Logo

வாசகன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6844
vasagan

ந்த வீட்டை விட்டு நான் வெளியே வந்தபோது இரவாகிவிட்டது. சமீபத்தில் அங்கு கூடியிருந்த நெருங்கிய நண்பர்களுக்கு பிரகாசமான என்னுடைய கதையை நான் படித்துக் காட்டினேன். அவர்கள் என்னை அளவுக்கும் அதிகமாகப் புகழ்ந்து தள்ளினார்கள். ஆள் அரவமற்ற தெருவில் நடக்கும்போது, என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு சந்தோஷத்தை நான் அனுபவித்ததே இல்லை என்பதை உணர்ந்தேன்.

பிப்ரவரி மாதத்தின் இரவு நேரம் மிகவும் தெளிவாகவும் மேகங்கள் இல்லாமலும் இருந்தது. நட்சத்திரங்கள் ஒளிவீசிக் கொண்டிருந்த வானம் பூமியின்மீது மெல்லிய குளிரையும், புதிதாக விழுந்து கொண்டிருந்த பனியையும் பரப்பிக் கொண்டிருந்தது. வேலிகள்மீது தொங்கிக் கொண்டிருந்த மரக்கிளைகள் என் பாதையில் ஆங்காங்கே விட்டு விட்டு நிழல் உண்டாக்கி விட்டிருந்தன. நீலநிற நிலவு வெளிச்சத்தில் பனித்துளிகள் சந்தோஷத்துடன் சிதறி விழுந்து கொண்டிருந்தன. ஓரு உயிர்கூட கண்களில் படவில்லை. கால்களில் படும்போது பனி உண்டாக்கிய ஓசை மட்டுமே, அந்த மனதில் தங்கிய இரவுப் பொழுதின் அமைதியைக் குலைத்துக் கொண்டிருந்தது.

ஆமாம்... இந்த உலகில் குறிப்பிடத்தக்க ஓருவனாக இருக்க வேண்டும். சுற்றியிருக்கும் மனிதர்கள் மத்தியில் தனி ஒருவனாகத் தெரிய வேண்டும் - நான் நினைத்தேன்.

என் கற்பனை என் எதிர்காலத்தை ஓவியமாகத் தீட்டியபோது ஒரு பிரகாசமான வண்ணத்தையும் விடவில்லை.

‘‘ஆமாம்... உங்க அந்தச் சிறுகதை மிகவும் நன்றாக இருந்தது. அதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்’’- எனக்குப் பின்னால் ஒரு சிந்தனையைத் தூண்டும் குரல் கேட்டது.

நான் நடந்துகொண்டே சுற்றிலும் பார்த்தேன்.

கருப்பு நிறத்தில் ஆடை அணிந்திருந்த ஒரு சிறிய மனிதன் என்னைத் தாண்டிச் சென்று, என்னுடைய பாதையில் நின்று கொண்டு என் முகத்தை தலையை உயர்த்திப் பார்த்துக் கொண்டே கூர்மையான ஒரு சிரிப்பை வெளிப்படுத்தினான். அவனுடைய எல்லா விஷயங்களுமே மிகவும் கூர்மையாகவே இருந்தன. அவனுடைய பார்வை, அவனுடைய கன்ன எலும்புகள், அவனுடைய அளவெடுத்தாற் போன்ற தாடை... அவனுடைய முழு உருவமும் சீரான முறையின் கண்களை உறுத்துகிற அளவிற்குப் படைக்கப்பட்டிருந்தது. அவன் மெதுவாகவும், ஓசை உண்டாக்காமலும், பனியில் வழுக்குவதைப்போல நடந்தான். கதையைப் படித்த அறையில் அவனை நான் பார்க்கவில்லை. அவனுடைய குறிப்பைக் கேட்டு உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டு நின்று விட்டேன். அவன் யாராக இருக்கும்? எங்கிருந்து அவன் வந்தான்?

‘‘யார் நீங்க? நீங்க அங்கே இருந்தீங்களா?’’- நான் கேட்டேன்.

‘‘ஆமாம்... அந்த சந்தோஷத்தை நானும் அனுபவித்தேன்.

அவன் கம்பீரமான குரலில் பேசினான். அவனுடைய உதடுகள் மிகவும் மென்மையாக இருந்தன. அவனுடைய சிறிய மீசை அந்த உதடுகளில் மலர்ந்த சிரிப்பைச் சிறிதும் தடுக்கவில்லை. தொடர்ந்து இருந்துகொண்டிருந்த அந்தச் சிரிப்பு விரும்பத்தகாத ஒரு கருத்தை அவன்மீது உண்டாக்கியது. நான் விரும்பாத வகையில் ஏதாவது கடுமையான கருத்தை அவன் தனக்குள் வைத்திருப்பானோ என்ற எண்ணத்தை அது உண்டாக்கியது. அதற்காக அந்தப் புதிய மனிதனின் நடவடிக்கைகளை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருக்கும் அளவிற்கு நான் ஒரு மனநிலையில் இல்லை. எனக்கு நானே சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்ததில் அவன்மீது நான் கொண்ட எண்ணம் ஒரு நிழலைப்போல கரைந்து போனது. அவனுடன் சேர்ந்து நான் நடந்தேன். அவன் என்ன கூறுவான் என்று ஆச்சரியத்துடன் பார்த்தேன். அன்று மாலையில் நான் அனுவித்த இனிய நிமிடங்களுடன் அவனும் ஏதாவது சேர்ப்பான் என்று மனதிற்குள் ரகசியமாக எதிர்பார்த்தேன். மனிதன் பேராசை பிடித்தவன். ஏனென்றால் அதிர்ஷ்டம் அவனைப் பார்த்து எப்போதும் அன்புடன் புன்னகைத்துக் கொண்டே இருக்கிறது.

‘‘மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து நாம் தனித்து இருக்கிறோம் என்று உணர்வதே ஒரு நல்ல விஷயம்தான் இல்லையா?’’ - அந்த மனிதன் கேட்டான்.

அவனுடைய அந்தக் கருத்து மீது மாறுபட்ட கருத்து எதுவும் எனக்கு இருப்பது மாதிரி தெரியாததால் அவன் சொன்னதை உடனடியாக நான் ஒப்புக் கொண்டேன்.

அதைக்கேட்டு அவன் உரத்த குரலில் வாய் விட்டுச் சிரித்தான். தன்னுடைய சிறிய கைகளை மெல்லிய விரல்களுடன் உணர்ச்சியால் உந்தப்பட்ட மாதிரி பிசைந்தான்.

‘‘நீங்க ஒரு மகிழ்ச்சி நிறைந்த மனிதர் !’’ நான் அவனுடைய சிரிப்பால் பாதிக்கப்ட்டுக் கூறினேன்.

‘‘ஆமாம்... நான் சந்தோஷம் நிறைந்த மனிதன்தான்.’’ - அவன் ஒப்புக் கொண்டான். அப்போது புன்னகைத்துக் கொண்டே தன் தலையை ஒரு பக்கமாக அவன் சாய்த்தான். ‘‘அதே நேரத்தில் நான் கேள்விகள் கேட்பவனும் கூட நான் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் எப்போதும் விருப்பம் உள்ளவன். எல்லா விஷயங்களையும் பற்றித் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தொடர்ந்து இருக்கும் ஒரு உள் அரிப்பு அது. அதுதான் என்னை விடாமல் இயக்கி நடைபோடச் செய்து கொண்டிருக்கிறது. நான் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்த உங்களின் வெற்றியை அடைவதற்கு நீங்கள் செலவு செய்தது என்ன?’’

நான் அவனையே பார்த்தேன். தயங்கிக் கொண்டே பதிலைச் சொன்னேன் :

‘‘ஒரு மாத வேலை.... கூட கொஞ்சம் நாட்கள் ஆகியிருக்கலாம்.’’

‘‘அப்படியா?’’ - அவன் ஆச்சரியத்துடன் பதில் சொன்னான் : ‘‘சிறிது உழைப்பு, அன்றாட வாழ்க்கையில் ஒரு சிறிய அனுபவம்... அவற்றுக்கு எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்களுடைய கருத்துப்படி ஆயிரக்கணக்கான மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது = உங்களுடைய புரிதலுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் விலை அப்படியொன்றும் பெரிது என்று கூறுவதற்கில்லை. அதைத் தொடர்ந்து எதிர்பார்ப்பு மேலும் அதிகமாகும். அதாவது - காலம் செல்லச் செல்ல... ஹா... ஹா...! நீங்கள மரணத்தைத் தழுவும்போது, ஹா... ஹா... ஹா...! எல்லாவற்றிற்கும் ஏற்கெனவே எங்களுக்குக் கொடுத்திருப்பவற்றைவிட இன்னும் கொஞ்சம் தரவேண்டும் என்று மனதில் நினைப்பீர்கள். இல்லையா?’’

அவன் மீண்டும் தன்னுடைய வழக்கமான உரத்த சிரிப்பைத் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு வெளியிட்டான். தன்னுடைய கூர்மையான கறுத்த கண்களால் என்னை மெதுவாக அளவெடுத்துப் பார்த்தான். நானும் அவனை ஆராய்ச்சி செய்தேன். அவனைத் தலையிலிருந்து கீழ்வரை பார்த்துவிட்டு மெதுவான குரலில் கேட்டான் :

‘‘மன்னிக்கணும்.  நான் இப்போது யாருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்?’’

‘‘நான் யார்? என்னை உங்களால் யூகிக்க முடியவில்லையா? சரிதான்... தற்போதைக்கு நான் யார் என்பதைக் கூற மாட்டேன். ஒரு மனிதன் என்ன உங்களிடம் சொல்லப் போகிறான் என்பதை விட அவனுடைய பெயர் என்ன என்பது அப்படியொன்றும் உங்களுக்கு முக்கியமான விஷயம் இல்லையே?’’


‘‘நீங்க சொல்வது சரிதான்... ஆனால் இது எல்லாமே மிகவும் வினோதமாக இருக்கிறதே !’’ நான் சொன்னேன்.

