Logo

புரட்சிக்காரி

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6248
puratchikari

ண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்து கொண்டு தவளை உயிர்போகும் வேதனையுடன் கத்தியது. முன்னோக்கி நகர்ந்து கொண்டு பிடியில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சி. தவளையின் காலோ எதுவோதான் தண்ணீர்ப் பாம்பின் வாய்க்குள் இருந்தது.

இப்போதைய சத்தம் இப்படி இருந்தது.

‘நான் போறேன்.’

இப்போது ஒரு உரத்த சத்தம்.

‘நான் போறேன்.’

இனி சத்தத்தின் அளவு குறையும். அடுத்த கட்டம் இதுவாக இருக்கும்.

‘விட்டால் போவேன். விட்டால் போவேன்.’

அதற்குப் பிறகு சத்தத்தின் அளவு மேலும் குறையும். பின்னர் அது இல்லாமலே போகும். எல்லாம் முடிந்தது!

கண்ணில் பட்ட தண்ணீர்ப் பாம்பின் தலையில் சரியாகப் படும் வண்ணம் ஒரு கல்லை எடுத்து எறிந்தால், அது தன் பிடியை விட்டு விடும். அதன்மூலம் ஒரு உயிர் தப்பிக்கும்.

ஆனால், வேறொரு விஷயம் இருக்கிறது. தண்ணீர் பாம்பின் விஷயம்! தண்ணீர்ப் பாம்பு தவளையைப் பிடித்துத் தின்றுதான் உயிர் வாழ முடியும். அது பட்டினி கிடக்கும். ஒரு உயிரினத்தின் வாயில் கிடைத்த இரையை விடுவிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயம். அது ஒரு உயிரினமாகவே இருந்தாலும் கூட. தவளை என்றைக்காவது தண்ணீர்ப் பாம்பின் அல்லது சாரைப் பாம்பின் வாய்க்குள் சிக்கி இரையாகியே தீர வேண்டும். இந்த தண்ணீர்ப் பாம்பின் அல்லது வேறொன்றின்.

இப்படி நினைத்து நினைத்து போய்க் கொண்டிருந்த போது ஒரு இடத்தில் போய் சேர்ந்தது. தவளை பிறந்ததே தண்ணீர்ப் பாம்பின் உணவாக ஆவதற்குத்தான்.

இல்லை!

நிச்சயமாக இல்லை.

தவளை பிறந்தது தவளையாக வாழ்வதற்குத்தான். இப்படி கற்பனை பண்ணிக் கூறியதாக தோன்றுகிறது. இல்லை... மனதில் உறுதிபடுத்திக் கொண்டு கூறியதுதான்.

ஒரே அமைதி!

பிடியிலிருந்து தவளை தப்பித்து விட்டதா? இல்லாவிட்டால் தண்ணீர்ப் பாம்பு அதை விழுங்கிவிட்டதா?

முன் பக்கமிருந்த பரந்து கிடக்கும் வயலின் அக்கரையில் இருக்கும் ஆற்றின் கரையில் வளர்ந்திருக்கும் செடிகளில் வரிசையாகத் தெரியும் சாலை விளக்குகள் அணைந்தன. நேரம் நள்ளிரவு நேரம் தாண்டி விட்டிருந்தது.

படகில் துடுப்பு மோதும் சத்தம் கேட்கிறது. யாரோ படகோட்டி வந்து கொண்டிருக்கிறான். வயலின் வடக்குப் பக்கத்தில் மடை இல்லை. ஊரின் ஏரியிலிருந்து ஆற்றில் செல்பவர்களாக இருந்தால், அந்த வழியில் வரமாட்டார்கள். சீக்கிரமாக வரவேண்டும் என்பதற்காக வயல் பக்கம் வந்தவர்களாக இருக்க வேண்டும்

ஆமாம்... அதேதான். அவர்கள் விசாரிக்கிறார்கள்.

"வீட்டுக்காரர்களே!"

பரந்த நீர்ப்பரப்பில் வழியும் திசையும் தெரியாமல் சுற்றித் திரியும் படகோட்டிகள் கேட்பார்கள்.

"வீட்டுக்காரர்களே, வடக்குப் பக்கம் மடை இருக்கிறதா?"

படகு நெருங்கி வருகிறது.

சிருதா சொன்னாள்:

"இல்லை. நீங்க எங்க போகணும்?"

"வடக்குப் பக்கம் இருக்குற ஏரிக்குப் போகணும்."

"அப்படியென்றால் வந்த வழியே திரும்பிப் போய், தெற்குப் பக்கத்து ஏரியை அடைஞ்சு மேற்குப் பக்கம் போய் வடக்குப் பக்கம் இருக்குற சின்ன நீர் பாதைக்குள் நுழைஞ்சு வடக்குப் பக்கமா போங்க"- தொடர்ந்து சிருதா சொன்னாள்:

"அந்த ஒடுகலான நீர்ப் பாதையில் படகு போகாது. ஒரே சேறும் சகதியுமா இருக்கும்."

படகு நகராமல் நின்று விட்டது. காலியான படகு அல்ல. படகில் என்னவோ இருக்கிறது. இருட்டாக இருந்தாலும், என்னவோ மூடப்பட்டிருப்பதைப்போல இருந்தது. கள்ளக்கடத்தல்காரர்களாக இருக்க வேண்டும். போலீஸ்காரர்களுக்கு பயந்து, ஆற்றையும் ஏரியையும் நிராகரித்து, சிறு வாய்க்கால்கள் வழியாகவும் வயல்கள் வழியாகவும் எடத்துவாவிற்கோ சங்ஙனாஞ்சேரிக்கோ கோட்டயத்திற்கோ சென்று அரிசி விற்க முயல்பவர்களாக இருக்க வேண்டும்.

அதிகமாக லாபம் அடைய நினைப்பவர்கள்!

மறைத்து வைத்த நெல்லைப் பணமாக்கிக் கொடுப்பவர்கள்!

சமூக துரோகிகள்!

இப்போது அவர்கள் பொறியில் சிக்கி விட்டிருக்கிறார்கள்.

அவர்களைப் பிடிக்க வேண்டும் என்று சமீபத்தில் கமிட்டி கூடிய போது, தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.

படகு சிறியதுதான். ஒரே ஒரு ஆள்தான் இருந்தான். யாரோ ஒருவன் எப்படியோ கொஞ்சம் பணம் தயார் பண்ணி, நெல்லை விலைக்கு வாங்கி, அவிய வைத்து, காயச் செய்து, குத்தி எடுத்துக் கொண்டு செல்பவனாக இருக்க வேண்டும். பிழைப்பதற்கான வழி! ஆற்றிலும் ஏரிகளிலும் நெருப்புக் கண்களைக் கொண்ட பிசாசுகளைப் போல அலைந்து கொண்டிருக்கும் போலீஸ்காரர்களின் படகிற்கு பயந்து படகு செல்லாத குறுக்கு வழியில் செல்லும் படகுக்காரன். அவனுக்கு ஐந்தோ எட்டோ பிள்ளைகள் இருப்பார்கள். போலீஸ்காரர்களின் படகிற்கு காணிக்கை செலுத்த காசில்லை. பெரிய அளவில் அரிசியைக் கடத்துபவர்கள் நேரான வழியில் செல்லலாம். போலீஸ்காரர்களின் படகு வழி மாறிச் சென்றுவிடும். இல்லாவிட்டால் அன்றைய தினம் அந்த வழியே அது வராது. இவை அனைத்தும் இயந்திரத்தனமாக நடக்கும்.

படகோட்டி படகைத் திருப்பி, துடுப்பைப் போட்டான். பாவம்! பிள்ளைகளின் வயிற்றை நிறைப்பதற்காகப் பாடுபடக்கூடியவன்!

படகு திருட்டுத்தனமாகச் செல்வதைப் போல் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. துடுப்பு நீரில் வேகமாக மோதிக் கொண்டிருந்தது. அவன் இன்று சந்தையை அடைந்து சரக்கை விற்றுக் காசாக்கி விடுவானா? நேரம் பாதி இரவு தாண்டிவிட்டது. சிறு சிறு வாய்க்கால் வழியாகத் துடுப்பு போட்டு எப்போது போய்ச் சேர்வது?

சந்தையை அடைந்துவிட்டால் சில நொடிகளில் சரக்கு விற்றுத் தீர்ந்துவிடும். நல்ல விலை. நாளை ஐந்தோ ஐந்தே காலோ ஆகும். அவனுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

வயலுக்கு மத்தியில் இருக்கும் காக்கைத் தீவில் மின்மினிப் பூச்சிகள் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருக்கின்றன. ஊரிலிருக்கும் மின்மினிப் பூச்சிகள் அனைத்தும் அங்குதான் வந்து கூடுகின்றன. எல்லா காலங்களிலும் அதுதான் நிலைமை. அங்கு வந்த காலத்திலிருந்தே அவள் அதைப் பார்க்கிறாள்.

தூரத்திலிருந்து இருட்டைக் கிழித்துக் கொண்டு மின்மினிப் பூச்சிகள் அந்த இடத்தை நோக்கித்தான் வேகமாகப் பறந்து செல்லும். சில இடங்களில் இருள் மிகவும் அடர்த்தியாக இருக்கும். அதனால் மின்மினிப் பூச்சிகள் மிகவும் சிரமப்பட்டு அடர்த்தி குறைவாக இருக்கும் இடத்தைத் தேடி இருட்டைக் கிழித்துக் கொண்டு செல்லும்.

மின்மினிப் பூச்சிகள் அந்த காக்கைக் தீவில் வந்து கூடுவதற்கான காரணம் என்ன? எப்போதும் அந்த இடத்தில் அதுதான் நடக்கும். சிருதா அங்கு வந்த நாளிலிருந்தே அதைப் பார்க்கிறாள். இப்போதும் அப்படித்தான்.

காக்கைத் தீவு ஒரு வரலாறு படைத்த வட்டமான நிலப் பகுதி. காக்கைத் தீவு எப்போது உண்டானது? யாருக்குத் தெரியும்?

புன்னப்புரை- வயலாருக்கு முன்னால் காக்கைத் தீவு வரலாறு படைத்தது. இந்த மனித வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு சம்பவம் அது.


காக்கைத் தீவில் இருந்த சோதர் அந்தக் கதையின் வீர நாயகனாக இருந்தார். எங்கெல்லாம் அறியப்படாத எத்தனை காக்கைத் தீவுகள் இருக்கின்றன! சோதர்கள் இருக்கிறார்கள்!

சிருதா நினைத்துப் பார்த்தாள். அங்கு நீலம்பேரூரில், சக்கச்சம்பாக்கில் காவாலத்தில்... பிறகு எங்கெங்கெல்லாமோ! எங்கெல்லாமோ!

சிருதா கண்ணனுடன் இரவோடு இரவாக ஓடிச் சென்ற ஏழாவது நாளன்று அது நடந்தது. ஒரு திங்கட்கிழமை இரவு வேளையில் அவள் போனாள். மறு ஞாயிற்றுக்கிழமை காக்கைத் தீவு சம்பவம் நடந்தது. அந்த இரவு வேளையிலும் காக்கைத் தீவில் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்து சேர்ந்தன.

ஸ்டாலினின் தந்தை செவ்வாய்க்கிழமை சென்றான்- வயலாருக்கு. அப்படித்தான் புதுப்பெண்ணை யாருக்கும் தெரியாமல் அவன் அழைத்துக் கொண்டு சென்றான். வயலாரில் சண்டைக்கான ஆயத்தங்கள் இருந்தன. அது அவளுக்குத் தெரியும். எனினும், வருவான் என்று எதிர்பார்த்து அவள் தூங்காமல் இருந்தாள். தூங்க முடியவில்லை. எப்படி ஒருத்தியால் உறங்க முடியும்?

சிருதா கண்ணனின் மனைவியானது தாலி கட்டி, துணி கொடுத்து அல்ல. வாத்தியமும் மேளமும் இல்லை. திருமணம் நடந்தது. இருட்டு வேளையில்தான். நட்சத்திரங்கள் கூட சாட்சியாக இல்லை. அவன் கதவைத் தட்டி அழைத்தான். அவள் வெளியேறி நடந்தாள். கார்மேகங்களால் கருப்பு நிறத்தில் வீங்கிப் போயிருந்த முகத்தை ஆகாயம் கொண்டிருந்தது. இலைகள் கூட அசையவில்லை. அடுத்த நிமிடம் நெருப்பும் மின்னலும் இடியும் பெரும் மழையும் உண்டாகலாம். அந்த அளவிற்கு இயற்கை உறைந்து போய்க் காணப்பட்டது. சிருதா கண்ணனுக்குப் பின்னால் அப்படிப் போகும் விஷயம் அந்தத் தாய்க்கு ஒருவேளை பிடிக்காமல் போயிருக்கலாம்.

 

சிருதா அந்த இரவில் நினைத்துப் பார்த்தாள்.

ஒரு முடிவு எடுக்கப்பட்ட இரவு. அதுதான் திருமணம்.

அது ஆரம்பமானது இப்படித்தான். காக்கைத் தீவில் பல்வேறு இடங்களையும் சேர்ந்த மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக வந்து சேர்ந்திருப்பதைப் பார்க்கும் போது சிருதாவிற்கு தன்னுடைய திருமண நாளைப் பற்றிய ஞாபகம் வந்து விட்டது. அந்த உறைந்து போயிருந்த இரவை சிருதா நினைத்துப் பார்த்தாள். திருமண இரவு!

கண்ணன் சிருதாவின் உள்ளங்கையைப் பற்றி அழுத்தினான். அப்படி இறுக்கமாகப் பிடித்த போது உள்ளங்கையின் எலும்புகள் ஒன்றோடொன்று உரசிக் கொண்டன. வேதனை உண்டாகியிருக்க வேண்டும். வேதனை உண்டானதா?

சிருதாவிற்குத் தெரியாது. இப்போது ஞாபகத்தில் இல்லை.

"எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு."

"எனக்கும்."

கண்ணனும் சிருதாவும் இப்படித் தங்களுக்குள் கூறிக் கொண்டார்கள்.

ஒரு குளிர்ச்சி.

மூடியிருந்த கறுத்த முகத்தைக் கொண்ட இயற்கையின் குணம் மாறியது. அந்தத் தாய் மென்மையானவளாக மாறுவாள். அவளால் அப்படியே அதிக நேரம் இருக்க முடியாது. அந்தக் குளிர்ச்சி வேறு எந்தக் காரணத்தாலும் அல்ல. தாயின் இளகிய குணத்தால்தான்.

காக்கைத் தீவில் அதற்குப் பிறகும் பல இடங்களில் இருந்தும்- நீலம்பேரூர், சக்கச்சம்பாக்க, சதுர்த்தியாகரி, காவாலம்- இப்படிப் பல இடங்களிலிருந்தும் மின்மினிப்பூச்சிகள் படு வேகமாக வந்து கூடுகின்றன. காக்கைத் தீவு ஒரு சந்திரமண்டலமாக மாறிவிடும்.

சிருதா இப்படித்தான் சொன்னாள்:

"அப்படி ஒரு மனிதராக இருந்ததால்தான், எனக்குப் பிடிச்சது."

தான் எப்படிப்பட்ட ஒரு ஆள் என்று கண்ணன் சொன்னான்?

அந்த வார்த்தைகளை சிருதாவால் இப்போது அப்படியே நினைத்துப் பார்க்க முடியவில்லை.

அவள் கூறிய வார்த்தைகளை ஞாபகத்தில் வைத்திருக்கிறாள்.

"நாளைக்கு குண்டு பட்டு இறந்தாலும் அதற்குப் பிறகுகூட நீங்கதான் என் கணவர்."

"அப்படின்னா நீதான் என் மனைவி!"

கண்ணன் சொன்னான்.

இயற்கை மூச்சுவிட்டது. பிரபஞ்சத்திற்கு அசைவு இருக்கிறது. மெல்லிய முணுமுணுப்புச் சத்தம். வானத்திலிருந்து துளிகள் விழுந்தன.

"நான் உன்னுடைய..."

"நான் உங்களுடைய..."

வானம் தெளிவானது.

இதுதான் திருமணம்.

அப்போது செவ்வாய்க்கிழமை வயலாருக்குச் சென்றிருந்த கண்ணன் ஞாயிற்றுக்கிழமை வரை திரும்பி வராததற்குக் கவலைப்பட வேண்டுமா?

எனினும், சிருதா பெண்தானே! அது மட்டுமல்ல- இளம்பெண்ணும் கூட. ரத்தமும் எலும்பும் உள்ளவள். சதைக்கு சக்தி இருக்கிறது. அவள் தூங்காமல் கவிழ்ந்து கிடந்தாள். திங்கட்கிழமை தான் அவள் பெண் என்பதைத் தெரிந்து கொண்டாள். பெண் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாள். ஆணால் பெண்ணுக்கு எதைத் தர முடியும் என்றும்; பெண்ணால் ஆணுக்கு எதைத் தர முடியும் என்பதையும் தெரிந்து கொண்டாள்.

அன்று மட்டுமே! அதற்குப் பிறகு இல்லை... அதற்கு முன்பும் இல்லை.

அன்று ஏக்கம் உண்டானது. அதனால்தான் தூக்கம் வராமலிருந்தது.

வெள்ளிக் கிழமை தெற்குப் பக்கம் இருந்த இட்டிக்காளி அக்கா ஒரு ரகசியத்தைச் சொன்னாள்:

"காக்கைத் தீவில் ஒரு தலைவர் வந்து யாருக்கும் தெரியாமல் மறைந்து இருக்காரு."

"எந்தத் தலைவர்?"

சிருதாவிற்குப் பல தலைவர்களையும் தெரியும். பல தலைவர்களின் வகுப்புகளுக்கும் போயிருக்கிறாள். பலருடைய உரைகளையும் கேட்டிருக்கிறாள்.

"அப்படியா?"

இட்டிக்காளிக்குத் தெரியாது.

காக்கைத் தீவில் சோதர்தான் தங்கியிருக்கிறான். சோதரைப் போல வேறொருவன் அந்த ஊரில் இல்லை. தலையைத் தூக்கிப் பார்த்தால்தான் சோதருடைய முகத்தைப் பார்க்க முடியும். பருமனான மனிதன். வயது என்ன இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. வாயைத் திறந்தால் நீண்ட தூரம் வரை கேட்கும். கர்ஜிப்பதைப் போல இருக்கும். இப்போதும் நான்கு ஆட்கள் செய்யக்கூடிய வேலையைச் செய்வான். ஆறு ஏழு பேர் எதிர்த்து நின்றாலும், சோதருக்கு நிகராக ஆக முடியாது. சோதர் இடிகாட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைக்காரனாக இருந்தான். அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் அழிந்து போய்விட்டார்கள்.

இட்டிக்காளிதான் இந்த விஷயத்தைச் சொன்னாள்.

சோதருக்கு மனைவியும் பிள்ளைகளும் இருந்தார்கள். எல்லோரும் இறந்துவிட்டார்கள். ஒரு காலத்தின் ஓட்டத்தில் அவை நடந்து முடிந்துவிட்டன. சோதர் தனியாகத்தான் இருக்கிறான். காக்கைத் தீவுப் பக்கம் யாரும் போக மாட்டார்கள்.

யாருக்கும் தெரியாமல் மறைந்து வாழ்வதற்கு ஏற்ற இடம்தான் காக்கைத் தீவு.

சிருதா கேட்டாள்:

"அந்த அண்ணன் யூனியனைச் சேர்ந்தவரா?"

இட்டிக்காளி சொன்னாள்:

"இது என்ன கேள்வி? சரிதான்... பெரிய ஆளு அவர். ஊர்வலம் போறதா இருந்தா, முன்னால அவர்தான் நிற்பார். சாகுறதுக்குக் கூட பயப்பட மாட்டார்."

அன்று இரவுதான் காக்கைத் தீவு சம்பவம் நடந்தது.

போலீஸ் தேடிக் கொண்டிருந்த தலைவர்தான் காக்கைத் தீவில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருந்தவர்.

ஒரே கூப்பாடும் சத்தமுமாக இருந்தன. வயலின் நான்கு கரைகளும் கண் விழித்தன. காக்கைத் தீவை நோக்கி இரண்டு படகுகள் பயணித்தன. இரும்புத் தொப்பியும் துப்பாக்கியும் வைத்திருந்த போலீஸ்காரர்கள் அவர்கள். துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. போலீஸ்காரர்கள்தான் சுட்டவர்கள்.


சுவாரசியமான செய்தி அதுவல்ல. போலீஸ்காரர்கள் காக்கைத் தீவிற்குள் சிக்கிக் கொண்டார்கள். அவர்கள் போக முடியாமல் மாட்டிக் கொண்டார்கள். அவர்கள் பயணித்து வந்த வழியை அந்த இரவிலேயே ஆண்கள் அடைத்து விட்டார்கள் படகுகளால் வெளியே செல்ல முடியவில்லை. தலைவர் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அதற்குப் பிறகு சோதரையும் யாரும் பார்க்கவில்லை. போலீஸ்காரர்கள் காக்கைத் தீவை அடைந்த போது, தலைவரைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு சோதர் அங்கிருந்து கிளம்பி விட்டிருந்தான்.

பொழுது விடிந்து ஆலப்புழையிலிருந்து ராணுவம் வந்துதான் காக்கைத் தீவில் மாட்டிக் கொண்டிருந்த போலீஸ்காரர்களைக் காப்பாற்றியது.

படகு பயணிக்கும் வழியைத் திறந்து கொடுக்க ஊரில் ஒரு ஆள்கூட கிடைக்கவில்லை. ராணுவத்தினரே மடையைத் திறந்தார்கள். ஆனால், எல்லா வீடுகளுக்குள்ளும் அவர்கள் நுழைந்து அட்டகாசம் செய்தார்கள். ஒரு இடத்திலும் ஒரு ஆண்கூட இல்லை. சட்டி, பானை அனைத்தையும் அவர்கள் அடித்து உடைத்தார்கள். ஏதாவது பொட்டோ பொடியோ இருந்தால், அவற்றை அவர்கள் எடுத்துக் கொண்டு போகவும் செய்தார்கள்.

கொள்ளை நடந்தது. கொள்ளை!

உண்மைதான். அப்படி நடக்காமல் இருக்குமா? அவர்களுக்குக் கோபம் வராமல் இருக்குமா?

பெண்கள் அனைவரையும் தங்களுடன் அழைத்துச் சென்றார்கள். அந்தப் பெண்களின் கூட்டத்தில் சிருதாவும் இருந்தாள். அன்றே பெண்களை விட்டு விடவும் செய்தார்கள். அன்றுதான் சிருதா முதல் தடவையாக சிறைக்குச் சென்றாள். திருமணம் நடந்த ஏழாவது நாள்.

 

பத்து சென்ட் நிலம் வசிப்பதற்குக் கிடைத்தது. மொத்தம் பதினைந்து சென்ட். அதில் பத்து சென்ட் போக, ஐந்து சென்ட் மீதம் இருந்தது. அரைக்காட்டுக்காரர்களின் பங்கு. அவர்களுக்கு மொத்தத்தில் இருந்தது வேறொரு பதினைந்து சென்ட் இடம்.

அரைக்காட்டுக் குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர் சொன்னார்:

"சிருதா, ஐந்து சென்ட் நிலத்திற்கான விலையை இங்கே தந்திடு. நாங்கள் இருக்கும் வீடு எப்போது கீழே விழும் என்று எங்களுக்கே தெரியாது. நீதான் பார்க்குறியே! அதைச் சரி பண்ணணும். அப்படிச் செய்தால், உனக்கு நூறு நல்ல விஷயங்கள் நடக்கும்."

அரைக்காட்டுக் குடும்பத்தின் பெரியவர் பதிலை எதிர்பார்த்து நின்றிருந்தார்.

அந்த வட்டமான வசிப்பிடத்திற்கு முத்தோலித்தரை என்று பெயர். ஸ்டாலின் பிறந்த பிறகு, சிருதா கண்ணனின் வீட்டிலிருந்து இடம் பெயர்ந்தாள். கண்ணனுடைய சகோதரிகளின் சண்டைகளை அவளால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கண்ணன் புன்னப்புரையில் குண்டடி பட்டு இறந்ததற்கு சிருதாதான் காரணமாம்! ஒரு புரட்சிக்காரி!  ஒரு விஷயம் உண்மைதான். முனையில் சிவப்புக் கொடி கட்டப்பட்டிருக்கும் வேல் கம்பை கண்ணனின் கையில் கொடுத்தவள் சிருதாதான்.

நாத்தனார்மார்களின் சண்டைகளைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்ற நிலை வந்தபோது, அரைக்காட்டுக் குடும்பத்தின் மூத்தவரிடம் சிருதா கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"முத்தோலி நிலத்தில் ஒரு குடிசையை உண்டாக்கி இருந்துக்கட்டுமா?"

"இருந்துக்கோ. அந்த செடிகளையெல்லாம் பத்திரமா பார்த்துக்கணும். மாடுகள் தின்றுவிடக்கூடாது."

அப்போது முத்தோலி நிலத்தில் ஏராளமான கன்றுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆள் வசிப்பது செடிகளுக்குப் பாதுகாப்பான விஷயமும்கூட.

சிருதா ஒரு ஆறு கால்களைக் கொண்ட வீட்டை உண்டாக்கினாள். அந்த வீட்டிலேயே அவள் தங்கவும் செய்தாள்.

இப்போது அரைக்காட்டுப் பெரியவருக்கு வயது மிகவும் அதிகம் ஆகிவிட்டது. அந்தக் காலத்தில் அரைக்காட்டு வீட்டுக்காரர்களுக்குப் பத்து பறை நிலமும் நாற்பது சென்ட் வீட்டு மனையும் சொந்தமாக இருந்தன.

நிலச்சட்டம் வந்தது. குடியிருப்பதற்கான நிலத்தை வளைத்து போடுவதற்கு மார்க்சிஸ்ட் கட்சி முடிவு எடுத்தது. மாநிலம் முழுவதும் குடியிருக்க நினைத்தவர்கள் பத்து சென்ட் நிலத்தை வளைத்துப் போட்டார்கள்.

அரைக்காட்டுப் பெரியவர் கேட்டார்:

"சிருதா, எதற்கு நீ நிலத்தை வளைச்சுப் போடுறே?"

"அது என்னுடைய உரிமை."

அரைக்காட்டுக் கிழவர் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டார்.

"நாங்க பத்து பேர் வாழ்றதுக்கு இதுதான் இருக்கு."

"அதுல பத்து சென்ட் நிலம் எனக்காக உள்ளது."

பெரியவர் சம்மதித்தார்.

"வெள்ளைக் காய் கிடைக்கிற தென்னை முழுவதும் உனக்குத்தான்."

பெரியவர் தொடர்ந்து சொன்னார்:

"எங்களை விட நீதான் நல்லா இருக்கே!"

குடியேற நினைப்பவன் நிலச்சுவான்தார்களிடம் எப்படிப் பேச வேண்டும் என்பதை நான்கு நாட்களுக்கு முன்னால் நடந்த வகுப்பில் கூட தெளிவாகக் கூறியிருந்தார்கள். அந்த மொழி சிருதாவிற்கு நன்கு தெரியும்.

அரைக்காட்டு பெரியவர் தன்னுடைய உடலைக் கொஞ்சம் சொறிந்த போது, சொறிந்த இடத்திலிருந்து தூசி கிளம்பியது.

சிருதா அவரை 'எதுவும் பேசாம போங்க' என்று கூறுவது மாதிரி பார்த்தாள்.

பெரியவர் கேட்டார்:

"அளந்து பார்த்துத்தான் வளைச்சுப் போட்டியா?"

"பிறகு எப்படி?"

"அய்யோ... கோபப்படாதே சிருதா! மன வருத்தம் காரணமாக நான் கேட்கிறேன்."

பெரியவர் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அதற்குப் பிறகும் வேறென்னவோ கேட்க வேண்டும் என்று நினைப்பதைப் போல இருந்தது. அவர் எதற்காக நின்று கொண்டிருக்கிறார் என்று மனதில் நினைத்தவாறு சிருதா அவரைப் பார்த்தாள். அந்த அளவிற்கு நிலத்தின் சொந்தக்காரரிடம் நடக்க வேண்டியதுதான். நடவடிக்கை அதிகாரத் தொனியில் இருக்க வேண்டும். கடுமையாக எதிர்க்க வேண்டும். நிலச்சுவான்தார்தனத்தின் முகத்தில் கொடுக்க வேண்டிய ஒரு அடியே அது. சிருதா அப்படிச் சொல்லலாமா? சொன்னால் என்ன? அது தேவைதான். அதுதான் செய்ய வேண்டியது.

பார்வையால் ஒரு மாதிரி ஆகிவிட்ட பெரியவர் மெல்ல சிரித்துக் கொண்டார். அது சொறிந்ததால் உண்டான சுகத்தால் என்பதாகக் காட்டிக் கொண்டு நின்றிருந்தார்.

தலைமுடியைச் சொறிவதற்கு மத்தியில் வறட்டு சொறிவும் இருக்கிறது. சொறியும் போது தூசி பறக்கும். பெரியவர் கேட்பதற்கு விஷயங்கள் இருக்கின்றன. சிருதாவைப் பொறுத்தவரையில் கிழவர் அங்கிருந்து போனாலே போதும்.

சிருதா புன்னப்புரை தியாகியின் மனைவி. ஆனால், சக்கச்சம்பாக்கில் ஈர்யேத்ர குடும்பத்தில் கீழ்நிலையில் இருக்கும் ஒருவனின் மகளாகப் பிறந்தவள் அவள்.

பரம்பரைக்கு அர்த்தம் இருக்கிறதா? யாருக்குத் தெரியும்? ஓதிக்கோன் நம்பூதிரி மார்க்ஸை உச்சரிப்பது பூஜை அறையில் உட்கார்ந்து கொண்டு வேத மந்திரங்களைக் கூறுவதைப் போல இருக்கும். உச்சரிப்பு மாறுமோ? அதுதான் இந்தியா. அதுதான் கேரளம்.

பெரியவர் கையைச் சொறிவதற்கிடையில் மூன்று நான்கு பேன்களை 'ஸ்' என்ற சத்தத்துடன் நசுக்கிக் கொன்றார். அது ஒரு மெல்லிய சுகத்தைக் கொடுத்த விஷயம்தான்.

கிழவர் அங்கிருந்து போனால் போதும் என்றிருந்தது சிருதாவிற்கு.

யாரிடம் என்றில்லாமல், அடுத்து கொல்ல இருந்த பருத்துப் போய் காணப்பட்ட பேனை சொறியும் இடத்தில் விரட்டிக் கொண்டிருப்பதற்கு இடையில் கிழவர் கேட்டார்:


"சிருதா, வளைச்சுப் போட்டுட்டேல்ல? அதற்குப் பிறகும் எட்டு தென்னை மரங்கள் வெளியே இருக்கு. அந்தத் தென்னை மரத்துல தேங்காய் பறிக்கட்டுமா? இன்னைக்கு வீட்டுல சாப்பாடு வைக்கல. அதுதான்!"

கிழவருக்கு ஒரு பேன் கிடைத்தது. பழுத்து நீருடன் காணப்பட்டது அது.

சிருதா எதுவும் பேசவில்லை. சிருதாவால் பேச முடியாது. என்ன பேசுவது?

கிழவர் தொடர்ந்து சொன்னார்: "சில இடங்களை நீ வளைத்துப் போட்டுக் கொண்டாலும், அதற்கு மேல் இருக்கும் தென்னை மரத்தில் ஏற நான் அனுமதிக்க மாட்டேன். பிறகு... அவங்க நிம்மதியாக வாழ்றதுக்குக் கையில் பணம் இருக்கு. வேற நிலமும் வயலும் இருப்பவர்களாக இருக்கும். இல்லாவிட்டால் வாழ்றதுக்கு வழிகள் இருக்கும். சம்பளமோ வேலையோ கூலியோ இருக்கும். எங்களுக்கு அப்படி எதுவும் இல்லை."

தன் மனதிற்கே தெரியாமல் சிருதா கூறினாள்:

"தேங்காய் பறிச்சிக்கோங்க."

நாக்கு அப்படி அசைந்து விட்டது.

அப்படிக் கிடைத்த ஐந்து சென்ட் நிலத்தை விற்பதற்காக அரைக்காட்டு கிழவர் போயிருக்கிறார். வேறு யாரும் கேட்க மாட்டார்கள். அப்படி இருப்பதால் எந்தவிதப் பயனும் இல்லை.

சிருதா யூனியன் மற்றும் கட்சியில் உறுப்பினராக இருந்தாள். அவளை எதிர்ப்பதற்கு யாரும் இல்லை. அவளுடைய வீட்டின் நான்கு பக்கங்களிலும் இருக்கும் ஐந்து சென்ட் நிலம் யாருக்கு வேண்டும்?

விலை கொடுக்கவில்லை, வாங்கவில்லை என்பதால் சிருதாவிற்கு ஒன்றுமில்லை. அந்த ஐந்து சென்ட்டும் தனக்குச் சொந்தமானது என்றே சிருதா நினைத்துக் கொண்டு வாழலாம். அதன் எல்லா பலன்களும் வசதிகளும் அவளுக்குத்தான். எதற்காகப் பணம் கொடுக்க வேண்டும்?

எனினும் அவள் கேட்டாள்:

"எவ்வளவு பணம் வேண்டும்?"

"ஊர்ல நடப்புல இருக்குற விலைதான். ஐநூறு ரூபாய் தா. எட்டு தென்னை மரங்கள் இருக்கே! எல்லா தென்னை மரங்களிலும் தேங்காய்கள் நல்லா பிடிச்சிருக்கு. சிருதா, உனக்கு நல்லது. நிலம் முழுவதும் உனக்குச் சொந்தமாகும். எனக்கும் அது நல்ல விஷயமாக இருக்கும். பட்டினி இருந்தாலும் ஒரே கூரைக்குள் சுருண்டு கிடக்கலாமே!"

சிருதாவிற்குக் கொஞ்சம் கோபம் வருவதைப் போல இருந்தது.

