Logo

நீ மட்டுமே என் உயிர்!

Category: புதினம்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6282
nee-mattumea-en-uyir

“போயிடுங்க. இங்கே இருந்து. உடனே போயிடுங்க. போதும் உங்களை நம்பி நான் மோசம் போனது.”

“போயிடுங்க... போயிடுங்கன்னா... நான் எங்கே போவேன், ஜானு...?”

“ஜானு! அப்படிக் கூப்பிடற உரிமை உங்களுக்கு இல்லை. உங்களை நல்லவர்ன்னு நம்பினேன். நீங்க ஒரு அயோக்யன்னு அம்பலமாயிடுச்சு...”

“ஐயோ, ஜானகி... என் மேலதான் தப்பு. என்னோட சூழ்நிலை அப்படி... புரிஞ்சுக்கோ....”

“அதே சூழ்நிலைதான் என்னையும் நிர்கதியாக்கிடுச்சு... ‘உன்னைக் கண்கலங்காம பார்த்துபேன்’னு சத்தியம் பண்ணிணீங்க... உங்க சாயம் வெளுத்துருச்சு... உங்க வேஷம் கலைஞ்சுருச்சு.”

“என்னை மன்னிச்சுடு, ஜானு... அநாதையா நான் உன்னைத் தேடி வந்திருக்கேன்...”

“ஏன் வந்தீங்க, எனக்கு வாழ்க்கை குடுத்த என் புருஷன் வர்றதுக்குள்ள இங்கே இருந்து போயிடுங்க.”

“உன்னை விட்டுட்டு நான் எங்கே போக முடியும், ஜானு? உன்னைப் பிரிஞ்சு என்னால எப்படி வாழ முடியும்? உன் கூட இங்கயே நான் இருந்துக்கறனே? உன் புருஷன் கேட்டா ‘தூரத்து உறவு’ன்னு சொல்லிடேன்...”

“ச்சீ... இப்படிச் சொல்ல உங்களுக்கு வெட்கமா இல்லை? நல்லவரான என் புருஷன் என் மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருக்கார். அவர் வர்றதுக்குள்ள இங்கே இருந்து போயிடுங்க... புருஷன், குழந்தைகள்ன்னு நிம்மதியா இருக்கற என் வாழ்க்கையை நிர்மூலமாக்கிடாதீங்க...”

ஜானகியும், இன்னொரு மனிதனும் பேசிக் கொண்டிருந்தது அத்தனையையும் ஆபீஸிலிருந்து திரும்பி வாசல் வரை வந்துவிட்ட சங்கர் கேட்க நேரிட்டது. ஜானகிக்காக வாங்கி வந்திருந்த பூப் பொட்டலமும், குழந்தைகளுக்காக வாங்கி வந்திருந்த பொம்மைகளும் அவனது கையிலிருந்து நழுவி விழுந்தன.

“ஏ, ஜானகி!” அவனது கடுமையான குரல் கேட்டதும், பயந்து வெளியே ஓடிவிட்டான் அந்த மனிதன். அவனது முகத்தைச் சங்கரும் பார்க்கவில்லை. அந்த மனிதனும் சங்கரின் முகத்தைப் பார்க்கவில்லை. மின்னலென மறைந்துவிட்டான் அவன்.

வீட்டிற்குள் நுழைந்த சங்கர், கோபாவேசமானான். ஜானகியின் தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சுவரில் மோதினான்.

“நம்பிக்கைத் துரோகி...” கத்தியபடியே அவளை அடித்து நொறுக்கினான். ஆத்திரம் தீர அடித்துப் போட்டவன், வீட்டை விட்டு வெளியேறினான். போய்க் கொண்டிருந்த அவனது கால்களில் விழுந்து கதறினாள் ஜானகி. அடிப்பட்ட வலிமையும் தாங்கிக் கொண்டு அவனிடம் கெஞ்சினாள்.

“நான் சொல்றதைக் கேளுங்க...”

“எவன்கிட்டயோ சொன்னதைத்தான் கேட்டுக்கிட்டிருந்தேனே... விடுடீ...”

“என்னைக் கொஞ்சம் பேசவிடுங்க.” கதறி அழுதபடி கேட்டவளை எட்டி உதைத்துவிட்டு வெளியேறினான். அவளது மனதில் ஏற்பட்ட அதிர்ச்சியும், உடலில் பட்ட அடியும் சேர்ந்து அவளது நினைவை மழுங்கடிக்க, மயங்கி விழுந்தாள் ஜானகி.

2

திருச்சி பங்களாவின் வாசலில் நின்ற கூர்க்காக்கள் சங்கரைக் கூர்ந்து கவனித்த பின் உள்ளே அனுமதித்தனர். ‘சொந்த வீட்டிற்குள் நுழைய இப்படி ஒரு நிலை?’... எண்ணியபடியே உள்ளே சென்றான் சங்கர்.

“அண்ணா... அண்ணா...” சங்கரைப் பார்த்து சந்தோஷமாகக் கூவினான் நிர்மலா.

“வாண்ணா. இப்பவாவது உனக்கு எங்க ஞாபகம் வந்துச்சே.” தங்கை நிர்மலா அன்புடன் ஓடி வந்தாள்.

அங்கே வந்த வசந்தாவைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டான் சங்கர்.

“அம்மா... அம்மா...” சங்கரின் பாசம் நிறைந்த குரலைக் கேட்ட வசந்தா, மகிழ்ச்சியில் திளைத்தாள்.

கன்றைப் பிரிந்த பசுவின் நிலையில் வாடிக் கொண்டிருந்த வசந்தா வாயார அவனை வரவேற்றாள்.

“வாப்பா, சங்கர்...” சங்கரைப் பிரிந்து வசந்தா பட்டபாடு! அம்மா சங்கரை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதைப் பார்த்து நிர்மலாவிற்கு சந்தோஷமாக இருந்தது. அவளும் சந்தோஷமாகப் பேச ஆரம்பித்தாள்.

“அம்மா உன்னைப் பார்க்கணும்னு துடிச்சிக்கிட்டிருந்தாங்க. அப்பாதான் இன்னும் கோபம் மாறாம இருக்கார். ஆனா... உன்னை நேர்ல பார்த்துட்டார்ன்னா அவரோட கோபமெல்லாம் பறந்து போயிடும்ண்ணா...”

“அதுதான் நடக்காது!” அழுத்தமாகப் பேசியபடி தன் அறையிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த முத்தையா, வசந்தாவைக் கண் ஜாடையிலே கண்டித்தார்.

“என்னை மன்னிச்சிடுங்கப்பா. முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை, அவளோட குடும்பப் பின்னணி, கடந்த காலம் எதுவும் தெரியாத பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்காதேன்னு நீங்க சொல்லியும் உங்களைப் பகைச்சுக்கிட்டு அவளை நம்பிக் கல்யாணம் பண்ணிட்டது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்ப்பா. என்னை மன்னிச்சிடுங்க.”

“எல்லா முடிஞ்சு போச்சு மை ஸன்! எப்ப நீ ஒரு பொண்ணுக்காகப் பெத்தவங்க, கூடப்பிறந்தவ, நம்ப குடும்ப கெளரவம் எல்லாத்தையும் மறந்துட்டு அவ பின்னாடி போனியோ... அப்பவே நீ எனக்கு மகன் இல்லைன்னு முடிவு பண்ணிட்டேன்...”

“உங்களோட முடிவுல ஆரம்பிச்ச என்னோட அந்த வாழ்க்கையும் முடிஞ்சு போச்சுப்பா. என்னை மன்னிச்சுடுங்க...”

மகன் கெஞ்சுவதைப் பார்த்து அழுதாள் வசந்தா. கணவனின் கண்டிப்பு அவளது வாயைக் கட்டிப் போட்டது.

மீண்டும் தொடர்ந்தான் சங்கர்.

“இந்த சொத்து சுகத்தை அனுபவிக்கறதுக்காக மறுபடி உங்களைத் தேடி வரலைப்பா. செஞ்ச பாவத்துக்கு மன்னிப்புக் கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்திருக்கேன். மன்னிச்சுட்டதா ஒரு வார்த்தை சொன்னா போதும். நான் போயிடுவேன்...”

அவன் இவ்விதம் கூறியதும் கல்போல் இறுகிப் போயிருந்த முத்தையாவின் மனது கசிந்தது.

“ஒரு தடவை நீ வீட்டை விட்டுப் போனப்பவே என் உயிரும் போயிருக்கும். அந்த அளவுக்கு வேதனைப்பட்டுட்டேன். மறுபடியும் எங்கடா போகப்போற? நீ இங்கேயே இருப்பா...”

அடிவயிறு நொந்து பெற்ற பாசத்தினால் முத்தையாவின் கண்டிப்பையும் மீறி அவனிடம் பாசமழை பொழிந்தான் வசந்தா.

மனம் கசிந்து நின்ற முத்தையாவாலும் அதற்குமேல் கடுமையாகப் பேச இயலவில்லை. கெஞ்சியபடி நிற்கும் சங்கரைப் பார்த்தார். தற்போதுள்ள சங்கராக அவரது கண்ணுக்குத் தெரியவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது பரிச்சையில் மிகக் குறைந்த மார்க்குகள் வாங்கி ஃபெயிலாகிவிட்டு அதை அப்பாவிடம் சொல்வதற்குப் பயந்து போய் நிற்கும் சிறுவன் சங்கராகவே காட்சி அளித்தான் அவரது கண்களுக்கு. வாழ்க்கைப் பரிச்சையில் தோல்வி அடைந்து வந்து மன்னிப்புக் கேட்டுக் கெஞ்சியபடி நிற்கும் சங்கரிடம் அவரது வைராக்யமும், கோபமும் தோற்றுப்போனது. உணர்ச்சி வசப்பட்ட அவர், சங்கரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார்.

“உன்னை மன்னிச்சுட்டேன்ப்பா சங்கர். நீ பண்ணினதப்பையெல்லாம் மறந்துட்டேன்ப்பா. நீ எங்கயும் போக வேண்டாம். உங்க அம்மா சொன்ன மாதிரி நீ இங்கேயே இருப்பா சங்கர்...”

இதைக் கேட்டதும் வசந்தாவும், நிர்மலாவும் சந்தோஷத்தில் திளைத்தனர். மாடியில் இருந்து படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தான் நிர்மலாவின் கணவன் ரமேஷ்.

“வாங்க மச்சான். எப்படி இருக்கீங்க? உங்களைப் பிரிஞ்சு நிர்மலா ரொம்ப வேதனைப் பட்டுக்கிட்டிருந்தா...”

“இப்பதான் அவன் வந்துட்டாளே மாப்பிள்ளை...”

“இனிமேல் நீங்களும், நம்ம குடும்பமும்தான்ப்பா எனக்கு முக்கியம். என் வாழ்க்கை இனி இங்கேதான்.”


“சங்கர், உங்கப்பா உன் மேல கோபமா இருந்தாலும் உள்ளுக்குள்ள உன் மேல வச்சிருக்கற பாசத்துல உருகிப் போயிருந்தார்ப்பா. அவர் ஒரு நாள் கூட வயிறாரச் சாப்பிட்டாருப்பா. அதை வயித்துக்கு ஏதோ பேருக்குச் சாப்பிடுவார். ராத்திரி நேரங்கள்ல அமைதியா தூங்கறது இல்லை. உன்னை நினைச்சு நினைச்சு அவர் வேதனைப்பட்டது எனக்குதான்ப்பா தெரியும்...”

வசந்தா, சங்கரின் கைகளை ஆறுதலாக வருடியபடியே, பேசினாள்.

“அதான் அண்ணன் வந்துட்டாரேம்மா” நிர்மலா கூறியதும் சந்தோஷ அலை பரவியது அங்கு.

மீண்டும் பேச ஆரம்பித்தாள் வசந்தா.

“சங்கர்... அந்தப் பொண்ணுதான் பெரிசு. ‘அவ இல்லாம நான் இல்லை’ன்னு பிடிவாதமா அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, பெத்த எங்களைக் கூடப் பகைச்சுக்கிட்டுப் போனியே... இப்ப அவளுக்கு என்ன ஆச்சு? உங்களுக்குள்ள என்ன பிரச்னை?... ”

“ப்ளீஸ் மா. கெட்ட கனவுன்னு நான் மறந்துட்ட அந்த விஷயத்தை மறுபடி ஞாபகப்படுத்தாதீங்க. நான் ஏன் இங்கே திரும்ப வந்தேன்ங்கற காரணத்தை என்கிட்ட இப்ப கேக்காதீங்க. காலம் வரும்போது நானே சொல்றேன்....”

“சரிப்பா. நீயா சொல்றவரைக்கும் நான் அதைப்பத்தி எதுவும் கேக்கலப்பா. ஆனா... நீ வீட்டை விட்டுப் போனப்புறம் உன்னைப்பத்தின எந்தத் தகவலும் தெரியாம இருந்துச்சு. அதனால... கேக்கறேன்... உனக்குக் குழந்தை...”

“குழந்தை ஒண்ணு இல்லம்மா, ரெண்டு குழந்தைகள். அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட மூணு வருஷ காலத்துக்குள்ள அடுத்தடுத்து ரெண்டு குழந்தைங்க பிறந்துச்சும்மா. ரெண்டு ஆண் குழந்தைங்கம்மா.... ஜானகி சொன்னா... ‘உங்கம்மா அப்பா வந்து பேர் வைக்கறவரைக்கும் ரெண்டு குழந்தைகளையும் ‘கண்ணா’, ‘குட்டி’ன்னே கூப்பிடுவோன்னு... த்சு... எல்லா முடிஞ்சுபோச்சுமா. விடுங்க. இனிமே பழங்குப்பையைக் கிளற வேண்டாம்மா...’

அதற்கு மேல் பேசினால். ஏற்கெனவே நொந்து போயிருக்கும் மகனின் மனக்கஷ்டம் அதிகமாகும் என்ற எண்ணத்தில் வசந்தா பேச்சை மாற்றினாள்.

“நம்ம நிர்மலாவும் உண்டாகி இருக்காப்பா. அவ உருவத்தைப் பார்த்தே உனக்குத் தெரிஞ்சுக்குமே... சரிப்பா... உன் முகம் வாடிக்கிடக்கு. முதல்ல சாப்பிடவா. என் கையால நீ சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு!... என்னங்க! நீங்களும் வாங்க. நல்லா வயிறாரச் சாப்பிடுங்க. நிர்மலா, மாப்பிள்ளை எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிடலாம்... வாங்க.” வசந்தா எழுந்தாள். அவளைப் பின் தொடர்ந்து அனைவரும் சாப்பிடும் மேஜை அருகே சென்றனர்.

இரண்டு சமையல்காரர்கள் இருந்த போதும், மூன்று வேலைக்காரர்கள் இருந்த போதும், சங்கருக்குத் தானே தோசை போட்டு, தன் கையாலேயே பரிமாறினாள் வசந்தா.

நீண்ட நாட்களுக்குப் பின் அனைவரும் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர்.

3

சங்கர் அடித்துப் போட்டு விட்டுப் போனதும் லேசான மயக்கத்திற்கு ஆளானாள் ஜானகி. குழந்தைகள் இருவரது அழுகுரலும் பக்கத்து வீட்டிலிருக்கும் பாமாவின் கவனத்தை ஈர்த்தது.

‘ஜானகியோட குழந்தைங்க ஏன் இப்படி விடாம அழுதுக்கிட்டே இருக்குதுங்க?’ யோசித்தபடியே ஜானகியின் வீட்டிற்குள் நுழைந்தாள் பாமா. ஜானகியின் அருகே நின்று அழுது கொண்டிருந்த மூத்தவனையும், ஜானகியின் மீது படுத்து அழுதுகிட்டிருந்த இளையவனையும் பார்த்த பாமாவிற்கு ஒன்றும் புரியவில்லை. குழந்தைகளின் அருகே வந்தாள். மயங்கியிருந்த ஜானகியைப் பார்த்துத் திடுக்கிட்டாள்.

ஜானகியின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள். ஜானகி கண் விழித்தாள். அழும் குழந்தைகளை மார்போடு அணைத்துக் கொண்டாள். தாயின் ஸ்பரிஸம் சூடு உணர்ந்த குழந்தைகள் அழுகையை நிறுத்தினர்.

“என்னம்மா ஜானகி... என்ன நடந்துச்சு? உடம்பு சரியில்லையா?”

“அ... அ... அதெல்லாம் ஒண்ணுமில்ல, பாமாக்கா... கொஞ்சம் களைப்பா இருந்துச்சு. படுத்துக்கலாம்னு நினைச்சு படுக்கறதுக்குள்ள மயங்கிட்டேன் போலிருக்கு...”

“உன் வீட்டுக்காரர் இன்னுமா ஆபீஸ்ல இருந்து வரலை?”

“அ.... அ... ஆமா பாமாக்கா. அவர் இன்னும் வரலை. வந்துடுவார்...”

“உனக்கு ஒத்தாசையா ஏதாவது செய்யட்டுமா?”

“வேணாம், பாமாக்கா. எனக்கு ஒண்ணுமில்ல. சாதமெல்லாம் ரெடியா இருக்கு. குழந்தைகளுக்கு ஊட்டணும். அவ்வளவுதான். நான் பார்த்துக்கறேன், பாமாக்கா.”

“சரிம்மா. ஏதாவது உதவி தேவைன்னா என்னைக் கூப்பிடு.”

“ரொம்ப நன்றி, பாமாக்கா. தேவைப்பட்டா கண்டிப்பா கூப்பிடறேன்.”

பாமா அங்கிருந்து அவளது வீட்டிற்குப் போனாள். குழந்தைகளுக்குச் சாதம் ஊட்டியபின் அவர்களை உறங்க வைத்தாள் ஜானகி. விபரம் அறியாத குழந்தைகள், விதியை எண்ணி வேதனைப்படும் தாய்மைத் தவிப்பில் ஜானகி! நெஞ்சில் துயரம் கனக்க, கண்களில் கண்ணீர் வற்றாத நதியாக வழிந்தபடி இருந்தது. இரவு வந்தது. திருமணமான நாளிலிருந்து ஒரு நாள் கூடக் கணவனைப் பிரிந்திராத ஜானகி, தனிமைத்தீயில் தவிப்பாய் உணர்ந்தாள். சங்கரை முதல் முதலாய்ச் சந்தித்த சம்பவமும், அவனது மனைவியான பின் கழித்த உல்லாசமான வசந்த கால நினைவுகளும் அவளது நெஞ்சில் ஊஞ்சலாடின.

4

துரை மாநகரின் புறநகர்ப் பகுதி. நெருப்பு அரக்கனின் அசுரப்பசிக்கு இரையாகிப் போன பதினெட்டுக் குடிசைகளில் ஜானகியும், அவளது பெற்றோரும் வசித்து வந்த குடிசையும் ஒன்று. குடிசைக்குள் இருந்த ஜானகியின் அம்மா, அப்பா இருவரும் தீ விபத்தில் உருத்தெரியாமல் கருசிச் சாம்பலாகிப் போனார்கள்.

எக்ஸ்போர்ட் வேலை என்றழைக்கப்படும் தையல் தொழில் நடக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துத் தினக் கூலி வாங்கிக் கொண்டு வீடு திரும்பிய ஜானகிக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம் அந்தத் தீ விபத்து.

எதிர்காலம் சூன்யமாகத் தெரிய மிரண்ட விழிகளுடன் மான் போல மருண்டு போய் நின்றிருந்தாள் அவள். தற்செயலாய்த் தன் நண்பன் ஒருவனுடன் அந்தப் பகுதிக்கு வந்திருந்தான் சங்கர். விபத்தினால் பாதிக்கப்பட்ட குடிசை வாழ் மக்களுக்கு அரசாங்கம் செய்யும் உதவி சம்பந்தப்பட்ட துறையைச் சேர்ந்தவன் அந்த நண்பன். அவனது பெயர் பாலன். திருச்சியிலிருந்து மதுரைக்கு வேறு வேலையாக வந்த சங்கரைத் தன்னுடன் அங்கே அழைத்து வந்திருந்தான் பாலன்.

வந்த இடத்தில் தனிமையில் சோகமே உருவாக நின்று கொண்டிருந்த ஜானகியைப் பார்த்த முதல் பார்வையிலேயே தன்வசம் இழந்தான் சங்கர்.  பளிச் என்ற நிறத்தில் வெகுளித் தனம் வெளிப்பட்டு நிற்கும் முகத்தில் சோகத்தை மீறிய ஒரு அழகு சோபையிட்டிருந்ததைக் கண்டான். அந்த அழகில் மனம் சொக்கிப் போன அவன், அவளிடம் பேச்சுக் கொடுத்து அவளது தற்போதைய நிலைமை பற்றி அறிந்து கொண்டான்.

அன்னியன் ஒருவன் தன்னிடம் பேசுவது கண்டு அஞ்சினாலும், அவளுக்கும் சங்கர் மீது ஒரு ஈர்ப்புத் தோன்ற, கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடம் சகஜமாய்ப் பேச ஆரம்பித்தாள்.


பாதிக்கப்பட்டோர் குழுமியிருந்த பொது இடத்தில் அவளும் ஒண்டி இருந்தாள். புதுக்குடிசைகள் உருவாகும் வரை அவளுக்கு வசிக்க இடமும், உணவும் கொடுத்து வந்தது அரசு.

வந்த வேலையை மறந்துவிட்டு ஜானகியின் அழகிலும், அவளுடன் பழகுவதிலும் மனம் அலைபாயந்தது சங்கருக்கு. இவர்களது காதல், கவிஞர் வைரமுத்துவின் ‘நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்’ பாடல் வரியைப் போல மிகத் துரிதமாக மலர்ந்தது. வளர்ந்தது.

தன் பெற்றோரிடம் சம்மதம் கேட்டு வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறிய சங்கர், திருச்சிக்குக் கிளம்பினான். முதலில் அம்மாவிடம் தன் காதல் விஷயத்தைக் கூறினான். வசந்தா பயந்தாள். நயந்து பேசினாள் மகனிடம்.

“உங்கப்பாவைப் பத்தி உனக்குத் தெரியாதாப்பா? அந்தஸ்து, குடும்ப கெளரவம், மானம் இதையெல்லாம் பெரிசா மதிக்கறவர். நீ யாரோ முன்ன பின்ன தெரியாத பொண்ணுங்கற. காதலிக்கறேன்னு சொல்ற, அவளுக்கு அம்மா அப்பா யாருமே இல்லைங்கற... அவளோட குடும்பப் பின்னணி சரியாத் தெரியலைன்னு வேற சொல்ற...”

“ஆனா  அந்தப் பொண்ணு ஜானகி நல்ல பொண்ணுன்னு மட்டும் எனக்குத் தெரியுதும்மா... நீங்கதாம்மா அப்பா கிட்ட சொல்லி அவர்கிட்ட சம்மதம் வாங்கணும்... நீங்க மனசு வச்சா முடியும்மா...”

“முடியாதுப்பா. நான் மனசு வைக்கறதுக்கே அவரோட அனுமதி வேணும். என்ன செய்யறது?... கல்யாணமான நாள்ல இருந்து அப்படியே பழகிட்டேன். இன்னொண்ணு நீ... நல்லா புரிஞ்சுக்கணும். உங்கப்பா இதுக்கு நிச்சயமா ஒத்துக்கமாட்டார். அவரோட கோபமும், பிடிவாதமும் உனக்குத் தெரிஞ்சதுதானே! நீயே அவர்கிட்ட கேளு. அவர் சம்மதிச்சார்னா எனக்கு சந்தோஷம்தான். சம்மதிக்கலைன்னா...”

“சம்மதிச்சாலும் சம்மதிக்காட்டாலும் அவளைத் தான்மா நான் கல்யாணம் பண்ணிப்பேன். என்னை நம்பிக் காத்திருக்கற அவளை ஏமாத்தமாட்டேன்.” உறுதியான குரலில் சங்கர் பேசியதும், அவனது உள்ளத்தில் ஜானகி நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டாள் என்பதைப் புரிந்து கொண்டாள் வசந்தா.

“உன் மனசும், உன்னோட விருப்பமும் எனக்குப் புரியுதுப்பா. உங்கப்பாவுக்கும் புரியணுமே... அவர்கிட்ட பேசு. என்னால முடிஞ்சது, உனக்காக அந்த ஆண்டவன் கிட்ட பிரார்த்தனை பண்றது மட்டும்தான்.”

அதே சமயம் உள்ளே நுழைந்தார் முத்தையா.

“என்ன வசந்தா ஆண்டவன்... பிரார்த்தனைன்னு... அம்மாவும் மகனும் என்ன பேசிக்கிட்டிருக்கீங்க?”

“அவனையே கேளுங்க...”

“என்ன சங்கர்... என்ன விஷயம்? சொல்லுப்பா...”

ஜானகியைக் காதலிக்கும் விஷயத்தை அவரிடம் எடுத்துக் கூறினான் சங்கர்.

“இந்த வயசுல காதல் வயப்படறது இயற்கைதான். ஆனா... உன்னோட காதலை என்னால அங்கீகரிக்க முடியாது. அந்தப் பொண்ணை உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுல என்னத் துளிகூட விருப்பம் இல்லை. முன்னபின்ன தெரியாத ஒரு பொண்ணை எப்படி உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?! நம்மளைச் சேர்ந்த உறவுக்காரங்ககிட்ட மரியாதையா சொல்லிக்கிற மாதிரி அந்தஸ்தான, கெளரவமான குடும்பத்துல சம்பந்தம் பண்ணணுங்கற என்னோட எண்ணத்துல மண்ணை அள்ளிப் போட்டுடாத...”

“அவ நம்ம வீட்டு மருமகளாயிட்டான்னா நம்ப அந்தஸ்தும், கெளரவமும் அவளையும் சேர்ந்துடுமேப்பா...”

“சேர்க்க வேண்டியவங்களைத்தான்ப்பா நம்ம வீட்லயோ நம்ம குடும்பத்துலயோ சேர்த்துப்பேன்...”

“சேத்துல மலர்ந்திருக்கற செந்தாமரைப்பா, ஜானகி. அந்தத் தாமரையைத்தான் பகவானுக்கு சமர்ப்பிச்சு பூஜை பண்றோம். வணங்கறோம்...”

“அந்தத் தாமரையை மறுநாளே வாடிப்போச்சுன்னு வெளியே தூக்கிப் போட்டுடறோம்...”

“அப்பா...”

“சங்கர்! நான் ஒரு தடவை சொன்னா சொன்னதுதான். உனக்கு அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி வைக்க ஒரு நாளும் நான் சம்மதிக்க மாட்டேன். உன் தங்கச்சி நிர்மலாவுக்குப் பெரிய இடத்து மாப்பிள்ளையா பார்த்துதான் கல்யாணம் பண்ணி வச்சேன். இருந்தாலும் அவங்களுக்கு இவ்வளவு பெரிய பங்களா கிடையாது. நம்ப பங்களாவுல இருக்கக் கூடிய வசதிகள் கிடையாது. அதனால மாப்பிள்ளையை நம்ப வீட்டோட வந்து இருக்கணும்னு சம்பந்திட்ட சொல்லி, அவரும் சம்மதிச்சதுனாலதான் அந்தக் கல்யாணம் நடந்துச்சு. எல்லாம் உனக்குத் தெரிஞ்ச விஷயம்தானே! உனக்கு நம்ப அந்தஸ்துக்குச் சரிசமமான இடத்துலதான் பொண்ணு பார்ப்பேன். அம்மா, அப்பான்னு பெரியவங்க இருக்கக் கூடிய குடும்பத்துப் பொண்ணா பார்த்துதான் உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன்.”

“கல்யாணம் பண்ணிக்கப் போறது நான்ப்பா...”

“கல்யாணம் பண்ணி வைக்கப் போறது நான்... உன்னோட அப்பா...”

“ஒரு அப்பாவா என்னோட ஆசையைப் புரிஞ்சுக்கோப்பா...”

“ஒரு மகனா நீ என்னோட அறிவுரையைக் கேட்டுக்கோப்பா...”

“ஸாரிப்பா. அப்பாங்கற மரியாதைக்குதான் இவ்வளவு நேரம் உங்ககிட்ட அனுமதி கேட்டேன். கெஞ்சிக்கிட்டிருக்கேன்...”

“நீ கொஞ்சினாலும் இந்தக் கல்யாணம் நடக்காது...”

“உங்களை மிஞ்சிப் போய் ஜானகியைத்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்...”

“அந்த அளவுக்கு உனக்குத் தைர்யம் வந்துடுச்சா?”

“அந்த தைர்யத்தை உருவாக்கினதே நீங்கதானே!”

“உன்னை உருவாக்கி இவ்வளவு பெரியவனா வளர்த்து ஆளாக்கின என்னையே எதிர்த்துப் பேசறியா?”

“மன்னிச்சுடுங்கப்பா. அவளை மறந்து என்னால வாழ முடியாது...”

“அப்படின்னா நீ எங்களை மறந்துட வேண்டியதுதான்.” அவர்கள் இருவரும் காரசாரமாகப் பேசுவதைக் கேட்டுக் கலங்கிக் கொண்டிருந்த வசந்தா, மேலும் அதிர்ந்தாள்.

“என்னங்க...”

“நீ எதுவும் பேசாத. நல்ல இடத்துப் பொண்ணா பார்த்து ஊரறிய உலகறிய சிறப்பா கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சந்தோஷமா நாம காத்திருக்க, இவன் என்னடான்னா ஊர் பேர் தெரியாத எவளையோ கல்யாணம் பண்ணிக்கப் போறதா பிடிவாதம் பிடிக்கறான்.”

“முடிவா என்னப்பா சொல்றீங்க?”

“உன் கல்யாணம் எங்க இஷ்டப்படிதான் நடக்கணும். உன் இஷ்டப்படி நீ விரும்புற பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறதா இருந்தா இந்த வீட்லயும் உனக்கு இடம் இல்லை. எங்க மனசுலயும் இடம் இல்லை.”

“என்னங்க...” அலறிய வசந்தாவைப் பொருட்படுத்தாமல் முத்தையா காரில் ஏறிப் புறப்பட்டுவிட்டார்.

5

வீட்டிலிருந்து கோபத்துடன் வெளியேறிய சங்கர், மதுரைக்கு வந்தான். அம்மா, அப்பாவுடன் பேசியது பற்றியும், நடந்த சம்பவங்கள் பற்றியும், ஜானகியிடம் கூறினான்.“”

“பெத்தவங்க மனசை நோகடிச்சுக் கல்யாணம் பண்ணிக்கற நிலைமையாயிடுச்சாங்க?”

“ஆமா ஜானகி. இனி நீதான் என் உயிர். நீ மட்டுமே என் உயிர்!” என்று கூறியவனின் அன்பை உணர்ந்து அவனது கால்களைத் தன் கண்ணீரால் அபிஷேகம் செய்தாள் ஜானகி.

ஆனால் சங்கரின் பொறுமையாகக் காத்திருக்கலாம் என்று பேசிப் பார்த்தாள்.

“எனக்குத்தான் யாருமே இல்லைன்னு ஆயிடுச்சு. உங்க அம்மா, அப்பா, தங்கைன்னு சுற்றம் சூழ வாழற நீங்க, எனக்காக அவங்களையெல்லாம் விட்டுட்டு இப்படி வந்துடறது நியாயமாங்க? இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இருந்து பார்க்கலாம்.


ஒரே தடவை தட்டினதுல கதவு திறக்கும்னு எதிர்பார்க்காம மறுபடி மறுபடி தட்டிப் பாருங்களேன். உங்க அன்பாலயும், பொறுமையாலயும் பூட்டிக் கிடக்கற உங்க அப்பாவோட மனக்கதவு திறக்கும்ன்னு நான் நம்பறேன்ங்க.”

“இல்லை ஜானகி. எங்க அப்பாவைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும். அவர் மனசு மாறாது. பெத்த மகனான எனக்கே வீட்ல இடம் இல்லைன்னு சொல்லி விரட்டினவர் அவர். அவரா மனசு மாறி உன்னை ஏத்துக்குவார்?! அவர் தன்னோட வீட்லயும் இடமில்லை, மனசுலயும் இடமில்லைன்னு சொன்னப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும்?”

“ரொம்ப வேதனையாத்தான் இருந்திருக்கும்னு எனக்குப் புரியுதுங்க. ஆனா திட்டினது உங்கப்பாதானே? அவருக்கு உங்களைத் திட்டறதுக்கு உரிமை இல்லையா? அப்பா கோபமா பேசிட்டாரேங்கற ஆத்திரத்துல அவசர முடிவு எடுக்காதீங்க...” கெஞ்சினாள் ஜானகி. மறுத்துப் பேசினான் சங்கர்.

“தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறு அடி பாயுமாம். அவர் இவ்வளவு ரோஷமா பேசும்போது எனக்கென்ன? நான் எடுத்த முடிவுதான் சரி. நாம உடனடியா கல்யாணம் பண்ணிக்கணும்.”

சங்கரின் குரலில் இருந்த உறுதியை இனி மாற்ற முடியாது என்று புரிந்து கொண்ட ஜானகி, மெளனமானாள்.

“ஆத்திரப்பட்டு அவசர முடிவு எடுக்கறீங்க... அவரோட சம்மதத்துக்காகக் காத்திருக்கோம்ன்னு தெரிஞ்சா மனசு மாறவும் வாய்ப்பு இருக்குன்னு நான் நினைக்கறேன்...”

“இல்லை ஜானகி. நான் எடுத்த முடிவு சரிதான். இதுக்கு மேல நீ வேற எதுவும் பேசாத” என்று கூறி, ஜானகியின் வாயை அடைத்தான் சங்கர்.

பாலனின் உதவியோடு மிக எளிமையாக மீனாட்சி அம்மான் கோவிலில் ஜானகியைத் திருமணம் செய்து கொண்டான் சங்கர். திருமணமான நாளிலிருந்து தன் மீது உயிரையே வைத்து அன்பு செலுத்திய சங்கரின் உயர்ந்த உள்ளத்தையும், அந்த அன்பு முறிந்து போகும்படி நேரிட்ட சம்பவத்தையும் நினைத்துப் பார்த்துக் கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த ஜானகி, நீ்ந்திக் கொண்டிருந்த நினைவலைகளிலிருந்து மீண்டாள்.

6

மூத்தவன் தூக்கத்தில் சிணுங்கினான்.

‘இந்தக் குழந்தைகள்... என் எதிர்காலம்? ஐயோ கடவுளே... அவர் இல்லாத வாழ்க்கை? அவரோட துணை இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படி வளர்ப்பேன்?’ நினைத்து நினைத்து அழுதவள், சங்கரின் ஆத்திரமான பேச்சு, அவசரமான வெளியேற்றம் பற்றிச் சிந்தித்து மேலும் மேலும் அழுதாள். அழுகையின் முடிவில் பெண்மையின் சக்தி அவளது சோகத்தைப் பின்னுக்குத் தள்ளியது. வறுமையின் பிடியில் பிறந்தவள், வளர்ந்தவள், வாழ்ந்தவள் என்றாலும் வைராக்யம் அவளைப் பற்றிக் கொண்டது. அவளது அந்த வைராக்யம் மிகுந்த மன வலிமையையும் அளித்தது. ஆனாலும் தன் மீது உயிரையே வைத்திருந்த கணவனின் நினைவும், அவனது பிரிவும் அவளை வதைத்தது.

‘இனி என்ன செய்ய வேண்டும்? எப்படி வாழ வேண்டும்? இரண்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கும் வழிமுறை என்ன?....’ என்றெல்லாம் யோசித்தாள். யோசித்தாள். யோசித்துக் கொண்டே இருந்தாள். விடியும் வரை யோசித்தாள். ‘தனக்கும் தன் குழந்தைகளுக்கும் விடிவுகாலம் வருமா?’ என்ற கேள்விக் குறி நெஞ்சை நிறைக்க, அதன் விளைவால் இதயம் கனக்க, கண்கள் தூக்கத்தைத் தொலைத்தன. பொழுது விடியும்வரை அவளது இமைகள் மூடவில்லை.

7

றுநாள் காலை. பக்கத்து வீட்டுப் பாமா ஜானகியிடம் வந்தாள். “என்னம்மா ஜானகி... உனக்கென்ன பிரச்னை, அழுது அழுது முகமெல்லாம் வீங்கி இருக்கு? நீ சொல்லலைன்னாலும் உன் முகம் காட்டிக் குடுக்குது. உனக்கு ஏதோ கஷ்டம்னு புரியுது... அக்கம் பக்கத்துல இருக்கறவங்களை அந்நியமா நினைக்காம இருந்தா சுக துக்கத்துல பங்கெடுத்துக்கலாம். உதவி செய்யலாம். என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு. உன் வீட்டுக்காரர் எங்கே?”

மிகுந்த அன்போடு பாமா கேட்டதும், ஜானகியால் அதற்கு மேல் தன் உணர்வுகளை அடக்க முடியவில்லை.

“அடுத்தவங்க எப்பிடிப் போனா நமக்கென்னன்னு அலட்சியமா இருக்கறவங்க நடுவில அக்கறையோடு என் பிரச்னைகளைப் பத்தி கேக்கற உங்ககிட்ட சொல்றதுக்கென்னக்கா? என் புருஷன்... என்கிட்ட கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாரு... என்னை விட்டு ஒரு நாள் கூடப் பிரிஞ்சு இருக்க முடியாத அவர்... இப்ப என்னையும், என் குழந்தைகளையும் விட்டுட்டுப் போயிட்டாரு...” அழுகுரலில் பேசினாள் ஜானகி.

“போனவர், கோபம் மாறி வந்துடுவாரு. பொறுமையா காத்திருக்காம இப்படி அழுது அழுது உன்னை நீயே ஏன் வருத்திக்கற?”

“ஆத்திரத்துல எதையும் யோசிக்காம, கலந்து பேசாம, அவசரமா முடிவு எடுக்கற அவரைப் பத்தி எனக்குத்தான் பாமாக்கா தெரியும். அவரோட கோபம் எந்த அளவுக்குப் போகும்னு எனக்கு நல்லா தெரியும். எதுக்காக அவ்வளவு கோபம்னு தயவு செஞ்சி கேட்டுடாதீங்க...”

“நான் கேட்கலைம்மா. ஆனா உனக்கு உதவி செய்யத் தயாரா இருக்கேன்...”

“ரொம்ப நன்றி பாமாக்கா. என் கணவர் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அந்தப் பணம், காசு, சொத்து, சுகத்தையெல்லாம் ஒரு பொருட்டா மதிக்காம என்னைக் கல்யாணம் பண்ணி எனக்கு வாழ்க்கை குடுத்தவர். பொருளாதார ரீதியா மிக உயரத்துல இருந்த அவர், எனக்காகக் கீழே இறங்கி வந்து ஒரு நிறுவனத்துல வேலைக்குச் சேர்ந்தார். நூறு பேருக்கு மேற்பட்ட தொழிலாளர்கள், அவர்கிட்ட கைநீட்டிச் சம்பளம் வாங்கிட்டிருந்தாங்க. ஆனா நூறு பேர்ல ஒருத்தரா அவர் கைநீட்டிச் சம்பளம் வாங்க ஆரம்பிச்சார். இருந்தாலும் அவரோட சம்பளம் எங்க குடும்ப வண்டி சிரமப்படாம ஓடறதுக்குத் தகுந்த அளவு உதவியா இருந்துச்சு. ஆனா... இப்ப... அவர் இல்லாம நான் தனியா... எப்படி... என்ன பண்றதுன்னு நேத்து முழுசும் யோசிச்சேன். ஒண்ணும் புரியலை.” அழுதுகொண்டே பேசிய ஜானகி, மேலும் தொடர்ந்தாள்.

“பெரிய படிப்பெல்லாம் படிக்காத எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சமையல் வேலை, வீட்டு வேலை, இது போகத் தையல் வேலை. அதுவும் எக்ஸ்போர்ட் கம்பெனியில தைச்சுத்தான் பழக்கம். வேற எதுவும் தைக்கத் தெரியாது.”

“நீதான் நல்லா சமைப்பியே. உன் கையால சமைச்ச காரக்குழம்பு, பொரியல், கூட்டு, பிரியாணி இதெல்லாம் நீ எனக்குக் குடுத்திருக்க. உன்னோட கைமணம் சூப்பரா இருக்கு. அதனால எனக்கு ஒரு யோசனை தோணுது...”

“என்ன யோசனை, பாமாக்கா? சொல்லுங்க...”

“பாண்டிச்சேரியில ஒரு பணக்காரக்குடும்பம். எங்க அம்மா சின்ன வயசுல அவங்க பங்களாவுலதான் சமையல் வேலை பார்த்தாங்க. பதினஞ்சு வயசுல இருந்து இருபத்து மூணு வயசு வரைக்கும் அங்கதான் எங்கம்மா சமையல் வேலை பார்த்தாங்களாம். அந்த வீட்டைச் சேர்ந்தவங்க எல்லாரும் நல்லவங்க.


எங்கம்மாவுக்குக் கல்யாணம் பண்ணி வச்சதே அந்தம்மாதான். கல்யாணத்துக்கப்புறம் எங்கம்மா எங்கப்பாவோட ஊருக்குப் போக வேண்டியதாயிடுச்சு. அதனால எங்கம்மா வேலையைவிட வேண்டியதாயிடுச்சு. அவங்க இறந்துபோய்ப் பல வருஷமாச்சு. அவங்க உயிரோட இருந்தப்ப, எங்கம்மா, வருஷத்துக்கு ஒரு தடவை பாண்டிச்சேரிக்குப் போய் அவங்களைப் பார்த்துட்டு வர்றது வழக்கமா இருந்துச்சு. அவங்க இறந்ததுக்கப்புறம் அவங்க மருமக மங்களத்தம்மாவைப் போய் அம்மா பார்த்துட்டு வருவாங்க. நானும் அம்மா கூட அங்கே போயிருக்கேன். எங்க அம்மாவுக்கப்புறம் சமையல் வேலைக்கு வந்த யாரும் நிலைச்சுச் செய்யலைன்னு அவங்க சொன்னாங்க. போன முறை நான் போனப்ப...

சமையலுக்கு நல்ல ஆளா பார்த்துக் கொண்டு வந்து விடு பாமான்னு சொன்னாங்க. அந்த வீட்டுக்குச் சமையல் வேலைக்குப் போறியா? அவங்களோட பங்களா காம்பவுண்டுக்குள்ளயே தோட்டக்காரன், வாட்ச்மேனுக்கெல்லாம் குவார்ட்டர்ஸ் குடுத்திருக்காங்க. உனக்கும் தங்கறதுக்கு குவர்ட்டர்ஸ் ஏற்பாடு பண்ணிடுவாங்க. உன் பிள்ளைகளும் அங்கே தங்கிக்கலாம். அந்த மங்களத்தம்மா குடும்பத்துக்கு நீ சமைச்சுப் போடணும். மேல் வேலைக்கெல்லாம் வேற ஆட்கள் இருக்காங்க. உன்னோட வேலை வாய்க்கு ருசியா சமைச்சுப் போடணும். நேரம் பார்த்துக் காபி, டீ, மோர், சூப் இப்படி ஆளாளுக்குக் கேக்கறபடி பண்ணிக் குடுக்கணும். அவங்க குடும்பம் பெரிசு. அண்ணன், தம்பி இரண்டு பேர் குடும்பமும், பிள்ளை குட்டிகளோட கூட்டுக் குடித்தனமா இருக்காங்க. சம்பந்தி வீட்டைச் சேர்ந்தவங்க நாலு பேர் இவங்களோடதான் இருக்காங்க. அத்தனை பேருக்கும் சமைக்கற வேலை உன் வேலை. நம்பிக்கையான ஆள் வேணும்னு கேட்டதுனால, நீ விருப்பப்பட்டா அங்கே வேலைக்குப் போகலாம்...”

“நான் இப்ப இருக்கற நிராதரவான நிலைமைக்கு நீங்க சொல்ற அந்த வேலை வாய்ப்பு, நடுக்கடல்ல தத்தளிச்சுட்டிருக்கும்போது கைகுடுத்துக் கரை சேர்க்கற துடுப்பு மாதிரியான பெரிய உதவி பாமாக்கா. இன்னிக்கே என்னை அங்கே கொண்டு போய் விடறீங்களா?”

“ஓ... இன்னிக்கே போகலாம். இங்க இருந்து பஸ்ல கிளம்பினா ஐந்து மணி நேரத்துல பாண்டிச்சேரி போயிடலாம். மங்களத்தம்மா என்னை அங்கே சமையல் வேலைக்குக் கூப்பிட்டாங்க. எனக்குத்தான் கர்ப்பப்பையில கட்டி இருக்கு, அந்த வைத்தியம் பண்ணிக்கணும், இந்த வைத்தியம் பார்க்கணும், அதிகச் சிரமமான வேலை செய்யக் கூடாது, அது இதுங்கறாங்களே... அதனால போக முடியலை. எங்க வீட்டுக்காரர் கூட அங்கே போயிடலாம்னுதான் சொன்னார். என்னோட உடல் நிலை ஒத்துழைக்கலை. உன்னைப் போல ஒரு நம்பிக்கையான, நல்ல ஆளைக் கொண்டு போய் விட்டா அவங்களுக்கு சந்தோஷமா இருக்கும். உனக்கும் உதவியா இருக்கும்.”

“நீங்க இவ்வளவு தூரம் சொல்லும்பொழுது எனக்கு அங்க போய் வேலை செய்றதுல எந்தத் தயக்கமும் இல்லை பாமாக்கா. நாம எத்தனை மணிக்குக் கிளம்பணும்?”

“எங்க வீட்டுக்காரர் பகல் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருவாரு. அவர்கிட்ட சொல்லிட்டு ரெண்டு மணிக்குக் கிளம்பிடலாம். உன் துணிமணி, குழந்தைகளோட சாமானெல்லாம் மூட்டை கட்டித் தயாரா இரு. கையில பணம் வச்சிருக்கியா அல்லது... நான் தரட்டுமா? பெரிசா உதவ முடியாட்டாலும் ஏதோ என்னால முடிஞ்சதைக் குடுப்பேன், ஜானகி.”

“வாடகை கேட்டு இந்த வீட்டு ஓனர் வந்தாரு. அவருக்குக் குடுத்தது போகக் கொஞ்சம் பணம் இருக்கு. சமாளிச்சுடலாம்.”

“சரிம்மா. நான் இப்ப போயிட்டு ரெண்டு மணிக்கு வரேன்.”

“சரி பாமாக்கா.”

பாமா போனதும் தன் உடைமைகளையும், குழந்தைகளின் துணிமணிகளையும் பெட்டியில் எடுத்து வைத்தாள். தட்டு முட்டுச் சாமான்கள் சிலவற்றை மூட்டை கட்டினாள். செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் மனம் துவண்டு போய்க் கண்கள் கண்ணீரைச் சிந்தியபடி இருந்தன.

8

பாண்டிச்சேரி. லாஸ் போட்டை எனும் பகுதியில் இருந்த மிகப் பிரம்மாண்டமான பங்களா. இரண்டு செக்யூரிட்டிகள் பங்களாவின் பெரிய கதவிற்கு முன் காவல் காத்துக் கொண்டிருந்தனர். ஏற்கெனவே பல முறை பாமாவை அங்கே பார்த்திருந்தபடியால் அவளையும் அவளுடன் வந்திருந்த ஜானகி மற்றும் குழந்தைகளையும் உள்ளே அனுமதித்தனர்.

பங்களாவைப் பார்த்துப் பிரமித்துப் போனாள் ஜானகி. அந்த பங்களாவில் வசிக்கும் குடும்பத்தின் தலைவியான மங்களத்தம்மாவிடம் ஜானகியை அறிமுகப்படுத்தினாள் பாமா.

“மங்களத்தம்மா. இவ ஜானகி. சமையல் வேலைக்கு நல்ல ஆள் வேணும்னு கேட்டீங்கன்னு கூட்டிட்டு வந்திருக்கேன். இந்த ரெண்டு பிள்ளைகளும் இவளோட குழந்தைங்க. சின்ன பிரச்னையில இவ புருஷன் கோவிச்சிக்கிட்டுப் போயிட்டாரு. ஜானகி நல்லா சமைப்பா. பொறுப்பா இருந்துப்பா. அதைவிட முக்கியமானது, ரொம்ப நேர்மையான பொண்ணு.”

“சரி பாமா. நீ உத்தரவாதம் குடுத்தா நல்ல பொண்ணாத்தான் இருப்பா. இருந்தாலும் சொல்றேன். எனக்கு நேர்மைதான் முக்கியம். சமையல், ஸ்டோர் ரூம் பொறுப்பு முழுசையும் இவளை நம்பி விட்டுடுவேன். வீட்டு வேலை செய்யற ஆளுக கூட ஒற்றுமையா இருந்துக்கணும். கசகசன்னு சந்தைக்கடை மாதிரி சத்தம் போட்டுக்கிட்டோ, சண்டை போட்டுக்கிட்டோ இருக்கறது எனக்குப் பிடிக்காது. இன்னொரு விஷயம்... இது பெரிய குடும்பம். ஆளாளுக்கு அது வேணும், இது வேணும்னு கேப்பாங்க. மனம் கோணாம அவங்க கேக்கறதைச் செஞ்சு குடுக்கணும். ஆண்டவன் புண்ணியத்துல நாங்க நல்ல வசதியா இருக்கோம். பிடிச்சதைச் சாப்பிட முடியாதபடிக்குப் பிரச்னை பண்ணக் கூடாது...”

ஜானகிக்கு மங்களத்தம்மாவைப் பார்த்ததுமே பிடித்து விட்டது. மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.

“அம்மா. நீங்க சொன்னபடி பொறுப்பா இருந்துப்பேன். பொறுமையா இருப்பேன். இதோ இந்த நிமிஷத்துல இருந்து இதை என் வீடு போலப் பார்த்துப்பேன். இந்தக் குடும்பத்தினருக்கு என்னென்ன செய்யணுமோ அத்தனையையும் மனம் கோணாம, முகம் சுழிக்காம செய்வேனுங்க. நீங்க குடுக்கற ஆதரவுலதான் என் ரெண்டு பிள்ளைகளை நான் வளர்க்கணும்.”

“நீ நல்லபடியா நடந்துக்கிட்டா உன்னை நல்லா பார்த்துப்பேன். உன் குழந்தைகளையும்தான். இங்கே தோட்ட வேலை பார்க்கற சண்முகத்தோட அப்பா எங்க மாமியார் காலத்துல வேலைக்குச் சேர்ந்தவர். தோடட்டத்தைப் பார்த்திருப்பியே... ஒரு பூஞ்சோலை மாதிரி இருக்குல்ல? அதுக்குக் காரணம் சண்முகத்தோட அப்பா சிவசாமிதான். சிவசாமி இறந்து போனப்புறம் இந்த சண்முகம் அவரைப் போலவே தோட்டத்தைப் பொறுப்பா பார்த்துக்கறான். பரம்பரை பரம்பரையா இந்த பங்களாவுல வேலை பார்க்கறாங்க. அவங்களுக்குத் தங்கறதுக்கு வீடு குடுத்திருக்கோம். பின் பக்கம் பசுமாடு கட்டி இருக்கோம். அதனால வேலையாட்கள் குடும்பத்துக்குப் பால் அளந்து குடுத்துடுவோம். இங்கே காய்க்கற தேங்காயெல்லாம் சமையலுக்குப் போக மீதியையும் குடுத்துடுவோம். இங்கே வேலை பார்க்கறவங்க வயிறு வாடாம சாப்பிடலாம்.


அவங்களோட பிள்ளைகளைப் படிக்க வைக்கறோம். வைத்திய உதவி செய்யறோம். அதனால நீ நல்லபடியா நடிந்துக்கிட்டா உன்னையும் உன் குழந்தைகளையும் நான் பார்த்துக்குவேன்.”

“சரிங்கம்மா.” ஜானகி கைகூப்பி வணங்கினாள்.

“பாமா... ரெண்டு நாள் தங்கிட்டுப் போறியா?”

“இல்லங்கம்மா. இவங்களச் சமையலறைக்குக் கூட்டிட்டுப் போ. எல்லாரும் காபி குடிங்க. குழந்தைகளுக்குச் சாப்பிட ஏதாச்சும் குடுக்கச் சொல்லு. குவார்ட்டர்ஸ்ல எந்த போர்ஷனை ஜானகிக்குக் குடுக்கணுங்கறதயெல்லாம் என் தம்பி வந்தப்புறம் நானே ஏற்பாடு பண்ணிக்கறேன்.”

“சரிங்கம்மா.” கூறிய பாமா சமையலறைக்கு ஜானகியையும், குழந்தைகளையும் அழைத்துச் சென்றாள்.

“பாமாக்கா... இந்த பங்களா அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. நல்ல இடத்துலதான் என்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கீங்க பாமாக்கா. கூடப்பிறந்த பொறுப்பு மாதிரி இப்படிப் பொறுப்பு ஏத்துக்கிட்டு, என் கூடவே வந்து உதவி பண்ணி இருக்கீங்க... எந்த ஜென்மத்தில இந்தக் கடனை அமைக்கப் போறேனோ...?”

கண்களில் கண்ணீர் தளும்பி நிற்க, பேசினாள் ஜானகி.

“கடனும் இல்ல உடனும் இல்லை... என்னால முடிஞ்ச உதவியை உனக்குச் செய்யணும்னு நினைச்சேன். திக்குத் தெரியாத காட்டில் விட்டாப்ல... ரெண்டு குழந்தைங்களையும் வச்சுக்கிட்டு நீ அல்லாடறதைப் பார்த்து ஏதோ என்னால முடிஞ்சதைச் செஞ்சிருக்கேன். இனிமேல் நீ இங்கே இந்த மங்களத்தம்மாட்ட நல்ல பேர் எடுக்கணும். அவங்களோட ஆதரவுல உன் குழந்தைங்களை வளர்த்து ஆளாக்கு. நீ பெத்து வச்சிருக்கறது ஆண் குழந்தைங்க இல்லை. ஆண் சிங்கங்கள். அவங்க வளர்ந்து உன்னைத் தங்கத் தட்டுல தாங்குவாங்க. கவலைப் படாம தைரியமா இரு. நான் கிளம்பறேன்.”

பாமா விடை பெற்றுப் புறப்பட்டாள்.

9

குடித்து முடித்த காபி கப்பை டேபிள் மீது வைத்தார் முத்தையா. அவர் காபியை ரசித்துக் குடித்ததைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் வசந்தா.

“சங்கர் வீட்டை விட்டுப் போனதிலிருந்து காபி குடிக்கறதையே நிறுத்தியிருந்தீங்க. மகன் வந்துட்ட சந்தோஷத்துல மறுபடியும் காபி குடிக்கறீங்க. உள்ளுக்குள்ள பாசத்தை வச்சு மறைச்சுட்டு வெளியில கோபத்தை மட்டும் காண்பிச்சிட்டிருந்தீங்க...”

“அவன் செஞ்சது தப்புன்னு உணர்ந்திட்டான். அதனாலதான் அவனை மன்னிச்சு ஏத்துக்கிட்டேன். ஒரு விஷயம் கவனிச்சியா, வசந்தா, மதுரையில இருந்து திரும்ப வந்தவன் நிரந்தரமா இங்கே இருக்கறதுக்காக வரலை. என்னைப் பார்த்து மன்னிப்புக் கேட்டுட்டு வேற எங்கயாவது போயிடலாம்ங்கற எண்ணத்துலதான் வந்தேன்னு சொன்னான்ல்ல?... அவன் அப்படிச் சொன்னதும் எனக்குத் ‘திக்’ன்னு ஆயிடுச்சு வசந்தா...”

“திரும்ப வந்த பையன்கிட்ட அவ்வளவு ஆத்திரமா நீங்க பேசி இருக்கக் கூடாதுங்க.”

“ஆமா வசந்தா. போனவன், திரும்ப வரவேண்டியதாகி, வந்துட்டானேன்னு உதாசீனமா பேசிட்டேன். மறுபடியும் போகப் போறதா சொன்னதும் என் உள்மனசுக்குள்ள இருந்த பாசம் பொங்கிடுச்சு...”

“தான் ஆடாட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க?”

“அனுபவம் இல்லாமயா சொல்லியிருப்பாங்க? அவன் எடுத்த அவசரமான முடிவு அழிவுலதான் கொண்டு விடும்னு புரிஞ்சுக்கிட்டான். அது போதும் எனக்கு. இப்ப அவனோட மனசு இருக்கற நிலையில அவனோட கவனத்தைத் திசை திருப்பணும். புதுசா ஒரு பிஸினஸ் ஆரம்பிச்சு, முழுக்க முழுக்க அவனோட பொறுப்பில விட்டுடணும். அவன் அந்தப் புது நிறுவனத்தை நிர்வாகம் பண்றதுல ஈடுபட்டு வேலைகள்ல மூழ்கினான்னா அவனோட கவலையை மறப்பான்...”

“கவலையை மறக்கறதுக்குப் புது பிஸினஸ் துவங்கறதெல்லாம் இருக்கட்டும். அவனுக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து மறுகல்யாணம் பண்ணி வச்சுட்டோம்னா வர்றவ அவனை நல்லா பார்த்துக்குவா. இளவயசு... தனிமையில எப்படிங்க இப்படியே இருக்க முடியும்?”

“நீ சொல்றதும் சரிதான். ஆனா நான் அதைப் பத்தி பேசமாட்டேன். நீயே பேசு. நீயே பொண்ணு பாரு. நீயே உன் மகன்கிட்ட பேசி முடிவு பண்ணு. உனக்கு க்ரீன் ஸிக்னல் குடுத்துட்டேன். சங்கரோட மறுகல்யாண விஷயம் முழுசும் உன்னோட பொறுப்பு...”

“நமக்குக் கல்யாணமான நாள்ல இருந்து இன்னிக்கு இந்த இருபத்து ஒன்பதாவது வருஷம் வரைக்கும் நீங்க பார்த்து எது செஞ்சாலும் சரின்னு வாழ்ந்து பழகிட்டேன். இப்ப முதன் முதலா ஒரு பொறுப்பைக் குடுக்கறீங்க. நல்லபடியா முடிக்கணும்.”

“உன்னால முடியும். நீ சங்கர்கிட்ட பேசு. அவனோட சம்மதத்தைத் தெரிஞ்சுக்கிட்டு ஏற்பாடு பண்ணு. அது சரி... சங்கர்கிட்ட என்ன பிரச்னைன்னு கேட்டியா?”

“கேட்டேன்ங்க. அதைப்பத்தி என்கிட்ட எதுவும் கேக்காதீங்க அப்படின்னு சொல்லிட்டான்.”

“என்ன நடந்துச்சோ என்னமோ. சொல்லலைன்னா விடு. நம்ப மகன் நம்பகிட்ட வந்து சேர்ந்துட்டான். இனி அவன் நம்பளை விட்டுப் பிரியாம எப்பவும் நம்ம கூடவே இருக்கணும். அதுக்காகத்தான் ஒரு ஐடியா பண்ணி இருக்கேன். சங்கர் கல்யாணம் கட்டிக்கிட்ட அந்த மதுரைப் பெண்ணுக்கு நம்பளோட திருச்சி அட்ரஸ் தெரிஞ்சாலும் தெரிஞ்சிருக்கும். ஒரு வேளை அவ, சங்கரைத் தேடி இங்க வந்துட்டாள்ன்னா? பழையபடி சங்கர் மனசு மாறி அவ பின்னாடியே போயிட்டான்னா? அதனால... நாம புதுசா துவங்கப்போற பிஸினஸை சென்னையில துவங்கலாம். நாம எல்லாரும் ஊரைவிட்டுச் சென்னைக்கே போயிடலாம்.”

“ஊரை விட்டே போறதா?”

“ஆமா வசந்தா!”

“இங்கே...”

“அதைப்பத்தி நீ ஏன் கவலைப்படறே? இங்கே இருக்கற ஆளுங்க இங்கேயே இருந்து வீடு தோட்டத்தையெல்லாம் பார்த்துக்கட்டும். சென்னையில புது பங்களா வாங்கறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கேன். அங்கே போய் அங்கே உள்ள ஆளுகளை வேலைக்குப் போட்டுக்கலாம். இங்கே இருக்கற எந்த வசதிக்கும் அங்கே குறைவில்லாம நான் ரெடி பண்ணிடறேன். நீ கவலையேபடாதே...”