அவன் என்னுடைய கோட் காலரை என்ன காரணத்தாலோ தொட்டான். அதை மெதுவாகத் தடவியவாறு சொன்னான் : ‘‘ஆமாம்... இது வினோதமாகத்தான் இருக்கும். சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய அனுபவங்களைத் தாண்டி ஒரு மனிதன் ஏன் பயணிக்கக் கூடாது? உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால், நாம் மனம் விட்டுப் பேசுவோம். நான் ஒரு வாசகன் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வித்தியாசமான வாசகன். அதாவது - எதையும் ஏன் -?’’ என்று கேட்க விரும்பக்கூடிய, புத்தகங்கள் எப்படி எழுதப்படுகின்றன? - உதாரணத்திற்கு உங்களுடைய புத்தகங்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆசைப்படக்கூடிய ஒரு வாசகன்... நாம அதை விவாதிப்போம்.’’

‘‘ஓ... தாராளமாக...’’- நான் சொன்னேன்: ‘‘நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன். அப்படிப்பட்ட சந்திப்புகளும் உரையாடல்களும் எல்லா நாட்களிலும் இருக்கக்கூடிய வாய்ப்பு இல்லையே!’’- ஆனால் நான் பொய் சொன்னேன். உண்மையாகச் சொல்லப் போனால் அந்த முழு சம்பவமும் எனக்குப் பிடிக்கவில்லை. அந்த மனிதன் என்ன விரும்புகிறான்? எனக்கு யாரென்றே தெரியாத ஒரு மனிதனை, கிட்டத்தட்ட ஒரு போட்டி என்று நினைக்கிற அளவிற்கு இருக்கக்கூடிய ஒரு விஷயத்திற்கு இந்த சாதாரண சந்திப்பை எப்படி நான் அனுமதித்தேன்?

அவனுக்கு அருகில் நான் மெதுவாக நடந்து கொண்டிருந்தேன். மிகவும் அமைதியாகவும் கவனமாகவும் இருப்பதைப்போல் நான் காட்டிக் கொண்டேன். நான் அந்த விஷயத்தை நினைத்துப் பார்த்தபோது, எனக்கு அது சற்று சிரமமான விஷயமாகத்தான் இருந்தது. எனினும் நான் மனதில் மிகவும் உற்சாகமாக இருந்ததால், அவனுடன் பேச மாட்டேன் என்று கூறி அவன் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை.  அதனால் என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியாக இருந்தேன்.

நிலவு எங்களுக்குப் பின்னால் இருந்தது. எங்களுடைய நிழல்கள் எங்கள் பாதையில் தெரிந்தன. அவை ஒரே கறுப்பு உருவமாக இணைந்து எங்களுக்க முன்னால் பனியில் நகர்ந்து போய்க் கொண்டிகரந்தன. நான் அவற்றைப் பார்க்கும்போது, எனக்குள் என்னவோ வளர்வதைப் போல உணர்ந்தேன். அந்த நிழல்களைப் போலவே இனம்புரியாத வகையில் எனக்கு முன்னால் ஏதோ கறுப்பாக இருப்பதுபோல் எனக்குத் தோன்றியது.

என்னுடன் நடந்து வந்து கொண்டிருந்த மனிதன் ஒரு நிமிடத்திற்கு அமைதியாக இருந்தான். பிறகு, தன்னுடைய சிந்தனைகளின் எஜமானாக இருக்கும் ஒரு மனிதனின் தன்னம்பிக்கை நிறைந்த குரலில் அவன் பேசினான்:

‘‘மனிதர்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தைவிட முக்கியமானதும், வியப்படையச் செய்வதும் வேறொன்றும் இல்லை. சரிதானா?’’

நான் தலையை ஆட்டினேன்.

‘‘நீங்கள் ஒப்புக் கொண்டீர்கள். அப்படியென்றால் நாம் விஷயங்களை வெளிப்படையாகவே பேசுவோம். நீங்கள் இப்போதும் இளமையாக இருக்கும் காலகட்டத்தில், வெளிப்படையாகவே பேசுவோம். நீங்கள் இப்போதும் இளமையாக இருக்கும் காலகட்டத்தில், வெளிப்படையாக விவாதம் செய்வதற்கான வாய்ப்பை எந்தச் சமயத்திலும் இழந்து விடாதீர்கள்!’’

‘என்ன வினோதமான மனிதனாக இருக்கிறான்!’- நான் நினைத்தேன். திடீரென்று உண்டான ஆர்வத்தில் நான் மெதுவாகச் சிரித்துக்கொண்டே கேட்டேன்: ‘‘நாம் எதைப்பற்றி விவாதிக்கப் போகிறோம்?’’

ஒரு நிமிட நேரத்திற்கு அவன் என்னையே வெறித்துப் பார்த்தான். பிறகு ஏதோ அதிக நாட்கள்  மிகவும் நெருக்கமாகப் பழகிய நண்பர்களிடம் பேசுவதைப்போல, சர்வசாதாரணமான குரலில் ஆச்சரியத்துடன் பார்த்தவாறு சொன்னான்:

‘‘இலக்கியத்தின் நோக்கங்கள் என்ன என்பதைப் பற்றிப் பேசுவோம்!’’

‘‘சரி... ஆனால், இப்போதே நேரம் அதிகமாக ஆகிவிட்டதே!’’

‘‘நேரம் அதிகமா? இல்லை. உங்களுக்கு அப்படியொன்றும் அதிக நேரம் ஆகிவிடவில்லையே!’’

அந்த வார்த்தைகள் என்னை அதிர்ச்சியடையச் செய்தன. அவன் அந்த வார்த்தைகளை மிகவுவு அழுத்தமாக உச்சரித்தான். அவை மிகவும் பலமாக என் காதில் விழுந்தன. அவனிடம் சிலவற்றைக் கேட்க வேண்டும் என்பதற்காக நான் நின்றேன். ஆனால் அவன் என்னுடைய கையைப் பற்றி மெதுவாக இழுத்து, நடக்கும்படிச் செய்தான்.

‘‘நிற்காதீர்கள். என்னுடன் நீங்கள் நல்ல ஒரு சாலையில் இருக்கிறீர்கள்.... நாம் ஒருவரோடொருவர் தேவையான அளவிற்கு அறிமுகமாகி விட்டோம். என்னிடம் சொல்லுங்கள்- இலக்கியம் விரும்புவது என்ன? நீங்கள் இலக்கியம் படைத்திருக்கிறீர்கள். நீங்கள் அதைக் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.’’

என்னுடைய கட்டுப்பாட்டை மீறி என்னுடைய வியப்பு வளர்ந்து கொண்டிருந்தது. இந்த மனிதன் என்னிடமிருந்து எதை எதிர்பார்க்கிறான்? இவன் யார்?

‘‘இங்கே பாருங்க’’- நான் சொன்னேன்: ‘‘நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் - இவை எல்லாம்...’’

‘‘இவை எல்லாம் ஒரு நல்ல முடிவுக்காகத்தான் நடக்கின்றன. என்னை நம்புங்கள்! நல்ல ஒரு விஷயத்திற்காக அல்லாமல் உலகத்தில் எந்த ஒரு காரியமும் நடப்பதில்லை. அதனால் நாம் கெகஞ்சம் வேகமாக முன்னோக்கி அல்ல- ஆனால், ஆழமாகப் போவோம்.’’

அவன் சொன்ன விஷயம் ஆர்வ்த்தைத் தூண்டக்கூடிய ஒன்றாகத்தான் இருந்தது. எனினும் அது என்னை என்னவோ செய்தது. நான் பொறுமை இல்லாமல் நடக்க ஆரம்பித்தேன். அவன் மெதுவாகப் பேசிக்கொண்டே என்னைப் பின் தொடர்ந்தான்.

‘‘என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த நேரத்தில் இலக்கியம் என்ன நோக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதற்கு விளக்கம் கூறுவதற்கு நீங்கள் சிரமப்படுகிறீர்கள். நானே அதற்கு விளக்கம் கூற முயற்ச்சிக்கிறேன்.’’

அவன் ஒரு நீண்ட பெருமூச்சை விட்டான். பிறகு என்னுடைய முகத்தைப் புன்னகைத்தாவாறு பார்த்தான்.

‘‘மனிதன் தன்னைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அவனுக்கு உதவுவதே இலக்கியத்தின் நோக்கம் என்று நான் சொன்னால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். தன்மீது அவன் கொண்டிருக்கும் நம்பிக்கையை மேம்படுத்துவதும், உண்மையைத் தேடுவதில் அவனுக்கு இருக்கும் ஆர்வத்தை வளர்த்து எடுப்பதும், மக்களிடம் இருக்கும் கீழ்த்தரமான, தரம் தாழ்ந்த விஷயங்களுக்கு எதிராகப் போராடச் செய்வதும், நல்ல விஷயங்களைக் கொண்டு வருவதும், மனித இதயங்களில் வெட்க உணர்வு, கோபம், தைரியம் ஆகியவற்றை உண்டாக்கச் செய்வதும், மனிதர்களை பலம் கொண்டவர்களாக ஆக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்வதும், புனிதமான அழகுணர்ச்சியுடன் அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு உதவி புரிவதும்... இதுதான் என்னுடைய  கருத்து. சொல்லப்போனால் இது ஒரு மேலோட்டமான சுருக்கம். வாழ்க்கையை மகிழ்ச்சிப்படுத்தக்கூடிய எல்லா விஷயங்களையும் இதில் நிரப்பிக் கொள்ள வேண்டியதுதான். சொல்லுங்க- இந்த விளக்கத்துடன் நீங்கள் உடன்படுகிறீர்களா?’’

‘‘ஆமாம்... நீங்கள் சொல்வது சரிதான்’’- நான் சொன்னேன்: எப்படிப் பார்த்தாலும் அதுதான் உண்மை. இலக்கியத்தின் நோக்கம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவது என்பது எல்லாரும் ஏற்றுக்கொண்ட ஒன்றுதானே!’’


‘‘அப்படியென்றால் நீங்கள் என்ன பெரிய சேவை செய்திருக்கிறீர்கள்?’’- அந்த மனிதன் மெதுவான குரலில் கேட்டான். அவனுடைய வழக்கமான உரத்த சிரிப்பை இன்னொரு முறை அவன் வெளியிட்டான்.

‘‘இதை எல்லாம் நீங்கள் எதற்காகச் சொல்கிறீர்கள்?’’- நான் கேட்டேன். அவனுடைய சிரிப்பால் பாதிக்கப்பட்டதைப்போல் நான் காட்டிக்கொண்டேன்.