"ஆஹா! அந்த எட்டு தென்னை மரங்களில் இருந்து தேங்காய் பறிக்க சம்மதிச்சதுனால அந்த விலையைச் சொல்றீங்க? நல்லதுதான். நான் கொஞ்சம் தாராளமாக நடந்து கொண்டேன். அதற்காக என்னை எல்லாரும் குறை சொல்றாங்க. அடுத்த தடவை தேங்காய் பறிக்க சம்மதிக்கக்கூடாது என்று எல்லாரும் சொல்றாங்க. நான் கொஞ்சம் மனசு இளகிட்டேன்."

சிறிது நிறுத்திவிட்டு, சிருதா தொடர்ந்தாள்: "இருந்தாலும், இனிமேலும் தேங்காய் பறிக்க இங்கே வராமல் இருக்கணும்."

அதைக் கேட்டதும் கிழவரிடம் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் உண்டாகவில்லை. சொறியும் இடத்திலிருந்து மற்றொரு நல்ல பேனை அப்போது அவர் கண்டுபிடித்திருந்தார். அதற்குப் பிறகும் சிருதா நிறுத்தவில்லை. சிருதாவின் கோபம் அதிகரித்துக் கொண்டிருந்தது.

"பெரிய வசதி படைத்த முதலாளிமார்களுக்கு அவர்களுடைய பெரிய நிலங்கள் பக்கம் போக முடியாது என்பது தெரியுமா? யாராவது வெறுமனே கொஞ்சம் நடந்திருந்தாலும், அவங்க அப்படி நடந்தவங்களைக் கொன்னுட்டுத்தான் மறுவேலை பார்ப்பாங்க."

பெரியவர் யாரிடம் என்றில்லாமல் கூறினார்: "அதைப் பற்றி எனக்கு என்ன? நான் எந்த உயிரின் மேலேயும் மண்ணை வாரி போட்டது இல்ல. ஒரு எறும்பைக் கூட கொன்னது இல்லை. தேங்காய் இடும்படி நீதான் சொன்னே. நான் தேங்காய் இட்டேன். இப்போ அந்த மண்ணோட காசை இங்கே தரச் சொல்றேன்."

தொடர்ந்து கிழவர் சொன்னார்:

"கண்ணனோட வீட்டுல நாத்தனார்மார்களும் மாமியாரும் சண்டை போட்டப்போ, அதைப் பொறுத்துக்க முடியாமல் வந்தபோது, நீ கேட்டே. ஒரு சின்ன குடிசையைக் கட்டிக்கட்டுமான்னு. நான் அதற்கு சம்மதிச்சேன். ஏதாவது வாக்குவாதம் செய்தேனா? இப்போ பிள்ளைகள் என்னைக் குத்திக் கிழிக்கிறாங்க. அதைக் கொஞ்சம் நினைச்சுப் பாரு சிருதா."

"இந்த பூமி எல்லாம் பூமியில இருக்குற மனிதர்களுக்குச் சொந்தம்."

"அய்யோ... இது என்ன கூத்தா இருக்கு!"

"அது அப்படித்தான். நீங்க எல்லாருக்கும் சொந்தமான இடங்களை வளைச்சுப் போட்டுட்டீங்க."

"அய்யோ... அரவுக்காட்டு பகவதிமேல சத்தியமா சொல்றேன்... நான் யாருடைய நிலத்தையும் எடுக்கல. சொல்லப் போனால் ஒரு குச்சியைக் கூட இடம் மாற்றிப் போடல. சிருதா, என்ன இப்படிப் பேசுறே?"

கிழவருக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

"அந்தக்காலத்துல இருந்தே இது எங்களுடைய குடும்பத்துக்குச் சொந்தமானது. இது யாரிடமிருந்தும் வளைத்துப் போட்ட நிலம் இல்லை."

சிருதா சொன்னாள்: "பழைய ஆளுங்க வளைத்துப் போட்டதா இருக்கும்."

அதைக் கேட்டு கிழவர் ஒரு மாதிரி ஆகிவிட்டார். விஷயம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

"சிருதா, நீ என்ன விலை தருவே?"

"என் கையில அந்த அளவுக்குப் பணமெதுவும் இல்லை."

அவளையும் மீறி, அவளுக்கே தெரியாத ஒரு உணர்ச்சி நாக்கின் வழியே வெளிப்பட்டதைப் போல ஒரு வார்த்தை வெளியே வந்தது.

"முந்நூறு ரூபாய் தர்றேன்."

அதைச் சொல்லியிருக்க வேண்டாம். சொல்லிவிட்டாள். அது அதிகம்தான். இருநூறுக்கு அல்ல... நூறுக்கு ஒப்புக் கொண்டிருக்கலாம். ஒப்புக் கொள்ளாமல் இருந்தால் கிழவரால் என்ன செய்ய முடியும்? அவர் வந்து தேங்காய்களைப் பறிப்பாரா? அவருக்கு ஒரு தேங்காய் கிடைக்குமா? வேறு யாரும் வந்து வாங்குவார்களா?

கிழவர் சொன்னார்:

"நாநூறு ரூபாய் தா. நூறு ரூபாய் அதிகமா. ஒரு தடவை தேங்காய் பறிக்கும் காசு. அவ்வளவுதான்... இப்போ நூறு தேங்காய்களுக்கு நூறு ரூபாய் விலை. சிருதா, நீ பதினைந்து நாட்கள் வேலை செய்யிற பணம் இது. நீ ஒரு தனி பெண். எங்களுக்கு ஒரு தடவை நாநூறு ரூபாய் வந்திருச்சுன்னா, அவ்வளவுதான். சிருதா, உனக்கு காலாகாலத்திற்கும் இது இருக்கும். நூறு குணங்கள் இருக்கு. சிருதா, நாநூறு ரூபாய் தா.

கிழவர் பேசிக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு வார்த்தையும் மனதிற்குள்ளிருந்து வந்து கொண்டிருந்தது.

கண்ணனிடம் எதைப் பார்த்து விருப்பம் கொண்டாள் என்ற விஷயத்தை அவள் சின்னம்மா என்று அழைக்கும் அக்கா கேட்டாள்.

சிருதாவால் அதற்கு பதில் கூற முடியவில்லை. கண்ணன் யூனியன் ஆளாக அங்கு வந்திருந்தான். கண்ணன் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றுபவன் என்று நினைப்பதற்கில்லை. அவனுக்கு என்ன வருமானம் இருக்கிறது? வேலைக்குச் செல்லாமல் ஒவ்வொரு வீடாக போய் நின்று கெஞ்சிக் கேட்டு வாங்கிப் பிழைப்பை நடத்துபவன்!


இல்லாவிட்டால் வசூல் செய்து வாழ்பவன்! அவனிடம் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? ஒன்றே ஒன்று இருக்கிறது. நல்ல நாக்கு. பெரிய பிடிவாதக்காரன். கொள்கைப் பிடிப்பு உள்ளவன்.

கண்ணன் சொன்னான்:

"என்னுடன் வந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரியுமா?"

"தெரியும்."

சிருதாவே அந்த வாழ்க்கையை விளக்கிச் சொன்னாள். போலீஸ் அடித்துக் கொல்லும். சிறைக்குள் மரணம் வரையில் கிடக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். குண்டடிபட்டு மரணத்தைத் தழுவ வேண்டியது வரலாம். வேலைக்குப் போய் நான்கு சக்கரங்கள் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) கொண்டு வந்து வாழ்வதற்கான வழி இருக்காது. எல்லா விஷயங்களும் தெரியும்.

கண்ணன் சொன்னான்:

"அது மட்டுமல்ல; இன்னும் இருக்கு. என் பாதையில் தடையாக நிற்கக்கூடாது."

'இல்லை' என்று நூறு முறை அவள் உறுதியளித்தாள்.

"மனைவி எப்போதும் தடையாகத்தான் இருப்பாள்."

"நான் அப்படி இருக்க மாட்டேன்."

"அப்படியே இருக்கட்டும். ஒண்ணு கேட்கட்டுமா? நீ எதைப் பார்த்து என் பின்னால வந்திருக்கே?"

சிருதா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

எதைப் பார்த்து?

ஆனால், அந்த இரவே அவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள் அவனுக்குப் பின்னால்.

ஒருத்தியைப் பின்னால் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொண்டு ஓடுவதற்கு கண்ணனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

குட்டனும் பரமுவும் கேட்டார்கள்.

குட்டனும் பரமுவும் பின்னால் கண்ணனுடன் சேர்ந்து குண்டடி பட்டு இறந்துவிட்டார்கள்.

குட்டனும் பரமுவும் கேட்ட கேள்வியைக் கண்ணன் சிருதாவிடம் சொன்னான்.

இருவரும் தவறைத்தான் செய்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தானேயும் ஒருவரோடொருவரிடமும். கண்ணன் இன்னொரு தப்பையும் செய்தான். அமைப்பிடம்...

"கேட்டியா சிருதா, பரமுவும் குட்டனும் சொல்றாங்க. நான் அமைப்பை ஏமாற்றுவேனாம்."

"எப்படி?"

"நான் அதை விட்டுப் போயிடுவேனாம். துரோகம் பண்ணுவேனாம். திருமணம் ஆயிடுச்சுன்னா, அப்படி ஆயிடுவேனாம்."

"ம்... அதையும்தான் பார்ப்போமே! நானே உயிரைத் தருவேன். மடியைப் பிடிச்சுக்கிட்டு இருந்தால் நானே போகச் சொல்லி அனுப்புவேன். அன்று ஒரு நாள் மைதானத்தில்- பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதை நான் கேட்டேன். அது என் மனதில் கல்லைப் போல பதிந்து விட்டது. சட்டத்தை மீற வேண்டிய சூழ்நிலை வந்தால், துப்பாக்கிக்கு முன்னால் மார்பைக் காட்டிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை வந்தால் தாய்மார்களும் மனைவிமார்களும் சகோதரிகளும் ஆண்களுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைக்க வேண்டுமென்றுதானே அன்னைக்கு நீங்க பேசினீங்க! நான் அதைச் செய்வேன். நான் அதை மறக்கமாட்டேன்."

எல்லோரும் கூறுவது சிருதா ஒரு ஆண் என்றுதான். அந்த அளவிற்கு வீரமும் பிடிவாதமும் கொண்டவளாக அவள் இருந்தாள். எட்டில் அப்பச்சனின் தொழில் பிரச்சினையில், அப்பச்சனின் வாசலில் போய் நின்று, அப்பச்சனுடன் ஒற்றைக்கு ஒற்றையாகப் பேசி நின்றவள் அவள்தான். அன்று ஆண்கள் யாருமே இல்லை. கிட்டத்தட்ட முப்பது பெண்கள் மட்டுமே இருந்தார்கள். எல்லோருக்கும் முன்னால் சிருதா. அவள்தான் விஷயத்தைச் சொன்னாள்- மிகுந்த தைரியத்துடன்.

முதல் தடவையாக பெரிய அளவிலோ சிறிய அளவிலோ இருக்கும் விவசாயிக்கு முன்னால் போய் நின்றுகொண்டு, சில பெண்கள் கூலியாக நெல்லைத்தான் தர வேண்டும் என்றும்; கூலியாகத் தர வேண்டிய நெல்லைப் படி நிறைய அளந்து தர வேண்டும் என்றும் கூறியது அன்றுதான். முக்கால் படி வீதம் அளந்து வைக்கப்பட்ட நெல்லை அவர்கள் எடுக்கவில்லை.

எட்டில் அப்பச்சன் என்பது யார்? தெரிந்து கொள்ள வேண்டியது அதைத்தானே?

எட்டில் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கென்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அப்பச்சனின் தந்தை நான்கு புலையர்களை அடித்துக் கொன்று ஆற்றில் தூக்கிப் போட்டுவிட்டார் என்று பொதுவாகவே கூறுவார்கள். இரண்டு பேரை அப்பச்சன் பழிக்குப் பழி வாங்கியிருக்கிறார். ஒரு கொலை வழக்கும் நடந்திருக்கிறது.

வீரம் படைத்தவள். பிடிவாதக்காரி. அவள் தைரியமாக நின்று கொண்டு சொன்னாள்:

"எல்லா விஷயங்களையும் செய்தவரே! அடித்துக் கொன்றோ உயிருடனோ ஆற்றில் கல்லைக் கட்டி மூழ்கச் செய்தவரே! அதற்காகத்தான் வந்திருக்கோம்."

'அவளைப் பிடிங்கடா' என்று கூற அப்பச்சனுக்கு நாக்கு வரவில்லை. அப்பச்சன் திகைப்படைந்து நின்று விட்டார்.

ஒரு புலைய இனத்தைச் சேர்ந்த பெண் அவருக்கு முன்னால் நின்று பேசுவது அதுதான் முதல் தடவையாக இருக்க வேண்டும்.

"அப்படி சாகுறதுக்குத்தான் நாங்க வந்திருக்கோம்."

"அவள் யாருடா?"

"ஒலோம்பியின் மகள்."

கண்ணன் தனக்குப் பின்னால் ஒரு பெண்ணுடன் வந்து கொண்டிருப்பதை கண்ணனுடைய சகோதரி கோதை பார்த்தாள். அவள் ஓடிச் சென்று தன் தாயிடமும் தன்னுடைய அக்காவிடமும் விஷயத்தைச் சொன்னாள்.

"அண்ணன் வர்றாரு. போராட்டம் நடக்குற இடத்துல இருந்து ஒருத்தியை அழைச்சிட்டு வர்றார்னு நினைக்கிறேன்."

மூன்று பேரும் அவர்கள் வருவதைப் பார்த்தார்கள். தாய் சொன்னாள்:

"இனிமேல் அவன் யூனியன், போராட்டம் என்று ஓடிக் கொண்டிருப்பதை நிறுத்திடுவான்."

அப்படித்தான் அந்தத் தாய் நினைத்தாள். மூத்த பெண் வேறொரு விதத்தில் சொன்னாள்:

"அவளும் அப்படிப்பட்ட ஒருத்தியாக இருந்தால்...?"

"எப்படி இருந்தாலும் ஒரு பெண் ஆணின் கடிவாளம்தானே! யாராக இருந்தாலும்...?"

கோதையின் கருத்து வேறொன்றாக இருந்தது.

"நெறியும் முறையும் உள்ளவளாக இருந்தால், இப்படியெல்லாம் வருவாளா?"

கண்ணனும் சிருதாவும் வாசலுக்கு வந்தார்கள்.

"அம்மா, கொச்சம்மா, கோதை... இது என் மனைவி. எட்டில் அப்பச்சனை நேருக்கு நேராக எதிர்த்துப் போராடியவள்."

கோணலான முகத்துடன¢ காளி சிருதாவை மேலிருந்து கீழ்வரை ஒருமுறை பார்த்தாள்.

சிருதா வெட்கப்பட்டாள்.

கோதை தன் முகத்தைக் கொண்டு வக்கனை காட்டுகிறாளோ, தாய் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டாள்.

புன்னப்புரை வெடி விபத்து முடிந்தவுடன் கோதை நேருக்கு நேராக நின்று கொண்டு சொன்னாள்:

"நீங்க இங்கேயிருந்து கிளம்புங்க பெண்ணே. இங்கு நீங்க இருக்க வேண்டாம். நீங்க என்னோட அண்ணனின் மனைவி இல்லை. என் அண்ணனை குண்டுக்கு இரையாகக் கொடுத்ததே நீங்கதான்."

சிருதாவின் நாக்கு செயலற்றுப் போய்விட்டது. வயிற்றில் ஒரு கருவுடனும், உடுத்தியிருந்த துணியுடனும் சிருதா அந்த வீட்டை விட்டு வெளியேறினாள். முத்தோலி நிலத்திற்கு அருகில் அந்தக் காலத்தில் வீடுகள் எதுவும் இல்லை. ஒரு தென்னை மரத்திற்குக் கீழே சிறிது நேரம்- அதாவது, மதியம் வரை அவள் உட்கார்ந்திருந்தாள். பிறகு எழுந்து அரைக்காட்டை நோக்கி நடந்தாள்- கெட்ட சனியில் பைத்தியம் பிடித்திருப்பதைப்போல.

சிருதா சிருதாம்மாவாக ஆனாள்.


எல்லோரும் அவளை சிருதாம்மா என்றுதான் அழைக்கிறார்கள். புன்னப்புரையில் குண்டடிபட்டு இறந்த கண்ணனின் மனைவி. வேறு யார்? சிருதா! சிருதா வெறும் சிருதா அல்ல. சிருதா என்ற புலையப் பெண் அல்ல. அவள்... சிருதாம்மா.

குட்டன், பரமு ஆகியோரைப் பற்றி ஞாபகப்படுத்த அப்படி யாருமில்லை. அவர்களுக்கு சிருதாக்கள் யாரும் இல்லை. அதனால் யாரும் சிருதாம்மாக்களாக ஆகவில்லை.

ஆலப்புழை சுடுகாட்டில் சாலையின் அருகில் மலையைப் போல குவித்து, புன்னப்புரையில் குண்டடிப்பட்டு இறந்தவர்களின் உடல்களை ஒன்றாகச் சேர்த்து எரித்தார்கள். பெட்ரோலில் நனைக்கப்பட்ட கோணிகளை அவற்றுக்கு நடுவில் போட்டார்கள். இப்படித்தான் சிதையை உண்டாக்கினார்கள். அவ்வளவு இறந்த உடல்களை நெருப்பில் எரித்தார்கள் என்ற விஷயம் யாருக்கும் தெரியாது. ஒரு வட்டமான இடத்தில் இப்போதும் ஆலப்புழை- கொல்லம் சாலையின் மேற்குப் பகுதியில் இருக்கும் பெரிய சுடுகாட்டில் சிறிதும் வெளுக்காமல் கறுப்பாக இருப்பதை நாம் பார்க்கலாம். அங்கு ஒன்றோடொன்று பற்களைக் காட்டி இளித்து எரியத் தயாரான இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தூண்களும் இருக்கின்றன. அவர்கள் துலா மாதத்தில் போட்டி போட்டுக் கொண்டு புன்னப்புரை தினத்தைக் கொண்டாடும் போது, அந்தக் கறுத்த மணலின் மீது வெள்ளை மணலைப் போடுவது உண்டு. அதற்குப் பிறகும் கறுத்த மணல் வெள்ளை ஆகாமல்தான் இருக்கும்.

கண்ணன் யாருக்குச் சொந்தம்?

குட்டன் யாருக்குச் சொந்தம்?

பரமு யாருக்குச் சொந்தம்?

கண்ணன் ஒரு ஆளுக்குச் சொந்தமானான்.

சிருதாவிற்குச் சொந்தம்.

சிருதா அதன்மூலம் சிருதாம்மாவாக ஆனாள்.

சிருதாம்மாவிற்கு ஒரு வரலாறு உண்டானது. யாரோ ஒரு கதையைச் சொன்னார்கள். அந்தக் கதையைக் கேட்டவர்கள், பிறரிடம் கற்பனைகளையும் மிகைகளையும் சேர்த்து அதைப் பெரிதாக்கிச் சொன்னார்கள். அதைக் கேட்ட நூறு பேர் பத்தாயிரம் பேரிடம் அதற்குப் பிறகு பல வண்ணங்களையும் சேர்த்து மெருகேற்றி அந்தக் கதையைச் சொன்னார்கள். அந்தக் கதையின் ஆரம்பம் இதுதான். அதைக் கோதைதான் சொன்னாள்.

கோதை புள்ளேன் தரையைச் சேர்ந்த கறம்பியிடம் சொன்னாள்:

"அவள் புரட்சிக்காரி. துலா மாதம். ஏழாம் தேதி மதிய நேரம் அண்ணனுக்கு அம்மா சோறு பரிமாறினாங்க. சோறு சாப்பிட்டுக் கொண்டு இருக்குறப்போ, அண்ணன் சொன்னாரு, 'அம்மா, இனிமேல் சில நேரங்களில் நீங்க சோறு பரிமாற வேண்டாம்' என்று. அம்மா நெஞ்சு வெடிக்க அப்போ சொன்னாங்க, 'அப்படி சொல்லாதடா மகனே'ன்னு. அண்ணன் அதற்குச் சிரிச்சாரு. அண்ணன் சிரிச்சா, அது ஒரு அழகான சிரிப்பா இருக்கும். தினமும் போகுறப்போ அண்ணன் இப்படிச் சொல்வாரு. இருந்தாலும், அன்னைக்கு அண்ணன் அதைச் சொல்றப்போ அவள்... அந்தப் போராட்டக்காரி கதவுக்குப் பின்னால மறைஞ்சு நின்னு அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள். அவளோட கண்கள் தீப்பந்தத்தைப் போல இருந்தது. நான் அப்போ அடுப்புல அப்பளம் சுட்டுக்கிட்டு இருந்தேன். சுட்ட அப்பளம் இருந்தால், அண்ணன் இரண்டு அகப்பை அதிகமா சோறு சாப்பிடுவாரு. அதுதான் உண்மை."

கறம்பி கேட்டாள்:

"அதற்குப் பிறகு புரட்சிக்காரி என்ன செய்தாள்னு சொல்றே?"

"அதைக் கேளும்மா... நான் சொல்றேன்."

கோதை தொடர்ந்தாள்:

"அண்ணன் சிவப்பு நிறத்துல ஒரு ஆடையை எடுத்து அணிந்து, சிவப்பு நிறத்துல ஒரு தொப்பியையும் அணிந்தார். தொப்பியை எடுத்துத் தந்தது யாருன்னு நினைக்கிறே?"

"யாரு?"

"அந்தப் போராட்டக்காரிதான். நான் அதை மறைஞ்சு நின்னு பார்த்தேன். பிறகு சிவப்பு நிறக்கொடி இருக்கும் ஒரு வேல் கம்பை எடுத்து அவள் அண்ணனோட கையில் தந்தாள்."

கறம்பி சொன்னாள்:

"இந்த ஊர்ல இருக்கும் எல்லோரும் அப்படி வேல் கம்பைக் கொண்டு போனாங்கள்ல!"

கோதைக்கு அப்படி சொன்னது பிடிக்கவில்லை. அவள் கதையைக் கூறத் தொடங்கினாள்:

"அது இல்லைம்மா... ஊர்ல இருந்த எல்லாரும் அதே மாதிரி வேல் கம்புகளைக் கொண்டு போனாங்க. கொச்சிட்டி அண்ணனும் கொண்டு போனார்ல! எவ்வளவு மரங்களை இந்த ஊர்ல வெட்டி கூர்மைப் படுத்தினாங்க. நம்ம யாருக்காவது இது தெரியுமா? ஊர்வலத்துக்குப் போறாங்கன்னுதானே நாம நினைச்சோம். எதுவுமே தெரியாத பெண்களுக்கு வேறு எதை நினைக்கத் தெரியும்? அப்போ... அவள் இருக்காளே அம்மா... போராட்டக்காரி... அவளோட விஷயத்தைப் பற்றித்தான் சொல்றேன். நான் குடிசையில- ஓலையில இருந்த ஓட்டை வழியா பார்த்தேன்..."

கறம்பி சொன்னாள்:

"அட... போடீ பெண்ணே... புருஷனும் பொணடாட்டியும் ஒண்ணு சேர்ந்து நிற்கிறதை குடிசையின் ஓலை ஓட்டை வழியா பார்த்தேன்னு... வெட்கம் கெட்ட செயல்!"

"ஓ... அப்படி இல்லை அம்மா. புரட்சிக்காரியின் விஷயத்தைச் சொல்றேன். போராட்டக்காரி... நான் எதுவும் சொல்லல. சொல்றது என்னன்னா... போராட்டக்காரி. முத்தம் தர்றது இல்ல. புருஷனைக் கட்டிப் பிடிக்கிறது இல்ல... புரட்சிக்காரிப் பெண்ணாக இருந்தால் அப்படித்தான் இருந்திருக்கணும்."

அதற்குப் பிறகும் கோதைக்குக் கூறுவதற்கு விஷயங்கள் இருந்தன. கறம்பி இடையில் புகுந்து கேட்டாள்:

"பிறகு எப்படி புரட்சிக்காரியாக இருந்தாலும் அவளுக்கு வயிற்றில் உண்டானது?"

"அதைச் சொல்லணுமா? பெண்ணுக்கு வயிற்றுல உண்டாகுறதக்கு எவ்வளவு நேரம் வேணும்? அப்படி உண்டாயிடுச்சு."

"ம்... சரி இருக்கட்டும். பிறகு.. நீ விஷயத்தைச் சொல்லு..."

"அதைத்தான் நான் சொல்ல வந்தேன். நான் ஓலை ஓட்டை வழியாக பார்த்தது- அண்ணனும் அண்ணனோட பொண்டாட்டியும் அந்தப் பக்கம் என்ன செய்றாங்கன்றதைத் தெரிஞ்சிக்கிறதுக்காக இல்லை. அது கேவலமான செயல். பிறகு... அவள்... அந்த வேல் கம்பை ஏதோ அரவுக்காட்டு வெளிச்சப்பாடு கையில் கோவிலில் வாளை எடுத்து தர்றது மாதிரி எடுத்துக் கொடுத்தாள். உண்மையைச் சொல்லணும்ல அம்மா! என் அண்ணனின் கைகள் நடுங்கின. அண்ணன் சொன்னாரு- 'நான் இறந்திடுவேன் சிருதா'ன்னு. பிறகு தொண்டை அடைக்க அண்ணன் சொன்னாரு- 'நான் முன்னால நடக்க வேண்டியவன்' என்று. அப்போ அவள் சொல்றா, 'சாடுங்க. மார்புல குண்டைத் தாங்கணும்'னு. இந்த வார்த்தைகளை ஒரு பெண் சொல்வாளா அம்மா? நீங்களே சொல்லுங்க..."

கதையைக் கறம்பி பாப்பியிடமும் ஏலிக்குஞ்ஞாமயிடமும் கொச்சிரயிடமும் சக்கியிடமும் சொன்னாள்.

சிருதா போராட்ட குணம் படைத்தவள்! குண்டடி பட்டால் அது மார்பின் மீதாக இருக்க வேண்டும் என்று சிருதா கண்ணனிடம் சொன்னாள்.

சக்கி கேட்டாள்:

"அதன் அர்த்தம் என்னன்னு யாருக்காவது தெரியுமா?"

எந்தப் பெண்ணுக்கும் தெரியவில்லை. ஆண்களுக்கும் தெரியவில்லை.

யாரோ ஒரு ஆள் சொன்னான்:

"போலீஸ்காரர்களின் துப்பாக்கியைப் பார்க்குறப்போ திரும்பி ஓடக்கூடாதுன்னு... திரும்பி ஓடினால் குண்டு முதுகுல பாயும்னு..."


 

அப்படி சிருதாம்மா சொன்னாளா?

சொன்னாள்.

கோதை காதால் கேட்ட விஷயம் அது.

பள்ளிக்கூடத்தில் படித்தவர்கள் சொன்னார்கள். தைரியம் படைத்த அரச வம்சத்தைச் சேர்ந்த பெண்கள் போர்க்களத்திற்குத் தங்களுடைய கணவர்களை வாளைக் கையில் தந்து நெற்றியில் குங்குமம் அணிவித்து அனுப்பி வைப்பார்களாம். அந்தக் கதைகள் வரலாற்றில் இருக்கிறது. அவர்கள் கூறுவார்களாம். 'இறப்பதாக இருந்தால், மார்பில் காயம் பட்டு இறக்க வேண்டும்' என்று.

வயிற்றில் கண்ணனின் கருவைத் தாங்கிக் கொண்டு சிருதா அப்படிக் கூறியிருக்கிறாள்.

அவள் ஒரு வீரம் படைத்த பெண்ணேதான்.

வேல் கம்பை எடுத்துக் கொடுக்கும் போது அவளுடைய கை நடுங்கவில்லை. சிருதாவைப் பற்றி யாரோ ஒரு கவிதை இயற்றியிருந்தார்கள். அது தொழிலாளர்களின் இல்லங்கள் அனைத்திலும் பாடப்பட்டது.

முதல் புன்னப்புரை தினம் கொண்டாடப்பட்ட போது, ஊர்வலத்திற்கு முன்னால் ரத்தநிற மாலையைக் கழுத்தில் அணிந்து பெரிய ரத்த நிறக் கொடியை பிடித்துக் கொண்டு முன்னால் நடந்து சென்றது சிருதாதான்.

சிருதாதான் மலர்களை வைத்து வணங்கினாள்.

புன்னப்புரையின் வீரம் மிக்க பெண்!

சிருதா குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

புன்னப்புரை தியாகியின் வாரிசு.

அவனுக்கு ஒரு பெயர் வேண்டும்.

'ஸ்டாலின்!'

வயதான பலருக்கும் அந்தப் பெயரை அப்போது அழைப்பதற்குக் கஷ்டமாக இருந்தது. நாக்கு ஒத்துழைக்கவில்லை.

நல்ல ஒரு குழந்தை! அவனுக்கு மனிதர்கள் அழைக்கக்கூடிய ஒரு பெயரை வைத்தால் என்ன? இப்படிச் சொன்னவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் புன்னப்புரை போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள்.

 

சிருதாம்மா கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவள். கட்சி அவளைச் சேர்ந்தது. ஸ்டாலின் அந்த உறவில் பிறந்த குழந்தை.

ஊரிலுள்ள ஆண்கள், பெண்கள் எல்லோரும் சிருதாம்மாவைப் பார்த்து புன்னகை செய்கிறது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். தலைவர் பாராட்டினார். கட்சியின் எந்தவிதமான கொண்டாட்டமாக இருந்தாலும், அதில் சிருதாம்மாவிற்கும் ஸ்டாலினுக்கும் இடம் இருந்தது- முன் வரிசையில்தான்.

புன்னப்புரையின் வீரப்பெண்!

புன்னப்புரையின் வீர வாரிசு!

ஆண்டு விழாவில், கடலைப் போல திரண்டிருந்த மக்கள் கூட்டம் உரத்த குரலில் சொன்னது:

"சிருதாம்மா, நீங்க பேசணும்."

சிருதாம்மா பேசினாள். நான்கு வார்த்தைகள்.

"என்னை அழைத்துக் கொண்டு வந்தது புன்னப்புரைதான்."

நீண்ட நேரத்திற்கு கைத்தட்டல்!

சிருதாம்மாவின் வாயில் இருந்து வெளியே வந்தது ஒரு காவியத்தைப் போல இருந்தது. அது சிந்திக்கக்கூடியதாக இருந்தது; மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது.

"என்னை அழைத்துக் கொண்டு வந்தது புன்னப்புரைதான்."

அதன் அர்த்தம் என்ன?

பொதுக்கூட்டம் முடிந்ததும் பாரு கேட்டாள்:

"சிருதாம்மா, நீங்க என்ன சொன்னீங்க?"

"என் அக்கா, எனக்கு என்ன பேசத் தெரியும்? என் நாக்குல அப்படி வந்தது அதைச் சொல்லிட்டேன்."

"உண்மையைச் சொல்லணும்ல! நானும் கொச்சுட்டியும் சிரிச்சிட்டோம்."

"ஆம்பளைகளின் உற்சாகத்தைப் பார்த்து நான் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்."

ஆர்வம் கொண்ட இளைஞர்கள் வாசக சாலையில் ஒன்றாகக் கூடி அந்த வார்த்தைகளைக் குறித்து விவாதம் செய்தார்கள்.

எந்தப் பெண்ணாவது இப்படிக் கூறுவாளா?

கண்ணன் உண்மையிலேயே சொல்லப் போனால் புன்னப்புரை வயலாரின் அடையாளம் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அடையாளத்திற்குப் பின்னால் ஒருத்தி சென்றாள்- இரவோடு இரவாக.

அப்படியென்றால் அந்தப் பெண் யார்?

முழுமையான புரட்சிச் சிந்தனையின் அடையாளம்!

சிருதாம்மா பெண் அல்ல; புரட்சிச் சிந்தனையின் அடையாளம் அவள். கண்ணன் ஒரு ஆண் அல்ல. புன்னப்புரை- வயலாரின் அடையாளம் அவன்.

காவித் தன்மை கொண்ட அந்த வார்த்தையின் அர்த்தம் என்னவென்று விளக்கிக் கூறப்படவில்லையா?

அதுதான் கவிதை!

"என்னை அழைத்துக் கொண்டு வந்தது புன்னப்புரைதான்."

அந்த வார்த்தையைச் சொல்லிப் பாடல்கள் இயற்றப்பட்டன. பற்பல மாத இதழ்களிலும் வார இதழ்களிலும் அந்தப் பாடல்கள் பிரசுரிக்கப்பட்டன. நாற்று நடும் பாடல்களும் திருவாதிரைப் பாடல்களும் இயற்றப்பட்டன.

விருத்தமும் தாளமும் இல்லாத, ஆழமான, எப்படிப்பட்ட விளக்கங்களும் கொண்டு பொருளை முழுமையாக வெளிப்படுத்த முடியாத அதன் அர்த்தம், அந்த இரண்டு அடிகளுக்கு வடிவம் தரும் எழுத்துக்களின் முதுகெலும்பை ஒடித்து எல்லா பழைய கலை சம்பந்தப்பட்ட தத்துவங்களையும் தகர்த்தெறிந்தது.

இதோ அந்தக் கவிதை!

ரஷ்யாவில் ஸ்டாலினின் வார்த்தைகள் கவிதையாவது இப்படித்தான்!

"என்னை அழைத்துக் கொண்டு வந்தது புன்னப்புரைதான்."

களர்கோட்டு மகாதேவன் ஆலயத்தில் இருக்கும் பூசாரி ஒரு சமஸ்கிருத பண்டிதர். கட்சிமீது ஈடுபாடு உள்ளவர். பகவத் கீதையையும், பாகவதத்தையும், ரிக் வேதத்தையும் கூறி கட்சியின் பாட வகுப்புகளில் மாறுபட்ட பொருள் முதல்வாதத்தையும் பிற விஷயங்களையும் அவரால் விளக்கிக் கூற முடியும். கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம்தான் கார்ல் மார்க்ஸ் என்று அவர் கூறுவதுண்டு.

சிருதாம்மாவின் வார்த்தைகள் அவர் கேட்டவைதான். அந்தக் கண்களுக்கு என்ன ஒரு பிரகாசம்! அந்தக் குரல் ஒரு பெண்ணின் குரல்தானா?

கூடியிருந்த கூட்டம் உணர்ச்சிவசப்பட்டுவிடவில்லையா?

