விடுமுறைக்கு வருவேன். அறிமுகமில்லாத நகரமும் அங்கு இருக்கும் புதிய நண்பர்களும் சேர்ந்து என்னிடம் பெரிய மாறுதல்களை உண்டாக்குவார்கள். புதிய என்னால் பழைய நான் வாழ்ந்ததைப் போல இங்கு வாழ முடியாமல் போகலாம்.

கவலைகள் நிறைந்த காலம் என் இதயத்தில்  தோன்றியது- ஒரு ஈரமான வானவில்லைப் போல- புத்தகத்தில் எங்கோ வாசித்திருக்கும் சிகோமார் மரக்கிளையைப் போல.

புதர்களுக்கு மத்தியில் ஒரு சத்தம் கேட்டது.

பார்த்தபோது-

குளித்து, ஈரம் மாறாத ஆடைகள் அணிந்திருக்கிறாள். மார்பை மறைத்துக் கொண்டு, தோளின் வழியாக இட்டிருந்த ஈரமான துணியின் மீது அழகான எழுச்சிகள்...

"நாளைக்குப் போறே... அப்படித்தானே?"

"ஆமாம்..."- நான் சொன்னேன்.

திடீரென்று எனக்கு அழுகை வந்தது.

"நடந்த விஷயங்களெல்லாம் தெரிஞ்சதா,"

"ம்..."

"அதனால்தான் நேற்றும் முந்தா நாளும் நான் வரல..."- அவள் சொன்னாள்: "அம்மா எப்போதும் காவல் இருக்காங்க."

எனக்கு பாவமாக இருந்தது. இவ்வளவு நடந்த பிறகும் என்னுடைய சந்தோஷத்திற்காக, இந்தப் பெண் எப்படியெல்லாம் தன் மனதைப் புண்ணாகிக் கொள்கிறாள்! திடகாத்திரமான ஒரு கணவருடன் சேர்ந்து சிறிது காலம் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கு ஒரு சிறு குழந்தையின் நடுங்கிக் கொண்டிருக்கும் விரல்கள் தடவுவதால் என்ன கிடைக்கப் போகிறது?

அவளுக்கு என் மீது வெறுப்பு உண்டாகுமோ?

என்னையே அறியாமல் கேட்டு விட்டேன்: "என்னைப் பிடிச்சிருக்கா?"

முன்பும் பல தடவை கேட்டிருக்கும் கேள்விதான். அதற்குப் பிறகும்... எதற்காக இப்போது அதைத் திரும்பவும் கேட்கிறேன்?

அவளுடைய கண்கள் அடுத்த நிமிடம் கண்ணீரால் நிறைந்தது. எதையோ கூறுவதற்காக உதடுகள் மலர்ந்து துடித்தன. "என் தெய்வம்..."- அவள் சொன்னாள்: "எனக்கு பிடித்த ஒரே ஒரு ஆள்."

என்னுடைய கண்ணோரங்களிலும் ஈரம் உண்டானது. என்ன கூற வேண்டும் என்று தெரியாமல் நான் அப்படியே நின்று விட்டேன்.

எங்கோ ஒரு வாலாட்டிக் குருவி ஓசை உண்டாக்குவது காதில் விழுந்தது.

"நாளைக்கு எப்போ போறே?"

"அதிகாலையில்..."

சிறிது தயங்கியவாறு நின்று நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு குரலைத் தாழ்த்திக் கொண்டு ரதி கேட்டாள்:

"போகட்டுமா?"

"சாயங்காலம் வருவீங்களா?"

"வரப் பார்க்குறேன்"- சிறிது நேரம் யோசித்துவிட்டு, அவள் உறுதியாக முடிவெடுத்த குரலில் சொன்னாள்: "இல்ல... வர்றேன்."

அதைக் கேட்டு அதிர்ந்து போய்விட்டேன். நான் எந்தச் சமயத்திலும் இதை எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு ஆபத்துகள் சூழ்ந்திருக்கும் போது, அவளுக்கு எப்படி இதைக் கூறுவதற்கு தைரியம் வந்தது?

