Logo

நீலக்கடல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
neelakadal

ப்ரொஃபஸர் ரேணுகாதேவி சிங்கப்பூரில் நடக்கப் போகிற பொருளாதார மேதைகள் பங்குபெறும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்ளத் தீர்மானித்திருப்பதை அறிந்தவுடன், அவளுடைய உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். ரேணுகா ஒரு இதய பாதிப்பிலிருந்து தப்பித்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன.

இரத்த அழுத்தத்திற்காகவும் சர்க்கரை வியாதிக்காகவும் ஒவ்வொரு நாளும் மருந்துகள் உட்கொண்டும் பத்திய உணவு சாப்பிட்டுக் கொண்டும் மிக எச்சரிக்கையுடன் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு வயதான கன்னிப் பெண்தான் அவள். ஐம்பத்தைந்து வயது ஆனவுடன் தான் வசித்துக் கொண்டிருந்த பணியிலிருந்து ஓய்வெடுத்து தன் மனதிற்கேற்ற சமூக சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டு அதில் வாழ்க்கைக்கான திருப்தியை அடைந்து கொண்டிருந்த பெண். இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுரைகள் கூறுபவள். வாரத்தில் ஒரு முறையாவது விளையாட்டு வீராங்கனைகளாக இருக்கும் பெண்களை ஒன்றுகூட்டி அரசாங்கத் தலைமையகத்திற்கு அருகில் அவர்களை ஒரு ஊர்வலமாக அழைத்துச் செல்லும் பெண் விடுதலைப் போராட்டத் தலைவி. செய்தி ஊடகங்களுக்கு மிகவும் விருப்பமானவள். இப்படிப் பல முகங்களைக் கொண்ட ரேணுகாதேவி நகரத்தைவிட்டு போகிறான் என்றால் சட்ட ஒழுங்கு பாதிக்கப்படுமா இல்லையா? வார்த்தைகளாலும் எண்ணங்களாலும் கலாச்சார எதிர்ப்பாளர்கள் பெண்களை அவமானப்படுத்துவார்களா இல்லையா! அவள் நகரில் இல்லையென்றால் யாருடைய கம்பீரக் குரல் அக்கிரமங்களுக்கும் அநீதிக்கும் எதிராக தெருக்களிலும் மேடைகளிலும் இன்மேல் கேட்கும்? ரேணுகாதேவி ஒரு வாரத்திற்கு என்றல்ல ஒருநாள் கூட நகரை விட்டு போகக் கூடாது என்று அவளின் விசிறிகள் உரத்த குரலில் கூப்பாடு போடுகிறார்கள். பாதிக்கப்பட்ட பெண் இனத்திற்கு பாதுகாப்பு தருவதற்கு ஒரு பெண் இல்லை என்ற நிலை உண்டாகிவிடும். அவள் ஊரில் இல்லையென்றால் நகரில் செயின் அறுக்கும் சம்பவங்களும், கற்பழிப்பும் அதிகமாகிவிடும்.

ரேணுகா திருமணமாகாத பெண்ணாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கான காரணம் வறுமையோ, அழகுக் குறைவோ அல்ல. பொருளாதார வசதிபடைத்த தந்தைக்கு ஒரே மகளாகப் பிறந்து எல்லாவித வசதிகளையும் அனுபவித்து வளர்ந்த பெண் அவள். ஆனால், மற்ற பெண்களிலிருந்து தான் மாறுபட்டவள் என்பதை சிறு வயது முதற்கொண்டே மனதில் வைத்துக் கொண்டிருப்பவள் அவள் என்பதும் உண்மை. அசாதாரணமான அறிவுத்திறன் படைத்த ஒரு ஆண் கிடைக்கும்வரை தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்பதில் அவள் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். தான் விரும்பக்கூடிய மனிதனை மட்டுமே தன்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பதை ரேணுகா ஒருமுறை தன் தந்தையிடம் கூறவும் செய்தாள். ஒரு சராசரி மனிதனின் மனைவியாகவும் அவன் குழந்தைகளின் தாயாகவும் வாழ்வதைவிட திருமணமே செய்து கொள்ளாமல் அதே நேரத்தில் மன அமைதியுடன் தனக்குச் சொந்தமான வீட்டில் தனக்குப் பிரியமான புத்தகங்களைப் படித்துக் கொண்டிருப்பது எவ்வளவோ மேல் என்று அவள் அப்போதே முடிவு செய்துவிட்டிருந்தாள். இப்படி குடும்ப வாழ்க்கை என்னவென்று தெரியாமல், காதல் என்னவென்று தெரியாமலே ரேணுகா வளர்ந்தாள். அழகானவளாக, அழகு இல்லாதவளாக, இளமை பூத்துக் குலுங்குபவளாக, இளமை இல்லாதவளாக.

தன்னுடைய தலை முடியில் நரை தோன்றிய பிறகும் ரேணுகாவிற்கு கவலை என்ற ஒன்று உண்டாகவேயில்லை. கண்ணாடியில் தன்னுடைய உருவத்தைப் பார்த்தவாறு அவள் சொல்வாள்.

‘பரவாயில்லை. என் முகத்துல சுருக்கங்கள் இன்னும் விழல...’

அவள் மிகவும் விலை மதிப்புள்ள ஆடைகளை அணிய பிரியப் பட்டாள். பின்னி நிறுவனத்தின் பட்டாடைகள் மீது ரேணுகாவிற்கு அதிக விருப்பம். ஓரத்தில் மெல்லிய ஜரிகை போட்ட, இளம் நிறத்தில் இருக்கும் புடவைகளை அவள் மிகவும் விரும்புவாள். வான நிறம், மயிலிறகு வண்ணம், கடல் நீலம் ஆகிய வண்ணங்களில் வந்திருக்கும் ஒரு புதிய பட்டுப் புடவை ஜவுளிக்கடைக்கு வந்தால், அந்தக் கடையின் உயர் அதிகாரி ரேணுகாவிற்கு உடனடியாகத் தொலைபேசி மூலம் அந்தத் தகவலைக் கூறுவார். அந்தப் புடவையின் விலை இரண்டாயிரம் ரூபாயாக இருந்தாலும், அதை ரேணுகா கட்டாயம் வாங்கவே செய்வாள். அங்கு வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இது நன்றாகவே தெரியும். புது ஆடைகளிலிருந்து கிளம்பிவரும் அந்தத் தனிப்பட்ட மணம் ரேணுகாவைப் பித்துப் பிடிக்கச் செய்தது. மது அருந்தியதைப் போல் ஒரு போதை நிலையை அவள் புதிய பட்டாடைகளை அணியும்போது உணர்ந்தாள். தன்னுடைய சதைப் பிடிப்பு இல்லாத கன்னங்களில் அவள் சந்தன வாசனை கொண்ட ஒரு பவுடரைத் தேய்ப்பாள். அதைத் தவிர வேறு எந்த அழகுப் பொருளையும் அவள் பயன் படுத்தமாட்டாள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சங்கிலியில் ஆலிலைக் கிருஷ்ணனின் உருவம் ‘லாக்கெட்’ வடிவில் மாட்டப்பட்டிருக்கும். தன்னுடைய மனதில் அமைதியற்ற நிலை உண்டாகும்போது அந்த லாக்கெட்டைக் கையால் தடவிக் கொள்வது அவளின் வழக்கம். படுக்கும்போது தனியாக ஏதாவதொரு இடத்தில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போது அவள் ‘கிருஷ்ணா... குருவாயூரப்பா என்னை காப்பாத்தணும்’ என்று மெதுவான குரலில் கூறுவாள். கன்யாஸ்திரீகள் தாங்கள் இயேசு கிறிஸ்துவின் மனைவிகள் என்று மனதில் கற்பனை பண்ணிக் கொள்வதைப் போல ரேணுகா தான் ஸ்ரீகிருஷ்ணனின் பத்தாயிரத்தெட்டு மனைவி மார்களில் ஒருத்தி என்று நினைத்துக் கொண்டு அதில் நிம்மதி அடைவாள். ‘உடல் சம்பந்தமில்லாத’ விஷயங்களில் மட்டுமே அவளுக்கு எப்போதும் ஆர்வம். தன்னுடைய நிர்வாண உடம்பைப் பற்றி தெளிவாக அறிந்திருந்த ரேணுகா அதை இன்னொரு மனிதன் முன்னால் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை தனக்கு எந்தக் காலத்திலும் வராமல் இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டினாள். புதினங்களிலும், உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயங்களை விளக்கக் கூடிய நூல்களிலும், ஆண் - பெண் உறவைப் பற்றி அவள் படித்திருக்கிறாள். ஆனால், அதைப் படிக்கும்போது வெறுப்புடன்தான் அவள் படிப்பாள். அப்படிப்பட்ட ஒரு தகுதியற்ற செயலில் தான் எந்தக் காலத்திலும் ஈடுபட்டு விடக் கூடாது என்பதை அவள் எப்போதோ தீர்மானித்து விட்டிருந்தாள். தன்னுடைய உடம்பின் ரகசியங்களை சிதையில் எரியும்போது நெருப்பு மட்டும் தெரிந்து கொள்ளட்டும் என்றெண்ணினாள் அவள்.

“பெரியம்மா சிங்கப்பூருக்குப் போக தீர்மானிச்சாச்சு... அப்படித் தானே?” தங்கையின் மகளும் இருபத்தொரு வயது நிறைந்தவளுமான சிவா அவளைப் பார்த்துக் கேட்டாள். அவளை ரேணுகாவிற்கு மிகவும் பிடிக்கும் வாரத்தில் ஒரு நாள் - ஞாயிற்றுக்கிழமை அவள் ரேணுகாவுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிடுவாள். மற்ற நாட்களில் அவள் தான் தங்கியிருக்கும்  ஹாஸ்டலிலேயே தங்கிவிடுவாள்.


சிவா ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி. பெரியம்மாவைத் திரைப்படம் பார்க்க அழைத்துச் செல்வது, பெரியம்மாவுடன் சேர்ந்து அதிகாலை நேரத்தில் செங்கல்லூர் சிவன் கோவிலுக்குச் செல்வது போன்ற கடமைகளை அவள் மிகவும் ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தாள்.

ரேணுகா தன்னுடைய பழைய ரோம சால்வையை ஸர்ஃப் கலக்கிய நீரில் மூழ்க வைத்து சலவை செய்து கொண்டிருந்தாள். அவள் தலையை உயர்த்தி சிவாவைப் பார்த்து ஒரு புன்சிரிப்பைத் தவழவிட்டாள். “போகாம இருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற பொருளாதார மேதைகள் அந்த மாநாட்டுல பங்கெடுக்கிறாங்க. அவங்க வரச்சொல்லி அழைச்சு நான் அதற்குப் போகலைன்னா, அதனால வர்ற அவமானம் இந்தியாவுக்குத்தான்.”

“சரி... போயிட்டு வாங்க. அதே நேரத்துல நம்ம உடம்போட நிலை என்னன்றதை மறந்துடக்கூடாது. வெயில்ல நடந்தால் இரத்த அழுத்தம் அதிகமாகும்ன்றதையும் இனிப்பு பலகாரங்களை ஆர்வத்துடன் சாப்பிட்டா மறுநாள் தாங்க முடியாத அளவுக்கு உடல்ல களைப்பு உண்டாகும்ன்றதையும் எப்பவும் ஞாபகத்துல வச்சிருக்கணும். ரெண்டு மாசத்துக்கு முன்னாடிதான் மருத்துவ மனையைவிட்டு வெளியே வந்திருக்கிறோம்ன்றதை மறந்திடக் கூடாது”- சிவா சொன்னாள்.

“நீ பயப்படாதே. நான் நல்ல உடல் நிலையோட ஒரு வாரத்துல திரும்பி விடுவேன்...” - ரேணுகா சொன்னாள்.

“எதுக்கு இந்தப் பழைய சால்வையைச் சலவை செய்துக்கிட்டு இருக்கீங்க பெரியம்மா? உங்களுக்கு அடர்த்தியான நிறங்கள்ல இருக்குற துணிகள்தான் பொருத்தமா இருக்கும். இன்னைக்கே ஒரு சிவப்பு நிற சால்வை வாங்குங்க. ஒரு காஷ்மீர் சால்வை கோவளத்துல ஒரு ஹோட்டலுக்குள் காஷ்மீர்காரங்களோட ஒரு அருமையான கடை இருக்கு. ஆயிரம் ரூபாய்க்கு மேல விலை வராது...”- சிவா சொன்னாள்.