‘‘ஏன் அப்படி நினைக்கிறீர்கள்?’’

‘‘வெளிப்படையாகக் கூறுவது என்றால்...’’- நான் கறாராக ஏதாவது சொல்ல வேண்டும் என்று வீணாக முயற்சித்தேன். வெளிப்படையாக என்றால் என்ன அர்த்தம்? இந்த மனிதன் அப்படியொன்றும் முட்டாள் இல்லை. மனிதர்களின் ‘வெளிப்படை’ என்பதன் எல்லைகள் எந்த அளவிற்கு வரையறை உள்ளவை, அவை சுயமரியாதை என்ற ஒன்றால் எந்த அளவிற்குக் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறது என்பதெல்லாம் அவனுக்கு நன்றாகத் தெரியும். நான் மீண்டும் அவனைப் பார்த்தபோது, அவனுடைய புன்னகையால் ஆழமாக காயப்பட்டேன். அந்தப் புன்னகையில் அந்த அளவிற்குத் தாராளமாகக் கேலியும் வெறுப்பும் கலந்திருந்தன! பயத்தின் ஆரம்ப நிலைகளை நான் உணர்ந்தேன். உடனடியாக அந்த இடத்தை விட்டுப் போய்விடுவது நல்லது என்று அந்த பயம் எனக்குச் சொன்னது.

‘‘குட் நைட்’’- நான் என்னுடைய தொப்பியை உயர்த்தியவாறு உடனடியாகச் சொன்னேன்.

‘‘ஏன்?’’- அவன் மென்னையான ஆச்சரியத்துடன் கேட்டான்.

‘‘அளவுக்கு அதிகமாக தமாஷ்கள் நடப்பது எனக்குப் பிடிக்காது.’’

‘‘நீங்கள் போகப் போகிறீர்களா? சரி... அது உங்கள் விருப்பம் ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் போய்விட்டால், பின்னர் நாம் எந்தச் சமயத்திலும் மீண்டும் சந்திக்க மாட்டோம்.’’

அவன் ‘எந்தச் சமயத்திலும்’ என்ற வார்த்தையை மிகவும் அழுத்தமாக உச்சரித்தான். அந்த வார்த்தை இறுதிச் சடங்கு மணியைப் போல என்னுடைய காதுகளில் முழங்கிக் கொண்டிருந்தது. அந்த வார்த்தையை நான் பொதுவாகவே வெறுத்தேன். அதற்காக பயப்படக்கூட செய்தேன். அது கனமானதாகவும் குளிர்ந்ததாகவும் இருந்தது. மனிதர்களின் நம்பிக்கைகளை அழிப்பதற்காக விதி அதற்கென்றெ படைத்து விட்டிருக்கிற பெரிய சுத்தியலாக அந்த வார்த்தையை நான் நினைத்தேன். அந்த வார்த்தை என்னை நிற்கச் செய்தது.

‘‘நீங்கள் விரும்புவது என்ன?’’- நான் கவலையுடனும் வெறுப்புடனும் கேட்டேன்.

‘‘நாம் கீழே உட்காருவோம்’’- அவன் மீண்டும் ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான். என் கையை இறுகப் பற்றி, கீழே இழுத்து உட்கார வைத்தான்.

அந்த நிமிடத்தில் நாங்கள் நகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் இருந்தோம். அசைவே இல்லாத பனிபடர்ந்த கிளைகளைக் கொண்ட லோக்கஸ்ட், லிலாக் புதர்கள் சூழ்ந்த ஒரு பாதையில் இருந்தோம். நிலவு வெளிச்சத்தில் அவை என்மீது விழுந்து ஒளிர்ந்து கொண்டிருந்தன. பனிபடர்ந்த அடர்த்தியான அந்தக் கிளைகள் எங்கே என் நெஞ்சுக்குள் ஓட்டை போட்டு நுழைந்து என் இதயத்திற்குள் ஆழமாகப் போய்விடப் போகின்றனவோ என்றுகூட நான் நினைத்தேன்.

என்னுடன் இருந்த மனிதனின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்த நான் அவனையே அமைதியாக வெறித்துப் பார்த்தேன்.

அவனுடைய நடவடிக்கைகளைப் பற்றித் தெளிவான ஒரு விளக்கத்தை நானே கொடுக்க முயற்சித்தால், அது அவனுக்குக் கெடுதல் செய்கிற ஒரு விஷயமாகக் கட்டாயம் இருக்கும் என்று நான் நினைத்தேன். ஆனால் அவன் என் சிந்தனைகளை மெருகேற்றினான் என்பதென்னவோ உண்மைதான்.

‘‘நான் அசாதாரணமானவன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவற்றையெல்லாம் உதறிவிடுங்கள். அது எந்த அளவிற்குத் தரம் தாழ்ந்த வெறுக்கத்தக்க ஒரு கருத்து! அப்படி நினைப்பதன் மூலம் ஒருவரைச் சரியாகப் புரிந்துகொள்ள பல வேளைகளிலும் எப்படி எல்லாம் மறுத்து விடுகிறோம். அந்த நபர் நம்மைவிட அதிகமான உண்மைத் தன்மை கொண்டவர் என்று ஒருவரைப் பற்றி நினைப்பதும், அந்த நினைப்பு தொடர்ந்து உள்ளே ஆழமாக நுழைந்து, ஒருவரோடொருவர் கொண்டிருக்கும் உறவை அது எந்த அளவிற்குப் பெரிதாக பாதிக்கிறது என்பதும் யோசிக்கப்பட வேண்டியவை.’’

‘‘ஆமாம். உண்மைதான்’’- நான் சொன்னேன். அந்த மனிதனுக்கு முன்னால் இருப்பது என்பதே எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. ‘‘ஆனால் நீங்கள் தவறாக நினைக்கவில்லையென்றால் நான் கட்டாயம் போகவேண்டும். எனக்கு நேரமாகிவிட்டது.’’

‘‘அப்படின்னா... போங்க’’- அவன் தோளைக் குலுக்கியவாறு சொன்னான்: ‘‘போங்க... ஆனால் ஒரு விஷயத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய உண்மையான அடையாளத்தை இழப்பதற்காக நீங்கள் அவசரப்படுகிறீர்கள்.’’அவன் என் கையை விட, நான் நடந்து சென்றேன்.

வோல்காவிற்கு மேலே மலை மீது இருக்கும் பூங்காவில் அவனை நான் விட்டுவிட்டு வந்தேன். அந்த மலை பனியால் மூடப்பட்டிருந்தது. ஆங்காங்கே ஒற்றையடிப் பாதைகள் கருப்பு நிற ரிப்பன்களைப் போல அங்கு காணப்பபடும். அவனுக்கு முன்னால் நதியைத் தாண்டி ஒரு பெரிய அமைதியான சமவெளி இருந்தது. அவன் அங்கிருந்த பெஞ்ச்சுகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டு, எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். நான் பாதையின் வழியாக நடந்து சென்றேன். நான் அவனிடமிருந்து போகக்கூடாது என்று நினைத்தாலும் நடந்து கொண்டே இருந்தேன். நான் மெதுவாக நடப்பதா? வேகமாக நடப்பதா? அவன் எனக்கு எந்த அளவிற்குச் சிறியவன் என்பதை நான் காட்டவேண்டும் என்றால் எப்படி நடந்தால் சரியாக இருக்கும்?

மிகவும் புகழ்பெற்ற மெட்டு ஒன்றை அவன் விசில் அடிக்க அது என் காதில் விழுந்தது. குருட்டு மனிதன் ஒருவனை வழிநடத்திச் செல்லும் இன்னொரு குருட்டு மனிதனைப் பற்றிய நகைச்சுவை கலந்த சோகப் பாடல் அது. அவன் எதற்காக அந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தான் என்று நான் நினைத்தேன்.

அந்தச் சிறிய மனிதனைப் பார்த்த நிமிடத்திலிருந்து நான் இனம்புரியாத, சிறிதும் எதிர்பாராத, உணர்ச்சிகள் நிறைந்த இருட்டு வளையத்தில் முழுமையாக நான் சூழப்பட்டிருந்ததை உணர்ந்தேன். என்னுடைய சமீபகால குழப்பங்களும் பிரச்சினைகளும் நிறைந்த மனம் மிகப்பெரிய சிந்தனைகளால் ஆக்கிரமிக்கப்பட்டது.

‘நீ எப்படித் தலைவனாக முடியும்

நீயே பார்க்க முடியாத சாலையிலல்?’

நான் அந்த மனிதன் விசில் அடித்துப் பாடிய பாடலில் இருந்த வரிகளை மீண்டும் நினைத்துப் பார்த்தேன்.

நான் திரும்பி, பின்னால் பார்த்தேன். ஒருகையைத் தன்னுடைய முழங்காலில் வைத்துக்கொண்டு, தாடையை கையில் வைத்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டு அவன் விசில் அடித்தான். அவனுடைய முகத்தில் நிலவு ஒளிர்ந்து கொண்டிருதது. அவனுடைய கருப்பு மீசை பிரகாசித்துக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நிறைய அறிவு கொண்டிருக்கும் ஒரு மனிதன் அருகில் இருக்கிறான் என்ற உணர்வால் உந்தப்பட்டு, நான் திரும்பிப் போக முடிவெடுத்தேன். நான் அவனை நோக்கிச் சென்று, அவனுக்கு அருகில் அமர்ந்து மெதுவாக- ஆனால் ஆர்வத்துடன் சொன்னேன்: ‘‘சரி... நாம் எளிய வார்த்தைகளில் பேசுவோம்.’’


‘‘எல்லாருக்கும் தேவைப்படுவதே எளிமைதான்’’- அவன் ஒப்புக்கொண்டான்.

‘‘என்னை ஈர்க்கிற அளவிற்கு உங்களிடம் ஏதோ ஆற்றல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னிடம் நீங்கள் கூற விருப்பப்படும் சில விஷயங்கள் உங்களிடம் உண்மையாகவே இருக்கின்றன என்று நினைக்கிறேன். சரிதானா?’’