அவள் இரண்டடி நடந்து திரும்பி நின்று கேட்டாள்: "இன்னைக்கும் கூச்சம் இருக்குமா?"

கேள்வியை முடிப்பதற்கு முன்னால் ரதி குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

"இல்லை... இன்னைக்குப் பாருங்க..."- நான் பெருமையுடன் முணுமுணுத்தேன்.

ஈரமான ஒற்றை முண்டிற்கு மேலே இருந்த சதையின் அசைவுகள் அகன்று அகன்று போயின.

நான் மீண்டும் தனியனாக ஆனேன்.

மழை முடிந்த பிறகு இருக்கும் வெயில். தெற்குப் பக்கத்தில் இருக்கும் ஒற்றையடிப் பாதை வழியாக ஒரு கோடாங்கி நடந்து செல்லும் சத்தம் கேட்டது. வயதான குரங்கு விளையாட்டுக்காரனாக இருக்க வேண்டும். அவனுடைய உடுக்கில் இருந்து வரும் சத்தம் யாராலும் கவனிக்கப்படாமல் தூரம் தூரமாகப் போய்க் கொண்டிருந்தது. 'இன்று இரவு...' நான் மனதிற்குள் கூறிக் கொண்டேன். இன்றைய இரவு....'

அவளைக் கட்டிப் பிடித்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டேன். அவளுடைய தலை முடிகளுக்கு நடுவில் விரல்களை ஓடவிட்டு, காதுக்கு மேலே முத்தமிட்டேன். அழுத்தப்பட்ட ஒரு மெல்லிய அழுகையுடன் ரதி கண்களை மூடிக் கொண்டாள். மங்கலான நிலவு வெளிச்சத்தில் அந்தக் கண்களின் ஓரத்தில் ஒரு கண்ணீர்த் துளி ஒதுங்கி நின்று  ஒளிர்வதை என்னால் பார்க்க முடிந்தது.

அவ்வப்போது பாலைப் பூக்கள் உதிர்ந்து விழுந்து கொண்டிருந்தன. மன்னரின் அரண்மனையில் பணப் பெட்டியைப் பாதுகாப்பவனைப் போல காற்று சிறிதும் தவறாமல், வேலை செய்து கொண்டிருக்க வேண்டும்.

என்னுடைய முதுகில் அவள் தன் கைகளால் வருடினாள். தலையின் பின்பகுதியில் இருந்த முடியைப் பிடித்து இழுத்து வெறியுடன் என்னை அணைத்துக் கொண்டாள்.

மூடிய கண்களில் கன்னத்திற்கு நேர் மேலே, கீழ் கண் இமைக்கு மிகவும் அருகில், கன்னக் குழிகளில், உதடுகளில், மூக்கின் நுனியில், கழுத்திற்கு மேலே, மார்பில்- எல்லா இடங்களிலும் நான் முத்தமிட்டேன். நிலவு தழுவிக் கொண்டிருந்த பாலை மரத்தின் தடிமீது சாய்ந்து நின்று கொண்டு ரதி அந்த முத்தங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டிருந்தாள்.


நிழல் இருந்த பக்கம் நகர்ந்து நிற்கக்கூட நாங்கள் மறந்துவிட்டோம். இன்று எங்களுக்கு நிலவைப் பார்த்துக்கூட பயமில்லை.

பாறைகளைத் தூளாக்கித் தகர்த்துக் கொண்டு குதித்துப் பாயும் மலை நீரின் பாய்ச்சலைப் போல எனக்குள் உணர்ச்சி எழுந்து நின்றது.

நான் ஒரு ஆணாக மாறுகிறேன்.

கடந்து சென்ற சமீப நிமிடம் வரை எதற்கும் தகுதியற்றவனாக இருந்த நான் ஒரு பெரிய சக்தியாக மாறுகிறேன்.

"பப்பு!"- அவள் முணுமுணுத்தாள்: "என்னால போக முடியாது."

நான் அதைக் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அவளுடைய மார்பை நிர்வாணமாக்கும் அவசரத்தில் நான் இருந்தேன். அவிழ்க்கும் போது, ப்ராவின் இரண்டு முனைப் பகுதிகளிலும் ஏராளமான பிச்சிப்பூக்கள் இருப்பதைப் பார்த்தேன்.

