Logo

மிருதுளா பிரபு

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 7101
mirudhula-prabhu

 

1

னம் ஒரு க்யான்வாஸா?

அப்படித்தானென்றால், கோடுகளும் வண்ணங்களும் என்ன? உணர்வுகள், அனுபவங்கள், நினைவுகள்...

புதியது பழையதை மறைக்கிறது. க்யான் வாஸில் ஒரு நிறத்தைத் தேய்க்கலாம். விளைவு? முதலில் இருந்த நிறம் மங்குகிறது, மாறுகிறது, மறைகிறது.

ஒரு அனுபவம். அதன்மீது மற்றொன்று. இப்படி ஒன்றின்மீது இன்னொன்றாக அசாதாரணங்களான அனுபவங்கள் - ஒவ்வொன்றுக்கும் அதற்கு முன்பு இருந்ததைவிட அடர்த்தியான நிறம்...

பலவும் மாறுகின்றன, மறைகின்றன.

ஒழுங்கு தவறுகிறது.

கால அளவிற்கு கட்டுப்படாமல் இருக்கிறது.

ஒரு பழைய கிண்ணத்தைப் போல என்னுடைய நினைவுகள் அதன் ஓரம் உடைந்திருக்கிறது. பளபளப்பு குறைந்திருக்கிறது. கிண்ணத்தின் உடலில் கோடுகளும் அடையாளங்களும் இருக்கின்றன. நான் மறதி உள்ளவனாகியிருக்கின்றேன்.

எனினும், அவ்வப்போது சில விஷயங்கள் ஞாபகத்தில் வருகின்றன.

நினைவில் சிறு துண்டுகள்.

நான் அவற்றைப் பொறுக்கி எடுக்கலாம். அவற்றைக் கூட்டிச் சேர்த்து ஒரு வடிவத்தை உண்டாக்க முயற்சிக்கலாம்.

ஆரம்பிக்கட்டுமா?

நான் - முகுந்தன்.

நான் எப்போது அங்கு சென்றேன்? அந்தப் பழைய அன்னை இல்லத்திற்கு எப்படிப் போனேன்? எங்கிருந்து போனேன்?

யார் திருமதி மிருதுளா பிரபு?

அழகியான மிருதுளா- வயது நாற்பதைத் தாண்டியிருந்தாலும் அம்மா - காப்பாற்றுபவள் - காதலி - காமம் கொண்டவள் - கெட்ட பெண் மந்திரவாதி.

நான் கூறுவதெல்லாம் உண்மையா?

என்னால் தெளிவாகக் கூற முடியவில்லை. மனம் என்பது ஆழமான ஒரு ரகசியம். ஞாபகசக்தியை இழந்தவனின் மனமோ?

மிருதுளா கூறுவாள்: மனம் ஒரு ரகசிய பெட்டியைப் போல. ஏராளமான தோல்களைக் கொண்ட அபூர்வமான வெங்காயம் அது. அந்த வெங்காயத்தின் தோலை ஒவ்வொன்றாக உரித்து உள்ளே இருப்பதைப் பார்ப்பதற்கு சீராக செயல்படும் நகங்கள் வேண்டும்.

அன்னை இல்லத்தின் மாடியிலிருந்த அறையில் இருக்கும்போது இந்த வார்த்தைகளை அவள் சொன்னாள்- ஏதோ ஒரு இரவு நேரத்தில்.

காற்றாடி மரங்கள் மட்டுமே வளர்ந்திருக்கும் பரந்த மணல் வெளியில் கதவுகளை அடைத்து சிறை வைக்கப்பட்ட வயதான கிழவியைப் போல அன்னை இல்லம் தனியாக இருந்தது.

காலைப் பொழுதுகளில், சாயங்கால வேளைகளில் வெப்பம் நிறைந்த இரவு நேரங்களில், காற்றாடிகளில் ஊசி இலைகள் ஒன்றோடொன்று உரசி முனகும். எங்கேயோ கடல் இரைந்து கொண்டிருக்கும்.

அருகில் வேறெங்கும் வீடுகள் இல்லை. பேருந்துகள் ஓடும் சாலைகள் இல்லை. ஆட்கள் ஆரவாரம் செய்துகொண்டிருக்கும் தெருக்கள் இல்லை.

எந்த தங்கத் தம்புரான் இந்த அன்னை இல்லத்தைக் கட்டினார்? எந்தப் படுக்கையறையில் இன்பம் காண்பதற்காக?

இது ஒரு ரகசிய இடமோ?

ஒரு மாலை நேரம்.

மாதம், தேதி தெரியவில்லை.

அந்தச் சாயங்கால வேளைகளிலும் காற்றாடி மரங்கள் முனகின. கடல் இரைந்து கொண்டிருந்தது. காற்றாடிகளின் முனகல்களுக்கு மத்தியில் ஒரு அழைப்பு கேட்டது.

‘‘முகு!’’

மாளிகையின் வாசலில் நின்றிருந்த நான் அந்த அழைப்பைக் கேட்டேன். திரும்பிப் பார்த்தேன்.

மிருதுளா பிரபு நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள்.

வாசலிலிருந்து நான் உள்ளே வந்தேன். அவளுக்கு எதிரிலிருந்த வேறொரு நாற்காலியில் உட்கார்ந்தேன். அவளைப் பார்க்காமலேயே நான் உட்கார்ந்திருந்தேன். அதாவது - அவளுடைய முகத்தை நான் பார்க்கவில்லை. பார்க்கத் துணியவில்லை என்பதுதான் அதற்கு அர்த்தம்.

எங்களின் நாற்காலிகளுக்கு மத்தியில் ஒரு பழைய மேஜை இருந்தது. கலை வேலைப்பாடுகள் இருந்த பழைய மேஜை, ஈட்டி மரம், யானைக் கொம்பு- இரண்டையும் கலை நயத்துடன் கலந்து செய்யப்பட்டிருந்த மேஜை. அதன் கால்களையே நான் பார்த்தேன். மேஜையின் மேற்பகுதியில் தந்தத்தாலான தாமரைகள் இருந்தன. மேஜையின் கால்கள் பாம்புகளாக இருந்தன. தந்தத்தாலான கண்களும் தந்தத்தாலான புள்ளிகளும் கொண்ட புணர்ந்து கொண்டிருக்கும் பாம்புகள். மேஜையின் கால்களைப் பார்த்தபோது திருமதி. மிருதுளா பிரபுவின் கறுப்புநிற பட்டுப் புடவையின் மடிப்புகளையும் தங்க நிற ஓரப்பகுதியையும் நான் பார்த்தேன். அது மட்டுமல்ல- கறுப்பு நிற வெல்வெட் செருப்புகளை அணிந்திருந்த வெளுத்த பாதங்களையும்தான்.

வெளுத்த விரல்கள் அசைந்து கொண்டிருந்தன.

அப்போது சாயம் பூசப்பட்ட நகங்கள் மின்னி மறைந்தன - வளர இருக்கும் பாம்புக் குட்டிகளின் படத்தைப் போல.

‘‘முகு!’’ - மீண்டும் மிருதுளா அழைத்தாள்.

நான் தலையை உயர்த்தினேன். ஆனால், மிருதுளாவின் கண்களைப் பார்க்க என்னால் முடியவில்லை. பார்த்தது அவற்றுக்கு மேலே இருந்த சுவரைத்தான்.

சுவரிலிருந்த ஓவியம் இப்படியும் அப்படியுமாக ஆடியது.

பச்சையும் கறுப்பும் காவியும் கலந்த தேவகன்னியின் ஓவியம். மீதமிருந்த வெளிச்சம் மிக வேகமாகப் பின்வாங்கியது. அதனால் அப்படித் தோன்றியிருக்கலாம்- தேவகன்னிகளின் மார்பகங்கள் குலுங்கின.

யார் இந்த சுவர் ஓவியங்களை வரைந்தது?

இந்த அளவிற்குப் பெரிய மார்பகங்களை அந்த மனிதன் எதற்காக வரைய வேண்டும்?

தங்கத் தம்புரானின் படுக்கையறைத் தோழி ஓவியனின் மாடலாக இருந்திருப்பாளோ?

தூரத்திலிருந்த சாளரத்தை நோக்கி என் கண்கள் சென்றன. சாளரம் வழியாக கண்ட அலரிப்பூக்கள் இப்போது சாம்பல் நிறத்தில் காட்சியளித்தன. இறுதி சூரிய கிரகணங்கள் அவற்றில் சமாதி அடைந்து கொண்டிருந்தன.

‘‘முகு!’’ - மீண்டும் மிருதுளா.

நான் தரையைப் பார்த்தேன்.

‘‘என்னைப் பார்க்க, என் கண்களைச் சந்திக்க, உனக்குப் பயமா இருக்கா என்ன?’’

மிருதுளா கேட்டாள்.

‘‘இல்லம்மா...’’

‘‘எனக்கு ஒரு பேர் இருக்கு முகு. என் பேரைச் சொல்லிக் கூப்பிடறதுதான் எனக்குப் பிடிக்கும்.’’

‘‘நான் பேரைச் சொல்லி கூப்பிட மாட்டேன் அம்மா’’

‘‘உன் அம்மாவா இருக்குற அளவுக்கு எனக்கு இன்னும் வயசு ஆகல’’- மிருதுளாவின் வார்த்தைகளில் வெறுப்பு கலந்திருந்தது.

அப்போது கூடத்திற்கு அப்பாலிருந்த தொலைபேசி மணி ஒலித்தது. மிருதுளா பிரபு எழுந்து நின்றாள். கூடத்தை நோக்கி நடந்தாள். கறுப்பு நிற பட்டுப் புடவையின் ஓரம் கால்களில் பட்டு ஓசை உண்டானது. அந்த ஓசை ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு சீரான இசையைப் போல எங்கும் பரவிக் கேட்டது.

இருட்டு பரவியது. இருட்டுக்கு உயிர் இருக்கிறதோ? என்னை மூச்சு விடாமற் செய்வதற்காக அது தன் கூர்மையான விரல்களை நீட்டுகின்றதோ? எழுந்து நிற்க வேண்டும். விளக்கின் இயக்கியைக் கண்டுபிடிக்க வேண்டும். ஆனால், எழ முடியவில்லை. இனம் புரிந்துகொள்ள முடியாத ஒரு சக்தி என்னை நாற்காலியுடன் சேர்த்துக் கட்டிப் போட்டிருக்கிறது.

திடீரென்று நினைத்தேன்- இன்று வெள்ளிக்கிழமை.

வெள்ளி - செவ்வாய் - வெள்ளி.

இந்த நாட்கள் ஆபத்து நிறைந்த நாட்களோ?


அந்தக் கூட்டம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது? நீண்ட தூரத்திலிருந்து கொண்டுதான் மிருதுளா பேசிக் கொண்டிருக்கிறாள். கேட்பதற்கு இனிமையான குரல். ஏராளமான கண்ணாடிப் பாத்திரங்களை ஒரே நேரத்தில் உடைப்பது மாதிரி இருந்தது அந்தக் குரல்.

மிருதுளா யாருடன் பேசுகிறாள்? என்ன கூறுகிறாள்? எதுவும் தெளிவாகக் கேட்கவில்லை.

மிருதுளா திரும்பி வந்தாள். பேச்சைத் திரும்பவும் தொடர வேண்டியது இருக்கும். புரிந்து கொள்வதற்குச் சிரமமான பலவற்றையும் மிருதுளா கேட்பாள்.

நான் என்ன கூறுவேன்?

என்ன பதில்களைக் கூறுவேன்?

இப்படித் திகைத்து நின்று கொண்டிருந்தபோது, ஒரு சிறகடிப்பு சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்து திரும்பிப் பார்த்தேன்.

என்னவோ பறக்கிறது. இந்த இருட்டில்கூட அது தெளிவாகத் தெரிந்தது.

ஒரு வவ்வால்.

திறந்து கிடக்கும் சாளரத்தின் வழியே வந்திருக்க வேண்டும்.

மேற்கூரை வரை பலமுறை வவ்வால் பறந்தது.

மேற்கூரையில் அது மோதியதா? அதனால்தான் வந்த வேகத்திலேயே அது வெளியே பறந்து போய்விட்டதா?

திடீரென்று மாடி பிரகாசமானது.

நான் உற்றுப் பார்த்தேன்.

அங்கு ஒரு முகம்.

மரியாம்மா- நர்ஸ் மரியாம்மா.

என் பிறப்பு பற்றிய கதையை மரியாம்மாதான் ஒருநாள் எனக்குச் சொன்னாள்.

மழையும் இடியும் நிறைந்த கர்க்கிடக மாதத்தின் ஒரு நாளன்று நள்ளிரவு நேரத்தில் நான் பிறந்தேன். வெளியே வருவது என்பது சாதாரண ஒரு விஷயமாக இருக்கவில்லை. என் தாயின் இடுப்பின் அசைவுகள் என்னை இந்த மண்மீது தள்ளிவிட முடியாமற்போன போது, டாக்டர் கத்தியை எடுத்தார். என் தாய் கூப்பாடு போட்டாள். பிரசவ அறையில், வவ்வால்கள் பறந்து கொண்டிருந்தன. ஆகாயத்தில் நிறைய கிளைகளைக் கொண்ட மின்னல் தோன்றியது. அவற்றின் முனையிலிருந்து கிளம்பிய நெருப்புத் துண்டுகள் பூமியில் விழுந்தன. பதினான்கு உலகங்களும் ஒன்று சேர்ந்து முழங்கியதைப் போல இடி இடித்தது. விளக்குகள் அணைந்தன. டாக்டரின் கத்தி கீழே விழுந்தது. ரப்பர் உறைகள் அணிந்திருந்த டாக்டரின் கைகள் சூழ்ந்திருந்த இருட்டைத் துளாவிக் கொண்டிருந்தன. அவை என் தாயின் வயிற்றுக்குள் சென்றன. வர மறுத்த என்னை இழுத்து வெளியில் கொண்டு வந்தன.

பேனாவை அமிலத்தில் தொட்டு நாகத்தகட்டில் எழுதியதுபோல இப்போதும் என்னுடைய ஞாபகத்தில் மறையாமல் அவை இருக்கின்றன.

மரியாம்மா கூறிய அனைத்தும்.

‘‘நீ வெளியே வந்தப்போ உன் தாயின் இரத்தமெல்லாம் இல்லாமல் போயிருந்துச்சு...’’

இக்கதை எதுவும் யாரோ எழுதிய என் ஜாதகத்தில் இல்லை.

அடர்த்தியான தாளில் ஸ்டீல் பேனாவால் எழுதிய ஜாதகம். அதன் சிவந்த மேலட்டை சிதிலமடைய ஆரம்பித்திருக்கிறது.

நினைவுகளிலிருந்து விடுபட்ட நான் எதற்காக என் பிறந்த கதையை நினைத்துப் பார்க்கிறேன்? இந்த ஜாதகத்தை நான் எதற்காக பத்திரப்படுத்தி வைத்தேன்?

ஹரி; ஸ்ரீகணபதயே நம:

அவிக்னமஸ்து.

ஸ்வஸ்திஸ்ரீ கொல்ல வருடம்... கர்க்கிடகம்... தேதி... சந்திரவாரம்... உத்திரட்டாதி நட்சத்திரமும் அபரபக்ஷவாமும் சேர்ந்த யோகம் வாய்ந்த சுபதினத்தன்று இரவு, இடவத்தில் சந்திரன் நிற்க, கர்க்கிட லக்னாபததி முன் நிற்க-

அஸ்ய நட்சத்திரஸ்ய

ஸ்த்ரீயோனி

அசுரகணம்

அஜம் ஜன்மக்ருஹம்

அத்தி வ்ருக்ஷம்

பெரும்புள் பக்ஷி

ப்ரதவிபுதம்

ப்ரஹ்மா பூததேவத

துர்கா வாரதேவத

அக்னி நக்ஷத்ரதேவத

பிறகு -

ஹம்ஸயோகம், நிபுணயோகம், சுனபாயோகம், நீசபங்க ராஜயோகம்...

இனி-

அன்னையைக் கொல்லும் யோகம்.

அந்த யோகம் ஜாதகத்தில் இல்லை. அப்படி ஒரு யோகத்தைப் பற்றி என் தந்தைதான் கூறினார். தந்தை என்று கூறும்போது முழுமையாக ஞாபகத்தில் வருவது சிவந்த கண்களும் விரிந்த பெரிய மீசையும்தான். என்னைப் பெற்ற போது இழந்த இரத்தம் என் தாயை சயரோக நோயாளியாக ஆக்கிவிட்டது என்று என் தந்தை நம்பினார். ‘மகனே’ என்று ஒருமுறைகூட என் தந்தை என்னை அழைத்ததில்லை. அவர் அழைத்தது ‘பிசாசே’ என்றுதான்.

அப்போது என் வயது நான்கோ ஐந்தோ.

வீட்டிற்குப் பின்னாலிருந்த பாம்புப் புற்றைத் தாண்டி ஒரு குளம் இருந்தது. பச்சை நிறத்தைக் கொண்ட குளம். அசையாத நீர். நீர்ப்பரப்பில் ஒரு மூடியைப்போல யாரோ பச்சை நிறத்தைக் கொண்ட ஒரு கண்ணாடியாலான பலகையை வைத்திருக்கிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன். அதன் வழியாகப் பார்த்தால், குளத்தின் அடிவரை தெரியும். குளத்தில் பலவகைப்பட்ட மீன்களும் இருந்தன. அவற்றின் அசைவுகளைப் பார்த்துக் கொண்டிருப்பது எவ்வளவு சுவாரசியமான ஒரு விஷயம்!

குளத்தின் ஓரத்தில் மீன்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோதுதான், பலரும் சேர்ந்து எழுப்பிய அழுகைச் சத்தம் என் காதில் விழுந்தது.

நான் வீட்டிற்கு ஓடினேன்.

தரையில் படுக்க வைத்திருந்த என் தாய் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல் இருந்தது.

என் அன்னையின் பிணத்தை எடுப்பதற்கு முன்னால் என் தந்தை என்னுடைய காதுகளைப் பிடித்து முறுக்கினார். அவர் உரத்த குரலில் கத்தினார்: ‘‘தின்னுட்டியேடா, பிசாசே! உன் தாயைத் தின்னுட்டியேடா!’’

என் கண்ணீரில் வேதனையின் ஈக்கள் பறந்து திரிந்தன.

என் தாயின் மரணத்தைப் பற்றிய கதையை சொன்னது நர்ஸ் மரியாம்மா அல்ல, கமலம் அக்கா.

இப்போது என் தந்தை எங்கே? மரியாம்மா எங்கே? கமலம் எங்கே?

வீடும், வாய்க்காலும், பாம்புப் புற்றும், குளமும், மீன்களும் எங்கே?

தெரியவில்லை.

என்மீது அன்பு வைத்திருந்த பக்கத்து வீட்டுக்காரக் கிழவன் எங்கே? நல்லவன், பற்கள் இல்லாதவன், சிலேட்டில் நான் வரைந்த ஒவ்வொன்றையும் ஓவியங்கள் என்று கூறியவன்.

எல்லோரும் இறந்துபோய்விட்டார்கள்.

குரல் கேட்டது.

மிருதுளா திரும்பி வந்து கொண்டிருந்தாள். ‘‘நீ ஏன் விளக்கைப் போடல, முகு?’’

‘‘என்னால அசைய முடியல.’’

‘‘சரிதான்...’’ - மிருதுளா சிரித்தாள்.

திடீரென்று சுற்றிலும் வெளிச்சம் பரவியது. விளக்கு இயக்கியை விட்டு மிருதுளா அகன்றாள்.

‘‘முகு, இன்னைக்கு வெள்ளிக் கிழமை.’’

‘‘தெரியும் அம்மா.’’

‘‘நீ என்னைப் பேர் சொல்லிக் கூப்பிட மாட்டியா?’’ - என் அருகிலிருந்து கொண்டு மிருதுளா கேட்டாள்.

காற்றாடிகள் இப்படியும் அப்படியுமாக ஆடின. கடல் இரைந்தது.

‘‘இங்க பாரு முகு! எனக்கு அவ்வளவு வயசாயிடுச்சா என்ன?’’

நான் நிமிட நேரத்திற்கு மிருதுளாவின் உடலைப் பார்த்தேன்.

அழகி.

மற்றவர்கள் யாராக இருந்தாலும், மோகத்தை எழுப்புவதற்காக பிறந்த உடல்.

ஆனால், நான் எப்படி பெயர் சொல்லி அழைப்பது? என்னைப் பார்த்துக் கொள்ளும் அம்மாவாயிற்றே மிருதுளா. இவ்வளவு பெரிய வீட்டில் நான் இருந்ததில்லை. இவ்வளவு நல்ல க்யான்வாஸையும் சாயங்களையும் நான் இதற்கு முன்பு பயன்படுத்தியதே இல்லை.

மிருதுளா என் கழுத்தின் பின் பகுதியைத் தடவினாள்.


‘‘முகு! நீ பல விஷயங்களையும் தெரிந்துகொள்ளணும்! ம்... அதற்கான நேரம் வரல...’’

திடீரென்று மிருதுளா தன் கைகளைத் தட்டினாள். தொடர்ந்து உரத்த குரலில் அழைத்தாள்.

‘‘சுப்பம்மா...’’

ஏதோ படிகள் வழியாக, ஏதோ கூடத்தின் வழியாக சுப்பம்மா அங்கு வந்து நின்றாள்.

பருமனான பெண்.

இடது கன்னத்திலும் கழுத்திலும் மச்சங்கள் இருந்தன. வெற்றிலைப் போட்டு சிவப்பான தடித்த உதடுகள்.

நீளமான மூக்கு நுனியில் சிவப்பு கற்களைக் கொண்ட மூக்குத்தி.

முகம் முழுக்க வயதானதைக் காட்டும் முதிர்ந்த கோடுகள்.

சுப்பம்மா என்னைத் தொட்டாள். குளிர்ந்த கை அட்டையைப் போன்ற விரல்கள்.

என்னை விழித்துப் பார்த்தவாறு சுப்பம்மா கட்டளையிட்டாள்.

‘‘வா...’’

நான் அவளுடன் சேர்ந்து நடந்தேன்.

அவளுடைய விலை குறைவான புள்ளிகள் போட்ட புடவையிலிருந்து கெட்ட நாற்றம் வந்தது.

என் படுக்கைக்கு என்னை அவள் அழைத்துக் கொண்டு போனாள்.

நடந்து செல்லும்போது எங்கோ, தூரத்தில் ஒரு சிரிப்பு சத்தம் கேட்டது.

யார் சிரித்தது?

மிருதுளா?

2

ன் படுக்கையறை.

பெரிய கட்டில், பெரிய மெத்தை, உருவங்கள் பின்னப்பட்ட தலையணைகள்.

கட்டிலின் மூலைகளில் இருந்த கொம்புகளிலிருந்து கொசு வலை தொங்கிக் கொண்டிருந்தது.

நான் படுத்திருந்தேன். மல்லாக்க அல்ல... ஒடிந்து வளைந்து படுத்திருந்தேன். வயிற்றில் ஒரு வேதனை வயிற்றிலும் குடலிலும் யாரோ நெருப்புத் துண்டுகளை இடுகிறார்கள். என் கண்கள் மூடுகின்றன. திடீரென்று கண் இமைகள் துடிக்கின்றன. திறக்கின்றன.

வெளிச்சமில்லை.

ஒவ்வொன்றையும் நினைத்துக் கொண்டே நான் மெத்தையில் உருளுகிறேன.

யார் அவள், இந்த மிருதுளா பிரபு?

அவள் என்னை இங்கே எதற்காக தங்கச் செய்ய வேண்டும்?

‘பிரபு’ என்பது அவளுடைய கணவனாக இருக்கலாம். அவன் எங்கே?

இந்த அன்னை இல்லம் மிருதுளாவிற்குச் சொந்தமானதா? இல்லாவிட்டால் வாடகை வீடா? அன்னை இல்லத்திற்குப் பின்னால் தேக்கு மரப் பலகையாலும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் ஷெட்டில் நின்று கொண்டிருக்கும் பெரிய கார் யாருடையது? மிருதுளா பணக்காரியா? அவளுக்கு ஏதாவது வேலை இருக்கிறதா? இந்த வீட்டில் மிருதுளாவையும் சுப்பம்மாவையும் என்னையும் தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் இங்கு என்ன நடக்கிறது?

செவ்வாய்க்கிழமை இரவுகளில், வெள்ளிக்கிழமை இரவுகளில் பரம ரகசியமான ஏதோ சில விஷயங்கள் இங்கு நடக்கின்றன. நான் புரிந்துகொள்ளாத ஏதோ சில சங்கதிகள்... அதனால்தான் சுப்பம்மா என்னை இந்தப் படுக்கையில் கட்டிப் போட்டு விடுகிறாள்.

எங்கிருந்தோ இசை கேட்கிறது.

உன்மத்தம் பிடிக்க வைக்கும் நறுமணம் வருகிறது.

எங்கிருந்தோ பலத்த சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

கனவில் தோன்றியவையாக இருக்குமா? நான் சிறிது உறங்கிவிட்டேனா?

கண்களைத் திறந்தபோது, அருகில் நின்றிருக்கும் மிருதுளாவைப் பார்த்தேன். அவள் அணிந்திருந்தது புடவை அல்ல. ஹவுஸ் கோட் அணிந்திருந்தாள்.

நான் அவளை நிமிட நேரத்திற்குப் பார்த்தேன். பிறகு தரையைப் பார்த்தேன்.

நான் வரைந்த ஓவியங்கள் தரையில் கிடந்தன. சுவரில் ஃப்ரேம் போட்ட வெள்ளை க்யான்வாஸ்கள் சாய்ந்து நின்றிருந்தன. ஒரு மூலையில் கம்பீரமாக நின்றிருந்தது ‘ஈசல்’. ஒரு ஸ்டூலில் பெயிண்ட் ட்யூப்கள், ப்ரஷ்கள்.

‘‘முகு!’’

நான் மிருதுளாவின் அழைப்பைக் கேட்டு, தலையை உயர்த்தினேன். வசீகரிக்கும் புன்சிரிப்புடன் மிருதுளா சொன்னாள்: ‘‘முகு, உன்கிட்ட நான் எவ்வளவோ விஷயங்களைச் சொல்ல வேண்டியதிருக்கு.’’

சொல்லட்டும். கேட்கிறேன். எனக்குப் பல விஷயங்கள் புரியவே இல்லை. பல ரகசியங்களும் எனக்குத் தெரியவில்லை. எல்லாவற்றையும் கூறுவதற்காக மிருதுளா வந்திருக்கிறாளோ?

ஆனால், மிருதுளா எதுவும் கூறவில்லை.

ஒரு கேள்வி வந்தது. ‘‘முகு, நீ எதற்காக அப்படி எதையோ பார்த்துக்கிட்டு இருக்கே?’’

அந்த நிமிடத்தில் எனக்குப் பயம் உண்டானது.

‘‘உனக்கு உடல் நலம் இல்லையா?’’

‘‘எனக்குப் பயமா இருக்கு.’’

‘‘என்னைப் பார்த்தா?’’

அதற்குப் பதில் கூற நான் தயாராக இல்லை.

‘‘சரி... உனக்குப் பயம் இருக்குறப்போ நான் எதுவும் உன்கிட்ட சொல்ல மாட்டேன்’’ - மிருதுளா சிரித்தாள்.

எனக்குக் கேட்கவேண்டும்போல் இருந்தது. சொல்லுங்கள் நான் எப்போது இங்கு வந்தேன்? எப்படி?

ஆனால், நான் கேட்கவில்லை.

சிரித்துக் கொண்டே மிருதுளா என் படுக்கையறையை விட்டுச் சென்றாள்.

நான் எழுந்தேன். கட்டிலின் நான்கு மூலைகளிலும் இருந்த தூண்களையே நான் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மறதி என்ற கறுத்த மார்பகத்தில் கூர்மையான வெள்ளியாலான கத்தி ஆழமாக இறங்கியது.

நான்கு தூண்கள்... என்று கூறலாமா? நான்கு கொம்புகள் அவற்றுக்கு மேலே ஒரு ஃப்ரேம். அதில்தான் கொசுவலை கட்டப்பட்டிருந்தது. அந்த நான்கு கொம்புகளில் ஒன்றில் நான் கத்தியால் வரைந்திருந்தேன். கப்பல் சேதமடைந்ததால் தனிமையான ஒரு தீவில் சிக்கிக்கொண்ட ராபின்சன் க்ரூஸோ என் ஞாபகத்தில் வந்தான். க்ரூஸோ ஒரு மரக் கொம்பில் தினமும் கத்தியால் வரைந்து கொண்டிருந்தான்- தினமும் ஒரு கோடுவீதம். கோடு அல்லது செதுக்கல். இப்படியே அவன் பழமையான ஒரு காலண்டரை உண்டாக்கினான். காலத்தைத் தீர்மானிப்பதற்காக.

நானும் கத்தியால் இந்தக் கட்டிலின் கொம்பில் வரைந்திருக்கிறேன். செதுக்கியிருக்கிறேன்.

பத்து கோடுகள்.

அப்படியென்றால் பத்து நாட்கள்.

அவற்றுக்குள் ஒரு செவ்வாய்க்கிழமையும் இரண்டு வெள்ளிக் கிழமைகளும் அடங்கும். இல்லாவிட்டால் ஒரு வெள்ளிக்கிழமையும் இரண்டு செவ்வாய்க் கிழமைகளுமாக இருக்குமோ?

நான் மீண்டும் தரையைப் பார்த்தேன்.

ஓவியங்கள்... என் படைப்புகள்.

அன்னையும் குழந்தையும்.

இடிந்த ஆலயம்.

காம்போசிஸன் - ஒன்று.

காம்போசிஸன் - இரண்டு.

இப்படிப் பல. இவை அனைத்தும் நான் காட்சியில் வைத்தவை. மியூசியம் அனெக்ஸில்.

ஏராளமான ஆட்கள் என்னுடைய ஓவியக் கண்காட்சியைப் பார்ப்பதற்காக வந்தார்கள். அவர்களில் ஒருத்தி மிருதுளா பிரபு. அவள் இரண்டு ஓவியங்களை விலைக்கு வாங்கினாள். ஆயிரம் ரூபாய். அவள் மீது எனக்கு நன்றி தோன்றியது. அதற்கு முன்பு ஒரு முறையும் ஐம்பது ரூபாய்க்குக்கூட நான் ஓவியங்களை விற்றதில்லை.

கண்காட்சியின் மூன்றாவது நாளன்றுதான் மிருதுளா ஓவியங்களை வாங்கினாள்.

அந்த ஓவியங்களுக்கு அடியில் நான் சிவப்பு நிற ஸ்டிக்கர்களை ஓட்டினேன்.

‘ஸோல்ட்!’

மிருதுளாவிடம் நான் சொன்னேன்: ‘‘கண்காட்சி முடிய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கு. அதுவரை...’’

‘‘எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல... கண்காட்சி முடிஞ்சு இவை எனக்குக் கிடைச்சா போதும்...’’

மேல்முகவரி அச்சடிக்கப்பட்ட அட்டையை மிருதுளா என்னிடம் தந்தாள்.


கண்காட்சி முடிந்தவுடன் ஓவியங்களைக் கொண்டுபோவதற்காக மிருதுளா வரவில்லை.

மேல்முகவரி இருந்த அட்டையை நான் எங்கோ தொலைத்துவிட்டிருந்தேன். இனி என்ன செய்வது? நான் பணம் வாங்கியாகிவிட்டது. அந்த இரண்டு ஓவியங்களும் மிருதுளாவுக்குச் சொந்தமானவை. அவற்றை அவளிடம் எப்படிக் கொண்டுபோய் சேர்ப்பேன்?

மேல்முகவரியை மறந்து போயிருந்தாலும், நான் அவளின் பெயரை மறக்கவில்லை.

மிருதுளா... மிருதுளா... மிருதுளா...

திரும்பத் திரும்பச் சொன்னபோது ஐஸ்கிரீமைப் போல நாக்கோடு ஒட்டிக்கொள்ளக் கூடிய ஒரு பெயர் அது.

மிருதுளா புகழும், பணமுமுடைய ஒரு பெண் என்று நான் தீர்மானித்தேன். இல்லாவிட்டால் ஆயிரம் ரூபாயைச் செலவழிப்பாளா? கண்காட்சி நடைபெற்ற இடத்திலிருந்தபோது பலரும் அவளுடன் பேசினார்களே! கலையைப் பற்றி நல்ல அறிவு கொண்டிருப்பதைப் போல மிருதுளா சில விஷயங்களைச் சொன்னாளே! அவளைத் தெரிந்திருப்பவர்கள் நகரத்தில் பலரும் இருப்பார்கள்.

நான் பலரிடமும் விசாரித்துப் பார்த்தேன்.

கிடைத்த பதில்கள் எனக்கு உதவியாக இல்லை.

‘மிருதுளாவா? மிருணாளினியா?’

‘என்ன? பொது வாசக சாலையைச் சேர்ந்த மாதங்கியா? மதன காமேஸ்வரியா?’

‘யூ மீன் - பெரிய ஹோட்டலில் ரம்மி விளையாடும் அந்தப் பேரழகியா?’

இல்லை... இல்லை... இல்லை...

அவர்கள் யாரும் இல்லை.

பிறகு?

அந்தச் சமயத்தில் - அதாவது, பத்து நாட்களுக்கு முன்பா? அந்தச் சமயத்தில் நான் எங்கே இருந்தேன்? யாருடன் இருந்தேன்?

நினைவுகளில் மணம் உயர்கிறது... வாசனை வருகிறது.

சிறிய அறை. சுவர்களில் பாசி பிடித்திருக்கிறது. தரையில் ஆங்காங்கே சிதிலத்தின் வெளிப்பாடுகள். தரையிலிருந்த விரிசல்களுக்குள்ளே இருந்து கரையான் புற்று எழுந்து கொண்டிருந்தது. அறையின் கதவு பாதி மரத்தாலும் மீதி கண்ணாடி கொண்டும் அமைந்திருந்தது. கண்ணாடியில் எனக்கு முன்பு அங்கு தங்கியிருந்த யாரோ ஆங்கிலச் செய்தித் தாள்களை ஒட்டி வைத்திருந்தார்கள். ‘ப்ரைவஸி’ வேண்டும் என்பதற்காக இருக்கலாம். ஒரு சாளரம் மட்டுமே அங்கு இருந்தது. அதன் வழியாகப் பார்த்தால் தகரம் போட்ட மேற்கூரையைக் கொண்ட பொது கழிப்பறையும் பக்கத்து நிலத்தில் இருக்கும் ஒரு தென்னை மரமும் தெரிந்தன. தினமும் காலையில் ஒரு மரங்கொத்திப் பறவை தென்னை மரத்தைக் கொத்தும். டக்-டொக்! தேடுவது எதை? புழுக்கள்? முன் பிறவி? சாளரத்தின் சட்டத்திற்கு அப்பால் நின்று கொண்டிருக்கும் செண்பகம் அறைக்குள் இருக்கும்போது தெரியாது. அது பூத்து காற்றில் ஆடும்போது என்ன நறுமணம்! அதோடு சேர்ந்து நாற்றமும் உண்டாகும். தகர மேற்கூரை கொண்ட கழிப்பறையைத் தாண்டித்தான் காற்று செண்பக மரத்தைத் தேடி வருகிறது.