“ஆயிரம் ரூபாயா? அவ்வளவு விலை கொடுத்து நான் ஒரு சால்வையை வாங்கறதா இல்ல. அங்கே போயி செலவழிக்கிறதுக்கு ஐந்நூறு டாலர் நான் ரிசர்வ் வங்கியோட அனுமதியோட எடுக்குறேன். விமான பயணச் சீட்டுகளுக்கும் ஹோட்டல்ல தங்குற அறை வாடகைக்கும் ஆகுற செலவை மாநாடு நடத்துறவங்க பார்த்துக்குறதா கடிதத்துல எழுதியிருக்காங்க. அப்படின்னா, உணவு விஷயம்? அதற்கான செலவை நான்தான் பார்த்துக்கக வேண்டி வருமோ? வேண்டிய சாமான்கள் வாங்கவும், உணவுக்கும் ஐநூறு டாலர் போதுமா? எனக்கு கொஞ்சம் பதைபதைப்பாத்தான் இருக்கு...” - ரேணுகா சொன்னாள்.

“செலவுக்கு தாராளமா அதுபோதும். எனக்காக நீங்க எதுவும் செலவழிக்க வேண்டாம். எனக்கு வெளிநாட்டு பொருட்கள் மேல எப்பவும் ஈடுபாடு கிடையாது”- சிவா வெறுப்புடன் சொன்னாள்.

“உனக்கு ரெண்டு மேடன் ஃபோம் ப்ரா வாங்கிட்டு வரணும்னு நான் நினைச்சிருக்கேன். லேஸ் வச்ச ப்ரா இந்தியாவுல கிடைக்கிறது இல்லியே! பிறகு ஒரு லிப்ஸ்டிக்... நிறத்தை வெண்மையாக்குகிற க்ரீம்...” - ரேணுகா சொன்னாள்.

“பெரியம்மா, அது எதுவுமே எனக்கு வேண்டாம். நான் ப்ரா போடுறதேயில்ல. லிப்ஸ்டிக் எந்தக் காலத்திலும் பயன்படுத்துறது இல்ல. நான் வெள்ளையா இருக்கணும்ன்ற ஆசையும் இருந்தது இல்ல. எனக்காக நீங்க செலவழிக்கணும்னு நினைச்சிருக்கிற பணத்தை வச்சு நல்ல உணவுப் பொருட்கள் வாங்கிச் சாப்பிடுங்க. நல்ல உடல் நலத்தோட திரும்பவும் என்கிட்ட திரும்பி வாங்க”- சிவா சிரித்துக் கொண்டே சொன்னாள்.

பெரியம்மாவின் பெட்டிமேல் அவள் அமர்ந்து இரண்டு முறை வெறுமனே எழுந்து எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் பெட்டி சரியாக அடைக்கவில்லை. கடைசியில் பெட்டியை அடைந்தபோது, அதை எடுத்து தூக்கிப் பார்த்த ரேணுகா கை மிகவும் வலிப்பது போல் உணர்ந்தாள்.

“இதைக் கையில எடுத்துக்கிட்டு விமான நிலையத்துக்குள்ள நான் எப்படி நடப்பேன்? அங்கே கூலி வேலைக்காரங்க கிடைக்குறது இல்லன்னு கேள்விப்பட்டிருக்கேன்...” - ரேணுகா சொன்னாள்.

ஒரு பெட்டிக்கு பதிலாக இரண்டு சிறு பெட்டிகளை எடுத்துச் செல்லும்படி சிவா சொன்னாள். ஒவ்வொரு கையிலும் ஒரு பெட்டி.

“ரெண்டு பாலியெஸ்டர் புடவைகளும் ஒரு பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு போனாலே போதும்” - சிவா சொன்னாள்.

“நான் ரொம்பவும் ஏழை போல இருக்குன்னு மற்ற ஆளுங்க நினைச்சிடப் போறாங்க” - ரேணுகா முணுமுணுத்தாள்.

“ஏழை நாட்டின் சார்பா போற நீங்க ஒரு பணக்காரியைப் போல இருக்கணும்னு அவசியமில்லையே” - சிவா சொன்னாள்.

சில வேளைகளில் தனக்கு சிவா மீது தாங்க முடியாத அளவிற்கு வெறுப்பு உண்டாவதை ரேணுகா நினைத்துப் பார்த்தாள். அவளின் எளிமையான வாழ்க்கை முறையை ரேணுகாவால் பின்பற்ற முடியவே முடியாது. இளம்பெண்களின் இயற்கையான மென்மைத் தன்மையை காந்தியிசம் போர்க் குணமாக்கி அவளைப் பாழ்செய்யும் என்று ஒரு முறை ரேணுகா சிவாவிடம் சொன்னாள். “பெரியம்மா, நீங்க காந்தியின் கொள்கைகளை விளக்கி போனமாதம் வி.ஜெ.டி ஹாலில் புகழ்ந்து பேசினதை பார்வையாளர்களுக்குப் பின் வரிசையில் உட்கார்ந்து நானும் கேட்டேன்.” சிவா சிரித்தவாறு சொன்னாள்.

ரேணுகாவை வழியனுப்புவதற்காக விமான நிலையத்திற்கு மாணவர் தலைவர்களும் பொதுநல சேவகர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் அனைவரையும் உள்ளேவிட விமான நிலைய காவல் துறையினர் மறுத்தார்கள். நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மனதில் வைத்து ஒரு பயணி தன்னால் முடியாத நிலையில் இருக்கும்போது மட்டும் பொருட்களை ‘புக்’ செய்வது போன்ற விஷயங்களுக்கு ஒரு உதவியாளரை தன்னுடன் வைத்திருக்கலாம். அப்படியில்லாமல் சுமார் நூறு பெண்களையும், ஆண்களையும் உள்ளே விடமுடியுமா?  நிச்சயமாக முடியாது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் ரேணுகா வாசலுக்குச் சென்று மீண்டும் மீண்டும் அவர்கள் அன்பிற்கு நன்றி கூறியவண்ணன் இருந்தாள்.

“நீங்க திரும்பிப் போங்க. ஒரு வாரம் ஆனவுடன் நான் திரும்பி வருவேன். அதற்கான டிக்கெட் என் கையிலயே இருக்கு”- ரேணுகா சொன்னாள். அவளுடைய தலைமுடி கட்டுப்பாட்டை மீறி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அவளின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கைகளை உயர்த்தி புன்னகை செய்தவாறு அவளிடமிருந்து பிரிந்து சென்றார்கள்.

“நீங்க திரும்பி வர்றப்போ நாங்க விமான நிலையத்துக்கு வருவோம்”- அவர்கள் அவளைப் பார்த்துச் சொன்னார்கள்.

“வேண்டாம். நான் ஒரு வாடகைக் கார் பிடிச்சு வீட்டுக்கு வந்திடுவேன். நீங்க அங்கே வந்து என்னைப் பாருங்க. யாரும் விமான நிலையத்துக்கு வரவேண்டாம்.” ரேணுகா அவர்களிடம் சொன்னாள்.

“நான் வர்றேன்...”- சிவா சொன்னாள். ரேணுகா பாசத்தடன் அவளைப் பார்த்தாள். தன்னுடைய சொத்துக்களுக்கு வாரிசு, தன்மீது பாசம் வைத்திருக்கும் ஒரேயொரு உயிர், அவள் மறுத்தாலும் ஒரு தரமான ஹேண்ட் பேகையோ வாசனைப் பொருளையோ தான் கட்டாயம் அவளுக்குப் பரிசாகக் கொண்டுவந்து தரவேண்டும் என்று ரேணுகா தீர்மானித்தாள்.


விமானத்தில் முக்கியமான பிரமுகர்கள் அமரக்கூடிய முன்னிருக்கைகளில் ஒன்றில்தான் பேராசிரியை ரேணுகாதேவி உட்கார்ந்திருந்தாள். ஏதாவது அமைச்சர்களுடன் அறிமுகமாகலாமே என்ற எண்ணத்துடன் அவள் சுற்றிலும் கண்களை ஓட்டினாள். அப்போது தனக்கு வலது பக்கத்தில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஒரு மனிதன் மட்டுமே அவள் கண்களில் பட்டான். ஒருவகை ஏமாற்றத்துடன் அவள் கண்களை வேறு பக்கம் திருப்பினாள்.

அந்த நிமிடம் ரேணுகாவிற்குத் தன்னுடைய தோழியான த்ரேஸ்யாவைப் பற்றிய ஞாபகம் வந்தது. தான் சிங்கப்பூருக்குச் செல்வதாகக் கூறியவுடன், த்ரேஸ்யா சொன்ன வார்த்தைகளும்தான்.

“ரேணு, ஒரு சிங்கப்பூர்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு அங்கேயே தங்கிடாதே.”

சிங்கப்பூரில் அழகுப் பிரியர்களான சீனாக்காரர்களும், மலேஷியாவைச் சேர்ந்தவர்களும் நிறைய இருப்பதாக த்ரேஸ்யா சொன்னாள். அவர்கள் ஷாப்பிங்கிற்காக மட்டுமே சிங்கப்பூருக்கு வருகிறார்கள். ஆடைகள் தேர்ந்தெடுப்பதற்கு மத்தியில் ஒரு ஆள் தன்னுடைய பின்பாகத்தைக் கிள்ளி வலி உண்டாக்கியதாக த்ரேஸ்யா சொன்னாள். திரும்பிப் பார்த்தபோது அந்த ஆள் முதுகைக் காட்டிக் கொண்டு ஓடுவதை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.

ரேணுகா சென்னையை அடைந்தாள். அன்று தன்னுடைய சினேகிதி ஒருத்தியுடன் இரவில் தங்கிவிட்டு மறுநாள் சிங்கப்பூருக்குப் புறப்படுவதாகத் திட்டம். சாயங்காலம் ஷாப்பிங் செல்லலாம் என்று புறப்பட்டபோது அவளுடைய சினேகிதி சொன்னாள்.

“ரேணு, இந்த குளியலறைச் செருப்புகளைப் போட்டுக்கிட்டு நீ சிங்கப்பூர் மண்ல காலை வச்சா எங்களைப் போன்ற இந்தியாக்காரர்களுக்கு அது அவமானமா இருக்கும். நல்ல தரமான தோல்ல செஞ்ச காலணிகள் அணிஞ்சால்தான் நல்லா இருக்கும்.”

ஹவாய் செருப்புகளைத் தாளில் சுற்றி சினேகிதிக்குத் தெரியாமல் ரேணுகா ஒளித்து வைத்தாள். தோழி தேர்ந்தெடுத்த செருப்புகளுக்குள் தன்னுடைய பாதங்களை நுழைந்தாள் ரேணுகா. விரல்கள் நசுங்கி விடுமோ என்று அவள் பயந்தாள். செருப்பின் அடிப் பகுதியின் உயரம் காரணமாக அவளின் நடையில் ஒருவித தடுமாற்றம் உண்டானது.