பூசாரி சொன்னார்:

"சாகுந்தலம், மேக சந்தேஸம் ஆகியவற்றை நான் தினமும் பார்ப்பது உண்டு. உண்மையைக் கூற வேண்டுமே! நான் கவிதையை வழிபடுபவன். நல்ல கவிதைகளைக் கேட்கும் போது, நான் உணர்ச்சிவசப்பட்டு விடுவேன். நான் கவிதையை அல்ல. அரங்கத்தில் இருக்கும் போது நான் எதிர்பார்த்தது ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவைதான். கூடியிருந்த கூட்டமும் அதைத்தானே எதிர்பார்த்தது? ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமே! அந்த வார்த்தைகளைக் கேட்டப்போ நான் ஒரு மாதிரி ஆயிட்டேன்."

பூசாரி அங்கு உட்கார்ந்திருந்தவர்களிடம் தொடர்ந்து சொன்னார்:

"இதோ பாருங்க... நினைச்சுப் பார்க்குறப்பவே நான் உணர்ச்சி வசப்படுறேன்."

ஒரு அருமையான குரலில், சாகுந்தலத்திலிருந்து ஒரு கவிதையைக் கூறும் வகையில் பெரிய விரல், சுட்டுவிரல் ஆகியவற்றின் முனைகளை ஒன்று சேர்ந்து, கையை உயர்த்தியவாறு தேன் என்ற முத்திரையைக் காட்டுகிற மாதிரி வைத்துக் கொண்டு அந்தக் கவிதை மொழியில் அவர் சொன்னார்:

"பு-ன்ன-ப்புரை-தான்."

பூசாரி கையைக் காட்டினார்.

"பாருங்க... ரோமம் எழுந்து நிற்கிறது."

அவர் கூறியது உண்மைதான். பூசாரி மயிர்க்கூச்செறிய நின்றிருந்தார்.

பூசாரி அந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலிருந்து மீண்டு வருவதற்கு சிறிது நேரம் வேண்டியிருந்தது.

பூசாரி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்:

"உங்களில் யாருக்காவது தெரியுமா? ஒரு விஷயத்தை நான் சொல்றேன். இது மிகவும் பழமையான நாடு. பலவகைப்பட்ட மனிதர்களும் என்னைத் தேடி வந்தார்கள். புன்னப்புரையைச் சேர்ந்த போர்க்கள வீரர்கள் தங்களின் போர்க் கருவிகளைப் பூஜை செய்து தர வேண்டும் என்று சொன்னார்கள்.


 

அது தேவையா என்று நான் கேட்டேன். நான் மட்டும் சம்மதிச்சிருந்தா, குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது தட்சணையாக என் கையில் கிடைத்திருக்கும்."

அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் சொன்னான்:

"புன்னப்புரை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்த்துங்கல் தேவாலயத்திற்குப் போய் பிரார்த்தனை செய்யலையா? அதே மாதிரி சபரிமலைக்குப் போகலையா?"

 

வாக்கு அளிப்பதற்குத் தகுதி குறிப்பிட்ட வயதை அடைவதுதான்! இனி வரி கட்டுபவர்கள் மட்டுமல்ல வாக்களிப்பவர்கள்.

ஸ்டாலினை இடுப்பில் வைத்துக் கொண்டு தேர்தல் கூட்டங்களில் சிருதாம்மா தோன்றினாள். ஸ்டாலின் சிவப்பு நிறத் தொப்பியை அணிந்திருந்தான். சிவப்பு நிற ஆடை அணிந்திருந்தான். சிவப்பு நிறத்தில் தடிமனான அரைக்கால் சட்டையை அணிந்திருந்தான்.

கடலைப் போல கூடியிருந்த கூட்டத்திடம் சிருதா ஒரே ஒரு வார்த்தையைத்தான் கூறினாள்:

"உங்க கட்சிக்கு வாக்களியுங்க."

திரண்டு நின்றிருந்த கூட்டம் எதிர்பார்த்தது அந்த இரு வரிகளைத்தான். அந்த வார்த்தைகளில் கவிதை இல்லையா?

ஆனால் கேட்டுக் கொண்டார்கள்.

இடுப்பில் அமர்ந்திருந்த ஸ்டாலின் தன் கையைச் சுருட்டி உயர்த்தினான். அவன் என்னவோ சொன்னான். கூடியிருந்த கூட்டம் உணர்ச்சிவசப்பட்டது. நீண்ட நேரம் கைத்தட்டல் சத்தம் ஒலித்தது.

அவன் சில வாக்குகளை உண்மையாகவே வாங்கித் தந்தான்.

இங்குலாப்- ஜிந்தாபாத் என்று அவன் கூறியிருப்பானோ?

இருக்கலாம். அதைத் தவிர, அவன் கூறுவதற்கு என்ன இருக்கிறது?

 

வயலில் களை எடுப்பதற்காகச் செல்வாள்- நாற்றுகளைப் பறித்து நடுவதற்காகப் போவாள்- அறுவடை செய்யப் போவாள். மண் சுமப்பதற்கு மட்டும் முடியாது. அந்த வேலையை சிருதா செய்தது இல்லை. அது ஒரு கடுமையான வேலையும்கூட. வேறொரு வேலைக்கும் சிருதாவை அழைக்காமல் இருக்க முடியாது. கூடை பின்னுவாள்- முறம் பின்னுவாள்- பாய் பின்னுவாள்- தட்டு பின்னுவாள்.

அவள் எப்போதும் அப்படித்தான். பொருத்தமான ஒருத்தனுடன் அவளை இணைத்து விடுவதற்கு அவளுடைய தந்தையும் சகோதரர்களும் நினைத்தார்கள் என்றால், அதற்குக் காரணம் இருக்கிறது. சிருதா இளம் வயதிலிருந்தே மிகவும் சாமர்த்திய குணம் கொண்டவள்.

அப்போது அவளுக்கு ஐந்து வயதே நடந்து கொண்டிருந்தது. தொழுவத்தின் நான்கு பக்கங்களிலும் இருந்த வேலி சாய்ந்துவிட்டது. இடையில் மரத்துண்டை வைத்து ஓட்டையைச் சரி பண்ண வேண்டும். அப்போது ஒரு ஓட்டையிலிருந்து ஒரு சிறு கடுக்காய் கிடைத்தது. கடுக்காய் மிகவும் கனமாக இருந்தது. ஒலோம்பி கடுக்காயைத் திறந்து பார்த்தான். அதில் பாதி நிறைந்து, சிறிய நாணயங்களும் கால் சக்கரக் காசுகளுமாக இருந்தன. யாருடைய சிறிய சம்பாத்தியமோ?

யாருடைய சம்பாத்தியம்?

சிருதாவின்!

அப்போது அவளுக்கு ஐந்தே ஐந்து வயது நடந்து கொண்டிருந்தது. ஐந்து வயதில் ஒரு சிறு பெண்ணுக்கு சம்பாதிக்கத் தோன்றுமா? அவளுக்கு எங்கிருந்து காசு கிடைத்தது?

அவளும் ஏதாவது வேலை செய்வதற்காகப் போவாள்- அவளுக்குப் பொருத்தமான வேலைக்கு.

வளர்ந்து வந்தபோது எல்லோருக்கும் ஒரு விஷயம் புரிந்தது.

சிருதா ஒரு படியை நான்கு படிகளாக ஆக்குகிறவள். அப்படியென்றால் அதில் இருக்கும் விஷயம் என்ன?

ஒலோம்பி குஞ்ஞாளியிடம் கேட்டான்:

"சிருதாவிடம் அப்படி என்ன திறமை இருக்குன்னு நீ நினைக்கிறே?

வெற்றிலைத் துண்டில் சுண்ணாம்பு தேய்த்து மடக்கி, புலையனிடம் கொடுத்துக் கொண்டே குஞ்ஞாளி கேட்டாள்:

"ம்... என்ன?"

"என்னன்னு சொல்றேன். அவளுக்கு கண்கள் இருக்கு. அதுதான் விஷயம்."

"வேறு யாருக்கும் கண்கள் இல்லையா?"

"போ வௌக்குமாறே! கண்கள் என்றால் இந்த முகத்துல இருக்குறதா? மனதில் இருக்கும் கண் அது உனக்குத் தெரியுமா?"

ஒலோம்பி தொடர்ந்து கேட்டான்:

"அவள் சமையலறைக்குள் நுழைஞ்சிட்டா, இந்த வீட்டுல புகையாம இருந்திருக்கா? நாழியோ அதுல பாதியோ கட்டாயம் இருக்கும். எப்படி பார்த்தாலும் நாழி கஞ்சி தண்ணியும் உப்பும் அரைத்த மிளகாயும் மூணு நேரமும் இருக்கும்."

குஞ்ஞாளி அதை ஒப்புக் கொண்டாள்.

"அது உண்மைதான். அவள் சமையலறைக்குள் நுழைஞ்சா நடக்குறது அதுதான். பலகைப் பெட்டியிலும் பாத்திரத்தில் அரிசி இல்லாமல் இருக்காது. அது ஒரு உண்மையான விஷயம்தான்! உண்மையை யார் சொன்னாலும் ஒப்புக் கொள்ளத்தானே வேண்டும்?"

"உனக்கு அது தோணுச்சா?"

குஞ்ஞாளி அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

"அவளை அடையப் போற ஆம்பளை நேர்மையும் திறமையும் உள்ளவனாக இருந்தால், அதிர்ஷ்டம் செய்தவன்தான்."

"அப்படிப்பட்ட ஒருத்தனைத் தேடிக் கண்டுபிடிச்சு அவளைத் தரணும். சரிதானே? பிறகு... தந்தையின் கடமை ஆயிற்றே அது? இது ஒரு புதிய விஷயமா?"

ஒலோம்பிக்கு அது தெரியும்.

ஒலோம்பி நினைத்துப் பார்த்தான்.

ஒவ்வொரு இளம் வயது வேலை செய்பவர்களைப் பார்க்கும் போதும் மிகவும் கவனத்துடன் பார்த்து சிருதாவிற்கு அவன் பொருத்தமாக இருக்கிறானா என்று அவன் சிந்தித்துப் பார்ப்பதுண்டு.

இது வரையில் ஒருவனையும் அவன் பார்க்கவில்லை.

குஞ்ஞாளி கேட்பாள்:

"பெண் இப்படியே இருந்தால் நல்லா இருக்குமா?"

"ம்..."

ஒரு முனகலே பதிலாக இருக்கும்.

நிலைமை இப்படி இருக்கும் போது யூனியனைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதனுடன் இரவோடு இரவாக சிருதா போய்விட்டாள். அவன் தரை தரையாக நடந்து திரிபவன். கால் காசுக்கு வேலை செய்ததில்லை. அப்படிப் படிகளில் ஏறி நடந்து திரிவதற்காக அவன் வெட்கப்படவும் இல்லை.

பிரச்சாரம் செய்யக் கூடியவன்!

அவனுடைய பிரச்சாரம்!

 

சிருதா புன்னப்புரையில் இருக்கிறாள் என்பதை ஒலோம்பி தெரிந்து கொண்டான். குஞ்ஞாளிக்கும் அது தெரிய வந்தது. வெளியே நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு மகளைப் பெற்றெடுக்கவே இல்லை என்றாள் குஞ்ஞாளி. அப்படிப்பட்ட ஒரு பெண் ஒலோம்பிக்கும் இல்லை.

குஞ்ஞாளி கேட்டாள்:

"மனதில் கண் இருக்கும் மகள்... எப்படி இருக்கா?"

"பேசாம போ... அவள் உன் வயித்துல இருந்தவள்தானே?"

"நான் என் வயிற்றில் வேற எங்கே இருந்தாவது பிடிச்சு கொண்டு வந்துவிட்டேனா என்ன?"

ஒலோம்பி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

புன்னப்புரையில் நடந்த வெடிகுண்டு சம்பவம் எல்லா இடங்களுக்கும் தெரிந்தது. ஏராளமானவர்கள் இறந்து விட்டார்கள். ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட இறந்து விட்டாராம்! போலீஸ் இன்ஸ்பெக்டரா? அவரைக் கொன்றுவிட்டார்கள். ஆமாம்! என் கடவுளே!

நான்கு மைல் தூரத்திற்கு குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது. நிறைய ஆட்கள் இருந்தார்கள். நிறைய என்றால் எண்ண முடியாத அளவிற்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எல்லோருடைய கைகளிலும் முனை கூர்மை செய்யப்பட்ட வேல் கம்புகள் இருந்தன.


 

வேல் கம்பின் முனையைக் கூர்மைப்படுத்த வேண்டிய காரணம் என்ன?

வேல் கம்பின் முனை கூர்மையாக இருக்க வேண்டும். அதற்காக.

வேல் கம்பின் முனை எதற்காக கூர்மையாக இருக்க வேண்டும்?

வீரத்தை வெளிப்படுத்த அப்படித் தோன்றியது. அவ்வளவுதான்!

குஞ்ஞாளி சொன்னாள்:

"எது எப்படி இருந்தாலும் கண்ணன் வேல் கம்புடன் முன்னால் நடந்து போயிருப்பான்."

குஞ்ஞாளி தொடர்ந்து சொன்னாள்:

"கண்ணன் வேல் கம்பைப் பிடித்துக் கொண்டு முன்னால் போயிருப்பான். அவன் அப்படிப்பட்ட ஆளு."

ஒலோம்பி சொன்னான்:

"போயிருப்பான். போகாம இருக்க மாட்டான். அவனுடைய குணம் அப்படி."

குஞ்ஞாளி எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். குஞ்ஞாளி கற்சிலையைப் போல இருந்தாள். கற்சிலையிலிருந்து சத்தம் புறப்பட்டு வந்தது:

"அவள் வேல் கம்பை அவனுடைய கையில் கொடுத்து அனுப்பியிருப்பான்."

இன்னொரு கற்சிலையிலிருந்து ஒரு சத்தம்:

"அனுப்பியிருப்பாள். அது அவளோட குணம்."

 

வெளி வேலியைத் தாண்டியிருந்த காட்டில் இரவுப் பறவை கூவியது:

'கூவ! கூவ!'

பரந்து கிடந்த வயல்வெளிகளில் சிறு அலைகள் என்னவோ கதைகளைக் கூறின.

அந்த வீட்டிலிருந்த சிம்னி விளக்கில் எண்ணெய் வற்றியது. குஞ்ஞாளி கேட்டாள்:

"நாம போய்த் தேட வேண்டாமா?"

"எதுக்குடி?"

"கண்ணன் செத்துப் போயிருந்தா...?"

"கண்ணன் செத்தால் நமக்கென்ன?"

"இல்ல... அவன் கூடத்தானே நம்ம மகள் போனாள்? அதுதான் சொன்னேன்."

ஒலோம்பிக்கு பதில் கூறுவதற்கு நேரம் தேவைப்படவில்லை.

"அவன் செத்துட்டா, அவள் இங்கே வந்துடுவாள்."

"அதுதான் நடப்பா?"

"பிறகு என்ன?"

"அவள் வரலைன்னா?"

"மனதில் கண் இருக்கும் அவள் வாழ்வாள்."

"அடடா! இந்த அப்பனின் பிடிவாதத்துக்கு குறைச்சல் இல்லை."

மண்ணெண்ணெய் விளக்கு அணைந்தது. அப்போதும் காட்டில் இருந்த இரவுப் பறவை தன் இணையை அழைத்துக் கொண்டிருந்தது.

காற்று வீசுவது நின்றது. வயலில் இருந்த நீர் அசைவே இல்லாமல் ஆனது. சுற்றிலும் அமைதி நிலவியது. எனினும் ஊரெங்கும் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. புன்னப்புரை குண்டின் சத்தம் எதிரொலிக்கிறதோ! அது நாள் கணக்கில்... மாதக் கணக்கில்... வருடக் கணக்கில் எதிரொலித்துக் கொண்டே இருக்கும். குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த ஒலோம்பியை குஞ்ஞாளி தட்டி எழுப்பினாள்:

"பிறகு... உறங்குகிறீர்களா?"

ஒலோம்பி உறங்கிக் கொண்டிருந்தான்.

"ஏங்க... சின்ன ஆற்றின் கரையில் இருக்கும் வயல் நீரில் 'ங்ஙோ' என்றொரு சத்தம் ஒலிப்பது காதில் விழுகுதா?"

பதில் இல்லை.

 

இரண்டு நாழி நெல்லுக்கு இரண்டு குவளை கள்ளைக் குடித்துவிட்டு, மீதி நெல்லைக் கூடையில் வைத்தவாறு ஒரு பழைய பாட்டைப் பாடிக் கொண்டே வீட்டிற்குள் வந்த ஒலோம்பி சொன்னான்:

"அடியே பொண்டாட்டி!"

"என்ன?"

"அடியே... அவன் செத்துட்டான்."

"யாரு?"

"கண்ணன்..."

"என் தாயே!"

தலையில் கையை வைத்துக் கொண்டு குஞ்ஞாளி உட்கார்ந்து விட்டாள். ஒலோம்பி தொடர்ந்து சொன்னான்:

"மார்புல குண்டடிபட்டு செத்திருக்கான்; முதுகுல இல்ல... அவள் அப்படிச் சொல்லித்தான் அவன்கிட்ட வேல் கம்பையே கொடுத்து அனுப்பியிருக்கா. அவள் மனசுல கண் உள்ளவள். அவள் என்னோட மகள். அவள் இன்னைக்கு புன்னப்புரையிலும் ஏன் இந்த நாடு முழுவதும் தான் யார்னு கேட்க வச்சிட்டா."

"என்ன சொல்றீங்க?"

"ச்சீ.... உனக்கு எதுதான் தெரியும்? அவள் இப்போ ஊர்ல சிருதாம்மாவா ஆயிட்டா."

"அப்படின்னா?"

"அவள் பேரு சிருதாம்மா."

"அப்படியா? சொல்ல வர்றதை விளக்கி சொல்லுங்க."

ஒலோம்பி நீண்ட நேரம் அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே இருந்தான். பிறகு சொன்னான்:

"அடியே, இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒன்றரை நாழி சோற்றைத் தின்னு, ஒரு பெரிய துடுப்பை ஏரி நீர்ல இருந்து எடுத்து படகுல போட்டு, ஒரே மூச்சுல நாலு புட்டி கள்ளக் குடிச்சிட்டு, நாழி நெல்லுடன் வீட்டுக்கு வர்றவனின் பொண்டாட்டியா இருக்குறதைவிட..."

ஒரே மூச்சில் ஒலோம்பி சொன்னான். அதற்கு மேல் கூற மூச்சு அனுமதிக்கவில்லை. என்ன கூற வேண்டும் என்று ஒலோம்பிக்கே தெரியாது.

இரவிச்சோவன் நல்ல பக்குவமடைந்திருந்த கள்ளைக் கொடுத்திருந்தான். இப்போது கள்ளிற்கு மதிப்பே இல்லை. கள்ளில் ஒரு துளி நீர்கூட சேர்க்கப்படவில்லை. தலைக்குள் ஒரே புகைச்சலாக இருந்தது!

மேற்குப் பக்கம் இருந்த குடிசையிலிருந்து ஏழரைக் கோழி கூவியபோது ஒலோம்பி கண்விழித்தான். குஞ்ஞாளி உட்கார்ந்திருந்தாள். குஞ்ஞாளி கேட்டாள்:

"நேற்று என்ன சொன்னீங்க?"

"அதைத் தெரிஞ்சிக்கிறதுக்காக நான் எப்போ கண் விழிப்பேன்னு எதிர்பார்த்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கியா?"

"ஆமா..."

"நீ தூங்கவே இல்லையா?"

"இல்ல..."

"அப்படின்னா சொல்றேன். ஒரு பயனும் இல்லாத புருஷனுடன் நூறு வருடங்கள் அவனுடைய பொண்டாட்டியா வாழ்வதைவிட நல்ல புருஷனுடன் பதினைந்தே நாட்கள் வாழ்வது எவ்வளவோ மேல் என்பது என் மகளுக்கு நல்லா தெரியும். அவள்... சிருதாம்மா."

 

வீட்டில் உள்ள தாய்மார்களின் காலைநேரக் கவலையே தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவதற்கு தயார் பண்ணுவது தான். அது ஒரு வேலைதான். காலையில் அவர்களை மலம் கழிக்கச் செய்ய வேண்டும். பல் தேய்க்கச் செய்ய வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். பாடங்களை படிக்கச் செய்ய வேண்டும். மரவள்ளிக் கிழங்கையோ சேம்பையோ கஞ்சியையோ தயார் பண்ண வேண்டும். புத்தகங்களை எடுத்துக் கொண்டு சிறுவன் பள்ளிக்கூடத்திற்குப் போன பிறகுதான் நிம்மதியே உண்டாகும். பிறகு சிறிது நேரத்திற்கு ஓய்வெடுக்கலாம்.

பிள்ளைகள் யாராக ஆக வேண்டுமென்று தீர்மானித்துதான் பள்ளிக்கூடத்திற்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சில தாய்மார்கள் பள்ளிக்கூடத்திற்கு நடந்து செல்லும் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே அவர்களை டாக்டர்களாக நினைத்துக் கனவு காண்பார்கள். வேறு சிலர் பொறியியல் வல்லுனர்களாக அவர்களைக் கனவு காண்பார்கள். வேறு சிலர் போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக கனவு காண்பார்கள். சில தாய்மார்கள் வேலைக்கான கூலியைச் சரியாக கணக்குப் போட்டு வாங்குவதற்காகத் தங்களின் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவார்கள். அதை அவர்களால் செய்ய முடியும். பள்ளிக்கூடத்திற்குச் சென்றால் கண்கள் தெளிவாகும். ஊர் சுற்றியாகவும் போக்கிரியாகவும் ஆக மாட்டார்கள். அதற்காக அனுப்புபவர்களும் இருக்கிறார்கள். நான்கு எழுத்துக்களைப் படித்தால் அதற்கேற்ற பலன் இருக்கிறது.

அந்த வகையில் தலைமுறைகள் நன்றாக வர வேண்டும். தாயையும் தந்தையையும்விட பிள்ளைகள் நல்ல முறையில் இருக்க வேண்டும். நன்றாக வாழ வேண்டும். அவர்களைவிட பிள்ளைகள் படிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதற்குப் பின்னால் வரக்கூடிய தலைமுறை அதையும் தாண்டி படிப்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். அப்படி முன்னோக்கி.. முன்னோக்கி...!


முதல் தேர்தலில் தொழிலாளர்களின் கட்சிகளுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. தொழிலாளர்களுக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. அவர்களுடைய சங்கிலி மட்டுமே ஏமாற்றம் இல்லை. இனிமேலும் முயற்சி நடக்கும். இந்த நாட்டில் தொழிலாளர்களின் ஆட்சி வரும். இன்று இல்லாவிட்டால் நாளை அது கட்டாயம் நடக்கும்.

அமைச்சர்கள் கொடி கட்டப்பட்ட அரண்மனையைப் போன்ற காரில் பயணம் செய்வதை சிருதாம்மா பார்ப்பாள். அமைச்சர்கள் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். அவர்களைப் பற்றி சிருதாவின் தலைவர்கள் பேசுவதை அவள் கேட்டிருக்கிறாள்.

அமைச்சர்கள் ஊழல் பேர்வழிகள்!

மக்களுக்குத் துரோகம் செய்பவர்கள்!

தொழிலாளர்களின் அமைச்சர்கள் அப்படி இருக்கமாட்டார்கள்!

பள்ளிக்கூடத்திற்குச் செல்லும் தன் மகனைப் பார்த்து எம்.எல்.ஏ.வாக வரவேண்டும் என்றும்; அமைச்சராக வரவேண்டும் என்றும் விருப்பப்படுகிற ஏதாவது ஒரு தாய்... இருக்கலாம். அப்படியும் கனவு காண்பதற்கு மனிதர்களுக்கு உரிமை இல்லையா என்ன?

இருக்கிறது- நிச்சயமாக.

 

பெரிய நட்சத்திரம் உதித்தது. பெரிய நட்சத்திரம் தோன்றுவது எப்போதாவதுதான். பெரிய நட்சத்திரத்தின் முதல் தோற்றத்திற்கு ஒரு சிறப்பு இருக்கிறது. அப்போது வீட்டுக்கு வெளியே பிரகாசம் படர்ந்திருக்கும் கோழி தன் சிறகை அடித்துக் கொண்டு கூவும். அதை ஊரிலிருக்கும் சிலராவது பார்ப்பார்கள். பெரிய நட்சத்திரத்தின் முதல் கீற்றின் சிறப்பு அது.

அந்தக் காலத்தில் மகரிஷிகள் பெரிய நட்சத்திரம் உதிக்கும் போது காடுகளில் இருக்கும் பர்ணசாலைகளில் கண் விழிப்பார்கள்.

அந்த விஷயம் சிருதாம்மாவிற்குத் தெரியுமா?

ஆனால், சிருதாம்மா கண் விழிப்பாள்.

தொப்பை வயிற்றைக் கொண்டிருக்கும் சக்ரேஸ்வரன் முதலாளியின் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும். நூற்று ஐம்பது தென்னை மரங்களின் அடிகளுக்கு நீர் தரவேண்டும். பன்னிரண்டு படிகள் பிடிக்கக்கூடிய குடம். ஒரு தூக்கு என்று சொன்னால் இரண்டு குடங்கள் என்று அர்த்தம். ஒரு தென்னை மரத்திற்கு ஐந்து தூக்கு நீர் ஊற்ற வேண்டும்.

ஒரு வசதி இருக்கிறது. ஏழு குளங்கள் இருக்கின்றன. ஐந்து குளங்கள் வற்றவே வற்றாது. இரண்டு குளங்கள் வற்றக்கூடியவை. அதனால் பிரச்சினையில்லை.

தொந்தி சக்ரேஸ்வரன் முதலாளி சரியாகக் கூலி தருவார். கடன் கூற மாட்டார்.

சக்ரேஸ்வரன் முதலாளி புன்னப்புரை வெடிகுண்டு சம்பவத்திற்கு முன்பு, போலீஸ்காரர்களுக்குச் சொந்தக்காரராக இருந்தார் என்று பொதுவாக கூறுவார்கள்.

யாருக்குத் தெரியும்?

சக்ரேஸ்வரன் முதலாளியின் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சும் வேலை லாபம் தரக்கூடிய ஒன்று.

முதலாளிமார்கள் இருக்கிறார்கள். தொழிலாளர்களும் இருக்கிறார்கள். நிலச்சுவான்தார்கள் இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வாழ்வதற்கு நிலச்சுவான்தார்கள் வேண்டும். முதலாளிமார்கள் வேண்டும். அதுதான் இன்றைய நிலைமை.

கண்ணன் கூறிய வார்த்தைகள் சிருதாம்மாவின் காதுகளில் ஒலித்தன.

"இந்த நிலைமை மாற வேண்டும். மாற்ற வேண்டும்."

பொழுது புலரும் நேரத்தில்தான் நீர் வார்ப்பது முடிவடையும். ஸ்டாலின் கண்விழிப்பது அந்தச் சமயத்தில்தான்.

ஐந்து மணி ஆகும் போது வயலுக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். ஸ்டாலினைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும். வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடிக்க வேண்டும்.

வேலைக்குப் போக முடியாமலிருந்தால் ஸ்டாலினின் விஷயங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்படி அவன் சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தால்...? ஸ்டாலின் தொழிலாளர்களின் அமைச்சராக ஆவதைப் பார்க்கலாம். அப்படித்தான் சிருதா நினைத்தாள்.

நீருக்குள் மூழ்கியவாறு களைகளைப் பிடுங்கிக் ª££ண்டிருந்தார்கள். ஐம்பது பெண்கள் இருந்தார்கள். வரிசையாக நீருக்குள் மூழ்கி அவர்கள் களைகளைப் பறித்தார்கள். கரையில் நின்று கொண்டிருந்த விவசாயி உரத்த குரலில் சொன்னான்:

"யாருடைய வாயிலும் நாக்கு இல்லையா? பாட்டைப் பாடிக் கொண்டே களையைப் பறிக்க வேண்டியதுதானே?"

யாரோ ஒருத்தி சொன்னாள்:

"ஒரு ஆளின் கூலியைத் தரணும்."

"அதைச் சொல்லணுமா? அது நாட்டு நடப்புதானே?"

கொச்சிட்டிக் கிடாத்தி சொன்னாள்:

"சிருதாம்மா, உங்களைப் பற்றிய அந்தப் பாட்டைப் பாடுங்க."

இன்னொருத்தி அதை வழிமொழிந்து சொன்னாள்:

"ஆமாம்... அது அருமையான பாட்டாச்சே!"

சிருதா பாடவில்லை.

"என்னால முடியாது."

குட்டி அந்தப் பாட்டைப் பாடினாள். சிருதா அதைப் பின்பற்றிப் பாடவில்லை.

பாட்டின் ஒரு அடியைப் பாடி முடித்திருந்த இடைவேளையில் விவசாயி கேட்டான்:

"அது யாரு? சிருதாவா பாடியது? இல்லாவிட்டால் வேறு யாருமா?"

"குட்டி..."

"அப்படின்னா தொடர்ந்து பாடு..."

"பார்த்தீங்களா? முதலாளிக்குக்கூட பாட்டு பிடிச்சிருக்கு! அது அருமையான பாட்டு..."

"அதை இயற்றியது யார்?"

தெற்குத் திசையில எங்கோ இருக்கும் ஒரு கட்சிக்காரர் இயற்றிய பாட்டு இது. நாடு முழுவதும் இப்போ இதைத்தான் பாடுறாங்க. சமீபத்தில் நான் வைக்கத்திற்குப் போயிருந்தப்போ, ஒரு நாள் வேலைக்குப் போனேன். அங்கேயும் இதைத்தான் பாடினாங்க."

சிருதாவிற்கு அருகில் இருந்தவாறு களை பறித்துக் கொண்டிருந்த பெண் சொன்னாள்:

"அதற்கும் ஒரு அதிர்ஷ்டம் இருக்க வேண்டாமா? ஒருத்தியின் பெயரை நாடே பாட்டாகப் பாடுதுன்றது எவ்வளவு பெரிய விஷயம்!"

அதிர்ஷ்டம்!

சிருதா எதுவும் பேசவில்லை. அது மட்டுமல்ல- கல்லையோ மரத்தையோ கொண்டு உண்டாக்கப்பட்டவளைப் போல அவள் இருந்தாள்.

ஒரு காலத்தில் ஊரெங்கும் சிருதாம்மா நிறைந்து நின்றிருந்தாள்.

இப்போது சிருதாம்மாவை யார் நினைக்கிறார்கள்?

சிருதாம்மா என்ற பெயர் இருக்கிறது. ஆள் இல்லை. அவள் மறக்கப்பட்டுவிட்டாள்.

அவள் அருகில் நின்று கொண்டு களை பறித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் மெதுவான குரலில் சொன்னாள்:

"அந்தப் பக்கம் இருக்கிற நிலங்களுக்கோ வெச்சூர் ஏரிக்கோ வேலைக்குப் போனால் இப்படிப் பேசப்படுற சிருதா நான்தான்னு சொன்னா எப்படி இருக்கும் அம்மா?"

"எப்படி இருக்கும்?"

"அவங்க சொல்லுவாங்க, புருஷனை சாகுறதுக்குக் கொடுத்தவள்னு."

அந்த புலையப் பெண் எதுவும் பேசவில்லை. சிருதா தொடர்ந்து சொன்னாள்:

"நாத்தனார்களும் மாமியாரும் இப்போதும் சொல்லிக் கொண்டு இருக்குறது அதுதானே? அவர்கள் ஊரெல்லாம் இப்போதும் சொல்லிக் கொண்டு திரியிறாங்க- நான் பணக்காரி என்று."

"அது உண்மைதான். அவங்க அப்படித்தான் சொல்லிக் கொண்டு இருக்காங்க."

"இப்போ என்னைப் பார்த்தா தோணும்ல- இப்படி மத்தவங்க சொல்லிக் கொண்டு இருக்குற சிருதா நான் இல்லைன்னு... வேற யாரோன்னு... நான் இந்த ஊர்ல இருக்குற நூறாயிரம் பெண்கள்ல ஒருத்தின்னு... அப்படி நினைக்கிறதுதான் சரி..."

தொடர்ந்து சிருதா சொன்னாள்:

"அந்தக் குழந்தை வேறு யாருக்கோ பொறந்ததுன்னு அவங்க சொல்லியிருக்காங்க."

அவர்கள் அப்படிக் கூறியது உண்மைதான் என்பதை உலகியும் ஒப்புக் கொண்டாள். உலகியிடம் அவர்கள் அப்படிக் கூறியிருக்கிறார்கள்.


"சிருதாம்மா! அவங்க மட்டும் அல்ல அப்படிச் சொன்னது. உங்க மச்சினிச்சிங்க சிலரும் குசுகுசுன்னு அப்படிச் சொல்றாங்க. அவங்க சொல்றதுக்குக் காரணம் அவங்களோட சகோதரர் குண்டடிபட்டு இறந்துட்டாருன்றதுக்காகன்னுகூட வச்சுக்கலாம். அதற்குக் காரணக்காரியே நீதான்னு அவங்க நினைச்சிக்கிட்டு இருக்காங்க. அவங்க இல்லாம மத்தவங்க சொல்றதை நினைச்சாத்தான்..."

"அதை நான் சொல்றேன். அப்போ என்னை எல்லோரும் தலையில தூக்கி வச்சிக்கிட்டு ஆடினாங்க. இன்னைக்கும் நான் உட்கார்ந்து கொண்டு இருக்காமல் வேலை செய்துகிட்டு இருக்கேன். கிடைக்க வேண்டியது கிடைக்கிறப்போ நாளைக்கு என்று நினைக்காமல் தவிட்டைப் பொடியாக்கினேன். பிறகு... பட்டினி கிடக்க வேண்டிய சூழ்நிலை வரல. அப்பமும் அடையும் துணியும் இருக்குறப்போ கூட ஓணம் பண்டிகையைக் கொண்டாடவில்லை. மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக இருப்பேன். எப்போதும் என் அடுப்பில் நெருப்பு எரியும். என் அடுப்பிற்குள் பாம்பு நுழையாது. அவங்க பேசுறதுக்குக் காரணமே இதுதான்."

"நீ சொல்றது உண்மைதான் மகளே!"

ஒரே அமைதி!

அதற்குப் பிறகும் பாட்டு தொடங்கியது.

அது ராமனின் கதையைப் பற்றிய பாட்டாக இருந்தது.