‘‘கடைசியில் நீங்கள் கேட்பதற்கான தைரியத்தைப் பெற்று விட்டீர்கள்’’- அவன் சிரித்துக்கொண்டே வியப்புடன் சொன்னான். ஆனால் இப்போது அவனுடைய சிரிப்பு மிகவும் மென்மையானதாகவும், அதில் சந்தோஷ அலைகள் இருப்பதைப்போலவும் நான் உணர்ந்தேன்.

‘‘சரி... சொல்லுங்கள்...’’- நான் சொன்னேன்: ‘‘எந்த விதமான உங்களின் வேறுபாடுகளும் இல்லாமல்- முடியுமானால்...’’

‘‘நல்லது. ஆனால் இந்த வேறுபாடுகள் உங்களின் கவனத்தை இழுப்பதற்குத் தேவைப்பட்டன என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள். எளிமையாகவும் தெளிவாகவும் இருந்த நம்முடைய ஆர்வத்தை நான் வாழ்க்கை தாறுமாறாக ஆக்கிவிட்டது. அது அளவுக்கும் அதிகமான கடுமைத்தன்மையுடனும், அளவுக்கு மேலே குளிர்ச்சியானதாகவும் இருக்கிறது. எதையும் வெப்பப்டுத்தவோ மென்மைப்படுத்தவோ உள்ள ஆற்றலை நாம் இழந்துவிட்டோம். ஏனென்றால், நாமே குளிர்ந்து கடுமையாகவும் இருக்கிறோம். சொல்லப் போனால் நமக்கு மீண்டும் பார்வைகள், கற்பனைகள், கனவுகள், சிந்தனைகள் தேவைப்படுகின்றன. நாம் உருவாக்குகிற வாழ்க்கையில் வண்ணங்கள் இல்லாமல் போய்விட்டன. அது மிகவும் சாதாரணமாகவும் சுவையற்றதாகவும் ஆகிவிட்டது. புதிதாகப் படைக்க வேண்டும் என்று ஒரு காலத்தில் நாம் நினைத்த உண்மை, நம்மை நசுக்கி அழித்துவிட்டது. நாம் என்ன செய்ய வேண்டும்? நல்லது... நாம் முயற்சி செய்வோம். சொல்லப்போனால் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆற்றலும் கற்பனையும் குறிப்பிட்ட காலத்திற்கு பூமியிலிருந்து மேலே எழுந்து வருவதற்கு உதவி செய்யும். அவன் எதை இழந்தானோ அதை மீண்டும் அவன் அடைவதற்கு அது உதவும். அவன் இழந்ததென்னவோ உண்மைதானே? இனிமேலும் பூமியின் எஜமானன் என்று மனிதன் தன்னைக் கூற முடியாது. அவன் வாழ்க்கைக்கு அடிமையாகிவிட்டான். அவன் ஒருகாலத்தில் இந்த பூமியில் கம்பீரமாக இருந்த நிலைக்கான உண்மைகளுக்கு முன் முதுகு வளைந்து நின்றுவிட்டான். நான் சொல்வது உண்மைதானே? தானே உண்டாக்கிக் கொண்ட சில விஷயங்களை முன் வைத்து, அவனே ஒரு முடிவையும் எடுத்து அதை மாற்ற முடியாத சட்டம் என்கிறான். அந்தச் சட்டத்திற்குக் கீழ்ப்படிந்துவிட்டதன் மூலம், தன்னிச்சையான படைப்புத் தன்மை என்ற அம்சத்தை நோக்கிய தன் பாதையையே அடைத்துவிட்டோம் என்பதை அவன் கவனிக்கத் தவறிவிட்டான். படைப்பதற்காக அழியக்கூடிய உரிமைக்கான போராட்டத்தில் அவன் தன்னைத் தானே குறுக்கிக் கொண்டான்.

அவன் இதற்கு மேலும் போராடத் தயாராக இல்லை. அவன் வெறுமனே பின்பற்றுகிறான்... அவன் எதற்காகப் போராடுகிறான்? வீரியத்துடன் போராடுவதற்கு அவன் என்ன நோக்கங்களை வைத்திருக்கிறான்? அதனால்தான் வாழ்க்கை மிகவும் சாதாரணமாகவும், சோர்வு நிறைந்ததாகவும் இருக்கிறது. அதனால்தான் மனிதனின் படைப்பு உத்வேகம் தேங்கி நின்றுவிட்டது. மனதிற்குச் சிறகுகள் கிடைக்குமா என்பதற்காகவும், மனிதனின் நம்பிக்கை தன் மீது படவேண்டும் என்பதற்காகவும் சிலர் கண்ணை மூடிக்கொண்டு தேடுகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் முடிவற்ற அம்சங்கள் இருக்கக்கூடிய- மனிதத்துவத்தை ஒன்றிணைக்கக்கூடிய- கடவுள் வாழக்கூடிய அந்த இடத்தை அடைவதே இல்லை. உண்மையைத் தேடிச் செல்லும் பயணத்தில் தங்களின் பாதையைக் கோட்டை விட்டவர்கள் அழிந்துவிடுவார்கள் ! அவர்கள் அழியட்டும். நாம் அவர்களைத் தொல்லைப்பபடுத்த வேண்டாம். அவர்கள் மீது பரிதாபப்படவேண்டாம். இந்த உலகில் ஏராளமான பேர் இருக்கிறார்கள் ! அரிப்பு - அது முதலில் தேவை. அதாவது - கடவுளைக் காண வேண்டும் என்ற ஆர்வம். கடவுளைக் காண வேண்டும் என்ற ஆர்வத்தைக் கொண்ட மனங்கள் வேண்டும். அப்படிப்பட்ட அரிப்பையும் ஆர்வத்தையும் கொண்டவன் அவர்களுடன் இருப்பான். அவர்களுக்கு அவன் வாழக்கையைத் தருவான். ஏனென்றால் அவன்தான் முழுமையை அடைவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவன். நான் சொல்வது உண்மைதானே?’’

‘‘ஆமாம்’’ - நான் சொன்னேன் : ‘‘நீங்கள் சொல்வது சரிதான்.’’

‘‘நீங்கள் ஒப்புக் கொள்வது குறித்து சந்தோஷம்’’ - என்னுடன் இருந்த அந்த மனிதன் ஒரு பெரிய சிரிப்புடன் என்னையே கூர்ந்து பார்த்தான். பிறகு, அமைதியாக எங்கோ தூரத்தில் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் நீண்ட நேரம் அமைதியாக இருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. பொறுமை இல்லாமல் நான் தவித்தேன். தூரத்தில் பதித்த கண்களை எடுக்காமல் அதே நேரத்தில் என்னையும் பார்க்காமலே அவன் கேட்டான் : ‘‘உங்களின் கடவுள் யார்?’’

இந்தக் கேள்வியைக் கேட்பது வரையில் அவன் மிகவும் அமைதியாகவும் அன்புடனும் என்னுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதே ஒரு சுவையான அனுபவமாக இருந்தது. எல்லா சிந்திக்கும் மனிதர்களைப் போல, அவனும் சற்று கவலை கொண்ட மனிதனாக இருந்தான். அந்த குணம்தான் அவனை என்னுடன் மிகவும் நெருக்கமாக்கியது. நான் அவனைப் புரிந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். என்னுடைய வியப்பு என்னை விட்டுப் போக ஆரம்பித்தது. ஆனால் அவன் தனக்குத்தானே உண்மையாக இருக்கும் பட்சம், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் எந்த மனிதனும் விடையைக் கண்டுபிடிக்க மிகவும் சிரமப்படும் ஒரு இக்கட்டான கேள்வியை இப்போது அவன் கேட்டுவிட்டான். என் கடவுள் யார்? எனக்கு அது தெரியுமா?

இந்தக் கேள்வியால் நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன். யார்தான் தோற்காமல் இருக்க முடியும். என்னுடைய இடத்தில் யார்தான் தன்னுடைய சிந்திக்கும் ஆற்றலை அப்படியே காப்பாற்றிக் கொண்டிருக்க முடியும்? அவன் தன்னுடைய கூர்மையான கண்களால் என்னைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, என்னுடைய பதிலுக்காகக் காத்திருந்தான்.

‘‘பதில் சொல்ல வேண்டிய நீங்கள் நீண்ட நேரம் மவுனமாகவே இருந்து கொண்டிருக்கிறீர்கள். அந்தக் கேள்வியை இந்த மாதிரி கேட்டிருந்தால். ஒருவேளை என்னிடம் சில விஷயங்களைக் கூற உங்களால் முடிந்திருக்கும். நீங்கள் ஒரு எழுத்தாளர். ஆயிரக்கணக்கான மக்கள் உங்களைப் படிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்தியைப் பதிய வைக்க விரும்புகிறீர்கள்? மற்றவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறதா என்று எப்போதாவது மனதில் நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா?’’

என்னுடை மனதின் உள் வேலைகளை இந்த அளவிற்கு அருகில் பார்க்க வேண்டிய கட்டாயம் எனக்கு இதற்கு முன்பு எந்தச் சமயத்திலும் உண்டானது இல்லை. பிறரை ஈர்க்க வேண்டும் என்பதற்காக நான் மிகைப்படுத்துகிறேன் அல்லது என்னை நானே துயரத்திற்கு ஆளாக்கிக் கொள்கிறேன் என்று யாரும் நினைக்கக் கூடாது. ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சை கேட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை.


