Logo

பிதாமகன்

Category: புதினம்
Published Date
Written by sura
Hits: 5964
pithaamagan

1

பொந்தியோஸ் பீலாத்தோஸ் ஒரு கடிதம் எழுதுகிறார்!

பிரபஞ்சத்தின் தந்தையான ஜூபிடர் கடவுளின் அருளாலும், வெற்றி வீரரும் மக்களின் தலைவருமான ரோம சக்கரவர்த்தி டைபீரியஸ் க்ளாடியஸ் நீரோவின் கருணையாலும், மிகப்பெரிய ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியும் யூதர்கள் வசிக்கும் முழு பகுதிக்கும் கவர்னருமான பொந்தியோஸ் பீலாத்தோஸின் கையொப்பம். அதிகார முத்திரை ஆகியவற்றுடன்... டேய் அன்டோனியஸ், மேலே எழுதப்பட்டிருக்கும் வினோதமான பெருமைகளைப் படித்தும், என்னுடைய முத்திரையின் வண்ண ஜொலிப்பைப் பார்த்தும் நீ திகைத்து நின்றுவிட வேண்டாம். அப்படி திகைத்து நிற்கக் கூடிய மனிதன் நீ இல்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

மேலே சொல்லப்பட்டிருப்பது போலத்தான் இப்போது என்னுடைய செயல்கள் ஒவ்வொன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கடைசியாக நீ எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்று நினைக்கும்போது புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். சக்கரவர்த்தியும், வரலாறும், ஜூபிடர் கடவுளும் சேர்ந்து (ஜூபிடர் கடவுளின் பெயரை உச்சரிக்க நானும் படித்துக் கொண்டேனா) என்னை இங்குவரை கொண்டுவந்து சேர்த்து விட்டார்கள் என்று இப்போதைக்குச் சொன்னால் போதும் அல்லவா?

டேய், இரண்டு சக்கரவர்த்திகளுக்காக கடந்த கால் நூற்றாண்டு காலமாக நான் உலகம் முழுவதையும் சுற்றிக் கொண்டிருந்தபோது அவ்வப்போது நீ எங்கிருக்கிறாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று நான் நினைத்துப் பார்ப்பேன். உன்னைத் தேடியும் பார்த்திருக்கிறேன். ஆனால், ரோம சாம்ராஜ்யத்தின் முழு சக்தியையும் பயன்படுத்தித் தேடியும், உன்னைப் பற்றி எந்தத் தகவலும் எனக்குத் தெரியாமலே போய்விட்டது. திடீரென்று ஜூபிடர் கடவுள் (ஹா! ஹா! கடவுளின் பெயர் மீண்டும் வந்து விட்டது) மின்னலைத் தோன்றச் செய்வதைப்போல உன்னுடைய கடிதம் எனக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அதைப் பார்த்து அன்டோனியஸ், நான் எவ்வளவு மகிழ்ச்சியடைந்தேன் தெரியுமா? ஒரு வகையான தனிமை உணர்வும், கவலைகளும் மனதில் தோன்ற ஆரம்பித்து விட்டிருந்ததா. வாழ்க்கையே இருளத் தொடங்கி விட்டதோ என்று கூட நினைக்க ஆரம்பித்து விட்டேன். அந்த நேரத்தில்தான்& என்னுடைய நல்ல நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்& என்னுடைய உயிர் நண்பனான அன்டோனியஸ். நீ என்னைப் பற்றி நினைத்துப் பார்க்கிறாய். அதற்காக நான் நன்றி கூறுகிறேன். நண்பனே, நான் முன்பெல்லாம் இந்த மாதிரி உணர்ச்சி வசப்பட்டு நீ என்னைப் பார்த்திருக்கவே மாட்டாய். என்னைப் பற்றியும் பல விஷயங்களை உன்னிடம் நான் கூற வேண்டியிருக்கிறது.

இன்று ஸாபத். அதனால் நான் சொல்வதைக் கேட்டு எழுதும் யூத இளம்பெண் இன்று வேலைக்கு வரவில்லை. சொல்வதைக் கேட்டு எழுதும் பெண் என்று கூறியவுடன் உனக்குப் புன்சிரிப்பு தோன்றுகிறதா என்ன? இல்லையடா... நீ நினைப்பது போல் அப்படியொன்றும் இல்லை. அவள் உண்மையிலேயே அழகான ஒரு இளம் பெண்தான். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அவளுக்கு லத்தீன், க்ரீக், ஹீப்ரு ஆகிய மொழிகள் நன்றாகவே தெரியும். ஒரு மகளைப் போல அவள் மீது எனக்கு மிகவும் பிரியம் உண்டு. அப்படியும் சில உறவுகள் இந்த வாழ்க்கையில் நமக்குத் தேவைப்படத்தானடா செய்கின்றன? அவள் பெயர் ரூத். பெயர் மிகவும் நன்றாக இருக்கிறது. இல்லையா? நம்முடைய ரோமப் பெண்களுக்கு ஏன் இந்த மாதிரி கிளுகிளுப்பு உண்டாக்குவது மாதிரியான பெயர்கள் இல்லாமல் இருக்கின்றன? அவள் என்னுடைய மனைவி ஜூலியாவின் ஒரு தோழியின் மகள். (அதனால்தான் இந்த அளவுக்கு மரியாதையாக நடந்து கொள்கிறேன் என்று மனதில் நீ நினைக்க வேண்டாம்) அவள் இங்கு இல்லாததால் சில விஷயங்களை என்னுடைய சொந்த கையால் சிறிதும் மறைக்காமல் நான் எழுதட்டுமா? இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால் உனக்குக் கடிதம் எழுதும் போதாவது என்னுடைய கையால் நான் எழுதக் கூடாதா? கையெழுத்து நன்றாக இல்லாமல் இருந்ததற்காக நீயும் நானும் பள்ளிக் கூடத்தில் வாங்காத அடிகளா?

டேய், நாம் இருவரும் கடைசியாகப் பிரிந்தது உன் ஞாபகப் படத்தில் இருக்கிறதா? நாம் பிரிந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. கொளீஸ்யத்திற்கு தெற்கே இருந்த தெருவில் கனவுலகம் போன்றதொரு விலைமாதுகளின் இல்லத்தின் கற்களால் ஆன படிகளை விட்டு இறங்கி தூசியையும் இரத்தத்தையும் மிதித்தவாறு இருட்டைக் கிழித்துக்கொண்டு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க நாம் இருவரும் நடந்து சென்றோம். அன்று நாம் இருவரும் என்னென்ன மதுவையெல்லாம் அருந்தினோம். எப்படிப்பட்ட காமக் களியாட்டங்களில் எல்லாம் ஈடுபட்டோம். துருக்கி நாட்டைச் சேர்ந்த அழகிய இளம் பெண்களும் மாஸிடோனியன் பையன்களும் நமக்கு அலுத்துப் போன போது நீ அலிகள் வேண்டுமென்று சொன்னாய். உடனே அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த அலிகளைக் கொண்டு வந்தார்கள். டேய், நாம் என்னவெல்லாம் செய்தோம்? எகிப்து நாட்டைச் சேர்ந்த அலிகள் மீது இருக்கும் துர்நாற்றத்தைத் தாங்க முடியவில்லை. அரேபியாவைச் சேர்ந்த அலிகள்தான் வேண்டும் என்று கூறி நாம் பாத்திரங்களை வீசி எறிந்தோம். மதுக் குப்பிகளை வீசியெறிந்து உடைத்தோம். மேஜைகளைக் கீழே தள்ளி விட்டோம். விலை மாதுகள் இல்லத்தின் சொந்தக்காரிக்கு நேராக வாளை உருவினோம். நீ என்னைச் சுட்டிக்காட்டி அவளுடன் சேர்ந்து கத்தியதை இப்போதும் நான் மறக்கவில்லை.

இங்கு நின்று கொண்டிருப்பது யார்? ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு துணை படைத்தலைவன்& எச்சரிக்கை. வாசனைத் திரவியங்கள் பூசிய அரேபியர்களைத் தவிர, வேறு யாருமே எங்களுக்கு வேண்டாம். அவர்களை எங்கே ஒளித்து வைத்திருக்கிறீர்கள்? எந்த செனட்டரை திருப்திபடுத்துவதற்காக அவர்களை நீங்கள் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருக்கிறீர்கள்?

உனக்குப் பின்னால் நின்றவாறு நான் வாளைச் சுழற்றினேன். அப்போது வாள் என் கையிலிருந்து நழுவிக் கீழே விழுந்தது. கார்ஸிக்காவில் அவள் பிறந்து வளர்ந்த மலையிடுக்குகளின் கடினத் தன்மையை ரோமுக்கு வருவதற்கு முன்பே தன்னிடம் வைத்திருந்த அந்த விலைமாதுகள் இல்லத்தின் இளம் சொந்தக்காரி சீனப் புகையிலையால் நிறம் மங்கிப் போயிருந்த பற்கள் அனைத்தையும் வெளியே காட்டி அப்போது சிரித்தாள். கீழே விழுந்த வாளை எடுத்து என்னுடைய இடுப்பில் இருந்த உறைக்குள் போட்டேன். பிறகு, உன் நெஞ்சிலும் என் நெஞ்சிலும் ஒவ்வொரு நகம் நீண்ட சுண்டு விரலை வைத்தவாறு அவள் சொன்னாள். (டேய், அந்த நிமிடத்தின் சூடு எந்த அளவுக்கு இருந்தது) பரட்டை நாய்களே, மதிப்பிற்குரிய ரோம சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியே நான் கொடுக்கும் பெண்களில் திருப்திபட்டுக் கொள்கிறார். இதுவரை என்மீது ஒரு குறை கூட அவர் சொன்னதில்லை.


அதற்குப் பிறகு தானே ஒரு துணை படைத்தலைவனும், அவனுடைய தோழனும் காசை வைத்துவிட்டு வெளியே போங்களடா, பிச்சைக்கார நாய்களே!' அதோடு நிற்காமல் அவள் தன்னுடைய கறுப்புவண்ண ஆடையை மேலே தூக்கித் தன்னுடைய வெளிறிப் போய் காணப்பட்ட தடிமனான தொடைகளை நம்மிடம் காட்டியவாறு அவள் சத்தம் போட்டாள். அவள் சத்தமாக கைகளைத் தட்டியது இப்போதும் பசுமையாக என் ஞாபகத்தில் இருக்கிறது. அதற்குப் பிறகு எனக்கு ஞாபகத்தில் இருப்பது படிகளில் தலைகீழாக விழுந்து கிடந்த நம் இருவரின் மீதும் காரித் துப்பிய கார்ஸிக்கன் குண்டர்களின் முகங்கள்தாம். நம் இருவரின் உடல்களிலுமிருந்த ஆடைகள் முழுமையாகக் காணாமல் போயிருந்தன. நீ டைபர் நதிக்கரையில் இருக்கும் உன் மாளிகை புத்தக அறையின் ஒரு மாதிரியான வாசனையோடு மூழ்கிக் கிடக்கும் குளிர்ச்சியான படுக்கையை நோக்கி லேசாக ஆடியவாறு நடந்து சென்றிருப்பாய். உடம்பில் துணி எதுவும் இல்லாமல் இருந்ததால் வேறு நீ எங்கும் போயிருக்க வாய்ப்பில்லை. போகும் வழியில் நீ உனக்கு மிகவும் பிடித்தமான உன்னுடைய பழைய காதல் பாட்டுகளைப் பாடியிருக்கலாம். நான் எப்படியோ படைக்களத்தில் இருக்கும் என்னுடைய கூடாரத்திற்கு, காவலாளிகள் யாரும் என்னுடைய நிலையைப் பார்த்திராத வண்ணம் வந்து சேர்ந்தேன்.

காமக் களியாட்டங்கள், அடிகள், மது ஆகியவற்றின் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்காக காலையில் எண்ணெய் போட்டு உடம்பைத் தேய்த்து விட்டுக் கொண்டிருந்தேன். அப்போதுதான் செய்தி கொண்டு வரும் ஆள் அந்தச் செய்தியைக் கொண்டு வந்தான். நேராக நிற்காத தலையுடன் நான் சக்ரவர்த்தியின் உத்தரவைப் படித்தேன். 'இன்றே பிரிட்டனுக்குப் படையைக் கொண்டு செல்ல வேண்டும்.' அன்று ரோமை விட்டு நான் புறப்பட்டதுதான். அன்டோனியஸ், அதற்குப் பிறகு அகஸ்டஸும் டைபரீஸும் என்னைப் பொறுத்தவரை ஞாபகச் சின்னங்களாக மட்டுமே இருந்துவிட்டன. கார்த்தேஜ், கார்த்தோபா, ஸ்மிர்ணா, ஆர்மேனியா, டெமாஸ்கஸ், அலெக்ஸாண்ட்ரியா, கடைசியில் இந்த யூதர்களின் வறண்டு காய்ந்து போய்க் கிடக்கும் நாட்டிற்கு வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. டேய் அன்டோனியஸ், நீ பொறாமைப்படக்கூடாது. எப்படிப்பட்ட வகை வகையான அதரத்தேன்களை நான் பருகியிருக்கிறேன்! எந்த மாதிரியான வித விதமான மது வகைகள் என்னுடைய நரம்புகளில் ஓடிக் கொண்டிருக்கின்றன. எத்தனை ஆயிரம் இரத்தக் களங்களை இத்தனை வருடங்களில் நான் பார்த்திருக்கிறேன்! எப்படிப்பட்ட காற்றுகளையெல்லாம் நான் சுவாசித்திருக்கிறேன்! எப்படிப்பட்ட மலர்களையும் மரங்களையும் நான் பார்த்திருக்கிறேன்! பறவைகளை வளர்த்தேன். நாய்கள் மேல் பிரியம் வைத்தேன். பழங்களைத் தின்றேன்... அன்டோனியஸ், கடந்து வந்த என்னுடைய வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் போது, எனக்கு திருப்தி உண்டாகியிருக்கிறதா என்று யாராவது கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் நான் மவுனமாகத்தான் இருப்பேன். நான் ரோம சாம்ராஜ்யத்திற்காக என்னுடைய சக்ரவர்த்திக்காக வேலை செய்தேன். அந்தச் சமயத்தில் எனக்குக் கிடைத்த சுகங்களை நான் அனுபவித்தேன். அவ்வளவுதான். இதுதான் ஜூபிடர் கடவுள் (டேய், நான் இந்த உண்மையை மறைக்கவில்லை. கடவுளின் பார்வை என்மீது பட ஆரம்பித்துவிட்டது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்) எனக்கு வாழ்க்கையில் தந்த பங்கு. அதன் சரியையும் தவறையும் பற்றி சொல்வதற்கு நான் யார்?

என்னுடைய இந்த ஓட்டங்களுக்கும் வாழ்க்கை உயர்வுகளுக்கும் இடையில் ஒருமுறை விசாரித்தபோது தான் எனக்கே தெரிய வந்தது. நீ உன்னுடைய வீட்டின் கீழ்ப்பகுதியில் இருந்த பாரசீக துணிக்கடையை விற்றுவிட்டு, நீ சேகரித்து வைத்திருந்த நூல்களை மார்க்கஸ் லான்ஜினஸின் பள்ளிக்கூடத்திற்கு தானமாகத் தந்துவிட்டு காணாமலே போய்விட்டாய் என்கிற உண்மையே. உன்னுடைய வீர சாகச மோகக் கதைகளை நினைத்துப் பார்த்தபோது நீ கப்பல் ஏறி இந்தியாவுக்கோ சைனாவுக்கோ போயிருப்பாய் என்றுதான் நான் நினைத்திருந்தேன்.

நான் சொன்ன வார்த்தைகளைக் கொஞ்சம் நீ கேட்டிருந்தால், அன்டோனியஸ், இப்படிப்பட்ட எந்த விஷயங்களுமே நடந்திருக்காது. முன்பே நான் உன்னிடம் பலமுறை கூறியிருக்கிறேனே, வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் ஒரு ஆண் திருமணம் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என்று. ரோம நாட்டில் உள்ள நகரங்களில் பணமும், அழகும் உள்ள, உனக்குப் பொருத்தமான எத்தனைப் பெண்கள் திருமணம் செய்வதற்குத் தயாராக இருப்பார்கள்! அதைப்பற்றி கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல் அந்த சேர்த்து வைக்கப்பட்ட நூல்களுக்கு மத்தியில் ஒரு புழுவைப் போல தனியாக நீ வாழ வேண்டிய அவசியம் என்ன? உன்னுடைய கட்டுக்கடங்காத காமவெறியை ஒரு நல்ல பெண் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி நடந்து வீட்டிற்குள் எரிந்து கொண்டிருக்கும் ஒரு நெருப்புச் சுடரைப் போல பிரகாசமாக இருந்து உன்னை பத்திரமாகப் பார்த்துக் கொண்டிருப்பாள். ஆனால், நீயோ நூபியன் அலிகளின் நகக்கீரல்களுக்கும், ஆர்மேனியன் நாட்டைச் சேர்ந்த அழகான குண்டர்களின் வறண்டுபோன முத்தங்களுக்கும், ரோம விலைமாதுகளின் வெறுக்கத்தக்க காமக்களியாட்டங்களுக்கும் அடிமையாகிவிட்டாய். அதைத்தான் உன்னுடைய தலைவிதி என்கிறேன்.