 

அந்த வரிசையிலிருந்து உலகியும் சிருதாவும் சற்று முன்னோக்கி நகர்ந்து களையைப் பறித்தார்கள். அவர்களுடைய வேலைக்கு சுறுசுறுப்பு வந்து சேர்ந்தது. வேகத்தில் இருந்த தன்னுடைய சிந்தனைகளுடன் சிருதா படு சுறுசுறுப்பாக நகர்ந்து கொண்டிருந்தாள்.

இடத்தின் சொந்தக்காரன் சொன்னான்:

"வடக்கு எல்லையில் இருப்பவர்களுடன் மற்றவர்கள் சேர்ந்து களையைப் பறியுங்கள்!"

ஒரு பெண் தனக்கு அருகில் இருந்த இன்னொரு பெண்ணிடம் சொன்னாள்:

"சிருதாம்மாவைப் பற்றிய பாட்டைக் கேட்டப்போ, சிருதாம்மாவுக்கு ஒரு பெருமையும் சுறுசுறுப்பும் வந்திடுச்சு."

"அது நடக்கக்கூடியதுதானே!"

சிருதா மனதில் நினைத்துக் கொண்டிருந்த விஷயம் அவளையும் மீறி உலகியின் காதுகளில் விழுந்தது.

"ஒரு விஷயம் சொல்றதா இருந்தா, என் உண்மையான நிலை என்னன்னு தெரியுமா அம்மா?"

"அது என்னடி?"

"என் குழந்தைக்காகத்தான் நான் இப்படி உயிருடனே இருக்கேன்."

"எல்லாரும் அப்படித்தானே?"

"அது இல்லம்மா. அவங்கவங்களோட சந்தோஷமும் மற்ற விஷயங்களும் அவங்கவங்களுக்குத்தான் தெரியும். அது மட்டும் அல்ல. நான் வேல் கம்பை எடுத்துக் கொடுத்தது சரிதான். அப்போ துப்பாக்கில குண்டு பாயும்னோ, அவர் இறப்பாருன்னோ நான் நினைக்கல. ஊர்வலத்துக்குப் போறாங்க... பெரிய ஊர்வலத்துக்கு..."

"துப்பாக்கி மூலம் சுடுவாங்கன்னு பேச்சு இருந்தது. எல்லாரும் சொன்னாங்க."

"அது உண்மைதான். நான் அதையெல்லாம் நினைக்கல."

"இந்த ஊர்ல இருக்குற எந்தப் பெண்ணும் அதை நினைக்கல. அது உண்மைதான். ஊர்வலம் பெரியதா இருக்க வேண்டும் என்ற ஒரே எண்ணம்தான் அப்போ இருந்தது."

"அம்மா... நாங்க ஒண்ணா ஆறு இரவுகள் இருந்தோம். அப்படி ஒருத்தியின் வாழ்க்கை அமைஞ்சிடுச்சு அம்மா..."

அதற்குப் பிறகும் பாட்டு பாடியவள் பாட ஆரம்பித்தாள். ராமரின் கதையைப் பற்றிய பாட்டுதான். சீதை இலங்கையில் தன்னுடைய கணவனை நினைத்து மரத்தடியில் அரக்கப் பெண்கள் காவல் காக்க இருந்து கொண்டிருக்கும் ராமாயணக் கதைப்பகுதிதான் பாட்டின் மையமாக இருந்தது.

சிருதா கேட்டாள்:

"நானும் மனிதப் பிறவிதானே? ரத்தமும் எலும்பும் கொண்ட மனிதப் பிறவி."

உலகி சொன்னாள்:

"ஆமாம் மகளே. உண்மைதான். அந்த வயதைத்தான் நீ கடந்து வந்து கொண்டிருக்கிறாய்."

"அதற்குப் பிறகு வாழ்க்கையில என்ன இருக்கு அம்மா?"

ஸ்டாலின் வேலிக்கு வெளியில் இருந்து கொண்டு அழைத்தான். பள்ளிக்கூடத்திலிருந்து அவன் மதிய நேரத்தில் வந்திருக்கிறான். அவனுக்கு அருகில் சென்ற அவள் சொன்னாள்:

"உறியில சாதம் வச்சு குழம்பு ஊற்றி வச்சிருக்கேன். அதை எடுத்து சாப்பிடு. கையையும் முகத்தையும் கழுவிட்டுத்தான் சாப்பிடணும்."

மற்ற பெண்கள் பார்த்தார்கள்.

'நல்ல பையன்!'

அவர்கள் தங்களுக்குள் தயங்கித் தயங்கி அப்படிக் கூறிக் கொள்ளவில்லையென்றாலும், மனதிற்குள்ளாவது கூறிக் கொண்டிருப்பார்களோ?

அது கண்ணனின் மகனா?

கண்ணன் இந்த அளவிற்கு நிறத்தைக் கொண்டவன் இல்லை. சிறு பிள்ளைகளுக்கு நிறம் உண்டாவது வளர்ப்பு மூலம்தான். சிருதாம்மா அவனைப் பொன்னனப் போல வளர்த்தாள். அவன் ஒரு புலையப் பையன் இல்லை. ஸ்டாலினைக் கூர்ந்து பாருங்கள். அவனுக்கு கண்ணனின் சாயல் அப்படியே இருக்கும்.

அப்படியா?

அதற்காக கண்ணனும் சிருதாம்மாவும் எத்தனை நாட்கள் ஒன்று சேர்ந்தார்கள்? ஒரு குழந்தையை உண்டாக்க எத்தனை நாட்கள் ஆணும் பெண்ணும் ஒன்று சேர வேண்டும்?

திருமண நாளிலிருந்து கணக்கு போட்டால் பத்தாவது மாதத்தில் பெண்கள் குழந்தையைப் பெற்று விடுவதில்லையா?

அதற்கு அந்தக் காலத்தில் கண்ணனுக்கு நேரம் இருந்ததா? புன்னப்புரை- வயலார் போராட்டத்திற்காக அவன் ஓடிக் கொண்டிருக்கவில்லையா?

அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்த இரவு வேளையில் அவர்கள் ஒன்றாகத்தானே இருந்தார்கள்! அந்த இரவு கண்ணனுக்குச் சொந்தமானதாக இருந்தது.

அப்படியென்றால் ஏதாவது வெட்டவெளியிலோ மக்கள் வசிக்காத புறம்போக்கு நிலத்திலோதான் அவன் உண்டாகியிருக்க வேண்டும். மேன்மையான இடத்திலாக இருக்க வாய்ப்பில்லை.

யார் எங்கெல்லாம் பிறக்கிறார்கள்?

உயர்ந்த இடத்தில் குழந்தைகள் பிறக்க வேண்டும்.

மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. வீட்டிற்குள் லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் ஸ்டாலின் தன்னுடைய பாடத்தை வாசித்துக் கொண்டிருந்தான். வெளியே வராந்தாவில் சிம்னி விளக்கின் ஒளியில் சிருதாம்மா பாய் நெய்து கொண்டிருந்தாள்.

மாலை நேரம் மறைந்து போயிருந்தது. நல்ல இருட்டு நிலவிக் கொண்டிருந்தது. காக்கைத் தீவில் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகக் கூடியிருந்தன. விட்டில் பூச்சிகளின் சத்தம் ஒரு இரைச்சலாக ஆகிவிட்டிருந்தது. மழை மேகம் இருக்கிறதோ?

பாய் நெய்து கொண்டிருந்தாள். பாய் நெய்வதற்கு அந்த அளவிற்கு சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. அது இயந்திரத்தனமாக நடக்கக்கூடிய ஒரு விஷயம். அதில் நல்ல பழக்கம் உள்ளவர்களுக்கு தவறு என்பதே உண்டாகாது. பாய் நெய்வதற்கு அறிவு தேவையில்லை. பாய் நெய்பவர்கள் இடையில் எதை வேண்டுமானாலும் சிந்திக்கலாம். சிந்தனை செய்வதற்குப் பாய் நெய்வது என்பது தடையாகவே இருக்காது. பாய் நெய்வதற்கு சிந்தனையும் தடையாக இருக்காது.

ஸ்டாலின் பெருக்கல் வாய்ப்பாட்டை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான்.

'ஓர் அஞ்சு அஞ்சு

ஈரஞ்சு பத்து

மூவஞ்சு பதினைஞ்சு'

சிருதாம்மாவிற்கு அதுவும் தெரியாது.

கண்ணனுடைய உருவத்தை நினைத்துப் பார்க்க முடியுமா? கண்ணன் சிரிப்பதை அவள் நினைத்துப் பார்க்கிறாள். கண்ணன் உணர்ச்சி பொங்க பேசுவதை அவள் பார்க்கிறாள். ஆனால், ஒரு மெல்லிய தெளிவற்ற தன்மை இனியும் காலம் செல்லச் செல்ல கண்ணனின் உருவம் மறைந்தேகூட போகலாம்.


எப்போதும் கண்ணனால் தெளிவாகத் தோன்ற முடியவில்லை. அது ஒரு பிரச்சினைக்குரிய விஷயமும் இல்லை. சிருதா கண்ணனைத் தெளிவாகப் பார்க்க முயற்சிக்கிறாள். நெய்து கொண்டிருக்கும் பாயின் நீளம் அதிகமாகிறது.

ஸ்டாலின் பன்னிரண்டாம் வாய்ப்பாட்டைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

யாரோ ஒரு மனிதன் வாசலில் நின்றிருக்கிறான்.

கண்ணன்!

குண்டடிபட்டு இறந்த கண்ணன்!

சிருதா நடுங்கிவிட்டாள்.

இல்லை. அது கட்சியின் செயலாளர்.

கண்ணனின் மிகவும் நெருங்கிய நண்பர் அவர். கண்ணனைத் தெளிவாகப் பார்க்க வேண்டும் என்ற முயற்சி அந்த நண்பருக்குத் தெரியுமா? பயமாக இருந்தது. தவறு செய்து கொண்டிருக்கும் போது அவள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டாள். மனதில் நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் வேறொரு மனிதர் தெரிந்து கொண்டுவிட்டார். அதுவும் கண்ணனுடைய நண்பர்.

கண்ணன் மறையாமல் இருக்க வேண்டுமென்றால் கண்ணனைத் தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணன் தூங்குவதைப் பார்த்ததில்லை. கண்ணன் பல் தேய்ப்பதைப் பார்த்ததில்லை. கண்ணன் கோபப்படுவதைப் பார்த்ததில்லை. கண்ணன் நகைச்சுவையாக பேசுவதைக் கேட்டதில்லை.

கண்ணனைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்கும் போது கண்ணன் எப்படி மறையாமல் காட்சியளித்துக் கொண்டிருப்பான்? கண்ணன் என்ற மனிதன் இருந்தான்.

அவ்வளவுதான்.

கேட்டால் அதைக் கூறலாம். அது போதுமே!

வேல்கம்பைக் கொடுத்து அனுப்பியதோ?

இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே தெரிந்திருந்தால் அவள் கொடுத்து அனுப்பியிருக்கவே மாட்டாள்.

கட்சியின் செயலாளர் சொன்னார்:

"நான் எவ்வளவு நேரமாக வந்து நின்று கொண்டு இருக்கிறேன். உங்களையே நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன்."

சிருதா எழுந்தாள். உள்ளே அவரை அழைப்பதா இல்லாவிட்டால் வெளியே அவள் போய் நிற்பதா?

உள்ளே அழைக்கலாம்.

ஸ்டாலின் இருக்கிறான்.

'பதினாறொண்ணு- பதினாறு'

"தோழர்- உள்ளே வந்து உட்காருங்க. நான் ஒவ்வொரு சம்பவத்தையும் நினைச்சுக்கிட்டு இருந்துட்டேன்."

"நான் அப்படித்தான் நினைச்சேன்."

"சரி... தோழர், எப்போதும் இல்லாத வகையில் இப்போ இங்கே வந்திருக்கீங்களே?"

அந்தக் கேள்வியின் தொனியில் அது சரியானதுதானா என்ற அர்த்தமும் கலந்திருந்தது.

"சிருதாம்மா, நான் பல நாட்களாகவே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிக்கிட்டுதான¢ இருந்தேன். ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லணும்ன்றதுக்காகத்தான். நீங்க காலையில வேலைக்குப் போயிடுறீங்க. எனக்கும் கட்சி விஷயமாக நேரம் கிடைப்பது இல்லை. இப்போது வந்தது கூட- இந்த நேரத்துல சரியில்லைன்னு எனக்குத்  தெரியும். பிறகு... அது சரியா, தப்பா என்று பின்னால முடிவு பண்ணிக்குவோம்னு மனசுல நினைச்சுக்கிட்டேன்."

பேச்சு நின்று விட்டது.

சிருதாவிற்குப் பேசுவதற்கு விஷயம் எதுவும் இல்லை.

சதானந்தன் கண்ணனின் நண்பராக இருந்தார். மிகவும் நெருங்கிய நண்பர். புன்னப்புரை போராட்டத்தில் அவரும் பங்கு பெற்றவர்தான். குண்டடிபடவில்லை என்பது ஒன்றுதான் வித்தியாசம். சிறையில் பலமுறை இருந்திருக்கிறார். அடியும் இடியும் வாங்கியிருக்கிறார்.

சதானந்தன் சொன்னார்:

"ஸ்டாலின் படிப்பில் திறமைசாலி. பாடம் சொல்லித் தரும் ஆசிரியரிடம் நான் விசாரிப்பது உண்டு. நன்றாகப் படிக்கும் பையன் என்று ஆசிரியர் சொன்னார். அவனை மிகவும் கவனம் செலுத்திப் பார்த்துக்கணும் என்று நான் அவரிடம் கூறுவதுண்டு. அவர் தினமும் கட்சி அலுவலகத்திற்கு வருவார்."

ஸ்டாலின் பாடப் புத்தகத்திலிருந்த ஒரு செய்யுளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தான். நாளைக்கு வகுப்பில் புத்தகத்தையே பார்க்காமல் அதை அவன் கூற வேண்டியதிருக்கலாம்.

"முழுமையான ஈடுபாடு கொண்டிருக்கும் பையன் என்பது தெரிகிறது. நாம பேசுவது அவனுக்குத் தெரியாது."

எதையாவது கூற வேண்டுமே!

"ம்... அவன் படித்துக் கொண்டிருக்கிறான்."

"அவனை நல்லா வளர்க்கணும். அவன் ஒரு தலைவராக வருவான்."

அதற்கு அவள் என்ன பதில் கூறுவாள்?

எங்கேயோ ஒரு நாய் குரைத்துக் கொண்டிருக்கிறது. வயலின் வடகிழக்கு மூலையில்தான் அந்தச் சத்தம் கேட்கிறது. பொன்னிட்டியின் வீடு அங்குதான் இருக்கிறது. அங்குதான் வாயாடியான மாணிக்கா இருக்கிறாள். தினமும் ஏதாவது சிருதாம்மாவைப் பற்றி அவளுக்குக் கூறியே ஆக வேண்டும்.

அவள் கூறுவாள்:

"செயலாளர் தோழர் மாலை முடியிற நேரத்துல சிருதாம்மாவோட வீட்டிற்குப் போயிருந்தாரு."

நல்ல இருட்டு நேரம். பொன்னிட்டியின் வீட்டிலிருந்த விளக்கு கூட அணைந்துவிட்டது. தோழர் வருவதை யாராவது பார்த்திருப்பார்களோ? யாராவது பார்த்திருந்தால் அந்த விஷயம் மாணிக்காவின் காதுகளில் கட்டாயம் போய்ச் சேரும். அதற்குப் பிறகு அதுவே பாட்டாக மாறவும் செய்யும்.

"யாராவது பார்த்திருந்தால் என்ன சொல்வீங்க?"

"எனக்கும் அந்த பயம் இருக்கு."

அதற்குப் பிறகு என்ன கூறுவது?"

"நான் வந்த விஷயம்- நான் நீண்ட நாட்களாகவே கேட்க நினைத்திருந்தது..."

தலையைக் குனிந்து கொண்டிருந்த சதானந்தன் சொன்னார்:

"நான் திருமணம் செய்துக்கல. நான் திருமணம் செய்து கொள்ளணும்னு நினைக்கிறேன். சிருதாம்மா, உங்களுக்கு சம்மதம் என்றால்... நான் கட்டாயப்படுத்தல. உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால்... நான் ஒருவேளை வாழ்க்கையில திருமணமே பண்ணாமலே இருந்துவிட்டேன் என்ற சூழ்நிலை உண்டாகும். விருப்பம் இல்லையென்றால், அதைப் பற்றி நான் வருத்தப்படமாட்டேன். அதற்குக் காரணம் இருக்கு."

கூறியாகிவிட்டது.

பதில் இல்லை.

ஸ்டாலினின் சத்தத்தைக் காணோம்.

அவன் வாசித்து வாசித்து தூங்கிவிட்டிருக்கலாம். இல்லாவிட்டால் அமைதியாக சதானந்தனும் தன் தாயும் ஒருவரோடொருவர் பேசுவதை அவன் கேட்டுக் கொண்டிருக்கலாம். அந்த அளவிற்கு அவன் வளர்ந்திருக்கிறானா?

யாருக்குத் தெரியும்?

அந்த அமைதி இருவரையும் பயம் கொள்ளச் செய்தது. அதற்குப் பிறகு என்ன கூற வேண்டும் என்பது சதானந்தனின் மனதில் தோன்றியது எதையாவது. அது என்ன என்பது உறுதியாகத் தெரியவில்லை. கூறுவதற்கு சிருதாவும் பயந்தாள்.

ஸ்டாலின் கேட்டு விடுவானே!

சிருதாம்மா பதுங்கிப் பதுங்கி அறையின் கதவுக்குப் பக்கத்தில் போய்ப் பார்த்தாள்.

ஸ்டாலின் தூங்கிவிட்டான்!

புத்தகத்தைத் திறந்தபடியே வைத்திருந்தான்.

குரலைத் தாழ்த்திக் கொண்டு சதானந்தன் கேட்டார்:

"தூங்கிட்டானா?"

சிருதாம்மா தலையை ஆட்டினாள்.

"சிருதாம்மா, உங்க மனதில் கண் இருக்கு. அப்படியென்றால் அதை அடைய நினைப்பது சரியில்லையென்றால்... அதுதான் நான் சொன்னேனே... எனக்கு அதைப்பற்றி வருத்தம் இல்லைன்னு."

சிருதாம்மாவின் மனதில் கண் இருக்கிறதா? யாரோ அங்கு இருந்தார்கள். அது கண்ணனாக இருக்க வேண்டும். இப்போதும் கண் இருக்கிறது. ஆனால் கண்ணன் என்று உறுதியாகக் கூறுவதற்கில்லை.

"உங்களுடைய திருமணம் காதல் திருமணம்தானே?"

"ஆமாம்... காதல் திருமணம்தான்."

மனதையும் மீறி சிருதா கூறினாள்.

"அது ஒரு கனவாக இருந்தது."

"ஊரின் விடுதலைக்காகவும் தொழிலாளர்கள் இனத்திற்காகவும் அந்த வீரர் தன்னையே அர்ப்பணித்தார்."

அதற்கு அவள் பதில் எதுவும் கூறவில்லை.


கூற வேண்டியவற்றையெல்லாம் கூறியாகிவிட்டது. விட்டில் பூச்சிகள் சத்தமிட்டுக் கொண்டிருந்தன. நேரம் கடந்து போய்க் கொண்டிருந்தது.

சதானந்தன் எழுந்து போவதாகத் தெரியவில்லை. அதற்குப் பிறகு அவர் என்ன காரணத்திற்காக அமர்ந்திருக்கிறார் என்பதை சிருதாம்மாவும் கேட்கவில்லை.

அந்த அளவிற்கு இருட்டிய பிறகும் ஒரு ஆண் அமர்ந்திருக்கும் போது அவள் அதைக் கேட்க வேண்டுமல்லவா? அவருக்கு ஒரு வேலையும் அங்கு இல்லை. தவறான நோக்கம் இருப்பது மாதிரியும் தெரியவில்லை.

எல்லா விளக்குகளும் அணைந்தன.

சிருதாம்மாவிற்குத் தூக்கம் வரவில்லை. அந்த மாதிரி ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்தால்- ஆணும் பெண்ணுமாயிற்றே! எது நடக்கக் கூடாது? எதுவுமே நடக்கவில்லை என்றும் ஆகலாம்.

திடீரென்று சதானந்தன் நடுங்கிய குரலில் சொன்னார்:

"நான் போறேன்."

அவர் சிருதாம்மாவையே பார்த்தார். அவருடைய கண்களில் ஏதோ ஒன்று மின்னியது. அவளுடைய கண்களும் மின்னுவதாக அவருக்குத் தோன்றியது.

சதானந்தன் நின்றுகொண்டே இருந்தார்.

"நல்லா இருட்டிடுச்சு... இப்போ போறீங்களா?"

"நான் போறேன்... வரட்டுமா?"

சிருதா கதவை அடைத்துத் தாழ்ப்பாள் போட்டாள்.

ஆனால் தூக்கம் வரவில்லை. அவள் காதுகளைத் தீட்டி வைத்துக் கொண்டு படுத்திருந்தாள். காலடிச் சத்தம் கேட்கிறதா என்பதற்காக இருக்கலாம்- கதவை யாராவது தட்டுகிறார்களா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக இருக்கலாம்.

இரண்டு முறை எழுந்து கதவின் தாழ்ப்பாளைச் சரியாகப் போட்டிருக்கிறோமா என்று சோதித்துப் பார்த்தாள். ஏழரைக் கோழி கூவியது.

சக்ரேஸ்வரன் முதலாளியின் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்ச வேண்டும்.

 

ஆறேழு நாட்களாக ஸ்டாலினைக் கல்லூரியிலிருந்து வெளியே போகுமாறு கூறிவிட்டார்கள். ஸ்டாலின் மாணவர்கள் சங்கத்தின் தீவிரமான செயல்வீரனாக இருந்தான் - சங்கம் சிறிதும் அசையவில்லை.

ஸ்டாலின் ஒரு குறிப்பிடத்தக்க குணத்தைக் கொண்டவனாக இருந்தான். அது எல்லோருக்கும் தெரியும். அவன் போராடும் குணத்தைக் கொண்டவன். எனினும், ஒரு விஷயம் மட்டும் உண்மை. கட்சிமீது அவனுக்குத் தீவிர ஈடுபாடு இருந்தது. தன் தந்தையைப் போலவே கட்சிக்காக இறப்பதற்குக் கூட அவன் தயாராக இருந்தான். அதுதான் அவனுடைய பிறப்பாக இருந்தது- வளர்ச்சியும்!

"என்ன நடந்தது மகனே? சொல்லு..."

"என்ன நடக்கணும்? சில சந்தர்ப்பவாதிகள், சருகுகள், பிற்போக்குத்தனமானவர்கள் அமைப்பிற்குள் வந்துவிட்டார்கள், விஷயம் அதுதான்."

"என்ன நடந்தது? அதைச் சொல்லு..."

"அம்மா, அதைச் சொன்னால் உங்களுக்குப் புரியுமா?"

"புரியாது... நீ சொல்றது உண்மைதான்."

சிருதாவிற்கு மிகவும் கவலையாக இருந்தது.

ஸ்டாலினின் படிப்பு முடிவுக்கு வந்துவிட்டதா? அவனுக்கு ஒரு பயமும் இல்லை.

அமைப்பிற்குள் பிற்போக்கு எண்ணம் கொண்டவர்கள் நுழைந்துவிட்டதற்காக, அவனை எதற்காகக் கல்லூரியிலிருந்து வெளியே போகுமாறு கூற வேண்டும்? அதை சிருதாவால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.

போன வருடம் சணல் நிறுவனம் நடத்தும் கோவிந்தனின் மகனைக் கல்லூரியிலிருந்து வெளியேற்றினார்கள். அவனும் மாணவர்கள் சங்கத்தில் இருந்தவன்தான். பத்து நாட்கள் கல்லூரியை அடைக்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. கல்லூரியில் லத்தி சார்ஜ் நடைபெற்றது. என்ன ஒரு ஆர்ப்பாட்டம்! இறுதியில் அவனை மீண்டும் கல்லூரிக்கு வரும்படிக் கூறிவிட்டார்கள்.

இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாணவர்கள் சங்கம் அவனைக் கை கழுவிவிட்டிருக்க வேண்டும்.

அவன் அவர்களுடன் சண்டை போட்டிருக்க வேண்டும். அதுதான் அவனுடைய இயற்கை குணம்.

கட்சியின் செயலாளரைப் போய் பார்த்து விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் அவள்.

"என்ன சிருதாம்மா?"

சதானந்தத்தின் சிரிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது.

"என் மகனின் விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்காக வந்தேன்."

நேராகவே சிருதா விஷயத்திற்கு வந்தாள்.

சதானந்தன் சொன்னார்:

"ஓ... இப்போது அவன் கட்சிக்கு விரோதி ஆயிற்றே!"

சிருதா அதைக் கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவளால் எதுவும் பேச முடியவில்லை. ஸ்டாலின் கட்சிக்கு எதிரானவனாக ஆகியிருக்கிறான்.

"வேகமும் தைரியமும் இருந்தால் மட்டும் போதாது. வேகமும் தைரியமும் இருக்குற அதே நேரத்தில் பணிவும் இருக்கணும்."

சிருதா சொன்னாள்:

"கட்சி என்றால் எங்களுக்கு உயிர் ஆச்சே!"

"ஆமாம்... கண்ணன் தன்னோட உயிரை விட்டதே கட்சிக்காகத்தானே! சிருதாம்மா, நீங்களும் கட்சிமீது தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் பெண்தான். அது மட்டும் போதாதே!"

"என்னதான் நடந்தது?"

ஒரு மிகப்பெரிய மாளிகை தரை பெயர்ந்து கீழே விழுந்தது. அப்போது உண்டான சத்தம் இருக்கிறதே! கட்சி அலுவலகத்திற்கு அருகில் நின்றிருந்த ஒரு தென்னைமரம் அடியோடு கீழே விழுந்தது. அதன் தலைப்பகுதி குலுங்கியது. சதானந்தன் ஒருபீடியை எடுத்து எரிய வைத்தவாறு சொன்னார்:

"சங்கம் ஸ்டாலினை ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வெளியேற்றியிருக்கிறது."

சிருதா கேட்டாள்:

"எதற்காக?"

"ஹ...ஹ...ஹ..."- சதானந்தன் சிரித்தார். சகித்துக் கொள்ள முடியாத சிரிப்பு!

"என்ன தோழரே, நீங்க சிரிக்கிறீங்க?"

தொடர்ந்து சிருதாம்மா சொன்னாள்:

"நானும் அப்படிச் சிரிக்க முடியும். தெரியுதா?"

சதானந்தன் தீவிரத்தன்மையுடன் பிரச்சினையைக் கூறத் தயாரானார்:

"இந்த விஷயத்தை மாணவர் அமைப்பின் ஆலப்புழை கிளையைச் சேர்ந்தவர்களிடம் கேட்க வேண்டும்- எதற்காக ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் என்று... ஆனால், கண்ணனுடைய மகனாக இருப்பதால்... சிருதாம்மா, நீங்கள் கேட்பதால்... எனக்குத் தெரிந்த அளவில் விஷயங்களைச் சொல்றேன்."

அது என்ன என்று சிருதாம்மா கேட்பாள் என்று சதானந்தன் நினைப்பதைப் போல இருந்தது. சிருதா கிண்டலாக சிரித்துக் கொண்டு நின்றிருந்தாள். கேலியாக... சதானந்தனால் கூறாமல் இருக்க முடியவில்லை.

"தோழர் சிருதாம்மா!"

"என்ன?"

"மாணவர்கள் சங்கம் என்பது கட்சியைச் சேர்ந்த மாணவர்களின் அமைப்பு என்ற விஷயம் தெரியுமா?"

"தெரியும்."

"அந்த அமைப்பில் இருக்கும் உறுப்பினர்களும் தலைவர்களும்தான் பின் நாட்களில் இளைஞர்கள் அமைப்பின் உறுப்பினர்களாகவும் தலைவர்களாகவும் வருபவர்கள்."

சிருதா அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

சதானந்தன் தொடர்ந்து சொன்னார்:

"அவர்கள்தான் நாளைய கட்சியின் செயல்வீரர்கள். தலைவர்கள். அவர்கள்தான் அதற்குப் பிறகு தொழிலாளி வர்க்க சர்வாதிகாரத்தைச் செயல்படுத்தப் போகிறவர்கள். சிருதாம்மா, உங்களுக்குப் புரியுதா?"

"ம்... புரியுது. என் மகன் என்ன தவறு செய்துவிட்டான்? அதைச் சொல்லுங்க தோழரே?"

சதானந்தனை பொறுத்தவரையில் அந்தக் கேள்வி முக்கியமற்ற ஒன்றாக இருந்தது.

சதானந்தன் ஒரு புன்னப்புரை போராளியாக இருந்தவர்.

கட்சியின் உள்ளூர் குழுவின் செயலாளர் சொன்னார்:

"நான் சொல்ல வர்றது என்னவென்றால், கீழ்ப்படிதல் என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயம். அதாவது... மாணவர்கள் அமைப்பாக இருந்தாலும் சரி, இளைஞர்கள் அமைப்பாக இருந்தாலும் சரி... அவை கீழ்ப்படியக் கூடியவையாக இருக்க வேண்டும்."


சிருதா எதையும் கேட்க நினைக்கவில்லை. அவள் அமைதியாக நின்றிருந்தாள்.

யார் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய தேவை சதானந்தனுக்கு இல்லை. கூற வேண்டியதைக் கூறி முடிக்க வேண்டும். அந்த வாய்க்காலில் அவர் விழுந்துவிட்டார்.

"ஸ்டாலின் கட்சித் தலைமையின் உத்தரவுகளை எதிர்த்தான். அதுதான். பிரச்சினையே! மகன் தந்தையின் மற்றும் அன்னையின் உத்தரவுகளை எதிர்ப்பதைப் போல... ஸ்டாலின் என்னவெல்லாம் சொன்னான் தெரியுமா சிருதாம்மா?"

"என்ன சொன்னான்?"

"கட்சியின் தலைவர்கள் எல்லோரும் திருடர்கள், சந்தர்ப்பவாதிகள், ஏமாற்றுப் பேர்வழிகள் என்று அவன் சொன்னான். அதற்குப் பிறகு அவன் என்ன செய்தான் தெரியுமா?"

"தெரியாது."

"அது அல்ல விஷயம். அவன் மட்டும் தனியே தைரியமாக ஒரு காரியத்தைச் செய்தான். அது என்னவென்று தெரியுமா?"

"தெரியாது."

"அவன் மட்டும் தனியே பேருந்தை நிறுத்தினான். கட்சியின் வழிகாட்டுதலை மீறி நடந்த விஷயம் அது. மாணவர்களின் நலனுக்காகக் கூட அது இருக்கலாம் என்பது வேறு விஷயம்."

சிருதாம்மா எதுவுமே புரியததைப் போல நின்று கொண்டிருந்தாள். சதானந்தன் என்ற வண்டி ஓடத் தொடங்கிவிட்டது. அது இடையில் நிற்காது; ஓடிக் கொண்டே இருக்கும்.

"அப்போது காங்கிரஸையும் சேர்த்து உள்ள எதிர்க்கட்சிகள் ஸ்டாலினுக்குப் பின்னால் அணிவகுத்து நின்றுவிட்டார்கள். அது நமக்கு எதிரான ஒரு போராட்டமாக மாறிவிட்டது. ஸ்டாலின் அன்றைக்குச் செய்த சொற்பொழிவைக் கண்ணன் கேட்டிருந்தால்... நான் சொல்ல மாட்டேன் என்ன நடந்திருக்கும் என்று."

சதானந்தன் தொடர்ந்து சொன்னார்:

"ஸ்டாலின் இப்போது மாணவர்கள் அமைப்பில் எதுவாகவும் இல்லை. அவன் கட்சியின் எதிரி."

 

சிருதா நடந்தாள். அவள் நடந்து சென்றது கல்லூரியை நோக்கி. ஸ்டாலின் படிக்க வேண்டும். படிக்க வேண்டுமென்றால் அவனை வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும். அவன் படித்து தன்னுடைய பார்வையைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ப்ரின்ஸிப்பால் சொன்னார்:

"அவனை சஸ்பெண்ட் செய்திருக்கோம்."

"அந்த அளவுக்கு அவன் என்ன செய்தான்?"

"அவன் கல்லூரியின் ஒழுங்கை மீறினான்."

எப்படி என்று கேட்க சிருதாவிற்குத் தெரியவில்லை. அவள் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்விதான் இருந்தது.

"அப்படியென்றால் அவனை இங்கு படிக்க அனுமதிக்க மாட்டீர்களா?"

"அவனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நான் பல்கலைக்கழகத்திற்கு எழுதியிருக்கேன்."

"அவனைப் படிக்கச் செய்வதால் என்ன கெடுதல் வரப்போகிறது?"

"அவனைக் கல்லூரிக்குள் அனுமதித்தால், இங்கு மற்ற மாணவர்கள் படிக்க முடியாத அளவிற்கு சூழ்நிலை உண்டாகும்."

"அதை எப்படிச் சொல்றீங்க?"

ப்ரின்ஸிப்பாலின் அறைக்கு முன்னால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்தார்கள். ஸ்டாலினின் தாய் வந்திருக்கிறாள்! புன்னப்புரையின் வீரப்பெண்!

யாரோ உரத்த குரலில் சொன்னார்கள்:

"ஸ்டாலின்- இன துரோகி!"

ஏராளமான குரல்கள் அதைத் தொடர்ந்து ஒலித்தன.

"ஸ்டாலின் -இன துரோகி!"

ப்ரின்ஸிப்பால் சொன்னார்:

"நீங்க அதைக் கேக்குறீங்கள்ல?"

அப்போது இன்னொரு முழக்கம் கேட்டது.

"ஸ்டாலின்- ஜிந்தாபாத்!"

"ஸ்டாலினை வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும்!"

சிருதா கைகளால் தொழுதவாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள்:

"என் பிள்ளையைப் படிக்க வையுங்க."

"இயலாத விஷயம். ஸ்டாலினைத் திரும்பவும் வகுப்பிற்குள் நுழைய அனுமதித்தால், இங்கே படிப்பே நடக்காது. இந்தக் கல்லூரியையே மூட வேண்டியது இருக்கும்."