“என் கவலை அதைப்பத்தியெல்லாம் இல்லைங்க. என்ன இருந்தாலும் சங்கருக்கு அவனோட புள்ளைங்க நினைப்பு இருக்கத்தானே செய்யும்? பாவம். அவனுக்கு என்ன பிரச்னையோ? அவனால சொல்லவும் முடியலை. சொல்லக் கூடாதுன்னு தீர்மானமா இருக்கான்...”

“நடந்தது நடந்து முடிஞ்சு போச்சு. இனி கடந்த காலத்தைப் பத்தி நினைச்சோ, பேசியோ, கவலைப்பட்டோ என்ன ஆகப் போகுது? நினைக்கவும் தேவை இல்லை. அதுக்காகத்தான் இந்த ஊர் மாற்றம், புது பிஸினஸ் திட்டமெல்லாம். சங்கருக்காகத்தான் இதையெல்லாம் செய்யறேன்...”

“நீங்க செய்யற எல்லாமே நம்ப குடும்பத்துக்கு நன்மையாத்தான் இருந்திருக்கு... ஏதோ நம்ப சங்கரோட காதல் விஷயத்துலதான் அவனுக்கும் உங்களுக்கும் மன வேறுபாடு ஆயிடுச்சு. அதில கூட பாருங்க. நீங்க எதிர்ப்புத் தெரிவிச்சு அதை மீறிப் போய் அந்தப் பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கிட்ட அவன், இப்ப என்னமோ பிரச்னையாகித் திரும்ப வந்துட்டான். நீங்க நல்லதுக்குத்தான சொன்னீங்கன்னு இப்ப புரியுது...”


“புரிஞ்சா சரி.”

“சரிங்க. ஆடிட்டரைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தீங்க. எப்ப போகப் போறீங்க?”

“இப்ப அங்கதான் கிளம்பிக்கிட்டிருக்கேன். நான் என்னோட கார்ல போயிடறேன். நிர்மலாவுக்கு செக்கப்க்கு போகணும்னு சொன்னியே... உன்னோட கார் ரெடியாயிடுச்சா? ஸர்வீசுக்குப் போயிருந்துச்சே!”

“ரெடியா வந்துடுச்சுங்க. நான் அதிலயே போய்க்கறேன்.”

“சரி வசந்தா. நான் கிளம்பறேன்.”

கூறிவிட்டு முத்தையா வெளியேறினார்.

10

நிறைமாதக் கர்ப்பிணியான நிர்மலா, புளி சாதத்தைச் சுவைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“என்னம்மா நிர்மலா... புளிசாதம் நல்லா இருக்கா?”

“ரொம்ப சூப்பரா இருக்கும்மா. ஏம்மா, சமையலுக்கு சரசு, எடுபடி வேலைக்கு எல்லம்மா, ஏகாம்பரம், இப்படி கிச்சனுக்கு மட்டும் மூணுபேர் இருந்து நீங்க ஏம்மா சமைச்சுக்கிட்டிருக்கீங்க?...”

“எல்லாம் உனக்காகத்தான். இப்படி வாயும், வயிறுமா இருக்கறப்ப நான் பார்த்து, என் கையால பக்குவமா சமைச்சுக் குடுக்கணும்னு எனக்கு ஆசை...”

“உங்களுக்குச் சமைக்கறதுல ஆசை. எனக்குச் சாப்பிடறதுல ஆசை...” வளைகாப்பிற்காக அவளது கைகளில் அணிவிக்கப்பட்ட கண்ணாடி வளையல்கள் போலக் கலகலவெனச் சிரித்தாள் நிர்மலா.

மகளின் மகிழ்ச்சியான சிரிப்பைப் பார்த்துப் பூரித்துப் போனாள் வசந்தா.

“சாப்பிட்டுட்டு கிளம்பும்மா. இன்னிக்கு டாக்டரம்மாவைப் பார்க்கணுமில்ல?”

“சரிம்மா.”

“நிம்மா... நிம்மா...”

சங்கர் நிர்மலாவைச் சுருக்கமாகவும், செல்லமாகவும் நிம்மா என்றே அழைப்பான்.

“என்னண்ணா... எங்கயோ கிளம்பிட்ட மாதிரி தெரியுது!”

“ஆமாம்மா. அப்பா முக்கியமான வேலைகள் குடுத்திருக்காரு. அதையெல்லாம் முடிக்கணும். ஆமா... மாப்பிள்ளை எங்கே?”

“அவர் அவங்க ஃபேக்டரிக்குப் போயிருக்கார் அண்ணா.”

“கல்யாணம் ஆன புதுசுல உன்னையே சுத்திச் சுத்தி வந்தாரு. இனிமே பிறக்கப் போற குழந்தையைச் சுத்தி வருவாரு... இல்லம்மா?”

“அட போங்கண்ணா...”

“போகத்தானே போறேன்...” என்றவன் வசந்தாவிடம் திரும்பினான்.

“அம்மா... அப்பா புதுசா பிஸினஸ் ஆரம்பிக்கற விஷயமா சில வேலைகள் குடுத்திருக்காரு... நான் கிளம்பறேன்மா. புது ப்ராஜக்ட், சென்னைக்கு ஊர் மாற்றம் இதைப்பத்தியெல்லாம் அப்பா பேசி இருப்பார்னு நினைக்கறேன். அதுக்காகப் பிரார்த்தனை பண்ணிக்கோங்கம்மா. இந்தப் புதுத் தொழில் நிறுவனத்தை நானே திறம்பட நடத்தி அப்பாட்ட நல்ல பேர் எடுக்கணும்னு ஆர்வமா இருக்கேன்மா.”

“உன்னைப்பத்தி எனக்குத் தெரியாதாப்பா? நம்பளோட வியாபாரத்தை உங்கப்பா கூடச் சேர்ந்து எவ்வளவு நல்லா முன்னுக்குக் கொண்டு வந்த, உன்கிட்ட இருக்கற திறமையும், அறிவும் நிச்சயமா நம்ம புது பிஸினஸையும் வளமா கொண்டு வரும். இது என்னோட பிரார்த்தனை மட்டுமில்லப்பா, என்னோட நம்பிக்கையும்கூட.”

“தேங்க்ஸ்மா. நான் வரேன். வரேம்மா நிம்மா.”

“சரிண்ணா. நாங்களும் ஆஸ்பத்திரிக்குக் கிளம்பறோம்.”

“பார்த்து ஜாக்கிரதையா போயிட்டு வாங்க. என்னோட மருமகனோ மருமகளோ எப்ப வெளிய வரும்னு ஆசையா காத்திருக்கேன்...”

“எவ்வளவு அன்புப்பா உனக்கு உன்னோட தங்கச்சி மேல? கடவுள் அருளால நாம எப்பவும் இப்படி சந்தோஷமா இருக்கணும்.”

“இருப்போம்மா. நான் போயிட்டு வரேன்.”  சங்கர் அவனுடைய கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

11

பாண்டிச்சேரியின் சூழ்நிலைக்கேற்ப தன் மனநிலையையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டாள் ஜானகி. அது போல அவள் வேலைக்குச் சேர்ந்த பங்களாவில் வசிக்கும் குடும்பத்தினருடனும் மிக எளிதாகப் பழகிக் கொண்டாள். அதற்கு ஒரு முக்கியமான காரணமாக இருந்தது, ஜானகியின் நளபாகச் சமையல்.

அதற்கு அடுத்தபடியாக அவளது முகம் சுழிக்காத சேவையும், கடுமையான உழைப்பும் இடம் வகித்தது. அந்த உழைப்பிற்காக அவள் பட்ட பாடும், சிரமமும் வார்த்தைகளில் வர்ணிக்க இயலாது.

அந்தக் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணவு தேவைப்பட்டது. குடும்பத் தலைவியான மங்களம்மாவின் கணவர் வழி உறவினரும், தாய்வழி உறவினருமாக நிறைய அங்கத்தினர்கள் இருந்தபடியால் சமையலறையில் வேலைப் பளு, ஜானகியின் இடுப்பை ஒடித்தது. சமையலறைக்குத் தேவையான அனைத்து நவீன சாதனங்களும் இருந்தன. என்றாலும் ஓயாத வேலையாக இருந்தபடியால் உடல் களைத்தாள். இளைத்தாள். உடல் வலிமையைக்காட்டிலும் மனவலிமை அதிகமாக இருந்த படியால் சளைக்காமல் சமைத்துப் போட்டாள்.

ஜானகியும் அவளது பிள்ளைகளும் அங்கேயே சாப்பிட்டுக் கொள்ள உரிமை கொடுத்திருந்தாள் மங்களத்தம்மா. பிள்ளைகள் வயிறு வாடாமல் வாய்க்கு ருசியான உணவு வகைகள் சாப்பிடுவதைப் பார்த்துக் கண்களும் உள்ளமும் குளிர்ந்தாள் ஜானகி. வாய்க்கு, வயிற்றுக்கு மட்டுமல்லாமல் அறிவு வளர்ச்சிக்கு உதவும் கல்வியையும் தானமாக அளித்தார் மங்களத்தம்மா.

பிள்ளைகளின் வளர்ச்சிக்குரிய உணவுகளும், குடியிருக்க இருப்பிடமும், வளமான எதிர்காலத்திற்குத் தேவையான கல்வியும் தாராளமாக வழங்கி வரும் மங்களத்தம்மாவிற்கு நன்றிக்கடன் தீர்ப்பதற்காகக் கடுமையாக உழைத்தாள் ஜானகி.

மங்களத்தம்மாவின் தம்பி ரகு என்பவன், தன் குடும்பத்துடன் மங்களத்தம்மாவின் வீட்டில் நிரந்தமாகத் தங்கி இருந்தான். நாற்பது வயது நிறைந்தவன் எனினும் நாய்க்குணம் மாறாத நயவஞ்சகனாக இருந்தான்.

தேவை இல்லாமலே சமையலறைக்கு வருவது, ஜானகியிடம் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்பதுவுமாக இருப்பான். அவனுடைய அணுகு முறையில் ஒரு அசிங்கம் இருப்பதைப் புரிந்து கொண்டது ஜானகியின் உள்ளுணர்வு.

சமையலறைக்குள் வந்த ரகுவைக் கண்டு கொள்ளாமல் தன் வேலைகளில் ஈடுபட்டிருந்தாள் ஜானகி.

“ஜானகி... ஜானகி...” ரகு கூப்பிட்டான். அவன் கூப்பிட்டது காதில் விழுந்தும் விழாதது போல இருந்தாள் ஜானகி.

மறுபடியும் தொடர்ந்து அழைத்தான். வேண்டுமென்றே மிக்ஸியில் மிளகாயைப் போட்டு அதைச் சுழலவிட்டாள் ஜானகி. இதைப் புரிந்தும் புரியாதது போல அங்கேயே நின்று கொண்டிருந்தான் அவன். எஜமானியின் உடன் பிறந்த தம்பி என்ற உரிமையிலும் அந்த உரிமையின் தீய விளைவான திமிரிலும் இருந்த அவனை யாரும் எதுவும் கேட்க முடியாது.

மீண்டும் அழைத்தான்.

“ஜானகி, வயிறு சரி இல்லை. கொஞ்சம் பால் சேர்க்காத டீ போட்டு இஞ்சி, எலுமிச்சம்பழம் சேர்த்துக் கலந்து குடு.”

“எடுபிடி வேலைக்குத்தான் மூணு பையன்க இருக்கான்களே... அவன்கள்ல யாரையாவது அனுப்பிக் கேட்க வேண்டியதுதானே? இதுக்காக நீங்களே வரணுமா என்ன?” நக்கலாகக் கேட்டாலும், அவன் அதைக் கண்டு கொள்ளவில்லை.

“அந்த மூணு பேரையும் ஆளுக்கொரு வேலை குடுத்து வெளியே அனுப்பியிருக்கேன். என் பொண்டாட்டி ஒரு சோம்பேறி. விடிஞ்சு சூரியன் வந்தப்புறமும் கூட இன்னும் தூங்கிக்கிட்டிருக்கா. எங்க அக்கா காலையிலேயே கார் எடுத்துக்கிட்டு பஞ்சவடி போயிட்டாங்க. அவங்க இனி ஆசிரமம், மணக்குள விநாயகர் கோயில்னு வரிசையா போயிட்டு வர்றதுக்கு நேரமாகும். மத்தவங்கள்லாம் அவங்கவங்க வேலையா இருக்காங்க. இந்த நேரத்துல இங்கே யாரு வரப்போறா? இவ்வளவு பெரிய பங்களாவுல யார் யாரு எங்கே இருக்காங்கன்னே தெரியாதே?” ரகுவின் பேச்சு ஒரு தினுசாக வேறு திசையில் போவதைப் புரிந்து கொண்டாள் ஜானகி.


“உங்க சம்சாரம் தூங்கறாங்களா?... இல்லையே... இப்பதானே தோட்டத்துப் பக்கம் அவங்களைப் பார்த்தேன். அவங்க தூங்கறாங்கன்னு நீங்க கனவு காணறீங்களா?...”

மேலும் குத்தலாகப் பேசி ஜானகியின் அருகே சென்றான் ரகு. இரண்டு பிள்ளைகள் பெற்றெடுத்தும் இளமைக் கட்டு குலையாத அவளது மேனியெழிலில் அவனது மனம் மங்கியது. அதனால் அவனது அறிவு மங்கியது.

“ஜானகி... நீ... திட்டினாக் கூட அது எனக்குத் திகட்டாத தித்திப்புதான்...” என்றபடியே அவளது தோள்களைப் பின் பக்கமாகப் பிடித்தான்.

பாம்பு கொத்தியது போலத் துடித்தாள் ஜானகி. “என்னடா சொன்ன? திகட்டாத தித்திப்பா? இப்ப இந்தக் கொதிக்கற தண்ணிய உன் மேல ஊத்தறேன். அது எப்படி இருக்குன்னு சொல்றியா?...” அடக்க முடியாத ஆத்திரத்துடன் டீ போடுவதற்காக ஸ்டவ்வில் கொதித்துக் கொண்டிருந்த சுடுதண்ணீரைப் பாத்திரத்துடன் எடுத்தாள்.

அவளது கோபத்தையும், அதன் விளைவான ஆபத்தான் செயலையும் கண்டு பயந்து போன ரகு தலை தெறிக்க ஓடினான். அவமானத்தில் ஜானகியின் உடல் நடுங்கியது. மூச்சிரைத்தது. நெஞ்சத்தில் படபடப்பு ஏற்பட்டது. கண்கள் சிவந்தன. முதலில் கோபத்தில் ஆரம்பித்த உணர்வுகள் பிறகு... மெல்ல அழுகையில் முடிந்தன.

‘கடவுளே... அபலைப் பெண்கள்னாலே ஆம்பளைகளுக்கு ‘இவ அலையறவ’ங்கற நினைப்புதானா? புருஷன் இல்லாதவளும், புருஷனைப் பிரிஞ்சு வாழறவளும் ஒழுக்கம் தவறித்தான் போகணும்னு ஏன் கடவுளே தவறா நினைக்கறாங்க? என் காதல் கணவர் தொட்ட இந்த உடம்பை இன்னொரு காமுகன் தொட்டுட்டானே! அவன் தொட்ட என் தோள்ப் பட்டை தீப்பட்டது போலச் சுட்டுக்கிட்டிருக்கே கடவுளே!’ மனதிற்குள் எழுந்த துக்கம் கண்களில் கண்ணீராகக் கொட்டியது.

‘சொர்க்க சுகமான வாழ்க்கை குடுத்த என் கணவரைப் பிரிஞ்சு இப்படியெல்லாம் நான் தவிக்க வேண்டியதிருக்கே. தாலியைக் குடுத்த கணவர், ஒரு வேலியா என்னைப் பாதுகாக்காம பாதியிலேயே விட்டுட்டுப் போயிட்டாரே தெய்வமே... ஏதோ... உழைச்சுப் பிழைக்கலாம்னு இங்க வந்தா என் உடம்பு மேல ஆசை வச்சு... என்னைக் கேவலப்படுத்தறானே ஒரு பாவி...’ அவளது அழுகை தொடர்ந்தது. இதற்குள் உள்நோக்கத்துடன் ரகு வெளி வேலைக்கு அனுப்பிய பையன்கள் வந்தனர்.

“ஜானகி அக்கா... ஏற்கெனவே பிரியாணி அரிசி நிறைய இருக்குன்னு ரகு அண்ணன்கிட்ட சொல்லியும், அவர் இன்னும் ரெண்டு கிலோ வாங்கிட்டு வரச் சொன்னார்க்கா.” கூறியபடியே அரிசி பாக்கெட்களைக் கீழே வைத்தான் வேலை செய்யும் பையன் தாஸ்.

“ஆமாக்கா. பெரிய அம்மாவுக்கு ஃப்ரிட்ஜ் நிறையப் பழங்கள் இருக்குன்னு சொல்லியும் இன்னும் வாங்கிட்டு வான்னு என்னை அனுப்பினார்.” இன்னொரு பையன் மோகன் கூறினான்.

“அயர்ன் பண்ற துணியை எல்லாம் இங்கே பக்கத்துல நம்ப காம்பெளண்ட் சுவர்கிட்ட கடை போட்டிருக்கற மணி அண்ணன் கிட்டதான்க்கா குடுப்பேன். இன்னிக்கு என்னடான்னா சிவாஜி ஸார் சிலைகிட்ட இருக்கற கடைக்குப் போய் குடுடான்னு அனுப்பிட்டாருக்கா.”

மூணு பேரும் ரகுவின் மீது புகார் கூறினர். அழுததை மறைத்து அவர்களைச் சமாதானப்படுத்தினாள் ஜானகி.

“ஏதோ மறதியில சொல்லி இருப்பார். இனிமேல் இப்படியெல்லாம் உங்களை அனுப்பமாட்டார். போங்க... ஜன்னல், கதவு, மரச் சாமான்களையெல்லாம் சுத்தமா துடைங்க. தினமும் அவரவர் பார்க்கற வேலையைக் கவனமா பாருங்க. காபி, டீ ஏதாவது குடிக்கறீங்களா?”

“சரிங்கக்கா. காபி குடுங்க!” அன்புடன் அவர்களுக்குக் காபி போட்டுக் கொடுத்து அனுப்பி வைத்தாள் ஜானகி.

அன்பு நிறைந்த அவளது இதயத்தில் ரகு வளர்த்த வம்பு புண்ணாகி, ரணமாகி, அதன் பின் ஆழமான வடுவாகி விட்டது. பெருமூச்செறிந்தபடி மீண்டும் ஒரு இயந்திரமாகித் தன் வேலைகளில் மூழ்கினாள் ஜானகி.

12

ஸ்பத்திரிக்கே உரிய நெடியுடன் ஆனால் மிகவும் சுத்தமாக இருந்தது ‘வெல்த்’ மருத்துவமனை. அங்கே மகப்பேறு பிரிவில் பணிபுரியும் பெண் டாக்டர் ப்ரியா ரவிச்சந்திரன்.

டாக்டர் ப்ரியா ரவிச்சந்திரன், கைனகாலஜி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் மகப்பேறு மருத்துவத்துறையில் மகத்தான அறிவும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்மணி. கைராசியான டாக்டரம்மா எனும் பெயர் எடுத்தவர். நோயாளிகளிடமும், தன்னிடம் ஆலோசனைக்கு வரும் கர்ப்பிணிப் பெண்களிடமும் மிக்க அன்போடும், சேவை மனப்பான்மையோடும் பழகும் குணநலன் கொண்டவர்.

ஏழை, பணக்காரர்கள் பாகுபாடெல்லாம் பார்க்காமல் அனைவரையும் சமமாகப் பாவிக்கும் பண்பு நிறைந்தவர், கனிவான முகமும், கருணை நிரம்பிய கண்களும் உடையவர். ‘வெல்த்’ மருத்துவ மனையின் மகப்பேறு மருத்துவப் பகுதியில் உள்ள டாக்டர் ப்ரியா ரவிச்சந்திரனின் பிரத்தியேக அறைக்கு வெளியே காத்திருந்தனர் நிர்மலாவும், வசந்தவும்.

“நிர்மலா, உள்ளே போங்க...” நர்ஸ் கூறியதும், நிர்மலா ப்ரியாவின் அறைக்குச் செல்வதற்காக எழுந்தாள். கூடவே வசந்தாவும் அவளைப் பின் தொடர்ந்து சென்றாள்.

இருவரும் அறைக்குள் நுழைந்தனர்.

“வா நிர்மலா. வாங்கம்மா...” சிரித்த முகத்துடன் வரவேற்றார் ப்ரியா.

“வணக்கம் டாக்டரம்மா!” நிர்மலா கூறினாள்.

“என்னம்மா ப்ரியா... நல்லா இருக்கியா?” வசந்தா கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேம்மா!” ப்ரியா கூறினார்.

“என்ன நிர்மலா.... பிரச்னை ஒண்ணுமில்லயே? நான் எழுதிக் கொடுத்த மாத்திரைங்கள்லாம் நாள் தவறாம சாப்பிடறியா?”

“பிரச்னைல்லாம் ஒண்ணுமில்ல டாக்டர். மாத்திரையெல்லாம் தினமும் கரெக்டா சாப்பிட்டுக்கறேன். ராத்திரி தூக்கமே வர மாட்டேங்குது டாக்டர். ரொம்ப கஷ்டமா இருக்கு டாக்டர்...”

ப்ரியா புன்னகைத்தார்.

“எல்லாக் கர்ப்பிணிப் பெண்களுக்கும், டெலிவரி டைம் நெருங்க நெருங்கத் தூக்கம் வராது. உனக்கு டெலிவரி ஆகற தேதி பக்கத்துல வந்துருச்சுல்ல... சரி நிர்மலா, வந்து படுத்துக்க... குழந்தையோட போஸிஷன் பாக்கணும்... வசந்தாம்மா... ப்ளீஸ்... நீங்க கொஞ்சம் வெளில வெயிட் பண்றீங்களா? நிர்மலாவை செக்-பண்ணிட்டு உங்களைக் கூப்பிடறேன்....”

“சரிம்மா ப்ரியா...” வசந்தா எழுந்து வெளியேறினாள். நிர்மலாவைப் பரிசோதித்தபின் ப்ரியாவின் முகத்தில் திருப்தி நிலவியது.

“எழுந்திரும்மா நிர்மலா. உனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. வயித்துல குழந்தையும் நல்லா இருக்கு...”

கையில் மாட்டியிருந்த கை உறைகளைக் கழற்றியபடியே பேசினார் டாக்டர் ப்ரியா. அறையிலிருந்த சிறிய வாஷ்போஸினில் கைகளைக் கழுவித் துண்டினால் துடைத்துக் கொண்டார்.

புடவையைச் சரி செய்து கொண்ட நிர்மலா, நாற்காலியில் உட்கார்ந்தாள். ப்ரியா அறையின் கதவைத் திறந்தார்.

“வாங்க வசந்தாம்மா!” வெளியே காத்திருந்த வசந்தா எழுந்து உள்ளே வந்தாள்.

“நிர்மலா நல்லா இருக்கா. நைட்ல தூக்கம் வரலைன்னு சொன்னா. படுக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடி காலாற, காத்தாட நடந்துட்டு வந்து படுத்தா தூக்கம் வரும்.


உங்க பங்களாவுலதான் பெரிய மொட்டை மாடி பரந்து, விரிந்து இருக்கே... சாயங்கால நேரமானா உங்க வீட்டுத் தோட்டத்துல உலாவலாம். ராத்திரிங்கறதுனால மொட்டை மாடியில நடக்கட்டும்.”

“சரிம்மா ப்ரியா.”

“என்ன நிர்மலா... இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் உன் தூக்கப் பிரச்னை. குழந்தை பிறந்தப்புறம் அவன் உன்னைத் தூங்க விடணுமே...” கேலியாகச் சிரித்தாள் ப்ரியா.

பிரியாவின் கேலிப் பேச்சைக் கேட்டு வெட்கத்துடன் சிரித்தாள் நிர்மலா.

“அப்ப... நாங்க கிளம்பறோம் ப்ரியா.”

“சரி வசந்தாம்மா. கிளம்புங்க. எந்த நேரமும் வலி எடுக்கலாம். வலி எடுத்த அடுத்த நிமிஷம் என்னோட மொபைல் நம்பர்ல கூப்பிடுங்க.”

“சரிம்மா.”

“வரேன் டாக்டர்.” நிர்மலாவும் விடை பெற்றாள்.

13

திய நேரம். சாப்பிட்ட பின்பு குறைந்தபட்சம் ஒரு மணி நேரமேனும் அயர்ந்து தூங்கும் வழக்கம் உடையவர் முத்தையா. முத்தையா அவரது அறையில் படுக்கச் சென்றுவிட்டால், அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. அவராகவே பகல் தூக்கம் கலைந்து, கதவைத் திறந்து வெளியே வரும்வரை காத்திருப்பது வழக்கம்.

அன்று மதிய உணவு உண்டபிறகு, படுத்துத் தூங்குவதற்காகத் தன் அறைக்குச் சென்றார் அவர்.

சாப்பிட்டு முடித்த சங்கரின் அருகே வந்தாள் வசந்தா.

“உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும் சங்கர்...”

“என்னம்மா விஷயம்...? சொல்லுங்கம்மா...”

“நிர்மலாவுக்கு எந்த நிமிஷமும் பேறுகால வலி எடுக்கலாம்னு டாக்டரம்மா சொல்லியிருக்காங்க... நல்லபடியா பிரசவம் நடந்துடும்னு சொன்னாங்க. அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சு, அவ சந்தோஷமா இருக்கா. மாப்பிள்ளை தங்கமானவர். நம்ப இஷ்டப்படி, நம்ம பாசத்தைப் புரிஞ்சுக்கிட்டு நம்ம வீட்லயே வந்து நம்ம கூடவே இருக்கார். எல்லாம் நிறைஞ்சுருக்கற நம்ம குடும்பத்துல நீ... மட்டும்... தனி ஆளா நிக்கறது மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குப்பா... தனி ஆளா நிக்கறது மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குப்பா...”

குறுக்கிட்டுப் பேசினான் சங்கர்.

“என்னம்மா சொல்றீங்க? அன்பான அம்மா, அப்பா, ஆசைத் தங்கச்சி, மரியாதைக்குரிய மாப்பிள்ளை... இப்படி என்னைச் சுற்றிப் பாச மழை பொழிஞ்சுக்கிட்டிருக்கீங்க... என்னைப் போய்த் தனி ஆள்ங்கறீங்க?!...”

“அட... அதில்லைப்பா... தோள்ல்ல தூக்கி வளர்த்த அப்பா உன் கூடத் தோழனா பழகறார். அண்ணா அண்ணான்னு ஆசையா கூப்பிட்டுப் பேசறா உன் தங்கச்சி. மச்சான்னு மனசாரக் கூப்பிட்டு உன் மனம் குளிரப் பழகறாரு மாப்பிள்ளை. சமைச்சுப் பரிமாற ஆளுக இருந்தும் உனக்குச் சாப்பாடு எடுத்துப் பரிமாற உன் அம்மா நான் இருக்கேன். எல்லாம் சரிதான். ஆனா... உன்னோட தேவைகளைக் கவனிச்சு, உன் குறிப்பறிஞ்சு உனக்குப் பணிவிடை செய்றதுக்கு உனக்காக, உனக்குன்னு ஒருத்தி, மனைவிங்கற ஸ்தானத்துல வேணும்ப்பா...”

“அம்மா... ப்ளீஸ்.... இந்த ஒரு விஷயத்துல மட்டும் என் இஷ்டப்படி விட்டுடுங்கம்மா. எனக்கு எந்தக் குறையும் இல்லை. என்னைப் பார்த்துக்க நீங்க எல்லாரும் இருக்கீங்க. எனக்கு அது போதும். ரெண்டு தண்டவாளத்துல ஒரு ரயில்தான் ஓட முடியும். அதுபோல ரெண்டு பேர் இணைஞ்சு, ஒரு வாழ்க்கைதான் வாழ முடியும். மறு வாழ்க்கை வாழறதுன்னா அது மறு ஜென்மத்துல வேணும்னா நடக்கும். என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான்...”

தற்செயலாக அங்கு வந்த முரளி, அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டான். சங்கரின் அருகில் வந்தான்.

“மனைவியைப் பிரிஞ்சு இருக்கற எத்தனையோ பேர் ஒரு மாசகாலம் முடியறதுக்குள்ள இன்னொரு பெண்ணைத் தன் வாழ்க்கையில இணைச்சுக்கறாங்க. கல்யாணமும் பண்ணிக்கறாங்க. அப்படிப்பட்ட ஆண்களுக்கு நடுவுல, கொள்கைப் பிடிப்போட இருக்கற உங்களை எப்படிப் பாராட்டறதுன்னே தெரியல மச்சான். ஆனா... ஒரே ஒரு விஷயம் என்னைச் சொல்ல அனுமதிச்சா... சொல்லிடுவேன் மச்சான்...”

“ச்ச... என்ன மாப்பிள்ளை இது... அனுமதி அது இதுன்னு கேட்டுக்கிட்டு... என்ன சொல்லணுமோ சொல்லுங்க மாப்பிள்ளை...”

“அது... அது... வந்து... மச்சான்... உங்களுக்கு ரெண்டு மகன்கள் இருக்காங்கள்ல...?! அவங்களை இங்க அழைச்சிட்டு வந்து உங்க கூட வச்சிக்கலாம்னு... ஒரு யோசனை... தப்பா இருந்தா கோவிச்சுக்காதீங்க மச்சான் ப்ளீஸ்...”

“கோபிக்கறதுக்கு என்ன மாப்பிள்ளை இருக்கு? என்னோட நலனை மனசுல வச்சு சொல்றீங்க. நீங்க சொல்றதும் சரிதான்... அந்தப் பிள்ளைங்க என்ன பண்ணுவாங்க என்னோட தப்புக்கு? நீங்க சொல்ற யோசனை நல்ல யோசனைதான். நான் போய்ப் பார்த்துக் கூட்டிட்டு வரேன்...”

“ரொம்ப சந்தோஷம் மச்சான். நல்லதை யார் சொன்னாலும் ஏத்துக்கற உங்க பண்பு உயர்ந்தது மச்சான்...” முரளி பேசி முடிப்பதற்குள் வசந்தா இடை மறித்துப் பேசினாள்.

“அதெல்லாம் சரி. உன்னோட மகன்களை இங்கே கூட்டிட்டு வந்தப்புறம் அவங்களை யார் பார்த்துப்பா? ஆயிரம் வேலைக்காரங்க இருந்தாலும் பெத்த அம்மாக்காரி அன்பா அனுசரணையா கவனிக்கற மாதிரி யார் கவனிப்பாங்க?...”

“அதனால... இப்ப... என்ன சொல்ல வர்றீங்கம்மா?” சங்கர் சற்றுக் கோபமாகக் கேட்டான்.

“கோபப்படாதப்பா. பிள்ளை வளர்க்கற வயசா எனக்கு? ஏதோ... தூக்கி வச்சிக்கறதும் கொஞ்சி சந்தோஷப்படறதும் தான் என்னால முடியும். அதனால உனக்காக இல்லாட்டாலும் அந்தப் பிள்ளைங்களுக்காகவாவது ஒரு... துணை வேணும்....”

“அம்மா.... ப்ளீஸ்... இனி ஒரு தடவை அந்தப் பேச்சே பேசாதீங்க...”

“மச்சான்... மறுகல்யாணத்துல உங்களுக்கு விருப்பமில்லைன்னா விட்டுடுங்க. ஆனா... உங்க பிள்ளைகளைக் கூட்டிட்டு வர்றதைப் பத்தி நல்லா யோசிங்க மச்சான். என்னதான் இருந்தாலும் அவங்க உங்க ரத்தம், அவங்களை இங்கே கூட்டிட்டு வர்றதுதான் நல்லது.” முரளி கூறியதும் சங்கர் சில நிமிடங்கள் யோசித்தான்.

“ஆமா மாப்பிள்ளை. நீங்க சொல்றது சரிதான். ஆனா... அம்மா சொல்ற மாதிரி பிள்ளைகளுக்காகக் கூட இனி யாரையும் எனக்குத் துணையா சேர்த்துக்கறதுல எனக்கு உடன்பாடு இல்ல. என் பையன்களை வேலைக்காரங்க உதவியோட நானே கவனிச்சுப்பேன். என்னால முடிஞ்சவரைக்கும் ஒரு தாய் இல்லாத குறை தெரியாம நானே வளர்த்துப்பேன்!” என்றவன் வசந்தாவை அழைத்தான்.

“அம்மா... உங்க வார்த்தையைத் தட்டறேன்னு நினைச்சுடாதீங்கம்மா...”

“நான் ஒண்ணும் நினைக்கலப்பா. முதல் முதலா உங்கப்பா என்கிட்ட இந்தப் பொறுப்பைக் குடுத்தாரு. அதை நிறைவேத்த முடியலைன்னு சின்ன வருத்தம். அவ்வளவுதான். உன்னை வற்புறுத்தி, உனக்கு வருத்தம் குடுக்கற விஷயம் எதையும் செய்ய மாட்டேன். உன் மனசு போல செய்ப்பா.”

“சரிம்மா. நான் நாளைக்கே மதுரைக்குக் கிளம்பப் போறேன்” என்றவன், முரளியைக் கூப்பிட்டான்.


“மாப்பிள்ளை... நிர்மலாவுக்குப் பிரசவ நாள் நெருங்கிடுச்சுன்னு சொன்னாங்க. அதனால நிர்மலாவோட பிரசவம் முடிஞ்சப்புறம் மதுரைக்குப் போலாம்ன்னு நினைக்கிறேன்.”

“சரி மச்சான். என்னோட யோசனைக்கு மதிப்புக் குடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் மச்சான்.”

“எனக்காக என்னோட நல்லதுக்காக நல்லதை மட்டுமே சொல்ற என்னைப் பெத்தவங்களுக்கு அடுத்தபடியா தங்கச்சி மாப்பிள்ளை நீங்க இருக்கீங்க. உரிமையோட நீங்க சொல்றதை ஆலோசிச்சுப் பார்க்கறது என் கடமை மாப்பிள்ளை...”

“என் வார்த்தைகளுக்கு இவ்வளவு மதிப்புக் கொடுக்கற உங்க அன்புக்காக நன்றி சொல்றேன் மச்சான். நிர்மலா எனக்கு மனைவியா கிடைச்சதுனால ஒரு நல்ல குடும்பம் எனக்குக் கிடைச்சிருக்கு. இதுக்காகக் கடவுளுக்கு நான் நன்றி சொல்லணும்.”

“கடவுள் நாம ஒவ்வொருத்தர் செய்றதையும் பார்த்துக்கிட்டுதான் இருக்கார். நமக்குத் தீமை செய்றவங்களுக்கு நல்லதையே நாம செஞ்சோம்ன்னா அது நமக்குப் பிற்காலத்துல நன்மையான பயனைத்தான் குடுக்கும்னு சொல்லுவாங்க. நான்... யாருக்கும் தீமை செய்யலை. எனக்குத் தீமை செஞ்சவங்களுக்குப் பதிலுக்குத் தீங்கும் செய்யல. எனக்குப் பிடிக்காததை விட்டு விலகி வந்தேனே தவிர, யாரையும் பழிவாங்கணும்னு நினைக்கலை. அதனால என் பிள்ளைகளை அந்தக் கடவுள் என்கிட்ட சேர்த்து வைப்பார்...” முன்னுக்குப் பின் முரணாக உணர்ச்சி வசப்பட்டுப் பேசிய சங்கரைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

“நீ போய் உன் பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டுவாப்பா சங்கர். என்னால முடிஞ்ச அளவுக்கு நான் ஒத்தாசையா இருக்கேன். உன்னோட பிள்ளைங்க என்னோட பேரன்ங்க. நெஞ்சு நிறைய நம்பிக்கையோட வாழப்போன நீ நெஞ்சு பொறுக்க முடியாத வேதனையோட வந்திருக்கறதைப் பார்த்து என்னோட பெத்த வயிறு பத்தி எரியுதுப்பா... இருந்தாலும் என்னோட துக்கத்தை வெளிப்படுத்தி உன்னையும் கஷ்டப்படுத்தக் கூடாதுன்னுதான் பிரார்த்தனையில மனசைச் செலுத்திக்கிட்டிருக்கேன்.”

“உங்க பிரார்த்தனை நான் இழந்த நிம்மதியை எனக்குத் திரும்பக் குடுக்கும்னு நான் நம்பறேன்மா.”

பெரும்பாலான செல்வந்தர்கள் குடும்பத்தில் செல்லாக்காசாக இருக்கும் அன்பும், மனித நேயமும் அங்கே தாராளமாகத் தவழ்ந்து கொண்டிருந்தன.

அதுவரை அவர்கள் மூவரது உரையாடலில் கலந்து கொள்ளாமல் மெளனம் காத்த நிர்மலா, சங்கரின் அருகே வந்தாள்.

“அண்ணா... உங்க மகன்களைப் பார்க்கணும்ன்னு எனக்கும் ஆசையா இருக்கு.” பாசத்துடன் கூறிய நிர்மலாவின் தலையை அன்புடன் கோதி விட்டான் சங்கர்.

‘தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையைக் கூடப் பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகப் போகிறது என்பதை அறியாத நிர்மலா, அண்ணனின் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று  ஆசைப்படுகிறாளே!’ என்று விதி எட்டி நின்று கைகொட்டிச் சிரித்தது.

14

மாமாலை நேரம். பங்களாவின் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார் முத்தையா. அவருடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தாள் வசந்தா.

“என்ன வசந்தா... ஏதாவது முக்கியமான விஷயம் பேசணும்னாத்தானே நான் வாக்கிங் பண்ணும் போது கூடவே வருவ! சொல்லு... என்ன விஷயம்...?”

பெருமூச்சு விட்டபடி பேச ஆரம்பித்தாள் வசந்தா.

“எல்லாம் நம்ம சங்கர் விஷயம்தான்ங்க. மறுகல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சீங்கள்ல? அதைப் பத்தி அவன்கிட்ட பேச ஆரம்பிச்சதுமே அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு சொல்லிட்டான் சங்கர். அவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிக்கறதுல துளி கூட இஷ்டம் இல்லியாம். ‘அதைப்பத்தி நினைச்சுப்பார்க்கக் கூட நான் தயாரா இல்லை. இனி ஒரு தடவை அந்தப் பேச்சையே எடுக்காதீங்க!’ன்னு எடுத்த எடுப்பிலயே சொல்லிட்டான்... அப்போ நம்ம மாப்பிள்ளை ஒரு யோசனை சொன்னாரு. சங்கருக்கு ரெண்டு மகன்ங்க இருக்காங்கள்ல? அவங்களை இங்கே கூட்டிக்கிட்டு வந்து வச்சுக்கலாம்னு மாப்பிள்ளை சொன்னாரு. அதுக்கு மட்டும் சம்மதிச்சிருக்கான் சங்கர்... என்னங்க இது? நான் பாட்டுக்குப் பேசிக்கிட்டே இருக்கேன். நீங்க ஏதோ யோசனைக்குப் போய்ட்டீங்க?”

“ஆமா வசந்தா. யோசனைதான். சங்கர் பொறந்தப்ப ராஜா வீட்டுக் கன்னுக்குட்டியா பொறந்தான். வளரும் போதும். இளவரசனா வளர்ந்தான். ஆனா அவனோட பிள்ளைங்க? எங்கே எப்படிக் கஷ்டப்படறாங்களோ தெரியல. என்னதான் சங்கர், நம்பளை மீறிக் கல்யாணம் கட்டிக்கிட்டு வாழ்ந்தான்னாலும், அந்தப் பிள்ளைங்க நம்ம வாரிசு... நம்ம ரத்தத்தோட ரத்தம். உனக்கு ஞாபகம் இருக்கா? சங்கர் சின்னப் பையனா இருந்தப்ப எது தேவைப்பட்டாலும் இப்பவே, இந்த நிமிஷமே, உடனே வேணும்பான். நாமளும் அவன் எதைக் கேட்டாலும் அடுத்து நிமிஷம் வாங்கிக் குடுத்தோம். விபரம் தெரிஞ்சு, பெரியவனானப்புறம்தான் இப்பவே வேணும்... உடனே வேணுங்கற பாட்டை நிறுத்தினான். ஆனா அவனோட கல்யாண விஷயத்துல மட்டும் என்னால அவன் கேட்டதை நிறைவேத்த முடியல. அவனோட பிள்ளைகளைக் கூட்டிக்கிட்டு வந்தப்புறம் சங்கரை வளர்த்த மாதிரி செல்லமா, செல்வச் சீமான் வீட்டு வாரிசுகளா வளர்க்கணும். நம்ப குலக் கொழுந்துகளான அந்தப் பிஞ்சுச் செடிகளுக்கு நாமளும், நம்ப அன்பு ஆணிவேரா இருக்கணும்... இதைப் பத்தித்தான் யோசிச்சிக்கிட்டிருக்கேன். சங்கர் தன்னோட தப்பை உணர்ந்து திரும்ப வந்தப்புறம் அவன் மேல உள்ள கோபம் போயிருச்சு. சங்கர் தெரியாம பண்ணின தப்புக்கு தெரிஞ்சே அவனோட பிள்ளைகளுக்கு நாம ஏன் தண்டனை குடுக்கணும்? மாப்பிள்ளை சொன்ன ஆலோசனை ரொம்ப நல்ல விஷயந்தான்.”

“சென்னைக்குப் போய் ஸெட்டில் ஆகணும்னு சொன்னீங்களே... அது எந்த அளவுல நிக்குதுங்க?”

“நிக்காம எல்லா ஏற்பாடுகளும் நடந்துக்கிட்டிருக்கு வசந்தா. நிர்மலாவுக்குப் பேறு காலம் முடியட்டும். சங்கரோட பிள்ளைகளும் வந்துடட்டும். எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போயிடலாம்.”

“சரிங்க. பழகின ஊர், பழகின இடம், பார்த்துப் பார்த்துக் கட்டின இந்த பங்களா... எல்லா வேலைகளையும் ஒழுங்கு முறையா செய்யப் பழகின வேலைக்காரங்க... கோவில், ஆஸ்பத்திரி இதெல்லாத்தையும் விட்டுட்டு திடீர்னு போகணும்னு நினைக்கறப்ப மனசைக் கலக்குதுங்க...”

“கலக்கமோ, குழப்பமோ இருக்க கூடாதுங்கறதுனால தான் ஊரை விட்டுப் போகணும்னு முடிவு பண்ணினேன் வசந்தா. நாம புதுசா ஆரம்பிக்கப் போற உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனத்தைச் சென்னையில செஞ்சாத்தான் நல்லபடியா நடக்கும். புதுசா ஒரு கம்பெனியைத் துவங்கி, அதை முன்னுக்குக் கொண்டு வரணும்ங்கற ஆர்வத்துல சங்கருக்குப் பழசெல்லாம் மறக்கும்...”

“மறக்கும்ன்னு நீங்க ரொம்ப சாதாரணமா சொல்றீங்க. மனசார ஒருத்தியைக் காதலிச்சு, கைப்பிடிச்சு, கூடி வாழ்ந்ததை எந்த சக்தியாலும் மறக்க வைக்க முடியாதுங்க. சேர்ந்து வாழ்ந்ததுக்கு அடையாளமா ரெண்டு ஆம்பிளைப் பிள்ளைங்க... அந்தக் குழந்தைங்களைக் கொஞ்சி மகிழ்ந்ததை எப்படிங்க மறக்க முடியும்?...”

“மறக்க முடியாட்டாலும், அதையே நினைச்சு மருகிகிட்டிருக்காம மனசை வேற பக்கம் திருப்புவான்ல?... அதைச் சொன்னேன் வசந்தா.”


“என்னமோங்க... அந்த ஆண்டவன் புண்ணியத்துல உங்களுக்குச் சங்கர் மேல இருந்த கோபம் தணிஞ்சுருச்சு. அதுவே பெரிய விஷயம்.”

“பெரிய விஷயத்துல தப்பு பண்ணினாலும் பெரியவங்க நாம மன்னிக்கறதுதான் நல்லதுங்கறதை நானும் புரிஞ்சுக்கிட்டேன். ஜாம் ஜாம்ன்னு நம்ப மகனோட கல்யாணத்தை நடத்தணும்ன்னு.... கனவு கண்டுக்கிட்டிருந்தேன். நிஜமாவே அது வெறும் கனவாவே ஆயிடுச்சுங்கற ஏமாத்தமும், வருத்தமும் என் மனசுக்குள்ள ஒரு ஓரமா உறுத்திக்கிட்டே இருக்கு வசந்தா. மன்னிச்சுட்டேனே தவிர, மறக்க முடியலையே...”

“பழசை மறந்தாத்தான் புது வேலைகள்ல மனசை ஈடுபடுத்த முடியும்.”

“ஈடுபாட்டோட செஞ்சாத்தான் எந்த ஒரு காரியமும் திறம்பட நடக்கும். எனக்கு அது புரியுது. அதனாலதான் உன்கிட்ட பேசற அளவுக்குக் கூட சங்கர்கிட்ட பழைய விஷயங்கள் எதுவும் நான் பேசறதில்ல.”

“பேசாம இருக்கறதுதாங்க நல்லது. நீங்க எதையாவது சொல்ல, அதுக்கு அவன் ஏடாகூடமா தர்க்கம் பண்ண, அந்த வம்பெல்லாம் எதுக்கு? ஏதோ... வீட்டை விட்டுப் போனவன்... திரும்ப வந்து சேர்ந்துட்டான்ங்கற சந்தோஷத்துல நம்ம காலம் போகட்டும்.”

“காலம் வேகமாப் பறக்குது வசந்தா. சங்கரையே சின்னப்பையனா பார்த்த மாதிரி இருக்கு. அவனுக்கு ரெண்டு பையன்ங்க... ஹும்... ஆண்டவன் அருளால அந்த ரெண்டு பேரும் நம்மகிட்ட வந்து சேரணும்.”

“நானும் அதைத்தாங்க எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கேன்...”

அப்போது எடுபிடி வேலை பார்க்கும் பெண் செல்லி ஓடி வந்தாள்.

“அம்மா... அம்மா...”

“என்ன சொல்லி, ஏன் இப்படிப் பதற்றமா ஓடி வர்ற?”

“அக்காவுக்கு இடுப்பு வலி கண்டுருச்சும்மா...”

“அப்படியா? இதோ நான் வந்துடறேன்...” வசந்தா, பங்களாவை நோக்கி வேகமாக நடக்க, செல்லி சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த முத்தையாவும் நடையை எட்டிப் போட்டார்.

பங்களாவிற்குள் நிர்மலாவின் அறைக்குச் சென்றாள் வசந்தா.

 “அம்மா... லேசா வலிக்குதும்மா...”

வலியின் வேதனை முகத்தில் தெரிய, மெல்லிய குரலில் கூறினாள் நிர்மலா.

“இரும்மா. டாக்டரம்மாவுக்கு முதல்ல போன் பண்ணிடறேன்.”

டாக்டர் ப்ரியாவிற்கு போன் செய்தாள் வசந்தா.

“நிர்மலாவுக்கு லேசா வலி எடுத்திருக்கும்மா.”

“நான் ஹாஸ்பிட்டல்லதான் வசந்தாம்மா இருக்கேன். இங்கே கூட்டிட்டு வந்துடுங்க.”

“சரிம்மா.”

பேசி முடித்த வசந்தா, சொல்லியைக் கூப்பிட்டாள்.

“செல்லி, கொஞ்சம் சீரகத்தை வறுத்து எடுத்துக்கிட்டுவா.” சமையலறைக்கு ஓடிய செல்லி, அங்கே இருந்த சமையல்காரப் பெண்மணி சரசுவிடம் கேட்டுச் சீரகத்தை வறுத்து வாங்கிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள். செல்லியிடமிருந்து சீரகத்தை வாங்கிய வசந்தா, அதை நிர்மலாவிடம் கொடுத்தாள்.

“இந்தாம்மா... இதை வாயில போட்டுக்க. கொஞ்சம் தண்ணி குடி.”

வசந்தாவிடமிருந்து வறுத்த சீரகத்தை வாங்கி வாயில் போட்டுக் கொண்ட நிர்மலா சிறிதளவு தண்ணீரையும் குடித்தாள்.

நிர்மலாவின் உடைகளைத் தளர்த்திவிட்டு, அவளுக்கு ஆதரவாய், ஆறுதலாய் அவளருகே உட்கார்ந்து கொட்டாள் வசந்தா.

“எனக்குப் பயம்மா இருக்கும்மா...” நிர்மலாவின் கைகள் நடுங்கின.

“என்ன பயம்? பொண்ணாப் பொறந்தவங்க எல்லாருமே இந்த உபாதையையெல்லாம் தாங்கிக்கிட்டுதான் ஆகணும். இந்த வலிக்கு, பயத்துக்குப் பின்னால குழந்தைங்கற சொர்க்கம் இருக்கே?! உன் குழந்தையோட அழுகுரல் கேட்டதும் உடல்வலியெல்லாம் மாயமா மறைஞ்சு போகுமே...” மகளைச் சமாதானப்படுத்திய வசந்தா அப்போது அறியவில்லை... குழந்தையின் அழுகுரல், தன்னையும் தன் குடும்பத்தினரையும் அழ வைக்கப் போகிறது என்பதை.

வறுத்த சீரகத்தையும், தண்ணீரையும் குடித்த பிறகு, மேலும் இடுப்பு வலி அதிகரித்தபடியால் பரபரப்பானாள் வசந்தா.

காரை எடுத்து வரச் சொல்லி வேலைக்காரப் பெண் சொல்லியை அனுப்பினாள். தேவையான பொருட்களைப் பையில் எடுத்து வைத்தாள். முத்தையாவிற்கும், சங்கருக்கும் செய்தியைச் சொல்லிவிட்டு மாப்பிள்ளை முரளிக்குச் சொல்லச் சொன்னாள்.

பூஜையறைக்குச் சென்றாள். கண்மூடித் தெய்வங்களைப் பிரார்த்தித்தாள்.

“தெய்வங்களே... எம் பொண்ணு நல்லபடியா, சுகமா பெத்துப் பிழைச்சு குழந்தையோட வரணும்.” வேண்டிக் கொண்டபின், நிர்மலாவைக் கைத்தாங்களாக அழைத்துச் சென்று காரினுள் ஏறினாள். உதவிக்குச் செல்லியையும் கூப்பிட்டுக் கொண்டாள்.

‘வெல்த்’ மருத்துவமனைக்கு கார் விரைந்தது. டாக்டர் ப்ரியா, இவர்கள் வருவதற்குள் மருத்துவமனையில் நிர்மலா அட்மிட் ஆவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தாள். காத்திருந்தாள். நிர்மலாவின் பிரசவ வலி அதிகமாகியது. ஸ்பெஷல் அறைக்குள் அவள் அனுமதிக்கப்பட்டதும், டாக்டர் ப்ரியா நிர்மலாவைப் பரிசோதனை செய்தாள்.

“குழந்தை பிறக்க இன்னும் டைம் இருக்கு. நிர்மலா. குழந்தையோட தலை இன்னும் இறங்கலை...”

“ரொம்ப வலிக்குது டாக்டர். தாங்க முடியலை...”

“பிரசவ வலின்னா அப்படித்தாம்மா இருக்கும். பொறுத்துக்க.” ஆறுதலாகப் பேசிய டாக்டர் ப்ரியா, அறைக்கு வெளியே வந்தாள். அங்கிருந்த வசந்தாவை அழைத்தாள்.

“வாங்க வசந்தாம்மா.”

வசந்தா அறைக்குள் வந்தாள்.

“ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை. வசந்தாம்மா. நல்லபடியா குழந்தை பிறந்துடும். ஆனா எப்படியும் இன்னும் நாலஞ்சு மணி நேரமாவது ஆகும். நீங்க இங்கேயே நிர்மலா கூட இருங்க. எப்ப வேண்ணாலும் என்னோட மொபைல்ல கூப்பிடுங்க. நர்ஸ் ரோஸியை நிர்மலாவைக் கவனிச்சுக்க ஏற்பாடு பண்ணி இருக்கேன்.”

“சரிம்மா ப்ரியா...”

டாக்டர் ப்ரியா கிளம்பிச் சென்றதும், நிர்மலாவின் அருகே வந்தாள் வசந்தா. வலியால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த நிர்மலாவின் கைகளை ஆறுதலாகப் பிடித்துக் கொண்டாள். மனதிற்குள் தன் இஷ்ட தெய்வங்கள் அத்தனையிடமும் மனமுருக வேண்டியபடியே இருந்தாள்.

சில மணி நேரங்கள் கடந்தன. நிர்மலாவிற்கு வலி அதிகமாகியது. தாங்க இயலாதவளாய்த் துடித்தாள்.

வசந்தா, அறைக்கு வெளியே வந்து, நர்ஸ் ரோஸியை அழைத்தாள்.

“ரொம்ப வலிக்குதுன்னு சொல்றா, ரோஸி. டாக்டரம்மாவைக் கூப்பிடேன்.”

“இங்கேதான்மா இருக்காங்க. நான் போய்க் கூட்டிட்டு வரேன்.” ரோஸி வேகமாக அங்கிருந்து சென்றாள்.

சில நிமிடங்களில் ப்ரியா வந்தாள். நிர்மலாவைப் பார்த்தாள். “ரோஸி... ஸ்ட்ரெச்சர் எடுத்துட்டு வந்து, நிர்மலாவை லேபர் ரூமுக்குக் கூட்டிட்டு வந்துடு.”

“சரி மேடம்.”

நிர்மலா லேபர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். முத்தையாவிற்குத் தகவல் தெரிவித்தாள் வசந்தா.

“நிர்மலாவை லேபர் ரூமுக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.”

மறுமுனையில் முத்தையா பேசினார்.

“டாக்டர் ப்ரியா என்ன சொல்றாங்க?”

“சுகப் பிரசவம் ஆயிடும்ன்னு சொல்றாங்க. சங்கர்ட்டயும் மாப்பிள்ளைட்டயும் சொல்லிடுங்க...”

“சரி, வசந்தா. சொல்லிட்டு நாங்க ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்றோம்.”

“சரிங்க.”

மருத்துவமனையின் போன் மூலம் தகவல் கூறிய வசந்தா, லேபர் அறைக்கு வெளியே இருந்த நாற்காலியில் உட்கார்ந்தாள்.

அரை மணி நேரத்தில் முரளி, சங்கர், முத்தையா அனைவரும் வந்தனர். படபடக்கும் மனதுடன் காத்திருந்தனர். மணித்துளிகள் நகர்ந்தன. குழந்தையின் அழுகுரல் கேட்டது. அனைவரும் சந்தோஷப்பட்டனர்.


லேபர் அறையின் கதவைத் திறந்து, டாக்டர் ப்ரியா வந்தாள்.

“சங்கர்... கொஞ்சம் வாங்களேன்...” ப்ரியா அழைத்ததும், சங்கர் ப்ரியாவின் அருகே சென்றான்.

“ஸாரி சங்கர்... குழந்தை நல்லபடியா பிறந்து நல்லா இருக்கு. பெண் குழந்தை. ஆனா... ஆனா... நிர்மலாவுக்குத் திடீர்னு ரத்தப் போக்கு அதிகமாயிடுச்சு. இது நான் எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான விஷயம். லேபர் ரூமுக்குக் கூட்டிட்டு வர்ற வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லாம இருந்த நிர்மலாவுக்குத் திடீர்னு ஏன் இப்படி ஆச்சுன்னு ஒண்ணுமே புரியல. எவ்வளவோ முயற்சி செஞ்சும் நிர்மலாவோட உயிரைக் காப்பாத்த முடியலை. வெரி ஸாரி...”

“டாக்டர்...” அதிர்ச்சியில் தன்னையறியாமல் அலறினான் சங்கர்.

குழந்தையின் அழுகுரலுடன் அவர்கள் அனைவரது அழுகையும் சேர்ந்து கொள்ள, அங்கே சோகமான ஒரு சூழ்நிலை உருவாகியது.

15

வலைகளை மறக்க வைக்கும் சக்தி எதற்கு இருக்கிறதோ இல்லையோ, காலத்திற்கு அந்த சக்தி அதிகமாகவே இருக்கிறது. காலத்தின் சக்தி மிக வலிமையானது. காலம் செல்லச் செல்ல... நிர்மலா மறைந்து போன துயரம், மெல்ல மெல்லக் குறைந்தது. இதற்கு மற்றொரு காரணம், நிர்மலா பெற்றெடுத்த குழந்தை!

அந்தக் குழந்தையின் முகம் துக்கத்தைக் குறைத்தது. தான் பெற்றெடுத்த மகள் நிர்மலாவின் இழப்பை, அவள் பெற்றெடுத்த குழந்தையின் பிறப்பால் ஓரளவு மறந்தாள் வசந்தா. சுகமான சுமையாக அமைந்துவிட்ட அந்த பேத்தியின் அழகிய முகம் கண்டு, பொக்கை வாய்ச் சிரிப்பொலி கேட்டுத் தன் துயரத்தை மறந்தாள். மனைவியின் மறைவிற்குப் பின்னர், மாமனார் வீட்டில் இருக்க மனமின்றி, முரளி அவனது பெற்றோர் வீட்டிற்குப் போய்விட்டான்.

குழந்தைக்குப் பெயர் வைக்கும் விழா எளிமையாக நடத்தப்பட்டபோது வந்திருந்த குழந்தையைப் பார்த்துவிட்டுப் போனான். குழந்தைக்குச் சரண்யா என்று சங்கர் பெயர் வைத்தான்.

சரண்யா மீது தன் உயிரையே வைத்திருந்தான் சங்கர்.

சரண்யாவைக் கொஞ்சிக் கொண்டிருந்த சங்கரிடம் பேச ஆரம்பித்தாள் வசந்தா.

“சங்கர், நிர்மலாவுக்கு வலி எடுத்ததுனால உன்னோட மகன்களை இங்கே கூட்டிட்டு வர்ற விஷயம் அப்படியே நின்னுபோச்சு. நிர்மலாவோட பேறுகாலம், அவனோட மரணம்ன்னு நாள் ஓடிப்போயிடுச்சு. இப்ப போய்க் கூட்டிட்டு வந்துடேன்ப்பா...”

“ஆமாம்மா. நானும் அதைப் பத்தி யோசிச்சுக்கிட்டுதான்மா இருக்கேன்.”

“யோசிக்கறதுலயே நாட்கள் ஓடிடக் கூடாது, சங்கர். நாளைக்கே நீ கிளம்பு...”

“சரிம்மா” என்றவன், சரண்யாவை மீண்டும் கொஞ்ச ஆரம்பித்தான். சங்கர் சரண்யா மீது தன் உயிரையே வைத்திருந்தான்.

“குடுப்பா அவளை. சாதம் ஊட்டணும்.” கை நீட்டிக் கேட்ட வசந்தாவிடம் வர மறுத்து, சங்கரின் மார்போடு ஒட்டிக் கொண்டாள் சரண்யா.

‘இந்தக் குழந்தை இப்படி என் மேல ஒட்டிட்டிருக்காளே... மனசுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு என்னோட மகன்களையும் கூட்டிட்டு வந்துட்டா... இன்னும் கூடுதலான சந்தோஷம் கிடைக்குமே...’ நெஞ்சம் நெகிழ்ந்தது சங்கருக்கு. மதுரைக்குப் போன வேகத்திலேயே சுவரில் அடித்த பந்து போலத் திரும்ப வரப் போகிறான் சங்கர் என்பதை அப்போது யாரும் அறியவில்லை.

16

துரை. மதுரை மாநகரினுள் நுழைந்த சங்கருக்குப் பழைய நினைவுகள் கரைபுரண்டன. ஜானகியுடன் மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனது, அழகர் கோவிலுக்குப் போனது இன்னமும் அவனது இதயத்தில் பசுமையாக இருந்தது.

ஜானகியைத் திருமணம் செய்து கொண்ட புதிதில் அவளை அழைத்துக் கொண்டு மதுரை நகர் முழுவதும் சுற்றினான். மதுரையின் மதுரமான மணமுள்ள மல்லிகைச் சரத்தை ஜானகிக்கு வாங்கிக் கொடுப்பான். மல்லிகைப்பூ என்றால் ஜானகிக்குக் கொள்ளைப் பிரியம். அடர்த்தியாகக் கோத்திருக்கும் மல்லிகைச் சரத்தைத் தலை நிறையச் சூடிக் கொண்டு சங்கரின் மனதைக் கிறங்கடிப்பாள்.