“நான் கீழே விழுந்திடுவேனோ?” - அவள் சந்தேகத்துடன் தன் தோழியைப் பார்த்து கேட்டாள். அந்தக் காலணிகளை அணிந்து நடப்பதற்கு அவளின் தோழி ஒன்றரை மணி நேரம் ரேணுகாவிற்குப் பயிற்சியளித்தாள். இருந்தாலும், காலில் உண்டான வலி அதிகரிக்கவே செய்தது. பாதம் பயங்கரமான வலித்தது. காலில்  வேதனை உண்டாக ஆரம்பித்ததைத் தொடர்ந்து மனதிலும் இனம்புரியாத ஒரு குழப்ப நிலை உண்டாகத் தொடங்கியது. தான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம்? இதய நோயும், இரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலியும், சர்க்கரை நோயும், இவை தவிர தினந்தோறும் மருந்துகளை உட்கொண்டதன் விளைவாக வந்து சேர்ந்த அதிக சோர்வு நிலையும் முழுமையாகத் தன்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, தான் இதற்கு முன்பு பழக்கமே இல்லாத ஒரு நாட்டிற்குப் பறந்து செல்வது சரியான செயல்தானா? அந்த மாநாட்டில் பங்கெடுக்க வந்திருக்கும் அறிவாளிகள் தான் வாசிக்கப் போகும் பேப்பரின் சாதாரணத் தன்மையைப் பற்றி அவர்களுக்குள் சொல்லி கிண்டல் பண்ண மாட்டார்களா? தனக்கென்று ஒரு ஃபார்முலா வையோ ஒரு கண்டு பிடிப்பையோ அந்த அரசாங்கத்தில் தான் முன் வைக்கப் போவதில்லை. வினோதமான ஒரு இந்திய பட்டுப்புடவையை அணிந்திருக்கும் ஒரு பெண் தென்னிந்திய உச்சரிப்புடன் ஆங்கிலத்தில் என்னவோ புலம்பிக் கொண்டிருக்கிறாள் என்று மட்டுமே அங்குள்ளவர்கள் நினைப்பார்கள். தான் உண்மையிலேயே யாருக்கு போதனை செய்வதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறோம்? நம் வீட்டு வாசலில் இருக்கும் மலருக்கு மணமில்லை என்பதைத் தனக்குப் புரியவைத்த தன்னுடன் பல வருடங்களாகப் பழகிக் கொண்டிருக்கும் நபர்களுக்குத் தன்மீது பொறாமை உண்டாக வேண்டும் என்பதற்காக மட்டுமேதான் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறோமா? அதற்காகத்தான் இந்தக் கட்டுரை வாசிப்பா? அதற்காகத்தான் இந்த இறுக்கமான காலணிகளை அணிந்துகொண்டு நடக்கும் நடையா? - இப்படி பல விஷயங்களையும் மனதில் நினைத்துப் பார்த்த ரேணுகாதேவி தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்: ‘நீ ஒரு சரியான முட்டாள்...’ அவளின் முணு முணுப்பைக் கேட்ட அருகில் அமைதியாக அமர்ந்திருந்த அந்த மனிதன் இறகால் வருடுவதைப் போல மென்மையான குரலில் கேட்டான்: “மேடம், நீங்க என்னைப் பார்த்து ஏதாவது சொன்னீங்களா?”

அதைக் கேட்டு ரேணுகாவிற்கு வெட்கமாகப் போய்விட்டது. முதுமையின் ஒரு அடையாளம்தானே தனக்குத்தானே ஒரு நபர் பேசிக் கொள்வது!

“இல்ல... நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன். சில நேரங்கள்ல இப்பத்தான் யாருக்கிட்ட என்றில்லாமல் எனக்கு நானே பேசிக்குவேன்...”- ரேணுகா சொன்னாள்.

அதற்குப் பிறகு அவள் கடைக்கண்களால் அந்த இளைஞனை அவ்வப்போது பார்த்தவண்ணன் இருந்தாள். அவன் ரேணுகாவைச் சிறிதுகூட திரும்பிப் பார்க்கவில்லை. அவனுடைய கவனம் முழுவதும் பத்திரிகை படிப்பதிலேயே இருந்தது. அவன் பயன்படுத்தியிருந்த ஆஃப்டர் ஷேவ் லோஷனின் எலுமிச்சம் பழ வாசனையை மிகவும் விரும்பிய ரேணுகா அவன் முகத்தையும் தலைமுடியையும், அணிந்திருந்த ஆடையையும் ஆர்வத்துடன் பார்த்தாள். அந்த மனிதனுக்கு சுமார் முப்பத்தைந்து வயது இருக்குமென்று கணக்குப் போட்டாள். வியர்வையில் சற்று நனைந்து போயிருந்த ஒரு அடர்த்தியான நீல வண்ணச் சட்டையை அவன் அணிந்திருந்தான். வெள்ளை நிறத்தில் காற்சட்டை அணிந்திருந்தான். சதைப்பிடிப்பான அவனுடைய உடம்போடு ஒட்டிப்போய் காணப்பட்டது சட்டை. இரத்த ஓட்டமுள்ள கன்னங்களைக் கொண்டிருந்தான். தாடைப் பகுதி நேர்த்தியாக அமைந்திருந்தது. கண்கள் பழைய சீன நாட்டு அறிஞர்களின் கண்களைப் போல இருந்தன. அவனுடைய மீசை கீழ் நோக்கி வளைந்திருந்தது. அவன் ஒரு முறையாவது சிரித்து, அதைத் தான் பார்க்க மாட்டோமா என்று விருப்பப்பட்டாள் ரேணுகா. மற்ற உறுப்புகளைப் போல அவனுடைய பல்வரிசையும் அழகாக அமைந்திருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவளுக்கு. தன்னைவிட இருபது வயது குறைவாக இருக்கும் ஒரு இளைஞனின் புன்சிரிப்பைப் பார்த்து என்ன பிரயோஜனம்? த்ரேஸ்யாவைப் போல இளம் வயதிலேயே தான் திருமணம் செய்திருந்தால் தன்னுடைய வலது பக்கம் அந்த இளைஞனைப் போல ஒரு அழகான மகன் தனக்கு இருந்திருப்பான்! இதை நினைத்தபோது ரேணுகாவின் கண்களில் நீர் நிறைந்துவிட்டது.

“பத்திரிகையைப் படிச்சு முடிச்சிட்டு கொஞ்சம் எனக்குத் தர முடியும்?”- ரேணுகா அந்த இளைஞனைப் பார்த்து கேட்டாள்.

அடுத்த நிமிடம் அவன் பத்திரிகையை மடித்து ரேணுகாவின் கையில் கொடுத்தான். அவன் முகத்தில் மெல்லிய புன்சிரிப்பு காணப்பட்டது. அவனுடைய வலது பக்க பல்லொன்று தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அது அவனுடைய உருவ அழகை முழுமையற்றதாக ஆக்கியிருப்பதாக ரேணுகா உணர்ந்தாள். அந்தக் குறைபாட்டை நினைத்து அவளுக்கு வருத்தம் உண்டானது.


“நன்றி, பத்திரிகை வாசிக்குறதுக்கு எனக்கு இன்னைக்கு நேரம் இல்லாமல் போச்சு”- ரேணுகா சொன்னாள்.

“எனக்கும்தான்...” என்றான் அவன்.

“நீங்க ஒரு இந்தியர்தானே?”- ஆங்கில உச்சரிப்பில் இருந்த வித்தியாசத்தைப் பார்த்து ரேணுகா கேட்டாள்.

“இல்ல... நான் ஒரு மலேஷியாக்காரன். என் பேரு கிம்ஸுங். என் நண்பர் ஒருத்தரோட திருமணக் கொண்டாட்டத்துல கலந்துக்குறதுக்காக நான் திருவனந்தபுரத்துக்கு வந்திருந்தேன். அவர் சிங்கப்பூர்ல ஒரு இறக்குமதி வியாபாரம் செய்யற மலையாளி...”- அந்த இளைஞன் சொன்னான்.

தன்னிடம் பேசுவதில் ஈடுபாடு கொண்டிருக்கும் ஒரு சக பயணி கிடைத்ததற்காக ரேணுகா மகிழ்ச்சியடைந்தாள். அவன் மூச்சுக் காற்றில் கலந்திருந்த சிகரெட் வாசனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

தான் முதல் தடவையாக இந்தியாவைவிட்டு ஒரு வெளி நாட்டிற்குப் பயணம் செய்வதாக ரேணுகா சொன்னபோது, அந்த இளைஞன் புன்னகை செய்தான்.

“அதைப் பற்றி எந்தக் கவலையும் பட வேண்டாம். என் கார்லலே உங்களைப் பல இடங்களையும் பார்க்க நானே கூட்டிட்டுப் போறேன். என்னை நம்புறதா இருந்தா...”- சிரித்தவாறு அவன் சொன்னான்.

“பார்க்கறதுக்கு நீங்க ஒரு ஓநாயைப் போல ஒண்ணும் இல்ல. அப்படியே நீங்க ஓநாயாகவே இருந்தால்கூட, அதற்காக நான் ஏன் பயப்படணும்? நான் ஒண்ணும் சின்னப் பொண்ணு இல்ல. அழகியும் இல்ல. ரிசர்வ் வங்கி அனுமதிச்சிருக்குற ஐநூறு டாலர்களும் ஒரு மெலிசான தங்கச் சங்கிலியும் மட்டம்தான் என்கிட்ட இருக்கு”- சிரித்தவாறு ரேணுகா சொன்னாள்.

“சின்னப் பொண்ணு இல்லைன்னு சொன்னதை நான் நம்புறேன். ஆனா, அழகான பெண் இல்லன்னு நீங்க சொன்னதை நான் பலமா எதிர்க்கிறேன்.”

அதைக் கேட்டு ரேணுகாவின் கன்னங்கள் சிவந்துவிட்டன. அவளின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது. அவள் உடனடியாகப் பேசும் விஷயத்தை மாற்றிக் கொண்டு கேட்டாள்.

“உங்களை வரவேற்க விமான நிலையத்துக்கு யார் வருவாங்க? மனைவியா, இல்ல அலுவலகத்துல வேலை பார்க்குறவங்களா?”

“என்னை வரவேற்க யாரும் வரமாட்டாங்க. எனக்கு மனைவின்னு யாரும் இல்ல. கூட வேலை செய்யிறவங்களும் இல்ல. நான் ஒரு அப்பிராணி இலக்கியவாதி. கவிதைகள் எழுத முயற்சி பண்ணிக்கிட்டு இருக்குற ஒரு மனிதன். நான் ஒரு தனிக்கட்டை.”

“நாங்க தங்கப் போறது வெஸ்ட்டின் ப்ளாஸாவுல. எல்லாரையும் மாநாட்டை நடத்துறவங்க அந்த ஹோட்டல்லதான் தங்க ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அந்த ஹோட்டல் நீங்க வசிக்குற இடத்துல இருந்து ரொம்பவும் தூரமா என்ன?”- ரேணுகா கேட்டாள்.

“தூரத்தை ஒரு பொருட்டா நினைக்க வேண்டாம். நான் ஒவ்வொரு நாளும் சாயங்காலம் அங்கே வந்து உங்களை எங்காவது சுற்றிக் காண்பிக்கிறதுக்காக என் கார்ல கூட்டிட்டுப் போறேன். தியேட்டரா, சூதாட்டம் நடக்குற இடமா, கேபரேவா... எதைப் பார்க்கணும்ன்றதை மட்டும் கொஞ்சம்கூட தயங்காம என்கிட்ட சொல்லிட்டா போதும்...”- அவன் சொன்னான்.

ரேணுகா தன்னுடைய முகத்தைப் பத்திரிகைக்குப் பின்னால் மறைத்து கொண்டாள். ‘கேபரே பார்க்க நான் போவதாக இந்த இளைஞன் எதை வைத்துத் தீர்மானித்தான்? தன்னைப் பார்க்கும்போது அப்படிப்பட்டவளாகவா தெரிகிறது? ஹோட்டல்களில் கேபரே நடனத்தை நிறுத்த வேண்டுமென்று அரசாங்கத் தலைமைச் செயலகத்திற்கு முன்னால் போராட்டம் நடத்திய நான் இந்த இளைஞனுடன் சேர்ந்து அப்படிப்பட்ட ஆபாசக் காட்சிகளைப் போய்ப் பார்ப்பதா? குருவாயூரப்பா, என்னை காப்பாத்தணும்’- ரேணுகா மெதுவான குரலில் முணுமுணுத்தாள். அவள் கை விரல்கள் சங்கிலியில் தொங்கிக் கொண்டிருந்த ஆலிலை கிருஷ்ணனின் உருவத்தை வருடின.

“எனக்கு கேபரே நடனங்களைப் பார்க்குறதுல விருப்பம் இல்ல...”- ரேணுகா உறுதியான குரலில் சொன்னாள்.

“இந்தியாவுல பார்க்குற காட்சிகள் அல்ல சிங்கப்பூர் கேபரேக்களில். பெண்ணும், ஆணும் பங்குபெறும் காட்சிகளை நீங்கள் பார்க்கலாம். பார்த்தார் நீங்க ஆச்சரியப்படுவீங்க, மேடம்...”- இளைஞன் சொன்னான்.