"ஏன் அப்படிச் சொல்றீங்க?"

ஸ்டாலினை மீண்டும் வகுப்பிற்குள் அனுமதிக்க வேண்டும் என்று கூறுபவர்கள் யார்? ஸ்டாலினை வகுப்பிற்குள் அனுமதிக்கக்கூடாது என்று கூறுபவர்கள் யார்? மாணவர்கள்!

ஸ்டாலினைத் திரும்பவும் அனுமதிக்க வேண்டும் என்று வாசலில் நின்றுகொண்டு முழுங்குபவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் வாசலில் நிற்கிறார்கள். ப்ரின்ஸிப்பாலுடைய அறைக்கு முன்னால் நின்று கொண்டு ஸ்டாலினை வகுப்பிற்குள் நுழைய அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்பவர்கள் யார்?

பொன்னிட்டியின் மகன், மாணிக்கத்தின் சகோதரன் பிரகாசம்.

குஞ்ஞாண்டியின் மகன் ராஜன்!

வடக்கு வீட்டைச் சேர்ந்த சந்திரபானு.

சதானந்தத்தின் தம்பி விஸ்வன்.

இப்படிப் பலர்... எல்லோரும் புன்னப்புரை போராட்டத்தில் பங்குபெற்ற போராளிகளுக்கு மிகவும் வேண்டியவர்கள்!

 

சிருதாம்மா வெளியேறியபோது வானமே அதிர்கிற மாதிரி முழக்கங்கள் ஒலித்தன.

"ஸ்டாலின் ஒழிக!"

"மாணவர்கள் சங்கம் ஜிந்தாபாத்!"

"கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!"

"கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஜிந்தாபாத்!"

வெளியே முழக்கங்கள் ஒலித்தன:

"கம்யூனிஸ்ட் அரசாங்கம் ஒழிக!"

சிருதா நடந்து சென்றாள்.

"ஸ்டாலின் ஜிந்தாபாத்!"

"இந்திய தேசிய காங்கிரஸ்- ஜிந்தாபாத்!"

காங்கிரஸ்காரர்கள் 'ஸ்டாலின்- ஜிந்தாபாத்' என்று முழக்கமிடுகிறார்கள்.

சாதத்தை உருட்டிக் கொண்டிருந்த போது, சிருதா கேட்டாள்:

"மகனே, நீ காங்கிரஸ்காரனா ஆயிட்டியா?"

"இல்லை."

"பிறகு... உனக்கு ஜிந்தாபாத் என்று அவங்க சொல்றாங்க."

"அவங்க முழங்கட்டும். அதுனால என்ன?"

"அது வெட்கக் கேடான விஷயம் இல்லையா?"

அருகில் இருந்த கிண்ணத்திலிருந்த மிளகாயை எடுத்துக் கடித்தான். மிகுந்த எரிச்சலை அது உண்டாக்கியது. ஸ்டாலின் நீரை எடுத்துக் குடித்தான்.

ஸ்டாலின் சொன்னான்:

"நான் காங்கிரஸ் ஜிந்தாபாத் என்று சொல்லலையே!"

"கட்சியில் இருக்குறதா இருந்தால் கட்டுப்பாடு மிகவும் முக்கியம் மகனே!"

"உண்மைதான்."

"நீ தலைவர்களைப் பற்றிக் கேவலமா பேசினியா?"

"தலைவர்களை விமர்சித்தது கட்டுப்பாட்டை மீறிய செயலாமா?"

"அப்படிப் பேசலாமா?"

"நான் கட்சியைத்தான் விரும்புறேன்; தலைவர்களை இல்லை."

"நீ கட்சிக்குத் தேவையில்லை."

"அதனால் பரவாயில்லை."

சாப்பிட்டு முடித்து கையைக் கழுவிவிட்டு, ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பினான்.

 

ஸ்டாலினுக்கு ஒரு குணம் இருந்தது. உரத்த குரலில்தான் அவன் படிப்பான். நள்ளிரவு நேரம் வரையில் அவன் படித்துக் கொண்டிருப்பதைக் கேட்கலாம். அந்தப் பகுதியெங்கும் அவன் வாசிக்கும் சத்தம் கேட்கும். இப்போது அது கேட்பதில்லை. மாம்பலகையால் செய்யப்பட்ட அலமாரியில் அவன் தன்னுடைய புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கிறான். யாரும் அதைத் தொடுவதில்லை.

"உன்னை வகுப்பிலிருந்து வெளியேற்றிவிட்டார்களா?"

"ஆமாம்..."

"இனிமேல் கல்லூரிக்குப் போக முடியாதா?"

"முடியாது."

"அந்த அளவுக்கு நீ என்ன பெரிய தவறைச் செய்துட்டே?"

"என்ன?"

"நீ ஆசிரியரிடம் போய் சொன்னியா?"

"இல்ல..."

"ஏன்?"

"அது தலைவரோட கட்டளை. மாணவர் சங்கத்தின் தலைவர்கள் என்னை கல்லூரியை விட்டு வெளியே அனுப்பணும்னு சொல்லிக்கிட்டே திரியிறாங்க. பிரின்ஸிப்பால் பயப்படுறாரு."

"காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்களே? அவர்கள் உனக்கு ஆதரவா இருப்பவர்கள்தானே?"

"அதற்கு நான் என்ன அவர்களின் ஆளா?"

அமைதியாக அறுவடை செய்து கொண்டிருக்கும்போது சிருதா கட்டுப்பாட்டைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பாள். ஏராளமான வகுப்புகளில் சிருதா பங்கெடுத்திருக்கிறாள். கட்சி ஒரு விஷயத்தைத் தீர்மானித்து விட்டால், அந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதற்குப் பிறகு அதற்கு எதிராக நிற்கக்கூடாது.


அதுதான் சரியான விஷயம். தீர்மானம் எடுப்பதற்கு முன்னால் குழுவில் அதை எதிர்க்கலாம். விருப்பமில்லையென்றாலும், தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும்.

அதற்குப் பெயர்தானே கட்டுப்பாடு!

அவன் அதை மீறிவிட்டான்.

நெற்கதிர்களை மிதித்துக் கொண்டு அவன் நின்று கொண்டிருக்கிறான்.

ஸ்டாலின் கட்டுப்பாட்டை மீறிவிட்டான். இரவில் நன்கு இருட்டும்வரை தன் மகனுக்காக அந்தத் தாய் காத்திருந்தாள். அப்போதும் கட்டுப்பாட்டைக் குறித்து அவள் நினைத்துக் கொண்டிருப்பாள்.

"கட்சியின் தவறுகளை ஊர் முழுக்கச் சொல்லிக் கொண்டு திரியக்கூடாது."

மனதிற்குள் சிருதா முணுமுணுத்தாள்.

ஸ்டாலின் வேட்டியைத் துவைத்து நனைத்துக் கொண்டிருந்த போது சிருதா அருகில் சென்று கேட்டாள்:

"மகனே, நான் கேட்பவை அனைத்தையும் கேட்பதற்கு நீ தயாராக இல்லை. நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகக் கேட்கிற«ன். சின்ன வயசுல இருந்தே நான் கட்சியில இருப்பவள்."

"அம்மா, நான் உங்க வயிற்றுக்குள் இருப்பதற்கு முன்பே நீங்க கட்சியில இருந்தீங்களா?"

"ஆமாம்."

ஸ்டாலின் நல்ல பயிற்சியைப் பெற்றிருந்தான்.

"மகனே, ஒரு விஷயத்தைச் சொல்லட்டுமா? கட்சியில இல்லாமல் என்னால வாழ முடியாது. கட்சி என்பது என்னுடைய மூச்சு. நீ இப்போ கோபத்துடன் இருக்குறப்போ நான் மனசுல எவ்வளவு கஷ்டப்படுறேன் தெரியுமா? அய்யோ... மகனே, கட்சி இல்லாமல் எப்படி வாழ்றது?"

மூழ்க வைத்த சட்டையை நீருக்குள்ளிருந்து வெளியே எடுத்துக் கொண்டிருந்தான் ஸ்டாலின். அவன் மெதுவாகச் சிரித்தான்.

"என்ன மகனே, நான் சொல்றது புரியுதுல்ல,"

"புரியுதும்மா."

"பிறகு எதற்கு சிரிக்கிறே?"

"அம்மா, நீங்க சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லுங்க."

"அது இல்ல மகனே. நான் தெரிஞ்சிக்கணும்ன்றதுக்காகத்தான்... நான் எந்தவொரு போராட்டத்திலும் பங்கெடுக்காமல் இருந்தது இல்லைன்ற விஷயம் உனக்குத் தெரியும்ல!"

ஸ்டாலின் சட்டையைக் கயிற்றில் உலர்வதற்காகத் தொங்கவிட்டான். அவனுடைய தாய் பின்னால் நடந்து வந்து பேசிக் கொண்டிருந்தாள். அப்போது அவன், அவளுடைய கேள்விகளுக்கு பதில் கூறினான்.

"மகனே, உங்களுடைய சங்கத்தின் கூட்டத்தில் சொல்ல வேண்டியதை நீ சொல்லலையா?"

"சொன்னேன். சொல்லாம இருப்பேனா? தலைவர் முடிவு செய்ததைத்தானே தீர்மானிக்கிறாங்க! அதற்குப் பிறகு நான் சொல்றதுனால என்ன பயன்?"

"அப்படியென்றால் அது கட்சியின் முடிவாக இருக்கும்."

"கட்சியின் முடிவு! அம்மா, அது எப்படி உண்டாகுதுன்னு நீங்க நினைக்கிறீங்க? அதையும் தலைவரே முடிவு செய்துவிடுவார். அதற்குப் பிறகு அதை ஒப்புக் கொள்வதற்கான வகுப்பை எடுப்பார். அதுதான் சரியானது என்று சொல்லி மற்றவர்களை ஒப்புக் கொள்ளச் செய்வார். பிறகு தீர்மானம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படும்."

சிருதாவிற்கு எதுவுமே புரியவில்லை. அதை மறுப்பது மாதிரி அவள் தலையை ஆட்டினாள்.

"இல்லை மகனே இல்லை. நீ சொல்றது மாதிரி எதுவும் நடக்க கட்சி ஒப்புக் கொள்ளாது."

"பழைய கட்சி... கட்சி கூட நமக்கே தெரியாமல் மாறிவிட்டது அம்மா!"

சிருதாவிற்கு சிறிது கோபம் உண்டானது.

"அது எப்படி உனக்குத் தெரியும்? நீ நேற்று முளைத்த காளான்தானே? பழைய கட்சியைப் பற்றி நீ சொல்றே... பழைய கட்சிதான் இப்போதும் இருக்குது. நான் அப்போதும் இப்போதும் பார்ப்பது ஒன்றையேதான்."

அதைக் கேட்டு ஸ்டாலின் சிரித்தான். அவனுக்கு சிரிப்பு தானாகவே வந்துவிட்டது. ஒரு நகைச்சுவையைக் கேட்டு சிரிப்பதைப் போல அவன் சிரித்தான்.

"நீ என்னடா கிண்டலா சிரிக்கிறே?"

"உஷ்... நான் கிண்டல் பண்ணுகிறேனா? அதுவும் என்னுடைய எல்லாமுமாக இருக்கும் அம்மாவைப் பார்த்து."

"உனக்கு எல்லாமுமாக எது இருக்குடா?"

"அம்மா!"

"அம்மா! அப்படியென்றால் நீ இப்படியெல்லாம் நடந்திருப்பியா?"

"எப்படி?"

"இருந்தாலும்... என் மகனே! உனக்கு கட்சிமீது ஈடுபாடு இல்லாமல் போச்சே!"

ஸ்டாலின் ஒரு பாட்டை முணுமுணுத்தான். அவன் மிகவும் இயல்பாக இருந்தான். தன் அன்னையின் தாடையைப் பிடித்து உயர்த்தியவாறு தலையைக் குலுக்கிக் கொண்டு அவன் சிரித்தான்.

அன்னைக்கும் சிரிப்பு வந்தது.

"அம்மா, நாம கட்சி விஷயத்தை ஆழமாகப் பேசுவோம்."

"நீ என்னைக் கட்சிக்கு எதிராக ஆக்குவதற்கா?"

"ச்சீ... அது நடக்குற விஷயமா? அப்படிப்பட்ட எண்ணம் எனக்கு இல்லை. அதுவல்ல விஷயம். அம்மா, நீங்க சொன்னீங்கள்ல நான் கட்சிக்கு எதிராக இருக்கேன்னு. நான் கட்சிக்கு ஆதரவாக இருக்கேன்."

சிருதா ஸ்டாலினைப் பாதத்திலிருந்து தலைவரை சிறிது நேரம் பார்த்தாள்.

"இருந்தாலும்... என் மகனே, நீ எப்படி இப்படி ஆனாய்?"

"அம்மா, அதைத்தான் நானும் சில நேரங்களில் யோசிக்கிறேன். சில நேரங்களில் எனக்குத் தோணும், கட்சி எப்படி இப்படியெல்லாம் ஆயிடுச்சுன்னு..."

"எப்படி ஆயிடுச்சுன்னு நீ சொல்றே? டேய், கட்சியால் எப்படிப்பட்ட காரியங்களெல்லாம் நடந்திருக்கின்றன! கூலி அதிகமாகக் கிடைச்சிருக்கு. சூரியன் உதிச்சதுல இருந்து சாயங்காலம் வரை சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டாம். உரிமைகள் அதிகமா கிடைச்சிருக்கு. பிறகு... இப்போ முதலாளிமார்கள் அடிப்பார்களா? முன்பு எப்படி இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இரண்டு மூன்று பேர்களையாவது கொல்லுவாங்க. அந்த மாதிரியெல்லாம் இப்போ நடக்குதா?"

வேறொரு சட்டையை எடுத்து துவைத்துக் கொண்டே ஸ்டாலின் சொன்னான்:

"இனி ஒரு புன்னப்புரை உண்டானால், இவ்வளவு பேர்களும் இருப்பார்களா?"

"இனி புன்னப்புரை உண்டாக வேண்டிய அவசியமே இல்லையே!"

"இல்ல... உண்டானால்...!"

"அப்படி ஏன் தோணுது?"

"அம்மா, இப்போ கட்சி என்றால் என்ன?"

திரும்ப அவள் கேட்டாள்:

"என்னன்னா கேட்குறே? நீ என்ன கேட்குறே? நேராக விஷயத்தைச் சொல்லு."

"சொல்றேன். கட்சி என்றால்... நான் சொல்றேன். அலுவலகம், அதை படிப்படியா இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடமாக ஆக்கக்கூடிய ஆசை, எழுதும் கடிதங்கள், சர்க்குலர் பிறகு... தலைவர் பேசக்கூடிய பொதுக்கூட்டம், தலைவர்களின் கருத்துக்களை சரி... சரி என்று கூறக்கூடியவர்கள் இருக்கும் கூட்டம்- அரசாங்கம். எல்லா விஷயங்களும் தயார். கட்சி... கட்சி.... ஜிந்தாபாத்! எல்லோருடைய கைகளும் சர்க்கரை குடத்திற்குள்...."

"நீ என்ன சொல்றே?"

"இப்போ போனால் சக்ரேஸ்வரன் முதலாளியை எங்கே பார்க்கலாம்?"

"எங்கு பார்க்கலாம்?"

"அம்மா நீங்க சொல்லுங்க."

"நீ சொல்லு..."

"கட்சி செயலாளரின் வீட்டில்... இல்லாவிட்டால் அலுவலகத்தில். கட்சியின் எதிரிகள் எல்லோரும் இப்போ அங்கேதானே கூடியிருக்காங்க?"

"நீ எப்படி இப்படியெல்லாம் தலையே இல்லாமல் பேசுறே?"

"என் தலை என்னுடைய கழுத்துலதான் இருக்கு அம்மா."

மூக்கில் விரலை வைத்து நின்று போன அன்னை கேட்டாள்:

"நீ காங்கிரஸ்காரனா ஆகப் போறியா?"

"இல்லை."

"இனியும் நீ படிக்கணும்ல?"

"ஆமா..."


ஸ்டாலின் தொடர்ந்து சொன்னான்:

"ஆனால், ஒரு விஷயம்... அம்மா..."

"என்ன?"

"எம்.எல்.ஏ.வாக ஆவதற்கும் அமைச்சராக ஆவதற்கும் அப்படியொண்ணும் படிக்க வேண்டிய தேவையில்லை. இவ்வளவு படிச்சிருக்குறதே அதிகம்!"

அது உண்மைதான்.

"அப்படியென்றால் நீ எம்.எல்.ஏ.வாகவும் அமைச்சராகவும் ஆகப் போறியா?"

அதற்கு ஸ்டாலின் பதில் எதுவும் கூறவில்லை.

"மகனே, என் ஆசை அது... ஒரு மாதம் இல்லையென்றாலும் ஒரு வாரமாவது நீ அமைச்சராக இருக்கணும்."

"அம்மா, உங்களுக்கு எப்படி இப்படியொரு ஆசை உண்டானது?"

"அப்படியொரு ஆசை உண்டாயிடுச்சு மகனே. அந்த ஆசை எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. நான் உண்மையைச் சொல்லட்டுமா? நான் உறங்குறப்போகூட அந்த ஆசைதான் என் மனசில இருக்கு. இப்போ கூட..."

சிருதா தன்னுடைய பேச்சை நிறுத்தினாள். சிருதாவின் கண்கள் ஈரமாயின. கடுமையான ஏமாற்றம் கண்களில் தெரிந்தன. ஆசை தகர்ந்து போனால், அந்த தகர்வு கண்களில் தெரியும்.

தழுதழுத்த குரலில் சிருதா சொன்னாள்.

"இந்த விஷயத்தை நான் உன்னிடம் தவிர வேறு யாரிடமும் சொன்னது இல்லை. உன்னை மடியில வைத்துக் கொண்டு நீ சின்னபிள்ளையா இருக்குறப்போ, உன் காதுகளில் தினந்தோறும் ஆயிரம் தடவை நான் கூறியிருக்கிறேன். அப்படிச் சொன்னால் நீ அப்படி ஆயிடுவேன்னு நம்பினேன்."

நினைவு தெரிந்த நாட்கள் முதல் அவன் காதுகளில் அவள் கூறிக் கொண்டே இருந்தாள். தொந்தரவு பிடித்த உறுதிமொழி!

சிருதா தொடர்ந்து சொன்னாள்:

"அது உன் மனதிற்குள் நுழையவில்லை."

பிறகும் சிருதா கேட்டாள்:

"மகனே, மனதில் அதைப் பற்றியெல்லாம் நினைக்காமல் நீ எப்படி கேள்வி கேட்டே?"

ஸ்டாலினுக்கும் அது தெரியாது.

அமைச்சராக ஆக வேண்டும் என்று தினமும் ஆயிரமோ பத்தாயிரமோ லட்சமோ தடவை குழந்தையின் காதில் கூறினாலும், அமைச்சராக ஆக வேண்டும் என்று பிடிவாதம் ஒரு குழந்தைக்கு உண்டாகுமா? இன்று உலகமெங்கும் உள்ள அமைச்சர்கள், அமைச்சர்களாக ஆனது அவர்களுடைய தாய்மார்கள் காதுகளுக்குள் முணுமுணுத்ததாலா? எது எப்படி என்று யாருக்குத் தெரியும்?

புளிய மரத்தின் பொந்துக்குள் இருந்த ஆந்தை என்ன காரணமோ தெரியவில்லை- அந்தக் கடுமையான வெயிலில் பறந்து சென்றது. ஆந்தையால் பகல் நேரத்தைப் பார்க்க முடியாது. அது பறந்துவிட்டது. எந்த மரத்தை நோக்கி? எதற்காக? இருட்டில் பறக்கிறது. ஒரு மரக்கிளையில் போய் அடைக்கலம் ஆகலாம். எங்கோ தட்டி, கீழே விழவும் செய்யலாம். பறந்து பறந்து எந்தவொரு இடத்திலும் போய்ச் சேராமல் இறக்கைகள் சோர்ந்து போயின என்றும் வரலாம்.

"ஆந்தை!"

"ஆந்தை!"

"அம்மா, அப்படியென்றால் நான் அமைச்சராக ஆகணும். அப்படித்தானே?"

பிரகாசமான முகத்துடன் தாய் சொன்னாள்:

"ஆமாம் மகனே... ஆமாம்..."

ஒளிமயமான முகத்தை அப்போதுதான் அவன் பார்த்தான்.

ஸ்டாலின் சொன்னான்:

"நான் அமைச்சராக ஆவேன் அம்மா!"

"நீ அமைச்சராக ஆவாயா?"

"ஆவேன்..."

ஸ்டாலின் நடந்தான்.

 

அந்த உலரப் போடப்பட்டிருந்த வேட்டிகளும் சட்டைகளும் அன்று இரவு முழுவதும் கயிற்றில் கிடந்தன. பனி விழுந்து கொண்டிருந்தது. உலர்ந்த துணிகள் ஈரமாயின.

அந்த இரவு வேளையில் அணையாத விளக்கு அந்த வீட்டில் எரிந்து கொண்டிருந்தது. மூடாத கண்களுடன் அந்த அன்னை காத்திருந்தாள்.

அமைச்சராக ஆவதற்காக ஒற்றை வேட்டி அணிந்து ஸ்டாலின் சென்றான்.

மறுநாள் பகலில் அறுவடை இருக்கிறது- கரையோரத்தில் இருக்கும் வயலில்.. நல்ல விளைச்சல். அறுவடை செய்து மிதித்து, களைப்புடன் சிருதா வந்தாள். தெற்கு திசையிலிருந்து வீசிய காற்றில் வேட்டியும் சட்டையும் ஆடிக் கொண்டிருந்தன. சிருதா அவற்றை எடுத்து மடித்துப் பெட்டியில் வைத்தாள்.

விளக்கு மறுநாள் பொழுது விடியும் வரையில் எரிந்தது. சிருதாவின் கண்கள் மூடின.

ஓணான் ஒன்று ஓடியபோது, அவளுடைய கண்கள் திறந்து கொண்டன.

துலா மாதம் ஏழாம் தேதி பெரிய சுடுகாட்டில் நிகழ்ச்சி இருக்கிறது.

புன்னப்புரை போராட்டத்தில் உயிரை விட்ட தியாகிகளை எரித்த இடத்தில் மலர் வளையங்கள் வைக்கப்பட இருக்கின்றன. நிகழ்ச்சியை கட்சி அந்த வருடமும் முடிவு செய்து அச்சடித்து எல்லோருக்கும் தெரியும்படி செய்தது.

கண்ணனின் நினைவு தினம். ஒரு கூடை சிவப்புநிறத் தெற்றிப் பூக்களைக் கொண்டு கண்ணனை மனதில் நினைத்துக் கொண்டே அந்தக் கறுப்பு மண்ணில் ஸ்டாலின் அர்ச்சனை செய்ய வேண்டும். பாசத்துடன் அந்த  மலர்களுடன் ஒரு துளி கண்ணீரையும் சிந்த வேண்டும்.

கண்ணனின் ஆன்மா அன்றைக்குத்தான் பூமிக்கு வருகிறது. அதைத் திரும்பவும் சொர்க்கத்திற்குப் போகும்படி செய்வது இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம்தான். அந்த முழக்கம் ஸ்டாலினின் தொண்டைக்குள்ளிலிருந்து வரவேண்டும். சிருதா மட்டும் போதாது.

இல்லாவிட்டால்?

அந்த ஆன்மா பூமியில் அனாதைப் பிரேதமாக சுற்றிக் கொண்டிருக்கும்- அடுத்த வருடம் வரும் வரை. அடுத்த வருடம் சிவப்பு நிறத் தெற்றிப் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு ஸ்டாலின் இன்குலாப் ஜிந்தாபாத் என்று உரத்த குரலில் முழங்கினால் அந்த ஆன்மா சொர்க்க உலகத்தை நோக்கிப் பயணிக்கும்.

அடுத்த வருடமும் அது நடக்கவில்லையென்றால்? இன்னொரு வருடமும் அனாதைப் பிரேதமாக அலைய வேண்டும்- பிறகு என்றைக்காவது ஸ்டாலின் மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்து மந்திரங்களைக் கூறுவது வரை.

புன்னப்புரை குண்டடிபட்டு மரணத்தைத் தழுவிய கேளு, பத்மநாபன் ஆகியோரின் ஆன்மாக்கள் சொர்க்கத்திற்குப் போகும் போது, கண்ணனுடைய ஆன்மா அனாதைப் பிரேதமாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது.

அந்தோனியின் ஆன்மாவிற்காக குர்பானா செய்யப்படுகிறது.

கண்ணனுடைய ஆன்மாவை சந்தோஷப்படுத்த ஸ்டாலின் இல்லை.

ஸ்டாலின் வரவில்லை.

ஸ்டாலின் எங்கே இருக்கிறான்?

சதானந்தன் சிருதாவிடம் சொன்னார்:

"சிருதாம்மா, அன்றைக்கு ஸ்டாலினைப் பற்றி நான் சொன்னப்போ உங்களுக்கு வருத்தமா இருந்திருக்கும். இப்போ என்ன தோணுது?"

"அவன் எங்கே போயிருக்கான்?"

"ஸ்டாலினைப் பற்றி எனக்கு வந்த தகவல்கள் அதிர்ச்சியளிக்கக் கூடியனவாக இருக்கின்றன. ஆனால், நம்முடைய அரசாங்கமாக இருப்பதால், எல்லா விஷயங்களும் தெரிய வந்தும் மன்னிசிருக்கு. எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கு."

"அவன் அமைச்சராக ஆவேன் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கான்."

"ஹ...ஹ...ஹ...!"

சதானந்தன் உரத்த குரலில் சிரித்தார். சிறிதும் நிறுத்தாத தொடர் சிரிப்பு. சிருதா பாதியாக வாயைத் திறந்து கொண்டு நின்றிருந்தாள். அவளுக்கு எதுவுமே புரியவில்லை. அவளுக்குள் ஒரு நடுக்கம் இருந்து கொண்டிருந்தது.

தந்தையிடம் மதிப்பு இல்லாத மகன்!

சிருதாவிற்கு கண்ணன் மீது மதிப்பு இருக்கிறதா?

இருக்கிறது... இருக்கிறது!


அது தேவையில்லை. மனைவிக்கு கணவன் மீது மதிப்பு இருக்க வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால், அதற்குப் பிறகு அவனைப் பற்றிய நினைவுகள் மட்டுமே.

சதானந்தன் சொன்னார்:

"அவன் அமைச்சராக ஆகக்கூடியவன்தான். அவனை அமைச்சராக ஆக்கவும் என்னால் முடியும். ஆனால் அதற்கு அவன் ஒப்புக் கொள்ளவில்லை."

சதானந்தன் தொடர்ந்து சொன்னார்:

"சிருதாம்மா, நீங்க கண்ணனை இதயத்தில் வைத்து வழிபடுறீங்க. எனக்கு அது தெரியும். ஆனால், அவனோ? புன்னப்புரை போராட்டத்தில் உயிரைக் கொடுத்த தியாகியை மதிக்காதவனால் அமைச்சராக ஆக முடியுமா?"

"புன்னப்புரை போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்களை அமைச்சர்கள் மறந்துவிட்டார்கள் என்று அவன் சொல்றான்."

"அதைத்தான் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று சொல்றோம். இங்கே மலர்களை சமர்ப்பணம் செய்துதான் அவர்கள் சத்திய வாக்குமூலமே சொன்னாங்க-."

"அவன் எங்கே இருக்கான்?"

"சிருதாம்மா, அதை நீங்களே தெரிஞ்சுக்குவீங்க."

சதானந்தன் நடந்தார். அதற்கு மேல் பேசுவதற்கு விரும்பாதைப் போல இருந்தது அவருடைய செயல். அவர் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.

சிருதாம்மாவிற்கு தூக்கம் வருவதைப் போல இருந்தது. அவன் வந்தான் பாதி இரவு தாண்டிய நேரத்தில்.

"அம்மா!"

ஒருமுறை தான் அழைத்தான். சிருதாவின் காதில் அவன் அழைப்பது கேட்டது. அவன் மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். அலைகிறான். அது மட்டும் உண்மை. சரியான உணவில்லை. சிரமப்பட்டு வேலை செய்கிறான். தாயின் சிறகுக்கு அடியில் வாழும் சிறுவன் அல்ல; இளைஞனும் அல்ல. அவன் எல்லா விஷயங்களையும் பற்றி சிந்திக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டான் என்றே தோன்றியது.

அவன் என்ன செய்கிறான்? தீவிரமாக எதையோ செய்கிறான் என்பது மட்டும் உண்மை.

"அம்மா! சோறு இருக்கா!"

"இருக்கு. நீ சாப்பிடக்கூடிய சோறு என்றைக்கும் எப்போதும் இங்கே இருக்கும்."

ஒரு தாய் தன் மகனிடம் அப்படியெல்லாம் கூற வேண்டியது இல்லை. 'இருக்கு' அல்லது 'இல்லை' என்று சொன்னாலே போதும். இந்த அளவிற்குத் தெளிவாக விளக்கி அந்நியர்களிடம்தான் கூற வேண்டும். மகனிடம் தாய் கூறக்கூடாது.

"அப்படின்னா, பரிமாறுங்க. எனக்கு கடுமையா பசிக்குது."

"உனக்கு வயிறு நிறைய சாப்பிடுறதுக்கு சாதம் இருக்கு."

"சரி... மகிழ்ச்சி!"

தாய் சிரிக்கவில்லை.

ஐந்தாறு கவளங்களை உருட்டி உருட்டி அவன் உள்ளே போகச் செய்தான். பசியின் வேகம் குறைந்தது.

தாய் தன்னுடைய மகனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஸ்டாலின் தன் தாயிடம் கேட்டான்:

"அம்மா, கையில பணம் இருக்கா?"

"இருக்கு..."

"உங்க கையில பணம் கட்டாயம் இருக்கும். அது எனக்குத் தெரியும்."

"எப்போதும் என் கையில் நெல்லும் சக்கரமும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) அரிசியும் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே. ம்... என்ன?"

"எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்."

"என் கையில இருக்குற பணம் முழுவதும் உனக்காக உள்ளதுதான்."

"சரி மகிழ்ச்சி!"

ஸ்டாலின் முகத்தை உயர்த்திச் சிரித்தான்.

"என்னடா இது?"

"எது அம்மா?"

"ம்..."

ஒரு நிமிடம் ஆனது.

"நீ அமைச்சராக ஆவாய். அப்படித்தானே?"

அதற்கு பதில் இல்லை.

"அப்படி நீ சொல்லிட்டுப் போனியே?"

"போனேன்."

"அதற்குப் பிறகு... நீ கட்டுப்பாடு இல்லாதவனா ஆயிட்டே. கட்சிக்கு எதிரானவனா ஆயிட்டே. நம்முடைய அரசாங்கம் இருக்கிறதுனாலதான் நீ இப்படியெல்லாம் நடக்குறேன்னு இன்னைக்கு செயலாளர் சொன்னார். டேய், நீ என்ன காரணத்துக்காக ஏழாம் தேதி புன்னப்புரை நாளன்று வராமல் இருந்தே? நீ உன் அப்பாவை மறந்திட்டியா?"

"இல்லை. ஏழாம் தேதி நாங்க புன்னப்புரை தினத்தைக் கொண்டாடினோம்."

"என்ன சொன்னே?"

"கொண்டாடினோம் அம்மா. உண்மையாகவே கொண்டாடினோம். சத்தியமா..."

அதற்குப் பிறகும் ஒரு குழப்பம்.

"பெரிய சுடுகாட்டில் நினைவு கூர்வதை விட்டு வேறு எங்கு புன்னப்புரை தினத்தைக் கொண்டாடினீங்க?"

"அதுவா விஷயம்? புன்னப்புரை, வயலார் ஆகியவற்றின் தினங்களை பெரிய சுடுகாட்டிலும் வயலாரிலும் என்று இல்லாமல் இனியும் கொண்டாடுவோம்."

"எந்த இடத்தில்?"

"எங்கெல்லாமோ..."

அந்த அன்னைக்கு கேட்பதற்கு எதுவுமே இல்லை என்ற சூழ்நிலை வந்த சில நிமிடங்களுக்கு மத்தியில் ஸ்டாலின் சொன்னான்:

"அம்மா! இனி பணத்தைத் தாங்க."

அவன் இந்த அளவிற்கு எந்தச் சமயத்திலும் சோறு சாப்பிட்டதில்லை.

சோற்றைச் சாப்பிட அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. வாரி வாரி அவன் சாப்பிட்டான் ஆவேசத்துடன்...

ஸ்டாலின் இப்படியெல்லாம் ஆக வேண்டிய அவசியம் இருக்கிறதா? எப்போதும் அவனை எதிர்பார்த்து சோறும் குழம்பும் பானையில் இருக்கின்றன.

"அம்மா, பணம் தாங்க."

அவன் அவசரப்பட்டான்.

"நீ கொஞ்சம் உட்காரு மகனே. உன்னைக் கண்கள் நிறைய நான் கொஞ்சம் பார்த்துக்குறேன்."

"ம்... நல்லா பார்த்துக்கோங்க."

ஸ்டாலின் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் அட்டென்ஷனில் நிற்பதைப் போல தன் தாய்க்கு முன்னால் நின்றான். சிறிதும் அசையவில்லை. பொம்மையைப் போல அவன் நின்றிருந்தான். உயிரற்றவனைப் போல கண்களில் இமைகள் கூட அசையவில்லை. சிருதா பயந்துபோய் விட்டாள்.

-ஸ்டாலின் கல்லாகிப் போனானா?

மகனைத் தாய் குலுக்கி அழைத்தாள்.

"மகனே! மகனே!"

ஒரு மெல்லிய புன்னகை!

"மகனே, நீ எப்போதும் என்னை பயமுறுத்துறே!"

"பிள்ளைகள் எப்போதும் தாயை பயமுறுத்தத்தான் செய்வாங்க அம்மா."

தொடர்ந்து ஸ்டாலின் சொன்னான்:

"நான் கொடுத்து வைத்தவன் அம்மா, நீங்க அதிர்ஷ்டம் செஞ்சவங்க. உங்களுக்கு அப்படி இப்படின்னு எந்தவித பயமும் வரவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால்..."