இவை அனைத்தும் வெளியே.

உள்ளே என்னுடைய சிறிய அறையில் வேறு நாற்றங்கள் இருந்தன. கயிறு கொண்டு பின்னப்பட்ட ஆடிக்கொண்டிருக்கும் கட்டிலில்தான் நான் படுப்பேன். தென்னை மரத்தின் கொம்புகளைப் பயன்படுத்தி அந்தக் கட்டில் உண்டாக்கப்பட்டிருந்தது. அதன்மீது ஒரு அழுக்கு விரிப்பு. அதில்தான் என்ன கெட்ட நாற்றம்! தலைப்பகுதியில் அழுக்கடைந்த ஒரு தலையணை. அதன் சகிக்க முடியாத நாற்றம் என் நாசி நுனியை எப்போதோ கொன்றுவிட்டது. பிறகு... லின்ஸீட் எண்ணெயின் நாற்றம், டர்ப்பன்டைன் நாற்றம்.

மொத்தத்தில் அழுக்கடைந்த, அசுத்தமான சூழ்நிலை.

ஆனால் ஒன்று மட்டும் நான் கூறுவேன். இருபத்து இரண்டு வயது ஆகியும் நான் அசுத்தமாகவில்லை. கயிற்றுக் கட்டிலின் அழுக்கு விரிப்பில் தேவையற்ற ஆசைகளின் கறை பட்டதே இல்லை.

ஆரம்பத்தில் அந்த அறையில் இரவு நேரத்தில் உறங்குவதற்காக ஒரு ஆள் வந்துகொண்டிருந்தான். அவனுடைய பெயர் ஞாபகத்தில் இல்லை. அவன் தொழில் ஞாபகத்தில் இல்லை. வேறு எந்த இடத்திற்கும் போக முடியாத ஒரு மனிதன் அவன் என்று நான் நினைத்தேன். அந்தக் காரணத்தால்தான் தரையில் படுத்துக்கொள்ளும்படி அவனிடம் சொன்னேன். இரவு முழுவதும் அந்த மனிதன் இருமிக்கொண்டே இருப்பான். ஒரு இரவு வேளையில் அவன் என் தொடைகளை இறுகப் பிடித்தான். நான் அவனை வெளியே போகச் சொன்னேன்.

ஓவியக் கண்காட்சி முடிவடைந்த பிறகு ஒரு இரவு.

கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தபோது நான் திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

காரணம்- சங்கிலி ஓசை.

இரும்புச் சங்கிலி.

அதன் வளையங்கள் ஒன்றொடொன்று மோதும்போது ஒரு சத்தம் கேட்டது- கிலிங்... கிலோங்... கிலிங்... கிலோங்...!

பயம் உண்டானது. படுத்த நிலையிலேயே நான் மேலே பார்த்தேன்.

அந்த அழுக்குப் பிடித்த அறையில் நான் இப்போது தனியாக இல்லை.

என் உடலுக்கு மேலே யாரோ கால்களை விரித்து வைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

பாதங்களுக்கு மேலே வெளுத்த கால்கள் தெரிந்தன. தொடைவரை கால் நிர்வாணமாக இருந்தது.

அது யார்? பிசாசா? என்னைப் பெற்று இறந்த என் தாயா? ஆணா? பெண்ணா? மீண்டும் பார்த்தேன்.

அதோ, கீழே தொங்கிக் கொண்டிருக்கும் கைகள். அவைதான் சங்கிலியைப் பிடித்துக் கொண்டிருந்தன. அந்தச் சங்கிலி என்னைக் கட்டிப் போடுவதற்கா? என்னை நிரந்தரமாக சிறைக்குள் போடுவதற்காக இருக்குமோ? அந்தக் கை, கால்களை தொடைகளை, நான் திரும்பத் திரும்பப் பார்த்தேன். என் கண்கள் மூடித் திறந்தன. இதயம் ஊஞ்சலாடியது. மூளை பயமென்னும் போலீஸ் வட்டத்திற்குள் ஒடுங்கிக் கிடந்தது.

பார்க்கும்போதெல்லாம் தொடாமலே தோன்றியது - மினுமினுப்பு... மினுமினுப்பு... சங்கிலி பிடித்திருந்த கைகளில் தங்க வளையல்கள்.

அது தேவதையா? தேவதாசியா?

அந்தக் கைகளில், கால்களில் தொடைகளில் நிமிட நேரம் பார்க்க முடிந்த மினுமினுப்பில் ஒரு ரோமம்கூட இல்லை.

அப்படியே இருந்தாலும், அவற்றுக்கு நிறமில்லை.

அதிர்ச்சியின் ஒரு பெரிய அலை என்னுடைய உடலில் வேகமாகப் பரவியது.

அப்போது ஒரு இனிய குரல் கேட்டது.

எங்கே உயரங்களில் இருந்து.

கோவில் மணிகள், தேவாலய மணிகள், வாங்கு அழைப்புகள், இரும்பு ஓசைகள், சங்கிலிகள், தேவாசுர வாத்தியங்கள், மின்சார கிட்டார்கள், ஓசையெழுப்பும் காற்று, இப்படியும் அப்படியுமாக ஆடும் காற்றாடி மரங்கள். மீண்டும் மீண்டும் கேட்கும் காதலன், காதலிகளின் முத்தச்சத்தங்கள், உரத்து கேட்கும் தாய்மார்களின் பிரசவ வேதனைகள், மரண ஓலங்கள் - இவை எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஒரு பாட்டு பிரபஞ்சத்தைப் படைத்தால் எப்படி இருக்கும்?

அந்தப் பாட்டு பிரபஞ்சத்தைக் கொண்டுவந்து சிறு வடிவத்தில் வெளிப்படுத்தியதைப் போல் இருந்தது அந்த இனிய குரல். அதைக் கேட்டபோது நான் சில விஷயங்களைப் பார்த்தேன்.

வானம்.

வட்டமான ஒரு மிகப்பெரிய வெங்காயத்தைப் போல் இருந்தது வானம். அந்த ஒரு மையத்தைச் சுற்றி நிறைய வட்டங்கள். வட்ட வடிவத்திலிருந்த அதை அசைத்தால், அது நிறைய வெள்ளி மோதிரங்களாக பிரிந்து விழும்.

அசைக்கக் கூடாது.

உள்ளே செல்ல வேண்டும். வண்ணங்களின் ஒட்டு மொத்தமான ஆர்ப்பாட்டத்தினூடே முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

அதோ, வானம் ஒரு குழலாக மாறியிருக்கிறது.

ஒரு சுரங்கம்...

சுரங்கத்தின் முடிவில் அழகிய பெண்ணான மிருதுளா பிரபு நின்றிருந்தாள். வெள்ளை நிற மேகச் சிதறல்கள் பறந்து கொண்டிருந்த தலை முடியில் முல்லைப் பூக்களைச் சூடியிருந்தாள்.

நான் கேட்ட இனிய குரல் மிருதுளாவிற்குச் சொந்தமானது.

‘‘முகு... நீ என்னைத் தேடினே... அப்படித்தானே?’’

‘‘ஆமாம்...’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன்.

‘‘முகு, உனக்கு வழி தெரியல. ஆனா, நாளைக்கு படுக்கையை விட்டு எழுந்திருக்கிறப்போ, உனக்கு வழி தெரியும். நீ என்னைத் தேடி வருவே. கறுப்பு நிற மெழுகுவர்த்திகளை உருக்கி உண்டாக்கப்பட்ட தார் சாலையில் நீ நடக்குறப்போ தட்டுகளை வைத்திருக்கும் பெண்களைப் போல காற்றாடி மரங்கள் உன்னை வரவேற்கும்.’’

திடீரென்று வானம் காணாமற் போனது. மிருதுளா காணாமற் போனாள்.

மீதியிருந்த இரவில் நான் உறங்கினேனா?

பொழுது புலர்வதற்கு முன்பே கண் விழித்தேன்.

நான் வர இருக்கும் காலை நேரத்திற்காகக் காத்திருந்தேன். சாளரச் சட்டத்திற்கு படிப்படியாக நீலமும் நிலவும் கலந்த நிறம் கிடைத்தது. தொடர்ந்து சிறிது சிவப்பு கோழி கூவினதை நான் கேட்கவில்லை. காதில் விழுந்தது மரங்கொத்திப் பறவையின் டக்-டொக் சத்தம்தான்.


நான் ஓவியங்களை வைத்துக் கொண்டு நடந்தேன். கறுப்பு நிற சாலை வழியாக.

எவ்வளவு தூரம் நடந்தேன்? எனக்குத் தெரியவில்லை.

ஆனால், வழி நன்கு தெரிந்ததைப் போலிருந்தது.

அதோ, மணல்வெளி! ஆடிக் கொண்டிருக்கும் காற்றாடி மரத்தின் கிளைகள்! பெரிய சுவர்! ஒரு பெரிய மாளிகையின் வெளிக் கதவு!

கேட்டில் மிருதுளா பிரபு என்னை எதிர்பார்த்து காத்து நின்றிருந்தாள்.

அழகி!

என்ன நிறம்!

மஞ்சள் எலுமிச்சம் பழத்தைப் போலிருந்த கன்னத்தில் மலை அடிவாரத்தின் முதல் ஆப்பிள் முத்தம் தந்தபோது உண்டான நாணத்தை வெளிப்படுத்தும் நிறம்!

எந்தச் சாயத்தை எந்தச் சாயத்தில் கலந்து வரைந்தால் இந்த நிறம் கிடைக்கும்?

நான் திகைத்து நின்று விட்டேனா?

‘‘முகு...’’ - பாசத்துடன் மிருதுளா அழைத்தாள்.

நான் அருகில் சென்றேன்.

‘‘வா...’’ - மிருதுளா அழைத்தாள்.

நான் கேட்டைக் கடந்தேன். அன்னை இல்லத்தின் வயிற்றில் நான் கால் வைத்தபோது, மிருதுளா சிரித்தாள்.

மாளிகையிலிருந்த அறையை அடைந்தபோது மிருதுளா சொன்னாள்: ‘‘இனி இதுதான் உன் வீடு. இனிமேல் நீ வேற எங்கேயும் போகவேண்டியது இல்ல...’’

இவை அனைத்தும் எப்போது நடந்தன?

பத்து நாட்களுக்கு முன்பா?

இந்தக் கட்டிலின் கால்கள் கூறும் கதை அதுதான்.

நான் இங்கிருந்து தப்பித்தது...

ஓ... அது என் கதையின் முடிவு.

3

ழுத்திலும் இடது கன்னத்திலும் மச்சம் கொண்ட சுப்பம்மாவிற்கும் மிருதுளா பிரபுவிற்குமிடையே உள்ள உறவு என்ன? வேலைக்காரிக்கும் எஜமானி அம்மாவிற்கும் இடையில் உள்ள உறவா? இல்லாவிட்டால், அதையும் தாண்டிய உறவா?

இந்த அன்னை இல்லத்திற்கு வந்தது முதல் நான் இதைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டு - ஆச்சரியப்படுவதுண்டு.

கைகளைத் தட்டி உரத்த குரலில் ‘சுப்பம்மா’ என்று அழைக்கும் மிருதுளா எஜமானத்தி. அதே நேரத்தில், சில வேளைகளில் சுப்பம்மாவிற்கு முன்னால் மிருதுளா பயந்துபோய் நிற்கிறாளே?

ஒரு வெள்ளிக்கிழமை மாலை நேரம். நான் படுக்கையறையில் இருந்தேன். மிகவும் களைப்படைந்து உறங்கிக் கொண்டிருந்தேன். யாரோ என்னைத் தட்டி அழைத்தார்கள். கண்களைத் திறந்தபோது, சுப்பம்மாவைப் பார்த்தேன். பருகுவதற்காக எதையோ கொண்டு வந்திருந்தாள். நான் கப்பை வாங்கிப் பருகினேன். அது முழுவதும் நெருப்பாக இருந்தது. மூளையில் என்னவோ எழுந்து பிடிப்பதைப் போல் நான் உணர்ந்தேன். அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தது, முன்பு நான் வரைந்த அடுப்பு இம்ப்ரஷனிஸ்ட் ஓவியம் - உருக்கு உற்பத்தித் தொழிற்சாலையில் அடுப்பு.

என் சாயத் தட்டிலிருந்த பலவகைப்பட்ட இரத்த வண்ணங்களையும் கலந்து நான் அதை வரைந்திருந்தேன்.

ஸ்கார்லட்லேக், க்ரிம்ஸன்லேக், வெர்மீலியன் ரோஸ்மாடர், இந்தியன் ரெட், ஆரஞ்சு - இவற்றுடன் காட்மியன் மஞ்சளும் கத்தியின் உதவியால் இந்தச் சாயங்களை எடுத்த பிறகு நான் க்யான்வாஸை ஆக்கிரமித்தேன். கன்னியான க்யான்வாஸ், சாயக் கலவையைத் தாங்கியிருந்த என் கத்திதான் குறி. நான் செய்வது கற்பழிப்பு. அந்தச் செயல் முடிந்தபோது, க்யான்வாஸில் சாய்ந்து கொண்டிருக்கும் வாளியைப் பார்த்தேன். அதிலிருந்து ஆயிரம் உலோகங்களில் உருகிய அம்சங்கள் வெளியே வந்தன. அவற்றிலிருந்து இரத்தமும் வழிகிறது. இல்லை... ஒரு முறை அல்ல... அது ஒரு வெள்ளப் பெருக்காக இருந்தது.

மீண்டும் நான் உறங்கிவிட்டேனா?

சுப்பம்மா எங்கு போனாள்?

குறிப்பாகக் கூறத்தக்க காரணமெதுவும் இல்லாமலே எனக்குப் பயம் உண்டானது. யாரையாவது பார்க்க வேண்டும்போல் இருந்தது. நான் கூடத்தின் வழியாக ஓடி, மாடியிலிருந்த அறைக்குச் சென்றேன். அங்கு மிருதுளா இருந்தாள். சாளரத்தின் வழியாக அந்தப் பேரழகி வெளியே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். என் காலடிச் சத்தத்தைக் கேட்டு மிருதுளா திரும்பிப் பார்த்தாள். புன்னகைத்தாள்.

‘‘வா...’’ - மிருதுளா சொன்னாள். தந்தமும் ஈட்டிக் கொம்பும் கொண்டு உண்டாக்கப்பட்ட மேஜைக்கருகில் இருந்த நாற்காலியில் அவள் உட்கார்ந்தாள்.

திடீரென்று எனக்குத் தோன்றியது - நான் ஒரு நெருப்பைத் தின்னும் பறவை. என் தலையை மறைத்துக் கொள்ள வேண்டும்போல் எனக்கு இருந்தது. நான் மிருதுளாவிற்கு முன்னால் முழங்காலிட்டு அமர்ந்தேன். கறுப்பு நிற பட்டுப் புடவையின் மினுமினுப்பான மடிப்புகளுக்கு மத்தியில் மிருதுளாவின் தொடைமீது நான் என் தலையைச் சாய்த்தேன். நான் முணுமுணுத்தேன்: ‘‘அம்மா!’’

மிருதுளா என் முகத்தைப் பிடித்துத் தூக்கினாள்.

‘‘வா... முகு!’’

அந்த அறையின் வாசலுக்கு மிருதுளா என்னை அழைத்துச் சென்றாள். வானம் சிவந்து காணப்பட்டது.

கடல் ஒரு குழு அழைப்பைப் போல இரைந்து கொண்டிருந்தது.

‘‘முகு! நீ ஒரு கோழை. எல்லா ஓவியர்களும் இப்படித்தான்.’’

தொடர்ந்து ஓவியம் வரைவதைப் பற்றி மிருதுளா என்னவோ சொன்னாள். ‘‘இயற்கைக்கு அப்பால் இருப்பதைப் பார்க்க வேண்டும். பிரபஞ்சங்களின் ஆழத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இயற்கைக் காட்சிகளையும் சாய ஓவியங்களையும் எதற்காக வரைய வேண்டும்? கற்பனைக்கெட்டாத காலத்தைச் சேர்ந்த பூதங்களை வரைய வேண்டும். பிசாசுகளை வரைய வேண்டும். வாழ்க்கையின் உயிர்ப்பாக இருக்கும் கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள் அதன் கருக்களாக இருக்கட்டும்.’’

ஒரு கார் கேட்டைத் தாண்டி வரும் சத்தம் கேட்டது. நான் பார்த்தேன். யாரோ வந்துகொண்டிருந்தார்கள். பெண்கள்... காரை ஓட்டிக் கொண்டு வருவதுகூட ஒரு பெண்தான்.

மிருதுளா சொன்னாள்: ‘‘என் தோழிகள் வர்றாங்க. நான் அவர்களை அறிமுகப்படுத்துகிறேன். நீ அவர்களுக்குப் பிடித்த ஒரு ஓவியன்.’’

ஷெட்டிற்கு வெளியே கார் நின்றது.

மிருதுளாவின் தோழிகள் மிருதுளாவின் அறைக்குள் வந்தார்கள்.

அம்பிகா மேனன்.

வித்யா ஷேணாயி.

பத்மா.

தெல்மா ரொஸேரியோஸ்.

அம்பிகா: மார்பகம் இல்லாத பெண். அவள் பெண் வேடம் போட்டிருக்கும் ஆணாக இருப்பாளோ? ஐம்பதை நெருங்கியிருக்கும் வயது.

வித்யா: சுறுசுறுப்பு இல்லை. இலேசான தொப்பை வயிறு பெரிய பின்பகுதி.

பத்மா: சிறு பெண். அழகி. அழகான கண்கள்.

தெல்மா: கறுப்பு நிறம். நெற்றியில் பச்சைப் பொட்டு அளவான உடல். நீளமாக மூக்கு. அதில் ஒரு கிளி வளைவு.

பத்மாவைத் தவிர மீதி எல்லோரும் என்னையே உற்றுப் பார்த்தார்கள்- நான் ஒரு வினோதமான பொருள் என்பதைப் போல.

நானும் அவர்கள் எல்லோரையும் உற்றுப் பார்த்தேனோ?

நான் ஒரு ஓவியத்தின் காம்போசிஸனைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஐந்து பெண்கள்.

அவர்களை எப்படி ஒன்று சேர்ப்பது?

‘பெண்ணும் ஆணும் கலந்திருந்த’ அம்பிகா மேனன் நடுவில் இருக்கட்டும் - நாற்காலியில். அவளுக்குச் சற்றுப் பின்னால் மிருதுளா. மிருதுளாவிற்கு இரு பக்கங்களிலும் வித்யாவும் தெல்மாவும்.


அப்படியென்றால் பத்மா?

அவள் தரையில் படுத்திருக்கட்டும்- அவர்களுக்கு முன்னால் ஒரு விரிப்பில் - அழகான ஒரு நாய்க் குட்டியைப் போல.

இவ்வளவு விஷயங்களையும் நான் சிந்தித்தேன். அந்த ஐந்து பெண்களும் கறுப்பு நிறத்தில் பட்டுப் புடவைகள் அணிந்திருந்தார்கள்.

அது இந்த வெள்ளிக்கிழமை க்ளப்பின் சீருடையா?

அவர்களின் ஓவியத்தை வரைவதற்கு மென்மையான சாயங்கள் போதும். கறுப்பு... பிறகு பொன் நிறம் - புடவைகளின் கரைகளை வரைவதற்கு. சிறிது பச்சை - தெல்மாவிற்கு பொட்டு வைக்க. பிறகு ஏதாவதொரு நிறம் நாய்க் குட்டியின் விரிப்பிற்கு.

தெல்மா கேட்டாள்: ‘‘முகுந்தன், எனக்காக ஒரு படம் வரைய முடியுமா?’’

‘‘என்ன படம்?’’

‘‘கடைசி விருந்து’’

‘‘எவ்வளவோ பெரிய மகான்கள் அதை வரைந்திருக்கிறார்களே! டாவின்சியையும் சேர்த்து...’’

தெல்மா சிரித்தாள்: ‘‘எனக்குத் தேவையானது. வேறொண்ணு லாஸ்ட் ஸப்பர் - ஜூடாஸின் பார்வையில்...’’

நான் அதிர்ந்துபோய் விட்டேன்.

தெல்மா தொடர்ந்தாள்: ‘‘சாப்பாட்டு மேஜையின் நடுவில் அமர்ந்திருக்கச் செய்ய வேண்டியது இயேசு கிறிஸ்துவை அல்ல - ஜூடாஸை’’

நான் யோசித்தேன்.

நன்மை - தீமை.

வெண்மை - கறுப்பு.

கடவுள் - பிசாசு.

மிருதுளா ஒரு லெட்டர்பேடையும் டாட் பேனாவையும் எங்கிருந்தோ கொண்டு வந்தாள்.

நான் படம் வரையத் தொடங்கினேன்.

சாப்பாட்டு மேஜை. நடுவில் ஜூடாஸ். எல்லோருக்கும் கடைசியில் இயேசு... மற்ற நாற்காலிகளில் மீதியிருந்த சீடர்கள்.

வரைந்து முடித்தபோது கண்களில் பட்டது - ஒரு ஹோட்டல் அறையின் சாப்பாட்டு மேஜை.

ஜூடாஸ் தனியாக உட்கார்ந்து ஹெர்குலிஸ் ரம் பருகிக் கொண்டிருக்கிறான். பரிமாறும் ஆள் நடந்து அருகில் வருகிறான்- பில்லுடன். ஜூடாஸ் முப்பது வெள்ளிக் காசுகளைத் தட்டில் போடுகிறான். 25 காசுகள் ரம்மிற்கு 5 காசுகள் டிப்ஸ்.

தெல்மா ஓவியத்தைப் பார்ப்பதற்காக குனிந்தாள்.

‘‘இந்தப் பரிமாறுபவன் யார்?’’ - தெல்மா கேட்டாள்.

‘‘கிறிஸ்டோஃபர்’’ - நான் சொன்னேன்.

‘‘இல்ல... லூஸிஃபர்’’ - தெல்மா சொன்னாள்.

எல்லோரும் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள் - பத்மாவைத் தவிர. அவர்கள் கைகளைத் தட்டினார்கள்.

உண்மைதான் - நான் அவர்கள் எல்லோரும் விருப்பப்படக் கூடிய ஒரு ஓவியன்தான்.

திடீரென்று சுப்பம்மா அங்கு தோன்றினாள். ‘‘வா’’ - என்னை அவள் அழைத்தாள். கீழ்ப்படியும் குணத்தைக் கொண்ட ஒரு ஆட்டுக் குட்டியைப் போல நான் அவளுக்குப் பின்னால் சென்றேன் - என் படுக்கையறைக்கு.

சுப்பம்மா போனதும். நான் கதவை அடைத்தேன்.

ஓவியம் வரைய வேண்டும்.

ஈஸலில் நான் ஒரு க்யான்வாஸைக் கொண்டுபோய் வைத்தேன். இருட்டு... சுற்றிலும் இருட்டு. மொத்தத்தில் இருந்த மஞ்சள் நிறத்தைக் கொண்ட ஒரு பல்பின் வெளிச்சம் மட்டுமே.

என்ன வரைவது? ஏதாவது... தோன்றுவதை... எந்தவித இலக்கும் இல்லாமல்.

தூரிகை க்யான்வாஸில் ஓட ஆரம்பித்தது.

கீழே எங்கோ வீணையின் இசை கேட்டது.

உயிர்ப்பான, இனிய மந்திரங்களை யாரோ உச்சரிக்கிறார்கள். வீணை மீட்டுவது மிருதுளாவா? அவர்கள் எல்லோரும் சேர்ந்தா மந்திரங்களை உச்சரிக்கிறார்கள்?

இயேசு மந்திரமா, ஜூடாஸ் மந்திரமா?

எதிலும் கவனத்தைச் செலுத்தக் கூடாது. இந்த ஓவியம் முழுமையாக முடியட்டும் - இல்லாவிட்டால் இந்தக் கிறுக்கல்.

எத்தனை மணிகள் கடந்தன? இது வேறொரு நாளா? கதவை யாரோ தட்டினார்கள்.

திறந்து பார்த்தேன்.

மிருதுளா.

என்ன நறுமணம் அவளுக்கு?

அவளா? அவள்... அவள்...!

மிருதுளா என் படுக்கையில் உட்கார்ந்தாள். நான் அவளை தைரியத்துடன் உற்றுப் பார்த்தேன். கூர்மையான மூக்கு. இந்தப் படுக்கையறையின் மங்கலான வெளிச்சம். மஞ்சள் பூசியிருந்த கன்னங்கள். அகலமான உதடுகள். கீழுதடு சற்று முன்னோக்கி தள்ளி இருக்கிறதோ? காதுகளில் ஒளிர்ந்து கொண்டிருப்பவை வைரக் கம்மல்களா? கம்மலுக்கு மேலே தெரியும் தலைமுடி நரைத்திருக்கிறதோ? இல்லை... இல்லை... வைரத்தின் பிரகாசம் அப்படித் தெரிகிறது.

‘‘குறும்புக்காரன்... உனக்கு இப்போ தைரியம் வந்திருச்சு... அப்படித்தானே?’’

‘‘புரியலம்மா...’

‘‘அம்மா இல்லை... மிருதுளா! சொல்லு, முகு! நீ என்னையே எதுக்கு இப்போ உற்றுப் பார்த்தே?’’

‘‘வெறுமனே...’’

‘‘பொய்!’’

நான் அதற்கு பதிலெதுவும் கூறவில்லை.

‘‘உனக்கு விருப்பமில்லையா முகு?’’

அப்படியென்றால் என்ன? ஒரு கெட்ட கேள்வியோ?

எங்காவது ஓடிப் போகவேண்டும்போல் எனக்கு இருந்தது. இப்போது வரை நான் உடலை அசுத்தப்படுத்திக் கொள்ளாதவன்.

‘‘முகு, நான் அழகிதானே?’’

‘‘ஆமா...’’

‘‘பிறகு?’’

‘‘நான் கெட்டவனாக ஆகலை அம்மா!’’

படுக்கையில் அமர்ந்தவாறு மிருதுளா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். இப்படியொரு சிரிப்பு இருக்கிறதா? மிருதுளா படுக்கையில் மல்லாக்கப் படுத்தாள். சிரிப்பு தொடர்ந்தது.

திடீரென்று திறந்து கிடந்த கதவு வழியாக ஒரு தலை உள்நோக்கி நீண்டது.

சுப்பம்மா.

மச்சத்தைக் கொண்டவள்.

அவளைப் பார்த்ததும் மிருதுளா சிரிப்பை நிறுத்தினாள்.

எழுந்தாள்.

சுப்பம்மாவிற்கு மிருதுளா பயப்படுகிறாளா?

எதற்காக?

பொழுது புலர்வது வரை நான் தூங்கவேயில்லை.

அதோ, ஈஸலில் நான் வரைந்த புதிய ஓவியம்.

ஏராளமான மண்டையோடுகள்.

பார்வையற்ற அவற்றின் ஏராளமான கண் துவாரங்கள் வழியாக காற்று வருகிறது. அதே காற்றுதான்... க்யான்வாஸிற்குக் கீழே அது உருகி விழுகிறது. அப்படி உருகி விழுந்த காற்றில் ஒரு முகம் - ஒரு பிசாசின் முகம்.

இது என் படைப்பா?

இப்படியொரு ஒவியத்தை இதற்கு முன்பு எப்போதும் நான் வரைந்ததில்லை.

என்னை வைத்து இதை யாரோ வரைந்திருக்கிறார்கள்.

இயற்கைக்கு அப்பால் பார்க்க வேண்டும். பிரபஞ்சங்களின் ஆழத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றெல்லாம் சொன்ன மிருதுளா என் விரல்களில் நுழைந்திருப்பாளோ?

யார் அவள்?

மரணத்தைப் பற்றி, காலம் என்ற வளையத்தைப் பற்றி வான ரேகைகளைப் பற்றி, தாளியோல கிரந்தங்களில் இருக்கும் பழைய மந்திர விதிகளைப் பற்றி என்னிடம் அவள் எப்போது விளக்கிக் கூறினாள்?

நான் அந்தக் கட்டிலின் காலைப் பார்க்க வேண்டும்.

என்னுடைய காலண்டர்.

இப்போது அந்தக் காலில் பதினாறு கோடுகள்.

நான் அந்தப் பதினாறு கோடுகளையும் எண்ணி உறுதிப்படுத்திக் கொண்டபோது, சுப்பம்மா மீண்டும் வந்தாள்.

தடிச்சி சுப்பம்மா.

அவள் நடப்பதைப் பார்க்கும்போது முட்டையைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு நடக்கும் எட்டுக்கால் பூச்சி மாதிரி அவள் இருப்பாள்.

தாங்கிப் பிடித்திருப்பது ட்ரே.

அதில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் கல்லில் என்ன இருக்கிறது.

சுடு நீர்?

காப்பி?

தேநீர்?


4

ன் பாணி மாறியிருக்கிறது. தூரிகையையும் கத்தியையும் தவிர்த்துவிட்டு, சில நேரங்களில் ட்யூப்களிலிருந்து க்யான்வாஸில் நேரடியாக சாயத்தை நான் தேய்க்க ஆரம்பித்து விடுகிறேன். என் வண்ணங்களுக்குப் பிரகாசம் இல்லை. எல்லாமே இருண்ட நிறங்கள்.

- ரோஸியானா.

- பாண்ட் அம்பர்.

- ரா அம்பர்.

- ஐவரி ப்ளாக்.

என் விஷயங்கள் மாறியிருக்கின்றன. நான் சமீப காலமாக வரைந்து கொண்டிருப்பவை - மற்ற உலகங்களைப் பற்றி மரணத்தைப் பற்றி.

வெப்பம் மாறாத புதிய இறந்த உடல்கள் - குளிர்ந்து உறைந்துபோன பிணங்கள் - குளிர்ந்து போயிருக்கும் மம்மிகள் - இரத்தத்தைக் குடிக்கும் கற்பனைக்கெட்டாத காலத்தைச் சேர்ந்த உருவங்கள்.

உடல் பிரிவதைப் பற்றி மிருதுளா என்ன சொன்னாள். நினைவுகளின் லாடம் பதிக்கப்பட்ட காலணிகள் அணிந்து உறுதியான சுவடுகளை வைக்க நான் முயற்சிக்கிறேன். ஆனால், நான் நடப்பது மறதியின், மந்திரவாதத்தின் க்ரீஸ் உருகி வழிந்து கொண்டிருக்கும் பாதை வழியாக. அதனால் நாள், வாரம், எதுவும் எனக்குத் தெரியவில்லை.

தந்தத்தாலான தாமரை மலர்கள் இருக்கும் அந்தப் பழைய மேஜையின் இரு பக்கங்களிலுமாக நாங்கள் உட்கார்ந்திருந்தோம். அப்போதுதான் மிருதுளா நட்சத்திர உடலைப் பற்றி பேசினாள். ஒவ்வொரு உடலிலும் ஒரு நட்சத்திர உடல் இருக்கிறது. அதைப் பிரித்து நட்சத்திர தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நட்சத்திர தளத்தில்தான் எல்லா செல்வங்களும் இருக்கின்றன. எனக்கு அந்த விஷயங்கள் எதுவும் அப்போது புரியவில்லை. அப்போது ஒரு கல்லூரி விரிவுரையாளரைப் போல மிருதுளா ஒரு சோதனையைக் காட்டினாள்.

அந்தப் பழைய மேஜைமீது என்னுடைய பத்து விரல்களையும் வைக்கும்படி மிருதுளா சொன்னாள். நான் அவள் சொன்னபடி செய்தேன். மிருதுளா தியானத்தில் இருப்பதைப் போலிருந்தாள். நிமிடங்கள் கடந்தபோது மேஜை தரையை விட்டு மேலே உயர்ந்ததைப் போல் எனக்குத் தோன்றியது. மேஜையின் உருவம் சுவரில் தெரிவதையும் நான் பார்த்தேன். திரைப்பட சிலைட் திரையிடப்படுவதைப் போல அப்போதும் என்னுடைய விரல்கள் மேஜைமீது இருந்தன.

மிருதுளா கண்களைத் திறந்தாள். சுவரைச் சுட்டிக் காட்டினாள் ‘‘பார்த்தியா?’’ அது இந்த மேஜையின் நட்சத்திர இமேஜ். மண்ணுக்கும் மரத்திற்கும்கூட இந்த மாதிரி நட்சத்திர உருவங்கள் இருக்கு.’’

அந்த வகையில் நான் சில சொற்களைத் தெரிந்துகொண்டேன்.

அஸ்ட்ரல் பாடி - நட்சத்திர உடல்.

அஸ்ட்ரல் ப்ளெய்ன் - நட்சத்திர தளம்.

ஆகாஷிக் ரெக்கார்ட் - ஆகாயப் பதிவு.

தொடர்ந்து. என்னுடைய உடலிலிருந்து என் நட்சத்திர உடலைப் பிரித்துக் கொண்டுபோவதற்கான வழிகளை மிருதுளா சொன்னாள். நான் அவற்றைச் சோதித்துப் பார்த்தேன்.

‘‘சொல்லு. நீ என்ன செய்தே?’’ - ஒரு சாயங்கால வேளையில் மிருதுளா என்னிடம் கேட்டாள்.

‘‘பிணத்தைப்போல நான் படுக்கையில் மல்லாக்கப்படுத்துக் கிடந்தேன். கண்களை மூடியிருந்தேன். சதைகள் இறுக்கமாக இருப்பதை நான் தவிர்த்தேன். இந்த உடல் மேலே உயர முயற்சித்தேன்.’’

‘‘பிறகு?’’

‘‘என்னோட நட்சத்திர உடல் உடம்பை விட்டு உயர, பிரிய மறுத்திடுச்சு.’’