“நான் அப்படிப்பட்டவ இல்ல. என்னை நீங்க தவறா புரிஞ்சிக்கிட்டீங்க. நான் கேபரே நடனத்திற்கு எதிரானவள்”-ரேணுகா சொன்னாள். தன் மூச்சு தொண்டைக்குள்ளேயே சிக்கிக் கொண்டு விட்டதைப் போல் அவள் உணர்ந்தாள். தான் வேறு ஏதாவதொரு இருக்கையில் அமர்ந்திருக்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். ‘வல்கர் ஃபெல்லோ’- அவளின் மனம் முணுமுணுத்தது. ‘எவ்வளவு அழகாக இருந்தென்ன, ஒரு பிரயோஜனமும் இல்லையே... மனிதனோட மனம் ஒரு குப்பைத்தொட்டியைப் போல இருக்குறப்போ... நான் இனிமேல் இந்த ஆள் முகத்தைப் பார்க்க மாட்டேன். இந்த ஆள்கிட்ட இனிமேல் பேசவும் மாட்டேன்.’

 

“மேடம், நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். நான் ஒரு முட்டாள். உங்களை ஒரு சாதாரண பெண்ணா நான் நினைச்சிட்டேன். எங்க ஊர்ல பெண்களும் கேபரேக்களை ரொம்பவும் விரும்பிப் பார்ப்பாங்க. அதுனால நான் உங்களை அழைச்சிட்டேன். தவறு நடந்திடுச்சு”- கிம் மெதுவான குரலில் சொன்னான்.

“சரி... இந்த விஷயத்தை நாம மறந்துடுவோம்” என்றாள் ரேணுகா.

“நான் ஹோட்டலுக்கு எப்போ வரணும்?” கிம் கேட்டான்.

“நாளைக்கு மீட்டிங் முடியறப்போ சாயங்காலம் ஆயிடும். அதற்குப் பிறகு ஏழரை மணிக்கு ஒரு விருந்து இருக்கு. நிதி அமைச்சர் சிறப்பு விருந்தினரா கலந்துக்கிறாரு. அதுக்குப் போகாம இருக்க முடியாது. மறுநாள் சாயங்காலம் ஆறரை மணிக்கு வந்தால் நாம சேர்ந்து வெளியே போகலாம்”- ரேணுகா சொன்னாள்.

‘ச்யாங்கி’ என்றழைக்கப்படும் சிங்கப்பூர் விமான நிலையத்தில் கால் வைத்தபோது ரேணுகாதேவி உண்மையிலேயே பயந்துபோய் விட்டாள். எவ்வளவு பெரிய, கலக்கத்தை மனதில் வரவழைக்கக் கூடிய ஒரு உலகம் அது! தன்னுடன் அந்த நாட்டைச் சேர்ந்த கிம் இருப்பது உண்மையிலேயே தன்னுடைய அதிர்ஷ்டம்தான் என்பதை அவளால் உணர முடிந்தது. இயந்திர பொம்மைகளைப் போல எந்தவித உணர்ச்சி வெளிப்பாடும் இல்லாமல் மனிதர்கள் எஸ்கலேட்டரில் சிறிதும் அசையாமல் நின்றிருப்பதை ரேணுகா பார்த்தாள். எங்கு பார்த்தாலும் சிறிதுகூட சிரிக்காத மனிதர்கள். எண்ண எண்ண முடிவே இல்லாத கட்டிடங்கள்... கம்பளி விரித்ததைப் போல் பரந்து கிடக்கும் பச்சைப் புல்வெளிகள்... ரேணுகா அதிசயித்த நின்றுவிட்டாள். இந்த சுத்தம், இந்த அடக்கம், இந்த சுறுசுறுப்பு... இதெல்லாம் சாராதணமாக மானிட உலகத்தில் பார்க்க முடியாத விஷயங்களாயிற்றே. தான் தவறிப்போய் வேறு ஏதாவது உலகத்திற்கு வந்துவிட்டோமோ என்று நினைத்தாள் ரேணுகா. விமான நிலையத்தின் நீல வெளிச்சத்தில் கிம் என்ற இளைஞனின் முகம் ஒரு முழு நிலவைப்போல பிரகாசித்தது. அவன் புன்னகை சிந்தியவாறு தன்னுடைய கையை நீட்டினான். “என் கையைப் பிடிச்சுக்கோங்க”- அவன் சொன்னான். ரேணுகா மகிழ்ச்சியுடன் தன்னுடைய நடுங்கிக் கொண்டிருக்கும் விரல்களை அவன் விரல்களுடன் கோர்த்தாள்.


பேராசிரியை ரேணுகாதேவி என்று சாக்பீஸால் எழுதப்பட்ட ஒரு சிலேட்டைப் பிடித்துக் கொண்டு ஒரு மெலிந்துபோன சீனப்பெண் அங்கு நின்றிருந்தாள்.

“அதோ, உங்களைத் தேடி ஆள் நிக்குது”- கிம் சொன்னான்.

ரேணுகா முன்னோக்கி நடந்தாள்.

“வெல்கம் டூ சிங்கப்பூர், ஃப்ரொஃபஸர்”- சீனப்பெண் சொன்னாள்.

“பிறகு பார்க்கலாம்” என்று சொன்ன கிம் மக்கள் கூட்டத்தில் மறைந்தான். சீனப் பெண்ணுடன் ரேணுகா வெஸ்ட்டின் ஹோட்டலை அடைந்தபோது, நேரம் ஐந்தரை மணியாகிவிட்டிருந்தது.

“உங்களைப் போன்ற புகழ்பெற்ற ஒரு பொருளாதார ஆராய்ச்சியாளர் இந்த மாநாட்டில் பங்கெடுப்பது எங்களின் பேரதிர்ஷ்டம் என்று நாங்க நினைக்கிறோம்”- சீனப் பெண் சொன்னாள்.

ரேணுகா அந்தப் பெண் போனபிறகுகூட அந்த வார்த்தைகளை எண்ணி ஆச்சரியப்பட்டாள். தன்னுடைய பெயரும், புகழும் இந்த நாட்டிலுள்ளவர்களுக்கு ஏற்கெனவே தெரியுமா? அவர்கள் எவ்வளவு ஈடுபாட்டுடன் தன்னுடன் பழகுகிறார்கள்? நம் வாசலில் இருக்கும் மலருக்கு மணமில்லைன்னு சொல்றது சரிதான். தன்னை வி.ஜெ.டி. ஹாலுக்கோ இல்லாவிட்டால் அத்தகைய ஏதாவது ஒரு இடத்திற்கோ பேச அமைப்பவர்கள் தனக்கான ஒரு வண்டியைக் கூட அனுப்பி வைக்கமாட்டார்கள். தானே நடுச்சாலைக்குச் சென்று ஆக்டோரிக்ஷா பிடித்து நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்குச் செல்ல வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் ஆட்டோரிக்ஷா பிடித்து வீடு திரும்ப வேண்டும். இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தாள் ரேணுகா.

அறையில் தனியாக இருந்தபோது சிறிதுநேரம் களைப்பைப் போக்குவதற்காக அவள் கட்டிலில் மல்லார்ந்து படுத்தாள். அந்த அறையிலிருந்த இரட்டைக்கட்டில், விளக்குகள், மினி ஃப்ரிட்ஜ், பூ வைக்கப்பட்ட பாத்திரிங்கள், எழுத்து மேஜை ஸோஃபா, டி.வி. செட் அனைத்தும் ரேணுகாவிற்குப் பிடித்திருந்தன. ஏதோ ஒரு இனிய நறுமணம் அந்த அறையை முழுமையாக ஆக்கிரமித்திருந்தது.

தன்னைத் தவிர இந்தியாவிலிருந்து வேறு யாரும் இந்த மாநாட்டில் பங்கெடுக்காமலிருக்கும் விஷயத்தை ஒரு அதிர்ஷ்டம் என்றே ரேணுகா நினைத்தாள். தான் கிம் என்ற இளைஞனுடன் சேர்ந்து வெளி இடங்களைப் போய் பார்ப்பதைத் தெரிந்து கொண்டால் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் தன்னைப் பற்றித் தவறாக நினைப்பார்கள். தனக்கும் அந்த இளைஞனுக்குமிடையே இருக்கும் வயது வித்தியாசத்தைக்கூட அவர்கள் கவனிக்க மாட்டார்கள்.

சோப்பு நுரைக் குளியல் தொட்டியில் ஆனந்தமாகப் படுத்திருந்தபோது ரேணுகாவின் உடம்பில் ஒரு புத்துணர்ச்சி பரவியது மாதிரி இருந்தது. அந்த சுகமான உணர்வில் அவள் தன் கண்களை மூடிக்கொண்டாள். எவ்வளவு நேரம் அந்த இளம் வெப்பம்கொண்ட நீரில் படுத்திருந்தோம் என்பதே ரேணுகாவுக்குத் தெரியாமல் போய்விட்டது. கடைசியில் நறுமணம் கமழ்ந்து கொண்டிருந்த உடலைத் துவட்டி. புதிய பட்டாடைகளை அணிந்து, ஈரமான கூந்தலை அவிழ்த்துப் போட்டவாறு அவள் ஹோட்டலைச் சுற்றியுள்ள காட்சிகளைப் பார்ப்பதற்காக இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தாள். ஹோட்டலில் கீழ்ப்பகுதியில் ஆடைகள், வாசனைப் பொருட்கள் போன்றவை விற்பனை செய்யப்படும் கடைகள் இருந்தன. ஆறாவது மாடியில் ப்யூட்டி பார்லர் இருந்தது. அதற்கு முன்னால் இரண்டு மூன்று நிமிடங்கள் வெறுமனே நின்றிருந்ததாலோ என்னவோ, அதன் வாசலில் நின்றிருந்த சீனன் தன்னைப் பார்த்து புன்னகைப்பதாக உணர்ந்தாள் ரேணுகா.

“வாங்க மேடம். உங்க தலைமுடியில கொஞ்சம் சாயம் தேய்ச்சு கழுவி விடுறோம். உங்க நீளமான சுருண்ட தலைமுடி எவ்வளவு அழகா இருக்கு” - சீனன் தன்னுடைய கறுத்த பற்களைக் காட்டி சிரித்துக் கொண்டே சொன்னான்.

ரேணுகா உள்ளே நுழைந்தாள். டை அடித்துக் கழுவி முடித்த பிறகு ரேணுகா தன்னுடைய உருவத்தைக் கண்ணாடியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்தாள். ஒரு இளம் பெண்ணைப் போல் தான் மாறி விட்டிருப்பதை அவள் உணர்ந்தாள்.

“மேடம், உங்களுக்கு ஃபேஸியல் பண்ணி விடட்டுமா?” - சீனன் கேட்டான். அழகைக் கூட்டிக் காட்டுவதற்காக பணம் செலவழிப்பதைப் பற்றியும் பெண்களின் ஆடம்பர மோகத்தைப் பற்றியும் ஒருவகை வெறுப்புடன் தான் கேரளத்தில் இருக்கும்பொழுது பேசியதை அந்த நிமிடத்தில் ரேணுகா நினைத்துப் பார்த்தாள். ஆனால், சிங்கப்பூரில் தான் ஒரு மாறுபட்ட வடிவம் எடுத்திருப்பதையும் நினைத்துப் பார்த்தாள். தலைமுடியை விரித்துப் போடும் போது, ப்ராவை அவிழ்க்கும்போது, கால்களிலிருந்து காலணிகளை நீக்கும்போது எல்லோரும் அனுபவிக்கக்கூடிய ஒரு புது உணர்வை அவளும் அனுபவித்தாள்.

சீனாக்காரனின் விரல் நுனிகள் ரேணுகாவின் முகத்தில் இங்கு மங்குமாய் நகர்ந்தன. தோலைப் பளபளப்பாக்குவதற்காக அவன் தேய்த்த வாசனை திரவியத்தின் நறுமணமும் விரல்களின் தொடர்ச்சியான நாட்டியமும் அவளை ஒருவித மயக்கத்தில் வீழ்த்தியது. எவ்வளவு முயற்சித்தும், அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை. தான் உறக்கத்தின் ஆழத்திற்கு போய்க் கொண்டிருப்பதை ரேணுகா நன்கு உணர்ந்தாள்.

“எனக்குத் தூக்கம் வருது...”- அவள் சொன்னாள். சீனாக்காரனின் வியார்வை நாற்றம், முகத்தில் தேய்த்த வாசனை திரவியத்தின் நறுமணத்துடன் சேர்ந்து அவளின் நாசிக்குள் நுழைந்து கொண்டிருந்தது. ரேணுகா தன்னுடைய கால் விரல்களை செருப்புக் குள்ளிருந்து எடுத்தாள். அவள் நாற்காலியில் சாய்ந்தவாறு உறங்கினாள்.