"இது எதற்கு?"- கேட்காமல் இருக்க முடியவில்லை.

"முகர்ந்து பார்க்க..."

"யாருக்கு?"

"என்... என்... என்னோட மகனுக்கு..."

சொல்லி முடிப்பதற்கு முன்னால் அவள் என்னுடைய நெற்றியில் முத்தமிட்டாள். முகத்தை மார்போடு சேர்த்து அழுத்தினாள். அவளுடைய ஒரு கால் என்னுடைய கால்களுடன் பிணைந்து மேலே ஏறியது.

ஆச்சரியமாக இருந்தது. எனக்கு இன்று கூச்சமே இல்லை. நான் இப்போது முழுமையான ஒரு ஆணாக மாறியிருக்கிறேன்.

அந்தப் புரிதல் மேலும் அதிகமான பலத்தைத் தந்தது.

ஆணின் கைகளுக்குள் பெண் நெருங்கிக் கிடந்தாள். அவன் அவளுடைய உடம்பு முழுவதையும் விரல்களால் தடவினான். அவளுடைய மார்பிலிருந்து எழுந்த மென்மையான நறுமலரில் அவன் உதடுகளை வைத்தான். அவளுடைய கால்களின் பலம் குறைந்து குறைந்து இறுதியில் இல்லாமல் போவதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் அவனுடைய உடல்மீது முழுமையாக சாய்ந்து விழுந்தாள்.

"நான் மோசமானவளா?"- அவள் கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை.

"மோசமானவள் இல்லை... தெரியுதா? என் மகனே, நீ அந்த அளவிற்கு மோகம் கொண்டிருப்பது தெரிஞ்சுதான் நான் இறங்கி வந்தேன்"- அவள் சொன்னாள். அவன் 'உம்' கொட்டினான்.

"எல்லா பெண்களையும் பார்க்குறப்போல்லாம் இப்படி தோணுமா?"

"இல்ல..."- அவன் சொன்னான். "ரது அக்கா, எனக்கு உங்க மேல மட்டும்தான் விருப்பம்"- அந்த வார்த்தைகள் தந்த நிம்மதியில் அவள் தன் கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய கழுத்தில் அவன் நிறுத்தாமல் முத்தமிட்டுக் கொண்டிருந்தான். முத்தங்களுக்கு மத்தியில் தலையை உயர்த்தி அவன் கேட்டான்: "ரது அக்கா, நான் உங்களைத் திருமணம் செய்து கொள்ளட்டுமா?" அந்தக் குரலில் இருந்த உண்மைத் தன்மை அவளை குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க வைத்தது. "எதற்கு? என் மகனே, வயசாகி கல்யாணம் பண்ணி இருக்குற நான் மட்டும்தான் உனக்குக் கிடைச்சிருக்கேனா?" அவன் அவற்றைப் பற்றியெல்லாம் யோசித்திருக்கவில்லை. அதனால் அவளுடைய கேள்வியைக் கேட்டபோது அவனுக்கு வெட்கமாக இருந்தது. அதைப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்: "என் மகனே, உனக்கு கவலையா இருக்கு... அப்படித்தானே?" "இல்ல..."- அவனுடைய கண்கள் தரையையே பார்த்தன. அது ஏன் என்று அவனுக்கே புரியவில்லை. அதை மறைப்பதற்காக அவன் அவளுடைய வயிற்றின் மீது விரல்களை ஓட்டினான். மார்பில் முகத்தை வைத்தான். அவள் அவனுடைய கண்களில் முத்தமிட்டாள். அங்கிருந்து உதடுகளை எடுக்காமல் தூக்கக் கலக்கம் நிறைந்த குரலில் அவள் கேட்டாள்: "படுக்க வேண்டாமா?"