அளவற்ற அவர்களின் அன்பையும், ஆசையையும் அடையாளமிட்டுக் காட்டுவதற்குக் குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்களது அன்பு மேலும் பிரவாகமாகப் பெருகியது.

‘’பெருகிய அன்பு... கருகிப் போகுமளவு என் தூய்மையான அன்பிற்குத் துரோகம் செய்துவிட்டாள் ஜானகி. என்னைப் பெத்தவங்களை விட்டுட்டு, கூடப் பிறந்தவளை விட்டுட்டு, ‘நீ மட்டுமே என் உயிர்’ன்னு ஓடி வந்தேனே... எனக்கு ஏனிப்படித் துரோகம் செஞ்சுட்டா? பாவி... அவளைப் பத்தி நினைக்கறதே தப்பு. அவள் தண்டிக்கப்பட வேண்டியவ. ஆனா எனக்குப் பிறந்த என் மகன்கள்? அந்தப் பிஞ்சுகள் என்ன தப்பு செஞ்சாங்க? நான் என் மகனைக்ளைப் பார்க்கணும். கொஞ்சணும். என் கூட கூட்டிக்கிட்டுப் போகணும். என்னோட அம்மா, அப்பாவைப் பாட்டி தாத்தான்னு அறிமுகப்படுத்தணும். சரண்யா கூட இந்தப் பையன்களையும் சேர்த்து வளர்க்கணும். எனக்கு என் பிள்ளைங்க வேணும்...’

நெஞ்சத்தில் பொங்கிய பாசத்தில், அவனது கண்களில் கண்ணீர் குளம் கட்டியது. முன்பு அவள் ஜானகியுடன் குடும்பம் நடத்திய இடத்திற்கு வந்ததும் காரை நிறுத்தினான். இறங்கினான்.

அவன் குடியிருந்த வீட்டிற்குச் சென்றான். வீட்டில் பூட்டு தொங்கிக் கொண்டிருந்தது. பக்கத்து வீடுகளில் இருந்து சிலர் வெளியே வந்தனர். அவர்களிடம் விசாரித்தான் சங்கர்.

“இந்த வீட்ல இருந்தவங்க...”

“தெரியலயே. ரொம்ப நாளா பூட்டிதான் கிடக்கு.”

“பாமாக்கான்னு ஒருத்தங்க குடி இருந்தாங்க. அவங்க...?”

“பாமாக்காதான் செத்துப் போச்சே தம்பி! அந்த அக்காவுக்குக் கர்ப்பப் பையில கேன்ஸர் வந்து, செத்துப் போச்சு. அது சரி, நீங்க யாரு தம்பி? யாரைத் தேடி வந்தீங்க? பாமாக்காவையா?”

“அ... ஆமா... இ... இல்லை.... இங்கே... பாமாக்கா குடியிருந்த வீட்டுக்குப் பக்கத்துலதான் நான் குடியிருந்தேன்... சும்மா... பார்த்துவிட்டுப் போகலாம்னு வந்தேன்...”

“இந்த இடமெல்லாம் கை மாறிப் போச்சு தம்பி. யார் யார் எங்கெங்கே போனாங்களோ தெரியல...”

“சரிங்க. நன்றி. வரேன்.”

“சரி தம்பி.”

ஏமாற்றமும், அதிர்ச்சியும் அளித்த உணர்வுகளை மறைத்து அவர்களிடம் விடை பெறுவதற்கு மிகவும் சிரமப்பட்டான் சங்கர். எங்கே...? என் பிள்ளைகள் எங்கே?... ஜானகியை மனதிற்குள் திட்டியபடியே காருக்குள் ஏறி காரைக் கிளப்பினான்.

‘வேணும். எனக்கு இதெல்லாம் வேணும். பெத்தவர் பேச்சைக் கேக்காம, பிடிவாதமா அவளைக் கல்யாணம் பண்ணி, அவள் மட்டுதான் என் உயிர்ன்னு வாழ்ந்த எனக்கு இந்தத் தண்டனை வேணும்தான்.’

கோபமும், வருத்தமும் மாறி மாறி அவனைத் தாக்கின. திருச்சியை நோக்கி காரைச் செலுத்தினான்.

17

ங்கரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் வசந்தா. சங்கரது காரின் ஹாரன் கேட்டுப் பரபரப்புடன் எழுந்தாள்.

சங்கரின் கார் பங்களாவின் போர்டிகோவில் வந்து நின்றது. ஆவலுடன் பார்வையை ஓட விட்டாள் வசந்தா.


காரிலிருந்து வாடிய முகத்துடன் இறங்கிய சங்கரைப் பார்த்து அவளது மனதிற்குள் கேள்விகள் தோன்றின. என்றாலும் அவளது கண்கள், காரிலிருந்து பிள்ளைகள் இறங்குகிறார்களா என்று தேடின. மிஞ்சியது ஏமாற்றம்.

“என்னப்பா சங்கர்... என்ன ஆச்சு?”

“எல்லாமே போச்சும்மா. பிள்ளைங்களைக் கூட்டிக்கிட்டு அவ எங்கேயோ போய்ட்டா... அக்கம் பக்கத்துல இருந்தவங்களுக்கு எதுவும் தெரியல... தப்பு பண்ணிட்டேன்மா. நான் என்னோட பிள்ளைங்களை விட்டுட்டு வந்திருக்கக் கூடாது.”

“உன்னோட பிரச்னை பத்தி எனக்கு எதுவும் தெரியாத பட்சத்துல எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. உன்னைவிட ஆசையா காத்திருந்தேன் பேரப்பிள்ளைகளைப் பார்க்கணும்னு.”

“எதிர்பார்த்துக் காத்திருக்கும்போது எதிர்பார்க்காததுதான்மா நடக்குது...”

சங்கரின் குரலில் தென்பட்ட சேகத்தைப் புரிந்து கொண்ட வசந்தா தன்னைத் தானே ஆறுதல் படுத்திக் கொண்டு, சங்கருக்கு ஆறுதல் சொல்ல முனைந்தாள்.

“எதுக்கும் குடுப்பினைன்னு ஒண்ணு வேணும்னு சொல்லுவாங்கப்பா. நான் குடுத்து வச்சது அவ்வளவுதான்...”

அப்போது சரண்யாவின் அழுகுரல் கேட்டது.

“குடுத்து வச்சிருக்கார்மா கடவுள் நமக்குச் சரண்யாவை...” கூறியவன் ஓடோடிச் சென்று சரண்யாவைத் தூக்கி வந்தான்.

“இவள்தான்மா இனி எனக்கு உலகம். இவள் என் மருமுகள் இல்லம்மா... மகள்! என் மகள்.”

சங்கரின் கைச்சூடு பட்டதும் சரண்யாவின் அழுகை நின்றது. அவன் நெஞ்சோடு ஒட்டிக் கொண்டு சிரித்தாள்.

“என்னைப் பார்த்துட்டா போதும். சரண்யாவுக்கு ஒரே சிரிப்புதான்.”

“சிரிக்கட்டும்மா. இவளாவது என்னிக்கும் இதே போல சிரிச்சுக்கிட்டே இருக்கட்டும். சந்தோஷமா இருக்கட்டும். இவளைப் பார்க்கும்போது தெய்வத்தையே பார்க்கற மாதிரி இருக்கு. இவளோட முகம் பார்த்தா போதும்... என்னோட கவலைகளெல்லாம் மாயமா மறைஞ்சு போகுது. இனி இவள்தான் எனக்கு எல்லாம். இவளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கறதுதான் என்னோட லட்சியம். சரண்யா... இவகிட்ட நான் சரண் அடைஞ்சுட்டேன்மா...” என்று கூறியபடியே அவள் உச்சி முகர்ந்து முத்தமிட்டான்.

பழைய நிகழ்வுகளை மறக்க முயற்சித்தாலும், மீண்டும் மீண்டும் அவனுக்கு ஜானகியுடன் வாழ்ந்த நாட்கள் நினைவிற்கு வந்தன. அவனது எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் மோதின.

ஜானகியைத் திருமணம் செய்து கொண்ட புதிதில், அவர்கள் இருவரும் ஓருயிரும் ஈருடலுமாக வாழ்ந்தனர். மூச்சுக்கு முந்நூறு முறை ஜானகி ஜானகி என்று அழைத்து அவள் மீது தன் உள்ளத்து அன்பையெல்லாம் கொட்டினான். அந்த அன்பின் பிரதிபலிப்பாக ஜானகினின் முகம் சந்தோகத்தில் பூரித்துப் போகும். அமைதியான ஆற்றில் சில கல்லொன்றை விட்டெறிந்தால் சலனமாகும் ஆற்றுத் தண்ணீர் போல சந்தோணத்திற்கு நடுவே சின்னதாய் ஒரு சஞ்சலம் ஜானகியின் முகத்தில் தென்படுவதைக் கவனித்தான் சங்கர்.

“என்ன ஜானகி... திடீர்த் திடீர்னு ஏதோ யோசனைக்குப் போயிடற? உன் உதடுகள் சிரிச்சாலும் உன் உள்மனசுக்குள்ள வேற ஏதோ நினைப்பு இருக்கு. என்னன்னு சொல்லும்மா...”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க...”

“நீ சும்மா சொல்ற... என்கிட்ட கூட சொல்ல முடியாத விஷயம் ஏதாவது உன் மனசுக்குள்ள இருக்கா? சொல்லு ஜானகி... எதுவாயிருந்தாலும் சொல்லும்மா...”

“எனக்காக... உங்கம்மா, அப்பா, தங்கைன்னு உங்க ரத்த பந்தங்களையெல்லாம் விட்டுட்டு வந்திருக்கீங்களே... அவங்களோட வருத்தத்தையும், கோபத்தையும் நினைச்சுட்டா ரொம்ப கஷ்டமா இருக்குங்க. பெத்தவங்களையும் அவங்களோட உறவையும் விட்டுட்டு வர்றதுக்கு நான் காரணமாயிட்டேன்னுன்னு என் மனசுக்குள்ள அப்பப்ப உறுத்தலா இருக்குங்க...”

“அட... இதுதான் உன் முக வாட்டத்துக்குக் காரணமா? நான் என்னவோ ஏதோன்னு நினைச்சுட்டேன். இங்கே பாரு ஜானகி... நான் நேர்மையா எங்கம்மா, எங்கப்பாட்ட நாம காதலிக்கற விஷயத்தைச் சொல்லி, அவங்க மறுத்தப்புறம்தான் அவங்களை எதிர்த்து உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அவங்ககிட்ட எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தேன். ஜானகி இல்லாம எனக்கு வாழ்க்கையே இல்லை. அவளுக்கு நம்பிக்கை குடுத்து, காத்திருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். என்னை நம்பி இருக்கற ஒரு பொண்ணை அம்போன்னு விட்டுட்டு எப்படி வர முடியும்னு கேட்டேன்.

“அவங்க என் கேள்வியைப் பத்தியும் சிந்திச்சுப் பார்க்கலை. என்னோட உண்மையான காதலைப் பத்தியும் புரிஞ்சுக்கலை. எனக்கு அவங்களும் வேணும், நீயும் வேணும்ன்னு தான் துடிச்சேன். ஆனா அவங்களோட நீ காதலிச்சவள்தான் உனக்கு வேணும்ன்னா... நீ... எங்களுக்குத் தேவையில்லைன்னு இரக்கமே இல்லாம சொல்லிட்டாங்க. எங்கப்பா பிடிவாதக்காரர். அவர்தான் அத்தனை கடுமையா பேசினார். கல்யாணமான நாள்ல்ல இருந்து எங்கப்பாவுக்கு அடங்கியே வாழ்ந்து பழகினவங்க எங்கம்மா. அம்மாவை அடக்கி வச்சிருக்கிறதே எங்கப்பாவுக்குப் பழக்கம். அம்மாவுக்கு என்னோட காதலை அங்கீகரிக்கணும்னுதான் எண்ணம்.

“ஸ்டேஷன்ல இருந்து ரயில் கிளம்பலாம்ன்னு ஸ்டேஷன் மாஸ்டர் பச்சைக் கொடி காட்டுவார். அதே சமயம் இன்னொரு ஆள் வந்து சிகப்புக் கொடியைக் காட்டினா? அந்த ஓட்டற என்ஜின் டிரைவர் என்ன முடிவை எடுப்பார்? அது போலத்தான் எங்க வீட்ல நடந்தது. பச்சைக் கொடியைப் பிடிக்கக் கூட எங்கம்மா பயப்படுவாங்க. மகனோட எதிர்காலமாச்சேன்னு அம்மா மருகினாங்க. அப்பாவுக்கு அந்தக் கவலையெல்லாம் கிடையாது. அந்தஸ்துதான் அவருக்கு முக்கியம். ஆழ்ந்து சிந்திச்சுப் பார்க்கலாமேங்கற எண்ணமெல்லாம் அவருக்கு வரவே வராது. நான் எங்கப்பா மேல மரியாதை வச்சிருக்கேன். பாசம் வச்சிருக்கேன். அவர் என்னைப் புரிஞ்சுக்கலையென்னுதான் எனக்கு வேதனையா இருக்கு.”

“என் மேல தன் உயிரையே வச்சிருக்காங்க எங்கம்மா. ஆனா என்னோட எதிர்காலம் பத்தி அப்பாவை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசமாட்டாங்க. அவங்களால பேச முடியாது. பேசவும் கூடாது. ‘உனக்கு உன்னைப் பெத்து வளத்த நாங்க முக்கியமா? அல்லது உன்னைக் காதலிச்ச அந்தப் பொண்ணு முக்கியமா?’ன்னு ஒரு கேள்வி கேட்டுச் சங்கடமான சூழ்நிலையை உருவாக்கினார் எங்க அப்பா. எனக்கு ‘நீ மட்டுமே என் உயிர்’ன்னு தோணுச்சு. என் மனசில அப்படி ஒரு எண்ணம் ஏற்பட்ட அந்த நிமிஷ நேரத்தை அந்த வினாடி நேரத்தை என் வாழ்நாள் முழுசும் மறக்க மாட்டேன் ஜானகி...”

“இந்த அளவுக்கு உங்க அப்பாமேல கோபமா இருக்கறது தப்பு இல்லையாங்க...”


“இல்லை ஜானகி. தப்பே இல்லை. ஏன் தெரியுமா? எங்கம்மாவுக்கு எங்க அப்பா இருக்காரு. எங்க அப்பாவுக்கு எங்க அம்மா இருக்காங்க. அவங்க ரெண்டு பேருக்கும் என் தங்கை நிர்மலா இருக்கா. ஆனா... உனக்கு? உனக்குன்னு யாருமே இல்லையே? தீ விபத்துல உன்னைப் பெத்தவங்களைப் பறி குடுத்துட்டு தன்னந்தனியா இருந்த உனக்கு என்னையே குடுத்து வாழ்வு கொடுக்கறதுதான் சரின்னு முடிவு எடுத்தேன். இப்பவும் சொல்றேன் நீ மட்டுமே என் உயிர்...”

சங்கர் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியதும், தன்மீது இமயத்தளவு அன்பு வைத்திருப்பதை உணர்ந்தும் கண்ணீரில் கரைந்தாள் ஜானகி. சங்கரின் காலடிகளில் சரிந்தாள். அவளைத் தூக்கி நிறுத்திய சங்கர், அவளை மூச்சுத் திணறத் திணற இறுக அணைத்து, தன் அன்பைத் தெரிவித்தான். காற்று கூட நுழைய முடியாத அந்த நெருக்கத்தில் காமத்தீயின் நெருப்பு இல்லை. காதல் சக்தியின் துடிப்பு மட்டுமே இருந்தது. ‘நீ மட்டுமே என் உயிர்’ என்ற அவர்களது காதல் மந்திரத்தைத் தங்கள் ஸ்பரிஸ உணர்வினால் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

ஜானகியின் நினைவுகளில் மூழ்கியிருந்த சங்கரின் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது. இதைக் கண்ட வசந்தா பதறினாள்.

“என்னப்பா சங்கர்... கண்ணுல தண்ணி? திடீர்னு என்ன ஆச்சு?...”

“ஒண்ணுமில்லைம்மா.” பழைய நினைவலைகளில் இருந்து மீண்ட சங்கர், சமாளித்துப் பேசினான். அவன் அடக்கியும் அடங்காத அவனது மனது ஏதேதோ நினைவுகளை உண்டாக்கியது.

“என்னப்பா சங்கர்... இவ்வளவு முக வாட்டமா இருக்க? என்னப்பா. என்ன விஷயம்? அம்மாட்ட சொல்லக் கூடாதா?...”

“ஒண்ணுமில்லைம்மா.” பழைய நினைவலைகளில் இருந்து மீண்ட சங்கர், சமாளித்துப் பேசினான். அவன் அடக்கியும் அடங்காத அவனது மனது ஏதேதோ நினைவுகளை உண்டாக்கியது.

“என்னப்பா சங்கர்... இவ்வளவு முக வாட்டமா இருக்க? என்னப்பா, என்ன விஷயம்? அம்மாட்ட சொல்லக் கூடாதா?...”

“சொல்லக் கூடாதுன்னு இல்லைம்மா. சொல்ல வேண்டாம்னு நினைக்கறேன். என் கடந்த கால வேதனைகள் என்னோட போகட்டும். என்னோட மனக்குறையை மறந்து நான் சரண் அடைய... இதோ என் சரண்யா இருக்காளே...”

குழந்தை சரண்யாவின் அழகிய சிரிப்பில் தன் பழைய நினைவுகளை ஒதுக்கி மனநிலை தெளிந்தான் சங்கர்.

“சரண்யாவைக் குடுப்பா. அவளுக்குச் சோறு ஊட்டணும்...”

“இப்ப என்ன? சரண்யாவுக்குச் சோறு ஊட்டணும். அவ்வளவுதானே? போய் எடுத்துட்டு வாங்க. நானே என் சரணும்மாவுக்கு ஊட்டி விடறேன்.”

சரண்யா மீது அவன் கொண்டுள்ள உன்னதமான பாசம் கண்டு பூரித்துப் போன வசந்தா, உள்ளே சென்று தன் கையால் பால் சாதம் பிசைந்து வெள்ளிக் கிண்ணத்தில் கொண்டு வந்தாள். சங்கர் சாதம் ஊட்டியதும் தன் அழகான செப்பு வாயைத் திறந்து சாப்பிட்டாள் குழந்தை சரண்யா. சாப்பிட்டு முடித்ததும் சங்கரின் தோளிலேயே தலை சாய்ந்து தூங்கினாள். அவளைத் தொட்டிலில் போட்டு விட்டுத் தன் அறைக்குச் சென்றான் சங்கர்.

18

றுநாள் காலை. முத்தையா சாப்பிடும் மேஜைக்கு முன் போடப்பட்டுள்ள நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். சங்கரின் வருகைக்காகக் காத்திருந்தார். சமையல்காரக் கமலம் மற்றும் செல்லியின் உதவியுடன் காலை உணவு வகைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் வசந்தா.

“என்ன வசந்தா... சங்கர் ஏன் இன்னும் சாப்பிட வரலை?...”

“அவனுக்குக் காலையில எழுந்திருச்சதும் சரண்யா முகத்தைப் பார்க்கணும். தினமும் அதுதான் நடக்குது. இன்னிக்கும் அப்படித்தான் சங்கர் போய், தொட்டிலுக்குள்ள சரண்யாவோட முகத்தைப் பார்க்கும்போது அவ முழிச்சுக்கிட்டா. பிறகென்ன... அவளைத் தூக்கி, கொஞ்சறதுலயே நேரம் போறது தெரியல அவனுக்கு. திடீர்னு மணி பார்த்தவன் குளிச்சுட்டு வந்துடறேன்னு அவசர அவசரமாக ஓடறான். இதோ வந்துடுவான்...”

வசந்தா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சங்கர் அங்கு வந்தான்.

“சரண்யா எங்கேம்மா?”

“சரண்யாவைச் சொல்லி தூக்கிட்டுப் போய்த் தோட்டத்துல வச்சிருக்கா. நீ சாப்பிட உட்கார்ப்பா. அப்பா உனக்காகக் காத்துக்கிட்டிருக்கார்...”

முத்தையாவின் நாற்காலிக்கு எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான்.

“என்னப்பா சங்கர்... சரண்யா உன்கிட்ட நல்லா ஒட்டிக்கிட்டா போலிருக்கு?!...”

“ஆமாப்பா. சில உறவுகளைக் கடவுள் வெட்டி விட்டுடறார். சில உறவுகளை அவரே ஒட்ட வைக்கிறார். வாழற வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வேணுமே. என்னோட வாழ்க்கைக்குப் புது அர்த்தம் குடுத்திருக்கா சரண்யா...”

“எப்படியோப்பா... நீ மன அமைதியா இருந்தா அது போதும்.”

“அமைதியை வெளியே எங்கேயும் தேட வேண்டியதில்லைப்பா. அது நம்ம மனசுலதான் இருக்கு. யாருக்கு எது நிலைக்குமோ... எது கிடைக்குமோ அதுதான்ப்பா நடக்கும். இதெல்லாம் அனுபவம் எனக்குக் குடுத்துருக்கற வாழ்க்கைப் பாடங்கள்...”

“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும், வாசல் தோறும் வேதனை இருக்கும்ன்னு கவியரசு கண்ணதாசன் எழுதினது எத்தனை யதார்த்தமான உண்மை!...”

“உண்மைகள் கூடச் சில சமயங்கள்ல்ல தோத்துப் போகுதேப்பா...”

“நீ எதை மனசுல வச்சுட்டுப் பேசறன்னு எனக்குப் புரியலப்பா. ஆனா உன்னோட உள் மனசுல ஏதோ ஒரு முள் தைச்சிருக்கு. அது மட்டும் புரியுது...”

“இப்ப அப்பாவும், மகனும் சாப்பிடுங்க...”

முத்தையாவின் பேச்சும், சங்கரின் பேச்சும் தத்துவார்த்தமான ரீதியாகப் போவதைத் தடுப்பதற்காக இடைமறித்துப் பேசினாள் வசந்தா. சங்கரின் மனமும், முகமும் வாடிவிடாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த கவனமாக இருந்தாள் வசந்தா. அதைப் புரிந்து கொண்ட முத்தையா சுதாரித்துக் கொண்டார்.

“சரி, வசந்தா. இன்னிக்கு என்ன டிபன்?” உற்சாகமாகக் கேட்பதுபோல நடித்தார். அவரது உற்சாகம் சங்கரையும் பற்றிக் கொண்டது.

“என்னப்பா இது? என்ன டிபன்னு கேக்கறீங்க? என்னென்ன டிபன்னு கேளுங்கப்பா. என்னைப் பொறுத்த வரைக்கும் காலையில் நல்லா வயிறு நிறையச் சாப்பிடணும். ஆபீஸ்க்கு போயிட்டா வயிறு பசிக்காது. பசிச்சாலும் வேலை மும்முரத்துல சாப்பிடவும் முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் அவசர அவசரமா சாப்பிட்டாகணும். அதனால காலையில நிறையச் சாப்பிட்டுடுவேன். சொல்லுங்கம்ம. இன்னிக்கு என்னென்ன டிபன்?”

“இட்லி, சட்னி...”

“என்னம்மா... எடுத்த எடுப்பில எனக்குப் பிடிக்காத இட்லி, சட்னியைச் சொல்றீங்க?...”

“இட்லியும், சட்னியும் உங்க அப்பாவுக்கு. உனக்கு வெண் பெங்கல், சாம்பார், மெதுவடை, பூரி கிழங்கு கூடப் பண்ணச் சொல்லி இருக்கேன். எல்லாம் இருக்கு பாரு...”

டைனிங் டேபிள் மீது வரிசையாக வைத்திருந்த உணவு வகைகளைப் பார்த்தான் சங்கர்.

“என்னம்மா... பூரின்னு சொன்னீங்களே... கிழங்கு மட்டும்தான் இருக்கு?”


“நீ முதல்ல வெண் பொங்கலையும், வடையையும் சாப்பிடுப்பா. பூரி சூடா சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும். அதனாலதான் போட்டு வைக்கலை. இதோ ஒரு நிமிஷத்துல போட்டுடலாம்,” என்ற வசந்தா சமையல்காரப் பெண்மணி கமலத்தை அழைத்தாள்.

“கமலம், சங்கர் தம்பிக்கு சூடா பூரி போட்டுக் குடு.”

“சரிங்கம்மா!” கூறிய கமலம், பிசைந்து வைத்திருந்த பூரி மாவை எடுத்தாள். வட்டங்களாகத் தேய்த்தாள். ஏற்கெனவே தயாராகக் காய வைத்திருந்த வாணலியில் மந்த்ரா கடலை எண்ணெய் பளபளப்பாக மின்னியது. வட்டங்களை எடுத்து மந்த்ராவில் போட்டு எடுத்தாள். பொன் நிறமான, உப்பலாக எழும்பிய பூரிகளைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு வந்து வசந்தாவிடம் கொடுத்தாள்.

அவற்றை வாங்கிச் சங்கருக்கு அன்புடன் பரிமாறினாள் வசந்தா.

“கிழங்கு நிறையத் தொட்டுச் சாப்பிடுப்பா...”

“நிறையத் தொட்டுச் சாப்பிடறதா? ஒரு பூரி மேல நிறைய கிழங்கு மசாலாவை வச்சு அதுக்கு மேல இன்னொரு பூரியை வச்சு அப்படியே அந்த பூரி ஸாண்ட்விச்சை சாப்பிடணும்!” என்ற சங்கர் உப்பலான பூரியை விரலால் லேசாக அழுத்தி, அதன் மீது உருளைக் கிழங்கு மசாலாவை வைத்தான். அதன் மீது இன்னொரு பூரியை வைத்து இணைத்து இரண்டு பூரிகளைச் சுவைத்துச் சாப்பிட்டான்.

அவன் சாப்பிடுவதைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தாள் வசந்தா. இட்லியை மட்டும் சாப்பிட்டு முடித்த முத்தையா, சங்கர் பூரி சாப்பிடுவதைப் பார்த்தார். மேஜை மீது காணப்பட்ட உணவு வகைகளைப் பார்த்த அவரது வாயில் நீருறியது.

“எனக்குத் தினமும் ரெண்டு இட்லியையும் சாம்பாரையும் மட்டும் குடுக்கற. பூரி பொங்கலையெல்லாம் கண்ணுல காட்டறதோட விட்டுடற!...”

“அவனோட வயசென்ன... உங்களோட வயசென்ன? அவனுக்குக் கல்லைத் தின்னாலும் ஜீரணிக்கற வயசு. ஆசைப்படறீங்களேன்னு ரெண்டு பூரியைக் குடுத்தா நெஞ்சைக் கரிக்குதுன்னு சொல்றீங்க. கஷ்டப்படறீங்க. அது மட்டுமா? டாக்டர் ராமச்சந்திரன் என்ன சொல்லி இருக்காரு, உங்களுக்கு கொலஸ்டிரால் கொஞ்சம் அதிகமா இருக்குன்னு சொன்னார்ல? மறந்து போச்சா?” வசந்தா செல்லமாக மிரட்டியது புன்னகைத்தார் முத்தையா.

“பாவம்மா அப்பா. கொஞ்சமா பொங்கலும், ஒரே ஒரு பூரியும் குடுங்கம்மா.”

சங்கர் சொன்னதும் இடைமறித்துப் பேசினார் முத்தையா. “வேண்டாம்பா சங்கர். சும்மா உங்கம்மாவைச் சீண்டிப் பார்க்கறதுக்காகக் கேட்டேன். எனக்காக இல்லாட்டாலும் உங்க எல்லாருக்காகவும் நான் இன்னும் கொஞ்ச நாள் உயிரோட இருக்கணும். உயிரோட இருக்க வேண்டிய நான் ஆரோக்யமா இருக்கணும். அதனால எனக்கு ஆகாத போகாத சாப்பாடு, பலகாரமெல்லாம் சாப்பிடணுங்கற ஆசையை எல்லாம் விட்டுட்டேன்ப்பா. ஏற்கெனவே சொன்னபடி நாம ஆரம்பிக்கப் போற புது ஹோஸைரி கம்பெனியை எவ்வளவு சீக்கரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆம்பிக்கணும். இந்த இன்டஸ்ட்ரியை உன்னோட பொறுப்பல விட்டு, உன்னோட கடந்த காலக் கஷ்டங்களை நீ மறக்கணும். உன்னோட பிஸியான நடவடிக்கைகளை நான் பார்க்கணும். நிர்மலா விட்டுட்டுப் போன சரண்யா குட்டியை நீதான் கரை சேர்க்கணும். இதுக்கெல்லாம் என்னென்ன செய்யணுமோ அதுக்கெல்லாம் உறுதுணையா உன்கூட நின்னு நான் உதவியா இருக்கணும். அதுக்காகவாவது நான் என்னோட உடல்நலத்தை நல்லபடியா பார்த்துக்கணும்னு அக்கறையா இருக்கேன்ப்பா...”

“எனக்காக, நம்ம குடும்பத்துக்காக எவ்வளவோ பாடு படறீங்கப்பா. நீங்க நினைக்கறபடி நம்ம புது இன்டஸ்ட்ரியை வெற்றிகரமா நடத்திக் காட்டுவேன்ப்பா. சென்னையில அடையார் ஏரியாவுல ஒரு பங்களா விலைக்கு வந்திருக்கறதா நம்ப ரியல் எஸ்டேட் பழனிச்சாமி சொன்னாரு. பங்களா புதுசாத்தான் இருக்காம். பெயிண்ட் கூட அடிக்க வேண்டிய அவசியம் இருக்காதாம். ஏதோ குடும்பப் பிரச்னையால அந்த பங்களாவுக்குச் சொந்தக்காரங்க வெளிநாட்டுக்குக் குடிபோறாங்களாம். அதனால விக்கறாங்களாம்.”

“முன்ன பின்ன விலையிருந்தாலும் யோசிக்காம வாங்கிடுப்பா.”

“சரிப்பா. மத்தப்படி இன்டஸ்டிரிக்குத் தேவையான மிஷின்கள் அத்தனையும் ஆர்டர் பண்ணிட்டேன். ஃபேக்டரிக்கு இடம் பார்த்துப் பேசி முடிச்சாச்சு. ஆபீசும் ஃபேக்டரிக்குப் பக்கத்துலயே பார்த்து முடிச்சுட்டேன். பங்களா ரெடியாயிடுச்சுன்னா நாம அங்கே போயிட வேண்டியதுதான்...”

முத்தையாவும், சங்கரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டிருந்த வசந்தா, கண் கலங்கியபடி பேச ஆரம்பித்தாள்.

“இங்கே இருந்தா எனக்கு நம்ப நிர்மலாவோட நினைப்பு வந்துட்டே இருக்கு. அவ நின்ன இடம், அவ ஊஞ்சல்ல உட்கார்ந்து ஆடற காட்சி, தோட்டத்துல பூக்கற பூவை அழகா அவ கோக்கற நேர்த்தி, நாள், கிழமைன்னா அவ போடற கோலங்கள்... திடீர் திடீர்னு வந்து அம்மான்னு வாய் நிறையக் கூப்பிட்டு, என் கழுத்தைக் கட்டிக்கிட்டு, சின்னக் குழந்தை மாதிரி கொஞ்சறது... இதெல்லாம் என்னோட கண்ணுக்குள்ளயே நிக்குது. இங்கே இருந்தா இப்படித்தான். அவளோட ஞாபகம் என்னைப் போட்டு வாடடி எடுக்கும். அதனால நீங்க சொல்றபடி சீக்கிரமா நாம சென்னைக்குப் போயிடலாம். இந்த உலகத்துல எங்கே போனாலும் பெத்த பிள்ளையோட பிறப்பு, வளர்ப்பு, நினைப்பு மறக்காது. ஆனா... வளர்ந்த இந்த இடத்தை விட்டு, இந்த பங்களாவை விட்டுப் போனாலாவது என்னோட துக்கமும், நெஞ்சுப்பாரமும் கொஞ்சமாவது குறையுமான்னு பார்க்கறேன்...”

நிர்மலாவின் இழப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத வசந்தா அழுதாள்.

“அழாதீங்கம்மா. நிர்மலாதான் சரண்யாவாப் பிறந்திருக்கா. மனசைத் தேத்திக்கோங்க.” சங்கர் ஆறுதல் கூறியதும் கண்களைத் துடைத்துக் கொண்டாள் வசந்தா.

“நான்தான் சொன்னேனே வசந்தா, இன்னும் கொஞ்ச நாளைக்கு நாம ஆரோக்யமா இருக்கணும்ன்னு. நீ இப்படி கவலைப் பட்டுக்கிட்டிருந்தா உன் உடம்புதான் கெட்டுப் போகும். போம்மா. போய் உன் கையால எனக்கு ஒரு காபி போட்டுக் கொண்டு வா...”

வசந்தாவின் துக்கமான மனநிலையை மாற்றுவதற்காக, முத்தையா அவளிடம் காபி கேட்டார். வசந்தா காபி போடுவதற்காகச் சமையலறைக்குச் சென்றாள்.

“சங்கர்... நம்ப போவில் குருக்கள் ஈஸ்வர ஐயரை வரச் சொல்லி இருக்கேன். நாம சென்னைக்குப் போறதுக்கு நல்ல நாள் பார்க்கறதுக்காக அவரை வரச் சொன்னேன். அவர் நான் பார்த்துச் சொல்லட்டும். நாம மத்த ஏற்பாடுகளை மளமளன்னு முடிச்சுடுவோம்.”

“சரிப்பா. நான் ஆபீசுக்குக் கிளம்பறேன்.”

“போய்ட்டு வாப்பா.”

“சங்கர், அவனுக்கு மத்தையா வாங்கி கொடுத்திருந்த ஸொனோட்டா காரை எடுத்துக் கொண்டு, ஆபீஸிற்குக் கிளம்பினான். காரை ஓட்டும் பொழுது அவனது மனம் அவனிடம் பேசியது.”

‘இந்த சொகுசான கார் சவாரிக்கும், பங்களா வாசத்திற்குமா நான் ஏங்கினேன்?! அப்பாவின் பேச்சைக் கேட்காமல், அவர் சொல்லி மீறி அந்த...  ஜானகி... அவளைக் கல்யாணம் செஞ்சுட்ட பாவத்துக்காக மன்னிப்புக் கேட்டுட்டு எங்கேயாவது தனியா போயிடணும்னு நினைச்சேன்.


ஆனா... அப்பா... அம்மாவைப் பார்த்த பிறகு... அவங்க மறுபடியும் எங்கேயும் போயிடாதப்பான்னு கெஞ்சின பிறகு... என்னால அவங்களோட அன்பு வியூகத்தைத் தாண்டிப் போக முடியலியே... அவங்க எப்படி என்னைப் பிரிஞ்சு இருக்க முடியாம தவிக்கறாங்களோ அது போல என்னோட பிள்ளைகளையும் பிரிஞ்சு இருக்க முடியாம நான் தவிக்கிறேனே... நான் இங்கே வகை வகையா அம்மா கையால சாப்பிடறேன், சொகுசான கார் சவாரியை அனுபவிக்கிறேன்... என் மகன்கள் எங்கே, எப்படி இருக்கானுங்களோ...’

சங்கரின் மனம் அவனுடன் பேசிக் கொண்டிருந்தபடியால் அவனது கவனம் சிதறியது. சங்கர் போய்க் கொண்டிருந்த கலெக்டர் ஆபீஸ் ரேடின் இடது பக்கம் இருந்த தெருவில் இருந்து மெயின் ரோடிற்குத் திரும்பிக் கொண்டிருந்த இன்னோவா காரைக் கவனிக்கவில்லை. அவனும் அதே தெருவிற்குள் திரும்பலாம் என்று ஸ்டீயரிங்கை வளைத்தான். சட்டென்று எதிரே வந்த இன்னோவா காரைப் பார்த்துச் சுதாரித்துக் கொண்ட சங்கர் தன் காரில் க்றீச் என்று ப்ரேக் போட்டான். இன்னொவா காருக்கும், சங்கரின் காருக்கும் இடையே ஒரு அங்குல இடைவெளி மட்டுமே இருந்தது.

‘யார் அவன்? இவ்வளவு அஜாக்கிரதையாக காரை ஓட்டுவது!’ என்ற கோபத்தில் இன்னோவா காரில் இருந்து வேகமாக இறங்கினான் ஒரு நபர். அதே சமயம் ஸொனோட்டா காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த சங்கரைப் பார்த்தான். கோபமாகப் பேச வாயெடுத்தான். அதற்குள் சங்கர் அந்த நபரின் அருகே வந்தான்.

“ஸாரி ஸார். எக்ஸ்ட்ரீம்லி ஸாரி. கவனக் குறைவா காரை ஓட்டின என்னை மன்னிச்சுடுங்க...”

சங்கர் பணிவாகவும், கனிவாகவும் மன்னிப்புக் கேட்டதும், இன்னோவா காரில் வந்த நபருக்கு ஏற்பட்டிருந்த கோபம் மாயமாய் மறைந்தது.

“பரவாயில்லை ஸார்,” என்ற அந்த நபர் சங்கரின் கம்பீரமான தோறறத்தையும், செல்வச் செழிப்பான அடையாளங்களையும் பார்த்தான்.

“நீங்க யார்ன்னு தெரிஞ்சுக்கலாமா? என்னோட பேர் பிரபாகர். நான் சென்னையில ஹொஸைரி எக்ஸ்போர்ட் பண்ணிக்கிட்டிருக்கேன்....”

“என்ன? ஹொஸைரி எக்ஸ்போர்ட்டா?”

“ஆமா சார். ஏன் அவ்வளவு ஆச்சர்யமா கேட்கறீங்க?”

“சொல்றேன் மிஸ்டர் பிரபாகர். நாம ரெண்டு பேரும் காரை பார்க்கிங் ப்ளேஸ்ல பார்க்க பண்ணிட்டு இதோ பக்கத்துல ஒரு காப்பி ஷாப் இருக்கு பாருங்க. அங்கே போய் உட்கார்ந்து பேசலாம்.”

“ஓ.கே.” என்ற பிரபாகர், தனது இன்னோவா காரை ஓர் ஓரமாக நிறுத்தினான். பிரபாகரின் கார் அருகே தன் ஸொனோட்டாவை நிறுத்திவிட்டு வந்தான் சங்கர். இருவரும் காபி ஷாப்பிற்குள் சென்றனர்.

அங்கு சென்று உட்கார்ந்தனர்.

“உன்னோட பேர் சங்கர். எங்க அப்பா பேர் முத்தையா... முத்து ஃபர்னிச்சர், முத்து பாத்திரக்கடை, முத்து எலக்ட்ரானிக்ஸ்ன்னு இருக்கே...”

“ஓ... நல்லா தெரியுமே... ஃபேமஸான கடைகளாச்சே...?!”

“அதெல்லாம் எங்களோடதுதான்.”

“ஓ... வெரி குட். சென்னையில நான் ஹொஸைரி எக்ஸ்போர்ட்ஸ்ன்னு சொன்னதும் ஆச்சரியப்பட்டீங்களே... ஏன் ஸார்?”

“அதுவே? நாங்க இங்கே நடத்திக்கிட்டிருக்கற கடைகளையெல்லாம் வித்துட்டு சென்னையில ஹொஸைரி மில் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம். நீங்களும் அது சம்பந்தப்பட்ட தொழில் பண்றதா சொன்னதும் ஆச்சர்யமாயிடுச்சு...”

“ஓ... அப்படியா? மெஷின்ஸ் எல்லாம் வாங்கிட்டீங்களா?”

“ஆர்டர் குடுத்தாச்சு. கூடிய சீக்கிரம் வந்துடும்...”

இதற்குள் காபி ஷாப் சிப்பந்தி இவர்களின் மேஜை அருகே வந்தான். மெனு கார்டைக் கொடுத்தான்.

“ஹய்யோ... நான் இப்பதான் மூக்கு முட்ட ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுட்டு வந்தேன். ப்ளாக் டீ போதும். நீங்க என்ன பிரபாகர் சாப்பிடறீங்க?”

“நான் காலையில எதுவுமே சாப்பிடலை ஸார். எனக்கு ஒரு சிக்கன் ரோல், கோல்ட் காபி... கொண்டு வாப்பா...”

“ஓ.கே. ஸார்.” சிப்பந்தி நகர்ந்தான்.

“மிஸ்டர் பிரபாகர்! எக்ஸ்போர்ட்ஸ் பத்தி உங்ககிட்ட பேசணும்...”

“ஒரு நிமிஷம் ஸார்... இந்த மிடர் கிஸ்டர் எல்லாம் வேண்டாமே... ஜஸ்ட்... பிரபாகர்ன்னு சுப்பிடுங்களேன்...”

“நீங்களும் ஸார்... மோர்... ன்னெலலாம் இல்லாம சும்மா... சங்கர்ன்னே கூப்பிடலாமே...”

சங்கர் இவ்வாறு கூறியதும் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

“பிரபாகர், நான் என்னோட குடும்பத்தோட சென்னையில செட்டில் ஆகப் போறேன். சென்னையில ஹெஸைரி இன்டஸ்ட்டீஸ் ஆரம்பிச்சு நைட்டீஸ். பனியன், ஜட்டி, டீ.ஷர்ட், டவல்ஸ் எல்லாம் தயாரிக்கலாம்னு ஐடியா வச்சிருக்கேன்.”

“ப்ராண்ட் நேம் வச்சுட்டிங்களா?”

“இல்லை பிரபாகர். ப்ராண்ட் நேம் வச்சு தயார் பண்ணி மார்க்கெட்டிங் பண்றது என்னோட ஐடியா இல்லை. மொத்தமா யார் கேட்டாலும் அவங்களோட ப்ராண்ட் நேம்ல தயாரிச்சு குடுக்கலாம்ங்கறதுதான் என்னோட திட்டம். உதாரணமா நீங்களே என்னோட தயாரிப்புகளை வாங்கறீங்கன்னா... உங்களோட ப்ராண்ட் நேம்ல பண்ணிக் குடுக்கத் தயாரா இருக்கேன்...”

“உதாரணமா என்ன சங்கர்... உண்மையிலேயே உங்ககிட்ட வாங்கலாம்னு நான் யோசிக்கிறேன். ஏன் தெரியுமா? ஏற்கெனவே எங்களுக்கு சப்ளை பண்றவங்களோட தரம் எனக்குப் பிடிக்கலை. உங்களோட தயாரிப்புகள் நல்ல தரமா இருக்கக் கூடிய பட்சத்தில என்னோட எக்ஸ்போர்ட்டுக்குத் தேவையான எல்லாத்தையும் உங்ககிட்டயே வாங்கிப்பேன்.”

“நிச்சயமா நல்ல குவாலிட்டியா, வித விதமான டிஸைன்கள்ல என்னால தயாரிச்சுத் தர முடியும். அது சரி, நீங்க ஏதாவது ப்ராண்ட் நேம்ல எக்ஸ்போர்ட் பண்றீங்களா?”

“ஆமா சங்கர். ‘ராசாத்தி’தான் எங்க ப்ராண்ட் நேம்.”

“ஓகோ! ராசாத்தி! பேர் ரொம்ப நல்லா இருக்கு.”

“தேங்க் யூ. ரேட்டும் எனக்கு ஏற்கெனவே சப்ளை பண்றவங்களோட ரேட்டை விடக் குறைவா இருக்கணும். தயாரிப்புகளும் தரமானதா இருக்கணும்...”

“சாம்பிள் பண்ணித் தரேன் பாருங்க. அதுக்கப்புறம் சொல்லுங்க.”

அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் ஆர்டர் கொடுத்த உணவு வகைகளையும் ப்ளாக் டீயையும் கொண்டு வந்தான் சிப்பந்தி.

பிரபாகர் சாப்பிட ஆரம்பித்தான். அவனது பேச்சையும் தொடர்ந்தான்.

“தற்செயலா நடக்கற எல்லா விஷயத்தையும் அது ஒரு விபத்து மாதிரி நடந்துடுச்சுன்னு சொல்லுவாங்க. ஆனா இன்னிக்கு உண்மையிலேயே ஒரு விபத்து நடக்கறதுல இருந்து தப்பிச்சு தற்செயலா நாம சந்திச்சுப் பேசிக்கிட்டிருக்கோம். தற்செயலா நான் செஞ்சுக்கிட்டிருக்கற தொழிலுக்கும் நீங்க ஆரம்பிக்கப் போற தொழிலுக்கும் நெருக்கமான சம்பந்தம் இருக்கு... தற்செயலா நானும் வேற ஒரு சப்ளையரைத் தேடிக்கிட்டிருக்கற ஐடியாவுல இருக்கும்போது தற்செயலா நீங்க புதுசா ஹொஸைரி இன்டஸ்ட்ரீ ஆரம்பிக்கறதாவும், எனக்கு உங்களோட தயாரிப்புகளை சப்ளை பண்றதாவும் சொல்றீங்க...” பிரபாகர் கூறியதைக் கேட்ட சங்கர் சிரித்தான்.

“அது சரி... நீங்க... இங்கே... திருச்சியில...?!” என்று கேட்டான் சங்கர்.


“திருச்சியில ஒரு பார்ட்டியைப் பார்க்க வந்தேன். நிறையச் சரக்கு தேவைப்படறதாகவும், ரேட் பேசணும்ன்னும் கூப்பிட்டிருந்தார். அவரோட பேர் தினகரபோஸ். புதுசா ரெடிமேட் ஷாப் ஆரம்பிக்கறதா சொன்னார். அவரோட கடையில ஹொஸைரி ஐட்டங்களையும் ஒரு பகுதியில வைக்கப்போறதா சொன்னார். அந்த தினகர போஸ்ங்கறவரோட மச்சினர்க்கு எங்க முதலாளி ஃப்ரெண்டாம். அதனால எங்க முதலாளி தினகர போஸைப் பார்த்துப் பேசிட்டு வரச் சொன்னார்...”

“என்ன?! முதலாளியா?!...”

“ஆமா சங்கர். எங்க ஹொஸைரி எக்போர்ட் கம்பெனியோட முதலாளி மிஸ்டர் ராஜேந்திர பிரசாத். அவருக்கு நான் மகன் மாதிரி. அவருக்கு நான் மகன் ஆனது ஒரு பெரிய கதை. அதையெல்லாம் உங்ககிட்ட சொல்லணும். இன்னொரு நாள் நான் உங்களோட அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வரேன். நான் இங்கே வந்ததுன்னு இன்னொரு காரணம், திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார். அந்தப் பிள்ளையார் கோவிலுக்கு நான் இது வரைக்கும் போனது இல்லை. எங்க முதலாளி ராஜேந்திர பிரசாத், என்னை அந்தக் கோவிலுக்குப் போயிட்டு வரணும்ன்னு சொல்லி அனுப்பிச்சார்.”

“ஆமா பிரபாகர். அந்தக் கோவில் பிள்ளையார் ரொம்ப சக்தியுள்ள கடவுள். கண்டிப்பா நீங்க போயிட்டு வாங்க...”

“சரி சங்கர். முன்ன பின்ன பார்க்காத உங்களை ரொம்ப நாளா பார்த்துப் பழகின மாதிரி ஒரு உணர்வு எனக்கு. உங்களோட மொபைல் நம்பர் குடுங்க. உங்களைப் பார்க்கணும்ன்னா போன் பண்ணிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும்.”

சங்கர் மொபைல் நம்பரைச் சொன்னதும், அதைத் தன் மொபைல் போன் புக்கில் போட்டு வைத்துக் கொண்டான் பிரபாகர்.

“அப்போ... நான் கிளம்பறேன் சங்கர்” என்ற பிரபாகர், சிப்பந்தி கொண்டு வந்த பில்லுக்குப் பணம் கட்டுவதற்காகத் தன் பர்ஸை எடுத்தான். அவன் பணம் எடுப்பதைத் தடுக்க முயற்சி செய்தான் சங்கர்.

“இது எங்க ஊர். நீங்க எங்க ஊருக்கு வந்திருக்கீங்க. நான்தான் குடுக்கணும்.” பிரபாகரிடமிருந்த பில்லை வாங்கிய சங்கர் பணத்தைக் கொடுத்தான்.

இருவரும் அங்கிருந்து கிளம்ப, கார்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தனர்.

சங்கரின் கை குலுக்கி அவனிடம் விடை பெற்றுத் தன் இன்னோவா காரில் பயணித்தான் பிரபாகர். ஸொனோட்டா காரில் ஏறிய சங்கரின் முகத்தில் புதிய சந்தோஷம் தென்பட்டது.

‘புது இன்டஸ்ட்ரி துவங்கற நேரம் நல்ல நேரம் போலிருக்கு. நான் நினைச்சபடியே... என்னோட திட்டப்படியே நடக்கறதுக்கு ஏத்த மாதிரி எக்ஸ்போர்ட் பண்ற பிரபாகர் அறிமுகமாகி இருக்கார். அந்தப் பிரபாகர் மூலமா புதுத் தொழிலை விருத்தி பண்ணிடலாம்னு தோணுது.’

புதிய தொழில் அபிவிருத்தி அடையும் அடையாளங்கள் தென்பட்டதும், சங்கரின் கவலைகள் எப்போதைக்குச் சற்று மறந்தன. புது உற்சாகத்துடன் காரை ஓட்டினான்.

19

பாண்டிச்சேரி, மங்களத்தம்மாவுடைய பங்களாவின் பராமரிப்பில் பெரும்பங்கையும், மங்களத்தம்மாவின் குடும்ப நலன்களில் கடுமையான உழைப்பையும் மேற்கொண்ட ஜானகி மீது திகுந்த அன்பு கொண்டிருந்தாள் மங்களத்தம்மா.

ஜானகியின் மகன்கள் கண்ணாவையும், குட்டியையும் எந்த வேலையும் வாங்காமல் அவர்களைப் படிக்க வைத்தாள் மங்களத்தம்மா. அவர்களது படிப்பிற்குரிய செலவுகள் அத்தனையையும் மங்களத்தம்மா ஏற்றுக் கொண்டாள். அவர்களுக்குப் பள்ளிக்கூடச் சீருடைகள் மட்டுமல்லாது பண்டிகை தினங்களில் நல்ல, அழகிய உடைகளையும் வாங்கிக் கொடுப்பது மங்களத்தம்மாவின் வழக்கம். ஜானகிக்குப் புடவைகள், ஜாக்கெட் துணிகள் வாங்கிக் கொடுப்பாள்.

உழைப்பை மையமாகக் கொண்டு தன் கணவனின் பிரிவையும், அதனால் ஏற்பட்ட வறுமையையும் ஓரளவு வளமானதாக மாற்றிக் கொண்டாள் ஜானகி. வறுமை வளம் ஆகலாம். ஆனால் அவளது மனம்?! அது அவளது வாழ்வில் ஏற்பட்டுள்ள துன்பச் சுமையைச் சுமப்பது பற்றி சிந்தித்தபடியே இருக்க வைத்தது. வீட்டு வேலைகளிலும், சமையல் வேலைகளிலும், மற்ற ஊழியர்களை உரிய நேரத்தில், அவர்கள் பணிக்ள் செய்வதை மேற்பார்வை பார்ப்பதிலும் ஈடுபட்டிருந்தாலும் மனதின் ஓரத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் சோகம் அவளது கண்களை நிரந்தரமாக ஈரத்தில் வைத்திருந்தது. மனதை முள் போல் தைத்துக் கொண்டிருந்தது.

மங்களத்தம்மாவின் உறவினர் கூட்டம் அடிக்கடி அங்கே வருவதும், சில நாட்கள் தங்குவதுமாக இருப்பது வழக்கம். அது போன்ற சமயங்களில் ஜானகிக்கு மிக அதிகமாக வேலைப் பளு இருக்கும். ரகுவைப் போன்ற போக்கிரிகளும் அந்த உறவுக் கூட்டத்தில் இருப்பார்கள்.

குறையாத இளமையும், நிறைந்த செழுமையான உடல் வனப்பும் கொண்ட ஜானகியை வளைத்துப் போட முயன்றவர்கள் பலர். அத்தகைய கேவலமான மனிதர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, அவள் நெருப்பாகத் தகிக்க வேண்டி இருந்தது. அந்தச் சூழ்நிலை அளிக்கும் வேதனைகளைச் சகித்துக் கொள்ள வேண்டி இருந்தது.

‘புருஷன் துணை இல்லாதவ. கூப்பிட்டா வந்துடுவா!’ன்னு சில ஆண்கள் தன்னை மிகக் கேவலமாக மதிப்பிடுவதை நினைத்து அவமானப்பட்டாள். சில நேரம் ஆத்திரப்பட்டாள். உள்ளத்திற்குள் ஒளித்து வைத்து ரகசியமாய் அழுதாள்.

அன்றும் அப்படித்தான். உறவினர்கள் பத்துப் பேருக்கு அதிகப்படியாகச் சமைத்து முடித்துப் பரிமாறிய பிறகு ஏற்பட்ட களைப்பால் சமையலறையிலேயே ஓர் ஓரத்தில் சுருண்டு படுத்துக் கொண்டாள் ஜானகி. படுத்தவள், அலுப்பினால் உடனே கண் அயர்ந்தாள். ஆழ்ந்த தூக்கத்திலிருந்த அவளது கழுத்தில் ஏதோ பூச்சி ஊருவது போலிருக்க, கைகளால் தட்டிவிட்டாள். மறுபடியும் அதே உணர்வு ஏற்பட மறுபடியும் தட்டிவிட்டாள். மூன்றாவது முறை ஏதோ உணர்வு தோன்றிய போது அவளது அலுப்பும், ஆழ்ந்த தூக்கமும் கலைந்து போனது. தன் கழுத்தில் ஊர்வது பூச்சி அல்ல. ஒரு மனிதனின் கை என்று புரிந்து கொண்டதில் வேகமாய் எழுந்தாள். வேங்கையைப் போல் சீறினாள். எதிரே நிற்பவன் யாரென்று கூடப் பார்க்காமல் எரிமலையாய் வெடித்தாள்.

“நீங்க கோடீஸ்வரனா இருக்கலாம். ஆனா இப்ப என் முன்னாடி நீங்க ஒரு அற்பப் புழு. அபலைப் பொண்ணுன்னா சேலையை மாத்தற மாதிரி ஆளை மாத்தறவன்னு தப்புக் கணக்குப் போடாதீங்க. வறுமையின் கொடுமையில வாழற பொண்ணோட இளமையை இழிவா நினைக்காதீங்க. நீங்க நினைக்கற மாதிரியான பொண்ணா இருந்தா நான் ஏன் இந் சமையல்காரி வேலைக்கு வரணும்? மானமும், கெளரவமும்தான் எனக்கு முக்கியம். பொண்டாட்டி, பிள்ளை, குட்டின்னு வாழற குடும்பஸ்தரான உங்களுக்கு ஏன் இவ்வளவு கேவலமான புத்தி....”

ஜானகியின் வசைமாரியினால் மனம் மாறினான் அவள் மீது கை வைத்தவன். ஜானகியின் சாட்டையடியான வார்த்தைகள் அவனது பெண் வேட்டையாடும் கேடு கெட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டின. அவன் மனதைச் சுட்டன.


அபரிமிதமான பணச் செருக்கினாலும், ஆண் என்ற ஆணவத்தினாலும் அநாதாரவாய் மங்களத்தம்மாவிடம் அடைக்கலம் புகுந்திருந்த ஜானகியின் அழகையும் மானத்தையும் சூறையாடலாம் என்று வந்தவனைச் சொற்களாலேயே கன்னத்தில் அறைந்தாள் ஜானகி.

ஜானகி எனும் பெண் புலியின் சீற்றத்தைக் கண்டு மிரண்டு போன அவன், மங்களத்தம்மாவின் தங்கை பேரன். மனைவி, குழந்தைகளுடன் வாழ்பவன். ஜானகி பேசிய பேச்சினால் நிலை குலைந்து போன அவன் தலை குனிந்து நின்றான்.

அப்போது அங்கே வேதாசலம் வந்தார். ஜானகியின் கோபம் கொந்தளிப்புகளைக் கேட்டுவிட்ட அவர் உள்ளே வந்ததும் அவன் வெளியேறினான்.

“நீ கோபமா பேசினதையெல்லாம் கேட்டேன்மா ஜானகி. திருட்டுத்தனமா சமையலறைக்குள்ள நுழைஞ்ச பூனைக்குச் சூடு போட்ட பால் பானை மாதிரி நீ அவனுக்குச் சூடு போட்டுட்ட. உன்னைப் போலவே எல்லாப் பெண்களும் தைரியமா செயல்பட்டா பிறன் மனை நோக்கும் ஆண்களே நம்ம சமுதாயத்துல இருக்க மாட்டாங்க...” ஜானகிக்கு ஆறுதலாகப் பேசி வேதாசலம் வருடத்திற்கு ஓரிரு முறை அங்கே வருவார். சில நாட்கள் தங்கிச் செல்வார். அவர் மங்களத்தம்மாவின் ஒன்றுவிட்ட சகோதரர்.

“ஐயா... வேலை முடிஞ்ச களைப்புல கொஞ்ச நேரம் கண் அசரலாம்ன்னு படுத்தேன்ங்க. நிம்மதியா பத்து நிமிஷம் கூட தூங்கலிங்க. அதுக்குள்ள...”

“கவலைப்படாதேம்மா. அவன் இனிமேல் உன் வழிக்கு வரமாட்டான். அவன் மனுசனா இருந்தா உன்னோட வசவுகளே அவனைத் திருத்தி இருக்கும். போம்மா. போய் ரெண்டு வாய் சாப்பிடு. இனி மறுபடி நாலு மணிக்கு உன்னோட வேலை தொடரணுமே...”

“சாப்பாடு என்னங்கய்யா முக்கியம்? மானத்தோடு வாழறதுதாங்க முக்கியம். என்னை இழிவா நினைச்சு யாராவது என்னை அணுக முயற்சி பண்ணினா எனக்குத் தாங்க முடியலய்யா...”

“தாங்கித்தாம்மா ஆகணும். இது பொண்ணாப் பொறந்த ஜென்மங்களுக்கு விதிக்கப்பட்ட விதி. சகல பூமியையும் தாங்கற பூமாதேவி மாதிரி உன்னோட துன்ப பாரத்தைத் தனியாளா சுமந்துக்கிட்டிருக்க...”

“சுமையை ஒரு நாளைக்கு இறக்கி வைக்கணுமேய்யா. எத்தனை நாளைக்குத் தாங்க முடியும்? விடியும்னு காத்திருக்கோம். விடியலே வராம இருட்டா இருந்தா என்ன பண்ண முடியும்? ஏதோ என் மேல பகவான் வச்ச கருணை.... மங்களத்தம்மா வீட்ல இடம் கிடைச்சுது. இல்லைன்னா என்னோட பிள்ளைங்களும் கூலி வேலைக்குத்தான் போக வேண்டியிருக்கும். தானத்தில் சிறந்த கல்விதானத்தை என்னோட இஷ்ட தெய்வம் மாரியம்மன் இந்த மங்களத்தம்மா ரூபத்துல குடுத்திருக்கு...”

“குடுக்கற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொட்டாட்டாலும் உன்னோட மகனுங்க உயர்ந்த நிலைமைக்கு வர்றதுக்குரிய கல்வியைக் குடுக்குது. கவலைப்படாதேம்மா...”

“கவலைப்படறதுக்குக் கூட நேரமே இல்லாம கடுமையா உழைச்சுக்கிட்டிருக்கேன்ய்யா...”

“உன்னோட உழைப்புக்கேத்த உயர்வு நிச்சயமா கிடைக்கும்மா.”

“கிடைக்கும்னு எதையும் எதிர்பார்த்து நான் வாழலைங்க. நதியோட போக்குல ஓடற தண்ணி மாதிரி வாழ்க்கை போற போக்குல நான் போய்க்கிட்டிருக்கேன். ஏமாற்றமே வாழ்க்கையாகிப் போன நிலைமையில எதிர்பார்ப்புகளே இல்லிங்கய்யா...”

“ஜானகி... நீ தனி ஆளா தவிச்சுப் போய் எங்க மங்களக்கா வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கன்னு தெரியும். ஆனா... உனக்கு ஏன் இந்த நிலைமைன்னு உன்கிட்ட நான் கேட்டது இல்லை... அதைத் தெரிஞ்சுக்கணுங்கற அவசியமும் இல்லை. ஆனா உன் உடன்பிறக்காத ஒரு அண்ணனா என்னால ஆறுதல் சொல்ல முடியும். என்னோட மகளும், மகனும் வெளிநாட்டில போய் செட்டில் ஆனப்புறம் நானும், என்னோட மனைவியும் பிள்ளைங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும்ன்னு வாழ்த்திக்கிட்டு எங்க வாழ்நாட்களைக் கடத்திக்கிட்டிருக்கோம். எங்களோட எஞ்சிய கால வாழ்க்கை பயனுள்ளதா இருக்கணும்னு எங்க ஊர்ல்ல முதியோர் இல்லம் நடத்திக்கிட்டிருக்கோம்...”