‘‘வேற வழிகளைக் கையாண்டு பார்க்கலையா?’’

‘‘பார்த்தேன்- கனவு வழியா. உறங்கப் போறதுக்கு முன்னாடி சம்பவங்கள் நிறைந்த ஒரு கனவுக்கு நான் வடிகால் கொடுத்தேன். விளக்கை அணைத்துவிட்டு படுத்தபிறகு உறக்கத்துக்கான கதவு பாதி திறந்தபோது, முன்பே நான் தயார் பண்ணி வச்சிருந்த அந்தக் கனவுக்குள் நுழைய, அதோடு கலக்க நான் முயற்சித்தேன். முடியல...’’

‘‘கால் விரல்கள்?’’

‘‘அந்த மூணாவது வழியையும் பண்ணி பார்த்தாச்சு அம்மா.’’

‘‘என்னை அப்படிக் கூப்பிடாதே’’

நடுக்கத்துடன் நான் அழைத்தேன்: ‘‘மிருதுளா...’’

அன்பு வயப்பட்ட மிருதுளா என் தலைமுடியில் தன் விரல்களால் வருடினாள்.

‘‘ம்... கால் விரல்கள்?’’

‘‘படுத்த பிறகு வலது கால் பெருவிரலை நான் நீண்ட நேரம் அமைதியா பார்த்துக்கிட்டு இருந்தேன். பெருவிரலுக்கு அசைவு உண்டானது. அது பிரகாசமானது. அந்த அசைவையும் பிரகாசத்தையும் நான் மற்ற கால் விரல்களுக்கு மாற்றினேன். பிறகு... இடது கால் பாதத்திற்கு... கணுக்கால்களுக்கு... முழங்கால்களுக்கு... இடுப்பிற்கு... தொப்புளுக்கு... நெஞ்சுக்கு... கழுத்துக்கு... கைகளுக்கு... மூளைக்கு...’’

‘‘அதற்குப் பிறகும் நீ பிரியல...’’

‘‘இல்ல... அப்போது நான் என் பிறந்த கதையை நினைச்சேன். நர்ஸ் மரியாம்மாவை நினைச்சேன். என் யோகம் என் தாயைக் கொன்னதை நினைச்சேன். என்னைப் ‘பிசாசே’ன்னு அழைச்ச என் அப்பாவை நினைச்சேன். பயமா இருந்தது...’’

‘‘அதுதான் பிரச்சினையே. நீ எதுக்கு பயப்படுறே? நான் இருக்குறப்போ நீ எதுக்காக பயப்படுற? உனக்கு இன்னும் நம்பிக்கை வரல. அதுதான் ஆபத்தானது...’’

‘‘நம்பிக்கை? எதைப்பற்றி அம்மா?’’

‘‘என்னை அப்படிக் கூப்பிடாதேன்னு சொன்னேன்ல?’’

‘‘மிருதுளா...!’’

‘‘முகு... இனிமேலும் முயற்சிக்கணும். வாரக் கணக்கில்... மாதக் கணக்கில்... உன்னால அது முடியும். நீ ஆறாம் இந்திரியத்தையும் நாலாவது வானத்தையும் அடிமையாக்குவே. இந்திரியங்களைத் தாண்டிய பார்வை இப்பவே உன்கிட்ட இருக்கு. இல்லாவிட்டால் பூத, பிரேதங்களின் அழகான ஓவியங்களை உன்னால எப்படி வரைய முடியும்?’’

‘‘பயம் நிறைந்த ஓவியங்கள்...’’

‘‘உன் பயம் மாறும். சொல்லு... உனக்கு ஆசை இல்லையா?’’

‘‘அம்மா!’’ - நான் உரத்த குரலில் கத்தினேன்.

வேண்டியதில்லை. அப்படி அழைத்திருக்க வேண்டியதில்லை. மிருதுளாவிற்கு கோபம் வந்துவிட்டது. அவள் என் காதில் ஓங்கி அடித்தாள். அந்தக் கைக்குத்தான் என்ன முரட்டுத் தன்மை இருந்தது! நான் மெதுவான குரலில் சொன்னேன்: ‘‘மிருதுளா! இனிமேல் நான் உன்னைப் பேர் சொல்லித்தான் கூப்பிடுவேன்.’’

மிருதுளா என் அருகில் வந்தாள். என் நெற்றியில் முத்தமிட்டாள்.

அப்போது நான் அழுதேனா?

‘‘நீ எதுக்காக அழற?’’

‘‘நான் அழலியே!’’

‘‘உனக்கு என் மேல பிரியம் தோணுதா, முகு?’’

நான் என்ன பதில் கூறுவது? என்ன சொன்னாலும் மிருதுளாவிற்கு விருப்பமில்லாமல் போகலாம். பேசாமலிருப்பதே புத்திசாலித்தனமானது.

‘‘நீ ஏன் ஒரு பதிலும் சொல்லாம இருக்கே? நீ என்ன சின்னக் குழந்தையா? ஒண்ணு... உனக்கு எல்லாமே தெரியும். இல்லாட்டி... நீ... இல்ல... சொல்ல மாட்டேன்...’’

திடீரென்று மிருதுளா எழுந்து நின்றாள். அவள் மாடிவரை வளர்ந்து நிற்பதைப் போல் எனக்குத் தோன்றியது. நான் இந்த உருவத்தை வேறு எங்கோ பார்த்திருக்கிறேன். ஆமாம் ஓவியக் கண்காட்சிக்கு பிறகு கண்ட கனவில்... அதிலா? அதற்கு முன்பா? அது எப்படி?

யார் முணுமுணுத்தது? ‘வான... வானப் பதிவு...’


‘இதுவரை நடந்தவை அனைத்தும், இதுவரை வாழ்ந்தவர்களின் சிந்தனைகளும் உணர்ச்சிகளும் எல்லாம் நட்சத்திரத் தளத்தில் மறையாமல் தங்கியிருக்கின்றன. அது ஒரு நிரந்தர புராணம் - அழியாத ஒரு பதிவு - ஆகாஷிக் ரெக்கார்ட்... அதைப் படிக்க வேண்டுமென்றால் நட்சத்திர தளத்தை அடையவேண்டும். இந்த உடலைவிட்டு உயரத் தெரிய வேண்டும் - அஸ்ட்ரல் ப்ளேனை நோக்கி.’

இந்த விஷயம் இப்போது மிருதுளா கூறியதா? இல்லாவிட்டால் முன்பொரு பிறவியில் கூறியதா?

கடுமையான இருள்.

மிருதுளா இல்லை. இங்கு நான் மட்டும் தனியாகத்தான் இருக்கிறேன். இங்கு என்றால்? தந்தத்தாலான தாமரை மலர்களும், நெளிந்து கொண்டிருக்கும் பாம்புகளும் உள்ள பழைய மேஜை எங்கே? மிருதுளா இருந்த அறை எங்கே? அன்னை இல்லம் எங்கே?

நான் இப்போது ஒரு கார் ஷெட்டில் இருக்கிறேன்.

தேக்கு மரமும ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளும் கொண்டு கட்டப்பட்ட அன்னை வீட்டின் கார் ஷெட் அல்ல இது. இது ஒரு பெரிய நகரத்தின் கான்கிரீட் கட்டிடங்களின் பின்னாலிருக்கும் கார் ஷெட்களின் வரிசை. நான் நின்று கொண்டிருக்கும் கார் ஷெட்டின் நம்பர் எட்டு.

என்னை அடித்தது யார்?

என் கால்களுக்கு இடையில், பிறப்பு உறுப்பில் இடித்தது என்ன?

நான் உரத்த குரலில் கத்தினேன்.

பெரிய நகரத்தின் ஒட்டுமொத்த வெளிச்சங்களும் நிமிட நேரத்திற்கு பிரகாசித்தன. பிறகு அணைந்தன.

பிறகு நான் நினைத்துப் பார்த்தது சுப்பம்மாவைத்தான்.

மச்சங்கள் உள்ள தடிச்சி சுப்பம்மா என்னைத் தரையிலிருந்து தூங்குகிறாள்.

அப்படியென்றால்-

நான் இந்த அன்னை இல்லத்தில்தான் இருக்கிறேன்.

மிருதுளா எங்கே? நான் தேடினேன்.

சுப்பம்மா உரத்த குரலில் சிரித்தாள். தமிழில் என்னவோ இடைவிடாது பேசினாள். அவள் என்ன சொன்னாள்? ஒன்று மட்டுமே எனக்குப் புரிந்தது. மிருதுளா வீட்டில் இல்லை.

‘‘அவங்க எங்கே?’’

‘‘எங்கே போனா உனக்கென்ன?’’ - சுப்பம்மாவின் பதில்.

இது இரவா? பகலா?

நான் வெளியே பார்த்தேன். அலரிப் பூங்கொத்துகள் ஆடிக் கொண்டிருந்தன. அவற்றின் சிவந்த இதழ்களில் முதல் சூரியக் கதிர்கள் விழுந்திருந்தன. வானம் வெள்ளைப் புடவை உடுத்திக் கொண்டிருந்தது.

‘‘இன்னைக்கு என்ன கிழமை?’’

‘‘இன்னைக்கு புதன்கிழமை’’ - சுப்பம்மா சொன்னாள்.

அப்படியென்றால் நேற்று செவ்வாய்கிழமை. நேற்றுதான் நானும் மிருதுளாவும் நட்சத்திர உடலைப் பற்றி பேசினோமா? தெரியவில்லை.

எனக்கு ஒரு ஆர்வம் தோன்றியது.

இந்த அன்னை இல்லம் முழுவதும் நடந்து சோதித்துப் பார்க்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம் அல்லவா? எனக்கு இங்கு தெரிந்தவை சில அறைகளும் மூலைகளும் மட்டும்தான். மாடியில் இருக்கும் அறை, வராந்தா, நீண்ட கூடம், என் படுக்கையறை, பின்னால் இருக்கும் தேக்கு மரம், கார் ஷெட்.

‘மிருதுளா திரும்பிவர நேரமாக வேண்டும்’ - நான் வேண்டிக் கொண்டேன்.

‘‘வா!’’ - சுப்பம்மாவின் கட்டளை.

நான் பின்னால் நடந்தேன். என் படுக்கையறைக்கு.

‘‘தூக்கம் வருது சுப்பம்மா!’’

‘‘இப்பவா? நேரம் விடிஞ்சப்பவா?’’

‘‘தூக்கம் வருது, சுப்பம்மா’’ - என் கொச்சைத் தமிழ் அவளுக்குப் பிடித்திருக்குமா?

அவள் சிரித்தாள்: ‘‘தூங்கு...’’

நடந்து செல்லும் சுப்பம்மாவைப் பார்த்தபோது மீண்டும் ஒருமுறை தோன்றியது - முட்டையைத் தாங்கியவாறு நடந்து செல்லும் எட்டுக்கால் பூச்சி.

நான் படுக்கவில்லை. தூங்கவில்லை. நான் என்னுடைய தேடலை ஆரம்பித்தேன்.

எந்தவித சலனமும் இல்லாத அன்னை இல்லம். இன்று காற்றாடி மரங்களும் கடலும்கூட மவுன விரதத்திலிருந்தன. பூத, பிரேத, பிசாசுகளின் ஓவியங்களிலிருந்து விலகி படுக்கையறைக்கு வெளியே நடந்து செல்லும்போது நான் வேண்டிக் கொண்டேன்- ‘கடவுளே, தாயே, என் பாதங்களுக்கு நடுவில் ரப்பரும், பஞ்சும் உலகத்தின் ஒட்டுமொத்த பூனைகளின் ஓசையற்ற நடையும் இரண்டறக் கலந்துவிட வேண்டும்!’

ஓசை உண்டாக்காமல் நடக்கும்போது எனக்குத் தோன்றியது- நான் சிறையிலிருந்து தப்பிக்கிறேன்!

விசாலமான ஒரு  தளம். கீழே இறங்க பயன்படும் கைப்பிடி கொண்ட படிகள். எவ்வளவு படிகள்! முன்பு இருந்த தம்புரானும் அவருடைய படுக்கையறைத் தோழியும் எவ்வளவு நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தப் படிகளில் ஏறியிருப்பார்கள்? இறங்கியிருப்பார்கள்? அவர்களின் கால்களில் தங்கச் செருப்புகள் இருந்திருக்குமோ? அவர்கள் ஒன்று சேர்ந்தா நடந்திருப்பார்கள்? இல்லாவிட்டால் தம்புரான் முன்னாலும், தோழி பின்னாலும் நடந்திருப்பார்களா? தம்பு கிழவனாக இருந்தான்- என்று கற்பனை செய்ய எனக்குத் தோன்றியது. ஜுரம் உள்ளவன் வெப்ப ஜுரம், பித்த ஜுரம், வாத ஜுரம், கப ஜுரம், ஆலாப ஜுரம், சன்னி பாத ஜுரம், மாஹேந்திர ஜுரம், பக்ஷ ஜுரம், சாதுர்த்திக ஜுரம், மாச ஜுரம், ஷண்மாச ஜுரம், சர்வ ஜுரம்...

அவர், தோழி?

பிராணேஸ்வரி, ஸம்போகினி, அனலா, அஜிதா, அனாமிகா, காம ரூபிணி...

சிம்மாசனத்தைவிட, செங்கோலைவிட, ஓவியங்களைவிட அமைச்சர்களைவிட படைத்தளபதிகளைவிட தம்புரானைத் தாங்கியிருந்தது அந்தத் தோழியின் இடையாக இருக்கும்.

அருகிலிருக்கும் மலைகளில் வளரும் எழுநூறு, எண்ணூறு வயதுகள் கொண்ட ஈட்டி மரங்களைத் தம்புரான் வெட்டி வீழ்த்தினான். அந்த அடர்ந்த காடுகளுக்குள் காம வயப்பட்டு நடந்து திரிந்த யானைக் கூட்டங்களிலிருந்த பெண் யானைகளின் கண்ணீரைப் பொருட்படுத்தாமல் தம்புரான் ஆண் யானைகளின் தலைகளில் குண்டு பொழியச் செய்தான். அவனே நேரடியாக அல்ல... சம்பளம் வாங்கிய வேலைக்காரர்கள் துப்பாக்கிகளைத் தூக்கினார்கள். கேம்வார்டர்கள்... கன்சர்வேட்டர்கள்... மரம் பிடித்து, மரத்தை இழுத்து, விக்கிரகங்ளைச் சுமந்து, வெள்ளைப் புள்ளிகளும் ஜுரமும் கொண்ட ஆண் யானைகள் அல்ல இறந்து விழுந்தவை... கொலை செய்யப்பட்டு விழுந்த ஆண் யானைகள்... எடை அதிகம் கொண்ட நீளமான கொம்புகளை மண்ணில் குத்தி, இரத்தத்தைச் சிந்தியவாறு, கடைசி தடவையாக உருண்டபோதும் அவை என்ன அழகாக இருந்தன!

வயது அதிகமான ஈட்டி மரம், தூளாகத் தொடங்கியிருக்கும் தந்தம்... மெதுவாக நடக்க வேண்டும். ஓசையும் அசைவும் கேட்டு சுப்பம்மா வந்துவிடக்கூடாது.

இந்த அன்னை இல்லம் முழுவதையும் சுற்றி நடந்து பார்க்க நேர்ந்தால், எப்படிப்பட்ட ரகசியங்களெல்லாம் எனக்குத் தெரிய வரும்? இறங்கினேன்.

கடைசி படியும் முடிந்தது.

பார்க்கிறேன் - எல்லாவற்றையும் பார்க்கிறேன்.

தூண்கள், சுவர்கள், சுவர்களில் மறைந்து கொண்டிருக்கும் ஓவியங்கள்.

சலங்கை அணிந்த பாதிக் கால், பல படங்களையும் இழந்துவிட்ட பாம்பு, நிழலைப் போலிருக்கும் ஒரு கஜலட்சுமி, போதை நிறைந்த அழகிகள், பூதகணங்கள்.

நான் நடந்தேன்.


புதிர்கள் நிறைந்த அன்னை இல்லத்தின் குடல்கள் வழியாக.

திடீரென்று ஒரு வழித்தடை போல, ஒரு கதவு முன்னால் இருந்தது. மூடப்பட்டிருந்த பழைய கதவு. அதன்மீது இங்குமங்குமாக பித்தனைக் குமிழ்கள், ஏதோ கணக்கு ஆசிரியர் கொத்தி உண்டாக்கிய டிசைன்கள்.

இந்தக் கதவுக்கு அப்பால் என்ன இருக்கும்?

கதவில் பூட்டு எதுவும் இல்லை. பூட்டு அதற்குள் இருக்கிறதோ? நடுங்கிக் கொண்டிருந்த கைகளை வைத்து அந்தக் கதவை திறக்க நான் முயன்றபோது இரண்டு குளிர்ந்த கைகள் பின்னாலிருந்து என்னைத் தொட்டன. நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

சுப்பம்மா.

அவள் என்னை எப்படிக் கண்டு பிடித்தாள்? மிருதுளா இல்லாத நேரம் பார்த்து அவளும் ஏதாவது தேடலில் இறங்கியிருப்பாளோ?

‘‘வா!’’ - சுப்பம்மா உரத்த குரலில் என்னை அழைத்தாள். அவளுடைய வெற்றிலை போட்டு சிவப்பாக்கிய உதடுகள் நடுங்கின. கோடுகள் விழுந்த அவளுடைய கழுத்தும் முகமும் அசைந்தபோது மச்சங்கள் நடனம் ஆடின.

இன்று என்ன சுப்பம்மாவிடம் நல்ல ஒரு வாசனை?

நான் மூக்கை விரித்தேன்.

மிருதுளாதான் காரை ஓட்டியவாறு வந்து கொண்டிருந்தாள். கார் அன்னை இல்லத்திற்குப் பின்னாலிருந்த ஷெட்டை நோக்கி வந்து கொண்டிருந்தது.

மீண்டும் பார்த்தபோது சுப்பம்மா முற்றத்தில் நின்றிருந்தாள். என்னவோ மாற்றங்கள் உண்டான சுப்பம்மா...

திடீரென்று நான் காரணத்தைக் கண்டுபிடித்தேன்.

இப்போது பார்த்த சுப்பம்மா வேலைக்காரியின் புள்ளிகள் போட்ட புடவையை அணிந்திருந்தாள்.

சற்று முன்பு என்னைக் கையும் களவுமாக பிடித்தபோது?

அவள் ஒரு அடர்த்தியான நீல நிறப் பட்டுப் புடவையை அல்லவா அணிந்திருந்தாள்?

ஆமாம்... அதனால்தான் நாற்றம் வரவில்லை. அந்தப்புடவை மிருதுளாவிற்குச் சொந்தமானதா?

5

புள்ளிகள் போட்ட புடவையை அணிந்திருந்த சுப்பம்மா மதிய உணவுடன் என்னுடைய படுக்கையறைக்கு வந்தபோது நான் ஓவியம் வரைந்து கொண்டிருந்தேன்.

பிரேத சக்திகளைப் பற்றிய ஓவியம்.

க்யான்வாஸின் மத்தியில் உடம்போடு ஒட்டிக் கிடந்த பச்சை கவுன் அணிந்திருந்த பெண் உருவம். முகத்திற்கும் கழுத்திற்கும் நீல நிறம். கை, கால்களுக்கு அடர்த்தியான பச்சை நிறம். அவளுடைய முதுகிலிருந்த பெரிய சிறகுகள் வளர்கின்றன. சிறகுகளின் பக்கத்திலிருந்த நீளமான தூவல்கள் அவளின் இடையைச் சுற்றி, முன்னால் வந்து பிறப்பு உறுப்பிற்கு மேலே ஒன்று சேர்கின்றன. அவள் தன் வலது கையில் வாளும் இடது கையில் தராசும் வைத்திருக்கிறாள். தலையில் ஒரு சந்திர கலை - பிரிந்து ஆடிக் கொண்டிருக்கும் அவளுடைய தலைமுடி ஆறு கைகளைக் கொண்ட நட்சத்திரங்களைப் போல் மின்னியவாறு நெளிந்து கொண்டிருக்கும் ஆக்டோபஸ்... ஒரு மேகத்தின்மீது அவள் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடைய வலது பக்கம் மற்றொரு பெண் உருவம் நான் வரைந்தேன். அவள் புலி முகத்துடன் இருக்கிறாள். அவளுடைய கை, கால்கள் மீன்களின் செதில்களால் சூழப்பட்டிருக்கின்னன. சிறகு கொண்ட பெண்ணின் இடது பக்கம் ஒரு ஆண் இருக்கிறான். அவனுக்குக் கொம்பு இருக்கிறது. அவன் போருடை அணிந்திருக்கிறான். அவனுடைய தோளிலிருந்து நெருப்பு ஜுவாலைகளைக் கொண்டு பின்னி உண்டாக்கிய மேலாடை காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

ஓவியம் பாதிக்குமேல் முடிந்த நேரத்தில்தான் சுப்பம்மா வந்தாள். ஈஸலுக்கு அப்பால் போடப்பட்டிருந்த சிறிய மேஜையில் அவள் உணவை வைத்தாள்.

எப்போதும் உடனே அங்கிருந்து போய்விடுவாள் சுப்பம்மா.

இன்று என்ன காரணத்தாலோ அவள் சுற்றிச் சுற்றி அங்கேயே நின்றிருந்தாள்.

முன்பு ஒருமுறைகூட என்னுடைய ஓவியங்களைப்பற்றி அவள் தன்னுடைய கருத்தைக் கூறியதேயில்லை. ‘வா’ என்ற ஒரே வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு என்னைக் கட்டிப் போட்ட ஜெயிலர் சுப்பம்மா.

ஆனால், இன்று அவள் ஓவியத்தை உற்று நோக்கிக் கொண்டே சொன்னாள்: ‘‘நல்ல படம்... அழகா இருக்கு!’’

புள்ளி போட்ட புடவை, ஒட்டுப் போட்ட பழைய இரவிக்கை... முகத்தில் கற்பனை பண்ண முடியாத அளவிற்கு வயதைக் காட்டும் குறுக்குக் கோடுகள்... தடிமனான உதடுகள்... மச்சம்... சிவப்பு மூக்குத்தி...

ஒரு மாறுதலை நான் கவனித்தேன்.

பார்வையில், நின்று கொண்டிருக்கும் முறையில் அதிகாரமில்லை. கண்களில் தெரிந்தது திரண்டு நின்றிருந்த பயம்.

என் பார்வை அவளைத் தளர்வடையச் செய்ததோ?

‘‘நீ என்ன அப்படிப் பார்க்குறே?’’ - மெதுவான குரலில் அவள் கேட்டாள்.

‘‘ஒண்ணுமில்ல...’’

‘‘பொய் சொல்லாதே.’’

‘‘நான் ஏன் பொய் சொல்லணும்?’’

‘‘நீ அதை அம்மாகிட்ட சொல்லுவியா?’’

‘‘எதை’’ - நான் கேட்டேன்.

தமிழில் வெள்ளமென அவள் பேசினாள். அத்துடன் மென்மையான வேதனையும். திரும்பத் திரும்ப அவள் கூறியது இதுதான்.

‘‘எனக்குத் தெரியும்... நான் மிருதுளாவோட பட்டுப்  புடவையை எடுத்து அணிந்திருந்ததை நீ பார்த்துட்டே. நீ அம்மாகிட்டே அந்த விஷயத்தை சொல்லிடாதே. என்ன வந்தாலும் சொல்லக்கூடாது.’’ சுப்பம்மா பாவம்... சுப்பம்மா மன நிம்மதியுடன் இறக்க நினைக்கிறாள் - அதற்கான நேரம் வரும்போது. அவள் மேலும் சொன்னாள்: ‘‘மிருதுளாம்மா பயங்கரமானவங்க. மந்திரங்கள் தெரிஞ்சவங்க. நீ ஆபத்தை உண்டாக்கிடாதே.’’

‘‘அம்மாவோட புடவையை ஒரே ஒரு தடவை எடுத்து உடுத்தியிருக்கே! அது அந்த அளவுக்கு பயங்கரமான குற்றமா என்ன?’’ - நான் கேட்டேன்.

சுப்பம்மா என் கால்களில் விழுந்தாள்.

‘‘உனக்கு அம்மாவைப் பற்றி தெரியாது. அம்மா பயங்கரமான ஆளு.’’

கிழவி சுப்பம்மா - என்னை விரட்டும் சிறை அதிகாரி என் கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிற காட்சியை நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

நான் அவளைத் தேற்றினேன். ‘‘நீ பயப்படாதே, சுப்பம்மா நான் உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன்.’’

‘‘போறேன்’’ - கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சுப்பம்மா என் படுக்கையறையை விட்டு அகன்றாள்.

அந்த நீலப் பட்டுப் புடவையைப் பற்றி நான் மறந்தே போய்விட்டேன். அதிலென்ன பிரச்சினை இருக்கிறது என்று சிறிதும் நான் நினைத்திருக்க மாட்டேன் - சுப்பம்மா இந்த மாதிரி நடக்காமல் இருந்திருந்தால். இப்போது தோன்றியது. சுப்பம்மாவைக் கட்டிப்போட எனக்கு ஒரு கயிறு கிடைத்திருக்கிறது - நீல நிறப் பட்டுச் சேலை. இந்தக் கயிறை ஒரு தூக்கைப் போல நான் அவளின் தலைக்கு மேலே உயர்த்திக் காட்டுவேன். இந்த அன்னை இல்லத்தைப் பற்றிய ரகசியங்களை வெளிப்படுத்த நான் அவளைக் கட்டாயப்படுத்துவேன். அவள் ஒத்துழைக்கவில்லையென்றால் நான் மிருதுளாவிடம் எல்லாவற்றையும் கூறுவேன் -சுப்பம்மாவைக் காட்டிக் கொடுப்பேன்.

சுப்பம்மா போனபிறகு நான் ஓவியம் வரைவதில் மீண்டும் ஈடுபட்டேன்.


அப்போது அந்த அழைப்பு கேட்டது. ‘‘முகு!’’

கோவில் மணிகள், தேவாலய மணிகள், தேவாசுர வாத்தியங்கள் - இவை அனைத்தும் சேர்ந்த குரல். பழைய கனவில் கேட்ட குரல்.

ஓவியம் கிட்டத்தட்ட முடிவடைந்திருந்தது.

மீண்டும் அழைப்புச் சத்தம் கேட்டது ‘‘முகு!’’

இன்னும் காய்ந்திராத பிரேதங்கள் இருந்த க்யான்வாஸுடன் நான் மிருதுளா இருந்த அறைக்கு ஓடினேன். அங்கு நான் நிர்வாண உடலின் அழகைக் கண்டேன். ஓவியர்கள் நிர்வாண உடல்களை விரும்புவார்கள் - காம எண்ணங்கள் இல்லாமலே.

நிர்வாண உடல் என்று எதற்காக கூற வேண்டும்?

உடல் என்று சொன்னால் போதும். அதை வடிவமைத்தவன்தான் உண்மையிலேயே மிகப் பெரிய கலைஞன். நாம் அதற்கு ஆடைகள் அணிவித்து, மறைத்தோம். அதன் விளைவுகள், மூலைகள், பரப்புகள், உறுப்புகள் கோடுகள் -எல்லாவற்றையும் நாம் ஒளித்து வைத்தோம். அதன் தாளலயங்கள் வெளியே காட்டக் கூடாத - மறுக்கப்பட்ட பொருட்கள் என்று நாம் விளம்பரம் செய்தோம்.

மிருதுளாவைக் கண்டபோதுதான் இப்படியெல்லாம் தோன்றியது. மிருதுளா நிர்வாணமாக இல்லை. ஆனால் அவள் தன் நிர்வாணத்தை மறைத்து வைக்கவில்லை. மென்மையான ஒரு ‘ஸீ த்ரூ’ கவுனை மட்டுமே அணிந்திருந்தாள். என்ன நிறம் அவளுக்கு! இப்போதும் என்ன ஒரு இளமை!

அந்த அறையில் முன்பு நான் பார்த்திராத ஒரு மெத்தையில் பாதி சரிந்த நிலையில் மிருதுளா படுத்திருந்தாள். சிவந்த வெல்வெட் மெத்தை.

காணிக்கையுடன் சென்ற பக்தனைப் போல, காயாத ஓவியத்தைக் கையில் வைத்துக் கொண்டு நான் அவளுக்கு முன்னால் நின்றிருந்தேன்.

ஓவியம் மிருதுளாவின் கவனத்தில் பட்டதாகத் தெரியவில்லை.

அவள் மெத்தையை விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.

ஒரு குற்ற விசாரணை செய்பவனைப் போல என்னை மிருதுளா பார்த்தாளோ?

அவளுடைய கேள்வி உயர்ந்தது: ‘‘நேற்று இரவு நான் இல்லாத நேரத்துல நீ என்ன செய்தே?’’

‘‘உறங்கினேன்.’’

‘‘உண்மையாகவா?’’

‘‘ஆமா...’’

‘‘ம்... உனக்குத் தெரியாத பல விஷயங்கள் இருக்கு. நேரம் வர்றப்போ நீ எல்லாவற்றையும் தெரிஞ்சுக்கவே. நானே அவற்றை உனக்குச் சொல்லுவேன். அதற்கு முன்னாடி அபத்தம் எதையும் காட்டாதே.’’

நான் திகைப்படைந்து நின்றேன்.

நான் கூறியதை அவள் நம்பினாளா? சுப்பம்மா என்னை பற்றி ஏதாவது கூறியிருப்பாளோ? ச்சே! அப்படி இருக்காது சுப்பம்மாவிற்குத்தானே பயமே! அவள் என் கால்களில் விழுந்தாளே!

இனி மிருதுளா என்ன சொல்லுவாள்?

‘‘முகு! நான் நேற்று தெல்மாவின் வீட்டுல இருந்தேன். அவர்கள் எல்லோருக்கும் உன்மேல எவ்வளவு விருப்பம் தெரியுமா?’’

‘‘யாருக்கு?’’

‘‘தெல்மாவிற்கும் அம்பிகாவிற்கும், வித்யாவிற்கும்.’’

நான் அவர்களை நினைத்துப் பார்த்தேன். நான் வரையாத ஐந்து பெண்களின் ஓவியம் எனக்கு முன்னால் தோன்றியது. விரிப்பில் அழகியும் கள்ளங்கபடமற்றவளுமான நாய்க்குட்டி படுத்திருக்கிறாள்.

‘‘பத்மா வரவில்லையா?’’ - நான் கேட்டேன்.

மிருதுளாவின் கண்கள் கத்தி முனைகளாக மாறின.

‘‘நீ ஏன் பத்மாவைப் பற்றி விசாரிக்கிறே?’’

‘‘வெறுமனே...’’

‘‘உனக்குப் பத்மாவைப் பிடிச்சிருக்கா?’’

நான் வாய் திறக்கவில்லை.

‘‘உன்கிட்டதான் கேட்டேன். உனக்குப் பத்மாவைப் பிடிச்சிருக்கா?’’

‘‘எனக்கு எல்லாரையும் பிடிச்சிருக்கு.’’

‘‘திருடன்! உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’’

‘‘ஆமா... அம்மா!’’

‘‘அம்மாவா? யாரோட அம்மா?’’ - மிருதுளா கத்தினாள். வெல்வெட் மெத்தை குலுங்கியது. ஒரு வெளுத்த கால் மின்னல் கீற்றைப் போல வெளிப்பட்டது.

மிருதுளாவின் உதை என் உடம்பில் பட்டிருந்தால் பரவாயில்லை. ஆனால், இன்னும் காய்ந்திராத என் ஓவியத்தின்மீது அவளுடைய பாதம் வேகமாக வந்து விழுந்தது.

க்யான்வாஸிலிருந்த பச்சை கவுன் அணிந்த பெண்ணின் சிறகுகளும், புலி முகம் கொண்ட பெண்ணின் செதில்கள் சூழ்ந்த கால்களும், அந்த ஆணின் போருடையும் நெருப்பு, மேலாடையும் ஒன்றாகக் கலந்தன.

மிதித்துக் குழைந்த சாயங்கள்.

க்யான்வாஸில் இப்போது தெரிவது மிருதுளாவின் பாதச் சுவடு.

நல்ல ஒரு ஓவியம் வெறுமனே பாழாகிவிட்டது.

எனக்கு வருத்தம் உண்டானது. என் கண்கள் ஈரமாயின.

மிருதுளாவின் கோபம் தணிந்துவிட்டது. வெல்வெட் மெத்தையை விட்டு அவள் எழுந்தாள் - என் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.

நான் முணுமுணுத்தேன்: ‘‘மிருதுளா... மிருதுளா... மிருதுளா...’’

ஒரு மந்திரம் கூறுவதைப் போல.

‘‘முகு! காரணமே இல்லாமல் நான் கோபித்துவிட்டேன். பரவாயில்ல... மறந்திடு. நீ பிரம்மச்சாரி. பெண் வாசனைன்னா என்னன்னு தெரியாதவன். ஒரே ஒரு தடவை பார்த்த பத்மா உன்னைப் பாழ்படுத்திடுவாளோன்னு நான் நினைச்சிட்டேன். நீ அவளைப் பற்றி தனியா விசாரிச்சப்போ. ம்... போகட்டும் என்ன ஆனாலும் இந்த க்யான்வாஸை நீ தூக்கிப் போட வேண்டாம். என் கால் சுவடு இருக்குற இடத்துக்கு மேலே நீ இன்னொரு படம் வரை...’’

ஒன்றின் மேல் ஒன்று.

ஒரு நிறத்தின்மேல் இன்னொன்று.

‘‘என்ன வரையணும், மிருதுளா?’’

‘‘ஒரு கிளி.’’

‘‘நான் என் படுக்கையறைக்குப் போகட்டுமா?’’

‘‘வேண்டாம்... இங்கே... என் கண் முன்னாடி வரைஞ்சா போதும்.’’

‘‘நான் பெயிண்ட்டும் தூரிகையும் எடுத்திட்டு வர்றேன்.’’

‘‘நீ சிரமப்பட வேண்டாம்... நான் சுப்பம்மாவைக் கூப்பிடுறேன்.’’

மிருதுளா தன் கைகளைத் தட்டினாள்.

கைத்தட்டலின் எதிரொலி கூடத்தில் கேட்டது.

சுப்பம்மா வந்து நின்றாள்.

‘‘சுப்பம்மா, முகுவின் சாயங்களையும், தூரிகைகளையும் எடுத்துக்கிட்டு வா!’’

சுப்பம்மா கொண்டு வந்தாள்.