அவன் கைகளை விரித்து நான்கு பக்கங்களிலும் பார்த்தான். நிலவு சற்று மங்கிவிட்டிருந்தது. மரங்கள் அனைத்தும் அமைதியாக நின்றிருந்தன. இடையில் அவ்வப்போது வெப்பக் காற்று வீசிக் கொண்டிருந்தது. மங்கலான நிலவு வெளிச்சத்தில் நிர்வாணமான சதை எழுச்சியுடன் நின்றிருந்தது. அவன் அவளை இறுக அணைத்துக் கொண்டு நிலவு ஒளி இல்லாத நிழலை நோக்கி நகர்ந்தான். அங்கு விரிந்து கிடக்கும் பாலை இலைகளின் மீது அவளைப் படுக்க வைத்தான். திடீரென்று அது நடந்தது. ஒரு உரத்த அழுகைச் சத்தம் அவனையும் மீறி வெளிப்பட்டது. சூழ்நிலையைப் பற்றிய உணர்வு வந்தவுடன், "நான் ஓடிப்போய் சொல்லட்டுமா?" என்று, மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு அவன் கேட்டான். "வேண்டாம்"- அவள் ரவிக்கையை அணிவதற்கு மத்தியில் சிறிதும் பதட்டமே இல்லாத குரலில் சொன்னாள்:

"அப்போ... எதற்காக நாம் இங்கே வந்தோம் என்ற கேள்வி வரும். நான் அங்கே... வீட்டுக்குப் போயிடுறேன். மகனே, நீ போய் படு..."

"ரது அக்கா."

"ரதீன்னு கூப்பிடு"- அவள் என்னை வளைத்துச் சுற்றி மீண்டும் ஒரு முறை முத்தமிட்டாள்.

"பாம்பு..."- நான் நடுங்கிக் கொண்டே ஞாபகப்படுத்தினேன்.

அவள் அதைக் கேட்கவில்லை என்பது மாதிரி இருந்தது.

"ரதீன்னு ஒரு தடவை கூப்பிடு மகனே."

"ரதீ..."

அவள் அடுத்த நிமிடம் அழுதாள்.

"நான் இறந்துவிட்டால்...?"- அதைச் சொல்லு போது அழுகைக்கு நடுவிலும் அவள் புன்னகைத்தாள்.

"என்னை மறந்திடுவியா?"

"இல்ல... இல்ல..."- என்னால் என்னையே கட்டுப்படுத்த முடியவில்லை.

ரதி சேம்புக் குவியலில் இருந்து ஒரு கயிறை அறுத்து கால் பாதத்தில் இறுகக் கட்டினாள். ரவிக்கையில் இருந்து எடுத்த ஒரு சேஃப்டி பின்னைக் கொண்டு காயத்தை இழுத்துக் கிழித்தாள்.

"வாய்க்குள் ஏதாவது காயம் இருக்குதா?"

"இல்ல..."

"அப்படின்னா... இந்தக் காயத்துல இருந்து ரத்தத்தை உறிஞ்சி எடுத்துத் துப்பறியா?"

என்ன செய்கிறோம் என்பதைப் பற்றிக் கூட நினைக்காமல் அந்தக் காயத்தில் உதடுகளை வைத்தேன். மூளை செயல்படுவதையே நிறுத்திவிட்டிருந்தது. மூளை ஒரு கரிமருந்து சாலையைப் போல எனக்குத் தோன்றியது.

என்னுடைய உதடுகள் அந்தக் கால் பாதத்தில் பட்டு முத்தத்தில் ஈடுபட்டது. ரத்த முத்தம். வாய்க்குள் உப்பு ருசி கொண்ட ரத்தம் வேகமாக நுழைந்தது. இரண்டு தடவை அதை வெளியே துப்பினேன். அப்போது அவள் என்னைப் பிடித்து எழுப்பினாள்.

"போதும்... புறப்படு..."

"நான் உங்களுடன் வீடு வரைக்கும் வர்றேன்."

அவள் மீண்டும் ஒருமுறை என் ரத்தம் படிந்த உதட்டில் முத்தமிட்டாள்.

"பொழுது விடிந்தவுடன் போறேல்ல?"- அவளுடைய குரலில் களைப்பு இருந்தது. உயிரில்லாத ஒருவகையான பலவீனமான குரல். விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய உடலில் பரவுவதைப் போல் எனக்குத் தோன்றியது. கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மூடுகின்றனவோ?