எனக்குள் மென்மையான உணர்வுகளும் ஆசைகளும் இருப்பதை நான் கண்டுபிடித்திருக்கிறேன். நல்லவை என்று சொல்லப்படும் விஷயங்கள் எனக்குள் நிறையவே இருபபதை நான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ஆனால் இவற்றையெல்லாம் இணைக்கக்கூடிய, வாழ்க்கையின் சகல அம்சங்களையும் உள்ளடக்கிய, தெளிவான, முழுமையான சிந்தனை எது என்பதைத்தான் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. என் ஆன்மாவில் வெறுப்பு நிறையவே இருந்திருக்கின்றன. அது தொடர்ந்து அங்கு இருந்து கொண்டு செயல்பட்டிருக்கிறது. சில வேளைகளில் அது வெடித்து கோப நெருப்பாக வெளியே கிளம்பி வரவும் செய்திருக்கிறது. அதே நேரத்தில் என் மனதில் நிறைய சந்தேகங்களும் இருந்திருக்கின்றன. பல வேளைகளில் அவை என் மனதிற்குச் சுமையாகக்கூட இருந்திருக்கின்றன. நான் உள் மனதில் மிகவும் களைத்துப் போய் அல்லல்பட்டிருக்கிறேன். என்னை மீண்டும் வாழ்க்கைக்குள் கொண்டுவர எதனாலும் முடியாது. என் இதயம் இறந்த மனிதனின் இதயத்தைப்போல குளிர்ந்து போய்க் காணப்பட்டது. என் மனம் தூங்கியது. என் சிந்தனை கனவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில் குருடனாக, செவிடனாக, ஊமையாக, இரவும் பகலும் எத்தனையோ நாட்களாக எந்தவித முடிவும் இல்லாமல், எதற்காகவும் ஆசைப்படாமல், எதையும் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறேன். அப்படிப்பட்ட நேரங்களில், சில தெரியாத காரணங்களால் புதைக்கப்படாமல் போன பிணத்தைப் போல நான் உணர்ந்திருக்கிறேன். அப்படி இருப்பதில் இருக்கும் கொடுமை வாழவேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளும்போது மேலும் அதிகமாகும். அப்படி இருப்பதில் அர்த்தம் குறைவு என்பதைப் போலவும் அதிக குழப்பமானதாகவும்கூட இருக்கும். சொல்லப் போனால் வெறுப்பில் இருக்கும் சந்தோஷத்தைக்கூட அது எடுத்து விடும்.

சரி... என்னுடைய செய்தி என்ன? நான் எதைக் கற்றுத்தர முயற்சித்தேன்? நான் முன்பு எப்படி இருந்தேனோ அப்படித்தான் இப்போதும் இருக்கிறேன். மக்களுக்கு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது  நீண்ட காலமாக மக்களுக்கு எவையெல்லாம் கூறப்பட்டு வருகின்றனவோ, அவையேதான் எப்போதும் அவர்களுக்குச் சொல்லப்படுகின்றனவா? மக்கள் கவனிக்க வேண்டும் என்று கூறப்படும் விஷயங்கள் அவர்களை மேலும் சிறந்தவர்களாக ஆக்கவில்லையா? இந்தக் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் அவர்கள்மீது, பெரும்பாலும் அவர்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாகக் கொண்டு போய் திணித்துக் கற்றுத் தருவதற்கு எனக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் மீது உண்மையான நம்பிக்கை கொண்டு, என்னுடைய முழுமையான புரிதலுடன் நான் அந்தக் காரியத்தைச் செய்கிறேனா? எனக்கு அருகில் அமர்ந்திருக்கும் இந்த மனிதனிடம் நான் என்ன கூறுவது? ஆனால் அவனோ என் பதிலுக்காகக் காத்திருந்து களைத்துப்போய் மீண்டும் பேசத் தொடங்கிவிட்டான்.

‘‘ஆசை உங்களுடைய புகழை இன்னும் அழிக்காமல் இருக்கிறது என்பதைப் பார்க்க முடியாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில், நான் இந்தக் கேள்விகளையே உங்களிடம் கேட்டிருக்கக் கூடாது. நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இருக்கிறீர்கள். இதிலிருந்து உங்கள்மீது நீங்கள் கொண்டிருக்கும் அன்பு அறிவுப் பூர்வமானதாக இருக்கிறது என்ற முடிவுக்குக் என்னால் வர முடிகிறது. ஏனென்றால், அதைத் துறப்பதால் உண்டாகும் தொல்லையால் கூட நீங்கள் மூழ்கிப் போய்விடக் கூடாது. அந்த விஷயத்திற்காக என்னுடன் நீங்கள் கொண்டிருக்கும் முரண்பாட்டால் உண்டான கோபத்திலிருந்து உங்களை விடுதலை செய்கிறேன். ஒரு சிறிய தவறு செய்த மனிதனிடம் - ஆனால் ஒரு பெரிய குற்றவாளியிடம் அல்ல... என்ற வகையில்... உங்களுடன் நான் பேசுகிறேன்.

ஒரு காலத்தில் நம் மத்தியில் மிகப்பெரிய எழுத்தாளர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்க்கையையும் மனித மனங்களையும் மிகவும் கூர்ந்து கவனித்தவர்கள். அவர்களுடைய எழுத்துக்களின் மூலம், மனிதர்கள் முழுமையான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று உத்வேகம் பெற்றார்கள். மனிதனிடம் ஆழமான நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை அந்த எழுத்துக்களின் மூலம் கற்றார்கள். அவர்கள் எந்தச் சமயத்திலும் அழிந்து போகக்கூடிய நூல்களை எழுதவில்லை. ஏனென்றால் அவற்றில் அழிவற்ற உண்மைகள் இருந்தன. அவர்களின் பக்கங்களில் அழகு நிரந்தரமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவர்களின் கதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் உலாவினர். உத்வேகம் பெற்று உயிரோட்டத்துடன் இருந்தனர். அந்தப் புத்தகங்களில் வீரமும் இருந்தது. அனல் தெறிக்கும் சினமும் இருந்தது. உண்மையான; வற்புறுத்தல் இல்லாத காதலைப் படைத்தனர். அவற்றில் மிகையான ஒரு வார்த்தைகூட இருக்காது. அந்தப் புத்தகங்கள்தான் உங்களுடைய மனதை வளர்த்தன என்ற விஷயம் எனக்குத் தெரியும். எனினும் நான் கூறுகிறேன் - உங்களுடைய மனம் மிகவும் மோசமாகவே அறிவூட்டப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நீங்கள் உண்மையைப் பற்றியும், காதலைப் பற்றியும் எழுதுவது பொய்யானதாகவும் போலித்தனமானதாகவும் இருக்கிறது. அதைக் கூற வேண்டும் என்று உங்களை நீங்களே வலிய வற்புறுத்துவதைப் போல இருக்கிறது. நீங்கள் நிலவைப் போன்றவர். நீங்கள் பிரதிபலிக்கும் வெளிச்சத்தை வைத்து ஒளிவீசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் வெளிச்சம் பரிதாபப்படும் அளவிற்கு மிகவும் பலவீனமான இருக்கிறது. அது நிழல்கள் மீது விழுகிறது. அதன் பலவீனமான ஒளிக்கீற்று யாரையும் சூடு படுத்துவதில்லை. மக்களுக்கு உண்மையாகவே பயனுள்ள ஏதாவது விஷயத்தைத் தரும் விஷயத்தில் நீங்கள் மிக மோசமாக இருக்கிறீர்கள். அப்படி நீங்கள் தரும் விஷயம் வாழ்க்கையை அதன் சிந்தனை அழகுடனும் வார்த்தைகளுடனும் உன்னத நிலைக்கு மேம்படுத்துவதற்குப் பதிலாக, மனிதனுக்கு நீங்கள் தேவை என்ற அளவில் உங்களின் இருத்தல் விஷயத்தை அதன் மூலம் உயர்த்திக் கொள்கிறீர்கள். வாழ்க்கையிலிருந்தும் மக்களிடமிருந்தும் அதிகமாக எடுப்பதற்காக நீங்கள் தருகிறீர்கள். அன்பளிப்புகள் தருவதென்றால், அந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறீர்கள். சொல்லப் போனால் நீங்கள் கடனுக்குப் பணம் தரும் மனிதராகவே இருக்கிறீர்கள். உங்களுக்கு கட்டப்படும் வட்டிக்காக நீங்கள் உங்களின் அனுபவத்தில் ஒரு பகுதியை வழங்குகிறீர்கள். உங்களின் பேனா வெறுமனே உண்மையைப் பற்றி கிறுக்கல்கள் போடுகிறது. வாழ்க்கையின் மிக சாதாரண விஷயங்களை மிகவும் கவனமாகக் கிளறிப் பார்க்கிறது. சாதாரண மக்களின் சாதாரண இடத்து உணர்வுகளை விளக்கும்போது, ஒருவேளை நீங்கள் பல தாழ்ந்த நிலை உண்மைகளை வெளியிடலாம். ஆனால் அவர்களுக்காக ஆன்மாவை உயர்த்தும் வண்ணம் எதையாவது உங்களால் படைக்க முடியுமா? முடியாது ! சாதாரண இடத்தில் இருக்கும் குப்பைகளைத் தோண்டுவதில் பயன் இருக்கிறது என்பதில் நீங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். அதில் கவலையைத் தரும் சிறிய உண்மைகளைத் தவிர, அதற்குமேல் வேறு எதுவும் இல்லை என்பதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்.


அதன்மூலம் இயற்கையிலேயே மனிதன் மிகவும் மோசமானவன், கோணல் புத்தி கொண்டவன், நேர்மையற்றவன், எல்லா நேரங்களிலும் எல்லா வழிகளிலும் பல வெளிச் சூழ்நிலைகளை நம்பியிருப்பவன், சக்தியற்றவன், கெட்ட எண்ணம் கொண்டவன், தான் தனியே இருக்கும்போது துண்டிக்கப்பட்டவன் என்பதையும் நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள். இந்த நேரத்தில் அவன் அனேகமாக இதை ஒப்புக் கொண்டிருப்பான் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனென்றால் அவனுடைய ஆன்மா வித்தியாசமானதாகவும் மனம் பலவீனமானதாகவும் இருக்கின்றன. அவனுடைய நிலை ஏன் அப்படி இருக்கிறது?- புத்தகங்களில் தான் படைக்கப்பட்ட விதம் எப்படி என்பதை அவன் பார்க்கிறான் - குறிப்பாக அறிவாளித்தனத்துடன் என்று தவறாக நினைக்கும் அளவிற்குத் திறமையுடன் எழுதப்பட்டிருக்கும் நூல்களில். ஆனால் அது ஒரு வசிய சக்தியே. நீங்கள் ஒரு மனிதனை எப்படி சித்தரித்திருக்கிறீர்களோ, அப்படியேதான் அவன் தன்னைப் பார்க்கிறான். அவன் எந்த அளவிற்கு மோசமானவன் என்று காட்டியிருக்கிறீர்களோ அப்படியேதான் அவன் தன்னைப் பார்க்கிறான். சிறந்த மனிதராக வரக்கூடிய சாத்தியத்தை அவனால் பார்க்க முடிவதில்லை. அவனுக்கு அந்த சாத்தியத்தை நீங்கள் காட்டியிருக்கிறீர்களா? உங்களால் சாதித்துக் காட்ட முடியுமா, நீங்கள் உங்களை... என்ற நிலையில்? ஆனால், நான் உங்களை எதுவும் சொல்லாமல் விடுகிறேன். ஏனென்றால், நான் பேசுவதைக் கேட்கும்போது, உங்களை நியாயப்படுத்துவது எப்படி என்பதை உங்களால் சிந்திக்க முடியாது. நான் சொன்னதை மறுக்கவும் முடியாது. ஒரு ஆசிரியர், அவர் நேர்மையானவராக இருக்கும்பட்சம், எல்லா நேரங்களிலும் அவர் ஒரு கூர்ந்து கவனிக்கும் மாணவனாகவும் கட்டாயம் இருக்க வேண்டும். உங்களைப் போன்ற இன்றைக்கு இருக்கும் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நீங்கள் கொடுப்பதைவிட அவர்களிடமிருந்து மிகவும் அதிகமாக எடுத்த்க் கொள்கிறீர்கள். ஏனென்றால், எது இல்லையோ அதைப்பற்றிதான் நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