ஃபேஸியலும் ஆவி பிடித்தலும் முடிந்தவுடன் சீனாக்காரன் அவளின் முகத்தை ஈர களிமண்ணால் மூடினான். மண் காந்ததும், ஒரு முகமூடியைப் போல் அது ஆனது. சிறிது நேரம் சென்றதும் அவன் குளிர்ந்த நீரில் பஞ்சை முக்கி முகத்தில் மூடியிருந்த மண்ணை சிறிது சிறிதாக ஒற்றி நீக்கினான். அவளுக்கு உறக்கம் கலைந்தது.

அவள் சிந்தித்தாள்.

இவ்வளவு காலமாக மிகவும் கவனமாகப் பாதுகாத்து வந்த சமநிலையை திடீரென்று ஒரே நாளில் காற்றில் பறக்கவிட்டுவிட தன்னால் முடியுமா? தன்னுடைய ஒழுக்கக் கோட்பாடுகளுக்கு இனிமேல் அதிகமாக முக்கியத்துவம் இருக்காது என்ற நிலை உண்டாகிவிட்டதா? ஒரு நாள் சிவா தன்னுடைய நண்பனுடன் மாலை நேரத்தில் ரேணுகாவின் வீட்டிற்கு வந்தாள். சமையலறைக்குள் நுழைந்து தேநீர் தயாரித்து அவனை உபசரித்தாள். அந்த மாணவன் போனபிறகு, தான் சிவாவைக் கடுமையாகத் திட்டியதையும் அவளின் மனதை வேதனையடையச் செய்ததையும் ரேணுகா நினைத்துப் பார்த்தாள். ஆமாம்... கிம் வரும்போது இனிமேல் தான் ஒரு அக்காவைப் போல் நடந்து கொள்ள வேண்டும். யாருக்கும் கீழ்படியாத தன்னுடைய உடலை அழகான கண்களைக் கொண்ட ஒரு வெளிநாட்டுக்காரனுக்கு எந்தவித காரணத்தைக் கொண்டும் காட்சிப் பொருளாக ஆக்கிவிடக் கூடாது. அப்படியொரு சம்பவம் நடந்துவிட்டால் அதற்குப் பிறகு உள்ள வாழ்க்கை முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டும் தனக்குத்தானே பரிதாபப்பட்டுக் கொண்டும் நாட்களை ஒட்டிக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அந்த அளவிற்கு கொடுமையான ஒரு சூழ்நிலை இந்த உலகத்தில் வேறொன்று இருக்கிறதா என்ன? ரேணுகாதேவி அந்தக் கட்டிலில் படுத்தவாறு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள்.


இரவில் இரண்டாம் ஜாமத்தில் தொலைபேசி மணி ஒலித்தது. கண்ணயர்ந்து தூக்க நிலையிலிருந்த ரேணுகா கண் விழித்தாள். சிங்கப்பூரில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் இருப்பதை ஞாபகத்தில் கொண்டு வர அவளுக்கு ஒரு நிமிட நேரம் ஆனது. இருட்டில் தடவிக் கொண்டும் பதைபதைப்புடனும் நடந்து போய் அவள் தொலைபேசியை எடுத்து “ஹலோ” என்றாள்.

“ஹலோ ரேணுகா... நான்தான்... கிம். நான் ஒரு நாடகம் பார்க்க போயிருந்தேன். திரும்பி வர்றப்போ உங்களைக் கொஞ்சம் பார்க்கலாம்னு நான் இந்த ஹோட்டலுக்கு வந்தேன். முதல் மாடியில இருக்குற காபி பாருக்கு வந்தா நாம ரெண்டு பேரும் சேர்ந்து காபி குடிக்கலாம். நான் காபி பார்ல இருந்துதான் ஃபோன் பண்றேன்” கிம் சொன்னான்.

“மணி என்ன?”- ரேணுகா கேட்டாள்.

“ஒண்ணே கால் கழிஞ்சிருச்சு. காபி குடிக்குறதுக்கு ஏற்ற நேரம்தான்.”- கிம் சொன்னான்.

“சரி- பத்து நிமிடங்கள்ல நான் ட்ரெஸ் பண்ணிட்டு கீழே வர்றேன். எனக்கு காபி, ஆர்டர் பண்ணிருங்க. பாலும் வேணும். சர்க்கரையும் வேணும்.” - ரேணுகா தொலைபேசியில் சொன்னாள். தன்னுடைய சொந்தக் குரல் வேறொவர் குரல் மாதிரி ஒலிக்கிறதோ என்றொரு சந்தேகம். அப்போது அவளுக்கு உண்டானது. வேகமாகக் கட்டிலை விட்டு எழுந்தபோது, ரேணுகாவிற்குத் தலை சுற்றுவதைப் போல் இருந்தது. தான் ஒரு நோயாளி என்ற விஷயத்தை மீண்டும் அவள் நினைவுபடுத்திப் பார்த்தாள்.

முகம் கழுவி, பல் துலக்கி முடித்த ரேணுகா கதவைப் பூட்டிவிட்டு கையில சாவியை எடுத்துக் கொண்டு காபி பாரை நோக்கி நடந்தாள். லிஃப்ட் நகரும்போது உண்டான சத்தம் கிரகங்கள் நகரம்போதும், சுற்றும்போதும் உண்டாகும் சத்தத்தை நினைவுபடுத்தியது. தான் ஆகாயத்திலிருந்து பறந்துவந்து கீழே இறங்கிக் கொண்டிருப்பதைப் போல் ரேணுகா உணர்ந்தாள். அவளுக்கு ஆகாயம் அளித்த எந்த கொடைகளும் தேவையில்லை...

காபி பாரில் ஒரு கண்ணாடி பாத்திரத்திற்குப் பின்னால் சிவந்த பன்னீர் மலர்களால் பாதி முகம் மறைக்கப்பட்ட நிலையில் கிம் அமர்ந்திருந்தான். அகலமான அந்த நெற்றியைப் பார்த்தவுடன் ரேணுகா அங்கே அமர்ந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டாள். தன்னுடைய பாதங்களுக்கு இறக்கைகள் முளைத்துவிட்டதோ என்று அவள் நினைத்தாள். எவ்வளவு வேகமாக தான் அந்த இளைஞனின் முன்னால் வந்து நிற்கிறோம் என்று அவள் ஆச்சரியப்பட்டாள்.

கிம், ஒரு மலரைக் கிள்ளி ரேணுகாவிடம் நீட்டினான்.

“என்னோட முதல் பரிசு...”- அவன் மெதுவான குரலில் சொன்னான். அவனுடைய உள்ளங்கையின் சிவப்பு நிறத்தை ரேணுகா பார்த்தாள். உலகம் என்றால் என்னவென்பதை முழுமையாகத் தெரிந்தவனென்றும் ஏராளமான பெண்களுடன் உறவு கொண்டிருப்பவனென்றும் தான் நினைத்திருந்த கிம்ஸுங் கடைசியில் ஒரு நல்ல மனிதனாக மனதில் பட்டுவிடுவானோ என்று அவள் நினைத்தாள்.

“நீல நிறப் பட்டாடை அணிந்துவந்த உங்களைப் பார்க்குறப்போ, எனக்கு ஒரு மயில்தான் ஞாபகத்துல வருது. பறவையைச் சொல்லல. மயிலைப் போல நீல வண்ணத்துல இருக்குற கடலை நான் நினைக்கிறேன். ஜெர்மன் தத்துவ ஞானியாக நீட்ஷெ முன்பொருமுறை கடலை அழைத்தார்- ‘மயில்களில் மயிலாய கடலே’ன்னு. ஓரங்களில் சிறகுகள் விரித்து கடலும் ஆடுகிறதே!- கிம் சொன்னான். “

“நீங்கள் கவிதைகள் எழுதுறது உண்டா?”- ரேணுகா அவனைப் பார்த்துக் கேட்டாள்.

“என்னோட ரகசியத்தை நீங்கள் சரியா கண்டுபிடிச்சிட்டீங்க. ஆமாம்... நான் ஒரு கவிஞன்தான். ஆறு நூல்கள் இதுவரை வெளியாகியிருக்கு”- அவன் சொன்னான்.

“பார்த்த நிமிடத்திலேயே என் மனசுல பட்டது நீங்க ஒரு சாதாரண மனிதனா இருக்க முடியாதுன்னு”- ரேணுகா சொன்னாள். அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

“உங்க இந்தியர்களுக்கு ஒரு உணவுப் பொருளின் உண்மையான ருசியை அனுபவிப்பதற்கே தெரியல...”- கிம் சொன்னான். காபியில் ஆரம்பித்து அவர்களுடைய பேச்சு, ஆண் - பெண் உடலுறவு வரை போய்க் கொண்டிருந்தது.

“காமவயப்பட்ட ஒரு பெண்ணின் உடல் வியர்க்கும். அந்த வியர்வை தோலைக் குளிரச் செய்யும். அந்த நேரத்துல அவளிடமிருந்து புறப்பட்டு வர்ற வாசனை இருக்கே, அந்த மணத்திற்கு அசாதாரணமான ஒரு வசிய சக்தி இருக்கு...”- கிம் சொன்னான்.

அவனுடன் உடலுறவு கொண்ட பெண்களை நினைத்து ரேணுகாவிற்குப் பொறாமை உண்டானது. அவர்கள் அனைவரும் இளமை ததும்பியவர்களாக இருக்க வேண்டும். பேரழகிகளாக இருக்க வேண்டும். அதே சமயம் தான் நிச்சயம் ஒரு முட்டாளாகத் தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நாளைக்குக் காலையில ராஃபில்ஸ் ஹோட்டலில் இந்தியாவின் பொருளாதார நிலையைப் பற்றி ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை படிக்க இருக்கும் தான் ஆண் - பெண் உறவைப் பற்றி இப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பேனா என்று அவள் மனம் நினைத்தது.

“நான் இப்போ தூங்கப் போறேன். காப்பிக்கு நன்றி”- ரேணுகா மரியாதையுடன் சொன்னாள்.

“நானும் அறைக்கு வரட்டுமா?”- அவன் கேட்டான். நீங்க என்ன சொல்றீங்க. என் பொறுமையை நீங்க சோதிக்கப் பார்க்கறீங்களா? நான் அப்படிப்பட்ட பெண்ணுன்னு நீங்க மனசுல நினைச்சீங்களா?” - ரேணுகா கோபத்துடன் அவனைப் பார்த்து கேட்டாள்.

“என்னை மன்னிக்கனும். நான் எந்தவித கெட்ட எண்ணமும் இல்லாம உங்களைப் பார்த்து கேட்ட கேள்வி அது. வெறுமனே அறையில் இருந்து பேசலாமேன்னு நினைச்சேன்...” கிம் மெதுவான குரலில் சொன்னான்.

“அறைக்கு ராத்திரி நேரத்துல யாரும் வர்றதை நான் விரும்பல”- ரேணுகா சொன்னாள்.

“ஒரு வாரத்துல ஒருநாள் போயிடுச்சு. இனி இருக்குறது ஆறு நாட்கள் மட்டும்”- கிம் சொன்னான். ரேணுகா அடுத்த நிமிடம் நாற்காலியைவிட்டு எழுந்தாள்.

“நான் தூங்கப் போறேன்.” லிஃப்டில் நிற்கும்போதும், பிறகு அறையை நோக்கி நடக்கும்போது கிம் தன்னைப் பின் தொடர்கிறானோ என்று ரேணுகா பயந்தாள். கதவை மூடிய பிறகும்கூட அவள் இதயம் வேகமாக அடித்துக் கொண்டேயிருந்தது. ‘ஒருமுறை கூட சாத்தியமில்ல...’ - அவன் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். உடலுக்கு அது தேவைதான் என்றாலும், அந்த உறவு தன்னை முழுமையாக நாசம் பண்ணிவிடும் என்பதைத் தெளிவாக அவள் உணர்ந்திருந்தாள். நல்லது- கெட்டதைப் பற்றி இளம் தலைமுறையினரிடம் பேசுவதற்கு அதற்குப் பின்னால் தகுதி இல்லாமலே போய்விடுமே! உடலில் வருத்தத்தைப் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு என்ன மதிப்பு இருக்கிறது? அழிந்து போகக் கூடிய உடலை மறந்துவிட்டு அழிவே இல்லாத ஆத்மாவைத்தான் பெரிதாக நினைக்க வேண்டும்.