டேய், உன்னைப் போல நானும் ஒரு திருமணமாகாத இளைஞனாகத்தான் இருந்தேன். ஆனால், கடைசியில் எனக்கு பொருத்தமான ஒரு ரோமநாட்டுக்காரியை நான் கண்டுபிடித்து, அதன் மூலம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தேடிக் கொண்டேன். லான்ஜினஸின் பள்ளிக்கூடத்தில் படித்தவள்தான் ஜூலியா. உன்னைப் போல புத்தகங்களை வாங்கி சேர்த்து வைக்கும் பழக்கம் அவளுக்கும் உண்டு. உன்னைப் போல சிறிதும் தேவையே இல்லாத பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருக்கும் பெண்தான் அவளும். எதற்காகப் பிறவி என்ற ஒன்று இருக்கிறது? எதற்காக உறவுகள் உண்டாக்கப்படுகின்றன? மரணத்திற்குப் பிறகு என்ன இருக்கிறது? உண்மை என்றால் என்ன? உண்மை என்பது ஒன்றே ஒன்றுதானா? இல்லாவிட்டால் பல உண்மைகள் இருக்கின்றனவா, இப்படி பல விதப்பட்ட விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருப்பாள் ஜூலியா. சொல்லப் போனால், இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு நான் இப்போது ஜூலியாவை சுதந்திரமாக இருக்கச் செய்திருக்கிறேன். அவள் என்னையும் அப்படி விட்டிருக்கிறாள். எதுவுமே இல்லையென்றாலும் என்னுடைய குறட்டை ஒலியை இத்தனை காலமும் அவள் பொறுத்துக் கொண்டிருக்கிறாளே! அது ஒன்றே போதுமே! அன்பு என்பதை அறிந்த இப்படிப்பட்ட ரோம நாட்டுப் பெண்கள் எவ்வளவுபேர் இருப்பார்கள்? அதற்காக நான் ஒரு புண்ணிய ஆத்மாவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நீ நினைத்து விடக்கூடாது, அன்டோனியஸ். ஒரு ரோமன் கவர்னருக்கு முடியாது என்று என்னடா இருக்கிறது? என் மனதில் இருக்கும் விருப்பங்களுக்கு ஒரு எல்லை இருக்கிறதா என்ன?


மதுவும் பெண்ணும் உணவும் மென்மையான படுக்கையும் வேகமாக ஓடக் கூடிய குதிரைகளும் நண்பர்களான மிருகங்களும் பறவைகளும் எனக்கு கட்டாயம் வேண்டும். நான் என்ன செய்யட்டும்? சரித்திரம் என்ற தூண்டில் எனக்காகப் போட்டிருக்கும் இரைகளே இவை எல்லாம். நான் இவை ஒவ்வொன்றையும் கொத்திக் கொத்தி வரலாற்றின் எல்லைக்குள் நின்று கொண்டிருக்கிறேன். ஒரு நாள் அந்தத் தூண்டில் என்னைத் தூக்கியெறிந்து கரையில் போட போவதென்னவோ உறுதி. தம்! தும்! இரண்டு முறை துடிப்பேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிடும். சரித்திரத்திற்கு என்னால் ஆன பயன் முடிந்தது. தூண்டில் வேறொரு மனிதனுக்காக மீண்டும் கீழ் நோக்கிச் செல்லும். வேறென்ன?

டேய், நம்முடைய பழைய வாழ்க்கையும் ரோம நாடும் என்னுடைய மனதை விட்டு கிட்டத்தட்ட மறைந்து போனது மாதிரிதான். ரோம மதுவின் ருசி மட்டுமே என்னிடம் இப்போது ஒட்டிக் கொண்டிருக்கிறது. நான் பல நாடுகளுக்கும் போய் அலைந்து திரிந்திருந்தாலும், நம்முடைய ரோம மதுவின் வாலில் கட்டக்கூடிய தகுதி கொண்ட வேறொரு மதுவை நான் எங்குமே பார்த்ததில்லை. இந்த யூதர்களின் மதுவை உதட்டால் தொடக் கூட முடியவில்லை. பிறகு ஒரு விஷயம்... இந்த யூதப் பெண்கள் இருக்கிறார்களே... அன்டோனியஸ், அவர்களைப் பற்றி இப்போதென்ன என்கிறாயா? டேய், ரோம் நாட்டுப் பெண்கள் எட்னா எரிமலையைப் போன்றவர்கள். புகைந்து கொண்டே இருப்பார்கள். வெடிப்பது என்பது அபூர்வ சம்பவமாயிருக்கும். ஆனால் இந்த யூதப்பெண்கள் படுக்கையில் விழுந்தால் பத்து எட்னா எரிமலைகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறுவதைப் போல என்று கூறுவதே சரியானது. அவர்களின் அடக்கமும் வெட்கமும் பிரார்த்தனையும் விரதமும்& எல்லாமே ஒரு மூடுபனியைப் போல. நாம் அதற்குள் தட்டுத் தடுமாறி தேடி அவர்களைப் படுக்கையில் நான்கு சுவர்களுக்குள் கொண்டு வந்து போட்டால் அதற்குப் பிறகு என்ன நடக்குமென்று உனக்குத் தெரியுமாடா? அவர்களின் ஒத்துழைப்பு இருக்கிறதே! அடடா... டேய், ரோமப் பெண்களின் தடித்து கொழுத்து போன உடல் வாகைக் கொண்டவர்கள் அல்ல இந்த யூதப் பெண்கள். இவர்களின் உடம்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். எந்தவொரு அலட்டலும் இல்லாமல் அவ்வளவு அமைதியானவர்கள் இந்த யூதப் பெண்கள். நான் இந்தப் பெண்களுக்கு மத்தியில் வந்து வாழ ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன என்பதை நீ நினைத்துப் பாரடா. எனக்கொரு சந்தேகம். இந்த யூத ஆண்கள் மொத்தத்தில் பிரயோஜனமில்லாதவர்கள் என்பதுதான் அது. முன்பிருந்த காலமாக இருந்தால் நீயும் நானும் இங்கு ஒரு வெற்றிப் பயணம் நடத்தியிருக்கலாம். இப்போது அதைச் சொல்லி என்ன பயன்? இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது இல்லையா? ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமல் போகிறது. ஒரு இடத்தில் மது நன்றாக இல்லை. பெண்கள் நன்றாக இருக்கிறார்கள். மற்றொரு இடத்தில் மது நன்றாக இருக்கிறது. ஆனால், பெண்கள் மனதிற்குப் பிடிக்கிற மாதிரி இல்லை. மதுவும், மங்கையும் மீனும் பழங்களும்& எல்லாமே நல்லதாக இருக்கும் ஒரு இடமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அங்கே நாம் இருக்கமாட்டோம்.

அன்டோனியஸ், இந்தக் கடிதம் கிடைத்தவுடன் நீ ஒருமுறை இங்கு வந்தால் இந்த விஷயங்களை எல்லாம் நீயே நேரில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வண்ணம் ஏற்பாடு பண்ணித் தருவேன். ஆனால், உன்னுடைய கடிதத்தைப் படிக்கும் போது, நீ மிகவும் நிலை குலைந்து போயிருப்பது போல் தெரிகிறதே. ரோம் நகரத்தின் மத்தியில் நீ நடத்துவதாகச் சொல்லும் உதவி மையத்தின் அர்த்தம் என்ன? நீ ரோம சாம்ராஜ்யத்தையும் இந்த உலகத்தையும் திருத்தி நன்றாக ஆக்கப் போகிறாயா என்ன? சில விலைமாதுகளை மனம் மாறச் செய்வதாலும் அனாதை கர்ப்பிணிகள் பிரசவமாவதற்கு இடத்தைத் தந்து குழந்தைகளை ஏற்றுக் கொள்வதாலும், சாவதற்கு அவிழ்த்து விடப்பட்ட குதிரைகளுக்கு மேய இடம் தந்ததாலும் முன்பு நாம் ஒரு நாணயத்தைக் காண்பித்து வேலை வாங்கிய தெருக் குண்டர்களுக்கு முந்திரித்தோப்பு வேலை தந்ததாலும் நீ அடையப் போவது என்ன? அதற்குப் பதிலாக நீ வேறொன்று செய்திருக்கலாம். நீ போய் அந்த சக்ரவர்த்தியையும் செனட்டர்மார்களையும் திருத்தப் பார்த்திருக்கலாம். டேய், நீ ஐம்பது பேரைக் காப்பாற்றினாலும், ஏன் ஐந்நூறு பேரைக் காப்பாற்றினாலும் இந்த ரோம சாம்ராஜ்யம் காப்பாற்றப்பட்டு விடுமா என்ன? இதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியவர்கள் ஆண்டு கொண்டிருக்கும் சக்ரவர்த்திகள் அல்லவா? அவர்களிடம்தானே அதிகாரமும், பலமும், மகத்துவமும், படைகளும், வரி வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள்? அவர்கள் பெரிய சாலைகள் அமைக்கும் போதும், கொளீஸியம் கட்டும் போதும், ஆலயங்கள் உண்டாக்கும் போதும், கிணறு தோண்டும் போதும், நாடக அரங்கேற்றம் செய்கிறபோதும் அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன. போரும் கலகமும் உண்டாகிறபோது, சரித்திரத்தில் லேசான சலனங்கள் உண்டாகின்றன. இதில் தப்பிப்பதற்கு எங்கு இடம் இருக்கிறது? யார் யாரைக் காப்பாற்றுவது? உனக்கு இதில் என்ன இடம் இருக்கிறது எனக்காவது இதில் ஒரு கருவியின் இடமாவது இருக்கிறது. காப்பாற்ற நினைத்தாலும், அதெல்லாம் நடக்காதடா. அந்தக் கதையை நான் உன்னிடம் இன்னும் சொல்லவில்லை. நான் இப்போது கூறுவதுதானடா உண்மை. வரலாறு என்பது இப்படித்தான் இருக்கிறது. சில பட்டாளக்காரர்களும், சில காலத்திலும் இருக்கத்தான் செய்வார்கள். இன்னொரு பக்கம் சக்ரவர்த்திமார்களும் பிரபுக்களும் செனட்டர்மார்களும் உன்னைப் போன்ற புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்பவர்களும் உலகத்தில் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். சூரியன் உதிக்கிறது. இரவு வருகிறது. குளிர், உஷ்ணம், பால்ய காலம், வாலிபப் பருவம், முதுமைப் பருவம், மரணம்... மழை பெய்யவோ பெய்யாமலோ இருக்கிறது. சில ஆலிவ் பழங்களுக்கு ருசியில்லை. சில பழங்கள் மிகவும் ருசியாக இருக்கின்றன. சில கிணறுகள் வற்றுவதேயில்லை. சில கிணறுகள் லேசான கோடையில் கூட வற்றிப் போய்விடுகின்றன. டேய், வரலாற்றுக்கு யார் மீது எந்தவித கருணையுமில்லை. அதன் ஒரு பாகமாக வரும் ரட்சகர்களைச் சிறிது கூட நம்பவும் வேண்டாம். காரணம்& வரலாற்றின் தூண்டிலில் சிக்கிக் கிடப்பவர்கள்தான் அவர்களும். என்னை இறுக்கிக் கட்டிப் போடுவது பெண் என்றால், அவர்களை வீழ்த்துவது பெண்ணை விட இறுகக் கட்டிப் போடப் பார்க்கும் ஏதாவது எண்ணங்களாக இருக்கும். எல்லாவற்றையும் தாண்டி ஒரு நாள் ஒரு இழுப்பு... ப்லும்! தம்! தும்! இரண்டு உதைப்பு, ஒரு வாய் திறத்தல், லேசாக தலையைச் சாய்த்தல்... எல்லாம் முடிந்தது.


அதனால்தான் சொல்கிறேன் என் அன்டோனியஸே, என் அன்பு நண்பனே, நீ இப்போது செய்து கொண்டிருக்கும் வேலைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, திரும்பவும் வந்து ஒரு நல்ல பெண்ணைக் கண்டுபிடித்து (அவளை எனக்கும் நீ விட்டுத்தர வேண்டும்... ஹா!ஹா!ஹா!) டைபர் நதிக்கரையிலோ ஆப்பியன் பாதையோரத்திலோ ஒரு நல்ல வீட்டை உண்டாக்கி, வேண்டுமென்றால் சில நூல்களை மீண்டும் வாங்கி சேகரித்து இனி இருக்கும் காலமாவது நீ சுகமாக வாழ ஆரம்பிப்பதுதான் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

குழந்தைகள் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். குழந்தைகள் இல்லையென்றால் ஏதோ ஒரு குறை இருப்பது போலவே தோன்றும். மனைவியும் வேலைக்காரர்களும் சேர்ந்து அந்தக் குழந்தைகளை வளர்த்துக் கொள்வார்கள். நாம் அதைப் பற்றி சிறிது கூட மண்டையைப் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். அவர்களை எப்போதாவது ஒருமுறை பார்த்தால்கூட போதும். ஆனால், அவர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மரணமடையும் நேரத்தில் நாம் எதுவுமே இங்கு விட்டுச் செல்லவில்லை என்றொரு உணர்வு நம்மை ஆட்டிப் படைக்கத் தொடங்கும் என்பது என் எண்ணம். குழந்தைகள் என்பது ஒரு அதிர்ஷ்ட சோதனை என்று கூட நான் கூறுவேனடா, ஆன்டோனியஸ். வீர பராக்கிரமசாலிகளாக உலகப் புகழ்பெறும் பிள்ளைகளுமாகப் பிறக்கிறார்கள் என்று வைத்துக் கொள். அவர்கள் உண்டாக்குகிற சாம்ராஜ்யத்தில் ஒரு மிகப்பெரிய அரண்மனையின் வராந்தாவில் வெயிலை அனுபவித்துக் கொண்டிருக்கும் காட்சியை மனதில் ஒரு நிமிடம் நினைத்துப் பார். நினைத்துப் பார்க்கும் போதே அது எவ்வளவு சுகமான ஒரு அனுபவமாக இருக்கிறது. அதே நேரத்தில் அதிகாரமும், பலமும், செல்வமும் நம்மிடம் மட்டுமே இருக்கின்றன என்று வைத்துக் கொள். அப்படியொரு சூழ்நிலை இருந்தால் நம் பிள்ளைகள் நம்மிடம் சண்டைபோட ஆரம்பிப்பார்கள். கோபம் கொள்வார்கள். வாள் முனையில் நம்மைப் பற்றி வாய்க்கு வந்தபடி குற்றச்சாட்டுகளையும் இல்லாததையும் பொல்லாததையும் கூறுவார்கள். அது மட்டும் உண்மை. சில வேளைகளில் அவர்கள் நம்மைக் கொலை செய்யவும் முயலலாம். சில நேரங்களில் நாம் அவர்களைக் கொல்லவேண்டியது வந்தாலும் வரலாம். ஒரு சில வேளைகளில் நான் இரண்டு வாரங்களுக்கு முன்பு காப்பாற்ற முயன்ற ஒரு இளைஞனின் விஷயத்தைப் போல, வரலாறு அவர்களைக் கொல்லலாம். எது இருந்தாலும் பரவாயில்லை. வரலாறு என்று சொல்லப்படுவது இப்படித்தானே பல விளையாட்டுகளைப் புரிந்து கொண்டு இருக்கிறது. அதற்குள்ளே ஜூபிடர் கடவுள் மிகவும் பலத்துடன் தன்னுடைய கையை நுழைத்தார் என்றால் அவருக்கு என்னுடைய வாழ்வுதான். (நான் எவ்வளவு கவனமாக இருக்கிறேன் என்பதைப் பார்த்தாயா?) இதிலிருந்து எப்படி தப்பிப்பது, அன்டோனியஸ்? ரட்சகனாக முயற்சிப்பதால் என்ன பயன்? உன்னுடைய ஆதரவு மையத்தைப் பற்றி நான் கேவலமாகப் பேசுகிறேன் என்று நினைக்காதே. உண்மையிலேயே பார்க்கப் போனால் உன்னுடைய கடிதம் இரண்டு வாரங்களுக்கு முன்னால் வந்திருந்தால் இயேசு என்ற பெயரைக் கொண்ட அந்த இளைஞனை நான் ஏதாவது சில தகிடு தத்த வேலைகள் செய்து அந்த திருட்டு யூதர் கூட்டத்திடமிருந்து காப்பாற்றி உன்னுடைய ஆதரவு மையத்திற்கு அனுப்பி வைத்திருப்பேன். உன்னுடைய விசித்திரமான சிந்தனை ஓட்டங்களுடன் ஒத்துப் போகக்கூடிய ஒரு மனிதன்தான் அவன். ஒருவேளை ஹா!ஹா!ஹா! உன்னுடைய பழைய வாழ்க்கை முறையோடு ஒத்துப் போகக்கூடிய மனிதனாகக் கூட அவன் இருக்கலாம். காரணம்& அந்த மனிதனுக்காகக் கண்ணீர் வழிய காத்து நின்றவர்களெல்லாம் பேரழகிகளான யூதப் பெண்கள்தாம். எனக்கு ஏற்கனவே நன்கு அறிமுகமான ஒன்றிரண்டு பெண்கள் கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள் என்பதையும் முன்கூட்டியே நான் கூறிவிடுகிறேன். அதனால் உன் ஆர்வத்தைக் குறைவாக நான் மதிப்பிடவில்லை என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். டேய், ரோமன் விலைமாதுகளிடமும் குழந்தைகளிடமும் என்னையும் உன்னையும் தவிர வேறு யார் வரலாற்றுரீதியாக இந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டிருக்க முடியும்? ஒருவேளை என்னால் காப்பாற்ற முடியாமற்போன அந்த இளைஞன் உன்னுடைய ஆதரவு மையத்திற்கு வந்து அங்கிருக்கும் மனிதர்களில் தானும் ஒருவனாக ஆகியிருக்கலாம். நீங்கள் இரண்டு பேரும் சேர்ந்து ரோம சாம்ராஜ்யத்தையும் இந்தப் பரந்து கிடக்கும் உலகம் முழுவதையும் காப்பாற்றியிருக்கலாம். (எதிலிருந்து? யாரிடமிருந்து? அதைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.) அதற்கு உதவியாக இருந்ததற்காக நான் மரணமடைந்து பரலோகத்தை நோக்கிச் செல்லும் போது ஜூபிடரின் வலது பக்கத்தில் ஒரு தங்கத்தால் ஆன சிம்மாசனமும் எல்லா பரமானந்தங்களும் எனக்குக் கிடைத்திருக்கும்.