“நடத்துங்கய்யா. நம்பளால நாலு பேருக்கு நல்லது நடக்குதுன்னு நினைக்கும்போதே மனசு லேசா பஞ்சு போல ஆகிடுது. உங்களோட நல்ல மனசுக்கு உங்க பிள்ளைங்க தீர்க்காயுசா, நிறைஞ்ச வாழ்க்கை வாழ்வாங்கய்யா.”

“வாழ்க்கைங்கறது சின்ன விஷயம் இல்லைம்மா. ஒரு சின்ன விதை எப்படி முளைச்சு, இளம் செடியா, துளிர்விட்டு, வளர்ந்து நாளடைவில் பெரிய ஆலமரமா வளருதோ, அது போல நம்ப அம்மா – அப்பாவோட ஆசைங்கற விதையில உருவான நம்பளோட வாழ்க்கையும் ஆலமரம் மாதிரிதான். அந்த மரத்தோட விழுதுகள் பிள்ளைகள். அவங்க வேரூன்ற வரைக்கும் உன் வியர்வை சிந்த உழைப்பைக் காணிக்கையாக்கு. நிச்சயம் உன் பிள்ளைகளால உனக்கு நல்ல காலம் பிறக்கும்.”

“உங்க வாக்கு பலிக்கட்டுங்கய்யா.”

“சரி, ஜானகி. நீ சாப்பிடு. மணி நாலு ஆகப்போகுது.”

“சரிங்கய்யா.”

வேதாசலம் நகர்ந்ததும் ஜானகி தட்டை எடுத்துச் சாப்பிட உட்கார்ந்தாள்.

20

சென்னைப் பள்ளிக்கரணைப் பகுதியில் பங்களாவையும், அதன் அருகில் காலி இடமாகவும் வாங்கி இருந்தான் சஙகர். திருச்சியிலருந்து சென்னைக்கு வந்து குடும்பத்தினர் அனைவரும் அந்த பங்களாவில் குடி புகுந்தார்கள். காலி இடத்தில் கட்டடம் துரிதமாகக் கட்டப்பட்டு அங்கே பின்னலாடை தயாரிப்பதற்குரிய மிஷின்கள் அமைக்கப்பட்டன. புதிய தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.

வசந்தாவிற்கு ஊர் மாற்றி வந்ததும் சற்று ஆறுதலாக இருந்தது. திருச்சி பங்களாவில் அடிக்கடி நிர்மலாவின் நினைவுகள் வந்து வாட்டி வதைக்கும். இங்கே வந்த பிறகு புதிய இடத்தின் மாறுதல்கள் அவளுக்கு ஓரளவு மன அமைதி அளித்தன.

முத்தையாவிடம் கலந்து ஆலோசித்து ஃபேக்டரியின் திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்தான் சங்கர்.

“அப்பா... ஃபேக்டரி திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கறதுக்கு ஏவி.எம்.சரவணன் ஸாரைக் கூப்பிடலாம்னு நினைக்கிறேன்.”

“ஓ.... கூப்பிடலாமே. சரவணன் ஸாரோட அப்பாவும் என்னோட பெரிப்பா மகனும் அந்தக் காலத்துல ரொம்ப நெருக்கமான நண்பர்கள். ஏவி.மெய்யப்பன் ஐயா இறந்து போன ரெண்டு மூணு வருஷத்துல எங்க பெரியப்பா மகனும் இறந்துவிட்டாரு. அவர் யார்னு தெரியுதா உனக்கு? தனுஷ் கோடி அண்ணா தனுஷ்கோடி அண்ணான்னு ஒருத்தர் திருச்சியில நம்ம பங்களாவுக்கு வருவாரு... ஞாபகம் இருக்கா? நீ அப்போ சின்னப் பையன். நல்ல உயரமா, பெரிய மீசை வச்சிருப்பாரு. தார்பாச்சி ஸ்டைல் வேஷ்டி கட்டி, தொளதொளன்னு மேல்சட்டை போட்டிருப்பாரு...”

“எனக்கு நல்லா ஞாபகம் இருக்குப்பா. என்னை அவர், சங்காலி சங்காலின்னு கூப்பிடுவாரு...”

“அவரேதான். பரவாயில்லையே. நல்லா ஞாபகம் வச்சிருக்கியே?!”

“அவரோட ட்ரெஸ், பேசற விதம், அவரோட அசாதாரணமான உயரம் இதெல்லாம் ஒரு வித்தியாசமா இருந்ததுனால நல்லா ஞாபகம் இருக்கு.”

“அந்த தனுஷ்கோடி அண்ணனுக்குச் சரவணன் ஸாரோட அப்பா நண்பர். சரவணன் ஸார் கூட நல்லா ஞாபகம் வச்சிருப்பாரு.


அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு அவரைப் பார்த்துப் பேசு. நிச்சயமா நம்ம விழாவிற்குத் தலைமை தாங்கறதுக்கு அவர் வருவாரு.”

“சரிப்பா. இதயம் நல்லெண்ணெய் அதிபர் மிஸ்டர் முத்து, விளம்பரப்பட இயக்குனர் மிஸ்டர் லேகா ரத்னகுமார், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஸார், சுகிசிவம் ஐயா, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விவநாதன் ஐயா இவங்களையெல்லாம் சிறப்பு விருந்தினரா கூப்பிடலாம்னு நினைக்கறேன்.”

“இதயம் முத்துவை உனக்குப் பழக்கமா?”

“ரொம்ப நெருங்கின பழக்கம் கிடையாது. மைம் மேனேஜ்மென்ட் பத்தி அவர் மேடையில பேசறதை நிறைய தடவை கேட்டிருக்கேன். சூப்பரா பேசுவார். மேடைப் பேச்சு முடிஞ்சதும் அவரைப் போய்ப் பார்த்துப் பாராட்டி இருக்கேன். அந்த சமயங்களில் என்னை நான் யார், என்ன பண்றேன்னு கேட்டிருக்காரு. ரொம்ப எளிமையான மனிதர். திறமையான மனிதர். அவர் கூடத்தான் டைரக்டர் லேகா ரத்னகுமாரையும் பார்த்திருக்கேன். அவர்தான் இதயம் நல்லெண்ணெய் விளம்பரப் படங்களை எடுக்கிறவரு. டைரக்ஷனும் அவர்தான். எப்பவும் கருப்பு டிரஸ்லதான் இருப்பாரு. அதைப்பத்தி அவர்கிட்ட கேட்டதுக்கு ‘வறுமையின் நிறம் கருப்பு’ன்னு சொன்னாரு...”

“என்னது? வறுமையின் நிறம் கருப்பா?!”

“ஆமாப்பா. அவர் கஷ்டப்பட்ட காலத்துல துவைச்சுப் போட்டு உடுத்திக்க மாத்து ட்ரெஸ் வாங்கறதுக்குக் கூட வசதி இல்லாத நிலைமையாம். அதனால முந்தின நாள் போட்ட அதே கருப்பு பேண்ட், கருப்பு ஷர்ட்டை மறுநாளும் போட்டுச் சமாளிச்சிருக்காரு. ‘என்னோட வறுமையினால கருப்பு ட்ரெஸ் போடறது எனக்கு வழக்கமா ஆயிடுச்சு. நாளடைவில நான் முன்னேறி, பிரபலமான பிறகும் அதுவே எனக்கு ஒரு ‘இமேஜ்’ ஆயிடுச்சு!’ அப்படின்னு சொல்லி ‘ஜீரோ டு ஹீரோ’ன்னு அவரைப் பத்தின ஒரு புஸ்தகம் கொடுத்தாரு. சாதாரண நிலமையில இருந்து கஷ்டப்பட்டு உழைச்சு இன்னிக்கு விளம்பரப்பட உலகமே அவரைத் திரும்பிப் பார்க்கற அளவுக்கு அவர் எப்படி முன்னேறினார்ன்னு அந்தப் புஸ்தகத்துல எழுதியிருந்ததைப் படிச்சேன். வாழ்க்கையில முன்னுக்குவரத் துடிக்கும் இளைஞர்களுக்கு அந்த ‘ஜீரோ டு ஹீரோ’ புத்தகம் முன்னோடியா இருக்கும்.”

“அப்படின்னா... நம்ம திறப்பு விழாவுக்குச் சிறப்பு விருந்தினரா அவசியம் அவரை அழைக்கணும். நீ பார்த்து ஏற்பாடு பண்ணு. ஒண்ணொண்ணுத்துக்கும் என்னைக் கேட்டுதான் செய்யணுங்கறது இல்லை. நீயா பார்த்துச் சிறப்பா செய்.”

“சரிப்பா.”

“விழாவுக்கு வர்ற சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை வாங்கணும். குமரன் சில்க்ஸ் போய் அதை வாங்கிடறேன். அம்மாவோட வெள்ளி அன்ன விளக்கை எடுத்துட்டுப் போயிடுவோம்.”

“அதான் சொன்னேனேப்பா. நீ பார்த்துச் செய்ன்னு. உனக்காகத்தான் இந்தப் புது கம்பெனியை ஆரம்பிக்கற திட்டம் போட்டேன். வேற எதைப் பத்தியும் யோசிக்காதே. புதுசா இன்னிக்குப் பிறந்ததா நினைச்சுக்கோ. கடந்த காலமெல்லாம் மறந்து போன காலமாகட்டும். இனி நடக்கப் போறதை மட்டுமே நீ நினைக்கணும். செயல்படணும்.”

“சரிப்பா. எனக்காக நீங்க செய்யற இந்த முயற்சியினால இந்தப் புதுத் தொழிலை முன்னுக்குக் கொண்டு வந்து நல்ல லாபம் எடுக்கறது மட்டும் என்னோட எண்ணமில்லை. நல்ல, தரமான தயாரிப்பாளர்கள்ங்கற பேரையும் எடுப்பேன். நீங்க சொன்ன மாதிரி ஊர் விட்டு ஊர் வந்த இடத்துல புதுப்பிறவி எடுத்ததுபோல என் மனசை ஈடுபடுத்தி வெற்றி அடைவேன்.”

‘கடவுளோட அருளும், என்னோட ஆசிர்வாதமும் உனக்கு எப்பவும் உண்டு.’

“தேங்க்ஸ்ப்பா!” சங்கரின் மனதில் திமான உறுதியும், தைர்யமும் தோன்றியது.

21

பிபின்னலாடைத் தயாரிப்பு நிறுவன ஃபேக்டரியின் துவக்க விழா பிரபல பிரமுகர்களின் தலைமையிலும், வாழ்த்துரையிலும் இனிது நடைபெற்றது. சரண்யா ஹோஸைரிஸ் என்ற அந்த நிறுவனத்திற்குப் பெயரிட்டிருந்தான் சங்கர். ஏற்றுமதி செய்யும் அளவு பெருமளவில் செய்ய வேண்டும் என்ற அலட்சியத்துடன் உழைத்தான் சங்கர். துவக்க விழாவிற்கு வந்திருந்த பிரபாகருக்கு நைட்டி போன்ற பின்னலாடைகளைத் தனது ஃபேக்டரியில் தயாரித்து சேம்பிள் கொடுத்தான் சங்கர்.

பிரபாகருக்கு அவற்றின் தரம் மிகவும் பிடித்தது. அவன் முன்பு வாங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தில் தரம் குறைவாகவும் விலை அதிகமாகவும் இருந்தபடியால் சங்கரிடமே தனது எக்ஸ்போர்ட்ஸ் ஆடர்களுக்கு மொத்தமாக வாங்க ஆரம்பித்தான். தொடர்ந்து வாங்கினான். உள்நாட்டிலும் பல பிரபல ஜவுளிகடைகளிலும், ஆயத்த ஆடைக் கடைகளிலும் அவரவர் ப்ராண்ட் நேம் போட்டுத் தயாரித்துக் கொடுத்த சங்கரின் நிறுவனம் மிக விரைவாக வளர்ந்தது.

அங்கே தொழில் வளர, குடும்பத்தில் சரண்யாவும் வளர்ந்து கொண்டிருந்தாள். சங்கரை ‘அப்பா’ என்று மழலையில் அழைக்க ஆரம்பித்த அவள், அவனது அளவற்ற பாசத்தினால் வளர்ந்து விபரம் தெரிந்த பிறகும் அவனை ‘அப்பா’ என்றே அழைத்தாள். எதற்கெடுத்தாலும் ‘அப்பா’, ‘அப்பா’ என்று சங்கரிடம்தான் வருவாள்.

தனக்கு நேரம் இருக்கும் பொழுதெல்லாம் சங்கருடன் பேசி மகிழ்வாள். அவன் செல்லும் இடங்களுக்கு அழைதுச் செல்வான். தனது நிறுவனத்தின் மீது எத்தனை ஈடுபாடு கொண்டானோ அதைவிடப் பன்மடங்கு அக்கறையையும், அன்பையும் சரண்யா மீது வைத்து உயிருக்குயிராய் நேசித்தான்.

நிர்மலாவின் கணவன் முரளி மறுமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவில் ஒரு உத்யோகம் தேடிக் கொண்டு அங்கே குடியேறிவிட்டான். வருடத்திற்கு ஓரிரு முறைகள் தொலைபேசியில் சரண்யாவின் நலன் விசாரிப்பான். அவனுக்கு இரண்டாவது மனைவி மூலம் குழந்தைகள் உருவாகி அவனுக்கென்று புதிய குடும்பத் தோன்றியதும் நாளடைவில் சரண்யா பற்றிய நலம் விசாரிப்புகள் கூட நின்று போயின. வசந்தாவின் அன்பும், சங்கரின் பாசமும் அபரிமிதமாகக் கிடைத்த சரண்யாவிற்கு எந்தக் குறையும் இல்லை.

‘குழந்தை வளர்க்கும் வயசா எனக்கு?’ என்று சங்கரிடம் கேட்ட வசந்தா, நிர்மனாவின் குழந்தையை வளர்த்து ஆளாக்கும் நிலை ஏற்பட்டது. தன் உடல் வலிமையாய் இல்லாவிட்டாலும், மன வலிமையாலும், சங்கரின் உறுதுணையாலும் சரண்யாவை வளர்த்தாள் வசந்தா.

22

திதிறப்பு விழா முடிந்து அனைவரும் விடை பெற்றுச் சென்றனர். பிரபாகர் மட்டும் சங்கருடன் இருந்தான்.

"தேங்க்ஸ் பிரபாகர். காலையில திறப்பு விழாவுக்கு முதல் ஆளா வந்தீங்க. இப்ப எல்லாரும் போன பிறகும் எனக்குத் துணையா இருக்கீங்க...."

"இதென்ன பெரிய விஷயமா? ஏதோ என்னால முடிஞ்சது... நாங்க ஏற்கெனவே எக்ஸ்போர்ட் பிஸினஸ்ல இருக்கோம். எங்களுக்கு சப்ளை பண்ற ஹொஸைரி தயாரிப்பாளர்கள் அனுப்பற டிஸைன் நல்லா இல்லை. தரமும் மட்டமா இருக்கு. அதனால எங்களோட முழுத் தேவைக்கும் இனி நீங்களே தயாரிச்சுக் குடுங்க. எங்க ப்ராண்ட் நேம் 'ராசாத்தி'ன்னு லேபிள் போட்டுக் குடுத்துடுங்க. ஏற்கெனவே நீங்க குடுத்த சேம்பிள் பின்னலாடைகள் நல்ல குவாலிட்டியா இருக்கும்.


டிஸைன்சும் நல்லா இருக்கும். எனக்காக மெனக்கெட்டு திறப்பு விழாவுக்கு முன்னாடியே மிஷினை ஓட்டி சேம்பிள்ஸ் பண்ணிக் குடுத்திருக்கீங்க. டிஸைன்ஸ் ரொம்ப அருமையா இருக்கு. உங்க டிஸைனர் யாரு?"

"தாட்சாயணி'ன்னு ஒரு லேடி, ஸ்மார்ட்டான பொண்ணு. சினிமாத்துறையில பிரபலமா இருக்காங்க. அவங்கதான் டிஸைன் பண்ணிக் குடுக்குறாங்க. நல்ல கற்பனை வளம் உள்ள பொண்ணு. இன்னிக்கு ட்ரெண்டுக்கு ஏத்த மாதிரி சூப்பரா டிஸைன் பண்றாங்க."

"ஓ. வெரி குட்..."

"எங்க அப்பாகிட்ட உங்களை அறிமுகம் பண்ணி வச்சப்ப உங்களை மாதிரி ஒரு திறமையானவரோட நட்புக்கு நீ ரொம்ப லக்கி சங்கர்ன்னு சொன்னார். திறமை மட்டும் இல்லைப்பா. அவரோட மனசும் நல்ல மனசுன்னு நான் சொன்னேன்."

"சங்கர்! நீங்க என்னை நல்லவர் நல்லவர்ன்னு சொல்லச் சொல்ல என்னோட மனச்சாட்சி குத்துது. உங்ககிட்ட என்னைப் பத்தி முழுமையா சொல்றதுக்கு நேரம் வந்துருச்சுன்னு நினைக்கிறேன். ஏதோ ஒரு உணர்வு உங்ககிட்ட என்னை இன்னும் நெருங்கிப் பழகும்படி தூண்டுது. அது என்னன்னு எனக்கே புரியலை. உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா இப்ப டின்னருக்கு எங்கயாவது போகலாமா? ஆற அமர உட்கார்ந்து பேசணும்..."

"எனக்கு ஓ.கே. திறப்பு விழா வேலை நல்லபடியா முடிஞ்சுருச்சு. அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். அப்பா, சரண்யா எல்லாரும் வீட்டுக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. எனக்கு வீட்டுக்குப் போறதைத் தவிர வேற வேலை இல்லை. தாராளமா நாம டின்னருக்குப் போலாமே..."

"தேங்க்யூ சங்கர், கிளம்பலாமா?"

"ஒரு நிமிஷம், அம்மாவைக் கூப்பிட்டுச் சாப்பிடறதுக்கு வரலைன்னு சொல்லிடறேன்." சங்கர் தன் பொமைலில் வசந்தாவைத் தொடர்பு கொண்டான்.

"அம்மா, இன்னிக்கு பிரபாகர்ன்னு ஒருத்தரை உங்களுக்கும், சரண்யாவுக்கும் அறிமுகப்படுத்தி வச்சேனே...  அவர் கூட ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டுக்கறேன்ம்மா. எனக்காக நீங்களும் சரண்யாவும் காத்திருக்காதீங்க. அப்பாகிட்டயும் சொல்லிடுங்க..."

வசந்தாவிடம் பேசி முடித்த சங்கர், அங்கிருந்த ஊழியர் ஒருவரை அழைத்தான்.

"தம்பி... நாங்க கிளம்பறோம். எல்லாக் கதவையும் செக் பண்ணிட்டுப் பூட்டிடு. சாவிக் கொத்தை பங்களாவுல குடுத்துடு."

"சரி ஸார்."

ஊழியரிடம் ஃபேக்டரியையும், ஆபீஸையும் பூட்டிக் கொள்ளச் சொல்லிய சங்கர் கிளம்பினான்.

"பிரபாகர், எந்த ஹோட்டலுக்கு போகலாம்?"

"நீங்க சொல்லுங்க சங்கர்."

"மௌண்ட் ரோடுல 'ஸம்பாரா'ன்னு ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சிருக்காங்க. அதோட ஓனர் கூட எனக்கு ஃப்ரெண்டு தான். அங்கே போகலாமா?"

"வெஜிடெரியன் ரெஸ்டாரண்ட்டா... நான்வெஜிடேரியன் ரெஸ்ட்டாரண்ட்டா?"

"ரெண்டும் இருக்கு. ஏன்? நீங்க வெஜிடேரியனா?"

"இல்லை சங்கர். ப்யூர் நான்வெஜிடேரியன். தினமும்... நாள் தவறாம எனக்கு அசைவம் வேணும்."

"அப்படின்னா ஸம்பாரா போய் ஒரு வெட்டு வெட்டலாம் வாங்க..."

"ஓ.கே." சிரித்துக் கொண்டே கிளம்பினான் பிரபாகர். இருவரும் அவரவர் காரில் ஏறி ஸம்பாரா ரெஸ்ட்டாரண்ட் நோக்கிப் பயணித்தனர்.

23

ம்பாரா ஸ்பெஷல் ஐட்டமான சுவை மிகுந்த கோழிக்கறி வறுவலை எம்.ஜி.ஆர். ஸ்டைலில் ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பிரபாகர், திடீரென்று கூறிய விஷயத்தைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் சங்கர்.

"என்ன சங்கர்! ஷாக் ஆயிட்டீங்க-?! நிஜமாவே நான் கொஞ்ச காலம் ஜெயில்ல இருந்தவன்தான்..."

"விளையாடாதீங்க, பிரபாகர்... எந்த விஷயத்துலதான் ஜோக் அடிக்கறதுன்னே இல்லயா?..."

"ஹய்யோ சங்கர். நிஜமா சொல்றேன். திருட்டுக் குற்றத்துக்காக நான் ஜெயில் தண்டனையை அனுபவிச்சவன். உங்க கிட்ட என் மனசுல உள்ளதை எல்லாம் சொல்லணும்னுதானே உங்களை இங்கே கூட்டிட்டு வந்தேன்...."

"என்னால நம்ப முடியலை, பிரபாகர்."

"நீங்க நம்பினாலும் நம்பாட்டாலும் அதுதான் உண்மை. சூழ்நிலை காரணமா ஒரு திருட்டைப் பண்ணின நான், வேற ஒரு சூழ்நிலை காரணமா நல்லவனா மாறினேன். திருந்தினேன். நான் திருடிய சூழ்நிலை வறுமை. நான் திருந்திய சூழ்நிலை நேர்மை. ஆமா சங்கர். இனி திருடவே கூடாதுங்கற வைராக்யத்துலதான் ஜெயில்ல இருந்து வெளியே வந்தேன். என்னைச் சோதிக்கற மாதிரி ஒரு சம்பவம் நடந்துச்சு.

"ஜெயில்ல இருந்து வெளியேறின நான் கால் போன போக்கில நடந்துக்கிட்டிருந்தேன். நான் நடந்துக்கிட்டிருந்த ரோடுல ஒரு பெரிய பேங்க் இருந்துச்சு. பேங்க் வாசல்ல காரில இருந்து ஒரு பெரியவர் இறங்கினாரு. அவர் இறங்கின பிறகு காரை பார்க் பண்றதுக்காக அந்த காரோட டிரைவர் காரை முன்னால ஓட்டிக்கிட்டு போயிட்டாரு. பெரியவருக்கு திடீர்னு ரத்த அழுத்தம் குறைஞ்சு போய்க் கண்ணை இருட்டிக்கிட்டு வந்திருக்கும் போல. அப்படியே நிலை தடுமாறி விழுந்துட்டாரு. இதைப் பார்த்த நான் போய் அவரைத் தூக்கிவிட்டேன். அவர் கீழே விழும் போது அவரோட கையில இருந்த தோல் பையும் கீழே விழுந்திருந்தது. நிறை மாதக் கர்ப்பிணி போல அந்தப் பை நிரம்பி இருந்துச்சு. பழைய பிரபாகரா இருந்திருந்தா, பை இவ்வளவு கனமா இருக்கே, பணமாத்தான் இருக்கும்னு அதைத் தூக்கிட்டு ஓடிப் போயிருப்பேன். ஆனா... நான் அப்படிச் செய்யலை. அவரை பேங்க்குள்ள கூட்டிக்கிட்டுப் போனேன். அவர் அந்தப் பையை என்கிட்ட குடுத்து இதுல பதினஞ்சு லட்சம் ரூபாய் பணம் இருக்கு. இதை கட்டிட்டு வந்துடுப்பான்னு சொல்லி அக்கவுண்ட் நம்பர்ல்லாம் குடுத்தாரு.

"அவர் ரொம்ப களைப்பா இருந்தார். அதனால அவரை உட்கார வச்சுட்டு நானே போய்ப் பணத்தைக் கட்டிட்டு பையை அவர்கிட்ட குடுத்தேன். திரும்பத் திரும்ப எனக்கு நன்றி சொன்னாரு. ஆஸ்பிட்டல் போலாம்ன்னு கூப்பிட்டேன். அவர் எங்க வீட்டுக்கே டாக்டர் வந்துடுவார். நீ என் வீட்டுக்கு வான்னு வற்புறுத்திக் கூப்பிட்டாரு. நானும் போனேன்.

"என்னோட நேர்மையைப் பாராட்டினார். அவரோட சொந்த பந்தங்கள் எல்லாரும் பணத்தைச் சுருட்டறதுலயே குறியா இருந்து அவரை அக்கறையா பார்த்துக்கறதில்லைன்னும், அதனால் அவங்களையெல்லாம் அனுப்பிட்டதாகவும் சொன்னாரு. அவரோட எக்ஸ்போர்ட் பிஸினஸைப் பார்த்துக்க நம்பிக்கையானவங்க யாருமே இல்லைன்னு சொல்லி வருத்தப்பட்டாரு. "நீ என் கூடவே இருந்து, ஆபீஸையும் பார்த்துக்கறியா?'ன்னு ரொம்ப பரிதாபமா அவர் கேட்டப்ப என்னால மறுக்க முடியலை. எனக்கு பிஸினஸ், ஆபீஸ் வேலையெல்லாம் பழக்கமில்லைன்னு நான் சொன்னேன். அதுக்கு அவர் அதெல்லாம் உனக்கு நான் கத்துத்தரேன்னு சொன்னாரு. எனக்குன்னு யாரும் இல்லாத நானும், அவருக்குன்னு யாரும் இல்லாத அவரும் ஒருத்தருக்கொருத்தர் துணையானோம்.

"பல கம்பெனிகள்ல இருந்து சரக்கு வாங்கி எக்ஸ்போர்ட் பண்ற அவரோட பிஸினஸ் பத்தி எனக்குச் சொல்லிக் குடுத்தாரு. பின்னலாடைகள்தான் நிறைய ஏற்றுமதி பண்ணிக்கிட்டிருந்தாரு.


வியாபார சூட்சுமம், தரத்துக்குத்தான் முதலிடம் குடுக்கணும்ங்கற தாரக மந்திரத்தையெல்லாம் எனக்குக் கத்துக் குடுத்தாரு. நானும் புரிஞ்சுக்கிட்டு அவரோட பிஸினஸை பார்த்துக்கிட்டேன். என்னை அவரோட மகன் மாதிரி கூடவே வீட்ல வச்சுக்கிட்டாரு. அவரோட உடல் நிலைக்கு ஏத்த மாதிரி சாப்பாடு பண்ணிக் குடுக்கறதுக்கு நல்ல ஆளா பார்த்துச் சமையலுக்கு வச்சேன்.

"மருந்து, மாத்திரையெல்லாம் நானே பார்த்து எடுத்துக் குடுத்துடுவேன். பக்குவமான உணவு, நேரத்துக்கு மருந்து குடுக்கறது& இதெல்லாம் அவரோட ஆரோக்கியத்தை நல்லபடியா ஆக்கிடுச்சு. அடிக்கடி டாக்டரை வரவழைச்சு அவரோட உடல்நிலை பத்தி தெரிஞ்சுக்குவேன். இந்த அளவுக்கு அக்கறையா பார்த்துக்கிட்டதுனால அவருக்கு என்னை ரொம்ப பிடிச்சுருச்சு. பிஸினஸ் சம்பந்தப்பட்ட கணக்கு வழக்குகளை எல்லாம் வீட்டுக்குக் கொண்டு வந்து அவர்கிட்ட காமிச்சுடுவேன். பண விஷயத்துல என்னோட நேர்மையைப் பார்த்து அவருக்கு என் மேல ரொம்ப அன்பும், மரியாதையெல்லாம் கூடிப்போச்சு.

"அவர்தான் இனி எனக்கு எல்லாம்னு வாழ்க்கையில ஒரு பிடிப்பு தோணுச்சு. அதனால அவரோடவே ஐக்கியமாகிட்டேன். கூடவே இருந்து குழி பறிச்ச அவரோட உறவுக்காரக் கும்பலை விரட்டி அடிச்ச அவர், அநாதை இல்லங்களுக்கு, முதியோர் இல்லங்களுக்கு ஏகப்பட்ட நன்கொடை குடுத்துக் கிட்டிருக்காரு. அவரை மாதிரி ஒரு நல்ல மனுஷனை இந்தக் காலத்துல பார்க்கறது ரொம்ப அபூர்வம்."

நீளமாகப் பேசி முடித்தான் பிரபாகர். அவன் கூறிய யாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த சங்கருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'திருட்டுக் குற்றத்துக்காக ஜெயில் தண்டனையை அனுபவித்து விட்டு வந்த ஒரு மனிதன் லட்சக் கணக்கில் பணத்தைத் திருடிக் கொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தும் தன் வைராக்யத்தில் வெற்றி பெற்றிருப்பது மிகப் பெரிய விஷயம்.' சிந்தித்துக் கொண்டிருந்தவனைப் பிரபாகரின் குரல் கலைத்தது.

"என்ன சங்கர்! என்னோட வாழ்க்கைக் குறிப்பு உங்களுக்கு ஆச்சர்யக் குறியா இருக்கா?"

"உண்மைதான் பிரபாகர். நேர்மைக்குப் புறம்பான வேலையைச் செஞ்ச நீங்க... நேர்மையே உருவா மாறினது ஆச்சர்யமாத்தான் செஞ்ச தப்பை உணர்ந்தவன் மறுபடி தப்பே செய்ய மாட்டான்னு பெரியவங்க சொல்லுவாங்க. நீங்க அதை நிரூபிச்சிட்டீங்க.’’

‘‘தேங்க் யூ சங்கர்! என்னால முடிஞ்ச வரைக்கும் எங்களாட எக்ஸ்போர்ட் ஆர்டர் எல்லாத்தையும் உங்களுக்கே குடுத்துடறேன். ஏற்கனவே இதைப்பத்தி நான் உங்ககிட்ட பேசி இருக்கேன். இருந்தாலும் மறுபடியும் உறுதியா சொல்றேன். உங்க ஃபேக்டரி தயாரிப்புகள்தான் எங்க மூலமாக ஏற்றுமதியாகப் போகுது.’’

‘‘தேங்க்யூ வெரி மச் பிரபாகர். எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய ஆர்டர் உங்க மூலமா கிடைக்கறது எனக்கு ரொம்ப உற்சாகமா இருக்கு. சந்தோஷமா இருக்கு. என்னோட கவனமெல்லாம் இந்தப் புது ப்ராஜக்ட்லதான். அதுக்குரிய பிள்ளையார் சுழியை நீங்க போட்டுட்டீங்க.’’

‘‘ம்கூம். பிள்ளையார் சுழியை நான் போட்டதுக்குத் திருச்சி மலைக்கோட்டைப் பிள்ளையார்தான் காரணம். நம்மளோட முதல் சந்திப்பே திருச்சியிலதான் நடந்துச்சு?! அப்பவே உங்க மேல எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகிடுச்சு. அது சரி, உங்க குடும்பத்தைப் பத்தி...’’

‘‘இப்போதைக்கு என்னோட அம்மா, அப்பா, சரண்யா, இந்தக் கம்பெனி இதுதான் என் உலகம். எப்போதோ எனக்குன்னு இருந்த குடும்பத்தைப் பத்தி நினைச்சுக் கூடப் பார்க்கக்கூடாதுன்னு உறுதியா இருக்கேன்...’’

‘‘ஸாரி ஸார். உங்களோட பர்சனல் லைஃப் பத்தி கேட்டுட்டேன். நீங்க எதுவும் சொல்ல வேணாம் ஸார். நானும் உங்களை மாதிரிதான். எனக்காக இருந்த குடும்பத்தைப் பத்தி முழுசா மறந்துட்டேன். ராஜேந்திர பிரசாத் ஐயா கூட அவரோட மகனா என்னோட வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்கேன். அதைப்பத்தி நானும் இப்ப பேச விரும்பலை. காலம் வரும் போது சொல்றேன். நம்ப இரண்டு பேரும் இந்த விஷயத்துல கூட ஒண்ணா இருக்கோம்...’’

‘‘நம்ப நட்பு, வியாபார ரீதிக்கு அப்பாற்பட்டு, ஃப்ரெண்ட்ஷிப்புக்கு ஒரு உதாரணமா இருக்கணும். அதுதான் என்னோட விருப்பம்."

‘‘உங்க விருப்பம்தான் என்னோட விருப்பம். அடடே மணியைப் பாருங்க. பன்னிரண்டு ஆகப்போகுது! கிளம்பலாமா?’’

‘‘ஓ. கிளம்பலாமே.’’

இருவரும் பில்லுக்குரிய பணத்தைக் கட்டுவதற்குச் சின்னதாக ஒரு செல்லச் சண்டை போட்டபின், தன் கம்பெனி திறப்பு விழா ட்ரீட் என்று கூறிச் சங்கர் பணம் செலுத்தினான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பினர்.

24

காலம் இறக்கை கட்டிப் பறந்தது. வளர்ந்து பருவப் பெண்ணான சரண்யா மிகவும் அழகாக இருந்தாள். தாய் உயிரோடு இல்லை எனினும், தந்தையின் தோளில் சாய்ந்து வளரவில்லை எனினும், வசந்தாவின் அன்பால் தாய்மையையும் சங்கரின் அதீத பாசப் பிரதிபலிப்பால் தந்தைக்குரிய நேசத்தையும் அனுபவித்தபடியால், கவலைகளின் சுவடுகள் என்பது துளிகூட இல்லாமல் சிட்டுக் குருவியாய் வளர்ந்து மலர்ந்திருந்தாள் சரண்யா.

கல்லூரியில் இருந்து வரும் வழியிலேயே தனது மொபைலில் சங்கரைக் கூப்பிட்டு விடுவாள்.

‘‘அப்பா... இன்னிக்கு ஃபிசிக்ஸ் மிஸ் ரொம்ப மொக்கை போட்டுட்டாங்கப்பா...’’

‘‘அப்பா என்னோட ஃப்ரெண்டு திவ்யா இல்லைப்பா, அவ நல்லா கவிதை எழுதறாப்பா.’’

‘‘அப்பா... நாளைக்கு சிட்டி சென்டர் போயே ஆகணும்ப்பா. நீங்களும் என்கூட வர்றீங்கப்பா. வேலை இருக்கு அது இதுன்னு சொன்னீங்கன்னா, பார்த்துக்கோங்க...’’ இவ்வாறு எதையாவது அவனுடன் ஒரு வார்த்தைக்கு நூறு அப்பா போட்டுப் பேசுவது சரண்யாவின் வழக்கம்.

ஞாயிற்றுக் கிழமைகளில் சங்கர் வீட்டில் இருந்தாலோ... கேட்கவே வேண்டாம். அவள் டி.வி. பார்க்கும்போது சங்கரும் அவர் கூடவே இருக்க வேண்டும். அவள் படிக்கும் பொழுது சங்கரும் அவளுடன் உட்கார்ந்திருக்க வேண்டும். தோட்டத்திற்கு அழைத்துச் சென்று ஓடிப் பிடிச்சு விளையாட வைப்பாள். சிறிது நேரத்தில் களைப்பில் மூச்சு வாங்க நிற்கும் அவனைக் கேலி பண்ணுவாள்.

‘‘ஹய்... அப்பாவுக்கு வயசாயிடுச்சு...’’ கிண்டல் பண்ணிச் சிரிப்பாள்.

சரண்யா கேட்பவை அனைத்தையும் மறுக்காமல் வாங்கிக் கொடுப்பான் சங்கர். மறுப்பது போன்ற எதையும் சரண்யா கேட்பது இல்லை.

சங்கர் களைப்புடன் வீடு திரும்பும் நாட்களில் சங்கர் மீதுள்ள பரிவின் காரணமாகச் சரண்யாவை அடக்குவாள் வசந்தா.

‘‘அப்பா டயர்டா இருக்கான்ல? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும், சரண்யா...’’ என்று வசந்தா கூறினால், அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாள் சரண்யா. சங்கர் அதற்கு ஒரு படி மேல போய், ‘சரண்யாகிட்ட பேசினா என்னோட களைப்பெல்லாம் ஓடிப்போயிடும்!’ என்பான்.

இவ்வாறு நாளொரு அன்பும் பொழுதொரு பாசமுமாக வளர்க்கப்பட்டாள் சரண்யா.


25

செல்வச் செழுமையான சூழ்நிலையில் சரண்யா வளர, பாண்டிச்சேரியில் சிக்கனமாக வளர்க்கப் பட்டார்கள் சங்கரின் மகன்கள். அரும்பு மீசையும், குறும்புப் பேச்சுமாக வாலிபர்களாக வளர்ந்திருந்தார்கள் அவர்கள். அங்கே சரண்யா செல்லமாகவும், கொஞ்சலாகவும் வளர்க்கப்பட்ட, இங்கே கண்டிப்பும், கட்டுப்பாடுமாக அவர்களை வளர்த்தாள் ஜானகி.

தீபக், ஸ்ரீதர் என்று அவர்களுக்குப் பெயர் வைத்திருந்தாள். என்றைக்காவது ஒரு நாள் சங்கரின் அம்மா, அப்பாவுடன் இணையும் பொழுது, அவர்களே பேரன்களுக்குப் பெயர் வைக்கட்டும் என்ற அவளது நம்பிக்கை நமத்துப் போனது. அவளே பெயர் வைத்தாள்.

மூத்தவன் தீபக் படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தான். வக்கீல் படிப்பு படிப்பதற்காக மிக்க ஆவலுடன் சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடித்திருந்த அவன், பிரபல வக்கீல் சுந்தரத்திடம் ஜூனியராகச் சேர்ந்திருந்தான்.

இளையவன் ஸ்ரீதர் படிப்பில் சுமார். ஆனால் நடனக் கலையில் மிக்க ஆர்வமாக இருந்தான். ஜானகியிடம் கெஞ்சிக் கூத்தாடி நடன வகுப்பிற்குச் சென்று மிக்க தேர்ச்சி பெற்றிருந்தான். தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடிக் கொண்டிருந்தான்.

அண்ணன், தம்பி இருவரும் ஒற்றுமையாக இருந்தனர். நண்பர்களைப்போல பழகினர்.

‘‘அண்ணா... நமக்காக நம்ப அம்மா எத்தனை வருஷமா எவ்வளவு கஷ்டப்படுறாங்க! நாம நிறையச் சம்பாதிக்க ஆரம்பிச்சப்புறம் அம்மாவை உட்கார வச்சு சாப்பாடு போட்டு, அவங்களுக்கு நல்ல ஓய்வு எடுக்கணும்.’’

‘‘ஓய்வா? நம்ம அம்மாவா? என்னதான் நாம சம்பாதிச்சுப் போட்டாலும் அம்மாவுக்குச் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காது. அவங்களால அப்படி உட்காரவும் முடியாது. ஏன்னா, அவங்களோட கவலைகளை மறக்கறதுக்காக இடைவிடாத வேலைகள்ல மூழ்கிப் பழகிட்டாங்க...’’

‘‘கவலைகள் யாரால வந்துச்சு? நம்பளோட அப்பாவாலதானே? எதனால அப்பாவைப் பிரிஞ்சாங்க? இதுக்கெல்லாம் பதிலே தெரியாம நாம இருக்கோம்...’’

‘‘பதில் தெரியாம இருக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். அப்பாவோட முகம் கூடத் தெரியாம வளர்ந்து, வாலிபர்களா நிக்கறோம். அப்பான்னு அவரைப் பத்தின பேச்சை எடுத்தாலே அம்மாவுக்குக் கோபம் வருது. எங்கேயோ இருக்கற நம்ப அப்பாவை என்னிக்காவது பார்ப்போமா? அதுக்குரிய சந்தர்ப்பம் வருமா...?’’ தீபக் ஏக்கத்துடன் பேசிக் கொண்டிருக்க, ஸ்ரீதர் கோபப்பட்டான். கோபமாகப் பேச ஆரம்பித்தான்.

‘‘சந்தர்ப்பம் வந்தாலும் நான் அவரைப் பார்க்க மாட்டேன். சின்ன வயசா இருந்த நம்ப அம்மாவைத் தனியா தவிக்க விட்டுட்டுப் போன அவர் மேல எனக்கு வெறுப்பா இருக்கு. எல்லாரும் அம்மா, அப்பா கூடச் சேர்ந்து வாழறாங்க. ஆசையா அப்பா அப்பான்னு கூப்பிடறாங்க. அப்பா கூடத்தான் ஸ்கூலுக்குப் போறாங்க. ஸ்கூல்ல படிக்கும்போது அப்பாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு வர்ற பையன்களைப் பார்த்து எவ்வளவு ஏங்கியிருக்கேன்! போச்சு. எல்லாம் போச்சு. எந்த வயசு வரைக்கும் ஒரு மகனுக்கு அப்பாவோட தோள் தேவையோ அப்போ வரைக்கும் எனக்குக் கிடைக்கல. தோளுக்கு மேல வளர்ந்துட்ட நிலையில் ஒரு தோழனா பழக வேண்டிய சூழ்நிலையிலயும் அந்த அன்பான நெருக்கம் நமக்குக் கிடைக்கல. அம்மாவோட இறுக்கமான மனநிலையினால நாம அனுபவிக்க வேண்டிய குடும்ப குதூகலங்கள் எதையுமே அனுபவிக்கலை. இதுக்குக் காரணமான அந்த ‘அப்பா’ங்கற மனிதரைப் பார்க்கணுங்கற ஆவலோ... ஆசையோ... எனக்குத் துளிகூட இல்லை...’’

‘‘அம்மாவே நமக்கு அப்பாவா இருந்து எந்தக் குறையும் இல்லாம வளர்த்துட்டாங்க. அப்பா மேல என்ன தப்புன்னு நமக்குத் தெரியாம அவர் மேல கோபப்படறது, அவரை வெறுக்கறது சரி இல்லை ஸ்ரீதர்...’’

‘‘ஒரு விஷயம் அண்ணா... எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருந்தா அம்மா அவர் மேல இவ்வளவு கோபமா இருப்பாங்க? நம்ப அம்மாவோட பொறுமையான குணத்துக்கு வெறுமையான வாழ்க்கைதானே அவர்களுக்குப் பரிசா கிடைச்சிருக்கு...?’’

‘‘வெறுமையான வாழ்க்கையும் இல்லை. தனிமையான வாழ்க்கையும் இல்லை. அம்மாவுக்குத்தான் நாம இருக்கோமே! அம்மா அம்மான்னு அவங்க மேல உயிரையே வச்சிருக்கோமே!’’

‘‘ஒரு தாய்க்க அவங்க பெத்த பிள்ளைங்க, அவங்க மேல பாசமா இருக்கறது நிச்சயமா சந்தோஷமானதுதான்... ஆனா... அதே தாய்தானே ஒருத்தர்க்குத் தாரமாகவும் இருக்காங்க! அந்த மனைவிங்கற ஸ்தானத்துல இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனின் அன்பு, அந்த அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகள், எனக்கே எனக்கென்று என் புருஷன் இருக்கார்ங்கற பெருமிதம் இதையெல்லாம் எதிர்பார்ப்பாங்க. பிள்ளைங்க எவ்வளவு அன்பா இருந்தாலும், புருஷனோட பாசத்துக்குத்தான் முதலிடம் குடுப்பாங்க. கழுத்துல தாலி கட்டினவர்க்குதான் முதலிடம். அப்புறம்தான் வயித்துல பிறந்த பிள்ளைங்க! அதனாலதான் சொல்றேன், ரெண்டு மகனுங்க நாம இருந்தும் அம்மாவோட வாழ்க்கை வெறுமையானதுதான்னு... இப்ப சொல்லு அண்ணா... அப்பா மேல நான் கோபப்படறது நியாயம்தானே?’’

‘‘நியாயம் அநியாயமெல்லாம் பார்த்து வர்றது பாசமில்லை ஸ்ரீதர். பெத்த பிள்ளைங்க எவ்வளவு பெரிய தப்பு பண்ணாலும் தாய், தகப்பன் அவங்களை வெறுத்து ஒதுக்கிட மாட்டாங்க. அரவணைச்சு, அறிவுரை சொல்லித் திருத்தத்தான் பார்ப்பாங்க. அது போல ஏன் நாம நம்ப அப்பாவை மன்னிக்கக் கூடாது? அவர் செஞ்ச தப்பைப் பத்தி எதுவுமே தெரியாது நமக்கு. நமக்குத் தெரிஞ்சதெல்லாம் அவர், நம்ம அம்மாவைப் பிரிஞ்சு இருக்குற ஒண்ணு மட்டும்தான்...’’

‘‘அந்த ஒரு தப்பே மன்னிக்க முடியாத தப்புதானே?’’

‘‘தப்புகள் தண்டிக்கப்படலாம். ஆனா மன்னிக்க முடியாதது கிடையாது...’’

‘‘அண்ணா... நீ மென்மையான மனசு உள்ளவன். நான் முரட்டுத்தனமான சுபாவம் உள்ளவன். என்னோட எண்ணங்கள் உன்கூட ஒத்துப் போகாது. நானும் அம்மாவை மாதிரிதான். லேசுல எதையும் மறக்க மாட்டேன்...’’

‘‘மறக்கறதும், மன்னிக்கறதும் அவரவர் மனோபாவத்தைப் பொறுத்தது...’’

‘‘பொறுத்தார் பூமி ஆள்வார்ன்னு பெரியவங்க சொல்வாங்க. நம்ம அம்மாவோட பொறுமை கடலை விடப் பெரிசு. ஆனா அவங்க பூமியை ஆளாட்டாலும் கூடப் பரவாயில்ல... கண்ணீர் சிந்தாத வாழ்க்கையாவது கிடைச்சிருக்கலாமே... அண்ணா... நான் ஒண்ணு சொல்றேன்... அம்மாவோட மனசுக்குள்ள இருக்கற கோபமும், துக்கமும் அப்பா கூட ஏன் இந்தப் பிரிவுங்கற காரணமும் அவங்க வாய் மூலமா வெளி வராம, இந்த வாக்கு வாதத்துக்கு முடிவே இருக்காது...’’

வேலை முடிந்து குவார்ட்டர்ஸிற்குள் நுழைந்த ஜானகியின் காதில் ஸ்ரீதர் பேசுவது அறைகுறையாய் விழுந்தது.

‘‘என்னடா ஸ்ரீதர்... என்ன முடிவு? எதுக்கு முடிவு...?’’ ஜானகி கேட்டதும், சில விநாடிகள் முழித்தான் ஸ்ரீதர். பின் சமாளித்துப் பேச ஆரம்பித்தான்.

‘‘அது... அது... ஒண்ணுமில்லம்மா. ஒரு இங்க்லிஷ் சினிமா பார்த்தேன். அதோட முடிவே எனக்குப் புரியல அதைத்தான் அண்ணாட்ட கேட்டுக்கிட்டிருந்தேன்...’’


‘‘நான் சொன்னதைக் கேட்டு ஒழுங்கா படிச்சிருந்தா உன் அண்ணன்கிட்ட கேட்டிருக்க வேண்டியதில்ல. உனக்கே புரிஞ்சிக்கும்...’’

‘‘நான் ஒழுங்காதாம்மா படிச்சேன். படிப்புதான் என்கிட்ட வரலை...’’ ஸ்ரீதர் குறும்பாகப் பேசினான்.

‘‘உன்னைப் போலத்தான் உங்க அண்ணனை வளர்த்தேன்... அவன் நல்லா படிச்சு... இதோ ஜூனியர் வக்கீலா ஆகிட்டான். நீயும் இருக்கியே... ப்ளஸ் டூவுல கோட் அடிச்சுட்டு டி.வி. சேனல்ல டான்ஸ் ஆடிக்கிட்டிருக்க...’’

‘‘அண்ணா கோர்ட்ல வாதம் பண்ணிச் சம்பாதிப்பான். நான்... ஸ்டேஜ்ல டான்ஸ் பண்ணிச் சம்பாதிக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல பிரபுதேவா மாதிரி சினிமா நடிகராகி, அப்புறம் டைரக்டர் ஆகி... கோடி கோடியா சம்பாதிச்சு... உங்க காலடியில கொட்டுவேன்...’’

‘‘இப்ப நான் உன்னோட மண்டையில் கொட்டப் போறேன். உன்னோட ஆட்டம் பாட்டத்தையெல்லாம் டி.வி.யோட நிறுத்திக்க. சினிமா கினிமான்ன... பார்த்துக்க...’’

‘‘சினிமான்னா பெரிய திரை. டி.வி.ன்னா சின்னத்தரை. அவ்வளவுதாம்மா வித்தியாசம்...’’

‘‘போதும். இனியும் அந்தப் பேச்சே வேணாம். சாப்பிட வாங்க...’’

பங்களாவில் இருந்து இரவு உணவை டிபன் கேரியரில் எடுத்து வீட்டிற்குக் கொண்டு வந்திருந்தாள் ஜானகி. தீபக்கும் ஸ்ரீதரும் சிறு பிள்ளைகளாக இருந்தவரை பங்களாவின் சமையலறையிலேயே அவர்களுக்கு உணவு பரிமாறுவாள் ஜானகி. பெரியவர்கள் ஆனதும் அவர்கள் இருவரும் அங்கே வந்து சாப்பிடச் கூச்சப்பட்டனர். எனவே டிபன் கேரியரில் எடுத்து வர ஆரம்பித்தாள் ஜானகி. மங்களத்தாம்மாவின் அனுமதியோடு இது நடைபெற்றது.

"தீபக்... ஏண்டா... உம்முனு இருக்க? உன் தம்பி ஏதாவது சொன்னானா? மணியாச்சு. சாப்பிட உட்காரு..."

பிள்ளைகள் இருவரும் சாப்பிட உட்கார்ந்திருக்க, அவர்களுக்கு உணவுடன் தன் உள்ளத்து அன்பையும் சேர்த்துப் பரிமாறினாள் ஜானகி.

"அம்மா... வத்தக் குழம்பும், எண்ணெய்க் கத்தரிக்காய் வறுவலும் சூப்பர்மா. உன் கைமணமே தனிம்மா. இவ்வளவு ருசியான சாப்பாட்டை உன் கையால சாப்பிட அப்பாவுக்குத் தான் குடுத்து வைக்கலை..." ஸ்ரீதர் வேண்டுமென்றே குறும்புடன் ஜானகியைச் சீண்டினான்.

"வேற பேச்சு இருந்தா பேசுடா..." அப்பளத்தை அவனது தட்டில் போட்டபடியே கூறினாள் ஜானகி.

"வேற ஏதாவது அவரைப் பத்தி தெரிஞ்சாத்தானே வேற பேச்சு பேச முடியும்? இப்போதைக்கு எனக்குத் தோணினது இதுதான்..."

"உனக்கு எல்லாமே இப்படித்தான். ஏதாவது வேண்டாத விஷயமா தோணும்..."

"ஆமாம்மா. உங்களை வேண்டாம்னு விட்டுட்டுப் போனவரைப் பத்தி உருப்படியா எதுவும் தோணாதுதான்..."

"போதும்டா ஸ்ரீதர். இதுக்கு மேல எதுவும் பேசாத. உங்க அப்பா என்னை வேண்டாம்னு விட்டுட்டுப் போனார்னு உனக்கு யார் சொன்னது?

"இதை யாராவது சொல்லணுமா என்ன? நீங்க அவரைப் பத்தி பேசினாலே கோபப்படறதைப் பார்த்து நானா தெரிஞ்சுக்கிட்டேன்."

"சரி சரி, போதும். இனி உன்னோட வாய் சாப்பிடறதுக்கு மட்டும்தான் திறக்கணும். உன் கூடப்பிறந்தவன்தானே தீபக். அவனைப் பாரு. உன்னைப் போல வெட்டி நியாயம் பேசாம சமர்த்தா சாப்பிடறான். அவன் உண்டு அவனோட வேலை உண்டுன்னு இருக்கான்..."

"அண்ணாவா? இவனா... எப்பிடி... எப்பிடி... சமர்த்தா இருக்கானா? போகப் போகத் தெரியும்... இந்த தீபக்கின் எண்ணம் புரியும்!" என்று பாடி நக்கலாகப் பேசிய ஸ்ரீதரின் தலையில் குட்டினாள் ஜானகி.

"பாவம்டா மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஸார். அவரோட மெட்டை இப்பிடி கொலை பண்றியே!...."

"நான் பாடறதையே கொலைன்னு சொன்னீங்கன்னா, இப்ப அவரோட பாட்டை ரீமிக்ஸ்ங்கற பேர்ல எப்படியெல்லாம் கொலை பண்றாங்க. அதுக்கு என்ன சொல்லுவீங்க?"

"நாம என்னடா சொல்ல முடியும்? கேட்டா ரசிகர்களுக்குப் பிடிக்குது. நாங்க பண்றோம்ன்னு சொல்லுவாங்க."

"டேய் ஸ்ரீதர்! வீட்டுக்குள்ளயே இருக்காங்கன்னுதான் பேர். அம்மா பாரு. எவ்வளவு தெளிவா பேசறாங்க?!" தீபக் கூறியதும் ஜானகிக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது.

"யப்பாடா. இவ்வளவு நேரம் என்னவோ இந்த உலகத்துலயே நான்தான் நல்ல பையனாக்கும்ங்கற மாதிரி எதுவும் பேசாம இருந்தான். இப்ப... அம்மாவுக்கு ஐஸ் வைக்கறதுக்காக வாயைத் திறந்தியாக்கும்?" தீபக்கைக் கேலி செய்தான் ஸ்ரீதர்.

"எனக்கு ஐஸ் வச்சு அவனுக்கு என்னடா ஆகப் போகுது?" ஜானகி சிரித்துக் கொண்டே கூறினாள்.

"உங்களைப் புகழ்ந்து பேசிட்டேன்னு அவன் பொறாமைப்படறாம்மா." தீபக் வாயில் உணவை வைத்துக் கொண்டே பேசினான்.

"முதல்ல உன் வாய்க்குள்ள இருக்கறதை முழுங்கு." ஸ்ரீதர் தீபக்கின் தொடையைத் தட்டினான்.

"நீங்களும் சாப்பிடுங்கம்மா." தீபக் பாசத்துடன் கூறினான்.

"இதோ உட்கார்ந்துடறேன்ப்பா!" என்ற ஜானகி மேலும் தொடர்ந்தாள்.

"ஏண்டா ஸ்ரீதர், சாப்பிடவான்னு சொன்னதும் குழம்பு பிரமாதம் கத்தரிக்கா பிரமாதம்ன்னு சாப்பிட்டியே... வாங்கம்மா சாப்பிடன்னு வாயாரக் கூப்பிட்டியாடா? தீபக்தான் அக்கறையா கூப்பிடறான் பாரு... தன்னுடைய தட்டில் சாதத்தைப் போட்டபடியே கூறினாள் ஜானகி.

"உங்களுக்கு உங்க மூத்த பையன்னா உசத்தி. அவன் என்ன சொன்னாலும் இனிக்கும்..." செல்லமாகச் சிணுங்கிய ஸ்ரீதரைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தனர் ஜானகியும், தீபக்கும். அவர்களது சிரிப்பில் ஸ்ரீதரும் கலந்து கொண்டான்.

தலைவன் இல்லாத அந்தக் குடும்பம், ஏழ்மையான அந்தக் குடும்பம், நேர்மையின் பலனாய் மகிழ்ச்சிப் பூக்களை முகர்ந்தது.

26

கையில் மாத்திரைகளோடு, மனதில் கவலையோடு, முத்தையாவின் கட்டிலருகே நின்றிருந்தாள் வசந்தா. அவள் கொடுத்த மாத்திரைகளை விழுங்கிய முத்தையா, அயர்ச்சியுடன் படுத்துக் கொண்டார்.

பரபரப்புடன் சங்கர் அங்கே வந்தான்.

"என்னப்பா! என்ன ஆச்சு! ஏன் இவ்வளவு டையர்டா இருக்கீங்க? டாக்டர் வந்து பி.பி. செக் பண்ணாரா? என்ன சொன்னார்?"

வசந்தா அவனுக்குப் பதில் கூற ஆரம்பித்தாள்.

"அப்பா எதையோ மனசுல நினைச்சுக்கிட்டு சங்கடப்படறாராம். அதனால பி.பி. கொஞ்சம் அதிகமாயிடுச்சாம். அதனால லேஸா தலை சுற்றலாம், ரொம்ப களைப்பா இருக்கார். வேற மாத்திரை எழுதிக் குடுத்துட்டுப் போனார் டாக்டர். அதை வாங்கிட்டு வரச் சொல்லி இப்பதான் குடுத்தேன். இந்த மாத்திரைக்கு பி.பி. நார்மலாயிடுமாம். ஆனா... அவர் கவலைப்படாம இருக்கறது முக்கியம்ன்னு டாக்டர் சொல்றாருப்பா..."

வசந்தா விளக்கியதும் சங்கரின் முகம் வாடியது. முத்தையா படுத்திருந்த கட்டிலின் விளிம்பில் உட்கார்ந்து முத்தையாவின் கையைப் பிடித்துக் கொண்டபடி பேச ஆரம்பித்தான்.

"அப்பா... என்ன கவலைப்பா உங்களுக்கு? நிர்மலாவை நினைச்சு கஷ்டப்படறீங்களா?..."

"இல்லைப்பா...."

"பின்ன எதை யோசிச்சு இப்பிடி உடம்பைக்  கெடுத்துக்கறீங்க? நீங்க மனசுல நினைக்கறதை வாய்விட்டுச் சொன்னாத்தானே தெரியும்?..."

"நிர்மலா நம்பளை விட்டுப் போனதை விட உன்னை நினைச்சுதாம்ப்பா ரொம்ப கவலைப்படறேன்.... உனக்காக ஒரு குடும்பம் இல்லாம ஆகிட்ட இந்த நிலைமைக்கு நான்தானே காரணம்? என்னாலதான் நீ இப்பிடி தனியாளா நிக்கற..."


"நான் தனி ஆள்ன்னு யாருப்பா சொன்னா? நானே அப்படி நினைக்காதப்ப நீங்க ஏன் அப்படி நினைச்சு உங்களை வருத்திக்கறீங்க?..."

"நீ உன் மனைவியைப் பிரிஞ்சு வாழறதுக்கு என்ன காரணமோ எனக்குத் தெரியல. ஆனா... எங்க கூடவே உன்னையும், உன் குடும்பத்தையும் சேர்ந்து வாழும்படி நான் சொல்லியிருந்தா.... உனக்கு எந்தக் கஷ்டமும், எந்தப் பிரிவும் வந்திருக்காது இல்லையா?"