தரையில் போட்ட க்யான்வாஸுக்கு முன்னால் முழங்காலிட்டு உட்கார்ந்து கொண்டு நான் வரைய ஆரம்பித்தேன்.

இளம் பச்சை, அடர்த்தியான பச்சை, சிறிது கோபால்ட் ப்ளு, சிறிது லெமன் மஞ்சள், சிவப்பு, அதன் அடர்த்தியைக் குறைக்க கொஞ்சம் சிங்க் ஒயிட்.

வாள் மறைகிறது. தராசு மறைகிறது. புலிமுகம் மறைகிறது. மிருதுளாவின் பாதத்தின் அடையாளம் மறைகிறது.

ஏதோ முணுமுணுப்பு கேட்டு நான் திரும்பிப் பார்த்தேன். வெல்வெட் மெத்தையில் சப்பணம் போட்டு உட்கார்ந்து கொண்டு மிருதுளா என்னவோ சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மூடியிருந்தன.

கொத்தி வைத்த பொம்மையைப் போல சுப்பம்மா நின்றிருந்தாள்.

அதோ, க்யான்வாஸில் கிளி...

அதற்கு உயிர் இருக்கிறதா?

அதன் கண்கள் மனிதக் கண்களாக மாறுகின்றனவோ?

ஓவியத்தை முழுமை செய்துவிட்டு நான் எழுந்தேன்.

வியர்த்தது.

மிருதுளா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தவாறு எழுந்தாள். அவள் ஓவியத்தையே உற்றுப் பார்த்தாள்.

‘‘முகு! எனக்கு இந்த ஓவியம் பிடிக்கல.’’

தரையில் கிடந்த க்யான்வாஸை மிருதுளா அழுத்தி மிதித்தாள்.

க்யான்வாஸ் வெறுமையானது. தூய வெள்ளை நிறத்தில் அது மாறியது.

எங்கோ சிறகடிக்கும் ஓசை.

நான் சுற்றிலும் பார்த்தேன்.


அதோ, ஒரு பச்சைக் கிளி பறக்கிறது - பயந்து கத்தியவாறு.

தப்பிப்பதற்கு வழி தேடுகிறதோ அது?

காற்றடித்தது. திறந்த சாளரம் மூடியது.

இனி கிளி எப்படி வெளியே செல்லும்?

அது மாடிக்குப் பறந்தது.

அந்தப் பழைய வவ்வாலைப் போல...

மாடியில் மோதி, கிளி கீழே விழுந்தது.

கடல் இரைந்தது. காற்றுக்கு பலம் கூடியது. வானத்தில் கருமேகங்கள் நிறைந்தனவோ? சூரியன் மறைந்துவிட்டதோ? வெட்டவெளியில் குங்குமப் பொடிகளின் சுழல்காற்று உண்டானதோ?

தரையில் விழுந்த கிளி இலேசாக நெளிந்தது.

சிவந்த கோடுள்ள கழுத்தை உயர்த்தி அது எங்களைப் பார்த்தது.

மனிதனின் கண்களா?

மிருதுளா தன் கைகளைத் தட்டினாள்.

அந்தச் சத்தத்தைக் கேட்டதைப் போல ஒரு பெரிய கறுப்பு நிறப் பூனை எங்கிருந்தோ பாய்ந்து வந்தது. தரையில் கிடந்த கிளியை அது கடித்து எடுத்தது.

கிளியின் இறுதி அழுகை.

பிறகு அதன் எலும்புகள் நொறுங்கும் மெல்லிய சத்தம்.

கறுப்புப் பூனையின் வாயில் நுரை தள்ளிக் கொண்டிருந்தது.

ஒரே ஓட்டத்தில் கறுப்புப் பூனை எங்கோ போய் மறைந்தது.

வெறுமையான க்யான்வாஸைக் கையில் வைத்திருந்த நான் தரையைப் பார்த்தேன்.

ஒரு துளி இரத்தம் கண்ணில்பட்டது.

மிருதுளா சிரித்தாள். ‘‘முகு, இனி அந்தக் க்யான்வாஸில் எதுவும் வரைய வேண்டாம். அது சபிக்கப்பட்டது.’’

நான் ஏன் நடுங்கினேன்?

திடீரென்று ஒரு சத்தம் கேட்டது.

யாரோ தரையில் விழுகிறார்கள்.

சுப்பம்மா.

அவளுக்கு சுய உணர்வு இல்லாமலிருந்தது.

6

டந்தது என்ன? கனவா, உண்மையா? வரைந்த கிளி எப்படிப் பறந்தது? யார் அதற்கு உயிர் தந்தது? மிருதுளாவா? அவளுக்குக் கண்ணுக்குத் தெரியாத சக்திகள் இருக்கின்றன. பல மந்திரங்களும் அவளுக்கு நன்கு தெரியும். கைகளைத் தட்டிக் கறுப்புப் பூனையை வரவைத்தவள் அவள்தானே? அந்தக் கறுப்புப் பூனையை முன்பு ஒருமுறைகூட அவன் பார்த்தது இல்லை. மிருதுளா அதைத் தற்காலிகமாக படைத்தாளா? அப்படியென்றால் நோக்கம் என்ன? கிளியைக் கொல்வதற்கா?

பத்மாவிடம் எனக்குப் பிரியம் என்ற எண்ணம் மிருதுளாவிற்கு எப்படி உண்டானது? அந்த எண்ணம்தானே கிளி சம்பவத்திற்கு தூண்டியது? வெறுமையான க்யான்வாஸ் சபிக்கப்பட்ட ஒன்று என்று எப்படி மிருதுளா சொன்னாள்?

எதுவும் புரியவில்லை.

சிந்திக்க வேண்டும்.

இங்கு ரகசியங்கள் இருக்கின்றன - ரகசியங்களின் அறைகள்.

இரண்டோ மூன்றோ நாட்கள் கடந்தன. நான் ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தேன்.

காலை வேளையில் படுக்கையறையின் சுவர்களில் சாய்ந்து நின்றிருந்த என்னுடைய ஓவியங்களிலிருந்த தூசிகளைத் தட்டி அவற்றை அடுக்கி வைப்பதில் நான் ஈடுபட்டிருந்தேன். ஆச்சரியம்! அவற்றுக்கு மத்தியில் பத்மா இருந்த நான்கு ஓவியங்களை நான் பார்த்தேன்.

எப்போது நான் அந்த ஓவியங்களை வரைந்தேன்? ஒருமுறை மட்டுமே பார்த்த பத்மாவை இந்த அளவுக்கு சரியாக வரைய என்னால் எப்படி முடிந்தது?

ஒரு ஓவியத்தில் பத்மா தரை விரிப்பில் சாய்ந்து படுத்திருக்கிறாள்.

இன்னொன்றில் குளித்து முடித்த பத்மா முடியைக் கைகளால் கோதிக் கொண்டிருக்கிறாள்.

மூன்றாவது ஓவியத்தில் அவளுடைய ப்ளவுஸ் திறந்திருக்கிறது.

கடைசி ஓவியத்தில் பத்மா முழுமையான நிர்வாணக் கோலத்தில் இருக்கிறாள்.

இறுதியாகச் சொன்ன ஓவியத்தைப் பார்த்தால் யாருக்கும் தோன்றலாம்- காம எண்ணங்களுடன்தான் நான் அந்த மார்பகங்களிலும் பின் பகுதியிலும் தூரிகையை ஓட்டியிருக்கிறேன் என்று. அந்த ஓவியங்கள் நான் முன்பே வரைந்தவை என்றிருக்கும்பட்சம் மிருதுளா அவற்றை பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது - இந்தப் படுக்கையறைக்கு வந்த சந்தர்ப்பங்களில்: ஆனால், அந்த ஓவியங்களைப் பற்றி எந்தவொரு கருத்தையும் மிருதுளா வெளிப்படுத்தியதாக எனக்கு ஞாபகத்தில் இல்லை.

நான் என் நினைவாற்றலை எப்படி நம்புவது?

அந்த நான்கு ஓவியங்களை வரைந்த விஷயம் என்னுடைய ஞாபகத்தில் இல்லவே இல்லை. ஞாபகத்தின் சிதறிய துண்டுகள் பிறகும் சிதறுகின்றன. பொடியாகின்றன. குங்குமப் பொடிகள்.

வயிறு பற்றி எரிகிறது. அந்த நெருப்பு திரவம் இப்போதும் எனக்கு பருகக் கிடைக்கிறதா?

அந்த ஓவியங்களைப் பார்த்துவிட்டு நான் பத்மாவைக் காதலிக்கிறேன் என்று நினைத்தால்கூட மிருதுளா எதற்குக் கோபப்பட வேண்டும்? நான் அவளுக்கு யார்? விளையாட்டு பொம்மையா? சோதனைப் பொருளா?

நான் யாரையும் காதலித்தது இல்லை. நான் இந்த நிமிடம் வரை அசுத்தமானதில்லை. கனவுகள் கண்டு பழகிப்போன என்னுடைய மூளை இன்றுவரை ஒரு சக்தி வெளியேறும் கனவைக்கூட உருவாக்கியதில்லை.

நான் பெண் வாசனை தெரியாதவன்.

அவ்வப்போது பிறப்பு உறுப்பில் வேதனையை அனுபவிப்பவன்.

ஆனால், இங்கு வருவதற்கு முன்பு இப்படிப்பட்ட வேதனை உண்டானதில்லையே!

அந்த வேதனை வருவதற்கு முன்பு, நான் ஒரு பெரிய நகரத்தில் இருந்தேன். எட்டாம் எண்ணைக் கொண்ட கார் ஷெட்டில் என் கால்களுக்கு மத்தியில் என்னவோ வந்து இடிக்கிறது. இப்படி இப்போது விழித்திருக்கும்போதுகூட தோன்றுகிறது. தொடர்ந்து அந்த வேதனை இருக்கிறது. ஏதோ கடந்தகால நினைவு என்னைப் பின் தொடர்கிறதா? அபத்தம்! இந்த அன்னை இல்லத்திற்கு வந்து சேர்வதற்கு முன்பு இப்படி வேதனை இல்லையே!

நான் கட்டில் தூணைப் பார்த்தேன். இருபத்தியிரண்டு கோடுகள்.

கிளி சம்பவம் என்று நடந்தது? இரண்டோ மூன்றோ நாட்களுக்கு முன்பு.

நான் ஓவியங்களிலிருந்த தூசியைத் தட்டி அடுக்கி வைத்தேன்.

அந்தத் தூணில், தரையில் நின்றுகொண்டே இனியும் எட்டு கோடுகள் போடலாம். அதற்கும் மேலாக வேண்டுமென்றால் நான் கத்தியுடன் கட்டிலில் ஏறி நிற்க வேண்டும். கத்தி பயன்படுத்தாமல் இருக்கும் மூன்று தூண்கள் மீதியிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் முப்பது கோடுகள் வீதம் வரைந்தால் நான் இங்கு இருப்பது நூற்று இருபது நாட்கள் என்று வரும்.

அதற்குள் நான் எல்லா ரகசியங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அது முடியக்கூடிய விஷயமா?

கட்டில் தூணில் நான் விரல்களைத் தேய்த்தேன்.

அப்படி நின்றுகொண்டிருக்கும்போது பலவற்றையும் கண்டேன்- கேட்டேன்.

கடல் பெரும்பறை என முழங்கிக் கொண்டிருக்கிறது. பலியிடப்படும் இடங்களில் விளக்குகளுடன் ஆட்கள் வரிசையாக நகர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். சங்கநாதம் உயர்ந்து கேட்கிறது. தவளைச் சங்கு புஷ்பங்கள், நீல சங்கு புஷ்பங்கள், அசோகம், நந்தியார் வட்டம், தாமரை, பாரிஜாதம், நீர்மாதுளம், பிச்சி, கிருஷ்ண துளசி, கற்பூரத் துளசி-

தீபத் தட்டு.

கற்பூரம்.

இரத்தினம் பதித்த கிரீடங்கள்.

துவார பாலகர்.

வாத்திய கோஷம் - கொம்பு, குழல், இலைத்தாளம், இடைக்கா, செண்டை, மத்தளம், உடுக்கை.

ஸ்ரீவேலியா?

நூறு குத்து விளக்குகள்.

உதய அஸ்தமன பூஜையா?


கோவில் எது? கமலகாந்தனுடையதா? காளிகுளிகளுடையதா? கருமாடிக்குட்டனுடையதா?

எண்ணெய் கறுப்பு நிறம் கொண்ட பெரிய கருங்கல் தூண்கள். அவற்றில் நடனமாடும் கறுப்பு அழகிகள். எத்தனையோ வருடங்கள் கடந்த பிறகும் அவர்களின் கல்லாலான மார்பகங்கள் உடையாமல் இருக்கின்றன.

யாரென்று தெரியாத, காமவயப்பட்ட சிற்பிகள் - சிற்பங்களைச் செய்யும்போது அந்த மார்பகங்களை ஊதியிருப்பார்கள் - கருங்கல் துகள்களை அகற்றுவதற்காக. பிறகு அவர்கள் அந்தப் பாதி உருண்டைகளை தங்களின் விரல்களைச் சிறகுகளாக ஆக்கித் தடவியிருப்பார்கள்- மினுமினுப்பையும் முழுமையையும் சோதித்துப் பார்க்க.

சிற்பத்திலிருந்த அழகிகள் தூண்களை விட்டு இறங்கினார்கள். அவர்கள் மிருதுளாவின், அம்பிகா மேனனின், வித்யா ஷேணாயின், தெல்மா ரொஸேரியஸ்ஸின் வடிவங்களை எடுத்தார்கள்.

இப்போது அவர்கள் அழகிகளா?

மிருதுளாவைத் தவிர மற்றவர்கள் - இல்லை?

நன்கு இருட்டி விட்டிருக்கிறது.

இது வெள்ளிக்கிழமையா?

தூரத்திலிருந்து ஒரு அழைப்பு கேட்டது.

‘‘முகு!’’

அந்த அழைப்பில் வஞ்சிப் பாட்டு இருந்தது. பளபளப்பு இருந்தது. கம்பீரம் இருந்தது. அழகு இருந்தது. மன்மத வாசனை இருந்தது.

மிருதுளாவைத் தவிர, வேறு யாராலும் அப்படி அழைக்க முடியாது.

நான் ஓடிச் சென்றேன் மாடி அறைக்கு.

வெளியே பாட்டு பாடிக் கொண்டிருந்த காற்று - எசப்பாட்டு, வில் பாட்டு, நாட்டுப் பாடல்கள்...

மாடி அறை பீலியை விரிக்கிறது - படத்தை விரித்து ஆடுகிறது.

அங்கு நான்கு பெண்கள்.

மிருதுளா, தெல்மா, அம்பிகா, வித்யா.

‘‘ஹலோ ஜுடாஸ்!’’ - தெல்மா அழைத்தாள்.

அந்த அழைப்பு எனக்குப் பிடிக்கவில்லை. எனினும் நான் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

பத்மா எங்கு போனாள்?

கேட்கவில்லை. கேட்டாள் மிருதுளா கோபப்படுவாள்.

அவர்கள் இன்றும் கறுப்பு நிறப் பட்டுப் புடவைகளைத்தான் அணிந்திருந்தார்கள். இன்றும் பூஜை இருக்கிறது என்று அர்த்தம்.

‘‘ஹலோ ஜுடாஸ். இன்னைக்கு என்ன வரைவதா திட்டம்?’’ - தாளையும் பேனாவையும் நீட்டியவாறு தெல்மா கேட்டாள்.

நான் வெறுமனே ஏதோ வரைந்தேன். அந்தக் கோடுகளுக்கு மத்தியில் ஒரு ஸ்ரீகிருஷ்ணன் உயர்ந்தான். எனக்குச் சில சுலோகங்கள் ஞாபகத்தில் வந்தன. என்னைப் பெற்று இறந்

துபோன என் தாய் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டும்போது பாடிய வரிகளா அவை?

‘‘மவ்லே மாயூரபர்ஹம்.

ம்ருகத திலகம் சாரு லாலாடபட்டே.

கர்ணத்வந்தே...’

‘அன்பு, ஆனந்தம், தவழும்

உன் முகத்தைப் பார்க்க விரும்பிக்

கூடினார்கள்.

புண்ணியவதிகளான கோபியர்கள்...’

வித்யா கூறுவது காதில் விழுந்தது. ‘‘அப்பாவி!’’

என்னைப் பற்றியா சொன்னாள்?

தெல்மா மிருதுளாவிடம் கேட்டாள். ‘‘என்னைக்கு முடிவு?’’

மிருதுளா சிரித்தாள். ‘‘நேரம் வரட்டும். நேரத்தைப் பற்றி எனக்குக் கூட என்ன தெரியும்?’’

அம்பிகா சொன்னாள்: ‘‘அடுத்த செவ்வாய்கிழமை என் வீட்டில் பூஜை நடக்கட்டும். அன்னைக்கு மிஸ்டர் மேனன் இருக்க மாட்டார்.’’

அவர்கள் எல்லோரும் என்னை மறந்து விட்டார்களா? என்னுடைய ஓவியத்தைப் பார்க்க யாரும் விருப்பம் இருப்பது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

நான் அதைக் கிழித்தெறிந்தேன். தாள் துண்டுகள் சாளரத்தின் வழியாக வெளியே பறந்தன.

‘‘முகு, நீ வரையலையா?’’ - மிருதுளா கேட்டாள்.

‘‘நல்லா வரல. அதனால கிழிச்சு எறிஞ்சுட்டேன்.’’ - நான் மெதுவான குரலில் சொன்னேன்.

‘‘நேரமாகுது...’’ - யார் அப்படிச் சொன்னது?

மிருதுளா கைகளைத் தட்டி அழைத்தபோது, என்னைக் கட்டிப் போட சுப்பம்மா வந்தாள். படுக்கையறையை அடைந்ததும் பயத்துடன் அவள் கேட்டாள்: ‘‘அம்மாக்கிட்ட அந்த விஷயத்தைச் சொல்லலேல்ல?’’

‘‘இல்ல சுப்பம்மா... நான் உன்னைக் காட்டிக் கொடுப்பேனா?’’ வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுப்பம்மா அந்த விஷயத்தைக் கேட்கிறாள்- புதிதாக உறுதிப்படுத்திக் கொள்கிற நோக்கத்தில்.

அவளிடம் நான் கேட்க நினைப்பதையெல்லாம் கேட்பதற்கு எனக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கும்?

நான் படுத்தேன்.

தூக்கம் வரவில்லை.

வெளியே இருந்த தளத்தில் காலடிச் சத்தம் கேட்டதோடு குலுங்கக் குலுங்கக் கேட்கும் சிரிப்புச் சத்தம் கேட்டதோடு கோவில் கணித அடையாளங்களைக் கொண்ட அந்தக் கதவைத் திறந்து அவர்கள் ரகசியங்களின் கடலுக்குள் இறங்குகிறார்களோ?

திடீரென்று எல்லாம் நின்றுவிட்டதைப் போலிருந்தது.

கட்டிலில் படுத்துக் கொண்டே நான் நட்சத்திர உடலைப் பற்றி சிந்தித்தேன். நான் என்னுடைய வலது கால் பெருவிரலையே உற்றுப் பார்த்தேன் - மனதை ஒருநிலைப்படுத்திக் கொண்டு. பெருவிரல் பிரகாசமானது. படிப்படியாக எல்லா விரல்களும் பிரகாசித்தன. ஒரு சலனம் என்னுடைய உடலில் பரவியது. பிரகாசத்தின் ஸ்க்ரூட்ரைவர் எனக்குள் திறந்து நுழைந்தது. மிகப் பெரிய ஆச்சரியம்! நான் உடலிலிருந்து பிரிந்தேன்! நான் இப்போது பிரகாச துளி மட்டுமே!

கட்டிலுக்குக் கீழே நான் நின்றிருந்தேன். தரையை மிதித்து அல்ல. கால்களுக்கு கனமில்லை. நான் படுக்கையைப் பார்த்தேன். அங்கு முகுந்தனின் உடல் கிடக்கிறது. நான் அவனுடைய நட்சத்திர உடல்.

நான் உயர்ந்தேன். கனமில்லாத நான். வானத்தை நோக்கி.

பூமியில்லாத காட்சிகளை நான் பார்த்தேன். சாதாரணமாகப் பார்க்க முடியாத காட்சிகள், ஒரு சாயத் தட்டிலும் இல்லாத வண்ணங்கள், புதிய தளங்கள், புதிய கோணங்கள்... சதுரங்களும் வட்டங்களும் கோடுகளும் கோணங்களும்... மனிதனால் முடியாத ஜால வித்தைகளைப் பயன்படுத்திக் கோர்த்து, இணைத்து, உண்டாக்கிய அரண்மனைகள்... நான் அந்த அரண்மனைக்குள் ஏறி இறங்கினேன். பறந்து திரிந்தேன். அப்போது ஏராளமான நிர்வாண அழகிகள் சிறகை விரித்துக் கொண்டு உயர்வதைப் பார்த்தேன். காமவயப்பட்ட சக்தி படைத்த ஆண்கள் மேக ரதங்களின் அழகிகளைப் பின்தொடர்ந்தார்கள். ரதங்களில் பூட்டப்பட்டிருந்த குதிரைகள் புயலைப் போலிருந்தன. பலம் கொண்ட ஆண்கள் அழகிகளைப் புணர்ந்தார்கள். சிறிதும் முடிவடையாத அந்த இன்ப உறவில் அவர்கள் ஈடுபட்டிருந்தபோது கண்ணுக்குத் தெரியாத இசைக்கருவிகள் இசை மழையைப் பொழியச் செய்தன. திடீரென்று அனைத்தும் மறைந்தன. பிரேத உருவங்கள் என்னைச் சூழ்ந்தன. அவை என்னுடைய உடலைப் பிளந்து, என் குருதியைக் குடித்தன. என்னுடைய எலும்புகளைச் சுவைத்துத் தின்றன. என் குடல்களை இழுத்து, அவை மேகங்களுக்கு நடுவில் பாலம் கட்டின.

நிமிடங்கள் கடந்தபோது பொன் நிற விரிப்பு விரிக்கப்பட்டிருந்த படிகளில் நான் இருந்தேன். பிரேத உருவங்கள் எங்கோ மறைந்து போயிருந்தன.

என் சுவடு தவறாகிவிட்டதா? நான் கீழே பதிக்கத் தொடங்கினேன். படுவேகமாக. நான் இப்போது கடலுக்கு மேலே இருந்தேன்- காற்றாடி மரங்களுக்கு மேலே.

நான் அன்னை இல்லத்தைச் சுற்றிப் பறக்க ஆரம்பித்தேன்.

அப்போது பெரிய அளவில் பயம் தோன்றியது.


என் உடல் கட்டிலில் கிடந்தது. நான் அதை விட்டுப் பிரிந்து போய் எவ்வளவு காலம் ஆனது? அது அங்கேயேதான் இருக்கிறதா? இல்லாவிட்டால் நான் எதற்குள் நுழைவது? ஒரு பிரகாச துளியாக நான் என்றென்றைக்கும் இந்த வெட்டவெளியில் தங்கியிருக்க வேண்டிய நிலை வருமோ?

கார் சத்தம் கேட்டது.

பார்த்தேன்.

தெல்மாவும் அம்பிகாவும் வித்யாவும் தங்களின் காரில் ஏறுகிறார்கள். விடை பெறும் பரபரப்பு. சிறுசிறு பேச்சுகள். கை வீசல்கள்.

நான் மிருதுளாவிற்குத் தெரியாமல், யாருக்கும் தெரியாமல் மாடியிலிருந்த அறைக்குள் நுழைந்தேன். கூடத்தின் வழியாக படுக்கையறைக்கு நான் வேகமாகப் பாய்ந்தேன். ஹாவ்! என் உடல் காணாமற் போகவில்லை. நான் என்ற ஒளி அதன்மீது போய் அமர்ந்தது. அப்போது உடல் திடுக்கிட்டு விழித்தது. நான் பழைய முகுந்தனாக ஆனேன்.

நான் படுக்கையறைக் கதவை அடைக்கவில்லை.

நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன்.

தூங்கியிருக்க வேண்டும்.

மீண்டும் நினைவு வந்தபோது, எனக்கு அருகில் நாளிதழ் கிடப்பதைப் பார்த்தேன். நான்காக மடிக்கப்பட்ட தாள். இங்கு இதற்கு முன்பு பத்திரிகை இருந்து நான் பார்த்ததில்லை. வழக்கத்தில் இல்லாத சம்பவம் இது. நான் ஆர்வத்துடன் பத்திரிகையைப் பிரித்தேன்.

என் ஆத்மாவையும் உடலையும் மிகப் பெரிய பனிக் கட்டிகளில் யாரோ அறுத்துப் போடுவதைப் போல் நான் உணர்ந்தேன். நான் பத்திரிகையில் பார்த்த புகைப்படத்தையே திரும்பத் திரும்ப பார்த்தேன்.

பத்மாவின் படம்.

கறுப்பு கட்டத்திற்குள்.

நான்கு வரிகளில் மரண அறிவிப்பு.

இறுதிச் சடங்கு நடைபெற்ற நாள் - நேரிலும், நேரில் இல்லாமலும் ஆறுதல் தெரிவித்த உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி - இவன், கவலையில் மூழ்கியிருக்கும் தாயும், தந்தையும்.

மரணமடைந்த தேதி...?

‘அய்யோ’ என்று கத்த நான் முயற்சித்தேன். முடியவில்லை. அதிர்ச்சியை ஏற்ற உடலும் மனமும் சத்தம் போட்டு கத்துவதற்கான சக்தியைக்கூட இழந்துவிட்டன.

பத்மா இறந்த நாளன்றுதான் கிளியை கறுப்புப் பூனை தின்றது.

சிவப்புக் கோடு போட்ட கழுத்தை உயர்த்தி, கிளி எல்லோரையும் கடைசி முறையாகப் பார்த்தபோது எனக்கு என்ன தோன்றியது?

மனிதக் கண்கள்.

பத்மாவின் கண்கள்.

சுப்பம்மா அன்று எதற்காக மயக்கமடைந்து விழுந்தாள்?

அந்தக் க்யான்வாஸ் சபிக்கப்பட்டது என்று மிருதுளா கூறக் காரணம் என்ன?

அந்தப் பத்திரிகையை நான் பார்க்க வேண்டுமென்று யாரோ கட்டாயம் விரும்புகிறார்கள்.

பத்மாவின் மரணத்தைப் பற்றி நான் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் மட்டும்தானே வழக்கத்தில் இல்லாத வகையில் என் படுக்கையைத் தேடி பத்திரிகை வந்திருக்கிறது!

இதற்குப் பின்னால் இருப்பது யார்? மிருதுளா?

சுப்பம்மா காப்பி ட்ரேயுடன் வந்தபோது நான் பத்திரிகையிலிருந்த புகைப்படத்தைக் காட்டினேன்.

அவள் கால்முதல் தலைவரை நடுங்கினாள். காப்பி கப் கீழே விழுந்து உடைந்தது. அவளுடைய கறுத்த முகம் வெளிறியது.

என்னவோ கூற அவள் முயன்றாள். வெற்றிலை போட்டு சிவந்த அவளுடைய உதடுகள் அசைந்தனவே தவிர, வார்த்தைகள் வெளியே வரவில்லை.

எனக்கு என்னுடைய குரல் திரும்பக் கிடைத்தது.

‘‘சுப்பம்மா!’’ நான் அழைத்தேன்.

அவள் முணுமுணுத்தாள்: ‘‘சொல்லாதே... அந்தப் புடவை விஷயத்தைச் சொல்லாதே!’’

7

சிந்திக்கச் சிந்திக்க அந்த விஷயம் எனக்கு மேலும் மேலும் உறுதிபடத் தெரிந்தது. மிருதுளாதான் பத்மாவைக் கொன்றிருக்கிறாள் - மந்திரங்களைப் பயன்படுத்தி.

இனி நான் இங்கு எப்படித் தங்குவது? நினைத்துப் பார்க்க முடியாத ஏதோ ஆபத்து இங்கு பதுங்கியிருக்கிறது. இந்த இடத்தில் தீமை நிறைந்து இருக்கிறது. இங்கு நான் கைதி. வெளி உலகத்துடன் இந்த வீடு கொண்டிருக்கும் தொடர்பு இந்த தொலைபேசியில் ஒதுங்கியிருக்கிறது. அந்தக் கருவி எனக்கு உதவி செய்யாது. நான் அழைக்க யாருமில்லை. என்னுடைய பயங்களைப் பற்றி நான் யாரிடம் கூறுவேன்? நண்பர்கள் இல்லாத நான் - ஞாபகங்களை இழந்த நான் - ஓ! தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.

எல்லாவற்றையும் மூட்டை கட்ட வேண்டும். ஓடவேண்டும்.

எதை மூட்டை கட்டுவது? இங்கு என்ன இருக்கிறது? என்னுடைய ஓவியங்கள், சாயங்கள், தூரிகைகள், சாயத் தட்டு, ஈஸல், தோளில் தொங்கப் போடும் வார் உள்ள துணிப்பை, அணிந்திருக்கும் ஆடை, மங்கலான நீல நிறத்தில் இருக்கும் டெனிம் பேன்டும் பட்டன் விழுந்த சட்டையும் - இவ்வளவுதான்.

அணிந்திருக்கும் ஆடைகளும், பேன்டும் சட்டையும் கையில் இருக்கட்டும். வேறெதுவும் வேண்டாம். பூத, பிரேதங்களின் ஓவியங்கள் இங்கேயே கிடந்து கரையானுக்கு இரையாகட்டும்.

துணிப் பையில் நான் சட்டையையும் பேன்டையும் வைத்தேன்.

படுக்கையறையை விட்டு இறங்கும்போது ஒரு ஆசை தோன்றியது. பத்மாவை இன்னொரு முறை பார்க்க வேண்டும். என் ஓவியங்களுக்கு மத்தியில் நான் அவளைத் தேடினேன். இல்லை. பத்மாவைக் காணோம். அவளுடைய நான்கு ஓவியங்களும் காணாமற் போயிருந்தன.

ஓட வேண்டும்.

தப்பிக்க வேண்டும்.

பையைத் தோளில் போட்டுக் கொண்டு நான் கூடத்தின் வழியாக ஓடினேன் - மிருதுளா இருக்கும் அறைக்கு. அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். மிருதுளா அங்கு இல்லை.

எப்படிக் கீழே இறங்குவது? எந்தப் படிகளில் ஏறி நான் முதலில் இங்கு வந்து சேர்ந்தேன்? நான் அவசரத்தில் ஒரு சோதனை நடத்தினேன். மாடி அறையின் வராந்தாவிலிருந்து வெளியே இறங்கும் இரும்பு ஏணியை நான் பார்த்தேன். அதன் வழியே நான் முற்றத்தில் வந்து இறங்கினேன்.

காற்று வீசியது. கடல் இரைந்தது.

நான் கேட்டை நோக்கி ஓடினேன். திரும்பிப் பார்க்காமல் ஓட வேண்டும்.

அப்போது பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது.

‘‘முகு!’’

முன்னோக்கி வைத்த கால் அப்படியே நின்று விட்டது. காலுக்கு கனம் வந்து சேர்ந்ததைப் போலிருந்தது. உடலைவிட காலின் எடை அதிகமாக இருந்தது.

நான் திரும்பிப் பார்த்துவிட்டேன்.

கார் ஷெட்டில் மிருதுளா நின்றிருந்தாள். ஸ்வெட்டரும் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். அழகி - புத்திசாலிப் பெண்- கவர்ச்சிப் பெண். ஸ்வெட்டரிலிருந்து முன்னோக்கி குதிப்பதற்குத் தயாராக இருந்த மார்பகங்கள்.

‘‘முகு!’’

என் மனம் பதறியது. எனக்குத் தோன்றியது. நான் குதிரை லாடம். மிருதுளா - காந்தம். கேட்டைக் கடந்து தப்பிக்க வேண்டும் என்று மனம் கட்டளையிட்டாலும், கால்கள் நடந்தது என்னவோ கார் ஷெட்டை நோக்கித்தான். இப்போது கால்களுக்கு கனம் இல்லை. கால்களுக்கு சிறகுகள் முளைத்திருந்தன.

‘‘நீ எங்கே போற?’’ - வசீகரிக்கும் சிரிப்புடன் மிருதுளா கேட்டாள்.

‘‘எனக்குத் தெரியாது.’’

‘‘பிறகு?’’


‘‘இருந்தாலும் நான் போறேன். எனக்குப் பயமா இருக்கு.’’

மிருதுளா தன்னுடைய இரண்டு கைகளையும் முன்னால் நீட்டினாள் - கட்டிப் பிடிப்பதற்கு அழைப்பதைப் போல. இதுவும் அவளின் மாயச் செயலாக இருக்கலாம். கவனமாக இருக்க வேண்டும்.

அவளுடைய புரிந்துகொள்ள முடியாத சக்திகள் என்னை அடிமைப்படுத்தி விடக்கூடாது.

‘‘நீ யாருக்கு பயப்படுறே?’’

‘‘உனக்குத்தான்’’ - நான் எப்படியோ கூறிவிட்டேன்.

‘‘சரிதான்... பாரு... இங்கே பாரு!’’

நான் பார்த்தேன். என்ன பிரகாசம் அவளுடைய கண்களுக்கு! அவை வசீகர ஒளிகளைப் பொழிந்து கொண்டிருக்கும் மோகன இயந்திரங்களாக இருந்தன. எனக்கு உள்ளே மோகம் பிறந்தது - மிருதுளாவின் கைகளுக்குள் இருக்க வேண்டும். நான் அவளுக்கு நேராகச் சென்றேன். அவளுடைய கைகளுக்குள் நான் சிக்கினேன். அவள் என் தலையைத் தன் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள்.

‘‘உனக்கு இப்போ பயமா இருக்கா?’’

‘‘இல்ல...’’

‘‘வா... நாம எங்கேயாவது போகலாம். எனக்கும் ஒரு மாறுதல் தேவைதான். அந்த இருட்டு அறையில் தனியா இருக்குறதாலதான், உன் மனம் அலை பாய்ஞ்சுக்கிட்டு இருக்கு வா... நாம கொஞ்சம் சுத்தமான காற்றை சுவாசிப்போம்.’’

மிருதுளா காரின் கதவைத் திறந்து பிடித்தாள். நாங்கள் முன் இருக்கையில் அமர்ந்தோம். கடற்கரை சாலையின் வழியாக மிருதுளா காரை ஓட்ட ஆரம்பித்தாள்.