சிருதா இடையில் புகுந்து சொன்னாள்:

"நான் உன்னுடைய தந்தையிடம் வேல் கம்பைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்."

"ஓ! அது ஒரு காலத்துல நடந்தது. அதை விடுங்க அம்மா. உங்களுக்கு கட்சி என்றால் உயிர்மூச்சு. அதுனால..."

"ஆமாம்டா... எனக்கு கட்சி உயிரேதான்."

"கட்சியில் நான் இருந்து கொண்டு சிறைக்குப் போனால், உங்களுக்கு வருத்தம் உண்டாகுமா?"

அதை சிருதா நினைத்திருக்கவில்லை. கட்சியின் அரசாங்கம் வந்துவிட்டது. இனிமேல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை வராது. அதனால் அதை அவள் நினைக்கவேயில்லை.

பதில் எதுவும் வராமல் இருக்கவே ஸ்டாலின் சொன்னான்:

"அமைச்சராக ஆவதற்காக நான் சிறைக்குப் போனால், அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க அம்மா?"

"போடா போ!"

"அம்மா உங்களுடைய அரசியல் அறிவு ஒரே குழப்பத்துல இருக்கு. இப்போ இருக்குற பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் வெள்ளைக்காரர்களின் காலத்துலயும் காங்கிரஸ் ஆண்ட காலத்துலயும் சிறைக்குப் போனவங்கதான்."


"அதுனால...?"

"நம்ம ஊர்ல அமைச்சராக வரணும்னா சிறைக்குப் போவதுதான் நல்லது."

"அதற்காக நீ சிறைக்குப் போகப் போறியா என்ன?"

"அம்மா, பணத்தை எடுத்துத் தாங்க."

"எதற்குப் பணம்?"

"எனக்கு வேணும். பணம் முழுவதும் எனக்குச் சொந்தமானதுன்னு நீங்கதானே சொன்னீங்க?"

சிம்னி விளக்குடன் சிருதா வடக்குப் பக்கம் இருந்த அறைக்குள் சென்றாள். அவளைப் பின் தொடர்ந்து ஸ்டாலின் சென்றான். மூலையில் ஒரு மரத்தாலான பெட்டி இருந்தது. நூற்றைம்பது பறைநெல் வரை அதில் வைத்துப் பாதுகாக்கலாம். அறுவடை செய்த நெல்லை அதில்தான் பதரை நீக்கிக் காய வைத்து பத்திரப்படுத்தி வைத்திருப்பாள். அதை அட்சய பாத்திரம் என்றே சொல்லலாம்.

அதிலிருந்து நெல் இல்லாமலே போகாது. ஒரு எலி அதிலிருந்து நெல்லை எடுக்காது. அடுத்த அறுவடையின் போது அதிலிருந்து சிருதா நெல்லை எடுத்து மாற்றுவாள்.

அதில் ஒரு பெட்டி இருக்கும்.

ஸ்டாலினுக்கு அது தெரியும். அதில்தான் சிருதா பணத்தைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். தினமும் அதில் ஏதாவதொரு தொகையை அவள் வைப்பாள்.

அவனுடைய அன்னை ஒரு ரூபாயையாவது வைக்காத நாள் இருக்கிறதா?

யாருக்குத் தெரியும்?

அந்தப் பெட்டியின் மேற்பலகையை அவள் எடுத்தாள். பாதிவரை அதில் நெல் இருந்தது.

ஸ்டாலின் கேட்டான்:

"அம்மா, நெல் தீர்ந்திடுச்சே!"

"இல்லை. தீரவில்லை. ஒரு ஆள்தானே சாப்பிடுறேன்."

"நீங்க மட்டும்... அம்மா, நீங்க சரியா சாப்பிடுறதே இல்ல.

ஸ்டாலின் கண்களைச் சுருக்கினான்.

"இனிமேலும் சரியா சாப்பிட மாட்டேன்."

"அது ஏன்?"

அதற்கு பதில் எதுவும் வரவில்லை. வேண்டாம் என்று அவள் அமைதியாக இருந்திருக்கலாம். சாப்பிடுவது என்பது உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்குத்தானே? எதற்காக உயிருடன் இருக்க வேண்டும் என்று அவள் நினைத்திருக்க வேண்டும். அதைத் கூற வேண்டாம் என்று நினைத்திருக்கலாம்.

மிகவும் நெருங்கியவர்கள் மரணத்தைத் தழுவும் போது அவர்களுடன் சேர்ந்து இறந்துவிட வேண்டும் என்று தோன்றும். ஆனால் இறப்பதில்லை. நீர் குடிக்காதவர்கள் நீர் குடிக்க ஆரம்பிப்பார்கள். சாப்பிடுவார்கள். விளையாடுவார்கள். பிறகு... நல்ல வேட்டி வாங்குவார்கள். திருவிழாவைப் பார்க்கப் போவார்கள்.

அது ஒரு கதையைப் போன்றது. ஸ்டாலின் அதைக் கேட்க மாட்டான் என்று நினைத்துக் கொண்டே சிருதா பெட்டியைத் திறந்தாள். பெட்டி நிறைய பணம் இருந்தது. நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன. பத்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. ஐந்து ரூபாய் நோட்டுகள் இருந்தன. அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

"உனக்கு எவ்வளவு ரூபாய் வேணும்?"

ஸ்டாலின் சொன்னான்:

‘‘அம்மா, நீங்க ஒரு பணக்காரியா?’’

‘‘உனக்காகத்தான்...’’

‘‘இனிமேல் உங்களுக்கு பணக்காரர்களுக்கே இருக்குற வர்க்க குணம் வரும்.’’

‘‘உனக்காக...’’

‘‘அம்மா, நீங்க சமூக துரோகியா மாறுவீங்க.’’

‘‘உனக்காக...’’

ஸ்டாலின் சொன்னான்:

‘‘நான் எனக்குத் தேவையானதை எடுத்துக் கொள்ளட்டுமா?’’

‘‘எடுத்துக்கோ.’’

‘‘அம்மா, எனக்கு பணத்தின்மீது எந்தவித விருப்பமும் இல்லை. நான் சும்மா இதை வாரி எடுத்துக்கொண்டு போய் அங்கே செலவழிப்பேன்.’’

‘‘எடுத்துக் கொண்டு போ. செலவு செய்... நான் வேலை செய்து உண்டாக்கிய பணம். யாரிடமும் கணக்கு கூற வேண்டியதில்லை. உன்னிடம் மட்டுமே...’’

‘‘என்னிடமா? எதுக்கு?’’

‘‘உன் வகையில....’’

பதில் கூற தடுமாறுவதைப்போல ஸ்டாலின் சொன்னான்:

‘‘எனக்கு முன்னூறு ரூபாய் வேணும்.’’

‘‘எடுத்துக்கோ!’’

பெட்டி திறந்திருந்தது. ஸ்டாலின் தன் அன்னையின் முகத்தை பார்த்தான். அங்கு எந்தவித உணர்ச்சி வேறுபாடுகளும் இல்லை. எடுத்தாலும் எடுக்கவில்லையென்றாலும் எதுவும் இல்லை. சிருதா அந்த பணத்தின்மீது பாசம் வைக்கவில்லை.

பணத்தின்மீது பாசம் வைக்காதவர்களுக்கு பணக்காரர்களின் வர்க்க குணம் இருக்குமா?

அது விவாதம் செய்யப்பட வேண்டிய ஒரு விஷயம். உளவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விவாதமாக குழு கூடும்போது இந்த விஷயத்தை எடுக்கலாம்.

பணம் இருந்தால் பணத்தின்மீது பாசம் வைப்பார்கள். பணத்தின்மீது பாசம் வைக்காதவர்கள் இருக்கிறார்களா?

திடீரென்று இந்தக் கேள்வி சம்பந்தமே இல்லாத ஒன்று என்று ஸ்டாலினுக்குத் தோன்றியது. அந்த விஷயமே சம்பந்தமில்லாதது. அதில் உளவியல் விஞ்ஞானமும் இல்லை. ஒரு சுக்கும் இல்லை. சுண்ணாம்பும் இல்லை.

இல்லாவிட்டால் இப்படிப்பட்ட விஷயங்களை எதற்காக விவாதம் செய்கிறார்கள்? சமூக விரோதிகளை, பதுக்கல் பேர்வழிகளை, கொள்ளை லாபம் அடிப்பவர்களை, பண வெறியர்களைக் கண்டுபிடிப்பதற்குக் கண்ணாடி வேண்டுமா?

உளவியல் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட விவாதம் அந்த அளவிற்கு விளக்கமாக நடக்க வேண்டுமா?

அம்மா சமூக விரோதியாக ஆவாளோ?

அம்மா எதுவும் பேசாமல் இருக்கிறாள். பெட்டியைத் திறந்து வைத்திருக்கிறாள். மகன் அருகில் இருக்கிறான்.

பணத்தை ஈ மொய்த்துக் கொண்டிருக்கிறது. பெட்டிக்குள்ளும் ஈக்கள் இருக்கத்தான் செய்கின்றன. பெட்டியைத் திறந்ததும் வெளியே வந்த ஈக்கள் வட்டமிட்டுப் பறந்தன.

தாய் பணத்தை எடுத்துத் தர வேண்டுமென்பது அவனுடைய விருப்பம். மகன் அதை எடுத்துக்கொள்ள வேண்டுமென்பது தாயின் விருப்பம். மகன் வெற்றி பெற்றுவிட்டான்.

ஸ்டாலின் இருளுக்குள் நுழைந்தான்.

‘நீ போறியா’ என்று கேட்க முடியாது. பல வருடங்களுக்கு முன்னால் நங்ஙேலி என்ற ஒரு வயதான பெண் அவளிடம் அதைப்பற்றிக் கூறியிருக்கிறாள். அது அவளுடைய ஞாபகத்தில் அப்போது வந்தது. ஞாபகத்தில் வரவேண்டிய அவசியமில்லை. ‘போறியா?’ என்று யாரிடமும் கேட்க வேண்டிய தேவை வரவில்லை. அந்தப் பாட்டி கூறியிருக்கிறாள். ‘எப்போ வருவே?’ என்று கேட்க வேண்டுமென்று. அப்போது அந்த வார்த்தை நாக்கில் வந்தது.

‘‘நீ எப்போ வருவே?’’

‘‘வருவேன்- ஒரு பகல் நேரத்தில். பணத்திற்காக... என்ன அம்மா, பணம் தருவீங்கள்ல?’’

‘‘இந்தப் பணம் தீருவதுவரை... பிறகு நான் சம்பாதிக்கும் பணம் தீருவதுவரை...’’

ஸ்டாலின் இருட்டுக்குள் மறைந்து விட்டான். அவனைப் பார்க்க முடியவில்லை. இருட்டின் சுருளுக்குள் அவனும் போய்விட்டான். அது சுருட்டி சுருட்டி அவனை எங்கு கொண்டுபோய் சேர்க்குமோ?

இன்று ஆட்சி செய்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் இதேமாதிரி வீட்டிற்கு எப்போதாவது வந்துவிட்டு, வீட்டில் தங்காமல் இருட்டின் சுருள்களுக்குள் இறங்கிப் போனவர்கள்தான்.

ஆனால் ஸ்டாலின் என்ன செய்கிறான்? யாருக்குத் தெரியும்? அதை அவள் கேட்கவில்லை. கேட்டாலும் அவன் சொல்லமாட்டான்.

கட்சிக்கு அப்பால் கட்சிகள் உண்டாகின்றனவோ? அது என்னவாக இருக்கும்?

எதுவாகவும் இருக்கட்டும்.

 

காய்ச்சல்! கடுமையான காய்ச்சல்! எழுந்து சிறிது நீரைச் சுட வைத்துக் குடிப்பதற்கு முடியவில்லை. இப்படியும் ஒரு இல்லாத நிலை உண்டாகுமா?

வாயாடியாக இருந்தாலும் மாணிக்கா சாயங்காலம் வந்தாள். வேலைக்கு சிருதா வராமல் போகவே அவள் அவளைத் தேடி வந்திருக்கிறாள்.


வேலை இருந்தால் சிருதாவை அவள் பார்க்காமல் இருக்க மாட்டாள்.

மாணிக்கா நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். அவளுடைய கை பலமாக சுட்டது. நெருப்பைத் தொட்டுவிட்டதைப்போல் அவள் தன் கையை எடுத்தாள்.

‘‘என் அப்பா! இது என்ன காய்ச்சல்!’’

அவள் அடுப்பில் நெருப்பு மூட்டி நீரைக் கொதிக்க வைத்து கொடுத்துவிட்டுத்தான் அங்கிருந்து போனாள்.

மறுநாளும் சிருதா எழுந்திருக்கவில்லை. தலையைக்கூட அவளால் தூக்க முடியவில்லை.

சில பெண்கள் அவளைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்கள் எல்லோரும் காய்ச்சல் நெருப்பைப்போல தகிக்கிறது என்றார்கள். மருத்துவமனைக்குப் போகும்படி அவளிடம் சொன்னார்கள்.

ஒரு வாரம் அதே மாதிரி அவள் படுத்துக் கிடந்தாள்.

அது ஒரு கடுமையான காய்ச்சலாக இருந்தது. அதற்குப் பிறகும் அது சரியாவதற்கு ஒருவார காலம் ஆனது. பிறகும் அவள் வேலைக்குப் போகவில்லை.

நல்ல வேலை இருக்கும் காலம். கிழக்குத் திசையில் பரந்து கிடக்கும் வயல்களில் கதிர்கள் உயரமாக வளர்ந்து பச்சை பசேல் எனக் கிடந்தன. கதிர்களை வேருடன் பிடுங்கியவுடன் எங்கு பார்த்தாலும் நீர்ப் பரப்பே காட்சியளித்தது. தொடர்ந்து வேலை இருந்துகொண்டேயிருந்தது.

சிருதாவால் போக முடியவில்லை.

மாணிக்கா அவளுக்காகக் கவலைப்பட்டாள்:

‘‘சிருதாம்மா, எவ்வளவு ரூபாய் வர்றது போச்சு!’’

அதற்கு சிருதா பதிலெதுவும் சொல்லவில்லை.

கொச்சு கறம்பி சொன்னாள்:

‘‘எதுவுமே முடியலைன்னு வந்தால் என்ன செய்வீங்க?’’

சக்கி சொன்னாள்:

‘‘அவ்வளவு பணமும் போச்சுன்னே வச்சுக்கோ. சிருதாம்மாவிற்கு செலவிற்கு பிரச்சினையே இருக்காது.’’

எல்லாம் சரிதான்.

யூனியன் புதிய சம்பளம் நிர்ணயித்திருக்கிறது. ஐந்து ரூபாய் காலை எட்டு மணிக்கு வேலைக்குச் செல்ல வேண்டும். பன்னிரண்டு மணிக்குக் கரைக்கு வரவேண்டும். பிறகு ஒரு மணிக்கு வேலையில் இறங்க வேண்டும். மூன்று மணிக்கு வேலை செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

காளி வயதான ஒரு பெண். இந்த நேரங்களை எப்படி அறிந்து கொள்வது என்பது அவளுடைய சந்தேகம்.

மாணிக்கா சொன்னாள்:

‘‘ஒவ்வொரு வயலிலும் யூனியனைச் சேர்ந்தவர்கள் கொடியை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருப்பார்கள். அதைப் பார்த்து கரைக்கு வந்து கொள்ள வேண்டியதுதான், வேலையில் இறங்கிக் கொள்ள வேண்டியதுதான்’’

‘‘அதற்கு முதலாளிமார்கள் ஒப்புக்கொள்வார்களா?’’

‘‘ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியுமா? அவங்க என்ன செய்வாங்க?’’

‘‘அவங்கதான் வேலை தர்றாங்க. பணம் தர்றவங்களும் அவங்கதான். வேறு யாரோ வேலையில ஆட்களை இறக்குவதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா?’’

‘‘அதுதானே போராட்டம்ன்றது!’’

கொச்சு கறம்பி கேட்டாள்:

‘‘என்ன சிருதாம்மா, எதுவுமே பேசாம இருக்கீங்க?’’

காளி சொன்னாள்:

‘‘காய்ச்சல் வந்து... இதோ பார்... அவங்க எப்படி மெலிஞ்சு போயிருக்காங்கன்னு! அவங்களால நாக்கெடுத்துப் பேச முடியாம இருக்கும்.’’

கடந்த போராட்ட காலத்தில் சிருதாம்மா மிகவும் தீவிரமாக இருந்தாள். சிருதாம்மாதான் அந்தப் பகுதியில் போராட்டத்தை நடத்தியதே. ஒவ்வொரு வீடாக அவள் ஏறி இறங்கினாள்.

புல்லாந்தரை வீட்டில் வேலை செய்யும் கேசவனும் மாதவனும் அவர்களுடைய ஆட்களும் போராட்டத்தை எதிர்த்தார்கள்.

அவை அனைத்தும் எல்லோருக்கும் நினைவில் இருக்கக்கூடிய விஷயங்கள்தான்.

ஊர்வலத்திற்கு முன்னால் கொடியைப் பிடித்துக்கொண்டு நடந்தாள் சிருதாம்மா.

புல்லாந்தரை வீட்டில் வேலை முடிந்தவுடன், சத்தியாகிரகம்!

முன்வரிசையில் சிருதாம்மா!

போலீஸ்காரர்கள் வந்தார்கள். முதலில் அவர்கள் கைது செய்தது சிருதாம்மாவைத்தான்!

கொச்சு கறம்பி சொன்னாள்:

‘‘ஆறாவது நாள் ஊர்வலத்திற்கு முன்னால் யார் இருந்தது?’’

‘‘கேசவ அய்யாவின் மகள்கள்.’’

சிருதாம்மாதான் அவர்களை அங்கு கொண்டு வந்தாள்.

சிருதா எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

ஐந்து ரூபாயாகக் கூலியை உயர்த்தியதற்கும் போராடவேண்டியதிருக்கும். முன்பு இருந்ததைவிட பெரிய போராட்டம்!

அதைவிடப் பெரிய போராட்டம் வேலை செய்யும் நேரம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

சிருதா எதுவும் பேசவில்லை.

‘‘அவங்களால் நாக்கெடுத்துப் பேச முடியாமல் இருக்கும்.’’

 

நீர் வற்றிய வயலில் களைகளைப் பறிக்க ஆரம்பித்தார்கள். சிருதா வேலைக்குப் போக ஆரம்பித்தாள்.

வாயாடியான மாணிக்கா வாயையே சிறிதும் மூடாமல் என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். வேறு யாரோ அவளுக்கு பதில் கூறிக் கொண்டிருந்தார்கள்.

மேலூட்டுக்காரர்களும் வயல் வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள். பெரிய குடும்பங்களைச் சேர்ந்த தம்புராட்டிமார்கள் அவர்கள். அந்த விஷயத்திற்காக இனியும் போராட வேண்டியதிருக்கும்.

மாணிக்கா கேட்டாள்:

‘‘யூனியனைச் சேர்ந்தவர்கள் ஏன் எதுவும் பேசாமல் இருக்காங்க? வயல் வேலையை யார் செய்யணும்னு சொல்லியிருக்காங்க?’’

பறையனும் புலையனும்தான். பிறகு சோவன்மார்கள்கூட செய்யலாம். நாயர்களும் மாப்பிளமார்களும் மேத்தனும் அதைச் செய்யச் சொல்லி இருக்கிறதா?

இல்லை.

‘‘பிறகு இவர்களை எதற்காக வேலைக்கு எடுக்குறாங்க.’’

‘‘யூனியனைச் சேர்ந்தவர்கள் எதுவும் பேசாமல் இருந்தால் நாம போராட்டம் நடத்தணும்.’’

‘‘தம்புராட்டிமார்கள் இப்போ முழுப் பட்டினியில இருக்காங்க. வயிறு எரியிறப்போ, நாங்க உயர்ந்தவங்கன்ற எண்ணமெல்லாம் போயிடும்.’’

சிருதாவிற்கு அருகில் வெண்மை நிறத்தில் இருந்த ஒரு பெண் களை பறித்துக் கொண்டிருந்தாள். நல்ல இனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். மாணிக்கா தன்னுடைய நாக்கால் அடித்துக் கொண்டிருந்தாள்.

அந்த இளம்பெண் நன்றாக வேலை செய்தாள். வேலையில் அதிக பழக்கமில்லை என்பது மட்டும் தெரிந்தது.

அவளை எங்கோ பார்த்திருப்பதைப்போல சிருதாவிற்குத் தோன்றியது. இந்த ஊரைச் சேர்ந்தவளாக அவள் இருக்க முடியாது. இங்கு வந்தவளாக இருக்க வேண்டும். நாயர் இனத்தைச் சேர்ந்த பெண். முண்டு கட்டி இருப்பதை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். அடிப்பாவாடை இல்லை. தார் உடுத்தியிருந்தாள்.

சிருதா கேட்டாள்:

‘‘கண்ணு, நீ எந்த ஊரு?’’

‘‘என் வீடு இங்கே இல்லை. பொங்ஙையில இருக்கு.’’

‘‘இங்கே கல்யாணம் பண்ணிக் கொண்டு வந்தார்களா?’’

‘‘ஆமாம்.’’

‘‘எங்கே?’’

‘‘பருத்திக்காட்டுக்கு.’’

அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த நிலம் பருத்திக்காட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்குச் சொந்தமானது. நானூற்று ஐம்பது பறை. சிருதா அந்த ஊருக்கு வரும்போது பருத்திக்காட்டுக்காரர்கள்தான் அங்கு விவசாயம் செய்து கொண்டிருந்தார்கள். சிருதா அங்கு பருத்திக் காட்டுக்காரர்களுக்காக வேலை செய்திருக்கிறாள்.

சிலுவை மூட்டில் மாப்பிள அதற்குப் பிறகு விவசாயம் செய்ய ஆரம்பித்தார்- குத்தகைக்கு எடுத்து. இப்போது பருத்திக் காட்டுக்காரர்களின் நானூற்று ஐம்பதை சிலுவை மூட்டில் தொம்மி தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் பாகம் பிரித்துக் கொடுத்துவிட்டார். தெற்கு திசையில் இருக்கும் நூற்று பத்தில்தான் இன்று பணியாட்கள் இறங்கி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

நானூற்றைம்பது இப்போதும் பருத்திக்காட்டுக்காரர்களின் நானூற்றைம்பதுதான்.

சிருதா கேட்டாள்:

‘‘பொங்ஙையில யாரு?’’

‘‘கூட்டும்மேல்.’’

குனிந்து வேலை செய்து கொண்டிருந்த சிருதா அதிர்ச்சியடைந்து நின்று விட்டாள்.

அந்த இளம்பெண் எதுவுமே நடக்காததைப்போல வேலை செய்து கொண்டிருந்தாள்.


‘‘கொஞ்சம் நிமிர்ந்து நில்லு.’’

அவள் நிமிர்ந்து நின்றாள்.

சிருதா அவளையே உற்றுப் பார்த்தாள். அந்த இளம்பெண்ணும்தான். அந்த முகத்திற்கு அப்பால் இன்னொரு முகத்தைப் பார்ப்பதைப் போல சிருதாவிற்கு தோன்றியது. எவ்வளவோ வெவ்வேறு முகங்களுக்கு மத்தியில் நல்ல மனம் படைத்த ஒரு வயதான பெண்ணின் முகத்துடன் அந்த முகத்திற்கு ஒரு ஒற்றுமை இருந்தது.

‘‘கூட்டும்மேல் மூத்த தம்புராட்டியின்...?’’

கூட்டும்மேலில் எத்தனையோ மூத்த தம்புராட்டிகள் இருந்திருக்கிறார்கள். அதில் அவள் யாரைப்பற்றி விசாரிக்கிறாள்?

சிருதாவிற்கு அந்த நல்ல இதயத்தைக் கொண்ட வயதான பெண்ணின் பெயர் தெரியும். ஆனால், அந்தப் பெயரைக் கூறக்கூடாது. அதற்கு நாக்கு வரவில்லை. அந்த வயதான பெண் கொடுத்த சோற்றையும் குழம்பையும் சாப்பிட்டு அதன் சுவையால் தடித்துப்போன நாக்கு அந்தப் பெயரை உச்சரிக்க அனுமதிக்காது.

சிருதா பழைய தலைமுறையிலிருந்து வந்தவள். பழைய நினைவுகள் உணர்ச்சிப்பூர்வமாக ரத்தத்தில் கலந்திருக்கின்றன.

சிருதாவின் தாய் பொங்ஙையைச் சேர்ந்தவள்தான். கூட்டும்மேல் குடும்பத்தின் எழுதப்பட்ட அடிமையாக அவள் இருந்தாள். எழுதப்பட்ட அடிமை என்றால்- தலைமுறைகளின் வித்தியாசம் இருக்கிறது.

சிருதா பன்னிரண்டு வயது வரையில் பொங்ஙையில்தான் வளர்ந்தாள் தன் தாயின் வீட்டில். அதற்குப் பிறகுதான் அவள் கண்ணனுக்குப் பின்னால் சென்றாள்.

சிருதா முயற்சித்துப் பார்த்தாள். தீவிரமாக முயற்சித்துப் பார்த்தாள். அப்போது அந்தப் பெயர் வெளியே வந்தது.

‘‘சிருதேவித் தம்புராட்டியின்...’’

‘‘மகளுடைய மகள்.’’

கூட்டும்மேல் சிருதேவி அம்மாவிற்கு ஆறேழு பெண் பிள்ளைகள் இருந்தார்கள். சிருதா அங்கிருந்த காலத்தில் அவர்களில் ஒரு மகளைத் திருமணம் செய்து கொடுத்திருந்தார்கள். அவளுடைய மகள்தான் இப்போது மாணிக்கா மற்றும் பலரின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் களை பறிப்பதற்காக வயலில் இறங்கியிருக்கிறாள்.

சாயங்காலம் அரிசியும் மரவள்ளிக் கிழங்கும் வாங்குவதற்காக!

அதன்மூலம் வயிற்றில் பசி என்ற பெரிய புழுவை இல்லாமல் செய்வதற்கு...

வரப்பில் நின்று கொண்டு தேவஸ்யா கேட்டார்:

‘‘யாருடி வேலை செய்யாமல் தூணைப்போல நின்று கொண்டிருப்பது? கூலி அதிகமாகவும் வேணும். தூணைப்போல நின்று கொண்டும் இருக்கணும். குனிந்து களையைப் பறிங்கடி...!’’

சிருதா குனிந்தாள் இயந்திரத்தனமாக. கூலி அதிகமாகக் கேட்கப் போகிறாள் அல்லவா?

‘‘அவர் ஒரேயடியா குதிக்கிறாரு. பருத்திக் காட்டுக்காரர்களுக்கு குத்தகைப் பணத்தையும் தர்றது இல்ல. வயலை தனக்குச் சொந்தமாக ஆக்கிக்கொண்டு குதிக்கிறாரு. பேராசை பிடிச்ச மனிதன்!’’

வேறு யாரிடமும் கூறவில்லை. தனக்குத்தானே சிருதா கூறிக் கொண்டாள். மற்றவர்கள் இருந்த இடத்திற்கு சிருதாவும் அந்த இளம்பெண்ணும் பறித்துக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.

‘‘இனியும் அந்த ஆள் சொல்றதுக்கு என்ன இருக்கு?’’

சிருதா அந்த இளம்பெண்ணிடம் கேட்டாள்:

‘‘இந்த வயலின் சொந்தக்காரர்கள் யார்னு தெரியுமா?’’

‘‘எனக்குத் தெரியாது. நான் வேலை தேடி வந்தவள்.’’

அந்த நீண்ட கதையை எப்படிக் கூறுவது? சிருதாவிற்கு அதைக் கூறத் தெரியாது.

சிலுவை மூட்டில் தொம்மி புன்னப்புரை கடைவீதியில் நெல் வியாபாரியாக இருந்தார். அவர் காற்று உள்ளவராக இருந்தார். பருத்திக்காட்டு பெரியவரைக் கைக்குள் போட்டு, பருத்திக்காட்டு குடும்பத்திற்குச் சொந்தமான நானூற்றைம்பதை தனக்கென ஆக்கிக் கொண்டார் தொம்மி. கதை இதுதான்.

அந்த இளம்பெண் கேட்டாள்:

‘‘அதற்கு இப்போ என்ன செய்றது?’’

‘‘எதுவும் செய்ய முடியாது.’’

சிருதா தன்னுடைய கதையைப் பற்றிய பாடலைப் பாட ஆரம்பித்தாள். தெளிவான குரலில். எல்லோரும் அவளைப் பின்தொடர்ந்து பாடினார்கள். அந்த இளம்பெண்ணைத் தவிர.

அவளுடைய பெயர் திரிபுரசுந்தரி.

வாயில் உச்சரிக்க முடியாத பெயர்!

வேலை நடந்து கொண்டிருந்தது.

காரணம்- பாட்டு.

தேவஸ்யா உரத்த குரலில் சொன்னார்:

‘‘பாடு... பாடு...’’

திடீரென்று பாட்டு நின்றது.

சிருதா கேட்டாள்:

‘‘கூட்டும்மேலில் வெளியே இருக்கும் ஆயிரத்து ஐம்பது யாருக்குச் சொந்தம்?’’

‘‘முக்கோலய்க்கல் ஒலிதமாப்பிளயின் பிள்ளைகளுக்கு...’’

‘‘உள்ளே இருக்கும் ஆயிரத்து ஐம்பது...?’’

‘‘கொள்ளாந்தா வர்க்கி மாப்பிளயின் பிள்ளைகளுக்கு.’’

‘‘குத்தகைப் பணம் தர்றீங்களா?’’

‘‘குத்தகைப் பணமா? அப்படின்னா என்ன?’’

சிருதாவிற்கு என்ன கூறுவது என்றே தெரியவில்லை.

தேவஸ்யா உரத்த குரலில் கேட்டார்:

‘‘என்னடி பாட்டு பாடாமா இருக்கீங்க?’’

‘‘மனசு வரல...’’

சிருதா எழுந்து நின்றாள்.

‘‘மனசு வரல...’’

தேவஸ்யா தனக்கு அருகில் நின்றவனிடம் சொன்னார்:

‘‘அது சிருதாம்மா... எதுவும் பேசாதே.’’

வாயாடி மாணிக்கா தனக்கு அருகில் நின்றிருந்த கொச்சு கறம்பியிடம் சொன்னாள்:

‘‘இன்னைக்கு சிருதாம்மா கூலி நாலு ரூபாய்.’’

ஐந்து ரூபாய் கூலியாக தரவேண்டும் என்பதற்கான போராட்டம் தேவஸ்யாவின் வயலில்தான் ஆரம்பமானது. அந்தப் போராட்டத்திற்கு முன்னால் நின்றவள் சிருதா.

 

சதானந்தன் சிருதாவிடம் சொன்னார்:

‘‘சிருதாம்மா! நான் ஒரு விஷயத்தைச் சொல்றேன். உங்க வீட்டை இப்போ போலீஸ்காரர்கள் கவனித்துக் கொண்டு இருக்காங்க. அது உங்களுக்குத் தெரியுமா?’’

சிருதா சொன்னாள்:

‘‘போராட்டத்திற்கு பிறகு நான் பார்த்திராத சிலர் அந்தப் பக்கமா நடந்து போகிறார்களா?’’

‘‘இருக்கலாம்.’’

‘‘போராட்டக்காரியா இருப்பதால் இருக்கலாம்.’’

‘‘இல்ல... அந்த விஷயத்தைத்தான் நான் சொல்ல விரும்புறேன். ஸ்டாலினைத் தேடி அவர்கள் அலைகிறார்கள்.’’

‘‘அதற்கு அவன் அந்த வீட்டிற்கு வரலையே!’’

ஒரு நிமிடம் கழித்து சிருதா கேட்டாள்:

‘‘அவனை எதற்காக தேடுறாங்க?’’

சதானந்தன் மெல்லிய ஒரு புன்சிரிப்பை வெளியிட்டார்:

‘‘விஷயமே அதுதானே? அவன் நக்ஸலைட்...’’

‘‘அப்படின்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?’’

‘‘கூர்மையான அறிவைக் கொண்டு...’’

‘‘அவன் அப்படிப்பட்டவன் என்று போலீஸ்காரர்களிடம் சொன்னதே நீங்களாகத்தான் இருக்கும்!’’

அப்படிச் சொல்லத்தான். சிருதாம்மாவிற்குத் தோன்றியது.

‘‘சிருதாம்மா, இப்படி தவறான குற்றச்சாட்டையும் நீங்க சொல்றீங்களா?’’

தொடர்ந்து சதானந்தன் சொன்னார்:

‘‘இல்ல... அப்படியென்றால் நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன். நான் எதையுமே சொல்லலைன்னு வச்சுக்கோங்க.’’

சதானந்தத்திடம் வருத்தப்பட்டு எந்தவித பிரயோஜனமும் இல்லை. அவர் போலீஸ்காரர்களிடம் ஸ்டாலின் ஒரு நக்ஸலைட் என்று கூறியிருந்தால்கூட, அதற்காகக் குற்றம் சொல்லி ஒரு பயனும் இல்லை. கட்சி நக்ஸலைட்டுகளுக்கு எதிரானது. ஸ்டாலினைப் பற்றி கூறியிருந்தாலும், அது அவருடைய கடமை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படியென்றால் சக்ரேஸ்வரன் முதலாளி, புன்னப்புரை குண்டு விபத்திற்குப் பிறகு ஊரெங்கும் அலைந்து எல்லா ஆண்களையும் பிடித்தபோது பட்டாளத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பெயர் தந்தது தவறா?

சக்ரேஸ்வரன் முதலாளியைக் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்லை. முதலாளி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். கம்யூனிஸ்ட்காரர்களின் பெயரை அவர் கொடுத்தார்.

இன்று கம்யூனிஸ்ட்காரர்கள் நக்ஸலைட்களின் பெயர்களைக் கொடுக்கிறார்கள். அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் பெயரையும் கொடுத்துவிட்டார்கள்.


நக்ஸலிஸம் வளரக்கூடாது. அது ஆபத்தான விஷயம். அந்த அமைப்பு அழிய வேண்டும்.

ஒரு கட்சியைச் சேர்ந்தவள் என்ற நிலையில் ஸ்டாலின் வந்தால், அந்த தகவலை அவள் போலீஸ்காரர்களிடம் கூற வேண்டுமா?