"இல்லைப்பா. நீங்க நினைக்கறது தப்பு. மனுஷனாப் பிறந்த ஒவ்வொருத்தருக்கும் இன்னது நடக்கும்னு இருந்தா அது நடந்தே தீரும். இங்கே இருந்தா நடந்திருக்காது... அங்கே இருந்ததுனாலதான் நடந்ததுங்கற வாதமே தேவை இல்லைப்பா. மறுபடியும் சொல்றேன்ப்பா. நான் தனி ஆள் இல்லை. எனக்காக என்னோட அப்பா நீங்க... இதோ என்னோட அம்மா, என் தங்கை பெற்ற மகள் இப்ப என்னோட மகளாய் என் சரண்யா... நீங்கதான் என் உலகம். என் குடும்பம். என் குடும்பத்துக்கு அடுத்தபடியா நான் நேசிக்கறது நம்ம ஃபேக்டரி. புதுத் தொழில்ல கவனம் செலுத்தி என்னோட கடந்த காலத்தை மறந்து நான் நிம்மதியா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டீங்க. உங்க ஆசைப்படியே நான் நிம்மதியா இருக்கேன்.... சரண்யாவை வளர்த்து ஆளாக்கிட்டோம். அவளுக்குக் கல்யாணத்தைப் பண்ணிவச்சு நம்ப கடமையை நிறைவேத்தணும். அப்பா அப்பான்னு கூப்பிட்டுக்கிட்டு என் மேல பாச மழை பொழியற சரண்யாவோட அன்பில சரணாகதி அடைஞ்சுட்டேன்ப்பா. என் மனசுல எந்த ஏக்கமும் இல்லை. விதியின் விளைவால நடக்க வேண்டியது எல்லாமே நடந்தே தீரும்ப்பா. இதுக்கு உதாரணமா ஒண்ணு சொல்றேன்... நான் மதுரையில இருந்து நம்ப வீட்டுக்கு வந்து மறுபடியும் உங்க கூடச் சேர்ந்து வாழ ஆரம்பிச்ச புதுசுல என்னை மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி அம்மா கெஞ்சினாங்க. எதுக்காக? என்னோட மகன்களைக் கூட்டிட்டு வந்து, அவங்களை வளர்க்கறதுக்காக. எனக்குப் பிள்ளை வளர்க்கற வயசாப்பா அப்படின்னு சொல்லி அம்மா என்னை ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க. ஆனா என்ன நடந்துச்சு? பிள்ளை வளர்க்கற வயசு இல்லைன்னு சொன்ன அம்மாவைத் தன் குழந்தையை வளர்க்க விட்டுட்டு நம்ம நிர்மலா உயிரை விட்டுட்டா. நினைச்சோமா இப்படியெல்லாம் நடக்கும்ன்னு? அதனாலதாம்பா சொல்றேன். என்னைப் பத்தி கவலைப்படாதீங்க. நீங்க உடம்புக்கு ஒண்ணும் வந்துடாம ஆரோக்கியமா இருக்கணும். உங்க உடல்நிலை பத்தின கவலை இல்லாம அம்மா நிம்மதியா இருக்கணும். நாம எல்லாரும் சேர்ந்து ஜோரான மாப்பிள்ளை ஒருத்தனைப் பார்த்து நம்ம சரண்யாவோட கல்யாணத்தை ஜாம் ஜாம்ன்னு நடத்தணும். இதைத் தவிர எனக்கு வேற சிந்தனைகளே இல்லைப்பா."

சங்கர் பேசிய ஆறுதல் வார்த்தைகளால் மனம் தெளிவு பெற்றார் முத்தையா. மகனின் அன்பான பேச்சு அவரது முகத்தில் புன்னகையைத் தோற்றுவித்தது.

"இவ்வளவு பாசம் வச்சிருக்கற உனக்காகவாவது என்னோட ஆரோக்கியத்தை நான் கவனிச்சுப்பேன் சங்கர்."

முத்தையா, கண்களில் கண்ணீர் மல்க, சங்கரிடம் பேசினார். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வசந்தாவின் கண்களும் பனித்தன.

"டாக்டர் குடுக்கற மாத்திரைகளை விட உன்னோட வார்த்தைகள் அவரோட பி.பி.யைக் குறைச்சுடும்ப்பா சங்கர்..." சங்கரைப் பாராட்டினாள் வசந்தா. சங்கர் பேசிய பின், இறுக்கமான சூழ்நிலை மாறி இதமான ஒரு மனநிலை ஏற்பட்டது அனைவருக்கும்.

27

பேக்டரியில் சங்கர் வாங்கிப் போட்ட மிஷின்கள், இரண்டு ஷிஃப்ட் ஓடும் அளவிற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தன. பத்து நாட்களுக்கு ஒரு முறை பிரபாகர் வந்து சங்கரைச் சந்திப்பதும், சங்கர் பிரபாகரைச் சந்திப்பதும் வழக்கமாக இருந்தது. அவர்களது சந்திப்புகள் அவர்களது நட்பின் நெருக்கத்தை மேலும் வளர்த்தன. அவர்களின் மனங்களை இணைத்தன.

பன்னாட்டுத் தொழிலதிபர்களின் தொடர்பு, தேசிய அளவில் சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்தது.- பல தொழில் அதிபர்கள் தங்கள் புதிய ஷோரூம் மற்றும் தொழில் நிறுவனங்களைத் துவக்கி வைப்பதற்குச் சங்கரை அழைத்தனர். அதைத் தங்கள் கௌரவமாகக் கருதினர்.

ஏற்கெனவே செல்வந்தர்களான அவர்களது குடும்பம் மேன்மேலும் பொருளாதார ரீதியாகப் பெரும் செல்வச் செழிப்பான குடும்பமாக ஆகியது. முத்தையாவும் சங்கர் மற்றும் சரண்யாவின் நலன் கருதிப் பழைய கவலைகளை மறந்து உடல் நலம் தேறினார். சங்கரின் உழைப்பையும், அதன்மூலம் உயர்ந்த நிலையையும் கண்டு சந்தோஷப்பட்டார்.

28

ழகிய பார்க் ஒன்றில் ஸ்ரீதரும், அவனது காதலி வாணியும் அருகருகே உட்கார்ந்து ஆனந்தமாய்ப் பேசிக் கொண்டிருந்தனர். புல்வெளியின் மீது கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த வாணி, தன் கையால் புல்லைக் கிள்ளிக் கிள்ளிப் போட்டபடியே இருந்தாள்.

"என்ன வாணி?! வந்ததுல இருந்து பார்க்கறேன். எதுவுமே பேசமாட்டேங்கற? புல் என்ன தப்பு பண்ணுச்சு? அதைப் போய்க் கிள்ளிக்கிட்டிருக்க!"

"புல் ஒண்ணும் தப்பு பண்ணலை. தப்பு பண்ணினது நீங்க..."

"நானா? தப்பா? என்ன தப்பு? எக்குதப்பா நீதான் பேசறே..." கிண்டல் கலந்து பேசிய ஸ்ரீதரை முறைத்துப் பார்த்தாள்.

"ஒண்ணும் தெரியாத அப்பாவி போல மூஞ்சியை வச்சுக்கிட்டா சரியா போச்சா? டி.வி. டான்ஸ் ப்ரோக்ராம்ல ரீல் ஜோடி கூட ஆடினீங்களே?! எப்படி ஆடினீங்க? ரியல் ஜோடி மாதிரி கட்டிப்பிடிச்சு... ச்... ச... நீங்க அந்த ப்ரோக்ராம்ல முதல் முதல்ல ஆடப்போனப்ப என்கிட்ட என்ன சொன்னீங்க? சும்மா... ஊறுகா தொட்டுக்கற மாதிரிதான் தொட்டு ஆடுவேன் அப்பிடின்னீங்க. ஆனா என்ன பண்றீங்க? தயிர் சாதம் சாப்பிடறமாதிரில்ல ஆடறீங்க? ச்சி... கண்றாவி...’’

‘‘அடிப்பாவி... உதாரணம் சொல்றதுக்கு வேற எதுவும் உனக்குத் தோணலியா?’’

‘‘தோணுச்சு. அப்பிடியே உங்களைக் கடிச்சுக் குதறிட மாட்டோமான்னு தோணுச்சு. போயும் போயும் இப்படி ஒருத்தரைப் போய்க் காதலிக்கிறோமேன்னு தோணுச்சு. டி.வி.யில இப்படி ஒரு ப்ரோக்ராமை ஏன்தான் நடத்தறாங்களோன்னு தோணுச்சு...’’

‘‘வாணி... நான் சொல்றதைக் கேளு. தொட்டு ஆடறதெல்லாம் நான் விருப்பப்பட்டு ஆடறது கிடையாது. டான்ஸ் மாஸ்டர் என்ன சொல்றாங்களோ, எப்பிடி ஆடச்சொல்றாங்களோ அதை நான் கேட்டே ஆகணும். என்னோட இஷ்டத்துக்கு நான் ஆட முடியாது. ஆடவும் கூடாது. டான்ஸ் ஒரு கலை. அந்தக் கலை உணர்வோடதான் ஆடறேனே தவிர வேற எந்தத் தப்பான நோக்கமும் எனக்குக் கிடையாது. உன்னோட பொஸஸிவ் நேச்சர் எனக்குப் புரியுது. ஆனா அதுக்கு என்னால ஒண்ணும் பண்ண முடியாது. ஏன்னா டான்ஸை என் உயிருக்குயிரா நேசிக்கிறேன். நீயும், டான்சும் எனக்கு ரெண்டு கண்கள் மாதிரி.


‘‘நீ என்னை முழுமையா புரிஞ்சுக்கணும். கொஞ்சம் கொஞ்சமா டி.வி. ப்ரோக்ராம்ல இருந்து மாறி சினிமாவுல டான்ஸ் மாஸ்டரா ஆகணுங்கறது என்னோட லட்சியம். டான்ஸ் கத்துக்கறதுக்காக அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கறதுக்கு நான் எவ்வளவு பாடு பட்டேன்னு உனக்குத் தெரியாது. எங்க அம்மாவோட ஆசிர்வாதத்துலதான் எதையுமே செய்ய ஆரம்பிக்கணும், சாதிக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். ப்ளஸ் டூ முடிச்ச நான் மேலே படிக்க இஷ்டமில்லைன்னு சொன்னப்ப, அம்மா கோபப்பட்டாங்க. வருத்தப்பட்டாங்க. டான்ஸ் க்ளாசுக்குப் போகக் கூடாதுன்னு மறுத்தாங்க. அவங்களை நைஸ் பண்ணி, சமாளிச்சு பங்களாக்கார மங்களத்தம்மாவைச் சிபாரிசு பண்ணச் சொல்லி, கெஞ்சி ஒரு வழியா அம்மா சம்மதிச்சாங்க. முழு மனசா ஆசிர்வதிச்சு என்னை க்ளாசுக்கு அனுப்பினாங்க. எங்க அப்பாவைப் பிரிஞ்சு எங்க அம்மா எவ்வளவு கஷ்டப்படறாங்கன்னு உனக்குத் தெரியுமே... அவங்களுக்கு என்னால எந்தக் கஷ்டமும் வந்துடக் கூடாதுன்னு நான் ஒழுங்கா இருக்கேன். ஒழுக்கமா இருக்கேன். இப்ப அம்மாவுக்கு அடுத்தபடியா உனக்காக, உன் மனசுக்கேத்தபடி நான் இருப்பேன். என்னை நீ தப்பா நினைக்காத. ஆயிரம் ரம்பை, ரதிகளைச் சந்திச்சாலும் என் கண்ணுக்கு நீதான் அழகு. என் இதயத்துல உனக்கு மட்டும்தான் இடம். உனக்காக என் உயிரையும் குடுப்பேன். ஆனா... என் உயிரைவிட மேலா மதிக்கிற, நான் நேசிக்கிற நடனக் கலையை மட்டும் நான் விட்டுக் குடுக்கவே மாட்டேன். உன்னோட பொஸஸிவ் நேச்சருக்காக என்னோட கலை ஆர்வத்தை நான் விட்டுவிட முடியாது. நீ எனக்கு வேணும். என்னையும், நான் நடனக்கலை மேல வச்சிருக்கிற அளவற்ற ஆசையையும் புரிஞ்சுக்கிட்ட வாணியா நீ எனக்கு வேணும்... ஐ லவ் யூ ஸோ மச்...’’

ஸ்ரீதர் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வாணியின் மனம் நெகிழ்ந்தது. மகிழ்ந்தது.

உணர்வு பூர்வமாக ஸ்ரீதர் பேசிய பேச்சைக் கேட்ட அவள், உணர்ச்சி வசப்பட்டாள். என் மேல இவ்வளவு அன்பா இருக்கற இவர், நிச்சயமா தப்பு பண்ண மாட்டார். அவரோட அம்மாவையும், என்னையும் சம அளவுக்கு நேசிக்கிற இவர் என்னை மீறி எதுவும் செய்ய மாட்டார். இவரோட கலை ஆர்வத்தை நான் மேலும் வளர்த்து, ஊக்கம் கொடுத்து இவர் சினிமாத்துறைக்கு வர்றதுக்கு உறுதுணையா இருக்கணும். என்னோட பொஸஸிவ் நேச்சரை மூட்டை கட்டிப் போடணும். உள்ளுக்குள் இவ்விதம் எண்ணிய வாணி, வெளிப்படையாக அதைக் காட்டிக் கொள்ளாமல், வேண்டுமென்றே வீம்பாகப் பேசினாள்.

‘‘அதெல்லாம் சரிதான். டான்ஸ் ஆடும் போது உங்க கூட ஆடற பொண்ணுகளை அவ்வளவு நெருக்கமா தொட்டு ஆடும்போது எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? ‘பச்சக்’, ‘பச்சக்’ன்னு ஒட்டிக்கறீங்களே... உங்களோட இந்த முகம், இந்த கை, கால், உடல் முழுசும் எனக்கே எனக்கு மட்டும் தானே? அதை எவ எவளோ தொட்டு உரசும் போது எனக்குப் பத்தி எரியுது...’’

‘‘நீ என்ன தீக்குச்சியா பத்தி எரியறதுக்கு? என் மனசுல எந்தக் களங்கமும் இல்லை. தப்பான எண்ணத்துல பெண்களின் தப்பான இடங்களைத் தொட்டு ஆடறதுக்கு நூறு பேருக்கு மேல கூடி இருக்கற அரங்கம் தேவையில்ல. அந்தரங்கமான ஆசைகளை நிறைவேத்திக்கணும்ன்னா அதுக்கு எத்தனையோ வாய்ப்புகள் இருக்கு. ஆனா நான்? ஒழுக்கங்கறது என் கூடவே பிறந்தது. எங்க அம்மாவோட வளர்ப்பு, என்னைத் தப்பு செய்ய விடாத உன்னதமான வளர்ப்பு. வெள்ளித் திரை உலக வெளிச்சத்துக்கு வரணும்ன்னு துடிச்சிட்டிருக்கற எனக்குத் திரைமறைவான இருண்ட வாழ்க்கை தேவையே இல்லை. எங்கம்மாவோட ஆசிர்வாதமும், உன்னோட அன்பும் என்னை உயர்த்தணும்ங்கற ஒரே எண்ணத்தைத் தவிர வேற எந்த எண்ணமோ தவறான ஆசைகளோ கிடையாது...’’

அதற்கு மேல் அவனைப் பேசவிட்டு வேடிக்கை பார்க்க விரும்பாத வாணி, தன் கண்களாலேயே அவனைக் கைது செய்தாள்.

ஸ்ரீதர்... உங்களை நல்லாப் புரிஞ்சுக்கிட்டேன். இனி என்னோட தூண்டுகோல் உங்க லட்சியத்துக்குரிய ஊக்க உணர்வை உருவாக்கற ஊன்றுகோலா இருக்கும். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்ன்னு சொல்லுவாங்க. உங்களோட வெற்றிக்குப் பின்னால இந்த வாணிங்கற பொண்ணு இருப்பா. என்னோட பர்ஸனல் உணர்வுகளை ஒரு பக்கமா ஒதுக்கிட்டு உங்களோட முன்னேற்றத்துலதான் என்னோட முழுக் கவனமும் இனி இருக்கும். ஐ லவ் யூ ஸோ மச்...."

வாணி, அவளது கோபம் மாறி, தன்னை முழுமையாகப் புரிந்து கொண்டாளே என்ற மகிழ்ச்சியில் திளைத்தான் ஸ்ரீதர்.

"தேங்க்யூ வாணி. நான் ஏறக்கூடிய முன்னேற்ற ஏணிப்படிகள்ல என் கூட கை கோத்து எனக்குக் கை குடுத்து என்னில் பாதியா நீ என் கூடவே வரணும். என் கூடவே இருக்கணும். நீ என் கூட இருந்தா... உன்னோட இதயப்பூர்வமான ஆதரவு இருந்தா இந்த உலகமே என் உள்ளங்கைகள்ல அடக்கம். ஆமா வாணி. இந்த என்னோட உணர்வு சத்தியமான நிஜம்."

"இப்பிடியே இருட்டறது கூடத் தெரியாம பேசிக்கிட்டிருந்தோம்ன்னா நம்பளை அவங்கவங்க வீட்ல தேட ஆரம்பிச்சுடுவாங்க. எனக்குப் பிரச்னை இல்லை. எங்க அப்பா கிட்ட நம்ப காதலைப் பத்தி சொல்லிடுவேன். நீங்கதான் உங்க அம்மாவுக்குப் பயப்படுவீங்க."

"ஆமா வாணி, எனக்குப் பயம்தான். அண்ணனை முந்திக்கிட்டு படிப்புல ஜெயிக்கலை. ஆனா காதல் விவகாரத்துல மட்டும் முந்திக்கிட்டேனேன்னு அம்மா நினைப்பாங்க. திட்டுவாங்க."

"அவங்க திட்டறது நியாயம்தானே! இந்த உலகமே உங்களைத் திரும்பிப் பார்க்கற அளவுக்கு டான்ஸ்ல பெரிய ஆளா வந்து, பெரிய படிப்பு படிக்காத உங்களோட மைனஸ் பாயிண்ட்டை ப்ளஸ் பாயிண்ட்டா உருமாத்திக் காட்டுங்க." வாணி அவனுக்குத் தைர்யமூட்டினாள்.

"நிச்சயமா நான் என்னையும் என்னோட திறமையையும் நிரூபிச்சுக் காட்டுவேன் வாணி."

"சரி, ஸ்ரீதர். வாங்க கிளம்பலாம்."

இருவரும் அவரவர் வீட்டிற்குக் கிளம்பினார்கள்.

29

ழக்கமாய் 'வாணிம்மா' என்று அழைத்துக் கொண்டே வீட்டிற்குள் நுழையும் கங்காதரன் அன்று மௌனமாய் உள்ளே வந்ததைப் பார்த்துத் துணுக்குற்றாள் வாணி.

'அப்பாவோட முகமே சரியில்லையே! என்னவாயிருக்கும்?' யோசித்தாள்.

'ஒரு வேளை என்னோட காதல் விஷயம் தெரிஞ்சுருச்சோ... எதுவானாலும் சரி. பேசித்தானே ஆகணும்?' மனதிற்குள் தோன்றிய எண்ண அலைகளை அடக்கி வைத்தாள்.

தளர்வாய் ஸோஃபாவில் சரிந்து உட்கார்ந்திருந்தார் கங்கதரன். அவர் இளம் வயதிலேயே மனைவியை இழந்தவர். மனைவி மீது உயிரையே வைத்திருந்த அவர், அவளது உயிர் போனதும் தன் உயிரைவிட்டு விடாமல் வாழ்ந்து வருவது வாணிக்காகத்தான்.


வாணியை அப்படி வளர்க்கணும், இப்படி வளர்க்கணும்ன்னு ஆசைப்பட்ட தன் மனைவியின் ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தார். அந்த முடிவில்தான் அவரது வாழ்வு தொடர்ந்தது.

மனைவி ஆசைப்பட்டபடியே வாணியை நன்றாகப் படிக்க வைத்தார். துணிவே துணை எனும் வாழ்வியல் அறிவுரைகளைப் போதித்தார். எதற்கும் கலங்காத மனம் கொண்டு, பிரச்னைகளை எதிர்கொள்வதே நல்லது எனும் தைர்யத்தை ஊட்டி வளர்த்தார். நேர்மை, கௌரவம், பணிவு ஆகிய பண்புகளைப் பன்முறை கூறிப் புதுமைப் பெண்ணாக அவள் மலரவும், வளரவும், வாழவும் பாடுபட்டார்.

அம்மாவின் அன்பு மடி இல்லாமல் அப்பாவின் அரவணைப்பால் வளர்ந்த வாணி, கங்காதரனின் தியாக உணர்வைப் புரிந்து கொண்டாள். எனவே அவர் காட்டிய வழிகளைப் பின்பற்றினாள்.

ஸ்ரீதர் மீது காதல் கொள்ளும் வரை கங்காதரனிடம் எதையும் மறைக்காத வாணி, தன் காதல் பற்றி அவரிடம் வெளிப்படையாகக் கூறும் தருணத்திற்காகக் காத்திருந்தாள். அதற்குள் வேறு யாரோ சொல்லி விட்டார்களோ என்ற எண்ணம் எழுந்தது அவளுள்.

கங்காதரனின் அருகே சென்றாள்.

"என்னப்பா? உடம்பு சரி இல்லையா?"

"உடம்புக்கு ஒண்ணுமில்லம்மா..."

"ஒண்ணுமில்லைன்னா முகம் ஏன் இப்படி வாடிக்கிடக்கு?"

"வாடிப் போன என்னோட வாழ்க்கையில என்னைத் தேடி வந்த சொர்க்கமா நீ பிறந்திருக்க. நீ பிறந்ததும் உங்க அம்மா கண்ணை மூடிட்டா. அதுக்கப்புறம் எதுக்காக இந்த உலகத்துல உயிர் வாழணும்ன்னு நினைச்சேன்... 'எனக்காக நீங்க வாழணும்ப்பா'ன்னு உன்னோட அழுகுரல் சொல்லுச்சு... உனக்காக... உனக்காக மட்டுமே இந்த உயிரைச் சுமந்துக்கிட்டிருக்கேம்மா..."

"நீங்க இவ்வளவு விரத்தியா பேசற அளவுக்கு என்னப்பா நடந்துருச்சு?"

"நடக்கக் கூடாதது நடக்கலைம்மா. ஆனா... நடக்கறது நல்லபடியா நடக்கணுமேன்னுதான் கவலைப்படறேன்..."

"உங்க கவலையைத் தூக்கிப் போட்டுட்டு எந்த தயக்கமும் இல்லாம நீங்க பேசணும்னு நினைக்கற விஷயத்தைப் பேசுங்கப்பா."

"பேசத்தாம்மா போறேன். நேர்மையையும், துணிவையும் ஊட்டி வளர்த்த என் பொண்ணு கிட்ட பேசறதுக்கு எனக்கு இல்லாத உரிமையா? நேரடியாவே விஷயத்துக்கு வரேம்மா. உன்னை பார்க்ல ஒரு பையன் கூடப் பார்த்ததா கலைஞானம் மாமா சொன்னாரு... நீ தப்பு செய்யக் கூடிய பொண்ணு இல்லைன்னு எனக்கும் தெரியும். ஆனா.... எதையும் வெளிப்படையா மனம் விட்டு பேசிடறதுதானே நல்லது."

"நல்ல விஷயங்களை மட்டுமே போதிச்சு என்னை வளர்த்தீங்கப்பா. அதனால நான் தப்பு பண்ண மாட்டேன்ங்கற உங்க நம்பிக்கையும் சரிதான். ஆனா... அதே சமயம் காதல் தப்புன்னு என்னோட அப்பா சொல்ல மாட்டார்ன்னு நானும் நம்பறேன்...."

வாணி... காதல் பற்றிப் பேசியதும் ஓரிரு நிமிடங்கள் மௌனமாக இருந்தார் கங்காதரன். அதன் பின் அழுத்தமாகப் பேச ஆரம்பித்தார்.

"நிச்சயமா காதல் தப்பு இல்லை... தப்பான நபரைக் காதலிக்காத வரைக்கும்! சொல்லும்மா! பார்க்ல உன் கூடப் பேசிக்கிட்டிருத பையனைத்தான் நீ விரும்பறியா? அவன் யாரு? என்ன படிச்சிருக்கான்? அவனோட குடும்பத்தைப் பத்தி உனக்கு என்ன தெரியும்? அவனுக்கு என்ன வருமானம்? உன்னைப் போலவே அவனும் புத்திசாலியா?..." மகளைப் பற்றி வேற்று மனிதர் கூறிய தகவல் பற்றி வாணியிடம் பேச ஆரம்பித்ததும் அவரது மனம் லேசாகியது. எனவே படபடப்பின்றிக் கேள்விகளைத் தொடுத்தார்.

"நானே இன்னிக்கு இது விஷயமா உங்க கிட்ட பேசணும்ன்னு காத்திருந்தேன். அதுக்குள்ள உங்க ஃப்ரெண்டு கலைஞானம் மாமா முன்னுரை குடுத்துட்டாரு. இனி விளக்கவுரையை நான் சொல்றேன்ப்பா. நான் விரும்பறவரோட பேர் ஸ்ரீதர். லாஸ்பேட்ல ஒரு பெரிய பங்களாவுல அவங்கம்மா சமையல் வேலை பார்க்கறாங்க.-.."

"என்ன?! சமையல்காரியோட மகனையா விரும்பற?!..."

"ஏம்ப்பா? சமையல் பண்ற வேலை புண்ணியமான வேலைதானே! அமெரிக்க நாட்டின் பதினாறாவது ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் யாரோட மகன்னு தெரியாதாப்பா? அவர் ஒரு ஏழைத் தச்சரோட மகன்ப்பா. ஒரு தச்சரோட மகன்ங்கற காரணத்தால அவருக்குக் கிடைக்க வேண்டிய பதவியும், புகழும் கிடைக்காமல் போகலியே?... ஆபிரகாம் லிங்கன் ஒரு போஸ்ட் மேனா வேலை பார்த்தவர். அவரைப் போல உலக நாடுகள் முழுசும் ஏழ்மையான நிலையில இருந்தவங்களோட வாரிசுகள் பெரிய அளவுல முன்னேறி இருக்காங்க. ஏன்?... நம்ப தலைவர் காமராஜர் கூட ஏழ்மையான குடும்பத்தில பிறந்தவர்தான். கல்வித் தந்தைன்னு அவரைத் தமிழ்நாடு கொண்டாடலியா? பெருந்தலைவர்ன்னு அவரைப் பாராட்டலியா?..."

"சரிம்மா. நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிதான். ஒத்துக்கறேன். நீ விரும்பற அந்த ஸ்ரீதர் ஏதாவது ஒரு துறையில முன்னேறக் கூடிய வாய்ப்புகளோ அறிகுறிகளோ தெரியுதா?..."

"அப்பா... அவர் படிச்சதென்னவோ ப்ளஸ்டூதான். ஆனா... அவர் நடனத் துறையில ரொம்ப ஆர்வமா ஈடுபட்டுக்கிட்டிருக்கார். சின்னத்திரையில இப்போ ஆடற டான்ஸர்ஸ்ல அவர்தான்ப்பா முன்னணியா இருக்காரு. கூடிய சீக்கிரமே சினிமாவுலயும் பெரிய ஆளா வந்துருவாருப்பா. அதுக்கேத்த எல்லாத் திறமைகளும் அவருக்கு இருக்குப்பா..."

"இருக்கலாம்மா. ஆனா... திரைப்படத்துறைங்கறது ஒரு சூதாட்டக் களஞ்சியம் மாதிரி. ஜெயிச்சா உச்சிக்குக் கொண்டு போய்விடும். தோத்துட்டா... அதல பாதாளத்துல தள்ளிடும். நிலையான, நிரந்தரமான புகழோ, வருமானமோ இருக்காதே! சினிமாவுல இருக்கற எத்தனையோ பேர் கஷ்டத்துலயே இருக்காங்களே... எல்லாருமா முன்னேறிடறாங்க?..."

"முன்னேறலாம்ப்பா. நம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தா... நிச்சயமா முன்னேறிடலாம். இந்த ரெண்டுமே ஸ்ரீதர்கிட்ட நிறைய இருக்கு. திறமை மட்டும் இருந்தா போதாது, அந்தத் திறமையை வெளிக் கொண்டு வர என்னென்ன முயற்சிகள் எடுக்கணுமோ அத்தனையும் எடுத்துக்கிட்டிருக்கார்ப்பா."

"முயற்சிகள் வெற்றி அடைஞ்சுட்டா சரி. இல்லைன்னா....? கைவசம் வேற தொழிலும் தெரியாம பெரிய படிப்பு இல்லாம டான்சுக்குத் தாளம் போடற மாதிரி சோத்துக்குத் தாளம் போடணுமேம்மா... எந்த ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டாலும் வெற்றி, தோல்வி ரெண்டையுமே சிந்திச்சுப் பார்க்கணும்மா."

"நீங்க சொல்றது சரிதான்ப்பா. ஆனா... ஸ்ரீதரை ஒரு தடவை பார்த்து பேசிட்டிங்கன்னா அவரோட வெற்றி நிச்சயங்கற முடிவுக்கு நீங்களே வந்துருவீங்க. ஏன் சொல்றேன்னா... டான்ஸ் துறையில ஜெயிக்கணும்... ஜெயிக்கணும்ங்கற... ஒரு வெறி அவர்க்கு இருக்கு... ஒரு தீ அவருக்குள்ள எரிஞ்சுக்கிட்டே இருக்கு. சினிமாவுல டான்ஸ் மாஸ்டரா உயரணும்ங்கற ஒரு இலக்கை நோக்கி அவர் பண்ற பயணம் நிச்சயமா வெற்றி அடையும். அதுக்காக அவர் உழைக்கற உழைப்பும் மிகக் கடினமானது. ப்ளீஸ்ப்பா புரிஞ்சுக்கோங்கப்பா..."

"புரியுதும்மா. மேலே சொல்லு. அவரோட குடும்பத்தைப் பத்தி..."

"ஸ்ரீதருக்கு ஒரு அண்ணன் இருக்காரு. அவரோட பேர் தீபக். அவர் வக்கீலுக்குப் படிச்சுட்டு சென்னையில ஒரு பெரிய லாயர்கிட்ட ஜூனியரா இருக்காரு..."


"ஓ... ஸ்ரீதரோட அண்ணனும் சென்னையிலதானா? ஸ்ரீதரும் டி.வி.யில டான்ஸ் ஆடறதுக்குச் சென்னையிலதானே இருந்தாகணும்?..."

"ஆமாப்பா. ரெண்டு பேரும் சென்னைக்கும், பாண்டிச்சேரிக்கும் வந்து போய்க்கிட்டிருக்காங்க..."

"ஏன்? குடும்பத்தோட சென்னையில குடியேறிட வேண்டியதுதானே?"

"அவங்கம்மா இதுக்கு ஒதுக்க மாட்டேங்கறாங்களாம்..."

"ஏன்?"

"அது... அது... வந்துப்பா... ஸ்ரீதரோட அப்பா பிரிஞ்சு போயிட்டாராம். அதனாலதான் அவங்கம்மா சமையல் வேலைக்குச் சேர்ந்திருக்காங்க. ஸ்ரீதரும், அவங்க அண்ணனும் சின்னப் பிள்ளைகளா இருந்தப்பவே அவங்கப்பா பிரிஞ்சுட்டாராம். அவங்கம்மாதான் வேலை செஞ்சு கஷ்டப்பட்டு இவங்க ரெண்டு பேரையும் வளர்த்திருக்காங்க...."

"என்னம்மா இது? சமையல் வேலை செய்றவங்களோட பையன்னு சொன்ன. அதுக்கு ஏதேதோ உதாரணமெல்லாம் சொன்ன. நானும் ஒத்துக்கிட்டேன். இப்ப என்னடான்னா ஸ்ரீதரோட அப்பா பிரிஞ்சுட்டார்ன்னு சொல்ற. அவங்கப்பா யாரு? அவருக்கு எந்த ஊரு?"

"அதைப் பத்தியெல்லாம் அவங்கம்மா எதுவும் சொந்தப் பிள்ளைங்ககிட்ட கூட சொல்ல மாட்டாங்களாம்."

"அதெப்பிடிம்மா, அப்பா யார்? அவர் ஏன் போனார்ன்னு தெரிஞ்சுக்காம, நான் முடிவு எடுக்க முடியும்?"

"அப்பா... பூஞ்சோலையில பூத்துக் குலுங்கற பூக்களைப் பார்த்து ரசிக்கறோம். சந்தோஷப்படறோம். அந்தப் பூக்கள் ஒவ்வொண்ணும் எந்தச் செடியில பூத்தது?... எந்த விதையில அந்தச் செடி முளைச்சதுன்னு ஆராய்ச்சி பண்றோமா?..."

"அது இயற்கை. இது வாழ்க்கை. ஸ்ரீதரோட பூர்வீகம் தெரிஞ்சாத்தாம்மா உன்னை அவனுக்குக் கட்டிக் குடுக்கறதான்னு என்னால முடிவு எடுக்க முடியும்."

"அப்பா... அவரோட பூர்வீகம் தெரிஞ்சு அவர்ட்ட என் மனசைக் குடுக்கலை. அவரோட மனசையும், உழைக்கும் குணத்தையும் பார்த்துத்தான் அவரை நேசிச்சேன். கெட்டுப் போறதுக்கு நிறையச் சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையிலயும் ஒழுக்கமா இருக்கற அவர் யோக்கியமானவர். நல்லவர். அதனால அவர் கூட நான் வாழும் வாழ்க்கை சந்தோஷமா இருக்குமே தவிர எந்த சஞ்சலமும் இருக்காது. துணிவே துணைன்னு சொல்லி என்னை வளர்த்தீங்களேப்பா... அதே துணிவைத் துணையா கொண்டுதான் கணவன் பிரிஞ்சு போனப்புறம் ரெண்டு மகன்களைப் பாடுபட்டு வளர்த்து ஆளாக்கியிருக்காங்க ஸ்ரீதரோட அம்மா. ஒரு வேலையைத் தேடிக்கிட்டு கௌரவமா வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அவங்களுக்குள்ள என்ன பிரச்னையோ? அதைப்பத்தி நமக்கென்ன?...

"என்னமோம்மா.. நீ எனக்கு ஒரே பொண்ணு. உன்னோட விருப்பத்தை மீறி என்னால என்ன செய்ய முடியும்? நான் சொல்லிக் குடுத்த பாடத்தை எனக்கே திரும்பச் சொல்லி என்னை மடக்கிட்ட... அது சரி... அண்ணன் இருக்கும் போது தம்பிக்கு என்ன அவசரமாம்?"

"அவசரப்பட்டுட்ட காதல்ன்னாலும் அழிஞ்சு போகாத காதல்ப்பா எங்களோடது."

"சாமர்த்தியமா பேசியே என்னைச் சமாதானப்படுத்திடற. அது போகட்டும். அண்ணன் படிப்புல கெட்டிக்காரனா இருக்கும் போது, தம்பிக்கு ஏன் படிப்புல பிடிப்பு இல்லாம போச்சு?" சிரித்தபடியே கேலியாகக் கேட்டார் கங்காதரன்.

"சிரிக்காதீங்கப்பா. நம்ப கையில இருக்கற அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு? அவங்க அண்ணனுக்குப் படிப்புல ஆர்வம். இவருக்கு நடனத்துல ஆர்வம்."

"ஆர்வக் கோளாறுல எதிர்காலத்தைக் கோட்டை விட்டுடக் கூடாதில்ல?"

"ஆர்வம் மட்டும்தான்ப்பா. கோளாறு எதிலயும் இல்லை. அதனால ஒளிமயமான எதிர்காலம் கிடைக்கும்ப்பா."

"நீ இவ்வளவு தூரம் பேசறதுனாலயும், உனக்கு இருக்குற நம்பிக்கையிலயும்தான் ஸ்ரீதருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி வைக்கச் சம்மதிக்கிறேன்... ஆனா... நீ நாளைக்கு ஏமாந்து போய்க் கண்ணைக் கசக்கினா என்னால அதைத் தாங்க முடியாது..."

"நீங்க கண்ணாரக் கண்டு களிக்கற மாதிரிதான் என்னோட வாழ்க்கை இருக்கும்ப்பா. கவலையே படாதீங்க."

"சரிம்மா. ஸ்ரீதரோட அண்ணன் தீபக்கோட கல்யாணம் நிச்சயமாகட்டும். அது வரைக்கும் பொறுமையா இரு. அதுக்கப்புறம் பேசி முடிச்சுடலாம்."

"சரிப்பா. தேங்க்ஸ்ப்பா." மகளின் குரலில் தென்பட்ட மகிழ்ச்சி கண்டு தானும் உள்ளம் மகிழ்ந்தார் கங்காதரன்.

30

ங்களாவின் முகப்பில் இருந்த அழகான அகன்ற படிக்கட்டுகளின் மேல் படியில் முத்தையா உட்கார்ந்திருந்தார். அவரருகே வசந்தா உட்கார்ந்திருக்க, அடுத்த படிக்கட்டில் வசந்தாவின் மடி மீது தலை சாய்த்துச் சரண்யா உட்கார்ந்திருந்தாள்.

தோட்டத்துக் குளிர் காற்றும், பூத்துக் குலுங்கிய மலர்களின் வாசனையும் மனதை அள்ளியது. கறுப்பு வண்ணத்தில் கோப்பை நிற நீலப்பூக்கள் தெளித்திருந்த துணியில் சுரிதார் அணிந்திருந்தாள் சரண்யா. நீலப் பூக்களின் நடுவே, மின்னும் அழகிய வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டு அந்த உடையின் வண்ணத்திற்கும் பூ வேலைப்பாடுகளுக்கும் மேலும் அழகு சேர்த்திருந்தது. சரண்யாவின் சிவந்த நிறத்திற்கு அந்த வண்ண உடை மிகவும் பொருத்தமாக இருந்தது. சரண்யாவின் அழகை ரசிப்பதில் வசந்தாவின் கவலைகள் பறந்தோடின.

பால்கோவா போன்ற கன்னக் கதுப்புகள் காவியம் கூறின. ஆரஞ்சுச் சுளை போன்ற காது மடல்களில் தொங்கும் அழகிய தங்கத் தொங்கல் கம்மல்கள்! நெற்றியை மறைக்கும் சுருள் முடிக் கற்றைகள்! பீட்ரூட் வண்ணத்தில் மெல்லிய உதடுகள்! அந்தக் காலத்து நடிகை சரோஜா தேவியின் சங்கு கழுத்து போல சரண்யாவின் கழுத்து மிக அழகாக இருந்தது. தந்தத்தில் கடைந்தெடுத்தது போன்ற கைகள். வெண்டைக்காய் விரல்கள். நகங்களின் மீது சிகப்பு வண்ணத்தில் நகப்பூச்சு பூசியிருந்தாள். ரோஜா இதழ்களின் மீது பொட்டு வைத்தது போலிருந்தது அந்த நகங்கள்! தன் பேத்தியின் அழகை எத்தனை முறை ரசித்தாலும் வசந்தாவிற்கு அலுக்காது.

அப்பொழுது சங்கரின் கார் பங்களாவினுள் நுழைந்தது. அதைப் பார்த்த சரண்யா துள்ளி எழுந்தாள்.

"ஹய்... அப்பா... இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டாரு... ஜாலி..." உரக்கக் குரல் கொடுத்தாள் சரண்யா.

வழக்கமாய் முகம் மலர வீட்டிற்குத் திரும்பும் சங்கர் அன்று சற்று வாடிப் போயிருந்தான்.

சரண்யாவைக் கண்டதும் ஹாய் சரணும்மா என்று குதூகலமாய் அழைக்கும் சங்கரிடம் தென்பட்ட மாற்றத்தைப் புரிந்து கொண்ட சரண்யா, எழுந்தாள். சங்கரின் அருகே சென்றாள்.

"என்னப்பா... உடம்பு சரியில்லையா? தலை வலிக்குதா? வேலை ரொம்ப அதிகமாப்பா?" வாஞ்சையோடு கேட்ட சரண்யாவிற்கு ஒற்றை வார்த்தையில் பதில் கூறினான் சங்கர்.

"இல்லைம்மா..."

அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார் முத்தையா.

"என்னப்பா சங்கர்? நிர்வாகத்துல ஏதாவது பிரச்னையா?"

"ஆமாம்ப்பா. லேபர் ப்ராப்ளம். கூலியைக் கூட்டிக் குடுத்தாலும் கூட இன்னும் வேணும் இன்னும் வேணும்னு பேராசைப்படறாங்கப்பா."

"அப்படியா? யூனியன் லீடரா இருக்கறது யார்? அவன் எப்படிப்பட்டவன்?"

"யூனியன் லீடரா இருக்கற நாகராஜன் நல்ல மனுஷன்தான்ப்பா. என்னன்னு தெரியல. திடீர்னு இன்னும் கூலியை ஏத்திக் குடுங்கன்னு மனு குடுத்திருக்கான். இத்தனைக்கும் தொழிலாளர்கள் நலனுக்கு மருத்துவ வசதி, அவங்களோட பிள்ளைகளுக்குக் கல்வி வசதி எல்லாமே கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன்ப்பா...."


"நீ எத்தனை வசதி பண்ணிக் குடுத்தாலும்  தொழிலாளிங்க ஒண்ணு நினைச்சுட்டாங்கன்னா... உனக்கு எதிராத்தான் கொடி பிடிப்பாங்க. இதுக்கு ஏன் நீ கவலைப்படற? நம்ப பக்கம் சட்ட ரீதியா எல்லா விஷயங்களும் கரெக்டா இருக்கறப்ப நாம ஸ்ட்ராங்கா இருக்கலாம். இதுக்கெல்லாம் நீ உன்னை வருத்திக்க வேண்டியதே இல்லை. நல்ல லாயராப் பார்த்து இந்த மேட்டரை அவங்க கிட்ட விட்டுடு. அவங்க பார்த்துப்பாங்க. மிஷின்ல வேலை பார்க்கும் போது தொழிலாளிக்கு அடிபடறது, விபத்து நேரிடறது இதெல்லாம் நடக்கறதுதான். இதுக்கு நாம என்ன பண்றது... இப்படிப்பட்ட விஷயத்துக்கெல்லாம் லாயர்ங்கதான் சரி. நம்ம கம்பெனி நிர்வாகத்துக்காகத் தனிப்பட்ட வக்கீல் யாரையாவது நிரந்தரமா நியமனம் பண்ணு. நம்ம கேசுங்க எல்லாத்தையும் அந்த வக்கீல் பார்த்துப்பாரு. நீ ரிலாக்ஸ்டா இரு..."

"நல்ல ஐடியா சொன்னீங்கப்பா. ஆனா நல்ல திறமையான வக்கீலா யார் இருக்காங்கன்னு விசாரிக்கணும்..."

"நம்ம பிரபாகர்கிட்ட விசாரியேன்..."

"ஆமாப்பா. பிரபாகர்கிட்டதான் கேக்கணும்."

"கேளு. கேட்டு நம்ம நிர்வாகம் சம்பந்தப்பட்ட எல்லா சட்டப் பிரச்னைக்கும் லீகல் அட்வைஸரா அந்த ஆளையே வச்சுக்க. உதவியா இருக்கும். டென்ஷன் இல்லாம நீ மத்த வேலையைப் பார்க்கலாம்."

"ஆமாப்பா, நாளைக்கு முதல் வேலையா வக்கீல் விஷயமா பிரபாகர்கிட்ட பேசிடறேன்," என்று கூறியவனின் முகத்தில் டென்ஷனும், கவலையும் மறந்து புன்னகை வந்தது.

இதைக் கண்ட சரண்யா மறுபடியும் துள்ளிக் குதித்தாள். புள்ளிமான் போல ஓடி வந்து சங்கரின் தோள்களில் சாய்ந்து கொண்டாள்.

"டென்ஷன் மாயமாயிடுச்சு அப்பாவுக்கு. சொல்லுங்கப்பா... இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டீங்க. வெளில எங்கயாவது போலாமா?" கிளிப்பிள்ளை போலக் கொஞ்சிப் பேசிக் கெஞ்சிய சரண்யாவின் தேன் மொழியில் மனம் லேசானான் சங்கர்.

"நீ எங்கே போகணும்ன்னு ஆசைப்படறியோ... அங்கேயே போகலாம்."

"அப்படின்னா நானே ப்ரோகிராம் சொல்லட்டுமா?"

"ஓ... சொல்லேன்..."

"முதல்ல ஸ்பென்ஸர் ப்ளாஸா போய் அங்கே வெஸ்ட் ஸைட்ல எனக்கு டிரஸ் வாங்கறோம். அப்புறம் அல்ஸா மால் போய் எனக்குத் தைக்க குடுத்த சுடிதார் ஸெட்டை வாங்கறோம். அதுக்கப்புறம் க்ரீன் பார்க் போய் டின்னர் சாப்பிடறோம். வீட்டுக்கு வர்றோம். இதுதான் நான் போடற ப்ரோக்ராம். சரியாப்பா?"

"என் சரணும்மா சொன்னா சரிதான்." சங்கர் சம்மதித்ததும் குஷியாகக் கிளம்பினாள் சரண்யா.

"அம்மா, நீங்களும் அப்பாவும் வாங்களேன். வீட்ல நைட்டுக்கு எதுவும் சமைக்க வேண்டாம்னு சமையல்காரம்மாட்ட சொல்லிடுங்க. நிதானமா போயிட்டு வரலாம்."

வசந்தாவிடம் கூறினான¢ சங்கர்.

"சரிப்பா. இதோ கிளம்பிடறோம்." வசந்தா எழுந்தாள்.

சங்கர் முகம் கழுவி விட்டு ஐந்து நிமிடங்களில் தயாரானான். வேறு உடை மாற்றிக் கொண்டு வந்தாள் சரண்யா.

"அப்பான்னா எங்கப்பாதான் அப்பா!" என்று சங்கரின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவர்கள் அனைவரும் ஒன்றாக வெளியில் கிளம்பினார்கள்.

31

சென்னை நகரத்தின் பிரபல வக்கீல்களில் ஒருவரான சுந்தரம் என்பவரிடம் ஜூனியராகச் சேர்ந்திருந்தான் தீபக். முதல் முறையிலேயே தீபக்கின் புத்திசாலித்தனத்தைப் புரிந்து கொண்டார் சுந்தரம். தீபக்கின் திறமைகள் அவரது மேற்பார்வையில் மேலும் மெருகு பெற்றன.

"வெரிகுட் தீபக். நீ எடுத்துக் குடுக்கற பாயிண்ட்ஸ் இந்த கேசுக்குப் பெரிய பக்கபலமா இருக்கு. உன்னை எனக்கு அறிமுகப்படுத்தினாரே வேதாசலம்! அவருக்குத்தான் நான் நன்றி சொல்லணும்."

"நான்தான் ஸார் அவருக்குப் பெரிசா நன்றிக் கடன் பட்டிருக்கேன். அவர் எங்களுக்கு எந்தவிதமான உறவோ ரத்த பந்தமோ கிடையாத. ஆனாலும் உதவி செஞ்சாரு. எங்க அம்மா வேலை செய்யற பங்களாக்காரங்களுக்குச் சொந்தக்காரர் அவர். எங்க அம்மா கஷ்டப்பட்டு எங்களை வளர்க்கறதைக் கண்கூடா பார்க்கறவர். அதனால உங்ககிட்ட என்னை அறிமுகப்படுத்தி, உதவி செஞ்சாரு."

"வேதாசலம் நல்ல மனுஷன். அவரோட உதவி செய்யற மனப்பான்மையினால உனக்கு மட்டுமல்ல. பல பேருக்கு நல்லது நடக்குது. எப்படித் தெரியுமா? அவரும், அவரோட மனைவியும் சேர்ந்து முதியோர் இல்லம் நடத்தறாங்க. உதவி இல்லாத பல முதியோர் அங்கே வந்து நிம்மதியா இருக்காங்க. வேதாசலத்தோட பொண்ணும், பையனும் வெளிநாட்டில செட்டில் ஆகிட்டாங்க. எங்க பிள்ளைங்க வெளிநாட்டுக்குப் போயிட்டாங்க. நாங்க இங்கே தனியா கிடக்கறோம்னு புலம்பாம, ஒரு நல்ல வழியில ஈடுபட்டு மத்தவங்களுக்கு உதவி செய்யற அவரோட மனித நேயம் பாராட்டுக்குரியது. வணக்கத்துக்குரியது."

"ஆமா ஸார். எங்கம்மா கூட வேதாசலம் ஐயாவைப் பத்தி பெருமையா சொல்லிக்கிட்டிருப்பாங்க... எங்களோட கஷ்டகாலத்துலயும் நல்ல காலமா அவரை மாதிரியும், உங்களைப் போலவும் பெரிய மனசு உள்ளவங்களைச் சந்திக்க வச்சிருக்காரு கடவுள்."

"உன்னோட பேச்சு அனுபவ ரீதியா இருக்கு. அதனால தெளிவாவும் இருக்கு. உன்னோடதிறமைகள் இன்னும் நிறைய வெளிப்படணும். பிரபாகர்ன்னு ஒரு எக்ஸ்போர்ட் பிஸினஸ் பண்றவர் எனக்கு நெருங்கிய நண்பர். அவரோட இன்னொரு நண்பருக்கு லீகல் அட்வைஸர் வேணும்ன்னு கேட்டாராம். பிரபாகர் என்கிட்ட சொன்னாரு. எனக்கு உன்னோட ஞாபகம்தான் வந்துச்சு. பிரபாகரோட ஃப்ரெண்ட் மிஸ்டர் சங்கர்கிட்ட உன்னை அனுப்பறேன். அவரோட அட்ரஸை வாங்கிக்க. பெரிய புள்ளி. பிரபலமான தொழிலதிபர்..."

"தொழிலதிபர்ன்னா... என்ன நிறுவனம் ஸார் அவரோடது?"

"சரண்யா ஹொஸைரி ப்ராடக்ட்ஸ். அதாவது பின்னலாடைத் தயாரிப்பு நிறுவனம் நடத்தறாரு. நைட்டீஸ், ஜட்டி, பனியன், ஸ்கர்ட்ஸ் இப்படி ஏகப்பட்ட ரகங்கள் தயாரிக்கிறாரு. சொந்தமா மிஷின்கள் வச்சு தயாரிச்சு வெளி நாடுகளுக்குக் கூட அனுப்பறாரு. உள் நாட்டிலயும் ப்ராண்ட் நேம் போட்டு எக்கச்சக்கமா தயாரிக்கிறாரு. அவரோட ஃபேக்டரி தொழிலாளர்கள் சம்பந்தமா சில பிரச்னைகள் உருவாயிருக்காம். இது சம்பந்தமா அவரோட நிறுவனத்துக்காக லீகல் அட்வைஸர் நிரந்தரமா தேவைப்படுதாம். அதுக்காகத்தான் உன்னை அவர்கிட்ட அனுப்பறேன். சங்கரைப் போய்ப் பாரு. நீ நல்ல பேர் எடுக்கணும். உன்னைச் சங்கருக்கு அறிமுகப்படுத்தி அனுப்பற எனக்கு நல்ல பேர் எடுத்துக் குடுக்கணும்."

"என் மேல நிறைய நம்பிக்கை வச்சிருக்கிற உங்களோட பேரை நிச்சயமா நான் காப்பாத்துவேன் ஸார். மிஸ்டர் சங்கரோட அட்ரஸ் குடுங்க ஸார்."

"இதோ..." தன் ப்ரீஃப்கேஸில் இருந்து சங்கரின் விசிட்டிங் கார்டை எடுத்து தீபக்கிடம் கொடுத்தார் சுந்தரம்.

"தேங்க்யூ ஸார். நான் நாளைக்குக் காலையிலேயே அவருக்கு போன் பண்ணி அவரோட அப்பாயிண்ட்மென்ட் வாங்கிட்டு போய்ப் பார்த்துடறேன் ஸார்."

"ஆல் தி பெஸ்ட் தீபக்." சுந்தரம் வாழ்த்தி அனுப்பியதும் அங்கிருந்து கிளம்பினான் தீபக்.


32

ங்கரின் அலுவலகம்! அந்தக் கட்டடத்தின் உள்ளும், புறமும் பிரமாண்டமாகவும், பிரமாதமாகவும் அலங்கரித்திருந்த நேர்த்தியைக் கண்டு பிரமித்துப் போனான் தீபக். வெளிநாட்டு நாகரிகத்திற்கு ஈடாக இருந்த சங்கரின் அலுவலகத்தில் சங்கரைச் சந்திப்பதற்காகக் காத்திருந்தான் தீபக்.

அங்கே வரவேற்பாளர் பணியில் அமர்த்தப்பட்டிருந்த இளம்பெண் ஷர்மிளா. அவனை உட்கார வைத்த அவளது கனிவையும், பணிவையும் வெகுவாக ரசித்தான் தீபக்.

சில நிமிடங்களில் கமகமக்கும் ஃபில்டர் காபியை மிக அழகிய பீங்கான் கப்பில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள் ஷர்மிளா.

"ப்ளீஸ் ஹேவ் தி காபி ஸார். மை பாஸ் வில் பி கமிங் நௌ..."

"ஓ.கே. மேடம். தேங்க்ஸ்."

காபியை வாங்கிக் கொண்ட தீபக், அதை ரசித்துக் குடித்தான். அவன் குடித்து முடித்த அதே நேரம், சங்கர் அலுவலகத்திற்குள் நுழைந்து, நேராக அவனது அறைக்குச் சென்றான்.

தீபக்கின் அருகே வந்தாள் ஷர்மிளா.

"இப்ப வந்தாரே... அவர்தான் என்னோட பாஸ். நீங்க பார்க்க வந்திருக்கற மிஸ்டர் சங்கர். அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்த ரூமுக்குள்ள போங்க. பாஸ் ஒரு அஞ்சு நிமிஷம் சாமி கும்பிடுவாரு..."

"சரி மேடம். அஞ்சு நிமிஷம் கழிச்சுப் போறேன்..."

"ஓ.கே.தேங்க்யூ." தேனில் குளித்தெழுந்த குரலால் அவனுக்கு நன்றி கூறினாள் ஷர்மிளா.

ஐந்து நிமிடங்கள் கழித்துச் சங்கரின் அறைக்குள் சென்றான் தீபக்.

"ஸார்... என் பேர் தீபக்..."

"தெரியும். என்னோட செக்ரட்டரி சொன்னாங்க. பிரபாகரோட வக்கீல் மிஸ்டர் சுந்தரத்துகிட்ட ஜூனியரா இருக்கீங்களாமே! ஏன் நிக்கறீங்க? உட்காருங்களேன்..."

"தேங்க்யூ ஸார்..." கூறியபடியே உட்கார்ந்தான் தீபக்.

"பிரபாகர் ஸார் மூலமா உங்களைப் பத்தி நிறையக் கேள்விப்பட்டிருக்காராம் எங்க சீனியர் லாயர் சுந்தரம் ஸார். உங்களோட மேனேஜ்மென்ட் திறமை, உங்க தயாரிப்புகளோட உயர்ந்த தரம், இதைப்பத்தியெல்லாம் பிரபாகர் ஸார் நிறையச் சொல்லி இருக்காராம். உங்களை மீட் பண்ணதில எனக்கு ரொம்ப சந்தோஷம் ஸார்..."

"சந்தோஷம் உங்களுக்கு மட்டுமில்லை மிஸ்டர் தீபக்! எனக்கும்தான். ஏன் தெரியுமா? பிரபாகர் அறிமுகப்படுத்தி அனுப்பி வைக்கற நபர்ன்னா நிச்சயமா திறமையானவரா இருப்பார், அவரால என்னோட பிரச்னைகளெல்லாம் தீர்வாயிடுங்கற சந்தோஷம்! என்ன மிஸ்டர் தீபக்! நான் சொல்றது சரிதானே?..."

"சரி இல்லை ஸார்..."

"என்ன?!..."

"ஆமா ஸார். என்னை நீங்க மிஸ்டர் தீபக்ன்னு கூப்பிடறது... நீங்க... நாங்கன்னு பேசறது சரி இல்லைன்னு சொல்றேன் ஸார்..." என்று தீபக் கூறியதும் வாய்விட்டுச் சிரித்தான் சங்கர்.

தீபக்கும் சிரித்தான்.

"ஒரு பெரிய நிறுவனத்தோட மேனேஜிங் டைரக்டரான நீங்க இவ்வளவு ஃப்ரீயா பழகறதுனால என்னோட டென்ஷன் மாயமாப் போயிடுச்சு...."

"வெரிகுட்... தீபக்! எங்க ஃபேக்டரியில வேலை செய்யற தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட ஃபைல்ஸ் எல்லாம் நீங்க... ஸாரி... நீ... பார்க்கணும். என்னோட செக்ரட்டரி கம் ரிஸப்ஷனிஸ்ட் ஷர்மிளா கிட்ட எல்லா விபரமும் சொல்லி இருக்கேன். அவங்க உன்னை, அது சம்பந்தப்பட்ட செக்ஷனுக்குக் கூட்டிட்டுப் போவாங்க. ஷி வில் ஹெல்ப் யூ..."

"ஓ.கே. ஸார். நான் போய்ப் பார்க்கறேன்."

"சரி, தீபக்..."

தீபக் எழுந்து போக முயற்சிக்கும் பொழுது, அந்த அறையின் கதவைத் தள்ளிக் கொண்டு பூப் போன்ற ஒரு பெண், புயலென உள்ளே நுழைந்தாள்.

"அப்பா... என்னப்பா நீங்க?! என்னோட கார் சாவியையும் சேர்த்து எடுத்துக்கிட்டு வந்துட்டீங்க?!..." அழகான அந்தப் பெண் செல்லமாய்ச் சிணுங்கியபடி பேசினாள். அவள் மட்டுமா பேசினாள்?! அவளது கயல் விழிகளும் பேசின. குறும்பு மின்னும் அந்தக் கண்கள்! துடிக்கும் செம்பவழ உதடுகள்! செழுமையிலேயே பிறந்து செல்வச் சூழ்நிலையிலேயே வளர்ந்த அவள் வாதுமைப் பருப்பில் வடித்தெடுத்த சிற்பம் போல் இருந்தாள். வைத்த கண் எடுக்காமல் அவளது அழகை அள்ளிப் பருகினான் தீபக். அவனை அறியாமல் அவ்விதம் ரசித்த அவன், ஓரிரு நிமிடங்களில் தன்நிலை உணர்ந்தான்.

"அட என்ன சரணுமா நீ? இதோ பக்கத்துல இருக்கு நம்ம பங்களா... இவ்வளவு கிட்டக்க இருந்து ஸ்கூட்டர்ல வர்றதுக்கு இத்தனை சிணுங்கலா? ஸாரிம்மா. தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன். இந்த உன்னோட கார் சாவி... பார்த்து சரணும்மா. ரொம்ப கவனம்! நீ இன்னும் சரியா கார் ஓட்டப் பழகலை. நீ ஓட்டறதைப் பார்க்க எனக்குப் பயமா இருக்கு."

"நான் என்ன... சின்னப் பாப்பாவா? இப்படி பயப்படறீங்க! குடுங்கப்பா சாவியை..." சாவியை வாங்கிக் கொண்டு மான் போலத் துள்ளி ஓடினாள் சரண்யா. அவள் போகும் போது கூட தீபக்கைப் பார்க்கவில்லை.

'சங்கர் ஸாரின் மகள்! பேர் சரண்யா! தீபக்கின் மூளை இந்த விஷயங்களைப் பதிவு செய்து கொண்டது. சரண்யா என்ற பெயர் அவனது இதயத்தில் அதிர்வுகளைத் தோற்றுவித்தது.

'முக்கியமான வேலையா என்னை இங்கே அனுப்பி இருக்காரு சுந்தரம் ஸார். இவ்வளவு பெரிய நிறுவனத்துல லீகல் அட்வைஸரா என்னை அப்பாயிண்ட் பண்ண சான்ஸ் இருக்கும். என்னோட முன்னேற்றத்துக்கு முதல்படியா இந்த சரண்யா ஹொஸைரி நிறுவனத்துல கால் வச்சிருக்கேன். ஆனா என்னோட கண்கள்? முதலாளியோட மகளைக் கண் கொட்டாமல் ரசிக்குதே... இது தப்பு. என் மனசை அலைபாய விடக்கூடாது.' தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்துக் கொண்டான் தீபக். சங்கரின் அறையை விட்டு வெளியேறினான். ஷர்மிளாவுடன் லேபர் சம்பந்தமான பிரிவிற்குச் சென்று, யாரைப் பார்க்க வேண்டுமோ அவரைப் பார்த்தான். அவரிடம் ஃபைலைப் பெற்றுக் கொண்டு கிளம்பினான்.

33

ங்கரிடம் தன் சாவியை வாங்கிக் கொண்ட சரண்யா, அவளுக்காகச் சங்கர் வாங்கிக் கொடுத்திருந்த புதிய ஹூண்டாய் அக்ஸெண்ட் காரில் ஏறினாள். காரை ஸ்டார்ட் செய்தாள். ஆக்ஸிலேட்டரை மிக அதிகமாக அழுத்தினாள். எனவே கார் வேகம் எடுத்தது. வேகத்தைக் கண்ட சரண்யா பயந்து போனாள். டென்ஷனாகப் போன சரண்யா, ப்ரேக்கை மிதிக்க வேண்டும் என்று கூடத் தோன்றாமல் திணறினாள். ஸ்டீயரிங்கைச் சீராகத் திருப்பாமல் விட்டபடியால் கார் நேர்கோட்டில் செல்லாமல் தாறுமாறாக ஓடியது. ஏ.ஸி. குளிரிலும் பயத்தில் தெப்பமாய் நனைந்து போனாள் சரண்யா.