ஆனால் மனிதனிடம் உயர்ந்த விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். உங்களிடம் என்று சில விஷயங்கள் இருக்கத்தானே செய்யும்? மற்ற சாதாரண மனிதர்களிடமிருந்து நீங்கள் எந்த வகையில் மாறுபடுகிறீர்கள்? அவர்களைப் பற்றி இரக்கமே இல்லாமல் மிகவும் மேலோட்டமாக, உங்களை நீங்களே ஆசிரியர்களாக நினைத்துக் கொண்டு, உன்னதமான விஷயங்களின் வெற்றிக்காக மோசமானவற்றை அழிக்க வந்தவர்கள் என்று காட்டிக்கொண்டு எப்படிச் செயல்படுகிறீர்கள்? ஆனால் கெட்டது, நல்லது - அவர்களை வித்தியாசப்படுத்திக் காட்டிய உங்களின் முயற்சிகளுக்கு நன்றி - இரண்டும் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு, கயிறுகளாலான இரண்டு பந்துகளைப்போல - கருப்பிலும் வெள்ளையிலும் இருக்கும் அவை தங்களின் உண்மையான வண்ணத்தை ஒன்றின்மீது ஒன்றில் தடவிக்கொண்டு சாம்பல் நிறமாக மாறி விடுவதை நீங்கள் கவனித்தீர்களா? இல்லை. நீங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் இல்லை. உங்களைவிட பலசாலியான வேறு யாரையாவது அவர் தேர்ந்தெடுத்திருப்பார். அவர் அவர்களின் இதயத்திற்குள் வாழ்க்கையின்மீது, உண்மையின்மீது, மனிதர்களின்மீது அன்பு கலந்த காதல் இருக்கும்படி புகட்டி விட்டிருப்பார். நம்முடைய இருட்டில் அவை சக்தி, புகழ் ஆகியவையாக ஒளிர்ந்து வெளிச்சம் தந்து கொண்டிருக்கும். ஆனால் நீங்கள் சாத்தானின் வெற்றியைக் காட்டும் விளக்குகளைப் போல புகையுடன் எரிந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களுடைய புகை மனிதர்களின் மனதிற்குள்ளும் ஆன்மாவிற்குள்ளும் நுழைந்து அவர்களை விஷம் கொண்டவர்களாக ஆக்கிவிட்டதே. தன்மீதே நம்பிக்கை இல்லாதவர்களாக அது அவர்களை விஷப்படுத்தி விட்டது. இப்போது சொல்லுங்கள் - நீங்கள் என்ன பிரச்சாரம் செய்வீர்கள்?’’

அந்த மனிதனின் சூடான மூச்சு என் கன்னத்தில் படுவதை நான் உணர்ந்தேன். அவனுடைய பார்வையைச் சந்திப்பதற்கு பயந்து நான் என் கண்களை வேறு பக்கம் திருப்பிக் கொண்டேன். அவனுடைய வார்த்தைகள் என்னுடைய மூளைக்குள் நெருப்புப் பொறிகளைப் போல எரிந்து கொண்டிருந்தன. நான் அதைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். நான் அதைத் தாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். அவனுடைய சாதாரண கேள்விகளுக்குப் பதில் சொல்வது என்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதை வேதனையுடன் நான் உணர்ந்தேன். நான் பதில் எதுவும் கூறவில்லை.

‘‘அதனால் நீங்களும் உங்களைப் போன்ற மற்றவர்களும் எந்த வாசகர்களுக்காக எழுதினீர்களோ, அந்த வாசகன் கோபமடைந்து கேட்பான் - ‘‘என்ன நோக்கத்திற்காக நீங்கள் எழுதுகிறீர்கள்?’’ என்று நீங்கள் எவ்வளவோ எழுதுகிறீர்கள். மக்களின் இதயங்களில் அன்பான உணர்வுகளை எழுப்ப வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? இல்லை. நீங்கள் சக்தியற்ற - உயிரற்ற வார்த்தைகளால் அதை எந்தச் சமயத்திலும் செய்ய முடியாது. வாழ்க்கைக்குப் புதிதாக உங்களால் எதையும் தர முடியாது. சொல்லப் போனால் இருந்த பழையதையேகூட நீங்கள் குழப்பி, தாறுமாறாக்கி, வடிவமே இல்லாத ஒன்றாக்கி விடுகிறீர்கள். உங்களைப் படிக்கும்போது நாங்கள் எதையும் தெரிந்துகொள்ளவில்லை. அதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம் - உங்களைத் தவிர, எல்லாமே சாதாரண இடங்கள், சாதாரண மக்கள், சாதாரண சிந்தனைகள், சம்பவங்கள்... மனிதனின் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஆன்மாவைப் பற்றியும், அது மறுமலர்ச்சி அடைவதைப் பற்றியும் யார் எப்போது பேசப் போகிறார்கள்? உருவாக்குவதற்காக அழைப்பு எங்கே? தைரியம் நிறைந்த பாடங்கள் எங்கே இருக்கின்றன? ஆன்மாவை மேம்படுத்திக் கொண்டு செல்லும் நம்பிக்கை தரும் வார்த்தைகள் எங்கே?

நீங்கள் திரும்பத் திரும்ப உருவாக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களைவிட வாழ்க்கை வேறு எதையும் தரவில்லை என்று நீங்கள் கூறிவிடலாம். ஆனால், அப்படிச் சொல்லாதீர்கள். அது வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம். வார்த்தைகள் என்ற கொடுப்பினையைக் கையில் வைத்துக்கொண்டு, தன்னைத்தானே சக்தி அற்றவன் என்று வாழ்க்கையைப் பார்த்துக் கூறுவதும், அதற்குமேல் எழ முடியாமல் இருப்பதும், மனிதனுக்கு அவமானம் தரக்கூடிய செயல் என்பதுதான் உண்மை. வாழ்க்கையில் நீங்கள் அதே இடத்திலேயே நின்று கொண்டு, இப்போது வாழ்க்கையிடம் இல்லாதவற்றை உங்களின் சிந்தனையின் செயல்பாட்டால் படைக்க முடியாமல் இருந்தால் உங்களின் வேலையால் என்ன பயன்? உங்களின் அழைப்பிற்கு நீங்கள் என்ன நியாயம் கூறுவீர்கள்? சம்பவங்களே நடைபெறாத வாழ்க்கையின் குப்பைத்தனமான படங்களைத் தந்து, அவர்களின் மனங்களைத் குழப்பத்திற்குள்ளாக்கி, எவ்வளவு பெரிய கெடுதலை நீங்கள் செய்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள். விஷயங்களைச் சித்தரிக்கும் ஆற்றல் உங்க¬ளுக்கு இல்லை என்பதை நீங்கள் கட்டாயம் ஒப்புக் கொள்ள வேண்டும். வாழ்க்கையைப் பற்றிய உங்களின் சித்தரிப்பு ஒரு வெட்கப்படத்தக்க சூழ்நிலையை உங்களிடம் உண்டாக்கும் . இருத்தலின் மற்ற வடிவங்களைப் படைக்க வேண்டும் என்ற வேட்கையை அது உண்டாக்கும். வாழ்க்கையின் நாடித்துடிப்பை உங்களால் வேகப்படுத்த முடியுமா? மற்றவர்கள் பண்ணியதைப்போல சக்தியால் அதை உங்களால் நிறைக்க முடியுமா?’’


அந்த வினோதமான மனிதன் சற்று நேரத்திற்குத் தன் பேச்சை நிறுத்தினான். நான் மிகவும் அமைதியாக அவனுடைய வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

‘‘நான் என்னைச் சுற்றிலும் ஏராளமான அறிவாளிகளைப் பார்க்கிறேன். அவர்களில் சிலர் உயர்ந்த மனம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட உணர்வுகளைக் கொண்ட அவர்கள் உடைந்து போய் இதயத்தில் நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கிறார்கள். நான் எப்போதும் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கிறேன் - ஒரு மனிதன் எந்த அளவிற்கு நல்லவனாக இருக்கிறானோ, பரிசுத்தமானதாகவும் ஆன்மாவில் நேர்மை குணம் கொண்டவனாகவும் இருக்கிறானோ, தன்னிடம் இருக்கும் சிறிய அளவு சக்தியை வைத்துக் கொண்டு அவன் வாழ்வதற்கு மிகுந்த வேதனையும் கஷ்டமும் படுகிறான். பெரும்பாலான அப்படிப்பட்ட மக்கள் தனிமையில் விடப்பட்டவர்களாகவும் கவலை நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அதைவிடச் சிறந்த நிலைக்காக எந்த அளவிற்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். அதை உருவாக்குவதற்கான பலம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் அந்த அளவிற்கு நசுக்கப்பட்டவர்களாகவும் பரிதாபப்படும் நிலையிலும் இருப்பதற்கு - உரிய நேரத்தில் அவர்கள் மேலெழுந்து வருவதற்கு உதவக்கூடிய வார்த்தைகள் கூறப்படாதது தானே காரணம்?’’