சிருதா நினைத்துப் பார்த்தாள்.

அது அவளுடைய கடமையா?

கடமைதான் என்றால் அவள் கட்சியைச் சேர்ந்தவளா?

யாருக்குத் தெரியும்? எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது.

காங்கிரஸ்காரர்களான தந்தைமார்களுக்கு கம்யூனிஸ்ட்காரர்களான பிள்ளைகள். காங்கிரஸ்காரர்களான பிள்ளைகளுக்கு கம்யூனிஸ்ட்காரர்களான தந்தைமார்கள்.

என்ன ஒரு குழப்பமான விஷயம்!

ஸ்டாலின் பின்பு ஒருமுறை வந்தபோது, அவன் அவளிடமிருந்து நானூறு ரூபாய் வாங்கினான்.

தமாஷாகக் கூறுவது மாதிரி பணத்தைக் கையில் வாங்கும்போது அவன் சொன்னான்:

‘‘அம்மா! இந்தப் பணத்தைக் கொடுத்து ஒரு துப்பாக்கியை வாங்கினால் என்ன?’’

‘‘துப்பாக்கியா? அது எதுக்குடா?’’

‘‘சும்மா... பாதுகாப்புக்கு...’’

‘‘வேண்டாம்... துப்பாக்கியோ கத்தியோ எந்தச் சமயத்திலும் கையில் இருக்கக்கூடாது. மனிதன் என்றால் கோபம் வரும். அப்போ கத்திகூட கையில் இருக்கக்கூடாது. பிறகு... துப்பாக்கி என்றால் கேட்க வேண்டுமா?’’

அவன் அத்துடன் போய்விட்டான்.

செயலாளர் சொன்னது உண்மையாகத்தான் இருக்க வேண்டும்.

 

உண்மைதான். யாரெல்லாமோ இரவு நேரத்தில் பார்த்தும் பதுங்கியும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பற்றித் தெரிந்து கொண்டதிலிருந்து அவள் கவனித்தாள். அப்போது அதைப் புரிந்து கொள்ள அவளால் முடிந்தது. விஷயம் தெரியாமல் இருந்திருந்தால், அவள் அதை கவனித்திருக்கவே மாட்டாள். எதைப் பற்றியும் தெரிந்து கொண்டிருக்கவும் முடியாது.

இரவு நேரத்தில்தான் ஸ்டாலின் வருவான். அவன் வந்ததெல்லாம் இரவு வேளையில்தான். தாயைப் பார்ப்பதற்காக பகல் நேரத்தில் வந்தால்தான் என்ன? அவனுடைய வீடுதானே? பிறந்து வளர்ந்த வீடு...

அது மட்டுமல்ல; அவள் எவ்வளவு விஷயங்களை அவனிடம் கேட்காமல் விட்டிருக்கிறாள். அவன் எங்கு இருக்கிறான்? என்ன செய்கிறான்? - இவை போன்ற விஷயங்களையெல்லாம் ஒரு தாய் கேட்க வேண்டுமா இல்லையா? எதற்காகப் பணத்தை எடுத்துச் செல்கிறான் என்றாவது அவள் கட்டாயம் கேட்க வேண்டும். எதையுமே அவள் கேட்கவில்லை.

அவன் வந்து போலீஸ்காரர்களின் வலையில் சிக்குவானா? சிக்கலாம். பிறகு சிறையில் சில நாட்கள் கிடக்க வேண்டியதிருக்கும்.

இப்படித் தனியே அலைந்து திரிபவர்களுக்கென்று இருப்பதுதான் மறைந்து திரிவதும் சிறை வாசமும்.

இப்போது தூக்கம் இல்லை. மயக்கம்தான் இருந்தது.

பொழுது விடியவில்லை. எங்கேயிருந்து எப்படி வந்தான் என்று கூற முடியவில்லை.

முன்னால் நின்று கொண்டிருந்தான்.

சிருதா அதிர்ச்சியடைந்து விட்டாள்.

‘‘நான்கு பக்கங்களிலும் போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.’’

‘‘பரவாயில்லை... எனக்குப் பணம் வேணும். ஐநூறு ரூபாய்...’’

‘‘நான் ஐந்து செண்ட் நிலம் வாங்கினேன். இப்போ இந்த நிலம் முழுவதும் நமக்குச் சொந்தம்.’’

‘‘அப்படின்னா பணம் இல்லையா?’’

‘‘இருக்கு... முன்னால் இருக்குற ஐந்தையும் விலை பேசி வச்சிருக்கேன்.’’

‘‘அதுனால?’’

‘‘ஐநூறு வேணுமா?’’

கணக்குப் போட்டுப் பார்க்க சிறிது நேரம் வேண்டும். பெட்டியில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நேற்றே அவள் எண்ணி வைத்திருந்தாள். ஐந்து பறை நிலத்திற்கு ஆயிரத்து முந்நூறு ரூபாய் விலை தரவேண்டும். பிறகு... பத்திரம் எழுதுவதற்கான செலவு இருக்கிறது. அப்படியென்றால்... அப்படியென்றால்... சிருதா மனதில் ஒரு கணக்கு கூட்டினாள்.

பொழுது புலர்ந்து கொண்டிருக்கிறது!

இருட்டுக்கும் வெளிச்சத்திற்குமிடையே ஒரு தலைமுடி இழையின் தூரம்தான் இருக்கிறது.

‘‘முந்நூறு போதாதா மகனே?’’

‘‘போதும்...’’

‘‘நான் பொருளைச் சம்பாதித்து சேர்க்கிறேன்.’’

‘‘ஊரில் எல்லோரும் வாங்குறாங்க.’’

‘‘எல்லோரும் நிலச் சொந்தக்காரர்களா ஆயிட்டாங்க.’’

ஓசை உண்டாக்காமல் அவள் பெட்டியைத் திறந்தாள். அதற்குள்ளிருந்த பெட்டியை வெளியே எடுத்து, மூன்று அல்ல - நான்கு நோட்டுகளை எண்ணி அவள் தந்தாள். ஸ்டாலின் எப்படி மறைந்தான் என்று அவளுக்குத் தெரியாது. ஆகாயத்தில் உயர்ந்துவிட்டானா? பூமியைப் பிளந்து கீழே போய்விட்டானா?

யாருக்குத் தெரியும்? அவன் எங்கே போனான்?

அன்று இரவிலும், யாரெல்லாமோ அந்தப் பக்கம் பார்த்துக் கொண்டு பதுங்கிக் கொண்டு இருந்தார்கள்.

ஸ்டாலின் ஒரு நக்ஸலைட்!

ஒரு கூட்டம் போலீஸ்காரர்கள் வந்து வீட்டைச் சோதனை செய்து பார்த்தார்கள். அலமாரியிலிருந்த புத்தகங்களையெல்லாம் எடுத்தார்கள். எப்போதோ அவன் அலமாரியில் அடுக்கி வைத்தவை அவை. யாரும் அவற்றைத் தொட்டும்கூட பார்க்கவில்லை.

சிருதாவிடம் இன்ஸ்பெக்டர் சில கேள்விகளைக் கேட்டார். அவன் அங்கு வருவதுண்டா என்றெல்லாம். வருவது இல்லை என்று உறுதியான குரலில் அவள் பதில் சொன்னாள். போலீஸ்காரர்களைப் பார்த்து சிருதாவிற்கு பயம் எதுவும் தோன்றவில்லை. மனதில் பதற்றம் உண்டாகவும் இல்லை.

‘‘உனக்குக் கொஞ்சம்கூட கூச்சமே இல்லையாடீ?’’

‘அடியே’ என்றும்; ‘நீ’ என்றும் என்னை அழைக்கக் கூடாது என்று கூறவேண்டும்போல அவளுக்கு இருந்தது. ஆனால் அவள் கூறவில்லை. அதைக் கூறாமல் இருந்ததற்குக் காரணம் என்ன? யாருக்குத் தெரியும்? இன்ஸ்பெக்டர் வயதான ஒரு ஆள் அல்ல; இளைஞன். ஒரு இளைஞன் அப்படி அழைத்திருக்கக்கூடாது.

சிருதாவிற்கு அவனைப் பெற்று வளர்க்கும் வயது இருக்கிறது.

போலீஸ்காரர்களைப் பார்த்து கூச்சப்பட வேண்டிய அவசியமில்லை. அவள் எந்தவொரு தவறையும் செய்யவில்லை. அதை அவளே நேரடியாகச் சொன்னாள்:

‘‘நான் ஏன் கூச்சப்படணும்?’’

‘‘ஓ! நீ தலைவி ஆச்சே!’’

போலீஸ்காரர்கள் நாக்கிற்கு எரிச்சல் உண்டாகிற மாதிரிதான் பேசுவார்கள். காரித் துப்ப வேண்டும்போல அவளுக்கு இருந்தது.

போலீஸ்காரர்கள் திரும்பிப் போகும் நேரத்தில் இன்ஸ்பெக்டர் சொன்னார்:

‘‘உன் மகன் ஒரு கொலைகாரன். ஞாபகத்தில் வச்சுக்கோ!’’

அவன்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றம் அதுவாக இருக்க வேண்டும். முன்பு யார்மீதெல்லாம் கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது!

‘‘அவனுடைய கழுத்தில் கயிறு தொங்கப் போகுது. ஞாபகத்துல வச்சுக்கோ!’’

கொலை செய்தது நிரூபிக்கப்பட்டால், அதற்குத் தண்டனை கயிறில் தொங்குவதுதான்.

முன்பும் அப்படித்தான் இருந்தது.

மாணிக்கா வேலை செய்யும்போது சொன்னாள்:

‘‘இந்தக் கட்சிக்காரர்களுக்கும் யூனியன்காரர்களுக்கும் தைரியம் போதாது. முன்பு தைரியம் இருந்தது. இப்போ கொஞ்சம்கூட தைரியம் இல்லை. அதனால் தைரியம் உள்ள ஆண் பிள்ளைகள் கட்சி உண்டாக்குறாங்க.’’

அந்த ஊரில் ஸ்டாலின் தவிர, வேறு யாரும் அப்படி இல்லை.

கொட்டைக்காட்டு பப்புவின் பணப் பெட்டியிலிருந்து நான்காயிரம் ரூபாய் திருட்டு போய்விட்டது! மூலேப்பாடத்தில் பத்து பறை நிலம் வாங்குவதற்காக அவர் பணத்தை வைத்திருந்தார்.

அதே நாளில் காக்காழத்தில் இருக்கும் ஒரு முஹம்மது குஞ்ஞின் வீட்டிலும் கொள்ளை நடந்தது. முஹம்மது குஞ்ஞு கடை வீதியில் இருக்கும் ஒரு நெல் வியாபாரி.


முஹம்மது குஞ்ஞுவைக் கட்டிப் போட்டுவிட்டுத்தான், கொள்ளை நடந்திருக்கிறது. வாயில் துணி வேறு திணிக்கப்பட்டிருந்தது.

அடுத்த நாள் கலர்கோட்டில் இருந்த ஒரு வீட்டில் ஒரு ஆள் கதவைத் தட்டியிருக்கிறான். வீட்டுச் சொந்தக்காரர் கதவைத் திறக்கவில்லை. யாரோ ஒரு உறவினர் என்று சொல்லித்தான் கதவையே தட்டியிருக்கிறான்.

சிலுவை மூட்டில் வீட்டுக்காரர்கள் வீட்டிற்கு காவலாக இருக்கிறார்கள்.

மண்ணான் இட்டிக் குஞ்ஞுவின் வீட்டிலும் திருடு நடந்திருக்கிறது.

ஊரில் நக்ஸலைட்டுகளின் செயல்பாடு மிகவும் தீவிரமாக இருந்தது.

அப்படியென்றால் அப்படிப்பட்ட ஒருவன்தான் ஸ்டாலினா? சிருதாவால் நம்ப முடியவில்லை.

ஸ்டாலின் கொள்ளை அடிக்கக்கூடியவன் இல்லை. திருடக்கூடியவனில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் கொலை செய்யக் கூடியவனும் அல்ல. சிருதா அப்படித்தான் நம்பினாள்.

அந்த வருடத்தின் விவசாயம் புழுக்களின் பாதிப்பால் மிகவும் மோசமாக இருந்தது. நெல் நன்றாக வளர்ந்திருந்தது. ஆனால் அறுவடை செய்யாமலே அது காய்ந்துவிட்டது. கதிர் வந்த நேரத்தில் அறுவடையும் மோசமாக இருந்தது. வயலில் நெல் நன்றாகப் பிடித்தால்தானே அறுவடை செய்பவர்களுக்கும் நல்ல கூலி கிடைக்கும்?

மழைக்காலம் சீக்கிரமே ஆரம்பமாகிவிட்டது. இரவு, பகல் எந்நேரமும் விடாமல் மழை பெய்து கொண்டிருந்தது. நான்கைந்து சுழல் காற்றும் அடித்தது. வீட்டின் மேற்குத் திசையில் நின்றிருந்த மூன்று தென்னை மரங்களில் இடி விழுந்தது. எத்தனையோ வருடங்களாக நின்றிருந்த தென்னை மரங்கள்தான். எனினும், நிறைய தேங்காய்களைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

தென்னையும் வீடும் வைத்திருப்பவர்கள் கூறுவதுண்டு. தென்னை மரம் இடி விழுந்து கீழே சாய்வது கஷ்டகாலத்தில்தான் நடக்கும் என்பார்கள். பறையனும் புலையனும் கஷ்ட காலத்தின் அடையாளம் அது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்ததில்லை. அவர்களுக்குத் தென்னை மரங்கள் சொந்தத்தில் இல்லை. சிருதாவிற்கு கஷ்ட காலம்தான்.

சந்தேகமே இல்லை. கஷ்ட காலம்தானே? அவளுடைய மகன் ஒரு கொலைகாரன். அதைவிட என்ன கஷ்டகாலம் இருக்கிறது?

அதுவும் ஒரே மகன்!

தரையில் உட்கார்ந்து அவள் கூடை பின்னிக் கொண்டிருந்தாள். நூறு மூங்கில்களை வாங்கியிருந்தாள். நீர் மிதவை வைத்திருப்பவர்களிடமிருந்து அவள் வாங்கினாள். நாற்பது கூடைகளைப் பின்னி வைத்திருந்தாள். ஆலப்புழையிலிருந்து ஆட்கள் வருவார்கள்.

ஒரு பறை நெல்லை அவிய வைத்து உலரப் போட்டு, குத்தினால் இரண்டு படி அரிசி கிடைக்கும். அதுவும் கருப்பு நிற அரிசி அது வெளுக்கவே வெளுக்காது. அந்த அரிசியைக் கொண்டு சோறு சமைத்தால், சுவையே இருக்காது.

ஒரு கவளம் நல்ல வெள்ளை நிறத்தில் இருக்கும் சோற்றை எப்போது சாப்பிட முடியும்?

எல்லாம் நல்லபடியே நடந்தால் அடுத்த வருடம். அப்போதும் ஏதாவது புழுவின் பாதிப்போ உப்பு நீரோ வந்துவிட்டால் அதுவும் நடக்காமல் போய்விடும்.

முன்பு இப்படியெல்லாம் இருக்காது. ஆனால், அப்போது ஒரு அறுவடை செய்பவனுக்கு அறுவடை காலத்தின்போது உள்ள செலவு போக, பத்தோ பதினைந்தோ பறை நெல் அறுவடை முடிந்ததும் மீதம் என்று இருக்கும். இன்று ஒரு ஆள் இரண்டு நாழி அறுவடை செய்தால், ஐந்து பறை நெல் கூலியாகக் கிடைக்கும். ஐந்து நாட்கள் அறுவடை செய்து, மூன்று நாட்கள் மிதித்தால்தான் முன்பு கிடைத்த ஐந்து பறை நெல் தொழிலாளிக்குக் கிடைக்கும்.

இப்போது புதிய வகை வித்துகள் விதைக்கப்படுகிறது. விளைச்சல் இருக்கிறது.

முன்பு யார் உரம் போடுவார்கள்?

இப்போது உரத்தால்தானே நெல்லே வளர்கின்றது!

ஒரு மாதிரி வாழ்பவர்களுக்கெல்லாம் நிலம் இருக்கிறது. எனினும் தானியப் பெட்டியில் இருக்கும் நெல்லை வைத்துக் கொண்டு அடுத்த அறுவடைக் காலம் வரையில் வாழ்ந்துவிட முடியாது.

கூடைகளை விற்றால் பணம் கிடைக்கும். அதை வைத்து அரிசி வாங்கலாம். அரிசி வாங்க வேண்டியதிருக்கும்.

அரிசியை எடுத்துக் கொண்டால் அதன் விலை மிகவும் அதிகமாக இருக்கிறது.

அடுத்த விதை போடும் காலத்தின்போது கூலி ஏழு ரூபாயாக ஆகிவிடும் என்று கூறிக் கொள்கிறார்கள். யூனியன் அந்தக் கூலி வேண்டும் என்று கூறிவிட்டது.

அரை ரூபாயிலிருந்து ஏழு ரூபாய்க்கு கூலி அதிகரித்துவிட்டது. அரை ரூபாய் கூலி இருந்த காலத்தில் செய்த அளவு வேலையைத்தான் இப்போதும் செய்ய வேண்டியதிருக்கிறது.

ஆனால், ஒரு விஷயம் வேலைக்கு ஒரு படையே வருகிறது. பெரும்படை. பத்து பறை நிலத்தில் முன்பெல்லாம் மூன்று நாட்கள் களை எடுப்பார்கள். நிலத்தின் சொந்தக்காரர்கள் ஆட்களை அழைத்துக் கொண்டு நடப்பார்கள். இன்றோ அதிகமான ஆட்கள் இருப்பதைப் பார்த்து அவர்கள் ஓடி ஒளிகிறார்கள்.

படை என்றால் படைதான். வானத்தில் பறவைக் கூட்டம் பறந்து திரிவதைப் போல காலை நேரத்தில் வேலை செய்யச் செல்லும் படை பூமியில் எல்லா இடங்களிலும் நடந்து போய்க் கொண்டிருக்கிறது.

மாணிக்கா சொன்னது உண்மைதான். உள்ளே இருந்தவர்களெல்லாம் வெளியே வந்துவிட்டார்கள்- வயிற்றைக் காப்பாற்ற.

அவர்களுக்கும் வேலை செய்யத் தெரியும்.

எல்லோரும் சமம்.

எனினும் புதிய பெண்கள் இப்போதும் உள்ளே ஒதுங்குகிறார்கள்.

புதிய ஆட்களுக்குத்தான் இப்போது வயலும் நெல்லும் தேங்காயும் பணமும்.

இப்போது பின்னி முடித்த முப்பறை கூடைக்கு ஒரு தவறு நேர்ந்துவிட்டது. அது எப்படி வந்ததோ, தெரியவில்லை. எதை நினைத்துக் கொண்டிருந்தாலும், பின்னிக் கொண்டிருக்கும் கூடைக்கு எந்த குறையும் உண்டாகாது. அது நல்ல விதமாகவே முடியும். இன்று என்ன ஆனது?

அந்தக் கூடை விலைக்குப் போகாது. அந்த அளவிற்கு நேரமும் வேலையும் வீணாகிவிட்டன.

ஒன்றரை ரூபாய் குறைந்தது.

இல்லை. எனினும், இது எப்படி நடந்தது? வாழ்நாளில் இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லை.

ம்... இருக்கட்டும். இதில் எதையாவது வைக்க வேண்டியதுதான்.

நேற்றைக்கு முந்தின நாள் ஆரம்பித்த மழை. சிறிது கூட விடவில்லை. ஒரே மாதிரி பெய்து கொண்டிருக்கிறது. இருளடைந்து கிடந்தது. சூரியனைப் பார்க்க முடியவில்லை. மனிதர்கள் வெளியே வர முடியவில்லை.

வெள்ளம் பெருக்கெடுத்து வந்து கொண்டிருக்கிறது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறதோ?

ஊரெங்கும் ஒரு சத்தம்! சூறாவளிக் காற்றின் சத்தமாக இருக்க வேண்டும்.

 

இரவில் படுத்தால் தூக்கம் வருவதில்லை. கண்களை மூடவும் முடியவில்லை. ஆனால், கண்களை விழித்துக் கொண்டு படுத்திருக்கும் போது கனவு வந்து கொண்டிருந்தது. எழுந்து உட்கார்ந்தாலும் கனவு தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் அறுவடை செய்யும் போது, களத்தில் கதிர்களை மிதிக்கும் போது- எல்லா நேரங்களிலும் கனவுகள் வந்து கொண்டேயிருந்தன.


சிறுவன் தன் தாயை 'அம்மா!' என்று அழைக்கிறான். என்ன கூத்து இது!

என்னவோ விபத்து வரப் போகிறது. அதன் முழக்கம் தான் இப்போது கேட்டுக் கொண்டிருப்பது!

ஒரு பயம்!

அது வரையில் எந்தச் சமயத்திலும் அத்தகைய ஒரு அனுபவம் அவளுக்கு உண்டானதில்லை. இரவில் வெளியே செல்லத் தோன்றவில்லை.

சூரியன¢ தோன்றியது. நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. காற்று மெதுவாக வீசிக் கொண்டிருந்தது. மழை நின்றது. வெள்ளம் வடியும். எனினும் எந்த இடத்திலும் வேலை நடக்கவில்லை. என்ன வேலை செய்வது?

சிறுவன் தாயை அழைக்காமல் இருந்திருந்தால்- மனதில் அமைதியுடன் இருந்திருக்கலாம்.

ஏன் இப்படியொரு அழைப்பு கேட்கிறது?

 

ஓ! நாசம்! பிறகும் போலீஸ்காரர்களின் தொல்லை. மாறுவேடம் அணிந்த இரண்டு போலீஸ்காரர்கள் வருகிறார்கள். அவர்கள் எதற்காக வருகிறார்கள்?

இரண்டு பேரும் வாசலில் வந்து நிற்கிறார்கள். சிருதா வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. இடைவிடாத மழையின் காரணமாக நெருப்பை எரிய வைக்க எதுவும் இல்லாமலிருந்தது. கீறப்பட்ட தென்னை மடல் நனைந்து போய்விட்டது. ஒருநாள் வெயில் அடித்தாலும் நனைந்த மடல் காய்ந்துவிடாது.

ஊதி ஊதி கண்களும் முகமும் சிவப்பாயின.

வாசலில் போலீஸ்காரர்கள் சில நிமிடங்களாக நின்று கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ்காரர்கள் ஏன் எதுவுமே பேசாமல் இருக்கிறார்கள்? இப்படிப் போலீஸ்காரர்கள் எதுவும் பேசாமல் நின்றிருப்பார்களா? அவர்களுக்கு ஒரு தயக்கம்... நீருக்குள் விழுந்த பூனையைப் போல...

சிருதா அவர்களைப் பார்க்கவேயில்லை.

"இங்கே கொஞ்சம் வாங்க..."

என்ன ஒரு மரியாதை!

உள்ளே இருந்து கொண்டே சிருதா கேட்டாள்!

"ம்... என்ன?"

"ஒரு நோட்டீஸ் இருக்கு."

"நோட்டீஸா? அதற்கு நான் எதற்கு?"

"கையெழுத்துப் போட்டுத் தரணும்."

"எனக்கு இப்போ மனசு இல்ல."

"அப்படிச் சொல்லக்கூடாது."

"எனக்கு மனசு இல்லைன்னு சொல்றேன்ல!"

போலீஸ்காரர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். அது ஒரு மூடப்படாத தேங்காயைப் போல இருந்தது. என்ன வழி?

"ஒரு முக்கியமான விஷயம்..."

"எனக்கு ஒரு முக்கியமும் இல்லை."

மீண்டும் அமைதி!

ஒரு போலீஸ்காரர் இன்னொரு போலீஸ்காரரின் காதில் முணுமுணுத்தார்:

"நாம விஷயத்தை நேரடியா சொல்லிட்டா என்ன?"

"வேண்டாம்... அவங்க தாயாச்சே! நம்மையும் அம்மாமார்கள் பெத்திருக்கிறாங்கள்ல?"

போலீஸ்காரர்கள் தங்களுக்குள் என்னவோ மெதுவாகப் பேசிக் கொள்கிறார்கள். அதைப்பற்றி சிருதா ஏன் கவலைப்பட வேண்டும்?

ச்சே! இந்த மடல் எரியவில்லை. அடுப்பில் அது வெறுமனே புகைந்து கொண்டிருந்தது. வீடு முழுவதும் புகையாகிவிட்டது. நன்கு காய்ந்து கிடந்த மடல்... மழையும் காற்றும் வருவதற்கு முன்னால் அவற்றை வாரி உள்ளே கொண்டு வந்து போட வேண்டும் என்று அவள் நினைத்திருந்தாள். அப்போது பரணில் நிறைய காய்ந்த மடல்கள் இருந்தன. அங்கு இடம் இல்லாமல் இருந்ததால்தான் அவள் வெளியே இருந்த மடல்களை உள்ளே கொண்டு வந்து வைக்கவில்லை. நாசம் பிடித்த மழையும் காற்றும்! பரணில் மூச்சுவிடமுடியாத அளவிற்கு மடல்களும் விறகுகளும் இருந்தன. அவை முழுவதும் தீர்ந்து போய்விட்டன.

இந்த அடுப்பில் அரிசியை எப்படி வேக வைக்க முடியும்?

நெருப்பை எரிய வைப்பதற்காக குனிந்து ஊதிக் கொண்டிருக்கும் போது சிருதா தன் தலையை உயர்த்திக் கேட்டாள்:

"என்ன மகனே!"

கண்கள் திறந்திருக்கும் போதுகூட கனவு. கனவில் ஸ்டாலினின் அழைப்பு.

"அம்மா!"

"என்ன மகனே!"

சரியாகக் காய்ந்திராத மடலை எரிய வைப்பதற்கான தீவிர முயற்சியில் நெருப்புக் கையாக மாறியது. அந்த வீடெங்கும் புகை நிறைந்தது. மூச்சு விட முடியவில்லை.

சிருதாம்மாவிற்கும் மூச்சு அடைத்தது.

புகைக்கு மத்தியிலிருந்து கூட சத்தம் வெளியே வரும்.

புகை வாசலிலும் பரவியது. அடர்த்தியாக. கண்களுக்கு எரிச்சல் உண்டாகும் அளவிற்கு அது அதிகமாக இருந்தது. மூச்சுவிட முடியவில்லை.

சத்தம் வெளியே வந்தது.

"என்ன மகனே!"

அதற்குப் பிறகும் என்ன சத்தம்!

"என்ன? என் தங்க மகனே! அம்மா வர்றேன்."

என்னவொரு அடர்த்தியான, மூச்சை அடக்கக்கூடிய புகைப்படலம் அது! ஒரு போலீஸ்காரர் சொன்னார்:

"என் அம்மா!"

அந்த போலீஸ்காரர் யார் தெரியுமா? நம்மையும் தாய்தானே பெற்றெடுத்தாள் என்று கூறிய போலீஸ்காரர்! அவர் புகையால் தன் கண்களைக் கசக்கியபோது- மூச்சு அடைத்த போது சொன்னார்- 'என் அம்மா!' என்று.

"என்ன? அம்மா வர்றேன் மகனே!-"

இப்படியும் ஒரு புகை இருக்குமா?

நெருப்பு புகையாக மாறும். நெருப்பு புகையாக மாறிவிட்டது. நெருப்பு எல்லாவற்றையும் இல்லாமல் செய்கிறது.

புகையோ?

தப்பித் தடவி பரவிக் கொண்டிருப்பது.

நெருப்பும் புகையும் சகோதரர்களா?

நெருப்பு, புகை ஆகியவற்றின் தந்தை யார்? தாய் யார்? அதைத் தெரிந்திருந்தால் மட்டுமே நெருப்பிற்கும் புகைக்குமிடையே இருக்கும் உறவு என்ன என்பதைக் கூற முடியும். நெருப்பும் புகையும் சகோதரர்களா என்பதை.

சிருதாம்மா "நான் வர்றேன் மகனே! நான் வர்றேன் மகனே! என்று கூறிக் கொண்டே இருந்தாள்.

காக்கைத்தீவில் மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகக் கூடுவதைப் போல முத்தோலி வீட்டில் புகை அடர்த்தியாக ஒன்று சேர்ந்தது. ஊரில் உள்ள எல்லோரும் அங்கு வந்து கூடினார்கள்.

 

குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தரப்பட்டிருக்கிறது. ஸ்டாலினை மரண தண்டனையிலிருந்து காப்பாற்றுவதற்கு. புன்னப்புரை பகுதியில் இருப்பவர்களின் தேவையாக இருந்தது அது.

சதானந்தன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை உண்டானது. அந்தப் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.விற்கும் எம்.பி.க்கும் அது கவுரவ பிரச்சினையாக மாறியது.

முத்தோலி வீட்டைச் சேர்ந்த சிருதாம்மாவிற்கு ஒரு கடிதம் வந்தது. தபால்காரரே அந்தக் கடிதத்தைப் படித்துக் காட்டினார். ஆறு வாக்கியங்கள் மட்டுமே உள்ள ஒரு கடிதம். விஜயவாடா சிறையிலிருந்து அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது.

'அம்மாவிற்கு, நான் பிப்ரவரி பதினேழாம் தேதி இறக்க மாட்டேன். ஆவேசம் ஆபத்தானதாக மாறிவிட்டது. இறந்துவிடுவேன் என்று பயந்து மரணத்திலிருந்து தப்பிப்பதற்காக இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை. அம்மா, நீங்கள் கவலைப்படக்கூடாது. தூக்கு மரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது, எது சரி எது தவறு என்று பிரித்து தெரிந்து கொள்ள முடியும். அப்போது சரியையும் தவறையும் ஒப்பிட்டு மட்டுமே பார்க்க முடியும்.’

துக்கம் விசாரிக்க வந்ததைப் போல பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஸ்டாலின் இறந்துவிட்டான் என்பதைப் போல அவர்களுடைய செயல் இருந்தது.

யாரும் ஆச்சர்யப்படத்தான் செய்வார்கள்!


சிருதாம்மா ஒன்று கூடை பின்னிக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் தென்னை மடலைக் கீறிக் கொண்டிருப்பாள். அதுவும் இல்லாவிட்டால் கஞ்சி வைத்துக் கொண்டிருப்பாள்.

துக்கம் விசாரிப்பதற்காக வந்தவர்கள் என்ன கூறுவார்கள்? சிருதாவிற்கு துக்கம் இல்லை. அங்கு எதுவும் நடக்கவில்லை.

சதானந்தன் ஒவ்வொரு வீடாக சூறாவளியைப் போல நடந்து ஸ்டாலினுக்காக கட்சி செய்த காரியங்களைக் கூறிக் கொண்டிருந்தார். கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரிடம் போராடிக் கொண்டிருந்தார்கள். கண்ணனுடைய மகன் என்பதற்கு தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லை. அங்கு- டில்லியில் அதுதான் கஷ்டமே இதை எங்கு போய்க் கூறுவது?

அங்கு காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் இருக்கிறது. அவர்களுக்கு புன்னப்புரை தியாகிகள் ஒரு பொருட்டே அல்ல. எனினும் ஸ்டாலினுக்கு மன்னிப்பு கிடைக்கும்.

துக்கம் விசாரிப்பதற்காக வரும் பெண்கள் தென்னை மடலைக் கீறிக் கொண்டிருந்த சிருதாம்மாவைப் பார்த்துக் கூறுவார்கள்:

"ஸ்டாலினுக்கு மன்னிப்பு கிடைக்கும்."

அதைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? சிருதா அதைக் காது கொடுத்தே கேட்கவில்லை.

தோழர் எம்.பி. கூறினால் யார் கேட்காமல் இருக்க முடியும்? அப்படித்தான் சிலரிடம் சதானந்தன் கூறினார்.

கட்சி அலுவலகத்திலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கில் கடிதங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. முப்பத்தாறு அறிக்கைகளும் கட்சியின் செயலாளர் சாதாரண வேலையையா செய்து கொண்டிருக்கிறார்?

எல்லாம் கோப்பில் இருக்கிறது.

அறுவடை நடக்கும் இடத்தில் யாரோ சிருதாம்மாவிடம் கேட்டார்கள்:

"ஸ்டாலின் விஷயம் என்னாச்சு?"

சிருதாவிடம் அதைக் கேட்டிருக்கக்கூடாது. தூக்குத் தண்டனை நிறைவேற்றும்படி தீர்ப்பு சொல்லப்பட்ட கன்டம்ட் செல்லில் இருக்கும் மகனைப் பற்றி அவனுடைய விஷயம் என்ன ஆனது என்று அவனுடைய தாயிடம் கேட்கக் கூடாது.

எனினும் நெல் விளைந்து கிடக்கும் வயலில் வரிசையில் நின்று கொண்டு கதிர்களைப் பிடிப்பிடியாக அறுவடை செய்து கொண்டிருக்கும் தாயிடம் அதைக் கேட்கலாம்.

தலையை உயர்த்தாமல் சிருதா பதில் சொன்னாள்:

"உப்பு தின்றவன் தண்ணியைக் குடிக்கணும்."

அதற்குப் பிறகு கூறுவதற்கு என்ன இருக்கிறது?

வாயாடி மாணிக்கா கூறிக் கொண்டிருந்தாள்:

"கட்சி பொறுப்பேற்று இருக்குது. ஸ்டாலின் தூக்குத் தண்டனையில இருந்து தப்பிப்பாருன்னு சதானந்தன் அண்ணன் சொன்னார். ஆனால், டில்லியில் நம்முடைய அரசாங்கம் இல்லை என்றும் சொன்னார்:

 

அந்த வருடம் சிருதாவின் தானியப் பெட்டி நிறைந்தது. பிறகு... தானியப் பெட்டிக்கு வெளியேயும் கோணிகளில் நெல்லை நிறைத்துக் கட்டி வைத்தார்கள். படகுத்துறைக்குப் பக்கத்தில் இருந்த ஐந்து பறை நிலத்தில் நல்ல விளைச்சல் உண்டானது.

இந்த வருடம் அறுவடைக் காலத்தில் பறைக்கு ஒன்பது ரூபாய் விலை இருக்கிறது. இடவம், மிதுன மாதங்களில் பறைக்கு குறைந்தது பதினைந்து ரூபாய் விலை வரும். குறைந்தபட்சம் இருநூற்றைம்பது பறை நெல்லாவது சிருதாவின் வீட்டில் இருக்கும்.