சங்கரின் அலுவலகத்திலிருந்து வெளியேறித் தன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்த தீபக், ஏதோ ஒரு கார் தாறுமாறாக ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். தன் ஸ்கூட்டரின் வேகத்தைக் கூட்டி, சற்று முன் சென்றான். காருக்குள் சரண்யா இருப்பதைப் பார்த்தான். திடுக்கிட்டான்.


ஸ்கூட்டரை அவளது காரை ஒட்டி ஓட்டினான். அவளது கார் கதவின் கண்ணாடி ஜன்னலைத் தட்டினான். 'ப்ரேக்கைப் போடுங்க! ப்ரேக்கைப் போடுங்க,' என்று குரல் கொடுத்தான். கண்ணாடி வழியாகத் தீபக்கின் குரல் அவளுக்குக் கேட்காவிட்டாலும் அவனது உதட்டசைவில் அவன் கூறியதைப் புரிந்து கொண்ட சரண்யா, ஸ்டீயரிங்கைச் சீராக்கி, ஆக்ஸிலேட்டரை அழுத்தியிருந்த காலை மெதுவாக எடுத்து, காரை ஓர் ஓரமாகச் செலுத்தி ப்ரேக்கை அழுத்தினாள். கார் குலுங்கி நின்றது.

தீபக், தன் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு, கார் அருகே சென்றான். சரண்யாவும் தன் கார் கதவைத் திறந்து வெளியே வந்தாள். வியர்வையில் குளித்தது போல் ஈரமாகிப் போன உடையில் இருந்த சரண்யாவின் உடல் பயம் குறையாமல் நடுங்கியது. நடுக்கம் மாறாத குரலில் 'தேங்க்யூ' என்றாள்.

முயல் குட்டி போல் பயந்து போயிருந்த சரண்யாவைப் பார்க்கச் சிரிப்பாக வந்தது தீபக்கிற்கு. சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

"உங்க அப்பாதான் சொன்னார்ல? ஜாக்கிரதையா போம்மான்னு... பயமே இல்லாம கார் ஓட்டக் கத்துக்கிட்டப்புறம்தான் தனியா காரை எடுக்கணும். ஓட்டணும்..."

'இவருக்கு எப்படித் தெரியும்... அப்பா சொன்னது?!' வியப்பில் விழிகள் விரிய, தன் மனதில் தோன்றிய கேள்வியைத் தீபக்கிடம் வெளிப்படுத்தினாள்.

"எங்க அப்பா சொன்னது உங்களுக்கு எப்படித் தெரியும்?...."

"உங்க ஆபீசுக்கு நான் வந்திருந்தேன். உங்க அப்பா கூடப் பேசிக்கிட்டு இருந்தேன். நீங்க புயல் மாதிரி உள்ளே வந்தீங்க. மின்னல் மாதிரி மறைஞ்சு போயிட்டிங்க..."

"ஓ... அப்படியா?! நான் கவனிக்கவே இல்லை. உங்க பேர்?"

"என் பேர் தீபக். உங்க பேர் சரணும்மா... சரிதானே?!..."

'க்ளுக்' என்று சலங்கை கொஞ்சும் சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள் சரண்யா.

"சரணும்மாவா? ஐய... எங்கப்பா மட்டும் என்னை அப்படிக் கூப்பிடுவாரு. நீங்க ஆபீஸ்ல இருக்கும் போது கூப்பிட்டாரா?! என் பேர் சரண்யா..."

சரண்யாவின் குயிலோசை கலந்த குரலில் சொக்கிப் போனான் தீபக். சரண்யாவின் அழகிலும், அபிநயமான பேச்சிலும் மனதிற்குள் அவளிடம் சரண்டர் ஆனான் தீபக்.

'அடக்குடா தீபக்! அடக்கு. மனசை அடக்கு. நீயும் அடங்கு!' உள்மனம் இட்ட கட்டளைக்கு அடி பணிந்தான் தீபக்.

"உங்களுக்கு இன்னும் பயம் தெளியலை. இருங்க. என் ஸ்கூட்டரைப் பூட்டிட்டு வரேன். உங்க கார்ல உங்களை உங்க வீட்ல விட்டுடறேன். அப்புறமா நான் வந்து என்னோட ஸ்கூட்டரை எடுத்துக்கறேன்."

தீபக் கூறியதும், அவனது ஸ்கூட்டரைப் பார்த்தாள் சரண்யா.

'இத்தனை பழசான ஸ்கூட்டரா? இதை யாரு எடுத்துட்டு போகப் போறாங்கன்னு லாக் வேற போடணுங்கறார்?' சரண்யாவின் மனதிற்குள் எழுந்த கேள்விகளைப் படித்து விட்ட தீபக் சிரித்தான்.

"நீங்க என்ன நினைக்கறீங்கன்னு புரியுது. இந்த ஸ்கூட்டர் எங்க அம்மா வேலை செய்யற பங்களா முதலாளியம்மாவோட பிள்ளைங்க ஓட்டிப் பழசாப் போன ஸ்கூட்டர்தான். ஸ்கூட்டர் மட்டுமில்ல. சின்ன வயசுல இருந்தே அந்தப் பசங்களோட சட்டை, பேண்ட் இதெல்லாம் போட்டுத்தான் வளர்ந்தேன். ஏதாவது பண்டிகைன்னா முதலாளியம்மா புதுத் துணி எடுத்துக் குடுப்பாங்க. மத்த நாள்லயெல்லாம் பழந்துணிதான். அது மாதிரிதான் இந்த ஸ்கூட்டரும்..."

அவன் பேசி முடிப்பதற்குள் சரண்யா குறுக்கிட்டாள்.

"ஸாரி... பழைய ஸ்கூட்டர்னு நான் நினைச்சது உண்மை தான். ஆனா... அதுக்குப் பின்னால இப்படி ஒரு சோகப் பின்னணி இருக்கும்ன்னு நான் எதிர்பார்க்கலை..."

"சோகமெல்லாம் ஒண்ணுமில்லை. ஏழ்மையின் பிரதிபலிப்பு. அவ்வளவுதான். அதே பங்களாக்காரம்மாதான் வக்கீல் படிப்பு படிக்கறதுக்கு எனக்குப் பண உதவியும் செஞ்சாங்க. பங்களாவுல டிரைவர் வேலை பார்க்கற ஒரு அண்ணன்கிட்ட கார் ஓட்டக் கத்துக்கோன்னு சொல்லி நான் கார் ஓட்டறதுக்கு அவங்கதான் ஹெல்ப் பண்ணினாங்க. சரி... சரி. என்னோட வரலாறு ஒண்ணும் பெரிய சரித்திர காலத்து வரலாறு இல்லை. வாங்க. கார்ல ஏறுங்க..."

பேச ஆரம்பித்த ஓரிரு நிமிடங்களில் வெகு சரளமாகப் பேச ஆரம்பித்த தீபக்கைப் பார்த்து ஆச்சர்யமானாள் சரண்யா. காரில் ஏறினாள். தீபக் காரை ஓட்டினான். சரண்யா வழி சொல்ல, சங்கரின் பங்களா போர்டிகோவின் முன் போய் நிறுத்தினான் தீபக்.

"உங்க ஆபீஸிலிருந்து ரொம்ப பக்கத்துல இருக்கு உங்க வீடு?!"

"ஆமா தீபக். ஆபீசுக்குப் பக்கத்துலயே வீடு இருந்தா வசதிதானே? அதனாலதான்..."

அவள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே காரின் ஹாரன் ஒலி கேட்டு வசந்தா வெராண்டாவிற்கு வந்தாள். காரிலிருந்து தீபக் இறங்குவதையும், கூடவே சரண்யா வருவதையும் பார்த்த வசந்தாவின் முகத்தில் கேள்விக்குறி உணர்வுகள் வெளிப்பட்டன.

"பாட்டி... இவர் மிஸ்டர் தீபக். வக்கீல். அப்பாவுக்குத் தெரிஞ்சவர்..." என்று ஆரம்பித்து காரைத் தன்னால் சமாளித்து ஓட்ட முடியாத நிலையையும், தீபக் உதவி செய்ததையும் விளக்கிக் கூறினாள்.

"ரொம்ப தேங்க்ஸ் தம்பி. என் மகன் சங்கர்கிட்ட இவளுக்கு இப்ப கார் வாங்கிக் குடுக்காதேன்னு எவ்வளவோ சொன்னேன். அவன் கேக்கலை. இவ ஆசைப்பட்டுட்டாள்னு, கார் ஓட்ட சரியா கத்துக்கறதுக்கு முன்னாடியே வாங்கிக் குடுத்துட்டான். நல்ல வேளை நீங்க பார்த்து உதவி செஞ்சிங்க. இவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா எங்க வீட்ல யாராலயும் அதைத் தாங்கிக்க முடியாது. அடடா... பேசிக்கிட்டே இருக்கேனே... உள்ள வாங்க தம்பி."

"இல்லங்கம்மா. நான் கிளம்பறேன். என்னோட ஸ்கூட்டரைப் போய் எடுக்கணும்."

"அதெல்லாம் எடுத்துக்கலாம்ப்பா. எங்க வீட்டுக்கு வர்றவங்க எதுவும் சாப்பிடாம போகவே கூடாது." வசந்தாவின் அன்புக் கட்டளையை மீற இயலாமல் உள்ளே சென்றான் தீபக்.

பங்களாவையும், பங்களாவின் உட்புறத்தையும் பார்த்து மானசீகமாக வாய் பிளந்தான் தீபக். டைனிங் டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த அழகிய பீங்கான் சாமான்களிலிருந்து சுவர்களில் அங்கங்கே மாட்டப்பட்டிருந்த ஓவியங்கள் வரை அனைத்திலும் பணம்!...பணம்!...பணம் பேசியது. அலங்கரிப்பதற்கு என்னதான் கலை உணர்வு ஒரு காரணம் எனினும் அந்தக் கலை உணர்விற்கு விலையாகப் பணமும் ஒரு தேவைதானே?!

"என்ன தீபக்? பாட்டி குடுத்த ஜூஸைக் குடிக்காம திரு திருன்னு முழிக்கறீங்க?!" சரண்யா கேட்டதும் மடமடவென்று ஜூஸைக் குடித்தான் தீபக். அவன் வேகமாக ஜூஸைக் குடித்தாலும் அவனது இரண்டு கைகளாலும் க்ளாஸைப் பிடித்துக் குடிப்பதைக் கவனித்தாள் வசந்தா.

'சங்கர் க்ளாஸைப் பிடிக்கற மாதிரியே பிடிச்சுக் குடிக்கறான் இந்தப் பையன்!' நினைத்துக் கொண்டாள் வசந்தா. அப்போது முத்தையா அங்கே வந்தார்.


அவர் அருகே ஓடினாள் சரண்யா. அவள் கார் ஓட்டியது பற்றியும், தீபக் காப்பாற்றியது பற்றியும் சுருக்கமாகக் கூறித் தீபக்கை அறிமுகப்படுத்தி வைத்தாள்.

"வணக்கம்ங்க ஐயா..."

தீபக் இவ்விதம் கூறியதைக் கேட்டுச் சிரித்தாள் சரண்யா. தொடர்ந்து பேசினாள்.

"அதென்ன ஐயா... பையான்னுக்கிட்டு? ஸார்னு சொல்லாம?"

"சரண்யா குட்டி... ஸார்... மோரெல்லம் இப்ப வந்த பழக்கம்மா. ஐயானு எவ்வளவு அன்பா பணிவா கூப்பிடுது இந்தத் தம்பி..."

"தம்பி.. தங்கக் கம்பி... அட போங்க தாத்தா..." சரண்யா பேசுவதைக் கேட்டு தீபக் தப்பாக நினைத்துக் கொள்வானோ என்று முத்தையா சமாதானமாகப் பேசினார்.

"எங்க சரண்யா இப்படித்தான் தம்பி. நீங்க ஒண்ணும் தப்பா நினைக்காதிங்க. அவ விளையாட்டுப் பிள்ளை..."

"அதுதான் தெரிஞ்சுதேய்யா... விளையாட்டுக் கார் ஓட்டற மாதிரி ஓட்டினாங்களே..."

தீபக்கைக் கோபமில்லாமல் மென்மையாக முறைத்தாள் சரண்யா.

"சொல்லுங்க தம்பி. நீங்க என்ன பண்றீங்க?" முத்தையா கேட்டதும், தன் சட்டக் கல்வி, அதன் மூலமாய்க் கிடைத்த நல்ல மனிதர்களின் அறிமுகம் மற்றும் சங்கரின் நிறுவனத்தில் லீகல் அட்வைஸராக நியமிக்கப்படலாம் போன்ற அத்தனை தகவல்களையும் எடுத்துக் கூறினான் தீபக்.

‘‘அப்போ... ரொம்ப நெருங்கிட்டீங்கன்னு சொல்லுங்க. சந்தோஷம் தம்பி. உங்களை மாதிரி துடிப்பான இளைஞர்கள் திறமையா செயல்படணும். வாழ்த்துக்கள்...’’

முத்தையா கூறியதும் அவரது கால்களில் விழுந்து வணங்கினான் தீபக். அவனை மனதார ஆசிர்வதித்தார் முத்தையா.

‘‘நான் கிளம்பறேங்க.’’ வசந்தாவிடமும், முத்தையாவிடமும் விடைபெற்றுக் கிளம்பிய தீபக்கின் விழிகள் சரண்யாவைத் தேடின. உடை மாற்றிக் கொள்வதற்காக மாடி அறைக்குச் சென்றிருந்த சரண்யா படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தாள்.

"நான் கிளம்பறேன்." என்றவன் அவளது விழிகளைத் தன் விழிகளில் சந்தித்தான். அவளது விழிகளும் தீபக்கின் விழிகளுடன் கலந்துரையாடின.

கையசைத்து விடை கொடுத்தாள் சரண்யா.

அங்கிருந்து கிளம்பினான் தீபக்.

34

ஞாயிற்றுக்கிழமை காலை நேரம், பங்களாவில் காலை டிபன் தயாரிக்கும் வேலையை வழக்கத்தைவிடச் சீக்கிரமாக முடித்து விட்டுத் தன் குவார்ட்டர்சுக்கு வந்தாள் ஜானகி. சனி, ஞாயிறு என்றால் தீபக்கும், ஸ்ரீதரும் சென்னையில் இருந்து பாண்டிச்சேரி வரும் நாட்கள் என்பதால், அன்றைய தினங்களில் கூடியவரை மகன்களுடன் இருக்க முயற்சிப்பது அவளது வழக்கம். அன்று பங்களாவிலிருந்து சூடான இட்லிகளையும், தக்காளி சட்னியையும் டிபன் கேரியரில் எடுத்து வந்திருந்தாள்.

தீபக்கும், ஸ்ரீதரும் ஜானகி பங்களா வேலைக்குப் போகும் பொழுதே எழுந்து விட்டிருந்தனர். ஜானகி திரும்ப வருவதற்குள் இருவரும் குளித்து முடித்துச் சாமி கும்பிட்டுவிட்டுக் காத்திருந்தனர்.

ஜானகியின் கையிலிருந்த டிபன் கேரியரைப் பார்த்ததும் துள்ளி ஓடி வந்தான் ஸ்ரீதர்.

"ஆஹா! டிபன் வந்துருச்சு... ஆசையில் ஓடி வந்தேன்..." பாடிக் கொண்டே ஜானகியிடமிருந்து டிபன் கேரியரை வாங்கினான் ஸ்ரீதர். திறந்தான்.

"ஆஹா... அம்மா கையால செஞ்ச மல்லிகைப் பூ இட்லி, தக்காளி சட்னி... பிரமாதம்..." என்று கூறியபடியே சாப்பிட உட்கார்ந்தான் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் செய்வதையெல்லாம் வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தீபக்கை அழைத்தாள் ஜானகி.

"வாடா தீபக்!" என்றபடியே தட்டுக்களை எடுத்து வைத்து, தண்ணீரும் மொண்டு வைத்தாள்.

எழுந்து வந்தான் தீபக். அவன் வருவதற்குள் நாலைந்து இட்லிகளை சட்னியில் குளிக்க வைத்து உள்ளே தள்ளினான் ஸ்ரீதர்.

"என்னடா அவசரம் உனக்கு? இப்படி முழுங்கற?" தீபக் கேட்டான்.

"உனக்கென்ன அண்ணா? நீ கேப்ப... நாள் முழுசும் டான்ஸ் ஆடறது நான்தானே? ஆடற ஆட்டத்துக்கு இப்படி சாப்பிடலைன்னா என் கதி என்ன ஆகும்? நீ வக்கீல்! உட்கார்ந்த இடத்துல... நின்ன இடத்துல இருந்து உடம்பு நோகாம வேலை பார்க்கறவன்..."

"எனக்கு மூளை வேலை பார்க்குதில்ல?" தீபக், தன் தட்டில் இருந்த இட்லியை மெதுவாக எடுத்து சட்னியுடன் சாப்பிட்டபடியே கேட்டான்.

"என்னோட உடம்புக்குத் தீனி இந்த டிபன் கேரியர்ல. உன்னோட மூளைக்குத் தீனி சட்டப் புத்தகத்துல...அம்மா.. இன்னும் ரெண்டு இட்லி போடுங்கம்மா..." ஏகப்பட்ட இட்லிகளை உள்ளே தள்ளினான் ஸ்ரீதர். அவன் இன்னும் ரெண்டு இட்லி போடுங்கம்மா என்று கேட்டு வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்க, இன்னும் ரெண்டு இட்லி போட்டுக்கப்பா என்று தீபக்கிடம் கெஞ்சியபடி பரிமாறிக் கொண்டிருந்தாள் ஜானகி.

"நீங்களும் எங்க கூடவே சாப்பிட்டிருக்கலாம்மா?" அன்புடன் கேட்ட மகன்களைப் பாசப் பார்வை பார்த்து பூரித்தாள் ஜானகி.

"பத்து மணியானாத்தான் ஏதாவது குடுன்னு கேட்டு என்னோட வயிறு மணி அடிக்கும். இருங்க. காபி கலக்கித் தர்றேன்." எழுந்து சென்று பாத்திரத்தில் பாலை ஊற்றி ஸ்டவ்வைப் பற்ற வைத்தாள் ஜானகி.

விடியற்காலம் போட்டு வைத்திருந்த டிகாஷனை ஊற்றி, நுரை பொங்கும் காபியைத் தயாரித்து டம்ளர்களில் ஊற்றினாள். மகன்கள் இருவருக்கும் கொடுத்தாள். இருவரும் ரசித்துக் குடிப்பதை அவள் ரசித்தாள்.

"அம்மா... நீங்களும் சென்னைக்கு வந்துடுங்களேன். வாரத்துல அஞ்சு நாள் உங்களைப் பிரிஞ்சு இருக்க வேண்டி இருக்கு. இப்ப நான் ஓரளவு சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கேன்...."

"ஓரளவுக்குன்னா? எந்த அளவுக்குப்பா தீபக்? இப்ப இருக்கற விலைவாசியில சென்னையில போய் நாம குடும்பம் நடத்த முடியுமா? வெறும் கையில முழம் போடக் கூடாது. அங்கே போனா வீடு பார்க்கணும். அட்வான்ஸ் குடுக்கணும். அதுக்கப்புறம் மாசா மாசம் வாடகை குடுக்கணும். கண்ணை மூடித் திறக்கறதுக்குள்ள அடுத்த மாசம் பிறந்துடும். இங்கே குவார்ட்டர்ஸ்ல வாடகை இல்லாம குடி இருக்கோம். பங்களாக்கார மங்களத்தம்மா நம்ம வயிறு வாடாம மூணு வேளையும் சாப்பாடு குடுத்துடறாங்க. துணிமணி குடுத்துடறாங்க. நாள் கிழமைன்னா புதுத் துணி, விசேஷமான சாப்பாடு போடறாங்க. இப்போதைக்கு நம்ப குடும்ப வண்டி எந்தச் சிரமமும் இல்லாம ஓடிக்கிட்டிருக்கு. வாரத்துல அஞ்சு நாள் நீங்க ரெண்டு பேரும் உங்க வருமானத்துல சாப்பிட்டுக்கறீங்க. ஆனா நாம எல்லாரும் ஒட்டு மொத்தமா அங்கே குடி போகறதுன்னா ரொம்ப கஷ்டமாயிடும். என் மேல இருக்கற பாசத்தினால கூப்பிடறீங்க. எனக்குப் புரியுது. எனக்கு உங்க ரெண்டு பேரையும் பிரிஞ்சு இருக்கறது கஷ்டமாத்தான் இருக்கும். என்ன பண்றது, இன்னும் கொஞ்ச நாள் இப்படியே போகட்டும். நான் இப்ப சென்னைக்கு வர மறுக்கறதுக்கு இன்னொரு முக்கியமான காரணம் இருக்கு. அது என்ன தெரியுமா? மங்களத்தம்மா நமக்குச் செஞ்ச உதவிக்கும் சரி... செஞ்சுக்கிட்டிருக்கற உதவிக்கும் சரி... நாம பெரிசா நன்றிக்கடன் பட்டிருக்கோம்.


அதனால திடீர்னு பங்களா பொறுப்பை விட்டுட்டுப் போக முடியாது. போகவும் கூடாது. நான் அடிக்கடி சொல்வேனே... பாமாக்கான்னு ஒருத்தங்க என்னை இங்கே கொண்டு வந்து வேலைக்குச் சேர்த்தாங்கன்னு... அது போல நானும் யாராவது நல்ல ஆளா கிடைச்சு என்னோட வேலையில சேர்த்துவிட்டு, கொஞ்ச நாள் நானும் அவங்க கூடவே இருந்து எல்லா வேலையும், சமையல் முறையும் பழக்கினப்புறம்தான் இங்கே இருந்து கிளம்ப முடியும். அதுதான் நாம அவங்களுக்குச் செய்யற நன்றிக் கடன். புரியுதா?..."

"புரியுதும்மா. ஆனா அதுக்காக இன்னும் எவ்வளவு நாளைக்கு உங்க உடம்பு தேய உழைச்சுக்கிட்டே இருப்பீங்க? சமையல்கட்டுல கிடந்து வெந்துக்கிட்டிருப்பீங்க? உங்களை ஓய்வு எடுக்க வச்சு, உங்களை உட்கார வச்சு சாப்பாடு போடணும்ன்னு எங்களும் ஆசை இருக்காதா?" தீபக் பாசத்துடன் கேட்டான்.

"தீபக்! நமக்குக் கடவுள் எவ்வளவோ சோதனைகள் குடுத்திருக்காரு. கஷ்டங்கள் குடுத்திருக்காரு. ஆனா அதே கடவுள் என் உடம்புல பலத்தையும், தெம்பையும், நல்ல ஆரோக்யத்தையும் வழங்கி இருக்காரு. அதனாலதான் அத்தனை கஷ்டத்துலயும் உங்களை வளர்த்து ஆளாக்க முடிஞ்சுது. அதனால... என்னோட ஓய்வைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. எனக்கு ஓய்வு வேணும்ங்கற எண்ணம் என்னோட மனசுலயும் இல்லை. என் உடம்புலயும் இல்லை. நான் நல்லா இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னை நினைச்சு வருத்தப்படக் கூடாது..."

"சோதனைகள், கஷ்டங்கள் இதெல்லாம் கடவுள் குடுத்தார்ன்னு சொல்றீங்களேம்மா... இந்தக் கஷ்டங்களெல்லாம் அப்பாவாலதானே வந்துச்சு! அவரைப் பத்தி பேசவும் கூடாதுன்னு வாய்ப்பூட்டுப் போடறீங்க..." ஸ்ரீதர் சற்றுக் கோபமாகக் கேட்டான்.

"போட்ட பூட்டு போட்டதாகவே இருக்கட்டும்ப்பா. இப்ப எதுக்கு அந்தப் பேச்செல்லாம்? நீங்க ரெண்டு பேரும் நல்லபடியா முன்னுக்கு வந்து காட்டுங்க. ஜானகி தனி ஆளா வளர்த்த பிள்ளைங்க எப்படி முன்னேறி இருக்காங்கன்னு மத்தவங்க பாராட்டணும். நீங்க உயரணும். உங்களோட உயர்வைப் பார்த்து நான் சந்தோஷப்படணும். என்னோட லட்சியமெல்லாம் அது ஒண்ணுதான். மத்தப்படி கடந்த காலத்தைப் பத்தியெல்லாம் பேசறது எனக்குப் பிடிக்காதுன்னு தெரியும்ல. இன்னிக்கு பதினோரு மணி வரைக்கும் உங்க கூடவேதான் இருக்கப் போறேன். அதுக்கப்புறமாதான் பங்களாவுக்குப் போய் சமையல் பண்ணப் போறேன். அதையும் ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டு ஓடி வந்துடுவேன். நீங்க வெளில வெய்யில்ல அலையாம ரெஸ்ட் எடுங்க. சாயங்காலமா மணக்குள விநாயகர் கோவிலுக்குப் போயிட்டு வரலாம்."

"சரிம்மா!" இருவரும் கோரஸாகக் குரல் கொடுத்ததும், ஜானகி வாய்விட்டு, மனம் விட்டுச் சிரித்தாள். அங்கே சந்தோஷப் பூக்கள் மெதுவாகத் தம் இதழ் விரித்து மலர்ந்தன.

35

கையில் அழகான ரோஜாக்களால் தொகுக்கப்பட்ட 'பொக்கே'யைப் பிரபாகரிடம் கொடுத்தான் சங்கர்.

"என்ன சங்கர்? எதுக்காக பொக்கேயெல்லாம் குடுத்து அமர்க்களம் பண்றீங்க?"

"இன்னிக்கு எங்க கம்பெனியோட ஆண்டு விழா. இந்த கம்பெனியோட வளர்ச்சிக்கு முக்கியமான காரணகர்த்தா நீங்களாச்சே?! என்னோட சந்தோஷத்தைப் பகிர்ந்துக்கறதுக்காக இந்த பொக்கே."

"தேங்க்யூ சங்கர். நான் அப்படி என்ன பெரிசா பண்ணிட்டேன்?"

"பெரிய விஷயம்தான். ஆரம்ப கால கட்டத்துல உங்களோட எக்ஸ்போர்ட் ஆர்டரையெல்லாம் குடுத்ததுனாலதான் தயாரிப்பு பத்தின குவாலிட்டி மத்தவங்களுக்குத் தெரிய ஆரம்பிச்சது. உள்நாட்டுலயும் பல ஷோரூம்ஸ்சுக்கு ரெக்கமண்ட் பண்ணினீங்க. அதெல்லாம் எனக்குக் கை குடுத்துத் தூக்கிவிட்டது மாதிரி ரொம்ப உபயோகமா இருந்துச்சு. பொருளாதார ரீதியிலயும் சரி, நல்ல பெயர் எடுக்கற விஷயத்துலயும் சரி... நிறுவனம் வளர வளர நாமளும் வளர்ச்சி அடையறோம்ல! எப்பவும் உங்களோட எக்ஸ்போர்ட் ஆர்டர்சுக்குதான் முதலிடம். உள்ளூர், வெளியூர் எல்லா இடங்கள்ல இருந்தும் ஆர்டர் குவியறதுக்கு நீங்கதான் காரணம். உங்களோட உதவிக் கரங்கள்தான் காரணம். தொழில் ரீதியான பழக்கத்துக்கு அப்பாற்பட்டு நட்பு ரீதியா நாம இத்தனை வருஷமா நெருங்கிய நண்பர்களா இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கு."

"சந்தோஷம் உங்களுக்கு மட்டுமில்ல ஸார். எனக்கும் தான். எங்க முதலாளி ராஜேந்திர பிரசாத் ஐயாட்ட உங்களைப் பத்தியும், உங்க நிறுவனம் பத்தியும் அடிக்கடி பேசிக்கிட்டிருப்பேன். அவரும் ரொம்ப சந்தோஷப்பட்டாரு. ரெண்டு மூணு தடவை உங்களை நேர்ல பார்த்திருக்கார்ல... அதனால உங்களைப் பத்தி விசாரிப்பாரு. அவரால முன்ன மாதிரி எழுந்து நடமாட முடியலை. அதனால எங்கயும் வெளியே வர்றதில்லை. உங்களை வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னாரு."

"அடடே... நானே அவரை வந்து பார்த்திருக்கணும். இந்த ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா நான் உங்க வீட்டுக்கு வந்து அவரைப் பார்க்கறேன். ஐயாட்டயும் சொல்லுங்க..."

"கண்டிப்பா சொல்றேன் சங்கர். ஐயாவுக்கு 'தான் இன்னும் ரொம்ப நாள் இருக்க மாட்டோம்'ங்கற எண்ணம் வந்துருச்சு போல. அதனால லாயர் சுந்தரத்தை வச்சு உயில் எழுதிட்டாரு. அவரோட அசையாத சொத்துக்களை அனாதை இல்லங்களுக்கும், எக்ஸ்போர்ட் நிறுவனத்தையும், வீட்டையும் என்னோட பேருக்கும் எழுதி இருக்காராம். நான் தனி மனுஷன்... எனக்கெதுக்கு இவ்வளவு பெரிய வீடும், நிறுவனமும்ன்னு ஐயாட்ட கேட்டேன். 'என்ன செய்யணுமோ அதைத்தான் செஞ்சிருக்கேன். நீ பேசாம இரு!'ன்னு என்னோட வாயை அடைச்சுட்டாரு. அது சரி... லாயர்ன்ன உடனே ஞாபகம் வருது. உங்க நிறுவனத்துக்கு லீகல் அட்வைஸர் வேணும்னு கேட்டீங்களே? அதுக்காக தீபக்ன்னு ஒரு ஜூனியர் லாயரைச் சுந்தரம் ஸார் அனுப்பினாராமே! பையன் எப்படி?..."

"பையன் ஸெம ஸ்மார்ட். எத்தனையோ வருஷமா லேபர் ப்ராப்ளம் எதுவுமே இல்லாம ஓடிக்கிட்டிருந்த நிறுவனத்துல புல்லுருவி மாதிரி ஒரு நாலஞ்சு பேர் வந்து சேர்ந்தானுங்க. அவனுகளாலதான் பிரச்னைகள் தலை தூக்க ஆரம்பிச்சது. இப்ப இந்த தீபக் வந்தப்புறம் எல்லாப் பிரச்னைகளையும் பார்த்துக்கறான். நான் ப்ரொடக்ஷன் வேலையை மட்டும் நிம்மதியா பார்த்துக்கிட்டிருக்கேன்..."

"வெரிகுட். ரொம்ப நல்லது."

"ஆமா பிரபாகர். எனக்கு அந்த தீபக்கைப் பிடிச்சுப் போச்சு. நூறு ஸார் போட்டு மரியாதையா பழகறான். எனக்கு மட்டுமல்ல, எங்க அம்மாவுக்கு தீபக்ன்னா இஷ்டமாயிடுச்சு. வேலைக்குச் சேர்ந்த புதுசுல சரண்யாவை கார் ஆக்ஸிடெண்ட்ல இருந்து காப்பாத்தி இருக்கான். அப்போ எங்க வீட்டுக்குப் போயிருக்கான். அதில இருந்து அம்மாவுக்கு தீபக் ஃப்ரெண்டாயிட்டான். எப்பவாச்சும் அம்மா போன் போட்டு அவனை வரச்சொல்லி தடபுடலா சாப்பாடெல்லாம் போட்டு அனுப்புவாங்களாம். தீபக்கையே லீகல் அட்வைசரா போடலாம்ன்னு எங்க அம்மா என்கிட்ட ஸ்ட்ராங்கா சிபாரிசு பண்ணாங்க. அதுக்கேத்த மாதிரி அவனும் திறமைசாலியா இருந்ததுனால அவனை நியமிச்சுட்டேன்."


"ஓ... அம்மாவுக்கு அவன் மேல அவ்வளவு பிரியமா? அது சரி சங்கர்.. சரண்யா இந்த வருஷம் டிகிரி கோர்ஸ் முடிக்குதில்ல? அடுத்து என்ன பண்ணப் போகுது?"

"அடுத்து சரண்யாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு அப்பா சொல்லிக்கிட்டிருக்காரு."

"அப்படியா? சின்னப் பொண்ணாச்சே!"

"ஆமா. ஆனா அப்பாவுக்கு ஒரு ஆசை. சரண்யாவுக்குக் கல்யாணம் பண்ணிடணும்னு. இன்னும் சரணும்மாட்ட இதைப்பத்தி யாரும் பேசலை."

"பேசுங்க ஸார். மனம் விட்டுப் பேசி முடிவு பண்ணுங்க. இந்தக் காலத்துப் பொண்ணுங்க அவங்களோட எதிர்காலத்தை அவங்களேதான் முடிவு பண்ணணும்னு நினைக்கறாங்க. அதனால சரண்யாட்ட அவ மனசுல என்ன ஐடியா வச்சிருக்காள்ன்னு தெளிவா கேட்டுடுங்க."

"கேட்டுதான் செய்யணும் எதையுமே. ஏன்னா... முன்ன காலத்துல மாதிரி பாட்டிக்காக, தாத்தாவுக்காகன்னு பொண்ணுங்க இப்ப எதுக்கெடுத்தாலும் தலையாட்டறதில்லை. மேல படிக்கணும்னு நினைக்கறாளான்னு கேக்கணும்."

"படிக்கணும்ன்னு ஆசைப்பட்டா படிக்கட்டும் ஸார். படிச்சாதான் நல்லது. என்னதான் சொத்து, பத்துக்கள் இருந்தாலும் சொந்தக் கால்கள்ல நிக்கற ஒரு படிப்பு கண்டிப்பா பெண்களுக்கு வேணும்.  சரண்யா மேல பாசம் வச்சிருக்கற உங்க மனசு நிறைஞ்சு போற மாதிரி ஒரு எதிர்காலமும், மண வாழ்க்கையும் அவளுக்கு அமையும்."

"தேங்க்யூ பிரபாகர். அது சரி... லஞ்ச்சுக்கு எங்கேயாவது வெளியே போலாமா அல்லது எங்க வீட்டுக்குப் போலாமா?"

"இல்லை ஸார். ராஜேந்திர பிரசாத் ஐயாவுக்கு அடுத்த வாரம் பிறந்த நாள். எழுபது வயது முடியுது. அதுக்காக வீண் ஆடம்பரமான செலவெல்லாம் வேண்டாம், எழுபது ஜோடிகளுக்கு இலவசமா கல்யாணம் பண்ணி வைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணணும்ன்னு சொல்லி இருந்தாரு. மத்த ஏற்பாடுகள் எல்லாம் பண்ணி முடிச்சுட்டேன். எழுபது பட்டுப்புடவை, வேஷ்டி, ஷர்ட் எடுக்கற வேலையும், சமையலுக்கு நல்ல ஆளா பார்க்கற வேலையும்தான் பாக்கி இருக்கு... முதல்ல பட்டுப்புடவை, வேஷ்டி எடுக்கற வேலையை முடிக்கணும். எனக்கு இந்தப் பட்டு... புடவை... இதைப்பத்தியெல்லாம் ஒண்ணுமே தெரியாது..."

"அவ்வளவுதானே? நம்ம குமரன் சில்க்ஸ் இருக்கும் போது என்ன கவலை? நான் கூட்டிட்டுப் போறேன். குமரன் சில்க்ஸ் உரிமையாளர் சகோதரர்கள்ல மிஸ்டர் குமார் எனக்கு நெருங்கிய நண்பர். அவரோட கடைக்குக் கூட நம்ம பின்னலாடைத் தயாரிப்புகள் போகுதே. இப்பவே போகலாமா?"

"ஓ. நான் ரெடி. கையோட கேஷ் கூட எடுத்துக்கிட்டு வந்திருக்கேன்."

"கேஷ் எடுத்துட்டு வரலைன்னா கூடப் பரவாயில்லை. அப்புறமா குடுத்தனுப்பிக்கலாம்."

"அதுக்கு அவசியமில்லை சங்கர். என் கையில கேஷ் இருக்கு."

"சரி, வாங்க. என்னோட கார்லயே போயிடலாம்."

"ஓ.கே."

இருவரும் சங்கரின் காரில் கிளம்பினார்கள்.

டிரைவர் காளி... பவ்யமாய் கார் கதவைத் திறந்துவிட்டான். இருவரும் உள்ளே ஏறி உட்கார்ந்தனர்.

"காளி.... குமரன் சில்க்ஸ் போப்பா."

"சரி ஸார்."

கார் கிளம்பியது. குமரன் சில்க்ஸ் பார்க்கிங் ஏரியாவில் காரை நிறுத்தினான் காளி.

"வாங்க பிரபாகர். பட்டு செக்ஷனுக்குப் போகலாம்."

சங்கரும், பிரபாகரும் பட்டுப் புடவைகள் இருக்கும் மாடிக்குச் சென்றனர். அங்கே பிஸியாக ஊழியர்களுக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார் குமார். அவர் அருகே சென்றான் சங்கர்.

"ஹலோ... குமார்..."

திரும்பி அவனைப் பார்த்ததும் சந்தோஷமாக வரவேற்றார் குமார்.

"என்ன சங்கர் ஸார், அம்மா... பாப்பாவையெல்லாம் காணோம்? நீங்க மட்டும் வந்திருக்கீங்க!"

"அவங்க யாரும் வரலை குமார். இவர் என்னோட ஃப்ரெண்டு பிரபாகர். இவருக்காகத்தான் வந்திருக்கேன். எழுபது பட்டுப் புடவை, வேஷ்டி, ஷர்ட் எல்லாம் வேணுமாம்... இலவசமா கல்யாணம் பண்ணி வைக்கப் போறாராம்."

"ஹலோ மிஸ்டர் பிரபாகர்! முதல் முதலா எங்க கடைக்கு வந்திருக்கீங்க. சந்தோஷம். வாங்க... உங்களுக்கு வேண்டிய புடவையை எடுத்துக்கோங்க." என்ற குமார் அவர்களை அழைத்துச் சென்று புது டிஸைன் புடவைகளைக் காண்பிக்கச் சொல்லி ஊழியர்களுக்கு உத்தரவு இட்டார். கூடவே இருந்து புடவைகளைத் தேர்ந்தெடுக்க உதவி செய்தார். வேஷ்டிகள் எடுப்பதற்குக் கூடவே இருந்தார். பில் போடும் போது நிறைய விலைக் குறைப்பு செய்து கொடுத்தார்.

பிரபாகருக்குத் தன் வேலைகள் இத்தனை எளிதாக முடிந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி. இருவரும் குமாரிடம் விடைபெற்றுக் கிளம்பினர். புடவைகளைப் பணியாளர்கள் மூலம் காரில் ஏற்றச் செய்தார் குமார்.

"ரொம்ப நன்றி மிஸ்டர் குமார். எனக்குப் புடவைகள் பத்தி எதுவுமே தெரியாது. சங்கர் சொல்றாரு, இப்ப நாங்க எடுத்திருக்கற புடவைகளெல்லாம் மிக மிக நேர்த்தியா இருக்குன்னு."

"தேங்க்யூ பிரபாகர் ஸார். எப்ப வேணும்ன்னாலும் வாங்க."

"ஓ.கே."

சங்கரும் குமாரிடம் விடை பெற்ற பின், இருவரும் அங்கிருந்து கிளம்பினர். மீண்டும் காரில் ஏறினர்.

"உங்களுக்குதான் சங்கர் ஆயிரம் நன்றி சொல்லணும். நான் போட்ட பட்ஜெட்டுக்குள்ள எழுபது சேலை, வேஷ்டி, ஷர்ட் எல்லாம் வாங்கியாச்சு...."

"நண்பர்களுக்குள்ள செஞ்சுக்கற உதவிக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்ல பிரபாகர். நம்ப தலைமுடி கறுப்பா இரந்த காலத்துல இருந்து நண்பர்களா பழகறோம். இப்போ நரை, திரைன்னு வந்தாச்சு. இப்பவும் நம்ம நட்பு தொடருது பாருங்க... அதுதான் பெரிய விஷயம்."

"உண்மையிலேயே பெரிய விஷயம்தான் சங்கர். இதுக்காக நான் பெருமைப்படறேன்."

கார் சங்கரின் பங்களாவை நோக்கி விரைந்தது.

36

ங்களாவிற்குள் கார் நுழைந்தது. சங்கரின் கார் ஹாரன் ஒலி கேட்டு உள்ளிருந்து ஓடோடி வந்தாள் சரண்யா.

காரிலிருந்து இறங்கிய பிரபாகரைப் பார்த்தாள்.

‘‘ஹாய் பிரபாகர் அங்க்கிள்... வாங்க...’’

‘‘என்னம்மா காலேஜ்க்குப் போகலியா?’’

‘‘இன்னிக்கு லீவு அங்க்கிள்...’’

சங்கரைப் பார்த்ததும் அவனது தோளோடு ஒட்டிக் கொண்டாள்.

‘‘அப்பா... ஏம்ப்பா... இவ்வளவு நேரமா சாப்பிட வரலை? பாட்டி நீங்க இன்னும் சாப்பிடாம இருக்கீங்கன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க.’’

இதற்குள் முத்தையாவும், வசந்தாவும் அங்கே வந்தனர். பிரபாகரை வரவேற்றனர். வசந்தா, வேலையாட்கள் உதவியுடன், அவர்களுக்கு சாப்பிட எடுத்து வைத்தாள்.

சங்கர் தன் கையிலிருந்த புடவை பெட்டியைச் சரண்யாவிடம் கொடுத்தான். சரண்யா புடவை இருந்த அட்டைப் பெட்டியைத் திறந்து பார்த்தாள்.

‘‘வாவ்!.. அழகான மாம்பழக் கலர் பட்டு! அதில் பச்சைக்கலர் பார்டர்ல ஜரிகைமயில் தோகை விரிச்சு ஆடுது. புடவைக்கு நடுவுல மயில் இறகு மட்டும் நூல் வேலைப்பாடு பண்ணி இருக்கு! சூப்பரா இருக்குப்பா. குமரன் சிலக்ஸ்க்குப் போனீங்களாப்பா?’’

‘‘ஆமாம்மா. பிரபாகர் அங்கிளுக்காகப் போனேன். இந்தப் புடவை புதுசா வந்திருக்குன்னு எடுத்துக் காண்பிச்சாங்க. உடனே உனக்காக எடுத்துட்டேன். புடிச்சிருக்கில்ல.


‘‘பிடிச்சிருக்கு... ஆனா... இவ்வளவு க்ராண்டான புடவையை நான் எங்கேப்பா கட்டப்போறேன்?!...’’

‘‘அட என்னம்மா பொண்ணு நீ? உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு யோசிச்சுக்கிட்டிருக்கோம். பட்டுப் புடவை எங்கே கட்டப் போறேன்னு கேக்கற?’’ முத்தையா செல்லமாய் பேத்தியைக் கடிந்து கொண்டார்.

‘‘கல்யாணமா? எனக்கா? போங்க தாத்தா...’’

அவள் அதிகமாய் வெட்கப்படுவதைப் பார்த்த பிரபாகர் சிரித்தான்.

‘‘என்னம்மா... நீ வெட்கப்படறதைப் பார்த்தா... கல்யாணம் பண்ணிக்கற ஆசை வந்துடுச்சு போல் தெரியுது!’’ பிரபாகர் இவ்விதம் கேலி பண்ணியதும் சிணுங்கினாள் சரண்யா.

‘‘போங்க பிரபாகர் அங்க்கிள்.’’

‘‘இப்ப எல்லாரையும் போங்க போங்கன்னு சொல்ற, சீக்கிரமா உன் கல்யாணத்துக்கு எங்களை வாங்க வாங்கன்னு கூப்பிடப்போற!’’ பிரபாகர் கூறியதும் அனைவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்.

கல்யாணம் என்ற வார்த்தையைக் கேட்டதும் சரண்யாவிற்கு தீபக்கின் ஞாபகம் வந்தது. அவனது உருவம் அவளது கண்களை நிறைத்தது. வண்ண மயமான கனவுகளில் தீபக்கோடு சேர்ந்து மிதந்தாள் சரண்யா.

37

அலுவலகத்தில் ஷர்மிளாவிடம் கேட்டு தீபக்கின் மொபைல் நம்பரை வாங்கியிருந்தாள் சரண்யா. அவனுக்கு போன் செய்து பேசினாள்.

‘‘இன்னிக்கு நாம மீட் பண்ணணும். எங்கே மீட் பண்ணலாம்?’’

‘‘நாம சந்திக்கிறதா? எதுக்கு?’’

‘‘நான் உங்க கிட்ட பேசணும்...’’

‘‘அதை இப்பவே பேசலாமே?!...’’

‘‘தீபக்! ரொம்பவே நடிக்காதீங்க. உண்மையிலேயே உங்களுக்கு என் கூடப் பேசணும் போல இல்லையா? என்னைப் பார்க்கணும் போல இல்லையா?’’

‘‘அது... அது... வந்து...’’

‘‘யெஸ் ஆர் நோ, சொல்லுங்க. அது போதும்.’’ லேசாக மிரட்டிப் பேசினாள் சரண்யா.

‘‘யெஸ். பார்க்கணும்னு ஆசையா இருக்கு. பேசணும்னு ஆசையா இருக்கு. ஆனா பயமாவும் இருக்கே... அதனாலதான் அப்படி மழுப்பலா பேசினேன். ஐ ஆம் ஸாரி...’’

‘‘ஒரு பொண்ணான நானே வலிய உங்க மொபைல் நம்பருக்குப் போட்டு, உங்க கூடப் பேசறேன். உங்களுக்கு என்ன பயமாம்?’’

‘‘அது வந்து...’’

‘‘இதென்ன எதுக்கெடுத்தாலும் ‘அது வந்து’, ‘அது வந்து’ன்னு... எது வந்து? சகஜமா பேசுங்க...’’

‘‘அது வந்து... ஸாரி உங்க குடும்பச் சூழ்நிலை வேற... என்னோட குடும்பச் சூழ்நிலை வேற. என் மனம் போன போக்குல நான் போக முடியாது...’’

‘‘எல்லாருக்கும் குடும்பம் இருக்கும். உங்களுக்கு மட்டும்தான் குடும்பமா?’’

‘‘அப்படிச் சொல்லலை சரண்யா. எனக்குச் சில கட்டுப்பாடுகள் இருக்கு. அதனாலதான் பேசத் தயங்கறேன்...’’

‘‘எந்தத் தயக்கமும் தேவை இல்லை. இன்னிக்கு நாம ‘பரிஷ்டா’ காபி ஷாப்ல சந்திக்கறோம். கரெக்டா நாலு மணிக்கு வந்துருங்க. உங்களுக்கு முன்னால நான் அங்கே வந்து காத்துக்கிட்டிருப்பேன். சரியா?’’

‘‘சரி.’’

தீபக் சம்மதித்ததும் மொபைல் லைனைத் துண்டித்தாள் சரண்யா. ‘பாவம்! ரொம்ப பயமுறுத்திட்டேனோ?’ நினைத்துக் கொண்டாள். நினைவின் விளைவால் சிறு புன்னகை மென்மையாகப் பூத்தது.

38

ரிஷ்டா காபி ஷாப்! தனியாக வந்து தீபக்கிற்காகக் காத்திருந்தாள் சரண்யா. அன்றொரு நாள் தாறுமாறாகக் காரை ஓட்டியதிலிருந்து காரையே எடுப்பதில்லை. டிரைவரை ஓட்டிவரச் செய்துதான் எங்கும் போய் வந்து கொண்டிருந்தாள்.

சரியாக நான்கு மணி ஆகி ஐந்து நிமிடங்கள் கழித்துத் தீபக் அங்கே வந்தான். அவளுக்கெதிரே உட்கார்ந்தான்.

‘‘ஹாய் தீபக்!’’

‘‘ஹாய்!’’

‘‘என்ன தீபக்! என்ன சாப்பிடறீங்க?’’

‘‘ம்... அது... வந்து...’’

‘‘ஹய்யோ... ஆரம்பிச்சுட்டீங்களா? இந்த வார்த்தையை உங்க குரல் டிக்ஷனரியில இருந்து எடுத்துடுங்களேன்...’’

‘‘அது வந்து... ஸாரி... உங்க கூடப் பேசும்போதுதான் இப்படி உளர்றேன்...’’

‘‘சரி... உளறியது போதும். என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டேன்...’’

‘‘அது... வந்து... ஸாரி... ஸாரி... வெரி ஸாரி... எனக்கு இந்த மாதிரி இடங்கள்லயெல்லாம் சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. இங்கே சாப்பிடற அளவுக்கு எனக்கு வசதியும் கிடையாது. எங்க குடும்ப நிலைமை அப்படி. நீயே ஏதாவது ஆர்டர் பண்ணிடு. ப்ளீஸ்...’’

‘‘ஓ.கே.’’ என்றவள் அங்கிருந்த வெயிட்டரை அழைத்தாள்.

‘‘யெஸ் மேடம்!’’ என்றபடி வந்தான் அவன்.

‘‘ஒரு சிக்கன் பர்கர். ஒரு சிக்கன் நக்செகட்ஸ் குடுங்க.’’

‘‘ஓ.கே. மேடம்.’’ என்று கூறிவிட்டு அவன் நகர்ந்தான்.

‘‘என்ன தீபக். அன்னிக்கு கார் பிரச்னைக்கு அப்புறம் என்னைப் பத்தி நினைச்சீங்களா, இல்லையா?’’

‘‘ம்கூம். நான் நினைக்கவே இல்லை...’’

‘‘என்ன?! நினைக்கவே இல்லையா?’’ சரண்யாவின் முகம் வாடிப் போனது.

‘‘மறந்தாதானே நினைக்கறதுக்கு?’’ குறும்பாகச் சிரித்தான் தீபக்.

‘‘அடடே... பரவாயில்லையே?! ‘அது வந்து’...‘போய்’ன்னெல்லாம் இழுக்காம அழுத்தமா குறும்புப் பேச்செல்லாம் பேசத் தெரியுது!’’

‘‘எல்லாம் தெரியும். ஆனா பயம்...’’

‘‘என்ன பயம்?’’

‘‘இமயம் போல உயர்ந்து நிக்கற உங்க அந்தஸ்தைப் பார்த்துப் பயம்! சென்னையில முக்கியமான பிரபல புள்ளிகள்ல ஒருத்தரா இருக்கற உங்க அப்பாவைப் பார்த்துப் பயம்! இதுக்கெல்லாம் மேல தேவதை மாதிரி இருக்கற உன்னோட அழகைப் பார்த்துப் பயம்! உன் மேல உயிரையே வச்சிருக்கற உன்னோட வீட்டார் அத்தனை பேரும் உன்மேல காட்டற அன்பைப் பார்த்துப் பயம்!...’’

‘‘ப்ளீஸ் ஸ்டாப் இட் தீபக்! நீங்களும் மனுஷன். நாங்க எல்லாரும் மனுஷங்கதான். அன்புங்கறது மனுஷங்க அத்தனை பேருக்கும் பொதுவானது. பணக்காரங்க, ஏழைங்க பாரபட்சம் பார்த்து வராது. அன்பு உருவாகறதுக்கு மனுஷனா இருக்கணும். நல்ல மனசு இருக்கணும். அது போதும். என்னை மறந்தாதானே நினைச்சு பார்க்கறதுன்னு அழகா சொன்னீங்க. அப்படின்னா அதுக்கு என்ன அர்த்தம்?’’

‘‘அது... வந்து... ஸாரி... உன்னைப் பார்த்த முதல் நாள்ல்லயே உன் மேல அன்பு வந்துருச்சு. உன் முகம் என் கண் முன்னாடி நிழலாடிக்கிட்டே இருந்துச்சு. காரணமே தெரியாம என் இதயத்துல உன்னோட உருவம் ஃப்ரேம் பண்ணி மாட்டின படம் மாதிரி பதிந்திருச்சு. உன்னை நினைக்கவே கூடாதுன்னு என்னோட மனசுக்கு ஸ்பீட் ப்ரேக்கர் போட்டேன். ஆனா அதைவிட அதிகமான ஸ்பீட்ல உன் நினைவுகள் என்னோட இதயத்தைக் கிள்ளிடுச்சு. எதுக்குமே ஒரு கட்டுப்பாடு வச்சு பழகுற, வாழற நான், உன் விஷயத்துல என்னோட கட்டுப்பாட்டை இழந்துட்டேன். ஐ மீன்... என்னை உன்கிட்ட இழந்துட்டேன்...’’

‘‘நீங்க என் கிட்ட எதையும் இழக்கலை. நாம ரெண்டு பேரோட இதயங்களும் இணைஞ்சுருச்சு.’’

‘‘இதயங்கள் இணைஞ்சுருச்சா?!’’

‘‘ஆமா தீபக்! இவ்வளவு நேரம் நீங்க உங்களையும் அறியாம உங்களுக்குள்ள இருந்ததையெல்லாம் கொட்டினீங்களே! அதுக்கு என்ன காரணம்னு தெரியலியா? உங்க இதயமும், என்னோட இதயமும் ஒண்ணாயிடுச்சுன்னு... இதுக்குப் பேர் என்ன தெரியுமா?...’’


‘‘காதல்!’’ சரண்யா காதல் என்று கூறும் பொழுதே தீபக்கும் ஒரே சமயம் ‘‘காதல்’’ என்று கூற, இருவரது குரலும் கோரஸாக ஒலித்தது.

‘‘யப்பாடா... மனசுக்குள் இவ்வளவு காதலை வச்சுக்கிட்டு... நானா கூப்பிட்டுப் பேசற வரைக்கும் ‘கம்’ன்னு இருந்துக்கிட்டு, கேட்டா கட்டுப்பாடு, அந்தஸ்து... அது... இது...ன்னு பெனாத்திக்கிட்டு... இப்ப காதல்ன்னு வாயைத் திறந்து உங்களைச் சொல்ல வச்சுட்டேன் பார்த்தீங்களா?’’

‘‘நீ ஜெயிச்சது மட்டுமில்ல... உன்னோட மனசுங்கற ராஜாங்கத்துல என்னை ஏத்தி வச்சுட்டியே! மகாராணி நீ!’’

‘‘ராஜாங்கத்தை ஆளற மகாராணி நான்னா... அந்த மகாராணியையே ஆளற மகாராஜன் நீங்களாச்சே!’’

‘‘யம்மோய்! உன்னை மாதிரி எனக்குப் பேசத் தெரியாது.’’

‘‘எல்லாம் தெரிஞ்சும் தெரியாதது மாதிரி உங்களுக்கு நீங்களே முகமூடி போட்டுக்கறீங்க. நாம எடுக்கற முடிவு நல்ல முடிவா இருந்தா அதில ஸ்ட்ராங்கா நின்னுடணும்.’’

‘‘அந்த அளவுக்கு எனக்குத் தைர்யம் இல்லை...’’

‘‘எனக்குக் குடும்ப ஸென்டிமென்ட், பயம் எல்லாம் இருக்கு தீபக். ஆனா என்னோட எதிர்காலத்தை யார்கிட்ட ஒப்படைக்கணும்ங்கற உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கும்ன்னு நான் நினைக்கறேன். அதனால என்னோட குடும்பத்துல யார் தடுத்தாலும் அவங்க கூட வாதாடி நம்ம காதலை ஜெயிக்க வைப்பேன். காதலிச்சவரையே கைபிடிக்கணும்ன்னு கெஞ்சி, கதறி, விளக்கமா எடுத்துச் சொல்லி அவங்களோட சம்மதத்தை வாங்கறதுக்குப் பாடு படுவேன். அவங்க பார்த்து என் கையைப் பிடிச்சு உங்க கையில இணங்கி சந்தோஷமா நம்ம காதலை அங்கீகரிச்சு கல்யாணத்தை அரங்கத்துல நடத்தணும். அதுக்காகக் காத்திருப்பேன்...’’

‘‘ஒரு பொண்ணான நீயே இவ்வளவு பக்குவமாகப் பேசும்போது, நானும் உன் கூட தோளோடு தோள் குடுத்து, கூட வருவேன். ஐ லவ் யூ சரண்யா...’’

‘‘வாவ்... இந்த ஐ லவ் யூ எப்பதான் உங்க வாய்ல இருந்து வருமோன்னு காத்திருந்தேன். ஐ லவ் யூ தீபக். நம்பளை யாராலயும் பிரிக்க முடியாது...’’

இதற்குள் வெயிட்டர் சரண்யா ஆர்டர் செய்திருந்த உணவு வகைகளைக் கொண்டு வந்தான்.

தீபக்கின் அருகே சிக்கர் பர்கர் ப்ளேட்டை எடுத்துத் தீபக்கின் வாயில் கொடுத்து விட்டுத் தானும் உண்டாள். இருவரும் ஒரே ப்ளேட்டில் உணவு வகைகளைச் சாப்பிட்டனர். அடுத்து ஆர்டர் செய்த ஒரு கோல்ட் காபியையும் இருவரும் இரண்டு ஸ்ட்ரா போட்டுக் குடித்தனர்.

தற்செயலாய் அந்த பரிஷ்டா ஷாப் இருந்த ‘இஸ்பஹானி’ வளாகத்தின் வேறொரு கடைக்கு வந்திருந்த வாணி, தீபக்கும், சரண்யாவும் உள்ளே நுழைந்ததையும், ஒரே ப்ளேட்டில் சாப்பிட்டதையும் பார்க்க நேர்ந்தது.

உலகை மறந்து அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்த வாணி, அங்கிருந்து நகர்ந்தாள்.

39

ழக்கமாய்ச் சந்திக்கும் பூங்காவில் ஸ்ரீதரும், வாணியும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தனர். வாணி எலுமிச்சை வண்ண சுடிதார் அணிந்திருந்தாள். சுரிதாரில் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தது. ஒரே வண்ணத்தில் சுரிதார் பேண்ட்டும், மேலாடையும் அணிந்து ஜரிகை வேலைப்பாடு செய்யப்பட்ட கறுப்பு வண்ணத் துப்பட்டா போட்டிருந்தாள்.

தலைமுடியைத் தளரப் பின்னி முல்லைச்சரத்தை ஸ்டைலாக தொங்க விட்டிருந்தாள். அவளது அழகையும், அலங்காரத்தையும் ரசித்துக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.

‘‘என்ன அப்படிப் பார்க்கறீங்க?!’’ வாணி கேட்டாள்.

‘‘நான் இப்படிப் பார்க்கணும்னுதானே அலங்காரம் பண்ணி இருக்க?!’’

ஸ்ரீதர் கேட்டதும் வாணி வெட்கப்பட்டாள்.

"ஆமா, உங்களுக்காகத்தான், நீங்க ரசிக்கணும்ன்னுதான் பார்த்துப் பார்த்து ட்ரெஸ் ஸெலக்ட் பண்ணி, அழகுபடுத்தி இருக்கேன். உங்க கூட டான்ஸ் ஆடற பொண்ணுகளை விட நான் உங்க கண்ணுக்கு அழகாத் தெரியணுமே..."

"அட! அப்படி வேற இருக்கா? இங்க பாரு வாணி... ரம்பை, ரதி, ஊர்வசி, உலக அழகி ஐஸ்வர்யா ராயே என் கண் முன்னாடி வந்தாக் கூட என் நெஞ்சுல நிறைஞ்சிருக்கற நீதான் என்னோட கண்ணுக்கு அழகுன்னு ஏற்கெனவே சொல்லி இருக்கேன். இப்பவும் அதையேதான் சொல்றேன். இதை ஏதோ உன்னை சந்தோஷப்படுத்தறதுக்காகச் சொல்றேன்னு நினைக்காத. வார்த்தை ஜாலமெல்லாம் எனக்குத் தெரியாது. என் மனசுல என்ன இருக்கோ அதுதான் வெளியே வரும்."

"நிஜமா நானும் உங்களை முழுசா நம்பறேன் ஸ்ரீ...! உங்க இதயத்துல நான் மட்டும்தான் இருக்கேன். இருக்க முடியும்னு புரிஞ்சுக்கிட்டேன். அதனால தைர்யமா அப்பா கிட்ட நம்ம காதலைப் பத்தி பேசிட்டேன்..."

"நிஜமாவா? பேசிட்டியா?"

"ஆமா ஸ்ரீ. போன வாரம் நாம பார்க்ல பேசிக்கிட்டிருந்ததை எங்க அப்பாவோட ஃப்ரெண்டு கலைஞானம் மாமா பார்த்திருக்காரு. அப்பாகிட்ட போய் பத்த வச்சுட்டாரு. அப்பா அதைப் பத்தி என் கிட்ட எதுவும் கேட்காம 'டல்லா' உட்கார்ந்திருந்தாரு. நானாவே வலியப் போய்க் கேட்டப்பதான் சொன்னாரு. கலைஞானம் மாமா நம்பளைப் பத்தி சொன்னதை... நானும் அப்பாட்ட இதைப் பத்தி பேசணும்ன்னு இருந்த நேரத்துல கலைஞானம் மாமாவே ஒரு சந்தர்ப்பத்தை மறைமுகமா ஏற்படுத்திக் குடுத்துட்டாரு. உங்களைப் பத்தின விபரங்களையெல்லாம் அப்பா கேட்டாரு..."