வெயிலுக்கு சக்தி ஏறிக் கொண்டேயிருந்தது. அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த கடலில் காட்டு மரங்களும் சிறு படகுகளும் மூழ்கி எழுந்து கொண்டிருந்தன. ஸெருலியன் ப்ளூ நிறத்திலிருந்த வானத்தில் இங்குமங்குமாக சிதறிக் கிடந்த வெள்ளி மேகங்கள் ஒன்றோடொன்று தட்டி விளையாடிக் கொண்டிருந்தன.

காரை ஓட்டும்போது இந்த மண்ணுக்கும் சாதாரண வாழ்க்கைக்கும் ஏற்ற சராசரியான உரையாடலை நடத்திக் கொண்டிருந்தாள் மிருதுளா.

- இது பழைய ப்ளைமௌத், முகு... பெட்ரோலுக்கு அதிக விலை உண்டானப்போ, நான் இதில் டீஸல் என்ஜினைப் பொருத்தினேன்.

- நான் செக்புக் எடுத்துவர மறந்துட்டேன். பரவாயில்ல. என்னோட கைப்பையைத் திறந்து பாரு... முன்னூற்றிப் பத்தா? ஓ... அது போதும்.

- முன் கூட்டியே திட்டமிட்டிருந்தா நாம இதை ஒரு பிக்னிக்காகவே மாற்றியிருக்கலாம்.

- மதிய உணவு தாரா ஓட்டலில் - ஓ.கே.?

இப்படிப் பல.

பகல் முழுவதும் இப்படியே முடிந்துவிட்டதா?

அதோ மீண்டும் கடற்கரைச் சாலை. நின்றுகொண்டிருக்கம் கார்களின் வரிசை. மணலில் மக்கள் கூட்டம். வேர்க்கடலை விற்பவர்கள், ஐஸ்க்ரீம் வண்டி, நுரை தள்ளிக் கொண்டிருக்கும் அலைகள். சாயங்காலம் ஆகியிருந்தது.

மக்கள் கூட்டத்தை விட்டு விலகி கடற்கரையின் தனிமையான ஒரு இடத்தில் மிருதுளா காரை நிறுத்தினாள்.

‘‘வா, முகு! நாம இங்கே உட்காருவோம்.’’

நாங்கள் மணலில் அமர்ந்தோம்.

காற்று வீசி, மிருதுளாவின் தலைமுடி சிதறி பறந்தது.

‘‘பக்கத்துல வா... நெருக்கமா உட்காரு’’ - மிருதுளா என் தோளில் தன் கையை வைத்தாள்.

என் இதயத்தில் ஏராளமான நெருப்பு மீன்கள் வேகமாக ஓடின.

‘‘முகு! உனக்கு என்ன இவ்வளவு வெட்கம்? இங்கே வேற யாரும் நம்மைப் பார்க்க மாட்டாங்க. ம்... பக்கத்துல வான்னு சொல்றேன்ல.’’

நான் தயங்கினேன்.

‘‘முகு! உனக்கு இருபத்து இரண்டு வயசாயிடுச்சுல்ல? நான் சொல்றது உனக்குப் புரியலையா? திருடன்!’’

மிருதுளா என்னைப் பிடித்து இழுத்தாள். நான் அவள்மீது சாய்ந்தேன் - அவளின் மார்பகத்தில்.

‘‘முகு! நாம குளிப்போம்.’’

‘‘எனக்கு நீந்தத் தெரியாது.’’

‘‘எது எப்படியோ, நான் குளிச்சே ஆகணும். நீ கண்ணை மூடிக்கிட்டு உட்கார்ந்திரு.’’

நான் கண்களை மூடிக் கொண்டேன்.

மீண்டும் உத்தரவு - சிறிது தூரத்திலிருந்து. ‘‘இனி கண்களைத் திறக்கலாம்.’’

கண்களைத் திறந்தபோது, கடலில் குளித்துக் கொண்டிருந்த மிருதுளாவைப் பார்த்தேன். அவள் நிர்வாணமாக இருக்கிறாளோ? எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஸ்வெட்டரும் ஜீன்ஸும் எனக்கருகில் சுருண்டு கிடந்தன.

மேலே எழுந்து கொண்டிருந்த கடலலைகள் மிருதுளாவை பயமுறுத்தவில்லையா? அவள் எப்போது திரும்பி வருவாள்? அதுவரை நான் என்ன செய்வது?

நான் கடலோரத்திற்குச் சென்று சரிவில் போய் நின்றேன். ஈரமான மண்ணில் நான் ஒரு பெண்ணின் நிர்வாண உருவத்தை வரைந்தேன். - ஒரு ‘பாஸ்ரிலீஃப்.’

நிலவு உதித்தது.

இப்போது மிருதுளாவைப் பார்க்க முடிந்தது. காமவயப்பட்ட கடல் கன்னி அவள். மார்பை மறைக்கவில்லை.

திடீரென்று அவள் கரைக்கு ஓடி வந்தாள். என்னுடைய மணல் அழகி அவளின் பார்வையில் பட்டாள்.

‘‘நீ என்னைப் பார்த்து வரைஞ்சதா?’’ - மிருதுளா கேட்டாள்.

அதற்கு பதில் கூறுவதற்கு முன்பே ஒரு பெரிய அலை எங்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டது. அது பின்வாங்கிச் செல்லும்போது நானும் மிருதுளாவும் தரையில் கிடக்கும் ஒன்றோடொன்று பின்னிய கை கால்களாக இருந்தோம். எனக்கு வெட்கமாக இருந்தது. நான் தூரத்தில் ஓடினேன்.

‘‘கடல் உன் மணல் அழகியை எடுத்துக்கிட்டு போயிடுச்சு முகு, ஒரு விஷயம் தெரியுமா? கடல் காம வயப்பட்ட ஒரு கிழவன்...’’

அதற்கு நான் பதிலெதுவும் கூறவில்லை.

ஸ்வெட்டரையும் ஜீன்ஸையும் எடுத்துக் கொண்டு மிருதுளா காருக்கு அருகில் வந்தாள்.

ஆடைகளை அணிந்துகொண்டு, மிருதுளா காரில் ஏறினாள். அவளுடன் நானும்.

அன்னை இல்லத்தின் கேட் தெரிந்தது.

கேட்டைக் கடந்து உள்ளே நுழைந்த காரை பின்னோக்கி நகர்த்தி ஷெட்டில் விட மிருதுளா முயற்சித்தபோது என்னுடைய வேதனையை மீண்டும் உணர்ந்தேன்.

பிறப்பு உறுப்பில் வேதனை.

‘‘நிறுத்து...’’ - நான் கத்தினேன்.

மிருதுளா காரை நிறுத்தினாள்.

‘‘முகு! உனக்கு என்ன ஆச்சு!’’

‘‘ஒண்ணுமில்ல...’’ - காரை விட்டு நான் இறங்கினேன்.

மிருதுளா காரை பின்னோக்கி நகர்த்தி ஷெட்டுக்குள் கொண்டு போனாள்.

முற்றத்தில் நின்றிருந்த என் தலை சுற்றியது.

நான் இப்போது இந்த முற்றத்தில் இல்லை.

நான் ஒரு பெரிய நகரத்தில் இருந்தேன். வானத்தை முட்டிக் கொண்டிருக்கும் உயர்ந்த கட்டிடங்கள். தூரத்தில் தெரியும் அவற்றின் உடல்களில் வெளிச்சத்தின் சதுரங்கள் இருந்தன. அருகில் எங்கோ ஃபோர் லேன் ட்ராபிக் உள்ள சுறுசுறுப்பான சாலை, சீறிப் பாய்ந்து போய்க் கொண்டிருக்கும் வாகனங்கள், வண்ணங்களைப் பொழிந்து கொண்டிருந்த நியான் விளக்குகள், விளம்பரப் பலகைகள்... நான் எங்கு இருக்கிறேன்? நான் இருந்த ஃப்ளாட்டுக்குப் பின்னால்- எண் இடப் பட்டிருந்த கார் ஷெட் வரிசைக்கு முன்னால் சரியாகச் சொன்னால் எட்டாம் எண் கொண்ட கார் ஷெட்டில் நான் ஷெட்டிற்குள் பின்பக்கத்தில் நின்றிருக்கிறேன். சிறிதும் எதிர்பார்க்காமல் எட்டாம் எண் ஷெட்டில் யாரோ காரை பின்னோக்கி செலுத்துகிறார்கள் - எச்சரிக்கை உணர்வு இல்லாமல் கார் என்னுடைய பிறப்பு உறுப்பில் இடிக்கிறது - அய்யோ! நான் சுவர்மீது தள்ளப்படுகிறேன். அடி வாங்கிய ஒரு கொசுவைப் போல நான் நசுங்கிப் போகிறேன். இனி என் கால்களுக்கு மத்தியில் சிறுநீர் பெய்ய மட்டுமே பயன்படும் ஒரு கருவி இருக்கிறது - அய்யோ!

‘‘நீ ஏன் கத்தினே?’’ - மிருதுளாவின் குரல்.

நான் திகைப்படைந்து சுற்றிலும் பார்த்தேன். நான் எங்கு இருக்கிறேன்?

‘‘முகு!’’

அன்னை இல்லம் - ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் உண்டாக்கப்பட்ட ஷீட்.

‘‘ஒ... ஒண்ணுமில்ல... ஒண்ணுமில்ல...’’ - நான் முணுமுணுத்தேன்.

‘‘வா...’’

நான் மிருதுளாவின் பின்னால் நடந்தேன்.

நேராக நான் படுக்கையறைக்கு ஓடினேன். மீண்டும் நான் கைதியாகிவிட்டேனா?

நேரம் எவ்வளவு ஆனது?

எங்கும் தாழம்பூ மணம் பரவியிருந்தது.

யாரோ என்னைத் தொடுகிறார்கள்.

மிருதுளா.

சிவப்பு நிறத்தில் பட்டுப் புடவை அணிந்திருந்த மிருதுளா.

‘‘முகு, நான் ஒரு தடவை சொன்னதை நினைச்சுப் பார்த்தியா? நேரம் வர்றப்போ நான் சில விஷயங்களைச் சொல்லிப் புரிய வைப்பேன்னு...’’

‘‘நினைச்சுப் பார்க்குறேன்.’’

‘‘எழுந்திரு... ஆரம்பம் இன்னையிலிருந்து இருக்கட்டும்.’’

மிருதுளா என்னை விசாலமான தளத்திற்கு அழைத்துக் கொண்டு சென்றாள். கீழே இறங்கிச் செல்லும் படிகள் வழியாக நாங்கள் நடந்தோம். பித்தளைக் குமிழ்களும் கோவில் கணித முறைப்படி டிசைன்களும் அமைக்கப்பட்ட கதவிற்கு முன்னால் நாங்கள் நின்றிருந்தோம்.

‘‘உனக்கு இந்த அறைக்குள்ள பார்க்கணும்போல இருக்கா?’’ - மிருதுளா கேட்டாள்.

நான் மவுனமாக நின்றிருந்தபோது மீண்டும் அவள் கேட்டாள்: ‘‘இல்லாட்டி இதுக்குள்ளே எனக்கே தெரியாம நீ நுழைஞ்சிட்டியா?’’

‘‘இல்ல...’’

‘‘வா...’’ - மிருதுளா அந்தக் கதவைத் திறந்தாள்.

விசாலமான அறை. ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த பாலீஸ் செய்த ஸ்டாண்டில் கறுப்பு நிற மெழுகுவர்த்திகள் உருகிக் கொண்டிருந்தன. தரையில் பீடங்கள். எதிரில் தெரிந்த சுவரில் வெல்வெட்டாலான சதுரம். ஊதுபத்திகளிலிருந்து நறுமணம் கொண்ட புகை வந்து கொண்டிருந்தது. அது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இல்லாமற்போனபோது, காற்றில் புகை தெளிவற்ற ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தது.

நானும் மிருதுளாவும் உள்ளே நுழைந்தோம்.

என் வலது பக்கம் சுவரில் அரிவாள்கள், வாள்கள், சூரிக்கத்திள், சூலங்கள்... அந்த ஆயுதங்களுக்கு மேலே ஒரு அட்டவணை தொங்கிக் கொண்டிருந்தது. எனக்குப் புரியாத மந்திர எழுத்துக்களும் அடையாளங்களும் அதில் எழுதப்பட்டிருந்தன. இடது பக்கம் சுவர் இல்லை. தரையிலிருந்து மாடிவரை ‘வுட் பாலிஷிங்’தான். பழமையான சித்திர வேலைப்பாடுகள் கொண்ட தேக்குப் பலகைகள்...

ஒரு வெள்ளித் தட்டில் மலர்களின் குவியல். அதைத் தாண்டி பூஜை பாத்திரங்களும், புலி முகமும் செதுக்கப்பட்ட கைப்பிடி உள்ள பூஜை மணியும்.

மிருதுளா என்னையே உற்றுப் பார்த்தாள்.

‘‘கண்களை மூடிக்கோ, முகு!’’ - கட்டளை பிறந்தது.

நான் அவள் சொன்னபடியே நடந்தேன்.


சிறிது நேரம் கழித்து அவள் சொன்னாள்: ‘‘இனிமேல் கண்களைத் திறக்கலாம்.’’

சிறிதும் எதிர்பார்த்திராத ஒரு காட்சியை நான் பார்த்தேன். ஒரு பீடத்தில் நிர்வாண கோலத்தில் மிருதுளா உட்கார்ந்திருந்தாள். மார்பகங்களில் மஞ்சள் தூள் பூசப்பட்டிருந்தது. மார்பகக் கண்களில் குங்குமம் இருந்தது.

‘‘முகு! நான் காளிமாதான்னு நினைச்சுக்கோ. என்னைப் பூஜை பண்ணு! என்ன, புரியுதா?’’

எனக்கு எதுவும் புரியவில்லை. நான் தலைகுனிந்து நின்றிருந்தேன்.

‘‘முகு! ஒரு அரிவாளை எடு.’’

நடுங்கும் விரல்களுடன் வலது பக்கச் சுவரிலிருந்து நான் ஒரு அரிவாளை எடுத்தேன்.

‘‘அதை இங்கே எடுத்துட்டு வா.’’

நான் அருகில் சென்றபோது மிருதுளா என்னிடமிருந்து அரிவாளை வாங்கினாள். அரிவாள் முனையை என்னுடைய ஆடைகளில் அவள் தேய்த்தாள். ஆடைகள் கிழிந்தன.

‘‘ம்... நிர்வாணமாகு...’’

எதிர்த்து எதுவும் சொல்ல நாக்கு அசையவில்லை. நான் நிர்வாணம் ஆனேன்.

‘‘பூஜை செய்...’’

நான் மிருதுளாவிற்கு முன்னால் தரையில் உட்கார்ந்தேன். வெள்ளித்தட்டிலிருந்து பூக்களை எடுத்தேன்.

செந்தாமரை, செம்பருத்தி, செத்தி.

இதழ்களை அடிவயிற்றிலும் பிறப்பு உறுப்பிலும் போடத் தொடங்கியபோது, மிருதுளா கண்களை மூடிக் கொண்டாள். அவளுடைய உடலெங்கும் இன்பத்தின் அலைகள் பரவின. வியர்வையில் நனைந்த மஞ்சள் தூள் அவளுடைய மார்பகங்களுக்கு மத்தியில் வழிந்து கொண்டிருந்தது.

பார்க்கக் கூடாது.

பார்க்கக் கூடாத இடத்தைச் சிறிதும் பார்க்கக் கூடாது.

கட்டுப்பாட்டை இழக்கக் கூடாது.

நான் கண்களை மூடிக் கொண்டேன்.

திடீரென்று ஏதோ கையில் பட்டது. பூக்கள் தீர்ந்துபோய் விட்டனவா? நான் எதைத் தொடுகிறேன்?

கண்களைத் திறந்தபோது அதிர்ந்துபோனேன்- வெள்ளித் தட்டில் நான் எதைத் தொடுகிறேன்?

பூக்களின் குவியல் இதுவரை அதை மூடியிருந்ததோ?

மிருதுளா அப்போதும் கண்களை மூடி அமர்ந்திருந்தாள்.

பாதி சுய உணர்வில் இருப்பதைப்போல் அவள் கேட்டாள்: ‘‘என்னை உடலுறவு கொள்ளணும்போல உனக்கு இருக்கா?’’

‘‘இல்ல...’’

‘‘உனக்கு என் உடலைப் பிடிக்கலையா?’’

‘‘பிடிச்சிருக்கு.’’

‘‘இருந்தும்...?’’

‘‘வேண்டாம்...’’

திடீரென்று மிருதுளா தன் கண்களைத் திறந்தாள். மிடுக்கான குரலில் அவள் சொன்னாள்: ‘‘நான் காத்திருந்தது வீணாகல. நான் வணங்கிய கடவுள்கள் என்னைக் கைவிடல. நீதான் எனக்குத் தேவையானவன். நீ பிரம்மச்சரியத்தைக் காப்பாத்திக்கிட்டு இருக்கே! எல்லாம் நல்லபடியா முடியறதுக்கான நேரம் நெருங்கிக்கிட்டு இருக்கு.’’

மீண்டும் அவள் கண்களை மூடிக்கொண்டாள்.

அவள் வியர்வையில் குளித்திருந்தாள்.

எதையும் புரிந்துகொள்ள முடியாத நான் என் கிழிந்துபோன ஆடைகளை இடுப்பில் சுற்றிக் கொண்டு மாடிக்குச் செல்லும் படிகளில் ஓடி ஏறினேன்.

8

லைக்கு என்னவொரு கனம்!

நான் ஆழமான உறக்கத்தில் இருந்தேனோ? என்னை இப்போது தூக்கத்திலிருந்து கண் விழிக்கச் செய்தது கூடத்திலிருந்து இடைவெளி விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருக்கும் தொலைபேசி சத்தமா? யாரும் தொலைபேசியை எடுக்காததற்குக் காரணம் என்ன? மிருதுளா எங்கே? சுப்பம்மா எங்கே? இன்று என்ன கிழமை? என்று நான் யோனி பூஜை நடத்தினேன்?

இரண்டு கைகளையும் நெற்றியில் அழுத்திப் பிடித்துக் கொண்டு நான் படுக்கையில் பாதி எழுந்து உட்கார்ந்திருந்தேன். அப்போது முன்பு எப்போதோ கண்ட ஒரு பழைய கனவின் நினைவைப் போல ஒரு காட்சி தோன்றி மறைந்தது.

எனக்குக் காய்ச்சல் என்று மிருதுளா கூறுகிறாள்.

நான் மாத்திரைகள் சாப்பிட வேண்டுமென்று அவள் கட்டாயப்படுத்துகிறாள்.

ஆறோ ஏழோ மாத்திரைகளை நான் விழுங்கி, தொடர்ந்து அந்த நெருப்பு திரவத்தைக் குடிக்கிறேன்.

இப்போதுதான் எனக்கு நினைவு வருகிறது - மூடுபனிக்கு நடுவில் தெரியும் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தைப் போல.

நான் உறங்கிப் போனது மணிக்கணக்கிலா, நாட்கணக்கிலா? இனி கட்டில் தூண்களைக் காலத்தைத் தீர்மானிக்க நம்பியிருக்க முடியுமா?

நான் எழுந்து நடந்தேன். கால்களுக்கு பலம் குறைந்திருந்தது. ஆனால், நான் நினைத்தபடி அல்ல. அவற்றுக்குத் தோன்றியபடி கால்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

கூடம் -மாடி அறையின் வராந்தா - அங்கு எங்கும் மிருதுளா இல்லை.

இப்போது தொலைபேசி ஒலிக்கவில்லை.

‘‘மிருதுளா!’’ - நான் உரத்த குரலில் அழைத்தேன். பதில் கிடைக்கவில்லை.

நான் தளத்திற்கு வந்தேன். ‘‘சுப்பம்மா...’’ - பதில் இல்லை.

நான் படிகளில் இறங்கினேன்.

சுவரில் கஜலட்சுமியும் போதை தரும் அழகிகளும் என்னைப் பார்த்து பற்களைக் காட்டினார்கள்.

இப்போது இங்கு நான் மட்டும் தனியாக இருக்கிறேன். வேண்டுமென்றால் யோனி பூஜை நடத்திய அறைக்குள் நான் நுழையலாம் எதற்காக? அதன் உட்பகுதியைத்தான் நான் ஏற்கனவே பார்த்து விட்டேனே! ரகசியங்கள் அங்கு இல்லை. மிருதுளாவின் மனதில்தான், சுப்பம்மாவின் மனதில்தான்.

திடீரென்று எங்கிருந்தோ ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது.

ஒரு சிரிப்புச் சத்தமல்ல. ஏராளமான சிரிப்புகள்.

யாரோ ஆனந்த வெள்ளத்தில் மூழ்கிச் சிரிக்கிறார்கள்.

நான் சுற்றிலும் பார்த்தேன். காதுகளைத் தீட்டிக் கொண்டு கேட்டேன். என்னுடைய வலது பக்கத்திலிருந்து அந்தச் சிரிப்புச் சத்தங்கள் கேட்டன. நான் அந்தப் பக்கத்தை நோக்கி நடந்தேன். இதுவரை என்னுடைய கவனத்தில் பட்டிராத ஒரு கதவு இலேசாகத் திறந்தது. வெளியே வெளிச்சம் பரவியது. சிரிப்புச் சத்தம் கேட்டது அங்கிருந்துதான்.

நான் கதவை நெருங்கினேன். மறைந்து நின்று பார்த்தேன். பெரிய நகரத்தின் புடவைக் கடையா அது? எங்கு பார்த்தாலும் பட்டுப் புடவைகள் பல வண்ணங்களிலும் அவை இருந்தன. அகலமான ஜரிகை ஓரங்கள். தைத்துச் சேர்ந்த வெள்ளி வேலைப்பாடுகள்.

அந்தப் புடவைகள் அசைந்தன- உயிருள்ளவைபோல புடவை மடிப்புகளில் உயர்ந்து தாழும் அசைவுகள் - புடவைகள் பலவண்ண சிகரத்தைப்போல இருந்தது. சிகரத்திலிருந்து சிரிப்புச் சத்தங்கள் கேட்டன.

திடீரென்று சிகரத்தின் மேலே ஒரு தலை எழுந்தது.

சுப்பம்மாவின் தலை.

சந்தோஷம் அவளைப் பைத்தியமாக்கியதிலிருந்து அந்தப் புடவைகள் அனைத்தையும் தன் உடலில் மாறி மாறி சுற்றி மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தாள் அவள்.

கதவைத் துள்ளித் திறந்து கொண்டு நான் உரத்த குரலில் அழைத்தேன்: ‘‘சுப்பம்மா...’’

அவள் ஒரு சிலையைப் போல அசையாமல் நின்றாள். கடைசி சிரிப்பு அமைதியாக உறைந்தபோது அவளுடைய வெற்றிலை போட்ட உதடுகள் அவலட்சணமாக கோணிப் போயிருந்தன.

நான் அருகில் சென்று அவளுடைய தோளைப் பிடித்து குலுக்கினேன்.

‘‘சுப்பம்மா!’’

இழந்த உயிர் மீண்டும் கிடைத்ததைப்போல அவள் திடுக்கிட்டு சுய உணர்விற்கு வந்தாள். அவள் அழுதாள். ‘‘சொல்லாதே... அம்மாக்கிட்டே சொல்லாதே.’’

நொடிகளுக்குள் அவளுக்கு சுய உணர்வும் சக்தியும் திரும்பக் கிடைத்துவிட்டனவா? ஒரு புடவைத் தலைப்பால் அவள் கண்ணீரைத் துடைத்தாள். வேகமாக எழுந்த அவள் எல்லா புடவைகளையும் மடித்தாள். ஐம்பது அறுபது புடவைகள்.


புடவைக் குவியல் மாறியபோதுதான், பெரிய படுக்கை கண்ணில் பட்டது. லேஸ் வைத்து பின்னப்பட்ட விரிப்புகள் சில்க் உறை போடப்பட்ட தலையணைகள். அது மிருதுளாவின் படுக்கையறையாக இருக்க வேண்டும். மிருதுளாவின் படுக்கையில் உட்கார்ந்து படுத்துக்கொண்டுதான் சுப்பம்மா தன்னுடைய தனித்துவ சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்திருக்கிறாள்.

நான் அறை முழுவதையும் பார்த்தேன்.

யானைக் கொம்புகள் தாங்கியிருந்த வட்ட வடிவமான பெரிய நிலைக் கண்ணாடி ட்ரஸ்ஸருக்கு மேலே ஏகப்பட்ட வாசனைப் பொருட்கள். ஒரு மூலையில் பெரிய வார்ட்ரோப். அடைக்கப்பட்டிருந்த சாளரத்துக்கு அருகில் சுவர்களின் மூலையையொட்டி ஆங்கில எழுத்து ‘எல்’ வடிவத்தில் போடப்பட்டிருந்த ஃபோம் ரப்பராலான இருக்கை. மற்றொரு மூலையில் போடப்பட்டிருந்த உயரமான ஸ்டாண்ட் அதன் தட்டில் யாருடைய புகைப்படமோ.

அவை அனைத்தையும் ஒரே பார்வையில் நான் தெரிந்து கொண்டபோது, சுப்பம்மா வார்ட்ரோபில் புடவைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள்- ஏற்கனவே இருந்த மாதிரி இல்லாமல்.

நான் திறந்து கிடந்த வார்ட் ரோபிற்கு அருகில் சென்றேன். அதற்குள்ளிருந்த புடவைக் குவியலைத் தாண்டி நான் ஒரு ஆணின் ஆடைகளைப் பார்த்தேன். ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த சட்டைகள், கோட்டுகள்... அவற்றின் பழைய பாணி கலர்கள் அவற்றின் பழமையைக் காட்டியது. அவை எத்தனை வருடங்களுக்கு முன்பு தொங்கவிடப்பட்டவை? யாருக்காக?

ஏதோவொன்றால் தூண்டப்பட்ட நான் ஒரு கோட்டின் பைக்குள் கையை விட்டேன். விரல்கள் எதிலோ ஒட்டின. கையை வெளியே எடுத்தபோது என் விரல்களில் செல்லரித்த ஒரு கைக்குட்டை சிக்கியிருந்தது.

புடவைகளை அடுக்கி வைத்த பிறகு, சுப்பம்மா வார்ட் ரோப்பின் கதவை அடைத்துப் பூட்டினாள். நான் கோட்டின் பைக்குள்  கையை விட்டதை அவள் கவனித்ததாகத் தெரியவில்லை.

பதைபதைப்புடன் அவள் மீண்டும் கெஞ்சினாள். ‘‘அம்மாக்கிட்ட சொல்லாதே.’’

பொய்யாக நடித்தவாறு நான் சொன்னேன்: ‘‘எல்லாவற்றையும் நான் சொல்லுவேன்.’’

‘‘சொல்லாதே’’ - சுப்பம்மா அழுதாள்.

‘‘நீயும் மிருதுளாவும் என்னை பொம்மைன்னு நினைச்சு விளையாடுறீங்க. இந்த சிதிலமடைந்த வீட்டுல ஆயிரம் ரகசியங்கள் இருக்கு. அவை எல்லாம் உனக்குத் தெரியும். நீ எல்லாத்தையும் மறைச்சு வைக்கிறே. நீ அவற்றைச் சொல்ல முடியுமா? அப்படின்னா மட்டும்தான் நான் நாவை அடக்கிக்கிட்டு இருப்பேன்.’’

‘‘தெரியாது... எதுவும் தெரியாது.’’

‘‘அப்படின்னா, வேண்டாம். உன் புடவை விளையாட்டைப் பற்றி நான் அம்மாக்கிட்ட சொல்லுவேன். எனக்கு சாப்பாடு தர்ற அம்மாக்கிட்ட அந்த நன்றியுணர்வு கூடவா எனக்கு இல்லாமப் போகும்?’’

அப்படி பயமுறுத்தியவுடன் சுப்பம்மா அதிர்ந்துபோய்விட்டாள். எனினும், அவள் தான் பிடித்திருப்பதையே பிடித்துக் கொண்டிருக்க முயற்சித்தாள். ‘‘எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியாது. சில விஷயங்கள்தான் தெரியும். சில விஷயங்கள் மட்டும்...’’

அவள் தமிழில் சொல்ல ஆரம்பித்தாள்.

‘‘இருபத்து ரெண்டு வருடங்களுக்கு முன்னாடி நான் மிருதுளா அம்மாவோட வேலைக்காரியா ஆனேன். இருபத்து மூணு... இல்லாட்டி இருபத்து நாலா இருக்குமோ? எனக்குன்னு யாருமில்ல. எனக்குன்னு இருந்த ஒரே சொத்து என்னோட கிழிஞ்சுபோன புள்ளிபோட்ட புடவையும் பல தடவைகள் ஒட்டுப் போட்ட ரவிக்கையும் மட்டும்தான். எனக்கு அறுபத்து எட்டு வயது ஆகுது. ஆனால், அந்தக் காலத்துல நான் கறுப்பு நிற அழகியா இருந்தேன். என் கிராமத்துலயே நான்தான் அழகானவ. நான் ஆம்பளைகளுக்கு பின்னாடி நடந்து போகாதவ இல்ல. என்னைப் பார்த்து விஸில் அடிக்காதவன் ஊர்ல இல்ல. நான் எல்லாரையும் ஏமாத்தினேன். என்னைத் தேடி வந்த பலசாலிகளான, கலப்பைப் பிடிச்சு உழக்கூடிய, மாடு மேய்க்கிற இளைஞர்கள் எல்லாருக்கும் நான் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தினேன். என் கறுப்பு அழகு அவங்கள பாடாய்ப் படுத்திச்சு. எனக்கு அவங்க மரிக்கொழுந்தையும் ஜாமத்தில் பூவையும் பரிசா தந்தாங்க. ஆனா, என் சேலை நுனியை தொடக்கூட நான் அவங்களை விடல. நான் அவங்களுக்கு அடிபணியல. அந்த நாள்லயே என் தலை முழுவதும் பேராசைதான். பெரிய ஆளா ஆகணும். பணக்காரியா ஆகணும்... எதுக்கு? பட்டுச் சேலை அணியிறதுக்கு... என்னோட மிகப் பெரிய பலவீனமா இருந்தது பட்டுப்புடவைகள்! கிராமத்து கோவில்ல திருவிழாக்களும், பண்டிகைகளும் நடக்குறப்போ வில் வைத்த மாட்டு வண்டிகள்ல தடிச்ச பணக்காரிகள் வந்து இறங்குவாங்க. அவங்களோட அழகே இல்லாத உடம்புகள்ல, கண்ணே கூசுற மாதிரி ஜரிகையும் ஓரமும் போட்ட பட்டுப் புடவைகள் இருக்குறதைப் பார்க்கறப்போ, அந்தப் புடவைகளோட முந்தானைகள் காத்துல ஆடி பல வண்ணங்களையும் வெளிச்சம் போட்டு காட்டுறப்போ - நான், ஏழை சுப்பம்மா - ஒதுங்கி நின்னு ஆசையோட எச்சிலை முழுங்கிக்கிட்டு இருப்பேன். பேராசைப்படுறது சாபம். அது அழிவிற்கு ஆரம்பம். கறுத்த அழகி சுப்பம்மாவிற்கு அது தெரியாமல் போச்சு. இந்த சுப்பம்மாவிற்குத் தெரியும். ஓ... அந்தக் காலம்! அப்போ எனக்கு தடிச்ச உடம்பு இல்ல. சதைப் பிடிச்சு தொங்குற இந்த கழுத்தும் தாடையும் இல்ல. ஏராளமான தண்டனைச் சின்னங்களைப் போல கன்னத்திலும் கழுத்திலும் இருக்குற மச்சங்கள் இல்ல. நான் என்னோட கிராமத்தின் விக்கிரகமா இருந்தேன்- அழகின் விக்கிரகமா...

என் தாயும் அந்தக் காலத்துல ரொம்பவும் அழகா இருந்தவங்கதான். தில்லை நடராஜனுக்கு நடனம் ஆடின தேவதாசி குலத்தைச் சேர்ந்தவ நான். என் அப்பா ஜமீந்தார் ஒருத்தரோட வீட்டுல நடனம் சொல்லித் தர்ற நட்டுவரா இருந்தாரு. அந்தக் காலத்துல அது ஒரு அந்தஸ்தான விஷயமா இருந்தது. கலப்பைப் பிடிக்கிறவனோட பொண்டாட்டியா ஆகுறதுக்காக பிறந்தவ இல்லை நான்னு என் அம்மா சொல்லுவாங்க.

என்னைப் பின்தொடர்ந்து சுத்திக்கிட்டு இருந்த காதலர்கள்லயே ரொம்பவும் அழகும் பலசாலியுமா இருந்தவன் கண்ணப்பன்தான். மாட்டுப் பொங்கல் அன்னைக்கு பொழுது விடியிற நேரத்துல அவன் ஒருமுறை என்னைப் பலவந்தமாக கட்டிப் பிடிச்சுட்டான். அப்போ நான் அவன்கிட்ட கேட்டேன். ‘உன்கிட்ட பட்டுப் புடவை வாங்குறதுக்குப் பணம் இருக்கா?’ன்னு. அவன் அதிர்ச்சியடைந்து விலகிட்டான்.

கடைசியில-

என் தந்தை என்னை ஜமீந்தார் வீட்டுக்குக் கொண்டு போனாரு. வீட்டைக் காட்டுறதுக்காக இல்ல. ஜமீன்தார் பரம்பரையைச் சேர்ந்த ஏதோ ஒரு சின்னப் பெண்ணோட அரங்கேற்றத்தைப் பார்க்குறதுக்கு. ஆனா, அது சொல்லப் போனா, காட்சிப் பொருளா என்னைக் காட்டுறதுக்குத்தான். நான் எதிர்க்கல. அந்த ஜமீன்தார் கிழவன்கிட்ட நான் சொன்னேன்: பணம் வேண்டாம் தங்கம் வேண்டாம். விவசாய இடங்கள் வேண்டாம். ஒண்ணு மட்டும்தான் வேணும்! எப்பவும் பட்டுப் புடவைகள்...’


அந்த ஆளோட கைகளுக்கு கண்ணப்பனோட கைகளுக்கு இருந்த பலம் கிடையாது. அந்த ஆளோட இரத்தத்துல சூடே இல்ல. அந்த ஆளோட படுக்கையறையில் என் கன்னித்தன்மைக்கு எந்தப் பாதிப்பும் உண்டாகல. தப்பா சொல்லக் கூடாது. சின்னக் குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள் வாங்கித் தர்றது மாதிரி அந்த ஆளு எனக்கு வாரந்தோறும் பட்டுப்புடவைகளை பரிசா கொடுத்தாரு.