இப்படி எத்தனை நல்ல நல்ல கனவுகள். நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்க விரும்புகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாதவன் என்ன ரட்சகனடா, அன்டோனியஸ்? உலகம் முழுவதற்கும் தலைவன் என்றும் ரட்சகன் என்றும் பேசப்பட்ட ஜூலியஸ் சீஸர் ஒரே குத்தில் மரணத்தைத் தழுவவில்லையா? டேய், ஒருவன் ரட்சகனாக இருக்கிறான் என்றால் அதற்கு ஒரு விவஸ்தை இருக்க வேண்டும். இந்த ரோம சாம்ராஜ்யம் முழுவதையும் இந்த உலகம் முழுவதையும் ஒரே நிமிடத்தில் எந்தவித குறைகளும் இல்லாமல் ஆக்கி காப்பாற்றி மகிழ்ச்சியில் மிதக்க வைக்கக்கூடிய முழுத் தகுதி சம்பந்தப்பட்ட ஆளுக்கு இருக்க வேண்டும். அந்த மகிழ்ச்சியான சூழ்நிலையைப் பார்த்து ஆனந்தம் அடைந்து, மரணமில்லாத ரட்சக பதவியை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய கொடுப்பினை இருக்க வேண்டும். அதற்குத் தேவையான அதிகாரமோ படைபலமோ மந்திர சக்தியோ& எது வேண்டுமென்றாலும் அவையெல்லாம் கட்டாயம் அந்த மனிதனிடம் இருக்க வேண்டும். இது எதுவுமே இல்லாமல் ஒரு நிமிடம் ரட்சகன், இன்னொரு நிமிடம் ரட்சிக்கப்பட வேண்டியவன் என்று சொல்லிக் கொண்டிருந்தால், நிச்சயம் அது நல்லதல்ல. அது நமக்குப் பின்னால் கூடிக் கொண்டிருக்கும் நாட்டு மக்களை ஏமாற்றுவதாகத்தான் அர்த்தம். ஏன் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வது என்று கூட இதைச் சொல்லலாம்.

டேய், இயேசு என்ற பெயரைக் கொண்ட அந்த மனிதனை நான் விசாரிக்கும் போது, நீகூட என் அருகில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த மனிதன் சொன்ன பட்டும்படாத சில விஷயங்கள் ஒருவேளை உனக்கும் புரியலாம். எனக்கு ஒரு விஷயமும் புரியவில்லை என்பதே உண்மை. நீ அப்போது என்னுடன் இருந்திருந்தால் ஒருவேளை அந்த அப்பாவி இளைஞனைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது ஒரு வழியை நீ சொல்லிக் கொடுத்திருப்பாய் என்று என் மனத்திற்குப் படுகிறது.


நான் கொலை செய்யும்படி உத்தரவு பிறப்பித்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கணக்கே இருக்காது என்பதை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். அதைப் பற்றி எனக்கு கொஞ்சமும் வருத்தமில்லை. நான் எதற்கு வருத்தப்பட வேண்டும்? என்னுடைய சக்கரவர்த்திக்காகவும், நாட்டுக்காகவும் செய்யவேண்டிய வேலையை நான் செய்தேன். அவ்வளவுதான். ஆனால், அந்தப் பையனை புரோகிதர்களிடம் அடிக்கவும், கொல்லவும் விட்டதற்காக உண்மையிலேயே நான் வருத்தப்படுகிறேன். அப்படி அவர்களுடன் போக வேண்டிய ஆள் இல்லை அவன் என்று யாரோ என்னைப் பார்த்து கூறுவது போல் இருந்தது. ஆனால், அவர்களுடன் போகாமல் இருக்க முடியாது என்றதொரு சூழ்நிலையை அந்த இளைஞனே உருவாக்கிவிட்டிருந்தான். காரணம்& அவனுடைய மனது வேறெங்கு நோக்கியோ இருந்தது. மனிதனாக இருந்தால் இருக்கக் கூடிய சூழ்நிலையைப் பற்றிய ஒரு தெளிவான அறிவு இருக்க வேண்டாமா? குறிப்பாக ஆபத்தான கட்டத்தில்! டேய், அன்டோனியஸ்! என்னுடைய வாழ்க்கையிலேயே ஒரு மனிதனைக் காப்பாற்ற வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், அது அவனைத்தான். ஆனால், அதை அவனாவது புரிந்து கொள்ள வேண்டாமா? ரோமசாம்ராஜ்யத்தின் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கும் மனிதன் எவ்வளவு தூரம் வழியை விட்டு அகன்று போக முடியும்? உண்மையிலேயே சொல்லப் போனால் எனக்கு அந்த மனிதனிடம் ஒருவித ஈடுபாடு தோன்றியது. நிச்சயமாக அது அனுதாபமல்ல. அந்த மனிதன் அனுதாபத்தை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு ஆள் என்பதாக என் மனதிற்குப் படவில்லை. என்னால் புரிந்து கொள்ளக்கூடிய, நெருக்கத்தை உண்டாக்குகிற ஏதோ ஒன்று அந்த மனிதனிடம் இருந்தது. அது அந்த மனிதனின் சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்த முகத்தையும், கஷ்டச் சூழ்நிலையையும் தாண்டி அவனிடம் நிழல் பரப்பி விட்டிருந்தது. யாருக்கும் தலை வணங்காத குணம், மீனைப் போன்றதொரு நழுவும் தன்மை. நாம் எந்த அளவிற்கு கையை நீட்டினாலும் அருகிலேயே நின்றிருப்பேன் என்றொரு பிடிவாத குணம்... அதே நேரத்தில் அந்த மனிதன் நின்று கொண்டிருந்த விதத்திலும், பார்வையிலும், சின்னச் சின்ன அசைவுகளிலும் ஒருவித அன்பு வெளிப்பட்டது. அடிகளை வாங்கி அங்கே நின்று கொண்டிருக்கும் நிமிடத்திலும் அத்தர்மரம் பூத்ததைப் போல அந்த மனிதனிடமிருந்து அன்பு என்றொரு நறுமணம் கிளம்பி நாலா பக்கங்களிலும் பரவிக் கொண்டிருந்தது. அவன் ஒரு திருடனல்ல. பொய் சொல்லக் கூடியவனல்ல. ஏதோ ஒரு கனவிற்குப் பின்னால் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாது என்பதும், ஆபத்தான நிமிடத்தில் கூட அந்த மனிதன் அந்த கனவின் பிடியில்தான் நின்று கொண்டிருப்பான் என்பதும் நான் புரிந்து கொண்ட விஷயங்கள். நீ சொல்லலாம் அந்த மனிதனைப் பார்த்ததும் எனக்கு எப்போதோ பார்த்த யாரோ ஒரு மனிதனை ஞாபகத்தில் வந்திருக்குமோ என்று இல்லையடா. நிச்சயமாக இல்லை. சத்தியமாகச் சொல்கிறேன் இல்லை. எப்போதாவது ஒரு முறையாவது தெளிவான சிந்தனையுடன் நான் பேசுவதற்கான சூழ்நிலை உண்டாகாதா என்ன? நல்ல விஷயங்களைப் பார்க்கிற போது அதைக் கண்டு உணரக்கூடிய திறமை எப்போதாவது ஒரு முறை எனக்கு இருக்கக்கூடாதா என்ன?  நீ என்னைக் கிண்டல் பண்ணினால் கூட பரவாயில்லை. அந்த மனிதனைப் பார்க்கும் போது என் மனதில் தோன்றியது என்ன தெரியுமா? ஒரு பூனைக் குட்டியையோ ஒரு நாய்க் குட்டியையோ கையிலெடுத்து தூக்குவதைப் போல அந்த மனிதனை மார்போடு சேர்த்து வைத்துக் கொஞ்சி ஆறுதல்படுத்த வேண்டும் போல் இருந்தது எனக்கு. இன்னொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் ஒரு பறவைக் குஞ்சைப் போல அந்த மனிதனை எடுத்து உள்ளங்கையில் வைத்து தடவ வேண்டும் போல் நான் ஆசைப்பட்டேன். ஆனால், அப்படி கொஞ்சும் போது ஒரு கடியோ இல்லாவிட்டால் ஒரு கொத்தோ எனக்குக் கட்டாயம் கிடைக்குமென்றும் நான் எதிர்பார்த்தேன். காரணம்& அன்பு என்ற ஒன்றிற்குப் பின்னால் அந்த மனிதன் வேறு ஏதோ ஒன்றை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது தான். டேய், அன்டோனியஸ்! அந்த மனிதன் ஒரு மந்திரவாதி என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ரகசிய சக்திதான் அந்த மனிதனுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாமல் மறைந்து நின்று அவனை மரணத்தை நோக்கிப் பிடித்து இழுத்திருக்க வேண்டும். இதெல்லாம் யாருக்குத் தெரியும்? என்ன இருந்தாலும் யூதர்களின் ரட்சகன் என்று கூறிக்கொண்ட அவன் கடைசியில் ஒரு சிலுவைத்தடி மேல் உடம்பை வளைத்துக் கிடந்து இறுதி விடை சொல்ல வேண்டி வந்தது. அந்த மனிதனும் தப்பிக்க முடியவில்லை. யூதர்களும் காப்பாற்றப்படவில்லை. நான் இந்த விஷயத்தை உன்னிடம் சொல்ல காரணம், நீ உன்னுடைய ஆதரவு இல்லத்தை இதுபோன்ற ஆபத்தான கட்டத்திற்குக் கொண்டு போய் விடக்கூடாது என்பதற்காகத்தான். இதைப்பற்றி நீ நினைத்துப் பார்க்கும் போது உனக்கு என்ன தோன்றுகிறது? நீ நாளைக்கு ஒரு சிலுவையில் வேதனைகளைத் தாங்கிக் கொண்டு இறுதி மூச்சை விடுகிறாய் என்று வைத்துக் கொள். அதனால் யாருக்கு என்ன பிரயோஜனம்? கொஞ்சம் பெயர் கெட்டுப் போயிருக்கும். அவ்வளவுதான். வயது குறைவாக இருக்கும் பட்சம், சில இளம்பெண்கள் அதற்காக வருத்தப்பட்டு நின்றிருப்பார்கள். நான் சொல்வது உண்மைதானேடா, ஹா!ஹா!ஹா!

இனி ஒரு தமாஷான விஷயத்தைச் சொல்கிறேன். நான் அந்த மனிதனை விசாரித்துக் கொண்டிருக்கும் பொழுது சிறிது தள்ளி கவலை தோய்ந்த முகங்களுடன் நின்றிருந்த இளம்பெண்களை நான் ஓரக் கண்களால் பார்த்தேன். எந்தவிதமான எண்ணமும் இல்லாமல் வெறுமனேதான். தீர்ப்பு சொல்பவனுக்கும் அழகுணர்ச்சி என்ற ஒன்று வேண்டும்தானேடா?

அப்போது அங்கே நின்று கொண்டிருக்கிறாள் கண்களில் நீர் வழிந்தபடி& என்னுடைய சினேகிதி, யூத ரசிகைகளின் முடிசூடா மகாராணி சாட்சாத் மக்தலேனாக்காரி மரியம்! என்னுடைய தனி அறைக்கு எத்தனை முறை நான் அவளை யாருக்கும் தெரியாமல் சுவரைத் தாண்டவைத்து, பேரானந்தத்தின் உச்சத்தை அடையும் இரவுகளை அவளுடன் நான் செலவிட்டிருக்கிறேன் தெரியுமா? சுவரைத் தாண்டிக் குதிப்பது என்பது கூட அவளைப் பொறுத்தவரை ஒரு வித காமக் களியாட்டம்தான். சில நாட்களாகவே அவளை நான் பார்க்க முடியவில்லை. அவளைப் பற்றிய எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. நான் அவளைப் பற்றி பல இடங்களிலும் விசாரித்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவளோ இப்போது ஒரு பரிசுத்தமான பெண்ணைப் போல அழுது கலங்கிய கண்களுடன் என்னையே பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.


நான் அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு ஒருவித அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டேன். என்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து அவளை நோக்கி நான் சிரிக்காமல் இருந்ததே பெரிய விஷயம். மீண்டும் ஒருமுறை பார்த்தபோதுதான் என்னாலேயே புரிந்து கொள்ள முடிந்தது. அவள் கண்களில் ஒரு அமைதியான கெஞ்சல் தெரிந்தது. எனக்கு அப்போதுதான் அது புரிந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் அவளும் அந்த இயேசுவிற்குப் பின்னால் சுற்றித் திரிந்திருக்கிறாள். இப்போது வந்து இயேசுவின் உயிருக்காக என்னிடம் கெஞ்சி நின்றிருக்கிறாள். நான் எனக்குள் சொல்லிக் கொண்டேன். டேய் இயேசுவே, சரிதான்... உன்னால் நான் காமக்களியாட்டங்களில் கைதேர்ந்த ஒருத்தியை இழக்க வேண்டிய நேர்ந்துவிட்டதே! இந்த ஒரு குற்றத்திற்காகவே உனக்கு நான் மரண தண்டனை அளிக்கலாம். ஹா!ஹா!ஹா! ஆனால், நான் அதைச் செய்யவில்லை. காரணம், நீ எந்தவித பிரச்சினைகளும் இல்லாதவன். பாவம் நீ. இந்தப் பெண்கள் முட்டாள்களாக இருப்பதால் உனக்குப் பின்னால் நடந்து திரிகிறார்கள். என்னால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நான் உன்னை மன்னிக்கிறேன். இப்படி நான் நினைத்துக் கொண்டிருக்கும் நிமிடத்தில் ஜூலியாவின் வேலைக்காரி அவளுடைய ஒரு செய்தியை எடுத்துக் கொண்டு என்னை நோக்கி ஓடி வருகிறாள். டேய், உன்னால் நம்ப முடிகிறதா? (நீ நம்புவாய்... இந்த மாதிரியான கனவுகளும் தத்துவ சாஸ்திரங்களும் கலந்த அனுபவங்கள் உனக்கும் உண்டல்லவா?) ஜூலியா எழுதியிருக்கிறாள்; நீங்கள் இந்த நல்ல மனிதனை ஒன்றும் செய்யக் கூடாது. இந்த மனிதனை நான் கடந்த இரவில் கனவு கண்டேன்.

நான் திகைத்துப் போய் உட்கார்ந்துவிட்டேன். நான் நினைத்ததைத் தான் ஜூலியாவும் சொல்கிறாள். அதுவும் கனவின் மூலமாக அறிந்து. அப்பப்பா... இயேசு! நான் இயேசுவின் முகத்தையே ஆச்சரியம் மேலோங்கப் பார்த்தேன். யூதப் பெண்களை மட்டுமல்ல. கனவின் வழியாக வந்து என்னுடைய ரோம் நாட்டுக்காரியைக் கூட நீ வசீகரித்திருக்கிறாய் இல்லையா? இயேசு என்னுடைய முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தான். திடீரென்று ஏதோ ஞாபகம் வந்ததைப் போல ஒரு மின்னலைப் போன்று தலையைத் திருப்பி அவன் தனக்குப் பின்னால் மரியமும் மற்றவர்களும் நின்றிருந்த இடத்தைப் பார்த்தான். நானும் உடனே மரியத்தைப் பார்த்தேன். அப்போது அவளுடைய கண்கள் மலர்வதையும், அவளின் கண்ணீரால் நனைந்த முகம் பிரகாசமாகத் தெரிவதையும் நான் பார்த்தேன். எனக்கு அதைப் பார்த்து பொறாமையாக இருந்ததடா. நான் மரியத்திற்கு எவ்வளவு வெள்ளி நாணயங்களை வாரி வாரி தந்திருக்கிறேன்! எவ்வளவோ இனிமையான விஷயங்களை அவளிடம் பேசியிருக்கிறேன். ஆனால், ஒரு முறை கூட அவள் என்னை அப்படிப் பார்த்ததில்லை. எனக்காக ஒருமுறை கூட அவளின் முகம் இந்த மாதிரி பிரகாசமாக மாறியதில்லை. அன்டோனியஸ், ஒரு விதத்தில் பார்க்கப் போனால் இந்தப் பெண்களுக்கு உண்மையில் தேவைப்படுவது என்ன என்பதை யாரால் புரிந்து கொள்ள முடியும்?

டேய், என்னுடைய கை வலிக்க ஆரம்பித்துவிட்டது. உன்னுடைய கடிதம் கிடைத்ததால் உண்டான மகிழ்ச்சியில் இந்த அளவுக்கு எழுதிவிட்டேன். உன்னிடம் கூறுவதற்கு இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. நாளை நான் சொல்வதைக் கேட்டு எழுதக்கூடிய இளம்பெண், சக்கரைக் குட்டி வருவாள். அப்போது மீதி கடிதத்தை எழுதுகிறேன். அவள் பெண்ணாக இருப்பது மட்டுமல்லாமல் ஜூலியாவிற்கு மிகவும் விருப்பமானவளாகவும் இருப்பதால் என்னால் அந்த அளவிற்கு எல்லா விஷயங்களையும் மனம் திறந்து சொல்ல முடியாது. இதுவரை எழுதியதை நான் கொண்டு போய் பூட்டி வைக்கிறேன். இந்தப் பெண்களைச் சிறிதும் நான் நம்பத் தயாராக இல்லை. அழகிய இளம் பெண்ணும், நன்றாகப் பழகக்கூடியவளுமான ரூத் நம்முடைய ரகசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டாம். அவள் அதைத் தெரிந்து கொண்டால் நம் இருவரைப் பற்றியும் என்ன நினைப்பாள்? நாம் இருவரும் கெட்டு நாறிப் போன மனதைக் கொண்ட இரண்டு ரோமன் கிழவன்கள் என்றல்லவா நினைப்பாள். ஹா!ஹா!ஹா! அப்படி அவள் நினைப்பது இவ்வளவு பெரிய ரோம சாம்ராஜ்யத்திற்கும் மக்கள் தலைவனான டைபீரியஸ் சக்கரவர்த்திக்கும் அவமானமான ஒன்று அல்லவா? ஹோ! ஒரு நல்ல ரோம குடிமகனாக வாழ்வதற்கு படவேண்டிய பாடு இருக்கிறதே! அப்பப்பா...

2

கேட்டு எழுதும் பெண்!

சில தவறுகளைக் கண்டுபிடிக்கிறாள்!