"போய்விட்டால் என்னை மறந்துவிடக் கூடாது."

"இல்ல..."- நான் மூச்சை அடக்கி, அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு சொன்னேன்.

எல்லாவற்றுக்கும் நானே காரணம்.

எல்லா விஷயங்களும் எனக்காக.

"சரி... புறப்படு"- அவள் சொன்னாள்.

ஆகாயம் வெடித்துக் கொட்டியதைப் போல மழை பெய்தது. அதைத் தொடர்ந்து இடி இடித்தது.


மரங்கள் இப்படியும் அப்படியுமாக ஆடின. நாங்கள் இரண்டு திசைகளிலும் ஓடினோம்.

சிறிது தூரம் ஓடிவிட்டு, நான் திரும்பிப் பார்த்தேன். மழையின் நூல்கள் வழியாக காட்சி தெளிவாக தெரியவில்லை.

எனினும் நான் அவளைப் பார்த்தேன்.

தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழையில் ஓடுவதற்கு சக்தியில்லாமல் முழுமையாக நனைந்து கொண்டு ஒரு காலை இழுத்தவாறு அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள்.

தலையைத் துவட்டிக் கொண்டிருந்தபோது, மேற்குப் பக்கத்திலிருந்து ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. அவளுடைய தாயின் குரலை என்னால் அடையாளம் காண முடிந்தது.

தலைமுடியை வாரி, முன் பக்கத்தை அடைந்து எதுவுமே தெரியாதவனைப் போல- எல்லாவற்றையும் அறியாதவனைப் போல பார்த்துக் கொண்டு நின்றிருந்ததேன்.

என் தந்தை மழையில் இறங்கி -ஓடினார்.

நானும் என் தாயும் சித்தியும் அக்காவும் என்ன நடந்தது, என்று தெரியாமல் வாசலையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தோம். எல்லோரும் பதைபதைப்புடன் இருந்தார்கள்.

கோவிந்தன் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை.

சிறிது நேரம் சென்றதும் என் தந்தை நனைந்தவாறு வந்தார்.

"அங்கே இருக்குற பொண்ணை பாம்பு கடிச்சிருச்சு. சுய உணர்வு இல்லாமல் கிடக்குறா."

என் தாய் அதிர்ச்சியடைவதை நான் பார்த்தேன். அக்கா அழ ஆரம்பித்தாள்.

தலையைத் துவட்டுவதற்கு மத்தியில் என் தந்தை சொன்னார்: "விஷயம் எடுக்குற ஆள்கிட்ட கொண்டு போகப் போறாங்க."

மேற்குப் பக்க நிலத்தில் லாந்தர் விளக்குகளும் குடைகளும் தெரிந்தன. பாம்பைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியாக இருக்கும்.

என் தந்தை குடையை எடுத்துக் கொண்டு வெளியேறியபோது என் தாய் ஞாபகப்படுத்தினாள்: "அவங்ககூட போயிடாதீங்க. எங்கே கொண்டு போறாங்கன்னு தெரியாமல் போயிட்டால், காலையில பையனை கல்லூரிக்கு அழைச்சிட்டுப் போகணுமே!"

"இப்போ வந்திடுறேன்"- என் தந்தை சொன்னார். தொடர்ந்து மழையில் இறங்கி நடந்தார்.

"நான் அவருடன் போகட்டுமா?"- தயங்கித் தயங்கி கேட்டேன்.

"எதற்கு?"- என் தாயின் குரல் மிகவும் கடுமையாக இருந்தது.

"பக்கத்து வீட்டில் இருப்பவர்களைப் பாம்பு கடிச்சா, விசாரிக்க வேண்டாமா?"

என் குரலில் கவலையும் செயலற்ற நிலையும் அதிகமாக இருந்தன.

"ஓ... அதற்காக நீ போக வேண்டாம். போய் படு. பொழுது விடிஞ்சவுடன் புறப்படணும்."

என் தாய் என்னையே வெறித்துப் பார்த்தாள். சிறைத் தண்டனை முடிந்து வெளியே வரும் திருடன், அடுத்து திருடுவதற்காகப் போக ஆரம்பிக்கும் போது போலீஸ்காரன் பார்க்கும் பார்வை அப்போது என்னுடைய ஞாபகத்தில் வந்தது.