ஒருநாள் நான் சொன்னேன்- ‘எல்லோரும் அணியிற, எந்தக் கடையிலயும் கிடைக்கிற, பணம் கையில இருந்தா யார் வேணும்னாலும் வாங்கக் கூடிய பட்டுப் புடவைகள் எனக்கு வேண்டாம். எனக்குன்னு தனியா நெய்யணும்’னு. அந்தக் கிழவன் என் ஆசையைத் தீர்த்து வைக்கத் தயாராயிட்டாரு. காஞ்சீபுரத்துக்கும் தர்மாவரத்துக்கும் அவர் அதுக்குன்னே ஆட்களை அனுப்பி வச்சாரு. அவங்க கைத்தறிக் கலையில பெரிய ஆட்களா இருக்குறவங்களை அழைச்சிட்டு வந்தாங்க. எனக்காக கலை நுட்பமும் கைத்தறிகளும் ஒரே நேரத்தில் செயல்பட்டன. மிக அழகான ரம்பாவும், திலோத்தமாவும் பொறாமைப்படுகிற மாதிரியான, கற்பனைக்கு எட்டாத அந்தப் பதினெட்டு முழம் பட்டு என் உடம்புல சேர்ந்த இரவு நேரத்தில் நான் அந்த மனிதரோட படுக்கையறையில் என் உடல் அழகை முழுசா வெளிக்காட்டி உள்ளே நுழைஞ்சப்போ, அவர் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டாரு. அவருக்கு மூச்சு அடைச்சது. அவர் இறந்துட்டாரு.

கூட சேர்ந்து சாகுறது தேவதாசி குலத்தோட தர்மம் இல்ல. ஆனால் அந்தக் கிழவனோட சதையும், எலும்பும், நிறைவேறாத ஆசைகளோட சந்தனக் கட்டையில எரிஞ்சு அடங்கினப்போ எனக்குன்னே தனியாக நெய்து உண்டாக்கின பட்டுப் புடவையை நான் அக்னி பகவானுக்கு சமர்ப்பணம் செய்துட்டேன்.

என் தந்தை இறந்துட்டாரு. என் தாய் இறந்துட்டாங்க. என் வாழ்க்கை பாவம் நிறைஞ்ச ஒண்ணா ஆயிடுச்சு. நான் யார் வேணும்னாலும் விலைக்கு வாங்குற சதையா ஆயிட்டேன். ஸூப்பம்மா சுப்பம்மாவா ஆனேன். யாருடைய விந்தோ உள்ளே போயி நான் ஒரு மகனைப் பெற்றேன். ஒரு தடியன். மிருதுளா அம்மாவோட வேலைக்காரியா நான் ஆனப்போ அவனுக்கு இருபத்து நாலு வயது. இப்பவும் எனக்குப் பட்டுப் புடவைகள் மேல ஆசை இருக்கு- இப்பவும்.’’

நான் இடையில் புகுந்தேன். ‘‘சுப்பம்மா, உன் கதையை விளக்கிச் சொன்னது போதும். நான் தெரிஞ்சுக்க விரும்புறது - இந்த அன்னை இல்லத்தின் ரகசியங்கள்.’’

‘‘எனக்குப் பயமா இருக்கு.’’

‘‘எதுக்கு?’’

‘‘அம்மா வந்திடுவாங்க.’’

‘‘அதுக்கு முன்னாடி சொல்லிடு. இல்லாட்டி...’’

‘‘சொல்லுறேன்... தெரிஞ்சதை சொல்லுறேன்.’’

‘‘தெரிஞ்சதைச் சொன்னா போதும்.’’

‘‘உனக்குப் பெரிய ஆபத்து இருக்கு...’’

‘‘எனக்கா?’’

‘‘ம்... சொல்றேன்.’’

அவசரப்படக்கூடாது. அவசரப்பட்டால் அவளிடம் பதற்றம் உண்டாகும். அவளுடைய போக்கிலேயே அவள் கூறட்டும். எனக்குத் தெரியவேண்டியது உண்மை. ரகசியங்களின் விளக்கம்.

அவளுக்குச் சிறிது நேரம் கொடுப்பதற்காக நான் அறையில் இங்குமங்குமாக நடந்தேன். உயரமான ஸ்டாண்டை நெருங்கியபோது, அதன் தட்டிலிருந்த புகைப்படத்தை நான் பார்த்தேன்.

ஒரு பழைய திருமண புகைப்படம். பேரழகியாக அதில் இருந்தாள் மிருதுளா. அந்த ஆள் யார்...? கணவன்? நான் உற்றுப் பார்த்தேன். நான் அந்த ஆளை எங்கோ பார்த்திருக்கிறேன். எப்போது? எங்கு?

என் மூளையில் பலவகைப்பட்ட அரிவாள்களும் வாள்களும் ஆழமாக இறங்கின. என் உடம்பெங்கும் குளிர் பரவியது.

அந்த ஆள் நான்தான். நான் மிருதுளாவின் கணவன்.

வேகமாகப் போய் நான் சுப்பம்மாவின் முன்னால் நின்றேன்.

‘‘சொல்லு... அப்போ மிருதுளாவின் கணவனாக நான் இருந்தேன்ல? இருபத்து நாலு வருடங்களுக்கு முன்னாடி நீ மிருதுளாவோட வேலைக்காரியா வந்தப்போ...’’

சுப்பம்மா வாயைத் திறந்தாள். ஆனால், ஒரு வார்த்தைகூட வெளியே வரவில்லை. பயத்தால் சிற்பமென ஆகிவிட்டது அவளுடைய முகம். அவள் யானைக் கொம்புகள் தாங்கிக் கொண்டிருந்த நிலைக் கண்ணாடியையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

நானும் பார்த்தேன்.

நிலைக் கண்ணாடியில் மிருதுளாவின் உருவம் தெரிந்தது.

நான் திடுக்கிட்டுத் திரும்பினேன்.

மிருதுளா உள்ளே வந்து கொண்டிருந்தாள்.

மிருதுளா என்னையும் சுப்பம்மாவையும் மாறி மாறிப் பார்த்தாள். பிறகு கேட்டாள்: ‘‘முகு! நீ எப்படி இங்கே வந்தே?’’

‘‘வந்தேன் - ரகசியங்களைத் தெரிஞ்சுக்குறதுக்காக’’ - முன்பு எப்போதும் வெளிப்படுத்திராத தைரியத்துடன் நான் பதில் சொன்னேன்.

திருமண புகைப்படத்தைச் சுட்டிக் காட்டும்போது மிருதுளா என்ன கூறுவாள்? நான் ஸ்டாண்ட்டை நோக்கி நடந்தேன். ஆச்சரியம்! புகைப்படம் அங்கு இல்லை.

‘‘முகு... போயி படுத்துத் தூங்கு... உனக்கு சுகமில்ல. ம்... போகச் சொல்லி நான் சொன்னேன்...’’

அந்த கட்டளையைப் பின்பற்ற நான் தயாரானேன்.

என்னுடைய பலமும் தைரியமும் இல்லாமற் போயிருந்தன.

9

டுமையான காய்ச்சல். அதன் வெப்பம் உடலை தகித்துக் கொண்டிருக்க, நான் பலவற்றையும் நினைத்துப் பார்த்தேன்.

அந்தப் பழைய திருமண புகைப்படத்தை பல்லாயிரம் தடவைகள் மிருதுளாவும், மிருதுளாவிற்குத் தெரியாமல் பட்டுப் புடவைகளை அணிவதற்காக அந்த அறைக்குள் நுழையும் சுப்பம்மாவும் பார்த்திருக்க வேண்டும். அந்தப் புகைப்படத்திலிருந்த ஆணின் முகமும் என்னுடைய முகமும் ஒன்றுதான். மிருதுளாவும் சுப்பம்மாவும் இதை கவனித்திருப்பார்களே!

புகைப்பட ஆதாரம் அவர்களுக்கு எதற்கு?

ஒன்று- என் மனைவி. இன்னொன்று - அவளுடைய பழைய வேலைக்காரி. முன்பிறவியில் இருந்த என்னுடைய முகத்தை அவர்கள் பல்லாயிரம் தடவைகள் பார்த்திருக்கிறார்கள். இந்த அன்னை இல்லத்தில் நான் கால் வைத்தபோதே, அவர்கள் என்னை அடையாளம் கண்டு பிடித்திருப்பார்கள். இல்லை. அதற்கு முன்பு மிருதுளா என்னை அடையாளம் கண்டுகொண்டாள். ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வந்தபோது; அந்தக் காரணத்தால்தான் அவள் ஓவியங்களை வாங்கியிருக்க வேணடும். கனவில் வழிகளைச் சொல்லியதுகூட அதனால்தான்.

அந்தப் புகைப்படம்தான் என்னுடைய சாவி. என்னைப் பற்றிய ஆதாரம் அதுதான். அதைப் பார்த்திருக்காவிட்டால் நான் மிருதுளாவின் கணவன் என்ற விஷயம் எனக்குத் தெரிந்திருக்காது.

நான் மிருதுளாவின் கணவனாக இருக்கும்பட்சம்-

நான் இறந்தேன் மீண்டும் பிறந்தேன். எனக்கு இப்போது இருபத்து இரண்டு வயது நடக்கிறது. மிருதுளாவின் வயது? நாற்பது? நாற்பத்தைந்து? எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கட்டும். என்னுடைய முற்பிறவியில் என் மனைவியாக ஆகக்கூடிய வயதுதான் அவளுக்கு இருந்தது. திருமணத்திற்குப் பிறகு நாங்கள் அந்தப் புகைப்படத்தை எடுத்தோம். ஒன்றாக வாழ்ந்தோம். முத்தமிட்டோம். படுத்தோம்- பிறகு என்றோ நான் இறந்துவிட்டேன்.

எப்படி இறந்தேன்?

என் பெயர் கடந்த பிறவியில் பிரபு என்று இருந்தது. என்ன பிரபு?

நாராயண பிரபு?

தேவரேச பிரபு?

ஏதோ ஒரு பிரபு?


மிருதுளா திடீரென்று அங்கு வராமலிருந்தால் எல்லா ரகசியங்களையும் நான் தோண்டி எடுத்திருப்பேன். சுப்பம்மா மூலம் எல்லாவற்றையும் கூற வைத்திருப்பேன். இனி முடியாது. சுப்பம்மாவை இனிமேல் நான் விரட்ட முடியாது. என் ஆயுதம் இழக்கப்பட்டிருந்தது. பயமுறுத்துவதற்கு அர்த்தமில்லாமல் போயிருக்கிறது.

வார்ட் ரோபைத் திறந்தபோது அடுக்குகள் மாறித் தாறுமாறாக கிடக்கும் புடவைகளை மிருதுளா பார்ப்பாள். சுப்பம்மாவின் குற்றத்தை நேரடியாக தெரிந்து கொள்வாள். இல்லை... இனிமேல் சுப்பம்மாவை நான் பயமுறுத்த முடியாது.

அந்தத் திருமண புகைப்படம் எப்படி மறைந்தது? அதுதான் எனக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ள முடியாத பல விஷயங்களும் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றனவே.

பத்மாவின் நான்கு ஓவியங்கள் எப்படிக் காணாமல் போயின?

என் க்யான்வாஸிலிருந்த கிளியால் எப்படிப் பறக்க முடிந்தது?

கறுப்புப் பூனை எங்கிருந்து வந்தது?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிருதுளாவால் மட்டுமே பதில் தர முடியும். இனி ஒளிந்து கொள்ளும் விளையாட்டு தேவையில்லை. ஒளிய வேண்டிய தேவையும் இல்லை. எல்லாவற்றையும் மனம் திறந்து கேட்கக் கூடிய சந்தர்ப்பம் வந்திருக்கிறது.

இப்படிப் பல விஷயங்களைப் பற்றியும் சிந்தித்துக் கொண்டு நான் என் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தேன். அப்போது மிருதுளா என்னைத் தேடி வந்தாள். நான் எழுவதற்கு முயற்சித்தபோது மிருதுளா அதைத் தடுத்தாள். ‘‘படு... உடல் அசையக் கூடாது. காய்ச்சல் குணமாகல...’’

மிருதுளா எனக்கு அருகில் உட்கார்ந்தாள். அவள் என்னுடைய நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள். ‘‘ராத்திரி ஆயிடுச்சு. நல்லா உறங்கணும்.’’ - படுக்கை விரிப்பின் சுருக்கங்களைத் தன் விரல்களால் சரிப்படுத்திக்கொண்டே அவள் மெதுவான குரலில் சொன்னாள்.

என் மனதில் திரண்டு நின்றிருந்த கேள்விகளில் எந்தக் கேள்வியை முதலில் கேட்பது? எப்படி ஆரம்பிக்க வேண்டும்? நான் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சாதாரண செய்தியைக் கூறுவது மாதிரி மிருதுளா சொன்னாள்: ‘‘முகு! நான் சுப்பம்மாவை அனுப்பிட்டேன்!’’

அதைக் கேட்டதும், என் கேள்விகளின் பட்டியல் சிதறிப் போனது.

‘‘என்ன?’’ - பட்டியலில் இடம் பெறாத ஒரு கேள்வி!

‘‘நம்ப முடியல... தெரியுமா? நான் இல்லாத நேரத்துல அவள் என்னோட புடவைகளை எல்லாம் எடுத்து உடுத்தியிருக்கா.’’

‘‘அதுனால?’’

‘‘ஒரு வேலைக்காரி இப்படி நடந்தால் யாரால சகிச்சிக்க முடியும்? உனக்குப் புரியாது- நீ பெண் இல்லையே!’’

‘‘அந்தக் கிழவி எங்கே போவா? எப்படி வாழுவா?’’

‘‘உனக்கு இந்த அளவுக்கு பரிதாப உணர்ச்சி தோணுறதுக்குக் காரணம்?’’

‘‘சுப்பம்மா ஏழை.’’

‘‘ஓஹோ...’’

‘‘முதல்ல நான் அவளை வெறுத்ததென்னவோ உண்மை. ஆனா, அவளோட கதையைக் கேட்டப்போ...’’

‘‘யார் கதையைச் சொன்னது?’’

‘‘சுப்பம்மாதான்.’’

‘‘முகு! கட்டுக் கதை உண்டாக்குறதுல படு கில்லாடி அவ. அப்படி அவ என்ன சொன்னா?’’

சுப்பம்மா சொன்ன கதையை நான் சுருக்கமாகச் சொன்னேன்.

‘‘அவளோட மகனுக்கு இருபத்து நாலு வயசு நடக்குறப்போ சுப்பம்மா உன் வேலைக்காரியா வந்து சேர்ந்திருக்கா’’ - நான் கூறி முடித்தேன்.

‘‘அதற்குப் பிறகு எதுவும் சொல்லலையா?’’

‘‘இல்ல... அவள் சொன்னதெல்லாம் உண்மையா?’’

‘‘அந்த பிசாசோட கடந்த கால வரலாறு எதுவும் எனக்குத் தெரியாது. ஒரு விஷயம் உண்மை. இருபத்து நாலு வருடங்களுக்கு முன்னாடி அவள் என் வேலைக்காரியா வந்து சேர்ந்தா. பேராசை பிடிச்ச, பொய் சொல்ற பொம்பளை அவ. நானா இருந்ததுனால இவ்வளவு காலமா அவளை சகிச்சிக்கிட்டேன். என்னைப் பற்றி உன்கிட்ட அவள் ஆயிரம் பொய்களைச் சொல்லியிருப்பா... அப்படித்தானே?’’

‘‘இல்ல... சுப்பம்மா உன்னோட நம்பிக்கையான வேலைக்காரியா இருந்தா.’’

‘‘நேரம் அதிகமாயிடுச்சு, முகு! தூங்கு...’’

‘‘இனி வீட்டு வேலைக்கு ஒரு ஆளைக் கண்டுபிடிக்கணுமே?’’

‘‘வேண்டாம்... இனி இங்கு இருக்கப் போறதே ஒண்ணோ இரண்டோ வாரங்கள் மட்டும்தான். நானே நேரடியா கவனிக்கிற விஷயங்கள் மட்டும்தான் இருக்கு.’’

‘‘ஒண்ணு ரெண்டு வாரங்கள் கடந்த பிறகு...?’’

‘‘மீதி உரையாடலை நாளைக்கு வச்சுக்குவோம். ரைட்!’’ - புன்சிரிப்புடன் மிருதுளா எழுந்தாள். என்னைப் போர்வையால் மூடி விட்ட அவள் விளக்கை அணைத்தாள். இடத்தை விட்டுக் கிளம்பினாள்.

நான் ஒரு சரியான மடையன் என்று என்னை நானே நினைத்தேன். கேட்க நினைத்த எதையும் நான் அவளிடம் கேட்கவில்லை. எதிர்த்து பல விஷயங்களைப் பேசியது மிருதுளாதான். சுப்பம்மாவை வேலையைவிட்டு அனுப்பியதைக் கூறுவதற்காக மட்டுமா அவள் வந்திருப்பாள்? சுப்பம்மாவை இப்போது எதற்கு வேலையைவிட்டு அனுப்ப வேண்டும்?

இதற்கு முன்பும் சுப்பம்மா மிருதுளாவின் புடவைகளை எடுத்து அணிந்திருப்பாள். இருபத்து நான்கு வருடங்களாக அவள் இந்தப் புடவை அணியும் விளையாட்டை நடத்திக் கொண்டு இருந்திருப்பாள். சொல்லப் போனால் இந்த விஷயத்தை இதற்கு முன்பே மிருதுளா அறிந்திருப்பாள். இன்றுவரை மிருதுளா அவளை வேலையை விட்டு அனுப்பாதது ஏன்?

சுப்பம்மாவிடமிருந்து நான் ரகசியங்களைத் தெரிந்துகொண்டு விடக்கூடாது என்ற கட்டாயம்தான் திடீரென்று உண்டான இந்த நடவடிக்கைக்குக் காரணம் குறைந்த பட்சம் சில விஷயங்களையாவது நான் தெரிந்து கொண்டிருப்பேன் என்ற சந்தேகம் மிருதுளாவிற்கு உண்டாகியிருக்க வேண்டும். என்னை எதிர்த்துக் கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அவளுக்கு மனசமாதானம் உண்டாகியிருக்க வேண்டும். பெரிதாக முகுந்தன் எதையும் தெரிந்துகொண்டு விடவில்லை என்று அவள் நினைத்திருக்கலாம்.

நான் சாய்ந்து படுத்திருந்தபோது கையில் என்னவோ தட்டியது. என்னவென்று தடவிப் பார்த்தேன். செல்லரித்த கைக்குட்டை வார்ட் ரோபில் இருந்த பழைய கோட்டின் பையிலிருந்து நான் எடுத்தது.

அந்த பழைய சட்டைகளையும் கோட்டுகளையும் மிருதுளா ஏன் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாள்?

இறந்துபோன கணவனுக்குச் சொந்தமானவையா அவை? அப்படியென்றால் - எனக்குச் சொந்தமானவை!

அது உண்மையென்றால், இந்தக் கைக்குட்டையும் என்னுடையதுதான். போன பிறவியில் நான் இந்தத் துணித் துண்டால் வியர்வையைத் துடைத்திருப்பேன். கைகளைத் துடைத்திருப்பேன். இதில் இப்போதும் என்னுடைய போன பிறவியின் வாசனை இருக்கிறது.

ஆகாஷிக் ரெக்கார்ட் - ஆகாயப் பதிவு - அது ஒரு சாகாவரம் பெற்ற புராணம் என்றல்லவா மிருதுளா ஒரு தடவை கூறினாள்? இன்றுவரை பிறந்து இறந்தவர்களின் சிந்தனைகள், வார்த்தைகள், ஆசைகள் - எல்லாம் ஆகாயப் பதிவில் இருக்கின்றன. இந்த கைக்குட்டை ஆகாயப் பதிவைவிட முந்தைய ஒன்று! கடந்து போன விஷயங்களைப் பற்றி இந்த செல்லரித்த கைக்குட்டை ஒரு சிறிய கதவையாவது திறந்து காட்டாமலா இருக்கும்?

நான் கைக்குட்டையை எடுத்து முகர்ந்து பார்த்தேன். நீண்டநேரம். புளிப்பு வாசனை.

நான் இப்போது எங்கு இருக்கிறேன்?


பாம்பேயில், பரோடாவில், டில்லியில், சென்னையில், விமானங்களில் குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்ட புகைவண்டி கம்பார்ட்மென்ட்களில் நான் பயணம் செய்கிறேன்.

கைக்குட்டைக்கு என்ன வாசனை இப்போது!

நான் ஒரு புகழ்பெற்ற ஓவியன். என்னைப் பார்ப்பதற்காக பழைய மகாராஜாக்களும், புதிய கேபினட் அமைச்சர்களும் வெளிநாட்டைச் சேர்ந்த அம்பாசிடர்களும் வருகிறார்கள். நான் அவர்களை ஓவியம் வரைய வேண்டும். வரிசையில் நிற்க அவர்கள் தயாராக இருக்கிறார்கள். என்னளவிற்குப் புகழ் பெற்ற ஒரு ஓவியன் இந்தியாவில் இல்லை.

நான் கொச்சியைச் சேர்ந்த ஸ்ரீதரபிரபு.

கொங்கண நாட்டிலிருந்து நூற்றாண்டுகளுக்கு முன்னால் கொச்சிக்கு வந்து சேர்ந்த ஸாரஸ்வத பிராமண குடும்பத்தைச் சேர்ந்தவன். பேரழகியான மிருதுளாவின் கணவன்.

முற்பிறவியைப் பற்றிய நினைவுகள் மனமென்னும் டி.வி. திரையில் தொடர்நது தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன. - ஏராளமான காட்சிகள்!

அன்று ஆட்களுக்கு என்மீது பொறாமை தோன்றியது ஏன்?

நான் புகழ்பெற்ற ஓவியனாக இருந்தேன் என்பதாலா? இல்லை - நான் மிருதுளாவின் கணவனாக இருந்தேன். என்பதாலா? இரண்டு காரணங்களுக்காகவும் இருக்கலாம். என் ஓவியங்களையும் என் மிருதுளாவையும் ஆட்கள் கண்களை அகலவிரித்துக் கொண்டு பார்த்திருக்கிறார்கள்.

எவ்வளவு பணத்தை நான் சம்பாதித்தேன்!

பத்தாயிரம் ரூபாய்களுக்குக் குறைவான தொகையை ஒரு போர்ட்ரெய்ட்டிற்கு நான் வாங்கியதே இல்லை. மிருதுளா கூறுவது உண்டு: ‘‘விலையை அதிகரிச்சா, ஒருவேலை இந்தக் கூட்டம் குறையுமோ? எனக்கு நீங்க கிடைக்காமல் போயிட்டீங்க...’’

அவள் அப்படிச் சொன்னது சரியில்லை.

நான் அவளை என்னுடன் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லவில்லையா? நான் நல்ல உடல் நலம் கொண்ட கணவனும் காதலனுமாக இருக்கவில்லையா?

பணம் சம்பாதிக்க போர்ட்ரெய்ட்டுகளையும், என் சந்தோஷத்திற்கு இயற்கைக் காட்சிகளையும் வரைந்து கொண்டிருந்த நான் தாந்த்ரீக பாணியில் முதல் தடவையாக வரைந்த ஓவியத்தை பாரீஸ் ‘பயனாலி’ல் காட்சிக்கு வைத்தேன். மிருதுளா கட்டாயப்படுத்தியதால்தான் நான் புதிய பாணியில் சோதனை செய்து பார்த்தேன். அந்த ஓவியம் சர்வதேச அளவில் பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றது.

அந்த நினைவுகளில் பயணம் செய்யும்போது நான் அன்னை இல்லத்தைப் பற்றிய சுய உணர்வுடன்தான் இருந்தேன். இந்தப் பிறவியில் முகுந்தனைப் பற்றிய சுய உணர்வும் இருந்தது. சுப்பம்மா வேலையை விட்டு அனுப்பப்பட்ட விஷயத்தையும், பாரீஸ், ‘பயனாலை’ப் பற்றியும் ஒரே நேரத்தில் நான் நினைத்தேன்.

நினைவுகள் காட்டைப் பார்க்கின்றன.

தனித் தனியாக இருந்த மரங்கள் எங்கே? தனித்தனியாக அவற்றைக் காண முயற்சித்தபோது, எல்லாம் மங்கலாகின்றன. புகையால் சூழப்படுகின்றன.

போன பிறவியும் இந்தப் பிறவியும் ஒன்றோடொன்று கலக்கின்றன.

மொத்தத்தில் - ஒரு சோர்வு உண்டாகிறது.

நான் கண்களை மூடினேன்.

உறங்கியிருக்கலாம். கனவு கண்டிருக்கலாம்.

புதிய ஒரு காட்சி.

அழகாக அலங்கரிக்கப்பட்ட மணியறைக்குள் நானும் மிருதுளாவும் ஒருவரையொருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம். அவளுடைய நிர்வாண உடலை நான் அங்குலம் அங்குலமாக சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். முதல் தரமான ஸேபில் தூரிகையின் மென்மைத்தனத்துடன் அவளுடைய உடலில் என் விரல்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன. அவளுடைய வலது தொடையின் உட்பகுதியில் ஒரு மச்சம் இருப்பதை நான் கண்டு பிடிக்கிறேன். அது விலைமதிப்பற்ற ஒரு கலைப் பொருள் என்று எனக்குப் படுகிறது. நான் அதற்கு முத்தம் தர முயற்சிக்கும்போது, கூச்சமடைந்து சிரிக்கும் மிருதுளா - என்னை விலக்க முயற்சிக்கிறாள். ஒரு கற்கால காதலனைப் போல நான் அவளை மல்லாக்கப் படுக்க வைக்கிறேன். பிறகு - நான் அதிர்ச்சியடைந்து சுய உணர்விற்கு வந்தேன்.

நான் அசுத்தமாகி இருக்கிறேன்.

இன்றுவரை இழக்கப்படாமலிருந்தது இழக்கப்பட்டு விட்டது - கட்டியாகிவிட்ட கபத்தைப்போல.

அசுத்தமானவனாகி விட்டேனா?

போன பிறவியில் ஆரம்பித்த ஒரு உடலுறவு இப்போது முடிந்திருக்கிறதோ?

நான் கட்டிலை விட்டு எழுந்தேன்.

அப்போது பிறப்பு உறுப்பு வலிக்க ஆரம்பித்தது.

எட்டாம் எண்ணைக் கொண்ட கார் ஷெட்டிற்குள் பின்பக்க சுவர்மீது சாய்ந்து கொண்டு நான் நின்றிருந்தேன். கார் பின்னோக்கி வருகிறது. அதிக வேகத்துடன் அது என்னைச் சுவருடன் சேர்த்து நசுக்குகிறது. பின்னால் இருக்கும் மட்கார்டும் நீட்டிக் கொண்டிருக்கும் ஒரு டெய்ல்லெட்டும் பிறப்பு உறுப்பில் இடித்தன. ஒரு பெண்தான் காரைப் பின்னோக்கி ஓட்டினவள். யார் அவள்?

தெரியாமல் அது நடந்துவிட்டதோ?

இந்த வேதனை ஒரு முற்பிறவி நினைவா? ஆமாம்... நினைவுதான். இது கனவாக இருந்தால், சுய உணர்வுடன் இருக்கும்போது இந்தத் தோணல் எப்படி உண்டாகிறது?

பொழுது விடியவில்லை.

நான் விளக்கைப் போட்டுக்கொண்டு, என்னுடைய முற்பிறவியைப் பற்றி சிந்தித்தவாறு திரும்பவும் படுத்தேன்.

ஓவியக் கலையைப் பற்றி ஒரு போலி விமர்சகரைப் போல மிருதுளாவால் பேச முடிகிறது என்றால், அது சாதாரண விஷயமல்ல. அவள் ஒரு ஓவியனின் மனைவியாக இருந்தவளாயிற்றே!

‘இயற்கைக்கு அப்பால் பார்க்க வேண்டும். ஆழமான பிரபஞ்சங்களைக் கண்டடைய வேண்டும். இயற்கைக் காட்சிகளையும் தனி உருவங்களையும் எதற்காக வரைய வேண்டும்? கண்ணுக்குத் தெரியாத காலத்தைச் சேர்ந்த பூதங்களை வரை... பிசாசுகளை வரை... வாழ்க்கை ஒளியின் புதிரான விஷயங்கள் உன் அன்றாட கருப்பொருட்களாக இருக்கட்டும்...’

அறையில் என்னவோ ஓடுவதைப் போல் நான் உணர்ந்தேன். சிறிய சத்தங்கள் அவ்வப்போது கேட்டன. இப்போது கட்டில் தூண் வழியாக ஓடி ஏறி, கொசுவலைக்குள் போய் மறைந்தது என்ன? மிகுந்த வேகத்துடன் அது ஓடி ஏறியது. அதோ அது குதிக்கிறது - அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் என்னுடைய க்யான்வாஸ்களை நோக்கி திடீரென்று எதையும் பார்க்க முடியவில்லை. கேட்க முடியவில்லை.

சோர்வு - பயங்கர சோர்வு.

கண்களை மூடலாமா? இன்னும் சிறிது உறங்கினால், எட்டாம் எண் கார் ஷெட் கனவில் தோன்றுமா? அப்படியென்றால், காரை பின்னோக்கி ஓட்டிய பெண்ணின் முகத்தைப் பார்க்கலாம்.

கனவுகள் இல்லாமல் சில நிமிடங்கள் உறங்கியிருக்கலாம். திடுக்கிட்டு கண் விழித்தபோது, பொழுது விடிந்திருந்தது.

என் மார்பில் என்னவோ ஓடிக் கொண்டிருந்தது.

நான் அதைக் கையால் தட்டி, தரையில் வீழ்த்தினேன்.

அது ஒரு பருமனான எட்டுக்கால் பூச்சி!

கறுப்பு நிற எட்டுக்கால் பூச்சி! உருண்டு கொண்டிருக்கும் பெரிய கண்கள்! தரையில் இருந்தவாறு அது என்னை வெறித்துப் பார்த்தது.


அடுத்த நொடியில் ஒரே தாவலில் அது கட்டில் தூண்மீது ஏறியது. இப்போது அதை மிகவும் அருகில் பார்க்க முடிந்தது. உடம்பெங்கும் ரோமங்கள் கொண்ட எட்டுக்காலி. அதன் தலையிலும் உடலிலும் மச்சங்கள் இருந்தன.

படுக்கையறையின் சூழலில் திடீரென்று குளிர்ச்சி உண்டானது.

ஏறிய தூணிலிருந்து மற்ற மூன்று தூண்களுக்கும் மாறி மாறித் தாவியவாறு எட்டுக்கால் பூச்சி வலை பின்ன ஆரம்பித்தது.

வண்ணங்களில் மின்னிய நூல்கள் - பட்டு நூல்கள். பல்வேறு வண்ணங்களில் முடிக்கப்பட்ட வலைகள்.

காஞ்சீபுரம்.

தர்மாவரம்.

வலை பின்னுவதற்கு இடையில் அவ்வப்போது எட்டுக்கால் பூச்சி முணுமுணுத்தது: ‘‘சவப்பெட்டி... சவப்பெட்டி...’’

10

லை நெய்து தளர்ந்துபோன எட்டுக்கால் பூச்சி ஓய்வெடுக்க ஆரம்பித்தது. பொன் நிற ஓரம் கொண்ட ஒரு ஆரஞ்சு வண்ண வலையின் மையத்தில் அது ஒட்டிக் கிடந்தது. உருண்டு கொண்டிருந்த கண்கள் சிறு ரோமங்களுக்கு நடுவில் காணாமற் போயிருந்தன. மச்சங்கள் எழுந்து நின்றன. முன் கால்கள் உயர்ந்தன. அவற்றை ஒன்றோடொன்று இணைத்துத் தூக்கிக் கொண்டு நின்றபோது, எட்டுக்கால் பூச்சி தியானத்தில் மூழ்கியிருக்குமோ?

இது சுப்பம்மாதான். இந்தப் புதிய வடிவத்திலும் அவளுக்கு வண்ணங்கள் மீதும் பட்டு நூல்கள் மீதும் அடங்காத ஆசை இருக்கத்தான் செய்கிறது. பத்மாவைக் கிளியாக மாற்றி பறக்க வைத்த மிருதுளா, சுப்பம்மாவை எட்டுக்கால் பூச்சியாக மாற்றியபோது, புன்னகைக்கவில்லையா?

சுப்பம்மா நெய்யட்டும், உடலிலிருந்து நுரையையும் நீரையும் வெளியேற்றி அவள் வேண்டுமென்ற அளவிற்குப் பட்டுப் புடவைகளை உண்டாக்கட்டும்.

சவப்பெட்டியைப் பற்றி சுப்பம்மா கூறினாளே! அவள் எதை மனதில் வைத்து அதைக் கூறியிருப்பாள்? எட்டுக்கால் பூச்சியாக ஆவதற்கு முன்பு அவள் குறிப்பாகச் சொன்னாள். நான் ஆபத்தின் பக்கம் இருக்கிறேன் என்று. என்னுடைய மரணத்தைப்பற்றி அவள் முன் கூட்டியே தெரிந்திருப்பாளோ?

நான் எதற்கு இறக்க வேண்டும்?

எனக்கு இருபத்தொரு வயது முடிவடைந்திருக்கிறது. அவ்வளவுதான். எனக்கு நோய்கள் எதுவுமில்லை. என்னைக் கொல்வதற்கு யாருக்கு விருப்பம் இருக்கிறது? ஆர்வம்? காரணம்? பிறகு... தற்கொலை செய்யும் நோக்கம் எனக்கில்லை.

பிறப்பு... மரணம்... பிறப்பு...

முடிவற்ற வளையம்... முடிவடையாத ரதச் சக்கரம்.

முற்பிறவியைப் பற்றிய கதையை முழுமையாகத் தெரியாமல் இறந்தால் இனிமேலும் நான் பிறக்க வேண்டியதிருக்கும். முடியாது - இனி வாழ முடியாது. இனிமேலும் தாயைக் கொல்லும் ஒருவனாக ஆக முடியாது.