யூதர்கள் வசிக்கும் பகுதியின் ரோமன் கவர்னரான பொந்தியோஸ் பீலாத்தோஸின் கேட்டு எழுதும் பெண்ணான ரூத் (வயது 23) ஜெருசலேமில் இருக்கும் கவர்னரின் தனி அறையில் உட்கார்ந்திருக்கிறாள். அப்போது நேரம் காலை பத்து மணி. அங்கு இருக்கும் தூண்களும் சிற்பங்களும் வெயில் பட்டு நிற்கின்றன. செங்கடலில் இருந்து வறண்ட காற்று வீசுகிறது. முதல் நாள் மழை பெய்ததற்கான அடையாளங்கள் மண்ணில் தெரிகின்றன. வெயிலில் மழையின் வாசனை இருக்கிறது. ஒரு வெண்மை நிற பூனை மண்டபத்தைச் சுற்றியிருக்கும் தூண்களில் ஒன்றை உரசியபடி ரூத்தைப் பார்த்து என்னவோ கேட்பது மாதிரி உரத்த குரலில் கத்துகிறது. ரூத் அதை எடுத்து மடியில் உட்கார வைத்து மெதுவாகத் தடவுகிறாள். ரூத் பூனையிடம்; ‘நீ ஒரு ரோமன் பூனை அல்லவா? உனக்கு எவ்வளவு கிடைத்தாலும் போதாது. போக்கிரி என்றவாறு பூனைக்கு முத்தம் தருவதற்காக அவள் குனிகிறாள். அப்போது பூனை சற்று தள்ளி ஒரு பூச்செடியில் அமர்ந்திருக்கும் ஏதோ ஒரு பிராணியைப் பார்த்தவாறு குதித்து ஓடுகிறது. ரூத் பூனையிடம் ‘போடி, போ! போயி உன் முதலாளியை இங்கே அழைச்சிட்டு வா’ என்கிறாள்.

பிடிக்கப் போனது கிடைக்காமல் பூனை திரும்பி வருகிறது. பிறகு ரூத்தின் பாதத்திலிருந்து தன்னுடைய நீலநிறத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கண்களை உயர்த்தியவாறு அவளைப் பார்த்து மீண்டும் உரத்த குரலில் கத்துகிறது.

ரூத் உதைக்கிறேன் என்பதைப் போல் தன்னுடைய காலைத் தூக்கியபடி பூனையிடம் ‘ச்சீ! நன்றி கெட்டவளே! போ இங்கேயிருந்து!’ என்கிறாள். தொடர்ந்து பூனையைப் பொய்யான கோபத்துடன் உற்று பார்க்கிறாள். ரூத்தின் நீலநிற ஆடைக்குக் கீழேயிருந்து பூனையை பயமுறுத்துவதற்காக வெளியே வந்த வெண்மையான அழகான அவளுடைய கால் அந்த அறையை மேலும் பிரகாசமாக ஆக்குகிறது. பூனை ரூத்தின் மேஜைக்குக் கீழே சுருண்டு உட்கார்ந்து தன் கண்களை மூடிக் கொள்கிறது.

ரூத் என்னவோ சிந்தித்தவாறு அறையின் சுவர்களைத் தாண்டி தூரத்தில் தெரியும் ஜெருசலேம் நகரத்தையே பார்த்தவாறு அமர்ந்திருக்கிறாள்.


உயரம் குறைந்த, மென்மையான, சற்று தடித்த அதே நேரத்தில் நல்ல வடிவமைப்பைக் கொண்ட அழகான இளம்பெண்தான் ரூத். அவளின் சுருண்ட தலைமுடி விரிந்து தோள் மீதும் முதுகிலும் கிடந்தது. சற்று முன்பு ஒரு மின்னல் கீற்றைப் போல வெளியே வந்த அவளது கால் இப்போது நீலநிற ஆடைக்குள் இன்னொரு கால்மீது போடப்பட்டு இருந்தது. வெளுத்து சிவந்து காணப்பட்ட அவள் பாதங்களில் ஓடிய நீல நரம்புகள் நகங்களின் நிறத்தில் போய் இரண்டறக் கலந்து காணாமல் போகின்றன. சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போதுகூட அவள் முகம் மிகவும் அழகாகவே இருந்தது. அவளது அழகான உதடுகளில் அவ்வப்போது புன்சிரிப்பு அரும்பிக் கொண்டிருந்தது. அவளின் விழிகளின் ஓரத்திலும் அதே புன்சிரிப்பு மறைந்திருந்தது. முகத்தில் லேசான கர்வத்தின் சாயல் தெரிந்தது.

ரூத் (தனக்குள்): இன்றைக்கு என்ன ஆனது? பெரியவரைக் காணோமே! நேற்று இரவு அதிகமாக அவர் மது அருந்தியிருக்க வேண்டும். பூனை வந்து விட்டது. இனி நாய் வரவேண்டும். கிளி வரவேண்டும். மான்குட்டி வரவேண்டும். யானை வரவேண்டும். முயல் வரவேண்டும். பிறகு லேசாக ஆடித் தளர்ந்த வண்ணம் கவர்னர் பொந்தியோஸ் பீலாத்தோஸ் வருவார். இது எல்லாம் காலையில் ஒழுங்காக அந்த மனிதர் படுக்கையை விட்டு எழுந்தால். இந்த மிருகங்களிடமாவது அந்த மனிதருக்குப் பாசம் இருக்கிறது என்பது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். அவர் நேற்று தன்னுடைய ஏதோ ஒரு பழைய நண்பனுக்கு எழுதி பெட்டியில் ஒளித்து வைத்திருந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார் & என் மீது ஒரு தந்தை தன்னுடைய மகள் மீது கொண்டிருக்கும் அன்பைக் கொண்டிருப்பதாக. மகளைப் போல! அவரது வார்த்தைகளை நம்புவதற்கு ரோம நாட்டு பெண்கள்தான் வரவேண்டும்.

அவர் சொல்லுவதைக் கேட்டு எழுதுவதற்காக உட்கார்ந்திருக்கும்போது அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கும் மேஜைக்குக் கீழே அந்த மனிதரின் கால் நீண்டு வந்து என்னுடைய கால்களைத் தொடுவதை அவர் சோம்பல் முறிப்பதன் விளைவு என்று நான் நம்ப வேண்டுமா என்ன? சரி... அப்படியே நம்புகிறேன். ஆனால், ஏற்கனவே எழுதியதைப் படித்துப் பார்ப்பதற்காக எனக்குப் பின்னால் வந்து அவர் மிகவம் நெருக்கமாக நிற்கும்போது அதில் ஏதோ தவறு இருப்பதை என்னால் உணர முடிகிறதே! நிச்சயம் அவர் செயலில் தவறு இருக்கிறது என்று ஒரு பெண்ணான நான் கூறுகிறேன். இருந்தாலும் பெரியவரை வெறுமனே சந்தேகத்தின் பெயரில் விடுவோம். ஒரு விதத்தில் பார்த்தால் இந்த பீலாத்தோஸ் உண்மையிலேயே ஒரு பாவம் என்றுதான் சொல்ல வேண்டும். உலகத்தில் என்னென்ன நடக்கின்றன என்பதைப் பற்றி இந்த மனிதருக்கு எதுவுமே தெரியாது. காலையில் படுக்கையை விட்டு எழுந்தால் அதற்குப் பிறகு அவர் வாழ்வது தனக்கென்று சொந்தமாக அவர் அமைத்துக் கொண்ட உலகத்திற்குள்தான். அவரின் மூக்கிற்கு முன்னால் என்ன தெரிகிறதோ, அதுதான் அவருக்கு வாழ்க்கை. யாராவது ஒரு பெண் முன்னால் வந்து விட்டால் போதும், அவளையே வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார். ஏதாவது ஒரு மிருகத்தைப் பார்த்துவிட்டால் அதற்குப் பக்கத்தில் போய் நின்று அதைத் தடவ ஆரம்பித்து விடுவார். சில நேரங்களில் மிருகம் அவரை உதைக்கவோ கடிக்கவோ குத்தவோ செய்வதுண்டு. அந்த மிருகம் அவர் மீது கொஞ்சம் விருப்பம் காட்டினால் போதும், அவ்வளவுதான்& அதற்கு அருகிலேயே மணிக்கணக்கில் மனிதர் உட்கார்ந்து விடுவார். பெண் அவர் மீது விருப்பம் இருப்பது மாதிரி காட்டினால், மனிதர் பரபரப்பாகி விடுவார். அதற்குப் பிறகு எல்லா விஷயங்களும் திருட்டுத்தனமாக வேலைக்காரர்கள் மூலம் நடந்து கொண்டிருக்கும். இந்த மனிதர் எப்படி யூதர்கள் வசிக்கும் இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருக்கிறார் என்பது யெஹோவிற்கு மட்டும்தான் தெரியும். ரோம சாம்ராஜ்யத்தின் கம்பீரத்தால் எப்படியோ இந்த மனிதரின் பதவியும் இங்குள்ள ஆட்சியும் காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கூறுவதைத் தவிர வேறு எப்படி கூற முடியும்? பூட்டி வைப்பது என்பது இவரின் இன்னொரு வேலை. பூட்டி வைக்கும் பொருள் யாருக்கும் தெரியாது. அதை யாரும் பார்ப்பதில்லை என்று இந்த மனிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார். தான் கைப்பட எழுதும் எந்த விஷயமாக இருந்தாலும் அதை உள்ளே பூட்டி வைத்து விடுகிறார் மனிதர். அப்படி பூட்டி வைக்கப்படும் பொருளைத்தான் ரகசியங்களைத் தேடும் யாராக இருந்தாலும் முதலில் திறந்து பார்ப்பார்கள் என்ற உலகத்து உண்மையை இந்த மனிதருக்குத் தெரியாமல் இருப்பதுதான் விந்தையாக இருக்கிறது. நானும் ஜூலியாவும் கள்ளச்சாவி உருவாக்குவோம் என்ற எண்ணம் ஏனோ இந்த பீலாத்தோஸுக்கு உண்டாகவே இல்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சில நேரங்களில் கிழவனின் நீளமான ரோமன் மூக்கைப் பிடித்து கொஞ்ச வேண்டும்போல் தோன்றுகிறது யானைத் தந்தத்தால் ஆன அந்தத் தடிமனான பெட்டியில் ஜூலியாவும் நானும் பார்க்காத பொருள் என்ன இருக்கிறது? இது எதுவுமே தெரியாத இந்த மனிதர் தான் எழுதும் ஒவ்வொரு முட்டாள்தனமான கடிதத்தையும் இதற்குள் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறார். காதல் கடிதங்களும், காதல் கவிதைகளும் கூட இவற்றில் அடக்கம். சக்கரவர்த்தியின் காம உறவு சம்பந்தப்பட்ட விஷயத்திற்குப் பயன்படும் சில பொருட்களும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற வினோதமான விதிகளும்கூட அங்கு இருந்தன. இவ்வளவு பெரிய ரோம சாம்ராஜ்யத்தின் மகத்தான் ரகசியங்களெல்லாம் இந்தப் பெட்டியை விட்டு கீழே இறங்கி என் தலைக்குள் வந்து அமர்ந்திருக்கின்றன. இந்த மனிதரின் காதலர்களின் பெயர்களும், காதலிகளுடைய பெயர்களும் எனக்கும் ஜூலியாவிற்கும் நன்றாகவே தெரியும். ‘என்னைக் கஷ்டப்படுத்தாமல் இருக்கும் காலம் வரையில், நான் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. நான் அந்த மனிதரை என்றோ மன்னித்து விட்டேன்’ என்று ஜூலியா சொல்லுவாள். ஜூலியாவை அந்த மனிதர் தேவையில்லாமல் கஷ்டப்படுத்துவதில்லை. இந்த விஷயங்களெல்லாம் அவர்களுக்கிடையே எப்போதோ முடிந்துவிட்டன. சொல்லப்போனால் ஜூலியாவைப் பார்ப்பதற்கே பயப்படுவார் பீலாத்தோஸ். அவள் தன்னைவிட புத்திசாலி, விஷயங்கள் தெரிந்தவள் என்ற விஷயம் கிழவருக்கு நன்றாகவே தெரியும். அவள் படிக்கும் நூல்களையும் அவள் செய்யும் தியானங்களையும் பார்த்து உண்மையாகவே இவர் பயப்படுவார். புலியையே பாய்ந்து பிடிக்கக் கூடிய ஏதோவொரு சக்தி அதற்குள் மறைந்திருப்பதாக எண்ணி இந்த மனிதர் மனதிற்குள் நடுங்குவார்.


ஜூலியா படிக்கும் சில நூல்களை இவர் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகப் படிக்கும்போது, பனிக்கட்டியைப் பிடித்திருப்பதைப் போல இந்த மனிதரின் கைகள் விறைத்துப் போவதை நானே நேரில் பார்த்திருக்கிறேன். அவள் தியானம் செய்யும் அறைக்குள் நுழைந்த இந்த மனிதர் பயந்து போய் உடம்பெல்லாம் வியர்க்க ஏதோ பூதத்தைப் பார்த்ததைப் போல ஓடிவந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். என் பீலாத்தோஸே, உங்களுடைய மனைவி ஜூலியா உண்மையிலேயே சொல்லப் போனால் நீங்கள் கொலை செய்யச் சொன்ன இயேசுவின் பாதங்களைப் பற்றிக் கொண்டிருக்கும் பெண் என்ற விஷயத்தை அறிந்தால் எந்த அளவிற்கு நீங்கள் வியர்த்துப் போய் நிற்பீர்கள். கண்களில் சினம் உண்டாகும்படி ஆவீர்கள் என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

நீங்கள் அண்டோனியஸிற்கு எழுதியிருந்த கடிதத்தை நான் எடுத்து படித்தேன். இயேசு என்னவோ மந்திரவாதத்தின் மூலம் ஜூலியாவின் கனவில் வந்திருப்பதாக நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பெரியவர் பீலாத்தோஸே, உங்களின் பேரழகியும் அமைதியான குணத்தை கொண்ட மனைவியுமான ஜூலியா உங்களுக்குத் தெரியாமல் எத்தனை முறை முகமூடியை அணிந்துகொண்டு என்னுடன் உங்களுக்குப் பிரியமான இயேசுவின் பாதத்தைத் தேடி வந்திருக்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா? கவர்னரே, நீங்கள் மரியத்தை சுவரைத் தாண்டி வர வைத்தீர்கள். நான் உங்களுடைய மனைவியை சுவர் தாண்ட வைத்தேன். உண்மையாகச் சொல்லப்போனால் ஜூலியா இன்னொரு ஆணுக்காக சுவரைத் தாண்டினாள் என்றாலும், அதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தெரியவே தெரியாது. அந்த அளவிற்கு ஒரு கனவு உலகை அமைத்துக் கொண்டு நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் உங்களையே எனக்கு ஒருவிதத்தில் பிடிக்கிறது. உங்களின் காம ஆசைகள் கொண்ட வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் எந்தவித குறிக்கோளும் உங்களுக்கு இல்லை என்பதை அறிவேன். அது மட்டுமல்ல. யாரிடமும் உங்களுக்கு அன்பு என்ற ஒன்று இல்லாததைப் போலவே, உங்களுக்கு யாரிடமும் பகை இருப்பதாகவும் எனக்குத் தோன்றியதில்லை. ஆனால், அதை இப்போது சொல்லி என்ன பயன்? உங்களுக்குள் இருக்கும் சுத்தமான மனிதன், ஒரு கெட்ட மனிதன் செய்கிற செயல்களையெல்லாம் சிறிதும் கலக்கமே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறானே! இது போதாதென்று உங்களின் ஆணவமான பேச்சுக்களை நாங்கள் இவ்வளவு நாட்களும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறோமே. உங்களின் அந்தப் பழைய குடிகார, காமவெறி பிடித்த நண்பருக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் எப்படியெல்லாம் அளந்து விட்டிருக்கிறீர்கள். அதை வாசிக்கும் போது யாருக்கும் என்ன தோன்றும்? ஜெருசலேமில் இருக்கும் காமவெறி பிடித்த ஒரு மனிதன் பீலாத்தோஸ் என்ற எண்ணம் எல்லோருக்குமே உண்டாகும். ஆனால், உங்களின் வினோதமான காமக்களியாட்டக் கதைகளை மரியமும், ராஹேலும் அன்னாவும் என்னிடம் நிறையவே கூறியிருக்கிறார்கள். உங்களால் எதுவுமே பண்ண முடியாது. வெறுமனே உருட்டிப் பிடித்துக் கொண்டிருக்கவும், மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க மட்டுமே தெரியும் என்ற விஷயம் எங்கள் எல்லோருக்கும் தெரியும். நான் சொல்வது உண்மைதானே, பீலாத்தோஸ்? நீங்கள் உங்களின் நண்பரிடம் சொல்கிற பேரின்ப நிலையின் உச்சநிலை அதுதானென்றால் அது உங்களின் விருப்பம். ஆனால், மரியத்தைக் கீழே நிறுத்திவிட்டு, நீங்கள் உயரத்தில் ஏறுகிறீர்கள் என்று அவள் கூறுகிறாள். இவை எல்லாவற்றையும் தாண்டி மரியம் உங்களை ஒளி வீசும் கண்களுடன் பார்க்கவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறது அல்லவா? இயேசுவை அப்படி அவள் பார்த்ததற்காகக் கூட நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் இல்லையா? பீலாத்தோஸே, உங்களின் ஆயிரம் உருட்டிப் பிடித்தல்களிலும், மூச்சுத் திணறல்களிலும்& அதாவது, இனிமேல் உங்களால் முடியுமானால்& முழுமையான திருப்திகளிலும்& எல்லாவற்றிலும் சேர்த்து உங்களுக்குக் கிடைக்கக் கூடிய ஆனந்தம் இயேசுவின் ஒரே ஒரு பார்வையில் கிடைத்துவிடும் என்ற உண்மை உங்களுக்கு எப்படி புரியும்? இதையெல்லாம் புரிந்து கொள்ளக் கூடிய மனிதராக நீங்கள் இருந்தால், உங்களுக்கு அந்த அதிகாலை வேளையில் ஒரு பாத்திரம் தண்ணீர் தேவையே இருந்திருக்காதே. இயேசு எங்களிடம் உண்டாக்கிய ஆனந்தம் நீங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்பதைப் போன்றதல்ல என்பதை உங்களுக்கு நான் எப்படி புரிய வைப்பேன்? இயேசு எங்களுக்கு முத்தம் தந்தது எங்களின் உதடுகளிலோ அல்லது மார்பகங்களிலோ அல்ல. அவன் எங்கள் மேல் படர்ந்தது எங்கள் தொடைகளுக்கு நடுவில் இருக்கும் இடைவெளியில் அல்ல. பனி விழுந்திருக்கும் மலர்கள் மீது தடவிச் செல்லும் காற்றைப் போல எங்களின் இதயங்களைத்தான் அவன் முத்தமிட்டான். அவன் எங்களின் மேலோட்டமான உடல் கவர்ச்சியின் போலித்தனங்களையெல்லாம் தாண்டி உள்ளே நுழைந்தது எங்களின் ஆன்மாவிற்குள்தான். அதனால் நாங்கள் அவனின் அணைப்பிற்காக ஏங்கியிருக்கிறோம். இப்போதும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். ஒருமுறை அவன் திடீரென்று என்னுடைய தோள்மீது தன்னுடைய ஒரு கையை வைத்தான். இதுவரை எந்த ஆணும் நுழைந்திராத என்னுடைய உடம்பில் நெருப்பு பற்றி எரிவதைப் போல அப்போது இருந்தது. என்னுடைய தொடைகளின் உட்பகுதி முழுவதும் ஈரமாகியது. என்னுடைய மார்பகங்கள் பூகம்பம் உண்டானதைப் போல வேகமாக எழுந்து நின்றன. ஆனால், அவனுடைய விழிகளைப் பார்த்த போது என்னுடைய உடலை விட்டு ஒரு பறவையைப் போல இனம் புரியாத வேறு ஏதோ ஒரு ஆனந்த அனுபவத்தை நோக்கி நான் பறந்து சென்றேன். அவன் எங்களைத் திரும்பத் திரும்ப தொட்டிருக்கக் கூடாதா? மீண்டும் மீண்டும் கட்டிப் பிடித்திருக்கக் கூடாதா? எங்களுடன் சேர்ந்து தூங்கி, ஒன்றாகச் சேர்ந்து கனவுகள் கண்டு, எங்களுடன் சேர்ந்து போர்வையால் தன்னை மூடிக் கொண்டு, எங்களின் ரகசிய வாசனைகளை அவனும் முகர்ந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவனின் மனமோ வேறொரு உலகத்தில் இருந்தது. எங்களால் எப்போதாவது ஒருமுறை மட்டுமே பார்க்க முடிந்த, அதே நேரத்தில் நுழைய முடியாத இன்னொரு உலகம் அது. பீலாத்தோஸே, மரியத்தின், மார்த்தாவின், மற்ற பெண்களின் அழுகைக் குரலை மட்டும்தானே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? நானும் ஜூலியாவும் அவனுக்காக அழுததை நீங்கள் பார்க்கவில்லை அல்லவா? ஒரு காதலனை நினைத்து அழுவதைப் போலத்தான் நாங்கள் அவனுக்காகக் கண்ணீர் விட்டோம். நீங்கள் நள்ளிரவு தாண்டிய பிறகும் கூட தமாஸ்கஸில் இருக்கும் அந்த மோசமான ஒற்றைக் கண்ணைக் கொண்ட படைத் தலைவனுடன் சேர்ந்து மது அருந்தி, கண்டபடி ஆடி பின்னர் குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்த போது நாங்கள் இயேசுவை நினைத்து தூங்காமல் விழித்துக் கொண்டிருந்தோம்.