பணம் எப்வளவு?

அந்தப் பணம் அனைத்தையும் சிருதா என்ன செய்வாள்?

சதானந்தன் சொன்னார்:

"சிருதாம்மா கட்சியின் கட்டிட நீதிக்கு நன்கொடையாக கொடுத்து விடுவாள். அதை விட்டால் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்?"

 

அதற்குப் பிறகும் இரண்டு போலீஸ்காரர்கள் ஒருநாள் ஒரு நோட்டீஸைக் கொண்டு வந்தார்கள்.

அதே நாளில் தபால்காரர் ஒரு கடிதத்துடன் முத்தோலி வீட்டுக்கு வந்தார்.

அவர் கடிதத்தைப் படித்தார்.

கடிதத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது:

'அன்புள்ள அம்மாவிற்கு,

செய்தவை அனைத்தும் தவறு என்றாகிவிட்டது. உளவியல் விஞ்ஞானத்தின் விளக்கத்தை உணர்ச்சிப்பூர்வமாகக் கையாண்டு பார்த்தேன். அந்த செயல்பாட்டில் அறிவைக் கடந்து வர ஒப்புக் கொள்ளவில்லை. உணர்ச்சி, கேவலமான மிருகத்தன்மை கொண்டதாகி விட்டது. மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை என்ற ஒன்று இருப்பதாக இருந்தால், மறுநாளே ஏதோ ஒரு உலகத்தில் கோடிக்கணக்கான மனிதர்களுக்கு மத்தியில் இருந்து கொண்டு அப்பாவைக் கண்டுபிடித்து நான் விஷயங்களைக் கூறுவேன். பிறகு... அம்மா, நீங்கள் அங்கு வந்து சேரும் காலத்தில் உங்களிடமும் கூறுவேன். முத்தோலி வீட்டில் நடந்த விஷயங்கள் பரவாயில்லை. 16-ஆம் தேதி சூரியன் மறைந்து, அதிகாலை 5 மணிதான் நேரம்.

மகன்,

ஸ்டாலின்.

ஒரு பெரிய களத்தில் விரிக்கும் பாயை அவள் பின்னிக் கொண்டிருந்தாள். ஒரு பெரிய பாய்க்குத் தேவையான மூலப்பொருளை அவள் சேகரித்து வைத்திருந்தாள்- இரண்டு வருடங்களாக ஒரு நல்ல களப் பாயை விற்றால் ஐந்நூறு ரூபாய் கிடைக்கும்.

வயலில் இருந்து மூன்று மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்து ஐந்து மணிவரை அவள் பாய் பின்னலாம். பிறகு இரவிலும் தொடரலாம்.

மூன்று மணியிலிருந்து அவள் பாய் நெய்து கொண்டிருக்கிறாள். சுறுசுறுப்புடன் கஜங்களுடைய நீளத்தில் பாயின் நீளம் அகலத்திற்கேற்ப நீண்டு கொண்டிருக்கிறது. எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் வேலை நடந்து கொண்டிருந்தது.

முதல் சாமத்தை அறிவிக்கும் கோழி கூவியது. நள்ளிரவு கோழி பத்து திசைகளில் இருந்து அதைப் பின்தொடர்ந்து கூவியது. ஏழரைக் கோழி கூவியபோது, பெரிய மீன் உதயமானது. சக்ரேஸ்வரன் முதலாளியின் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சும் வேலை வேண்டாம் என்று அவள் முடிவு செய்திருக்கிறாள்.

ஐந்து மணிக்குப் பஞ்சாயத்து அலுவலகத்தில் எப்போதும் நேரத்தை அறிவிக்கும் சங்கொலி அன்றும் ஒலித்தது. சிருதா பின்னோக்கி சாய்ந்தாள்.

 

புன்னப்புரையின் வீரப்பெண் மரணமடைந்துவிட்டாள்.

துப்பாக்கிக் குழாய்க்கு முன்னால் செங்கொடியைக் கொடுத்து தன்னுடைய கணவனை போராட்டத்திற்கு அனுப்பி வைத்த வீர மங்கை இறந்துவிட்டாள்.

சிருதாவின் வீட்டில் கருப்பு நிற 'பேட்ஜ்' அணிந்த ஆண்கள் நின்றிருந்தார்கள். மறந்து போய்விட்டிருந்த பாட்டின் வரிகள் எல்லோரின் நாக்கு நுனியிலும் வந்து விளையாடிக் கொண்டிருந்தன. முழுப் பாடலும் யாருக்கும் நினைவில் இல்லை. அங்கும் சில வரிகள் மட்டும்!

சிருதா எப்படி இறந்தாள்?

எப்படிப் பார்த்தாலும் அந்த மரணமும் ஒரு ஆச்சர்யம்தான்.

சிருதாவை எங்கு அடக்கம் செய்ய வேண்டும்?

"வயலின் கரையில் யாரும் பார்க்காத ஒரு இடத்தில் அடக்கம் செய்யக்கூடாது. அதாவது- அந்த வயலில் வேண்டாம்."

செயலாளர் சதானந்தனின் கருத்து அது. பெண்களில் யாரோ ஒருத்தி வேறொரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தை வெளிப்படுத்தினாள்:

"அவள் உண்டாக்கிய சிறிய இடத்தில் தான் அவளை அடக்கம் செய்ய வேண்டும்."

அப்போது கருத்து வேறுபாடு இருக்கவே செய்தது. தெற்குத் திசையில் நின்றிருந்த பூவரசு மரத்தின் நல்ல ஒரு கிளை பிரியும் இடத்தில் ஏறி நின்று கொண்டு சதானந்தன் பேசினார்:

"தோழர்களே!"

மக்கள் கூட்டம் அமைதியானது. எல்லோரும் அருகில் வந்து நின்றார்கள்.

சதானந்தன் பேச ஆரம்பித்தார்:


"இங்கு மூடப்பட்டிருப்பது யாருடைய பிணம்?"

சதானந்தன் கேட்டார். பதிலையும் அவரே சொன்னார்:

"புன்னப்புரையின் வீர மங்கையின்..."

கூடியிருந்த கூட்டம் அமைதியாக அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது.

"அவளுடைய இறந்த உடல் இறுதி ஓய்வு எடுக்கும் இடத்தில் ஒரு நினைவுத் தூணாவது எழுப்பப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. சந்தேகம் இருக்கிறதா?"

கூடியிருந்த கூட்டத்திடம் சதானந்தன் கேட்டார். உடனடியாக கூட்டத்திலிருந்து பதில் வந்தது:

"நினைவுத் தூண் உண்டாகும்."

"அப்படியென்றால் இந்த இறந்த உடலை வெறுமனே கிடக்கும் இந்த மூலையில் அடக்கம் செய்ய வேண்டுமா? இல்லாவிட்டால் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டுமா? இதுதான் பிரச்சினையே. கன்னியாகுமரியையும் டில்லியையும் சந்திக்க வைக்கும் மிகப் பெரிய சாலைக்கு அருகில் அந்த நினைவுத் தூண் உயர்ந்து நிற்க வேண்டும். அதைக் கடந்து செல்பவர்கள் அதைப் பார்த்து உணர்ச்சிவசப்பட வேண்டும்."

கூடியிருந்த மக்கள் கூட்டம் கைகளைத் தட்டி அதை ஏற்றுக் கொண்டது.

"அதே நேரத்தில் சிருதாம்மாவிற்கு ஆதரவான இன்னொரு கருத்தும் இருக்கிறது. அதையும் நான் கூறுகிறேன்.

சிருதாம்மாவின் நிலத்திலேயே அவரை அடக்கம் செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் போது அதில் ஒரு குறை இருக்கிறது. இந்த மண் சமூகத்திற்குச் சொந்தமானது என்ற தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் எல்லைகளைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. எனினும், பழமையான அந்த நம்பிக்கையை நாம் முழுமையாக நிராகரிக்க வேண்டாம். அது நம்மை பாதிப்பதென்னவோ உண்மை."

பெரிய சுடுகாட்டில் புன்னப்புரை தோட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளை எரித்த இடத்தில்தான் சிருதாம்மாவையும் அடக்கம் செய்ய வேண்டும்.

மக்கள் கூட்டம் தீர்மானித்தது.

அது ஒரு பெரிய மரண ஊர்வலமாக இருந்திருக்க வேண்டும். பெரிய சுடுகாட்டிற்கு மூன்று மைல் தூரம் இருக்கும். மரண ஊர்வலத்தின் ஒருமுனை பெரிய சுடுகாட்டில் என்றால், இன்னொரு முனை வீட்டில் இருந்தது.

ஊரெங்கும் சிவப்பு கொடியுடன் இணைந்த கருப்புக் கொடி பறந்து கொண்டிருந்தது. சிவப்பு நிறத்திற்கு அப்படியொரு உணர்வு வந்து சேர்ந்தது.

அந்தப் பிரதேசம அப்படிப்பட்ட ஒரு மரண ஊர்வலத்தைப் பார்த்தது இல்லை. தலைவர்களுக்குக் கூட அப்படியொரு மரியாதை கிடைத்தது இல்லை.

அது ஒரு சக்தியின் பிரதிபலிப்பாக இருந்தது. அமைதியான சக்தியின் பிரதிபலிப்பு. கட்சி தளர்ந்து போகவில்லை. பிளவு உண்டாகவும் இல்லை. கட்சி ஒன்றுதான். அது பெரியது. ஒரே நிமிடத்தில் கட்சியின் பலத்தைப் பார்க்க முடியும்.

சதானந்தனைப் பொறுத்தவரையில் அது ஒரு மிகப்பெரிய வெற்றி என்றுதான் சொல்ல வேண்டும்.

 

சிருதாம்மாவின் உடன் பிறப்புகள் வந்திருந்தார்கள். கண்ணனுடைய நாத்தனார்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்திருந்தார்கள். முத்தோலி வீட்டை விட்டு அவர்கள் போகவில்லை. இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஒருவரோடொருவர் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தார்கள்.

அங்கு தானியப் பெட்டி இருக்கிறது. அதற்குள் பெட்டி இருக்கிறது அதற்குள் இருப்பவற்றுக்கு வாரிசு யார்?

சிருதாம்மாவின் உடன் பிறப்புக்களா? கண்ணனுடைய உடன் பிறப்புக்களா?

கண்ணனுடைய உடன் பிறப்புகளுக்கு என்ன உரிமை இருக்கிறது?

கண்ணன் சிருதாம்மாவிற்கு யார்?

யாருமல்ல. கண்ணன் சிருதாவைத் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

ஆனால், சிருதாவின் உடன் பிறப்புக்கள் வரவேண்டியவர்கள்தான்.

சக்கச்சம்பாக்க லோக்கல் கமிட்டி செயலாளரும் தொழிலாளி யூனியன் தலைவரும் வந்திருக்கிறார்கள்.

எது வந்தாலும் சட்டம் சட்டம்தான். இல்லை என்று சொல்லி எந்தவித பிரயோஜனமும் இல்லை. வாரிசு சண்டை சட்டப்படி தான் முடிவு செய்யப்படும்.

சிருதாம்மாவின் வாழ்க்கை யாரும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டது.

கண்ணனுடன் வீட்டை விட்டு வெளியேறியபோது புகைந்த நெருப்புக் கொள்ளி நம் முதுகில் என்றல்லவா அவருடைய உடன் பிறப்புக்கள் நினைத்தார்கள்? பிறகு அவர்கள் திரும்பிப் பார்த்திருப்பார்களா? இப்போது பண விஷயம் என்று வந்ததும், தங்கையாகிவிட்டாள், சித்தியாகிவிட்டாள். இப்படி உறவு கூறி வந்திருக்கிறார்கள்.

கண்ணனுடைய ஆட்க-ளுக்குக் கூறுவதற்கு விஷயங்கள் இருக்கின்றன.

"சிருதா அன்னைக்கே இறந்துவிட்டாள் என்று நீங்கள் நினைச்சுக்கோங்க."

சிருதாவின் ஆட்களுக்கும் கூறுவதற்கு விஷயம் இருந்தது.

முதலாவது- கண்ணன் அவளைத் திருமணம் செய்யவில்லை. அப்படியென்றால் கண்ணனுடைய ஆட்கள் சிருதாவிற்கு யார்? யாருமல்ல. என்ன உறவு இருக்கிறது? ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஆறேழு நாட்கள் ஒன்றாக வாழ்ந்தாள் என்பதைக் கொண்டு அந்த ஆணின் ஆட்களுக்குப் பெண்ணின் சொத்தில் உரிமை இருக்குமா? ஆறு நாட்கள் அல்ல, ஆறு வருடங்கள் வாழ்ந்தால்கூட அடுத்த வாரிசாக ஆக முடியுமா? இறந்து போய்விட்டாலும் கதை என்னவோ அதேதான்.

நிலைமை அப்படிப் போனால் எல்லா விஷயங்களும் பிரச்சினைக்குள்ளாகும்.

அது மட்டுமல்ல- சிருதாவை கண்ணனுடைய சகோதரிமார்களும் தாயும் சேர்ந்து வீட்டை விட்டு வெளியேற்றினார்களே- இரவில் உறங்குவதற்கு இடம் இல்லை என்ற சூழ்நிலையில்!

ஆனால், கண்ணனை சிருதாவிற்குப் பிடித்திருந்தது.

அதைக்கூட எப்படித் தெரிந்து கொள்வது? கண்ணன் சிருதாவை மயக்கி அழைத்துச் சென்றிருக்கலாம். பின்னால் அவளுக்கு தலையில் தெளிவு உண்டாகியிருக்கலாம். யாருக்குத் தெரியும்? கண்ணன் உயிருடன் இருந்திருந்தால், அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம். புத்திசாலியான சிருதா தன் விருப்பப்டி அவனை விட்டு பிரிந்து போயிருப்பாள். அதை யாரும் கூறவே வேண்டாம். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களை விவாதத்திற்குரியனவாக யாரும் கூறவும் வேண்டாம்.

சிருதா பத்து சக்கரங்கள் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) சம்பாதித்திருந்தால், அது ஸ்டாலினுக்காகத்தான். ஸ்டாலினுக்கு மட்டுமே. நான்கு காசுகள் சம்பாதிக்கும் போது தன்னுடைய உடன் பிறப்புகளும் கண்ணனுடைய ஆட்களும் யாருமே அவருடைய மனதில் இருந்ததில்லை. அந்த வகையில் பார்க்கப்போனால் அதற்கு அவர்கள் உரிமை கொண்டாடக்கூடாது.

அந்த வாதத்திலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

பிறகு அந்த சொத்து யாருக்குச் சேர வேண்டும்?

 

என்னதான் விஷயங்கள் கூறினாலும் தினமும் நீர் குடித்து உண்டாக்கிய சொத்து அல்ல அது. சிருதாம்மாவின் சொத்து மகனுக்குக் கொடுப்பாள். அவள் பட்டினி கிடப்பாள். அப்படி சொத்தை உண்டாக்கியவள் நீர் குடிக்காமல் உண்டாக்கும் போது அது இப்படித்தான் தாறுமாறாகப் போய் முடியும்.

ஐந்து சென்ட் நிலம் வாங்கியதற்கு என்ன அர்த்தம் கொடுத்தார்கள்? ஆண்களாக இருந்தால், அதைவிட அதிகமாக விலை தந்திருப்பார்கள். அந்த நிலத்தை அவள் குறைந்த விலைக்கு அல்லவா வாங்கினாள்? பொருள் அர்த்தத்துடன் வாங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் உரிமை மூலம் கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் இப்படித்தான் இருக்கும்.


ரொக்கப் பணமும் இருக்கும்.

அது ஒரு நல்ல தொகையாக இருக்கும்.

தானியப் பெட்டியை இதுவரை திறக்கவில்லை. இரண்டு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் அதைக் காவல் காத்துக் கொண்டிருந்தார்கள். இரவு பகலாக அவர்களுக்கிடையே சண்டை எதுவும் உண்டாகிவிடக்கூடாது என்பதற்காக காவல் காப்பதற்கு நல்ல மனிதர்களும் இருந்தார்கள். இரண்டு இடங்களிலும் ஊரைச் சேர்ந்த செயலாளர்கள் கலந்து பேசியும் ஒரு முடிவை அடைய முடியவில்லை.

 

சிருதாவை எரிய வைத்த இடத்தில் ஒரு நினைவுத் தூணை நிற்கச் செய்ய வேண்டும். அது ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஒரு விஷயம்.

இப்போது அறுவடை முடிந்துவிட்ட காலம். கடந்த அறுவடை மிகவும் மோசமாக இருந்தது. கதிர்களை அறுவடை செய்து மிதித்து முடிக்கும் போது, பத்து பறை நெல் இருக்கக்கூடிய வீட்டில் போன வருடம் மூன்று பறை நெல்கூட மீதம் இருக்கவில்லை. அப்படியென்றால் நன்கொடை வசூலித்து தூண் உண்டாக்குவது என்பது நடக்காத விஷயம். சூட்டோடு சூடாக அந்தக் காரியத்தைச் செய்யவில்லையென்றால், பிறகு அது நடக்கவே நடக்காது.

தலைவரை எரிய வைத்த இடத்தில் தூண் உண்டாக்குவதற்கான அடிக்கல் அமைக்கப்பட்டும், அது அப்படியேதான் இருக்கிறது.

அது தீர்மானமாகவே இருக்கும். அவ்வளவுதான். மண்ணம்பிள்ளிராமன் கமிட்டி கூடியபோது ஒரு வேண்டுகோளை வைத்தார்:

"இப்போது உரிமை பற்றிய தகராறுதானே? நாம ஒரு தீர்மானம் எடுத்தால் என்ன?"

ராமன் விளக்கினார்.

"விவாதத்தில் இரண்டு பக்கங்களையும் சேர்ந்தவர்கள் கூறுவதிலும் விஷயம் இருக்கு. எப்படியென்றால் எதிரணியைச் சேர்ந்தவர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது என்ற விஷயத்தில். அவரவர்களுடைய விஷயத்தில் அந்த அளவிற்கு பலமில்லை என்பது வேறு விஷயம்."

சதானந்தன் அதை ஒப்புக் கொண்டார்.

ராமன் தொடர்ந்து சொன்னார்:

"பணம், நெல் ஆகியவை கட்சிக்கு இருக்கட்டும். பிறகு... அந்தப் பணத்தை வைத்து தூண் உண்டாக்குவோம். யாரிடமும் பணம் வசூல் பண்ண வேண்டாம்."

"அது ஒரு நல்ல முடிவு. ஆனால், அதற்கு இரு பக்கங்களையும் சேர்ந்தவர்கள் சம்மதிக்க வேண்டாமா?"

"சம்மதிக்காம என்ன செய்வாங்க? எத்தனை நாட்களுக்கு இரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் காவல் இருப்பார்கள்."

தொடர்ந்து ராமன் சொன்னார்:

"அசைக்க முடியாத சொத்துக்களைப் பற்றிய பிரச்சினை நீதிமன்றத்தில் முடிவு செய்யப்படட்டும்."

இரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் கட்சியிடம் அந்த அளவிற்கு ஈடுபாடு கொண்டவர்கள் இல்லை. கட்சியின் முடிவை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கும் வழியில்லை. ஒரு பிரிவினர் எதிர்த்தாலே போதுமே, தானியப் பெட்டியைத் திறக்க முடியாதே!

சாக்கச்சம்பாக்காவில் இருந்து வந்த தோழர் ஒரு குழப்பமான மனிதர். எதையும் தைரியமாக அவரால் கூற முடியாது. தயங்கித் தயங்கிதான் எதையும் பேசுவார். ஒரு துணிச்சலான கருத்தைக் கூற மாட்டார். குழப்பிக் கொண்டே இருப்பார்.

பொதுவாகவே அந்தக் கருத்து கமிட்டிக்கு ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே தோன்றியது.

சிருதாவின் சொத்தில் பங்கு கேட்பவர்களில் முக்கியமான ஆள் குஞ்ஞன். கொச்சு பறம்பில் குஞ்ஞன். பத்து பதினைந்து பறை வயலையும் ஒரே தடவையில் நானூறு தேங்காய்கள் கிடைக்கக்கூடிய நிலத்தையும் சொந்தமாகக் கொண்டவன். எதற்குமே பிரயோஜனமில்லாத நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

 

"கட்சிக்-கு கொடுப்பதற்கு எங்களுக்கு இப்போது விருப்பமில்லை."

குஞ்ஞனின் உறுதியான முடிவு அது. கட்சியை குஞ்ஞன் சவாலுக்கு அழைக்கிறான்.

ராமனும் சதானந்தனும் தங்களையே அறியாமல் கோபத்துடன் கேட்டார்கள்:

"ச்சீ... நீ என்னடா சொன்னே?"

குஞ்ஞன் சிறிது கூடத் தயங்கவில்லை.

"நான் அதைத்தான் சொன்னேன். கட்சிக்குக் கொடுக்க எங்களுக்கு இப்போ விருப்பம் இல்லை."

சாக்கச்சம்பாக்கா லோக்கல் கமிட்டி செயலாளரும் அங்கு இருந்தார்.

ராமன் கேட்டார்:

"தோழரே! என்ன தூணைப் போல நின்று கொண்டு இருக்கீங்க?"

சதானந்தன் கேட்டார்:

"கட்சியை அவமானப்படுத்துறதைக் கேட்டுகொண்டு நிற்கிறீங்களா?"

யசோதரன் எதுவும் பேசவில்லை. அவர் புன்னகை செய்தவாறு நின்று கொண்டிருந்தார். ராமனையும் சதானந்தனையும் அந்தச் சிரிப்பு கோபம் கொள்ளச் செய்தது.

"மாவட்ட கமிட்டிக்கு நாங்கள் எழுதப் போறோம். உங்களை இனிமேலும் எல்.சி. செயலாளராக வச்சிருக்கக்கூடாது."

"இவரைக் கட்சியில இருந்து டிஸ்மிஸ் செய்யணும்."

அதற்கும் பதில் இல்லை.

ராமன் சதானந்தன் ஆகியோரின் கோபம் யசோதரன் பக்கம் திரும்பியது.

யசோதரன் கட்சியைச் சேர்ந்த ஆள் இல்லை. நியாயமாக சந்தேகப்படலாம். சிருதாவுடைய ஆட்களின் ஆளாக அவர் வந்திருக்கிறார்.

யசோதரனைப் பதவியிலிருந்து விட்டெறிய வேண்டும்.

யசோதரன் கட்சியை அவமானப்படுத்திவிட்டார்.

அந்த விஷயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு கேள்விப்பட்டு ஆட்கள் சிலர் அங்கு வந்து கூடிவிட்டனர். சிலர் என்றால்- ஆட்கள் மேலும் அதிகமாகலாம்.

 

ஒரு கூட்டம் போலீஸ்காரர்கள். நீதிமன்றம் நியமித்த இரண்டு மூன்று நபர்களுடன் அந்த இடத்திற்கு வந்தார்கள்.

குஞ்ஞன் சொன்னான். அது ஒரு சவாலாக இருந்தது.

"குஞ்ஞனிடம் விளையாட வேண்டாம்."

கொல்லனை வரவழைத்து தானியப் பெட்டியைத் திறக்கச் செய்தார்கள். பெட்டியை வெளியே எடுத்தார்கள். எல்லோரும் நின்றிருக்க, பெட்டியைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தார்கள்.

பதினேழு ரூபாய் இருந்தது.

ஒரு கம்மல் இருந்தது.

ஒரு பவுன் எடை இருக்கக்கூடிய ஒரு மாலை இருந்தது.

பெட்டியில் இவ்வளவுதான் இருந்தன. தானியப் பெட்டியில் முப்பத்தைந்து பறை நெல் இருந்தது.

வீடு இருந்த நிலத்தையும் வீட்டையும் படித்துறைக்கு அருகில் இருந்த நிலத்தையும் ரிஸீவர் நீதிமன்றத்திற்காக கையகப்படுத்தினார்.

 

முல்லைக்கல் பிரசன்னன் ஒரு நெருப்புப் பொறியாக இருந்தான். நல்ல தைரியமும் துணிச்சலும் உள்ளவன். எந்தப் போராட்டமாக இருந்தாலும் அவனை முன் வரிசையில் பார்க்கலாம். எப்படிப்பட்ட செயல்களாக இருந்தாலும் அவனிடம் இதைச் செய்ய வேண்டும் என்று கூற வேண்டியதே இல்லை. யாரிடமும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூறக்கூடியவன் அவன்.

ஆனால் அவனுடைய கருத்தை யாரும் ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை- சரியாக இருந்தாலும் தவறாக இருந்தாலும். எந்த விஷயமாக இருந்தாலும், அவனுக்கென்று ஒரு கருத்து இருக்கும். அந்த வகையில் பிரசன்னன் சொந்தக் கருத்து கொண்ட ஒருவனாக இருந்தான்.

கட்சியின் செயல்கள் பிரசன்னனின் உயிர் மூச்சாக இருந்தன. போராட்டம் உண்டானால் புது மழையில் நனையும் செடியைப் போல அவன் ஆகிவிடுவான். அடுத்த நிமிடம் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பான். எதை வேண்டுமானாலும் செய்வான். எப்போதும் போராட்டம் நடந்து கொண்டே இருக்குமா? எப்போதும் செயலாற்றுவதற்குக் காரியங்கள் இருந்து கொண்டே இருக்குமா? அப்போது குறை கூறுவதில் இறங்கிவிடுவான். ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி குறைகளைக் கூறிக் கொண்டிருப்பான்.


இந்தச் செயலாளரை மாற்ற வேண்டும்.

கட்சி என்ன செய்கிறது?

இப்படியே போனால் கட்சியே இல்லாமல் போய்விடும்!

தினமும் எதையாவது செய்யாவிட்டால் உயிரோடு இருந்தாலும், இறந்ததைப் போலத்தான் என்று நினைக்கக்கூடியவன் அவன்.

பெரிய சுடுகாட்டில் புன்னப்புரை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை எரிய வைத்த கரிந்து போன மண்ணைப் பார்த்துக் கொண்டே பிரசன்னன் பல மணி நேரங்களைச் செலவிடுவான்.

பிரசன்னன் சொல்வதுதானே! அதை யாரும் கவனிப்பதேயில்லை.

பெரிய சுடுகாட்டில் இப்படி கற்சிலையைப் போல நின்று கொண்டிருப்பது பிரசன்னன்தானே? பரவாயில்லை. வெயில், வெப்பம் எதுவும் அவனுக்குத் தெரியாது.

அவன் இப்போது பைத்தியம் பிடித்தவன். சிறிது நேரம் சென்ற பிறகு அவனுடைய தலைக்குத் தெளிவு உண்டாகும். அப்போது அவன் அங்கிருந்து போய்விடுவான்.

பிரசன்னனை அழைக்க வேண்டாம். அழைப்பதால் எந்தவொரு பிரயோஜனமும் இல்லை.

சில நேரங்களில் அவன் உலகத்தை வாய்க்கு வந்தபடி திட்டிக் கொண்டே அங்கிருந்து நகருவான்.

அவங்க எதற்காக இறந்தாங்க?

யாருக்காக இறந்தாங்க?

அந்தக் கேள்வி சரியானதுதான். ஆனால், பிரசன்னன் அதைக் கேட்கும் போது, அதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

புன்னப்புரை போராட்டத்தில் முதல் துப்பாக்கிக் குண்டை மார்பில் தாங்கி, அது வெளியே வந்து விழ மரணத்தைத் தழுவிய பத்மநாபனின் மகன் கூட- பிரசன்னன் அந்தக் கேள்விகளைக் கேட்கும் போது நல்ல தமாஷ்தான் என்பது மாதிரி திரும்பக் கேட்பான்:

"அவங்க எதற்காக இறந்தாங்க?"

பிரசன்னன் கைகளைச் சுருட்டி விட்டுக் கொண்டு கேட்பான்:

"யாருக்காக இறந்தாங்க?"

கைகளை சுருட்டி விட்டுக் கொண்டு பத்மநாபனின் மகனும் கேட்பான்:

"யாருக்காக இறந்தாங்க?"

அது ஒரு பொழுதுபோக்கு... தமாஷ்!

பிரசன்னனுக்கு அது புரிகிறதோ இல்லையோ!

 

பைத்தியக்காரனான பிரசன்னன் சொல்லுகிற அளவிற்கு யாருக்கும் எந்தவித தொந்தரவையும் செய்தது இல்லை. அவனை அங்கு அப்படியே விட்டிருக்கிறார்கள்.

அவன் ஒரு தொல்லை தருபவனாக மாறியிருக்கிறான். அவனை அப்படியே பொருட்படுத்தாமல் விட்டது தவறான ஒரு செயலாகிவிட்டது.

என்ன நடந்தது?

அந்த அளவிற்கு விஷயம் தீவிரமாகவில்லை. எனினும், ஆபத்தானதாக மாறலாம்.

சம்பவம் என்ன?

இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய கருத்து உண்டாகியிருக்கிறது. இளம் நாக்கிற்கு கடிப்பது எப்படி என்பது தெரியாது. அவர்களுக்கு பக்குவப்பட்ட அறிவு இருக்குமா? அவர்களுக்கு வருவது, வராதது- எதைப் பற்றியும் தெரியாது. ஆவேசம் மட்டுமே இருக்கும்.

புன்னப்புரையின் வீர மங்கைக்கு நினைவுத் தூண் எழுப்பவில்லை. அது இளைஞர்களுக்கு ஒரு ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இருந்தது.

வயதானவர்கள் சொன்னார்கள்:

"அப்படி ஒரு சவ அடக்கம் நடந்திருக்க வேண்டியது இல்லை. அதைப் பார்த்து இளைஞர்கள் மனம் நெகிழ்ந்திட்டாங்க. அப்படி நெகிழ்ந்திருக்க வேண்டியது இல்லை."

சதானந்தன் உண்டாக்கிய ஏற்பாடு அது. அவர் எதற்காக அதைச் செய்தார்?

சில பெண்களுக்குத் தெரிந்திருக்கும் விஷயம் அது. அவர் எதற்காக அதைச் செய்தார்?

சதானந்தன் திருமண விஷயமாக அணுகியதை ஒரு வேளை சிருதா கூறி அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

சதானந்தனுக்கு சிருதா மீது மன ரீதியாக ஒரு நெருக்கம் உண்டாகியிருக்கலாம். அவளுக்கு அப்படி உண்டாகாமல் கூட இருந்திருக்கலாம்.

என்னவோ... அந்த விஷயங்களை எப்படித் தெரிந்து கொள்வது? இதயத்திற்குள் ஒரு ஈடுபாடு இல்லையென்றால், அப்படி ஒரு சவ அடக்கம் நடந்திருக்கவே நடந்திருக்காது.

அவளும் ஒரு சாதாரண பெண். அதைவிட்டால் வேறு என்ன கூற முடியும்?

சதானந்தனின் மனைவி சொன்னாள்:

"சிருதா என்று சொல்லுறப்போ, வாயில் நீர் ஊறுது."

எது எப்படி இருந்தாலும் அந்த சவ அடக்கம் இளைஞர்களைக் கிளர்ந்தெழச் செய்துவிட்டது. அந்த எண்ணத்தை சிறுவர்கள் மத்தியில் உண்டாக்கியது யார்?

அதுதானே கூத்து! பைத்தியக்கார பிரசன்னன்... பைத்தியம் பிடித்தவனாக இருந்தாலும், சில நேரங்களில் அவன் கூறுவதை யார் கேட்டாலும் சரியானது என்றே நினைப்பார்கள். அது உண்மைதானே என்று அதைக் கேட்பவர்களுக்குத் தோன்ற ஆரம்பித்துவிடும். புதிய புதிய எண்ணங்கள் அவனுடைய கிறுக்கு பிடித்த தலைக்குள் தோன்றுவது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது.

அவன் உண்டாக்கிவிட்ட விஷயம் என்ன என்பதுதானே தெரிந்து கொள்ளப்பட வேண்டியது?

சிறிதும் சம்பந்தமே இல்லாதது!

பைத்தியம்! அதே நேரத்தில் பெரிய அளவில் ஆபத்து இருக்கிறது.

இதில் பெரிய அளவில் விவரமில்லை என்றும் கூறுவதற்கில்லை.

வெளியே கூற முடியாது.

இளைஞர்களைப் பிடித்து நிறுத்த வேண்டும். இந்த கெட்ட எண்ணத்தை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இல்லாவிட்டால் ஆபத்தில் போய் முடிந்துவிடும். பைத்தியக்காரன் பிரசன்னன் ஆரம்பித்து வைத்த செயல். அதற்கான சூழ்நிலையை சதானந்தன் உண்டாக்கிக் கொடுத்தார்.

ஸ்டாலினுக்காக ஒரு நினைவுத்தூண் உண்டாக்க வேண்டுமென்று-

இளைஞர்கள் இப்போது அதற்காக ஓடித் திரிந்தார்கள்.

கொலை செய்த குற்றத்திற்காக தூக்கு மரத்தில் ஏறியவனின் நினைவுக்காக நினைவுத் தூண்!

ஸ்டாலின் போன பாதையில் அந்தத் தாய் அவனைப் போகவிட்டாள். சரியான பாதைக்கு அவனை அவள் திருப்பிவிடவில்லை. அப்படி பாதை தவறிச் சென்றவனுக்கு நினைவுச் சின்னம் உண்டாக்கப் போகிறார்களாம்!

இளைஞர்கள்தானே! அவர்களுக்குக் கட்டுப்பாடு என்பது பிடிக்கவே பிடிக்காது. அவர்களுடைய தலைக்குள் நெருப்பு பிடிக்கும். அது கொழுந்துவிட்டு எரியும்.

மூத்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

சில பைத்தியக்காரத்தனமான வாக்கியங்கள் சுவரெழுத்துக்களாக காட்சியளித்தன. யார் எழுதினார்கள், யார் ஒட்டினார்கள் என்பது யாருக்கும் தெரியாது.

பிறகு-

அவற்றின் எண்ணிக்கை அதிகமானது.

இப்போது இல்லவே இல்லை.

பைத்தியக்காரனான பிரசன்னனைக் காணவில்லை. அவன் ஊரை விட்டே போய்விட்டான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.