மிருதுளாவிற்குத் தேவை நான்தான். அப்படித்தானே யோனி பூஜை நடைபெற்ற இரவின்போது அவள் சொன்னாள்? என்னை அடையாளம் தெரியாமல் அப்படி எப்படிக் கூற முடியும்? அதன் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும்: ‘‘முகு, நாம இனிமேலும் கணவன் - மனைவியாக வாழலாம். உன்னோட மரணத்தையும் இழந்துவிட்ட என்னோட இளமையின் நீண்ட வருடங்களையும் நாம மறந்திடுவோம்.’’

கட்டிலில் படுத்துக் கொண்டு நான் ஒரு கணக்குப் போட்டேன். சுப்பம்மாவிற்கு அறுபத்தெட்டு வயது. இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் அவள் மிருதுளாவின் வேலைக்காரியாக வந்து சேர்ந்தாள். அப்போது அவளுடைய தடிமனான மகனுக்கு இருபத்து நான்கு வயது... ஓ! இந்த கணக்கு எதற்கு? மிருதுளாவிலிருந்து ஆரம்பிப்போம். மிருதுளாவிற்கு இப்போது நாற்பத்தைந்து வயது என்றால், அவளுடைய இருபத்தொன்றாம் வயதில்தான் சுப்பம்மா அவளிடம் வேலைக்காரியாக சேர்ந்திருக்கிறாள். அப்போது நான் மிருதுளாவின் கணவன். அன்று என்னுடைய வயது? அதைத் தீர்மானிக்க இந்தக் கணக்குக் கூட்டல் உதவாது. ஒரு விஷயத்தைத் தீர்மானிக்கலாமே! நான் இறந்தது இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு... இல்லாவிட்டால், இருபத்து மூன்று.

என்னுடைய இன்றைய வயது (இருபத்து இரண்டு) ப்ளஸ் புதிய பிறப்பிற்கான சமயம் (ஒன்று) ஈக்வல்ஸ் இருபத்து மூன்று.

ச்சே! அது எப்படிச் சரியாகும்? சுப்பம்மா வேலைக்காரியாக வந்த நாளன்று நான் இறந்தால்தானே இந்தக் கணக்குச் சரியாகும்? இன்னொரு விஷயம் - மிருதுளாவிற்கு இப்போது நாற்பத்தைந்து வயதுதான் என்று எப்படி உறுதியாகக் கூற முடியும்?

கணக்கு விஷயத்தில் மிகவும் மோசமானவன் நான்.

இனியும் சிந்திக்க வேண்டும். தெளிவில்லாமல் தோன்றி மறைந்து கொண்டிருக்கும் நினைவுகளை ஆறாவது அறிவு கொண்டு கட்டிப் போட வேண்டும். தளர்ந்து போன குதிரைகளுக்கு ஒப்பானவை நினைவுகள். அவற்றை அடித்து எழுப்பக் கூடிய சாட்டை வார்கள் அஸ்ட்ரல் தளத்தில் இருக்கும். அந்தத் தளத்திற்கு உயர்ந்தால்...? ஆகாயப் பதிவின் வழியாக ஓசையெழுப்பி பயணித்தால்?

இல்லாவிட்டால் ஒன்று செய்யலாம் - சுப்பம்மாவுடன் பேசலாம்.

இனி யாருக்கும் பயப்படாமல் அவள் எல்லாவற்றையும் கூறலாமே!

பிறகு... அந்த செல்லரித்த கைக்குட்டையும் எனக்கு உதவும். அதை முகர்ந்து பார்த்தால் கடந்த காலத்திற்குச் செல்ல ஒரு பாதை உண்டாக்க முடியுமே!

தலையணைக்குக் கீழே நான் தடவிப் பார்த்தேன். அங்கு கைக்குட்டை இருந்தது.

கைக்குட்டையை மூக்கிற்கு அருகில் வைத்தபோது அறையில் சுழல் காற்று உண்டானது.

தரையிலிருந்து தூசுகள் எழுவதை முதலில் பார்த்தேன். அது பம்பரத்தைப் போல சுற்றும் தூசிப் படலமாக ஆனது. அதற்குள் என்றோ கிழித்துப் போட்ட ஒரு ஓவியத்தின் துண்டுகள் இருந்தன.

லெடாவும் அன்னப் பறவையும்.

ஸ்பார்ட்டாவைச் சேர்ந்த ஒரு பழைய மன்னரின் மனைவியான லெடாவுடன் ஸீயுஸ் கடவுள் அன்னப் பறவை வேடத்தில் சென்று உடலுறவு கொள்கிறான்.

தூசிப் படலத்தில் லெடாவின் தலையும் அன்னப் பறவையின் வாலும் சுற்றிக் கொண்டிருந்தன.

திடீரென்று சுழல் காற்று ஒரு தூணாக மாறியது. தூண் அல்ல... உள்ளே ஓட்டை விழுந்திருக்கும் ஒரு சிலிண்டர். அந்த சிலிண்டர் என் மூக்கு அளவிற்கு உயர்ந்தது. சில நொடிகள் அது கீழே இறங்கிய போது செல்லரித்த கைக்குட்டை அதன்மீது பட்டது. கைக்குட்டை சிறு சிறு துண்டுகளானது. தூசிகளானது. சுழல் காற்று முடிவடைந்த போது தரையிலிருந்த தூசியிலும் குப்பைகளிலும் கைக்குட்டை காணாமற் போயிருந்தது.

சுழல் காற்று சுப்பம்மாவின் ஏழு நிறங்களைக் கொண்ட வலைகள் மீது வேகமாக வீசியதோ? இப்போது வலைகளைக் காணோம். சுப்பம்மாவையும்.

சுப்பம்மா எங்கே?

கொசுவலையின் மடிப்புகளில் அவள் ஒளிந்திருக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது க்யான்வாஸிற்குப் பின்னால் பதுங்கியிருக்கலாம்.

நேரம் எவ்வளவு ஆனது?

படுக்கையறை குளிர்ச்சியாக இருக்கிறது.

அதற்குக் காரணம் இல்லாமலில்லை.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இது மழைக்காலமா? எனக்கே தெரியாமல் வானத்தில் கறுத்த மேகங்கள் ஒன்று சேர்ந்தபோது, படுக்கையறையில் சுழற்காற்று உண்டாகி விட்டதோ?

நான் கூடத்தின் வழியாக மாடியிலிருந்த அறையை அடைந்தேன்.


அன்னை இல்லத்தின் மாடியிலிருந்து மழைநீர் வழிந்து கொண்டிருந்தது. தேவகன்னிகள் இருக்கும் சுவர் ஓவியத்தில் ஈரம் கலந்து கொண்டிருந்தது. அலரிச் செடி காற்றிலாடி உண்டான நிழல் இப்போது தெரிந்தது.

இருட்டிவிட்டதா?

மழையின் காரணமாக இருட்டிவிட்டதைப் போல் தோன்றுகிறதோ?

அறையின் வராந்தாவை நோக்கித் திறக்கும் கதவு காற்று பட்டு பல தடவை மூடித் திறந்து கொண்டிருந்தது. நிறைய கீற்றுகளைக் கொண்ட மின்னல்கள் வானத்தின் மார்பைப் பிளந்து கொண்டிருந்தன. நிற்காத பீரங்கிப் போராக இருந்தது இடி முழக்கம்.

என்னுடைய பிறப்பு நேரத்தில் இப்படி இடியும் மின்னலும் இருந்திருக்க வேண்டும்.

இது இரவா? பகலா?

மின்னலின் பாதிப்பு உண்டாகி, விளக்குகள் அணைந்து விட்டனவா? மிருதுளா எங்கே?

காற்றுக்கு சக்தி தருவது கருமேகங்களா?

அதோ... என்னவோ சத்தத்துடன் விழுகிறது!

நான் ஓடிச்சென்று சாளரத்தின் வழியாக பார்த்தேன். கார்ஷெட் தகர்ந்திருக்கிறது. ஒரு பெரிய ஆஸ்பெஸ்டாஸ் துண்டு எங்கோ பறந்து கொண்டிருக்கிறது.

அய்யோ! நான் உரத்த குரலில் கத்தினேன்.

என்னுடைய பிறப்பு உறுப்பு வலிக்க ஆரம்பித்தது - முன்பு எப்போதும் இருந்திராத கடுமையுடன்.

புதிய ஒரு மின்னல்... அதன் பிரகாசத்தில்தான் நான் எட்டாம் எண் கார் ஷெட்டைப் பார்த்தேனா?

இங்கில்லாத ஷெட்...

நகரத்தின் கார்ஷெட்...

அது ஒரு நினைவுதானே? அதைப் பார்ப்பதற்கு விளக்கு எதற்கு? வெளிச்சம் எதற்கு?

நான் பல தடவைகள் அந்த கார் ஷெட்டைப் பார்த்திருக்கிறேன். இன்னும் நான் அதற்குள் நின்று கொண்டிருக்கிறேன். பின் சுவரோடு சேர்ந்து.

ஆனால், இப்போது நான் காரைப் பின்னோக்கிச் செலுத்தும் பெண்ணின் முகத்தைப் பார்த்துவிட்டேன்! மிருதுளா...

இனிமேலும் சிறிதும் சந்தேகப்படுவதற்கில்லை. நான் இறந்து போன ஸ்ரீதரபிரபு... மிருதுளாவின் கணவன் நான்... அன்று நசுங்கி உபயோகமில்லாமற் போன பிறப்பு உறுப்பு இந்தப் பிறவியிலும் எனக்கு வேதனையைத் தந்து கொண்டிருக்கிறது. முற்பிறவியில் உண்டான அந்த அனுபவம்தான் என்னை பிரம்மச்சாரியாக ஆக்கியதா? என்னைப் பெண் வாசனை தெரியாதவனாக ஆக்கியது அதுதானா?

நான் ஓடினேன் - படுக்கையறைக்கு.

கவிழ்ந்து படுத்துக் கொண்டு நான் தேம்பித் தேம்பி அழுதபோது யாரோ என்னைத் தொட்டார்கள். திடுக்கிட்டுத் திரும்பியபோது, நான் பார்த்தது மிருதுளாவை.

‘‘மகனே!’’ - மிருதுளா அழைத்தாள்.

‘‘மகனா! நான் உன் கணவன்!’’ - நான் உரத்த குரலில் கத்தினேன்.

‘‘இல்ல... நீ என் மகன். என் ஸ்ரீயின் தனி வார்ப்பு நீ. அதே நெற்றி... அதே சுருள்முடி... தவிட்டு நிறத்தைக் கொண்ட கண்கள்...’’

‘‘நான் ஸ்ரீதரபிரபு... உன் கணவன்...’’

‘‘உன் மனம் முழுவதும் குழப்பம்... அதை நான் சரி பண்ணுறேன்.’’

‘‘அதற்குத்தான் நீ பிசாசுகளுக்கு பூஜை பண்ணுறியா?’’

‘‘முகு, உனக்கு எல்லா விஷயங்களையும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு சந்தர்ப்பம் வரும்... வரணும். அதற்காக பிசாசுகளைத் துணைக்கு அழைக்கக்கூட நான் தயார்தான்.’’

‘‘நீ கதை சொல்ற... என்னைத் தப்பா நினைக்கிறே. போன பிறவியில் நீ என் ஆண்மைத் தனத்தை அழிச்சே. எட்டாம் எண்ணைக் கொண்ட கார் ஷெட் ஞாபகத்துல இருக்கா? மாக்ஸ்முல்லர் பவனில் நடைபெற்ற என் ஓவியக் கண்காட்சி ஞாபகத்தில் இருக்கா? என்ன... ஒண்ணும் பேசமாட்டேங்குற?’’

‘‘எனக்குப் பயமா இருக்கு.’’

‘‘பயம்! உனக்கா? சொல்லு மிருதுளா, நான் எப்படி இறந்தேன்?’’

‘‘சொல்றேன்... நேரம் வரட்டும்.’’

‘‘நேரம் வந்திருச்சு...’’

‘‘அப்படி எனக்குத் தோணல.’’

‘‘மிருதுளா, எல்லா விஷயங்களையும் திறந்து சொல்லலைன்னா, நான் உன்னை...’’

காற்று பலமாக வீசியது. காற்றாடி மரங்கள் வேரோடு வீழ்ந்தன. ஆடி நடுங்கிய அன்னை இல்லத்தின் சுவர்களில் விரிசல்கள் உண்டாயின. கரிய மேகங்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகியபோது, அவற்றுக்கு மத்தியில் ஒரு கறுத்த வானவில் தோன்றியது.

என் அருகில் மிருதுளா இல்லை.

எட்டுக்கால் பூச்சி சுப்பம்மாவின் முணுமுணுப்பு ஏராளமான ஒலிபெருக்கிகள் மூலம் மிதந்து வந்ததைப் போல் தோன்றியது - ‘சவப்பெட்டி... சவப்பெட்டி...’

பொழுது விடிந்தபோது, தலையணைக்கு அடியில் நான் ஒரு கடிதத்தைப் பார்த்தேன். மிருதுளா எழுதியிருந்த கடிதம் அது.

‘நான் உன்னை ஃபஹாத் என்று அழைக்கட்டுமா? உன்னை நான் பெற்றெடுத்த நாளன்று ஸ்ரீயின் நான்கு க்யான்வாஸ்களை ஒரு அரேபிய பணக்காரர் விலைக்கு வாங்கினார். மருத்துவமனையில் வெள்ளைப் போர்வைகளுக்கு மத்தியில் உன்னை நான் கைகளுக்குள் அடக்கிப் படுத்திருக்கும்போது, என்னையும் உன்னையும் பார்ப்பதற்காக ஸ்ரீ வந்தார். ஸ்ரீ சொன்னார்: ‘இன்று என்னுடைய நான்கு ஓவியங்களை ஒரு அரேபியர் வாங்கினார். இவனை நான் அந்த அரேபியரின் பெயரைச் சொல்லி அழைக்கட்டுமா? அல்ஃபஹாத்.’ கர்னல் மேனன்தான் உன்னுடைய ஓவியக் கண்காட்சியைப் பற்றிச் சொன்னார். உன்னுடைய ஓவியங்களல்ல - நீதான் எனக்குப் பெரிது. நீ காணாமல் போன என்னுடைய மகன். நான் உன்னைத் தேடிக் கொண்டிருந்தேன். உன் அழுக்கடைந்த வசிப்பிடத்தைக் கண்டு பிடித்தது கர்னல்தான். நீ இங்கு வந்தாய். நான் உனக்கு எல்லாவற்றையும் தந்தேன். ஆனால், நீ பைத்தியம் பிடித்தவனைப் போல நடந்து கொள்கிறாய். நான் தருபவை அனைத்தும் நெருப்பு திரவம் என்று நீ சொன்னாய். நீ என்னைப் பெயர் சொல்லி அழைத்தாய். நான் விரும்பியது. ‘அம்மா’ என்று அழைப்பதைக் கேட்கத்தான். நீ என்னுடைய மார்பகங்களை மறைந்துகொண்டு பார்க்கிறாய். நீ ஆபாச ஓவியங்களை வரைகிறாய். லெடாவும் அன்னப் பறவையும் உன்னுடைய நிரந்தரக் கருவா? ஏதோ ஒரு பத்மாவின் நிர்வாண ஓவியங்களை நீ வரைகிறாய். உன்னுடைய ஓவியங்களை நான் கர்னல் மேனனிடம் காட்டினேன். நிறைவேறாத பாலுணர்வு எண்ணங்களால் உந்தப்பட்டதன் விளைவாகப் பிறந்தவையே அந்த ஓவியங்கள் என்று அவர் கூறுகிறார். இந்திய ராணுவத்தின் மருத்துவப் பிரிவில் பணியாற்றியவர் கர்னல். ஒரு விஷயம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. எட்டாம் எண் கார் ஷெட்டில் நடந்ததை நீ எப்படி அறிந்தாய்? தந்த்ராவின் விளைவாலா? ஸ்ரீயின் ஆவி உன்னை ஆட்கொள்கிறதா? சுப்பம்மாவின் மகன்தான் உன்னைத் தூக்கிக் கொண்டு போனவன்- நீ சிறு குழந்தையாக இருந்தபோது. நீ என்னுடைய ஸ்ரீயுடைய மகன். இறுதி பூஜை நாள் நெருங்குகிறது. அன்று உன் மனம் தெளிவாகும்.’

நான் பல துண்டுகளாக அந்தக் கடிதத்தை கிழித்து எறிந்தேன். அப்போது புதிய ஒரு வலையை உண்டாக்கிக் கொண்டிருந்த சுப்பம்மா சிரித்தாள். கிண்டல் நிறைந்த சிரிப்பு. சிரிப்பு முடிந்தவுடன் சுப்பம்மா கோபத்துடன் கேட்டாள்: ‘‘அந்தக் கடிதத்துல சொல்லப்பட்டிருப்பதை நீ நம்புறியா?’’

‘‘இல்ல... இல்ல...’’ - நான் சொன்னேன்.


மிருதுளா என்னைக் குழப்புகிறாள். கடைசி பூஜை நாள் வரை நான் அவளுக்குத் தேவைப்படுகிறேன். புரிந்து கொள்ள முடியாத பயங்கரமான ஏதோ - ஒரு தேவை. அந்த விஷயத்தை யோனி பூஜையன்று அவள் குறிப்பிட்டிருக்கிறாள்.

நான் அவளுடைய மகனாக இருந்தால், என்னை வைத்து யோனி பூஜையை அவள் நடத்தியிருப்பாளா?

எட்டாம் எண் கார் ஷெட்.

மாக்ஸ்முல்லர் பவனில் நடைபெற்ற என்னுடைய ஓவியக் கண்காட்சி.

கண்காட்சியின் தொடக்கவிழா நடந்த மாலை நேரத்தில் பத்திரிகை உலகத்திலுள்ள முக்கியமானவர்களும் ஜெர்மன் அம்பாசிடரும் புகழ்பெற்ற கலைஞர்களும் மூன்று நான்கு அமைச்சர்களும் வந்திருந்தார்கள். என்னுடன் மிருதுளாவும் அங்கிருந்தாள். அன்று அவள் அணிந்திருந்தது நான் அவளுக்காக டிசைன் செய்திருந்த ஒரு பத்திக் புடவை. இப்போதுகூட அந்தப் புடவை அன்னை இல்லத்தின் வார்ட் ரோபில் இருக்கும். கண்காட்சி நடைபெற்ற இடத்தில் மிருதுளா ஆணவத்துடன் நடந்துகொண்டிருந்தாள். அவளுடைய அழகு எல்லோரையும் ஈர்த்தது. ஜெர்மன் அம்பாசிடரையும்கூட! ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன்... ஆமாம். கண்காட்சியைப் பார்ப்பதற்காக கர்னல் மேனனும் அம்பிகாவும் வந்திருந்தார்கள். கண்காட்சிக்குப் பிறகு நடைபெற்ற மது விருந்திலும் அவர்கள் கலந்துகொண்டார்கள். நானும் மேனனும் நிறைய ‘ஹைபால்’ஸை உள்ளே தள்ளினோம். விருந்து முடிந்தபோது மேனன் சொன்னார்: ‘‘ஸ்ரீ நீங்க காரை ஓட்ட வேண்டாம்.’’

ஆனால் நான்தான் காரை ஓட்டினேன். வீட்டை அடைந்தபோது நான் வியர்வையில் நனைந்து போயிருந்தேன். சுய உணர்வு இல்லாமலேயே நான் எப்படியோ அங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். எட்டாம் எண்ணுக்கு நான் பின்னோக்கி காரைச் செலுத்த முயன்றபோது, மிருதுளா சொன்னாள்: ‘‘ஸ்ரீ நீங்க நிதானமா இல்ல...’’ நான் காரை நிறுத்திவிட்டு வெளியில் இறங்கினேன். மிருதுளாதான் காரை பின்னோக்கிச் செலுத்தினாள். அப்போது மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு ஷெட்டிற்குள் நுழைந்த நான் ஷெட்டின் பின்பக்க சுவர்மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தேன்.

மிருதுளா காரை பின்னோக்கி நகர்த்தியபோது - என்மீது இடித்தபோதுதான் நான் ஆண்மையை இழந்தவனாக ஆனேன்.

காயத்தைச் சரி பண்ணியதும், ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்ததும் கர்னல் மேனன்தான். ராணுவ மருத்துவப் பிரிவில் மேனன் அகில இந்திய அளவில் புகழ் பெற்றவர். இறுதியாக மனு கொடுக்கப்பட்ட நீதிமன்றம்.

களிமண்ணைக் குழைத்து திருக்காக்கரை அப்பனைச் செய்வதைப் போல கர்னல் என்னென்னவோ செய்தார்- ஆபரேஷன்கள், க்ராஃப்டுகள், வாரக் கணக்கில் வேதனைகள்...

ஆனால், மீண்டும் உண்டாக்கப்பட்ட கருவிக்கு சிறுநீர் கழிக்க மட்டுமே முடிந்தது.

அன்று நான் கவலைப்பட்டது எனக்காக அல்ல.

மிருதுளா என்ன செய்வாள்?

அழகியும் வயதில் இளையவளுமான மிருதுளா!

நான் சுயநலத்தின் உறைவிடமாக இருந்தேன். சில நேரங்களில் எனக்குச் சந்தேகம் உண்டானது. மிருதுளா எனக்கு துரோகம் செய்வாளோ?

நான் அவளுக்கு ஒரு திறந்த வாசலைப் பரிசாகத் தரவேண்டியிருந்தது. ‘‘இதுதான், இப்போதைய என் நிலை... போயிடு... தப்பிச்சிடு...’’ என்று கூறியிருக்க வேண்டும்.

நான் அதைச் செய்யவில்லை.

பிறகு என்ன நடந்தது?

நினைவுகளின் - முற்பிறவி நினைவுகளின் - ஓட்டம் முடிவடைகிறது.

அம்பிகா மேனன்.

‘பெண் ஆண்’

அம்பிகா என்னை அடையாளம் கண்டு கொண்டிருப்பாளே! இந்த அன்னை இல்லத்தில் நான் கர்னலைப் பார்க்கவில்லை. ஆனால் அம்பிகா கூறியிருப்பாளே! - ‘‘நம்ப ஸ்ரீதரபிரபு இருக்காரே! அவர் திரும்பவும் வந்திருக்காரு.’’

நான்... ஸ்ரீதர பிரபு, எப்போது இறந்தேன்?

நோய்?

கொலைச்செயல்?

தற்கொலை?

மரணத்திற்கு எது காரணமாக இருந்திருக்கும்?

காற்று வீசுகிறது.

கடல் இரைகிறது.

இந்த மாளிகை அறை முழுவதும் நீர் நிறைந்திருக்கிறது. நான் - முகுந்தன். மிருதுளாவின் கருணையால் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பவன். என்னுடைய முற்பிறவிக் கதையை யார் நம்புவார்கள்?

எனினும் என்ன விலை தந்தாவது எனக்கு அந்தக் கதை தெரிய வேண்டும். சுப்பம்மா எந்த சவப்பெட்டியைப் பற்றிக் கூறினாள்?

அவள் எட்டுக்கால் பூச்சி ஆவதற்கு முன்பு, எந்த ஆபத்தைப் பற்றிக் குறிப்பிட்டாள்?

நான் தளத்தை நோக்கி நடந்தேன்.

தங்கத் தம்புரானும் தோழியும் பல தடவைகள் ஏறி இறங்கிய பழைய படிகள் வழியாக கீழே இறங்கினேன். யோனி பூஜை நடந்த அறையின் பித்தளைக் குமிழ்களையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். பிறகு மிருதுளாவின் படுக்கையறையை நோக்கி நடந்தேன்.

அதன் கதவு மூடியிருந்தது.

சாவி துவாரத்தின் வழியாக ஒரு திருடனைப்போல, நான் மறைந்துகொண்டு பார்த்தேன். மிருதுளா என்னவோ எழுதிக் கொண்டிருந்தாள்.

நான் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

என் படுக்கையறைக்கு நான் திரும்பினேன்.

படுக்கையில் விழுந்தேன்.

நேரத்தைப் பற்றி எனக்கு எந்தவொரு உணர்வும் இல்லாமலிருந்தது.

உறங்க ஆரம்பித்தபோது, என் முகத்தில் என்னவோ ஓடியது.

எட்டுக்கால் பூச்சி.

எட்டுக்கால் பூச்சி வடிவிலிருந்த சுப்பம்மா.

சுப்பம்மா முணுமுணுத்தாள்: ‘‘பாரு... பாரு...’’

நான் பார்த்தேன். அப்போது என் பார்வையை மறைக்க சுவர்கள் இல்லை. அப்படியென்றால் இரவு பகலாகிவிட்டதா? நான் பார்த்த சூழல் அன்னை இல்லத்திற்குச் சொந்தமானது அல்ல. இந்த இடம் எது? இந்தப் பெரிய மரம் எது? அதில் இறந்து தொங்கிக் கொண்டிருப்பது யார்?

11

ரவு பகலாகவில்லை. சில நொடிகளுக்கு வெளிச்சம் தெரிந்தது என்பதுதான் உண்மை. அது மங்கலாக ஆரம்பித்தது. மரக்கிளையும் இறந்த உடலும் தெளிவற்ற உருவங்கள் ஆயின.

இடம் எது? இறந்தது யார்?

ஆணா? பெண்ணா?

எங்கோ காற்றடித்தது. கனம் இல்லாத கார்ட்போர்ட் கட்-அவுட்டைப் போல, பிணம் ஆடியது. அப்போது அதன் இடுப்புக்குக் கீழே இருந்த பழைய பேன்ட்டை நான் பார்த்தேன்.

கிழிந்த பேன்ட் இரண்டாகப் பிரியும் இடத்தில் சிதைந்துபோன நீளமான ஆண்குறி. நிர்வாணமான ஒரு தொடை. அதில் குஷ்டத்தின் அடையாளமான புள்ளிகள். வெறுப்பு தோன்றியது.

நான் கண்களை மூடினேன்.

‘‘பார்த்தியா?’’ - சுப்பம்மாவின் குரல் கேட்டது.

நான் கண்களைத் திறந்தேன். இப்போது மரம் இல்லை. பிணம் இல்லை. தூரத்தில் வானத்தின் கறுத்த துண்டு. கேக்கில் பதிக்கப்பட்டிருக்கும் சர்க்கரைத் தூள்களைப் போல நட்சத்திரங்கள்.

‘‘பார்த்தியா?’’

நான் கட்டிலுக்கு மேலே பார்த்தேன். சுப்பம்மா பல நிறங்களில் வலை பின்னிக் கொண்டிருந்தாள்.

‘‘அந்தப் பிணம் யாரோடது?’’ - நான் கேட்டேன்.

‘‘மகன்... என் மகன்...’’

‘‘உன் மகனா?’’

சுப்பம்மா கட்டில் சட்டத்தை விட்டுக் கீழே குதித்தாள். புதிதாக வெளியேற்றிய ஒரு நூலில் பெண்டுலத்தைப் போல அவள் ஆடினாள்.

அவள் சொன்னாள்:


‘‘என் மகன்... என் மகன் தடியன். குழந்தைவேலு. அவனுக்கு வலது தொடையில் குஷ்டம். படிக்காதவன். படம் வரையாதவன். அவன் உன் பொண்டாட்டியின் கள்ளக்காதலனா இருந்தான்... மிருதுளாவின் கள்ளக் காதலன். உனக்கு அது ஞாபகத்தில் இருக்குதா? எட்டாம் எண் கார் ஷெட்டில் நீ ஆண்மையை இழந்தவன் ஆயிட்டே. நீ முழுசா தகர்ந்து போயிட்டே. பயப்பட்டே... மிருதுளா துரோகம் பண்ணிடுவாளோன்ற பயம் உனக்கு. நாலஞ்சு மாதங்கள் வரை அவள் பத்தினியாத்தான் இருந்தா. கடைசியில் அவள் பாதை மாறிட்டா. குற்றம் சொல்லக்கூடாது. இப்பவும் மிருதுளா அழகிதானே! யாரிடமும் ஆசையை உண்டாக்குறவதானே? அப்படின்னா அந்தக் காலத்துல எப்படி இருந்திருப்பா? அவளுக்கு அழகான காதலர்கள் கிடைச்சாங்க. பெரிய பெரிய ஆளுங்க கிடைச்சாங்க. ஆனால், அவள் புத்திசாலி ஆச்சே! யாரும் கொஞ்சம்கூட சந்தேகப்படக் கூடாது. அதனால் தான் எதுக்குமே லாயக்கு இல்லாத என் மகனை வலை வீசிப் பிடிச்சா. அவன்கிட்ட ஒரு விபச்சாரிகூட உடலுறவு வச்சிக்கமாட்டா. குளிக்காதவன்... அழுக்குப் பிடிச்சவன்... குஷ்டரோகி... யாருக்கும் அந்த விஷயம் தெரியாது. எனக்குக்கூட. பேரழகியான மிருதுளா அவனை வசப்படுத்துவாள்னு யாராவது நினைப்பாங்களா? நிறைய இரவுகள்ல என் மகன் உன் படுக்கையறையை அபகரிச்சிட்டான். நீ பல நேரங்கள்ல ஊர்ல இருக்க மாட்டே. நீ விமானங்கள்ல பறந்துகிட்டு இருந்தே. ஓவியக் கண்காட்சிகள் நடத்துனே. நீ மன்னர்களையும் பிரபுக்களையும் படம் வரைஞ்சே. பணத்தையும் விருதுகளையும் வாங்கிக் குவிச்சே. அப்போதெல்லாம் என் குழந்தைவேலு உன் பொண்டாட்டியை அனுபவிச்சுக்கிட்டு இருந்தான். என்ன, இப்போ நான் சொல்றது எதுவும் உனக்குப் பிடிக்கல... அப்படித்தானே?’’

‘‘சொல்லு சுப்பம்மா... நீ சொல்றது என் போன பிறவி கதைதானே?’’

சுப்பம்மா ஆட்டத்தை நிறுத்தினாள். அவள் என் தோள்மீது தாவி ஏறினாள். கன்னத்தின் வழியாக ஓடி ஏறினாள். அவள் என் காதோரத்தைப் பிடித்து உட்கார்ந்தாள்.

‘‘சொல்லு சுப்பம்மா.’’

‘‘ஒருநாள் நீ உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டே. நீ தெரிஞ்சுக்கிட்ட பிறகுதான், எனக்கும் விஷயம் தெரிஞ்சது. அந்த நேரத்துல உன் மரணம் உன்னை நெருங்கிக்கிட்டு இருந்தது.’’

‘‘நான் மரணமடைந்தேனா?’’

‘‘என்ன சந்தேகம்? மரணமடையலைன்னா, நீ மறுபிறவி எடுத்திருக்க முடியுமா? ம்... நான் என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்? ஆமா... நீ உண்மையைத் தெரிஞ்சுக்கிட்டே... நீ அப்போ விமான நிலையத்துக்கு போயிட்டே. நீ எதற்காக திரும்பி வந்தே? நீ போக வேண்டிய விமானம் அன்னைக்கு பறக்கலையா? இல்லாட்டி நீ அங்கே போய் சேர்றதுக்கு முன்னாடியே அது பறந்து போயிடுச்சா? எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்... நீ திரும்பி வந்துட்டே. நீ மிருதுளாவோட படுக்கையறைக்கு வந்தே. அப்போ என் குழந்தைவேலுவோட குஷ்டம் பிடித்த தொடைகள் உன் மிருதுளாவோட இளமையைக் கவ்விப் பிடிச்சுக்கிட்டு இருக்கு. உன்னால அதைப் பொறுக்க முடியல. நீ கத்துனே. நீ என் மகன்மேல பாய்ஞ்சே. ஞாபகத்துல இருக்கா? உனக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக் இருந்துச்சு. கைப்பிடியில ஈயத்தை உருக்கி ஊற்றி கனமா இருக்கும். அதை எடுத்து நீ குழந்தைவேலுவை அடிச்சே. நான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். உன் உரத்த சத்தத்தையும் மிருதுளாவின் கூப்பாட்டையும் கேட்டுத்தான் நான் அங்கே ஓடி வந்தேன். அப்போ குழந்தைவேலு தரையில கிடந்தான். நீ வாய்ல நுரை தள்ளிய நிலையில நின்னுகிட்டு இருக்கே- பைத்தியம் பிடிச்ச ஒரு மிருகத்தைப் போல. நீ திரும்பவும் வாக்கிங் ஸ்டிக்கை ஓங்கினே. ஈயம் காய்ச்சிய கைப்பிடி இன்னொரு தடவை குழந்தைவேலுவின் தலையில பட்டிருந்தா, அவன் செத்தே போயிருப்பான். திடீர்னு குழந்தைவேலு வேகமா எழுந்திருச்சான். உன் கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை அவன் பிடுங்கிட்டான். உன் கைகள் படம் வரையிற கைகளாச்சே! பெண்களின் கை. என் மகனோட கை பலம் வாய்ந்ததா இருந்தது. அவன் உன் வாக்கிங் ஸ்டிக்கால அடிச்சான். மண்டையோடு உடைஞ்சு, மூளை வெளியில வர்றதை அன்னைக்குத்தான் நான் பார்த்தேன். உனக்குத் தெரியுமா? மூளையின் நிறம் வெள்ளைதானே? வெளியே வர்றப்போ அது சிவப்பு நிற அடை அவியல் மாதிரி இருக்கும். இரத்தத்துல கலந்த மூளை அடைகள்...! இருந்தாலும் செத்து விழுந்த உன் முகம் ஆச்சர்யப்படுற மாதிரி ரொம்பவும் பிரகாசமா இருந்தது...’’

‘‘சுப்பம்மா!’’ - நான் உரத்த குரலில் கத்தினேன். நான் அந்தக் கொலைச் செயலைப் பார்த்தேன். நான் என்னுடைய மூளையைப் பார்த்தேன்.

சுப்பம்மா என் காதின் ஓரத்தைக் கடித்தாள்.

‘‘உனக்குப் போதும்... அப்படித்தானே மீதியைப் பின்னாடி சொல்றேன்.’’

‘‘சுப்பம்மா, எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியணும்- இந்த நிமிடமே.’’