காரணம்& அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று அவன் சொன்னது, அவனுடைய அடி முட்டாள்களான சீடர்களுக்குப் புரியவில்லையென்றாலும், அவனுடைய சினேகிதிகளான எங்களுக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால், இப்போது எங்களுக்குக் கவலை இல்லை. நாங்கள் சம்பவம் நடந்த அந்த நாளுக்குப் பிறகு அவனுக்காக அழுததே இல்லையே. அவன் மீண்டும் உயிர்த்தெழுந்துவிட்டான் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. அவன் எங்களைப் பார்ப்பதற்காக உடனே வருவான் என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரியாது. பீலாத்தோஸே, பிரபஞ்சத்தின் தந்தையான ஜூபிடர் கடவுளின் கவனக் குறைவாலும், வெற்றி வீரரான டைபீரியஸின் ஆர்ப்பாட்டமான நடவடிக்கைகளாலும் யூதர்களின் ஒட்டுமொத்த பகுதிக்கும் கவர்னராக இருக்கும் உங்களுக்கு என்ன தெரியும்? நாங்கள் இனிமேல் எதற்காக பயப்பட வேண்டும்? எதற்காகக் கவலைப்பட வேண்டும்? நாங்கள்அன்று அவன் நிலையைப் பார்த்து அழுதோம். அவன் முகத்தில் பலரும் துப்பியதைப் பார்த்து வாய்விட்டு அழுதோம். அவன் உடலில் வழிந்த குருதியைப் பார்த்து அழுதோம். நீங்கள் அவன் மேல் அடி விழச் செய்தீர்கள். அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் அப்படிச் செய்தீர்கள். புரோகிதர்களின் அடிகளால் தளர்ந்து போயிருந்த உடல்மேல் தான் நீங்கள் மீண்டும் அடிவிழச் செய்தீர்கள். அவனைக் காப்பாற்றுவதற்காகத்தான் அப்படிச் செய்ததாக நீங்கள் ஜூலியாவிடம் சொன்னதை நாங்கள் சிறிதளவிலாவது நம்பத் தயாராகவே இருக்கிறோம். சில நேரங்களில் கெட்ட மனிதன் கூட நல்ல செயலைச் செய்வான். அப்படிப்பட்ட முரண்பாடான விஷயங்கள் உங்களுக்கு நன்கு பழகிப் போன ஒன்றாயிற்றே. ஆனால், உண்மையிலே கடிதம்தானே உங்களின் மனதை முழுவதுமாக மாற்றியது? அந்தக் கடிதத்தை மட்டும் நாங்கள் அனுப்பியிருக்காவிட்டால், இயேசுவின் ரட்சகன் என்று நீங்கள் சொல்லிக் கொள்ளும் சம்பவம் நடந்திருக்குமா? உங்களின் சட்ட அறிவைப் பற்றி இந்த அளவிற்குப் பெருமையாகப் பந்தாவாகப் பேசிக் கொண்டிருக்க முடியுமா? அந்த நண்பருக்கு எழுதிய கடிதத்தில் நீங்கள் என்னவெல்லாம் கூறியிருக்கிறீர்கள்? நீங்கள் இயேசுவைப் காப்பாற்ற முயன்றதாகவும், அதற்கு இயேசு சம்மதிக்கவில்லை என்றும் எழுதியிருக்கிறீர்கள். இயேசு, வரலாற்றுக்கு இரையாகிப் போன ஒரு மனிதன் என்றும், சக்தி இல்லாத ரட்சகன் அவன் என்றும் நீங்கள் அந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிறீர்கள். நண்பரே, பீலாத்தோஸே! இயேசுவைக் காப்பாற்ற அவனுடைய தந்தையான கடவுளால் கூட முடியாது என்று அவனுடைய சினேகிதியான நான் கூறுகிறேன். அவனுடைய சினேகிதிகளான எங்களுக்குத் தெரிந்த அளவிற்கு அவனை வேறு யாருக்குத் தெரியும்? பீலாத்தோஸ், உங்களுக்குச் சிறிது கூட சம்பந்தமில்லாத இந்த இயேசுவின் மிகப் பெரிய தோல்வி எது என்று நான் சொல்லட்டுமா? அவன் எங்களை& பெண்களை அவனுடைய உலகத்திற்குள் எல்லா வாசல் கதவுகளையும் திறந்து உள்ளே வரும்படி செய்யவில்லை. சில கழுதைகளான ஆண்களைச் சீடர்கள் என்று கூறிக் கொண்டு அவன் நடந்து திரிந்தான். அவர்களுக்காக அவன் செலவிட்ட நேரத்தையும், பொறுமையையும்  எங்களுக்காகச் செலவிட்டிருந்தால், அவனுக்கு இத்தகைய ஒரு முடிவு இவ்வளவு சீக்கிரம் வந்திருக்காது. இப்படிப்பட்ட ஒரு பயங்கரமான முடிவு வந்திருக்கவே வந்திருக்காது. தன்னுடைய சொந்த தாயைக் கூட அவன் தூரத்தில்தான் நிறுத்தி வைத்தான். சகோதரிகளையும்தான். அவன் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. தாயும் மனைவியும் காதலியும் சகோதரியும் காட்டும் அன்பையும், பாசத்தையும் வேறு யாரால் காட்ட முடியும்? அவன் தன்னுடைய தந்தையைத் தேடிப் போகும் அதே நேரத்தில் தன்னுடைய அன்னையைப் பற்றியும் புரிந்து கொண்டிருந்தான் என்றால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அதற்குப் பதிலாக அவன் தந்தையைத் தேடி சந்து பொந்துகளில் எல்லாம் தட்டுத் தடுமாறி நடந்து திரிந்தான். தந்தை யாராக இருந்தால் என்ன? கர்ப்பப்பைதானே அவனுடைய உண்மையான தந்தை? கஷ்டம்! அவன் மனதை யாரால் மாற்ற முடியும்? உயிர்த்தெழுந்து வரும் இயேசுவாவது திரும்பி வந்து, பாவம் அந்த மரியத்தின் கால்களில் விழுந்து, 'அம்மா, உன்னை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது' என்று கூறுவானா? இந்த முறை நான் அவனிடம் இந்த விஷயத்தை மனம் திறந்து கூறிவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனால், அந்தத் திருட்டு சீடர்களின் காதுகளில் நான் கூறுவது விழாமல் இருக்க வேண்டுமே. உயிர்த்தெழுந்து வந்தவுடன் அவர்கள் மீண்டும் அவனுடன் போய் ஒட்டிக் கொள்வார்களே. அதைப் போல அவனை விட்டு ஓடித் தப்பிக்கவும் செய்வார்களே. பீலாத்தோஸே, என்னுடைய உயர் அதிகாரியே, உண்மையாகப் பார்க்கப் போனால் நீங்கள் பிடித்து அடிகள் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டியது அந்தச் சீடர்களைத்தான். கதஸமேன் தோட்டத்தில் வைத்து இயேசுவைப் புரோகிதர்கள் பிடித்த போது ஒரு சீடன் உடம்பில் துணியே இல்லாமல் தப்பி ஓடியிருக்கிறான். என் இயேசுவே, உன்னுடைய நிலை இப்படி ஆகிப் போய் விட்டதே! இன்று இப்படியொரு நிலை என்றால், நாளை உன்னுடைய கடவுள் உலகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்? நீ எந்தக் காரணத்தால் எங்களிடம் உன்னுடைய ரகசியங்கள் முழுவதையும் மனம் திறந்து கூறவில்லை? எதற்காக அந்த விருந்திற்கு எங்களை நீ அழைக்கவில்லை? உணவு பரிமாறுவதற்கு வேண்டியாவது உனக்கு நாங்கள் உதவியாக இருந்திருப்போமே. சிறிது கூட மனவலிமையே இல்லாத ஆண்களிடம் உன்னுடைய கடவுள் ராஜ்யத்தை ஒப்படைக்க உனக்கு எப்படி தைரியம் உண்டானது? நாங்கள் உன்னுடைய கடவுள் ராஜ்யத்தை எங்களின் கர்ப்பப்பைகளில் வைத்து காப்பாற்றுவோமே! அதை வளர்த்து இந்த ஆகாயத்திற்கும் பூமிக்கும் பரப்பி இருப்போம் அல்லவா? நீ எங்களுடைய அன்பை நிராகரித்ததற்கு, உன் தாயை நிராகரித்ததற்கு, உனக்கு என்னவெல்லாம் நடக்கக் கூடாதோ அவையெல்லாம் நடந்தன. இனிமேலும் அவை நடக்குமோ என்று உண்மையாகவே அச்சம் கொள்கிறேன். இயேசுவே, உண்மையாகப் பார்க்கப் போனால் ஒரு ஆணைப் போல, நீ எங்களுடன் உறவு கொண்டிருந்தாயானால், பெண்மை இல்லாத ஒரு கடவுளின் ராஜ்யத்தைக் கற்பனையே பண்ணியிருக்க மாட்டாய். எதற்காக நீ உன்னுடைய கடவுளின் ராஜ்யத்திலிருந்து பெண்களின் அன்பும், அரவணைப்பும் ஆதரவும் அறவே வேண்டாமென்று நிராகரித்து ஒதுக்கினாய்? அதன் அடித்தளங்களை சில முட்டாள்களுக்கு ஏன் நீ எழுதிக் கொடுத்தாய்? அது உனக்கு எவ்வளவு பெரிய நஷ்டம் தெரியுமா? அது எங்களுக்கும் கூட நஷ்டம்தான். சரி... போகட்டும் போகட்டும்... போனதெல்லாம் போகட்டும் (ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு) இயேசு, எனக்கு மனத்திற்குள் பயமாகவே இருக்கிறது.


நீ உயிர்தெழுத்திருக்கிறாய் என்றால் மரணத்திலிருந்து திரும்பி வரும் நீ எப்படி இருப்பாய்? நீ மீண்டும் அன்னியனாகவும், சிறிது கூட அறிமுகமில்லாதவனாகவும், தூரத்தில் இருப்பவனாகவும் ஆகியிருக்க வேண்டும். எனக்கு உன்னை இனிமேல் பார்ப்பதற்குக் கூட தயக்கமாகவே இருக்கிறது. நீ அன்பும் மூச்சும் மணமும் உஷ்ணமும் இல்லாத ஒரு உருவத்தைக் கொண்டிருந்தாய் என்றால் எப்படி இருக்கும்? உணர்ச்சி நரம்புகள் ஓடிக் கொண்டிருக்கும் உன்னுடைய கையை இனிமேலும் என்னால் தொட்டுப் பார்க்க முடியுமா? (ரூத் மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு தன்னுடைய முகத்தில் கையை வைத்துக் கொண்டு தலை குனிந்து அமர்ந்திருக்கிறாள். சிறிது நேரம் கழித்த பிறகு திடீரென்று தலையை உயர்த்திப் பார்க்கிறாள்.) ஓ! கடைசியில் இதோ வந்து விட்டார் யூதர்கள் வசிக்கும் நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் கவர்னர். இன்று தன்னுடன் அவர் யாரை அழைத்து வருகிறார்? கோவேறு கழுதை! சரியான நண்பன்தான்.

ரூத் அமர்ந்திருக்கும் ஆசனத்திற்குக் கீழே குனிந்து பார்த்தவாறு பூனையைத் தட்டியெழுப்பி; 'அடியே... எழுந்திரு. இதோ வருகிறார் உன்னுடைய உரிமையாளர். ஓடிப்போய் அந்த ஆளுடைய கால்களையே சுற்று. அதைப் பார்த்து அவர் ரொம்பவும் சந்தோஷப்படுவார்.

ரூத்(தனக்குள்): இன்று என்னுடைய கையெழுத்தைப் பார்ப்பதற்காக பீலாத்தோஸ் வரட்டும். முதலில் தன்னுடைய சொந்த கையெழுத்தையும் மொழியையும் அவர் சரிபண்ண முயற்சிக்க வேண்டும். அந்த அன்டோனியஸுக்கு எழுதிய கடிதத்தில்தான் எத்தனை எழுத்துப் பிழைகள். அதற்காக அவர் வெட்கப்பட வேண்டாமா? இன்று எனக்குப் பின்னால் மிகவும் நெருங்கி வந்து நின்றால், நான் அவரை நிச்சயமாக உதைப்பேன். இந்த அறையின் தரை எவ்வளவு இறுகியது என்பதை மரியம் இல்லாமலே அவர் உணரட்டும்.

இல்லாவிட்டால் வேண்டாம். போகட்டும். என்ன இருந்தாலும் இந்த மனிதர் பாவம்தானே. சாதாரண பெண்ணான என் முன்னால் வந்து நின்று வளைந்து குழைந்து இவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் எனக்கே பாவமாகத் தோன்றும்.

ரூத் எழுந்து நின்று வணங்கியவாறு (பீலாத்தோஸிடம்) 'இன்று ஏன் மிகவும் தாமதமாக வருகிறீர்கள், ஐயா? நன்றாகத் தூங்கி விட்டீர்களா என்ன? இந்தக் கோவேறு கழுதை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது? ஸிரியாவிலா? அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு கோவேறு கழுதையைக் கொண்டு வர வேண்டுமா, ஐயா? இது ஒரு சிறப்பு இனத்தைச் சேர்ந்ததா என்ன? எனக்கு கழுதைகளைப் பற்றி எதுவுமே தெரியாது. இன்று நீங்கள் என்ன எழுதுவதாக இருக்கிறீர்கள்? இல்லை, ஐயா. நான் உங்களுக்காகக் காத்திருந்து நொந்து போகவில்லை. இங்கு அமர்ந்திருப்பது என்பது ஒரு சுகமான அனுபவம்தானே, ஐயா? நான் இங்கு உட்கார்ந்து பல விஷயங்களைப் பற்றியும், மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். ஓ... அப்படி குறிப்பாகச் சொல்லும்படி எதைப் பற்றியும் நினைக்கவில்லை ஐயா. சிலுவையில் அறையப்பட்டு இறந்த அந்த இயேசுவைப் பற்றி நான் நினைத்துப் பார்த்தேன். ஐயா, நீங்களும் அவனைப் பற்றி நினைத்தீர்களா என்ன? என்ன ஆச்சரியம், ஐயா? அவன் ஒரு அப்பிராணி மனிதன்... இல்லையா ஐயா உங்களால் ஒன்றுமே பண்ண முடியவில்லையா? கடிதம் யாருக்கு ஐயா எழுதியிருக்கறீர்கள்? அன்டோனியஸுக்கா இந்தப் பெயரை நான் இப்போதுதான் ஐயா கேள்விப்படுகிறேன். ஐயா அவர் உங்களின் பழைய நண்பரல்லவா? பரவாயில்லை, ஐயா பழைய நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கொண்டு வந்து புதுப்பித்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்திருக்கிறதே. இந்தப் பூனை உங்களின் மடி மேல் ஏறுவதற்கு காத்திருந்தது. ஐயா, இப்போதுதான் இவளுக்கு நிம்மதியே. சரி... ஆரம்பிக்கலாமா ஐயா? கவனம் ஐயா. இதோ உங்களின் அங்கியின் ஓரத்தை அந்தக் கழுதைக் குட்டி கொஞ்சம் கொஞ்சமாகத் தின்று கொண்டிருக்கிறது.

3

பீலாத்தோஸ்

கடிதத்தைத் தொடர்கிறார்...