ஆத்மாவின் மதிப்பை நிலை நிறுத்த வேண்டும். ஆமாம்- ரேணுகா தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். ‘ஒரு விபச்சாரியா என்னால் ஆக முடியாது.’

ரேணுகா கட்டிலில் படுத்தவாறு தன்னுடைய முகத்தில் பாதியையும் உடம்பையும் போர்வையால் மூடினாள். இரவு எங்கே தன்னை முழுமையாக ஆக்கிரமித்துவிடப் போகிறதோ என்று அவள் பயந்தாள். கதவை யாரோ தட்டுவது அவளுடைய காதில் விழுந்தது. கிம்மாகத்தான் இருக்க வேண்டும். தன்னுடைய அறையின் வாசலில் அந்த நேரத்தில் ஒரு ஆள் வந்து நின்று கொண்டிருப்பதை ஹோட்டலில் பணி புரிபவர்கள் யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? தவறாக நினைப்பார்கள் என்பது நிச்சயம். அப்படி அவர்கள் தவறாக நினைப்பதால் உண்டாகும் அவமானம் தனக்குத்தான். நிச்சயம் அவனுக்கு அல்ல. நல்ல பெயருடன் கேரளத்திற்குத் திரும்பிச் சென்றால் தான் குருவாயூர் கோவிலுக்குச் சென்று எடைக்கு எடை சர்க்கரை அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் ரேணுகாதேவி. தொடர்ந்து அவள் கனவுகள் அற்ற ஒரு உறக்கத்தில் ஆழ்ந்து போனாள்.

காலையில் எழுந்தபோது மணி ஏழு ஆகியிருந்தது. முந்தைய இரவில் நடைபெற்ற நாடகம் ஒரு கனவாக மட்டுமே இருக்க வேண்டுமென்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள் ரேணுகா. கதவுக்கருகில் அன்றைய செய்தித்தாள்கள் கிடந்தன. இந்தியாவில் நடைபெறும் சம்பவங்களைத் தெரிந்து கொள்வதற்காக மட்டும். அவள் அந்தச் செய்தித் தாள்களைப் புரட்டினாள். ரூம் சர்வீஸ் பையனை அழைத்து தேநீரும், ரொட்டியும் கொண்டு வரச் சொன்னாள்.

“எலுமிச்சம்பழ ஜூஸ் வேணுமா மேடம்?”- தொலைபேசி வழியாக ஒரு பெண் குரல் மென்மையாகக் கேட்டது.

“சரி... ஒரு டம்பளர் எலுமிச்சம்பழ ஜூஸ் அனுப்பி வைங்க.” ரேணுகா சொன்னாள். அறையிலிருந்த மினி ஃப்ரிட்ஜ்ஜைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த புட்டிகளை அலசினாள். மது வகைகளுக்கு மத்தியில் தான் பருகும் குளிர் பானங்களும் இருப்பதைப் பார்த்து அவளுக்கு மகிழ்ச்சி உண்டானது.

ராஃபில்ஸ் ஹோட்டலில் மாநாட்டிற்கு வந்திருந்த மற்ற நபர்களுடன் உட்கார்ந்திருக்கும்போது மட்டுமல்ல, மைக் மூலம் தன்னுடைய ஆராய்ச்சிக் கட்டுரையை வாசிக்கும்போது ரேணுகாவின் மனதில் கிம் என்ற இளைஞனைப் பற்றிய சிந்தனைகள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டேயிருந்தன. அவன் தன் மீது வருத்தம் கொண்டிருப்பானோ? அவன் இனியொரு முறை தன்னைப் பார்க்க வரவில்லையென்றால் மாற்றவே முடியாத ஒரு நிரந்தர வருத்தம் தன் வாழ்க்கை முழுவதும் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள். உண்மையாகச் சொல்லப் போனால் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் தோரணங்கள்போல தொங்கிக் கொண்டிருக்கும் இலட்சிய எண்ணங்களும் ஒழுக்கக் கோட்பாடுகளும் தன்னை பலமுள்ளவளாக ஆக்குவதற்குப் பதிலாக ஒரு கோழையாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை அவள் உணரவே செய்தாள். தன்னுடைய உடல் அடக்கம் செய்யப்படும்பொழுது, அது காலம் முழுக்கத் தன்னுடைய தோழனாக இருந்த ஆத்மாவைப் பார்த்துச் செல்லும்! ‘எனக்கு வாழ்க்கையில என்ன மகிழ்ச்சி இருந்தது? தியாகம் செய்து செய்து நானே சேர்ந்து போய்விட்டேன்...’ என்று.

உடலை அலட்சியப்படுத்தியதன் மூலம் மற்றவர்களுக்குத் தான் கூற விரும்பியது என்ன? தன்னுடைய உடலை கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பயன்படுத்துகிற எந்தப் பெண்ணும் என்னைவிட சுயநலமற்றமவளே! என்னைவிட மகிழ்ச்சி நிறைந்தவளே! நான் எப்போதும் கோழைத்தனம் கொண்ட ஒரு பெண்ணே! சுயநலம் கொண்ட ஒரு பெண்ணே! சிவா என்ற பெண்ணை ஒரு வயதான கன்னிப் பெண்ணாக வாழ்க்கை முழுவதும் வாழும்படி அறிவுரைகள் மூலம் அவளின் மனதில் வித்துக்களை ஊன்றியிருப்பதை ரேணுகா நினைத்துப் பார்த்தாள்.

அவளின் இளமையையும், அழகையும், பாசம் செலுத்தும் ஏக்கத்தையும் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் அழித்துப் பார்க்க அவள் ஆசைப்பட்டாள். அவளுடைய சொத்துக்களுக்கு வாரிசான அந்த இளம் பெண் வாழ்க்கையில் தன்னைப் பின்பற்றும்படி, தன்னைப் போலவே தோட்டத்திலுள்ள பூச்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருக்கச் செய்து, தன்னைப் போலவே பொது இடங்களில் டி.வி. கேமராவுக்கு முன்னால் அமர்ந்து ஒழுக்கக் கோட்பாடுகளைப் பற்றி ஆவேசம் குடிகொள்ளப் பேசும்படி செய்து... என் வாழ்க்கை போலித்தனமானது... - ரேணுகா சொன்னாள்.

சுற்றிலும் அமர்ந்திருந்த மனிதர்கள் அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தினார்கள்.

“மேடம், நீங்க என்கிட்ட ஏதாவது சொன்னீங்களா?” அருகில் அமர்ந்திருந்த ஒரு ஜப்பான்காரர் உரத்த குரலில் கேட்டார்.

“இல்ல...”- ரேணுகா முணுமுணுத்தாள்.

“இந்தியப் பெண்கள்மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டு. அவங்களோட உடல் புனிதத் தன்மையைப் பற்றி ஜப்பான்ல இருக்குறவங்களுக்கு நல்லாவே தெரியும். என் பேர் ஷோஸு. டாக்டர் ஷோஸு”- அந்த வயதான மனிதர் சொன்னார்.

“உங்களைப் பார்த்ததுக்காக நான் ரொம்பவும் சந்தோஷப்படுறேன்.”- ரேணுகா சொன்னாள். அவள் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்து போக வேண்டுமென்று ரேணுகா கடவுளைத் தொழுதாள். அப்படியென்றால் மட்டுமே தான் பகல் கனவு கண்டு கொண்டு இங்கு அமர்ந்திருக்க முடியும் என்று அவள் நினைத்தாள். உடல் விருப்பங்களைத் தாலாட்டு பாடி தூங்கவைத்துவிட்டு இந்தக் குளிர்ச்சியான சூழ்நிலையில் அமைதியாக அமர்ந்திருக்க அவள் விருப்பப்பட்டாள். மற்ற மனிதர்களின் வார்த்தைகளைச் சிறிதும் கவனிக்காமல் அவள் கிம் என்ற இளைஞனின் உடல் அழகை நினைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

“மேடம், உங்களோட உரை ரொம்பவும் சிறப்பா இருந்துச்சு...”

டாக்டர் ஷோஸு சொன்னார். கையால் தொட்டால் எங்கே கீழே விழுந்துவிடுவாரோ என்ற அளவிற்கு மிகவும் மெலிந்துபோய் இருந்தார் அந்த மனிதர். முகத்தில் சிறிதுகூட சதைப்பிடிப்பு இல்லை. ஒரு மண்டையோட்டை ஒத்திருந்தது அவருடைய முகம். பெரிய கண்ணாடி அணிந்த ஒரு மண்டையோடாக அது இருந்தது. அழகற்ற தன்மை மீதும் முதுமை மீதும் காரணமில்லாத ஒரு வெறுப்பு ரேணுகாவின் மனதில் தோன்றியது. அதனால்தானோ என்னவோ அந்த வயதான மனிதரின் பாராட்டு வார்த்தைகளுக்கு ஒரு நன்றி கூட கூறாமல் அவள் அமைதியாக இருந்தாள்.

மதிய உணவு ராஃபில்ஸ் ஹோட்டலிலேயே வழக்கப்பட்டது. பலரும் ரேணுகாதேவியிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் ரேணுகாவின் சொற்பொழிவைப் புகழ்ந்து பேசினார்கள். தமிழ் பேசும் ஒரு பத்திரிகை செய்தியாளர் மட்டும் ரேணுகாவை அரசாங்கத்தின் ஜால்ரா என்று சிறிதும் தயங்காமல் சொன்னார். அதைக் கேட்டு ரேணுகா ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அந்த மனிதர் மது அருந்தியிருப்பதாக ஒருவர் ரேணுகாவின் காதில் முணுமுணுத்தார்.

“அரசாங்கத்தோட நடவடிக்கைகளை எப்போதும் ஆதரிக்கிற பொருளாதார நிபுணர்கள்தானே நீங்க?”- அந்தப் பத்திரிகை செய்தியாளர் கேட்டார். ஒரு குள்ளநரியின் முகத்தை அந்த மனிதர் கொண்டிருந்தார். ரேணுகாவும் அந்த மனிதரும் ஒருவரையொருவர் முட்களைப் போன்ற கூர்மையான வார்த்தைகளால் சாடிக் கொண்டனர்.


“நான் ஒரு கோழைன்ற மாதிரி உங்களுக்கு தோணுதா?”- ரேணுகா தன்னுடைய குரலை உயர்த்திக் கொண்டு கேட்டாள்.

“தைரியமே இல்லாத பெண் நீங்க.”- அவர் சொன்னார். அவரின் அந்தக் கருத்து ரேணுகாவின் மனதை மிகவும் வேதனைகொள்ளச் செய்தது. அவர் கொன்னது உண்மைதான் என்பதை அவளும் புரிந்து கொண்டாள். அந்தப் புரிதல் அவளை மிகவும் கவலைக்குள்ளாக்கியது.

தன்னுடைய வாழ்க்கையின் முழுமையற்ற தன்மைகளையும் மனதில் உண்டாகியிருக்கும் கசடுகளையும் பெருக்கி எறிந்துவிட்டு ஒரு புதிய பிறவியை எடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு ரேணுகா வந்தாள். தன்னுடைய தேவைகள் என்ன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவற்றை நிறைவேற்ற வேண்டும். எதிர்காலத்தை மகிழ்ச்சியான ஒன்றாக மாற்ற வேண்டும். தியாகங்களால் சோர்வடைந்து ஈரமில்லாமல் வறண்டு போன தன்னுடைய வாழ்க்கையை இந்தப் புதிய முடிவின் விளைவாக பூத்துக் குலுங்கச் செய்ய வேண்டும் என்று ரேணுகா சிந்தித்து முடிவு செய்தாள்.