"ஹா! இவன் போய் விசாரிக்கப் போறானாம்!"- சித்தி, சொன்னாள்: "போய் படுடா."

தூக்கம் வரவேயில்லை.

மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

மழையின் முடிவற்ற இழைகளை யாரோ அங்கு... மேலே இருந்து அவிழ்த்துவிடுகிறார்கள். இடி முழக்கங்கள் வீட்டை நடுங்கச் செய்தன. மேற்குப் பக்க நிலத்தில் இருந்த தென்னை மரத்தில் மின்னல்கள் விழுந்து எரிந்து கொண்டிருந்தது. வேகமாக விழுந்து கொண்டிருந்த மழைக்கு மத்தியில், அணையாமல் பலமாக உயர்ந்து எரிந்து கொண்டிருந்த தீ ஜூவாலைகளைப் பார்த்து நான் அதிர்ந்து போய் நடுங்கினேன்.

என் தந்தை திரும்பி வந்திருந்தார். காலையில் நகரத்திற்குப் போக வேண்டியதிருப்பதால், விஷத்தை எடுப்பவரிடம் ரதியைக் கொண்டு சென்றவர்களின் கூட்டத்துடன் அவரால் போக முடியவில்லை.

இதயம் நின்று விட்டதைப் போல இருந்தது. ரதியின் உருவம் மனம் முழுக்க நிறைந்திருந்தது. பாசம் கொண்டதால் மட்டும் ஒரு ஆண் பிள்ளையின் விருப்பத்திற்குத் தயாரான ஒரு பெண்.

என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒரு ஆச்சரியமாக அவள் வளர்ந்து கொண்டிருந்தாள்.

படுத்துப் படுத்து எப்போதோ தூங்கிவிட்டேன். தூக்கத்திற்கு மத்தியில் ஒரு கனவு கண்டேன்.

ஒரு சவ அடக்கம்.

பாம்பு கடித்து இறந்த ஒரு இளம்பெண்ணை எல்லோரும் சேர்ந்து குழிக்குள் இறக்கி வைக்கிறார்கள். அவளுடைய முகம் தெரியவில்லை. அழகும் இளமையும் துடித்துக் கொண்டிருக்கும் மார்பின்மீது மண் விழுகிறது. பச்சைப்புல் அவளுக்கு மேலே போர்வையாக ஆகிறது. நல்ல சிவப்பு நிறம் கலந்த சிறுமலர்கள் புற்களுடைய நுனியில் மலர்ந்து வருகின்றன.

அப்போது திடுக்கிட்டுக் கண் விழித்துவிட்டேன். எந்த யாமத்தில் நான் கனவு கண்டேன்? எந்த யாமத்தில் காணும் கனவுகள் உண்மையாகவே நடக்கும்?

பதைபதைப்படைந்த இதயத்துடன் அதையே நினைத்துக் கொண்டு படுத்திருந்தபோது, என் தாய் வருவதைப் பார்த்தேன்.

என்னை எழுப்புவதற்காக.

8

ழை கிட்டத்தட்ட நின்றுவிட்ட புலர்காலைப் பொழுது என் தாயின் கால்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றி, பூஜை அறைக்குள் சென்று தொழுது, நான் வெளியேறி நடந்தேன்.

கோவிந்தன் தூக்கக் கலக்கத்துடன் படி வரையில் வந்தான். அவனுடைய கண்கள் நீரால் நிறையத் தொடங்கியிருந்தன.

வேலைக்காரனின் தலையில் பொருட்களை வைத்துவிட்டு, என் தந்தை முன்னால் நடந்து போயிருந்தார். மூன்று பேர் ஒரே நேரத்தில் அந்தப் பாதையில் போகக் கூடாதே!

அதிகாலை நேரத்தின் வெளிச்சம் கிராமத்துப் பாதையில் தெரிந்தது.

சேப்பாட்டு சந்திப்பை அடைய ஒன்றிரண்டு மைல்கள் நடக்க வேண்டும். அங்கு நின்றால் மட்டுமே பேருந்து வரும்.