பீலாத்தோஸின் தனி அறை. அவர் ஒரு பெரிய சிம்மாசனத்தின் மீது சாய்ந்து படுத்திருக்கிறார். அவர் மடியில் பூனை சுருண்டு படுத்திருக்கிறது. அவரின் ஒரு கை பூனையைத் தடவிக் கொண்டிருக்கிறது. கோவேறு கழுதைக்குட்டி சற்று தள்ளி இருக்கும் பூச்செடிகளை நாசம் செய்து கொண்டிருப்பதை ரூத் பார்க்கிறாள். இருந்தாலும் தான் அதைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. அவள் எழுத்தாணியுடன் அமர்ந்திருக்கிறாள்.

பீலாத்தோஸ் (ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு): சரி ஆரம்பிப்போம். (தனக்குள்) இவள் இங்கே இருக்க எதை எழுதுவது? சரி... எதையாவது எழுதுவோம். (ரூத்திடம்) ரோமில் இருக்கும் என்னுடைய நண்பன் டைட்டஸ் அண்டோனியஸ்ஸுக்கு நான் எழுதும் கடிதம் இது. முத்திரை எதுவும் வேண்டாம். நேராக கடிதத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

ரூத் பீலாத்தோஸிடம்: ஏன் சார் அப்படி?

பீலாத்தோஸ் (ஒரு மாதிரியாக ஆகி): நான் சொல்வதைக் கேள். அவன் என் நண்பன்.

ரூத் (பீலாத்தோஸிடம்): சரி சார்.

பீலாத்தோஸ்: என் அன்பான அண்டோனியஸ், நான் முன்பு எழுதிய விஷயங்களின் தொடர்ச்சிதான் இது...

ரூத் (பீலாத்தோஸிடம்): எப்போ சார் அந்தக் கடிதத்தை எழுதுனீங்க?

பீலாத்தோஸ் (ஒரு மாதிரியாக ஆகி): அதை நானே எழுதினேன்.

ரூத் (பீலாத்தோஸிடம்): அந்தக் கடிதத்தை அனுப்பியாச்சா சார்? எனக்கு அனுப்பினதா ஞாபகத்துல இல்லியே!

பீலாத்தோஸ் (கோபத்தை அடக்கிக் கொண்டு): அன்னைக்கு நீ வராம இருந்தே. ஒரு தகவல் கொண்டு போற ஆள் போறப்போ, அவன்கிட்ட அந்தக் கடிதத்தைக் கொடுத்தனுப்பிட்டேன்.

ரூத்: அப்படியா சார்? (தனக்குள்) திருடுறதா இருந்தா அதை ஒழுங்கா திருடணும். பீலாத்தோஸே, தைரியமா ஒரு பொய்கூட உங்களுக்கு ஒழுங்கா சொல்லத் தெரியலியே!

(பீலாத்தோஸிடம்): இப்போ என்ன செய்யலாம் சார்? பிலாத்தோஸ் (ரூத்திடம்): ஆரம்பிப்போம். கொஞ்சம் கவனமாகவே இனிமேல் நான் இருக்கணும். சரி... நீ இடையில கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது. என் சிந்தனை திசை மாறிடும்.

ரூத் (பீலாத்தோஸிடம்): சந்தேகம் ஏதாவது தோணினா கேட்கலாம்ல சார்?

பீலாத்தோஸ் (நீண்ட பெருமூச்சு விட்டவாறு): தாராளமா கேட்கலாம். (தனக்குள்) இந்தப் பெண் கால்களைச் சிறிது நீட்டியவாறு உட்காரக் கூடாதா? இவளின் கால்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. ஆனால், எல்லா யூதப் பெண்களையும் போல இவளும் அதை அடக்க ஒடுக்கமாக மூடி வைத்திருக்கிறாள். என்ன செய்வது? (ரூத்திடம்): சரி... எழுது...

ரூத் (தனக்குள்) இதோ வந்துர்றேன். பெரிய சிந்தனை...

பீலாத்தோஸ் நாம பேசிக்கிட்டு இருந்த விஷயத்தைத் தொடருவோம். (நீண்ட மவுனம்).

ரூத் (பீலாத்தோஸிடம்): சார்?


பீலாத்தோஸ் (தனக்குள்): இவளை அருகில் வைத்துக் கொண்டு என்ன சொல்வது? இவளுக்கு கொஞ்சம் அறிவு அதிகமாக இருக்கிறது என்பது எனக்கே புரியத் தொடங்கி விட்டது. இப்போது என்ன செய்வது?

ரூத் (பீலாத்தோஸிடம்): என்ன சார், நேற்று சரியா தூங்கலையா? (தனக்குள்): ஏதாவது சொன்னால் விஷயம் எனக்குத் தெரிந்துவிடும் என்று மனதிற்குள் மனிதர் பயப்படுகிறார் போலிருக்கிறது இன்றைக்கு வேலை நடந்தது மாதிரிதான்...

பீலாத்தோஸ் (ரூத்திடம்): ரூத், ஒண்ணு செய்... இன்னைக்கு ஜூலியா எங்கேயோ போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா. நீயும் அவ கூட போ. நான் இங்கே உட்கார்ந்து எழுத வேண்டிய விஷயங்களை எழுதிக்கிறேன்.

ரூத் (தனக்குள்): எழுதிய விஷயங்களைப் பூட்டி வைக்க மறக்க வேண்டாம். காரணம் இன்று சாயங்காலமே நாங்கள் மீதிக் கதையை படிக்க வேண்டுமே! அதாவது& உயிர்த்தெழுந்த இயேசுவைப் பார்த்துவிட்டு நாங்கள் திரும்பி வரும் போது... (பீலாத்தோஸிடம்): சரி சார். அப்படின்னா நான் போகட்டுமா சார்?

பீலாத்தோஸ் தலையை ஆட்டுகிறார்.

ரூத் (தனக்குள்): இனி பெரியவரை ஒரு வழி பண்ண வேண்டியதுதான்.

ரூத் மிகவும் சாதாரணமாக செருப்பின் கயிறைக் கட்டுவது போல் நடித்துக் கொண்டு தன்னுடைய ஆடையை லேசாகத் தூக்கி நன்கு தெரிகிற மாதிரி அழகான, கவர்ச்சியான தன்னுடைய கால்களை வெளியே காட்டினாள். ரூத் (குனிந்தவாறு தனக்குள்): பீலாத்தோஸே, ஒரு நிமிடம், ஒரு பார்வை. என்னுடைய இயேசு கூட இதைப் பார்த்ததில்லை.

பீலாத்தோஸ் அதிர்ச்சியடைந்ததைப் பார்த்து உறங்கிக் கொண்டிருந்த பூனை கூட கண்களைத் திறக்கிறது. பீலாத்தோஸின் முகத்தில் ஒரு வித பதைபதைப்பும் ஆச்சர்யமும் திணறலும் தெரிகிறது. அவர் சுற்றிலும் பார்க்கிறார். தான் அமர்ந்திருக்கும் சிம்மாசனத்தின் இரண்டு பக்கங்களையும் இறுகப் பற்றிக் கொண்டு ஒரு சிலையைப் போல ரூத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருக்கிறார். ரூத் மெதுவாக நிமிர்ந்தபோது கூட, உறைந்து போன ஒரு மனிதனைப் போல உட்கார்ந்திருந்த இடத்திலேயே சிறிதும் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார் பீலாத்தோஸ்.

ரூத் (பீலாத்தோஸிடம்): நான் வாங்கின செருப்பே நல்லா இல்ல சார்.

பீலாத்தோஸ் மீண்டும் ஒருமுறை அதிர்ச்சியடைந்த மனிதனாகிறார்.

பீலாத்தோஸ் (ரூத்திடம்): ஆமா... ஆமா ரூத் (பீலாத்தோஸைப் பார்த்து கவர்ச்சியாக சிரித்தவாறு) சார்... இன்னைக்கு உங்களுக்கு எழுதி எழுதி கை பயங்கரமா வலிக்கப் போகுது. அது மட்டும் உண்மை. நான் உங்களுக்கு உதவ வேண்டாமா சார்?

பீலாத்தோஸ் (ரூத்திடம்): அப்படியா? ஆமா... ஆமா... வேண்டாம்... வேண்டாம்.

ரூத் மண்டபத்தை விட்டு இறங்கி, கீழே நின்றவாறு பீலாத்தோஸைப் பார்த்து வணங்குகிறாள். பீலாத்தோஸ் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாமல் ஒரு கையால் பதிலுக்கு மரியாதை செலுத்துகிறார். ரூத் பூச்செடியைத் தின்று கொண்டிருக்கும் கோவேறு கழுதைக் குட்டியை கையால் விரட்டி விடுகிறாள். வீட்டை நோக்கி மெதுவாக நடந்து செல்லும் ரூத்திற்குப் பின்னால் வாலை உயர்த்திக் கொண்டு பூனை கத்தியவாறு வேகமாகப் பாய்ந்தோடுகிறது.

ரூத் (தனக்குள்): யூதப் பெண்களின் அடக்கமும் ஒடுக்கமும் போலித்தனமானது என்றல்லவா தன்னுடைய நண்பனுக்கு பீலாத்தோஸ் எழுதியிருக்கிறார்? இனி அதைப் பற்றி மேலும் அவர் நிறைய எழுதலாமே! பீலாத்தோஸ் ஒரு கண் பார்வை தெரியாத மனிதரைப் போல முன்னால் பார்த்தவாறு சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்தார். கடைசியில் எழுத்தாணியைக் கையிலெடுத்து எழுத ஆரம்பித்தார்.

டேய் அண்டோனியஸ், நான் உனக்கு எழுதும் கடிதத்தின் எஞ்சிய பகுதியை என்னுடைய கேட்டு எழுதும் பெண்ணுக்குச் சொல்லிக் கொடுக்க முயற்சி செய்ததில், நான் தோல்வியடைந்து விட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதன் விளைவாக நானே என் கைப்பட மீண்டும் எழுதுகிறேன். என்ன எழுதுவது என்பதைக் கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு அதிர்ச்சியில் இப்போது நான் இருக்கிறேன். நான் சொன்னதைக் கேட்டு அவள் எழுதும் சம்பவம் இன்று நடக்கவில்லையென்றாலும், இன்று ஆச்சரியப்படக் கூடியதும், சிறிது கூட நம்ப முடியாததும், மிகவும் இன்பம் தரக்கூடியதுமான ஒரு சம்பவம் நடந்தது. மோசமான செருப்பு உண்டாக்கக்கூடிய புண் அவளிடம் நீண்டநாட்கள் இருக்கட்டும். அதை முழுமையாக விளக்குவது என்றால் இந்த ஒரு கடிதத்தில் அது முடியவே முடியாது. நான் உன்னிடம் அதிகமாக ஒன்றும் கூறப்போவதில்லை. ஜூபிடர் கடவுள்மேல் எனக்கு ஈடுபாடு மேலும் அதிகரித்திருக்கிறது என்பதை மட்டும் இங்கு கட்டாயம் கூற விரும்புகிறேன். இந்த மாதிரியான இனிய சம்பவங்கள் நேர்கிறபோது அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.

டேய், அண்டோனியஸ், உன்னிடம் மட்டுமே நான் இந்த விஷயத்தைச் சொல்ல முடியும். அந்த இயேசுவைப் பற்றி என்னுடைய மனதிற்குள் இனம்புரியாத ஒரு குழப்பநிலை இருக்கவே செய்கிறது. அது மட்டுமல்ல. அவன் இப்போது உயிர்த்தெழுந்து விட்டானென்று ஒரு தகவல் வெளியே பரவி விட்டிருப்பதையும் நான் அறிகிறேன். உண்மையிலேயே இது பிரச்சினைக்குரிய ஒரு விஷயம்தான். எனக்கு அதனால் எந்தவித பயமும் இல்லை. அந்தப் பையன் மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தால், அவனைப் பார்க்க எனக்குக் கூட ஆர்வம்தான். உங்கள் இருவருக்கும் சம்மதம் என்றால், நான் உங்களிடம் அவனை அனுப்பி வைக்கவும் தயாராக இருக்கிறேன். சரியா? ஹா! ஹா! ஹா! இந்த இயேசு ஒருநாள் திரும்பி வந்து யூதர்களுக்கு ராஜாவாகவும் ரட்சகனுமாகவும் ஆவதாக இருந்தால் அவனுக்காக நான் என்னவெல்லாம் செய்ய முயற்சித்தேன் என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியும் என்று திடமாகவே நான் நம்புகிறேன். அவன் என்னைத் தூக்கில் போடமாட்டான். அது நிச்சயம். என்னுடைய பிரச்சினை அதுவல்ல. அவன் ஒரு சித்தனாக மாறி அவனுக்கென்று ஏராளமான சீடர்களை உருவாக்கி உலகமெங்கும் தன்னுடைய செய்திகளைப் பரப்பி, மிகப்பெரிய குறிப்பிடத்தக்க ஒரு நபராக மாறி, ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு அவன் தன்னுடைய பெயரையும் பெருமையையும் எல்லா இடங்களிலும் நிற்கும்படி செய்து விட்டான் என்று வைத்துக்கொள். அப்படியென்றால் அந்த சரித்திரத்தில் நான் எப்படிப்பட்ட மனிதன் என்று அறியப்படுவேன்? இப்படி நான் எண்ணுவதற்குக் காரணம் என்ன தெரியுமா? அந்த ஆளின் அச்சமற்ற தன்மைதான். அது என் மனதில் இனம்புரியாத ஒரு எச்சரிக்கை உணர்வை உண்டாக்குகிறது. நிலைமை அப்படி இருக்கிறபோது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டாமா? இரண்டாயிரம் வருடங்கள் கடந்தபிறகும் நமக்கு கொஞ்சம் கெட்ட பெயர் இருக்கிறது என்றால் அதனால் நமக்கு என்ன நஷ்டம்? எது எப்படியோ என் மனதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் நான் உன்னிடம் இதையெல்லாம் தெரிவிக்கிறேன். நடந்தது இதுதானடா.


முக்கிய யூதப் பெரியவர்களும், பணியாட்களும் சேர்ந்து அந்த ஆளைப் பிடித்துக் கட்டி என்னுடைய அரண்மனைக்குக் கொண்டு வந்தார்கள். நான் முதல் நாள் குடியும், கூத்தாட்டமும் முடிந்து படுக்கும்போது பொழுது விடியும் நேரமாகி விட்டது. படுக்கையில் படுத்து கண்களை அப்போதுதான் மூட ஆரம்பித்திருப்பேன். வேலைக்காரன் வந்து என்னை அழைத்தான். நான் என்னுடைய தலையைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு, எப்படியோ கஷ்டப்பட்டு ஆடையை எடுத்து அணிந்து கொண்டு வெளியே வந்தபோது, இந்த ஆட்களின் கூட்டம் அங்கே நின்றிருந்தது. அவர்களுடன் இயேசுவும் இருந்தான். கிழக்குத் திசையில் அப்போது தான் வெளிச்சத்தின் ரேகைகள் தெரிய ஆரம்பித்துக் கொண்டிருந்தன. அவர்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நான் திரும்பிப்போய் குளியலறைக்குள் நுழைந்து தலையில் சில நிமிடங்கள் நீரை மொண்டு ஊற்றினேன். தொண்டைக்குள் விரல்களை விட்டு வாந்தி எடுக்க முயற்சித்தேன். சிறிது நேரம் கக்கூஸிற்குள் நுழைந்து உட்கார்ந்தேன். பிறகு சாகப்போகிறவனைப் போல் முகத்தை வைத்துக் கொண்டு சட்ட இருக்கையின் மீது வந்து அமர்ந்தேன். என்னால் கண்களைத் திறந்து பார்க்கவே முடியவில்லை. இயேசு என் கண்களுக்கு முன்னாலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து போய்க் கொண்டேயிருந்தான். அப்போது என்னுடைய நிலையைப் புரிந்து கொண்ட ஒரு பணியாள் ஒரு பாத்திரத்தில் நான் பருகுவதற்காக ஏதோ ஒன்றைக் கொண்டு வந்து தந்தான். ரோம நாட்டு மதுவும் ஹிந்துஸ்தானத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மூலிகைகளையும் சேர்த்து தயாரித்த ஒரு வினோதமான திரவம் அது. அதைப் பருகியவுடன் நான் உற்சாகமாகி உட்கார்ந்து விட்டேன். அண்டோனியஸ், நான் மேலே சொன்ன இயேசுவைப் பார்த்து முக்கியமாக ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டேன். நீ யூதர்களின் ராஜாவா? காரணம்& அவன் அப்படி சொல்லிக்கொண்டு திரிந்தான் என்பதுதான் அவன் மீது அவர்கள் வைத்த குற்றச்சாட்டு. அதற்கு பதிலாக இயேசு என்னைப் பார்த்துச் சொன்னது என்னையே சாட்டையால் அடித்தது மாதிரி இருந்தது. ‘அப்படின்னு நீங்க சொல்லாதீங்க’& இதுதான் அவன் சொன்ன பதில். அவன் அப்படிச் சொன்னதற்காக அவனை நான் மன்னித்தேன். பிறகு அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவனுடைய ராஜ்யம் இந்த உலகத்தில் இல்லையாம். பிரச்சினை முடிந்ததா? இந்த உலகத்தில் இல்லாத ராஜ்யத்தைப் பற்றி ரோம சாம்ராஜ்யம் ஏன் கவலைப்பட வேண்டும்? உண்மையின் பக்கம் சாட்சியாக இருப்பதற்குத்தான் அவன் பிறந்தானாம். அதில் என்ன தவறு இருக்கிறது? ஆனால், நான் அவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். உண்மை என்றால் என்ன? அதைப் பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா? காரணம்& அவ்வளவு சர்வ சாதாரணமாக அவன் உண்மையைப் பற்றி பேசியதுதான். அவன் பேசி முடிந்ததும் நான் வெளியே சென்று யூதர்களைப் பார்த்துச் சொன்னேன். இந்த மனிதரிடம் எனக்கு எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் இன்று பெஸஹா பெருநாளாயிற்றே! பெருநாளன்று யாராவது ஒரு குற்றவாளியை நாம் சுதந்திரமாக விட்டுவிடவேண்டுமல்லவா? அது இந்த மனிதனாக இருக்கட்டுமே!