"நீ என்ன சொன்ன?"

"அவசரத்தைப் பாரு. சொல்றதைக் கேளுங்களேன்... உங்க அண்ணன் தீபக் மாதிரி படிச்சு ஒரு தொழில் இல்லாம இருக்கீங்களேன்னு அப்பாவுக்கு மனக்குறை. டி.வி.யில டான்ஸ் ஆடற துறையில இருந்து நல்லா முன்னுக்கு வரலாம்பான்னு அவருக்கு எடுத்துச் சொன்னேன். உங்க அம்மா, அப்பா பத்தி கூடக் கேட்டாரு. உங்க அப்பா உங்க கூட இல்லைன்னு சொன்னதும்  ரொம்பவே அப்ஸெட் ஆனாரு. அதையும் சமாளிச்சு உங்க குடும்ப நிலைமையை விளக்கிச் சொன்னேன். நிறைய நேரம் எடுத்து, நிறையப் பேசி, அப்பாவுக்கு நீங்களும், உங்க குடும்பத்தினரும் நல்லவங்கன்னு புரிய வச்சேன். அம்மா இல்லாம என்னை வளர்த்தவராச்சே... அதனால என்னோட எதிர்காலம் பத்தின பயம் இருக்கத்தானே செய்யும்? நான் விளக்கமா சொன்னப்புறம் கன்வின்ஸ் ஆகிட்டாரு..."

"யப்பாடா.. இப்பத்தான் நிம்மதியா இருக்கு..."

"எங்க அப்பா எனக்குச் சுதந்திரம் குடுத்து வளர்த்தாரு. அது மட்டுமில்லை. தன் பொண்ணு மனம் விட்டுப் பேசறதைக் காது குடுத்துக் கேட்கணும்ங்கற அக்கறை உள்ளவரு எங்க அப்பா. அது சரி... உங்கம்மா கிட்ட நீங்க நம்பளைப் பத்தி பேசிட்டிங்களா?"

"அண்ணன் ஒருத்தன் இருக்கானே... அவனோட லைன் க்ளியராகாம... அம்மாகிட்ட பேசறதுக்குக் கொஞ்சம் பயமா இருக்கு. மத்தப்படி காதலுக்கு எதிர்ப்புக் காட்டறவங்க இல்லை எங்க அம்மா. ஏற்கெனவே நான் பட்டப் படிப்பு படிக்கலைங்கற ஆதங்கத்துல இருக்காங்க.


அதனால இந்த டான்ஸ் துறையில கொஞ்சம் பெரிய அளவில் முன்னேறினப்புறம் சொல்லலாம்ன்னு காத்துக்கிட்டிருக்கேன். உனக்கு உங்கப்பாட்ட ஒரு வாய்ப்புக் கிடைச்ச மாதிரி எனக்கும் எங்கம்மாட்ட பேசறதுக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்காமயா போயிடும்?"

"வாய்ப்புக் கிடைக்கும்னு காலத்தைக் கடத்திடாம அந்த வாய்ப்பை நீங்களே உருவாக்கி, உங்க அம்மா கிட்ட பேசிடுங்க ஸ்ரீ."

"முதல்ல அண்ணன் கிட்ட சொல்லிடுறேன். அப்புறம் அம்மாகிட்ட பேசிடறேன்."

"நான் என்னோட 'கருணாலயா' குழந்தைகள் இல்லம் திறக்கற விஷயமா சென்னைக்குப் போயிருந்தேன்."

"என்ன?! சென்னைக்குப் போனியா? எனக்கு ஒரு போன் கூட ஏன் போடலை?"

"நீங்க உங்க வேலையில பிஸியா இருப்பீங்க. அதனால போன வேலை முடிச்சதும் கிளம்பி வந்துட்டேன். அதைவிட ஒரு த்ரில்லிங்கான விஷயம் இருக்கு. கேளுங்க. உங்க அண்ணனை ஒரு பொண்ணு கூடப் பார்த்தேன். அவரும் காதல் வலையில சிக்கிட்டார் போலிருக்கு?!..."

"இந்தக் காலத்துல... ஒரு ஆடவனை ஒரு பொண்ணு கூடப் பார்க்கறது என்ன அபூர்வமான விஷயமா? பழங்காலத்துலதான் ஒரு பொண்ணை ஒருத்தன் கூடப் பார்த்தா உடனே தப்பா பேசுவாங்க. இப்ப அநேகமா எல்லாப் பொண்ணுங்களும் வேலைக்குப் போறாங்க. பிஸினஸ் துறையில இறங்கி இருக்காங்க. உத்யோக ரீதியா ஆணும், பெண்ணும் பொது இடங்களுக்குப் போக வேண்டி இருக்குல்ல?"

"அடடா... விட்டா ஒரு மெகா ஸீரியலே பண்ணிடுவீங்க போலிருக்கு! நான் சொல்ல வர்றதை முழுசா சொல்ல விடுங்களேன். உத்யோக ரீதியா ஒரு பொண்ணும், பையனும் போனா இப்படி நெருக்கமா, தோளாடு தோள் உரச நடந்து போக மாட்டாங்க. ரெஸ்ட்டாரண்ட்ல உட்கார்ந்து ஒரே ப்ளேட்ல சாப்பிட்டு உலகத்தை மறந்து இருக்க மாட்டாங்க...."

"அட! என்னோட அண்ணன் தீபக்கா இந்த அளவிற்கு முன்னேறி இருக்கான்? ரொம்ப ஆச்சர்யமா இருக்கே! வீட்ல இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி இருப்பானே?!..."

"வீட்ல பூனை... வெளியில புலி. ஆனா சும்மா சொல்லக் கூடாது. பொண்ணு அபார அழகு!"

"ஒரு பொண்ணான நீயே இன்னொரு பொண்ணை அழகுன்னு பாராட்டறதைப் பார்த்தா. அண்ணனை முந்திக்கிட்டு நான் அந்தப் பொண்ணைப் பார்த்திருக்கணுமே!.."

"ம்... பாப்பீங்க... பாப்பீங்க..." செல்லமாக ஸ்ரீதரின் முதுகில் ஓங்கிக் குத்தினாள் வாணி.

"முதல்ல உங்கம்மா கிட்ட போய் நம்ம விஷயத்தைச் சொல்ற வழியைப் பாருங்க. இப்ப நாம வீட்டுக்குக் கிளம்பற வழியைப் பார்க்கணும்."

இருவரும் எழுந்து பூங்காவை விட்டு வெளியேறினர்.

40

சந்தாவிற்கு வழக்கமாய் வரும் முழங்கால் வலி அன்று வழக்கத்திற்கு மாறாக மிக அதிகமாக வந்துவிட்டது. தாய்லாந்தில் இருந்து சங்கர் ஏகப்பட்ட தைலங்கள் வாங்கி வந்து கொடுத்திருந்தான். அவற்றில் ஒன்றை எடுத்து முழங்காலில் தேய்த்துக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்த சரண்யா, வசந்தாவின் அருகே வந்தாள்.

"நான் தேய்ச்சு விடறேன் பாட்டி..."

வசந்தாவின் கையில் இருந்த தைல பாட்டிலை வாங்கிக் கொண்டாள் சரண்யா.

"இன்னிக்கு என்ன, வானம் பொத்துக்கிட்டு ஊத்தப் போகுதா? எனக்குத் தைலம் தேய்ச்சு விடணும்னு அக்கறை வந்துருச்சு..."

"என்னோட பாட்டிக்கு நான் செய்யாம வேற யாரு செய்வா?" என்று சொல்லியபடி தேய்க்க ஆரம்பித்தாள் சரண்யா.

"ஏண்டியம்மா சரண்யா குட்டி... என்னோட காலுக்குத் தைலம் தேக்கிறியா அல்லது... என்னோட தலையில ஐஸ் வைக்கறியா?..."

"சும்மா இருங்க பாட்டி. நான் சொல்றதைக் கேளுங்க. இப்ப 'இதயம் வெல்த்'...ன்னு இதயம் கம்பெனியில இருந்து டென் யெம்.யெல். பாக்கெட் போடறாங்க..."

"என்ன பாக்கெட் போடறாங்க?"

"எண்ணெய் பாக்கெட்தான் போடறாங்க..."

"அது எதுக்கு பத்து மில்லி பாக்கெட்?"

"அதை அப்படியே வாய்ல ஊத்தி ஒரு இருபது நிமிஷம் கொப்புளிச்சுட்டு, தண்ணி மாதிரி எண்ணெய் நீர்த்துப் போனப்புறம் வெளியில துப்பிடணும். இப்படி செஞ்சா... உங்க முழங்கால் வலி மாயமா மறைஞ்சு போயிடும்..."

"நிஜமாவா சொல்ற, கண்ணம்மா?"

"ஆமா பாட்டி, முழங்கால் வலி மட்டுமல்ல, பல்வலி, தலைவலி எல்லாமே குணமாகுதாம். இதுக்கு இங்க்லீஷ்ல 'ஆயில் புல்லிங்'ன்னு சொல்றாங்க. பேப்பரைப் பார்த்தா 'ஆயில் புல்லிங்', ரேடியோ கேட்டா' ஆயில் புல்லிங்'ன்னு, டி.வி. விளம்பரத்துல கூட பாட்டுப் பாடுதே பாட்டி..."

"ஆமா.. நான் கேட்டிருக்கேன். ஆனா உட்கார்ந்து பார்த்ததில்லை. இனிமே பார்க்கறேன்..."

"பார்த்தா மட்டும் போதாது. அதே மாதிரி தினமும் செய்யணும். என்ன?"

"சரிடி, என் கண்ணம்மா. ஆஹா! நீ தைலம் தேய்ச்சு விட்றது எவ்வளவு சுகமா இருக்கு?!"

"இது இது இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்..."

"என்ன?"

"ஒண்ணுமில்லை பாட்டி. உங்களுக்கு வலி குறையணும்னு எதிர்பார்த்தேன்." சமாளித்துப் பேசியவள் தொடர்ந்தாள்.

"பாட்டி... காதலைப் பத்தி என்ன நினைக்கறீங்க?"

"ம்... உனக்குக் கல்யாண வயசு வந்துருச்சு. கல்யாண ஆசையும் வந்துருச்சு போலிருக்கு..."

"நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க பாட்டி."

"என்ன கேட்ட?"

"சரியான பாட்டி. காதலைப் பத்தி என்ன நினைக்கறிங்க?"

"எங்க காலத்துல காதல்ங்கறது கெட்ட வார்த்தை. இப்ப உங்க காலத்துல அது ஒரு வேத வார்த்தை..."

"ஹய்... கரெக்ட்டா சொல்லிட்டீங்களே!"

"நான் கரெக்டா சொன்னது இருக்கட்டும். நீ கேட்க வந்ததைத் தப்பு இல்லாம கரெக்டா கேளுடி செல்லம்."

"பாட்டி... உங்களுக்குத் தெரியும். என்னைப்பத்தி. நான் எதையும் வெளிப்படையா பேசறவள்ன்னு... நான்... நான் ஒருத்தரை விரும்பறேன் பாட்டி..."

"அப்படின்னா... காதல்?..."

"ஆமா பாட்டி..."

இதைக் கேட்ட வசந்தா பெருமூச்சு விட்டாள்.

"இதே விஷயத்தை இருபது வருஷத்துக்கு முன்னால நீ சொல்லி இருந்தா... இங்கே நிலைமையே வேறயா இருந்திருக்கும். நான் கூட அதிர்ச்சியாயிருப்பேன். ஏன்னா... சங்கரும் இதே போலத் தன் காதலைப் பத்தி சொன்னப்ப ஒரு பிரளயமே நடந்துச்சு. குடும்பத்துல இருந்து சங்கர் பிரிக்கப்பட்டான். அப்போ அவனைச் சுமந்த இந்த வயிறு, அவனைப் பொத்தி வச்ச இந்த நெஞ்சு எப்படி எரிஞ்சுது தெரியுமா? பெத்த அப்பா பேச்சைக் கேட்காம, அவன் காதலிச்ச பொண்ணே பெரிசுன்னு கல்யாணம் பண்ணிக்கிட்ட மகனைக் கோபப்படறதா அல்லது குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு போயிட்டானே மகன்னு அழுது தீர்க்கறதா, உங்க தாத்தாவோட வைராக்யத்தைப் பார்த்து மௌனயாகம் நடத்தி வாழ்க்கையை ஓட்டறதான்னு நான் தவிச்ச தவிப்பு அந்த ஆண்டவனுக்குதான் தெரியும். நான் பட்ட வேதனையைத் தீர்க்கறதுக்கு என் மகன் மறுபடி எங்க கூட வந்து சேர்ந்தான்.


ஆனா... தோல்வி அடைஞ்ச காதல் கல்யாண வாழ்க்கையை வெறுத்து தனிமரமா வந்தான். மகன் வந்து சேர்ந்துட்டான்னு முழுசா சந்தோஷப்பட முடியாம.. அவனோட வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்ங்கற ஏமாற்றமும், சோகமும் மனசுக்குள்ளே உறுத்திக்கிட்டே இருந்துச்சு. இன்னிக்கு வரைக்கும் அந்த உறுத்தல் எனக்குள்ள இருக்கும்மா சரண்யா..."

"அப்பா ஏன் அவரோட குடும்பத்தைப் பிரிஞ்சு வந்தாராம்?"

"அதைப் பத்தி கேட்கவே கூடாதுன்னு சொல்லிட்டான். சிங்கக் குட்டி மாதிரி ரெண்டு மகன்களை மட்டும் போய்க் கூட்டிட்டு வரேன்னு சொல்லிவிட்டுப் போனவன் அவங்களைக் கண்டுபிடிக்க முடியாம ஏமாற்றமா வந்து சேர்ந்தான். அதுக்கப்புறம் அவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கறதுக்கு என்னென்னவோ முயற்சி செஞ்சான். ஒண்ணும் நடக்கலை. அவங்களைக் கண்டுபிடிக்கவே முடியலை. 'நீ தனியா இருக்கியேப்பா'ன்னு நாங்க கவலைப்பட்டா அவனோட குடும்பத்துப் பேச்சு எதையுமே பேசக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக்கிட்டான். அதுக்கப்புறம் சென்னைக்கு வந்து இந்தப் புது கம்பெனியோட தன் வாழ்வை ஐக்கியமாக்கி உன்னைத் தன்னோட உலகமாக்கி ஒரு வேள்வி மாதிரி வாழ்ந்துக்கிட்டிருக்கான். எல்லாம் அந்தக் காதல் படுத்தின பாடு!..."

"என்னோட காதல் உங்களை எந்த விதத்துலயும் பாடுபடுத்தாது பாட்டி ஏன் தெரியுமா? உங்க எல்லோரோட சம்மதமும், ஆசிர்வாதமும் கிடைச்சப்புறம்தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன். உங்க எல்லாரையும் சமாதானம் பண்ணிச் சம்மதம் வாங்கிக்கற திறமையும், அதைவிட நம்பிக்கையும் அதிகமாவே இருக்கு எனக்கு..."

"சமத்துடி செல்லம் நீ. அது சரி... நீ காதலிக்கற அந்தப் பையன் யாரு? அதைச் சொல்லு முதல்ல..."

"அவர் வேற யாருமில்ல பாட்டி. உங்களுக்குப் பிடிச்சவர். வக்கீலுக்குப் படிச்சவர்..."

"அட... யாரு?... ஓ... அந்தப் பையன் தீபக்கா? உண்மையிலேயே அவனை எனக்குப் பிடிச்சது. ஆனா அதுக்காக? அவன் உனக்கு ஏத்தவன்தானான்னு நான் எப்படித் தெரிஞ்சுக்கறது?"

"நான் தெரிஞ்சுக்கிட்டேன் பாட்டி. உண்மையிலேயே அவர் நல்லவர். ஏழ்மையான குடும்பத்துல பிறந்தவர்தான்னாலும் கௌரவமானவர். கட்டுப்பாடானவர். பண்பானவர். அவரோட குடும்பத்தைப் பத்தியெல்லாம் சொன்னாரு. அவருக்கு ஒரே ஒரு தம்பி. அவர் டான்ஸராம். அவங்கம்மா மேல பாசம் அதிகம் வச்சிருக்காரு. ஆனா அவங்கம்மாவை விட்டுட்டு அவங்கப்பா பிரிஞ்சு போயிட்டாராம். அதுக்கப்புறம் அவங்கம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்திருக்காங்க."

"எதனால பிரிஞ்சாராம்?"

"அதெல்லாம் ஓப்பனா கேக்கறது நாகரிகமில்ல பாட்டி அதனால நான் எதுவும் கேட்கலை பாட்டி."

"அது சரி... இந்தக் காலத்துல இப்படிப் பிரிஞ்சு வாழறது, விவாகரத்து பண்றது இதெல்லாம் சகஜமாயிருச்சு. சர்வ சாதாரணமாயிடுச்சு. நீ காதலிக்கற அந்த தீபக் நல்லவனா இருந்தாப் போதும். உன் மனசுக்கேத்தபடி நடந்துக்கறவனா இருந்து, நீ சந்தோஷமா வாழ்ந்தா அது போதும்."

"நீங்க ஸிக்னல் குடுத்தா போதும் பாட்டி. அப்பாட்டயும் தாத்தாட்டயும் நீங்கதான் பாட்டி இதைப்பத்தி பேசணும்."

"அதுக்கென்ன? பேசிட்டா போச்சு.. நீ கவலைப்படாதே. எல்லாம் நான் பார்த்துக்கறேன். தாத்தா முன்ன மாதிரி இல்லை. அந்தஸ்து பேதம் பார்க்கற குணமெல்லாம் இப்ப மாறிடுச்சு. காலம் அவரை நல்லாவே மாத்திடுச்சு. அதனால தான் நானிருக்கேன் உன் காதலுக்குன்னு தைர்யமா பேசறேன்...'எஞ்சாய்..."

"ஹய்... பாட்டி என்னைப் பார்த்து இங்லீசெல்லாம் பேசப் பழகிட்டீங்க பாட்டி..."

'பச்','பச்' என்று வசந்தாவின் கன்னத்தில் முத்தமிட்டுத் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள் சரண்யா.

அப்போது சங்கர் அங்கே வந்தான்.

"என்னம்மா... ஒரேயடியா முத்த மழையா இருக்கு?"

"குஷி மூடு வந்துடுச்சுன்னா இப்படித்தான் முத்தம் குடுப்பா இந்தச் சரண்யா குட்டி..."

"அவளோட இந்த சந்தோஷமான மூடுலயே நான் இன்னொரு சந்தோஷமான சமாச்சாரம் சொல்லப் போறேன்... சரணும்மாவுக்கு ஒரு ஃபர்ஸ்ட் க்ளாஸ் மாப்பிள்ளை பார்த்திருக்கேன்..."

"அப்பா... எ... எனக்கு.. இப்ப... கல்யாணம் வேண்டாம்ப்பா..."

"நீ வேண்டான்னா... நான் விட்டுருவேனா? பையன் ரொம்ப நல்லவன். அதைவிட முக்கியமான விஷயம்... தாத்தாவுக்கு உன்னைக் கல்யாணக் கோலத்துல பார்க்கணும்னு ஆசை வந்துருச்சு. அது மட்டுமில்ல... உன் மூலமாவது அவரோட கொள்ளுப் பேரன், பேத்திகளைப் பார்க்கணும்னு துடிக்கறாரு. அதனால உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டேன். முடிவு பண்ணிட்டேன்..."

"அப்பா... நான் இதைப்பத்தி உங்ககிட்ட பேசணும்ப்பா..."

"நீ ஒண்ணும் பேச வேணாம்மா. நான் சொன்னா சொன்னதுதான். இங்கே பாரு.... மாப்பிள்ளைப் பையனோட ஃபோட்டோ கூட கையோட கொண்டு வந்திருக்கேன்!" என்றபடியே தன் ஷர்ட் பாக்கெட்டில் ஃபோட்டோவை எடுத்துச் சரண்யாவின் முகத்திற்கு நேரே காட்டினான்.

அந்த ஃபோட்டோவில் புன்னகைத்துக் கொண்டிருந்தான் தீபக்!

ஃபோட்டோவில் தீபக்கைப் பார்த்த சரண்யா மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனாள்.

அவளது மகிழ்ச்சியைப் பார்த்த சங்கரும் சந்தோஷப்பட்டான்.

"என்ன சரணும்மா, கல்யாணம் இப்ப வேண்டான்னு சொன்ன!... தீபக்கோட ஃபோட்டோவைப் பார்த்ததும் முகத்துல பூரிப்பு பொங்கி வழியுது?!..."

"என் மனசுல தீபக் இருக்கார்ன்னு நீங்க எப்படிப்பா கண்டுபிடிச்சீங்க?"

"நீ பிறந்த வினாடியில இருந்து உன்னோட ஒவ்வொரு அசைவோட அர்த்தமும், உன்னாட கண் பார்வை பேசற பாஷையும் தெரியற எனக்கு, நீ தீபக்கை விரும்பறது தெரியாம போயிடுமா? அதுமட்டுமில்லைம்மா... தீபக் ஒழுக்கமான, கண்ணியமான பையனா இருக்கான். சுறுசுறுப்பா முன்னேறக்கூடிய இளைஞனா இருக்கான். அதனால உன்னை அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ன்னு ஒரு யோசனை வந்துச்சு. அதுக்கேத்தாப்ல உன் மனசுக்குள்ளயும் அவன் இருக்கான். நீ நெனச்சதும், நான் நெனச்சதும் ஒண்ணாயிடுச்சு..."

"என்னோட அப்பா சங்கர் அப்பா இல்லை... தங்க அப்பா..." வழக்கம் போலச் சங்கரின் தோளில் சாய்ந்து கொண்டு தன் சந்தோஷத்தைப் பிரதிபலித்தாள் சரண்யா.

"தீபக்கோட குடும்பத்துல யாரைப் பார்த்துப் பேசணுமோ அவங்களைப் பார்த்துப் பேசிட்டியாப்பா? வசந்தா கேட்டாள்.

"இல்லைம்மா. இனிமேல்தான் அதைப்பத்தியெல்லாம் நாம பேசணும். என்னென்ன செய்யணும்ன்னு ப்ளான் பண்ணணும்."

"நானே அவர்கிட்ட சொல்லி, நீங்க, தாத்தா, பாட்டி, மூணு பேரும் அவரோட வீட்டுக்கு, பாண்டிச்சேரிக்குப் போறதுக்குக் கேட்டுச் சொல்றேன்ப்பா..."

"சங்கர்... பொண்ணு பேசற ஸ்பீடு கொஞ்சம் ஓவரா இல்லை...?" வசந்தா கேலி பண்ணினாள்.

"நீயே பேசும்மா. பேசிட்டுச் சொல்லு. அப்புறமா நாங்க பாண்டிச்சேரி போய்ப் பேசறோம்."

"சரிப்பா..." மகிழ்ச்சியில் துள்ளினாள் சரண்யா.

"உன்னோட சந்தோஷம்தாம்மா எங்க எல்லாருக்கும் முக்கியம். உன்னோட ஒளிமயமான எதிர்காலம்தான் எங்களோட லட்சியம்." பேசிய சங்கரின் கண்களில் துளிர்த்த கண்ணீரைப் பார்த்துக் கலங்கி விட்டாள் சரண்யா.

"இவ்வளவு பாசமான அப்பா கிடைச்ச நான் ரியலி லக்கிப்பா...."

"சரிம்மா. வா. சாப்பிடலாம். அம்மா இன்னிக்கு என்ன மெனு?"


"பரோட்டாவும், சிக்கன் குருமாவும் பண்ணச் சொன்னேன். உனக்கு அது வேண்டாம்ன்னா தோசை கூடப் போட்டுக்கலாம்ப்பா..."

"பரோட்டா, தோசை ரெண்டையும் சிக்கன் குருமாவைக் கூட்டணியாக்கி ஒரு வெட்டு வெட்டிடலாமா சரணும்மா?"

"டபுள் ஓ.கே.ப்பா."

அவர்கள் இருவரது சந்தோஷமும் நிலைபெற வேண்டும் என்ற மானசீகமான பிரார்த்தனையோடு அவர்களது சந்தோஷத்தைப் பார்த்து ரசித்தாள் வசந்தா.

41

திகாலை நேரம். டான்ஸ் மியூசிக்கைச் சிறிய டேப்ரிக்கார்டரில் போட்டு உரக்க ஒலிக்க விட்டிருந்தான் ஸ்ரீதர்.

பாடலுக்கு ஏற்றபடி நடனம் ஆடிப் பயிற்சி செய்து கொண்டிருந்தான். தூக்கம் கலைந்து எழுந்த தீபக் கத்தினான்.

"டேய் ஸ்ரீதர்.... ஏண்டா இப்படி காலங்கார்த்தால மியூசிக்கை அலற விட்டு என் தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டிருக்க?"

"ஐய... நீ பாட்டுக்கு நீ தூங்கேன்..."

"இந்தக் காட்டுக் கத்தல்ல எப்படிடா தூங்க முடியும்?..."

"என்ன? காட்டுக் கத்தலா? கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?..."

"நீ மட்டும் என்னவாம்? கழுதை உதைக்கிற மாதிரிதான் உன்னோட டான்ஸ் இருக்கும்... 'விலுக்' 'விலுக்'ன்னு..."

"இதுதான் இப்ப மாடர்ன் ட்ரெண்டு... உனக்கென்ன தெரியும் அதெல்லாம்? ஆனா... தெரிய வேண்டிய விஷயமெல்லாம் ரொம்பத் தெளிவாவே தெரிஞ்சு வச்சிருக்க... அப்பாவியா இருக்கற நீ.. அடப்பாவின்னு ஆச்சர்யப்படற அளவுக்கு முன்னேறி இருக்கியே?!..."

"என்னடா... பொடி வச்சுப் பேசற? நேரடியா சொல்லேன் சொல்ல வந்ததை..."

"ஓ.கே. உட்கார்ந்து பேசுவோமா? அம்மா பங்களாவுக்குப் போயிருக்காங்க. அவங்க வர்றதுக்குள்ளாற நாம பேசுவோம்." என்ற ஸ்ரீதர், டேப்ரிக்கார்டரை நிறுத்தினான். தீபக்கின் அருகில் வந்தான். தீபக் தலை வைத்துப் படுத்திருந்த தலையணையை உருவினான்.

"டேய், ஏண்டா இப்படிப் பண்ற? குடுடா தலையணையை..."

"ம்கூம்... மாட்டேன். நீ எழுந்து உட்காரு..."

"உன்னோட பெரிய தொல்லையாப் போச்சுடா! என்ற படியே எழுந்து உட்கார்ந்த தீபக், ஸ்ரீதரிடம் இருந்த தலையணையை வாங்கித் தன் மடியில் வைத்து இரண்டு கைகளையும் தலையணையில் ஊன்றிக் கொண்டான்.

"சொல்லுடா... என்ன பேசணும் உனக்கு?"

"நீதான் சொல்லணும்... ஒரு அழகான பறவை உன் பின்னாடி சுத்துதாமே?..."

"டேய்... மரியாதையாப் பேசு..."

"ஒரு அழகான பொண்ணுகூட பரிஷ்டா காபி ஷாப்ல உன்னை யாரோ பார்த்தாங்களாமே..."

"வேற யாரு பார்த்திருப்பா? உன்னோட ஆளுதானே! பார்த்ததும் பத்த வச்சுட்டாளா?"

"பத்திக்கிட்டது நீ..."

"சரி... சரி... நானே சொல்லிடறேன். அந்தப் பொண்ணு பேரு சரண்யா. சரண்யா ஹொஸைரி இன்டஸ்ட்ரீஸ் நிறுவன முதலாளியோட பொண்ணு. சரண்யா அவங்க வீட்ல எங்க மேட்டரைச் சொல்லிட்டாளாம்..."

"மேட்டர்ன்னா?!"

"டேய்.... நான் சொல்லவா வேண்டாமா? நடுவுல நடுவுல கிண்டல் பண்ணிக்கிட்டிருந்தினா... நான் எதுவும் சொல்ல மாட்டேன்..."

"சரி சரி... கோவிச்சுக்காத. சொல்லு. உன்னோட காதல் புராணத்தை..."

"புராணமும் இல்லை... ஒண்ணும் இல்லை... முதல் தடவை பார்த்தப்பவே அவமேல எனக்கு லவ் ஆயிடுச்சு. ஆனா பெரிய இடத்துப் பொண்ணாச்சேன்னு பயமா இருந்துச்சு. ஆனா.. அவளாவே என்னோட மொபைல் ஃபோன்ல கூப்பிட்டா. பரிஷ்டாவுக்கு வரச் சொன்னா. போனேன். அங்கேதான் நாங்க மனம் விட்டுப் பேசினோம். நான் இல்லாம அவ இல்லை, அவ இல்லாம நான் இல்லைன்னு அந்த முதல் சந்திப்புலயே புரிஞ்சுக்கிட்டோம்."

"ஓ... அந்த அளவுக்கு ஸ்பீடா?"

"ஆமாண்டா. ஸ்பீடா போனாலும் ஸ்டெடியா நிக்கும் எங்க லவ்..."

"எதை வச்சு இவ்வளவு ஸ்ட்ராங்கா சொல்ற?"

"அவங்க பாட்டி கிட்ட மேட்டரைச் சொல்லி இருக்கா. அதே சமயம் சங்கர் ஸாரும் அதான்டா சரண்யா ஹொஸைரி இன்டஸ்ட்ரீஸ் நிறுவன முதலாளி... அவரும் எனக்குச் சரண்யாவைக் கட்டிக் குடுக்கணும்னு நினைச்சதைச் சொல்லி இருக்காரு. என்னோட ஃபோட்டோவைச் சரண்யாகிட்ட காண்பிச்சிருக்காரு. அது வரைக்கும் என்னைப்பத்திதான் சங்கர் ஸார் பேசறாங்கன்னு தெரியாத சரண்யா ஃபோட்டோவுல என்னைப் பார்த்ததும் சந்தோஷமாயிட்டாளாம். அவங்க வீட்ல எல்லாரும் ஓ.கே.ரைட்ன்னு சொல்லிட்டாங்க. அவங்க பாட்டி, தாத்தா, சங்கர் ஸார் எல்லாரும் நம்ம வீட்டுக்கு வந்து அம்மாவைப் பார்த்துப் பேசப் போறாங்களாம்... மொபைல்ல கூப்பிட்டுச் சொன்னாடா..."

"அது சரி... நம்ப அப்பா நம்ப கூட இல்லை, பிரிஞ்சுட்டார்ன்னு சொல்லிட்டியா?"

"அதைப் பத்தி அவ்வளவு விபரமா சொல்லிக்கலை. ஆனா அப்பா பிரிஞ்சுட்டார்ன்னு தெரியும். ஏன் பிரிஞ்சுட்டார்ன்னு கேக்கறது நாகரிகம் இல்லைன்னு அவ நினைச்சிருக்கலாம். அதனால அவ என்கிட்ட எதுவும் கேக்கலை..."

"நம்ப அப்பா ஏன் பிரிஞ்சு போனார்ன்னு நமக்கே அம்மா சொல்ல மாட்டேங்கறாங்க. நமக்குத் தெரியாத அந்த விஷயத்தைப் பத்தி நீயோ... நானோ... என்ன பேச முடியும்?"

"என்னடா பேச முடியலை?" கேட்டுக் கொண்டே குவார்ட்டஸுக்குள் நுழைந்தாள் ஜானகி. தீபக்கும், ஸ்ரீதரும் பேசியதை அரைகுறையாகக் காதில் வாங்கியபடியால் அவர்களிடம் மறுபடியும், 'என்ன விஷயம்,' என்று கேட்டபடியே உட்கார்ந்தாள்.

"ஆஹா... அம்மா அன்னபூரணி வந்துட்டாங்க. அம்மா அம்மா... பசிக்குதும்மா. என்னம்மா டிபன் இன்னிக்கு?" ஸ்ரீதர் கேட்டதும், ஜானகி அவனைச் செல்லமாய் முறைத்தாள்.

"ஏண்டா பேச்சை மாத்தற? அண்ணனும், தம்பியும் என்னடா பேசிக்கிட்டிருந்தீங்க?"

"நான் சொல்றேம்மா..." என்று ஆரம்பித்த தீபக், அவனது காதல் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெளிவாக எடுத்துச் சொன்னான்.

"யப்பாடா... உத்தம புத்திரன்... அரிச்சந்திர மகாராஜா... உண்மை விளம்பி... ஏகப்பட்ட பட்டம் குடுக்கலாம் தீபக் உனக்கு...!" ஸ்ரீதர் கிண்டல் செய்தான்.

"டேய் ஸ்ரீதர். நீ சும்மா இருடா!" அவனை அடக்கினாள் ஜானகி.

தொடர்ந்து பேசினாள்.

"அவங்க அந்தஸ்துக்கும், நம்ம நிலைமைக்கும் சரிப்பட்டு வருமா, தீபக்?"

"இதைப் பத்தியெல்லாம் நானும் சரண்யாகிட்ட பேசினேன். அவங்க வீட்ல பையன் நல்லவனா இருந்தா போதும்ன்னு சொல்லிட்டாங்களாம். நான் நல்ல பையன்தானம்மா?..."

"உனக்கென்னடா? தங்கம் மாதிரி சிங்கம்! எனக்கு அந்தப் பொண்ணு நல்ல குணக்காரியா இருக்கணும். உன்னோட சந்தோஷம்தான் எனக்கு முக்கியம்."

"சரிம்மா. உன்னைப் பார்த்துப் பேசணும்னு சொல்றாங்க..."

"வரட்டுமே. அடுத்த ஞாயிற்றுக்கிழமை வரச் சொல்லு."

"தேங்க்ஸ்ம்மா... அப்பாவைப் பத்தி கேட்டா?" தயக்கமாகத் தீபக் கேட்டான்.

"அதை அவங்க கேட்கும் போது நான் பார்த்துக்கறேன்."

"சரிம்மா." தீபக் சமாதானமானான்.

"அம்மா, இவனுக்குச் சீக்கிரமா கல்யாணத்தை முடிச்சுவைம்மா. நான் ஒருத்தன் காத்துக்கிட்டிருக்கேன்ல?..."

"அலையாதடா..." ஜானகி ஸ்ரீதரைப் பொய்க் கோபத்துடன் திட்டினாள்.

"வாங்கடா, சாப்பிட!" அழைத்தாள். மூவரும் சாப்பிட உட்கார்ந்தனர்.


42

ஞாயிற்றுக்கிழமை. ஜானகி தயாரித்த ரவா கேசரியின் மணம் மங்களத்தம்மாவின் பங்களாவையே தூக்கியது. பங்களாவில் குடியிருந்த மங்களத்தாம்மாவின் குடும்பத்தினரும், வெளியூர்களில் இருந்து வந்திருந்த உறவினர்களும் கேஸரிக்காக வெகு ஆவலுடன் காத்திருந்தனர். நெய்யில் மிதந்த கேஸரி பளபளவென்று மின்னியது. பொன்னிறமாக வறுபட்ட முந்திரிப்பருப்பு அங்கங்கே தென்பட்டது. மொறு மொறுப்பான உளுந்து வடையில் அங்கங்கே தென்பட்ட மிளகு, பார்வைக்கு அழகை ஊட்டியது. கெட்டியான சட்னியின் மீது கடுகு, கருவேப்பிலையைத் தாளித்துக் கொட்டினாள் ஜானகி.

"ஜானகி... ஜானகி..."

மங்களத்தம்மாவின் குரல் கேட்டுப் புடவை முந்தானையில் கையைத் துடைத்தபடியே வெளியே வந்தாள் ஜானகி.

"என்னங்கம்மா?"

"நீ ஏன் இன்னும் சமையலறையிலேயே இருக்க? பொண்ணு வீட்டுக்காரங்க வந்துருவாங்கள்ல? கேஸரி, வடை, சட்னியை எடுத்துக்கிட்டு நீ குவார்ட்டர்சுக்குக் கிளம்பு. இங்கே டிபன் எடுத்துக் குடுக்கற வேலையைக் கிச்சாவும், பாபுவும் பார்த்துப்பாங்க. சீக்கிரமா நீ கிளம்பு. போய் வேற புடவையை மாத்திக்கிட்டு, தலையை வாரு. முகம் கழுவிக்க..."

"அவங்க வர்றதுக்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்மா."

"பரவாயில்லை ஜானகி. நீ போய் உன் பையன்களோட இரு."

"போறேம்மா. குவார்ட்டஸ்லயே கேஸரி, வடை போட்டுக்கறேன்னு சொன்னேன். அதையெல்லாம் இங்கேயே போட்டுக்கச் சொல்லிட்டிங்க. மெதுவா போய்க்கறேன். இங்கே எல்லாருக்கும் எடுத்துக் குடுத்துட்டு..."

"அட... நான் பார்த்துக்கறேன் ஜானகி. நீ கிளம்பு..."

"சரிங்கம்மா. அம்மா... இந்த நேரத்துல உங்ககிட்ட நான் பேசியே ஆகணும். பாமாக்கா என்னை இங்கே கொண்டு வந்துவிடும் போது என்னோட மகனுங்க ரெண்டு பேருக்கும் சின்ன வயசு. இன்னிக்குக் கல்யாண வயசுல நிக்கறாங்க. கல்யாணம் பேசறதுக்குப் பொண்ணு வீட்டுக்காரங்களும் வர்றாங்க. நல்ல இடத்துல இருந்து பொண்ணைக் குடுக்கறதுக்குத் தயாரா இருக்காங்க. என்னோட இந்த நிலைமைக்குக் காரணம் நீங்களும், நீங்க குடுக்கற ஆதரவும்தாம்மா. கூடப்பிறந்த பிறப்பா நினைச்சு எனக்கு நீங்க செஞ்ச உதவிக்கெல்லாம் என்னோட உடம்பைச் செருப்பா தைச்சுப் போட்டாக் கூட என்னோட நன்றிக் கடன் தீராதும்மா..."

ஜானகியின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.

"என்ன ஜானகி இது?! நல்ல காரியம் நடக்கறப்ப கண்ணைக் கசக்கிட்டு? நான் என்ன பெரிசா செஞ்சுட்டேன் உனக்கு? உன்னோட உழைப்பு, சமையல் திறமை, அன்போட சேவை செய்யற மனப்பான்மை, பொறுப்பான வீட்டு நிர்வாகம், அதெல்லாத்தையும் விட உன்னோட நேர்மையான குணம்... இதுக்காக நான் செஞ்ச பிரதி உபகாரம்தானே ஜானகி?..."

"நீங்க பெருந்தன்மையாப் பேசறிங்கம்மா. எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நன்றிக் கடனை என்னால தீர்க்க முடியாதும்மா..."

மங்களத்தாம்மாவின் காலில் விழுந்தாள் ஜானகி.

"எழுந்திரு. ஜானகி. எல்லாமே கடவுள் செயல். ஆண்டவன் அருள். சென்னையில பெரிய கம்பெனி சரண்யா ஹொஸைரி இன்டஸ்ட்ரீஸ். அந்த நிறுவனத்தோட முதலாளி வீட்ல இருந்து உன் பையனுக்குச் சம்பந்தம் பேச வர்றாங்க..."

"அதுதாம்மா பயமா இருக்கு..."

"பயம் எதுக்கு? சந்தோஷப்படு. எல்லாம் நல்லபடியா முடியும். நல்லதே நடக்கும்."

"உங்க ஆசிர்வாதம்தாம்மா எனக்குப் பெரிய பலம். நான் கிளம்பறேம்மா..."

"கேசரி, வடையெல்லாம் எடுத்துக்காம கிளம்பற? மறந்துட்டியா?"

"இதோ எடுத்துக்கறேம்மா..."

சமையலறைக்குச் சென்று தூக்குகளில் டிபன் வகைகளை எடுத்து கொண்டு தன் குவார்ட்டர்ஸிற்குக் கிளம்பினாள் ஜானகி.

43

குவார்ட்டர்ஸில் ஜானகிக்காகக் காத்திருந்தார்கள் தீபக்கும், ஸ்ரீதரும்.

கையில் தூக்குகளுடன் உள்ளே நுழையும் ஜானகியைப் பார்த்து மகிழ்ந்தனர்.

"அம்மா வருவாங்க பின்னே... கேசரி மணம் வரும் முன்னே..." ஸ்ரீதர் ராகம் போட்டுப் பேசினான்.

"டேய் தின்னிப் பண்டாரமே... சும்மா இருடா..." தீபக் அவனை மிரட்டினான்.

தூக்குகளை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, முகம் கழுவிக் கொள்ளவும், புடவை மாற்றிக் கொள்ளவும் நகர்ந்தாள் ஜானகி.

"டேய் ஸ்ரீதர்... கேசரியை இப்பவே தின்னுடாதே. அவங்க எல்லாரும் வரட்டும்..." ஜானகி கூறினதும் சிரித்தான் தீபக்.

"உனக்கென்ன சிரிப்பு?"

"சரண்யா வீட்ல இருந்து அவங்க எல்லாரும் வர்றதுக்குள்ள கேசரித் தூக்கைக் காலி பண்ணிட்டின்னா? நம்ப அம்மாவோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு நினைச்சுப் பார்த்தேன். சிரிப்பு வந்துச்சு..."

"ஐயோ சாமி... அம்மா அவ்வளவுதான். என்னை நொறுக்கிப்புடுவாங்க..."

"தெரியுதில்ல... கம்முனு இரு..."

"ஓ.கே. மாப்பிள்ளை ஸார்."

இருவரும் சிரித்தனர்.

முகம் கழுவிப் புடவை மாற்றிக் கொண்டு வந்த ஜானகி, சாமி படத்தின் முன் நின்று கைகூப்பி, கண்மூடி வணங்கினாள். விபூதியை விரலால் தொட்டுத் தீபக்கின் நெற்றியிலும், ஸ்ரீதரின் நெற்றியிலும் பூசினாள்.

குவார்ட்டர்ஸ் வாசலில் காலடியோசை கேட்டது. ஜானகி வெளியே வந்து பார்த்தாள்.

முத்தையாவும், வசந்தாவும் நின்றிருந்தார்கள்.

"நாங்க சென்னையில இருந்து வந்திருக்கோம். சரண்யாவோட தாத்தா நான். இவ சரண்யாவோட பாட்டி..."

"வாங்க... வாங்க... உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்... உள்ளே வாங்க..." ஜானகி அவர்கள் இருவரையும் வரவேற்றாள்.

கூடை கூடையாகப் பழ வகைகளையும், சென்னை மாநகரின் பிரபலமான 'தித்தி' இனிப்பகத்தின் இனிப்பு வகைகள் அடங்கிய அட்டைப் பெட்டிகளையும் காரிலிருந்து டிரைவர் இறக்கிக் கொண்டு வந்தான்.

குவார்ட்டர்ஸில் இருந்த ப்ளாஸ்டிக் சேர்களில் முத்தையாவையும், வசந்தாவையும் உட்காரும்படி வேண்டிக் கொண்டாள் ஜானகி. அவர்கள் உட்கார்ந்தார்கள். டிபன் வகைகளை அவர்களுக்கு எடுத்துக் கொடுத்து உபசரித்தாள் வசந்தா.

அதன் பின் வசந்தா கேட்டாள்.

"மாப்பிள்ளைப் பையன் எங்கே?"

"இதோ கூப்பிடறேங்க!" என்ற ஜானகி, குரல் கொடுத்ததும் தீபக் வந்தான். கூடவே ஸ்ரீதரும் வந்தான். இருவரையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் ஜானகி.

"தீபக் எங்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான். உங்க சின்னப் பையன் ஸ்ரீதரை இப்பத்தான் பார்க்கறோம்." வசந்தா கூறியதும் ஜானகியின் மனதில் கேள்விக்குறி தோன்றியது. மனதில் தோன்றிய கேள்விக் குறியை வாய்விட்டுக் கேட்டாள் ஜானகி.

"பொண்ணோட அப்பாவும் வர்றதா சொன்னாங்களே...?"

"ஆமாம்மா. ஆனா திடீர்ன்னு வர முடியாத சூழ்நிலை ஆயிடுச்சு. அஸோஸியேஷன் கான்ஃபரன்ஸ் பதிமூணாம் தேதிதான் நடக்கறதா இருந்துச்சு. எதிர்பாராதவிதமா அந்த கான்ஃபரன்ஸை இன்னிக்குன்னு மாத்திட்டாங்க. அதனால எங்க மகனால இங்கே வரமுடியல. நீங்க பெரியவங்க போய்ப் பார்த்துட்டு வாங்கன்னு எங்களை அனுப்பி வச்சான்..." வசந்தா கூறியதைத் தொடர்ந்து முத்தையாவும் பேச ஆரம்பித்தார்.

"இன்னொரு நாளைக்கு நாம எல்லாரும் சேர்ந்து போகலாம்ப்பான்னு எங்க மகன்கிட்ட சொன்னேன். நல்ல காரியங்களைத் தள்ளிப் போடக்கூடாதுன்னு வற்புறுத்தி எங்களைப் போகச் சொன்னான்..."


"அதனால என்னங்க? அவர் இன்னொரு நாள் வரட்டும். தீபக் கூட நீங்க பேசிக்கிட்டிருங்க. நான் காபி கலந்து எடுத்துட்டு வரேன்." ஜானகி காபி கலக்கப் போனதும், தீபக் வசந்தாவிடமும், முத்தையாவிடமும் கலகலப்பாகப் பேசினான்.

ஜானகி காபி கொண்டு வந்தாள்.

முத்தையாவும், ஜானகியும் ரசித்துக் குடித்தார்கள்.

"சரண்யாவும் உங்க பையன் தீபக்கும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இவங்க ரெண்டு பேரும் விரும்பறது உறுதியா தெரியாமலே என்னோட மகன், உங்க தீபக்கைச் சரண்யாவுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கலான்னு நினைச்சிருக்கான். இன்னிக்கு அவனால வரமுடியாம ஆகிட்டாலும், அவனைக் கலந்துதான் கல்யாணத்தை உறுதி பண்ணணும். தேதி வைக்கணும்..."

"அதெல்லாம் சரிங்கம்மா. பணம், பங்களா, கார் இப்படி ஏராளமான வசதிகள்ல நீங்க இருக்கீங்க... நாங்க இதோ பங்களாக்காரங்க குடுத்திருக்கற குவார்ட்டர்ஸ்ல இருக்கோம். இப்பத்தான் கொஞ்ச நாளா என்னோட மகனுங்க ரெண்டு பேரும்ம ஏதோ ஓரளவு சம்பாதிக்கறாங்க. உங்க பேத்திக்கும் வசதியான வாழ்க்கைதான் பழக்கம். எங்களுக்கு உழைச்சு உழைச்சு அசதியான வாழ்க்கைதான் மிச்சம். நம்ம ரெண்டு குடும்பத்தோட அந்தஸ்துக்கு மலைக்கும், மடுவுக்கும் உள்ள வேறுபாடு! அதையெல்லாம் யோசிச்சு..."

"எந்த யோசனைக்கும் இடமில்லைம்மா. எங்க சரண்யாவோட சந்தோஷம்தான் எங்களுக்கு முக்கியம்.."

"முக்கியமான விஷயம் இதுல நீங்க கவனிக்க வேண்டியது என்னன்னா... இன்னிக்குக் காதல் வேகத்துலயும், மோகத்துலயும் உங்க சரண்யாவுக்கு இந்த அந்தஸ்து பேதமெல்லாம் பெரிசா தெரியாம இருக்கலாம். ஆனா நடைமுறை வாழ்க்கைன்னு வரும்போது..."

"நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையானது பணமும், வசதியும் மட்டுமில்லம்மா. நல்ல மனமும், குணமும்தான். இந்த ரெண்டும் தீபக்கிட்ட இருக்குன்னு சரண்யாவும் நம்பறா. எங்க மகனும் நம்பறான். நம்பிக்கைதானே வாழ்க்கை. இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தது சரண்யாதான். அவ சின்னப் பொண்ணா இருந்தாலும், நல்லது கெட்டது புரிஞ்சுக்கற பக்குவம் அவகிட்ட இருக்கு. அவளோட இஷ்டம்தான் எங்க இஷ்டம்..."

"இதுக்கு மேல உங்க இஷ்டம். எனக்கு சந்தோஷம்தான்..."

"நாங்க முறைப்படி மாப்பிள்ளையைப் பார்த்துட்டோம். கல்யாணத்துக்கு நாள் பார்த்துடலாம். ஆனா சம்பிரதாயத்துக்கு நீயும் சென்னைக்கு வந்து எங்க பேத்தியைப் பார்க்கணும்மா. என்னிக்கு வர்றதுன்னு போன் பண்ணிச் சொல்லிட்டு வாம்மா."

"சரிங்க. எனக்கும் என்னோட வருங்கால மருமகளைப் பார்க்கணும்னு ஆசையாத்தான் இருக்கு. கண்டிப்பா வரேனுங்க..."

"சரிம்மா. சந்தோஷம். நாங்க கிளம்பறோம். உன்னோட கேசரியும் சரி, காபியும் சரி... அபார ருசியா இருக்கும்மா..."

முத்தையா கூறியதும் வசந்தா சிரித்தாள்.

"இவருக்கு பி.பி. இருக்கு. இன்னிக்கு கேசரியை நிறையச் சாப்பிட்டுட்டாரு."

"என்னிக்கோ ஒரு நாள் சாப்பிட்டா ஒண்ணும் ஆகாதுங்க..."

"சரிம்மா... நாங்க கிளம்பறோம்."

இருவரும் கிளம்பினார்கள்.

தீபக்கிடமும், ஸ்ரீதரிடமும் விடை பெற்றனர். அவர்களது கார் கிளம்பியது.

44

ஸோஸியேஷன் கான்ஃபரன்ஸ் முடிந்ததும் அங்கிருந்து கிளம்பினர் பிரபாகரும், சங்கரும்.

"என்ன சங்கர்! திடீர்னு உங்க முகம் ரொம்ப டல்லாயிடுச்சு! ஏன் இவ்ளவு அப்ஸெட் ஆகி இருக்கீங்க?"

"தீபக்கைச் சரண்யாவுக்குன்னு பேசியிருக்கறதா சொன்னேனே... பாண்டிச்சேரியில இருக்கற தீபக் வீட்டுக்கு அம்மா, அப்பா கூட நானும் போறதா இருந்துச்சு. உங்களையும் கூட்டிட்டுப் போறதா இருந்தேன்.

"என்னையா...?"

"ஏன் அப்படி என்னையான்னு கேக்கறீங்க? நீங்க இல்லாம எங்க கம்பெனியிலயும் சரி, எங்க வீட்லயும் சரி, எந்த ஒரு விசேஷமும் நடக்காது. எங்க நிறுவனத்தோட வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணமாச்சே... ரத்த சம்பந்தமே இல்லாத நீங்க எனக்கு உதவி செய்யணும்ன்னு என்ன இருக்கு..."

"அது என்னவோ தெரியலை சங்கர். திருச்சியில முதல் முதல்ல உங்களைச் சந்திச்சப்பவே என் மனசுக்குள்ள உங்க மேல ஒரு இனம் புரியாத அன்பு தோணுச்சு. உங்க குடும்பத்துல ஒரு ஆளா உங்க குடும்பத்துச் சுபநிகழ்ச்சிகள்ல நான் கலந்துப்பேன்..."

"நான் பார்த்து வளர்த்த என் பொண்ணு சரணும்மாவோட முதல் சுப நிகழ்ச்சியோட முதல் நடவடிக்கைக்குப் பாண்டிச்சேரிக்கு நாம போக முடியலியேன்னு அப்ஸெட் ஆகிட்டேன்..."

"இந்த கான்ஃபரன்ஸ்க்கு முக்கியமான புள்ளி வர்ற தேதி முன்கூட்டின தேதியாயிடுச்சு. அவரோட சப்போர்ட்லதான் இந்த எக்ஸ்போர்ட், இம்போர்ட எல்லாம் பிரச்னை இல்லாம போயிக்கிட்டிருக்கு. ஏற்கெனவே அறிவிச்ச தேதியில அவர் வெளிநாட்டுக் கிளம்பியாக வேண்டிய சூழ்நிலை ஆயிடுச்சா... அதனால இப்படி தேதி மாறிப்போச்சு. உங்களுக்கும் கஷ்டமாத்தான் இருக்கும். எனக்குப் புரியுது. உங்க அம்மா, அப்பா போயிருப்பாங்கள்ல?"

"ஆமா. அவங்க ரெண்டு பேரும் இன்னொரு நாளைக்கு எல்லாரும் சேர்ந்து போகலாம்ன்னு சொன்னாங்க. நான்தான் முதல் முதல்ல பண்ணப் போற நல்ல காரியத்தோட முதல் நடவடிக்கையைத் தள்ளிப் போட வேண்டாம்னு சொல்லி அவங்களை அனுப்பி வச்சேன்."

"பெரியவங்க பிள்ளையார் சுழி போடட்டும். மத்ததெல்லாம் தானா நல்லபடியா நடக்கும்."

"ஆஹா... எவ்வளவு அன்போட பேசறீங்க! இந்த அன்புக்கு என்னிக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன் பிரபாகர்."

"பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சங்கர். எனக்குன்னு ராஜேந்திர பிரசாத் ஐயாவுக்கு அடுத்தபடியா நீங்க தான் இருக்கீங்க. உங்களுக்காக எதுவும் செய்வேன்."

"தேங்க்யூ பிரபாகர். வரட்டுமா?" சங்கர் தன் காரில் ஏறிக் கொள்ள, பிரபாகர் அவனது காரில் ஏறிக் கொள்ள, இருவரது கார்களும் அங்கிருந்து கிளம்பின.

45

பாண்டிச்சேரியில் இருந்து திரும்பும் வசந்தா, முத்தையா இருவரது வரவையும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தாள் சரண்யா.

சதா சர்வ காலமும் தீபக்கின் நினைவிலேயே மிதந்து கொண்டிருந்தாள் அவள். 'எதிர்ப்பு இல்லாத காதல், எத்தனை பேருக்குக் கிட்டும்? முதல் முதலா நான் கண்ணோடு கண் கலந்தது தீபக்கிடம்தான். முதல் முதலா என் மனசைப் பறிகுடுத்தது தீபக்கிடம்தான். முதல் முதலா இவன்தான் எனக்குக் கணவனா வரணும்னு நான் நினைச்சது தீபக்கைத் தான். முதல் முதலா நான் ரசிச்சது தீபக்கோட அழகைத்தான். முதல் முதலா இவன் நிச்சயமா நல்லவனா இருப்பான்னு நினைச்சதும் தீபக்கைத்தான். என்னோட வாழ்க்கையில் முதன்மையானவர் தீபக். என்னோட எல்லாமே தீபக்தான். தீபக்... தீபக்...'

தீபக்கின் உயிரைத் தன் உயிராக மதித்து, அவனது முகத்தைக் கற்பனையில் கண்டு களித்துக் கொண்டிருந்த சரண்யாவின் நினைவலைகள், காரின் ஹாரன் ஒலி கேட்டுக் கலைந்தன.

பங்களாவிற்குள்ளிருந்து போர்டிகோவிற்கு ஓடோடி வந்தாள் சரண்யா.

காரிலிருந்து இறங்கிய வசந்தாவையும், முத்தையாவையும் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.


"வாங்க பாட்டி. இவ்வளவு நேரம் ஆயிடுச்சு! வழியில எங்கேயாவது சாப்பிட்டீங்களா? இங்கே சமையல்காரம்மா ரவா பொங்கல் பண்ணி வச்சிருக்காங்க. நான் போய் எடுத்துட்டு வரட்டுமா? தாத்தா... உங்களுக்கு இட்லிதான். உங்களுக்கு எடுத்துட்டு வரட்டுமா?..."

"என்ன அதிசயம் இது? கார்ல இருந்து இறங்கி உள்ள வர்றதுக்குள்ள உபசாரத்தைப் பாருங்களேன்..." வசந்தா கேலி பண்ணியதும், முத்தையாவும் அதில் கலந்து கொண்டார்.

"சோழியன் குடுமி சும்மா ஆடுமா? நாம யாரைப் பார்த்துட்டு வந்திருக்கோம்? திருவாளர் தீபக்கைப் பார்த்துட்டு வந்திருக்கோமே..."

"அதுக்குதான் இத்தனை குஷியான வரவேற்பா? அதுக்குதான் இத்தனை ருசியான டிபன் ஐட்டங்களா? அட்ரா சக்கை..."

வசந்தாவும், முத்தையாவும் மாறி மாறிக் கிண்டல் பண்ண, சரண்யாவின் முகம் சிவந்தது வெட்கத்தால்.

"நாங்களே சொல்லிடறோம்மா... உன்னோட தீபக்கையும் அவங்கம்மா, தம்பியையும் பார்த்துப் பேசிட்டு வந்ததைப் பத்தி..."

வசந்தா பேசி முடிப்பதற்குள் சங்கரின் காரும் பங்களாவிற்குள் நுழைந்தது.

"ஹய்... அப்பாவும் வந்துட்டாரு..." சங்கர் வந்தான்.

"என்னப்பா, அம்மா... தீபக்கோட அம்மாவைப் பார்த்துப் பேசினீங்களா? என்ன சொன்னாங்க? என்ன நடந்துச்சு? உங்களுக்குத் திருப்திதானா?"

"அடேயப்பா... சரண்யா கல்யாண விஷயத்துல உனக்கு இருக்கற ஆர்வமும், அக்கறையும்!... சரண்யா குடுத்து வச்சிருக்கணும் சங்கர்..."

"அவ யாரும்மா? என்னோட ரத்தத்தின் ரத்தம். இன்னிக்கு உங்க கூடப் பாண்டிச்சேரிக்கு வர முடியலியேன்னு நொந்து போயிட்டேன். சரி... விஷயத்தைச் சொல்லுங்க..."

"தீபக்கோட அம்மாவைப் பார்க்க லட்சுமிகரமா இருக்காங்க. ஆனா... அவங்க புருஷன் அவங்க கூட இல்லாததுனாலயோ வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டதுனாலயோ தெரியல... அவங்க கண்கள்ல ஒரு சோகம் தெரியுது. முகம் மலரச் சிரிச்சுப் பேசினாலும் உள்ளுக்குள்ள ஒரு சோகம் அவங்களை எரிச்சுக்கிட்டிருக்குது. அதை அவங்க சொல்லாமயே உணர முடிஞ்சுது... எதனால அவர் பிரிஞ்சு போனார்ன்னு கேட்டிருக்கலாம்... ஆனா கேட்கலை..."

இப்போது முத்தையா குறுக்கிட்டார்.

"இங்க பாரு, வசந்தா... அந்த அம்மாவைப் பார்த்தா நல்லவங்களா, தன்மையானவங்களா இருக்காங்கன்னு கண்கூடாப் பார்த்துட்டோம். தீபக்கும் நல்ல பையன்னு தெரிஞ்சுடுச்சு. தம்பி ஸ்ரீதரும் அடக்க ஒடுக்கமா இருக்கான். பெரிசா சம்பாதிக்கலைன்னாலும் அவங்கவங்க சொந்தக் கால்ல நின்னு உழைச்சு அவங்க தேவைக்குரிய வருமானம் வருது. நம்ம சரண்யாவுக்குத் தீபக்கைப் பிடிச்சிருக்கு. இதுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவங்க அப்பா யாரு? அவரு எங்கே போனாரு? ஏன் போனாருங்கற கேள்விகளெல்லாம் தேவையில்லாத விஷயம். சங்கர் விஷயத்துல நான் ஏகமா கெடுபடி பண்ணி என்ன ஆச்சுன்னு தெரியும்ல? நல்லதையே நினைச்சு, நல்லபடியா நடத்துவோம், இந்தக் கல்யாணத்தை..."

முத்தையா கூறியதைக் கேட்டதும் உணர்ச்சி வசப்பட்டான் சங்கர்.