‘‘இன்னும் சில விஷயங்கள்...’’ - அந்த மனிதன் தொடர்ந்து சொன்னான் : ‘‘ஆன்மாவைச் சுத்தம் செய்யும் சந்தோஷமான சிரிப்பை உங்களால் எழச் செய்ய முடியுமா? உங்களைச் சுற்றிலும் பாருங்கள். மனிதர்கள் எப்படிச் சிரிக்க வேண்டும் என்பதையே மறந்துவிட்டார்கள். அவர்கள் கசப்புடன் சிரிக்கிறார்கள். அவர்கள் பொறாமையுடன் சிரிக்கிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் கண்ணீர் மூலம் சிரிக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் ஒரு சந்தோஷமான, உண்மையான சிரிப்பை, வயதான மனிதர்களிடமிருந்து பெரும்பாலும் வரக்கூடிய சிரிப்பை நீங்கள் எந்தச் சமயத்திலும் கேட்டிருக்க முடியாது. நல்ல சிரிப்பு ஆன்மாவை நலத்துடன் வைத்திருக்கும். மனிதன் சிரிக்கக்கூடியவனாக இருக்க வேண்டும். ஏனென்றால் மிருகங்களிடம் இல்லாத பல உயர்ந்த விஷயங்களில் சிரிப்பும் ஒன்று. கவலைகள் நிறைந்த சிரிப்பைத் தவிர, மக்களிடம் உங்களால் வேறு எந்தச் சிரிப்பையும் வெளிக்கொண்டு வரமுடியுமா? தாழ்ந்த தன்மையைக் கொண்ட சிரிப்பு மட்டுமே அவனிடம் இருக்கிறது. அவன் கோமாளித்தனமாக இருக்கிறான். அதற்குக் காரணம் அவனிடம் இருக்கும் கீழான தன்மைகள். உங்களின் கற்றுத்தரும் உரிமையில் சில நல்ல நோக்கங்கள் இருக்க வேண்டும். அவை நல்ல உணர்வுகளை, இருக்கும் சிலவற்றை அழித்துப் புதிதாக சிலவற்றைப் படைக்கக்கூடிய சக்தியை அளிப்பவையாக இருக்க வேண்டும். கோபம், வெறுப்பு, வீரம், வெட்கம், தோல்வி, விரக்தி- பூமியில் இருக்கும் எல்லாவற்றையும் இந்த நெம்புகோல்களைக் கொண்டுதான் அழிக்க முடியும். உங்களால் இப்படிப்பட்ட நெம்புகோல்களை உருவாக்க முடியுமா?அவற்றைச் செயல்படுத்த உங்களால் முடியுமா? மக்களிடம் பேசுவதற்கான உரிமை உங்களுக்கு வேண்டுமென்றால், அவர்களிடம் இருக்கும் குறைகளைப் பார்த்து உங்களுக்குப் பெரிய அளவில் வெறுப்பு வரவேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் படும் கஷ்டங்களைப் பார்த்து அவர்களின் மீது பெரிய அளவில்  அன்பு உண்டாக வேண்டும். அப்படிப்பட்ட உணர்ச்சிகள் எதுவும் உங்களின் இதயத்தில் இல்லையென்றால், எதையாவது கூறுவதற்கு முன்னால் மீண்டும் அமைதியாக சிந்தித்துப் பார்ப்பது நல்லது.’’

பொழுது விடிந்து கொண்டிருந்தது. ஆனால் என்னுடைய ஆன்மாவில் எப்போதும் வளர்ந்து கொண்டிருக்கும் இருள் நிறைந்திருந்தது. மனதில் ரகசியமாக எதையும் வைத்திருக்கும் பழக்கம் இல்லாத  அந்த மனிதன் பேசிக்கொண்டே போனான். சில நேரங்களில் இந்தச் சிந்தனை என்னிடம் உண்டாகத்தான் செய்தது: ‘இவன் மனிதன்தானா?’

அவன் சொன்ன விஷயங்களில் நான் ஆழமாகப் பாதிக்கப்பட்டு விட்டேன். அதைப்பற்றி மேலும் சிந்திப்பதற்கு முன்னால், அவனுடைய வார்த்தைகள் ஊசிகளைப்போல என் மூளைக்குள் நுழைந்து கொண்டிருந்தன.

‘‘மொத்தத்தில் வாழ்க்கை மிகவும் ஆடம்பரமாகிவிட்டது. அது புதிய தளங்களை நோக்கி முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறது. அது ஆழமாகவும் போய்க் கொண்டிருக்கிறது. அந்தப் போகும் போக்கு மெதுவாக இருக்கிறது. அதற்குக் காரணம் நம்மிடம் அதை வேகப்படுத்துவதற்கான பலமோ ஆற்றலோ இல்லை. ஆமாம் வாழ்க்கை வசதி மிக்கதாக ஆகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் கேள்விகள் கேட்பதைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். யார் பதில்களைக் கூறுவது? நீங்கள்தான்- நீதிபோதகர்களாகத் தங்களைத் தாங்களே நியமித்துக் கொண்ட நீங்கள்தான் பதில் கூறவேண்டும். மற்றவர்களிடம் விளக்கிக் கூறும் அளவிற்கு வாழ்க்கையைச் சரியானபடி நீங்கள் புரிந்துகொண்டிருக்கிறீர்களா? நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன தேவை என்பது உங்களுக்குத் தெரியுமா? எதிர்காலம் என்ன வேண்டுகிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கான ஆற்றல் உங்களுக்கு இருக்கிறதா? வாழ்க்கையின் சோகங்களால் பாதிக்கப்பட்டு, ஒடிந்துபோய் ஆன்மாவை இழந்து கிடக்கும் மனிதனைத் தட்டி எழுப்புவதற்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்? மனிதன் உற்சாகமே இல்லாதவனாக ஆகிவிட்டான். அவனுக்கு வாழ்க்கையின் மீது சிறிதளவே ஆர்வம் இருக்கிறது. மதிப்புடன் வாழவேண்டும் என்ற அவனுடைய ஆசை கிட்டத்தட்ட அழிந்தே போய்விட்டது. அவன் மிகவும் எளிமையாக, ஒரு பன்றியைப் போல வாழ விரும்புகிறான். உங்கள் காதில் விழுகிறதா? ‘நேர்மை’ என்ற வார்த்தையைக் கேட்டால் அவன் பயங்கரமாக சிரிக்கிறான். சதையும் தடிமனான தோலும் கொண்ட ஒரு குவியல் எலும்புகளின் உருவமாக மனிதன் மாறிக் கொண்டிருக்கிறான். அந்தப் பெரிய எலும்புக் குவியல் உத்வேகத்தால் செயல்படவில்லை. அதற்கு பதிலாக காமத்தால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவனுக்கு கவனிப்பு தேவைபப்படுகிறது. துரிதமாக செயல்படுங்கள்! அவன் மனிதப் பிறவியாக இருக்கும்போதே, அவன் வாழ்வதற்கு உதவி செய்யுங்கள். நீங்களே அழுதுகொண்டும் முனகிக் கொண்டும் தவித்துக்கொண்டும் இருக்கும் நிலையில், வாழ வேண்டும் என்ற அவனுடைய ஆசைக்கு உங்களால் எப்படி உதவ முடியும்? அவன் துண்டிக்கப்பட்டு இருக்கும் நிலையை வேறொரு நிலையில் இருக்கும் உங்களால் எப்படி விளக்கிக் கூற முடியும்? வாழ்க்கை அழுகிப் போன விஷயங்களால் நாறிக் கொண்டிருக்கிறது. இதயங்கள் கோழைத்தனத்தாலும் அடிமைத்தனத்தாலும் நிறைந்திருக்கின்றன. மனங்களும் கைகளும் சோம்பேறித்தனத்தின் மென்மையான கயிறுகளால் கட்டப்பட்டிருக்கின்றன. இந்தக் கறைபட்ட தன்மைகளுக்குள் நீங்கள் எதைச் செலுத்த முடியும்? எந்த அளவிற்குச் சிறியவர்களாகவும் மோசமானவர்களாகவும் இருக்கிறீர்கள் நீங்கள்! உங்களைப் போன்றவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறீர்கள்! ஒளிரும் இதயத்தையும் எல்லாரையும் அரவணைக்கக் கூடிய பலமான மனதையும் கொண்ட, உறுதி படைத்த அன்பான மனிதன் தோன்றினால் மட்டுமே இது சாத்தியம்! வெட்கப்படத்தக்க அமைதியான சூழ்நிலை சக்தி படைத்த வார்த்தைகளால் ஒலிக்கும். அவை மணியின் ஓசைகளைப் போல் முழங்கிக் கொண்டிருக்கும். இருந்தும் இறந்தவர்களைப் போல இருப்பவர்களின் விரக்தி அடைந்த ஆன்மாக்கள் உலுக்கப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும்...’’


இந்த வார்த்தைகளைக் கூறிவிட்டு, அவன் நீண்ட நேர அமைதியில் ஆழ்ந்துவிட்டான். நான் அவனைப் பார்க்கவில்லை. வெட்கம், கோபம்- இவற்றில் எதை அதிகமாக உணர்ந்தேன் என்பதை என்னால் ஞாபகப்படுத்திப் பார்க்க முடியவில்லை.

‘‘என்னிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’- முக்கியமான கேள்வி வெளியே வந்தது.

‘‘எதுவும் இல்லை’’- நான் சொன்னேன்.

மீண்டும் அமைதி.

‘‘பிறகு இப்போது எப்படி வாழ்வீர்கள்?’’

‘‘எனக்குத் தெரியாது’’- நான் சொன்னேன்.

‘‘நீங்கள் என்ன சொல்வீர்கள்?’’

நான் என் அமைதியைக் கடைப்பிடித்தேன்.

‘‘அமைதியாக இருப்பதைவிட உயர்ந்த உலக அனுபவம் கிடையாது.’’

இந்த வார்த்தைகளுக்கும் அதைத் தொடர்ந்து வந்த சிரிப்புக்கும் இடையில் இருந்த இடைவெளி என்னை வெறுப்படையச் செய்தது. நீண்டநேரம் மென்மையான இதயத்துடனும் சந்தோஷத்துடனும் சிரிக்க வாய்ப்பு கிடைக்காத ஒரு மனிதனைப் போல அவன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரித்தான். ஆனால் அந்த உரத்த சிரிப்பு என் இதயத்தில் ரத்தம் வடியச் செய்தது.