ஆனால், ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரனை வேண்டுமானால் நாம் சுதந்திரமாக விடலாம் என்றார்கள் அந்த யூதர்கள். ‘இயேசுவை தண்டிக்க வேண்டும்!’& அவர்கள் உரத்த குரலில் கத்தினார்கள். குடித்திருந்த மூலிகை கலந்த திரவத்தின் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விட்டிருந்தது. இனியொரு முறை பாத்திரத்தை நிரப்பித் தரும்படி நான் கையால் சைகை செய்தேன். சொல்லிவிட்டு மீண்டும் குளியலறைக்குள் நுழைந்து தலையை மட்டும் நீரால் நனைத்து குளிர்ச்சிப்படுத்தினேன். திரும்பி வந்து இரண்டாவது முறையாக பாத்திரத்தில் இருந்த திரவத்தைக் குடிக்க தொடங்கியபோது என் மனதில் ஒரு எண்ணம் உதித்தது. எல்லோரும் காணும் வண்ணம் இயேசுவிற்கு லேசாக தண்டனை தந்தால், ஒருவேளை இந்தப் பிரச்சினைக்கு முடிவுக்கு வந்தாலும் வரலாம் என்றெண்ணிய நான் இயேசுவை சம்மட்டியால் ஓங்கி அடித்தேன். யாரோ அவனின் தலையில் ஒரு முள்ளால் ஆன கிரீடத்தைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஒரு சிறு தமாஷ். அந்தச் சமயத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட நான் என் தலையில் கையை வைத்து சிறிது நேரம் கண்களை மூடித் தூங்கத் தொடங்கினேன். கண்களை மீண்டும் திறந்தது எனக்கு முன்னால் நின்றிருந்த மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுத்தான். யூதர்களுக்கு இயேசுவின் உயிர்தான் வேண்டுமாம். இந்த நேரத்தில்தான் சற்று தூரத்தில் மரியம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. ஜூலியா அனுப்பி வைத்த கடிதம் என் கைகளில் கிடைத்ததும் அப்போதுதான். அதற்குப் பிறகு நான் கவலைப்பட ஆரம்பித்துவிட்டேன். இயேசுவின் அருகில் சென்று நான் கேட்டேன். ‘இளைஞனே, நீ உண்மையிலேயே எங்கிருந்து வருகிறாய்? இந்த உலகத்தில் இருந்துதானா?’ அதற்கு எந்த பதிலும் கூறாமல் அவன் மவுனமாக இருந்தான். அப்போது நான் அவனைப் பார்த்துச் சொன்னேன். உன்னைக் காப்பாற்றுவதற்கும் கொல்வதற்கும் உள்ள முழு அதிகாரம் எனக்கு இருக்கிறது என்பது உனக்குத் தெரியுமா? என்னிடம் நீ பேசினால் என்ன? அதற்கு அவன் நான் புரிந்து கொள்ள முடியாதபடி என்னவோ பதில் சொன்னான். நீ அப்போது என்னிடம் இருந்திருந்தால் அவன் சொன்னதன் அர்த்தம் உனக்கு விளங்கியிருக்கும். இருந்தாலும் எனக்கு கோபம் வரவில்லை. காரணம்& தன் செயலின் விளைவால் விழுந்து கிடக்கும் ஒரு சத்தியவான் அவன் என்பதை நான் புரிந்து கொண்டதுதான். ஆனால், நான் முதலில் சொன்னது போல் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுபவர்களைத்தானே நம்மால் காப்பாற்ற முடியும் அன்டோனியஸ்? கடைசியில் கூடியிருந்த கூட்டம் அசைய ஆரம்பித்ததடா. விஷயம் மோசமாகி விட்டது. கூட்டம் அரசியல் பேச ஆரம்பித்தது. சக்கரவர்த்தியைக் குறை கூறியும் என்னை எதிர்த்தும் பேசும் குரல்கள் எழ ஆரம்பித்தன. ஆபத்து, ஆபத்து என்று என்னுடைய இதுவரையான பொதுவாழ்க்கை அனுபவம் என்னை அழைத்து ஏதோ சொன்னது. இருந்தாலும் கடைசி முறையாக ஒரு முயற்சி செய்து பார்த்தேன். ஜூலியாவை மனதில் நினைத்து நான் அவனை யூதர்களின் ராஜா ஹெரோதேஸிடம் நீதி வழங்குவதற்காக அனுப்பினேன். அதிர்ஷ்டவசமாக ஹெரோதேஸ் என்னவோ அழிவு உண்டாக்குவதற்காக அந்த நேரம் ஜெருசலேமிற்கு வந்திருந்தார். அவருக்கு மாந்திரீகவாதிகளையும், ஜோதிடர்களையும் மிகவும் பிடிக்கும் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.


எனக்கு அந்த மனிதரைக் கொஞ்சம் கூட பிடிக்காது என்பது வேறு விஷயம். அவர் இயேசுவை வெறுமனே விட்டால் அதற்குப் பிறகு மதப் பெரியவர்களின் வாய்களை மூடுவது என்பது ஒரு சாதாரண விஷயமில்லை. ஆனால் ஹெரோதேஸ் என்ன செய்தார் தெரியுமா? எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இயேசுவை என்னிடமே மீண்டும் அனுப்பி வைத்தார். பின்னால்தான் எனக்கே தெரியவந்தது, அவரின் கேள்விகளுக்கும் இயேசு எந்தவித பதிலும் சொல்லவில்லை என்பதே. இந்த இடைப்பட்ட நேரத்தில் எனக்கு சிறிது நேரம் கண்களை மூடி தூங்குவதற்கான நிமிடங்கள் கிடைத்தன என்பது மட்டுமே மீதி. அதற்குப் பிறகு என்ன செய்வது? மக்களின் நடவடிக்கை கட்டுப்பாட்டை மீறி போய்க் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. நான் இயேசுவைப் பார்த்தேன். இயேசு என் கண்களையே அதே ஆபத்தான அன்புடன் பார்த்தவாறு நின்றிருந்தான். நான் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னேன். எல்லோரின் முன்பும் என்னுடைய இரண்டு கைகளையும் கழுவியவாறு நான் சொன்னேன். ‘இந்த நேர்மையான மனிதனின் குருதியில் எனக்கு எந்தவித பங்கும் கிடையாது. நீங்கள் இனிமேல் என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.’ நான் மீண்டும் இயேசுவின் முகத்தைப் பார்த்தேன். மிகவும் களைத்துப் போய் குருதியும் காயங்களும் இருந்த அந்த முகத்தில் எந்தவித உணர்ச்சி மாறுபாட்டையும் என்னால் காணமுடியவில்லை. நான் அவனை யூதர்களின் கைகளில் ஒப்படைத்தேன். டேய், ஒருத்தனை கொலை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துவிட்டால் அதற்குப் பிறகு மக்கள் கூட்டம், பட்டாளம் எல்லோரும் எப்படியெல்லாம் வெறியாட்டம் ஆடுவார்கள் என்பது நமக்குத் தெரியாதா என்ன? அந்த விஷயம் மிகவும் கம்பீரமாக, எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தது. உள்ளே நடந்த அந்த விஷயங்களெல்லாம் கேட்டு எழுதும் அந்தப் பெண்ணுக்கு எதற்கு தெரிய வேண்டும்? அதனால்தான் இந்தக்கடிதத்தை நானே எழுதுகிறேன். என் கையெழுத்தைக் கொஞ்சம் பொறுத்துக் கொள். அது மட்டுமல்லடா. அவளும் ஒரு யூதப் பெண்தானே! அழகும் இளமையும் கொண்டவளாயிற்றே! இயேசுவின் வலையில் அவளும் வீழ்ந்தாளோ என்னவோ யாருக்குத் தெரியும்? இந்த ஜூலியாவின் சினேகித வட்டம் அப்படியொன்றும் மகிழ்ச்சியடையக் கூடிய விதத்தில் இல்லையென்று பல நேரங்களில் எனக்குத் தோன்றியிருக்கிறது. ஆனால், என் அண்டோனியஸ், குடும்ப அமைதி என்பது ஒரு முக்கியமான விஷயமாயிற்றே! பிறகு... உனக்குத்தான் தெரியுமே. நம்மை போன்ற கெட்ட மனிதர்களுக்குப் பெரிய அளவில் குரலை உயர்த்தி கேள்வி கேட்க எப்படி முடியும் என்பதையும் ஒரு நிமிடம் நினைத்துப்பார். அதனால் மவுனமாக இருப்பதே நல்ல மனிதனுக்கு அடையாளம் என்று நடந்து கொள்வதுதானே சிறந்தது? காலம் எல்லா விஷயங்களுக்கும் நிச்சயம் பதில் சொல்லவே செய்யும். டேய், இயேசு உயிர்த்தெழுந்து வந்தால் என்னைப் பார்ப்பதற்கு வருவானா? உனக்கு என்ன தோன்றுகிறது? எதற்கு என்னைப் பார்க்க அவன் வரவேண்டும் என்று தோன்றுகிறதா? அவனுடைய உலகம் வேறு எங்கோ இருக்கிறது. பிறகு ஒரு விஷயம்... ஒரு ஆட்சித்தலைவன் என்ற முறையில் வரலாற்றுரீதியான ஒரு ஆர்வம் எனக்கு இருக்கவே செய்கிறது. அவன் வாக்குறுதி தந்தபடி ஒரு தெய்வ ராஜ்யத்தை அவன் என்றாவதொரு நாள் அமைப்பானா? அப்படியொரு நல்ல இடம் இருக்குமானால் டேய் அன்டோனியஸ், நாம் இரண்டுபேரும் மனப்பூர்வமாக அங்கு சென்று ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குவோம். அதற்கான ஒரு விண்ணப்ப மனுவாக என்னுடைய இந்தக் கடிதம் இருக்கட்டும். இந்தக் கடிதத்தை நீ பத்திரமாகப் பாதுகாத்து வை. உன்னுடைய புத்தகங்களுக்கு மத்தியில் இதற்கும் ஒரு இடம் கொடு. இயேசுவின் தெய்வராஜ்யத்தில் உனக்கு என்ன ஆகவேண்டும் என்று ஆசை? நீ ஒரு நூல்களைப் பாதுகாத்து வைக்கும் மனிதன் வேலையைப் பார். நான் ஒரு மிருகச் சாலையைப் பார்த்துக் கொள்ளக் கூடியவனாக இருந்து கொள்கிறேன். சில நாட்கள் சென்ற பிறகு, நமக்கு ஒருவித அலுப்புத் தோன்றுமா என்ன? பார்க்கலாம். சில நாட்கள் அந்த வேலைகளில்தான் இருந்து பார்ப்போமே! சரி... உன்னுடைய பதில் கடிதத்திற்காக நான் காத்திருக்கிறேன். உனக்கு நல்லது நடக்கட்டும்.

உன்னுடைய உயிருக்குயிரான நண்பன்,

பொந்தியோஸ் பீலாத்தோஸ்.

4

கேட்டு எழுதும் பெண்ணுக்கு

மயக்கம் வருகிறது!

லைகளின் அடிவாரத்தின் வழியாகவும் கற்களும் புற்களும் ஏராளமாக இருக்கும் வறண்டுபோன சமவெளி வழியாகவும் ஜெருசலேமிலிருந்து வரும் ஒருபாதை. வண்டிச் சக்கரங்களின் அல்லது குதிரைக் குளம்புகளின் அடையாளமே சிறிதும் இல்லாத இந்த கிராமத்து பாதை ஆட்டிடையர்களின் & கள்ளி பொறுக்க வரும் பெண்களின் & சிறுசிறு கிராமங்களிலிருந்து எப்போதாவது ஜெருஸலேமில் இருக்கும் பெரிய தேவாலயத்திற்கு வந்து கடவுளைத் தொழ வரும் கிராமத்து மனிதர்களின் பாதை என்பதை அதைப் பார்க்கும் போதே நமக்குத் தெரியும். யாருக்கும் குறிப்பாக எங்காவது போவதற்காக உண்டாக்கப்பட்ட பாதை அல்ல இது. எப்படியோ காலம் காலமாக வரலாற்றின் சிறிய செயல்களை நிறைவேற்றுவதற்காக அந்த மண்ணில் நடமாடிக் கொண்டிருந்த ஊரும் பேரும் இல்லாத காலடிகளுக்குக் கீழே மெல்ல மெல்ல உருவாகிய பாதை இது. பாதையில் இரு பக்கங்களிலும் இருக்கும் புழுதிக்கும் இந்தப் பாதைக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. சொல்லப் போனால், இரண்டு பக்கங்களில் இருக்கும் புழுதியை விட பாதையில் இருக்கும் புழுதி சற்று உறுதியானதாக இருக்கும். அவ்வளவுதான். ஆங்காங்கே விழுந்து கிடக்கும் ஆட்டின் சாணமும் கழுதையின் எச்சமும்தான் இந்த கிராமத்துப் பாதைக்கு உயிரின் அடையாளத்தை தந்து கொண்டிருந்தன. தூரத்தில் கண்களை ஒட்டினாலும் சிறப்பாகக் கூறும்படி ஒன்றும் இல்லை. அமைதியாக இருக்கும் மலைகள். வெயிலில் காய்ந்து கிடக்கும் சமவெளிகள். ஏதாவதொரு இனிய காட்சியைக் காணவேண்டும் என்று ஆசைப்படும் ஆண் அல்லது பெண் கட்டாயம் தங்களின் தலையை உயர்த்தி மேல் நோக்கிப் பார்த்தே ஆகவேண்டும். அங்கே காற்று பட்டு இங்குமங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருக்கும் மேகங்களின பரிதவிப்பையும் நீலவண்ண வானத்தின் பிரகாசத்தையும் அபூர்வமாக தென்படும் பறவைகளையும் அவர்கள் பார்க்கலாம். அதோடு சூரியனையும்தான். இரவு நேரமாக இருந்தால் ஆகாயத்தில் மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைக் காணலாம். கீழே மணல்களில் தன்னுடைய காலடிச் சத்தம் கேட்டு நடுங்கி ஒடும் தேளைப் பார்ப்பவன் அதிர்ஷ்டசாலி என்றுதான் சொல்ல வேண்டும். வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு குள்ள நரியையோ, பதுங்கிக் கொண்டிருக்கும் ஒரு முயலையோ பார்த்தால் அந்த நாள் நிச்சயம் யாராலும் மறக்க முடியாத ஒரு நாளே.


இந்த பாதை வழியாகத்தான் அன்று (அதாவது & பொந்தியோஸ் பீலாத்தோஸ் தன் நண்பன் அன்டோனியஸுக்கு எழுதிய கடிதத்தை முழுமையாக முடித்து முத்திரையிட்டு ரோமுக்குப் போகின்ற தகவல்கள் கொண்டு போகும் மனிதனுக்காகத் தயாராக எடுத்து வைத்து விட்டு, பகல்நேர உணவு முடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில்) பீலாத்தோஸின் மனைவி ஜூலியாவும் கேட்டு எழுதும் பெண் ரூத்தும் அவர்களின் சினேகிதிகளான மக்தலனாவைச் சேர்ந்த மரியமும் மார்த்தாவும் வேறிரண்டு பெண்களும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். ஜூலியா யூத வேடத்தில் இருந்தாள். முகத்தை துணியால் மூடியிருந்தாள். எல்லோரும் உரத்த குரலில் ஒன்றாகப் பேசியவாறு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் ஒருத்தி இன்னொருத்தியிடமும் பெரும்பாலும் எல்லோருடனும் என்று பேசிக் கொண்டு வந்தார்கள். பேச்சின் வேகம் கூடக்கூட நடையின்வேகம் குறைந்து கொண்டிருந்தது. பலவிதப்பட்ட விஷயங்களையும் அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். விஷயம் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு என்று மாறிக் கொண்டிருந்தது. வீட்டு விஷயங்கள், நாட்டு விஷயங்கள் என்று எல்லாவற்றையுமே அவர்கள் பேசிக் கொண்டு வந்தார்கள். உதாரணத்திற்கு இப்போது அவர்களிடம் நடந்த உரையாடல்:

ரூத்: (ஆகாயத்தைப் பார்த்தவாறு): மழை வரப்போகுதுன்னு நினைக்கிறேன்.

மரியம்: ஏய்... அது மழை பெய்யற மேகம் இல்லை. இப்போ மழை பெய்யறதுக்கான அறிகுறியே இல்ல. மழை பெய்தா நல்லாத்தான் இருக்கும். என்ன உஷ்ணம்.

ஒரு பெண் (மரியத்திடம்): இயேசு இந்த வழியாதான் வருவார்னு எப்படி உறுதியான குரலில் சொல்ற?

மரியம்: அப்படி உறுதியா ஒண்ணும் நான் சொல்லல. என்னோட யூகம் அது. அவ்வளவுதான். இன்னைக்கு பார்க்கலைன்னா, இன்னொரு நாள் வேற ஒரு பாதையில பார்ப்போம். அவன் எங்கே இருக்கான்ற விஷயம் நமக்குத் தெரியாதுன்னாலும், நாம எங்கே இருக்கோம்ன்ற விஷயம் அவனுக்குத் தெரியும்ல? அதுதான் என்னோட நம்பிக்கை.

ரூத்: நடந்து நடந்து என் கால் ஒரு வழி ஆயிடுச்சு. ச்சே... இந்த செருப்பு ரெண்டு கால்ல பயங்கரமா கடிக்குது. இன்னைக்கு நான் செருப்பைக் கழற்றி ஒரு விளையாட்டு காட்டினதுக்கு இது தண்டனை போல இருக்கு.

மார்த்தா: என்ன விளையாட்டு?

ரூத் (புன்னகை செய்தவாறு): சொல்லக்கூடாது மனசுக்குக் கஷ்டமாக இருக்கும்.