‘‘நீ இறந்துட்டே. நீ அசைவு இல்லாமல் போன பிறகு மிருதுளா அழுதான்னு நான் சொன்னா, உனக்கு அது ஆறுதல் தந்தது மாதிரி இருக்கும். உனக்கு நிம்மதி உண்டான நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஆனால், உண்மையா அப்படி இருந்தாத்தானே சொல்ல முடியும்? அவள்... உன்னோட மிருதுளா அழல. சத்தம் போடாம எல்லா விஷயங்களையும் வேகவேகமா ஒதுக்குறதுல அவ தீவிரமா ஈடுபட்டா. அதுதான் அவளுக்கு சரின்னு பட்டது. அந்த அளவுக்கு சுயநலக்காரியா அவ இருந்தா. உன்னோட ஓவியங்களை விற்றுப் பணம் உண்டாக்கணும். உன் இன்ஷூரன்ஸ் பணத்தை எப்படியாவது அடையணும். உயிரோட இருந்த உன்னால எந்தப் பிரயோஜனமும் இல்லயே! அவள் கர்னல் மேனனின் கால்கள்ல விழுந்தா. அப்போ மேனன் பெரிய மனிதரா இருந்தாரு. அவர் எல்லா விஷயங்களையும் சரி பண்ணிக் கொடுத்துட்டாரு. நீ மாரடைப்பால இறந்துட்டேன்னு வெளியே காட்டிட்டாங்க. நான் ஒரு விஷயம் சொல்றேன். நீ அதிர்ச்சியடையக் கூடாது. நான் நினைக்கிறேன் - என் மகன்மேல மிருதுளாவுக்கு மனப்பூர்வமான காதல் இருந்துச்சுன்னு...’’

‘‘சுப்பம்மா!’’ - நான் இன்னொரு முறை கத்தினேன்.

‘‘கத்தாதே. அழாதே... பைத்தியக்காரன் ஆகாதே! இவை எல்லாம் நடந்தது எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி. நீ திரும்பவும் பிறந்து இங்கே வந்திருக்கே. பழைய வேலைக்காரியான நான் இங்கே எட்டுக்கால் பூச்சியா இருக்கேன். என் குழந்தைவேலுவுக்கு என்ன ஆனது? அதைப்பற்றி யாரும் ஏன் கேட்கல?’’

‘‘அவனுக்கு என்ன ஆச்சு, சுப்பம்மா?’’


‘‘அவன் பயந்துட்டான். அவன் கொலைகாரன் ஆயிட்டானே! அவன் கொலை செய்தது புகழ்பெற்ற கலைஞனை ஆச்சே! அவனை போலீஸ் பிடிச்சா. அவனுக்கு உதவ யார் இருக்கா? நான் அறிவுரை சொன்னேன். ‘ஓடுடா... இந்த உலகத்தின் எல்லையில் இருக்குற மூலையில போய் ஒளிஞ்சுக்கடா. நான் உன்னைத் தேடி வருவேன். நீ என் மகன். உன் அப்பன் யாருன்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும்... குழந்தைவேலு, உனக்கு பால் தர இந்த மார்பகப் பைகள் தயாரா இருக்குடா’ன்னு!’’

‘‘சுப்பம்மா!’’

‘‘கொஞ்சம் பேசாம இருக்கியா? என் மகன் வாய்ல என் சுருங்கிப் போன மார்பகங்கள் பால் சுரக்கத் தொடங்கினதுக்கு நீ ஏன் அழறே?’’

‘‘மன்னிக்கணும் சுப்பம்மா! நீ ஒரு பழைய கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தேல்ல? பழைய கதை இல்ல... தொடர்ந்துகொண்டு இருக்குற கதை. குழந்தைவேலு என்ன செய்தான்?’’

‘‘நீ ஒரு மரக் கிளையில அவனோட சிதிலமடைந்த பிணத்தைப் பார்த்தேல்ல? போலீஸுக்கு பயந்து அவன் தூக்குல தொங்கி இறந்துட்டான்.’’

‘‘நான் யார் சுப்பம்மா?’’

‘‘ஸ்ரீதரபிரபுவின் மறுபிறவி.’’

‘‘அவரோட மகனா?’’

‘‘மகனா? எந்த மகன்? மிருதுளாவிற்கு ஒரு மகன் இருந்ததேயில்லை.’’

‘‘நான் மகன்னு மிருதுளா சொல்றா. அரேபிய பெயர் கொண்ட மகன்.’’

‘‘பொய். அவளுக்கும் உனக்கும் ஒரு மகன் இல்லவே இல்லை. நீ பழைய ஸ்ரீதரபிரபுதான்.’’

‘‘சுப்பம்மா, நான் இந்த அன்னை இல்லத்துல கால் வச்சப்போ, நீ என்னை அடையாளம் கண்டுபிடிச்சிட்டியா?’’

‘‘நான் மட்டுமா? மிருதுளா, அம்பிகா மேனன்... எல்லோரும் உன்னை யார்னு தெரிஞ்சிக்கிட்டோம்.’’

‘‘தெல்மா? வித்யா? பத்மா...’’

‘‘தெல்மா... பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்ட பைத்தியம்! வித்யா... கொஞ்ச நேர சந்தோஷத்துக்காக எதுலயும் பங்கெடுப்பாள். பத்மா... அம்பிகாவுக்குத் தெரியாமல் கிழவனான கர்னல் மேனன் காதலித்த சின்னப்பொண்ணு!’’

‘‘எனக்கு எதுவும் புரியல, சுப்பம்மா. நீ சொன்னது எல்லாம் உண்மையாக இருந்தால், உன்னை மிருதுளா என்ன காரணத்தால் விட்டெறியவில்லை.’’

‘‘தன்னைத் தானே காப்பாத்திக்கிறதுக்கு! அனாதையான என்னை அவள் வாடகைக்கு எடுத்தாள். என் வாயை மூடிக் கட்டினாள். நான் ஒரு வார்த்தையைக்கூட வெளியே சொல்லிடக் கூடாதே! அவளுக்கு தேவைப்படுற காலம் வரையில் என்னைத் தன்கூட வச்சிருந்தா. அவளுக்கு என்மீது எந்தக் காலத்திலும் இரக்கம் என்பது இருந்ததே இல்லை. என்னை எட்டுக்கால் பூச்சியாக்கியது அன்பு காரணமாவா?’’

‘‘நான் முட்டாள், சுப்பம்மா.’’

‘‘அடி முட்டாள்! உன் நேரம் நெருங்கிடுச்சு...’’

‘‘நேரமா?’’

‘‘ஆமா... மரண நேரம்... அவளுக்கு உன் ரத்தம் வேணும்.’’

‘‘எனக்கு சாகுற அளவுக்கு வயசு ஆகலையே, சுப்பம்மா!’’

‘‘நீ ஏற்கெனவே இறந்தவன்தானே?’’

திடீரென்று யாரோ நடந்து நெருங்கி வருவதைப் போலிருந்தது.

சுப்பம்மா என் காதுப் பகுதியிலிருந்து குதித்தாள். கொசு வலையின் மடிப்பகளுக்குள் அவள் ஒளிந்து கொண்டாள்.

என்னை யாரோ தொட்டார்கள்.

மிருதுளா...

‘‘முகு! நீ தூங்கலையா?’’

‘‘தூங்கினேன்.’’

‘‘இனியும் தூங்கணும். ஓய்வு எடுக்கணும். நேரம் நெருங்கிடுச்சு...’’

நேரம்?

மரணத்திற்கான நேரம்.

ஒளி பரவியது.

நான் கண்களைக் கசக்கியவாறு எழுந்தேன். மிருதுளாவைக் காணோம்.

பார்த்தது சுப்பம்மாவை.

என் மார்பில் அவள் இறந்து கிடந்தாள்.

மல்லார்ந்து.

எட்டுக் கால்களும் மேல் நோக்கித் தூக்கியவாறு இருந்தன.

நான் சுப்பம்மாவைத் தரையில் தள்ளிவிட்டேன்.

எங்கிருந்தோ எறும்புகளின் பெரிய கூட்டம் ஓடி வந்தது. அவளுடைய இறந்த உடலை எறும்புகள் சூழ்ந்தன.

அவளை இழுத்துக்கொண்டு போக எறும்புகள் ஒன்று சேர்ந்து மிகவும் சிரமப்பட்டன.

12

றுதி-

             இறுதியாக என்ன நடந்தது?

நான் அன்னை இல்லத்திலிருந்து எப்படித் தப்பித்தேன்? என்று?

நான் ஒரு புதிய கடற்கரையில் இருக்கிறேன். இங்கு சவுக்கு மரங்கள் இல்லை. வளர்ந்து நிற்பவை அடர்த்தியான கள்ளிச் செடிகளின் வரிசைதான். கடலின் நிறம் சிவப்பு. அலைகளின் சத்தம் அழுகை. இரவு வந்துவிட்டது. எனக்கு முன்னால் மெதுவாக நகர்ந்து கொண்டிருப்பது எட்டுக்கால் பூச்சி அல்ல, ஒரு பெரிய நண்டு. நண்டின் கால்களுக்கு நடுவில் இன்னொரு உயிர் நொறுங்குகிறது. துண்டாகுகிறது. தூரத்தில் தெரிகிற வெளிச்சங்கள் மீனவர்களின் குடிசைகளா, சுடுகாட்டு பூமியில் பற்றி எரியும் பிணங்களா?

என்ன கிழமை?

வெள்ளி.

கடைசி வெள்ளிக்கிழமை. அன்னை இல்லத்தின் கடைசி இரவு.

கள்ளிச் செடிகள் இல்லை. நண்டு இல்லை. பற்றி எரியும் பிணங்கள் இல்லை. இருந்தவை என்னுடைய ஓவியங்கள். லின்டீட் எண்ணெயின் நாற்றம்... பிறகு அறையின் மூலையில் எறும்புப் பட்டாளம் கொண்டு போய் போட்ட சுப்பம்மாவின் பிணம்.

நான் கண்விழித்தது மந்திர உச்சரிப்புகள் கேட்டு அல்ல. அன்னை இல்லத்தின் மேற்கூரை ஓடுகளிலும் சுவர்களிலும் கனமான மழை செண்டை கொட்டுவதைப் பார்த்துத்தான். நான் கண்களைத் திறந்தபோது, புலர்காலைப் பொழுதாக இருக்கலாம். உச்சி வெயில் நேரமாக இருக்கலாம். மாலையாக இருக்கலாம்.

சுப்பம்மாவின் பிணத்தை நான் பார்த்தேன்.

முட்டையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மலர்ச்சி அவளிடம் இல்லை. அவள் சுருங்கிப் போயிருந்தாள். எறும்புகள் அவளுடைய உடம்பிலிருந்த குளிர்ந்துபோன நீரை மகிழ்ச்சியுடன் குடித்துக் கொண்டிருக்கலாம். நான் அருகில் சென்றேன். குனிந்து பார்த்தேன். இறந்த காது, அசையாத உரோமம், அசையாத மச்சங்கள், மரண பயத்துடன் மேலே பார்த்தபோது, ஒடுங்கிப் போன எட்டுக்கால்கள்!

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் ஏதோ கிராமப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை பைத்தியம் பிடிக்க வைத்த அழகி சுப்பம்மா... அழகி சுப்பம்மா...

என் மனைவியின் இளமைக்குள் குஷ்டமுள்ள தன் உடலைச் செலுத்திய தடியன் குழந்தைவேலுவின் தாய்.

சுப்பம்மாவை குழி தோண்டிப் புதைக்க வேண்டும்போல் எனக்கு இருந்தது.

சொல்லப்போனால்- என் கண்களைத் திறந்தவளாயிற்றே அவள்!

அவளுக்காக இனி நான் ஒன்றே ஒன்று மட்டும்தான் செய்ய முடியும். எறும்புகள் அவளுடைய உடலைக் கடித்துத் தின்பதற்கு முன்பே, முற்றத்தில் ஒரு குழி தோண்டி அவளை அடக்கம் செய்ய வேண்டும். உலகத்தில் முன்பு எந்தச் சமயத்திலும் யாரும் ஒரு எட்டுக்கால் பூச்சியை அடக்கம் செய்ததில்லை. ஆனால், இப்படியொரு எட்டுக்கால் பூச்சி இதற்கு முன்பு உலகத்தில் இருந்தது இல்லையே!

சுப்பம்மாவின் எட்டுக்கால் பூச்சியைப் பற்றி நினைத்தபோது எனக்கு ஒரு ஆவல் தோன்றியது. அவளை ஒரு பட்டுப் புடவையில் சுற்றி குழிக்குள் அடக்கம் செய்ய வேண்டும் என்று நான் நினைத்தேன். பட்டுப் புடவைகள் அவளுடைய பலவீனமான ஒரு விஷயமாக இருந்தனவே! ஒரு முழுப் புடவை இன்று அவளுக்குத் தேவையே இல்லை. ஒரு பட்டுத் துணி போதும்.


நான் சுப்பம்மாவை கையால் எடுத்தபோது, எறும்புகள் நான்கு திசைகளிலும் ஓடின. நான் நடந்தேன்.

தளம்... படிகள்... யோனி பூஜை நடந்த ரகசிய அறை... கூடம்... மிருதுளாவின் படுக்கையறை... சுப்பம்மா என் பாக்கெட்டிற்குள் இருந்தாள்.

படுக்கையறையில் மிருதுளா இருந்தாள். நான்அவளுடைய வார்ட்ரோபைத் திறந்தேன். அவளின் விலை உயர்ந்த பட்டுப் புடவைகளை வெளியே எடுத்தேன். அவற்றில் என் கண்களுக்குப் பிடித்தமான ஒரு புடவையை நான் தேர்ந்தெடுத்தேன். வயலட்டும், கறுப்பும், பொன் நிறமும் கலந்த ஒரு புடவை. அது முழுவதும் எனக்குத் தேவையில்லையே! சுப்பம்மாவிற்கும் தேவையில்லையே! அதன் ஒரு துண்டு போதும் - சிறிய ஒரு துண்டு.

இப்படித் தோன்றியபோதுதான் என் கையில் கத்தி இருக்கும் விஷயம் என் ஞாபகத்திற்கு வந்தது.

கத்தி.

தந்தமும் கலைமான் கொம்பும் கொண்டு செய்யப்பட்ட கைப்பிடி கத்தியின் நீளம் ஒன்பது அங்குலம்.

நான் அந்தக் கத்தியை விரித்தேன். புடவையிலிருந்து ஒரு துண்டு, ஒன்பது அங்குல நீளம். கத்தியால் நான் அதைக் கிழித்து எடுத்தேன்.

அப்போது யோனி பூஜையைப் பற்றி நான் நினைத்தேன்.

விசாலமான அறை. தரையில் பீடங்கள், ஊதுபத்திகள். வலது பக்கத்திலிருந்த சுவரில் கத்திகள், வாள்கள்...

நிர்வாணமான மிருதுளா.

அவள் ஒரு கத்தியை என் ஆடைகளில் தேய்க்கிறாள் நான் நிர்வாணமாகிறேன்.

அந்த இரவில் நான் ஒரு கத்தியை அந்த அறையிலிருந்து திருடினேனா?

இன்னொரு இரவில், ஒரு கனவு நடையில், நான் அங்கு சென்றேனா?- ஒரு கருவியை எடுக்க!

கலைமான் கொம்பாலான கைப்பிடியைக் கொண்ட இந்தக் கத்தி பழைய மன்னருக்கு அவருடைய படுக்கையறைத் தோழி பாக்கு வெட்டிக் கொடுத்த கத்தியாக இருக்குமோ?

நான் கத்தியை மடக்கினேன்.

பாக்கெட்டிற்குள்ளிருந்து நான் சுப்பம்மாவை வெளியே எடுத்தேன்.

பாவம்.

முன்பு என்னை ‘வா’ என்று அதட்டியவள்.

வெட்டி எடுத்த புடவைத் துண்டில் நான் அவளைச் சுற்றினேன். பட்டால் மூடப்பட்ட சுப்பம்மாவை நான் என் உள்ளங்கையில் வைத்தேன். மடக்கிய கத்தியை பாக்கெட்டிற்குள் போட்டேன்.

ஒரு கரு வண்டைப்போல நான் நேராகச் சென்றது கார் ஷெட்டுக்குத்தான்.

இப்போது கூரையே இல்லாத கார்ஷெட்.

எட்டாம் எண்.

பிறப்பு உறுப்பு.

முற்பிறவி.

அங்கு கார் இல்லை.

நான் முழங்கால் போட்டு உட்கார்ந்தேன். பாக்கெட்டிற்குள்ளிருந்து கத்தியை எடுத்து, தரையைத் தோண்டி, குழிக்குள் பட்டுத் துணியால் மூடப்பட்ட சுப்பம்மாவைப் போட்டேன். பிறகு குழியை மூடினேன்.

தாயைக் கொல்லும் ராசி.

சுப்பம்மாவை அடக்கம் செய்யக்கூடிய ராசி.

வேண்டுமென்றால் இப்போது நான் அன்னை இல்லத்திலிருந்து எங்கு வேண்டுமானாலும் போகலாம். அன்னை இல்லம் சிறையாக இருந்தாலும், நான் அங்கிருந்து தப்பித்துச் செல்லலாம்.

ஆனால், தேடுதல் ஆரம்பித்திருக்கும் வேளையில் நான் எப்படி இங்கிருந்து தப்பித்து ஓடுவேன்?

நான் யார்?

நர்ஸ் மரியாம்மாவின் கதையில் பிறந்தவனா?

ஸ்ரீதரபிரபுவா?

மிருதுளாவின் மகன் அல்ஃபஹாதா? மிருதுளாவிற்கு ஒரு மகனே இல்லை என்று சுப்பம்மா என்ற எட்டுக்கால் பூச்சி சொன்னாள்.

நான் அல்ஃபஹாத்தாக இருக்கும்பட்சம் எட்டாம் எண் கார் ஷெட்டில் பிறப்பு உறுப்பு நசுங்கிய சம்பவத்தை நான் ஏன் நினைக்க வேண்டும்?

எல்லாம் தோணல்களா?

தோணல்கள் என்றால்... தோன்றுவதற்கு ஒரு மனமோ அறிவோ வேண்டாமா? அது எப்போது வந்தது? எந்த இரத்தக் குழாய் வழியாக?

நான் மேல்மாடிக்குச் சென்றேன்.

ஈட்டித் தடியையும் யானைக் கொம்பையும் கலை நயத்துடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட மேஜை, மேஜைக்கால்கள்... இணை சேரும் பாம்புகள்... அதோ சுவர் ஓவியம்... தேவ பெண்கள்... பெரிய மார்பகங்கள்...

நான் தேவ பெண்கள் இருந்த ஓவியத்திற்கு முன்னால் நின்றேன்.

தேவ பெண்கள்.

தேவதாசிகள்.

சுப்பம்மா.

பட்டுத் துணியால் சுற்றி குழிக்குள் போட்டு மூடப்பட்ட சுப்பம்மா என்ற எட்டுக்கால் பூச்சி.

நான் எவ்வளவு நேரம் அங்கு நின்றேன்?

திடீரென்று ஒரு அழைப்பு வந்தது.

‘‘முகு!’’

நான் திரும்பிப் பார்த்தேன். மிருதுளா... கறுப்பு நிற பட்டுப் புடவை அணிந்த மிருதுளா.

நான் எதுவும் சொல்லவில்லை.

‘‘முகு... நீ எதற்குக் கத்தியை விரிச்சு பிடிச்சிருக்கே?’’

அப்போதுதான் நான் கவனித்தேன் - கையில் விரிக்கப்பட்ட கத்தி இருப்பதை. நான் அதை மடக்கி பாக்கெட்டிற்குள் போட்டேன்.

‘‘முகு! நேரம் எவ்வளவு ஆச்சுன்னு தெரியுமா?’’

‘‘தெரியாது.’’

‘‘இரவு... ரொம்ப நேரமாச்சு...’’ - மிருதுளா சிரித்தாள்.

‘‘எனக்கு  மாதம், வாரம், கிழமை எதுவும் தெரியல. இரவு ஆனால், என்ன, பகல் ஆனா என்ன?’’

‘‘முகு... நேரமாயிடுச்சு.’’

‘‘எதுக்கு?’’

‘‘உண்மையை அடைவதற்கான நேரம்’’ - மிருதுளா முணுமுணுத்தாள்.

மரணத்திற்கான நேரம்?

மிருதுளா என் அருகில் வந்தாள். என்னைக் கட்டிப் பிடித்தாள்.

‘‘முகு! எனக்கு பயமா இருக்கு.’’

‘‘எதுக்கு?’’

‘‘நீ விரிச்சுப் பிடிச்ச கத்தியோட நின்னப்போ...’’

‘‘மிருதுளா, உன்னை பயமுறுத்துறதுக்கு நான் எப்பவும் முயற்சித்தது இல்ல. இந்தக் கத்தி என் கையில எப்படி வந்ததுன்னுகூட எனக்குத் தெரியாது. உன் பயத்துக்குக் காரணம் இந்தக் கத்திதான்னா, இதோ... இது உன் கையிலேயே இருக்கட்டும்.’’

மிருதுளா என் கத்தியை வாங்கினாள்.

‘‘முகு... இன்னைக்கு வெள்ளிக்கிழமை.’’

‘‘அதுனால என்ன?’’

‘‘இது உண்மையைத் தெரிஞ்சிக்க வேண்டிய நாள்.’’

‘‘அதை நானும் நம்பணுமா?’’

‘‘என்ன முகு, அப்படிச் சொல்றே?’’

‘‘சும்மாதான்... சரி... அது இருக்கட்டும்... உன் சினேகிதிகள் எங்கே? தெல்மாவும் வித்யாவும் அம்பிகாவும்...?’’

தெரிந்துகொண்டே நான் பத்மாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை.

‘‘இன்னைக்கு இரவு அவர்களுக்கானது இல்ல...’’ - மிருதுளா சொன்னாள்.

‘‘நல்லது... இது நம்ம இரவா இருக்கட்டும்...’’

‘‘முகு, நீ தேவையில்லாததையெல்லாம் பேசுற...’’ - மிருதுளா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

‘‘உன்கிட்ட எனக்கு ஆசை தோணுதுன்னு நான் சொல்லல...’’

‘‘வாக்குவாதம் வேண்டாம் முகு! வா... நாம போகலாம்.’’

நாங்கள் நடந்தோம்.

மிருதுளா முன்னால். நான் பின்னால்.

பித்தளைக் குமிழ்களும் கோவில் கணித முறைப்படி அமைந்த சித்திர வேலைப்பாடுகளும் கொண்ட கதவுக்கு முன்னால் நாங்கள் போய் நின்றோம். மிருதுளா கதவைத் திறந்தாள்.

பழைய காட்சி.

எரிந்து கொண்டிருக்கும் கறுப்பு மெழுகுவர்த்திகள் எதிரிலிருந்த சுவரில் சிவப்பு நிறத்தில் வெல்வெட்டாலான சதுரம்.

ஊதுபத்திகளிலிருந்து மேல்நோக்கி எழும் மெல்லிய புகை வலது பக்கமிருந்த சுவரில் அரிவாள்கள், வாள்கள், கத்திகள், சூலங்கள். மேலே மந்திர எழுத்துகளும் அடையாளங்களும் வரையப்பட்ட படம். இடது பக்கம் சுவருக்குப் பதிலாக சித்திர வேலைப்பாடுகள் கொண்ட தேக்குப் பலகைகள்.


இன்று இரவு மிருதுளா என்னைக் கண்களை மூடும்படிக் கூறவில்லை. எந்தவொரு வெட்கமும் இல்லாமல் பாம்பு படம் எடுப்பதைப் போல, அவள் எனக்கு முன்னால் நின்று கொண்டு ஆடைகளைக் களைந்தாள்.

ஒரு பீடத்தில் மிருதுளா உட்கார முயன்றபோது, நான் தடுத்தேன்: ‘‘உட்காரக் கூடாது.’’

அவள் அதிர்ச்சியடைந்து நின்றாள்.

‘‘முகு!’’

‘‘தேவதையைப் போல் உட்கார உனக்கு அதிகாரம் இல்லை. உன் தொடைகளில் குஷ்டத்தின் அடையாளங்கள் இருக்கு.’’

‘‘நீ என்ன சொல்ற?’’

‘‘மிருதுளா, உனக்கு நான் யார்னு தெரியல- இன்னும்...’’

‘‘நீ ஒரு ஓவியன்.’’

‘‘இல்ல... உன் கணவன்... ஸ்ரீதரபிரபு.’’

‘‘இல்ல... இல்ல... இல்ல... நீ நான் தெருவுல இருந்து கண்டெடுத்துக் கொண்டு வந்த ஒரு ஓவியன்...’’

‘‘சுருக்கமாகச் சொன்னா - உன் பிச்சைகளை வாங்குற ஒரு பிச்சைக்காரன்.’’

‘‘அப்படின்னு நான் சொல்லல. நீ எனக்குத் தேவை.’’

‘‘எதுக்கு?’’

‘‘இந்த இரவு அதைத் தெரிவிக்கும்.’’ - மிருதுளாவின் முகம் இருண்ட வண்ணக் குழம்பானது.

‘‘நான் உன் கணவன் இல்லைன்னா, பிறகு யார்? மகனா? நீ எனக்கு எழுதித் தந்ததெல்லாம் மறந்து போச்சா? உன் அல்ஃபஹாத் யார்? நான் அல்ஃபஹாத்தும் ஸ்ரீயும் ஒன்றாகச் சேர்ந்த ஒரு வினோதப் பிறவியா?’’

நான் மூன்று நான்கு அடிகள் முன்னோக்கி வைத்தேனோ? என் முகம் மிகவும் பயங்கரமாக இருந்ததோ? மிருதுளா திடீரென்று வலது பக்கமிருந்த சுவரை நோக்கி ஓடினாள். ஒரு அரிவாளை சுவரிலிருந்து எடுத்தாள்.

‘‘நான் உனக்கு உறுதியா எதையும் எழுதித் தந்தது இல்ல... எனக்கு எந்தச் சமயத்திலும் ஒரு மகன் இருந்தது இல்ல. நீ என்னோட பலி மிருகம்... பலி மிருகம்!’’ - மிருதுளா கத்தினாள்.

‘‘உன் கணவன் யார்?’’

‘‘ஸ்ரீதரபிரபு... இந்த நூற்றாண்டு பார்த்த மிகப் பெரிய கலைஞன்.’’

‘‘அதாவது மறுபிறவி எடுத்த நான்... நான்தான்’’ - நான் உரத்த குரலில் சொன்னேன்.

மிருதுளாவின் கேலி நிறைந்த சிரிப்பு அந்த அறையின் சுவர்களையும் அறையிலிருந்த பூஜை பொருட்களையும் அதிரச் செய்தன.

அவள் இடது பக்கமிருந்த தேக்குப் பலகைகளை நோக்கி ஓடினாள்.

அப்போது கறுப்பு நிற மெழுகுவர்த்திகள் அணைந்தன.

நான் வெளிச்சம் கொண்ட ஒரு சதுரத்தைப் பார்த்தேன்.

அந்தப் பலகைகளுக்கு அப்பால், பூஜையறையின் இடது பக்கத்தில் ஒரு அறை இருந்தது. பத்து திரிகள் இட்ட குத்து விளக்கின் பிரகாசம் இருந்த அறை.

தேக்குப் பலகைகள் ஒரு இழுக்கும் கதவாக இருந்தனவோ?

மிருதுளா குத்துவிளக்கிற்கு முன்னால் நின்றாள்.

நான் அருகில் சென்றேன்.

அங்கு பெரிய ஒரு குடம் இருந்தது. அதன் சிவந்த மார்பிலிருந்து அடர்த்தியான வெள்ளை மேகங்களைப் போல புகை புறப்பட்டு எங்களை மூடியது.

சுய உணர்வை மங்கச் செய்யும் மணம்... அத்துடன் சுய உணர்வை இழக்கச் செய்யும் நாற்றம்.

‘‘நீ என் கணவரைப் பார்க்கணுமா?’’ - மிருதுளாவின் குரல் எங்கிருந்தோ கேட்டது.

‘‘நான் என்னைப் பார்க்கணும். என் போன பிறவி கதையை நான் தெரிஞ்சிக்கணும்.’’

அடுத்த நொடியில் உரத்துக் கேட்ட சிரிப்பு மிருதுளாவின் தொண்டைக்குள்ளிருந்து வந்ததுதானா?

மனிதர்கள் அப்படிச் சிரிக்க மாட்டார்கள்.

பிசாசுகள்!

சொல்ல முடியாது... நான் பிசாசுகளின் சிரிப்பைக் கேட்டது இல்லையே! - அவற்றின் படங்களை வரைந்திருந்தாலும்!

எவ்வளவு நேரம் அவள் அப்படிச் சிரித்தாள்!

எழுந்து உயர்ந்த அந்தப் புகை குறைந்து, நின்றது. யாரும் ஏறி நடக்கக்கூடிய ஒரு வெள்ளிக் கம்பளமாக அது மாறியது.

இப்போது கண்ட காட்சி என் இதய ஓட்டத்தையே நிறுத்தக் கூடியதாக இருந்தது.

ஒரு சவப்பெட்டி.

அதில் ஒரு பிணம்.

பிணமல்ல... முண்டம்...

அப்படிச் சொல்ல முடியாது. காரணம் - அதற்கு முகம் இருந்தது. சுற்றிலும் அழுகிய மாமிசம்.

என் முகம்.

குழந்தைவேலு ஈயத்தாலான என்னுடைய வாக்கிங் ஸ்டிக்கால் அடித்து சிதைத்த என் தலை.

ஆனால், என் முகம் சிதைந்திருக்கவில்லை. சிதைந்தது தலையின் பின்பக்கமாக இருக்க வேண்டும். என் முகம் அதே நிலையில் இருந்தது. அதன் நிறம், செல்லரித்துத் தூள் தூளான என் கைக்குட்டையின் நிறத்தில் இருந்தது.

‘‘மிருதுளா! இதோ நான்! உன் ஸ்ரீ’’ - நான் கத்தினேன். அந்த நிமிடத்தில்தான் மிருதுளா என்னைக் குத்தினாள். என் வலது தோளில்.

‘‘மிருதுளா, இனியும் சந்தேகம் இருக்கா? இதோ படுத்திருக்கிறது நான்தானே?’’ - வேதனை தெரியாமல் நான் கேட்டேன்.

‘‘இல்ல... அது என் ஸ்ரீ’’

‘‘நீ என்னை ஏன் குத்தினே?’’

‘‘நீ என்னோட பலி மிருகம்...’’

‘‘எதுக்கு?’’

‘‘உன் ரத்தத்தை இந்தப் பெட்டியில் இந்த முகத்தில் தெளித்தால் என் ஸ்ரீ திரும்பவும் உயிரோடு வருவார்.’’

‘‘மிருதுளா? இந்த ஆர்ப்பாட்டங்கள் தேவையா? நான் உனக்கு முன்னால் இன்னொரு பிறவி எடுத்து நின்று கொண்டிருக்கிறேனே!’’

‘‘உன்னை எனக்குத் தெரியாது.’’

‘‘எனக்கும் என்னைத் தெரியாது. ஆனால் ஒண்ணு எனக்குத் தெரியும். ஒண்ணு... நான் உன் ஸ்ரீ. இல்லாட்டி நீ பெற்ற... இல்லாட்டி பெற்றெடுக்க ஆசைப்பட்ட அல்ஃபஹாத்.’’

‘‘நீ நான் கண்டுபிடிச்ச, நான் சாப்பாடு போட்டு வளர்த்த பலி மிருகம்... நீ பெண் வாசனை தெரியாதவன். உன் இரத்தம் இந்தச் சவப் பெட்டியில் விழுறப்போ, என் ஸ்ரீ கண்களைத் திறப்பார்... பேசுவார்...’’

‘‘உனக்கு பெரிய தப்பு நடந்திருக்கு’’ - நான் சொன்னேன்.

அவள் திகைத்து நின்றாள்.

‘‘என் உடல் சுத்தமானது இல்ல... நம்முடைய போன பிறவி உடலுறவின் தொடர்ச்சியாக, கடந்துபோன ஏதோ இரவில் நான் முதல் தடவையாக அசுத்தமானவனா ஆயிட்டேன்.’’

‘‘பொறுக்கி!’’ - மிருதுளாவின் உரத்த அலறலோடு சேர்ந்து எங்கோ இடி முழங்கியது.

பிறகு என்ன நடந்தது?

எதுவும் தெளிவாக இல்லை.

நான் அவளுடைய அரிவாளைப் பிடித்து வாங்கினேனா?

நான் என்னுடைய இறந்த உடலின் தொடை எலும்பை எடுத்து அவளை அடித்தேனா?

அவள் தரையில் விழுந்தாளோ?

அப்போது சவப் பெட்டியின் ஃபார்மலின் திரவமும் உப்புக் கட்டிகளும் நாலா பக்கங்களிலும் சிதறினவோ?

நான் மிருதுளா மீது பாய்ந்தேனோ?

குழந்தைவேலுவிற்கு அடிபணிந்த அவளை நான் பலாத்காரம் செய்தேனோ?

அல்ஃபஹாத்தான நான் அவளுடைய மார்பகங்களில் பால் குடித்தேனோ?

அங்கு வழிந்து கொண்டிருந்த குருதி யாருடையது?

தாயைக் கொல்லும் ராசியைக் கொண்ட நான், அல்ஃபஹாத் ஆன நான், என் தாயை, மிருதுளாவைக் கொன்றுவிட்டேனோ?


தெருவில் அலைந்த, பெண் வாசனை தெரியாத என்னுடைய இரத்தத்தை பலிநீராகத் தெளித்து அந்தச் சவப்பெட்டியிலிருந்த பிணத்திற்கு உயிரூட்ட மிருதுளா எதற்கு விரும்பினாள்?

மன்னிப்பு கேட்கவா?

‘‘நான் தெரியாம உங்களை பலமில்லாத ஆளாக்கிட்டேன். ஒரு கெட்ட நேரத்துல... நான் குஷ்ட ரோகியான குழந்தைவேலுக்கு அடிபணிஞ்சிட்டேன்... மன்னிச்சிடுங்க... மன்னிச்சிடுங்க...’’ என்று கூறுவதற்கா?

இதோ புதிய கடற்கரை.

கிளைகள் உள்ள கள்ளிச் செடிகள்.

நண்டின் கத்திரிக் கால்கள்.

சிதறிய நினைவுகள்.

நினைவுகளின் சிறு துண்டுகள்.

பலவும் மாய்கின்றன, மறைகின்றன.

சிதறிய, இந்தக் கடற்கரையின் மணல்களுடன் கலந்துவிட்ட என் உணர்வுகளின் தூசிகளை நான் பெருக்கி எடுக்கலாம்.

நான் அவற்றை ஒன்று சேர்த்து ஒரு வடிவம் உண்டாக்க முயற்சிக்கலாம்.

நான் முகுந்தன்.

மிருதுளா பிரபு யார்?

தாய், மனைவி, காதலி, காமரூபிணி, கெட்ட பெண் மந்திரவாதி?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.