‘‘ஹா... ஹா... ஹா... நீங்கள் வாழ்க்கையின் ஆசிரியர்களில் ஒருவரா? இப்படிப்பட்ட குழப்ப நிலைக்கு மிகவும் சர்வ சாதாரணமாக இறங்கி வந்துவிட்டீர்களே! ஹா... ஹா... ஹா... என்னுடன் ஏதாவது செய்ய நேர்ந்தால், பிறக்கும்போதே வயதானவர்களாகப் பிறந்த உங்களைப் போன்ற ஒவ்வொரு இளைஞனும் இதே மாதிரி குழப்பமடையத்தான் செய்வார்கள். பொய்களின் கவசத்திற்குப் பின்னால் மறைந்து கொண்டிருப்பவன் அரக்கத்தனம், வெட்கமற்றதன்மை ஆகியவை கொண்டவன்- இவர்கள் மட்டுமே தன்னுடைய மனசாட்சியின் தீர்ப்புக்கு முன்னால் சிறிதும் அசையாமல் இருப்பார்கள். நீங்கள் எந்த அளவிற்கு பலசாலி! ஒரு சிறிய தள்ளலிலேயே நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள்! ஏதாவது சொல்லுங்கள். உங்களை நியாயப்படுத்த என்னிடம் ஏதாவது சொல்லுங்கள். நான் சொன்னதை மறுத்துப் பேசுங்கள். வெட்கம், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்திருக்கும் உங்களின் இதயத்தை அவற்றிலிருந்து விடுதலை செய்யுங்கள். சிறிது பலமும் நம்பிக்கையும் உங்களிடம் இருப்பதைக் காட்டுங்கள். ஒரு நிமிடத்தில் உங்களின் முகத்தில் நான் எறிந்த வார்த்தைகளை நான் திரும்பப் பெற்றுக் கொள்ளப்போகிறேன். நான் உங்களுக்கு முன்னால் வளைந்து நிற்கிறேன்... நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதைக் காட்ட உதவும் ஏதாவது உங்களின் இதயத்தில் இருந்தால், அதை எனக்குக் காட்டுங்கள். எனக்கு ஒரு ஆசிரியர் தேவைப்படுகிறார். ஏனென்றால், நான் ஒரு மனிதப் பிறவி. வாழ்க்கையின் இருட்டுக்குள் நான் என்னுடைய பாதையைத் தவறவிட்டுவிட்டேன். வெளிச்சத்தை நோக்கி, உண்மையை நோக்கி, அழகை நோக்கி, புதிய வாழ்க்கையை நோக்கிப் போகக்கூடிய ஒரு பாதையை நான் தேடிக் கொண்டிருக்கிறேன். அந்தப் பாதையை எனக்குக் காட்டுங்கள். நான் ஒரு மனிதப் பிறவி. என்னை வெறுங்கள், என்னை அடியுங்கள். ஆனால் வாழ்க்கையின் இன்னொரு பக்கச் சேற்றிலிருந்து என்னைப் பிடித்து வெளியே கொண்டு வாருங்கள்! இப்போது இருப்பதைவிட நான் சிறந்தவனாக இருக்க விரும்புகிறேன். அதை எப்படிச் செய்வது? எப்படி என்று எனக்குக் கற்றுத் தாருங்கள்.’’

நான் நினைத்தேன்- இந்த மனிதன் மிகச் சரியாக என்னிடம் வெளியிட்டிருக்கும் கோரிக்கைகளை என்னால் திருப்திப்படுத்த முடியுமா? வாழ்க்கை போராட்டமயமாகிக் கொண்டிருக்கிறது. மக்களின் மனங்கள் நாளுக்கு நாள் அதிகமாகும் ஏராளமான சந்தேகங்களால் நிறைந்து விட்டிருக்கிறது. நிச்சயம் ஒரு வழி கண்டுப்பிடிக்கப்பட வேண்டும். அது எங்கே இருக்கிறது? ஒரு விஷயம் எனக்குத் தெரிகிறது- ஒருவன் கடுமையாக முயற்சி செய்வது சந்தோஷம் தரக்கூடிய ஒன்று அல்ல. சந்தோஷத்திற்காக ஏன் கடுமையான முயற்சி செய்ய வேண்டும்? வாழ்க்கையின் அர்த்தம் அங்கு இல்லை. மனிதன் தன் முயற்சியால் மட்டும் திருப்தியடைந்து விடமாட்டான். அவன் அதற்கெல்லாம் மேலானவன். வாழ்க்கைக்கான அர்த்தம் வெற்றியின் பலத்திலும் அழகிலும் இருக்கிறது. நம் இருத்தலின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கான இறுதி முடிவைக் கொண்டிருக்கிறது. ஆனால் அது முடியும் வாழ்க்கையின் பழைய எல்லைக் கோடுகளுக்குள் அல்ல. அவை ஒவ்வொருவருக்கும் மிகவும் குறுகலானவையாக இருக்கும். அதற்குள் மனித உற்சாகத்திற்குத் தேவைப்படும் சுதந்திரத்திற்கான இடமே இல்லை.

அவன் மீண்டும் சிரித்தான். ஆனால் இப்போது சிரிப்பு மிகவும் மென்மையாக இருந்தது. சிந்தனைகளால் வேட்டையாடப்பட்ட இதயத்தைக் கொண்ட ஒரு மனிதனின் சிரிப்பாக அது இருந்தது.

‘‘எவ்வளவு மனிதர்கள் பூமியில் வாழ்ந்திருக்கிறார்கள்! அவர்களில் சிலர் மட்டும், அவர்களை ஞாபகப்படுத்தும் வகையில் எதையெதையோ விட்டுச் சென்றிருக்கிறார்களே! அது ஏன்? நாம் கடந்த காலத்தைப் பார்ப்போம். அதைப் பார்க்கும்போது மிகவும் பொறாமையாக இருக்கிறது. நிகழ்காலத்தில் தன்னுடைய மரணத்திற்குப் பிறகு பூமியில் எந்த அடையாளத்தையாவது விட்டுச் செல்லும் ஒரு மனிதன்கூட இல்லை. மனிதன் தூக்கத்தில் காணாமல் போய்விட்டான். அவனை எழுப்புவதற்கு யாரும் அவனைத் தேடவில்லை. அவன் தூங்கி, மிருகமாக மாறிவிட்டான். அவனுக்குத் தேவை சாட்டை அடி. அந்த அடி விழுந்த பிறகுதான் அவனுக்கு அன்பைப் பற்றிய ஞாபகமே வரும். அவனைத் துன்பப்படுத்துவதற்காக பயப்பட வேண்டாம். அன்புடன் நீங்கள் அடித்தால், அவன் உங்களின் அடியைப் புரிந்து கொண்டு, தனக்கு அது தேவைதான் என்று அவன் நினைப்பான். விரக்தி அடைந்து அவன் தவிக்கும்போது, தனக்குத்தானே வெட்கப்படும்போது, நீங்கள் தொடர்ந்து அவன்மீது அடியுங்கள். அப்போது அவன் மறுபிறவி எடுப்பான்... மக்கள்? சில நேங்களில் தங்களுடைய தந்திரத்தனமான செயல்களாலும், சிந்தனைகளின் வக்கிரத்தாலும் நம்மை ஆச்சரியப்பட வைத்தாலும், அவர்கள் இப்போதும் குழந்தைகள்தான். அவர்களுக்கு எப்போதும் அன்பு தேவைப்படுகிறது. அவர்களின் ஆன்மாவிற்கு புதிய முழுமையான உணவை அளிக்கும் தொடர் முயற்சிகள் தேவைப்படுகிறது. உங்களால் மக்கள் மீது அன்பு செலுத்த முடியுமா?’’

‘‘மக்கள்மீது அன்பு செலுத்துவதா?’’- நான் மீண்டும் சந்தேகத்துடன் கேட்டேன். உண்மையாகவே நான் மக்கள்மீது அன்பு வைத்திருந்தேனா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போது நான் உண்மையானவனாக இருக்க வேண்டும். இல்லை. எனக்குத் தெரியாது. தன்னைப் பற்றித் தானே யார் கூற முடியும்? நான் மக்கள்மீது அன்பு வைத்திருக்கிறேன். தன்னைக் கூர்மையாக ஆராய்ச்சி செய்திருக்கும் எந்த மனிதனும் அந்தக் கேள்விக்கு ‘ஆமாம்’ என்று பதில் கூறுவதற்கு முன்னால் ஆழமாகச் சிந்திப்பான். நம்முடைய சொந்த நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் நாம் எந்த அளவிற்குத் தூரத்தில் விலகிப் போய் இருக்கிறோம் என்பதும் நம் எல்லோருக்கும் தெரியும்.

‘‘நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே? நீங்கள் எதுவும் சொல்லவில்லை என்றாலும், நான் உங்களைப் புரிந்து கொண்டேன்.... இப்போது நான் உங்களிடமிருந்து விடைபெறுகிறேன்.’’


‘‘ஏற்கெனவே?’’- நான் அமைதியாகக் கேட்டேன். நான் அவனைப் பார்த்து பயந்தேன். சொல்லப் போனால் அதைவிட அதிகமாக என்னைப் பார்த்து நான் பயந்தேன்.

‘‘ஆமாம்.... நான் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். மீண்டும் வருவேன். ஆனால் உடனடியாக அல்ல. காத்திருங்கள்!’’

அவன் புறப்பட்டான்.

அவன் எப்படிச் சென்றான்? நான் அவனைப் பார்க்கவில்லை. அவன் வேகமாகவும் ஓசை உண்டாக்காமலும் ஒரு நிழலைப்போல மறைந்துவிட்டான். நான் பார்க் பெஞ்சில் குளிரைப் பற்றிக் கவலைப்படாமல் நீண்ட நேரமாக அமர்ந்திருந்தேன். சூரியன் உதித்து வந்தது. அது பனி படர்ந்திருந்த மரக்கிளைகளில் பட்டுப் பிரகாசித்தது. இந்த வெளிச்சம் நிறைந்த பகல்பொழுது, இதற்கு முன்பு நான் பார்த்திராத ஒரு நாளாக எனக்குத் தெரிந்தது. சூரியன் எப்போதும்போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. பனிப் போர்வைக்குள் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இந்தப் பழைய பூமி சூரியனின் கதிர்கள் பட்டு, தாங்க முடியாத அளவிற்குப் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.