தன் உள் மனதைக் கூர்மையாகப் பார்த்தபோது ஒரு செந்தாமரையைப் போல கிம் என்ற இளைஞனின் சிரித்த முகம் தெரிவதை அவள் உணர்ந்தாள். அடுத்த நிமிடம் அவள் கண்களிலிருந்து நீர் வழியத் தொடங்கியது. “கடவுளே, நீ எவ்வளவு கருணை நிறைந்தவன்!”- அவள் முணுமுணுத்தாள். அன்று இரவு மாநாட்டை ஏற்பாடு செய்தவர்களும் நிதியமைச்சரும் தலைமை தாங்க ஒரு பெரிய விருந்து நடந்தது. எல்லா மாநாட்டு வருகையாளர்களும் தன்னைத் தவிர மது அருந்தவதைப் பார்த்து என்னவோ போல் ஆகிவிட்டாள் ரேணுகா. பெண்கள் வாய்க்கு வந்தபடியெல்லாம் சிறிதும் சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் மற்றவர்களின் மனைவிமார்களிடம் சேட்டைகள் செய்து கொண்டிருந்தார்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வயதான மனிதர் மட்டும் சிறிதும் சமநிலை தவறாமல் தன்னுடைய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி நடந்து கொண்டார். மற்றவர்களிடமிருந்து விலகி அவர் அருகில் சென்று அமர்ந்தாள் ரேணுகா.

“மது அருந்துபவர்களைக் கண்டால் எனக்கு பயம்...” - ரேணுகா சொன்னாள்.

நீளமாக பழைய யானையின் தந்தத்தைப் போல மஞ்சள் நிறத்தில் இருந்த பற்கள் முழுவதும் வெளியே தெரியும்படி குலுங்கக் குலுங்கச் சிரித்தார் டாக்டர் ஷோஸோ.

“அவங்களைப் பார்த்து எதற்கு பயப்படணும்? அவங்க யாருக்கும் யார்கிட்டயும் பகைமை இல்லை. யாரையும் அவங்க எதிரியாகவும் நினைக்கல. சொல்லப் போனால் அவங்க ஒருவிதத்தில் சர்க்கஸ் கோமாளிகள் மாதிரி. பெண்களுக்கு முன்னால் கோமாளித்தனங்கள் செய்து செய்து கடைசியில் அவங்க சுயநினைவு இல்லாமல் தரையில் விழுவாங்க. பிறகு பொழுது விடியிறதுவரை குறட்டை விட்டுத் தூங்குவாங்க. மது அருந்துபவர்களைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியமே இல்ல. மது அவங்களோட சக்தியை அபகரிக்கும். அதற்குப் பிறகு அவங்க யாரையும் தொந்தரவு செய்ய மாட்டாங்க”- டாக்டர் ஷோஸோ ஒரு குழந்தையைப் போல பாசத்துடன் சொன்னார்.

“எங்கே அவங்க என்னை வந்து தொட்டுடுவாங்களோன்ற பயம்தான் எனக்கு...”- ரேணுகா சொன்னாள்.

“இந்தியாவைச் சேர்ந்தவங்க உடலுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தர்றாங்க. உடல்ல இன்னொருத்தர் கை படுறதை ஒரு அவமானமான விஷயமா நீங்க நினைக்கிறீங்க. யாருடைய தொடுதலுக்கும் உங்களை அவமானப்படுத்தும் சக்தி கிடையாது. நோயாளிகளைப் பார்த்துக்குற நர்ஸுகள் மனிதர்களைத் தொடுவதிலிருந்து விலகி ஓடுறது இல்லியே! இந்த உலகத்துல எடுக்குறவங்க, கொடுக்குறவங்கன்னு ரெண்டு பேரும் இருக்காங்க. கொடுக்குறவங்களுக்கு ஒரே ஒரு கொள்கைதான். அதை மட்டும் தான் அவங்க பின்பற்றுவாங்க. அது - கொடுத்துக் கொண்டே இருக்கணும்ன்றது...”- கிழவர் சொன்னார்.

“இந்தியாவுல நான் எத்தனையோ தடவை மதுவிற்கு எதிராக ஊர்வலங்கள் நடத்தியிருக்கேன். மதுக்கடைகளுக்கு முன்னால் போராட்டம் நடத்தியிருக்கேன். இப்போ இங்கே மது அருந்துபவர்களுக்கு மத்தியில் இவ்வளவு நேரம் இருக்க வேண்டிய சூழ்நிலையை நினைக்கிறப்போ மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு!”

“ஞானிகள்கிட்ட சாதாரணமா பார்க்கக்கூடிய ஒரு விசேஷ குணம் பற்றற்ற தன்மை”- ஷோஸோ சொன்னார். அடுத்த நிமிடம் ரேணுகா ஒரு வார்த்தைகூட கூறாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறி அகலமான இடைவெளியைக் கடந்து தன் ஹோட்டல் வரவேற்பரையில் மூச்சு வாங்க வந்து நின்றாள். வரவேற்பு கவுன்டரில் சாவியை வாங்கும்போது அங்கு நின்றிருந்த பெண் “மேடம், உங்களுக்கு ஒரு பூச்செண்டையும், ஒரு செய்தியையும் ஒரு ஆளு இங்கே வச்சிட்டு போயிருக்காரு” என்று சொன்னாள். சிவந்த பன்னீர் மலர்கள் மட்டுமிருக்கும் பூச்செண்டையும் அதில் வைக்கப்பட்டிருந்த அட்டையையும் பார்த்தவாறு தன்னுடைய அறையை நோக்கி ரேணுகா நடந்தாள். பூச்செண்டை அனுப்பி வைத்தற்காக கிம்மீது அவளுக்குக் கோபம் வந்தது. தங்களுக்கிடையே இருக்கும் நட்பை இந்த ஹோட்டலில் உள்ளவர்களிடம் அவன் ஏன் விளம்பரம் செய்ய வேண்டும்? கவுன்டரில் இருந்த இளம்பெண் சிரிப்பை அடக்க முயற்சிப்பதைப் போல ரேணுகாவுக்குத் தோன்றியது. ரேணுகா அந்தப் பூச்செண்டை வைப்பதற்காக ஒரு பாத்திரத்தைத் தேடினாள். அறையிலோ குளியலறையிலோ பூவை வைப்பதற்கு ஏற்ற அளவுள்ள ஒரு பாத்திரமும் ரேணுகாவின் கண்களில் படவில்லை. அதனால் அவள் அந்தப் பூச்செண்டை ஸோஃபாவின் மீது சாய்த்து வைத்தாள். பிறகு ஆடையை மாற்றிக் கொண்டு படுக்கையில் சாய்ந்தாள். மலர்களோடு சேர்த்து வைக்கப்ப்பட்டிருந்த அட்டையில் கிம் எழுதிய வாசகத்தை திரும்பவும் படிக்க அவள் முயற்சிக்கவில்லை. காலையில் குளியல் தொட்டியில் கிடந்தபோது தன்னுடன் இணைந்து இருக்கட்டுமே என்றெண்ணி அந்தப் பூச்செண்டை நீருக்குள் போட்டாள். அதன் இதழ்கள் உதிர்ந்து நீர்மீது மிதந்து கொண்டிருந்தன. மலர்களை முத்தமிடும்போது ஒரு முள் பட்டு ரேணுகாவின் கன்னத்தில் ஒரு துளி இரத்தம் கசிந்தது. கிம் என்ற இளைஞனைப் போலவே அவன் அனுப்பி வைத்த பூக்களுக்கும் தன்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்யவும் வேதனைப்படுத்தவும் முயல்கிறது என்பதை ரேணுகா கால்களைத் தனித்தனியாகத் தூக்கி ஆராய்ந்தாள். சுருக்கங்கள் இல்லாமலும் பட்டுபோல பளபளப்பானதுமான தன்னுடைய தொடைகள் மிகவும் அழகானவை என்று அவளுக்கே தோன்றியது. ஆனால், முழங்கால்கள்...? பாதத்திற்கு மேலே ரோமம் வளர்ந்திருக்கும் கால்கள்... அவை அழகாக இல்லை என்பதை ரேணுகா நினைத்துப் பார்த்தாள். ப்யூட்டி பார்லருக்குப் போய் எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக கால்களிலிருக்கும் ரோமத்தை அகற்றி அவற்றை அழகானதாக ஆக்க வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள்.

அவள் இதுவரையில் உடலழகை ஒரு சாதாரண விஷயமாக மட்டுமே நினைத்திருந்தாள். அந்த ஒரே காரணத்தால் தன்னுடைய வயதைக் கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, அவள் வயது கூடியவளாகத் தோன்றினாள். நடுத்தர வயதை அடைந்தபோது அவள் தன் உடலழகில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.


ஏதாவது க்ரீம் தடவிக் குளிப்பாள். ஆனால், உடலழகைப் பேண தான் செய்யும் முயற்சிகளை ரகசியமாக வைக்க அவளால் முடியவில்லை. அவளின் வீட்டு வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே கிடக்கும். இரவு, பகல் வேறுபாடில்லாமல் பலவிதப்பட்ட கோரிக்கைகளுடன் அவளைப் பார்க்க ஆட்கள் வந்துகொண்டே இருப்பார்கள். தங்களின் பாதுகாவலரான ரேணுகா கதவை மூடிக் கொண்டு உடம்பெங்கும் க்ளீம் தடவிக் கொண்டு இங்குமங்குமாய் அறைக்குள் நடந்து கொண்டிருந்தாள் என்பதை அறிந்தால் அவர்கள் அதற்குப் பிறகு அவளைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அழகுமீது கொண்ட ஆர்வத்திற்கும் பணத்தின் மீது கொண்ட பற்றுக்கும் நடுவில் கொள்கைகள் என்ற வறண்ட திரிசங்கு உலகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருப்பதை ரேணுகா நினைத்துப் பார்த்தாள். மேல்நோக்கி உயரவோ கீழே விழவோ பொது மக்களும், உறவினர்களும், நண்பர்களும் எந்தக் காலத்திலும் தன்னை அனுமதிக்க மாட்டார்கள் என்பது மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரியும்.

“பாவம் ரேணுகா...”- அவள் தன்னுடைய மார்பகங்களையும் அடி வயிறையும் தொடைகளையும் பாசம் மேலோங்க தடவியவாறு சொன்னாள். சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் அவளுடைய நிர்வாண உடம்பு ஒரு அசாதாரண அழகுடன் தெரிந்தது. தான் காதலியாக ஆவதற்கும் தாயாக ஆவதற்கும் படைக்கப்பட்டவளே என்ற உண்மையை அந்த நிமிடத்தில் சமநிலையிலிருந்து தவறிப்போன ரேணுகா உணர்ந்தாள். விதி தன்னை ஏமாற்றிவிட்டதோ என்று அவள் நினைத்தாள். இல்லாவிட்டால் இப்படிப்பட்ட கொடுமையான வஞ்சனைச் செயலுக்குத் தான்தான் முழுமுதற் காரணமோ என்றுகூட அவள் நினைத்தாள்.

மீண்டும் மாநாடு. மீண்டும் விவாதங்கள். மதிய உணவு. சாயங்காலம் ஹோட்டலுக்கு வந்து மீண்டும் குளியல். ஒரு நீலப் பட்டுப்புடவையை எடுத்து அணிந்து கொண்டு, தன்னுடைய தலைமுடியை அவிழ்த்து விட்டவாறு ரேணுகா கிம் வருவதை எதிர்பார்த்து எழுதும் மேஜைக்கருகில் உட்கார்ந்திருந்தாள். நேரத்தை வீண் செய்யப் பிடிக்காத ஒரே காரணத்திற்காக சிவாவிற்கு ஒரு கடிதம் எழுத அவள் முடிவெடுத்தாள். நம்ப முடியாத ஆனந்தத்தை தான் சிங்கப்பூரில் அடைந்து கொண்டிருப்பதாக அவள் எழுதினாள். வாழ்க்கை குறித்த தன்னுடைய கண்ணோட்டம் முழுமையாக மாறுவதைப் போல் தனக்குத் தோன்றுகிறது என்றும், நேரில் பார்க்கும்போது எல்லா விஷயத்தையும் நேரில் கூறுவதாகவும் அவள் எழுதினாள். கடிதம் எழுதி முடிக்கவும், வாசலில் கிம் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. சாம்பல் நிறத்தில் காற்சட்டையும் வெள்ளை பட்டுச் சட்டையும் அவன் அணிந்திருந்தான்.

“ரவீந்திரநாத் தாகூரின் ஒரு கதாநாயகியைப் போல இருக்கீங்க நீங்க...”- அவன் ரேணுகாவைக் கால் முதல் தலைவரை பார்த்துக் கொண்டு சொன்னான்.

“தாகூரின் கதைகளைப் படிச்சிருக்கீங்களா?”- ரேணுகா கேட்டாள்.

“ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகளைப் படிச்சிருக்கேன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் சாந்தி நிகேதனுக்கு ஒரு சுற்றுலாப் பயணியா போயிருந்தேன். டாக்டர் பிரபாத் முகர்ஜியின் வீட்டிற்கு விருந்தாளியாகப் போய்த் தங்கினேன்.”- கிம் சொன்னான்.

“கிம், நீங்க உண்மையிலேயே இந்தியாவின் நண்பர்தான்.”

“நண்பன் மட்டுமல்ல, காதலனும் கூட...”- கண்களில் தெரிந்த மலர்ச்சியுடன் அவன் சொன்னான். எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் அவன் தன்னுடைய முகத்தை ரேணுகாவின் கூந்தலுக்குள் மறைத்தான். தாகமெடுத்தவன் அவசர அவசரமாக நீரைக் குடிப்பதைப் போல அவளின் கூந்தலிலிருந்து புறப்பட்டுவந்த நறுமணத்தை அவன் ஆர்வத்துடன் முகர்ந்து கொண்டிருந்தான்.

“கதவை அடைக்கல...”- ரேணுகா சொன்னாள். அவன் கதவை நோக்கி நடக்கும்போது ரேணுகா தான் சொன்ன வார்த்தைகளை நினைத்து தன் மீதே பரிதாபம் கொண்டாள். வாசல் கதவை அடைத்தவுடன் முழு சுதந்திரத்தையும் அவனுக்குத் தான் அளித்து விட்டதாக தான் சொன்ன வார்த்தைகள் மூலம் அவனுக்குச் சொன்னது மாதிரி ஆகிவிடாதா என்பதையும் அவள் நினைக்காமலில்லை. தான் இந்த அளவிற்கு ஒரு வெட்கமற்ற பெண்ணா என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டாள் ரேணுகா.

தன்னைக் கட்டிலுக்கும் தனக்கு இதுவரை தெரியாத ஒரு உலகத்திற்கும் அழைத்துச் செல்லும் இளைஞனிடம் ரேணுகா கெஞ்சினாள்.

“என் மேல கருணை காட்டு கிம்! நான் என்ன செய்யிறேன்னே எனக்குத் தெரியல...”

தன்னுடைய உடலில் உள்ள குறைகளைப் பற்றி அவள் மிகவும் கவலைப்பட்டாள். ‘தன்னுடைய இதய நோய் அதிகரித்துவிடுமோ? தன்னுடைய மெலிந்துபோன உடம்பால் அவனுடைய உடல் எடையைத் தாங்க முடியாமற் போய்விடுமோ?’ இப்படியெல்லாம் நினைத்தவாறு ரேணுகா கண்களை மூடிக் கொண்டு தன்னுடைய இளம் காதலின் விருப்பங்களுக்கு இணங்கினாள். அவனுக்காக அவள் ஒரு மனைவியின் மனநிலையுடன் வேதனைகளைத் தாங்கிக் கொண்டாள். அந்த நிமிடத்தில் காதல் என்ற வலையில் சிக்கிக் கொண்ட அந்த அப்பாவிப் பெண்ணால் “என்னோட கிம்... என்னோட என்னோட என்னோட...” என்று புலம்ப மட்டுமே முடிந்தது.

தொடர்ந்து அவனுடைய கட்டளைப்படி நடக்கக் கூடிய ஒரு பொம்மையாக மாறிவிட்டாள் ரேணுகா. அவனுடன் சேர்ந்து நீந்துவதற்கு அவள் தயாரானாள். அவர்கள் சேர்ந்து காஸினோவிற்குப் போய் சூதாட்டத்தில் பணம் வைத்து இழந்தார்கள். கேபரேவிற்குச் சென்று நிர்வாண உடம்புகளைப் பார்த்தபோதுகூட ரேணுகா சிவனையும், பார்வதியையும் மட்டும் நினைத்தாள். எல்லா இரவுகளிலும் ஹோட்டல் பணியாட்களின் கண்களில் மண்ணத் தூவி விட்டு கிம் ரேணுகாவின் அறையிலேயே படுத்துறங்கினான். அவன் வார்த்தைகள் எல்லா நேரத்திலும் அவளுடைய காதுகளில் எதிரொலித்துக் கொண்டேயிருந்தன.

“அழிவில்லாத பொருட்கள் மீது மட்டும்தான் அன்பு செலுத்தணும்னு நீ சொல்றியா ரேணுகா? அழியப் போற பொருட்கள்தான் நம்மிடமிருந்து அன்பைப் பெறுது. இதழ்கள் கீழே விழும் பூவை நான் விரும்புகிறேன். மறையப் போகிற சூரியனை நான் விரும்புறேன். உன் இளமையை... சிறகுகள் விரித்து பறப்பதற்குத் தயாராக இருக்கும் பறவையையொத்த இந்த இளமை... ஒவ்வொரு நிமிடமும் துடித்துக் கொண்டிருக்கும் இளமை... நான் அதை மட்டும் விரும்புறேன்... ரேணுகா... உடலை அலட்சியப்படுத்தலாமா? ஆத்மாவைக் கண்டுபிடிக்கும்போது கூட மகிழ்ச்சியடையிறது உடல் மட்டும்தானே?”

ரேணுகாவின் புதிய அவதாரம் அவன் கைப்பிடிக்குள் ஒடுங்கிக் கிடந்தது.

இருபத்து நான்காம் தேதி தன்னுடைய பெரியம்மாவை வரவேற்பதற்காக சிவா விமான நிலையத்திற்கு வந்தாள். பெரியம்மா எழுதிய கடிதத்தில் தான் திரும்பி வருவதைப் பற்றி வேறு யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று எழுதியிருந்தாள். அங்கு போய்ச் சேர்ந்த பிறகு இரண்டு நாட்களுக்குள் ரேணுகா எழுதியிருந்த கடிதம் சிவாவிற்கு இருபத்து மூன்றாம் தேதி மதிய நேரத்தில் கிடைத்தது. தன்னுடைய வாழ்க்கை பற்றிய கண்ணோட்டம் முற்றிலும் மாறுவதாக அதில் ரேணுகா எழுதியிருந்தாள். சிவா அந்த வார்த்தைகளை நினைத்து தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள்.


விமானத்திலிருந்து இறங்கிவரும் ஆண்கள், பெண்களுக்கு மத்தியில் சிவா தன்னுடைய பெரியம்மாவைத் தேடினாள். ஆனால், அவள் இல்லை. அவள் வரும் தேதி ஒருவேளை மாறியிருக்குமோ என்று அவள் நினைத்தாள். ஒருவித குழப்ப நிலையுடன் இங்குமங்குமாய் அவள் நடந்து கொண்டிருந்தபோது மைக் வழியாக ஒரு செய்தி வந்தது. “பேராசிரியை ரேணுகாதேவியின் உறவினர்கள் யாராவது விமான நிலையத்திற்கு வந்திருக்கிறார்களா?” என்பதே அந்தச் செய்தி. அடுத்த நிமிடம் சிவா செய்தி புறப்பட்ட இடத்திற்கு விரைந்தாள். பெரியம்மா விலை மதிப்புள்ள பொருட்களை ஏதாவது வாங்கிக் கொண்டு வந்து, அதை சுங்க இலாக்கா அதிகாரிகள் ஏதாவது பிரச்சினைக்குள்ளாக்குகிறார்களோ என்று அவள் நினைத்தாள். சிறிது கோபம் மேலோங்க அவள் கவுன்டரில் பார்த்த அதிகாரிகளிடம் கேட்டாள்.

“என்ன பிரச்சினை?”

“நீங்க யாரு?”- ஒரு ஆள் கேட்டார்.

“நான் பேராசிரியை ரேணுகாதேவியோட சொந்தம். என் பேரு சிவா.”

“ப்ரொஃபஸர் ரேணுகாதேவி முந்தா நாள் ராத்திரி சிங்கப்பூர்ல மாரடைப்பு ஏற்பட்டு இறந்துட்டாங்கனு எங்களுக்குத் தகவல் வந்திருக்கு. அவரோட உடலை சென்னையில இருந்துவந்த விமானத்துல இருந்து இப்போ இறக்கிக்கிட்டு இருக்காங்க. நீங்க அதை வாங்கிக்கலாம்.”- ஒரு அதிகாரி சொன்னார்.

அதைக் கேட்டு சிவா அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்று விட்டாள். அடுத்த நிமிடம் அவள் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தொலைபேசியில் செய்தியைச் சொல்ல ஆரம்பித்தாள். தொலைபேசியில் பேசியதற்கான பணத்தை எடுப்பதற்காகத் தன்னுடைய பர்ஸை சிவா திறந்தபோது ஒரு அதிகாரி அதை வாங்க மறுத்துவிட்டார்.

“வேண்டாம்... இந்த கட்டணத்தை நாங்க ஏத்துக்குறோம்”- அவர் சொன்னார்.

“உங்களுக்கு நன்றி”- சிவா மெவான குரலில் சொன்னாள். அடுத்த சில நிமிடங்களில் ரேணுகாவின் உயிரற்ற உடல் வீட்டிற்கு வந்தது. அங்கிருந்து தைக்காடு சுடுகாட்டிற்குச் சென்ற சவ ஊர்வலத்தில் சமூக சேவகர்களும், முன்னாள் துணைவேந்தர்களும் மாணவர் தலைவர்களும் கலந்து கொண்டு தங்களின் துக்கத்தை வெளிப்படுத்தினார்கள். சவ ஊர்வலத்தில் பங்குபெற்ற ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் எல்லார் காதிலும் விழும்படி சொன்னார்.

“ப்ரொஃபஸர் ரேணுகாதேவி நடத்துற கடைசி ஊர்வலம் இதுதானே!”

இறுதியில் பெரியம்மாவின் வீட்டில் தானும் ஒரு வேலைக்காரியும் மட்டும் தனியாக இருக்கும்போது சிங்கப்பூரிலிருந்து ஹோட்டல் நிர்வாகத்தினர் அனுப்பியிருந்த பெட்டிகளைச் சாவியின் உதவியால் திறந்தாள் சிவா. பெரியம்மா ஷாப்பிங்கிற்குப் போகவேயில்லை என்பதை அவள் புரிந்து கொண்டாள். ஊரிலிருந்து கொண்டு போயிருந்த ஆடைகளும் சீப்பும் சோப்பு டப்பாவும் மருந்து புட்டிகளும் மட்டுமே பெட்டியில் இருந்தன. பட்டுப் புடவைகளின் ஓரங்கள் தூசு படிந்து கறுப்பு நிறத்தில் இருந்தன. ரேணுகா சாலையில் இறங்கி நடந்திருக்க வேண்டும். புடவைகளைச் சலவை நிலையத்திற்குக் கொடுத்து அனுப்புவதற்காக சிவா அவற்றை எடுத்து ஒரு கூடையில் போட்டு மூடினாள். பெட்டியிலிருந்த சாமான்கள் ஒவ்வொன்றையும் வெளியே எடுத்தபோது, ஒரு ஆணின் உள்ளாடைகள் அவற்றுக்கு மத்தியில் இருப்பதை சிவா பார்த்தாள். அந்த உள்ளாடைகளில் வியர்வை நாற்றமிருந்தது. இவை எப்படி பெரியம்மாவின் பெட்டிக்குள் வந்தன என்று ஆச்சரியத்துடன் அவள் நினைத்தாள். தாங்கள் அறையிலும் குளியலறையிலும் பார்த்த ஆடைகளையும் மற்ற பொருட்களையும் எடுத்து பெட்டிக்குள் வைத்து அனுப்புவதாக ஹோட்டலின் டெபுட்டி மேனேஜர் சாமான்களுடன் இணைத்திருந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

சிவா ஏதோ ஒரு சிந்தனையுடன் சிறிது நேரம் அந்த உள்ளாடைகளையே பார்த்தவாறு தரையில் அமர்ந்திருந்தாள். இந்த உள்ளாடைகள் பெரியம்மாவின் அறைக்குள் எப்படி வந்தன என்பதொன்றே அவளின் சிந்தனையாக இருந்தது. கடைசியில் அந்த உள்ளாடைகளை ஒரு தாளில் சுற்றி, சிவா இருட்டினூடே நடந்து சென்று சாலையின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் போட்டாள். வீட்டிற்குத் திரும்பும்போது அவள் தனக்குத்தானே முணுமுணுத்தாள். “பாவம் பெரியம்மா.”

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.