ரதிக்கு என்ன ஆனது என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை. என் தாயிடம் கேட்டேன்.

"நான் அங்கே போய், ரது அக்காவின் அம்மாவிடம் போறேன்னு சொல்லிட்டு வரட்டுமா?"

"அங்கே யாரும் இல்ல..."- என் தாய் கவலையுடன் சொன்னாள்: "எல்லோரும் அந்தப் பெண் பிள்ளையை ஹரிப்பாட்டு தம்பியிடம் கொண்டு போயிருக்காங்க."

தம்பிதான் எல்லோருக்கும் தெரிந்த வரையில் மிகப் பெரிய விஷத்தை எடுக்கும் மனிதர்.

நான் இதயத்துடிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன்: "ரது அக்காவுக்கு...?"

"எதுவும் தெரியல... ஆயுள் இருந்தால் கிடைக்கும். கஷ்டம்... நல்ல பொண்ணு!"

வயல்களின் முகத்தில் உட்கார்ந்து கொண்டு தவளைகள் கத்தின. வயலில் நீர் முழுமையாக நிறைந்திருந்தது.

காற்றில் குளிர்ச்சி இருந்தது-

இரு பக்கங்களிலும் இருந்த நிலத்தின் ஓரங்களில் விரிந்து வந்து கொண்டிருந்த காளான்கள், மழை நீரின் தழுவல் பட்டு ஒடிந்து விழுந்து கிடந்தன.

நான் முன்னால் நடந்தேன்.

இந்த கிராமம் என்னை விடைகூறி அனுப்பி வைக்கிறது- வேறு பலரையும் பயணத்திற்கு அனுப்பி வைத்ததைப் போல இனி நான் இந்த ஊரைச் சேர்ந்தவன் இல்லை. எனக்கு மிகவும் பிடித்த மனிதர்களை விட்டு நிரந்தரமாக நான் போகிறேன்.

இளம் சூரியன் வெளிச்சத்தை அள்ளி விதைத்துக் கொண்டிருந்தது.


பகல் வேளையில் எங்கோ சிறுவர்கள் பறக்கவிட்ட ஒரு பட்டம் நூல் அறுந்து ஒரு மரக்கிளையில் சிக்கிக் கிடப்பதைப் பார்த்தேன். மழைநீர் பட்டுத் தாள் முழுவதும் சுருக்கங்கள் விழுந்திருந்தன. அதிகாலைக் காற்று அதுவும் என்னைப் போல நடுங்கியது.

அழுகை வந்தது. என் ரது அக்காதான் அந்த மரக்கிளையில் சாய்ந்து விழுந்து கிடந்து நடுங்குகிறாள் என்பதைப் போல எனக்குத் தோன்றியது. முன்பு எவ்வளவு அழகாக அந்தப் பட்டம் இருந்திருக்கும்!

ஒரு மாட்டு வண்டி கடந்து சென்றது. வெட்டிக் குளங்கரை கோவிலில் நடை திறக்கும் நேரமாக இருக்க வேண்டும். மணியோசைகள் கேட்டன.

ரதீ! ரதீ! என் மனம் அழுதது.

இறக்கக்கூடாது! வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இந்த வீட்டிற்கு வரும் போது, என் தந்தையும் தாயும் உறங்கும் உயிரற்ற நிலத்திலிருந்து கவலைகள் நிறைந்த காற்று வீசி வரும் போது, அதில் ரது அக்காவின் உடலின் வாசனை மட்டும் இல்லாமல் இருக்க வேண்டும்!

தலைக்கு மேலே ஒரு ஒற்றைக் கிளி பறந்து போனது- ஒரு ஊசி போகும் வேகத்தில், நிற்காமல் ஓசை உண்டாக்கியவாறு.

நான் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.

தூரத்தில் மழை நின்று விட்டிருந்த மேகங்கள் அற்ற, சிவப்பு நிற ஆகாயத்தில் அது போய் கலக்கும் வரை நான் அங்கேயே நின்றிருந்தேன்.

பிறகு-

கண்கள் கண்ணீரால் நிறைந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.