'அந்தக் காலத்துல இமயத்தளவு வீராப்பும் இறுமாப்புமா இருந்த அப்பா... அந்தஸ்து பேதத்தோட உச்சிக்குப் போன அப்பா... குலம், கோத்திரம்னு விசாரிக்கணும்னு ஏகப்பட்ட கண்டிஷன்ல இருந்த அப்பா... இப்ப இதயத்து அளவுல எவ்வளவு மாறி இருக்கார். எதையும் துருவ வேண்டாம். நல்லதுன்னு நம்பிச் செய்யலாம்னு எவ்வளவு யதார்த்தமா பேசறார்! கல்லுக்குள்ள ஈரம் கசிய ஆரம்பிச்சுடுச்சு...' நினைத்த சங்கர், முத்தையாவின் கையைப் பிடித்துக் கொண்டான்.

"பாண்டிச்சேரிக்கு வரமுடியலையேன்னு வருத்தப்பட்டுக்கிட்டிருந்த நான்... இப்ப நீங்க இப்படி பெருந்தன்மையா பேசறதைக் கேட்டு சந்தோஷப்படறேன்ப்பா..."

"என்னோட வறட்டுப் பிடிவாதத்தால வறண்டு போச்சு உன்னோட வாழ்க்கை. உன்னோட மனசைப் புரிஞ்சுக்காம... என்னோட கௌரவம்தான் பெரிசுன்னு வீம்பு பிடிச்சேன்.

இடைமறித்தான் சங்கர்.

"அப்பா... நான் என்ன சொல்லியிருக்கேன்? அதைப்பத்தி யாரும் எதுவும் பேசக்கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?.."

"நீ வாழாத வாழ்க்கையெல்லாம் சேர்த்து நம்ம சரண்யா வாழணும்..."

அப்போது சரண்யா வழக்கம் போலச் சங்கரின் தோளைப் பிடித்துத் தொங்கியபடியே பேசினாள்.

"அடடா.. ஒரேடியா சென்டிமெண்ட் மழை பொழிஞ்சு நெஞ்சைத் தொடறீங்களே எல்லாரும்... என்னப்பா இது... 'ஒருத்தரைப்'பத்தி ஏதாவது தகவல் சொல்லுவாங்கன்னு ஒருத்தி எதிர்பார்த்துக் காத்திருக்கேன்னு யாருக்காவது தோணுதா?..." சூழ்நிலையின் இறுக்கத்தைக் குறைப்பதற்குச் சரண்யா இதமாய்ப் பேசினாள்.

"அடி என் கண்ணே சரண்யா, உன்னோட தீபக் எங்ககூட கலகலன்னு கலகலப்பா பேசினான். ஆனா... உன்னைப் பத்தி எதுவும் கேக்கலை. வெட்கமாயிருக்கும். தீபக்கோட தம்பி டி.வி.யில டான்ஸராம். நீ அவனோட டான்ஸ் ப்ரோகிராம் பார்த்திருக்கியாம்மா? டான்ஸ் நம்பர் ஒன்ல சூப்பரா ஆடுவான் அந்தப் பையன்..." முத்தையா கூறினார்.

"தெரியும் தாத்தா. தீபக் சொல்லியிருக்காரு."

"தீபக் முகத்துல ஏகப்பட்ட சந்தோஷம்!" வசந்தா மகிழ்ச்சியுடன் கூறினாள்.

"தீபக்கோட அம்மா வேற என்ன சொன்னாங்க பாட்டி?"

"ம்... சொன்னாங்க... சுரைக்காய்க்கு உப்பு இல்லைன்னு..."

"போங்க பாட்டி..." சிணுங்கினாள் சரண்யா.

"சும்மா.. விளையாட்டுக்குச் சொன்னேன்டா கண்ணு. தீபக்கோட அம்மாவுக்குத் தன்னோட வருங்கால மருமகளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கலாம்..."

"அப்படியா சொன்னாங்க?"

"ஆமாண்டா. அடுத்த ஞாயிறு அவங்க இங்கே வர்றாங்க. வந்து உன்னைப் பார்த்தப்புறம் கல்யாணத்தை உறுதி பேசிட்டு முகூர்த்தத்துக்கு நாள் பார்த்துடலாம். சந்தோஷம்தானே."

"ஆமா பாட்டி. நான் ரொம்ப லக்கி."

வசந்தாவை முத்தமிட்டாள் சரண்யா.

"என்னம்மா சரண்யா செல்லம். தாத்தாவுக்குப் பசிக்குது. சங்கருக்குப் பசிக்குது. சமையல்காரம்மாவை எடுத்து வைக்கச் சொல்லும்மா..."

"இதோ போறேன் தாத்தா. எல்லாரும் டைனிங் டேபிளுக்கு வாங்க..."

குதூகலித்த உள்ளத்துடன் குதித்தோடினாள் சரண்யா. அன்றைய இரவு உணவை அனைவரும் மன நிறைவுடன் சாப்பிட்டனர்.

46

திரைப்படத் துறையில் ஆர்வமிக்க நபர்களுக்குக் கனவுத் தொழிற்சாலையாகத்  திகழும் சென்னையில், படப்பிடிப்புகள் நடைபெறும் பங்களாக்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தாள் வாணி.

ஸ்ரீதரிடம் தன்னை அந்த பங்களாக்களுக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டாள்.

"முதல்ல நீ எங்க சேனல் ஷூட்டிங் நடக்கற இடத்துக்கு வாயேன்," என்றான்.

"மத்தவங்க கூட நீங்க ஆடற டான்ஸை டி.வி.யிலயே பார்க்க முடியல. இந்த லட்சணத்துல ஷூட்டிங் நடக்கற இடத்துக்கு வேற வந்து பார்க்கணுமா?..."

இவ்விதம் அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கும்.

‘‘உங்களுக்குத் தெரியாம, சொல்லாம திடீர்னு உங்க ஷூட்டிங் நடக்கற இடத்துக்கு வந்து நிப்பேன்...’’

‘‘வாயேன். எனக்கென்ன பயம்?’’

‘‘நீங்க பயப்படுவீங்கன்னு நான் சொன்னேனா? நீங்கதான் உத்தம புத்திரனாச்சே! உங்களை ஏன் நான் வேவு பார்க்கணும்? சும்மா தமாசுக்குச் சொன்னேன்... ஆதரவற்ற குழந்தைகளுக்காகக் ‘கருணாலயா’ன்னு ஒரு பராமரிப்பு இல்லம் துவங்கப் போறேன்னு சொன்னேன்ல்ல... அது விஷயமா திடீர்னு சென்னைக்கு வர வேண்டியதிருக்கு. மத்தப்படி உங்களை யாரு பார்க்க வர்றா?...’’


‘‘என்னைப் பார்க்க நீ சென்னைக்கு வர்றியோ இல்லையோ... எங்க அண்ணனோட வருங்கால மனைவியைப் பார்க்கறதுக்காக எங்க அம்மா சென்னைக்குப் போகப் போறாங்க...’’

‘‘ஓ... அப்படியா? எவ்வளவு சந்தோஷமான சமாச்சாரம்?! இவ்வளவு நிதானமா சொல்றீங்க! நீங்க போகலியா?’’

‘‘நான் எதுக்கு? அன்னிக்குப் பொண்ணு வீட்ல இருந்து எங்க வீட்டுக்கு வந்தப்ப கூட நான் எதுவும் பேசலை. கம்முனு இருந்துட்டேன்...’’

‘‘ஏன்? உங்க வாய்க்குள்ள கம் வச்சிருந்தீங்களா?’’

‘‘வர வர உன்னோட மொக்கையைத் தாங்க முடியலை... அம்மா மட்டும்தான் சென்னைக்குப் போய்ப் பொண்ணு பார்க்கப் போறாங்க...’’

‘‘வழக்கமா முதல்ல பொண்ணைப் பார்த்துட்டு அப்புறம் தான் கல்யாணப் பேச்சே பேசுவாங்க. இப்ப என்னடான்னா மாப்பிள்ளையும் பொண்ணும் சந்திச்சுப் பேசி முடிவு பண்ணினதுக்கப்புறம் மாப்பிள்ளையோட அம்மா பொண்ணு பார்க்கப் போறாங்களா... விளையாட்டா இருக்கு...’’

‘‘விளையாட்டு ஒண்ணுமில்ல... என்னதான் காதல் கல்யாணம்னாலும் முறைப்படியான சம்பிரதாயங்களையும் நாம கடைபிடிக்கணுமில்ல? அதுக்குத்தான். அது மட்டுமில்லை... எங்க அம்மாவுக்குத் தன்னோட வருங்கால மருமகளைப் பார்க்கணும்னு ஆசையா இருக்குல்ல? அதனாலதான் பொண்ணோட பாட்டி வரச் சொன்னதும் வரேன்னு சொல்லிட்டாங்க எங்க அம்மா. அம்மா போய்ப் பார்த்துட்டு வர்ற சம்பிரதாயம் முடிஞ்சதும் அண்ணனோட கல்யாணம்தான்...’’

‘‘அதுக்கப்புறம்?!...’’

‘‘அதுக்கப்புறம்... அண்ணனும் அண்ணியும் சந்தோஷமா இருப்பாங்க...’’

‘‘அது மட்டும்தானா?’’

‘‘ஏய்... நான் என்ன சொல்லணும்ன்னு நீ எதிர்பார்க்கறே?’’

‘‘ஒண்ணும் தெரியாத பாப்பா மாதிரி பேசாதீங்க...’’

‘‘கோவிச்சுக்காத வாணி... அண்ணனோட கல்யாணம் முடிஞ்சப்புறம் நம்ம கல்யாணம்தான். ஆனா அதுக்கு அவசரப் படக்கூடாது. நான் சினிமாத் துறையில கால் பதிக்கணும். என்னையும், என்னோட திறமைகளையும் ஓரளவுக்கு நிரூபிச்ச பிறகு நாம கல்யாணம் பண்ணிக்கலாம்...’’

‘‘நானும் அப்படித்தான். ஆதரவற்றோர் குழந்தைகளுக்கான இல்லம் ஆரம்பிச்சு... அது நல்லபடியா செயல்பட்டு, அங்கே அடைக்கலமாகற குழந்தைங்க ஆதரவா வளரணும். அந்த முயற்சியில ஓரளவுக்காவது நான் வெற்றி அடையணும். அதுக்கப்புறம்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நானும் முடிவு பண்ணி வச்சிருந்தேன்...’’

‘‘பார்த்தியா நாம ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிச்சிருக்கோம். நம்ம ஜோடிப் பொருத்தம் கன கச்சிதம்!’’

‘‘ஆஹா... ஜோடி நம்பர் ஒன்தான் போங்க...’’

‘‘ரியல் ஜோடிதானே?...’’

‘‘பின்னே என்ன? ரீல் ஜோடியா? அடி வாங்கப் போறீங்க... டி.வி.க்கு ஆடி ஆடி அதே நினைப்புல ரீல்... ரியல்ன்னு நீங்கதான் பேசறீங்கன்னு பார்த்தா, இப்ப நானும் பேச ஆரம்பிச்சுட்டேன்...’’

‘‘பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்...’’

‘‘யார் பூ?... யார் நாரு?...’’

‘‘அடடா... உன்ட்ட வாயைக் குடுத்துட்டு ஜெயிக்க முடியுமா? நீதான் பூ. என்னோட காதல் பூ. ரோஜாப்பூ... போதுமா...?’’

‘‘ரொம்ப வழியாதீங்க. எனக்கு லேட்டாயிடுச்சு. அப்பாவுக்கு மருந்து வாங்கிட்டுப் போகணும்.’’

‘‘சரிம்மா தாயே... வா... கிளம்பலாம்...’’ இருவரும் தொடர்ந்து அரட்டை அடித்துக் கொண்டே நடந்தனர்.

47

முத்தையாவின் குடும்பத்தினரின் சென்னை பங்களா! சுற்றிலும் தோட்டம்! தோட்டத்தில் பச்சைப் பசேலென்ற செடி, கொடி, மரங்கள்! செடிகளில் பூத்துக் குலுங்கும் அழகிய வண்ணப் பூக்கள்! கைதேர்ந்த ‘கார்டன் டிஸைன’ரால் உருவாக்கப்பட்ட அந்தத் தோட்டம், ஒரு பூங்காவைப் போல மிக அழகாக இருந்தது. தோட்டத்திற்கு நடுவில் இருந்த பங்களா, வெல்வெட் சட்டை அணிந்த கொழு கொழு குழந்தை போல மனதைக் கொள்ளை கொண்டது. ரம்மியமான அந்தத் தோட்டத்துச் சூழ்நிலையில், அந்தப் பகுதி, சென்னைதானா?! என்று ஆச்சர்யப்படும் விதத்தில் இருந்தது. விலாசம் எழுதிக் கொண்டு வந்த பேப்பரை எடுத்துச் சரி பார்த்துக் கொண்ட ஜானகி, தான் வந்த ஆட்டோவை நிறுத்தச் சொன்னாள்.

‘‘இந்த பங்களாதான்ப்பா. நிறுத்து...’’ ஆட்டோவை நிறுத்தினான் ஆட்டோ டிரைவர். ‘இவ்வளவு பெரிய பங்களாவா இருக்கு? நிஜமாவே நான் எழுதிக் கொண்டு வந்த அட்ரஸ்ல இருக்கற பங்களா இதுதானா?’ மீண்டும் சரி பார்த்தாள் ஜானகி.

‘‘என்னடி கலா?! இவ்வளவு பெரிய பங்களாவா இருக்கு? பணக்கார வீட்டுப்பொண்ணுன்னு சொன்னாங்க. ஆனா இவ்வளவு பெரிய பணக்காரங்களா இருப்பாங்கன்னு நான் எதிர்பார்க்கலயேடி...’’

‘‘ஜானகியக்கா... அங்கே ஸெக்யூரிட்டி நிக்கறாரு. அவர்கிட்ட கேட்டுடலாமே...’’

‘‘அதுவும் சரிதான். வா.’’

ஆட்டோவில் இருந்து இறங்கி பங்களாவின் கேட்டை நோக்கி நடந்தாள். கூடவே கலாவும் சென்றாள். பங்களா கேட் அருகே நின்றிருந்த ஸெக்யூரிட்டியின் அருகே இருவரும் சென்றார்கள்.

தன்னிடம் இருந்த அட்ரஸ் பேப்பரை அவனிடம் காண்பித்தாள் ஜானகி.

‘‘இத சரண்யா ஹொஸைரி நிறுவன அதிபரோட பங்களாதானே?’’ ஜானகி கேட்டாள்.

‘‘ஆமாம்மா. நீங்க யாரு?’’

‘‘என் பேர் ஜானகி, பெரியம்மா என்னை வரச்சொல்லி இருந்தாங்க...’’

‘‘ஓ... நீங்கதான் ஜானகியா? பாண்டிச்சேரியில இருந்துதானே வர்றீங்க? நீங்க வந்தா உங்களை நிறுத்தி வைக்காம உள்ளே கூட்டிட்டு வரச் சொல்லியிருக்காங்கம்மா.’’

ஜானகியையும், கலாவையும் ஸெக்யூரிட்டி உள்ளே அழைத்துச் சென்றான். போர்டிகோவின் அருகே வந்ததும் அழைப்பு மணியின் ஸ்விட்சை அழுத்தினான். அதன் ஒலி கேட்டு அங்கே பணிபுரியும் ஒரு சின்னப் பெண் வந்தாள்.

‘‘பாண்டிச்சேரியில இருந்து ஜானகியம்மா வந்திருக்காங்கன்னு பெரியம்மாட்ட போய்ச் சொல்லு, வள்ளி...’’ என்று ஸெக்யூரிட்டி கூறி முடிப்பதற்குள் வசந்தா அங்கே வந்தாள்.

‘‘அடடே... ஜானகி! வாம்மா. உள்ளே வா. உன் கூட வந்திருக்கற பொண்ணையும் கூட்டிட்டு வாம்மா...’’

கலா பின் தொடர, ஜானகி உள்ளே சென்றாள். ‘‘இந்தாங்கம்மா...’’ தன்னிடமிருந்த பையை வசந்தாவிடம் கொடுத்தாள் ஜானகி.

‘‘ரெண்டு பேரும் உட்காருங்கம்மா!’’ வசந்தா கேட்டுக் கொண்டதும் அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்தனர் கலாவும், ஜானகியும்.

ஜானகி கொடுத்த பையில் இருந்த பொருட்களை வெளியில் எடுத்தாள் வசந்தா.

புதிய எவர்சில்வர் சம்புடம் நிறையப் பாதாம் ஹல்வாவும், மற்றொரு டப்பாவில் காராப் பூந்தியும் இருந்தன. நெய்யில் மின்னிய பாதாம் ஹல்வாவில் அங்கங்கே குங்குமப்பூ தென்பட்டது. அழகிய கலர் முத்துக்கள் போன்ற காராப்பூந்திகள் உடனே எடுத்துச் சாப்பிடத் தூண்டின.

அதே பையினுள் மற்றொரு சிறிய ப்ளாஸ்டிக் கவரில் நெருக்கமாகக் கோக்கப்பட்டிருந்த குண்டு மல்லிகைச் சரம் இருந்தது.

‘‘என்ன ஜானகி இது? குண்டு மல்லிகைப் பூ கொண்டு வந்திருக்க... பூ கொண்டு வந்தது சரி. நிறையப் பலகாரம் வேற கொண்டு வந்திருக்க! எதுக்கும்மா இந்த சம்பிரதாயமெல்லாம்?...’’

‘‘சம்பிரதாயத்துக்காக இல்லைங்கம்மா. சந்தோஷத்தை வெளிப்படுத்துறதுக்கு எனக்கு இதுதான் தோணுச்சு. இதெல்லாம் வீட்ல நானே பண்ணினதும்மா...’’

‘‘எதுக்கும்மா கஷ்டப்பட்டுக்கிட்டு...’’


‘‘இதில என்னங்கம்மா கஷ்டம்? அது சரிங்கம்மா... பொண்ணு...’’

‘‘புரியுது. உன் வருங்கால மருமகளைப் பார்க்கத்துடிக்கறே... இதோ... இப்ப வந்துடுவா. நீ அவளைப் பார்க்கறப்ப எந்த ட்ரெஸ் போட்டுக்கறதுன்னு செலக்ட் பண்ண அவளுக்கு ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சு. ஒரு வழியா சில்க் காட்டன் புடவை உடுத்திக்கிறேன்னு அதை உடுத்திக்கறதுக்கு இன்னொரு ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சு. இதோ வந்துட்டாளே...’’

அழகிய அன்னப் பறவை உருவ ஜரிகை இழையினால் நெய்யப்பட்டிருந்த மயில் கழுத்து வண்ண சில்க் காட்டன் புடவை கட்டி இருந்தாள். காதில் மாட்டலுடன் தொங்கல் அணிந்து, கழுத்தில் மயில் டாலர் கோக்கப்பட்டிருந்த தங்க ஆரம் அணிந்திருந்தாள். ஒரு கையில் யாழி உருவம் கொண்ட ப்ரேஸ்லெட், இன்னொரு கையில்  தங்க செயின் சேர்த்த வாட்சு அணிந்திருந்தாள். தலை முடியைத் தளர்வாகப் பின்னி இருந்தாள். அழகிய மயில் ஒன்று அசைந்து வருவது போலிருந்தது. இப்பொழுதே புது மணப் பெண்ணுக்குரிய களை வந்திருந்தது.

வைத்த கண்களை எடுக்காமல் அவளையே ரசித்துக் கொண்டிருந்தாள் ஜானகி.

‘‘வணக்கம்!’’ என்று சரண்யா அவளை வணங்கிய போதுதான் தன் உணர்விற்கு வந்தாள்.

‘‘வணக்கம்மா. உட்கார்.’’ சரண்யாவை சோபாவில் தன் அருகே உட்கார வைத்துக் கொண்டாள் ஜானகி.

‘‘எங்க வீடு இப்படியெல்லாம் பிரம்மாண்டமா இருக்காதும்மா. இப்போதைக்கு குவார்ட்டர்ஸ்தான். தீபக் இன்னும் கொஞ்சம் முன்னேறினப்புறம் சென்னைக்கு வந்துடலாம்ன்னு இருக்கேன். அப்போ கொஞ்சம் நல்ல வீடா பார்த்துக்கலாம். உன்னோட பிறந்த வீட்டு வசதிகளையெல்லாம் எங்க வாழ்க்கை முழுக்க நீ எதிர்பார்க்க முடியாதும்மா...’’

‘‘வாழ்நாள் முழுசும் உங்க குடும்பத்து மருமகளா இருக்கற சந்தோஷமே போதும், அத்தை...’’

‘‘அடியம்மா செல்லம்... இப்பவே ‘அத்தை’ போட்டுப் பேச ஆரம்பிச்சாச்சா? அது மட்டுமில்லாம... பெரிய மனுஷி மாதிரி பேசறியே!’’ வசந்தா ஆச்சர்யப்பட்டுப் பேசினாள்.

‘‘நீங்க இன்னும் அவளைக் குழந்தையாவே நினைச்சுக்கிட்டிருக்கீங்க. அதனால அவ பேசறதைப் பார்த்து ஆச்சர்யப்படறீங்க. இந்தக் காலத்துப் பிள்ளைங்க நல்லா விவரம் தெரிஞ்சவங்களாவே இருக்காங்க. அதனாலதான் இவ்வளவு பக்குவப்பட்டுப் போறாங்க. தெளிவான சிந்தனை செய்யறாங்க. முடிவு எடுக்கறாங்க.’’

"எங்க சரண்யாவைப் பொறுத்த வரைக்கும் அவ எடுக்கற முடிவுதான் எங்களோட முடிவு. அவளோட சந்தோஷம்தான் எங்க வாழ்க்கை. அவளோட நிம்மதிதான் எங்க பேச்சு. அவளோட சுகம்தான் எங்க மூச்சு. எங்க வீட்ல எல்லாமே அவளை மையமா வச்சுதான் நடக்கும்! என்று மிகப் பெருமையாகப் பேசிய வசந்தா, கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

"சங்கர் நாலு மணிக்கு வந்துடுவான். நீங்க வரும்போது அவனும் இருக்கணும்ன்னு சொல்லிக்கிட்டிருந்தான்... அவள் பேசி முடிப்பதற்குள் வீட்டு டெலிபோன் ஒலித்தது. வசந்தா எழுந்து சென்று பேசினாள்.

"ஹலோ..."

"அம்மா... நான் சங்கர் பேசறேன். நான் சொன்னபடி நாலு மணிக்கு வர முடியாதும்மா. இப்பவே மணி மூணே முக்கால் ஆச்சு... இங்கே ஃபேக்டரியில தீப் பிடிச்சிடுச்சு. பயப்படாதீங்கம்மா. பெரிய விபத்து இல்லை. ஃபையர் இன்ஜின் வந்துருச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல, எல்லாம் சரியாயிடும். தீபக்கோட அம்மா வந்துட்டாங்களா?"

"வந்துட்டாங்கப்பா. என்னப்பா... தீ விபத்துங்கற. பயமா இருக்கு..."

"அதான் சொன்னேனேம்மா. பெரிய விபத்து இல்லைன்னு. வேலை செய்றவங்க யாருக்குமே ஒரு சின்னக் காயம்கூட இல்லை. பொருள் சேதமும் இல்லை. கவலைப்படாதீங்க. அத சரிம்மா... தீபக்கோட அம்மாவை நான் வர்ற வரைக்கும் இருக்கச் சொல்லுங்கம்மா. நான் கொஞ்ச நேரத்துல வந்துடறேன். தீ விபத்துன்னதும் பிரபாகரும் ஃபேக்டரிக்கு வந்துட்டார். அவரும் நானும் கிளம்பி வந்துடறோம்."

"சரிப்பா."

வசந்தா ரிஸீவரை வைத்துவிட்டு வந்து உட்கார்ந்தாள்.

"அப்பா என்ன சொன்னார் பாட்டி?"

"அவன் வரக் கொஞ்சம் லேட் ஆகுமாம். தீபக்கோட அம்மாவை இருக்கச் சொல்லுங்க, வந்துடறேன்னு சொன்னான்டா செல்லம்."

"சரி பாட்டி."

'முதல் முதலாக ஜானகி வந்திருக்கும் பொழுது தீ விபத்து பற்றி எதற்கு அனாவசியமாய்ச் சொல்லிக்கிட்டு...' என்று நினைத்தாள் பாட்டி.

"சரண்யா குட்டி... உங்க அத்தைக்குப் பலகாரம், காபி குடுக்கச் சொல்லும்மா."

"சரி பாட்டி." சரண்யா எழுந்து சென்றாள்.

"டிபன், காபி சாப்பிட்டு முடிச்சுட்டு வீட்டைச் சுத்திப் பாருங்க."

"சரிங்கம்மா."

சமையல்காரப் பெண்மணி தட்டுகளில் இனிப்பு வகைகளும், கார வகைகளும் அடுக்கிக் கொண்டு வந்தாள்.

சரண்யா அவற்றை வாங்கி, டீப்பாய் மீது வைத்தாள்.

"சாப்பிடுங்க அத்தை. நீயும் சாப்பிடு!" என்று ஜானகியிடமும், ஜானகியுடன் வந்த கலாவிடமும் கூறினாள் சரண்யா.

இருவரும் பலகாரம் சாப்பிட்டுக் காபி குடித்ததும் வீட்டைச் சுற்றிக் காட்டுவதற்கு அழைத்துச் சென்றாள் சரண்யா.

பங்களாவின் உட்புறம் முழுதும் சுற்றிக் காட்டினாள். பிரமிப்பு அடங்காமல் ரசித்துக் கொண்டிருந்தார்கள் ஜானகியும், கலாவும்.

வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்துவிட்டு வரும் பொழுது ஓர் இடத்தில் மாட்டப்பட்டிருந்த சங்கரின் பெரிய புகைப்படத்தைத் தற்செயலாய்ப் பார்த்துவிட்ட ஜானகி, திகைத்தாள், அதிர்ந்தாள்.

"சரண்யா... இது... யார்மா?" ஜானகியின் குரல் நடுங்கியது.

"இது எங்க அப்பா..." இதைக் கேட்ட ஜானகி, மேலும் அதிர்ச்சி அடைந்தாள்.

"சரண்யா... இந்தக் கல்யாணம் நடக்காது. தீபக்கை மறந்துடு." கோபமும், துக்கமும் வெளிப்பட்ட குரலில் கத்தினாள் ஜானகி. அந்தப் பக்கமாக வந்த வசந்தா, ஜானகி கோபமாகக் கூறிய வார்த்தைகளைக் கேட்டாள்.

"ஏம்மா ஜானகி என்ன ஆச்சு?" அதிர்ச்சி மாறாத குரலில் கேட்டாள்.

வசந்தா கேள்வியை முழுதாக முடிப்பதற்குள் ஜானகி, கலாவின் கையைப் பிடித்துக் கொண்டு பங்களாவின் வெளிப்பக்கம் வந்து மிக வேகமாக வெளியேறினாள். போய்க் கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி, கலாவை ஏற்றி விட்டு, தானும் ஏறிக் கொண்டாள்.

"பஸ் ஸ்டேண்டுக்குப் போங்க." ஜானகி கூறியதும் ஆட்டோ விரைந்தது.

48

தீ விபத்து நடந்த பகுதியைத் தீ அணைப்புப் படையினர் வந்து முற்றிலும் அணைத்தபின் அங்கிருந்து கிளம்பினான் சங்கர்.

"வாங்க பிரபாகர். வீட்டுக்குப் போகலாம். தீபக்கோட அம்மா காத்துக்கிட்டிருப்பாங்க."

"ஓ! போலாமே."

இருவரும் வீட்டிற்கு வந்தனர்.

ஹாலில் இருந்த சோஃபாவிலேயே சுருண்டு படுத்து அழுது கொண்டிருந்தாள் சரண்யா. ஜானகி அவளது தலையில் சூட்டிவிட்ட குண்டு மல்லிகைச் சரம் சரிந்து கிடந்தது. புடவை கசங்கக் குப்புறப்படுத்திருந்தாள் சரண்யா. அவளது தலைப்பக்கம் உட்கார்ந்து அவளது தலையை வருடிக் கொடுத்துக் கொண்டிருந்த வசந்தாவின் கண்களிலும் கண்ணீர், இதைப் பார்த்த சங்கர் துடித்தான்.


"என்னம்மா... ஏன் அழறீங்க? சரண்யா ஏன் அழறா? என் சரண்யாவை அழ வைச்சது யாரு? இங்கே என்ன நடந்துச்சு? தீபக்கோட அம்மா வந்திருக்கறதா சொன்னீங்களே... அவங்க எங்கே? சரண்யாவோட கண்ணுல கண்ணீர் வரவச்சு அதை நான் பார்க்கும்படியா பண்ணினது யாரு? சரணும்மா... சொல்லும்மா..."

சங்கரின் குரல் கேட்டு எழுந்த சரண்யா அவன் தோள் மீது சாய்ந்து மேலும் கதறி அழுதாள்.

"நோ... என்னோட சரணும்மா அழக் கூடாது. அம்மா! சொல்லுங்கம்மா... ஏன் சரணும்மா அழறா?"

"தீபக்கை மறந்துடு, இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு தீபக்கோட அம்மா ஜானகி கோபமா சொல்லிட்டு வெளியேறிப் போயிட்டாப்பா..."

"ஏனாம்? ஏன் நடக்காதாம்? எதுக்காகத் தீபக்கை மறக்கணுமாம்?" மேன்மேலும் கோபம் உச்சிக்கு ஏறியது சங்கருக்கு. பிரபாகர் உடன் வந்திருப்பதையும்ம பொருட்படுத்தாமல் கத்தினான் அவன்.

"அந்தம்மா கூட வேற யார் வந்தாங்க?"

"ஒரு சின்னப் பொண்ணைக் கூடக் கூட்டிட்டு வந்தாங்கப்பா."

"பொண்ணு பார்க்கறதுக்காக வந்துட்டு கல்யாணம் நடக்காதுன்னு அவங்க எப்படிச் சொல்லலாம்? அப்படியே பிடிக்கலைன்னாலும் அதை நாசூக்கா, நாகரிகமா சொல்லணும், இப்படித் தடாலடியாவா சொல்லுவாங்க?..." சங்கர் மிகுந்த படபடப்பானான்.

ஏ.ஸி. குளிரிலும் உணர்ச்சி வசப்பட்டதால் அவனது சட்டை வியர்வையால் நனைந்தது.

இதைக் கண்ட வசந்தாவும், பிரபாகரும் பயந்து போனார்கள்.

சங்கரை ஆற அமர உட்கார வைத்தான் பிரபாகர். நிலைமையைப் பார்த்த சரண்யா, மாடியிலுள்ள தன் அறைக்குப் போய்விட்டாள்.

"பதட்டப்படாதே சங்கர். நடந்தது என்னன்னு பொறுமையா கேளு. தீபக்கோட அம்மா பலகாரம், குண்டு மல்லிகைப் பூச்சரமெல்லாம் ரொம்ப சந்தோஷமா கொண்டு வந்தா. ஆசையா சரண்யாவுக்குச் சூட்டி விட்டா. அப்பா எழுந்திருக்க நாலு மணி ஆகுமே. நீயும் வர லேட் ஆகும்ன்னு சொன்னேன். அதனால நீங்கள்ல்லாம் வர்றதுக்குள்ள பங்களாவைச் சுத்திக் காட்டிட்டிருந்தா சரண்யா. சுவர்ல மாட்டியிருந்த உன்னோட போட்டோவைப் பார்த்து அது யார்ன்னு கேட்டிருக்கா ஜானகி. 'இது எங்க அப்பா'ன்னு ஏகப்பட்ட சந்தோஷமா சரண்யா சொன்னதும், அந்த ஜானகிக்கு வந்த கோபத்தைப் பார்க்கணுமே....

"நீ தீபக்கை மறந்துடு. இந்தக் கல்யாணம் நடக்காது!ன்னு பயங்கரக் கோபமா கத்திட்டு அவ பாட்டுக்கு வெளியேறிப் போயிட்டா..."

வசந்தா கூறியதையெல்லாம் தன் அறையில், பகல் தூக்கம் முடிந்து எழுந்து வந்த முத்தையாவும் கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு நெஞ்சுப் படபடப்பு ஏற்பட்டது. இதைக் கவனித்த வசந்தா பதறினாள்.

"அப்பாவைப் பாரு சங்கர். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டாரு!" என்று அவள் கூறியதும், சங்கர் அப்பாவைத் தாங்கிப் பிடித்து சோஃபாவில் உட்கார வைத்தான். இது போன்ற டென்ஷன் சமயத்தில் கொடுக்க வேண்டிய மாத்திரையை அவருக்குக் கொடுத்தான்.

"எனக்கு ஒண்ணுமில்லைப்பா!" கூறிய முத்தையா சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.

அங்கிருந்த பிரபாகர் சங்கரின் அருகே வந்தான்.

"சங்கர், நாம இப்ப உடனே பாண்டிச்சேரிக்குக் கிளம்பிப் போகலாம். அந்தம்மாவைப் பார்த்து என்ன, ஏதுன்னு கேட்கலாம். கிளம்புங்க. நானும் வரேன். டிரைவர் வேண்டாம். நானே ஓட்டிக்கிட்டு வரேன்."

"ஆமா. அதுதான் சரி. வாங்க போகலாம்."

"நானும் வரேன் சங்கர்." வசந்தாவும் கிளம்பினாள். உடன் முத்தையாவும் கிளம்பினார்.

"நீங்க வேண்டாம்ப்பா. நீங்க இருங்க.-..."

"நான் இருந்தாத்தான் எதையாவது யோசிச்சுக்கிட்டு டென்ஷன் ஜாஸ்தியாகும். அதனால நானும் வரேன்." தீர்மானமாகக் கூறிய முத்தையாவை அதற்கு மேல் மறுக்க முடியவில்லை.

மாடியில் இருந்து உடை மாற்றிக் கொண்டு இறங்கி வந்தாள் சரண்யா.

"நானும் உங்க கூட வரேன். நீங்க யாரும் இல்லாம, நீங்க வர்ற வரைக்கும் இந்தச் சூழ்நிலையில என்னால இங்கே இருக்க முடியாதுப்பா... நான் காரிலயே இருந்துக்கறேன்..."

"சரிம்மா. நீயும் வா. உன்னோட கண்ணில இருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வரக் கூடாது. தைர்யமா இரு. நான் பார்த்துக்கறேன்." கூறிய சங்கர் ஷர்ட்டை மாற்றிக் கொண்டு கிளம்பினான்.

49

ன்று தீபக்கின் சீனியர் வக்கீல் சுந்தரம், பாண்டிச்சேரியில் ஒரு முக்கியமான வேலையை முடித்துவிடும்படி கூறி இருந்தார். எனவே தீபக், பாண்டிச்சேரியில் இருந்தான். நேரு வீதிக்குச் சென்று தன்அலுவல்களை முடித்துவிட்டு ஜானகியின் வரவிற்காகக் காத்திருந்தான்.

சென்னையில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் பஸ்ஸில் ஏறிப் பயணித்த ஜானகி, பங்களாவின் குவார்ட்டர்சுக்கு வந்து சேர்ந்தாள்.

தீபக்குடன் ஸ்ரீதரும் வந்து காத்திருந்தான்.

"உனக்கு ஷூட்டிங் இல்லையா?"

"இன்னிக்கு இல்லை. நாளைக்கு இருக்கு. போகணும். அது சரி, அம்மா எப்போ வருவாங்கன்னு த்ரில்லிங்கா இருக்கா?"

"ஆமாடா. என்னதான் ஏற்கெனவே அம்மா சம்மதிச்சுட்டாங்கன்னாலும் சரண்யாவோட வீட்டுக்குப் போயிருக்காங்களே... அவங்களோட அந்தஸ்தின் அடையாளமான மாளிகையையெல்லாம் பார்த்துவிட்டுப் பயந்துடுவாங்களோன்னு எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு..."

"சச்ச... ஏன் அப்படி நெகட்டிவா நினைக்கறே?"

"அம்மாவுக்கு வெளி உலகம் அவ்வளவா தெரியாதுல்ல? சரண்யா குடும்பம் பணக்காரங்கன்னு தெரியும். ஆனா பெரிய கோடீஸ்வரக் குடும்பம்ன்னு அம்மா எதிர்பார்த்திருக்கமாட்டாங்களே..."

ஜானகி எதிர்பார்க்காத ஒன்றைத்தான் எதிர் கொண்டு விட்டுத் திரும்ப வருவது அப்போது தீபக்கிற்குத் தெரியவில்லை.

"அம்மா எப்பவும் எதிலயும் உஷாரா இருக்கக் கூடியவங்க. அதனால போன இடத்துல உன்னோட சரண்யாட்ட மனம் விட்டுப் பேசிட்டுத்தான் வருவாங்க."

"என்ன சொன்ன? சரண்யாவா? அவ உன்னோட அண்ணிடா."

"சரி... ஸாரி. அண்ணிட்ட பேசிட்டு வருவாங்க."

"நான் இன்னிக்குச் சென்னையில இருந்திருந்தா... அம்மாவை பஸ் ஸ்டேண்ட்லயாவது போய்ப் பார்த்திருப்பேன். இன்னிக்குன்னு இங்கே வேலை குடுத்துட்டாரு எங்க ஸார். டேய்... ஒரே டென்ஷனா இருக்குடா..."

"ச்சே... இப்படி மொக்கை போடறியே! மணியாச்சு. வயிறு பசிக்குது. போ. போய் அம்மா என்ன டிபன் வச்சுட்டுப் போயிருக்காங்கன்னு பார்த்து எடுத்துட்டு வா."

"உனக்கு வேணுன்னா நீ போய் எடுத்துக்கோ."

"தம்பி உடையான¢ படைக்கு அஞ்சான்னு சொல்வாங்க. நீ என்னடான்னா வயித்துப் பசிக்கு கொஞ்சம் டிபன் எடுத்துக் குடுத்து உதவி செய்ய மாட்டேங்கறியே!"

"அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்னு கூடச் சொல்லுவாங்க. இப்ப உன்னை அடிக்கட்டுமா?"

"போடா சோம்பேறி. நானே போய் எடுத்துக்கறேன்." தீபக் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே ஜானகி வந்து கொண்டிருந்தாள்.

"ஹய்... அம்மா வந்துட்டாங்க... போ தீபக்... இப்ப அம்மாவைப் போய் மொக்கை போடு..." ஸ்ரீதர் கேலி பண்ணினான்.

துள்ளி எழுந்த தீபக், குவார்ட்டர்சுக்குள் வந்து செருப்பைக் கழற்றிப் போட்டுக் கொண்டிருந்த ஜானகியின் அருகே சென்றான்.


"அம்மா.. சரண்யாவைப் பார்த்தீங்களாம்மா? உங்களுக்கு அவளைப் பிடிச்சுதா...?"

"தீபக்... இந்தக் கல்யாணம் நடக்காது..."

"அம்மா..." அதிர்ச்சியில் உரக்கக் கத்தினான் தீபக்.

"கத்தாதே தீபக். சரண்யாவை மறந்துடு. உன்னை மறந்துடணும்ன்னு அவட்டயும் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன்...."

"ஏம்மா? என்னம்மா ஆச்சு?"

"என்னமோ ஆச்சு. இந்தக் கல்யாணம் நடக்காது. அவ்வளவு தான். இதுக்கு மேல என்னை எதுவும் கேட்காதே..."

"அப்பாவைப் பத்தி கேட்டா எதுவும் கேட்கக்கூடாதும்பிங்க. அவர் ஏன் உங்களைப் பிரிஞ்சார்னு கேட்டா எதுவும் கேட்கக் கூடாதும்பிங்க. அப்போ நாங்க சின்னப் பிள்ளைங்கம்மா. கேட்கக்கூடாதுன்னு நீங்க சொன்னப்புறம் நாங்க ரெண்டு பேரும் எதுவுமே கேட்கலை. உங்க வார்த்தைக்கு மரியாதை குடுத்தோம். இது என் வாழ்க்கை. இது சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு எதுவும் கேட்கக் கூடாதுன்னு நீங்க சொன்னா...?"

"நான் சொன்னா சொன்னதுதான். இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கவும் கூடாது..."

"அது ஏன்னுதாம்மா கேக்கறேன். சொல்லுங்கம்மா... உங்களுக்குச் சரண்யாவைப் பிடிக்கலையா?"

"எனக்கு யாரையுமே பிடிக்கலை..."

இதைக் கேட்ட ஸ்ரீதர், ஜானகியின் அருகே வந்தான்.

"பாவம்மா, தீபக். நீங்க வர்ற வரைக்கும் எவ்வளவு ஆசையா காத்துக்கிட்டிருந்தான் தெரியுமா?"

"தெரிய வேண்டாம்... எனக்கு எதுவும் தெரியாததுனால தான் அவங்க வீட்டுக்குப் போனேன். இந்த விஷய்ததைப் பத்தி இனிமேல எதுவும் பேசாதே..." நயந்து பேசிய ஸ்ரீதரிடமும் கோபமாகவே பேசினாள்.

தீபக் குறுக்கிட்டுப் பேசினான்.

"அப்போ... என்னோட காதல்?"

"அதான் அவளை மறந்துடுன்னு சொல்லிட்டேனே!"

"காரணம் சொல்லுங்க. மறக்கறதா வேண்டாமான்னு நான் முடிவு செய்யறேன்."

அப்போது குவர்ட்டர்சுக்குள் வந்த சங்கர், அவர்கள் பேசியதைக் கேட்க நேர்ந்தது.

"முடிவு எடுக்கறது அவங்க. ஆனா காரணத்தைச் சொல்லாம வந்துருவாங்க..." ஜன்னல் பக்கமாகத் திரும்பி இருந்த ஜானகி, சங்கரின் குரல் கேட்டு அதிர்ச்சியுடன் திரும்பினாள்.

"நீங்களா? நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க?"

"ஜானகி? நீயா... நீயா தீபக்கோட அம்மா?"

ஆமா என்பதற்கு அடையாளமாகத் தலையை மட்டும் அசைத்தாள் ஜானகி.

அப்போது காரில் காத்துக் கொண்டிருந்த சரண்யா, முத்தையா, வசந்தா, அனைவரும் குவார்ட்டர்சுக்குள் வந்தனர். ஜானகியைப் பார்த்த பிரபாகர் ஆச்சர்யப்பட்டான். அதிர்ச்சியடைந்தான். ஜானகி என்று அழைத்தான்.

பிரபாகரைப் பார்த்து மிகவும் கோபமாகக் கத்த ஆரம்பித்தாள் ஜானகி.

"நீங்களா? எதுக்காக இங்கே வந்தீங்க? உங்களாலதானே என் வாழ்க்கை பறி போச்சு? உங்களைப் பத்தி எதுவுமே என் புருஷன் கிட்ட சொல்லலைன்னு சொன்னேனே! கேட்டீங்களா? நம்ப குடும்பத்துல இருந்தப்பவும் உங்களால ஒரு பலனும் இல்லை. வீட்டை விட்டுப் போனப்புறமும் என்னோட குடும்பத்தைப் பிரிக்கணும்ன்னு என்னோட வீட்டுக்கு வந்தீங்க. நீங்கள்லாம் ஒரு அண்ணன்! அதிலயும் கூடப்பிறந்த அண்ணன்! உங்களை என்னோட அண்ணன்னு சொல்லிக்கவே கேவலமா இருக்கு..."

"என்ன? பிரபாகர் உன்னோட அண்ணனா? சங்கர் அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகக் கேட்டான்.

"ஆமா. இதைத்தான் அன்னிக்கு உங்ககிட்ட சொல்லத் துடிச்சேன். கெஞ்சினேன். ஆத்திரப்பட்டு அவசர முடிவு எடுக்கறதே உங்களுக்கு வழக்கமா ஆயிடுச்சு. எங்க அண்ணன் திருட்டுவேலை பண்ணிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான். அந்த அவமானமான விஷயம் உங்களுக்கு தெரியக்கூடாதன்னுதான் எனக்கு ஒரு அண்ணன் இருக்கறதை நான் சொல்லலை. அதனாலதான் மதுரையில நம்ப வீட்டுக்கு வந்தப்ப, வீட்டுக்குள்ள சேர்க்காம, 'என் புருஷன் வர்றதுக்குள்ள போயிடுங்கன்னு' கெஞ்சிக்கிட்டிருந்தேன். நீங்க இவர் என்னோட அண்ணன்னு தெரியாம, தெரிஞ்சுக்கவும் முடியாம என்னைக் கேவலமானவளா நினைச்சு, விட்டுட்டுப் போயிட்டீங்க. அன்னிக்கு நீங்க வீட்டுக்குள்ள வந்தப்ப இவர் வெளியே ஓடினாரு. அந்தச் சமயத்துல நீங்க ரெண்டு பேருமே ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கலை. என்னைத் தப்பா நினைச்சு அடிச்சுப் போட்டீங்களே! அப்போ நான் எவ்வளவு கெஞ்சினேன்! சொல்றதைக் கேளுங்கன்னு. இன்னிக்கு என் பிள்ளைங்க கேட்கறாங்க... அப்பா யாரு, அவர் ஏன் நம்பளைப் பிரிஞ்சு போனார்ன்னு? இந்தக் கேவலத்தை நான் எப்படி அவங்ககிட்ட சொல்ல முடியும்? என் முகத்துக்கு நேரா மரியாதையா பேசிட்டு, என் முதுகுக்குப் பின்னால, 'கழுத்துல தாலி... நெத்தியில பொட்டு... கையில பிள்ளைங்க... ஆனா புருஷன் மட்டும் கூட இல்லையா?'ன்னு இளக்காரமா பேசினவங்க எத்தனை பேரு! சின்னக் குழந்தைகளைக் கையில பிடிச்சுக்கிட்டு இந்த பங்களாக்கார மங்களத்தம்மாட்ட வேலைக்கு வந்தேன். வந்த இடத்துல வயித்துக்குச் சோறு கிடைச்சுது. ஆனா மனசுக்கு? வேதனையும், வலியும் தான் கிடைச்சுது. 'இளவயசுப் பொண்ணு! புருஷன் துணை இல்லாதவளா தனியா இருக்காளே... கூப்பிட்டா... வந்துருவா!' இழிவா நினைச்சு என்னைப் பெண்டாள வந்த வேதனையும், வலியும், அவமானமும்... அந்தக் காமுக நாய்கள்ட்ட இருந்து என்னையும், என்னோட பெண்மையையும் காப்பாத்திக்க நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்? அடுப்படியில வெந்து, நெஞ்சுக்குள்ள நொந்து போய்... வாழ்க்கையோட ஒவ்வொரு நாளையும் கடத்தறதுக்கு நான் பட்டபாடு! யாருக்குத் தெரியும்? மணவாழ்க்கையில மனைவியோட சேலையைத் தொட்டதுல இருந்து அவள் இறந்த பிறகு அவளோட பிணத்து மேல சம்பிரதாயத்துக்காகப் புதுச்சேலை போடற வரைக்கும் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். முதல் இரவுல இருந்து முதுமை வரைக்கும் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். அவனோட வாரிசுகளை வளர்க்கறதுக்கு, வாரிசுகளோட எதிர்காலத்தை உருவாக்கறதுக்குப் பொண்ணுக்குப் புருஷனோட துணை வேணும். பள்ளிக் கூடத்துல 'உங்கப்பா எங்கேன்னு கேக்கறாங்க'ன்னு என் மகனுங்க என்கிட்ட வந்து சொல்லும் போது நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்? என் மகன்களைக் கட்டுப்பாடா வளர்க்கறதுக்கு நான் பட்ட பாடு யாருக்குத் தெரியும்?"

அப்போது வசந்தா பேச ஆரம்பித்தாள்.

"என் மகன் சங்கர் மட்டுமென்ன கஷ்டப்படாம சந்தோஷமாவா இருந்தான்?! உன்னைப் பிரிஞ்சப்புறம் தன் உயிரையே பிரிஞ்ச மாதிரி நடைபிணமாத்தான் வாழ்ந்தான். ஒரு மனைவி ஸ்தானத்துல இருக்கக் கூடியவ மட்டுமே  தரக்கூடிய சுகங்களை இழந்தான். மனைவிங்கறவ அளிக்கக்கூடிய சேவைகளைத் துறந்தான். தன் குடும்பத்தை இழந்துட்ட அவன், எங்களை மட்டுமே உலகமா நினைச்சு வா£ந்துக்கிட்டிருக்கான். அவனுக்காக அவங்கப்பா ஆரம்பிச்ச நிறுவனத்தை நிர்வாகம் பண்றதுல தன் வேதனைகளை மறந்தான். அதுக்காக எப்பவும் அந்த நிறுவன வேலைகள்ல தன்னை மூழ்கடிச்சுக்கிட்டான். தாய் அறியாத சூல் இல்லைன்னு சொல்லுவாங்க. அவனோட மனக் கவலையும், முக வாட்டமும் எனக்கு மட்டும் தான் தெரியும். உன்னை நெனச்சு கஷ்டப்பட்டான். பிள்ளைங்கள நெனச்சு கஷ்டப்பட்டான். அந்தக் கஷ்டங்களையெல்லாம் சரண்யா முகம் பார்த்து ஆறுதல் அடைஞ்சான். மறுகல்யாணம் பண்ணிக்கச் சொல்லி எவ்வளவோ கெஞ்சினேன்.


'என் வாழ்க்கையிலயும் என் மனசுலயும் வேற யாருக்கும் இடமில்லை!' அப்படின்னு சொல்லிட்டான். எங்களுக்கு இருக்கற வசதிக்கு, செல்வாக்குக்கு அவன் மனம் போனபடி இள வயசு ஆசைகளை அனுபவிச்சிருக்கலாம். ஆனால் அவன் உன்னைத் தவிர வேறு யாரையும் மனதால் கூட நினைக்கலை. உனக்காவது உன் வயித்துல பிறந்த உன் சொந்த மகனுங்க உனக்கு ஆறுதலா இருக்கானுங்க. ஆனா சங்கர்? கூடப் பிறந்த தங்கச்சியோட மகளைத் தன் மகளா நினைச்சு தன் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தேடிக்கிட்டான்..."

"அப்படின்னா... சரண்யா அவரோட..."

"ஆமா. சரண்யா சங்கரோட தங்கச்சி பெத்த பொண்ணு. என்னோட மகள் வயிற்றுப் பேத்தி. பிரசவத்துல என் மகள் என்னை விட்டுட்டுப் போயிட்டா... நிர்மலாவோட புருஷன் வேற கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆஸ்திரேலியா போயிட்டார். குழந்தை பிறந்ததுல இருந்து அவளை நான் வளர்த்தாலும் சங்கர் மேலதான் அவளுக்கு அதிகப் பாசம். சங்கருக்குச் சரண்யான்னா உயிர். அவ பேச ஆரம்பிக்கும் போதே சங்கரை 'அப்பா'ன்னு கூப்பிட்டுதான் பேச ஆரம்பிச்சா. அதுவே நாளடைவுல பழக்கமாயிடுச்சு. இன்னிக்கு வரைக்கும் சங்கரை அப்பான்னுதான் சரண்யா கூப்பிடறா. பங்களாவுல மாட்டியிருந்த சங்கரோட படத்தைப் பார்த்துட்டு நீ கேட்டப்ப எங்க 'அப்பா'ன்னு சொல்லியிருக்கா வழக்கம் போல. நீ... நிதானமா என்ன... ஏதுன்னு கேக்காம அவசரப்பட்டு, 'இந்தக் கல்யாணம் நடக்காது'ன்னு மொட்டையா சொல்லிட்டு கிளம்பி வந்துட்டே. சரண்யா கண்ணுல கண்ணீரைப் பார்த்த சங்கர் டென்ஷனாகிட்டான்..."

வசந்தா சங்கரைப் பற்றியும், சரண்யாவைப் பற்றியும் விரிவாகப் பேசியதும் தெளிவாகப் புரிந்து கொண்டாள் ஜானகி பாரம் குறைந்து லேசாய்ப் போன மனதுடன் தன் எண்ணங்களை வார்த்தைகளாக வெளியிட்டாள் அவள்.

"என்னை மன்னிச்சுடுங்க அத்தை. ஆத்திரத்துல அவசரப்பட்டு இருபத்திரண்டு வருஷத்துக்கு முன்னால அவர் செஞ்ச தப்பை நானும் இப்போ பண்ணிட்டேன். மன்னிச்சுடுங்க..."

இதைக் கேட்ட சங்கர், ஜானகியிடம் பேச ஆரம்பித்தான்.

"ஜானகி... என் மேலதான் தப்பு. ஆத்திரத்தில அறிவை இழந்துட்டேன். என்னை மன்னிச்சுடு ஜானகி.. என்னோட அலட்சியத்தால இத்தனை வருஷம் நீ பட்ட கஷ்டம் போதும். இனி நாம சேர்ந்து வாழ்வோம். என்னை மன்னிச்சு ஏத்துக்கம்மா. சரண்யாவும் தீபக்கும் காதலிக்கறாங்க. அவங்களைச் சேர்த்து வைக்கணும்மா..."

சங்கரும் சேர்ந்து பிரபாகரும் கெஞ்சினான்.

"ஜானகி... நடந்ததையெல்லாம் கெட்ட கனவா மறந்துடும்மா. என்னால முறிஞ்சு போன உங்க உறவு மறுபடியும் மலரணும்... இந்தக் கல்யாணம் நடக்காதுன்னு மட்டும் மொட்டைகட்டையா சொல்லிட்டுவேற எதுவும் சொல்லாம கொள்ளாம அவசரப்பட்டு கோவிச்சுக்கிட்டு வந்துட்டே... இப்ப சங்கர் இங்கே வராம அப்படியே விட்டிருந்தா... நிறைய உண்மைகள் புதைஞ்சு போயிருக்கும் ரெண்டு காதல் உள்ளங்கள் சிதைந்து போயிருக்கும்... அன்னிக்கு உன் புருஷனை உன்கிட்ட இருந்து பிரிச்சுட்ட நானே இப்ப அவர்கிட்ட உன்னைச் சேர்த்து வைக்கிறேன்..."

ஜானகியின் கையைப் பிடித்துச் சங்கரின் கையுடன் இணைத்து வைத்தான் பிரபாகர். இதைப் பார்த்த ஸ்ரீதரும், தீபக்கும் ஆச்சர்யமும், அதிர்ச்சியும் அளவில்லாத சந்தோஷமும் அனைத்தும் கலந்த உணர்வுக் கலவையால் உணர்ச்சி வசப்பட்டனர்.

"அப்பா..." தீபக்கும், ஸ்ரீதரும் சங்கரைக் கட்டிப்பிடித்துக் கொண்டனர்.

"தீபக்... ஸ்ரீதர்! ரெண்டு பேரும் என்னை மன்னிச்சுடுங்கப்பா..."

"அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. எங்க அப்பான்னு உங்களை அடையாளம் கண்டுட்டோம். இந்த நிமிஷ சந்தோஷத்துக்கு முன்னால மற்ற எல்லாக் கஷ்டமும் தூசாப் பறந்து போச்சு..."

நடந்ததையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த முத்தையாவும், சரண்யாவும், குழப்பங்கள் தெளிவடைந்ததை அறிந்து, அங்கே நிலவிய மகிழ்ச்சிகரமான காட்சிகளைக் கண்டு குதூகலித்தனர்.

"சரண்யா... நான் உன் தீபக்கோட தாய்மாமன்மா..." பிரபாகர் சந்தோஷமாய்த் தன் புதிய உறவின் பரிமாணத்தைச் சரண்யாவிடம் அறிமுகப்படுத்த ஆரம்பித்தான்.

தீபக்கிடமும், ஸ்ரீதரிடமும் சென்று, அவர்களது கைகளைத் தன் தோள்கள் மீது போட்டுக் கொண்டு, "நான் உங்க தாய்மாமன்டா. உங்கம்மா கூடப் பிறந்த அண்ணன்!" என்றான்.

"மாமா... மாமா..." என்று தீபக்கும் ஸ்ரீதரும் பிரபாகரைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

"இவங்க உங்க பாட்டி. இவங்க உங்க தாத்தா."

பேரப் பிள்ளைகளை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்கள் முத்தையாவும், வசந்தாவும்.

"சரண்யா... இவன் யார்ன்னு உனக்குத் தெரியாதில்ல?... இவன் என்னோட தங்கச்சி மகன் தீபக். இவனுக்குச் சரண்யான்னு ஒரு பொண்ணு பார்த்து வச்சிருக்கோம்..." கிண்டலாகப் பிரபாகர் கூறியதைக் கேட்டு சரண்யா வெட்கப்பட்டாள்.

"போங்க பிரபாகர் அங்கிள்...."

"பார்த்தியா, அன்னிக்கு இப்படித்தான் போங்க போங்கன்னு சொன்ன. அதுக்கு நான் என்ன சொன்னேன்? உன்னோட கல்யாணத்துக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடப் போறேன்னு சொன்னேன்ல?"

இதைக் கேட்டு மேலும் வெட்கமானாள் சரண்யா. வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

ஆட்டோவில் இருந்து இறங்கியவள் வாணி. உடன் அவளது தந்தையும் வந்தார்.

"அடப்பாவி... நிலைமை சரியானதும் உடனே அவளோட மொபைல்ல கூப்பிட்டு வரச் சொல்லிட்டியாடா... பெரிய ஆளுடா நீ..." தீபக் ஸ்ரீதரின் இடுப்பில் குத்தினான் தமாஷாக.

"அம்மா... இவதான் வாணி. உங்களோட ரெண்டாவது மருமகளா வரப்போறவ. இவர் அவளோட அப்பா, மிஸ்டர் கங்காதரன்." ஜானகியுடன் சங்கரும் நின்றிருந்தபடியால் இருவரது காலிலும் விழுந்து வணங்கினாள் வாணி.

"எங்களை விடப் பெரியவங்க இருக்காங்கம்மா. அவங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ." ஜானகி கூறியதும் வாணி, வசந்தா& முத்தையா இருவரது காலிலும் விழுந்து வணங்கினாள்.

"பாட்டி... இது என் ஆளு..." கண் சிமிட்டிக் குறும்பாக வாணியை அறிமுகப்படுத்தி வைத்தான் ஸ்ரீதர்.

தீபக்கும் சரண்யாவும் நைசாக ஓர் ஓரமாக ஒதுங்கிக் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர். "குழப்பமெல்லாம் தீர்ந்து போய்ச் சுமுகமாயாச்சு. இதுக்கெல்லாம் யார் காரணம்?... அந்தக் கடவுள்தான்." பிரபாகர் சொல்லி முடிப்பதற்குள் அங்கே மங்களத்தம்மா வந்தார். மங்களத்தம்மாவைப் பார்த்ததும் ஜானகி உணர்ச்சி வசப்பட்டுப் பேச ஆரம்பித்தாள்.

"குழப்பம் தீர்ந்து குடும்பம் சுமுகமானதுக்குக் கடவுள் காரணமா இருக்கலாம். ஆனா என்னோட கஷ்டத்தைத் தீர்த்து என் பிள்ளைகளை நான் வளர்த்து ஆளாக்கறதுக்கு முக்கியமான கடவுள் மங்களத்தம்மாதான். இவங்கதான் எனக்கு மானசீகமான தெய்வம்." ஜானகி இவ்விதம் கூறியதும், அவளது நன்றியுணர்வை நினைத்து மங்களத்தம்மாவின் மனம் நெகிழ்ந்தது. மங்களத்தம்மாவின் அறிமுகம் கிடைத்ததும், வசந்தா மங்களத்தம்மாவிடம் சிநேகமாகப் பேச ஆரம்பித்தாள்.

"நீங்க செஞ்ச உதவி பத்தி ஜானகி சொன்னா..."


"நான் செஞ்சது கொஞ்சம் தான். ஆனா அதுக்குப் பிரதி உபகாரமா ஜானகி தன் உடம்பு தேய உழைச்சிருக்கா. என் பங்களா, என் குடும்பம், தோட்டம், பசுமாடு எல்லாத்தையும் அவ மேற்பார்வை பார்த்துக்கிட்டா. அவளை மாதிரி ஒரு நன்றி உள்ள மனுஷியை என் வாழ்நாள்ல நான் பார்த்ததில்லை." ஜானகியின் புகழ் பாடினாள் மங்களத்தம்மாள்.

அங்கு மகிழ்ச்சிகரமான நிலைமை நிலவியது. காதோரம் நரையோடிய சங்கர், ஜானகியின் காதோரம் ரகசியமாய்க் கூறி மகிழ்ந்தான். "நீ மட்டுமே என் உயிர்!"

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.