மழையைப் பற்றி பேசுவதற்காக வழியில் சிறிது நின்ற கூட்டம் இப்போது மீண்டும் முன்னோக்கி நடக்கத் தொடங்கியது. பாதையில் ஆங்காங்கே வீசிய சிறு சுழல் காற்றுகள் தூசியை வட்ட வட்டமாகச் சுழற்றியடித்தன. ஆகாயத்தில் மழை பெய்வதற்காக என்பதைப் போல் மேகங்கள் திரண்டிருந்தன. ஆனால், அவை மரியம் சொன்னதைப்போல, தேவையான அளவிற்கு முதிர்ச்சியடைந்ததாக இல்லை. சூரியன் இப்போதும் பிரகாசமாக ஒளி வீசிக் கொண்டிருந்தது. மணல் மைதானத்தின் ஓரங்களிலும் தூரத்திலிருக்கும் மலைகளிலும் மணல் ஆவி எழும்பி உயர்ந்து கொண்டிருப்பது தெரிந்தது. தூரத்தில் எங்கோ முழங்கிய இடியோசை காற்றில் கலந்து எதிரொலித்தது. சில மேகங்கள் வழியாக சூரியனின் கதிர்கள் நிசப்தமாக சுட்டெரித்துக் கொண்டிருந்தன. ஆகாயத்தில் இருந்த காற்று இப்போது பூமியை நோக்கி இறங்கியது. நடந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு எதிர் திசையில் காற்று வீசியது. அது அவர்கள் தலையில் அணிந்திருந்த துணியை விலக்கியது. அதனால் அவர்களின் தலைமுடி பின்னோக்கி காற்றில் பறந்து கொண்டிருந்தது. அதேநேரத்தில் அந்தக் காற்று அவர்களின் ஆடைகளை உடலோடு ஒட்டிக் கிடக்கும்படி செய்தது.

ஜூலியா: காற்று என்ன அருமையா வீசுது!

எல்லோரும் அவள் சொன்னதை ஒப்புக் கொள்கிறார்கள்.

மார்த்தா: மழை வருவதற்கான அடையாளம்தான். தூரத்துல எங்கோ மழை பெய்துக்கிட்டு இருக்கு. அதனால்தான் இந்த குளிர்ந்தகாற்று.

ஒரு பெண்: வீட்டுல துணிகளை காயப் போட்டிருந்தேன்.

மார்த்தா: என் ஆட்டுக்குட்டிகள் நல்லா நனையப் போகுது. நேற்றுத்தான் பிறந்தது. தாய் ஆட்டை வாசல்ல கட்டியிருக்கேன்.

ரூத் (குனிந்து காலைப் பார்த்தவாறு): என்னால இனிமேல ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியாது. ரெண்டு கால்களும் பயங்கரமா வலிக்குது.

மார்த்தா: இங்க பாரு ரூத்... இன்னொருத்தர் சொல்றதைக் கேட்டு எழுதுறதும் பக்கத்துல உட்கார்ந்திருந்தாலும் மட்டுமே போதுமா? அப்பப்போ கொஞ்சம் கஷ்டப்படவும் செய்யணும். (ஜூலியாவிடம்) இவளை ஏதாவது கஷ்டப்பட்டு உழைக்கிற வேலையில ஈடுபடுத்தக் கூடாதா? அந்த பீலாத்தோஸ் கூட உட்கார்ந்து உட்கார்ந்து இவளும் ஒரு சுகவாசி மாதிரி ஆயிட்டா. நான் இதைச் சொல்றதுக்காக ஜூலியா, என்னை நீ மன்னிக்கணும்.

அதைக் கேட்டு ஜூலியா சிரிக்கிறாள்.

சற்று முன்னால் கேட்ட இடிமுழக்கம் இப்போது சற்று உரக்க கேட்கிறது. மேகங்கள் எந்தவித அசைவும் இல்லாமல் வானத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கின்றன. யார் கண்ணிலும் படாமல் சூரியன் மறைந்து போய்விட்டது. மீண்டும் வானத்தின் விளிம்பிலிருந்து ஒரு படை புறப்பட்டு வருவதைப் போல இடி முழக்கம் கேட்டது.

ஜூலியா (உரத்த குரலில்): பூமியே குலுங்குற மாதிரி இருக்கே!

ரூத்: ஆமா... பத்திரம்.

ஒரு ராட்சஸன் நடந்து வருவதைப் போல ஒரு சத்தம் எல்லாப் பக்கங்களிலும் கேட்டது. பூமி குலுங்கியது. நடுங்கிக் கொண்டிருக்கும் ஆட்டின் மேற்தோல் ஆடுவதைப் போல அந்த சத்தத்தின் விளைவால் பூமியில் நடந்து செல்லும் பெண்களின் கால்களுக்குக் கீழே லேசாக அதிர்ந்தது. அவர்கள் பாதி வழியில் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றார்கள். காற்றுக்கு எதிராக முகத்தை உயர்த்தி கண்களை சுருக்கிக் கொண்டு பயந்து போய் சுற்றிலும் பார்த்தார்கள்.

ரூத்: என் காலைக் கீழே வைக்க முடியல. அய்யோ!

ஒரு பெண்: ஏய்... பூகம்பம் வந்திடுச்சின்னு பயப்படுறியா? மலை ஏதாவது பிளந்து கீழே விழுந்திருக்கும்னு நினைக்கிறேன். பயப்படாதே.

மற்றொரு பெண்: இப்போ மழை பெய்தா நல்லா இருக்கும். கொஞ்சம் மாறுதலா இருந்த மாதிரி இருக்கும்.

அப்போது புழுதியை எழுப்பிக் கொண்டு காற்று பயங்கர வேகத்துடன் வீசியது. மீண்டும் பூமி லேசாக அசைந்தது. யாரோ அழைப்பது மாதிரி இருந்தது. ஆகாயம் முழுமையாக இருண்டு போய் காணப்பட்டது. பயத்துடன் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் அவர்கள் காற்றின் பிடியில் சிக்கிய மண் சிலைகளின் கூட்டத்தைப் போல விழித்தவாறு பாதையில் அசையாமல் நின்றிருந்தனர். சுற்றிலும் புழுதி காற்றில் பறந்து கொண்டிருந்தது. காற்று வேகமாக வீசும் சத்தம் உரத்து கேட்டது.

அப்போது தூரத்தில் எதிர் திசையிலிருந்து வழிப்போக்கன் ஒருவன் வந்து கொண்டிருப்பது புழுதியினூடே தெளிவில்லாமல் தெரிந்தது.


ஜூலியா: யாரோ வர்றாங்க.

ஒரு பெண்: நல்லாதப் போச்சு. ஒரு ஆண் துணைக்கு வந்தது மாதிரி ஆச்சு.

ரூத்: பூகம்பம் வந்துச்சுன்னா, ஆண்&பெண் எல்லாமே அதுக்கு ஒண்ணுதான்.

அவர்கள் தலையில் அணியும் துணியை காற்றுக்கு எதிராக கஷ்டப்பட்டு பிடித்துக் கொண்டு வழிப்போக்கனை எதிர்பார்த்து நின்றிருந்தார்கள். வானத்தின் விளிம்பில் காதுகள் செவிடாகிற மாதிரி இரைச்சல் கேட்டது.

வழிப்போக்கனின் கால்களில் காலணி எதுவும் இல்லை. தலையில் கட்டப்பட்டிருந்த துணியின் முனையால் புழுதி முகத்தில் படாமல் மறைத்திருந்தான். அவன் மெதுவாக அருகில் வந்து கொண்டிருந்தான். பெண்கள் அந்த ஆளையே உற்று பார்த்தவாறு நின்றிருந்தனர். அவன் அருகில் வந்த போது, அவனுடைய அழுக்கடைந்த ஆடையில் இரத்தக்கறை இருப்பது தெரிந்தது. பெண்கள் அந்த இரத்தக் கறையைப் பார்த்தார்கள். அவர்களிடமிருந்து ஒரே நேரத்தில் அதிர்ச்சி, பயம் இரண்டுமே வெளிப்பட்டன. வந்த மனிதன் தன்னுடைய முகத்திலிருந்த துணியை எடுத்து அதன் ஒரு முனையை தன்னுடைய கழுத்து வழியாக தோள் மீது இட்டான். வேகமாக வீசிக் கொண்டிருந்த காற்று அந்த மனிதனை பின்னாலிருந்து தள்ளியது. அவன் களைத்துப் போன காயங்கள் இருந்த முகத்தில் ஒரு புன்சிரிப்பு தெரிந்தது.

ஜூலியா: என் இயேசுவே!

ரூத்: ங்ஹே! (மயக்கமடைந்து ஒரு பக்கம் சாய்கிறாள்)

ஜூலியாவும் மார்த்தாவும் நிலைகுலைந்து தரையில் உட்காருகிறார்கள். மரியம் இயேசுவை கண் இமைக்காமல் பார்த்தவாறு நின்றிருக்கிறாள். அவளின் முகத்தில் பூவைப் போல ஒரு புன்சிரிப்பு மெல்ல அரும்புகிறது. மற்ற பெண்கள் கத்துவதற்காக திறந்த தங்களின் வாய்களை ஒரு கையால் மூடியவாறு முன்னோக்கி தங்கள் பாதங்களை வைக்கிறார்கள்.

மரியம் முன்னோக்கி நடந்து சென்று இயேசுவிற்கு மிகவும் அருகில் போய் நிற்கிறாள். அவன் முகத்தையே உற்று நோக்குகிறாள். அவள் சிரிக்கிறாள்.

மரியம்: இது நீதானா? உன்னோட ஆடையைத் துவைத்துத் தர உன்னோட தந்தையின் வீட்டில் யாருமே இல்லையா?

மரியம் இயேசுவின் கைகளை தன் கைகளில் எடுக்கிறாள். இயேசு முன்னோக்கி நடந்து வந்து அவளின் கன்னத்தில் முத்தமிடுகிறான்.

ரூத் கண்களைத் திறக்கிறாள். விழுந்து கிடக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்காமே இயேசுவை அவள் உற்றுப் பார்க்கிறாள். இயேசு அருகில் வந்து அவளின் ஒரு பக்கத்தில் அமர்ந்து அவளை நோக்கி புன்சிரிப்பு சிரிக்கிறான்.

ரூத்: இயேசுவே! இப்போதும் உடம்புடன்தான் இருக்கிறாயா? அப்படின்னா பரவாயில்லே...

இயேசு தன்னுடைய இரு கைகளாலும் அவளின் வலது கையைத் தூக்கி விரல் நுனியில் முத்தமிடுகிறான். ரூத் மீண்டும் மயக்கமடைகிறாள். இயேசு அவள் பாதங்களில் இறுக மாட்டப்பட்டிருந்த செருப்புகளைக் கழற்றி, செருப்பு கடித்திருந்த பாதங்களை கைகளால் மெதுவாகத் தடவுகிறான். பூமி மீண்டும் குலுங்குகிறது. இயேசு புன்னகை செய்தவாறு ஆகாயத்தை நோக்கித் தன்னுடைய தலையை உயர்த்துகிறான்.

நாம் சில பிற்சேர்க்கைகளைப் படிப்போம்

1

யூதர்களின் ராஜாவான ஹெரோதேஸ் யூதர்களின் ரோமன் கவர்னரான பொந்தியோஸ் பீலாத்தோஸுக்கு எழுதிய குறிப்பு:

வாழ்த்துக்கள்!

பிறகு என்ன விசேஷம், பெருமதிப்பிற்குரிய பீலாத்தோஸ்? நாம் இரண்டு பேரும் இந்த அளவிற்கு அறிமுகமில்லாதவர்களைப் போல இருக்க வேண்டுமா என்ன? சமீபத்தில் தாங்கள் சிறிதும் எதிர்பார்க்காத வேளையில் என்னுடன் தொடர்பு கொண்ட பிறகு நான் இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். நான் ரோம சாம்ராஜ்யத்தின் எதிரியா என்ன? இல்லையே! ரோம சாம்ராஜ்யமும் தாங்களும் என்னை மதிக்கிறீர்கள் அல்லவா? யூத பகுதியின் ரோமன் கவர்னரும் யூதர்களின் ராஜாவும் தங்களுக்குள் ஏன் இப்படி ஒரு இடைவெளியுடன் இருக்க வேண்டும்? அதிகாரிகளான நாமெல்லாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டாமா? தாங்கள் என்னை சமீபத்தில் நினைத்துப் பார்த்ததற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அன்று என்னிடம் தாங்கள் அனுப்பி வைத்திருந்த மந்திரவாதிக்கு அதற்குப் பிறகு என்ன நடந்தது? அந்த மனிதன் செய்த குற்றம் என்ன? என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் முன்னால் அற்புதச் செயல்கள் எதையும் காட்ட அந்த மனிதனால் முடியவில்லை. நான் என்னுடைய நண்பர்களையும் வீட்டிலுள்ளவர்களையும் அவன் காட்டப்போகும் வித்தைகளைப் பார்ப்பதற்காக அழைத்திருந்தேன். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. என்னைப் பார்த்து அவன் பயப்பட்ட மாதிரியும் தெரியவில்லை. அவனைப்பற்றி என்னால் ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. அதனால்தான் நான் அந்த மனிதனை தங்களிடமே திரும்பவும் அனுப்பி வைத்தேன். தாங்கள் என்னுடைய அரண்மனைக்கு ஒருமுறை தயவு செய்து வருகை தர வேண்டும். இதயபூர்வமாக வரவேற்கிறேன். ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதிக்கு எந்தவித குறைபாடும் தோன்றாத அளவிற்கு நான் தங்களுக்கு வரவேற்பு ஏற்பாடுகள் பண்ணித்தருவேன். தங்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தாங்கள் நிச்சயம் ஏமாற்றமடைய மாட்டீர்கள். வருக! வருக!

அந்த மந்திரவாதி இப்போது எங்கிருக்கிறான்? கிடைத்தால் அவனையும் அழைத்து வரவும். நாமிருவரும் சேர்ந்து அந்த மனிதனின் அற்புதங்களையும், வித்தைகளையும் சிறிது கண்டு களிப்போம். நான் தங்களுக்காக ஏற்பாடுகள் செய்யப் போகிற பல விஷயங்களுடன் அதையும்.

 

                                             தங்களின் நண்பன்,

                                              ஹெரோதேஸ்

2

ரணத்திலிருந்து திரும்பி வந்த ஒரு இளைஞன் தனக்குத்தானே பேசிக் கொள்ளுதல்.

லாசரை உயிர்ப்பித்து எழுப்பியபோதோ, யொவாராஸின் குழந்தையை மரணத்திலிருந்து திரும்பக் கொண்டு வந்தபோதோ எனக்கு இதைப்பற்றிய எந்த புரிதலும் கிடையாது. நான் சொன்னேன். அது நடந்தது. அவ்வளவுதான். இப்போது இதோ நானே உயிருடன் வந்திருக்கிறேன். யார் என்மீது வாழ்க்கையின் வார்த்தைகளை உச்சரித்தது? மொத்தத்தில் எல்லாமே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. இரண்டு நாட்கள் நான் என்னுடைய தந்தையின் வீட்டிலிருந்தேன் என்றால் அந்த விஷயம் என்னுடைய ஞாபகத்திலேயே இல்லை. பிறவி தருவது தாயாக இருந்தால், உயிர்த்தெழ வைப்பது தந்தையாக இருக்குமோ? ஆனால், என்னுடைய தந்தை என்னைவிட்டு விலகி இருப்பது ஏனோ? என்னுடைய தாயைவிட்டு அவர் விலகி இருந்தார். நான் ஒரு அனாதையாக இருந்ததற்காக என்னுடைய அன்னையிடம் நான் எந்த அளவிற்கு கோபித்திருக்கிறேன்! நினைக்கும் போது மனதிற்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. கர்ப்பம் தரித்த ஒரு பெண்ணைப் பற்றி அப்படி நான் பேசலாமா? அவள் உயிரின் வித்தை தன்னிடம் ஏற்றுக் கொண்டவள் அல்லவா? கடவுள் ராஜ்யத்தின் வித்து. இந்த விஷயமெல்லாம் முன்கூட்டியே எனக்கு ஏன் தெரியாமல் போனது? எல்லாம் முடிந்தபிறகுதான் அறிவு வேலை செய்யுமா என்ன?


என் தாய் நான் தந்த வேதனைகளையெல்லாம் தாங்கிக் கொண்டாள். என் மரணத்தையும் என் தாய் ஏற்றுக் கொண்டாள். இப்போது நான் உயிர்த்தெழுந்து வந்தது எதற்காக? என்னுடைய மரணத்தால் என் தாய் அடைந்த வேதனையை இல்லாமல் ஆக்க என்னால் முடியுமா, ஆனால், நான் அன்பு செலுத்தாத என்னுடைய சினேகிதிகள் கூட இப்போதும் என் மீது அன்பு செலுத்திக் கொண்டிருக்கிறார்களே! அப்படியென்றால் என் தாயும் என்னைக் கைவிட்டிருக்கமாட்டாள். இவர்களையும் உடன் அழைத்துக் கொண்டு என் தாயைப் பார்க்கப் போனால் என்ன? என் தாய் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியடைவாள். என்னுடைய இந்த உயிர்ப்பால் அப்படியாவது ஒரு நல்ல காரியம் நடக்கட்டும்... சரிதானே?

3

டைட்டஸ் அன்டோனியஸ், பொந்தியோஸ் பீலாத்தோஸுக்கு எழுதிய கடிதத்திலிருந்து

...சரி... நீ சொன்னதற்கு நான் சம்மதிக்கிறேன். இந்த இயேசு என்ற மனிதன் உயிர்தெழுந்து உன்னைத் தேடி வந்தால் அவனை என்னிடம் அனுப்பி வை. அவனை நான் இங்கு வைத்து கவனமாகப் பார்த்துக் கொள்கிறேன். நான் அவனைப் போல புரட்சிகரமான மனிதனொன்றுமில்லை. ஆனால், அவன் கூறுவதை என்னால் புரிந்துகொள்ள முடியும் என்று நினைக்கிறேன். எங்களால் முடியுமானால் ஒரு கடவுள் ராஜ்யத்தைக்கூட உருவாக்கலாம். எல்லாம் முடிந்ததும், உன்னை நான் இங்கு அழைக்கிறேன். அதற்குள் நீ கொஞ்சம் விவேகமும் விரக்தியும் அடைந்து ஒரு நல்ல மனிதனாக முயற்சி செய். அது கட்டாயம் நடக்குமா, நடக்கும். எல்லோருக்குமே கடைசியில் ஒரு இடம் இருக்கவே செய்கிறது. அது உனக்கும் இருக்கிறதடா. பீலாத்தோஸ், கடவுள் ராஜ்யத்தில் உனக்கும் ஒரு இடம்...

ஆதாரம்

மத்தேயு எழுதிய சுவிசேஷம். அத்தியாயம் 27,28

மார்க்கோஸ் எழுதிய சுவிசேஷம். அத்தியாயம் 15,16

லூக்கா எழுதிய சுவிசேஷம் அத்தியாயம். 23, 24

யோஹன்னான் எழுதிய சுவிசேஷம். அத்தியாயம் 18, 19, 20.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.